மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


‘திராவிட மாடல்’ நூல் விமர்சனம்: சர்ச்சைகளும், விடுபடலும் …


பேரா. ஜூடித் ஹெயர்


[திராவிட மாதிரி: தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதாரம் குறித்த விளக்கம்’ (The Dravidian Model: Interpreting the political economy of Tamil Nadu); ஏ. கலையரசன் மற்றும் எம். விஜயபாஸ்கர், வெளியீடு: கேம்பிரிட்ஜ் யுனிவர்சிடி பிரஸ், 2021

Economic and Political Weekly, பிப்ரவரி 19, 2022 இதழில் வெளியான பேராசிரியர் ஜூடித் ஹெயர் எழுதிய “Inclusivity and Growth under the ‘Dravidian Model’: Controversial Omissions and Claims”  என்ற கட்டுரையின் தமிழாக்கம்]

(தனது EPW கட்டுரையை தமிழாக்கம் செய்து மார்க்சிஸ்ட் இதழில் பிரசுரிக்க ஒப்புதல் வழங்கிய பேராசிரியர் ஜூடித் ஹெயர் அவர்களுக்கு எங்கள் நன்றியை உரித்தாக்குகிறோம்ஆசிரியர் குழு )

திராவிட மாதிரி: தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதாரம் குறித்த விளக்கம்’ என்ற நூல் ஒரு முக்கியமான, அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய, புத்தகமாகும். தமிழ்நாடு, அனைத்து சாதியினரையும் உள்ளடக்கிய சமூக வளர்ச்சியுடன், பொருளாதார வளர்ச்சியை வெற்றிகரமாக இணைத்துள்ளது என்றும், முக்கியமாக, இது வேறு எந்த இந்திய மாநிலத்தாலும் சாதிக்க முடியாத ஒன்று என்றும் கூறுகிறது, இந்நூல். இவ்விரண்டில் ஒன்றின் வளர்ச்சி மற்றொன்றைப் பாதிக்கவே செய்யும் என்ற வாதத்தை நிராகரிப்பதாக அமைகிறது. ஏனெனில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க முடியும்; அதைப்போலவே பொருளாதார வளர்ச்சியும் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க முடியும் என்பதை இது காட்டுகிறது என்பதே நூல் முன்வைக்கும் கருத்து. 


இந்நூல் தமிழ்நாட்டின் சமூக உள்ளடக்க தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சி சாதனைகளை விளக்குவதன் மூலமாக, சமூகம் மற்றும் பொருளாதாரம் என இரண்டு தளங்களிலும் அரசு நன்கு செயல்பட முடிந்துள்ளது என்பதற்கு ஒரு விளக்கம் அளிக்கிறது. ஒன்றிய அரசின் கீழ் உள்ள மாநில அரசுகளுக்கு உள்ள வரம்புகள் குறித்தும், மாநிலத்தின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஏன் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதற்கான தர்க்க நியாயத்துடனும் இந்தப் புத்தகம் தொடங்குகிறது. மேலும், “கிராம்சியன்” தன்மையில் கட்டப்பட்ட ‘திராவிட பொது புத்தி’தான் இந்த சமூக உள்ளடக்கம் கொண்ட பொருளாதார வளர்ச்சிக்குக் காரணம் என வாதிடுகிறது. மேலும், ‘திராவிட பொது புத்தி’ என்பதை சட்டர்ஜி கூறுவதைப் போல ‘சாதாரண மக்களிடையே நிலவும் அனுபவபூர்வமான உணர்வு நிலை’ என வரையறுக்கிறது. சமூக அந்தஸ்து சார்ந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக  மக்கள் அணிதிரட்டப்பட்டனர். இதை அடைவதற்கு பொருளாதார வளர்ச்சி ஒரு வழிமுறையாகப் பார்க்கப்பட்டது. 

சில குறிப்பிடத்தக்க சாதனைகள்

சாதனைகள் பற்றிப் பேசும் முதல் விரிவான அத்தியாயம், கல்வி பற்றி பேசுகிறது. பல இந்திய மாநிலங்களை விட முன்னதாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் சிறப்பான சாதனைகள் நடத்தப்பட்டதை கவனத்துக்குக் கொண்டு வருகிறது. சமூகத்தில் தாழ்நிலையிலுள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினரை, தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் அதிக அளவில் சேர்க்கும் வகையில், இதற்கென சிறப்பாக வகுக்கப்பட்ட கொள்கைகள் குறித்துப் பேசுகிறது. கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 6 – 14 வயது குழந்தைகள் பள்ளிக்கல்வி பெற்று வரும் இன்றைய காலகட்டத்தில், இச்சாதனை பெரியதாகத் தெரியாவிட்டாலும், இது உண்மையில் ஒரு சாதனைதான். எனினும், கற்றல் திறன்  என்ற அடிப்படையில் சாதனை குறைவுதான். இதில் இந்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியே உள்ளது. 

ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவில்  இரண்டு மாநிலங்களில்தான் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதமும், கல்வியின் தரமும் பொதுவாக மேம்பட்டு உள்ளன. அதில் தமிழ்நாடும் ஒன்று.  இருந்தும், பெருவாரியான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு, ஆங்கிலவழிக் கல்வி தனியார் பள்ளிகளில் மட்டுமே தரப்படுகிறது என்பதும்  ஒரு காரணமாக உள்ளது. உயர்கல்வியைப் பொருத்த அளவில் இந்திய மாநிலங்களிலேயே சிலவிதங்களில் தமிழ்நாடு, பொதுவாகவும், குறிப்பாக பட்டியலின மக்களின் கல்வியிலும், முதல் இடத்தில் உள்ளது. இருப்பினும், கல்வியின் தரம் ஏற்றத்தாழ்வுடனே உள்ளது. உயர்கல்வி நிலையங்கள் பலவும் தனியாரிடமே உள்ளன. உயர்கல்வியைத் தனியார்வசம் விட்டுவிட்டு, அரசு தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்துகிறது (கல்விக்கான அரசின் செலவு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்). கல்வியின் தரம் குறைவாக இருப்பதால் அது பட்டியலின மக்களின் மீது பாரபட்சமான வகையில் தாக்கம் செலுத்துகிறது. அது குறித்து இந்த அத்தியாயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். கல்வித்தரம் குறைவாக இருப்பதன் விளைவுகள் குறித்து கடைசி அத்தியாயத்தில் பேசப்பட்டிருப்பதற்கு பதிலாக இங்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். ஆங்கிலவழிக் கல்விக்கு முக்கியத்துவம் தருவதில் அரசுக்கு இருக்கும் விருப்பமின்மையும் இங்கு அதிக கவனம் பெறத் தகுதியுடைய மற்றுமொரு பிரச்சினையாகும். 

சாதனைகள் குறித்த அடுத்த அத்தியாயம், நாம் நன்கு அறிந்த, சுகாதாரத்தில் அடைந்துள்ள சிறப்பான முன்னேற்றங்களைக் குறித்து விரிவாகப் பேசுகிறது. குழந்தை பிறப்பின் போது, தாய் மற்றும் சேய் மரண விகிதம் இந்திய மாநிலங்களிலேயே கேரளாவுக்கு அடுத்து தமிழ்நாட்டில்தான் மிகவும் குறைவாக உள்ளது என்பது உண்மையிலேயே சிறப்பான சாதனையாகும்.  ஆனால், தாய்-சேய் மரண விகிதத்தைக் குறைப்பதற்கு மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதே தவிர, மற்ற உடல்நலம் தொடர்பான விஷயங்களில் தமிழ்நாடு கவனம் செலுத்தவில்லை என்பது இதில் உள்ள பிரச்சனையாகும். தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பல புதுமையான கொள்கைகளைப் பின்பற்றிவருகிறது என்பதை இந்த அத்தியாயம் எடுத்துக்காட்டுகிறது. வலுவான ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பு,  மையப்படுத்தப்பட்ட மருந்துக் கொள்முதல், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை உள்ளடக்கிய ஒரு அதிகார அமைப்பு மற்றும் பொதுத்துறையில் மருத்துவ வல்லுனர்களைத் தக்கவைப்பதை நோக்கமாகக் கொண்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும். மேலும், பொது சுகாதாரப் பணியாளரை, மருத்துவப் பணியாளர்களிடமிருந்து தனியாகப் பிரித்ததும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். அடுத்தகட்ட மருத்துவப் பராமரிப்பு தனியார் துறைக்குத் திறந்துவிடப்பட்டது. இதில் காப்பீட்டு வசதி இருப்பதால், ஓரளவிற்கு ஏழைகளும் அணுகும் வகையில் உள்ளது. ஆரோக்கியத்தை மிக மோசமாகப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினையாக உள்ள துப்புரவு குறித்தும், அதேபோல் ஊட்டச்சத்து குறித்தும் இங்கு விவாதித்திருந்தால் அது உதவிகரமாக இருந்திருக்கும். சுகாதாரத்துறையில் எடுத்துக்கொள்ளப்பட்ட முக்கியமான பிரச்சனைகள் அனைத்தும் தனியார்மயமாக்கலினால் வரக்கூடிய பிரச்சனைகளே. அவையும் கடைசி அத்தியாயத்தில்தான் விவாதிக்கப்பட்டுள்ளன.


மூலதனமும் உழைப்பும்

மூலதனக் குவிப்பு பற்றிய அடுத்த அத்தியாயத்தில், நூலாசிரியர்கள் மூலதன குவிப்பைத் தவிர்த்து மக்கள் நலனில் அரசு அக்கறை செலுத்துகிறது என்பதற்கு எதிராகப் பேசியுள்ளனர். எடுத்துக்காட்டாக:


அரசியல் அணிதிரட்டல் மற்றும் மாநில அளவிலான கொள்கைகள் மூலதனத் திரட்டலுக்கு சிறந்த வாய்ப்பை நல்கியுள்ளன. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு இந்தத் தளத்தில் ஒப்பீட்டளவில் நல்ல பங்கு அளிக்கப்பட்டுள்ளது.  (ப.113)

ஆயினும், பட்டியலின மக்களைவிட இதர பிற்பட்ட வகுப்பினரே இதில் அதிகப் பங்கு வகிக்கின்றனர். மற்ற இந்திய மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் உற்பத்தித் துறையில் அதிகளவில் வேலை வாய்ப்பை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. தொழில்நுட்பத் திறமைவாய்ந்த தொழிலாளர்களும் இங்குதான் அதிகம் உள்ளனர். பேருந்து வசதி, சாலை வசதிக் கட்டமைப்புகள் மற்றும் மின்சாரமயமாக்கல் போன்றவற்றின் மூலம், அரசு, மூலதனத் திரட்சியைப் பரவலாக்க உதவியுள்ளது.  சிறுதொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு மாநில தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக் கழகம்(சிப்காட்) மற்றும் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (சிட்கோ) போன்ற நிறுவனங்கள் அமைக்கப்பட்டன (ப.133-134). முன்னரே ஓரளவு தொழில்மயமாக்கப்பட்டிருந்த தமிழகப் பொருளாதாரத்தை மேலும் வளர்த்து 1970 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் திராவிடக் கட்சிகள் மூலதனத் திரட்சிக்கு பெரும் ஆதரவை வழங்கியுள்ளன. சிறு தொழில்களை ஊக்குவித்தல் மற்றும் தொழிற்சாலைப் பரவலாக்கம் போன்ற தொழிற் கொள்கைகள், பாரம்பரியமாக தொழிற்பின்னணி இல்லாத பிரிவினரும் தொழில் முனைவோராக  மாற உதவியது. இருப்பினும், 1991-இல் பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு மாநிலத்திற்கு அதிக சுயாட்சி அதிகாரம் கிடைத்த பின்னர்தான் வளர்ச்சியில் உண்மையான எழுச்சி ஏற்பட்டது. அப்பொழுதுதான் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி விகிதம் முன்னிலை பெறத் தொடங்கியது.  பன்னாட்டு நிறுவனங்களின் மீதான ஈர்ப்பு காரணமாக ஏற்பட்ட சங்கடங்கள் குறித்து இந்த அத்தியாயம் இன்னும் அதிகமாகப் பேசியிருக்கலாம். வேலைவாய்ப்பின் தரத்தை அதிகரிக்க முடியாத தோல்விகள் குறித்தும் அதிகம் கவனம் செலுத்தப்பட்டிருக்கலாம். 


அடுத்த அத்தியாயம் ஊரகப் பகுதிகளைப் பற்றியது. இந்தப் பகுதியில், கிராமப்புற பொருளாதாரத்தின் மேம்பாட்டைவிட, அங்கு நிலவிய பழைய படிநிலை உறவுகள் உடைத்தெறியப்பட்டு, சமூக உறவுகள் மாற்றம் பெற்றதைக் குறித்தே அதிகம் பேசப்படுகிறது. நாடு முழுவதும் பரவலாக, பிறரைச் சார்ந்து வாழும் தன்மை குறைந்தது என்றாலும், வேறு எங்கேயும்விட தமிழ்நாட்டில் இது கண்கூடாகத் தெரிந்தது. இந்நூலாசிரியர்கள் குறிப்பாக, உயர்சாதி நிலப்பரப்புகளிடமிருந்து குத்தகை விவசாயிகளுக்கு நிலங்கள் கைமாற்றப்பட்டது, விவசாயத் தொழிலாளர்கள் பலவகைத் தொழில்களுக்கு மாறியதை ஒட்டி, அவர்களது பேரம் பேசும் சக்தி அதிகரித்ததால் விவசாயக் கூலித்தொகை உயர்வுக்கு வழிவகுத்தது, பணியிடத்திற்கு வெளியேயும் கிராமப்புற நலனில் அரசின் தலையீடு ஆகியவை மற்ற இடங்களை விட தமிழ்நாட்டில் சிறப்பாக இருந்தமை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுகின்றனர். விவசாயத்தில் கிராமப்புற தொழிலாளர்களின் பங்கில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. வலுவான சமூகக் கொள்கையின் விளைவாக விவசாயத் துறைக்கு வெளியே நிகழ்ந்த மூலதனத் திரட்சியே பெரும்பாலும் கிராமப்புறங்களில் இத்தகைய மாற்றம் ஏற்படக் காரணமாக அமைந்தது. விவசாயத்தின் பங்கில் ஏற்பட்ட வியத்தகு சரிவினால் ஏதாவது பயனுள்ளதாக நடந்திருக்க வேண்டும். இதற்குமுன், விவசாயத் துறையில் ஒரு நல்ல வளர்ச்சி ஏற்பட்ட வரலாறு உள்ளது. ஆனால், தற்போது வளர்ச்சியின் பெரும்பகுதியை இழந்துவிட்டோம். 

உழைப்பின் சாதனைகள் குறித்து விரிவாகப் பேசும் இறுதி அத்தியாயம், விவசாயத்தில் இருந்து அதிக தொழிலாளர்கள் வெளியேறுவது,  முறைப்படுத்தப்பட்ட உற்பத்தித் துறையில் ஊதியத்தின் பங்கு அதிகமாக இருப்பது, கணிசமான ஊதியம், சிறந்த பணி நிலைமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவை இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தையும் விட தமிழ்நாட்டில் சிறப்பாக இருப்பதைக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக: 


ஒரு பெரிய தேசத்தின் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும், தொழிலாளர் சந்தையின் நெகிழ்வுத்தன்மை மூலம் வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்தி, ஒப்பீட்டளவில் சிறந்த ஊதிய விகிதம், வருமானம் மற்றும் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை மாநில அரசு உறுதி செய்துள்ளது. (ப.214)

தொழிலாளர்களில் 23% மட்டுமே முறைப்படுத்தப்பட்ட துறைகளில் வேலை செய்கின்றனர். ஆனால் நகர்ப்புறங்களில் நிலையான வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கும் முறைப்படுத்தப்படாத தொழிலாளர்களுக்குமான ஊதிய இடைவெளி வேறெங்கேயும்விட மிகக் குறைவாகவே உள்ளது. அதிக வருமானம் பெறும் வேலைகளில் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்றபோதிலும், அதற்கு கீழே உள்ள வேலைகளில் எல்லா தரப்பினரும் பங்கு பெறுகின்றனர். தமிழ்நாடு,  அரசியல் கட்சிகளுடன் இணைக்கப்பட்ட வலுவான தொழிற்சங்கங்களின் வரலாற்றைக் கொண்டுள்ளது. முறைசார் தொழிலாளர்களின் பணி விதிகள் மற்றும் நிபந்தனைகளை வகுப்பதில் தொழிற்சங்கங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. தமிழ்நாட்டில் தொழிற்சங்கங்கள் போராட்டகுணம் குறைவாகவே உள்ளனர்; பணப்பயன்கள் பெறுவதில் அதிக ஆர்வமும், தொழில் தகராறுகளுக்கான நடவடிக்கைகள் குறைவாகவும் இருப்பதால், முதலாளிகள் பேச்சுவார்த்தை நடத்துவதில் அதிக விருப்பம் காட்டுகின்றனர் என்று நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர் (ப.188). திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தபிறகு நலவாரியங்கள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளதால், முறைசாரா தொழிலாளர்கள் கவனம்பெறுகின்றனர். மற்ற இடங்களைவிட உழைப்பிற்கு பாதுகாக்கப்பட்ட, அதிக ஊதியம் இங்கு கிடைத்தாலும், அது மட்டுமே போதாது. உண்மையில், உழைப்பின் தரத்தை உயர்த்துவதில் மிகக் குறைந்த முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது. இது குறித்து இறுதி அத்தியாயத்தில் பேசப்பட்டிருந்தாலும், இந்த அத்தியாயத்திலும் மூலதனக் குவிப்பு குறித்த பகுதியிலும்  விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். இறுதி அத்தியாயத்தில் பேசப்பட்டுள்ள படித்த வேலையில்லாதோர் குறித்து இங்கு ஏதும் குறிப்பிடப்படவில்லை.


திராவிடத் தொகுதியை நிலைநிறுத்துவது குறித்து

இறுதி அத்தியாயத்தில் சாதிகளுக்கு இடையேயான வேறுபாடுகள் மற்றும் நூலாசிரியர்கள் கூற்றான (Dravidian Bloc)  ‘திராவிடத் தொகுதி’யை நிலைநிறுத்துவதில் உள்ள பிரச்சனைகள், ஊழல் மற்றும் பணம் எதிர்பார்ப்பது, ஜனநாயகம் ஆகியவை குறித்து ஆர்வமூட்டும் விவாதங்கள் உள்ளன.  கிராமப்புறம் – நகர்ப்புறம் மற்றும் பிராந்தியங்களுக்கிடையேயான வேறுபாடுகள் குறித்து இங்கு முதன்முறையாகப் பேசப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தொடர்பாக மக்களிடமிருந்து வரும் அழுத்தங்கள் காரணமாக புதிதாக பிரச்சனைகள் எழுகின்றன, உதாரணத்திற்கு, உண்மையில் முக்கியமானதாக இல்லாவிட்டாலும், ஜனநாயக கோரிக்கைகளின் பிரதிபலிப்புகள் என்ற அடிப்படையில் எழும் எதிர்ப்புகளாக, இவை குறிப்பிடப்பட்டுள்ளதானது ஆச்சரியமளிக்கிறது. ஏனெனில், சுற்றுச்சூழல் தொடர்பாக மாநிலத்தில் உண்மையாகவே பெரிய அளவில் பிரச்சினைகள் நிலவுகின்றன. இவ்வரிகளின் ஊடே மறைந்துள்ள கருத்துக்கு, இது பொருந்தாது என்று எளிதாகக் கூறிவிட முடியாது. ஊழல் தொடர்பாகக் குறிப்பிடப்படும் மணல் அள்ளும் பிரச்சனை, விவசாயத்திலும் குடிநீர் விநியோகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் (கிரானைட்) தோண்டுவதும் ஒரு பெரிய பிரச்சினையாகும். தண்ணீர்ப் பஞ்சம், விவசாயத்திற்கான நீர் பயன்பாடு மற்றும் ஏழைகளுக்கான குடிநீர் வினியோகம் ஆகியவற்றிலும் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக சுற்றுச்சூழல் மாசுபாடும் உள்ளது. ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மூலதனக் குவிப்பு மற்றும் சமூக நீதியின் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் இவை குறித்து ஏதும் பேசப்படவில்லை. 


நூலாசிரியர்கள் தமிழ்நாட்டின் இந்த உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த சமூக இயக்கங்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கூறுகின்றனர். 1920களிலும் 1930களிலும் நடந்த பிராமணர் அல்லாதோர் போராட்டம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (உயர் சாதியினர் அல்ல) ஆதிக்கம் செலுத்தும் இந்த மாநிலத்திற்கு முக்கியமானது. பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர்தான் இந்த உள்ளடக்கிய வளர்ச்சியின் பலனை அடைந்தார்களே தவிர, பட்டியலின மக்கள் அல்ல. இந்தக் கருத்தானது, மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையிலிருந்த அந்த சமூகத்திடம் மாற்றத்துக்கான ஒரு நேர்மறையான அணுகுமுறையைக் கொடுத்ததால், அதிக உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய அனுமதித்தது. திராவிட கட்சிகள் மீதும் கொள்கை வகுப்பவர்கள் மீதும் இந்த சூழல் அழுத்தத்தை ஏற்படுத்தி, பெரிய உள்ளடக்கிய வளர்ச்சியை எளிதாக எதிர்ப்பின்றி அடைய வழிவகுத்தது. ஆனால், தலித்துகளுக்கு எதிராக ஆழமான விரோதம் நிலவுவதை இது புறக்கணிக்கிறது. இன்றைய நாள்வரை அவர்கள் மீது காட்டப்படும் சாதியப் பாகுபாடுகளும், கொடுமைகளும் தொடர்கின்றன என்பதே இதை எடுத்துக் காட்டுகிறது. சாதிவெறி, தலித்துகளுக்கு எதிரான ஆழமான விரோதம் மற்றும் பிற சமூகங்களுடனான சாதிய மோதலுக்கு தமிழ்நாடு பெயர் பெற்றது. இந்நூல் இந்த உண்மை குறித்து போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை. கீழ்நிலை சமூகங்களை உயர்த்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட, சாதியை மையப்படுத்திய திட்டங்களே, சாதிவெறியை மேலும் வளர்ப்பதற்குக் காரணமாக அமைந்தனவா என்பது ஒரு முக்கியமான கேள்வி. பின்னடைவுகள் உள்ளன; ஒப்புக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட வேண்டியவை பின்னடைவுகள் மட்டுமே அல்ல. சாதிய இழிவுகள் ஆழமாக வேரூன்றியும் சாதிய பாகுபாடுகள் பரவலாகவும் உள்ளன. தன் சாதியப் படிநிலையை மறைப்பது என்பது உண்மையில் இயலாததாக உள்ளது. 


இந்நூலில் தரப்பட்டுள்ள உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வரையறையில் பாலின ரீதியான உள்ளடக்கிய வளர்ச்சி சேர்த்துக் கொள்ளப்படவில்லை. பாலினம் பற்றி நூலில் குறிப்பிடப்படவேயில்லை. எனவே அது குறித்த விவாதமும் இல்லை. இதைத் தவிர்ப்பதற்கு நல்ல காரணங்கள் இருப்பதாக நூலாசிரியர்கள் முடிவு செய்திருக்கலாம். அப்படியானால் அதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். சாதியைப் போலவே பாலினத்திலும் தமிழ்நாட்டின் புள்ளிவிவரங்கள் எதிர்மறையாகவே உள்ளன. பாலினப் பாகுபாட்டைக் களைவதற்காகப் பல திட்டங்கள் தீட்டப்பட்ட போதிலும் இப்பிரச்சினை மிக இழிந்த நிலையிலேயே உள்ளது. பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான பாகுபாட்டின் அளவு அதிர்ச்சி அளிப்பதைப் போலவே, சமீப காலமாக பெண் கருக்கொலையும் சிசுக்கொலையும் பரவலாக நடந்தேறிவரும் சூழலும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் பொதுவாக சொல்லப்படும் தமிழ்ப் பண்பாடு குறித்த கதைகளுக்கு மாறாக, பாலின உறவுகளின் எதிர்மறை அம்சங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன.


இந்தப் புத்தகம் கூறுவது போல, பல அம்சங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக உள்ளது. ஆனால் அது மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது. மாநிலத்தில் நிலவும் கடினமான பிரச்சனைகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள இறுதி அத்தியாயம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. பல பிரச்சனைகள், இருப்பதாகவே அங்கீகரிக்கப்படவில்லை. புத்தகம் முழுவதுமே விமர்சனப்பூர்வமற்ற முறையிலேயே எழுதப்பட்டுள்ளது. மற்ற இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, புள்ளிவிவரங்கள் சிறப்பானதாகத் தோன்றலாம்; ஆனால், மற்ற கிழக்காசிய நாடுகளில் ஏதேனும் ஒன்றுடன் ஒப்பிட்டால்கூட அது சிறப்பாக இல்லை. 


1967லிருந்து ஆட்சியில் இருந்த தமிழக அரசியல் கட்சிகள் குறித்து வாசகர்களுக்கு பல சுவாரசியமான தகவல்கள் இந்நூலில் உள்ளன. இந்தப் புத்தகம், நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் தாக்கம் குறித்த அதீதமான மதிப்பீடுகளாலும், பல விடுபடல்களினாலும் ஒரு சர்ச்சைக்குரிய புத்தகமாகவே காணப்படுகிறது. இந்நூலிற்கு  ஆதரவாக மட்டுமல்லாது, எதிராகவும் மேலும் பல நூல்கள் வெளிவர இது தூண்டுதலாக இருக்கும் என  நம்புவோம்.

தமிழில்: சேலம் சோபனா

Advertisement


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: