சுபாஷிணி அலி
உத்திரப் பிரதேச மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் குறித்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன் வரை, உ.பி. மாநிலத்தின் ஆளும் கட்சியான பாஜக, அதன் பலவகையான தோல்விகள் மற்றும் கொடூரமான கொள்கைகளுக்குப் பிறகும் கூட எவராலும் எதிர்த்து நிற்க முடியாத வலிமைபெற்ற ஒரு கட்சியாகவே பெரும்பாலான அரசியல் விமர்சகர்களால் கருதப்பட்டது. 2017ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 39.67% வாக்குகளைப் பெற்று பாஜக வெற்றி பெற்றது. இத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும் (பிஎஸ்பி) சமாஜ்வாதி கட்சியும் (எஸ்பி) முறையே 22.23% மற்றும் 21.82% வாக்குகளைப் பெற்று பின்தங்கியிருந்தன. இவ்விரு கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்குவிகிதம் பாஜகவை விட அதிகமாக இருந்த அதேநேரத்தில், 2019 மக்களவை தேர்தலில் அவை கூட்டாகப் போட்டியிட்டபோது, தங்கள் ஆதரவு வாக்குகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதில் வெற்றி பெறவில்லை என்பதைக் கண்டோம். இத்தேர்தலில் பாஜகவின் வாக்குவிகிதம் 49.56% ஆக உயர்ந்த அதேநேரத்தில், பிஎஸ்பி மற்றும் எஸ்பி ஆகிய கட்சிகளின் வாக்குவிகிதம் முறையே 19.26% மற்றும் 17.96% ஆகக் குறைந்தது. இவ்வகையில் வலுவான மாநிலக் கட்சிகளின் ஒரு கூட்டணியோ அல்லது அவற்றில் எந்தவொரு கட்சியும் தனியாக நின்றோ, ஆளும் பாஜகவின் தேர்தல்ரீதியான வலிமையில் எவ்வித சேதாரத்தையும் ஏற்படுத்த இயலாது என்றே தோன்றியது.
2017 சட்டமன்றத் தேர்தல் உத்திகள்
2017 மாநில சட்டமன்றத்தில் வெற்றி பெற பாஜக மிகச் சிறப்பானதொரு நடைமுறை உத்தியை வடிவமைத்து இருந்தது. உயர்வகுப்பு சாதியினரிடையே தமக்கிருந்த வலுவான அடித்தளத்தை நிலைநிறுத்திக் கொண்ட அதே நேரத்தில், மாநிலத்தின் மிகப்பெரிய, அரசியல் ரீதியாக முன்னேறிய துணைச் சாதியும், செல்வி மாயாவதியின் சாதியும் ஆன ஜாதவ் பிரிவு அல்லாத, பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியின்போது புறக்கணிக்கப்பட்ட மிகப்பெரும் பிரிவினரை அவர்களது பிரச்சனைகளின்மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்; கூடுதலாக அரசியல் பொறுப்புகள் வழங்கப்படும் என்று உறுதிமொழிகளை வாரிவழங்கி, அவர்களை தன்பக்கம் ஈர்த்துக் கொள்ளவும் அதனால் முடிந்தது.
மாயாவதியின் ஆட்சி ஜாதவ் பிரிவினருக்கு ஆதரவாகவும், அவர்களை முன்னிறுத்துவதாகவுமே இருந்தது என்பதே இந்தப் பெரும்பிரிவினரின், மேலும் பொதுவான மக்களின், கருத்தாக இருந்தது. யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரிடையேயும் கூட இதேபோன்ற உத்தியை பயன்படுத்தி பாஜக தனக்கான ஆதரவை அதிகரித்துக் கொண்டது. கடந்த பல தசாப்தங்களாகவே அக்கட்சிக்கான ஆதரவுத் தளம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்போது மிகச் சிறிய அளவில் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழுக்களின்மீது இலக்கு வைப்பது, (மீனவர்/படகோட்டி சாதியைச் சேர்ந்த) நிஷாத் கட்சி, கிழக்கு உத்திரப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் கணிசமாக வசித்து வரும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியான ராஜ்பார் இனத்தவரின் கட்சியான சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி) ஆகிய சாதி அடிப்படையிலான கட்சிகளுடன் கூட்டு வைப்பது போன்ற உத்திகளின் மூலம் இந்த ஆதரவுத் தளம் பெருமளவிற்கு அதிகரித்தது. யாதவர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த முக்கியமான சில தலைவர்களையும் பாஜக வெற்றிகரமாகக் கவர்ந்திழுத்தது. அவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியை கைவிட்டனர்.
இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்த இந்தக் குழுக்களுக்கும் குர்மிக்கள், லோதிகள் போன்ற பெரும் எண்ணிக்கையிலான இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இடையே நிலவிய பொதுவான கருத்து என்பது சமாஜ்வாதி கட்சி யாதவரை செழிக்கவைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒரு கட்சி என்பதாகும். பாஜக இதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, நிலம், நகர்ப்புற-கிராமப்புற சொத்துக்கள் மற்றும் சமூகப் படிநிலை ஆகியவற்றில் தொடர்ந்து மேலாதிக்கம் செலுத்தி வரும் உயர்வகுப்பு சாதிகளுடன் தலித்களுக்கும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் (நீண்டகாலமாகவே) இருந்து வரும் முரண்பாடுகளை காணாமல் போகச் செய்வதிலும் வெற்றி பெற்றது. தனது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கான அறைகூவலோடு கூடவே, தலித் துணைப் பிரிவுகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட யாதவ் இல்லாத சாதிப் பிரிவினருக்கும் யாதவ்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை திறம்பட கையாண்டதன் விளைவாக, மொத்தமுள்ள 403 இடங்களில் 325 இடங்களை கைப்பற்றி மிகப்பெரும் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிக் கட்டிலில் ஏறியது. அதே நேரத்தில் பிஎஸ்பியும் எஸ்பியும் முறையே 19 மற்றும் 47 இடங்களுடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
2017 மற்றும் 2019 தேர்தல்களில் பாஜகவுக்கும் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கும் வாக்கு விகிதத்தில் இருந்த இடைவெளி முழுமையாக நீக்கி விட முடியாது என்னுமளவிற்கு மிகப்பெரியதாக இருந்தது. இந்நிலையில் பாஜக தோற்கடிக்கப்பட முடியாத ஒரு சக்தியாகவே தோற்றம் அளித்தது. இத்தகைய தேர்தல் தோல்விகளால் இந்த இரண்டு கட்சிகளுமே மிகவும் மனமுடைந்து போனதோடு, செயலற்றதொரு நிலைக்கும் சென்று விட்டன. சமாஜ்வாதி கட்சியை ஒப்பிடுகையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை தீவிரமாக எதிர்க்க முன்வராததோடு, ஏழைகள், பெண்கள், தாக்குதலுக்கு ஆளாகும் தலித்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் போன்ற பிரிவினருக்கான நிவாரணம் மற்றும் நியாயம் ஆகியவற்றுக்காகப் போராடவும் கூடத் தயங்கியது.
இத்தகையதொரு சூழ்நிலையில்தான் 2021ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை மாநிலத்தில் வேகமாக வீசிக் கொண்டிருந்த தருணத்தில் பஞ்சாயத்து தேர்தல்களை நடத்தியே ஆக வேண்டும் என பாஜக வற்புறுத்தியது. இத்தேர்தலில் கிடைக்கும் உறுதியான வெற்றி சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் எளிதாக வெற்றிபெறுவதற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையே இதன் அடிப்படையாகும். இத்தேர்தலுக்காக பாஜக மிக விரிவான தயாரிப்புகளைச் செய்தது. வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து, அவர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், தலைவர்கள் ஆகியோரை பணித்ததோடு, மட்டற்ற வகையில் தேர்தல் செலவுக்கான நிதி கிடைப்பதை உறுதிப்படுத்தி, மாநில அரசின் இயந்திரம் முழுவதையும் பயன்படுத்திக் கொண்டது. அதற்கு முற்றிலும் மாறாக, எதிர்க்கட்சிகளோ மற்ற கட்சிகளுடன் எவ்வித உடன்பாட்டிற்கும் வரவில்லை என்பதோடு, அந்தக் கட்சிகளுக்கு உள்ளேயே பிளவுபட்டு நின்றன. ‘அதிகாரபூர்வ’ வேட்பாளர்கள் எவரையும் அடையாளம் காண அவர்களால் இயலவில்லை.
வாக்குச்சீட்டின் அடிப்படையில் நடைபெற்ற இத்தேர்தலின் முடிவுகள் ஜூன் மாத மத்தியில் வெளியானது. இந்த முடிவுகள் பாஜகவிற்கு மிகப்பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக இருந்தன. பீப்பிள்ஸ் டெமாக்ரசி வார இதழில் நான் எழுதியிருந்த ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்: “மொத்தமுள்ள மாவட்ட பரிஷத் இடங்களில் பாஜக 954 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 1,000 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 300 இடங்களிலும் காங்கிரஸ் 70 இடங்களிலும் ராஷ்ட்ரீய லோக் தள் கட்சி 37 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. இத்தேர்தலின் தன்மை குறித்த விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. எனினும் இதில் நிச்சயமான அம்சம் என்னவெனில், மாவட்ட பரிஷத் இடங்களில் கணிசமான இடங்களை கைப்பற்றியிருந்த போதிலும், பாஜக தனது ஆதரவு தளத்தை இழந்துள்ளது. அதன் வலிமையான பகுதிகள் இப்போது அபாயத்திற்கு ஆளாகியுள்ளன. சமாஜ்வாதி கட்சி தன்னிச்சையான வகையில் முக்கிய எதிரியாக உருவாகியுள்ளதும் கூட முக்கியமானதோர் உண்மை ஆகும்.”
பாஜக அரசின் பல்வேறு தோல்விகளுக்கு எதிராக கிராமப்புற பகுதிகள் மட்டுமின்றி மாநிலத்தின் சிறுநகர மக்களிடையே பரவலான அதிருப்தியும் கோபமும் நிலவி வருவதையே இத்தேர்தல் முடிவுகள் நிச்சயமாக எடுத்துக் காட்டுகின்றன. இந்த முடிவுகள் சமாஜ்வாதி கட்சி (சட்டமன்ற தேர்தல் குறித்த) தனது செயல்பாடுகளை தொடங்குவதற்குத் தூண்டி விட்டதோடு கூடவே, மாவட்ட பரிஷத் தலைவர்களுக்கான தேர்தல் மட்டுமின்றி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளிலும் எதையும் விட்டுவிடாதவாறு பாஜகவினையும் தூண்டியது. இவ்வகையில் குண்டர் படை மற்றும் காவல்துறையின் வன்முறையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, இதுவரை கண்டிராத வகையில் பண பலம், ஆள் பலம் ஆகியவற்றை வெளிப்படுத்தி, மாவட்ட பரிஷத் தலைவர் பதவிகளை அக்கட்சி வென்றது. மேலும் மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்திலும், சிறு நகரத்திலும், பெரு நகரத்திலும் தனது இந்துத்துவா, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு, சாதிய அடிப்படையிலான ஏற்பாடுகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் பணியிலும் அது தீவிரமாக இறங்கியது.
பகுஜன் சமாஜ் கட்சியை விட கவனம் கொள்ளத் தக்க வகையில் முன்னுக்கு வந்ததன் மூலம் மிக முக்கியமான சாதகமான நிலையை சமாஜ்வாதி கட்சி பெற்றதோடு, பாஜகவிற்கு வலுவான எதிர்க்கட்சியாகவும் அது உருப்பெற்றது. ராஷ்ட்ரீய லோக் தள் மற்றும் இதர சிறிய சாதி அடிப்படையிலான கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் அதன் நிலைமை மேலும் வலுப்பெற்றது. இதில் முதலாவது வெற்றி என்பது அனைத்து வகையிலும் மேல் சாதியினருக்கே சாதகமாக இருக்கும் அதே நேரத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதன் அடிப்படையில் 2019ஆம் ஆண்டில் மிக முக்கியமான அமைச்சர் பதவியை துறந்து பாஜக அரசிலிருந்து விலகிக் கொண்ட எஸ்பிஎஸ்பி கட்சியுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணி ஆகும்.
மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்ள ஒன்றிய அரசுக்கு நெருக்கடி தந்ததன் மூலம் விவசாயிகளின் இயக்கம் இதுவரை கண்டிராத வெற்றியை பெற்றது. இது மோடி அரசை தோற்கடிக்க முடியும் என்ற பொதுவான உணர்வையும் நம்பிக்கையையும் மக்களிடையே உருவாக்கியது. இத்தகைய உணர்வு உத்திரப் பிரதேச மாநிலத்திலும் பரவலாக நிலவியதோடு, எதிர்க்கட்சிகளுக்கும் அது உதவி செய்தது. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பாக, பாஜக அரசில் இடம்பெற்றிருந்த இதர பிற்பட்ட வகுப்புகளை சேர்ந்த ஐந்து முக்கியமான தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, மேலும் பல சட்டமன்ற உறுப்பினர்களையும் தங்களோடு சேர்த்துக் கொண்டு சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். இவர்கள் அனைவருமே யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் முக்கியமான தலைவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் விளைவாக, சமாஜ்வாதி கட்சியின் தலைமையிலான கூட்டணி இதற்கு முன்பு நிலவிய விரக்தியான நிலைமையைப் போன்று இல்லாமல், மிகுந்த நம்பிக்கையுடன் தேர்தல் களத்தில் குதித்தது. இந்த மாபெரும் கூட்டணி நடத்திய பேரணிகளும் ஊர்வலங்களும் இதுவரை கண்டிராத வகையில் பெரு நகரங்களிலும், சிறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் பல்வேறு இனங்களை, சாதிகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்தோடு பங்கேற்றதை எதிர்கொண்டன. மேற்கு உத்திரப் பிரதேசத்தில் தொடங்கி, கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் முடிவடைந்த ஏழு சுற்று வாக்குப் பதிவின் ஒவ்வொரு சுற்றிலும் இந்த மகா கூட்டணிக்கு மக்களின் ஆதரவு அலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்ததாகவே தோன்றியது. மாற்றத்திற்கான மக்களின் விரிவான விருப்பம் தெள்ளத் தெளிவாகவே தெரிந்தது. முற்றிலும் எவராலும் தோற்கடிக்கப்பட முடியாத ஒரு சக்தி என்பதாக பாஜக தொடக்கத்தில் தோற்றம் அளித்ததற்கு முற்றிலும் மாறான வகையில் பாஜக மண்ணைக் கவ்வும் தோற்றத்தினை வெளிப்படுத்தத் தொடங்கியது.
எனினும் அதற்குச் சாதகமான நிலை மிக அதிகமாகவே இருந்தது. மார்ச் 10ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டபோது, பாஜக நம்பத்தக்க வெற்றியை பெற்றது. பதிவான வாக்குகளில் 41 சதவீத வாக்குகளை அது பெற்றிருந்தது. (இது 2019இல் பெற்றதை விட 9% குறைவும் 2017இல் பெற்றதை விட 3% அதிகமும் ஆகும்) பாஜக 255 தொகுதிகளில் வென்றதெனில், அதன் கூட்டணிக் கட்சிகள் 18 தொகுதிகளில் வென்றன. வாக்குகளை அதிகம் பெற்ற போதிலும் இந்தக் கூட்டணி உண்மையில் 57 தொகுதிகளை இழந்திருந்தது. சமாஜ்வாதி கட்சி தனது வாக்கு விகிதத்தை 32% ஆக உயர்த்திக் கொண்டதோடு 111 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சிகள் வென்ற 14 தொகுதிகளோடு சேர்த்து மொத்தம் 125 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
இந்தத் தேர்தல் முடிவு குறித்து சற்று விரிவாக அலசுவது மிகவும் முக்கியமானதாகும். முதலாவதாக, தேர்தல் மோசடி, ஆளும் கட்சிக்கு ஆதரவாக நிர்வாகத் தலையீடு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அகற்றப்பட்டது ஆகியவை குறித்த பல்வேறு புகார்களும் எழுப்பப்பட்டன. இவையொன்றும் அடிப்படையில்லாத புகார்கள் அல்ல. சந்தேகத்திற்குரிய வகையில் வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டுபோனது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தேர்தல் நடவடிக்கைகளில் இயங்கி வந்த 4 மூத்த நிர்வாக அதிகாரிகள் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டனர். பல தொகுதிகளில் வெற்றியானது மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் இருந்தது. இதுபோன்ற தருணங்களில் நிர்வாக ரீதியான தலையீடுகள் குறித்த சந்தேகத்தை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட முடியாது. இத்தேர்தல் முடிவுகளில் மிகப்பெரும் சந்தேகத்தை எழுப்பிய மற்றொரு அம்சம் அஞ்சல் வாக்குகளில் 51.5 சதவீத வாக்குகளை பெற்று 304 தொகுதிகளில் சமாஜ்வாதி வெற்றி முகத்தில் இருந்ததாகும். மொத்தம் பதிவான வாக்குகளை ஒப்பிடுகையில் அஞ்சல் வாக்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவானவை என்றபோதிலும், ஒவ்வொரு தொகுதியிலும் அஞ்சல் வாக்குகளில் பெரும்பகுதியை பெறும் கட்சியே பதிவான வாக்குகளிலும் அதிகமான வாக்குகளை பெறும் என்பதே பெரும்பாலான தேர்தல்களின் மூலமான நமது அனுபவமாக உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தப் போக்கிற்கு முற்றிலும் மாறான வகையில் முடிவு ஏற்பட்டுள்ளது குறித்து நம்பத்தகுந்த விளக்கம் எதுவும் இதுவரை தரப்படவில்லை.
இத்தகைய புகார்களும் சந்தேகங்களும் நீடித்தபோதிலும், வாக்காளர்களில் பெரும்பான்மையோர் பாஜகவிற்கு வாக்களித்திருப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்த பலரும் விவசாயிகளுக்கும் மற்றவர்களுக்கும் வங்கி மூலமாக பணம் அனுப்பியது, இலவச உணவுப் பொருட்கள் வழங்கல், வீடுகள், கழிப்பறைகள் கட்டுவதற்கான நிதியுதவி போன்ற நலத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியதே பாஜகவின் வெற்றிக்குக் காரணம் எனக் கூறியிருந்தனர். இது ஓரளவிற்குத் தாக்கம் ஏற்படுத்துவதாக இருப்பினும், வெற்றிக்கான முக்கிய அம்சமாக இதைக் கருத முடியாது. இத்தகைய கண்ணோட்டத்திற்குப் பல காரணங்களும் உண்டு. இணைய தளமான நியூஸ் கிளிக்-இன் இந்திப் பதிப்பில் கூர்மையானதொரு பார்வையாளரான சுபோத் வர்மா எழுதியிருந்த ஒரு கட்டுரையில் ( இது மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இந்தி இதழான லோக் லஹார்-இன் மார்ச் 14, 2022 இதழில் மறுபிரசுரம் செய்யப்பட்டது.) பாஜகவின் வெற்றிக்கான காரணமாக சுட்டிக் காட்டப்படும் ‘புனைவு’களில் ஒன்றுதான் பாஜகவின் வெற்றிகரமான நலத் திட்டங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் ‘புனைவு’ பாஜகவினாலும் வெகுஜன ஊடகங்களாலும் மிகத் தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார். உண்மையில் இத்தகைய திட்டங்களால் பெருமளவிற்குப் பயனடைவோரான சமூகத்தின் மிகவும் ஏழ்மை நிரம்பிய பிரிவினர் பாஜகவினை எதிர்த்தே வாக்களித்துள்ளனர் என்றே தெரிகிறது. ஏனெனில், மாநிலத்தில் மிகவும் ஏழ்மை நிரம்பிய பகுதியான கிழக்கு உத்திரப் பிரதேசத்தின் பெரும்பாலான தொகுதிகளை பாஜக சமாஜ்வாதி கட்சியிடம் பறிகொடுத்திருக்கிறது. இவ்வகையில் அவரது முடிவோடு நான் உடன்படுகிறேன். இத்தகைய நலத்திட்டங்கள் ஓரளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், பாஜகவின் வெற்றிக்கு தீர்மானகரமான அம்சமாக அவை இருக்கவில்லை.
சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லீம்கள் மீதான வெறுப்பு மற்றும் சந்தேகத்தில் வேரூன்றிய பெரும்பான்மை-தேசியவாதத்தின் சிறப்பு வடிவத்தை பெரும்பான்மை சமூகத்தின் மிகப் பெரிய பிரிவினரின் மேலாதிக்க சிந்தனையாக மாற்றுவதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சங் பரிவாரத்தின் உலகப் பார்வையே இப்போது அதன் சொந்த உலகக் கண்ணோட்டமாக உள்ளது. 2022 மார்ச் 14 தேதிய பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழின் தலையங்கம் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது: “ பாஜகவின் குறிப்பிடத்தக்க வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. எனினும் அதிகரித்துக் கொண்டே வரும் இந்து என்ற உணர்வு என்ற முக்கியமான காரணத்தை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. (அழுத்தம் என்னுடையது- சு.அ) கடந்த பல ஆண்டுகளாகவே, சமூகத்தின் மேல்சாதியினர் மட்டுமின்றி, மக்கள் தொகையில் கணிசமான பகுதியினரும் இந்து என்ற அடையாளத்தால் ஊக்கம் பெற்றுள்ளனர். தேசியவாதப் போர்வையுடன் கூடிய இந்துத்துவாவை ஏற்றுக் கொள்வதென்பது, மற்றவர்களை- அதாவது முஸ்லீம் சிறுபான்மையினரை- இலக்கு வைப்பதாக இருந்தது.” இது மிகவும் மோசமான, அபாயகரமான விளைவுகளைக் கொண்டதாகும். எனவே இதை அடையாளம் கண்டு கொண்டு எதிர்க்கப்பட வேண்டும். சங் பரிவாரின் உலகக் கண்ணோட்டத்தை இவ்வாறு ஏற்றுக் கொண்டது பாஜக அரசின் பல்வேறு தவறான நடவடிக்கைகள் குறித்து அவர்களில் பலரையும் கவலைப்படாதவர்களாக ஆக்கியுள்ளது. உண்மை என்னவெனில், அதன் கொள்கைகள் மிக மோசமான வகையில் அவர்களை நேரடியாகவே பாதித்துள்ளன என்பதே ஆகும்.
பாஜக அரசு எதைச் செய்தாலும் சரி, அல்லது செய்யாமல் விட்டாலும் சரி. அது ஏற்கத்தக்கதே. ஏதாவது ஒரு வகையில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அதன் ஆதரவாளர்களும் வால்பிடிப்போரும், அதன் சீட கோடிகளான ஊடகங்களும் இடைவெளியின்றித் தொடர்ந்து வெட்கமேயின்றி பீற்றிக் கொண்டிருப்பதன் விளைவாகவே சங் பரிவாரின் தத்துவம் இவ்வாறு விரிவாக ஊடுருவியுள்ளது.
இது முற்றிலும் உண்மையா? உத்திரப் பிரதேச தேர்தல் முடிவுகள் முற்றிலும் வேறுபட்ட ஒன்றை, அதாவது பாஜகவை உண்மையில் வீழ்த்தமுடியும் என்பதை, நமக்குத் தெரிவிப்பதாகவே தோன்றுகிறது.
மிக நீண்ட கால அரைகுறை உறக்கத்திற்குப் பிறகுதான் சமாஜ்வாதி கட்சி தேர்தல் களத்தில் குதித்தது என்று நமக்குத் தெரியும். இந்த உறக்கம் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் முடிவுக்கு வந்தது. மிகப்பெரும் பெரும்பான்மையை கொண்டிருந்த, தனது சொந்த உலகக் கண்ணோட்டத்தை மக்கள் தொகையில் பெரும்பகுதியினரையும் தங்களுக்கான உலகக் கண்ணோட்டமாக ஏற்றுக் கொள்ளச் செய்வதில் வெற்றி பெற்ற, கணக்கற்ற நிதியாதாரங்களை தன்னிடம் வைத்துள்ள, வெகுஜன ஊடகங்களின் மீது முழுமையான ஆதிக்கம் செலுத்துகின்ற, தனது தேர்தல் முறைகேடுகளை தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் போன்ற அரசியல்சட்டபூர்வமான அமைப்புகளை அனுமதிக்க மறுக்கின்ற ஓர் ஆளும் கட்சியைத்தான் அது எதிர் கொண்டது. எவர் ஒருவரையும் முடக்கிவிடும் இத்தகைய குறைபாடுகள் நிலவியபோதிலும், சமாஜ்வாதி கட்சி 2017இல் பெற்ற 22% வாக்குகள், 2019இல் பெற்ற 18% வாக்குகள் என்றிருந்த தனது வாக்கு சதவீதத்தை இந்தத் தேர்தலில் 32% வாக்குகளாக அதிகரித்துக் கொள்ள முடிந்துள்ளது.
2021 பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளில் மிகத் தெளிவாகத் தென்பட்ட மிகப் பரவலான கோபமும் அதிருப்தியும் நிச்சயமாக இந்தத் தேர்தலிலும் வெளிப்பட்டன. இந்தக் கோபமும் அதிருப்தியுமே சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் பேரணிகளிலும் கூட்டங்களிலும் இளைஞர்கள் உள்ளிட்டு பெரும் எண்ணிக்கையில் மக்கள் உற்சாகத்தோடு கலந்து கொள்வதை உறுதிப்படுத்தியது.
லோக்நீதி- சிஎஸ்டிஎஸ் கூட்டாக மேற்கொண்ட ஆய்வு இந்தத் தேர்தலில் பல்வேறு கட்சிகளும் பல்வேறு சாதிகளிடம் பெற்ற வாக்குகள் குறித்த விரிவான பரிசீலனையை வழங்கியுள்ளது. (தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளியானது)
பாஜக 2017 | பாஜக 2022 | சமாஜ் வாதி 2017 | சமாஜ் வாதி 2022 | பகுஜன் சமாஜ் 2017 | பகுஜன் சமாஜ் 2022 | காங். 2017 | காங் 2022 | |
பிராமணர் (7%) | 83 | 89 | 7 | 6 | 2 | – | 1 | 1 |
ராஜ்புத்/தாகுர் (7%) | 70 | 87 | 11 | 7 | 9 | 2 | 3 | 1 |
வைஸ்யா (2%) | 71 | 83 | 11 | 12 | 3 | 1 | – | 1 |
இதர மேல்சாதிகள் (2%) | 70 | 78 | 15 | 17 | 5 | 1 | 2 | 2 |
ஜாட் (2%) | 38 | 54 | 57 | 33 | 3 | 12 | 1 | – |
யாதவ் (11%) | 10 | 12 | 68 | 83 | 2 | 2 | 14 | 1 |
குர்மி (5%) | 63 | 66 | 16 | 25 | 7 | 3 | 5 | 4 |
கொயரி,மவுர்யா, குஷ்வாஹா, சைனி (4%) | 56 | 64 | 18 | 22 | 22 | 4 | – | 2 |
கேவார், காஷ்யப், மல்லா, நிஷாத் (4%) | 74 | 63 | 7 | 26 | 15 | 7 | 1 | 2 |
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (16%) | 62 | 66 | 15 | 23 | 11 | 4 | 4 | 3 |
ஜாதவ் (12%) | 8 | 21 | 3 | 9 | 87 | 65 | <1 | 1 |
இதர தாழ்த்தப்பட்ட பிரிவினர் (8%) | 32 | 41 | 11 | 23 | 44 | 27 | 2 | 4 |
முஸ்லீம்கள் (19%) | 6 | 8 | 46 | 79 | 19 | 6 | 19 | 3 |
விவரங்கள் சதவீதத்தில். மீதமுள்ளோர் பிற கட்சிகளுக்கு வாக்களித்தனர். 2017இல் சமாஜ்வாதியின் சதவீதம் 2022இல் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியுடனான கூட்டணியின் அடிப்படையிலானது. 2017இல் காங்கிரஸ் சமாஜ்வாதியுடன் கூட்டணி கண்டிருந்தது. எனினும் இம்முறை தனியாக நின்றது. அதன் அடிப்படையில் இப்பட்டியலில் தரப்பட்டுள்ளது. இந்த இனங்களின் சதவீதம் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு பங்காக பிராக்கெட்டில் தரப்பட்டுள்ளது.
மேற்கண்ட பட்டியல் சாதிரீதியான கூட்டணியை நிர்வகிப்பதில் பாஜகவின் தோற்கடிக்கப்பட முடியாத தன்மையை வலியுறுத்தும் அதே நேரத்தில், அதை உற்றுப் பார்க்கையில் வேறு ஒரு விஷயத்தையும் எடுத்துக் காட்டுகிறது. மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதமாக உள்ள மேல்தட்டு சாதியினர் 2017 மற்றும் 2022 தேர்தல்களில் தொடர்ந்து பாஜகவிற்கு ஆதரவாகவே இருந்து வருகின்றனர். யாதவ் இல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பலரும், தலித் துணைப் பிரிவினரும் கூட 2019 மற்றும் 2022 தேர்தல்களில் பாஜகவிற்கு ஆதரவாக மாறியுள்ளதையும் காண முடிகிறது. எனினும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், மாநில மக்கள்தொகையில் கணிசமான அளவில் பெரும் எண்ணிக்கையில் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக மாறியுள்ளனர் என்பதே ஆகும். மாநிலத்தின் மக்கள் தொகையில் 11 சதவீதமாக உள்ள யாதவ் பிரிவினர் சமாஜ்வாதி கட்சிக்கான தங்கள் ஆதரவை 68% (2017)லிருந்து 83% (2022) ஆக அதிகரித்துள்ளனர். மாநில மக்கள்தொகையில் 19 சதவீதமாக உள்ள முஸ்லீம்கள் தங்கள் ஆதரவை 46% (2017)லிருந்து 79%(2022)ஆக அதிகரித்துள்ளனர். மக்கள்தொகையில் 12 சதவீதமாக உள்ள ஜாதவ்கள் தங்கள் ஆதரவை 3%லிருந்து 9%ஆக அதிகரித்துள்ளனர். யாதவ் மற்றும் முஸ்லீம்கள் பாரம்பரியமாகவே சமாஜ்வாதி கட்சியின் ஆதரவாளர்கள் என்ற போதிலும், இந்த முறை அந்த ஆதரவு அதிகரித்துள்ளது என்பது இந்தப் பிரிவினரில் பெரும் எண்ணிக்கையிலானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பதைக் குறிப்பிடுகிறது. சமாஜ்வாதி கட்சிக்கு விரோதமானவர்கள் என பொதுவாகக் கருதப்பட்ட ஜாதவ் பிரிவினரில் கணிசமானோர் உண்மையில் 2022ஆம் ஆண்டு தேர்தலில் அக்கட்சியை ஆதரித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி மேலும் பலவீனமாகும் என்று எதிர்பார்க்கபடும் நிலையில், ஜாதவ் பிரிவினர் பெரும் எண்ணிக்கையில் சமாஜ்வாதி கட்சியின் பால் வந்து சேர்வார்கள் என்றே புரிந்து கொள்ளலாம். மக்கள் தொகையில் 30% ஆக உள்ள யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் பெரும் எண்ணிக்கையிலானோர் தொடர்ந்து பாஜகவின் ஆதரவாளர்களாக நீடிக்கும் அதே நேரத்தில், அவர்களில் கணிசமானோர் சமாஜ்வாதி கட்சியின் பக்கம் நகர்ந்துள்ளனர். இந்தப் பிரிவினர் கடந்த காலத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு எதிரானவர்களாக, பாஜகவின் ஆசைவார்த்தைகளுக்கான இலக்காக இருந்து வந்தவர்கள் ஆவர். இப்பிரிவினரின் தலைவர்களில் பலரும் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தனர். தங்கள் தலைவரை பின்பற்றி இப்பிரிவினர் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர் என்பதையும் இப்பட்டியல் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் பிரச்சாரம் என்பது சமாஜ்வாதி கட்சியின் மீதான அதன் கோபத்தையே மையமாகக் கொண்டிருந்தது. இருந்தபோதிலும், அக்கட்சியின் ஆதரவாளர்களான ஜாதவ்கள், முஸ்லீம்கள் மற்றும் யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக மாறியுள்ளனர்.
இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் நமக்குச் சொல்வது என்னவெனில் மாநில மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் இத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பதும், இந்தப் போக்கு எதிர்காலத்திலும் தொடரக் கூடும் என்பதுமே ஆகும். சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளவர்களில் மிகப்பெரும்பான்மையோர் மாநிலத்திலேயே மிகவும் ஏழ்மையான, பொருளாதார ரீதியாகவும், சமூகரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்தவர்களாக உள்ளனர் என்பதை உணர்ந்து கொள்வதும் மிக முக்கியமானதாகும். பெரும்பான்மை சமூகத்தினரை முழுமையாக ஒன்றுபடுத்துவதைத் தடுக்கும் வகையில் அச்சமூகத்திற்குள்ளேயே சாதிரீதியாகவும், வர்க்கரீதியாகவும் இடைவெளி தொடர்ந்து நீடிக்கிறது என்பதே இதன் பொருளாகும். 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களின் மையப் பகுதியாகவும், அப்போதிருந்தே மிக மோசமான வகையில் பிளவுபட்டு வந்த மேற்கு உத்திரப் பிரதேசத்தின் மீரட், ஷாம்லி, முசஃபர்நகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பெருமளவிற்கு மதரீதியான ஒற்றுமையை உருவாக்க சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகளின் வீரஞ்செறிந்த இயக்கத்தைப் போன்ற பரந்து விரிந்த வர்க்க இயக்கத்தினால் முடிந்துள்ளது என்பதும் மற்றொரு உண்மையாகும். இந்தப் போராட்டத்திற்கென உத்திரப் பிரதேசத்தின் காசிப்பூர் எல்லைப் பகுதிக்கு பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளை இந்த மூன்று மாவட்டங்கள்தான் அனுப்பி வைத்தன. சமாஜ்வாதி கட்சியின் மகா கூட்டணி இந்த மூன்று மாவட்டங்களிலும் மகத்தான வெற்றி பெற்றது. முசாஃபர்பூர், ஷாம்லி ஆகியவற்றில் இருந்த அனைத்து தொகுதிகளிலும், மீரட் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 3 தொகுதிகளிலும் மகா கூட்டணி வெற்றி பெற்றது.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் அரசியல் சூழல் மாறிக்கொண்டுவருவதையே இந்தத் தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இரு முனைப்பட்ட அரசியலில் பலவீனமான ஒரு முனையாக இப்போது சமாஜ்வாதி கட்சி உருவெடுத்துள்ளது. மேலே குறிப்பிட்ட சமூக இடைவெளிகளை கண்டறிந்து அதைப் பயன்படுத்துவதில் சமாஜ்வாதி கட்சி எத்தகைய தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்கிறது என்பதில்தான் பலவீனமான இந்த முனை மேலும் வலிமை பெறுவதற்கான வாய்ப்புகள் அடங்கியுள்ளன. பாஜகவின் சோர்வில்லாத ஸ்தாபன முயற்சிகளுக்கு அது ஈடு கொடுப்பதோடு, அதன் மக்கள் விரோத, சாதிய ரீதியான, வகுப்புவாத ரீதியான அரசியலை இடைவிடாது, தொடர்ச்சியாக, கடுமையாக எதிர்த்து நிற்கவும் வேண்டும்.
மாநிலத்தின் இதர அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில், பகுஜன் சமாஜ் கட்சி பெரிதும் பலமிழந்து போயிருப்பதையும், காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டிருப்பதையும் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. இது சமாஜ்வாதி கட்சி மேலும் வலுப்படுவதற்கு வழிவகுக்கும். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில், ஐந்து மாநில சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற இந்தத் தேர்தலில் அக்கட்சி பேரழிவை எதிர்நோக்கியது. அதிலும் குறிப்பாக, உத்திரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அதற்கு ஏற்பட்ட படுதோல்வி தேசிய அளவில் முன்னணிப் பாத்திரத்தை அக்கட்சி வகிப்பதற்கான வாய்ப்புகளை முற்றிலுமாக சீர்குலைத்துள்ளது.
இடதுசாரிகளின் பலவீனமும் இத்தேர்தலில் மிகத் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. நமது தொடர்ச்சியான முயற்சிகளுக்கு இடையிலும் ஒரு சில இடங்களில் மட்டுமே போட்டியிடுவது; ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவதைத் தவிர்ப்பது என்ற நமது முயற்சிகளுக்கு சிபிஐ மற்றும் சிபிஐ(எம் எல்) கட்சிகளை இணங்கச் செய்ய முடியவில்லை. இறுதியில் நாம் 3 தனித் தொகுதிகளில் மட்டுமே தனியாகப் போட்டியிட்டோம். சிபிஐ 39 தொகுதிகளிலும் சிபிஐ (எம் எல்) 11 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இத்தேர்தலில் நமக்கு ஒட்டுமொத்தமாக 6,000 வாக்குகள் கிடைத்தன எனில், சிபிஐ, சிபிஐ(எம் எல்) ஆகியவற்றுக்கு சராசரியாக இதே அளவிற்கான வாக்குகள்தான் கிடைத்தன. பெரும்பாலான தொகுதிகளில் மகா கூட்டணிக்கு நாம் ஆதரவு தெரிவித்ததோடு, சிபிஐ மற்றும் ஐபிஎஃப் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த தொகுதிகள் தவிர்த்து நாம் போட்டியிடாத மாவட்டங்கள் அனைத்திலுமே இந்த மகா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து சுயேச்சையான பிரச்சாரத்தை நாம் மேற்கொண்டோம். ஐபிஎஃப் கட்சி நமது வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தது.
எனினும் சங் பரிவாருக்கு எதிரான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மிக முக்கியமானதொரு பங்கினை வகிக்க வேண்டியுள்ளது என்றே நாம் கருதுகிறோம். உள்ளூர் பிரச்சனைகள் மீதும், அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கான முன்முயற்சியையும், இடதுசாரி ஒற்றுமையை கட்டுவதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம். அதே நேரத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து கூட்டுப் போராட்டங்களையும் நடத்துவோம். இவ்வகையில் கடந்த காலத்தைப் போல் அல்லாமல் அக்கட்சி இத்தகைய முயற்சிகளில் பங்கேற்க முன்வரும் என்றே நம்புகிறோம்.
பல்வேறு பகுதிகளும் பல்வேறு வகையான பிரச்சனைகளின் மீது நம்மால் நடத்தப்படும் போராட்டங்களிலும் இயக்கங்களிலும் கவர்ந்திழுக்கப்படக் கூடிய தனிநபர்கள் உள்ளிட்ட சமூகக் குழுக்கள், அமைப்புகள் ஆகியவற்றை நாம் அடையாளம் காண வேண்டியுள்ளது. தத்துவார்த்த தளத்தில் சங் பரிவாரை எதிர்த்துப் போராட மிகப்பெரும் முயற்சியை நாம் எடுக்க வேண்டியுள்ளது. இந்த தளத்தில்தான் முதலாளித்துவ கட்சிகள் வலுவாக பங்கு பெற முன்வரத் தயங்குகின்றன.சங் பரிவாரின் திட்டத்தின் அடிநாதமாக உள்ள மனுவாதத்தினை அம்பலப்படுத்தவும் நாம் முன்முயற்சிகளை எடுக்க வேண்டும். இதனோடு கூடவே பெரும்பான்மை சமூகத்தின் பெருமளவிலான பிரிவினரிடையே வெற்றிகரமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள சங் பரிவாரின் அரசியல் ரீதியான மேலாதிக்கத்தை உடைத்தெறிவதற்கு சமூகரீதியான, பொருளாதார ரீதியான போராட்டங்களும் இயக்கங்களும் அவசியமாகின்றன.
கொரோனா பெருந்தொற்று மேலாண்மை, பொதுவான பொருளாதாரம், அதிகரித்து வரும் வறுமை, வேலையின்மை, கிராமப்புற துயரம் ஆகிய மக்கள் பிரச்சனைகளை கையாள்வதில் இந்த அரசு படுதோல்வி அடைந்த போதிலும், பாஜக இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. அதன் ஆட்சியின் கீழ் தலித்துகள் மீது, அதிலும் குறிப்பாக தலித் பெண்களின் மீது மிக மோசமான தாக்குதல் நடைபெற்ற போதிலும் அக்கட்சி இத்தகைய வெற்றியை ஈட்டியுள்ளது. விவசாயிகள் போராட்டத்தின்போது நான்கு விவசாயிகளையும் ஒரு பத்திரிக்கையாளரையும் பட்டப் பகலில் கொடூரமாகப் படுகொலை செய்த சம்பவத்தில் அதன் தலைவர்களுக்கு நேரடியான பங்கிருப்பது உறுதியானபோதிலும் அக்கட்சி இத்தகைய வெற்றியை அடைந்துள்ளது.
இத்தகைய பின்னணியில் உத்திரப் பிரதேச தேர்தல் முடிவுகளிலிருந்து சரியான அரசியல் பாடங்களை வகுப்பது வரும் நாட்களில் சங் பரிவாரை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் அவசியமானதாகும்.
தமிழில்: வீ. பா. கணேசன்
Leave a Reply