பண வீக்கம்: தட்டிப் பறிக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பு !


க. சுவாமிநாதன் 

ஏப்ரல் 2022 பண வீக்க கணக்குகள் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளன. பண வீக்கம் குறித்த பரவலான விவாதங்கள் பொருளாதார வட்டங்களில் உருவாக்கியுள்ளன. பண வீக்கம் ஏதோ பொருளாதாரத்தின் இயல்பான போக்கில் நிகழ்வது போல பேசும் “நிபுணர்கள்” உண்டு. இவர்கள் ஆள்பவர்களின் பக்கம் நிற்பவர்கள். முதலாளித்துவ சமுகத்தின் உள்ளார்ந்த பாரபட்சத்தை மறைப்பவர்கள்.  தங்களின் பொருளாதார நிபுணத்துவத்திற்கு கூட உணமையாக இருப்பவர்கள் இல்லை. 

ஏப்ரல் 2022 மாதத்தில் சில்லறை பண வீக்கம் (Retail Inflation) 7.79 சதவீதத்தை தொட்டுள்ளது. இது 8 ஆண்டுகளாக இல்லாத உயர்வாகும். மொத்த விலை பண வீக்கம் (Whole sale Inflation) 15. 08 சதவீதத்தை தொட்டுள்ளது. கடந்த 13 மாத காலமாக இரட்டை இலக்கமாகவும், 30 ஆண்டுகளாக இல்லாத உயர்வு என்றும்  “சாதனை” படைத்துள்ளது. 

பாதிப்பில் பாரபட்சம்

இந்த விகிதங்கள் பொதுவானது போல தோன்றினாலும், அதன் பாதிப்புகள் வித்தியாசமான அளவுகளில் மக்களை பாதிக்கின்றன. இதன் சுமையை அதிகமாக தாங்க வேண்டியவர்களாக இருப்போர் அடித்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கமுமே. சில்லறை விலை பண வீக்கம் 7.79 என்பது அதன் கணக்கீட்டு கூடையில் உள்ள அனைத்துப் பொருட்களின் விலை உயர்வு சராசரியே. ஆனால் உணவுப் பொருள் விலை உயர்வு என்பது 8.38 சதவீதம். காய்கறி விலை உயர்வு 15.41 சதவீதம். சமையல் எண்ணெய் விலை உயர்வு 17.3 சதவீதம். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வு 10.80 சதவீதம். ஆகவே தங்களின் வருமானத்தில் யார் பெரும் பகுதியை உணவுக்கும், போக்குவரத்துக்கும் செலவிடுவார்களோ, அவர்கள் அதிகமான பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என்பதே இதில் அடங்கியுள்ள உண்மை. இது தவிர, கல்வி, உடை, வீட்டு வசதி, உடல் நலம் என எல்லா செலவுகளுமே அதிகரித்துள்ளன.

சி.எம்.ஐ. இ (Centre for Monitoring Indian Economy)  மதிப்பீட்டின்படி கீழ் மட்ட நடுத்தர வர்க்கத்தினரின் – அதாவது ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சம் முதல் 2 லட்சத்திற்கு இடையில் உள்ளவர்கள் – வாழ்க்கைத் தரத்தையும் பண வீக்கம் சரித்துள்ளது. 

பண வேகத்தின் தாக்கத்தில் இன்னொரு கோணமும் உண்டு. இது நகரங்களை விட கிராமங்களை அதிகமாக தாக்கியுள்ளது. கிராமப்புற பண வீக்கம் 8.38 சதவீதமாக உள்ளது. சில மாநிலங்களில் இரட்டை இலக்கமாக கூட உள்ளது. மேற்கு வங்கம் ஒரு உதாரணம். அங்கே 10.53 சதவீதமாக உள்ளது. நகரங்களை விட குறைவாக உள்ள மாநிலங்களில் கேரளாவும் ஒன்று.  

சுய தொழில் புரிவோர் நிலைமையோ மிக மோசம். 

“ஃபிரண்ட் லைன்” இதழில் வெளியாகியுள்ள ஓர் உண்மைக் கதை இது.   ஊபரில் 2015 இல் இணைந்த ஒருவர் 9 லட்சம் ரூபாய்க்கு கடனில் கார்  வாங்கியுள்ளார். ருபாய் 23000 மாதத் தவணை. மூன்று வருடம் ஓரளவு நன்றாக ஓடுகிறது. அவரும் தவணை தவறாமல் கட்டுகிறார். பின்னர் டீசல் விலை உயர்வை தாங்க முடியாமல், சி.என்.ஜி க்கு மாறுகிறார். அப்படியும் கட்டுப்படியாகாமால், காரின் கடனில் பாதியை கட்டி முடித்த நிலையிலும், 2019 இல் கடன்தாரரால் கார் பறிமுதல் ஆகிறது. இப்படி நிறைய கதைகள் உள்ளன. 

உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் பெற்றவர்களில் 80 லட்சம் பேர் கடந்த ஆண்டு ஒரு சிலிண்டர் கூட வாங்கவில்லை. 1 கோடி பேர் ஒரே ஒரு சிலிண்டர் மட்டுமே வாங்கியுள்ளனர்.

ஆகவே பண வீக்கம் வர்க்க பாரபட்சம் உடையது. எளிய மக்களை பார்த்தால் கொம்பை சிலிர்த்து கோபமாக முட்டுகிறது. 

குதிருக்குள் ஒளிந்த எங்கப்பன்

பணவீக்கம் அதிகமானவுடன் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையே “பண வீக்கம் ஒரு திட்டமிட்ட தாக்குதல்” என்பதை நிரூபிக்கிறது. பணக் கொள்கைகளில் மாற்றம் என்ற வழக்கமான ஆயுதத்தை கடந்து, புதிய கருவிகளை கையில் எடுத்துள்ளனர். அதுவே பெட்ரோல் மீதான செஸ் வரியில் குறைப்பு. பெட்ரோல் செஸ் ரூ 8, டீசல் ரூ 6 குறைப்பு, உஜ்வாலா கேஸ் பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு ரூ 200 மானியம், இறக்குமதி வரி சலுகை என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்கள் எண்ணெய் மீது போட்ட வரிகள், பண வீக்கத்திற்கு முக்கியக் காரணம் என்பதை அவர்களே ஒத்துக் கொண்டுள்ளனர். ரிசர்வ் வங்கி பணக் கொள்கையில் – ரீப்போ விகிதத்தில் 0.40 சதவீத உயர்வு, ரொக்க இருப்பு விகிதத்தில் 0.50 சதவீத உயர்வு – செய்த மாற்றங்கள் போதாது என்பதையும் வெளிப்படுத்தி உள்ளனர். 

2014க்கும்  2022 க்கும் இடைப்பட்ட காலத்தில் பெட்ரோல் வரிகள் மட்டும் ஒரு லிட்டருக்கு ரூ 9.40 லிருந்து ரூ 27.90 ஆக 3 மடங்கு உயர்வு. டீசல் வரிகள் மட்டும் ஒரு லிட்டருக்கு ரூ 3.56 லிருந்து ரூ 31.47  ஆக 9 மடங்கு உயர்வு. 

பண வீக்கத்தின் பொருளாதார இலக்கணமான “அதிக பணம் குறைவான பொருட்களை துரத்துவது” (Too much money chasing too few goods) என்ற கிராக்கி –  அளிப்பையும் கடந்த காரணங்கள் பண வீக்க பாய்ச்சலுக்கு பின்புலத்தில் இருந்துள்ளன என்பதை இது தெளிவாக்குகிறது. 

நவீன தாராளமயத்தின் “வருமான திரட்டல் கோட்பாட்டின்” விளைவு இது. 

உலகச் சூழல் காரணமா?

உக்ரைன் – ரஷ்யா மோதலே பண வீக்க உயர்வுக்கு காரணம் என ஆட்சியாளர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். அந்நிய முதலீடுகள் இந்தியப் பங்கு சந்தைகளை விட்டு வெளியேறியதும் காரணம் எனக் கூறப்படுகிறது. 

இவை இரண்டும் கூடுதல் தாக்கத்தை உருவாக்கி இருக்கலாம். உக்ரைன் போரை ஒட்டி ரஷ்யா மீது போடப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் கூடுதல் அழுத்தத்தை உருவாக்கி இருக்கலாம். அது போல அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் கூடுதல் பங்களிப்பை செய்திருக்கலாம். அதனால் இறக்குமதி செலவினம் கூடியிருக்கலாம். எல்லாம் “கூடுதல்” என்பதுதானே தவிர அடிப்படைக் காரணிகள் அவை அல்ல. 

உக்ரைன் போர் எப்போது துவங்கியது? பிப்ரவரி 2022 இல். ஆனால் அதற்கு முன்பே 10 மாதங்களாக மொத்த விலை பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது. மார்ச் 2021 இல் 6 சதவீதமாக இருந்த பண வீக்கம் ஜூன் 2021 க்குள்ளாக 11 சதவீதத்தை நெருங்கி விட்டது. அக்டோபர் 2021 இல் 12.2 சதவீதம். பிப்ரவரி 2022 இல் 14.1 சதவீதம். அதற்கு பிறகே உக்ரைன் போர் வருகிறது. சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலைகளும் உக்ரைன் போருக்கு முன்பே உயர்ந்து விட்டன. ஏப்ரல் 2020 இல் பேரலுக்கு 17 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் விலை பிப்ரவரி 2022 இல் பேரலுக்கு 94 டாலர்களாக உயர்ந்து விட்டது. 

ஆனால் ஆட்சியாளர்கள் “உலகக் காரணிகளை” சுட்டுவது இரண்டு நோக்கங்களை கொண்டது. 

ஒன்று, நாங்களோ, எங்கள் பொருளாதார கொள்கைகளோ காரணம் அல்ல என்று தப்பித்துக் கொள்வது. 

இரண்டாவது, உலக சூழல்கள் இப்படி இருந்தால், எங்களால் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்று கை கழுவுவது. 

ஆகையால் உலகக் காரணிகள் தாண்டிய காரணிகள் உள்ளன. 

கோணல் பாதை… மக்களின் வாதை

நவீன தாராளமயப்  பாதையை அடியொற்றி ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பண வீக்கத்தின் வேர்களாக உள்ளன. 

முதலாவதாக, ஒன்றிய அரசு “விலைக் கடிவாளத்தை” கழற்றி விட்டதால், உலகச் சந்தையின் ஊசலாட்டங்களால் பாதிக்கப்பட்டது.

இரண்டாவதாக, கார்ப்பரேட்டுகள், “சூப்பர் ரிச்” மனிதர்களுக்கு தரப்பட்ட பெரும் வரிச் சலுகைகள். இதனால் ஏற்பட்ட அரசின் வருவாய் இழப்பை ஈடுகட்டவும், பெருக்கவும், வரி உயர்வுகளை சார்ந்து ஒன்றிய அரசு பயணித்தது. இதனால் சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும், இங்கே எண்ணெய் மீதான வரிகளை உயர்த்தியது. 

மூன்றாவதாக, ஜி.எஸ்.டி முறைமை மாநில அரசுகளின் வரி அதிகாரத்தை பெருமளவு பறித்ததால், வருமானத்திற்காக  மாநில அரசுகளும் போட்ட பெட்ரோல், டீசல் வரிகள். 

நான்காவதாக, பன்னாட்டு மூலதனம் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதனால் “காலூன்றா மூலதனம்” (Foot loose Capital) ஆக பங்குச் சந்தைக்குள் வரும் ஊக மூலதனம். அது திடீர் என்று பறப்பதால் ஏற்படும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி. அதனால் உயரும் இறக்குமதி செலவினம். 2014 இல் டாலருக்கு ரூ 61 ஆக இருந்த மதிப்பு இன்று ரூ 77.7 ஆக சரிந்துள்ளது. அதாவது அன்று 61 ரூபாய்க்கு இறக்குமதியான பொருள்களுக்கு இன்று 77.7 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது.  

ஐந்தாவதாக, உணவுப் பொருள்களில் அரசு கொள்முதல் குறைந்து தனியார் கொள்முதல் அதிகரித்தது. அவர்கள் உணவுப் பொருள் இருப்பை லாபத்திற்காக பதுக்குவது. (சிறு விவசாயிகள் அடுத்த பருவ செலவுகளை செய்ய பணம் தேவை என்பதால், நீண்ட நாள் பதுக்கி வைக்க முடியாது). 

ஆறாவதாக, பருவம் பொய்க்காவிட்டாலும், விளைச்சல் திறன்  குறைவது. 11 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வீழ்ச்சி.  எண்ணெய் விலைகளின் காரணமாக கடுகு, எண்ணெய் வித்துக்கள் (Mustard, Rape seeds) உற்பத்தியை நோக்கி நகர்ந்ததால் உணவுப் பொருள் உற்பத்தியில், உணவுப் பயிர் பரப்பளவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி. 2020- 21 இல் 3365 கோடி ஹெக்டேர் ஆக இருந்த கோதுமை வயல்கள் 2021 – 22 இல் 3. 17 கோடி ஹெக்டேர் ஆக சரிந்துள்ளது. 

இவை எல்லாம் நவீன தாராள மயப் பாதை தந்த வாதை. 

நோய் முதல் நாடா அரசு

அரசு மேற்கொண்டுள்ள இரண்டு வகை நடவடிக்கைகளும் நிலைத்த தீர்வுகளை தராது. 

ஒன்று, பெட்ரோல், டீசல் மீதான “செஸ்” குறைப்பும், கேஸ் சிலிண்டர் மானியமாக ரூ 200 வழங்கப்படுவதும்… 

ஏற்கெனவே சொன்னது போல, இப்போது குறைத்திருப்பது ஏற்கெனவே செய்த பெட்ரோல், டீசல் வரி அதிகரிப்பில் ஒரு சிறு பகுதியே. 2014 நிலைமைக்கு திரும்பாத வரை, இவை எல்லாம் கண்ணா மூச்சி விளையாட்டே. மேலும், விலை கூடினால் வரி கூடும் (எடை மீது வரி அல்ல) என்பதால் சர்வதேச சந்தையில் இன்னொரு “ஜெர்க்” இருந்தால் இப்போது தரப்பட்ட எட்டு ரூபாய், ஆறு ரூபாய் எல்லாம் காணாமல் போய் விடும். நவம்பர் 14, 2021 இல் அறிவித்த பெட்ரோலுக்கு ரூ 5, டீசலுக்கு ரூ 10 வரிச் சலுகை அன்றைய விலைகளை முறையே 101.50 மற்றும் 91.50 க்கு சென்னையில் கொண்டு வந்தது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட வரிக் குறைப்புக்கு பிறகும் பெட்ரோல் இன்று ஒரு லிட்டர் சென்னையில் ரூ 102.63 , டீசல் ரூ  94.24. நவம்பர் வரிக் குறைப்பின் பயன் ஐந்து மாதங்களில் காணாமல் போயுள்ளது. 

சமையல் கேஸ் விலைகள் 2014 இல் ரூ 410. 50. இன்று விலை ரூ 1012.50. அரசு ரூ 200 மானியத்தை உஜ்வாலா பயனாளிகளுக்கு அறிவிக்கிறது. 1000 ரூபாய் கொடுத்து வாங்க முடியாதவர்கள் 800 ரூபாய் கொடுத்து வாங்கி விடுவார்கள் என்ற லாஜிக் இடிக்கவில்லையா?

வட்டி விகிதக் குறைப்புகள் பணப் புழக்கத்தை குறைக்கும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. 

இந்தியாவில் பண வீக்கத்திற்கு முக்கிய உந்துதலை உருவாக்குவது உணவுப் பொருள் பண வீக்கம். வட்டி விகிதத்தை குறைப்பதால் உணவு நுகர்வை மக்கள் குறைப்பார்களா? 

மூன்றாவது, இந்தியாவில் ஏற்பட்டுள்ள பண வீக்கம் கிராக்கி உந்தல் பண வீக்கம் (Demand Pull Inflation) ஆக இல்லை. அது செலவின உந்தல் பண வீக்கம் (Cost Push Inflation) ஆக உள்ளது. சர்வதேச சந்தை விலை உயர்வுகள், இடு பொருள் விலை உயர்வு, வரி உயர்வுகள் ஆகியன இதன் காரணங்களாக உள்ளன. ஆகவே பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தி பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் வழி வெற்றி அடையுமா என்பது கேள்விக் குறியே. 

ஏற்கெனவே வேலை இன்மை, வருமான வீழ்ச்சியால் பெரும்பாலான மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி இருக்கையில், வட்டி விகித உயர்வுகள் அவர்களின் வீட்டுக் கடன், வாகன கடன், தனி நபர் கடன் தவணைகளை அதிகரித்து வாங்கும் சக்தியை அரித்து விடும். இது இன்னும் மந்தத்திற்கு வழி வகுத்து தேக்க வீக்கத்திற்கு (Stagflation) கொண்டு போய் விடலாம். 

கோவிட் காலத்தில் அரசுக்கு தர ஆரம்பித்த கடன்களை குறைக்க வேண்டும் என்று ஐ.எம்.எப் தனது ஏப்ரல் 2022 “உலக நிதி நிலைத்தன்மை அறிக்கை” கூறுகிறது. இதன் பொருள் இன்னும் நிதிச் சுருக்கத்தை நோக்கி நகர்வதே. இது கோவிட் காலத்தில் நிகழ்ந்த வருமான/சொத்து ஏற்றத் தாழ்வுகளை ஓரளவு தணிக்கும் முயற்சிகளையும் பாதிக்கும். 

கடன் தருவது கூட முதலீட்டாளர்கள் கைகளில் பணப் புழக்கத்தை உறுதி செய்வதே அன்றி நுகர்வோர் கைகளில் அல்ல. கோவிட் காலத்தில் கூட, நேரடி ரொக்க நிவாரணத்தை ஒன்றிய அரசு மறுத்து விட்டது. 

நெருக்கடிகள் எழும் போது எல்லா வர்க்கக் குழுக்களுமே தங்கள் பங்கை வருமான மறு பங்கீட்டில் உறுதி செய்ய முனைவது இயல்பு. இடு பொருள் உயர்வை நிறுவனங்கள் நுகர்வோர் தலையில் கட்ட முயல்வார்கள். விலைகளை உயர்த்துவார்கள்.

தொழிலாளர்கள் கூலி உயர்வுக்காக போராடுவதும் விலை ஏற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று சில பொருளாதார “நிபுணர்கள்” பேசுகிறார்கள். அமெரிக்காவில் 1979 – 2019 வரையிலான விலை உயர்வில் 62 சதவீதம் தொழிலாளர் சம்பள உயர்வுக்கு சென்றது. 2020 -21 இல் 8 சதவீதம் மட்டுமே தொழிலாளர் சம்பள உயர்வுக்கு சென்றுள்ளது. 54 சதவீதம் நிறுவன லாபங்களுக்கு சென்றுள்ளது. அங்கேயே அதுதான் நிலைமை.  இந்தியாவின் கதையோ வித்தியாசமானது. அமெரிக்க தொழிலாளி மாதிரி  இங்குள்ள தொழிலாளர் பேர சக்தி உள்ளவர்கள் கிடையாது.  இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாளர்களே அதிகம் என்பதால் அவர்கள் கூலியை உயர்த்த முடியாது. பண வீக்கம் இப்படி குரூரமாக மட்டுப்படலாமே தவிர, அதையும் தாண்டி உயரும் பண வீக்கம் சாமானிய மக்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறது.  

ஊருக்கு வழி எது?

போகாத ஊருக்கு வழி சொல்கிறது ஒன்றிய அரசு. வட்டி விகிதக் குறைப்பு எல்லாம் அறுவை சிகிச்சை தேவைப்படுகிற நிலையில் களிம்பைப் போடுகிற கதைதான். 

பண வீக்கம் என்பதை எளிமையாக சொல்வதானால், வாங்குபவர்களிடம் இடம் இருந்து விற்பவர்களுக்கு வருமானம் செல்வதுதான். (விவசாய விளை பொருட்களுக்கு இந்த லாஜிக் பொருந்தாது).  30 மணி நேரத்தில் ஒரு பில்லியனர் உருவாவதும், அதே நேரத்தில் 1 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வீழ்வதும் இதனால் நிகழ்வதுதான். 

ஆனால் நிதி அமைச்சரின் மாதாந்திர பொருளாதார அறிக்கை, உயர் வருமான பகுதியினரை ஒப்பிடும் போது இந்திய ஏழை நடுத்தர மக்கள் மீது பண வீக்கம் குறைவான பாதிப்பையே உருவாக்குகிறது என்று கூறியது குரூரத்திலும் குரூரம். இதே கருத்து அவர் பெயரில் ட்வீட் செய்யப்பட்டு பின்னர் அது போலி ட்வீட் என்று நீக்கப்பட்டது. ஆனால் மாதாந்திர அறிக்கையில் அதே கருத்து இன்னும் இருக்கிறது. 

முதலாளித்துவ பொருளாதாரப் பாதையில் பண வீக்கமும், வேலை இன்மையும் “அமைப்பு சார்ந்த பிரச்சினைகள்” (Systemic issues). நவீன தாராளமய பாதையில் இவ்விரு பிரச்சினைகளுமே தீவிரம் அடைகின்றன. காரணம், அரசு தலையீடு கூடாது என்ற கோட்பாடும், வேலையற்ற வளர்ச்சியே அதன் பண்பு என்பதும்…

சாமானிய, நடுத்தர மக்கள் கைகளில் பணம் புழங்குகிற வகையில் மாற்று பொருளாதார பாதை குறித்த விவாதங்கள் தேவை. அரசு தலையீடு, அரசு முதலீடு, வருமான திரட்டல் அணுகுமுறையில் மாற்றம், விலைக் கட்டுப்பாடு, மானியங்கள், ரொக்க உதவிகள், மூலதன கட்டுப்பாடுகள்  உள்ளிட்டவை பரிசீலிக்கப்பட வேண்டும். 

நவீன தாராளமய எல்லைகளுக்குள் நிலைத்த தீர்வுகள் கிடையாது. நவீன தாராளமய கட்டமைப்பை கடந்தே அது கிடைக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s