அபிநவ் சூர்யா
“லெனின்” என்றவுடன் நம்மில் பலருக்கும் மனதில் முதலில் தோன்றுவது பெட்ரோகிராட் நகரத்தில் மாபெரும் உழைக்கும் மக்கள் திரளின் முன்பு “சர்வதேச சோசலிச புரட்சி வாழ்க!” என கோஷமிட்ட நாயகனின் பிம்பம்தான். 20ம் நூற்றாண்டில் உலகெங்கிலும் உள்ள சுரண்டப்பட்ட மக்களின் நம்பிக்கை ஒளியாக மாறிய மாபெரும் ஆளுமை லெனின் என்றால் அது மிகை ஆகாது.
லெனின் ஒரு புரட்சியாளர். உலகத் தலைவர். ஆனால், இந்த வண்ணமிகு புகழாரங்களைத் தாண்டி, அவர் “மார்க்சிய தத்துவத்தை செயலில் நிறுவிக் காட்டியவர்” என்பதுதான் நமக்கு முக்கியமான படிப்பினையாக இருக்கும். பாட்டாளி வர்க்கம், புரட்சியின் மூலம் இந்த சுரண்டல் நிறைந்த முதலாளித்துவ சமுதாயத்தை தூக்கி எறிந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியை நிறுவும் என்பது, அதுவரை ஒரு ஏட்டுக் கணிப்பாக மட்டுமே இருந்து வந்தது. அதை நிறுவிக் காட்டிய அக்டோபர் புரட்சிக்கு தலைமை தாங்கியவர் லெனின்.
மார்க்சிய தத்துவத்தின் மிக முக்கிய சாராம்சம் எது என பார்த்தால் அது “இயங்கியல் பொருள்முதல்வாதம்” தான் என நாம் அறிவோம். லெனின் ஒரு செயற்பாட்டாளர். “என்ன செய்ய வேண்டும்?” என்ற புத்தகத்தை எழுதியவர். அவர் மார்க்சிய தத்துவத்திற்கு என்ன பங்காற்றினார்?
“இயங்கியல்” கோட்பாட்டின் தந்தை என கருதப்படும் ஹெகல் எழுதிய “தர்க்கத்தின் அறிவியல்” (Science of Logic) என்ற நூலை லெனின் 1914-15 கால கட்டத்தில்தான் படித்தார். ஆய்வு வட்டங்களில் சிலர், லெனின், ஹெகலை படிப்பதற்கு முன்னால், இயங்கியல் பொருள்முதல்வாத கோட்பாடு குறித்து அறிந்திருந்தாலும், அவரின் சிந்தனைகளில் ஒரு எந்திரப் பார்வைதான் நிலவியது எனக் கூறும் வழக்கம் உண்டு. ஹெகலை படித்த பிறகுதான் “இயங்கியல்” குறித்த முழுமையான புரிதல் பெற்றார் என்றெல்லாம் அவர்கள் கூறுவர். ஆனால் இது உண்மைக்கு முற்றிலும் மாறானது. இதுபோன்ற வாதங்கள், லெனினின் துவக்க கால படைப்புகளை தவறென சித்தரித்து, கருத்துமுதல்வாத கோட்பாடுகளை முன்நிறுத்தும் உத்தி.
லெனினின் செயல்பாடுகள் அனைத்தும் இயங்கியல் பொருள்முதல்வாத அடிப்படையில்தான் இருந்தது என்பது நமக்கு தெரிந்ததே. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே லெனினின் எழுத்துகளிலும், சிந்தனைகளிலும், நிலைபாடுகளிலும் கூட தொடர்ந்து நிலவும் “இயங்கியல்” பார்வையை நம்மால் பார்க்க முடியும். சொல்லப்போனால், லெனினின் எழுத்துக்களை கூர்ந்து ஆய்வு செய்தால், “இயங்கியல்” குறித்த நம் புரிதல் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், மார்க்சியத்தின் “இயங்கியல் பொருள்முதல்வாத” தத்துவத்தையே அவர் மெருகூட்டியிருக்கிறார் என்பது நமக்கு விளங்கும்.
மார்க்சும் ஏங்கல்சும் ஹெகலின் “இயங்கியல்” தத்துவத்தை போற்றி எழுதிய அதே வேளையில், அதை பொருள்முதல்வாதத்துடன் இணைத்து, அறிவியல் தத்துவத்தை உருவாக்கினர். ஆயினும், அன்று பல மார்க்சிஸ்டுகளும், ஹெகலிய பாணியில் “இயங்கியல்” என்பதை “ஆய்வுக் கருத்து – எதிர்கருத்து – தொகுப்பு” என்ற மும்முனை அம்சம் கொண்ட தத்துவமாகவே அணுகினர். ஆனால், ஒவ்வொரு நாளும் மார்க்சியத்தை செயலில் அமலாக்க துடித்த லெனின், இயங்கியலை வேறு பாணியில் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். “சமூகத்தை, தொடர்ந்து மாற்ற நிலையில் இருந்து கொண்டிருக்கும் ஒரு உயிரினம் போல” புரிந்து கொள்வதே சரியான இயங்கியல் பார்வை என எளிமையாக விளக்கினார். “ஒரு நிகழ்வின் அனைத்து நிதர்சனமான சூழல்களையும், அதன் வளர்ச்சியையும் ஆய்வு செய்யும் முறையே” இயங்கியல் என அவர் வரையறுத்தார். செயலில் ஈடுபடும் மார்க்சியவாதிகள், “எப்போதும் எல்லா இடத்திலும் பொருந்தும்” செயல்முறைகளை/விதிமுறைகளை தேடுவது என்பது இயங்கியலுக்கு எதிரானது என வாதிட்டார்.
ஹெகலை படித்த லெனின், “இயங்கியலின் சுறுக்கக் குறிப்பு ” (Summary of Dialectics) என்ற குறிப்பை எழுதி, இயங்கியலின் முக்கிய கூறுகளாக கூறுவது.
- ஒரு பொருளை மற்ற அனைத்திற்கும் அதனுடன் உள்ள தொடர்புடன் அதை ஆய்வு செய்து, அதன் வளர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும்.
- நிகழ்வின் எதிர்மறையான/முரண்பாடான சக்திகளையும் அதன் போக்கையும் புரிந்து கொள்ள வேண்டும்.
- எதிர்மறைகளின் உறவாடல் மற்றும் அதன் தொகுப்பு/அதன் மூலம் ஏற்படும் மாற்றம் அவற்றின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
இவையே இயங்கியலின் அம்சங்கள் என குறிப்பிடுகிறார். இந்த முக்கிய அம்சங்களின் அடிப்படையில் லெனினின் அரசியல் செயல்பாடு மற்றும் அவர் சிந்தனைகளை பற்றி புரிந்து கொண்டு, “இயங்கியல்” பார்வை குறித்து லெனினியம் நமக்கு அளிக்கும் பாடம் குறிந்து இந்த கட்டுரை ஆராய முனைகிறது.
பொருள்முதல்வாத பார்வை
லெனின் எதற்காக ஹெகலை படித்தார்?
ஹெகல் கூறிய அனைத்தையும் அப்படியே பிரகடனம் செய்யவா? இல்லை!
நாம் அறிந்ததுபோல், ஹெகலின் “இயங்கியல்” என்பது “கருத்துமுதல்வாத” அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. ஆனால் லெனின், ஹெகலை படிக்கையில் அதை பொருள்முதல்வாத பார்வையுடன் படித்தார்.
ஹெகலை படித்த லெனின், அந்நூல் குறித்த குறிப்புகள் எடுக்கையில், ஒவ்வொரு முறையும் ஹெகல் கூறிய கருத்துமுதல்வாத கருத்துகளை அப்படியே தலை கீழாக மாற்றி, பொருள்முதல்வாத அடிப்படையில் எழுதி வந்தார்.”மனிதனின் இருப்பே சிந்தனையை தீர்மானிக்கின்றது” என்பதுதானே மார்க்சிய புரிதல்? நாம் பெரும்பாலும் எதைப் பற்றி சிந்திக்கிறோம்? நம்மை சுற்றியுள்ள சூழல் பற்றி, நாம் செய்யும் வேலை பற்றி, நம் வாழ்க்கைநிலை பற்றி, நம் உறவுகள் பற்றி.. இதுபோல நம் பொருள்நிலை சூழல் தான் நம் சிந்தனையை தீர்மானிக்கின்றது.இதுவே நாம் சமூகத்தை ஆய்வு செய்வதிலும் அடிப்படையாக இருக்க வேண்டும். “உண்மையாக நிதர்சனமாக இருக்கும் நிலையை, சமூக உறவுகளை, நாம் ஆராய கற்றுக்கொள்ள வேண்டும். அது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதோடு நாம் அதை குழப்பிக் கொள்ளக் கூடாது” என்கிறார் லெனின். உதாரணமாக, நெருக்கடிக்குப் பின் வளர்ச்சிப் பாதையில் சிறு காலம் முதலாளித்துவ பொருளாதாரம் பயணிக்கையில், அக்காலத்தில் மக்களுக்கு முதலாளித்துவ சமூகம் குறித்து ஆதரவு எண்ணம் இருக்கலாம். ஆனால் நாம் “ஏன் முதலாளித்துவம் நல்ல பொருளாதார முறை?” என்பதைப் பற்றியா ஆராய வேண்டும்? இல்லை. இன்றைய சூழலில் முதலாளித்துவம் எப்படி இயங்குகிறது, அது எவ்வாறு மீண்டும் நெருக்கடியை நோக்கி பயணிக்கிறது என்பதைப் பற்றித்தானே ஆராய வேண்டும்? இதுவே மார்க்சிய இயங்கியல் பார்வையின் அடிப்படை.
இதையே லெனின் அழுத்திக் கூறினார். “மனிதனின் சிந்தனைக்கு வெளியே, சுதந்திரமாக, பொருட்கள் (பொருளியல் நிலை) நிலவுகிறது என்ற முக்கியமான அம்சத்தை ஹெகல் மறைக்கிறார்” என லெனின் எழுதுகிறார். இந்த “முக்கியமான” அம்சத்தை நிலைநாட்டவே, ஹெகலை படிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, லெனின் “பொருள்முதல்வாதமும், அனுபவவாத விமர்சனமும்” (Materialism and Empirio-criticism) என்ற நூலை (1908ல்) எழுதினார். வரலாற்றின் பல ஆய்வாளர்களின் தத்துவங்கள், சமகால வாதங்கள் என அனைத்தையும் ஆய்வு செய்து, அவற்றில் இருக்கும் கருத்துமுதல்வாத அம்சங்களை தவிடுபொடி ஆக்கும் நூல் அது. மேலும் முக்கியமாக, எவ்வாறு “இயற்கை” என்பது மனிதனின் மூளைக்கு வெளியே, நிதர்சனமாக நிலைக்கும் உண்மை என்பதையும், அக்கால அறிவியல் ஆய்வு முறையில் நிலவும் நெருக்கடிகளையும், கருத்துமுதல்வாத போக்குகளையும் அம்பலப்படுத்தி எழுதினார்.
ஆக, ஒரு மனிதனால் எந்த மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பது அவனின் விருப்பு வெறுப்புகளை சார்ந்து அல்ல. மாறாக பொருளியல் நிலையின் வளர்ச்சி மற்றும் வர்க்கப் போராட்டதின் நிலை சார்ந்தே உள்ளது என்பதை மீண்டும் அழுத்திக் கூறினார் லெனின்.
ஆனால் “இருப்பே சிந்தனையை தீர்மானிக்கின்றது” என்று பொருள்முதல்வாத நிலைபாட்டை சரியாகக் கூறும் மார்க்சியவாதிகள் பலரும், அதில் இருக்கும் “இயங்கியல்” போக்கை மறந்து விடுகின்றனர். தன் பொருளியல் சூழல் குறித்து சிந்திக்கும் மனிதன், அந்த சிந்தனையின் அடிப்படையில் செயல்படவும் செய்கிறான் அல்லவா? அந்த சிந்தனையின் அடிப்படையில் மேற்கொள்ளும் செயல்பாடு, பொருளியல் சூழலையும் மாற்றி அமைக்கிறது அல்லவா? இவ்வாறு பொருளியல் சூழலுக்கும், மனித சிந்தனைக்கும் இடையே நிலவும் இயங்கியல் போக்கை பலரும் மறந்து விடுகின்றனர். இதனால் தான் “மனிதனின் சிந்தனை நிதர்சனமான பொருளியல் சூழலை வெறும் பிரதிபலிப்பது மட்டும் இல்லை. அதை உருவாக்கவும் செய்கிறது” என லெனின் எழுதுகிறார்.
உதாரணமாக, ஒரு ஆலை தொழிலாளியின் இருப்பே அவன் சிந்தனையை தீர்மானிக்கின்றது என்றால், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அவரிடம் போய் எதற்காக பிரச்சாரம் செய்ய வேண்டும்? “அவர் இருக்கும் நிலை மாறும்பொழுது, அவரின் சிந்தனையும் மாறும்” என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்கலாமே? ஆனால், நாம் ஏன் தொடர்ந்து முதலாளித்துவ ஏகாதிபத்திய சுரண்டல் குறித்து பிரச்சாரம் செய்கிறோம்? ஏனென்றால் சூழல் எவ்வளவு மோசமாக மாறினாலும், வர்க்க உணர்வு ஏற்பட்ட தொழிலாளிகளால் மட்டும்தான் இந்த சமூக அமைப்பை மாற்றி அமைக்க முடியும். நம் பிரசாரங்களின் விளைவாக சங்கமாக இணையும் தொழிலாளர்கள் தானே நல்ல கூலி மற்றும் பணியிட சூழலுக்காக போராடுகின்றனர்? அது பொருளியல் தளத்தில் ஒரு சிறு மாற்றத்தை உண்டாக்குகிறது அல்லவா? இன்று நாம் மேற்கொள்ளும் பிரச்சாரங்கள் அனைத்தும், அனைத்து தொழிலாளர்களையும் சென்றடையாமல் இருக்கலாம். ஆனால், முதலாளித்துவ நெருக்கடி மோசம் அடையும் பொழுது, புரட்சியை நோக்கிய வர்க்க உணர்வு உண்டாக நம் பரப்புரைகள் அவசியமாகும். அதனால் தானே “கிளர்ச்சி-பிரச்சாரம்” (Agitprop) மேற்கொள்வதில் தேர்ந்த திறன் பெற்ற கட்சியை உருவாக்குவதே தலையாய கடமை என லெனின் எழுதினார். (“என்ன செய்ய வேண்டும்?”).
பொருள்முதல்வாத பார்வையை முன்வைக்கும்பொழுது, பொருளியல் சூழலில் ஏற்படும் வளர்ச்சிகளை புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் புரட்சிகர மாற்றத்தை உழைக்கும் வர்க்கம் நிகழ்த்துவதற்கான ஆயுதமாக அமையும் தத்துவக் கருத்துக்களை வளர்த்தெடுப்பது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான கடமை ஆகும்.
அனைத்தின் இணைப்பு – வரலாற்று சூழல்
அடுத்ததாக பொருள் (பொருளியல் சூழல்) குறித்து ஆய்வு செய்யும் பொழுது, அந்த பொருளை தனியே புரிந்து கொள்ள முடியாது. எந்த ஒரு பொருளும் மற்ற அனைத்து பொருட்களுடனும் இணைப்பில் தான் உள்ளது. இதுவே “இயங்கியல்” முறையின் அடுத்த முக்கிய அம்சம். முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் பலரும், பொருளாதாரத்தை புரிந்து கொள்ள முற்பட்டு, “ஒரு தனி மனிதன், அவனின் ஆசை, தேவை, கிராக்கி இப்படி அப்படி இருக்கலாம். இவ்வாறு அனைத்து மனிதர்களையும் கூட்டினால் பொருளாதாரத்தில் கிராக்கி இப்படி இருக்கும்” என புரிந்து கொள்வர். இதனால்தான் முதலாளித்துவ பொருளாதார ஆய்வு முறை முற்றிலும் தவறான ஆய்வு முறை. எந்த பொருளும் (மனிதனும்) எல்லா சமயங்களிலும் மற்ற அனைத்தினோடும் தொடர்பில், ஓர் உறவில்தான் உள்ளது. இந்த முழுமையை கணக்கில் கொண்டுதான், அந்த முழுமையில்தான் அந்த பொருளை ஆய்வு செய்து புரிந்து கொள்ள முடியும்.
எடுத்துக்காட்டாக, சென்னையில் ஃபாக்ஸ்கான் ஆலையில் போராடும் தொழிலாளர்கள், அவர்களின் அன்றாட உணவு, இருப்பிட தேவைக்காக போராடலாம். ஆனால், அதை புரிந்து கொள்ளும் நாம், அப்போராட்டத்தை தனியே புரிந்து கொள்ள முடியாது. இந்த போராட்டம் நவ தாராளமய கொள்கைகள் காலத்தில், அதை தீவிரமாக அமலாக்கும் இந்துத்துவா அரசின் காலத்தில் நடக்கிறது. இங்கே நவ தாராளமாய கொள்கைகளை தழுவி, அதற்காக தொழிலாளர்களை கைவிட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க மட்டுமே முனையும் பிராந்திய முதலாளித்துவ கட்சியின் மாநில அரசாங்கம்தான் உள்ளது. இந்த நிறுவனம் உலகளவில் தொழிலாளர்களை சுரண்டி லாபத்தை கூட்டும் ஐஃபோன் நிறுவனத்திற்கு உற்பத்தி செய்கிறது. இந்த சர்வதேச சுரண்டலானது, சர்வதேச நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தில், ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இவ்வாறு அனைத்தினோடும் தொடர்புடைய சூழலில்தான் இந்த போராட்டம் நிகழ்கிறது. இவ்வாறுதான் இதை புரிந்து கொண்டு ஆய்வு செய்ய முடியும்.
நாம் மேலே கண்ட எடுத்துக்காட்டை பார்த்தாலே, முக்கியமான ஒரு படிப்பினை கிட்டும். ஒரு நிகழ்வை அதன் எல்லா இணைப்புகளோடும் சேர்த்து பார்க்கும் பொழுது, வரலாற்று ரீதியாக அந்த நிலை எவ்வாறு உருவானது, இன்று அதன் சூழல் எவ்வாறாக உள்ளது என்று ஆய்வு செய்த பின்னர்தான் அந்த நிகழ்வை நாம் புரிந்து கொள்ள முடியும். இதுவே “லெனினிய இயங்கியலின்” ஆகச்சிறந்த படிப்பினையாகும். நாம் ஒரு நிகழ்வை ஆய்வு செய்யும் பொழுது, அதே நிகழ்வில் “மார்க்ஸ் என்ன சொன்னார்?, லெனின் என்ன செய்தார்?” என புத்தகங்களை மனப்பாடம் செய்து விளக்கம் அளிப்பது போதுமானதல்ல. அந்த நிகழ்வின் வரலாற்று மற்றும் நிதர்சனமான சூழல் என்ன என்பதை புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து திட்டம் வகுப்பதுதான் மார்க்சியவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம். இதனால்தான் லெனின், “எந்த ஒரு முன்மொழிவையும் வரலாற்று ரீதியாக, அனைத்தினுடனான இணைப்புகளுடனும் சேர்த்து, வரலாற்றின் நிதர்சனமான அனுபவங்களுடன் இணைத்து புரிந்து கொள்வதே” மார்க்சியத்தின் சாரம் என்கிறார்.
நம் இந்திய சூழலிலிருந்தே இதை நாம் புரிந்து கொள்ள முடியும். சிபிஐ(எம்) கட்சியானது இந்திய சமுதாயத்தின் வரலாற்று சூழலையும், இன்றைய தேசிய சர்வதேச சூழலையும், வர்க்க போராட்டத்தின் நிலையையும் “இயங்கியல்” பார்வையில் புரிந்து, கட்சி திட்டம் உருவாக்கி, அதன் அடிப்படையில் உத்திகள் அமைத்து செயல்படுகிறது. ஆனால், அன்று மாவோயிஸ்டுகளும் சரி, இன்று பல்வேறு அதி தீவிர இடதுசாரி அமைப்புகளும் சரி, கட்சியின் பல்வேறு நிலைபாடுகளை விமர்சித்து, “சிபிஐ(எம்) என்பது புரட்சிகர கட்சியே இல்லை. கம்யூனிஸ்ட்கள் புரட்சிகரமான நிலைபாட்டை எடுக்க வேண்டும்” என சாடுகின்றனர். வரலாற்று அனுபவங்கள் அனைத்துமே, சிபிஐ(எம்)-மின் நிலைபாடு பெரும்பாலும் சரியானதாக இருந்துள்ளதைக் காட்டுகிறது. ஆக, அன்று ரஷ்ய கம்யூனிஸ்டுகளான போல்ஷவிக்கள் எவ்வளவு புரட்சிகரமாக இருந்தார்கள், அதனால் நாமும் அதே நிலைபாட்டை எடுக்க வேண்டும் என்பது தவறான இயங்கியல் பார்வை. “நாம் எப்போதும் ‘அனைவரை விடவும் புரட்சிகரமாக இருக்க வேண்டும்’ என்ற முழக்கத்தை வைக்க மாட்டோம்” என்கிறார் லெனின். வர்க்க நலனிற்கு பயனளித்த ஒரு உக்தி, மாறிய சூழலில் அபாயகரமாக அமையலாம் என்றும், நிலையான, மாறாத கட்டளைகளை நம்பி மார்க்சிஸ்டுகள் செயல்படக் கூடாது எனவும் கூறினார்.
சூழலுக்கேற்ப புரட்சிகரமான நிலைபாட்டை லெனின் எவ்வாறு எடுத்தார் என்பதை அக்கால ரஷ்ய சூழலை புரிந்து கொண்டால் நமக்கு விளங்கும். முதலாம் உலகப் போர் துவங்கியபோது, முதலில் ஜெர்மனிதான் போர் முழக்கம் விடுத்தது. இதனால் இது ரஷ்யா துவங்கிய போர் இல்லை என்றும், இதனால் தாய் நாட்டை காக்க இந்த போரில் ரஷ்ய ராணுவத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் சில திரிபுவாத சக்திகள் ரஷ்யாவில் முழக்கமிட்டனர். ஆனால், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக, லெனின் அந்த போர் நடக்கும் சூழலை விளக்கிப் பேசினார். பல ஆண்டுகளாக முதலாளித்துவம் ஏகபோக நிலையை நோக்கி பயணித்து, நிதி மூலதனத்தின் ஆதிக்கம் விரிந்து, ஏகாதிபத்திய சூழல் நிலவுவதை விளக்கிய லெனின், இந்த சூழலில், இந்த போரை யார் தொடங்கியது என்ற கேள்வியே வீணானது என்றும், இது ஒரு ஏகாதிபத்திய போர் என்றும், இதை உழைக்கும் வர்க்கம் முற்றிலுமாக எதிர்க்க வேண்டும் என்றும் விளக்கினார்.
ரஷ்யப் புரட்சிக்கு பின்னரும் கூட, “முழுமையான முதலாளித்துவத்திற்கு பின்னரே சோசலிசத்தை நோக்கி செல்ல முடியும் என மார்க்ஸ் விவரித்து இருக்கிறார்” எனக் கூறி, சோசலிசத்தை நோக்கிய பயணத்தை எதிர்த்த இடதுசாரிகளுக்கு பதில் அளித்தார் லெனின். “சோசலிசம் குறித்த பலனற்ற கேள்விகளை எழுப்புவதற்கு பதிலாக, சோசலிசத்தை நோக்கி முன்னேறாமல் இந்த போர் ஏற்படுத்திய காயங்களை குணமாக்க முடியுமா என்ற நிதர்சனமான கேள்வியை கேளுங்கள்” என வாதிட்டார். நிதர்சனமான சூழலை புரிந்து கொள்வதும், சூழலுக்கேற்றவாறு உக்திகளை வகுப்பதுமே இயங்கியலின் சாராம்சமாக கருதினார் லெனின்.
ஆனால் 1920-30களில், ஏகாதிபத்திய போருக்கு பின்னரும், பொருளாதார நெருக்கடியாலும் ஏகாதிபத்திய சக்திகள் வலுவிழந்து இருந்த காலத்தில் சோவியத் ஒன்றியம் பாய்ச்சல் வேகத்தில் சோசலிசம் நோக்கி பயணித்தது.அது சரியான உத்தியாக இருந்தது. ஆனால், எல்லா நேரத்திலும் “பாய்ச்சல் வேக” மாற்றத்திற்கான உத்தி சரியானதாக இருக்கும் என சொல்ல முடியாது. இன்று, சோவியத் வீழ்ச்சிக்கு பின்னர், உலகளவில் சோசலிச சக்திகள் வலு குறைந்துள்ள வேளையில், ஏகாதிபத்திய சக்திகள் அசுர சக்தியுடன் தாக்கும் நவ தாராளமய காலத்தில், மக்கள் சீனம் “பாய்ச்சல் வேக” உத்தியை பின்பற்றவில்லை. தன் நாட்டு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, பல்வேறு வர்க்கங்கள், உடைமை முறைகளின் வளர்ச்சி ஆகியவற்றை ஆய்வு செய்து, 2049ற்குள் சோசலிச சமூகத்தில் அடி எடுத்து வைக்கும் “மிதமான மாற்றத்திற்கான” குறிக்கோளையே கொண்டுள்ளது.
நிதர்சனமான வரலாற்று பின்னணியையும், நிதர்சனமான சூழலையும் ஆய்வு செய்து, அதற்கேற்றார் போல உத்திகளை மாற்றக்கூடிய கட்சிதான் மக்களை விடுதலை பாதையில் வழி நடத்த முடியும்.
நிகழ்வின் வளர்ச்சி
1903ல் ரஷ்யாவில் கட்சியினுள் “போல்ஷ்விக்-மென்ஷ்விக்” பிளவு ஏற்பட்டு, உட்கட்சி போராட்டம் வளரத் துவங்கிய பொழுதே “நிதர்சனமான சூழலை புரிந்து கொள்ளாமல், நம் போராட்டத்தை புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அதை புரிந்து கொண்ட பின், வளர்ச்சி என்பது இயங்கியல் ரீதியாக தான் நிகழ்கிறது என்பது தெளிவாக தெரியும்” என்றார் லெனின். இது அவர் ஹெகலை படிப்பதற்கு பத்து ஆண்டுகள் முன்னால் எழுதுப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பொருளின்/நிகழ்வின் சூழலை புரிந்து கொண்ட பின்னர், அது எவ்வாறு வளர்ச்சி அடைகிறது, அந்த வளர்ச்சியின் காரணிகள் என்ன என்பதை புரிந்து கொள்வதுதான் நாம் அடுத்ததாக கவனிக்க வேண்டிய “இயங்கியல்” அம்சம். இதை லெனின் எழுத்துக்கள் வழி புரிந்து கொள்ள முடியும்.
‘நரோத்னிக்கு’கள் என்ற இயக்கம் ரஷ்யாவில் இயங்கி வந்த “மக்கள் செயற்பாட்டாளர்”களின் இயக்கம். அவர்கள் சிறு-குறு வேளாண் அமைப்பையும், ரஷ்யாவின் ஊரக வாழ்வியலையும் காக்க முற்பட்டனர். இதற்காக அவர்கள் ரஷ்யாவில் சிறு-குறு விவசாயிகளின் நிலை, அவர்களின் உடைமை, அவர்கள் மீது அரசு கொள்கைகளின் தாக்கம் என விரிவாக ஆய்வு செய்து, அன்றைய வர்த்தக சூழலால் இந்த வர்க்கம் சந்திக்கும் அவதிகளை அறிக்கையாக வெளியிட்டனர்.
நரோத்னிக்குகளை கடுமையாக விமர்சித்த லெனின், சிறு-குறு விவசாயிகளின் இன்னலை வெளிக்கொணரலாம், ஆனால் இன்றைய பொருளாதார சூழலில் அவதிகளுக்கு மாற்று என்பது ரஷ்யாவின் ஊரக வாழ்வியலில் தேடுவது என்பது அபத்தம் என விவரித்தார். ஏனென்றால், சிறு-குறு விவசாயிகள் உட்பட, அனைவரின் இன்னல்களுக்கும் மூலம், அங்கு நிலவும் முதலாளித்துவ சூழல்தான். இந்த முதலாளித்துவ ஏகாதிபத்திய சூழலின் வளர்ச்சி என்பது உழைப்பிற்கும்-மூலதனதிதிற்கும் இடையேயான மோதலில் அடங்கி உள்ளது என லெனின் விவரித்தார். இதை புரிந்து கொள்ளாத நரோத்னிக்குகளின் தரவுகள் எல்லாம் சரியானதாக இருந்தாலும், ஆய்வின் முடிவுகள் தவறானதாக உள்ளது என லெனின் குறிப்பிட்டார்.
மேலும் நரோத்னிக்குகளின் பிற்போக்குதனத்தை சரியாக விமர்சனம் செய்த சில மார்க்சியவாதிகள், அன்றைய ரஷ்ய பொருளாதாரத்தை எவ்வாறு சீரமைப்பது என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கும் விடை அளித்த லெனின், “நம் தேசிய பொருளாதாரம் என்பது முதலாளித்துவ பொருளாதாரம். அதை ஒருங்கிணைப்பது எல்லாம் முதலாளிகள்தான். அதை எவ்வாறு சீரமைப்பது என்ற கேள்விக்கு பதிலாக, முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சி குறித்த கேள்வியை முன்நிறுத்த வேண்டும்” என விமர்சித்தார்.
இன்றும் கூட இந்தியாவில் வேளாண் நெருக்கடி முற்றிவரும் வேளையில், நமது கலாச்சார தளங்களில் பல இடங்களில் கிராம வாழ்க்கையை பாராட்டி சித்தரிக்கும் போக்கு உள்ளது. ஆனால், லெனின் கூறியது போல், இந்த முதலாளித்துவ சமூகத்தின் அவலங்களுக்கான மாற்று அது கிடையாது.
சிபிஐ (எம்) கட்சி திட்டமும், மக்கள் ஜனநாயக புரட்சிக்கு பின் வேளாண் கேள்விக்கு என்ன கூறுகிறது? நில சீர்திருத்தம் மூலம் நில விநியோகம் செய்வது, சிறு-குறு விவசாயிகளுக்கு நிதி-ரீதியாக ஆதரவு அளிக்கும் அதே வேளையில், கூட்டுறவு மூலம் விவசாயிகளை குழுக்களாக ஒன்று திரட்டுவது, வேளாண் துறையில் நவீன தொழிற்நுட்பம் மூலம் உற்பத்தி சக்திகளை மேம்படுத்துவது என கட்சித் திட்டம் குறிப்பிடுகிறது. ஆக, இன்றைய அவல நிலைக்கான மாற்று கிராம சமுதாயத்தையும், சிறு-குறு விவசாயிகளின் வாழ்வியலையும் அப்படியே நீடித்து பாதுகாப்பதில் இல்லை.
பொருள்/நிகழ்வின் வளர்ச்சியை புரிந்து கொள்வது இயங்கியலின் முக்கிய அம்சமாகும. மாறா நிலை பார்வையில் (Metaphysical) சிந்தித்தால், நரோத்னிக்குகள் செய்த தவறையே நாமும் செய்ய நேரிடும்.
எதிர்மறைகளின் சக்திகளும், போக்குகளும்
இதுவரை, ஒரு பொருள்/நிகழ்வு/சமூகத்தை ஆய்வு செய்யும் பொழுது, அதன் அனைத்து இணைப்புகளையும் கண்டறிந்து, அதை குறிப்பிட்ட சூழலில் பொருத்தி, வளர்ச்சியை புரிந்து கொள்வதே இயங்கியல் என கண்டோம். எந்த ஒரு பொருள்/சமூக முறையும் உள்ளார்ந்த இயக்கத்தில்தான் (Self-Movement) இருக்கும். நிலையான, மாறாத பொருள் என எதுவும் கிடயாது. இந்த உள்ளார்ந்த இயக்கத்தின் மூலத்தை கண்டறிவதே இயங்கியல் பார்வையின் பிரதான கடமை. இந்த வளர்ச்சியின் மூலக்கரு அந்த பொருள்/சமூகத்தின் அகத்தில் உள்ள எதிர்மறை/முரண்பாடான சக்திகளில் அடங்கி உள்ளது. நாம் அறிந்ததுபோல் முதலாளித்துவ சமூகத்தில் இந்த மூலக்கருவானது தனியுடைமை குவியல் மற்றும் சமூகமயமாக்கப்பட்ட உழைப்பு, இரண்டிற்கும் இடையேயான முரண்டபாட்டில் உள்ளது. இது முதலாளி மற்றும் பாட்டாளி வர்க்கங்கள் இடையேயான மோதலாக வெளிப்படுகிறது. பாட்டாளி வர்க்கம் மட்டுமே இந்த முரண்பாட்டை இறுதிக் கட்டம் வரை இட்டுச் சென்று, போராட்டத்தின் நிறைவாக புரட்சியை நிகழ்த்த வல்ல வர்க்கமாகும். இந்த முரண்பாடு குறித்தும், சமூக வளர்ச்சியின் பாதையில் பாட்டாளி வர்க்கமே முன்னேறிய வர்க்கம் என்பதையும் லெனின் மிகத் தெளிவாக உணர்ந்திருந்தார்.
இங்கே முன்னர் குறிப்பிட்டது போல, சூழலை அறிந்து உத்திகள் வகுப்பதே இயங்கியலின் அடிப்படை அம்சம் என கண்டோம். ஆனால், அதற்காக இந்நாட்களில் தமிழகத்தில் பலர் மார்க்சியத்தின் பெயரால் மேற்கொள்ளும் அடையாள அரசியல் உத்திகளையும் இயங்கியல் பார்வையில் நியாயப்படுத்திவிட முடியுமா? இல்லை! இங்கேதான் முரண்பாடான சக்திகளை கண்டறியும் கடமை நமக்கு வழி காட்டுகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் பாட்டாளி வர்க்கம் மட்டுமே மிகவும் முன்னேறிய வர்க்கம் என்பது தெளிவாகிறது. லெனினை பொறுத்த வரையில் உத்திக்கான ஒரே ஒரு மாறாத கோட்பாடு உள்ளது என்றால், அது “பாட்டாளி வர்க்கத்தின் நலன்” மட்டுமே.
இப்படிப்பட்ட வர்க்க போராட்டத்தால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் “பாரபட்சமற்ற” சமூக அறிவியல் ஆய்வு என்பது இருக்கவே முடியாது என்பதிலும், வர்க்கங்களின் போராட்டத்தின் விளைவாக நிகழும் சமூக வளர்ச்சியில், பாட்டாளி வர்க்கப் பார்வை மட்டுமே அறிவியல் பூர்வமான கண்ணோட்டத்தை கொண்டுள்ளது என்பதிலும் லெனின் எக்காலத்திலும் உறுதியாக நின்றார்.
குறிப்பாக, பிளக்கனோவ் போன்ற ரஷ்ய அறிஞர்கள், மார்க்ஸ் 1848ல் ஜெர்மானிய புரட்சி சமயத்தில் மேற்கொண்ட ஆய்வை மேற்கோள் காட்டி, ரஷ்யாவில் தாரளவாத முதலாளித்துவ கட்சிகளின் முதலாளித்துவ ஜனநாயக போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரினார். இதை முற்றிலுமாக மறுத்த லெனின், ஏகாதிபத்திய முதலாளித்துவ சூழலில், ரஷ்யாவில் சுரண்டல் முறை ஜார் மன்னனின் ஒடுக்குமுறை ஆட்சியை சார்ந்தே உள்ளது என்பதையும், ஜனநாயக புரட்சிக்கான கடமைகளை பாட்டாளி வர்க்க தலைமையிலான புரட்சிகர அரசுதான் சாத்தியமாக்கும் எனவும் விவரித்தார். அக்காலத்தில் நகர்ப்புற பாட்டாளி வர்க்கமானது ரஷ்ய மக்கள் தொகையில் ஐந்து சதத்திற்கும் குறைவு. அதேநேரம், இயங்கியல் பார்வையில், முன்னேறிய வர்க்கத்தின் மீது நம்பிக்கை வைத்தார் லெனின். இந்த போல்ஷ்விக் நிலைபாட்டை விவரித்து, “தொழிலாளி – விவசாயி வர்க்கங்களின் புரட்சிகர-ஜனநாயக சர்வாதிகாரம்” (The Revolutionary-Democratic Dictatorship of the Proletariat and the Peasantry) என்ற அறிக்கையை 1905ல் வெளியிட்டார். இதே கோட்பாட்டை அடிப்படையாக வைத்துத்தான் மென்ஷ்விக்கள், அதி தீவிர இடதுசாரிகள், திரிபுவாதிகள், சீர்திருத்தவாதிகள் என அனைவரையும் புரட்சி வரை எதிர் கொண்டார்.
ஜனநாயக கோரிக்கைகளை பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க வேண்டும் என கூறும் அதே வேளையில், “ஏதேனும் ஒரு சமயத்தில், இவற்றில் எந்த ஒரு கோரிக்கையும் முதலாளி வர்க்கத்தின் கையில், உழைக்கும் வர்க்கத்தை ஏமாற்ற பயன்படாமல் இருந்ததே இல்லை” எனக் குறிப்பிடுகிறார் லெனின். “குடியரசிற்கான கோரிக்கை உட்பட, தன் எல்லா ஜனநாயக கோரிக்கைகளையும், முதலாளி வர்க்கத்தை தூக்கி எறியும் தன் புரட்சிகர போராட்டத்தின் கீழ் அடிபணியச் செய்யாமல், பாட்டாளி வர்க்கம் சுதந்திரமாக செயல்பட முடியாது” என அவர் குறிப்பிடுகிறார்.
பாட்டாளி வர்க்க நலனை முன்நிறுத்துதல் என்ற நிலைபாட்டை மையமாக வைத்து நாம் அடையாள அரசியல் முழக்கங்களை நிராகரிப்பதையும் புரிந்து கொள்ளலாம். ஆக, இயங்கியல் பார்வையில், நாம் எப்போதுமே முரண்பாடுகளை வெளிக்கொணர்ந்து, முன்னேற்றத்தை சாத்தியமாக்கும் நோக்கத்துடன் நாம் நிற்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில் அது என்றுமே பாட்டாளி வர்க்க நலன் மட்டும்தான்.
எதிர்மறைகளின் மோதல் மூலம் மாற்றம்
எதிர்மறைகளின் ஒற்றுமை இருப்பை சாத்தியமாக்கும். அவற்றின் மோதல் மாற்றத்தை சாத்தியமாக்கும். உதாரணமாக முதலாளித்துவத்தில் தொழிலாளி வர்க்கம் தன் வாழ்வாதாரத்திற்காக முதலாளி வர்க்கத்தை நாடிச் செல்கிறது. உற்பத்திக்காக முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தை சார்ந்து உள்ளது. இந்த வர்க்கங்களுக்கு இடையேயான ஒற்றுமை முதலாளித்துவத்தை இன்று நிலைக்கச் செய்கிறது. இந்த ஒற்றுமை தற்காலிகமானதே. இந்த வர்க்கங்களுக்கு இடையேயான மோதல்தான் நிலையானது. இந்த வர்க்கங்களுக்கு இடையேயான மோதல் புரட்சிகர மாற்றத்திற்கு இட்டுச் செல்கிறது. இந்த மோதல் தொடர்ந்து இந்த சமூக முறையில் அளவு மாற்றங்களை உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது. முதலாளித்துவ குவியல், உழைப்பை சமூகமயமாக்குகிறது (அதாவது பாட்டாளி வர்க்கமாக இல்லாமல் இருந்தோரும், மேலும் மேலும் முதலாளித்துவத்தின் பிடியின் கீழ் வர, உழைப்பு எல்லாம் “சமூக” உழைப்பாக மாறுகிறது). தொழிலாளி வர்க்கம் மீதான சார்பை வெறுக்கும் முதலாளிகள், தொடர்ந்து எந்திரமயமாக்கலுக்கு முனைகின்றனர். இவை அனைத்தும் முதலாளித்துவ நெருக்கடியை கூர்மைப்படுத்துகிறது. இறுதியில் இந்த அளவு மாற்றங்கள் புரட்சியில் விளைந்து, தன்மை மாற்றத்தை உருவாக்குகிறது.
இந்த மாற்றம் ஏற்பட்ட பின்னர், பொருள்/சமூகத்தின் சில அம்சங்கள் மீண்டும் அதே நிலைக்கு வந்தது போல தோன்றலாம் (நிலைமறுப்பின் நிலை மறுப்பு – Negation of Negation). ஆனால் பொருள்/சமூகத்தின் மாற்றமும், மனித ஞானமும் ஒரு வட்டத்தின் வடிவில் பயணிப்பதில்லை. அது மேலே செல்லும் சுருள் (Spiral) சுழல் ஏணி போன்றது. ஒவ்வொரு முறையும் அது ஒரு தளம் மேலே செல்கிறது. மனிதனின் ஞானமும் ஆழம் அடைகிறது. மீண்டும் மாற்றத்தை நோக்கிய பயணம் தொடர்கிறது. இதுவே “இயங்கியல்” விதியின் இறுதி சாராம்சம்.
இதை லெனினைப்போல் உணர்ந்தவர்கள் அக்காலத்தில் வேறு எவரும் இல்லை. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரஷ்யாவில் நெருக்கடி முற்றியது. 1905ல் புரட்சி வெடித்தது. அந்த புரட்சி நசுக்கப்பட்டது. ஜார் மன்னர் டூமா (ரஷ்யாவின் நாடாளுமன்றம்) உருவாக்குவது போன்ற சிறு ஜனநாயக கோரிக்கைகளை மட்டும் ஏற்று, கொடுங்கோல் ஆட்சியை தொடர்ந்தார். அனைத்தையும் இழந்ததுபோல தோன்றியது. வட்டத்தின் துவக்கப் புள்ளிக்கே மீண்டும் திரும்பியது போல தோன்றிய சமயம். புரட்சிகர உணர்வு சரிந்து, பிற்போக்கு சக்திகள் தலைத்தூக்கத் துவங்கிய தருணம். ஆனால், லெனின் இது சுருளின் அடுத்த தளம் என உணர்ந்திருந்தார். மீண்டும் நெருக்கடி ஆழம் அடையும், மீண்டும் புரட்சிகர உணர்வு ஓங்கும் என நம்பிக்கையுடன் இருந்தார்.
பிற்போக்கு சிந்தனைகள் தலைத்தூக்கிய அதே காலத்தில்தான், நாடு கடத்தப்பட்ட லெனின், தன்னையும், கட்சியையும் தத்துவார்த்த ரீதியாக மேம்படுத்தி, அடுத்து வரவிருக்கும் புரட்சிக்கு தயார் படுத்த முனைந்தார். சுவிட்சர்லாந்து மற்றும் பிரிட்டனில் பல்வேறு நூலகங்களில் பல மாதங்கள் ஆய்வு நடத்தி, “பொருள்முதல்வாதமும், அனுபவவாத விமர்சனமும்” என்ற ஆகச் சிறந்த படைப்பை 1908ல் கொண்டு வந்தார். இதன் மூலம் ரஷ்யாவில் கட்சியில் பலரும் இயங்கியல் பொருள்முதல்வாத சிந்தனையில் ஆழ்ந்த தேர்ச்சி பெற்றனர். இந்த காலத்தில், அவர் “சட்டப்பூர்வ” போராட்டங்களிலும் கட்சியை மேம்படுத்த, டூமாவின் உள்ளே போல்ஷவிக் பிரதிநிதிகளின் உத்தி குறித்த பல அறிக்கைகள் எழுதினார். 1914ல் முதலாம் உலகப் போர் வெடித்த சமயத்தில், சுவிட்சர்லாந்து நூலகத்தில் ஹெகலை படிக்கத் துவங்கினார்.
1916ல், போரின் அயர்ச்சியாலும், வறுமையாலும், புரட்சிகர உணர்வு ஓங்குவதைக் கண்டறிந்த லெனின், புரட்சியை வழிநடத்த கட்சி உறுப்பினர்களை தயார் செய்வதில் அதி தீவிரமாக இறங்கினார். 1916ல் “ஏகாதிபத்தியம்” என்ற நூலில், நிதி மூலதன கட்டுப்பாடு குறித்தும், ஏகாதிபத்திய சக்திகள் இடையேயான மோதல் குறித்தும் உலுக்க வைக்கும் ஆய்வை படைத்து, நடக்கும் போரின் முகத்திரையை கிழித்தார். “அரசும் புரட்சியும்” என்ற நூலின் மூலம் அரசின் ஒடுக்கும் தன்மையை அம்பலப்படுத்தி, பாட்டாளி வர்க்கம் அரசு எந்திரத்தை உடனடியாக கைப்பற்ற வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். பிப்ரவரி முதலாளித்துவ புரட்சிக்கு பின், தயக்கத்தில் இருந்த போல்ஷ்விக் உறுப்பினர்களை, புரட்சி நிகழ்த்துவதை நோக்கி தள்ளும் பல கட்டுரைகளை எழுதி, முன்னேறிய வர்க்கங்களின் உணர்வு உச்சத்திலும், எதிரி வர்க்கத்தின் படை நலிவடைந்தும் இருக்கும் காலத்தை தவற விடக் கூடாது என எழுதி, உண்மையான புரட்சியாளர்களை உருவாக்கினார் (இந்த கட்டுரைகள் பின் நாளின் “ஏப்ரல் ஆய்வறிக்கை” (April Thesis) என தொகுக்கப்பட்டது). இவ்வாறாக, இயங்கியல் பார்வையில் பொருளியல் சூழலை புரிந்து, மாற்றத்தை நிகழ்த்தும் துல்லிய நடவடிக்கைகளில் ஈடுபட்டார் லெனின்.
புரட்சி நிகழ்ந்த பின்னரும், லெனினின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் எழுத்துக்களில் “இயங்கியல்” சிந்தனையை அறிந்து கொள்ள முடியும். மார்க்ஸ்-எங்கல்ஸ் எழுத்துக்கள் பலவும் முதலாளித்துவ சமூகத்தின் விமர்சனமாகவே அமைந்தன. முதலாளித்துவத்தை கடந்த சமூகம் அன்று மிகப் புதியதோர் களம். அறிவியல் ஆய்வு முறையை தன் ஆயுதமாக கொண்ட லெனின், தளராது அரசை வழி நடத்தினார்.
பிற்போக்கு சக்திகள் மீண்டும் ரஷ்யாவை முதலாளித்துவப் பிடியில் சிக்க வைப்பதை தடுக்க, லெனின் பல முயற்சிகள் மேற்கொண்டார்.விமர்சனங்களுக்கு மத்தியிலும் பிரஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கையை ஜெர்மனியுடன் கையொப்பமிட்டு உலகப் போரிலிருந்து விலகி ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க அரசை காப்பாற்றியது, சோசலிசம் நோக்கிய பயணத்தில் தேசிய பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கும் கடமைகளை தெள்ளத் தெளிவாக விவரித்தது, “வேளாண் பிரச்சினைகள் குறித்து” என்ற அறிக்கையின் மூலம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு ஊரக பகுதியில் எந்த வர்க்கங்கள் ஆதரவாகவும் எந்த வர்க்கங்கள் எதிராகவும் இருக்கும் என்பதை புரிந்து அவர்களை கையாளும் உத்தி வகுத்தது, உள் நாட்டு போரின் விளைவாக ரஷ்ய பொருளாதாரமும் மக்களின் புரட்சிகர உணர்வுகளும் நலிவடைந்த பொழுது உற்பத்தி சக்திகளை வளர்க்க பாட்டாளி வர்க்க அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சிறு-குறு முதலாளித்துவ பொருளாதார திட்டமான “புதிய பொருளாதார கொள்கை” என்பதை வடிவமைத்து புரட்சியை காத்தது, என அவரின் ஒவ்வொரு நடவடிக்கையிலும், மாறும் சூழலையும், வர்க்கப் போராட்டத்தின் நிலையையும் உணர்ந்து, மாற்றத்திற்கான உத்தியை வடிவமைத்தார்.இதில் துல்லியமான “இயங்கியல்” பார்வையை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
இறுதியாக
லெனினின் வாழ்வை காலவாரியாக அடுக்கி வைத்துப் பார்த்தால், சுரண்டப்படும் மக்களின் விடுதலைக்காக அன்றாடம் களத்தில் பாடுபடும் ஒருவர், கள அனுபவங்கள் மூலமும், படிப்பினைகள் மூலமும் எவ்வாறு படிப்படியாக ஒரு தேர்ந்த, ஆழ்ந்த சிந்தனையாளராக மாறுகிறார் என்று, “இயங்கியல்” மாற்றத்திற்கான மனித எடுத்துக்காட்டாக அவர் விளங்குவார். லெனினின் அரசியல் வாழ்விற்கும், இயங்கியல் முறைக்கும் உள்ள ஒற்றுமையை புரிந்து கொள்வது அவசியம்.
லெனினிய இயங்கியல் நமக்கு தெளிவாக உணர்த்துவது இவைதான்
- புரட்சிகர கோட்பாடு இல்லாமல் புரட்சிகர கட்சி இயங்க முடியாது. ஆனால், புரட்சிகர கோட்பாடு என்பது வறட்டு சூத்திரம் அல்ல. நிகழ்வுகளின் நிதர்சன நிலையே கோட்பாட்டின் உண்மைத் தன்மையை நிறுவுகிறது. ஒரு பொருள்/நிகழ்வு/சமூகத்தின் வரலாற்று நிலை மற்றும் சூழலை உணர்ந்து மாற்றத்திற்கான உத்திகளை வகுக்க வேண்டும்
- வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான மூலக் கருவை மையமாக வைத்தே நம் உத்திகள் இருக்க வேண்டும். முதலாளித்துவ சமூகத்தில், உழைக்கும் பாட்டாளி வர்க்க நலன் என்பதே அந்த மூலக் கரு
- அறிவியல்பூர்வமான சோசலிசம் என்பது இக்கால முரண்பாடான போக்குகளை புரிந்து, அதிலிருந்து எழும் வருங்காலத்தை நோக்கிய புரிதல். இந்த அறிவியல்பூர்வமான புரிதல் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். எதிரி வர்க்கம் சக்திவாய்ந்து இருக்கும் வேளையில், பாட்டாளி வர்க்க கட்சி தத்துவார்த்த ரீதியாகவும், களப் பணியிலும் தன்னை மேம்படுத்திக் கொண்டு, வரவிருக்கும் புரட்சிகர சூழலில் உழைக்கும் வர்க்கங்களை புரட்சி நோக்கி வழி நடத்த தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்
இன்று நம்மிடையே சக்திவாய்ந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் போன்ற ஒரு சோசலிச அரண் இல்லை. ஆயினும், இன்றைய சூழலுக்கு ஏற்ப, மக்கள் சீனம், கியூபா, வியட்நாம், லாவோஸ், வட கொரியா ஆகிய நாடுகள் தாங்கள் சந்திக்கும் சவால்களுக்கு இயங்கியல் பார்வையில் அறிவுப்பூர்வமான உத்திகளை வகுத்து வருகின்றனர். உதாரணமாக, அண்மையில் கியூபாவின் புதிய அரசியல் சாசனத்தில், இக்கால சூழலுக்கேற்ப உற்பத்தி சக்திகளை வளர்க்க சிறு-குறு தனிச்சொத்து முறையை சட்டப்பூர்வமாக முதன்முதலில் அங்கீகரித்தது கியூபா.
சீனாவை எடுத்துக்கொண்டால், 1978ல் நிகழ்ந்த சீர்திருத்தங்களை பலரும் லெனினின் “புதிய பொருளாதார கொள்கை”-யுடன் ஒப்பிடுவார். ஆனால், புதிய பொருளாதார கொள்கையில் சிறு-குறு முதலாளித்துவ நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கின. இன்று சீனாவில் மாபெரும் தனியார் நிறுவனங்களும் இயங்குகின்றன. இந்நியலையை சமாளிக்க சீனா தொடர்ந்து உத்திகள் வகுக்கின்றது. எடுத்துக்காட்டாக, ஹுவாவே என்ற உலகளாவிய மாபெரும் தனியார் நிறுவனத்தின் 90ரூ உரிமம் அதன் தொழிலாளர் சங்கத்தின் கையில் உள்ளது. அவ்வாறு அல்லாத நிறுவனங்கள் பலவற்றிலும், அதன் நிர்வாகத்தை கட்டுப்படுத்த, அதன் நிர்வாகக்குழுவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் கட்டாயம் இடம் பெறுகின்றனர். ஆனால் கார்ப்பரேட் சூழல் இந்த கட்சி பிரதிநிதிகளை நச்சுப்படுத்திவிட்டால்? அதற்காக கட்சியினுள் ஊழலை ஒழிக்க நடவடிக்கைகள் எடுத்து, கட்சி மற்றும் மக்கள் இடையேயான ஜனநாயக இணைப்பை ஆழப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.
இவ்வாறாக இன்றைய சூழலில் சோசலிசத்தை நோக்கி பயணிக்கும் நாடுகள், இயங்கியல் பார்வையில் தங்கள் நிலைக்கேற்ப உத்திகள் வகுத்து வருகின்றனர். இன்று மக்கள் ஜனநாயகப் புரட்சிக்காக பாடுபடும் நாடான இந்தியாவில், லெனினின் இயங்கியல் பார்வை நமக்கு அநேக பாடங்களை கற்பிக்கின்றது. ஆனால் லெனின் காணாத சூழலிலும் நாம் சரியான உத்திகளை வகுத்து, மக்கள் ஜனநாயகப் புரட்சி நிகழ்ந்த பின்னர் மக்களையும் அரசையும் வழி நடத்தக் கூடிய சரியான முடிவுகளை எடுக்க, நாம் தத்துவார்த ரீதியாகவும், இயங்கியல் பொருள்முதல்வாத பார்வையிலும் தேர்ந்த பயிற்சி பெறுவது அவசியமாக உள்ளது.
அரசியல் என்பது மாறாத “மார்க்சிய கட்டளைகளில்” அடங்கி உள்ளது என யோசித்தால், நம் அன்றாட அரசியல் வாழ்வு நமக்கு வெறுப்பையும் விரக்தியையுமே உண்டாக்கும். இயங்கியல் முறைப்படி, நிதர்சனமான சூழலிலிருந்து எந்நாளும் கற்றுக்கொண்டு, அதன் மூலம் நம் தத்துவார்த்த ஞானத்தையும் மேம்படுத்திக்கொண்டு, நம் கட்சிப் பணிகளை முன்னெடுப்பதே முக்கியமானது.
Reading List
- “Summary of Dialectics” by VI Lenin ” Lenin’s Collected Works” (1914)
- “On the Question of Dialectics” by VI Lenin, “Bolshevik” (1925)
- “Lenin on Dialectics” by Cliff Slaughter, “Introduction to The Philosophical Notebooks of Lenin” (1962)
- “Lenin and the Practice of Dialectical Thinking” by Robert Mayer, “Science & Society” (1999)
- “Reflections on Lenin’s Dialectics” by Pyotr Kondrashov, “Monthly Review” (2023)
Leave a Reply