அயலுறவு கொள்கை: பின்னோக்கி செல்லும் சக்கரங்கள் !

(குரல்: தேவி பிரியா, ஆடியோ எடிட்டிங் : மதன் ராஜ்)

– க.சுவாமிநாதன்

“எந்தவொரு அரசு மற்றும் அதன் அரசாங்கத்தின் அயல்துறை கொள்கையானது, இறுதியாக பார்த்தால், அதன் உள்நாட்டு கொள்கையின் வெளிப்பாடு தவிர வேறு எதுவுமல்ல. அந்த அரசு மற்றும் அரசாங்கத்தின் தலைமை ஏற்றுள்ள வர்க்கம் அல்லது வர்க்கங்களின் நலன்களையே அது பிரதானமாக பிரதிபலிக்கிறது. இந்திய அரசாங்கத்தின் அயல்துறைக் கொள்கை என்பது நமது முதலாளி வர்க்கத்தின் இரட்டைத்தன்மையான, அதாவது ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு அதே நேரத்தில் அதனுடனான சமரசம் மற்றும் ஒத்துழைப்பு என்பதையே பிரதிபலிக்கிறது.”

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தின்  பத்தி 4.1-ல் உள்ள இவ்வரிகள் நான்கு ஆண்டு நரேந்திர மோடி ஆட்சிக் காலத்திய அயலுறவுக் கொள்கைக்கும் கனகச்சிதமாகப் பொருந்துகின்றன. உள்நாட்டுக் கொள்கையில் அவர்கள் கடைப்பிடிக்கிற பிற்போக்குத்தனத்தின் நீட்சி அப்படியே அயலுறவுக் கொள்கையிலும் வெளிப்படுகிறது. பன்னாட்டு மூலதனத்துடன் சமரசமும், ஒத்துழைப்பும் மேலோங்கிய பொருளாதாரப் பாதையில் பயணிக்கும் மத்திய அரசின் அயலுறவுகளிலும் அதன் பிரதிபலிப்பு உள்ளது. சிற்சில நேரங்களில்  அது  காட்டும் மென்மையான எதிர்ப்பும் இந்திய ஆளும் வர்க்கங்களுடைய நலன்களின் வெளிப்பாடே.

விடுதலைக்கு பிந்தைய இந்திய அயலுறவுக் கொள்கையில் 1950களின் பிற்பகுதியிலும், 1970களிலும் வெளிப்பட்ட முற்போக்கான அம்சங்களின்  சுவடுகள் கடந்த நான்காண்டுகளில் பெருமளவு துடைத்தெறியப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தில்  பத்திகள் 4.1ல் துவங்கி 4.6 வரை இந்திய அயலுறவுக்கொள்கை, ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்ற வகையில், சந்தித்த மாற்றங்களை விவரிக்கிறது. சோவியத் யூனியன் உள்ளிட்ட சோசலிச முகாம் வலுவாக இருந்த காலத்தில் கூட்டுச்சேரா இயக்கம் உள்ளிட்டு சர்வதேச அரங்கில் அது ஆற்றிய குறிப்பிடத்தக்க பாத்திரத்தையும் அது பதிவு செய்கிறது.

அமெரிக்காவின் கேந்திரக் கூட்டாளியாக

இந்தியா அயலுறவுக் கொள்கையில் அமெரிக்காவின் கேந்திரக் கூட்டாளியாக மாறுகிற ஆசையே பிரதான அம்சமாக உள்ளது. 1991க்குப் பிந்தைய உலகமய யுகத்தில் இப்போக்குகள் துவங்கினாலும் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் ஆட்சிக் காலத்திலேயே இதற்கான அழுத்தமான முன்னெடுப்புகள் அரங்கேறின. உலக சமாதானம், கூட்டுச்சேரா இயக்கம் உள்ளிட்ட பாரம்பரிய விழுமியங்கள் அப்பட்டமாகக் கைகழுவப்படுவது அப்போது தீவிரமாயின. பொக்ரான் அணுகுண்டு சோதனை அத்திருப்பத்தின் வெளிப்பாடே. பிந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலும் அடுத்த கட்ட நகர்வுகள் இருந்தன என்பது உண்மை. ஆனால் மீண்டும் பி.ஜே.பி  ஆட்சியதிகாரத்திற்கு 2014-ல் வந்த பிறகு இப்போக்குகள் நீண்ட தாவல்களாக மாறியுள்ளன.

லெமோ-சிஸ்மோ- பீகா:

அமெரிக்காவுடனான உறவுகள் எந்த அளவிற்கு தேசத்தின் சுயசார்பிற்கும், பாதுகாப்பிற்குமே ஊறு விளைவிக்கின்றன என்பதற்கு மேற்கூறிய உடன்பாடுகளே சாட்சியங்கள்.

லெமோ (CEMOA -Loaistics Exchange Memorundem of Aareement) என்பது இராணுவத் தளவாடங்களை உற்பத்தி தளத்தில் துவங்கி பயன்பாட்டு  இடம் வரையிலான போக்குவரத்து, தகவல் பரிமாற்றம், எரி பொருள் உள்ளிட்ட இதர வளங்களை ஏற்பாடு செய்து தருவதற்கான உடன்பாடு ஆகும்.  லெமோ 2016ல் கையெழுத்தாகி விட்டது.

சிஸ்மா (CISMO – Communications and Information Secunity Memorandum of Agreement) என்பது அமெரிக்க  சமிக்ஞை சாதனங்களை இந்தியா பயன்படுத்திக் கொள்வதற்கான உடன்பாடாகும். கைம்மாறாக இந்திய ராணுவ நடவடிக்கைகளைப்பின் தொடர்வதற்கான அமைதி அமெரிக்காவுக்கு கிடைத்து விடுகிறது.

சிஸ்மோவை “காம்காசா” என்று பெயர் மாற்றம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்தேறி வருகின்றன. காம்காசா (Comcas Commonication Compatibicity and security agreement) என்பது வெறும் பெயர் மாற்றமல்ல. இது இந்தியாவிற்கான பிரத்தியேக வடிவம் என்கின்றனர். இது  சிஸ்மோவை விட ஒரு படி மேலே செல்கிற உடன்பாடாகும். முன்னது இந்திய ராணுவ நடவடிக்கைகளை பின் தொடர்வதை அனுமதிக்கிறதெனில், பிந்தையது எல்லா உள்தகவல் பரிமாற்றத்தையும் கட்டுப்படுத்தவும் வழிசெய்து தருகிறது.

பீகா (BECA – BASIC EXCHANGE AND COOPERATION AAREEMENT FOR GEO SPATIAC COOPERATION) என்பது இந்தியா குறிவைக்கிற இலக்குகள் – ஏவுகணை, பீரங்கிகள், குண்டு வீச்சு உள்ளிட்ட- அனைத்தும் அமெரிக்க புவியமைப்பு விண்கல ஆதார ஏற்பாட்டின் வாயிலாகச் செய்யப்படுவது என்பதே ஆகும்.

இந்த உடன்பாடுகளுக்கான காரணம் அமெரிக்காவின் கேந்திரக் கூட்டாளியாக மாறுகிற இந்திய ஆளும் வர்க்கங்களின் ஆர்வம்தான்.

கண்களை விற்று சித்திரம் வாங்குவதே

இத்தகைய உடன்பாடுகளால் தேசத்தின் சுயசார்பும், பாதுகாப்பும் பலவீனப்படுமென்பதே உண்மை. இது குறித்து எழும் கேள்விகள் இதோ

  • “லெமோ” உடன்பாட்டின் தேவை என்ன? கடல் வழிகளில் இராணுவத்தைப் பயன்படுத்துகிற தேவை இந்தியாவிற்கு மிகக் குறைவு. ஆனால் அமெரிக்க கடற்படையின் எதிர்கால வியூகத்திற்கு இந்த உடன்பாடு மிக முக்கியமானது. அமெரிக்க கடற்படை 60 சதவீத போர்க்கப்பல்களை இந்தோ-பசிபிக் பகுதியில் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. எனவே இந்தியத் துறைமுகங்கள் அதற்குப் பயன்படும். போர்விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்கு இந்திய விமானதளங்கள் தேவைப்படும்.

  • “காம்காசா”வில் இந்தியா கையெழுத்திட்டால் அமெரிக்காவின் மிக உயர் தொழில் நுட்ப மேடைகள் தகவல் பரிமாற்றங்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்திய இராணுவ நடவடிக்கைகள், உள்  தகவல் பரிமாற்றங்களின் மீது அமெரிக்காவின் கண் இருக்கும் என்பதே அபாயம். மட்டுமின்றி அத்தகைய உயர் தொழில் நுட்பத்திற்கு ஏற்ற ஆயுதத் தளவாடங்களையும் அமெரிக்காவிடமிருந்தே வாங்க வேண்டி வரும். உதாரணமாக கடல் கண்காணிப்பு ஆளில்லா விமானங்கள் (SEA GVARDIAN DRONES). அங்குசம் வாங்குவதால் யானையையும் வாங்க வேண்டிய கட்டாயம்.

  • “பீகா” என்பது முழுக்க முழுக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவின் புவியமைப்பு விண்கல ஏற்பாட்டைச் சார்ந்து இந்தியா நிற்பதற்கே இட்டுச் செல்லும். ஏற்கெனவே பெருஞ்செலவில் சுயசார்போடு  இந்தியா இயக்கிவரும் 6 விண்கலங்களையும் பின்னோக்கி இழுக்கிற செயலாகும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி (I&II) ஆட்சிக்காலங்களில் ஊசலாட்டங்கள் இருந்தாலும் 20 ஆண்டுகளாகக் கையெழுத்தாகாத இந்த உடன்பாடுகள் – லெமோ, சிஸ்மோ – மோடி காலத்தில் கையெழுத்தாகிவிட்டன. பீகா, காம்காசா ஆகியவை  விவாதிக்கப்பட்டு வருகின்றன.

பகைக்கு விடுக்கப்படும் அழைப்பு

மோடி அரசின் இந்நகர்வுகள் இந்தியாவைப் பாரம்பரிய நட்புகளிலிருந்தும், அண்டை உறவுகளிலிருந்தும் அன்னியமாக்கி வருகின்றன.

ஒன்று ரஷ்யாவுடனான உறவு. இந்திய ராணுவத்திற்கான வன்பொருள்களை அளித்து வருவது இரஷ்யாதான். மேற்கூறிய உடன்பாடுகள் இந்தியா பயன்படுத்தும் வன்பொருட்கள் மீதும் அமெரிக்காவின் பிடிமானத்திற்கு வழிவகுக்கக் கூடுமென இரஷ்யா கருதக் கூடும். இது இந்திய – இரஷ்யா பரிமாற்றங்களில் பாதிப்பை உருவாக்கக் கூடியதாகும். இரஷ்யாவிலிருந்து  எஸ்-400 வான்வழித் தற்காப்பு ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கான ரூ.39000 கோடி உடன்பாட்டை அமெரிக்கா  எதிர்த்து வருவது தனிக்கதை.

இரண்டாவது சீனாவுடனான உறவு. அமெரிக்கா – ஜப்பான்- இந்தியா இணைந்து ஜப்பானின் கடல் பகுதியும், பிலிப்பைன்சுக்கு சற்றுத் தள்ளியும் உள்ள ஒகினாவின் அருகில் நடத்துகிற மலபார் ராணுவ பயிற்சிகள்  சீனாவைக் கட்டுக்குள் வைக்கிற அமெரிக்கா திட்டத்தின் ஒரு பகுதியேயாகும். “பீகா” “காம்காசா” உடன்பாடுகளோடு இப்பயிற்சிகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும். உடன்பாட்டு நாடுகளின் கடற்படைகளும் ஒருங்கிணைந்து அமெரிக்கக் கட்டளையின் கீழ் இயங்குமென்றால் அதன் வியூகமும்,  நோக்கமும் தெளிவாகிறது.

மேலும் அமெரிக்காவுடனான நெருக்கம் மற்றும் உடன்பாடுகள் காரணமாக எதிர்காலத்தில் இராணுவக் கொள்முதல்களுக்கு “நேட்டோ” நாடுகளை சார்ந்து நிற்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கும். தற்போதுள்ள வழிகள் பல அடைபட்டுப் போகலாம்.

கடந்த 15 ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர் (சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்) பெறுமான அமெரிக்க ஆயுதங்களை இந்தியா வாங்கியுள்ளது. இதற்காக அமெரிக்காவின் இணைந்து இயங்குகிற 50க்கும் மேற்பட்ட செயலாக்கக் குழுக்கள், இந்தியாவின் கேந்திர, அரசியல், சமூகக் கட்டமைப்பிற்குள் ஊடுருவுகின்றன. அமெரிக்க “சிந்தனைத் தொட்டிக்குள்” பல ஓய்வு பெற்ற இந்திய அயலுறவு, பாதுகாப்புத்துறை உயர் அலுவலர்கள் இருப்பதென்பது பின்வாசல் வழியாக அதிகார வர்க்கத்திற்குள்ளும் ஊடுருவுவதற்கான வழிமுறை ஆகும்.

பாரம்பரியத்திலிருந்து விலகல்:

இஸ்ரேலுடனான உறவுகள், ஈரானின் மீதான அமெரிக்கப் பொருளாதாரத்தடை ஆகியன இந்திய அரசின் அயலுறவுக் கொள்கைக்கான சோதனைகளாக அமைந்துள்ளன.

அமெரிக்காவின் செல்லமாக உலக அரங்கில் விளங்கக்கூடிய இஸ்ரேலிடமிருந்து அதிகபட்ச ஆயுதங்களைக் கொள்முதல் செய்கிற வாடிக்கையாளராக இந்தியா மாறியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு யூதவெறியோடு தனது தத்துவார்த்த ஒருமையை வெளிப்படுத்தி வருவது ஊரறிந்த ஒன்றே. இந்திய ஆளும் வர்க்கங்களின் விருப்பங்களும் அத்தோடு ஒருங்கிணையும் போது பி.ஜே.பி அரசாங்கத்திற்கு  பொன்னான வாய்ப்பல்லவா!  பிரதமர்மோடி இஸ்ரேல் சென்று யூத வெறி அமைப்பின் தந்தை எனப்படும் ஹெர்ஷ்ல் சமாதியில் மரியாதை செலுத்தினார். 20லட்சம் பாலஸ்தீனியர்கள் வேலிகளுக்குள் திறந்தவெளிச் சிறையில் வாழ்கின்ற சோகம் மோடியைக் கொஞ்சமும் அசைக்கவில்லை. அண்மையில் டெல் அவீவில் இருந்து ஜெருசலேத்திற்கு தலை நகருக்கு மாற்றுகிற ட்ரம்ப்பின் முடிவுக்கு எதிராக ஐ.நா.வில் வாக்களித்தாலும் வெளியில் இந்தியாவின் குரல் பெரிதாக எழும்பவில்லை.

அடுத்து ஈரான் பிரச்சனை. அமெரிக்கா ஈரானுடனான பலதரப்பு அணு உடன்பாட்டை முறித்துக் கொண்டு பொருளாதாரத்தடை விதித்திருப்பது இந்தியா மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மொத்தம் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈரானின் பங்கு 17 சதவீதமாக இருந்தது. 2012-இல் அமெரிக்கத் தடை விதிக்கப்பட்ட பின்புலத்தில் 7 சதவீதம் வரை சரிந்தது. 2016இல் அமெரிக்க – ஈரான் உடன்பாடு ஏற்பட்ட பிறகு இந்திய இறக்குமதி இரண்டு மடங்குகள் உயர்ந்தன. தற்போது மீண்டும் பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது. இந்தியா வெளியில் வீராப்பாக “மூன்றாவது நாட்டின்” தலையீட்டை நாங்கள் நிராகரிப்போம் என்று கூறினாலும் ஈரானிலிருந்து இறக்குமதியாகும். கச்சா எண்ணெய் மே-ஜூன் 2018 மாதங்களுக்கிடையே மட்டும் 16 சதவீதம் சரிந்துவிட்டது. காரணம் அரசனை விஞ்சிய அரச விசுவாசிகளாக ரிலையன்ஸ், நயாரா போன்ற தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரான் இறக்குமதியை நிறுத்தியதுதான்.

பிப்ரவரி 2018இல் ஈரான் அதிபர் ஹாசன் ரௌஹானி இந்தியா வந்தபோது ஏற்பட்ட  – ஈரானின் பசர்காடு வங்கியை இந்தியாவில் திறப்பது, 25 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரிப்பது, ரூபாய் – ரியால் பரிமாற்றத்திற்கான ஏற்பாடு போன்ற முடிவுகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. பாகிஸ்தான், காஷ்மீர் போன்ற பிரச்சினைகளில் இந்தியாவின் பக்கம் உறுதியாக நெடுங்காலமாக நின்ற நாடு ஈரான் என்பது வரலாறு.

எனினும் அமெரிக்காவின் மூர்க்கத்தனம் இந்தியாவிடம் சில எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இராணுவ ஒத்துழைப்பு குறித்த தீர்மானத்தில் முதன்முறையாக பாகிஸ்தானுடன் இணைந்து ஈடுபடுவது என்ற இதுவரை இல்லாத ஓர் முடிவும், இந்தியா இணையாவிடினும் ஒரு கச்சை ஒரு சாலை திட்டத்திற்கான தீர்மானம் அங்கு ஒருமனதாய் நிறைவேற்றப்பட்டிருப்பதும் உதாரணங்கள். உருக்கு, அலுமினியம் மீது அமெரிக்கா எழுப்பியுள்ள வரிச்சுவர்களுக்கு எதிராக 29 அமெரிக்க விவசாய இறக்குமதிப்பொருட்கள் மீது இந்தியாவிலும் வரிச்சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதுவெல்லாம் கவனிக்கத்தக்க நிகழ்ச்சிகள். இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மத்தியக் குழு (ஜூன் 24 – 26) அறிக்கை கூறுவது போல இவை துவக்க நிலை மாற்றங்களாக இருப்பதால் அறுதியிட்ட முடிவுகளுக்கு இப்போது வர இயலாது. எனினும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகள் கூடுதலாய் வெளிப்ப்பட்டு வரும் நிலையில் அதற்கேற்ற வகையிலான தகவமைவின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது.

எனினும் அயலுறவுக் கொள்கையின் சாய்மானம், அமெரிக்காவுடனான கேந்திரக் கூட்டாளி என்கிற கனவு பக்கமே உள்ளது. ட்ர்ம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் தீவிர வலதுசாரி நடவடிக்கைகள் உலக அரங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற சூழலில் இந்திய அரசின் சாய்மானமும், தனது சர்வதேசக் கடமைகளினின்று வழுவுவதும் அபாயகரமானதாகும்

தேசமும் – வணிகமும்

2016-ல் அமெரிக்க காங்கிரசில் உரையாற்றிய மோடி,  “இன்று இந்திய அமெரிக்க உறவு வரலாற்றின் தயக்கங்களைக் கடந்து வலுப்பெற்றுள்ளது.” என்று கூறியது வரலாற்றுச் சக்கரம் பின்னோக்கிச் சுழற்றப்படுவது குறித்த அப்பட்டமான ஒப்புதல் ஆகும்.

இதன் பொருளாதார நோக்கங்களையும் பிரதமர் தனது உரையில் மறைக்கவில்லை. உலக அரங்கில் இந்தியாவை தேசமாக அல்லாது சந்தையாகவே மோடி முன்னிறுத்துகிறார். இதோ அவரின் வார்த்தைகளிலேயே “இந்தியாவின் 125 கோடி மக்கள் இந்நாட்டை  அமெரிக்க வணிகத்திற்கான இசைவான கூட்டாளியாக மாற்றியுள்ளார்கள்”

இந்தியா @71 சந்திக்கிற பெரும் சவாலாகும் இது!