தொழிற்சங்கம் அமைத்தல் அமெரிக்கா மற்றும் இந்திய அனுபவங்கள்…


எஸ். கண்ணன்

ஒரு தொழிற்சங்கம் அமைக்கப்பட்டதும், அது அங்கீகரிக்கப்பட்டதும், நாகரீக வளர்ச்சி பெற்ற இந்த உலகில் அவ்வளவு பெரிய விஷயமா? என்று கேள்வி கேட்போரும் உள்ளனர். முதலாளித்துவத்தின் மீதான மாயை, முதலாளித்துவ வளர்ச்சி மீது கொண்டுள்ள பிரமிக்கும் வகையிலான கண்ணோட்டம் போன்றவை மேற்படி கேள்விகளுக்கு காரணமாக உள்ளது. அண்மையில் அமேசான் நிறுவனத்தில் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்ததும், அதைத் தொடர்ந்த தாக்குதலும், தொழிலாளர்கள் அதை முறியடித்த வெற்றியும்தான் இந்த விவாதத்திற்கு காரணம் ஆகும்.

அடுத்து நாகரீக வளர்ச்சி, முதலாளித்துவ வளர்ச்சி என்பது ஒரு சிலருக்கே, பெரும்பான்மையோர் அங்கு புறக்கணிக்கப்படுவோராக உள்ளனர் என்பதை அமெரிக்க அரசும் மற்றும் அமேசான் நிறுவனமும் வெளிப்படுத்தி உள்ளன. இந்த வளர்ச்சி தீர்வல்ல. இந்த வளர்ச்சி சுரண்டலைத் தீவிரமாக அதிகரிக்கவும், பாட்டாளிகளை உதிரி பாட்டாளிகளாக மாற்றவும் பங்களிப்பு செய்யக் கூடியது என்பதை மேலே குறிப்பிட்ட அமேசான் மற்றும், ஸ்டார் பக்ஸ் ஆகிய நிறுவனங்களிலும், நமது நாட்டிலும் நடந்து வரும் போராட்டங்கள் தெரியப்படுத்தும் செய்தியாகும்.

அமேசான் மற்றும் ஸ்டார் பக்ஸ் நிறுவனங்களில் என்ன நடந்தது?

அமெரிக்க நாட்டின் பெரிய வணிக நிறுவனம் அமேசான், அதன் முதலாளி ஜெஃப் பெசோ வளிமண்டலத்திற்கு 11 நிமிட சுற்றுலா சென்று வந்தவர். அதற்காக பல கோடி ரூபாய் செலவிட்டவர். அதைத் தொடர்ந்து வளிமண்டல சுற்றுலாவை நடத்தும் பெரும் நிறுவனமாக அமேசான் மாறியுள்ளது. கொரானா காலத்தில் பல லட்சம் கோடி டாலரை லாபம் ஈட்டிய நிறுவனம் அமேசான். ஆன்லைன் வர்த்தகத்தில் உலகின் முதல்பெரும் நிறுவனமாக, உலகெங்கும் கிளை பரப்பி செயல்பட்டு வருகிறது.  16,08,000 தொழிலாளர்கள் அமேசானில் பணி புரிகின்றனர்.

இங்கு அமேசான் தொழிலாளர் சங்கம் (Amazon Labour Union) உருவானதும், அதை ஒடுக்க நிறுவனம் முயற்சித்ததும் பெரும் செய்தியாக ஓராண்டுக்கு மேல் வலம் வந்தது. தொழிற்சங்கம் அமைக்க முயற்சித்த ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். வழக்கம் போல் முதலாளித்துவம் தனது பிரித்தாளும் சூழ்ச்சியை அரங்கேற்றியது. தொழிற்சங்க ஆதரவு, எதிர்ப்பு என்ற சிந்தனையை, தொழிலாளர்களிடம் விதைத்தது. கருப்பு, வெள்ளை நிறவெறி உள்ளிட்டு ஆதிக்கம் செலுத்தியது. தொடர் போராட்டத்தின் விளைவாக ஜே.எஃப்.கே. 8 என்ற ஒரு இடத்தில் உள்ள குடோனை மையப்படுத்தி செயல்படும் தொழிலாளர்களுக்குள் நடத்திய வாக்கெடுப்பில், சுமார் 6,000 தொழிலாளர்களில், 4,785 தொழிலாளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். அவர்களில் 2,654 பேர் தொழிற்சங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். நெடிய போராட்டத்தின் வெற்றியாக வாக்கெடுப்பு மூலம் தொழிற்சங்கம் அங்கீகாரம் பெற்றுள்ளது. இதன் முக்கிய காரணகர்த்தாவான கிரிஸ்து ஸ்மால் என்ற இளைஞர், வேலைநீக்கம் செய்யப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் அனைத்து பகுதி தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் பல அமைப்புகளின் ஆதரவு நடவடிக்கைகள் காரணமாக வேலையை மீண்டும் பெற்றார்.

அமெரிக்காவின் ஸ்டார் பக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும், 32,660 கடைகளை கொண்ட காபி மற்றும் உணவு விநியோகம் செய்யும் பெரும் நிறுவனமாக உள்ளது. 3,80,000 ஊழியர்கள் உலகம் முழுவதும் பணி புரிகின்றனர். இந்தியாவில் 1,200 ஊழியர்கள் பணிபுரிவதாக விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனத்திலும் தொழிற்சங்கம் துவங்கி பெரும் அடக்கு முறையை சம்மந்தப்பட்ட தொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் கடந்த டிசம்பர் முதல் தொழிற்சங்கம் அமைக்கவும் அதை அங்கீகரிக்க வேண்டும் எனவும் கேட்டு, தொழிலாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். 1965 காலத்தில் தொழிற்சங்கம் வேண்டும், அது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக, 68 சதவீதம் பேர் அன்று போராடினார்கள். இன்று அதே கோரிக்கைக்காக 77 சதவீதம் பேர் போராடுவதாக நிலை உள்ளது என்று மசாசூட்ஸ் இண்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜியின் வரலாற்று பேராசிரியர் ஜோசப் மெக்கார்ட்டின், ஸ்டார் பக்ஸ் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக 18 வயது முதல் 34 வயதுக்குட்பட்ட ஊழியர்கள் இது போன்ற கோரிக்கைகளை முன் வைத்து போராடுவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். புதிய தலைமுறை இளைஞர்கள் நாங்கள் U (U for Union) விற்குப் பின் அணிவகுப்போம் என்கின்றனர். இந்த அமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் அனைவரும் பெண்கள் என்பதும் கவனிக்கதக்கது. ஏனென்றால் 70 சதம் தொழிலாளர்கள் பெண்களாக உள்ளனர்.

ஒரு மணி நேரத்திற்கு 17 அமெரிக்க டாலர் ஊதியம் (1258 ரூபாய்), காப்பீடு, கல்வி உதவி போன்றவை இருந்தாலும், தொழிற்சங்கம் அவசியம் எனக் கூறுகின்றனர். நிரந்தர வேலை இல்லை; பல நிறுவனங்களில் பணி புரியும் நாங்கள் உதிரி பாட்டாளிகளாக மாற்றப் பட்டு இருக்கிறோம். இவை மிகுந்த மன உளைச்சல் தருவதாக உள்ளது எனக் கூறுகின்றனர். நிதி மற்றும் வாழ்க்கை உத்தரவாதம் பாதுகாப்பற்றதாக உள்ளது என்கின்றனர். என்னுடைய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட முடியவில்லை. வேலையிலிருந்து, வீட்டிற்கு சென்று வரவே நேரம் போதவில்லை என லியோ ஹெர்னாண்டஸ் என்ற இளம் தொழிலாளி கூறுகிறார்.

தொழிற்சங்கமாக ஊழியர்கள் ஒன்று சேர்வதை நிறுவனம் விரும்பவில்லை. ஏனென்றால் எங்களை துரத்தும் அவர்களின் எண்ணம் ஈடேறாமல் போகும். எங்களை ஜனநாயக ரீதியில் நடத்தினாலும் அல்லது நல்ல ஊதியம் அளித்தாலும் அது நிரந்தரமல்ல என்பது பிரச்சனை தானே என்கிறார் நியான் பேனட் என்ற 22 வயது பெண் ஊழியர். இதுதான் இன்றைய முதலாளித்துவ சமூகத்தின் வேலை வாய்ப்பாக உள்ளது.

இந்தியாவிலும் இதே நிலை தானே

அமேசான் அல்லது ஸ்டார் பக்ஸ் நிறுவனங்களின் ஒடுக்கு முறைக்கு சற்றும் சளைத்ததல்ல, இந்தியாவில் உள்ள பன்னாட்டு மற்றும் இந்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள். தமிழகத்தில் ஏராளமான அனுபவங்கள் உண்டு. தொழிற்சங்கங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பெரும் செல்போன் மற்றும் கார் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டபோது, வேலைநீக்கம், தற்காலிக வேலை நீக்கம், காரணம் கோரும் அறிவிப்பு, உள்விசாரணை என்ற பல பெயர்களில் தொழிலாளர்கள் சந்தித்த மன உளைச்சல் தந்த தண்டனைகள் ஏராளம். அமெரிக்காவின் அரசு தனது பாராமுக செயல்களால், அமேசானில் சங்கம் வைத்ததை தண்டித்தது. தமிழகத்தில் அல்லது இந்தியாவின் தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் சம்மந்தப்பட்ட அரசுகளும், ஒன்றிய அரசுகளும் நேரடியாக, தொழிற்சங்க தலைமையிடம், சங்கத்தை தவிர்க்க கேட்டு கொண்டனர்.  “நாங்க நாடு நாடாக சென்று மூலதனத்தை ஈர்த்து வந்தால், நீங்க சங்கம் வைத்து கெடுப்பீங்களா?” என கேள்வி கேட்பதுண்டு.

மேற்குறிப்பிட்ட வாதங்களையும், தண்டனைகளையும் கடந்தே தொழிற்சங்கங்கள் பயணிக்க வேண்டியுள்ளது. மூலதனத்துடன் முரண்படுகிற தொழிலாளி வர்க்கம் அதற்கேற்ற ஒற்றுமை பலத்தை கட்ட வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. ஒற்றுமை பலத்தாலும், சரியான அணுகுமுறைகளாலுமே, பெரும் மூலதனக் குவியல்களை கொண்ட காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரளவு தொழிற்சங்கத்தை அமைக்க முடிந்துள்ளது. பெற வேண்டிய பலன்களும், உரிமைகளும் ஏராளம் உள்ளது என்பது அரசியல் ரீதியான கொள்கைகளுடன் இணைந்தது. அதற்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மூலதன குவிப்பு அதிகரிக்கிறது. அதற்கு காரணம், தொழிலாளர்களின் கட்டமைப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் ஆகும். இதை மார்க்சிஸ்ட் கட்சியின் கொல்கத்தா சிறப்பு மாநாட்டில் முன்வைக்கப்பட்ட ஆய்வு அறிக்கையும் விவாதிக்கிறது. “இந்தியாவில் பாட்டாளி வர்க்கம் அதிகரித்துள்ளது. பெரும்பாலானவர்கள், அமைப்பு ரீதியிலான தொழில்களில் உள்ளவர்கள் அல்ல; மாறாக அமைப்பு சாராத தொழில்களில் உள்ளவர்கள்” எனக் கூறுகிறது. மூலதனத்திற்கு வளர்ச்சியடைந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், உற்பத்தி திறனை அதிகரிக்க முடிகிறது. அதே சமயம் கூலியில் தேக்கத்தை உருவாக்கி, லாபம் அதிகரிக்கிறது.

ஓர் ஆண்டுக்கு முன் பெங்களூரு, விஸ்றான் நிறுவனத்தில் பல ஆயிரம் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும், கடந்த டிசம்பரில் சென்னை, ஶ்ரீபெரும்புதூரில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பெண் தொழிலாளர்களின் போராட்டமும், முறையான தொழிற்சங்கம் அமைக்கும் வாய்ப்பில்லை; மிகக் கொடிய சுரண்டல்; குறைந்தபட்ச ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது; நிரந்தரமில்லை; உணவு, தங்குமிடம் போன்ற ஏற்பாடுகளில் கொள்ளை போன்ற கோரிக்கைகள் முன்னுக்கு வந்தன. இவை அமேசான் அல்லது ஸ்டார்பக்ஸ் அளவிற்கு பேசப் படவில்லை. ஏன் இந்த நிலை என்றால், இந்தியா ஜனநாயக விழுமியங்களை பின்பற்றுவதில் பலவீனமாக உள்ளது. அதை விட மோசம், மூலதனத்தை ஈர்க்க நம் தொழிலாளர் உரிமைகளை விட்டுத் தர வேண்டும் என்ற அரசின் பிற்போக்கான எண்ணம் மற்றும் அதன் கருத்தியல் ஆகும்.

இந்திய சூழலில் இரண்டு உண்மைகளை காண வேண்டியுள்ளது. ஒன்று, இந்தியாவில் அதிகரித்து வரும் வேலை என்ற கட்டமைப்பு வடிவம், மிக அதிகமான மூலதனம் மற்றும் லாபக் குவிப்பிற்கு வழி வகுக்கிறது. இரண்டு, கருத்தியல் ரீதியாகவே வேலைவாய்ப்பின் ஜனநாயகத்தில் பின் தங்கி இருக்கும் பிற்போக்கு குணம். இவை இரண்டையும் எதிர் கொள்ளும் வடிவத்திலான பாட்டாளி வர்க்க அணிதிரட்டல் அவசியப் படுகிறது. மிக சாதாரணமாக இந்த உற்பத்திக்கு, இவ்வளவு பயிற்சி போதும், இந்த கல்வித் தகுதி தேவையில்லை, மேலும் நீடித்த வேலை வாய்ப்பு வேண்டியதில்லை போன்ற பல கருத்துக்களை முதலாளித்துவ பிரதிநிதிகள் முன்வைக்கின்றனர். எனவே மேலே கூறிய இரண்டு கருத்தாக்கத்தையும் தகர்க்கும், முதலாளித்துவ ஜனநாயகம் கூட இல்லாத நிலையை, மூலதன ஈர்ப்பு என்ற முழக்கம் பயன்படுத்திக் கொள்வதை அனுமதிக்க கூடாது.

அமெரிக்காவில் சுதந்திர தேவி, இந்தியாவில் குஜராத் வளர்ச்சி, வெற்றுமுழக்கம்:

சுதந்திர தேவியின் சிலை நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டு மணி நேர வேலைக்கான மே மாத போராட்டம், அடக்க பட்ட அதே 1886ம் ஆண்டு, அக்டோபர் மாதம் சுதந்திர தேவி சிலை அமைக்கப் பட்டுள்ளது. இது அன்றைய அமெரிக்காவின் இரட்டைத் தன்மையை வெளிப்படுத்துகிறது. அதாவது சிகாகோவில் மே மாதம் 1886 ம் ஆண்டில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும், அதைத் தொடர்ந்த அடக்குமுறைகளும் மிகக் கொடிய ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது. காவல் துறை அதிகாரி, நகர்மன்ற தலைவர், ஆகியோர் இந்த கோர தாண்டவத்தை முன்நின்று நடத்தியதை, நீதிமன்றம் நியாயப்படுத்தியது. பின்னாளில் அந்த நீதிமன்ற ஜூரிகள், மே போராட்டத்தில் ஈடுபட்டு, தூக்கிலிடப்பட்ட தோழர்கள் தவறு செய்திருக்கலாம் என தான் நம்பியதாகவும், அதற்காக வருந்துவதாகவும் கூறினார். இப்படித்தான் அமெரிக்காவின் ஜனநாயகம் அன்று முதல் இன்று வரை முதலாளித்துவத்திற்கு ஆதரவாக அமலாகிறது.

ஒரு புறம் அனைத்து உரிமைகளும் உள்ளது. மறுபுறம் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கூட மறுக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும், வேலை நீக்கம் செய்யப்படுவதும் அமெரிக்காவில் அரங்கேறுகிறது. இதை அம்பலப் படுத்தும் போராட்டங்களாக அன்று சிகாகோ மே தினப் போராட்டம் என்றால், இன்று அமேசான் மற்றும் ஸ்டார் பக்ஸ் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் அமைக்கும் பணியும் அதன் போராட்டமும் பார்க்கப்பட வேண்டும். மேலும் முதலாளித்துவ ஜனநாயகத்தில், வளர்ச்சியும், உரிமைகளும் சிறுபான்மையினரான முதலாளிகளை அல்லது இன்றைய கார்ப்பரேட் அமைப்புகளை பாதுகாப்பதாகவே இருக்கும்.

இது உலகம் முழுவதும் அமலாவதை காண முடியும். இந்திய ஆட்சியாளர்களின் வளர்ச்சி முழக்கம், இரட்டைத் தன்மை கொண்டது. அது முதலாளிகளின் வளர்ச்சிக்கானது என்பது அம்பலப்பட்டு உள்ளது. சமூகத்தை வளர்த்தெடுத்த பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் வளர்ச்சி என தொழிற்சங்க போராட்டங்கள் நிருபித்துள்ளன. பாஜக மற்றும் மோடி குஜராத் மாடல் வளர்ச்சி என முழக்கமிடுவதைக் காண முடிகிறது. 2022 ஆம் ஆண்டும் குஜராத் மாநிலத்தில் பாஜக பொறுப்பேற்று 25 ஆண்டுகள் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது.

மேற்கண்ட பிரச்சாரத்தை தொடர்ந்து குஜராத் மாநிலம், நாட்டில் 21ஆம் இடம் பிடித்து, மனித வளக் குறியீடுகளில் பின்தங்கி உள்ளதையும், கல்வியில் 18ஆம் இடத்திலும், தனிநபர் வருமானம்  பட்டியலில் பத்தாம் இடத்திலும் இருப்பதையும், காண முடியும். அங்கு முதலாளிகள் குவித்த செல்வம் மலை போலும், தொழிலாளர்கள் இழந்த உரிமை கடல் போலும் இருப்பதை காண முடிகிறது. அதேநேரம் மனிதவள குறியீடு, கல்வி ஆகியவற்றில் கேரளம் முதல் இடத்தில் உள்ளது. தனிநபர் வருவாயில் 8ஆம் இடத்தில் என எல்லா முதலாளித்துவ புள்ளிவிவர மதிப்பீடுகளிலும், குஜராத்-ஐ விட கேரளம் முன்னேறி உள்ளது. அதற்கு காரணம் தொழிலாளர் உரிமைகள் எனக் கூறினால் மிகை அல்ல.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அண்மையில், குஜராத்தில் தொழிற்சாலை துவங்கும் நிறுவனங்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில் 1,200 நாள்கள் வரையிலும், புதிய நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் எதுவும் பொருந்தாது, குறைந்தபட்ச ஊதியம், வேலை ஆள் இழப்பீட்டு சட்டம் மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு சட்டம் மட்டுமே பொருந்தும் என்பதாக உள்ளது. இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொழிலாளர் உரிமைகளை விற்கும் செயல் என்பதை தவிர வேறில்லை.

அதேபோல் திராவிட மாடல் என்ற வியாக்கியானங்களும் ஒரு சில சமூக போராட்டங்களை பாதுகாத்தாலும், ஒரு எல்லையில் முதலாளித்துவத்தை பாதுகாக்கும் கருவியாகவே இருக்கும். முதலாளித்துவ உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தும் வகையிலேயே, புதிய முழக்கங்கள், நாகரீகமான சொல்லாடல்கள் உலகம் முழுவதும் கையாளப்படுகின்றன.  இவை தொழிலாளி வர்க்கத்தின், தீர்வை நோக்கிய போராட்ட உணர்வை மட்டுபடுத்தவோ, தள்ளிவைக்கவோ உதவுகிறது.

மூலதன சுரண்டலுக்கு எதிரான போராட்டமாக வளர்ச்சி பெறுவது:

இது மே மாதம். மே தின கொண்டாட்டங்கள் மற்றும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் பெருமளவில் நடத்த வேண்டிய தேவையையும், அமேசான் மற்றும் ஸ்டார் பக்ஸ் நிறுவனங்களில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள், அதை ஒட்டிய முன்னேற்றங்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் பரவ செய்ய வேண்டியுள்ளது.

உயிர் வாழ்வதன் பொருட்டு, ஒரு தொழிலாளி தனது உழைப்பு சக்தி, என்ற சரக்கினை, முதலாளிக்கு விற்று அதன் மூலமான கூலியை பெறும் நிலையில் உள்ளார், என மார்க்ஸ் கூறினார். இன்று அந்த நிலைமை தீவிரமாகி வருகிறது. கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் கூலியை கட்டுப்படுத்துவதிலும், தொழிலாளர்களை பல பெயர்களில் (காண்ட்ராக்ட், பயிற்சி)  வகைப்படுத்துவதன் மூலமும் தனது வளர்ச்சி விகிதத்தை உயர்த்தி கொள்கின்றன.

முதலாளித்துவம் தான் உற்பத்தி செய்யும் சரக்கின் விலையை சந்தையில் தீர்மானிக்கிறது. குறைவான விலைக்கு விற்கும் முதலாளி சந்தையில் வெற்றி கொள்கிறார். அதற்காக சரக்கு உற்பத்திக்கான அடக்க செலவை குறைக்கிறார். அது பெரும்பாலும் உழைப்பு சக்தியின் விலையை குறைப்பதாக அமைகிறது. அதன் மூலம், சரக்கின் விலையை குறைத்து சந்தையில் போட்டியிட முடிகிறது.

ஆனால் தொழிலாளி வர்க்கம் தனக்குள் ஒரு தொழிற்சங்கம் வைத்து கூலிக்கான பேரம் பேசும் போது, உற்பத்தி செலவு அதிகரிக்கும் என்ற முதலாளியின் கணக்கு, தொழிற்சங்கம் அமைப்பதை தடுக்க முயற்சிக்கிறது. கூலியை மட்டும் உயர்த்தி கொள்வதல்ல; தொடர் அரசியல் போராட்டங்களும், அதில் தொழிலாளர்களின் பங்கேற்பும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அச்சம் தருவதாக உள்ளது. இந்த பின்னணியில் வர்க்க அரசியலின் முன்னேற்றமாக தொழிற்சங்கம் அமைப்பதையும், அதன் போராட்டங்களையும் மதிப்பிட வேண்டியுள்ளது. சங்கம் அமைக்கும் பணிகளும், போராட்டங்களும் வெல்லட்டும்!.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s