அன்வர் உசேன்
ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் உலகம் முழுவதும் பல விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஒரு புறம் புடின் இட்லருக்கு இணையாக விமர்சிக்கப்படுகிறார். இன்னொரு புறம் அவரது நடவடிக்கைகள் அனுதாபத்துடன் பார்க்கப்படுகின்றன. போர் என்பது எப்படியாக இருந்தாலும், எங்கே நடந்தாலும், அது மனித உயிர்களைப் பலி வாங்குகிறது. அரும்பாடுபட்டு உருவாக்கிய உற்பத்தி சாதனங்களும் வளங்களும் இமைப்பொழுதில் அழிக்கப்படுகின்றன. போரில் ஈடுபடும் தேசங்களில், உழைக்கும் மக்களே கடும் இழப்புக்கு ஆளாகின்றனர். இது வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த இரு தேச உழைப்பாளிகளுக்கும் பொருந்தும். ஆனால், சுரண்டும் வர்க்கங்கள் போர்களுக்கு ஆதரவான கருத்துக்களை கட்டமைப்பதில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அவற்றில் இருந்து விலகி நின்று போர்களை ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்.
இப்போதைய சூழலில், நாம் ஒரு முக்கியமான உண்மையை கணக்கிலெடுப்பது அவசியம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 42% பேர் ரஷ்யாவை இன்னமும் அதுவொரு கம்யூனிஸ்ட் நாடு என்று எண்ணுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவிலும் பலர் அவ்வாறு நினைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இன்றைய ரஷ்யா ஒரு சோசலிச நாடு அல்ல. அங்கு நடக்கும் ஆட்சி முதலாளித்துவ ஆட்சியே. விளாடிமிர் புடின் அந்த முதலாளித்துவ நாட்டின் தலைவரே.
வரலாற்று பின்னணி:
1917ம் ஆண்டு சோவியத் புரட்சி வெற்றியடைந்த பிறகு, வெவ்வேறு காலகட்டங்களில் அதனோடு 14 குடியரசுகள் இணைந்துகொண்டன. அவை:
1. உக்ரேனியா
2. பைலோரஷ்யா
3. உஸ்பெகிஸ்தான்
4. கஜகஸ்தான்
5. ஜார்ஜியா
6. அஜர்பைஜான்
7. லிதுவேனியா
8. மால்டோவா
9. லத்திவியா
10. எஸ்தோனியா
11. கிர்கிஸ்தான்
12. தஜிகிஸ்தான்
13. துர்க்மெனிஸ்தான்
14. அர்மீனியா
இதுவே பின்னர் ‘சோவியத் ஒன்றியமாக’ அமைந்தது. ரஷ்ய மொழியோடு சேர்த்து, மேற்சொன்ன 14 தேசங்களின் மொழிகளும் அதிகாரப்பூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன. 15 தேசிய இனங்களை உள்ளடக்கியிருந்ததால் அவ்வப்பொழுது சில முரண்பாடுகள் ஏற்பட்டாலும், பொதுவாக, சோவியத் குடி மக்கள் எனும் அடையாளம் உருவானது. மேலும், சோவியத் யூனியனின் அரசியல் சட்டம் சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியிருந்தது. இதன் பொருள் என்னவெனில், எந்த ஒரு குடியரசும் தாம் விரும்பினால் ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லலாம். இந்த உரிமையை உருவாக்க லெனினும், ஸ்டாலினும் கடுமையாக பாடுபட்டனர். இந்த பிரச்சனையில் லெனினுக்கும், ஜெர்மன் கம்யூனிஸ்டு ரோசா லக்சம்பர்குக்கும் இடையே கடும் விவாதங்கள் நடைபெற்றன. தேசிய இனப்பிரச்சனைகளில் கம்யூனிஸ்டுகளின் நிலையை புரிந்து கொள்ள முயல்பவர்களுக்கு லெனின்-ரோசா லக்சம்பர்க் விவாதங்கள் ஒரு புதையல் எனில் மிகை அல்ல.
சோசலிச சமூக அமைப்பின் நன்மைகளான வேகமான தொழில் வளர்ச்சி/ விவசாய முன்னேற்றம்/ இலவச கல்வி மற்றும் மருத்துவம்/ உழைக்கும் மக்களின் உரிமைகள் அனைத்தையும் இந்த 14 குடியரசுகளும் பெற்றன. எனினும், 1970களில் சோவியத் ஒன்றியத்தில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி தேக்கமுற்றது. 1980களில் முதலாளித்துவ உலகுடன் ஒப்பிடும் பொழுது அது பின் தங்கியிருந்தது. மின்னணு புரட்சி/ கணிணி மயம் என முதலாளித்துவம் தனது உற்பத்தி சக்திகளை வேகமாக வளர்த்தெடுத்தது. இதனால், கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் சோவியத் ஒன்றியம் இரு சவால்களை சந்தித்தது. ஒன்று, அதன் பொருளாதாரம் கடுமையாக பின்னடைவை எதிர் கொண்டது. இன்னொருபுறம், சோசலிச ஜனநாயகம் சிதைவுகளுக்கு உள்ளானது. ஏகாதிபத்தியமும் தனது தொடர் தாக்குதல்களை பல முனைகளில் முன்னெடுத்தது.
இந்தச் சூழலில் சோசலிசம் பின்னடைவை சந்திப்பதற்கு சற்று முன்னதாக லிதுவேனியா/லத்திவியா/எஸ்தோனியா ஆகிய மூன்று குடியரசுகளும் பிரிந்து போயின. சோசலிசம் பின்னடைவை சந்தித்த பொழுது, அனைத்து குடியரசுகளும் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து, தம்மை தனி சுதந்திர தேசங்களாக அறிவித்து கொண்டன. இதில் உக்ரைனும் அடங்கும். எனினும், இந்த நிகழ்வு வேறு ஒரு பிரச்சனையை உள்ளடக்கியிருந்தது. சோவியத் ஒன்றியம் இருந்த பொழுது, ரஷ்ய மக்கள் வேறு குடியரசுகளுக்கு புலம்பெயர்வதும், ஏனைய குடியரசு மக்கள் ரஷ்யாவுக்குள் வருவதும் பரவலாக நடந்தது. குறிப்பாக, இந்த பரஸ்பர புலம்பெயர்வு ரஷ்யா/உக்ரைன்/பைலோரஷ்யா ஆகிய மூன்று குடியரசுகளிடைய வலுவாக நடந்தது. இதன் விளைவுதான், இன்றைய உக்ரைனின் கிழக்கு பகுதியில் சுமார் 20% பேர் ரஷ்ய மொழி பேசுபவர்களாக உள்ளனர்.
வாக்குறுதி மீறிய ஏகாதிபத்தியம்
அந்த சமயத்தில், சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த எந்த தேசத்தையும் நேட்டோ எனும் ராணுவ அமைப்புக்குள் இணைக்கக்கூடாது எனவும், ரஷ்யாவின் எல்லை நாடுகளில் நேட்டோ ராணுவத்தையோ அல்லது ஆயுதங்களையோ நிறுத்தக் கூடாது எனவும், ரஷ்யா அமெரிக்காவிடம் முன்வைத்தது. அன்றைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர் “ரஷ்யா இருக்கும் கிழக்கு நோக்கி ஒரு இன்ச் கூட நேட்டோ விரிவாக்கம் செய்யப்பட மாட்டாது” என வாக்குறுதி அளித்தார். ஆனால் ஏகாதிபத்தியத்தின் பல வாக்குறுதிகள் போல் இதுவும் காற்றில் விடப்பட்டது.
நேட்டோ என்ற அமைப்பு இரண்டாம் உலகப்போர் முடிந்த ஆண்டுகளில் (1949) அமெரிக்கா/ பிரிட்டன்/ பெல்ஜியம்/ கனடா/ டென்மார்க்/ பிரான்ஸ்/ ஐஸ்லாந்து/ இத்தாலி/ லக்ஸம்பர்க்/ நெதர்லாந்து/ நார்வே/ போர்ச்சுகல் ஆகிய நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு ஆகும். அமெரிக்காவே இந்த அமைப்பின் தலைமை என்பதை கூறத் தேவையில்லை. பின்னர் 1950களில், நேட்டோவுடன் மேற்கு ஜெர்மனி/கிரீஸ் ஆகிய நாடுகளும் 1982இல் ஸ்பெயினும் இணைக்கப்பட்டன. கம்யூனிஸ்ட் நாடுகளிடமிருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவே இந்த கூட்டமைப்பு என்று நேட்டோ கூறியது. எனவே அதன் எதிர்வினையாக சோவியத் யூனியன்/ கிழக்கு ஜெர்மனி/ அல்பேனியா/ போலந்து/ செக்கோஸ்லேவாகியா/ ஹங்கேரி/ பல்கேரியா/ ருமேனியா ஆகிய சோசலிச நாடுகள் தங்களுக்குள் வார்சா ஒப்பந்த அமைப்பு எனும் கூட்டமைப்பை உருவாக்கின. எனினும், இந்தியா/எகிப்து/யுகோஸ்லவியா/கியூபா/வியட்நாம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த இரு அமைப்பிலும் சேராமல் அணிசேரா நாடுகளின் அமைப்பை உருவாக்கின.
1991இல் சோவியத் யூனியனும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோசலிசத்தை கைவிட்ட பிறகு வார்சா ஒப்பந்த அமைப்பும் இல்லாமல் ஆகியது. நாளடைவில் அணிசேரா அமைப்பும் செயலிழந்துவிட்டது. ஆனால் நேட்டோ தொடர்ந்து விரிவடைந்தது. முதலாளித்துவ நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, தாங்கள்தான் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மேலாதிக்கம் பெற வேண்டும் என்று கொண்டிருந்த பேராசையின் வெறிதான் இதற்கு அடிப்படையான காரணம். இந்த வெறியின் ராணுவ முகம்தான் நேட்டோ. எனவே, கிட்டத்தட்ட அனைத்து முன்னாள் சோசலிச நாடுகளையும் நேட்டோ தனது வளையத்திற்குள் கொண்டு வந்தது. பின்னர் எஸ்தோனியா/லத்திவியா/லிதுவேனியா ஆகிய முன்னாள் சோவியத் குடியரசுகளையும் சேர்த்தது. இறுதியாக 2008ஆம் ஆண்டு உக்ரைன் மற்றும் ஜார்ஜியாவை இணைக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியது. அன்றிலிருந்துதான் ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் ஆழமான பிரச்சனைகள் உருவாயின. இந்த பிரச்சனைகளின் மையமாக உக்ரைன் உருவெடுத்தது.
நேட்டோவை நாங்கள் விரிவாக்கம் செய்ய மாட்டோம் என ஒரு போதும் உறுதி அளிக்கவில்லை என இப்பொழுது அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இது வடிகட்டிய பொய் ஆகும். 1991ஆம் ஆண்டே போலந்து நேட்டோவில் சேர விண்ணப்பித்தது. ஆனால் ஜெர்மனி இதனை கடுமையாக எதிர்த்தது. இது குறித்து அமெரிக்கா/ ஜெர்மனி/ பிரான்சு/பிரிட்டன் ஆகிய நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் 06.03.1991இல் பான் நகரில் நடந்தது. அதில் ஜெர்மனியின் பிரதிநிதியான ஜுர்கன் ஸ்ரோபோக் கீழ்கண்டவாறு கூறினார்:
“ஜெர்மனியின் எல்பே நதிக்கு அப்பால் நேட்டோவை விரிவாக்குவது இல்லை எனும் உறுதிமொழியை நாம் ரஷ்யாவுக்கு தந்துள்ளோம். எனவே போலந்தின் கோரிக்கையை நாம் ஏற்க இயலாது”.
1992ஆம் ஆண்டிலிருந்தே பல அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நேட்டோவை கிழக்கே விரிவாக்கம் செய்வது ரஷ்யாவை போருக்கு தள்ளிவிடும் என எச்சரித்துள்ளனர். அந்த எச்சரிக்கைகளில் சில:
- 1997ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் ராணுவ அமைச்சராக இருந்த ராபர்ட் மக்னமாரா சி.ஐ.ஏ. இயக்குநர் ஸ்டேன்ஸ் டர்னர் உட்பட 12க்கும் அதிகமானவர்கள் இணைந்து பில் கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில் “நேட்டோவை கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்வது வரலாற்று பிழையாக மாறி விடும்” என எச்சரித்தனர்.
- பனிப்போர் காலத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுத்தவர்களில் ஒருவரான ஜார்ஜ் கேனன் 1990களிலேயே கீழ்கண்டவாறு கூறுகிறார்:
“கிழக்கு பகுதியில் நேட்டோவை விரிவாக்கம் செய்வது பனிப்போரின் பிந்தைய காலகட்டத்தின் மிகப்பெரிய தவறான கொள்கையாகும். இது பல விரும்பத்தகாத விளைவுகளை உருவாக்கும். அமெரிக்க-ரஷ்யா உறவை சீர்குலைத்துவிடும். ரஷ்யா நிரந்தர எதிரியாக ஆகிவிடும்”
- ரஷ்ய விவகாரங்கள் குறித்த ஆய்வாளர் ஸ்டீபன் கொஹேன் 2014ஆம் ஆண்டு கூறினார்:
“நாம் நேட்டோவை ரஷ்யாவை நோக்கி விரிவாக்கம் செய்வது என்பது பிரச்சனையை ராணுவமயமாக்கிவிடும். ரஷ்யா பின்வாங்காது. வாழ்வா-சாவா போராட்டமாக ரஷ்யா இதனை பார்க்கும்”
- அமெரிக்காவின் பிரபல வெளியுறவு கொள்கை நிபுணர் ஹென்ரி கிசிங்கர் 2014இல் கூறினார்:
“உக்ரைனை நேட்டோவில் சேர்க்க கூடாது. அவ்வாறு சேர்த்தால் உக்ரைன் கிழக்கு- மேற்கத்திய நாடுகளின் போர்க்களமாக மாறிவிடும். ரஷ்யா நிரந்தரமாக எதிர் தரப்பில் நிற்கும் ஆபத்து உருவாகும்.”
- 2008ஆம் ஆண்டில் சி.ஐ.ஏ.வின் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் அமெரிக்க தலைமையகத்துக்கு அனுப்பிய ஒரு குறிப்பில் கீழ்கண்டவாறு கூறுகிறார்:
“உக்ரைனை நேட்டோவில் இணைப்பது குறித்து உக்ரைன் மக்களிடையே செங்குத்தான பிளவுபட்ட கருத்து நிலவுகிறது என ரஷ்யா கவலை அடைந்துள்ளது என நமது நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உக்ரைனில் உள்ள ரஷ்ய இன மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இத்தகைய பிளவு கடும் விளைவுகளை உருவாக்கும். மோசமான சூழலில் இது உள்நாட்டு போருக்கும் வழிவகுக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில் உக்ரைனில் தலையிடும் முடிவு எடுக்க வேண்டி வரும் என ரஷ்யா கவலைப்படுகிறது. அத்தகைய சூழலை ரஷ்யா விரும்பவில்லை.”
இவ்வளவு எச்சரிக்கைகளையும் அறிவுறுத்தல்களையும் மீறித்தான், நேட்டோ விரிவாக்கம் திட்டமிடப்பட்டது. அமெரிக்க அரசியல் தலைமை தனது மேலாதிக்கத்தை ஐரோப்பாவில் நிறுவுவதற்காக, ரஷ்யாவை போருக்கு தள்ளினால் தவறு இல்லை எனும் முடிவுக்கு வந்தது என்பதையே இது காட்டுகிறது. அமெரிக்க ஏவுகணைகள் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் எல்லையிலும் படைகள் நிறுத்தப்படும் என்றால், அது தனது பாதுகாப்பிற்கு ஆபத்து என்று ரஷ்யா கருதுகிறது. உக்ரைன் எல்லையிலிருந்து ஏவுகணைகள் 10 முதல் 15 நிமிடங்களுக்குள் மாஸ்கோவை தாக்கிவிடும். 2008ஆம் ஆண்டு உக்ரைனையும் ஜார்ஜியாவையும் நேட்டோவில் இணைக்கும் அமெரிக்காவின் விருப்பம் ரஷ்யாவிடம் கடும் எதிர்ப்பை விளைவித்தது. அதே போல் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சமீபத்தில் அணுஆயுதங்களை நிறுவ உக்ரைன் முனைப்புடன் உள்ளது என பேசினார். இவையும் ரஷ்யாவின் அச்சத்தை அதிகரித்தன.
உக்ரைன் அரசியலில் அமெரிக்க தலையீடு
உக்ரைன் நாட்டின் உள் அரசியலில் ஒரு திருப்புமுனையாக 2014ஆம் ஆண்டினை பார்க்கலாம். அதற்கு முன்பாக, 2010இல் நடந்த தேர்தலில் விக்டர் யோனுகோவிச் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதே உக்ரைன் மேற்கு பகுதியும் கிழக்கு பகுதியும் பல்வேறு பண்பாடு, அரசியல் அம்சங்களில் பிளவுபட்டிருந்தன. கிழக்கு பகுதியில் வாழும் மக்கள் ரஷ்ய மொழியும், மேற்கு பகுதி மக்கள் உக்ரைன் மொழியும் பெரும்பான்மையாக பேசுகின்றார்கள். எனவே, கிழக்கு பகுதி மக்கள் ரஷ்யாவின் ஆதரவாளர்களாகவும், மேற்கு பகுதி மக்கள் ரஷ்ய எதிர்ப்பாளர்களாகவும் மாறும் வகையில் பல கருத்துகள் கட்டமைக்கப்பட்டன. இதில் அமெரிக்காவின் பங்கு மிக முக்கியமானது.
ஜனாதிபதி யோனுகோவிச் தொடக்கத்தில் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டினார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அமெரிக்க முதலீடுகள் உக்ரைனுக்கு வரவில்லை. எனவே அவர் ரஷ்யாவுடன் முதலீடுகளுக்காகவும், பொருளாதார ஒத்துழைப்புக்காகவும் ஒப்பந்தம் போட்டார். உக்ரைன் தனது பிடியிலிருந்து நழுவுகிறது என்பதை உணர்ந்த அமெரிக்கா, மேற்கு உக்ரைன் மக்களை யோனுகோவிச்சுக்கு எதிராக தூண்டியது. 2014ஆம் ஆண்டில் ஏராளமான கலவரங்கள் நடைபெற்றன. இந்த கலவரங்களை உருவாக்குவதில் உக்ரைன் நாட்டில் இயங்கும் நாஜி ஆதரவாளர்கள் முக்கிய பங்கை ஆற்றினார்கள். “மைதான் புரட்சி” என ஊடகங்களால் அழைக்கப்பட்ட இந்த கலவரங்களின் காரணமாக யோனுகோவிச் பதவி விலகினார். பின்னர் பதவியேற்ற ஜனாதிபதிகள் கிழக்கு உக்ரைன் மக்களுக்கு எதிராக விஷம் கக்கினார்கள். ரஷ்யா மீது வன்மத்தை வெளிப்படுத்தினார்கள். இப்படியான பின்னணியில் கிரீமியா தீவினை ரஷ்யா தன்னோடு இணைத்து கொண்டது. ஏனெனில் ரஷ்யாவின் முக்கிய கப்பற்படை தளம் அங்கு இருந்தது.
டோன்பாஸ் எனப்படும் பகுதியில் உள்ள லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் ஆகிய மாநிலங்களில் உள்ள ரஷ்ய மொழி பேசும் மக்கள் தங்களுக்குள் பொது வாக்கெடுப்பு நடத்தி தங்களை சுயாட்சி பிரதேசங்களாக அறிவித்து கொண்டன. உக்ரைனில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் தாக்கப்படுவது ரஷ்யாவில் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அவர்களுக்கு ரஷ்ய அரசாங்கம் உதவ வேண்டும் எனும் கருத்து மக்களிடையே இருந்தது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண 2015ஆம் ஆண்டு மின்ஸ்க் நகரில் உக்ரைன்/ரஷ்யா/பிரான்ஸ்/ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையே பேச்சு வார்த்தைகள் நடந்தன. இறுதியில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்;
- லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் பகுதிகளுக்கு உக்ரைன் அரசாங்கம் சுயாட்சி வழங்குவது. ரஷ்ய மொழியை அங்கீகரிப்பது.
- லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் மக்கள் பிரிவினை எண்ணத்தை கைவிடுவது. உக்ரைனின் ஒன்றுபட்ட தன்மையை பாதுகாப்பது.
எனினும் இந்த ஒப்பந்தம் அமலாக்கப்படவில்லை. நடைமுறையில் ரஷ்ய மொழி உதாசீனப்படுத்தப்பட்டது. லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் மக்கள் மீது தாக்குதல்களும் தொடர்ந்தன. அன்றிலிருந்து கிழக்கு உக்ரைன் பகுதி மக்கள் மீது உக்ரைன் ராணுவமும், நாஜி சித்தாந்தவாதிகளும் ஏராளமான தாக்குதல்களை நடத்தினர். கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 18,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நாஜிக்களை ஊக்கப்படுத்திய நேட்டோ
உக்ரைனில் கடந்த 10 ஆண்டுகளாக வலதுசாரி பயங்கரவாதிகளும் நாஜி சித்தாந்தவாதிகளும் பெரும் எண்ணிக்கையில் உருவாகியுள்ளனர். இவர்களை ஆதரிப்போர் உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். நேட்டோவின் ஆய்வு அமைப்பான “அட்லாண்டிக் கவுன்சில்” இவர்களை ஆதரித்தும் புகழ்ந்தும் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.
நாஜி அமைப்புகளில் முக்கியமானது “அசோவ் பட்டாலியன்” என்ற அமைப்பாகும். அசோவ் பட்டாலியன் கோட்பாடுகள் என்ன?
- உக்ரைன் மக்கள் பரிசுத்த வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள்.
- கிழக்கு உக்ரைனில் வசிக்கும் ரஷ்யர்கள் அசுத்தமான ரத்தம் உடையவர்கள். அவர்கள் உக்ரைனின் பரிசுத்த ரத்தத்தை மாசுபடுத்த முயல்கின்றனர்.
- எனவே கிழக்கு உக்ரைன் மக்களை அடிமைப்படுத்த வேண்டும். தேவை எனில் அவர்களை படுகொலை செய்ய வேண்டும்.
இட்லரின் பல்வேறு நாஜி அடையாளங்களை இந்த அமைப்பு பயன்படுத்துகிறது. இத்தகைய கோட்பாடுகளை கொண்ட அமைப்பை நேட்டோ அமைப்பு ஆதரித்தது; இன்றும் ஆதரிக்கிறது. அசோவ் பட்டாலியன் என்ற இந்த அமைப்புதான் 2014ஆம் ஆண்டில் நடந்த கலகங்களில் முக்கிய பங்கை ஆற்றியது. பின்னர் உக்ரைன் ராணுவத்தின் ஒரு பகுதியாக அது இணைக்கப்பட்டது. டோன்பாஸ் பகுதியில் வாழும் ரஷ்ய மொழி சிறுபான்மையினரை கொன்று குவித்ததும் இந்த அமைப்புதான். இந்த அமைப்பின் கொடூரங்கள் அனைத்தும் நேட்டோ அமைப்புக்கு நன்றாக தெரியும். சில அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்த வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தனர். அமென்ஸ்டி மனித உரிமை அமைப்பும் இந்த அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என கோரியது. அமென்ஸ்டி தனது அறிக்கையில் கூறியது:
“பயங்கரவாத அமைப்புகள் செயல்படுத்தும் கட்டுப்படுத்தப்படாத வன்முறையில் உக்ரைன் சிக்கி மூழ்கி கொண்டுள்ளது. கொடூரங்களை நிகழ்த்தும் இந்த அமைப்புகள் எவ்வித தண்டனைக்கும் உள்ளாக்கப்படுவது இல்லை.”
ஆனால், “அசோவ் பட்டாலியன்தான் நாம் ரஷ்யாவுக்கு தரும் பரிசு” என அட்லாண்டிக் கவுன்சில் கருத்து தெரிவித்தது. எத்தகைய வன்மம் நேட்டோவுக்கு உள்ளது என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.
அமெரிக்க செனட் நாடாளுமன்ற உறுப்பினர் பாப் மெனென்டஸ் உக்ரைனுக்கு 500 மில்லியன் டாலர் அதாவது சுமார் 3,800 கோடி ரூபாய் அளவுக்கு ஆயுதங்களை வழங்கிட தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இந்த ஆயுதங்கள் நாஜிக்களின் கைகளுக்கு செல்வதை தடுக்க என்ன வழிமுறைகள் உள்ளன என அவரிடம் கேட்ட பொழுது “நாம் ஏன் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்?” என பதில் கூறினார்.
புடினின் தேசிய வெறி
ரஷ்யாவை நேட்டோ சுற்றி வளைப்பதையும் உக்ரைனில் உள்ள ரஷ்ய மொழி சிறுபான்மையினரை பாதுகாப்பதும் முக்கியம்! இது குறித்த புடினின் கவலை நியாயமானது; அது ரஷ்ய மக்களின் கவலையை பிரதிபலிக்கிறது. ஆனால் தனது போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்த லெனின் மற்றும் ஸ்டாலின் முன்னெடுத்த தேசிய இனக் கொள்கைகளை புடின் இழிவுபடுத்துகிறார். உக்ரைன் எனும் நாடு வரலாற்றில் இருந்ததே இல்லை எனவும், அதனை உருவாக்கியது லெனினும் ஸ்டாலினும்தான் எனவும் புடின் கூறுகிறார். சுயநிர்ணய உரிமை தந்தது மிகப்பெரிய தவறு எனவும், அதனால்தான் சோவியத் ஒன்றியம் சிதறுண்டது எனவும் குற்றம் சாட்டுகிறார். “மகா ரஷ்யா” எனும் கோட்பாட்டையும் வலியுறுத்தும் புடின், உக்ரைன் ஒரு தேசமாக நீடிக்க உரிமை இல்லை எனவும் கூறுகிறார்.
புடின் போன்ற முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு, தேசிய பிரச்சனையில் கம்யூனிஸ்டுகள் முன்வைக்கும் கோட்பாடுகள் பிடிக்காமல் போவதில் ஆச்சர்யம் இல்லை. ஜார் மன்னனின் ரஷ்ய சாம்ராஜ்யம் பல தேசிய இனங்களை அடிமைப்படுத்தியிருந்தது. எனவேதான் “ரஷ்யா தேசிய இனங்களின் சிறைச்சாலை” என லெனின் வர்ணித்தார். சுயநிர்ணய உரிமை வழங்கப்படாவிட்டால் எந்த ஒரு குடியரசும் சோவியத் ஒன்றியத்தில் இணைந்திருக்காது. சோவியத் ஒன்றியம் வெறும் ரஷ்யாவாகவே இருந்திருக்கும்.
தற்போது, “மகா ரஷ்யா” எனும் சாம்ராஜ்யத்தை உருவாக்கும் எந்த வாய்ப்பும் இல்லை என்பதை புடின் உணர மறுக்கிறார். சோவியத் ஒன்றியம் சிதறுண்டது மனித குலத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுதான். ஆனால் அதற்கு காரணம் சுயநிர்ணய உரிமை அல்ல.
ரஷ்யாவின் ராணுவ பாதுகாப்பு மற்றும் உக்ரைனில் உள்ள ரஷ்ய மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எனும் இரு நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட வேறு எந்த இலக்கையும் உக்ரைன் படையெடுப்பு மூலம் சாதிப்பதற்கு புடின் முயன்றால், அது விரும்பத்தகாத விளைவுகளையே தோற்றுவிக்கும். உலகின் இரு மிகப்பெரிய தேசங்களான சீனாவும், இந்தியாவும் மற்றும் சில நாடுகளும் ரஷ்யாவின் நியாயமான கவலையை ஏற்கிறார்கள். அதே சமயம், புடினின் நோக்கம் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி நீளுமானால், உலக நாடுகளின் எதிர்ப்பையே அவர் சம்பாதிக்க நேரிடும்.
பாசிச எதிர்ப்பு போரில் உலக மக்களின் ஆதரவை பெற்றார் ஸ்டாலின். ஆனால் புடின் ஸ்டாலின் அல்ல. உக்ரைனில் ஒருவேளை ரஷ்யா வெற்றியடையுமானால், அதுவும் ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும்.
முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மை முகம்
ரஷ்ய படைகள் உக்ரைனில் நுழைந்ததுமே பல முதலாளித்துவ நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இது எதிர்பார்த்த ஒன்றுதான். எனினும், அதன் மூர்க்கத்தனம் எல்லையில்லாமல் விரிவடைந்தது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தங்களை திரும்ப பெற்றன. ரஷ்யாவில் செயல்பட்ட ஷெல் போன்ற நிறுவனங்கள் தமது செயல்பாட்டை நிறுத்தின. ஆப்பிள் நிறுவனம்/சாம்சங்/வால்வோ இப்படி பலநிறுவனங்கள் வெளியேறின. ரஷ்ய வங்கிகள் ‘ஸ்விப்ட்’ எனப்படும் நிதி பரிவர்த்தனையை பயன்படுத்த முடியாத அளவுக்கு தடைகள் விதிக்கப்பட்டன. ஐரோப்பா மற்றும் அமெரிக்க வான்வெளிகளில் ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. தன்னுடன் முரண்பட்டால் எந்த ஒரு நாட்டையும் மண்டியிட வைக்க முடியும் என முதலாளித்துவ உலகம் முயல்கிறது. கால்பந்து/ஹாக்கி/மோட்டார் பந்தயம்/மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகள் என அனைத்து விளையாட்டு போட்டிகளிலுமிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பூனைகளுக்கும் யோக் மரங்களுக்கும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்த தடைகளால் பாதிக்கப்படப்போவது புடின் அல்லது பிற அரசியல்வாதிகள் அல்ல; ரஷ்ய மக்கள்தான்.
ரஷ்ய ஊடகங்கள் முழுவதும் ஐரோப்பா/அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளன. தொலை காட்சி விவாதங்களில் ரஷ்யாவை சிறிதளவு ஆதரித்து பேசுவோரும் வெளியேற்றப்படுகின்றனர். டோன்பாஸ் பகுதியில் 5 ஆண்டுகளாக ரஷ்ய மொழி பேசும் மக்கள் அடைந்த துன்பங்களை ஆய்வு செய்த ஒரு ஃபிரான்சு பத்திரிக்கையாளர் தனது அனுபவத்தை சொன்னதற்காக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பி.பி.சி./கார்டியன் போன்ற புகழ்பெற்ற ஊடகங்கள் கூட பொய்ச் செய்திகளை தாராளமாக பரப்பின. முதலாளித்துவ ஊடகங்கள் தமது அரசுகளின் கருத்துகளை மட்டுமே மக்கள் கேட்க வேண்டும் என எண்ணுகின்றன. எதிர்த்தரப்பு கருத்துகளை மக்கள் கேட்க கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டுள்ளன. இது முதலாளித்துவ ஜனநாயகம். இந்த ஜனநாயகத்தில் மாற்று கருத்துக்கு இடமில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் போர் முதலாளித்துவத்தின் நிறவெறியை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு தொலைகாட்சி செய்தியாளர் கூறினார்:
“இது சிரியாவோ அல்லது ஆப்கானிஸ்தானோ அல்ல; நாகரிக ஐரோப்பா. இங்கு தாக்குதல் நடக்கிறது”
அப்படியானால் சிரியாவும் ஆப்கானிஸ்தானும் நாகரிகமற்ற காட்டுமிராண்டி தேசங்களா?
இன்னொரு செய்தியாளர் கூறினார்:
“நெஞ்சம் பதைக்கிறது. ஊதா கண்களும் பொன் நிறத்திலான முடியையும் உடைய மக்கள் தாக்கப்படுகின்றனர்.”
அப்படியானால் மற்றவர்கள் தாக்கப்பட்டால் பரவாயில்லையா? ஆம். அப்படிதான் அந்த ஊடகங்கள் முன்வைக்கின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த அதே நாளில் அமெரிக்க விமானங்கள் சோமாலியா மீது குண்டு பொழிந்தன. அமெரிக்க ஆதரவுடன் சவூதி படைகள் ஏமன் மீது தாக்குதலை நடத்தின. இஸ்ரேல் விமானங்கள் பாலஸ்தீனம் மீது தாக்குதல்கள் நடத்தின. இஸ்ரேல் ராணுவத்தினர் 15 வயது பாலஸ்தீன் பெண்ணை சித்திரவதை செய்து கொன்றனர். இது குறித்த காணொளி பரவலாக வலம் வந்தது. அமெரிக்காவின் ஆசியோடு ஏமன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3,00,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 70% பேர் குழந்தைகள். ஆனால் இவை குறித்து முதலாளித்துவ ஊடகங்களில் ஒரு விவாதம் கூட இல்லை.
மேற்கத்திய ஊடகங்களின் செய்தி மற்றும் கட்டுரைகள் வெளியிடப்பட்டதில் பாரபட்சத்தை பாருங்கள்:
- உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்- 1400
- சவூதி ஏமன் மீது தாக்குதல்-0
- இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்- 5.
சிறிது நாட்கள் முன்புவரை அரேபிய அல்லது ஆப்பிரிக்க அகதிகளுக்கு அனுமதியில்லை என கூறிய போலந்து போன்ற நாடுகள் இன்று உக்ரைன் அகதிகளை இரு கரம் கூப்பி வரவேற்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு வெடி பொருட்கள் பார்சல் அனுப்பப்பட்டன. நெதர்லாந்தில் ரஷ்யர்களுக்கு சொந்தமான உணவுவிடுதி தாக்கப்பட்டது. அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ரஷ்யாவை சேர்ந்த எவராவது புடினை கொன்று விடுவது ரஷ்யாவின் எதிர்காலத்துக்கு நல்லது என பகிரங்கமாக கூறியுள்ளார். இவையெல்லாம் முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுகிறது.
முதலாளித்துவம் கைவிட்ட முதலாளித்துவ குழந்தை
ரஷ்யா சோசலிசத்தை கைவிட்ட பொழுது அதன் ஒரே கனவு முதலாளித்துவ உலகம் தன்னை சம பங்காளியாக கருதி அரவணைத்து கொள்ளும் என்பதுதான். அந்த விருப்பத்துடனேயே அனைத்து அரசு நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்பட்டன. கம்யூனிச கருத்துகளும் அவற்றை கடைப்பிடிப்போரும் வேட்டையாடப்பட்டனர். லெனின் மற்றும் ஸ்டாலின் சிலைகள் உடைக்கப்படடன. தாராளமய பொருளாதார கொள்கைகள் அமலாக்கப்பட்டன. அந்தோ பரிதாபம்! முதலாளித்துவ உலகம் ரஷ்யாவை தனது சம பங்காளியாக பார்க்கவில்லை. மாறாக தனக்கு அடிபணிந்து இருக்கும் ஒரு நாடாக ரஷ்யா இருக்க வேண்டும் என்றே கருதியது.
மார்க்சிய ஆய்வாளர் டேவிட் ஹார்வி ஒரு சுவையான ஒப்பீட்டை முன்வைக்கிறார். இரண்டாம் உலகப்போரில் துவம்சம் செய்யப்பட்ட நாடுகள் ஜப்பானும் ஜெர்மனியும். ஆனால் இந்த இரு நாடுகளையும் மறுநிர்மாணம் செய்ய ஏராளமான நிதி உதவிகளை முதலாளித்துவ உலகம் செய்தது. அதற்கு “மார்ஷல் திட்டம்” எனவும் பெயரிட்டது. ஆனால் சோசலிசத்தையே தூக்கி எறிந்த ரஷ்யாவுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. குறைந்தபட்சம் ஐரோப்பிய நாடுகள் கூட ரஷ்யாவை அரவணைக்க முன்வரவில்லை.
அதே சமயத்தில் சோவியத் ஒன்றியத்தின் ஒரு வலிமையே ரஷ்யாவை தொடர்ந்து பாதுகாத்தது. அதுதான் ராணுவ வலிமை. புடினை பார்த்து ஓரளவு முதலாளித்துவ நாடுகள் அச்சப்படுகின்றன என்றால் அதற்கு முக்கிய காரணம் ராணுவ வலிமைதான்! இதற்கு புடின் ஸ்டாலினுக்கும் அவருக்கு பின்னால் ஆட்சியிலிருந்த ஏனைய கம்யூனிஸ்டு தலைவர்களுக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர். “சமாதானத்துக்கு சமாதானம்! ஏவுகணைக்கு ஏவுகணை” என முழக்கமிட்ட யூரி ஆண்ட்ரோபோவ் போன்றவர்கள்தான் இந்த ராணுவ வலிமையை உருவாக்கினர்; பாதுகாத்தனர். இப்போது இந்த ராணுவ வலிமையைதான் முதலாளித்துவ நாடுகள் சிதைக்க முயல்கின்றன.
இந்த போர் எப்படி முடியும் என்பது இக்கட்டுரை எழுதப்பட்ட சமயத்தில் தெளிவற்றதாகவே இருந்தது. எனினும், ஏற்கெனவே இரு தரப்பிலும் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. உக்ரைனின் ஆலைகளும் கட்டடங்களும் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.
உலக அளவில் கம்யூனிஸ்டுகள் ஒரே குரலில்தான் ஒலிக்கிறார்கள்:
- போர் தொடர்வதில் எந்த நியாயமும் இல்லை. போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- நேட்டோ தனது விரிவாக்கத்தை கைவிட வேண்டும்.
- ஐரோப்பாவில் உள்ள அணு ஆயுதங்கள் அகற்றப்பட வேண்டும்.
- உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்களின் வாழ்வும் பண்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும்.
- உக்ரைன் சமாதான வழியில் பயணிப்பதை உத்தரவாதம் செய்யவேண்டும்.
இதுதான் சரியான பார்வையாக இருக்க முடியும்.
ஆதாரங்கள்: Consortiumnews/ Fair.org/davidharvey.org/Mint Press/MR online/ Newsclick/ RT.com/ Tricontinental newsletter/multipolarista.
Leave a Reply