மாறும் உலகச் சூழலும் மார்க்சிஸ்ட் கட்சியின் புரட்சிகர பாரம்பரியமும் நடைமுறையும் !


பேரா. பிரபாத் பட்நாயக்

1.     இந்திய காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஐக்கிய முன்னணி தந்திரத்தின் முதல் கட்டம்

போல்ஷ்விக் புரட்சி 1917இல் நடந்தது.  உலகின் பல்வேறு பகுதிகளில் உதயமான கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து 1919இல் சர்வதேச கம்யூனிஸ்ட் அகிலம் உருவானது.  1920இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. இந்தியாவில் காலனியாதிக்கத்தை எதிர்த்து முதலாளி வர்க்கத்தின் தலைமையில் விடுதலை போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரம் அது.  உதயமானவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன் ஒரு மிகப் பெரிய கேள்வி எழுந்தது.  இந்த காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் முதலாளிகளுடனும், சமூகத்தின் பிற பிரிவினருடனும் கட்சியின் பங்கு பாத்திரம் என்னவாக இருக்க வேண்டும்?  இந்தப் போராட்டத்தில் இவர்களுடன் இணையும் இடத்தில் கட்சியின் யுத்த தந்திரம் என்னவாக இருக்க வேண்டும்? என்ற கேள்வி பெரிதாக எழுந்து நின்றது.  அந்த நேரத்தில் 1928இல் நடந்த ஆறாவது சர்வதேச அகிலத்தில் காலனித்துவம் குறித்த ஆய்வறிக்கையின் மீது விவாதம் நடத்தப்பட்டு, ”காலனியாதிக்கத்திற்கு உட்படுத்தப்படும் நாடுகளின் விவசாயிகள் மிகவும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுகிறார்களே தவிர, பாட்டாளி வர்க்கமாக்கப்படவில்லை” என்ற முக்கிய முடிவிற்கு வந்தது.  மிகப் பெருமளவில் விவசாயக் கூலிகள் இருந்தாலும், விவசாயம்  முதலாளித்துவ மயமாக்கப்படுகிறது என்ற முடிவிற்கு அகிலம் வரவில்லை.  அதன் காரணமாக, காலனியாதிக்க நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இதனை எதிர் கொள்வதற்கு பொருத்தமான தந்திரங்களோ உத்திகளோ இல்லாமல் போனது.

அப்போது இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்ததோடு, பல்வேறு சதி வழக்குகளையும் சந்தித்தனர்.  பெஷாவர் சதி வழக்கு (1922-27), கான்பூர் சதி வழக்கு (1924) மற்றும் மீரட் சதி வழக்கு (1929).  முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதால் கட்சியின் வளர்ச்சி தடை செய்யப்பட்டாலும், இளைஞர்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகளுக்கு மரியாதையும் கட்சியின் பால் ஈர்ப்பும் ஏற்பட்டது.  பகத் சிங்கும் அவரது தோழர்களும் இந்துஸ்தான் சோசலிச குடியரசு படையில் இருந்து ஈர்க்கப்பட்டவர்கள் தாம்.  பகத் சிங் தூக்கிலிடப்பட்ட சில நாட்களில் நடைபெற்ற கராச்சி காங்கிரசில் தான் சுதந்திர இந்தியா குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   சுதந்திர இந்தியாவின் கருத்துருவாக்கத்தில் மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமத்துவம் என்ற முற்போக்குக் குணாம்சங்கள் இடம்பெற்றிருந்தன.  வயதிற்கு வந்த அனைவருக்கும் வாக்குரிமை, சாதி, இன, பாலின வேறுபாட்டினை கடந்து அனைத்து பிரஜைகளும் சட்டத்தின் முன் சமம் என்பன போன்ற முற்போக்குக் கருத்துகளும் அதில் இடம் பெற்றிருந்தன. 

ஜெர்மனியில் நாஜிக்களின் ஆதிக்கம் துவங்கிய நேரத்தில் 1935இல் ஏழாவது அகிலம் கூடியது.  அகிலம், பாசிஸ்ட்டுகளுக்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணி அமைக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தது.  அதே போன்று காலனியாதிக்க நாடுகளில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தில் பல்வேறு வர்க்கங்களைச் சார்ந்த மக்கள் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒரு ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தது.  இந்தியச் சூழலில் இது தத்-பிராட்லி (Dutt-Bradley thesis) ஆய்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டது.  அப்போதும் கம்யூனிஸ்டுகளில் ஒரு பிரிவினர் காங்கிரசில் இரகசியமாக (காங்கிரசிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினர் என்ற இரட்டை உறுப்பினர் அந்தஸ்த்துடன்) இணைந்து வேலை செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.  கம்யூனிஸ்ட் கட்சியும்  காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட்டது.  இதனால் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஒரு வலுவான இடதுசாரி கருத்தோட்டம் எழுச்சி பெற்றது.

ரஜினி பாமி தத்தும் பென் பிராட்லியும் ஜவஹர்லால் நேருவை சுவிட்சர்லாந்தில், அவருடைய மனைவியின் மருத்துவத்திற்காக போயிருந்த இடத்தில், சந்தித்துப் பேசிய பின்னர் இந்த ஒருங்கிணைப்பு இன்னும் வலுவானது.  ஏகாதியத்திய எதிர்ப்பு மக்கள் ஐக்கிய முன்னணிக்கான பொருளாரத் திட்டத்திற்கு தத்-பிராட்லி அறிக்கை வைத்த முன்மொழிவில், ”வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களின் ஊதியத்தினை குறைப்பதை தடுத்து நிறுத்துவது, தொழிலாளர்களை வேலையில் இருந்து தூக்குவது போன்றவை இல்லாமல் தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தத்திற்கான உரிமை, தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம், எட்டு மணி நேர வேலை, வாடகையை பாதியாகக் குறைப்பது, ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும், உள்நாட்டு இளவரசர்களும், ஜமீன்தாரர்களும், லேவாதேவிக்காரர்களும் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கடன்களுக்காக பறிப்பதை தடுத்து நிறுத்துவது”  போன்றவை உள்ளடக்கப்பட்டிருந்தன.

1930 பெருமந்தத்தின் போது, விவசாயிகள் கடுமையான  நெருக்கடிக்குள்ளாயினர்.  பெரும் கடனுக்கு ஆளாகினர்.  விவசாயத்தை விட்டு நகரங்களை நோக்கி விவசாயிகள் இடம் பெயர்ந்ததன் காரணமாக வேலைக்குக் காத்திருக்கும் தொழிலாளர் படை வீங்கிப் போனது.   ஐக்கிய முன்னணி தந்திரம் மட்டுமல்லாமல், இந்திய புறச் சூழலும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தை மேலும் வலுவடையச் செய்தது.  கம்யூனிஸ்ட் இயக்கம் விவசாயிகளிடையேயும் தொழிலாளர்களிடையேயும் வலுவடைந்தது.   நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களுக்கு எதிரான பிரஜா (குடிமக்கள்) இயக்கம் மறு பகுதியில்  பெரிய அளவில் எழுந்தது. அங்கும் கம்யூனிஸ்டுகளே பல பகுதிகளில் தலைமை தாங்கி வழிநடத்தினர். இந்த எழுச்சிகள் 1930-களின் இறுதியில் நடைபெற்ற மாகாண சபை தேர்தல்களில் காங்கிரஸின் வெற்றிக்கு வழிவகுத்தது. அந்த தேர்தல்களில் பல கம்யூனிஸ்டுகள்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். சோவியத் யூனியன் மீது ஜெர்மனி தாக்குதல் நடத்திய போது, நமது போராட்டத்தின் தன்மை மாறிவிட்டது என்று கம்யூனிஸ்ட் கட்சி முடிவிற்கு வந்தது. இதனை காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியும், காங்கிரசும் அதிகாரப்பூர்வமாக நிராகரித்தன. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தன.  ஐக்கிய முன்னணி தந்திரத்தின் இந்த கட்டம் சோவியத் யூனியன் மீது ஜெர்மனி தாக்குதல் நடத்திய போது முடிவிற்கு வந்தது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு எதிரான காலனியாதிக்க அரசின் ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக காங்கிரஸில் அங்கம் வகித்த பல கம்யூனிஸ்டுகளும் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.  ஆனால், வெள்ளையனே வெளியேறு இயக்க தீர்மானத்தை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்ததன் காரணமாக, அவர்கள் அடையாளம் காணப்பட்டு, காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நாடு சுதந்திரத்தை நோக்கி நகர்ந்தபோது, காங்கிரஸில் உள்ள கம்யூனிஸ்டுகளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டி வந்து விடுமோ என்ற அச்சமும் முதலாளித்துவ காங்கிரஸ் தலைமைக்கு பெரிய அளவில் இருந்தது.

2.     சுதந்திரத்திற்குப் பின் அமைந்த இந்திய அரசு குறித்த கட்சியின் மதிப்பீடு

சுதந்திரத்தின் போது, புதிய அரசின் தன்மை எப்படி இருக்க வேண்டும்? என்பதும், ஆளும் கட்சியுடன் கம்யூனிஸ்டுகளின் உறவு எப்படி இருக்க வேண்டும்? என்ற கேள்வியும் முன்னுக்கு வந்தது.  இது குறித்தெழுந்த கடுமையான விவாதம் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவினை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த நிலைப்பாடு அதன் கட்சி திட்டத்தில் பொதிந்துள்ளது.   ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சிக்குள் புரட்சிக்கு முன்பு நடந்த விவாதத்தின் போது லெனின் எடுத்த நிலைப்பாட்டிலிருந்து தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு எடுக்கப்பட்டது.  வரலாற்றில் எந்தெந்த நாடுகளில் எல்லாம் முதலாளித்துவம் தாமதமாக போராட்டத்தில் இணைந்ததோ, அங்கெல்லாம் நிலப்பிரபுத்துவ சொத்து மீதான தாக்குதல் முதலாளித்துவ சொத்து மீதான தாக்குதலாக மாறிவிடும் என்ற பயத்தில் நிலப்பிரபுத்துவ-எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சியை நடத்தும் திறனை முதலாளிகள் பெற்றிருக்கவில்லை என்பதுதான் லெனினின் வாதம்.  எனவே, விவசாயிகளின் ஜனநாயகப்பூர்வமான விருப்பங்கள் பூர்த்தி செய்யப்பட முடியாது.  தொழிலாளி வர்க்கம் விவசாயிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, நிலப்பிரபுத்துவ சொத்துக்களை உடைத்து, நிலப்பிரபுத்துவ சலுகைகளை அடித்து நொறுக்கி, நில மறுவிநியோகம் செய்யும் புரட்சியினை நடத்தும்போது மட்டுமே, ஜனநாயகப் புரட்சி முழுமை பெறும்.   அதிலிருந்து சோசலிசத்தை நோக்கி நகர முடியும்.   நிலச் சீர்திருத்தங்கள் மூலமாக உள்நாட்டுச் சந்தையின் அளவை விரிவுபடுத்த முடியும்.  இதன் மூலம், விவசாயத்தின் வளர்ச்சியை தீவிரமாக விரைவுபடுத்த முடியும்.  இருபதாம் நூற்றாண்டில் அனைத்து மூன்றாம் உலக நாடுகளின் புரட்சிகர திட்டத்திலும் லெனினின் நிலைப்பாடே ஏதேனும் ஒரு வகையில் பொதிந்திருந்தது.

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய அரசாங்கம் நில மறு விநியோகத்தை தவிர்த்தது என்பதுடன், உயர் தட்டு விவசாயிகளும், ஜமீந்தார்களும் தங்கள் நிலங்களை முதலாளித்துவ விவசாயமாக மாற்றுவதை ஊக்குவித்தது. இதுவே முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்துடன் சமரச உடன்பாடு செய்து கொண்டது என்பதை நிரூபிக்கப் போதுமானது. சுதந்திரத்திற்குப் பின் உருவான இந்திய அரசு, பெருமுதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசு என்பதால், அது முதலாளித்துவ வளர்ச்சிக்கு வழிவகுத்தது.  இதன் காரணமாக கிராமங்களில் நிலப்பிரபுக்களும் விவசாய முதலாளித்துவமும் கலந்திருக்கும் நிலை ஏற்பட்டது.  எனவே, பாட்டாளி வர்க்கத்தின் கடமை என்பது, விவசாயிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஒரு ஜனநாயகப் புரட்சியை நடத்தி, இந்த நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ அரசாங்கத்தினை மாற்றி, ஒரு மாற்று அரசாங்கத்தை உருவாக்கி, அதிலிருந்து சோசலிசத்திற்கு நகர்வது என்பதே ஆகும்.  அதே நேரத்தில், முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாமல்,  ஒப்பீட்டளவில் தன்னாட்சி பெற்ற ஒரு முதலாளித்துவப் பாதையைத் தொடரும் லட்சியங்களைக் கொண்டிருந்தாலும், அது பெருமளவில் வெளிநாட்டு நிதி மூலதனத்துடன் ஒத்துழைப்பதாகவும் உள்ளது என்றும் கட்சி மதிப்பீடு செய்தது.

இதில் இரண்டு அம்சங்கள் கவனத்திற்குரியவையாகும். முதலாவது அம்சம் –  முதலாளித்துவ வளர்ச்சியை நோக்கி நகரும்போது, இடதுசாரி அதிதீவிரவாதிகள் சித்தரிப்பது போல, முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்தின் கீழ் இல்லை என்பதோடு, அது எந்த வகையிலும் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியவில்லை என்பதாகும்.  இது உண்மை என்பதற்கான சான்றுகள் -பொதுத்துறை உருவாக்கம், சோவியத் யூனியனின் உதவியுடன் பொருளாதார இறையாண்மை, பெருநகர மூலதனத்தின் கட்டுப்பாட்டிலிருந்து நாட்டின் இயற்கை வளங்களின் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுத்தல், மற்றும் அயலுறவுக் கொள்கையில் அணிசேராமை போன்றவையாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உள்நாட்டில் முதலாளித்துவ வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது என்பதால் சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய அரசாங்கம் உலக முதலாளித்துவத்தின் முகாமில் இணைந்துவிட்டது என்பதல்ல என்பதுதான் இதற்குப் பொருள்.

இரண்டாவது அம்சம் – அரசு, முதலாளித்துவ மற்றும் நிலப்பிரபுக்களின் சொத்துக்களைப் பாதுகாப்பதில் அதன் வர்க்கத் தன்மையை வெளிப்படுத்தியபோதும், முதலாளிகளுக்கு மானியங்களையும் சலுகைகளையும் அள்ளி அள்ளி கொடுத்து, அவர்களை அரசியல் அதிகாரம் படைத்தவர்களாக மாற்றும் ஜங்கர் முதலாளித்துவத்திற்கு வழிவகுத்தாலும், முதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன்களுக்காக மட்டுமே அது பிரத்தியேகமாக செயல்படவில்லை. அது அனைத்து வர்க்கத்தினருக்கும் மேலானதாக தன்னை காட்டிக் கொண்டது – தோற்றமளித்தது. அவ்வப்போது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தலையீடு செய்தது. புராதன மூலதனக் குவிப்பின் ஒரு பகுதியாக, முதலாளித்துவ விவசாயத்திற்காக நிலத்தை குத்தகைதாரரிடமிருந்து கைப்பற்றி நிலப்பிரபுக்கள் விவசாய முதலாளித்துவத்தை செய்ய வழிவகுத்தாலும், மறு புறம் புராதன மூலதனக் குவிப்பின் செயல்முறையை தடுக்கும் வகையில் நகர்ப்புற பெரு முதலாளித்துவம் விவசாயத்தையோ அல்லது கைவினைஞர்களின் கைவினைக் கலைகளையோ ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்தியது. மாறாக, கைத்தறி துறையின் சிறு உற்பத்தியாளர்கள் ஒரு பகுதி துணி உற்பத்தியை செய்வதற்கென்று ஒதுக்கியது.  அதே போல, குலாக்களோ நிலப்பிரபுக்களோ மட்டும் பயனாளிகளாகிவிடாமல், விவசாயச் சந்தைகளில் தலையீடு செய்து விளைபொருட்களை லாப விலைக்கு வாங்கவும் ஏற்பாடு செய்தது.   சர்வதேச சந்தையின் ஏற்ற இறக்கங்களிலிருந்து பாதுகாப்பளித்தல், மானிய விலையில் இடுபொருட்கள் கிடைத்தல், மானியத்துடன் கூடிய நிறுவன கடன் வசதிகள், அரசு நிறுவனங்களின் மூலம் புதிய நடைமுறைகள் மற்றும் விரிவாக்கச் சேவைகள், மற்றும் விதை ரகங்கள் கிடைத்தல் போன்ற விவசாயத்திற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது.  இவற்றின் பெரும் பயன்களை கிராமப்புறங்களில் வளர்ந்து வரும் முதலாளித்துவ வர்க்கத்தினர் அடைந்தனர் என்றாலும், பெரும் எண்ணிக்கையில் இருந்த விவசாயிகளும் பயனடைந்தனர்.  ஏகாதிபத்தியத்தின் ஆசிர்வாதங்களின் தேவையின்றி, தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கு பெருநகர மூலதனத்துடன் அதிகரித்து வரும் ஒத்துழைப்பைப் பொருட்படுத்தாமல், பெருநகர மூலதனத்தையே கூட தியாகம் செய்து, இந்த முதலாளித்துவ வளர்ச்சி என்பது ஒருவிதமான தனித்தன்மையுடன் நடத்தப்பட்டது.

இந்த விசித்திரமான குணாம்சத்தின் காரணமாக, காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின்போது ஏகாதிபத்தியத்திற்கெதிராக ஒன்றிணைந்து போராடிய வர்க்க அணிகளுக்குள் இணைப்பை ஏற்படுத்த முடியாத அளவு இடைவெளி ஏற்படவில்லை. இதையே வேறுவிதமாகக் கூறினால், காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின்போது வழங்கப்பட்ட உழுபவனுக்கு நிலம் போன்ற பல வாக்குறுதிகளை முதலாளித்துவம் மீறினாலும், டிரிஜிஸ்ட் ஆட்சி (dirigiste regime) – அதாவது ஒரு முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் மீது வெறும் ஒழுங்குமுறை தலையீட்டுப் பாத்திரத்திற்கு மாறாக, ஒரு வலுவான அதிகாரபூர்வமான பாத்திரத்தை வகிக்கும் வகையில் அரசு இருந்த வரை, அது காலனித்துவ எதிர்ப்பு போராட்டத்தின் வாக்குறுதிகளை முற்றிலுமாக மீறவில்லை. அதனால்தான், கட்சி முதலாளித்துவ ஆட்சி முறைக்கு எதிராக இருந்தாலும், அதனுடைய பல்வேறு நடவடிக்கைகளை – வங்கிகளின் தேசியமயம், பொதுத்துறைகளின் உருவாக்கம், பொதுத்துறைகளை பயன்படுத்தி  பெருநகர மூலதனத்தின் கைகளிலிருந்து இயற்கை வளங்களை மீண்டும் கைப்பற்றியது, அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம் போன்ற பிறவற்றையும் ஆதரித்தது.

முதலாளித்துவம் வளர்த்துக் கொண்ட இந்த தனித்துவமான குணாதிசயத்தின் காரணமாக, அது முதலாளித்துவமே இல்லை என்று பலரை தவறாக நம்ப வைத்துள்ளது. அந்த தவறான புரிதலின் ஒரு பகுதிதான் இந்த பொருளாதார ஆட்சி முறையை ‘முதலாளித்துவத்தை நடைமுறைப்படுத்தாத  அல்லது முதலாளித்துவத்தை ஆதரிக்காத வளர்ச்சி முறை’ என்று வகைப்படுத்துவதாகும். இது ஆளும் வர்க்கத்தின் குணாம்சத்தை அடையாளம் காணாத எதிர்மறையான விளக்கமாகும். அந்த தவறான புரிதலின் மற்றொரு பகுதிதான் ஆளும் வர்க்கத்தையும் அதன் வளர்ச்சிப் பாதையையும் அடிப்படையற்ற வகையில் – ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அடையாளப்படுத்துகிறது. அது நகர்ப்புறத்தில் மற்றும் கிராமப்புறத்தில் உள்ள நடுத்தர வர்க்கத்தை அல்லது குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை, வசதி படைத்த விவசாயிகளை, முதலாளித்துவம் அல்லாத, சோசலிசம் அல்லாத ஒரு ‘இடைநிலை ஆட்சியின்’ பொதுவான வளர்ச்சிப் பாதையில் ஆளும் வர்க்கமாகப் பார்க்கிறது. வரலாற்று ரீதியாக, நடுத்தர வர்க்க மேலாதிக்கம் ஒரு நீடித்த நிகழ்வாக இருந்ததில்லை என்றாலும், போருக்குப் பிந்தைய உலகில் ஒரே நேரத்தில் முதலாளித்துவமும் சோசலிச முகாமும் இருப்பதன் காரணமாக அது நீடித்த நிகழ்வாக இருக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது என்று வாதிடுகிறது. இது  தவறு என்று ஏற்கனவே பல நிகழ்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. ஆனால் இந்த தவறான புரிதல்கள்தான்  சுதந்திரத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ ஆட்சி முறையின் தனித்துவமான தன்மைக்கு சான்றாகும்.

3.     சர்வதேச நிதி மூலதன உருவாக்கப் பின்னணியில் இந்திய டிரிஜிஸ்ட் ஆட்சிமுறை கைவிடப்பட்டு நவ தாராளவாத அமலாக்கம்

இந்த டிரிஜிஸ்ட் ஆட்சி முறையில் உள்ள அதன் உள்ளார்ந்த முரண்பாடுகளின் காரணமாக வெகுகாலத்திற்கு அதனை நீட்டிக்க முடியாது என்பது ஆரம்பம் முதலே தெளிவாகத் தெரிந்தது. அதனுடைய வளர்ச்சி என்பது உள்நாட்டுச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. உள்நாட்டு சந்தையின் வளர்ச்சி விவசாயத் துறையின் வளர்ச்சியை, குறிப்பாக உணவு தானிய உற்பத்தியை, சார்ந்தது.  ஒட்டுமொத்த கிராக்கி குறைவதன் காரணமாக பொருளாதாரம் மந்தமடைந்து விடக்கூடாது என்பதில் டிரிஜிஸ்ட் அரசு தலையீடு செய்து சரி செய்ய வேண்டும் என்பதால், தேவையான உணவு தானியங்களை நுகர்விற்கு வாங்கிய பிறகு, ஆலைகளில் தயாராகும் பொருட்களை, சேவைகளை வாங்குமளவிற்கு மக்களின் கையில் உபரியாக வாங்கும் சக்தி இருப்பதையும் உத்தரவாதப்படுத்த வேண்டும்.  ஏனென்றால் மக்களின் வாங்கும் சக்தி உபரியாக இருப்பதை, வாங்கும் சக்தியின் அதிகரிப்பை உறுதிப்படுத்தினால் மட்டுமே உள்நாட்டுச் சந்தையின் வளர்ச்சி சாத்தியமாகும்.  மக்கள் தொகை வளர்ச்சியை விட அதிகமான உணவு தானிய உற்பத்தி வளர்ச்சி, அதைவிட துரித உபரியின் வளர்ச்சி, அதன் மூலம் உள்நாட்டு சந்தையின் வளர்ச்சி என்பதுதான் டிரிஜிஸ்ட் ஆட்சி முறை.

இந்தியாவில் இருபதாம் நூற்றாண்டின் துவக்கதில் சுதந்திரத்தின் போது தனிநபர் உணவு தானியம் கிடைத்தல் என்பது 150 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தது.  டிரிஜிஸ்ட் ஆட்சியின் கீழ் இது 1980களின் இறுதியில் 180 கிலோ கிராமாக மாறியது.  ஆனாலும், உணவு தானிய உற்பத்தியின் வளர்ச்சி வீதம், உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்தும் அளவுக்கு வேகமாக இல்லை. கடுமையான பணவீக்கத்தை ஏற்படுத்தாமல், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை சுமார் 3.5 முதல் 4 சதவிகிதத்திற்கு அதிகமாக உருவாக்க முடியாது. பணவீக்கம் என்பது தேர்தல் காலத்தில் அரசிற்கு பாதகமாக அமையும் என்பதால் அதனை தவிர்க்க வேண்டியிருந்தது.  தற்போதைய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் அந்த நேரத்தில் இருந்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்திற்கு சமமாக ஆண்டிற்கு 2 சதவீத வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதத்தைத்தான் தர முடிந்தது.  இதனால் வேலையின்மையும் இதே விகிதத்தில் வளர்ந்து கொண்டே வந்தது.  சுருக்கமாகச் சொன்னால், நவீனத்துறையில் வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி தாமதமடைந்தது என்பது சுதந்திரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை பொய்யாக்கிக் கொண்டிருந்தது.

நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும் உணவு தானிய உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் போதுமானதாக இல்லை என்பதற்கும் தொடர்புள்ளது. இந்தியாவில் சுதந்திரத்தின்போது எடுக்கப்பட்ட நிலச் சீர்திருத்தங்களின் விளைவு என்னவென்றால், முதல் 15 சதவீத நில உடமைகளின் உரிமையில் அமைப்பு மாற்றம் ஏற்பட்டது என்பது மட்டுமே. பெரிய அளவில் காட்சியில் இல்லாத நில உரிமையாளர்கள் கைகளிலிருந்து அவர்களின் நிலங்கள் பணக்கார குத்தகைதாரர்களுக்கு பணத்தை பெற்றுக் கொண்டு உரிமை மாற்றம் செய்யப்பட்டது. மொத்தத்தில், உயர்மட்ட அளவில் செய்யப்பட்ட இந்த 15 சதவீத நில உரிமை மாற்றம் என்பது உண்மையில் தீவிர நிலச்சீர்திருத்த நடவடிக்கையாக அமையவில்லை.   மொத்த விதை நிலத்தின் அளவு கூட வேண்டும். அந்த விளை நிலத்தில் ஒரு ஏக்கருக்கான உற்பத்தி விகிதமும் அதிகரிக்க வேண்டும்.  அப்போதுதான் விவசாய வளர்ச்சி சாத்தியமாகும். நீர்ப்பாசனம் இரண்டையும் அதிகரிக்கும் என்றாலும், எத்தனை விவசாயிகள் அதன் பலன்களை பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தது.  எத்தனை விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள் என்பது நில மறுபகிர்மானத்தை, கூட்டு விவசாய முறையை, கூட்டுறவு திட்டங்களை  என அனைத்தையும் பொறுத்தது.  எனவே சுருக்கமாகச் சொன்னால் டிரிஜிஸ்ட் ஆட்சி முறையின் கீழ் நில மறு பகிர்மானம் அல்லது நிலச் சீர்திருத்தம் இல்லாததால் வேலைவாய்ப்பிலும் வளர்ச்சி ஏற்படவில்லை.

இதனால் பொதுவான மக்களிடையே இந்த டிரிஜிஸ்ட் ஆட்சியின் மீது ஒரு ஏமாற்றம் ஏற்பட்டது.  அதே நேரத்தில் இந்த டிரிஜிஸ்ட் ஆட்சியின் வலுவான ஆதரவாளராக இருந்த நகர்ப்புற மத்திய தர வர்க்கம், பொருளாதாரத்தை சுதந்திர வர்த்தகத்திற்கும் மூலதன பாய்ச்சலுக்கும் திறந்து விட்டால் அதிக அளவு வளர்ச்சி வாய்ப்புகள் உருவாகும் என்று நினைத்தது.  இப்படி நாட்டின் பொருளாதாரம் திறந்து விடப்படும்போது அதிக சம்பளம் கொடுக்கும் வளர்ந்த நாடுகளில் இருந்து குறைந்த சம்பளம் கொடுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கு மூலதனம் வரும். அதனால் நன்மைகள் கிடைக்கும் என்றும், நாடு விட்டு நாடு புலம் பெயர்வது எளிதாகும் என்றும், நகர்ப்புற மத்திய தர வர்க்கம் நினைத்ததால் டிரிஜிஸ்ட் ஆட்சிக்கு அதனுடைய ஆதரவு குறையத் தொடங்கியது.

இது எப்படி இருந்தாலும், உலக முதலாளித்துவக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றமே டிரிஜிச ஆட்சி முறையின் அழிவுக்குப் பின்னால் இருந்த மிக முக்கியமான காரணி. சோவியத் யூனியனையும் சீனாவையும் சுற்றி வளைக்க அமெரிக்கா உலகெங்கிலும் தனக்கான தளங்களை பராமரித்து வந்தது.  அதே நேரத்தில், காலனியாதிக்க காலம் போல காலனி நாடுகளில் இருந்து ‘செல்வத்தின் வடிகால்’ கிடைக்காததால், அமெரிக்காவின் பேலன்ஸ் ஆஃப் பேமெண்ட்களில் நிலையான நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதில் அமெரிக்காவால் எந்த மாற்றத்தையும்  ஏற்படுத்த முடியவில்லை. எனவே இந்தப் பற்றாக்குறைகளை சரி செய்ய தேவையான நிதிகளை பெறுவதற்காக டாலர்களை அச்சிட வேண்டியிருந்தது. அவை போருக்குப் பிந்தைய பிரெட்டன் வுட்ஸ் அமைப்பின் கீழ் ‘தங்கம் போல் நல்லது’ என்று அறிவிக்கப்பட்டது. மற்றும் அதிகாரப்பூர்வமாக ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு 35 டாலர்கள் ($35) என மாற்றப்பட்டது. இது அமெரிக்காவிலிருந்து டாலர்கள் வெளியேற வழி வகுத்தது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வங்கிகளின் கருவூலங்களை நிரப்ப வழிவகுத்தது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் அந்த மூலதனங்களை லாபகரமான இடங்களில் கடனாகக் கொடுக்க விரும்பின. பிரெட்டன் வுட்ஸ் அமைப்பின் கீழ் எந்த நாட்டிலும் எந்த மூலதனக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதையோ அந்த கட்டுப்பாடுகளினால் தங்கள் மூலதனப் பாய்ச்சல் தடைபடுவதையோ அவை விரும்பவில்லை. நிதி மூலதன நடவடிக்கைகளுக்காக உலகம் முழுவதும் திறக்கப்பட வேண்டும் என்று அவை விரும்பின.

பண வடிவில் உலகம் முழுவதும் பாய்ந்து கொண்டிருக்கும் இந்த சர்வதேச நிதி மூலதனம் 1973-74லும் 1979-80லும் ஏற்பட்ட இரண்டு எண்ணெய் விலை உயர்வுகளால் மேலும் வீங்கிப் பெருத்தது.   இதனால் இந்தியா போன்ற நாடுகளின் மீதும் நிர்ப்பந்தத்தினை அதிகப்படுத்தியது. இந்த நாடுகளின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட எளிதில் கிடைக்கக்கூடிய நிதி ஆதாரத்தினை இதற்கு சர்வதேச நிதியம் (IMF) போன்ற நிறுவனங்கள் வழங்கும் என்று ஆசை காட்டப்பட்டது. ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவைப் போல் அல்லாமல், இந்த கவர்ச்சி வார்த்தைகளை எதிர்த்து இந்தியா சில காலம் நின்றது. ஆனால் இறுதியாக எண்பதுகளில் இந்தியாவும் அடிபணிந்தது. அது முதல் ஒரு நவ-தாராளவாத ஆட்சியின் முழுமையான அறிமுகத்திற்கான வழியை இந்தியா திறந்தது.

இதற்கிடையில் இந்திய பெரு முதலாளித்துவ வர்க்கத்தின் அணுகுமுறையில் ஏற்பட்ட ஒரு ஆழமான குறிப்பிடத்தக்க மாற்றமே இந்த அடிபணிவிற்கு முக்கிய காரணமாகும். ஏகாதிபத்தியத்தை சாராமல் ஒப்பீட்டளவில் தன்னாட்சி பெற்ற ஒரு முதலாளித்துவத்தை இந்தியாவில் கட்டியெழுப்பும் திட்டத்தை இந்திய பெரு முதலாளி வர்க்கம் கைவிட்டது.  உள்நாட்டுச் சந்தையில் மட்டும் இருப்பது என்பது அதற்கு முட்டுக்கட்டையாகத் தோன்றியது.  சில காலம் உள்நாட்டுச் சந்தையை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, அந்நிய மூலதனத்துடன் சேர்ந்து சர்வதேச சந்தையில் நுழைவதற்கு  சில முன்னெடுப்புகளை செய்தது. ஆனால் அந்நிய மூலதனம் சர்வதேச சந்தையில் இந்திய மூலதனம் தன்னுடன் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள அனுமதித்ததற்கு ஈடாக இந்தியாவின் உள்நாட்டு சந்தையில்  நுழைவதை விரும்பியது. இந்தியப் பெரு முதலாளித்துவ வர்க்கம் இறுதியாக இதற்கு அடிபணிய வேண்டியிருந்தது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் நவ-தாராளமயம் நுழைவதில் சிறு காலதாமதம் ஏற்பட்டது.  சோவியத் யூனியன் இருக்கும்போதே இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகுதான் வர்க்க பலாபலன்களின் சமநிலையை நவதாராளவாதத்திற்கு சாதகமான நிலைக்கு மாற்ற முடிந்தது.   

4.     நவ தாராளவாத ஆட்சிக் காலத்தில் இடதுசாரி அரசாங்களின் சாதனைகள்

இந்தியாவில் டிரிஜிஸ்ட் ஆட்சி முட்டுச் சந்திற்கு வந்தது.  வேலையின்மை பெருகியது.  இந்த ஆட்சி முறையில் வேலையின்மையின் வீச்சை குறைப்பதற்காக எடுக்கும் எந்தவொரு முயற்சியும் பணவீக்கத்தில் கொண்டு விட்டது.  உணவுப் பொருட்களின் விலைகள் உட்பட தாறுமாறாக ஏறியபோது மக்கள் தங்கள் கோபத்தினை தேர்தல் ஜனநாயகத்தில் காட்டினர்.  1975-77 காலக்கட்டத்தில் எமர்ஜென்சியை விதித்ததன் மூலம், தேர்தல் ஜனநாயகத்தின் கட்டமைப்பை முழுவதுமாக தூக்கி எறியும் ஒரு முயற்சிக்கு மத்திய அரசு சென்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசரநிலையை கடுமையாக எதிர்த்தது. மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்றது. 1977 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலில் அது முதல் முறையாக மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசாங்கத்தை அமைத்தது.

நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் இடது முன்னணி அமைச்சத்தால் மேற்கு வங்கத்தில் ஆப்பரேஷன் பர்கா என்ற பெயரில் எடுக்கப்பட்டன.  குத்தகைதாரர்களை பதிவு செய்ய அனுமதித்து இந்த அரசு அங்கீகரித்தது.  (ஷேர்கிராப்பர் என்பது நில உரிமையாளர் ஒரு ரை அவர் தரும் பயிரின் பங்கிற்கு ஈடாக நிலத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் முறையாகும்).  அதுவரையில் இந்த குத்தகைதாரர்களுக்கு குத்தகை உரிமை மறுக்கப்பட்டிருந்தது.

நிலச்சீர்திருத்தங்களுடன் விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசனம் உள்ளிட்ட   வேறு சில அத்தியாவசிய நடவடிக்கைகளும் அதற்கான நிதி அதிகரிப்பும் சேர்த்து எடுக்கப்பட்டதால், மேற்கு வங்கத்தில் விவசாயத் துறையின் வளர்ச்சி விகிதத்தில் துரித முன்னேற்றம் ஏற்பட்டது. மற்றொரு முக்கியமான நடவடிக்கையாக ‘நிலத்தை உழுபவரே அறுவடை செய்ய வேண்டும்’ என்ற விதியை மாநில அரசு கொண்டு வந்தது. முன்பு, நிலத்தை குத்தகைதாரர் பயிரிட்ட பிறகு, நில உரிமையாளர்களின் குண்டர்கள் அறுவடையை எடுத்துச் செல்வார்கள்.  குத்தகைதாரருக்கு நில உரிமையாளர் என்ன நினைக்கிறாரோ அதனை கொடுப்பார். இது கிராமப்புறங்களில் அதிகார சமநிலையை மாற்ற உதவியது. இதனால் 1990 களில், நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களை விடவும் விவசாயத் துறையின் வளர்ச்சியில் மேற்கு வங்கம் மிக உயர்ந்த விகிதத்தை எட்டியது. இப்படி துரிதப்படுத்தப்பட்ட விவசாய வளர்ச்சி கிராமப்புறங்களில் விவசாயம் சாரா பொருட்களுக்கான கிராக்கியை அதிகப்படுத்தியது.  இதன் காரணமாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் வளர்ந்தன.

 மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம் கால் பதித்த மற்றொரு தடம் உள்ளூர் சுயாட்சி அரசு நிறுவனங்களை (LSGIs) உருவாக்கியது.  இதனால் ஜனநாயக அதிகாரப் பகிர்வு ஏற்பட்டது. இதற்கான அத்தனை ஆதாரங்களும் இந்த உள்ளூர் சுயாட்சி அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.  திட்டங்கள் உள்ளூர் மட்டத் தேவைகளுக்கிணங்க தீட்டப்பட்டன.  அதற்கான முடிவினை தீர்மானிக்கும் இடங்களாக இந்த ஜனநாயக அமைப்புகள் இருந்தன.  மக்கள் பங்கேற்புடன் இவை செயல்பட்டன.  பிற்காலத்தில் இந்த ஜனநாயக அதிகாரப் பகிர்வு நாடு முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையாக மாறியது.  அரசியலமைப்புச் சட்டத்திலும் திருத்தம் கொண்டு வரப்பட்டது.  இதற்கெல்லாம் மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம்  முன்னோடியாகத் திகழ்ந்தது. 

கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசு ஒரு படி மேலே சென்றது. அது பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பல நிறுவனங்களின் நிர்வாகத்தை, இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுடன் சேர்த்து, உள்ளூர் சுயாட்சி அரசு நிறுவனங்களிடம்(LSGI) ஒப்படைத்தது. அதே நேரத்தில் அவர்களின் சம்பளப் பணத்தை மாநில அரசு தொடர்ந்து கொடுத்தது. கூடுதலாக, கிராம சபைகளால் அவர்களின் சொந்தத் தேவைகளின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டிய திட்டங்கள் என்று தீர்மானிக்கப்படும் திட்டங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் திட்ட நிதியில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மாநில நிதி ஆணையம் LSGI களுக்கு மாற்றுவது கட்டாயமாக்கப்பட்டது.

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கத்தின் கீழ் விவசாய வளர்ச்சி ஒரு படி அதிகரிக்கவே செய்தது. இருப்பினும் மாநிலத்தின் புவியியல் கட்டுப்பாடுகள் காரணமாக விவசாயத் துறையின் வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருந்தது. ஆனால் மாநில பட்ஜெட்டில் மக்கள் நலச் செலவினங்களை அதிகரித்ததன் மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தது. உள்ளூர் கிராக்கி அதிகரித்தது. இது விரிவாக்கத்திற்கும் பங்களித்தது. எனவே விவசாயம் அல்லாத சிறு துறைகள் விரைவான வளர்ச்சியடைந்தன. 2004-05க்கும் 2011-12க்கும் இடையில் கேரளாவில் தனிநபர் உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மோடியின் குஜராத்தைப் போலவே இருந்தது. குஜராத்தின் உயர் வளர்ச்சி குறித்து இடைவிடாமல் தம்பட்டமடிக்கப்பட்டது.  ஆனால், உண்மையில், அதே அளவு வளர்ச்சி கேரளாவிலும் இருந்தது.

இடதுசாரிகள் ஆளும் மூன்றாவது மாநிலமாக இருந்த திரிபுராவில் இந்தக் காலகட்டத்தில் சமூகக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் கூர்க்காலாந்து இயக்கம் மற்றும் திரிபுரா பழங்குடியினர் சுயாட்சி இயக்கம் போன்ற பிரிவினைவாத இயக்கங்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கான ஒரு வழிமுறையாக சுயாட்சி கவுன்சில்கள் திரிபுராவில்  உருவாக்கப்பட்டன.

 இந்த மூன்று இடது முன்னணி (LF) அரசாங்கங்களின் நடவடிக்கைகளின் மூலம், வளர்ச்சிக்கான ஒரு குறிப்பிட்ட இடதுசாரி உத்தி தெளிவாகப் புலனாகிறது. அதன் முக்கிய கூறுகள்:

உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தியை ஒரு துரிதமான விவசாய வளர்ச்சியின் மூலமும், மாநில அரசிடமிருந்து போதுமான நிதி ஒதுக்கீடு செய்து அளிப்பதன் மூலமும் அதிகரித்தல்.

கிராமப்புற சமுதாயத்தில் பல்வேறு வர்க்கங்களுக்கு இடையே அதிகார சமநிலையில் மாற்றம் கொண்டு வருதல்.

உள்ளூர் வாங்கும் சக்தி அதிகரிப்பிலிருந்து எழும் கிராக்கியின் உயர்வு சிறு உற்பத்தித் துறைகளின் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும். இதன் மூலம் உள்ளூர் மட்டத்தில் பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும். மேலும் இதன் தாக்கம் பொருளாதாரத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். சமூகச் செலவினங்களை, குறிப்பாகக் கல்வி மற்றும் கிராமப்புற மக்களின் செல்வாதரங்களுக்கான செலவுகளை கணிசமாக உயர்த்துதல்.

உள்ளூர் அளவிலான பங்கேற்பு ஜனநாயகத்தை அதிகாரப் பகிர்வின் மூலம் வலுப்படுத்துதல்.

மாநிலங்களின் வரி வருவாயைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு பெரு முதலாளிகளுக்கு வழங்கிய வரிச் சலுகைகள், மற்றும் நிதியாதாரங்களை மையப்படுத்தும் நடவடிக்கைகள் போன்றவற்றின் காரணமாக மாநில அரசுகளின் மீது பெருகிவரும் இறுக்கமான நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த இடதுசாரி உத்தியை மாநிலங்களில் தொடர்ந்து பின்தொடர்வது காலப்போக்கில் கடினமாகிறது. ஆனால் உழைக்கும் மக்களின் அமோக ஆதரவு இந்த இடதுசாரி உத்திக்கு இருந்தது என்பதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி அரசாங்கங்களின் நீண்ட தேர்தல் வெற்றிகளிலிருந்து தெளிவாக உணர முடிகிறது. உண்மையில் மேற்கு வங்கத்தில் உழைக்கும் மக்கள் இடது முன்னணி அரசாங்கத்தின் மீது 34 ஆண்டு காலமாக நம்பிக்கை வைத்திருந்தனர்.

இருப்பினும், மத்திய அரசு கடைபிடிக்கும் நவ தாராளவாத உத்திக்கும், இந்த இடதுசாரி உத்திக்கும் இடையில் முரண்பாடு உள்ளது. சர்வதேச நிதி மூலதனத்தின் உத்தரவின் பேரில், விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை உள்ளிட்ட சிறு உற்பத்தித் துறைகளுக்கு மத்திய அரசின் ஆதரவு திரும்பப் பெறப்பட்டதால், பெருமளவில் ஏற்பட்டுள்ள விவசாய நெருக்கடி, உழைக்கும் மக்களின் கைகளில் வாங்கும் சக்தியைக் குறைக்கிறது. உலக வங்கி, ஐ.எம்.எஃப் போன்ற பிரெட்டன் வுட்ஸ் நிறுவனங்களின் பரிந்துரையின்படி விதிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி போன்ற நடவடிக்கைகளின் மூலம் நிதியாதாரங்களை மையப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளால், அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் பராமரிப்பு உள்ளிட்ட சமூக நலச் செலவினங்களுக்கு மாநிலங்களுக்கு சிறிதளவு மட்டுமே நிதி கிடைக்கிறது. கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறையின் தனியார்மயமாக்கலின் காரணமாக உழைக்கும் மக்களின் உண்மை வருமானம் மேலும் குறைகிறது.

தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக தனியார் துறையின் பெரிய அளவிலான முதலீட்டை மாநிலத்திற்கு வரவழைக்க முனைந்த மேற்கு வங்க மாநில இடதுசாரி அரசாங்கத்தின் தீர்மானத்தை இந்த பின்னணியில் பார்க்க வேண்டும். எனினும் இது மட்டும் போதாது என்பதை அனுபவம் காட்டுகிறது. தொழில்மயமாக்கலுக்கு தேவையான பிற முயற்சிகளும் கூடுதலாக எடுக்கப்பட வேண்டும். சீனாவின் டவுன்ஷிப் மற்றும் கிராம நிறுவனங்களின் நிர்மாண முறையில், LSGI-க்கு சொந்தமான யூனிட்கள்  உருவாக்கப்பட வேண்டும்.  அல்லது கேரளாவில் சில இடங்களில் முயற்சிப்பது போல, கூட்டுறவுக்கு சொந்தமான யூனிட்கள் மூலம் தொழில்மயமாக்கலை ஊக்குவிக்கும் புதுமையான நடவடிக்கையை எடுக்கலாம். மேலும் சில முதலாளிகள் மாநிலத்தில் தொழிற்சாலைகளை தொடங்கும் போது, இந்த நோக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது அந்த நிலத்திற்காக வழங்கப்பட்ட நிறுவனப் பங்குகளை வாங்கி LSGI அல்லது விவசாய கூட்டுறவு நிறுவனங்களை உருவாக்க முயற்சி செய்யலாம். இதன் மூலம் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான முரண்பாடுகள் எழுவது குறைக்கப்படும். சுருக்கமாகச் சொன்னால், இடதுசாரி உத்தியை முன்னெடுத்து முன்னேறிச் செல்வதற்கு முழு அளவிலான புதுமையான நடவடிக்கைகள் இடதுசாரிகளால் அவசரமாக எடுக்கப்பட வேண்டியுள்ளது.

5.     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் இன்று சந்தித்து வரும் முன்னெப்போதுமில்லாத சவால்கள்

இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் முன்னெப்போதும் இல்லாத சவால்களை சந்தித்து வருகின்றனர்.  முதலாவதாக ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான முரண்பாடுகள் சமீபகாலமாக சத்தமின்றி அமுக்கப்படுகின்றன.  ஏகாதிபத்தியங்களிடையே தொடர்ந்து மிகத் தீவிரமாக இருக்கும் முரண்கள் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு சாதகமானது என்று கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆரம்பம் முதல் கணிக்கப்பட்டு வருகிறது.  உண்மையில், ஏகாதிபத்திய நாடுகளிடையே எழுந்த உள் முரண்களும் மோதல்களும்தான் போல்ஷ்விக் புரட்சியை நடத்துவதற்கும் தக்க வைப்பதற்குமான கால அவகாச இடைவெளியை அளித்தது என்று லெனின் எழுதியுள்ளார். அப்படியிருக்கையில், இன்று ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான உள் முரண்கள் சத்தமில்லாமல் அமுக்கப்படுகின்றன என்பது சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்துள்ள சூழலில், கம்யூனிஸ்டுகளின் நடைமுறை உத்திக்கு எல்லா இடங்களிலும் மிகப் பெரிய சவாலாக மாறிப் போயுள்ளது.

இரண்டாவது சவால், நவ தாராளவாதம் உழைக்கும் மக்களை முழுவதுமாக மூழ்கடிப்பது மட்டுமல்லாமல், அவர்களை எதிர்த்துப் போராடும் திறனற்றவர்களாக பலவீனப்படுத்துவதாகவும் உள்ளது. இந்தியாவில் உழைக்கும் மக்கள் முழுமையான வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  கிராமப்புற மக்களில் நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 2200 கலோரி உணவு கிடைக்க முடியாத நிலையில் உள்ளவர்களின் விகிதம் திட்டக் கமிஷனின் முந்தைய அளவுகோலின்படி, 1993-94க்கும் 2011-12க்கும் இடையில் 58 சதவீதத்திலிருந்து 68 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 2100 கலோரிகள் என்ற அளவுகோலாக இருக்கும் நகர்ப்புற இந்தியாவிற்கு இது முறையே 57 சதவீதம் மற்றும் 65 சதவீதம் ஆகும்.  இது எப்படி நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.  விவசாயம் மற்றும் சிறு உற்பத்தித் துறைக்கான அரசின் ஆதரவினை அரசு விலக்கிக் கொள்ளும் போது இந்தத் துறைகள் நெருக்கடிக்குள்ளாகின்றன.  அதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தாலும், விவசாயிகள் நகர்ப்புறங்களை நோக்கி வேலை தேடி புலம் பெயரும் போது வேலை வாய்ப்பும் அதே விகித அளவிலோ அல்லது அந்த விகிதத்தை விடவும் குறைவாகவோ குறைகிறது. 1991 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் இடையில் விவசாயிகளின் எண்ணிக்கை 15 மில்லியன் குறைந்துள்ளது.  சிலர் விவசாயக் கூலிகளாக மாறிப் போயுள்ளனர்.  இன்னும் சிலர் நகர்ப்புறங்களுக்கு புலம் பெயர்ந்து, அங்கு ஏற்கனவே இருக்கிற வேலைகளை பகிர்ந்து கொள்ளும் கூலிகளாக மாறிப் போயுள்ளனர்.    

வேலை தேடும் தொழிலாளர் பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, ஏற்கனவே அமைப்பு சார்ந்த துறையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் ஊதிய விகிதத்திலும் இது தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.  அவர்களின் பேரம் பேசும் சக்தி குறைகிறது.  இன்னும் இரண்டு காரணிகளும் தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியின் மீது தாக்கத்தை செலுத்துகின்றன.  உலகம் முழுவதும் பாய்ந்து செல்லும் நிதி மூலதனம் போர்க்குணமிக்க அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள் உள்ள நாடுகளை விட்டு வெளியேறி, அணி திரட்டப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள நாடுகளை நோக்கி நகர்ந்துவிடும்.  எனவே, இது தொழிலாளர்களின் போர்க்குணத்தினை தணிக்கும் தாக்கத்தினை செய்கிறது.  அடுத்த மற்றொரு காரணி பொதுத்துறை ஊழியர்கள் போர்க்குணம் மிக்கவர்களாக அணி திரட்டப்பட்டவர்களாக இருப்பதால், பொதுத்துறைகள் தனியார்மயமாக்கப்படுகின்றன.  தனியார்மயமாக்கல் என்பதும் தொழிலாளர்களின் போர்க்குணத்தினை தணிக்கும் தாக்கத்தினை செய்கிறது.

டிரிஜிஸ்ட் காலத்துடன் ஒப்பிடும் போது நவ தாராளவாதம், தொழிலாளர்களின் போராட்டத் திறனை பலவீனப்படுத்தியுள்ளது. இந்தியாவில் நவ-தாராளமயக் காலத்தில் தொழிலாளர்கள் பெரிய வேலைநிறுத்தங்களை நடத்துகின்றனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் முன்பை விட அவர்களது வேலைநிறுத்த சக்தி பலவீனமடைந்துள்ளது என்பதுதான் உண்மை. அதேபோல், நவ தாராளமயத்தால் இரக்கமின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களை அணிதிரட்டுவது என்பது மிகவும் கடினமான மற்றும் நீடித்த செயல்முறையாகும். நவ தாராளவாதம் தொழிலாளர்களின் எதிர்ப்பினை தெரிவிக்கும் வேலைநிறுத்த வடிவத்தின் திறனை பலவீனப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்க அணிதிரட்டப்பட்ட போராட்டங்களாக நடத்துவதற்குப் பதிலாக தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிராக, தொழிலாளர்களின் ஆதரவுடன் விவசாயிகளால் நடத்தப்பட்ட சமீபத்திய போராட்டம், இவற்றையெல்லாம் மீறி நடந்தேறியதற்காக மிகவும் பெருமைப்பட வேண்டியுள்ளது.

நவ தாராளவாதம் ஒருபுறம் வர்க்கப் போராட்டத்தினை தணிப்பதாக உள்ளது.  மறுபுறம் அடையாள அரசியலை ஊக்கப்படுத்துகிறது.  அடையாள அரசியலை பட்டியலின அல்லது பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஊக்கப்படுத்தவில்லை.  மாறாக, ஆளும் வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் சாதி உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்தி, அவர்களது விசுவாசத்தை பெற்று, அவர்களை பிளவுபடுத்துகிறது.  நவீன தாரளமயக் கொள்கைகள் நெருக்கடிக்குள்ளாகும்போது, அடையாள அரசியலின் தீவிர அரசியல் வடிவமாக வகுப்புவாத பாசிச வடிவத்தினை எடுக்கிறது.  பெரு முதலாளி வர்க்கம் நிதியாதாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அளித்து இதனை வளர்த்தெடுக்கிறது.

டிரிஜிஸ்ட் ஆட்சிமுறையின்போது இருந்தது போல்  கம்யூனிச அரசியல் முன்னிலையில் இல்லை என்றாலும், ஒரு தகுந்த சந்தர்ப்பம் வரும்போது இது போன்ற பிளவுவாத அரசியலை முற்றிலுமாக முறியடித்து அது வெடித்துச் சிதறி கிளம்பலாம். நவ-தாராளவாத முதலாளித்துவத்தின் நெருக்கடி அத்தகைய ஒரு சந்தர்ப்பம் வருமென்பதை முன்னறிவிக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் காரணமாக, உலகம் முழுவதும் மற்றும் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும், மிக வேகமாக அதிகரித்து வரும் செல்வ மற்றும் வருமான சமத்துவமின்மையின் விளைவுதான் இந்த நெருக்கடி. இதன் காரணமாக எழுகிற அதீத உற்பத்திப் போக்கை அரசு தலையீடு செய்து தடுத்து நிறுத்த முடியும்.  ஆனால், சர்வதேச நிதி மூலதனம் தேசிய அரசுகளை அதனுடைய கட்டளைகளுக்கு அடிபணியச் சொல்வதன் காரணமாக, தேசிய அரசுகளின் தலையீடு என்பது தற்போது இல்லாமல் போய் விட்டது.   ஏனெனில் உலகமயமாக்கப்பட்ட நிதி மூலதனம் தேசிய-அரசை எதிர்கொள்வது பிந்தையதை அதன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய நிர்ப்பந்திக்கிறது. இந்த கட்டளைகளில் நிதிப் பற்றாக்குறை தவிர்க்கப்பட வேண்டும் என்பதும் செல்வந்தர்கள் மீது வரி போடக் கூடாது என்பதும் அடங்கும்.  ஆனால், நாட்டின் பொருளாதாரத்தை தூண்டுவதற்கு அரசின் செலவினங்களை அதிகரிக்க தேவையான நிதியை உருவாக்க உள்ள  இரண்டு வழிகள் இவை மட்டுமே.  .

6.     தூண்டப்படும் வெறுப்பரசியலும் அதனை விஞ்சிய விவசாயிகளின் போராட்டம் அளிக்கும் நம்பிக்கையும்

இந்த சூழ்நிலையில்தான் உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளில் உள்ள பெருநிறுவன-நிதிமூலதன தன்னலக்குழுக்கள் நவ-தாராளவாத நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து நடத்த பாசிச சக்திகளை ஊக்குவித்து வருகின்றன. இந்தப் போக்கிற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இங்குள்ள பெருநிறுவன-நிதி மூலதன தன்னலக்குழுக்கள் பாசிச இந்துத்துவாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது. இந்த கார்ப்பரேட்-இந்துத்துவா கூட்டணி தற்போது நமது அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. இது முஸ்லிம்களை, (மற்றும் சில சமயங்களில் தலித் மற்றும் கிறிஸ்தவர்களை) ‘நாம் அல்லாத மற்றவர்கள்’ என சித்தரித்து வெறுப்பின் இலக்காக ஆக்குகிறது. மேலும் மக்களின் வாழ் நிலைமைகளின் நெருக்கடிகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசைதிருப்பும் வழிமுறையாக இந்த வெறுப்பரசியலை பயன்படுத்துகிறது, இதன் காரணமாக பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற விஷயங்கள் மறக்கப்பட்டு, நெருக்கடிக்கிடையிலும் கார்ப்பரேட் இந்துத்துவா கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.

இந்த கார்ப்பரேட் இந்துத்துவா கூட்டணியானது, உள்நாட்டு மற்றும் அந்நிய பெருநிறுவன-நிதிமூலதன தன்னலக்குழுக்களின் நலன்களுக்காக மட்டுமே பிரத்தியேகமாக செயல்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகளைத் தடுக்கும் சட்டங்கள், பின்னர்  கொரோனா பெருந்தொற்று காலத்தை தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் சட்டத் தொகுப்பு மசோதாக்கனை மற்றும் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்ற பயன்படுத்திக் கொண்டது.  விவசாயத்திற்கென எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச மாநில ஆதரவையும் முற்றிலுமாக விலக்குவதாகவும், கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்திற்கும் அத்துமீறலுக்கும் விவசாயத் துறையை திறந்துவிடுவதற்கு வழிவகுப்பதாகவும் இந்த மூன்று வேளாண் சட்டங்களும்  இருந்தன. மோசமான இந்த சட்டங்களுக்கு எதிராக, தொழிலாளர்களின் ஆதரவுடன், விவசாயிகள் நடத்திய ஓராண்டு காலப் போராட்டத்தின் காரணமாக, இறுதியாக அவை திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆனாலும் அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலை கைவிட்டுவிடவில்லை.  தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அதன் ஆதரவு பெருவணிக நிறுவனங்களுக்கிடையில் அது உருவாக்கியுள்ள விவசாயத்திற்கான இணைக் கடன் ஏற்பாடு என்பது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பொதுமக்கள் வைப்பு நிதியாக வைத்துள்ள நிதி வளங்களை பயன்படுத்தி, பெரு நிறுவனங்கள் விவசாயத் துறையில் ஆக்கிரமிப்பு அத்துமீறல் செய்ய வழி வகுக்கும். இதில் இருந்து, அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலை கைவிட்டுவிடவில்லை என்பது தெளிவாகிறது.

எனினும், ஒப்பீட்டளவில் எதிர்ப்பு நிலை மந்தமாகி, எதிர்ப்பற்ற நிலை போன்றிருந்த காலப் பின்னணியில், நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் என்பது உழைக்கும் மக்களின் போராட்டங்களின் எழுச்சிக்கான வழியைத் திறந்துள்ளது. அரசியலமைப்பைத் தகர்க்கும் முயற்சி செய்யும் கார்ப்பரேட்-இந்துத்துவா கூட்டணியை தோற்கடிப்பதன் மூலம் அது ஜனநாயக.அரசியலுக்கான வாய்ப்பைத் திறக்கும். ஆனால், பாசிசக் கூறுகளின் தோல்வி என்பது தீர்மானகரமானதாக இருக்க வேண்டுமானால், இந்தக் கூறுகள் உருவாகக் காரணமான நவ தாராளவாத முதலாளித்துவத்தை கடந்து வர வேண்டும். கார்ப்பரேட் இந்துத்துவா கூட்டணியை தோற்கடிப்பது என்று அரசியலமைப்பு உறுதி கூறும் அனைத்து கூறுகளையும் பாதுகாக்க  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் ரீதியாக ஒன்றுபட்ட முயற்சிகள்  மேற்கொள்வதுடன், உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான குறைந்தபட்ச பொருளாதார நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து நவ தாராளமயத்தின் எல்லைகளை உடைக்க வேண்டும்.

தமிழில்: ஆர். எஸ். செண்பகம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s