அருண் குமார். கி
அறிமுகம்
தமிழகத்தில் திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம் மற்றும் பொது உடைமை இயக்கங்களால் கட்டமைக்கப்பட்ட மாநிலத்தின் பன்மைத் தன்மையையும் (social pluralism of the state), அதன் மதச்சார்பற்றத் தன்மையையும் குலைக்கும் நோக்கத்துடன் வகுப்புவாத அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் மாநிலத்தில் மத மோதல்கள், மதம் குறித்த விவாதங்கள் ஏற்பட்டு வருகின்றன. தமிழக அரசியல் களத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாற்றத்தை – மதவாத அமைப்புகள் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதை, அவ்வமைப்புகளின் வளர்ச்சியை – புரிந்துகொள்வது, அவ்வமைப்புகளின் செயல்பாட்டுக்கு எதிரான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முதல்படி ஆகும். தமிழக அரசியலில் விளிம்பு நிலையில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தன்னை மாநில அரசியலில் நிலைப்படுத்திக் கொள்ள ஏராளமான தந்திரங்களை, முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எனினும், தேர்தல் அரசியலில் அதனுடைய பலத்தை பாஜக-வால் நிரூபிக்க முடியவில்லை. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் அக்கட்சியால் ஓரளவுக்கு தொடர்ச்சியாக தேர்தல் வெற்றி பெறமுடிகின்றது. உள்ளாட்சி தேர்தல் தொடங்கி, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் வரை அம்மாவட்டத்தில் பாஜக தொடர்ந்து வென்று வருகின்றது. மற்ற மாவட்டங்களில் பெற முடியாத வெற்றியை கன்னியாகுமரியில் மட்டும் அக்கட்சி பெறுவதன் காரணமென்ன? அதன் முழுமையான காரணத்தை அறிந்து கொள்ள அம்மாவட்டத்தின் மத, சமூக அரசியலை அறிந்து கொள்வது அவசியமாகும்.
விவேகானந்தா ஆசிரமம் உருவாக்கம்
ஹைந்தவ சேவா சங்கம் (எச்.எஸ்.எஸ்) என்னும் இந்து அமைப்பு 1932இல் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பாகும். ஆர்.எஸ்.எஸ் இன் முதல் சாகா கன்னியாகுமரியில் 1946 இல் தொடங்கியது. எனினும் ஹெச் எஸ் எஸ் மற்றும் ஆர்.எஸ்எஸ் இரு அமைப்புகளும் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், அந்த அமைப்புகளுக்கான அடிப்படை ஆதரவு பெருமளவில் நம்பூதிரிகள், நாயர்கள், சைவ வேளாளர்கள் போன்ற உயர் வகுப்பினர்களுக்குள்தான் இருந்தது. கன்னியாகுமரியின் பெரும்பான்மையினரான நாடார் (பிற்படுத்தப்பட்ட) வகுப்பினரிடையே இந்த இந்து தேசிய அமைப்புகளுக்கு அப்போது செல்வாக்கு இல்லை. இந்தத் தடைகளை அகற்றி, இன்னும் பெருவாரியான மக்களிடம் சென்றடைவதற்காக மக்களிடையே புகழ்பெற்றவர்களாக விளங்கும் ஆன்மீக /மதத் தலைவர்களை பயன்படுத்திக் கொள்ள ஆர்.எஸ்.எஸ் தீர்மானித்தது. இந்தியா நெடுகிலும் பரந்துபட்ட செல்வாக்கைப் பெற்றிருந்த, இந்து சமயத்திற்குப் புத்துயிரூட்டிய ஆன்மீகத் தலைவரான விவேகானந்தரை ஆர்.எஸ்.எஸ் இவ்வாறு பயன்படுத்திக் கொண்டது. 1963இல், கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம் அமைத்ததில் ஆர்.எஸ்.எஸ்-க்கு முக்கியப் பங்குண்டு. இந்நினைவுச்சின்ன குழுவால் தோற்றுவிக்கப்பட்டதே விவேகானந்தர் கேந்திரம். அது கன்னியாகுமரியில் நிலவியிருந்த கிறிஸ்தவ சமூகத்தின் செல்வாக்கிற்கு எதிராக, இந்துக்களை, குறிப்பாக நாடார் சமூகத்தினரை, ஒன்று திரட்டத் தொடங்கியது.
இச்சமயத்தில், 1982 மார்ச் மாதம் நடைபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் மாசித் திருவிழாவில் இந்து பக்தர்களை கிறிஸ்தவ மீனவர்கள் கடத்திச் சென்று மானபங்கம் செய்து விட்டதாக வதந்தி பரவியது. இதை அடுத்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் எட்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள். துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கிறிஸ்தவ சகோதரிகளால் நடத்தப்பட்ட பள்ளிகள், தேவாலயங்கள், மருத்துவ நிலையங்கள் எல்லாம் சேதப்படுத்தப்பட்டன. 680 மீனவ குடிசைகள் தீக்கிரையாகின. இக்கலவரம் இந்துக்களின் இந்து உணர்வு நிலைபாட்டை ஆழமாக்கியதோடு இரு சமூகத்தினரிடையே பகைமையை மேலும் பெரிதாக்கியது.
மண்டைக்காடு கலவரத்தினால் இந்துக்களுக்கு ஏற்பட்டிருந்த இந்து உணர்வை பயன்படுத்தி, அவர்களை மதத்தால் ஒன்றிணைக்க விவேகானந்தா ஆசிரமம் முடிவு செய்தது. அதன்படி சமய வகுப்புகள் எனப்படும் இந்து சமய வகுப்புகளைத் தொடங்கியது. அவற்றின்மூலம் இள மனங்களில் இந்துப் பண்புகளைக் கட்டி எழுப்புவதில் மிகுந்த கவனம் செலுத்தியது. விவேகானந்தா ஆசிரமம் 1940இல் சுவாமி அம்பானந்தாவால் வெள்ளிமலை என்ற கிராமத்தில் தொடங்கப்பட்டது. இது நிறுவப்பட்டதன் நோக்கம் கிறிஸ்தவ மத குருமார்கள் செய்து வந்த மதமாற்றத்தை தடுப்பதும், மக்களிடையே இந்து சமய நெறிகளை போதிப்பதுமே ஆகும். அப்போது கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கு தளம் அமையாததால் சுவாமி அம்பானந்தாவிற்கு ஆர்.எஸ்.எஸ்-ஸோடு தொடர்பிருக்கவில்லை. அவருக்குப் பின் 1951இல் சுவாமி மதுரானந்தா அதன் தலைவர் ஆனார் . இவருக்கு ஆர்.எஸ்எஸ் உடன் வலுவான பிணைப்பு இருந்தது. இவர்தான் விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னக் குழுவில் உறுப்பினராக இருந்து, நினைவுச்சின்னம் அமைப்பதில் முக்கியப் பங்காற்றினார் . சமய வகுப்புகள், திருவிளக்கு பூஜை, மங்களப் பிரார்த்தனை போன்ற நிகழ்வுகளைப் பரவலாக்குவதற்கு ஆசிரமம் ஒரு கருவியாகச் செயல்பட்டது. இம்மதப்பழக்கங்கள் முன்னரே மக்களால் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், அதுவரை அவை தனிப்பட்ட விவகாரங்களாகவே கருதப்பட்டன. இப்படி தனிப்பட்ட வழிபாட்டு முறைகளை பொதுவெளிக்கு கொண்டு வந்ததன் மூலம், ஆசிரமம் இந்து விழிப்புணர்வை ஊட்டுவதற்குத் துணைநின்றது .
1974லேயே ஆசிரமம், குழந்தைகளுக்குக் கற்பிக்க சமய வகுப்புத் திட்டத்தை தொடங்கியிருந்தது. எனினும் மண்டைக்காடு கலவரத்துக்குப் பிறகே இவை மாவட்டம் முழுதும் வேகமாகப் பரவின. இந்த வகுப்புகளை இந்துத்துவ அமைப்புகள் கிறிஸ்தவ பைபிள் வகுப்புகளைப் போல நடத்த முயன்றன . எனவே இவையும் ”ஞாயிறு வகுப்புகள்” (Sunday Schools) என்றே அழைக்கப்பட்டன. கிறிஸ்டோஃபர் ஜெஃபர்லாட், இப்படி “மற்றவரை”ப் போலச் செய்தலை “திட்டமிடப்பட்ட ஒன்றிணைப்பு” (strategic syncretism) என்கிறார். இந்து சமூகத்திற்கு எதிரானவர் என்று கருதப்பட்ட குழுவினரின் பண்பாட்டு மதிப்பீடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதால் இது (பைபிள் வகுப்பு/சமய வகுப்பு) ‘ஒன்றிணைப்பு’ ஆகிறது. வலுவான சமூக அரசியல் தளத்தினாலும் பெருமையினாலும் தம்மை உயர்வாகக் கருதி “பிறரை” மேலாதிக்கம் செய்யும் சித்தாந்தத்தை ஆதரிப்பதால் ‘திட்டமிடப்பட்டது’ என்கிறார் ஜெஃபர்லாட்.
இந்துத்துவ அமைப்புகள், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ், சிறுவர் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை 60 ஆண்டுகளுக்கு முன்பே புரிந்து கொண்டு செயல்படத் தொடங்கியிருந்தது. ராஷ்டிர சேவிகா சமிதி (பெண்கள் அணி), அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (மாணவர் அணி), ஹிந்து சுவயம் சேவக் சங் (வெளிநாட்டு அணி), பாரதிய ஜனசங்கம் (அரசியல் அணி) ஆகிய முன்னணி அமைப்புகளை ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் தேசிய அளவில் ஏற்படுத்தியிருந்தது. புதிய முயற்சியாக 1952இல் உத்திரப்பிரதேசத்தில் சரஸ்வதி சிசு மந்திர் எனும் தொடக்கப் பள்ளியை தோற்றுவித்தது. இப்பள்ளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்ததால், 1958இல் மாநில அளவிலான சிசு சிக்ஷா பிரபந்த சமிதி என்னும் அமைப்பை உருவாக்கியது. அதன் பின்னர் 1977இல் பல மாநிலங்களிலும் இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட பள்ளிகளை ஒன்றுபடுத்தி திறம்படச் செயல்படச் செய்ய நாடு தழுவிய அளவில் வித்யா பாரதி எனும் அமைப்பை உருவாக்கியது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் வித்யா பாரதி பள்ளிகள் தமிழ்நாட்டில் வெற்றி அடையவில்லை. அதனுடைய இணையதளத்தில் கண்டுள்ளபடி அவ்வமைப்பின் கீழ் 12,828 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அவற்றுள் தமிழ்நாட்டில் இருப்பது 217 பள்ளிகள். அங்கு பயில்பவர்கள் 75,700 மாணவர்கள். தமிழ்நாட்டில் மத நெறிகளைக் கல்வியின் மூலம் பரப்புவது எதிர்பார்த்த பலனைத் தராததால், விவேகானந்தா ஆசிரமம் அப்பொறுப்பைத் தனதாக ஏற்றுக் கொண்டது. சமய கருத்துகளையும் விழுமியங்களையும் கல்வியின் மூலம் இள நெஞ்சங்களில் பரப்புவதற்கு வித்யா பாரதி பள்ளிகளையே மாதிரியாக ஆசிரமம் எடுத்துக் கொண்டது. குழந்தைகளிடையே மதப்பற்று, நாட்டுப்பற்று உணர்வுகளை ஊட்டுவதற்கு முறைசாரா சமயக் கல்வியை அது தேர்ந்தெடுத்தது.
இந்துக்கள் பிற மதங்களுக்கு மாறக்கூடியவர்களாக இருப்பது அவர்கள் தம் மதம் குறித்த அறியாமையில் இருப்பதாலேயே என ஆசிரமம் கருதியது. இந்துக்களுக்கு “தமது செழிப்பான ஆன்மீக வளத்தையும் மரபின் மாண்பையும் அறிவுறுத்தி, வாழ்வு தரும், வாழ்வினை உய்விக்கும், வாழ்வினை உருமாற்றும் நித்திய சமயத்தோடு அவர்களைப் பிணைத்தால் வேர்ப்பிடிப்பற்று வாழும் அவர்கள் தம் நம்பிக்கையில் உறுதிப்படுவார்கள்” என்பதைச் செயல்படுத்துவதே ஆசிரமத்தின் நோக்கம். தங்களின் இலக்கினை அடைவதற்கு இந்த ஞாயிறு வகுப்புகள் பயன்தரக் கூடியவை என ஆசிரமம் கருதியது. எனவே மாணவர்களுக்குக் கல்வியின் மூலம் மதநெறிகளை ஊட்டி இந்து மதத்தின் முக்கியத்துவத்தைக் கற்பித்தது .
ஞாயிறு வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் சமூக உள்ளடக்கத்தை நோக்கும்போது, பெரும்பாலான மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நாடார் சமூகத்தினராகவும் சிறு பிரிவினர் கிருஷ்ணவகை சமூகத்தினராகவும் இருந்தனர். பிராமணர், நாயர், வேளாளர், தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் பெருமளவில் ஞாயிறு வகுப்புகளில் சேரவில்லை. ஆசிரியர்களின் பங்கேற்பும் இவ்வாறான சமூகக் கூறுகளையே கொண்டிருந்தது. ஆக ஞாயிறு வகுப்புகள் செயல்பட்டது நாடார் சமூகத்தினரைச் சார்ந்தே இருந்ததால் அச்சமூகமே பாஜகவின் வலுவான வாக்கு வங்கியாக, இந்து வாக்கு வங்கியாக உருவானது. அதாவது இந்துக்களை ஒன்றிணைக்கும் பாஜகவின்/ சங்பரிவாரத்தின் திட்டம் கன்னியாகுமரியில் நிஜமானது.
வித்யா பாரதி பள்ளிகளும் சமய வகுப்புகளும்
தங்களுடைய இந்துத்துவ நோக்கத்தோடு இணையக்கூடிய அந்தந்த இடங்களுக்கான திட்டங்களின் மூலம் இந்துத்துவ அமைப்புகள் மக்களைத் திரட்டின. முறையான பள்ளிகளும் (formal schools) அருகாமை அமைப்புகளும் (neighbourhood associations) இந்துத்துவ கொள்கைகளைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றின. ஆர்.எஸ்.எஸ் அதன் வித்யா பாரதி பள்ளிகளின் மூலம் இந்து சமய உணர்வை (Hindu religiosity) தீவிரமாக பரப்பியது. அதன் பாடத்திட்டத்தின் மூலம் பிற மதச் சிறுபான்மையினர் மேல் வெறுப்பை விதைக்க முயன்றது. ஆர்.எஸ்.எஸ் ஆல் நடத்தப்பட்ட சிசு மந்திர் பள்ளிகள் குழந்தைகளிடம் இந்து மேலாதிக்க உணர்வைப் பாய்ச்சி, பிஞ்சு மனங்களை வடிவமைப்பதற்குக் கருவியாயின. இவ்வாறு, ”இந்து ராஷ்டிரம்” நிறுவ வேண்டும் என்ற தங்கள் இலக்கை அடைவதற்கு கல்விப் புலமே இன்றியமையாதது என்பதை ஆர்.எஸ்.எஸ் கண்டு கொண்டது.
வித்யா பாரதி பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு தனி பாடப் புத்தகங்களைக் கொண்டுள்ளன. விழுமியங்கள் அடிப்படையிலான கல்வியையும் பாரதப் பண்பினையும் கற்பிப்பதைத் தவிர, வித்யா பாரதி பள்ளிகளின் பாடத்திட்டம் மதச் சிறுபான்மையினரை அந்நியர்கள்; படையெடுப்பாளர்கள் என்று சித்தரித்து உருவாக்கப்பட்டுள்ளது. மத நெறிகளையும் இந்திய வரலாற்றில் இந்து மையக் கருத்துகளைச் சுற்றியுமே இங்கு கற்பிக்கப்படுகின்றது. கல்வியின் மூலம் இந்து மனப்பான்மையை ஊட்டும் ஆர்.எஸ்.எஸ் -இன் முயற்சிகள் அறிஞர்களின் கவனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. இப்பள்ளிகளின் தன்மை குறித்துப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பள்ளிகளின் பாடத்திட்டங்கள், அமைப்பு, சமூகத்தின் மதச்சார்பின்மை இயல்புக்கு இப்பள்ளிகளின் அச்சுறுத்தல் என்பன குறித்துப் பல அறிஞர்கள் (கார்டர், முகர்ஜி, முகர்ஜி மற்றும் மகாஜன், சர்கார், செதல்வாட், சுந்தர், தனேஜா) ஆய்வு செய்துள்ளனர்.
“முறையான சம்பிரதாயங்களை மாணவர்களிடையே வலியுறுத்தும் வகையில் குறிப்பான சில சடங்குகளும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட மதவழக்கங்களும் மிகக் கவனமாக மாணவர்களுக்கு ஊட்டப்பட்டன. இந்துக்களின் சடங்குகளும் விழாக்களும் குறையேதுமின்றிக் கடைப்பிடிக்கப்பட்டன. மேலும் பள்ளி வளாகத்திற்குள் அல்லது அருகாமையில் எப்போதுமே ஒரு கோவில் இருந்தது . அவர்களின் அன்றாட பள்ளி வாழ்வில் அவையும் ஒரு அங்கமாகும்”. என்று சர்கார் குறிப்பிடுகிறார்.
இந்துத்துவ அமைப்புகள் மரபார்ந்தும் முறையான வழிகளிலும் இந்துக்களை எவ்வாறு ஒன்றுதிரட்டுகின்றனர் என்பதை குறித்தே இங்கு சொல்லப்பட்ட அறிஞர்களின் ஆய்வுகள் விவாதித்தன. முறைசாரா கல்வி மூலம் இந்துக்களை அணி திரட்டுவது குறித்து போதுமான கவனம் செலுத்தப்படவில்லை. அதேபோல, இந்துத்துவ அமைப்புகளின் அரண்களாக விளங்கும் வட மாநிலங்களை முன்வைத்தே இவ்வாய்வுகள் நடைபெற்றுள்ளன. இந்துத்துவ அமைப்புகளுக்கு வலுவான இருப்பு இல்லாத தென் மாநிலங்களில் முறையான/முறைப்படுத்தப்படாத கல்வித் திட்டங்கள் மூலம் இந்துக்களை அணிதிரட்டுவது குறித்து மதிப்பிடவும் புரிந்து கொள்ளவும் குறைந்த ஆய்வுகளே உள்ளன.
வடமாநிலங்களில் வெற்றியைப் பெற்றுத் தந்த இந்துத்துவ தந்திரோபாயங்கள்/திட்டங்கள், திராவிட கட்சிகள் உருவாக்கிய அரசியல் கலாச்சாரச் சூழலைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில் எதிர்பார்த்த பலனை பெறத் தவறின. உதாரணமாக, முன்பே குறிப்பிடப்பட்டதைப்போல, வித்யா பாரதி பள்ளிகள் இங்கு பரவலாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மகாராஷ்டிராவில் 213 பள்ளிகள் இருக்க தமிழ்நாட்டில் அவை 217 இருக்கின்றன. பள்ளிகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பினும் மாணவர் சேர்க்கை மகாராஷ்டிராவில்தான் அதிகம். தமிழ்நாட்டில் இப்பள்ளிகளில் 75,700 மாணவர்கள் பயிலும் நிலையில் மகாராஷ்டிராவில் 92,197 மாணவர்கள் பயில்கின்றனர்.
முன்னரே குறிப்பிட்டது போல, சமய வகுப்புக்கள் வித்யா பாரதி பள்ளிகளின் மாதிரியையே பின்பற்றினாலும்கூட, மதச்சிறுபான்மையினரிடம் வெறுப்பை விதைப்பதிலும், இந்து மதக் கல்வியை கற்பிப்பதிலும், செயல்படுவதிலும் அவை தனித்து விளங்கின. எடுத்துக்காட்டாக, வித்யா பாரதி பள்ளிகளில் மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர் பெற்றோர்களுக்கு அங்கு பங்கு இல்லை. இந்த அணுகுமுறைக்கு மாற்றாக தமிழகத்தில் நடைபெறும் சமய வகுப்புகளில் பெற்றோரும், குறிப்பாக தாய்மார்கள், மாணவர்களோடு சேர்ந்து பயில்கின்றனர். மேலும் சமய வகுப்புகள் என்பவை மரபான முறை சார்ந்த பள்ளிகளுக்கு இணையாகத் தனியாக நடத்தப்படுபவை. ஆதலால், மாணவர்கள் தமது பள்ளிகளில் பொதுவான கல்வியையும், சமய வகுப்புகளில் மதக் கல்வியையும் கற்க வேண்டும். மேலும் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் வித்யா பாரதி பள்ளிகள் பெரும்பாலும் உண்டு உறைவிட பள்ளிகளாகும். ஆர்.எஸ்.எஸ் பள்ளிகள் தரமான கல்வியை வழங்குகின்றன. கட்டணம் அதிகம் இல்லை என்பது போன்ற காரணங்களால் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளைவிட ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளிகளை நாடுகின்றனர். இப்படியான தூண்டுதல் சமய வகுப்புகளில் இல்லாவிட்டாலும்கூட, கன்னியாகுமரியில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சமய வகுப்புகளில் சேர்ந்தனர்.
கற்பித்தலும் அரசியலும்
தமிழ்நாட்டு அரசின் கல்வித் திட்டம் ”மதச்சார்பின்மைத் தன்மை” உடையதால், இந்துக்களுக்கு ஆதரவான பார்வையை அது கொண்டிருக்கவில்லை என ஆசிரமம் கருதியது. இந்து மாணவர்கள் இந்து மத அறிவை இந்தப் பாடத்திட்டத்தில் இருந்தோ, கோவில்களில் இருந்தோ பெற வழியில்லை என்பது ஆசிரமத்தின் கருத்து. ஆசிரமத்தின் தலைவர் சுவாமி சைதன்யானந்தர், மதத்தைப் பற்றிய முறையான புரிதல் இல்லாததால் பெரும்பாலான இந்துக்களுக்கு இந்து மதத்தை பற்றித் தெரியவில்லை; அதனால்தான் கிறிஸ்தவ மத குருக்களால் எளிதாக அவர்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர்; இதனைத் தடுக்க மதக் கல்வி அவசியம் என நினைத்தார்.
சமய வகுப்புக்களின் பாடத்திட்டம் இந்து மதத்தை ஆபிரகாமிய/செனடிக் மதங்களின் தாக்குதலிலிருந்து காக்கும் வகையில் கவனமாக உருவாக்கப்பட்டது. இந்து மதம் பற்றி விளக்குவது அதன் நோக்கத்தில் சிறு பகுதியே; முக்கிய நோக்கம் பிற மதத்தினரால் இந்து மதத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் பற்றிப் பேசுவதே. சமய வகுப்புக்கள் தொடக்கநிலை, இளநிலை, வளர்நிலை, உயர்நிலை, முதுநிலை என ஐந்து படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றோர் அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்கின்றனர். அனைத்து நிலைகளையும் முடித்து, சமயக் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ”வித்யாஜோதி” எனும் பட்டம் வழங்கப்படும். பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவின்போது, பட்டம் பெற்றவர்கள், “நாங்கள் நம்பிக்கை உடைய இந்துக்களாக இருப்போம்; எல்லா வழிகளிலும் இந்து மதத்தைக் காப்போம்” என்று நெருப்பின் முன் சத்தியம் செய்வர். ஒவ்வொரு படி நிலையும் தனித்தனி பாடத்திட்டம் கொண்டிருப்பதால் ஒருவேளை மாணவர்கள் இடையிலேயே படிப்பிலிருந்து வெளியேறினாலும், அவர்களுக்கு மதக் கல்வி கிடைத்து விடும்படியே பாடத்திட்டத்தை கவனமாக அமைத்துள்ளனர். ‘இந்து மதத்திற்கு ஆபத்து’ என்பதே ஐந்து படிநிலைகளிலும் பாடத்திட்டத்தை இணைக்கும் சங்கிலி. எனவே, ஒவ்வொரு இந்துவுக்கும் இளவயதிலேயே பிற மதங்களிடமிருந்து அவர்கள் மதத்தைக் காப்பது கடமையாகிறது.
சமய வகுப்புகளின் அமைப்பாளர்கள் ஆர்எஸ்எஸ் சாகாவை ஒத்ததாக இவ்வகுப்புகளின் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டனர். காலை 8 முதல் 10 அல்லது 9 முதல் 11 வரை என இரண்டு மணி நேரங்கள் வகுப்புகள் நடைபெறுகின்றன. பஜனை 20 நிமிடங்கள், கதை சொல்லல் 20 நிமிடங்கள், இந்துத் தத்துவம் 20 நிமிடங்கள், கேள்விகள் 10 நிமிடங்கள், அசைன்மென்ட் 10 நிமிடம், வருகைப்பதிவு 5 நிமிடம், பிரார்த்தனை 5 நிமிடம், விளையாட்டு மற்றும் பிற செயல்கள் 30 நிமிடம் எனப் பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது. பாடங்கள் வெளிப்படையாக, ஆயிரம் ஆண்டுக்காலம் தாய்நாட்டு இந்துக்களுக்கு எதிரான முஸ்லிம் கிறிஸ்தவ அராஜகங்களைப் பற்றிப் பேசி, கிறிஸ்தவ – முஸ்லிம் விரோத மனப்பான்மையை படிப்படியாக குழந்தைகளிடம் வளர்ப்பதாக அமைந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் பள்ளி மாதிரிகளாகவே சமய வகுப்புகள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், பிராந்திய உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருப்பதை காணலாம். இந்திய சுதந்திரப் போராட்டத்தை விவரிக்கும்போது, தேசியத் தலைவர்களுடன் மாநிலத்தைச் சார்ந்த தலைவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன், வாஞ்சிநாதன், வ.உ.சிதம்பரனார் முதலானவர்களின் பங்களிப்புகள் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளது. இப்படி நாடு தழுவிய அளவிலிருந்து மாறி, மாநிலம் சார்ந்த உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அவற்றின் பாடங்களில் இஸ்லாமும், கிறிஸ்தவமும் அந்நிய மதங்கள் எனவும், அவை படையெடுப்பாளர்களால் இங்கு கொண்டுவரப்பட்டவை எனவும் கூறப்பட்டுள்ளது. தேச விரோத – இந்து விரோத அமைப்புகள் எதிலும் சேர வேண்டாம் எனத் தன் மாணவர்களிடம் அவை கேட்டுக் கொண்டன. பெண்களிடம், மேலை நாட்டுக் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டாம் எனவும், பெண்கள் லட்சிய இந்துப் பெண்களாக வாழ்ந்து, தன் கணவனுக்கே வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் பாடம் சொல்கிறது. இந்து மதத்தில் அறிவியல் என இராமாயண காலத்தில் புஷ்பக விமானம் இருந்தது; பழங்காலத்தில் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தது என்று பேசுகிறது. பாடப் புத்தகங்களில் பகவத் கீதை விளக்கப்பட்டது; மாணவர்கள் கோவில்களுக்குச் சென்று கோவில் குழுக்களில் உறுப்பினர்கள் ஆகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாணவர்கள் இந்துக்களைப் பாதுகாக்கவும் மதமாற்றத்தைத் தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டனர். இன்னும் மதத்துக்காக உயிரை தியாகம் செய்யவும் தயாராக வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளனர். தற்போதைய இந்தியச் சூழலைக் கற்பிக்கும்போது, இந்துக்கள் இரண்டாம் நிலை குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்றும், சிறுபான்மையினரும் அவர்களின் நிறுவனங்களும் அரசு மானியங்களைப் பெறுவதால், இந்துக்களின் நிறுவனங்கள் மூடப்படுகின்றன எனவும் சொல்கின்றன. மேலும் சிறுபான்மையினரின், குறிப்பாக முஸ்லிம்களின், மக்கள் தொகை அதிகரித்துள்ளதாகவும் பாடங்கள் பேசுகின்றன. மேலும், மதச்சார்பின்மையே இந்துக்களின் துயர்களுக்குக் காரணம் எனவும் போதித்கப்படுகிறது.
இத்தகைய நிலைபாட்டைக் கொண்டுள்ள பாடத்திட்டம், அதோடு சேர்த்து கோவில்கள், புனிதத் தலங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், இந்திய அரசர்கள் முதலானவற்றையும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறது. இந்துக் கோவில்களும் இந்துத் தலைவர்களும் மட்டுமே குறிப்பிடப்பட்டு, சிறுபான்மை சமூகத்தினரைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றனர். அதேபோன்று, இந்திய பிரிவினைக்கு முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களுமே காரணம் எனவும், அகண்ட பாரதம் சிதறியதற்கும் அவர்களே காரணம் எனவும், பாடங்களின் மூலம் குற்றம் சாட்டப்படுகிறது. “இந்துக்களை ஒன்றிணைத்து, பெருமைமிக்க நம் கடந்த காலத்தை மீட்டு, ஆயிரம் ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்திய பகைவர்களுக்குப் பாடம் கற்பியுங்கள்” எனத் தன் மாணவர்களுக்கு போதிக்கின்றன சமய வகுப்புப் பாடங்கள். தம் மாணவர்களிடையே இந்து உணர்வினை ஊட்ட, வருகைப் பதிவின்போதும் வாழ்த்தும்போதும்அவர்களை ‘ஹரிஓம்’ எனச் சொல்லப் பயிற்றுவிக்கின்றன பாடங்கள்.
சமய வகுப்புகளின் செயல்பாடுகளும் வளர்ச்சியும்
சமய வகுப்புக்கள் முதன்மையாக குழந்தைகளை ஒன்று திரட்டவும் மத நெறிகளை ஊட்டுவதையுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தன. வயது, கல்வி, சாதித் தடையின்றி யாரும் வகுப்புகளில் சேரலாம். ஐந்து படிநிலைகளையும் முடிக்க ஏறத்தாழ 5 ஆண்டுகள் ஆகின்றன. ஜனவரி மாதம் மாணவர் சேர்க்கை தொடங்கி ஜூன் முதல் வாரத்தில் தேர்வுகள் நடக்கின்றன. முதல் மூன்று வருடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் 5 ரூபாய்; தேர்வுக் கட்டணம் 10 ரூபாய்; அடுத்த இரு வருடங்களுக்கு 25 ரூபாய் கட்டணம் தவிர வேறு கட்டணம் ஏதுமில்லை.
தொடக்கத்தில் 1,193 மாணவர்கள் சேர்ந்தனர். மண்டைக்காடு கலவரத்துக்குப் பின் இது 1,750 மாணவர்களாக உயர்ந்தது. அதற்குப் பின் மாணவர் எண்ணிக்கையில் சீரான வளர்ச்சி ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மதக் கல்வி என்பது புதிய சிந்தனையல்ல. விடுதலைக்கு முன்பே திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முன்பே மதக் கல்வி முறை இருந்து வந்துள்ளது. விவேகானந்தா ஆசிரமத்தின் சமய வகுப்புகள் மேற்குறிப்பிட்டதிலிருந்து முற்றாக வேறுபடுகின்றது. சமய வகுப்புகள் மக்களை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக அவர்களை மதத்தின் பெயரால் ஒரு சார்பாக அணிதிரட்டுவதையே (polarize) பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்து மதத்திற்கு எதிரான கிறிஸ்தவப் பிரச்சாரத்துக்குப் பதிலாகவே, சமய வகுப்புகள் நடத்தப்படுவதாக அமைப்பாளர்கள் கூறினர். வகுப்புகள் தொடக்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டது, பின்னர் மாணவர்களோடு தாய்மார்களும் வருவதற்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகின்றன. கோவில் வளாகங்களில் நடத்தப்படுவதன் மூலம் வகுப்புகளுக்கு வரும் மாணவர்களும் தாய்மார்களும் கோயிலுக்குச் செல்வதை இவ்வகுப்புகள் உறுதி செய்து கொண்டன.
விவேகானந்தா ஆசிரமத்தின் ஆவணங்களின்படி கன்னியாகுமரியில் உள்ள 1150 சமய வகுப்பு நிலையங்களில் 50,000 முதல் 55,000 மாணவர்கள் வாராந்திர வகுப்புகளுக்கு வருகின்றனர். திருவிளக்கு பூஜை, மங்களப் பிரார்த்தனை போன்ற நிகழ்வுகளை விட சமய வகுப்புத் திட்டமே வெற்றிகரமான திட்டம் என அதன் அமைப்பாளர்கள் கருதுகின்றனர். ஒவ்வொரு வருடமும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததால், சமய வகுப்புகளை நிறுவனமயமாக்க ஆசிரமம் முடிவு செய்தது. அதன்படி 1984 மே 18இல் இந்து சமயக் கல்வி அறக்கட்டளை எனும் பெயருடன் ஒரு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதுவே, இந்து தர்ம வித்யா பீடம் என பெயர் மாற்றம் பெற்றது. ஏறத்தாழ 3,500 ஆசிரியர்கள், ஊதியம் ஏதும் இல்லாமல், மதக் கல்வி கற்பிப்பதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 80 முதல் 85 சதவீதம்பேர் பெண்கள். சமய வகுப்பு ஆசிரியைகள் பெரும்பாலானோர் ஏழ்மையான பொருளாதார பின்னணியை கொண்டவர்கள். தனியார் பள்ளி ஆசிரியர்களும், தையல் வேலை செய்பவர்களும், இல்லத்தரசிகளுமே அவர்களுள் அடங்குவர். சமய வகுப்புகளின் ஆரம்ப நோக்கம் மாணவர்கள் மட்டுமே. பின்னர், பெண்கள் தான் திறமையுடன் மத நெறிகளைப் பரப்புவோர் என்பதால் அவர்களையும் பங்கு பெற வைப்பது நோக்கம் ஆயிற்று.
கன்னியாகுமரி மாதிரி அரசியல்: சமய வகுப்பின் அரசியல் தாக்கங்கள்
கன்னியாகுமரியில் பாஜகவின் தேர்தல் பாதை தமிழ்நாட்டின் அனுபவத்திலிருந்து முற்றிலும் வேறானது. மற்ற மாவட்டங்களைப் போலின்றி பாஜகவும் பிற சங் பரிவார அமைப்புகளும் அமைப்பு ரீதியாக கன்னியாகுமரியில் வலுவாக இருக்கின்றனர். அதனால் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் பொதுத் தேர்தல் நடக்கின்றபொழுது, பாஜகவால் மற்ற கட்சிகளின் வெற்றியைத் தடுக்க முடிந்தது. 1940களில் இருந்தே சங் பரிவார அமைப்புகள் கன்னியாகுமரியில் செயல்பட்டுக் கொண்டிருந்தன எனினும், 1982 மண்டைக்காடு கலவரத்திற்கு பின்பு, நிலைமை தீவிரமாக மாற்றமடைந்தது. கலவரத்தை அடுத்து, இரு வகுப்பினருக்கும் இடையே இடைவெளி அதிகரித்து, மத ரீதியான பிளவு உண்டானது. இப்பிளவினை பாஜகவும் சங் பரிவாரமும் உடனடியாக அவர்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டன. 1984 சட்டமன்றத் தேர்தலில் புதிதாக உருவான சங் பரிவார அமைப்பான இந்து முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் V. பாலச்சந்திரன் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு பத்மநாபபுரம் தொகுதியை வென்றார்.
இந்த வெற்றியை அடுத்து ஆர்எஸ்எஸ் இன் முன்னாள் பொதுச் செயலாளரான சேஷாத்திரி ”இப்போது தமிழ் உணர்வை இந்து உணர்வு மாற்றியமைத்துள்ளது” என்று கூறினார். ‘திராவிட மண்ணில் இந்து தேசிய அரசியலுக்கான ஒரு புது யுகத்தின் தொடக்கம்’ என இந்த வெற்றி கருதப்பட்டது. வலிமை வாய்ந்த கட்சிகளான திமுக அதிமுகவுடன் எந்தக் கூட்டணியும் அமைக்காமல், சங் பரிவார் பெற்ற வெற்றியாகும் இது. மாநிலத்தில் தேர்தல் அரசியலில் வெற்றிவாய்ப்பை அதிகரிக்க திராவிட /தமிழ் அரசியலின் இடத்திற்கு மதவாத/ வகுப்புவாத அரசியலைக் கொண்டுவர வேண்டும் என்ற படிப்பினையை இந்த வெற்றி பாஜகவுக்கு தந்தது. கன்னியாகுமரியில் பாஜக சங் பரிவார அமைப்புகளோடு இணைந்து நீண்டகால முயற்சிகளுக்குப்பின் திராவிட அரசியலை வகுப்புவாத அரசியலால் பதிலீடு செய்வதில் வெற்றிபெற்றது. ஒப்பீட்டளவில் கன்னியாகுமரியில் பாஜக அமைப்பு ரீதியாக வலுவாக இருப்பதற்கான காரணங்களைக் கேட்டபோது, கட்சியின் உழைப்பைத் தாண்டி, சமய வகுப்புகளும் கட்சியின் வெற்றிக்குக் காரணம் என்றனர் தலைவர்கள். சமய வகுப்பின் மாணவர்களும் ஆசிரியர்களும் பாஜகவின் ஆதரவாளர்கள் ஆயினர். ஆசிரியர்களும் மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் பாஜகவின் பிரசுரங்களையும் தேர்தல் அறிக்கைகளையும் விநியோகித்தனர்; தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் எனக் கூறுகின்றனர் அமைப்பாளர்கள். பாஜகவின் முழு நேர உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சமய வகுப்பின் மாணவர்கள்தான். பிற சங்க பரிவார் அமைப்புகளிலும் அவ்வாறே. மேற்கண்ட விவாதங்களின்படி, சமய வகுப்பு மாணவர்கள், குறுகிய காலச் செயல்பாடுகளாக தேர்தல் பிரச்சாரம் செய்தல், தேர்தல் பிரசுரங்களை விநியோகித்தல் போன்றவற்றில் மட்டும் ஈடுபடவில்லை; நெடிய பயணமாக கட்சியின் முழு நேர உறுப்பினராகி கட்சியோடு இணைப்பைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அதாவது, சமய வகுப்புகள் பாஜகவுக்கு கொள்கை ரீதியான ஆதரவை மட்டும் அளிக்கவில்லை; அதைத் தாண்டி கொள்கையை பரப்புவதற்கும் வெகுஜனப்படுத்துவதற்கும் தேவையான ஆள்பலத்தையும் அளிக்கிறது. மத உணர்வுள்ள மக்கள் திரள் – அவர்களைச் சமய வகுப்புகளுக்குக் கொண்டு வருதல் – அதிலிருந்து தேர்தலில் வெற்றி பெறுதல்_ என்ற காரணிகளின் சேர்க்கையே கன்னியாகுமரியின் அரசியல் மாதிரிக்கு அடிப்படையாக அமைந்தது.
கன்னியாகுமரியில் பாஜகவின் வெற்றியை தொடர்ந்து, மற்ற மாவட்டங்களிலும் சமய வகுப்புகளைத் தொடங்கி தேர்தலில் வெல்லும் வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என ஆசிரம அமைப்பாளர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் கோரிக்கைகள் வந்தன. அதன்படி, திருநெல்வேலியிலும் கோயம்புத்தூரிலும் சென்னையிலும் சமய வகுப்புகள் தொடங்கப்பட்டன. எனினும் கன்னியாகுமரியில் பெற்ற வெற்றியை இங்கெல்லாம் பெற முடியவில்லை. எனவே இம்மாவட்டங்களில் ஏன் சமய வகுப்புகள் வெற்றி பெற முடியவில்லை என ஆராய்வது உசிதமாகும்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கன்னியாகுமரியின் மத ரீதியான மக்கள் தொகை, 48.65 விழுக்காட்டினர் இந்துக்கள், 46.85 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள், 4.2 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். ஆனால், சென்னயிலோ 81 விழுக்காடு இந்துக்களும் 9.45 விழுக்காடு இஸ்லாமியரும் 7.72 விழுக்காடு கிறிஸ்தவர்களும் ஆவர். கிட்டத்தட்ட இதேபோன்றே நிலைதான் திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூரிலும். பிற மாவட்டங்களைப் போலின்றி கன்னியாகுமரியில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் சம எண்ணிக்கையில் இருந்ததால் இந்து சமயத்திற்கு அச்சுறுத்தல் என்ற காரணத்தைக் காட்டி இந்துக்களை சிறுபான்மையினருக்கு எதிராகத் திரட்டுவது இந்து அமைப்புகளுக்கு ஏதுவாக இருந்தது. இந்து தர்ம வித்யா பீடமும் சமய வகுப்புகளும் இந்த அதிருப்தியை அவர்களுக்குச் சாதகமாகத் திருப்பி மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட முடிந்தது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த காரணி மற்ற மாவட்டங்களில் இல்லாமல் போகவே சிறுபான்மையினருக்கு எதிரான இந்து மேலாதிக்கத்தை இங்கெல்லாம் அவர்களால் உருவாக்க முடியாமல் போனது. எனவேதான் கன்னியாகுமரி மாதிரியை போன்ற வெற்றியை மற்ற மாவட்டங்களில் ஈட்ட முடியவில்லை.
பிற மாவட்டங்களில் இந்து தேசியவாத அமைப்புகள் பலமற்று இருப்பதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் இந்துத்துவக் கொள்கையை தங்களுக்கு உவப்பான கொள்கையாக மக்கள் கருதவில்லை. பெரும்பாலான மக்கள் பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ அந்நியர்களாக கருதுகின்றனர். இந்தச் சவாலை எதிர்கொள்ளும் வகையில் தமிழ் தேசியவாதத்தின் அடையாளங்களைத் தமதாக்கி கொள்ளவும், பின் இந்து தேசியம் எனும் பெரும் சட்டகத்துக்குள் அதனை வசதியாக வைத்துக் கொள்ளவும், பாஜக எல்லா வழிகளிலும் முயன்றது. சான்றாக, 2012ல் தமிழ்த்தாய் ஊர்வலம், 2020ல் வேல்யாத்திரை ஊர்வலம், தஞ்சை கோவிலில் ராஜராஜ சோழனுக்கு சிலை எடுப்போம் என்ற வாக்குறுதி போன்றவற்றைச் சொல்லலாம். பிஜேபி தலைவர் ஒருவரின் கூற்றுப்படி, பாஜகவின் நோக்கம் ‘தமிழ் உணர்வுடன் இணைந்த தேசியவாதம்’ என்பதாகும். எனினும் யாத்திரைகளையும் எதிர்ப்புகளையும் மாநாடுகளையும் கோஷங்களையும் மீறி, மாற்றுக் கட்சியாக வர முயன்ற பாஜகவின் முயற்சிகள் பலனின்றிப் போயின.
முடிவுரை
இவ்வாய்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் முறை சாராத மதக் கல்விப் புலத்தில் இந்துத்துவ அமைப்புகளின் பணிகளைத் தெளிவாக்குகிறது. கன்னியாகுமரி மாவட்டம் மதரீதியாகப் பிளவுபட்டிருந்த 1980களில் இந்து தேசியவாத அமைப்புகள் இந்து ஒற்றுமை என்ற உணர்வினையூட்டி இந்து வாக்கு வங்கியை உருவாக்கின. விவேகானந்தா ஆசிரமம் சமய வகுப்புகளில் காட்டிய செயல்திறன் மிக்க ஈடுபாடு இதற்கு உதவியது. சமய வகுப்புகள் வெற்றி பெற முதன்மைக் காரணம், மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க அளவிலான கிறிஸ்தவ மக்கள் தொகையே ஆகும். அங்கு, இந்து _எதிர் _மற்றவர் எனும் விவாதத்தினைக் கட்டமைக்க இந்துத்துவ அமைப்புகளுக்கு இக்காரணம் உதவியது. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இது போன்ற சாதகம் இல்லாததால் அங்கெல்லாம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. மேற்கூறிய விவாதங்களில் இருந்து பாதி நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்பான சமய வகுப்புகள் என்பவை மாவட்டத்தில் செயல்படும் இந்துத்துவ அமைப்புகளின் பல்வேறு திட்டங்களைப் பற்றிய புரிதலைத் தருகிறது. ஆதலால் இந்து மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு விவேகானந்தா ஆசிரமம் கன்னியாகுமரியில் செயல்படுத்திய, தனித்த, புதுமையான சிந்தனையே சமய வகுப்புகள் என்பனவாகும் .
தமிழில்: ஜமிலா ராசிக்
Leave a Reply