நாட்டு மக்கள் அனைவரும் தமது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்பதை மையப்படுத்தி இந்திய விடுதலையின் 75வது ஆண்டை ஆசாதி கா அம்ரித் மகாத்சவ் என்ற பெயரில் மோடி அரசு ஒரு பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. கதர், பருத்தி,பட்டு போன்ற இயற்கை துணிகளுக்கு மாறாக பாலியஸ்டர் துணியில் கொடி தயாரிக்கலாம் என்ற வகையில் 2021 டிசம்பரில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் மிகப்பெரும் பாலியஸ்டர் உற்பத்தியாளர் யார் என்பதை அனைவரும் அறிவர். கூட்டுக் களவாணி முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு இது வழி வகை செய்தது.
அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமர் பொறுப்பேற்கும் வரை ஆர் எஸ் எஸ்-ம், பாஜக-வும் எப்போதும் தேசியக் கொடியை ஏற்றவில்லை. காவிக்கொடியின் மீதே அவர்களது விசுவாசம் குவிந்திருந்தது. ஆர்எஸ்எஸ் ஒருபோதும் இந்திய விடுதலைப் போரில் பங்கேற்கவில்லை. இந்துத்துவ ஆதரவு வரலாற்று ஆசிரியர்களாலும் பதிவு செய்யப்பட்டு ஆங்கிலேய உளவுத்துறையினரால் உறுதிப்படுத்தப்பட்ட உண்மை இது.
கம்யூனிஸ்டுகளின் போற்றத்தக்க பங்கு
மாறாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த ஒன்பது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களும் விடுதலைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பல்லாண்டு காலம் சிறைகளில் வாடினர். அந்தமான் செல்லுலார் சிறையில் பளிங்கு கற்களில் பொறித்து வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பெயர்கள் புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புடையவை ஆகும்.1947 ஆகஸ்டு 15 ல் சிறையில் இருந்தே தோழர் ஏ.கே.கோபாலன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஹோசியாபூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்த யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு மூவர்ணக் கொடியை ஏற்றியதற்காக 16 வயதே நிரம்பிய ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார். கம்யூனிஸ்ட்களுக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் தேச பக்தி யும், தியாக உணர்வும் இந்திய சோசலிச மாற்றத்துக்கான புரட்சிகர பார்வையின் உள்ளார்ந்த அம்சமாகும்.
1920 ம் ஆண்டு தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை இயக்க நிகழ்ச்சி நிரல்களை வடிவமைப்பதில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கியது. 1921 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அகமதாபாத் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மௌலானா ஹஸ்ரத் மோகனியும், சுவாமி குமாரனந்தாவும் முழு விடுதலை தீர்மானத்தை முன்மொழிந்தனர். காந்தியடிகள் இந்த தீர்மானத்தை ஏற்கவில்லை.(1929 ஆம் ஆண்டிலேயே முழு விடுதலை தீர்மானம் ஏற்கப்பட்டது) 1922 ஆம் ஆண்டு கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் அடுத்த மாநாட்டில் தேசிய இயக்கத்தின் நோக்கங்கள் அடங்கிய சாசனத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விநியோகித்தது. அடுத்தடுத்து நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளிலும் இது தொடர்ந்தது.
விடுதலை இயக்கத்தின் நிகழ்ச்சி நிரல் மீது செல்வாக்கு செலுத்துவதில் கம்யூனிஸ்டுகள் பெரும் பங்காற்றினார். நிலப் பிரச்சனை: நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக 1940 களில் கம்யூனிஸ்டுகள் நிலப் பிரச்சனையில் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். கேரளாவில் புன்னப்புரா- வயலாரு, வங்காளத்தில் தெபாகா இயக்கம், அசாமில் சுர்மா பள்ளத்தாக்கு போராட்டம், மகாராஷ்டிராவில் வார்லி கிளர்ச்சி, இவற்றின் உச்சமாக தெலுங்கானா ஆயுதப் போராட்டம் ஆகியன நிலச்சீர்திருத்தம், ஜமீன்தாரி முறை ஒழிப்பு போன்ற பிரச்சனைகளை முன்னுக்குக் கொண்டு வந்தன.
இந்தியாவின் மொழி பன்மைத்துவத்துக்காகவும், மொழி ரீதியிலான பல்வேறு தேசிய இனக் குழுக்களை விடுதலைப் போராட்டத்தில் ஒருங்கிணைப்பதற்காகவும் கம்யூனிஸ்டுகள் அரும்பாடுபட்டனர். இது விடுதலை பெற்ற இந்தியாவில் மொழி அடிப்படையிலான மறுசீரமைப்புக்கு இயல்பாக இட்டுச் சென்றது.
விடுதலைப் போராட்ட காலத்தில் வகுப்புக் கலவரங்கள் வெடித்தபொழுது அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலை நாட்டுவதில் கம்யூனிஸ்டுகள் மதச்சார்பின்மையின் பால் கொண்டிருந்த உறுதியான அர்ப்பணிப்பு பெரும் பங்காற்றியது. இன்றும் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிப்பதில் கம்யூனிஸ்டுகளே முன்னணி பாத்திரம் வகித்து வருகின்றனர்.
விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள ஆகப் பெரும்பான்மையான சுரண்டப்படும் மக்களையும், சமூக ரீதியில் ஒடுக்கப்பட்ட, குறிப்பாக அருவருப்பான சாதிய அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கும், தாக்குதலுக்கும் தொடர்ந்து உள்ளாக்கப்பட்டு வரும் மக்களையும், மொழி அடிப்படையிலான ஏராளமான தேசிய இனங்களையும், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களைத் திரட்டுவதிலும், எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளாதாரத்திலும், சமூக நீதி அடிப்படையிலும் உள்ளடக்கிய பாதையில் இந்தியர்கள் அனைவரையும் திரட்டுவதிலும் கம்யூனிஸ்டுகள் மகத்தான பங்காற்றினர்.
வரலாற்றைத் திருத்தி, பொய்மையைக் கட்டமைத்தல்
விடுதலை இயக்கத்தில் ஆர்எஸ்எஸ்-ம், பாஜக-வும் தங்களையும் ஒரு அங்கமாகக் காட்டும் வகையில் வரலாற்றைத் திருத்துவதற்கான ஒரு வாய்ப்பை சுதந்திர தின நிகழ்வுகள் வழங்கியுள்ளன. இந்துத்துவ , ஆர்எஸ்எஸ் தலைவர்களை விடுதலைப் போராட்ட வீரர்களாகச் சித்தரிக்கும் வகையில் அரசு ஆதரவில் ஆர்ப்பரிக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பிரச்சாரத்தில் வி.டி.சவர்க்கரின் பெயர் முதன்மையாகக் குறிப்பிடப்படுகிறது. 1923 ஆம் ஆண்டு சவர்க்கர், இந்து மதத்துடன் எவ்விதத்திலும் தொடர்பற்ற இந்துத்துவா என்று சொல்லாடலை ஒரு அரசியல் திட்டமாக முன் வைத்தார். காந்திஜியின் படுகொலைக்கு சதித் திட்டம் தீட்டியதில் பின்னணியாக செயல்பட்டதால் கைது செய்யப்பட்டார். போதுமான சாட்சியம் இல்லை எனக்கூறி கிரிமினல் சட்டத்திலுள்ள ஓட்டைகளைக் காட்டி விடுதலை செய்யப்பட்டார். சிறந்த கிரிமினல் வழக்குரைஞராகவும் திகழ்ந்த சர்தார்பட்டேல் குற்றத்தை உணர்ந்ததால் தான் அவரை விசாரணைக்கு உட்படுத்தினார்.
ஆங்கிலேயர்களின் உதவியுடனும், ஆதரவுடனும் துயரம் நிறைந்த பிரிவினைக்கு இட்டுச் சென்ற, முஸ்லிம்களுக்கு தனி நாடு எனும் கோரிக்கையை முன்வைத்து முகமது அலி ஜின்னா போராடியதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சவர்க்கர்
இரு தேசக் கொள்கையை முதலில் முன்வைத்தார். செல்லுலார் சிறையில் கைதியாக இருந்த பொழுது சவர்க்கர் தன்னை விடுதலை செய்யக்கோரி ஆங்கிலேய அரசுக்கு கருணை மனு அனுப்பியதை இந்துத்துவ ஆதரவு வரலாற்று ஆசிரியர்களின் பதிவுகளே உறுதிப்படுத்து கின்றன.தனது மனுவில் ஆங்கிலேய அரசுக்கு பின்வரும் உறுதிமொழியை சவர்க்கர் அளித்திருந்தார்:
“1906-07ல் நிலவிய பதட்டமான, நம்பிக்கையற்ற இந்தியச் சூழலினால் ஏமாந்து போய் நாங்கள் அமைதியான முன்னேற்றப் பாதையிலிருந்து விலகி முட்கள் மண்டிய பாதைகளில் சென்றது போல் இன்று இந்தியாவையும், மனித குலத்தின் நன்மையையும் மனதில் கொண்ட ஒருவரும் கண்ணை மூடிக்கொண்டு செல்ல மாட்டார்கள். எனவே ,அரசாங்கம் அளவற்ற அறத்தையும், கருணையையும் காட்டி என்னை விடுதலை செய்தால், நான் அரசியல் சட்ட ரீதியான முன்னேற்றத்திற்காகவும் ,அத்தகைய முன்னேற்றத்திற்கு முன் நிபந்தனையாக ஆங்கிலேய அரசின்பால் காட்ட வேண்டிய விசுவாசத்துக்காக வும் தீவிரமாக வாதிடுபவனாக இருப்பேன். (ஆர்.சி மஜும்தார் அந்தமானில் தண்டனை, பக்கம் 211- 213)
ஆங்கிலேயர்களுடன் சமாதான உடன்பாடு செய்து கொண்டதற்குப் பின்னர் தமது வாழ்வின் பெரும்பாலான காலங்களில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்க்கவில்லை என்பது மட்டுமல்லாமல் காங்கிரசையும், இடதுசாரிகளையும் எதிர்ப்பதே அவரது அரசியலாக இருந்தது. 1942 ஆம் ஆண்டின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்றவை இந்து மகாசபை அல்லது சங்பரிவார் உறுப்பினர்களின் எவ்விதப் பங்கேற்புமின்றி நடைபெற்றதாக இந்து மகாசபையின் தலைவர் என்ற வகையில் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
‘அரசாங்கத்தின் எந்த ஒரு பதவியிலும் அல்லது ,பொறுப்பி லும் உள்ள இந்து சங்பரிவாரத்தினர் அனைவரும் அப்பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பதுடன், தமது வழக்கமான கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியான வழிகாட்டல்களை நான் வழங்குகிறேன்’
(நூராணி மேற்கோள், பிரண்ட்லைன், டிசம்பர் 1 ,1995) என்றார்.
1942 ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாய் உள்துறை அமைச்சகம் பின்வருமாறு பதிவு செய்துள்ளது: சங் பரிவார் அமைப்புகள் தம்மைத்தாமே கண்காணித்துக் கொண்டு சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட்டு வந்தனர். குறிப்பாக 1942 ஆகஸ்ட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஒட்டி வெடித்த போராட்டங்களில் அவர்கள் பங்கேற்கவில்லை’.
உண்மையை மறைக்க அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக வதந்திகளைப் பரப்பினர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஐம்பதாம் ஆண்டு விழாவை நாடு கொண்டாடிய பொழுது ,அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, 1992 ஆகஸ்ட் 9ஆம் தேதி நள்ளிரவு நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் ஆற்றிய உரையில்,
‘கான்பூர், ஜாம்செட்பூர், அகமதாபாத் ஆகிய இடங்களில் ஆலைகளில் மிகப்பெரும் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து 1942 செப்டம்பர் 5 ம் தேதி டெல்லியிலிருந்து லண்டனுக்கு அனுப்பப்பட்ட குறிப்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆங்கிலேய எதிர்ப்புப் புரட்சியாளர்களைக் கொண்ட அமைப்பு என்பதை இதன் உறுப்பினர்கள் பலரது நடவடிக்கைகள் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன’ என பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இத்தகையதுதான் சவர்க்கரின் வெட்கக்கேடான பங்களிப்பு.
நேர்மாறாக, அரசாங்கம் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களில் கம்யூனிஸ்டுகளை விடுங்கள், ஜவஹர்லால் நேருவைப் பற்றியும் எதுவும் குறிப்பிடவில்லை அல்லது பெயரளவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவுக்கான பெரும் விவாதங்களை முன்னெடுத்து, தீர்மானங்களை நிறைவேற்றி, விடுதலை பெற்ற இந்தியாவை ஒரு நவீன மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக வடிவமைப்பதற்குரிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் நேரு மகத்தான பங்கையாற்றியதால் இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. சவர்க்கரும்,
ஆர்எஸ்எஸ் -ம் வெறித்தனமான, சகிப்புத்தன்மையற்ற, பாசிச இந்து ராஷ்டிரமாக இந்தியாவை உருவாக்க நினைத்த பார்வைக்கு இது நேரெதிரானதாகும். தற்போது ஆர்எஸ்எஸ்- ன் அரசியல் பிரிவான பாஜக இத்தகைய இந்துத்துவத்தை முன்னெடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்
அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியுள்ள இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயகத் தன்மையை வீழ்த்திட, அதன் மீது தாக்குதல் தொடுப்பதும், சிறுமைப்படுத்து வதும், இறுதியில் அதனை ஒழிப்பதும் பாசிச திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அவசியமாகும். ‘குறிப்பாக, 2019 ஆம் ஆண்டு மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு நமது அரசியல் சாசனத்தின் நான்கு அடிப்படைத் தூண்களான மதச்சார்பற்ற ஜனநாயகம், கூடாடாட்சி, சமூக நீதி, பொருளாதார இறையாண்மை ஆகியவற்றின் மீது கொடூரத் தாக்குதல் நடைபெற்று வருகிறது’ என சிபிஐ(எம்) 23 வது அகில இந்திய மாநாட்டு அறிக்கை குறிப்பிடுகிறது.
அரசியல் சாசனத்தின் மீதான இந்தத் தாக்குதலானது அரசியல் சாசனத்தின் செயல்பாட்டைப் பாதுகாப்பதையும், மக்களுக்கு அரசியல் சாசன ரீதியில் அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை உறுதிப்படுத்தவதையும் கண்காணித்து பராமரிப்பதை உறுதிப்படுத்தும் கருவிகளாக செயல்படும் சுதந்திரமான அரசியல் சாசன ரீதியிலான நிறுவனங்களையும், அதிகார அமைப்புகளையும் சிறுமைப்படுத்தி செயலிழக்கச் செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் வழக்கமான நடைமுறைகள் அனைத்தும் மோசமாக சிறுமைப்படுத்தப் பட்டு, நாடாளுமன்றக் குழுக்களின் செயல்பாடுகளும், விவாதங்களும் புறம் தள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பான்மை பலத்தைக் கொண்டு எவ்வித விவாதமோ, பரிசீலனையோ இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படு கின்றன. அதிகரித்து வரும் பண வீக்கம், வேலையின்மை போன்ற மக்களின் கடுமையான பிரச்சனைகள் குறித்து போதுமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்திய ‘குற்றத்துக்காக’
27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சென்ற கூட்டத்தொடரில் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். மக்களுக்கு பதில் அளிக்கக் கடமைப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றத்திற்கு பதிலளிக்கக் கடமைப்பட்ட அரசாங்கமும் என்ற வகையிலான முறையை மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு செயலிழக்கச் செய்வது ஆபத்தானதாகும். இவ்வாறு தான் ‘மக்களாகிய நாம்’ நமது இறையாண்மையை அனுபவித்து வருகிறோம். நாடாளுமன்றத்தைச் செயலிழக்கச் செய்வதென்பது மக்களின் இறையாண்மையைப் பறிப்பதும், அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்தும் பதிலளிக்கும் கடமையிலிருந்தும் தப்பிப்பதும் ஆகும். பாசிச வழிமுறைகளின் மூலம் சர்வாதிகாரத்தை நோக்கி அச்சுறுத்தும் வகையில் நாடு நகர்கிறது.
அரசியல் சாசனப் பிரிவு 370 , 35 ஏ நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம் ,அரசியல் ஊழலை சட்டபூர்வமாக்கும் தேர்தல் பத்திரங்கள் போன்ற அரசியல் சாசனத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகளாகியும் உச்சநீதிமன்றம் இன்னமும் இவற்றை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. நீதித்துறையின் பாரபட்சமற்ற தன்மையும், சுதந்திரமும் கடுமையாக சமரசம் செய்யப்படுகையில், அரசியல் சாசன விதிகளை நடைமுறைப்படுத்துவதிலும், ஜனநாயக உரிமைகளையும், குடிமை உரிமைகளையும் உத்தரவாதப்படுத்துவதிலும் நீதித்துறையின் பார்வை நீர்த்துப்போய் விடும்.
அதேபோல, ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு மிகவும் இன்றியமையாத, சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்துவதை உத்திரவாதப்படுத்து வதற்கு தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்ற, சுதந்திரச் செயல்பாடு அவசியமாகும். இது சமரசம் செய்யப்படுகையில் அரசாங்கங்கள் மக்களின் ஜனநாயகக் கருத்துக்களையும், மக்களின் தீர்ப்புகளையும் இனி பிரதிபலிக்க வாய்ப்பில்லாமல் போய்விடும்.
மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் மோடி அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலை அமலாக்குவதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் விதத்தை நாடு உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறி வைப்பது, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைச் சீர்குலைப்பது, தேர்தலில் தோல்வியுற்ற பிறகும் கட்சித் தாவல்களை ஊக்குவித்து பாஜக அரசாங்கங்களை அமைப்பது போன்ற ஜனநாயகக் கேலிக்கூத்துகளும், ஜனநாயகத்தை சீரழிப்பதுமான நடவடிக்கைகளும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
தீவிர வகுப்புவாதப் பிளவு
அரசியல் சாசன முறைமையை மிகப்பெருமளவில் அழித்தொழிப்பதுடன் நச்சு வெறுப்புகளைப் பரப்புவதன் அடிப்படையில் வகுப்புவாத ரீதியில் தீய பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகப் பண்புகளை அழிப்பதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மைச் சமூகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்டு வருகிற பெருமளவிலான ‘புல்டோசர் அரசியல்’ பல மாநிலங்களில் வன்முறைக்கு இட்டுச் சென்றுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மீது தேசியச் சின்னத்தைப் பொறிக்கும் பொழுது இந்து மதச் சடங்குகளை நடத்துவது போன்றவற்றின் மூலம் இந்திய அரசை, அரசியல் சாசனத்துடன் அல்லாமல் இந்துத்துவாவுடன் அடையாளப்படுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
எதேச்சதிகாரத் தாக்குதல்கள்
வகுப்புவாதப் பிளவு அச்சுறுத்தல் அதிகரித்து வருவதோடு ஜனநாயக உரிமைகள் மீதும், மக்களின் குடிமை உரிமைகள் மீதும் முன்னெப்போதும் இல்லாத தாக்குதல் நடைபெறுகிறது. தீஸ்தா செடால்வட் கைது செய்யப்பட்ட விதத்திலும், பீமா கோரேகான் கைதிகள் தொடர்ந்து சிறையில் வாடுவதையும், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரையும் கொடூரச் சட்டங்களின் கீழ் காவலில் வைத்திருப்பதையும் கண்டு வருகிறோம். மாற்றுக் கருத்துக்கள் ஒவ்வொன்றும் ‘தேச விரோதமாக’ச் சித்தரிக்கப்பட்டு கண்காணிப்பு அரசின் ‘தீயக் கண்களால்’ கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும் எதிரான தாக்குதல்
இந்துத்துவக் கதையாடலை வெற்றி பெறச் செய்ய, பாசிச திட்டத்தின் கருத்தியல் உள்ளடக்கத்தை நிலைநாட்ட, இந்திய வரலாற்றை திருத்தி எழுதுவது அவசியமாகும். ஆகையால், சிந்தனையிலும், செயலிலும் பகுத்தறிவைப் புறம் தள்ளி மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் கல்வி முறை புதுப்பிக்கப்படுகிறது. அறிவியல் மனோபாவத்தை மறுத்து மூடநம்பிக்கை , இருண்மை வாதம், புராண கட்டுக்கதைகள் ஊக்குவிக்கப்படு கின்றன. இந்தியப் பண்பாட்டின் ஒத்திசைவுத்தன்மை, ஒற்றைப் பண்பாட்டுக் கதையாடலைத் திணிப்பதன் மூலம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்து புராணங்களையும், இந்து இறையியல் தத்துவத்தையும் கொண்டு, இந்தியாவின் வளமை மிக்க பன்மைத்துவம் அழிக்கப்படுகிறது.
பெருகிவரும் மக்கள் எதிர்ப்பு
மக்கள் மத்தியில் இந்துத்துவ அடையாளத்தை நிலை நிறுத்துவது, வாழ்வாதாரங்கள் மீதான தினசரி தாக்குதல்களுக்கு உள்ளாகும் நமது மக்களின் அவலமான வாழ்க்கை நிலைமைகளைப் பின்னுக்குத் தள்ள பயன்படுகிறது. இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக அரசியல் சாசனத்தைப் பாதுகாத்து வலுப்படுத்திட, விலைவாசி உயர்வு, வேலையின்மை, பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற அன்றாடப் பிரச்சினைகளில் பெருமளவில் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பது அவசியம். ஜனநாயக உரிமைகள், குடிமை உரிமைகள், மதச்சார்பின்மை ஆகியவற்றைத் தீவிரப் போராட்டங்களின் மூலமே காக்க முடியும்.
பெருகிவரும் வலிமைமிக்க போராட்டங்களின் மூலம் சிபிஐ(எம்) -ன் சுய பலத்தை அதிகரிப்பது, இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்துவது, இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்டுவது, இந்துத்துவ வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பரந்துபட்ட சக்திகளைத் திரட்டுவது, நமது அரசியலமைப்பின் அடிப்படையான மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசைப் பாதுகாப்பது ஆகியவையே இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை அனுசரிப்பதற்கான வழிமுறையாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதே தேசபக்திக்கு அடிப்படையாகும். இதையொட்டி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களில் தேசியக்கொடியை ஏற்றி, ஆங்கிலேய ஆட்சியிலிருந்து நாடு விடுதலை பெற்றதன் 75 ஆம் ஆண்டு தினமான ஆகஸ்ட் 15 அன்று நமது அரசியல் அமைப்பின் முகவுரையை முன்வைத்து உறுதியேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நமது மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை அழிக்கும் பாசிச இந்துத்துவா ராஷ்டிரத்தைத் திணிக்கும் வெறித்தனமான முயற்சிகளிலிருந்து நாட்டைக்காக்கும் போராட்டத்தை அனைவரும் ஒருங்கிணைந்து வலுவாக முன்னெடுப்போம்.
தமிழில்: சிசுபாலன்
Leave a Reply