உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைக்கான போராடமே முதன்மையானது

பிருந்தா காரத்

(நம் தமிழ் ”மார்க்சிஸட்” இதழுக்காக தோழர் பிருந்தா காரத் அளித்த பிரத்யேக பேட்டி)

மத்திய ஆட்சியில் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் தொடர்வதோடு, சமூகத்தை மத ரீதியாக பிரித்து, தங்கள் அமைப்பை விரிவுபடுத்தியும் வருகிறது. இந்நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எவ்வாறு பார்க்கிறது? எவ்வாறு இவர்களை எதிர்கொண்டு, அவர்களின் விரிவாக்கத்தை தடுத்து நிறுத்துவது?

மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பி.ஜே.பி –  ஆர்.எஸ்.எஸ் தனது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை அனைத்து வகையிலும் உந்தித் தள்ளுகிறது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலையும், அதன் அடுத்தடுத்த நிகழ்வுகளையும், துல்லியத் தாக்குதல் என்பதாகவும் பயன்படுத்திக் கொண்டது. அதை தனது ஆதாயத்திற்காக தவறாகவும் பயன்படுத்தியது. இதன் மூலம் அரசும், அதனை ஆட்சி செய்யும் கட்சியும் கலவையாக தேசியவாத உணர்வை கதையாடி தேர்தலில் கூடுதல் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றனர்.

இன்று எந்த ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு  பி.ஜே.பி ஆட்சி பொறுப்பிற்கு வந்ததோ,அந்த பெரும்பான்மையை பயன்படுத்தியே நாடாளுமன்றத்தின் ஜனநாயக அமைப்பை குழிதோண்டி புதைக்கின்றனர். ஆனபோதும், இந்த வளர்ச்சிப்போக்கில் வேறு ஒரு உண்மை உள்ளது என்பதை கம்யூனிஸ்டாகிய நாம் அங்கீகரிக்க வேண்டும்.  பி.ஜே.பி யின் கோரிக்கைகளுக்கு பின்னால் இந்திய ஆளும் வர்க்கத்தின் அபரிமிதமான ஆதரவு உள்ளது என்பதாகும். அந்நிய மூலதனத்துடன் கைகோர்த்துள்ள இந்திய பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கூட்டே இந்த ஆளும் வர்க்கமாகும். இன்று பி.ஜே.பி தான் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஆகப்பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது.

தற்போதைய நிலையை ஆராய்வதற்கான முக்கியமான அம்சமாக இது அமைகிறது. தேசிய அளவில் பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளே ஆளும் வர்க்கத்தின் இரண்டு கட்சிகளாகும். நவ தாராளமயம் சார்ந்த குணாதிசயங்களிலும் செயல்பாடுகள் மற்றும் உறுதிப்பாட்டிலும் இரண்டு கட்சிகளிடையேயும் எவ்வித வேறுபாடும் கிடையாது. நாடாளுமன்றத்தில் அதீத பலம் பொருந்திய கட்சியாக பி.ஜே.பி தற்போது இருப்பதால் அது நவதாராளமயக் கொள்கையை மிக கடுமையாக அமலாக்குகிறது. தொழிலாளர்களுக்கு எதிரான தொழிலாளர் சட்டங்களை உருவாக்கியதிலும், விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கும் நோக்கோடு கொண்டுவரப்பட்டு, மத்திய அரசால் திரும்பப்பெறப்பட்ட விவசாய சட்டங்களிலும், குறைந்த விலையில் பொது சொத்துக்களை கார்ப்பரேட்டுகள் சூறையாட வழி செய்ததிலும், லாபத்தில் இயங்கும் பொதுத் துறைகளை தனியாருக்கு குறைந்த விலைக்கு தாரைவார்ப்பதிலும் நாம் அரசின் கடுமையான நவ தாராளமய அமலாக்கத்தை பார்க்க முடியும். சலுகைசார் முதலாளித்துவத்தை பாதுகாக்கவும் வளர்த்தெடுக்கவும் இந்த அரசு வெளிப்படையாகவே செயலாற்றுகிறது. ஆளும் வர்க்கத்தினருக்கு சாதகமான அரசின் கொள்கை முடிவுகளின்படி  கார்ப்பரேட்டுகள் ஆதாயம் அடைவதோடு கூடுதல் சலுகைகளையும் பெறுகின்றனர். அதீதமான சொத்துக் குவிப்பு மற்றும் சாதனை படைக்கும் லாபத்தை ஈட்டி அதானி பணக்காரர்களின் முன்னணி பட்டியலில் இடம்பிடித்தது நிச்சயமாக எதேச்சையான ஒன்றல்ல.

வர்க்கப் பார்வையில் கூறுவதென்றால், பெருமுதலாளிகள் உடனான இந்த நட்புறவு என்பது மற்ற வர்க்கங்களுக்கிடையே ஒரு மோதலை இதன் மூலம் ஏற்படுத்துகிறது. உதாரணமாக, கொரோனா காலத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் எதிர்கொண்ட நஷ்டத்தின் போது கடுமையான பாகுபாட்டை உணர்ந்தனர். பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி அமலாக்கம் ஆகியவை அவர்களின் சிக்கலை மேலும் அதிகப்படுத்தியது. கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு விவசாயத்தை கையளிக்கும் முடிவுக்கு எதிராக, கிராமப்புற இந்தியாவில் பல்வேறு தரப்பட்ட விவசாய பகுதியினரிடையே ஒரு ஒற்றுமை உருவாகியது. உழைக்கும் வர்க்கம் இக்காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆதிக்க போக்குகள் மற்றும் நிலமற்றவர்களின் உயர்வால் கிராமப்புற உழைக்கும் வர்க்கத்தினரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

வர்க்க சக்திகளின் ஒருங்கிணைவை புரிந்துகொள்ள முயற்சிப்பதோடு, முரண்பாடுகளையும் வித்தியாசங்களையும் பயன்படுத்தி போராட்டங்கள் மூலம் சுரண்டப்படும் வர்க்கங்களிடையே ஐக்கியத்தை உருவாக்கி, சமூக மாற்றத்திற்கான திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். இதற்கு இந்த அனைத்து பிரச்சினைகளிலும் கட்சி ஊக்கத்துடன் தலையிட்டு வர்க்க வெகுஜன அமைப்பை வலுப்படுத்த வேண்டும்.  அதன் மூலம் ஆளும் அரசின் கொள்கைகளால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான வர்க்கத்தினரிடையேயும் இதர பகுதியினரிடையேயும்  விரிவாக சென்றடைவது.

அதே நேரம், சங்பரிவார் கூட்டத்தினால் வழி நடத்தப்படும் மத்திய அரசின் பெரும்பான்மைவாதத்தை முதன்மைப்படுத்துவதையும், அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள மதச்சார்பின்மை மீதான கடுமையான தாக்குதல்களையும் எதிர்த்த போராட்டத்தினை அதே அளவிளான  முக்கியத்துவத்துடன் நாம் முன்னெடுக்க வேண்டும். இந்த அரசுக்கு மதச்சார்பின்மை என்பது தவறான வார்த்தையாக உள்ளது. சங்பரிவாரின் இந்துத்துவ நோக்குடன் மூழ்கடிக்கப்படாத எந்த ஒரு சுயேட்சையான அமைப்பும் தற்போது இல்லை. நீதித்துறை, தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகள், அரசியல் அமைப்பு சட்டத்தின்படியாக இல்லாமல் சங்பரிவாரின் இந்து ராஷ்ட்ராவின் மீது பற்று கொண்ட கொள்கை சார்பின் அடிப்படையில் சுயேச்சையான அமைப்புகளில் பணியமர்த்தப்படுவது என இது நீளும். 

உயர் கல்வி நிறுவனங்களும் இத்தகைய கடுமையான தாக்குதலை எதிர்கொண்டது. உயர்கல்வி நிறுவனங்களின் உயர் பொறுப்பில் தகுதியற்றவர்களை அமர்த்துவது, பாடதிட்டத்தில் வரலாற்று நோக்கை மறுத்து, அறிவியல் ரீதியான ஆய்விற்கு பதிலாக தெளிவின்மையையும் மாயைகளை கொண்டு நிரப்புவது நடந்துள்ளது. மதச்சார்பின்மையும் ஜனநாயகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். தேசத்தின் முக்கியமான இந்த இரு தூண்களும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுமாயின் எவ்வாறு மதச்சார்பின்மை சாத்தியமாகும்? மதச்சார்பின்மையின் மாண்புகள் அல்லாத மதக் கோட்பாடுகளை அடிப்படையாக கொண்ட தேசத்தை எவ்வாறு ஜனநாயகம் உள்ள நாடு என்று கொள்ள முடியும்? சங் பரிவார் முன்னிறுத்தும்  சித்தாந்தம் என்பது மனுஸ்மிருதியின் அடிப்படையில் சாதிய ஆணாதிக்க கருத்தாக்கத்தை ஆழமாக கொண்டதாகும். சமூக சீர்திருத்தம் என்பது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி க்கு சாபம் போன்றதாகும். சாதியத்திற்கு எதிராகவும், சாதிய அமைப்பு முறைக்கு எதிராகவும் ஆணாதிக்கத்திற்கு எதிராகவும்  போராடுவது என்பது சங்பரிவார் கூட்டத்தின் சித்தாந்தத்தின் மீது தொடுக்கும் கடும் தாக்குதல் ஆகும்.

பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்துவது குறித்த விரிவான புரிதலின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) செயல்படுகிறது.  தேசத்தின் மீதுள்ள இந்த மோசமான அபாயத்தை எதிர்த்து போராடி வீழ்த்திட வேண்டும். நமது சொந்த மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, நவதாராளமயத்திற்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைப்பதோடு, ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாகத்தான் இது சாத்தியமாகும்.

நவ தாராளமயம் மற்றும் இந்துத்துவ சித்தாந்தத்தை ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. சக்திகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், இதற்கு முன்னதாகவும் பலமுறை விவாதிக்கப்பட்டது போல், இதற்கு எதிரான ஒன்றுபட்ட அணியை கட்டுவது சாத்தியமா? அனைத்து எதிர்கட்சிகளையும் ஒரே மேடையில் அணி சேர்ப்பது சாத்தியமா?

அனைவரையும் ஒரே அணியில் திரட்டுவதற்கு பல முன்மாதிரிகள் உள்ளன. சுரண்டப்படும் மற்றும் ஒடுக்கப்படும் சக்திகளை ஓரணியில் திரட்டுவதே மிகவும் முக்கியமான திரட்டுதலாகும்.

அரசியல் கட்சியை பொறுத்தவரை வலுவான இடதுசாரி அணியை கட்டுவதே முதன்மையான முன்னுரிமையாகும்.  இது ஒன்றும் எளிதான காரியமல்ல. நாம் அறிந்தது போல் பல்வேறு விஷயங்களில் இவற்றுக்கிடையே வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியும் பார்வர்ட் பிளாக் கட்சியும் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கின்றனர். அதேநேரம் வங்கத்தில் இடது ஜனநாயக அணியில் உள்ளனர். சிபிஐ(எம்.எல்) கட்சி வங்கத்தில் சிபிஐ(எம்) ஊழியர்கள் திரிணாமுல் கட்சியினரால் தாக்கப்படுவதை கண்டிப்பதில்லை. கடந்த தேர்தலில் திரிணாமுல் கட்சியை எதிர்த்து போட்டியிடவும் இல்லை. ஆனபோதும் நாம் இடதுசாரிகளின் ஒற்றுமையை வலுப்படுத்த முயற்சிக்க வேண்டும். அதுவே இதர சக்தியினரை நம்மோடு அணிசேர வழி செய்யும்.

பி.ஜே.பி. க்கு எதிரான இதர கட்சிகளை கொண்ட அணியை பொறுத்தவரை, அகநிலை விருப்பம் மட்டும் அதை சாத்தியப்படுத்த விடாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இம்முழக்கத்தை எப்போதும் வைக்கவில்லை. ஏனெனில் அது சாத்தியமில்லை என்பதை அனுபவம் காட்டியுள்ளது. உதாரணமாக, நவதாராளமயத்தை ஆதரிக்கும் கட்சிகளை கொண்ட ஒரு நிரந்தரமான அனைத்துக் கட்சி அணியை நாம் உருவாக்க முடியுமா? நம் அடிப்படை வர்க்கத்தினரின் உரிமைக்காக நாம் போராட வேண்டியுள்ளது. தற்போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி  மட்டுமே தேசிய அளவில் உள்ளது. ஆனபோதும் அதனால் தன்னை விரிவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஐ பொருத்தவரை நாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அங்கத்தினர் அல்ல. பி.ஜே.பி க்கு எதிரான பொதுவான விஷயங்களில்  அதனுடன் ஒத்துழைத்துள்ளோம். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெரிய அளவில் பலவீனம் அடைந்துள்ளது. அதன் பல தலைவர்கள் பிஜேபி யுடன் இணைந்துள்ளனர். மற்ற கட்சிகளை அணி சேர்க்கும் நிலையிலும் காங்கிரஸ் இல்லை. பல மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு கடும் இழப்பை ஏற்படுத்தியே தங்களை நிலைப் படுத்தியுள்ளனர். தமிழ்நாடு மற்றும் பீஹார் மாநிலங்களில் பிராந்திய கட்சிகளான திமுக மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள் ஆகிய கட்சிகளுடன் உள்ள சிறிய கட்சியாகவே தன்னை ஆக்கிக்கொண்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் கூட்டப்பட்ட கூட்டங்களில் அதற்கு வெளியே உள்ள தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் ஆம் அத்மி கட்சி ஆகியவை அழைக்கப்படவும் இல்லை; அவற்றிற்கும் இதில் பங்கேற்கும் விருப்பமும் இல்லை. மேலும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் அவை நவதாராளமயத்தையே அமலாக்குகிறது. இது பிஜேபி க்கு எதிரான கொள்கை ரீதியான மாற்றை உருவாக்குவதை பலவீனப்படுத்துகிறது. மேலும் பிஜேபி முன்னிலைப்படுத்தும் மதவாதத்தை எதிர்த்து போராடவும் அது முன்வருவதில்லை. பல நேரங்களில் அதன் மீது மிதமான அல்லது சமரச போக்கையே கையாள்கிறது.

பிரச்சனைகளின் அடிப்படையில் இந்த அனைத்து கட்சிகளுடனும் நாம் ஒரு ஒற்றுமையை கட்டியமைக்க தொடர்ந்து முயற்சித்துள்ளோம். உதாரணமாக, கூட்டாட்சிக்கு எதிரான மோடி அரசின் நிலைப்பாட்டை எதிர்த்த போராட்டத்தில், ஆளும் மாநில கட்சிகளிடையே ஒரு இணக்கதை ஏற்படுத்துவது சாத்தியப்பட்டது. கேரள இடது ஜனநாயக அணி இதில் தீவிரமான பங்காற்றியது. அதேபோல் விவசாய இயக்கங்கள் அழைப்பு விடுத்த தேசிய அளவிலான பந்திற்கு ஆதரவாக கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. பி.ஜே.பி யின் விவசாய விரோத கொள்கைகளுக்கு எதிராக தன்னிச்சையாக கள அளவில் இணக்கம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தின் ஜனநாயக முறையை தகர்த்து அரசு நிறைவேற்ற முனைந்த சட்டங்களை எதிர்த்த போராட்டத்தில் நாடாளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சிகளிடையே ஒரு இணக்கம் ஏற்பட்டது. இவை எல்லாம் ஒரு சாதகமான வளர்ச்சி போக்குகள் மட்டுமே. இவற்றை அனைத்து கட்சிகளின் அரசியல் கூட்டணி என்பதோடு இணைத்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது.

வலுவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இடது அணி மட்டுமே பி.ஜே.பி க்கு எதிரான விரிவான அணிதிரட்டலை சாத்தியமாக்கும் என்பதை அனுபவங்கள் எடுத்துக்காட்டுகிறது. விரிவான ஒற்றுமையை கட்டியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தன்னை வலுவாக கட்டியமைக்க வேண்டும். தற்போதைய நிலையில் அரசியல் ரீதியான தலையீடுகளை மேற்கொள்ளும் பலம் நமது கட்சிக்கு வெகுவாக சரிந்துள்ளது. எனவே, வர்க்க , வெகுஜன இயக்கங்களை கட்டி எழுப்புவதன் மூலம் வலுவான வெகுஜன கட்சியை கட்டியமைக்கும் பணியே அடிப்படையில் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வலது திருப்பம் நிலவும் இன்றைய சூழலில் நாம் எவ்வாறு இடது ஜனநாயக அணியை சாத்தியப்படுத்த போகிறோம்?

இடது ஜனநாயக முன்னணி பற்றி சிலரிடம் ஒரு தவறான புரிதல் உள்ளது. அது ஒரு பிரச்சார முழக்கம் என்று கருதுகின்றனர்; இடது ஜனநாயக முன்னணி தற்போது போராடி, கட்டவேண்டிய ஒரு அணி என்று அவர்கள் பார்ப்பதில்லை. இது கட்சியின் புரிதலுக்கு மாறானது.

இடது ஜனநாயக முன்னணி என்பது அரசியல் கட்சிகள் மட்டும் என்கிற எல்லைக்கு உட்பட்டது அல்ல; மாறாக, முற்போக்கு சமூக சக்திகள், இயக்கங்கள், அறிவு ஜீவிகள்,தொழில்துறையின் தொழில்நுட்பத்திறன் கொண்டோர்(professionals) ஆகியோரை திரட்டுவதற்கான ஒரு மேடை.அந்த மேடை ஒரு மாற்று திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவின் எதிர்காலம் பற்றிய எதிர்காலப் பார்வை கொண்டது.

இது மிக முக்கியமான உடனடி கடமை.இது நேர்மறையான திட்டங்கள் அடிப்படையில் விரிவான மக்கள் திரளை அணி சேர்க்கும் கடமையாகும். இது வெறும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி க்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. அந்தப் போராட்டம் மாற்று எதிர்காலப் பார்வை (vision )யுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படவேண்டும். சங் பரிவார் சக்திகளின் கீழ் வலதுசாரிகள் அணிதிரட்டப்படுவதை முறியடிக்க, மாற்றுத் திட்டத்தின் அடிப்படையில், சமூக மற்றும் அரசியல் சக்திகளை திரட்டிட வேண்டும். அத்தகைய சக்திகள், குழுக்கள்,கட்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தந்த மாநில அளவிலான நிலைமைகளை சரியாக ஆய்வு செய்து, அவர்களை கண்டறிந்து, இடது ஜனநாயக அணி நிறுவிட பணியாற்ற வேண்டும்.

தமிழில் – ச.லெனின்

சமூக ஒடுக்குமுறையும் இடது ஜனநாயக திட்டமும்

குரல்: அருந்தமிழ் யாழினி

உ. வாசுகி

இந்தியச் சூழலில் மக்கள் ஜனநாயகப் புரட்சியை இலக்காக வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு உகந்தவகையில் மக்கள் ஜனநாயக அணியை உருவாக்க வேண்டும் என்பது கட்சித் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. வர்க்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட வேண்டிய அந்தப் போராட்ட  அணியின் முன் முயற்சியாக, வர்க்க சேர்மானத்தில்  மாற்றத்தை ஏற்படுத்திட இடது ஜனநாயக அணி கட்டமைக்கப்பட வேண்டும் என்பது 1978 முதல் அகில இந்திய மாநாடுகளில் வலியுறுத்தப்பட்டு வந்த  கடமையாகும். இடைப்பட்ட காலத்தில் இடது ஜனநாயக அணி கட்டப்படுவதற்கான முக்கியத்துவம் பின்னடைவை சந்தித்தது. 20வது மாநாட்டில் அந்த பலவீனம் பரிசீலிக்கப்பட்டு, இடது ஜனநாயக அணி கட்டப்படுவது  அதி முக்கியத்துவம் வாய்ந்த முன்னுரிமை கடமையாக மீட்டெடுக்கப்பட்டது.

இந்திய மக்களின்  முன், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் முற்றிலும்  வேறுபட்ட மாற்றாக இடது ஜனநாயக கொள்கைகளும் திட்டங்களும் முன்வைக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. மக்கள் தேர்வு செய்வதற்கு ஏதுவாக, அரசியல் பொருளாதார சித்தாந்த பண்பாட்டுத் தளங்களில் ஒரு மாற்றுப்பாதை உருவாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அத்தகைய திட்டமும் வகுக்கப்பட்டது. இடதுசாரி கட்சிகள், அமைப்புகள், குழுக்கள், தனிநபர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை, சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பகுதிகளைத் திரட்டி, வர்க்கங்களை உள்ளடக்கிய போராட்ட அணியாக இது வடிவமைக்கப்பட வேண்டும் என அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானம் வழிகாட்டியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய ஒன்றிய பாஜக அரசு அதன் சித்தாந்த அடிப்படையில் பொருளாதார சுரண்டலை தீவிரப்படுத்துவது மட்டுமல்ல, சமூக ஒடுக்குமுறையை ஊக்குவிக்கவும் நியாயப்படுத்தவும் செய்கிறது. அடையாள அரசியல் இதற்கான தீர்வாக இருக்க முடியாது. சமூக ஒடுக்குமுறையின்  அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு வேர்களை அடையாளம் கண்டு, அவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிப்பதற்கான கொள்கைகள்தான் மாற்றுக் கொள்கைகள் ஆக இருக்க முடியும். வேறுபட்ட தலைவர்களும் கட்சிகளும் மீட்பராக, ஆளும் கட்சியின் மாற்றாகக் காட்சியளிக்க முயற்சிப்பதை, இடது ஜனநாயக மாற்றுக் கொள்கைகள், அவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் போராட்டங்கள் மூலமாகவே அம்பலப்படுத்த முடியும்.

தற்போதைய நிலைமை:

சாதிய, பாலின ஒடுக்குமுறைகள் கடந்த காலத்தை விட அதிகரித்து வருகின்றன. சாதிப் பெருமிதமும், ஆண் என்கிற பெருமிதமும் வெளிப்படையாகவே பிரதிபலிக்கப் படுகின்றன; பகிரப்படுகின்றன. இவை உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாகவும் உள்ளன.

வருடத்துக்கு சராசரியாக 30,000 பெண்கள் இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதில் பெரும்பான்மையாக  ஏழை குடும்பங்கள், பட்டியலின, பழங்குடியின பெண்கள் அடங்குவர். ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆளும் கட்சியான பாஜகவின் தலைவர்களும், அமைச்சர்களும், முன்னணி ஊழியர்களும் இத்தகைய குற்றவாளிகள் பட்டியலில் உள்ளனர். உடை உள்ளிட்ட பல்வேறு கவைக்குதவாத வாதங்களை முன்வைத்து இத்தகைய குற்றங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. மாறுபட்ட கருத்துக்கள், பாஜகவின் மீதான விமர்சனங்கள்  பதிவு செய்யப்பட்டால், அப்பெண்ணுக்கோ அல்லது ஆணின் பெண் உறவினர்களுக்கோ  பகிரங்கமாக பாலியல் வல்லுறவு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இஸ்லாமியப் பெண்களை கற்பனையாக ஏலம் விடக்கூடிய செயலிகள் சமீபத்தில் உருவாக்கப்பட்டன. வலுவான வணிகமயமாக்கலை நோக்கிச் செல்லும் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்தால் பெண்கல்வி பெருமளவில் பாதிக்கப்படும். ஊரக வேலை உறுதி சட்டத்திற்கு  நிதி ஒதுக்கீடு தொடர்ந்து போதுமானதாக இல்லாத சூழல், அதை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான ஊரகப் பெண்களை பாதிக்கிறது. உலக வங்கி நிதி/கடன் உதவியோடு கொண்டுவரப்படும் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏழைக் குடும்பங்களின் குடியிருப்பைக் கேள்விக்குறியாக்குகிறது. இது பெண்களின் பாதுகாப்பை பலவீனப்படுத்துகிறது. குடும்பப் பணிக்கான பொறுப்புகள் பெண்ணின் தலை மீது சுமத்தப்பட்டுள்ள சமூகச் சூழலில் கடும் விலை உயர்வு, பொது சேவைகளில் இருந்து அரசு விலகல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் பெண்களுக்கே கூடுதலான பின் விளைவுகளை உருவாக்குகின்றன. உழைப்பு படையில் 2013இல் 36 சதவீதமாக இருந்த பெண்களின் பங்கேற்பு, 2018இல்  23 ஆகக் குறைந்து, 2019 இல் 18 ஆக மாறி, 2021இல் 9.24 சதவீதமாக படுபாதாளத்தில் சரிந்திருக்கிறது. பசிக் குறியீட்டில் மிக மோசமான நிலைமையில் இந்தியா உள்ளது. பெருந்தொற்று  காலத்தில்  அதிகரித்த உலகளாவிய வறுமையில் 60 சதவிகிதம்  இந்தியாவில் நிலவியது என்னும்போது, சமூகத்திலும், குடும்பத்திலும் இரண்டாம் தரக் குடிமக்களாக பாவிக்கப்படக்கூடிய பெண்களே அதிகம் சேதாரம் அடைகின்றனர். இதில் பட்டியலின, பழங்குடியின பெண்கள் பல மடங்கு அதிகம் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

பழங்குடியின மக்களின் நிலங்கள் மற்றும் வசிப்பிடங்களைக் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க ஏதுவாக  விதிமுறைகள், சட்டங்கள் திருத்தப்படுகின்றன. வன உரிமை சட்டத்தின் அடிப்படையான சாராம்சம் நீர்த்து போகிறது. பட்டியலின மக்களின் மீதான வன்கொடுமைகள் எண்ணிக்கையில் அதிகரிப்பது மட்டுமல்ல, மிகக் கொடூரமான முறையில் நடத்தப்படுகின்றன. இவற்றை செய்யும் சாதி ஆதிக்க சக்திகளின் பகுதியாகவும், ஆதிக்கத்தை நியாயப்படுத்துவதோடு குற்றவாளிகளின் பாதுகாவலர்களாகவும்  பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் செயல்படுகின்றன. பல்வேறு  பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்போது இட ஒதுக்கீடு அமலுக்கு வராது என்ற நிலை, பட்டியலின மக்களின், பெண்களின் வேலைவாய்ப்பைப் பெரிதும் பாதிக்கும் பிரதான பிரச்சனையாக முன்னுக்கு வருகிறது.

இந்தியாவின் பிரத்தியேக சூழலில் ஏற்கனவே நிலவி வந்த  சாதியக் கட்டமைப்பின் மீது தான் நவீன வர்க்கங்களான  முதலாளி, தொழிலாளி வர்க்கங்கள் உருவாயின. நிலப்பிரபுத்துவம் முற்றாக ஒழிக்கப்படாத சூழலில், முதலாளி வர்க்கம் நவீன வர்க்கமாக இருந்தாலும், அதற்கு முந்தைய காலகட்டத்தின் சாதிய, ஆணாதிக்க ஒடுக்குமுறை கருத்தியலைத் தன் உழைப்புச் சுரண்டலுக்கும் , லாபவெறிக்கும்  சாதகமாக பயன்படுத்தி வருவதையே பார்க்கிறோம். பல்வேறு அரசியல் கட்சிகள் சாதி ஒழிப்புக்கோ, சாதிய ஒடுக்குமுறை ஒழிப்புக்கோ உண்மையாகப் போராடாமல், சாதிகளை வாக்கு வங்கிகளாகக் கருதியே செயல்படுகின்றன. சாதியின் பெயரால் உணர்வுகளைத் தட்டி எழுப்பி, அந்த அடையாளத்தை அரசியல் பேரத்துக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. நிலம், கூலிக்காகவும், பெருநில உடைமைக்கு எதிராகவும் நடத்த வேண்டிய போராட்டங்களைத் தம் நிகழ்ச்சிநிரலில் கூட வைப்பதில்லை. நில விநியோகம்  மற்றும் ஊரக வேலை  திட்டம் அமல்படுத்தல் சம்பந்தமாக  இதர கட்சிகள்  களத்துக்கு வருவதில்லை என்பது  இதற்கான உதாரணம். மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் தான் பிரச்சனைக்கு பின்னாலுள்ள சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் குறிவைக்கின்றன. நிலம், கூலி, பெரு நிலவுடைமை முறைமைக்கு எதிரான போராட்டங்களை நடத்துகின்றன. தீவிர நிலச் சீர்திருத்தத்தை முன்வைக்கின்றன. இந்தியாவிலேயே நில விநியோகம் அதிகமாக நடைபெற்ற மாநிலங்களில் மேற்கு வங்கம் கேரளா, திரிபுரா முன்னிலையில் உள்ளன. தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை கட்டப்பட வேண்டுமானால், சாதிய முறைமைக்கும், பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கும்  எதிராக ஒன்றுபடுவது முன் நிபந்தனையாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாக வரையறுக்கிறது.

நடவடிக்கைகள்:

இச்சூழலில் இடது ஜனநாயக சக்திகளை அணிதிரட்ட வும், போராட்டங்களில் இறக்கவும் சில நடவடிக்கைகள் மார்க்சிஸ்ட் கட்சியால் எடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இடதுசாரி வெகுஜன அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு, JEJAA என்கிற பெயரில் செயல்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. தொழிற்சங்க அமைப்புகள், விவசாய விவசாயத் தொழிலாளர் அமைப்புகளின் பொது கோரிக்கைகள் மீதான கூட்டுப் போராட்டம் இக்காலகட்டத்தில் வலுப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒரு நீண்ட நெடிய வெற்றிகரமான போராட்டத்தை நடத்தி முடித்துள்ளது. அதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பங்கு பாத்திரம் பிரதானமானது. பெண்களுக்கும் பட்டியலின மக்களுக்கும் எதிராக செயல்படும் காப் பஞ்சாயத்துகள், இக்காலகட்டத்தில் மேற்கூறிய பகுதியினரும் பங்கேற்கும் விதத்தில் இயங்கின.

பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய பட்டியலின,  பழங்குடியின மக்களுக்கான பரந்த மேடைகள், சிறுபான்மை நல குழுக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலோடு செயல்பட்டு வருகின்றன. சாதிய, பாலின ஒடுக்குமுறை பிரச்சினைகளில் கட்சியின் தோழர்கள் களத்தில் இறங்கி தலையீடு செய்கின்றனர். அதிகரித்து வரும் சாதி ஆணவக்  குற்றங்கள் மற்றும் கொலைகளுக்கு எதிராக உறுதியான போராட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகின்றன. கோயில் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களும், பட்டியல் இன மக்களும்  உள்நுழைவதை உறுதிப்படுத்துவதற்கான இயக்கங்களும் தொடர்ந்து நடக்கின்றன. சபரிமலை பிரச்சினையை உதாரணமாகக் கூற முடியும். சமூகநீதி பாரம்பரியத்தை நினைவுகூர்ந்து அடர்த்தியான ஒரு மனிதச்சங்கிலி லட்சக்கணக்கான பெண்களின் பங்கேற்புடன் கேரளாவில் நடைபெற்றது. நிர்பயா பிரச்சனைக்குப் பிறகு அமைக்கப்பட்ட நீதியரசர் வர்மா கமிஷனுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகள் மதிப்பு மிகுந்தவையாகும். தமிழக அரசால் வெளியிடப்பட்ட பெண்களுக்கான வரைவு கொள்கை குறித்து அரசியல் கட்சி என்கிற முறையில் அனேகமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே தன்னுடைய கருத்துக்களை விரிவான குறிப்பாக அனுப்பி இருக்கிறது.

மாநில அரசின் குறுகிய அதிகார வரம்புக்கு உட்பட்டு, இடது ஜனநாயக மாற்று கொள்கைகளை ஓரளவு அமல்படுத்திய செயல்பாட்டின் மூலமாகவே கேரளாவில் இடது முன்னணி அரசு பெரும்பான்மையான மக்கள் ஆதரவோடு மீண்டும் தேர்வு செய்யப்பட்டது.

 பழங்குடியின மக்களின் கலாச்சாரம், மொழி, நிலம், வாழ்வாதாரம் உள்ளிட்ட உரிமைகளைப் பாதுகாக்க அவர்கள் அடர்த்தியாக வசிக்கக்கூடிய தொடர்பகுதிகளுக்கு பிரதேச சுயாட்சி உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்திலேயே சுட்டிக்காட்டப்பட்ட அம்சம். அதன் அடிப்படையில்தான் மேற்கு வங்கத்தில் கோர்க்கா இன மக்களுக்கும், திரிபுராவின் பழங்குடியின மக்களுக்கும் மாவட்ட சுயாட்சி கவுன்சில்கள் அமைக்கப்பட்டன. பழங்குடியின மக்களின் குடியிருப்பு, இனச்சான்றிதழ், கல்வி, வேலைவாய்ப்புக்கு வலுவான போராட்டங்கள் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடத்தப்படுகின்றன

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு ஒன்றிய பாஜக அரசு காட்டுகிற தயக்கம் அதன் சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே  முன் வருகிறது என சுட்டிக் காட்டப்பட்டது. கணக்கெடுப்பு என்று சொல்லும்போது எண்ணிக்கை மட்டுமல்ல; கல்வி, வேலைவாய்ப்பு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வாழ்வியல் அம்சங்களில் இந்த சாதிகள் எந்த நிலைமையில் உள்ளன என்பதும் புரிந்து கொள்ளப்படும். இந்துக்கள் என்கிற ஒற்றை வார்த்தைக்குள் சாதிய ஒடுக்குமுறைகளையும் வேறுபாடுகளையும் மூடி மறைக்கிற ஆர் எஸ் எஸ்ஸின் முயற்சிகள் இதில் அம்பலமாகும்.

இடது ஜனநாயக திட்டம் சமூக நீதி குறித்த கீழ்கண்ட அம்சங்களை மாற்றுக் கொள்கையாக முன்வைக்கிறது:

 • சாதிய முறைமையையும், சாதிய ஒடுக்குமுறையின் அனைத்து வடிவங்களையும் முற்றாக ஒழிப்பது;
 • பட்டியலின, பழங்குடியின மக்களின் அடிப்படையான மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு சிறப்பு நடவடிக்கைகள் எடுப்பது;
 • பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான துணை திட்டத்தை ஒரு சட்டத்தின் அடிப்படையில் உருவாக்குவது;  இதனை கண்காணிக்க உயர்மட்ட கமிட்டி ஒன்றை நிறுவுவது;
 • பழங்குடியின மக்களின் நில  உரிமை, வாழ்வுரிமை, கலாச்சார உரிமைகளுக்கான அரசியல் சாசனப் பிரிவுகள் மற்றும் சட்டப் பிரிவுகளைப் பாதுகாப்பது;
 • தனியார் துறையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவது;
 • சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவது; பிற்பட்ட சாதிகள் குறித்தும் கணக்கெடுப்பது;
 • நிலுவையில் இருக்கும் காலி இடங்களை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்புவது
 • கையால் மலம் அள்ளும் நடைமுறையைக் கறாராக தடுத்து நிறுத்துவது;
 • தீண்டாமைக்கு எதிராகக் கடும் தண்டனைகளை அமல்படுத்துவது;
 • வன உரிமை சட்டத்தைக் கறாராக  நடைமுறையாக்குவது;
 • சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டம் ஆக்குவது;
 • பெண்கள் குழந்தைகள் மீதான கொடூரமான வன்முறையைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது; குற்றவாளிகள் தப்பி விடாமல் தண்டனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிசெய்வது;
 • சாதி ஆணவக் குற்றங்களுக்கு எதிரான சட்டம் கொண்டு வருவது.

மாநில, அகில இந்திய மாநாடுகள் இடது ஜனநாயக அணி மற்றும் திட்டம் குறித்து பரிசீலிக்கும். ஆனால், இவை மாநாட்டு பரிசீலனைக்கான அம்சங்கள் மட்டுமல்ல; மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைகளும், கமிட்டிகளும், உறுப்பினர்களும் தம் அன்றாட பணிகளை, தமிழகத்தின் இடது ஜனநாயக திட்டத்தைச் சுற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். இடதுசாரி வெகுஜன அமைப்புகளை இவற்றிலுள்ள கோரிக்கைகளின்பால் அணிதிரட்டி, கூட்டுப் போராட்டம் நடத்திட வேண்டும். இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வோர் அம்சத்தையும் ஆதரிக்கக் கூடிய பல்வேறு முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் கண்டிப்பாக உள்ளன. அவற்றையும் உள்ளடக்கிய கூட்டு மேடைகள் உருவாக்கப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டும். ஒரே ஒரு கோரிக்கையில் அல்லது அக்கோரிக்கையின் ஒரே ஒரு புள்ளியில் இணைய முன் வருபவர்களையும் அதற்குத் தகுந்தவாறு பயன்படுத்திட வேண்டும்.

ஒன்றிய அரசின் சாதிய மதவெறி கொள்கைகள், மாநில உரிமைகள் பறிப்பு, பொருளாதார சுரண்டல் போன்றவற்றை எதிர்த்த போராட்டங்களில் மாநில முதலாளித்துவ கட்சிகளை இணைத்துக் கொள்ள வேண்டும். பெரு முதலாளி வர்க்க பிரதிநிதிகளான பாஜக, காங்கிரசையும், மாநில முதலாளித்துவ கட்சிகளையும் சமப்படுத்தி பார்க்கக்கூடாது என்று கட்சி ஆவணங்கள் சுட்டிக் காட்டுகிற அதே நேரத்தில், நமது வர்க்கங்கள் மற்றும் சமூக ஒடுக்குமுறையில் பாதிக்கப்படும் பகுதியினருக்கான  ஆதரவு நிலையில் சமரசத்திற்கு இடமில்லை எனவும், அத்தகைய கொள்கைகளை நடவடிக்கைகளை ஆட்சியிலிருக்கும் மாநில முதலாளித்துவ கட்சி எடுக்கும்போது மக்களைத் திரட்டி போராட்டங்களில் இறக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.  இதற்கு கட்சியின் சொந்த பலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தலையாய கடமை. எனவே கட்சித் திட்டம் சார்ந்தும், இடது ஜனநாயக திட்டம் சார்ந்தும் பணிகளை ஒருங்கிணைத்து முன்னேறுவது என்பது அவசர அவசியமானதாகும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நகல் தீர்மானம் சொல்வது என்ன?

(மார்க்சிஸ்ட் கட்சியின் 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் நகல் தீர்மானம் குறித்து : முழுமையாக வாசிக்க | ஆங்கிலம் (பி.டி.எப்) | Link )

 • ஜி. ராமகிருஷ்ணன்

2022 ஏப்ரல் மாதத்தில் நடக்கவுள்ள, நமது கட்சியின் 23 வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ள அரசியல் தீர்மானத்தின் நகலினை தற்போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ளது. (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கவேண்டிய மாநாடு, கொரோனா பாதிப்பினால் 4 ஆண்டுகளுக்கு பின் நடக்கவுள்ளது) நகல் தீர்மானத்தை படிக்க உதவியாக ஒரு சுருக்கமான அறிமுகம் வழங்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

நாடு முழுவதும் உள்ள கட்சி அமைப்புகள் இந்த நகல் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தியும், தனியாகவும் திருத்தங்களை அனுப்புவார்கள். வரப்பெற்ற திருத்தங்களையும், மாநாடு நடக்கும்போது விவாதத்தில் முன்வைக்கப்படும் திருத்தங்களையும் கணக்கிலெடுத்துக்கொண்டு, அரசியல் தீர்மானம் இறுதிப்படுத்தப்படும். கட்சியின் கொள்கையை உருவாக்குவதில் கட்சியின் அணிகள் முழுவதையும் ஈடுபடுத்தும் இந்த நடவடிக்கை நமது கட்சியில் பின்பற்றும் உட்கட்சி ஜனநாயகத்தின் உயர்ந்த வெளிப்பாடு ஆகும்.

நகல் அரசியல் தீர்மானத்தை 3 பகுதிகளாக பகுத்துப் பார்க்கலாம். முதலாவது, உலகளாவிய நிலைமை. இரண்டாவது தேசிய நிலைமைகள். மூன்றாவது எதிர்கால அரசியல் கடமைகள்.

 உலக நிலைமைகள்:

 “நவீன தொழில் துறை, உலகச் சந்தையை உருவாக்கியுள்ளது… நவீன முதலாளித்துவ வர்க்கம் என்பதே நீண்டதொரு வளர்ச்சிப்போக்கின் விளைவு – உற்பத்தி முறைகளிலும், பரிவர்த்தனை முறைகளிலும் தொடர்ச்சியாக நிகழ்ந்த மாற்றங்களின் விளைவு” என்று 1848 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை குறிப்பிடுகிறது. இப்போது முன்னைக்காட்டிலும்  உலகச் சந்தை விரிந்து பரந்ததாக இருக்கிறது. அறிக்கை எழுதப்பட்ட 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்த நிலைமைகளில் இருந்து 20 ஆம் நூற்றாண்டிலும், தற்போதும் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட வளர்ச்சி உலகச் சந்தையில் பெரும் தாக்கம் செலுத்துகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இந்தியா உள்ளிட்டு பல காலனி நாடுகள் விடுதலை அடைந்தன. எனவே, ஏகாதிபத்திய ஆதிக்கம் முந்தைய வடிவத்தில் தொடரமுடியவில்லை. இருந்தாலும் நவீன-தாராளமய பொருளாதாரக் கொள்கையின் மூலம், அறிவியல் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட வளர்ச்சியைப் பயன்படுத்தி, தமது ஆதிக்கத்தை ஏகாதிபத்திய நாடுகள் வலுப்படுத்திக்கொண்டன. பொருளாதார ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக, உலகெங்கிலும் ராணுவத் தலையீட்டையும், அரசியல் தலையீட்டையும் தொடர்ந்து மேற்கொள்கிறார்கள்.

அதே நேரத்தில், பொருளாதாரத்தில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா, கொரோனா மரணங்களிலும் முதலிடத்தில் இருக்கிறது. இவ்வாறு, முதலாளித்துவத்தால் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகிறது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே, உலக முதலாளித்துவம் நெருக்கடியில் இருந்துவருகிறது. இதனைப் பற்றி நகல் தீர்மானத்தில் பத்தி 1.6 “உலக முதலாளித்துவம் மீட்சியடைந்து பழைய நிலைக்கு வருவது சாத்தியமாகவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) கணக்கீட்டின்படி உலக மொத்த உற்பத்தி வளர்ச்சி 2009 ஆம் ஆண்டில் 5.4 சதவீதமாக இருந்தது 2019 ஆம் ஆண்டில் 2.8 சதவீதம் என்ற நிலைக்கு தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது” என்பதை சுட்டிக்காட்டுவதுடன் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் நாட்டடங்கு விதிக்கப்பட்டதால் மொத்த உற்பத்தி மைனஸ் 4.4 சதவீதமானதையும் எடுத்துக் காட்டுகிறது.

வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலும், பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துவருகிறது. அதனை பத்தி 1.8 விளக்குகிறது. வேலையின்மையும் வறுமையும் அதிகரித்து வருவதுடன் சுரண்டல் தீவிரமாகியிருப்பதையும் அது விளக்குகிறது.

வலதுசாரி திருப்பத்தில் மாற்றம்:

மேற்சொன்ன பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்களிடம் அதிருப்தி அதிகரிக்கிறது. அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டிருக்கும் தீவிர வலதுசாரி சக்திகள், கடந்த பத்து ஆண்டுகளில், பல நாடுகளில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார்கள். ஆனால் அந்த நிலையில் இருந்து இப்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

2018 ஆம் ஆண்டுக்கு பின், லத்தீன் அமெரிக்க நாடுகளில் வலதுசாரி சக்திகளுக்கு எதிரான எழுச்சி நடைபெற்றுவருவதை நகல் தீர்மானத்தின் பத்தி 1.36 முதல் 1.39 வரை விளக்குகிறது. 2019 ஆம் ஆண்டில், அமெரிக்கா மேற்கொண்ட தலையீட்டின் காரணமாக பொலிவியாவில் ஈவோ மொரேல்ஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதற்கு எதிராக வலுவான மக்கள் இயக்கத்தைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்கள். பிரேசில் நாட்டில் 2018 ஆம் ஆண்டில் வலதுசாரிகள் ஆட்சியைப் பிடித்தார்கள். இப்போது அந்த ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சி உருவாகி போராட்டங்கள் நடந்துவருகின்றன. தேர்தல் நடைபெற்றால், தொழிலாளர் கட்சியின் தலைவர் லூலா ஆட்சியைக் கைப்பற்றுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சிலி நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியையும் உள்ளடக்கிய இடதுசாரி ஆட்சி ஏற்பாட்டுள்ளது. மேலும் சர்வாதிகார ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே பெரு, ஹோண்டுராஸ், அர்ஜண்டைனா, நிகரகுவா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி சக்திகள் அதிகாரத்திற்கு வந்துள்ளன. வெனிசுவேலாவில் அமெரிக்காவின் நேரடித் தலையீட்டினை எதிர்த்த வலுவான மக்கள் இயக்கம் நடந்த பின்னணியில் மீண்டும் நிகோலஸ் மதுராவின் தலைமையிலான ஆட்சி அமைந்து இயங்கிவருகிறது.

ஐரோப்பிய நாடுகளிலும் ஆலைத் தொழிலாளர்கள், சேவைத்துறைகளில் பணியாற்றும் மருத்துவர், செவிலியர், சுகாரார பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட இதர உழைக்கும் மக்களும் பல வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். பிரான்ஸ், போர்ச்சுகல், கிரீஸ் போன்ற நாடுகளில், தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கக்கூடிய சட்டத் திருத்தங்களை எதிர்த்து போராட்டங்கள் நடந்துள்ளது. போர்ச்சுக்கல் போன்ற நாடுகளில் கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கான சலுகைகள் கோரி, போராட்டத்தை முன்னெடுத்து, சட்டத்தையும் நிறைவேற்றச் செய்துள்ளார்கள்.

கொரோனா நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு கியூபா, வடகொரியா போன்ற நாடுகளில் உள்ள சோசலிச அரசாங்கங்களை பலவீனப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. ஏற்கனவே முன்னெடுத்துவரும் பொருளாதார தடைகளை தீவிரமாக்குகிறது. 

வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் உட்பட பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளார்கள். மறுபக்கம் மக்கள் சீனத்தின் சோசலிச அரசாங்கம் கொரோனா பெருந்தொற்றினை வெற்றிகரமாக எதிர்கொண்டிருப்பதுடன் உலகின் இரண்டாவது பொருளாதாரமாகவும் வலிமையடைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், அதீத வறுமையை முற்றாக ஒழித்துள்ள சீனாவின் பிரகடனம் கவனிக்கத்தக்கதாகும். உலக அரங்கில் மக்கள் சீனத்தின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.

உலகின் பிரதான முரண்பாடுகள்:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உலக நிலைமைகளையும், தேசிய நிலைமைகளையும் புரிந்துகொள்ள கீழ்க்காணும் பிரதான முரண்பாடுகளை மனதில் நிறுத்துவது அவசியமாகும்.

1)   சீனா, கியூபா, வடகொரியா உள்ளிட்ட சோசலிச நாடுகளுக்கு எதிரான ஏகாதிபத்திய நிலைப்பாடுகளும். சீனாவுடன் அமெரிக்கா கடைப்பிடிக்கின்ற மோதல் போக்கும் – ஏகாதிபத்தியத்திற்கும், சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடுகளாக உள்ளன.

2)   அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையில் சலசலப்பு ஏற்பட்டதை கட்சியின் சென்ற மாநாடு சுட்டிக்காட்டியது. தற்போது ஜோ பைடன் ஆட்சிக்கு வந்துள்ளார். சில திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுத்து ரஷ்யாவிற்கும், சீனாவிற்கும் எதிரான அணிச்சேர்க்கையை உருவாக்கிட முயற்சி நடக்கிறது. இருப்பினும் ஏகாதிபத்திய நாடுகளுக்குள் ஏற்பட்ட சலசலப்புகள் தொடர்கின்றன.

3)   உலகம் வெப்பமாதலும், வளரும் நாடுகளின் மீதான கடன் சுமையும் முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. எனவே, ஏகாதிபத்திய நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரிக்கின்றன. லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் அதன் வெளிப்பாடுகளைப் பார்க்கிறோம்.

4)   உழைப்புக்கும் மூலதனம் மற்றும் முதலாளித்துவத்திற்கும் அமைப்பிற்கும் இடையிலான அடிப்படை முரண்பாடு தீவிரமடைந்துவருகிறது. தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. வேலை இழப்பும், நவீன தொழில்நுட்பங்களின் வருகையால் வேலைச் சூழலில் மாற்றங்களும் தொடர்கின்றன. இவைகளை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் போராடி வருகிறது.

இத்தகைய பின்னணியில், உலகில் நடக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களை ஆதரிப்பதுடன், இந்தியாவிலும் அதனை வலுப்படுத்திட வேண்டும் என்று நகல் அறிக்கையில் பத்தி 1.65 தொடங்கி 1.75 விளக்கியுள்ளது. உலக அளவில் இடதுசாரி சக்திகளோடு கைகோர்ப்பதுடன், இந்தியாவிலும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிரான மக்கள் இயக்கங்களை வலுப்படுத்த கட்சி தனது உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது.

புவி வெப்பமாதல்:

புவி வெப்பமாதல் பிரச்சனை தீவிரமடைந்துவருகிறது. இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றம் உலக மக்களை பாதிக்கிறது. பருவநிலை மாற்றத்தை ஒரு வர்க்கப் பிரச்சனையாக பார்க்க வேண்டும் என்கிறது நகல் அறிக்கை. ‘உலக சமநீதிக்கான போராட்டம் தீவிரமடைந்து வருவதை சி.ஓ.பி 26 மாநாடு காட்டுகிறது, இந்த போராட்டம் மிக நீண்டதாக இருக்கும்’ என்று பத்தி 1.53 குறிப்பிடுவது முக்கியமானதாகும்.

இப்படியான சூழலில், உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் ஆண்டுக் கூட்டங்கள் முக்கியத்துவம் பெருகின்றன. முக்கியமான சமூக பொருளாதார சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்கிற அனுபவப் பகிர்விற்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் அவசியம் உள்ளது. இந்த ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்கிறது நகல் அறிக்கை.

தேசிய நிலைமைகள்:

ஆங்கிலத்தில் 63 பக்கங்கள் உள்ள நகல் அறிக்கையில், 19 பக்கங்கள் உலக நிலைமைகளும், 44 பக்கங்கள் தேசிய நிலைமைகளையும், எதிர்கால கடமைகளையும் கட்சி விவரித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூடுதலான தொகுதிகளில் வென்றதுடன், கூடுதலான வாக்குகளையும் பெற்று அதிகாரத்திற்கு வந்திருக்கும் மோடி அரசாங்கம், தனது பாசிச வகைப்பட்ட இந்து ராஷ்ட்ரா திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்கிறது. பாஜகவைப் பற்றி கட்சி திட்டத்தில் 3 பத்திகள் நகல் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவற்றிலிருந்து கீழ்க்காணும் பகுதிகள் வாசிக்க:

“பாஜக அதிகாரத்திற்கு வருகிறபோது, அரசின் அதிகாரத்திலும், அரசு இயந்திரத்திலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவ வாய்ப்புக் கிடைக்கிறது. இந்துத்துவா தத்துவம் பழமைவாதத்தை வளர்க்கிறது, இந்து ராஷ்டிரத்தை நிறுவும் நோக்குடன் இந்தியாவின் பன்முகப் பண்பாட்டை நிராகரிக்கிறது.”

“மதவெறி அடிப்படையிலான பாசிச போக்குகளின் ஆபத்து வலுப்பெற்று வருவதை எதிர்த்து அனைத்து நிலைகளிலும் (கட்சி) உறுதியாகப் போராடும்”

இப்போதுள்ள மோடி தலைமையிலான ஒன்றிய அரசை, ‘வகுப்புவாத-பெருமுதலாளித்துவ கூட்டு’ (Communal-corporate nexus) என்று நகல் தீர்மானம் குறிப்பிடுகிறது. தனது பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இந்த தன்மையை மோடி அரசு வெளிப்படுத்திவருகிறது.

மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சி, சமூக நீதி மற்றும் பொருளாதார இறையாண்மை ஆகிய நமது அரசமைப்பின் 4 தூண்களையும் தகர்த்து, இந்திய குடியரசின் தன்மையையே மாற்றிவருகிறது.

தேர்தல் பிரச்சாரத்தினை வகுப்புவாத தேசியவாத வெறியைச் சுற்றி அமைத்துக்கொண்டதன் மூலம், மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகள் தேர்தலில் எதிரொலிக்காமல் செய்ய முடிந்திருப்பதுடன், உள்ளூர் அளவில் சாதி அடிப்படையிலான திரட்டல்களை மேற்கொண்டு அதனைக் கொண்டு ‘இந்து அடையாளம்’ உருவாக்குவதையும் செய்துள்ளார்கள். ஊடகங்களையும், சமூக ஊடகத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். பெருமளவில் பணம் தேர்தல் களத்தில் பயன்படுத்தப்படுகிறது.

பொருளாதார இறையாண்மையின் மீதான தாக்குதல்:

2019 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின், மோடி அரசாங்கம், நவ தாராளமய பொருளாதாரக் கொள்கையை மேலும் தீவிரமாக அமலாக்குகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பதும், பொதுத்துறைகளை தனியார்மயம் ஆக்குவதுமான நடவடிக்கைகளோடு வேறு பல வடிவங்களிலும் பொருளாதார இறையாண்மையின் மீது தாக்குதல் நடக்கிறது. பாதுகாப்புத்துறை உட்பட இந்தியாவின் அனைத்து பொதுத்துறைகளிலும் தனியார்மயத்தை முன்னெடுக்கிறார்கள். இவ்வாறு இந்திய சுயச்சார்பின் அடிப்படைகள் தகர்க்கப்படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களை சார்ந்திருக்கும் நிலையை நோக்கி நாடு நகர்கிறது.

கொரோனா பரவலுக்கு முன்பே இந்திய பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கியிருந்தது. இப்படியான சூழலில் அரசாங்கம் பொதுச் செலவினங்களை அதிகரிக்க வேண்டும். ஆனால் பொதுச் செலவினங்கள் வெட்டிச் சுருக்கப்பட்டன.  இப்போது அது மந்தநிலையை எட்டியுள்ளது.

வேளாண் துறையில் செலவினங்கள் அதிகரித்திருப்பதுடன், அதீத வட்டியும், மானியக் குறைப்பும் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா பரவலின் காரணமாக ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான அவசியம் அதிகரித்தது ஆனால் அரசின் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கவில்லை. மறுபக்கத்தில், பெருமுதலாளிகளின் ரூ.10.72 லட்சம் கோடி அளவிலான வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 13 நிறுவனங்களின் ரூ.4.5 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை திரும்ப செலுத்துவதில் இருந்து 64% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பொதுச் சொத்துக்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகின்றன.

இந்தியாவின் 10 பெரும் பணக்காரர்களிடம் நாட்டின் சொத்துக்களில் 57% உள்ளது. 50 சதவீதம் இந்திய ஏழைகளிடம் மொத்தச் சொத்துக்களில் 13% மட்டுமே உள்ளது. இதே காலகட்டத்தில் சட்டப்படியான ஊழல் முலம் பாஜக பல ஆயிரம் கோடி பணம் திரட்டுவது  முன்னெடுக்கப்படுவதையும் நகல் ஆவணம் விளக்குகிறது.

இவ்வாறாக, கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட நவ-தாராளமயக் கொள்கைகளே வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. கொரோனா தொற்றினையும் அறிவியலற்ற முறைகளில் கையாண்டதுடன், ஜி-20 நாடுகளோடு ஒப்பிட்டால் மிகக் குறைவான பொதுச் செலவினத்தை மேற்கொண்டு, அவசியமான பொருளாதார ஊக்க நடவடிக்கைகளையும் புறந்தள்ளியது பாஜக அரசாங்கம்.

எதேச்சதிகார திசைவழியில்:

யு.ஏ.பி.ஏ., / என்.எஸ்.ஏ மற்றும் தேசத்துரோக வழக்குகளைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மிக மோசமான இந்தச் சட்டங்கள் மதவழி சிறுபான்மையினர் மீது குறிவைத்து செயல்படுத்தப்படுகின்றன. சொந்த மக்களையே வேவுபார்க்கும் போக்கும் அதிகரித்துள்ளது.

நாட்டின் கூட்டாட்சி அமைப்பின் மீது தாக்குதல் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜகவின் அரசியல் திட்டங்களை முன்னெடுக்க ஆளுநர் பயன்படுத்தப்படுகிறார். பொதுப் பட்டியலில் உள்ள விவகாரங்களில் ஒன்றிய அரசு தன்னிச்சையான முடிவுகளை தொடர்ந்து திணிக்கிறது. நிதிப் பகிர்வு செய்வதிலும், வரிக் கொள்கைகளும் மாநிலங்களுக்கான வாய்ப்புகள் சுருக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமைகளை நகல் அறிக்கை உதாரணங்களுடன் விளக்குகிறது.

நாடாளுமன்றம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் மற்றும் ஊடகங்களின் சுயேட்சையான தன்மையின் மீது தாக்குதல் நடக்கிறது. விசாரணை அமைப்புகள், அரசியல் நோக்கத்தோடு ஏவிவிடப்படுவதும் தொடர்கிறது. இவை அனைத்தையும் விளக்கும் நகல் அறிக்கை, ஜம்மு காஷ்மீர் மீது நடத்தப்படும் தாக்குதல்களைப் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளது.

சமூக நீதியின் மீது தாக்குதல்:

பாசிச தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் கருவியாக செயல்படும் பாஜக, அரசாங்கத்தை பயன்படுத்தி அதன் கொள்கைகளை தீவிரமாக முன்னெடுக்கிறது. இதனால் சமூக நீதி ஏற்பாடுகள் சிதைக்கப்படுகின்றன. பெண்கள், சிறுபான்மையினர், பட்டியலினத்தார், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர், பாலியல் சிறுபான்மையினர் என அனைத்து தரப்பின் மீதும் ஒடுக்குமுறைகள் அதிகரித்துள்ளன.

புதிய கல்விக் கொள்கை, மாநிலங்களிடம் கலந்து ஆலோசிக்காமலே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் அடிப்படையில், அறிவியல் விரோதமாகவும், வரலாற்றின் இடத்தில் நம்பிக்கையை புகுத்துவதுடன், இந்தியாவின் பன்முகத்தன்மை மீதான தாக்குதலாகவும் அமைந்திருக்கிறது. இந்திய தத்துவங்களுக்கு மாறாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை திணிப்பதாகவும் உள்ளது.

வெளியுறவுக் கொள்கை:

இந்தியா பின்பற்றிவந்த கூட்டு சேராக் கொள்கை கைவிடப்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக அதை மாற்றும் போக்கில் பாஜக செயல்படுவதை நகல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பருவநிலை மாற்றம், அதிகரிக்கும் கடன் போன்ற உலகு தழுவிய பிரச்சனைகளிலும், உள்நாட்டுக் கொள்கைகளிலும் இது இந்திய நலன்களை பாதிக்கும். அண்டை நாடுகளுடனான உறவிலும் இது பாதிப்பை உருவாக்குகிறது.

அதே போல, அறிக்கையின் பருவநிலை மாற்றம் மற்றும் சூழலியல் தொடர்பான பகுதி, நாம் சந்தித்துவரும் பிரச்சனைகளை விளக்குகிறது. நமக்கென்று சுயேட்சையான அணுகுமுறையின் அவசியத்தை அந்தப் பகுதி சுட்டிக்காட்டுகிறது.

நம்பிக்கை தரும் மக்கள் போராட்டங்கள்:

கடந்த 4 ஆண்டுகளில், நாடு முழுவதுமே மக்கள் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்களும், அதனை தொடர்ந்து நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவையாகும்.

அன்னிய மூலதனத்தோடு கைகோர்த்துக் கொண்டுள்ள இந்திய பெருமுதலாளிகளின் திட்டங்களுக்கும், இந்திய விவசாயிகள் மற்றும் ஒரு பகுதி பணக்கார விவசாயிகளுக்கும் இடையிலான மோதலாக விவசாயிகள் போராட்டத்தை பார்க்க வேண்டும். பெரிய முதலாளிகளின் நலன்களுக்கும், பெருமுதலாளி அல்லாத கோடிக்கணக்கான சிறு/குறு தொழில்முனைவோர் மற்றும் ஒரு பகுதி நடுத்தர முதலாளிகளின் நலன்களுக்கும் இடையிலான மோதலும் போராட்டங்களில் வெளிப்படுகிறது.

நகல் அறிக்கை குறிப்பிடும் மேற்சொன்ன வர்க்கங்களின் மீதான தாக்கத்தை கணக்கில் கொண்டு, தொழிலாளர் இயக்கமும், விவசாயிகள் இயக்கமும் முன்னேறிட வேண்டும். ஆளும் வர்க்கத்தின் கூட்டாளிகளிடையே எழக்கூடிய முரண்பாடுகளை பயன்படுத்தி சுரண்டப்படும் வர்க்கங்கள் தங்களுடைய வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என நகல் அறிக்கை பணிக்கிறது.

அரசியல் கட்சிகளைப் பற்றி:

அரசியல் கட்சிகளைப் பற்றிய நகல் அறிக்கையின் மதிப்பீடு கவனமாக வாசிக்க வேண்டியதாகும். “இந்திய ஆளும் வர்க்கங்களுடைய பிரதானமான கட்சியாக பாஜக உருவெடுத்திருக்கிறது. இதன் துணையோடு ஆர்.எஸ்.எஸ். தனது வலைப்பின்னலை விரிவாக்குகிறது. இந்தியாவின் பெரிய கட்சியாகவும் பாஜக மாறியுள்ளது.” அதே சமயத்தில் பல மாநில தேர்தல்களில் பாஜக தன்னுடைய இலக்குகளை எட்டமுடியாத நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. பாஜக  தற்போது இந்தியாவின் 12 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது, நாடாளுமன்றத்தில் 2 அவைகளிலும் பெரும்பான்மை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி, இந்திய ஆளும் வர்க்கங்களின் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தான் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் நவ-தாராளமய கொள்கைகளை முன்னெடுக்கிறது. காங்கிரசின் பலமும் செல்வாக்கும் குறைந்துவருகிறது. உட்கட்சி பூசலின் காரணமாக காங்கிரசில் இருந்து விலகிய பலரும் பாஜகவில் இணைகிறார்கள். மதச்சார்பின்மையை தமது கொள்கையாக கூறினாலும், இந்துத்துவா கொள்கையுடன் சில சமயங்களில் சமரசம் செய்துகொள்கிறது. இதர மதச்சார்பற்ற கட்சிகளை திரட்டும் திறனையும் அது இழந்துள்ளது.

கடந்த மாநாடு, ‘ஆர்.எஸ்.எஸ். பின்புலத்துடன் செயல்படும் பாஜக, பிரதான ஆபத்து’ என்பதை சுட்டிக்காட்டியது. எனவே பாஜகவையும், காங்கிரசையும் ஒரே தட்டில் வைக்க முடியாது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியுடன் அரசியல் அணிச்சேர்க்கையை கட்சி ஏற்படுத்திக்கொள்ள கூடாது என்பதை நகல் அறிக்கை தெரிவிக்கிறது.

மாநில கட்சிகளைப் பொருத்தமட்டில், அவை  நவ-தாராளமய கொள்கைகளையே முன்னெடுக்கின்றன. அரசியல் சந்தர்ப்பவாத போக்கினை அவ்வப்போது கடைப்பிடித்து வந்துள்ளார்கள். எனினும் கூட்டாட்சியின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவரும் சூழலில் மாநில கட்சிகள் பலவும் பாஜகவுடன் கூர்மையாக முரண்படுகின்றன.

பொதுவான பிரச்சனைகளில் கரம் கோர்க்க முன்வரும் மாநில கட்சிகளுடன் ஒத்துழைப்பதுடன், மாநிலங்களின் தன்மைக்கு ஏற்ப உத்திகளை வகுத்திட வேண்டும். அதே சமயத்தில் மாநில கட்சிகளின் தலைமையிலான அரசாங்கங்கள் முன்னெடுக்கும் கொள்கைகள் மக்களை பாதிக்கும்போது, தனியாகவும், இடதுசாரி கட்சிகளோடு இணைந்தும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மாநில ஆட்சிகளை, ஒன்றிய அரசோடு இணைவைத்து பார்க்கக் கூடாது. (விரிவாக வாசிக்க : நகல் அறிக்கை பிரிவு 2.139 – 2.143)

அதே போல, இஸ்லாமியர்களிடையே செயல்படும் தீவிரவாத மற்றும் அடிப்படைவாத அமைப்புகளைப் பற்றி குறிப்பிடும்போது, ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கும் அரசியலுக்கு இது சாதகமாக அமைவவதை சுட்டிக்காட்டும் நகல் அறிக்கை, சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக உறுதியாக நின்று, மதச்சார்பற்ற மேடைகளில் திரட்டிட வேண்டும்  என்று பணிக்கிறது.

வலிமையான மார்க்சிஸ்ட் கட்சி:

ஆர்.எஸ்.எஸ். வலைப்பின்னல் வேகமாக வளர்ந்துவரும் சூழலில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவுத்தளத்தில் ஏற்பட்டிருக்கும் அரிமானத்தை நகல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கேரளத்தில் நமது ஆட்சியை பலவீனப்படுத்தும் விதத்தில் பாஜக அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறது. முன்னணி ஊழியர்களின் மீதான தாக்குதலும் முன்னெடுக்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில், கட்சி எதிர்கொண்டுள்ள பின்னடைவை சுய விமர்சனப் பார்வையுடன் ஆய்வு செய்து, அதிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுகளை, சிரத்தையுடன் அமலாக்கிட வேண்டும் என்று நகல் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. திரிபுராவிலும் நம் மீதான பாசிச வகைப்பட்ட தாக்குதல்கள் தொடர்கின்றன.  இந்த மாநிலங்களில் நமது ஆதரவுத்தளத்தில் சரிவும் ஏற்பட்டு வருகிறது.

நமது கட்சியின் ஆதரவுத்தளம் பாதிக்கப்பட்டால் அது மக்கள் நலனை முன்னிறுத்தி நாம் மேற்கொள்ள வேண்டிய தலையீடுகளை பலவீனப்படுத்தும். எனவே, கட்சியை வலுப்படுத்த வேண்டியது நம் முன் உள்ள முக்கியமான கடமையாகும். கொல்கத்தா பிளீனம் எடுத்த முடிவுகளை சிரத்தையுடன் அமலாக்க வேண்டும். அரசியல், தத்துவ, ஸ்தாபன பணிகளை முன்னெடுக்க வேண்டும். தொடர்ச்சியாக மக்கள் கோரிக்கைகள் மீது இயக்கத்தை நடத்த வேண்டும். அவர்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்த வேண்டும். உள்ளூர் அளவில் இயக்கங்களை கட்டமைத்து மக்களைத் திரட்ட வேண்டும்.

நவ-தாராளமய கொள்கைகளின் அமலாக்கத்தினால் மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரங்களும் கேள்விக்குறியாகியுள்ளது. வேலையின்மை, வறுமை உள்ளிட்ட துன்ப துயரங்கள் அதிகரிக்கின்றன. இந்த சூழலில், மக்களுக்கு மதவெறியூட்டி, சாதிவெறியூட்டி, இனவெறியூட்டி இயங்கும் அதீத வலதுசாரி கட்சிகள் அதிகாரத்திற்கு வருகிறார்கள்; அல்லது  போராட்டங்களை சீர்குலைக்கிறார்கள். இப்படியான நிலைமைகளில் தலையீடு செய்து மக்களை வென்றெடுக்கக் கூடிய முயற்சியில் பல நேர்மறையான அனுபவங்களும் உலகத்தில் உள்ளது. அவைகளை நகல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இடது ஜனநாயக திட்டம்:

நகல் அறிக்கையின் பத்தி 1.17 – 1.19 சுட்டுவது போல செயல்பட்டு இந்தியாவில் நமது இயக்கத்தை முன்னேற்றுவதே ‘இடது ஜனநாயக திட்டம்’.

மக்கள் ஜனநாயக அணியில் இடம்பெற வேண்டிய வர்க்கங்களை திரட்டுவதே இடது ஜனநாயக திட்டத்தின் நோக்கம். இடது ஜனநாயக அணியை கட்டுவதை பலரும் தொலைநோக்கு திட்டமாகவே கருதுகிறார்கள். அவ்வாறு அல்ல. இடது ஜனநாயக அணியை கட்டுவதை கட்சியின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக மேற்கொள்ள வேண்டும் என்பதே நம் முடிவு.

துன்ப துயரங்களில் உள்ள மக்களின் தேவைகளையே நாம் இடது ஜனநாயக திட்டத்தில் முன்னெடுக்கிறோம். நம் திட்டங்களும் கோரிக்கைகளும் தான் முதலாளித்துவ கட்சிகளின் திட்டங்களுக்கு மாற்று. 

இடது ஜனநாயக அணியின் திட்டம், “பொருளாதார இறையாண்மையை பாதுகாத்தல், அரசமைப்புச் சட்டத்தை பாதுகாத்தல், ஜனநாயக உரிமைகளை, குடிமக்கள் உரிமைகளை காத்தல், கூட்டாட்சியை பாதுகாப்பது, பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகள், சமூக நீதி, மக்கள் நலத்திட்டங்கள்” என்ற தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. இவைதான் பாதிக்கப்படும் மக்களின் பெரும்பான்மையான கோரிக்கைகள்.

இடதுசாரி கட்சிகளும், அவர்களின் வர்க்க வெகுஜன அமைப்புகளும், இடதுசாரிகள் குழுக்கள் மற்றும் தனிநபர்களும், பல்வேறு கட்சிகளில் உள்ள சோசலிஸ்டுகளும், ஜனநாயக பிரிவினரும், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை முன்னெடுக்கும் பட்டியலினத்தார், பழங்குடியினர், பெண்கள், சிறுபான்மையோர் மற்றும் சமூக இயக்கங்கள் ஆகியவை   – நாம் அமைக்க வேண்டிய இடது ஜனநாயக அணியின் தொடக்கமாக அமைந்திடுவார்கள். இந்த சக்திகளை ஒருங்கிணைப்பதன் மூலமே இடது ஜனநாயக அணிக்கு ஒரு திட்டவட்டமான வடிவம் கிடைக்கும் என்று 22 வது மாநாட்டின் அரசியல் தீர்மானம் குறிப்பிடுகிறது.

எனவே இந்தப் பணிகளை வேகப்படுத்த வேண்டும்.  தில்லி விவசாயிகள் போராட்டக் களத்தில் ஒன்றிணைந்த பல்வேறு இயக்கங்களும், ஆதரவாக நின்ற அறிவு ஜீவிகளையும் ஒருங்கிணைத்திட வேண்டும் என நகல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்துத்துவாவை எதிர்கொள்வது:

வலிமையான மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்குவதே இந்துத்துவ சக்திகளை எதிர்கொள்வதற்கான அடிப்படையான தேவையாகும்.

கட்சியும், வெகுஜன அமைப்புக்களும் வகுப்புவாத சக்திகளின் பிற்போக்கு கருத்துக்களுக்கு எதிராக அயராத பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். இந்துத்துவ குழுக்களின் தாக்குதல் போக்குக்கும், வெறுப்பு பிரச்சாரத்திற்கும் பதிலடி தர வேண்டும். சமூக அமைப்புகள், பண்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் மக்கள் அறிவியல் இயக்கங்களை முன்னெடுப்பதன் வழியாக அறிவியல் சிந்தனையை பரவலாக்கிட வேண்டும். சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராடுவதும், இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். கொரோனா காலத்தில் முன்னெடுத்த சமூக நல நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் தலையீடு செய்து எதிர்கொள்வது அவசியம்.

மேற்சொன்ன நடவடிக்கைகள் இல்லாததன் விளைவாகவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது ஆதரவுத்தளத்தை விரிவாக்க முடிகிறது.

அரசியல் நிலைப்பாடு:

நமது கட்சி மேற்கொள்ள வேண்டிய அரசியல் நிலைப்பாடு, நகல் அறிக்கையின் பத்தி 2.171 இல் விளக்கப்பட்டுள்ளது.

கட்சியை வலுப்படுத்துவதும், இடதுசாரி ஒற்றுமையை பலப்படுத்துவதும் ஒரு மாற்றுக் கொள்கையை முன்னெடுக்க அவசியம் ஆகும்.

நவ-தாராளமய கொள்கைகளால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்களுக்கு வடிவம் கொடுப்பதும் அவசியமாகும். இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக இருமுனைப் போராட்டம் தேவைப்படுகிறது.

நாடாளுமன்றத்திற்குள் நாம் மதச்சார்பற்ற சக்திகளோடு ஒத்துழைப்புடன் இயங்கிட வேண்டும். நாடாளுமன்றத்திற்கு வெளியே அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் திரட்டி வகுப்புவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும். வர்க்க – வெகுஜன அமைப்புகளின் மேடையை உருவாக்க வேண்டும். இவ்வகையிலேயே நாம் இடது ஜனநாயக அணியை ஏற்படுத்த முடியும்.

மேற்சொன்ன சூழலை விளக்கும் நகல் அறிக்கையின் பத்தி 2.172, கட்சியின் தற்போதைய கடமைகளை விளக்குகிறது.

நகல் அறிக்கையை, கட்சியின் ஒவ்வொரு அமைப்பும் ஊன்றிப் படித்து, அமைப்பிற்குள் விவாதித்து, அதனை மேம்படுத்துவதற்கான திருத்தங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்பிட வேண்டும். அறிக்கையை முழுமையாக புரிந்துகொள்வதே, அதனை அமல்படுத்துவதற்கான முதல் கட்ட நடவடிக்கை ஆகும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் நடைமுறை கொள்கை ஓர் ஆய்வு

(குரல் : யாழினி)
இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்

இந்தியப் புரட்சியின் நீண்டகாலத் உத்தி (Strategy) என்பது மக்கள் ஜனநாயகப் புரட்சி என்று நமது கட்சித் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறானது தேசிய ஜனநாயகம் என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகாலத் திட்டமாகும். இவ்விரண்டு நீண்டகாலத் திட்டங்களுக்கும் ஏற்ப இரண்டு நடைமுறை உத்திகள் (tactical lines) உள்ளன; அவை முறையே வர்க்கப் போராட்டம், வர்க்க ஒத்துழைப்பு என்பவைகளாகும்.

தங்களுடைய நீண்டகால உத்தியானது தேசிய ஜனநாயகம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எற்றுக் கொண்ட மூன்று வருட காலத்திற்குள்ளேயே வர்க்க ஒத்துழைப்பு என்ற அதனுடைய அன்றாட நடைமுறை உத்தி தெளிவாக விளங்க ஆரம்பித்துவிட்டது. 1967ம் ஆண்டில் மூன்று மாநிலங்களின் – கூட்டணி அரசாங்கங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்தது; இத்தகைய கூட்டணிகளுக்குத் தலைமை தாங்கிய கட்சிகள் “பிற்போக்குக் கட்சிகளென்றும்” “வகுப்புவாதக் கட்சிகளென்றும்” இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் நிந்திக்கப்பட்டிருந்த போதிலும், அந்தக் கட்சியானது இந்த கூட்டணி அரசாங்கங்களில் சேர்ந்தது; அதற்கடுத்த இரண்டு வருட காலத்திற்குள்ளாகவே காங்கிரசுடன் கூட்டு சேருவதென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது ; இந்த வழியானது பத்தாண்டு காலம் நீடித்தது. காங்கிரசுடன், அந்த கட்சி கொண்டிருந்த கூட்டு அவசர கால நிலைமையின் பொழுது முற்றிலும் அம்பலப்படுத்தப்பட்டபோதுதான் அது கைவிடப்பட்டது. அஸ்ஸாமில் சிறுபான்மையினருக்குத் துரோகம் இழைத்தது. 1984-ம் வருடம் டிசம்பர் மாத நாடாளுமன்றத் தேர்தலிலும், பல மாநில சட்டமன்றங்களுக்கு 1985- மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்தல் சமயத்திலும் அவர்கள் செய்த தேர்தல் சாகசங்கள் ஆகியவைகளில் காணப்பட்டது போன்று, இடது சாரிகளுக்கெதிராக எந்த முதலாளித்துவ எதிர்க்கட்சியுடனும் கூடிக் குலாவ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் இன்றும் கூட முயற்சித்து வருகிறார்கள்.

(இக்கட்டுரை எழுதப்பட்ட காலத்திற்கு பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை குறித்து அறிய … இக்கட்டுரையை வாசிக்கலாம் : http://marxist.tncpim.org/on-cpi-party-programme/ )

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றாட நடைமுறை உத்தி குறித்து நாம் இங்கே ஆராயப்போவதில்லை. ஒவ்வொரு கட்டமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அன்றாட நடைமுறை உத்தி எவ்வாறு வளர்ச்சியடைந்து வருகிறது என்பதை ஆராய்வதோடு நிறுத்திக்கொள்கிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 7-வது காங்கிரஸ் வகுத்த அன்றாட நடைமுறை

உத்தி

வர்க்கப் போராட்டம் என்பது தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அன்றாட நடைமுறை உத்தி; இதற்கான அடித்தளம் 1964 ம் ஆண்டில் கல்கத்தாவில் நடை பெற்ற அந்தக்கடசியின் 7வது காங்கிரஸ் நிறைவேற்றிய இன்றைய நிலைமையும் கடமைகளும் என்ற தீர்மானத்தில் இடப்பட்டிருந்தது.”அரசாங்கத்தின் மக்கள்-விரோதக் கொள்கைகளுக்கெதிரான வெகுஜன நடவடிக்கைகளுக்கு அமைப்பு முறையிலான தலைமை அளிப்பது என்பதுதான்” அந்த அன்றாட நடைமுறை உத்தியின் உண்மையான அம்சமாகும். அத்துடன், வெகுஜன அமைப்புகளின் பலவீனத்திலிருந்து தோன்றிவரும் கடுமையான ஆபத்துக்கள் முற்றிலும் புரிந்து கொள்ளப்பட்டு, அந்தப் பலவீனம் விரைவாக போக்கப்பட்டாலொழிய இந்தக் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்ற இயலாது என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.

அந்தத் தீர்மானம் மேலும் கூறியது:

‘சிவில் உரிமைகள், மக்களாட்சி உரிமைகள் மீது தொடுக்கப்படும் ஒவ்வொரு தாக்குதல்களுக்கு  எதிராகவும், ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கெதிராகவும், மக்களின் அனைத்து ஜனநாயகப் பகுதிகளையும், கட்சி திரட்ட வேண்டும். அரசாங்கத்தின் மக்கள்விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், மாற்றுக் கொள்கைகளுக்காகவும் அது பிரச்சாரம் செய்யவேண்டும். உலக சமாதானத்திற்காகவும், அனைத்து அணு ஆயுதங்களை தடை செய்ய வேண்டுமென்பதற்காகவும், பொதுவான படைபலக் குறைப்பிற்காகவும் இடைவிடாத பிரச்சாரத்தை அது நடத்தவேண்டும். மக்கள் ஜனநாயக முன்னணி என்ற முழக்கமும், குறிப்பாக, மக்களாட்சிப் புரட்சிக்கு முக்கியத்துவமுடையது என்ற கண்ணோட்டத்தில் உழுபவனுக்கே நிலம் என்ற முழக்கமும் இடைவிடாது பிரபலப் படுத்தப்படவேண்டும்”

கட்சித் திட்டத்தையும், மேலே குறிப்பிடப்பட்ட ”இன்றைய நிலைமையும் கடமைகளும்” என்ற தீர்மானத்தையும் நிறை வேற்றிய 7வது கட்சிக் காங்கிரஸ், ‘திரிபுவாதத்திற்கெதிரான போராட்டம்’ என்ற ஒரு அறிக்கையையும் நிறைவேற்றியது. அந்த அறிக்கை கூறுகிறது:

‘முதலாளித்துவ வர்க்கம் மற்றும் ஆளுங்கட்சிக்கு வால் பிடிக்கக்கூடிய திரிபுவாதக் கருத்துக்கள், முழக்கங்கள், மற்றும் அன்றாட நடைமுறைக் கொள்கைகளுக்கெதிராக கட்சி உறுதியாகப் போராடும்பொழுதே, கம்யூனிஸ்ட் கட்சியானது (மார்க்சிஸ்ட்) அனைத்து வகைப்பட்ட குறுங்குழுவாத(Sectarian) வெளிப்பாடுகளுக்கு எதிராகவுமான அதனுடைய போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டியது மக்களாட்சி முன்னணியின் ஒற்றுமையைக் கட்டுவதற்கான ஒரு அத்தியாவசிய நிபந்தனையாகும்”. குறுங்குழுவாதம்(Sectarian) இரண்டு பிரதான வடிவங்களில் தன்னை வெளிப்படுத்துக் கொள்கிறது.

(அ) ”ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருக்கக் கூடிய மக்கள் குறித்த குறுங்குழுவாத(Sectarian) போக்கு; –

(ஆ) ”வலதுசாரி பிற்போக்கு அல்லது வெறித்தனமான, கம்யூனிச எதிர்ப்பு என்பதை தங்களுடைய அடிப்படைக் கண்ணோட்டமாகக் கொண்ட – இடதுசாரி எதிர்க்கட்சிகளுக்குப் பின்னால் திரண்டிருக்கும் மக்கள் குறித்த குறுங்குழுவாத(Sectarian) போக்கு”

இவ்விரண்டுமே கிட்டத்தட்ட சரிசமமான அளவில் பிளவுபட்டு காங்கிரசிற்குப் பின்னாலும், கம்யூனிஸ்ட் – அல்லாத எதிர்க்கட்சிகளுக்குப் பின்னாலும் திரண்டிருக்கும் கணிசமான மக்கட்பகுதியினரை மக்களாட்சிக் கொள்கைகளுக்கு ஆதரவாகவும் வெகுஜன  இயக்கங்களிலும் வென்றெடுக்க வேண்டும் என்பதை, புரிந்துகொள்ளத் தவறியதிலிருந்து எழுகிறது’

திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற அறிக்கையிலிருந்த ஒரு முக்கியமான கட்டளை எதுவென்றால், கட்சியானது ”ஒரு மாநிலத்திலோ அல்லது மத்தியிலோ எந்த இடத்தில் அமைச்சரவை நெருக்கடி தோன்றினாலும் அல்லது வேறெந்த நெருக்கம் உருவானாலும் அத்தகைய நிகழ்ச்சிகள் அனைத்திலும் தலையிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட அமைச்சரை நீக்குவது, அமைச்சரவையை ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்தல், ஆளும் கட்சிக்குள் உள்ள விரோதம் நிறைந்த கோஷ்டிகள் குற்றச்சாட்டுக்களையும், எதிர்க் குற்றச்சாட்டுக்களையும் பரிமாறிக் கொள்வது போன்ற சந்தர்ப்பங்களை, ஒட்டுமொத்தத்தில் நாட்டினுள்ளும், ஆளுங்கட்சிக்குள்ளும் உள்ள தீவிரமனநிலையைக் கொண்ட சக்திகளை பலப்படுத்தும் பொருட்டு பயன்படுத்திக்கொள்ளவேண்டும், கையாள வேண்டும். ஆளும் வர்க்கங்களுக்குள்ளும், ஆளும் வர்க்கங்களின் பகுதிகளுக்குள்ளும் உள்ள இத்தகைய அற்பத்தனமான மோதல்களை அருவருப்புடன் அணுகும் போக்கும், இத்தகைய நிலைமைகளில் தலையிட்டு அவற்றை மாற்ற மறுப்பதும் (எந்தச்சிறு அளவில் அது சாத்தியம் என்ற பொழுதிலும்) ஒரு வேகமாக மாறிக் கொண்டிருக்கும் அரசியல் நிலைமையில், கட்சியை ஒரு முற்றிலும் செயலூக்கமற்ற சக்தியாக ஆக்கிவிடும்”.

எனினும், இவ்வித அனைத்து அரசியல் தலையீடுகளும் அதைப்போன்ற அனைத்து ஐக்கியப் போராட்டங்களும், பிரச்சாரங்களும் வெகுஜன இயக்கத்தை, உழைக்கும் மக்களின் போராட்டத்தை, பலப்படுத்துவதாகவும், தொழிற்சங்கங்களின் ஒற்றுமை போன்றவற்றைப் பலப்படுத்துவதாகவும், இருக்கவேண்டும்” என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டது … இந்தக் கடமையை அவமதிப்பு செய்வதானது அரசியல் நடவடிக்கையின் பிரதான வடிவம் மேலிருந்து சாகசம் செய்வது என்ற சந்தர்ப்ப வாத அன்றாட நடைமுறை உத்திக்கு இட்டுச் செல்லும்”

முடிவு இது தான் :

“உழைக்கும் மக்களின் ஐக்கியப் போராட்டங்களை உருவாக்குவதற்காகவும் அவர்களுடைய ஐக்கிய அமைப்புகளைக் கவர்வதற்காகவும் அவர்களிடையே செய்யப்படும் விரிந்த அளவினான நடவடிக்கைகளை மேலிருந்து செய்யப்படும் அரசியல் தலையீட்டோடு இணைக்கும் சரியான அன்றாட நடைமுறை கொள்கை வழியை கட்சிக் கடைப்பிடிக்குமானால், அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கெதிராகவும் பிற்போக்காளர்களுக்கு எதிராகவுமான போராட்டத்தில் மக்களின் மிகப்பெரும் எண்ணிக்கையைத் திரட்டுவதற்கு, கட்சி ஒரு சக்திவாய்ந்த பங்கை ஆற்ற முடியும்”

இடது ஜனநாயக முன்னணி – பிரகாஷ் காரத்

பிரகாஷ் காரத்

இடது ஜனநாயக மாற்றினை நோக்கி முன்னேறுவோம் என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வகுத்துக்கொண்ட நடைமுறை உத்தியாக அமையப்பெற்ற அறைகூவலாகும். இதற்காக நமது கட்சி, அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி வலுவான இடது ஜனநாயக அணியினை கட்ட வேண்டும். முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சிமுறைக்கு (bourgeois-landlord order) உண்மையான மாற்றாக இந்த அணி இருக்கும் என்று கட்சி கருதுகிறது.

திரட்டவேண்டிய வர்க்கப் பிரிவுகள்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை தொலைநோக்குத் திட்டத்துடன் இந்த இடது ஜனநாயக மாற்றுக்கு உள்ள பொருத்தப்பாடு என்ன?  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொலைநோக்குத் திட்டம் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கியதாகும்.  இதற்காக முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அமைப்பினால் சுரண்டப்படும் வர்க்கத்தின் அனைத்து பிரிவினரையும் ஒன்றிணைத்து, மக்கள் ஜனநாயக முன்னணி அமைக்கவேண்டும் என்கிறது கட்சியின் திட்ட ஆவணம். தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், விவசாயக்கூலிகள், மத்தியதர வர்க்கத்தினர் மற்றும் சிறு முதலாளிகள் ஆகியோரே அந்த சுரண்டப்படும் வர்க்கப் பிரிவினர் ஆவர்.

மக்கள் ஜனநாயக அணியை கட்டுவதை நோக்கி முன்னேறும்போது, தேவைப்படும் நேரங்களில் இடைக்கால நிலைமைகளுக்கேற்ப இடைக்கால முழக்கங்களை உருவாக்கிக் கொள்ளலாம் என்று கட்சியின் திட்டம் விளக்குகிறது.

இடது ஜனநாயக முன்னணி என்பது அப்படிப்பட்ட இடைக்கால முழக்கமாகும்.  அது முதலில் 10வது கட்சிக்  காங்கிரஸ் ஜலந்தரில் 1978 ஆம் ஆண்டு நடந்தபோது உருவாக்கப்பட்டது. 10வது கட்சிக் காங்கிரஸ் இடது ஜனநாயக முன்னணியின் கருதுகோளைக் குறித்து பின்வருமாறு விளக்குகிறது;-

”இடது ஜனநாயக அணியைக் கட்டுவதற்கான நமது போராட்டம் என்பது வர்க்க சக்திகளுக்கிடையேயான சமன்பாட்டில் ஒரு மாற்றத்தினை உருவாக்கும் நமது போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.  அதே போல, இரண்டு நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ கட்சிகளில் ஏதேனும் ஒன்றைத்தான் மக்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்ற நிலையில், தற்போதுள்ள அமைப்பு முறையின் சட்டகத்திற்குள்ளேயே கட்டுண்டு கிடக்கும் நிலையினை மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகும் அது.  அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளையும் அணி திரட்டுவதன் மூலம் இந்த முன்னணியின் முன்னேற்றத்தினை நோக்கி நகர முடியும்.  அவ்வாறு நகரும்போது, கட்சி இந்த சக்திகளை  அணி திரட்டத் தொடங்குவதன் காரணமாக, எதிர்காலத்தில், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் மக்கள் ஜனநாயக அணியினை நாம் கட்ட முனையும்போது இந்த சக்திகள் அந்த அணியில் பங்கேற்க முடியும்.  இடது ஜனநாயக அணியினை வெறும் தேர்தலுக்கான அணியாகவோ அல்லது அமைச்சரவைக்கான முன்னணியாகவோ புரிந்து கொள்ளக்கூடாது.  மாறாக, பொருளாதாரத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் பிற்போக்கு சக்திகளை தனிமைப்படுத்துவதற்கும், பொருளாதார மற்றும் அரசியல் தளங்களில் உடனடி முன்னேற்றத்திற்குமான போர்ப்படையாக இதனை புரிந்து கொள்ள வேண்டும்.”

இதன் தொடர்ச்சியாக, மக்கள் ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய வர்க்கங்கள்தான் இடது மற்றும் ஜனநாயக முன்னணியில் இடம் பெறுவார்கள் என்று விளக்கமளித்துள்ளோம்.  இருந்தபோதும், இதில் உள்ள ஒரே வேறுபாடு தலைமை குறித்தானது.  மக்கள் ஜனநாயக முன்னணிக்கான தலைமை தொழிலாளி வர்க்கமாக  இருக்க வேண்டும் என்ற அவசிய தேவை இடது ஜனநாயக அணிக்கான அவசியத்தேவையாக இருக்க வேண்டுமென்பதில்லை.  10வது கட்சிக் காங்கிரசில் இருந்து இந்தக் காலம் முழுவதும் இடது ஜனநாயக அணி என்ற நடைமுறை உத்திக்கான அறைகூவலை விடுத்துவந்த போதிலும், ஒவ்வொரு கட்சி காங்கிரசிலும், இந்த இடைக்கால முழக்கத்தின் நோக்கத்தில் எந்த முன்னேற்றத்தையும்  எட்ட முடியவில்லை.

மேற்குவங்கம், கேரளா மற்றும் திரிபுராவில் மட்டுமே இந்த அரசியல் மற்றும் வர்க்க சக்திகளை கொண்ட முன்னணிகளையும் கூட்டணிகளையும் நம்மால் உருவாக்க முடிந்துள்ளது.  உதாரணமாக, மேற்குவங்கத்தில் கடந்த இரு பத்தாண்டுகளில் பல்வேறு வர்க்கப் போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின் வாயிலாக இடது முன்னணி கட்டப்பட்டுள்ளது.  ஆனால், இந்த மூன்று மாநிலங்களிலும் இந்த கூட்டணிகளை உருவாக்கியுள்ளது என்பது நமது நோக்கத்தின் ஒரு பகுதி வெற்றிதான்.  இது அகில இந்திய அளவில் உருவாக்கப்பட வேண்டும்.

நடைமுறை உத்தி குறித்த பரிசீலனை:

ஏப்ரல் 2015ம் ஆண்டில் நடந்த 21வது கட்சி காங்கிரஸ் கடந்த 25 ஆண்டுகளாக நாம் கடைபிடித்து வந்துள்ள அரசியல் நடைமுறை உத்தி குறித்த மிக ஆழமான பரிசீலனையை நடத்தியது.  ஏன் நம்மால் இடது ஜனநாயக மாற்றினை கட்ட முடியவில்லை என்பதை பற்றித் தெரிந்து கொள்ள விமர்சனப் பூர்வமான ஆழ்ந்த பரிசீலனை தேவைப்பட்டது.

இந்த ஆழ்ந்த பரிசீலனையின்போது இக்காலக்கட்டத்தில் கட்சியின் சொந்த பலம் அதிகரிக்கப்படவில்லை என்பது தெளிவாகியது.  சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், மேற்குவங்கம், கேரளா மற்றும் திரிபுராவைத் தவிர்த்த நாட்டின் பிற பகுதிகளில் கட்சியின் சொந்த பலம் குறைந்துள்ளது.  காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதே உடனடிநோக்கமாக இருந்ததன் காரணமாக  அதற்குப் பொருத்தமான தந்திரங்களை உருவாக்குவற்கே முதன்மை கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. இடது ஜனநாயக சக்திகளை அணிதிரட்டும் நோக்கில் கவனம் குவித்து பொதுத் திட்டத்தின் அடிப்படையில் வர்க்க, வெகுமக்கள் போராட்டங்களைக் கட்டமைத்து வளர்ப்பதற்கன முக்கியத்துவம், அவசியமான அளவுக்கு தரப்படவில்லை.

21 வது மாநாட்டின் விவரிப்பு:

எனவே, கட்சிக் காங்கிரஸ் இந்த பலவீனத்தைக் களைவது என்ற முடிவிற்கு வந்தது.  அந்த கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் இடது ஜனநாயகஅணியினை கட்டுவதற்கு மீண்டும் முதன்மை இடத்தை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தது.  இதற்காக கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பதற்கு மிக அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.  இதற்கு நவீன தாராளமயத்தின் தாக்கத்தின் காரணமாக சமூகப் பொருளாதார சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஒரு தீர்க்கமான ஆய்வினை நடத்த வேண்டுமென்றும், அந்த ஆய்வின் அடிப்படையில் நமது நடைமுறை உத்திக்கேற்ற முழக்கங்களை  உருவாக்க வேண்டும் என்றும், வர்க்க மற்றும் வெகுமக்கள் போராட்டங்களை நடத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

21வது கட்சி காங்கிரசும், 10வது கட்சிக் காங்கிரஸ் விவரித்தது போலவே, இடது ஜனநாயக அணியை ஒரு தேர்தல் கூட்டணியாகப் பார்க்கக்கூடாது என்றும்,  அது வெறுமனே அரசியல் கட்சிகளின் கூட்டணி அல்ல என்றும், மாறாக, பல்வேறு வர்க்க மற்றும் மக்கள் ஜனநாயக அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்களின் கூட்டணியாகும் என்றும் விவரித்தது.

21வது கட்சி காங்கிரசின் விளக்கம் பின்வருமாறு:-

”இடதுசாரிக் கட்சிகள், அவற்றின் வர்க்க வெகுஜன அமைப்புகள், இடதுசாரி குழுக்கள் மற்றும் இடது அறிவுஜீவிகள், பல்வேறு கட்சிகளில் பரவிக் கிடக்கும்  சமூகவியலாளர்கள், மதச்சார்பற்ற முதலாளித்துவ கட்சிகளில் உள்ள ஜனநாயகப் பிரிவினர், ஆதிவாசி, தலித், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் ஜனநாயக அமைப்புகள், ஒடுக்கப்படும் மக்கள் பிரிவினரின் பிரச்சினைகளை கையிலெடுத்து போராடும் சமூக இயக்கங்கள் போன்றவை இடது ஜனநாயக அணியில் இடம்பெற வேண்டும்.  இந்த சக்திகள் அனைத்தையும் ஒரு கூட்டு மேடையின் கீழ், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கொள்கைகளுக்கு எதிரான, ஒரு தனித்துவமான, பொதுத்திட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே, இடது ஜனநாயக அணியினை உருவாக்குவதற்கான திட்டவட்டமான வடிவத்தை நாம் பெறமுடியும்”.

மாநிலங்களுக்கான திட்டம்:

இந்தப் புரிதலின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு இடது ஜனநாயகத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.  அந்தத் திட்டத்தில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் உள்ளடங்கியிருக்கும்.  இந்தத்திட்டத்தின் கீழ் எந்தெந்த மக்கள் சக்திகள் இடது ஜனநாயக அணியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமோ அந்தப் பிரிவினர் அனைவரும் அணி திரட்டப்பட வேண்டும்.  இந்த கூட்டுமேடையிலிருந்து பல்வேறு கட்சிகள், வர்க்கங்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்கள் கட்டவிழ்த்துவிடும் ஒன்றுபட்ட போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின் மூலம், ஒரு குறிப்பிட்ட அரசியல் திசைவழியுடன் கூடிய திட்டவட்டமான இடது ஜனநாயக அணி உருவாக்கப்பட வேண்டும்.

அப்படி ஒரு முன்னணி உருவாக்கப்படும்போது, அந்த முன்னணியினால் பிற முதலாளித்துவ கட்சிகளின் கொள்கைகளில் இருந்தும், அரசியலில் இருந்தும் முற்றிலும் வேறான அரசியல் – தத்துவப் பார்வையினை கொண்டு செயல்படமுடியும்.

தமிழகத்தில் இடதுஜனநாயக திட்டம்:
தமிழ் நாட்டில், 21வது கட்சிக் காங்கிரசிற்குப் பிறகு இடது ஜனநாயக திட்டத்தினை உருவாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.  பல்வேறு இடதுசாரி கட்சிகளின் வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகள் ஒரு பொது மேடையின் கீழ் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தவும், இயக்கங்களை நடத்தவும் அணிதிரட்டப்பட்டன.  இது தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

இதோடு கூட, முக்கிய திராவிட கட்சிகள் மற்றும் பிற முதலாளித்துவ கட்சிகளின் அரசியல் மற்றும் தத்துவார்த்தப் பார்வையிலிருந்து தனித்துவமான தத்துவார்த்தப் பார்வையுடன் கூடிய  ஒரு அரசியல் கொள்கை திட்டம் இந்த கூட்டு மேடையில் இருந்து உருவாக்கப்பட வேண்டும் என்ற தேவை உள்ளது.  நவீன தாராளவாதக் கொள்கைகளுக்கு மாற்றான, மக்கள் முன்னேற்றத்திற்கான, மற்றும் இந்த சமூகத்தில் நிலவும் பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வுகளுக்குக் கடிவாளமிடக்கூடியதுமான ஒரு மாற்றுக்கொள்கைச் சட்டகம் அங்கு உருவாக்கப்படவேண்டும்.

கருத்தியல் போராட்டம்:

இந்தத் திசைவழியில் எடுக்க வேண்டிய மற்றொரு நடவடிக்கை திராவிடக் கருத்தியலுக்கும், இயக்கங்களுக்கும் இசைவான ஒரு இடதுசாரி கருத்தியல் பார்வை உருவாக்கப்பட வேண்டும்.  இந்த இடதுசாரிக் கருத்தியல், திராவிடக் கருத்தியலுடனும் இயக்கங்களுடனும் விமர்சனப்பூர்வ தலையிடல் மேற்கொண்டு அதன் பாரம்பரியத்தில் அமைந்த நேர்மறை அம்சங்களை இணைத்துக் கொள்வதாகவும், எதிர்மறை அம்சங்களைக் கழித்துக்கட்டுவதாகவும் அமைந்து, அதன் போதாமைகளை மிஞ்சுவதாக அமையவேண்டும். மேலும் குறிப்பாக புதிய தாராளவாதத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட கேடுவிளைவிக்கும் கருத்தியல் தலையீட்டையும், சீர்குலைவையும் புரிந்துகொள்ளவேண்டும்.

மேலும், இந்த இடது ஜனநாயகத் திட்டம் என்பது மக்களை பிரித்தாளும் இந்துத்துவா வகுப்புவாதக் கொள்கைகளை எதிர் கொள்ளக் கூடிய வகையில் ஒரு தெளிவான திசைவழியினை காட்ட வேண்டும்.

கட்சியின் அனைத்து மட்டங்களுக்கும் இடது ஜனநாயக அணி குறித்தும் அதனுடைய மாற்று குறித்தும் அதன் அடிப்படைக் கரு குறித்தும் தெளிவாக விளக்கி அவர்கள் புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.  இதனை தேர்தல் கூட்டணிகளுடனோ அல்லது தேர்தல் உடன்பாட்டுடனோ குழப்பிக் கொள்ளக்கூடாது என்பது தெளிவாக அவர்களுக்குப் புரியச் செய்யப்பட வேண்டும்.  இடது ஜனநாயக அணியினை கட்டுவது என்பதனை நமது பிரதானமான நோக்கமாக தக்க வைத்துக் கொண்டு, எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் அதற்குப் பொருத்தமான தேர்தல் உத்திகளை உருவாக்கிக் கொள்ளலாம். கட்சியின் நலன்களை நோக்கி முன்னேறுவதன் அவசர அவசியத்திற்கும், இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்டுவதன் உடனடி அவசர அவசியத்திற்கும் நன்றாகப் பொருந்தும்படி இந்த தேர்தல் உத்திகள் வடிவமைக்கப்பட வேண்டும்.

 • தமிழில்: ஆர்.எஸ்.செண்பகம்

தமிழகத்தில் இடது ஜனநாயக முன்னணி: பொருளாதார கொள்கைகள்

வெங்கடேஷ் ஆத்ரேயா

இந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலம் என்ற வகையில் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளும் நிலவும் மத்திய மாநில நிதி உறவுகளும் தமிழக வளர்ச்சிக்கும் அதன் தன்மைக்கும் ஒரு முக்கிய காரணமாக அமைகின்றன.

கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆளும் அரசாங்கங்கள் பின்பற்றிவந்த  தாராளமய கொள்கைகள் தமிழக வளர்ச்சியின் தன்மையை கணிசமான அளவிற்கு நிர்ணயித்துள்ளன.

தமிழகத்தில் தொடர்ந்து அரசு பொறுப்பில் இருந்து வந்துள்ள திமுக, அதிமுக ஆகிய கட்சிகளும் அதே தாராளமய கொள்கைகளைத்தான் பின்பற்றி வந்துள்ளன. மக்களின் நேரடி அதிருப்தி இவர்கள் மீது பாயும் பொழுதெல்லாம் சில மக்கள் நல திட்டங்களை அறிவிக்கின்றனர். மக்கள் கோரிக்கைகளை கண்டறிந்து நாமும் இதர ஜனநாயக இயக்கங்களும் நடத்தும் போராட்டங்களும் சில மக்கள் நல திட்டங்களும் நடவடிக்கைகளும் அமலாக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. எனினும் அடிப்படையில் தாராளமய கொள்கைகளின் தாக்கம் மக்கள் வாழ்வில் பெரும் சவாலாக வந்து நிற்கிறது.

மாநிலத்தின் ஆண்டு உற்பத்தி ஆண்டுக்கு 6% க்கும் அதிகமாக வளர்ந்துவருவதாக சொல்லப்பட்ட போதிலும்,  மக்களின் அடிப்படை பிரச்சினைகளான வேலையின்மை, சிறு குறு விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளும் வேளாண் நெருக்கடி, சிறு குறு தொழில்முனைவோர் சந்திக்கும் தொழில் நெருக்கடி, தொழில் மந்தநிலை, சொத்து, வருமானம், கல்வி, ஆரோக்கியம் அனைத்திலும் நிலவும், மேலும் அதிகரித்துவரும் பெரும் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை கவனிக்கும்போது, மாற்றுக் கொள்கைகளின் அவசியத்தை உணரலாம்.

ஊழல் மலிந்துள்ளதும், தமிழகத்தின் கனிமங்கள், ஆற்று மணல், தாது மணல், நீர், நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்கள்  மிகக் குறைந்த விலையில் பெரும் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கப்படுவதும் மறுபுறம் பொதுத்துறை முதலீடுகள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகின்றன, பாசனம், கிராமப்புற கட்டமைப்பு வசதிகள், வேளாண் விரிவாக்க அமைப்பு, வேளாண் ஆராய்ச்சி ஆகியவற்றிற்கான ஒதுக்கீடுகள் மத்திய மாநில அரசுகளால் வெட்டப்பட்டு வருகின்றன. இடுபொருள் மானியங்கள் குறைக்கப்படுகின்றன.

அரசின் வரவு-செலவு இடைவெளியை கடுமையாக குறைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும், இதனை செலவைக் குறைப்பதன் மூலம் மட்டுமே செய்யவேண்டும் என்பதே தாரளமய பட்ஜெட் கொள்கை.

அண்மை ஆண்டுகளில் மத்திய பா ஜ க அரசு நலத்திட்டங்களையும்  அழித்து வருகிறது. இதில் ஊரக வேலை உறுதித்தித் திட்டமும் அடங்கும். பொதுவிநியோக அமைப்பையும் மத்திய அரசு திட்டமிட்டு சீரழித்து வருகிறது. தானியங்கள் உள்ளிட்டு வேளாண் விளை பொருட்களை அரசு இனி கொள்முதல் செய்யாது என்ற தொனியில் தான் மைய அரசு பேசி வருகிறது.

இந்தப் பின்புலத்தில் இடது ஜனநாயக முன்னணி கட்டுவது அவசியம் என்ற புரிதலில் அதற்கான அரசியல் – பொருளாதார கொள்கைகளை நாம் முன்வைக்க வேண்டியுள்ளது.

மாற்று பொருளாதாரக் கொள்கைகள்

விவரங்களுக்குள் போகும் முன், இடது ஜனநாயக முன்னணியின் (இஜமு) மாற்று பொருளாதார பார்வை பற்றிய புரிதல் அவசியம்..

தொழிலாளிவர்க்கம், கிராமப்புறங்களில் விவசாயத்தொழிலாளிகள், ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள், இதர கிராமப்புற, நகர்ப்புற சிறு உற்பத்தியாளர்கள், மத்திய தர வர்க்கத்தினர் ஆகிய உழைக்கும் மக்கட்பகுதி இரண்டு முன்னணிகளிலும்  இடம்பெறும். பணக்கார விவசாயிகளைப் பொருத்த வரையில், விடுதலை போராட்ட காலத்திலும் விடுதலைக்கு பின் ஒரு கட்டம் வரையிலும் பணக்கார விவசாயிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் இடையில் வலுவான முரண்பாடுகள் இருந்தன. தாராளமய கொள்கைகள் அமலுக்கு வந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் முடியும் தறுவாயில் இந்த முரண்பாடுகள் மட்டுப்பட்டுள்ளன. எனினும், இஜமுவிலும் மஜமுவிலும் பணக்கார விவசாயிகளை, முன்பின் முரணற்று இல்லாவிடினும், இடம்பெறச் செய்ய முடியும். அதேபோல், பெருமுதலாளிகள் தலைமையிலான அரசில் நிலப்பிரபுக்களுடன் முதலாளிவர்க்கமும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், சிறு நடுத்தர முதலாளிகள் இயல்பாக இஜமு / மஜமு பக்கம் வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் முதலாளித்துவ  நிலப்ரபுத்வ வளர்ச்சிப்பாதையின் நெருக்கடிகள் முற்றுகையில் தொழிலாளி வர்க்கம் தனது தலைமைப் பங்கினை சரிவர ஆற்றி  அவர்களை நம்பக்கம் கொண்டுவர இயலும். இத்தகைய புரிதலின் அடிப்படையில் தமிழக சூழலில் இடது ஜனநாயக பொருளாதார மாற்று பற்றி நாம் பரிசீலிப்போம்.

வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி: இடது மாற்று

இடது ஜனநாயக மாற்றின் முக்கிய பொருளாதார அம்சம், நில ஏகபோகத்தை தகர்க்கும் முழுமையான நில சீர்திருத்தம் ஆகும். இதனை சாதிப்பதன் மூலம் தான் கிராமங்களில் நில உடமை அடிப்படையில் ஆதிக்க சக்திகளாக விளங்கும் பணக்கார ஆளும் வர்க்கங்களின் பிடியை தளர்த்த முடியும். விவசாயத்தில் உற்பத்தி சக்திகள் வேகமாகவும் ஜனநாயகத்தன்மையுடனும் வளர முடியும். சாதி ஆதிக்க சக்திகளை தகர்க்கவும் இது மிகவும் அவசியமான நடவடிக்கை. உள்நாட்டுச்சந்தை விரிவடையவும் ஊரகப்பகுதிகளில் வேலை வாய்ப்பு பெருகவும் இது அவசியம்.

தமிழக மக்களில் சரிபாதியினர் கிராமங்களில் வசிக்கின்றனர். ஊரகக் குடும்பங்களில் பெரும்பாலானோர் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியையாவது வேளாண்மை மூலம் பெறுகின்றனர். ஆகவே, தமிழகத்தில் நிலப்பிரச்சினை மிக முக்கிய பிரச்சினையாகும்.  2011 ஆண்டிற்கான வேளாண் சென்சஸ் கணக்கெடுப்பு தரும் தகவல்படி 10 ஏக்கர் அல்லது அதைவிட அதிகமாக நிலம் சாகுபடி செய்வோர் தமிழகத்தின் மொத்த சாகுபடி நிலப்பரப்பில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒருபங்கை சாகுபடி செய்கின்றனர். ஆனால் 5 ஏக்கருக்கு குறைவாக சாகுபடி செய்யும் குடும்பங்கள்  மொத்த சாகுபடி செய்யும் குடும்பங்களில் 92% ஆக இருந்தும் மொத்த சாகுபடிபரப்பில் 61% தான் அவர்களால் சாகுபடி செய்யப்படுகிறது.இது சாகுபடி நிலங்களின் விநியோகம். ஆனால் நில உடமை இதைவிட கூடுதலாக ஒரு சிலரிடம் குவிந்துள்ளது. ஏனெனில் நிலம் உள்ளவர்கள் ஒருபகுதியை குத்தகைக்கு விடுகின்றனர். குத்தகைக்கு நிலம் எடுப்பவர்களில் பெரும் பகுதியினர் சொந்தமாக நிலம் அற்றவர்கள்.

சாதிவாரி சமூக பொருளாதார கணக்கெடுப்பு 2௦11 இன்படி தமிழக கிராமங்களில் 73% குடும்பங்கள் சொந்தமாக விவசாய நிலம் அற்றவை. இதே கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் கிராமங்களில் மொத்த  உழைப்பு படையில் சுமார் 20% சாகுபடியாளர்கள், 45% விவசாயத் தொழிலாளர்கள். தலித்துகளில் பெரும்பகுதியினர் விவசாய அல்லது பிற உடலுழைப்பு தொழிலாளர்கள். இதுதான் வன்னியர் உள்ளிட்ட சில ஏழை குடியானவ சாதிகளின் நிலையும். இவ்விவரங்களை இணைத்துப் பார்த்தால், தமிழகத்தில் நிலக்குவியல் தொடர்வதும், ஏராளமான ஊரக குடும்பங்கள் சொந்த சாகுபடிக்கு வாய்ப்பின்றி கூலி தொழிலாளிகளாகவும் குத்தகை விவசாயிகளாகவும் உள்ளனர் என்பதும் தெரிகிறது.

தமிழக கிராமங்களில் நிலவும் நில ஏகபோகத்திற்கு ஒரு முக்கிய சமூக அம்சம் உண்டு. தலித் மக்களில் பெரும் பகுதியினர் நிலம் மற்றும் இதர உற்பத்தி கருவிகள் இல்லாதவர்கள். இதனால் முழுமையான நிலச்சீர்திருத்தம் என்ற முழக்கம் சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. நிலவும் சாதி ஒடுக்குமுறை அமைப்பை தகர்க்க முழுமையான நிலச்சீர்திருத்தம் ஒரு முக்கியமான புள்ளி.

இருக்கும் நிலம் தொடர்பான சட்டங்களை முறையாக அமலாக்கினாலேயே ஓரளவு நில மறுவிநியோகம் சாத்தியமாகும். இதற்கு வலுவான இயக்கமும் அமைப்பும் தேவை என்பது உண்மையே. எனினும் நிலப்பிரச்சினை என்று ஒன்று தமிழகத்தில் உள்ளது, அது கம்பெனிகளுக்கு நிலம் தாரைவார்க்கப்படுவது மட்டுமல்ல. இங்குள்ள நிலமற்ற, மிகக் குறைவான நிலம் உள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மக்களுக்கு நிலம் மிக அவசியம். இந்த புரிதலை விரிவாக கொண்டுசெல்வது இடதுஜனநாயக முன்னணி கட்டும் பணியில் இடம் பெற வேண்டும்.

விவசாயத்தை பெரும்பகுதி மக்களுக்கு நன்மை பயக்கும் தொழிலாக மாற்றவும், மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தவும் உற்பத்தியில் மக்களின் ஈடுபாட்டை பன்மடங்கு அதிகப்படுத்தவும் கிராமப்புற சாதி ஆதிக்க விழுமியங்களை உடைக்கவும்  அவற்றிற்கு தொடர்ந்து உயிர் கொடுத்து வரும் பெரும் நில உடைமையாளர்களின் சமூக அரசியல் செல்வாக்கை தகர்க்கவும்  அடிப்படை நில சீர்திருத்தம் தேவை.

இதன் முதல்படியாக, அரசு தரிசுகளை பெரும் கம்பெனிகளுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் குத்தகைக்கு கொடுக்கும் கொடுமைக்கு முடிவு கட்டி அவற்றை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு மறுவிநியோகம் செய்ய வேண்டும்.  சட்டத்திலுள்ள ஓட்டைகளை அடைத்தால் – குறிப்பாக கோவில், ட்ரஸ்ட் நிலங்களை கையகப்படுத்தினால், பினாமிகளை இனம் கண்டு அகற்றினால், நில உச்சவரம்பு சட்டம் தொடர்பான பல விலக்குகளை நீக்கினால் கணிசமாக நிலம் கிடைக்கும்.

எனினும் முழுமையான நிலச்சீர்திருத்தம் என்ற முழக்கத்தை நடைமுறை முழக்கமாக மாற்றுவது எளிதல்ல. ஆகவே வர்க்கங்களை திரட்டும் பணியில் இந்த முழக்கத்தை திட்டமிட்டு நடைமுறை முழக்கமாக நாம் மாற்ற வேண்டியுள்ளது.

நில மறுவிநியோகம் என்பது துவக்கம் தான். இதனை தொடர்ந்து ஒட்டுமொத்த வேளாண் குடிமக்களுக்கு கூடுதல் அரசு ஆதரவு, பாசனம், சந்தை வசதிகள், கட்டுப்படியாகும் விளைபொருள் விலை, விரிவாக்க உதவி, ஆராய்ச்சி உதவி, நிறுவனக்கடன், இடுபொருள் மானிய உத்தரவாதம் ஆகியவையும் வேளாண் நெருக்கடியிலிருந்து தமிழகத்தை மீட்கவும் தமிழக கிராமங்களின் முகங்களை மாற்றவும் மிக அவசியம்.

நமது மாற்று கொள்கையின்கீழ் பாசனம், மின்சாரம், வேளாண் பொருட்களை சேமித்து வைக்க கிடங்குகள், குளிர்சாதன வசதிகள், கிராமப்புற சாலைகள்  உள்ளிட்ட  கட்டமைப்பு வசதிகளை அரசு உருவாக்க வேண்டும். இவற்றை செய்ய,  தனியார்மய, தாராளமய கொள்கைகள் கைவிடப்பட்டு, பொதுத்துறை  முதலீடுகள் உயர்த்தப்படவேண்டும் என்பது இடது மாற்றின் அம்சம்.. அதேபோல், சிதைந்துகிடக்கும் மாநில வேளாண் விரிவாக்க அமைப்பை தூக்கி நிறுத்தி வலுப்படுத்த அரசு நடவடிக்கை தேவை என்பதை மக்கள் இயக்ககங்களின்மூலமாக கொண்டு செல்லும் பொழுது இடது மாற்றுப் பார்வையில் நமது அணிதிரட்டல் நடைபெறும்.. நமது மாற்று பார்வையில்: :வேளாண் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள் உயர்த்தப்பட்டு, மகசூல் அதிகரிக்க வழி செய்யவேண்டும். பல்வகை வேளாண் மற்றும் பால் கூட்டுறவு அமைப்புகளையும் கூட்டுறவு வங்கிகளையும் வலுப்படுத்தி, வேளாண் மற்றும் கால்நடை துறைகளில் பாடுபடும் சிறு குறு உற்பத்தியாளர்களுக்கு அரசு உதவும். பெரும் உற்பத்தியின் வலிமையை சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்படுத்தவேண்டும் என்பது நமது மாற்று கொள்கை. வேளாண் துறை மற்றும் வேளாண் குடிமக்கள்  நலனுக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை நிர்ப்பந்திப்போம். குறிப்பாக, விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை மற்றும் கொள்முதல் உத்தரவாதம், தேசீய வேளாண் விரிவாக்க அமைப்பு, ஆராய்ச்சி அமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துதல், குறைந்த வட்டியில் போதுமான கடன்களை வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்குதல், போதுமான இடுபொருள் மானியங்களை உறுதியாகவும் உரிய நேரத்திலும் வழங்குதல்,  ஊராக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பொதுத்துறை முதலீடுகள் ஆகிய கொள்கைகளை மத்திய அரசு பின்பற்றிட நாம் நிர்ப்பந்திப்போம்.

கிராமப்புறங்களில் வேளாண்மையை பிரதான வருவாயாக கொண்டுள்ள குடும்பங்கள் 18 சதவிகிதம் தான். 65 சதவிகித குடும்பங்களின் பெரும்பகுதி வருமானம் உடல் உழைப்பிலிருந்து கிடைக்கிறது.  தமிழக கிராமப்புறங்களில் மொத்தக் குடும்பங்களில் கூலி வேலை செய்து வாழ்பவர்கள் மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள். மொத்த கிராமப்புற குடும்பங்களில் சம்பளத்திற்கு ஒருவராவது வேலை செய்யும் குடும்பங்கள் 10 சதவிகிதம்.  இத்தகையோரில் 78 சதவிகிதம் பேரின் மாத வருமானம் ரூ.5000-ம ரூ.5000-க்கு குறைவு. 16 சதவிகிதத்தினர் ரூ,5000 முதல் ரூ.10000 வரை பெறுகின்றனர். ஆக, தமிழக கிராமங்களில் கணிசமான பகுதியினர் வறுமையில் வாடுகின்றனர். மாத வருமானம் ரூ.10,000-மும் அதற்கும் குறைவாகவும் உள்ளவர்களே கிராமப்புறத்தில் பெரும்பான்மையான குடும்பங்கள். இவர்களுடைய கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மனைப்பட்டா, வீட்டு வசதி போன்ற பிரச்சனைகளுக்கு இடது ஜனநாயக மாற்று முன்னுரிமை அளிக்கும்.

தொழில் துறையில் இடது ஜனநாயக முன்னணியின் திட்டம்

விடுதலைக்குப் பின்பும், குறிப்பாக கடந்த இருபத்தைந்து ஆண்டு தாராளமய காலத்திலும், தனியார் பெரும் கம்பெனிகளுக்கு வரிச்சலுகைகளும் கட்டமைப்பு வசதிகளும் அளித்து, அவர்களது லாபத்தை அதிகரிப்பதன் மூலம் தான் முதலீடுகளையும் வேலை வாய்ப்புகளையும் பெருக்க முடியும் என்பதே அடுத்தடுத்து வந்த மத்திய மாநில அரசுகளின் தாரக மந்திரமாக  இருந்துள்ளது. கொடுக்கப்பட்ட சலுகைகள் உண்மையிலேயே எந்த அளவிற்கு முதலீடுகளை ஈர்த்துள்ளன, வேலை வாய்ப்புகள் போதுமான அளவு உருவாக்கப்பட்டுள்ளனவா என்றெல்லாம் எந்த ஆய்வும் அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. நாம் தமிழகத்தில் பலமுறை கோரியும் சட்டமன்றத்தில் இவை தொடர்பான வெள்ளை அறிக்கை வைக்கப்படவில்லை. கார்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் மட்டும் அள்ளிக்கொடுக்கப்படுகின்றன.

நமது மாற்றுக் கொள்கையின்கீழ் இதுவரை மாநில அரசுகளால்  பெரும்கம்பெனிகளுடன் போடப்பட்டுள்ள அனைத்து தொழில்சார்  புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிசீலிக்கப்பட்டு, அவற்றின் அமலாக்கம் உழைப்பாளி மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் மாற்றப்படும். கம்பெனிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் வேலை வாய்ப்பு அதிகரிப்புடன் இணைக்கப்படும். பயனளிக்காத ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும்.

தாராளமய கொள்கைகளால் சிறு குறு தொழில் முனைவோர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கு என்று இருந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டு, பெரும் நிறுவனங்களுடன் சமமற்ற ஆடுகளத்தில்  போட்டிபோடும் நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற்சமயம் ஆட்சியில் உள்ள பாஜக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலமும் ஜிஎஸ்டி மூலமும் சிறுகுறு தொழில்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. அந்நிய நேரடி முதலீட்டை வரவேற்பது என்ற பெயரில் சிறு குறு தொழில்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. நமது மாற்றுக்கொள்கையின்கீழ், இத்தகைய அணுகுமுறை முற்றிலும் தவிர்க்கப்படும். சிறு குறு தொழில்முனைவோர் ஊக்கம் பெற, அவர்களுக்கு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அரசு அறிவித்துள்ள சலுகைகள் உரிய நேரத்தில் அவர்களை வந்தடையும். சிறு குறு தொழில்முனைவோருக்கு நிறுவனக்கடன் வசதி மிக அவசியம். மாநில அளவில் நமது மாற்று திட்டம் இதனை செய்யும். எனினும், மத்திய அரசின் கொள்கைகளில் மாற்றம் காணாமல் கடன் வசதி மேம்பாட்டில் ஓரளவு தான் செய்ய முடியும். ஆகவே, மத்திய அரசின் கொள்கைகளில் தக்க மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதைப் போலவே கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை தமிழகத்தில் இடது ஜனநாயக அணி ஆவணத்தில் காணலாம்.

கட்டமைப்பு தொடர்பான இடது ஜனநாயக முன்னணியின் திட்டம்

ஆற்றல் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்திற்கு உரிய கவனம் செலுத்தப்படும். சுற்றுச்சூழல் அம்சங்களையும் கணக்கில் கொண்டு மின் உற்பத்திக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அனைத்துவகை ஆற்றல் தோற்று வாய்களும் கணக்கில் கொள்ளப்பட்டு மின் உற்பத்திப் பெருக்கம் திட்டமிட்டு அமலாக்கப்படும்.

மின்சாரம் உள்ளிட்ட ஆற்றல் துறையில் போதிய முதலீடுகள் அரசாலும் கூட்டு நிறுவனங்கள் மூலமும் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு, தொழில் நிறுவனங்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்டு அனைத்து தொழிற்சங்கங்களின் பங்களிப்பும் இதில் வரவேற்று பெறப்படும். புதுப்பிக்கத்தகுந்த ஆற்றல் தோற்றுவாய்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

போக்கு வரத்து, தகவல் தொடர்பு, ஆற்றல், பாசனம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு துறைகளிலும் அந்நிய இந்திய பெருமுதலாளிகளின் முதலீட்டைப்பெறுவதையே மையப்படுத்தும் அணுகுமுறைக்கு மாறாக அரசே முன்கை எடுக்கும். இதற்கான வளங்களை  மத்திய அரசுடன் வாதாடியும், ஊழலை முற்றிலுமாக ஒழித்தும், ஊழலற்ற வரிவசூல் மூலமும்  கனிமப்பொருள்கள் உள்ளிட்ட தமிழக இயற்கை வளங்களை அரசே பயன்படுத்தியும், வரி அல்லாத வளங்களை திரட்டியும் அரசு செயல்படும்.

போக்குவரத்து, ஆற்றல் துறைகள் உள்ளிட்டு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் திறம்பட பராமரிக்கப்பட்டு, அவற்றின் பொதுநல தன்மை பாதுகாக்கப்பட்டு, அவற்றை லாபகரமாக செயல்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்நிறுவனங்களில் பணிபுரியும் உழைப்பாளி மக்களின் உரிமைகளும் நலன்களும் பாதுகாக்கப்படும்.

தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் பொருத்தமான வகைகளில் பயன்படுத்தவும் திட்டங்கள் உருவாக்கப்படும். தமிழகத்தின் நீர்வளங்கள் பயன்பாடும் பராமரிப்பும் தொலைநோக்கு அடிப்படையில் திட்டமிடப்படும். பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை கணக்கில் கொண்டு, இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வதற்கான, அவற்றால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் குறைக்கவும் உதவும் வகையில்  பேரிடர் மேலாண்மை வலுப்படுத்தப்படும்.

வளர்ச்சிக்கான வளம் திரட்டுதல்: இடது ஜனநாயக மாற்று அணுகுமுறை

மக்களுக்கு நன்மை செய்திட அரசின் ஒதுக்கீடுகளை கணிசமாக அதிகரிக்க வேண்டும். இதற்கு மத்திய அரசுடன் கூடுதல் வளங்கள் மாநிலங்களுக்கு தரப்படவேண்டும் என்ற போராட்டத்தில் தெளிவாக நிலை எடுக்கப்படும். வரிவசூலில் ஊழலுக்கு முடிவுகட்டி  அரசின் வரிவருமானம் உயர்த்தப்படும். வரி வருவாய் திரட்ட பயனளிக்காத, தேவையற்ற  வரி சலுகைகள் கண்டறியப்பட்டு நீக்கப்படும்.

இடது ஜனநாயக மாற்றின் சில பொது பொருளாதார அம்சங்கள்

குறைந்தபட்சக் கூலியை தொழிலாளர் அமைப்புகளைக் கலந்து நிர்ணயித்து சட்டபூர்வமாக உறுதிசெய்வது, விலைவாசி உயர்வுக்கேற்ப ஊதிய மாற்றம் செய்வது, ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது, உழைப்பாளி மக்களுக்கு குறைந்தபட்ச சமூக பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்வது, பொதுவிநியோக அமைப்பை பாதுகாப்பது, வலுப்படுத்துவது: சுற்றுச்சூழலுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது, மக்கள் ஒப்புதலுடன் தொழில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது, முதியோர் நலன் காப்பதற்கான சிறப்பு திட்டங்களை உருவாக்கி அமலாக்குவது போன்றவையும் மாற்றுக் கொள்கைகளின் பகுதியாகும்.

இத்தகைய இடது ஜனநாயக முன்னணியின் அடிப்படை பொருளாதார மாற்றுக்கொள்கைக்கான போராட்டங்கள் இடது ஜனநாயக முன்னணியை கட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

இடது ஜனநாயக அணிக்கான வர்க்கங்களைத் திரட்டுதல்!

என். குணசேகரன்

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் சுரண்டப்படும் வர்க்கங்கள் கிளர்ந்தெழுந்து, அணி சேர்ந்து ஆளும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களை அதிகாரத்திலிருந்து புரட்சி மூலமாக அகற்றி ஒரு புதிய பாட்டாளி வர்க்க அரசை நிறுவிட வழிகாட்டுகிறது.

இந்தப் புரட்சிக் கடமையை வெற்றிகரமாக நடத்திட மக்கள் ஜனநாயக அணி அமைக்க திட்டம் வழிகாட்டுகிறது. மக்கள் ஜனநாயக அணி புரட்சியை சாதிப்பதற்கு தேவை. அதற்கு, தற்போது நிலவும் வர்க்கச் சூழலில் இடது ஜனநாயக அணி தேவை. இரண்டையும் தனித் தனி அணிச்சேர்க்கையாக பார்க்கக் கூடாது.

தேசிய அளவில், பாஜக காங்கிரஸ் போன்ற சுரண்டும் வர்க்கங்களின் அரசியல் அணிச்சேர்க்கைகளை முறியடித்து முன்னேறுகிற அணியாக இடது ஜனநாயக அணி இருக்கும். அவ்வாறு அமையும் இடது ஜனநாயக அணி வலுப்பெற்று, மக்கள் ஜனநாயக அணியாக உருப்பெற்று, இந்தியப் புரட்சி வெற்றியை நோக்கி முன்னேறும்.

வர்க்கப் போராட்ட அணி

இடது ஜனநாயக அணி என்பதுதான் ”…ஒரு உண்மையான மாற்று ” என்று 21-வது கட்சி அகில இந்திய மாநாட்டுத் தீர்மானம் , பாரா – 2. 86 குறிப்பிடுகிறது. பாஜக , காங்கிரஸ் உள்ளிட்ட முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு இது மாற்று.

இது ஒரு வர்க்கப் போராட்ட அணியாக மலர வேண்டும். இதில், தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கம், சில்லறை வர்த்தகர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட பிரிவினரின் பிரதிநிதித்துவம் இருக்கும்.

21-வது கட்சி காங்கிரஸ் “இந்த அணி மக்கள் ஜனநாயக அணிக்காக திரட்ட வேண்டிய வர்க்கங்களைக் கொண்டிருக்கும்” (;பாரா 2. 86) என்று சுட்டிக் கட்டுகிறது.

இந்த இடத்தில் மக்கள் ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய வர்க்கங்கள் குறித்து கட்சி திட்டத்தில் அளிக்கப்பட விளக்கத்தை நினைவுகூர்வது அவசியம்.

மக்கள் ஜனநாயக அணியைக் கட்டுவது குறித்து கட்சித்திட்டம் அத்தியாயம் 7, விரிவாக விளக்குகிறது.

தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக அணிக்கு மையமானதும் அடித்தளமானதும் ஆகும். இந்தக் கூட்டணிக்கு தலைமையேற்று புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது தொழிலாளி வர்க்கத்தின் கடமை.

விவசாயிகளிடையே பல பிரிவினர் உள்ள நிலையில் ஒவ்வொரு பிரிவினரின் பங்கினை திட்டம் விளக்குகிறது.

கிராமப்புறங்களில் பெரும் எண்ணிக்கையில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகள் தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படையான கூட்டாளிகளாக இருப்பார்கள்.

நடுத்தர விவசாயிகள் மக்கள் ஜனநாயக அணியின் நம்பகமான கூட்டாளிகளாக இருப்பார்கள்.

ஊசலாட்ட குணம் இருந்தபோதிலும், பணக்கார விவசாயிகளை மக்கள் ஜனநாயக அணிக்கு கொண்டு வர இயலும்.

நகர்ப்புற, கிராமப்புற நடுத்தர வர்க்கம் சார்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர், பொறியாளர்கள், மருத்துவர்கள், அறிவுஜீவிகள் உள்ளிட்டோர் மக்கள் ஜனநாயக அணியில் அங்கம் வகிக்க இயலும்.

முதலாளித்துவ ஆட்சிமுறை மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பினும், பெரு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களோடு சந்தைக்காக சமமற்ற போட்டியில் ஈடுபட வேண்டிய நிலையில் பெருமுதலாளிகள் அல்லாத முதலாளிகள் உள்ளனர். எனவே, இவர்களும் மக்கள் ஜனநாயக அணியில் இடம் பெற இயலும்.

இவ்வாறு கட்சி அணுகவேண்டிய வர்க்கங்கள் குறித்து கட்சித்திட்டம் வரையறை செய்கிறது.

மார்க்சியமும் வர்க்க ஆய்வும்

நமது சமுகத்தில் உள்ள வர்க்கங்களை எவ்வாறு பகுப்பாய்வு செய்வது என்பதனை நமது மார்க்சிய மூலவர்களின் எழுத்துகளே நமக்கு கற்றுத் தருகின்றன. சீனப் புரட்சிக்கு தலைமை தாங்கிய மாசேதுங் 1926-ஆண்டு எழுதிய “சீன சமுகத்தில் வர்க்கங்கள் பற்றிய” என்ற சிறு கட்டுரையில் அன்றைய கால சூழலில் வெவ்வேறு வர்க்கங்களின் நிலைமைகள் புரட்சி மாற்றம் குறித்த அவர்களின் சிந்தனை போக்குகள் ஆகியவற்றை விளக்குகிறார்.

நிறைவாக அந்த வர்க்கப் பகுப்பாய்வினை கீழ்க்கண்டவாறு தொகுக்கிறார். கட்டுரையின் துவக்கத்தில் “யார் நமது நண்பர்கள் ? யார் நமது எதிரிகள் “என்று கேள்வி எழுப்பி, நிறைவாக இந்த தொகுப்பிற்கு வருகின்றார். ”. . . . போர்ப்படை உடைமையாளர்கள், அதிகார வர்க்கத்தினர், தரகு வர்க்கத்தினர், பெரிய நிலப்பிரபுக்கள், அறிவு ஜீவிகளில் மிகவும் பிற்போக்கு பகுதியினர், போன்றோர் நமது எதிரிகள்… நமது புரட்சிக்கு தலைமை தாங்கும் சக்தி , ஆலை பாட்டாளி வர்க்கம், ;நமது நெருக்கமான நண்பர்கள் அரை பாட்டாளி வர்க்கம் மற்றும் குட்டி முதலாளித்துவ பிரிவினர். நடுத்தர முதலாளிவர்க்கத்தைப் பொறுத்தவரை அதன் வலதுசாரிப் பிரிவினர் நமக்கு எதிரிகள் : அதன் இடது சார்பான பிரிவினர் நமக்கு நண்பர்கள். . . ’இவ்வாறு துல்லியமான பகுப்பாய்வினை மாவோ செய்துள்ளார். இது போன்று பகுப்பாய்வு செய்து திரட்டும் செயல்முறையில் தேர்ச்சி பெற வேண்டும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தில் இந்திய சமூகத்தில் உள்ள வர்க்கங்கள் பற்றிய பகுப்பாய்வு உள்ளது. இந்த அடிப்படை பார்வையுடன், பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட வாழ் நிலைகள், வாழ்வாதார சிக்கல்களுடன் வாழ்ந்து வரும் கொண்ட மக்களை வர்க்க அடிப்படையில் திரட்டிட வேண்டும்.

வர்க்கம் – மார்க்சிய நோக்கு

சமூகத்தில் வாழும் மக்களை தனித்தனி நபர் என்கிற வகையில் பார்க்கிற பார்வை முதலாளித்துவ ஆய்வுக்கண்ணோட்டமாகும். தனி நபருக்கு உள்ள செயல் ஆற்றல், தனி நபரின் சிந்தனைத்திறன் என்றெல்லாம் தனிநபர் மேன்மையை உயர்த்திப் பிடிப்பது முதலாளித்துவம் போற்றும் பண்பாட்டு நெறி. ஆனால் அனைத்து உலகச் செல்வங்களும் கூட்டு உழைப்பால், கூட்டுச் செயல்பாட்டால் உருவானதே. எனவே, சமூக மாற்றமும், வர்க்க ஒருமைப்பாட்டினால் மட்டுமே சாதிக்க இயலும். இது, வர்க்கம் பற்றிய மார்க்சியப் பார்வையாகும்.

சமூக உற்பத்தியில் ஒவ்வொரு குறிப்பிட்ட மக்கள் தொகுதி வகிக்கும் பாத்திரத்தையொட்டியே வர்க்கம் வரையறை செய்யப்படுகிறது. உற்பத்திக் கருவிகளில் தனியுடைமை ஆதிக்கம் செலுத்தி வந்துள்ள சமூக அமைப்புகளில் எல்லாம், பெரும்பான்மையான உழைப்பாளி மக்கள் சுரண்டப்பட்டு வந்துள்ளனர். மனித வரலாற்று வளர்ச்சியில் உற்பத்தி சக்திகள் வளர்ந்து ஒரு கட்டத்தில் உபரி உற்பத்தி சாத்தியமாகிறது. இது வர்க்க சமுதாயத்திற்கு வழிகோலுகிறது.

உற்பத்திக் கருவிகளின் தனி உடைமை என்பதே வர்க்க சமுதாயத்தின் இலக்கணம். உற்பத்திக் கருவிகளில் சமூக உடைமையை ஆதிக்க நிலையில் கொண்டு வந்து, உழைப்பாளி வர்க்கம் தலைமையேற்று நடத்தும் அரசே, மக்கள் ஜனநாயக அரசு. இதற்காக, இன்றைய சூழலில் இடது ஜனநாயக அணி அமைய வேண்டும்.

வர்க்கங்களோடு நெருக்கம்

கொல்கத்தா ப்ளீனம் மக்களோடு உயிரோட்டமான தொடர்பு கொள்ள வலியுறுத்துகிறது. ”புரட்சிப் பாதையில் செல்லும் வெகுமக்கள் கட்சி “ என்ற நிலைக்கு கட்சி உயர்ந்திட வெகு மக்களோடு, குறிப்பாக சுரண்டப்படும் வர்க்கங்களோடு நெருக்கம் தேவை.

சமூக வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும் இயக்கமும், அவற்றின் ஊடாக, முரண்பாடுகளும் தெறிக்கின்றன. இதில் அடிப்படையானது உற்பத்தி சார்ந்தது.

உழைப்பில் ஈடுபடும் வர்க்கங்களுக்கு உரிய பலன் கிடைக்காதது; அதையொட்டி ஏற்படும் வாழ்வாதார சிக்கல்கள்; இவற்றால் ஏற்படும் மன அழுத்தங்களும், அதிருப்தியும், குமுறல்களும் சாதி, மத, இன்ன பிற அடையாளங்களாக திசை திருப்பப்படுவது எல்லாம் நமது சமூகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஆளுகிற அரசு, சுரண்டப்படும் வர்க்கங்களின் கருவி என்பதை உணர்வதே உண்மையான வர்க்க அரசியல் பார்வை. அத்துடன், உள்ளூர் சமூக அதிகார பீடத்தில் ஆளுமை செலுத்துவதும், இந்த உடைமை வர்க்கங்களே என்பதை உணர்ந்து அதனை எதிர்ப்பது தான் வர்க்க அரசியல்.

இந்த வர்க்க அரசியல் பார்வையை உள்ளூர் சமூக மக்களுக்கு அழுத்தமாக பதியச் செய்கிற போது, ஒவ்வொரு பிரச்சனையிலும்(முரண்பாட்டிலும்) எதிரெதிராக உள்ள இரண்டு கூறுகளில், தாங்கள் எந்தப் பக்கம் என்பதை அவர்களே நிலை எடுப்பார்கள்.

உதாரணமாக, உள்ளாட்சி மட்டத்தில் ஆண்டு வரவு-செலவு திட்டம், பெரும்பான்மை மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக இல்லாமல், சிறு கூட்டம் பலன் பெறுவதற்காக செலவிடப்படுகிற நிலையை மக்கள் தாங்களே அறிவது வர்க்க அரசியல் பார்வை.

உள்ளூர் மட்டப் பிரச்சனைகளில், வர்க்க அரசியல் பார்வை ஏற்பட பயிற்றுவித்தால், மாநில, மத்திய, சர்வதேச பிரச்சனைகளிலும் வர்க்கப் பார்வை வேரூன்ற வாய்ப்பு ஏற்படும். இதனால், புதிய தாராளமயக் கொள்கை, ஏகாதிபத்திய ஆதிக்கம் போன்ற அனைத்து தேசிய, சர்வதேசிய பிரச்சனைகளில் சிறந்த தெளிவு ஏற்படும். இப்பிரச்சனைகளில் இயக்கம் நடத்தும்போது மக்கள் உளப்பூர்வமாக கலந்து கொள்வார்கள்.

தற்போது, மத்திய ஆண்டு வரவு-செலவுத்திட்டம் குறித்து நமது கட்சியின் மத்தியக்குழு அறிக்கை உடன் வருகிறது. இது தெளிந்த வர்க்கப் பார்வை கொண்டது. ஆனால், இது வெகுமக்கள் பார்வையாக பரிணமிக்க வேண்டும். இல்லையெனில், சரியான பார்வை மேல் மட்டத்தில் இருந்தாலும் பலனில்லை. வெகு மக்களிடையே உருவாகும் வர்க்கப் பார்வை, இன்றைய கட்சி விரிவாக்கத்திற்கும் , மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கும், தேவையானது.

வர்க்கங்கள் பற்றிய விவரங்கள்

நமது கட்சி, வர்க்க – வெகுஜன அமைப்புகளின் கிளை மட்டக் கூட்டங்களை நடத்துவதற்கு உறுதியுடன் முயற்சிக்க வேண்டும். அங்கு வாழும் நமது வர்க்கங்களை திரட்டுவதற்கான விவாதம் ஊக்குவிக்கப்பட வேண்டும். அந்தப்பகுதி சார்ந்த மக்கள் வாழ்நிலை குறித்த விரிவான விவாதம் நடைபெற வேண்டும்.

உள்ளூர் சமூகத்தில் வாழ்ந்திடும் முறைசாரா தொழிலாளர்கள், விவசாயிகள், உள்ளிட்ட குடும்பங்கள் எதிர்நோக்கும் தொழில், குடியிருப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பிரச்சனைகள், விவாதிக்கப்பட வேண்டும். (சமூகக் குழுக்கள் திரட்டுவதன் முக்கியத்துவம் இந்த இதழில் வாசுகி எழுதிய கட்டுரையில் இடம் பெற்றுள்ளது).

அவர்களது பிரச்சனைகளை பற்றுக் கோலாகக் கொண்டு அவர்களை நமது வெகுஜன அமைப்புகளில் செயல்பட வைப்பதற்கான திட்டங்களும் அவ்வப்போது விவாதிக்க வேண்டும். இது கிளை அமைப்புகளின் பழக்கமாக மாற்றிட வேண்டும். அந்தப் பகுதி சார்ந்த வர்க்கங்களின் வாழ்வாதார நிலைமைகள் பற்றிய நுணுக்கமான விபரங்கள் கிளை அமைப்புகளிடம் இருக்க வேண்டும்.

வர்க்க உணர்வு

இக்கடமையை சாதிக்க வேண்டுமெனில் உழைப்பாளி மக்களிடம் வர்க்க உணர்வுகள் (class consciousness) மேலாதிக்கம் கொண்டவையாக மாற வேண்டும். வர்க்க உணர்வு என்பது என்ன? வரலாற்று இயக்கத்தில், சமூக மாற்றத்திற்காக ஒரு வர்க்கம், தான் ஆற்ற வேண்டிய புரட்சிகரப் பாத்திரத்தை உணர்ந்து, வர்க்க ஒற்றுமையை உருவாக்குவதுதான்.

உழைப்பாளி மக்களுக்கு வர்க்க உணர்வை ஏற்படுத்துவது, இடது ஜனநாயக அணி அமைக்கும் கடமைகளில் மிக முக்கியமானது. எனவே, இத்தகு வர்க்க உணர்வை எவ்வாறு ஏற்படுத்துவது ? இது, முக்கியமான சவால்.

சிந்தனை, உணர்வு ஆகியன எதார்த்த உலகின் பிரதிபலிப்பு என்பது மார்க்சிய பொருள்முதல்வாதம். வேலை தளத்தில் தனது உழைப்பைச் செலுத்துகிற போது, ஒருவர் தன்னை தொழிலாளி அல்லது விவசாயி என்ற வகையில் அடையாளப்படுத்திக் கொள்கிறார். வேலை தளத்தில், உழைப்பு செலுத்தும் நிகழ்வின்போது, புதிய பொருளை உருவாக்கும் படைப்பாற்றல், இதர உழைப்பாளிகளோடு ஒன்றுபட்டு நிற்கிற ஒருமைப்பாடு ஆகியவை வெளிப்படுகின்றன. இந்த நிகழ்வின்போது உழைப்பாளி எனும் அடையாள உணர்வே மேலோங்கி உள்ளது.

தான் வசிக்கும் உள்ளூர் சமூகம், குடியிருப்பு, வீடு, குடும்பம் என்கிற சூழலில் அவர் தன்னை உட்படுத்திக் கொள்ளும்போது வெவ்வேறு உணர்வுகளுக்கு ஆட்படுகிறார். பல தருணங்களில் சாதி சார்ந்த பிணைப்புகளில் அவர் ஈடுபடுகிறபோது சாதி சார்ந்த அடையாள உணர்வுகள் மேலோங்குகின்றன. குடும்பம் சார்ந்த மத சடங்குகளில் ஈடுபடுகிறபோது அவர் தன்னை ஒரு இந்து, முஸ்லீம் என்ற வகையில் மதம் சார்ந்தவராக அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

இவ்வாறு பலவிதமான சமூக உறவுகள் பலவித அடையாளங்களை அவருக்கு ஏற்படுத்துகின்றன. வேலை தளத்தில் ஏற்படும் வர்க்க ஒற்றுமை உணர்வு கூட சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் மங்கிப்போகின்றன. இது அல்லாமல் அவர் பல முதலாளித்துவக் கட்சிகளின் ஆதரவாளராக அல்லது அந்தக் கட்சிகளுக்கு வாக்களிப்பவராக இருக்கின்றார். இதனால், இடது ஜனநாயக அணியில் அங்கம் வகிக்க வேண்டிய வர்க்கங்களே, தாங்களே அறியாமல், தற்போதைய சுரண்டல் முறையை நிலை நிறுத்துகிறவர்களாக, உள்ளனர். அவர்களே, சுரண்டும் வர்க்கங்களுக்கு ஆதரவாக இருக்கும் வேதனையான நிலை உள்ளது. உழைப்பாளி, தன்னை சுரண்டல் வாழ்க்கைக்கு உணர்வுப் பூர்வ எதிர்ப்பின்றி உட்படுத்திக் கொள்ளும் அவலமான சூழல் உள்ளது.

வர்க்க, வெகுஜன அமைப்புகளில் தங்கள் கோரிக்கைகளுக்காக ஒரு பகுதி உழைப்பாளி மக்கள் திரள்கின்றனர். தங்களது சங்கச் செயல்பாடுகளின்போது கோரிக்கைகளுக்காக ஒற்றுமை உணர்வு ஏற்பட்டு, வர்க்க உணர்வு நிலையில் சிறிது முன்னேறியவர்களாக மாறுகின்றனர். எனினும் இந்த சங்க ஒற்றுமை உணர்வு, சமூக மாற்ற அரசியல் உணர்வு மட்டம் என்கிற அளவிற்கு உயர்வதில்லை.

ஆளும் வர்க்க உத்திகள்

ஆளும் வர்க்கங்கள் உழைப்பாளி மக்களின் வர்க்க உணர்வை மழுங்கடிக்க பல உத்திகளை பயன்படுத்துகின்றனர். உழைப்பாளி வர்க்கங்களின் வர்க்க உணர்வை மங்கிடச் செய்யும் பணியில் இன்று ஊடகங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன.

வர்க்க உணர்வை மழுங்கடிக்கும் கருத்துகள் வினையாற்றும் இடம் எது?

உழைப்பாளிகள் வசிக்கின்ற குடியிருப்பு, கிராமம், நகர வார்டு உள்ளிட்ட உள்ளூர் சமூகம் சார்ந்த தளங்களில் வர்க்க உணர்வுக்கு எதிரான உணர்வுகள் தழைப்பதற்கான சூழலும் உருவாக்கப்படுகிறது. கிராம, நகர்ப்புறங்களில் உற்பத்தி சார்ந்தும், உற்பத்தி அல்லாத நிறுவனங்கள் (கல்வி, அரசியல் கட்சிகள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்கள், கலாச்சார விழாக்கள் போன்றவை) சார்ந்தும் மக்கள் நெருக்கமான உறவுகள் கொள்கிற தளமே, உள்ளூர் சமூக தளம்.

இதில் மக்களிடையே பல்வேறு முரண்பாடுகளும் எழுகின்றன. இந்த சமூக உறவுகளில் வசதி வாய்ப்புகளும், அந்தஸ்தும், செல்வாக்கும் கொண்ட ஒரு சிறு கூட்டமே அதிகாரம் படைத்தவர்களாக காலம் காலமாக இருந்து வருகின்றனர். இந்த உறவுகளில் தலையிட்டு, நமது வர்க்கங்களை அதிகாரம் படைத்தவர்களாக மாற்றிட வேண்டும்.

எங்கே நமது வர்க்கங்கள் திசை திருப்பப்படுகிறார்களோ, அங்கே நமது தலையீடு வலுவானதாக இருத்தல் வேண்டும். அதாவது, வர்க்க உணர்வை வலுப்படுத்திட, உள்ளூர் சமூகத் தளத்தை முழுவதுமாக நாம் பயன்படுத்திட வேண்டும். இக்கடமையை நிறைவேற்றிட, உள்ளூர் மட்டத்தில் உள்ள கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் கிளை அமைப்புகளின் பாத்திரமே முக்கியமானது. அவர்கள்தான் இந்த வர்க்கங்களின் வாழ்க்கையில் நேரடியாக தலையிடும் வாய்ப்பும் நெருக்கமும் கொண்டவர்கள். இந்த நோக்கில் கொல்கத்தா ப்ளீனத்தில் வெகுஜன அமைப்புகளின் கிளை அமைப்புகளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.

தொழிற்சாலை மட்டத்தில் வர்க்க அதிகாரம் வெளிப்படையாக கோலோச்சுகிறது. தொழிற்சாலை மட்டங்களில் ஊதிய உயர்வு, சங்க உரிமை போன்ற பிரச்சனைகளில் போராட்டங்களை உருவாக்குவதும், அவற்றின் ஊடாக வர்க்க உணர்வை உயர்த்துவதும் மிக அவசியம். இதில் தொழிற்சங்கங்களில் பணியாற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.

நான்கு அம்சங்கள்

வர்க்கங்களைத் திரட்டுவதற்கான உள்ளூர் மட்ட செயல்பாட்டில் சில முக்கிய அம்சங்கள் தவறாது இடம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, கீழ்க்கண்ட நான்கு அம்சங்களும் நீங்காமல் நிறைந்து இருக்க வேண்டும்.

1.விமர்சனம் : அரசு மற்றும் ஆளும் வர்க்கங்களின், கொள்கை, நடைமுறைகள் பற்றிய விமர்சனக் கருத்துகள், கட்சி அணிகள் மற்றும் உழைக்கும் மக்களிடம் இடையறாது விவாதிக்கப்பட வேண்டும்.

2.மாற்று: விமர்சனத்தின் ஊடாக நாம் மாற்றுக் கோரிக்கைகளை உருவாக்குகிறோம். எனவே முன் வைக்கும் மாற்று கோரிக்கைகள்- தீர்வுகள்; அவற்றையொட்டி இயக்கங்கள் நடத்துவதற்கான உடனடி மற்றும் எதிர்காலத் திட்டம் அனைத்தும் “மாற்று’என்பதற்குள் அடங்கும்.

3.தத்துவார்த்த கருத்தோட்டங்கள் : பிரச்சனைகளுக்கு ஊற்றுக்கண்ணாக உள்ள முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அமைப்பைப் பற்றியும், அதனை மாற்றிட வேண்டிய அவசியத்தையும், மார்க்சிய இயக்கவியல் ரீதியில் விளக்குவது தான் தத்துவார்த்த கருத்துகள் எனப்படுவது;

இந்த தத்துவார்த்தக் கருத்துகளை நமது வர்க்கங்கள் உள்வாங்கிட தொடர் முயற்சி மேற்கொள்ள வேண்டும். உள்ளூர் சமூகத்தில் இதற்கு வல்லமை உள்ளது. மார்க்ஸ் “கருத்துகள் மக்கள் மனதை கவ்விப் பிடிக்கும் போது அவையே ஒரு பௌதிக சக்தியாக மாறிடும்” என்றார். நாம் திரட்டிடும் மக்களிடம், கட்டாயமாக இந்தத் தத்துவப் பணியை நாம் நடத்திட வேண்டும்.

4.ஸ்தாபனப்படுத்துதல் : எத்தகு பிரச்சனைகளை எடுத்தாலும், சம்பந்தப்பட்ட மக்கள் செயலாற்றும் களங்களை நிச்சயித்திட வேண்டும். அதற்கு நமது வர்க்க, வெகுஜன அமைப்புகளே, சிறந்த களங்கள். அத்துடன் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான களங்களையும் உருவாக்க வேண்டும். புதிய அமைப்புகளையும் தேவைப்பட்டால் உருவாக்கலாம் என்று 18-வது கட்சிக் காரங்கிரசிலிருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேற்கண்ட நான்கு அம்சங்களில் ஒன்று கூட விடுபடாமல் கையாளுதல் வேண்டும். நான்கும் ஏக காலத்தில் நடைபெறும் வகையில் களத்தில் பணியாற்றும் தோழர்களின் ஆற்றல்களை வளர்க்க வேண்டும். இது வர்க்கத் திரட்டலுக்கு சிறந்த வழிமுறை. இதுவே நமது கடந்த கால அனுபவங்களில் கிடைத்த படிப்பினை.

அது மட்டுமல்லாது இவ்வாறு செயல்படுகிற போது மட்டுமே இடது ஜனநாயக அணியை உருவாகக் முடியும்.

செயல் சிந்தனை; இரண்டு இணையான செயல்பாட்டுத் தளங்கள்

உள்ளூர் தளத்தில் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் முதலாளித்துவ சிந்தனை, பண்பாடு அனைத்தும் மேலாதிக்கம் செலுத்துகிறது. இந்த மேலாதிக்கத்தின் இறுக்கம் குடியிருப்பு, நகர வார்டு, கிராமம் என்ற கட்டுக்கோப்புக்குள் கோலோச்சுகிறது. வர்க்க வெகுஜன அமைப்புகளில் வெகுஜன அடிப்படையில் சேர்த்த உறுப்பினர்களை உறுதிப்படுத்த வேண்டும் என்று நீண்டகாலம் பேசப்பட்டாலும், நடைமுறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எப்போதுமே எட்ட முடியாமைக்கு இதுவும் காரணம்.

செயல், சிந்தனை ஆகிய இரண்டுமே வர்க்கங்கள் தங்களது வரலாற்றுக் கடமையை உணர்வதற்கு தேவைப்படுகின்றன. நமது வர்க்கங்களின் உணர்வு நிலையை நமது அரசியல் உயரத்துக்கு உயர்த்திட மக்களோடு அன்றாட நெருக்கம் தேவைப்படுகிறது. இதில் உள்ளுர் சார்ந்த கிளை அமைப்புகளே பெரும் பங்காற்றிட இயலும். நாம் திரட்டியிருக்கிற வர்க்கங்களையும், அரசியல் ரீதியாக உறுதிப்படுத்த வாய்ப்புள்ள தளமும் உள்ளுர் சமூகம்தான். இதனை பயன்படுத்துவதற்கு நமது கிளை அமைப்புகளை பயிற்றுவிக்க வேண்டும்.

உதாரணமாக நலத் திட்டங்களின் பயனை பயனாளிகளுக்கு பெற்றுத் தருகிற முயற்சியில் கிளைகள் ஈடுபடும் போது குடும்பங்களோடு நெருக்கம் அதிகரிக்கிறது. அல்லது நலத் திட்டங்களை அமலாக்க இயக்கம் நடத்தும் போதும் நெருக்கம் அதிகரிக்கிறது. இந்த நெருக்கத்தின் மூலம் நலத் திட்டங்களை தங்களது சாதனையாக ஆளும் வர்க்கங்கள் முன்னிறுத்தி பலன் அடைவதை தடுக்க முடியும். அத்துடன், அடிப்படை கோரிக்கைகளுக்கான வர்க்கப் போராட்டத்தை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இது உள்ளூர் மட்ட செயல்பாட்டில் சாத்தியமாகிறது.

ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்திற்கு எதிராக இடது ஜனநாயக மாற்றுக்கான உணர்வை பதிக்கும் நடவடிக்கைகளை கட்சிக் கிளைகளும், வெகுஜன அமைப்புகளின் கிளை அமைப்புகளும் உள்ளூர் மட்டத்தில் செய்திட வேண்டும். இதுவே உண்மையான கருத்தியல் போராட்டமாகும்.

இந்தப் போராட்டம் மக்களை சிந்தனை ரீதியாக முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக திருப்பி, இடது ஜனநாயக அணி கருத்தியலுக்கு கொண்டு வரும்.

இக்கடமைகளை நிறைவேற்றிட, மார்க்சிஸ்ட் கட்சியின் சொந்த பலம் அதிகரிக்க வேண்டும். இந்தியாவில் பாட்டாளி வர்க்க ஆட்சி அதிகாரமான, ”மக்கள் ஜனநாயக அரசு” அமைக்கும் திட்டத்துடன் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக செயலாற்றி வருகிறது. எனவே மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சி , இடது ஜனநாயக அணியின் வளர்ச்சியை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.