பிருந்தா காரத்
“அடிமைத்தனம், சாதிய அமைப்பு, (சமூகம், கலாச்சாரம் போன்ற) அனைத்து வடிவங்களிலுமான சாதிய ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை முற்றிலுமாக அழித்தொழிக்கவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. உழைக்கும் தீண்டத்தகாதவர்கள் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து உழைப்பாளிகளின் முழுமையான, முற்றிலுமான சமத்துவத்திற்காகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது”.
1930ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட செயலுக்கான மேடை என்ற கட்சி ஆவணத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் இவை. இதன் இன்றைய முக்கியத்துவம் என்ன?
1930ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி முதன்முதலாக வெளியிட்ட இந்தக் கொள்கை அறிக்கை மூன்று முக்கியமான அம்சங்களைக் கொண்டதாகும். முதல் அம்சம், சாதிய அமைப்பையும், அதிலிருந்து தோன்றும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்தொழிப்பது என்ற தனது உறுதிப்பாட்டை அது வெளிப்படுத்துகிறது.
1916ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்த இளம் அம்பேத்கர் “சாதியை புறந்தள்ளுவதற்கான நீடித்த முயற்சிகள்” குறித்து எழுதியிருந்தார். “இயற்கைக்கு முரணான ஓர் அமைப்பு” என்றும் அவர் அதை விவரித்து இருந்தார்.
19ஆம் நூற்றாண்டில் சாதிய அமைப்பை எதிர்த்துப் போராடிய ஜோதிபா புலே மற்றும் இதர மகத்தான சமூக சீர்திருத்தவாதிகளுக்குப் பிறகு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்தாரெனில், அரசியல் கட்சிகளிடையே சாதிய அமைப்பை முற்றிலுமாக அகற்ற அறைகூவல் விடுத்த முதல் அரசியல் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. இந்தப் பின்னணியில்தான் சாதிய அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை அப்படியே இருத்திக் கொண்டு அதை ‘சீர்திருத்த’ வேண்டும் என்ற காந்திய அணுகுமுறையை 1930ஆம் ஆண்டின் இந்த ஆவணம் விமர்சித்திருந்தது.
இந்த ஆவணத்தின் இரண்டாவது அம்சம் என்பது சாதிய அமைப்பிற்கு எதிரான போராட்டத்தை பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் எதிரான தேச விடுதலைப் போராட்டத்தோடு இணைத்ததே ஆகும். “நம் நாட்டில் உள்ள பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் விளைவாக அனைத்து வகையான உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ள பல லட்சக்கணக்கான அடிமைகள், சமூக ரீதியாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ( தீண்டத்தகாதவர்கள் என்றழைக்கப்படும்) கோடிக்கணக்கான உழைப்பாளிகள் இப்போதும் இந்நாட்டில் இருந்து வருகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சி, நிலப்பிரபுத்துவ அமைப்பு, பிற்போக்குத் தனமான சாதி அமைப்பு, மத ரீதியான ஏமாற்றுவேலைகள், கடந்த காலத்திய அடிமைத்தன, பண்ணையடிமைத் தனங்கள் ஆகிய இவை அனைத்துமே இந்திய மக்களின் குரல்வளையை நெறித்து, அவர்களின் விடுதலைக்குத் தடையாக நிற்கின்றன. 20ஆம் நூற்றாண்டிலும் கூட சக மனிதனை நேருக்கு நேராகச் சந்திக்க, பொதுக் கிணறுகளில் நீரெடுத்துக் குடிக்க, பொதுப் பள்ளிகளில் சமமாக அமர்ந்து படிக்க உரிமைகளற்று ஒதுக்கப்படும் நிலை நீடித்து நிற்கவும் அவை வழிவகுத்துள்ளன” என்றும் அது குறிப்பிட்டது.
இத்தகைய சாதிய அமைப்பை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பவர்களில் ஒரு சிலரிடையே ஒருவிதமான மாயை அல்லது நம்பிக்கையும் நிலவி வந்தது. அப்போது இருந்த தேசியவாதத் தலைமையைப் போலில்லாமல் சாதிய அமைப்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் பிரிட்டிஷாருக்கு இல்லை என்பதே அந்த நம்பிக்கை ஆகும். உண்மையில், மக்களை பிளவுபடுத்தி தங்களது ஆட்சியை நீட்டித்துக் கொள்வது என்ற உத்தியின் மூலம் இந்து-முஸ்லீம் என்ற அடையாளங்களை வளர்த்தெடுக்க பிரிட்டிஷார் எவ்வாறு உதவி செய்தார்களோ, அதே போன்று சாதிய அமைப்பில் இருந்த பிளவுகளையும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். இதற்கு வர்க்க ரீதியான காரணமும் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குக் கிடைத்து வந்த மிகப்பெரும் ஆதரவு என்பது நிலப்பிரபுக்கள், ராஜாக்கள், மகாராஜாக்கள் ஆகியோரிடமிருந்தே வந்தது. ‘தீண்டத்தகாதவர்’களின் உழைப்பை மலிவாகப் பயன்படுத்திக் கொண்டு, ‘பண்ணை அடிமை மற்றும் அடிமை நிலைகளை’ நிலைநிறுத்திக் கொள்ள சாதிய அமைப்பே அவர்களுக்கு வழியேற்படுத்தித் தந்திருந்தது. இந்நிலையில் அத்தகைய சாதிய அமைப்பை நிலைநிறுத்தி, வலுப்படுத்த வேண்டிய அவசியமும் இந்தப் பிரிவினருக்கு இருந்தது.
இவ்வகையில் காலனிய ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்பது நிலப்பிரபுத்துவத்திற்கும் ஆழ வேரூன்றியிருந்த சாதிய அமைப்பிற்கும் எதிரான போராட்டத்தோடு இணைக்கப்பட்டதாக இருந்தது. எனவேதான் “காந்திய வகைப்பட்ட, சீர்திருத்தம் பெற்றிருந்த சாதிய அமைப்பை இரக்கமேதுமின்றி அழித்தொழிப்பதன் மூலம் மட்டுமே, விவசாயப் புரட்சியின் மூலம் மட்டுமே, பிரிட்டிஷ் ஆட்சியினை வலுவாகத் தூக்கியெறிவதன் மூலம் மட்டுமே, உழைக்கும் தீண்டத்தகாதவர்களின், அடிமைகளின் முழுமையான சமூக, பொருளாதார, கலாச்சார, சட்டபூர்வமான விடுதலை என்பதற்கு வழியேற்படும்” என 1930ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட செயல்திட்டம் குறிப்பிட்டிருந்தது.
மூன்றாவது அம்சம் என்னவெனில், அப்போதுதான் தலையெடுத்துக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தலைவர்களும் பிரிட்டிஷ் ஆட்சியின் மிகப்பெரும் அடக்குமுறைக்கு ஆளான போதிலும், ஒன்றன்பின் ஒன்றாக ‘சதிவழக்குகள்’ அவர்கள் மீது போடப்பட்ட போதிலும், 1930ஆம் ஆண்டின் செயல்திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு தீண்டாமை, ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பது, அந்நாட்களில் தலித்களுக்கு விரோதமான நடைமுறைகள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டனர். சில இடங்களில் இத்தகைய போராட்டங்களை அவர்களே தலைமையேற்றும் நடத்தினர். எனவே சாதிய அமைப்பை எதிர்த்துப் போராடுவதன் அத்தியாவசியமான அம்சத்தைப் பொறுத்தவரையில், அது தத்துவார்த்தரீதியான ஒரு நிலைபாடு மட்டுமல்ல; இத்தகைய போராட்டங்களில் கம்யூனிஸ்டுகளின் நேரடியான பங்களிப்பும் இதில் அடங்கியுள்ளது.
விடுதலை போராட்டத்தின்போதும், புதிதாக விடுதலை பெற்ற இந்தியாவிலும் சாதியைப் பொறுத்தவரையில் ஆர் எஸ் எஸ் மற்றும் அதே போன்ற கருத்துக்களைக் கொண்டிருந்த சக்திகளின் பங்களிப்பு எத்தகையதாக இருந்தது?
மக்களைப் பிளவுபடுத்தி காலனி ஆட்சியை நீட்டிப்பது என்ற பிரிட்டிஷாரின் உத்தியை இந்திய மயமாக்குவது என்பதுதான் விடுதலைப் போராட்டத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் ‘பங்களிப்பாக’ இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்து-முஸ்லீம் இனத்தவரின் ஒற்றுமையின் அடிப்படையில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக 1857இல் நடைபெற்ற கிளர்ச்சிக்குப் பிறகு, இத்தகைய ஒற்றுமை தமது ஆட்சிக்கு மிகப்பெரும் அழிவை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதை பிரிட்டிஷார் உணர்ந்து கொண்டனர். 1857ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பிறகு, விடுதலைக்கான தேசிய அளவிலான ஒற்றுமை உணர்வை பிளவுபடுத்தும், பலவீனப்படுத்தும் அடையாளங்களை வலியுறுத்துகின்ற, குறிப்பாக மதத்தைப் பயன்படுத்தி, கொள்கைகளை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வடிவமைத்தனர். இவ்வாறுதான் தேசிய இயக்கத்தை பிளவுபடுத்த உதவும் வகையில் 1906ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட முஸ்லீம் லீக் அமைப்புக்கு அவர்கள் சாதகமாக நடந்து கொண்டனர். இந்து அடையாளம் என்பதை தீவிரமாக மேற்கொள்ள அதே அளவிற்குத் தேவைப்படும் நிலையில்தான் 1925இல் ஆர் எஸ் எஸ் உருவானது. இந்தியாவின் விடுதலைக்கான போராட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து ஆர் எஸ் எஸ் தனது உறுப்பினர்களை மிகத் தீவிரமான வகையில் தடுத்து வந்தது. இன்றைய பிரதமர் உள்ளிட்டு பலராலும் குருஜி என்று போற்றப்படுகின்ற கோல்வால்கர் சொன்னார்: “நாம் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழியில் நமது மதம், நமது கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாப்பதன் மூலமே நாட்டின் விடுதலையைப் பற்றி நாம் பேசுகின்றோமே தவிர, இங்கிருந்து பிரிட்டிஷார் வெளியேறுவதைப் பற்றி அது குறிப்பிடவில்லை என்பதை நாம் நன்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.” (ஸ்ரீகுருஜி சமக்ர தர்ஷன், தொகுதி -4, பக். 40)
‘இந்தியன்’ என்பதற்கு மாறாக, அனைத்து இந்தியாவையும் உள்ளடக்கிய ‘இந்து’ என்ற அடையாளத்தை முன்னிறுத்துவதன் ஒரு பகுதியாக ஆர் எஸ் எஸ் அமைப்பும், அதேபோன்ற கருத்தைக் கொண்ட சமூக சக்திகளும், மனுஸ்மிருதி மற்றும் இதர இந்துமத நூல்கள் முன்வைத்த தத்துவத்தை மேலும் முன்வைத்து வளர்த்தெடுத்தன. மறுபுறத்தில், ஆர் எஸ் எஸ் உருவான நாளிலிருந்தும், அதற்கு முன்பாக இந்து மகாசபா செயல்பட்டு வந்த நாட்களிலும், இந்துத்துவா மற்றும் இந்து ராஷ்ட்ரா ஆகிய அரசியல் திட்டங்களுக்கு இந்து ஒற்றுமை என்பதை முன்னிறுத்துவது அவசியமானதாக இருந்தது. சாதிய அமைப்பை அப்படியே நிலைநிறுத்திக் கொண்டு இந்த இந்து ஒற்றுமையை வளர்த்தெடுக்க அனைத்து வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்துக்கள் அனைவருமே முகலாயர்களின் அடக்குமுறைக்கு ஆளானவர்கள்தான் என்ற கொள்கையை முன்னெடுத்ததன் மூலம் இத்தகைய ஒற்றுமையை அவர்களால் உருவாக்க முடிந்தது.
இந்துத்துவா என்ற கருத்தாக்கத்தின் தந்தையான வி.டி. சவர்க்கார் சாதிக்கு எதிரானவர் என்றும், சாதி மறுப்பு திருமணங்களை அவர் முன்னின்று நடத்தியிருக்கிறார் என்றும் கூறிக் கொள்கின்றனர். சாதியை முற்றிலுமாக அழித்தொழிப்பதற்கான ஒரு பகுதியாகவா அது அமைகிறது? இல்லை. அதிலிருந்து வெகுதூரத்தில் உள்ளது என்பதே உண்மை. சவர்க்காரும் அவருக்குப் பின் வந்த மற்றவர்களும் சாதிய அமைப்பினை மிக வலுவாக ஆதரித்து நின்றவர்களே. அவர் எழுதியிருந்தார்: “சில குறிப்பிட்ட சூழ்நிலைகளிலும் பின்னணியிலும் இந்து சமூகம் வலுவாக ஒன்றிணைவதற்கும், வியக்கத்தக்க வகையில் நிலைத்து நிற்பதற்கும் பிறப்பின் அடிப்படையிலான சாதிப் பிரிவினைகள் என்ற நடைமுறையே காரணமாக இருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதன் நிறை-குறைகளை மதிப்பிடும்போது சாதி என்ற நிறுவனத்தின் பின்னாளைய தீய விளைவுகளை மட்டுமே சுட்டிக்காட்டி குறை கூறுவது முற்றிலும் நன்றிகெட்டதொரு செயலே ஆகும். இந்து தேசத்தின் நலன்களை மட்டுமே மனதில் கொண்டு, அந்நாளைய இந்துக்கள் அதே நேரத்தில் ரத்த உறவுகள், இன வாழ்க்கை, பாரம்பரியம் ஆகியவற்றின் தூய்மையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிறப்பின் அடிப்படையிலான சாதிய வேறுபாடுகளை அனுமதித்தனர் அல்லது உருவாக்கினர் என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். (1963, இந்திய வரலாற்றின் ஆறு மகத்தான யுகங்கள், தொகுதி 4, பக். 710)
இந்துத்துவா: யார் இந்து? என்ற தனது நூலில் சவர்க்கார் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “சாதிய அமைப்பு செய்ததெல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் தனது புனிதமான ரத்தத்தை அது ஒழுங்குபடுத்திக் கொண்டதே ஆகும். இதன் மூலம் வறட்சியான, வறுமைமிக்க அனைத்தையும் உரமூட்டி, வளப்படுத்துவதிலும் அது பங்காற்றியது.” எனவே இந்துத்துவ சக்திகளின் அதிகாரபூர்வ இலச்சினையாகத் திகழும் சவர்க்காரைப் பொறுத்தவரையில் இந்து சமூகத்தை பாதுகாப்பதில் மிகவும் முக்கியமான பங்கினை சாதி வகித்தது. ஒரு சில ‘குறைகள்’ இருந்தபோதிலும் அது பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்றே அவர் கருதினார். தூய்மையாக வைத்திருக்கப்பட வேண்டிய ‘புனிதமான ரத்தம்’ என்பது உயர் சாதிக்காரர்களுடையதே ஆகும். ‘வறட்சியான மற்றும் வறுமைமிக்கவர்கள்’ என்பது சூத்திரர்களும், சாதியப் படிநிலைக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளவர்களுமே ஆகும். இப்படித்தான் சவர்க்கார் சாதிக்கு எதிரானவர் என்று அவர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
சாதிய அமைப்புக்கு வக்காலத்து வாங்கும் இந்த வாதத்தை மேலும் முன்னெடுத்துச் சென்ற கோல்வால்கர் தனது ‘சிந்தனைக் கொத்து’ என்ற நூலில் இவ்வாறு எழுதினார்: “ஒரு புறத்தில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் கிரேக்கர்கள், சாகர்கள், ஹூணர்கள், முஸ்லீம்கள், ஏன் ஐரோப்பியர்களின் அட்டூழியங்களை எல்லாம் சகித்துக் கொண்டு ‘சாதியில் மூழ்கிப் போனதாக’ சொல்லப்படும் இந்து சமூகம் உயிரோட்டத்துடன், வெல்லப்படமுடியாத ஒன்றாக இன்றும் நீடிக்கிறது. மறுபுறத்திலோ சாதியே இல்லாத சமூகங்கள் பொடிப்பொடியாக நொறுங்கிப் போய் மீண்டெழ முடியாத நிலையை எட்டியுள்ளன. வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், இந்த விபரீத சிந்தனையின்படி சாதிய அமைப்பானது இந்துக்களின் வலிமையை உறுதிப்படுத்தியுள்ளது.”
உள்ளார்ந்த மனிதத்தன்மை என்ற தனது கொள்கையில் தீன் தயாள் உபாத்யாயா வர்ண அமைப்பை நியாயப்படுத்தியிருந்தார். அதை தத்துவார்த்த ரீதியானதோர் உதாரணமாக பாஜக இன்றும் கூட உயர்த்திப் பிடித்து வருகிறது. 1965ஆம் ஆண்டில் அவர் எழுதியிருந்தார்: “நான்கு வகையான சாதிகள் என்ற நமது கருத்தாக்கத்தில் விராட் புருஷனின் வெவ்வேறு வகையான உறுப்புகளோடு அவை ஒப்பீடு செய்யப்பட்டன. இந்த உறுப்புகள் ஒன்றுக்கொன்று உதவிகரமானவை என்பது மட்டுமின்றி, இன்னும் சொல்லப்போனால் அங்கு தனித்தன்மையும், ஒற்றுமையும் நிலவுகிறது. ஒருமித்த நலன்களுக்கான முழுமையான அடையாளமும், ஒன்றையொன்று சார்ந்த அடையாளமும் அங்கு உள்ளன. இந்தக் கருத்தை உயிர்ப்போடு வைத்திராவிட்டால், ஒன்றுக்கொன்று உதவிகரமாக இருக்கும் இந்த சாதிகளிடையே மோதலை உருவாக்கிவிடக் கூடும். அவ்வாறெனில், அது தன் இயல்பிற்கு மாறானதாக மாறிவிடும்.”
எனவே வரலாறு நெடுகிலும் தலித்துகள் எதிர்கொண்டு வந்துள்ள அடக்குமுறை, பாரபட்சம் ஆகியவற்றின் வரலாறு என்பது சாதிய அமைப்பின் விளைவாக ஏற்பட்டதல்ல; மாறாக, அதன் ‘இயல்பிற்கு மாறானதே’ ஆகும். இதுவே பாஜகவின் புரிதலாக இன்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவேதான் மநுஸ்மிருதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடித்தளமாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருந்து வருகிறது. 1949ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று, அதாவது, அரசியல் நிர்ணய சபை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை இறுதிப்படுத்திய நான்கு நாட்களுக்குப் பிறகு, ஆர் எஸ் எஸ் இவ்வாறு அறிவித்தது: “இன்றுவரையிலும் மநுஸ்மிருதியில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ள அவரது (மநுவின்) சட்டங்கள் உலகத்தவரால் போற்றப்படுவதோடு, அதனை பின்பற்றவும், அவற்றோடு ஒத்த வகையில் இருக்கவேண்டும் என்ற உணர்வும் எழும்பியுள்ளது. ஆனால் நமது அரசியல் அமைப்புச் சட்ட நிபுணர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல.”
இவ்வகையில் சாதிய அமைப்பையே முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கரும் கம்யூனிஸ்டுகளும் உறுதியாக நம்பி, அதற்காகப் போராடி வந்தனர் எனில், காந்தியவாதிகள் சீர்திருத்த நடவடிக்கைகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர். அதே நேரத்தில் ஆர் எஸ் எஸ் –ஐ சேர்ந்த இந்துத்துவவாதிகளோ இந்து சமூகத்தை ஒன்றாக நிலைநிறுத்த சாதிய அமைப்பு அவசியமானது என்று கருதி வந்துள்ளனர்.
சாதியைப் பொறுத்தவரையில் தற்போதைய ஆர் எஸ் எஸ்ஸின் அணுகுமுறையில் மாற்றம் ஏதும் உள்ளதா?
சாதி குறித்த ஆர் எஸ் எஸ்ஸின் அணுகுமுறையில் அடிப்படையான மாற்றம் ஏதும் இல்லை. சாதிவேறுபாடின்றி அனைவரும் சேர்ந்து உண்ணுதல் போன்ற பெயரளவிற்கான திட்டங்களின் மூலம் மேலோட்டமான மாற்றங்களைக் கொண்டுவர அது முயற்சிக்கிறது. அல்லது பாஜக தலைவர்கள் தலித்துகளின் இல்லங்களுக்குச் சென்று உணவருந்துவது போன்ற – இது தலித்துகளை அவமானப்படுத்துவது என்பதைத் தவிர வேறில்லை – நடவடிக்கைகளின் மூலம் தங்களது சமமான குடியுரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்கள் கோருவதைப் போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.
எனினும் சாதிமறுப்புத் திருமணம் செய்யும் ஓர் ஆண் தலித் ஆக இருப்பாரானால் அதன் மீதான காப் பஞ்சாயத்துகளின் பிற்போக்குத்தனமான அணுகுமுறைக்கு அது முழுமையான ஆதரவை அளிக்கிறது. தனது சாதிய குணத்தை மறைத்துக் கொள்வதற்காக அண்ணல் அம்பேத்கரை கவர்ந்து செல்லவும் அது முயற்சிக்கிறது. எனினும் அதன் இத்தகைய முயற்சிகள் முன்னுக்குப் பின் முரணானவையே ஆகும். ஏனெனில் சாதி குறித்த புதுவகையான விளக்கங்களின் மூலம் மநுஸ்மிருதிக்கு நற்பெயரை ஏற்படுத்தவே அது முயற்சி செய்கிறது.
மேலே எடுத்துக் காட்டிய கோல்வால்கரின் எழுத்துக்கள் உள்ளிட்டு, சாதி குறித்து அதன் நிறுவன உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருந்த கருத்துக்களை ஆர் எஸ் எஸ் எப்போதுமே மறுத்ததில்லை; அல்லது அவற்றிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டதும் இல்லை. இந்து சமூகத்தில் உள்ள சாதிய அமைப்பு என்பது மிகவும் எளிமையான ஓர் உழைப்புப் பிரிவினையே ஆகும்; முஸ்லீம்களே அதற்குள் படிநிலைகளையும் பாரபட்சமான போக்குகளையும் அறிமுகப்படுத்தினர் என்ற கருத்தோட்டத்தையே ஆர் எஸ் எஸ் முன்வைக்கிறது.
பல்வேறு சாதிகள் குறித்து ஆர் எஸ் எஸ் ஆதரவாளர் ஒருவர் எழுதிய நூல் ஒன்றுக்கு அணிந்துரை எழுதுகையில் மூத்த ஆர் எஸ் எஸ் தலைவரான பைய்யா ஜோஷி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “சூத்திரர்கள் எப்போதுமே தீண்டத்தகாதவர்களாக இருந்ததில்லை. சத்திரியர்களின் இந்து என்ற பெருமையை சீர்குலைக்கவே அரேபியாவிலிருந்து படையெடுத்து வந்த முஸ்லீம் ஆட்சியாளர்கள் பசுவை கொல்வது; அவற்றின் தோலை உரிப்பது; அவற்றின் உடல்களை தொலைதூரங்களில் வீசுவது போன்ற அவமானகரமான செயல்களை மேற்கொள்ள கட்டாயப்படுத்தினர். பெருமைமிக்க இந்து கைதிகளுக்கு தண்டனையாக இத்தகைய வேலைகளை அளித்ததன் மூலம் அந்நிய படையெடுப்பாளர்கள் முற்றிலுமாக தோல் தொழிலில் மட்டுமே ஈடுபடும் ஒரு சாதியையே உருவாக்கினர்.”
மற்றொரு மூத்த ஆர் எஸ் எஸ் தலைவரான சுரேஷ் சோனி இவ்வாறு எழுதினார்: “துருக்கியர்கள், முஸ்லீம்கள், முகலாயர்கள் காலத்தில்தான் தலித்துகளின் வம்சாவளி தொடங்குகிறது. மத்தியகால அல்லது இஸ்லாமிய ஆட்சிக்காலத்தின்போது பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளின் விளைவாகவே இன்றுள்ள வால்மீகி, சுதர்சன், மாஜாபி சீக்கியர்கள் மற்றும் இவர்களுக்குள் உள்ள 624 துணை சாதிகள் தோன்றின.”
இவ்வகையில், ஆர் எஸ் எஸ் தத்துவவாதிகளின் இந்தக் கருத்துப்படி, இன்றுள்ள தலித்துகள் உண்மையில் சத்திரியர்கள்தான். அவர்கள் முகலாயர் ஆட்சிக் காலத்தில் ‘தூய்மையற்ற வேலை’களை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டவர்களே. எனவே அவர்களை தீண்டத்தகாதவர்களாக ஆக்கியவர்கள் முகலாய ஆட்சியாளர்கள்தான்! மநுஸ்மிருதி மற்றும் இதர மத நூல்களில் கூறப்பட்டிருக்கும் விதிமுறைகளை எல்லாம் மறந்து விடுங்கள். ஏகலைவன், சம்புகன், சபரி ஆகியவர்களைப் பற்றிய இதிகாச கதைகளைத் தான் ஆர் எஸ் எஸ் வரலாறு எனக் கருதுகிறது. இவை அனைத்திற்குமாக பழி சுமத்தப்பட வேண்டியவர்கள் முகலாயர்கள்தான்.
மறுபுறத்தில், முன்னாள் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகரும் இன்றைய பிரதமருமான நரேந்திர மோடி ‘கர்மயோக்’ என்ற வெளியீட்டில் மனிதக் கழிவுகளை அகற்றுவோரைப் பற்றி பின்வருமாறு கூறியிருந்தார்: “கடவுள்களின் மற்றும் சமூகம் முழுவதின் மகிழ்ச்சிக்காக பணிபுரிவதே தங்களது (வால்மீகிகளின்) கடமை என்று ஏதோவொரு காலப்பகுதியில் இவர்களில் யாரோ ஒருவருக்கு ஞானோதயம் பிறந்திருக்க வேண்டும். கடவுள்களால் தங்களுக்கு அளிக்கப்பட்ட இந்தப் பணியை அவர்கள் செய்தாக வேண்டும். (மனிதக் கழிவுகளை) சுத்தப்படுத்துவது என்ற இந்த வேலை உள்ளார்ந்த இறைச் செயலாக இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தொடர வேண்டும். வேறெந்த வேலையை அல்லது தொழிலை மேற்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களின் முன்னோர்களுக்கு கிடைக்கவில்லை என்பது நம்புவதற்கு இயலாத ஒன்று.”
இன்றைக்கும் தொடர்ந்து நீடித்து வருகின்ற, இந்த பிறப்பின் அடிப்படையில் சாதிக்கு ஏற்ற வகையில் தீர்மானிக்கப்பட்ட தொழிலை மிகக் கொடூரமான வகையில் நியாயப்படுத்துகின்ற இந்தப் போக்குதான் சாதிய அமைப்பு குறித்த ஆர் எஸ் எஸ் மற்றும் இந்துத்துவாவின் உண்மையான அணுகுமுறை ஆகும். ஆர் எஸ் எஸ்ஸின் அரசியல் பிரிவான பாஜக ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோது, அன்றைய முதல்வர் பைரோன் சிங் ஷெகாவாத் தான் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் மநுவின் சிலையை நிறுவுவதற்கு அனுமதி அளித்தார். அந்தச் சிலையை அகற்றுவதை எதிர்த்து நீதிமன்றத்திடமிருந்து தடை ஆணையை பெற்றவர் ஆர் எஸ் எஸ் ஸின் மற்றொரு பிரிவான விஸ்வ இந்து பரிஷத்தின் ஒரு தலைவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த அரசுகளின் போலித்தனத்தின் அவமானச் சின்னமாக அந்தச் சிலை இன்றும் கூட நின்று கொண்டிருக்கிறது.
ஒரு இந்து ராஷ்ட்ரத்தை அமைப்பதற்கான ஆர் எஸ் எஸ் ஸின் நிகழ்ச்சி நிரலைத்தான் மோடி அரசு இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அந்த இந்து ராஷ்ட்ரத்தின் மையமாகத் திகழ்வது சாதிய அமைப்புதான். இந்தியாவின் அரசியல் அமைப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டபோது ‘மநுவின் ஆட்சி முடிவிற்கு வந்து விட்டது’ என்று அண்ணல் அம்பேத்கர் கூறினார். தனது அதிகார பூர்வ இதழான ஆர்கனைசர் இதழில் ஆர் எஸ் எஸ் ஒரு கட்டுரை மூலம் அதற்கு பதிலளிக்கும்போது ‘இன்றும் மநு எங்கள் மனங்களில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்’ என்று குறிப்பிட்டது. அம்பேத்கர் தனது உரையில் மேலும் கூறுகையில் “இந்து ஆட்சி என்பது நடைமுறைக்கு வருமானால், அது இந்த நாட்டின் மிகப்பெரும் பேரழிவாகவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை…. அது ஜனநாயகத்துடன் ஒத்துப்போகாத ஒன்று.” என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது உண்மையாக இருந்த அண்ணல் அம்பேத்கரின் கருத்து இப்போதும் பொருத்தமானதொரு உண்மையாகவே உள்ளது.
நாடு விடுதலை பெற்று 73 ஆண்டுகள் கடந்த பின்னரும்கூட கிராமப்புற, நகர்ப்புற உழைப்பாளிகளில் பெரும்பகுதியினர் தலித்துகளாகவே உள்ளனர். இந்நிலையில் சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான உறவு எத்தகையதாக உள்ளது?
வர்க்க அடிப்படையிலான சமூகத்தின் வளர்ச்சியோடு இணைந்த வகையில் சாதி என்பது எவ்வாறு வரலாற்று ரீதியாகத் தலையெடுத்தது என்பதை கம்யூனிஸ்டுகளும் மார்க்சிய வரலாற்று ஆசிரியர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர். இந்தியாவில் சாதிய அமைப்பானது சமூகத்துடனும் உற்பத்தி உறவுகளுடனும் பின்னிப் பிணைந்துள்ளது. உற்பத்தி சக்திகள் நிலைபெற்ற விவசாயமாக வளர்ச்சி பெற்றது, சமூக உபரியின் வளர்ச்சியும், உற்பத்திக் கருவிகள் மற்றும் உபரி ஆகியவற்றின் மீதான உரிமை மற்றும் ஆதிக்கத்தைக் கைக்கொண்டுள்ள வர்க்கங்கள் மற்றும் அந்த உபரியை உற்பத்தி செய்கின்ற வர்க்கங்களாக வளர்ச்சி பெற்றது ஆகியவை நாம் நன்கறிந்த சமூகங்களின் வளர்ச்சி குறித்த ஆய்வின் ஒரு பகுதியாகும்.
பண்டைய இந்தியா குறித்த வரலாற்றாசிரியரும் மிகப் பரவலாக அங்கீகாரம் பெற்ற, பெரிதும் மதிக்கப்படுகின்றவருமான டி.டி. கோசாம்பி இவ்வாறு எழுதியிருந்தார்: “ இந்தியாவில் மிகக் குறைந்த வற்புறுத்தலுடன் தொடக்கநிலை உற்பத்தியாளர் தனது உபரியை பறிகொடுக்கும் வகையில் மதரீதியான சமூக உணர்வை உருவாக்குவதாகவே சாதி என்பது உற்பத்தியின் தொடக்கநிலையில் ஒரு வர்க்கமாக உள்ளது.”
மேலும் தூதரக அதிகாரியும் எழுத்தாளரும் கல்வியாளருமான ஜயந்தனுஜா பந்தோபாத்யாயா வர்க்கப் போராட்டங்கள் மற்றும் சாதிய ஒடுக்குமுறை ஆகியவை குறித்த தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “ எப்படியிருந்த போதிலும், உண்மையில், தெய்வத்தால் தோற்றுவிக்கப்பட்டது என்ற சாக்குப்போக்குடன் மத நூல்களால் நால்வருண முறைக்கு வழங்கப்பட்ட ஆதரவானது, தொழிலாளி வர்க்கத்தின் மீதான ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட ஒரு பழங்கால வடிவமான அநியாய உழைப்புப் பிரிவினையை புனிதப்படுத்தவும் நிலைத்து நிற்கச் செய்யவும் உதவியது. மிகச் சிறிய ஒட்டுண்ணி ஆளும் வர்க்கத்தால் பண்டைய இந்தியாவின் பெரும்பான்மையானவர்களாக உள்ள தொழிலாளி வர்க்கத்தை சுரண்டுவதற்கும் இது அடிப்படையானதாக விளங்கியது. இயல்பாகவே ‘வேற்றுலக’ ரீதியான மதத் தடைகள் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட சித்தாந்தங்களாகவே இருந்தன. இது இந்த உலகத்தில் சமூக பொருளாதார சுரண்டல் கட்டமைப்பை மறைக்க உதவியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நால் வருண மெய்யியலின் சமூக வேர்கள் பண்டைய இந்தியாவின் உற்பத்தி உறவுகளில் பதிக்கப்பட்டிருந்தன. ”
தலித்துகளில் பெரும்பான்மையோர் பல ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, மேலும் குறிப்பாக நவதாராளமய பொருளாதாரக் கொள்கைகளினால் பாதிக்கப்பட்டவர்களாகவும், சமூக-பொருளாதார ஏணியின் இறுதிப்படிக்கட்டில் கட்டுண்டும் கிடக்கின்றனர். ஏனெனில் சாதிய அமைப்பானது நவீன இந்தியாவின் ஆளும் வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதரவைப் பெற்றுள்ளதே இதற்கான காரணமாகும். குறிப்பாக தலித்துகளும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும் மேற்கொள்ளும் உற்பத்தியின் உபரி மதிப்பை அவர்களிடமிருந்து மேலும் தீவிரமாகக் கறப்பதற்கான ஒரு கருவியாக சாதிய அமைப்பு கையாளப்படுகிறது. எனவே சாதி என்பதை முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி உறவுகளின் ஒரு பகுதியாக மட்டுமே பார்ப்பது தவறானது. சாதிய உறவுகள் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் ஒரு பகுதி என நமது இயக்கத்திற்கு உள்ளேயும் கூட அடிக்கடி கூறப்பட்டு வந்துள்ளது. இத்தகைய கருத்து வெளிப்பாட்டின் பின்னே உள்ள புரிதல் என்னவெனில், ஒரு நவீன முதலாளித்துவ சமூகத்தில் சாதி மறைந்து போய் வர்க்க உறவுகளே மேலாதிக்கம் பெற்றதாக இருக்கும் என்பதே ஆகும். இது முற்றிலும் தவறானதொரு புரிதல் என்பதையே நமது அனுபவம் எடுத்துக் காட்டுகிறது.
எனவேதான் கட்சித் திட்டம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது: “ தலையெடுத்து வந்த முதலாளித்துவ வர்க்கத்தால் அழித்தொழிக்கப்பட்ட, முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தின் சாம்பலிலிருந்து முதலாளித்துவம் வளர்ந்துள்ள, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளை போலல்லாமல், இந்தியாவில் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தின் மீதே முதலாளித்துவம் பதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கவாதிகள் அவர்களின் ஆட்சிக் காலத்திலோ அல்லது நாட்டு விடுதலைக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த இந்திய முதலாளித்துவமோ அதை உடைத்தெறிய முயற்சிக்கவேயில்லை. முதலாளித்துவத்தின் சுதந்திரமான வளர்ச்சிக்கான மிக முக்கியமான முன் நிபந்தனைகளில் இவ்வாறு உடைத்தெறிவதும் ஒன்றாகும். எனவே தற்போதைய இந்திய சமூகமானது சாதிய, வகுப்புவாத, பழங்குடி நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து மேலாதிக்கம் செலுத்தும் ஏகபோக முதலாளித்துவத்தின் விசித்திரமான ஒரு கலவையே ஆகும்.”
எனவே சாதி என்பதை ஒரு நிலப்பிரபுத்துவ அல்லது முதலாளித்துவத்திற்கு முந்தைய உறவாக மட்டுமே பார்க்காமல் முதலாளித்துவத்தின் கீழ் வளர்ந்து வரும் பொருளாதார, சமூக, அரசியல், கலாச்சார உறவுகளில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டும். சாதியை எதிர்த்துப் போராடாமல் நம்மால் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட முடியாது. முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடாமல் நம்மால் சாதியை எதிர்த்துப் போராட முடியாது.
இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன?
வர்க்கச் சுரண்டலை கண்ணுறாமல் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையை மட்டுமே காணுகின்ற சமூக சீர்திருத்த இயக்கங்களின் வரையறைகளை வரலாறு நமக்கு எடுத்துக் காட்டியுள்ளது. அதைப் போன்றே சாதிய ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் செயல்படுவது குறித்த சமூகரீதியான உணர்வு இன்றி, வர்க்கப் போராட்டங்களை மட்டுமே வளர்த்தெடுக்க முனைவதென்பது, அந்த வர்க்கப் போராட்டத்தை பலவீனப்படுத்துவதாக ஆகிவிடுகிறது என்பதையும் நமது சொந்த அனுபவங்களிலிருந்தே நாம் கற்றுக் கொண்டுள்ளோம். பாட்டாளி வர்க்கத்தின் மிகப்பெரியதோர் உலகத்தை இது கண்ணுக்குத் தென்படாத ஒன்றாக ஆக்குகிறது. இந்த உலகத்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இரட்டைச் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர். அதுவே ஒரு தலித் பெண்ணாக இருப்பாரே ஆனால் அவர் ஒரு தலித் என்ற வகையிலும், ஒரு தொழிலாளி என்ற வகையிலும், ஒரு பெண் என்ற வகையிலும் மூன்று வகையான சுமைகளை சுமப்பவராக மாறுகிறார். இந்த நிலையை மாற்றுவதற்கான ஒரே வழி வர்க்கப் போராட்டம், சாதிய அமைப்பிற்கு எதிரான போராட்டம் மற்றும் தலித்துகளின் உரிமைகளுக்கான போராட்டம் ஆகியவற்றின் கூட்டணியை வளர்த்தெடுப்பதே ஆகும்.
முதலாளித்துவத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து சாதிகளுக்கு உள்ளேயும் வேறுபாடுகள் வளர்ந்து வருவதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். வர்க்கமும் சாதிகளும் ஒன்றல்ல. சாதி அடையாள அரசியலானது இந்த வேறுபாட்டை கண்ணுக்குத் தெரியாமல் மறைத்து விடுகிறது. எனினும் விரிவான பொருளில் பார்க்கும்போது இந்தியாவில் வர்க்கப் போராட்டமானது மிகவும் வித்தியாசமானதொரு தன்மையைக் கொண்டதாக உள்ளது என்ற, அது சாதிய அமைப்பை எதிர்த்த போராட்டமாக இருக்கவேண்டும் என்ற உண்மையை இது பலவீனப்படுத்தி விடாது.
கட்சித் திட்டம் இது பற்றிக் குறிப்பிடுகையில்: “ தலித் பிரிவைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலோர் உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நிலையில், தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை என்பதற்கு சாதிய அமைப்பிற்கு எதிரான, தலித்துகளின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான ஒற்றுமையே முன்நிபந்தனையாக அமைகிறது. சாதி அமைப்பை முற்றிலுமாக அழித்தொழிக்கவும், சமூக சீர்திருத்த இயக்கம் ஒன்றின் மூலம் அனைத்து வடிவங்களிலுமான சமூக ஒடுக்குமுறையை ஒழித்துக் கட்டவுமான போராட்டம் என்பது ஜனநாயகப் புரட்சியின் மிக முக்கியமானதொரு பகுதியாகும். அவ்வகையில் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தோடு பின்னிப் பிணைந்த ஒன்றே ஆகும்.”
புதிதாகப் பிறந்துள்ள 2021ஆம் ஆண்டில், அதாவது 1930ஆம் ஆண்டின் செயலுக்கான மேடை மேற்கொள்ளப்பட்டு 91 ஆண்டுகளுக்குப் பிறகு, வெறுத்தொதுக்கப்பட வேண்டிய சாதிய அமைப்பு, அதை நீடித்து நிலைக்கச் செய்ய முயலும் அனைத்து சக்திகள் ஆகியவற்றை எதிர்த்த போராட்டத்தை தீவிரப்படுத்த நாம் மீண்டும் உறுதி பூணுவோமாக.
தமிழில்: வீ. பா. கணேசன்