குமார் ஷிரால்கர்: ஒரு பன்முகப் புரட்சியாளர்


அசோக் தவாலே 

கடந்த அக்டோபர் 2 அன்று அவரது 80 வது வயதில் புற்றுநோய் நம்மிடமிருந்து பிரித்துச் சென்ற தோழர் குமார் ஷிரால்கரின் மறைவினால் மகாராஷ்ட்ரா மாநில மார்க்சிஸ்ட் கட்சி, இடது ஜனநாயக இயக்கம், ஆதிவாசி இயக்கம் ஆகியவை உணர்வுபூர்வமான, அர்ப்பணிப்பு நிரம்பிய, பன்முகத் தன்மை கொண்ட ஒரு புரட்சியாளரை  இழந்து நிற்கிறது. எனது 40 ஆண்டுக்கால தோழரை, நண்பரை நான் இழந்து நிற்கிறேன்.

1942 ஜனவரி 10 அன்று மகாராஷ்டிரா சங்க்லி மாவட்டத்தில் மிராஜ் என்ற ஊரில் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த குமார், சங்க்லியில் உள்ள வால்சந்த் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் தனது பொறியியல் படிப்பை முடித்தார். பம்பாய் ஐ ஐ டி நுழைவுத் தேர்வில் முதல் மாணவராக வந்தபோதும், குடும்பச் சூழ்நிலைகளால் மேற்படிப்பில் சேராமல் சுமார் ஐந்தாண்டு காலம் தானே நகரில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

சமூக மாற்றத்திற்கான அவரது ஓய்வற்ற உந்துதல்,  நல்ல ஊதியம் கிடைத்து வந்த அந்த வேலையை விட்டுவிட்டு, புகழ்பெற்ற சமூக சேவகரான பாபா ஆம்தே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்  விதர்ப்பாவில் சந்திராப்பூர் மாவட்டத்தில், சோம்நாத் பகுதியில் செயல்பட்டு வந்த, உழைப்பாளிகளுக்கான பள்ளியில் சேரும்படி அவரைத் தூண்டியது.  இந்த நேரத்தில்தான் சந்திராப்பூர், கட்சிரோலி மாவட்டங்களில் இருந்த ஆதிவாசிகளுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவர்களின் மோசமான வாழ்நிலை அவருக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது.  இத்தருணத்தில் சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர விரும்பும் தன்னையொத்த இளைஞர்களையும் அவர் அங்கு சந்தித்தார்.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சக ஊழியர்களோடு துலே மாவட்டத்திற்கு (இது பின்னர் துலே-நந்தூர்பர் என இரண்டு மாவட்டங்களாக பிரிந்தது) ஆதிவாசிகளை அணிதிரட்டச் சென்றார். ஏற்கனவே அங்கு அம்பர்சிங் மகராஜ் என்ற ஆதிவாசி தலைவர் நிலப்பிரபுக்களுக்கு எதிராக ஆதிவாசிகளை அணிதிரட்டி செயல்பட்டு வந்தார். உயர் சாதிகளை சேர்ந்த நிலப்பிரபுக்களை எதிர்த்து, ஆதிவாசி, தலித் பிரிவுகளை சேர்ந்த விவசாய தொழிலாளர்களின் தீவிரமான வர்க்கப் போராட்டங்கள் வெடித்தெழுந்தன. இவற்றில் பலரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். குமாரின் மீதும் தாக்குதல் நிகழ்ந்தது. இந்த வர்க்கப் போராட்டங்களில் இருந்து பெற்ற நேரடி அனுபவமே மார்க்சியத்தை நோக்கிச் செல்ல குமாரை உந்தித் தள்ளியது.

அவரைப் போன்றே மார்க்சியத்தை நோக்கி கவரப்பட்ட சுதிர் பெடேகர், பிரஃபுல் பித்வாய் போன்ற பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து புனேவில் ‘மகோவா குழு’ என்ற ஓர் அமைப்பை 1972 ஏப்ரல் 22 அன்று தொடங்கினர். 1972 மே தினத்தன்று குமாரும் மற்றவர்களும் சேர்ந்து நந்தூர்பாரில் ‘ஷ்ராமிக் சங்காதனா ‘ (உழைப்பாளர் கூட்டிணைவு) என்ற அமைப்பை தொடங்கினர். இந்த அமைப்பு, நிலப்பிரபுக்கள் கட்டவிழ்த்து விட்ட பொருளாதார சுரண்டல், சமூக அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக ஆதிவாசி, தலித் விவசாயத் தொழிலாளிகளை அணிதிரட்டி கடுமையான வர்க்கப் போராட்டத்தை பல ஆண்டுகள் நடத்தி வந்தது.

அவசரநிலை காலத்தில் குமார் முதலில் கைது செய்யப்பட்டு, பின்பு விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு பல மாதங்கள் அவர் தலைமறைவாக இருந்து செயல்பட்டு வந்தார். அவசரநிலை விலக்கிக் கொள்ளப்பட்டு 1977 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டபோது, ஷ்ராமிக் சங்காதனாவில் தத்துவார்த்த ரீதியான குழப்பம் நீடித்தது. ஒரு சில உறுப்பினர்கள் உள்ளூர் அளவிலான அமைப்புகளை உருவாக்கிக் கொண்டனர். குமாரும் அவரது தோழர்களும் ஆழமான கல்வி மற்றும் விவாதங்களுக்குப் பிறகு இடதுசாரிப் பாதையில் செல்வது என முடிவு செய்து, 1982ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். அப்போது கட்சியின் மாநில செயலாளராக இருந்த தோழர் எஸ். ஒய். கோல்ஹாட்கர் அவர்களுக்கு சிறந்த முறையில் வழிகாட்டி கட்சிக்குள் இணைத்துக் கொண்டார்.

1982ஆம் ஆண்டில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உருவானது. அதன் முதல் மாநில மாநாடு அதே ஆண்டில் நந்தூர்பார்  மாவட்டத்தில் ஷஹாதாவில் நடைபெற்றது. அப்போது குமார் மாநில அமைப்பின் முதல் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 30 ஆண்டுகளுக்கு அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஆகவும், தலைவர் ஆகவும்  அதன் தேசிய இணைச் செயலாளர் ஆகவும் அவர் பணியாற்றினார். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இந்த அமைப்பை வலுப்படுத்த அவர் கடுமையாக உழைத்தார்.

குமார் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்த ஓர் ஆண்டிற்குப் பிறகு, 1983இல்   நந்தூர்பார் மாவட்டத்தில் அதிர்ச்சி தரத்தக்க ஷேல்டி  படுகொலை சம்பவம் நிகழ்ந்தது. நிலப்பிரபுக்களின் ‘புருஷோத்தம் சேனா’,ஷேல்டி கிராமத்தில் கூலி பிரச்சினை மற்றும் நிலப் பிரச்சனையை முன்வைத்து ஐந்து ஆதிவாசி விவசாய தொழிலாளிகளை படுகொலை செய்தது. ஷேல்டி  படுகொலையை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதிலும் பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியதோடு, மும்பையில் உள்ள மாநில அரசின் செயலகத்தை நோக்கி கண்டனப் பேரணி ஒன்றையும் நடத்தியது. தானே, நாசிக், பல்கர், துலே, நந்தூர்பார் ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆதிவாசிகள் இந்தப் பேரணியில் அணிதிரண்டனர். இந்தப் பேரணிக்கு குமார் மற்றும் அவரது குழுவினருடன், அன்றைய மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களான எஸ். ஒய். கோல்ஹாட்கர், கோதாவரி பருலேகர், அகல்யா ரங்கனேகர், பிரபாகர் சான்ஸ்கிரி, டாக்டர் ஏ பி சாவந்த், நரேந்திர மலுசாரோ ஆகியோரும் தலைமை ஏற்று நடத்தினர்.

மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதிவாசி தலைவர்களுமான லகானு கோம், ஜே பி காவிட் ஆகிய இருவரும் இந்தப் பிரச்சனையில் சட்டமன்றத்தையே உலுக்கி எடுத்தனர். ஒரு கட்டத்தில் லகானு கோம் இந்தப் படுகொலைக்கு வழிகாட்டியாக இருந்த புருஷோத்தம்  கே பாட்டீலை தாக்குவதற்கு ஒரு நாற்காலியை தூக்கிக் கொண்டு சென்றார். ஆதிவாசிகளை படுகொலை செய்ய சேனாவிற்கு துப்பு வழங்கியவர்களில் முதல் பெயர் பாட்டீலாகத்தான் இருந்தது. குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

துலே, நந்தூர்பார் மாவட்டங்களில் குமார் மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கினார். மிகச் சிறந்த போராளிகளின் குழு ஒன்றையும் உருவாக்கினார். மாநிலம் முழுவதிலும் மேலும் பல இளம் போராளிகளுக்கு உத்வேகம் ஊட்டுபவராகவும் அவர் விளங்கினார். 1985ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவிற்கும் 1988ஆம் ஆண்டில் மாநில செயற்குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2005ஆம் ஆண்டில் கட்சியின் மத்தியக் குழுவிற்கும் தேர்வானார். மாநிலத்தில் கட்சியின் வார இதழான ஜீவன் மார்க் -இன் ஆசிரியர் குழுவில் அவர் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்தார். 2015ஆம் ஆண்டுவரை 33 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகள் அனைத்தையும் நிறைவேற்றிய அவர், மோசமாகி வந்த தனது உடல்நிலை, குடும்பச்  சூழல் காரணமாக கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் பொறுப்புகள் அனைத்திலும் இருந்து விலகிக் கொண்டார்.

இடதுசாரி கட்சிகளை சேர்ந்த 61 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக, 2006 ஆம் ஆண்டில் ஆதிவாசிகளுக்கான வன உரிமைகள் சட்டம்  நிறைவேறியது. இந்த சட்டத்திற்கான விதிகளை வடிவமைக்க அரசு ஒரு குழுவை உருவாக்கியது. இந்த அரசுக்  குழுவில் கட்சியின் சார்பில் குமார் நியமிக்கப்பட்டார். அதிலும் அவர் சிறப்பாகச் செயல்பட்டார். ஆதிவாசிகளின் அதிகாரத்திற்கான தேசிய முன்னணியை நிறுவியவர்களில் ஒருவரான அவர், அந்த அமைப்பிலும் முக்கியமான பங்களிப்பை செலுத்தியிருந்தார்.

கட்சியின் போராட்டங்கள், பிரச்சாரங்கள் அனைத்திலும் எப்போதும் முன்னணியில் இருந்த குமார், அரசியல் மற்றும் இதர சமூகப் பிரச்சனைகள் மீதான போராட்டங்கள் பலவற்றிலும் முன்னணிப் பாத்திரத்தை வகித்தார். மராத்வாடா பல்கலை கழகத்திற்கு டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் பெயரை வைப்பது, நிலமற்றோரின் உரிமைகள் பாதுகாப்பிற்கான குழு, சமூகக் கொடுமைகளுக்கு எதிரான மாநில அளவிலான சிறப்பு மாநாடு, நந்தூர்பார் மாவட்டத்தின் தலெடா வட்டத்தில் மாட் கிராமத்தில் தோழர் பி டி ரணதிவே உயர்நிலைப் பள்ளியை நிறுவுவது, என்ரான் நிறுவனத்திற்கு எதிரான போராட்டம், லத்தூர் மாவட்டம் கில்லாரியில் நிகழ்ந்த பூகம்பத்தை அடுத்து, அங்குள்ள மக்களுக்கான நிவாரண, மறுவாழ்வு நடவடிக்கைகள், அகமத் நகர் மாவட்டத்தில் கர்தா கிராமத்தில் ஒரு தலித் சிறுவன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற நீண்ட பயணம், அறிவொளி இயக்க பயணத்திற்கான உதவி, சுற்றுச் சூழல் பிரச்சனைகள் மீதான முன்முயற்சிகள் என பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கான இயக்கங்களிலும் அவரது பங்கு அளப்பரியது.

கொள்கையையும் நடைமுறையையும் இணைப்பது என்ற மார்க்சிய கோட்பாட்டின் உயிரோட்டமானதொரு உதாரணமாக குமார் திகழ்ந்தார். மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இடதுசாரி இயக்கத்தின் தத்துவார்த்த தூண்களில் ஒருவராகவும் அவர் விளங்கினார். 1974ஆம் ஆண்டில் ‘விழித்தெழுவீர்! விலங்குகளை உடைத்தெறிவீர்!’ என்ற தலைப்பில் இளைஞர்களுக்காக ஒரு சிறு பிரசுரத்தை மராத்தி மொழியில் அவர் எழுதினார். இந்தப் பிரசுரம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் கவனத்தைப் பெற்றதாக விளங்கியது. இந்தப் பிரசுரம் பல முறை மறுபதிப்பு செய்யப்பட்டது. 2015ஆம் ஆண்டில் ‘மதம், சாதி, வர்க்கம்’ என்ற தலைப்பில் கட்சிக் கல்விக்கான ஒரு பிரசுரத்தை அவர் எழுதினார். அதே ஆண்டு அவரது எழுத்துக்களின் தொகுப்பு நூல் ‘புதிய உலகம் – புதிய அமைதியின்மை’ வெளியானது. அரசியல், சமூக பிரச்சனைகள் குறித்து அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார். அரசியல் அமைப்புச் சட்டம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக-பொருளாதார நீதி ஆகியவற்றின் மீது ஆர் எஸ் எஸ் – பா ஜ க கூட்டணியின் பாசிச வகைப்பட்ட தாக்குதல்களை அவர் கடுமையாகக் கண்டித்து வந்தார்.

மார்க்சியத்தோடு கூடவே, ஜோதிபா பூலே, அம்பேத்கர், காந்தி ஆகியோரின் சிந்தனைகளையும் சிறந்த முறையில் உள்வாங்கியவராகவும் அவர் இருந்தார். பல்வேறு வகையான தத்துவார்த்த நிலைப்பாடுகளை கொண்டவர்களுடன் அவருக்கு இருந்த உறவின் விளைவாக, இந்த அமைப்புகளின் செயல் வீரர்கள் மட்டுமின்றி, தலைவர்களோடும் அவருக்கு விரிவான தொடர்பு இருந்தது. இடது ஜனநாயக முன்னணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கட்சியின் அடிப்படையான இலக்கை கருத்தில் கொண்டு, இந்த பல்வேறு சிந்தனை ஓட்டங்களைப் பின்பற்றுவோரையும் ஒன்றிணைப்பதில் அவர் தனிக்கவனம் செலுத்தினார்.   

குமாரின் இயல்புகளும் கூட தனிச் சிறப்பு மிக்கவையாக இருந்தன. சுயநலமற்ற, தியாகம் நிரம்பிய, எளிமையான, சமநிலையான போக்கு, அன்பு, பரிவு, வேடிக்கை என அனைத்தும் நிரம்பியவராக, அதே நேரத்தில் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக தன்னை முற்றிலும்  அர்ப்பணித்தவராகவும் அவர் இருந்தார். வர்க்க எதிரியோடு மோதும்போது, எதற்கும் கலங்காத மன உறுதியோடும் இருந்தார். எண்ணற்ற சந்தர்ப்பங்களில் இந்தக் குணங்கள் அனைத்திற்குமான சாட்சிகளாக நாங்கள் அனைவருமே இருந்தோம்.

கடந்த 40 ஆண்டுகளில் குமாரைப் பற்றி எனது தனிப்பட்ட நினைவுகள் ஏராளமாக உள்ளன. எனினும் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு மிகச் சமீப நிகழ்வுகள் இரண்டை மட்டுமே இங்கு குறிப்பிடுகிறேன். 2018 ஆம் ஆண்டில் மார்ச் 6  முதல் 12 வரை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மஹாராஷ்ட்ரா மாநிலப் பிரிவு நாசிக் நகரில் இருந்து மும்பை நகரை நோக்கி விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நடைபயணத்தை மேற்கொண்டது. எனினும், கடைசி நாளன்று நாங்கள் மும்பை நகரை வந்தடையும்வரை அன்றைய பகல்-இரவு முழுவதும் குமார் எங்களோடு நடந்து வந்தார். அதுவும் அவரது உடல்நிலை மோசமாக இருந்த ஒரு நேரத்தில், அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டதை என்னால் எப்போதும் மறக்க முடியாது.

இந்தப் பயணத்திற்குக் கிடைத்த பிரம்மாண்டமான மக்கள் ஆதரவு, ஊடகங்கள் தந்த அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக அன்று மாநிலத்தில் ஆட்சியில் இருந்த  ஃபட்னாவிஸ் தலைமையிலான பா ஜ க அரசு நமது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக, எழுத்து மூலமாக ஒப்புக் கொள்ளவும் வேண்டியிருந்தது. அது மட்டுமின்றி, அரசின் இந்த ஒப்புதலை, மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் முன்பாகவும் வைக்க வேண்டியதாயிற்று. நமது வெற்றியைக் கண்டு பெரிதும் மகிழ்ந்த குமார், அன்று ஆசாத் மைதானத்தில் கூடியிருந்த விவசாய சங்க தலைவர்கள் அனைவரையும் கட்டிப் பிடித்துக் கொண்டாடினார்.

2020-21 இல் இதுவரை இந்தியா கண்டிராத வகையில் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தையும் குமார் தொடர்ந்து கவனித்து வந்தார். எங்கள் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் அவ்வப்போது எனக்கு குறுஞ்செய்திகளையும் அனுப்பிக் கொண்டே இருந்தார். 2021 டிசம்பர் 9 அன்று மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெறுவதோடு, சம்யுக்தா கிசான் மஞ்ச்சின் இதர கோரிக்கைகளையும் எழுத்துபூர்வமாக ஏற்றுக் கொள்ள மோடி தலைமையிலான பா ஜ க அரசு நிர்ப்பந்திக்கப்பட்டபோது, மனதை உருக்கும் பாராட்டுச் செய்தி ஒன்றினை குமார் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அதை நான் என் வாழ்நாள் முழுவதும் போற்றிப் பாதுகாப்பேன்.

2019 லிருந்து புற்றுநோயுடனான தனது கடைசி போராட்டத்தை குமார் நடத்தியபோது நந்தூர்பார், நாசிக், மும்பை, புனே மாவட்டங்களில் இருந்த ஜெய்சிங் மாலி, நாது சால்வே, விவேக் மாண்ட்டாரியோ, டி எல் கராட், கிரண் மோகே, தியனேஷ்வர் மோரே, மகாருத்ரா டாகே, அமல் வாக் மாரே போன்ற பல தோழர்களும் அவரை நன்கு கவனித்து வந்தனர். 

அவர் மறைவதற்கு முதல் நாள் அக்டோபர் முதல் தேதியன்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஏ . விஜயராகவன், பொதுச் செயலாளர் பி. வெங்கட் ஆகிய இருவரும் நாசிக் சென்று அவரை சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கும் வகையில் குமார் கையை உயர்த்தினார். அதுவே அவரது கடைசி இயக்கமாகப் போனது. நந்தூர்பார் மாவட்டத்தில் நடைபெற்ற அவரது இறுதி நிகழ்வில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் விக்ரம் சிங் மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இதர இடதுசாரி, ஜனநாயக, மதசார்பற்ற சக்திகளைச் சேர்ந்த தலைவர்களும் ஒன்று திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

அக்டோபர் 3, 2022 அன்று பல்லாயிரக்கணக்கானோர் அணிதிரண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். உள்ளூர் ஆதிவாசி தோழர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க, உள்ளூர் ஆதிவாசி மரபுப்படி, அவரது உடல் தோழர் பி டி ரணதிவே உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. வழக்கத்திற்கு முற்றிலும் மாறாக நடைபெற்ற இந்த இறுதி நிகழ்வு, ஆதிவாசி மக்களின்  வாழ்வில் குமார் எந்த அளவிற்கு பின்னிப் பிணைந்திருந்தார் என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

1972 ஆம் ஆண்டிலிருந்தே குஞ்சாலி கிராமத்தில் நாராயண் சாஜன் தாக்கரே என்ற ஆதிவாசி தோழரின்  குடும்பத்தோடுதான் குமார் வசித்து வந்தார். தாக்கரேயின் குடும்ப அட்டையில் (ரேஷன்) குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக குமாரின் பெயர் இருந்தது  மட்டுமின்றி, குமாரின் அரசு முறை சான்றுகள் அனைத்திலும் தாக்கரேயின் இல்லமே அவரது முகவரியாக இருந்தது.  குமாரின் இறுதி நிகழ்வில் பங்கேற்ற தாக்கரே, மிகுந்த மன உளைச்சலோடு வீட்டிற்குத் திரும்பினார். அன்று இரவே தாக்கரேவும் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி வந்தது. அவர்களது உறவு பிரிக்கமுடியாத ஒரு தோழமை உறவு என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

மகாராஷ்ட்ரா மாநிலம் முழுவதிலும் குமாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பெரும் எண்ணிக்கையில் அஞ்சலிக் கூட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி, ஜனநாயக, மதசார்பற்ற சக்திகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் வார இதழான ஜீவன் மார்க் அவரது நினைவைப் போற்றும் வகையில் ஒரு சிறப்பிதழை கொண்டு வந்தது.

மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாகவும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பாகவும் தனிச் சிறப்பு மிக்க கம்யூனிஸ்ட்  புரட்சியாளரான தோழர் குமார்   ஷிரால்கருக்கு எனது கரமுயர்த்தி செவ்வணக்கத்தை செலுத்துகிறேன். மேலும் அதிக வலுவோடும், உறுதியோடும், அவர் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுத்துச் செல்வதுதான், நாம் அனைவரும் தோழர் குமாருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.

தமிழில்: வீ. பா. கணேசன் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s