- பிரகாஷ் காரத்
ஏப்ரல் 2022இல் நடந்துமுடிந்த கட்சியின் அகில இந்திய 23வது மாநாடு, உடனடி ஸ்தாபன வேலைகளை தீர்மானித்துள்ளது. டிசம்பர் 2015இல் கொல்கத்தா ப்ளீனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட “ஸ்தாபன அறிக்கை மற்றும் தீர்மானங்கள்” எனும் ஆவணமே இந்த ஸ்தாபன வேலைகளின் அடிப்படையாகும் என்பதை முதலில் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
கொல்கத்தா ப்ளீனம் காட்டும் பாதை:
“1.216 எங்கெல்லாம் கட்சி வளர்ச்சியடைந்துள்ளதோ அந்த அனுபவங்களை பொதுமைப்படுத்தி பிற பகுதிகளிலும் கட்சியை வளர்க்க வேண்டும். கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பதற்காக கட்சி அணிகள் செயல்பட வேண்டும்.
“1.217 நாடுதழுவிய செல்வாக்கு கொண்ட ஒரு வலுவான கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவது குறித்து கொல்கத்தா ப்ளீனம் பின்வரும் வழிமுறைகளை குறிப்பிடுகிறது.”
- 1. பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளில் போராட்டங்களை கட்டுவதன் மூலம் இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்டுதல்.
- 2. வெகுஜன அரங்கங்கள் மூலம் மக்களுடன் உயிரோட்டமான தொடர்பை ஏற்படுத்துவது.
- 3. தரமான உறுப்பினர்களைக் கொண்ட புரட்சிகர கட்சியை கட்டுவது.
- 4. இளைஞர்கள் மற்றும் பெண்களை கட்சியை நோக்கி ஈர்க்க தனிகவனம் செலுத்துவது.
- 5. வகுப்புவாத கருத்துக்கள், நவீன தாராளமய கருத்துக்கள் மற்றும் பிற்போக்கு கருத்துக்களுக்கு எதிராக கருத்தியல் போராட்டங்களை நடத்துவது.
“வெகுஜனங்களுடன் கூடிய ஒரு புரட்சிகர கட்சி (a revolutionary party with mass line)” என்னும் கோஷத்தை கொல்கத்தா ப்ளீனம் முன்வைத்தது. 1978ம் ஆண்டு நடைபெற்ற சால்கியா ப்ளீனம், “வெகுமக்கள் புரட்சிகர கட்சி (mass revolutionary party)” என்னும் கோஷத்தை முன்வைத்தது. இவை இரண்டிற்குமுள்ள வேறுபாடு என்ன?
1978இல் சால்கியா ப்ளீனம் நடைபெற்றபோது நமது கட்சிக்கும் பொதுவாக இடதுசாரிகளுக்கும் சாதகமான சூழல் அவசர நிலை காலத்தின் முடிவில் (1977) இருந்தது. சால்கியா ப்ளீனத்தின் மைய நோக்கம் கட்சியை எப்படி நாடு முழுவதும் விரிவடைய செய்வது என்பதாக இருந்தது. எனவே கட்சியை விரிவடைய செய்ய, குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில், “வெகுமக்கள் புரட்சிகர கட்சி” என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது. இக்காலக்கட்டத்தில்தான் மேற்கு வங்கம், திரிபுரா அதன் பின் கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தனர்.
2015இல் கொல்கத்தா ப்ளீனம் முற்றிலும் புதிய அரசியல் சூழ்நிலைமைகளில் நடந்துள்ளது. தேசிய அளவிலும் சரி சர்வதேச அளவிலும் சரி. சர்வதேச அளவில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு சோஷலிசத்திற்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டு, ஏகாதிபத்திய சக்திகளுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில், 2014 மக்களவை தேர்தலில் வலதுசாரிகளுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டது. மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது என்பது கார்ப்பரேட் – மதவாத சக்திகளின் பலம் கூடி, 2019இல் மிகப்பெரிய வெற்றியை அவர்களுக்கு சாத்தியமாக்கியது.
இந்துத்துவ மதவாத சக்திகள் ஒருபுறமும், முதலாளித்துவ நவீன தாராளமய கொள்கைகள் மறுபுறம் என இருமுனை தாக்குதல் நடைபெற்று வருகிறது. அதோடு, எதேச்சாதிகார பாசிச போக்கும் வளர்ந்து வருகிறது. இக்காலக்கட்டதில் இடதுசாரிகள் பலமும் நம் கட்சியின் சொந்த பலமும் வீழ்ச்சியடைந்துள்ளது. இவையனைத்தையும் கணக்கில் கொண்டுதான் கொல்கத்தா ப்ளீனம் கட்சியின் நிலையையும் எதிர்கால வேலைகளையும் ஆய்வு செய்தது.
சால்கியா ப்ளீனத்திற்கு பிறகு கட்சி விரிவடைய துவங்கியது. ஆனால் “வெகுமக்கள் புரட்சிகர கட்சி”க்கு பதிலாக வெகுமக்கள் கட்சி மட்டுமே இருந்தது. தற்போதைய கவனம் என்பது நாடு தழுவிய வலுவான வெகுமக்கள் புரட்சிகர கட்சியை கட்டுவதே. இது குறித்து கொல்கத்தா ப்ளீனம் சில முக்கிய கடமைகளை பட்டியலிடுகிறது. கட்சியை வெகுஜன பாதையில் திருப்புவது, மேலிருந்து கீழ்வரை கட்சியின் செயல்பாட்டில் தேவையான மாற்றங்கள், வளர்ந்துவரும் வலதுசாரிகளை கருத்தியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்க்கொள்ள கட்சி உறுப்பினர்களின் தரத்தை அனைத்து விதங்களிலும் மேம்படுத்துவது போன்றவை.
கட்சி உறுப்பினர் தரம்:
கொல்கத்தா ப்ளீனத்தில் பரிந்துரைக்கப்பட்ட மிக முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று கட்சி உறுப்பினர் பதிவை புதுப்பிக்கும்போது உறுப்பினரின் தரத்தை கீழ்கண்ட 5 கடமைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்வது.
- 1. உறுப்பினர் கட்டணம் மற்றும் லெவியை செலுத்துதல்.
- 2. கிளைக் கூட்டங்களில் தொடர்ச்சியான பங்கேற்பு.
- 3. கட்சி வகுப்புகள், பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் திருப்திகரமான பங்கேற்பு.
- 4. கட்சி விதிவிலக்கு அளித்திருந்தால் ஒழிய, ஏதேனும் ஒரு வர்க்க வெகுஜன அரங்கத்தில் உறுப்பினராகி அதன் செயல்பாடுகளில் முன்னணியில் செயல்படுவது.
- 5. தீக்கதிர், தமிழ் மார்க்சிஸ்ட், பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஆகிய கட்சியின் பத்திரிக்கைகளை படிப்பது; அவற்றிற்கு சந்தாதாரர் ஆவது.
பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்பு:
பலமுறை தீர்மானித்திருந்தாலும், கட்சி உறுப்பினர்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்கேற்பை உயர்த்துவதில் நாம் கணிசமான முன்னேற்றத்தை எட்டவில்லை. இது கட்சியின் முக்கியமான பலவீனங்களில் ஒன்று. அதோடு கட்சியில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தெரிகிறது. இளைஞர்களை ஈர்க்கும் வகையில் கட்சி செயல்படவில்லை என்று இதிலிருந்து தெரிகிறது.
கட்சியின் மொத்த உறுப்பினர் பதிவில், பெண்கள் 25 சதவீதமாகவும், இளைஞர்கள் 20 சதவீதமாகவும் இருக்க வேண்டும் என்று கொல்கத்தா ப்ளீனம் அறிவுறுத்துகிறது.
ஜனநாயக மத்தியத்துவம்:
நம் கட்சியை வழிநடத்தும் மிக முக்கியமான கோட்பாடுகளில் ஒன்று ஜனநாயக மத்தியத்துவம். ஜனநாயக மத்தியத்துவத்தை கடைப்பிடித்து செயல்படுவது பற்றி கட்சியின் அமைப்புச் சட்டம் தெளிவாக விளக்குகிறது. கட்சியில் இது எந்த அளவிற்கு செயல்படுத்தப்படுகிறது என்பதை மதிப்பீடு செய்து அதனை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கொல்கத்தா ப்ளீனம் கூறுகிறது.
கட்சியின் தினசரி செயல்பாட்டில் கிளைகளின் செயல்பாடு மிக முக்கியமானது. கிளைதான் அந்தந்த பகுதி மக்களுடன் நேரடி தொடர்ப்பில் இருக்கிறது. கிளைகளில்தான் உறுப்பினர்களின் தரமும் மதிப்பீடு செய்யப்பட்டு, உறுப்பினர் புதுப்பித்தல் நடைபெற வேண்டும். எனவே தொடர்ச்சியாக செயல்படாத கட்சிக் கிளைகளை மீண்டும் செயல்படுத்தி அவர்களை அரசியல் மற்றும் ஸ்தாபன வேலைகளில் கட்சி ஈடுபடுத்த வேண்டும் என்று கொல்கத்தா ப்ளீனம் கூறுகிறது.
கிளையைச் செயல்படுத்துவதில் கிளைச் செயலாளர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வழக்கமாக சந்திப்பது மாவட்டக் குழுவின் கடமையாகிறது.
கட்சி உறுப்பினர்கள்:
பல்வேறு மட்டங்களில் நிலவும் கட்சி கமிட்டிகளில் உள்ளவர்களும், வெகுஜன அரங்கத்தில் செயல்படும் கட்சி உறுப்பினர்கள், கட்சியின் முழுநேர ஊழியர்களின் மேம்பாடும் செயல்பாடும் கட்சிக்கு மிக முக்கியமானவை. கட்சி உறுப்பினர்களின் வயதை கணக்கில் எடுத்துக்கொண்டு, இளம் தோழர்களை அடையாளம் கண்டு, அவர்களை கமிட்டி பொறுப்புகளுக்கு ஊக்குவிக்கவும், அதிலிருந்து முழுநேர ஊழியர்களாகவும் உயர்த்த வேண்டும் என கொல்கத்தா ப்ளீனம் கூறுகிறது.
சீர்திருத்த பிரச்சாரம்:
பாராளுமன்றவாதம், அகநிலைவாதம், லிபரல்வாதம் போன்று கட்சிக்குள் நிலவும் தவறான கருத்துகளை களைய தொடர்ந்து கட்சிக்குள் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், கொல்கத்தா ப்ளீனம் கூறுகிறது. கம்யூனிச கோட்பாடுகளிலிருந்து விலகுபவர்கள் மீதும், ஊழல் செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்துத்துவ சித்தாந்தத்தை எதிர்கொள்ளுதல்:
அரசியலில் பாரதிய ஜனதா கட்சியும், சமூக பண்பாட்டு தளத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் மேலாதிக்கம் செலுத்தும் இக்காலக்கட்டத்தில், கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் சிவில் சமூகத்திடமும் சித்தாந்த, தத்துவார்த்த போராட்டம் நடத்த வேண்டியது கட்சியின் வளர்ச்சிக்கு இன்றியமையாத செயல்பாடாகும். கட்சியின் 21வது அகில இந்திய மாநாடு முதல் 23வது அகில இந்திய மாநாடு வரை இதுகுறித்து பல்வேறு அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளோம். அரசியல், தத்துவார்த்த, பண்பாட்டு சமூக தளங்களில் இத்தீர்மானங்களை நிறைவேற்றிட நாம் வேலை செய்ய வேண்டும்.
சமூக ஊடகங்கள்:
மாறிவரும் சூழலுக்கேற்ப மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் வெகுமக்களோடு தொடர்பு ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கட்சியின் செயல்பாடு மிகவும் முக்கியமென கொல்கத்தா ப்ளீனம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. மாநில, மாவட்ட மற்றும் அதன் கீழ் வரை அனைத்து மட்டங்களிலும் கட்சி ஸ்தாபன அமைப்புகளுக்கென வாட்சப் குழுக்கள் உருவாக்கிட வேண்டும். சமூக ஊடகங்களில் இடது கருத்துக்களை கொண்டுசேர்க்கும் வகையில் செயலாற்றும் சமூக ஊடக பயனாளர்களைக் கொண்ட, ஒரு விரிவடைந்த, வலுவான குழுக்களை உருவாக்க வேண்டும்.
புதிய அமைப்புகள்:
கொல்கத்தா ப்ளீனம், புதிய தளங்களில் செயல்பட வேண்டிய, புதிய வெகுஜன அரங்கங்களை உருவாக்க வேண்டிய தேவை குறித்து பேசியிருக்கிறது. அதில் குறிப்பாக சிறுவர்களுக்கான பாலசங்கத்தை உருவாக்கிடவும், குடியிருப்பு பகுதிகளில் செயலாற்றிடவும், கிராமப் பகுதிகளில் விவசாயம் சாராத தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை கண்டறியவும் அவர்களை அணிதிரட்டுவதும் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளன.
கட்சியும் வர்க்க வெகுஜன அமைப்பும்:
வர்க்க வெகுஜன அரங்கங்கள் சுயமாகவும், ஜனநாயகப் பூர்வமாகவும் செயல்பட வேண்டியதன் அவசியத்தை ப்ளீனம் வலியுறுத்துகிறது. வர்க்க வெகுஜன அரங்களின் முடிவுகளில் கட்சி நேரடியாக தலையிடுவதோ (அல்லது) அவற்றை கட்சியின் ஓர் அங்கமாக நடத்தும் தவறான போக்கை திருத்திக்கொள்வதும் ஒரு தொடர் நிகழ்வாகும். தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் விவசாய தொழிலாளர் அமைப்புகளின் பணி அடிப்படை வர்க்கத்தினருள் ஒரு சிறிய பிரிவினரிடம் மட்டுமே நிலவி வருகிறது என்பதை நாம் நினைவில் கொண்டு இத்திருத்தங்களை செய்ய வேண்டும். அதோடு உப-குழுக்கள் மற்றும் ஃப்ராக்ஷன் உறுப்பினர்கள் அரசியல் பணிகளையும், இந்த அரங்கங்களில் கட்சியை கட்டுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
தற்போதைய அரசியல்-ஸ்தாபன கடமைகள்:
23வது அகில இந்திய மாநாட்டு அரசியல்-ஸ்தாபன ஆய்வறிக்கை கட்சியின் நிலை குறித்தும், 22வது மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட ஸ்தாபன கடமைகளை நிறைவேற்றுவது குறித்தும் பேசியிருக்கிறது. இந்த இரண்டு மாநாட்டிற்கும் இடைபட்ட காலத்தில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றும் அதைத் தொடர்ந்த பொதுமுடக்கமும் ஸ்தாபன கடமைகளை நிறைவேற்றுவதில் தாமதத்தை ஏற்படுத்தியது. இவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டுதான் 23வது மாநாட்டின் அரசியல்-ஸ்தாபன உடனடி வேலைகள் குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டது.
கட்சியின் மத்தியக்குழு 2022 ஜூன் மாதம் கூடி, இந்த அறிக்கையை விவாதித்து சில முக்கிய உடனடி கடமைகளை வலியுறுத்துகிறது. மாநிலக் குழுக்கள் அதன் சூழலுக்கேற்ப இந்த கடமைகளை நிறைவேற்றுவது குறித்து திட்டமிட அறிவுறுத்தப்பட்டது.
அவற்றில் சில:
- 1. இடது ஜனநாயக முன்னணி: அனைத்து மாநிலக் குழுக்களும் அந்தந்த மாநிலத்தில் இடது ஜனநாயக முன்னணியை உருவாக்குவது குறித்து திட்டமிட வேண்டும். இதில் எந்தெந்த சக்திகளை நம்மோடு இணைத்துக்கொள்ள போகிறோம் என்று அடையாளம் காணவேண்டும். இதை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும். அதே நேரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் அகில இந்திய அளவில் இடது ஜனநாயக முன்னணிக்கான தளத்தை உருவாக்க ஒரு பொது புரிதலை நோக்கி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கேரளா, மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவை பொறுத்த வரையில் அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் முன்னணிகளை எவ்வாறு தொடர்ந்து பலப்படுத்தலாம் என்று அவர்கள் முடிவு செய்யட்டும்.
- 2. உள்ளூர் போராட்டங்கள்: உள்ளூர் பிரச்சனைகளை கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு காணும் வரை நீடித்த போராட்டங்களை இடைக் குழுவும் , பகுதிக் குழுவும் நடத்திட மாநிலக்குழுக்கள் மாவட்ட குழுக்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். இவ்வாறு நடத்தப்படும் போராட்டங்களின் அனுபவங்கள், படிப்பினைகளை பிற பகுதிகளுடனும் பகிர வேண்டும். மக்களுடைய வாழ்வாதார, தினசரி பிரச்சனைகள் தாண்டி சமூக ஏற்றத்தாழ்வால் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- 3. மதவாத, வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும், ஜனநாயக மாண்புகளை சிதைக்கும் அமைப்புகளுக்கு எதிராகவும், எதேச்சாதிகாரப் போக்கிற்கு எதிராகவும் ஒரு பரந்துபட்ட தளத்தை உருவாக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் இடங்களில் அவற்றை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
இந்துத்துவ சக்திகளுக்கு எதிரான கருத்தியல் எதிர்வினை:
- 1. இந்துத்துவ கருத்தியல்களுக்கு எதிர் கருத்துக்களை தொடர்ந்து எளிய நடையில் வெகுமக்களை சென்றடையும் வகையில் உருவாக்க வேண்டும். இதற்கென கட்சியில் பிரத்யேக குழுக்கள் செயல்பட வேண்டும்.
- 2. அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்கும், பகுத்தறிவை வளர்க்கும், சமூக-பொருளாதார சமத்துவத்தை பேணும் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். அவற்றை உள்ளடக்கிய சமூக-பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- 3. உழைக்கும் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் மதச்சார்பின்மை மற்றும் அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்கும் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட கட்சியும், தொழிற்சங்கங்களும் தனிகவனம் செலுத்த வேண்டும்.
- 4. ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் மற்றும் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் நாம் வேலை செய்ய வேண்டும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இப்பகுதிகளில் தனிகவனம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
- 5. சமூக சேவை நடவடிக்களை தொடர்ந்து செய்ய வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் செய்தது போல, சுகாதாரம் சார்ந்த சேவைகள், நூலகம் அமைக்க உதவுதல், பயிற்சி வகுப்புகள் நடத்துவது, திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடத்துவது என பல்வேறு சேவைகளை செய்ய வேண்டும்.
உடனடி ஸ்தாபன வேலைகள்:
- 1. கட்சி உறுப்பினர்களின் தரத்தை மேம்படுத்துதல். கட்சி உறுப்பினர் புதுப்பித்தலுக்கான 5 அவசிய கடமைகளை கறாராக கடைப்பிடிப்பதன் மூலமே இதனை நிறைவேற்ற முடியும். வருகின்ற 2023 கட்சி உறுப்பினர் புதுப்பித்தலின் போது இதனை அமல்படுத்த வேண்டும்.
- 2. செயல்படாமல் இருக்கும் கட்சி கிளைகளை செயல்படுத்துதல். அடுத்த 6 மாத காலத்திற்குள் செயல்படுத்த கூடிய கட்சி கிளைகளின் எண்ணிக்கையை அனைத்து மாநிலக் குழுவும் முடிவு செய்ய வேண்டும். அதோடு, கிளைச் செயலாளர்களுக்கான பயிற்சியையும் திட்டமிட வேண்டும்.
- 3. 2023 மற்றும் 2024 ஆண்டு உறுப்பினர் புதுப்பித்தலின் போது திட்டமிட்ட அளவில் இளைஞர்கள் மற்றும் பெண்களை கட்சியில் சேர்க்க திட்டமிட வேண்டும்.
- 4. கட்சியில் புதிய முழுநேர ஊழியர்களாக செயலாற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் முழுநேர ஊழியர்களுக்கும், புதிய இளம் முழுநேர ஊழியர்களுக்கும் கட்சி கல்வி மற்றும் அரசியல் பயிற்சி அளிக்க வேண்டும்.
- 5. தில்லியில் உள்ள நிரந்தரப்பள்ளியான சுர்ஜித் பவனில் ஆண்டு முழுவதும் வகுப்புகள் நடத்த பாடதிட்டத்தை முடிவு செய்து வகுப்புகள் நடத்த கட்சிக்கல்வி துணைக்குழு திட்டமிட வேண்டும். சங்பரிவார இந்துத்துவ கோட்பாடுகள் மற்றும் நடைமுறை குறித்த ஆய்வறிக்கையை அடுத்த மூன்று மாதத்திற்குள் கட்சியின் மத்தியகுழு முடிக்க வேண்டும்.
- 6. கட்சியை சீர்படுத்தும் பிரச்சாரத்தையும் அதனை செய்துமுடிக்க வேண்டிய கால அவகாசத்தையும் மத்தியக் கமிட்டி இறுதி செய்ய வேண்டும்.
- 7. கிராமப்புற தொழிலாளர் சங்கம் / கூட்டமைப்பை ஏற்படுத்திட வேண்டும். இதன் பொருட்டு மாநிலக் குழுக்கள் அந்தந்த மாநிலத்தில் உள்ள கிராமங்களில் சர்வே ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆய்வுகளை இந்தாண்டு இறுதிக்குள் முடித்திட வேண்டும்.
- 8. இந்த ஆய்வறிக்கையிலிருந்து பெறப்படும் முடிவுகளின்படி எவ்வாறு கிராமப்புற தொழிலாளர்களை ஒருங்கிணைப்பது என்ற திட்டத்தை அந்தந்த மாநிலக்குழுக்கள் விவாத்தித்து அதனை கட்சியின் மத்திய கமிட்டிக்கு தெரிவிக்க வேண்டும்.
- 9. சமூக வலைதள பயன்பாட்டை கட்சி செயல்பாடுகளோடும், கட்சி அரங்கங்களோடும் இணைக்கும் திட்டத்தை மாநிலக்குழுக்கள் உருவாக்க வேண்டும். இதற்கான பயிற்சி முகாம்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
- 10. வர்க்க வெகுஜன அரங்கங்களின் செயல்பாடுகளை ஆண்டு முழுக்க மதிப்பீடு செய்ய திட்டம் வகுக்க வேண்டும். வர்க்க வெகுஜன அரங்கங்களின் சுயேச்சையான செயல்பாட்டை உறுதிப்படுத்தும் வழிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும். கட்சியின் வளர்ச்சி மற்றும் ஃப்ராக்ஷன்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
- 11. சிறுவர்களுக்கான பாலசங்கத்தை நிறுவ மாநிலக்குழுக்கள் விவாதிக்க வேண்டும். மத்திய அளவில் இதற்கான பயிற்சி முகாம்கள் நடத்த வேண்டும்.
- 12. நகரப் பகுதிகளில் கட்சியின் செயல்பாட்டை மாநிலக் குழு கட்சியின் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் குழுவுடன் இணைத்து திட்டமிட வேண்டும்.
தமிழில்: பிரசன்னா, புதுச்சேரி.
தொடர்புடைய வாசிப்பு :
1. Political Organisational Report of 23rd Congress of CPI(M), April 2022
2. Report and Resolution on Organisation, Kolkata Plenum, December 2015
3. Report on Organisation, Salkia Plenum, December 1978
4. Resolution on Organisation, Salkia Plenum, December, 1978
4. Our Tasks on Party Organisation, Adopted by Central Committee, October, 1967
Leave a Reply