மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மக்கள் ஆளும்போது…


தன்னைத் தானே ஆளும் ஒரு நாடுதான் கியூபா. எவரிடமிருந்தும் வரும் உத்தரவுகளுக்கு அது அடிபணியாது…

ஃபிடல் காஸ்ட்ரோ

(ஆயுதம் தாங்கிய எழுச்சியின்மூலம் சர்வாதிகாரி பாடிஸ்டாவை 1959ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று விரட்டியடித்த பிறகு, ஜனவரி 21, 1959 அன்று கியூப தலைநகர் ஹவானாவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் அணிதிரண்டிருந்த கூட்டத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரையின் சுருக்கமான பகுதி)

சக குடிமக்களே!

இன்று நமது போராளித் தோழர்கள் எதிரியின் துப்பாக்கிக் குண்டுகளைக் கண்டு நடுங்கியதை விட அதிகமாகவே இந்தக் கூட்டத்தைக் கண்டு நடுங்கியிருக்க வாய்ப்புள்ளது. நமது மக்களின்மீது அளவிற்கடங்காத நம்பிக்கையை வைத்திருக்கும் எங்களைப் பொறுத்தவரையில், இந்தக் கூட்டம் எல்லா மதிப்பீடுகளையும் தாண்டி விட்டது. இப்போது மேடைக்கருகில் வந்து சேர்ந்தவர்கள் சொன்னார்கள்: இந்தக் கூட்டம் மாலேகானில் இருந்து சகோதரத்துவப் பூங்கா வரையில் நீண்டு கிடக்கிறது என்று. இன்று ஒருவிஷயத்தை மட்டும் நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். புரட்சியை ஆதரிக்கும் மக்கள் அனைவரும் ஒன்றாக அணிதிரண்டு நிற்பதற்கான இடமே ஹவானாவில் இல்லை. (பலத்த கைதட்டல்) 

இது நமது ஆயுத பலத்திற்குக் கிடைத்த வெற்றிதான்; எனினும் ஒரே ஒரு குண்டு கூட சுடப்படவில்லை. இது மிகவும் அழகான வெற்றி; உரிமையின் வெற்றி; நீதியின் வெற்றி; அறநெறியின் வெற்றி. நாங்கள் வெறும் கெரில்லாக்கள்தான் என்று, துப்பாக்கிகளால் சுடுவதைத் தவிர வேறெதையும் அறியாதவர்கள் என்று நினைத்தவர்கள், எங்களது ராணுவ ரீதியான வெற்றிகளுக்குப் பிறகு, தகவல் தளத்தில், பொதுமக்களின் கருத்துத் தளத்தில் எங்களை நசுக்கி விடலாம் என்று நினைத்தவர்கள், அந்தத் தளங்களிலும் எவ்வாறு போராடுவது; எவ்வாறு வெற்றி பெறுவது என்பதை கியூபப் புரட்சி அறிந்திருக்கிறது என்பதைக் கண்டு கொண்டார்கள்.

சர்வதேச செய்தி சேவையை தங்கள் ஏகபோகமாக வைத்திருப்பவர்கள், திரும்பிய திசையெல்லாம் பொய்களையும், அவதூறுகளையும் பரப்புபவர்கள், நமது புரட்சியை பலவீனப்படுத்த, நமது மக்களின் பெருமையைக் குலைக்க நினைத்தவர்கள், பலவீனமாக இருக்கும்போதே அதன் மீது விழுந்து சிதறடித்து விடலாம் என்று நினைத்தவர்களின் எண்ணம் இன்று பொய்யாய் போனது; ஏனென்றால், நமது புரட்சி இன்று மேலும் உறுதியாக, வலுவாக மாறியிருக்கிறது.

நமது புரட்சியை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக அவர்கள் அதை வலுப்படுத்தியிருக்கின்றனர். நமது புரட்சி தாக்குதல்களைக் கண்டு அஞ்சாது. நமது புரட்சி தாக்குதல்களால் பலவீனமடையாது. அதற்கு மாறாக, அது தன்னை மேலும் மேலும் பிணைத்துக் கொண்டு, மேலும் வலிமையைப் பெறுகிறது. ஏனென்றால், இந்தப் புரட்சி துணிவுமிக்க, போராட்ட குணம்மிக்க மக்களின் புரட்சி.

கியூப மக்களைப் பொறுத்தவரையில் எல்லாமே தெளிவாகத்தான் இருக்கிறது. கியூப புரட்சி ஒரு முன்மாதிரியான புரட்சி. இங்கே திடீர் ஆட்சிக் கவிழ்ப்பு எதுவும் நடக்கவில்லை. நாங்கள் மட்டும் ராணுவ அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவாக இருந்திருந்தால், மக்களின் உதவி எதுவும் இல்லாமலேயே, அதிபரை பதவியிலிருந்து தூக்கியெறிந்துவிட்டு, அவரது இடத்தில் மற்றொருவரை நியமித்து விட்டு, வசதி படைத்தவர்கள் அனைவரையும் மண்டியிட்டு வணங்கி இருந்தால், இது ஒரு புரட்சியாக இல்லாமல் இருந்திருந்தால், எங்களுக்கு எதிரிகள் என்று எவரும் இருந்திருக்க மாட்டார்கள்; எங்களை தாக்கியிருக்க மாட்டார்கள்; எங்களின் மீது அவதூறு பொழிந்திருக்க மாட்டார்கள்.

நாட்டின் நலன்களை விற்றுத் தின்ற, வெளிநாட்டவர்களுக்கு மிகுந்த தாராள மனத்துடன் சலுகைகளை அள்ளி வீசிய, மக்களை ஏமாற்றிய ஒரு சர்வாதிகார ஆட்சி  இந்த அரண்மனையில் இருந்தபோது யாருமே அதன்மீது தாக்குதல் தொடுக்கவில்லை. அதற்கு எதிராக வெளிநாட்டுப் பத்திரிக்கைகளில் பிரச்சாரம் எதுவும் நடைபெறவில்லை. அதனை கண்டிக்க வேண்டுமென்று (அமெரிக்க) காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசவில்லை. மிக மோசமானதொரு துரோகி, நமது குடிமக்களில் 20,000க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்த ஒரு குற்றவாளி இந்த அரண்மனையில் இருந்தபோது, கியூபாவிற்கு எதிராகவோ அல்லது அந்த சர்வாதிகாரிக்கு எதிராகவோ இத்தகைய பிரச்சாரங்கள் நடைபெறவில்லை.  

300 மில்லியன் பெசோக்களை திருடிய ஒருவன் இந்த அரண்மனையில் வசித்தபோது, ஆயிரம் கோடிக்கும் மேலான பெசோக்களை திருடிய திருடர் கூட்டத்தின் ஆளுகையில் இந்த நாட்டின் குடியரசு இருந்தபோது, அவர்களுக்கு எதிராக வெளிநாடுகளில் இத்தகைய பிரச்சாரங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. ஒவ்வோர் இரவும் டஜன் கணக்கில் கியூப மக்கள் கொல்லப்பட்டபோது, இளைஞர்கள் நெற்றிப் பொட்டில் சுடப்பட்டு கொலைசெய்யப்பட்டு கிடந்ததை பார்த்தபோது, ராணுவப் படைத்தளங்களில் பிணங்கள் மலையென குவிந்து கிடந்தபோது, எங்களது பெண்களிடம் அத்துமீறல் செய்தபோது, பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டபோது, தூதரகங்களுக்குள் காவல்துறையினர் நுழைந்து அங்கு தஞ்சம் புகுந்திருந்த 10 அகதிகளை ஒரு சில நிமிடங்களில்  சுட்டுத் தள்ளியபோது, கியூபாவிற்கு எதிராக இத்தகைய பிரச்சாரங்கள் எதுவும் நடக்கவில்லை; ஒரு சில அரிதான விதிவிலக்குகள் இருந்தபோதிலும் (அமெரிக்க) காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த சர்வாதிகாரத்தைக் கண்டித்துப் பேசவில்லை.

கியூப மக்களுக்கு எதிராகப் பிரச்சாரம் நடக்கிறது; ஆம். ஏனென்றால், அவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள். ஏனென்றால், வெறும் அரசியல் ரீதியாக மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும்  அவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள். கியூப மக்களுக்கு எதிராகப் பிரச்சாரம் நடக்கிறது; ஏனென்றால், இந்த அமெரிக்க கண்டம் முழுவதற்குமே அவர்கள் மிகவும் அபாயகரமான முன்னுதாரணமாக மாறியிருக்கிறார்கள்.

கியூப மக்களுக்கு எதிராகப் பிரச்சாரம் நடக்கிறது; ஏனென்றால், அந்நிய ஏகபோகங்களுக்கு வழங்கப்பட்ட சோர்வடைய வைக்கும் சலுகைகள் அனைத்தையும் நாங்கள் ரத்து செய்யப் போகிறோம் என்பதை, மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படவிருக்கிறது என்பதை, சர்வாதிகார ஆட்சி வழங்கிய சோர்வடைய வைக்கும் சலுகைகள் அனைத்தையும் நாங்கள் மறுபரிசீலனை செய்து, ரத்து செய்யப் போகிறோம் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.

கியூபாவிற்கு எதிராக ஏன் இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது? எந்தவொரு மக்களுக்கும் எதிராக நடத்தப்பட்ட பிரச்சாரங்களிலேயே மிகவும் அருவெறுக்கத்தக்க, மிகக் கொடூரமான, மிகவும் அநீதியான பிரச்சாரம் இதுவாகத்தான் இருக்கும். ஏன் இந்தப் புரட்சி வெற்றி பெற்ற ஐந்து நாட்களிலேயே ஒரு சில அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கியூப மக்களுக்கு எதிராக அவதூறுகளை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களின் நோக்கம் மிகத் தெளிவானது. நமது புரட்சியால் புரட்சிகளுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியை உலகத்திற்கு எடுத்துக்காட்ட முடிந்துள்ளது. புரட்சிகளின், போர்களின் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத வகையில் இந்தக் கலகக்காரர்களின் படை மிகுந்த பெருந்தன்மையோடு நடந்து கொண்டிருக்கிறது. ஆயிரம் பேர் நம்மால் சிறைபிடிக்கப்பட்டனர். காயமுற்றிருந்த நூற்றுக்கணக்கானோரை நமது மருத்துவர்கள் நன்கு கவனித்துக் கொண்டார்கள். ஒரே ஒரு கைதி கூட நமது படையினரால் தாக்கப்படவில்லை.   

இவற்றையெல்லாம் உலக மக்களுக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவேதான் இங்கே வந்துள்ள செய்தியாளர்களின் மூலம் அவர்களை நம்ப வைக்க இருக்கிறோம். அமெரிக்க கண்டத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வந்துள்ள செய்தியாளர்களை நாளை நாம் சந்திக்கவிருக்கிறோம்.  அந்தக் கூட்டத்தில் தெளிவானதொரு மனசாட்சியுள்ள ஒரு மனிதனாக என்னை நான் (அவர்களது) விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ளப் போகிறேன்.  எந்தவொரு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினருக்கும் நான் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எந்தவொரு வெளிநாட்டு அரசுக்கும் நான் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நாட்டு மக்களுக்கு நான் விளக்கமளிப்பேன். முதலில் எனது மக்களுக்கு, கியூப நாட்டு மக்களுக்கு விளக்கமளிப்பேன். இரண்டாவதாக, அமெரிக்க கண்டத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் விளக்கமளிப்பேன். மெக்சிகோ நாட்டு மக்களுக்கு, அமெரிக்க நாட்டு மக்களுக்கு, கோஸ்டரீகா நாட்டு மக்களுக்கு, வெனிசுலா நாட்டு மக்களுக்கு, ஏன் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு நான் விளக்கமளிப்பேன். (இந்தக் கூட்டம் நடந்து முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, 1959 ஜனவரி 23 அன்று லத்தீன் அமெரிக்கப் பகுதி முழுவதும் தனது கருத்துக்களைப் பரப்பும் வகையில் காஸ்ட்ரோ இதைத்தான் செய்தார்)

இதற்காகத்தான் நான் செய்தியாளர்களை அழைத்திருந்தேன். இங்கே வந்து தங்கள் சொந்தக் கண்களால் உண்மைகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. எங்கு நீதி இருக்கிறதோ, அங்கே குற்றங்கள் இருக்காது. எங்கே குற்றங்கள் இருக்கிறதோ, அங்கே பத்திரிக்கை சுதந்திரம் என்பது இருக்காது. குற்றங்கள் நிலவும்போது மக்கள் தங்கள் செயல்களை மறைத்து வைக்கவே விரும்புகிறார்கள்.

கியூப மக்கள் ஒன்றும் காட்டுமிராண்டிகளோ அல்லது குற்றமிழைப்பவர்களோ அல்ல. அவர்கள் உலகிலேயே மிகவும் நாகரீகமான, உணர்வுடையவர்கள். இங்கே ஓர் அநீதி இழைக்கப்படுகிறது என்றால், மக்கள் அனைவரும் அதற்கு எதிராக இருப்பார்கள். நமது அறிவுஜீவிகளோ, நமது செய்தியாளர்களோ, நமது தொழிலாளர்களோ, நமது விவசாயிகளோ, நமது மத குருமார்களோ உணர்வு அற்றவர்கள் அல்ல. தண்டனையானது நியாயமான ஒன்றாக இருக்கையில், இந்தத் தண்டனையை பெறத் தகுதியானவர்களாக இருக்கையில் எல்லோருமே தண்டனையை தருவதற்கு ஒப்புக் கொள்கிறார்கள்.  

இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு, நேச சக்திகள் போர்க்குற்றவாளிகளை தண்டித்தனர். இப்போது நமக்கிருப்பதை விடக் குறைவான உரிமையே அப்போது அவர்களுக்கு இருந்தது. ஏனெனில், பின்னாளில் ஒப்புதல் வழங்கப்பட்ட ஒரு சட்டத்தின்கீழ்தான் இந்தத் தண்டனையை அவர்கள் வழங்கினார்கள். அதேநேரத்தில் குற்றம் செய்வதற்கு முன்பாகவே நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்கீழ், பொதுவிசாரணைகளில், நேர்மையானவர்களைக்கொண்ட நீதிமன்றங்களில் தான் நாம் போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குகிறோம். இப்போது வழங்கப்பட்டு வரும் நீதியை ஒப்புக் கொள்பவர்கள், இந்தக் கூட்டுக் கொலைகாரர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்பவர்கள் எல்லோரும் கையை உயர்த்துங்கள்! (தொடர்ந்து 2 நிமிடங்களுக்குக் கைதட்டல்)

எமது மரியாதைக்குரிய தூதரக அதிகாரிகளே, அமெரிக்க கண்டம் முழுவதிலுமிருந்து வந்திருக்கும் செய்தியாளர்களே, அனைத்து வகையான கருத்துக்களையும் கொண்ட, அனைத்து சமூகப் பிரிவுகளையும் சேர்ந்த பத்து லட்சம் கியூப மக்கள் நடுவராக இருந்து இப்போது வாக்களித்திருக்கிறார்கள். ஜனநாயகவாதிகளுக்கு, அல்லது தங்களை ஜனநாயகவாதிகள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்வேன்: இதுதான் ஜனநாயகம். இதுதான் மக்களின் விருப்பத்தை மதிப்பது. ஜனநாயகவாதிகளும், அல்லது தங்களை ஜனநாயகவாதிகள் என்று கூறிக் கொள்பவர்களும் மக்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும்.

எனது உரையை முடிப்பதற்கு முன்பாக, நான் முக்கியமானது என்று கருதும் ஒரு விஷயம் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்: அது இதுதான். எங்கள் பாதுகாப்பு பற்றி கியூப மக்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். எங்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி பல்லாயிரக்கணக்கான மக்கள் கேட்டுக் கொள்கிறார்கள். புரட்சியின் எதிரிகளால் நாங்கள் தாக்கப்படக் கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். கியூப நாட்டு மக்களுக்கு நான் இன்று சொல்லிக் கொள்வதெல்லாம் அது உண்மையல்ல என்றுதான். ஒரே ஒரு நபரை நம்பி புரட்சி இருக்க முடியாது; ஒரே ஒரு நபரை மட்டுமே நம்பி ஒரு நாட்டின் எதிர்காலம் இருக்க முடியாது; ஒரே ஒரு நபரை மட்டுமே நம்பி நீதியின் எதிர்காலம் இருக்க முடியாது என்றுதான் நான் கூற விரும்புகிறேன்.

அதற்கும் மேலாக, தலைவர்களை கண்ணாடிப் பேழைக்குள் அடைத்து வைக்கக் கூடாது. நான் ஏற்கனவே செய்து வந்த செயல்களை தொடர்ந்து செய்வது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். என்ன நடந்தாலும் சரி, அனைத்து அபாயங்களையும் அமைதியாக எதிர்கொள்வதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். ஒரே ஒரு காரணத்தினால்தான் நான் இதைச் சொல்கிறேன். ஏனென்றால், எதுவுமே, எவரொருவருமே புரட்சியை தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை நான் நன்றாகவே அறிந்து வைத்துள்ளேன். எனது எதிரிகளுக்கும் சொல்வதற்கு ஒரு விஷயம் இருக்கிறது: எனக்குப் பின்னால் இருப்பவர்கள், என்னைவிட மிகவும் தீவிரமானவர்கள். அதைப் போன்றே, எங்களது புரட்சிகர நீதியை தாக்குவதன் மூலம் புரட்சியை அவர்கள் மேலும் பலப்படுத்துகிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. என்னைக் கொல்வதன்மூலம் அவர்களால் புரட்சியை மேலும் வலுப்படுத்தவே முடியும்.

எனவே, நாட்டின் நலன்களை, மக்களின் நலன்களை பாதுகாப்பதில் ஒவ்வொரு நாளும் கியூப நாட்டு மக்கள் வலுவாகிக் கொண்டேதான் வருவார்கள். இறுதியாக, மக்கள் தங்களது இலக்கை, எப்போதுமே நம்மிடம் இருந்திராத முழுமையான சுதந்திரம், இறையாண்மையை  அடைந்திருக்கின்றனர்.  இப்போது நமது நாடு தன்னைத் தானே ஆளுகின்ற, வேறு எவரின் ஆணையை ஏற்காத ஒரு நாடாக மாறியிருக்கிறது. 

இங்கே ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்க விரும்புகிறோம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களின் நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கின்ற போர்க்குற்றவாளிகளை திருப்பி அனுப்புமாறு அமெரிக்க அரசை கேட்டுக் கொள்கிறோம். மாஸ்ஃபெரா, வென்சுரா மற்றும் இதர குற்றவாளிகளுக்கு அமெரிக்க நாட்டு மக்கள் அடைக்கலம் கொடுக்கக் கூடாது என கியூப நாட்டு மக்கள் கோருகிறார்கள். அமெரிக்க அரசு இந்தப் போர்க்குற்றவாளிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என அமெரிக்க மக்கள் கோர வேண்டும். ஆம். அவர்கள் போர்க்குற்றவாளிகள்தான்.

உலகப் போருக்குப் பின்பு, அமெரிக்க நாட்டு மக்கள் கோயரிங், ஹிம்லர், ஹிட்லர் ஆகியோருக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் கொடுக்க ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்கள். (எனினும் இந்த உரை நிகழ்த்திய நேரத்தில் எவருக்கும் தெரிந்திராத உண்மை என்னவெனில், நாஜிகளான விஞ்ஞானிகள், அதிகாரிகள் பலரையும், அன்றைய அமெரிக்க அரசு தம் நாட்டுத் தொழிலாளர்களுக்கே தெரியாமல், அரசிற்குள் கொண்டு வந்து நுழைத்து, சோவியத் யூனியனுக்கு எதிராக உற்பத்தியையும் தொழில்நுட்பத்தையும் பெருக்குவதற்காக அவர்களை பயன்படுத்திக் கொண்டது என்பதுதான்). உண்மைதான். எங்கள் நாட்டின் ஹிம்லர் வென்சுரா. எங்களது கோயரிங் டாபர்னிலாஸ். எங்கள் ஹிட்லர் பாடிஸ்டா. அமெரிக்கா நியாயமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், கியூப மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைத்தால், இந்தப் போர்க்குற்றவாளிகளை திருப்பி அனுப்ப அது ஒப்புக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அவர்கள் எவரும் அரசியல் குற்றவாளிகள் அல்ல.

பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டவர்களை அரசியல் குற்றவாளிகள் என்று கருத முடியாது; ஏனென்றால், பெண்களை மோசமாக நடத்துவதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. கண்களைப் பிடுங்கி எறிந்து சித்திரவதை செய்தவர்களை அரசியல் குற்றவாளிகள் என்று கருத முடியாது; ஏனென்றால், கண்களைப் பிடுங்குவதற்கும் அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. குழந்தைகளை, முதிய பெண்களை படுகொலை செய்த, பல்லாயிரக்கணக்கான சக குடிமக்களை எவ்வித இரக்கமுமின்றி சித்திரவதை செய்தவர்களை அரசியல் குற்றவாளிகள் என்று கருத முடியாது; ஏனென்றால், சித்திரவதைக்கும் அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. 

அரசியல் குற்றவாளிகள் என்பதாக அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடியாது. ஏனெனில், அவர்கள் பொதுவான சட்டத்தை மீறிய குற்றவாளிகள் தான். எங்களிடமிருந்து திருடப்பட்டு அமெரிக்க வங்கிகளில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான பெசோக்கள்  எங்களிடம் திருப்பித் தரப்பட வேண்டும். வெளிநாட்டில் சேமித்து வைப்பதற்காக மக்களின் பணத்தை தன் பைகளில் நிரப்பிக் கொள்வதற்கும் அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.  ஏனெனில், தங்களின் ஆடம்பர செலவுகளுக்காக மக்களின் பணத்தைத் திருடுவதற்கும் அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இங்கேயும் சரி, உலகின் எந்த மூலையில் அவர்கள் இருந்தாலும் சரி, அவர்கள் திருடர்கள் என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை. எனவே, கொலைகாரர்கள், சித்திரவதையாளர்கள் ஆகியோரை திருப்பி அனுப்ப வேண்டுமென்று கேட்பதற்கான உரிமை கியூப மக்களுக்கு உள்ளது. அதைப்  போலவே, அனைத்து மக்களிடம் இருந்தும் திருடப்பட்ட பணத்தையும் திருப்பித்தர வேண்டும். 

மிகத்தெளிவான மனசாட்சி எனக்குள்ளது என்ற திருப்தியோடு, எனது கைகளில் எந்தவித ரத்தக் கறையும் இல்லை என்று பெருமையோடு கியூபாவிற்கு மட்டுமல்ல; அமெரிக்க கண்டத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் என்னால் தலைநிமிர்ந்து சொல்ல முடியும். [காஸ்ட்ரோவின் தலைமையில் நடைபெற்ற புரட்சிகரப் போராட்டத்தின்போது கைப்பற்றப்பட்ட போர்க் கைதிகளில் ஒருவர்கூட சுட்டுக் கொல்லப்படவில்லை என்பது மட்டுமல்ல; ஒருவர் கூட துன்புறுத்தப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், தம்மிடமிருந்த கைதிகளை குணப்படுத்த தங்களுக்கென வைத்திருக்கும் மருந்துகளை கொடுத்து உதவுவது உள்ளிட்டு கைதிகளை மிகச் சிறப்பாக நடத்தியதற்காக கியூப புரட்சியாளர்களுக்கு அந்த நாட்களில் உலகம் முழுவதிலும் நற்பெயர் கிடைத்தது மட்டுமின்றி, அமெரிக்க நாட்டிலிருந்து நிதியுதவியும் கூட கிடைத்தது] இந்த உண்மையை எந்த நாட்டிற்கு முன்பாகவும் தலைநிமிர்ந்து நின்று என்னால் சொல்ல முடியும்.

அமெரிக்க நாட்டு மக்கள் மிக மோசமான வகையில் ஏமாற்றப்படுவதற்கு தங்களை ஒப்புக் கொடுத்துவிட்டார்கள் என்பதை நினைத்துத்தான் நான் பெரிதும் வருத்தப்படுகிறேன். இந்தப் புரட்சி நசுக்கப்படுமானால், அமெரிக்க கண்டத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று நினைத்துத்தான் நான் பெரிதும் வருத்தப்படுகிறேன். ஏனென்றால், இந்தப் புரட்சி ஓர் அதிரடிப் புரட்சியோ அல்லது ஒரு ராணுவக் கும்பலின் எழுச்சியோ அல்ல; மாறாக, மக்களின், உண்மையிலேயே மக்களின், புரட்சி. அமெரிக்க கண்டத்து  மக்களின் நம்பிக்கை அதில் பிரதிபலிக்கிறது. ஏன் அப்படி? ஏனென்றால் அமெரிக்க கண்டத்திலுள்ள மிக மோசமான ஒரு பகுதியின் மீது நாம் தாக்குதல் நடத்தியிருக்கிறோம்.

நூறாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க கண்டத்தின் வரலாறு என்பது மிகவும் வெட்ட வெளிச்சமானது. பேராசை பிடித்த நபர்கள், ராணுவ வெறியர்கள், ராணுவ தளபதிகளின் அதீதமான பேராசைகளுக்கு அமெரிக்க கண்டம் பலியானது. கியூபாவில் இப்போது நடைபெற்று முடிந்துள்ள ஒரு புரட்சியைப் போன்ற ஒன்று அமெரிக்க கண்டத்திற்கும் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கும் எவ்வளவு அதிகமாகத் தேவைப்பட்டது!  நாம் வசிக்கும் இந்தப் பூமிப் பகுதியில் உள்ள நாடுகள் அனைத்திலும் உள்ள போர்க்குற்றவாளிகள் அனைவரையும் சுட்டுக் கொல்ல வேண்டுமென்று அமெரிக்க கண்டம் எவ்வளவு அதிகமாக ஆசைப்படுகிறது!  

கியூபாவின் உதாரணம் அமெரிக்க கண்டத்திற்கு எவ்வளவு அதிகமாகத் தேவைப்படுகிறது! மேலாதிக்கம் செலுத்த வேண்டுமென்ற பேராசை எதுவுமின்றி, இதர நாடுகளை சுரண்டவோ அல்லது மேலாதிக்கம் செலுத்தவோ இலக்கேதுமின்றி, ஒரு முன்னுதாரணமாக, நியாயத்திற்கான, பரந்த நீதிக்கான, உலகம் இதுவரை அறிந்ததிலேயே மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கின்ற மிகவும் தனித்துவமான ஓர் அமைப்பாக ஒரு புரட்சியை  இங்கு கொண்டு வந்தமைக்காக கியூபர்களாகிய நாம் மிகவும் பெருமைப்படலாம்.

கியூப புரட்சியைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவதெனில், முழுமையான சுதந்திரத்திற்குள் சமூகநீதிக்கான விருப்பம் நிறைந்த, மக்களின் உரிமைகளுக்கு முழுமையான மரியாதை தருகின்ற ஒன்றுதான் அது என்று கூறலாம். அமெரிக்க கண்ட த்திற்கான என்று இல்லையென்றாலும் கியூபாவின் பாரம்பரிய உரிமை என்ற வகையில் நமது புரட்சி பாதுகாக்கப்பட வேண்டும். கியூபா மட்டுமல்ல; அமெரிக்க கண்டத்திற்கே ஊறுவிளைவிக்கும் வகையில் அதனை நிர்மூலமாக்கும் ஒரு முயற்சியாக அதன் மீது பழிசுமத்த அனுமதிக்கக் கூடாது என்றும், நமது புரட்சியை பாதுகாக்க வேண்டும் என்றும் அமெரிக்க கண்டத்தில் உள்ள நேர்மையான மனிதர்களை, இந்தக் கண்டத்தின் நேர்மையான செய்தியாளர்களை, நமது நண்பர்களாக உள்ள மக்களை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். கியூப புரட்சி தலைதூக்காமல் இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். ஏனென்றால், அமெரிக்க கண்டத்தில் உள்ள எந்தவொரு நாடும் தலைதூக்கிவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் விருப்பம்.  

அதுவும்போக, அமெரிக்க கண்டத்து மக்கள் சர்வாதிகாரத்தின் கோரங்களை பார்த்தவர்கள் என்ற வகையில், அரசியல் எதிரிகளை விசாரணை ஏதுமின்றி கொத்துக் கொத்தாக கொன்றழிப்பது குறித்து கேள்விப்பட்டே பழகியவர்கள் அவர்கள் என்ற வகையில், கியூபாவின் இந்தப் புரட்சியும் கூட அதைப் போன்ற ஒன்றுதான் என்று அவர்களை நம்ப வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. வெளியுலகிற்கு அனுப்பப்படும் செய்திகள் கலகக்காரர்களின் ராணுவத்தின் நடத்தையைப் பற்றிப் பேசுவதில்லை; ஒரே ஒரு மனிதர் கூட கூட்டாக மக்களால் அடித்துக் கொலை செய்யப்படாத ஒரே புரட்சி இதுதான் என்பதைப் பற்றிப் பேசுவதில்லை; உலகின் வேறு எந்தநாட்டு மக்களையும் விட கியூபர்கள் இந்தப் புரட்சியின்போது மிகுந்த நாகரீகமாக நடந்து கொண்டார்கள் என்பதை அவர்கள் பேசுவதில்லை; சர்வாதிகாரியின் ஒரே ஒரு அடியாள் கூட சித்திரவதை செய்யப்படவில்லை; ஒரே ஒரு எதிரி கூட அடித்து நொறுக்கப்படவில்லை; பழிவாங்குவதை மக்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, இந்தக் குற்றவாளிகளை புரட்சிகர நீதிமன்றங்களுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்திய புரட்சி என்பது உலகத்திலேயே இது ஒன்றுதான் என்று அவர்கள் பேசுவதில்லை. 

ஒரு விஷயம் மட்டும் மிகவும் தெளிவானது. நீதி என்பது இல்லாமல் அமைதி நிலவ முடியாது. நீதி என்பது இல்லாமல் ஜனநாயகம் என்பது இருக்க முடியாது. எனினும் அமைதியின் பெயரால் உண்மையாகவே குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. என்னைத் தூற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களை கேட்க விரும்புகிறேன். அமெரிக்க நாடு என்ன செய்தது? ஹிரோஷிமா, நாகசாகியில் அது என்ன செய்தது? அமைதியின் பெயரால் இந்த இரு நகரங்களிலும் இருந்த பல லட்சக்கணக்கான மக்கள் மீது குண்டுகள் போடப்பட்டன. நாங்கள் எந்தக் குழந்தையையும் சுட்டுக் கொல்லவில்லை; நாங்கள் எந்தவொரு பெண்ணையும் சுட்டுக் கொல்லவில்லை; நாங்கள் எந்தவொரு முதியவரையும் சுட்டுக் கொல்லவில்லை.

இருந்தாலும் ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் பல லட்சக்கணக்கான மனிதர்கள் இறந்து போனார்கள். எதன்பெயரால்? ஆம். அமைதியை நிலைநாட்டுவதற்காக என்று சொல்லப்பட்டது. போரில் வட அமெரிக்க வீரர்களின் இறப்பைத் தடுக்க என்றும் கூட அவர்கள் சொன்னார்கள். நல்லது. நான் அந்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்குச் சொல்லிக் கொள்வேன்: கியூபாவின் விஷயங்களில் அவர்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை என்ற உண்மையை சுட்டிக் காட்டும் அதே நேரத்தில் எங்கள் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக கொடுங்கோலனின் அடியாட்களை நாங்கள் சுட்டுக் கொல்கிறோம்; அந்தக் கசாப்புக் காரர்களை சுட்டுக் கொல்கிறோம்; ஏனென்றால், நாளை அவர்கள் எங்கள் குழந்தைகளை கொலை செய்ய முடியாது என்பதற்காகவே இதைச் செய்கிறோம்.

தங்களை ஜனநாயகவாதிகள் என்று அவர்கள் அழைத்துக் கொள்ளும் நிலையில் ஜனநாயகம் என்றால் என்ன என்பதை அவர்கள் பார்க்கட்டும். மக்களின் விருப்பம் பற்றி அவர்கள் பேசி வரும் நிலையில், மக்களின் விருப்பம் என்ன என்பதை அவர்கள் பார்க்கட்டும். அவர்களே உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ளட்டும் என்றுதான் நான் கூறுகிறேன். ஒரு விஷயத்தை நான் மக்களுக்குத் தெளிவாகக் கூறிவிட வேண்டும்.  அமெரிக்க அரசு எங்களின்மீது நேரடியாகத் தாக்குதல் தொடுக்கவில்லை. அமெரிக்க நாட்டின் அனைத்து பத்திரிக்கைகளும் எங்களைத் தாக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஹெர்பெர்ட் மாத்யூஸ் உள்ளிட்டு பத்திரிக்கைகளில் ஒரு பகுதியினர் எங்களுக்கு ஆதரவாகப் பேசினார்கள். ஒருவிஷயம் மட்டும் மிகத் தெளிவானது. தற்சமயம் அமெரிக்க நாட்டு அரசு எங்களுக்கு விரோதமான அணுகுமுறையை மேற்கொள்ளவில்லை. என்றாலும் கூட அமெரிக்க நாட்டின் செயல்முறைகள் பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஒரு குறிப்பிட்ட வகையிலான பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. எங்களின் புரட்சியைக் கண்டு அஞ்சும் ஆதிக்க சக்திகள் புரட்சிக்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. மக்களிடையே புரட்சிக்கு எதிரான கருத்தை உருவாக்குவார்கள்; அதன் பிறகு நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க நாட்டு அரசை அவர்கள் கோருவார்கள்.

அமெரிக்க மக்களிடையே ஆதிக்க சக்திகளால் நடத்தப்பட்டு வரும் அவதூறு பிரச்சாரத்திற்கு பதிலாக ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அமெரிக்க நாட்டு மக்களிடம் கியூப நாட்டு மக்களுக்கு எவ்வித பகையுணர்வும் இல்லை என்பதையும், கியூபா மட்டுமின்றி அமெரிக்க நாட்டிற்கும் விரோதிகளாக இருப்பவர்கள் அந்த ஆதிக்க சக்திகள் என்பதையும் சுட்டிக் காட்டி, இந்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக எங்களை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எனது சக குடிமக்களே!  உங்கள் அனைவருக்கும் எனது நன்றியும் பாராட்டுதல்களும். இன்று நடைபெற்ற இந்த தனிச்சிறப்புமிக்க ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு, எங்களுக்கான மக்களின் ஆதரவை  இன்று நேரடியாகப் பார்த்தபிறகு, ஒரு கியூப நாட்டவனாகவும், இந்த மக்களை சார்ந்தவனாகவும் நாங்கள் பெருமைப்படுகிறோம். புரட்சிகர அரசின் பெயராலும், கிளர்ச்சிப் படையின் போராளிகளின் பெயராலும், அனைவரின் சார்பாகவும் எனது மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

(மார்க்சிஸ்ட் (ஆங்கிலம்) தொகுதி 32, 2016 அக்டோபர்-டிசம்பர் இதழில் வெளியான கட்டுரையின் சுருக்கம்)

தமிழில்: வீ. பா. கணேசன்  Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: