தொழிற்சங்கம் அமைத்தல் அமெரிக்கா மற்றும் இந்திய அனுபவங்கள்…

எஸ். கண்ணன்

ஒரு தொழிற்சங்கம் அமைக்கப்பட்டதும், அது அங்கீகரிக்கப்பட்டதும், நாகரீக வளர்ச்சி பெற்ற இந்த உலகில் அவ்வளவு பெரிய விஷயமா? என்று கேள்வி கேட்போரும் உள்ளனர். முதலாளித்துவத்தின் மீதான மாயை, முதலாளித்துவ வளர்ச்சி மீது கொண்டுள்ள பிரமிக்கும் வகையிலான கண்ணோட்டம் போன்றவை மேற்படி கேள்விகளுக்கு காரணமாக உள்ளது. அண்மையில் அமேசான் நிறுவனத்தில் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்ததும், அதைத் தொடர்ந்த தாக்குதலும், தொழிலாளர்கள் அதை முறியடித்த வெற்றியும்தான் இந்த விவாதத்திற்கு காரணம் ஆகும்.

அடுத்து நாகரீக வளர்ச்சி, முதலாளித்துவ வளர்ச்சி என்பது ஒரு சிலருக்கே, பெரும்பான்மையோர் அங்கு புறக்கணிக்கப்படுவோராக உள்ளனர் என்பதை அமெரிக்க அரசும் மற்றும் அமேசான் நிறுவனமும் வெளிப்படுத்தி உள்ளன. இந்த வளர்ச்சி தீர்வல்ல. இந்த வளர்ச்சி சுரண்டலைத் தீவிரமாக அதிகரிக்கவும், பாட்டாளிகளை உதிரி பாட்டாளிகளாக மாற்றவும் பங்களிப்பு செய்யக் கூடியது என்பதை மேலே குறிப்பிட்ட அமேசான் மற்றும், ஸ்டார் பக்ஸ் ஆகிய நிறுவனங்களிலும், நமது நாட்டிலும் நடந்து வரும் போராட்டங்கள் தெரியப்படுத்தும் செய்தியாகும்.

அமேசான் மற்றும் ஸ்டார் பக்ஸ் நிறுவனங்களில் என்ன நடந்தது?

அமெரிக்க நாட்டின் பெரிய வணிக நிறுவனம் அமேசான், அதன் முதலாளி ஜெஃப் பெசோ வளிமண்டலத்திற்கு 11 நிமிட சுற்றுலா சென்று வந்தவர். அதற்காக பல கோடி ரூபாய் செலவிட்டவர். அதைத் தொடர்ந்து வளிமண்டல சுற்றுலாவை நடத்தும் பெரும் நிறுவனமாக அமேசான் மாறியுள்ளது. கொரானா காலத்தில் பல லட்சம் கோடி டாலரை லாபம் ஈட்டிய நிறுவனம் அமேசான். ஆன்லைன் வர்த்தகத்தில் உலகின் முதல்பெரும் நிறுவனமாக, உலகெங்கும் கிளை பரப்பி செயல்பட்டு வருகிறது.  16,08,000 தொழிலாளர்கள் அமேசானில் பணி புரிகின்றனர்.

இங்கு அமேசான் தொழிலாளர் சங்கம் (Amazon Labour Union) உருவானதும், அதை ஒடுக்க நிறுவனம் முயற்சித்ததும் பெரும் செய்தியாக ஓராண்டுக்கு மேல் வலம் வந்தது. தொழிற்சங்கம் அமைக்க முயற்சித்த ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். வழக்கம் போல் முதலாளித்துவம் தனது பிரித்தாளும் சூழ்ச்சியை அரங்கேற்றியது. தொழிற்சங்க ஆதரவு, எதிர்ப்பு என்ற சிந்தனையை, தொழிலாளர்களிடம் விதைத்தது. கருப்பு, வெள்ளை நிறவெறி உள்ளிட்டு ஆதிக்கம் செலுத்தியது. தொடர் போராட்டத்தின் விளைவாக ஜே.எஃப்.கே. 8 என்ற ஒரு இடத்தில் உள்ள குடோனை மையப்படுத்தி செயல்படும் தொழிலாளர்களுக்குள் நடத்திய வாக்கெடுப்பில், சுமார் 6,000 தொழிலாளர்களில், 4,785 தொழிலாளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். அவர்களில் 2,654 பேர் தொழிற்சங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். நெடிய போராட்டத்தின் வெற்றியாக வாக்கெடுப்பு மூலம் தொழிற்சங்கம் அங்கீகாரம் பெற்றுள்ளது. இதன் முக்கிய காரணகர்த்தாவான கிரிஸ்து ஸ்மால் என்ற இளைஞர், வேலைநீக்கம் செய்யப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் அனைத்து பகுதி தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் பல அமைப்புகளின் ஆதரவு நடவடிக்கைகள் காரணமாக வேலையை மீண்டும் பெற்றார்.

அமெரிக்காவின் ஸ்டார் பக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும், 32,660 கடைகளை கொண்ட காபி மற்றும் உணவு விநியோகம் செய்யும் பெரும் நிறுவனமாக உள்ளது. 3,80,000 ஊழியர்கள் உலகம் முழுவதும் பணி புரிகின்றனர். இந்தியாவில் 1,200 ஊழியர்கள் பணிபுரிவதாக விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனத்திலும் தொழிற்சங்கம் துவங்கி பெரும் அடக்கு முறையை சம்மந்தப்பட்ட தொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் கடந்த டிசம்பர் முதல் தொழிற்சங்கம் அமைக்கவும் அதை அங்கீகரிக்க வேண்டும் எனவும் கேட்டு, தொழிலாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். 1965 காலத்தில் தொழிற்சங்கம் வேண்டும், அது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக, 68 சதவீதம் பேர் அன்று போராடினார்கள். இன்று அதே கோரிக்கைக்காக 77 சதவீதம் பேர் போராடுவதாக நிலை உள்ளது என்று மசாசூட்ஸ் இண்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜியின் வரலாற்று பேராசிரியர் ஜோசப் மெக்கார்ட்டின், ஸ்டார் பக்ஸ் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். குறிப்பாக 18 வயது முதல் 34 வயதுக்குட்பட்ட ஊழியர்கள் இது போன்ற கோரிக்கைகளை முன் வைத்து போராடுவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். புதிய தலைமுறை இளைஞர்கள் நாங்கள் U (U for Union) விற்குப் பின் அணிவகுப்போம் என்கின்றனர். இந்த அமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் அனைவரும் பெண்கள் என்பதும் கவனிக்கதக்கது. ஏனென்றால் 70 சதம் தொழிலாளர்கள் பெண்களாக உள்ளனர்.

ஒரு மணி நேரத்திற்கு 17 அமெரிக்க டாலர் ஊதியம் (1258 ரூபாய்), காப்பீடு, கல்வி உதவி போன்றவை இருந்தாலும், தொழிற்சங்கம் அவசியம் எனக் கூறுகின்றனர். நிரந்தர வேலை இல்லை; பல நிறுவனங்களில் பணி புரியும் நாங்கள் உதிரி பாட்டாளிகளாக மாற்றப் பட்டு இருக்கிறோம். இவை மிகுந்த மன உளைச்சல் தருவதாக உள்ளது எனக் கூறுகின்றனர். நிதி மற்றும் வாழ்க்கை உத்தரவாதம் பாதுகாப்பற்றதாக உள்ளது என்கின்றனர். என்னுடைய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட முடியவில்லை. வேலையிலிருந்து, வீட்டிற்கு சென்று வரவே நேரம் போதவில்லை என லியோ ஹெர்னாண்டஸ் என்ற இளம் தொழிலாளி கூறுகிறார்.

தொழிற்சங்கமாக ஊழியர்கள் ஒன்று சேர்வதை நிறுவனம் விரும்பவில்லை. ஏனென்றால் எங்களை துரத்தும் அவர்களின் எண்ணம் ஈடேறாமல் போகும். எங்களை ஜனநாயக ரீதியில் நடத்தினாலும் அல்லது நல்ல ஊதியம் அளித்தாலும் அது நிரந்தரமல்ல என்பது பிரச்சனை தானே என்கிறார் நியான் பேனட் என்ற 22 வயது பெண் ஊழியர். இதுதான் இன்றைய முதலாளித்துவ சமூகத்தின் வேலை வாய்ப்பாக உள்ளது.

இந்தியாவிலும் இதே நிலை தானே

அமேசான் அல்லது ஸ்டார் பக்ஸ் நிறுவனங்களின் ஒடுக்கு முறைக்கு சற்றும் சளைத்ததல்ல, இந்தியாவில் உள்ள பன்னாட்டு மற்றும் இந்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள். தமிழகத்தில் ஏராளமான அனுபவங்கள் உண்டு. தொழிற்சங்கங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பெரும் செல்போன் மற்றும் கார் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டபோது, வேலைநீக்கம், தற்காலிக வேலை நீக்கம், காரணம் கோரும் அறிவிப்பு, உள்விசாரணை என்ற பல பெயர்களில் தொழிலாளர்கள் சந்தித்த மன உளைச்சல் தந்த தண்டனைகள் ஏராளம். அமெரிக்காவின் அரசு தனது பாராமுக செயல்களால், அமேசானில் சங்கம் வைத்ததை தண்டித்தது. தமிழகத்தில் அல்லது இந்தியாவின் தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் சம்மந்தப்பட்ட அரசுகளும், ஒன்றிய அரசுகளும் நேரடியாக, தொழிற்சங்க தலைமையிடம், சங்கத்தை தவிர்க்க கேட்டு கொண்டனர்.  “நாங்க நாடு நாடாக சென்று மூலதனத்தை ஈர்த்து வந்தால், நீங்க சங்கம் வைத்து கெடுப்பீங்களா?” என கேள்வி கேட்பதுண்டு.

மேற்குறிப்பிட்ட வாதங்களையும், தண்டனைகளையும் கடந்தே தொழிற்சங்கங்கள் பயணிக்க வேண்டியுள்ளது. மூலதனத்துடன் முரண்படுகிற தொழிலாளி வர்க்கம் அதற்கேற்ற ஒற்றுமை பலத்தை கட்ட வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. ஒற்றுமை பலத்தாலும், சரியான அணுகுமுறைகளாலுமே, பெரும் மூலதனக் குவியல்களை கொண்ட காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரளவு தொழிற்சங்கத்தை அமைக்க முடிந்துள்ளது. பெற வேண்டிய பலன்களும், உரிமைகளும் ஏராளம் உள்ளது என்பது அரசியல் ரீதியான கொள்கைகளுடன் இணைந்தது. அதற்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மூலதன குவிப்பு அதிகரிக்கிறது. அதற்கு காரணம், தொழிலாளர்களின் கட்டமைப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் ஆகும். இதை மார்க்சிஸ்ட் கட்சியின் கொல்கத்தா சிறப்பு மாநாட்டில் முன்வைக்கப்பட்ட ஆய்வு அறிக்கையும் விவாதிக்கிறது. “இந்தியாவில் பாட்டாளி வர்க்கம் அதிகரித்துள்ளது. பெரும்பாலானவர்கள், அமைப்பு ரீதியிலான தொழில்களில் உள்ளவர்கள் அல்ல; மாறாக அமைப்பு சாராத தொழில்களில் உள்ளவர்கள்” எனக் கூறுகிறது. மூலதனத்திற்கு வளர்ச்சியடைந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், உற்பத்தி திறனை அதிகரிக்க முடிகிறது. அதே சமயம் கூலியில் தேக்கத்தை உருவாக்கி, லாபம் அதிகரிக்கிறது.

ஓர் ஆண்டுக்கு முன் பெங்களூரு, விஸ்றான் நிறுவனத்தில் பல ஆயிரம் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும், கடந்த டிசம்பரில் சென்னை, ஶ்ரீபெரும்புதூரில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பெண் தொழிலாளர்களின் போராட்டமும், முறையான தொழிற்சங்கம் அமைக்கும் வாய்ப்பில்லை; மிகக் கொடிய சுரண்டல்; குறைந்தபட்ச ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது; நிரந்தரமில்லை; உணவு, தங்குமிடம் போன்ற ஏற்பாடுகளில் கொள்ளை போன்ற கோரிக்கைகள் முன்னுக்கு வந்தன. இவை அமேசான் அல்லது ஸ்டார்பக்ஸ் அளவிற்கு பேசப் படவில்லை. ஏன் இந்த நிலை என்றால், இந்தியா ஜனநாயக விழுமியங்களை பின்பற்றுவதில் பலவீனமாக உள்ளது. அதை விட மோசம், மூலதனத்தை ஈர்க்க நம் தொழிலாளர் உரிமைகளை விட்டுத் தர வேண்டும் என்ற அரசின் பிற்போக்கான எண்ணம் மற்றும் அதன் கருத்தியல் ஆகும்.

இந்திய சூழலில் இரண்டு உண்மைகளை காண வேண்டியுள்ளது. ஒன்று, இந்தியாவில் அதிகரித்து வரும் வேலை என்ற கட்டமைப்பு வடிவம், மிக அதிகமான மூலதனம் மற்றும் லாபக் குவிப்பிற்கு வழி வகுக்கிறது. இரண்டு, கருத்தியல் ரீதியாகவே வேலைவாய்ப்பின் ஜனநாயகத்தில் பின் தங்கி இருக்கும் பிற்போக்கு குணம். இவை இரண்டையும் எதிர் கொள்ளும் வடிவத்திலான பாட்டாளி வர்க்க அணிதிரட்டல் அவசியப் படுகிறது. மிக சாதாரணமாக இந்த உற்பத்திக்கு, இவ்வளவு பயிற்சி போதும், இந்த கல்வித் தகுதி தேவையில்லை, மேலும் நீடித்த வேலை வாய்ப்பு வேண்டியதில்லை போன்ற பல கருத்துக்களை முதலாளித்துவ பிரதிநிதிகள் முன்வைக்கின்றனர். எனவே மேலே கூறிய இரண்டு கருத்தாக்கத்தையும் தகர்க்கும், முதலாளித்துவ ஜனநாயகம் கூட இல்லாத நிலையை, மூலதன ஈர்ப்பு என்ற முழக்கம் பயன்படுத்திக் கொள்வதை அனுமதிக்க கூடாது.

அமெரிக்காவில் சுதந்திர தேவி, இந்தியாவில் குஜராத் வளர்ச்சி, வெற்றுமுழக்கம்:

சுதந்திர தேவியின் சிலை நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டு மணி நேர வேலைக்கான மே மாத போராட்டம், அடக்க பட்ட அதே 1886ம் ஆண்டு, அக்டோபர் மாதம் சுதந்திர தேவி சிலை அமைக்கப் பட்டுள்ளது. இது அன்றைய அமெரிக்காவின் இரட்டைத் தன்மையை வெளிப்படுத்துகிறது. அதாவது சிகாகோவில் மே மாதம் 1886 ம் ஆண்டில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும், அதைத் தொடர்ந்த அடக்குமுறைகளும் மிகக் கொடிய ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது. காவல் துறை அதிகாரி, நகர்மன்ற தலைவர், ஆகியோர் இந்த கோர தாண்டவத்தை முன்நின்று நடத்தியதை, நீதிமன்றம் நியாயப்படுத்தியது. பின்னாளில் அந்த நீதிமன்ற ஜூரிகள், மே போராட்டத்தில் ஈடுபட்டு, தூக்கிலிடப்பட்ட தோழர்கள் தவறு செய்திருக்கலாம் என தான் நம்பியதாகவும், அதற்காக வருந்துவதாகவும் கூறினார். இப்படித்தான் அமெரிக்காவின் ஜனநாயகம் அன்று முதல் இன்று வரை முதலாளித்துவத்திற்கு ஆதரவாக அமலாகிறது.

ஒரு புறம் அனைத்து உரிமைகளும் உள்ளது. மறுபுறம் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கூட மறுக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும், வேலை நீக்கம் செய்யப்படுவதும் அமெரிக்காவில் அரங்கேறுகிறது. இதை அம்பலப் படுத்தும் போராட்டங்களாக அன்று சிகாகோ மே தினப் போராட்டம் என்றால், இன்று அமேசான் மற்றும் ஸ்டார் பக்ஸ் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் அமைக்கும் பணியும் அதன் போராட்டமும் பார்க்கப்பட வேண்டும். மேலும் முதலாளித்துவ ஜனநாயகத்தில், வளர்ச்சியும், உரிமைகளும் சிறுபான்மையினரான முதலாளிகளை அல்லது இன்றைய கார்ப்பரேட் அமைப்புகளை பாதுகாப்பதாகவே இருக்கும்.

இது உலகம் முழுவதும் அமலாவதை காண முடியும். இந்திய ஆட்சியாளர்களின் வளர்ச்சி முழக்கம், இரட்டைத் தன்மை கொண்டது. அது முதலாளிகளின் வளர்ச்சிக்கானது என்பது அம்பலப்பட்டு உள்ளது. சமூகத்தை வளர்த்தெடுத்த பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் வளர்ச்சி என தொழிற்சங்க போராட்டங்கள் நிருபித்துள்ளன. பாஜக மற்றும் மோடி குஜராத் மாடல் வளர்ச்சி என முழக்கமிடுவதைக் காண முடிகிறது. 2022 ஆம் ஆண்டும் குஜராத் மாநிலத்தில் பாஜக பொறுப்பேற்று 25 ஆண்டுகள் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது.

மேற்கண்ட பிரச்சாரத்தை தொடர்ந்து குஜராத் மாநிலம், நாட்டில் 21ஆம் இடம் பிடித்து, மனித வளக் குறியீடுகளில் பின்தங்கி உள்ளதையும், கல்வியில் 18ஆம் இடத்திலும், தனிநபர் வருமானம்  பட்டியலில் பத்தாம் இடத்திலும் இருப்பதையும், காண முடியும். அங்கு முதலாளிகள் குவித்த செல்வம் மலை போலும், தொழிலாளர்கள் இழந்த உரிமை கடல் போலும் இருப்பதை காண முடிகிறது. அதேநேரம் மனிதவள குறியீடு, கல்வி ஆகியவற்றில் கேரளம் முதல் இடத்தில் உள்ளது. தனிநபர் வருவாயில் 8ஆம் இடத்தில் என எல்லா முதலாளித்துவ புள்ளிவிவர மதிப்பீடுகளிலும், குஜராத்-ஐ விட கேரளம் முன்னேறி உள்ளது. அதற்கு காரணம் தொழிலாளர் உரிமைகள் எனக் கூறினால் மிகை அல்ல.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அண்மையில், குஜராத்தில் தொழிற்சாலை துவங்கும் நிறுவனங்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில் 1,200 நாள்கள் வரையிலும், புதிய நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் எதுவும் பொருந்தாது, குறைந்தபட்ச ஊதியம், வேலை ஆள் இழப்பீட்டு சட்டம் மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு சட்டம் மட்டுமே பொருந்தும் என்பதாக உள்ளது. இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொழிலாளர் உரிமைகளை விற்கும் செயல் என்பதை தவிர வேறில்லை.

அதேபோல் திராவிட மாடல் என்ற வியாக்கியானங்களும் ஒரு சில சமூக போராட்டங்களை பாதுகாத்தாலும், ஒரு எல்லையில் முதலாளித்துவத்தை பாதுகாக்கும் கருவியாகவே இருக்கும். முதலாளித்துவ உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தும் வகையிலேயே, புதிய முழக்கங்கள், நாகரீகமான சொல்லாடல்கள் உலகம் முழுவதும் கையாளப்படுகின்றன.  இவை தொழிலாளி வர்க்கத்தின், தீர்வை நோக்கிய போராட்ட உணர்வை மட்டுபடுத்தவோ, தள்ளிவைக்கவோ உதவுகிறது.

மூலதன சுரண்டலுக்கு எதிரான போராட்டமாக வளர்ச்சி பெறுவது:

இது மே மாதம். மே தின கொண்டாட்டங்கள் மற்றும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் பெருமளவில் நடத்த வேண்டிய தேவையையும், அமேசான் மற்றும் ஸ்டார் பக்ஸ் நிறுவனங்களில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள், அதை ஒட்டிய முன்னேற்றங்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் பரவ செய்ய வேண்டியுள்ளது.

உயிர் வாழ்வதன் பொருட்டு, ஒரு தொழிலாளி தனது உழைப்பு சக்தி, என்ற சரக்கினை, முதலாளிக்கு விற்று அதன் மூலமான கூலியை பெறும் நிலையில் உள்ளார், என மார்க்ஸ் கூறினார். இன்று அந்த நிலைமை தீவிரமாகி வருகிறது. கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் கூலியை கட்டுப்படுத்துவதிலும், தொழிலாளர்களை பல பெயர்களில் (காண்ட்ராக்ட், பயிற்சி)  வகைப்படுத்துவதன் மூலமும் தனது வளர்ச்சி விகிதத்தை உயர்த்தி கொள்கின்றன.

முதலாளித்துவம் தான் உற்பத்தி செய்யும் சரக்கின் விலையை சந்தையில் தீர்மானிக்கிறது. குறைவான விலைக்கு விற்கும் முதலாளி சந்தையில் வெற்றி கொள்கிறார். அதற்காக சரக்கு உற்பத்திக்கான அடக்க செலவை குறைக்கிறார். அது பெரும்பாலும் உழைப்பு சக்தியின் விலையை குறைப்பதாக அமைகிறது. அதன் மூலம், சரக்கின் விலையை குறைத்து சந்தையில் போட்டியிட முடிகிறது.

ஆனால் தொழிலாளி வர்க்கம் தனக்குள் ஒரு தொழிற்சங்கம் வைத்து கூலிக்கான பேரம் பேசும் போது, உற்பத்தி செலவு அதிகரிக்கும் என்ற முதலாளியின் கணக்கு, தொழிற்சங்கம் அமைப்பதை தடுக்க முயற்சிக்கிறது. கூலியை மட்டும் உயர்த்தி கொள்வதல்ல; தொடர் அரசியல் போராட்டங்களும், அதில் தொழிலாளர்களின் பங்கேற்பும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அச்சம் தருவதாக உள்ளது. இந்த பின்னணியில் வர்க்க அரசியலின் முன்னேற்றமாக தொழிற்சங்கம் அமைப்பதையும், அதன் போராட்டங்களையும் மதிப்பிட வேண்டியுள்ளது. சங்கம் அமைக்கும் பணிகளும், போராட்டங்களும் வெல்லட்டும்!.

உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைக்கான போராடமே முதன்மையானது

பிருந்தா காரத்

(நம் தமிழ் ”மார்க்சிஸட்” இதழுக்காக தோழர் பிருந்தா காரத் அளித்த பிரத்யேக பேட்டி)

மத்திய ஆட்சியில் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் தொடர்வதோடு, சமூகத்தை மத ரீதியாக பிரித்து, தங்கள் அமைப்பை விரிவுபடுத்தியும் வருகிறது. இந்நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எவ்வாறு பார்க்கிறது? எவ்வாறு இவர்களை எதிர்கொண்டு, அவர்களின் விரிவாக்கத்தை தடுத்து நிறுத்துவது?

மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பி.ஜே.பி –  ஆர்.எஸ்.எஸ் தனது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை அனைத்து வகையிலும் உந்தித் தள்ளுகிறது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலையும், அதன் அடுத்தடுத்த நிகழ்வுகளையும், துல்லியத் தாக்குதல் என்பதாகவும் பயன்படுத்திக் கொண்டது. அதை தனது ஆதாயத்திற்காக தவறாகவும் பயன்படுத்தியது. இதன் மூலம் அரசும், அதனை ஆட்சி செய்யும் கட்சியும் கலவையாக தேசியவாத உணர்வை கதையாடி தேர்தலில் கூடுதல் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றனர்.

இன்று எந்த ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு  பி.ஜே.பி ஆட்சி பொறுப்பிற்கு வந்ததோ,அந்த பெரும்பான்மையை பயன்படுத்தியே நாடாளுமன்றத்தின் ஜனநாயக அமைப்பை குழிதோண்டி புதைக்கின்றனர். ஆனபோதும், இந்த வளர்ச்சிப்போக்கில் வேறு ஒரு உண்மை உள்ளது என்பதை கம்யூனிஸ்டாகிய நாம் அங்கீகரிக்க வேண்டும்.  பி.ஜே.பி யின் கோரிக்கைகளுக்கு பின்னால் இந்திய ஆளும் வர்க்கத்தின் அபரிமிதமான ஆதரவு உள்ளது என்பதாகும். அந்நிய மூலதனத்துடன் கைகோர்த்துள்ள இந்திய பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கூட்டே இந்த ஆளும் வர்க்கமாகும். இன்று பி.ஜே.பி தான் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஆகப்பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது.

தற்போதைய நிலையை ஆராய்வதற்கான முக்கியமான அம்சமாக இது அமைகிறது. தேசிய அளவில் பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளே ஆளும் வர்க்கத்தின் இரண்டு கட்சிகளாகும். நவ தாராளமயம் சார்ந்த குணாதிசயங்களிலும் செயல்பாடுகள் மற்றும் உறுதிப்பாட்டிலும் இரண்டு கட்சிகளிடையேயும் எவ்வித வேறுபாடும் கிடையாது. நாடாளுமன்றத்தில் அதீத பலம் பொருந்திய கட்சியாக பி.ஜே.பி தற்போது இருப்பதால் அது நவதாராளமயக் கொள்கையை மிக கடுமையாக அமலாக்குகிறது. தொழிலாளர்களுக்கு எதிரான தொழிலாளர் சட்டங்களை உருவாக்கியதிலும், விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கும் நோக்கோடு கொண்டுவரப்பட்டு, மத்திய அரசால் திரும்பப்பெறப்பட்ட விவசாய சட்டங்களிலும், குறைந்த விலையில் பொது சொத்துக்களை கார்ப்பரேட்டுகள் சூறையாட வழி செய்ததிலும், லாபத்தில் இயங்கும் பொதுத் துறைகளை தனியாருக்கு குறைந்த விலைக்கு தாரைவார்ப்பதிலும் நாம் அரசின் கடுமையான நவ தாராளமய அமலாக்கத்தை பார்க்க முடியும். சலுகைசார் முதலாளித்துவத்தை பாதுகாக்கவும் வளர்த்தெடுக்கவும் இந்த அரசு வெளிப்படையாகவே செயலாற்றுகிறது. ஆளும் வர்க்கத்தினருக்கு சாதகமான அரசின் கொள்கை முடிவுகளின்படி  கார்ப்பரேட்டுகள் ஆதாயம் அடைவதோடு கூடுதல் சலுகைகளையும் பெறுகின்றனர். அதீதமான சொத்துக் குவிப்பு மற்றும் சாதனை படைக்கும் லாபத்தை ஈட்டி அதானி பணக்காரர்களின் முன்னணி பட்டியலில் இடம்பிடித்தது நிச்சயமாக எதேச்சையான ஒன்றல்ல.

வர்க்கப் பார்வையில் கூறுவதென்றால், பெருமுதலாளிகள் உடனான இந்த நட்புறவு என்பது மற்ற வர்க்கங்களுக்கிடையே ஒரு மோதலை இதன் மூலம் ஏற்படுத்துகிறது. உதாரணமாக, கொரோனா காலத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் எதிர்கொண்ட நஷ்டத்தின் போது கடுமையான பாகுபாட்டை உணர்ந்தனர். பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி அமலாக்கம் ஆகியவை அவர்களின் சிக்கலை மேலும் அதிகப்படுத்தியது. கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு விவசாயத்தை கையளிக்கும் முடிவுக்கு எதிராக, கிராமப்புற இந்தியாவில் பல்வேறு தரப்பட்ட விவசாய பகுதியினரிடையே ஒரு ஒற்றுமை உருவாகியது. உழைக்கும் வர்க்கம் இக்காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆதிக்க போக்குகள் மற்றும் நிலமற்றவர்களின் உயர்வால் கிராமப்புற உழைக்கும் வர்க்கத்தினரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

வர்க்க சக்திகளின் ஒருங்கிணைவை புரிந்துகொள்ள முயற்சிப்பதோடு, முரண்பாடுகளையும் வித்தியாசங்களையும் பயன்படுத்தி போராட்டங்கள் மூலம் சுரண்டப்படும் வர்க்கங்களிடையே ஐக்கியத்தை உருவாக்கி, சமூக மாற்றத்திற்கான திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். இதற்கு இந்த அனைத்து பிரச்சினைகளிலும் கட்சி ஊக்கத்துடன் தலையிட்டு வர்க்க வெகுஜன அமைப்பை வலுப்படுத்த வேண்டும்.  அதன் மூலம் ஆளும் அரசின் கொள்கைகளால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான வர்க்கத்தினரிடையேயும் இதர பகுதியினரிடையேயும்  விரிவாக சென்றடைவது.

அதே நேரம், சங்பரிவார் கூட்டத்தினால் வழி நடத்தப்படும் மத்திய அரசின் பெரும்பான்மைவாதத்தை முதன்மைப்படுத்துவதையும், அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள மதச்சார்பின்மை மீதான கடுமையான தாக்குதல்களையும் எதிர்த்த போராட்டத்தினை அதே அளவிளான  முக்கியத்துவத்துடன் நாம் முன்னெடுக்க வேண்டும். இந்த அரசுக்கு மதச்சார்பின்மை என்பது தவறான வார்த்தையாக உள்ளது. சங்பரிவாரின் இந்துத்துவ நோக்குடன் மூழ்கடிக்கப்படாத எந்த ஒரு சுயேட்சையான அமைப்பும் தற்போது இல்லை. நீதித்துறை, தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகள், அரசியல் அமைப்பு சட்டத்தின்படியாக இல்லாமல் சங்பரிவாரின் இந்து ராஷ்ட்ராவின் மீது பற்று கொண்ட கொள்கை சார்பின் அடிப்படையில் சுயேச்சையான அமைப்புகளில் பணியமர்த்தப்படுவது என இது நீளும். 

உயர் கல்வி நிறுவனங்களும் இத்தகைய கடுமையான தாக்குதலை எதிர்கொண்டது. உயர்கல்வி நிறுவனங்களின் உயர் பொறுப்பில் தகுதியற்றவர்களை அமர்த்துவது, பாடதிட்டத்தில் வரலாற்று நோக்கை மறுத்து, அறிவியல் ரீதியான ஆய்விற்கு பதிலாக தெளிவின்மையையும் மாயைகளை கொண்டு நிரப்புவது நடந்துள்ளது. மதச்சார்பின்மையும் ஜனநாயகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். தேசத்தின் முக்கியமான இந்த இரு தூண்களும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுமாயின் எவ்வாறு மதச்சார்பின்மை சாத்தியமாகும்? மதச்சார்பின்மையின் மாண்புகள் அல்லாத மதக் கோட்பாடுகளை அடிப்படையாக கொண்ட தேசத்தை எவ்வாறு ஜனநாயகம் உள்ள நாடு என்று கொள்ள முடியும்? சங் பரிவார் முன்னிறுத்தும்  சித்தாந்தம் என்பது மனுஸ்மிருதியின் அடிப்படையில் சாதிய ஆணாதிக்க கருத்தாக்கத்தை ஆழமாக கொண்டதாகும். சமூக சீர்திருத்தம் என்பது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி க்கு சாபம் போன்றதாகும். சாதியத்திற்கு எதிராகவும், சாதிய அமைப்பு முறைக்கு எதிராகவும் ஆணாதிக்கத்திற்கு எதிராகவும்  போராடுவது என்பது சங்பரிவார் கூட்டத்தின் சித்தாந்தத்தின் மீது தொடுக்கும் கடும் தாக்குதல் ஆகும்.

பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்துவது குறித்த விரிவான புரிதலின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) செயல்படுகிறது.  தேசத்தின் மீதுள்ள இந்த மோசமான அபாயத்தை எதிர்த்து போராடி வீழ்த்திட வேண்டும். நமது சொந்த மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, நவதாராளமயத்திற்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைப்பதோடு, ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாகத்தான் இது சாத்தியமாகும்.

நவ தாராளமயம் மற்றும் இந்துத்துவ சித்தாந்தத்தை ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. சக்திகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், இதற்கு முன்னதாகவும் பலமுறை விவாதிக்கப்பட்டது போல், இதற்கு எதிரான ஒன்றுபட்ட அணியை கட்டுவது சாத்தியமா? அனைத்து எதிர்கட்சிகளையும் ஒரே மேடையில் அணி சேர்ப்பது சாத்தியமா?

அனைவரையும் ஒரே அணியில் திரட்டுவதற்கு பல முன்மாதிரிகள் உள்ளன. சுரண்டப்படும் மற்றும் ஒடுக்கப்படும் சக்திகளை ஓரணியில் திரட்டுவதே மிகவும் முக்கியமான திரட்டுதலாகும்.

அரசியல் கட்சியை பொறுத்தவரை வலுவான இடதுசாரி அணியை கட்டுவதே முதன்மையான முன்னுரிமையாகும்.  இது ஒன்றும் எளிதான காரியமல்ல. நாம் அறிந்தது போல் பல்வேறு விஷயங்களில் இவற்றுக்கிடையே வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியும் பார்வர்ட் பிளாக் கட்சியும் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கின்றனர். அதேநேரம் வங்கத்தில் இடது ஜனநாயக அணியில் உள்ளனர். சிபிஐ(எம்.எல்) கட்சி வங்கத்தில் சிபிஐ(எம்) ஊழியர்கள் திரிணாமுல் கட்சியினரால் தாக்கப்படுவதை கண்டிப்பதில்லை. கடந்த தேர்தலில் திரிணாமுல் கட்சியை எதிர்த்து போட்டியிடவும் இல்லை. ஆனபோதும் நாம் இடதுசாரிகளின் ஒற்றுமையை வலுப்படுத்த முயற்சிக்க வேண்டும். அதுவே இதர சக்தியினரை நம்மோடு அணிசேர வழி செய்யும்.

பி.ஜே.பி. க்கு எதிரான இதர கட்சிகளை கொண்ட அணியை பொறுத்தவரை, அகநிலை விருப்பம் மட்டும் அதை சாத்தியப்படுத்த விடாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இம்முழக்கத்தை எப்போதும் வைக்கவில்லை. ஏனெனில் அது சாத்தியமில்லை என்பதை அனுபவம் காட்டியுள்ளது. உதாரணமாக, நவதாராளமயத்தை ஆதரிக்கும் கட்சிகளை கொண்ட ஒரு நிரந்தரமான அனைத்துக் கட்சி அணியை நாம் உருவாக்க முடியுமா? நம் அடிப்படை வர்க்கத்தினரின் உரிமைக்காக நாம் போராட வேண்டியுள்ளது. தற்போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி  மட்டுமே தேசிய அளவில் உள்ளது. ஆனபோதும் அதனால் தன்னை விரிவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஐ பொருத்தவரை நாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அங்கத்தினர் அல்ல. பி.ஜே.பி க்கு எதிரான பொதுவான விஷயங்களில்  அதனுடன் ஒத்துழைத்துள்ளோம். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெரிய அளவில் பலவீனம் அடைந்துள்ளது. அதன் பல தலைவர்கள் பிஜேபி யுடன் இணைந்துள்ளனர். மற்ற கட்சிகளை அணி சேர்க்கும் நிலையிலும் காங்கிரஸ் இல்லை. பல மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு கடும் இழப்பை ஏற்படுத்தியே தங்களை நிலைப் படுத்தியுள்ளனர். தமிழ்நாடு மற்றும் பீஹார் மாநிலங்களில் பிராந்திய கட்சிகளான திமுக மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள் ஆகிய கட்சிகளுடன் உள்ள சிறிய கட்சியாகவே தன்னை ஆக்கிக்கொண்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் கூட்டப்பட்ட கூட்டங்களில் அதற்கு வெளியே உள்ள தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் ஆம் அத்மி கட்சி ஆகியவை அழைக்கப்படவும் இல்லை; அவற்றிற்கும் இதில் பங்கேற்கும் விருப்பமும் இல்லை. மேலும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் அவை நவதாராளமயத்தையே அமலாக்குகிறது. இது பிஜேபி க்கு எதிரான கொள்கை ரீதியான மாற்றை உருவாக்குவதை பலவீனப்படுத்துகிறது. மேலும் பிஜேபி முன்னிலைப்படுத்தும் மதவாதத்தை எதிர்த்து போராடவும் அது முன்வருவதில்லை. பல நேரங்களில் அதன் மீது மிதமான அல்லது சமரச போக்கையே கையாள்கிறது.

பிரச்சனைகளின் அடிப்படையில் இந்த அனைத்து கட்சிகளுடனும் நாம் ஒரு ஒற்றுமையை கட்டியமைக்க தொடர்ந்து முயற்சித்துள்ளோம். உதாரணமாக, கூட்டாட்சிக்கு எதிரான மோடி அரசின் நிலைப்பாட்டை எதிர்த்த போராட்டத்தில், ஆளும் மாநில கட்சிகளிடையே ஒரு இணக்கதை ஏற்படுத்துவது சாத்தியப்பட்டது. கேரள இடது ஜனநாயக அணி இதில் தீவிரமான பங்காற்றியது. அதேபோல் விவசாய இயக்கங்கள் அழைப்பு விடுத்த தேசிய அளவிலான பந்திற்கு ஆதரவாக கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. பி.ஜே.பி யின் விவசாய விரோத கொள்கைகளுக்கு எதிராக தன்னிச்சையாக கள அளவில் இணக்கம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தின் ஜனநாயக முறையை தகர்த்து அரசு நிறைவேற்ற முனைந்த சட்டங்களை எதிர்த்த போராட்டத்தில் நாடாளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சிகளிடையே ஒரு இணக்கம் ஏற்பட்டது. இவை எல்லாம் ஒரு சாதகமான வளர்ச்சி போக்குகள் மட்டுமே. இவற்றை அனைத்து கட்சிகளின் அரசியல் கூட்டணி என்பதோடு இணைத்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது.

வலுவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இடது அணி மட்டுமே பி.ஜே.பி க்கு எதிரான விரிவான அணிதிரட்டலை சாத்தியமாக்கும் என்பதை அனுபவங்கள் எடுத்துக்காட்டுகிறது. விரிவான ஒற்றுமையை கட்டியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தன்னை வலுவாக கட்டியமைக்க வேண்டும். தற்போதைய நிலையில் அரசியல் ரீதியான தலையீடுகளை மேற்கொள்ளும் பலம் நமது கட்சிக்கு வெகுவாக சரிந்துள்ளது. எனவே, வர்க்க , வெகுஜன இயக்கங்களை கட்டி எழுப்புவதன் மூலம் வலுவான வெகுஜன கட்சியை கட்டியமைக்கும் பணியே அடிப்படையில் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வலது திருப்பம் நிலவும் இன்றைய சூழலில் நாம் எவ்வாறு இடது ஜனநாயக அணியை சாத்தியப்படுத்த போகிறோம்?

இடது ஜனநாயக முன்னணி பற்றி சிலரிடம் ஒரு தவறான புரிதல் உள்ளது. அது ஒரு பிரச்சார முழக்கம் என்று கருதுகின்றனர்; இடது ஜனநாயக முன்னணி தற்போது போராடி, கட்டவேண்டிய ஒரு அணி என்று அவர்கள் பார்ப்பதில்லை. இது கட்சியின் புரிதலுக்கு மாறானது.

இடது ஜனநாயக முன்னணி என்பது அரசியல் கட்சிகள் மட்டும் என்கிற எல்லைக்கு உட்பட்டது அல்ல; மாறாக, முற்போக்கு சமூக சக்திகள், இயக்கங்கள், அறிவு ஜீவிகள்,தொழில்துறையின் தொழில்நுட்பத்திறன் கொண்டோர்(professionals) ஆகியோரை திரட்டுவதற்கான ஒரு மேடை.அந்த மேடை ஒரு மாற்று திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவின் எதிர்காலம் பற்றிய எதிர்காலப் பார்வை கொண்டது.

இது மிக முக்கியமான உடனடி கடமை.இது நேர்மறையான திட்டங்கள் அடிப்படையில் விரிவான மக்கள் திரளை அணி சேர்க்கும் கடமையாகும். இது வெறும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி க்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. அந்தப் போராட்டம் மாற்று எதிர்காலப் பார்வை (vision )யுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படவேண்டும். சங் பரிவார் சக்திகளின் கீழ் வலதுசாரிகள் அணிதிரட்டப்படுவதை முறியடிக்க, மாற்றுத் திட்டத்தின் அடிப்படையில், சமூக மற்றும் அரசியல் சக்திகளை திரட்டிட வேண்டும். அத்தகைய சக்திகள், குழுக்கள்,கட்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தந்த மாநில அளவிலான நிலைமைகளை சரியாக ஆய்வு செய்து, அவர்களை கண்டறிந்து, இடது ஜனநாயக அணி நிறுவிட பணியாற்ற வேண்டும்.

தமிழில் – ச.லெனின்

உள்ளே வெளியே இரண்டும் ஓன்றுதான்: இடம்பெயர் தொழிலாளர்களின் கொரொனா கால போராட்டம்

ஆதிரன்

கொரோனா பரவல் மற்ற நாட்டு மக்களின் வழ்க்கையை முடக்கி போட்டது போலவே இந்திய மக்களின் வாழ்க்கையையும் முடக்கிபோட்டது. இந்த பொதுமுடக்கம் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்தாலும், முறைசாரா தொழிலாளர்களையும், இடம்பெயர் தொழிலாளர்களையும், விளிம்புநிலை மக்களான மாற்றுத்திறனாளிகள், மாற்றுப் பாலினத்தவரை கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில் இக்கட்டுரை இடம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பற்ற வாழ்கையை விவாதிக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் அனேகமாக இடம்பெயர் தொழிலாளர்களை அனைத்து மாவட்டங்களிலும் காணமுடிகிறது. குறிப்பாக தொழில் மற்றும் பெரு நகரங்களில் கணிசமான அளவில் இருக்கின்றனர். நகர்ப்புறங்களில் இடம்பெயர் தொழிலாளர்கள் குவிவதற்கு முதலாளித்துவத்தின் நகர்ப்புறத்தை மையப்படுத்திய சமமற்ற வளர்ச்சியே காரணம். சமமற்ற வளர்ச்சியின் காரணமாக நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு பெருக்கமும், கிராமங்களில் வேலையின்மையும் ஏற்பட தொழிலாளர்கள் நகரத்தை நோக்கி பயணப்பட்டனர். நகரத்திற்கு வந்த இடம்பெயர் தொழிலாளர்கள் கட்டுமானம், பொருள் உற்பத்தி மற்றும் பேரங்காடி போன்ற தொழில்களில் பெருமளவு வேலைக்கு அமர்த்தபட்டுள்ளனர். பிற மாநிலத்திலிருந்து வந்தவர்கள் மட்டுமல்லாமல் தமிழகதுக்குள்ளேயே மக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டதிற்கு புலம்பெயர்ந்து வேலை செய்து வருகின்றனர். ஆக இடம்பெயர் தொழிலாளர்களை பிறமாவட்ட தொழிலாளர்கள், பிறமாநில தொழிலாளர்கள் என இருவகைப் படுத்தலாம். இந்த இரண்டு வகையான தொழிலாளர்களின் நிலைமை தனித் தனியாக விவாதிக்க வேண்டியிருந்தாலும், பொதுவான பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை இங்கு காணலாம்.

முதலாவதாக, உணவுப் பிரச்சினை மிகபெரிய பிரச்சினையாக இருக்கிறது. பொதுமுடக்கத்தின் முதல் வார முடிவில் கையிலிருந்த பணம் தீர்ந்த நிலையில் உணவு பொருட்கள் வாங்க வழியின்றி தவித்தனர். நாட்கள் செல்ல செல்ல, அரிசி, பருப்பு என அரசு, தன்னார்வலர்களின் உதவியுடன் கிடைத்தாலும், காய் வகைகள் வாங்க வழியின்றி தவித்து வருகின்றனர். இரண்டாவதாக, வீட்டு வாடகை தலையாய பிரச்சினையாக மாறியது. கட்டுமான வேலைதளத்தில் தங்கியிருந்த காரணத்தாலும், அரசின் முகாம்களில் அடைக்கலம் புகுந்த காரணத்தாலும் பிறமாநில தொழிலாளர் ஒரளவு தப்பித்தாலும், பிற மாவட்ட தொழிலாளர்கள் வாடகை பிரச்சினையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டு வாடகை வசூலிப்பதில் வீட்டு உரிமையாளர்கள் தாமதப்படுத்த தமிழக அரசு கேட்டுக்கொண்டாலும் வாடைகை பளு பிற மாவட்ட தொழிலாளர் மீது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அனைத்தையும் விட சம்பளமின்மை இடம்பெயர் தொழிலாளர்களை கடுமையாக பாதித்திருக்கிறது. பொதுமுடக்க காலகட்டத்திற்கான சம்பளம் கிடைக்கவில்லை என்றாலும், பொதுமுடக்கத்திற்கு முன்னதாக செய்த வேலைக்கான சம்பளம் கிடைக்கவில்லை என இடம்பெயர் தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பொதுமுடக்கத்தின் நீட்சியும் முன்னர் செய்த வேலைகான சம்பளம் கிடைக்கவில்லை எனும் சூழலும் இடம்பெயர் தொழிலாளர்களை முற்றிலுமாக முடக்கி போட்டுள்ளது. அரசின் நிவாரணமும் இடம்பெயர் தொழிலாளர்களை சென்றடைவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. எடுத்துக்காட்டாக, நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அரசு நிவாரணம் சென்றடைந்துள்ளது. மற்ற தொழிலாளர்களுக்கு சென்றடையவில்லை. குறிப்பாக பிற மாநில இடம்பெயர் தொழிலாளர்களுக்கு பணப்பயன்கள் கிடக்கவில்லை. இச்சூழல், உள்ளே இருந்தால் பசியால் வாடுதல், வெளியே சென்றால் கொரொனா தொற்றுக்கு ஆளாக நேரிடல் என இடம்பெயர் தொழிலாளர்களை இரட்டை பிரச்சினையில் தள்ளியுள்ளது. பணமும் இல்லை; சரியான உணவும் இல்லை என்ற நிலையில் இடம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல விரும்புகின்றனர். சொந்த ஊர் சென்றால் குறைந்த பட்சம் உணவு பிரச்சினையில் இருந்தாவது தப்பிக்கலாம் என போராடி வருகின்றனர். பிறமாநில தொழிலாளர்களின் போராட்டத்தை தமிழகம் மட்டுமல்லாமல் தேசம் முழுவதும் இக்காலகட்டத்தில் காண முடிகிறது. மேலும், நாடு முழுவதும் பல இடங்களில் அரசின் உதவியை கூட எதிர்பாராமல் நடந்தே சொந்த ஊர் செல்கின்றனர். இப்படியான பயணத்தின் போது நாடுமுழுவதும் பல இடங்களில் இடம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் உச்சபட்சமாக மகாரஷ்ராவிலிருந்து மத்திய பிரதேசம் நோக்கி பயணமான போது தொடர்வண்டியில் அடிபட்டு இடம்பெயர் தொழிலாளர்கள் இறந்து போனதை குறிப்பிடலாம்.

இந்நிலையில் இடம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக, மத்திய, மாநில அரசுகள் கீழ்கண்ட கோரிக்கைகளை உடணடியாக நிறைவேற்ற வேண்டும்.

 1. பொது முடக்கதிற்கு முன்னதாக வேலை பார்த்ததற்கான சம்பளத்தை உடனடியாக வழங்க அரசு எற்பாடு செய்ய வேண்டும்.
 2. பொதுமுடக்கதிற்கு பின்னர் அனைத்து இடம்பெயர் தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கும் என்ற உத்திரவாதமற்ற சூழலில், விரும்பியவர்கள் தற்போது இருக்கும் இடத்தில் தொடர்ந்து இருக்கவும், சொந்த ஊர் செல்ல விரும்புபவர்களுக்கு பயணம் செய்வதற்கு முறையான போக்குவரத்து வசதிகளையும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
 3. பொதுமுடக்க காலகட்டத்திற்கும் ஒப்பந்ததாரரையோ, முதன்மை பணியமர்த்துபவரையோ இடம்பெயர் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
 4. நலவாரியத்தில் பதிவு செய்யாத இடம்பெயர் தொழிலாளர்களை உடனடியாக நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். வாடகைச் சுமை மற்றும் பொதுமுடக்க கால கட்டத்தில் வங்கிசாரா நபர்களிடமிந்து வாங்கிய கடன்களில் இருந்து விடுபடும் விதமாக வட்டியில்லா கடன்களை நலவாரியம் மூலம் அரசு வழங்க வேண்டும்.

எல்லை மீறிய உழைப்புச் சுரண்டலுக்கு மூலதனத்தை அழைக்கும் பாஜக!

எஸ்.கண்ணன்

அரசும், முதலாளித்துவமும் பொது முடக்கத்தில் தொழிலாளர்களையும், ஜனநாயக அமைப்புகளையும் முடக்கி, தீவிரமாக செயல்படுகிறது. மார்க்ஸ் சொன்னது போல் மூலதனம் தன்னை மேலும் மேலும் அதிகரித்து கொள்வதற்கு, இந்த கொரானா கொள்ளை நோய் காலத்தையும் விட்டு வைக்கவில்லை. பொது மருத்துவம் பறிக்கப்பட்ட மக்களுக்கு, கொரானா நோய் இருக்கிறதா இல்லையா என்பதை பரிசோதித்து கொள்வதும் கூட, மிக அதிக செலவு பிடிக்கிறது. தனியார் பரிசோதனை மையங்கள் ரூ. 4500 வசூலிக்க அரசே வழிகாட்டுகிறது. தங்களின் அடிப்படை தேவை என்ன என்பது குறித்து முடிவெடுக்க முடியாத பொதுபுத்தியை, அரசும் அதைக் கட்டுப்படுத்தும் சமூக அமைப்பும் வடிவமைத்து இருக்கிறது. இறக்குமதி செய்த கருவிகள் அப்பட்டமாக விலை அதிகம் கொடுக்கப்பட்ட செய்தி, பரபரப்பாக மாறினால், மதுக்கடைகளை திறந்து, அதுகுறித்த விவாதப் பொருளில் மக்களை திசைதிருப்புகிறது. அரசு கஜானாவை சூறையாடும் பணியை, ஆளும் கட்சி தலைவர்களும், முதலாளிகளும் போட்டி போட்டு செய்கின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பொருளாதார கொள்கையான ஏகாதிபத்திய உலகமயமாக்கல் இந்த நிலை உருவாக பெருமளவு பங்களித்துள்ளது. எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி இதழில், நோய்த்தொற்றும் முதலாளித்துவமும் என்ற கட்டுரையை சந்தீபன் பக்சி என்பவர் எழுதியுள்ளார். இதில் மூன்று முக்கிய அம்சங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று, பொது சுகாதாரப் பராமரிப்பு குறித்த பணிகள், அரசிடம் இருந்து படிப்படியாக தனியார் முதலாளிகளுக்கு கைமாற்றப்பட்டது. இரண்டு, இதுவரை இல்லாத வகையில், போக்குவரத்து ஏற்பாடுகள் மூலம் வேலை வாய்ப்புக்காகவும், சந்தைக்காகவும் உலகம் முழுவதிலும் ஒட்டி உறவாடும் புதிய சூழலை உலகமய பொருளாதாரக் கொள்கை அதிகரித்தது. மூன்று, இயற்கை மற்றும் சுற்றுச் சூழலை அழித்து ஒழித்தது. முதலாளித்துவம் காடுகளை அழித்ததும், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட மொத்த விவசாயமும் தொழிற்சாலை போல் மாற்றப்பட்டது ஆகும் என அவர் கூறுகிறார்.

1918 இல் இன்ஃபுளுவன்ஸா உள்ளிட்ட பல்வேறு நோய்த் தொற்றுகளுடன் போராடியபோதும் உலகம் அதிலிருந்து பாடம் கற்கவில்லை. காரணம் முதலாளித்துவத்தின் அதீத லாபவெறி, அனைத்தையும், தனியாருக்கு தாரை வார்க்கும் போக்கு, எல்லாவித எதிர்ப்புகளையும் புறக்கணித்தது. அறிவியலும் தொழில் நுட்பமும், மருத்துவத் துறையில் கோலோச்சினாலும், நிதிமூலதனத்தின் தாக்கம், இன்சூரன்ஸ் நிறுவனங்களை வளர்த்தது. தனியாரிடம் மருத்துவம் ஒப்படைக்கப்பட்டாலும், காப்பீடு மூலம் சிகிச்சை கிடைக்கிறதே என்ற திருப்தியுணர்வை, ஒவ்வொருவரிடமும் மேலோங்கச் செய்திருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் பொதுபுத்தி கட்டமைத்தலின் ஒரு பகுதியாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது.

கொள்ளை நோய் காலத்திலும் கார்ப்பரேட் பாசம்:

தாராளமய பொருளாதாரக் கொள்கை துவங்கிய காலத்தில் இருந்தே, தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் கார்ப்பரேட் ஆதரவு செயல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. தற்போதைய கொரானா பாதிப்புக்கு எதிராக கார்ப்பரேட் மட்டுமல்ல, அனைத்து பகுதி மக்களும் முடங்கி இருக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்புகளை பெரிதாகவும், சாதாரண மக்களின் இழப்பை ஒரு பொருட்டாக மதிக்காத வகையிலும் சித்தரிக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் இழப்பை நிவர்த்தி செய்ய ஊதிய வெட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிகாட்டப்படுகிறது. உற்பத்தி இல்லை; வருவாய் இல்லை; எப்படி நிறுவனங்கள் ஊதியம் அளிக்க முடியும்? என்ற கேள்விகள் மூலம் ஊதிய வெட்டை அமலாக்கிடும் பாதுகாப்பு கவசம் முதலாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

உலக அளவிலும் இது போன்ற செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில் H-1B விசா பெறப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட கொள்ளை குறித்து ட்ரூத் அவுட் இணைய இதழ் பலவகைகளில் அம்பலப்படுத்தி உள்ளது. H-1B விசா அமெரிக்காவில் பணிக்காக சென்றவர்களுக்கு கிடைக்கும் ஒரு அங்கீகாரமாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் 30 முன்னணி நிறுவனங்கள் H-1B விசா வழங்கப்பட்ட ஊழியர்களை மிக அதிகமாக பயன்படுத்தி வருகின்றன. மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், ஃபேஸ்புக், அமேசான், வால்மார்ட், கூகுள் போன்றவை இதில் முக்கியமானவை. இந்த நிறுவனங்கள் தொழில்நுட்பம் மற்றும் கோட்பாடு ரீதியில் அறிவு படைத்தவர்களுக்கான ஊதியத்தை, அமெரிக்க சட்டத்தின்படி தீர்மானிக்கப்பட்டவாறு, இவர்களுக்கு வழங்கவில்லை; குறைவாக வழங்கப்படுகிறது எனக் கூறப்படுகிறது. லெவல் 2க்குரியவருக்கு லெவல் 1 அளவில் ஊதியம் வழங்கப்படுகிறது. இது தொழிலாளர் துறையின் அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவின் பல நிறுவனங்களில் ஊதியக் குறைப்பு அமல்படுத்தப்படுகிறது. பிரதமர் மோடி, ஏப்ரல் 14 அன்று இரண்டாவது முறையாக பொது முடக்கம் குறித்து உரை நிகழ்த்தும்போது, நிறுவனங்கள் ஊதியத்தை வெட்டக்கூடாது; ஆட்குறைப்பு செய்யக்கூடாது போன்றவற்றை தெளிவாக கூறினார். ஆனால் இங்குள்ள தனியார் நிறுவனங்கள் இதை மீறும் வகையில்தான் நடந்து கொள்கின்றன. பெரும்பான்மையான ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் 10 முதல் 30 சதவீத ஊதிய வெட்டு அமலாகியுள்ளது. வர இருக்கும் மே, ஜூன் மாதங்களிலும் ஊதியம் வெட்டப்படும் என்று குறிப்பிடுகின்றனர். பல தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுக்கு, ஊதிய வெட்டு பகிரங்கமாக அறிவிப்பு செய்யப்படுகிறது. இதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அல்ல. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகும். லாபவிகிதக் குறைவு, பெரு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்க முடியாத மனநிலையை உருவாக்குகிறது. கடந்த ஆண்டு லாப விகிதத்தை விடவும் நடப்பு ஆண்டு லாப விகிதத்தை அதிகரிக்க, எந்த ஒரு மனிதத் தன்மையற்ற செயலையும் செய்யலாம் என பெரு நிறுவன நிர்வாகத்தினர் முடிவு செய்கின்றனர்.

கடந்த காலங்களில் அடைந்த லாபத்தை கேள்விக்கு உட்படுத்தி ஊதியம் வழங்கும் நிர்ப்பந்தத்தை அரசுகளால் செய்ய முடியவில்லை. முன்மாதிரியாக இருக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு அகவிலைப்படி உயர்வு இருக்காது என அறிவித்துள்ளன. எதிர்வரும் மாதங்களின் நிலை குறித்து அரசுகளும், முதலாளித்துவமும் திட்டமிட்டு ஒரு பதட்ட நிலையை உருவாக்குவதாக இதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த பதட்ட நிலையில் கிடைத்தவரை போதும்; அல்லது இந்த முடக்கம் தொழிலாளர்களை விடவும், முதலாளிகளுக்கே பாதிப்பை உருவாக்கியுள்ளது என்ற கருத்தை சாதாரண மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்கும் செயலாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊதிய விகிதம் குறைந்து வருவது குறித்து வெளியிட்ட கருத்துக்கள் இந்நிலையில் முக்கியத்துவம் பெறுகின்றன. 20 மற்றும் 21 வது அகில இந்திய மாநாட்டு அறிக்கைகளில், “நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது, ஆலைகளுக்குள் கூட்டுபேர உரிமையற்ற, ஒப்பந்தமுறை மற்றும் பயிற்சித் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது ஆகியவற்றின் மூலம், தொழிலாளர்களுக்கான ஊதிய பங்கு, கடந்த 30 ஆண்டுகளில் 30 சதத்தில் இருந்து 10 சதமாக குறைந்துள்ளது” எனக் கூறியிருந்தது. இதையே சர்வதேச தொழிலாளர் அமைப்பு பல பத்தாண்டுகளாக ஊதிய விகிதம் தேக்க நிலையில் உள்ளது எனக் கூறியுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் 22 வது அகில இந்திய மாநாட்டு அறிக்கை, “1972 முதல் 2013 வரையான காலப்பகுதியில், அடிமட்டத்தில் உள்ள 10 சதம் மக்களின் உண்மை வருமானம் வீழ்ச்சியை சந்தித்தது. உச்சத்தில் உள்ள 10 சதவீதத்தினர் அனைத்து விதமான பலன்களையும் அனுபவித்தனர். இடையில் உள்ள தொழிலாளர்களின் வருமானம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட விகிதாச்சார அளவில் குறைவை சந்தித்துள்ளது. மொத்தத்தில் 90 சதவீத மக்களின் உண்மை வருமானம் கடந்த முப்பது ஆண்டுக் காலமாக தேக்க நிலையில் உள்ளது” எனக் குறிப்பிடுகின்றது. இந்த விவரங்கள் சுரண்டலின் தன்மையை வெளிப்படுத்துகின்றன.

30 ஆண்டுகளாக தேக்க நிலையில் இருக்கும் ஊதிய விகிதம், தற்போது கொரானா பாதிப்பு காலத்தில் குறைக்கப்படுவதன் மூலம், நிறுவனங்களின் லாபவிகிதம் தக்க வைக்கப்படுகிறது. சமையல் எரிவாயு மான்யம் வேண்டாம் என மக்கள் முடிவெடுக்கும் வகையில், அவர்களின் உணர்ச்சியைத் தூண்டி விட்டது போல், இப்போது, திரை உலக பிரபலங்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் தங்களின் ஊதியத்தில் ஒரு பகுதியை குறைத்து கொள்ள முன்வருவதாக அறிவிக்கின்றனர். இதை தொலைக்காட்சிகள் செய்தியாக்குவதும், அந்த செய்தியை வாசிக்கும் வாசிப்பாளர், இந்த ஊதிய வெட்டுக்கு ஆளாவதும் சாதாரண நிகழ்வுகளாகின்றன. லாப விகிதத்தின் தொடர் உயர்விற்காக, கட்டமைக்கப்படும் கருத்தாக்கம் இவை என்பதை தீவிர பிரச்சாரமாக எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.

மீண்டும் உருவாகுமா பொருளாதார நெருக்கடி?

நாம் சிக்கன நடவடிக்கையை கையாளாவிடில், நாடு மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ளும் என சிலர் வாதிடுகின்றனர். கொரானா கால உற்பத்தி முடக்கம் மீண்டு வர ஒரு வருடம் கூட ஆகலாம். எனவே. நிறுவனங்களின் நிதி சமாளிப்பு திறன், தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் சாத்தியம் என்ற வகையிலும், தொழிற்சங்கம் இல்லாத இடங்களில் நிர்வாகம் இந்த அளவு நடந்து கொள்வதே மிகத் தாராளமானது என்பதையும் திணிக்கின்றனர். பொருளாதார நெருக்கடியை அனைவரும் சமமாகப் பகிர்ந்து கொள்வதே நியாயமற்றது. ஆனால், வறியவர் தலையில் அதிகம் திணிப்பது மிகக் கொடிய ஒன்றாகும்.

2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, உலகின் பல நாடுகளை பாதித்தது. இந்தியாவிலும் தகவல் தொழில் நுட்ப துறையில் வேலைஇழப்பை கூடுதலாக உருவாக்கியது. அதையொட்டி ஊதிய உயர்வு நிறுத்திவைப்பு போன்ற நடவடிக்கைகள் கையாளப்பட்டன. அதாவது நெருக்கடி காலத்திற்கான அரசு நிவாரணத்தைப் பெற்றுக் கொண்ட தனியார் நிறுவனங்கள், மறுபுறத்தில் தங்கள் தொழிலாளர்களிடம் இருந்தும் கணிசமாக பறித்துக் கொண்டது. அதேபோல் பொருளாதார பெருமந்தம் குறித்து, பேரா. மணிக்குமார் ஆய்வு செய்து எழுதிய, “1930களில் தமிழகப் பொருளாதாரம்”, என்ற நூல் மேலும் சில விவரங்களைத் தருகிறது. அதில் தொழில் பற்றி விவாதிக்கிற போது, “துணி உற்பத்தியைப் பொறுத்த அளவில் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் 25 சதவீதம் வீழ்ச்சி கண்டது. அதேநேரம் இந்தியா 41 சதவீத உயர்வை எட்டியது. இரும்பு உற்பத்தியில் அமெரிக்காவும், இங்கிலாந்தும் முறையே 20 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இந்தியா 75 சதவீத உயர்வை அடைந்தது. பருத்தி உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளிட்ட பலவும் வளர்ச்சி பெற்றன”, எனக் கூறுகிறார்.

இதற்கு எதிர் திசையில் சிறு மற்றும் குடிசைத் தொழில்கள் அழிவை சந்தித்த விவரங்களையும் பேரா. மணிக்குமார் பட்டியலிடுகிறார். அதற்கு காரணமாக, பெருமந்தத்தில் இருந்து மீட்சி பெற அமெரிக்காவும், இங்கிலாந்தும் இதர சில நாடுகளும் இந்தியாவில் இறக்குமதி செய்து குவித்த நுகர் பொருள்கள் ஆகும். ஒட்டு மொத்தமாக தொழில்துறையில் பெருமந்தம் ஏற்பட்டு இருந்ததால், வேலை இழப்பும், கூலி குறைப்பும் அதிகரித்தது என்கிறார். ஆனால் இதற்கு எதிரான தொழில் தாவா வழக்குகள் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்பதையும் பதிவு செய்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட விவரங்கள் உற்பத்தி திறன் இன்றிலிருந்து, பின் தங்கியிருந்த காலமாகும். இன்று உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது. எனவே அந்த சூழ்நிலைகளை முழுமையாக இன்றைய காலத்திற்கு பொருத்திப் பார்க்க முடியாது. ஆனால் படிப்பினைகள் உள்ளது. அதாவது ஒருபகுதி வேலையிழப்பு உருவாக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள வேலை வாய்ப்பில் நெருக்கடியை உருவாக்கும் மூலதனத்தின் செயல்பாடு ஆகும். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களின் வளர்ச்சி உருவாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட உலகின் பல நகரங்களில் கொரானா பாதுகாப்பு நடவடிக்கைகளில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே ஒருபகுதி வேலைஇழப்பும், மற்றொரு புறம், புதிய தொழில்நுட்பம் கற்றவர்களில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகலாம்.

கொரானா வைரஸ் குறித்து, வெளிப்படையாக சீனா நடந்து கொள்ளவில்லை, எனவே அங்குள்ள தொழில் மூலதனத்தை பிறநாடுகளுக்கு இடமாறுதல் செய்ய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் சொல்கின்றன. இதை ஈர்க்க தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் சிறப்பு குழுக்களை நியமித்துள்ளன. பாஜக ஆளும் பல மாநில அரசுகள் இதையொட்டியே தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

சட்டத் திருத்தங்கள்:

இதுவரையிலும் இந்திய நாடாளுமன்றம் நியமித்த நிலைக்குழுக்கள், பல ஆண்டுகளுக்கு பின்னரே தங்கள் அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. ஆனால் தொழிலாளர்களின் வேலை நேரத்தை தீர்மானிக்கின்ற, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த சட்டத் தொகுப்பை, நாடாளுமன்றம் நிலைக்குழுவிற்கு கடந்த அக்டோபரில் ஒப்படைத்தது. இக்குழு இந்த பொது முடக்க காலத்தில் அவசர அவசரமாக இணையம் மூலம், உறுப்பினர்களின் கருத்தறிந்து, அறிக்கை சமர்பித்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களின் எதிர்ப்பை உதாசீனம் செய்து மேற்படி நிலைக்குழு அறிக்கையை அளித்துள்ளது. அதில் வேலைநேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தவும் பரிந்துரைத்துள்ளது. இதை அடியொற்றி குஜராத், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்கள் வேலைநேரம் 12 என தீர்மானித்து சட்டம் அல்லது அவசர சட்டங்களை இயற்றி வருகின்றன. உ.பி. மாநில அரசு குறைந்தபட்ச கூலிச்சட்டம், மற்றும் குழந்தை உழைப்பாளர் தடுப்பு சட்டம் தவிர மற்ற தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும் மூன்று வருடங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அவசர சட்டம் இயற்றி உள்ளது.

சுமார் 55 நாள்கள் உற்பத்தி துறை முடங்கியதை சரிகட்ட ஒவ்வொரு நாளும் 4 மணிநேரம் கூடுதலாக உற்பத்தியில் ஈடுபடுவது அவசியமா? என்ற கேள்வி தாராளமய பொருளாதார கொள்கைவாதிகளுக்கு கேட்கப்போவதில்லை. வேலைநேர அதிகரிப்பு, வேலைப்பறிப்பை அதிகரிக்கும்; உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்; சந்தையில் நுகர்வு குறையும். ஆனால் பாஜகவின் மத்திய ஆட்சியாளர்கள், இத்தகைய விளைவுகள் குறித்து வாதிட தயாரில்லை. சீனாவில் குவிந்திருக்கும் இதர நாடுகளின் மூலதனத்தை ஈர்ப்பது மட்டுமே முக்கியம் என்கிறது பாஜக. இந்திய தொழிலாளர்களின் உழைப்பை பன்னாட்டு மூலதனத்திற்காக அப்பட்டமாக கொள்ளையடிக்கும் உரிமத்தை வழங்கும் முகவராக பாஜக ஆட்சி மாறியுள்ளது.

காரல் மார்க்ஸ் குறிப்பிட்டதுபோல், உழைப்பு சக்தியின் விலையைக் குறைக்கும் நடவடிக்கையில் அரசுகள் ஈடுபடுகின்றன. இது ஏற்கனவே தேக்கத்தில் இருந்த ஊதிய விகிதத்தை மேலும் பின்னோக்கி நகர்த்த எடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். வேலைநேரம் உயரும்போது, கூலியின் அளவு உயராமல் கட்டுக்குள் வைக்கும் ஏற்பாடும் இதற்குள் உள்ளது. ஏற்கனவே இடம்பெயர் தொழிலாளர்கள் 12 மணிநேரம் வேலை செய்து குறைவான கூலி பெறுவதை, இப்போது அனைத்து தொழிலாளருக்கும் பொதுவாக்கும் பணியை செய்கின்றனர்.

கடந்த காலங்களை விட ஒரு குறிப்பிட்ட பொருளை உற்பத்திக்கான நேரம் தொழில் துறையில் குறைந்துள்ளது. அதன் விளைவே உற்பத்தி அதிகரிப்பு ஏற்படுகிறது எனவும், மற்றொரு புறம் தொழிலாளி மீது உழைப்பு சுரண்டல் அதிகரிக்கிறது எனவும் தாமஸ் பிக்கட்டி, 21ஆம் நூற்றாண்டில் மூலதனம் எனும் நூலில் குறிப்பிடுகிறார். பணக்கார நாடுகளில் வேலை நேரம் குறையவும், ஓய்விற்கான நேரம் அதிகரிக்கவும் இதுவே காரணம் எனவும் பிக்கட்டி கூறுகிறார். இந்தியாவிலும் ஆலைகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கான நேரம் குறைகிறது. ஒவ்வொரு தொழில்நுட்ப வளர்ச்சியையும் பயன் படுத்தி “சைக்கிள் டைம்” அதாவது பொருள் உற்பத்திக்கான நேரம் குறைக்கப்படுகிறது. அதன் மூலம் தொழிலாளர்களின் உபரி உழைப்பு நேரம் அதிகரிக்கிறது. எனவே வேலைநேரம் 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கு இந்தியாவில் அனுமதிப்பதை தடுத்து நிறுத்த அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

இந்தியாவில் தற்போது வேலையின்மை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அவர்களுக்கு வேலை வழங்க உற்பத்தி நேரத்தைக் குறைப்பதை முன்வைத்து திட்டமிட்ட முயற்சி வேண்டும். ஒரு நாளைக்கு 8 மணிநேரம் என்பதற்கு பதிலாக, மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தில் கூறியவாறு, வேலைநேரத்தை 6 மணிநேரமாக குறைக்க வேண்டும். அல்லது சி.ஐ.டி.யு அகில இந்திய மாநாட்டு தீர்மானம் கூறியதுபோல், ஒரு நாளைக்கு 7 மணிநேரம், வாரம் ஐந்து நாட்கள் பணி என்பதாக திருத்த வேண்டும். அதன் மூலம் மூலதனக் குவிப்பை கட்டுபடுத்துவதுடன், வேலை வாய்ப்பு அதிகரிப்பு உள்ளிட்ட முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒட்டு மொத்தமாக இன்றைய கொரானா பொது முடக்க காலத்தில், முதலாளித்துவமும், பாஜக ஆட்சியாளர்களும் தொழிலாளர்களை கொள்ளையடிக்க எடுக்கும் முயற்சியை தடுக்கும் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியுள்ளது. மாற்று கோரிக்கைகளான, வேலைநேர குறைப்பு போன்றவற்றை முன் வைத்து, அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் இந்தக் கோரிக்கைகளுக்காக ஒருங்கிணைப்பதே இன்றைய தேவையாகும்.

கீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி

குரல்: ஆனந்த் ராஜ்
 • உ.வாசுகி

1968 டிசம்பர் 25, உரிமை கேட்ட விவசாயி, விவசாய தொழிலாளிகளின் மீது, ஏற்றிய செங்கொடியை இறக்க மறுத்தவர்கள் மீது கீழவெண்மணியில் ஒரு பக்கம் கிசான் போலீசின் குண்டுகள் பாய்ந்தன; மறுபக்கம் ஆண்டைகளின் குண்டர்களால் 44 உயிர்கள் கொளுத்தப்பட்டன. ரவுடிகளும், காவல்துறையும், அரசும், சட்டமும் மிராசுகளின் கண் சாடையில் கோரத்தாண்டவம் ஆடி முடித்தன.

வாழ்வியலின் அனைத்து அம்சங்களும் கட்டுப்பாட்டுக்குள்:

கீழத்தஞ்சையில் அனைத்து அதிகாரங்களையும், பல்லாயிரக்கணக்கான வேலி நிலங்களையும், செல்வங்களையும், வளங்களையும் வைத்திருந்த பண்ணைகளின் ஆதிக்கத்தின் கீழ் அடிமைகளாய் இருந்த உழைப்பாளிகளின் கதி படுமோசமாக இருந்தது. நாள் முழுவதும் வேலை செய்தால் கூலி வெறும் அரை மரக்கால் நெல். மொத்தத்தில் குடும்பத்தின் மாத வருமானம் ரூ.160-170 மட்டுமே.

கூலியை மட்டும் பண்ணைகள் நிர்ணயிக்கவில்லை; அவர்களின் ஒட்டு மொத்த வாழ்வியலையே நிர்ணயித்தனர். என்ன உண்ண வேண்டும், என்ன உடுக்க வேண்டும், எப்படி உடுக்க வேண்டும், எங்கு வசிக்க வேண்டும், பண்ணையின் எதிரில் எங்கு நிற்க வேண்டும், எப்படி நிற்க வேண்டும் என வாழ்வின் அனைத்து அம்சங்களும் கட்டுப்படுத்தப்பட்டன. மண் கலயங்களுக்கு மட்டுமே அனுமதி. பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்வது பண்ணைகளின் உரிமை. கொடுமைகளிலிருந்து தப்பிக்க முடியாது. தப்பிக்க நினைத்தாலே சவுக்கடியும், சாணிப்பாலும் தான். ஆபாச வசவுகளும், அடிமை வாழ்வும் நிதம் நிதம் விதிக்கப்பட்டவையாக இருந்தன. மொத்தத்தில் குத்தகை விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் பண்ணைகளின் கையில் உழைப்பு சுரண்டலுக்கு மட்டும் ஆளாகவில்லை. சமூக ஒடுக்குமுறையும், பண்பாட்டு ஒடுக்குமுறையும் சேர்ந்து நடந்தன. பொருளாதார சுரண்டலும் சமூக ஒடுக்குமுறை அல்லது கட்டுப்பாடும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. பண்ணையார்களுக்கு இருந்த நிலத்தின் மீதான உரிமை, அதன் உற்பத்தி மீதான கட்டுப்பாடு மற்றும் அதிகாரம் கூலிகளின் வாழ்க்கை மீது ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்தையும் அளித்தது. இதற்கெதிரான போராட்ட அலையின் உச்சகட்டம் தான் கீழவெண்மணியின் படுகொலைகள்.

இது தான் அரசு:

வெண்மணி கொடுமை நடந்தது முடியரசில் இல்லை; குடியரசில் தான். சர்வாதிகாரத்தில் இல்லை; ஜனநாயகத்தில் தான். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும், காவல்துறையும், சட்டமும், நீதித்துறையும் இருந்தும் இக்கொடுமைகள் நடந்து கொண்டிருந்தன. ஏனெனில் இவை அனைத்தையும் உள்ளடக்கிய அரசு, அனைவருக்கும் மேலானது; நடுநிலையானது என்பது கற்பிதமே. மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் அனைவருமே ‘அரசு’ குறித்த கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். ”மன்னராட்சியில் மட்டுமல்ல; ஜனநாயக அமைப்பிலும் கூட அரசு, ஒரு வர்க்கத்தை மற்றொரு வர்க்கம் ஒடுக்குவதற்கான கருவிதான்” என்கிறார் எங்கல்ஸ். “முதலாளித்துவ அரசு, தொழிலாளி வர்க்கத்தை நசுக்குவதற்கான கருவி” என்கிறார் மார்க்ஸ். அரசும் புரட்சியும் என்ற நூலில், லெனின், “சமரசம் காண முடியாத வர்க்க முரண்பாடுகளின் பிரதிபலிப்பும், விளைபொருளும் தான் அரசு” என்கிறார்.

வெண்மணி கொடுமைகளின் போதும், அதற்கு முன்னும் பின்னும் அரசு எந்திரம் இதைத் தான் ஒளிவு மறைவு இன்றி பட்டவர்த்தனமாக செய்தது. ஊடகங்களும் விதிவிலக்காக இல்லை. ’சுதந்திர’ ஊடகங்களும் வர்க்க பிடிப்புக்குள் தான். வெண்மணியில் அதிகார வர்க்கத்தின் கோர நர்த்தனத்தை, பிரதான பத்திரிகைகள், ‘விவசாயிகளுக்கிடையே நடந்த கலவரமாக’வே செய்தியாக்கின. இவர்கள் கூலி உயர்வு கேட்டதால், மிராசுதார்கள், தங்களின் சட்ட உரிமையின் படி, வெளியேயிருந்து ஆட்களைக் கொண்டு வந்ததாகவும், அவர்களுக்கும் உள்ளூர் கூலியாட்களுக்கும் இடையே நடந்த கலவரத்தின் விளைவு தான் இது என்பதாகவும் எழுதப்பட்டது.

அரசியல் ரீதியாகப் பண்ணையார்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சாதகமாகவும், பிறகு கதர் சட்டையணிந்த காங்கிரஸ்காரர்களாகவும், நீதிக்கட்சியின் ஆதரவாளர்களாகவும், திமுக ஆளும் கட்சியானதற்குப் பிறகு அதனுடன் சமரசம் செய்து கொண்டவர்களாகவும் இருந்தனர். நிலக்குவியலும், சாதிய கட்டுமானமும் ஆட்சிகள் மாறினாலும் இறுக்கமாகவே தொடர்ந்தன.

பண்பாட்டுரீதியானஒடுக்குமுறை:

1947-ல் தோழர் சீனிவாசராவ் எழுதிய ‘தஞ்சையில் நடப்பதென்ன?’ என்கிற நூல் ஒடுக்குமுறையின் முழு பரிமாணங்களையும் விளக்குகிறது. பண்ணையாட்கள் பெரும்பாலும் தலித் வகுப்பை சேர்ந்தவர்கள் என்பது சாதிய பரிமாணத்தையும் முன்னிறுத்துகிறது. அவர்கள் கொத்தடிமைகள் போலவே நடத்தப்பட்டார்கள். அடிமையின் அனைத்து நடவடிக்கைகளும் அடிமை உரிமையாளர் போடும் கோடுகளுக்குள் தானே? இந்த இடத்தில் மனுவின் அநீதி கோட்பாடுகளை சற்று நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். சூத்திரர்களுக்குக் கல்வி கூடாது; சொத்து கூடாது; ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது; அவர்ணர்கள், அதாவது வருணங்களுக்கு வெளியே இருப்பவர்கள், உடைந்த மண் கலங்களையும், பிணங்களின் வஸ்திரங்களையுமே பயன்படுத்த வேண்டும், மற்றவர்கள் உதறி விடும் சோற்று பருக்கைகளே இவர்கள் உணவாகும்…. போன்ற விதிகளின் சாராம்சத்தைக் கீழத்தஞ்சையில் உணர முடிந்தது.

அடிமை சமூகத்தில் அடிமைகள் மீதான உளவியல் மற்றும் பண்பாட்டு ரீதியான கட்டுப்பாடு சட்டபூர்வமானது. அதற்கான விதிமுறைகள் நிலவின. உதாரணமாக 1852ல் லூசியானா அடிமை கோட்பாடு (slave code) கீழ்க்கண்ட விதிகளை வகுத்தது:

 1. அடிமையின் உரிமையாளர் மற்றும் அவர் குடும்பத்துக்கு முழுமையாக அடிபணிய வேண்டும். அவர்கள் சொல்லும் வேலைகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும்.
 2. அடிமைக்கு எதுவுமே சொந்தமாக இருக்க முடியாது.
 3. உரிமையாளரின் அனுமதியின்றி அவரது தோட்டத்திலிருந்து/பண்ணையிலிருந்து வெளியேற முடியாது.
 4. அடிமைக்கு யாராவது கல்வி கொடுத்தால், கற்றுக் கொடுப்பவருக்கு தண்டனை உண்டு.
 5. ஒரு சின்ன மீறல் இருந்தாலும் கடும் சவுக்கடி கிடைக்கும்.

கீழத்தஞ்சை கொடுமைகளை இதனுடன் பொருத்திப் பார்த்தால் மிகச் சரியாகப் பொருந்துகிறது. அமெரிக்காவின் லூசியானாவில் 160 ஆண்டுகளுக்கு முன் அமலில் இருந்த மனித உரிமை மீறல்களைப் போன்ற நிலை தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் வரை கீழத்தஞ்சையில் நிலவியது.

நவீன மனு நீதி:

பண்ணையாட்களின் குழந்தைகளுக்குக் கல்வி அறவே அனுமதிக்கப்படாத ஒன்று. ஏனெனில் அவர்கள் பண்ணையார்களுக்கு சேவை செய்ய பிறந்தவர்கள். 6 வயதான சிறுவர்கள் மாடு மேய்க்க வேண்டும்; 10 வயதானால் மாட்டுத் தொழுவத்தில் சாணி அள்ள வேண்டும்; 15 வயதில் மாட்டு வண்டி ஓட்டும் வேலை; 18 வயதில் அப்பா அம்மாவைப் போல் கொத்தடிமை. சிறுமிகள் ஆடு மாடுகளுக்கு இழை தழை பறிக்க வேண்டும். சமைக்க சாப்பிட மண் சட்டி தான். உடையை எடுத்துக் கொண்டால் ஆண்கள் ஒரு துண்டு கட்டிக் கொள்ளலாம் என்றாலும் பொதுவாகக் கோவணம் உடுத்தும் நிலை தான். பெண்களின் புடவை முட்டியோடு தான் நிற்க வேண்டும். யாரும் செருப்பு போடக் கூடாது. பொதுக்கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடியாது. இவர்கள் வசிக்கும் பகுதிகளில் கிணறும் இருக்காது. பண்ணை வீட்டின் கொல்லைப்புறம் நின்று இரு கை ஏந்தி மீந்த சோற்றை வாங்கிக்கொள்ள வேண்டும். பண்ணையாருக்குத் தொலைவில் நின்று தான் பேச வேண்டும். அவர் அருகில் வந்தால் மண்டியிட்டுக் கை கூப்பி இருக்க வேண்டும். காலை 4 மணியிலிருந்து மாலை சூரியன் மறையும் வரை வேலை செய்ய வேண்டும். விடுமுறை என்பதெல்லாம் அகராதியில் இல்லாத சொல். பழைய சோறும், சுடு கஞ்சியும் தான் உணவாகக் கிடைக்கும். குடும்பம் முழுமைக்கும் சேர்த்து சொற்ப கூலியே கிடைக்கும்.

திருமணம் செய்து கொள்ளவும் மிராசுதாரின் அனுமதி வேண்டும், இறந்தவர்களைப் புதைப்பதற்கும் அனுமதி வேண்டும். குழந்தை பிறந்தவுடன் தகவல் கட்டாயம் சொல்லியாக வேண்டும். பண்ணையாட்களின் வீட்டைச் சார்ந்த பெண்களின் உடலின் மீதும் மிராசுதாருக்கு அதிகாரம் உண்டு. இவற்றில் எதை மறுத்தாலும் சவுக்கடியும், சாணிப்பாலும் தான். விடிய விடிய மரத்தில் கட்டி வைத்து அடிப்பதற்கு தண்டம் என்று பெயர். ஊசி முனையளவு கூட நிலம் சொந்தமாக இருக்கக் கூடாது. மிராசுதாரின் இடத்தில் சிறு குடிசை போட்டு வாழ வேண்டும்.

கொடுமை பொறுக்க முடியாமல் மலேசியா, சிங்கப்பூருக்கு வேலை தேடிப் போகலாம் என்று எண்ணுபவர்களை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து பிடித்து, உதைத்து இழுத்துவர ஆட்கள் உண்டு. ஒரு பண்ணையிலிருந்து இன்னொரு பண்ணைக்கு வேலை செய்ய மாறிப் போகக் கூடாது. அதாவது கூலி உழைப்பை விருப்பம் போல் விற்பதற்குக் கூட உரிமை கிடையாது. பண்ணைகளின் அதிகாரக் கட்டமைப்பில் கூலி தொழிலாளர்கள் அடிமைகளாகவே இருந்தனர். எனவே அடிமை கலாச்சாரமே எதிர்பார்க்கப்பட்டது; போதிக்கப்பட்டது. அடிமைகளின் உயிரும் உடலும் ஆண்டைகளுக்கு சொந்தம். பணிய மறுத்தவர்கள் கொலை செய்யப்பட்டனர். தமிழகத்தின் வேறு பல இடங்களில் இருந்த நிலையை விட கீழத்தஞ்சையில் கடுமையாக இருந்தது. நவீன இந்தியாவில் வெறும் 50 ஆண்டுகளுக்கு முன்வரை கீழத்தஞ்சையில் இது தான் நிலை.

மார்க்சீய சிந்தனையாளர் கிராம்சி, ஆளும் வர்க்கம், உழைப்பாளி வர்க்கங்களை ஒடுக்குமுறையால் மட்டும் கட்டுப்படுத்துவதில்லை. ஒரு ராணுவவீரர் துப்பாக்கி ஏந்தி நின்றால் அது வெளிப்படையான கட்டுப்பாடு. ஆனால் கலாச்சாரம் நமக்குள்ளேயே குடியிருக்கிறது. அதனைக் கட்டுப்படுத்துவது கண்ணுக்குத் தெரியாது. இது தான் அதன் பலம் என்கிறார். ஆளும் வர்க்கம் சித்தாந்த ரீதியாக, மற்ற வர்க்கங்கள் அதற்குக் கீழானவர்கள் என்பதை ஏற்க வைக்கிறது என்று விளக்குகிறார். பண்ணை அடிமைகளாக இருந்த விவசாய தொழிலாளிகள், தாம் அடிமைப்பட்டுக் கிடப்பதையும், தம் வாழ்வின் சகல அம்சங்களை ஆண்டைகள் கட்டுப்படுத்தி வைத்திருப்பதையும் இயற்கையானது; தங்களுக்கு விதிக்கப்பட்டது என்று ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டனர். ஒரு புறம் கடும் அடக்குமுறை இருந்தாலும் மறு புறம் மிராசுதார்கள் பொருளாதாரத்திலும், சாதியிலும் மேலானவர்கள்; நாம் அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்கள் என்ற கருத்தியல் வலுவாக நிலைகொண்டிருந்தது. இவ்வாறான சமூகக் கட்டுப்பாட்டின் மூலம் உழைப்பு சுரண்டல் தங்கு தடையின்றி நடந்தது. ஆளும் வர்க்க சிந்தனைகள் பொது புத்தி என்ற பெயரில் ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனைகளாவது சமூகக் கட்டுப்பாட்டின் ஓர் அம்சமே.

பொருளாதார கோஷங்கள் மட்டுமல்ல:

கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவின் படி தோழர் சீனிவாசராவ் கீழத்தஞ்சை வந்தார். கூலி உயர்வு மட்டுமல்ல; உழைப்பாளிகளை மனிதர்களாக நடத்த வேண்டும் என்பதும் செங்கொடி இயக்கத்தின் அழுத்தமான கோரிக்கையாக இருந்தது. ஏண்டி என்றால் ஏண்டா என்று கேள்; அடித்தால் திருப்பி அடி; பண்ணையார்களின் கூலிப்படை வந்தால் அவர்களை நீங்கள் மரத்தில் கட்டி வையுங்கள் என்ற பி.எஸ்.ஆரின் ஆவேசமான வார்த்தைகள் அடிமைப்பட்டுக் கிடந்தவர்களுக்கு உத்வேகத்தை அளித்தன. துண்டை தோளில் போடு, வேட்டி கட்டு என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் முழக்கங்களும் கிசான் சபையிலிருந்து வந்தன. ஆண்டை அடிமை என்பது இல்லை; அவர்களும் மனிதர்கள் தான்; நாமும் மனிதர்கள் தான் என்ற சமத்துவ சிந்தனைகள் போதிக்கப்பட்டன. தொடர்ந்து நடந்த போராட்டங்கள், எண்ணற்ற தியாகங்களின் மூலமே பண்ணையடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைத்தது. வெண்மணி தியாகம் இதற்கு சிகரம் வைத்தாற் போல் அமைந்தது.

வேலை பார்க்க வெவ்வேறு இடங்களுக்குப் போகலாம் என்பது கூட போராட்டங்களுக்குப் பிறகே கிடைத்த உரிமையாக இருந்தது. வெண்மணிக்குப் பிறகு அமைக்கப்பட்ட கணபதியா பிள்ளை கமிஷன் குறைந்த பட்ச கூலி, வீட்டு மனை கொடுப்பது உட்பட சில மாற்றங்களைப் பரிந்துரைத்தது. இந்த மாற்றங்களுக்குப் பின்பே, கிசான் சபா கொடுத்த துணிச்சலும் சேர்ந்து துண்டு தோளுக்குப் போனது; வேட்டியும், புடவையும் கணுக்காலைத் தொட்டன; பள்ளிக்கூடம் போக முடிந்தது; சொந்த வீட்டில் குடியிருக்க முடிந்தது; சுடு சோறு சாப்பிட முடிந்தது; செருப்பு அணிய முடிந்தது. மொத்தத்தில் திணிக்கப்பட்ட பண்பாட்டு ஒடுக்குமுறையைத் தளர்த்த முடிந்தது. அதிகார மேலாதிக்கத்தில் விரிசல் ஏற்படுத்தி பொருளாதார ரீதியான முன்னேற்றம் சற்றே கிடைத்தால், அது வாழ்வியலின் இதர அம்சங்களிலும் மாற்றம் காண்பதற்கான களச்சூழலை ஏற்படுத்தும் என்பது கீழத்தஞ்சையில் நிரூபணமாயிற்று. அதில் செங்கொடி இயக்கத்தின் பங்களிப்பு உன்னதமானது.

1930களில் கீழத்தஞ்சையில் சுரண்டலுக்கும், சமூக ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிக் கொண்டிருந்த மக்களைத் திரட்ட களம் இறங்கிய மணலூர் மணியம்மா, பிராமணிய ஆணாதிக்கக் கருத்தியலுக்கு சவால் விடும் வகையில் முடி வெட்டி, ஆணின் உடையை அணிந்து, சைக்கிள் ஓட்டி மக்களை அணி திரட்டினார். பெண் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும்; அதுவும் உயர்சாதி பெண் இப்படி இருக்க வேண்டும் என்ற பண்பாட்டு மேலாதிக்கத்தைத் தூக்கி எறிந்தார்.

ரஷ்ய புரட்சியின் அனுபவம்:

அடித்தளம் – மேல் கட்டுமானம் என்ற மார்க்சீய தத்துவத்தின் முக்கிய கோட்பாட்டை கவனித்தோமானால், உற்பத்தி சக்திகளும், உற்பத்தி உறவுகளும் சமூகத்தின் அடித்தளமாகவும், பண்பாடு, சித்தாந்தம், கல்வி, மதம், ஊடகம், குடும்பம், அரசு கட்டமைப்பு, அரசு எந்திரங்கள் போன்றவை மேல் கட்டுமானமாகவும் இருக்கின்றன. மேல் கட்டுமானம் என்பது அடித்தளத்தை நியாயப்படுத்துவதாக, அன்றைய உற்பத்தி உறவும், சொத்துறவும் இயல்பானது என்பதாக அமையும். அடித்தளத்தைக் கட்டுப்படுத்தும் ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிப்பதாகவே மேல் கட்டுமானம் இருக்கும். அடித்தளம் மாறும் போது, அந்த மாற்றமானது மேல் கட்டுமானத்தில் அதற்கேற்றாற் போல் மாற்றம் வருவதற்கு வழி வகுக்கும். இப்படி கூறுவதை, அடித்தளத்தின் மாற்றம் மட்டுமே மேல் கட்டுமானத்தின் மாற்றத்தை முடிவு செய்யும்; இரண்டுக்கும் இடையிலான உறவு ஒரு வழிப்பாதை என்ற முறையில் புரிந்து கொள்ளக் கூடாது. இத்தகைய புரிதல் எந்திரகதியானது. அடித்தளமானது மேல் கட்டுமானத்தின் மீது செலுத்தும் செல்வாக்கு பிரதானமானது. அதே சமயம், மேல் கட்டுமானம், அதில் ஏற்படும் மாற்றம் அடித்தளத்தின் மீதும் செல்வாக்கு செலுத்தும். எனவே தான் பொருளாதார துறையில் மட்டுமல்லாமல் கருத்தியல்/பண்பாட்டு/சித்தாந்த தளங்களில் கம்யூனிஸ்டுகளின் பணி கூர்மையாக வேண்டும்.

உதாரணமாக, ரஷ்ய புரட்சிக்குப் பின்னர், பெண்களின் நிலையும், அவர்கள் குறித்த பிற்போக்கு பண்பாட்டு விழுமியங்களும் தானியங்கியாக மாறவில்லை. சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் பொருளாதார அடித்தளம் மாற்றப்பட்ட பின்னும், மேல் கட்டுமானமாக இருந்த ஆணாதிக்கக் கருத்தியல் உள்ளிட்ட பண்பாட்டு விழுமியங்கள் அவ்வளவு சுலபமாக மாறி விடவில்லை. தோழர் லெனின் அவர்கள் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமிட்ட பிரச்சாரம், பெண்களைப் பொதுவெளிக்கு, அரசியலுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சி, பாலின சமத்துவ சட்டங்கள், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான போராட்டம் போன்றவற்றின் மூலமாகவே மாற்றம் வந்தது. புரட்சிக்குப் பின் சமூக நலத்துறையின் மக்கள் கமிசாராக நியமிக்கப்பட்ட அலெக்சாண்ட்ரா கொலந்தாய் மாற்றங்கள் கொண்டு வருவதில் முக்கியப் பங்கு வகித்தார். பெண்களைப் பொதுவெளிக்குக் கொண்டு வர பிரச்சாரம் செய்ய ஒரு தனி பிரிவே ஏற்படுத்தப் பட்டது. கொலந்தாய், இனேசா அர்மான்ந், குரூப்ஸ்கயா ஆகியோர் இதற்குப் பொறுப்பேற்றனர். முதலாளித்துவத்துக்கு முந்தைய கட்ட சமூகத்தின் மிச்ச சொச்சங்களைத் துடைத்தெறிந்து, சோஷலிச மாண்புகளை எடுத்துச்செல்லும் புரட்சிகர மாற்றத்தின் முகவர்களாகப் பெண்கள் பார்க்கப்பட்டனர். குறிப்பாக, மத்திய ஆசிய பகுதியில் ஆணாதிக்க ஒடுக்குமுறையால் அதிகம் பாதிக்கப்பட்ட முஸ்லீம் பெண்களுக்குக் கல்வி கொடுத்து, சமத்துவ பண்பாட்டை உள்ளார்ந்த உணர்வாக மாற்ற முயற்சித்த போது, மத்திய ஆசிய பகுதியில் பல எதிர்ப்புகள் எழுந்தன. அவற்றையெல்லாம் தாண்டித் தான் பண்பாட்டுத் துறையில் மாற்றங்கள் வந்தன. மார்க்சீய சிந்தனையாளர் கிராம்சி, ஒரு புதிய சமூகத்தை உருவாக்கிப் பராமரிக்க வேண்டும் என்றால் புதிய உணர்வுநிலையையும் உருவாக்க வேண்டும் என்கிறார்.

இந்தப் புரிதலுடன் தான் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தில், மக்கள் ஜனநாயக அரசின் ஒரு முக்கிய கடமையாக “ஜனநாயக, மதச்சார்பற்ற கண்ணோட்டம் கொண்ட ஒரு புதிய முற்போக்கு மக்கள் கலாச்சாரத்தை உருவாக்கும் வகையில் மக்களின் ஆற்றலும், திறனும் வளர்த்தெடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெண்மணி படுகொலைகள் தமிழ் இலக்கிய துறையில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தின. வெண்மணி குறித்தும், அதை ஒட்டியும் ஏராளமான கவிதைகள், படைப்புகள் உருவாக்கப்பட்டன. திரைப்படங்கள் வெளி வந்தன. புதிய படைப்பாளிகள் உருவாயினர். மொத்தத்தில் தலித் மக்களின் அரசியல் சமூக பண்பாட்டு உரிமைகளும், கூலி நிலைமையும் தமிழகத்தின் இதர மாவட்டங்களை விட ஒப்பீட்டளவில் தஞ்சை, நாகை, திருவாரூரில் மேம்பட்டதாக இருப்பது தற்செயலானதல்ல. அது, கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான போராட்டங்களின் விளை பொருளே. பொருளாதார சுரண்டலை எதிர்த்து மட்டுமல்ல; பண்பாட்டு ஒடுக்குமுறையை எதிர்த்தும் நடந்த போராட்டங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

கீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் !

 • இரா. சிந்தன்

கீழ் வெண்மணியில் நிகழ்த்தப்பட்டபடுகொலைகள், தனித்த சம்பவம் அல்ல. அது கீழத் தஞ்சையில் (இப்போதைய நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில்) கூர்மையடைந்திருந்த வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடே.

பிரிட்டிஷ் காலனியாதிக்க காலமாக இருந்தாலும், இந்திய விடுதலைக்கு பிறகான சூழலிலும், மாநிலத்தில் ஆட்சி மாறிய பின்னணியிலும், தொடரும் வர்க்கப் போராட்டத்தின் உக்கிரத்தை வெளிக்காட்டும் நிகழ்வுகளில் ஒன்றே கீழ்வெண்மணி தியாகம் ஆகும்.

பிரிட்டிஷ் ஆதிக்க காலம் :

அப்போதைய தஞ்சாவூர் இந்திய அரிசி உற்பத்தியில் சுமார் 30 சதவீதத்தை கொடுத்து வந்தது. வளமான இப்பகுதியில் விவசாயிகளும் தொழிலாளர்களும் பல்வேறு வகைகளில் சுரண்டப்பட்டார்கள். அரசனுக்கும்,கோயிலுக்கும் விளைச்சலில் பங்கு, இலவச உழைப்பு, காவல் வரி, தொழில் வரி (இறை) ஆகியவை நிலவின. வட்டி திரும்ப செலுத்த முடியாதவர்கள், உரிய வரி செலுத்த முடியாதவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. மேலும்,பிரம்மதேயம் உள்ளிட்டு கட்டாயமாக நிலம் தானம் பெறப்பட்டது. இவையெல்லாம் நிலவுடமை ஏகபோகங்களை வளர்த்தன.

1799 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் ஆளுகையில் வந்தது தஞ்சை. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு லாபவெறியே அடிப்படையாக இருந்தது. அவர்கள் பழைய நில உறவுகளின் ஒடுக்குமுறைகளை பயன்படுத்திக் கொண்டார்கள். மேலும் துல்லியமாக்கினார்கள்.

நிலத்தில் நேரடியாக உழைப்பவர்களுக்கும், காலனி அரசுக்கும் இடையில் ஜமீன்தார்கள், பண்ணையார்கள், மடங்கள் என்ற  இடைத்தட்டினை காலனி அரசு பயன்படுத்திக்கொண்டது. காலனி அரசு இந்த இடைத்தட்டு பகுதியிடம் வரி வசூல் செய்துகொள்ளும். நேரடியாக நிலத்தில் உழைப்பவர்களிடம்,  இடைத்தட்டு பகுதியினர் வரி வசூல் செய்து கொள்வார்கள் என்ற ஏற்பாடு உருவாக்கப்பட்டது. “விவசாயிகளிடம் அவர்கள் எப்படியும் வசூலிக்கலாம், வேலை வாங்கலாம். அதற்கு அரசு நிர்வாக அமைப்பு பூரண உதவி செய்யும்.” என விவரிக்கிறார் கோ.வீரய்யன்.

(ஆதாரம்: விவசாய இயக்கத்தின் வீர வரலாறு)

‘(தனது) மூலதனத்திற்கு சராசரி லாபத்தைக் கூட (விவசாயி) அடைய முடியாத நிலையில் நிலப்பிரபு (நில)வாரத்தை (அதாவது குத்தகைத் தொகையை) நிர்ணயிக்கிறார். அதன் மூலம் கொள்ளையடிக்கிறார்” என இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தனது ‘மார்க்சியமும் நிலவாரமும் என்ற கட்டுரையில் குறிப்பிடுவதைப் போலவே, தஞ்சையிலும் சுரண்டல் நிலவியது. பிரிட்டிஷ் முதலாளிகள், பழைய நிலைமைகளை மாற்றினார்கள், அதே சமயம் தங்கள் சுரண்டலுக்கு ஏதுவாக, முதலாளித்துவத்திற்கு முந்தைய சுரண்டல் அமைப்பையும் தக்க வைத்துக் கொண்டார்கள்.

அதிகமான வரி வசூல் மட்டுமல்ல; இலவச உழைப்பு, நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாதவர்களுக்கு கொடூரமான தண்டனைகளும் தஞ்சை முழுவதும் நிலவி வந்தன. ரயத்துவாரி நிலப்பிரபுக்களுக்கு சொந்தமாக பண்ணைகள் இருந்தன. அங்கேயே குடி வைக்கப்பட்டிருந்த பண்ணைகளில் அடிமைகள் ஒட்டச் சுரண்டப்பட்டார்கள். மிக மோசமான தீண்டாமை வடிவங்கள் நிலவின. சாணியைக் கரைத்து வாயில் ஊற்றுவது (சாணிப்பால்), சவுக்கடி வழங்குவது ஆகிய மனிதத் தன்மையற்ற தண்டனைகளும், பொதுக்கிணறுகள், ஆற்று நீர், சாலை, கோயில் வழிபாடு மற்றும் கல்வி மறுப்பு நிலவியது. இக்கொடுமைகளில் இருந்து தப்பித்து ஓட முயன்றவர்கள் பிடித்து வரப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

லாபவெறியும்,எதிர்ப்பு இயக்கமும்:

உலக நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தஞ்சை விவசாயிகளுடைய வாழ்க்கையிலும், விவசாயத் தொழிலாளர்களுடைய வாழ்க்கையிலும் நேரடி தாக்கங்களை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரின் காலத்தில், தஞ்சையிலும் சுரண்டலும், அடக்குமுறைகளும் கடுமையானது. போர்க்காலத்தில், தானியங்களை அதிக விலையில் விற்று கொள்ளை லாபம் பார்க்கும் வெறியுடன் உற்பத்தியை அள்ளிச் சென்றார்கள் காலனியாதிக்கவாதிகள். மக்களின் உணவுக்குக் கூட கையிருப்பு இல்லாத விதத்தில், தஞ்சைப்பகுதி நிலப்பிரபுக்களும், மடங்களும் விளைபொருட்களை எடுத்துக் கொண்டார்கள். உணவுப் பஞ்சத்தினாலும், கொள்ளை நோய்களாலும் மக்கள் செத்து மடிந்தார்கள்.

5,000 – 6,000 ஏக்கர் நிலச் சொந்தக்காரர்களான குன்னியூர் சாம்பசிவ அய்யர், வலிவலம் தேசிகர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் போன்ற நிலப்பிரபுக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். வடபாதி மங்கலம், நெடும்பலம் போன்ற பகுதிகளில் இருந்த நிலப்பிரபுக்கள் திராவிட இயக்க ஆதரவாளர்களாக இருந்தனர். (`தென்பரை முதல் வெண்மணி வரை’ மு.அப்பணசாமி) 1937 டிசம்பர் மாதத்தில் நீடாமங்கலத்தில் நடந்த தென்தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கட்சி மாநாட்டில் சமபந்தி போஜனம் நடைபெற்றது. இதில் சாப்பிட்ட தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களை நிலவுடைமையாளர்கள் கட்டி வைத்து அடித்தார்கள். அவர்களே காங்கிரஸ் கட்சியில் கோலோச்சினார்கள்.

அடக்குமுறைகளை மக்கள் அமைதியாக ஏற்கவில்லை. சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு இயக்கங்கள் உருவாகின. 1936-39ஆண்டுகளில் மணலூர் மணியம்மை என்ற கைம்பெண், வைதீக ஆச்சாரங்களையும், பண்ணையார்களையும், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தையும் எதிர்த்து மக்களைத் திரட்டினார். விவசாயிகள் சங்கம் சேர்வதை ஊக்குவித்தார். முதலில் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்ட அவர், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து இயங்கினார். (1954 ஆம் ஆண்டில் அவர் கொல்லப்பட்டார்.).

ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் திரட்ட கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது. தஞ்சையில் நிலவி வந்த தீவிர ஒடுக்குமுறைகளை அறிந்த கட்சி, பி. சீனிவாச ராவை இப்பகுதிக்கு அனுப்பி வைத்தது. மதராஸ் மாகாணத்தின் தென் கர்நாடகப் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசராவ். தமிழ் பேசுவார்; ஆனால் எழுதவோ படிக்கவோ தெரியாது. தஞ்சைக்கு வந்த அவரது வழிகாட்டுதலில் சாதி ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டலுக்கும் எதிராக உழைக்கும் மக்களை அணிதிரட்டினார்கள் கம்யூனிஸ்டுகள்.

‘ஆரம்பத்தில் சாதி இந்துக்களான வார தாரர்களும் குத்தகைதாரர்களும் சிறு விவசாயிகளும் விவசாயிகள் சங்கத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தனர். விவசாயிகள் சங்கத்தை ஆதிதிராவிடர்களின் சாதி சங்கம் என்று நினைத்தார்கள். சாதி வெறுப்பு அதிகமாய் இருந்தபடியால் விவசாயிகள் சங்கத்தின் கொள்கைகளையும், திட்டத்தையும் பற்றி அறிந்துகொள்ள அவர்களுக்கு காலதாமதமாயிற்று’ என விவரிக்கிறார் சீனிவாசராவ். தென்பரை கிராமத்தில் 1943 ஆம் ஆண்டு விவசாயிகள் சங்கத்தின் (கிசான் சபை) முதல் கிளை உருவாக்கப்பட்டது.

சாதி இந்துக்களின் வெறுப்பு மனநிலையை பயன்படுத்தி, உழைக்கும் மக்களிடையே பிரிவினையை உருவாக்க பண்ணையார்கள் முயற்சித்தனர். விவசாயிகள் சங்கம் இந்த சூழ்ச்சியை புரிந்துகொண்டது. சாதி ஆதிக்கத்திற்கு எதிரான களத்தில் நின்று, உழைக்கும் மக்கள் ஒற்றுமையை முன்னெடுத்தது. தோளில் துண்டு அணியக் கூடாது, வேட்டி அணியக் கூடாது, செருப்பு அணியக் கூடாது, தேநீர் வழங்குவதில்  பாகுபாடு (இரட்டைக் குவளை, சந்து வழியாக வழங்குவது), தண்ணீர் வழங்குவதில் பாகுபாடு என அங்கு நிலவிய சாதிக்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களை கம்யூனிஸ்டுகள் தலைமையேற்று நடத்தினர். அதே சமயம், பண்ணையாட்களையும், விவசாயிகளையும் ஒட்டச் சுரண்டிக் கொண்டிருந்த பண்ணையார்கள், மடாதிபதிகள், மிராசுதார்களுக்கு எதிரான போராட்டங்களும் வலுப்பட்டன.

தென்பரை கிராமத்தில் உத்திராபதி மடத்திற்கு சொந்தமான நிலத்தில் உழைத்து வந்த குத்தகை விவசாயிகள், குத்தகையாக 82 சதவீத விளைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்த நிலைமையை மாற்றி 33 சதவீதம்தான் தர முடியும் என சங்கம் முடிவு செய்தது .உடனே சங்க செயலாளராக இருந்த வீராசாமியை, 3 ஏக்கர் குத்தகை நிலத்திலிருந்து விரட்டியது உத்திராபதி மடம். சங்கத்தை அனுமதிப்பதை விட பயிர்கள் வயலிலேயே கருகட்டும் என முடிவு செய்தனர் மடத்தினர். விளைந்த நெல்லை அறுவடை செய்ய தடை போட்டார்கள். ஆனால் குத்தகை விவசாயிகள் உத்தரவை மீறினார்கள். போராட்டம் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்தது.

பெரும்பகுதி தாழ்த்தப்பட்டவர்களாக இருந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை மறுத்த வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களை கம்யூனிஸ்டுகள் வழிநடத்தினர். போராட்டத்தை ஒடுக்க அடியாட்களை ஏவினார்கள் பண்ணையார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகளின் உறுதியான போராட்டம், அரசு நிர்வாகத்தை தலையிடச் செய்தது. அடுத்தடுத்த வெற்றிகள் கம்யூனிஸ்டுகள் மீது நம்பிக்கையை அதிகரித்தது. இந்தச் சூழலில் இந்தியா விடுதலையடைந்தது.

இந்திய விடுதலையும், அடக்குமுறையும்:

காலனியாதிக்கம் முடிவுக்கு வந்ததென்றாலும், அது நிலஉறவுகளில் உடனடி மாற்றங்களைக் கொண்டு வரவில்லை. மாறாக கம்யூனிச இயக்கத்தை அடக்கும் முயற்சிகள் தொடங்கின. 1948 முதல் 1951 வரை நான்கு ஆண்டுகளுக்கு தஞ்சையில்144 தடை உத்தரவு அமலில் இருந்தது. இந்த உத்தரவு கம்யூனிஸ்ட் இயக்கத்தை பலவீனப்படுத்தவே பயன்படுத்தப்பட்டது.

தலைவர்கள் தலைமறைவாக இயங்கினார்கள். சுதந்திர இந்தியாவில் போராட்டக் களத்தில் கைது செய்யப்பட்ட களப்பால் குப்பு, திருச்சி சிறையில் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். பொய் வழக்குகள் புனையப்பட்டன. நிலப்பிரபுக்களுடன் சமரசம் செய்துகொண்ட இந்திய அரசின் வர்க்கத்தன்மை மிகத் தெளிவாக வெளிப்பட்டது.

இக்காலகட்டத்தில், முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 6  தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. மக்களிடம் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்த செல்வாக்கு வெளிப்பட்டது. அடக்குமுறைகள் பலிக்கவில்லை என உணர்ந்து கொண்ட ஆளும் வர்க்கம் இறங்கி வர நேர்ந்தது. ஜமீன் ஒழிப்பு, இனாம் ஒழிப்பு சட்டங்கள், விவசாயிகளுக்கு மூன்றில் ஒரு பங்கு வாரம், பண்ணையாட்களுக்கு கூலி ஒப்பந்தங்கள் என சில மாற்றங்கள் இந்தப் பின்னணியில்தான் ஏற்பட்டன.

இக்காலத்தில், நிலச் சீர்திருத்தசட்டம் வந்தபோதும் பெரும்பகுதி நிலம் ஏகபோகத்திலேயே தொடர்ந்தது. பெற்ற சட்டங்களை அமலாக்குவதற்காகவும் போராட வேண்டியிருந்தது.

உதாரணமாக ‘தஞ்சாவூர் பண்ணையாள், சாகுபடிதாரர் பாதுகாப்புச் சட்டத்தை’ தமிழகம் முழுமைக்கும் அமலாக்க கம்யூனிஸ்ட்டுகள் வலியுறுத்தினார்கள். இதற்காக  சிதம்பரத்தில் விவசாயிகள் பெருந்திரளாக போராடினார்கள். சிதம்பரம் வட்டத்திற்கு மட்டும் அச்சட்டம் விரிவாக்கப்பட்டது. இப்படி படிப்படியாகவே மாற்றங்கள் சாத்தியமாகின. இனாம் ஒழிப்புச்சட்டத்தின்படி நிலம் எடுக்கும் பட்டியலில் 198 கிராமங்களை இணைக்க 17 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. இந்திய விடுதலையும், மெல்ல மெல்ல ஏற்பட்ட மாற்றங்களும், நில உறவுகளை மாற்றியமைத்தன. பண்ணை அடிமைச் சுரண்டல் வீழ்த்தப்பட்டு, கூலி உழைப்பு முறை வந்தது.

1959 ஆம் ஆண்டில் விவசாயத் தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. கூலி உயர்வு, கூலி ஒப்பந்தங்களுக்கான கோரிக்கைகள் எழுந்தன. எனவே தங்கள் ஏகபோகத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், மிராசுதார்கள் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். அவர்கள் கூலிஉயர்வை மறுத்தது மட்டுமல்ல; கூலியை உயர்த்திக் கொடுக்கக்கூடாதென்று சிறு நிலவுடமையாளர்களுக்கும் தடை  போட்டார்கள்.

கூலி உயர்வுப் போராட்டங்களை திராவிட இயக்கம் விமர்சித்தது. வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்த சூழலில், திராவிட இயக்கத்தின் இந்த நிலைப்பாடு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களிடையே கேள்விகளை உருவாக்கின. இப்பகுதியில் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டுவந்த திராவிட விவசாயிகள் சங்கத்திற்குள் அதிர்வுகள் ஏற்பட்டன.

ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் உள்ளிட்ட திராவிட விவசாயிகள் சங்கத்தினர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார்கள். 1963, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் தத்துவார்த்த மோதல் வலுவாக நடந்து வந்த காலம். 1964 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி உருவானது. கீழத்தஞ்சையில் வர்க்க இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சி வழிநடத்தியது.

மாநிலத்தில் ஆட்சி மாற்றம்:

சில ஆண்டுகளில், (1967)  தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியுடன் தொகுதி உடன்பாடு கொண்டு தேர்தலை சந்தித்தது திமுக. தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து, திமுக ஆட்சியமைத்தது. அரசு இயந்திரம் எப்போதும் போல் தன் வர்க்கத்திற்கு சேவையாற்றியது.

1957 ஆம் ஆண்டிலேயே கேரளத்தில் அமைந்த கம்யூனிஸ்ட் அமைச்சரவை, தொழிலாளர் பிரச்சனைகளில் காவல்துறை தலையிடாது என கொள்கையை மேற்கொண்டது.  பிராந்திய முதலாளித்துவ கட்சியான திமுக, நிலவுடைமையாளர்களோடு சமரசம் செய்துகொண்டது. திமுக ஆட்சியில் ‘கிசான் போலீஸ்’ என்று அழைக்கப்பட்ட காவலர்கள் உள்ளூர் அளவில் மிராசுதார்களின் அடக்குமுறைகளுக்கு சாதகமாக செயல்பட்டனர். கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஒடுக்குவதற்கான ஏற்பாடாகவே அது இருந்தது. கூலி உயர்வுக்காக முத்தரப்பு பேச்சுவார்த்தையை விவசாயத் தொழிலாளர்கள் வலியுறுத்தியபோது, திமுக அரசாங்கம்  அதை ஏற்கவில்லை.

1966 அக்டோபர் 6 ஆம் தேதி பூந்தாழங்குடி கிராமத்தில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பக்கிரி என்ற விவசாயத் தொழிலாளர் கொல்லப்பட்டார். மிகப்பெரும் எழுச்சி வெடிக்கும் என்ற நிலையில்தான் முத்தரப்பு பேச்சுவார்த்தை சாத்தியமானது.

வெண்மணி என்ற கொதிகலன்:

நாகப்பட்டினம் வட்டத்தில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் ஒரு கிளை இருஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடு என்ற காங்கிரஸ்காரரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கம்யூனிச இயக்கத்தின் முன்னே தங்கள் சுரண்டல் சாம்ராஜ்யம் நொறுங்குவதை மிராசுதாரர்களால் ஏற்க முடியவில்லை. எத்தகைய அடக்குமுறைக்கும் தயாரானார்கள்.

சிக்கல் பக்கிரி கொல்லப்பட்டார். நிலக்கிழாராக இருந்தும் விவசாய தொழிலாளர்கள் பக்கம் நின்ற கீழக்கரை ஏ.ஜி.ராமச்சந்திரன் போலீசார் முன், வயலில் வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலைகளை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்த நாளிலேயே சின்னப்பிள்ளை கடத்தி கொல்லப்பட்டார். மேலும், நெல் உற்பத்தியாளர் சங்கம் நடத்திய பொதுக்கூட்டத்தில் ‘வெண்மணி சேரியை தீ வைத்து கொளுத்துவோம்’ என்று எச்சரித்து பேசினார்கள். எதிர்  வரவுள்ள சூழல் கடுமையாக இருக்கும் என்பதை கம்யூனிஸ்டுகள் உணர்ந்தார்கள்; எச்சரித்தார்கள். ஆனால், அரசு இயந்திரம் திட்டமிட்ட மெத்தனத்துடன் இயங்கியது. காங்கிரஸ் தலைவர் காமராஜர், விவசாயத் தொழிலாளர்கள் மீதே குற்றஞ் சாட்டிக் கொண்டிருந்தார்.

19.09.1968 அன்று மத்திய, மாநில அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச சம்பளம் கேட்டு நடத்தியபோராட்டத்திற்கு ஆதரவாக தஞ்சையில் விவசாயத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். அதில் கீழ்வெண்மணி தொழிலாளர்களும் பங்கெடுத்துக் கொண்டார்கள். இதிலிருந்து அப்பகுதியில் நிலவிய அரசியல் உணர்வையும், உறுதிப்பாட்டையும் உணர்ந்து கொள்ள முடியும். பண்ணையார்கள் இந்த அரசியல் உறுதிப்பாட்டை ஒடுக்க நினைத்தார்கள். இப்போராட்டத்தில் பங்கெடுத்ததற்காகவும் சேர்த்து ரூ.250 அபராதம் விதித்தார்கள்.

டிசம்பர் 25 ஆம் தேதி இரவில் காவல் துறையும்,கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் சென்ற ரெளடிகளும் கீழ் வெண்மணி கிராமத்தை சூழ்ந்து கொண்டு தாக்கினர். தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ராமய்யாவின் குடிசைக்குள் 48 பேர்  மறைந்து கொண்டார்கள். குடிசையின்  கதவைப் பூட்டினார்கள் ஏவலாட்கள். குடிசைக்கு நெருப்பு வைக்கப்பட்டது. தீயின் வெப்பம் தாளாமல் தப்பி ஓடியவர்கள் 6 பேர். அவர்களில் இருவரைப் பிடித்து மீண்டும் நெருப்புக்குள் வீசினார்கள் அடியாட்கள். ஒரு தாய் தன்னுடைய ஒரு வயது குழந்தையை நெருப்பில் இருந்த காப்பாற்றுவதற்காக வெளியே வீசினாள். பச்சிளம் குழந்தையென்றும் பாராமல் அதை மீண்டும் நெருப்பில் தூக்கியெறிந்தார்கள். வெளியிலிருந்து இச்சம்பவங்களை பார்த்து அலறிய குழந்தைகளையும் தாக்கினார்கள்.

சம்பவம் நடைப்பெற்ற அன்று இரவு எட்டு மணிக்கு கீவளுர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நள்ளிரவு 12-மணிக்கே காவல் துறையினர் வந்தனர். கனன்று கொண்டிருந்த குடிசையின் உள்ளே மனித உயிர்கள் சாம்பல்களாகி விட்டிருந்தன. இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. காவல் அதிகாரிகள் அடுத்த நாளில்தான் வந்தார்கள்.

1969 ஜனவரி 12 ஆம் தேதி, பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் பி.டி.ரணதிவே பின்வருமாறு எழுதினார்: “சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்ற காங்கிரஸ் பிரச்சாரத்திற்கு அஞ்சியும், தன் கட்சிக்குள் இருக்கும் நிலவுடைமையாளர்கள் அழுத்தத்திற்கு பணிந்தும், தாமதத்திற்கு (திமுக)  அமைச்சரவை வழிவகுத்தது, அது பின்னவர்கள் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நிலையெடுக்க ஊக்கமளித்தது” .

யார் யார், எந்தப் பக்கம் என தெளிவானது:

வெண்மணியின் தியாகமும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளும், வர்க்கப் போராட்டக் களத்தில் யார், எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பதை உணர்த்துகின்றன.

கோபாலகிருஷ்ண நாயுடு உட்பட இப்படுகொலையை முன்நின்று நடத்தியவர்களில் பலர் காங்கிரஸ்காரர்கள். காவல்துறையை கையாண்ட திமுக அரசாங்கம், மிராசுதார்களுக்கு சாதகமாக நடந்து கொண்டது. மேலும், பெரியார் தலைமையில் செயல்பட்ட திராவிடர் கழகமும், கூலி உயர்வுப் போராட்டங்களையே வன்முறைக்கு காரணமாக கற்பிக்க முயன்றது.

மேலும், வெண்மணி படுகொலைகள் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள் “விவசாயிகள் இருபிரிவினர் இடையே நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து” படுகொலைகள் நடந்ததாகக் கூறின. “விவசாய பணிகளுக்கு அமர்த்தப்பட்ட வெளியாட்களை 200 பேர் சூழ்ந்து கொண்டு தாக்கி, கொலை செய்ய முயன்றதால் மோதல் மூண்டதாகவும், அந்த மோதலில் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம்” என்றும் தெரிவித்தன.

இதுகுறித்து எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி ‘கீழவெண்மணி கொலை பாதகம் பற்றிய செய்திகளை தீக்கதிரில் தேடித் தேடிப் படித்தேன். எல்லா இதழ்களும் மௌனம் சாதிக்கிற தருணத்தில் இந்த தீக்கதிர் இதழ் மட்டும் இந்தச் செய்தி பற்றிய பேருண்மைகளை சத்தம் போட்டுச் சொன்னது’ என்கிறார்

இவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இன்னமும் அப்பட்டமாய் மிராசுதார்களை ஆதரித்தது “இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள அனைத்து 23 குற்றவாளிகளும் மிராசுதாரர்களாக இருப்பதும் திகைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ள பணக்காரர்கள். முதலாவது குற்றவாளி கார் ஒன்றை சொந்தமாகக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவு. இத்தகைய மிராசுதாரர்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளைப் பழிவாங்கும் அளவுக்கு பலவீனமான எண்ணம் கொண்டிருப்பார்கள்(?)” என வியாக்கியானம் கொடுத்தது நீதிமன்றம்.

போராட்டக் கனல் அணையவில்லை:

நிலவுடைமைச் சுரண்டலுக்கு எதிராகவும், அதன் சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும் உழைக்கும் மக்களைத் திரட்டி, தெளிவான தாக்குதலைத் தொடுத்து வந்த கம்யூனிஸ்ட் இயக்கம், தொடர்ந்து முன்னேறியது. படுகொலைகளும், அடக்குமுறைகளும் ஏவப்பட்டன. உண்மைகளை இருட்டடிக்க முயற்சி நடந்தது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பல உயிர்த் தியாகங்களைச் செய்து போராடினார்கள், நிலவுடைமை ஏகபோகத்தை தாக்கினார்கள். உடைப்பை ஏற்படுத்தினார்கள். அரசியல், சமூகத் தளங்களில் வெற்றிகள் கிடைத்தன.

கீழ்வெண்மணி படுகொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட கணபதியா பிள்ளை ஆணையம், கீழத்தஞ்சையில் நிலவிய கடுமையான உழைப்புச் சுரண்டலை வெளிக்கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இச்சட்டம் முதலில் தஞ்சையிலும், அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அமலாகின.

1970களில் நில விநியோகத்திற்கான இயக்கங்கள் வேகம் பிடித்தன. நிலச்சீர்திருத்தத்திற்கான முந்தைய சட்டம் திருத்தப்பட்டது. 1970 முதல் 1991 வரையிலான காலகட்டத்தில் திருவாரூர், நாகை மாவட்டங்களில் சாகுபடிக்கு தகுதியான சுமார் 6 லட்சம் ஏக்கர் நஞ்சை நிலத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலம், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோகிக்கச் செய்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பழைய நில உறவுகள் இயல்பாக மாறிவிடவில்லை. சாதீய ஒடுக்குமுறைகளை வீழ்த்தவும், நிலவுடைமை ஏகபோகத்தை தகர்க்கவும் ஒன்றுபட்ட போராட்டங்களும், அளப்பரிய தியாகமும் தேவைப்பட்டன. வர்க்கப் போராட்டமே மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்கும் என்ற பாடத்தை கீழத்தஞ்சை கம்யூனிஸ்ட் இயக்கம் நமக்கு கற்பிக்கிறது.

வலதுசாரி தாக்கமும், இந்திய தொழிலாளி வர்க்க கடமைகளும்

.கே.பத்மநாபன்

அழித்தொழிக்கப்பட வேண்டிய நிலப்பிரத்துவமும், அதனுடன் இணைந்த சாதீயமும், பத்தாம்பசலித்தனமான பழக்கவழக்கங்களும் மூடநம்பிக்கைகளும் ஆழமாக வேரூன்றியதாக உள்ளதே நமது சமூக அமைப்பு. இந்திய மக்களில் மிகப்பெரும்பகுதியினர் இந்த பிற்போக்குத்தனமாக கருத்துக்களில் கட்டுண்டு கிடப்பவர்களே. இருக்கின்ற வர்க்கங்களில் மிகவும் புரட்சிகரமான வர்க்கம் நவீன தொழிலாளி வர்க்கம்தான் என்ற அடிப்படையான கருத்தில் எவ்வித வேறுபாடும் இல்லையென்றாலும், மேற்கூறிய பிற்போக்கு சிந்தனைகளிலிருந்து தொழிலாளிவர்க்கம் இன்னமும் விடுபட்டு விடவில்லை என்பதை யதார்த்தத்தில் காண்கிறோம். இந்த பிற்போக்குக் கருத்துக்களின் தாக்கத்திலிருந்து இந்திய தொழிலாளி வர்க்கத்தை விடுபடச் செய்யும் பணி, அந்த வர்க்கத்தின் முன்னணியினராக செயல்படுவோரின் முதற்பெரும் கடமையாகும்.

நிறைய முதலாளித்துவத்தின் கோரமான சுரண்டல், மதம் சார்ந்த நம்பிக்கையையும், அதன் அடையாளங்களின் கொண்டாட்டங்களையும் தூண்டுகிறது. குறிப்பாக அமைப்பு சார்ந்த உற்பத்தி, சேவைத்துறைகளில் நிரந்தரம் செய்யப்படாத காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் மீதான சுரண்டல் அதிகரித்து வருகிறது. இந்த நிரந்தரமற்ற தொழிலாளி வர்க்கத்திடம், போராட்ட உணர்வை விட, விதி, வேண்டுதல், சாஸ்திரம், பரிகாரம் ஆகியவையே மேலோங்கி நிற்கிறது. இது சுரண்டல் நீடிக்கவும் சுரண்டல் ஒழிப்பை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கடவுளின் கருணையால் இன்றைய பொழுது சுபமாக முடிந்தது என அன்றாடம் காய்ச்சிகளான உடலுழைப்புத் தொழிலாளர்கள், சுரண்டலைச் சகித்துக் கொள்ள பழக்கப்படுத்தப்படுகின்றனர். அதாவது கம்யூனிஸ்ட்டுகள் வாதிடுகிற நவீன பாட்டாளி வர்க்கமே, முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டும் மாபெரும் சக்தியில், ஒருபகுதி, சமூகத்தின் பிற்போக்குக் கருத்துக்களாலும், பெரும் பகுதி திரட்டப்படாததாலும், ஆற்றல்படுத்தப் படாமல் உள்ளது. இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில்தான் தொழிலாளி வர்க்கம் பெருமளவில் நடத்தும் போராட்டங்களும் தலையெடுக்கின்றன.

ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் தத்துவார்த்த பிடிமானத்திலிந்து அனைத்துப்பகுதி உழைப்பாளி மக்களையும் மீட்டெடுக்க வேண்டிய தொழிலாளி வர்க்கத்தை புரட்சிகரமான கோட்பாடுகளோடு இணைந்து நிற்பவர்களாக மாற்றுவதுஎன்ற கடமையை நிறைவேற்றாமல், சுரண்டல் அமைப்பிற்கு முடிவுகட்டுவது என்ற உன்னதமான லட்சியத்தை நிறைவேற்ற இயலாது.

இந்திய தொழிலாளி வர்க்கத்தை ஒன்று திரட்டி, அவர்களுக்கான அமைப்புகளுடன் அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப நாட்களிலேயே துவங்கிற்று. கடந்த 110 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப்பணிகள் நடைபெற்று வந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுக்குள்ளேயே, இந்தியத் தொழிலாளி வர்க்கம் அரசியல் முதிர்ச்சி அடைந்து விட்டது என மாமேதை லெனின் பாராட்டியதும், வரலாற்று ஏடுகளில் பதிவாகியுள்ளன. இருப்பினும், ஆதிக்கம் செலுத்தும் முதலாளிவர்க்க நிலப்பிரபுத்துவ கருத்துக்களால் திசை திருப்பப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் நிலையிலிருந்து மாற்றம் காண்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து செயல்படுத்துவதே தொழிலாளி வர்க்க முன்னணியினரின் கடமையாகும்.


இந்தியா சுதந்திரமடைந்த காலகட்டம், ஏகாதிபத்தியங்கள் வீழ்ச்சியடைந்த காலமாக இருந்தது. சோசலிச நாடுகள், குறிப்பாக சோவியத் யூனியன், செயல்படுத்திக் காட்டிய புதிய சமூக அமைப்பு, உலகளாவிய ஈர்ப்பு சக்திகொண்டதாக இருந்தது. முதலாளித்துவ ஆட்சியாளர்கள் கூட சேமநல அரசு என தம்பட்டமடித்து மக்களை திசைதிருப்ப வேண்டிய சூழல் அது. முதலாளித்துவத்தின் அடிப்படை குணாம்சங்களான லாபவெறி, சுயநலம், பெருகிவரும் வேலையின்மை போன்றவற்றுக்கெல்லாம் மாற்றான ஒரு சமூக அமைப்பு சுரண்டலற்றதும் பொதுநலனில் அக்கறைகொண்டதுமான ஒரு சமூக அமைப்பு சாத்தியமானது என சாதாரணத் தொழிலாளி கூட பொதுவாக உணர முடிந்த காலகட்டம் அது. அந்தப் புரிதலை உள்வாங்கி, சமூகமாற்றத்திற்காக போராடும் சக்திகள் நம்பிக்கையோடு முன்னேறும் சூழல் அன்று இருந்தது. அத்தகைய சூழலிலும், புரட்சிகரமான சிந்தனைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் பல்வேறு விதமான தடைகளும், அச்சுறுத்தல்களும், அடக்குமுறைகளும் மேலோங்கியே இருந்தன.

இன்று சோவியத் யூனியன் சிதறுண்டு, சோசலிசக் கருத்துக்கள் பின்னடைவை சந்தித்து வரும் காலம். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகளாவிய முறையில் நிதிமூலதனம் அதன் வெறித்தனமான தாக்குதலை நடத்திவரும் காலம். வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் இன்று அவர்களது தத்துவார்த்த நிலைகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகளின் அடிப்படையில், தங்களது இந்த ஆதிக்கத்தை முன்னெடுத்து செல்ல, அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார அரங்குகளில் பெரும் பிரச்சாரத்தை அவை கட்டவிழ்த்துவிட்டுள்ள காலமிது. இந்த சூழலில், இந்திய உழைப்பாளி மக்களும் இந்தப் பிரசாரப் புயலின் தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்.

ஆனால் இந்திய உழைப்பாளி மக்களின் மிகப் பெரும்பான்மையானவர்கள் இன்றளவும், தங்களது பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக போராடும் அமைப்புகளில் கூட திரட்டப்படவில்லை. சங்க ரீதியாக திரட்டப்பட்ட தொழிலாளிகளில் கூட மிகப்பெரும்பான்மையினர் இப்போது முதலாளித்துவ கருத்தாளர்களாலேயே திரட்டப்பட்டுள்ளனர்; வழிநடத்தப்படுகின்றனர்.

கடந்த 25 ஆண்டுகளில் இந்திய தொழிற்சங்க இயக்கம் ஆட்சியாளர்களின் பொருளாதாரக் கொள்கைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி நாடுதழுவிய வேலைநிறுத்தங்கள் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. அந்த இயக்கங்களின், போராட்டங்களின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிக் கூடாதுதான். ஆனால், இந்த போராட்டங்கள் எந்த அளவிற்கு உணர்வுநிலையில் மாறுதலை உழைப்பாளி மக்களிடையே உருவாக்கியுள்ளது என்பதை ஆராய்ந்தால் நமது தொழிற்சங்க இயக்கத்தின் அடிப்படையான பலவீனத்தை நம்மால்உணரமுடியும். எந்தக் கொள்கைக்கு எதிராக போராடுகிறோம் என்பதை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முழுமையாக உணரவைப்பதில் நாம் வெற்றி பெறவில்லை. இன்றும் சொல்லப்போனால் ஆட்சியாளர்களின் கொள்கைகளின் விளைவுக்களுக்கு எதிராக உருவாகும் கோபத்தை கொள்கைகளுக்கு எதிரான கோபமாக மாற்றுவதில் நாம் இன்னமும் மிகவும் பின்தங்கியே உள்ளோம்.

பிரச்சனைகளை கொள்கைகளோடும் அந்தக் கொள்கைகளை ஆளும் வர்க்கத்தின் அரசியல் நிலைபாடுகளோடும் இணைத்து பார்க்க இயலாத நிலைதான் இன்று உள்ளது. இதன் பிரதிபலிப்புகளின் ஒரு பகுதிதான் “ஆளை மாற்றிப் பார்ப்பது” என்ற நிலை தொடருவதற்கான காரணம். மாற்றுக்கொள்கைகளுக்கான போராட்டமாக, நமது போராட்டங்களை மாற்றுவதுஎன்கிற கடுமையான அரசியல் பணியில் நாம் பின்தங்கியே உள்ளோம். இன்னும் சொல்லப்போனால், அதன் ஆரம்பநிலையில்தான் உள்ளோம். மிகப் பரவலாக நடைபெறும் பொருளாதாரப் போராட்டங்களிலேயே இந்த நிலை என்று நாம் சொல்லும்போது, பொருளாதாரக் கொள்கைகளிலும் கூட ஆளும் வர்க்க கருத்துக்கள்தான் உழைப்பாளி மக்களிடையே ஆதிக்கம் செலுத்துகிறது என்பதே அதன் பொருளாகும்.

சமூகம் சார்ந்த இதர பிரச்சினைகள் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தின் வெளிபாடுகளான ஜாதீய ஒடுக்குமுறையும், ஆண் ஆதிக்க பெண் அடிமைத்தன கருத்துக்களும் உழைப்பாளி மக்களிடையே இன்னமும் ஆழமாக வேரூன்றியே உள்ளன. மூடநம்பிக்கைகளும் கேடுகெட்ட பத்தாம்பசலித்தனமான பழக்க வழக்கங்களும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் முற்போக்கான கருத்துக்களை முன்னெடுத்து செல்வதில் பெரும் தடைகள் உள்ளன.

சமீபகாலமாக வலுப்பெற்று வரும் மதவாத கருத்துக்களையும், சமூக ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து நிற்பதில் தொழிலாளி வர்க்கமும் இதர பகுதி உழைப்பாளி மக்களும் எந்த அளவிற்கு பங்காற்றியுள்ளனர் என்பதை சுயவிமர்சன ரீதியாக பார்க்கத் தவறக்கூடாது. சொல்லப்போனால், இன்றைய சூழலில், நாம் கடமை தவறியவர்களாக இருக்கிறோம். உலகளாவிய முறையில் வலதுசாரி கருத்துக்களும் பிற்போக்கு சிந்தனைகளும் ஓரளவு வலுப்பெற்றுள்ள நிலையில், இந்தியாவிலும் ஆளும் வர்க்கங்கள் மென்மேலும் வலதுசாரி, பிற்போக்கு நிலைபாடுகளை மேற்கொள்கின்றன. இந்திய அரசியலில் வலதுசாரி, மதவாதக் கருத்துக்களின் மேலாதிக்கமும், பெருமுதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாடுகளின் அமலாக்கமும்உருவாக்கியுள்ள நெருக்கடிகள் ஆழமான பாதிப்புகளை ஏற்பத்தியுள்ளன. இவற்றை எதிர்கொள்ள இந்தியத் தொழிலாளிவர்க்கம் தனது அமைப்புகளில், செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாறுதல்களைக் கண்டாக வேண்டும். மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று, நாம் வெற்றிபெற வேண்டுமானால் இன்று நாம் சென்றடைந்துள்ள மக்களிடையே கூட நமது கருத்துக்கள் முழுமையாக எட்டவில்லை என்பதை உணர்ந்துகொண்டு நமது செயல்முறைகளில், அமைப்புகளை இயக்கும் முறைகள் உட்பட, மாற்றம் காணவேண்டும்.

நமது அமைப்புகளிலே உள்ளவர்களில் கணிசமான பகுதியினர் பெயரளவிலேயே நம்மவர்களாக உள்ளனர். நம்முடன் இணைந்து பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடுபவர்களில் மாற்று அமைப்புகளில் உள்ளவர்களும், எந்த அமைப்புகளிலும் இல்லாதவர்களும் உள்ளனர். இவர்களையெல்லாம் தொடர்ச்சியாக அணுகவும், மாற்றுக்கொள்கைக்காக ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தவும் முடிந்தால்தான் இன்றைய சவால்களை நாம் எதிர்நோக்க இயலும்.

ஆளும் வர்க்க கருத்துக்கள், பத்தாம்பசலித்தனமானதும், பிற்போக்குத் தன்மை வாய்ந்ததும் மக்களின் அடிப்படை நலன்களுக்கு விரோதமானதுமாக உள்ள போதிலும், மிக நுட்பமானதும்நவீனமானதுமான தொழில்நுட்ப உதவியுடன் அவை மக்களுக்கானவை என்ற போர்வையில் எடுத்து செல்லப்படுகின்றன.

இந்த சூழலில்தான் சுதந்திரப் போராட்ட காலம் முதற்கொண்டு இந்திய தொழிலாளிவர்க்கமும் உழைப்பாளி மக்களும் ஆற்றியுள்ள பணிகளையும் தியாகங்களையும் முன்னிறுத்தி மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டத்தின் அவசியத்தை, சமூகத்தில் அடிப்படைமாற்றம் காண்பதின் தேவையை, தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைப்பாளி மக்களிடையே கொண்டு செல்லும் ஸ்தாபன வலிமையை நாம் பெற்றாக வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பகுதி மக்களையும் ஒன்றிணைப்பதற்கும் அவர்களது ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் தடையாக உள்ளவற்றை அடையாளம் காணவும், அத்தகைய சக்திகளை அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்தவும் வேண்டும். இந்த ஒன்றுபட்ட வலிமையை ஆதாரமாக்கி பிரம்மாண்டமான மக்கள் இயக்கங்களை, போராட்டங்களை முன்னெடுத்து செல்வது, வலதுசாரி ஆதிக்க நிலையை முறியடிப்பதற்கு மிக அவசியம். எதிரிகளை அடையாளம் காணவும் தோழமை சக்திகளுடன் இணைந்து நிற்கவும் வர்க்க முன்னணியினர் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இதற்கான தத்துவார்த்தப் பயிற்சியின்மை, தற்போதைய பிரதான பிரச்சினையாக உள்ளது.

மாபெரும் அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டு விழாக்களும், இந்த லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான பணிகளுக்கான காலமாக மாற்ற வேண்டும். இது இன்றைய சவால்களை சந்திப்பதற்கான தயாரிப்பு பணிகளின் துவக்கமாக அமைய வேண்டும்.

நவீன தாராளமயமும் தொழிற்சங்கமும்

டாக்டர் ஹேமலதா, தலைவர்இந்திய தொழிற்சங்க மையம்

1970களில் உருவான பொருளாதார நெருக்கடிக்கு முதலாளித்துவ அமைப்பு மேற்கொண்ட எதிர்வினை நவீன தாராளமயமாகும். அமெரிக்காவும் பிரிட்டனும் 1980களில் நவீன தாராளமயத்தை அமல்படுத்தும் வண்ணம் பொருளாதார மறுகட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்த துவங்கின. இந்தத் திட்டங்கள், பன்னாட்டு நிதி நிறுவனம், உலக வங்கி போன்ற அமைப்புகளின் உதவியுடன் உலகம் முழுவதும் திணிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டுகளில் நுழையும்பொழுது உலகில் பெரும்பாலான நாடுகள் நவீன தாராளமயக் கொள்கைகளைத் தங்கள் திட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்தத் துவங்கின. சோவியத் யூனியன் சிதறியதும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவும், ஏகாதிபத்தியத்திற்குச் சாதகமான வகையில் வர்க்க பலாபலத்தில் மாற்றங்களை உருவாக்கின. சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசாங்கங்களும் நவீன தாராளமயக் கொள்கைகளை ஏற்றுச் செயல்படத் தொடங்கின. தற்போது உலகில் மிகப்பெரிய அளவில் செல்வாக்கு மிகுந்த தத்துவமாக நவீன தாராளமயம் உருவெடுத்துள்ளது.

நவீன தாராளமயக் கொள்கையின் மிக முக்கியமான நோக்கம், முதலாளிகளின் லாபத்தைப் பாதுகாப்பதுதான். மறுகட்டமைப்பு என்பது பல்வேறு நாடுகளிலும் பல்வேறு முறைகளில் செயல்படுத்தப்படலாம். ஆனால் பொதுவாக நவீன தாராளமய கொள்கை என்றால் தனியார்மயம் தாராளமயம், உழைப்பாளர்களை பணியமர்த்துவது அல்லது பணி நீக்குவது போன்ற விசயங்களில் முதலாளிகள் தங்கள் விருப்பப்படி நடந்துகொள்வது, தொழிலாளர்களின் கூலி மற்றும் இதர சலுகைகளை வெட்டும் நோக்குடன் சமூக நலத் திட்டங்களுக்கு அரசு செய்யும் செலவுகளைக் கணிசமாக குறைப்பதும், மற்ற நலன்களை வெட்டுவதும்தான் அதன் அடிப்படையாகும். தொழிற்சங்கம் அமைத்தல்; தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்கள் கூட்டு பேர சக்தியைப் பயன்படுத்துதல் போன்ற உரிமைகள், எளிய மக்களின் வாழ்வுநிலை, அவர்களுடைய ஜனநாயக உரிமைகள் ஆகிய அனைத்தும் கடும் தாக்குதலுக்கு உள்ளாகின. இத்தகைய தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களில் உழைக்கும் வர்க்கம்தான் பொதுவாக முன்னணிப் பாத்திரம் வகிக்கிறது. எனவே உழைக்கும் வர்க்கத்தின் அமைப்பு சார்ந்த வலுவை, தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்துவது, மேலும் முதலாளிகளின் தாக்குதலை எதிர்த்துப் போராடமுடியாமல் உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்குவது என்பவை நவீன தாராளமயத்தின் மிக முக்கியமான குறிக்கோள்களாகும்.

நவீன தாராளமயக் கொள்கைப்படி அரசு தலையீடு இல்லாமல் இருந்தால்தான் சந்தைப் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படும். ஆனால் நடைமுறையில் அரசு தலையீடு இல்லாமல் இருப்பது என்பது நிகழ்வதில்லை. மாறாக, முதலாளிகளுக்குச் சாதகமாக வெளிப்படையான அரசு தலையீடு என்பதுதான் நிகழ்கிறது. இதன் விளைவாக மக்களின் செல்வங்களையும், வளங்களையும் முதலாளிகளுக்கு அள்ளிக்கொடுக்க வழிவகை செய்யப்படுகிறது. ற்போது இந்தச் செயல்பாடு ஆரம்ப மூலதன சேர்க்கையின் தன்மையைப் பெற்றுள்ளது.

இந்தக் கட்டுரையில் நவீன தாராளமயத்தின் தாக்கம் தொழிலாளர்கள், தொழிற்சங்க இயக்கம் மீது, குறிப்பாக வர்க்க அடிப்படையில் இயங்கும் தொழிற்சங்கங்களின் மீது, எவ்வாறு இருக்கிறது என்பதை மட்டும் பார்ப்போம். நவீன தாராளமயத்தை செயல்படுத்தும் அனைத்து நாடுகளிலும் அமைப்பு ரீதியான தொழிலாளிவர்க்க இயக்கத்தைப் பலவீனப்படுத்தும் வகையில் கடுமையான, விடாப்பிடியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதலாளிகளுக்குச் சாதகமான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. கடுமையான போராட்டங்களின் மூலம் உழைக்கும் மக்கள் வென்றெடுத்த உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தொழிலாளர்களின் மீதும் அவர்களுடைய பணிச் சூழலின் மீதும் பல்வேறு விதமாகக் கடுமையான தாக்குதல்களை நடத்த முதலாளிகளுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்படுகிறது.

முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் ‘ஒழுங்குபடுத்தப்படாத பணி ஏற்பாடுகள்’ (non-standard work arrangements) பெரிதும் அதிகரித்துள்ளன. அதாவது, ஊசலாடும் (precarious) அல்லது எளிதில் இழக்கப்படக்கூடிய (vulnerable) பணியிடங்கள் அதிகரித்துவருகின்றன. பணி நிரந்தரம் செய்யப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் குறைந்துகொண்டே வருகிறது. இதே சமயத்தில் பகுதி நேர ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள், காசுவல் ஊழியர்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணி செய்வோர், ஒப்பந்தத் தொழிலாளர்கள் போன்ற சீரற்ற பணி செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வீட்டிலிருந்து பணி செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நிரந்தர அல்லது எப்போதும் தொடர்ந்து நடைபெறும் வேலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. பல மோட்டார் கார் நிறுவனங்களிலும் இதர தொழிற்சாலைகளிலும் தொழில் கற்போர் பல ஆண்டுகளுக்கு மிகச் சொற்ப சம்பளத்திற்குப் பணி செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். நிரந்தரப் பணியாளர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளத்தில் மிகக் குறைந்த விகித அளவு சம்பளம்தான் இவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. பெரிய பன்னாட்டு நிறுவனங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. இந்த நிலை தனியார் துறையில் மட்டுமின்றி பொதுத்துறை, அரசுத்துறைகளிலும் உள்ளது. இத்துறைகளில் வேலை செய்யும் லட்சக்கணக்கான ஊழியர்களின் பணிச்சூழல், ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்படாத பணியாளர்களின் பணிச்சூழலை ஒத்திருக்கிறது. கிட்டத்தட்ட 1 கோடிப் பணியாளர்கள் இந்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களில் பணி செய்கின்றனர். இவர்களுக்குப் பணியாளர்கள் என்ற அங்கீகாரம் கூடக் கிடையாது. இவர்களில் பெரும்பாலோர் பெண்கள்.

பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள உலக வேலைவாய்ப்பு, சமூக நிலைமை 2017 இல் உள்ள போக்கு என்ற அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 140 கோடிப்பேர் அல்லது உலகில் மொத்த உழைப்போரில் 42 சதவீதப்பேர் 2017 ல் எந்த நேரத்திலும் வேலை பறிபோகக்கூடிய நிரந்தரமற்ற பணிகளில் வேலை செய்கிறார்கள். இந்த அறிக்கையின்படி முன்னேறிவரும் (emerging) பொருளாதாரங்களில் இரண்டு பேரில் ஒருவரும் (இதர) வளரும் நாடுகளில் 5 இல் 4 பேரும் இத்தகைய நிலைமைகளில் பணியாற்றுகின்றனர். நிரந்தர வேலைகளைக் குறைப்பதும் நிரந்தரமற்ற பணிநிலைமைகள் மூலம் வேலைகளை முடித்துக்கொள்வதும் உழைப்பாளிகளுக்கு உரிய கூலியை மறுப்பதற்கும் அவர்களுக்கு மற்ற நல உதவிகளை மறுப்பதற்கும் முதலாளிகள் கையாளும் மோசமான நடவடிக்கைகளாகும். பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களும் முதலாளிகளுடைய இந்தக் கொள்ளையை சட்ட ரீதியிலான நடவடிக்கையாக மாற்றுவதற்காக தொழிலாளர் சட்டங்களைத் திருத்த முயற்சிக்கின்றன.

உழைக்கும் மக்கள் உற்பத்தி செய்யும் செல்வங்களில் உழைப்பவர்களுக்கு உரிய பங்கைக் குறைத்து முதலாளிகளின் பங்கை அதிகப்படுத்துவதற்காகவே மேற்கூறிய நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. 2017 ஆம் ஆண்டில் பன்னாட்டு நிதியம் வெளியிட்டுள்ள 2017 இல் உலகப் பொருளாதார நிலைமை என்ற அறிக்கையில் பின்வரும் விசயங்கள் தெளிவாகின்றன: 1991 ஆம் ஆண்டு முதல் 2014 வரை உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் என்று கருதப்படும் 50 நாடுகளில் 29 நாடுகளில் நாட்டு வருமானத்தில் உழைப்பவர் பங்கு குறைந்திருக்கிறது. 2014 இல் உலகின் மொத்த உற்பத்தியில் இந்த 29 நாடுகளின் பங்கு மூன்றில் இரண்டு பங்கு ஆகும். பத்து பெரும் தொழில்களில் ஏழில் உழைப்பாளர்கள் பெற்ற கூலியின் பங்கு குறைந்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் வளரும் நாடுகளில் ஒரு நாளுக்கு 3.10 டாலர்களுக்கும் குறைவாக சம்பாதிக்கும் உழைப்பாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 30 லட்சம் பேர் என்ற அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கூறிய மாற்றங்கள் கூலியின் பங்கைக் குறைப்பது மட்டுமில்லாமல், உழைக்கும் மக்களின் கூட்டு பேர சக்தியையும் பலவீனப்படுத்துகிறது. உழைப்பாளர்களின் வேலை நிரந்தரமற்றது. அவர்களுடைய குறைந்த வருமானமும் நிச்சயமற்றது. மேலும் அவர்களுடைய வேலையின் தன்மையால் பல்வேறு இடங்களில் சிதறியுள்ளனர். இதனால் இம்மக்களை தொழிற்சங்கங்களில் திரட்டுவது மிகவும் கடினமாக உள்ளது. ஒன்றிணைந்த உழைப்பாளர்களின் வலிமையைத் தொழிற்சங்கங்கள்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அத்தகைய தொழிற்சங்கங்கள் இல்லையென்றால் உழைக்கும் மக்களுக்கு முதலாளிகளோடு பேரம் பேசும் வலிமை இல்லை. ஆனால் முதலாளிகளோடு உரிமைக்காகப் போராடுவதற்கு மாற்றாக தொழிலாளர்கள் எப்படியாவது தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தால் தங்களுக்குள்ளேயே ஒருவரோடு ஒருவர் போட்டிபோட வேண்டியுள்ளது. இந்தச் சூழல் முதலாளிகளின் கையை மேலும் வலுப்படுத்துகிறது.

உலகமயமாதலும் தாராளமயமும் உற்பத்திப் பணிகளை உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது. இதன் மூலம் அவர்கள் உலகில் மிகக் குறைந்த கூலிக்குப் பணி செய்யத் தயாராயிருக்கும் உழைப்பாளர் படை எந்த நாட்டில் அதிக அளவில் இருக்கிறதோ அந்த இடத்தில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க முடியும். மேலும் தொழிற்சங்க இயக்கங்களும் தொழிலாளி வர்க்கமும் பலவீனமாக உள்ள இடங்களையும் தேர்ந்தெடுப்பார்கள். அரசாங்கங்களோ போட்டி போட்டுக்கொண்டு தங்கள் நாட்டு உழைப்பாளர்களின் சேவையைக் குறைந்த கூலிக்கு பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அளிக்க முன்வருகின்றன. வெளிநாடு மற்றும் உள்நாட்டு பெரு முதலாளிகளிடம் தொழிலாளர் சட்டங்களை எளிமைப்படுத்துவதாக உத்திரவாதம் அளித்து, அதன் விளைவாக இந்தப் பெரு நிறுவனங்கள் பாட்டாளிகளின் உழைப்பைத் தங்குதடையின்றிச் சுரண்டுவதற்கு வழி செய்கிறது. சுலபமாகத் தொழில் செய்ய உகந்த இடம் என்பதற்கான குறியீடுகளை அதிகப்படுத்துவதற்காக, பல நாடுகளின் அரசாங்கங்களும் பன்னாட்டுப் பெருமுதலாளிகள் தங்கள் நாடுகளில் முதலீடு செய்வதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.

மூலதனம் பறந்துபோய்விடும்; உற்பத்தி பிற நாடுகளுக்கும் இடங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டு, உள்ள வேலைகள் இழக்கப்படும் என்ற மிரட்டல்கள் தொழிலாளிகளையும் அவர்கள் சங்கங்களையும் தங்கள் வேலைகளைப் பாதுகாத்துக்கொள்ள கூலி மற்றும் இதர சலுகைகள் வெட்டப்படுவதை அங்கீகரிக்கும் நிலைக்குத் தள்ள பயன்படுத்தப்படுகின்றன. சங்கங்கள் இத்தகைய நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியும் நிகழ்வுகள் பல உள்ளன. ஐரோப்பாவில், சங்கங்கள் கம்பனிகளுடன் செய்து கொள்ளும் பல ஒப்பந்தங்களில் கூலி உயர்வு கோருவதில்லை; நீண்ட கால ஒப்பந்தங்கள் ஏற்பு, மேலும் வேலைகளைப் புதிய முறையில் மாற்றியமைக்கும் ஏற்பாடுகள் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ‘பெருந்தொழில்நிறுவன போட்டி (தந்திரம்)’ என்று கூறப்படுகிறது.

அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடாவில் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரமும் வேலைப் பாதுகாப்பும் தேவையென்றால் தொழிற்சங்கங்கள் முதலாளிகளுடன் நெகிழ்வு தரும் ஒப்பந்தங்கள்என்ற பெயரில் ஒப்பந்தங்கள் போட்டுகொண்டு வேலை நிறுத்தம் செய்யும் உரிமைகளைக் கைவிட வேண்டும் என்று சங்கங்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. ஸ்வீடனில் “சிக்கனப் பகிர்வு” என்ற பெயரிலும் ஜெர்மனியில் இணைந்து நிர்வகிக்கும் சிக்கனம்என்ற பெயரிலும் கனடாவிலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் தண்டிக்கும் தன்மை கொண்ட சிக்கனம்என்றும் அழைக்கப்படும் இத்தகைய சில நடவடிக்கைகளை உதாரணமாகக் கூறலாம். இந்தியாவிலும் தொழிற்சங்கங்கள் பல இடங்களில் கூலி உயர்வைத் தவிர்க்கவேண்டுமென்றும் நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டுமென்றும் இல்லாவிட்டால் வேலை இழக்க நேரிடும் என்றும் நிர்ப்பந்திக்கப்படுகின்றன என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 28 மாநிலங்கள் “வேலை செய்யும் உரிமை” சட்டங்களை இயற்றியுள்ளன. ஆனால் அந்தச் சட்டங்களுக்கு மேற்கூறிய தலைப்பு பொருந்தாது. இந்தச் சட்டங்கள் உழைப்பாளர்களின் வேலை செய்யும் உரிமையைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் அல்ல. மாறாக அவை தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணையாமல் இருக்க ‘உரிமை’, சங்கத்திற்கு சந்தா செலுத்த மறுக்கும் ‘உரிமை’ பற்றிப்பேசுகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் தொழிலாளிகள் தொழிற்சங்கத்தில் சேருவது, சங்கத்திற்கு சந்தா செலுத்துவது ஆகியவற்றை தடுத்து, தொழிற்சங்கங்களை நிதிப்ற்றாக்குறையினால் சீரழியச் செய்து இறுதியில் தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்களே இல்லாமல் செய்வதுதான் இந்தச் சட்டங்களின் நோக்கம். கனடாவில் “வேலைக்குத் திரும்புவோம்” என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசியத் துறைகள் என்று அரசு கருதும் துறைகளில் வேலை நிறுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் மீதும் தொழிலாளர்கள் மீதும் பெருந்தொகைகள் அபராதமாக விதிக்கப்படுகின்றன.

இங்கிலாந்தில் நவீன தாராளமயத் தொழிற்சங்கத்தை உருவாக்க (டோனி பிளேர் தலைமையில் இருந்த) உழைப்பாளர் கட்சி ‘பங்காளித்துவம்’ (partnership) என்ற கோட்பாட்டை முன்வைத்தது. இதன் பொருள் தொழிற்சங்க இயக்கம் வர்க்கப் போராட்டம் என்ற கருத்தை கண்டனம் செய்வதும், உற்பத்தியைப் பெருக்கி முதலாளிகளின் லாபத்தை அதிகரிப்பதுமாகும். நவீன தாராளமயம் சொன்னபடியெல்லாம் செய்ய முனையும் இத்தகைய தொழிற்சங்கங்களுக்கு அரசு ஏராளமான மானியங்களை வழங்கியது. பணியிடத்தில் கற்றல், பயிற்சி, நவீனமயமாக்கல்’ என்ற பல்வேறு சாக்குகள் கூறியும் பன்னாட்டு அரங்கில் செயல்படவும் ஏராளமான பணம் வழங்கப்பட்டது. இத்தொழிற்சங்கங்கள் நவீன தாராளமய அரசின் கைதிகள்; அவற்றின் ஓய்வூதியர்கள் என்று ஆக்கப்பட்டனர்.

தற்போதுள்ள பாஜக அரசாங்கத்தின் தொழிலாளர் சட்டங்களும் 44 மைய தொழிற்சட்டங்களை இணைத்து 4 சட்டத் தொகுப்புகளாக்கும் அதன் முயற்சியும் தொழிற்சங்க இயக்கத்தையும் தொழிலாளர்களின் கூட்டு பேர சக்தியையும் பலவீனப்படுத்தும் முயற்சியேயாகும்.

பாட்டாளிவர்க்கத்தின்மீது நவீன தாராளமயம் தொடுத்துள்ள மிக அபாயகரமானதும் மிகப்பெரியதுமான தாக்குதல், அதன் தத்துவார்த்தத் தாக்குதலாகும். நவீன தாராளமயத்திற்கு ஆதரவாகப் பேசும் கருத்தாளர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்துப் பிரச்சாரம் செய்கிறார்கள். சந்தைப் பொருளாதாரத்தைச் சார்ந்திருந்தால் போட்டி அதிகரிக்கும். இதனால் அரசுத் துறை சேவைகள் சிறப்படையும். தாராளமயம், மேலும் சுதந்திரமாக இயங்கும் சந்தைப் பொருளாதாரம் ஆகியவற்றால் மேலும் செல்வம் கொழிக்கும். மேல் தட்டுகளில் இருந்தும் செல்வச் செழிப்பு கீழ்த்தட்டுக்கும் சொட்டும். இதனால் சமூகத்தின் எல்லோருக்கும் நன்மை கிடைக்கும். நெகிழ்ந்து கொடுக்கும் உழைப்பாளர் சந்தை, வேலைவாய்ப்பும் சம்பளமும் அதிகரிக்கும். மேலும் தொழிற்சங்கங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை; தொழிலாளர்களுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துபவை. இதனால் தொழிற்சங்கங்களை ஒழிப்பது தொழிலாளர்களின் சுதந்திரத்தை மேம்படுத்தும் போன்றவை இத்தகைய கருத்துக்களாகும்.

அதனிடம் உள்ள ஏராளமான வளங்கள், அதன் அடிவருடியான பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அறிவுஜீவிகள், அதன் பிடியில் உள்ள அரசாங்கங்கள் ஆகியவை மூலம் பன்னாட்டு நிதி மூலதனத்தால் இயக்கப்படும் நவீன தாராளமயம் தனது தத்துவத்தை பரப்பி உலகம் முழுவதிலும் கோலோச்ச வைத்துள்ளது. வர்க்கச் சமரசத்தையும், திருத்தல்வாதத்தையும் ஏற்றுக்கொண்ட பல தொழிற்சங்கங்கள் மேற்கூறிய பிரச்சாரத்திற்கு இரையாகி, நவீன தாராளமயக் கொள்கைகளை ஆதரித்தன. ஐரோப்பாவிலும் இன்னும் பல வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும் அந்தக் காலகட்டத்தில் நிலவிய நெருக்கடியின் பின்னணியில் தனியார்யமும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதும் பொருளாதாரரீதியாக நன்மை பயக்கும் என்று இச்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன. பல தொழிற்சங்கங்கள் இது தவிர்க்க முடியாதது என்றும் கருதின. “(நவீன தாராளமயமாக்கத்திற்கு) மாற்றேதுமில்லை” என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய அனுபவமும் இதிலிருந்து அதிகம் வேறுபடவில்லை. துவக்கக் கட்டத்தில் இந்தியத் தொழிற்சங்க மையம்போன்ற, வர்க்கக் கண்ணோட்டத்துடன் இயங்கும் சில தொழிற்சங்கங்களைத் தவிர மற்ற சங்கங்கள், நவீன தாராளமய கொள்கைகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் நன்மை விளைவிக்கும் என்ற பிரமையையே கொண்டிருந்தன.

நவீன தாராளமயவாதிகள் இவ்வாறு கூறியவை அனைத்தும் தவறு என்பது தற்போது தெளிவாகியுள்ளது. செல்வச் செழிப்பு மேல்தட்டில் இருந்து கீழ்த்தட்டிற்கு சொட்டும் என்ற கருத்து முழுமையாகப் பொய்யானது என்பது உறுதிப்பட்டுள்ளது. இன்று காணப்படுவது இச்செல்வம் முன்பைவிட அதிக அளவில் குவிந்துள்ளது என்பதுதான். உற்பத்தித்திறன் பெருமளவில் அதிகரித்துள்ளது; உழைப்பாளர்கள் தங்கள் உழைப்பைச் செலுத்தி ஏராளமான செல்வத்தை உற்பத்தி செய்துள்ளனர்; ஆனால் ஒரு சிலரால் இந்தச் செல்வங்கள் அதிகமாக கைப்பற்றப்படுகின்றன. எந்தக் காலத்திலும் இல்லாதபடி ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. ஜனவரி 2017 ஆம் ஆண்டில், ஆக்ஸ்பாம்(OXFAM) 99%க்கான பொருளாதாரம்என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகில் 8 பேர் மட்டுமே உலகின் பாதி எண்ணிக்கையினரான மிகவும் ஏழ்மையான 362 கோடி மக்களிடம் உள்ள செல்வத்தைக் கைப்பற்றிக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். 1988 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் உலகில் மிக ஏழையான 10 சதவீதம் மக்களின் வருமானம் தலைக்கு 65 டாலர் என்ற அளவிற்கு உயர்ந்தது; ஆனால் உலகிலேயே பெரும் பணக்காரர்களான 1 சதவீதம் பேருடைய வருமானம் தலைக்கு 1180 டாலர் என்ற அளவில், அதாவது 182 மடங்கு, உயர்ந்தது.

இந்தியாவிலோ, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி இன்னும் அதிகம். அகில உலக புள்ளிவிபரங்களின்படி, உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களிடம் – மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதம் பேரிடம் உலகச் செல்வத்தில் 50 சதவீதம் உள்ளது. இந்தியாவில் மிகப்பெரும் செல்வந்தர்கள் –மேல்மட்டத்திலுள்ள ஒரு சதவீதம்பேர் நாட்டின் செல்வத்தில் 58 சதவீதத்தை வைத்துள்ளனர். ஒரு பில்லியன் (=100கோடி) அமெரிக்க டாலருக்குமேல் (கிட்டத்தட்ட 7,000 கோடி ரூபாய்க்கு மேல்) சொத்துள்ளவர்கள் இந்தியாவில் 57 பேர். அவர்களிடம் உள்ள செல்வமும் அடிமட்டத்தில் இருக்கும் 70 சதவீதம்பேரிடம் இருக்கும் உள்ள மொத்தச் செல்வமும் சமம்! ( 57 பேரிடம் 214 பில்லியன் டாலர் 14,98,000 கோடி ரூபாய் செல்வம் உள்ளது. )

நவீன தாராளமயத்தின் அடிப்படையில் நடக்கும் பொருளாதார வளர்ச்சி, வேலைகளை உருவாக்காத அல்லது வேலைவாய்ப்பில் இழப்பை ஏற்படுத்தும் வளர்ச்சி என்று கூறப்படுகிறது. வேலையின்மை என்பது கவலையளிக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளது. முன்னர் குறிப்பிடப்பட்ட, உலக தொழிலாளர் அமைப்புஅளித்த அறிக்கை கீழ்க்கண்டவாறு கூறுகிறது:வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், நீண்டகால வேலையின்மை, பொருளாதாரச் சிக்கல் தோன்றுவதற்கு முன்பு இருந்ததோடு ஒப்பிடுகையில், இப்போது அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில், 2016 ஆம் ஆண்டின் 2 வது காலாண்டுப் பகுதியில் 12 மாதங்களாக அதற்கு மேலாக வேலைதேடுவோரின் பங்கு 47.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2012 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் இவ்வாறு வேலை தேடுவோர் பங்கு 44.5 சதவீதமாக இருந்தது. 2016 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த பிரிவைச் சேர்ந்த நபர்களில் மூன்றில் இரண்டு பேர், 2 ஆண்டுகளுக்கும் மேல் வேலையின்றி இருந்தார்கள்.

அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் ஏற்படும் மாபெரும் முன்னேற்றங்கள், மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, அவை மக்களை வேலையில் இருந்து நீக்க பயன்படுகின்றன. லாபத்திற்காக பேராசைப்படும் பெரும் கம்பெனிகள் உழைப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்கின்றன. மருத்துவம், கல்வி, விருந்தோம்பல், எடிட்டிங் போன்ற துறைகளிலும், மோட்டார் கார் உற்பத்தி போன்ற தொழிற்சாலைகளிலும் பயன்படவல்ல செயற்கை அறிவு, ரொபாட்டிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் இன்று உருவாக்கப்படுகின்றன. இத்தகைய தொழில்நுட்பங்கள் மிக அதிக எண்ணிக்கையிலான அளவில் தொழிலாளர்களின் வேலைகளைப் பறித்து, வேலையின்மையை மேலும் கடுமையாக்கப் போகின்றன.

தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளைப் பறித்ததால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது என்பதற்கு எத்தகைய அத்தாட்சியும் இல்லை. உலகத் தொழிலாளர் அமைப்பின் முக்கிய அறிக்கையான உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக நிலை பற்றிய 2015ம் ஆண்டின் அறிக்கை” உலகின் மிக முன்னேறிய நாடுகள் மட்டுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆப்ரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட 63 நாடுகளில் இருந்து கிடைத்த 20 ஆண்டுகளுக்கான விபரங்களை ஆராய்ந்து இவ்வாறு கூறுகிறது:வேலை வாய்ப்புகளை வலுவிழக்கச்செய்கின்ற, மிக மோசமாக வடிவமைக்கப்பட்ட சட்ட மாற்றங்கள் . அவை குறுகிய காலகட்டத்திற்காக இருந்தாலும் சரி, அல்லது நீண்ட காலத்திற்காக இருந்தாலும் சரி நன்மை பயக்காது; வேலைவாய்ப்புகளைப் பெருக்காது.

உழைப்பாளிகளின் மீதும் தொழிற்சங்கங்களின் மீதும், வளர்ச்சி, முதலீடுகளைப் பெருக்குவது என்ற பெயரில் தாக்குதல்களும் நடவடிக்கைகளும் தொடுக்கப்பட்டு நவீன தாராளமயம் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த அம்சமான பொருளாதார நெருக்கடிகளை தடுப்பதில் தோல்வியடைந்தது. 1997ஆம் ஆண்டில் ‘கிழக்காசியப் புலிகள்’ என்று கூறப்பட்ட நாடுகளில் ஒரு பெரும் நிதி நெருக்கடி உருவாயிற்று. இது பின்னர் மற்ற நாடுகளுக்கும் பரவி உலகப் பொருளாதாரத்தில் ஒரு பெரும் பொருளாதார மந்த நிலையை 2001 ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து உருவாக்கத் துவங்கியது. இதிலிருந்து நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை அதிக காலத்திற்கு செயலாக்க முடியாது என்பது தெரிகிறது. அண்மைக்காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில், 2008 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார நெருக்கடி உருவாயிற்று. இன்றளவும் இந்தப் பிரச்சினை தொடர்கிறது. நவீன தாராளமயமாக்கத்தின் ஆதரவாளர்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படும் மீட்சிக்கான ஒரு சில அடையாளங்களாக சுட்டிக் கொண்டிருந்தாலும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. உலகத் தொழிலாளர் அமைப்பு 2017 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு மற்றும் சமூக நோக்கம் பற்றிய தனது அறிக்கையில் கூறுகிறது: 2017 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சியைப் பற்றிய முன்மதிப்பீடுகள் சமீபகாலமாக ஒவ்வொரு முறையும் இறங்குமுகமாகவே மாற்றப்படுகின்றன (2012 ஆம் ஆண்டில் 4.6% என்பது 2016 ஆம் ஆண்டில் 3.4 % எனக் குறைந்தது). உலகப் பொருளாதாரத்தைப் பொறுத்தமட்டில் ஒரு கூடுதலான நிச்சயமற்ற நிலைமையே உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் நவீன தாராளமயகொள்கைகளின் தாக்கத்தைக் குறித்து உலகெங்கும் அதிருப்தி அதிகரித்துவருகிறது. உலகெங்கும் உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கை நிலையின் மீதும், வேலைச் சூழலின் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்த்தும் நவீன தாராளமயக் கொள்கையின் அடிப்படையில் நடத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்தும் பெரிய போராட்டங்களை நடத்த முன்வருகின்றனர். பெருமளவிலான தொழிலாளர்களைத் திரட்டி பெரும் வேலை நிறுத்தங்கள் பிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ், போர்ச்சுகல், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி போன்ற ஐரோப்பாவின் பல நாடுகளில் நடைபெறுகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் இத்தகைய போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தியாவில் 1991 ஆம் ஆண்டில் நவீன தாராளமயக் கொள்கைகள் துவக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தன. ஒன்றிணைந்த தொழிற்சங்கங்க இயக்கங்களின் தலைமையில் நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகளை எதிர்த்து 17 முறை நாடு தழுவிய பொது வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன.

நவீன தாராளமயமாக்கம், உலகமயமாக்கம் ஆகிய கொள்கைகளின் நிலையத்தகு தன்மை உலகெங்கும் அதிகமாக கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல, மனித குலத்தை வாட்டும் பல சிக்கல்களைத் தீர்க்க முதலாளித்துவம் ஏற்றதுதானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால், பல நாடுகளில் நம்பகமான ஸ்தாபன பலத்தோடு கூடிய ஒரு இடதுசாரி மாற்று என்பது இல்லை. இந்தச் சூழலில் பல நாடுகளில் வலதுசாரிகள் நிலவும் அதிருப்தியை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்துகிறார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றதில் இதனைக் காண முடிகிறது. வெள்ளை இன தொழிலாளர்களிடையே தாராளமய, உலகமய கொள்கைகளுக்கு எதிராக நிலவி ந்த கோபத்தை , அக்கொள்கைகளின் விமர்சகராக தன்னை வேஷம் காட்டிக்கொண்டு டிரம்ப் பயன்படுத்திக்கொண்டார். அமெரிக்காவில் செய்யப்படவேண்டிய வேலைகளை வெளிநாட்டிற்கு அனுப்புவதை அவர் விமர்சித்தார். NAFTA, (வட அட்லாண்டிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்) TPP (பசிபிக் பகுதி பங்காளி ஒப்பந்தம்) போன்ற அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தங்களை விமர்சித்தார். அமெரிக்க உழைப்பாளி மக்களுக்குச் சாதகமாக பொருளாதாரத்தைச் செயல்படுத்துவதாக உறுதிகூறினார். வெள்ளைத் தொழிலாளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக தேசியம், இனவெறி பிரச்சனைகளை எழுப்பினார். மேலும் முஸ்லிம்கள், வெள்ளையர் அல்லாத மக்கள், புலம் பெயர்ந்து வந்தவர்கள் இவர்கள்தான் வெள்ளைத் தொழிலாளர்களின் எதிரிகள் என்று சித்தரித்தார். ஐரோப்பாவில் பிரான்ஸ், ஸ்வீடன், ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் வலதுசாரிகள் தாக்கமும் இனவெறியும் அதிகரித்துவருகின்றன.

இந்தியாவிலும் இத்தகைய சூழல் நிலவுகிறது. காங்கிரசின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளின் தாக்கத்தால் மக்களிடையே நிலவிய அதிருப்தியையும் அந்த ஆட்சிக்காலத்தில் வெளிப்பட்ட பெரிய ஊழல்களையும் வலதுசாரி ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரத்தின் ஓர் அங்கமான பாஜக பயன்படுத்திக்கொண்டது. காங்கிரஸ் அரசு பின்பற்றிய அதே கொள்ககளை பாஜக அரசு இன்னும் அதிக முனைப்புடன் செயல்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்துத்துவக் கொள்கை வகுப்புவாரியாக மக்களை மத அடிப்படையில் பிரித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முனைகிறது. ஒருபுறம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் மக்களிடையே வகுப்புவாதத்தைத் தூண்டி ஒற்றுமையைக் குலைக்க முயல்கிறது. மற்றொருபுறம் வெளிநாட்டு உள்நாட்டு பெருநிறுவனங்களுக்கும், பெருவர்த்தக நிறுவனங்களுக்கும் நன்மை பயக்கும் சர்வதேச நிதி மூலதனத்தின் ஆணைப்படி உருவாக்கப்பட்ட நவீன தாராளமய கொள்கைகளை அமலாக்குகிறது. பாஜக/ஆர்.எஸ்.எஸ் இவை செயல்படுத்தும் வகுப்புவாதக் கொள்கைகள் நவீன தாராளமயத்திற்கு எதிராகப் போராடும் தொழிலாளர்களின் ஒற்றுமையைச் சிதைக்கிறது.

தற்போது நம் நாட்டில் நிலவும் சூழ்நிலை வலிமையான இடதுசாரி அமைப்பைக் கட்டி நவீன தாராளமயகொள்கைகளுக்கு எதிராக நம்பகமான மாற்று கொள்கைகளை நிறுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது காங்கிரசின் அரசியல் அறிக்கை இந்துத்துவா மற்றும் பிற வகுப்புவாத சக்திகளை எதிர்த்த போராட்டத்தை நவீன தாராளமயமாக்கல் கொள்கைகள் உழைக்கும்வர்க்கத்தின் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளை எதிர்த்த போராட்டத்தோடு இணைக்க வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளது. 21 வது காங்கிரசில் அரசியல் உத்திகளை மறுபரிசீலனை செய்து அளிக்கப்பட்ட அறிக்கை, இத்தகைய மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்கவேண்டுமென்றும் போராட்டங்களுக்குத் தலைமைதாங்கி நடத்தவேண்டுமென்றும் அதன் மூலம் கட்சியின் தனிப்பட்ட வலிமையை வளர்க்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளது.

எனவே தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையில் நவீன தாராளமய கொள்கைகள் ஏற்படுத்தும் பிரச்சனைகள் மீது போராட்டங்கள் நடத்தவேண்டும். இப்பிரச்சினைகளை அரசின் கொள்கைகளோடு இணைத்து இக்கொள்கைகளின் பின்னால் உள்ள அரசியலை அம்பலப்படுத்தவேண்டும். இத்தகைய போராட்டங்கள், பிரச்சாரங்கள் மூலம்தான் நம் நாட்டில் உழைக்கும் மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் நவீன தாராளமய கொள்கைகளையும், வகுப்புவாத ஆபத்தையும் நம்மால் தோற்கடிக்க முடியும்.

முதலாளித்துவத்தில் ஏற்படும் சிக்கல்கள் தவிர்க்க முடியாதவை என்பதையும், அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும், உற்பத்தித் திறனிலும் மிகப்பெரிய முன்னேற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் இந்த முதலாளித்துவ அமைப்பு மக்களுடைய அடிப்படைத் தேவைகளைத் தீர்க்க உதவாது என்பதையும் தொழிலாளிவர்க்கத்திற்கும் இதர உழைக்கும் மக்களுக்கும் உணர்த்தவேண்டும். தற்சமயம் மகத்தான நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது. இத்தகைய காலகட்டத்தில், மதிப்பு இழந்த முதலாளித்துவத்திற்கு மாற்றுப்பாதை சோசலிசம் ஒன்றே என்ற செய்தியை மக்களிடையே பரப்ப வேண்டும்.

தமிழில்: பேரா ஹேமா