கொரோனா முன்களத்தில், கியூபாவின் தனிச் சிறப்பு!

 • ஜி. ஆனந்தன்

கியூபாவின் மீதான பொருளாதார முற்றுகையை அமெரிக்கா மேலும் மேலும் இறுக்கிக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டு மக்கள் உயிர் வாழவே முடியாத அளவிற்கு கொடும் பொருளாதார முற்றுகையை அமெரிக்கா தொடர்கிறது. டொனல்ட் டிரம்ப் அரசாங்கம் முன்பே அறிவித்த பொருளாதார முற்றுகைகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது பைடன் நிர்வாகம். இதே பைடன் துணை அதிபராக இருந்த போது, ஒபாமா அரசு ஹவானாவுடனான தனது உறவை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது. ஒபாமாவே ஹாவானாவிற்கு சென்றார். ஆனால், பைடன் அதிபரான பிறகு, டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து மேலும் மேலும் பொருளாதார முற்றுகையை அதிகரிக்கிறார். இது கடும் குற்றம் என்றாலும், அமெரிக்காவை கட்டுபடுத்த எந்த சர்வதேச அமைப்புகளும் இல்லை.

டிரம்ப் கியூபாவின் மீதான தடைகளை விதித்த பிறகு, உலகம் முழுவதும் கொரோனா தொற்று கொள்ளை நோயாக பரவியது. உலக நாடுகளுக்கெல்லாம் மனித உரிமை பற்றி வாய்கிழிய பேசும் அமெரிக்கா, அத்தகைய சிரமமான காலத்தில்கூட கியூபா மீதோ அல்லது ஈரான், சிரியா போன்ற நாடுகளின் மீதான பொருளாதாரத் தடைகளை மனிதாபிமான முறையில்கூட விலக்கிக் கொள்ள தயாராக இல்லை. உணவு எரிபொருள், கட்டுமானப் பொருட்கள், நவீன தொழிற்நுட்பம் என எதுவுமே கியூபாவை சென்றடைய முடியாமல் பொருளாதார முற்றுகை இட்டுள்ள அமெரிக்கா, கொரோனா தொற்று வந்தபோது அத்துடன் கியூபா மக்கள் அழியட்டும் என மருத்துவ சப்ளைகளுக்கும் தடை விதித்து தனது பிடியை மேலும் இறுக்கியிருந்தது.

கொரோனா தொற்றை பொறுத்தவரை யாரிடமும் எந்த பாரபட்சமும் காட்டவில்லை. அது வெள்ளைத் தோலை பாதித்ததைப் போலவே, கருப்புத் தோலையும், மாநிறத் தோலையும், மஞ்சள் தோலையும் பாதித்தது. உலகின் பணக்கார நாடுகளை தாக்கிய அந்த கிருமி, ஏழை நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. எவ்வளவு பெரிய இராணுவம் வைத்திருந்த நாட்டையும் அது விட்டு வைக்கவில்லை. அப்படியொரு சமதர்மம். ஆனால் பாதிப்பிற்குப் பிறகு விளைவுகள் ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடும். அதற்கு காரணம், அந்தந்த நாட்டின் அரசியல்-பொருளாதார நிலைமைகள். நாட்டு மக்களின் உயிரைவிட மருந்துக் கம்பெனிகளின் லாப வேட்கையே முக்கியம் என்றிருக்கும் அமெரிக்காவிலேயே உலகில் மிக அதிகமான மக்கள் கொரோனா தொற்றிற்கு உயிரிழந்தனர். அந்த நாட்டில் பாதிப்பு ஏழைகளுக்கு அதிகமாகவும், பணக்காரர்களுக்கு மிகக் குறைவாகவும் இருந்தது.

அமெரிக்காவில் அனைத்துமே வியாபாரம் என்றாகிவிட்ட நிலையில், அரசு அந்த வியாபாரத்தில் தலையிடக் கூடாது என்ற நிலையில், அமெரிக்க காங்கிரசும் செனட்டும் மிகப்பெரிய கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்கான அமைப்பாக மாற்றப்பட்ட நிலையில், மக்களை எப்படி அமெரிக்காவால் காப்பாற்ற முடியும்? உலகிலேயே மிகவும் பணக்கார நாடான அமெரிக்காவில் உலகிலேயே மிக மிக அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பது தற்செயலானது அல்ல. கொரோனா தொற்று ஏற்பட்டால் அதனை உறுதி செய்யும் ஆர்.டி.பிசிஆர் சோதனை இன்று வரை அமெரிக்காவில் எந்த மருத்துவமனையிலும் இலவசம் கிடையாது. ரேபிட் டெஸ்ட் கிட்கள் பைடன் நிர்வாகம் வந்த பிறகு இலவசமாக பள்ளிகளிலும், வீடுகளிலும் வழங்கப்பட்ட போதிலும்.

அமெரிக்காவில் அதிக உயிரிழப்பு ஏன்?

அமெரிக்காவில் மிக நவீன சிகிச்சை உபகரணங்கள் இருந்தும் உயிரிழப்புகள் அதிகமானதிற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, மருத்துவம் முழுமையாக தனியார் மயமானதால், வசதி உள்ளவர்களே சிகிச்சை எடுக்க முடியும். ஏழைகள் நோய் பாதித்தாலும் வீட்டிலேயே இருந்து மடிந்தனர். சாதாரண நாட்களிலேயே இதுதான் நிலைமை என்றால், மாபெரும் தொற்று நோய் வந்தபோது நிலைமை படுமோசமானது. அடுத்த பிரச்சனையும், தனியார் மயத்தின் மற்றொரு விளைவுதான். முதலில் மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, நகரத்தின் மக்கட் தொகைக்கு ஏற்ப அவசர சிகிச்சை பிரிவில் கூடுதல் படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருந்தன. அவையனைத்தும் பயன்படுத்தப்பட்டிருக்காது. இருப்பினும் இவ்வளவு மக்கட் தொகைக்கேற்ப படுக்கைகள் இருந்தால்தான், மருத்துவ அவசர நிலைகளை சமாளிக்க முடியும் என்ற அடிப்படையில் அவை இருந்தன. இப்படிப்பட்ட பெருந் தொற்று காலங்களில் அவை பயன்பட்டிருக்கும்.

ஆனால், அதற்கு முன் அவசர நிலை மருத்துவம் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியன தனியார் மயமானபிறகு, ஒரு படுக்கையால் எவ்வளவு லாபம் என்பதே அடிப்படையாக மாற்றப்பட்டது. ஒரு படுக்கை இருந்தது என்றால், அது சாதாரண காலங்களில் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அதனால் எந்த லாபமும் இல்லையென்றால், அந்த படுக்கை அப்புறப்படுத்தப்பட்டது. இவ்வாறு அவசரகால தேவைக்காக இருந்த கூடுதல் படுக்கைகள் அப்புறப்படுத்தப்பட்டதால், கொரோனா தொற்று ஏற்பட்டபோது, ஒரே நேரத்தில் கூட்டமாக மக்கள் பாதிக்கப்பட, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான கட்டமைப்பு இன்றி பலரும் சாக வேண்டிய நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் கொரோனா தொற்றிற்கு பல லட்சக் கணக்கானவர்கள் இறந்ததற்கு அங்கு கடைபிடிக்கப்படும் முதலாளித்துவ லாப வேட்கையே முழுமையான காரணமாகும்.

கியூபாவின் மருத்துவ சேவை

2020 ஆண்டு கொரோனா தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருந்தபோது மேலே குறிப்பிட்ட நாடுகளைத் தவிர, கியூபா மருத்துவர்கள் பல நாடுகளில் மருத்துவ சேவையாற்றினர். கியூபாவில் ஹென்றி ரீவ் பிரிகேட் என்ற மருத்துவ பிரிவு உண்டு. ஒபாமா ஹவானா சென்றபோது அமைக்கப்பட்ட மருத்துவ சேனை இது. இந்தப் படையே ஆப்ரிக்காவிற்கு எபொலா வைரஸ் பரவியபோது சென்றது. கொரோனா தொற்று ஏற்பட்டபோது இந்த குழுவில் 593 மருத்துவ நிபுணர்கள் சூரிநாம், ஜமாய்க்கா, டெமினிக், பிலேஸ், செயின்ட் வின்சண்ட், செயிண்ட் கிட்ஸ், வெனிசுவேலா, நிகராகுவா மற்றும் அர்ஜென்டைனா ஆகிய பகுதிகளில் மருத்துவ சேவையை வழங்கிக் கொண்டிருந்தனர்.

கியூபா பற்றி ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட  பிம்பத்திற்கு மாறாக, கியூபாவின் சேவை மேற்கத்திய நாடுகளில் பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தது. இத்தாலி கொரோனா தொற்று ஏற்பட்டு முழு அடைப்பில் இருந்தபோது, கியூப மருத்துவர்கள் அங்கு சேவைக்காக சென்றது மேற்கத்திய உலகில் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இத்தாலியின் லம்பார்டி பகுதியின் கிரிமா நகரில் 52 கியூபா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒரு மருத்துவமனையை ஏற்படுத்தினர். இதில் தீவிர சிகிச்சைக்கு 3 படுக்கைகள். இது குறித்து லம்பார்டி நகரின் உயர் சமூக நலத்துறை அதிகரி ஜூலியோ கல்லேரோ தெரிவிக்கையில், இது ஒரு குறியீடுதான். கிரிமா நகர மருத்துவமனை மிக மிக நெருக்கடியான நிலையில் திணறிக் கொண்டிருக்கிறது. அவசர நிலை சிகிச்சை பிரிவில் ஏற்கனவே நிரம்பியுள்ள நிலையில், மேலும் மேலும் நோயாளிகள் வருகையினால், மருத்துவர்களும், மருத்துவமனையும் கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த உதவி கிடைத்துள்ளது என பாராட்டினார்.

ஸ்பெயின் நாட்டிற்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே ஒரு சிறு நகரத்தின் பரப்பளவில் ஒரு நாடு உள்ளது. அதன் பெயர் அண்டோரா. இங்கும் கியூபா மருத்துவ சேவை குழுவினர் சென்றுள்ளனர். அமெரிக்கா இதர நாடுகளை கியூபா மருத்துவர்களை அனுமதிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்த பின்னணியில், அண்டோராவின் வெளியுறவு அமைச்சர், “எங்களுக்கு அமெரிக்காவின் நிலை பற்றி தெரியும். ஆனால் நாங்கள் ஒரு சுயாதிபத்தியம் உள்ள நாடு.  எங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய யாரை தெரிவு செய்வது, யாருடன் உறவுகள் மேற்கொள்வது  என்ற முடிவுகளை எடுக்கும் உரிமை எங்களுக்குள்ளது” என்று அறிவித்தார்(அசோசியேட் பிரஸ்).

கியூபாவின் மருத்துவ சேவையைப் பொறுத்துக் கொள்ள முடியாத அமெரிக்கா, கியூபா மருத்துவ சேவையை இரண்டு விதமாக கொச்சைபடுத்தி வருகிறது. அவர்கள் மருத்துவ சேவை செய்வதன் மூலம், கம்யூனிச கொள்கைகளை பரப்புகிறார்கள் என்பது முதலாவது குற்றச்சாட்டு. இரண்டாவது, மிகவும் மோசமான தொற்றுகள் ஏற்படும் இடங்களில் தங்களின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அனுப்பி அவர்களின் உழைப்பை கியூபா அரசு சுரண்டுகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை சமூக ஊடகத்தில்(டிவிட்டர்) செய்தியைப் பரப்பியது. தனது நாட்டில் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக 15 டாலர் என்பதை நிர்ணயிக்க வக்கில்லாத அமெரிக்க அரசு, அமேசான்  கிட்டங்கிகளில் சிறுநீர் கழிக்க செல்லக்கூட அனுமதியில்லாமல், பாட்டில்களில் சிறுநீர் கழித்து பின்னர் அவற்றை சுத்தம் செய்து கொள்ளும் நிலையில் தொழிலாளர்களை வைத்துள்ள அமெரிக்கா, கியூபா மருத்துவர்களின் மகத்தான சேவையை கேவலப்படுத்துகிறது.

அமெரிக்கா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சில நாடுகளில் பணிபுரியும் கியூபா மருத்துவர்களை வெளியேற்றியும் உள்ளது. அதனை வெற்றியாகவும் கொண்டாடுகிறது. உதாரணமாக, பிரேசில் நாட்டில் டிரம்ப் போன்ற வலதுசாரி அடிமுட்டாளான பொல்சனரோ நீதிமன்ற தகிடுதத்தங்கள் மூலம் ஆட்சிக்கு வந்தார். அவர் அமெரிக்காவுடன் தனது நேசத்தையும், நெஞ்சமெல்லாம் பொங்கி வழியும் கம்யூனிச எதிர்ப்பும் கொண்டவர். தென் அமெரிக்க பகுதியில் கொரோனா தொற்றில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு, பிரேசில். அதற்கு காரணம் பொல்சனாரோ. அவர் கொரோனா தொற்று என்பதையே இன்றுவரை நம்பவில்லை. அது பரவாமல் தடுப்பு நடவடிக்கை எடுக்கவும் மறுத்துவிட்டார். மேலும், மருத்துவமனைகளின் அவசரகால தேவைகளுக்கு அரசு சார்பில் கூடுதல் நிதி ஒதுக்கவில்லை. இந்த காரணங்களால் பிரேசில் நாட்டில் லட்சத்திற்கும் அதிகமான மக்கள் எந்த சிகிச்சையும் பெற வழியின்று மடிந்து போயினர். மருத்துவமனைகளில் இடமும் இல்லாத நிலையில், மருத்துவர்களும் பாதிக்கப்பட்டதால் மருத்துவர்களின் தேவையைவிட குறைந்த எண்ணிக்கையிலே அங்கு மருத்துவர் இருந்தனர். கியூபா மருத்துவர்கள் அங்கு ஜோசப் லூலா டி சில்வா காலத்திலிருந்தே சேவை புரிந்து வந்தனர். அப்படி அங்கு ஏற்கனவே சேவையிலிருந்த கியூபா மருத்துவர்களை அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க பிரேசில் வெளியேற்றியது. 

உலகம் முழுவதும் 65 நாடுகளில் சுமார் 30,000 கியூபா நாட்டு மருத்துவ நிபுணர்கள் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் பல ஐ.நா. சபையின் சார்பில் நடைபெறுவது. சில குறிப்பிட்ட நாடுகளின் பேரில் நடைபெறுவது. ஆப்ரிக்கா கண்டத்தில், உலகமே அச்சப்படும் எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டபோது அந்தந்த நாட்டு மருத்துவர்களே சிகிச்சை அளிக்க அஞ்சியபோது, அஞ்சாமல் அங்கு சென்று மருத்துவ சேவையை மேற்கொண்டவர்கள் கியூபா நாட்டு மருத்துவ தூதர்கள். அந்த சேவையில் ஒரு கியூபா நாட்டு மருத்துவர்க்கு எபோலா தொற்று ஏற்பட்டு அவர் இறந்தார் என்றாலும், கியூபா தனது சேவையை தொடர்கின்றது.

கொரோனா தொற்றை கட்டுபடுத்துதல்

எல்லா நாடுகளைப் போல் கியூபாவிலும் கொரோனோ தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், கியூபா பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ உபகரணங்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலை. காரணம்  50 ஆண்டு கால அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை. அத்தகைய கடினமான சூழலில் அவர்கள் எவ்வாறு தொற்று பரவலை சமாளித்தனர் என்பதை அறிந்தால், கியூபா அரசு அமெரிக்கா சொல்வதைப் போல் எந்தளவுக்கு ‘மனிதாபிமானம்’ இல்லாத ஆட்சி என்பதன் “உண்மைத் தன்மையைப்” புரிந்து கொள்ளலாம்.

அதனை நாம் சொல்வதற்கு பதில், மேற்கத்திய கம்யூனிச எதிர்ப்பு ஊடகங்கள் சொல்வதையே பார்க்கலாம். கியூபா கொரோனா தொற்றை வெற்றிகரமாக எதிர் கொண்ட விதத்தை மேற்கத்திய ஊடகங்களான, கார்டியன், சிஎன்பிசி, அசோசியேட் பிரஸ் ஆகியன சிலாகித்து எழுதியுள்ளன. அவை பெரும்பாலும் ஒரே மாதிரியிருந்தாலும், நாம் லண்டனிலிருந்து வெளிவரும் “கார்டியன்” பத்திரிக்கை எழுதுவதை பார்க்கலாம். கட்டுரையை அப்படியே மொழிபெயர்த்து தருகிறேன்.

கார்டியன் பத்திரிக்கையின் வியப்பு

தலைப்பு என்ன தெரியுமா? “பணக்கார நாடுகளின் கோவிட் முயற்சிகளை, அவை ஏற்படுத்திய அளவீடுகளை கடந்து செல்லும்  கியூபாவின் தடுப்பூசி வெற்றிக் கதை”

ஜெனரல் மாக்சிமா கோமஸ் 19ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டு காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடியவர்களில் முக்கியமானவர். அவர் தெரிவித்த கருத்து, “கியூபர்கள் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை தவற விடுவார்கள்; அல்லது அதனை கடந்து சென்று கொண்டிருப்பார்கள்” என்றார்.

150 ஆண்டுகளுக்குப் பின் அது முதுமொழி போல் மெய்பிக்கப்பட்டுவிட்டது. கீழ்மட்ட நிலையில் உள்ள இந்த தீவு நாடு, தெரு விளக்குகளை எரியவிடுவதற்கே அல்லல்படும் இந்த நாடு, கோவிட்19 க்கு எதிரான தடுப்பூசி செலுத்துவதில் மிகப்பெரிய வளம் பொருந்திய நாடுகள் பலவற்றைவிட அதிகமான பேர்களுக்கு தடுப்பூசி செலுத்தி விட்டது.

90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கட் தொகைக்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது, கியூபாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  83 சதவீதம் பேர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரு மில்லியனுக்கு மேல் மக்கட் தொகை கொண்ட நாடுகளில், ஐக்கிய அரபு எமிரேட் மட்டுமே இந்தளவுக்கு தடுப்பூசி போட்டுள்ளது.

“கியூபா மாஜிக்கல் ரியலிசத்தால் பீடிக்கப்பட்ட நாடு” என்கிறார் கனடாவின் டல்ஹவுசி பல்கலைக் கழகத்தில் லத்தீன் அமெரிக்க படிப்புகளுக்கான வருகைதரு பேராசிரியர் ஜான் கிரீக். “11 மில்லியன் மட்டுமே மக்கட் தொகை கொண்ட கியூபா, மிகவும் குறைவான வருவாய் உள்ள நாடு, பயோ டெக்னாலஜியில்  முன்னணி நாடு என்ற கருத்தை ஃபைசர் போன்ற நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரால் கற்பனை செய்வது இயலாத காரியமாக இருக்கும்”.

இதர லத்தீன் அமெரிக்க நாடுகள் போல கியூபாவிற்கும் சர்வதேச சந்தையில் தடுப்பூசிகள் வாங்க வேண்டுமெனில் அது மிகவும் சிரமமான காரியம் என்பதை அறிந்தே வைத்திருந்தது. ஆகவே 2020 மார்ச் மாதத்தில், சுற்றுலா நின்று போனதாலும், வெறிகொண்ட அமெரிக்க பொருளாதார முற்றுகையாலும், அன்னிய செலவாணி கையிருப்பு படுபாதாளத்திற்கு சென்றபோது, கியூபா நாட்டு விஞ்ஞானிகள் தங்கள் பணிகளில் இறங்கினர்.

துணிந்து இறங்கிய அவர்களின் அந்த முயற்சி நல்ல பலன்களைக் கொடுத்தது: இந்த வசந்தத்தில் கியூபா உலகின் சின்னஞ்சிறு  நாடுகளில் முதன் முதலாக வெற்றிகரமாக தன்னுடைய சொந்த தடுப்பூசியை வளர்த்தெடுத்து அதனை உற்பத்தி செய்யும் நாடாக மாறியது.(சிவப்பு நிறம் கட்டுரையில் உள்ளது-மொ-ர்). அது தொடங்கியது முதல் பொது மருத்துவ சேவை தகர்ந்து கொண்டிருக்கிறது என்று கொண்டால்கூட, இதற்கு  போதுமான மனித சக்தி, அதற்கு தேவைப்படும் ஊசிகளை விரைவாக வெளியிட்டது.  அவர்கள் குழந்தைகளுக்குக்கூட தடுப்பூசி போட்டு விட்டனர். (அந்த நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவரவர் விருப்பம்).

இரண்டு தடுப்பூசிகளுமே 90 சதவீதத்திற்கு மேல் தடுக்கும் திறன் கொண்டவை.  கடந்த வசந்த காலத்தில் கியூபா அரசு நடத்திய மருத்துவமனை சோதனைகள் இதனை உறுதி செய்கின்றன. வெற்றிகரமாக தடுப்பூசி இயக்கத்தை நடத்தியதின் விளைவாக, கடந்த கோடையில் மேற்குலகத்தில் மிக அதிகமாக இருந்த தொற்று தற்போது மிகவும் கட்டுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டில் ஒவ்வொரு வாரமும் நுற்றுக் கணக்கான கியூபர்கள் கோவிட்19 பாதித்து இறந்து கொண்டிருந்தனர். தற்போது 3 இறப்புகள் என்ற அளவில் உள்ளது.

தடுப்பூசி வெற்றி தனித்துவமாக பிரகாசிக்கிறது. ஏனெனில் இதர மருத்துவ துறைகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பின்னணியில், இதனை பார்க்க வேண்டியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் பண வருவாய் பாதியாய் குறைந்து விட்ட நிலையில், ஆண்டி பாயடிக் மருந்துகள் மிகவும் அரிதாகிவிட்டன.  20 மாத்திரைகள் கொண்ட அமாக்சலின் மருந்து கருப்பு சந்தையில் விற்கப்படும் விலை ஒரு மாத குறைந்தபட்ச ஊதியத்திற்கு சமமாக உள்ளது. எலும்பு முறிவிற்கு கட்டுபோடும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் இல்லாமல் பல பிரதேசங்களில் மருத்துவர்கள் அட்டைகளை கொண்டு எலும்பு முறிவிற்கு கட்டுபோட வேண்டிய நிலையில் உள்ளனர்.

1959 புரட்சி முதலே கியூபர்கள் இத்தகைய பிரம்மாண்டமான கனவுகளை நடைமுறைப்படுத்துகின்றனர், சில சமயம் அவைகள் பைத்தியக்காரத் தனமாக இருக்கும்.  இருப்பினும் பெரும்பாலும், அவை வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்” என்கிறார் ஹவானாவில் சட்டத் தொழில் புரிந்து வரும், கிரிகோரி பினியோவ்ஸ்கி.

பினியோவ்ஸ்கி மேலும் கூறுகையில், “இதற்கு முதன்மையான உதாரணம், சோவியத் யூனியன் தகர்ந்தபோது, ஃபிடல் காஸ்ட்ரோ பயோடெக் தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்ய முடிவெடுத்ததை கூறலாம். “நிதானமாக ஆலோசனை கூறும் எவருமே, 25 வருடங்கள் கழித்து பலனளிக்கும் ஒரு துறையில் முதலீடு செய்வதற்கு உகந்த நேரம் இதுவல்ல என எதிரான ஆலோசனையே வழங்கியிருப்பர். இப்போது நாங்கள் இங்கிருக்கிறோம்….. பயோடெக்கில் முதலீடு செய்தததின் விளைவாக உயிர்களை காப்பாற்றிக் கொண்டு”

“வேறு சில முயற்சிகள் நாடக பாணியில் தோல்வியில் முடிந்துள்ளன: 1970களில் பத்து மில்லியன் டன் கரும்பு விவசாயம் செய்து, அதன் மூலம் இதுவரை அறியப்படாத அளவிற்கு சர்க்கரை உற்பத்தி செய்து பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவது என்பதாகும். ஆனால் கரும்பை அறுவடை செய்யவே இதர தொழிற்சாலைகளிலிருந்து நிரந்தர பணியாட்களை கொண்டு வர வேண்டியதாயிற்று, இது தொழிற்சாலைகளை முடக்கியது; பொருளாதாரத்தில் கடும் சீரழிவுகளை ஏற்படுத்தியது.

கடந்த வருடம் கியூபா அறுவடை செய்த கரும்பு 1959இல் அறுவடை செய்ததைவிட 7 மடங்கு குறைவு.

ஹால் கிளிப்பாக் இவர் கனடாவின் ராயல் மிலிட்டரி கல்லூரியில் வருகைதரு வரலாறு மற்றும் உத்திகள் துறை பேராசிரியர். இவர் கியூபாவை பற்றி தெரிவிக்கையில், ஒரு நாடாகப் பார்க்கும் போது மிகப் பெரிய விஷயங்களை நிறைவேற்றும் போக்கு காணப்படுகிறது, அதே சமயம் அன்றாட விஷயங்களில் படு மோசமாக இருக்கும் நிலையும் காணப்படுகிறது என்கிறார்.

“நாடு முழுவதையும் பத்தாண்டுகளுக்குள் மின்மயமாக்குவது, இரண்டரை ஆண்டுகளில், படிப்பின்மையைப் போக்குவது, மருத்துவ சர்வதேசியம் போன்றவைகள் பை த்தியக்காரத்தனமான திட்டங்களாகத்தான் தெரியும். ஆனால் அவையனைத்தும் நிறைவேற்றப்பட்டன” என்கிறார். இவ்வாறு கார்டியன் பத்திரிக்கை கோவிட்-19 சிகிச்சையில் கியூபாவின் வெற்றியை எழுதுகிறது.

கொரோனா தடுப்பூசி சாதனை

இன்றைய தேதி வரை கியூபாவின் அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள் 4 கொரோனா தடுப்பூசிகளை தயாரித்துள்ளன. அவை மருத்துவ  சோதனைகளும் முடிந்து மக்களுக்கும் போடப்பட்டு வருகின்றன. கியூபாவில் உள்ள உலக சுகாதார மையம் அந்த நாட்டில் இதனை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.

கியூபா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் சபரினா 1, சபரினா 2 மற்றும் அப்தலா ஆகியவை ஊசி மூலம் செலுத்தக் கூடிய புரத சத்து அடிப்படையிலான தடுப்பூசிகள். மாம்பிசா என்ற தடுப்பூசி உலகிலேயே மூக்கில் ஸ்பேரே அடித்துக் கொள்ளக் கூடிய ஒரே தடுப்பு மருந்து. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் தடுப்பூசிகள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை இதர மூன்றாம் உலக நாடுகளுக்கு கொடுக்க மறுத்து வருகின்றன. அதே சமயம் அவற்றின் உற்பத்தியில் பெரும்பகுதியை ஜி-7 நாடுகளே தங்கள் கிட்டங்கிகளில் பதுக்கிக் கொள்கின்றன.

மேலும், அமெரிக்காவின் இரண்டு பெரிய தடுப்பூசிகளான ஃபைசர் மற்றும் மடர்னா ஆகியவை எம் ஆர் என் ஏ வகையைச் சேர்ந்ததால், அவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல, அங்கு பயன்படுத்தும் வரை பாதுகாக்க நீர் உறைநிலைக்கு கீழே 70 டிகிரி (-70 செல்சியஸ்) என்ற நிலைக்கே அதிகம் செலவிட வேண்டும். ஆனால் கியூபா நாட்டு தடுப்பூசிகள் குளிர்சாதனப் பெட்டிகளில் கொண்டுசெல்லும் வகையில் உள்ளது.

இந்த தடுப்பூசிகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உலக சுகாதார மையம் அங்கீகாரம் வழங்க வேண்டும். ஆனால், அங்கும் மேற்கத்திய நாடுகள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி, பைசர், மெடர்னா, அஸ்ட்ரா, ஜெனிக்கா போன்ற நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்ய கியூபாவின் தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கவிடாமல் தடுத்து வருகின்றன. உலகில் வேறெந்த நாட்டின் திறனுக்கும் சற்றும் குறைவில்லாத கியூபா நாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களை அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ளதைப் போன்ற தரத்துடன் இந்த ஆராய்ச்சி சாலைகள் இல்லை என்று சொட்டை சொல் சொல்லி இந்த தடுப்பூசிகளின் தடுக்கும் திறன் சிறப்பாக இருந்தும் அவற்றிற்கு அங்கீகாரம் வழங்கவிடாமல் தடுத்து வருகின்றன.

எய்ட்ஸ் நோய் கட்டுபடுத்துதல்

1980-90 கியூபாவிற்கு மிகவும் நெருக்கடியான கால கட்டம். கியூபர்கள் மூன்றொலொரு பங்கினர் தென் ஆப்ரிக்காவின் அங்கோலா விடுதலைப் போரில் பங்கேற்றனர். கரிபியன் தீவுப் பகுதிகளில் எய்ட்ஸ் நோய்ப் பரவல் மிக அதிகமாக இருந்தது. 1986இல் கியூபாவில் முதல் எய்ட்ஸ் நோயாளி உயிரிழக்கிறார். தொடர்ந்து கியூபாவின் மிகப் பெரிய மருத்துவ சவாலாக எய்ட்ஸ் நோய்ப் பரவல் இருந்தது. இந்த சமயத்தில் சோவியத் யூனியனும் வீழ்கிறது. கியூபாவின் பொருளாதாரத்திற்கு ஆண்டிற்கு சுமார் 5 பில்லியன் டாலர் அளவிற்கு மான்யங்களை வழங்கி வந்த சோவியத் வீழ்ந்தது ஒரு புறம். மற்றொரு புறம் சர்வதேச வணிகத்தில் ஈடுபடமுடியாதபடி அமெரிக்க பொருளாதார முற்றுகை என கியூபா பெரும் நெருக்கடியை சந்தித்த நேரத்தில் எய்ட்ஸ் தொற்று மிகப்பெரிய அளவில் அந்த தீவு நாட்டை அச்சுறுத்தியது. தென் ஆப்ரிக்காவிற்கு அடுத்தபடியாக மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் எய்ட்ஸ் நோயால் கரிபீயன் தீவுகளில் பீடிக்கப்பட்டிருந்தனர். ஹெச்ஐவி-எய்ட்ஸ் மருந்துக்கு கூட அமெரிக்க தடைவிதித்திருந்தது.

இந்த நிலையில் கியூபாவின் பயோ டெக்னாலஜி ஆய்வகங்கள், ஹெச்ஐவி கண்டறியும் சோதனைகளை உள்நாட்டிலேயே 1987ஆம் ஆண்டிலேயே தயாரித்தன. இதன் விளைவாக 1993ஆம் ஆண்டிற்குள் 12 மில்லியன் ஹெச்.ஐ.வி. சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தீவு நாட்டின் ஓரிணச் சேர்க்கை பிரிவினர் இந்த நோயால் மிகுந்த அளவில் பீடிக்கப்பட்டனர். அரசு செலவில் ஓரின சேர்க்கை பிரிவினருக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு எதிர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு கிளினிக்குகள் ஏற்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் ஆணுறைகள் அதிக விலையில் இறக்குமதி செய்யப்பட்டு, அவை இலவசமாக வழங்கப்பட்டன. அதேபோல் ஆண்டி வைரல் மருந்துகளும் அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, இலவசமாக வழங்கப்பட்டன. தீவிர சிகிச்சைகள் மூலம் நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  இத்தகைய தீவிர சிகிச்சைகள் நோய்ப் பரவலை கட்டுபடுத்த சோதனைகள் வாயிலாக எய்ட்ஸ் நோயை கட்டுபடுத்துவதில் கியூபா வரலாற்று சாதனை படைத்தது. உலகிலேயே தாயிலிருந்து கருவிற்கு ஹெச்ஐவி நோய்ப் பரவலை தடுக்க மருந்தும் சிகிச்சையும் கொண்ட ஒரே நாடு கியூபா மட்டுமே. 1990களில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெறும் இருநூறு என்ற அளவுக்கு அங்கு கட்டுக்குள் வைக்கப்பட்டது. அதே சமயம் கியூபாவைப் போன்ற மக்கட்தொகை கொண்ட நியூயார்க் நகரில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43,000 ஆக இருந்தது (மன்த்லி ரிவ்யூ, ஜூன் 1, 2020)

கியூபாவின் இதர தடுப்பூசிகள்: மெனின்ஜைட்டிஸ் -பி எனப்படும் மூளைக் காய்ச்சலுக்கு 1985லேயே தடுப்பூசி கண்டுபிடித்த ஒரே நாடு கியூபா மட்டும்தான். பின்னர் மஞ்சள்காமாலை பி எனப்படும் ஹெப்படிட்டிஸ் பி வைரஸ் கிருமிக்கும், டெங்கே கிருமிக்கும் தடுப்பூசிகளை (2000க்கு முன்பே) கண்டுபிடித்த நாடு கியூபாவாகும்.

ஒரு புறத்தில் அமெரிக்காவில் மருத்துவத்தை தனியார்மயமாக்கிய பிறகு ஒரு மருத்துவ படுக்கையால் எந்தளவுக்கு லாபம் என்ற பார்வையும் அதற்கேற்ற நடைமுறைகளும் ஏற்பட்டபோது, அன்றாட வாழ்க்கையில்  மூன்று  வேளை உணவே கடும் தட்டுபாடான ஒரு நாட்டில், உலகில் வேறெங்கும் கிடைக்காத அளவிற்கு தடுப்பூசிகளும், சிகிச்சையும் கிடைப்பதை  சோசலிச பொருளாதாரத்தின் சாதனை என்பதைத் தவிர வேறெப்படி அழைக்க முடியும்?

சோசலிச பதாகையை உயர்த்திப் பிடிக்கும் சீன கம்யூனிஸ்டுகள் !

 • அருண் குமார்

2022 அக்டோபர் 22 அன்று,  சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC)-யின் 20வது மாநாடு வெற்றிகரமாக நிறைவுற்றது. உலக பொருளாதாரத்தில், சீனா முக்கிய பங்கை வகிப்பதால் இந்த மாநாடு கூர்ந்து கவனிக்கப்பட்டது.

2021இல் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 17.7 லட்சம் கோடி டாலர்களை எட்டியது. இது உலகின் மொத்த உற்பத்தி மதிப்பில் 18.5 சதவீதம் ஆகும். 2013 முதல் 2021 வரை சீன பொருளாதாரம் சராசரியாக 6.6 சதவீதம் வளர்ந்தது. இது உலக பொருளாதார வளர்ச்சி விகிதமான 2.6 விட அதிகம். 2013-2021 காலத்தில் உலக உற்பத்தி மதிப்பில் சீனாவின் பங்கு சராசரியாக 38.6 சதவீதமாக இருந்தது. ஜி-7 நாடுகள் செய்த மொத்த பங்களிப்பை விட இது அதிகம் ஆகும். அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி, சர்வதேச வர்த்தகத்தில் மிக அதிகமாக ஈடுபடும் நாடாக 2020ஆம் ஆண்டில் உயர்ந்தது சீனா. 2021ஆம் ஆண்டிலும் இந்த முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டு 6.9 லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான வர்த்தகத்தில் ஈடுபட்டது.

தனிநபர் சராசரி தலா வருமானத்தை 2012ஆம் ஆண்டு இருந்த நிலையில் இருந்து இரட்டிப்பாக்கி 11,890 டாலர்கள் என்ற அளவை எட்டியுள்ளது சோசலிச சீனா. வருமான அளவு உயர்வு, கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டின் காரணமாக சீன மக்களின் சராசரி ஆயுள் 77.9 ஆண்டுகளாக உயர்ந்தது. இது உலக சராசரியை விட 5.2 ஆண்டுகள் அதிகம் ஆகும். இது சோசலிச முறையின் மேம்பாட்டை உணர்த்தி,  அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவையெல்லாம் மாநாட்டின் மீதான முக்கியத்துவத்திற்கு காரணமாக அமைந்தன.

49 லட்சம் கட்சி அமைப்புகளில் செயல்படும் 9.6 கோடி கட்சி உறுப்பினர்களில் இருந்து 2,296 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றார்கள். மாநாட்டு அறிக்கையை தயாரிப்பதற்கு மாபெரும் ஜனநாயக செயல்முறைகள் நடைமுறைபடுத்தப்பட்டன. கட்சியின் மத்தியக் குழுவின் கீழ் இயங்கும் 54 கல்வி மையங்கள் 26 முக்கிய தலைப்புகளில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு 80 அறிக்கைகளை தயாரித்தன. அவை மாநாட்டு வரைவு அறிக்கைக்கு அடிப்படையாக அமைந்தன. வரைவு அறிக்கை குறித்து 85.4 லட்சம் கருத்துகள் இணையத்தின் மூலம் பெறப்பட்டன. 20வது மாநாட்டில் முன் வைக்கப்பட்ட வரைவு அறிக்கையின் மேல் 4,700 கருத்துக்கள் வந்தன.

இந்த மாநாட்டின் பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்ட கடந்த 5 ஆண்டுகளை ‘நிகழ்வுகள்மிக்க காலம்’ என குறிப்பிட்ட அறிக்கை, ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதார,  அரசியல், கலாச்சார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டை முன்னெடுக்கும் ஐந்து-தள ஒருங்கிணைந்த திட்டப் பணியில் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ‘முழுமையான மக்கள் ஜனநாயக செயல்முறைகளை ஊக்குவிப்பது, முன்னேறிய சோசலிச கலாச்சாரத்தை வளர்ப்பது, மற்றும் பொது மக்கள் நலனை மேம்படுத்துவது’ ஆகியவற்றிலும் கட்சி வெற்றி கண்டிருப்பதாக அறிக்கை குறிப்பிட்டது. இந்த காலகட்டத்தில்தான், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு இலக்குகளில் ஒன்றான ‘கடும்வறுமையை ஒழித்து’, மதிப்பு மிக்க செழிப்பான சமுதாயத்தை உருவாக்குதல் எட்டப்பட்டது. இப்போது, நூற்றாண்டின் இரண்டாவது இலக்கினை நோக்கி நாட்டை வழிநடத்துகிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி. 2049 ஆம் ஆண்டிற்குள், இணக்கமான, வளர்ந்த சோசலிச சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், சீன பிரதமருமான லீ கச் சியாங் அவர்கள் மக்களின் அடிப்படை நலனை பாதுகாப்பதே கட்சியின் முதன்மையான கடமை என குறிப்பிட்டார். அனைத்து மக்களின் பொதுநலன் பாதுகாக்கப்பட்டு, அனைவரும் உயர்வடைந்தால்தான் வளர்ச்சியை நோக்கிய, நவீன மயமாக்கலின் பலன்களை முழுமையாகவும், நியாயமாகவும் பகிர்ந்து கொள்வதாக அமையும் என்றார்.

கடும் வறுமையை ஒழிக்கும் பணியிலும், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக முழுமையான போரினை முன்னெடுத்து மக்களின் உயிர்களையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் பணியிலும் கட்சியை வழிநடத்தியது இந்த கோட்பாடுகள்தான். முதலாளித்துவ நாடுகளைப் போல, பொருளாதார நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், மக்களின் உயிர்களை முதன்மைப்படுத்தி செயல்பட்டது சீனா.

மாநாட்டின் முன்பாக அறிக்கை சமர்ப்பித்து பேசிய, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங், கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளை மறவாது இருக்க வேண்டும்; மார்க்சியத்தின்மீதும், சோசலிசத்தின்மீதும் மாறாத பற்றுறுதியுடன் இருக்க வேண்டும் என்றார். கட்சி தனது தன்மையையும், தான் வகிக்க வேண்டிய பாத்திரத்தையும், உறுதிப்பாட்டினையும் மாறாமல் கடைப்பிடிக்கும் என்றார்.

“மார்க்சியம் வேலை செய்கிறது. குறிப்பாக, சீன நிலைமைகளுக்கும், நம் காலத்தின் தேவைகளுக்கும் பொருத்தி அமலாக்கினால்” என்பதுதான் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சீன தன்மையிலான சோசலிசத்திற்கும் காரணம் என்று ஜின் பிங்  கூறினார். “சீனா தன் தன்மையை மாற்றிக்கொண்டு, சோசலிச முறையை கைவிட்டு, ஒரு நாளும் ‘மடை மாறிப் போகாது'” என உறுதியுடன் அவர் கூறினார்.

சீனா ஒரு நாளும் மிரட்டல்கள் மற்றும் அழுத்தங்களுக்கு அடிபணியாது என்றும், எந்த ஒரு சவாலையும் தைரியமாக எதிர்கொள்ளும் என்று உறுதியுடன் பேசினார். ‘காலத்தின் தேவைகளுக்கும்’, ‘மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும்’  விடை அளிப்பதற்கான மாறாஉறுதியுடனும் முனைப்புடனும் முன் நகர்ந்தால் மட்டுமே கட்சி முன்னேறிச் செல்லும் என குறிப்பிட்டார். கம்யூனிஸ்டுகள் எப்போதுமே சுயவிமர்சனங்களுக்கு தயாராக இருந்து, சோசலிச கட்டமைப்பின் பாதையில் வரும் அனைத்து தடைகளையும் தாண்டி செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும். இந்த திசைவழியில் ஊழலுக்காக ஊற்றுக்கண்கள் நீடிக்கும்வரை அதற்கு எதிராக உறுதியுடன் கட்சி போராடும் எனவும் அவர் வாக்களித்தார்.

ஒழுங்காய்வுக்கான மத்தியக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் கட்சி ஊழலுக்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்தி வருவதாகவும்,  அது நல்ல பலன்களை அளித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது. அந்த அறிக்கையில் ஊழல் சார்ந்த வழக்குகளில் 74,000 பேர் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 48 சதவீதம் பேர் 18வது மாநாட்டிற்கு முன் தவறு செய்தவர்கள் என்றும், 11.1 சதவீதம் பேர் மட்டுமே 19வது மாநாட்டிற்கு பின் குற்றம் செய்தவர்கள் என்றும், இது ஊழல் குற்றங்கள் குறைந்து வருவதை காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சித் தலைமையின் இடைவிடாத முயற்சிகள் காரணமாக, பொதுமக்களிடம் 2022ஆம் ஆண்டு மேற்கொண்ட மாதிரி ஆய்வில் கட்சியின் கடுமையான சுய-ஆளுகை ‘மிகத் திறம்பட’ செயல்படுவதாக 97.4 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இது 2012 இல் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை விட 22.4 சதவீதம் அதிகம். கட்சி நிர்வாகிகளின் இணையர்கள் மற்றும் பிள்ளைகளின் தொழில் நடவடிக்கைகள் மீதான கண்காணிப்பு அதிகரித்துள்ளது. 2015லிருந்து 4,700 நிர்வாகிகளின் இணையர்கள் மற்றும் பிள்ளைகளின் தொழில் செயல்பாடுகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்ட கவனம் ‘முக்கிய துறைகள் மற்றும் முக்கிய இடங்கள்’ என்றும், அங்கே ‘புலிகளை வெளியேற்றி,  பூச்சிகளை நசுக்கி,  நரிகளை வேட்டையாடி ‘ ஊழலுக்கு எதிரான போரில் வெற்றி காண வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது அந்த அறிக்கை.

1982க்குப் பின் கட்சியின் அமைப்புச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது  தொடர்நடவடிக்கையாக இருந்து வருகிறது. ‘புதிய கோட்பாட்டு கண்டுபிடிப்புகள் மற்றும் செயல்பாட்டின் பரிணாம வளர்ச்சி’ ஆகியவற்றின் தேவைகளில் இருந்து இது மேற்கொள்ளப்படுகிறது. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் ‘திட்டமிட்ட சிந்தனை’யை பிரதிபலிப்பதாகவும், ‘தற்கால சூழல் மற்றும் சீன நிலைமைகளுக்கு மார்க்சியத்தை பொருத்திப் பார்ப்பதில் கிடைத்துள்ள அண்மைக்கால முன்னேற்றங்கள்’ ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை பிரதிபலிப்பதாகவும் உள்ளன. சீன தேசம் புத்துயிர் பெறுவதை சீனாவின் நவீனமயமாக்கலுக்கான பாதை மூலம் முன்னேற்றிக் கொண்டு செல்வதே கட்சியின் பிரதான கடமையாக நிர்ணயிக்கப்பட்டு, கட்சியின் புதிய அமைப்புச் சட்டத்தில் அது சேர்க்கப்பட்டது.

கட்சியின் தொடக்க கால நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள், அதன் முக்கிய சாதனைகள், கடந்த நூறு ஆண்டுகளின் வரலாற்றுப் படிப்பினைகள் ஆகியவற்றையும் அமைப்புச் சட்டத்தில் சேர்க்க மாநாடு ஒப்புதல் அளித்தது. போர்க்குணத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் போராடும் திறனை வளர்த்துக் கொள்வது பற்றிய குறிப்பையும் மாநாடு அமைப்புச் சட்டத்தில் சேர்த்தது.

மேலும் ஒரு முக்கிய திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது. ‘பொது உடைமை என்பதே முக்கிய பங்கு வகித்து, இதர பலதரப்பட்ட முறைகள் அதனுடன் சேர்ந்து வளரும் முறை,  உழைப்புக்கேற்ற விநியோகம் என்பதே முக்கிய பங்கு வகித்து, இதர விநியோக முறைகள் அதனுடன் சேர்ந்து நிலைக்கும் முறை, மற்றும் சோசலிச சந்தை பொருளாதார முறை, ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை சோசலிச பொருளாதார முறை, இவையே சீன தன்மைகளைக் கொண்ட சோசலிசத்தின் முக்கிய தூண்கள்’ என்ற கோட்பாட்டை அமைப்புச் சட்டத்தில் சேர்ப்பதுதான் அந்த திருத்தம்.

கட்சியின் அனைத்து மட்டங்களிலும் உள்ள நிர்வாகிகள் சிறப்பு-நடத்தையை எதிர்பார்க்கும் எண்ணம் மற்றும் செயல்களை எதிர்ப்பது, ஊழல் நடவடிக்களை எதிர்ப்பது போன்ற கண்ணோட்டத்துடன் கட்சி ஒழுக்கம் குறித்த அத்தியாயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்கால சவால்களை சந்திக்க தேவையான புதிய கடமைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கட்சி உறுப்பினர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. விரிவான, முழுமையான, கூடுதல் வலுவான வழிமுறை கொண்ட மக்கள் ஜனநாயகத்தை வளர்ப்பது, ஜனநாயகத் தன்மை கொண்ட தேர்தல்கள், கருத்துக் கேட்பு, முடிவெடுப்பு, நிர்வாகம், மற்றும் மேற்பார்வை போன்றவற்றிற்கான சிறந்த அமைப்பு மற்றும் வழிமுறைகளை நிறுவுதல் ஆகியவற்றையும் கட்சி அமைப்புச் சட்டத்தில் சேர்க்க மாநாடு ஒப்புதல் அளித்தது.

205 உறுப்பினர்கள், 171 மாற்று உறுப்பினர்கள் கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மத்திய குழுவையும், 133 உறுப்பினர்கள் கொண்ட மத்திய ஒழுங்காய்வு ஆணையத்தையும் மாநாடு தேர்வு செய்தது. 23 அக்டோபர் அன்று கூடிய புதிய மத்தியக் குழு, கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் ஜி ஜின் பிங் அவர்களை தேர்வு செய்தது. தோழர் ஜின் பிங் அவர்களை உள்ளடக்கிய 7-உறுப்பினர்கள் கொண்ட நிலைக்குழுவினையும்,அரசியல் தலைமைக்குழுவையும் மத்தியக்குழு தேர்வு செய்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஆயுதப்படை ஆணையத்தின் தலைவராகவும் ஜி ஜின் பிங் தேர்வு செய்யப்பட்டார்.

நிறைவுரையில், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு போராடும் துணிவும், வெற்றி பெறும் திறனும் உள்ளதாக ஜி அவர்கள் குறிப்பிட்டார். “இந்த புதிய காலத்தின் புதிய பயணத்தில், புதிய,  மேலும் பெரிய, உலகையே வியக்கச் செய்யும் அற்புதங்களை படைக்கும் முழு தைரியமும், திறனும் எங்களுக்கு உண்டு”. 23 அக்டோபர் அன்று ஊடகங்களை சந்தித்த ஜி ஜின் பிங் அவர்கள், இந்த மாநாடானது ‘பதாகையை உயர்த்திப் பிடித்து, சக்திகளை ஒன்று திரட்டி,  ஒற்றுமை மற்றும் உறுதியை பாராட்டும்’ மாநாடு எனக் கூறினார்.

சீனாவில் சோசலிச சமுதாயத்தை கட்டமைக்கும் முயற்சியில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாம் அனைவரும் வாழ்த்து தெரிவிப்போமாக.

(கட்டுரையாளர், சி.பி.ஐ(எம்) மத்தியக் குழு உறுப்பினர்)

தமிழில்: அபிநவ் சூர்யா

உக்ரைன் போர்: மானுடத்தின் புறந்தள்ளப்பட்ட சிக்கல்கள் !

விஜய் பிரசாத்

திடுக்கிடும் தலைப்புடன் ஒரு புதிய செய்தி வெளியாகிறது. ஆயுதங்களுக்காக உலகம் மேற்கொள்ளும் ஆண்டு செலவுத்தொகை  2 லட்சம் கோடி டாலர்களை கடந்துள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. பட்டியலில் அடுத்து உள்ள பத்து நாடுகளின் ஒட்டுமொத்த செலவீனத்தை விட அமெரிக்காவின் செலவீனம் அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவின் உளவுத்துறை செலவீனங்களையும், அணு ஆயுத பராமரிப்பு செலவீனங்களையும் சேர்த்து கணக்கிட்டால் வரும் தொகை மட்டுமே 1 லட்சம் கோடி டாலர்களை கடக்கும். இது மிக மிக அதிகமான தொகை ஆகும். மனித உழைப்பையும் அறிவையும் வீணடிக்கும் கடும் செயல்.

இன்னொரு செய்தி. சட்டவிரோத வரி ஏய்ப்புக்கு வழிவகுக்கும் நாடுகளில் குவிந்திருக்கும் செல்வத்தின் மதிப்பு 37 லட்சம் கோடி டாலர்களை கடந்திருப்பதாக ஒரு கணிப்பு வெளியாகியுள்ளது. பெரும் செல்வந்தர்கள், மனித வளத்தை சூறையாடிச் சேர்த்த செல்வம் இப்படிப்பட்ட நாடுகளில் பணமாகவும், தங்கமாகவும், வைப்பு நிதியாகவும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் மொத்த தொகையில் ஒரு சிறு பகுதி மட்டுமே. மேற்சொன்ன கணிப்பில் நிலம், விலை உயர்ந்த கலை பொருட்கள், நகைகள் போன்றவை உள்ளடங்காது. அவற்றையும் சேர்த்தால், கையளவு மனிதர்களிடம் குவிந்துள்ள செல்வத்தின் அளவு மிகக் கொடுமையானது. உலகின் முதல் 22 செல்வந்தர்கள் கையில் உள்ள சமூக வளத்தின் மதிப்பு, ஆப்ரிக்காவில் மொத்தம் உள்ள 3.25 கோடி பெண்களிடம் உள்ள ஒட்டுமொத்த செல்வத்தை விட அதிகம் ஆகும்.

உலகில் நிலவும் ஏழ்மை, பட்டினி மற்றும் எழுத்தறிவின்மை போன்ற சிக்கல்களுடைய அவல நிலைமை குறித்தும்,  கால நிலை மாற்ற பிரச்சனையால் எழும் அதிபயங்கர தாக்கங்கள் குறித்தும் தொடர்ந்து அறிக்கைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக செலவிடப்பட வேண்டிய நம்முடைய சமூக வளத்தின் பெரும் பகுதியை, ஆயுதங்களை குவிக்க செலவிடுவதுடன், வெளிநாடுகளில் பதுக்கியும் வைக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் 17 நிலைத்த நீண்டகால வளர்ச்சிக் குறிக்கோள்களை – பட்டினியை ஒழித்து அமைதியை நிலைநாட்டும் இலக்கினை – எட்டுவதற்கு ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி டாலர்கள் செலவிட வேண்டியுள்ளது.  இப்போது இந்த குறிக்கோள்களை எட்டுவதற்கு மிகச் சிறிய தொகை மட்டுமே செலவிடப்படுகிறது. பெருந்தொற்றுக் காலத்திலும், அதன் பிறகு அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக் காலத்திலும், இந்த செலவினங்களில் மென்மேலும் வெட்டு ஏற்படும். நாம் இந்தக் குறிக்கோள்களை விட்டு மென்மேலும் விலகிச் செல்வோம்.  மானுடத்தின் மிக முக்கியமான சிக்கலான பட்டினியை ஒழிக்கும் பாதையில் நாம் நெடுந்தொலைவு செல்லவேண்டியுள்ளது. (மக்கள் சீனம் தவிர. அங்கு 2021இல் கடும் ஏழ்மை ஒழிக்கப்பட்டுவிட்டது). உலக மக்களில் 300 கோடிபேர் ஏதோ ஒரு வித பட்டினியால் அவதிப்படுவதாக கணிக்கப்படுகிறது.

விடுதலைக்கு பதிலாக ஆதிக்கம்

மானுடத்தின் இந்த சிக்கல்களை தீர்க்கும் உலகு தழுவிய ஒரு சமூக – அரசியல் திட்டத்தை உருவாக்குவதற்கு பதிலாக, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான ஜி7 நாடுகளும், தங்களின் உலக ஆதிக்கத்தை நீடிப்பதற்கான உத்தியை நோக்கியே செல்கின்றன. சோவியத் ஒன்றியமும், கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளும் வீழ்ந்த 1991 ஆம் ஆண்டுக்கு பின், மூன்றாம் உலக நாடுகள் கடன் வலையில் சிக்க வைக்கப்பட்டதில் இருந்து இந்த ஆதிக்க போக்கு  தொடங்கியது. இந்த ஆதிக்கம் கால வரம்பின்றித் தொடரும் என்றும், அமெரிக்காவுக்கு எதிரான ஒரு அணியின் வரலாறு முடிந்து போனது என்றும், அமெரிக்க அறிவுஜீவிகள் மார் தட்டினார்கள். ஆனால் அமெரிக்காவும், ஜி7 நாடுகளும் “உலக பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் எல்லை மீறி சென்றதாலும், (குறிப்பாக சட்டவிரோதமாக ஈராக் மீது 2003இல் போர் தொடுத்தது)  2007-08இல் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும், அந்நாடுகளின் ஆதிக்கம் நிலை குலைய துவங்கியது.

அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகளில் வறண்டு போன வங்கி அமைப்பிற்கு நிதியளிக்க இந்தியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளை அணுகின. அதனால், ஜி7 கூட்டமைப்பை மூடிவிட்டு, உலகளாவிய சட்ட-திட்டங்களை தீர்மானிப்பதை ஜி20 என்ற கூட்டமைப்பின் கீழ் கொண்டு வந்து, அதில் நிதி அளிக்கும் இந்த புதிய நாடுகளையும் சேர்க்க உறுதி அளித்தது. ஆனால் மேற்கத்திய வங்கிகள் மீண்டு வந்த பின்னர், ஜி20 ஒதுக்கப்பட்டு,  முந்தைய ஜி 7   ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. இதர சக்திகளை எதிரியாக பார்க்காமல், மானுட சிக்கல்களை தீர்ப்பதில் கூட்டாளியாக பார்க்கலாம் என்ற முன்மொழிவை ஏற்க அமெரிக்கா மறுத்தது. இந்த கூட்டு சக்தியாக ஜி 20 அமைப்பில்  பங்கு வகித்த சில நாடுகள் சேர்ந்து  BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா) கூட்டமைப்பு 2009 இல் துவங்கப்பட்டது. இந்நாடுகள் ஒன்றிணைந்து, மேற்கத்திய நாடுகளால் கட்டுப்படுத்தப்படாத, ஐ.எம்.எஃப்-பின் சிக்கன அஜெண்டாவிற்கு அப்பாற்பட்ட, வளர்ச்சி திட்டங்களுக்கு வழி வகுக்கும் நிறுவன அமைப்பை ஏற்படுத்த முன் வந்தன.

BRICS கூட்டமைப்பு துவங்கப்படுவதற்கு முன், ரஷ்யாவின் விளாடிமிர் புதின் (அதுவரை பல விஷயங்களில் மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கி இருந்தார்)  முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று ஒரு முக்கிய உரையாற்றினார்.  “ஒரு துருவ உலகம் என்றால் என்ன?” என புதின் கேட்டார். “இந்த வார்த்தையை எவ்வளவு அழகு படுத்தி காட்டினாலும், அதன் அர்த்தம் ஒரே அதிகார புள்ளி, ஒரே ஒரு ஆதிக்க மையம் மற்றும் ஒற்றை ஆண்டான்” என்பதுதான். அந்த ஒற்றை அதிகார புள்ளி என்பது அமெரிக்காவையே குறிக்கிறது என்று அனைவரும் அறிந்திருந்தனர். மேற்கத்திய நாடுகளின் “சர்வதேச உறவுகளில் அதீதமாக பயன்படுத்தப்படும் கட்டுக்கடங்காத தாக்குதல் ” குறித்து புதின் கடுமையாக விமர்சித்தார். மேலும் “சர்வதேச சட்டம்” மேற்கத்திய நாடுகளை அவை மேற்கொள்ளும் போர் குற்றங்களிலிருந்து பாதுகாப்பதை குறிப்பிட்டார். “யாரும் பாதுகாப்பாக உணர்வதில்லை. ஏனெனில் யாரும் சர்வதேச சட்டம் தங்களை பாதுக்காக்கும் அரண் என்பதாக உணரவில்லை. இப்படிப்பட்ட சூழல் ஆயுத குவியலை ஊக்குவிப்பதில் ஆச்சரியம் இல்லை”. அமெரிக்கா ஐரோப்பாவை சுற்றி ஏவுகணை வளையத்தை உருவாக்குவதை நிறுத்திவிட்டு, 2002இல் அது கைவிட்டுவிட்ட “அணு ஆயுத ஏவுகணைக்கு எதிரான ஒப்பந்த”-த்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என புதின் குறிப்பிட்டார். அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்த முன்மொழிவை ஏற்க மறுத்தார்.

அச்சுறுத்தல்கள்

21ஆம் நூற்றாண்டில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். லிபியாவின் மீது 2011 ஆம் ஆண்டு நேட்டோ முன்னெடுத்த தாக்குதல் மேற்கத்திய நாடுகள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்ட எடுத்த முன்னெடுப்புகளுக்கான குறியீடாக அமைந்தது. இதுவே தெற்கு சீன கடல் பகுதி முதல் கரீபிய கடல் பகுதி வரை உலகளாவிய நேட்டோ ஆதிக்கம் தொடர்பான வாதங்களுக்கு  முன்னோட்டமாக அமைந்தது. 30 நாடுகள் மீதான பொருளாதார தடை விதிப்பு மூலம் அமெரிக்காவையும், அதன் கூட்டாளி நாடுகளையும் எதிர்ப்பவர்களை ஒழுங்கு படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது மட்டுமல்லாமல் ஐ.எம்.எஃப் அமைப்பின் புதுப்பிக்கப்பட்ட சிக்கன திட்டத்தின் காரணமாக, பல ஏழை நாடுகள் கொரோனா காலத்தில் கூட, தங்களுக்கு கடன் கொடுத்த செல்வச் செழிப்பு மிக்கவர்களுக்கு வழங்க வேண்டியிருந்த பணம், தங்கள் நாட்டு மக்களை காக்க சுகாதாரத்திற்கு மேற்கொண்ட செலவினை விடவும் அதிகம்.

2018இல் “தீவிரவாதத்திற்கு எதிரான போர்” நிறைவுற்றதாக அமெரிக்கா அறிவித்தது, அதன் தேச பாதுகாப்பு உத்தியில், சீனாவும் ரஷ்யாவும் அடைந்துவரும் எழுச்சியே மிகப்பெரும் ஆபத்தாக குறிப்பிட்டது. அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் அமெரிக்காவை “நெருங்கி வரும் எதிரி நாடுகளை” கட்டுப்படுத்துவது என்று வெளிப்படையாகவே பேசினார். சீனா மற்றும் ரஷ்யாவை இவ்வாறு தம் எதிரி நாடுகளாக குறிப்பிட்ட அவர், அமெரிக்காவின் மொத்த ஆதிக்கத்தையும் பயன்படுத்தி இந்நாடுகளை அடிபணிய வைப்பது என்று பேசினார். ஐரோப்பா மற்றும் ஆசியாவை சுற்றி அமெரிக்காவின் பல ராணுவ தளங்கள் (மொத்தம் 800) உள்ளதோடு, ஜெர்மனி முதல் ஜப்பான் வரை ரஷ்யா மற்றும் சீனாவை முன் நின்று தாக்கும் பல கூட்டாளி நாடுகளை அமெரிக்கா கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் கடற்படைகள், “பயணிப்பதற்கான சுதந்திரம்” என்ற பெயரில் ரஷ்யா (ஆர்டிக் பகுதி) மற்றும் சீனாவிற்கு (தெற்கு சீன கடல் பகுதி) எதிராக மிக அச்சுறுத்தலான படைப் பயிற்சிகளில் ஈடுபட்டன. இப்படிப்பட்ட செயல்பாடுகளோடு, 2014 ஆம் ஆண்டில் அமெரிக்கா உக்ரைன் நாட்டின் அரசியலில் தலையிட்டதும், 2015இல் தைவானிற்கு பெருமளவு ஆயுதங்கள் அளித்ததும், ரஷ்யாவையும், சீனாவையும் மேலும் மிரட்டுவதாக அமைந்தது. மேலும் 2018இல் அமெரிக்கா தன்னிச்சையாக “இடைநிலை தூர அணு-ஆயுத சக்திகள்” ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் காரணமாக, சர்வதேச அணு-ஆயுத கட்டுப்பாட்டு கட்டமைப்பை நலியச் செய்தது. ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் எதிரான போர்க்கள அணு ஆயுத உத்தியை அமெரிக்கா வகுத்துவருகிறது என்பதுதான் இந்த பின்வாங்கலின் வெளிப்பாடு.

அமெரிக்காவின் தேச பாதுகாப்பு உக்தியில் சீனாவையும், ரஷ்யாவையும் கட்டுப்படுத்துவது பற்றி குறிப்பிட்டிருப்பதும், “இடைநிலை தூர அணு-ஆயுத சக்திகள்” ஒப்பந்தத்திலிருந்து விலகியதும், ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும்  அமெரிக்காவால் உள்ள அச்சுறுத்தல் கற்பனையானது அல்ல என்பதை தெளிவாக்குகிறது. இதுவரை, ஆசிய பகுதியில் அமெரிக்காவின் நட்பு நாடுகளான தென் கொரியாவும், ஆஸ்திரேலியாவும்  இடைநிலை தூர அணு-ஆயுதங்களை அனுமதிக்க தயாராக இல்லை. ஆனால் குவாம் மற்றும் ஒக்கினாவா-வில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் ஆயுதங்களை குவிக்க வாய்ப்பு உண்டு. பல ஆண்டுகளாக இவ்வாறு கட்டமைக்கப்பட்டு வரும்  அமெரிக்க அச்சுறுத்தலை ரஷ்யா உணர்ந்ததன் விளைவாகவே உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை முன்னெடுக்கிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்ந்தாலும், இல்லாவிட்டாலும் அமெரிக்கா உக்ரேனில் அணு ஆயுதங்களை குவிக்க வாய்ப்பு உள்ளது என்ற கவலை எழுந்துள்ளது.

உக்ரைனில் நடந்துவரும் போர் பற்றிய வாதங்களுக்கு பின் ஒரு முக்கியமான கேள்வி உள்ளது: இயற்கையாகவே  யூரேசியா (ஆசிய-கிழக்கு ஐரோப்பிய) நாடுகள் நெருங்கி வரும் போக்கை அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் அனுமதிக்குமா? இல்லையேல் இதை தடுக்க ஐரோப்பிய மற்றும் சில ஆசிய நாடுகளில் தலையிடும் முயற்சிகளை தொடருமா? ஐரோப்பிய நாடுகளை ஆங்கிலேய-அமெரிக்க-ஆர்டிக் கூட்டமைப்பினுள் கொண்டு வந்து, ஐரோப்பிய-ஆசிய நாடுகள் இணைப்பை, குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனா உடனான இணைப்பை தடுக்கும் அமெரிக்காவின் முயற்சியும் உக்ரைன் மீதான போரில் ஒரு பங்கு ஆற்றியுள்ளது என்பதை நிராகரிக்கவே முடியாது.

இந்த நிலையில் மானுடத்தின் மிக முக்கிய சிக்கல்கள் கண்டுகொள்ளப் படாமல் போகின்றன. பட்டினியும் போர்களும் பூமியை வாட்டுகின்றன. அன்றாட வாழ்வின் நிதர்சன பிரச்சனைகளை தீர்ப்பதற்காகச் செல்ல வேண்டிய சமூக வளங்களோ, ராணுவ ஆதிக்கத்திலும் போர்களிலும் வீணடிக்கப் படுகின்றன.

தமிழில்: அபிநவ் சூர்யா

ஐஃபோன்: லாபம் எங்கிருந்து குவிகிறது?

 • அபிநவ் சூர்யா

ஐஃபோன், ஐபேட், மேக்புக் போன்ற பிரபல மின்னணுக் கருவிகளை விற்பனை செய்யும் ஆப்பிள் நிறுவனமானது, இன்று சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரும் நிறுவனமாக திகழ்கிறது. அது மட்டும் அல்லாது, இந்நிறுவனம் தான் தொழில்நுட்ப ஆய்விலும் உலகின் மிக உயரிய நிறுவனமாக கருதப்படுகிறது. இந்நிறுவனம் விற்கும் ஐஃபோனின் ஒவ்வொரு புதிய வெளியீட்டையும் வாங்குவதற்காக அமெரிக்காவில் பலர் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை பார்க்கிறோம். இந்த கலாச்சாரம் ஒரு பகுதி இந்தியர்களுக்கும் தொற்றிக்கொண்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த இந்த ஆப்பிள் நிறுவனத்தின், விற்பனைப் பண்டங்கள் அனைத்தும் உற்பத்தி ஆவது சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தான். இது போன்ற பன்னாட்டு மின்னணுக் கருவி நிறுவனங்களின் உற்பத்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே இயங்கி வரும் பல நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ளும் ஆப்பிள் நிறுவனம், தன் “ஜாம்பவான்” பிம்பத்தை பாதுகாத்துக்கொள்கிற  அதே வேளையில், வளரும் நாடுகளின் தொழிலாளர்களின் நிலை குறித்து கொஞ்சமும் கவலையற்று, கடும் சுரண்டலின் வாயிலாக தன் லாப வெறியை தீர்த்துக் கொள்கிறது.

ஆப்பிள் நிறுவனத்திற்கான உற்பத்தியை மேற்கொள்ளும் தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு சொந்தமான ஆலை காஞ்சிபுரத்தில் உள்ளது. அண்மையில் 3,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் மிக மோசமான பணிச் சூழல் மற்றும் தங்குமிடம் காரணமாக ஸ்ரீபெரும்புதூரில் போராட்டம் நடத்தி சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையை ஸ்தம்பிக்க வைத்தார்கள். இதற்கு ஓராண்டு முன்பு தான் ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்துள்ள ‘விஸ்ட்ரான்’ என்ற நிறுவனம், பெங்களூரு அருகே உள்ள தன் ஆலையின் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்க,  தொழிலாளர்கள் கொதித்தெழுந்து, பின் அது பெரும் கலவரமாக வெடித்தது. இது போன்ற நிலைமை, ஆப்பிள் நிறுவனத்தால் மட்டும் ஏற்படுவதில்லை என்பதும் உண்மை. நோக்கியா நிறுவனத்தோடு ஒப்பந்தம் வைத்திருந்த ஃபாக்ஸ்கான், 2014-15இல் தன் ஸ்ரீபெரும்புதூர் ஆலைகளை திடீரென மூடி, பத்தாயிரத்திற்கும் மேலான தொழிலாளர்களை நடுத் தெருவில் நிறுத்தியது.

இப்படிப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலையும், அதன் பின்னணியில் உள்ள முதலாளித்துவ-ஏகாதிபத்திய செயல்பாடுகளையும் நாம் புரிந்து கொள்வது அவசியம்.

ஆப்பிளின் சுரண்டல் வேட்டை

ஆப்பிள் நிறுவனத்தின் சுரண்டல் வேட்டை இந்தியாவில் மட்டுமல்லாது, பல்வேறு வளரும் நாடுகளிலும் நிகழ்கிறது. சீனாவில் ஷென்சென் மற்றும் ஷெங்ஷூ ஆகிய நகரங்களில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான்  ஆலைகளில் சுமார் 12லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம், மிகக் கடுமையான சூழலில் மிக அதிக நேரம் வேலை வாங்கியதால், 2011ல் பதினான்கு தொழிலாளர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள். இந்த சம்பவம் சீன நாட்டையே  உலுக்கியது. அதன் பின் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மேல் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தொழிலாளர்கள் ஊதியம் உயர்த்தப்பட்டது. அதன் பின், ஃபாக்ஸ்கானும், இதர ஆப்பிள் ஒப்பந்த நிறுவனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உற்பத்தியை இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளுக்கு நகர்த்த தொடங்கின. இந்த வளரும் நாடுகளில் நிலவும் குறைவான கூலி, தொழிற்சங்கங்களுக்கு எதிரான சட்டங்களையும் பயன்படுத்தி, மிக மோசமான சூழலில் தொழிலாளர்களை பணியில் அமர்த்தி கொள்ளை லாபம் ஈட்டுகிறார்கள். தொழிலாளர்கள் ஓரளவு நல்ல வருமானம் பெற வேண்டுமானால் ‘ஓவர் டைம்’ (Overtime) மிக அதிகமாக புரிய வேண்டும். அவர்கள் உழைப்பு சக்தியை மறு உற்பத்தி செய்து கொள்ள கூட முடியாத அளவில் தான் கூலி விகிதம் உள்ளது.

ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்காக ஆப்பிரிக்காவில் இருந்து கனிம வளங்கள் பெறப்படுகின்றன. அந்த சுரங்கங்களில் அடிமை நிலையில் பணி புரியும் ஊழியர்கள் ஒட்டச் சுரண்டப்படுகிறார்கள். ஆபத்தான சூழலில் குழந்தைத் தொழிலாளர்களும் கூட மிக சொற்ப ஊதியத்திற்கு பணியாற்றுகிறார்கள்.

இப்படிப்பட்ட நவதாராளமய சுரண்டலை நியாயப்படுத்தி பல முதலாளித்துவ அறிஞர்களும் பேசுகிறார்கள். அதிலும், பெண்களை பணி அமர்த்துவதன் மூலம் “பெண் விடுதலை”க்கு வழிவகுப்பது போல வாதிடுகின்றனர். ஆனால் அண்மையில் ஸ்ரீபெரும்புதூரில் நாம் அதையா பார்த்தோம்? அடித்தட்டு மக்களின் மோசமான  வாழ்க்கை நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, மோசமான வாழ்க்கைச் சூழலில், கடும் வேலைச் சுமையையும் புகுத்தி, பணி இடம், விதிகள், பெண்கள் – மகப்பேறு நல சட்டங்கள் எதையுமே பின்பற்றாமல், அற்பக் கூலிக்கு (மாதம் ரூ.12,000ற்கும் குறைவு) சுரண்டுவதன் மூலம், தன் லாபத்தை கூட்டிக் கொள்ளத்தான் பன்னாட்டு மூலதனம் முயற்சிக்கிறது.

ஆனால் இவர்கள் அனைவருமே ஆப்பிளோடு ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனம் மூலம் தான் பணி அமர்த்தப் படுகிறார்கள் என்பதால் ஆப்பிள் நிறுவனம் ஏதோ தன் கையில் எந்த கறையும் படியவில்லை என பாவிக்கின்றது. ஆனால் அதன் கொள்ளை லாபமும், சந்தையில் வகிக்கும் எங்கிருந்து வருகிறது?

தொழிலாளர்கள் கூலியை விட லாபம் எத்தனை மடங்கு அதிகம் என்பதை “சுரண்டல் விகிதம்” (Rate of Exploitation) என மார்க்ஸ் வரையறுத்தார். ஆப்பிள் நிறுவனத்துடைய சுரண்டல் விகிதம் சுமார் 2500% ஆகும். அதாவது, ஆப்பிள் நிறுவனத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் உழைக்கும் அனைவரும் தங்கள் சொந்த வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக உழைக்கும் நேரம் போக, 25 மடங்கு அதிக  நேரம் உபரி ஈட்டித் தருவதற்காக உழைக்கின்றனர். இதை “கொள்ளைச் சுரண்டல்” என்றும் கூட சில மார்க்சிய அறிஞர்கள் வரையறுக்கின்றனர்.

குறைந்த கூலியில் சுரண்டல்

நவதாராளமய காலத்திற்கு முன்பு மேற்கத்திய நாடுகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் புகழ் என்பது, தங்கள் தாய் நாட்டில் எத்தனை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துகிறார்கள் என்பதன் மூலம் கணிக்கப்பட்டது. ஆனால் இன்றோ, மூன்றாம் உலக நாடுகளில், தங்கள் உற்பத்தியை திறம்பட மாற்றியமைப்பதே விதந்தோதப்படுகிறது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும், சோசலிச சக்திகளின் நலிவும் காரணமாக, உலக தொழிலாளர் இயக்க வலிமை குன்றியது இதற்கான காரணங்களில் ஒன்றாகும். கணினி நுட்ப வளர்ச்சியும், தொலைத்தொடர்பு வளர்ச்சியும் காரணமாக உற்பத்தியை உலகின் பல இடங்களிலும் நடத்தலாம் என்ற நிலைமை உருவானது. பல ஆண்டுகளாக, பொருளாதார மந்த நிலையில் சிக்கி தவித்த ஏகாதிபத்திய முதலாளித்துவம், இந்த புதிய சூழ்நிலைகளை பயன்படுத்தி, கூலி விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் உற்பத்தியை மாற்றியமைத்ததன் மூலம் லாப விகிதத்தை உயர்த்திக்கொண்டது.

சர்வதேச நிதி மூலதனத்தை தங்கள் நாட்டில் ஈர்ப்பதற்கான போட்டியில் வளரும் நாடுகள் ஈடுபட்டன. அதற்காக, இந்நாடுகளில் தொழிலாளர் நல சட்டங்கள் நலிவடையச் செய்யப்பட்டன, சுற்றுச் சூழல் பாதுகாப்பு காற்றில் விடப்பட்டது. 21ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து வெறும் பத்து ஆண்டுகளில் (பண வீக்கம் கணக்கில் கொண்ட பின்) தொழிலாளர் ஊதியம் மும்மடங்காக உயர்ந்த சீனாவிலும் கூட, நாட்டின் மொத்த செல்வ உருவாக்கத்தில், தொழிலாளர் ஊதியத்தின் பங்கு குறையவே செய்தது. இதர வளரும் நாடுகளின் நிலை குறித்து கேட்கவே வேண்டாம்.

இந்த பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் அந்நிய நேரடி முதலீட்டின் வழியாக நுழைந்தன. 2013இல் முதல் முறையாக வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளுக்குச் செல்லும் அந்நிய நேரடி முதலீடு அதிக அளவை எட்டியது. ஆனால் அண்மைக் காலங்களில் இந்த நிலையும் மாறி வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் உள்ள ஒப்பந்த நிறுவனங்களை உற்பத்தி மேற்கொள்ள செய்து, ஏற்றுமதி மூலம் பண்டங்களை வாங்கிக் கொள்கின்றன. இதனால் தொழிலாளர் சுரண்டலின் பழி முழுவதும் மூன்றாம் உலக நாடுகளையும், அந்நாட்டு நிறுவனங்களையும் மட்டுமே சேர்வதாக வியூகம் செயல்படுகிறது.

எல்லா காலங்களிலும் (மார்க்ஸ் மூலதனம் எழுதிய காலம் முதலே) சர்வதேச முதலாளித்துவ சுரண்டலுக்கு முன் மாதிரியாக திகழ்ந்து வரும் ஜவுளி உற்பத்தி நிறுவனம் தான் இப்படிப்பட்ட ஒப்பந்த நிறுவன அடிப்படையிலான உற்பத்தி மாற்றத்தை துவங்கி வைத்தது. பின்னர் வாகன உற்பத்தி நிறுவனங்களும் படை எடுத்தன. இன்று மின்னணு கருவிகள் உற்பத்தி நிறுவனங்கள் இதில் முன்னிலை வகிக்கின்றன.

வர்த்தகம் – தொழில்நுட்பம் – சுரண்டல்

காலனிய ஆதிக்க காலம் முதல், ஏகாதிபத்திய நாடுகள் வளரும் நாடுகளை சுரண்டுவதற்காக முக்கிய உத்தி ஒன்றினை கையாண்டு வருகின்றன. வளரும் நாடுகளில் நிலவும் இயற்கை வளங்களை கொண்டு உற்பத்தியாகும் பண்டங்களை (பருத்தி, தேயிலை, கனிம வளம்) பெற்றிடும் ஏகாதிபத்திய நாடுகள், அவைகளை பயன்படுத்தி ஆலை உற்பத்தி மூலம் உருவாக்கிய பண்டங்களை, குறைந்த விலைக்கு கொண்டு வந்து வளரும் நாடுகளின் சந்தையில் குவித்திடுவர். இதனால் வளரும் நாட்டு தொழில் துறை அழிந்து போகும். இதன் விளைவாக வளரும் நாட்டில் உற்பத்தி திறன் உயராமல் இருக்கும். எனவே வளரும் நாடுகளில் கூலி விகிதம் குறைவாகவே இருக்கும். இதன் மூலம் வளரும் நாட்டு மக்கள் உழைப்பை எளிதாக சுரண்டி, இயற்கை வளங்களை மலிவு விலையில் அபகரித்துக் கொள்ள முடியும்.

ஆனால் இன்றோ உற்பத்தி அனைத்தும் வளரும் நாடுகளுக்கு மாறுவதை பார்க்கிறோமே! இது எப்படி? இங்கு தான் நாம் ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை கவனிக்க வேண்டும். இப்போதும், வளரும் நாடுகளை நோக்கி உற்பத்தி வருவதற்கு காரணம், கூலி விகிதம் குறைவாக இருப்பதுதான். ஏகாதிபத்திய சூழலில், வளரும் நாடுகளில் உள்ள நிறுவனங்களுடைய பிழைப்பு, உலக மதிப்புச் சங்கிலியில் (Global Value Chain) தங்களை பிணைத்துக் கொள்வதைப் பொறுத்ததாகவே உள்ளது. எனவே ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதில் போட்டி உருவாகிறது. இந்த கடும் போட்டியின் காரணமாக தொழிலாளர்களுடைய ஊதியத்தை குறைந்த நிலையில் வைக்க ஒவ்வொரு நாட்டு முதலாளிகளும் முயல்கின்றனர்.

இவ்வாறு நடக்கும் உற்பத்தியிலும் கூட, கடும் உழைப்பைச் சார்ந்த (Labour intensive) பகுதிகள் மட்டும் தான் வளரும் நாடுகளை நோக்கி வருகின்றன. முன்னேறிய கருவிகள், தொழில்நுட்பங்கள் சார்ந்த உற்பத்தி வருவது இல்லை. எனவே வளரும் நாடுகளில் உற்பத்தி திறன் உயர்வதில்லை. எந்திரங்கள் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் வழியாக வளரும் நாடுகளின் உற்பத்தி திறன் தொடர்ந்து மேம்படுவதில்லை.

ஆப்பிள் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களின் பெயரில் ஒரு உற்பத்தி ஆலை கூட கிடையாது! பிறகு இந்த நிறுவனங்கள் எதை உற்பத்தி செய்கின்றன? எப்படி சந்தையின் உச்சத்தில் உள்ளன? இவை உற்பத்தி செய்வது அனைத்துமே மின்னணு கருவிகளின் வடிவமைப்பு (Design), பிராண்ட் (Brand), மற்றும் அறிவுசார் காப்புரிமம். இவைகளை மட்டுமே வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம், வளரும் நாடுகளில் சொற்ப விலைக்கு உற்பத்தியை நிகழ்த்தி, லாபம் ஈட்டுகிறது. பிராண்ட் மற்றும் அறிவுசார் காப்புரிமங்களை வைத்திருப்பதன் வாயிலாக, சந்தையில் போட்டியில்லாத சூழலை உருவாக்கி, ஏகபோக நிலைமையில், கூடுதலான லாபம் குவிக்கிறது.

ஆனால் இந்த அறிவுசார் காப்புரிமம் அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் முழுமையாக ஆப்பிள் உருவாக்கியதா? அதுவும் இல்லை. அவர்கள் பயன்படுத்தும் நுட்பங்களான இணையதளம் (Internet), ஜிபிஎஸ், தொடும் திரை (Touch Screen), பேச்சு கணிப்பான் (Siri) போன்ற தொழில்நுட்பங்கள் எல்லாம் அரசு ஆய்வகங்களிலும், மக்கள் பணத்தில் இயங்கும் பல்கலைக்கழகங்களிலும் உருவாக்கப்பட்டவை. இவைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கருவிகளுக்கு, அறிவுசார் காப்புரிமத்தை பன்னாட்டு நிறுவனங்கள் கோரிட, ஏகாதிபத்திய அரசுகள் அனுமதித்து உள்ளன.

உற்பத்தி ஆலைகளை வைத்திருந்த மேலை நாட்டு நிறுவனங்கள், முன்பு, வளரும் நாடுகளின் வளத்தையும் மக்கள் உழைப்பையும் சுரண்டியது போல, இன்று அறிவுசார் காப்புரிமம் வைத்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் தொழிலாளர்களுடைய உழைப்பை மலிவான கூலிக்கு சுரண்டுகின்றனர்.

வர்த்தகம் – தொழில்நுட்பம் – சுரண்டல்

இந்த நவீன ஏகாதிபத்திய சுரண்டலுக்கு, சர்வதேச வர்த்தகமும், தொழில்நுட்பமும் முக்கிய பங்காற்றுகின்றன. குறைவான ‘மதிப்புக்கூட்டல்’ (Value Added) செய்யும், கடும் உழைப்பு தேவைப்படும் உற்பத்திகள், பணிகள் மட்டுமே வளரும் நாடுகளுக்கு வருகின்றன என்பதை முன்பே பார்த்தோம். அதுமட்டுமல்லாமல், கூலியின் அளவுக்கும், வளங்களின் இருப்புக்கும் ஏற்றவாறு பல நாடுகளிலும் உற்பத்தி சிதறியிருப்பதால், பண்டத்தின் சிறு பாகத்தை மட்டுமே குறிப்பிட்ட வளரும் நாட்டில் மேற்கொள்கின்றனர். (உதாரணமாக: ஐபோனுக்கான இடுபொருட்கள் உற்பத்தியும், உதிரி பாக உற்பத்தியும் 30 நாடுகளில் நடக்கின்றன). சர்வதேச வர்க்கத்தகத்தில் 60 சதவீதம் இடைநிலைப் பாகங்களுடைய பரிவர்த்தனையாக இருக்கிறது. சர்வதேச வர்த்தகத்தில் 80 சதவீதம் பன்னாட்டு நிறுவனங்களின் கைவசம் இருக்கிறது. உற்பத்தி இவ்வாறு சிதறிக் கிடைக்கின்ற காரணத்தால், எந்தவொரு நாடும், உதிரி பாக உற்பத்தியில் எவ்வளவு முன்னேறினாலும், மொத்த பண்டத்தின் உற்பத்தியை அறிந்துகொள்ள முடியாது. உற்பத்தியை கற்றுக்கொண்டு, அதே போன்ற பண்டத்தை தங்கள் சொந்த நாட்டில் மேற்கொள்ள முடியாது. இவ்விதத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் பாதுகாக்கப்படுகிறது.

காலனி ஆதிக்கம் நிலவிய காலத்தில், ஏகாதிபத்திய நாடுகள் உற்பத்தி ஆலைகளை கட்டுப்படுத்தி வந்தன. இன்று ஏகாதிபத்திய நாடுகள் தொழில்நுட்பத்தையும் உற்பத்தி திறனையும் கட்டுப்படுத்துகிறார்கள். மேலைநாடுகளே பெரும்பான்மையான தொழில்நுட்பத்தை தங்கள் வசமாக வைத்துள்ளார்கள். அதன் மூலம் உற்பத்தித் திறனை மிக அதிகமாக பராமரிக்கிறார்கள். எனவே வளரும் நாடுகளில் உள்ள நிறுவனங்கள், தங்களின் போட்டியிடும் திறனை உயர்த்த என்ன செய்ய முடியும்? ஒரே வழி, தொழிலாளர்கள் கூலியை குறைந்த நிலையில் வைத்து, சுரண்டல் மூலம் மிக அதிக உபரி ஈட்டுவது தான். இப்படி வளரும் நாட்டு நிறுவனங்கள் ஈட்டும் உபரியில் ஒரு பெரும் பங்கை ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்கள் அபகரித்துக் கொள்கின்றன (எ.கா: ஃபாக்ஸ்கான் ஈட்டும் ஒவ்வொரு டாலர் லாபத்திற்கு ஆப்பிள் 40 டாலர்கள் லாபம் ஈட்டுகிறது).

ஆக, வளரும்-வளர்ந்த நாடுகள் இடையேயான வர்த்தகமானது, மேலளவில் சமமான வர்த்தகம் போல தென்பட்டாலும், வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்ப ஆதிக்கத்தின் காரணமாக, இது ஒரு சமநிலை அற்ற வர்த்தகமாகத் தான் திகழ்கிறது. வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கு ஈடு கொடுக்க வேண்டுமானால், வளரும் நாடுகளின் கூலி அளவு குறைவாகவும், சுரண்டல் கூடுதலாகவும் இருக்க வேண்டும். இந்த சுரண்டலின் உபரியை ஏகாதிபத்திய நாடுகள் அபகரித்துக் கொள்கின்றன.

அறிவியலற்ற பார்வை

இப்படிப்பட்ட தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வு நிலை தான் சமகால ஏகாதிபத்திய சுரண்டலுக்கு அடிப்படையாக உள்ளது. இதனை உணர்ந்த சீனா, மிக துல்லியமான அறிவியல்பூர்வமான வளர்ச்சிப் பாதையை தேர்வு செய்தது. அதன் காரணமாக இன்று தொழில்நுட்ப துறையில் மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் நிலைக்கு வளர்ந்து நிற்கிறது. இது அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் அடிப்படைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். அதனால்தான் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள், சீனா மீது தொடர் தாக்குதல் நிகழ்த்துகின்றன.

இந்தியாவிலும், மேற்சொன்ன தொழில்நுட்ப சார்பின் ஆபத்து உணரப்பட்டது. எனவே சுதந்திரத்திற்கு பின், வலுவான அரசு ஆதரவு பெற்ற ஒரு அறிவியல் வளர்ச்சி கட்டமைப்பை உருவாக்கி முன்னேற துவங்கியது இந்தியா. ஆனால் நவீன தாராளமய காலத்திலோ, தொழில்நுட்ப சுயசார்பு முற்றிலுமாக கைவிடப்பட்டது. இதனால் ஏகாதிபத்திய நாடுகளின் தொங்கு சதையாகவே இந்தியா மாறிப் போனது. 21ம் நூற்றாண்டில், “உயர் தொழில்நுட்ப” பண்டங்களை நாம்   ஏற்றுமதி செய்வதை விட பன்மடங்கு அதிகமாக இறக்குமதி தான் செய்து வருகிறோம் என்பதோடு, இந்நிலை மேலும் மோசம் தான் அடைந்து வருகிறது.

மோடி ஆட்சியின் காலத்தில், இந்த நிலை மேலும் மோசமடைந்துள்ளது. அறிவியல் அடிப்படையிலான சமூகத்தை கட்டமைப்பதற்கு பதிலாக, திரிபுகள் மற்றும் பொய்கள் அடிப்படையிலான அறிவியல், கணித, வரலாற்று கட்டுக்கதைகள் பரப்பப்படுகின்றன. இளைஞர்கள் மத்தியில் மத, பிரிவினைவாத கருத்துகளே  விதைக்கப்படுகின்றன. நாட்டின் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சியை வழி நடத்த வேண்டிய பல்கலைக்கழகங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து, இந்த கல்வி அமைப்புகள் காவிக் கூடாரமாக மாற்றப்படுகின்றன.

“மேக் இன் இந்தியா”, “தற்சார்பு” ஆகிய முழக்கங்களை வாய்ச் சவடால் மட்டும் விடும் மோடி அரசு, நம் பொதுத்துறைகளை விற்பதும், குத்தகைக்கு விடுவதும் காரணமாக பொருளாதார இறையாண்மையை கார்ப்பரேட்டுகளிடம் அடமானம் வைக்கிறது. சிறு குறுந்தொழில்கள் முடங்கும் நிலை உருவாகிறது. தொழிலாளர் நல சட்டங்களை அழித்தொழித்து, கூடுதலான ஏகாதிபத்திய சுரண்டலுக்கே வழிவகுக்கப்படுகிறது. மக்களும், அறிவுச் செல்வமும் தான் வளர்ச்சிக்கு முக்கியம் என்பதை அங்கீகரிக்க மறுப்பதன் காரணமாக, கார்ப்பரேட் நிறுவனங்களைச் சார்ந்து அடிவருடி அரசியல் செய்கிறது.

நிறைவாக

இந்த உலகமயமாக்கல் சூழலில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் தயாரிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ‘அப்டேட்’ விடுவதைப் போல, ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் முறைகளும் ‘அப்டேட்’ ஆகிக்கொண்டே போகின்றன. வளரும் நாடுகளின் குறைந்த கூலி தொழிலாளர்கள் கொண்டு இயக்கப்படும் சர்வதேச உற்பத்தி, சசுரண்டலை நவீனப்படுத்தி உள்ளது.

மூலதனத்தின் இந்த இயல்பு புதியது அல்ல. 1867இல் லாசேன் சர்வதேசம் மாநாட்டில் மார்க்ஸ் நிகழ்த்திய உரையில் இவ்வாறு குறிப்பிட்டார், “உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வரவோ அல்ல; மலிவான உழைப்பு உள்ள இடத்திற்கு உற்பத்தியை நகர்த்தவோ செய்கின்றனர். இந்த சூழலில் தொழிலாளர் வர்க்கம் தனது போராட்டத்தை வெற்றிகரமாக்கிட, தேசிய அமைப்புகள் சர்வதேசியத்தை தழுவ வேண்டும்”

பாட்டாளி வர்க்க சர்வதேச ஒற்றுமை கொண்டு, நம் தேசத்தை சூறையாடும் நயவஞ்சகர்களையும், நம் தொழிலாளர்களை கடுமையாக சுரண்டி கொழுக்கும் ஏகாதிபத்திய மூலதனத்தையும் வீழ்த்துவோம்!

ஆதாரம்:

 1. சுரண்டல் விகிதம் : ஐஃபோன் எடுத்துக்காட்டு – ட்ரைகான்டினன்டல் ஆய்வு கழகம்
 2. 21ம்  நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் – ஜான் ஸ்மித்

மக்கள் ஆளும்போது…

தன்னைத் தானே ஆளும் ஒரு நாடுதான் கியூபா. எவரிடமிருந்தும் வரும் உத்தரவுகளுக்கு அது அடிபணியாது…

ஃபிடல் காஸ்ட்ரோ

(ஆயுதம் தாங்கிய எழுச்சியின்மூலம் சர்வாதிகாரி பாடிஸ்டாவை 1959ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று விரட்டியடித்த பிறகு, ஜனவரி 21, 1959 அன்று கியூப தலைநகர் ஹவானாவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் அணிதிரண்டிருந்த கூட்டத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரையின் சுருக்கமான பகுதி)

சக குடிமக்களே!

இன்று நமது போராளித் தோழர்கள் எதிரியின் துப்பாக்கிக் குண்டுகளைக் கண்டு நடுங்கியதை விட அதிகமாகவே இந்தக் கூட்டத்தைக் கண்டு நடுங்கியிருக்க வாய்ப்புள்ளது. நமது மக்களின்மீது அளவிற்கடங்காத நம்பிக்கையை வைத்திருக்கும் எங்களைப் பொறுத்தவரையில், இந்தக் கூட்டம் எல்லா மதிப்பீடுகளையும் தாண்டி விட்டது. இப்போது மேடைக்கருகில் வந்து சேர்ந்தவர்கள் சொன்னார்கள்: இந்தக் கூட்டம் மாலேகானில் இருந்து சகோதரத்துவப் பூங்கா வரையில் நீண்டு கிடக்கிறது என்று. இன்று ஒருவிஷயத்தை மட்டும் நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். புரட்சியை ஆதரிக்கும் மக்கள் அனைவரும் ஒன்றாக அணிதிரண்டு நிற்பதற்கான இடமே ஹவானாவில் இல்லை. (பலத்த கைதட்டல்) 

இது நமது ஆயுத பலத்திற்குக் கிடைத்த வெற்றிதான்; எனினும் ஒரே ஒரு குண்டு கூட சுடப்படவில்லை. இது மிகவும் அழகான வெற்றி; உரிமையின் வெற்றி; நீதியின் வெற்றி; அறநெறியின் வெற்றி. நாங்கள் வெறும் கெரில்லாக்கள்தான் என்று, துப்பாக்கிகளால் சுடுவதைத் தவிர வேறெதையும் அறியாதவர்கள் என்று நினைத்தவர்கள், எங்களது ராணுவ ரீதியான வெற்றிகளுக்குப் பிறகு, தகவல் தளத்தில், பொதுமக்களின் கருத்துத் தளத்தில் எங்களை நசுக்கி விடலாம் என்று நினைத்தவர்கள், அந்தத் தளங்களிலும் எவ்வாறு போராடுவது; எவ்வாறு வெற்றி பெறுவது என்பதை கியூபப் புரட்சி அறிந்திருக்கிறது என்பதைக் கண்டு கொண்டார்கள்.

சர்வதேச செய்தி சேவையை தங்கள் ஏகபோகமாக வைத்திருப்பவர்கள், திரும்பிய திசையெல்லாம் பொய்களையும், அவதூறுகளையும் பரப்புபவர்கள், நமது புரட்சியை பலவீனப்படுத்த, நமது மக்களின் பெருமையைக் குலைக்க நினைத்தவர்கள், பலவீனமாக இருக்கும்போதே அதன் மீது விழுந்து சிதறடித்து விடலாம் என்று நினைத்தவர்களின் எண்ணம் இன்று பொய்யாய் போனது; ஏனென்றால், நமது புரட்சி இன்று மேலும் உறுதியாக, வலுவாக மாறியிருக்கிறது.

நமது புரட்சியை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக அவர்கள் அதை வலுப்படுத்தியிருக்கின்றனர். நமது புரட்சி தாக்குதல்களைக் கண்டு அஞ்சாது. நமது புரட்சி தாக்குதல்களால் பலவீனமடையாது. அதற்கு மாறாக, அது தன்னை மேலும் மேலும் பிணைத்துக் கொண்டு, மேலும் வலிமையைப் பெறுகிறது. ஏனென்றால், இந்தப் புரட்சி துணிவுமிக்க, போராட்ட குணம்மிக்க மக்களின் புரட்சி.

கியூப மக்களைப் பொறுத்தவரையில் எல்லாமே தெளிவாகத்தான் இருக்கிறது. கியூப புரட்சி ஒரு முன்மாதிரியான புரட்சி. இங்கே திடீர் ஆட்சிக் கவிழ்ப்பு எதுவும் நடக்கவில்லை. நாங்கள் மட்டும் ராணுவ அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவாக இருந்திருந்தால், மக்களின் உதவி எதுவும் இல்லாமலேயே, அதிபரை பதவியிலிருந்து தூக்கியெறிந்துவிட்டு, அவரது இடத்தில் மற்றொருவரை நியமித்து விட்டு, வசதி படைத்தவர்கள் அனைவரையும் மண்டியிட்டு வணங்கி இருந்தால், இது ஒரு புரட்சியாக இல்லாமல் இருந்திருந்தால், எங்களுக்கு எதிரிகள் என்று எவரும் இருந்திருக்க மாட்டார்கள்; எங்களை தாக்கியிருக்க மாட்டார்கள்; எங்களின் மீது அவதூறு பொழிந்திருக்க மாட்டார்கள்.

நாட்டின் நலன்களை விற்றுத் தின்ற, வெளிநாட்டவர்களுக்கு மிகுந்த தாராள மனத்துடன் சலுகைகளை அள்ளி வீசிய, மக்களை ஏமாற்றிய ஒரு சர்வாதிகார ஆட்சி  இந்த அரண்மனையில் இருந்தபோது யாருமே அதன்மீது தாக்குதல் தொடுக்கவில்லை. அதற்கு எதிராக வெளிநாட்டுப் பத்திரிக்கைகளில் பிரச்சாரம் எதுவும் நடைபெறவில்லை. அதனை கண்டிக்க வேண்டுமென்று (அமெரிக்க) காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசவில்லை. மிக மோசமானதொரு துரோகி, நமது குடிமக்களில் 20,000க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்த ஒரு குற்றவாளி இந்த அரண்மனையில் இருந்தபோது, கியூபாவிற்கு எதிராகவோ அல்லது அந்த சர்வாதிகாரிக்கு எதிராகவோ இத்தகைய பிரச்சாரங்கள் நடைபெறவில்லை.  

300 மில்லியன் பெசோக்களை திருடிய ஒருவன் இந்த அரண்மனையில் வசித்தபோது, ஆயிரம் கோடிக்கும் மேலான பெசோக்களை திருடிய திருடர் கூட்டத்தின் ஆளுகையில் இந்த நாட்டின் குடியரசு இருந்தபோது, அவர்களுக்கு எதிராக வெளிநாடுகளில் இத்தகைய பிரச்சாரங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. ஒவ்வோர் இரவும் டஜன் கணக்கில் கியூப மக்கள் கொல்லப்பட்டபோது, இளைஞர்கள் நெற்றிப் பொட்டில் சுடப்பட்டு கொலைசெய்யப்பட்டு கிடந்ததை பார்த்தபோது, ராணுவப் படைத்தளங்களில் பிணங்கள் மலையென குவிந்து கிடந்தபோது, எங்களது பெண்களிடம் அத்துமீறல் செய்தபோது, பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டபோது, தூதரகங்களுக்குள் காவல்துறையினர் நுழைந்து அங்கு தஞ்சம் புகுந்திருந்த 10 அகதிகளை ஒரு சில நிமிடங்களில்  சுட்டுத் தள்ளியபோது, கியூபாவிற்கு எதிராக இத்தகைய பிரச்சாரங்கள் எதுவும் நடக்கவில்லை; ஒரு சில அரிதான விதிவிலக்குகள் இருந்தபோதிலும் (அமெரிக்க) காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த சர்வாதிகாரத்தைக் கண்டித்துப் பேசவில்லை.

கியூப மக்களுக்கு எதிராகப் பிரச்சாரம் நடக்கிறது; ஆம். ஏனென்றால், அவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள். ஏனென்றால், வெறும் அரசியல் ரீதியாக மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும்  அவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள். கியூப மக்களுக்கு எதிராகப் பிரச்சாரம் நடக்கிறது; ஏனென்றால், இந்த அமெரிக்க கண்டம் முழுவதற்குமே அவர்கள் மிகவும் அபாயகரமான முன்னுதாரணமாக மாறியிருக்கிறார்கள்.

கியூப மக்களுக்கு எதிராகப் பிரச்சாரம் நடக்கிறது; ஏனென்றால், அந்நிய ஏகபோகங்களுக்கு வழங்கப்பட்ட சோர்வடைய வைக்கும் சலுகைகள் அனைத்தையும் நாங்கள் ரத்து செய்யப் போகிறோம் என்பதை, மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படவிருக்கிறது என்பதை, சர்வாதிகார ஆட்சி வழங்கிய சோர்வடைய வைக்கும் சலுகைகள் அனைத்தையும் நாங்கள் மறுபரிசீலனை செய்து, ரத்து செய்யப் போகிறோம் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.

கியூபாவிற்கு எதிராக ஏன் இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது? எந்தவொரு மக்களுக்கும் எதிராக நடத்தப்பட்ட பிரச்சாரங்களிலேயே மிகவும் அருவெறுக்கத்தக்க, மிகக் கொடூரமான, மிகவும் அநீதியான பிரச்சாரம் இதுவாகத்தான் இருக்கும். ஏன் இந்தப் புரட்சி வெற்றி பெற்ற ஐந்து நாட்களிலேயே ஒரு சில அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கியூப மக்களுக்கு எதிராக அவதூறுகளை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களின் நோக்கம் மிகத் தெளிவானது. நமது புரட்சியால் புரட்சிகளுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியை உலகத்திற்கு எடுத்துக்காட்ட முடிந்துள்ளது. புரட்சிகளின், போர்களின் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத வகையில் இந்தக் கலகக்காரர்களின் படை மிகுந்த பெருந்தன்மையோடு நடந்து கொண்டிருக்கிறது. ஆயிரம் பேர் நம்மால் சிறைபிடிக்கப்பட்டனர். காயமுற்றிருந்த நூற்றுக்கணக்கானோரை நமது மருத்துவர்கள் நன்கு கவனித்துக் கொண்டார்கள். ஒரே ஒரு கைதி கூட நமது படையினரால் தாக்கப்படவில்லை.   

இவற்றையெல்லாம் உலக மக்களுக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவேதான் இங்கே வந்துள்ள செய்தியாளர்களின் மூலம் அவர்களை நம்ப வைக்க இருக்கிறோம். அமெரிக்க கண்டத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வந்துள்ள செய்தியாளர்களை நாளை நாம் சந்திக்கவிருக்கிறோம்.  அந்தக் கூட்டத்தில் தெளிவானதொரு மனசாட்சியுள்ள ஒரு மனிதனாக என்னை நான் (அவர்களது) விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ளப் போகிறேன்.  எந்தவொரு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினருக்கும் நான் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எந்தவொரு வெளிநாட்டு அரசுக்கும் நான் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நாட்டு மக்களுக்கு நான் விளக்கமளிப்பேன். முதலில் எனது மக்களுக்கு, கியூப நாட்டு மக்களுக்கு விளக்கமளிப்பேன். இரண்டாவதாக, அமெரிக்க கண்டத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் விளக்கமளிப்பேன். மெக்சிகோ நாட்டு மக்களுக்கு, அமெரிக்க நாட்டு மக்களுக்கு, கோஸ்டரீகா நாட்டு மக்களுக்கு, வெனிசுலா நாட்டு மக்களுக்கு, ஏன் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு நான் விளக்கமளிப்பேன். (இந்தக் கூட்டம் நடந்து முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, 1959 ஜனவரி 23 அன்று லத்தீன் அமெரிக்கப் பகுதி முழுவதும் தனது கருத்துக்களைப் பரப்பும் வகையில் காஸ்ட்ரோ இதைத்தான் செய்தார்)

இதற்காகத்தான் நான் செய்தியாளர்களை அழைத்திருந்தேன். இங்கே வந்து தங்கள் சொந்தக் கண்களால் உண்மைகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. எங்கு நீதி இருக்கிறதோ, அங்கே குற்றங்கள் இருக்காது. எங்கே குற்றங்கள் இருக்கிறதோ, அங்கே பத்திரிக்கை சுதந்திரம் என்பது இருக்காது. குற்றங்கள் நிலவும்போது மக்கள் தங்கள் செயல்களை மறைத்து வைக்கவே விரும்புகிறார்கள்.

கியூப மக்கள் ஒன்றும் காட்டுமிராண்டிகளோ அல்லது குற்றமிழைப்பவர்களோ அல்ல. அவர்கள் உலகிலேயே மிகவும் நாகரீகமான, உணர்வுடையவர்கள். இங்கே ஓர் அநீதி இழைக்கப்படுகிறது என்றால், மக்கள் அனைவரும் அதற்கு எதிராக இருப்பார்கள். நமது அறிவுஜீவிகளோ, நமது செய்தியாளர்களோ, நமது தொழிலாளர்களோ, நமது விவசாயிகளோ, நமது மத குருமார்களோ உணர்வு அற்றவர்கள் அல்ல. தண்டனையானது நியாயமான ஒன்றாக இருக்கையில், இந்தத் தண்டனையை பெறத் தகுதியானவர்களாக இருக்கையில் எல்லோருமே தண்டனையை தருவதற்கு ஒப்புக் கொள்கிறார்கள்.  

இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு, நேச சக்திகள் போர்க்குற்றவாளிகளை தண்டித்தனர். இப்போது நமக்கிருப்பதை விடக் குறைவான உரிமையே அப்போது அவர்களுக்கு இருந்தது. ஏனெனில், பின்னாளில் ஒப்புதல் வழங்கப்பட்ட ஒரு சட்டத்தின்கீழ்தான் இந்தத் தண்டனையை அவர்கள் வழங்கினார்கள். அதேநேரத்தில் குற்றம் செய்வதற்கு முன்பாகவே நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்கீழ், பொதுவிசாரணைகளில், நேர்மையானவர்களைக்கொண்ட நீதிமன்றங்களில் தான் நாம் போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குகிறோம். இப்போது வழங்கப்பட்டு வரும் நீதியை ஒப்புக் கொள்பவர்கள், இந்தக் கூட்டுக் கொலைகாரர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்பவர்கள் எல்லோரும் கையை உயர்த்துங்கள்! (தொடர்ந்து 2 நிமிடங்களுக்குக் கைதட்டல்)

எமது மரியாதைக்குரிய தூதரக அதிகாரிகளே, அமெரிக்க கண்டம் முழுவதிலுமிருந்து வந்திருக்கும் செய்தியாளர்களே, அனைத்து வகையான கருத்துக்களையும் கொண்ட, அனைத்து சமூகப் பிரிவுகளையும் சேர்ந்த பத்து லட்சம் கியூப மக்கள் நடுவராக இருந்து இப்போது வாக்களித்திருக்கிறார்கள். ஜனநாயகவாதிகளுக்கு, அல்லது தங்களை ஜனநாயகவாதிகள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்வேன்: இதுதான் ஜனநாயகம். இதுதான் மக்களின் விருப்பத்தை மதிப்பது. ஜனநாயகவாதிகளும், அல்லது தங்களை ஜனநாயகவாதிகள் என்று கூறிக் கொள்பவர்களும் மக்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும்.

எனது உரையை முடிப்பதற்கு முன்பாக, நான் முக்கியமானது என்று கருதும் ஒரு விஷயம் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்: அது இதுதான். எங்கள் பாதுகாப்பு பற்றி கியூப மக்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். எங்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி பல்லாயிரக்கணக்கான மக்கள் கேட்டுக் கொள்கிறார்கள். புரட்சியின் எதிரிகளால் நாங்கள் தாக்கப்படக் கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். கியூப நாட்டு மக்களுக்கு நான் இன்று சொல்லிக் கொள்வதெல்லாம் அது உண்மையல்ல என்றுதான். ஒரே ஒரு நபரை நம்பி புரட்சி இருக்க முடியாது; ஒரே ஒரு நபரை மட்டுமே நம்பி ஒரு நாட்டின் எதிர்காலம் இருக்க முடியாது; ஒரே ஒரு நபரை மட்டுமே நம்பி நீதியின் எதிர்காலம் இருக்க முடியாது என்றுதான் நான் கூற விரும்புகிறேன்.

அதற்கும் மேலாக, தலைவர்களை கண்ணாடிப் பேழைக்குள் அடைத்து வைக்கக் கூடாது. நான் ஏற்கனவே செய்து வந்த செயல்களை தொடர்ந்து செய்வது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். என்ன நடந்தாலும் சரி, அனைத்து அபாயங்களையும் அமைதியாக எதிர்கொள்வதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். ஒரே ஒரு காரணத்தினால்தான் நான் இதைச் சொல்கிறேன். ஏனென்றால், எதுவுமே, எவரொருவருமே புரட்சியை தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை நான் நன்றாகவே அறிந்து வைத்துள்ளேன். எனது எதிரிகளுக்கும் சொல்வதற்கு ஒரு விஷயம் இருக்கிறது: எனக்குப் பின்னால் இருப்பவர்கள், என்னைவிட மிகவும் தீவிரமானவர்கள். அதைப் போன்றே, எங்களது புரட்சிகர நீதியை தாக்குவதன் மூலம் புரட்சியை அவர்கள் மேலும் பலப்படுத்துகிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. என்னைக் கொல்வதன்மூலம் அவர்களால் புரட்சியை மேலும் வலுப்படுத்தவே முடியும்.

எனவே, நாட்டின் நலன்களை, மக்களின் நலன்களை பாதுகாப்பதில் ஒவ்வொரு நாளும் கியூப நாட்டு மக்கள் வலுவாகிக் கொண்டேதான் வருவார்கள். இறுதியாக, மக்கள் தங்களது இலக்கை, எப்போதுமே நம்மிடம் இருந்திராத முழுமையான சுதந்திரம், இறையாண்மையை  அடைந்திருக்கின்றனர்.  இப்போது நமது நாடு தன்னைத் தானே ஆளுகின்ற, வேறு எவரின் ஆணையை ஏற்காத ஒரு நாடாக மாறியிருக்கிறது. 

இங்கே ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்க விரும்புகிறோம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களின் நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கின்ற போர்க்குற்றவாளிகளை திருப்பி அனுப்புமாறு அமெரிக்க அரசை கேட்டுக் கொள்கிறோம். மாஸ்ஃபெரா, வென்சுரா மற்றும் இதர குற்றவாளிகளுக்கு அமெரிக்க நாட்டு மக்கள் அடைக்கலம் கொடுக்கக் கூடாது என கியூப நாட்டு மக்கள் கோருகிறார்கள். அமெரிக்க அரசு இந்தப் போர்க்குற்றவாளிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என அமெரிக்க மக்கள் கோர வேண்டும். ஆம். அவர்கள் போர்க்குற்றவாளிகள்தான்.

உலகப் போருக்குப் பின்பு, அமெரிக்க நாட்டு மக்கள் கோயரிங், ஹிம்லர், ஹிட்லர் ஆகியோருக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் கொடுக்க ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்கள். (எனினும் இந்த உரை நிகழ்த்திய நேரத்தில் எவருக்கும் தெரிந்திராத உண்மை என்னவெனில், நாஜிகளான விஞ்ஞானிகள், அதிகாரிகள் பலரையும், அன்றைய அமெரிக்க அரசு தம் நாட்டுத் தொழிலாளர்களுக்கே தெரியாமல், அரசிற்குள் கொண்டு வந்து நுழைத்து, சோவியத் யூனியனுக்கு எதிராக உற்பத்தியையும் தொழில்நுட்பத்தையும் பெருக்குவதற்காக அவர்களை பயன்படுத்திக் கொண்டது என்பதுதான்). உண்மைதான். எங்கள் நாட்டின் ஹிம்லர் வென்சுரா. எங்களது கோயரிங் டாபர்னிலாஸ். எங்கள் ஹிட்லர் பாடிஸ்டா. அமெரிக்கா நியாயமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், கியூப மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைத்தால், இந்தப் போர்க்குற்றவாளிகளை திருப்பி அனுப்ப அது ஒப்புக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அவர்கள் எவரும் அரசியல் குற்றவாளிகள் அல்ல.

பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டவர்களை அரசியல் குற்றவாளிகள் என்று கருத முடியாது; ஏனென்றால், பெண்களை மோசமாக நடத்துவதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. கண்களைப் பிடுங்கி எறிந்து சித்திரவதை செய்தவர்களை அரசியல் குற்றவாளிகள் என்று கருத முடியாது; ஏனென்றால், கண்களைப் பிடுங்குவதற்கும் அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. குழந்தைகளை, முதிய பெண்களை படுகொலை செய்த, பல்லாயிரக்கணக்கான சக குடிமக்களை எவ்வித இரக்கமுமின்றி சித்திரவதை செய்தவர்களை அரசியல் குற்றவாளிகள் என்று கருத முடியாது; ஏனென்றால், சித்திரவதைக்கும் அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. 

அரசியல் குற்றவாளிகள் என்பதாக அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடியாது. ஏனெனில், அவர்கள் பொதுவான சட்டத்தை மீறிய குற்றவாளிகள் தான். எங்களிடமிருந்து திருடப்பட்டு அமெரிக்க வங்கிகளில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான பெசோக்கள்  எங்களிடம் திருப்பித் தரப்பட வேண்டும். வெளிநாட்டில் சேமித்து வைப்பதற்காக மக்களின் பணத்தை தன் பைகளில் நிரப்பிக் கொள்வதற்கும் அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.  ஏனெனில், தங்களின் ஆடம்பர செலவுகளுக்காக மக்களின் பணத்தைத் திருடுவதற்கும் அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இங்கேயும் சரி, உலகின் எந்த மூலையில் அவர்கள் இருந்தாலும் சரி, அவர்கள் திருடர்கள் என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை. எனவே, கொலைகாரர்கள், சித்திரவதையாளர்கள் ஆகியோரை திருப்பி அனுப்ப வேண்டுமென்று கேட்பதற்கான உரிமை கியூப மக்களுக்கு உள்ளது. அதைப்  போலவே, அனைத்து மக்களிடம் இருந்தும் திருடப்பட்ட பணத்தையும் திருப்பித்தர வேண்டும். 

மிகத்தெளிவான மனசாட்சி எனக்குள்ளது என்ற திருப்தியோடு, எனது கைகளில் எந்தவித ரத்தக் கறையும் இல்லை என்று பெருமையோடு கியூபாவிற்கு மட்டுமல்ல; அமெரிக்க கண்டத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் என்னால் தலைநிமிர்ந்து சொல்ல முடியும். [காஸ்ட்ரோவின் தலைமையில் நடைபெற்ற புரட்சிகரப் போராட்டத்தின்போது கைப்பற்றப்பட்ட போர்க் கைதிகளில் ஒருவர்கூட சுட்டுக் கொல்லப்படவில்லை என்பது மட்டுமல்ல; ஒருவர் கூட துன்புறுத்தப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், தம்மிடமிருந்த கைதிகளை குணப்படுத்த தங்களுக்கென வைத்திருக்கும் மருந்துகளை கொடுத்து உதவுவது உள்ளிட்டு கைதிகளை மிகச் சிறப்பாக நடத்தியதற்காக கியூப புரட்சியாளர்களுக்கு அந்த நாட்களில் உலகம் முழுவதிலும் நற்பெயர் கிடைத்தது மட்டுமின்றி, அமெரிக்க நாட்டிலிருந்து நிதியுதவியும் கூட கிடைத்தது] இந்த உண்மையை எந்த நாட்டிற்கு முன்பாகவும் தலைநிமிர்ந்து நின்று என்னால் சொல்ல முடியும்.

அமெரிக்க நாட்டு மக்கள் மிக மோசமான வகையில் ஏமாற்றப்படுவதற்கு தங்களை ஒப்புக் கொடுத்துவிட்டார்கள் என்பதை நினைத்துத்தான் நான் பெரிதும் வருத்தப்படுகிறேன். இந்தப் புரட்சி நசுக்கப்படுமானால், அமெரிக்க கண்டத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று நினைத்துத்தான் நான் பெரிதும் வருத்தப்படுகிறேன். ஏனென்றால், இந்தப் புரட்சி ஓர் அதிரடிப் புரட்சியோ அல்லது ஒரு ராணுவக் கும்பலின் எழுச்சியோ அல்ல; மாறாக, மக்களின், உண்மையிலேயே மக்களின், புரட்சி. அமெரிக்க கண்டத்து  மக்களின் நம்பிக்கை அதில் பிரதிபலிக்கிறது. ஏன் அப்படி? ஏனென்றால் அமெரிக்க கண்டத்திலுள்ள மிக மோசமான ஒரு பகுதியின் மீது நாம் தாக்குதல் நடத்தியிருக்கிறோம்.

நூறாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க கண்டத்தின் வரலாறு என்பது மிகவும் வெட்ட வெளிச்சமானது. பேராசை பிடித்த நபர்கள், ராணுவ வெறியர்கள், ராணுவ தளபதிகளின் அதீதமான பேராசைகளுக்கு அமெரிக்க கண்டம் பலியானது. கியூபாவில் இப்போது நடைபெற்று முடிந்துள்ள ஒரு புரட்சியைப் போன்ற ஒன்று அமெரிக்க கண்டத்திற்கும் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கும் எவ்வளவு அதிகமாகத் தேவைப்பட்டது!  நாம் வசிக்கும் இந்தப் பூமிப் பகுதியில் உள்ள நாடுகள் அனைத்திலும் உள்ள போர்க்குற்றவாளிகள் அனைவரையும் சுட்டுக் கொல்ல வேண்டுமென்று அமெரிக்க கண்டம் எவ்வளவு அதிகமாக ஆசைப்படுகிறது!  

கியூபாவின் உதாரணம் அமெரிக்க கண்டத்திற்கு எவ்வளவு அதிகமாகத் தேவைப்படுகிறது! மேலாதிக்கம் செலுத்த வேண்டுமென்ற பேராசை எதுவுமின்றி, இதர நாடுகளை சுரண்டவோ அல்லது மேலாதிக்கம் செலுத்தவோ இலக்கேதுமின்றி, ஒரு முன்னுதாரணமாக, நியாயத்திற்கான, பரந்த நீதிக்கான, உலகம் இதுவரை அறிந்ததிலேயே மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கின்ற மிகவும் தனித்துவமான ஓர் அமைப்பாக ஒரு புரட்சியை  இங்கு கொண்டு வந்தமைக்காக கியூபர்களாகிய நாம் மிகவும் பெருமைப்படலாம்.

கியூப புரட்சியைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவதெனில், முழுமையான சுதந்திரத்திற்குள் சமூகநீதிக்கான விருப்பம் நிறைந்த, மக்களின் உரிமைகளுக்கு முழுமையான மரியாதை தருகின்ற ஒன்றுதான் அது என்று கூறலாம். அமெரிக்க கண்ட த்திற்கான என்று இல்லையென்றாலும் கியூபாவின் பாரம்பரிய உரிமை என்ற வகையில் நமது புரட்சி பாதுகாக்கப்பட வேண்டும். கியூபா மட்டுமல்ல; அமெரிக்க கண்டத்திற்கே ஊறுவிளைவிக்கும் வகையில் அதனை நிர்மூலமாக்கும் ஒரு முயற்சியாக அதன் மீது பழிசுமத்த அனுமதிக்கக் கூடாது என்றும், நமது புரட்சியை பாதுகாக்க வேண்டும் என்றும் அமெரிக்க கண்டத்தில் உள்ள நேர்மையான மனிதர்களை, இந்தக் கண்டத்தின் நேர்மையான செய்தியாளர்களை, நமது நண்பர்களாக உள்ள மக்களை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். கியூப புரட்சி தலைதூக்காமல் இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். ஏனென்றால், அமெரிக்க கண்டத்தில் உள்ள எந்தவொரு நாடும் தலைதூக்கிவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் விருப்பம்.  

அதுவும்போக, அமெரிக்க கண்டத்து மக்கள் சர்வாதிகாரத்தின் கோரங்களை பார்த்தவர்கள் என்ற வகையில், அரசியல் எதிரிகளை விசாரணை ஏதுமின்றி கொத்துக் கொத்தாக கொன்றழிப்பது குறித்து கேள்விப்பட்டே பழகியவர்கள் அவர்கள் என்ற வகையில், கியூபாவின் இந்தப் புரட்சியும் கூட அதைப் போன்ற ஒன்றுதான் என்று அவர்களை நம்ப வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. வெளியுலகிற்கு அனுப்பப்படும் செய்திகள் கலகக்காரர்களின் ராணுவத்தின் நடத்தையைப் பற்றிப் பேசுவதில்லை; ஒரே ஒரு மனிதர் கூட கூட்டாக மக்களால் அடித்துக் கொலை செய்யப்படாத ஒரே புரட்சி இதுதான் என்பதைப் பற்றிப் பேசுவதில்லை; உலகின் வேறு எந்தநாட்டு மக்களையும் விட கியூபர்கள் இந்தப் புரட்சியின்போது மிகுந்த நாகரீகமாக நடந்து கொண்டார்கள் என்பதை அவர்கள் பேசுவதில்லை; சர்வாதிகாரியின் ஒரே ஒரு அடியாள் கூட சித்திரவதை செய்யப்படவில்லை; ஒரே ஒரு எதிரி கூட அடித்து நொறுக்கப்படவில்லை; பழிவாங்குவதை மக்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, இந்தக் குற்றவாளிகளை புரட்சிகர நீதிமன்றங்களுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்திய புரட்சி என்பது உலகத்திலேயே இது ஒன்றுதான் என்று அவர்கள் பேசுவதில்லை. 

ஒரு விஷயம் மட்டும் மிகவும் தெளிவானது. நீதி என்பது இல்லாமல் அமைதி நிலவ முடியாது. நீதி என்பது இல்லாமல் ஜனநாயகம் என்பது இருக்க முடியாது. எனினும் அமைதியின் பெயரால் உண்மையாகவே குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. என்னைத் தூற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களை கேட்க விரும்புகிறேன். அமெரிக்க நாடு என்ன செய்தது? ஹிரோஷிமா, நாகசாகியில் அது என்ன செய்தது? அமைதியின் பெயரால் இந்த இரு நகரங்களிலும் இருந்த பல லட்சக்கணக்கான மக்கள் மீது குண்டுகள் போடப்பட்டன. நாங்கள் எந்தக் குழந்தையையும் சுட்டுக் கொல்லவில்லை; நாங்கள் எந்தவொரு பெண்ணையும் சுட்டுக் கொல்லவில்லை; நாங்கள் எந்தவொரு முதியவரையும் சுட்டுக் கொல்லவில்லை.

இருந்தாலும் ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் பல லட்சக்கணக்கான மனிதர்கள் இறந்து போனார்கள். எதன்பெயரால்? ஆம். அமைதியை நிலைநாட்டுவதற்காக என்று சொல்லப்பட்டது. போரில் வட அமெரிக்க வீரர்களின் இறப்பைத் தடுக்க என்றும் கூட அவர்கள் சொன்னார்கள். நல்லது. நான் அந்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்குச் சொல்லிக் கொள்வேன்: கியூபாவின் விஷயங்களில் அவர்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை என்ற உண்மையை சுட்டிக் காட்டும் அதே நேரத்தில் எங்கள் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக கொடுங்கோலனின் அடியாட்களை நாங்கள் சுட்டுக் கொல்கிறோம்; அந்தக் கசாப்புக் காரர்களை சுட்டுக் கொல்கிறோம்; ஏனென்றால், நாளை அவர்கள் எங்கள் குழந்தைகளை கொலை செய்ய முடியாது என்பதற்காகவே இதைச் செய்கிறோம்.

தங்களை ஜனநாயகவாதிகள் என்று அவர்கள் அழைத்துக் கொள்ளும் நிலையில் ஜனநாயகம் என்றால் என்ன என்பதை அவர்கள் பார்க்கட்டும். மக்களின் விருப்பம் பற்றி அவர்கள் பேசி வரும் நிலையில், மக்களின் விருப்பம் என்ன என்பதை அவர்கள் பார்க்கட்டும். அவர்களே உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ளட்டும் என்றுதான் நான் கூறுகிறேன். ஒரு விஷயத்தை நான் மக்களுக்குத் தெளிவாகக் கூறிவிட வேண்டும்.  அமெரிக்க அரசு எங்களின்மீது நேரடியாகத் தாக்குதல் தொடுக்கவில்லை. அமெரிக்க நாட்டின் அனைத்து பத்திரிக்கைகளும் எங்களைத் தாக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஹெர்பெர்ட் மாத்யூஸ் உள்ளிட்டு பத்திரிக்கைகளில் ஒரு பகுதியினர் எங்களுக்கு ஆதரவாகப் பேசினார்கள். ஒருவிஷயம் மட்டும் மிகத் தெளிவானது. தற்சமயம் அமெரிக்க நாட்டு அரசு எங்களுக்கு விரோதமான அணுகுமுறையை மேற்கொள்ளவில்லை. என்றாலும் கூட அமெரிக்க நாட்டின் செயல்முறைகள் பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஒரு குறிப்பிட்ட வகையிலான பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. எங்களின் புரட்சியைக் கண்டு அஞ்சும் ஆதிக்க சக்திகள் புரட்சிக்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. மக்களிடையே புரட்சிக்கு எதிரான கருத்தை உருவாக்குவார்கள்; அதன் பிறகு நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க நாட்டு அரசை அவர்கள் கோருவார்கள்.

அமெரிக்க மக்களிடையே ஆதிக்க சக்திகளால் நடத்தப்பட்டு வரும் அவதூறு பிரச்சாரத்திற்கு பதிலாக ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அமெரிக்க நாட்டு மக்களிடம் கியூப நாட்டு மக்களுக்கு எவ்வித பகையுணர்வும் இல்லை என்பதையும், கியூபா மட்டுமின்றி அமெரிக்க நாட்டிற்கும் விரோதிகளாக இருப்பவர்கள் அந்த ஆதிக்க சக்திகள் என்பதையும் சுட்டிக் காட்டி, இந்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக எங்களை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எனது சக குடிமக்களே!  உங்கள் அனைவருக்கும் எனது நன்றியும் பாராட்டுதல்களும். இன்று நடைபெற்ற இந்த தனிச்சிறப்புமிக்க ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு, எங்களுக்கான மக்களின் ஆதரவை  இன்று நேரடியாகப் பார்த்தபிறகு, ஒரு கியூப நாட்டவனாகவும், இந்த மக்களை சார்ந்தவனாகவும் நாங்கள் பெருமைப்படுகிறோம். புரட்சிகர அரசின் பெயராலும், கிளர்ச்சிப் படையின் போராளிகளின் பெயராலும், அனைவரின் சார்பாகவும் எனது மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

(மார்க்சிஸ்ட் (ஆங்கிலம்) தொகுதி 32, 2016 அக்டோபர்-டிசம்பர் இதழில் வெளியான கட்டுரையின் சுருக்கம்)

தமிழில்: வீ. பா. கணேசன்  

ஜார்ஜ் டிமிட்ரோவும் ஐக்கிய முன்னணியும்

கே.ஜி. பாஸ்கரன்

ரஷ்யாவில் மொங்கோ நகரில் உள்ள லெனின் சமாதி போன்று, பல்கேரியாவில் சமாதி ஒன்று கட்டப்பட்டு டிமிட்ரோவின் பூத உடல் வைக்கப்பட்டு இருந்தது. 1999இல் பல்கேரியா முதலாளித்துவ நாடான பின்னர், சமாதியை இடிப்பதற்கு முடிவு செய்தனர். பல்கேரிய நாட்டின் மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சமாதி இடிக்கப்படுவதை விரும்பவில்லை. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் டிமிட்ரோவ் நினைவாலயத்தை 4 முறை குண்டு வைத்து தகர்த்தனர். டிமிட்ரோவின் பூத உடலை எரித்தனர். தற்போது அந்த இடத்தில் நினைவாலயம் இருந்ததற்கான எந்த சுவடும் இல்லை.

பல்கேரியாவின் சோஃபியாவில் முன்பிருந்த கம்யூனிச காலத்து சிலைகளை எல்லாம் அகற்றி விட்டார்கள். அவற்றில் சிலவற்றை ஓரிடத்தில் குவித்து வைத்து மியூசியமாக்கி விட்டார்கள். மியூசியத்திற்கு அருகில் சோசலிஸ்ட் ஆர்ட் மியூசியம் என்ற பெயரில் கம்யூனிச எதிர்ப்பு ஓவியங்களை காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள். அந்த ஓவியங்கள் 1989ஆம் ஆண்டு, பல்கேரியா முதலாளித்துவத்திற்கு திரும்பியதை கொண்டாடுகின்றன.  அந்த வருடத்திற்கு முந்திய வரலாற்றை அழித்துவிட முதலாளித்துவ சக்திகள் விரும்புகிறது.

முதலாளித்துவத்தின் வளர்ச்சியும் முதலாம் அகிலமும்

18ஆம் நூற்றாண்டின் நடுவில் இங்கிலாந்தில் தொழிற்புரட்சி துவங்கியது. 1776இல் அமெரிக்கா, 1789இல் பிரான்ஸ், பிரேசில், அமெரிக்க ஸ்பானிஷ் காலனி நாடுகள், ஜெர்மன், ஆஸ்திரியா, ஹங்கேரி, இத்தாலி என மேற்கு ஐரோப்பியா மற்றும் வட அமெரிக்க நாடுகள் முழுவதும் முதலாளித்துவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. உலகம் தழுவிய முறையில் முதலாளித்துவ அமைப்பு முறை நிலை பெற்றது. வேகமாக வளர்ந்து வந்த முதலாளித்துவ அமைப்பு மக்கள் மீது அளவற்ற செல்வாக்கு செலுத்தியது. 1844இல் இங்கிலாந்தில் தொழிலாளர் நிலை எனும் நூலில் ஏங்கெல்ஸ் எழுதினார்: “நவீன முதலாளித்துவ சமூகத்தில் ஒவ்வொரு நபரும் பிற நபர்களுடன் போராடாமல் வாழ முடியாது. இதுவே முதலாளித்துவத்தின் பிரதான பண்பு”. 1819இல் இங்கிலாந்தில் தேசிய உரிமைகள் சாசன அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே சாசன இயக்கம் என்ற பெயரால் தோன்றிய தொழிலாளர்களின் முதல் அரசியல் கட்சியாகும். 1847இல் கம்யூனிஸ்ட் லீக் உருவானது. இதுவே சர்வதேச முதல் கம்யூனிஸ்ட் அமைப்பு. இந்த அமைப்புதான், 17 ஆண்டுகளுக்கு பின் 1864இல் நிறுவப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அகிலத்துக்கு அடிப்படையாக இருந்தது. 1848 பிப்ரவரியில் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியானது. 1864இல் துவக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அகிலம் 1876 வரை செயல்பட்டது. முதலாம் அகிலம் சித்தாந்த ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும் நவீன தொழிலாளர் இயக்கத்திற்கு அடித்தளமிட்டது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரின் அபாரமான பணியின் மூலம் தொழிலாளி வர்க்க தத்துவ இயலை, உலகக் கண்ணோட்டத்தை, விஞ்ஞான சோசலிசத்தை பிரச்சாரம் செய்வதிலும், நடைமுறைக்கு பொருத்துவதிலும் முதல் அகிலம் பிரதானமான வெற்றியை பெற்றது.

முதல் உலகப்போரும் இரண்டாம் அகிலமும்

 1914 முதல் 1917 வரை நடைபெற்ற உலகப்போரை ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போர் என லெனின் கூறினார். தொழிலாளி வர்க்கம் ஏகாதிபத்திய நலனுக்கு எதிராகவும், புரட்சிக்காகவும் போராட வேண்டுமென கூறினார். ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்றது. ஆனால் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்க தலைமை தேசியவாதம் பேசி, ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக நின்று, யுத்தத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுத்தன. “இரண்டாம் அகிலம் சந்தர்ப்பவாதத்துடன் போராடுவதற்கு தயாராகவில்லை. சந்தர்ப்பவாதத்துடன் சமாதானமாக வாழ்வதற்கு தயாரானது. சந்தர்ப்பவாதத்தை வலுப்படுத்தியது. சந்தர்ப்பவாதத்துடன் சமரசமாக துவங்கிய இரண்டாம் அகிலம் இறுதியில் அதுவே சந்தர்ப்பவாதத்தின் உருவமாக மாறிற்று”. என ஸ்டாலின் கூறினார்.

மூன்றாம் அகிலத்தின் ஆறாவது மாநாடும் உலகச்சூழலும்

1919இல் துவக்கப்பட்ட மூன்றாவது அகிலம் 1943 வரை செயல்பட்டது. மூன்றாம் அகிலம் புரட்சிகர மார்க்சிய சித்தாந்தத்தை தொழிலாளி வர்க்க இயக்கத்தில் நிலைநிறுத்தியது. இந்த காலகட்டத்தில் உலக தொழிலாளர் இயக்கமும், தேசிய இயக்கங்களும் எதிர்கொண்ட பல சித்தாந்த பிரச்சனைகளுக்கு தீர்வினை சுட்டிக்காட்டி லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோர் மார்க்சியத்தை ஆக்கபூர்வமாக வளர்த்தெடுத்தனர். பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சியடைந்தது. கம்யூனிஸ்ட் இயக்கம் உலக புரட்சிகர சக்தியாக வடிவமெடுத்தது. மூன்றாவது அகிலத்தின் முதல் மாநாடு 1919 மார்ச் மாதம் மாஸ்கோவில் நடைபெற்றது. முதல் மாநாட்டில் தோழர் லெனின், “இந்த மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாளி வர்க்கம் எவ்வளவு வேண்டுமானாலும் எரிச்சல் அடையட்டும். லட்சக்கணக்கான தொழிலாளர்களை கொலை செய்யட்டும். இறுதி வெற்றி நமதே. உலக புரட்சியின் வெற்றியை தவிர்க்க முடியாது” என பேசினார். மூன்றாவது அகிலத்தின் 6வது மாநாடு 1928இல் மாஸ்கோவில் நடந்தது.

மூன்றாவது அகிலத்தின் 6வது மாநாடு உலக நிலைமைகளை கீழ்கண்டவாறு மதிப்பீடு செய்தது. ”ஏகாதிபத்திய தலையீட்டை தோற்கடித்ததோடு மட்டுமில்லாமல் உள்நாட்டு எதிர்ப்பு சக்திகளையும் தோற்கடித்து சோவியத் யூனியன் வெற்றிகரமாக முன்னேறியது. முதலாளித்துவ அமைப்பு கடுமையான நெருக்கடிக்கு ஆளாயிற்று. தொழிலாளர்கள் நேரடியாக புரட்சிகரப் போராட்டங்களுக்கு முற்பட்டார்கள். முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் மீது கடும் தாக்குதலை துவக்கியது. முதலாளித்துவ வர்க்க தாக்குதல் தீவிரமானதால், தொழிலாளி வர்க்கம் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. பொருளாதார மறு கட்டமைப்புக்கு சோவியத் யூனியன் முயன்றது. இதர நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கு பரவியது. 1928 கால கட்டத்தில் முதலாளித்துவ உலக தொழில் உற்பத்தி அதிகரித்தது. அதே சமயம், முதலாளித்துவ உலகத்தின் முரண்பாடுகளும் தீவிரமாகியது. மறுபுறம் சோவியத் யூனியன் தொழில்ரீதியாக வளர்ச்சி அடைந்தது.

முதலாளித்துவ உலகத்தில் உற்பத்தி சக்திகள் வளர்ந்தன. மறுபுறம் அவற்றின் சந்தைகளின் பரப்பு குறைந்தது. இந்த நிலைமை ஏகாதிபத்திய நாடுகளிடையே யுத்த சூழலை ஏற்படுத்தியது. தேசிய விடுதலை இயக்கங்களின் மீதும், சோவியத் யூனியன் மீதும் ஏகாதிபத்திய தாக்குதல் நிகழும் அபாயம் அதிகரித்தது. முதலாளித்துவ அமைப்பில் ஏற்பட்டு வந்த தற்காலிக மீட்சி முடிவுக்கு வந்தது. மீண்டும் கடுமையான நெருக்கடி தவிர்க்க முடியாதபடி உருவானது. ஒரு பக்கம் நெருக்கடி. மறுபக்கம் வர்க்கப் போராட்டங்கள்  தீவிரமடைந்தன. சோவியத் யூனியனுக்கு எதிரான யுத்தமாக இது மாறும் என மாநாடு எச்சரித்தது. 1929இல்  முதலாளித்துவத்தைக் கவ்விய நெருக்கடி ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதற்கு வழி அமைத்தது. இரண்டாம் உலக யுத்தம் துவங்குவதற்கான சூழல் உருவாகி வருவதை அகிலத்தின் ஆறாவது மாநாடு மிகச் சரியாகவே மதிப்பீடு செய்தது”.

அகிலத்தின் ஏழாவது மாநாடும் உலகைச் சூழ்ந்த பாசிசமும்

1935இல் நடந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது மாநாட்டில் பொதுச்செயலாளராக ஜார்ஜ் டிமிட்ரோவ் தேர்வு செய்யப்பட்டார். அம்மாநாட்டில் ஐக்கிய முன்னணி தந்திர கோட்பாட்டை அவர் முன்வைத்தார். பாசிச இருள் உலகை சூழ்ந்து கொண்டிருந்த காலமது. ஏகாதிபத்திய கட்டத்தில் பாசிசம் என்பது முதலாளித்துவத்தின் தன்மையும் விளைவுமாகும். ஏகாதிபத்தியம் என்பது ஏகபோக மூலதனம் என்றார் லெனின். இதில் நிதி மூலதனத்தின் இயல்பே பிற்போக்கானதாகி விடுகிறது. ஐரோப்பிய முதலாளித்துவத்தில், முதல் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட நெருக்கடி பிற்போக்கின் கோர வடிவமான பாசிசத்தை பிரசவித்தது. அரசு ஏகபோக ஒழுங்குமுறையை மேற்கொள்ளுமாறு கீன்ஸ் யோசனை கூறினார். முதலாளித்துவ நாடுகளில் அத்தகைய புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அதே சமயம்,  தொழிலாளர்கள் சுரண்டப்படுவது மேலும் அதிகரித்தது. உழைக்கும் வர்க்கத்தின் போராட்டத்தை ஈவு இரக்கமின்றி நசுக்குவதன் மூலம், புரட்சிகர சக்திகள் வளருவதை தடுக்கும் ஒரே சாதனம் என்ற வகையில், பாசிசத்தை ஏகாதிபத்திய நாடுகள் பின்பற்றத் தொடங்கின.

பிரான்சில் பாசிசம் வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு டிமிட்ரோவ் பின்வருமாறு பதிலளித்தார்: “பாசிசத்தின் வெற்றிக்கு பிரான்சும் விதிவிலக்கல்ல. 1830, 1848 புரட்சிகள் மற்றும் பாரிஸ் கம்யூன் போன்ற ஆழமான புரட்சிகர பாரம்பரியம் அம்மண்ணில் இருப்பதால், இத்தாலி, ஜெர்மனியைப் போல வெகு எளிதில் பாசிசம் வேரூன்றிவிட முடியாது. ஆனாலும், இங்கு ஹிட்லர்கள் உருவாவதற்கான அடிப்படையை மறந்து விட இயலாது. வறுமை, வேலையின்மையை எதிர்த்தும், நெருக்கடியில் இருந்து மக்களை காக்கவும், புரட்சிகர இயக்கம் மக்களைத் திரட்டி போராட வேண்டும். இப்போராட்டம் தற்காப்புக்கானதாக இல்லாமல் தாக்கும் தன்மையில் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி சாத்தியமாகும். பிற்போக்கு சக்திகளும், பாசிசமும், சமூகத்தில் அதிருப்திக்கு ஆளான மக்களை கவருவதை தடுத்து நிறுத்தினால்தான் வெற்றியை உறுதிப்படுத்த இயலும். பாசிஸ்டுகளின் தேசியவெறி, இனவெறி சித்தாந்தத்தையும், அவர்களை பின்னணியில் இருந்து இயக்கும் நிதி மூலதனத்தையும், மக்களிடம் தோலுரித்து காட்டுவதின் மூலமே வெற்றி இலக்கை அடைய முடியும். பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து மக்களை திசை திருப்பும் சக்திகளிடம் இருந்து, தொழிலாளி வர்க்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, விடாப்பிடியான போராட்டத்தின் மூலமே பாசிசத்தை வீழ்த்த முடியும்”.

பாசிசத்தின் தன்மைகளை டிமிட்ரோவ் அம்பலப்படுத்தினார்.  முதலாளித்துவ பொது நெருக்கடி அதிகரித்து வருகையில், அதற்கு எதிரான, புரட்சியை தவிர்ப்பதற்காக முதலாளித்துவம் பாசிசத்தில் புகலிடம் தேடுகிறது என்றார். சோசலிசப் புரட்சியை நெருங்கும்போதுதான் பாசிசம் தாக்குதலை தொடங்கும் என நினைப்பது தவறு. உண்மையில் அதற்கு முன்பே தொழிலாளி வர்க்க ஸ்தாபனங்களை தாக்கி அழித்து விட பாசிசம் முயல்கிறது என்றார் டிமிட்ரோவ். நிதி மூலதனத்தின் கடைக்கோடி பிற்போக்கும், கடைக்கோடி இனவெறியும், கடைக்கோடி ஏகாதிபத்திய தன்மையும் கொண்ட பகுதிகளின், பகிரங்கமான, பயங்கரவாத, சர்வாதிகார முறையே பாசிசம் என்றார். பாசிசம், ரத்தவெறி பிடித்த ஏகாதிபத்திய வேட்டை விலங்கு; மிகக்கொடிய பகைவன் என்றார். பாசிசம் முதலாளித்துவ ஜனநாயகத்தை தாக்குகிறது. உழைக்கும் மக்கள் மீதான அநாகரிகமான சுரண்டல் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், உழைக்கும் மக்களை நசுக்கவும் முயல்கிறது. எனவே, முதலாளித்துவ நாடுகளில் உள்ள உழைக்கும் மக்கள் இன்றைய தினம் உறுதியாக தேர்ந்தெடுக்க வேண்டியது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அல்லது முதலாளித்துவ ஜனநாயகம், இரண்டில் ஒன்றை அல்ல. முதலாளித்துவ ஜனநாயகம் அல்லது பாசிசம், இரண்டில் ஒன்றைத்தான் என்றார்.

பாசிசம் எவ்வாறு மக்களை கவருகிறது என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்: “மக்களின் கோரிக்கை, தேவைகளை பற்றி வாய்ச்சவடால் அடிப்பது, தேசத்தின் கெளரவத்தை காப்பாற்ற தேசியவெறி உணர்வுகளை தூண்டுவது, முந்தைய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் மீது மக்களுக்குள்ள வெறுப்பை பாசிசம் பயன்படுத்திக் கொள்கிறது” என்றார். முதலாளித்துவ சமூகத்தில் அரசியல் அமைப்புகள் படிப்படியாக பாசிச மயமாவதையும், பாசிசத்தின் நேரடி தாக்குதலையும் கம்யூனிஸ்டுகள் கவனத்தில் கொள்ள வேண்டுமென எச்சரிக்கை செய்தார்.  பாசிசத்தை முறியடிக்க பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை கட்ட வேண்டிய அவசியத்தையும் டிமிட்ரோவ் வலியுறுத்தினார்.

முரண்பாடுகளும் ஐக்கிய முன்னணியும்

இயற்கையும், சமூகமும் முரண்பாடுகளின் தொகுப்பு என்பதே இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டம் என்கிறார் மாவோ. முரண்பாட்டின் பிரதான அம்சத்திற்கும், பிரதானமற்ற அம்சத்திற்கும் இடையிலான வேறுபாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் மாவோ. கட்சியின் 23வது காங்கிரசின் நகல் அரசியல் தீர்மானம், தீவிரமாகி வரும் நான்கு முரண்பாடுகளையும் கோடிட்டு காட்டுகிறது. இந்திய அரசியலில் முன்னுக்கு வந்துள்ள முரண்பாடுகளையும் தீர்மானம் விரிவாக விளக்குகிறது. இந்துத்துவா – கார்ப்பரேட் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் வெற்றிக்கு இந்துத்துவா வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும், நவதாராளவாத கொள்கைகளுக்கு எதிராகவும், ஒரே நேரத்தில் போராட்டங்களை முன் எடுக்க வேண்டும் என தீர்மானம் வலியுறுத்துகிறது.

கட்சியை வலுப்படுத்துவதற்கு ஐக்கிய முன்னணி உத்தி அவசியமானவை. பொதுவான பிரச்சனைகளில் வெகுஜன இயக்கங்களை கட்டி எழுப்புவதற்கு முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் ஒன்றுபட்ட நடவடிக்கைகளை முன் எடுப்பதற்கு ஐக்கிய முன்னணி உத்தியை பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட அரசியல் பிரச்சனைகளில் பிரச்சாரங்களையும், போராட்டங்களையும், மக்களைத் திரட்டவும் அரசியல் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட வேண்டும். தேர்தல் களத்தில் நமது உடனடி நோக்கங்களை அடைவதற்கோ, அரசியல் சூழ்நிலையில் மாற்றத்தை உருவாக்கவோ முதலாளித்துவ கட்சிகளுடன் பொதுவான உடன்பாட்டை உருவாக்குவதும் ஓர் ஐக்கிய முன்னணி உத்தியே. ஆயினும், ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு தனது சுயேட்சையான செயல்பாட்டிற்கு பங்கம் ஏற்படாத வண்ணம் ஐக்கிய முன்னணி உத்தி உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும். முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டு மேடைகள் உருவாக்கப்பட்டாலும், கட்சி தனது சொந்த அரசியல் நிலைபாட்டை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் தொய்வின்றி செயல்பட வேண்டும். முதலாளித்துவ கட்சிகளின் அரசியல் நிலைபாட்டிலிருந்து கட்சியின் வேறுபட்ட நிலைபாடுகளை சமரசமின்றி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஐக்கிய முன்னணி உத்தியின் மற்றொரு பிரதான அம்சம் என்னவெனில், இதர முதலாளித்துவ கட்சிகளுக்கு பின்னால் திரண்டுள்ள மக்களை அணுகுவதற்கும், நம் பக்கம் திரட்டுவதற்கும் உதவுகிறது என்பதாகும்.  முதலாளித்துவக் கட்சிகளின் செல்வாக்கின் பிடியில் உள்ள மக்களை வெல்வதன் மூலமும், கட்சி மற்றும் ஜனநாயக சக்திகளின் செல்வாக்கின் கீழ் அவர்களைக் கொண்டுவருவதன் மூலமும், வர்க்க சக்திகளின் பலாபலனில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஐக்கிய முன்னணியின் அவசியத்தையும், அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளையும் 17வது கட்சி காங்கிரசின் அரசியல் – ஸ்தாபன அறிக்கை விரிவாக ஆய்வு செய்துள்ளது.

                  பாசிசத்திற்கு எதிராக கட்டப்படும் ஐக்கிய முன்னணியில் தொழிலாளர்களை ஒன்றுபடுத்த வேண்டியதின் அவசியத்தை டிமிட்ரோவ் விரிவாக எடுத்துரைக்கிறார். 1982 முதல் நடைபெற்று வரும் தொழிற்சங்க வேலைநிறுத்த போராட்டங்களின் மூலம் தொழிலாளர் ஒற்றுமை மேம்பட்டு வருவதை தோழர் தபன் சின்ஹா தனது 2022 மார்ச் மாத வேலைநிறுத்தம் குறித்த கட்டுரையில் குறிப்பிடுகிறார். தொழிலாளி வர்க்கம் தனது நேச சக்தியான விவசாய வர்க்கத்தை அணி திரட்டுவதில் அக்கறையோடு செயல்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்துகிறார். குறிப்பாக பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணியில் இளைஞர்களையும், பெண்களையும் திரட்டாமல் அப்போராட்டம் வெற்றியடையாது என்கிறார்.

2022 ரஷ்ய – உக்ரைன் போர்:ஒரு பார்வை!

அன்வர் உசேன்

ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் உலகம் முழுவதும் பல விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஒரு புறம் புடின் இட்லருக்கு இணையாக விமர்சிக்கப்படுகிறார். இன்னொரு புறம் அவரது நடவடிக்கைகள் அனுதாபத்துடன் பார்க்கப்படுகின்றன. போர் என்பது எப்படியாக இருந்தாலும், எங்கே நடந்தாலும், அது மனித உயிர்களைப் பலி வாங்குகிறது. அரும்பாடுபட்டு உருவாக்கிய உற்பத்தி சாதனங்களும் வளங்களும் இமைப்பொழுதில் அழிக்கப்படுகின்றன. போரில் ஈடுபடும் தேசங்களில், உழைக்கும் மக்களே கடும் இழப்புக்கு ஆளாகின்றனர். இது வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த இரு தேச உழைப்பாளிகளுக்கும் பொருந்தும். ஆனால், சுரண்டும் வர்க்கங்கள் போர்களுக்கு ஆதரவான கருத்துக்களை கட்டமைப்பதில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அவற்றில் இருந்து விலகி நின்று போர்களை ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்.

இப்போதைய சூழலில், நாம் ஒரு முக்கியமான உண்மையை கணக்கிலெடுப்பது அவசியம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 42% பேர் ரஷ்யாவை இன்னமும் அதுவொரு கம்யூனிஸ்ட் நாடு என்று எண்ணுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவிலும் பலர் அவ்வாறு நினைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இன்றைய ரஷ்யா ஒரு சோசலிச நாடு அல்ல. அங்கு நடக்கும் ஆட்சி முதலாளித்துவ ஆட்சியே. விளாடிமிர் புடின் அந்த  முதலாளித்துவ நாட்டின் தலைவரே.

வரலாற்று பின்னணி:

1917ம் ஆண்டு சோவியத் புரட்சி வெற்றியடைந்த பிறகு, வெவ்வேறு காலகட்டங்களில் அதனோடு 14 குடியரசுகள் இணைந்துகொண்டன. அவை:

1. உக்ரேனியா

2. பைலோரஷ்யா

3. உஸ்பெகிஸ்தான்

4. கஜகஸ்தான்

5. ஜார்ஜியா

6. அஜர்பைஜான்

7. லிதுவேனியா

8. மால்டோவா

9. லத்திவியா

10. எஸ்தோனியா

11. கிர்கிஸ்தான்

12. தஜிகிஸ்தான்

13. துர்க்மெனிஸ்தான்

14. அர்மீனியா

இதுவே பின்னர்  ‘சோவியத் ஒன்றியமாக’ அமைந்தது. ரஷ்ய மொழியோடு சேர்த்து, மேற்சொன்ன 14 தேசங்களின் மொழிகளும் அதிகாரப்பூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன. 15 தேசிய இனங்களை உள்ளடக்கியிருந்ததால் அவ்வப்பொழுது சில முரண்பாடுகள் ஏற்பட்டாலும், பொதுவாக, சோவியத் குடி மக்கள் எனும் அடையாளம் உருவானது. மேலும், சோவியத் யூனியனின் அரசியல் சட்டம் சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியிருந்தது. இதன் பொருள் என்னவெனில், எந்த ஒரு குடியரசும் தாம் விரும்பினால் ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லலாம். இந்த உரிமையை உருவாக்க லெனினும், ஸ்டாலினும் கடுமையாக பாடுபட்டனர். இந்த பிரச்சனையில் லெனினுக்கும், ஜெர்மன் கம்யூனிஸ்டு ரோசா லக்சம்பர்குக்கும் இடையே கடும் விவாதங்கள் நடைபெற்றன. தேசிய இனப்பிரச்சனைகளில் கம்யூனிஸ்டுகளின் நிலையை புரிந்து கொள்ள முயல்பவர்களுக்கு லெனின்-ரோசா லக்சம்பர்க் விவாதங்கள் ஒரு புதையல் எனில் மிகை அல்ல.

சோசலிச சமூக அமைப்பின்  நன்மைகளான வேகமான தொழில் வளர்ச்சி/ விவசாய முன்னேற்றம்/ இலவச கல்வி மற்றும் மருத்துவம்/ உழைக்கும் மக்களின் உரிமைகள் அனைத்தையும் இந்த 14 குடியரசுகளும் பெற்றன. எனினும், 1970களில் சோவியத் ஒன்றியத்தில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி தேக்கமுற்றது. 1980களில் முதலாளித்துவ உலகுடன் ஒப்பிடும் பொழுது அது பின் தங்கியிருந்தது. மின்னணு புரட்சி/ கணிணி மயம் என முதலாளித்துவம் தனது உற்பத்தி சக்திகளை வேகமாக வளர்த்தெடுத்தது. இதனால், கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் சோவியத் ஒன்றியம் இரு சவால்களை சந்தித்தது. ஒன்று, அதன் பொருளாதாரம் கடுமையாக பின்னடைவை எதிர் கொண்டது. இன்னொருபுறம், சோசலிச ஜனநாயகம் சிதைவுகளுக்கு உள்ளானது. ஏகாதிபத்தியமும் தனது தொடர் தாக்குதல்களை பல முனைகளில் முன்னெடுத்தது.

இந்தச் சூழலில் சோசலிசம் பின்னடைவை சந்திப்பதற்கு சற்று முன்னதாக லிதுவேனியா/லத்திவியா/எஸ்தோனியா ஆகிய மூன்று குடியரசுகளும் பிரிந்து போயின. சோசலிசம் பின்னடைவை சந்தித்த பொழுது, அனைத்து குடியரசுகளும் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து, தம்மை தனி சுதந்திர தேசங்களாக அறிவித்து கொண்டன. இதில் உக்ரைனும் அடங்கும். எனினும், இந்த நிகழ்வு வேறு ஒரு பிரச்சனையை உள்ளடக்கியிருந்தது. சோவியத் ஒன்றியம் இருந்த பொழுது, ரஷ்ய மக்கள் வேறு குடியரசுகளுக்கு புலம்பெயர்வதும், ஏனைய குடியரசு மக்கள் ரஷ்யாவுக்குள் வருவதும் பரவலாக நடந்தது. குறிப்பாக, இந்த பரஸ்பர புலம்பெயர்வு ரஷ்யா/உக்ரைன்/பைலோரஷ்யா ஆகிய மூன்று குடியரசுகளிடைய வலுவாக நடந்தது. இதன் விளைவுதான், இன்றைய உக்ரைனின் கிழக்கு பகுதியில் சுமார் 20% பேர் ரஷ்ய மொழி பேசுபவர்களாக உள்ளனர்.

வாக்குறுதி மீறிய ஏகாதிபத்தியம்

அந்த சமயத்தில், சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த எந்த தேசத்தையும் நேட்டோ எனும் ராணுவ அமைப்புக்குள் இணைக்கக்கூடாது எனவும், ரஷ்யாவின் எல்லை நாடுகளில் நேட்டோ ராணுவத்தையோ அல்லது ஆயுதங்களையோ நிறுத்தக் கூடாது எனவும், ரஷ்யா அமெரிக்காவிடம் முன்வைத்தது. அன்றைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர் “ரஷ்யா இருக்கும் கிழக்கு நோக்கி ஒரு இன்ச் கூட நேட்டோ விரிவாக்கம் செய்யப்பட மாட்டாது” என வாக்குறுதி அளித்தார். ஆனால் ஏகாதிபத்தியத்தின் பல வாக்குறுதிகள் போல் இதுவும் காற்றில் விடப்பட்டது.  

நேட்டோ என்ற அமைப்பு இரண்டாம் உலகப்போர் முடிந்த  ஆண்டுகளில் (1949) அமெரிக்கா/ பிரிட்டன்/ பெல்ஜியம்/ கனடா/ டென்மார்க்/ பிரான்ஸ்/ ஐஸ்லாந்து/ இத்தாலி/ லக்ஸம்பர்க்/ நெதர்லாந்து/ நார்வே/ போர்ச்சுகல் ஆகிய நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு ஆகும். அமெரிக்காவே இந்த அமைப்பின் தலைமை என்பதை கூறத் தேவையில்லை. பின்னர் 1950களில், நேட்டோவுடன் மேற்கு ஜெர்மனி/கிரீஸ் ஆகிய நாடுகளும் 1982இல் ஸ்பெயினும் இணைக்கப்பட்டன. கம்யூனிஸ்ட் நாடுகளிடமிருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவே இந்த கூட்டமைப்பு என்று நேட்டோ கூறியது. எனவே அதன் எதிர்வினையாக சோவியத் யூனியன்/ கிழக்கு ஜெர்மனி/ அல்பேனியா/ போலந்து/ செக்கோஸ்லேவாகியா/ ஹங்கேரி/ பல்கேரியா/ ருமேனியா ஆகிய சோசலிச நாடுகள் தங்களுக்குள் வார்சா ஒப்பந்த அமைப்பு எனும் கூட்டமைப்பை உருவாக்கின. எனினும், இந்தியா/எகிப்து/யுகோஸ்லவியா/கியூபா/வியட்நாம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த இரு அமைப்பிலும் சேராமல் அணிசேரா நாடுகளின் அமைப்பை உருவாக்கின.

1991இல் சோவியத் யூனியனும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோசலிசத்தை கைவிட்ட பிறகு வார்சா ஒப்பந்த அமைப்பும் இல்லாமல் ஆகியது. நாளடைவில் அணிசேரா அமைப்பும் செயலிழந்துவிட்டது. ஆனால் நேட்டோ தொடர்ந்து விரிவடைந்தது. முதலாளித்துவ நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, தாங்கள்தான் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மேலாதிக்கம் பெற வேண்டும் என்று கொண்டிருந்த பேராசையின் வெறிதான் இதற்கு அடிப்படையான காரணம். இந்த வெறியின் ராணுவ முகம்தான் நேட்டோ. எனவே, கிட்டத்தட்ட அனைத்து முன்னாள் சோசலிச நாடுகளையும் நேட்டோ தனது வளையத்திற்குள் கொண்டு வந்தது. பின்னர் எஸ்தோனியா/லத்திவியா/லிதுவேனியா ஆகிய முன்னாள் சோவியத் குடியரசுகளையும் சேர்த்தது. இறுதியாக 2008ஆம் ஆண்டு உக்ரைன் மற்றும் ஜார்ஜியாவை இணைக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியது. அன்றிலிருந்துதான் ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் ஆழமான பிரச்சனைகள் உருவாயின. இந்த பிரச்சனைகளின் மையமாக உக்ரைன் உருவெடுத்தது.

நேட்டோவை நாங்கள் விரிவாக்கம் செய்ய மாட்டோம் என ஒரு போதும் உறுதி அளிக்கவில்லை என இப்பொழுது அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இது வடிகட்டிய பொய் ஆகும். 1991ஆம் ஆண்டே போலந்து நேட்டோவில் சேர விண்ணப்பித்தது. ஆனால் ஜெர்மனி இதனை கடுமையாக எதிர்த்தது. இது குறித்து அமெரிக்கா/ ஜெர்மனி/ பிரான்சு/பிரிட்டன் ஆகிய நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் 06.03.1991இல் பான் நகரில் நடந்தது. அதில் ஜெர்மனியின் பிரதிநிதியான  ஜுர்கன் ஸ்ரோபோக் கீழ்கண்டவாறு கூறினார்:

“ஜெர்மனியின் எல்பே நதிக்கு அப்பால் நேட்டோவை விரிவாக்குவது இல்லை எனும் உறுதிமொழியை நாம் ரஷ்யாவுக்கு தந்துள்ளோம். எனவே போலந்தின் கோரிக்கையை நாம் ஏற்க இயலாது”.

1992ஆம் ஆண்டிலிருந்தே பல அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நேட்டோவை கிழக்கே விரிவாக்கம் செய்வது ரஷ்யாவை போருக்கு தள்ளிவிடும் என எச்சரித்துள்ளனர். அந்த எச்சரிக்கைகளில் சில:

 • 1997ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் ராணுவ அமைச்சராக இருந்த ராபர்ட் மக்னமாரா சி.ஐ.ஏ. இயக்குநர் ஸ்டேன்ஸ் டர்னர் உட்பட 12க்கும் அதிகமானவர்கள் இணைந்து பில் கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில் “நேட்டோவை கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்வது வரலாற்று பிழையாக மாறி விடும்” என எச்சரித்தனர்.
 • பனிப்போர் காலத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுத்தவர்களில் ஒருவரான ஜார்ஜ் கேனன் 1990களிலேயே கீழ்கண்டவாறு கூறுகிறார்:

“கிழக்கு பகுதியில் நேட்டோவை விரிவாக்கம் செய்வது பனிப்போரின் பிந்தைய காலகட்டத்தின் மிகப்பெரிய தவறான கொள்கையாகும். இது பல விரும்பத்தகாத விளைவுகளை உருவாக்கும். அமெரிக்க-ரஷ்யா உறவை சீர்குலைத்துவிடும். ரஷ்யா நிரந்தர எதிரியாக ஆகிவிடும்”

 • ரஷ்ய விவகாரங்கள் குறித்த ஆய்வாளர் ஸ்டீபன் கொஹேன் 2014ஆம் ஆண்டு கூறினார்:

“நாம் நேட்டோவை ரஷ்யாவை நோக்கி விரிவாக்கம் செய்வது என்பது பிரச்சனையை ராணுவமயமாக்கிவிடும். ரஷ்யா பின்வாங்காது. வாழ்வா-சாவா போராட்டமாக ரஷ்யா இதனை பார்க்கும்”

 • அமெரிக்காவின் பிரபல வெளியுறவு கொள்கை நிபுணர் ஹென்ரி கிசிங்கர் 2014இல் கூறினார்:

“உக்ரைனை நேட்டோவில் சேர்க்க கூடாது. அவ்வாறு சேர்த்தால் உக்ரைன் கிழக்கு- மேற்கத்திய நாடுகளின் போர்க்களமாக மாறிவிடும். ரஷ்யா நிரந்தரமாக எதிர் தரப்பில் நிற்கும் ஆபத்து உருவாகும்.”

 • 2008ஆம் ஆண்டில் சி.ஐ.ஏ.வின் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் அமெரிக்க தலைமையகத்துக்கு அனுப்பிய ஒரு குறிப்பில் கீழ்கண்டவாறு கூறுகிறார்:

“உக்ரைனை நேட்டோவில் இணைப்பது குறித்து உக்ரைன் மக்களிடையே செங்குத்தான பிளவுபட்ட கருத்து நிலவுகிறது என ரஷ்யா கவலை அடைந்துள்ளது என நமது நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உக்ரைனில் உள்ள ரஷ்ய இன மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இத்தகைய பிளவு கடும் விளைவுகளை உருவாக்கும். மோசமான சூழலில் இது உள்நாட்டு போருக்கும் வழிவகுக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில் உக்ரைனில் தலையிடும் முடிவு எடுக்க வேண்டி வரும் என ரஷ்யா கவலைப்படுகிறது. அத்தகைய சூழலை ரஷ்யா விரும்பவில்லை.”

இவ்வளவு எச்சரிக்கைகளையும் அறிவுறுத்தல்களையும் மீறித்தான், நேட்டோ விரிவாக்கம் திட்டமிடப்பட்டது. அமெரிக்க அரசியல் தலைமை தனது மேலாதிக்கத்தை ஐரோப்பாவில் நிறுவுவதற்காக, ரஷ்யாவை போருக்கு தள்ளினால் தவறு இல்லை எனும் முடிவுக்கு வந்தது என்பதையே இது காட்டுகிறது. அமெரிக்க ஏவுகணைகள் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் எல்லையிலும் படைகள் நிறுத்தப்படும் என்றால், அது தனது பாதுகாப்பிற்கு ஆபத்து என்று  ரஷ்யா கருதுகிறது. உக்ரைன் எல்லையிலிருந்து ஏவுகணைகள் 10 முதல் 15 நிமிடங்களுக்குள் மாஸ்கோவை தாக்கிவிடும். 2008ஆம் ஆண்டு உக்ரைனையும் ஜார்ஜியாவையும் நேட்டோவில் இணைக்கும் அமெரிக்காவின் விருப்பம் ரஷ்யாவிடம் கடும் எதிர்ப்பை விளைவித்தது. அதே போல் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சமீபத்தில் அணுஆயுதங்களை நிறுவ உக்ரைன் முனைப்புடன் உள்ளது என பேசினார். இவையும் ரஷ்யாவின் அச்சத்தை அதிகரித்தன.

உக்ரைன் அரசியலில் அமெரிக்க தலையீடு

உக்ரைன் நாட்டின் உள் அரசியலில் ஒரு திருப்புமுனையாக 2014ஆம் ஆண்டினை பார்க்கலாம். அதற்கு முன்பாக, 2010இல் நடந்த தேர்தலில் விக்டர் யோனுகோவிச் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதே உக்ரைன் மேற்கு பகுதியும் கிழக்கு பகுதியும் பல்வேறு பண்பாடு, அரசியல் அம்சங்களில் பிளவுபட்டிருந்தன. கிழக்கு பகுதியில் வாழும் மக்கள் ரஷ்ய மொழியும், மேற்கு பகுதி மக்கள் உக்ரைன் மொழியும் பெரும்பான்மையாக பேசுகின்றார்கள். எனவே, கிழக்கு பகுதி மக்கள் ரஷ்யாவின் ஆதரவாளர்களாகவும், மேற்கு பகுதி மக்கள் ரஷ்ய எதிர்ப்பாளர்களாகவும் மாறும் வகையில் பல கருத்துகள் கட்டமைக்கப்பட்டன. இதில் அமெரிக்காவின் பங்கு மிக முக்கியமானது.

ஜனாதிபதி யோனுகோவிச் தொடக்கத்தில் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டினார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அமெரிக்க முதலீடுகள் உக்ரைனுக்கு வரவில்லை. எனவே அவர் ரஷ்யாவுடன் முதலீடுகளுக்காகவும், பொருளாதார ஒத்துழைப்புக்காகவும் ஒப்பந்தம் போட்டார். உக்ரைன் தனது பிடியிலிருந்து நழுவுகிறது என்பதை உணர்ந்த அமெரிக்கா, மேற்கு உக்ரைன் மக்களை யோனுகோவிச்சுக்கு எதிராக தூண்டியது. 2014ஆம் ஆண்டில் ஏராளமான கலவரங்கள் நடைபெற்றன. இந்த கலவரங்களை உருவாக்குவதில் உக்ரைன் நாட்டில் இயங்கும் நாஜி ஆதரவாளர்கள் முக்கிய பங்கை ஆற்றினார்கள். “மைதான் புரட்சி” என ஊடகங்களால் அழைக்கப்பட்ட இந்த கலவரங்களின் காரணமாக யோனுகோவிச் பதவி விலகினார். பின்னர் பதவியேற்ற ஜனாதிபதிகள் கிழக்கு உக்ரைன் மக்களுக்கு எதிராக விஷம் கக்கினார்கள். ரஷ்யா மீது வன்மத்தை வெளிப்படுத்தினார்கள். இப்படியான பின்னணியில் கிரீமியா தீவினை ரஷ்யா தன்னோடு இணைத்து கொண்டது. ஏனெனில் ரஷ்யாவின் முக்கிய கப்பற்படை தளம் அங்கு இருந்தது.

டோன்பாஸ் எனப்படும் பகுதியில் உள்ள லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் ஆகிய மாநிலங்களில் உள்ள  ரஷ்ய மொழி பேசும் மக்கள் தங்களுக்குள் பொது வாக்கெடுப்பு நடத்தி தங்களை சுயாட்சி பிரதேசங்களாக அறிவித்து கொண்டன. உக்ரைனில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் தாக்கப்படுவது ரஷ்யாவில் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அவர்களுக்கு ரஷ்ய அரசாங்கம் உதவ வேண்டும் எனும் கருத்து மக்களிடையே இருந்தது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண 2015ஆம் ஆண்டு மின்ஸ்க் நகரில் உக்ரைன்/ரஷ்யா/பிரான்ஸ்/ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையே பேச்சு வார்த்தைகள் நடந்தன. இறுதியில் ஒரு  ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்;

 • லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் பகுதிகளுக்கு உக்ரைன் அரசாங்கம் சுயாட்சி வழங்குவது. ரஷ்ய மொழியை அங்கீகரிப்பது.
 • லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் மக்கள் பிரிவினை எண்ணத்தை கைவிடுவது. உக்ரைனின் ஒன்றுபட்ட தன்மையை பாதுகாப்பது.

எனினும் இந்த ஒப்பந்தம் அமலாக்கப்படவில்லை. நடைமுறையில் ரஷ்ய மொழி உதாசீனப்படுத்தப்பட்டது. லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் மக்கள் மீது தாக்குதல்களும் தொடர்ந்தன. அன்றிலிருந்து கிழக்கு உக்ரைன் பகுதி மக்கள் மீது உக்ரைன் ராணுவமும், நாஜி சித்தாந்தவாதிகளும் ஏராளமான தாக்குதல்களை நடத்தினர். கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 18,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாஜிக்களை ஊக்கப்படுத்திய நேட்டோ

உக்ரைனில் கடந்த 10 ஆண்டுகளாக வலதுசாரி பயங்கரவாதிகளும் நாஜி சித்தாந்தவாதிகளும் பெரும் எண்ணிக்கையில் உருவாகியுள்ளனர். இவர்களை ஆதரிப்போர் உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். நேட்டோவின் ஆய்வு அமைப்பான “அட்லாண்டிக் கவுன்சில்” இவர்களை ஆதரித்தும் புகழ்ந்தும் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

நாஜி அமைப்புகளில் முக்கியமானது “அசோவ் பட்டாலியன்” என்ற அமைப்பாகும். அசோவ் பட்டாலியன் கோட்பாடுகள் என்ன?

 • உக்ரைன் மக்கள் பரிசுத்த வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள்.
 • கிழக்கு உக்ரைனில் வசிக்கும் ரஷ்யர்கள் அசுத்தமான ரத்தம் உடையவர்கள். அவர்கள் உக்ரைனின் பரிசுத்த ரத்தத்தை மாசுபடுத்த முயல்கின்றனர்.
 • எனவே கிழக்கு உக்ரைன் மக்களை அடிமைப்படுத்த வேண்டும். தேவை எனில் அவர்களை படுகொலை செய்ய வேண்டும்.

இட்லரின் பல்வேறு நாஜி அடையாளங்களை இந்த அமைப்பு பயன்படுத்துகிறது. இத்தகைய கோட்பாடுகளை கொண்ட அமைப்பை நேட்டோ அமைப்பு ஆதரித்தது;  இன்றும் ஆதரிக்கிறது. அசோவ் பட்டாலியன் என்ற இந்த அமைப்புதான் 2014ஆம் ஆண்டில் நடந்த கலகங்களில் முக்கிய பங்கை ஆற்றியது. பின்னர் உக்ரைன் ராணுவத்தின் ஒரு பகுதியாக அது இணைக்கப்பட்டது. டோன்பாஸ் பகுதியில் வாழும் ரஷ்ய மொழி சிறுபான்மையினரை கொன்று குவித்ததும் இந்த அமைப்புதான். இந்த அமைப்பின் கொடூரங்கள் அனைத்தும் நேட்டோ அமைப்புக்கு நன்றாக தெரியும். சில அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்த வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தனர். அமென்ஸ்டி மனித உரிமை அமைப்பும் இந்த அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என கோரியது. அமென்ஸ்டி தனது அறிக்கையில் கூறியது:

“பயங்கரவாத அமைப்புகள் செயல்படுத்தும் கட்டுப்படுத்தப்படாத வன்முறையில் உக்ரைன் சிக்கி மூழ்கி கொண்டுள்ளது. கொடூரங்களை நிகழ்த்தும் இந்த அமைப்புகள் எவ்வித தண்டனைக்கும் உள்ளாக்கப்படுவது இல்லை.”

ஆனால், “அசோவ் பட்டாலியன்தான் நாம் ரஷ்யாவுக்கு தரும் பரிசு” என அட்லாண்டிக் கவுன்சில் கருத்து தெரிவித்தது. எத்தகைய வன்மம் நேட்டோவுக்கு உள்ளது என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

அமெரிக்க செனட் நாடாளுமன்ற உறுப்பினர் பாப் மெனென்டஸ் உக்ரைனுக்கு 500 மில்லியன் டாலர் அதாவது சுமார் 3,800 கோடி ரூபாய் அளவுக்கு ஆயுதங்களை வழங்கிட தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இந்த ஆயுதங்கள் நாஜிக்களின் கைகளுக்கு செல்வதை தடுக்க என்ன வழிமுறைகள் உள்ளன என அவரிடம் கேட்ட பொழுது “நாம் ஏன் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்?” என பதில் கூறினார்.

புடினின் தேசிய வெறி

ரஷ்யாவை நேட்டோ சுற்றி வளைப்பதையும் உக்ரைனில் உள்ள ரஷ்ய மொழி சிறுபான்மையினரை பாதுகாப்பதும் முக்கியம்! இது குறித்த புடினின் கவலை நியாயமானது; அது ரஷ்ய மக்களின் கவலையை பிரதிபலிக்கிறது. ஆனால் தனது போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்த லெனின் மற்றும் ஸ்டாலின் முன்னெடுத்த தேசிய இனக் கொள்கைகளை புடின் இழிவுபடுத்துகிறார். உக்ரைன் எனும் நாடு வரலாற்றில் இருந்ததே இல்லை எனவும், அதனை உருவாக்கியது லெனினும் ஸ்டாலினும்தான் எனவும் புடின் கூறுகிறார்.  சுயநிர்ணய உரிமை தந்தது மிகப்பெரிய தவறு எனவும், அதனால்தான் சோவியத் ஒன்றியம் சிதறுண்டது எனவும் குற்றம் சாட்டுகிறார். “மகா ரஷ்யா” எனும் கோட்பாட்டையும் வலியுறுத்தும் புடின், உக்ரைன் ஒரு தேசமாக நீடிக்க உரிமை இல்லை எனவும் கூறுகிறார்.

புடின் போன்ற முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு, தேசிய பிரச்சனையில் கம்யூனிஸ்டுகள் முன்வைக்கும் கோட்பாடுகள் பிடிக்காமல் போவதில் ஆச்சர்யம் இல்லை. ஜார் மன்னனின் ரஷ்ய சாம்ராஜ்யம் பல தேசிய இனங்களை அடிமைப்படுத்தியிருந்தது. எனவேதான் “ரஷ்யா தேசிய இனங்களின் சிறைச்சாலை” என லெனின் வர்ணித்தார். சுயநிர்ணய உரிமை வழங்கப்படாவிட்டால் எந்த ஒரு குடியரசும் சோவியத் ஒன்றியத்தில் இணைந்திருக்காது. சோவியத் ஒன்றியம் வெறும் ரஷ்யாவாகவே இருந்திருக்கும்.

தற்போது, “மகா ரஷ்யா” எனும் சாம்ராஜ்யத்தை உருவாக்கும் எந்த வாய்ப்பும் இல்லை என்பதை புடின் உணர மறுக்கிறார். சோவியத் ஒன்றியம் சிதறுண்டது மனித குலத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுதான். ஆனால் அதற்கு காரணம் சுயநிர்ணய உரிமை அல்ல.

ரஷ்யாவின் ராணுவ பாதுகாப்பு மற்றும் உக்ரைனில் உள்ள ரஷ்ய மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எனும் இரு நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட  வேறு எந்த இலக்கையும் உக்ரைன் படையெடுப்பு மூலம் சாதிப்பதற்கு புடின் முயன்றால், அது விரும்பத்தகாத விளைவுகளையே தோற்றுவிக்கும். உலகின் இரு மிகப்பெரிய தேசங்களான சீனாவும், இந்தியாவும் மற்றும் சில நாடுகளும் ரஷ்யாவின் நியாயமான கவலையை ஏற்கிறார்கள். அதே சமயம், புடினின் நோக்கம் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி நீளுமானால், உலக நாடுகளின் எதிர்ப்பையே அவர் சம்பாதிக்க நேரிடும்.

பாசிச எதிர்ப்பு போரில் உலக மக்களின் ஆதரவை பெற்றார் ஸ்டாலின். ஆனால் புடின் ஸ்டாலின் அல்ல. உக்ரைனில் ஒருவேளை ரஷ்யா வெற்றியடையுமானால், அதுவும் ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும்.

முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மை முகம்

ரஷ்ய படைகள் உக்ரைனில் நுழைந்ததுமே பல முதலாளித்துவ  நாடுகளும் பொருளாதாரத்  தடைகளை விதித்தன. இது எதிர்பார்த்த ஒன்றுதான். எனினும், அதன் மூர்க்கத்தனம் எல்லையில்லாமல் விரிவடைந்தது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தங்களை திரும்ப பெற்றன. ரஷ்யாவில் செயல்பட்ட ஷெல் போன்ற நிறுவனங்கள் தமது செயல்பாட்டை நிறுத்தின. ஆப்பிள் நிறுவனம்/சாம்சங்/வால்வோ இப்படி பலநிறுவனங்கள் வெளியேறின. ரஷ்ய வங்கிகள் ‘ஸ்விப்ட்’ எனப்படும் நிதி பரிவர்த்தனையை பயன்படுத்த முடியாத அளவுக்கு தடைகள் விதிக்கப்பட்டன. ஐரோப்பா மற்றும் அமெரிக்க வான்வெளிகளில் ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. தன்னுடன் முரண்பட்டால் எந்த ஒரு நாட்டையும் மண்டியிட வைக்க முடியும் என முதலாளித்துவ உலகம் முயல்கிறது. கால்பந்து/ஹாக்கி/மோட்டார் பந்தயம்/மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகள்  என அனைத்து விளையாட்டு போட்டிகளிலுமிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பூனைகளுக்கும் யோக் மரங்களுக்கும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்த தடைகளால் பாதிக்கப்படப்போவது புடின் அல்லது பிற அரசியல்வாதிகள் அல்ல; ரஷ்ய மக்கள்தான்.

ரஷ்ய ஊடகங்கள் முழுவதும் ஐரோப்பா/அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளன. தொலை காட்சி விவாதங்களில் ரஷ்யாவை சிறிதளவு ஆதரித்து பேசுவோரும் வெளியேற்றப்படுகின்றனர். டோன்பாஸ் பகுதியில் 5 ஆண்டுகளாக ரஷ்ய மொழி பேசும் மக்கள் அடைந்த துன்பங்களை ஆய்வு செய்த ஒரு ஃபிரான்சு பத்திரிக்கையாளர் தனது அனுபவத்தை சொன்னதற்காக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பி.பி.சி./கார்டியன் போன்ற புகழ்பெற்ற ஊடகங்கள் கூட பொய்ச் செய்திகளை தாராளமாக பரப்பின. முதலாளித்துவ ஊடகங்கள் தமது அரசுகளின் கருத்துகளை மட்டுமே மக்கள் கேட்க வேண்டும் என எண்ணுகின்றன. எதிர்த்தரப்பு கருத்துகளை மக்கள் கேட்க கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டுள்ளன. இது முதலாளித்துவ ஜனநாயகம். இந்த ஜனநாயகத்தில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் போர் முதலாளித்துவத்தின் நிறவெறியை  வெளிப்படுத்தியுள்ளது. ஒரு தொலைகாட்சி செய்தியாளர் கூறினார்:

“இது சிரியாவோ அல்லது ஆப்கானிஸ்தானோ அல்ல; நாகரிக ஐரோப்பா. இங்கு தாக்குதல் நடக்கிறது”

அப்படியானால் சிரியாவும் ஆப்கானிஸ்தானும் நாகரிகமற்ற காட்டுமிராண்டி தேசங்களா?

இன்னொரு செய்தியாளர் கூறினார்:

“நெஞ்சம் பதைக்கிறது. ஊதா கண்களும் பொன் நிறத்திலான முடியையும் உடைய மக்கள் தாக்கப்படுகின்றனர்.”

அப்படியானால் மற்றவர்கள் தாக்கப்பட்டால் பரவாயில்லையா? ஆம். அப்படிதான் அந்த  ஊடகங்கள் முன்வைக்கின்றன.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த அதே நாளில் அமெரிக்க விமானங்கள் சோமாலியா மீது குண்டு பொழிந்தன. அமெரிக்க ஆதரவுடன் சவூதி படைகள் ஏமன் மீது தாக்குதலை நடத்தின. இஸ்ரேல் விமானங்கள் பாலஸ்தீனம் மீது தாக்குதல்கள் நடத்தின. இஸ்ரேல் ராணுவத்தினர் 15 வயது பாலஸ்தீன் பெண்ணை சித்திரவதை செய்து கொன்றனர். இது குறித்த காணொளி பரவலாக வலம் வந்தது. அமெரிக்காவின் ஆசியோடு ஏமன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3,00,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 70% பேர் குழந்தைகள். ஆனால் இவை குறித்து முதலாளித்துவ ஊடகங்களில் ஒரு விவாதம் கூட  இல்லை. 

மேற்கத்திய ஊடகங்களின் செய்தி மற்றும் கட்டுரைகள் வெளியிடப்பட்டதில் பாரபட்சத்தை பாருங்கள்:

 • உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்- 1400
 • சவூதி ஏமன் மீது தாக்குதல்-0
 • இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்- 5.

சிறிது நாட்கள் முன்புவரை அரேபிய அல்லது ஆப்பிரிக்க அகதிகளுக்கு அனுமதியில்லை என கூறிய போலந்து போன்ற நாடுகள் இன்று உக்ரைன் அகதிகளை இரு கரம் கூப்பி வரவேற்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு வெடி பொருட்கள் பார்சல் அனுப்பப்பட்டன. நெதர்லாந்தில் ரஷ்யர்களுக்கு சொந்தமான உணவுவிடுதி தாக்கப்பட்டது. அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ரஷ்யாவை சேர்ந்த எவராவது புடினை கொன்று விடுவது ரஷ்யாவின் எதிர்காலத்துக்கு நல்லது என பகிரங்கமாக கூறியுள்ளார். இவையெல்லாம் முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுகிறது.

முதலாளித்துவம் கைவிட்ட முதலாளித்துவ குழந்தை

ரஷ்யா சோசலிசத்தை கைவிட்ட பொழுது அதன் ஒரே கனவு முதலாளித்துவ உலகம் தன்னை சம பங்காளியாக கருதி அரவணைத்து கொள்ளும் என்பதுதான். அந்த விருப்பத்துடனேயே அனைத்து அரசு நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்பட்டன. கம்யூனிச கருத்துகளும் அவற்றை கடைப்பிடிப்போரும் வேட்டையாடப்பட்டனர். லெனின் மற்றும் ஸ்டாலின் சிலைகள் உடைக்கப்படடன. தாராளமய பொருளாதார கொள்கைகள் அமலாக்கப்பட்டன. அந்தோ பரிதாபம்! முதலாளித்துவ உலகம் ரஷ்யாவை தனது சம பங்காளியாக பார்க்கவில்லை. மாறாக தனக்கு அடிபணிந்து இருக்கும் ஒரு நாடாக ரஷ்யா இருக்க வேண்டும் என்றே கருதியது.

மார்க்சிய ஆய்வாளர் டேவிட் ஹார்வி ஒரு சுவையான ஒப்பீட்டை முன்வைக்கிறார். இரண்டாம் உலகப்போரில் துவம்சம் செய்யப்பட்ட நாடுகள் ஜப்பானும் ஜெர்மனியும். ஆனால் இந்த இரு நாடுகளையும் மறுநிர்மாணம் செய்ய ஏராளமான நிதி உதவிகளை முதலாளித்துவ உலகம் செய்தது. அதற்கு “மார்ஷல் திட்டம்” எனவும் பெயரிட்டது. ஆனால் சோசலிசத்தையே தூக்கி எறிந்த ரஷ்யாவுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. குறைந்தபட்சம் ஐரோப்பிய நாடுகள்  கூட ரஷ்யாவை அரவணைக்க முன்வரவில்லை.

அதே சமயத்தில் சோவியத் ஒன்றியத்தின் ஒரு வலிமையே ரஷ்யாவை தொடர்ந்து பாதுகாத்தது. அதுதான் ராணுவ வலிமை. புடினை பார்த்து ஓரளவு முதலாளித்துவ நாடுகள் அச்சப்படுகின்றன என்றால் அதற்கு முக்கிய காரணம்   ராணுவ வலிமைதான்! இதற்கு புடின் ஸ்டாலினுக்கும் அவருக்கு பின்னால் ஆட்சியிலிருந்த ஏனைய கம்யூனிஸ்டு தலைவர்களுக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர். “சமாதானத்துக்கு சமாதானம்! ஏவுகணைக்கு ஏவுகணை” என முழக்கமிட்ட யூரி ஆண்ட்ரோபோவ் போன்றவர்கள்தான் இந்த ராணுவ வலிமையை உருவாக்கினர்; பாதுகாத்தனர். இப்போது இந்த ராணுவ வலிமையைதான்  முதலாளித்துவ நாடுகள் சிதைக்க முயல்கின்றன.

இந்த போர் எப்படி முடியும் என்பது இக்கட்டுரை எழுதப்பட்ட சமயத்தில் தெளிவற்றதாகவே இருந்தது. எனினும், ஏற்கெனவே இரு தரப்பிலும் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. உக்ரைனின் ஆலைகளும் கட்டடங்களும் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.

உலக அளவில் கம்யூனிஸ்டுகள் ஒரே குரலில்தான் ஒலிக்கிறார்கள்:

 • போர் தொடர்வதில்  எந்த நியாயமும் இல்லை. போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 
 • நேட்டோ தனது விரிவாக்கத்தை கைவிட வேண்டும்.
 • ஐரோப்பாவில் உள்ள அணு ஆயுதங்கள் அகற்றப்பட வேண்டும்.
 • உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்களின் வாழ்வும் பண்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும்.
 • உக்ரைன் சமாதான வழியில் பயணிப்பதை உத்தரவாதம் செய்யவேண்டும்.

இதுதான் சரியான பார்வையாக இருக்க முடியும்.

ஆதாரங்கள்: Consortiumnews/ Fair.org/davidharvey.org/Mint Press/MR online/ Newsclick/ RT.com/ Tricontinental newsletter/multipolarista.

கியூபா: புரட்சியைப் பாதுகாக்கும் புதிய தலைமுறை

சிந்தன்

கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின்  8 வதுமாநாட்டினை ‘தொடர்ச்சியின் மாநாடு’ என்று அழைக்கிறார்கள். உலக முதலாளித்துவ ஊடகங்களெல்லாம், ‘காஸ்ட்ரோக்களின் காலம் முடிந்தது’ என்று செய்தி போட்டு மகிழ்ந்தபோது, ‘தொடர்ச்சி’ என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தியதன் நோக்கம், மிக நன்றாகவே புரிகிறது. சோசலிச லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுக்கிறோம் என்று பெருமிதத்துடனே அவர்கள் அறிவித்துள்ளனர்.

2021 ஏப்ரல் 16 தொடங்கிய மாநாடு 19 அன்று நிறைவடைந்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, கட்சியின் முதன்மைச் செயலாளர் மிகுவெல்டியாஸ்-கேனல் இவ்வாறு பேசினார். “தயங்காமல் சொல்வேன். உண்மையான புரட்சிகர போராட்டத்தில், வெற்றி என்பது கற்றுக் கொண்டே இருப்பதுதான். முன்பே பரிசோதிக்கப்படாத ஒரு பாதையை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். புதியவைகளை கண்டறிந்து கொண்டே இருக்க வேண்டும். கொள்கை உறுதியை எவ்வகையிலும் கைவிட்டுவிடக் கூடாது. அதே சமயம், மாற வேண்டியவைகளை மாற்றியமைக்க வேண்டும். வீழ்த்த முடியாத நம் தலைவர் (ஃபிடல் காஸ்ட்ரோ) நமக்கு கொடுத்துச் சென்றிருக்கும் புரட்சியின் கருதுகோளில் இருந்து மாறாமல் பயணிக்க வேண்டும். இந்த சவால் நம் முன் உள்ளது. கட்டுப்பெட்டியான சிந்தனைப் போக்குகளையும், தவறிழைத்துவிடாது இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வையும் சற்று தளர்த்திக் கொண்டு, நமது பாதையில் முன்னேறுவோம்.”

காஸ்ட்ரோக்களின் காலம் தொடர்கிறது. இன்னும் இளமைத் துடிப்புடன், புதுமைகளைக் கைக்கொண்டு என்பதுதான் இந்த மாநாடு வெளிப்படுத்தியிருக்கும் தெளிவான அறிவிப்பு.

புதிய தலைமுறை தலைவர்கள்:

கியூபாவில் புரட்சி நடைபெற்றபோது பிறந்திருக்காத  தலைமுறையைச் சார்ந்தவர் மிகுவெல் டியாஸ்-கேனல். மின்னணுவியல் பொறியாளர். இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக வளர்ந்தார். நிகரகுவா படைத்தலைவராக இயங்கியுள்ளார். ஒவ்வொரு இளைஞரும் ராணுவ கடமையாற்ற வேண்டும் என்பதை பின்பற்றி 3 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். கியூபாவின் இரண்டு பிராந்தியங்களில் முதன்மைச் செயலாளராக செயல்பட்டுள்ளார். உயர்கல்வித்துறைக்கு அமைச்சராக இருந்துள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக தேர்வானார். மூன்று ஆண்டுகளுக்கு முன் கியூப சோசலிச குடியரசின் தலைவராக தேர்வானார். இப்போது கட்சியின் முதன்மைச் செயலாளராகவும் தேர்வாகியுள்ளார். புதிய அரசியல் தலைமைக்குழுவில் 3 பெண்கள் உட்பட 14 பேர் உள்ளனர்.

இளைஞர்களும் புதிய மாற்றமும்:

முன்பு ஃபிடல் காஸ்ட்ரோ செய்ததைப் போலவே, இந்த மாநாட்டில் ரால் காஸ்ட்ரோவும் தனது ஓய்வினை அறிவித்தார். வேறு எந்த கூடுதல் பொறுப்பையும் எடுக்கவில்லை. ‘ஒரு சாதாரண புரட்சிகரப்போராளியைப் போலவே நானும் ஓய்வு பெறுகிறேன். நான் உயிரோடு வாழும் காலம் வரையில் என் கால்களில் வாழ்வேன். தந்தை நாட்டையும்,புரட்சியையும்,சோசலிசத்தையும் முன்னணியில் நின்று காப்பேன்’ என அவர் அறிவித்தார்.

திட்டமிட்ட வகையில் இளைஞர்களை வளர்த்தெடுத்து உரிய பணிகளில்  அமர்த்திவிட்டே அவர்கள் இதைச் செய்துள்ளனர்.

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இளைஞர்களை அமர்த்துவது ஒரு தொடர் பணியாகும். இதற்காக அமைப்பு ரீதியாக சில ஏற்பாடுகளும் அவசியம். கியூப கம்யூனிஸ்ட் கட்சி தனது மத்தியக்குழுவிற்கு அதிகபட்ச வயது 60 என நிர்ணயித்தது. அதே போல  அரசியல் தலைமைக்குழுவிற்கு வயது வரம்பு 70 ஆகும். கட்சியின் மத்தியக்குழுவில் பெண் பிரதிநிதிகளின் சதவீதம் கிட்டத்தட்ட 50 ஆகும்.

இந்த மாநாட்டில், கொரோனா கட்டுப்பாட்டிற்காக 300 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டனர். 58 ஆயிரம் கிளைகளில் உள்ள 7 லட்சம் கட்சி உறுப்பினர்களை அவர்கள் பிரதிநிதித்துவம் செய்தனர். கியூப கம்யூனிஸ்ட் கட்சியில் இப்போது 27 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். 2006ஆம் ஆண்டு வாக்கில் கட்சி உறுப்பினர்கள் குறையக் கூடிய சூழலை கட்சி கண்டுணர்ந்தது. இப்போது அந்த நிலைமை முடிவிற்கு வந்துவிட்டது. அதே சமயம், கட்சி உறுப்பினர்களின் சராசாரி வயது உயர்ந்துள்ளது. 42.6% கட்சி உறுப்பினர்களின் வயது 55க்கும் அதிகமாகும். அதே சமயம் கட்சியின் முழுநேர ஊழியர்களுடைய சராசரி வயது 42.5 ஆக உள்ளது என்கிறது மாநாட்டு அறிக்கை.

8வது மாநாடு 4 நாட்கள் நடந்தது. மாநாட்டு ஆவணங்கள் முன்கூட்டியே விநியோகிக்கப்பட்டன. மண்டல அளவில் பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்டன. இந்த ஆவணங்கள் தத்துவத்தளத்திலும், மக்களின் சமூக பொருளாதார நிலை குறித்தும், கட்சியின் முன்னணி பணியாளர்கள் கொள்கை குறித்தும், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வது மற்றும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வது ஆகியவைகளை உள்ளடக்கியிருந்தன.

அரசமைப்பில் மாற்றங்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கியூபா தன்னுடைய அரசமைப்புச் சட்டத்தை மாற்றியமைத்தது. அரசமைப்பின் புதிய மாற்றங்கள், அப்போதே பொது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டன. அரசியல் கட்டமைப்பிலும், பொருளாதார கட்டமைப்பிலும் செய்ய வேண்டிய இந்த மாற்றங்களை மக்கள் பரவலாக விவாதித்தார்கள். கட்சிக்குள்ளும் அனைத்து நிலைகளிலும் விவாதிக்கப்பட்டது. திருத்தங்கள் பெறப்பட்டன.

பிரதமர் என்ற பதவி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. குடியரசின் தலைவராக ஒருவர் இரண்டு ஐந்தாண்டுகள் மட்டுமே அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்பட முடியும். மக்கள் அதிகார தேசிய அவையின் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்து கூட்டாக தலைமை தருவார்கள் என்பதாகஅரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

தனியார் முதலீடுகளுக்கு ஊக்கம்

கியூபா திட்டமிட்ட சோசலிச பொருளாதாரத்தை அடிப்படைக் கட்டமைப்பாக கொண்டுள்ளது. அதே சமயத்தில்,அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அரசியல் ரீதியாகவும்,பொருளாதாரத்திலும் தொடர்ந்து கியூபாவை தாக்கி வருகிறார்கள். சுமார் 60 ஆண்டுகளாக தொடரும் இத்தகைய தாக்குதலை எதிர்கொள்ள படைப்பூக்கம் மிக்க புதிய வழிமுறைகளை கியூபா பின்பற்ற வேண்டியுள்ளது. அதுதான் ஒரு குறிப்பிட்ட நாட்டில், குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் சோசலிசத்தை கட்டமைப்பதன் சவால் ஆகும்.

சோவியத் ரஷ்யா தனது நாட்டின் புதிய பொருளாதார கொள்கையை அமலாக்கி பரிசோதித்தது. இப்போதும் மக்கள் சீனமும், வியட்நாமும் பல்வேறு பரிசோதனைகளை தங்கள் நாடுகளில் மேற்கொள்கிறார்கள். கியூபாவும் அந்த அனுபவங்களை பரிசீலித்து, தனது நாட்டில் தனியார் முதலீடுகள் மற்றும் அன்னிய முதலீடுகளை சில பகுதிகளில் அனுமதிக்கிறது.

பல ஆண்டுகள் பொது விவாதத்திற்கு பிறகு 2016 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. 2030 வரையிலான கியூப சமூக பொருளாதார மேம்பாட்டு திட்ட கருதுகோள் உருவாக்கப்பட்டது.

உற்பத்திக்கு உதவும் வகையில் வேலை முறைகளை மாற்றியமைத்தல் அல்லது அழித்தல், அரசு அல்லாத துறைகளை விரிவாக்குவது, சுய வேலைவாய்ப்பு, கூட்டுறவு உட்பட விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத தொழில்களில் அதிகரிப்பது என்ற முடிவுகளை எடுத்தனர். அதே சமயம் மூலதன குவியல் உருவாகாமல் தடுக்க தொழில் உடைமையானது எண்ணிக்கை மற்றும் அளவுக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லாத காலியிடங்களை குத்தகைக்கு விடுவது, குத்தகைதாரர்களுக்கு நுண் கடன்களை வழங்குவது, உற்பத்தி பொருட்களை உணவு விடுதிகளுக்கும், தங்கும் விடுதிகளுக்கும் விற்க அனுமதிப்பது, போன்றவை சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளில் ஒன்றாகும்.

நலவாழ்வு, கல்வி, பாதுகாப்பு மற்று ஆயுதம் தொடர்பான நிறுவனங்கள், எவ்விதமான தனியார்மயம் அல்லது அந்நிய மூலதனத்திலிருந்தும் விலக்கியே வைக்கப்பட்டுள்ளன. கியூபாவின் அந்நிய வர்த்தகத்திற்கு ஒரு செலவாணி, உள்நாட்டு வர்த்தகத்திற்கு ஒரு செலவாணி என்று இருந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, இரண்டும் ஒன்றாக்கப்பட்டுள்ளது. இந்த எல்லா மாற்றங்களையும் ‘சோசலிச திட்டமிடல் அமைப்பே வழிநடத்துகிறது.’

இந்த மாற்றங்களைத் தொடர்ந்து நடந்திருக்கும் மாநாடு, கிடைத்த அனுபவங்களை பரிசீலித்துள்ளது. பொருளாதார வகைப்பட்ட 52 கொள்கை முடிவுகள் நினைத்த பலன்களை கொடுத்துள்ளன. 41 கொள்கை முடிவுகள் ஓரளவு பலன் கொடுத்துள்ளன. 12 கொள்கைகள் முடிவுகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்று மாநாட்டு அறிக்கை கூறுகிறது. கொரோனா பெருதொற்றுக்கு நடுவிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதை அறிக்கை காட்டுகிறது. அடிப்படைத் தேவைகள் மற்றும் சேவைகளுக்கு அதிக செலவு என்கிற நிலைமையை மாற்ற இன்னும் முன்னேற வேண்டியுள்ளது என்று சுயவிமர்சனமாகவும்  அது கூறுகிறது.

பொருளாதார நிலைமைகளை பரிசீலித்த மாநாட்டின் முதல் ஆணையத்திற்கு, பிரதமர் இம்மானுவல் மரி ரோக்ரஸ் தலைமையேற்றார். இதில்  319 செயல்முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 2016 முதல் 2020 வரையிலான பணிகளை பரிசீலித்ததுடன், 2026 வரையிலான செயல்திட்டமும் நிறைவேற்றப்பட்டது.

முன்னணியினர் குறித்த கொள்கை

“ஒரு முன்னணி ஊழியருக்கு எப்படி தலைமையேற்பது என்பது மட்டும் தெரிந்தால் போதாது; நீடித்திருக்கும் சிக்கலான சூழலை எதிர்கொண்டு முறியடிக்கவும் தெரியவேண்டும். அதற்கான தைரியமும், அற்பணிப்பும், திட்டமிடலும் தீர்வும் இருக்க வேண்டும்.”

புரட்சிக்கு பின்னர் பிறந்தவர்கள் தலைமையேற்றிருக்கும் இந்தக் காலகட்டத்தில் முன்னணி பணியாற்றும் கம்யூனிஸ்ட் ஊழியர்களைக் குறித்த கொள்கையை இந்த மாநாடு விவாதித்திருக்கிறது. மிகுவெல் டியாஸ் கானல் அந்த அவைக்கு தலைமையேற்றார். ‘முன்னணிச் செயலாட்டாளராக வரக்கூடியவர் நல்லவராக மட்டும் இருக்கக் கூடாது, சிறந்தவர்களாக, மிகச் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்’ என்கிறார்.

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர் கொள்கை அறிவியல் பூர்வமாக தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. இன்னொரு தருணத்தில், அதனை விரிவாக பார்ப்போம்.

கியூப மக்களின் உயிரோட்டம் மிக்க கட்சியாக தொடர்ந்து வைத்திருக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. கட்சியில் 40 வயதுக்கு குறைவான முழுநேர ஊழியர்கள் 1,501 பேர் உள்ளனர். 54.2 % ஊழியர்கள் பெண்கள், 47.7 % பேர் கருப்பின அல்லது கலப்பு மண குழந்தைகள். நகராட்சி மற்றும் மாவட்ட செயலாளர்களில் 75 பேர் பெண்கள் (42%). 81 சதவீதம் கட்சி ஊழியர்கள் பல்கலைக்கழக படிப்பை முடித்தவர்கள். இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக கட்சிக்கு வரும் ஊழியர்கள் தொடர்ந்து படிப்பது உறுதி செய்யப்படுகிறது. சிறப்புத் திறன் கொண்ட (புரொபசனல்) கட்சி ஊழியர்களில் குறிப்பிட்ட பகுதி (23.5%) இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக வருகிறார்கள். கட்சி, அரசு மற்றும் நிர்வாக பொறுப்புகளில் கட்சியின் ஊழியர்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுவதில்லை, 76.5% பேர் ஒரே பொறுப்பில் 5 ஆண்டுகளுக்கு மேல் தொடரவில்லை. 6.9% பேர் மட்டுமே ஒரு குறிப்பிட்ட பொறுப்பில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கின்றனர்.

கியூபாவின் கடந்த காலம்

கியூபா, தனது வரலாற்றில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்திருக்கிறது. சோசலிச சோவியத் யூனியன் தகர்ந்தபோது, இரண்டு நாடுகளுக்குமான பொருளாதார ஒத்துழைப்பு தகர்ந்தது. இதனால் 20 ஆண்டுகளாக கியூபா பெற்றுவந்த நன்மைகளை இழந்தது. அன்னிய வர்த்தகம் 80 சதவீதம் வரை விழுந்தது. உற்பத்தி திறனை பயன்படுத்திக் கொள்வதில் 85% வீழ்ச்சி ஏற்பட்டது. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 35% சரிந்தது.

1992 தொடங்கி 1996 வரையில் அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளை தீவிரமாக்கியது. இதனால் வர்த்தகமும், டாலர் பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது, நிரந்தரமாக கியூபாவின் 10 சதவீத உள்நாட்டு உற்பத்தி பாதிப்பிற்கு ஆளானது. ஆனால், இந்த நெருக்கடிக்கு கியூப கட்சி முன்கூட்டியே தயாராகியிருந்தது.

சோவியத் அரசின் ‘பெரெஸ்றோய்க்கா’ திட்டத்தை, கியூப தலைமை 1985களிலேயே நிராகரித்துவிட்டிருந்தது. கட்சிக்குள் நெறிப்படுத்தும் இயக்கத்தை வலிமையாக முன்னெடுத்திருந்தது. இது, அடுத்தடுத்த காலங்களில் வந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதில் கியூபாவிற்கு உதவியது. பொருளாதார முடிவுகள் அதீத மையப்படுத்துதலை மாற்றியமைத்திருந்ததும், நாட்டின் நிர்வாக கட்டமைப்பின் அளவு மற்றும் தோற்றத்தை மாற்றியமைத்தலையும் கியூபா முன்கூட்டியே செய்திருந்தது.

உள்ளூர் குழுக்களுக்கு புத்துயிர் கொடுத்ததுடன், பிராந்திய அளவிலும், தேசிய அளவிலும் பிரதிநிதிகளுக்கு நேரடி தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. சமூக, பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதில் மக்களின் பங்கேற்பு  உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆற்றல் உற்பத்தியும் விநியோகமும் பரவலாகியது. உயர் தொழில்நுட்பம், நகர்ப்புற வேளாண்மை, அடிப்படை உணவுப் பொருள் உற்பத்தி ஆகியவை மேம்பட்டன. 1993-94களில், செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, பல கட்ட விவாதங்களுக்கு பின் கியூபா தனது பொருளாதாரம் அந்நிய மூலதனத்திற்குத் திறக்கப்பட்டது. பாதிக்கும் அதிகமான அரசு நிலங்கள் கூட்டுறவு உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டன. நிலம் கொடுத்து முடிவெடுப்பதற்கான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது. சுற்றுலாத் துறையில் நுழைந்த அன்னிய மூலதனத்திற்கு, உள்ளூர் வள ஆதாரமும் குறிப்பிடத்தக்க அளவில் கிடைத்ததை ஒட்டி, பொருளாதார மீட்சி வேகமெடுத்தது. நிக்கல் சுரங்கங்களை நோக்கி சீனா, பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்தன.

இவ்வாறாக, தனது சொந்த பலத்தையும், பலவீனங்களையும் கணக்கில் கொண்டு கியூபா சோசலிச பாதையில் முன் நோக்கி பயணிக்கிறது.

கட்சியே வழிநடத்துகிறது

கட்சிதான் மக்களின் பாதுகாவலன்; மக்களின் துணை; மக்களின் நம்பிக்கை. பாதுகாவலர்களை கொண்ட அமைப்பு என்பது அடிப்படையானது. புரட்சிக்கு எது பாதுகாப்பை தருகிறது? கட்சிதான். புரட்சியை நிரந்தரப்படுத்துவது எது? புரட்சிக்கு எதிர்காலம் தருவதும், புரட்சிக்கு உயிர் கொடுப்பதும், புரட்சிக்கு எதிர்காலத்தை உறுதி செய்வதும் கட்சியே. கட்சி இல்லாமல் புரட்சி இருக்காது. என்றார் ஃபிடல் காஸ்ட்ரோ (1974).

கியூபாவில் ஒரு சமூக அமைதியின்மையை உருவாக்கிட எதிரிகள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு அவசியம் என்று நினைவூட்டியுள்ளது இந்த மாநாடு. கியூபா ஒரு மிகச் சிறிய பொருளாதாரம். தனக்கென எந்த உற்பத்தியை மேற்கொண்டாலும், அதற்காக அது பல நாடுகளில் இருந்து தொழில்நுட்பமும், கச்சாப் பொருட்களும் பெற்றாக வேண்டும். மேலும், தன் நாட்டின் தேவை போக அதிகமான உற்பத்தியை வேறு நாட்டு சந்தைக்கு அனுப்பியாக வேண்டும். எனவே நிதி மூலதனமும், உலகச்சந்தையும் தவிர்க்கக்கூடியவை அல்ல. சுற்றுலாவும், நவீன தொழில்நுட்பத்தின் பெருக்கமும் அதிகரிக்கும்போது, அது கியூப குடிமக்களுடைய வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும். அதற்கேற்ப மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் கடமையும் கட்சியிடம் உள்ளது.

இதையெல்லாம் உணர்ந்த மாநாடாகத்தான், ‘தொடர்ச்சியின்’ மாநாடு அமைந்திருப்பதை காண்கிறோம். சமூக ஊடகங்களின் வளர்ச்சி வரைக்கும் அனைத்தும் அங்கே விவாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் ஒற்றுமையை சீர்குழைத்து, அமைதியின்மையை உருவாக்க முன்னெடுக்கும் ஏகாதிபத்திய முயற்சிகள் வீழ்த்தப்படும் என்பதை இந்த மாநாடு மிகத் தெளிவாகவே அறிவித்தது.

மிகுவேல் டியாஸ் கேனல் இவ்வாறு பேசினார், “கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை இரண்டே வரிகளில் சுருங்கக் கூறுவதானால், ‘மக்களும் ஒற்றுமையும்’ எனலாம். அதனால்தான் கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் கட்சியாக இருந்ததே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியானது… பெரும் அநீதியும், ஏற்றத்தாழ்வும் நிலவிய நாட்டின் நிலைமையை மாற்றியமைக்க விரும்பிய மனித நேயசக்திகளின் அனைவரின் ஒற்றுமையில்தான் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. ஒரு கட்சியின் உறுதிப்பாடு என்பது நாட்டின் சக்தியை வளர்ச்சியை நோக்கி திரட்டி செலுத்தும் தன்மையே ஆகும்.

“அவர்கள் தொடர்ந்து முன் செல்கின்றார்கள்.”

***

சீனா & ஷின்ஜியாங்: உண்மைகளும் பொய்களும்

அபிநவ் சூர்யா

தன் பேராதிக்கத்தை கேள்விக்குள்ளாக்குவோரை கட்டுக்குள் கொண்டு வர உலக ஏகாதிபத்திய சக்திகள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் ஆயுதங்களில் ஒன்று “பொய் பரப்புரைகள்”. தன்னை எதிர்க்கும் நாடு/இயக்கம் “படுகொலைகள்/மனித உரிமை மீரல்களில் ஈடுபடுகிறது” என்றோ, “உலக அமைதிக்கு அச்சுறுத்தல்” என்றோ கட்டுக்கதைகள் மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு, இதை காரணமாக வைத்து அந்த நாடு/இயக்கம் மீது தடைகளை விதிப்பது முதல் போர் தொடுப்பது வரையிலான செயல்பாடுகள் நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன. சோவியத் ஒன்றியம், வட கொரியாவில் துவங்கி, பின் கியூபா, வியட்நாம், யுகோஸ்லேவியா, ஈரான், ஈராக், என நீண்டு, இன்று வெனிசுவேலா, பொலிவியா வரை இதே உக்தி தான் தொடர்கிறது. இதே உக்தியை தான் மக்கள் சீனம் மீதும் பயன்படுத்தி வருகின்றனர் ஏகாதிபத்தியவாதிகள். மாவோ காலம் முதலே சீன கம்யூனிஸ்ட் கட்சி “பட்டினிச் சாவை உருவாக்கியது”, “திபெத்தியர்களை அழிக்கிறது” என்றெல்லாம் பொய் சொல்லி வந்த மேற்கத்திய நாடுகள், இன்று “ஹாங்காங்கில் ஜனநாயகப் படுகொலை, தைவான் அச்சுறுத்தல், தென் சீன கடல் பகுதி ஆக்கிறமிப்பு” என நீட்டிச் செல்கின்றன. இதன் ஒரு பகுதியாக அண்மை ஆண்டுகளில் எழுந்துள்ள கட்டுக்கதை தான் “சீனாவின் மேற்கு பகுதி ஷின்ஜியாங் மாகாணத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி ‘உய்கூர் முஸ்லீம்’ சிறுபான்மையினரை கொடுமை படுத்தி வருகிறது” என்பதாகும். இந்த கட்டுக்கதைகளில் உள்ள சிக்கல் என்னவென்றால், இந்த பரப்புரைகள் மேற்கத்தி ஊடகங்களில் பரவி இருப்பதனால், பல இடதுசாரி தோழர்கள் கூட இதை உண்மையென நம்பி, ஏகாதிபத்திய வலையில் வீழ்ந்து விடுகின்றனர். ஆக, இதை முளையிலேயே முறியடிப்பது அவசியமாகிறது.

ஷின்ஜியாங் பகுதி வரலாறு

“ஷின்ஜியாங்” மாகாணமே சீனவின் மிகப்பெரும் மாகாணம். மத்திய கிழக்கு ஆசிய நாடுகளை எல்லையாகக் கொண்ட இந்த பகுதியானது மத்திய சீனாவையும் அரபு நாடுகள் – ஐரோப்பாவையும் இணைக்கும் பாலமாக உள்ளது. பண்டைய பட்டு வழிச் சாலையின் பாதையில் உள்ள மிக முக்கிய பகுதி. இதனால் வரலாற்று ரீதியாக “ஹான்” இனத்தவர் மற்றும் “உய்கூர்” இஸ்லாமிய மக்கள் கலாச்சாரங்களுக்கு இடையேயான பரிமாற்றம் செழித்து வந்துள்ள பகுதி.

சீன புரட்சியில் ‘குவாமிங்டான்’ (தேசியவாத) சக்திகள் வீழ்த்தப்பட்ட பின் இப்பகுதியின் அனைத்து மக்களையும் மாவோ ஒன்றிணைத்து, “ஷின்ஜியாங் உய்கூர் சுயசார்பு பகுதி” (XUAR) என்ற மாகாணத்தை உருவாக்கினார். ஆனால் கம்யூனிச எதிரிகளின் ஆதரவுடன் செயல்படும் சக்திகள் “கிழக்கு துருக்கிஸ்தான்” தனி நாடு வேண்டும் என கோரி பிரிவினைவாத செயல்பாடுகளில் பல காலமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் மேல்தட்டு கம்யூனிச எதிர்ப்பாளர்கள் பலர் சீனாவை விட்டு வெளியேறி ஏகாதிபத்திய நாடுகளில் குடியேறி, அந்நாடுகளுக்கு உதவியும் வருகின்றனர்.

1978ல் சீனாவின் சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் 1989ல் தியானன்மென் போராட்டம் காலங்களில் அமெரிக்கா சென்று படித்து வந்த, மற்றும் புதிதாய் செல்வந்தர்கள் ஆன உய்கூர் இளைஞர்கள் சிலர் சீனாவில் விரக்தி அடைந்து, மேலை நாடுகள் சென்று, “உலக உய்கூர் இளைஞர்கள் மாநாடு” என்ற அமைப்பை ஜெர்மணியில் துவங்கி, ஷின்ஜியாங் பகுதியில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு கொடுத்தும், சீனாவுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொண்டும் வருகின்றனர். மேலும் இந்த அமைப்புகள் அமெரிக்க உளவுத்துறையின் நிதி ஆதரவை வெளிப்படையாக பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதன் பின் 1990ல் துவங்கி 2016 வரை ஷின்ஜியாங் பகுதியில் பலக் கலவரங்களையும் தீவிரவாத தாக்குதல்களையும் அரங்கேற்றி வருகின்றனர் பிரிவினைவாத அமைப்புகள். இதில் பல நூறு பேர் உயிரிழந்து பல்லாயிரம் பேர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இதற்கெல்லாம் தலைமை தாங்கும் “கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்” (ETIM) என்ற அமைப்பு 2002ல் ஐ.நா. சபையால் “தீவிரவாத அமைப்பு” என வரையறுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவில் ‘அல்-கைதா’ மற்றும் ‘ஐசிஸ் (ISIS)’ தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்று செயலாற்றி வருகிறது இந்த அமைப்பு. இதன் ஒரு முக்கிய நிகழ்வாக 2009ல் ஷின்ஜியாங் தலைநகர் ‘உரும்ச்சி’-யில் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் 197 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறையை ஒருங்கிணைக்க தீவிரவாதிகள் “முகநூல்” (Facebook) தளத்தை பயன்படுத்தினர். இவர்களின் அடையாளங்களை அளிக்க முகநூல் நிறுவனத்திடம் சீன அரசு கேட்ட பொழுது அந்நிறுவனம் மறுத்ததை தொடர்ந்து, சீனாவில் Facebook தடை செய்யப்பட்டது.

சீன அரசின் தீவிரவாத எதிர்ப்பு

இப்படிப்பட்ட பிரிவினைவாத தாக்குதல்களால் 2014ல் விரிவான “சட்டத்திற்கு உட்பட்டு தீவிரவாதத்திற்கு எதிராக தாக்குவது” என்ற அறிக்கையை வெளியிட்டது ஷின்ஜியாங் அரசு. இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், காஷ்மீரில் இந்திய அரசின் நடவடிக்கைகள் போலவோ, அல்லது மேற்காசியாவில் அமெரிக்காவைப் போலவோ “தீவிரவாத ஒழிப்பு” என்ற பெயரில் ராணுவத்தை குவித்து சட்டவிரோத கொடுமைகளுக்கு வழிவகை செய்து மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் போக்கை சீனா கையிலெடுக்கவில்லை. ஒரு நுணுக்கமான வழிமுறையை கையாண்டது.

மக்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதன் மூலம் அரசின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதால், தீவிரவாத இயக்கங்கள் மீதான மோகம் நலிவடையும் (ஷின்ஜியாங்கில் சீன அரசின் வளர்ச்சித் திட்டங்களை பின் பகுதியில் காணலாம்). மேலும் தீவிரவாத சிந்தனையால் பாதிக்கப்பட்டு செயல்படுபவர்களை வெறும் தண்டிக்காமல், அவர்களுக்கு கல்வி & வாழ்வாதார பயிற்சி அளித்து அவர்களை மீட்டெடுப்பது என திட்டமிட்டது சீனா. இச்சமயத்தில், 2016ல் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த “அதி-தீவிரவாதத்திலிருந்து மீட்டெடுக்கும் மையங்கள்“-ஐ சட்டத்திற்கு உட்பட்டு உலக நாடுகள் நடத்தலாம் என ஐ.நா. சபை ஒப்புதல் அளித்தது.

இதனைத் தொடர்ந்து தீவிரவாத சிந்தனைகளை கட்டுப்படுத்த 2017ல் “சிறப்பு தொழில் பயிற்சி மையங்கள்”-ஐ ஷின்ஜியாங் மாகாணத்தின் பல பகுதிகளில் சீனா நிறுவியது. வழக்கமாக இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக நடத்தப்படும் தொழில் பயிற்சிகளையும் தாண்டி, இந்த சிறப்பு மையங்களில் அதி-தீவிரவாதத்திலிருந்து மீட்டெடுக்கும் கல்வியும் அளிக்கப்படுகிறது. உதாரணமாக, ‘அரசின் நிதி உதவி திட்டங்கள் “ஹலால்” கிடையாது. அதை திருப்பி கொடுக்க வேண்டும்’ என பிரிவினைவாதிகள் பரப்புரை செய்தனர். இதற்கு விழுந்து, இவ்வாறு செய்ய தன் குடும்பங்களை வற்புறுத்தியவர்கள், அவர்களின் குற்றம் மிகச் சிறியது என்பதால், அவர்களை சிறையில் அடைக்காமல், அவர்கள் திருந்தி வாழ இந்த மையங்களில் சேர்ந்து கல்வி பெறும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த கல்வி என்பது கடவுள் மறுப்பு கல்வி ஒன்றும் கிடையாது. இங்கே தொழில் பயிற்சியுடன் சேர்ந்து சீனாவின் அரசியல் சாசனமும், சட்டங்களும், தீவிரவாதத்தின் ஆபத்துகள் குறித்தும் மட்டுமே கல்வி அளிக்கப்படுகிறது. மேலும் இங்கே வந்து சேர்பவர்கள் தங்களின் சொந்த விருப்பத்தில் தான் சேர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு 4-10 மாதங்கள் பயிற்சி பெற்று செல்பவர்கள் தீவிரவாதத்தை பெரும்பாலும் கைவிட்டு, 90% பேர் நல்ல வேலை/தொழில் செய்து வாழ்கிறவர்களாக மாறுவதை சீனா நன்கு ஆவணப்படுத்தியுள்ளது.

இங்கே கவனிக்க வேண்டியது, இது போன்று தீவிரவாதத்திற்கு எதிரான “மீட்டெடுக்கும் மையங்கள்”-ஐ சீனா மட்டும் அல்லாமல், அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகளும் அமல் படுத்துகின்றனர். சீன அரசின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் பெரும் பலன்களை அளித்துள்ளன. 2017லிருந்து இன்று வரை ஷின்ஜியாங் பகுதியில் ஒரு தீவிரவாத தாக்குதல் கூட நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொய் பரப்புரைகள்

1990களுக்கு பிறகு நவீன தாராளமய வளர்ச்சியின் தோல்வி உலகமெங்கும் வெட்ட வெளிச்சமாக தெரிந்து, மக்களை இன்னலில் ஆழ்த்தி வதைக்க, சீனாவின் “சோசியலிச சந்தை” பொருளாதார வளர்ச்சி அந்நாட்டு மக்கள் மத்தியில் செழிப்பையும் அமைதியையும் குவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவை விஞ்சும் சக்தியாக சோசியலிச சீனம் உருவெடுத்து வருவதை தடுக்க ஏகாதிபத்திய சக்திகள் பன்முனை தாக்குதலை துவங்கிவிட்டனர். இந்த தாக்குதலின் அங்கமாக ஷின்ஜியாங் அமைந்துள்ளது.

இந்த பணியில் மூன்று முக்கிய செயற்பாட்டாளர்களை பார்க்கலாம். ஒன்று “உலக உய்கூர் மாநாடு” (WUC) என்ற அமெரிக்க உளவுத்துறை நிதி உதவி பெற்ற, ஜெர்மணியிலிருந்து செயல்படக்கூடிய அமைப்பு. இரண்டாவது ‘ஆட்ரியன் சென்ஸ்’ என்ற நபர். பனிப்போர் காலத்தில் அமெரிக்க அரசு “கம்யூனிசத்தால் பாதிக்கப்பட்டோர்” என்ற பொய் பரப்புரை செய்யும் ‘அய்வு மையம்’ ஒன்றை துவங்கியது. இன்று அந்த அமைப்பில் ஆய்வாளர் தான் சென்ஸ். இவர் ஒரு “நாஜி”. ஆம்! ஜெர்மனிய கிருஸ்துவ அடிப்படைவாதி. தான் சோசியலிச சீனத்தை அழிக்க கடவுளால் அனுப்பப்பட்டவர் என சொல்லிக்கொள்பவர். ஹிட்லரின் மீது பாசம் வெளிப்படுத்துவார். மூன்றாவது அமெரிக்க-பிரிட்டன் அரசுகள் மட்டுமல்லாமல், போர்களின் மூலம் லாபம் பெறும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களான ‘ராயேதான்’, ‘போயிங்’ போன்றவற்றின் நிதி பெறும் “ஏ.எஸ்.பி.ஐ” (ASPI) என்ற ஆஸ்திரேலிய ஆய்வகம் (சீனா உடன் போர் ஏற்பட்டால் இந்நிறுவனங்களுக்கு ஏக சந்தோஷம்).

இந்த மூன்று பேரும் முக்கிய பணிகளை செய்கின்றனர். “உலக உய்கூர் மாநாடு” தான் முதன் முதலில் 2017ல் சீனா தொழிற்பயிற்சி மையங்களில் உய்கூர் முஸ்லிம்களை கொடுமை படுத்துவதாக கட்டுக்கதையை துவக்கியது. இது தொடர்ந்து பிரிவினைவாதிகளுடன் தொடர்பில் இருந்து, அவர்கள் இந்த பயிற்சி மையங்களிலிருந்து “தப்பித்து வந்தவர்கள்” என சித்தரித்து நடிக்க வைத்து, இணைய பிரச்சாரம் மேற்கொள்ளும். ஆட்ரியன் சென்ஸின் பணி சீன அரசின் கொள்கைகளை திரித்து காட்டுவது. இந்த பயிற்சி மையங்களில் 10 லட்சம் முஸ்லிம்கள் அடைபட்டு கிடப்பதாக பொய் கூற துவங்கிய இவர், சீன அரசு “கட்டாய கருத்தடை”, “கலாச்சார அழிப்பு” நடவடிக்கைகள் மூலம் உய்கூர் முஸ்லிம்கள் மீது “இன அழிப்பு” நடவடிக்கைகளை ஏவி விடுவதாக பொய் அறிக்கை வெளியிட்டார். ASPI முதலில் செயற்கைக்கோள் (Satellite) புகைப்படங்கள் வைத்து சீனா பல்லாயிரம் “இன அழிப்பு” மையங்களை திறந்துள்ளதாக பொய் அறிக்கை வெளியிட்டது. பின்னர் சீனா “வறுமை ஒழிப்பு” என்ற பெயரில் உய்கூர் முஸ்லிம்களை வயல்களிலும் ஆலைகளிலும் “அடிமைப் பணி”-யில் அமர்த்தியுள்ளதாக பொய் அறிக்கை வெளியிட்டது.

இந்த மூவர் தான் பிரதானம். இவர்களின் பொய்களை மீண்டும் மீண்டும் மேற்கத்திய ஊடகங்கள் ஒளிபரப்பு செய்துகொண்டே இருக்கும். இந்த பரப்புரைகளின் உண்மை நிலையை பின்வருமாறு காணலாம்.

முஸ்லிம்களின் உரிமைகள்

எந்த மதத்தவரும் அவர்களின் மதத்தை கடைபிடிக்க சீன அரசியல் சாசனத்தில் உரிமை உண்டு. இதை பறிப்பவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். இது உய்கூர் முஸ்லிம்களுக்கும் பொருந்தும். ஷின்ஜியாங் முஸ்லிம் ஒவ்வொருவரும் குர்ஆன் படிக்கவும், ஹஜ்ஜி பயணம் செல்லவும், மசூதிகளில் வழிபடவும் செய்கின்றனர். ரமலான் காலத்தில் பண்டைய “காஷ்கார்” நகரமே ஜொலிக்கும். “முஸ்லிம்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது, தயவு செய்து பொய் பரப்பாதீர்கள்” என சீன இஸ்லாமிய கூட்டமைப்பு பல அறிக்கைகள் விடுத்த பின்னும் ஊடக பொய்கள் நிற்கவில்லை.

சீனாவில் தடை செய்யப்பட்ட ஒரே ஒன்று, “பொது வெளியில் மத நடவடிக்கைகள்“. உதாரணமாக, அரசு பணியில் இருப்பவர்கள் மத வெளிப்பாட்டில் ஈடுபட்டால், அது அரசு மத நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஆகாதா? இதை சீனா அனுமதிப்பதில்லை. “மதம் என்பது தனிமனித எல்லைகளுள் மட்டுமே இருக்க வேண்டும்” – இதானே மதச்சார்பின்மையின் உண்மையன பொருள்? ஃபிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகளிலும் இது போன்ற விதிகள் உண்டு. ஆனால் இது போன்றவற்றை பிடித்துக்கொண்டு ‘முஸ்லிம்களுக்கு உரிமையே இல்லை’ என பொய்யாடல்கள் வலம் வருகின்றன.

மேலும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வைத்து சீனா மசூதிகளை அழிப்பதாக பொய்ப் பிரச்சாரம வலம் வருகிறது. ஆனால் இந்த பொய்யையும் சீன ஊடகங்கள் உடைத்துள்ளன. அழிக்கப்பட்டதாக சொல்லப்படும் மசூதிகளின் புதுப்பிக்கப்பட்ட புகைப்படங்களே வெளியாகிவிட்டன. மேலும் 1980லிருந்து சீனாவில் 35,000 மசூதிகள் கட்டப்பட்டுள்ளன. 1980ல் ஷிங்சியாங்கில் ~3000 மசூதிகள் இருந்தது. இன்று ~24,000 மசூதிகள் உள்ளன. சீனாவில் சராசரியாக 530 முஸ்லிம்களுக்கு ஒரு மசூதி உள்ளது. இது அனேக இஸ்லாமிய நாடுகளை விடவும் கூட அதிகம். ஷின்ஜியாங்கில் மட்டும் 8 இஸ்லாமிய மதக் கல்லூரிகள் உள்ளன.

பயிற்சி மையங்களா? சிறைகளா?

அதி-தீவிரவாத சித்தாந்தத்திலிருந்து மீட்டெடுப்பதற்காக செயல்படும் மையங்கள் உய்கூர்களை அடைத்து வைக்கும் சிறைகள் என்ற பரப்புரை நிகழ்கிறது. ஆட்ரியன் சென்ஸ் இதை முதலில் சொன்ன பொழுது ஆதாரம் கேட்டால், “அவர் சொல்லி, இவர் சொல்லி கேட்டது” என்ற அபத்தமான ஆதாரம் கொடுத்தார். அவர் 10 லட்சம் என கூறியது ஊதி பெரிதாக்கப்பட்டு, 80 லட்சம் வரை போய்விட்டது (உய்கூர் ஜனத்தொகையே 1.2 கோடி தான்). ஆனால் இது சிறைகள் என்ற வாதம் முழுக்க முழுக்க பொய்.

நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், இந்தியா உட்பட இதுவரை 90 நாடுகளில் இருந்து 1000ற்கும் மேற்பட்ட அதிகாரிகளையும் ஊடகவியலாளர்களையும் அழைத்து சீனா இந்த மையங்களை சுற்றிக்காட்டியுள்ளது. இவர்கள் அனைவருமே இந்த மையங்கள் “இன அழிப்பு மையங்கள் இல்லை” என திட்டவட்டமாக கூறிவிட்டனர். “உலக வங்கி” அதிகாரிகளும் வந்து பார்த்துவிட்டு இதையே தான் கூறினர். இருப்பினும் மேற்கத்திய ஊடகங்கள் பரப்புரைகளை நிறுத்தவில்லை. பிரிட்டனின் “பி.பி.சி” ஊடகவியலாளர்கள் கூட அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர். அவர்கள் ஒளிபரப்பும் காணொளியை பார்த்தாலே நமக்கு புரிகிறது – இந்த மையங்கள் சிறைகள் இல்லை. அங்குள்ளவர்கள் சொந்த விருப்பத்தில் கல்வி பயில்கின்றனர் என்பது நிரூபணம் ஆகிறது. ஆனாலும் இவை “சிறைகள்” தான் என கட்டுக்கதை கட்டுவதை நிறுத்தவில்லை. அமெரிக்காவின் என்.பி.ஆர், ஏ.பி.சி ஊடகங்களும் சென்று பார்த்து “கொடுமைகள்” பற்றி எந்த ஆதாரமும் கொண்டு வர முடியவில்லை.

மேலும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் “ஆயிரக்கணக்கான சிறைகளை கட்டியது சீனா” என்ற பொய்யும் உடைக்கப்பட்டுவிட்டது. “சிறைகள்” என கூறப்படும் பல ஸ்தலங்களும் உண்மையில் மருத்துவமனைகள்/அலுவலகங்கள் என சீன ஊடகங்கள் நிருவி விட்டன.

இந்த மையங்கள் எல்லாம் சிறைகளே இல்லை என தெளிவாக தெரிகிறது. இதை மேலும் “இன அழிப்பு” மையம் எனக் கூறுவது வரலாற்றில் பாசிசத் தாக்குதலால் மாண்ட யூதர்களையும், கம்யூனிஸ்டுகளையும் அவமானப்படுத்தும் செயல் ஆகும்.

இன அழிப்பு?

இந்த பரப்புரைக்கு மேற்கத்திய நாடுகள் முக்கியமாக பயன்படுத்துவது ஆட்ரியன் சென்ஸ் அவரின் அறிக்கையை தான். “தரவுகளை கொடுமை செய்தால் அதை என்ன கதை வேண்டுமானாலும் சொல்ல வைக்கலாம்” என்ற ஆங்கில சொல்லாடல் உண்டு. அதைத் தான் ஆட்ரியன் சென்ஸ் செய்கிறார். சீன அரசின் சில தரவுகளை பொருக்கி எடுத்துக் கொண்டு, முழு தரவை கூறாமல், அவற்றை திரித்துக் காட்டி, தவறான முடிவுகளுக்கு வருகிறார் சென்ஸ். உதாராணம்: மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவில் ஒரு/இரு குழந்தை சட்டம் 1980களிலிருந்து உள்ளது. ஒரு தம்பதியர் ஒன்று (சமீபத்தில் இரண்டு) குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ளலாம். ஆனால் 2017 வரை ‘உய்கூர்’ போன்ற சிறுபான்மை இனத்தவருக்கு இந்த சட்டம் பொருந்தாது என இருந்தது (அவர்கள் எவ்வளவு குழந்தை வேண்டுமானலும் பெறலாம்). ஆனால் சுமார் 40 ஆண்டுகளுகு பின் 2017ல் இது சிறுபான்மையினருக்கும் நீட்டிக்கப்பட்டது. இயல்பாகவே 2017ல் உய்கூர் ஜனத்தொகை வளர்ச்சி விகிதம் குறையத் தான் செய்யும். வெறும் 2 ஆண்டு போக்குகளை வைத்து, “உய்கூர் ஜனத்தொகையை சீனா கட்டுப்படுத்துகின்றது. இது இன அழிப்பு” என கட்டுக்கதை வைக்கிறார்.

ஆனால் உண்மை நிலவரம் என்ன? 2010லிருந்து 2018 வரை பார்த்தால், ‘உய்கூர்’ ஜனத்தொகை பெருக மட்டும் இல்லை. “ஹான்” பெரும்பான்மையினத்தவரை (தேசிய அளவில் பெரும்பான்மை) விட அதிவேகமாக வளர்ந்துள்ளது. ‘உய்கூர்’ ஜனத்தொகை 22% அதிகரிக்க, ‘ஹான்’ ஜனத்தொகை வெறும் 2% தான் அதிகரித்துள்ளது. ஷின்ஜியாங் மொத்த ஜனத்தொகையில் இன்று ஹான் இனத்தவர் ~40% பங்கு வகிக்க, ‘உய்கூர்’ இனத்தவரின் பங்கு ~45%-ஆக உயர்ந்துவிட்டது. பின்புலத்தை கூறாமல், வெறும் 2 ஆண்டு போக்கை வைத்து “இன அழிப்பு” என கூறுவது போன்ற பல கயமைத்தனமான கதைகள் நிறம்பியதே ‘சென்ஸ்’ அறிக்கை. இவ்வாறு தோலுரித்து காட்டப்பட்ட பின்பும் ‘ஆட்ரியன் சென்ஸ்’ என்ற “நாஜி”-யின் பொய் அறிக்கையை மேற்கத்திய நாடுகளும் ஊடகங்களும் தூக்கிப் பிடித்த வண்ணம் உள்ளனர்.

ஷின்ஜியாங் வளர்ச்சி

அடுத்த விசாரணைக்கு செல்லும் முன், ஷின்ஜியாங் பகுதியில் சீன அரசின் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து பார்ப்பது அவசியமாகிறது. புரட்சி ஏற்பட்ட பின்னரே சீனாவின் பிற பகுதிகளைப் போல் ஷின்ஜியாங்கிலும் நிலக்கிழார்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, உழுபவர்களுகு நிலம் அளிக்கப்பட்டது. இதனால் மக்கள் வாழ்வு பன்மடங்கு உயரத் துவங்கியது. 1949ல் வெறும் 10%-ஆக இருந்த கல்வி அறிவு விகிதம், இன்று 98% ஆகியுள்ளது. 1978லிருந்து இன்று வரை தனி மனித சராசரி ஆண்டு வருமானம் 100 மடங்கு அதிகரித்து, இன்று ~$3,500-ஆக உள்ளது. இது இந்தியாவின் அனைத்து பெரும் மாநிலங்களை விடவும் அதிகம் (தமிழகத்தை விட 25% அதிகம்).

அண்மை கால முக்கிய நிகழ்வு என்னவென்றால், அதிவேக வறுமை ஒழிப்பு தான். 2014ல் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளோர் விகிதம் ஷின்ஜியாங்கில் ~20%. இன்று வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்த வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் ஒரு முக்கிய பங்காற்றியது ஊழியர்களின் இடமாற்றம். கடந்த பத்தாண்டின் துவக்கத்தில் ஷின்ஜியாங் ஊரகப் பகுதியில் வறுமை விகிதம் மிக அதிகமாக இருந்தது. இதன் காரணம் தெற்கு பகுதிகளில் விளைச்சல் நில அளவு மிகக் குறைவு. இதை நிவர்த்தி செய்ய அரசு பெரும் முதலீடுகள் மேற்கொண்டது. அரசே முன்னெடுப்பு மேற்கொண்டு, ஊரகப் பணியாளர்களுக்கு நகர்ப்புற ஆலைகளில் பணி பெற்றுத் தந்தது. இதனால் அவர்கள் வருமானம் 10 மடங்கானது. இது மட்டுமின்றி, பல தொழில் வளர்ச்சி உதவிகளும் மேற்கொள்ளப்பட்டன. இது போல் மக்கள் நல்வாழ்வில் அரசு காட்டிய அக்கறையின் காரணமாகவே பிரிவினைவாதிகளின் கை என்றுமே ஓங்கவில்லை. 1950ல் வெறும் 3000-ஆக இருந்த உய்கூர்களின் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை, 2018ல் 4.3 லட்சமாக உயர்ந்துள்ளது!

அடிமை உழைப்பு?

அண்மையில் சீனாவில் கொதித்து வருவது இந்த “அடிமை உழைப்பு” சர்ச்சை. வறுமை ஒழிப்பு நடவடிக்கை திட்டம் மற்றும் ஆலைப் பணிகள் தரவு ஆகியவற்றை திரித்து காட்டும் ASPI மற்றும் சென்ஸ், சீன அரசு உய்கூர் மக்களை அடிமை உழைப்பில் தள்ளுவதாகவும், இது ஹிட்லர் காலத்தில் யூதர்கள் நிலை போன்றது எனவும் கூறியுள்ளனர். இது சாமானிய சீனர்களின் மத்தியிலும் கோபத்தை கிளப்பி உள்ளது. ஆலைகளிலும் பெரும் வயல்களிலும் வேலை பெறும் ஷின்ஜியாங் மக்களுக்கு முதலாளிகள் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து, ஒப்பந்தம் போட்டு ஊதியம் வழங்க வேண்டும். “இது எப்படி அடிமை உழைப்பாகும்?” என கொதிக்கின்றனர் சீன இணைய வாசிகள். இவ்வாறு அரசு வேலை பெற்றுத் தருவது நாடு முழுவது நடக்கிறது.

குறிப்பாக ஷின்ஜியாங் பருத்தி. இந்தியாவை அடுத்து அதிக பருத்தி உற்பத்தி செய்யும் நாடு சீனா. சீனாவின் ~87% பருத்தி ஷின்ஜியாங்கில் உற்பத்தி ஆகிறது. இந்த பருத்தி உற்பத்தியில் அடிமை உழைப்பு இருப்பதாகக் கூறி “மேம்பட்ட பருத்திக்கான முன்னெடுப்பு” (BCI) என்ற சுவிட்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்ட சர்வதேச கூட்டமைப்பு ஷின்ஜியாங் பருத்தியை தடை செய்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், தடை செய்த தலைமையகத்திலிருந்து ஒருவர் கூட ஷின்ஜியாங்கில் காலடி எடுத்து வைக்கவில்லை. ஆனால் இதே BCI-யின் சீன கிளையில் இருப்பவர்கள் ஷின்ஜியாங் சென்று, அங்கு நன்கு கள ஆய்வு செய்து, “இங்கு அடிமை உழைப்பு இல்லவே இல்லை” என அறிக்கை அளித்துள்ளனர். வேடிக்கை முரண். இது மட்டுமில்லாமல், வடக்கு ஷின்ஜியாங்கில் ஏற்கனவே 95% உற்பத்தி ட்ரோன் மற்றும் எந்திரங்கள் மூலம் நடைபெறுகின்றன. இதில் எங்ருந்து “அடிமை உழைப்பை” புகுத்துவது?

இந்த பொய் பரப்புரையால் கோபமடைந்துள்ள சீன இளைஞர்கள், “எங்கள் பருத்தி உங்களுக்கு வேண்டாம் என்றால் உங்கள் உடை எங்களுக்கு வேண்டாம்!” எனக் கூறி வெளிநாட்டு பிராண்டுகளான “நைக்கி”, “அடிடாஸ்”, “எச்&எம்” போன்றவற்றை புறக்கணிக்க பெருமளவில் துவங்கிவிட்டனர்.

பொய் வாக்குமூலங்கள்

இப்படி ஒவ்வொன்றும் பொய்யென நிருவிய பின்னும், “பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம்” என சில நபர்களின் காணொளியை தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டே இருக்கும் மேற்கத்திய ஊடகங்கள், அவர்கள் சொல்வதில் உள்ள உண்மைத்தன்மையை ஆராய்வதே இல்லை.

உதாரணமாக மிஹ்ரிகுல் டுர்சுன் என்பவர் 2018ல் அமெரிக்க பாராளுமன்ற கமிட்டி முன் வாக்குமூலம் அளித்தார். அவர் பின்னர் CNN தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அவர் ஷின்ஜியாங் “இன அழிப்பு மையத்தில்” துன்புறுத்தப்பட்டதாகவும், தன் மகன் கொல்லப்பட்டதாகவும் கூறினார். ஆனால் சீன ஊடகங்கள் ஷின்ஜியாங்கில் உள்ள மிஹ்ரிகுல்லின் வீட்டிற்கே சென்று பார்த்தால், மிஹ்ரிகுல்லின் அம்மா தன் பேரக்குழந்தைகள் எகிப்தில் நலமாக உள்ளதாகக் கூறி புகைப்படம் காட்டுகிறார். மேலும் மிஹ்ரிகுல் ஷின்ஜியாங் தொழிற்பயிற்சி மையங்களுக்கு சென்றதே இல்லை எனவும் கூறுகிறார்.

இப்படி பல பல பொய் வாக்குமூலங்கள். இந்த வாக்குமூலங்கள் குறித்து கருத்து கேட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை அழைக்கும் மேற்கத்திய ஊடகங்கள். ஒரு கட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் கோபமடைந்து, “இந்த பொய்களுக்கு விடை அளிப்பதே தான் எங்கள் பணியா?” என மேற்கத்திய ஊடகங்களை சாடினார்.

யார் ஆதரிக்கின்றனர்? யார் எதிர்க்கின்றனர்?

இப்படி பொய் மேல் பொய் சொல்லி சீனாவின் ஷின்ஜியாங் கொள்கைகளை தொடர்ந்து எதிர்த்து வரும் நாடுகள் அனைத்துமே மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் மட்டுமே! 2020 அக்டோபரில் ஐ.நா. சபையில் சீனாவின் “ஷின்ஜியாங் மனித உரிமை மீரல்கள்” குறித்து “கவலை” தெரிவித்து 39 நாடுகள் கடிதம் அளித்தன. இவை அனைத்துமே வடக்கு அமெரிக்க-ஐரோப்பிய-ஆஸ்திரேலிய ஏகாதிபத்திய நாடுகள். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்நாட்டு பிரதிநிதிகள் யாருமே ஷின்ஜியாங் சென்றதில்லை. ஷின்ஜியாங் வந்து அங்குள்ள சுதந்திரம் குறித்தும், தொழிற்பயிற்சி மைய்யங்கள் குறிந்தும் வந்து பார்த்துக்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தது சீனா. ஆனால் இந்த அழைப்பை அவர்கள் நிராகரித்துவிட்டனர்.

2021 மார்ச் மாதத்தில் கியூபா தலைமையில் 64 நாடுகள் சீனாவின் ஷின்ஜியாங் கொள்கைகளை ஆதரித்து ஐ.நா மனித உரிமை ஆணையத்திற்கு கடிதம் எழுதினர். இவை பெரும்பாலும் கிழக்காசிய, மேற்காசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க வளரும் நாடுகள். இந்நாட்டு பிரதிநிதிகள் பலரும் ஷின்ஜியாங்கிற்கு நேரடியாக சென்றுள்ளனர்.

“இஸ்லாமிய ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு” (OIC) என்பது (180 கோடி இஸ்லாமியர்கள் வாழும்) 57 இஸ்லாமிய நாடுகள் சேர்ந்த அமைப்பு (ஐ.நா-விற்கு பிறகு உலகின் இரண்டாம் பெரும் கூட்டமைப்பு). இந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஷின்ஜியாங் பயணித்து ஆய்வு செய்து 2019ல் வெளியிட்ட அறிக்கையில், “மக்கள் சீனம் தன் நாட்டில் முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பது பாராட்டுக்குறியது” எனக் கூறியது.

ஆனால் தொடர்ந்து பொய்களை கட்டிக்கொண்டு நிற்கிறது மேற்கத்திய நாடுகள். டிரம்ப் வெளியேறுவதற்கு முன்பு, சீனாவில் தொழிற்பயிற்சி முயற்சி “இன அழிப்பு நடவடிக்கை” என முத்திரை குத்தியது அமெரிக்கா. இதையே தற்போதைய பிடன் அரசும் தொடர்கிறது. அமெரிக்காவுடன் கை கோர்த்து நிற்பது பிரிட்டன், கனடா, ஜப்பான் போன்ற நாடுகள். அமெரிக்கா என்ற நாடு உருவானதே அந்நாட்டு பூர்வகுடிகள் செவ்விந்தியர்களி இன அழிப்பிற்கு பின்பு தான். 95% செவ்விந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதை அந்நாட்டு அறிஞர்களே கூறுவர். ஆனால் அதை அமெரிக்கா “இன அழிப்பு” என இன்றளவும் வரையறுக்கவில்லை. தன் போர் செலவீனத்திற்காக காலனிய பிரிட்டன் அரசு வங்கத்தின் 30 லட்சம் மக்களை பட்டினி போட்டு கொன்ற இனப்படுகொலைக்கு இன்றளவும் மன்னிப்பு கோரவில்லை. ஆனால் இந்த நாட்டு அரசுகள் எல்லாம் பொய்களை கட்டிக்கொண்டு சீனா மீது கள்ளத் தாக்குதல் நடத்துகின்றன.

ஏன் ஷின்ஜியாங்?

சோசியலிச சீனாவை கட்டுப்படுத்த ஏகாதிபத்தியவாதிகள் எந்த வாய்ப்பையும் பயன்படுத்துவர் என்பது உண்மை தான். ஆனால் ஷின்ஜியாங்கை தாக்குவதற்கு இதர காரணங்களும் உண்டு. சீனாவின் அசுர வேகத்தை கண்டு அஞ்சும் அமெரிக்கா, அதை பொருளாதார ரீதியாக கட்டுப்படுத்த முக்கியமாக தாக்குவது சீனாவின் “பெல்ட் & ரோட்” (BRI) என்ற சர்வதேச வர்த்தக கட்டமைப்பை கட்டியமைக்கும் கனவைத் தான். இதை சாத்தியமாக்கிவிட்டால் பெரும்பாலான வளரும் நாடுகளும் மேற்கத்திய நாடுகளை சார்ந்திராமல், சோசியலிச சீனாவுடனான வர்த்தகம் மூலம் செழிக்க வாய்ப்புள்ளது.

பண்டைய் பட்டுப் பாதை போலவே, BRI-க்கும் முக்கிய பகுதியாக இருந்து, சீனாவை கிழக்கு ஐரோப்பிய, மேற்கு ஆசிய, ஆப்ரிக்க நாடுகளுடன் இணைக்கும் பாலம் ஷின்ஜியாங். இந்த பகுதியில் சலசலப்பை உருவாக்கினால் BRI முடங்கும் என்ற நோக்கம் நிச்சயம் இருக்கும். மேலும் எண்ணெய் மற்றும் கணிம வளம் நிறைந்த பகுதி ஷின்ஜியாங். இந்த வளங்கள் மீதும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஒரு பார்வை இருக்கக் கூடும்.

இறுதியாக..

ஷின்ஜியாங் குறித்த சேகரிக்க வேண்டிய தரவுகள் கடினமாக இருப்பதாலும், மேற்கத்திய ஊடகங்களில் பொய்கள் நிறம்பி இருப்பதாலும், இந்த பரப்புரைகளை சில இடதுசாரிகள் கூட நம்பி விடுகின்றனர். உதாரணமாக இந்த “இன அழிப்பு மையங்கள்” உண்மை என நம்பி விமர்சித்து சிபிஐ(எம்-எல்) லிபரேஷன் கட்சி கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில் வெறும் மேற்கத்திய ஊடகங்களே மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. சீனாவில் ஷின்ஜியாங் செல்ல எந்த தடையும் இல்லை. ஆண்டுக்கு 20 கோடி சுற்றுலா பயணிகள் ஷின்ஜியாங் செல்கின்றனர். ஆனால் ‘உய்கூர் கொடுமை’ குறித்த ஒரு நம்பகத்தன்மை கொண்ட புகைப்படம் கூட வெளிவரவில்லை என்பதை சிந்திக்க மாட்டார்களா? அது சரி. மேற்கு வங்க நிலை குறித்தே சரியான புரிதல் இல்லாதவர்கள் எப்படி மக்கள் சீனம் குறித்து புரிந்து வைத்திருப்பார்கள்?

இப்படி நாமும் ஏகாதிபத்திய வலையில் வீழ்ந்திடக் கூடாது. சீனாவின் “சோசியலிச சந்தை” வளர்ச்சிப் பாதை குறித்தோ, ஷின்ஜியாங்கில் தீவிரவாத கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்தோ நமக்கு விமர்சனம் இருக்கலாம். ஆனால் பொய் பரப்புரைகள் வசப்பட்டு ஏகாதிபத்திய சக்திகளுக்கு வலு சேர்ப்பது உழைக்கும் வர்க்கத்திற்கு எவ்விதத்திலும் உதவாது.

பொது சுகாதாரம்: முதலாளித்துவ பார்வையின் குறைபாடுகள்

(பொது சுகாதாரம் குறித்து முதலாளித்துவ அறிஞர்களிடம் இருந்த நம்பிக்கைகள் சிதைந்திருக்கும் சூழலில் அதற்கான அடிப்படை காரணங்களை ரிச்சர்ட் லெவின்ஸ் பட்டியலிடுகிறார். குறுகலான முதலாளித்துவ பார்வையிலிருந்து, முற்போக்கான மார்க்சிய பார்வையை அவர் வேறுபடுத்துகிறார். இந்தப் பார்வையை முன்னெடுப்பது வர்க்கப் போராட்டத்தில் தவிர்க்க முடியாதது என்கிறார். மந்த்ளி ரிவியூ இதழில் அவர் எழுதிய கட்டுரையின் சுறுக்கமான மொழியாக்கம். – ஆசிரியர் குழு)

– ரிச்சர்ட் லெவின்ஸ்

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ‘மேற்குலக’ நாடுகளின் அறிவியல் பாரம்பரியமானது. “இது எதனால் ஆனது” மற்றும் “இது எப்படி இயங்குகிறது” என்ற கேள்விகளுக்கு பதில் தேடும் அறிவியல் கண்ணோட்டங்களில் மிகப்பெரும் வெற்றிகளை சாதித்திருக்கிறது. நூற்றாண்டுகளாக இந்த கேள்விகளுக்கான விடை அறியும் எளிய வழிமுறைகளை உருவாக்கியிருக்கிறார்கள். பொருட்களை உடைத்து திறந்தும், செதுக்கி மெலிதாக்கி, கீரியும் அவை எதனால் செய்யப்பட்டிருக்கிறது என கூறுகிறோம். ஆனால் ஒப்பீட்டளவில் சிக்கலான அமைப்புகளை புரிந்துகொள்வதில் இந்த வெற்றி சாத்தியமாகவில்லை.

மக்கள் நலவாழ்வு சார்ந்த விசயங்களை ஆய்ந்து பார்த்தால் இந்த பலவீனம்  தெளிவாகவே புலப்படுகிறது. கடந்த நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் மாறிக் கொண்டேவந்துள்ள மக்கள் நலவாழ்வு குறித்தான போக்குகளில் கொண்டாடுவதற்கு உள்ள காரணங்களைப் போலவே, அச்சுறுத்தும் காரணங்களும் உள்ளன. கடந்த இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் முப்பது ஆண்டுகள் அதிகரித்தது. வினோதமான உயிர்க்கொல்லி நோய்கள் மட்டுப்படுத்தப்பட்டன. கிட்டத்தட்ட அழிக்கப்பட்டன. பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டு விட்டது.  தொழுநோய் அரிதான ஒன்றாக மாறிப் போயுளளது.  போலியோ நோய் உலகின் பல பகுதிகளில் ஒழிக்கப்பட்டு விட்டது. ஒரே மாதிரியான வெவ்வேறு கிருமிகளை வேறுபடுத்தி சோதித்து அறியும் அளவிற்கு அதி நவீன அறிவியல் தொழில் நுட்பத்தில் நாம்  முன்னேறியிருக்கிறோம்.

அதே சமயம் ஏழை பணக்காரர் இடைவெளி அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் உலக மக்கள் திரளில் பெரும் பகுதியினருக்கு கிடைகாத சூழல் உருவாகியுள்ளது. இப்படியான சூழலில் புதுப்புது நோய்கள் தோன்றுகின்றன, ஒழித்துவிட்டதாக கருதிய நோய்கள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளன. இது பொதுசுகாதார வல்லுனர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.

1970-களிலேயே தொற்று நோய்கள் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டன. அதாவது தொற்றுநோய்கள் கொள்கையளவில் ஒழிக்கப்பட்டுவிட்டன.  எதிர்கால சுகாதாரப் பிரச்சனை என்பது சிதைவுறுதல் நோய்கள் (Degenerative diseases), வயது முதிர்வு காரணமாக ஏற்படும் நோய்கள், நாட்பட்ட நோய்கள் போன்ற நோய்களாகும்.  அவ்வாறு நினைத்தது ஒரு இமாலயத் தவறு என்பதை இன்று உணர்கிறோம். 

மலேரியா, காலரா, காசநோய், டெங்கு மற்றும் நவீன நோய்கள் வந்துள்ளன. புதிய, வேறுபட்ட வகையிலான நோய்கள் பீடித்திருப்பதும், அதில் மிகவும் அச்சப்படத்தக்க நோயான ‘எய்ட்ஸ்’ நோய், ‘லிஜனேர்’ நோய் (Legionnaire’s disease), எபோலா தொற்று, நச்சு அதிர்வு பாதிப்பு (Toxic shock syndrome) பல்வேறு மருந்துகளுக்கும் கட்டுப்படாத காச நோய் மற்றும் இதர நோய்களின் தாக்குதல் அதிர்ச்சி தருகின்றன.

இது எப்படி நடந்தது?  பொதுசுகாதாரம் இவ்வாறு சிக்கலுக்குள்ளானது எப்படி?  சுகாதார நிபுணர்கள் தொற்று நோய் மறைந்து விடும் என கருதியது எப்படி? அது ஏன் தவறாகியது?

பொய்யாகிப்போன சில காரணங்கள்

கடந்த நூற்றைம்பது ஆண்டுகளாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் தொற்று நோய்த் தாக்கம் குறைந்து வந்தது உண்மைதான்,  இந்த போக்கு அப்படியே தொடரும் என்பது வழக்கமான கணிப்பு ஆகும். அவ்வாறு கணித்த சுகாதார வல்லுனர்கள் முன்வைத்த வாதம் தொற்று நோய்கள் முற்றாக மறைந்து விடும் என்பதாகும்.

முதலாவதாக அதனை எதிர்கொள்ள அனைத்து விதமான புதிய தொழில்நுட்பங்களையும் கடைபிடித்துள்ளோம் என்பதால் அவர்கள் அவ்வாறு நம்பினார்கள்.

உண்மையில் சில நோய்களைக் கண்டுபிடிப்பதில் விரைவாகச்  செயல்பட்டிருக்கிறோம். இரண்டே நாளில் ஆளைக் கொன்றுவிடும் அபாயமான நோய் பீடித்த நோயாளருக்கு ஆய்வக பரிசோதனைகளின் மூலம் நோயை விரைவாகக் கண்டுபிடித்து உடனே சிகிச்சை அளிக்க முடிகிறது.  வாரக் கணக்கில் பாக்டீரியா கிருமிகளை வளர்த்து அதன் மூலம் நோயைக் கண்டறிவதற்குப் பதிலாக மரபணு சோதனை மூலம் ஒரே மாதிரி தெரிகிற நோய்க்கிருமிகளையும் கூட விரைவாக வேறுபடுத்தி அடையாளம் காண முடிகிறது.  

நோய் பரப்பும் நுண் உயிரிகளுக்கு எதிரான போர்க் கருவிகளாகிய  மருந்துகளையும், தடுப்பூசிகளையும் உருவாக்கியுள்ளோம். கொசு மற்றும் சிறு பூச்சிகளை (Ticks) அழிப்பதற்கு மருந்துகள் உருவாக்கியுள்ளோம்.  உயிர்வகை மாற்றம் மற்றும் இயற்கை தேர்வு மூலம் நுண்ணுயிரிகள் தொடர்ந்து அச்சுறுத்தும் என்பது நாமறிந்ததே. எனவே நோய்கள் உருவாகும் செயல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கும்.  அதே சமயம் அதனை எதிர்கொள்ள இதுவரை கண்டிராத புதுப்புது ஆயுதங்கள் உருவாக்கப்படும்.

குறிப்பிட்டுச் சொன்னால் நமக்கும், நோய் உருவாக்கும் நுண்ணுயிரிகளுக்கும் போர் நடக்கிறது. நாம்தான் இதில் முன்னணியில் இருப்போம். ஏனெனில் நமது ஆயுதங்கள் மென்மேலும் வலுவானதாகவும், ஆற்றல் மிக்கதாகவும் உள்ளன.

மற்றொரு காரணம் – இதைத்தான் உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் சுட்டிக் காட்டுகிறது – பொருளாதார வசதி வறுமையை ஒழித்துவிடும், செல்வத்தைப் பெருக்கிவிடும் எனவே அனைத்து புதிய தொழில்நுட்பங்களும் அனைவருக்கும் கிடைக்கும்.

மூன்றாவதாக மக்கள் தொகை வல்லுனர்கள் ஒரு காரணத்தை முன்வைத்தார்கள். தொற்று நோய்கள் குழந்தைகள் மீதே கடுமையாக இருக்கின்றன, நமது சமூகத்தில் வயது மூத்தவர்கள் அதிகம் எனவே நோய் தாக்கத்திற்கு குழந்தைகள் ஆளாகும் வாய்ப்பு குறைவாகும்.

இவ்வாறு அனுமானக்கும்போது ஒரு விசயத்தை அவர்கள் கவனிக்க தவறியுள்ளார்கள். குழந்தைகளை நோய்கள் அதிகம் தாக்குவதற்கு காரணம் அவர்கள் கிருமிகளை எதிர்கொண்டதில்லை என்பதாகும். வயதானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள். இப்போது குறைவாக உள்ள குழந்தைகளுக்கு வயதாகும்போது அவர்கள் நோய்க்கு ஆளாகும் சாத்தியம் அதிகம். அம்மை போன்ற வியாதிகள் குழந்தைகளை விடவும் வயதானவர்களுக்கே அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

குறுகிய கண்ணோட்டமே பிரச்சனை

மருத்துவமும் அது சார்ந்த அறிவியல் துறையும் கொண்டிருக்கும் வரலாற்று அறிவும், தத்துவ புரிதலும் ஒரு வரம்புக்கு உட்பட்டவையே ஆகும். பொது சுகாதார கணிப்பில் ஈடுபட்டுள்ள கிட்டத்தட்ட அனைவரும் பூகோள ரீதியிலும், வாழ்வுரிமை பற்றியும் குறுகிய கண்ணோட்டம் கொண்டவர்கள். அவர்கள் கடந்த நூற்றாண்டு அல்லது இரண்டு நூற்றாண்டுகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர்.  முழுமையான வரலாற்றுக் காலத்தை எடுத்துக் கொள்வதில்லை.  நீண்ட கால நோக்கில் அவர்கள் பார்த்திருப்பார்களென்றால் மக்கள் தொகையிலும், உணவு மற்றும் நிலப்பயன்பாட்டிலும் ஏற்பட்டிருக்கும் பெரிய மாற்றங்களின் விளைவாக, நோய் உருவாக்கம் ஏற்படுவதையும், மறைவதையும் கணக்கில் எடுத்திருப்பார்கள். இயற்கையோடான உறவில் மாற்றம் ஏற்படும்போது தொற்று நோய் பரவலுக்கும், தாக்குதலுக்கும் ஆளாகிறோம்.

ஐரோப்பாவில் பிளேக் நோய்

ஆறாம் நூற்றாண்டில் ரோமப் பேரரசில் ஜஸ்டினன் என்ற அரசருடைய முடியாட்சிக் காலம் வீழ்ச்சியுற்ற சமயத்தில் ஐரோப்பாவில் முதன்முறையாக பிளேக் நோய் பரவியது.  சமூக சீர்குலைவும், உற்பத்தி வீழ்ச்சியும் ஏற்பட்டு ஐரோப்ப கண்டமே துயரில் ஆழ்ந்தது.  அந்தக் காலகட்டத்தில் மிகப் புகழ் பெற்ற நகரங்களில் சுகாதார வசதிகள் சீர்குலைந்தன.  பிளேக் நோய் பரவிய காலத்தில் பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.  14 ஆம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவத்திற்கு நெருக்கடி உருவாகி வளர்ந்த காலத்தில் பிளேக் நோய் மீண்டும் தோன்றியது, பிளேக் நோய் பரவுவதற்கு முன்பாகவே மக்கள் தொகை வீழ்ச்சியுற்றதை பார்த்தோம்.  1338-ஆம் ஆண்டில் ஆசியாவிலிருந்து கருங்கடல் துறைமுகங்களில் வந்திறங்கிய மாலுமிகள் மூலம் பிளேக் நோய் கடத்தப்பட்டு பின்னர் அது அங்கிருந்து குறுகிய கால இடைவெளியில் மேற்கு முகமாக பயணம் செய்து ரோம், பாரீஸ், லண்டன் நகரங்களைத் தாக்கியது என்பதே பிளேக் நோய் பரவல் குறித்த பொதுவான வரலாறு ஆகும்,  வேறு வார்த்தைகளில் சொன்னால், பிளேக் நோய் வேறு இடத்தில் தோன்றி இங்கு பரப்பப்பட்டது என்பதாகும்.  இதற்கு முன்னர் பல கால கட்டங்களில் பலமுறை பிளேக் நோய் தோன்றியிருக்கக்கூடிய சாத்தியப்பாடு இருந்தும், எந்தப் பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை. மக்கள் அதனை எதிர்த்து நிற்கும் சக்தியை இழந்திருந்த போதுதான் அந்த நோய் வெற்றிபெற்றது. எலிகளை கட்டுப்படுத்தி வந்த  நமது சமூகத்தின் கட்டுமானம் தகர்க்கப்பட்ட பின்னணியில், எலிகளினால் பரப்பப்படும் நோயினை எதிர்க்கும் சக்தியை இழந்தோம்.

சூழலியலை கணக்கில் கொண்ட பார்வை

இதர நோய்களைப் பார்த்தோமானால், அவைகள் வரலாற்றில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சூழ்நிலைகள் காரணமாக உருவாவதும், மறைவதும் நிகழ்கிறது. நாடு வளர்ச்சியடையும்போது தொற்று நோய் மறைந்து விடும் என்ற கோட்பாட்டிற்கு  மாற்றாக ஒரு சுற்றுச்சூழல் பார்வை முன்வைக்கப்பட்டது.  மக்களின் வாழ்வியலில் ஏற்படும் பெரிய மாற்றங்கள் காரணமாக (மக்கள் தொகை பெருக்கம், தங்குமிட அமைப்பு முறை, உற்பத்தி முறைகள்) நோய்க்கிருமிகள், அவைகளின் உற்பத்தி மற்றும் பரவல் ஆகியவற்றிலும் மாற்றம் ஏற்படுகிறது

லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் இதர பகுதிகளில் பரவிய ரத்தக்கசிவு நோய் எலிகள் மூலம், நேரடியாக இல்லாமல் விளைந்த தானியக் கதிர்களை கடித்து உண்ட மிச்சத்தை சுத்தம் செய்ததன் வழியாக பரவியது.  தானியங்கள் எலிகளின் உணவாகும்.  எலிகள் தானிய விதைகளையும், புற்களையும் உண்டு வாழ்கின்றன.  காடுகள் அழிக்கப்பட்டு, தானிய பயிர் விளைச்சல் துவங்கிய பொழுது ஓநாய், சிறுத்தை, பாம்புகள் மற்றும் எலிகளை தின்னும் ஆந்தை போன்ற உயிரினங்கள் அழிக்கப்பட்டன.  அதன் இறுதி விளைவாக எலிகளுக்கான  உணவுத் தேவை கூடியது, எலிகளின் இறப்பு விகிதம் குறைந்தது.

தற்போது தொற்று நோய்களின் வாகனமாக இந்த சமுக விலங்குகள் உள்ளன.  அவைகள் தங்களுக்கான வளைகளை கட்டிக் கொண்டன.  தங்கள் இனத்தை கட்டிக் காத்தன.  எப்பொழுது எல்லாம்  புதிய தலைமுறை உருவாகிறதோ, அப்பொழுது இளமையான எலிகள் புதிய இடங்களைத் தேடி வளைகள் அமைக்கச் சென்று விடுகின்றன.  அவைகள் பெரும்பாலும் உணவுக் கிடங்குகளையும், குடியிருப்புகளையும் நோக்கிச் சென்றன.  அதன் மூலம் நோயைக் கடத்துபவைகளாக  மாறிப்போயின.

இதே போன்ற மற்றொரு மனித நடவடிக்கை நீர்ப்பாசன ஏற்பாடுகள் ஆகும்.  இதனால் கல்லீரல் புளூக் நோயை பரப்பும் நத்தை, மலேரியா, டெங்கு மற்றும் மஞ்சள் காமாலை நோயை பரப்பும் கொசு போன்ற உயிரினங்களுக்கான வாழ்விடங்கள் உருவாகின்றன. நீர்ப்பாசனம் பெருகிய பொழுது, உதாரணமாக எகிப்தில் அஸ்வான் அணை கட்டிய பின்னர் கொசுக்களின் வாழ்விடங்கள் உருவாக்கப்பட்டன.  எப்போதாவது வரும் ‘ரிப்ட் பள்ளத்தாக்கு காய்ச்சல்’ எகிப்தில் இப்போது எல்லாக் காலங்களிலும் காணப்படும் நோயாக மாறியுள்ளது. 

மூன்றாம் உலக நாடுகளில் பிரம்மாண்டமான நகர உருவாக்கம் காரணமாக  டெங்கு நோயைப் பரப்பும் கொசுக்களால் “ஏடெஸ் எகிப்தி”  எனும் மஞ்சள் காமாலை நோய் பரப்பப்படும் புதிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.  நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் வாழ அவை பழகிக்கொண்டன.  காடுகளில் இருக்கக்கூடிய இதர கொசுக்களோடு போட்டி போட முடியாத சோனி கொசுக்கள் வெப்ப மண்டலங்களில் பெரிய நகரங்களில் கைவிடப்பட்ட பொருட்களான குட்டைகள், நீர்த்தொட்டிகள் மற்றும் பழைய டயர்கள் மூலம் இனப் பெருக்கம் செய்ய வசதியாக ஒரு சிறப்பு சூழலை உருவாக்கித் தந்துள்ளோம். வெப்ப மண்டலங்களில் நகரமய வளர்ச்சி, குறிப்பாக பெருநகரங்களான பாங்காக், ரியோ டி ஜெனீரோ. மெக்சிகோ மற்றும் பத்திலிருந்து இருபது மில்லியன் மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களில் டெங்கு மற்றும் மஞ்சள் காமாலை நோய் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

மக்கள் தொகை நெருக்கம்

மக்கள் தொகை நெருக்கமானது புதிய புதிய நோய்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.  தட்டம்மை நிலைத்து நிற்க சில நூறு ஆயிரம் மக்கள் தொகை போதும். எண்ணிக்கை குறைவாக இருந்தால் தட்டம்மை அனைவரையுமே தாக்கும், அதிலிருந்து மீள்வோருக்கு எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும். குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது அந்த நோய் நீடித்திருக்க முடியாமல் மறைந்துவிடும். மீண்டும் அது உருவாகித்தான் வளர வேண்டும். இரண்டரை லட்சம் பேர் வாழுகிற ஒரு நகரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான குழந்தைகளின் எண்ணிக்கையானது தட்டம்மை நோய் நிலைத்து தொடர போதுமான அளவாகும்.  அதுவே ஒரு கோடிப்பேர் அல்லது இரண்டு கோடிப்பேர் வாழும் நகரமாக இருந்தால் எம்மாதிரியான நோய்கள் தோன்றவும், பரவவும் முடியும் என எண்ணிப் பார்க்க வேண்டும்.  வாழ்க்கை நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டால் அது நோய்க்கான வாய்ப்பு வாசல்களை திறந்து விடும் என்று தெளிவாக தெரிகிறது.

நுண்ணுயிர்கள் பரவலுக்கான சூழல்

பொது சுகாதாரம் பற்றி குறுகிய பார்வை கொண்ட மருத்துவர்கள், மனிதனுக்கு தோன்றும் நோய்கள் மீது மட்டுமே அக்கறை கொள்வார்கள், காட்டு விலங்குகள் அல்லது வளர்ப்பு பிராணிகள் மற்றும் தாவரங்களைத்  தாக்கும் நோய்கள் மீது போதிய அக்கறை செலுத்துவதில்லை. அவ்வாறு கவனம் செலுத்தினால் எல்லா உயிரினங்களும் நோய்களை பரப்புகிற உண்மையை அவர்கள் எதிர் கொள்ள நேரிட்டிருக்கும்.  ஒட்டுண்ணிகளால் தான் நோய்கள் பரப்பப்படுகின்றன.  நோய்த்தொற்று ஒன்று தோன்றினால் அதன் அறிகுறிகள் தென்படலாம் அல்லது தென்படாமலும் இருக்கலாம். ஆனால் எல்லா உயிரினங்களும் ஒட்டுண்ணிகளுடன் தொடர்பு உடையவையே.  நீரிலோ அல்லது நிலத்திலோ உயிர்வாழ்வதற்கான போட்டியில் தப்பி பிழைக்கும் வழியாகத்தான் ஒட்டுண்ணிகள் உயிரினங்களில் தொற்றுகின்றன.

உதாரணமாக லிஜனேர் நோய்க் கிருமி தண்ணீரில் தான் வாழ்கிறது. இந்த பாக்டீரியா கிருமி உலகமெங்கும் காணப்பட்டாலும் அதன் வலுவற்ற தன்மை காரணமாக, பரவலாக நோயை உருவாக்கவில்லை. அதன் நுணுக்கமான உணவுத்தேவைகளின் காரணமாக, மனிதர்களை பெரும்பாலும் தொற்றுவதில்லை. அதற்கு சில தன்மைகள் உண்டு.   ஒன்று கடுமையான வெப்பநிலையைத் தாங்கும் சக்தி, இரண்டு ஓர் அமீபாவிற்குள் ஒளிந்து கொண்டு குளோரின் தாக்குதலிலிருந்து தப்பிக்கும் ஆற்றல். அரங்கங்கள், உணவு விடுதிகள், சாலையோரக் கடைகளில் தண்ணீரை கொதிக்கவைத்து, குளோரின் கலந்து பயன்படுத்துகிறார்கள். சில தங்கும் விடுதிகளில் ‘ஷவர்’ (நீர்த்தூவல்) வசதி இருக்கும். அதில் நீர் பொழியும்போது அதனால் கிருமிகளை நுரையீரலின் இடுக்குகளுக்கு கொண்டு சேர்க்க முடியும். லினேஜர் கிருமிக்கு தகுந்த சூழலை இந்த வகையில் நாம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். குளோரினும், நீரை கொதிக்க வைப்பதும் லினேஜர் கிருமி அல்லாத பிற கிருமிகளை அழித்துவிடும். குழாய்களின் உட்பகுதிகளில் லினேஜர் கிருமிகள் தங்கிக் கொள்கின்றன.

உயிரினங்களை நாம் கவனித்தோமானால், ஒட்டுண்ணி மற்றும் அதன் புரவலர் உயிரினங்கள் மீது அமர, போட்டி போடுகின்றன.  ஒரே பண்புடைய உயிரினங்கள், ஒட்டுண்ணிகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை, எனவே ஒட்டுண்ணிகள் அவற்றை நோக்கி படையெடுக்கின்றன.  நோய் பரவல், குறிப்பாக, காலரா பரவல் குறித்து உற்று நோக்கினால், அது  பூமிக் கோளத்தின் கிழக்கு பகுதியிலிருந்து அமெரிக்கா சென்று பின்னர் பெரு நாட்டிற்குள் புகுந்து மத்திய அமெரிக்கா வரை பயணப்பட்டுள்ளது.  ஆரஞ்சு மர நோய், பீன்ஸ் மற்றும் தக்காளியைத் தாக்கிய நோய்க் கிருமிகள், அதே போல விலங்குகளை தாக்கிய நோய்கள் இதே பாதையில் பயணப்பட்டுள்ளன.  நாம் காண்பது என்னவென்றால் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கையில் நோய்க்கிருமிகள் மற்றும் அதன் புரவலர்கள் ஓர் இணையான பரிணாம வளர்ச்சியை கொண்டுள்ளன.  ஆனால் இவை மனிதர்களிடம் காணப்படுவதில்லை என்பது ஒரு வேறுபாடு ஆகும். இந்தக் கண்ணோட்டத்தில் மனிதனைத் தாக்கும் நோய்கள் குறித்து புரிதல் ஏறிபட்டால் அதன் மூலம் ஏற்படும் சாத்தியமான ஆபத்துகளை கண்டுகொள்ள முடியும்.

நோய்க் கடத்தல்  முறை

எந்த மாதிரியான பூச்சிகள் நோயைப் பரப்புகின்றன. கிட்டத்தட்ட அவைகள் கொசுக்களாகவோ அல்லது ஈககளாகவோ உள்ளன அல்லது உண்ணி, வண்டு மற்றும் பேன் போன்ற பூச்சிகளாக இருக்கின்றன, பல்லாயிரக்கணக்கான பூச்சியினங்கள் இருந்தாலும், இந்த இரு பிரிவுகள் தான் பெரும்பாலும் நோய்க்கிருமிகளை மனிதனிடம் பரப்புகின்றன.   பட்டாம்பூச்சி மற்றும் தட்டான்பூச்சி போன்ற பூச்சிகள் மூலம்  நோய்கள் பரப்பப்படுவதில்லை.  அது ஏன் இப்படி நடக்கிறது?  அதற்கான காரணம் என்ன?

இந்த இரு பிரிவுகளும் ஒரே மாதிரியான உறிஞ்சு குழல் வாயமைப்பு கொண்டவை.  அவர்களின் புரவலர்களிடமிருந்து ஒரு வித திரவத்தை உறிஞ்சுகின்றன.  கொசு ரத்தத்தினை உறிஞ்சுகிறது. அபிட் வண்டு தாவரத்தின் சத்துக்களை உறிஞ்சுகிறது.  ஏதாவது பானத்தை உறிஞ்சு குழல் மூலம் உறிஞ்சிப் பழகியிருந்தால் நீங்கள் அறிவீர்கள், அதாவது உறிஞ்சிய சில நேரம் கழித்து உறிஞ்சு குழலில் ஓர் இடைவெளி உண்டாகும். தொடர்ந்து பானத்தை உறிஞ்ச வேண்டுமானால் ஒரு சிறு அளவாவது அந்தத் திரவம் அக்குழாய்க்குள் திருப்பி அனுப்பப்பட வேண்டும்.  கொசு மற்றும் அபிட் வண்டின் உமிழ்நீர் சுரப்பி உறிஞ்சு குழல் மூலம் திருப்பி அனுப்பப்பட்டு ரத்தம் அல்லது உயிர்ச்சத்தை மீண்டும் பருகுகிறது.  அதனால் தான் கிருமிகள் குறித்து ஆராயும் போது, கொசுக்களின் உமிழ்நீர் சுரப்பி மற்றும் உண்ணியின் உமிழ்நீரையும் சோதிக்கிறோம். குறிப்பிட்ட நோய் அல்லது குறிப்பிட்ட சூழலை மட்டும் ஆய்வு செய்யாமல், மேற்சொன்ன வகையில் ஒட்டுமொத்தத்தையும் ஆய்வு செய்தால் நம்மால் பொதுத் தன்மையை அறிந்துகொள்ள முடியும். ஆனால் அப்படியான ஆய்வுகள் நடப்பதில்லை.

பரிணாமம் மற்றும் சமுதாயம் குறித்த பார்வையில் குறைபாடு

பொது சுகாதார அறிவியலில் நிலவக்கூடிய மற்றுமொரு குறுகிய நோக்கு – அறிவுக்கு தாமே திணித்துக்கொண்ட கட்டுப்பாடு – பரிணாம வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியை வளர்த்தெடுப்பதின் பின்னடைவாகும். பரிணாமம் என்றால், சூழலில் ஏற்படும் சவால்களுக்கு தக்க உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்பதே உடனடியான புரிதலாக இருக்கிறது. உதாரணமாக உடல் தனக்கு எழக்கூடிய சவாலை ஆன்டிபாடி மூலம் எதிர்க்கிறது. பல நுண்ணுயிர்கள் ஆன்டிபாடிக்களை எதிர்கொண்டு நிலைத்திருக்கும் தன்மையை வளர்த்துக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். வேளாண் துறையில் பல பூச்சிகள், பூச்சிக்கொல்லி மருந்துகளை எதிர்த்து தங்களை தகவமைத்துக்கொண்ட அனுபவங்கள் நமக்கு உள்ளன. சில நுண்ணுயிர்கள், ஆன்டிபாடிக்களை எதிர்கொள்வதற்கு முன்பே அதற்கு எதிரான ஆற்றலை உருவாக்கிக் கொண்டிருப்பதையும் கூட பார்க்கிறோம்!. இதற்கு காரணம் புதிய பெயரோடு சந்தைக்கு வரும் மருந்துகள் அதற்கு முந்தைய மருந்துகளை பெரும்பாலும் ஒத்து இருப்பதும், பெயர் மட்டுமே புதிதாக இருப்பதும் ஆகும். எனவே கிருமிகளுக்கு அந்த ஆன்டிபாடிக்களை எதிர்கொள்வது சிரமமாக இல்லை. ஒரு நோய்க்கான காரணிகளை மட்டுமே பார்ப்பது போதாது, மக்களை பலவீனமாக்கும் பிற காரணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

குறைபாடுள்ள பொது சுகாதார சிந்தனையானது, பிற உயிரிகள் குறித்தும், பரிணாம வளர்ச்சி, சூழலியல் ஆகியவை குறித்தும் கண்டுகொள்ளவில்லை. அதே போல அது சமூக அறிவியலையும் கண்டுகொள்ளவில்லை. எல்லா விதமான சுகாதார சிக்கல்களுக்கும் ஏழைகளும், ஒடுக்கப்பட்டோருமே அதிகமாக ஆளாகிறார்கள். ஆயுட்காலம், முதுமையினால் வரும் நோய்கள், மாரடைப்பு ஏற்படும் கால இடைவெளி போன்றவைகளை வெளிப்படுத்துவதாக வர்க்க வேறுபாடுகள் அமைகின்றன.

ஒரு முற்போக்கான திறனாய்வாளர் 

ஒரு முற்போக்கான மருத்துவ திறனாய்வாளர் என்றால் எது மக்களை நோயாளிகளாக ஆக்குகிறது, எந்தவித சுகாதார வசதி மக்களுக்கு கிடைக்கிறது என்பது குறித்து செயல்புரிபவராக இருக்க வேண்டும்.

மக்களின் குறைவான வருமானம், பருவநிலை மாற்றத்தின் மூலம் உண்டாகும் வெப்பம் ஆகியவை பொது சுகாதாரத்தை பாதிக்கும் முக்கியமான காரணிகளாகும். இலையுதிர் காலத்தின் இறுதியில் அல்லது குளிர் காலத்தின் ஆரம்பத்தில், மண்ணெண்ணெய் அடுப்பு, மின் அடுப்பு, மற்றும் வெப்பம் குறைவான அறைக்கு வெப்பமூட்டும் சாதனங்கள் மூலம் ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற அதிக எண்ணிக்கையில் மக்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருவார்கள். இப்படிப்பட்ட மக்களுக்கு உடல் வெப்ப நிலையில் ஒரு சிறு மாற்றம் அவரின் உடல்நலத்தைப் பாதிக்கும்.  ஆனால் வசதி படைத்தவர்களை அது பாதிக்காது.  அதுவே தான் உணவு விஷயத்திலும் இருக்கும்.  மக்கள் வேலையில் இல்லாமல் இருந்தால், அல்லது விலைவாசி உயரும் போது, அவர்கள் உணவிற்கு செலவிடுவதை குறைத்துக் கொள்வார்கள்.  அதன் உடனடி விளைவு ஊட்டச் சத்து குறைபாடு ஆகும். 

தெரிவு எனும் கற்பனை

உடல் நலத்தில் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கு, புறந்தள்ளப்படுவதால் ஏற்படும் வேறுபாடுகள், உடல்நலத்தில் கடுமையான பாதிப்பை உருவாக்கும்.  ஒருவேளை ஒரு மாணவர் கிட்டப்பார்வை உடையவர் என வைத்துக் கொள்வோம். ஆனால் அவள் உயரமானவளாக இருந்த காரணத்தினால், கடைசி இருக்கைக்கு மாற்றப்பட்டாள்.  ஆசிரியர் கூடுதல் பணியில் இருந்தபடியால் அவளால் கரும்பலகையை பார்க்க முடியவில்லை என்பதை கவனிக்கவில்லை.  படபடப்பு காரணமாக அவள் பக்கத்து மேசையில் இருந்த குழந்தையோடு சண்டையில் ஈடுபட்டாள். திடீரென அவள் கற்றல் குறைபாடுடைய குழந்தையாகப் பார்க்கப்பட்டு தொழில் பயிற்சி வகுப்பிற்கு மாறறப்பட்டாள்.  அவள் ஒரு சிறந்த கவிஞராக வந்திருக்கும் வாய்ப்புள்ளவளாக இருந்திருக்கலாம்.  மிகவும் வசதி படைத்த சமூகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிரியர்கள் மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தும் வாய்ப்பும் இருக்கும்.  இப்பெண் அங்கிருந்தால், இறுதியில் கண்ணாடி அணியும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

நச்சு வாயுவை வெளியேற்றும் ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை புற்று நோய் கடுமையாகத் தாக்கும். முக்கியமான வாழ்க்கை விளைவுகள் அற்பமான உயிரியல் வேறுபாடுகளினால் தான் உருவாகின்றன.

தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பற்றி

மனிதர்கள் தம் தெரிவு செய்யும் உரிமையை பயன்படுத்துவது கூட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. 

புகை பிடித்தல் பழக்கம் ஒரு உதாரணம். பணியில் சுதந்திரமாக இருக்கும் சூழலைப் பொறுத்து புகைபிடிக்கும் எண்ணிக்கை உயரும்.  வாழ்க்கையில் குறைவான  வாய்ப்பு உள்ளவர்கள், புகை பிடிக்கும் வாய்ப்பை பயன்படுத்துகிறார்கள்.  ஒரு சில பணிகளின் போது இடைவேளை எடுத்துக் கொண்டு வெளியில் செல்ல வாய்ப்பாக இது பயன்படுகிறது.  இதனை தெரிவு செய்பவர்கள் கூறுவது “ஆமாம்.  புகைபிடித்தால் இன்னும் இருபது ஆண்டுகளில் புற்று நோயை உருவாக்கும். ஆனால் நிச்சயமாக இன்று என்னை அது உயிருடன் வாழ வைக்கிறது”. இந்த புத்திசாலித்தனமற்ற முடிவுகளை எடுக்கும் மக்கள், தங்களின் சூழ்நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டு, அதற்கான பொருத்தப்பாடுகளை உருவாக்குகின்றனர்.  ஆகையால் போதனைகள் மூலம் அவர்களை மாற்றி விடலாம் என்பது நடவாத காரியமாகும்.  தெரிவு எதனடிப்படையில் செய்யப்பட்டுள்ளது என்பதின் உள்ளடக்கத்தை நீங்கள் மாற்ற வேண்டும்.

மக்கள் தங்கள் வசம் உள்ள அனைத்தையும் பயன்படுத்தி அர்த்தமுள்ள தெரிவைச் செய்ய வேண்டுமென்றால், அவர்கள் வாழ்க்கையை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கும் நிலை ஏற்பட வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

ஒரு கூட்டத்தில் நான் பங்கேற்றபோது கேள்வித்தாள் ஒன்றை கொடுத்தார்கள். அந்தக் கேள்வி பின்வருமாறு :  நாம் ஜனநாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு எல்லா மக்களுக்கும் ஓட்டுப் போடும் உரிமை இருக்கும் போது, சுகாதாரத்தில் இது போன்ற எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும், அசமத்துவத்தை அனுமதிக்கும் கொள்கைகளை ஏன் தொடர அனுமதிக்க வேண்டும்? நாம் விவசாயத்தை மேம்படுத்த திட்டங்கள் தீட்டுகிறோம், ஆனால் அது பசியை உருவாக்குகிறது.  நாம் மருத்துவமனைகளை உருவாக்குகிறோம், ஆனால் அவைகள் புதிய நோய்களை பரப்பும் இடமாக உள்ளது.  நாம் வெள்ளத்தை கட்டுப்படுத்த, பொறியியல் திட்டங்களில் முதலீடு செய்கிறோம்,  ஆனால் அது வெள்ள அபாயத்தை கூட்டுகிறது.  என்ன தவறு நிகழ்ந்தது? 

அதற்கு ஒரு விடை, நாம் போதுமான அளவு புத்திசாலித்தனம் அற்றவர்களாக நாம்  இருக்கலாம். அல்லது அந்தப் பிரச்சனைகள் மிகவும் சிக்கலானதாக இருக்கலாம்; அல்லது நாம் சுயநலவாதிகளாக இருக்கலாம்; அல்லது நம்மிடம் கோளாறு ஏதோ இருக்கலாம் என்பதாகும். அல்லது, ஒருவேளை, இயற்கையுடன் இயைந்து கூட்டுறவு வாழ்வு வாழ தகுதியற்ற ஜந்துக்களாக நாம் இருக்கிறோம் என சொல்லலாம்.

இது போன்ற எதிர்மறை முடிவுகளை நிராகரிக்க வேண்டும்.   போராட்ட வரலாறு நீண்டது, கடினமானது; ஆனால் போராட்டங்களே வெற்றியை சாதித்துள்ளன. ஜனநாயகம் என்ற மாயையை நம்பிக்கொண்டிருப்பதும், ஒரு சாதகமான அரசு நமது பிரச்சனைகளை தீர்க்கும் என நம்புவதும் மிக எளிது.   சமூக ஜனநாயக அரசுகளால் உருவாக்கப்பட்ட மிகவும் தொலைநோக்கு கண்ணோட்டம் கொண்ட திட்டங்கள் எந்தவிதத்திலும் முதலாளித்துவத்திற்கு சவால் விடவில்லை.  அவைகள் செய்தது சற்றுக் கூடுதல் சமத்துவம், அதாவது முற்போக்கான வருமான வரித் திட்டம், தாராள வேலையில்லாக் கால காப்பீடு போன்றவைகளாகும்.

சரக்கு உந்து ஓட்டுநர்கள் மத்தியில் காணப்படும் இதய நோய் தாக்குதலை கட்டுப்படுத்த, மேம்படுத்தப்பட்ட உணவு வழங்க வேண்டுமென ஸ்வீடனில் போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்கள் தெருவோர உணவு கடைகளில் மேம்படுத்தப்பட்ட தரமான உணவு கிடைத்திட நகர உணவகங்கள் (restaurant) மற்றும் உணவு கடைகள் (canteen) ஆகியவற்றின் முதலாளிகளுடன் இணைந்து  தரமான உணவு கிடைக்கச் செய்தனர். மற்ற பகுதிகளில் தொழிற்சங்கங்கள் கூட்டுப்பேர ஒப்பந்தங்கள் மூலம் ஷிப்ட் பணி நிலைமைகள், ஷிப்ட் பணி நேரங்கள் மற்றும் பணி நிலைமைகளில் மாற்றம் கண்டன.  தொழிற்சங்கங்கள், சுகாதாரப் பிரச்சனை வர்கக உறவுகளில் ஒரு கூறு என்பதை அங்கீகரித்தன.

ஒரு சில விஷயங்களில் பணியிட மேம்பாடு செலவில்லாததாக உள்ளது.  கட்டிட பணிகளில் ஈடுபடும் தொழிலாளிகள் கடினமான அந்த தலைக்கவசம் அணிய வற்புறுத்தும் விளம்பரப் பலகை வைக்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்.  பணி மறுசீரமைப்பு மற்றும் செலவு பிடிக்கும் பணி குறித்து பேசினால் தந்திரமாக நழுவி செல்லப்படுகிறது. 

சுகாதாரத்தை மேம்படுத்தும் அரசு திட்ட செலவிற்கு, வரி மூலம் ஈடுகட்ட அரசு முயன்றால், வணிக வர்க்கம் கடுமையாக எதிர்க்கும்.  புதிய செலவினங்கள், தங்களது போட்டித் தகுதியில் குறிக்கிடுவதாக கருதுவார்களேயானால், அவர்களது எதிர்ப்பு, அரசியல் வடிவம் எடுக்கும் – உதாரணம்.  சில சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிகள் நீக்கம்.  தொழிற்சங்கத்தினால் முன்வைக்கப்படும் ஒரு சில செலவுகள் தனியார் முதலாளிகள் செய்ய வேண்டி வந்தால், அக்கோரிக்கை கடுமையாக எதிர்க்கப்படும்.  அவர்கள் கூறுவார்கள்,  போட்டிச்சூழலில் இது கடுமையான பாதிப்பை உருவாக்கும், எனவே, வியாபாரத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்லப் போவதாக அச்சுறுத்துவார்கள். ஒருவேளை, தொழிற்சங்கம் பணிச்சூழல் குறித்து கோரிக்கை வைத்தால், நிர்வாகம் அதனை வர்க்க முன்னுரிமையின் அடித்தளமாக பார்க்கத் துவங்குவர்.  இந்த சூழ்நிலையில், ஒரு வலுமிக்க, திறமையாக கட்டமைக்கப்பட்ட தொழிற்சங்கத்தினால் மட்டுமே அதனை சாதிக்க முடியும்.

சுகாதார வாழ்வு என்பது தொழிலாளர்களுக்கு அவர்களின் திறனின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.  ஆனால் மேல்தட்டு மக்களுக்கு சுகாதாரம் ஒரு நுகர்வுப் பொருளாகும்.  தங்களுக்கான மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதியை காசு கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். குடிநீர் தரம் மேம்படுத்தப்படுவதற்கு மாறாக, பாட்டில் குடிநீர் வாங்குவார்கள், காற்றின் தரம் உயர்த்தப்படுவதற்கு மாறாக தாங்கள் வாழும் அறைகளுக்கு பிராணவாயு உருளைகள் வாங்குவார்கள். சுகாதாரமும் ஒரு விற்பனை பண்டமாகும்.  அதனால், மருத்துவமனை, சுகாதார பராமரிப்பு அமைப்புகள் (Health Maintenance Organisations). மருந்து உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சுகாதார அமைப்புகள் அனைத்தும் இதில் முதலீடு செய்துள்ளன.

ஒருவருடைய சிறப்பான உடல்நலம் அமைவது என்பது அவர் தேவையான மற்றும் பொருத்தமான நடவடிக்கை எடுக்கும் திறன், அவர் வாழ்க்கையில் எந்த இடத்தில் இருக்கிறார் என்பவைகளைப் பொறுத்தது ஆகும்.  அந்த இடம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதும் முக்கியமாகும். கொள்கைகளை தீர்மானிக்கும் இடத்தில் யார் இருக்கிறார்கள், எந்த வர்க்கம் இருக்கிறது என்பது முக்கியமாகும்.

சமூகம், தொற்றுயியல் மற்றும் வரலாற்றியல் அடிப்படையில்  எழுப்பும் கேள்விகளையும், மற்றும் சுகாதார சேவை, சுகாதாரக் கொள்கைகளையும் விரிவாக பார்க்க வேண்டிய தேவை உள்ளது. இது எல்லாமே ஒருங்கிணைந்த அமைப்பாகும், அதை உருவாக்குவதுதான் வருங்கால போர்க்களமாகும்.  நாம் சுகாதாரப் பிரச்சனையையும் பரவலாக்க வேண்டும்.  அவைகள் வர்க்கப் போராட்டத்தின் கூறுகளாகும்.  அதற்கு மாற்று வேறு எதுவும் கிடையாது.

(தமிழாக்கம் – ரமணி)