அருண் குமார்
தமிழில்: ச.லெனின்
நாட்டில் வேகமாக நகர்மயமாகும் மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்று. புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தின் 48.5 சதவீத மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். இந்த போக்கு அடுத்த சில பத்தாண்டுகளுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர்மயமாதல் என்பது வாய்ப்பு மற்றும் சவால்கள் என இரண்டையும் ஒருங்கே கொண்டுள்ளது.
பொருளாதார மற்றும் சமூக ரீதியான மேம்பட்ட ஒரு வாழ்நிலைக்கான நம்பிக்கையோடு நகரங்களை நோக்கி புலம்பெயரும் மக்களுக்கு நகர்மயம் சவாலாக உள்ளது. அதேநேரம் அரசிற்கோ அதிகப்படியான வரியை விதித்து அதன் வருவாய்க்கான வழிகளை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பாக உள்ளது. இந்தப் பின்னணியில், சமூக மாற்றத்தை நிகழ்த்துவதற்கான உறுதிப்பாடுடன் இருக்கும் புரட்சிகர சக்தி என்கிற வகையில் நகர்பகுதிகளில் நமது தலையீடு அவசியமானதாகும். நமக்கு நகர்மயம் என்பது சவாலாகவும் அதேநேரம் வாய்ப்பாகவும் உள்ளது.
கொல்கத்தா பிளீனத்தின் ஸ்தாபனம் குறித்த அறிக்கையில் நகர்ப்புற மக்கள் மத்தியில் நமது தொடர்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து கூடுதல் அழுத்தம் கொடுத்து குறிப்பிடப்பட்டுள்ளது. நகரங்கள் என்பது தொழிற்சாலைகளில் மையமாக மட்டுமில்லாமல் சேவை துறை சார்ந்த மையங்களாகவும் வளர்ந்து வருகிறது. நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு இந்த இரண்டு துறைகளும் கூடுதலான பங்களிப்பை செலுத்துகிறது என்பதோடு மட்டுமல்லாமல், அவை அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கும் இடமாகவும் உள்ளது. கிராமப்புற இளைஞர்கள் பலர் வேலை மற்றும் மேம்பட்ட வாழ்வை தேடி நகரங்களை நோக்கி புலம்பெயர்கின்றனர். நகரங்கள் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொழில் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுடன், சேவை துறை சார்ந்த பணிகளில் வந்து குவியும் புதிய தலைமுறையினர் கூடுதலாக இணைகின்றனர். அந்தவகையில் நகரங்கள் இன்னமும் உழைக்கும் வர்க்கத்தின் முக்கிய மையமாக திகழ்கிறது. எனவே நகரங்களில் நமது அடித்தளத்தை வலுவாக்க வேண்டியது அவசியமாகிறது.
வங்கி, காப்பீடு, கல்லூரிகள், பள்ளிகள், பயிற்சி மையங்கள் என நிதி மற்றும் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகம் நடைபெறுகிறது. வளர்ந்துவரும் தகவல் தொழில் நுட்பத்துறை புதிய தலைமுறையினரின் துறைசார் வல்லுநர்களை (professionals) நகரங்களை நோக்கி வரவைக்கிறது. இவர்களில் பெரும்பகுதியினர் தங்களின் வாழ்வை மேம்படுத்திக்கொள்ளும் கனவுடன் கூடிய, நன்கு படித்த, மத்தியதர வர்க்கத்தினராக உள்ளனர். இருக்கும் பொருளாதார நிலைமைகளில் அவர்களின் கனவுகள் நிராசைகளாகவே முடியும் என்பதை உணர மறுக்கின்றனர். மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றாததையும், மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மோசமான பொது போக்குவரத்து, நெருக்கடியான சாலைகள், தங்களை ஆற்றுப்படுத்தி தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வெளி இல்லாமை என்பது போன்ற மோசமான அரசுகளின் மீது அவர்களுக்கு கோபமும் அதிருப்தியும் உள்ளது. சொந்த வீடு என்பதன் மீதான விருப்பம் கூடுதலாக உள்ளது. நில விற்பனை சந்தை இம்மக்களை சார்ந்தே உள்ளது. இம்மக்களின் ஆசைகள் மற்றும் அச்சங்களின் மீதே அவர்கள் தங்கள் முதலீட்டை திட்டமிடுகின்றனர். இம்மக்கள் இன்றளவும் நவதாராளமய கொள்கைகள் குறித்து குழப்பமான பார்வையையே கொண்டுள்ளனர். ஒரு பக்கம் சந்தைகள் மூலம் அது வழங்கியுள்ள வாய்ப்பு வசதிகளை நினைத்து மகிழ்கின்றனர். மறுபுறம் வேலை மற்றும் வாழ்நிலை குறித்த நிச்சயமற்ற தன்மைகளை நினைத்து வருந்துகின்றனர். சமூகத்தின் அடிநாதமாக இருக்கும் இம்மக்கள் தங்களின் அதிருப்திகளை வெளிப்படுத்தும் அதேநேரம், இந்த வளர்ச்சிப்போக்கை ஏற்பதா? நிராகரிப்பதா? என்று முடிவெடுக்க முடியாமல் நிற்கின்றனர்.
அரசுக்கும் இம்மக்களுக்குமான முதல் தொடர்பு உள்ளாட்சி அமைப்புகள்தான். அரசு வழங்கவேண்டும் என்று இம்மக்கள் எதிர்பார்க்கும் தேவைகளை உள்ளாட்சி அமைப்புகள்தான் நிறைவேற்றிட வேண்டும். அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே அவர்களால் உடனடியாக தொடர்புகொள்ள முடிந்த மக்கள் பிரதிநிதியாகும். உள்ளாட்சி அமைப்புகளில் செய்யவேண்டிய பணிகள் குறித்து அதிகமான எதிர்பார்ப்பு இம்மக்களிடம் உள்ளது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ள வரம்புகள் குறித்து அவர்கள் அறிவதில்லை. எனவே உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மீதே அவர்களின் கோபங்கள் வெளிப்படுகிறது. உள்ளாட்சி அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மக்களின் எதிர்பார்ப்புகளை கூடுமான அளவு நிறைவேற்றிட உழைத்திட வேண்டும். அதேநேரம் மக்கள் மத்தியில் இப்பணிகளை மேற்கொள்வதில் உள்ள வரம்புகளையும் எடுத்துக் கூறிடவேண்டும். சமூகத்தில் நவதாராளமயத்தின் மோசமான தாக்கம் குறித்தும் நமது அரசியல் குறித்தும் மக்கள் மத்தியில் எடுத்துரைப்பதற்கான நல்ல வாய்ப்பை இது வழங்கியுள்ளது. மக்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் நிலையில் உள்ள நாம் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் நமது மாற்று திட்டத்தின் அடிப்படையிலான சிறப்பான செயல்பாடுகள் மூலம் முன்னணி வகிக்க வேண்டும்.
அதிகாரங்களை குவிக்கும் மத்திய அரசின் இன்றைய போக்கை அம்பலப்படுத்திடவேண்டும். அரசியல் சாசனத்தின் 73 மற்றும் 74 ஆம் பிரிவு வழங்கியுள்ள குறைந்தபட்ச அதிகாரப் பரவலையும் மத்திய அரசு சிதைக்கிறது. அதிகாரப் பரவல் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு பிரிவுகள் குறித்து கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் இ.எம்.எஸ். கீழ்காணும் வகையில் குறிப்பிடுகிறார். “ஜனநாயகபர்வமான அதிகாரப் பரவல் என்பது, உழைக்கும் மக்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படுகிற ஒடுக்குமுறை மற்றும் சரண்டலுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவுவதாக இருக்கவேண்டும் என்பதே எனது நம்பிக்கை. தேசிய மற்றும் மாநில அளவில் ஜனநாயகமும், கீழ்மட்ட அளவில் அதிகாரப் போக்கு என்பதே இந்திய அரசியலின் அரசியல் சாசனம் குறிப்பிடுகிறது. மேலும் அரசியல் அமைப்பின் உள்ளடக்கம் மாநிலங்களின் உரிமைகள் மற்றும் அதிகாரத்தின் மீதான மத்திய அரசின் ஆதிக்கத்தை விரிவுபடுத்த வழிவகை செய்கிறது. எனவே, அரசு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரப் பரவலை அமலாக்க தயாராகாமல் இருப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.” இந்தப் இரண்டு பிரிவுகளும் அரசு நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதே தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுக்கு கட்டுப்படும் வகையில் அதிகாரிகள் இல்லை.
இந்த அடிப்படையில் அதிகாரப்பரவல் குறித்து நாம் பேசவேண்டியுள்ளது. 73 மற்றும் 74 ஆவது பிரிவுகளின் சாதகமான பங்களிப்புகள் மற்றும் வரம்புகளையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அனைத்து மாநிலங்களும் உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கி, அதற்கான நிதி ஆதாரங்களை உருவாக்கி செயல்பட வைப்பதோடு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி அவ்வமைப்புகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்யவேண்டும் என்கிறது இப்பிரிவுகள். நாடுமுழுவதும் ஒரேமாதிரியான செயல்பாடுகளை உத்தரவாதப்படுத்துவதோடு கிராமப்புற மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இப்பிரிவு அரசியல் சாசனத்திற்குட்பட்ட அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. 74 ஆவது பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரப் பரவலின்படி ‘வளர்ச்சிக்கான பணிகளை திட்டமிடுவது, சுகாதாரம், கல்வி, வறுமை ஒழிப்பு, வீட்டுவசதி, நகர வளர்ச்சி திட்டங்கள், நிலபயன்பாடுகள் குறித்த வரம்புகள், தண்ணீர் விநியோகம், குடிசை பகுதிகளை மேம்படுத்துதல், சிறு தொழில் வளர்ச்சி உள்ளிட்ட 18 முக்கியமான அம்சங்களில் செயல்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உண்டு. இவையெல்லாம் அதன் அதிகார வரம்பாக தீர்மானிக்கப்பட்டாலும், மாநிலத்திற்கு மாநிலம் அது வேறுபடும். தேர்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதி என்கிற வகையில் மக்கள் நலன் சார்ந்து அவ்வமைப்பை செயல்பட வலியுறுத்துவது நமது கடமையாகும்.
அதேநேரம் அதன் வரம்புகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வேகமான நவதாராளமய காலத்தில் அதற்கேற்ற வகையில்தான் பொருளாதார கொள்கை, அரசு அமைப்பு முறை எல்லாம் மாறிப் போயுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதி கடுமையாக வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது. சர்வதேசிய நிதி முகமைகளான உலக வங்கி நவதாராளமய சீர்திருத்தங்களை அமலாக்கிட அழுத்தம் கொடுக்கின்றன. தண்ணீர் விநியோகத்திற்கு மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், குடிநீர், குப்பை சேகரிப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு, பொது இட பயன்பாடு உள்ளிட்டவைகளுக்கு தனித்தனியாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், சொத்துவரி, மின்கட்டணம் மற்றும் நிலப்பயன்பாடு உள்ளிட்டவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் அவை கூறுகின்றன. அரசியல் ரீதியான பின்விளைவுகளை சந்திக்க வேண்டும் என்கிற அச்சத்தில் மத்திய மாநில அரசுகள் இவற்றை ஓரே நேரத்தில் அமலாக்க அஞ்சுகின்றன. எனவே உலக வங்கி கொஞ்சம் கொஞ்சமாக அமலாக்கச் சொல்கிறது. அவ்வாறே தற்போது அது அமலாக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.
உள்ளாட்சி அமைப்புகள் தண்ணீர் விநியோகம் உள்ளிட்ட மக்களுக்கு ஆற்றும் சேவைகளை தனியார்மயமாக்க வேண்டும் என்கிறது உலக வங்கி. நகரங்களுக்கு 24 மணி நேரமும் தண்ணீர் விநியோகத்தை தனியார் வந்தால்தான் வழங்கமுடியும் என்கிறது. “கொள்கை அடிப்படடையில், பராமரிப்பு மற்றும் செயல்பாட்டுக்கான பணம் என்பது பயன்பாட்டு கட்டணத்தின் மூலமே திரட்டப்பட வேண்டும். சொத்தின் மீதான தேய்மானம் மற்றும் சொத்துக்கள் மூலம் ஈட்டப்பட வேண்டிய வருமானம் எல்லாம் வரவாக வேண்டும்” என்கிறது உலக வங்கி (2013). பொதுப் பணத்தின் மூலம் அனைவருக்கும் குடிநீர் வழங்குவது சாத்தியமில்லை. எனவே தனியாரை அனுமதிப்பது அவசியம் என்கிறது. “தற்போது ஏழை மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகள் பொது நிதியை செலவு செய்கின்றன. அவை போதுமான திட்டமிடல்கள் இல்லாமலும் தேவையை நிறைவேற்ற போதுமானதாகவும் இருப்பதில்லை. நிதி ஆதாரத்தை திரட்டுவதாக இல்லாமல் நிதியை செலவழிப்பதாக உள்ளது. எனவே நிதி ஆதாரங்களுக்கான பழைய வழிமுறைகளுக்கு மாறாக, ஒரு புதிய நிதி திரட்டும் முறையை அரசாங்கம் கண்டறியவேண்டும்.” செலவுகளை ஈடுகட்ட தனியார் முதலீட்டை அனுமதிக்க வேண்டுமென்கிறது உலக வங்கி. ”அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டும் என்கிற விருப்பத்தை அரசியல் கட்சிகளின் தலைமை அடைய நினைத்தால் அவர்கள் சற்று மாற்றி சிந்திக்க வேண்டும்” (உலக வங்கி 2017)
காங்கிரஸ், பி.ஜே.பி மற்றும அனேகமாக அனைத்து மாநில கட்சிகளுக்கும் நவதாராளமய சீர்திருத்தங்களை அமலாக்குவதில் எவ்வித தயக்கமும் இல்லை. இப்படியான சீர்திருத்தங்களை அமலாக்கினால் மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டி வருமே என்பது குறித்து மட்டுமே அவர்களுக்கு அச்சம் உள்ளது. மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளவே ஜனநாயகமும் ஜனநாயக அமைப்புகளும் மெதுமெதுவாக சீரழிக்கப்படுகிறது. மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு இதன் வேகம் அதிகரித்ததுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளை பொருத்தவரை அதன் அதிகாரங்கள் வெட்டிச் சுருக்கப்பட்டு, அதன் ஜனநாயக உள்ளடக்கம் நீர்த்துப்போக செய்யப்படுகிறது. இ.எம்.எஸ். சுட்டிக்காட்டியதுபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளால் எடுக்கப்படும் முடிவுகள் மதிக்கப்படாமல் அரசு நிர்வாகத்தின் அதிகாரம் நிறுவப்படுகிறது. நவதாராளமய கொள்கைகளின் அமலாக்கத்திற்கு பிறகு, உலக வங்கியின் வேறொரு பரிந்துரையின்படி தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இணையான அரசு அதிகாரிகளின் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. நகர வளர்ச்சி குழுமம், குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் ஆகியவை இதற்கான உதாரணங்களாகும்.
பி.ஜே.பி உருவாக்கியுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு பிறகு இந்த அமைப்புகளின் உள்ளடக்கம் மேலும் புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது. சிறப்பு நோக்க திட்டம் (Special Purpose Vehicle) என்று அது அழைக்கப்படுகிறது. இது அரசு மற்றும் தனியார் மூலம் 50:50 என்கிற பங்குகள் அடிப்படையில் செயல்படும். சந்தையில் தனக்கான அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டு கூடுதல் நிதி ஆதாரங்களை பெருக்கிக் கொள்ள வேண்டும். இது தலைமை நிர்வாக அலுவலரை நியமித்து செயல்படும். அவர் மூன்றாண்டுகள் அப்பொறுப்பில் இருப்பார். அதற்கு முன்பாக அவரை அப்பொறுப்பிலிறுந்து விடுவிப்பதாக இருந்தால், மத்திய அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும். இது 74வது பிரிவு வழங்கியுள்ள உரிமைகள் மீதான தாக்குதலாகும். அதிகாரப் பரவலை நீர்த்துப் போகச் செய்வதாகும். தனியார் அரசு கூட்டு திட்டங்களை ஊக்குவிப்பதோடு, திட்ட மேலாண்மை ஆலோசகர்களை கொண்டு செயல்படும் தன்மையை கொண்டுள்ளது. இது தவிர்க்க முடியாத வகையில் நகர நிர்வாகத்தில் நேரடி ஆதிக்கத்தை செலுத்தும்.
நகர நிர்வாகம் என்பது ஜனநாயக வழிமுறைப்படியான செயல்பாடுகளில் இருந்து நிர்வாக வழிமுறையாக மட்டும் மாற்றப்படும். உள்ளாட்சி தேர்தல்களின் முக்கியத்துவம் குறையும். மேயர், தலைவர் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் வார்த்தைகளுக்கு எவ்வித மரியாதையும் இல்லாமல் போகும். மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்கிற குறைந்த பட்ச சிந்தனையும் குறைந்துபோகும். மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படாமல், லாப நஷ்ட கணக்கின் அடிப்படையிலும் வருமானத்தை ஈட்டுவதற்கான சிந்தனையோடுமே திட்டங்கள் செயல்படுத்தப்படும். பொதுவாக ஆணையர்களாக உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் தலைமை நிர்வாக அலுவலருமே அனைத்து முடிவுகளையும் எடுப்பார்கள். அவர்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் அற்றவர்களாவர். இது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படும் மோசமான தாக்குதலாகும். இதை எதிர்த்து கடுமையாக போராட வேண்டும்.
கலங்கரை திட்ட வளர்ச்சி என்கிற ஒன்றும் தற்போது முன்நிறுத்தப்படுகிறது. குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்து மேம்படுத்துவது, அதை மற்ற பகுதிகள் பின்பற்றுவது என்பதாகும். இது சிறுதுளி தத்துவம் என்பது போன்றதாகும். ஆனால் எங்குமே வெற்றி பெறாது. இது சென்னை தி.நகர் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் போன்றதாகும். அப்பகுதியின் நிலப்பயன்பாடு, போக்குவரத்து முறை, தகவல் தொடர்பு என எல்லாம் நவீனமயமாக்கப்படும். ”நகர்மயத்தின் மூலம் உருவாகியுள்ள நிலம் குறித்த கொள்கை, கட்டமைப்பு சேவை, போக்குவரத்து மேம்படுத்தப்படுவது, ஒருங்கிணைந்த வளர்ச்சி ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான அறுவடையை வழங்கும்.” என்கிறது உலக வங்கி. ஸ்மார்ட் சிட்டிக்கான இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் எல்லாம் ஒன்று பணம் படைத்த மேட்டுகுடி பகுதிகளாக உள்ளன; அல்லது நிலத்தின் மதிப்பு கூடுதலாக உள்ள இடமாகவும், வர்த்தக நோக்குடன் அங்குள்ள ஏழை மக்களிடமிருந்து அவற்றை அபகரிக்கும் நோக்கம் கொண்டதாகவும் உள்ளன.
2008 ஆம் ஆண்டு நெருக்கடிக்கு பிந்தைய காலத்தில் நிலம் ஒரு முக்கியமான ஆதாரமாக உள்ளது. அரசு நிலங்களை குத்தகைக்கு கொடுத்தோ அல்லது விற்பனை செய்தோ நிலங்களை பணமாக மாற்றும் போக்கு அதிகரித்துள்ளது. அரசு நிலங்களில் உள்ள குடிசை பகுதிகளை அகற்றுவதும், அந்த நிலங்களை தனியாருக்கு வாரிவழங்குவதும் நிகழ்கிறது. நில தரகு என்பது நிதி மூலதனத்தின் கூடாரமாக இருந்து அதிகப்படியான லாபத்தை வழங்குகிறது. உலகம் முழுவதும் அவை நிலம் மற்றும் வீடுகள் குறித்த மாயத்தோற்றதை உருவாக்கி வருகின்றன. குறைந்த விலையில் வீடுகள் என்பவை எல்லாம் ஏழை மற்றும் புலம்பெயர் மக்களுக்கான வீடு கட்டும் வேலைகளை தனியாருக்கு வழங்கும் வேலைகளே ஆகும். தனியார் – அரசு கூட்டு என்பதன் மூலம் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் வீடு எனும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பை முடக்குகிறது.
நிலம் சம்மந்தப்பட்ட வர்த்தகத்தின் மூலம் ஊழல் மற்றும் முறையற்ற பணப் பரிவர்த்தனை அதிகரிக்கிறது. உள்ளூர் தலைவர்கள், ஒப்பந்தக்காரர்கள், நில தரகர்கள் ஆகியோர் இதன்மூலம் ஊழலில் திளைக்கின்றனர். அரசும் இதை கண்டுகொள்வதில்லை. இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து செயல்படுவதன் மூலம் குடிசைகளை எளிதில் காலிசெய்து நிலங்களை கொள்ளையடிக்க முடிகிறது. எனவே இதன் ஊழல் நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுகிறது.
இந்தப் பின்னணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் முன்னுள்ள சவால்கள் மகத்தானதாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பிரதிநிதிகளுக்கு கூடுதலாக இது பொருந்தும்.
அவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தேர்வாகியுள்ள பிரதிநிதிகளின் முதல் கடமை மக்களின் நலன்சார்ந்து மக்களுடன் இரண்டறக் கலந்து பனியாற்றுவதாகும். உள்ளாட்சி அமைப்புகளுக்குள்ள வரம்புகளும் விளக்கப்படவேண்டும். குடிசை பகுதிகளுக்கு சுகாதாரம், மருத்துவம், கல்வி, தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கிடைத்திட முன்னுரிமை வழங்கிட வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையில் குடியிருப்போர் நலச்சங்கம், அடுக்குமாடி கட்டிட அமைப்புகள் துவங்கி அவர்கள் மூலம் மக்களின் கோரிக்கைகளை அடையாளப்படுத்தி முன்னெடுப்பது. அந்த அமைப்புகளின் மூலம் ஜனநாயகத்தின் மீதான விருப்பத்தை வளர்த்தெடுத்து, கீழிருந்து வரும் குரல்களுக்கு செவிசாய்த்திட வேண்டும். சொத்துவரி உயர்வு, பயன்பாட்டு கட்டணங்கள் விதிப்பது போன்றவற்றுக்கு எதிராக இந்த குடியிருப்பு சங்கங்கள் செயல்படுவதை முதல் வேலையாக மாற்ற வேண்டும். உள்ளாட்சி அமைப்புள் தங்களின் செயல்பாட்டிற்காக எவ்வாறு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை சார்ந்துள்ளன என்பதை விளக்க வேண்டும். ஏனெனில் இந்த அரசுகளின் செயல்பாடுகளே நவதாராளமய சீர்திருத்தங்களுக்கு இணங்கச் செய்கிறது. கொரோனா தொற்று காலத்தில் சொத்து வரி உயர்வை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்குவதற்கான நிபந்தனையாக மாற்றியுள்ளது ஒன்றிய அரசு. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்குவதற்கு பதிலாக, தனியார் மற்றும் வெளி நிதி அமைப்புகளிடம் நிதி பெறுவதற்கான நிர்ப்பந்தத்தை உருவாக்குகிறது. இவ்வளவு இருந்தபோதும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் வெறும் இரண்டு சதம் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படுகிறது. சீனாவில் 11 சதமும் பிரேசிலில் 7 சதமும் ஒதுக்கப்படுகிறது. இவற்றை எல்லாம் அந்த குடியிருப்போர் நல அமைப்புகளில் விவாதிப்பதின் மூலம் அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக அவர்களை கேள்வி எழுப்ப வைக்க முடியும்.
ஸ்டாலின் கூறியதுபோல் கம்யூனிஸ்டுகள் தனித்த வார்ப்புகள். நமது நடவடிக்கைகளின் மூலம் அதை நிருபிக்க வேண்டும். ஊழல் நடவடிக்கைகளில் நாம் ஈடுபடாதவர்கள்; அதிலிருந்து வெகுதூரம் நிற்பவர்களாக மட்டும் நிற்காமல், ஊழலுக்கு எதிராக மக்களையும் திரட்டிட வேண்டும். பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வாங்குவதில் துவங்கி நில பயன்பாடு, கட்டிட அனுமதி என பல அம்சங்களை லஞ்சம் இல்லாமல் பெறுவது பெரும் சிரமமாக உள்ளது. இவைகளை எளிதில் பெற்று மக்கள் பயன்படும்படி இதை மாற்ற முயற்சிக்கவேண்டும்.
உள்ளூர்தான் மக்கள் கூடுவதற்கும் பேசுவதற்கும் உறவுகளை வளர்ப்பதற்குமான இடமாக உள்ளது. விழாக்கள், பண்டிகைகள், திருமணங்கள் போன்றவையே அதற்கான இடங்களாகும். விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளை நாம் நடத்திட முன்முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். திருவிழாக்களில், பண்பாட்டு நிகழ்வுகளில் நாம் கூடுதலாக பங்கேற்க வேண்டும். பழமைவாத மூடநம்பிக்கை நிகழ்வுகளை கவனமாக தவிர்க்க வேண்டும்.
கொரோனா பெருந்தொற்று முக்கியமான படிப்பினையை நமக்கு வழங்கியுள்ளது. நெருக்கடியான காலங்களில் மக்கள் உதவிக்காக தேடி நிற்பார்கள். அதுபோன்ற காலங்களில் நாம்தான் முதலில் உதவிக்கரம் நீட்டுபவர்களாக இருக்க வேண்டும். கேரளாவில் நமது உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் மக்களுக்கான உதவிகளையும் அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்தனர். வெள்ளச் சேதத்தின்போதும் இப்படியான பணிகளை அவர்கள் மேற்கொண்டனர். அதை நாம் அனைத்து பகுதிகளிலும் செய்திடவேண்டும். இதுபோன்ற தன்னலமற்ற பணிகள் மூலம்தான் மக்களின் மனத்தை வெல்ல முடியும்.
உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சி தன்மையை சீர்குலைக்கும் முதலாளித்துவ கட்சிகளின் செயல்பாடுகளை எடுத்துரைக்க வேண்டும். ஜனநாயகத்தை சீர்குலைப்பது, தனியாருக்கு வளங்களை தாரைவார்ப்பது, அதிகாரிகளின் கையில் நிர்வாகத்தை ஒப்பளிப்பது போன்ற நடவடிக்கைகளை மக்களுடன் உரையாடும்போது அவ்வப்போது விவாதிக்க வேண்டும். எந்த மாதிரியான அரசியல் சூழ்நிலையில் நாம் பணியாற்றுகிறோம் என்பதை மக்களிடம் பேசாமல் விட்டால் அவர்களால் மக்கள் பிரதிநிதிகளான நமது வேலைகளை புரிந்து கொள்ள இயலாது. தற்போதைய நிலையிலேயே தேங்குவதைவிட நமது குறிக்கோளை நோக்கி பயணிப்பதற்கான வேலைகளை கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் செய்ய முனைய வேண்டும். நமது அரசியலை மக்களிடம் பேசுவதன் மூலம்தான் அவர்களின் ஆதரவை தொடர்ந்து பெற்று அதை விரிவுபடுத்திட முடியும்.
மதவாத சக்திகள் நகரங்களை தங்களின் இயற்கையான தளமாக பார்க்கின்றன. மத்திய தர மக்களின் ஊசலாட்டத்தையும், அச்சத்தையும் வளர்த்து அவர்களுக்கான ஆதாயத்தை வளர்த்துக் கொள்கின்றனர். நமது நடவடிக்கைகளில் அவர்களின் ஜனநாயகமற்ற தன்மையை விளக்கி நமது சித்தாந்த பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவேண்டும்.
இ.எம்.எஸ். கூறியதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். “ஒன்றிய மற்றும் மாநில நாடாளுமன்ற\ சட்டமன்ற ஜனநாயகத்தை பாதுகாப்பதோடு, மேலும் அவற்றை மாவட்ட மற்றும் அதற்கடுத்த கீழ்நிலைவரை விரிவுபடுத்துவதே ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக கருதப்பட்டது. அதுவே இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முக்கியமானதாகும்.” ஒன்றியத்தில் பி.ஜே.பி ஆட்சியில் இருக்கும் நிலையில் இது கூடுதல் பொருத்தப்பாடுடையதாக உள்ளது.