– இரா.சிசுபாலன்
உலக வரலாற்றில் நவம்பர் புரட்சி ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி வைத்தது. இதற்கு முன் நடைபெற்ற புரட்சிகள் – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என முழங்கிய பிரெஞ்சு புரட்சி உட்பட – அனைத்துமே ஒரு சுரண்டல் வர்க்கத்தின் ஆட்சியை அகற்றிவிட்டு பிறிதொரு சுரண்டல் வர்க்கத்தின் ஆட்சியை நிலைநாட்டுவனவாகவே அமைந்தன. மகத்தான சோவியத் புரட்சியே முதன்முறையாக சுரண்டல் சமூக அமைப்பை வீழ்த்தி, சுரண்டலற்ற சமுதாயத்தைப் படைத்தது.
நவம்பர் புரட்சி உலகம் முழுவதும் விடுதலைப் போராட்ட சக்திகளுக்கு பெரும் ஆதர்சமாய் விளங்கியது. இந்திய விடுதலையின் உள்ளடக்கம் என்னவாக அமைய வேண்டும் என்ற சாரத்தை சோவியத் புரட்சியில் இருந்தே விடுதலைப் போராட்ட வீரர்கள் பெற்றனர்.
தமிழகத்தில் மகாகவி பாரதி ,சுப்பிரமணியம் சிவா, வ.உ.சிதம்பரம், திரு. வி.க, சக்கரைச் செட்டியார், ம.சிங்காரவேலர், ஜீவானந்தம்,பி.ராமமூர்த்தி உள்ளிட்ட பல விடுதலைப் போராட்ட தலைவர்கள் நவம்பர் புரட்சியால் ஈர்க்கப்பட்டு இந்தியாவிலும் அதே போன்ற மாற்றம் ஏற்பட வேண்டும் எனப் போராடினர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் சுதந்திரமே தமது லட்சியம் என விடுதலை இயக்க வீரர்கள் முழக்கமிட்டனர்.
ரஷ்யப் புரட்சியை உச்சி மீது வைத்துக் கொண்டாடிய மகாகவி பாரதி, ‘ஆஹா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி’ எனப் பாடினார். நவம்பர் புரட்சி வெற்றி பெற்ற சில தினங்களில் (29.11.17) சுதேசமித்திரன் பத்திரிகையில்,’ ரஷ்யாவில் சோசிலிஸ்ட் கட்சியார் ஏறக்குறைய தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றி விடக் கூடுமென்று தோன்றுகிறது… இக்கொள்கை மேன்மேலும் பலமடைந்து வருகிறது. ஏற்கனவே ரஷ்யாவில் ஸ்ரீமான் லெனின்… முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளை நிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அனைத்து ஜனங்களுக்கும் பொது உடமையாகி விட்டது. ருஷ்யாவிலிருந்து இது (இக்கொள்கை) ஆசியாவிலும் தாண்டி விட்டது’ என எழுதுகிறார்.
ரஷ்யாவில் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட ஆண் – பெண் சமத்துவம் குறித்து தமது உரைநடையில் மகாகவி எழுதுகிறார்:
‘சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து தேசத்தில் மான்செஸ்டர் நகரத்தில் பிரசுரம் செய்யப்படும் ‘மான்செஸ்டர் கார்டியன்’ என்ற பத்திரிக்கை நவீன ருசியாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விவரங்களை பிரசுரம் செய்திருக்கிறது. அது கூறுவதாவது: ‘தெற்கு சோவியத் (போல்ஷிவிஸ்ட்) ரஷ்யாவில் இதுவரையில் இருந்து வந்த வீண் நிர்பந்தங்கள் இனி விவாக விஷயத்தில் இல்லாதபடி ஒழித்து விடப்படும். அதாவது வேற்றுமைகள் முதலியன விவாகங்களுக்கு தடையாகக் கணிக்கப்பட மாட்டா. இப்போது உள்ள சட்டப்படி ஸ்திரீகளுக்கும் புருஷர்களுக்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலாரும் சமானமாகவே கருதப்படுவர். எல்லாக் குழந்தைகளும் சமூகச் சட்டப்படி பரிபூரண சமத்துவம் உடையனவாம். பாதுகாப்பில்லாத குழந்தைகள் யாருக்கு பிறந்த போதிலும் அவற்றைப் பாதுகாக்க ஒரு தனி இலாகா ஏற்பட்டிருக்கிறது. இந்த சட்டம் ராஜாங்க சாசனப்படி நடைபெறும் விவாகங்களையே அங்கீகாரம் செய்யும். பெண்கள் 14 வயதுக்குள்ளும், ஆண்கள் 18 வயதுக்குள்ளும் விவாகம் செய்து கொள்ள வேண்டும். இருதிறத்தாரும் மனமொத்தால்தான் விவாகம் செய்யலாம். விவாகம் முடிந்ததும் புருஷன் அல்லது ஸ்திரியின் பெயரைக் குடும்பத்தின் பெயராக வைத்துக் கொள்ளலாம். விவாகத்துக்குப் பிறகு தம்பதிகள் பரஸ்பரம் உதவியாக வாழ கடமைப்பட்டிருக்கிறார்கள். புருஷனேனும், ஸ்திரீயேனும் விவாக பந்தத்தை நீக்கிக் கொள்ள விரும்பினால் அங்ஙனமே நீக்கிக் கொள்ள சட்டம் இடம் கொடுக்கிறது’ என்ற மேற்கோளை முன்வைத்து இந்திய நிலைமைகளில், பெண்கள் அடிமைகளாக வாழ்வதைச் சுட்டிக்காட்டி பெண் விடுதலைக்காக குரல் கொடுக்கிறார்.
1918-19 ம் ஆண்டிலேயே பக்கிங்ஹாம் அண்ட் கர்னாடிக் (பி அண்ட் சி) மில் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் திரு.வி.க., அவர் சென்னையில் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களுக்கு தலைமை ஏற்றார். அப்போராட்டங்களில் உரையாற்றுகையில்,
‘பொருளாதார உரிமையற்ற வெறும் அரசியல் உரிமை என்பது பணக்காரர் ஆட்சியாய் சாதி, மதப் பூசல்களைப் பெருக்கி விரிப்பதாகும். நமது நாட்டுக்கு அரசியல் விடுதலையும் வேண்டும்;அதனூடே பொருளாதார விடுதலையும் விரவி நிற்றல் வேண்டும். பொருளாதார விடுதலை என்பது அன்னிய முதலாளிகளிடமிருந்து மாத்திரமல்ல, உள்நாட்டு முதலாளிகளின் பிடியிலிருந்தும் விடுதலை பெற்று சமதர்ம ஆட்சி மலர வேண்டும்’ என்றார்.
‘திரு.வி.க., சமூகத் துறையில் காந்தியத்தையும், மார்க்சியத்தையும் இயைவிப்பதற்கு முயன்று வந்தார். காந்தியத்தின் அடிப்படையான அகிம்சையும், மார்க்சியத்தின் லட்சியமான பொதுவுடமைக் கொள்கையும் திருவிக – வைக் கவர்ந்தன. எனவே அன்பு நெறியைக் கடைபிடித்து பொதுவுடமைச் சமுதாயத்தை அமைக்கும் வகையைப் பற்றி இடைவிடாது சிந்தித்தும், பேசியும், எழுதியும் வந்தார்’ என நவசக்தியில் கல்கி எழுதினார்.
இந்திய விடுதலை இயக்கத்துடன் தொழிலாளி வர்க்கத்தின் பாத்திரத்தை இணைக்கும் நோக்குடன் வ.உ.சிதம்பரமும்,சுப்பிரமணியம் சிவாவும் செயல்பட்டனர். தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர் போராட்டத்திற்கு அவர்கள் தலைமையேற்றனர். போராட்டத்தில் வ.உ.சி., க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சிவாவுக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும் கிடைத்தது. வ.உ.சி., தொடங்கிய சுதேசிக் கப்பல் நிறுவனம் ஆங்கிலேயரின் வணிகத்தை பெரிதும் பாதிக்கும் என்பதால் ஆங்கிலேயர்கள் வ.உ.சி., மீது கடும் ஆத்திரம் கொண்டனர்.
1920 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ட்ராம்வே தொழிலாளர் வேலை நிறுத்தம், மதுரை தொழிலாளர் வேலை நிறுத்தம் ஆகிய தொழிலாளி வர்க்கப் போராட்டங்களில் சுப்பிரமணியம் சிவா தீவிரமாகப் பங்கேற்றார். கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலரோடு மிக நெருங்கிய நட்பு பாராட்டினார்.
1920 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரசுக்கு சென்னை சோசலிஸ்டுகள் சார்பாக சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் ஒரு தந்தி அனுப்பினார். அதில் அரசியல், சமூக, பொருளாதார இலட்சியங்களை தொடருவதே தேசிய சோசலிசத்தின் பிரதான ஸ்வரம்… தனது சமுதாயப் புணரமைப்பு என்ற இலட்சியத்துக்கு பொருந்த அரைகுறை சீர்திருத்தங்களோடு சமாதானம் ஆகிப்போகும் முயற்சிகளால் மட்டுமே எந்த நன்மையும் விளையாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதே ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவுக்கு முழு விடுதலை என்ற தீர்மானத்தை கம்யூனிஸ்டான ஹஸ்ரத் மோகானி முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்காரவேலர் தொழிலாளர்- விவசாயிகள் கட்சி ஒன்றை நிறுவினார். அதன் சார்பில் 1923 ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் இந்தியாவிலேயே முதன் முறையாக மே தினத்தைக் கொண்டாடினார். அந்த மே தின பொதுக்கூட்டத்தில் சுப்பிரமணியம் சிவா வீர உரையாற்றினார்.
ஆங்கிலேயருக்குச் சொந்தமான ‘மெட்ராஸ் மெயில்’ என்ற பத்திரிகை ‘தேசிய இயக்கத்தில் போல்ஷெவிக்குகளின் தங்கம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது. அதை மறுத்து, ‘எங்கே இருக்கிறது போல்ஷெவிக்குகளின் தங்கம்’ ?என்ற தலைப்பில் 1922 ஜூன் மாதம் சிங்காரவேலர் ஒரு கட்டுரை எழுதினார். அதில், ‘அப்படியே அதை வாங்கி மக்களின் நன்மைக்கு உபயோகப்படுத்துவதில்தான் என்ன தவறு ?என்றும் கேட்டிருந்தார்.
சென்னை மாமன்ற உறுப்பினராக சிங்காரவேலர் செயல்பட்ட காலத்தில்தான் அவரது முன் முயற்சியில் தமிழகத்தில் முதன்முறையாக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சாதிமுறையை, வருணாசிரம தருமத்தை இந்தியப் புரட்சியின் அடிப்படையான பிரச்சனைகளில் ஒன்றாகவே சிங்காரவேலர் பார்த்தார். 1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வரவேற்று 30.8.1931 தேதியிட்ட குடியரசு பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் காங்கிரஸ் கட்சியைப் பின்வருமாறு சாடினார்:
‘ஜாதி என்பது நமது இந்திய தேசத்தில் மட்டும் பிறந்த ஒரு ஸ்தாபனம்.இதை ஒழிக்காமல் சகோதரத்துவம் வெறும் சொல்லே. காங்கிரஸ்காரர்கள் ஆயினும் இதை ஒழிக்காத வரை இவர்கள் நடிப்பெல்லாம் வேஷம் எனக் கொள்ளல் வேண்டும். தீண்டாமை ஒழிய வேண்டும் என சொல்லிக்கொண்டு, பூணூலையும், சந்தியா வந்தனத்தையும் வைத்துக்கொண்டிருத்தல் வஞ்சனை அல்லாது வேறில்லை.இந்தக் கபட நாடக சூஸ்திரம் போகாமல் காங்கிரஸ்காரர்கள் பொதுஜனத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்வது பெரும் பித்தலாட்டம். இதனை சுயமரியாதையோர் வற்புறுத்துவது உண்மையே. தீண்டாமையை விட்டவர்கள் ஏன் ஆச்சாரியார்கள் எனவும், ஐயர், ஐயங்கார் எனவும் அழைக்க சம்மதிக்க வேண்டும்?ஜாதியை உண்மையில் ஒழித்தார்கள் என்பார்களாயின் ஜப்பான் தேசத்தில் சாமுரே பிரபுக்கள் தங்கள் ஜாதியை பகிரங்கமாக ஒழித்தெறிந்த விதமாக பூணூலையும், அர்த்தமில்லா வர்ணாசிரமங்களையும் ஏன் ஒழித்தெறியல் ஆகாது? இதைச் செய்யும் வரை தீண்டாமை நீங்க வேண்டும் என்பது மதி மயக்கே’ என்றார்.
சுயமரியாதைக்காரர்களின் கருத்தோட்டத்தில் உள்ள சிக்கல்களையும் சுட்டிக்காட்டிய அவர்,’அறிவுமிக்க ஆதாரமாகிய விஷயங்களைக் குறித்து நமது சுயமரியாதைக்காரர் எவ்வளவு ஊக்கத்துடன் உழைத்து வருகின்றாரோ, அவ்வளவு மனவிசாலத்துடன் சீல ஆசாரம், பொருளாதாரம் முதலிய முக்கிய விஷயங்கள் குறித்து பாடுபட வேண்டுமாய் நமது தோழர்களைக் வேண்டிக் கொள்கிறோம். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றதையும் கவனித்தல் வேண்டும். அறிவை அந்தகார இருளில் இருந்து நீக்குவதைப்போல், உயிரையும் தாங்கொணா பசிப்பிணியிலிருந்து காக்க வேண்டும். உணவு இன்றி அறிவு விளங்காது. ஆகையால் உணவே உயிருக்கும் அதில் தோன்றும் அறிவுக்கும் ஆதாரம். ஆதலின் 35 கோடி மக்கள் இனிது உண்டு, உடுத்தி, வாழ்வதற்கு வேண்டிய ஆதாரங்களை சுயமரியாதைப் பெரியோர் கண்டெடுத்து அளிப்பார்கள் என்று நம்புகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
தந்தை பெரியார் சோவியத் யூனியன் உள்ளிட்ட பல மேலை நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பி சோசலிச பிரச்சாரத்தை வலுவாக முன்னெடுத்தார். சுயமரியாதை இயக்கத்தை சமுதாய சீர்திருத்த இயக்கமாக மட்டுமின்றி அரசியல் குறிக்கோள்களைக் கொண்ட ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற விருப்பம் அவர்களிடத்தில் ஏற்பட்டது அதைத் தொடர்ந்து தந்தை பெரியார் சிங்காரவேலரைக் கலந்து இயக்கத்தின் நோக்கத்தையும் அதற்கான திட்டத்தையும் தயாரித்தார். ஈரோட்டில் ஈவெரா வீட்டில் 1932 டிசம்பர் 28 ,29 தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் தென்னிந்திய சம தர்மக் கட்சி என்ற ஒரு பிரிவை சுயமரியாதை இயக்கத்தில் அமைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. தந்தை பெரியார், சிங்காரவேலர், ஜீவா ஆகியோர் ஈரோட்டு திட்டத்தை விளக்கி தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டனர். தமிழகத்தில் 154க்கும் மேற்பட்ட கிளைகள் அமைக்கப்பட்டன. 1933 ஆம் ஆண்டு குடியரசு பத்திரிகையின் ஒவ்வொரு இதழிலும் ரஷ்யாவின் சாதனைகளைப் பற்றிய கட்டுரைகள் வெளியிடப்பட்டன. மதத்தைப் பற்றி லெனின் எழுதிய கட்டுரைகள் தொடராக வெளிவந்தன. பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’என்ற நூலை 1934 இல் அரசாங்கம் தடை செய்தது. அதனைத் தமிழில்
ப. ஜீவானந்தம் மொழிபெயர்த்தார். அது ஈவெரா- வின் சகோதரர் ஈ வெ கிருஷ்ணசாமி அவர்களுடைய உண்மை விளக்கம் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதனால் அரசாங்கம் ஜீவாவையும், ஈ வெ கிருஷ்ணசாமியையும் கைது செய்தது. கம்யூனிசக் கருத்துக்கள் பரவுவதைத் தடுப்பதில் ஆங்கிலேய அரசு குறியாக இருந்தது.
புதுச்சேரியில் பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தை வீழ்த்தும் போராட்டத்தில் முன்னணியில் நின்ற கம்யூனிஸ்ட் தலைவர் வ.சுப்பையாவின் தலைமையில் 1935ஆம் ஆண்டு தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன் வைத்தனர்:
- நாள் ஒன்றுக்கு பத்து மணி நேர வேலை
- தினக்கூலி 3 அணாவிலிருந்து 6 அணா
- பெண்களுக்கு இரவு வேலை கூடாது
- குழந்தைத் தொழிலாளர்களை வேலையில் பங்கேற்க வைக்கக் கூடாது
- பெண் தொழிலாளியின் மகப்பேறு காலத்தில் சம்பளத்தோடு கூடிய ஒரு மாத விடுமுறை
- பிள்ளை பேறுக்காக அரை மாதச் சம்பளம்.
84 நாட்களுக்கு போராட்டம் தொடர்ந்தது. தொழிலாளர்களின் விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாக கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. 1936 ஜூலை 23 அன்று புதுவைத் தொழிலாளர் வர்க்கம் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தில் ஈடுபட்டது. இப்போராட்டத்தின் விளைவாக ஆசியாவிலேயே முதன்முறையாக 8 மணி நேர வேலையை புதுவைத் தொழிலாளர் சங்கம் உறுதிப்படுத்தியது.
பொருளாதார சமத்துவம் மட்டும் இல்லாமல் சமூக சமத்துவத்துக்கான போராட்டங்களிலும் கம்யூனிஸ்டுகள் முன்னோடிகளாக விளங்கினர். 1930 களில் காங்கிரசும் காந்தியும் விடுத்த அழைப்பை ஏற்று பி. இராமமூர்த்தி அரிசன சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு அருகே வசித்து வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் 200 பேருக்கு சில மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்து,தோள்பட்டையில் சங்கு சக்கர அடையாளமிட்டு அக் கோயிலின் தர்மகர்த்தா தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடுகளைச் செய்தார். கோயில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீதிமன்றம் வரை சென்று அம்மக்களின் வாக்குரிமையை நிலைநாட்டினார்.
நவம்பர் புரட்சியும், சோவியத் இலக்கியங்களும், சோவியத் மக்களும் அரசும் சாதித்த சாதனைகள் தமிழக இலக்கியப் பரப்பில் பெரும் செல்வாக்கு செலுத்தின. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதுகிறார்: ‘இரஷ்ய ஆட்சி பொதுமக்கள் ஆட்சி. பொதுவுடமை ஆட்சி. அதனைச் சர்வாதிகாரம் என்பது தவறு. இரஷ்யர்கள் கூட்டாக உழைக்கிறார்கள். உழைப்பின் பயனை அனுபவிக்கிறார்கள். தம்மைத் தாமே ஆண்டு கொள்கிறார்கள். அதற்கேற்ற சமூக அமைப்பை அமைத்து அதன் வழியிலே செல்கின்றார்கள். அங்கே இரப்பாரும் இல்லை. புரப்பாரும் இல்லை. ஆண்டியும் இல்லை. ஆண்டையும் இல்லை. வயிற்றை எக்கி திரிவோரையும், வயிற்றை உப்ப வைத்துத் திரிவோரையும் காண முடியாது. தன்னலம் பேணாமல் பொதுநலம் பேணி உயர்கின்றது நாடு. இப்படி ஒரு நாடு இருந்தால் அதுவே ஒரு பூகோள சுவர்க்கம் என்பதற்கு ஐயமென்ன ?’என்கிறார்.
நவம்பர் புரட்சி ஏற்படுத்திய தாக்கம் தமிழக மண்ணில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை தீவிரப்படுத்தியதுடன், எதிர்கால இந்தியா எத்தகைய திசைவழியில் பயணிக்க வேண்டும் என்பதற்கான பார்வையையும் அளிப்பதாக அமைந்தது. புதியதோர் உலகம் காண போராடும் அனைவருக்கும் நவம்பர் புரட்சியே தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.
Leave a Reply