சர்வதேசியஒருமைப்பாடுதான் நம்மை மேம்படுத்தும் – அலெய்தா குவாரா


அலெய்தா குவாரா

தமிழில்: அஷ்வத்

எபோலா நோயும், கோவிட்-19 பெருந்தொற்று நோயும் உச்சம் தொட்டபோது, ஏழை நாடுகளுக்கு உதவுவதற்குத் தன் மருத்துவர்களை அனுப்பிவைத்தது கியூபா. சர்வதேசிய ஒருமைப்பாடு என்பது கியூப சோசியலிசத்திற்கு மையமாக இருப்பதன் காரணம் பற்றி, எர்னஸ்டோ சே குவேராவின் மகளாகிய அலெய்தா குவேரா விளக்கமளிக்கிறார்.

கியூப மக்களின் நல்லியல்புகளில் ஒன்று அவர்களுடைய ஒருமைப்பாட்டுணர்வு.

ஒருமைப்பாடு விசயத்தில் கியூப மக்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அனுபவம் உண்டு. சிலருக்கு ஆசிரியர்கள் என்ற முறையிலும், சிலருக்கு மருத்துவர்கள் என்ற முறையிலும், சிலருக்கு பயிற்சியாளர் என்ற முறையிலும், அந்த அனுபவம் கிடைத்திருக்கும். உதாரணமாக, சர்வதேசிய செயல்திட்டங்களிலிருந்து நாம் அனைவருமே ஏதாவதொரு வகையில் அனுபவத்தைப் பெற்றிருப்போம். தனிப்பட்டு ஒருவர் நேரடியாக இத்தகைய செயல்திட்டங்களில் பங்கேற்கவில்லை என்றாலும், அப்படி சென்றவர்கள் யாரேனும் அவர்களின் குடும்பத்தில் கண்டிப்பாக இருப்பார்கள்.

உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்த மனிதரென்றாலும், அவருடன் ஒருமைப்பாடு பாராட்டுவதென்பது, கியூப மக்களுக்கு புரட்சி கற்றுத் தந்த அழகான விஷயங்களில் ஒன்று. உதாரணமாகச் சொன்னால், பல்கலைக்கழகத்தில் என்னுடன் படித்த முன்னாள் மாணவர் ஒருவர், எபோலாவை ஒழிக்க வேறொரு நாட்டிற்குச் சென்று பாடுபடுவதைப் பார்ப்பது எவ்வளவு பூரிப்பாக இருக்குமென்பதை விவரிப்பது கடினம். நான் குழந்தைகள் நல மருத்துவராக இருக்கிறேன். ஒருமுறை மருத்துவமனையில் இருக்கும்போது ,பேராசிரியர் ஒருவர் என்னிடம், “எபோலாவுக்கு எதிரான போரில் கியூபாவின் உதவியை நாடி வருவார்கள் பார்!” என்றார். “நமக்குத் தான் எபோலாவைப் பற்றி எதுவுமே தெரியாதே!” என்று நான் பதிலளித்தேன். “அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் கண்டிப்பாக வருவார்கள் பார்” என்றார் அவர்.

அப்படியே நடந்தது. எபோலாவுக்கு எதிரான போரில், கியூபாவின் உதவியை நாடி விரைவில் வந்தது உலக சுகாதார நிறுவனம். கியூப மக்கள் உதவ ஒப்புக்கொள்வார்கள் என்று தெரிந்துதான் வந்தது. அதற்கு ஒப்புக்கொண்டது மட்டுமல்ல; சுகாதாரத்துறை வல்லுநர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என்று எங்கள் நாட்டிலுள்ள சிறந்தவர்கள் அனைவரும் எபோலாவை எதிர்த்துக் களமாடப் போனார்கள். அதில் வெற்றிபெறவும் செய்தார்கள்.

மனித குலத்தின் வல்லமை பற்றிய ஓர் அரிய உணர்வை இத்தகைய ஒருமைப்பாட்டு அனுபவங்கள் தருகின்றன; “உலகில் எங்கள் உதவி எங்கு தேவைப்பட்டாலும், உதவி தேவைப்படும் மனிதர்கள் எங்கிருந்தாலும், அங்கே சென்று உதவும் ஆற்றல் எமக்கு உண்டு” என்று சொல்ல முடியும். அவர்களின் தோல் நிறமோ, மதமோ ஒரு பொருட்டல்ல. பிற மனிதர்களுக்குப் பயனாக அமைந்தால் போதும்.

மனித குலத்தின் மேம்பாடு, ஒவ்வொரு நாளும் நாம் அடைந்துகொண்டிருக்கும் ஒன்று என்ற உணர்வு, சோசலிச புரட்சியின் மற்றொரு அழகான விசயம் ஆகும். ஒவ்வாமை நோய் வல்லுநரும், குழந்தைகள் நல மருத்துவருமாகிய நான், இந்த உணர்வை முதன்முதலாக நிகாரகுவாவில் ஒரு செயல்திட்டத்தின்போது அனுபவித்தேன். அப்போதுதான் ஒரு மருத்துவராக என் பணியைத் தொடங்கியிருந்தேன்; இருபத்துமூன்று வயது இருக்கும் – மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்றுகொண்டிருந்தேன்.

நிகாரகுவாவில் புரட்சி வெற்றிவாகை சூடியிருந்த நேரம். இன்று இருக்கும் எண்ணிக்கையில் மருத்துவர்கள் கியூபாவில் அன்றைய தேதியில் இல்லை. எனவே, மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களைச் சந்தித்துப் பேசிய தலைமைத் தளபதி ஃபிடல் காஸ்ட்ரோ, சர்வதேசிய பணி முன்பயிற்சியை (internship) மேற்கொள்ள யாருக்கேனும் விருப்பமுள்ளதா என்று கேட்டார். கியூபாவில் மருத்துவக் கல்லூரி இறுதி ஆண்டுப் படிப்பைப் ‘பணி முன்பயிற்சி’ என்று தான் அழைப்போம்.

என் வகுப்பிலிருந்து 480 மாணவர்கள் முன்வந்தார்கள்; நானும் அவர்களுடன் நிகாரகுவா சென்றேன். கியூபாவின் புரட்சிக்கு பிறகு பிறந்தவள் என்பதால், அந்த பயணம் ஒரு அளப்பரிய அனுபவமாக அமைந்தது. சுகாதாரம், கல்வி, சுயமரியாதை ஆகியவைகளை உறுதி செய்த புரட்சியில் பிறந்த எனக்கு, வேறொரு உலகம் எப்படியிருக்கும் என்பதை நேரில் பார்த்து அனுபவப்பட்டு அதனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால் அல்லாமல் அதை தெரிந்துகொள்ள முடியாது.

நிகாரகுவாவின் அனுபவம் மிகவும் கடுமையானது; புரட்சிகர நிகழ்முறையின் அரும்பிலேயே, சமூகத்தை இரண்டாக துண்டாடிய ஆற்றல் மிக்க கத்தோலிக்க சக்தியை அது எதிர்கொண்டது.

கியூபாவில் மருத்துவ அமைப்பு முற்றிலுமாகப் பொதுத்துறையாகவும், இலவசமாகவும், மக்கள் அனைவருக்காகவும் பணியாற்றிவந்ததைப் பார்த்துப் பழக்கப்பட்டிருந்தேன். நிகரகுவாவில் பகுதி நேரமாகப் பொது மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு, அதற்குப் பிறகு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்களை பார்க்க நேர்ந்தது. ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துப் பார்க்காமல் அவர்கள் தம் நோயாளிகளை வல்லுநரல்லாதவர்களிடம் — அதாவது எங்கள் கைகளில் — ஒப்படைத்துவிட்டுக் கிளம்பிவிடுவார்கள். நாங்கள் புதுமையான முறைகளைக் கையாள வேண்டியிருந்தது; தனிப்பட்ட முறையில் மனிதர்களாய் சுயவளர்ச்சி காண வேண்டியிருந்தது.

இந்த அனுபவம் கடுமையான ஒன்றாக இருந்த அதே வேளையில், நிறைய கற்றுத் தருவதாகவும் அமைந்தது. நிகாரகுவாவிற்குச் சென்றடைந்த உடனேயே இரண்டு பிரசவங்களுக்குத் உதவி செய்ய வேண்டிவந்தது. என் மருத்துவர் அங்கியை அணிந்திருந்த நான், மருத்துவமனை வாசலுக்குள் நுழைந்து, அங்கே இருந்தவரிடம் “டாக்டர், நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்” என்று கேட்டேன். “ “டாக்டர்” என ஸ்பானிய மொழியில் ஒருவர் சத்தமாக அழைத்தார், “சீக்கிரமாக இங்கே வாருங்கள், ஒரு பெண் பிரசவத்தில் இருக்கிறார்!”

அதற்குப் பிறகு, நான் மட்டுமே ஒரு நூறு பிரசவங்களுக்கு உதவி செய்திருப்பேன். பிரசவத்திற்கு உதவுவதில் நான் கிட்டத்தட்ட வல்லுநராகிவிட்டேன். நிகாரகுவா எங்களை வடித்தது; எங்களுக்கு எவ்வளவோ கற்றுக்கொடுத்து, இன்னும் வலிமையானவர்களாக, ஆற்றல் வாய்ந்த வல்லுநர்களாக மாற்றியது.

அதற்குப் பிறகு, அந்த செயல்திட்டத்தில் சென்ற பெண்களையும் என்னையும் கியூபாவுக்குத் திரும்பச்சொன்னார்கள். நிகாரகுவாவின் மீது படையெடுத்து வரப்போவதாக அமெரிக்கா மிரட்டியது. தலைமைத் தளபதி (ஃபிடல் காஸ்ட்ரோ) எப்போதுமே கியூபப் பெண்களைக் காக்க நினைப்பார். ஆனால், அப்போது மறுத்தவர்களில் நானும் ஒருத்தி. “அங்கிள்”—நான் பிடலை அன்கிள் என்றே அழைத்தேன்—”நீங்கள் பிரச்சினையைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தச் செயல்திட்டத்தில் பெரும்பாலும் பெண்களே இருக்கிறோம் என்பதால், இளைஞர்கள் (ஆண்கள்) இங்கே தனித்துவிட்டது போல் சிக்கிக்கொள்வார்கள்” என்றேன்.

ஆனாலும், அடுத்த செயல்திட்டம் ஏற்பாடு செய்யப்படுவது பற்றிய செய்தி கிடைக்கும் வரை லா ஹபானாவுக்குத் திரும்பிச் சென்று என் மருத்துவமனையான பெட்ரோ பொராஸில் பணியாற்றத் தொடங்கினேன். இம்முறை உலகின் மற்றொரு பகுதிக்கு அனுப்பப்பட்டேன். அந்தச் சமயத்தில் நான் ஒருவள் மட்டுமே செல்ல இயலும் என்கிற நிலை இருந்தது; எனக்குக் காதலர், கணவர், குழந்தை என்று எதுவும் இல்லை. ஆகவே, “நான் போகிறேன்” என்றேன்.

நான் அங்கோலாவுக்குச் சென்றேன்; என் வாழ்க்கையில் மிகவும் கடுமையான காலமாக அமைந்த இரண்டாண்டுகளை அங்கு கழித்தேன். எனக்கு நினைவில் உள்ள வரை, குழந்தைகள் நல மருத்துவராக சந்தித்த மிகக் கடினமான காலம் அது. அங்கே காலரா நோய்ப் பரவல்கள் இருமுறை ஏற்பட்டிருந்தன; மிகவும் தீவிரமான நிலை. இறந்துபோன தம் குழந்தைகளை பெற்றோர்கள் மருத்துவமனை அழைத்து வந்தார்கள்; அவர்களைக் காப்பாற்ற எங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

மனிதர்களைப் பற்றிய சில முக்கிய இயல்புகளை நான் அங்கோலாவில் கற்றுக்கொண்டேன். நிறவெறியும் காலனியமும் தொடர்பான  அனைத்தையும் நாம் எதிர்த்து போரிட வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன். தங்களுடைய வரலாற்றையும் வாழ்க்கையையும் தாமே படைத்துக்கொள்ளும் உரிமை மக்களிடம் இருக்கவேண்டும்.

ஆப்பரிக்க கண்டம் சூறையாடிச் சுரண்டப்பட்டது; அதன் மக்கள் கால்நடைகளைப்போல் மற்றொரு கண்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். மனித வரலாற்றின் இந்தக் கொடுமையான நிகழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டியவை. அன்றாடம் மனிதகுலத்தின் ஒருமைப்பாட்டை  கட்டமைப்பதன் வழியாகவே அதனைச் செய்ய முடியும். நம் பண்பாட்டை மற்றவர்களின் மீது திணிப்பதன் வழியே செய்ய முடியாது; அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதன் வாயிலாக அவர்களுக்கு உதவிட முடியும்.

எடுத்துக்காட்டாக, வட ஈகுவடாரைச் சேர்ந்த கிச்வா பேறுகால தாதியரிடம் இருந்து புத்தகங்களில் எழுதப்படாத பலவற்றை நான் கற்றுக்கொண்டேன். ஒருமைப்பாட்டைக் கற்பதென்றால் கவனம் செலுத்தக் கற்பதாகும்; இது, மனிதர்கள் என்ற முறையில் நம்மைப் பயனுள்ளவர்களாக உணர வழிவகுப்பதுடன், அறிவுநுட்பங்களைப்—தொன்மையான அறிவுநுட்பங்களையும் கூட—பயன்படுத்தி வளர வழிகோலும்.

இத்தனை ஆண்டுகளில் ஒருமைப்பாட்டு செயல்திட்டங்களின் வழியாக நாங்கள் சேகரித்துள்ள அறிவாக்கங்களின் அளவு அளப்பரியது. ஒரு சர்வதேசிய மருத்துவராக இருப்பதென்பது, வழி நெடுகிலும் கற்றுக்கொண்ட படிப்பினைகளின் பேரில் மனிதத்திற்கு நாம் பட்டிருக்கும் கடனைத் திருப்பியளிக்கச் சிறிதேனும் உதவுவதாகும்.

அதற்குப் பிறகு நான் பிரேசிலில் நிலமற்ற தொழிலாளர்கள் இயக்கத்தில் பணியைத் தொடர்ந்தேன். அர்ஜெண்டினாவில் இயங்கிவரும்  ‘ஒரு நல்ல உலகம் சாத்தியமே’ என்கிற ஒரு அறக்கட்டளையிலும் பணியாற்றினேன். அந்த அறக்கட்டளையின் வாயிலாகத்தான் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த என் தந்தையின் பூர்வீக நகரத்தைப் (ரொசாரியோ) பற்றி நான் தெரிந்துகொண்டேன்.

உண்மையில் அந்த நகரிலிருந்து பலதையும் கற்றுக்கொண்டேன். மபுச்சே மற்றும் குவரானி மக்களுடன் நேரம் செலவழித்தேன். கியூபாவிலுள்ள எஸ்கெவெலா லடீனோ அமெரிக்கானா டெ மெடிசினா-வில் பயின்ற மருத்துவ மாணவர்களுடன் அங்கு சென்றிருந்தேன். புரட்சியானது, அண்மை காலங்களில் செய்துள்ள அரிய விஷயங்களில் ஒன்று, உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த மருத்துவர்களுக்கும் சுகாதார வல்லுநர்களுக்கும் முற்றிலும் இலவசமாக இலத்தீன் அமெரிக்க பல்கலைக்கழகமொன்றில் பயிற்சியளித்திருப்பதாகும்.

இலவச மருத்துவப் பயிற்சி அளிப்பதென்பது பொருளாதாரக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், கியூப மக்களின் தியாகமாகும். ஆனால் அது ஓர் அழகிய விஷயம்; கியூபாவைச் சேர்ந்தவர் என்பதனால் ஒருவர் பெருமிதமடையத் தகுந்த விஷயம்.

உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றியிருப்பதென்பது எங்களுக்குப் பெருமிதத்தைத் தருகிறது; ஒருமைப்பாட்டுக்கான அறைகூவலை எப்போதுமே எங்களோடு கொண்டு செல்லும் அதே நேரம், அன்பு, புரிதல், அனைவருக்குமான மரியாதை—ஆகியவற்றின் தேவை குறித்தும் கற்றுக்கொள்கிறோம்.

இவையெல்லாம் இல்லையென்றால், இந்த உலகத்தை மாற்றிட முடியாது. இந்த உலகைக் கண்டிப்பாக மாற்றத்தான் வேண்டும்—நம்மால் இப்போது உள்ளபடியே வாழ்ந்துகொண்டே போக முடியாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s