இந்தியாவில் மதச்சார்பின்மை: வரலாறு, விலகல்,சவால் !

 • இரா.சிந்தன்

இந்திய அரசியலமைப்பை தாங்கி நிற்கும் நான்கு அடித்தளங்களாக, மதச்சார்பற்ற மக்களாட்சி, பொருளாதார இறையாண்மை, கூட்டாட்சி மற்றும் சமூக நீதி ஆகியவை அமைந்துள்ளன. இன்றைய பாஜக/ஆர்.எஸ்.எஸ் ஆட்சியினால் இந்த அடித்தளங்கள் அனைத்துமே தாக்குதலுக்கு உள்ளாகின்றன. 73 வது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள சூழலில், இந்திய மக்களாட்சியின் மதச்சார்பற்ற அம்சம் பற்றி விரிவாக பார்ப்போம்.

முதலில், மதச்சார்பின்மை என்பது மதவழி சிறுபான்மையினரின் பிரச்சனை மட்டுமே அல்ல. அது இந்திய நாட்டின் மக்களாட்சி கட்டமைப்பின் பிரிக்க முடியாத அங்கம் ஆகும்.

தொடக்கத்தில், பாஜகவின் தலைவர்கள் தாங்கள் ‘போலி மதச்சார்பின்மையை’ எதிர்ப்பதாக சொல்லி வந்தார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரோ, ‘மதச்சார்பின்மை’ என்பது மேற்கத்திய சிந்தனை என்று சொல்லி அதை விலக்கினர்.  

தற்போது, ஆர்.எஸ்.எஸ்/பாஜக பரிவாரம் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. ஆட்சி நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலிலேயே நகர்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மதச்சார்பின்மை கோட்பாடு அவர்களால் தாக்கப்படுகிறது. இந்த நிகழ்வுகளை தனியாக பார்க்க முடியாது. ஒட்டுமொத்த இந்திய மக்களாட்சி அமைப்பிற்கே விடுக்கப்பட்டுள்ள சவாலாகத்தான் பார்க்க வேண்டும்.

செக்யூலரிசமும் அதன் பொருளும்:

‘செக்யூலரிசம்’ என்ற ஆங்கிலச் சொல், தமிழில் மதச்சார்பின்மை எனப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளின் வரலாற்று சூழலில் அரசாட்சியில் தேவாலயங்களின் தலையீடு மிதமிஞ்சியதாக இருந்தது. எனவே, அந்த நாடுகளில் முதலாளித்துவ மக்களாட்சி உருவானபோது அரசாட்சியிலும், அரசியலிலும் இருந்து தேவாலயங்கள் விலக்கி நிறுத்தப்பட வேண்டிய அவசியம் இருந்தது. அதுவே மதச்சார்பின்மை வலியுறுத்தப்படுவதற்கான பிரதான அம்சம் ஆகும். ஆனாலும், சோசலிச நாடுகளைத் தவிர வேறு எந்த முதலாளித்துவ நாடுகளும் மதமும், அரசியலும் முற்றாக பிரிக்கப்பட வேண்டும் என்ற தெளிவோடு இல்லை.

எந்தவொரு நாட்டின் மக்களாட்சி கட்டமைப்பும், முழுமையான கருத்தாக முதலில் வடிவமைக்கப்பட்டு, அதன் பிறகு அமலாக்கப்படுவது அல்ல. இறக்குமதி செய்யப்படுவதும் அல்ல. அந்தந்த வரலாற்று காலகட்டத்தில், மக்களின் அனுபவங்களில் இருந்தே, போராட்டங்களின் மூலமாக வடிவம் பெறுகிறது. அதனால்தான், நவீன நாடாளுமன்ற மக்களாட்சி முறை நிலவக்கூடிய நாடுகள் எதுவுமே, ஒன்றை இன்னொன்று பிரதியெடுத்தது போல அமைந்ததில்லை. எனவே, மக்களாட்சியின் ஒரு அம்சமான மதச்சார்பின்மையின் கருப்பொருளையும் இந்திய சூழலில் இருந்து ஆய்வு செய்ய வேண்டும்.

அரசியலும், மதமும் பிரித்து வைக்கப்பட வேண்டும் என்ற பார்வை, இந்தியா மக்களாட்சியை பாதுகாக்க மிக மிக அவசியமானதாகும்.

வரலாற்றில் இணக்க வாழ்வு

இந்திய துணைக்கட்டத்தில் வாக்குரிமையும், நாடாளுமன்றம் உள்ளிட்ட பிரதிநிதுத்துவ அவைகளும் நவீன மக்களாட்சியின் ஏற்பாடுகள். இருப்பினும், மன்னராட்சிக் காலங்களிலும் சமூகத்தில் நல்லிணக்க வாழ்வுக்கான தேவையும்,  மதத்தில், நம்பிக்கையில் அரசு தலையிடாமைக்கான அவசியமும் உணரப்பட்டுள்ளன.

சங்ககால தமிழ் இலக்கியமான பட்டினப்பாலை (பத்துப்பாட்டு தொகுப்பு) காவிரி பூம்பட்டினத்தின் நகர வாழ்க்கையை விவரிக்கிறது. அந்த நாட்டில் பெளத்தம், சமணம், முருக வழிபாடு, காளி கோயில்கள், வீர மறவர் நினைவாக நடப்பட்ட கற்களை தொழுதல் என்று பல்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. வேள்வி செய்யும் ஆரிய முனிவர்களும் இருக்கிறார்கள். உலகின் பல பகுதிகளில் இருந்தும் துருக்கியர்கள், சீனர்கள், இலங்கையர், யவனர்கள் வந்து செல்லும் வணிகத் தளமாக இருந்துள்ளது.

பட்டினப்பாலை நூலை எழுதியவர் சைவர் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. ஆனால் அவர் தனது இலக்கியத்தை பொதுவானதாக படைத்துள்ளார். சோழ மன்னன் கரிகாற்பெருவளத்தானின் ஆட்சியும் கூட  சமய/மத நம்பிக்கை வழிப்பட்டதாக அந்த பாடல்களின் வழியாக அறியமுடியவில்லை.

அன்றைய தமிழ்ச் சமூகத்தில் அவரவர் நம்பிக்கை, பேச்சு மொழிகள் மற்றும் சிந்தனைகள் சார்ந்த நல்லிணக்கமும் நிலவிவந்தன. கலைக்கூடங்களில் பல்வேறு மொழி பேசும் மாறுபட்ட சிந்தனை கொண்ட அறிஞர்களுக்கிடையே  விவாதங்கள், அறிவுப் பகிர்வுகள் நடந்து வந்துள்ளன.

அப்போது சமுதாயத்தில் மனித உருவில் சிலைகளை வைத்து  வழிபாடு செய்யும் வழக்கம் இல்லை. கந்து எனப்படும் கல்லை நோக்கி தொழுவதை வேற்று நாட்டாரும் செய்தார்கள். பல்வேறு மத நம்பிக்கைகள் அருகருகே பின்பற்றப்பட்டு வந்தன.  அரசாட்சி என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்பது பொது விதியாக இருந்து வந்ததும் தெரிகிறது.

பட்டினப்பாலை நூல் எழுதப்படுவதற்கு 2 நூற்றாண்டுகள் முன்பே அசோகப் பேரரசினால், அதன் ஆட்சிப் பகுதிகள் நெடுகிலும் தர்ம சக்கரம் பொறித்த தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த தூண்களில்  அரசாட்சிக்கான ஒழுக்கங்கள் பிரகடனம் செய்யப்பட்டிருந்தன. அதில் ஒன்று  மக்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளை அவரவர் தேர்ந்தெடுத்து பின்பற்றுவதற்கான உரிமையை அரசாங்கம் உறுதி செய்திட வேண்டும் என்பதாகும். பின்னர் ஏற்பட்ட முகலாயர் அல்லது பிற முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியிலும் பெரும்பாலும் இந்த முறையே தொடர்ந்தது. கடந்த காலத்தில் பொதுவான நிலவிய சகிப்புக் கொள்கை என்பது வேறுபட்ட மத நம்பிக்கைகள் அருகருகே வாழ்வது தொடர்பானதாக மட்டுமில்லை. வேறுபட்ட மொழி, பண்பாடு மற்றும் மரபு சார்ந்த வேற்றுமைகளை அங்கீகரித்து இயங்குவதாகவும் இருந்தது.

எனவே, இந்திய சமூகத்தில் நிலவிய செழிப்பான நல்லிணக்க வரலாற்றை மதச்சார்பின்மைக்கான அடித்தளமாக காண முடிகிறது. மேலும், இந்திய வரலாற்றின் பொதுவான போக்கு, உலகின் வேறு பல பகுதிகளை ஒத்ததாகவே இருந்துவந்துள்ளது.

அதே சமயத்தில், பெரிய புராணம் குறிப்பிடும் சமணர் கழுவேற்றத்தைப் போன்று சகிப்பின்மையும், மத அடிப்படையிலான ஒடுக்குமுறைகளும் நிலவிய காலங்களும் வரலாற்றில் உண்டு. மத அடிப்படையில் இயங்க முயற்சித்த பல்வேறு மதங்களை, நம்பிக்கைகளை பின்பற்றியவர்களில் – கஜினி முகமது, தைமூர் போன்ற  மோசமான அரசர்களும் உண்டு. ஆனால் அதை மட்டுமே ஒட்டுமொத்த வரலாறாக முன்னிறுத்தி, இன்றைய அரசியலை பார்க்க முடியாது.

ஆனால் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தன்னுடைய அரசியலுக்கு ஏற்ற விதத்தில் வரலாற்றை திரிப்பதன் மூலம் வகுப்புவாத அரசியலை வளர்த்தெடுக்கிறது. மேலும் மக்களாட்சி ஏற்பாட்டிற்கே  நேர்மாறான, அரதப்பழைய சட்ட நூலான ‘மனுஸ்மிருதியை’ அரசமைப்பிற்கான முன் மாதிரியாக உயர்த்திப் பிடிக்கிறார்கள். அந்த நூலின் உள்ளடக்கம் அவர்களின் அரசியல் திட்டத்திற்கு நெருக்கமாக உள்ளது.

மனுவின் சட்டங்கள், பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வினையும், பாலின அடிப்படையில் வாய்ப்பு மறுப்பதையும், அடிமைப்படுத்துவதையும் நியாயப்படுத்துகின்றன. நிலவுடைமைச் சுரண்டலை தீவிரப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட அந்த சட்டங்கள் மக்களாட்சிக்கு நேர் விரோதமானவை. சனாதனத்தை, பிராமண மேலாதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கம் கொண்டவை. அதனை உயர்த்திப் பிடிக்கும் சங்க பரிவாரம், ஒட்டுமொத்த மக்களாட்சியையும் தகர்க்க நினைக்கிறது.

விடுதலைப் போரில் மக்கள் ஒற்றுமை

நவீன இந்தியாவிற்கான மதச் சார்பின்மைக் கொள்கையின் வலுவான அடித்தளம், விடுதலைப் போராட்ட காலத்தில் உருவானது.

தமிழ்நாட்டில் 1801 ஆம் ஆண்டில் கம்பெனி ஆட்சிக்கு எதிராக நடந்த மருது சகோதரர்கள் கிளர்ச்சிக்கும், வேலு நாச்சியாருக்கும் ஹைதரும், திப்புவும் அளித்த உதவிகளிலும், 1806 வேலூர் கிளர்ச்சியிலும் வலுவான மத ஒற்றுமை வெளிப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடுதழுவிய அளவில் பரவலான எழுச்சியாக அமைந்தது 1857 முதல் சுதந்திர போராட்டம். மத ஒற்றுமை வெளிப்பட்ட பொற்காலமாக அது இருந்தது. ராணி லட்சுமி பாயும், பேகம் ஹசரத் மஹாலும், மவுலவி அஹமதுல்லாவும், ராவ் துலா ராமும் தோளோடு தோள் நின்று கம்பெனி ஆட்சியை எதிர்த்தார்கள். ராணி லட்சுமி பாயின் காலாட்படை/பீரங்கிபடை தளபதிகள் மற்றும் அவரது பெண் மெய்க்காப்பாளர் முஸ்லீம்களாவர்.  பேகம் ஹஸ்ரத் மகாலின் தளபதிகளில் பாதி பேர் இந்துக்களாவர். மொகலாய முடியரசர் பகதுர் ஷா சபர் இந்த போராட்டத்தின் அடையாளமாக இருந்தார். இந்த ஒற்றுமை பிரிட்டிஷ் அரசாட்சிக்கு ஆபத்தானதாக அமைந்தது.

முதல் சுதந்திர போராட்டம் குறித்து, (பிற்காலத்தில் மன்னிப்புத் திலகமாகிய) வி.டி.சாவர்க்கர் எழுதிய நூல் மிகவும் புகழ்பெற்றதாகும். அதில் அவர் “இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஏற்பட்ட அபாயத்தை முதன்முதலில் உணர்ந்தவர்கள் பூனாவைச் சேர்ந்த நானா பட்னாவிசும், மைசூரின் ஹைதர் சாஹிபும்தான்” என்கிறார். திப்பு சுல்தானையும், ஹைதர் அலியையும் வெகுவாக புகழ்ந்துள்ளார். (இந்த நூலை எழுதும்போது அவர் ‘இந்துத்துவா’ திட்டத்தை உருவாக்கியிருக்கவில்லை)

மக்களின் விடுதலை எழுச்சியை ரத்த வெள்ளத்தில் ஒடுக்கிய பிரிட்டிஷ் ஆட்சி, நேரடியாக இங்கிலாந்து ஆளுகையின் கீழ் இந்தியாவை கொண்டு வந்தது. அதன் பிறகு இந்திய அரசியலில் வகுப்புவாத பிரிவினைகளை உருவாக்கும் முயற்சிகளையும் வேகப்படுத்தியது.

அதே சமயம் போராட்டக் களத்தில் முன்னின்ற தலைவர்கள், மதங்களைக்  கடந்த ஒற்றுமையை முன்னெடுத்தார்கள். அதன் அடிப்படையில், விடுதலைக்கு பிறகான இந்தியா எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் முன்வைத்தார்கள்.

பரிணமித்த அரசமைப்பு சட்டம்

விடுதலைக்கு முன்பே நவீன இந்தியாவின் அரசமைப்பு தொடர்பான வரைவுத் திட்டங்களை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. 1895 ஆம் ஆண்டில் பால கங்காதர திலகர் ‘சுதந்திர மசோதா’ (ஸ்வராஜ்) என்று, அரசமைப்புச் சட்டம் ஒன்றை நாட்டு மக்களின் முன் வைத்தார். அந்த ஆவணம் அனைத்து மதங்களும் இந்தியாவின் மதங்களாக இருக்கும் என்று பிரகடனம் செய்தது.

ஆனால், ஆட்சி அதிகாரத்தை கைவசம் வைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமோ,  வகுப்புவாத தன்மையுடன் அன்றைய அரசமைப்பில் திருத்தங்களை செய்தது. ஏற்கனவே ஆங்காங்கு தென்பட்ட வகுப்புவாத போக்குகளை, ஆதரித்து வளர்ப்பதாக பிரிட்டிஷ் அரசாங்கம் இயங்கியது. அதன் விளைவாக மத அடிப்படையிலான வகுப்புவாத அமைப்புகள் உருவாயின. 1906ஆம் ஆண்டில் முஸ்லிம் லீக்கும், பல்வேறு இந்து சபாக்களும் அமைக்கப்பட்டன. இந்து சபாக்கள் ஒருங்கிணைந்து 1913 ஆம் ஆண்டில் இந்து மகாசபா ஏற்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, 1925ஆம் ஆண்டில்தான் அமைக்கப்பட்டது. இருப்பினும் மற்ற வகுப்புவாத அமைப்புகளில் இருந்து ஆர்.எஸ்.எஸ் வேறுபட்டதாகும். மற்ற அமைப்புகளை ஒத்த விதத்தில் பழமையை மீட்டமைத்தல், மத அடிப்படையிலான அரசியலை முன்னெடுத்தல் என்பதோடு குறிப்பிடத்தக்க வேறு சில அம்சங்களும் இருந்தன.

 • முதலாவது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இத்தாலியின் பாசிசம் மற்றும் ஜெர்மானிய நாசிசத்திடம் இருந்து ஊக்கம் பெற்றதாக இருந்தது.
 • இரண்டாவது, மற்ற வகுப்புவாத அமைப்புகளில் இருந்து வேறுபட்டு, ‘இந்துக்களை ஆயுதமயமாக்குவோம்’ என்றது.
 • மூன்றாவது, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக மக்கள் போராடி வந்த சூழலில், அதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் உள்ளுக்குள்ளேயே எதிரிகளை கட்டமைத்து வெறுப்பினை மூட்டியது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் அரசியல் திட்டமும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சேவகம் செய்வதுடன், மராட்டியத்தில் வளர்ந்து வந்த பிராமணர் அல்லாதார்/தலித் மேம்பாட்டிற்கான அரசியலை எதிர்கொண்டு – சனாதன சிந்தனையை உயர்த்திப்பேசுவதாகவும், முன்னெடுப்பதாகவும் இருந்தன. அவர்களே மத அடிப்படையில் இரண்டு தேசங்கள் என்ற கொள்கையை முதலில் முன்வைத்தார்கள். அதன் பின்னர் சிறுபான்மை வகுப்புவாத அமைப்புகளில் இருந்தும் இரு தேசங்கள் என்ற பிரிவினை முழக்கம் எழுந்தது. இருப்பினும் அந்த காலகட்டத்தில் வகுப்புவாத/பாசிச வகைப்பட்ட திட்டத்திற்கு பரந்த மக்கள் ஆதரவு இல்லை என்பது இயல்பானது.

1925ஆம் ஆண்டில், பகத் சிங் செயல்பட்ட இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்கத்தின் ‘புரட்சிகர திட்டம்’ என்ற அரசியலமைப்பு சட்ட நகலை வெளியிட்டனர்.  1927ஆம் ஆண்டு சைமன் ஆணையத்தை புறக்கணித்த போராட்டத்தில் நேரு அறிக்கை வெளியிடப்பட்டது. இவை இரண்டுமே மதச் சார்பின்மைக் கொள்கையின் வழி நின்றன. இந்திய மக்களுக்கு கூடுதல் அதிகாரத்தையும் சுயாட்சியையும் உறுதி செய்வதை நோக்கியதாக இருந்தன.

மதச்சார்பின்மையில் உறுதி

1928ஆம் ஆண்டில், காங்கிரசின் மராட்டிய பிராந்திய மாநாடு நடந்தபோது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இவ்வாறு பேசினார்: “சமூகத்தை ஜனநாயகப்படுத்தாமல், அரசியலில் மட்டும் மக்களாட்சியை நிறுவிட உங்களால் முடியாது. இல்லை நண்பர்களே, அரசியலில் மக்களாட்சியும், சமூகப் பார்வையில் பழமைவாதத்தையும் கொண்டுள்ள விநோதமான கதம்பமாக நாம் ஆகிவிட வேண்டாம்… பிறப்பினால் கிடைக்கும் சாதகங்களும், சாதி அல்லது நம்பிக்கைகளும் அகற்றப்பட வேண்டும்… பெண்களின் நிலை உயர்த்தப்பட வேண்டும்… இந்தியாவின் பல்வேறு சமுதாயங்களிடையே பிரத்யேக நிலைமைகள் நிலவிடும் சூழல்தான் இப்போது நிலவுகிறது. நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டுமானால் மதச்சார்பின்மையும், அறிவியல் பயிற்சிகளும் அவசியப்படுகின்றன…  மதச் சார்பின்மையும், அறிவியல் சிந்தனைகளையும் போல, மதவெறியை குணப்படுத்தக் கூடிய வேறொன்று இல்லை.” என்றார்.

1931ஆம் ஆண்டில், கராச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சர்தார் வல்லபாய் பட்டேல் “எங்களுக்கு தேவை இதயப்பூர்வமான ஒற்றுமை… பெரும்பான்மை சமூகம் தைரியத்தை இரு கைகளிலும் எடுத்து சிறுபான்மையினரின் இடத்தில் தங்களை வைத்து பார்க்கும்போதுதான் அத்தகைய ஒற்றுமை ஏற்படும். இதுதான் ஞானத்தின் உச்சம்” என்று தெளிவாக முன்வைத்தார்.

மக்கள் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக, பிரிட்டிஷ் ஆட்சி சில சமரசங்களை முன்னெடுத்தது. அதில் உருவானதுதான் 1935 இந்திய அரசாங்க சட்டம். ஆனால், அதிலும் வகுப்புவாத பிரிவினையை தூண்டும் முயற்சிகள் இருந்தன. இவ்வாறு நவீன இந்தியாவிற்கான அரசாட்சி எவ்வாறு அமையவேண்டும் என்பதிலேயே மிக நீண்ட விவாதங்கள் விடுதலைப் போராட்ட காலத்தில் நடைபெற்றன.

இந்தியா விடுதலை பெற்றபோதும், நமது நல்லிணக்க வாழ்வின் மீதும்,  மதச்சார்பற்ற அரசியலின் மீதும் ஒரு சம்மட்டி அடியைக் கொடுத்தே அகன்றது பிரிட்டிஷ் காலனி நிர்வாகம். அவ்வாறு நிகழ்த்தப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் காரணமாக மத அடிப்படையிலான வகுப்புவாத கலவரங்கள் நிகழ்ந்தன. வகுப்புவாத சக்திகளும் அந்த களத்தை பயன்படுத்தி வளர முயற்சித்தார்கள். இவை வரலாற்றின் ஆறாத வடுக்கள் ஆகின.

ஆர்.எஸ்.எஸ்., முன்னெடுத்ததும், பிறகு சிறுபான்மை வகுப்புவாதிகள் கையில் எடுத்துக் கொண்டதுமான இரு தேசங்கள் பிரிவினையை நோக்கிய வகுப்புவாத வெறி நடவடிக்கைள், 1940களிலேயே தொடங்கிவிட்டன. ஆர்.எஸ்.எஸ் மட்டுமல்லாது, சிறுபான்மை வகுப்புவாத சக்திகளும் களத்தில் சேதங்களை விளைவித்தார்கள். பிரிவினையை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை. அதன் தலைவராக இருந்த மவுலானா  அபுல்கலாம் ஆசாத்திடம் கைகுலுக்க மறுக்கும் அளவுக்கு வெறுப்போடு முகமது அலி ஜின்னா (முஸ்லிம் லீக்)  செயல்பட்டார். இவ்வாறு பெரும்பான்மை வகுப்புவாத அமைப்புகளும், சிறுபான்மை வகுப்புவாத அமைப்புகளும் ஒருவருக்கொருவர் தீனி கொடுத்தார்கள்.

ஆனால், இந்திய தேசிய இயக்கத்தின் தலைவர்கள் மதச்சார்பின்மையில் உறுதி காட்டியது முக்கியமானதாகும். 1947ஆம் ஆண்டில், ‘இந்து அரசு’ அமைக்க வேண்டும் என்ற ஆலோசனையை வல்லபாய் படேலிடம், பிர்லா முன்வைத்தார். அதற்கு ஜூன் 10ஆம் தேதியிட்ட கடிதத்தில் பதில் கொடுத்துள்ளார் பட்டேல். “இந்து மதத்தை அரசின் மதமாகக் கொண்ட இந்து நாடாக இந்துஸ்தானை கருதுவதற்கு இயலாது என்று நினைக்கிறேன். வேறு சில சிறுபான்மையினர் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களை பாதுகாப்பது நமது முதன்மையான பொறுப்பு என்பதை நாம் மறக்கக் கூடாது. அரசு என்பது சாதி மதங்களைக் கடந்து, அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்”.

இந்திய மக்களாகிய நாம்

விடுதலை இந்தியாவின் அரசமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என அரசியல் நிர்ணய சபை விவாதித்தது. இந்த விவாதங்கள் 3 ஆண்டுகள் நடைபெற்றன. பிரிவினையின் மிக மோசமான வன்முறைகளைக் கண்ணுற்ற அந்த அவை மதச்சார்பின்மையில் உறுதி காட்டியது.

அரசியல் நிர்ணய சபையின் விவாதத்தில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தொடக்க வரி என்னவாக இருக்க வேண்டும் என்பதும் விவாதிக்கப்பட்டது. கடவுளின் பெயரால் இந்த நாட்டை நிர்மாணிக்கிறோம் என்ற வாசகமும் அவையில் முன்வைக்கப்பட்டது. ஆனால், இறுதியாக, ‘இந்திய மக்களாகிய நாம்’ என்று தொடங்க வேண்டும் என்றே முடிவானது. இந்த முடிவு வாக்கெடுப்பு நடத்தி இறுதி செய்யப்பட்டது.

13 பிரிட்டிஷ் மாகாணங்களும், 565 மன்னராட்சிப் பகுதிகளும், 8 மதங்களும், ஆயிரக்கணக்கான சாதிகளும், மொழிவழி தேசியங்களும், ஏராளமான மொழிகளும், இனக்குழு சமூகங்களும், பழங்குடிகளும் கொண்டு உருவான ஒரு நாட்டில், ‘மதச்சார்பின்மை இல்லாது போனால் அரசியல் அமைப்பு சட்டம் முன்வைக்கிற எல்லா சிறப்பு அம்சங்களும் பொருளற்றதாகிப் போகும்’ என்றார் அண்ணல் அம்பேத்கர். இவ்வாறுதான் இந்திய மக்களாட்சியின் சாரத்தில் இருந்து பிரிக்க முடியாத அங்கமானது ‘மதச்சார்பின்மை’.

அரசமைப்புச் சட்டத்தின் சாரம்

இருப்பினும், இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் 1975 ஆம் ஆண்டில்தான் சேர்க்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்புகளில், இந்திய அரசமைப்பில் இருந்து மதச்சார்பின்மைக் கொள்கையை பிரிக்கவே முடியாது என்பதை தெளிவாக்கியே வந்துள்ளது. முதலில் 1962 ஆம் ஆண்டில் தனது கருத்தாகவும் பின்னர், 1973 ஆம் ஆண்டு கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பிலேயே ஒரு பகுதியாகவும் உறுதிபட குறிப்பிட்டது.

இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 14, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது. பிரிவு 15, சாதி, மதத்தின் பேரால் வேற்றுமைகள் பாராட்டக் கூடாது என்கிறது.  ஒவ்வொரு தனி மனிதரும் தம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்தவும், பின்பற்றவுமான உரிமையை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 வழங்குகிறது. வெவ்வேறு மதப் பிரிவுகளும் மத நிறுவனங்களை நடத்தவும், சொத்துக்களை சேர்க்கவும், கையாள்வதற்குமான உரிமையை வழங்குகிறது.

அதே சமயம் மத வழி, மொழிவழி, இனவழி சிறுபான்மையினர் மற்றும் அதிகாரம் மறுக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக எந்தவொரு கட்டமைப்பிலும் அரசு தலையிடுவதை உறுதி செய்கிறது. தீண்டாமைக் கொடுமைகளையும், பாலின பாகுபாடுகளையும் மதத்தின் பேரால் நியாயப்படுத்துவதை எதிர்க்கிறது. குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க மத நிறுவனங்களில் அரசு தலையீடு செய்ய வேண்டும் என்கிறது. அதிலிருந்து பிறழ்வோரை தண்டிக்க அதிகாரமளிக்கிறது. இந்து சட்டமும், இட ஒதுக்கீடும், வன்கொடுமை தடுப்பு சட்டமும், மொழிவழி மாநிலங்களும், பாலின சமத்துவ முன்னெடுப்புகளும், அறநிலையத் துறை/கோயில் நிர்வாகங்களில் மேற்கொள்ளும் தலையீடுகளும் இதன்பாற்பட்டவையே. மேலும், தேர்தல் அரசியலில் மதம் கலக்கக் கூடாது என்பதை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் விரிவாக பேசுகிறது.

இந்தியாவிற்கானது மதச்சார்பின்மை

இருப்பினும், இந்தியாவின் மதச்சார்பின்மை கண்ணோட்டம், வெறுப்பின் அனைத்து வெளிப்பாடுகளையும் மறுதலிக்கிற காந்தியின் கண்ணோட்டத்தில் இருந்துதான் உருவெடுத்தது. எனவே, அது அதற்கே உரிய பலவீனத்தையும் கொண்டிருந்தது.

அரசாங்கத்திலும், அரசியலிலும் இருந்து மத நிறுவனங்களை முற்றாக விலக்கி வைப்பது இந்தியாவிற்கு மிக மிக அவசியமாகும். இங்கு நிலவக் கூடிய படிநிலைச் சாதி அமைப்பும் அதன் சுரண்டலும் பிரத்தியேகமானவை. நாட்டில் பன்முக பண்பாடு நிலவுகிறது, பல்வேறு மொழிவழி தேசியங்களும் இனக் குழுக்களும் வாழ்கின்றனர். எனவே, மதம் மட்டுமல்ல, சாதி அல்லது வேறு எந்த பண்பாட்டு நிறுவனமும் அரசில் ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மதம், மொழி மற்றும் இனவழி சிறுபான்மையினர் உரிமைகளை முன்னிறுத்தும் மக்களாட்சி மதிப்பீடுகளும், மதச்சார்பின்மையின் அங்கமே ஆகும். இந்தக் கொள்கையானது அரசின் நிர்வாகம் மட்டுமல்லாது அனைத்து பொது நிர்வாகங்களுக்கும் விரிவாக பார்க்க வேண்டியது.

ஒரு நிர்வாகத்தில், அது மத நிறுவனமே ஆனாலும், அதன் நிர்வாக ஒழுங்கு மேற்சொன்ன வரையறைக்குள் இருக்க வேண்டும் என்பதையும் மதச்சார்பின்மை வலியுறுத்துகிறது மேலும், சமூகத்தில் நல்லிணக்க வாழ்வினை பாதுகாப்பதும், வளர்த்தெடுப்பதும் முக்கிய பங்காற்றுகிறது.

நடைமுறையில் மதச்சார்பின்மை

பிரிட்டிஷ் ஆட்சியின் பல்வேறு முயற்சிகளையும், பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை வகுப்புவாத சக்திகளின் தாக்குதல்களையும் தாண்டி,  மதச்சார்பின்மைக் கொள்கையை பாதுகாத்தது விடுதலைப் போராட்டக் களம்தான். விடுதலைக்கு பின், இந்து வகுப்புவாத வெறியூட்டப்பட்ட கோட்சே, அண்ணல் காந்தியை சுட்டு வீழ்த்தினான். அதனைத் தொடர்ந்து சமூகத்தில் நல்லிணக்கத்தை சிதைக்க ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், அந்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன.

மறுபக்கத்தில் மொழிவழி மாநிலங்களுக்கான எழுச்சியும் இன்ன பிற ஜனநாயக இயக்கங்களும் சார்பின்மைக் கொள்கையை வலுப்படுத்தின. முற்போக்கான மாற்றங்களை நோக்கிய போராட்டக் களம், சமூக நல்லிணக்கத்தையும், மதச் சார்பின்மைக் கொள்கையையும் வலுப்படுத்தியதில் செலுத்திய பங்கு தனியாக விவரிக்க வேண்டியதாகும்.

இருப்பினும், விடுதலைக்கு பின் இந்திய ஆளும் வர்க்கம் கடைப்பிடித்த குறுகிய பார்வையின் காரணமாக வகுப்புவாத வெறிக் கூட்டத்திற்கு வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன. (உதாரணமாக, ஒன்றிய ஆட்சிகள் பின்பற்றிய மக்கள் விரோதக் கொள்கை முடிவுகளை, ஜனநாயகத்தை நசுக்கிய அவசர நிலை மற்றும் ஆட்சிக் கலைப்பு நடவடிக்கைகளை சொல்லலாம்)

முதலாளித்துவ ஜனநாயகமும், மதச்சார்பின்மைக் கொள்கை பற்றிய தாராளவாத பார்வையும் –  தன் அளவிலேயே ஏராளமான போதாமைகளைக் கொண்டவை ஆகும். முதலாளித்துவ ஜனநாயகம் என்பது வெளித்தோற்றத்திற்கு அனைவருக்குமானதாக தெரிகிறது. உண்மையில் அது வர்க்கச் சார்பானது. சுரண்டப்படும் மக்களை அடக்கி ஆள்வதாகவே அரசின் கருவிகள் உள்ளன. எனவே, அரசியலில் அது வகுப்புவாதத்தை அனுமதிக்கிறது. தன்னுடைய அதிகார நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறது. குறுகிய நோக்கங்களுக்காக சமுதாயத்தில் வகுப்புவாத உணர்வு பரவலாக்கப்படும்போது அது ஒட்டுமொத்த மக்களாட்சி அமைப்பையுமே பாதிக்கிறது.

அதனோடு தாராளவாத பார்வையும் இணையும்போது சிக்கல் கூடுதலாகிறது. பொதுவாக, சிறுபான்மையினருக்கான உரிமைகளை வலுவாகப் பேசும் தாராளவாத மதச்சார்பின்மை ஆதரவாளர்கள், ஒட்டுமொத்தமாக உழைக்கும் மக்கள் மீது நிகழ்த்தப்படும் முதலாளித்துவச் சுரண்டலை கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, சுரண்டலுக்கு ஆளாகும் மக்களில் பெரும்பான்மையோர் முன்பு, சிறுபான்மையினர் தனிச் சலுகை பெற்றவர்களாகவும், எதிரிகளாகவும் சித்தரிக்கப்படும்போது, தாராளவாத பார்வையிடம் அதற்கான பதில் இருப்பதில்லை. ஏற்கனவே அரசியலில் வகுப்புவாத உணர்வுக்கு இடம் ஏற்பட்டுவிடுகிற சூழலில், இத்தகைய குறைபாடுடைய  தாராளவாத போக்குகள் பாதிப்பை கடுமையாக்குகிறது.

சி.பி.ஐ(எம்) கட்சி திட்டத்தில் இது பின்வரும் விதத்தில் தெளிவாக விளக்கப்படுகிறது: “நடைமுறையில் மதச்சார்பின்மை முதலாளி வர்க்கத்தால் நாசமாக்கப்பட்டுள்ளது… அரசியலையும், மதத்தையும் முற்றாகப் பிரிப்பது என்பதற்குப் பதிலாக, அரசு மற்றும் அரசியல் நிகழ்முறைகளில் அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் சமமாக தலையிடுவதற்கான சுதந்திரம் என்பதே மதச்சார்பின்மையின் பொருள் என மக்களை நம்ப வைக்க முயல்கின்றனர். மதச்சார்பின்மைக்கு எதிரான போக்குகளை உறுதியுடன் எதிர்ப்பதற்கு பதிலாக, முதலாளி வர்க்கம் அதற்கு சலுகை வழங்கி வலுப்படுத்துகிறது.”

மேலும், இந்தியாவில் முதலாளித்துவ சுரண்டல் நிலை காரணமாக அரசியல் சாசனத்தில் சிறுபான்மை மக்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகள்கூட செயல்படுத்தப்படுவதில்லை. பொருளாதார, சமூகத்துறைகளில் சம வாய்ப்பு இல்லாததோடு பாரபட்சமும் நிலவுகிறது என்பதே உண்மை நிலையாகும்.

ஆனால், இந்திய ஆளும் வர்க்கங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. தொடக்கத்திலேயே அவர்கள் பிற்போக்கான நிலவுடைமை வர்க்கங்களோடு சமரசம் செய்தார்கள். அதன்பிறகு பொருளாதார இறையாண்மையையும் விட்டுக் கொடுத்தார்கள். சர்வதேச நிதி மூலதனத்தின் விதிகளுக்கு உட்பட்டு உலகமயத்தை ஏற்று நடந்தார்கள். ஆண்டுகள் செல்லச் செல்ல  விடுதலைப் போராட்ட காலத்தில் முகிழ்த்த புரிதலில் இருந்து திட்டவட்டமான முறிப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். இப்படிப்பட்ட போக்கு, இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு சாதகமான புறச்சூழலை உருவாக்கியது. 

ஆர்.எஸ்.எஸ் திட்டம்

இந்திய ஆளும் வர்க்கங்கள் ஆர்.எஸ்.எஸ்., வழிநடத்தும் பாஜகவோடு ஒரு கூட்டினை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். அதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு மதச்சார்பின்மை அடித்தளத்தையும், சமூகத்தில் நிலவும் நல்லிணக்கத்தையும் தாக்கி அழிக்க முயற்சிக்கிறார்கள். இதற்காக அரசு, நிர்வாகம், கல்வி அமைப்பு, தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை மதவெறி மயமாக்க முயற்சிக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் திட்டம் பாசிச வகைப்பட்டதாகும். அதன் கொள்கைத் திட்டம் சட்டத்தின் முன் அனைவரும் என்பதை ஏற்கவில்லை. இந்து மதம், ஆரிய இனம், சனாதன பண்பாடு மற்றும் சமஸ்கிருத மேன்மை ஆகிய நான்கு அம்சங்களை அது முன்னெடுக்கிறது. இந்து மதத்தை அது தனது அரசியல் திரட்டலுக்கான கருவியாக பார்க்கிறது. பிற மதங்களின் மீதான வெறுப்பை அடிப்படையாகக் கொண்டு மத உணர்வை கட்டமைக்கிறது. ஆரிய இனத்தை மேன்மைக்குரியதாக முன்வைப்பதுடன், சாதி ஆணாதிக்கத்தை உயர்த்திப்பிடிக்கும் சனாதன பண்பாட்டினை திணிக்கிறது. சமஸ்கிருத மொழியை அனைத்து மொழிகளுக்கும் மேம்பட்டதாக முன்வைக்கிறது. இவை அனைத்துமே மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், மக்களாட்சிக்கும் நேர் எதிரானதாகும்.

மேலும் கோல்வால்கர் எழுதிய நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசம் என்ற நூல், சாமானிய மக்களுக்கு எதிராக, இன்னொரு பகுதி சாமானிய மக்களை ஆயுதம் ஏந்தச் செய்கிற பாசிச திட்டத்தை இன்னும் விரிவாக பேசுகிறது.

அறிவியல் அடிப்படையே இல்லாத விதத்தில் மத நம்பிக்கையின் அடிப்படையில் மக்களின் தேச பக்தியை முடிவு செய்வதுடன், அதன் வழிப்பட்டதாக ஒருவரின் குடியுரிமையை தீர்மானிக்கிறது. மேலும், தனது விளக்கப்படி ‘இந்து தேசத்தின்’ குடிமக்கள் அல்லாதவர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்த வேண்டும் என்கிறது. முஸ்லிம்களையும், கிறித்துவர்களையும் அன்னியர்கள் என்பதுடன், பிற சிறுபான்மை மதங்களின் (பெளத்தம், சமணம், சீக்கியம்) தனித்துவத்தையும் ஏற்க மறுக்கிறது.

பொதுவாக பெரும்பான்மை வகுப்புவாதம் வெளித்தோற்றத்தில் தேசியவாதம் போலவே தென்படும். உண்மையில் அது அரசியல் லாபத்திற்கான திட்டம் மட்டுமே ஆகும்.

நாட்டின் இறையாண்மையை பாதுகாத்து, வளர்ச்சியை முன்னெடுப்பதன் மூலம் தேச உணர்வை வளர்ப்பதை விடவும் – உள்ளுக்குள்ளேயே எதிரிகளை கட்டமைத்து, முடிவில்லாத மோதல்களை உருவாக்கி, அதன் மூலம், தேசிய வெறியை கட்டமைத்தல் – இன்றைய ஆளும் வர்க்கத்திற்கு சுலபமாக தென்படுகிறது.  ஆனால் இது நாட்டின் அரசமைப்பிற்கும், மதச்சார்பின்மைக்கும் பெரும் சவாலை உருவாக்கியுள்ளது.

முடிவாக…

இந்த சவால், ஆளும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்கள் மீது தொடுத்துவரும் தாக்குதலின் மற்றுமொரு வெளிப்பாடே ஆகும். இதன் பின்னணியில் இருப்பது இந்துத்துவா-பெருமுதலாளித்துவ கூட்டே ஆகும்.

இந்துத்துவ வகுப்புவாதம் தனது அரசியலை பெரும்பான்மையினரின் பெயரால் முன்னெடுக்கும் போதிலும் அது உண்மையில் இந்துக்களாக வாழும் மக்களுக்கும் சேர்த்து துயரத்தையே அதிகரிக்கிறது. மிகச் சிறு எண்ணிக்கையிலான பெரு முதலாளிகளையும், கடைந்தெடுத்த பிற்போக்கு சக்திகளையுமே வலுப்படுத்துகிறது. மேலும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பாசிச திட்டமானது, மதச்சார்பின்மைக்கும் ஒட்டுமொத்தமாக மக்களாட்சிகும் அபாயமாகிறது.

பெரும்பான்மை வகுப்புவாதம் வளரும்போது மறுபக்கத்தில் சிறுபான்மை வகுப்புவாதத்தையும் தூண்டி விடுகிறது. அதுவும் மதச்சார்பின்மைக்க்கு சவாலாகவே எழுகிறது. பெரும்பான்மை மதவாதம் காரணி எனில், சிறுபான்மை மதவாதம் அதனால் உருவாகும் விளைவு என்ற தோற்றத்தில் முன்னுக்கு வருகிறது. உண்மையில் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்து வளர்கிறது. எனவே நாம் காரணியை பிரதானமாக எதிர்க்க வேண்டும், அதன் உடன் தோற்றமான சிறுபான்மை வகுப்புவாதத்தையும் எதிர்க்க வேண்டும். அதை நோக்கிய ஒன்றுபட்ட போராட்டத்தில் அனைத்து மக்களும் இணைய வேண்டும். சிறுபான்மை வகுப்புவாத சக்திகள், பாதிக்கப்படும் மக்களை அதிலிருந்து தனிமைப்படுத்தவும் செய்கிறார்கள். எனவே,  பெரும்பான்மை மதத்தை சார்ந்த மக்களை மதச்சார்பின்மை மற்றும் மதநல்லிணக்கத்தின் பக்கம் வென்றெடுக்க செயல்படும் அதே சமயத்தில், பாதிக்கப்படும் சிறுபான்மை மக்களோடு நிற்பதன் மூலம், ஜனநாயக இயக்கத்தை விரிவாக்க வேண்டும். அதன் வழியாகவே வகுப்புவாதத்தினை உறுதியுடன் எதிர்க்க முடியும்.

எனவே, மதச்சார்பின்மையை பாதுகாக்கும் போராட்டம், இந்திய குடியரசையும் அதன் மக்களாட்சியையும் பாதுகாப்பதற்கான போராட்டமே ஆகும். அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க  முதலாளித்துவ தாராளவாதப் பார்வை உதவி செய்யாது.

மார்க்சிய அடிப்படையில், மதச்சார்பின்மைக் கொள்கையிலிருந்து ஒரு சிறு விலகல் கூட ஏற்படாமல் செயல்படுவதுடன், விலகல் ஏற்படும்போது அதனை  அம்பலப்படுத்தவும், எதிர்த்து போராடவும் வேண்டும். ஒவ்வொரு மதத்தினரின் உரிமைகளை, அது பெரும்பான்மை மதமாக இருந்தாலும் சரி, அல்லது சிறுபான்மை மதமாக இருந்தாலும் சரி – அல்லது எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் சரி, அவர்களது உரிமைகளை பாதுகாத்து நிற்க வேண்டும். அதே நேரத்தில் நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் நிர்வாக நிகழ்முறைகளில் மதத்தை நுழைக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்திட வேண்டும். மதச்சார்பற்ற கல்வி, மதச்சார்பற்ற பண்பாடு, மதச்சார்பற்ற சமூக விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இதன் மூலமே மதச்சார்பற்ற இந்திய குடியரசை பாதுகாத்திட முடியும். நாட்டுப் பற்றாளர்கள் முன் உள்ள அவசர கடமை இதுவே.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் நம்முடைய பணி …

 • அருண்குமார்

அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 74வது திருத்தத்தின்படி உள்ளாட்சி தேர்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். ஆனாலும், பல மாநிலங்களில் அது முறையாக நடப்பதில்லை.

புதிய பொருளாதார கொள்கை அமலாக்கப்பட்ட பிறகு உள்ளாட்சி அமைப்புகள் மீதான பொருளாதார தாக்குதலோடு கலாச்சார அரசியல் ரீதியான தாக்குதல்களும்  நிகழ்கிறது. மக்களின் பங்கேற்போடு, மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதற்காகவே, விரிவான ஜனநாயகத்தை கொண்டதாக, உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அவை மக்கள் சார்ந்ததாக இல்லாமல் மையப்படுத்தப்பட்ட  அதிகாரத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்த்தப்பட்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தையே தனது கொள்கையாக கொண்டுள்ள பா.ஜ.க அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து விதமான ஜனநாயக உள்ளடக்கங்களையும் நசுக்கி வருகிறது.

74வது சட்ட திருத்தத்தின்படி 18 வகையான பணிகளை உள்ளாட்சி அமைப்புகள்தான் மேற்கொள்ளவேண்டும். கல்வி, சாலை அமைத்தல், குடிநீர் விநியோகம், சுகாதாரம், கழிவுநீர் அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும். ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த 18 பணிகளில் 5 க்கும் குறைவான பணிகளே மாநகராட்சிகள் மூலம் நடத்தப்படுகின்றன. அதிகபட்சமாக 7 பணிகள் மும்பை மாநகராட்சியில் மட்டுமே நடக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகள் எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்து பல ஆவணங்களும் அரசாணைகளும் சிறப்பாக உள்ளன. ஆனால், உண்மை நிலவரம் அவ்வாறு இல்லை என்பதையே மேற்கண்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏன் இவ்வாறு உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் முடக்கப்படுகிறது? 13 வது நிதிக்குழு, உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் சொந்த நிதியிலிருந்துதான் செயல்படவேண்டும் என்று தெரிவித்தது. மத்திய, மாநில அரசுகளிடமிருந்து நிதியை எதிர்பார்க்கக்கூடாது என்றது. மத்திய, மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் நிதியை குறைக்கவேண்டும் என்று வலியுறுத்தியது.

ஜி.எஸ்.டி போன்ற மத்தியப்படுத்தப்பட்ட வரி விதிப்பு முறைகளால் உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான வரி வருவாயை அதிகமாக இழக்க நேரிட்டது. நிதிக்குழு கூறியதுபோல், நிதியை உருவாக்க சொத்து வரியை உயர்த்துவது, குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது, கழிவு நீர் மற்றும் குப்பைகளை அகற்றுவதற்கான  சேவை கட்டணத்தை உயர்த்துவதென மக்கள் மீதான சுமை கூடுதலாக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சிகள் மீது நிதிச்சுமை

தற்போது 15வது நிதிக்குழு மேலும் இக்கட்டணங்களை உயர்த்த சில வழிமுறைகளை சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட அனைத்து வகையான சொத்துக்களையும் பட்டியலிட்டு சிறு பகுதியையும் விடாமல் வரி தீர்மானிக்க வேண்டும் என்கிறது. அதேபோல், சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஏற்றவகையில் சொத்து வரியை உயர்த்தவேண்டும் என்கிறது. மேலும், தீர்மானிக்கப்பட்ட சொத்து வரியை முழுமையாக வசூலிக்க வேண்டும் என்கிறது.

சொத்துவரியை முறைப்படுத்துவதில் என்ன தவறு? என்று சிலர் கேட்கக் கூடும். எங்கு சிக்கல் உள்ளதோ அங்கு அதை முறைபடுத்துவது தவறல்ல.  ஆனால், அதை பொதுமைப்படுத்தி ஏழை எளிய மக்களை பாதிக்கும் விதமாக வடிவமைப்பதில்தான் சிக்கல் உள்ளது. வர்த்தக பயன்பாடு நிறைந்த பகுதியில் வரி தீர்மானிக்கும்போது, அப்பகுதியில்  உள்ள குடியிருப்புகளுக்கும்  வர்த்தக நிலங்களுக்கு உள்ளதுபோல், குடியிருப்புக்களுக்கும் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வால் உயர் நடுத்தர மக்களும், நடுத்தர மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

குடிசை பகுதிகளையும் சொத்துவரிக்கு உட்படுத்தி ஏழை மக்களையும் நசுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த வரி உயர்வு, வாடகைதாரர்கள் மீது சுமத்தப்படுகிறது. இது வாடகைதாரர்களை மேலும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

சொத்து வரி உயர்வின் மூலம் ஒரு பகுதி நிதியை உள்ளாட்சி அமைப்புகள் திரட்டுகின்றன. மற்றொரு பகுதி நிதியை மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டிய குடிநீர், குப்பை மற்றும் கழிவு நீர் அகற்றுதல் போன்ற சேவைகளுக்கான கட்டணத்தை உயத்துவதன் மூலம் திரட்டுகின்றன.

15வது நிதிக்குழுவின் வலியுறுத்தலோடு, கரோனா காலத்தில் மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கொடுத்த அழுத்தமும், சொத்து வரி மற்றும் சேவை கட்டண உயர்வாக நம்மீது திணிக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்ய 5வது முறையாக பொருளாதார நிதி ஒதுக்கீட்டை அறிவித்த ஒன்றிய அரசு, இந்த நிதி மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டுமெனில், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் சொத்து வரியையும் சேவைகளுக்கான கட்டணத்தையும் உயர்த்தவேண்டும் என்றது. மேலும் 2021 – 22 க்குள் அனைவருக்கும் இந்த கட்டண உயர்வை அறிவிக்கவேண்டும். 2022 -23க்குள் இந்த கட்டண உயர்வுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.  2023 – 24க்குள் இந்த கட்டண உயர்வை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்று கட்டளையிட்டது. அதுவே தற்போது அரங்கேறி வருகிறது. நிதி தேவையின் காரணமாக அனைத்து மாநிலங்களும் இந்த கட்டண உயர்வை அமலாக்குகின்றன.

முன்பு குப்பைகளை பெறுவதற்கு கட்டணம் தீர்மானிக்கப்பட்டது. குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்காவிட்டால் தண்டம் விதிக்கப்படும் என்றனர். மலைபோல் குப்பைகளை குவிக்கும் வேலையைதான் மாநகராட்சிகள் மேற்கொண்டன. அது பல சுற்றுச்சூழல் கேட்டிற்கும் உயிர் சேதத்திற்கும்  வழிவகுத்தது. தற்போது குப்பைகளை மறுசுழற்சி செய்வதாக கூறினாலும், அதற்கும் கூடுதலாக கட்டணம் தீர்மானித்து மக்களிடம் வசூலிக்கப்படுகிறது.

சொத்து வரி உயர்வும் உலக வங்கியின் தலையீடும்

சொத்து வரி உயர்வு, சேவை கட்டண உயர்வு என மக்கள் மீது இந்த அழுத்தம் ஏன் சுமத்தப்படுகிறது? அதற்கான காரணம் என்ன? என்பதை நாம் ஆராய்ந்தால் அது உலக வங்கியிடம் போய் நிற்கிறது. 2010 முதல் 2015 ஆண்டு வரை இந்த கட்டண உயர்வுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. சுயமான நிதி திரட்டலின் மூலம்தான் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படவேண்டும் என்பது இங்கிருந்து வந்த முன்மொழிவேயாகும். உலகம் முழுக்க எங்கும் உள்ளாட்சி அமைப்புகளால் சுயமான நிதி திரட்டுதல் மூலம் செயலாற்ற முடியாது. இது அவர்களுக்கும் தெரியும். மும்பை மாநகராட்சிதான் அதிகபட்சமாக தனக்கு தேவையான நிதியில் 60 சதத்தை சுயமாக திரட்டுவது சாத்தியமாகியுள்ளது.

பிறகு ஏன் இத்தகைய விஷயத்திற்கு மீண்டும் மீண்டும் அழுத்தம் தரப்படுகிறது என்பதை 2008இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு, சர்வதேச நிதி மூலதனத்தினால் அதன் பாதிப்பில் இருந்து வெளிவர இயலவில்லை. எனவே, சர்வதேச அளவில் அதன் நிதி மூலதனத்தை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் முதலீடு செய்து லாபம் ஈட்ட முனைகிறது. நாம் இதை புரிந்துகொண்டு மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

கோவையில் சூயஸ் நிறுவனம் தண்ணீர் விநியோகத்தில் ஈடுபட மாநகராட்சி அனுமதித்ததை எதிர்த்து போராடினோம். அந்த நிறுவனம் டில்லி மாநகராட்சியில் இப்பணியை மேற்கொண்டது. அது நிர்ணயித்த அதிகமான கட்டணத்தை டில்லி மாநகராட்சியால் வசூல் செய்து கட்ட முடியாமல் போனது. இந்த தொகைக்கு ஈடாக தில்லி மாநகராட்சியின் மையப்பகுதியில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை சூயஸ் நிறுவனத்திற்கு கொடுக்கும்படி உலக வங்கி கூறியது. இதுதான் அதன் நோக்கமும். நிலம் தற்போது பணம் கொழிக்கும் சொத்தாக மாற்றப்பட்டுவிட்டது. நகர்ப்புறங்களில் உள்ள இடங்கள் தற்போது இவர்களின் இலக்காக மாறியுள்ளன. அரசுகளும் அதற்கு ஏற்ற வகையில்தான் செயல்படுகின்றன.

ஒன்றிய அரசு டில்லியில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தையும் நிர்வாக வசதிக்காக புதிய நாடாளுமன்றம் அமையவுள்ள சென்ட்ரல் விஸ்தாவிற்குள் கொண்டுவரவுள்ளது. உண்மையில், பல பகுதிகளில் உள்ள அலுவலகங்களை இங்கு மாற்றும்போது டில்லியின் முக்கியமான இடங்களில் உள்ள அதன் பழைய அலுவலகங்களை தனியாருக்கு கைமாற்றும் திட்டம் அதில் உள்ளது. சட்டிஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இந்துஸ்தான் எலக்ட்ரிக்கல் நிறுவனம் ஆதிவாசி மக்களின் நிலத்தில் முன்பு உருவாக்கப்பட்டது. தேசத்தின் வளர்ச்சிக்காக அம்மக்கள் அந்த நிலத்தை தானமாக வழங்கினர். 1990களுக்கு பிறகான பொருளாதார கொள்கையின் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்கள் நாசமாக்கப்பட்டு அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு கொடுக்கப்படுகிறது.  அப்படித்தான் இந்த நிறுவனமும் ஆக்கப்பட்டது.

மக்களை திரட்டுதல்

நம்மை சுற்றி இவ்வளவு நடந்தாலும், மக்களை திரட்டாமல், இதில் எவ்வித மாற்றத்தையும் உருவாக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதன் மூலம், அதன் பிரதிநிதிகளுக்கான உரிமைகளும் மறுக்கப்படுகிறது. மன்றங்களில் பேசுவதற்கு கூட அனுமதி இல்லாமல் போகிறது. நிதிநிலை அறிக்கைகளை அதிகாரிகளே தயார் செய்கின்றனர். அதை மன்றம் ஏற்காவிட்டாலும், மாநில அரசு ஏற்காவிட்டாலும், நிதிநிலை அறிக்கை மேல் நடவடிக்கைக்கு சென்றுவிடும். மக்களின் பங்கேற்போடே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறது 74 வது சட்ட திருத்தம். ஆனால், அவை மக்களை புறக்கணித்து அதிகாரிகளை கொண்டே செயல்படுத்தப்படுகிறது.

மக்கள் நலன் சார்ந்து செயல்படும் நம்மைப் போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் உரிய தலையீடு செய்யமுடியாத நிலை உள்ளது. ஆனால் மக்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு கேள்வி கேட்கும் முதல் நபராக உள்ளாட்சி பிரதிநிதிகளே உள்ளனர். எனவே, மக்கள் நலனுக்கு எதிராக உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கைகள் அமையும்போது, உள்ளாட்சி அமைப்பின் மீதான நம்பிக்கையும் நம்போன்ற கட்சிகளின் மீதான நம்பிக்கையையும் அவர்கள் இழக்க நேரிடுகிறது. எப்படியும் நீங்கள் எங்களுக்காக போராட்டம் போகிறீர்கள்.  உள்ளாட்சி அமைப்பின் பிரதிநியாக உங்களை அமர வைத்தாலும் அங்கு எதையும் செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு இல்லை. பிறகு உங்களை தேர்ந்தெடுப்பதைவிட, எனது சாதி, மதத்தை சார்ந்தவர்களை தேர்வு செய்வது எனக்கு வேறு வகையில் உதவக்கூடும் என்கிற குறுகிய மனநிலைக்கும் அவர்கள் செல்லும் நிலை ஏற்படுகிறது. மக்களை முற்போக்கு அரசியலில் இருந்து, குறுகிய பிற்போக்கு அரசியலுக்கு அவை அழைத்து செல்வது நம்போன்ற கட்சிகளுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும். அதேநேரம் மக்களை ஓரணியில் திரட்டி போராட்டங்களை முன்னெடுக்கவும் இது தடையாக அமையும். 

மக்களிடம் உண்மை நிலவரத்தை விளக்காமல் நம்மால் அவர்களை நமது அரசியலின்பால் ஈர்க்க முடியது. இதை ஒருநாளில் செய்துவிட முடியாது. சொத்துவரி உயர்த்தப்படும்போது மட்டும் வாருங்கள் போராடலாம் என்று கூறி பெரும் பகுதி மக்களை திரட்டிட முடியாது. இது ஒரு தொடர் நிகழ்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து மக்களுடன் உரையாடுவதற்கான வேலைகளை திட்டமிட்டு மேற்கொள்ளவேண்டும். அவர்களுக்கு புரியும்படி பேசிடவேண்டும்.

உள்ளாட்சி பிரதிநிதிகளாக

74 வது சட்ட திருத்தம் வார்டு கமிட்டி அமைக்கப்பட்டு மக்களின் பங்கேற்போடுதான் அனைத்து‌ முடிவுகளும் எடுக்கப்பட வேண்டும் என்கிறது. ஆனால், கேரளாவில் மட்டும்தான் வார்டு கமிட்டி நல்ல முறையில் செயல்படுகிறது. மற்ற இடங்களில் பெயர் அளவிற்கு வார்டு கமிட்டிகள் அமைக்கப்பட்ட போதும் அவை செயல்படுவதில்லை. அவர்களுக்கு தேவையானவர்களை கொண்ட கமிட்டி போலவும் அவை அமைக்கப்படுகிறது. 

நகர்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர் என்கிற வகையில் வார்டு கமிட்டிகள் போன்ற அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். அரசு இதுபோன்ற அமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும். அரசு அதை செய்யாததால் நாங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதுபோன்ற கூட்டங்களை கூடுதலாக நடத்தி மக்களிடம் கருத்துக்களை பெற்று, எது சாத்தியம் என்பதையும், எது சாத்தியமற்றதாக உள்ளது என்பதையும் பேசுவதோடு ஏன் இது சாத்தியமாகவில்லை என்பதற்கான காரணங்களையும், அதன் பின்புலத்ததையும் நாம் மக்களோடு பேசவேண்டும். வழக்கமாக நாம் வீதியில் செல்லும்போது இதுபோன்று பேசுவோம். அது போதுமானதல்ல. நாம் பேசும் அந்த நபரை தவிர மற்றவர்களுக்கு அது தெரியாது. மேலும் ஓரிடத்தில் மக்களை கூடச் செய்து அவர்களோடு உரையாடுவதுதான் அவர்களை அரசியல்படுத்தவும். நம்மோடு அவர்களை இணைக்கவும் உதவும். பெண்கள், இளைஞர்கள் என பலரை இணைப்பதும் சாத்தியப்படும்.

சமூக வானொலி மூலம் நமது வார்டுக்கு உட்பட்ட இடங்களில் குறிப்பிட்ட அலைவரிசையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு கேட்கும் வகையில் வானொலியில் நமது செயல்பாடுகளையும் பிரச்சினைகளையும் குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் பிரதிநிதிகள் பேசவேண்டும்.

மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு

வர்க்க, வெகுமக்கள் இயக்கங்களின் செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பு அவசியம். அந்தந்த அமைப்புகள் அதன் வர்க்க வெகுஜன பணிகளை மேற்கொள்வது அவசியம்தான். அதேநேரம் குடியிருப்புகளில் களத்தில் செயலாற்றும் தொழிற்சங்கம், மாதர், வாலிபர் அமைப்புகள் ஒருங்கிணைந்த சில கோரிக்கைகளை தீர்மானித்து, மக்களை விழிப்படைய செய்து போராட்டங்களில் இணைக்கவேண்டும். அந்தந்த அமைப்புகள் குறுகிய எண்ணிக்கையில் சில போராட்டங்களை அடையாளபூர்வமாக மட்டும் நடத்துவது பயன்தராது. குறிப்பிட்ட மக்கள் கோரிக்கையை தீர்மானித்து, அதில் வர்க்க, வெகுமக்கள் இயக்கங்களை ஒருங்கிணைத்து  உடனடி கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கைகளை மாவட்ட குழுக்கள் படித்து அதில் உள்ள விஷயங்களை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். மக்களுக்கு பாதகமான விஷயங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

நாட்டிலே அதிகமான காலிப்பணியிடங்கள் கோவை மாநகராட்சியில்தான் உள்ளது என்கிறது ஒரு புள்ளிவிவரம். 35 சதவீத  இடங்கள் காலியாக உள்ளது என்கிறது அவ்வறிக்கை. இது தொழிற்சங்க கோரிக்கை மட்டுமல்ல; மக்களுக்கு மாநகராட்சி வழங்க வேண்டிய  அன்றாட பணிகளை இந்த காலிப்பணியிடங்கள் எவ்வாறு பாதிக்கிறது என்பதை பேசவேண்டும். சுகாதாரம், குடிநீர், கழிவு குப்பைகள் அகற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஊழியர் இல்லாதது மக்களின் உடனடி பிரச்சினையோடு இணைந்தது. தொழிற்சங்கம் உள்ளிட்ட வெகுமக்கள் இயக்கங்கள் இதை பொது கோரிக்கையாக மாற்றி மக்களை போராட்டத்தில் இணைக்க வேண்டும்.

குடியிருப்புகளில் நமது பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அவர்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து பங்கேற்க வேண்டும். பொங்கல் போன்ற பண்டிகைகளை குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் பங்கேற்கும் வகையிலும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும், மேலும் வலுவாக நடத்திடவேண்டும். விசாகப்பட்டினத்தில் மே தினத்தை ஒரு நாள் நிகழ்வாக, கொடியேற்றி பேசி முடிக்கும் வழக்கமான நடைமுறையாக அல்லாமல், குடியிருப்பு பகுதியில் உள்ள அனைவரும் பங்கேற்கும் வகையில் நடத்தப்பட்டது. அது மே வாரம் போல் ஒரு வாரம் நடைபெற்றது. மகளிர் தினம் மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.

மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தினால் அவர்கள் நம்மோடு வருவார்கள். பிரச்சாரம், அறைகூவல்கள், போராட்டங்கள் இவைகளுக்கிடையேயான தொடர்பையும் புரிந்து செயலாற்ற வேண்டும். கொல்கத்தா பிளீனத்தில் குறிப்பிட்டதுபோல் மக்களுடன் உயிரோட்டமான தொடர்பை ஏற்படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

 தமிழில்: ச. லெனின்

புரட்சிக்கு ஒரு நாள் முன்பாக லெனின் எழுதிய கடிதம்!

வி.இ.லெனின்

தமிழில்: அபிநவ் சூர்யா

[ரஷ்யாவில் நடைபெற்ற பிப்ரவரி புரட்சிக்குப் பின் எட்டு மாதங்களில் லெனினின் எழுத்துகள் அனைத்துமே புரட்சியின் பாதையில் போல்ஷ்விக் புரட்சியாளர்களிடையே நிலவிய சித்தாந்த குழப்பங்களை, தயக்கங்களை நீக்கும் வகையில் இருந்தன.

கீழ் காணும் கடிதம் லெனின் அவர்கள் அக்டோபர் புரட்சிக்கு ஒரு நாள் முன்பு மத்திய குழு உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் ஆகும். இதில் அவர், வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களை புரட்சியாளர்கள் உணராமல், மக்களின் புரட்சிகர உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் போவது எவ்வாறு மாபெரும் குற்றமாக விளையும் என்பதை விளக்குகிறார்.

ரஷ்ய புரட்சி அரங்கேறிய தேதி, தற்போது புழக்கத்தில் உள்ள ஜார்ஜியன் நாள்காட்டி முறைப்படி நவம்பர் 7 ஆகும். ஆனால் 1917 ஆம் ஆண்டில்,  ரஷ்யாவில் ஜூலியன் நாள்காட்டி முறை பழக்கத்தில் இருந்து. அது ஜார்ஜியன் நாள்காட்டி முறையை விட 13 நாட்கள் பின் தங்கியது. அதன்படி புரட்சி அரங்கேறிய தேதி அக்டோபர் 25. அதனால் இந்த கடிதத்தில் தேதிகள்  “அக்டோபர்” மாதத்தில் என குறிப்பிடப்பட்டுள்ளன. – ஆசிரியர் குழு]

தோழர்களே,

நான் 24ஆம் தேதி மாலையில் இவ்வரிகளை எழுதுகிறேன். மிக மிக முக்கியமான நிலமையை எட்டியுள்ளோம். இப்போது எழுச்சியை தாமதிப்பது என்பது மிகவும் ஆபத்தாக விளையும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

அனைத்துமே ஒரு நூல் இழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தோழர்கள் உணர என் மொத்த சக்திகளையும் கொண்டு வற்புறுத்துகிறேன்; எந்த சம்மேளனங்களோ, மாநாடுகளோ (சோவியத் மாநாடு உட்பட) தீர்க்க முடியாத பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இவை மக்களால், ஜன சக்தியால், ஆயுதம் தாங்கிய மக்களின் போராட்டத்தால் மட்டுமே தீர்க்க முடியும்.

“கோர்னிலோவ்”களின்[1] முதலாளித்துவ சர்வாதிகார தாக்குதல்களும், வெர்கோவ்ஸ்க்கி[2] நீக்கப்பட்டுள்ளதும், நாம் தாமதிக்க முடியாது என்பதை காட்டுகிறது. எந்த நிலையிலும், இன்று மாலையே, இன்று இரவே, நாம் முதலில் இராணுவ அதிகாரிகளின் ஆயுதங்களை பறிமுதல் செய்து (அவர்கள் தடுத்தால், அவர்களை வீழ்த்தி), இந்த அரசாங்கத்தை கைது செய்து, முன்னேற வேண்டும்.

நாம் காத்திருக்க கூடாது! நாம் அனைத்தையும் இழக்கக் கூடும்!

உடனடியாக அதிகாரத்தை கைப்பற்றுவதன் பலனானது மக்களுக்கானதாய் (மாநாடு அல்ல. மக்களுக்கு. குறிப்பாக முதலில் இராணுவ வீரர்களுக்கும்[3] மற்றும் உழவர்களுக்கும்), இந்த கோர்னிலோவிய அரசாங்கத்திடம் இருந்து அவர்களை காப்பதாய் இருக்கும். இந்த அரசாங்கம்தான் வெர்கோவ்ஸ்க்கியை வெளியேற்றி, இரண்டாம் கோர்னிலோவ் சதியை[4] வடிவமைத்தது.

யார் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்?

இந்த கேள்வி இப்போது முக்கியம் இல்லை. வேண்டுமென்றால், புரட்சிகர இராணுவக் குழு எடுக்கட்டும். இல்லையென்றால், மக்களின் நலனை பாராட்டும் உண்மையான பிரதிநிதிகளுக்கு, (உடனடியாக அமைதிக்கான முன்மொழிவு மேற்கொண்டு) இராணுவ வீரர்களின் நலனை காப்பவர்களுக்கு, (உடனடியாக நிலக்கிழார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, தனிச்சொத்தை ஒழிக்கும்) உழவர்களின் நலனை காப்பவர்களுக்கு, பட்டினியில் வாடுபவர்களின் நலனை காப்பவர்களுக்கு மட்டுமே அதிகாரத்தை விட்டுத் தருவோம் எனக் கூறும் “ஏதோ ஒரு நிறுவனம்” அதிகாரத்தை கையிலெடுக்கட்டும்.

அனைத்து இராணுவ அமைப்புகளும், அனைத்து சேனைகளும், எல்லா படைகளும் உடனடியாக திரட்டப்பட்டு, அவர்களின் பிரதிநிதிகளை புரட்சிகர இராணுவ குழுக்களுக்கும், போல்ஷ்விக்களின் மத்தியக் குழுக்கும் அனுப்பி, எந்த நிலையிலும் 25ஆம் தேதி வரை கெரென்ஸ்க்கி[5] மற்றும் அவர் கூட்டாளிகள் கையில் அதிகாரத்தை விட்டு வைக்கக் கூடாது என்ற பிரத்தியேக கோரிக்கையை வைக்க வேண்டும். இந்த விஷயம் இன்று மாலையே, இன்று இரவே, உடனடியாக முடிவு செய்யப்பட வேண்டும்.

இன்று வெற்றி பெறும் சாத்தியம் இருக்கையில் (இன்று வெற்றி நிச்சயம்), நாளை பெருமளவில் இழக்க, உண்மையில் அனைத்தையும் இழக்க வாய்ப்பு இருக்கையில், மேலும் தாமதித்தால், வரலாறு புரட்சியாளர்களை மன்னிக்காது.

இன்று நாம் அதிகாரத்தை கைப்பற்றுவது சோவியத்களுக்கு[6] எதிராக அல்ல, அவர்களின் சார்பாக.

எழுச்சியின் பிரதான பணியே அதிகாரத்தை கைப்பற்றுவதுதான்; கைப்பற்றிய பின், எழுச்சியின் அரசியல் கடமை குறித்த தெளிவு கிடைக்கும்.

அக்டோபர் 25ஆம் தேதியின் ஊசலாடும் வாக்களிப்பிற்காக காத்திருப்பது என்பது வெறும் ஒரு சடங்காகவோ, அல்லது அபாயகரமாகவோ கூட முடியக் கூடும். இந்த மாதிரியான கேள்விகளுக்கு முடிவை வாக்களிப்பு மூலம் அல்லாமல், வன்முறை மூலம் தீர்மானிக்க, கடமையும் உரிமையும் மக்களுக்கு உண்டு. புரட்சியின் மிக முக்கியமான தருணங்களில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளுக்காக, மிகச் சிறந்த பிரதிநிதிகளுக்காகவும் காத்திருக்காமல், பிரதிநிதிகளுக்கு வழிகாட்டுதல் கொடுக்கும் கடமையும், உரிமையும் கூட மக்களுக்கு உண்டு.

அனைத்து புரட்சிகளின் வரலாறும் இதை நிறுவி உள்ளது; புரட்சியை காப்பாற்றுவதும், அமைதிக்கான வாய்ப்பை உருவாக்குவதும், பெட்ரோகார்ட் நகரத்தை காப்பாற்றுவதும், பஞ்சத்திலிருந்து காப்பாற்றுவதும், உழவர்கள் நில உரிமை பெறுவதும் தங்களை சார்ந்தே உள்ளது என புரட்சியாளர்கள் அறிந்திருந்தும், இந்த வாய்ப்பை தவற விட்டால், அது அளவற்ற பெரும் குற்றமாக விளையும்.

இந்த அரசாங்கம் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. எந்த நிலையிலும், அதற்கு இறுதி அடி கொடுக்கப்பட்டே ஆக வேண்டும்.

செயல்பாடுகளை மேலும் தாமதிப்பது அபாயகரமாக ஆகிவிடும்.

*

குறிப்புகள்:

[1] இராணுவ தளபதி கோர்னிலோவ் தலைமையிலான பிற்போக்கு அமைப்பு

[2] கோர்னிலோவை எதிர்த்த அமைச்சர்

[3] முதலாம் உலகப் போரில் அவதிப்பட்டு வந்த ரஷ்ய இராணுவம் மற்றும் சாதாரண சிப்பாய்கள்

[4] ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் இராணுவ ஆட்சியை நிறுவும் முயற்சி

[5] பிப்ரவரி புரட்சிக்குப் பிந்தைய  முதலாளித்துவ அரசின் தலைவர்

[6] தொழிலாளர் கமிட்டிகள்

கொரோனா முன்களத்தில், கியூபாவின் தனிச் சிறப்பு!

 • ஜி. ஆனந்தன்

கியூபாவின் மீதான பொருளாதார முற்றுகையை அமெரிக்கா மேலும் மேலும் இறுக்கிக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டு மக்கள் உயிர் வாழவே முடியாத அளவிற்கு கொடும் பொருளாதார முற்றுகையை அமெரிக்கா தொடர்கிறது. டொனல்ட் டிரம்ப் அரசாங்கம் முன்பே அறிவித்த பொருளாதார முற்றுகைகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது பைடன் நிர்வாகம். இதே பைடன் துணை அதிபராக இருந்த போது, ஒபாமா அரசு ஹவானாவுடனான தனது உறவை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது. ஒபாமாவே ஹாவானாவிற்கு சென்றார். ஆனால், பைடன் அதிபரான பிறகு, டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து மேலும் மேலும் பொருளாதார முற்றுகையை அதிகரிக்கிறார். இது கடும் குற்றம் என்றாலும், அமெரிக்காவை கட்டுபடுத்த எந்த சர்வதேச அமைப்புகளும் இல்லை.

டிரம்ப் கியூபாவின் மீதான தடைகளை விதித்த பிறகு, உலகம் முழுவதும் கொரோனா தொற்று கொள்ளை நோயாக பரவியது. உலக நாடுகளுக்கெல்லாம் மனித உரிமை பற்றி வாய்கிழிய பேசும் அமெரிக்கா, அத்தகைய சிரமமான காலத்தில்கூட கியூபா மீதோ அல்லது ஈரான், சிரியா போன்ற நாடுகளின் மீதான பொருளாதாரத் தடைகளை மனிதாபிமான முறையில்கூட விலக்கிக் கொள்ள தயாராக இல்லை. உணவு எரிபொருள், கட்டுமானப் பொருட்கள், நவீன தொழிற்நுட்பம் என எதுவுமே கியூபாவை சென்றடைய முடியாமல் பொருளாதார முற்றுகை இட்டுள்ள அமெரிக்கா, கொரோனா தொற்று வந்தபோது அத்துடன் கியூபா மக்கள் அழியட்டும் என மருத்துவ சப்ளைகளுக்கும் தடை விதித்து தனது பிடியை மேலும் இறுக்கியிருந்தது.

கொரோனா தொற்றை பொறுத்தவரை யாரிடமும் எந்த பாரபட்சமும் காட்டவில்லை. அது வெள்ளைத் தோலை பாதித்ததைப் போலவே, கருப்புத் தோலையும், மாநிறத் தோலையும், மஞ்சள் தோலையும் பாதித்தது. உலகின் பணக்கார நாடுகளை தாக்கிய அந்த கிருமி, ஏழை நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. எவ்வளவு பெரிய இராணுவம் வைத்திருந்த நாட்டையும் அது விட்டு வைக்கவில்லை. அப்படியொரு சமதர்மம். ஆனால் பாதிப்பிற்குப் பிறகு விளைவுகள் ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடும். அதற்கு காரணம், அந்தந்த நாட்டின் அரசியல்-பொருளாதார நிலைமைகள். நாட்டு மக்களின் உயிரைவிட மருந்துக் கம்பெனிகளின் லாப வேட்கையே முக்கியம் என்றிருக்கும் அமெரிக்காவிலேயே உலகில் மிக அதிகமான மக்கள் கொரோனா தொற்றிற்கு உயிரிழந்தனர். அந்த நாட்டில் பாதிப்பு ஏழைகளுக்கு அதிகமாகவும், பணக்காரர்களுக்கு மிகக் குறைவாகவும் இருந்தது.

அமெரிக்காவில் அனைத்துமே வியாபாரம் என்றாகிவிட்ட நிலையில், அரசு அந்த வியாபாரத்தில் தலையிடக் கூடாது என்ற நிலையில், அமெரிக்க காங்கிரசும் செனட்டும் மிகப்பெரிய கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்கான அமைப்பாக மாற்றப்பட்ட நிலையில், மக்களை எப்படி அமெரிக்காவால் காப்பாற்ற முடியும்? உலகிலேயே மிகவும் பணக்கார நாடான அமெரிக்காவில் உலகிலேயே மிக மிக அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பது தற்செயலானது அல்ல. கொரோனா தொற்று ஏற்பட்டால் அதனை உறுதி செய்யும் ஆர்.டி.பிசிஆர் சோதனை இன்று வரை அமெரிக்காவில் எந்த மருத்துவமனையிலும் இலவசம் கிடையாது. ரேபிட் டெஸ்ட் கிட்கள் பைடன் நிர்வாகம் வந்த பிறகு இலவசமாக பள்ளிகளிலும், வீடுகளிலும் வழங்கப்பட்ட போதிலும்.

அமெரிக்காவில் அதிக உயிரிழப்பு ஏன்?

அமெரிக்காவில் மிக நவீன சிகிச்சை உபகரணங்கள் இருந்தும் உயிரிழப்புகள் அதிகமானதிற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, மருத்துவம் முழுமையாக தனியார் மயமானதால், வசதி உள்ளவர்களே சிகிச்சை எடுக்க முடியும். ஏழைகள் நோய் பாதித்தாலும் வீட்டிலேயே இருந்து மடிந்தனர். சாதாரண நாட்களிலேயே இதுதான் நிலைமை என்றால், மாபெரும் தொற்று நோய் வந்தபோது நிலைமை படுமோசமானது. அடுத்த பிரச்சனையும், தனியார் மயத்தின் மற்றொரு விளைவுதான். முதலில் மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, நகரத்தின் மக்கட் தொகைக்கு ஏற்ப அவசர சிகிச்சை பிரிவில் கூடுதல் படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருந்தன. அவையனைத்தும் பயன்படுத்தப்பட்டிருக்காது. இருப்பினும் இவ்வளவு மக்கட் தொகைக்கேற்ப படுக்கைகள் இருந்தால்தான், மருத்துவ அவசர நிலைகளை சமாளிக்க முடியும் என்ற அடிப்படையில் அவை இருந்தன. இப்படிப்பட்ட பெருந் தொற்று காலங்களில் அவை பயன்பட்டிருக்கும்.

ஆனால், அதற்கு முன் அவசர நிலை மருத்துவம் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியன தனியார் மயமானபிறகு, ஒரு படுக்கையால் எவ்வளவு லாபம் என்பதே அடிப்படையாக மாற்றப்பட்டது. ஒரு படுக்கை இருந்தது என்றால், அது சாதாரண காலங்களில் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அதனால் எந்த லாபமும் இல்லையென்றால், அந்த படுக்கை அப்புறப்படுத்தப்பட்டது. இவ்வாறு அவசரகால தேவைக்காக இருந்த கூடுதல் படுக்கைகள் அப்புறப்படுத்தப்பட்டதால், கொரோனா தொற்று ஏற்பட்டபோது, ஒரே நேரத்தில் கூட்டமாக மக்கள் பாதிக்கப்பட, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான கட்டமைப்பு இன்றி பலரும் சாக வேண்டிய நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் கொரோனா தொற்றிற்கு பல லட்சக் கணக்கானவர்கள் இறந்ததற்கு அங்கு கடைபிடிக்கப்படும் முதலாளித்துவ லாப வேட்கையே முழுமையான காரணமாகும்.

கியூபாவின் மருத்துவ சேவை

2020 ஆண்டு கொரோனா தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருந்தபோது மேலே குறிப்பிட்ட நாடுகளைத் தவிர, கியூபா மருத்துவர்கள் பல நாடுகளில் மருத்துவ சேவையாற்றினர். கியூபாவில் ஹென்றி ரீவ் பிரிகேட் என்ற மருத்துவ பிரிவு உண்டு. ஒபாமா ஹவானா சென்றபோது அமைக்கப்பட்ட மருத்துவ சேனை இது. இந்தப் படையே ஆப்ரிக்காவிற்கு எபொலா வைரஸ் பரவியபோது சென்றது. கொரோனா தொற்று ஏற்பட்டபோது இந்த குழுவில் 593 மருத்துவ நிபுணர்கள் சூரிநாம், ஜமாய்க்கா, டெமினிக், பிலேஸ், செயின்ட் வின்சண்ட், செயிண்ட் கிட்ஸ், வெனிசுவேலா, நிகராகுவா மற்றும் அர்ஜென்டைனா ஆகிய பகுதிகளில் மருத்துவ சேவையை வழங்கிக் கொண்டிருந்தனர்.

கியூபா பற்றி ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட  பிம்பத்திற்கு மாறாக, கியூபாவின் சேவை மேற்கத்திய நாடுகளில் பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தது. இத்தாலி கொரோனா தொற்று ஏற்பட்டு முழு அடைப்பில் இருந்தபோது, கியூப மருத்துவர்கள் அங்கு சேவைக்காக சென்றது மேற்கத்திய உலகில் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இத்தாலியின் லம்பார்டி பகுதியின் கிரிமா நகரில் 52 கியூபா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒரு மருத்துவமனையை ஏற்படுத்தினர். இதில் தீவிர சிகிச்சைக்கு 3 படுக்கைகள். இது குறித்து லம்பார்டி நகரின் உயர் சமூக நலத்துறை அதிகரி ஜூலியோ கல்லேரோ தெரிவிக்கையில், இது ஒரு குறியீடுதான். கிரிமா நகர மருத்துவமனை மிக மிக நெருக்கடியான நிலையில் திணறிக் கொண்டிருக்கிறது. அவசர நிலை சிகிச்சை பிரிவில் ஏற்கனவே நிரம்பியுள்ள நிலையில், மேலும் மேலும் நோயாளிகள் வருகையினால், மருத்துவர்களும், மருத்துவமனையும் கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த உதவி கிடைத்துள்ளது என பாராட்டினார்.

ஸ்பெயின் நாட்டிற்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே ஒரு சிறு நகரத்தின் பரப்பளவில் ஒரு நாடு உள்ளது. அதன் பெயர் அண்டோரா. இங்கும் கியூபா மருத்துவ சேவை குழுவினர் சென்றுள்ளனர். அமெரிக்கா இதர நாடுகளை கியூபா மருத்துவர்களை அனுமதிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்த பின்னணியில், அண்டோராவின் வெளியுறவு அமைச்சர், “எங்களுக்கு அமெரிக்காவின் நிலை பற்றி தெரியும். ஆனால் நாங்கள் ஒரு சுயாதிபத்தியம் உள்ள நாடு.  எங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய யாரை தெரிவு செய்வது, யாருடன் உறவுகள் மேற்கொள்வது  என்ற முடிவுகளை எடுக்கும் உரிமை எங்களுக்குள்ளது” என்று அறிவித்தார்(அசோசியேட் பிரஸ்).

கியூபாவின் மருத்துவ சேவையைப் பொறுத்துக் கொள்ள முடியாத அமெரிக்கா, கியூபா மருத்துவ சேவையை இரண்டு விதமாக கொச்சைபடுத்தி வருகிறது. அவர்கள் மருத்துவ சேவை செய்வதன் மூலம், கம்யூனிச கொள்கைகளை பரப்புகிறார்கள் என்பது முதலாவது குற்றச்சாட்டு. இரண்டாவது, மிகவும் மோசமான தொற்றுகள் ஏற்படும் இடங்களில் தங்களின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அனுப்பி அவர்களின் உழைப்பை கியூபா அரசு சுரண்டுகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை சமூக ஊடகத்தில்(டிவிட்டர்) செய்தியைப் பரப்பியது. தனது நாட்டில் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக 15 டாலர் என்பதை நிர்ணயிக்க வக்கில்லாத அமெரிக்க அரசு, அமேசான்  கிட்டங்கிகளில் சிறுநீர் கழிக்க செல்லக்கூட அனுமதியில்லாமல், பாட்டில்களில் சிறுநீர் கழித்து பின்னர் அவற்றை சுத்தம் செய்து கொள்ளும் நிலையில் தொழிலாளர்களை வைத்துள்ள அமெரிக்கா, கியூபா மருத்துவர்களின் மகத்தான சேவையை கேவலப்படுத்துகிறது.

அமெரிக்கா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சில நாடுகளில் பணிபுரியும் கியூபா மருத்துவர்களை வெளியேற்றியும் உள்ளது. அதனை வெற்றியாகவும் கொண்டாடுகிறது. உதாரணமாக, பிரேசில் நாட்டில் டிரம்ப் போன்ற வலதுசாரி அடிமுட்டாளான பொல்சனரோ நீதிமன்ற தகிடுதத்தங்கள் மூலம் ஆட்சிக்கு வந்தார். அவர் அமெரிக்காவுடன் தனது நேசத்தையும், நெஞ்சமெல்லாம் பொங்கி வழியும் கம்யூனிச எதிர்ப்பும் கொண்டவர். தென் அமெரிக்க பகுதியில் கொரோனா தொற்றில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு, பிரேசில். அதற்கு காரணம் பொல்சனாரோ. அவர் கொரோனா தொற்று என்பதையே இன்றுவரை நம்பவில்லை. அது பரவாமல் தடுப்பு நடவடிக்கை எடுக்கவும் மறுத்துவிட்டார். மேலும், மருத்துவமனைகளின் அவசரகால தேவைகளுக்கு அரசு சார்பில் கூடுதல் நிதி ஒதுக்கவில்லை. இந்த காரணங்களால் பிரேசில் நாட்டில் லட்சத்திற்கும் அதிகமான மக்கள் எந்த சிகிச்சையும் பெற வழியின்று மடிந்து போயினர். மருத்துவமனைகளில் இடமும் இல்லாத நிலையில், மருத்துவர்களும் பாதிக்கப்பட்டதால் மருத்துவர்களின் தேவையைவிட குறைந்த எண்ணிக்கையிலே அங்கு மருத்துவர் இருந்தனர். கியூபா மருத்துவர்கள் அங்கு ஜோசப் லூலா டி சில்வா காலத்திலிருந்தே சேவை புரிந்து வந்தனர். அப்படி அங்கு ஏற்கனவே சேவையிலிருந்த கியூபா மருத்துவர்களை அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க பிரேசில் வெளியேற்றியது. 

உலகம் முழுவதும் 65 நாடுகளில் சுமார் 30,000 கியூபா நாட்டு மருத்துவ நிபுணர்கள் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் பல ஐ.நா. சபையின் சார்பில் நடைபெறுவது. சில குறிப்பிட்ட நாடுகளின் பேரில் நடைபெறுவது. ஆப்ரிக்கா கண்டத்தில், உலகமே அச்சப்படும் எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டபோது அந்தந்த நாட்டு மருத்துவர்களே சிகிச்சை அளிக்க அஞ்சியபோது, அஞ்சாமல் அங்கு சென்று மருத்துவ சேவையை மேற்கொண்டவர்கள் கியூபா நாட்டு மருத்துவ தூதர்கள். அந்த சேவையில் ஒரு கியூபா நாட்டு மருத்துவர்க்கு எபோலா தொற்று ஏற்பட்டு அவர் இறந்தார் என்றாலும், கியூபா தனது சேவையை தொடர்கின்றது.

கொரோனா தொற்றை கட்டுபடுத்துதல்

எல்லா நாடுகளைப் போல் கியூபாவிலும் கொரோனோ தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், கியூபா பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ உபகரணங்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலை. காரணம்  50 ஆண்டு கால அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை. அத்தகைய கடினமான சூழலில் அவர்கள் எவ்வாறு தொற்று பரவலை சமாளித்தனர் என்பதை அறிந்தால், கியூபா அரசு அமெரிக்கா சொல்வதைப் போல் எந்தளவுக்கு ‘மனிதாபிமானம்’ இல்லாத ஆட்சி என்பதன் “உண்மைத் தன்மையைப்” புரிந்து கொள்ளலாம்.

அதனை நாம் சொல்வதற்கு பதில், மேற்கத்திய கம்யூனிச எதிர்ப்பு ஊடகங்கள் சொல்வதையே பார்க்கலாம். கியூபா கொரோனா தொற்றை வெற்றிகரமாக எதிர் கொண்ட விதத்தை மேற்கத்திய ஊடகங்களான, கார்டியன், சிஎன்பிசி, அசோசியேட் பிரஸ் ஆகியன சிலாகித்து எழுதியுள்ளன. அவை பெரும்பாலும் ஒரே மாதிரியிருந்தாலும், நாம் லண்டனிலிருந்து வெளிவரும் “கார்டியன்” பத்திரிக்கை எழுதுவதை பார்க்கலாம். கட்டுரையை அப்படியே மொழிபெயர்த்து தருகிறேன்.

கார்டியன் பத்திரிக்கையின் வியப்பு

தலைப்பு என்ன தெரியுமா? “பணக்கார நாடுகளின் கோவிட் முயற்சிகளை, அவை ஏற்படுத்திய அளவீடுகளை கடந்து செல்லும்  கியூபாவின் தடுப்பூசி வெற்றிக் கதை”

ஜெனரல் மாக்சிமா கோமஸ் 19ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டு காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடியவர்களில் முக்கியமானவர். அவர் தெரிவித்த கருத்து, “கியூபர்கள் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை தவற விடுவார்கள்; அல்லது அதனை கடந்து சென்று கொண்டிருப்பார்கள்” என்றார்.

150 ஆண்டுகளுக்குப் பின் அது முதுமொழி போல் மெய்பிக்கப்பட்டுவிட்டது. கீழ்மட்ட நிலையில் உள்ள இந்த தீவு நாடு, தெரு விளக்குகளை எரியவிடுவதற்கே அல்லல்படும் இந்த நாடு, கோவிட்19 க்கு எதிரான தடுப்பூசி செலுத்துவதில் மிகப்பெரிய வளம் பொருந்திய நாடுகள் பலவற்றைவிட அதிகமான பேர்களுக்கு தடுப்பூசி செலுத்தி விட்டது.

90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கட் தொகைக்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது, கியூபாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  83 சதவீதம் பேர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரு மில்லியனுக்கு மேல் மக்கட் தொகை கொண்ட நாடுகளில், ஐக்கிய அரபு எமிரேட் மட்டுமே இந்தளவுக்கு தடுப்பூசி போட்டுள்ளது.

“கியூபா மாஜிக்கல் ரியலிசத்தால் பீடிக்கப்பட்ட நாடு” என்கிறார் கனடாவின் டல்ஹவுசி பல்கலைக் கழகத்தில் லத்தீன் அமெரிக்க படிப்புகளுக்கான வருகைதரு பேராசிரியர் ஜான் கிரீக். “11 மில்லியன் மட்டுமே மக்கட் தொகை கொண்ட கியூபா, மிகவும் குறைவான வருவாய் உள்ள நாடு, பயோ டெக்னாலஜியில்  முன்னணி நாடு என்ற கருத்தை ஃபைசர் போன்ற நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரால் கற்பனை செய்வது இயலாத காரியமாக இருக்கும்”.

இதர லத்தீன் அமெரிக்க நாடுகள் போல கியூபாவிற்கும் சர்வதேச சந்தையில் தடுப்பூசிகள் வாங்க வேண்டுமெனில் அது மிகவும் சிரமமான காரியம் என்பதை அறிந்தே வைத்திருந்தது. ஆகவே 2020 மார்ச் மாதத்தில், சுற்றுலா நின்று போனதாலும், வெறிகொண்ட அமெரிக்க பொருளாதார முற்றுகையாலும், அன்னிய செலவாணி கையிருப்பு படுபாதாளத்திற்கு சென்றபோது, கியூபா நாட்டு விஞ்ஞானிகள் தங்கள் பணிகளில் இறங்கினர்.

துணிந்து இறங்கிய அவர்களின் அந்த முயற்சி நல்ல பலன்களைக் கொடுத்தது: இந்த வசந்தத்தில் கியூபா உலகின் சின்னஞ்சிறு  நாடுகளில் முதன் முதலாக வெற்றிகரமாக தன்னுடைய சொந்த தடுப்பூசியை வளர்த்தெடுத்து அதனை உற்பத்தி செய்யும் நாடாக மாறியது.(சிவப்பு நிறம் கட்டுரையில் உள்ளது-மொ-ர்). அது தொடங்கியது முதல் பொது மருத்துவ சேவை தகர்ந்து கொண்டிருக்கிறது என்று கொண்டால்கூட, இதற்கு  போதுமான மனித சக்தி, அதற்கு தேவைப்படும் ஊசிகளை விரைவாக வெளியிட்டது.  அவர்கள் குழந்தைகளுக்குக்கூட தடுப்பூசி போட்டு விட்டனர். (அந்த நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவரவர் விருப்பம்).

இரண்டு தடுப்பூசிகளுமே 90 சதவீதத்திற்கு மேல் தடுக்கும் திறன் கொண்டவை.  கடந்த வசந்த காலத்தில் கியூபா அரசு நடத்திய மருத்துவமனை சோதனைகள் இதனை உறுதி செய்கின்றன. வெற்றிகரமாக தடுப்பூசி இயக்கத்தை நடத்தியதின் விளைவாக, கடந்த கோடையில் மேற்குலகத்தில் மிக அதிகமாக இருந்த தொற்று தற்போது மிகவும் கட்டுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டில் ஒவ்வொரு வாரமும் நுற்றுக் கணக்கான கியூபர்கள் கோவிட்19 பாதித்து இறந்து கொண்டிருந்தனர். தற்போது 3 இறப்புகள் என்ற அளவில் உள்ளது.

தடுப்பூசி வெற்றி தனித்துவமாக பிரகாசிக்கிறது. ஏனெனில் இதர மருத்துவ துறைகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பின்னணியில், இதனை பார்க்க வேண்டியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் பண வருவாய் பாதியாய் குறைந்து விட்ட நிலையில், ஆண்டி பாயடிக் மருந்துகள் மிகவும் அரிதாகிவிட்டன.  20 மாத்திரைகள் கொண்ட அமாக்சலின் மருந்து கருப்பு சந்தையில் விற்கப்படும் விலை ஒரு மாத குறைந்தபட்ச ஊதியத்திற்கு சமமாக உள்ளது. எலும்பு முறிவிற்கு கட்டுபோடும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் இல்லாமல் பல பிரதேசங்களில் மருத்துவர்கள் அட்டைகளை கொண்டு எலும்பு முறிவிற்கு கட்டுபோட வேண்டிய நிலையில் உள்ளனர்.

1959 புரட்சி முதலே கியூபர்கள் இத்தகைய பிரம்மாண்டமான கனவுகளை நடைமுறைப்படுத்துகின்றனர், சில சமயம் அவைகள் பைத்தியக்காரத் தனமாக இருக்கும்.  இருப்பினும் பெரும்பாலும், அவை வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்” என்கிறார் ஹவானாவில் சட்டத் தொழில் புரிந்து வரும், கிரிகோரி பினியோவ்ஸ்கி.

பினியோவ்ஸ்கி மேலும் கூறுகையில், “இதற்கு முதன்மையான உதாரணம், சோவியத் யூனியன் தகர்ந்தபோது, ஃபிடல் காஸ்ட்ரோ பயோடெக் தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்ய முடிவெடுத்ததை கூறலாம். “நிதானமாக ஆலோசனை கூறும் எவருமே, 25 வருடங்கள் கழித்து பலனளிக்கும் ஒரு துறையில் முதலீடு செய்வதற்கு உகந்த நேரம் இதுவல்ல என எதிரான ஆலோசனையே வழங்கியிருப்பர். இப்போது நாங்கள் இங்கிருக்கிறோம்….. பயோடெக்கில் முதலீடு செய்தததின் விளைவாக உயிர்களை காப்பாற்றிக் கொண்டு”

“வேறு சில முயற்சிகள் நாடக பாணியில் தோல்வியில் முடிந்துள்ளன: 1970களில் பத்து மில்லியன் டன் கரும்பு விவசாயம் செய்து, அதன் மூலம் இதுவரை அறியப்படாத அளவிற்கு சர்க்கரை உற்பத்தி செய்து பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவது என்பதாகும். ஆனால் கரும்பை அறுவடை செய்யவே இதர தொழிற்சாலைகளிலிருந்து நிரந்தர பணியாட்களை கொண்டு வர வேண்டியதாயிற்று, இது தொழிற்சாலைகளை முடக்கியது; பொருளாதாரத்தில் கடும் சீரழிவுகளை ஏற்படுத்தியது.

கடந்த வருடம் கியூபா அறுவடை செய்த கரும்பு 1959இல் அறுவடை செய்ததைவிட 7 மடங்கு குறைவு.

ஹால் கிளிப்பாக் இவர் கனடாவின் ராயல் மிலிட்டரி கல்லூரியில் வருகைதரு வரலாறு மற்றும் உத்திகள் துறை பேராசிரியர். இவர் கியூபாவை பற்றி தெரிவிக்கையில், ஒரு நாடாகப் பார்க்கும் போது மிகப் பெரிய விஷயங்களை நிறைவேற்றும் போக்கு காணப்படுகிறது, அதே சமயம் அன்றாட விஷயங்களில் படு மோசமாக இருக்கும் நிலையும் காணப்படுகிறது என்கிறார்.

“நாடு முழுவதையும் பத்தாண்டுகளுக்குள் மின்மயமாக்குவது, இரண்டரை ஆண்டுகளில், படிப்பின்மையைப் போக்குவது, மருத்துவ சர்வதேசியம் போன்றவைகள் பை த்தியக்காரத்தனமான திட்டங்களாகத்தான் தெரியும். ஆனால் அவையனைத்தும் நிறைவேற்றப்பட்டன” என்கிறார். இவ்வாறு கார்டியன் பத்திரிக்கை கோவிட்-19 சிகிச்சையில் கியூபாவின் வெற்றியை எழுதுகிறது.

கொரோனா தடுப்பூசி சாதனை

இன்றைய தேதி வரை கியூபாவின் அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள் 4 கொரோனா தடுப்பூசிகளை தயாரித்துள்ளன. அவை மருத்துவ  சோதனைகளும் முடிந்து மக்களுக்கும் போடப்பட்டு வருகின்றன. கியூபாவில் உள்ள உலக சுகாதார மையம் அந்த நாட்டில் இதனை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.

கியூபா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் சபரினா 1, சபரினா 2 மற்றும் அப்தலா ஆகியவை ஊசி மூலம் செலுத்தக் கூடிய புரத சத்து அடிப்படையிலான தடுப்பூசிகள். மாம்பிசா என்ற தடுப்பூசி உலகிலேயே மூக்கில் ஸ்பேரே அடித்துக் கொள்ளக் கூடிய ஒரே தடுப்பு மருந்து. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் தடுப்பூசிகள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை இதர மூன்றாம் உலக நாடுகளுக்கு கொடுக்க மறுத்து வருகின்றன. அதே சமயம் அவற்றின் உற்பத்தியில் பெரும்பகுதியை ஜி-7 நாடுகளே தங்கள் கிட்டங்கிகளில் பதுக்கிக் கொள்கின்றன.

மேலும், அமெரிக்காவின் இரண்டு பெரிய தடுப்பூசிகளான ஃபைசர் மற்றும் மடர்னா ஆகியவை எம் ஆர் என் ஏ வகையைச் சேர்ந்ததால், அவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல, அங்கு பயன்படுத்தும் வரை பாதுகாக்க நீர் உறைநிலைக்கு கீழே 70 டிகிரி (-70 செல்சியஸ்) என்ற நிலைக்கே அதிகம் செலவிட வேண்டும். ஆனால் கியூபா நாட்டு தடுப்பூசிகள் குளிர்சாதனப் பெட்டிகளில் கொண்டுசெல்லும் வகையில் உள்ளது.

இந்த தடுப்பூசிகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உலக சுகாதார மையம் அங்கீகாரம் வழங்க வேண்டும். ஆனால், அங்கும் மேற்கத்திய நாடுகள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி, பைசர், மெடர்னா, அஸ்ட்ரா, ஜெனிக்கா போன்ற நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்ய கியூபாவின் தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கவிடாமல் தடுத்து வருகின்றன. உலகில் வேறெந்த நாட்டின் திறனுக்கும் சற்றும் குறைவில்லாத கியூபா நாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களை அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ளதைப் போன்ற தரத்துடன் இந்த ஆராய்ச்சி சாலைகள் இல்லை என்று சொட்டை சொல் சொல்லி இந்த தடுப்பூசிகளின் தடுக்கும் திறன் சிறப்பாக இருந்தும் அவற்றிற்கு அங்கீகாரம் வழங்கவிடாமல் தடுத்து வருகின்றன.

எய்ட்ஸ் நோய் கட்டுபடுத்துதல்

1980-90 கியூபாவிற்கு மிகவும் நெருக்கடியான கால கட்டம். கியூபர்கள் மூன்றொலொரு பங்கினர் தென் ஆப்ரிக்காவின் அங்கோலா விடுதலைப் போரில் பங்கேற்றனர். கரிபியன் தீவுப் பகுதிகளில் எய்ட்ஸ் நோய்ப் பரவல் மிக அதிகமாக இருந்தது. 1986இல் கியூபாவில் முதல் எய்ட்ஸ் நோயாளி உயிரிழக்கிறார். தொடர்ந்து கியூபாவின் மிகப் பெரிய மருத்துவ சவாலாக எய்ட்ஸ் நோய்ப் பரவல் இருந்தது. இந்த சமயத்தில் சோவியத் யூனியனும் வீழ்கிறது. கியூபாவின் பொருளாதாரத்திற்கு ஆண்டிற்கு சுமார் 5 பில்லியன் டாலர் அளவிற்கு மான்யங்களை வழங்கி வந்த சோவியத் வீழ்ந்தது ஒரு புறம். மற்றொரு புறம் சர்வதேச வணிகத்தில் ஈடுபடமுடியாதபடி அமெரிக்க பொருளாதார முற்றுகை என கியூபா பெரும் நெருக்கடியை சந்தித்த நேரத்தில் எய்ட்ஸ் தொற்று மிகப்பெரிய அளவில் அந்த தீவு நாட்டை அச்சுறுத்தியது. தென் ஆப்ரிக்காவிற்கு அடுத்தபடியாக மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் எய்ட்ஸ் நோயால் கரிபீயன் தீவுகளில் பீடிக்கப்பட்டிருந்தனர். ஹெச்ஐவி-எய்ட்ஸ் மருந்துக்கு கூட அமெரிக்க தடைவிதித்திருந்தது.

இந்த நிலையில் கியூபாவின் பயோ டெக்னாலஜி ஆய்வகங்கள், ஹெச்ஐவி கண்டறியும் சோதனைகளை உள்நாட்டிலேயே 1987ஆம் ஆண்டிலேயே தயாரித்தன. இதன் விளைவாக 1993ஆம் ஆண்டிற்குள் 12 மில்லியன் ஹெச்.ஐ.வி. சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தீவு நாட்டின் ஓரிணச் சேர்க்கை பிரிவினர் இந்த நோயால் மிகுந்த அளவில் பீடிக்கப்பட்டனர். அரசு செலவில் ஓரின சேர்க்கை பிரிவினருக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு எதிர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு கிளினிக்குகள் ஏற்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் ஆணுறைகள் அதிக விலையில் இறக்குமதி செய்யப்பட்டு, அவை இலவசமாக வழங்கப்பட்டன. அதேபோல் ஆண்டி வைரல் மருந்துகளும் அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, இலவசமாக வழங்கப்பட்டன. தீவிர சிகிச்சைகள் மூலம் நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  இத்தகைய தீவிர சிகிச்சைகள் நோய்ப் பரவலை கட்டுபடுத்த சோதனைகள் வாயிலாக எய்ட்ஸ் நோயை கட்டுபடுத்துவதில் கியூபா வரலாற்று சாதனை படைத்தது. உலகிலேயே தாயிலிருந்து கருவிற்கு ஹெச்ஐவி நோய்ப் பரவலை தடுக்க மருந்தும் சிகிச்சையும் கொண்ட ஒரே நாடு கியூபா மட்டுமே. 1990களில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெறும் இருநூறு என்ற அளவுக்கு அங்கு கட்டுக்குள் வைக்கப்பட்டது. அதே சமயம் கியூபாவைப் போன்ற மக்கட்தொகை கொண்ட நியூயார்க் நகரில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43,000 ஆக இருந்தது (மன்த்லி ரிவ்யூ, ஜூன் 1, 2020)

கியூபாவின் இதர தடுப்பூசிகள்: மெனின்ஜைட்டிஸ் -பி எனப்படும் மூளைக் காய்ச்சலுக்கு 1985லேயே தடுப்பூசி கண்டுபிடித்த ஒரே நாடு கியூபா மட்டும்தான். பின்னர் மஞ்சள்காமாலை பி எனப்படும் ஹெப்படிட்டிஸ் பி வைரஸ் கிருமிக்கும், டெங்கே கிருமிக்கும் தடுப்பூசிகளை (2000க்கு முன்பே) கண்டுபிடித்த நாடு கியூபாவாகும்.

ஒரு புறத்தில் அமெரிக்காவில் மருத்துவத்தை தனியார்மயமாக்கிய பிறகு ஒரு மருத்துவ படுக்கையால் எந்தளவுக்கு லாபம் என்ற பார்வையும் அதற்கேற்ற நடைமுறைகளும் ஏற்பட்டபோது, அன்றாட வாழ்க்கையில்  மூன்று  வேளை உணவே கடும் தட்டுபாடான ஒரு நாட்டில், உலகில் வேறெங்கும் கிடைக்காத அளவிற்கு தடுப்பூசிகளும், சிகிச்சையும் கிடைப்பதை  சோசலிச பொருளாதாரத்தின் சாதனை என்பதைத் தவிர வேறெப்படி அழைக்க முடியும்?

பெண்களின் விடுதலைக்கான போராட்டத்தின் நூறாண்டுகள்

பிருந்தா காரத்

கம்யூனிஸ்ட் கட்சி 1920ஆம் ஆண்டில் தொடங்கியதிலிருந்தே இந்தியாவின் சமூக-பொருளாதார நிலைமைகளின் பின்னணியில், பெண்களின் விடுதலைக்கான போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல, மார்க்சிய தத்துவத்தையும் நடைமுறையையும் ஒன்றிணைக்க முயற்சி செய்து வந்துள்ளது. ‘பெண்களின் பிரச்சனைகள்’ குறித்த கட்சியின் புரிதலானது அதனுடைய நேரடியான செயல்பாட்டின் மூலமாக, அதிலும் குறிப்பாக, பெண் கம்யூனிஸ்டுகளின் பணி மற்றும் அனுபவம் ஆகியவற்றின் மூலமாக, உருவானது. பெண்களின் எண்ணற்ற இயக்கங்களின் மூலமாகப் பெற்றிருந்த அனைத்து நன்மைகளையும் இன்று பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியின் பிற்போக்குவாத ஆட்சியில் காணாமலடிக்க முயற்சி செய்யப்பட்டு வரும் ஒரு சூழலில், ஒவ்வொரு தளத்திலும் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட பணி பெண்களின் உறுதியான போராட்டங்களில் அவர்களை நேச அணிகளாக மாற்றியுள்ளது.

தொடக்கஆண்டுகள்

விடுதலைக்கான போராட்டத்திற்குள்ளே பெண்களின் சமத்துவத்திற்கான போராட்டத்திற்கு கம்யூனிஸ்டுகள் புதியதொரு தொலைநோக்கினை கொண்டுவந்தனர். அதில் மூன்று முக்கியமான பிரச்சனைகள் அடங்கியிருந்தன. முதலாவதாக, தொழிலாளி வர்க்க உறுப்பினர் என்ற வகையில், பெண்களின் மீதான சுரண்டல் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டத்தின் ஒருபகுதியாக, பெண்களின் விடுதலைக்கான போராட்டத்தின் ஊடாக அதற்குள்ள தொடர்பு; இரண்டாவதாக, பெண்களின் குடியுரிமை குறித்த பிரச்சனை; அதிலும் குறிப்பாக, சாதிய அமைப்பை அழித்தொழிப்பதற்கான போராட்டம்; மூன்றாவதாக, பாரம்பரியம், மதரீதியான விதிமுறைகள் மற்றும் தற்போதுள்ள முதலாளித்துவ கலாச்சாரம் ஆகியவற்றின் ஒப்புதலுடன் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறை குறித்த பிரச்சனை ஆகியவையே அவையாகும்.

1929ஆம் ஆண்டில் மீரட் சதிவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 18 கம்யூனிஸ்டுகள் தங்களது தரப்பில் வெளியிட்ட அறிக்கை இதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்டுகளால் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்ட மிக முக்கியமான அறிக்கையாக அமைந்திருந்தது. அந்த அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டிருந்தது: “குடும்பத்தைச் சுற்றியுள்ள உணர்ச்சிகள் என்ற போர்வையானது, சுரண்டலுக்கான ஒருவழியாக அது பயன்படுத்தப்படுவதை மூடிமறைக்க, எப்போதும் பயன்படுத்தப்படுகிறது. பெண்களையும் குழந்தைகளையும் சுரண்டுவதற்கு குடும்பம் பயன்படுவது சோஷலிசத்தின்கீழ் மட்டுமே நிறுத்தப்படும் என்று நாம் கூறிவருகிறோம்… பாரம்பரியமாகவே பெண்களின் அந்தஸ்து ஆண்களைவிடத் தரம்குறைந்த ஒன்றாக, ஒருசில நேரங்களில் உண்மையிலேயே அடிமைத்தனமான ஒன்றாக, இருந்து வந்துள்ளது. சோவியத் யூனியனில் தற்போது நடைபெற்றுவரும் பெண்களின் விடுதலை என்பதுதான் நாம் செல்லவேண்டிய வழியாகும்..” வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகப் போர்முழக்கமிடும் அதேநேரத்தில், ஆணாதிக்கத்தின் அடிப்படையிலான குடும்பக் கட்டமைப்புகளை எதிர்த்து வலுவாக விமர்சிப்பவர்களாகவும் கம்யூனிஸ்டுகள் இருந்து வந்துள்ளனர்.

வர்க்கப் போராட்டத்திலும் பாலின அடிப்படையிலான பாரபட்சத்திற்கு எதிரான போராட்டத்திலும் பெண்களை ஊக்குவிப்பது

விடுதலைக்கான இயக்கத்தின் ஒரு பகுதியாக ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம் போன்றவற்றில் பங்கேற்க பெருந்திரளான பெண்கள் அணிதிரட்டப்பட்டுவந்த அதேநேரத்தில் தொழிற்சங்கங்களில் செயல்பட்டுவந்த கம்யூனிஸ்டுகள் பம்பாய் நகர நெசவாலைகளிலும், ஷோலாப்பூர் பீடித்தொழிற்சாலைகளிலும் இருந்த தொழிலாளி வர்க்க, விவசாயப் பெண்களையும், பீகாரிலும் வங்காளத்திலும் இருந்த விவசாயத் தொழிலாளிகள் மற்றும் பெண் விவசாயிகளையும் ஊதியம், நிலம், தன்மானம் ஆகிய அடிப்படைப் பிரச்சனைகளின் மீதான போராட்டங்களில் அணிதிரட்டி வந்தனர்.

இந்த மிகப்பெரும் தொழிலாளர் அணிதிரட்டலானது அகிலஇந்திய தொழிற்சங்க காங்கிரஸின் (ஏஐடியுசி) தலைமையில் நடைபெற்றது. 1920ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு வெகுவிரைவிலேயே கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கிற்குள் வந்தது. ஏஐடியுசி தொடங்கப்பட்டவுடனேயே அதில் தன்னை இணைத்துக்கொண்ட முதல் அமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் தேவி வங்காளத்தில் இருந்த சணல் தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களிடையே பணியாற்றினார். அதேபோன்று பம்பாய் நகரில் பார்வதி போரேயும், தொடர்ந்துவந்த முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் அகல்யா ரங்கனேகர், உஷா டாய் டாங்கே, விமல் ரணதிவே மற்றும் அவர்களைப்போன்ற பலரும் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். 1936ஆம் ஆண்டில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் தொடங்கப்பட்டபோதும், கம்யூனிஸ்டுகள் அதில் முக்கிய பங்கு வகித்தனர். நிலம், தன்மானம் ஆகிய பிரச்சனைகளின் அடிப்படையில் பெருந்திரளாக அணிதிரட்டப்பட்டவர்களில் விவசாயப் பெண்களும் இருந்தனர். தேபகா, தெலுங்கானா, சுர்மா பள்ளத்தாக்கு ஆகிய போராட்டங்கள் அனைத்துமே இந்தியாவின் உழைக்கும் மக்கள், அதன் உழைப்பாளிகள் பொருளாதார அடிப்படையிலும், சமூகநீதிக்காகவும் முன்னெடுத்த போராட்டங்கள் தனித்துவம் பெற்ற மைல்கற்களாகத் திகழ்கின்றன. இவற்றில் பெண்களின் பங்கு சரிசமமாக இருந்தது என்பது மட்டுமின்றி, செங்கொடிகளை ஏந்தியபடி அந்தப் போராட்டங்களுக்குத் தலைமையேற்று நடத்துபவர்களாகவும் அவர்கள் இருந்தனர்.

கட்சியின் தலைமையின்கீழ் பெண்களின் வர்க்க அடிப்படையிலான நடவடிக்கைகள் அப்போது நிலவிவந்த சமூக விதிமுறைகளுக்கு சவால் விடுவதாகவும் இருந்தன. வர்க்க மற்றும் சமூக கோணத்தில் ஆணாதிக்கத்திற்கு விடப்பட்ட இரட்டைச்சவால்களாகவும் அது இருந்தது.

1945ஆம் ஆண்டில் மகாராஷ்ட்ராவில் தானே மாவட்டத்தில் வாழ்ந்துவந்த வோர்லி பழங்குடி மக்களிடையே கோதாவரி பருலேகர் மேற்கொண்ட பணி இந்த அம்சத்தை மேலும் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. நிலப்பிரபுக்களின் கொடூரமான சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற பழங்குடிப் பெண்கள் தங்களுக்கும், தங்களை இதுவரை அடக்கி ஒடுக்கி வந்தவர்களுக்கும் இடையே நிலவிய சமூக உறவுகளை மாற்றியமைத்த வர்க்கப் போராட்டத்தில் கூட்டு நடவடிக்கை என்ற வலிமையோடு பங்கேற்றபோது தங்களிடையே எழுந்த விடுதலை உணர்வினை மிகுந்த எழுச்சியோடு விவரித்தனர். நிலப்பிரபுக்களின் கைகளில் அவர்கள் எதிர்கொண்டுவந்த திட்டமிட்ட, கொடூரமான, பாலியல் வன்முறைக்கு எதிராகவும் அவர்களை வெளிப்படையாகப் பேசவைத்தது.

திரிபுராவில், தசரத் தேவ்பர்மாவின் தலைமையின்கீழ், மிகமோசமாக சுரண்டப்பட்டுவந்த பழங்குடி இனங்களிடையே, அதிலும் குறிப்பாகப் பழங்குடிப் பெண்களிடையே, எழுத்தறிவையும் சமூகரீதியான விழிப்புணர்ச்சியையும் கொண்டுவந்தது கம்யூனிஸ்ட் கட்சிதான். இது அப்போது வழக்கத்தில் இருந்துவந்த நிலப்பிரபுக்கள் கட்டாயஉழைப்பைப் பிடுங்கிக்கொள்ளும் ‘டிடுன்’ என்ற அடிமைமுறைக்கு எதிராக பழங்குடி மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இந்தப் போராட்டத்தில் மூன்று பழங்குடிப் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வர்க்கத்திற்குள்ளே

‘வர்க்கத்திற்குள்ளேயே’ ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சமநிலையற்ற உறவுகள் பெண்களால் தொடங்கி வைக்கப்பட்ட சவால்களை எதிர்கொள்கின்றன. தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் எழுதியுள்ளவை இதுபோன்ற பல பிரச்சனைகளை எழுப்பியுள்ளன. குடும்பத்திற்குள்ளே தற்போது நிலவிவரும் சமன்பாடுகளை கேள்விக்கு உள்ளாக்கும் பெண்கள் பலநேரங்களில் ‘பெரியோர் ஏற்பாடுசெய்த’ திருமணங்களை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்தனர். ஏனெனில் அவர்களது கணவர்கள் இந்த ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்பதே அதற்குக் காரணம். பி. சுந்தரய்யா தனது நூல்களில் இதுபோன்ற பல உதாரணங்களை எடுத்துக் காட்டுகிறார். பெண்கள் இவ்வாறு தங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கு எவ்வாறு கட்சி ஊக்கப்படுத்தியது என்பதை இந்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற மல்லு ஸ்வராஜ்யம் விவரித்திருந்தார். இவ்வாறு பெண்களால் எழுப்பப்பட்ட கேள்விகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று வந்த ஆண்களுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. கணவன் – மனைவி இருவருமே இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றுச் செயல்படுகையில் வீட்டுவேலைகளை இருவருமே பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் பெண்கள் கேள்வி எழுப்பினர். இவ்வகையில் ஆண் – பெண் இருவருமே இணைந்து செயல்படுகின்ற இயக்கங்களுக்குள் பல்வேறு தளங்களிலும் பெண்களின் சமஉரிமைக்காக கட்சியின் உதவியோடு பெண் கம்யூனிஸ்டுகள் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றதோடு, இந்த இயக்கத்திற்கு உள்ளேயும் அவர்கள் முன்னோடியான பங்கினையும் வகித்தனர்.

இதிலிருந்து பெறக்கூடிய முக்கியமான பாடம் என்னவெனில், வர்க்கப் போராட்டமானது அதில் பங்கேற்கும் பெண்களின் சுயஉணர்வை மாற்றியமைக்கும் அதேநேரத்தில், இயக்கத்திற்குள் நிலவும் பாலின அடிப்படையிலான வேறுபாடுகளின் அனைத்து அம்சங்களையும் எதிர்த்துப் போராடுவது என்ற முக்கியமான அம்சம் உள்ளிட்டு, அந்தப் போராட்டத்தின் தன்மையையும் அதேஅளவிற்கு சமமானஅளவில் விரிவுபடுத்துகிறது. இது வர்க்கப்போராட்டத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இதற்குப் பல தசாப்தங்களுக்குப் பிறகு, அதன் தொடக்க கட்டங்களில் கடும் எதிர்ப்பை எதிர்நோக்கிய, தொழிற்சங்க இயக்கத்திற்குள் உழைக்கும் பெண்களுக்கென தனியாக குழுக்களும் மேடைகளும் அமைக்கப்படுவதற்கு முன்னோடியாக இருந்த பி. டி. ரணதிவே அப்போது இதற்காக முன்வைத்த வாதம் மிகவும் புகழ்பெற்றதாகும். அப்போது அவர் சொன்னார்: “ கார்ல் மார்க்ஸ் ‘உலகத் தொழிலாளர்களே! ஒன்றுசேருங்கள்!’ என்று சொன்னபோது வெறும் ஆண்தொழிலாளர்களை மட்டுமே மனதில் வைத்து அந்த முழக்கத்தை எழுப்பவில்லை!” வேறுவார்த்தைகளில் கூறுவதெனில்,  வர்க்கப் போராட்டமானது முதலாளித்துவத்தின் பாலின அடிப்படையிலான வர்க்கச் சுரண்டலை எதிர்த்தும் நடத்தப்படவேண்டிய அவசியம் உள்ளது.

சாதியத்தை எதிர்த்த போராட்டத்தில் உள்ளடங்கிய பெண்விடுதலை

தொடக்ககால கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட பணிகளில் பெரும்பாலானவை சமூக சீர்திருத்தங்களுக்காகவும் தலித்துகளின் விடுதலைக்காகவுமான சாதிய எதிர்ப்புப் போராட்டங்களாகவே இருந்தன. மிக அதிகமான வகையில் ஒடுக்கப்பட்டுவந்த சாதிகளைச் சேர்ந்த பெண்களிடையே இது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், மேல்மட்ட சாதிகளிடையே பெண்களின் அவமானகரமான அந்தஸ்து குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. கேரளாவில் நம்பூதிரிகளிடையே இ எம் எஸ் தலைமையிலான இயக்கம் அவர்களிடையே பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

எனவே, இந்து விதிமுறைகளின் சீர்திருத்தத்திற்கான மசோதா தொடர்பான விவாதமும் அதைத்தொடர்ந்த போராட்டங்களும் நடைபெற்ற காலத்தில் இந்த சீர்திருத்தத்திற்கு ஆதரவான போராட்டங்களில் பெண் கம்யூனிஸ்டுகள் முன்வரிசையில் இருந்தது மிகவும் இயல்பானதொரு வளர்ச்சியாகவே இருந்தது. பெண் கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான போராட்டங்களைப் பொறுத்தவரையில், இந்து விதிமுறைகளின் சீர்திருத்தத்திற்கான மசோதாவிற்கு ஆதரவான போராட்டமானது, சாதிய அமைப்பிற்கு எதிரான போராட்டத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்றாகவே மாறிப்போனது. 1940களிலிருந்து 1950களின் இறுதி வரையிலான தசாப்தத்தில் நிலவிய இந்துசட்டங்களில் சீர்திருத்தம் கொண்டுவருவது குறித்த பிரச்சனை பெண்களின் மிகப்பெரும் போராட்டங்களைத் தூண்டிவிட்டது.

அதேபோன்று, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அன்றைய கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட போராட்டம், அதிலும் குறிப்பாக, பிறப்பின் அடிப்படையிலான சாதிய ஏற்றத்தாழ்வு, வர்க்கச் சுரண்டல், பாலின அடிப்படையிலான ஒடுக்குமுறை ஆகிய சமூகரீதியான முச்சந்தியில் நிற்கும் தலித் பெண்களுக்கான போராட்டங்களை பெண் கம்யூனிஸ்டுகள் தொடர்ச்சியாக நடத்திவந்தனர். சாதிக்கு எதிரான கம்யூனிஸ்டுகளின் புரிதலும் பணியும் இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாக உள்ளது என்பதற்கு சமீபத்திய ஹத்ராஸ் சம்பவம் உதாரணமாக உள்ளது.

பெருந்திரளான பெண்களிடையே கம்யூனிஸ்டுகளின் பணி

முந்தைய ஆண்டுகளில் பெண் கம்யூனிஸ்டுகள் அகில இந்திய பெண்கள் காங்கிரஸ் போன்ற பெண்களுக்கான கூட்டமைப்புகளில் இணைந்து செயல்பட்டு வந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த பெண்களை அணிதிரட்டுவது என்ற நோக்கத்துடன் செயல்பட்டுவந்த இந்த அமைப்பில் பெண் காங்கிரஸ்காரர்களும் இருந்தனர். எனினும், ஏழைப்பிரிவுகளைச் சேர்ந்த பெண்களை அணுகுவது; விரிவான இயக்கத்தின் ஒருபகுதியாக அவர்களின் கோரிக்கைகளுக்காகக் குரல்எழுப்புவது என்ற அம்சத்திற்கே பெண்கம்யூனிஸ்டுகள் முக்கியத்துவம் தந்துவந்தனர். சாதிக்கு எதிராகவும், மதசார்பற்ற மதிப்பீடுகளுக்காகவும், சமரசமின்றிப் போராடுவதென்பது இந்த அணிதிரட்டலில் அதற்கே உரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெகுவிரைவிலேயே இடதுசாரி நோக்கங்கொண்ட பெண்களுக்கான அமைப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்கிடையே கம்யூனிஸ்ட் எண்ணங்கொண்ட மாணவர்களின் மற்றொரு முக்கியமான முன்முயற்சி 1936ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மாணவர்களுக்கான விரிவானதொரு அமைப்பான அகில இந்திய மாணவர் கூட்டமைப்பிற்குள் நிகழ்ந்தது. அது தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் 1939இல் மாணவிகளை மேலும் சிறப்பான வகையில் அணிதிரட்டுவதற்காக, மாணவிகளுக்கான ஒரு குழு அமைக்கப்பட்டது. இதன் முதல் அமைப்பாளர்களில் ஒருவராக கனக் முகர்ஜி இருந்தார். அதேபோன்று சிட்டகாங் ஆயுதக் கிடங்கின்மீதான தாக்குதலின் நாயகியான கல்பனா தத்தும் அதில் இடம்பெற்றிருந்தார். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண் கம்யூனிஸ்டுகளும் 1940களில் தங்களது பகுதிகளில், உதாரணமாக, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், பெண்களுக்கான சங்கங்களை உருவாக்க முன்முயற்சி எடுத்துவந்தனர். குறிப்பாக, வங்காளத்தில் 1942ஆம் ஆண்டில் மகிளா ஆத்மரக்ஷா சமிதி என்ற ஓர் அமைப்பை உருவாக்க பெண் கம்யூனிஸ்டுகள் முன்முயற்சி எடுத்தனர். அந்த நேரத்தில் வங்காளத்தை ஆட்டிப் படைத்துவந்த மிகக்கொடுமையான பஞ்சத்தின் பின்னணியில் ஏழைப்பெண்களிடையே பணியாற்றுவதுதான் இந்த அமைப்பின் நோக்கமாக இருந்தது. “இந்தியப் பெண்களின் இயக்கங்களில் கம்யூனிஸ்டுகள்” என்ற புகழ்பெற்ற நூலில் ரேணு சக்ரவர்த்தி இந்த முன்னோடிகளின் மகத்தான பணிகளை விவரித்திருந்தார்.

பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுவந்த பெண்களின் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தியப் பெண்களுக்கான தேசிய கூட்டமைப்பு என்ற ஓர் அமைப்பினை 1954ஆம் ஆண்டில் உருவாக்கினர். இதில் பெண் கம்யூனிஸ்டுகள் மற்றவர்களோடு இணைந்து செயல்பட்டனர். விடுதலைப் போராட்டத்தின் பாரம்பரியங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாநிலக்கிளைகள் பலவும் அல்லது இந்தக் கூட்டமைப்பின் கிளைகளில் பலவும் சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கினர். பின்னர் 1981ஆம் ஆண்டில் இந்தக் கிளைகள் அனைத்தும் ஒன்றுபட்ட வகையில் இடதுசாரித்தன்மை கொண்ட அகில இந்திய ஜனநாயக மாதர்சங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களை உறுப்பினராகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்தியாவின் மிகப்பெரும் பெண்கள் அமைப்பாக அது உருப்பெற்றது. எனினும், இந்த அமைப்பில் பெண் கம்யூனிஸ்டுகள் செயல்பட்டு வந்தபோதிலும், இதனை ஒரு கம்யூனிஸ்ட் அமைப்பாகக் குறிப்பிட முடியாது. பெண்களின் விடுதலையை நோக்கியதொரு அரசியல் அணுகுமுறையைக் கொண்டதாக இந்த அமைப்பு இருந்தபோதிலும், இது ஒரு கம்யூனிஸ்ட் அமைப்பல்ல; அல்லது சில நேரங்களில் தவறாகக் குறிப்பிடப்படுவதைப்போல, கம்யூனிஸ்டுகளின் ‘முகப்பு’ அல்ல. தனக்கேயுரிய அமைப்புச்சட்டம், நிகழ்ச்சிநிரல் போன்றவற்றை அதுகொண்டுள்ளதோடு, எந்தவொரு அரசியல் கட்சியோடும் இணையாமல் சுதந்திரமாகச் செயல்படும் அமைப்பாகவும் இது விளங்குகிறது. இதன் உறுப்பினர்களில் பெரும்பாலோருக்கு எந்தவிதமான கட்சிசார்பும் இல்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு

1964ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானதை அடுத்து, பெண்களின் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான கம்யூனிஸ்டுகளின் பங்கு மேலும் பெருமளவிற்கு ஊக்கம் பெற்றது. கம்யூனிஸ்டுகளின் முந்தைய பங்கினை முன்னெடுத்துச் செல்லும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1964ஆம் ஆண்டில் உருவாக்கிய மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான அதன் கட்சித் திட்டத்திலும், 2000ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டத்திலும், பெண்விடுதலை குறித்த வர்க்க அடிப்படையிலான அணுகுமுறையின் தத்துவப் பின்னணி தெளிவாக எடுத்துக் கூறப்பட்டிருந்தது.

2000ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டத்தில் மக்கள் ஜனநாயகத்திற்கான திட்டத்தில் குறிப்பிடத்தக்க சேர்க்கையாக இருந்த பிரிவு “குடும்பக் கட்டமைப்பை ஜனநாயகப்படுத்துவதற்கான முனைப்பின் ஒரு பகுதியாக குழந்தைவளர்ப்பு மற்றும் வீட்டுவேலைகளில் பொருத்தமான உதவி ஏற்பாடுகள் இருக்கும்” என்பதாகும். இதன்மூலம் கட்சித் திட்டம் பாலின ரீதியான வேலைப்பிரிவினைக்கு எதிரான முக்கியமானதொரு மார்க்சிய நிலைபாட்டையும், குடும்பத்தின் ‘புனிதமான’ வளையத்திற்குள் ஜனநாயகத்தை விரிவுபடுத்துவதன் தேவையையும் உள்ளே கொண்டுவந்தது. விவசாயப் புரட்சியின் ஒருபகுதியாக, சாதிக்கு எதிரான, பாலின அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் அமையும் என்பதும் குறிப்பாகச் சுட்டிக் காட்டப்பட்டது.  “ஐம்பது ஆண்டுகால முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சி ஒவ்வொரு துறையிலும் ஆணாதிக்கத்தை நீடித்து நிற்கச் செய்திருக்கிறது” என்றும் கட்சித் திட்டம் குற்றம்சாட்டியது.  “பெண் என்ற வகையிலும், தொழிலாளி என்ற வகையிலும், நாட்டின் குடிமகள் என்ற வகையிலும்” பல்வேறு தளங்களில் தொடர்ந்துவரும் பெண்களின் மீதான சுரண்டலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் குறிப்பாக விவரித்திருந்தது.

2005 டிசம்பரில் மத்தியக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட “பெண்களின் பிரச்சனைகள், கடமைகள் குறித்த கட்சியின் கண்ணோட்டம்” என்ற ஆவணத்தில் இந்தப் புரிதலானது மேலும் விரிவாக விளக்கப்பட்டிருந்தது. வீட்டுவேலை குறித்த மார்க்சிய அணுகுமுறை உள்ளிட்டு ‘பெண்களின் பிரச்சனை’களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறையைப் புரிந்துகொள்ள விரும்பும் எவரொருவரும் அவசியம் படிக்கவேண்டிய ஆவணமாகும் இது.

கொள்கைப் பிரச்சனைகள்

இன்றைய சூழ்நிலையில் இந்தக் கட்டமைப்பிற்கு உள்ளிருந்துதான் கட்சி தனது நிலைபாடுகளை மேற்கொள்கிறது என்பதோடு, பெண்களோடு நேரடியாகத் தொடர்புள்ள பிரச்சனைகளில் போராட்டங்களையும் அது மேற்கொள்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து வந்த பல தசாப்தங்களில் கட்சி செய்த தலையீடுகள் அனைத்தையும் இங்கே குறிப்பிடுவது இயலாத ஒன்றாகும். எனினும், குடும்பம் உள்ளிட்டு பெண்களின் அந்தஸ்து தொடர்பான எந்தவொரு பிரச்சனையிலும், அனைத்துத் தளங்களிலும், சமத்துவம், உரிமைகளுக்கான போராட்டம் உட்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் நிற்காத எந்தவொரு போராட்டமும் இல்லை என்று சொல்வது மட்டுமே போதுமானது. புதிய தாராளமயக் கொள்கைகளுக்கு ஏதிரான கட்சியின் போராட்டமும்கூட பெண்களின் குறிப்பிட்ட பிரச்சனைகள், கோரிக்கைகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகவே இருந்தன. நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உறுப்பினர்களாக இருப்பவர்களும்கூட பெண்கள் இயக்கங்களின் உறுதியான கூட்டாளிகளாக இருந்ததோடு, பெண்களுக்கான சமஉரிமைகளுக்காகவும், நீதிக்காகவும், சட்டங்களை நிறைவேற்றும் முயற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். தற்போதைய இந்தியாவில் பெண்களின் மீதான வன்முறைக்கு எதிரான போராட்டம், இளம்பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, தாங்களாகவே இணையர்களை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான சுதந்திரத்தைக் கோருவது, தன்பாலின உறவுகளை குற்றம்அற்ற ஒன்றாக ஆக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு, சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த பெண்களையும், அவர்களது உரிமைகளையும் பாதுகாப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளின்மீதும் பெண்களுக்கு ஆதரவாக எவ்வித தயக்கமும்அற்ற நிலைபாட்டை எடுக்கத் தயங்கும் மற்ற கட்சிகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாகவே மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு இருந்து வந்துள்ளது.

மேற்குவங்கம், திரிபுரா, கேரளா போன்ற மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தபோது இந்தப் பற்றுறுதி தொடர்ந்து நீடித்தது. சுயஉதவிக் குழுக்களின் குடும்பஸ்ரீ இயக்கம் உள்ளிட்டு சபரிமலை சச்சரவு மீதான நிலைபாடு போன்ற சமூக சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்கின்ற, நாட்டிலேயே தனித்துவமான, கொள்கைரீதியான எண்ணற்ற தலையீடுகளின் மூலம் பெண்களுக்கு ஆதரவான கட்சியின் நிலைபாட்டிற்கு இன்று கேரளாவின் இடதுஜனநாயக முன்னணி ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.  இதற்கு முன்பாக, மேற்குவங்கத்திலும், திரிபுராவிலும் ஆட்சியில் இருந்த இடதுமுன்னணி அரசாங்கங்கள் பெண்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கல்வி, சுகாதாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்முயற்சிகளை மேற்கொண்டன. குறிப்பாக, மேற்குவங்கத்தில் நிலச்சீர்திருத்த இயக்கம், ஆண் –பெண் இருவர் பெயரிலுமே நிலத்திற்கான கூட்டுப்பட்டாக்களை வழங்குவது, தனித்துவாழும் பெண்களின் பெயரில் பட்டாக்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகள் சொத்துரிமை குறித்த சட்டங்களில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு முன்பாகவே, நிலத்தில் பெண்களுக்கு சமவுரிமை வழங்குவதற்காக எடுக்கப்பட்ட முன்னோடியான நடவடிக்கைகளை இங்கு சுட்டிக்காட்டலாம். அதைப்போன்றே, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மூன்றில் ஒருபங்கு இடங்களை பெண்களுக்கென ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கோரி தற்போது நடந்துவரும் இயக்கத்திற்கு பல தசாப்தங்கள் முன்பாகவே மேற்குவங்கத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் அதிகாரம் பரவலாக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்பில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டன. கிராமப்புறத்தில் உள்ள மிகவும் நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த பெண்களை முடிவெடுக்கும் அமைப்புகளில் பிரதிநிதிகளாக அமர்த்துவதை கட்சியின் தலைமையிலான இயக்கங்கள் உறுதிப்படுத்தின.

பெண்கம்யூனிஸ்டுகளின் தியாகங்கள்

அதிலும் குறிப்பாக, மேற்குவங்கத்திலும், திரிபுராவிலும் ஆளும் வர்க்கங்களின் கடுமையான தாக்குதல்களுக்கும் ஒடுக்குமுறைக்கும் கட்சி ஆளாகிவரும் நிலையில், ஆண்தோழர்களின் தோளோடு தோள்நின்று பெண்கம்யூனிஸ்டுகள் கடுமையாகப் பணியாற்றியதையும்,  பல்வேறு தியாகங்களைச் செய்ததையும் இப்பகுதிகளில் ஏற்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியிலிருந்தே நம்மால் அறிந்துகொள்ள முடியும். கட்சி தொடங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடையும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், நமது தியாகிகளை நினைவுகூர்ந்து அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும்போது, செங்கொடிக்காகவும், சமூக –பொருளாதார விடுதலைக்காகவும், சோஷலிசத்திற்காகவும் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த துணிவுமிக்க பெண்களும் அவர்களிடையே இருந்ததையும் நாம் நினைவுகூர்கிறோம்.

தனியார் சொத்துடைமை முடிவாக மறைந்துபோவதால் ஏற்படும் பின்விளைவுகள் எவை?

 • பிரெடெரிக் எங்கெல்ஸ்

அனைத்து உற்பத்தி சக்திகளையும், வணிக சாதனங்களையும், உற்பத்திப் பொருட்களின் பரிவர்த்தனை மற்றும் விநியோகத்தையும்கூட, தனியார் முதலாளிகளின் கைகளிலிருந்து சமுதாயமே எடுத்துக் கொள்ளும். இருக்கின்ற வள ஆதாரங்கள், சமுதாயம் முழுவதன் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தின்படி, சமுதாயம் அவற்றை மேலாண்மை செய்யும். இந்த வகையில், எல்லாவற்றுக்கும் அதிமுக்கியமாய், தற்போது பெருவீதத் தொழில்துறையையோடு தொடர்புடையதாய் இருக்கும் கேடான விளைவுகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டுவிடும்.

இனிமேல் வணிக நெருக்கடிகள் இல்லாமல் போகும். விரிவாக்கப்பட்ட உற்பத்தி, இப்போதைய சமூக அமைப்புமுறையில் மிதமிஞ்சியதாய் ஆகி, துன்பங்களுக்கெல்லாம் முதன்மையான காரணமாய் விளங்குகிறது. அதுவே பின்னால் பற்றாக்குறையாய் ஆகி, மேலும் விரிவாக்க வேண்டிய தேவைக்கு உள்ளாகிறது. [புதிய சமூக அமைப்புமுறையில்] மிதமிஞ்சிய உற்பத்தி, துன்பங்களை உருவாக்குவதற்குப் பதிலாக, சமுதாயத்தின் அடிப்படைத் தேவைப்பாடுகளுக்கும் அப்பால், மக்கள் அனைவரின் வாழ்க்கைத் தேவைகளையும் நிறைவேற்றுவதை உறுதி செய்யும். புதிய தேவைகளை உருவாக்கும். அதே வேளையில் அவற்றை நிறைவேற்றுவதற்கான சாதனங்களையும் உருவாக்கும். புதிய முன்னேற்றத்துக்கான நிபந்தனையாகவும் தூண்டுகோலாகவும் ஆகிப்போகும்.

முன்னேற்றமானது கடந்த காலத்தில் எப்போதும் செய்ததுபோல, சமூக அமைப்புமுறை முழுவதையும் குழப்பத்தில் ஆழ்த்திவிடாது. பெருவீதத் தொழில்துறை, தனியார் சொத்துடைமையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, மாபெரும் விரிவாக்கத்துக்கு உள்ளாகும். எந்த அளவுக்கு எனில், நம் காலத்தின் பெருவீதத் தொழில்துறையுடன் ஒப்பிடுகையில், பட்டறைத் தொழில் அற்பமாகத் தோன்றியதைப்போல், இப்போது நாம் காணும் பெருவீதத் தொழில்துறை, ஒப்பீட்டளவில் அற்பமாகத் தோன்றும் அளவுக்கு விரிவடையும். தொழில்துறையின் இந்த வளர்ச்சி, மக்கள் ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவுசெய்யப் போதுமான அளவுக்கு எராளமான உற்பத்திப் பொருட்கள் சமுதாயத்துக்குக் கிடைக்குமாறு செய்யும்.

விவசாயத் துறைக்கும் இந்த உண்மை பொருந்தும். விவசாயமும் தனியார் சொத்துடைமையின் தாக்கத்துக்கு ஆளாகிப் பாதிப்புக்கு உள்ளானது. தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் சிறுசிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டதால் பின்னடைவைச் சந்தித்தது. புதிய சமூக அமைப்பில் தற்போதைய முன்னேற்றங்களும் விஞ்ஞானச் செயல்முறைகளும் நடைமுறைப்படுத்தப்படும். அதன் விளைவாக [விவசாய வளர்ச்சியில்] ஏற்படும் முன்னோக்கிய பாய்ச்சலினால் சமுதாயத்துக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் [குறைவின்றிக் கிடைக்க] உறுதி செய்யப்படும்.

இவ்வாறாக, [புதிய சமூக அமைப்பில் உற்பத்தி செய்யப்படும்] அபரிதமான பண்டங்களினால் சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்ய முடியும்.

பரஸ்பரம் பகைமை பாராட்டும் பல்வேறு வர்க்கங்களாகச் சமுதாயம் பிளவுறுவது இதனால் தேவையற்றதாகிவிடும். மேலும், புதிய சமூக அமைப்பில் இது தேவையற்றது மட்டுமல்ல, ஏற்கவொண்ணாததாகவும் ஆகிவிடும். உழைப்புப் பிரிவினையிலிருந்தே வர்க்கங்கள் தோன்றின. இன்றைய நாள்வரை அறியப்பட்டு வந்த இந்த உழைப்புப் பிரிவினை, புதிய சமூக அமைப்பில் முற்றாக மறைந்துவிடும். நாம் விளக்கிக் கூறிய அளவுக்குத் தொழில்துறை மற்றும் விவசாயத்தின் உற்பத்தியை அதிகரிக்க தற்போதுள்ள எந்திரவியல், வேதியியல் செயல்முறைகள் போதுமானதாக இல்லை. எனவே அத்தகைய செயல்முறைகளைப் பயன்படுத்தும் மனிதர்களின் திறப்பாடுகள் அதற்கேற்றவாறு வளர்ச்சி காண வேண்டும்.

கடந்த [18-வது] நூற்றாண்டின் விவசாயிகளும் பட்டறைத் தொழிலாளர்களும் பெருவீதத் தொழில்துறைக்குள் ஈர்க்கப்பட்டபோது, தமது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு முற்றிலும் வேறுபட்ட மக்களாய் மாறிப் போயினர். அதுபோலவே, உற்பத்தி மீதான ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் கூட்டு நிர்வாகம், அதன் விளைவாக ஏற்படும் புதிய வளர்ச்சி ஆகிய இரண்டுக்கும் முற்றிலும் வேறு வகைப்பட்ட புதிய மக்கள் சக்தி தேவைப்படுகின்றது.

மக்கள், உற்பத்தியின் தனியொரு பிரிவுக்கென ஒதுக்கப்பட்டு, அதிலேயே பிணைக்கப்பட்டு, அதனால் சுரண்டப்பட்டு, இன்று இருப்பதைப் போல இனிமேலும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இனிமேலும் மற்ற எல்லோரின் செலவில் தங்கள் ஆற்றல்களுள் ஒன்றை மட்டுமே வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் இனிமேலும் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையின் ஒரேயொரு பிரிவை அல்லது ஒரேயொரு பிரிவின் ஒரு கிளையை மட்டுமே தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். தொழில்துறையானது இன்றைய நிலையில்கூட அத்தகைய மக்களை மிகமிகக் குறைந்த பயனுள்ளவர்களாகவே கருதுகிறது.

ஒட்டுமொத்த சமுதாயத்தால் நிர்வகிக்கப்படுகின்ற, மேலும், ஒரு திட்டத்தின்படி இயக்கப்படும் தொழில்துறையானது, சகல துறைகளிலும் தேர்ச்சிபெற்ற, தமது ஆற்றல்களைச் சமமான முறையில் வளர்த்துக் கொண்ட, உற்பத்தி அமைப்புமுறையை அதன் முழுப் பரிமாணத்தோடு நோக்கும் திறன்வாய்ந்த மனிதர்களை எதிர்நோக்குகிறது.

ஒருமனிதனை விவசாயியாகவும், இன்னொருவனை காலணி தைப்பவனாகவும், மூன்றாமவனை ஆலைத் தொழிலாளியாகவும், நான்காமவனை பங்குச் சந்தை முகவராகவும் ஆக்கிடும் இந்த உழைப்புப் பிரிவினையின் வடிவம், எந்திரத் தொழிலால் ஏற்கெனவே தகர்க்கப்பட்டுள்ளது. இனி அது முழுவதுமாய் மறைந்து போகும். கல்வியானது, இளைஞர்கள் ஒட்டுமொத்த உற்பத்தி அமைப்புமுறையை வெகுவிரைவில் கற்றுக் கொள்வதைச் சாத்தியமாக்கும். சமுதாயத்தின் தேவைகளை அல்லது தனது சொந்த நாட்டங்களை நிறைவேற்றும் பொருட்டு, உற்பத்தியின் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவுக்கு அவர்கள் மாறிச் செல்வதையும் சாத்தியமாக்கும். ஆக, இன்றைய உழைப்புப் பிரிவினை ஒவ்வொரு தனிநபர்மீதும் சுமத்தியுள்ள ஒருசார்புப் பண்பிலிருந்து இளைஞர்களை விடுவிக்கும். கம்யூனிச சமுதாயம் இந்த வகையில், அதன் உறுப்பினர்கள், பரந்த அளவில் வளர்ச்சிபெற்ற தமது ஆற்றல்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதைச் சாத்தியமாக்கும். ஆனால், இது நிகழும்போது, வர்க்கங்கள் நிச்சயமாக மறைந்து போகும். கம்யூனிச அடித்தளத்தின்மீது அமைக்கப்படுகின்ற சமுதாயம் ஒருபுறம் வர்க்கங்கள் நிலவுவதோடு ஒத்துப் போகாது என்பதும், மறுபுறம் அத்தகைய ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்கும் செயலே வர்க்க வேறுபாடுகளை ஒழித்துக்கட்டும் சாதனங்களை வழங்குகிறது என்பதும் இதன்மூலம் பெறப்படுகிறது.

இந்நிகழ்வினைத் தொடரும் பின்விளைவு, நகரத்துக்கும் நாட்டுப்புறத்துக்கும் இடையிலான வேறுபாடு மறைந்துபோக விதிக்கப்பட்டுள்ளதாகும். விவசாயத்தையும் தொழில்துறையையும் இரண்டு வெவ்வேறு வர்க்கங்களைக் கொண்டு மேலாண்மை செய்வதைக் காட்டிலும், ஒரே மக்களைக் கொண்டு மேலாண்மை செய்வது, முற்றிலும் பொருளாயதக் காரணங்களுக்காக மட்டுமே என்றாலுங்கூட, கம்யூனிசக் கூட்டுறவின் ஓர் அவசிய நிபந்தனையும் ஆகும். ஒருபுறம் பெரும் நகரங்களில் தொழில்துறை சார்ந்த மக்கள் நெருக்கமாய்க் குவிந்து கிடக்க, மறுபுறம் விவசாயம் சார்ந்த மக்கள் நாடு முழுதும் சிதறிக் கிடப்பது, விவசாயம், தொழில்துறை ஆகிய இரண்டின் வளர்ச்சி குன்றிய கட்டத்தோடு தொடர்புடைய ஒரு நிலைமையாகும். அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இது ஒரு முட்டுக்கட்டையாகும் என்பதையும் ஏற்கெனவே உணர முடிந்துள்ளது.

உற்பத்தி சக்திகளை திட்டமிட்ட முறையில் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துக்காக சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இடையே பொது ஒத்துழைப்பு உருவாக்குதல்; எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றி வைக்கும் நிலையை எட்டும் அளவுக்கு உற்பத்தியை விரிவுபடுத்தல்; பிறருடைய தேவைகளைப் புறக்கணித்துச் சிலரது தேவைகளை மட்டும் நிறைவு செய்யும் நிலைக்கு முடிவு கட்டுதல்; வர்க்கங்களையும் அவற்றின் முரண்பாடுகளையும் முற்றாக ஒழித்துக் கட்டுதல்; இன்றைய உழைப்புப் பிரிவினையை ஒழித்துக் கட்டுவதன் மூலமும், தொழில்துறைக் கல்வி மூலமும், பல்வேறுபட்ட செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலமும், எல்லோராலும் படைத்தளிக்கப்படும் மனமகிழ் நிகழ்வுகளில் அனைவரும் பங்கெடுப்பதன் மூலமும், நகரத்தையும் நாட்டுப்புறத்தையும் ஒருங்கிணைப்பதன் மூலமும், சமுதாய உறுப்பினர்கள் அனைவரின் ஆற்றல்களையும் சர்வாம்ச ரீதியில் மேம்படுத்துதல்; – இவையே தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படுவதால் ஏற்படும் முதன்மையான விளைவுகளாகும்.

(கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்ற நூலில் இருந்து)

சோசலிசம் இன்று !

(தற்கால உலகில் சோசலிசம் குறித்தான குறிப்பு)

நாம் வாழ்ந்துவரக்கூடிய வரலாற்று காலகட்டம், உலகமே சோசலிசத்தை நோக்கி மாறிச் செல்வதற்கான காலகட்டம் எனலாம். முதலாளித்துவச் சுரண்டல் உச்சம் தொட்டிருக்கும் இன்றைய ஏகாதிபத்திய கட்டத்தில் இருந்து, ஒரு மனிதர் இன்னொருவரை சுரண்டாத, ஒரு நாடு மற்றொரு நாட்டை சுரண்டாத சோசலிச அமைப்பை நோக்கி பயணிப்பதற்கான போராட்டமே, சோசலிசத்திற்கான போராட்டம் ஆகும். இந்த போராட்டம் கடுமையானது. மிக அவசியமானது.

இன்றைய உலகம் எவ்வாறு இயங்கி வருகிறது?

அண்மையில் நடைபெற்ற சி.பி.ஐ(எம்) அகில இந்திய மாநாட்டில், உலக முரண்பாடுகள் தீவிரமடைவதை பற்றி விவாதித்தது. அதன்படி,

உலகம் முழுவதுமே உழைப்புக்கும், மூலதனத்திற்கும் உள்ள அடிப்படையான முரண்பாடு தீவிரமடைகிறது.

வளர்முக நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தனது மேலாதிக்கத்தை உறுதி செய்து கொள்ள ஏகாதிபத்தியம் முனைகிறது. இது ஏகாதிபத்தியத்திற்கும் வளர்முக நாடுகளுக்குமிடையேயான முரண்பாட்டை கூர்மையாக்குகிறது.

ஏகாதிபத்திய நாடுகள் தங்களுக்குள்ளாகவும் முரண்படுகின்றன. எனினும் அந்த முரண்பாடுகளின் தீவிரத்தன்மை சற்றே மட்டுப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் ஏகாதிபத்தியத்திற்கும்,  சோசலிசத்திற்குமான முரண்பாடே இந்த மாறும் இடைக்காலத்தில் மைய முரண்பாடாக நீடித்து வருகிறது இந்த நான்கு முரண்பாடுகளில், வரலாற்று நிகழ்வுப் போக்கில் ஏதேனுமொன்று முன்னுக்குவரும்; அதே சமயம் மையமான முரண்பாடு தொடரும்.

அனைத்து துறைகளிலும் தோல்வி:

சமகால முதலாளித்துவத்தை, நவதாராள உலகமயம்” என்கிறோம். இந்த அமைப்பு அனைத்து முனைகளிலும் தோல்வியை எதிர்கொண்டு வருவது கண்கூடாக தெரிகிறது. உலகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் சர்வதேச நிதியம், 2021 ஆம் ஆண்டில் 6 சதவீத வளர்ச்சியை எதிர்நோக்கியது அந்த சதவீதம் 2022 ஆம் ஆண்டில் 3.2 ஆக சரிந்தது, 2023 ஆம் ஆண்டில் 2.7 சதவீதம் மட்டுமே என்று மெத்தனமாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 2.8 லட்சம் கோடி டாலர்கள் என்ற அளவில் இழப்பு ஏற்படும் என மதிப்பிட்டுள்ளனர். ஏகாதிபத்திய அமெரிக்காவில் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி வேகமாக சரிகிறது என்று புளூம்பெர்க் பொருளாதார அறிக்கை எச்சரித்துள்ளது. இவ்விதத்தில் உலகமே பொருளாதார மந்தநிலையை நோக்கி வேகமாக செல்கிறது.

அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் நடவடிக்கைகள் நிலைமையை சிக்கலாக்குகின்றன. ரஷ்யா – உக்ரைன் யுத்தத்தை தொடரச் செய்திடும் விதத்தில் ராணுவ உதவிகளை பிரம்மாண்டமாக மேற்கொள்கிறார்கள். மக்களின் வாங்கும் சக்தி வீழ்கிறது, விலையேற்றமோ உச்சத்திற்கு செல்கிறது. ஊதியப் பிரச்சனைகள், கடுமையான வேலை நிலைமைகள், பறிக்கப்படும் ஓய்வூதிய உரிமைகள் தொழிலாளி வர்க்கத்தினை போராட்டத்தில் தள்ளுகின்றன. (குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில்)

அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திற்கு எதிராக வளரும் நாடுகள் விவாதிக்க தொடங்கியுள்ளன. மேற்சொன்ன சூழல், முதலாளித்துவ நெருக்கடி அதிகரிப்பதை எடுத்துக்காட்டுவதுடன், மூன்றாம் உலக நாடுகளுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு அதிகரிப்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

கடந்த நூற்றாண்டில் சோசலிசம்:

இவ்வாறான சூழலில் பாட்டாளி வர்க்க புரட்சி தவிர்க்க இயலாதது என்பதை எங்கெல்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். புரட்சியின் வழியாக, “பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. இதைப் பயன்படுத்தி, முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளிலிருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்திச் சாதனங்களைப் பொதுச் சொத்தாக மாற்றுகிறது. இச்செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம், உற்பத்திச் சாதனங்களை அவை இதுவரை சுமந்திருந்த மூலதனம் என்னும் தன்மையிலிருந்து விடுவிக்கிறது.  —- ஒரு திட்டத்தின் அடிப்படையில் அமைந்த சமூகமயமான உற்பத்தி சாத்தியம் ஆகிறது.

அதுமுதற்கொண்டு, உற்பத்தியின் வளர்ச்சி, சமுதாயத்தில் வேறுபட்ட வர்க்கங்கள் நிலவுவதை காலத்துக்கு ஒவ்வாததாய் ஆக்குகிறது. சமூக உற்பத்தியில் அராஜகம் எந்த அளவு மறைகிறதோ, அந்த அளவு அரசியல் ஆட்சியதிகாரம் மறைந்து போகிறது…

இந்த உலகளாவிய விடுதலைச் செயலை நிறைவேற்றுவது நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். [இச்செயலுக்கான] வரலாற்று நிலைமைகளையும், அதன்மூலம் இச்செயலின் தன்மையையும்கூடத் தீர்க்கமாகப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு, இந்த நிலைமைகளைப் பற்றியும், அது நிறைவேற்றப் பணிக்கப்பட்டுள்ள மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த செயலின் நோக்கத்தைப் பற்றியும் முழுமையான அறிவை ஊட்ட வேண்டும். இதுவே பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தத்துவார்த்த வெளிப்பாடான விஞ்ஞான சோஷலிசத்தின் பணியாகும்.” என்றார் அவர்.

மார்க்சிய இயக்கம் கொடுத்த விஞ்ஞான சோசலிசத்தின் வெளிச்சத்தில் நடைபெற்ற, 1917 சோவியத் புரட்சியும், அதன் பின்னர் உலகம் எதிர்கொண்ட சோசலிச புரட்சிகளும், தேச விடுதலைப் போராட்டங்களும் மனித நாகரீகத்திற்கு வளமான உள்ளடக்கத்தை சேர்த்தன.

முதலாளித்துவப் பொருளாதாரங்கள் ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பின்னடைவை தவறாது சந்தித்து, பெரிய மந்தநிலையில் மூழ்கியிருந்த போதும், சோவியத் பொருளாதாரம் இடையறாது வளர்ந்து, அனைவருக்கும் எப்பொழுதும் வேலையை உறுதி செய்தது.

விழுந்த முதலாளித்துவ வர்க்கம் தான் இழந்ததைப் பெற நூறு மடங்கு வலிமையுடன் திருப்பித்தாக்கும் என்று மாமேதை லெனின் எச்சரிக்கை செய்தார். சோசலிச கோட்பாடுகளின் அமலாக்கத்தில் ஏற்பட்ட தவறுகள் சோசலிசத்தின் பின்னடைவுக்கு இட்டுச்சென்றது. அதனைத் தொடர்ந்து சோசலிசத்தையே ஒட்டுமொத்தமாக வீழ்த்தி முடிக்க வேண்டும் என்று உலக முதலாளித்துவ சக்திகள் முயற்சித்தன. அதைத்தான் நாம் இப்போதுவரை பார்த்து வருகிறோம்.

ஆனாலும் சோவியத் ஒன்றியத்திலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச கட்டமைப்பு உருவாக்கிய முன்னுதாரணங்கள் இப்போது வரலாற்று படிப்பினைகளை கொடுத்து வருகின்றன. இப்போதும் சீனா, கியூபா, வியட்நாம், வடகொரியா, லாவோஸ் ஆகிய நாடுகள் சோசலிசத்தை கட்டமைத்து வருகின்றன.

சாதனைப் பாதையில் சோசலிசம்:

இன்றைய சோசலிச நாடுகள் தங்களுடைய பொருளாதார முன்னேற்றத்தை தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்துகிறார்கள். உற்பத்தி சக்திகளை தொடர்ந்து மேம்படுத்தவும் செய்கிறார்கள். இதன் மூலம், மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, வீடு, உடை, கல்வி மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்திட முன்னுரிமை தருகிறார்கள்.

வறுமை ஒழிப்பில் வியட்நாமும், சீனாவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். சீனாவின் சாதனைகள் இதில் குறிப்பிடத்தகுந்தவையாகும். உலக வர்த்தகத்தில் அதிகம் ஈடுபடும் நாடாக இருந்துவந்த அமெரிக்காவை, கடந்த 2020 ஆம் ஆண்டில் பின்னுக்குத்தள்ளியது சோசலிச சீனா. அந்த இடத்தை இப்போது வரை தக்கவைத்துள்ளது. அதே சமயத்தில் தனிநபர் சராசரி வருமானத்தை 2012 ஆம் ஆண்டின் நிலையில் இருந்து இரட்டிப்பாக்கியுள்ளது. உலக சராசரியை விட 5.2 ஆண்டுகள் அதிகமான சராசரி ஆயுள் (77.9) என்ற நிலையை எட்டியுள்ளது.

அனைவருக்கும் வாழ தகுதியான வீடு, பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் ஆகியவைகளை உறுதி செய்துள்ள சீனா, கடும் வறுமையை ஒழித்துள்ளது. ஓரளவு முன்னேறிய சமூகம் என்ற இலக்கினை எட்டியது. இப்போது அடுத்த இலக்கை நோக்கி நடைபோடும் சீனா 2049 ஆம் ஆண்டிற்குள், இணக்கமான, வளர்ந்த சோசலிச சமுதாயத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

“பொதுவுடைமை என்பதே முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இதர பல்வேறுபட்ட உடைமை முறைகளும் அதனோடு சேர்ந்து வளர்வதற்கான ஒரு முறை; உழைப்பிற்கேற்ற விநியோகம் என்பதே முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இதர விநியோக முறைகளும் அதனோடு சேர்ந்து நிலைபெறுவதற்கான ஒரு முறை: சோஷலிச சந்தைப் பொருளாதார முறை ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் அடிப்படை சோஷலிச பொருளாதார முறை ஆகிய இவையே பிரத்தியேகமான சீன தன்மைகளைக் கொண்ட சோஷலிசத்தின் மிக முக்கியமான தூண்களாக அமைகின்றன” என்பதை தனது அமைப்பு சட்டத்தில் இணைத்துள்ளது சீன கம்யூனிஸ்ட் கட்சி.

சோசலிச நாடான கியூபாவில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளையும் தாண்டி, அனைத்து மக்களுக்கும் இலவச கல்வி மற்றும் சுகாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. லாவோஸ், வடகொரியா ஆகிய நாடுகளும் தங்கள் பின் தங்கிய நிலைமையை மாற்றி முன்னேறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள்.

இந்த நாடுகள் அனைத்துமே, சுய விமர்சன பார்வையுடன், தனது பிரச்சனைகளை ஆய்வு செய்கிறார்கள். பொருளாதாரத்தின் பின் தங்கிய நிலைமை, பிராந்தியங்களுக்குள் நிலவும் ஏற்றத்தாழ்வு மற்றும் ஊழல் உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கிறார்கள்.

சோசலிசம் பெற்ற படிப்பினைகள்:

சோசலிசம் என்பது சிக்கலும் இல்லாமல், நேர் கோட்டுப் பயணத்தில் வந்துவிடாது அது கம்யூனிச சமுதாயத்தை எட்டுவதற்கு முந்தைய ஒரு மாறும் இடைக்கால நிலையே ஆகும். மார்க்ஸ் அதை கம்யூனிசத்தின் முதல் கட்டம் என்கிறார்.

“வர்க்க சமுதாயத்திலிருந்து வர்க்கபேதமற்ற சமுதாயமாக மாறும் அந்த (சோசலிசக்)  காலகட்டத்தில் முதலாளித்துவமும் சோசலிசமும் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும்” [சிபிஐ(எம்) தத்துவார்த்த தீர்மானம்] இந்த காலகட்டத்தில் புரட்சி சக்திகளுக்கும், முதலாளித்துவத்தை பாதுகாக்க முனையும் எதிர்ப் புரட்சி சக்திகளுக்கும் இடையே- மோதல் தொடரும்.

சோசலிச சக்திகள் வரலாற்றுப் போக்கிலிருந்து கற்று மேம்படுத்திக் கொண்ட படிப்பினைகளை கீழ்க்காணுமாறு பட்டியலிடலாம்.

 1. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் இன்றியமையாமை
 2. உற்பத்தி சக்திகளை சமூக மயமாக்குதல் தனியார் மூலதனத்தின் இடத்தில் சமூக உடைமையை மாற்றீடு செய்ய வேண்டும் அதில் அரசு உடைமை என்பது பல்வேறு வடிவங்களில் ஒன்றாகவிளங்கிடும்)
 3. சரக்கு உற்பத்தியும், சந்தையும் இருப்பது சோசலிசத்திற்கு எதிரானதல்ல சோசலிச கட்டத்திலும் சந்தை இருக்கும். அதே சமயத்தில் பெரு மூலதனம் உருவாகாத விதத்தில் அரசு அதனை கட்டுப்படுத்திட வேண்டும்
 • திட்டமிட்ட பொருளாதாரம் என்பது சோசலிசத்தின் மற்றுமொரு அடிப்படைக் கொள்கையாகும் ஆனால் திட்டமிடலின் தன்மை, அனைத்து பொருளாதார முடிவுகளையும் மையப்படுத்துவதாக இருக்கக் கூடாது. பொருளாதார முடிவுகளில் மக்களின் பங்கேற்பினை உறுதி செய்ய வேண்டும்.  பொருளாதார நிறுவனங்களை நடத்துவதும், திட்டமிடுதலும் பரவலாக்கப்பட வேண்டும்.
 • ஜனநாயகமே சோசலிசத்தின் உயிர் நாடியாகும். மக்கள் பங்கேற்பை உறுதி செய்கிற, அரசியலமைப்பை உத்திரவாதப்படுத்தும் பல கட்சி முறை இருக்க வேண்டும்.  சோசலிச சமூக அமைப்பிற்கு உள்ளாகவே, மாற்றுக் கருத்துக்களை முன்னெடுக்கும் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். இதனை முன்னெடுக்கும்போது கட்சியின் முன்னணிப் பாத்திரத்தையோ, அரசின்வர்க்கத்தன்மையையோகைவிடுதல்கூடாது
 • சோசலிச கட்டமைப்பு, முதலாளித்துவ– ஏகாதிபத்திய சூழலிலேயே நடக்கிறது என்பதை மனதில் நிறுத்த வேண்டும் புதிய சமூக அமைப்பினை பாதுகாக்கும் சோசலிச உணர்வினை மக்களிடம் பராமறிப்பதும், வளர்த்தெடுப்பதும்  சோசலிச ஜனநாயகத்தின் கடமையாகும்
 • ஆணாதிக்க அமைப்பு முறையை வீழ்த்தி பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் அவசியத்தை சோசலிசம் மனதில் நிறுத்திட வேண்டும்.
 • சூழலியல் நெருக்கடி,  புவி வெப்பமாதல் பிரச்சனைகள் புவிக்கோளத்திற்கே நெருக்கடியாக முன்வந்திருக்கின்றன. புவியைப் பாதுகாப்பதும் சோசலிசத்தின் இலக்குகளில் ஒன்றாகும்.

இந்தியாவிற்கான படிப்பினைகள்:

உலக சோசலிச இயக்கத்தின் அனுபவத்தை, இந்தியாவின் திட்டவட்டமான சூழலில் இருந்து ஆய்வு செய்திட்ட சி.பி.ஐ(எம்), தனது திட்டத்தில் கீழ்க்கண்ட பத்தியை சேர்த்தது. இந்தியாவில் ஏற்படுத்தப்படும் “மக்கள் ஜனநாயக அரசு, பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளில் அரசுடமை மூலம் ஒரு தீர்மானகரமான பாத்திரத்தை வகிப்பதோடு, இதர துறைகளில் கட்டுப்படுத்துகிற, வழிகாட்டுகிற பாத்திரத்தை அரசு வகிக்க வேண்டியுள்ளது பொதுத்துறைக்கு மேலாதிக்கம்தரும், பல்வேறு வடிவ சொத்துடமை கொண்டதாக, பன்முக கட்டமைப்பு கொண்டதாக மக்கள் ஜனநாயகப் பொருளாதாரம் அமையும்.” “உலகப் பொருளாதாரத்தில் பெரும்மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கருத்தில்கொண்டு வெளிநாடுகளின் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் அதே நேரத்தில் சுயசார்பு பொருளாதாரத்தை பலப்படுத்துவதில் நாடு உறுதியோடு நிற்கும்”

அதே சமயத்தில், இந்தியாவின் திட்டவட்டமான சூழலையும் தனது தத்துவார்த்த தீர்மானத்தில் விளக்கியது.

இப்போதுள்ள பிரதிநித்துவ அமைப்புகளை (உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் உள்ளிட்டவைகளை) வெகுமக்கள் இயக்கங்களை வலுப்படுத்தும் விதத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த அவைகளுக்குள் நடத்தும் பணிகளை, வெகுமக்கள் போராட்ட இயக்கத்தோடும், நடவடிக்கைகளோடும் இணைத்து, முதலாளித்துவ நிலவுடைமை அமைப்புக்கு மாற்றான இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும். இதிலிருந்து எந்தவிதமான விலகலும் அனுமதிக்கப்படக் கூடாது.

உழைக்கும் வர்க்க ஒற்றுமையை அதிகப்படுத்தி வலுமிக்க தொழிலாளர் – விவசாயி கூட்டணியை உருவாக்கிட வேண்டும். இந்திய சமுதாயத்தில், வர்க்கச் சுரண்டலும் சமூகச் சுரண்டலும் நிலவி வருவதை மார்க்சிஸ்ட் கட்சி உணர்ந்துள்ளது. இப்போதைய சமூக பொருளாதார அமைப்பில், முதலாளித்துவ – அரை நிலவுடைமை வர்க்கங்களின் சுரண்டல் தொடர்கிறது, பல்வேறு வடிவிலான சாதி, இன மற்றும் பாலின ஒடுக்குமுறைகளும் நிலவுகின்றன. ஆலும் வர்க்கங்கள் தமது சுரண்டலின் மூலமாக உபரியை உறிஞ்சிக் கொள்கிறார்கள், தங்கல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிட சமூக ஒடுக்குமுறையின் அனைத்து வடிவங்களையும் பயன்படுத்திக் கொள்கிறன. எனவே, சமூக ஒடுக்குமுறைகளுக்கும், அனைத்து வடிவிலான சுரண்டலுக்கும் எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து முன்னெடுக்க வேண்டும் என்ற புரிதலை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

மேலும், இதே பின்னணியில் இருந்து அனைத்து விதமான அடிப்படைவாத சக்திகளுக்கும், வகுப்புவாத சக்திகலுக்கும் எதிரான போராட்டத்தை பார்க்க வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் அடிப்படைகளை பாதுகாத்தால்தான், வர்க்கத் திரட்டலை வேகப்படுத்திட முடியும். மேற்கண்ட சக்திகள் வர்க்க ஒற்றுமையை சிதைத்து, சுரண்டப்படும் மக்களிடையே வகுப்புவாத விஷத்தை பரப்புகிறார்கள். எனவே, வகுப்புவாதத்தை எதிர்க்கும் வீரம் செறிந்த போராட்டம், பாட்டாளிவர்க்க புரட்சிகர இயக்கத்தின் முன்னுள்ள முழுமுதல் கடமையாகும்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு, புதிய தாராளமய கொள்கை எதிர்ப்பு, இந்துத்துவா/வகுப்புவாத எதிர்ப்பு, சமூக ஒடுக்குமுறை, மேலாதிக்க எதிர்ப்பு ஆகியவற்றை மையமாக வைத்து சோசலிசத்தை நோக்கி மாறிச் செல்வதற்கான போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்.

‘திராவிட மாடல்’ நூல் விமர்சனம்: சர்ச்சைகளும், விடுபடலும் …

பேரா. ஜூடித் ஹெயர்


[திராவிட மாதிரி: தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதாரம் குறித்த விளக்கம்’ (The Dravidian Model: Interpreting the political economy of Tamil Nadu); ஏ. கலையரசன் மற்றும் எம். விஜயபாஸ்கர், வெளியீடு: கேம்பிரிட்ஜ் யுனிவர்சிடி பிரஸ், 2021

Economic and Political Weekly, பிப்ரவரி 19, 2022 இதழில் வெளியான பேராசிரியர் ஜூடித் ஹெயர் எழுதிய “Inclusivity and Growth under the ‘Dravidian Model’: Controversial Omissions and Claims”  என்ற கட்டுரையின் தமிழாக்கம்]

(தனது EPW கட்டுரையை தமிழாக்கம் செய்து மார்க்சிஸ்ட் இதழில் பிரசுரிக்க ஒப்புதல் வழங்கிய பேராசிரியர் ஜூடித் ஹெயர் அவர்களுக்கு எங்கள் நன்றியை உரித்தாக்குகிறோம்ஆசிரியர் குழு )

திராவிட மாதிரி: தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதாரம் குறித்த விளக்கம்’ என்ற நூல் ஒரு முக்கியமான, அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய, புத்தகமாகும். தமிழ்நாடு, அனைத்து சாதியினரையும் உள்ளடக்கிய சமூக வளர்ச்சியுடன், பொருளாதார வளர்ச்சியை வெற்றிகரமாக இணைத்துள்ளது என்றும், முக்கியமாக, இது வேறு எந்த இந்திய மாநிலத்தாலும் சாதிக்க முடியாத ஒன்று என்றும் கூறுகிறது, இந்நூல். இவ்விரண்டில் ஒன்றின் வளர்ச்சி மற்றொன்றைப் பாதிக்கவே செய்யும் என்ற வாதத்தை நிராகரிப்பதாக அமைகிறது. ஏனெனில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க முடியும்; அதைப்போலவே பொருளாதார வளர்ச்சியும் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க முடியும் என்பதை இது காட்டுகிறது என்பதே நூல் முன்வைக்கும் கருத்து. 


இந்நூல் தமிழ்நாட்டின் சமூக உள்ளடக்க தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சி சாதனைகளை விளக்குவதன் மூலமாக, சமூகம் மற்றும் பொருளாதாரம் என இரண்டு தளங்களிலும் அரசு நன்கு செயல்பட முடிந்துள்ளது என்பதற்கு ஒரு விளக்கம் அளிக்கிறது. ஒன்றிய அரசின் கீழ் உள்ள மாநில அரசுகளுக்கு உள்ள வரம்புகள் குறித்தும், மாநிலத்தின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஏன் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதற்கான தர்க்க நியாயத்துடனும் இந்தப் புத்தகம் தொடங்குகிறது. மேலும், “கிராம்சியன்” தன்மையில் கட்டப்பட்ட ‘திராவிட பொது புத்தி’தான் இந்த சமூக உள்ளடக்கம் கொண்ட பொருளாதார வளர்ச்சிக்குக் காரணம் என வாதிடுகிறது. மேலும், ‘திராவிட பொது புத்தி’ என்பதை சட்டர்ஜி கூறுவதைப் போல ‘சாதாரண மக்களிடையே நிலவும் அனுபவபூர்வமான உணர்வு நிலை’ என வரையறுக்கிறது. சமூக அந்தஸ்து சார்ந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக  மக்கள் அணிதிரட்டப்பட்டனர். இதை அடைவதற்கு பொருளாதார வளர்ச்சி ஒரு வழிமுறையாகப் பார்க்கப்பட்டது. 

சில குறிப்பிடத்தக்க சாதனைகள்

சாதனைகள் பற்றிப் பேசும் முதல் விரிவான அத்தியாயம், கல்வி பற்றி பேசுகிறது. பல இந்திய மாநிலங்களை விட முன்னதாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் சிறப்பான சாதனைகள் நடத்தப்பட்டதை கவனத்துக்குக் கொண்டு வருகிறது. சமூகத்தில் தாழ்நிலையிலுள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினரை, தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் அதிக அளவில் சேர்க்கும் வகையில், இதற்கென சிறப்பாக வகுக்கப்பட்ட கொள்கைகள் குறித்துப் பேசுகிறது. கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 6 – 14 வயது குழந்தைகள் பள்ளிக்கல்வி பெற்று வரும் இன்றைய காலகட்டத்தில், இச்சாதனை பெரியதாகத் தெரியாவிட்டாலும், இது உண்மையில் ஒரு சாதனைதான். எனினும், கற்றல் திறன்  என்ற அடிப்படையில் சாதனை குறைவுதான். இதில் இந்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியே உள்ளது. 

ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவில்  இரண்டு மாநிலங்களில்தான் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதமும், கல்வியின் தரமும் பொதுவாக மேம்பட்டு உள்ளன. அதில் தமிழ்நாடும் ஒன்று.  இருந்தும், பெருவாரியான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு, ஆங்கிலவழிக் கல்வி தனியார் பள்ளிகளில் மட்டுமே தரப்படுகிறது என்பதும்  ஒரு காரணமாக உள்ளது. உயர்கல்வியைப் பொருத்த அளவில் இந்திய மாநிலங்களிலேயே சிலவிதங்களில் தமிழ்நாடு, பொதுவாகவும், குறிப்பாக பட்டியலின மக்களின் கல்வியிலும், முதல் இடத்தில் உள்ளது. இருப்பினும், கல்வியின் தரம் ஏற்றத்தாழ்வுடனே உள்ளது. உயர்கல்வி நிலையங்கள் பலவும் தனியாரிடமே உள்ளன. உயர்கல்வியைத் தனியார்வசம் விட்டுவிட்டு, அரசு தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்துகிறது (கல்விக்கான அரசின் செலவு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்). கல்வியின் தரம் குறைவாக இருப்பதால் அது பட்டியலின மக்களின் மீது பாரபட்சமான வகையில் தாக்கம் செலுத்துகிறது. அது குறித்து இந்த அத்தியாயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். கல்வித்தரம் குறைவாக இருப்பதன் விளைவுகள் குறித்து கடைசி அத்தியாயத்தில் பேசப்பட்டிருப்பதற்கு பதிலாக இங்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். ஆங்கிலவழிக் கல்விக்கு முக்கியத்துவம் தருவதில் அரசுக்கு இருக்கும் விருப்பமின்மையும் இங்கு அதிக கவனம் பெறத் தகுதியுடைய மற்றுமொரு பிரச்சினையாகும். 

சாதனைகள் குறித்த அடுத்த அத்தியாயம், நாம் நன்கு அறிந்த, சுகாதாரத்தில் அடைந்துள்ள சிறப்பான முன்னேற்றங்களைக் குறித்து விரிவாகப் பேசுகிறது. குழந்தை பிறப்பின் போது, தாய் மற்றும் சேய் மரண விகிதம் இந்திய மாநிலங்களிலேயே கேரளாவுக்கு அடுத்து தமிழ்நாட்டில்தான் மிகவும் குறைவாக உள்ளது என்பது உண்மையிலேயே சிறப்பான சாதனையாகும்.  ஆனால், தாய்-சேய் மரண விகிதத்தைக் குறைப்பதற்கு மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதே தவிர, மற்ற உடல்நலம் தொடர்பான விஷயங்களில் தமிழ்நாடு கவனம் செலுத்தவில்லை என்பது இதில் உள்ள பிரச்சனையாகும். தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பல புதுமையான கொள்கைகளைப் பின்பற்றிவருகிறது என்பதை இந்த அத்தியாயம் எடுத்துக்காட்டுகிறது. வலுவான ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பு,  மையப்படுத்தப்பட்ட மருந்துக் கொள்முதல், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை உள்ளடக்கிய ஒரு அதிகார அமைப்பு மற்றும் பொதுத்துறையில் மருத்துவ வல்லுனர்களைத் தக்கவைப்பதை நோக்கமாகக் கொண்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும். மேலும், பொது சுகாதாரப் பணியாளரை, மருத்துவப் பணியாளர்களிடமிருந்து தனியாகப் பிரித்ததும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். அடுத்தகட்ட மருத்துவப் பராமரிப்பு தனியார் துறைக்குத் திறந்துவிடப்பட்டது. இதில் காப்பீட்டு வசதி இருப்பதால், ஓரளவிற்கு ஏழைகளும் அணுகும் வகையில் உள்ளது. ஆரோக்கியத்தை மிக மோசமாகப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினையாக உள்ள துப்புரவு குறித்தும், அதேபோல் ஊட்டச்சத்து குறித்தும் இங்கு விவாதித்திருந்தால் அது உதவிகரமாக இருந்திருக்கும். சுகாதாரத்துறையில் எடுத்துக்கொள்ளப்பட்ட முக்கியமான பிரச்சனைகள் அனைத்தும் தனியார்மயமாக்கலினால் வரக்கூடிய பிரச்சனைகளே. அவையும் கடைசி அத்தியாயத்தில்தான் விவாதிக்கப்பட்டுள்ளன.


மூலதனமும் உழைப்பும்

மூலதனக் குவிப்பு பற்றிய அடுத்த அத்தியாயத்தில், நூலாசிரியர்கள் மூலதன குவிப்பைத் தவிர்த்து மக்கள் நலனில் அரசு அக்கறை செலுத்துகிறது என்பதற்கு எதிராகப் பேசியுள்ளனர். எடுத்துக்காட்டாக:


அரசியல் அணிதிரட்டல் மற்றும் மாநில அளவிலான கொள்கைகள் மூலதனத் திரட்டலுக்கு சிறந்த வாய்ப்பை நல்கியுள்ளன. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு இந்தத் தளத்தில் ஒப்பீட்டளவில் நல்ல பங்கு அளிக்கப்பட்டுள்ளது.  (ப.113)

ஆயினும், பட்டியலின மக்களைவிட இதர பிற்பட்ட வகுப்பினரே இதில் அதிகப் பங்கு வகிக்கின்றனர். மற்ற இந்திய மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் உற்பத்தித் துறையில் அதிகளவில் வேலை வாய்ப்பை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. தொழில்நுட்பத் திறமைவாய்ந்த தொழிலாளர்களும் இங்குதான் அதிகம் உள்ளனர். பேருந்து வசதி, சாலை வசதிக் கட்டமைப்புகள் மற்றும் மின்சாரமயமாக்கல் போன்றவற்றின் மூலம், அரசு, மூலதனத் திரட்சியைப் பரவலாக்க உதவியுள்ளது.  சிறுதொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு மாநில தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக் கழகம்(சிப்காட்) மற்றும் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (சிட்கோ) போன்ற நிறுவனங்கள் அமைக்கப்பட்டன (ப.133-134). முன்னரே ஓரளவு தொழில்மயமாக்கப்பட்டிருந்த தமிழகப் பொருளாதாரத்தை மேலும் வளர்த்து 1970 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் திராவிடக் கட்சிகள் மூலதனத் திரட்சிக்கு பெரும் ஆதரவை வழங்கியுள்ளன. சிறு தொழில்களை ஊக்குவித்தல் மற்றும் தொழிற்சாலைப் பரவலாக்கம் போன்ற தொழிற் கொள்கைகள், பாரம்பரியமாக தொழிற்பின்னணி இல்லாத பிரிவினரும் தொழில் முனைவோராக  மாற உதவியது. இருப்பினும், 1991-இல் பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு மாநிலத்திற்கு அதிக சுயாட்சி அதிகாரம் கிடைத்த பின்னர்தான் வளர்ச்சியில் உண்மையான எழுச்சி ஏற்பட்டது. அப்பொழுதுதான் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி விகிதம் முன்னிலை பெறத் தொடங்கியது.  பன்னாட்டு நிறுவனங்களின் மீதான ஈர்ப்பு காரணமாக ஏற்பட்ட சங்கடங்கள் குறித்து இந்த அத்தியாயம் இன்னும் அதிகமாகப் பேசியிருக்கலாம். வேலைவாய்ப்பின் தரத்தை அதிகரிக்க முடியாத தோல்விகள் குறித்தும் அதிகம் கவனம் செலுத்தப்பட்டிருக்கலாம். 


அடுத்த அத்தியாயம் ஊரகப் பகுதிகளைப் பற்றியது. இந்தப் பகுதியில், கிராமப்புற பொருளாதாரத்தின் மேம்பாட்டைவிட, அங்கு நிலவிய பழைய படிநிலை உறவுகள் உடைத்தெறியப்பட்டு, சமூக உறவுகள் மாற்றம் பெற்றதைக் குறித்தே அதிகம் பேசப்படுகிறது. நாடு முழுவதும் பரவலாக, பிறரைச் சார்ந்து வாழும் தன்மை குறைந்தது என்றாலும், வேறு எங்கேயும்விட தமிழ்நாட்டில் இது கண்கூடாகத் தெரிந்தது. இந்நூலாசிரியர்கள் குறிப்பாக, உயர்சாதி நிலப்பரப்புகளிடமிருந்து குத்தகை விவசாயிகளுக்கு நிலங்கள் கைமாற்றப்பட்டது, விவசாயத் தொழிலாளர்கள் பலவகைத் தொழில்களுக்கு மாறியதை ஒட்டி, அவர்களது பேரம் பேசும் சக்தி அதிகரித்ததால் விவசாயக் கூலித்தொகை உயர்வுக்கு வழிவகுத்தது, பணியிடத்திற்கு வெளியேயும் கிராமப்புற நலனில் அரசின் தலையீடு ஆகியவை மற்ற இடங்களை விட தமிழ்நாட்டில் சிறப்பாக இருந்தமை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுகின்றனர். விவசாயத்தில் கிராமப்புற தொழிலாளர்களின் பங்கில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. வலுவான சமூகக் கொள்கையின் விளைவாக விவசாயத் துறைக்கு வெளியே நிகழ்ந்த மூலதனத் திரட்சியே பெரும்பாலும் கிராமப்புறங்களில் இத்தகைய மாற்றம் ஏற்படக் காரணமாக அமைந்தது. விவசாயத்தின் பங்கில் ஏற்பட்ட வியத்தகு சரிவினால் ஏதாவது பயனுள்ளதாக நடந்திருக்க வேண்டும். இதற்குமுன், விவசாயத் துறையில் ஒரு நல்ல வளர்ச்சி ஏற்பட்ட வரலாறு உள்ளது. ஆனால், தற்போது வளர்ச்சியின் பெரும்பகுதியை இழந்துவிட்டோம். 

உழைப்பின் சாதனைகள் குறித்து விரிவாகப் பேசும் இறுதி அத்தியாயம், விவசாயத்தில் இருந்து அதிக தொழிலாளர்கள் வெளியேறுவது,  முறைப்படுத்தப்பட்ட உற்பத்தித் துறையில் ஊதியத்தின் பங்கு அதிகமாக இருப்பது, கணிசமான ஊதியம், சிறந்த பணி நிலைமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவை இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தையும் விட தமிழ்நாட்டில் சிறப்பாக இருப்பதைக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக: 


ஒரு பெரிய தேசத்தின் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும், தொழிலாளர் சந்தையின் நெகிழ்வுத்தன்மை மூலம் வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்தி, ஒப்பீட்டளவில் சிறந்த ஊதிய விகிதம், வருமானம் மற்றும் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை மாநில அரசு உறுதி செய்துள்ளது. (ப.214)

தொழிலாளர்களில் 23% மட்டுமே முறைப்படுத்தப்பட்ட துறைகளில் வேலை செய்கின்றனர். ஆனால் நகர்ப்புறங்களில் நிலையான வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கும் முறைப்படுத்தப்படாத தொழிலாளர்களுக்குமான ஊதிய இடைவெளி வேறெங்கேயும்விட மிகக் குறைவாகவே உள்ளது. அதிக வருமானம் பெறும் வேலைகளில் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்றபோதிலும், அதற்கு கீழே உள்ள வேலைகளில் எல்லா தரப்பினரும் பங்கு பெறுகின்றனர். தமிழ்நாடு,  அரசியல் கட்சிகளுடன் இணைக்கப்பட்ட வலுவான தொழிற்சங்கங்களின் வரலாற்றைக் கொண்டுள்ளது. முறைசார் தொழிலாளர்களின் பணி விதிகள் மற்றும் நிபந்தனைகளை வகுப்பதில் தொழிற்சங்கங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. தமிழ்நாட்டில் தொழிற்சங்கங்கள் போராட்டகுணம் குறைவாகவே உள்ளனர்; பணப்பயன்கள் பெறுவதில் அதிக ஆர்வமும், தொழில் தகராறுகளுக்கான நடவடிக்கைகள் குறைவாகவும் இருப்பதால், முதலாளிகள் பேச்சுவார்த்தை நடத்துவதில் அதிக விருப்பம் காட்டுகின்றனர் என்று நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர் (ப.188). திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தபிறகு நலவாரியங்கள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளதால், முறைசாரா தொழிலாளர்கள் கவனம்பெறுகின்றனர். மற்ற இடங்களைவிட உழைப்பிற்கு பாதுகாக்கப்பட்ட, அதிக ஊதியம் இங்கு கிடைத்தாலும், அது மட்டுமே போதாது. உண்மையில், உழைப்பின் தரத்தை உயர்த்துவதில் மிகக் குறைந்த முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது. இது குறித்து இறுதி அத்தியாயத்தில் பேசப்பட்டிருந்தாலும், இந்த அத்தியாயத்திலும் மூலதனக் குவிப்பு குறித்த பகுதியிலும்  விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். இறுதி அத்தியாயத்தில் பேசப்பட்டுள்ள படித்த வேலையில்லாதோர் குறித்து இங்கு ஏதும் குறிப்பிடப்படவில்லை.


திராவிடத் தொகுதியை நிலைநிறுத்துவது குறித்து

இறுதி அத்தியாயத்தில் சாதிகளுக்கு இடையேயான வேறுபாடுகள் மற்றும் நூலாசிரியர்கள் கூற்றான (Dravidian Bloc)  ‘திராவிடத் தொகுதி’யை நிலைநிறுத்துவதில் உள்ள பிரச்சனைகள், ஊழல் மற்றும் பணம் எதிர்பார்ப்பது, ஜனநாயகம் ஆகியவை குறித்து ஆர்வமூட்டும் விவாதங்கள் உள்ளன.  கிராமப்புறம் – நகர்ப்புறம் மற்றும் பிராந்தியங்களுக்கிடையேயான வேறுபாடுகள் குறித்து இங்கு முதன்முறையாகப் பேசப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தொடர்பாக மக்களிடமிருந்து வரும் அழுத்தங்கள் காரணமாக புதிதாக பிரச்சனைகள் எழுகின்றன, உதாரணத்திற்கு, உண்மையில் முக்கியமானதாக இல்லாவிட்டாலும், ஜனநாயக கோரிக்கைகளின் பிரதிபலிப்புகள் என்ற அடிப்படையில் எழும் எதிர்ப்புகளாக, இவை குறிப்பிடப்பட்டுள்ளதானது ஆச்சரியமளிக்கிறது. ஏனெனில், சுற்றுச்சூழல் தொடர்பாக மாநிலத்தில் உண்மையாகவே பெரிய அளவில் பிரச்சினைகள் நிலவுகின்றன. இவ்வரிகளின் ஊடே மறைந்துள்ள கருத்துக்கு, இது பொருந்தாது என்று எளிதாகக் கூறிவிட முடியாது. ஊழல் தொடர்பாகக் குறிப்பிடப்படும் மணல் அள்ளும் பிரச்சனை, விவசாயத்திலும் குடிநீர் விநியோகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் (கிரானைட்) தோண்டுவதும் ஒரு பெரிய பிரச்சினையாகும். தண்ணீர்ப் பஞ்சம், விவசாயத்திற்கான நீர் பயன்பாடு மற்றும் ஏழைகளுக்கான குடிநீர் வினியோகம் ஆகியவற்றிலும் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக சுற்றுச்சூழல் மாசுபாடும் உள்ளது. ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மூலதனக் குவிப்பு மற்றும் சமூக நீதியின் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் இவை குறித்து ஏதும் பேசப்படவில்லை. 


நூலாசிரியர்கள் தமிழ்நாட்டின் இந்த உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த சமூக இயக்கங்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கூறுகின்றனர். 1920களிலும் 1930களிலும் நடந்த பிராமணர் அல்லாதோர் போராட்டம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (உயர் சாதியினர் அல்ல) ஆதிக்கம் செலுத்தும் இந்த மாநிலத்திற்கு முக்கியமானது. பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர்தான் இந்த உள்ளடக்கிய வளர்ச்சியின் பலனை அடைந்தார்களே தவிர, பட்டியலின மக்கள் அல்ல. இந்தக் கருத்தானது, மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையிலிருந்த அந்த சமூகத்திடம் மாற்றத்துக்கான ஒரு நேர்மறையான அணுகுமுறையைக் கொடுத்ததால், அதிக உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய அனுமதித்தது. திராவிட கட்சிகள் மீதும் கொள்கை வகுப்பவர்கள் மீதும் இந்த சூழல் அழுத்தத்தை ஏற்படுத்தி, பெரிய உள்ளடக்கிய வளர்ச்சியை எளிதாக எதிர்ப்பின்றி அடைய வழிவகுத்தது. ஆனால், தலித்துகளுக்கு எதிராக ஆழமான விரோதம் நிலவுவதை இது புறக்கணிக்கிறது. இன்றைய நாள்வரை அவர்கள் மீது காட்டப்படும் சாதியப் பாகுபாடுகளும், கொடுமைகளும் தொடர்கின்றன என்பதே இதை எடுத்துக் காட்டுகிறது. சாதிவெறி, தலித்துகளுக்கு எதிரான ஆழமான விரோதம் மற்றும் பிற சமூகங்களுடனான சாதிய மோதலுக்கு தமிழ்நாடு பெயர் பெற்றது. இந்நூல் இந்த உண்மை குறித்து போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை. கீழ்நிலை சமூகங்களை உயர்த்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட, சாதியை மையப்படுத்திய திட்டங்களே, சாதிவெறியை மேலும் வளர்ப்பதற்குக் காரணமாக அமைந்தனவா என்பது ஒரு முக்கியமான கேள்வி. பின்னடைவுகள் உள்ளன; ஒப்புக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட வேண்டியவை பின்னடைவுகள் மட்டுமே அல்ல. சாதிய இழிவுகள் ஆழமாக வேரூன்றியும் சாதிய பாகுபாடுகள் பரவலாகவும் உள்ளன. தன் சாதியப் படிநிலையை மறைப்பது என்பது உண்மையில் இயலாததாக உள்ளது. 


இந்நூலில் தரப்பட்டுள்ள உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வரையறையில் பாலின ரீதியான உள்ளடக்கிய வளர்ச்சி சேர்த்துக் கொள்ளப்படவில்லை. பாலினம் பற்றி நூலில் குறிப்பிடப்படவேயில்லை. எனவே அது குறித்த விவாதமும் இல்லை. இதைத் தவிர்ப்பதற்கு நல்ல காரணங்கள் இருப்பதாக நூலாசிரியர்கள் முடிவு செய்திருக்கலாம். அப்படியானால் அதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். சாதியைப் போலவே பாலினத்திலும் தமிழ்நாட்டின் புள்ளிவிவரங்கள் எதிர்மறையாகவே உள்ளன. பாலினப் பாகுபாட்டைக் களைவதற்காகப் பல திட்டங்கள் தீட்டப்பட்ட போதிலும் இப்பிரச்சினை மிக இழிந்த நிலையிலேயே உள்ளது. பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான பாகுபாட்டின் அளவு அதிர்ச்சி அளிப்பதைப் போலவே, சமீப காலமாக பெண் கருக்கொலையும் சிசுக்கொலையும் பரவலாக நடந்தேறிவரும் சூழலும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் பொதுவாக சொல்லப்படும் தமிழ்ப் பண்பாடு குறித்த கதைகளுக்கு மாறாக, பாலின உறவுகளின் எதிர்மறை அம்சங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன.


இந்தப் புத்தகம் கூறுவது போல, பல அம்சங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக உள்ளது. ஆனால் அது மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது. மாநிலத்தில் நிலவும் கடினமான பிரச்சனைகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள இறுதி அத்தியாயம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. பல பிரச்சனைகள், இருப்பதாகவே அங்கீகரிக்கப்படவில்லை. புத்தகம் முழுவதுமே விமர்சனப்பூர்வமற்ற முறையிலேயே எழுதப்பட்டுள்ளது. மற்ற இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, புள்ளிவிவரங்கள் சிறப்பானதாகத் தோன்றலாம்; ஆனால், மற்ற கிழக்காசிய நாடுகளில் ஏதேனும் ஒன்றுடன் ஒப்பிட்டால்கூட அது சிறப்பாக இல்லை. 


1967லிருந்து ஆட்சியில் இருந்த தமிழக அரசியல் கட்சிகள் குறித்து வாசகர்களுக்கு பல சுவாரசியமான தகவல்கள் இந்நூலில் உள்ளன. இந்தப் புத்தகம், நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் தாக்கம் குறித்த அதீதமான மதிப்பீடுகளாலும், பல விடுபடல்களினாலும் ஒரு சர்ச்சைக்குரிய புத்தகமாகவே காணப்படுகிறது. இந்நூலிற்கு  ஆதரவாக மட்டுமல்லாது, எதிராகவும் மேலும் பல நூல்கள் வெளிவர இது தூண்டுதலாக இருக்கும் என  நம்புவோம்.

தமிழில்: சேலம் சோபனா

சமய வகுப்புகளும் இந்துத்துவ அணிதிரட்டலும்: கன்னியாகுமரி ஒரு ஆய்வு

           அருண் குமார். கி

அறிமுகம்

தமிழகத்தில் திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம் மற்றும் பொது உடைமை இயக்கங்களால் கட்டமைக்கப்பட்ட மாநிலத்தின் பன்மைத் தன்மையையும் (social pluralism of the state), அதன் மதச்சார்பற்றத் தன்மையையும் குலைக்கும் நோக்கத்துடன் வகுப்புவாத அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் மாநிலத்தில் மத மோதல்கள், மதம் குறித்த விவாதங்கள் ஏற்பட்டு வருகின்றன. தமிழக அரசியல் களத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாற்றத்தை – மதவாத அமைப்புகள் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதை, அவ்வமைப்புகளின் வளர்ச்சியை – புரிந்துகொள்வது, அவ்வமைப்புகளின் செயல்பாட்டுக்கு எதிரான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முதல்படி ஆகும். தமிழக அரசியலில் விளிம்பு நிலையில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தன்னை மாநில அரசியலில் நிலைப்படுத்திக் கொள்ள ஏராளமான தந்திரங்களை, முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எனினும், தேர்தல் அரசியலில் அதனுடைய பலத்தை பாஜக-வால் நிரூபிக்க முடியவில்லை. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் அக்கட்சியால் ஓரளவுக்கு தொடர்ச்சியாக தேர்தல் வெற்றி பெறமுடிகின்றது. உள்ளாட்சி தேர்தல் தொடங்கி, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் வரை அம்மாவட்டத்தில் பாஜக தொடர்ந்து வென்று வருகின்றது. மற்ற மாவட்டங்களில் பெற முடியாத வெற்றியை கன்னியாகுமரியில் மட்டும் அக்கட்சி பெறுவதன் காரணமென்ன? அதன் முழுமையான காரணத்தை அறிந்து கொள்ள அம்மாவட்டத்தின் மத, சமூக அரசியலை அறிந்து கொள்வது அவசியமாகும்.                  

விவேகானந்தா ஆசிரமம் உருவாக்கம்

ஹைந்தவ  சேவா சங்கம் (எச்.எஸ்.எஸ்) என்னும் இந்து அமைப்பு 1932இல் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பாகும். ஆர்.எஸ்.எஸ் இன் முதல் சாகா கன்னியாகுமரியில் 1946 இல் தொடங்கியது. எனினும் ஹெச் எஸ் எஸ் மற்றும் ஆர்.எஸ்எஸ் இரு அமைப்புகளும் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், அந்த அமைப்புகளுக்கான அடிப்படை ஆதரவு பெருமளவில் நம்பூதிரிகள், நாயர்கள், சைவ வேளாளர்கள் போன்ற உயர் வகுப்பினர்களுக்குள்தான் இருந்தது. கன்னியாகுமரியின் பெரும்பான்மையினரான நாடார் (பிற்படுத்தப்பட்ட) வகுப்பினரிடையே இந்த இந்து தேசிய அமைப்புகளுக்கு அப்போது செல்வாக்கு இல்லை. இந்தத் தடைகளை அகற்றி, இன்னும் பெருவாரியான மக்களிடம் சென்றடைவதற்காக  மக்களிடையே புகழ்பெற்றவர்களாக விளங்கும் ஆன்மீக /மதத் தலைவர்களை பயன்படுத்திக் கொள்ள ஆர்.எஸ்.எஸ் தீர்மானித்தது. இந்தியா நெடுகிலும் பரந்துபட்ட செல்வாக்கைப் பெற்றிருந்த, இந்து சமயத்திற்குப் புத்துயிரூட்டிய ஆன்மீகத் தலைவரான விவேகானந்தரை ஆர்.எஸ்.எஸ் இவ்வாறு பயன்படுத்திக் கொண்டது. 1963இல், கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம் அமைத்ததில் ஆர்.எஸ்.எஸ்-க்கு  முக்கியப் பங்குண்டு. இந்நினைவுச்சின்ன குழுவால் தோற்றுவிக்கப்பட்டதே விவேகானந்தர் கேந்திரம். அது கன்னியாகுமரியில் நிலவியிருந்த  கிறிஸ்தவ சமூகத்தின் செல்வாக்கிற்கு எதிராக, இந்துக்களை, குறிப்பாக நாடார் சமூகத்தினரை,   ஒன்று திரட்டத் தொடங்கியது.

இச்சமயத்தில், 1982 மார்ச் மாதம்  நடைபெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் மாசித் திருவிழாவில் இந்து பக்தர்களை கிறிஸ்தவ மீனவர்கள் கடத்திச் சென்று மானபங்கம் செய்து விட்டதாக வதந்தி பரவியது. இதை அடுத்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில்  எட்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள். துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கிறிஸ்தவ சகோதரிகளால் நடத்தப்பட்ட பள்ளிகள், தேவாலயங்கள், மருத்துவ நிலையங்கள் எல்லாம் சேதப்படுத்தப்பட்டன. 680 மீனவ குடிசைகள் தீக்கிரையாகின. இக்கலவரம் இந்துக்களின் இந்து உணர்வு நிலைபாட்டை  ஆழமாக்கியதோடு  இரு சமூகத்தினரிடையே பகைமையை மேலும் பெரிதாக்கியது.

மண்டைக்காடு கலவரத்தினால் இந்துக்களுக்கு ஏற்பட்டிருந்த இந்து உணர்வை பயன்படுத்தி, அவர்களை மதத்தால் ஒன்றிணைக்க விவேகானந்தா ஆசிரமம் முடிவு செய்தது. அதன்படி சமய வகுப்புகள் எனப்படும் இந்து சமய வகுப்புகளைத்  தொடங்கியது. அவற்றின்மூலம் இள மனங்களில் இந்துப் பண்புகளைக் கட்டி எழுப்புவதில் மிகுந்த கவனம் செலுத்தியது. விவேகானந்தா ஆசிரமம் 1940இல் சுவாமி அம்பானந்தாவால் வெள்ளிமலை என்ற கிராமத்தில் தொடங்கப்பட்டது. இது நிறுவப்பட்டதன் நோக்கம் கிறிஸ்தவ மத குருமார்கள் செய்து வந்த மதமாற்றத்தை தடுப்பதும், மக்களிடையே இந்து சமய நெறிகளை போதிப்பதுமே  ஆகும். அப்போது கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கு  தளம் அமையாததால் சுவாமி அம்பானந்தாவிற்கு ஆர்.எஸ்.எஸ்-ஸோடு தொடர்பிருக்கவில்லை. அவருக்குப் பின் 1951இல் சுவாமி மதுரானந்தா அதன் தலைவர் ஆனார் . இவருக்கு ஆர்.எஸ்எஸ் உடன் வலுவான பிணைப்பு இருந்தது. இவர்தான் விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னக்  குழுவில் உறுப்பினராக இருந்து, நினைவுச்சின்னம் அமைப்பதில் முக்கியப் பங்காற்றினார் . சமய வகுப்புகள்,  திருவிளக்கு பூஜை, மங்களப் பிரார்த்தனை போன்ற நிகழ்வுகளைப் பரவலாக்குவதற்கு ஆசிரமம் ஒரு கருவியாகச் செயல்பட்டது. இம்மதப்பழக்கங்கள் முன்னரே மக்களால் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், அதுவரை அவை தனிப்பட்ட  விவகாரங்களாகவே கருதப்பட்டன. இப்படி தனிப்பட்ட வழிபாட்டு முறைகளை பொதுவெளிக்கு கொண்டு வந்ததன் மூலம், ஆசிரமம் இந்து விழிப்புணர்வை ஊட்டுவதற்குத் துணைநின்றது .

1974லேயே ஆசிரமம்,  குழந்தைகளுக்குக் கற்பிக்க சமய வகுப்புத் திட்டத்தை தொடங்கியிருந்தது. எனினும் மண்டைக்காடு கலவரத்துக்குப் பிறகே இவை மாவட்டம் முழுதும் வேகமாகப் பரவின. இந்த வகுப்புகளை இந்துத்துவ அமைப்புகள் கிறிஸ்தவ பைபிள் வகுப்புகளைப் போல  நடத்த முயன்றன . எனவே இவையும் ”ஞாயிறு வகுப்புகள்” (Sunday Schools) என்றே அழைக்கப்பட்டன. கிறிஸ்டோஃபர் ஜெஃபர்லாட், இப்படி “மற்றவரை”ப் போலச் செய்தலை “திட்டமிடப்பட்ட ஒன்றிணைப்பு” (strategic syncretism) என்கிறார். இந்து சமூகத்திற்கு எதிரானவர் என்று கருதப்பட்ட குழுவினரின் பண்பாட்டு மதிப்பீடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதால்  இது (பைபிள் வகுப்பு/சமய வகுப்பு) ‘ஒன்றிணைப்பு’ ஆகிறது. வலுவான சமூக அரசியல் தளத்தினாலும் பெருமையினாலும் தம்மை உயர்வாகக் கருதி  “பிறரை” மேலாதிக்கம் செய்யும் சித்தாந்தத்தை ஆதரிப்பதால்  ‘திட்டமிடப்பட்டது’ என்கிறார் ஜெஃபர்லாட்.

இந்துத்துவ அமைப்புகள், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ், சிறுவர் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்துவதன்  முக்கியத்துவத்தை 60 ஆண்டுகளுக்கு முன்பே புரிந்து கொண்டு செயல்படத்  தொடங்கியிருந்தது.   ராஷ்டிர சேவிகா சமிதி (பெண்கள் அணி), அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (மாணவர் அணி), ஹிந்து சுவயம் சேவக் சங் (வெளிநாட்டு அணி), பாரதிய ஜனசங்கம் (அரசியல் அணி) ஆகிய முன்னணி அமைப்புகளை ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் தேசிய அளவில் ஏற்படுத்தியிருந்தது. புதிய முயற்சியாக 1952இல்  உத்திரப்பிரதேசத்தில் சரஸ்வதி சிசு மந்திர் எனும் தொடக்கப் பள்ளியை தோற்றுவித்தது. இப்பள்ளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்ததால், 1958இல் மாநில அளவிலான சிசு சிக்ஷா பிரபந்த சமிதி என்னும் அமைப்பை உருவாக்கியது. அதன் பின்னர் 1977இல்  பல மாநிலங்களிலும் இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட பள்ளிகளை ஒன்றுபடுத்தி திறம்படச் செயல்படச் செய்ய நாடு தழுவிய அளவில் வித்யா பாரதி எனும் அமைப்பை  உருவாக்கியது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் வித்யா பாரதி பள்ளிகள்  தமிழ்நாட்டில் வெற்றி அடையவில்லை. அதனுடைய  இணையதளத்தில் கண்டுள்ளபடி அவ்வமைப்பின் கீழ் 12,828 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அவற்றுள் தமிழ்நாட்டில் இருப்பது 217 பள்ளிகள். அங்கு பயில்பவர்கள் 75,700 மாணவர்கள். தமிழ்நாட்டில்  மத நெறிகளைக் கல்வியின் மூலம் பரப்புவது எதிர்பார்த்த பலனைத் தராததால், விவேகானந்தா ஆசிரமம் அப்பொறுப்பைத் தனதாக ஏற்றுக் கொண்டது. சமய கருத்துகளையும் விழுமியங்களையும் கல்வியின் மூலம் இள நெஞ்சங்களில் பரப்புவதற்கு வித்யா பாரதி பள்ளிகளையே மாதிரியாக ஆசிரமம் எடுத்துக் கொண்டது. குழந்தைகளிடையே மதப்பற்று, நாட்டுப்பற்று உணர்வுகளை ஊட்டுவதற்கு முறைசாரா சமயக் கல்வியை அது தேர்ந்தெடுத்தது.

இந்துக்கள் பிற மதங்களுக்கு மாறக்கூடியவர்களாக இருப்பது அவர்கள் தம் மதம் குறித்த அறியாமையில் இருப்பதாலேயே என ஆசிரமம் கருதியது. இந்துக்களுக்கு “தமது செழிப்பான ஆன்மீக வளத்தையும் மரபின் மாண்பையும் அறிவுறுத்தி,   வாழ்வு தரும், வாழ்வினை உய்விக்கும், வாழ்வினை உருமாற்றும் நித்திய சமயத்தோடு அவர்களைப் பிணைத்தால்  வேர்ப்பிடிப்பற்று வாழும் அவர்கள் தம் நம்பிக்கையில் உறுதிப்படுவார்கள்”  என்பதைச் செயல்படுத்துவதே   ஆசிரமத்தின் நோக்கம். தங்களின் இலக்கினை அடைவதற்கு இந்த ஞாயிறு வகுப்புகள் பயன்தரக் கூடியவை என ஆசிரமம் கருதியது. எனவே மாணவர்களுக்குக்  கல்வியின் மூலம் மதநெறிகளை ஊட்டி இந்து மதத்தின் முக்கியத்துவத்தைக் கற்பித்தது .

ஞாயிறு வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் சமூக உள்ளடக்கத்தை நோக்கும்போது, பெரும்பாலான மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நாடார் சமூகத்தினராகவும் சிறு பிரிவினர் கிருஷ்ணவகை சமூகத்தினராகவும் இருந்தனர். பிராமணர், நாயர், வேளாளர், தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் பெருமளவில் ஞாயிறு வகுப்புகளில் சேரவில்லை. ஆசிரியர்களின் பங்கேற்பும் இவ்வாறான சமூகக் கூறுகளையே கொண்டிருந்தது. ஆக ஞாயிறு வகுப்புகள் செயல்பட்டது நாடார் சமூகத்தினரைச் சார்ந்தே இருந்ததால் அச்சமூகமே  பாஜகவின் வலுவான வாக்கு வங்கியாக, இந்து வாக்கு வங்கியாக உருவானது. அதாவது இந்துக்களை ஒன்றிணைக்கும் பாஜகவின்/ சங்பரிவாரத்தின் திட்டம் கன்னியாகுமரியில் நிஜமானது.

வித்யா பாரதி பள்ளிகளும் சமய வகுப்புகளும்

தங்களுடைய இந்துத்துவ நோக்கத்தோடு இணையக்கூடிய அந்தந்த இடங்களுக்கான திட்டங்களின் மூலம் இந்துத்துவ அமைப்புகள் மக்களைத்  திரட்டின. முறையான பள்ளிகளும் (formal schools) அருகாமை அமைப்புகளும் (neighbourhood associations) இந்துத்துவ கொள்கைகளைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றின. ஆர்.எஸ்.எஸ் அதன் வித்யா பாரதி பள்ளிகளின் மூலம் இந்து சமய உணர்வை (Hindu religiosity) தீவிரமாக பரப்பியது. அதன் பாடத்திட்டத்தின் மூலம் பிற மதச் சிறுபான்மையினர் மேல் வெறுப்பை விதைக்க முயன்றது. ஆர்.எஸ்.எஸ் ஆல் நடத்தப்பட்ட சிசு மந்திர் பள்ளிகள் குழந்தைகளிடம்  இந்து மேலாதிக்க உணர்வைப்  பாய்ச்சி, பிஞ்சு மனங்களை வடிவமைப்பதற்குக் கருவியாயின. இவ்வாறு, ”இந்து ராஷ்டிரம்”  நிறுவ வேண்டும் என்ற தங்கள் இலக்கை அடைவதற்கு கல்விப் புலமே இன்றியமையாதது என்பதை ஆர்.எஸ்.எஸ் கண்டு கொண்டது.

வித்யா  பாரதி பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு தனி பாடப் புத்தகங்களைக்  கொண்டுள்ளன. விழுமியங்கள் அடிப்படையிலான கல்வியையும் பாரதப் பண்பினையும்  கற்பிப்பதைத் தவிர,  வித்யா பாரதி பள்ளிகளின் பாடத்திட்டம் மதச் சிறுபான்மையினரை அந்நியர்கள்; படையெடுப்பாளர்கள் என்று சித்தரித்து உருவாக்கப்பட்டுள்ளது. மத நெறிகளையும் இந்திய வரலாற்றில் இந்து மையக் கருத்துகளைச் சுற்றியுமே இங்கு கற்பிக்கப்படுகின்றது. கல்வியின் மூலம் இந்து மனப்பான்மையை ஊட்டும் ஆர்.எஸ்.எஸ் -இன் முயற்சிகள் அறிஞர்களின் கவனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. இப்பள்ளிகளின் தன்மை குறித்துப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பள்ளிகளின் பாடத்திட்டங்கள், அமைப்பு, சமூகத்தின் மதச்சார்பின்மை இயல்புக்கு இப்பள்ளிகளின் அச்சுறுத்தல் என்பன குறித்துப் பல அறிஞர்கள் (கார்டர், முகர்ஜி, முகர்ஜி மற்றும் மகாஜன், சர்கார், செதல்வாட், சுந்தர், தனேஜா) ஆய்வு செய்துள்ளனர்.

“முறையான சம்பிரதாயங்களை மாணவர்களிடையே வலியுறுத்தும் வகையில் குறிப்பான சில சடங்குகளும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட மதவழக்கங்களும் மிகக் கவனமாக மாணவர்களுக்கு  ஊட்டப்பட்டன. இந்துக்களின் சடங்குகளும்  விழாக்களும்  குறையேதுமின்றிக்  கடைப்பிடிக்கப்பட்டன. மேலும்  பள்ளி வளாகத்திற்குள்   அல்லது அருகாமையில்  எப்போதுமே ஒரு கோவில்  இருந்தது . அவர்களின் அன்றாட பள்ளி வாழ்வில் அவையும்  ஒரு அங்கமாகும்”. என்று  சர்கார் குறிப்பிடுகிறார்.

இந்துத்துவ அமைப்புகள்‌ மரபார்ந்தும் முறையான வழிகளிலும்  இந்துக்களை எவ்வாறு ஒன்றுதிரட்டுகின்றனர் என்பதை குறித்தே இங்கு சொல்லப்பட்ட அறிஞர்களின் ஆய்வுகள் விவாதித்தன. முறைசாரா கல்வி மூலம் இந்துக்களை அணி திரட்டுவது குறித்து போதுமான கவனம் செலுத்தப்படவில்லை. அதேபோல, இந்துத்துவ அமைப்புகளின்  அரண்களாக விளங்கும் வட மாநிலங்களை முன்வைத்தே இவ்வாய்வுகள் நடைபெற்றுள்ளன. இந்துத்துவ அமைப்புகளுக்கு வலுவான இருப்பு இல்லாத தென் மாநிலங்களில் முறையான/முறைப்படுத்தப்படாத கல்வித் திட்டங்கள் மூலம் இந்துக்களை அணிதிரட்டுவது குறித்து மதிப்பிடவும் புரிந்து கொள்ளவும் குறைந்த ஆய்வுகளே உள்ளன.

வடமாநிலங்களில் வெற்றியைப் பெற்றுத் தந்த இந்துத்துவ தந்திரோபாயங்கள்/திட்டங்கள்,  திராவிட கட்சிகள்  உருவாக்கிய  அரசியல் கலாச்சாரச்  சூழலைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில் எதிர்பார்த்த பலனை பெறத் தவறின. உதாரணமாக, முன்பே குறிப்பிடப்பட்டதைப்போல, வித்யா பாரதி பள்ளிகள் இங்கு பரவலாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மகாராஷ்டிராவில் 213 பள்ளிகள் இருக்க தமிழ்நாட்டில் அவை 217 இருக்கின்றன. பள்ளிகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பினும் மாணவர் சேர்க்கை மகாராஷ்டிராவில்தான் அதிகம். தமிழ்நாட்டில்  இப்பள்ளிகளில் 75,700 மாணவர்கள் பயிலும் நிலையில் மகாராஷ்டிராவில் 92,197 மாணவர்கள் பயில்கின்றனர்.

முன்னரே குறிப்பிட்டது போல, சமய வகுப்புக்கள் வித்யா பாரதி பள்ளிகளின் மாதிரியையே பின்பற்றினாலும்கூட, மதச்சிறுபான்மையினரிடம் வெறுப்பை விதைப்பதிலும், இந்து மதக் கல்வியை கற்பிப்பதிலும், செயல்படுவதிலும் அவை தனித்து விளங்கின. எடுத்துக்காட்டாக, வித்யா பாரதி பள்ளிகளில் மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர் பெற்றோர்களுக்கு அங்கு பங்கு இல்லை. இந்த அணுகுமுறைக்கு மாற்றாக தமிழகத்தில் நடைபெறும் சமய வகுப்புகளில் பெற்றோரும்,  குறிப்பாக தாய்மார்கள், மாணவர்களோடு சேர்ந்து பயில்கின்றனர். மேலும் சமய வகுப்புகள் என்பவை மரபான முறை சார்ந்த பள்ளிகளுக்கு இணையாகத் தனியாக நடத்தப்படுபவை. ஆதலால், மாணவர்கள் தமது பள்ளிகளில் பொதுவான கல்வியையும், சமய வகுப்புகளில் மதக் கல்வியையும் கற்க வேண்டும். மேலும் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் வித்யா பாரதி பள்ளிகள் பெரும்பாலும் உண்டு உறைவிட பள்ளிகளாகும். ஆர்.எஸ்.எஸ் பள்ளிகள் தரமான கல்வியை வழங்குகின்றன.  கட்டணம் அதிகம் இல்லை என்பது போன்ற காரணங்களால் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளைவிட ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளிகளை நாடுகின்றனர். இப்படியான தூண்டுதல் சமய வகுப்புகளில் இல்லாவிட்டாலும்கூட, கன்னியாகுமரியில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சமய வகுப்புகளில் சேர்ந்தனர்.

கற்பித்தலும் அரசியலும்

தமிழ்நாட்டு அரசின்  கல்வித் திட்டம் ”மதச்சார்பின்மைத் தன்மை” உடையதால், இந்துக்களுக்கு ஆதரவான பார்வையை அது கொண்டிருக்கவில்லை  என ஆசிரமம் கருதியது. இந்து மாணவர்கள் இந்து மத அறிவை இந்தப் பாடத்திட்டத்தில் இருந்தோ, கோவில்களில் இருந்தோ பெற வழியில்லை என்பது ஆசிரமத்தின் கருத்து. ஆசிரமத்தின் தலைவர் சுவாமி சைதன்யானந்தர், மதத்தைப் பற்றிய முறையான புரிதல் இல்லாததால் பெரும்பாலான இந்துக்களுக்கு இந்து மதத்தை பற்றித் தெரியவில்லை; அதனால்தான் கிறிஸ்தவ மத குருக்களால் எளிதாக அவர்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர்; இதனைத் தடுக்க மதக் கல்வி அவசியம் என நினைத்தார்.

சமய வகுப்புக்களின் பாடத்திட்டம் இந்து மதத்தை ஆபிரகாமிய/செனடிக் மதங்களின் தாக்குதலிலிருந்து காக்கும் வகையில் கவனமாக உருவாக்கப்பட்டது.  இந்து மதம் பற்றி விளக்குவது அதன் நோக்கத்தில் சிறு பகுதியே; முக்கிய நோக்கம் பிற மதத்தினரால் இந்து மதத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் பற்றிப் பேசுவதே.  சமய வகுப்புக்கள் தொடக்கநிலை, இளநிலை, வளர்நிலை, உயர்நிலை, முதுநிலை என ஐந்து படிநிலைகளாகப்  பிரிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றோர் அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்கின்றனர். அனைத்து நிலைகளையும் முடித்து, சமயக் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ”வித்யாஜோதி” எனும் பட்டம் வழங்கப்படும். பொதுவாக  ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவின்போது,  பட்டம் பெற்றவர்கள், “நாங்கள் நம்பிக்கை உடைய  இந்துக்களாக இருப்போம்; எல்லா வழிகளிலும் இந்து மதத்தைக் காப்போம்” என்று நெருப்பின் முன் சத்தியம் செய்வர். ஒவ்வொரு படி நிலையும் தனித்தனி பாடத்திட்டம் கொண்டிருப்பதால் ஒருவேளை மாணவர்கள் இடையிலேயே படிப்பிலிருந்து வெளியேறினாலும், அவர்களுக்கு மதக் கல்வி கிடைத்து விடும்படியே பாடத்திட்டத்தை கவனமாக அமைத்துள்ளனர்.  ‘இந்து மதத்திற்கு ஆபத்து’ என்பதே ஐந்து படிநிலைகளிலும் பாடத்திட்டத்தை இணைக்கும் சங்கிலி. எனவே, ஒவ்வொரு இந்துவுக்கும் இளவயதிலேயே பிற மதங்களிடமிருந்து அவர்கள் மதத்தைக் காப்பது கடமையாகிறது.

சமய வகுப்புகளின் அமைப்பாளர்கள் ஆர்எஸ்எஸ் சாகாவை ஒத்ததாக இவ்வகுப்புகளின் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டனர். காலை 8 முதல் 10 அல்லது 9 முதல் 11 வரை என இரண்டு மணி நேரங்கள் வகுப்புகள் நடைபெறுகின்றன. பஜனை 20 நிமிடங்கள், கதை சொல்லல் 20 நிமிடங்கள், இந்துத் தத்துவம் 20 நிமிடங்கள், கேள்விகள் 10 நிமிடங்கள், அசைன்மென்ட் 10 நிமிடம், வருகைப்பதிவு 5 நிமிடம், பிரார்த்தனை 5 நிமிடம், விளையாட்டு மற்றும் பிற செயல்கள் 30 நிமிடம் எனப் பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது. பாடங்கள் வெளிப்படையாக, ஆயிரம் ஆண்டுக்காலம் தாய்நாட்டு இந்துக்களுக்கு எதிரான முஸ்லிம் கிறிஸ்தவ அராஜகங்களைப் பற்றிப் பேசி, கிறிஸ்தவ – முஸ்லிம் விரோத மனப்பான்மையை படிப்படியாக குழந்தைகளிடம் வளர்ப்பதாக அமைந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் பள்ளி மாதிரிகளாகவே சமய வகுப்புகள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், பிராந்திய உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருப்பதை காணலாம். இந்திய சுதந்திரப் போராட்டத்தை விவரிக்கும்போது, தேசியத் தலைவர்களுடன் மாநிலத்தைச் சார்ந்த தலைவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன், வாஞ்சிநாதன், வ.உ.சிதம்பரனார் முதலானவர்களின்  பங்களிப்புகள் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளது. இப்படி நாடு தழுவிய அளவிலிருந்து மாறி, மாநிலம் சார்ந்த உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அவற்றின் பாடங்களில் இஸ்லாமும், கிறிஸ்தவமும் அந்நிய மதங்கள் எனவும், அவை படையெடுப்பாளர்களால் இங்கு கொண்டுவரப்பட்டவை எனவும் கூறப்பட்டுள்ளது.  தேச விரோத – இந்து விரோத அமைப்புகள் எதிலும் சேர வேண்டாம் எனத் தன் மாணவர்களிடம் அவை கேட்டுக் கொண்டன. பெண்களிடம், மேலை நாட்டுக் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டாம் எனவும், பெண்கள் லட்சிய இந்துப் பெண்களாக வாழ்ந்து, தன் கணவனுக்கே வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் பாடம் சொல்கிறது. இந்து மதத்தில் அறிவியல் என இராமாயண காலத்தில் புஷ்பக விமானம் இருந்தது; பழங்காலத்தில் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தது என்று பேசுகிறது. பாடப் புத்தகங்களில் பகவத் கீதை விளக்கப்பட்டது; மாணவர்கள் கோவில்களுக்குச் சென்று கோவில் குழுக்களில் உறுப்பினர்கள் ஆகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாணவர்கள் இந்துக்களைப் பாதுகாக்கவும் மதமாற்றத்தைத் தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டனர். இன்னும் மதத்துக்காக உயிரை தியாகம் செய்யவும் தயாராக வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளனர். தற்போதைய இந்தியச் சூழலைக் கற்பிக்கும்போது, இந்துக்கள் இரண்டாம் நிலை  குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்றும், சிறுபான்மையினரும் அவர்களின் நிறுவனங்களும் அரசு மானியங்களைப் பெறுவதால், இந்துக்களின் நிறுவனங்கள் மூடப்படுகின்றன எனவும் சொல்கின்றன. மேலும் சிறுபான்மையினரின், குறிப்பாக முஸ்லிம்களின், மக்கள் தொகை  அதிகரித்துள்ளதாகவும் பாடங்கள் பேசுகின்றன. மேலும், மதச்சார்பின்மையே இந்துக்களின் துயர்களுக்குக் காரணம் எனவும் போதித்கப்படுகிறது.

இத்தகைய நிலைபாட்டைக்  கொண்டுள்ள பாடத்திட்டம், அதோடு சேர்த்து  கோவில்கள், புனிதத் தலங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், இந்திய அரசர்கள் முதலானவற்றையும்  மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறது. இந்துக் கோவில்களும் இந்துத் தலைவர்களும் மட்டுமே குறிப்பிடப்பட்டு, சிறுபான்மை சமூகத்தினரைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றனர். அதேபோன்று,   இந்திய பிரிவினைக்கு முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களுமே காரணம் எனவும், அகண்ட பாரதம் சிதறியதற்கும் அவர்களே காரணம் எனவும், பாடங்களின் மூலம்   குற்றம் சாட்டப்படுகிறது. “இந்துக்களை ஒன்றிணைத்து, பெருமைமிக்க நம் கடந்த காலத்தை மீட்டு, ஆயிரம் ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்திய பகைவர்களுக்குப் பாடம் கற்பியுங்கள்” எனத் தன் மாணவர்களுக்கு போதிக்கின்றன சமய வகுப்புப் பாடங்கள்.  தம் மாணவர்களிடையே இந்து உணர்வினை ஊட்ட, வருகைப் பதிவின்போதும் வாழ்த்தும்போதும்அவர்களை ‘ஹரிஓம்’ எனச் சொல்லப் பயிற்றுவிக்கின்றன பாடங்கள்.

சமய வகுப்புகளின் செயல்பாடுகளும் வளர்ச்சியும்

சமய வகுப்புக்கள் முதன்மையாக குழந்தைகளை ஒன்று திரட்டவும் மத நெறிகளை ஊட்டுவதையுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தன. வயது, கல்வி, சாதித் தடையின்றி யாரும் வகுப்புகளில் சேரலாம். ஐந்து படிநிலைகளையும் முடிக்க ஏறத்தாழ 5 ஆண்டுகள் ஆகின்றன.  ஜனவரி மாதம் மாணவர் சேர்க்கை தொடங்கி ஜூன் முதல் வாரத்தில் தேர்வுகள் நடக்கின்றன. முதல் மூன்று வருடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் 5 ரூபாய்; தேர்வுக் கட்டணம் 10 ரூபாய்; அடுத்த இரு வருடங்களுக்கு 25 ரூபாய் கட்டணம் தவிர வேறு கட்டணம் ஏதுமில்லை.

தொடக்கத்தில் 1,193 மாணவர்கள் சேர்ந்தனர். மண்டைக்காடு கலவரத்துக்குப் பின் இது 1,750 மாணவர்களாக உயர்ந்தது. அதற்குப் பின் மாணவர் எண்ணிக்கையில் சீரான வளர்ச்சி ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மதக் கல்வி என்பது புதிய சிந்தனையல்ல.  விடுதலைக்கு முன்பே திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முன்பே மதக் கல்வி முறை இருந்து வந்துள்ளது. விவேகானந்தா ஆசிரமத்தின் சமய வகுப்புகள் மேற்குறிப்பிட்டதிலிருந்து முற்றாக வேறுபடுகின்றது. சமய வகுப்புகள் மக்களை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக அவர்களை மதத்தின் பெயரால் ஒரு சார்பாக அணிதிரட்டுவதையே (polarize) பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்து மதத்திற்கு எதிரான கிறிஸ்தவப் பிரச்சாரத்துக்குப் பதிலாகவே, சமய வகுப்புகள் நடத்தப்படுவதாக அமைப்பாளர்கள் கூறினர். வகுப்புகள் தொடக்கத்தில் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டது, பின்னர் மாணவர்களோடு தாய்மார்களும் வருவதற்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகின்றன. கோவில் வளாகங்களில் நடத்தப்படுவதன் மூலம் வகுப்புகளுக்கு வரும் மாணவர்களும் தாய்மார்களும் கோயிலுக்குச் செல்வதை இவ்வகுப்புகள் உறுதி செய்து கொண்டன.

விவேகானந்தா ஆசிரமத்தின் ஆவணங்களின்படி கன்னியாகுமரியில் உள்ள 1150 சமய வகுப்பு நிலையங்களில் 50,000 முதல் 55,000  மாணவர்கள் வாராந்திர வகுப்புகளுக்கு வருகின்றனர். திருவிளக்கு பூஜை, மங்களப் பிரார்த்தனை போன்ற நிகழ்வுகளை விட சமய வகுப்புத் திட்டமே வெற்றிகரமான திட்டம் என அதன் அமைப்பாளர்கள் கருதுகின்றனர்.  ஒவ்வொரு வருடமும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததால், சமய வகுப்புகளை நிறுவனமயமாக்க ஆசிரமம் முடிவு செய்தது. அதன்படி 1984 மே 18இல் இந்து சமயக் கல்வி அறக்கட்டளை எனும் பெயருடன் ஒரு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதுவே,  இந்து தர்ம வித்யா பீடம் என பெயர் மாற்றம் பெற்றது. ஏறத்தாழ 3,500 ஆசிரியர்கள், ஊதியம் ஏதும் இல்லாமல், மதக் கல்வி கற்பிப்பதில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில்  80 முதல் 85  சதவீதம்பேர் பெண்கள். சமய வகுப்பு ஆசிரியைகள் பெரும்பாலானோர் ஏழ்மையான பொருளாதார பின்னணியை கொண்டவர்கள். தனியார் பள்ளி ஆசிரியர்களும், தையல் வேலை செய்பவர்களும், இல்லத்தரசிகளுமே அவர்களுள் அடங்குவர். சமய வகுப்புகளின் ஆரம்ப நோக்கம் மாணவர்கள் மட்டுமே. பின்னர், பெண்கள் தான் திறமையுடன் மத நெறிகளைப் பரப்புவோர் என்பதால் அவர்களையும் பங்கு பெற வைப்பது நோக்கம் ஆயிற்று.

கன்னியாகுமரி மாதிரி அரசியல்: சமய வகுப்பின் அரசியல் தாக்கங்கள்

கன்னியாகுமரியில் பாஜகவின் தேர்தல் பாதை தமிழ்நாட்டின் அனுபவத்திலிருந்து முற்றிலும் வேறானது. மற்ற மாவட்டங்களைப் போலின்றி பாஜகவும் பிற சங் பரிவார அமைப்புகளும் அமைப்பு ரீதியாக கன்னியாகுமரியில் வலுவாக இருக்கின்றனர். அதனால் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் பொதுத் தேர்தல் நடக்கின்றபொழுது,  பாஜகவால் மற்ற கட்சிகளின் வெற்றியைத் தடுக்க முடிந்தது. 1940களில் இருந்தே சங் பரிவார அமைப்புகள் கன்னியாகுமரியில் செயல்பட்டுக் கொண்டிருந்தன எனினும், 1982 மண்டைக்காடு கலவரத்திற்கு பின்பு, நிலைமை தீவிரமாக மாற்றமடைந்தது. கலவரத்தை அடுத்து, இரு வகுப்பினருக்கும் இடையே இடைவெளி அதிகரித்து, மத ரீதியான பிளவு உண்டானது. இப்பிளவினை பாஜகவும் சங் பரிவாரமும் உடனடியாக அவர்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டன. 1984 சட்டமன்றத் தேர்தலில் புதிதாக உருவான சங் பரிவார அமைப்பான இந்து முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் V. பாலச்சந்திரன் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு பத்மநாபபுரம் தொகுதியை வென்றார்.

இந்த வெற்றியை அடுத்து ஆர்எஸ்எஸ் இன் முன்னாள் பொதுச் செயலாளரான சேஷாத்திரி ”இப்போது  தமிழ் உணர்வை இந்து உணர்வு மாற்றியமைத்துள்ளது” என்று கூறினார்.  ‘திராவிட மண்ணில் இந்து தேசிய அரசியலுக்கான ஒரு புது யுகத்தின் தொடக்கம்’ என   இந்த வெற்றி கருதப்பட்டது. வலிமை வாய்ந்த கட்சிகளான திமுக அதிமுகவுடன் எந்தக் கூட்டணியும் அமைக்காமல், சங் பரிவார் பெற்ற வெற்றியாகும் இது.  மாநிலத்தில் தேர்தல் அரசியலில் வெற்றிவாய்ப்பை அதிகரிக்க திராவிட /தமிழ் அரசியலின் இடத்திற்கு  மதவாத/ வகுப்புவாத அரசியலைக் கொண்டுவர வேண்டும் என்ற படிப்பினையை   இந்த வெற்றி  பாஜகவுக்கு தந்தது.   கன்னியாகுமரியில் பாஜக சங் பரிவார அமைப்புகளோடு  இணைந்து நீண்டகால முயற்சிகளுக்குப்பின் திராவிட அரசியலை வகுப்புவாத அரசியலால் பதிலீடு செய்வதில் வெற்றிபெற்றது. ஒப்பீட்டளவில் கன்னியாகுமரியில் பாஜக  அமைப்பு ரீதியாக வலுவாக  இருப்பதற்கான காரணங்களைக் கேட்டபோது,  கட்சியின் உழைப்பைத் தாண்டி, சமய வகுப்புகளும் கட்சியின் வெற்றிக்குக் காரணம் என்றனர் தலைவர்கள். சமய வகுப்பின் மாணவர்களும் ஆசிரியர்களும் பாஜகவின்  ஆதரவாளர்கள் ஆயினர்.  ஆசிரியர்களும் மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் பாஜகவின் பிரசுரங்களையும் தேர்தல் அறிக்கைகளையும் விநியோகித்தனர்; தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் எனக் கூறுகின்றனர் அமைப்பாளர்கள். பாஜகவின் முழு நேர உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சமய வகுப்பின் மாணவர்கள்தான். பிற சங்க பரிவார் அமைப்புகளிலும் அவ்வாறே. மேற்கண்ட விவாதங்களின்படி, சமய வகுப்பு மாணவர்கள், குறுகிய காலச் செயல்பாடுகளாக தேர்தல் பிரச்சாரம் செய்தல், தேர்தல் பிரசுரங்களை விநியோகித்தல்  போன்றவற்றில் மட்டும் ஈடுபடவில்லை; நெடிய பயணமாக கட்சியின் முழு நேர உறுப்பினராகி கட்சியோடு இணைப்பைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அதாவது, சமய வகுப்புகள் பாஜகவுக்கு கொள்கை ரீதியான ஆதரவை மட்டும் அளிக்கவில்லை; அதைத் தாண்டி கொள்கையை பரப்புவதற்கும் வெகுஜனப்படுத்துவதற்கும் தேவையான ஆள்பலத்தையும் அளிக்கிறது. மத உணர்வுள்ள மக்கள் திரள் – அவர்களைச்  சமய வகுப்புகளுக்குக் கொண்டு வருதல் – அதிலிருந்து தேர்தலில் வெற்றி பெறுதல்_  என்ற காரணிகளின் சேர்க்கையே கன்னியாகுமரியின் அரசியல் மாதிரிக்கு அடிப்படையாக அமைந்தது.

கன்னியாகுமரியில் பாஜகவின் வெற்றியை தொடர்ந்து, மற்ற மாவட்டங்களிலும் சமய வகுப்புகளைத் தொடங்கி தேர்தலில் வெல்லும் வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என ஆசிரம அமைப்பாளர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் கோரிக்கைகள் வந்தன. அதன்படி, திருநெல்வேலியிலும் கோயம்புத்தூரிலும் சென்னையிலும் சமய வகுப்புகள் தொடங்கப்பட்டன. எனினும் கன்னியாகுமரியில் பெற்ற வெற்றியை இங்கெல்லாம் பெற முடியவில்லை. எனவே இம்மாவட்டங்களில் ஏன் சமய வகுப்புகள் வெற்றி பெற முடியவில்லை என ஆராய்வது உசிதமாகும்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கன்னியாகுமரியின் மத ரீதியான மக்கள் தொகை, 48.65 விழுக்காட்டினர் இந்துக்கள், 46.85 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள், 4.2 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். ஆனால், சென்னயிலோ  81 விழுக்காடு இந்துக்களும் 9.45 விழுக்காடு இஸ்லாமியரும் 7.72 விழுக்காடு கிறிஸ்தவர்களும் ஆவர். கிட்டத்தட்ட இதேபோன்றே நிலைதான் திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூரிலும். பிற மாவட்டங்களைப்  போலின்றி கன்னியாகுமரியில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் சம எண்ணிக்கையில் இருந்ததால் இந்து சமயத்திற்கு அச்சுறுத்தல் என்ற காரணத்தைக் காட்டி இந்துக்களை சிறுபான்மையினருக்கு எதிராகத் திரட்டுவது இந்து அமைப்புகளுக்கு ஏதுவாக இருந்தது. இந்து தர்ம வித்யா பீடமும் சமய வகுப்புகளும் இந்த அதிருப்தியை அவர்களுக்குச் சாதகமாகத் திருப்பி மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட முடிந்தது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த காரணி மற்ற மாவட்டங்களில் இல்லாமல் போகவே சிறுபான்மையினருக்கு எதிரான இந்து மேலாதிக்கத்தை இங்கெல்லாம் அவர்களால் உருவாக்க முடியாமல் போனது. எனவேதான் கன்னியாகுமரி மாதிரியை போன்ற வெற்றியை மற்ற மாவட்டங்களில் ஈட்ட முடியவில்லை.

பிற மாவட்டங்களில் இந்து தேசியவாத அமைப்புகள்  பலமற்று இருப்பதற்கு மற்றுமொரு முக்கிய காரணம்   இந்துத்துவக் கொள்கையை தங்களுக்கு உவப்பான கொள்கையாக மக்கள் கருதவில்லை. பெரும்பாலான மக்கள் பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ அந்நியர்களாக கருதுகின்றனர். இந்தச் சவாலை எதிர்கொள்ளும் வகையில் தமிழ் தேசியவாதத்தின் அடையாளங்களைத் தமதாக்கி கொள்ளவும், பின் இந்து தேசியம் எனும் பெரும் சட்டகத்துக்குள் அதனை வசதியாக வைத்துக் கொள்ளவும், பாஜக எல்லா வழிகளிலும் முயன்றது. சான்றாக, 2012ல் தமிழ்த்தாய் ஊர்வலம், 2020ல்  வேல்யாத்திரை  ஊர்வலம், தஞ்சை கோவிலில் ராஜராஜ சோழனுக்கு சிலை எடுப்போம் என்ற வாக்குறுதி போன்றவற்றைச் சொல்லலாம். பிஜேபி தலைவர் ஒருவரின் கூற்றுப்படி,  பாஜகவின் நோக்கம் ‘தமிழ் உணர்வுடன் இணைந்த தேசியவாதம்’ என்பதாகும்.  எனினும் யாத்திரைகளையும் எதிர்ப்புகளையும் மாநாடுகளையும் கோஷங்களையும் மீறி, மாற்றுக் கட்சியாக வர முயன்ற பாஜகவின் முயற்சிகள் பலனின்றிப் போயின.

முடிவுரை

இவ்வாய்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் முறை சாராத மதக் கல்விப் புலத்தில் இந்துத்துவ அமைப்புகளின் பணிகளைத் தெளிவாக்குகிறது.  கன்னியாகுமரி மாவட்டம் மதரீதியாகப் பிளவுபட்டிருந்த 1980களில் இந்து தேசியவாத அமைப்புகள் இந்து ஒற்றுமை என்ற உணர்வினையூட்டி இந்து வாக்கு வங்கியை உருவாக்கின. விவேகானந்தா ஆசிரமம் சமய வகுப்புகளில் காட்டிய செயல்திறன் மிக்க ஈடுபாடு இதற்கு  உதவியது. சமய வகுப்புகள் வெற்றி பெற முதன்மைக் காரணம், மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க அளவிலான கிறிஸ்தவ மக்கள் தொகையே ஆகும். அங்கு, இந்து _எதிர் _மற்றவர் எனும் விவாதத்தினைக் கட்டமைக்க இந்துத்துவ அமைப்புகளுக்கு இக்காரணம் உதவியது.  தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இது போன்ற சாதகம் இல்லாததால் அங்கெல்லாம்  எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.  மேற்கூறிய விவாதங்களில் இருந்து பாதி நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்பான சமய வகுப்புகள் என்பவை மாவட்டத்தில் செயல்படும் இந்துத்துவ அமைப்புகளின் பல்வேறு திட்டங்களைப் பற்றிய புரிதலைத் தருகிறது. ஆதலால்  இந்து மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு விவேகானந்தா ஆசிரமம் கன்னியாகுமரியில் செயல்படுத்திய, தனித்த, புதுமையான  சிந்தனையே சமய வகுப்புகள் என்பனவாகும் .

தமிழில்: ஜமிலா ராசிக்

Advertisements

19 ஆம் நூற்றாண்டு தென் தமிழக சமூக இயக்கம்

பேரா.  கா. அ. மணிக்குமார்

தற்கால தமிழகத்தில் சமூக எழுச்சி, சாதி எதிர்ப்பு இயக்கங்கள் எப்போதும் ஈ.வெ.ரா.  பெரியார், திராவிட இயக்கங்களாலேயே நடந்ததாகக் கருதப்படுகின்றன. துவக்க காலத்திய சாதிக் கட்டமைப்பு, சமூக ஏற்ற தாழ்வுகளுக்கு எதிரான போராட்டங்களில்  தீவிர பங்களிப்பு செய்த தனிநபர்கள், அமைப்புகளின் பெயர்கள் பொது விவாதத்தில் இடம் பெறாமல் போய் விட்டது.  மக்களைக் கவர்ந்த ஒரு பிரசித்தி பெற்ற தலைவரின் தலைமையில் இல்லாத கூட்டு இயக்கங்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டனவாகவே உள்ளன. நாடார்கள் (சாணார்கள் என்றும் அழைக்கப்பட்டனர்) ஒரு சமூக பிரிவு என்ற வகையில் திராவிட இயக்கங்கள், ஈ.வெ.ரா பெரியாரின் காலத்திற்கு முன்பே, தென் தமிழகத்தில் பல சமூக எழுச்சி இயக்கங்களை நடத்தியுள்ளனர்.  சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்களின் முதல் எதிர்ப்பு இயக்கம் என்பது கிறித்தவ மதத்தை தழுவுதல் என்ற வகையில் அமைந்தது. இந்த மத மாற்றம் அவர்களுக்கு ஆங்கில கல்வி கற்கவும், அதன் மூலம் சமுதாயத்தில் அங்கீகாரம், அதிகாரம் பெற பயன்பட்டது. இதில் ஐரோப்பிய கிறிஸ்தவ மிஷினரிகளின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. மதமாற்ற முறையை தேர்வு செய்யாதவர்கள், பின்னர் சிறு வியாபாரம், வணிகத்தில் ஈடுபட்டு, தங்களுக்கென்று சுதந்திரமான வாழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டனர்.

ஐரோப்பிய வர்த்தகர்களின் நம்பிக்கை, நன்மதிப்பைப் பெற்ற நாடார் மக்கள், அவர்களின் அனுசரணையோடு பணப்பயிர்கள் பயிரிடுவது, பஞ்சு, புகையிலை வர்த்தக தரகுப் பணிகளில் ஈடுபட்டு, பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்தனர்.  இவர்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம், பண்பாடு, கலாச்சார ரீதியான மேம்பாட்டிற்கான எதிர்பார்ப்பை அவர்களிடையே ஏற்படுத்தியது. அக்காலத்தில் நிலவிய சமூக சூழலில், பின்தங்கிய பிரிவினராக இருந்த நாடார் சமுதாய மக்கள் எப்படி தங்கள் அபிலாசைகளை வெளிப்படுத்தினார்கள் என்பதையும், சமூக அமைப்பில் இருந்த ஏற்றத் தாழ்வுகளை எப்படி எதிர்த்து நின்றார்கள் என்பதையும் இக்கட்டுரை விவாதிக்கிறது.

1

“ஒர் சமூக இயக்கம் என்பது ஒரு பொதுவான நலனை முன்னிறுத்தி, இலக்கை அடைவதற்காக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வெளியே எடுக்கும் கூட்டு முயற்சி” என்று வரையறுக்கப்படுகிறது. “சூழலியலும் – சமூகமும்: ஓர் அறிமுகம்”  என்ற நூலின் ஆசிரியர் லூக் மார்டெல் இன் கருத்துப்படி, இதில் மூன்று அம்சங்கள் உள்ளன :

 • 1.  சமூக இயக்கம் ஒரு பொது நலனை முன்னிறுத்தி, இலக்கை வென்றிட, கூட்டு இயக்கதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது.
 • 2.  இது ஒர் சமூகப் பொது நலனை அடிப்படையாகக் கொண்டது.
 • 3.  இது அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு வெளியே தன் அரசியல், பண்பாட்டு இலக்குகளை அடைய தொடர் நடவடிக்கை எடுக்கும்.

            இந்த விளக்கம் தங்கள் குடியுரிமையை வலியுறுத்தி தென் தமிழகத்தில் நாடார்கள் நடத்திய இயக்கங்களுக்கு சரியாக பொருந்துவதாக உள்ளது.

உயர் சாதி என்று சொல்லப்பட்வர்களால் அடக்குமுறையையும், துன்பங்களையும் அனுபவித்து வந்த நாடார் சமுதாய மக்களிடையே, கிறிஸ்தவ மிஷினரிகள் சாதிய அமைப்பின் மீது ஏற்படுத்திய தாக்குதல்கள், கிறிஸ்தவ மதத்தை பரப்ப அவர்கள் எடுத்த முயற்சிகள் மிகச் சரியாக செயல்பட்டது.  1797ஆம் ஆண்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார் சமூகத்தை சார்ந்த சுந்தரம் என்ற டேவிட், திருச்சபையின் உபதேசியராக நியமனம் செய்யப்பட்ட பிறகு, திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாடார் சமுதாய மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியதை காண முடிந்தது.   அப்போது திருநெல்வேலி மாவட்ட முதலூரில் (தற்போது முதலூர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது), முதல் கிறிஸ்தவ நாடார் குடியிருப்பு ஏற்படுத்திய பிறகு (1799), 40 ஆண்டுகள் கழித்து கால்டுவெல் திருநெல்வேலி வந்தார். 1841ஆம் ஆண்டின் இறுதியில் கால்டுவெல் திருநெல்வேலிக்கு வந்த போது, திருநெல்வேலி மாவட்டத்தில் 40,000 நாடார்  கிறிஸ்தவர்கள்  இருந்தார்கள். கால்டுவெல் திருநெல்வேலி மாவட்டத்தில் நாடார் மக்களோடு 30 ஆண்டுகள் இணைந்து பணிபுரிந்தார்.

விசித்திரம் என்னவென்றால், நாடார் சமுதாயத்தைப் பற்றி கால்டுவெல்-இன் கருத்திற்கு ஆட்சேபணை தெரிவித்தவர்கள் நாடார் சமுதாயத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களே. கால்டுவெல் எழுதிய “திருநெல்வேலி சாணார்கள்” என்ற நூலில் அவர் எழுதிய குறிப்பைப் பார்த்தால் இந்த ஆட்சேபணைக்கான காரணம் வெளிப்படையாக தெரியும். அந்த குறிப்பில் கால்டுவெல், “…மேற்கிந்திய தீவுகளில் வசிக்கும் விடுதலை பெற்ற அடிமைகளை சாணார் இன மக்களோடு ஒப்பீடு செய்தவர்கள், அறிவுத்திறமை, தேக பலம், சுறுசுறுப்பில் நீக்ரோக்கள் சாணார் மக்களை விட உயர்ந்தவர்களாக உள்ளனர் என்று கருதுகின்றனர்…  காலனி நாடுகளில் உடல் உழைப்புப் பணிகளில்  ஈடுபட்டுள்ள கடை நிலையில் உள்ள இந்துக்களை விட, நீக்ரோக்கள் மேம்பட்ட நிலையில் இருப்பதைப் பார்க்கும் போது, ஒரு இனத்தின் உடல் வலிமைக்கும், மனத்திண்மையை மேம்படுத்தும் திறமைக்கும்  பொதுவானதோர் சம்பந்தம் இருக்கிறது என்ற  கருத்து சரியானதென நிருபணமாகிறது” என்றார்.

    நாடார் சமுதாய மக்களை பிற தாழ்த்தப்பட்ட சாதி மக்களோடு ஒப்பீடு செய்த கால்டுவெல் “மேற்குக் கரையோர அடிமைகள் அல்லது மலைப்பகுதியை சார்ந்த அடிமைகளின் அறிவுத்திறன் பற்றி நான் முழுமையாக அறிந்திருக்கவில்லை. ஆனால் சமூக படிநிலையில் மேல் நிலையில் உள்ள சாதிகள் தொடங்கி கீழ் நிலையில் உள்ள சாதிகள் வரை பார்த்தால், சாணார் சமுதாய மக்களின் பயம் கலந்த, குழப்பமான மனநிலையை வேறு யாரோடும் ஒப்பீடு செய்ய முடியாது என்பதில் உறுதியாக உள்ளேன்” … சாணார் மக்களைவிட உயர்சாதி மக்களோடு தங்களுடைய அன்றாட தொடர்புகளை கூடுதல் நெருக்கத்துடன் கொண்டுள்ள பறையர் இன மக்களின் அறிவுத்திறன் கூடியுள்ளது. அவர்களின் பேச்சு மற்றும் உச்சரிப்புத்திறன் கூட துல்லியம் அடைந்துள்ளது” என முடிக்கிறார்.

 நாடார் மக்களின் குணம், சரீரம், அறிவாற்றல் பற்றி கால்டுவெல்-இன் வரையறையை வெறும் பிதற்றல்கள் என்று தற்கால ஆய்வாளர்கள் கண்டித்து நிராகரிக்கின்றனர். கால்டுவெல்-இன் இந்த கருத்து “வெள்ளையர்கள்தான் உயர்ந்தவர்கள்” என்ற காலனி ஆதிக்க கருத்தோட்டத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது.  ஏனென்றால் அதே நேரத்தில் கிறிஸ்தவ பாதிரியார்கள் எடுத்துக்  கொண்ட முயற்சியின் விளைவாக நாடார் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கும் கால்டுவெல், நாடார்களை பண்படுத்தி நாகரீகமாக்க எடுத்த முயற்சிகள் வெற்றிபெற்றது போல் “சாணார் இன மக்களின் பூர்வீக நிலைமை எப்படி இருந்திருந்தாலும் இப்போது தென் இந்தியாவில் உள்ள முற்போக்கான பூர்வ குடிமக்கள் மற்றும் சாதிகளில், இவர்கள் மிக உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார்கள் என்று நான் கருதுகிறேன்” என்று சொல்கிறார்.

சில குறிப்பிட்ட நாடார்களின் எதிர்ப்புகள் மட்டுமல்லாது, கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார்களில் அருமைநாயகம் என்ற சட்டாம்பிள்ளையின் தலைமையில் ஒரு நாடார் பிரிவினர் கால்டுவெல் சொன்னது தவறு என்று நிரூபித்தனர். சரிசம வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சமூகத்தில் சிறப்பான அந்தஸ்துகளில் பரிணமிக்க முடியும் என்பதற்கு அருமை நாயகம் ஒரு உதாரணம். அருமை நாயகம் ஒரு சிறந்த அறிவாளி. அவர் ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹீப்ரு, லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார். அவர் மேற்கத்திய கிறிஸ்தவத்தை விமர்சனம் செய்தார். நாசரேத்தில் விவிலிய சேவையில் சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றிய அருள்திரு A.F. கேமியரர் என்ற பாதிரியாரின் அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்தார். அருமைநாயகம் அவர் வகித்த பொறுப்பிலிருந்து திருச்சபையால் நீக்கப்பட்ட பின்னர், பிரகாசபுரத்தில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது) “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இந்து தேவாலயத்தை” தொடங்கினார். இந்த புதிய அமைப்பில் உடனடியாக சுமார் 2,500 பேர் உறுப்பினராக இணைந்தனர்.

நாடார் சமுதாய மக்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்று கால்டுவெல் மேலும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்தார். திருநெல்வேலி மாவட்டத்தின் பூர்வீக குடிமக்கள் பற்றி விவாதிக்கும் போது, அவர் பின் வருமாறு எழுதுகிறார்: “பிராமணர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லப்படுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நாயக்கர்களும், பிற தெலுங்கு சாதி மக்களும் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. அதுபோல வெள்ளாளர்கள் சோழ நாட்டிலிருந்தும், சாணார்கள் இலங்கையிலிருந்தும் வந்தவர்கள் என்றும் பொதுவாக கருதப்படுகிறது.” 

இது எந்தவித ஆதாரமும் இல்லாத வெற்று அறிக்கை. ஈழவர்கள் (அவர்கள் பெயர் குறிப்பிடுவது போல்) இலங்கையிலிருந்து கேரளாவிற்கு வந்தவர்கள். வடக்கு கேரளாவில் உள்ள ஈழவர்கள் “தீயர்கள்” என்று அழைக்கப்பட்டனர். வரலாற்று ஆசிரியர் K.M. பணிக்கர்   “நாடார்கள் பாலிநேச பூர்வீகக் குடியினர். இவர்கள் பாரம்பரியமாக தென்னை மரம் வளர்த்தல், மரம் வெட்டுதலை தொழிலாக கொண்டவர்கள்” என்கிறார்.  ஈழவ மக்களைப் போன்று, பனை மரத்திலிருந்து கள் இறக்கும் தொழில் திருநெல்வேலியில் உள்ள சாணார்கள் செய்து வந்ததால், அவர்களும் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் என்ற முடிவுக்கு கால்டுவெல் வந்திருக்கலாம். பின்னாளில் மாவட்டக் குறிப்புகள் தயாரித்த அதிகாரிகள் உட்பட அனைத்து  ஆய்வாளர்களும் கால்டுவெல் எழுதிய “திருநெல்வேலி மாவட்ட வரலாற்றை” முழுமையான பரிசீலனைக்கு உட்படுத்தாமல் தங்களுக்குகந்தவாறு பயன்படுத்திக் கொண்டனர்.

இலங்கையின் வரலாற்றை முழுமையாக அறிந்த ஒரு நபர், சாணார்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்ற கால்டுவெல்-இன் கருத்தை ஏற்று கொள்ள மாட்டார்கள்.  மானுடவியலாளர்களிடையேயான ஒருமித்த கருத்து என்னவென்றால், ஆரியர்களின் வருகைக்கு முன்பே இலங்கையில் உள்ள பூர்வ குடிமக்களான வேடர்கள், நாகர்கள், மற்றும் யாக்கர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஆரியர்களின் குடியேற்றம் என்று சொல்லப்பட்டது பெரும்பாலும் கி.பி. 4ஆம் அல்லது 5 ஆம் நூற்றாண்டில் கலிங்க நாட்டிலிருந்து விஜயன் என்ற அரசனின் வருகையை யொட்டி நடந்திருக்க வேண்டும் என்று கருதலாம். அதிலிருந்து இலங்கையோடு உள்ள எல்லா வித நடவடிக்கைகளும் தென் இந்தியாவிலிருந்தே நடந்து வந்துள்ளது.

இலங்கையை தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கும் கடல் பகுதி 20 மைல் தூரம் மட்டுமே என்பதால், தமிழ்நாட்டின் பல பகுதியிலிருந்து மக்கள் புலம் பெயரவும், இலங்கையின் வட பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களோடு கலந்து வாழவும் செய்தனர். மகாபலிபுரம் ஒரு துறைமுகமாக செழித்து விளங்கியுள்ளது என்றும், பல்லவர்கள் காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே கடல் வணிகம், கடற்பயணம் தழைத்தோங்கியிருந்திருந்தது என்றும் வரலாற்று அறிஞர் K. K. பிள்ளை எழுதுகிறார். தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு பெருமளவு மக்கள் பயணம் செய்தது, தொடர்புகள் ஏற்பட்டது இக்கால கட்டத்திலிருந்து தொடங்கியிருக்கலாம். 16வது நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து சென்ற சுமார் 40 சாதி மக்கள் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் குடியேறியுள்ளனர். அப்படி குடியேறியவர்களில் பிராமணர்கள், வெள்ளாளர்கள் தவிர செட்டியார்கள், அகமுடையார், மறவர்கள், மீனவர்கள், வன்னியர்கள், ஆசாரிகள், தச்சர்கள், வண்ணார்கள், சவரத்தொழிலாளர்கள் ஆகியோர் முக்கியமானவர்கள்.  பிற சாதிகளான வெள்ளாளர்கள், மறவர்கள், செட்டியார்கள் போன்று நாடார்கள், சாணார்கள் பற்றி இலங்கையின் வரலாற்றுக் குறிப்புகளில் தகவல்கள் ஏதும் கிடையாது. தற்போது இலங்கையில் உள்ள கள் இறக்கும் தொழிலாளர்கள் “துருவர்கள்” என்றே அழைக்கப்படுகிறார்கள்.

ஒரு காலத்தில் நாடார் மக்கள் பிறர் பொறாமைப்படும் அளவிலான இடத்தில் இருந்துள்ளார்கள் என்றும், அவர்கள் பாண்டிய மன்னர்களை எதிர்த்து நிற்கும் அளவிற்கு வலிமையாக இருந்துள்ளார்கள் என்றும் வாய் மொழி வரலாறு ஒன்று கூறுகிறது. அவர்களின் தகுதிக்கு மீறிய அகந்தையால் வெறுப்படைந்த ஒரு பாண்டிய மன்னர், நாடார் இன மக்களை தண்டிக்கும் வகையில், அவர்களை திருநெல்வேலி மாவட்டத்திற்குள் உள்ள வறண்ட, சாகுபடிக்கு உதவாத தரிசு நிலப்பகுதியில் வாழ வேண்டும் என்று உத்தரவிட்டு, அவர்களை அப்பகுதிக்குள் கட்டுப்படுத்தி வைத்தார். இருந்தாலும், தங்கள் கடின உழைப்பினால், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக காணப்படும் பனை மரங்களை வளர்த்து, பனை பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து முன்னேறினர்.

நாடார் இன மக்களின் காவல் தெய்வங்கள் பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்டத்தின் பத்ரகாளி (பத்ர என்றால் பனை ஓலை), வேறு பட்ட வடிவங்களை கொண்ட அய்யனார் போன்ற தெய்வங்களாகும். நாடார்களின் பூர்வீகம்  திருநெல்வேலி மாவட்டம் என்று உரிமை கொண்டாடுவதற்கு இது உதவுகிறது.  நாடார் மக்கள் கொற்கையை (கடல் கொண்டு அழிந்ததால் அதன் முக்கியத்துவத்தை இழந்த ஊர்) தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்களின் சந்ததியினர் என்ற ஓர் கருத்தும் நிலவுகிறது. பிரச்சனை என்னவென்றால், பிற தாழ்த்தப்பட்ட சாதி மக்களைப் போலவே, நாடார் மக்களுக்கும் தங்கள் பூர்வீகத்தைப் பற்றி அறிய எழுத்து வடிவிலான ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் ஏதும் இல்லை. நாடார்களின் பூர்வீகம் எதுவாயினும், யதார்த்த நிலை என்பது, அவர்கள் மிக ஏழ் நிலையில் இருந்துள்ளார்கள். மேலும் ஆங்கிலேயர் ஆட்சியின்போது தீண்டப்படாத சாதிகளில் ஒன்றாகவே நாடார் சாதி இருந்துள்ளது.            

2

சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து வெளியேறி, அடுத்த கட்ட உயர்நிலைக்கு முன்னேற தங்களை ஆரியர்கள், சத்திரியர்கள் என கூறிக்கொண்டு சமஸ்கிருதப் பாதையில் செல்ல கட்டுக்கதைகளையும், புராணக் கதைகளையும் கற்பனையாக இட்டுக்கட்டி கூறுதல் என்பது எல்லா தீண்டத்தகாத சாதிகளாகக்  கருத்தப்பட்டவர்களின்  உரிய குணமாக இருந்து வந்துள்ளது.  இந்த பரிதாபப்படக்கூடியக் பைத்தியத்திற்கு நாடார்களும் விதிவிலக்கல்ல. நாடார் சமுதாயத்தில் பொருளாதாரத்தில் முன்னேறிய ஒரு பகுதியினர், 19ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து இதனை எவ்வித தொய்வும் இன்றி செய்து வந்துள்ளனர்.

கமுதி ஆலய நுழைவு வழக்கில் பிரதிவாதிகளான நாடார்கள் கொடுத்த வாக்குமூலத்தில் அவர்கள் பரம்பரையாக இராணுவ வம்சாவழி வந்தவர்கள் என்று உரிமை கோரியுள்ளனர்.  மதராஸ் உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய இரண்டு ஆங்கிலேய நீதிபதிகள், “வழக்கில் பிரதிவாதிகள் வாதிடுவது போன்று, அவர்கள் சத்திரியர்கள் அல்லது இந்து மதத்தை சார்ந்த இராணுவ வம்சாவழி வந்தவர்கள் என்றோ, அல்லது பாண்டியர், சேரர், சோழ அரசர்களின் வம்சாவழி வந்தவர்கள் என்பதற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை. அப்படி இருப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இருந்தது என்று கூட சொல்ல முடியவில்லை. சாணார்கள் இப்படி அரசகுலம், இராணுவ பரம்பரையோடு தங்களை தொடர்பு படுத்தி வீணாக, பொய்யாக, உரிமை கோர எடுத்த முயற்சி பரிகசிக்க வேண்டிய ஒன்று” என்று நாடார்கள் மீது எந்தவித பரிவுமின்றி கூறியுள்ளனர்.

1908ஆம் ஆண்டு சங்கரலிங்க நாடார் vs. ராஜராஜேஷ்வர துரை கமுதி ஆலய நுழைவு வழக்கில், மதராஸ் உயர்நீதிமன்றம் “சாணார்கள் கோயிலுக்குள் சென்றது என்பது, “சிவ வழிபாடு செய்யும் இந்துக்களின் மதக் கொள்கைக்கு எதிராகவும், கடவுளை வழிபடும் சாதி இந்துக்கள் கடைபிடிக்கும் பழக்க வழக்கம், உணர்வுகளுக்கு எதிராகவும் அமைந்துள்ளது” என்று கூறி மேல் முறையீடு செய்த நாடார் மனுதாரர்கள் கோயிலை சுத்தப்படுத்துவதற்கு ரூ. 500 அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால் நாடார்கள் இந்த பிரச்சனையை இத்தோடு விட்டு விடவில்லை.

பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த இந்து நாடார்கள், பத்தொன்பதாம் நாற்றாண்டின் பிற்பகுதியில் சமூக தளத்தில் தங்கள் உரிமைகளை வலியுறுத்த முயன்றபோது, பல கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினர். இது மேல் சாதி மக்களோடு மோதலுக்கு இட்டுச் சென்றது. சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து அவர்கள் கோயில்களுக்குள் நுழைய முற்பட்ட போது அவர்களின் போராடும் குணம், ஒற்றுமை தெளிவாக வெளிப்பட்டது.  1872இல் திருச்செந்தூர், 1874இல் மதுரை, 1876இல் திருத்தங்கல், 1897இல் கமுதி, உச்சகட்டமாக 1899இல் சிவகாசியில் என ஆலய நுழைவுப் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. அந்த நாட்களில் நாடார் மக்களின் மனநிலையை தெரிந்து கொள்ளும் விதமாக, 1899ஆம் ஆண்டு நடந்த சிவகாசி கலவரம் பற்றிய சிறு குறிப்பு இங்கே கொடுப்பது பொருத்தமாகும்.

சிவகாசியில் வணிகம் மற்றும் வியாபாரம் சிறிது சிறிதாக முஸ்லீம்கள் கையிலிருந்து நாடார்கள் கைகளுக்கு மாறியது. இந்த வியாபார போட்டியின் காரணமாக முஸ்லீம்களுக்கும் நாடார்களுக்குமிடையே பகைமை இருந்து வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி கால் பகுதியில் – 1876 முதல் 1878 வரையான தாது வருடப்பஞ்சம் குறிப்பிடத்தக்க ஒன்று – அடிக்கடி பஞ்சம் ஏற்பட்டது. விவசாயத்தை நம்பியிருந்த சாதி என்ற வகையில் தேவர் சமூகத்தினர் (முக்குலத்தோர்: கள்ளர், மறவர், அகமுடையார்) பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டனர்.  அதே நேரம், வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நாடார் சமுதாயத்தினர் உணவு தானியங்கள் பற்றாக்குறையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அதிக அளவில் லாபம் சம்பாதித்தனர். இதனால் இந்த கால கட்டத்தில் இவர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டு, இரு சமுதாயத்தினரிடையேயான உறவு மோசமடைந்தது.

நாடார்கள் கோயில் நுழைவில் தங்கள் உரிமையை வலியுறுத்துவதும், அதுவரை உயர் சாதி இந்துக்கள் சமூகத்தில் அனுபவித்து வந்த சில சலுகைகளை கேட்பதும், பிற இந்து ஆதிக்க சாதியினருக்கு நாடார் மக்கள் மீது மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தது. இவையெல்லாம் சேர்ந்து “சிவகாசி அழிவிற்கு” அடிப்படையான காரணமாக அமைந்தது.

1895ஆம் ஆண்டு சிவகாசி நாடார்கள் ஊரில் உள்ள கைலாசநாதர் கோயில் அறங்காவலர்களாக நாடார்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியபோது பிரச்சனை வெடிக்கத் தொடங்கியது. நாடார்களுக்கு சிவகாசியின் புறநகர் பகுதியில் மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோயில்கள் இருந்தன. கைலாசநாதர் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படாததால் அவர்கள் இந்த இரண்டு கோயில்களையும் கட்டியிருந்தனர்.  இந்த கோயில்களில் வள்ளுவர் சாதியை சார்ந்த “பண்டாரம்” எனப்படுபவர்கள் பூஜை செய்து வந்தனர். 1897ஆம் ஆண்டு நாடார்கள் சிதம்பரத்திலிருந்து பிராமண புரோகிதர்களை வரவழைத்து இந்த கோயில்களில் பூஜை செய்தனர்.  மேலும் பிராமண புரோகிதர்கள் வசதி படைத்த நாடார்கள் வீடுகளுக்கு சென்று சடங்குகளும், பூஜைகளும் செய்தனர்.  இது சாதி இந்துக்களை கூடுதலாக கோபமடையச் செய்தது. 1898ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி, நாடார்கள் கோயில் கதவை உடைத்துக் கொண்டு கைலாசநாதர் கோயிலுக்குள் நுழைந்தனர். இத் தகவல் பரவியதும், கோபத்தின் உச்சிக்கு சென்ற சாதி இந்துக்கள், பத்ரகாளி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்த தோட்டத்திற்கு நெருப்பு வைத்தனர். இந்த மோதலில் ஒன்பது நாடார்கள் கைது செய்யப்பட்டு சாட்சியங்கள் முறையாக இல்லாததால் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

1899ஆம் ஆண்டு நாடார் சமுதாய மக்களின் சேமிப்பு கிடங்கிகளை தேவர் சமுதாயத்தை சேர்ந்த சிலர் தீ வைத்து கொளுத்தியதால் சிவகாசி சாதி கலவரம் வெடித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாடார்கள் தேவர் சமுதாய மக்களின் குடியிருப்புகளை தாக்கினர். இதன் விளைவாக தேவர்-நாடார் மக்களிடையே மூர்க்கத்தனமான மோதல் வெடித்தது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த கார்டோசன் என்பவர் தன் போலீஸ் படையோடு கலவரப் பகுதிக்கு விரைந்து கலவரத்தை கட்டுப்படுத்தினார். அவர் 15 சுற்று துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரிக்கை செய்த பின்னரே கலவரக்காரர்கள் கலைந்து சென்றனர். ஆனால், தேவர் சமுகத்தினர் சமாதானம் அடையவில்லை. அவர்கள் இந்த சம்பவத்திற்கு பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்குப் பகுதியிலிருந்தும், ராமநாதபுரத்தின் கிழக்குப் பகுதியிலும் உள்ள பல கிராமங்களிலிருந்தும் தேவர் சமுதாய மக்களை திரட்டினர்.

பிராமணர்கள், பிள்ளைமார்கள், மறவர் சமுதாய ஜமீன்தார்கள் ஆதரவோடு, அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் அப்போதிருந்த பள்ளர் சமுதாய விவசாயத்தொழிலாளர்கள், முஸ்லீம்கள் என சுமார் 5000 பேர் 1899ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் நாள்  சிவகாசியில் உள்ள நாடார் மக்களின் வீடுகளைத் தாக்கி அவர்களின் உடமைகளை சூறையாடினர். பின்னர் அவர்கள் சிவகாசியைச் சுற்றியுள்ள 150 கிராமங்களை தாக்கி கொள்ளையடித்தனர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் இறந்தனர். காயம்பட்ட மூன்று பேர் பின்னர் இறந்தனர். அவர்களில் ஒருவர் பெண். சிவகாசி நாடார்கள் “இந்த தாக்குதலில் தாங்கள் ரூ. 43,000 மதிப்புள்ள பொருட்களை இழந்தோம்” என்று அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பினர் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த “தானே” என்ற அதிகாரி கூறியுள்ளார். இந்த தாக்குதலில் சிவகாசிப் பகுதியில் மொத்தம் 4,000 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன என மற்றொரு புள்ளிவிவரம்  கூறுகிறது. மொத்தம் கைது செய்யப்பட்ட 1958 பேரில், 552 பேர் குற்றவாளி என தண்டிக்கப்பட்டனர். ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

3

நாடார் மக்களின் சமூக இயக்கத்தை விவரிக்கும் போது தென் திருவிதாங்கூர் பகுதியில் (தற்போது கன்யாகுமரி மாவட்டம்) நடந்த முக்கியமான சாதி எதிர்ப்பு எழுச்சியை நாம் தவிர்க்க முடியாது. அங்கு தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டவர்கள் நடத்தப்பட்ட விதம் மிகவும் கொடூரமானது. ஜேம்ஸ் போர்ப்ஸ் எழுதிய “கீழ்த் திசை நாடுகளின் நினைவுகுறிப்புகள்” என்ற புத்தகத்தில் அவர்  எடுத்துக்காட்டியுள்ள கொடுமையான நிகழ்ச்சிகள் கூர்ந்து கவனிக்கத் தக்கது:

“தங்களின் உடற் காற்றினால் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதிலிருந்து தவிர்ப்பதற்காக, தீண்டத்தகாதவர்கள் தாங்களாகவே குழிக்குள் மறைந்து கொள்ள வேண்டும்; அல்லது மரங்களின் மேல் ஏறி தங்களை மறைத்து கொள்ள வேண்டும்.  நாயர் சாதியை சார்ந்த ஒருவர் எதேச்சையாக இவர்களில் ஒருவரை சாலையில் சந்தித்தால், எவ்வித பச்சாதபமும் இல்லாமல் கொடூர மிருகத்தை கொல்வது போல் வாளால் வெட்டி கொன்று விடுவார்.  பசுவை விற்பவர் அல்லது அதை இறைச்சிக்கு விற்பவர் கொலை செய்யப்படுவார். 1772ஆம் ஆண்டு ஐரோப்பியர் ஒருவருக்கு மாடு ஒன்றை விற்பனை செய்த ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்கள் தங்கள் மார்பை மூடக்கூடாது. அரச குடும்பத்தை சார்ந்த ஒருவரின் முன்னால் நிற்கும் போது, மேலாடையுடன் காணப்பட்ட பெண்களின் மார்பகங்கள் வெட்டி எறியப்படும்”

“சாதிய ஒடுக்குமுறையின் கொடுமை எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு கேரளா சிறந்த உதாரணமாக இருந்தது. அங்கு தீண்டத்தகாதவர்களை, உயர் சாதியினர் பார்வையிலிருந்து விலகி இருக்க வேண்டிய தூரத்தை வைத்து தீண்டாமை தரவாரியாக பிரிக்கப்பட்டிருந்தது” என்று வரலாற்றறிஞர் K.M. பணிக்கர் குறிப்பிடுகிறார். 1809ஆம் ஆண்டு மைலாடியில் இலண்டன் மெஷினரி சபை (LMS) தொடங்கப்பட்டதிலிருந்து, கிறிஸ்தவ மிஷினரிகள் ஒடுக்கப்பட்ட மக்களை குறிவைத்து மதமாற்றம்  செய்தனர். அருள்திரு. T. ரிங்கல்டாப் என்ற பாதிரியார் முதலில் ஒரு கணிசமான அளவிற்கு தாழ்த்தப்பட்ட சாதியினரை (குறிப்பாக நாடார், ஈழவர்களை) வெற்றிகரமாக மதமாற்றம் செய்தார். அவர் 1813இல் LMS சபையில் 600 கிறிஸ்தவர்கள் இருந்தனர் என்கிறார்.  கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியவர்களின் மனநிலை, பழக்க வழக்கங்களை மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, கிறிஸ்தவ மிஷினரிகள் ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பள்ளிக் கூடங்கள் தொடங்கினர். இந்த பள்ளிக்கூடங்களில் பெண்களின் தனித்திறமையை வளர்க்கும் வகையில் தையல், எம்பிராய்டரிங் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. கிறிஸ்தவ மிஷினரிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அப்போதைய திவான் மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தான பிரிட்டீஷ் பிரதிநிதியுமான கர்னல் ஜான் மன்றோவின் ஆதரவுடன் 1814ஆம் ஆண்டு கிறிஸ்தவ நாடார் பெண்கள் மட்டும் குட்டையான கை வைத்த தொள தொளப்பான மேல்சட்டை அணிய அனுமதிக்கப்பட்டனர்.

அரசாங்கத்தின் உத்தரவு இருந்தபோதும், பிற நாயர் சாதி பெண்களைப் போல கிறிஸ்தவ நாடார் பெண்கள் பொது இடங்களில் மேல் சட்டை அணிந்து தோன்றினால், அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு தாக்குதலுக்கும் உள்ளானார்கள். பெண் மிஷினரிகள் வடிவமைத்த பெண்களுக்கான மேல் சட்டையும் கிறிஸ்தவ நாடார் பெண்களுக்கு பிடித்தமானதாக இருக்கவில்லை. எனவே, கிறிஸ்தவ நாடார் பெண்கள் – ஆண்கள் போராட்ட நடவடிக்கையில் இறங்கினர். இதற்கிடையே, இப்பிரச்சனையில் நீதிமன்றத்தின் தலையீடு கோரி உள்ளூர் நீதிமன்றத்தையும் அவர்கள் அணுகினர்.

1823ஆம் ஆண்டு போராட்டம் நடத்திய கிறிஸ்தவ நாடார் பெண்களுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருந்தாலும் கண்ணியமான உடை அணியும் நாடார் பெண்கள், உயர்சாதி என்று சொல்லப்பட்டவர்களால் தெருக்களிலும், பொது வெளியிலும் துன்புறுத்தப்படுவது தொடர்ந்தது. கிறிஸ்தவ மிஷினரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக, 1829ஆம் ஆண்டு இறுதியில் திருவிதாங்கூர் அரசு, கிறிஸ்தவ நாடார் பெண்கள் மேல்சட்டை அணிய அனுமதியளித்து உத்தரவிட்டது.  ஆனால் நீதிமன்ற தீர்ப்போ, அல்லது திருவிதாங்கூர் அரசின் அறிவிப்போ, இந்து நாடார் பெண்களுக்கு பொருந்தவில்லை. இந்து நாடார் பெண்களின் பிரச்சனை அடுத்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வைகுண்டசாமி அவர்களால் எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

முத்துக்குட்டி என்ற வைகுண்டசாமி தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட மக்களுக்கு உதவி செய்து அவர்களின் அடிமை விலங்கை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கத்தோடு அம்மக்களை ஒருங்கிணைத்தார். 1830களின் மத்தியில் வைகுண்டர் நடத்திய இயக்கங்கள் மற்றும் அவர் உருவாக்கிய அய்யா வழி என்ற புதிய மதக்கோட்பாடு கிறிஸ்தவ மிஷினரிகளின் மதமாற்ற முயற்சிகளை எதிர்த்து வந்த நாடார் மக்களை, குறிப்பாக வசதி படைத்த தென் திருவிதாங்கோடு பகுதியை சார்ந்த நாடார்களை வெகுவாக ஈர்த்தது. மேலும் வைகுண்டர், ஒடுக்கப்பட்ட மக்கள் நாகரீக, நவீன பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வைகுண்டரின் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக அவர் தன் கொள்கைகளையும், கருத்துக்களையும் பின்பற்றும் பெண்களை மேல்சட்டை அணியும்படி உபதேசித்தார். வைகுண்டர் மேற்கத்திய கிறிஸ்தவக் கலாச்சாரத்தை கடைபிடிக்கிறார் என்று மேல் சாதி இந்துக்கள் அவர் மீது குற்றம் சாட்டினர். அதே போல, கிறிஸ்தவ மிஷினரிகள் வைகுண்டர் மீதும், அவர் தொடங்கிய புதிய மத வழிமுறை பற்றியும் கேலியும் கிண்டலும் செய்தனர். எதிர்ப்புகள் இருந்தாலும், வைகுண்டசாமி அதிகப்படியான நாடார் இன மக்களை தன் வயப்படுத்தினார். இது தென் திருவிதாங்கூர் பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தை மேலும் பரப்புவதற்கு பெரும் முட்டு கட்டையாக இருந்தது.

1851ஆம் ஆண்டு வைகுண்டர் இறந்த போதிலும், அவரின் ஆவி கிறிஸ்தவ மிஷினரிகளை தொடர்ந்து மிரளச்செய்தது என்ற நம்பிக்கை நிலவியது. அவர் இறந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு 1864ஆம் ஆண்டு நாகர்கோவில் கிறிஸ்தவ மிஷினரி மாவட்டத்திலிருந்து கொடுத்த அறிக்கையில் “வைகுண்டரின் கொள்கையை பின்பற்றுபவர்கள் முன் நாட்களில் உயிர்த்தெழுதல் கோட்பாடு பற்றி தெரியாதவர்களாக இருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் “முத்துக்குட்டி மீண்டும் வருவார். மரணமடைந்த அவரின் பக்தர்களை உயிர்த்தெழச் செய்து, அவர்களை சொர்க்கத்திற்கு அழைத்து செல்வார் என்று சொல்கிறார்கள்” என்று சொல்லப்பட்டுள்ளது.  அதற்கு பத்தாண்டுகளுக்கு பிறகும் கூட, வைகுண்டசாமி  எதிப்பு இயக்கத்தின் தாக்கம் தொடர்ந்து இருந்ததாக மிஷினரிகள் உணர்ந்தார்கள். 1874இல் நாகர்கோவில் கிறிஸ்தவ மிஷினரி மாவட்டம் கொடுத்த அறிக்கையை மீண்டும் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.  அந்த அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “சாத்தானின் தந்திரமான சூழ்ச்சியினால், இந்த பகுதியில் நமது முன்னேற்றம் பெருமளவு தடைபட்டுள்ளது. இச் சூழ்ச்சியை முறியடிக்க நாம் இடைவிடாது போராட வேண்டும். நம்முடைய ஆயுதம் பலம் வாய்ந்தது… நம் பக்கம் உண்மை உள்ளது. இதற்கு எதிராக “முத்துக்குட்டியிசமோ “அல்லது வேறு ஏதோ நரகத்தின் வாசலோ” ஒன்றும் செய்து விட முடியாது. நமக்கு தேவையானது எல்லாம், கிறிஸ்தவ தேவாலயங்களில் அதிகமான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதே. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, முத்துகுட்டி எந்த தளத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்பட்டாரோ, இன்றும் கிறிஸ்துவிடமிருந்து கைப்பற்ற முயற்சிக்கிறாரோ, அந்த தளத்திலிருந்து அவமானப்பட்டு இழிவடைந்து ஒதுங்கிவிடுவார் “.

வைகுண்ட சாமியைப் பற்றி கிறிஸ்தவ தேவாலயங்களின் ஆவணங்களில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை பார்க்கும் போது, வைகுண்டரின் இயக்கம், அவர் இறந்த பின்பு கூட எந்த அளவிற்கு துடிப்பாக இருந்தது என்பது விளங்கும்.

கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் தான், தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. 1858ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பிரிட்டீஷ் மகாராணியின் அறிவிப்பு பின்வருமாறு கூறியது: ” பிரிட்டீஷ் அரசு தன் விருப்பத்தின் பேரில் மகிழ்ச்சியோடு இதை அறிவிக்கிறது…அவரவர்களுடைய மத நம்பிக்கை அல்லது மத பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதால் யாரும் அவமானப்படுத்தப்படவோ, வெறுப்புடன் நடத்தப்படவோ கூடாது. யாருக்கும் கூடுதல் சலுகை காட்டக் கூடாது. எந்தவித பாகுபாடும் இன்றி சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்”.

நாடார்கள், அப்போதய திவான் மாதவராவ்- ஐ சந்தித்து மகாராணியின் உத்தரவை அமுல்படுத்த அவர் தலையீட வேண்டும் என்று மனு கொடுத்தனர்.  இதற்குப் பதிலடியாக திருவிதாங்கூர் அரசு மனுதாரர்கள் மீது போலீஸ் அடக்குமுறையை ஏவியது. இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு பிறகு, நாடார்கள் இந்த பிரச்சனையில் ஒரு இறுதி கட்ட நடவடிக்கை எடுக்கத் துணிந்தனர். இந்து, கிறிஸ்தவ நாடார்கள் இணைந்து போராட முடிவு செய்தனர். மத நம்பிக்கையை விட சாதிப்பற்று மேலோங்கி இருந்ததால், நாடார் பெண்கள் மேல் சட்டை அணியும் உரிமைக்கான போராட்டத்தில் அய்யாவழி இயக்கத்தில் தீவிரமாக இருந்தவர்கள் கூட கிறிஸ்தவ நாடார்களுடன் இணைந்து போராடுவதில் எவ்வித தயக்கமும் காட்டவில்லை.

பெரும்பான்மையான இந்து நாடார்கள் “அய்யா வழி”யை  பின்பற்றுபவர்களாக இருந்தனர். தங்களுடைய நீண்ட காலப் போராட்டத்தில் கிறிஸ்தவ நாடார்கள் கலந்து கொள்ளாமல் இருந்ததால் வெறுப்படைந்த இந்து நாடார்கள் இந்த இயக்கத்தில் கிறிஸ்தவ மிஷினரிகளின் தலையீட்டை எதிர்த்தனர். ஆகவே, கிறிஸ்தவ மிஷினரிகள் இதற்கு மறைமுக ஆதரவு மட்டுமே கொடுத்தனர். நாடார் பெண்கள் மேல்சட்டை அணிய உரிமை கோரிய போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.  இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஒன்றுபட்டு நடத்திய உறுதியான போராட்டத்தினால், 1859ஆம் ஆண்டு பிரிட்டீஷ் அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த பிரகடனம் பின் வருமாறு சொல்கிறது: “அனைத்து பிரிவைச் சார்ந்த சாணார் இனப் பெண்கள் பிற கிறிஸ்தவ சாணார் இனப் பெண்களைப் போல் மேல் சட்டை அணிவதற்கோ அல்லது கோரா துணியிலான உடை அணிவதற்கோ அல்லது மீனவ இனப் பெண்கள் அணிவது போல் கோரா துணியை சுற்றிக் கொள்வதற்கோ அல்லது வேறு வடிவத்தில் மார்புப் பகுதியை மறைத்துக் கொள்வதற்கோ எந்தவித ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவர்கள் உயர்சாதி பெண்கள் அணிவது போல் உடை அணியக்கூடாது “.

4

நாடார்களின் சமூக இயக்கம் நடந்து கொண்டிருந்தாலும், அடுத்த பத்தாண்டுகளில் ஈ. வெ. ரா பெரியாரின் சுயமரியாதை இயக்கம், மகாத்மா காந்தியின் ஆதரவோடு இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய ஆலய நுழைவுப் போராட்டங்களுக்குப் பின்னர்தான் தென்தமிழ் நாட்டில் நாடார்கள் கோயிலில் நுழையும் கோரிக்கை நிறைவேறியது. காங்கிரஸ் கட்சி முன்னெடுத்த முயற்சிகள், நிறைவேற்றிய தீர்மானங்கள் இறுதியில் நடைமுறைக்கு வந்தன. குருவாயூர் ஆலய நுழைவு போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ராஜாஜி மதராஸ் ராஜதானிக்கு பிரதம மந்திரியாக இருந்த போது, 1939ஆம் ஆண்டு அவர் தலைமையிலான மந்திரிசபையில் “ஆலய நுழைவு உரிமை மற்றும் இழப்பீடு சட்டம்” இயற்றப்பட்டது.

கல்வி மற்றும் வியாபாரம் மூலமாக சமூகத்தில் அந்தஸ்து பெற்ற நாடார் சமூகத்தினர், தற்போது கல்வி, சமூக, பொருளாதார தளத்தில் வளர்ச்சியடைந்திருப்பது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டினால் அல்ல. அரசாங்கத்தின் ஆதரவை மட்டும் நம்பி இருக்காது, கல்வி கற்பதன் மூலம் சுயசார்பு நிலையை அடைந்து, ஒரு சுதந்திரமான வாழ்நிலையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நாடார் சங்கம் விரும்பியது. 1913இல் நாடார் என்ற பெயர் பிற்படுத்தப்பட்ட சாதி பட்டியலில் இடம் பெற்றிருந்தது. பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்த ஒரு பகுதி நாடார்கள் (அவர்கள் நாடார் மகாஜன சங்கத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்களாக இருந்தனர்) நாடார் சாதி பெயரை பிற்படுத்தப்பட்ட சாதி பட்டியலிருந்து எடுக்க வேண்டும் என்று1917இல் வலியுறுத்தினர்.

1921 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தங்கள் சாதிப் பெயரை நாடார் சத்திரியர் என்று பதிவு செய்வதில் நாடார் மகாஜன சங்கம் வெற்றி கண்டது. சென்னை மாகாணத்தின் முதன்மை செயலாளராக இருந்த G.T. போக் என்பவர் “1911இல் சாணார் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டவர்கள் தற்போது “நாடார்” என பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது சென்னை மாகாண அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டுள்ளது. நாடார் சமுதாயத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அரசு ஆவணங்களில் “சாணார்” என்ற வார்த்தை இனி பயன்படுத்தக் கூடாது” என்று பதிவு செய்துள்ளார்.  நாடார்களும் விரைவில் தங்கள் முட்டாள் தனத்தை உணர்ந்து சென்னை மாகாண அரசாங்கத்திடம், நாடார் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று 1935, 1940, 1950ஆம் ஆண்டுகளில் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த கோரிக்கை 1957இல் தான் நிறைவேறியது. 

தமிழில் – ஆர்.எஸ். துரைராஜ்

(Article published in Social Scientist, March-April, 2022)