‘மார்க்சிஸ்ட்’ தத்துவார்த்த மாத இதழ்கள், வெளியான காலத்தில் இருந்து 2021 வரையில், அச்சு இதழ்களை அப்படியே எண்ணியல் (டிஜிட்டல்) வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த கோப்புகள் இனி ஆய்வாளர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இணையத்தில் கிடைக்கும்.
தமிழகத்தின் பல்வேறு துறைகளில் ஆவணங்களை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றி பாதுகாக்கும் மகத்தான பணியை மேற்கொண்டுள்ளது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.
சி.பி.ஐ(எம்) கருவூலம் முயற்சியில், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துடன் இணைந்து மார்க்சிஸ்ட், செம்மலர் மற்றும் தீக்கதிர் இதழ்கள் டிஜிட்டல் வடிவில் ஆவணப்படுத்தப்படுகின்றன.
தெற்காசிய திறந்தவெளி மின்னணு காப்பகம் என்ற அமைப்பு உலகளாவிய முறையில் கலை, மானுடவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் தெற்காசிய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள ஏடுகள், நூல்கள், செய்தித் தாள்கள், கணக்கெடுப்பு தரவுகள் உள்ளிட்ட எண்ணற்ற ஆவணங்களை தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஜேஎஸ்டிஓஆர் (JSTOR) எனும் இணைய நிறுவனத்துடன் கூட்டு மேற்கொண்டு, உலகளாவிய வாசகர்களுக்கு மேற்கண்ட பல்வேறு துறைகளின் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் (பிடிஎப் உள்ளிட்ட வடிவங்களில்) முற்றிலும் இலவசமான முறையில் அளிக்கும் மகத்தான பணியை செய்து வருகிறது. இதில் தற்போது மார்க்சிஸ்ட் இதழ்கள் இடம்பெற்றுள்ளன.
https://www.jstor.org/site/south-asia-open-archives/saoa/mrkcis-33856030/
என்ற இணைய முகவரியில் இதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே ரோஜா முத்தையா நூலகத்தின் உதவியுடன் தீக்கதிர் நாளிதழின் முதல் இதழான 1963 ஜுன் 29 இதழ் தொடங்கி 1977 வரையிலான இதழ்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் நமது மார்க்சிஸ்ட் இதழிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் எழுத்து மற்றும் ஒலி வடிவில் வெளியாகும்.
- மார்க்சிஸ்ட்