கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 6

காங்கிரஸ் அரசு விடுதலைக்குப் பிறகு எடுத்த நடவடிக்கைகள் அனைத்துமே இந்திய முதலாளி வர்க்கத்தின் நலன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் எடுக் கப்பட்டவையே என்பதை நமது கட்சி திட்டம் எடுத்துரைக்கிறது.

இந்தியாவில், இயற்கை வள ஆதாரம் மட்டுமின்றி மனித வள ஆதாரமும் நிரம்பியுள்ளது. இவற்றை கொண்டு மக்கள் வாழ்க்கையை வளப்படுத்து வதற்குப் பதிலாக அரசு அதிகாரத்தைக் கைப் பற்றிய பெருமுதலாளிகள் தங்களின் குறுகிய சுயநலனை அடிப்படையாகக் கொண்ட முதலா ளித்துவ வளர்ச்சிப் பாதையை வகுத்துக் கொண்ட னர். அவர்கள் அந்நிய ஏகபோகத்துடன் வலுவான இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு நிலப்பிரபுக் களுடன் அதி காரத்தைப் பங்கிட்டுக் கொண்டனர்.

விடுதலைக்குபிறகு இந்தியா முதலாளித்துவம் தொழில் வளர்ச்சிக்காக பிரிட்டிஷ், அமெரிக்க ஏகாதிபத்தியங்களை அணுகியது. ஆனால் அவர் கள் இந்தியாவை தங்களின் இளைய பங்காளி யாக வைத்துக் கொள்ளவே முனைந்தனர். எனவே, சோவியத் முகாமில் உதவியை இந்தியா நாடியது. கனரகத் தொழில்கள், ஐந்தாண்டு திட்டங்கள் போன்றவற்றை இந்திய ஆளும் வர்க்கம் செயல்படுத்தியது என்றாலும், அத்தகைய முன்முயற்சிகள் ஆளுவர்க்கத்தை வலுப்படுத்திக்கொள்ளவே எடுக்கப்பட்டன. இது நாடுவிடுதலைபெற்ற 20 ஆண்டுகளுக்கு உள்ளா கவே தெளிவானது.

மேலும் இந்திய பெருமுதலாளித்துவம் தனது நேச கத்தியான நிலப்பிரபுத்துவத்தின் நலன் களைக் காப்பாற்றும் வகையில் உண்மையான நிலச் சீர்திருத்தத்தை நிறைவேற்றவில்லை. இதன் விளைவாக இந்தியாவின் சந்தை விரிவடைய வில்லை. அன்றைய திட்டமிட்ட பொருளாதாரம் என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி முதலாளித்துவ வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்தனர். நிதி ஆதாரங் களை இந்திய முதலாளித்துவம் தங்களுக்கு உகந்த வகையில் பயன்படுத்த முற்பட்டனர். வங்கி, காப்பீட்டுத் துறை போன்ற நிதித்துறை தேசிய மயமாக்கப்பட்டதன் மூலம் இவற்றின் பெரும் பாலான கடன் வசதிகளை பெருமுதலாளிகளே பயன்படுத்திக் கொண்டனர்.
சோவியத் உதவி மற்றும் சமூகக்கட்டுப் பாட்டிற்கு வழிவகுக்க அரசு பொதுத்துறை போன்றவற்றால், ஒரளவு இந்தியாவில் தொழில் மயமாக்கலில் முன்னேற்றம் இருந்தது. ஆனால் இவற்றால் முதலாளித்துவ சக்திகளே பெருமளவு பலன்பெற்றன. இவ்வாறு வலுப்பெற்ற பெரு முதலாளிகள் 1980களின் மத்தியில அரசிற்கென அதுவரை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கேந்திரத் தொழில்களில் நுழையவும், பொதுத்துறை நிறு வனங்களை தாங்களே எடுத்துக் கொள்ளவும், அந்நிய மூலதனத்துடன் சேர்ந்து புதிய பகுதி களில் விரிவடையவும் முயற்சி செய்தனர்.

சோவியத் யூனியன் சிதறுண்டு போனதைத் தொடர்ந்து மாறிய சர்வதேச நிலைமையில் 1991 முதல் தொடர்ந்து வந்த அரசுகள் தாராளமய மாக்கல், கட்டமைப்பை சீரமைக்கும் கொள்கை களை மேற்கொண்டு அந்நிய மூலதனத்திற்கு இந்தியப் பொருளாதாரம் திறந்து விடப்பட்டது. பொதுத்துறையை சீர்குலைக்கும் பணி துவங் கியது. அவற்றை அழித்து விடும் நோக்கத்தோடு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனி யாருக்கும் ஏகபோக நிறுவனங்களுக்கும் மலிவு விலையில் விற்கப்பட்டன.
இதே போன்று நிதித்துறையையும் திறந்து விடுமாறு சர்வதேச நிதி மூலதனம் தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்தது. வங்கித் துறையை தனியார் மயமாக்குதல், காப்பீட்டுத் துறையை திறந்து விடுதல் ஆகியவற்றுக்கு முன்னு ரிமை அளிக்கப் பட்டது. 1994-ல் காட் ஒப்பந்தத் தில் இந்தியா கையெழுத்திட்ட பிறகு உலக வர்த் தக அமைப் பின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய தாயிற்று. காப்புரிமை சட்ட மாற்றங் கள், சேவைத் துறைகள் அந்நிய மூலதனத்திற்குத் திறந்து விடப் பட்டன. இவை ஏகாதிபத்திய மூலதனத்தின் நலன் களுக்கே உதவி செய்துள்ளன. இவை அனைத் துமே இந்தியாவின் பொருளா தார இறையாண் மையை பாதித்துள்ளன.
தாராள மய, தனியார் மயப் பாதை பெருமுதலாளி களுக்கு எண்ணற்ற பலன்களைத் தந்துள்ளது. புதிய வர்த்தக நிறுவனங்கள் உருவாகி, அவை பெருமுதலாளித்துவ நிறுவனங்களாக விரிவடைந்து உள்ளன.

2014ஆம்ஆண்டில், ஒரு சதவீதத்தினராக மட்டுமே இருக்கும் பெரும் செல்வந்தர்கள் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 49 சதவீத சொத்தை தங்கள் வசம் வைத்திருந்தனர் எனில், 2016ஆம் ஆண்டில் மோடியின் அரசு தாராளமயக் கொள்கைகளை தீவிரமாகச் செயல்படுத்திய பிறகு அவர்களின் சொத்து மதிப்பு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 58.4 சதவீதமாக, அதாவது இரண்டே ஆண்டுகளில் கிட்டத்தட்ட 10 சதவீதம் உயர்ந்து அவர்களுக்கு செழிப்பை ஏற்படுத்தியது.

உலக மயமாக்கல் கொள்கைகள் இந்தியாவின் இறை யாண்மையை பல்வேறு வழிகளில் பலியிடு வதாகவும் மாற்றியுள்ளன என்பதை 2000-ல் மேம் படுத் தப்பட்ட கட்சி திட்டம் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 5

முப்பெரும் எதிரிகள்

ஆர்.சந்திரா

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் முன்வைக்கும் மிக முக்கிய அம்சம் புரட்சியின் கட்டத்தை பற்றிய நிர்ணயிப்பு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது திட்டத்தை முதலில் தனது ஏழாவது மாநாட்டில் 1964 இல் உருவாக்கியது. பின்னர் 2௦௦௦ ஆண்டில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கட்சி திட்டம் சமகாலப்படுத்தப்பட்டது. புரட்சியின் கட்டம் பற்றிய 1964 ஆம் ஆண்டு நிர்ணயிப்பைத்தான் சமகாலப்படுத்தப்பட்ட திட்டமும் முன்வைக்கிறது.

புரட்சியின் கட்டம் மக்கள் ஜனநாயக கட்டம் என்பது கட்சி திட்டத்தின் நிர்ணயிப்பு. மக்கள் ஜனநாயக புரட்சி கட்டத்தில் இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் வர்க்கங்கள் எவை; மக்கள் ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய வர்க்கங்கள் எவை என்பதை திட்டம் நமக்கு எடுத்துரைக்கிறது.       

சோஷலிச சமுதாயத்தை அடைவதற்கு படிக்கட்டான மக்கள் ஜனநாயகத்தை அமைப்பதற்கு தொழிலாளர்களும், விவசாயிகளும், அனைத்து பகுதி உழைக்கும் மக்களும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்த வேண்டும் [கட்சி திட்டம் 1.11] என்று திட்டம் கூறுகிறது.

புரட்சியை வெற்றிகரமாக நடத்த வேண்டுமென்றால், சமுதாயத்தில் எந்தெந்த வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தில்  ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். அவைகளிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்ற எந்தெந்த வர்க்கங்களுடன் இணைந்து போராட வேண்டும்; எந்த வர்க்கம்  அதற்குத் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். இந்திய புரட்சியின் இத்தகைய பிரச்சினைகளை சரியாக புரிந்து கொள்ள கட்சி திட்டம் நமக்கு உதவுகிறது.  நமது நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை இனம் காண வேண்டி உள்ளது. எதிரி வர்க்கங்கள் எவை என்று கண்டு பிடித்து அவற்றை வீழ்த்தும் தந்திரங்களை வகுக்க வேண்டி உள்ளது.  

இந்தியா விடுதலை பெற்ற பின்னர் கடந்த எழுபது ஆண்டுகளில் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருவதால், பெரு வாரியான மக்கள் சொல்லொணாத் துயரில்  அல்லல்பட்டு வருகின்றனர். ஏழைகள் வசம் இருக்கும் நிலம் மிகவும் குறைவானதாகும்.  நிலக்குவிப்பு தொடர்கின்றது. கிராமப்புறங்களில்  நிலப்பிரபுக்கள்பணக்கார விவசாயிகள் பெரும் வணிகர்கள் இடையே பலமான இணைப்பு இருப்பதை நமது கட்சி திட்டம் சுட்டிக்காட்டுகிறது. பெரு முதலாளிகளால் தலைமை  தாங்கப்படும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ  வர்க்க ஆட்சியில்   அவர்களுக்கு  ஆதரவாக செயல்படும் அரசு அவற்றிற்கு  சாதகமான கொள்கைகளை கடைப்பிடிப்பதால்  நகர்ப்புறங்களிலும் உழைக்கும் வர்க்கம் அப்பட்டமான சுரண்டலுக்கு ஆளாகி உள்ளதை காண முடியும். முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை பின்பற்றுவதுடன், அந்நிய மூலதனத்தின்  ஆதிக்கமும் அதிகரித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை, வளர்ந்த முதலாளித்துவ நாடுகளைப் போல இல்லாமல், முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயத்தின் மீது முதலாளித்துவம் உருவாகி உள்ளதை பார்க்க முடியும். இந்திய சமூக அமைப்பு வினோதமான ஒன்று என்பதை கட்சி திட்டம் சுட்டிக்காட்டுகின்றது: “… ஏகபோக முதலாளிகளால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதிய, மத மற்றும் ஆதிவாசி அமைப்புகளைக் கொண்ட வினோத கலவையாக உள்ளது.”  

புரட்சியின் கட்டம் பற்றி திட்டம் பின்வருமாறு கூறுகிறது:

நமது நாட்டில் சோசலிசத்தைக் கட்ட வேண்டும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி இலக்காக ஏற்றுக்கொள்கிறது. அதேசமயம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் தன்மையையும் தொழிலாளிவர்க்கத்தின் அரசியல்தத்துவார்த்த பக்குவத்தையும் அதன் அமைப்பு வலுவையும் கணக்கில் கொண்டு, உடனடி இலக்காக மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதை மக்கள் முன் வைக்கிறது. உறுதியான தொழிலாளிவிவசாயி கூட்டணி அடிப்படையில், தொழிலாளிவர்க்கத்தின் தலைமையில், அனைத்து உண்மையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளின் கூட்டணி என்ற அடிப்படையில் இது நிகழும்.” (திட்டம், பத்தி 6.2)

மக்கள் ஜனநாயக புரட்சிகட்டத்தில் இந்திய சமுதாயத்தில் மூன்று முக்கியமான முரண்பாடுகள் உள்ளன. அவை வருமாறு:

] நிலப்பிரபுத்துவத்திற்கும், பெரும் எண்ணிக்கையில் உள்ள விவசாயிகளுக்குமிடையிலான முரண்பாடு;

] ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய மக்களுக்கும் இடையேயான முரண்பாடு;

] முதலாளிகளுக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையே உள்ள முரண்பாடு 

இந்த மூன்று முரண்பாடுகள் இன்றும் இருப்பதனால்தான்,  மக்கள் ஜனநாயக புரட்சி என்ற இலக்கை அடைவதற்கு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக முதலாளித்துவ எதிர்ப்புப்  பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டுமென   கட்சித் திட்டம்   வலியுறுத்துகிறது.

நிலப்பிரபுக்களுக்கும், விவசாயிகளுக்கும்  இடையேயான முரண்பாடு அடிப்படை முரண்பாடு என்பதை கட்சி திட்டம் தெளிவாக கூறுகிறது.

பெரு முதலாளிகள் தலைமையிலான  முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசு அந்நிய ஏகபோக மூலதனத்தை பாதுகாக்கவும், அதை மேலும் வலுப்படுத்துவதற்கும்  ஏற்ப கொள்கைகளை வகுத்து கடைபிடித்து வருகிறது. எனவே,..”   மக்கள்ஜனநாயக புரட்சி நிலப்பிரபுத்துவம், அந்நிய ஏகபோக முதாளித்துவத்தை சமரசமின்றி எதிர்ப்பதோடு மட்டுமின்றி, அதனுடன் சேர்ந்து  அந்நிய நிதி மூலதனத்துடன் சமரசம் செய்து ஒத்துழைக்கும் நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டு வைத்திருக்கும் அரசுக்கு தலைமை தாங்கும் பெரு முதலாளித்துவத்தையும்  எதிர்க்கிறது” என்பதை கட்சி திட்டம் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. முதலாளி தொழிலாளி வர்க்க முரண்பாடு மேலே மூன்றாவது முரண்பாடாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், மக்கள் ஜனநாயக புரட்சி கட்டத்தில் நாம் குறிப்பாக ஏகபோக முதலாளிகளைபெருமுதலாளிகளைஎதிர்க்கிறோம் என்றும் திட்டம் தெளிவுபடுத்துகிறது.

ஆக கட்சி திட்டம் நமக்கு வலியுறுத்துவது, நமது இன்றைய மக்கள் ஜனநாயக புரட்சி கட்டத்தில் நிலப்பிரபுக்கள், ஏகபோக முதலாளிகள், ஏகாதிபத்தியம் ஆகியவையே இந்திய மக்களின் முப்பெரும் எதிரிகளாக அமைகிறார்கள் என்பதாகும்.

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 4

காலனி ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போரில் விவசாயி களை ஈர்க்க காங்கிரஸ் கட்சி ‘உழுபவனுக்கு நிலம் சொந்தம்’ என்ற முழக்கத்தை முன்வைத்தது. ஆனால் நாடு விடுதலை அடைந்த பின்னர் நீர்த்துப்போன நில உச்சவரம்பு சட்டங்கள் பெரும்பாலும் அமலாக வில்லை. (விதி விலக்கு: இடதுசாரிகள் தலைமையிலான மாநில அரசுகள்) 1950 களின் இறுதியில் நாடு முழுவதும் சுமார் 6 கோடியே 3 லட்சம் ஏக்கர் நிலம் உச்சவரம்புக்கு மேல் உள்ளதாக பேராசிரியர் மகாலாநோபிஸ் அறிக்கை தெளிவாக்கியது.
இன்றுவரை இதில் பத்தில் ஒரு பங்கு கூட கையகப்படுத்தப்பட்டு ஏழை மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு மறுவிநியோகம் செய்யப்பட வில்லை. நில ஏகபோகம் தொடர்வது இந்திய முதலாளிவர்க்கம் – குறிப்பாக அதன் பெரு முதலாளித்தலைமை – நிலப்பிரபுக்களுடன் செய்து கொண்டுள்ள சமரசத்திற்கான முக்கிய வெளிப்பாடு.
கிராமப்புறங்களிலும் விவசாயத்திலும் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கட்சி திட்டம் கவனத்தில் கொள்கிறது. விடுதலை பெற்ற இந்தியாவில் கிராமப்புறங்களிலும் குறிப்பாக விவசாயத்திலும் முதலாளித்துவ உறவுகள் வலுப்பெற்றிருக்கின்றன.
1960-ளில் உணவு நெருக்கடி ஏற்பட்ட பின்புலத்தில் பசுமை புரட்சி என்ற பெயரில் புதிய வேளாண் கொள்கைகள் அமலுக்கு வந்தன.
நவீன தொழில் நுட்பத்தை கொண்டுவந்து நிலப்பிரபுக்களையும் பணக்கார விவசாயிகளை யும் ஊக்கம் அளித்து விவசாயத்தை (முதலாளித்துவ உறவுகளின் அடிப்படையில்) நவீனப்படுத்துவதே பசுமை புரட்சியின் வர்க்க உள்ளடக்கம். “உழுபவனுக்கு நிலம்” உள்ளிட்ட நிலச்சீர்திருத்த முழக்கங்கள் பின்னுக்குப் போயின. இந்த மாற்றத்தில் அரசு கேந்திரமான பங்கு வகித்தது.
உயர்மகசூல் விதைகள், மான்ய விலை யில் உரம் உள்ளிட்ட ரசாயனங்கள் பயன்பாடு, பாசன வசதி உத்தரவாதம், அரசின் வேளாண் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க அமைப்புகள் மூலம் தொழில்நுட்ப உதவி, நாட்டுடைமையாக் கப்பட்ட வங்கி அமைப்பின் மூலம் கடன் வசதி ஆகியவற்றை அரசு பெருவிவசாயிகளுக்கு கொண்டு சென்றது. அவர்கள் மூலம் இதர விவசாயிக ளையும் நவீன உற்பத்திக்கு ஈர்த்தது. “பசுமை புரட்சி” என்று அறியப் பட்ட இந்த நடவடிக்கைகள் வேளாண் உற்பத்தி திறனை உயர்த்தவும் உணவு தானிய உற்பத்தி மக்கள் தொகையை விட வேகமாக அதிகரித் திடவும் வழிவகுத்தன. மகசூல் உயர்ந்து, உற்பத்தி ஒருபுறம் பெருகினாலும், இதன் முதலாளித்துவ உள்ளடக்கத்தை கட்சி திட்டம் கறாராக வரை யறுத்தது.
1980 களின் பிற்பகுதியில் தொடங்கி அரசு பின்பற்றி வந்த முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையின் முரண்பாடுகளின் விளைவாக வேளாண் துறையில் அரசு முதலீடு சரியத்துவங்கியது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் ஏற்பட்ட உள் நாட்டு பொருளாதார நெருக்கடி, உலகளவில் சோசலிசம் பின்னுக்குத் தள்ளப்பட்ட பன்னாட்டு சூழல், இவையிரண்டும் இந்திய ஆளும் வர்க்கங் களை நவீன தாராளமய கொள்கைகளுக்கு இட்டுச் சென்றது. இதன் தொடர்ச்சிதான் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்டு வரும் தாராளமய, தனியார்மய உலகமய கொள்கைகள். இக்கொள்கைகள் வேளாண் துறையில் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளன.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளை கடந்த பதினைந்து ஆண்டுகளில் தற்கொலைக்கு தள்ளியுள்ளன. 2000 – ஆண்டில் திட்டம் சமகாலப்படுத்தப் பட்ட பொழுது, பத்தாண்டு காலம் இக்கொள் கைகள் அமலாக்கப்பட்டதன் விளைவுகளை கட்சி திட்டம் சரியாக மதிப்பீடு செய்தது. முதலாளித்துவ உறவுகள் வேளாண் துறையில் கணிசமாக வளர்ந்துள்ளதையும், அந்நிய கம்பனிகள் முதல் முறையாக நேரடியான தாக்கத்தை நமது வேளாண்துறையில் ஏற்படுத்திவருவதையும் திட்டம் தெளிவாகக் குறிப்பிட்டது.
அதே சமயம், அனைத்துப்பகுதி விவசாயி களும் வேளாண் நெருக்கடியில் வேறுபாடின்றி பாதிக்கப்படவில்லை. ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் அரசின் வேளாண் கொள் கைகளால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்
பணக்கார விவசாயிகள் அரசின் கொள்கைகள் காரணமாக ஓரளவு பயன்பெற்றிருந்தாலும், அரசின் கொள் கைகள் அவர்களில் பலரையும் பாதித்துள்ளது என்பதையும் அவர்களையும் ஆளும் வர்க்கங் களுக்கு எதிராகத் திரட்டமுடியும்.
கணிச மான நிலங்களை கையில் வைத்துக்கொண்டும், பல நவீன உற்பத்திகருவிகளிலும் ஏகபோக வலுப் பெற்றும், கூட்டுறவு அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு இயந்திரத்தின் பல்வேறு பகுதிகள் இவற்றையும் இயக்குபவர்களாகவும் கிராமப்புறங்களில் பெரும் நிலப்பிரபுக்கள், பெரு முதலாளித்துவ விவசாயிகள் கொண்ட ஒரு ஆளும் வர்க்கம் உருவாகியுள்ளதை திட்டம் பதிவு செய்தது.
திட்டம் அங்கீகரிக்கப்பட்டு பதினைந்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அண்மையில் அரசியல் தலைமைக்குழு அமைத்த வேளாண் துறையில் நிலவும் வர்க்க முரண்பாடுகள் குறித்த ஆய்வுக்குழுவும் இந்த நிர்ணயிப்பை உறுதி செய் துள்ளன.
இந்த ஆளும் வர்க்கம் கிராமங்களில் சாதி ஆதிக்க பாதுகாவலனாகவும், பாலின ஒடுக்கு முறையை பராமரிக்கும் வண்ணமும் செயல்பட்டு வருவதை எதிர்த்தும் பாலின மற்றும் சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் நாம் நடத்த வேண்டிய போராட்டங்கள் மக்கள் ஜனநாயக முன்னணி அமைக்கும் பணியின் பகுதியாகும்.
கிராமப் புற செல்வந்தர்களுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் பொருளாதார மட்டத்தில் மட்டும் அல்ல, பழங்குடி மக்கள், தலித்துகள், பெண்கள் உரிமை பாதுகாப்பு, விடுதலை ஆகியவற்றுக்கான அரசியல், சமூக தளங்களிலும் நடத்தப்பட வேண்டும்.
மக்கள் ஜனநாயகப்புரட்சி ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், ஏகபோக முதலாளிவர்க்கம் ஆகிய மூன்று எதிரிகளை வீழ்த்தும் போராட்டம் என்பதையும் இதன் அச்சாணி தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான தொழிலாளி – விவசாயி கூட்டணி என்பதையும், இந்த வர்க்கக் கூட்டணியின் மிகவும் நம்பகமான ஆணிவேர் ஏழை விவசாயிகள் மற்றும் வேளாண் தொழி லாளிகள் உள்ளிட்ட கிராமப்புற தொழிலாளி கள் என்றும் திட்டம் நமக்கு உணர்த்துகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (3)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம் – 3

பொய்த்துப் போன விடுதலை இலட்சியங்கள்

செ.முத்துக்கண்ணன்

சுதந்திரப்போராட்டத்தில் பெருமளவிலான இந்திய மக்கள் உற்சாகத்தோடு பங்கேற்று அதை வெற்றிகரமாக்கினார்கள். சுதந்திர இந்தியாவில் தங்களுக்கான சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள மக்கள் விரும்பினார்கள். துயரம் மிகுந்த வறுமைக்கும், சுரண்டலுக்கும் ஒரு முடிவு வரும் என்று எதிர்பார்த்தனர். நிலம், நியாயமான ஊதியம், வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என்பதே சுதந்திரம் என மக்கள் கருதி வந்தனர். சமூக தீங்குகளான சாதியம், சமூகப் பகைமை போன்றவற்றிலிருந்து விடுதலை ஜனநாயக கட்டமைப்புக்குள் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவற்றையே மக்கள் சுதந்திரம் எனக் கருதினர்.

இந்திய ஆளும் வர்க்கம்:

சுதந்திர இந்தியாவில் பெரு முதலாளி வர்க்கம் நிலப்பிரபுக்களுடன் ஒரு கூட்டை அமைத்துக் கொண்டதோடு ஏகாதிபத்தியத்துடனும் சமரசம் செய்து கொண்டது. இதன் பிரதிபிலிப்பாகவே இன்று வரை காங்கிரஸ், பிஜேபி கட்சிகள் மத்திய அரசில் இருந்து வந்துள்ளது. அதே நேரத்தில் ஏகாபத்தியத்துடன் ஒட்டி உறவாடியும், முரண்பட்டும் தங்கள் இரட்டைத் தன்மையை வெளிப்படுத்தியது. சர்வதேச நிதி மூலதனத்துடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ள இந்திய பெருமுதலாளித்துவ வர்க்கம் தொடர்ந்து முயன்று வருகிறது.

இதற்காக பொதுத்துறைகளையும், ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் தனியார் மயமாக்க வேண்டும் என்று அதற்கான முயற்சியில் இன்று இந்தியாவின் நவரத்னாவை கொஞ்சம் கொஞ்சமாக கூறு போட்டு விற்று வருகிறது. ஏகாதிபத்தியத்திற்கு நமது பொருளாதார கட்டமைப்பை திறந்து விட்டதால் இந்திய சமூகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஊடுருவி செல்வாக்கு செலுத்துவதற்கு அடிப்படையாக அமைந்தது. குறிப்பாக  நிர்வாகத்துறை, கல்வி அமைப்பு, தகவல் தொடர்புசாதனங்கள் மற்றும் பண்பாட்டுத்துறை போன்றவை இலக்காகியுள்ளன.

பொருளாதாரக் கொள்கை:

திட்டமிட்ட பொருளாதாரம் என்பதே இந்திய பெருமுதலாளித்துவத்தின் தேவையில் இருந்து பாதைகள் வகுக்கப்பட்டது. பெருமளவிலான திட்டங்களுக்கு முதலீடு செய்வதற்கு தேவையான பெரும் நிதியாதாரம் தனியாரிடம் இல்லாதிருந்த நிலையில் கனரகத் தொழில்கள், கட்டமைப்புத்துறை ஆகியவை  பொதுத் துறை மூலம் வளர்க்கப்பட்டன. இது ஏகாதிபத்திய ஏகபோகங்களைச் சார்ந்திருப்பதை விடுத்து ஒரளவு தொழில்மயமாக்குவதற்கு பொதுத்துறை நிறுவனங்களைக் கட்டுவது உதவியது.

இக்காலத்தில் சோவியத்யூனியனின் தொடர்ச்சியான உதவியோடு வங்கி, காப்பீட்டுத்துறை போன்ற நிதிதுறையையும், எண்ணெய் மற்றும் நிலக்கரித் தொழிலையும் தேசியமயமாக்கியதன் மூலம் அரசுத்துறை விரிவுபடுத்தப்பட்டது. தொழில்மயக் கொள்கையை பாதுகாக்க ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, புதிய காப்புரிமைச் சட்டம், அன்னியப் பொருட்கள் மற்றும் மூலதனம் நுழைவதற்கான கட்டுப்பாடு, சிறு தொழில்களுக்கு பாதுகாப்பு என்பது போன்ற நடவடிக்கைகள் அன்று மேற்கொள்ளப்பட்டது. 1990 களுக்குபின் நிலைமை தலைகீழாக நவீன தாராளமய புதிய பொருளாதாரக்கொள்கை, ஏகாதிபத்திய சார்பு நடவடிக்கை காரணமாக மாறியுள்ளது.

சோசலிச பின்னடைவுக்குப் பின்:

ஏனெனில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு காரணமாக உலகில் பழமைவாத, பிற்போக்கு மற்றும் இனவெறி சக்திகளின் வளர்ச்சி இந்தியாவிலும் பிரதிபலிக்கின்றன. ஏகாதிபத்தியம் இந்த சக்திகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறது. இன்று இந்திய சூழலில் மதவாதம், சாதியம் இதற்கு பேருதவி செய்துவருகின்றன.

இன்றைய நிலையில் மோடி தலையிலான மதவெறி சக்திகள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து காங்கிரஸ் கடைபிடித்த அதே நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை மிக வேகமாக அமலாக்கி வருகின்றது.

பலனடைந்த பெருமுதலாளிகள்:

தாராளமய, தனியார்மயப் பாதை பெருமுதலாளிகளுக்கு ஏராளமான பலனை கொடுத்துள்ளது. இக்காலத்தில் புதிய வர்த்தக நிறுவனங்கள் பெருமுதலாளித்துவ நிறுவனங்களாக விரிவடைந்துள்ளன. 1957ல் 22 ஏக போக நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ 312.63 கோடியாக இருந்தது. 1997ல் ரூ 1,58,04.72 கோடியாக 500 மடங்கு வரை உயர்ந்துள்ளது. தற்போது 2016 ஜூலையில் இந்தியாவின் முதல் 5 பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 80.4 பில்லியன் டாலர்   ( 5.40 லட்சம் கோடி ரூபாய் ) ஆகும். இன்று வரை பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் வசதி படைத்த பகுதியினருக்கும் வருமான வரி விகிதம் குறைப்பு, செல்வவரி போன்றவை ரத்து என ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்பட்டு வருகின்றன.

விவசாய நெருக்கடி:

தொழிற்துறையில் மட்டுமல்லாது பசுமைப்புரட்சிக்கு பின் விவசாயத்துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டது.  தற்போது வேளாண்துறை கடும் நெருக்கடியில் உள்ளது. வேகமான நகரமயமாதல் சூழல் காரணமாக வேளாண் நிலங்களின் அளவு சுருங்கி வருகிறது. அரசின் கொள்கைகள் காரணமாக இடுபொருள் விலையுயர்வு, உற்பத்தி செலவு அதிகரிப்பு, அரசு தரும் குறைந்தபட்ச ஆதார கொள்முதல் விலை கட்டுப்படியாகாத நிலை, விவசாயத்திற்கான மானியம் சுருங்கி வருவது காரணமாக கடும் பாதிப்பை இந்திய விவசாயத்துறை சந்தித்து வருவது மட்டுமல்லாது தாதுவருஷ பஞ்ச காலத்தை விட அதிகளவில் விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணங்களை சந்தித்து வருகின்றனர்.

கிராமப்புற வேலைநாட்கள் 1990க்கு முன்பு 180 முதல் 200 வரை இருந்தது. தற்போது 30 முதல் 40 வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் 1991 முதல் 2011 வரையான காலத்தில் மட்டும் 150 லட்சம் பேரும், 2011க்கு பின் கடந்த ஐந்தாண்டுகளில் 5 கோடிக்கும் அதிகமான விவசாயிகளும். விவசாயத் தொழிலாளர்களும் விவசாயத்தைவிட்டு வெளியேறி அருகிலுள்ள நகரங்களுக்கு குடிபெயர்ந்து விட்டதாக மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறையின் புள்ளிவிபரம் வெளிப்படுத்துகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 2,500 பேர்  விவசாயத்தை கைவிடுவதாக தெரிவிக்கிறது. இதே காலத்தில் கிராமப்புற தொழிலாளிகள் 23.75  சதவீதத்திலிருந்து 29.96 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் கூலி, வேலைநாள் அளவு குறைந்தவண்ணமே உள்ளது.

கிராமப்புற அதிகாரப் படிநிலை:

அரசின் கொள்கைகள் காரணமாக பெரும்பாலான கிராமப்புற பகுதியில் நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள், ஒப்பந்தக்காரர்கள், பெரும் வர்த்தகர்களிடையே பலமான இணைப்பு ஏற்பட்டு இவர்கள் தான் கிராமப்புற செல்வந்தர்களாக உள்ளனர். இடதுசாரிகள் பலமாக உள்ள இடங்களை தவிர பஞ்சாயத்து அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள், கிராமப்புற வங்கி மற்றும் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் போன்றவையும் இவர்களது கட்டுப்பாட்டில் உள்ளதோடு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கிராமப்புறத் தலைவர்களாகவும் இவர்களே உள்ளனர்.

இந்த கிராமப்புற செல்வந்தர்கள் கந்துவட்டி, ரியல் எஸ்டேட், ஊக வாணிபம், விவசாயம் சார்ந்த தொழில்களில் முதலீடு செய்வது என அனைத்தையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். மேலும் கிராமப்புற சாதிய கட்டமைப்பை தங்களது ஆதிக்கத்திறகு பயன்படுத்திக்கொள்கின்றனர். உலகில் உள்ள சமூக அமைப்பு முறைகளில் இந்திய சாதிய அமைப்பு முறை சிக்கலானது. செய்யும் வேலை, பின்பற்றும் சடங்கு, பழக்கவழக்கம், திருமணம் தொடர்பான தடை( அகமணமுறை), பிற சாதியோடு சமமாக உட்கார்ந்து உண்ணதடை போன்றவைகளால் கட்டமைக்கப்படுகிறது. இதன் மூலம் வர்க்கச் சுரண்டலை நடத்த உதவுகிறது.

பற்றாக்குறையில் சாமானியர்கள்:

இதனுடைய விளைவு மேலும் மக்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறது. ஊட்டச்சத்து மிக்க உணவு இல்லாத நிலை, இரவு ஒரு வேளை உணவு இல்லாமல் தூங்கசெல்வோர் எண்ணிக்கை என்பது கோடிகளில் அதிகரித்த வண்ணம் உள்ளது. மருத்துவ தேவை என்பது முழுக்க  வணிகமயமாகிவிட்டது. 70 சதவீதம் பேர் கடன் வாங்கி வைத்தியம் பார்ப்பதும், 50 சதவீதம் பேருக்கு அடிப்படை மருந்து கூட கிடைக்காத நிலையும்,  குடும்ப வருமானத்தில் 40 சதவீதம் மருத்துவத்திற்கே செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் புதிய நோயாளிகளில்  24 சதவீதம் பேர் இந்தியர்களாக உள்ளனர். அதனால் இன்று உலகின் பார்மஸி இந்தியா என்று அழைக்கப்படும் அளவிற்கு நிலைமை சிக்கலாகியுள்ளது. கிராமப்புற எழுத்தறிவு மிகக்குறைவாகவே உள்ளது. சுகாதாரமற்ற மோசமான வீடு, குடிப்பதற்கு நீரும் கிடைக்காத நிலையில்தான் கிராமப்புற ஏழைமக்கள் வாழ்கின்றனர்.

இந்திய நாட்டின் அரசியல் சாசனம் “ ஒவ்வொரு குடிமகனுக்கும், வாழ்க்கைக்குத் தேவையான வசதிகள் மற்றும் வேலை செய்யும் உரிமை, அபரிமிதான சொத்துகுவிப்புக்கு வழியில்லாத பொருளாதார முறை, குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி பெறும் உரிமை, தொழிலாளர்களின் வாழ்க்கைக்கான ஊதியம், ஆண், பெண்  இருவருக்கும் சமவேலைக்கு சம ஊதியம்“ என்ற அரசியல் சாசன வழிகாட்டும் நெறிமுறைகள் ஒன்று கூட அமலாக்கப்படவில்லை. அரசியல் சட்ட நடைமுறைக்கும், முதலாளித்துவ ஆட்சியாளர்களின் நடைமுறைக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது.  இது சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ முறையின் மீதான கடுமையான கண்டனமாக திகழ்கிறது.

இன்றைய நிலையில் ஏகபோ பெருமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் தலைமையின் கீழ் இந்திய அரசின் செயல்பாடுகள் உழைக்கும் மக்களுக்கு எதிராக எத்தகைய தாக்குதல்களை தொடுத்து வருகிது என்பதை  கட்சித்திட்டம் மிகச் சரியான முறையில் சுட்டிக்காட்டுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (2)

கட்சித் திட்டம், சில வரலாற்று நினைவுகள்!

–         என்.சங்கரய்யா

1935 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பி.சி.ஜோஷி பொதுச் செயலாளராக ஆனதில் இருந்து கட்சிக்கு ஒரு (கொள்கை,செயல்) திட்டம் இருந்தது. அதனடிப்படையில் முதல் மாநாடு 1943 ஆம் ஆண்டு பம்பாயில் நடந்தது. அப்போது நான் சிறையில் இருந்தேன்.

முதல் மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து பி.ராமமூர்த்தி தலைமையிலான பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் பங்கெடுத்தனர். சிறு எண்ணிக்கையிலான மத்தியக் குழுவும் 3 பேர் மட்டும் கொண்ட பொலிட் பீரோ தேர்ந்தெடுக்கப்பட்டது.  அதில் பி.சி.ஜோஷி முதல் பொதுச் செயலாளர், பி.டி.ரணதிவே, ஜி.அதிகாரி ஆகியோர் மட்டும் அதில் இடம்பெற்றிருந்தனர். மத்தியக் குழுவில் தமிழ்நாட்டில் இருந்து யாரும் இல்லை. சுந்தரய்யா தமிழகத்தை கவனித்தார். இ.எம்.எஸ்  போல சிலர் மட்டும் இடம்பெற்றிருந்தது நினைவில் உள்ளது.

பம்பாய் கெத்வாடி மெயின் ரோட்டில் இருந்த அலுவலகத்தில் இருந்து, கட்சித் தலைமை இயங்கியது. 1943 ஆம் ஆண்டு வரை, 3 வது  கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஒரு பகுதியாக கட்சி இருந்தது. அதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (கம்யூனிஸ்ட் அகிலத்தின் பகுதி)  என குறிப்பிடுவோம். அகிலம் அங்கீகரித்த ஒரு கட்சியாக, அவர்களின் சர்வதேச நிலைப்பாடு, தத்துவார்த்த புரிதலை ஏற்றுக் கொண்டதாக கட்சி செயல்பட்டது. தத்துவார்த்த விசயங்கள் மட்டுமல்ல, அமைப்பு முறை கூட சர்வதேச விதிகளை ஒட்டித்தான் அமைந்தது. அவ்வாறான கட்சிகளையே அகிலம் அங்கீகரித்தது.

மாஸ்கோவில் அகிலத்தின் தலைமையகம் இருந்ததால், சிபிஎஸ்யுதான்(சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி) செயல் அடிப்படையில் அகிலத்தின் தலைவராக இருந்தது. சர்வதேச மாநாடுகளுக்கு பிரதிதிகள் செல்வார்கள். அகிலத்தின் உறுப்பினர் கட்சிகளை அகிலத்தின் முடிவுகள் கட்டுப்படுத்தும். 1943 ஆம் ஆண்டில் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்த சூழலில், அகிலத்தில் இதுகுறித்த விவாதம் வந்தது. சர்வதேச தலைமையானது, ’இனிமேல் பழைய கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஒரு மையத்தில் இருந்து வழிநடத்துவது சாத்தியமில்லை’ என முடிவுக்கு வந்தது. யுத்தத்தின் நடுவிலேயே அந்த அமைப்பு கலைக்கப்பட்டது. அதன் பின்னர் நாம் ஒரு தனித்த கட்சியாக இயங்கினோம். ஆலோசனைகள் இருக்கும். அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பங்கேற்கச் செய்வோம். சர்வதேச கட்சிகளின் வாழ்த்துச் செய்திகளைப் பெற்றுக்கொண்டால் போதும் என்ற முடிவு செய்ட்யும் வரை இது நடந்துகொண்டிருந்தது. அதே சமயம், சர்வதேச அகில இணைப்பில் இருந்த கட்சிகள் மார்க்சிய லெனினிய அடிப்படைகளையும், ஸ்தாபன அமைப்பு வடிவத்தையும் தொடர்ந்து முன்னெடுக்கிறோம்.

1948 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாடு கல்கத்தாவில் நடைபெற்றது. தோழர் பி.டி.ரணதிவே கட்சி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு அவரின் சில வறட்டுவாத நிலைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்க நேர்ந்ததால் அஜய் குமார்  1951 ஆம் ஆண்டு செயலாளரானார்.1952 ஆம் ஆண்டு இறுதியில் 3 வது கட்சி காங்கிரஸ் மதுரையில் நடந்தது. நாங்கள் அதற்கான ஏற்பாடு செய்தோம். அதில் அஜய் குமார் கோஷ் பொதுச் செயலாளராக தேர்வானார்.

4வது மாநாடு பாலக்காட்டில் நடைபெற்றது நானும் அதன் பிரதிநிதியாக பங்கேற்றேன்.  காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிச் செல்லவேண்டும் என்ற பி.சி.ஜோஷி பிரிவினர் முன்வைத்த முடிவுக்கும், அதற்கு மாற்றான பெரும்பான்மைக்கு எதிராக விவாதம் நடைபெற்றது. சுந்தரய்யா, ராமமூர்த்தி, ஏ.கே.கோபாலன் உட்பட தோழர்கள் காங்கிரஸ் கட்சியுடன் நெருங்குவதை எதிர்த்தோம். நானும் விவாதத்தில் பங்கேற்றேன். தமிழகத்தின் பெரும்பான்மை பிரதிநிதிகள் எதிர்த்தோம். இருப்பினும் அந்த மாநாட்டில் ஒரே தலைமையை தேர்வு செய்தோம்.

இக்காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும், வெகுஜன இயக்கங்களும் பெரிய அளவில் வளர்ந்தன. தேர்தல் முடிவுகளில் மட்டுமின்றி, இடைக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பொது அரசியல் செல்வாக்கிலும் பெரிய போராட்டங்களிலும் அது தெரிந்தது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அதிகாரத்திற்கு வந்தது.

இந்தச் சூழலில் இக்கடமைகளை – வெகுஜன இயக்கத்தை வலுப்படுத்த கட்சி ஸ்தாபனத்தை கெட்டிப்படுத்த, தத்துவார்த்த அடிப்படையை உறுதிப்படுத்த போன்றவைகளை ஆதாரமாகக் கொண்ட ஒரு வெகுஜனக் கட்சியை கட்டுவதில்தான் கட்சி கவனம் செலுத்த வேண்டும் என்ற முடிவிற்கு தலைமை வந்தது. இதனை ஒட்டி பஞ்சாபில் அமிர்தசரஸ் நகரில் 1958 ஏப்ரல் வரை கட்சியின் விசேஷ காங்கிரஸ் நடத்தப்பட்டது. தேசிய கவுன்சில் தேர்ந்தெடுத்தோம்  அதில் 101 பேர் வரை இருந்தனர். இந்தக் கவுன்சில் ஒரே மனதாகத்  தேர்வானது. அதில் தமிழகத்தில் இருந்து நானும்,பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், ரமணி, ஜீவா உள்ளிட்டோர் தேர்வானோம். செயற்குழு இருந்தது. மத்திய செயற்குழு இருந்தது. இப்படி மூன்றடுக்கான முறை உருவாக்கப்பட்டது.

1961 ஆம் ஆண்டில் விஜயவாடாவில் நடைபெற்ற 6 வது மாநாட்டில் மீண்டும் அரசியல் நிலைப்பாடு பற்றிய விவாதம் வந்தது. அந்தக் காலக்கட்டத்தில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முழுமையான கருத்து வேற்றுமைகள் வேகமாக பரவி வந்தது. இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனைகள் சம்பந்தமாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டினையும், இதன் பால் சோவியத் கட்சியின் பார்வையைப் பற்றியும் இந்தப் பின்னணியில் இந்தியாவில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை உத்திகள் குறித்தும், கட்சி முழுவதும் விவாதம் நடந்தது. அரசியல் குழப்பங்களும், ஒற்றுமையின்மையும் தலைதூக்கியிருந்தது. இதற்கு மேலாக இந்தியாவில் ஆளும் கட்சியாகிய காங்கிரஸ் கட்சி பாத்திரத்தைப் பற்றி, அதன் வர்க்கத் தன்மையைப் பற்றி விவாதங்கள் தீவிரமாகின.

6 வது மாநாட்டிற்கான அரசியல் தயாரிப்பு பணிகளும் முறையே நடந்த வந்தன. அதற்கு முன்னோடியாக கட்சி மாநாட்டில், விவாதிக்க வேண்டிய அரசியல் – ஸ்தாபன நகல் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் தேசிய கவுன்சிலிலும், மத்தியக்குழுவிலும், நடைபெறத் துவங்கின. ஆனால், இவ்வமைப்புகளில் விவாதிப்பதற்கான நகல் அறிக்கைகள் மீதும் கூர்மையான கருத்து மாறுபாடுகள் தோன்றின. இரண்டு ஆவண வரையறைகள் முன்வைக்கப்பட்டன. கூர்மையான விவாதங்களுக்குப் பின் தோழர் அஜய் கோஷ் அவர்களின் தொகுப்புரையை ஆதாரமாகக் கொண்டு கட்சியில் ஒற்றுமையை உத்தரவாதப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இக்கட்டத்தில்தான் டாங்கே அரசுக்கு எழுதியதான கடிதங்கள் வெளியாகின. கட்சிக்கு உள்ளே அதுபற்றிய விவாதம் நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில் இந்திய சீன யுத்தத்தில் இடதுசாரிகளாக கருதப்பட்டவர்களை கைது செய்தார்கள். யாரெல்லாம் அரசுக்கும், ராணுவத்திற்கும் ஆதரவாக உள்ளார்களோ அவர்களை மட்டும் கைது செய்யவில்லை. மற்றவர்களை சீன ஆதரவாளர்கள் என்று கைது மேற்கொண்டனர்.

உள்கட்சி போராட்டத்தில் விவாதங்கள் வலுவடைந்தன. ஆதிக்கம் செய்த குழு அடுத்த குழு மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். டாங்கே கடிதங்கள் பரிசீலனை செய்யப்படவேண்டும். தலைமையில் இருக்கக் கூடாது என்பது போன்ற குரல்கள் எழுந்தன. தில்லியில் 1963 ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியக் குழு கூட்டத்தில் இருந்து 32 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் கூடி ஒரு கட்சி உருவாக்குவதென முடிவெடுத்தோம். அப்போது இ.எம்.எஸ் வெளிநடப்புச் செய்யவில்லை . அஜய் கோஷ் நடுநிலை வகித்தார். 32 பேரில் தமிழகத்தில் இருந்து பிராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், ரமணி வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்தில் கும்பகோணத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நிலையில் வெளிநடப்பு நடத்தினோம். தமிழகத்தில் இந்த முரண். தேசிய அளவில் வெளிநடப்பு என்ற சூழலில் வெளிநடப்பு செய்த 32 பேர் தலைமையில் முடிவெடுத்து தெனாலியில் ஒரு கன்வென்சன் நடத்த முடிவு செய்தோம்.

அதில் விவாதம் நடத்தியபோது, இனிமேல் ஒரே கட்சியாக செயல்பட முடியாது என்ற முடிவை அது எடுத்தது. சொந்த அமைப்பு சட்டம், அரசியல் நிலைப்பாட்டுடன் செயல்பட முடிவு செய்தோம். அதன் விளைவாக 7 வது கட்சி காங்கிரஸ் கல்கத்தாவில் கூட்டப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்ற முடிவையும்,ஸ்தாபன அமைப்பில் மத்தியக் குழு, அரசியல் தலைமைக் குழு போன்ற ஏற்பாடுகள் முடிவு செய்யப்பட்டன.

அந்த மாநாடு முடித்து வெளியே வந்த உடனே அரசு அடக்குமுறைஒயை எதிர்கொள வேண்டியிருந்தது. சுமார் ஆயிரம்பேர் கைது செய்யப்பட்டனர். இ.எம்.எஸ்,ஜோதிபாசு என மாநாடு முடிந்து வீடு திரும்புவதற்குள்ளாகவே இந்தக் கைது நடைபெற்றது. கடலூர் சிறையில் 200 பேர் இருந்தோம். எம்.ஆர்.வி, ராமமூர்த்தி,ஏ.பி.என்ஸ், ரமணி, ஹேமச்சந்திரன், உமாநாத் ஆகியோர் இருந்ததாக நினைவு.

1964 ஆம் ஆண்டிலேயே கட்சி வரைவு திட்ட அடிப்படையில் செயபட்டது. கட்சித் திட்டத்தை இறுதி செய்திட ஒரு குழு ஏற்படுத்தினோம். அந்த குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம், அமைப்பு சட்டத்தை வடிவமைத்தது. அதற்கென ஒரு ஆணையம் அமைத்து செயல்படுத்தினோம். 1968 ஆம் ஆண்டு மாநாடு கொச்சின் மாநாட்டுக்கு பின் 1972 ஆம் ஆண்டில் மதுரை மாநாடு நடந்தது.

மக்கள் ஜனநாயக புரட்சி, அதனை நிறைவேற்று வர்க்கங்கள், தொழிலாளி வர்க்கத் தலைமை, விவசாயி தொழிலாளி ஒற்றுமை ஆகியவற்றை நமது திட்டம் இறுதி செய்தது. கட்சி திட்டத்தில் ஒரு திருத்தம் வந்தாலும் அது எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஒரு முறையை உருவாக்கினோம். திருத்தம் முன்மொழிதல் தொடங்கி விவாதம் வரை எப்படி நடக்க வேண்டும் என முடிவு செய்தோம்.

கட்சித் திட்டத்தை நவீனப்படுத்தும் பணி பின்னர் மேற்கொள்ளப்பட்டது. அதுதான் இப்போது இறுதியான ஆவணம். கட்சியின் திட்டம்தான் நமக்கு அடிப்படை ஆவணம். ஒவ்வொரு மாநாடு நிறைவேற்றும் தீர்மானமும் கட்சி திட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அமைய முடியும். தீர்மானங்களின் நோக்கம் கட்சி திட்டத்தை நடைமுறைச் சாத்தியமாக்குவதுதான்.

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (1)

 

(முற்போக்காளர்களும்,பொதுவான வாசகர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தை ஆழமாக அறிந்து கொள்வதற்கு ஏற்றவாறு பல கோணங்களில் விளக்குவதற்காக இந்தத் தொடர் துவங்கப்படுகிறது. -ஆசிரியர் குழு )

ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு “திட்டம்” என்று அழைக்கப்படும்  ஆவணம் மிக அவசியமானது.திட்டம் இல்லாமல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இயங்க முடியாது.(இந்தியாவில் துவக்க காலங்களில் திட்டம் இல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி இயங்கியது உண்மையே.ஆனால் அந்த சூழல் வித்தியாசமானது.) கம்யூனிஸ்ட் கட்சி தான் அடைய வேண்டிய தொலைநோக்கு இலக்கு குறித்து தனது திட்டத்தில் விளக்குகிறது.எனவே கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களில் அடிப்படையானது கட்சித் திட்டம்.

பொதுவாக தங்களது இலக்கு அல்லது இலட்சியம் பற்றி பல கட்சிகள் அவ்வப்போது பேசுவதுண்டு.”சமுத்துவ சமுதாயம் அமைப்பதே எங்கள் குறிக்கோள் என்று கடந்த காலங்களில் அதிமுக,திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் சொல்வதுண்டு.சமத்துவம்,சமநீதி,என்றெல்லாம் அவ்வபோது தங்களுக்கு தோன்றுவதை பல கட்சிகள் கோஷங்களாக முழங்குவார்கள்.தங்களது சுய நலத்திற்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் இது போன்ற கவர்ச்சிகரமான கோஷங்களை அவர்கள் எழுப்புவார்கள்.அவர்களது பேச்சுக்கும், செயல்பாடுகளுக்கும் தொடர்பு இருக்காது.ஆனால்,”திட்டம்”என்று ஏற்றுக் கொண்டதை நடைமுறை  வாழ்க்கையில் சாதித்திட இடைவிடாது முயற்சிக்கும் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது.

திட்டம் – கட்சியின் உயிர்நாடி

கட்சி திட்டம் உருவாக்குவதில் ரஷிய அனுபவத்தை இங்கு குறிப்பிடுவது உதவியாக இருக்கும்.1898-ஆம் ஆண்டு ரஷிய சமூக ஜனநாயக கட்சி எனும் பெயரில் ரஷியாவில் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படத்  துவங்கியது.ஒரு திட்டம் கட்சிக்கு தேவை என்று லெனின் கருதினார்.ஆனால் பலர் இக்கருத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை.கட்சித் திட்டம் உருவாக்குவதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்றும்,தற்போது உள்ளூர் அமைப்புக்களை உருவாக்குவதும் கட்சி கொள்கைகள் மற்றும் தத்துவம் குறித்த எழுத்துக்களை அதிக அளவில் உருவாக்கி, மக்களிடையே பிரச்சாரம் செய்வதும்தான் முக்கிய பணி  என்று பலர் வாதிட்டனர்.

மனம் போன போக்கில் சில செயல்பாடுகளில் ஈடுபடுவது சரியானதல்ல என்றும் ,ஒரு திட்டம் அடிப்படையில் கட்சி ஸ்தாபனத்தை ஒன்றுபடுத்த வேண்டும் என்றும் லெனின் அழுத்தமாக  வாதிட்டார்.நமது கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு ஒருங்கிணைப்பு தேவை;அவற்றை விரிவாக்கவும்,வலுவாக்கிடவும் வேண்டும்;தனித்தனியான,அவ்வப்போது எழும் அன்றாட கோரிக்கைகளுக்காக மட்டும் துண்டுதுண்டான இயக்கங்களை நடத்துவதற்கு பதிலாக, சமூக ஜனநாயகக் கட்சியின் அடிப்படை இலட்சியங்களுக்கான ஒன்றிணைந்த இயக்கம் என்ற உயரத்திற்கு கட்சி செல்ல வேண்டும்;அதற்கு,கட்சித் திட்டம் தேவை என்பதனை லெனின் வலியுறுத்தினார்.

1899 -ஆம் ஆண்டு “கட்சித் திட்டத்தின் நகல் என்ற கட்டுரையில் வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்களிடமும் அறிவுஜீவிகளிடமும்,கட்சியின் தொடர்புகளை தரமிக்கதாக உயர்த்தி,கட்சியின் செயல்பாடுகளை அதிகரித்திட, ஒரு திட்டம் தேவை  என்று வலியுறுத்தினார்,லெனின்.அத்துடன்,கட்சித் திட்டம் கொண்டிருக்க வேண்டிய அம்சங்கள்   என்ன என்பதை அக்கட்டுரையில் லெனின் விளக்கினார். லெனின் சிறையில் இருந்த 1895-96 -ஆம் ஆண்டுகளிலிலிருந்தே  கட்சித் திட்டம் தொடர்பான பிரச்னைகளை ஆய்வு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதனையொட்டிய  அவரது எழுத்துக்கள் கட்சித் திட்டம் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் உயிர்நாடியான   ஒன்று என்பதை உணர்த்துகிறது.

புரட்சி எனும் கருத்தாக்கம்

கட்சி திட்டம் புரட்சியை நோக்கமாகக் கொண்டது.புரட்சி என்பதற்கு அரிஸ்டாட்டில் துவங்கி ஏராளமான அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.வெறும் ஆட்சி மாற்றங்களை புரட்சியாகக் கருத முடியாது.மனித வரலாற்றில் வேறுபட்ட சித்தாந்தங்கள் அடிப்படையிலும் வன்முறை வழிமுறையிலும் பல அடிப்படையான மாறுதல்களை பல புரட்சிகள் நிகழ்த்தியுள்ளன.சமுகம்,பொருளாதாரம்,அரசியல்,பண்பாடு என பல துறைகளில் ஆழமான மாற்றங்களை புரட்சிகள் உருவாக்கியுள்ளன.

அடிப்படையான அதிகார மாற்றம்,ஆட்சி அமைப்பு முறையிலான மாற்றம் உள்ளிட்ட பல மாற்றங்கள் உருவாக்கி,முற்றிலும் புதிய பாதையில் நாட்டைக் கொண்டு செல்வதுதான் புரட்சியாக கருதப்படும்.அது வரை ஆண்டு கொண்டிருந்த அதிகார கூட்டத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து இந்த மாற்றங்களை கொண்டு வருகின்றனர்.எனவே மக்களின் பங்குதான் புரட்சியில் முக்கியமானது.

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் குறிப்பிட்ட நாட்டில் அடைய வேண்டிய புரட்சி இலக்கினை தெளிவாக வரையறுக்கிறது.உழைக்கும் வர்க்கங்களின் உழைப்பைச் சுரண்டி தங்களது சொத்துடைமை சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கும் சொத்துடைமை வர்க்கங்கலின் சமூக அரசியல் மேலாதிக்கத்திற்கு புரட்சி முற்றுப்புள்ளி வைக்கிறது.   முதலாளிகள்,நிலப்பிரபுக்கள்,அந்நிய நாட்டு மூலதன வர்க்கங்களின் கருவியாக விளங்கும்  அரசு அதிகாரத்தினை வீழ்த்தி, தொழிலாளி விவாசாயி மற்றும் உழைக்கும் வர்க்கங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதனை  புரட்சி சாதிக்கிறது.

இதுதான்  தொலைநோக்கு  இலக்கு. இந்த அதிகார மாற்றமே உண்மையான புரட்சி.இந்த புரட்சியை சாதிக்க,உழைக்கும் வர்க்கங்களை திரட்டுவதற்கு கட்சி மேற்கொள்ளும் வியூகம் கட்சித் திட்டத்தில் விளக்கமாக விரித்துக் கூறப்படுகிறது.தற்போதைய அரசு, அதன் வர்க்க குணம்,அதன் பலம்,பலவீனம்  குறித்து கட்சித் திட்டம் விளக்குகிறது. புரட்சியில் தொழிலாளி வர்க்கம் வகிக்கும் பங்கு, தொழிலாளி வர்க்கத்துடன்  விவசாயப்  பிரிவினர் இணைந்து உருவாக்கும் வர்க்கக் கூட்டணி,புரட்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம் போன்ற பல மிக அடிப்படையான அம்சங்களை கொண்டதாக கட்சித் திட்டம் அமைகிறது.இந்த இலக்கணங்கள்  அனைத்தையும் கொண்டதாக மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் அமைந்துள்ளது. புரட்சி இலக்கினை எட்டும் காலம் வரை இது நீடிக்கக்கூடியது.

மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சியின் திட்டம்

இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்தே சோசலிச இலட்சியம் பலரது சிந்தனையை ஈர்த்தது. நிலம், தொழில் உள்ளிட்ட உற்பத்திக்கான ஆதாரங்கள் அனைத்தும் தனியுடைமையாக இருக்கும்  நிலை மாறிடவும்,ஒரு சிறு கூட்டம் சொத்துகுவியல்,, மூலதனக் குவியலை இடையறாது மேற்கொள்ள ,அரசு துணை நிற்க்கும் நிலை, மாறிட வேண்டுமென்பதும்  அன்றைய சோஷலிஸக் கனவாக இருந்தது. சோசலிசம் மலருவதற்கான முக்கிய கட்டமாக மக்கள் ஜனநாயக அரசு அமைய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் கூறுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),1964-ஆம் ஆண்டு தனது திட்டத்தை உருவாக்கி உலகுக்கு அறிவித்தது.புதிய சூழலுக்கு ஏற்ப தனது திட்டத்தை 2002-ஆம் ஆண்டு மேம்படுத்தியது.

மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சியின் திட்டம் தனது இலக்கைப் பற்றி கீழ்க்கண்டவாறு வரையறுத்துள்ளது.

“8.1 மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)தனது புரட்சிகரத் திட்டத்தை இந்திய மக்கள் முன் வைக்கிறது. சோசலிசத்திற்கும்,சுரண்டலற்ற சமூகத்தை நோக்கி முன்னேறுவதற்கும் மக்கள் ஜனநாயகப் புரட்சியானது வழிவகுக்கும். இந்திய மக்களை விடுதலை செய்யும் இத்தகைய புரட்சிக்கு விவசாயிகளுடன் கூட்டணி அமைத்து தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கும்.உழைக்கும் மக்களின் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சியானது,ஏகாதிபத்தியம், ஏகபோக முதலாளித் துவம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றிற்கு எதிராக நடத்தப்படும் போர்க்குணமிக்க போராட்டங்களுக்கு தலைமைதாங்க வேண்டி யுள்ளது.மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகளை நமது நாட்டில் நிலவும் நிலைமைகளுக்கு ஏற்ப திட்டவட்டமான வகையில் பயன்படுத்துவதன்மூலம் அரசியல், தத்துவார்த்த,பொருளாதார, சமூக, பண்பாடு என்கிற அனைத்து முனைகளிலும் நாம் வெற்றிகாணும்வரை நீண்ட நெடிய போராட்டங்களைக் கட்சி நடத்தவேண்டியுள்ளது.”

தெளிவான இந்த இலட்சியத்தோடு மார்க்சிஸ்ட் கட்சி கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது.

ஆழமான பொருள் பொதிந்த சொற்றொடர்கள் இழையோடும் ஆவணம் இது. கருத்துச்செறிவு என்பதற்கான இலக்கணமாகத் திகழும் சிறு நூல் இது.இதனை ஒருமுறை வாசித்தால் போதுமானதல்ல. பன்முறை வாசிப்பது அவசியம். ஏனென்றால், அரை நூற்றாண்டு மக்கள் போராட்டங்களில் கிடைத்த பழுத்த அனுபவங்கள்,  மார்க்சியத்தில் தேர்ச்சி பெற்ற மாமேதைகளின் கனல் தெறித்த உட்கட்சி விவாதங்களில் வந்தடைந்த நிர்ணயிப்புக்கள் ஆகியன அனைத்தும் உள்ளடங்கிய நூல் இது. பல மணி நேரங்கள் இந்நூலோடு இணைந்திருப்பது புரட்சி இலட்சியத்தின் மீதான நமது உள்ள உறுதியை வலுப்படுத்தும்.

(தொடரும்)