கம்யூனிஸ்ட் கட்சி 1920ஆம் ஆண்டில் தொடங்கியதிலிருந்தே இந்தியாவின் சமூக-பொருளாதார நிலைமைகளின் பின்னணியில், பெண்களின் விடுதலைக்கான போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல, மார்க்சிய தத்துவத்தையும் நடைமுறையையும் ஒன்றிணைக்க முயற்சி செய்து வந்துள்ளது. ‘பெண்களின் பிரச்சனைகள்’ குறித்த கட்சியின் புரிதலானது அதனுடைய நேரடியான செயல்பாட்டின் மூலமாக, அதிலும் குறிப்பாக, பெண் கம்யூனிஸ்டுகளின் பணி மற்றும் அனுபவம் ஆகியவற்றின் மூலமாக, உருவானது. பெண்களின் எண்ணற்ற இயக்கங்களின் மூலமாகப் பெற்றிருந்த அனைத்து நன்மைகளையும் இன்று பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியின் பிற்போக்குவாத ஆட்சியில் காணாமலடிக்க முயற்சி செய்யப்பட்டு வரும் ஒரு சூழலில், ஒவ்வொரு தளத்திலும் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட பணி பெண்களின் உறுதியான போராட்டங்களில் அவர்களை நேச அணிகளாக மாற்றியுள்ளது.
தொடக்கஆண்டுகள்
விடுதலைக்கான போராட்டத்திற்குள்ளே பெண்களின் சமத்துவத்திற்கான போராட்டத்திற்கு கம்யூனிஸ்டுகள் புதியதொரு தொலைநோக்கினை கொண்டுவந்தனர். அதில் மூன்று முக்கியமான பிரச்சனைகள் அடங்கியிருந்தன. முதலாவதாக, தொழிலாளி வர்க்க உறுப்பினர் என்ற வகையில், பெண்களின் மீதான சுரண்டல் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டத்தின் ஒருபகுதியாக, பெண்களின் விடுதலைக்கான போராட்டத்தின் ஊடாக அதற்குள்ள தொடர்பு; இரண்டாவதாக, பெண்களின் குடியுரிமை குறித்த பிரச்சனை; அதிலும் குறிப்பாக, சாதிய அமைப்பை அழித்தொழிப்பதற்கான போராட்டம்; மூன்றாவதாக, பாரம்பரியம், மதரீதியான விதிமுறைகள் மற்றும் தற்போதுள்ள முதலாளித்துவ கலாச்சாரம் ஆகியவற்றின் ஒப்புதலுடன் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறை குறித்த பிரச்சனை ஆகியவையே அவையாகும்.
1929ஆம் ஆண்டில் மீரட் சதிவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 18 கம்யூனிஸ்டுகள் தங்களது தரப்பில் வெளியிட்ட அறிக்கை இதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்டுகளால் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்ட மிக முக்கியமான அறிக்கையாக அமைந்திருந்தது. அந்த அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டிருந்தது: “குடும்பத்தைச் சுற்றியுள்ள உணர்ச்சிகள் என்ற போர்வையானது, சுரண்டலுக்கான ஒருவழியாக அது பயன்படுத்தப்படுவதை மூடிமறைக்க, எப்போதும் பயன்படுத்தப்படுகிறது. பெண்களையும் குழந்தைகளையும் சுரண்டுவதற்கு குடும்பம் பயன்படுவது சோஷலிசத்தின்கீழ் மட்டுமே நிறுத்தப்படும் என்று நாம் கூறிவருகிறோம்… பாரம்பரியமாகவே பெண்களின் அந்தஸ்து ஆண்களைவிடத் தரம்குறைந்த ஒன்றாக, ஒருசில நேரங்களில் உண்மையிலேயே அடிமைத்தனமான ஒன்றாக, இருந்து வந்துள்ளது. சோவியத் யூனியனில் தற்போது நடைபெற்றுவரும் பெண்களின் விடுதலை என்பதுதான் நாம் செல்லவேண்டிய வழியாகும்..” வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகப் போர்முழக்கமிடும் அதேநேரத்தில், ஆணாதிக்கத்தின் அடிப்படையிலான குடும்பக் கட்டமைப்புகளை எதிர்த்து வலுவாக விமர்சிப்பவர்களாகவும் கம்யூனிஸ்டுகள் இருந்து வந்துள்ளனர்.
வர்க்கப் போராட்டத்திலும் பாலின அடிப்படையிலான பாரபட்சத்திற்கு எதிரான போராட்டத்திலும் பெண்களை ஊக்குவிப்பது
விடுதலைக்கான இயக்கத்தின் ஒரு பகுதியாக ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம் போன்றவற்றில் பங்கேற்க பெருந்திரளான பெண்கள் அணிதிரட்டப்பட்டுவந்த அதேநேரத்தில் தொழிற்சங்கங்களில் செயல்பட்டுவந்த கம்யூனிஸ்டுகள் பம்பாய் நகர நெசவாலைகளிலும், ஷோலாப்பூர் பீடித்தொழிற்சாலைகளிலும் இருந்த தொழிலாளி வர்க்க, விவசாயப் பெண்களையும், பீகாரிலும் வங்காளத்திலும் இருந்த விவசாயத் தொழிலாளிகள் மற்றும் பெண் விவசாயிகளையும் ஊதியம், நிலம், தன்மானம் ஆகிய அடிப்படைப் பிரச்சனைகளின் மீதான போராட்டங்களில் அணிதிரட்டி வந்தனர்.
இந்த மிகப்பெரும் தொழிலாளர் அணிதிரட்டலானது அகிலஇந்திய தொழிற்சங்க காங்கிரஸின் (ஏஐடியுசி) தலைமையில் நடைபெற்றது. 1920ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு வெகுவிரைவிலேயே கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கிற்குள் வந்தது. ஏஐடியுசி தொடங்கப்பட்டவுடனேயே அதில் தன்னை இணைத்துக்கொண்ட முதல் அமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் தேவி வங்காளத்தில் இருந்த சணல் தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களிடையே பணியாற்றினார். அதேபோன்று பம்பாய் நகரில் பார்வதி போரேயும், தொடர்ந்துவந்த முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் அகல்யா ரங்கனேகர், உஷா டாய் டாங்கே, விமல் ரணதிவே மற்றும் அவர்களைப்போன்ற பலரும் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். 1936ஆம் ஆண்டில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் தொடங்கப்பட்டபோதும், கம்யூனிஸ்டுகள் அதில் முக்கிய பங்கு வகித்தனர். நிலம், தன்மானம் ஆகிய பிரச்சனைகளின் அடிப்படையில் பெருந்திரளாக அணிதிரட்டப்பட்டவர்களில் விவசாயப் பெண்களும் இருந்தனர். தேபகா, தெலுங்கானா, சுர்மா பள்ளத்தாக்கு ஆகிய போராட்டங்கள் அனைத்துமே இந்தியாவின் உழைக்கும் மக்கள், அதன் உழைப்பாளிகள் பொருளாதார அடிப்படையிலும், சமூகநீதிக்காகவும் முன்னெடுத்த போராட்டங்கள் தனித்துவம் பெற்ற மைல்கற்களாகத் திகழ்கின்றன. இவற்றில் பெண்களின் பங்கு சரிசமமாக இருந்தது என்பது மட்டுமின்றி, செங்கொடிகளை ஏந்தியபடி அந்தப் போராட்டங்களுக்குத் தலைமையேற்று நடத்துபவர்களாகவும் அவர்கள் இருந்தனர்.
கட்சியின் தலைமையின்கீழ் பெண்களின் வர்க்க அடிப்படையிலான நடவடிக்கைகள் அப்போது நிலவிவந்த சமூக விதிமுறைகளுக்கு சவால் விடுவதாகவும் இருந்தன. வர்க்க மற்றும் சமூக கோணத்தில் ஆணாதிக்கத்திற்கு விடப்பட்ட இரட்டைச்சவால்களாகவும் அது இருந்தது.
1945ஆம் ஆண்டில் மகாராஷ்ட்ராவில் தானே மாவட்டத்தில் வாழ்ந்துவந்த வோர்லி பழங்குடி மக்களிடையே கோதாவரி பருலேகர் மேற்கொண்ட பணி இந்த அம்சத்தை மேலும் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. நிலப்பிரபுக்களின் கொடூரமான சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற பழங்குடிப் பெண்கள் தங்களுக்கும், தங்களை இதுவரை அடக்கி ஒடுக்கி வந்தவர்களுக்கும் இடையே நிலவிய சமூக உறவுகளை மாற்றியமைத்த வர்க்கப் போராட்டத்தில் கூட்டு நடவடிக்கை என்ற வலிமையோடு பங்கேற்றபோது தங்களிடையே எழுந்த விடுதலை உணர்வினை மிகுந்த எழுச்சியோடு விவரித்தனர். நிலப்பிரபுக்களின் கைகளில் அவர்கள் எதிர்கொண்டுவந்த திட்டமிட்ட, கொடூரமான, பாலியல் வன்முறைக்கு எதிராகவும் அவர்களை வெளிப்படையாகப் பேசவைத்தது.
திரிபுராவில், தசரத் தேவ்பர்மாவின் தலைமையின்கீழ், மிகமோசமாக சுரண்டப்பட்டுவந்த பழங்குடி இனங்களிடையே, அதிலும் குறிப்பாகப் பழங்குடிப் பெண்களிடையே, எழுத்தறிவையும் சமூகரீதியான விழிப்புணர்ச்சியையும் கொண்டுவந்தது கம்யூனிஸ்ட் கட்சிதான். இது அப்போது வழக்கத்தில் இருந்துவந்த நிலப்பிரபுக்கள் கட்டாயஉழைப்பைப் பிடுங்கிக்கொள்ளும் ‘டிடுன்’ என்ற அடிமைமுறைக்கு எதிராக பழங்குடி மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இந்தப் போராட்டத்தில் மூன்று பழங்குடிப் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
‘வர்க்கத்திற்குள்ளே’
‘வர்க்கத்திற்குள்ளேயே’ ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சமநிலையற்ற உறவுகள் பெண்களால் தொடங்கி வைக்கப்பட்ட சவால்களை எதிர்கொள்கின்றன. தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் எழுதியுள்ளவை இதுபோன்ற பல பிரச்சனைகளை எழுப்பியுள்ளன. குடும்பத்திற்குள்ளே தற்போது நிலவிவரும் சமன்பாடுகளை கேள்விக்கு உள்ளாக்கும் பெண்கள் பலநேரங்களில் ‘பெரியோர் ஏற்பாடுசெய்த’ திருமணங்களை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்தனர். ஏனெனில் அவர்களது கணவர்கள் இந்த ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்பதே அதற்குக் காரணம். பி. சுந்தரய்யா தனது நூல்களில் இதுபோன்ற பல உதாரணங்களை எடுத்துக் காட்டுகிறார். பெண்கள் இவ்வாறு தங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கு எவ்வாறு கட்சி ஊக்கப்படுத்தியது என்பதை இந்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற மல்லு ஸ்வராஜ்யம் விவரித்திருந்தார். இவ்வாறு பெண்களால் எழுப்பப்பட்ட கேள்விகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று வந்த ஆண்களுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. கணவன் – மனைவி இருவருமே இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றுச் செயல்படுகையில் வீட்டுவேலைகளை இருவருமே பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் பெண்கள் கேள்வி எழுப்பினர். இவ்வகையில் ஆண் – பெண் இருவருமே இணைந்து செயல்படுகின்ற இயக்கங்களுக்குள் பல்வேறு தளங்களிலும் பெண்களின் சமஉரிமைக்காக கட்சியின் உதவியோடு பெண் கம்யூனிஸ்டுகள் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றதோடு, இந்த இயக்கத்திற்கு உள்ளேயும் அவர்கள் முன்னோடியான பங்கினையும் வகித்தனர்.
இதிலிருந்து பெறக்கூடிய முக்கியமான பாடம் என்னவெனில், வர்க்கப் போராட்டமானது அதில் பங்கேற்கும் பெண்களின் சுயஉணர்வை மாற்றியமைக்கும் அதேநேரத்தில், இயக்கத்திற்குள் நிலவும் பாலின அடிப்படையிலான வேறுபாடுகளின் அனைத்து அம்சங்களையும் எதிர்த்துப் போராடுவது என்ற முக்கியமான அம்சம் உள்ளிட்டு, அந்தப் போராட்டத்தின் தன்மையையும் அதேஅளவிற்கு சமமானஅளவில் விரிவுபடுத்துகிறது. இது வர்க்கப்போராட்டத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இதற்குப் பல தசாப்தங்களுக்குப் பிறகு, அதன் தொடக்க கட்டங்களில் கடும் எதிர்ப்பை எதிர்நோக்கிய, தொழிற்சங்க இயக்கத்திற்குள் உழைக்கும் பெண்களுக்கென தனியாக குழுக்களும் மேடைகளும் அமைக்கப்படுவதற்கு முன்னோடியாக இருந்த பி. டி. ரணதிவே அப்போது இதற்காக முன்வைத்த வாதம் மிகவும் புகழ்பெற்றதாகும். அப்போது அவர் சொன்னார்: “ கார்ல் மார்க்ஸ் ‘உலகத் தொழிலாளர்களே! ஒன்றுசேருங்கள்!’ என்று சொன்னபோது வெறும் ஆண்தொழிலாளர்களை மட்டுமே மனதில் வைத்து அந்த முழக்கத்தை எழுப்பவில்லை!” வேறுவார்த்தைகளில் கூறுவதெனில், வர்க்கப் போராட்டமானது முதலாளித்துவத்தின் பாலின அடிப்படையிலான வர்க்கச் சுரண்டலை எதிர்த்தும் நடத்தப்படவேண்டிய அவசியம் உள்ளது.
சாதியத்தை எதிர்த்த போராட்டத்தில் உள்ளடங்கிய பெண்விடுதலை
தொடக்ககால கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட பணிகளில் பெரும்பாலானவை சமூக சீர்திருத்தங்களுக்காகவும் தலித்துகளின் விடுதலைக்காகவுமான சாதிய எதிர்ப்புப் போராட்டங்களாகவே இருந்தன. மிக அதிகமான வகையில் ஒடுக்கப்பட்டுவந்த சாதிகளைச் சேர்ந்த பெண்களிடையே இது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், மேல்மட்ட சாதிகளிடையே பெண்களின் அவமானகரமான அந்தஸ்து குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. கேரளாவில் நம்பூதிரிகளிடையே இ எம் எஸ் தலைமையிலான இயக்கம் அவர்களிடையே பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
எனவே, இந்து விதிமுறைகளின் சீர்திருத்தத்திற்கான மசோதா தொடர்பான விவாதமும் அதைத்தொடர்ந்த போராட்டங்களும் நடைபெற்ற காலத்தில் இந்த சீர்திருத்தத்திற்கு ஆதரவான போராட்டங்களில் பெண் கம்யூனிஸ்டுகள் முன்வரிசையில் இருந்தது மிகவும் இயல்பானதொரு வளர்ச்சியாகவே இருந்தது. பெண் கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான போராட்டங்களைப் பொறுத்தவரையில், இந்து விதிமுறைகளின் சீர்திருத்தத்திற்கான மசோதாவிற்கு ஆதரவான போராட்டமானது, சாதிய அமைப்பிற்கு எதிரான போராட்டத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்றாகவே மாறிப்போனது. 1940களிலிருந்து 1950களின் இறுதி வரையிலான தசாப்தத்தில் நிலவிய இந்துசட்டங்களில் சீர்திருத்தம் கொண்டுவருவது குறித்த பிரச்சனை பெண்களின் மிகப்பெரும் போராட்டங்களைத் தூண்டிவிட்டது.
அதேபோன்று, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அன்றைய கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட போராட்டம், அதிலும் குறிப்பாக, பிறப்பின் அடிப்படையிலான சாதிய ஏற்றத்தாழ்வு, வர்க்கச் சுரண்டல், பாலின அடிப்படையிலான ஒடுக்குமுறை ஆகிய சமூகரீதியான முச்சந்தியில் நிற்கும் தலித் பெண்களுக்கான போராட்டங்களை பெண் கம்யூனிஸ்டுகள் தொடர்ச்சியாக நடத்திவந்தனர். சாதிக்கு எதிரான கம்யூனிஸ்டுகளின் புரிதலும் பணியும் இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாக உள்ளது என்பதற்கு சமீபத்திய ஹத்ராஸ் சம்பவம் உதாரணமாக உள்ளது.
பெருந்திரளான பெண்களிடையே கம்யூனிஸ்டுகளின் பணி
முந்தைய ஆண்டுகளில் பெண் கம்யூனிஸ்டுகள் அகில இந்திய பெண்கள் காங்கிரஸ் போன்ற பெண்களுக்கான கூட்டமைப்புகளில் இணைந்து செயல்பட்டு வந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த பெண்களை அணிதிரட்டுவது என்ற நோக்கத்துடன் செயல்பட்டுவந்த இந்த அமைப்பில் பெண் காங்கிரஸ்காரர்களும் இருந்தனர். எனினும், ஏழைப்பிரிவுகளைச் சேர்ந்த பெண்களை அணுகுவது; விரிவான இயக்கத்தின் ஒருபகுதியாக அவர்களின் கோரிக்கைகளுக்காகக் குரல்எழுப்புவது என்ற அம்சத்திற்கே பெண்கம்யூனிஸ்டுகள் முக்கியத்துவம் தந்துவந்தனர். சாதிக்கு எதிராகவும், மதசார்பற்ற மதிப்பீடுகளுக்காகவும், சமரசமின்றிப் போராடுவதென்பது இந்த அணிதிரட்டலில் அதற்கே உரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெகுவிரைவிலேயே இடதுசாரி நோக்கங்கொண்ட பெண்களுக்கான அமைப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்கிடையே கம்யூனிஸ்ட் எண்ணங்கொண்ட மாணவர்களின் மற்றொரு முக்கியமான முன்முயற்சி 1936ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மாணவர்களுக்கான விரிவானதொரு அமைப்பான அகில இந்திய மாணவர் கூட்டமைப்பிற்குள் நிகழ்ந்தது. அது தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் 1939இல் மாணவிகளை மேலும் சிறப்பான வகையில் அணிதிரட்டுவதற்காக, மாணவிகளுக்கான ஒரு குழு அமைக்கப்பட்டது. இதன் முதல் அமைப்பாளர்களில் ஒருவராக கனக் முகர்ஜி இருந்தார். அதேபோன்று சிட்டகாங் ஆயுதக் கிடங்கின்மீதான தாக்குதலின் நாயகியான கல்பனா தத்தும் அதில் இடம்பெற்றிருந்தார். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண் கம்யூனிஸ்டுகளும் 1940களில் தங்களது பகுதிகளில், உதாரணமாக, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், பெண்களுக்கான சங்கங்களை உருவாக்க முன்முயற்சி எடுத்துவந்தனர். குறிப்பாக, வங்காளத்தில் 1942ஆம் ஆண்டில் மகிளா ஆத்மரக்ஷா சமிதி என்ற ஓர் அமைப்பை உருவாக்க பெண் கம்யூனிஸ்டுகள் முன்முயற்சி எடுத்தனர். அந்த நேரத்தில் வங்காளத்தை ஆட்டிப் படைத்துவந்த மிகக்கொடுமையான பஞ்சத்தின் பின்னணியில் ஏழைப்பெண்களிடையே பணியாற்றுவதுதான் இந்த அமைப்பின் நோக்கமாக இருந்தது. “இந்தியப் பெண்களின் இயக்கங்களில் கம்யூனிஸ்டுகள்” என்ற புகழ்பெற்ற நூலில் ரேணு சக்ரவர்த்தி இந்த முன்னோடிகளின் மகத்தான பணிகளை விவரித்திருந்தார்.
பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுவந்த பெண்களின் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தியப் பெண்களுக்கான தேசிய கூட்டமைப்பு என்ற ஓர் அமைப்பினை 1954ஆம் ஆண்டில் உருவாக்கினர். இதில் பெண் கம்யூனிஸ்டுகள் மற்றவர்களோடு இணைந்து செயல்பட்டனர். விடுதலைப் போராட்டத்தின் பாரம்பரியங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாநிலக்கிளைகள் பலவும் அல்லது இந்தக் கூட்டமைப்பின் கிளைகளில் பலவும் சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கினர். பின்னர் 1981ஆம் ஆண்டில் இந்தக் கிளைகள் அனைத்தும் ஒன்றுபட்ட வகையில் இடதுசாரித்தன்மை கொண்ட அகில இந்திய ஜனநாயக மாதர்சங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களை உறுப்பினராகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்தியாவின் மிகப்பெரும் பெண்கள் அமைப்பாக அது உருப்பெற்றது. எனினும், இந்த அமைப்பில் பெண் கம்யூனிஸ்டுகள் செயல்பட்டு வந்தபோதிலும், இதனை ஒரு கம்யூனிஸ்ட் அமைப்பாகக் குறிப்பிட முடியாது. பெண்களின் விடுதலையை நோக்கியதொரு அரசியல் அணுகுமுறையைக் கொண்டதாக இந்த அமைப்பு இருந்தபோதிலும், இது ஒரு கம்யூனிஸ்ட் அமைப்பல்ல; அல்லது சில நேரங்களில் தவறாகக் குறிப்பிடப்படுவதைப்போல, கம்யூனிஸ்டுகளின் ‘முகப்பு’ அல்ல. தனக்கேயுரிய அமைப்புச்சட்டம், நிகழ்ச்சிநிரல் போன்றவற்றை அதுகொண்டுள்ளதோடு, எந்தவொரு அரசியல் கட்சியோடும் இணையாமல் சுதந்திரமாகச் செயல்படும் அமைப்பாகவும் இது விளங்குகிறது. இதன் உறுப்பினர்களில் பெரும்பாலோருக்கு எந்தவிதமான கட்சிசார்பும் இல்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு
1964ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானதை அடுத்து, பெண்களின் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான கம்யூனிஸ்டுகளின் பங்கு மேலும் பெருமளவிற்கு ஊக்கம் பெற்றது. கம்யூனிஸ்டுகளின் முந்தைய பங்கினை முன்னெடுத்துச் செல்லும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1964ஆம் ஆண்டில் உருவாக்கிய மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான அதன் கட்சித் திட்டத்திலும், 2000ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டத்திலும், பெண்விடுதலை குறித்த வர்க்க அடிப்படையிலான அணுகுமுறையின் தத்துவப் பின்னணி தெளிவாக எடுத்துக் கூறப்பட்டிருந்தது.
2000ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டத்தில் மக்கள் ஜனநாயகத்திற்கான திட்டத்தில் குறிப்பிடத்தக்க சேர்க்கையாக இருந்த பிரிவு “குடும்பக் கட்டமைப்பை ஜனநாயகப்படுத்துவதற்கான முனைப்பின் ஒரு பகுதியாக குழந்தைவளர்ப்பு மற்றும் வீட்டுவேலைகளில் பொருத்தமான உதவி ஏற்பாடுகள் இருக்கும்” என்பதாகும். இதன்மூலம் கட்சித் திட்டம் பாலின ரீதியான வேலைப்பிரிவினைக்கு எதிரான முக்கியமானதொரு மார்க்சிய நிலைபாட்டையும், குடும்பத்தின் ‘புனிதமான’ வளையத்திற்குள் ஜனநாயகத்தை விரிவுபடுத்துவதன் தேவையையும் உள்ளே கொண்டுவந்தது. விவசாயப் புரட்சியின் ஒருபகுதியாக, சாதிக்கு எதிரான, பாலின அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் அமையும் என்பதும் குறிப்பாகச் சுட்டிக் காட்டப்பட்டது. “ஐம்பது ஆண்டுகால முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சி ஒவ்வொரு துறையிலும் ஆணாதிக்கத்தை நீடித்து நிற்கச் செய்திருக்கிறது” என்றும் கட்சித் திட்டம் குற்றம்சாட்டியது. “பெண் என்ற வகையிலும், தொழிலாளி என்ற வகையிலும், நாட்டின் குடிமகள் என்ற வகையிலும்” பல்வேறு தளங்களில் தொடர்ந்துவரும் பெண்களின் மீதான சுரண்டலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் குறிப்பாக விவரித்திருந்தது.
2005 டிசம்பரில் மத்தியக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட “பெண்களின் பிரச்சனைகள், கடமைகள் குறித்த கட்சியின் கண்ணோட்டம்” என்ற ஆவணத்தில் இந்தப் புரிதலானது மேலும் விரிவாக விளக்கப்பட்டிருந்தது. வீட்டுவேலை குறித்த மார்க்சிய அணுகுமுறை உள்ளிட்டு ‘பெண்களின் பிரச்சனை’களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறையைப் புரிந்துகொள்ள விரும்பும் எவரொருவரும் அவசியம் படிக்கவேண்டிய ஆவணமாகும் இது.
கொள்கைப் பிரச்சனைகள்
இன்றைய சூழ்நிலையில் இந்தக் கட்டமைப்பிற்கு உள்ளிருந்துதான் கட்சி தனது நிலைபாடுகளை மேற்கொள்கிறது என்பதோடு, பெண்களோடு நேரடியாகத் தொடர்புள்ள பிரச்சனைகளில் போராட்டங்களையும் அது மேற்கொள்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து வந்த பல தசாப்தங்களில் கட்சி செய்த தலையீடுகள் அனைத்தையும் இங்கே குறிப்பிடுவது இயலாத ஒன்றாகும். எனினும், குடும்பம் உள்ளிட்டு பெண்களின் அந்தஸ்து தொடர்பான எந்தவொரு பிரச்சனையிலும், அனைத்துத் தளங்களிலும், சமத்துவம், உரிமைகளுக்கான போராட்டம் உட்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் நிற்காத எந்தவொரு போராட்டமும் இல்லை என்று சொல்வது மட்டுமே போதுமானது. புதிய தாராளமயக் கொள்கைகளுக்கு ஏதிரான கட்சியின் போராட்டமும்கூட பெண்களின் குறிப்பிட்ட பிரச்சனைகள், கோரிக்கைகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகவே இருந்தன. நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உறுப்பினர்களாக இருப்பவர்களும்கூட பெண்கள் இயக்கங்களின் உறுதியான கூட்டாளிகளாக இருந்ததோடு, பெண்களுக்கான சமஉரிமைகளுக்காகவும், நீதிக்காகவும், சட்டங்களை நிறைவேற்றும் முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். தற்போதைய இந்தியாவில் பெண்களின் மீதான வன்முறைக்கு எதிரான போராட்டம், இளம்பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, தாங்களாகவே இணையர்களை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான சுதந்திரத்தைக் கோருவது, தன்பாலின உறவுகளை குற்றம்அற்ற ஒன்றாக ஆக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு, சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த பெண்களையும், அவர்களது உரிமைகளையும் பாதுகாப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளின்மீதும் பெண்களுக்கு ஆதரவாக எவ்வித தயக்கமும்அற்ற நிலைபாட்டை எடுக்கத் தயங்கும் மற்ற கட்சிகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாகவே மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு இருந்து வந்துள்ளது.
மேற்குவங்கம், திரிபுரா, கேரளா போன்ற மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தபோது இந்தப் பற்றுறுதி தொடர்ந்து நீடித்தது. சுயஉதவிக் குழுக்களின் குடும்பஸ்ரீ இயக்கம் உள்ளிட்டு சபரிமலை சச்சரவு மீதான நிலைபாடு போன்ற சமூக சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்கின்ற, நாட்டிலேயே தனித்துவமான, கொள்கைரீதியான எண்ணற்ற தலையீடுகளின் மூலம் பெண்களுக்கு ஆதரவான கட்சியின் நிலைபாட்டிற்கு இன்று கேரளாவின் இடதுஜனநாயக முன்னணி ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இதற்கு முன்பாக, மேற்குவங்கத்திலும், திரிபுராவிலும் ஆட்சியில் இருந்த இடதுமுன்னணி அரசாங்கங்கள் பெண்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கல்வி, சுகாதாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்முயற்சிகளை மேற்கொண்டன. குறிப்பாக, மேற்குவங்கத்தில் நிலச்சீர்திருத்த இயக்கம், ஆண் –பெண் இருவர் பெயரிலுமே நிலத்திற்கான கூட்டுப்பட்டாக்களை வழங்குவது, தனித்துவாழும் பெண்களின் பெயரில் பட்டாக்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகள் சொத்துரிமை குறித்த சட்டங்களில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு முன்பாகவே, நிலத்தில் பெண்களுக்கு சமவுரிமை வழங்குவதற்காக எடுக்கப்பட்ட முன்னோடியான நடவடிக்கைகளை இங்கு சுட்டிக்காட்டலாம். அதைப்போன்றே, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மூன்றில் ஒருபங்கு இடங்களை பெண்களுக்கென ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கோரி தற்போது நடந்துவரும் இயக்கத்திற்கு பல தசாப்தங்கள் முன்பாகவே மேற்குவங்கத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் அதிகாரம் பரவலாக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்பில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டன. கிராமப்புறத்தில் உள்ள மிகவும் நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த பெண்களை முடிவெடுக்கும் அமைப்புகளில் பிரதிநிதிகளாக அமர்த்துவதை கட்சியின் தலைமையிலான இயக்கங்கள் உறுதிப்படுத்தின.
பெண்கம்யூனிஸ்டுகளின் தியாகங்கள்
அதிலும் குறிப்பாக, மேற்குவங்கத்திலும், திரிபுராவிலும் ஆளும் வர்க்கங்களின் கடுமையான தாக்குதல்களுக்கும் ஒடுக்குமுறைக்கும் கட்சி ஆளாகிவரும் நிலையில், ஆண்தோழர்களின் தோளோடு தோள்நின்று பெண்கம்யூனிஸ்டுகள் கடுமையாகப் பணியாற்றியதையும், பல்வேறு தியாகங்களைச் செய்ததையும் இப்பகுதிகளில் ஏற்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியிலிருந்தே நம்மால் அறிந்துகொள்ள முடியும். கட்சி தொடங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடையும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், நமது தியாகிகளை நினைவுகூர்ந்து அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும்போது, செங்கொடிக்காகவும், சமூக –பொருளாதார விடுதலைக்காகவும், சோஷலிசத்திற்காகவும் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த துணிவுமிக்க பெண்களும் அவர்களிடையே இருந்ததையும் நாம் நினைவுகூர்கிறோம்.