(நூல்: நாம் செய்யவேண்டியது என்ன? ம.சிங்காரவேலர், பாரதி புத்தகாலயம்)
- ம.சிங்காரவேலர்
பூர்வ காலம் தொடங்கி அந்தந்த காலத்து அரசியல்கள் மதங்களை ஆதரித்து வந்திருக்கின்றன. மதங்கள் பரவியதற்கும் அரசியலே காரணம். “அரசன் எவ்வழியோ அவ்வழியே குடிகள்” என்ற முதுமொழி மதங்களுக்கும், அரசுகளுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்குகின்றது. இதனை ஆதி சாஸ்த்திர ஆராய்ச்சி மூலமாக நிரூபிப்போம். காட்டுமிராண்டி, (Savages) மந்திரக் காரன்தான், தலைவனாக மதிக்கப்பட்டிருந்தான். மந்திர தந்திரத்தில் வல்லவனே, நாகரிகமில்லாத காலங்களில், அரசனாகவும், சேனைத் தலைவனாகவும், ஆதிக்கமுடையவனாகவும், அந்தந்த ஊர் அரசியல் நிர்வாகங்களை நடத்தி வந்தான். இந்தக் காட்டு மிராண்டிப் பழக்கம், இன்றைக்கும் நமது நாட்டை ஆளும் (இங்கிலாந்து ப-ர்) அரசர்கள் முடியில், ‘டையு ஏ மாந் துருவர்’ (Diew et Mon Droit), அதாவது கடவுளும் என்னுடைய ஆட்சியும் என்று எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.
பண்டைக்கால அரசுகள் யாவும், கடவுளருளால் அல்லது ஆக்கினையால் பெறப்பட்டதென்பதே, அரசியல் திட்டத்தில் முதன்மையான சித்தாந்தம். மத்தியகாலத்தில் (Middle ages) பல அரசர்கள் தங்களுடைய ஆட்சியைக் கடவுளுடைய ஆட்சி என்றே வாதித்து வந்தனர். பதினான்காம் லூயி (Loui the fourteenth) பிரஞ்சு சேதத்தைக் கடவுள் உத்திரவு பெற்று அரசு புரிவதாகத் தன் பிரஜைகளுக்குத் தெரிவித்து வந்தான். ஜார் (Zar) சக்கரவர்த்திகள், ரஷ்யாவில் தாம் சிறிய பிதாவென (The Little Father) அழைக்கப்பட்டு அதாவது, பரலோகத்தில் உள்ள கடவுள் பெரிய பிதாவென்றும், தாம் சிறிய பிதாவெனவும் வழங்கி வந்தனர்.
ஆங்கில தேசத்தை ஆண்டுவந்த பிரஞ்சு அரசர்கள் யாவரும் தாங்களும் கடவுளும் ஒன்றெனவே எண்ணும்படி அரசு புரிந்து வந்தனர். கிருத்து மார்க்கம் ஏற்பட்டது முதல் ஸெயிண்ட் பீட்டர் (Saint Peter) முதல் இவ்வுலகை அரசு புரிந்த போப்புகள் (Popes) எல்லோரும். இவ்வுலகை ஆளும் கடவுளென்றே எண்ணி வந்திருக்கின்றனர். ஆட்சி ஹோலி ஸீ (Holy Sea) என்றே அழைக்கப்பட்டு வருகின்றது. பல நூற்றாண்டுகளாக, ரோமபுரியில் (Rome) போப் அவர்களே, பல சிற்றரசுகளை நியமிக்கவும், தள்ளவும், ஆதிக்கம் பெற்றிருந்தார். இன்றைக்கும், போப்புக்கும், முஸ்ஸோலினிக்கும் உண்டாயிருக்கும் வித்தியாசங்கள், இந்த ஆட்சி முறையைக் குறித்ததென அறிக.
கிறிஸ்துவ நாடுகளில், அரசர்களுக்கு முடி சூட்டுகின்றவர்கள், மதக்குருக்களே. சீமையில், (இங்கிலாந்தில்) மன்னர்களுக்கு முடி சூட்டுகின்றவர்கள், காண்டர்பரி ஆர்ச்பிஷப்புகளே. ஐரோப்பா தேசங்களில் பல ஊர்களில் அரசு மத ஆட்சியிலிருந்து விலக்கப் பட்ட போதிலும் (Separation of Church & State) அந்தரங்கமாக, மதத்தின் ஆதிக்கத்தை ஆதரிக்கும் பல கோடி பிரஜைகள் இருந்து வருகின்றார்கள்.
நமது இந்திய நாட்டிலும், இந்து சுயேச்சை மன்னர்கள், பிராமண செல்வாக்கை ஆதரித்து வந்தமையால்தான், இன்றைக்கும் இந்து மதம், பிராமண ஆதிக்கத்திற்குட்பட்டிருக்கின்றது. பண்டைக் கால முதல், மதகுருக்களே, அரசாங்கங்களில் மந்திரிகளாக இருந்து வந்திருக்கின்றனர். பாரத, ராமாயண காலங்களில், பிராமணர்களாகிய மகரிஷிகள், அரசியலில், எவ்வளவு செல்வாக்கைப் பெற்றிருந்தார்கள் என்பதை எளிதில் அளந்து பார்க்கலாம்.
அந்தக் காலத்துப் பிராமண ரிஷிகளின் செல்வாக்கை அறிந்து கெள்ள வேண்டுமென்போர், அயோத்தி நகரத்தில், தரசரத சக்கரவர்த்தியின் ராஜ சபையில், ரிஷிகள் வசித்திருந்த ஆதிக்கத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். பிராமண ரிஷிகளுக்கு, நமது நாட்டு அரசர்கள் அடிமைகளாகவே இருந்து வந்தனர். இந்தக் காட்சியை இன்றைக்கும், திருவாங்கூரிலும், சையாமிலும் (Siam) கண்காட்சியாகப் பார்க்கலாம். சரித்திர காலம் (Historic Period) முதல் அரசன் எந்த மதத்தைத் தழுவி வந்தானோ, அந்த மதத்தையே அவன் குடிகளும் ஆதரித்து வந்திருக்கின்றனர்.
2000 வருஷங்களுக்கு முந்தி நமது இந்தியாவில் அசோகச் சக்கரவர்த்தி, புத்தமதத்தைத் தழுவிய பிறகே, புத்த மதம் நாடு முழுமையும் பரவ ஆரம்பித்தது. 1500 வருஷங்களுக்கு முந்தி, ரோம புரியில் அரசாண்ட கான்ஸ்டான்டைன் (Constantine) சக்கரவர்த்தி கிருஸ்தவ மதத்தைக் கையாண்ட பிறகே, அம்மதம் ஐரோப்பா தேசங்களில் பரவி ஆதிக்கம் பெற்றது. இந்தியாவில் மகமதிய மதமும், கிறிஸ்துவ மதமும் பரவியுள்ளதற்குக் காரணம் அந்தந்த மதத்தைத் தழுவிய அரசுகள் நமது நாட்டை ஆண்டு வந்தமையால் என அறிக.
அரசியலில் இருந்து, மதச் செல்வாக்கை ஒழித்துள்ள ஊர்களில், மதம் ஆதரிக்கப்பட்டிருப்பதற்குக் காரணமென்ன வெனில் அரசு புரிந்து வரும் தலைவர்கள் மதப் பற்றுடையவர்களாதலால் நாஸ்திகம் பரவ இடமில்லாமலிருந்து வருகிறது. இஸ்பெயின் (Spain) தேசத்தில் மதஸ்தாபனங்களை அரசாங்கம் தலைவர்கள் சொத்துக்கு ஆசைப்பட்டார்களேயொழிய, மூடநம் கைப்பற்றியும், மதம் நிலைத்தே வருகின்றது. அங்கு தற்கால அரசியல் பிக்கைகளைப் போக்க முயற்சித்தார் ஒருவருமில்லை. பிரான்ஸ் (France) தேசத்திலும் பாதிரிமார்களை ஊரை விட்டுத் துரத்தவும், அவர்கள் கற்பனைகளை, மனிதர்களின் உள்ளத்திலிருந்து துரத்தவும் பிரயாசைப்பட்டார் யாருமிலர். இதுதான் உலகிலிருந்து மதத்தைப் போக்குவதற்குள்ள கஷ்டம்.
அரசியலை நடத்துகின்றவர்களுக்கு மதங்களை ஆதரிப்பதற்கு ஒரு பெருத்த காரணமுண்டு. மதங்களை அனுசரிப்பது, ஒரு பெரிய பொருளாதாரச் செல்வாக்கை அளிக்கின்றது. அரசியலில் செல்வாக்குடையவர்கள் யாவரும், பொருளாதாரச் செல்வாக்கைப் பெற்றுள்ளவர்கள். இவர்களை ஆதரிப்பவர்களில், பெரும்பான்மையோர், மதப்பற்றுடையவர்கள். இவர்களுடைய ஆதரவின்றி, அரசியல் அதிகாரிகளுக்கு ஆதிக்கம் வலுத்துவராது. ஆதலின் அரசியல் அதிகாரிகளுக்கு மதக்கற்பனைகளே, ஆதரவாக இருந்து வருகின்றன.
மதங்களை அரசியல் அதிகாரிகள் ஆதரிப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மதப்பற்றுடையோருக்குப் பகுத்தறிவு அதிக மிராது. இவர்கள் தங்கள் பகுத்தறிவைப் பூரணமாக உபயோகிப்பார்களானால், அதிகாரிகளுடைய சூழ்ச்சிகளை வெகுசுலபமாக அறிந்துகொள்ளலாம். பாமர ஜனங்கள் அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் வரை, அவர்கள் மூடத்தனத்தைக் கொண்டு அதிகாரிகள், தங்கள் ஆதிக்கத்தை நிலைக்க வைத்துக் கொள்ள இடமுண்டு. இதன் நிமித்தமாகவே, அதிகாரிகள் மதஸ்தர்களைப் பற்றித் தெளிவுபெறச் செய்ய இடம் கொடுப்பதில்லை.
உலகம் மூடத்தனத்தில் இருந்தால்தான், கொள்ளைக்காரர்களுக்கு லாபம். மூடத்தனத்தை ஆதரித்துவரும் ஸ்தாபனங்களில் மதம் முக்கியமானது. இதனைத் தழுவியும், ஆதரித்தும், வந்தால்தான், மூடத்தனம், உலகில் தழைத்தோங்கும். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அதிகாரிகள் தங்கள் ஆதிக்கத்தையும், செல்வாக்கையும் பெருக்கிக் கொள்ள முடியும். இந்தப் பொருளாதார அனுகூலத்திற்காகவே, அதிகாரிகள் “மத நடுநிலைமை” என்றும் மத விஷயத்தில் பிரவேசிப்பதில்லை என்றும் இன்னும் பல சாக்குப் போக்குகளைச் சொல்லிக் கொண்டு நாளைக் கழிப்பதென அறிக. அந்தந்த அரசாங்க ஆதரவாலேயே, அந்தந்த மதங்கள் அந்தந்த ஊர்களில் நிலைத்து வருகின்றன. முற்காலத்தைப் போல அரசுகள் மதங்களை வெளிமுகமாக ஆதரிக்காவிடினும், “மதநடுநிலைமை” என்ற கற்பனையை சிருஷ்டித்துக் கொண்டு, அதன் நிழலில் இருந்து கொண்டு, மதங்களை ஆதரித்து வருகின்றன.
மதங்கள், மதகுருமார்களுக்கும், அவர்களை அடுத்தோருக்கும், பல விதத்தில் அவர்கள் ஜீவனத்திற்கு அனுகூலமாகவே இருந்து வருகின்றன. அரசு செலுத்தும் அதிகாரிகளுக்கு அரசு புரிவதால் எவ்வளவு செல்வாக்கு கிடைக்கின்றனவோ அவ்வளவு செல்வாக்கும், ஆதிக்கமும், மதகுருமார்களுக்கு மதப்பற்றால் உண்டாகின்றன.
நமது தேசத்தில் மத ஆதரவில் பிழைத்து வரும் மடாதிபதிகள் எத்தனை? குருக்கள் எத்தனை? பூசாரிகள் எத்தனை? மந்திரத்தந்திரக் காரர்கள் எத்தனை? பண்டாரங்கள் எத்தனை? சோம்பித்திரியும் சந்நியாசிகள் எத்தனை? பைராகிகள் எத்தனை? பிச்சைக்காரர்கள் எத்தனை? இவர்கள் ஒருபக்கமிருக்க கோயில் ஸ்தாபனங்களாலும், மதஸ்தாபனங்களாலும், பிழைப்போர் எத்தனை? தர்மகர்த்தர்கள் எத்தனை? கோவில் சிப்பந்திகள் எத்தனை? மேளக்காரர், புஷ்பக்காரர், வாண வேடிக்கைக்காரர், பால்காரர், தயிர்க்காரர், பழக்காரர் எத்தனை? இதுவும் போதாமல் வாகனங்கள் செய்வோர் எத்தனை? குடைகள் செய்வோர் எத்தனை? கோவில் மராமத்து செய்வோர் எத்தனை? புதிய கோவில்களும், சமாதிகளும் கட்டுவோர் எத்தனை?
நமது தேச முழுமையும் பழைய கோவில்கள் இடிய, இடிய புதுக்கோவில்கள் கட்டப்பட்டே வருகின்றன! மதத்தால் பிழைக்கும் நமது நாட்டுப் பிரஜைகள் ஒரு கோடிக்குமேல் இருக்கலாம். இதுவும் போதாதென நமது காருண்ய அரசாங்கத்தார், மதஸ்தாபன கமிட்டி (Religious Endowment Board) ஒன்றை ஏற்படுத்தி அதனால் பல பேருக்குப் பிழைப்புத் தேடி வைத்துளர். இதற்கு நமது மாகாண ஜஸ்டிஸ் கட்சியார் புண்ணியங்கட்டிக் கொண்டார்கள்!!
இவ்வளவுபேர் நமது நாட்டு மக்கள் நமது மதங்களால் ஜீவித்து வருகின்றனர். இவர்கள் எல்லோரும் இந்து மார்க்கத்தினர். கிறிஸ்துவ மார்க்கத்தை எடுத்துக் கொண்டாலும், மகமதிய மார்க்கத்தை எடுத்துக் கொண்டாலும், இவ்விரு மதங்களால் பிழைத்து வரும் மக்கள் எத்தனை? கத்தோலியர் கூட்டத்தில் எத்தனை பேர் ஆணும், பெண்ணும் மாதாகோவில் மூலமாகவும், கன்னி மடங்கள் மூலமாகவும் ஜீவித்து வருகிறார்கள்? பிராடஸ் டண்ட் (Protestant), மார்க்கத்தில் எவ்வளவு பிஷப்புகள் (Bishops), ஆர்ச்பிஷப்புகள் (Archbishops), டீகன்ஸ் (Deacons), சாப்டர்ஸ் (Chapters), எல்டர்ஸ் (Elders or Presbyters) முதலியவர்கள், முகமதிய மார்க்கத்திலும் மௌலிகளும், மெளலானாக்களும் காஜிகளும் நிறைந்துள்ள பத்திலொரு பங்கும் மதங்களால் ஜீவனம் புரிந்து வருவதாக மொத்தத்தில் உலகிலுள்ள 170, 180 கோடி ஜனங்களில் எடுத்துக் கொள்ளலாம்!
இவ்வளவு பேரும் கற்பனையை வளர்த்தும், ஆதரித்தும், கோடான கோடி மாந்தர்கள் மூடபழக்கத்தில் ஜீவனத்தை நடத்தி வருகின்றார்கள் என்றால் மதங்கள் மிகவும் தலைமுறையாக ஆழ்ந்து கிடந்துவர தங்கள் பொருளாதார நன்மையாக இருந்து வருகின்றதென்று சமுதாயிகள் அதாவது சமதர்மவாதிகள் சொல்வது எவ்வளவு பொருத்தமுள்ளது என்பதை நினைக்க வேண்டி இருக்கின்றதென்பதைப் பாருங்கள்? இவ்வளவு ஆதிக்கத்தையும், செல்வாக்கையும், ஜீவஉபாயத்தையும், மதங்கள் கோடான கோடி மக்களுக்கும் அளிப்பதென்றால் மதங்களை ஒழிப்பது லேசான காரியமாகுமா?
இவ்வளவும் எந்தக்காரியத்திற்கென்றால், அவித்தை அதாவது மூடதனத்தை (Ignorance) வளர்க்கவும், பகுத்தறிவைக் கொல்லவும் என அறிக. இவ்வளவு அனர்த்தத்திற்கும், உலக அரசுகள் சாட்சி நின்று கொண்டு “மதநடு நிலைமை” என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு ஆஷாடபூபதி வேஷம் பூண்டு நிலைத்து வருகின்றன. இந்தப் பல்லவியைத்தான் நமது தேச காங்கிரசும் அதன் அதிபதியாகிய காந்தியாரும் பாடுகின்றார்கள். இனியும் பாடவும் போகின்றார்கள்.
மதங்கள் மூடத்தனத்தை வளர்ப்பதென்றால் இவ்வளவு செல்வாக்கும் அதற்கு எப்படி வந்ததென்று கேட்கலாம்? சிலருக்கு ஜீவன உபாயமும், செல்வாக்கும் ஆதிக்கமும் இருத்தலால் மதம் மூடத்தனத்தை வளர்த்து வந்த போதிலும் அழியாமலிருந்து வருகின்றன என்று அறியலாம்.
ஆதி மதங்களை உண்டாக்கிய மந்திரக்காரனே அரசனாக வாவது அல்லது தலைவனாகவாவவது இருந்து வந்தான். அவன் அதிகார ஸ்தாபனத்தில் வந்த சிற்றரசுகளும், பேரரசுகளும், தாங்களே உலகக் கடவுளென (Gods on Earth)வும் எண்ணி வந்திருக் கின்றனர். இருபதாம் நூற்றாண்டிலும் பல அரசர்கள் மதகுருமார்களிடமிருந்தே தங்கள் கிரீடத்தைப் பெருகின்றார்கள். மகுடாபிஷேகங்களில் பிராமணர்களே நமது நாட்டு அரசர்களின் மகுடத்தை ஆசிர்வதித்து அரசன் தலையில் வைக்கிறார்கள். கீரிடத்தை வைக்கும் போதெல்லாம் கிரீடம் தங்களுடையதென்றே சொல்லி அரசன் முடியில் வைக்கின்றார்கள். இன்னும் நாடுகளில் பிராமணர்களுக்கே சில அரசர்கள் அடிமைகளெனவே நடந்து கொள்கின்றார்கள்.
இன்றைக்கும் அரசன் எந்த மதத்தைச் சேர்ந்தவனோ அந்த மதத்தையே அவனது குடிகளும் அனுசரித்துள்ளார். ஐரோப்பா தேசம் முழுமையும், (ரஷ்யாவைத் தவிர) கிறிஸ்து மத அரசர்களா ஓர் தலைவர்களாலும் (Presidents) ஆளப்பட்டு வருகின்றது. ஆதலின் பெரும்பான்மையான ஐரோப்பியரும், கிறிஸ்துவர்களே. மதங்ளால் மதகுருமார்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மகந்துகளுக்கும் ஜீவனமூண்டு.
கோயில்களாலும் அவைகளால் நடக்கும் உற்சவங்களாலும் அனேக கோடி மக்கள் பிழைத்து வருகின்றார்கள். அவர்களை நோக்கி மதங்களை ஒழியுங்களென்றால் இலேசில் ஒழிப்பார்களா? மதங்கள் மனிதருடைய மூடத்தனத்தை வளர்க்கின்றமையால் மூடத்தனத்தைக் கொண்டு பாமர மக்களைப் பல அரசர்கள் ஆண்டு வரச் சந்தர்ப்பம் நேரிடுகின்றபடியால் அரசுகளும் மதத்தை ஆதரித்து வருகின்றன.
இத்தியாதி ஆதாரங்களைக் கொண்டு பலப்படுத்தியிருக்கும் மதங்களை ஒழிக்க வேண்டுமென்றால் இலேசில் ஆகும் காரியமா? இதனை நமது சுயமரியாதைத் தலைவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். 100 வருஷங்களாக மெஞ்ஞானமும், பகுத்தறிவு சங்கங்களும் ஆங்கில நாடுகளில் உழைத்து வந்தும் மதக்கற்பனைகள் பெரும்பான்மையோரிடமிருந்து ஒழியவில்லை என்றால் நமது நாட்டில் வைரம் பெற்றிருக்கும் மூடமதங்களைச் சுலபத்தில் ஒழிக்க முடியுமா வெனச் சிந்திக்க வேண்டும்.
இந்த முக்கிய பிரச்சனையைச் சரித்திர மூலமாகவும், நியாய மூலமாகவும் விசாரித்து அறிந்த முடிவு என்னவெனில், அரசுகள் மதப்பற்றை ஆதரிக்கும்வரை மதங்கள் நமது நாட்டை விட்டு ஒழிவது முடியாத காரியமே. நாஸ்திகம் தழைக்க வேண்டுமானால், அரசும் நாஸ்திகத்தைத் தழுவ வேண்டும். இரண்டாவது அப்படி அரசியலை நாஸ்திகமாக மாற்றிக் கொண்டாலும் தற்காலம் வாழும் மக்கள் பெரும்பான்மையோர் நாஸ்திகமாவது கஷ்டம். ஆனால் நமது நோக்கத்தை நமது குழந்தைகள்பால் செலுத்த வேண்டும்.
இனிவரும் சந்ததியாரை நாஸ்திகத்தில் வளர்க்க வேண்டும். அதற்கு நமது வீடுகளிலும், நமது பள்ளிக் கூடங்களிலும், நமது கல்விச் சாலைகளிலும் மூடத்தனத்தை உண்டாக்கும் மதத்தை நீக்கி, நாஸ்திகம் என்று சொல்லப்படும். சமதர்மக் கொள்கைகளைக் கற்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம்தான் வருங்காலத்தி லாவது நமது மக்களைச் சமதர்மக் கொள்கையுடைய பிரஜைக ளாக்கச் செய்ய முடியும்.
(குடியரசு, 28.02.1932)