உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைக்கான போராடமே முதன்மையானது

பிருந்தா காரத்

(நம் தமிழ் ”மார்க்சிஸட்” இதழுக்காக தோழர் பிருந்தா காரத் அளித்த பிரத்யேக பேட்டி)

மத்திய ஆட்சியில் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் தொடர்வதோடு, சமூகத்தை மத ரீதியாக பிரித்து, தங்கள் அமைப்பை விரிவுபடுத்தியும் வருகிறது. இந்நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எவ்வாறு பார்க்கிறது? எவ்வாறு இவர்களை எதிர்கொண்டு, அவர்களின் விரிவாக்கத்தை தடுத்து நிறுத்துவது?

மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பி.ஜே.பி –  ஆர்.எஸ்.எஸ் தனது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை அனைத்து வகையிலும் உந்தித் தள்ளுகிறது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலையும், அதன் அடுத்தடுத்த நிகழ்வுகளையும், துல்லியத் தாக்குதல் என்பதாகவும் பயன்படுத்திக் கொண்டது. அதை தனது ஆதாயத்திற்காக தவறாகவும் பயன்படுத்தியது. இதன் மூலம் அரசும், அதனை ஆட்சி செய்யும் கட்சியும் கலவையாக தேசியவாத உணர்வை கதையாடி தேர்தலில் கூடுதல் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றனர்.

இன்று எந்த ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு  பி.ஜே.பி ஆட்சி பொறுப்பிற்கு வந்ததோ,அந்த பெரும்பான்மையை பயன்படுத்தியே நாடாளுமன்றத்தின் ஜனநாயக அமைப்பை குழிதோண்டி புதைக்கின்றனர். ஆனபோதும், இந்த வளர்ச்சிப்போக்கில் வேறு ஒரு உண்மை உள்ளது என்பதை கம்யூனிஸ்டாகிய நாம் அங்கீகரிக்க வேண்டும்.  பி.ஜே.பி யின் கோரிக்கைகளுக்கு பின்னால் இந்திய ஆளும் வர்க்கத்தின் அபரிமிதமான ஆதரவு உள்ளது என்பதாகும். அந்நிய மூலதனத்துடன் கைகோர்த்துள்ள இந்திய பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கூட்டே இந்த ஆளும் வர்க்கமாகும். இன்று பி.ஜே.பி தான் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஆகப்பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது.

தற்போதைய நிலையை ஆராய்வதற்கான முக்கியமான அம்சமாக இது அமைகிறது. தேசிய அளவில் பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளே ஆளும் வர்க்கத்தின் இரண்டு கட்சிகளாகும். நவ தாராளமயம் சார்ந்த குணாதிசயங்களிலும் செயல்பாடுகள் மற்றும் உறுதிப்பாட்டிலும் இரண்டு கட்சிகளிடையேயும் எவ்வித வேறுபாடும் கிடையாது. நாடாளுமன்றத்தில் அதீத பலம் பொருந்திய கட்சியாக பி.ஜே.பி தற்போது இருப்பதால் அது நவதாராளமயக் கொள்கையை மிக கடுமையாக அமலாக்குகிறது. தொழிலாளர்களுக்கு எதிரான தொழிலாளர் சட்டங்களை உருவாக்கியதிலும், விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கும் நோக்கோடு கொண்டுவரப்பட்டு, மத்திய அரசால் திரும்பப்பெறப்பட்ட விவசாய சட்டங்களிலும், குறைந்த விலையில் பொது சொத்துக்களை கார்ப்பரேட்டுகள் சூறையாட வழி செய்ததிலும், லாபத்தில் இயங்கும் பொதுத் துறைகளை தனியாருக்கு குறைந்த விலைக்கு தாரைவார்ப்பதிலும் நாம் அரசின் கடுமையான நவ தாராளமய அமலாக்கத்தை பார்க்க முடியும். சலுகைசார் முதலாளித்துவத்தை பாதுகாக்கவும் வளர்த்தெடுக்கவும் இந்த அரசு வெளிப்படையாகவே செயலாற்றுகிறது. ஆளும் வர்க்கத்தினருக்கு சாதகமான அரசின் கொள்கை முடிவுகளின்படி  கார்ப்பரேட்டுகள் ஆதாயம் அடைவதோடு கூடுதல் சலுகைகளையும் பெறுகின்றனர். அதீதமான சொத்துக் குவிப்பு மற்றும் சாதனை படைக்கும் லாபத்தை ஈட்டி அதானி பணக்காரர்களின் முன்னணி பட்டியலில் இடம்பிடித்தது நிச்சயமாக எதேச்சையான ஒன்றல்ல.

வர்க்கப் பார்வையில் கூறுவதென்றால், பெருமுதலாளிகள் உடனான இந்த நட்புறவு என்பது மற்ற வர்க்கங்களுக்கிடையே ஒரு மோதலை இதன் மூலம் ஏற்படுத்துகிறது. உதாரணமாக, கொரோனா காலத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் எதிர்கொண்ட நஷ்டத்தின் போது கடுமையான பாகுபாட்டை உணர்ந்தனர். பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி அமலாக்கம் ஆகியவை அவர்களின் சிக்கலை மேலும் அதிகப்படுத்தியது. கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு விவசாயத்தை கையளிக்கும் முடிவுக்கு எதிராக, கிராமப்புற இந்தியாவில் பல்வேறு தரப்பட்ட விவசாய பகுதியினரிடையே ஒரு ஒற்றுமை உருவாகியது. உழைக்கும் வர்க்கம் இக்காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆதிக்க போக்குகள் மற்றும் நிலமற்றவர்களின் உயர்வால் கிராமப்புற உழைக்கும் வர்க்கத்தினரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

வர்க்க சக்திகளின் ஒருங்கிணைவை புரிந்துகொள்ள முயற்சிப்பதோடு, முரண்பாடுகளையும் வித்தியாசங்களையும் பயன்படுத்தி போராட்டங்கள் மூலம் சுரண்டப்படும் வர்க்கங்களிடையே ஐக்கியத்தை உருவாக்கி, சமூக மாற்றத்திற்கான திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். இதற்கு இந்த அனைத்து பிரச்சினைகளிலும் கட்சி ஊக்கத்துடன் தலையிட்டு வர்க்க வெகுஜன அமைப்பை வலுப்படுத்த வேண்டும்.  அதன் மூலம் ஆளும் அரசின் கொள்கைகளால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான வர்க்கத்தினரிடையேயும் இதர பகுதியினரிடையேயும்  விரிவாக சென்றடைவது.

அதே நேரம், சங்பரிவார் கூட்டத்தினால் வழி நடத்தப்படும் மத்திய அரசின் பெரும்பான்மைவாதத்தை முதன்மைப்படுத்துவதையும், அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள மதச்சார்பின்மை மீதான கடுமையான தாக்குதல்களையும் எதிர்த்த போராட்டத்தினை அதே அளவிளான  முக்கியத்துவத்துடன் நாம் முன்னெடுக்க வேண்டும். இந்த அரசுக்கு மதச்சார்பின்மை என்பது தவறான வார்த்தையாக உள்ளது. சங்பரிவாரின் இந்துத்துவ நோக்குடன் மூழ்கடிக்கப்படாத எந்த ஒரு சுயேட்சையான அமைப்பும் தற்போது இல்லை. நீதித்துறை, தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகள், அரசியல் அமைப்பு சட்டத்தின்படியாக இல்லாமல் சங்பரிவாரின் இந்து ராஷ்ட்ராவின் மீது பற்று கொண்ட கொள்கை சார்பின் அடிப்படையில் சுயேச்சையான அமைப்புகளில் பணியமர்த்தப்படுவது என இது நீளும். 

உயர் கல்வி நிறுவனங்களும் இத்தகைய கடுமையான தாக்குதலை எதிர்கொண்டது. உயர்கல்வி நிறுவனங்களின் உயர் பொறுப்பில் தகுதியற்றவர்களை அமர்த்துவது, பாடதிட்டத்தில் வரலாற்று நோக்கை மறுத்து, அறிவியல் ரீதியான ஆய்விற்கு பதிலாக தெளிவின்மையையும் மாயைகளை கொண்டு நிரப்புவது நடந்துள்ளது. மதச்சார்பின்மையும் ஜனநாயகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். தேசத்தின் முக்கியமான இந்த இரு தூண்களும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுமாயின் எவ்வாறு மதச்சார்பின்மை சாத்தியமாகும்? மதச்சார்பின்மையின் மாண்புகள் அல்லாத மதக் கோட்பாடுகளை அடிப்படையாக கொண்ட தேசத்தை எவ்வாறு ஜனநாயகம் உள்ள நாடு என்று கொள்ள முடியும்? சங் பரிவார் முன்னிறுத்தும்  சித்தாந்தம் என்பது மனுஸ்மிருதியின் அடிப்படையில் சாதிய ஆணாதிக்க கருத்தாக்கத்தை ஆழமாக கொண்டதாகும். சமூக சீர்திருத்தம் என்பது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி க்கு சாபம் போன்றதாகும். சாதியத்திற்கு எதிராகவும், சாதிய அமைப்பு முறைக்கு எதிராகவும் ஆணாதிக்கத்திற்கு எதிராகவும்  போராடுவது என்பது சங்பரிவார் கூட்டத்தின் சித்தாந்தத்தின் மீது தொடுக்கும் கடும் தாக்குதல் ஆகும்.

பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்துவது குறித்த விரிவான புரிதலின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) செயல்படுகிறது.  தேசத்தின் மீதுள்ள இந்த மோசமான அபாயத்தை எதிர்த்து போராடி வீழ்த்திட வேண்டும். நமது சொந்த மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, நவதாராளமயத்திற்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைப்பதோடு, ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாகத்தான் இது சாத்தியமாகும்.

நவ தாராளமயம் மற்றும் இந்துத்துவ சித்தாந்தத்தை ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. சக்திகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், இதற்கு முன்னதாகவும் பலமுறை விவாதிக்கப்பட்டது போல், இதற்கு எதிரான ஒன்றுபட்ட அணியை கட்டுவது சாத்தியமா? அனைத்து எதிர்கட்சிகளையும் ஒரே மேடையில் அணி சேர்ப்பது சாத்தியமா?

அனைவரையும் ஒரே அணியில் திரட்டுவதற்கு பல முன்மாதிரிகள் உள்ளன. சுரண்டப்படும் மற்றும் ஒடுக்கப்படும் சக்திகளை ஓரணியில் திரட்டுவதே மிகவும் முக்கியமான திரட்டுதலாகும்.

அரசியல் கட்சியை பொறுத்தவரை வலுவான இடதுசாரி அணியை கட்டுவதே முதன்மையான முன்னுரிமையாகும்.  இது ஒன்றும் எளிதான காரியமல்ல. நாம் அறிந்தது போல் பல்வேறு விஷயங்களில் இவற்றுக்கிடையே வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியும் பார்வர்ட் பிளாக் கட்சியும் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கின்றனர். அதேநேரம் வங்கத்தில் இடது ஜனநாயக அணியில் உள்ளனர். சிபிஐ(எம்.எல்) கட்சி வங்கத்தில் சிபிஐ(எம்) ஊழியர்கள் திரிணாமுல் கட்சியினரால் தாக்கப்படுவதை கண்டிப்பதில்லை. கடந்த தேர்தலில் திரிணாமுல் கட்சியை எதிர்த்து போட்டியிடவும் இல்லை. ஆனபோதும் நாம் இடதுசாரிகளின் ஒற்றுமையை வலுப்படுத்த முயற்சிக்க வேண்டும். அதுவே இதர சக்தியினரை நம்மோடு அணிசேர வழி செய்யும்.

பி.ஜே.பி. க்கு எதிரான இதர கட்சிகளை கொண்ட அணியை பொறுத்தவரை, அகநிலை விருப்பம் மட்டும் அதை சாத்தியப்படுத்த விடாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இம்முழக்கத்தை எப்போதும் வைக்கவில்லை. ஏனெனில் அது சாத்தியமில்லை என்பதை அனுபவம் காட்டியுள்ளது. உதாரணமாக, நவதாராளமயத்தை ஆதரிக்கும் கட்சிகளை கொண்ட ஒரு நிரந்தரமான அனைத்துக் கட்சி அணியை நாம் உருவாக்க முடியுமா? நம் அடிப்படை வர்க்கத்தினரின் உரிமைக்காக நாம் போராட வேண்டியுள்ளது. தற்போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி  மட்டுமே தேசிய அளவில் உள்ளது. ஆனபோதும் அதனால் தன்னை விரிவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஐ பொருத்தவரை நாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அங்கத்தினர் அல்ல. பி.ஜே.பி க்கு எதிரான பொதுவான விஷயங்களில்  அதனுடன் ஒத்துழைத்துள்ளோம். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் பெரிய அளவில் பலவீனம் அடைந்துள்ளது. அதன் பல தலைவர்கள் பிஜேபி யுடன் இணைந்துள்ளனர். மற்ற கட்சிகளை அணி சேர்க்கும் நிலையிலும் காங்கிரஸ் இல்லை. பல மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு கடும் இழப்பை ஏற்படுத்தியே தங்களை நிலைப் படுத்தியுள்ளனர். தமிழ்நாடு மற்றும் பீஹார் மாநிலங்களில் பிராந்திய கட்சிகளான திமுக மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள் ஆகிய கட்சிகளுடன் உள்ள சிறிய கட்சியாகவே தன்னை ஆக்கிக்கொண்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் கூட்டப்பட்ட கூட்டங்களில் அதற்கு வெளியே உள்ள தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் ஆம் அத்மி கட்சி ஆகியவை அழைக்கப்படவும் இல்லை; அவற்றிற்கும் இதில் பங்கேற்கும் விருப்பமும் இல்லை. மேலும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் அவை நவதாராளமயத்தையே அமலாக்குகிறது. இது பிஜேபி க்கு எதிரான கொள்கை ரீதியான மாற்றை உருவாக்குவதை பலவீனப்படுத்துகிறது. மேலும் பிஜேபி முன்னிலைப்படுத்தும் மதவாதத்தை எதிர்த்து போராடவும் அது முன்வருவதில்லை. பல நேரங்களில் அதன் மீது மிதமான அல்லது சமரச போக்கையே கையாள்கிறது.

பிரச்சனைகளின் அடிப்படையில் இந்த அனைத்து கட்சிகளுடனும் நாம் ஒரு ஒற்றுமையை கட்டியமைக்க தொடர்ந்து முயற்சித்துள்ளோம். உதாரணமாக, கூட்டாட்சிக்கு எதிரான மோடி அரசின் நிலைப்பாட்டை எதிர்த்த போராட்டத்தில், ஆளும் மாநில கட்சிகளிடையே ஒரு இணக்கதை ஏற்படுத்துவது சாத்தியப்பட்டது. கேரள இடது ஜனநாயக அணி இதில் தீவிரமான பங்காற்றியது. அதேபோல் விவசாய இயக்கங்கள் அழைப்பு விடுத்த தேசிய அளவிலான பந்திற்கு ஆதரவாக கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. பி.ஜே.பி யின் விவசாய விரோத கொள்கைகளுக்கு எதிராக தன்னிச்சையாக கள அளவில் இணக்கம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தின் ஜனநாயக முறையை தகர்த்து அரசு நிறைவேற்ற முனைந்த சட்டங்களை எதிர்த்த போராட்டத்தில் நாடாளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சிகளிடையே ஒரு இணக்கம் ஏற்பட்டது. இவை எல்லாம் ஒரு சாதகமான வளர்ச்சி போக்குகள் மட்டுமே. இவற்றை அனைத்து கட்சிகளின் அரசியல் கூட்டணி என்பதோடு இணைத்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது.

வலுவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இடது அணி மட்டுமே பி.ஜே.பி க்கு எதிரான விரிவான அணிதிரட்டலை சாத்தியமாக்கும் என்பதை அனுபவங்கள் எடுத்துக்காட்டுகிறது. விரிவான ஒற்றுமையை கட்டியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தன்னை வலுவாக கட்டியமைக்க வேண்டும். தற்போதைய நிலையில் அரசியல் ரீதியான தலையீடுகளை மேற்கொள்ளும் பலம் நமது கட்சிக்கு வெகுவாக சரிந்துள்ளது. எனவே, வர்க்க , வெகுஜன இயக்கங்களை கட்டி எழுப்புவதன் மூலம் வலுவான வெகுஜன கட்சியை கட்டியமைக்கும் பணியே அடிப்படையில் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வலது திருப்பம் நிலவும் இன்றைய சூழலில் நாம் எவ்வாறு இடது ஜனநாயக அணியை சாத்தியப்படுத்த போகிறோம்?

இடது ஜனநாயக முன்னணி பற்றி சிலரிடம் ஒரு தவறான புரிதல் உள்ளது. அது ஒரு பிரச்சார முழக்கம் என்று கருதுகின்றனர்; இடது ஜனநாயக முன்னணி தற்போது போராடி, கட்டவேண்டிய ஒரு அணி என்று அவர்கள் பார்ப்பதில்லை. இது கட்சியின் புரிதலுக்கு மாறானது.

இடது ஜனநாயக முன்னணி என்பது அரசியல் கட்சிகள் மட்டும் என்கிற எல்லைக்கு உட்பட்டது அல்ல; மாறாக, முற்போக்கு சமூக சக்திகள், இயக்கங்கள், அறிவு ஜீவிகள்,தொழில்துறையின் தொழில்நுட்பத்திறன் கொண்டோர்(professionals) ஆகியோரை திரட்டுவதற்கான ஒரு மேடை.அந்த மேடை ஒரு மாற்று திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவின் எதிர்காலம் பற்றிய எதிர்காலப் பார்வை கொண்டது.

இது மிக முக்கியமான உடனடி கடமை.இது நேர்மறையான திட்டங்கள் அடிப்படையில் விரிவான மக்கள் திரளை அணி சேர்க்கும் கடமையாகும். இது வெறும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி க்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. அந்தப் போராட்டம் மாற்று எதிர்காலப் பார்வை (vision )யுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படவேண்டும். சங் பரிவார் சக்திகளின் கீழ் வலதுசாரிகள் அணிதிரட்டப்படுவதை முறியடிக்க, மாற்றுத் திட்டத்தின் அடிப்படையில், சமூக மற்றும் அரசியல் சக்திகளை திரட்டிட வேண்டும். அத்தகைய சக்திகள், குழுக்கள்,கட்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தந்த மாநில அளவிலான நிலைமைகளை சரியாக ஆய்வு செய்து, அவர்களை கண்டறிந்து, இடது ஜனநாயக அணி நிறுவிட பணியாற்ற வேண்டும்.

தமிழில் – ச.லெனின்

சீனாவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் – சில கேள்விகளும் பதில்களும்

பிரகாஷ் காரத்

கேள்வி: தொடர்ச்சியான பல நடவடிக்கைகளின் மூலம் சீனாவை இலக்கு வைத்து அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்த ட்ரம்ப் நிர்வாகம் நீடித்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலகின் அமைதி, ஸ்திரத் தன்மை ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆக்ரோஷமானதொரு சக்தி என சீனாவை சித்தரிக்கும் வகையில் சர்வதேச அளவிலான பிரச்சாரத்தையும் அமெரிக்கா நடத்தி வருகிறது. ஏன் இவ்வாறு நடக்கிறது? தனக்கு விரோதமான இத்தகைய பிரச்சாரத்தை சீனா எவ்வாறு காண்கிறது?

சீனாவிற்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகம் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒரு பின்னணி உள்ளது. சீனாவின் வலிமை அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், அதைக் கட்டுப்படுத்தி வைக்கும் வகையிலும் திட்டங்களை உருவாக்கி தனது முக்கிய எதிரி சீனாதான் என்று அமெரிக்கா 20 ஆண்டுகளுக்கு முன்னால் இலக்கு நிர்ணயித்தது. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் அமெரிக்க ராணுவப் படைகளை களமிறக்குவதற்கான திட்டங்களை தீட்டியதோடு, ஆசிய-பசிஃபிக் பகுதிக்கான போர்த்தந்திரம் ஒன்றையும் இறுதிப்படுத்தியது.

‘ஆசியப் பகுதிக்கே முன்னிலை’ என்ற கொள்கையை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகம்தான் அறிவித்தது. அதன்படி அமெரிக்காவின் கடற்படையில் 60 சதவீத படைகள் ஆசிய-பசிஃபிக் பகுதிக்கு நிலைமாற்றப் பட்டன.

எனினும் அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் சீனா பொருளாதார ரீதியாக வலிமையடைந்ததோடு, அதன் உலகளாவிய அணுகல் திறனும் பெருமளவிற்கு அதிகரித்தது.

ட்ரம்ப் அமெரிக்க அதிபரான உடனேயே, அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் சீன நாட்டுப் பொருட்கள் அனைத்தின் மீதான சுங்க வரியை  அதிகரித்ததோடு சீனாவுடன் ஒரு வர்த்தக யுத்தத்தையும் தொடங்கினார். கூடவே அமெரிக்காவில் தயாராகும் நுண்ணிய சிப்கள் மற்றும் இதர கருவிகள் ஹுவேயி போன்ற சீன நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கிடைக்காதவாறு செய்யவும் அவர் முயன்றார். இந்தப் பெருந்தொற்றுக் காலத்திலும் கூட கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனா தான் காரணம் என அமெரிக்கா சீனாவின் மீதான தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது. கூடவே சீன நாட்டு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் ஆகியவர்களுக்கு எதிராகவும் பல்வேறு தடை உத்தரவுகளையும் அது விதித்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி உலகை மேலாதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது என்ற பூச்சாண்டியைக் காட்டி ஹுவேயி நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டுமென தனது கூட்டாளிகளை சம்மதிக்க வைக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.

வலுவானதொரு பொருளாதார சக்தியாக சீனா உருவாகி வருவதாலேயே இவை அனைத்தும் நடைபெறுகின்றன. அமெரிக்காவிற்கு அடுத்து உலகத்தில் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக இன்று சீனா மாறியுள்ளது. அடுத்த பத்தாண்டு காலத்தில் அமெரிக்க பொருளாதாரத்தையும் விஞ்சிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மனிதர்களைப் போலவே செயல்படும் திறன் வாய்ந்த இயந்திரங்களை உருவாக்கும் தொழில்நுட்பமான ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அதி நவீன தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முன்னேற்றத்தைக் கண்டு வரும் தொழில்நுட்ப வலுமிக்க ஒரு சக்தியாகவும் சீனா மாறிக் கொண்டு வருகிறது. உயர்தொழில்நுட்பத் துறையில் இதுவரையில் ஏகபோகத்தை அனுபவித்து வந்த அமெரிக்காவிற்கு இந்த அம்சமே மிகவும் அச்சமூட்டும் விஷயமாக உள்ளது. கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதிலும் பரவத் தொடங்கிய பிறகு, இந்தப் பெருந்தொற்றினை வெற்றிகரமாக சமாளித்து, மிக விரைவாக பொருளாதாரத்தையும் மீட்கும் நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளது. அதே நேரம் தனது நாட்டுப் பொருளாதாரத்திற்கு மிகப் பிரம்மாண்டமான வகையில் சேதத்தை ஏற்படுத்தியுள்ள பெருந்தொற்றினை சமாளிப்பதில் அமெரிக்கா தவறியுள்ள நிலையில் ட்ரம்ப்பிற்கு பயமேற்பட்டுள்ளது. அவரது இந்தப் பயம்தான் சீனாவின் மீதான கண்டனங்களும் தாக்குதல்களும் மீண்டும் ஒரு முறை அரங்கேற வழிவகுத்துள்ளது.

இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளில் எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்று இந்தப் பெருந்தொற்று வெடித்தெழுவதற்கு முன்பாகவும் கூட சீனா அரசு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. பொருளாதாரத் துறையில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கு உருவாகும் எந்தவொரு மோதலும் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் மீது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அது தொடர்ந்து கூறி வந்துள்ளது. அதன் கண்ணோட்டத்தின்படி அமெரிக்கா ஒரு மேலாதிக்க சக்தியாக நடந்து கொள்கிறது என்பதே ஆகும். ஐரோப்பாவில் உள்ள பெரும் நாடுகளான ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஆசியாவில் உள்ள ஜப்பான் போன்ற நாடுகளுடன் வழக்கமான பொருளாதார உறவுகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அமைதியான வகையில் நிகழ்ந்து வரும் தனது முன்னேற்றம் வேறு எந்தவொரு நாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருக்காது என்றும் சீனா தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறது. தனது நாட்டை மட்டுமே பாதுகாத்துக் கொள்ளக் கூடிய பாதையை மேலும் மேலும் அதிகமான அளவில் ட்ரம்ப் பின்பற்றி வரும் அதே நேரத்தில் வெளிப்படையான வர்த்தகம் என்பது உலகிலுள்ள அனைத்து நாடுகளின் வளத்திற்கான வழியாக, அனைத்து நாடுகளுக்கும் உரியதாக இருக்கிறது என உலகமயமாக்கலை சீனா உயர்த்திப் பிடிக்கிறது.

தற்போது நிலவி வரும் மையமான முரண்பாடு என்பது ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலானது என நமது கட்சி எப்போதுமே கூறி வந்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக சீனா உருப்பெற்றுள்ள நிலையில் சோஷலிச சக்திகளின் வலிமையை எவ்வாறு நீங்கள் மதிப்பீடு செய்கிறீர்கள்? தற்போதைய உலகளாவிய சக்திகளின் பலாபலனில் சீனாவின் செல்வாக்கு எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடும் எனக் கருதுகிறீர்கள்?

ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டினை மையமானதொரு முரண்பாடாகவே நமது கட்சி கருதுகிறது. சோவியத் யூனியன் சிதறுண்டு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நிலவிய ஆட்சிகள் வலுவிழந்து உலக அளவில் சோஷலிச சக்திகளை பலவீனப்படுத்திய போதிலும்கூட, குறிப்பிட்ட சில நாடுகளில் தற்போது நீடித்து வரும் சோஷலிசமானது பொருளாயத அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு முரணான ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற உண்மை தொடர்ந்து நீடிக்கிறது. அனைத்து வகையிலும் வலுவானதொரு நாடாக சீனா தன்னை வளர்த்துக் கொண்டு, உலகத்தில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக அது மாறியுள்ள சூழ்நிலையே மிகவலுவான ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவிற்கு சவாலான ஒன்றாக மாறியுள்ளது. இத்தகையதொரு சூழலில் இருந்துதான் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார, போர்த்தந்திர ரீதியான அதிகாரம் நீண்ட காலமாகவே சரிந்து வரும் அதே நேரத்தில் சீனா தனது வலிமையையும் செல்வாக்கையும் தொடர்ந்து உறுதியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது என்ற பின்னணியில்தான் அமெரிக்க – சீன மோதல் என்பது நடைபெறுகிறது. உலகத்திலுள்ள 60க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களை இணைத்துக் கொண்டுள்ள பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேடிவ் (பிஆர்ஐ – பண்டைக் காலத்தில் சீனாவின் பட்டு வர்த்தகர்கள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் பயணித்த பாதையை மீண்டும் உருவாக்கும் நோக்கத்துடன் ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நாடுகளின் வழியாக புதிய நெடுஞ்சாலைகள், கடல் வழிகள் ஆகியவற்றின் மூலம் இந்த நாடுகளின் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது; அதன் மூலம் சீனாவின் வர்த்தக உறவை மேம்படுத்துவது என்ற நோக்கத்துடன் அந்த நாடுகளின் ஒப்புதலுடன் சீனா மேற்கொண்டுள்ள (கடல்வழி) பாதை மற்றும் (நெடுஞ்) சாலை திட்டம் – மொ-ர்) சீனாவின் பூகோள ரீதியான, அரசியல் ரீதியான வீச்சு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதற்கான வலுவான வெளிப்படாக அமைகிறது.

பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்க-சீன நாடுகளுக்கு இடையிலான இந்த மோதல் என்பது சர்வதேச அரசியலின் தீர்மானகரமான, முக்கியமான ஓர் அம்சமாக இருக்கும். புதியதொரு பனிப்போர் உருவாகி வருகிறது என்ற பேச்சு வெளிப்படத் தொடங்கியுள்ள போதிலும் கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய மோதலைப் போன்றதாக இதைச் சித்தரிப்பது பொருத்தமானதாக இருக்காது. அந்த நேரத்தில் ஏகாதிபத்திய முகாம் என்பது பல நாடுகளை உள்ளடக்கிய அமெரிக்காவின் தலைமையிலான ஒரு குழு என்பதாக இருந்தது. மறுபுறத்தில் சோவியத் யூனியன் தலைமையில் சோஷலிச முகாமைச் சேர்ந்த நாடுகள் இருந்தன. அதே போன்று அப்போது சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கணிசமான பொருளாதார உறவுகள் என்று எதுவும் நிலவவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால் இன்றைய நிலைமை என்பது முற்றிலும் மாறானதாகும். அமெரிக்காவுடன் மட்டுமின்றி அதன் நேட்டோ கூட்டாளி நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் கூட சீனா விரிவான பொருளாதார உறவுகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளியாகவும் சீனா விளங்குகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களும் சீனாவில் மிகப்பெரும் முதலீடுகளை செய்துள்ளன.

அதேபோன்று அமெரிக்காவின் தலைமையில் அல்லது சீனாவின் தலைமையில் நாடுகளின் குழுக்கள் என்பதும் இப்போது இல்லை. சீனாவிடமிருந்து ‘விலகிக் கொள்வது’ பற்றி அமெரிக்கா பேசி வந்தாலும் கூட, அமெரிக்காவினாலோ அல்லது அதன் கூட்டாளி நாடுகளாலோ அவ்வாறு செய்வது எளிதான ஒன்றல்ல. அமெரிக்க-சீன மோதல் அதிகரித்து வரும் பின்னணியில் சீனாவுடனான பொருளாதார உறவுகள் தொடர்ந்து நீடிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே வெளிப்படையாகவே தெரிவித்து விட்டது. ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளைப் பொறுத்தவரையில், இந்தப் பிராந்திய குழுவைச் சேர்ந்த நாடுகளின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளியாக சீனா தொடர்ந்து இருந்து வருகிறது.

இத்தகையதொரு சூழ்நிலையில் சீனாவை கட்டுப்படுத்தி வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் அமெரிக்காவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள வலதுசாரி சக்திகள் விரும்பிய வகையில் உருவாக இயலாது.  ‘இந்திய-பசிஃபிக்’ பகுதி என்று அழைக்கப்படும் இந்திய பெருங்கடலையும் உள்ளிட்ட பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் போர்த்தந்திர ரீதியான, ராணுவ ரீதியான முஸ்தீபுகள் இந்தப் பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கவே வழிவகுக்கும்.

எனவே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் மோதலை ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் பின்னணியில்தான் காண வேண்டும். சோவியத் யூனியன் சிதறுண்டு போனதற்குப் பிறகு வர்க்க சக்திகளின் பலாபலன் என்பது ஏகாதிபத்தியத்திற்கு சாதகமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தே வருகிறது. எனினும் சோஷலிச சீனாவின் அதிகரித்துக் கொண்டே வரும் வலிமையானது எதிர்காலத்தில் வெளிப்படவிருக்கும் முரண்பாட்டின் மீது தாக்கம் செலுத்தவும் செய்யும்.

ஏகாதிபத்திய தாக்குதலுக்கு பதிலடி தருகையில் ஒரு சில தருணங்களில் சீனா சமரசம் செய்து கொள்வதைப் போலத் தோன்றுகிறது. சமாதானபூர்வமான சகவாழ்வு குறித்தும் கூட சீன கம்யூனிஸ்ட் கட்சி பேசுகிறது. 1960களில் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட சமாதானபூர்வமான சகவாழ்வு குறித்த திருத்தல்வாத கருத்துக்களை எடுத்துக் கூறி வந்ததையும்  நாம் பார்த்தோம். இப்போது சீனாவும் கூட அதே பாதையில்தான் செல்கிறது என்று இதை எடுத்துக் கொள்ள முடியுமா?

இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையேயான சமாதானபூர்வமான சகவாழ்வு என்பது போன்ற கருத்தோட்டங்களை பற்றிப் பேசும்போது அதன் வரலாற்றுப் பின்னணியையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையே, அதாவது முதலாளித்துவம் மற்றும் சோஷலிசம் ஆகிய இரண்டு வேறுபட்ட சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டம் என்பது அடிப்படையில் தவறானதொரு கருத்தோட்டம் அல்ல. சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி இந்த சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டத்தை உருவாக்கிய வழியைத்தான் நாம் விமர்சித்தோம். இந்த இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதான பூர்வமான போட்டி, சமாதானபூர்வமான வகையில் சோஷலிசத்திற்கு மாறிச் செல்வது  ஆகியவற்றோடு இணைந்த வகையில்தான் இந்த சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டத்தை அது முன்வைத்தது. இந்த மூன்று கருத்தோட்டங்களைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்தது.

சோஷலிசம் என்பது வலுவானதொரு சக்தியாக இருக்கும் காலத்தில் சமாதானபூர்வமான சகவாழ்வு மற்றும் சமாதானபூர்வமான போட்டி ஆகியவற்றின் மூலம் சோஷலிசத்தின் மேன்மை நிரூபிக்கப்பட்டு விடும்; அதன் மூலம் சமாதானபூர்வமான சோஷலிசத்திற்கு மாறிச் செல்வதற்கான வழி திறக்கும் என்ற மாயையை அது பரப்பி விடுகிறது. இத்தகைய கருத்தோட்டமானது ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்து விடுகிறது. அதன் விளைவாக முதலாளித்துவ நாடுகளில் நடைபெற்று வரும் வர்க்கப் போராட்டங்களை அது புறக்கணித்து விடுகிறது. ஏகாதிபத்தியமும், முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களும் எந்தவொரு காலத்திலும் சோஷலிசத்தோடு இணக்கமாக இருந்து விட முடியாது என்பதை அங்கீகரிக்கவும் இக்கருத்தோட்டம் தவறுகிறது. எனவேதான் இத்தகைய கருத்தோட்டங்களை நாம் திருத்தல் வாதம் என்று அடையாளப்படுத்தி விமர்சித்தோம்.

இன்றைய நிலைமை என்ன? நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு வர்க்க சக்திகளின் பலாபலன் ஏகாதிபத்தியத்திற்கு சாதகமானதாக மாறியுள்ளது. மீதமுள்ள சோஷலிச நாடுகளும் கூட சர்வதேச நிதி மூலதனத்தின் உலகளாவிய மேலாதிக்க சூழலையும், முந்தைய சோஷலிச நாடுகளுக்குள் மூலதனத்தின் அதிகாரத்தை மேலும் முன்னேற்றி, தனது உலகளாவிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தத் தீவிரமாகப் பாடுபட்டு வரும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்கொள்ள வேண்டிய தற்காப்பு நிலையில்தான் இருந்து வருகின்றன.

இத்தகையதொரு சூழ்நிலையில், இரு வேறுபட்ட சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதானபூர்வமான சகவாழ்வின் முக்கியத்துவத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவது சரியான ஒன்றே ஆகும். ஏகாதிபத்தியத்துடன் ஒரு மோதலில் ஈடுபடுவதற்குப் பதிலாக, தனது உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பதன் மூலம் தனது பொருளாதாரத்தை மேலும் வளர்ப்பது;, மக்களின் வாழ்க்கைத் தரங்களை மேலும் உயர்த்துவது ஆகியவற்றில்தான் அது கவனம் செலுத்தி வருகிறது. அதன் ராணுவ, பாதுகாப்பு வலிமை உள்ளிட்டு அனைத்து வகையிலும் சீனாவை வளர்த்தெடுப்பதற்கான அமைதியானதொரு சூழலும் அதற்குத் தேவைப்படுகிறது. சோஷலிசத்தின் தொடக்க நிலையில்தான் சீனா உள்ளது என்றே சீன கம்யூனிஸ்ட் கட்சி வகைப்படுத்தியுள்ளது. ஐம்பது ஆண்டுக் காலத்திற்குள் அதனை ஓரளவிற்கு நல்ல வளமானதொரு நாடாக வளர்த்தெடுப்பது என்பதையே அது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அது தற்போது கிட்டத்தட்ட எட்டியுள்ளது. முக்கியமான முதலாளித்துவ நாடுகள் மற்றும் நிதி மூலதனத்துடன் விரிவான உறவுகளை அது ஏற்படுத்திக் கொண்டதன் விளைவாகவே இது சாத்தியமானது. இந்தச் செயல்பாட்டின் ஊடேயே, சந்தைப் பொருளாதாரத்தை அது வளர்த்தெடுத்துள்ளதோடு, தனியார் மூலதனம் வளரவும் அனுமதித்துள்ளது. ஏகாதிபத்திய மூலதனம் மேலாதிக்கம் செய்து வரும் ஓர் உலகத்தில் உற்பத்தி சக்திகள், தொழில்நுட்ப செயல் அறிவு ஆகியவற்றை வளர்த்தெடுக்க இத்தகைய செயல்முறை தேவைப்படுகிறது என்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

தனித்துவமான சீன அடையாளங்களோடு கூடிய சோஷலிசத்தை கட்டுவது குறித்த மதிப்பீட்டை நாம் மேற்கொள்ளும்போது சீனா தொடர்ந்து முன்னேறி வருவதையும், மிகப்பெரும் பொருளாதார சக்தியாக மாறியுள்ளது என்பதையும், வறுமையை அகற்றுவதில் மிகப்பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியதும் அவசியமாகும். ஏகாதிபத்தியத்துடனான சமரசப் போக்கின் விளைவாகவே இந்த வெற்றி கிடைத்தது என இவற்றை எளிதாகப் புறந்தள்ளி விடக் கூடாது.

எனினும், சமாதானபூர்வமான சகவாழ்வின் அவசியத்தைப் புரிந்து கொள்ளும் அதே வேளையில், உலகின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு சோஷலிச அமைப்பும் வளர்ந்தோங்கி வருவதை ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகியவற்றால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதையும் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, ஏகாதிபத்தியத்தின் சதித்திட்டங்கள், சீர்குலைவு முயற்சிகள் ஆகியவற்றுக்கு எதிரான கண்காணிப்பு எப்போதும் இருந்து வருவது அவசியமாகும்.  ‘ஏகாதிபத்தியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை சீன கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு முன்பு கைவிட்டிருந்தது. நமது கட்சியின் 20வது கட்சிக் காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்த தீர்மானத்தில் இத்தகைய போக்கு ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடவும், ஒரு சர்வதேச கண்ணோட்டத்தை கைவிடுவதற்கும் வழிவகுக்கும் என்று நாம் எச்சரிக்கை செய்திருந்தோம்.

இறுதியாக, முன்னேற்றம் அடைந்ததொரு சோஷலிச நாடாக சீனா தன்னை எப்படி வளர்த்துக் கொள்கிறது என்பதையே உலக அளவில் சோஷலிசத்தின் எதிர்காலம் பெருமளவிற்குச் சார்ந்துள்ளது. அவ்வகையில் அவர்களது இத்தகைய முயற்சிகளுக்கான நமது ஒற்றுமையுணர்வையும், ஆதரவையும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சீன மக்களுக்கும் நாம்  தெரிவித்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

தமிழில்: வீ. பா. கணேசன்

பதினைந்தாம் நிதி ஆணையம் பற்றிய சர்ச்சை ஏன் எழுந்துள்ளது?

வளர்ச்சி சார்ந்த அதிகமான பொறுப்புகள் மாநிலங்களுக்கு இருப்பதையும், அதற்கான வளங்களை திரட்டுவதில் மாநிலங்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறைவு என்பதையும், கணக்கில் கொண்டு, மொத்தமாக மத்திய அரசு கையில் வந்து சேரும் வரி வருமானத்தில் ஒரு பகுதியை மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சாசனம் பணித்துள்ளது.

இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று, மத்திய அரசுக்கு வந்து சேருகின்ற மொத்த வரிப்பணத்தை ஒருபுறம் மத்திய அரசுக்கும், மறுபுறம் அனைத்து மாநில அரசுகளுக்கும் பகிர்வு செய்யும் பணி உள்ளது. அடுத்ததாக, மாநிலங்களுக்கு என்று இவ்வாறு தரப்படும் வரி வருமானத்தை கோட்பாடுகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கும் பணியும் உள்ளது. இவ்விரு பணிகளையும் மேற்கொண்டு பரிந்துரைகளை உருவாக்கி மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கும் அமைப்பாக நிதி ஆணையம் என்ற சட்டபூர்வமான ஏற்பாட்டையும் அரசியல் சாசனம் தந்துள்ளது. இந்த நிதி ஆணையம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படும். அதன் பணி முடிந்தவுடன் அது கலைக்கப்பட்டுவிடும். மீண்டும் ஐந்தாண்டுகள் முடியும் தருணத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான பரிந்துரைகளை உருவாக்க புதிதாக நிதி ஆணையம் அமைக்கப்படும்.

நாடு விடுதலை பெற்றதிலிருந்து இதுவரை இவ்வாறு பதினான்கு நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டு அந்தந்த காலத்திற்கான பரிந்துரைகளை அளித்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு பதினைந்தாவது நிதி ஆணையம் இந்திய குடியரசு தலைவரால் அமைக்கப்பட்டுள்ளது. இது நிறைவேற்ற வேண்டிய பணிபட்டியல் (Terms of Reference) குடியரசு தலைவரின் ஆணையில் தரப்பட்டுள்ளது. இந்த பணிபட்டியல் பல மாநில அரசுகளால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது.

அண்மையில் கேரளா, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப், தில்லி ஆகிய மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் புதுவை மாநிலத்தின் முதல்வரும் கூட்டாக சென்று குடியரசு தலைவரை சந்தித்து பதினைந்தாவது நிதி ஆணையத்தின் பணிபட்டியலில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள் குறித்து ஒரு மகஜரை சமர்ப்பித்துள்ளனர். ஆகவே, எழுந்துள்ள பிரச்சினை நிதி ஆணையத்தின் பணிபட்டியல் தொடர்பானதாகும்.

பணிபட்டியலுக்கு எதிர்ப்பு ஏன்?

துவக்கத்தில் அமைக்கப்பட்ட நிதி ஆணையங்கள் அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள, மேலே நாம் குறிப்பிட்ட, இரண்டு பணிகளை மாத்திரம் செய்யுமாறு பணிக்கப்பட்டன. ஆனால் நமது நாட்டில் தாராளமய கொள்கைகளின் தீவிர அமலாக்கம் 199௦களில் துவங்கியபின், 11 ஆவது நிதி ஆணையத்தில் துவங்கி, மாநில அரசுகளின் வரவு – செலவு பற்றாக்குறை தொடர்பான நெறிமுறைகளையும், அவற்றின் அமலாக்கத்தையும் நிதி ஆணையத்தின் பணிபட்டியலில் மத்திய அரசு இணைத்து வருகிறது. படிப்படியாக, அடுத்தடுத்து அமைக்கப்பட்ட நிதி ஆணையங்களுக்கு அளிக்கப்பட்ட பணிபட்டியல்கள், மாநிலங்களின் அதிகாரங்களில் தலையிடும் வகையிலும், மத்திய அரசின் நிலைபாடுகளை மாநில அரசுகளின் மீது திணிக்கும் வகையிலும் அமைந்து வருகின்றன.

பதினைந்தாவது நிதி ஆணையத்திற்கு தரப்பட்டுள்ள பணிபட்டியல் இந்த பாதையில் மேலும் தீவிரமாக பயணித்துள்ளது. எனவேதான் பணிபட்டியல் விவரங்கள் வெளிவந்த பின்பு  கேரள அரசு ஏப்ரல் 1௦ அன்று திருவனந்தபுரத்தில் பல மாநில அரசுகளுக்கு அழைப்பு விடுத்து ஒருநாள் ஆலோசனை கூட்டம் நடத்திட முன்கை எடுத்தது. இதனை தொடர்ந்து மே மாதம் 7 ஆம் தேதி விஜயவாடாவில் ஆந்திர பிரதேச அரசின் அழைப்பின் பேரில் இரண்டாவது கூட்டம் நடைபெற்று ஆணையத்தின் பணிபட்டியலில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள் குறித்து மேலும் விவாதிக்கப்பட்டு, ஒரு மகஜர் தயாரிக்கப்பட்டு பின்னர்  குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பணிபட்டியலின் மீதான முக்கிய விமர்சனங்கள்

ஊடகங்களில் பரபரப்பாகவும் அதிகமாகவும் பேசப்படுவது, நிதி ஆணையம் 2௦11 ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தனது பணிகளை செய்ய வேண்டும் என்ற அம்சம்தான். இது மக்கள் தொகையை நெறிப்படுத்துவதில் வெற்றிகண்டுள்ள கேரளா, தமிழகம், கர்நாடகா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு இடையேயான வரிவருமானப் பகிர்வில் பெரும் இழப்பை ஏற்படுத்தும். எனவே இம்மாநிலங்கள் இதனை எதிர்க்கின்றனர் என்ற கருத்து வலுவாக ஊடகங்களில் வந்துள்ளது. இதில் இம்மாநிலங்கள் பக்கம் நியாயம் உள்ளது, இந்தப் பிரச்சினை கணக்கில் கொள்ளப்படவேண்டும். ஏற்கெனவே, பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் விஷயத்தில் 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைதான் ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது என்பதும், இதற்கென பாராளுமன்றத்தில் சட்டமே நிறைவேற்றப்பட்டது என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

ஆனால் பணிபட்டியலில் உள்ள வேறு பல அம்சங்கள் மாநில உரிமைகளுக்கே வேட்டு வைக்கின்றன என்பதுதான் முக்கியமான பிரச்சினை. குறிப்பாக, மத்திய அரசுக்கும் மொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் வரிவருமான பகிர்வு என்பது முக்கிய பிரச்சினை. அனைத்து மாநிலங்களும் இதில் ஓரணியில் நிற்க வேண்டியுள்ளது. அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி, மாநிலங்களின் கூடுதல் பொறுப்புகளையும், குறைவான நிதி ஆதாரங்களையும் கணக்கில் கொண்டு, மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையை சந்திக்க மத்திய அரசு மானியங்கள் தரவேண்டும் (REVENUE DEFICIT GRANTS).

இப்பொழுது தரப்பட்டுள்ள பணிபட்டியல் இந்த மானியங்கள் அவசியம்தானா? என்று பரிசீலிக்குமாறு நிதிஆணையத்தை  பணிக்கிறது. இது அரசியல் சாசனம் தந்துள்ள ஏற்பாட்டையே கேள்விக்கு உள்ளாக்குவதாகும். இதனை அனைத்து மாநிலங்களுமே எதிர்த்தாக வேண்டும். அதேபோல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தும் மக்கள் நல திட்டங்களை, அவை அவசியமா இல்லையா என்று மதிப்பீடு செய்யவும் ஆணையம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத அம்சமாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் செயல்படுவதுதான் ஜனநாயகமாகும். மாநில அரசு அறிமுகப்படுத்தும் அல்லது தொடர்ந்து அமல்படுத்தும் மக்கள் நல திட்டங்களை மதிப்பீடு செய்யவும், நிராகரிக்கவும் நிதி ஆணையத்திற்கு வாய்ப்பு அளிப்பது என்பது மாநில மக்களின்  ஜனநாயக உரிமைகளில் கைவைப்பதே ஆகும்.

அதிகாரங்களை மையப்படுத்தும் பணிபட்டியல்

பதினைந்தாம் நிதி ஆணையத்திற்கு தரப்பட்டுள்ள பணிபட்டியல் இன்னும் பல வகைகளில் அதிகாரங்களை மத்திய அரசிடம் குவிக்கும் வகையிலும், மாநில உரிமைகளை புறந்தள்ளும் வகையிலும் அமைந்துள்ளது. தாராளமய கொள்கைகளின் பகுதியாக மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறை, ஃபிஸ்கல் (FISCAL) பற்றாக்குறை ஆகியவற்றின் வரம்புகளை சட்டரீதியாக சுருக்கிட  மாநிலங்கள் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு மாநிலங்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியதில் கடந்தகால நிதி ஆணையங்களுக்கும் பங்கு உண்டு.

இப்பொழுது இந்த வரம்புகளை மேலும் குறுக்கும் முயற்சி பணிபட்டியல் வாயிலாக வந்துள்ளது. ஏற்கெனவே மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3%க்கு மிகாமல் ஃபிஸ்கல் பற்றாக்குறை இருக்கவேண்டும் என்று இருந்தது. இந்த 3% ஐ  1.7% ஆக குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள மத்திய அரசு குழுவின் தலைவரான (பா.ஜ.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறப்பினர்) என்.கே. சிங் என்பவர்தான் இப்போது பதினைந்தாவது நிதி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், இப்பரிந்துரையை ஆணையம் திணிக்குமானால் மாநிலங்களுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்படும். அரசியல் சாசனத்தின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் மாநிலங்களின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கு பதிலாக, அதற்கு நேர் மாறாக, மத்திய அரசின் நிதி வளங்களை வலுப்படுத்துவதையே, அதுவும் மாநிலங்களின் வருமானங்களில் கைவைத்து செய்வதையே, பணிபட்டியல் முன்வைக்கிறது.

மத்திய அரசு அவ்வப்பொழுது தான்தோன்றித்தனமாக மாநிலங்களைக் கலந்துகொள்ளாமல் அறிவிக்கும் புதிய திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவற்றை நிறைவேற்ற போதுமான நிதி மத்திய அரசுக்கு வந்துசேர வேண்டும் என்ற அடிப்படையில், வரிபகிர்வு பிரச்சினை அணுகப்படுவதற்கு பணிபட்டியல் வழிசெய்கிறது. மேலும் மாநில அரசுகள் மத்திய அரசின் திட்டங்களை எவ்வாறு அமலாக்கி வருகிறது என்பதை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் தக்க ஏற்பாடுகளை உருவாக்குமாறு பணிபட்டியல் மத்திய அரசால் ஒருதலைபட்சமாக நியமனம் செயப்படும் தற்காலிக அமைப்பான நிதி ஆணையத்தை பணிக்கிறது.  இது மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட மாநில அரசுகளின் இறையாண்மையை காவுகொடுக்கின்ற நடவடிக்கை என்பதோடு ஏற்க இயலாத ஒன்றும் ஆகும்.

அடிமையாக தமிழக அரசு?

15ஆம் நிதி ஆணையத்தின் பணிபட்டியல் இன்னும் சில ஜனநாயக விரோத அம்சங்களை, மாநில உரிமைகளுக்கு விரோதமான அம்சங்களை கொண்டுள்ளது. இன்னொரு சந்தர்ப்பத்தில் மத்திய மாநில உறவுகள் பற்றி விரிவாக விவாதிக்கலாம். ஆனால் தமிழக அரசு பதினைந்தாவது நிதி ஆணையம் மூலம் தொடுக்கப்பட்டுள்ள மாநில உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்த்து இணைந்தோ தனித்தோ குரல் கொடுக்கத்தயாராக இல்லை என்பதை மட்டும் இங்கே பதிவு செய்யவேண்டும்.

வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதமும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை …

ஜான் பெல்லாமி ஃபாஸ்டர்

[பிரிட்டனில் 1949 மே முதல் வெளியீட்டைத் துவக்கிய, மார்க்சீய சித்தாந்த மாதப் பத்திரிக்கையான புகழ் பெற்ற “மன்த்லி ரிவ்யூ” பத்திரிக்கையின் ஆசிரியராக தற்போது ஜான் பெல்லாமி ஃபாஸ்டர் இருந்து வருகிறார். இவர் ஓரிகன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றியறும் கூட. மார்க்சீயத்தின் அடிப்படையில் சூழலியல் பற்றிய ஆய்வுகளில் பெயர் பெற்றவராக விளங்கி வருகிறார். சூழலியல் பற்றிய கேள்விகளுக்கு மார்க்சீயத்தின், குறிப்பாக மார்க்சின் எழுத்துக்களின், அடிப்படையில் புதிய விளக்கங்கள் உருவாகி வருவதில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். பிரண்ட் லைன் இதழில் வெளியான அவரது   நேர்காணலின் ஒரு பகுதி இங்கே இடம்பெறுகிறது ]

வளர்சிதை மாற்றப் பிளவு பற்றிய மார்க்சின் கோட்பாடு எனும் அவரது புகழ் பெற்ற கட்டுரை, சமூகவியலுக்கான அமெரிக்க சஞ்சிகை ஒன்றில் பிரசுரமானது. இதில் வளர்சிதை மாற்றப் பிளவு எனும் கோட்பாட்டினை அவர் அறிமுகம் செய்துள்ளார். இவ்வார்த்தைக் கோர்வையே மார்க்ஸ் உருவாக்கியதுதான். முதலாளித்துவ அமைப்பின் கீழ் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவில் ஏற்படக்கூடிய, அழிவை ஏற்படுத்தக்கூடிய, மாற்றங்களை நோக்கிய செயல்முறைகளை, வெளிப்படுத்தும் வகையில் வளர்சிதை மாற்றப் பிளவு என்பதை அவர் கையாண்டார். தவிர உலகெங்கிலும் சூழலியல் பற்றிய அவரது புதிய விளக்கமானது சூழலியல் பற்றிய கேள்விகளை மார்க்சீயத்துடன் தத்துவார்த்த அடிப்படையில் இணைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்குகிறது.சூழலியல் பற்றிய the vulnerable planet a short history of environment எனும் ஃபாஸ்டரின் சமீபத்திய புத்தகம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இன்றைய தினம் சூழலியலில் உருவாகியுள்ள சிக்கல்கள் யாவும் முதலாளித்துவ பொருளாதார அமைப்புடன் நெருக்கமானதாக, அதன் ஒரு பகுதியாக, இருந்து வருவதை தனது ஆய்வில் மையப்படுத்தியதன் விளைவாக இந்த புத்தகம் சர்வதேச அளவில் பெரும் கவனிப்பை பெற்று வருகிறது. ஃபாஸ்டரைப் பொறுத்தமட்டில் உலகளாவிய சூழலியல் பேரபாயம் என்பது முழுமையாக வியாபித்து நிற்கும் நெருக்கடியாகும். இது முதலாளித்துவத்தின் விளைவால் உருவானது. இதன்பொருட்டு முதலாளித்துவ அமைப்பில் முழுமையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. சூழல் பாதுகாப்பு என்பது முதலாளித்துவத்துடன் இணக்கமாக இருக்கக் கூடியதல்ல என்று அவர் கூறுகிறார். இதன் பொருட்டு ஜெர்மன் கம்யூனிஸ்ட் புரட்சியாளர் ரோஸா லக்ஸம்பர்க்கை அவர் மேற்கோள் காட்டியுள்ளார். மனித குலத்தின் முன்னே தெரிவு செய்வதற்கு சோஷலிசம் அல்லது அதற்கு எதிரான மறுமுனை ஆகிய இரண்டு வழிமுறைகளே உள்ளது என்று ஃபாஸ்டர் எச்சரிக்கிறார்.

மனித குலத்திற்கும் இயற்கைக்குமான உறவு பற்றி பொருள்முதல்வாத விளக்கத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தனது திறனாய்வை அவர் ஆதாரமாககொள்கிறார். நீடித்த சோஷலிச மாற்றுக்கு இது தவிர்க்கவியலாது என்பதை அவர் வலியுறுத்துகிறார். முதலாளித்துவ உற்பத்தி முறையின் அம்சமான வளர்சிதை மாற்றப் பிளவு என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள நெருக்கத்தில் உருவாகக் கூடியது. இதை மனித சமூகத்திற்கு இணக்கமாய் ஒத்திசைவாய் மாற்றுவது என்பது முன் சொல்லப்பட்ட மாற்று சமூகத்தில்தான் சாத்தியமாகும் என்று ஃபாஸ்டர் கருதுகிறார்.

ஜிப்சன் ஜான் மற்றும் ஜிதேஷ் ஆகியோர் ஃபாஸ்டருடனான நேர்காணலில் சூழலியல் பற்றி பல்வேறு வினாக்களை எழுப்பியதும் அவர் அளித்த விளக்கமும் ப்ரண்ட் லைன் இதழில் வெளியாகின அவை இங்கே தரப்படுகின்றன.

1999-ல் வெளியிடப்பட்ட வளர்சிதை மாற்றப் பிளவு பற்றிய மார்க்சின் கோட்பாடு எனும் உங்களது புகழ் பெற்ற ஆய்வுரையில் மட்டுமின்றி 2000-ல் வெளியான மார்க்சீய சூழலியல் எனும் நூலிலும் அனைவரும் அறியத்தக்க வகையில் வளர்சிதை மாற்றப் பிளவு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். மார்க்சும் எங்கெல்சும் இயற்கை பற்றி என்னதான் செய்துள்ளனர்? அவர்களின் அன்றைய கருத்துக்கள் இன்றைக்கு பொருத்தமானதாக இருக்க முடியுமா?

வரலாறு பற்றிய பொருள்முதல்வாத கருத்துருவும், இயற்கை பற்றிய பொருள்முதல்வாத கருத்துருவும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளதை பொருள்முதல்வாதிகள் என்ற அடிப்படையில் மார்க்சும் எங்கெல்சும் கண்டறிந்தனர். மேலும் இயக்கவியல் அடிப்படையில் அவர்கள் கண்டறிந்து இரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

எபிகூரசின் இயற்கை பற்றிய பண்டைய பொருள்முதல்வாத தத்துவம் குறித்த மார்க்சின் ஆய்வு சிறப்பு வாய்ந்தது. சுhநnளைஉhந ஷ்நவைரபே எனும் ஜெர்மானிய இதழொன்றில் அவர் ஆசிரியர் பொறுப்பில் இருக்கையில் வெளியிடப்பட்ட அவரது முதல் கட்டுரை, பொருள் குவிப்பில் முக்கியத்துவம் வகிக்கும் வனத்திருட்டு பற்றியதாகும். அவரது பொருளாதார தத்துவக் குறிப்புகளில் இயற்கை மட்டுமின்றி, உழைப்பும் அந்நியமாவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. தவிர பாகோனின் விதி குறித்து ஆதாரமான விமர்சனத்தை க்ரண்டிரிஸ் அளிக்கிறது. அதாவது இயற்கையின் தனித்துவம் வாய்ந்த விதிகளை ஏற்பதன் மூலம் இயற்கையை வெல்ல முடியும் என்பதே பாகோனின் கருத்தாகும்.

“காரல் மார்க்சின் சூழலியல் சோஷியலிசம்” எனும் தனது புத்தகத்தில் கோஹைசைட்டோ மார்க்சின் பிந்திய கால வாழ்வில் சூழலியல் பிரச்னைகள் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்ததை வெளிப்படுத்தியுள்ளார். எங்கெல்சைப் பொறுத்த மட்டில் அவரது மகத்தான படைப்பான, முடிவு பெறாத “இயற்கையின் இயக்கவியல்” என்ற நூலில் எழுதியுள்ளார்.

சமூகத்திற்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பினை அறியும் வகையில் இயற்கையின் உலகளாவிய வளர்சிதை மாற்றம், சமூக அடிப்படையில் வளர்சிதை மாற்றம், வளர்சிதை மாற்றப் பிளவு ஆகிய கருத்துக்களை மார்க்ஸ் பயன்படுத்திக் கொண்டார். தவிர சூழலியலில் நவீன முறைகளையும் அவை இதே வகையில் மேம்படக்கூடும் என்பதையும் அவர் எதிர்பார்த்தார். இவ்வகையில் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் வளர்சிதை மாற்றத்தை நியாயமான விதத்தில் முறைப்படுத்துவது என சோஷலிசத்தை வரையறை செய்துள்ளதோடு, மனிதனுக்கு தேவைப்படக் கூடியவற்றை நிறைவு செய்யும் அதே நிலையில் சக்தியை பாதுகாப்பதாகவும் சோஷலிசம் அமையும் என்றும் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஒரு தனி நபருக்கும் புவி சொந்தமானதல்ல. அல்லது இக்கோளத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் சொந்தமானதல்ல. அவர்கள் எதிர்வரும் சந்ததியினருக்காக இதை பொறுப்புணர்வுடன் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இதை நலிவுறாதிருக்கச் செய்வதோடு இதை தங்களின் குடும்பச் சொத்தாக மேம்படுத்திடவும் வேண்டும்.
முதலாளித்துவத்திற்கும் சூழலியலுக்கும் இடையிலான தொடர்பினை புரிந்து கொள்ளும் வகையில் உறுதிமிக்க ஆதாரம் அதுவும் அறிவியல் ரீதியில் அளித்திருப்பதைப்போல் வேறு எந்த ஆய்வுரையும் அளிக்கவில்லை என்று என்னால் உறுதியாக வாதிட முடியும். ஆயினும் இது திறனாய்வில் ஒரு வழிமுறைதான். நாம் இவற்றுடன் வேறு பலவற்றையும் இணைத்திட வேண்டும். நமது காலத்திய பிரத்தியேக வரலாற்றுத் தன்மையினை பிரதிபலிக்கும் வகையில் நாம் அறிந்திருக்கக்கூடிய சூழலியல் மாற்றங்கள் சமூக உறவுகள் பற்றியும், சூழலியலில் உருவாகியுள்ள சிக்கல்கள் பற்றியும் மனித ஞானம் விரிவு பெற்றமை அதன் செயல் திறன் குறித்தும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

தொழில் முதலாளித்துவம் உச்சாணி நிலையில் இருக்கையில் பல்வேறு மேற்கத்திய சிந்தனையாளர்கள் அமைப்பின் மீது சீற்றம் கொண்டு இயற்கையின்பால் காதல் வயப்பட்டவர்களாய் அழகியலோடு அவற்றை வெளிப்படுத்தினர். உண்மையிலேயே அவர்கள் இயற்கையின்பால் பழைய நிலைமைக்கு திரும்புதல் என்ற வாதத்தை முன்நிறுத்தினர். முதலாளித்துவம் குறித்தான இத்தகைய விமரிசனங்களிலிருந்தும் சூழலியலில் அது ஏற்படுத்தக்கூடிய தீங்குகள் பற்றியும் மார்க்ஸ் எத்தகைய முறையில் வேறுபட்டிருந்தார்?

இயற்கை அழகியல் புரட்சி எனில் இயற்கையின்பால் திரும்புதல் எனும் ரூசோவின் கருத்தையும், ஷெல்லி, வொர்ட்ஸ்வொர்த் போன்ற இயற்கையின் மீது காதல் கொண்ட அழகியல் கவிஞர்களையும் அல்லது முந்திய காலங்களில் செயல்பட்ட தோரே போன்ற இயற்கை பாதுகாப்பாளர்களையும் கருத்தில் கொள்ளமுடியும். இவர்களின் கருத்தோட்டங்கள் இயற்கையின்பால் திரும்புதல் எனும் ஒரு வகைப்பட்ட வாதத்தை எழுப்பியது உண்மையே. மாறாக இவற்றை முந்திய நிலைக்கு திரும்பிச் செல்லுதல் எனும் அறைகூவலுக்கு பதிலளிப்பதாக கருதமுடியாது. முதலாளித்துவ சமூகத்தின் உயரிய விளைவுகளுக்கு மாற்றாக விவரணம் செய்வதற்குரிய பொருளாக முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் இருப்பினும் இதை அச்சு அசலாக ஏற்கலாகாது. இயற்கையின் முதலாளித்துவ பேரழிவு பற்றிய இயற்கை அழகியல் விமரிசனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படத்தான் வேண்டும். ஏனெனில் உலகை பண மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பிடுதல் எனும் சார்லஸ் டிக்கன்ஸ் காலத்திய சமூக உணர்வோட்டத்தை இந்த அழகியல் விமரிசகர்கள் கொண்டுள்ளனர்.

சூழலியல் பற்றிய மார்க்சின் அணுகுமுறை இந்த இயற்கை அழகியலாளர்களைக் காட்டிலும் அவர் காலத்திய பொருள்முதல்வாத அறிவியலைச் சார்ந்து இருந்தது என்பது உண்மையே. இந்த அறிவியலே சூழலியல் பற்றிய கருத்தோட்டங்களின் வளர்ச்சிக்கான துவக்கமாகவும், முதலாளித்துவ பொருளாதாரத்தின் தாக்கம் சூழலியலில் விளைவிக்கக் கூடிய பேரழிவினை உணரத் தக்கதாகவும் அமைந்தது.

வரலாற்றுப் பொருள்முதல்வாதி என்ற அடிப்படையில் இந்தப் பிரச்னையில் மார்க்ஸ் அதீத கவனம் செலுத்தினார். இயல்பாக இருந்து வரக்கூடிய இயற்கை நிலையை முதலாளித்துவம் ஒரு சீரான முறையில் சீரழித்து வருவதை தனது வளர்சிதை மாற்றப் பிளவு பற்றிய கோட்பாட்டில் ஆய்வுக்கு உட்படுத்தினார். பல்வகையில் தாக்கத்தை விளைவிக்கக் கூடிய சிக்கலான கோட்பாடு என்ற அடிப்படையில் வளர்சிதை மாற்றக் கோட்பாட்டினை அவர் பயன்படுத்திக் கொண்டோதடன்றி சூழலியல் முறையின் மேம்பாட்டினையும் எதிர்நோக்கினார்.

மார்க்ஸ் ஷெல்லியை மெச்சுபவராக இருப்பினும் மார்க்சின் சூழலியல் என்பது இயற்கை அழகியல் மரபில் உருவானதல்ல. மாறாக அறிவியலானது பொருள்முதல்வாதம், இயக்கவியல் ஆகியவற்றிலிருந்து உருப்பெற்றதாகும். (மார்க்சீய சூழலியல் அறிஞரும், ஃபாஸ்டருடன் இணைந்தும் தனித்துவமாகவும் மார்க்சீய சூழலியல் பற்றிய பல்வேறு நூல்களின் ஆசிரியருமான) பால் பர்கெட் வெளிப்படுத்தியதைப் போன்று மனித குலத்தின் நீடித்த வளர்ச்சிப் போக்கு என்பதே சோஷலிசத்தின் சிறப்பம்சம் என்பதை மார்க்ஸ்அடையாளப்படுத்தியுள்ளார்.

உங்களைப் போன்ற மார்க்சீய அறிஞர்கள் பருவநிலை மாற்றம் சுற்றுச் சூழல் பேரழிவு போன்றவை முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டு வருகின்றனர். முதலாளித்துவத்தால் மனித குலத்தின் வாழ்நிலையை நம்பிக்கையற்ற நிலைக்கு தள்ளக்கூடிய இத்தகைய பேரழிவினை எப்படி உருவாக்க முடிகிறது?

முதலாளித்துவம் என்று சொல்லப்படும் தற்போதைய பொருளாதார சமூக அமைப்பு முறை உலகின் அனைத்து சூழல் வடிவங்களை மட்டுமின்றி, மனித குலத்தின் வாழ்விடமாக இருக்கக்கூடிய ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் அச்சுறுத்தி வருவது என்பது உண்மையே. மேலும் இது இன்றைய தினம் எழுந்துள்ள கேள்வியல்ல. சமகால அறிவியல் துறை அனைத்துமே இவற்றை அறிந்துள்ளது.

2017 நவம்பரில் 184 நாடுகளைச் சார்ந்த 15000 அறிவியலாளர்கள் மனித குலத்திற்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்தனர். ஏற்கனவே விடுத்த எச்சரிக்கைதான் புதுப்பிக்கப்பட்டது.

இங்கே வினாவொன்று எழுகிறது. முதலாளித்துவத்தின் இயக்க விதிகளில் இந்த அமைப்பு முறைக்குள் பூண்டோடு அழிவது தவிர்க்கவியலாது என்ற கருத்தோட்டத்தை உருவாக்கக்கூடியது ஏதேனும் உள்ளதா என்பதே அது. ஆம் என்பதே இதற்கான விடையாகும்.

முதலாளித்துவத்தின் கீழ் “குவித்திடு, குவித்திடு” என்பதே விதியாக உள்ளது என்பதை மார்க்ஸ் முன் வைத்தார். “மோசேயின் மந்திரச்சொல்லாக மட்டுமின்றி, தீர்க்கதரிசிகள் கூறிச்சென்றதும் இதைத்தான்”. (மூலதனத்தில் மார்க்ஸ் இது போன்ற பைபிள் வசனங்களையும், கதைகளையும் நகையுணர்வுடன் சுவைபடக் கையாண்டுள்ளது அதிசயத்தக்கதாகும். உபரி மதிப்பை மூலதனமாக மாற்றுவது பற்றி விவரிக்கையில் சொல்வதாவது: “பழைய கதைதான். ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான். ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான். இவ்வாறு பெற்றுக் கொண்டே போனார்கள்”)

மூலதனக் குவிப்பு என்றும் உயர்நிலையிலேயே தொடர்வதைக் காட்டிலும் வேறெதுவும் இந்த அமைப்பின் கீழ் முக்கியத்துவத்தைப் பெறுவதில்லை. இதன் பொருட்டு தங்கு தடையற்ற மடைகடந்த பொருளாதார வளர்ச்சி தேவைப்படுகிறது. மேலும் இருக்கக்கூடிய அனைத்தையும் சந்தைப் பொருட்களாக்கும் தேவையும் உள்ளது. இது உலகை வெறும் பணப் பரிவர்த்தனை பின்னல் என்ற கருத்துக்கு தள்ளுகிறது. இது பிரபஞ்சத்தின் உயிர்வேதியியல் செயல்பாடுகளில் தகர்வையோ அல்லது பிளவையோ உருவாக்குவதற்கு வழி வகுக்கிறது. இன்றைய தினம் அமைப்பு சார்ந்த சூழலியல் வல்லுனர்களைப் போலவே இச்சிக்கலை மார்க்சும் வளர்சிதை மாற்றப் பிளவாக அன்றே கருத்தில் கொண்டிருந்தார்.

தமிழில்: ராமச்சந்திர வைத்தியநாத்
நன்றி: பிரண்ட்லைன்

 

வர்க்க வெகுஜன அமைப்புகளின் முக்கியத்துவம் என்ன?

பொதுவாகக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வர்க்க வெகுஜன அமைப்புகளின் ஸ்தாபன தேவை உண்டு. தோழர் லெனின், கட்சி உறுப்பினரின் கடமையில் ஒன்றாக, கட்சியின் அமைப்பில் ஏதேனும் ஒன்றில் செயல்பட வேண்டும் என விதிகளை வகுத்திருக்கிறார். இது குறித்த சர்ச்சை எழுந்த போது அதற்கான நியாயங்களையும் விளக்கியிருக்கிறார். இந்தியாவிலும் பிரதான இடதுசாரி கட்சிகளுக்கு வெகுஜன அமைப்புகள் உண்டு. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரையில், தமிழகத்தில் வர்க்க வெகுஜன அமைப்புகளை மாவட்டம் துவங்கி, அதற்குக் கீழ் வரை  வலுப்படுத்துவதில் பொதுவாக பலவீனம் தொடர்கிறது. இச்சூழலில் இவை அமைக்கப்பட்ட நோக்கத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவது அவசியம்.

முக்கிய அரசியல் நடைமுறை உத்தியுடன் இணைந்தது:

மக்கள் ஜனநாயக புரட்சி என்ற இலக்கை எட்ட தேவைப்படும் மக்கள் ஜனநாயக அணியை உருவாக்க,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வகுத்திருக்கும் மிக முக்கிய அரசியல் நடைமுறை உத்தி இடது ஜனநாயக அணியைக் கட்டுவதாகும். இது அரசியல் கட்சிகளின் அணி அல்ல, வர்க்கங்களைத் திரட்டிக் கட்டப்படுவது என்பது நமக்குத் தெரியும். இடைக்கால முழக்கம் என்கிற அந்தஸ்து இதற்கு உண்டு.

கட்சியின் 10வது அகில இந்திய மாநாடு 1978ல் ஜலந்தரில் கூடி தீர்மானித்த இந்த அரசியல் நடைமுறை உத்தி, பின்னுக்குத் தள்ளப்பட்டு, மீண்டும் 21வது அகில இந்திய மாநாட்டில் மீட்டெடுக்கப்பட்டது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சக்திகளின் கொள்கைகளுக்கும், அரசியலுக்கும் முற்றிலும் மாறான நிகழ்ச்சி நிரலை முன்வைத்து, இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும். மக்கள் முன் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ பாதையா, இடது ஜனநாயக பாதையா என்ற இரண்டே பிரதானமான பாதைகள் முன்னிறுத்தப்படும் போது, அவர்களுக்கு வேறுபாடுகள் புலப்படும். தீர்மானிக்கவும் முடியும்.

அரசியல் உத்திக்குத் தகுந்த ஸ்தாபன ஏற்பாடு:

1978 மாநாட்டின் அரசியல் தீர்மானம் இதை முடிவு செய்த பின், சால்கியா பிளீனம் நடத்தப்பட்டு, இந்த அரசியல் உத்தியை நடைமுறைப்படுத்த பொருத்தமான ஸ்தாபன உத்திகள் விவாதிக்கப்பட்டன. வர்க்க சேர்க்கையில் மாற்றம் ஏற்படுத்தும் நோக்குடன் வர்க்கங்களைத் திரட்டுவது என்பது இடது ஜனநாயக அணிக்கான அடித்தளம் என்னும் போது, அவ்வாறு திரட்டுவதற்காக வர்க்க வெகுஜன அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. தொழிற்சங்கம், மாணவர் சங்கம்,  விவசாயிகள் சங்கம், எழுத்தாளர் சங்கம் மட்டுமே அக்காலத்தில் செயல்பட்டு வந்தன. சால்கியா பிளீனத்துக்குப் பிறகு தான் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்டு இதர அமைப்புகள், அண்மை காலத்தில் மாற்று திறனாளிகளுக்கான அமைப்பு, பாலர் சங்கம் போன்றவை உருவாக்கப்பட்டன.

எனவே நாம் அடிப்படையில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியது, கட்சி திட்டத்தின் இலக்கை அடைய தேவையான இடது ஜனநாயக அணியைக் கட்டும் துல்லியமான நோக்குடன் துவக்கப்பட்டவை தான் வர்க்க வெகுஜன அமைப்புகள்.  இந்த நோக்கத்தை நிறைவேற்ற பொருத்தமான அமைப்பு வடிவம், முழக்கம், நடைமுறையோடு இந்த அமைப்புகளை நடத்திட வேண்டும்.

வர்க்க வெகுஜன அமைப்புகளின் ஜனநாயக, சுயேச்சை செயல்பாடு:

உதாரணமாக, கட்சிக்கு அப்பாற்பட்டும், இதர முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்குப் பின்னும் இருக்கின்ற நமது வர்க்கங்களையும், ஒடுக்கப்படும் சமூக பகுதியினரையும் திரட்ட வேண்டும் என்றால், வர்க்க வெகுஜன அமைப்புகள் கட்சியின் துணை அமைப்புகளாக இருந்திட கூடாது. ஜனநாயக தன்மையுடன் சுயேச்சையாக இயங்கும் போது தான், அவற்றின் வட்டம் விரிவாகும். சம்பந்தப் பட்ட மக்கள் திரளை ஈர்த்து, பிரம்மாண்டமான மக்கள் அமைப்புகளாக அவை இயங்க முடியும். பல்வேறு கட்சிகள் மீது பற்று கொண்டவர்கள் உறுப்பினர்களாக உள்ள இந்த அமைப்புகள் வைக்கிற முழக்கங்கள், பேசுகிற அரசியல் நேரடி கட்சி மேடையைப் போல் இல்லாமல், அமைப்பின் சுயேச்சை தன்மைக்கு ஏற்ற விதத்தில் இருக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கட்சிக்கும் வர்க்க வெகுஜன அமைப்புகளுக்கும் இடையே உள்ள உறவு குறித்து 1981, 2004ல் இரண்டு ஆவணங்கள் கட்சியின் மத்திய குழுவால் வெளியிடப்பட்டுள்ளன. 2015 கொல்கத்தா பிளீனம், வர்க்க வெகுஜன அமைப்புகளின் சுயேசை மற்றும் ஜனநாயகத் தன்மையை வலுயுறுத்துகிற சமயத்தில்,  அவ்வமைப்புகளின் அன்றாட பணிகளில் கூடுதலாகக் கட்சி தலையிடும் திரிபு இருப்பதாக சுட்டிக் காட்டுகிறது. கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களை செயபாட்டாளர்களாகக் கொண்ட குறுகிய வட்டமாகவே வெகுஜன அமைப்புகள் தற்போது இருக்கின்ற நிலை மாற வேண்டும். கட்சியின் வழிகாட்டுதல் என்பது அரங்க பிராக்‌ஷன் கமிட்டிகள், கட்சி உறுப்பினர்கள் மூலமே அளிக்கப்பட வேண்டும். அமைப்புகளின் கமிட்டிகளில் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் இணைக்கப்பட வேண்டும். இது, ஓரளவு தொழிற்சங்கம், மாணவர் சங்கத்தில் நடக்கிறது. இதர அமைப்புகள் இதை நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது. அந்தந்த பகுதி மக்களை பாதிக்கும் பிரச்னைகளில் வலுவாகத் தலையீடு செய்யும் திறன் பெற்ற அமைப்புகளாக இவை இருக்க வேண்டும். கிளை செயல்பாடு, ஸ்தல போராட்டங்களில் இவை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இப்படி அமைப்புகளை நோக்கி வருகிற மக்கள் திரளை அரசியல் படுத்துவதும், கட்சியை நோக்கி ஈர்ப்பதும், போராட்டங்களில் துடிப்போடு பங்கேற்போரைத் துணைக்குழுவுக்குள்  கொண்டு வருவதும் அரங்க பிராக்‌ஷன் கமிட்டிகளும், கட்சி கமிட்டிகளும் செய்ய வேண்டிய அரசியல் பணிகளாகும்.

நவீன தாராளமய கொள்கைகள் வர்க்கங்களின் மீது உருவாக்கியிருக்கும் தாக்கம் குறித்தும் பிளீன அறிக்கை விரிவாகப் பேசுகிறது. அச்சூழலில் நாம் எடுக்க வேண்டிய பிரச்னைகளும் அடையாளப்படுத்தப் பட்டு, வழி முறைகள் விளக்கப்படுகின்றன. இந்தத் தாக்கம், உள்ளூர் மட்டத்தில் எப்படி பிரதிபலிக்கிறது என்று பரிசீலித்து, அதற்கு ஏற்றாற் போல் போராட்ட வடிவங்களைத் தீர்மானிக்க வேண்டும்.

எனவே, கிளை மட்டத்திலிருந்து இவற்றுக்கான முக்கியத்துவம் துவங்கப் பட வேண்டும். ஏதேனும் ஒரு வர்க்க வெகுஜன அமைப்பில் செயல்படுபவராகக் கட்சி உறுப்பினர் இருக்க வேண்டும் என்ற அமைப்பு விதி, வெறும் சம்பிரதாயம் அல்ல. வர்க்க வெகுஜன அமைப்புகளே கட்சி விரிவாக்கத்துக்கான நுழைவாயில் என்ற புரிதல் இதற்குப் பின் உள்ளது.  கட்சி கிளை இருக்கும் இடங்களில், வர்க்க வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதும், அவற்றின் சுயேச்சை மற்றும் ஜனநாயக செயல்பாட்டை உறுதிப்படுத்துவதும், இவ்வமைப்புகள் செயல்படும் இடங்களில் கட்சியை உருவாக்குவதும் முக்கிய பணியாக இருக்க வேண்டும்.

பகுதிக் குழு, இடைக்குழு உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி அமைய வேண்டும்?

மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிக் குழு, இடைக்குழு உறுப்பினர்களின் செயல்பாடு எந்த அடிப்படையில் அமைய வேண்டும்?

ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களுடன் உயிரோட்டமான தொடர்போடு இயங்குவது மிக மிக அத்தியாவிசயமான ஒன்றாகும். அதன் அவசியத்தை மார்க்சிய முன்னோடிகள் பல முறை வலியுறுத்தியுள்ளனர். மக்களோடு இருப்பதன் பொருள், பொது நீரோட்டத்தில் கரைந்து போவது அல்ல.திட்டவட்டமான சூழல்களுக்கு ஏற்ப மார்க்சியத் தீர்வுகளுக்கு வந்தடைவது முக்கியம். ஆனால்,  தர்க்க அடிப்படையில் வந்தடையும் தீர்வுகளை நடைமுறைப்படுத்தி அதன் அனுபவத்தில் கற்க வேண்டும். அனுபவத்தில் கிடைத்த பாடத்தை வைத்து மீண்டும் நம் தத்துவப் புரிதலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதைத்தான் ‘உயிரோட்டமான’ தொடர்பு என்கிறோம். இது இதயத்திற்கும் இரத்த நாளங்களுக்கும் இடையிலுள்ள தொடர்பைப் போன்றது. இது மூளைக்கும், மெல்லிய நரம்புத்தொடருக்கும் இடையிலான தொடர்பைப் போன்றது. கட்சியின் அனைத்து மட்டத்திற்கும் மேற்சொன்ன புரிதல் மிக அவசியம்.

உள்ளூர் அளவிலான கிளைகளுக்கு பகுதிக் குழுயே வழிகாட்டுகிறது. குழுகளின் செயல்பாடுகளைக் குறித்து பேசும்போது தோழர் மாவோ, ‘படைப் பிரிவு’ என்று குறிப்பிடுகிறார். அதன் தலைவரும் உறுப்பினர்களும் எத்தகைய உறுதியோடும், திறனோடும் செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த உதாரணத்தைக் குறிப்பிடும் அவர், குழு முடிவுகள் எடுக்கும்போது ஜனநாயகமும், செயல்படும்போது  பெரும்பான்மை முடிவுக்கு சிறுபான்மை கட்டுப்படும் ஒழுங்கும் மிக முக்கியம் என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை.

தமிழ்நாட்டில் 480 இடைக்குழுக்களில் 4738 குழு உறுப்பினர்கள் உள்ளனர். இடைக்குழு செயல்பாடுகளை, திருநெல்வேலி ப்ளீனம் ஆய்வு செய்தது. கட்சி இடைக்குழு உறுப்பினர்களுக்கு கட்சித் திட்டம் மற்றும் அமைப்புச் சட்டத்தைக் குறித்து கற்றுக்கொடுக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. குழு செயலாளர்களும், முழு நேர ஊழியர்களும் புதிய சிந்தனைகளுடன், பரிசோதனை முறைகளைப் பயன்படுத்தி இடைக்குழு செயல்பாடுகளை முன்னேற்ற வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியது. தமிழகத்தில்  உயிரோட்டமான கட்சியை வளர்த்தெடுக்க இவை மிக அவசியமான கடமைகள்.

நவ தாராளமயக் கொள்கைகள் தொடர்ந்து அமலாக்கப்பட்டுவருவதன் விளைவாக பல மாற்றங்கள் நிகழ்ந்திருகின்றன. கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவ – பணக்கார வர்க்கங்களின் கூட்டு உருவாகியுள்ளது. அவர்களால் சிறு குறு விவசாயிகளும், கிராமப்புற தொழிலாளர்களும் உழைப்பாளிகளும் சுரண்டப்படுகின்றனர். உள்ளூர் அளவில் இந்த மாற்றங்களை உணர்வதற்கான முயற்சிகளை நாம் செய்திருக்கிறோமா? உள்ளூரில் இந்த முரண்பாடுகள் எப்படி வெளிப்படுகின்றன என்ற விவாதங்கள் குழு அளவில் நடத்தப்பட்டுள்ளனவா?

முரண்பாடுகள் பல வடிவங்களில் வெளிப்படலாம். கந்துவட்டிச் சுரண்டலாக இருக்கலாம், கூட்டுறவு அமைப்புகளில் அதிகாரத்தைக் கைப்பற்றி மேற்கொள்ளும் முறைகேடுகளாக இருக்கலாம், சிறு குறு விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களாக இருக்கலாம். இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி போராடுவது மட்டுமல்ல. நாம் அவற்றின் பின் உள்ள வர்க்க – சமூக அரசியலை விவாதித்தோமா? போராட்ட முழக்கங்கள் நாம் திரட்டும் மக்களிடையே வர்க்க – சமூக (சாதி, பாலினம்) ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் உணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்தனவா? நம் அரசியலை நோக்கி மக்களை ஈர்க்க அது பயன்பட்டதா? என்ற கேள்விகளையும் ஒரு உள்ளூர் குழுயே கூடுதலாக விவாதிக்க வேண்டும். சரியான புரிதல் கிளைகளுக்கு ஏற்படுத்தும் வகையில் வழிகாட்ட வேண்டும்.

மேல் குழு முடிவுகளையும் ‘அறிக்கைகளையும்’ மக்கள் மொழியில், மக்களின் அன்றாட சிக்கல்களோடு இணைத்து முன்னெடுத்துச் செல்லவேண்டியது இடைக்குழுக்களின் அதிமுக்கியப் பணியாகும்.

நமது பிரச்சாரத்தை நோக்கி ஈர்க்கப்ப்படும் மக்களை பொருத்தமான வெகுஜன அமைப்புகளில் திரட்டுவது, நிதியாதாரத்தை திட்டமிட்டு பலப்படுத்துவதும் குழுகளின் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளாகும். குழுகளின் விவாதங்கள், செயலுக்கான உந்துதலைக் கொடுப்பதாக அமையவேண்டும்.

கல்கத்தாவில் நடைபெற்ற ஸ்தாபன ப்ளீனம், “கூட்டு செயல்பாடு, தனி நபர் பொறுப்பு, முறையான கண்காணிப்பு என்ற ஸ்தாபன கோட்பாட்டை, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் உறுதியாக அமல்படுத்துவது; தனி நபர் பொறுப்புகள் நிறைவேற்றப் பட்ட விதம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசீலனை செய்வது” என்ற கடமையை வகுத்துள்ளது. இவ்வகையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறை குழுக் கூட்டத்திற்கு அழைக்கும்போதும், பங்கேற்கும்போதும் பணிகளைக் குறித்த பரிசீலனை மனதில் ஓடுகிறதா? அடுத்து என்ன, விவாதத்திற்கான நிகழ்ச்சி நிரலில் புதிதாக என்ன சேர்க்க வேண்டும்? புதிதாக எழுந்திருக்கும் வாய்ப்புகள் என்ன? நாம் செயல்படும் பகுதியில் உழைக்கும் வர்க்கத்தைத் திரட்ட பரிசீலிக்க வேண்டிய புதிய சிக்கல்கள் என்ன? இந்தக் கேள்விகளெல்லாம் மனதில் ஓடுகிறதா? எனப் பார்க்க வேண்டும்.

ஒரு குழு உறுப்பினர் கட்சி திட்டத்தை முறையாக உள்வாங்கிக் கொள்வதுடன், அமைப்புச் சட்ட விதிகள், கம்யூனிஸ்ட் நெறிமுறைகளில் உறுதியோடு நின்றுகொண்டு செயலாற்ற வேண்டும்  – மேற்சொன்ன கேள்விகளுக்கு பதில் தேட வேண்டும். தத்துவ விவாதங்களையும், அரசியல் விவாதங்களையும் குழுகளில் இடம்பெறச் செய்ய வேண்டும். மார்க்சிய வாசகர் வட்டங்களைப் போன்ற ஏற்பாடுகளில் பங்கேற்க வேண்டும். செயல்பாடுகளுடன் இணைத்து தத்துவச் சர்ச்சைகளுக்கு பதில் தேட வேண்டும். கற்கவும், கற்பிக்கவும் வேண்டும்.

பெண்களையும், இளைஞர்களையும் கூடுதலாக இணைக்க வேண்டும் என ப்ளீனம் வழிகாட்டியிருக்கிறது. திட்டமிட்டு பயிற்றுவித்து இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். எனவே நாம் மேற்சொன்ன வகையில் குழு செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது மிக மிக அத்தியாவிசயமான ஒன்றாகும்.

 

சோசலிசத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு உடன் நிற்போம் …

– சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர், சி.பி.ஐ(எம்)

நேர்காணல்: இரா.சிந்தன்

கேள்வி: உலகத்தில் பல நாடுகளில் வலதுசாரித் திருப்பம் நிகழ்ந்துவருகிறது… இந்த சூழலில் நடைபெற்று முடிந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு, சோசலிசத்தின் புதிய கட்டத்திற்குள் நுழைவதாக அறிவித்திருக்கிறது. இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முதலாளித்துவ உலகில் ஒரு வலதுசாரித் திருப்பம் நிகழ்ந்துவருகிறது. பொருளாதாரம் நெருக்கடியில் தள்ளப்படும்போதெல்லாம், அரசியலில் திருப்பம் நேர்கிறது. அது வலதுசாரித் திருப்பமாக அமைவதை தவிர்க்கவியலாததில்லை. இடதுசாரித் திருப்பமாக மாற்ற முடியும். அது யார் வலிமையாக இருக்கிறார்கள்? என்பதையும், இடது வலது சக்திகளுக்கிடையிலான முரண் தொடர்பு எப்படி அமைந்துள்ளது என்பதையும் பொறுத்தது அது. பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு உருவாகியிருக்கிற வெறுப்புணர்வை அனுகூலமாக பயன்படுத்தி முன்னேற யாரால் முடிகிறதென்பதைப் பொறுத்தது. இடதுசாரிகள் வலிமையாக உள்ள இடங்களில் இடதுசாரிகள் முன்னேறுகிறோம். இடதுசாரிகளுக்கு வலிமை இல்லாதவிடங்களில் வலதுசாரிகள் பலனடைகிறார்கள். வலது போக்கும், இடதுபோக்கும் தொடர்ந்து மோதிக் கொண்டிருக்கின்றன.

1930 ஆம் ஆண்டு, உலகப் பொருளாதார நெருக்கடியின்போது வலதுசாரித் திருப்பம் அதன் ஒரு வெளிப்பாடாக அமைந்ததைப் பார்த்தோம். அது ஜெர்மன், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பாசிசமாக மாறியது. இடதுசாரிகள் முனைந்து அதனைத் தடுக்க முயல்கிறபோது, தடுக்கவும் முடிந்துள்ளது. இப்போதும் கூட லத்தின் அமெரிக்க நாடுகள் உள்ளிட்டு பல இடங்களில் வலதுசாரிகள் தடுக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் ஐரோப்பிய நாடுகளில், இடதுசாரிகள் வலுக் குறைவாக உள்ள நாடுகளில் வலதுசாரித் திருப்பம் நிகழ்ந்துள்ளது. அது முக்கியமானது. ஆனால் அடிப்படையாக நாம்,  இடது – வலது சக்திகளுக்கிடையே நடந்துவரும் போராட்டத்தை கவனிக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் சில நாடுகளில் இடது சக்திகளும், சிலவற்றில் வலது சக்திகளும் முன்னேறுகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரி சக்திகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இந்தக் காலகட்டத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெறுவது முக்கியமானது. அவர்கள் சோசலிசத்தின் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைவதாக தெரிவித்திருப்பது சரியானதே. 1970 சீனா என்ன திட்டமிட்டது. தோழர் டெங் ஜியோ பிங்,  தோழர் இ.எம்.எஸ் -ன் நண்பர். மார்க்சிஸ்ட் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான உறவை புதுப்பிக்கும் ஒப்பந்தத்தில் அவர்கள் இருவருமே கையெழுத்திட்டிருந்தனர். 1986 ஆம் ஆண்டு சீனாவுக்கு தோழர் இ.எம்.எஸ் உடன் பயணம் செய்தபோது, புகழ்பெற்ற தலைவர் டெங் சியோ பிங்கினைச் சந்தித்தோம்.அவரிடம் சீனாவில் நடைபெற்றுவரும் மாற்றங்களை புரிந்துகொள்வதற்காக கேள்வி எழுப்பினேன். அவர் சீன வரைபடத்தை எடுத்துவரச் செய்தார். அதில் தெற்கு பகுதியைச் சுட்டிக்காட்டி 1980 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியை வளர்த்தெடுப்போம், 1990 ஆம் ஆண்டில் கிழக்குப் பகுதி, 2000 ஆம் ஆண்டுக்குள் வடக்கு சீனம். 2020 ஆம் ஆண்டுக்குள் மேற்கு சீனம். பின்னர் நாங்கள் மத்திய சீனத்தையும், ஒட்டுமொத்த சீனத்தையும் வளர்த்தெடுப்போம் என விளக்கினார். அப்படியான திட்டமிட்ட பாதையிலிருந்து விலகாமல் சீனம் பயணிக்கிறது. மேலும், சோசலிசத்தின் மேன்மையை உயர்த்திப்பிடிக்கும் வகையில் ஒட்டுமொத்த தேசத்தையும் அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பாதையில் அவர்கள் பயணிக்கின்றனர்.

சமனற்ற வளர்ச்சிக்கும், மக்களின் தேவைகள் அதிகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, முக்கியமானதாக மாறியிருப்பதாக ஜீ ஜின்பிங் குறிப்பிட்டுள்ளாரே ?
சீனா ஏன் தனது சீர்திருத்தங்களைத் தொடங்கியது? … சீனத்தில் நிலவிவந்த முக்கிய முரண்பாடு – மக்களின் விருப்பங்கள் அதிகரித்துவருவதும் – அதனை நிறைவேற்றுவதில் சோசலிசத்திற்கு இருந்த போதாமையும் ஆகும். மக்களின் தேவைகளும், விருப்பங்களும் சோசலிசத்தின் காரணமாகவே அதிகரிக்கின்றன. இந்த முரண்பாட்டை சரியாகவே சீன கம்யூனிஸ்ட் கட்சி கணித்தது. பொருளாதார, சமூக கட்டமைப்பை மக்கள் விருப்பங்களை நிறைவேற்றுகிற வகையில் மாற்றியமைக்க வேண்டும். இந்த முரண்பாட்டிற்கு தீர்வு காணாவிட்டால் சோசலிசமே நீடித்திருக்க முடியாது. எனவே மேற்கு நாடுகளின் மூலதனத்தையும், தொழில்நுட்பத்தையும் அனுமதிப்பதன் மூலம், தனது இலக்கை எட்டுவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி முயன்றது. கம்யூனிஸ்டுகளின் விருப்பமும் இலக்கும் இதுவாக இருக்கலாம். முதலாளித்துவத்தின் மூலதனம், சீனாவில் சோசலிசத்தை வலிமையாக்குவதற்காக வருவதில்லை. அது சோசலிசத்தை சிதைக்க முயற்சிக்கும். எனவே அந்த முரண்பாட்டில் இருந்துதான் சீர்திருத்த நடவடிக்கைகளும் தொடங்குகிறது. இந்த முரணும், மோதலும் சீர்திருத்தத்தில் இருந்து பிரிக்க முடியாதவை.

ஹூ ஜிந்தாவோ மற்றும் ஜீ ஜின்பிங் ஆகியோர் சொல்வது சரிதான்.  (உலகமயத்திற்கு சாளரத்தைத் திறக்கும்போது) மூன்று முக்கியமான சிக்கல்கள் எழுகின்றன. மக்களுக்கிடையிலான, பிராந்தியங்களுக்கு இடையிலான சமனற்ற தன்மை உருவாகுகிறது. அந்த இரண்டுமே சோசலிசத்திற்கு பகைமையானவை. இரண்டாவது நீங்கள் சாளரத்தைத் திறக்கும்போது அங்கே எல்லாமே வரும் என்பதை மறந்துவிடாதீர்கள். நல்லவைகளோடு சேர்த்து கொசுக்களும், டெங்கு, சிக்கன் குனியாவும் வரும். அப்படி வந்து சேர்ந்துள்ள ஒரு சிக்கல் ஊழல். மேற்சொன்ன மூன்று சிக்கல்களையும் அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி உணர்ந்துள்ளது. சீர்திருத்தங்களைப் பயன்படுத்தி சோசலிசத்தை வலுப்படுத்த முயல்கிறது. ஆனால் முதலாளித்துவ சக்திகள் பலவீனப்படுத்த விரும்புகின்றனர்.

சமூக ஏற்றத்தாழ்வு, பிராந்திய ஏற்றத்தாழ்வு மற்றும் ஊழல் ஆகிய சிக்கல்களை  சீன கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து போராடிவருகிறது. இந்தப் போராட்டத்தில் யார் வெற்றியடைவார்கள்? … இந்த மாநாட்டில் கூட ஜீ ஜின்பிங் பேசும்போது மார்க்சிய – லெனினிய தத்துவம், மாசேதுங் சிந்தனைகள், டெங் ஜியோ பிங் கொள்கைகள் மற்றும் நான்கு முக்கியக் கோட்பாடுகள் உள்ளிட்டவை பற்றி பேசியுள்ளார். இந்தப் போராட்டத்தில் யார் வெற்றியடைவார்கள் என்ற ஊகத்தைப் பற்றி நான் பேசவில்லை. மார்க்சியம் என்பது ஜோதிடம் அல்ல. எனது விருப்பம் அங்கே சோசலிசம் வலுப்படவேண்டும் என்பதுதான். நாம் சோசலிசத்தை வலுப்படுத்த நடக்கும் முயற்சிகளுக்கு உடன் நிற்போம்

கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் அவ்வளவு அவசியமான பணியா?

கேள்வி: மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் தற்போது நடந்து வருகின்றன. இது அவசியமான பணியா?முதலாளித்துவக் கட்சிகளில் இது போன்ற எதுவும் நடப்பதில்லையே?

கம்யூனிஸ்ட்   கட்சியில்  கிளை மாநாடுகள்  மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றன. இது மிக முக்கியத்துவம் வாய்ந்த பணி.

2018 ஏப்ரலில் கட்சிக் காங்கிரஸ் எனப்படும் இந்திய அளவிலான மாநாடு நடைபெற உள்ளது. முன்னதாக ,கிளையிலிருந்து துவங்கி , மாநில மட்டம் வரை  மாநாடுகள்  நடத்திட கட்சியின் மத்தியக்குழு முடிவு செய்துள்ளது.

மாநாடு எனும்போது,சாதாரணமாக வழக்கில் இருக்கும் புரிதலி்ருந்து மாறுபட்ட பொருள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உண்டு.

கடந்த மாநாட்டிற்குப் பிறகு, கட்சி மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்தையும் அசை போடும் வாய்ப்பாக மாநாட்டு நிகழ்வு இருக்கும்.ஆனால், நடந்ததை நினைவுபடுத்திக் கொள்வது, அற்ப சந்தோஷத்திற்காக அல்ல.
உழைக்கும் மக்களை முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக ஒன்றுபடுத்துவது என்பது கட்சியின் அயராத போராட்டப்பணியாக அமைந்துள்ளது. இதில் மூன்று ஆண்டுக் கால முன்னேற்றம் என்ன என்பதை அறிவதுதான் கிளை மாநாட்டில் முக்கிய விவாதமாக அமையும். தொழிலாளிகள்,விவசாயிகள் உள்ளிட்ட வர்க்கப் பிரிவினரோடு கட்சி எப்படி உறவு கொண்டு, அவர்களிடம் ஆளும் அரசுகளுக்கு எதிரான உணர்வையும், இடதுசாரி மாற்று உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது என்பது மாநாட்டின் முக்கிய கேள்வி.
தங்களது பகுதி மக்களிடையே சாதிய, மதவாத  அடிப்படையில் எழுகிற சிந்தனைகளையும், இயக்கங்களையும் கட்சி எப்படி எதிர்கொண்டது என்று பரிசீலிக்கிற பணியும் மாநாட்டிற்கு உண்டு.
மக்களின் சமுக, பொருளாதார வாழ்வில் அரசு கொள்கைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டபோது கட்சி எப்படி களத்தில் அவர்களைத் திரட்டியது, உள்ளூர் பிரச்சினைகளுக்கான முன்முயற்சிகள், போராட்டங்கள் என அனைத்தும் மாநாட்டில் விவாதிக்கப்படுகின்றன.
இவற்றை எல்லாம் விவாதித்து, எதிர்கால செயல்பாட்டுக்கு அனைத்து உறுப்பினர்களும் ஏற்கிற முடிவுகள் எடுக்கப்படும்.
வெகு மக்களை திரட்டும் புரட்சிக் கட்சியாக……
கொல்கத்தாவில் கட்சி நடத்திய பிளீனம் எனப்படும் சிறப்பு மாநாட்டில் புரட்சிகர கட்சி என்ற வகையில் வெகுமக்கள் பாதையில் முன்னேற வேண்டுமென முடிவு எடுக்கப்பட்டது. மேற்கண்டவாறு விவாதம் மாநாட்டில் நடைபெறுகிறபோது, வெகுமக்களைத் திரட்டும் பாதையில், புரட்சிக் கட்சி செயல்பட்டிருக்கிறதா என்பதை புரிந்து கொள்ள முடியும்.
கம்யூனிஸ்ட்கள் தங்கள் குறைகளை மூடி மறைப்பதில்லை. மூன்றாண்டுகால செயல்பாட்டில் உள்ள குறைகள் கண்டறியப்பட்டு அவற்றைக் களைவதற்கான திட்டங்கள், வரும் காலங்களில்  புதிய உத்வேகத்தோடும், எழுச்சியோடும் பணியாற்றுவதற்கான வழிகள் ஆகியன அனைத்தையும் மாநாடு கண்டறியும்.
கம்யூனிஸ்ட் அல்லாத இதர கட்சிகளில் இந்த நடைமுறை இல்லை. திமுக, அதிமுக போன்ற கட்சிகளும் உள்ளூர் மக்கள் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள பல வழிகளில் முயற்சிக்கின்றனர். ஆனால் அதற்கான நோக்கம், சுயநலம் சார்ந்தது. பணம், பதவி, அந்தஸ்து  ஆகியவற்றை அடையவும், தேர்தல் ஆதாயம் அடையவும் அவர்கள் மக்களிடம் பணியாற்றுகின்றனர்; மக்களை திசை திருப்புகின்றனர்.
கம்யூனிஸ்ட்களுக்கு முதலாளித்துவ அமைப்பின் சுரண்டல் கொடுமையிலிருந்து மக்கள் விடுதலை அடைய வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. அது மட்டுமல்லாது, பாட்டாளி வர்க்கங்களே அதிகாரத்திற்கு வர வேண்டுமென்ற புரட்சி இலட்சியமும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு.
இதனால்தான் கட்சி உறுப்பினர் அனைவரும் கிளை மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென்றும் கடந்த கால வேலைகள் பற்றிய நிறை குறைகளை விவாதிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்படுகிறது. மாற்று சமுதாயத்தை மக்கள் படைக்கிறார்கள்; ஆனால் மக்களைத் திரட்டி அவர்களை புரட்சிகரமாற்றத்திற்கு தயார் செய்யும் கடமை  ஒவ்வொரு கட்சி உறுப்பினருக்கும் உண்டு. அத்துடன் நடந்த பணிகள் பற்றி விமர்சிக்கும் ஜனநாயக உரிமையும் அவர்களுக்கு உண்டு. இது போன்ற உரிமைகள், கடமைகள் எதுவும் முதலாளித்துவக் கட்சிகளில் இருப்பதில்லை.
கட்சியின் பிளீனம் மாதாமாதம் கிளைக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும், அவற்றில் உறுப்பினர் கலந்து கொள்வது அவரது அடிப்படைக்  கடமைகளில் ஒன்று என்றும் வலியுறுத்தப்படுகிறது. இதன் உள்ளார்ந்த பொருள் என்ன? முதலாளித்துவ கட்சியின் தலைமைதான் அக்கட்சியில் அதிகாரம் படைத்தது. மாறாக, கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை கூட்டங்களில்  உறுப்பினர் முழுமையாக கலந்து கொளவது என்பதற்கு மேலான நோக்கம் உண்டு.
அந்தப் பகுதி உழைக்கும் மக்களைத் திரட்டுவதற்கு தனது கருத்துக்களை கிளையில் பகிர்ந்து கொள்வதையும், முடிவுகள் எடுப்பதில் தனது பங்களிப்பையும் அவர் உறுதிப்படுத்துகிறார். கம்யூனிஸ்ட் கட்சியில்தான்  உண்மையான ஜனநாயகம் நிலவுகிறது என்பதன் அடையாளமாக  கட்சியின் மாநாட்டு நடைமுறைகள் அமைந்துள்ளன.
மக்கள் மனதை மாற்ற…..
கிளையின் இடையறாத அன்றாடப்பணிகளில் ஒன்று மக்கள் மனதை மாற்றுவதற்கான பிரச்சாரம். முதலாளித்துவ ஊடகப் பிரச்சாரம் ஆளும் வர்க்க கொள்கைகளை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதே போன்று, ஆளும் அரசுகளை விமர்சனம் செய்யும் சக்திகளும் சரியான தேர்வை மக்களுக்கு தெரிவிக்காமல், திசை திருப்ப பிரச்சாரம் செய்கின்றனர்.
மாறாக, வர்க்க ரீதியில் ஒற்றுமை கட்டி புரட்சிகர இலக்கை நோக்கிச் செல்வதற்கு கட்சிக்கிளை மக்களிடம் அன்றாட உரையாடல், பிரசுரங்கள், பத்திரிகை விற்பனை வழியாக பிரச்சாரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிளையும் ஓராண்டு தீக்கதிர் சந்தாவை கிளை மாநாடு நடைபெறுகிறபோது அளிக்க வேண்டும். மார்க்சிஸ்ட் இதழ் இந்த பிரச்சாரத்திற்கு உதவியாக இருக்கிறது. இவை போன்ற செயல்பாடுகளும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
ஆக, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மாநாடு என்பது கட்சி வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம்.

‘ட்ரம்ப் திட்டம்’ என்ற ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டால், அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்த இதழில் Leftword பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர் விஜய் பிரசாத் பதிலளிக்கிறார். நேர்காணல் ஆர்.ப்ரசாந்த். தமிழில் வீ.பா.கணேசன்.

‘ட்ரம்ப் திட்டம்’ என்ற ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டால், அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அல்லது திறமையற்றதொரு அதிபரின் குழப்பமான நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் அது என்பதாகவே பார்க்கிறீர்களா?

மேலோட்டமாகத் தெரிவதை விட ‘ட்ரம்ப் திட்டம்’ என்பது மிகவும் ஒழுங்கமைவான ஒன்று என்றே நான் கருதுகிறேன். திறமையற்ற வகையில் அவரது நடவடிக்கைகள் உள்ளன என்பது உண்மைதான். டிவிட்டரிலும் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார். அவர் என்ன செய்கிறார் என்பதை தொடர்ந்து கவனிப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது என்பதோடு, அதில் ஒரு சில விஷயங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகவும் உள்ளன. என்றாலும் ட்ரம்ப்-இன் மீது மட்டுமே நம் கவனத்தைச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. முதலில் திட்டம் பற்றிப் பார்ப்போம்.

முதலாவதாக, தங்கள் வேலைகள் காணாமல் போய்விட்டன என்றும், தங்கள் எதிர்காலம் மறைந்து விட்டது என்ற எண்ணத்தோடு தாங்கள் அவமானப்படுத்தப் படுகிறோம் என்றும், தரம் தாழ்த்தப்படுகிறோம் என்றும் நினைத்துக் கொண்டிருந்த வெள்ளை இனத்தைச் சேர்ந்த கருத்தால் உழைக்கும் தொழிலாளர்களில் ஒரு பிரிவினரை மிகச் சிறப்பான வகையில் ட்ரம்ப்பினால் நெருங்க முடிந்துள்ளது. அமெரிக்காவை மீண்டும் மிகச் சிறப்பானதாக ஆக்குவோம் என்ற கோஷம் அவர்களிடையே எதிரொலித்தது. ஏனெனில் அவர்களது அமெரிக்கா, அதாவது கருத்தால் உழைக்கும் தொழிலாளர்களின் அமெரிக்கா, மிக வேகமாக மறைந்து வருகிறது என்றே அவர்கள் கருதினார்கள். அது வெள்ளையர் பிரிவைச் சேர்ந்த தொழிலாளி வர்க்கம் அல்ல; 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஒபாமா அதிபராக இருந்தபோது தேநீர் விருந்து இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த வெள்ளை இனத்தைச் சேர்ந்த கருத்தால் உழைக்கும் தொழிலாளர்கள்தான் ட்ரம்ப்பின் இயக்கத்திற்குள் பெருமளவிற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

இப்போது ட்ரம்ப் வெளிப்படுத்தும் பழமைவாதம் என்பது அமெரிக்காவை மற்ற நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தும்படியான அமெரிக்காவின் பழைய பழமைவாதத்தைப் போன்றது அல்ல. அமெரிக்காவை மீண்டும் மிகச் சிறப்பானதாக ஆக்குவோம் என்பதன் பொருள் தனது தேச நலனுக்காக சர்வதேச மேடையில் அமெரிக்கா தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும். தீவிரமான வலதுசாரிகள் வாதாடுவதெல்லாம் பிரிட்டன், ப்ரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் உள்ள தலைமை உலகமய நோக்கம் கொண்டதாக மாறியுள்ளது. அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால், இந்தத் தலைமை தங்கள் தேசிய நலன்களின் மீது கவனம் செலுத்துவதாக இல்லை என்பதே ஆகும். ஆண்டுதோறும் டவோஸ் நகரில் ஒன்று கூடும் உலகத்தின் மேல்தட்டுப் பிரிவினரின் நலன்களில்தான் அவர்கள் கவனம் செலுத்தி வந்தனர். உண்மையில் இந்த வாதத்தில் கொஞ்சம் உண்மையும் இருந்தது என்றும் கூறலாம். உண்மையில் டவோஸ் முதலாளிகளின் இந்த சர்வதேச நிர்வாகிகள் தங்களது நலன்களை கவனமாகவே பார்த்துக் கொண்டார்கள். டவோஸ் முதலாளிகளின் சார்பாகவே அவர்கள் உலக அமைப்பை நிர்வாகம் செய்து வந்தார்கள். இதற்கு மாறாக டவோஸ் முதலாளிகளின் சார்பாக இல்லாமல் அமெரிக்க முதலாளிகளின் சார்பாகவே உலக அமைப்பை நாம் நிர்வாகம் செய்ய வேண்டும் என்றுதான் ட்ரம்ப் சொல்கிறார். உலகளாவிய முதலாளிகளில் பெரும்பகுதியினர் அமெரிக்க முதலாளிகளாகவே இருக்கிறார்கள் என்பதாகவே இருந்தது. அவர்களின் திட்டத்தில் பெரும்பகுதி அமெரிக்க டாலர்-வால் ஸ்ட்ரீட் கூட்டணியால்தான் நடத்தப்படுகிறது. எனவே, ட்ரம்ப் சொல்வது என்னவென்றால், உலகப் பொருளாதார அமைப்பை நிர்வகிப்பதற்காக உலகளாவிய பொருளாதார நிகழ்ச்சி நிரல், உலகளாவிய மனித உரிமைகளுக்கான நிகழ்ச்சி நிரல் அதாவது மனித உரிமைகள் குறித்த ஜெனிவா ஒப்பந்தம் போன்றவற்றால் நாம் மிகவும் கட்டுண்டு கிடக்கிறோம். எனவே அமெரிக்க ராணுவம் மேலும் தீவிரமாக சண்டையிட வேண்டும்; மேலும் அதிகமான வன்முறையில் இறங்க வேண்டும்; அதே நேரத்தில் அமெரிக்க நிதித் துறை அமெரிக்காவில் நலன்களைப் பாதுகாப்பதற்கு மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். எனவே ‘முதலில் அமெரிக்கா’ என்ற இந்த நிலைபாடு என்பது நிச்சயமாக மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டிருப்பது அல்ல; மாறாக, அது மேலும் மேலும் அப்பட்டமான ஏகாதிபத்தியம் என்பதைத் தவிர வேறல்ல.

எனவே ‘ஹிலாரி ஒரு ஏகாதிபத்தியவாதி என்பதால் அவரை விட ட்ரம்ப் மேலானவர்’ என்று மக்கள் சொல்லும்போது குழப்பம்தான் ஏற்படுகிறது. ஹிலாரி ஏகாதிபத்தியவாதிதான். ஆனால் ட்ரம்ப் ஊக்கமருந்தால் உரமேற்றப்பட்ட ஏகாதிபத்தியவாதி. அவரது ஏகாதிபத்தியம் மேலும் மேலும் பராக்கிரமம் மிக்க ஏகாதிபத்தியம் என்றே கூறலாம். லிபியா, சிரியா, இராக் போன்ற நாடுகளின் கண்ணோட்டத்தின்படி தங்களின் மீது குண்டுகள் வந்து விழும்போது, அது நடுத்தரமான ஏகாதிபத்தியவாதி போட்டதா? அல்லது முரட்டுத் தனமான ஏகாதிபத்தியவாதி போட்டதா? என்பது முக்கியமில்லை. என்றாலும் கூட, ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, ஒரு மார்க்சிய கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இதிலுள்ள ஒருசில வேறுபாடுகளை நாம் கண்டறிவது மிகவும் முக்கியமாகும். ஹிலாரி அதிபராக இருந்திருந்தால் ஒரு விதமான உலகளாவிய கண்ணோட்டத்துடன்  ஆட்சி செய்திருப்பார்; உலகளாவிய முதலாளிகளின் நிர்வாகியாகவும் அவர் இருந்திருப்பார். உலகம் முழுவதிலும் இருந்து வரும் சமிக்ஞைகள் குறித்து ஓரளவிற்கு உணர்ச்சியை வெளிப்படுத்துபவராகவும் இருந்திருப்பார். ஆனால் ட்ரம்ப்-ஐப் பொறுத்தவரையில், இவை குறித்தெல்லாம் முற்றிலும் கவலைப்படாத ஒருவராகவே இருக்கிறார். அதனால்தான் அவர் ஐரோப்பாவிற்குச் சென்றபோது அவர்களது திட்டத்திற்காக ஜெர்மன் முதலாளிகளை, ப்ரெஞ்சு முதலாளிகளை மிரட்டுகிறார். அவர்களைக் கேலி செய்கிறார். அமெரிக்க முதலாளிகள்தான் முதன்மையானவர்களாக இருக்க வேண்டும் என்றே அவர் நம்புகிறார். எனவே இந்த இரு ஏகாதிபத்தியங்களும் அதன் வகையில் அல்ல; அளவில்தான் வேறுபட்டவையாக இருக்கின்றன.

பாஜக தத்துவமும், அம்பேத்கர் சிந்தனைகளும் ஒன்றிணையுமா?

அண்மைக்காலங்களில் பாஜகவும் சங்க பரிவாரத்தின் சில அமைப்புகளும் டாக்டர் அம்பேத்கரை பெரிதும் மதிப்பதாக கூறி வரு கின்றனர். அவருக்கு நினைவு சின்னங்கள் எழுப்புவது, அவரது உருவச்சிலைகள் அமைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். அம்பேத்கர் இந்துத்வாவை எதிர்க்கவில்லை என்றும் அவர் முன்வைத்த தத்துவங்களுக்கும் ஆர் எஸ் எஸ் தத்துவங்களுக்கும் முரண்பாடே இல்லை என்றுகூட பேசுகின்றனர். உண்மை யில் அம்பேத்கர் அவர்களை சங்கபரிவாரத்தின் மூலவர்களுடன் ஒப்பிட்டு அவரை தங்கள் இயக்கத்தின் இலக்கண இலட்சிய நபராக சித்தரிப்பதில் ஏதேனும் உண்மை உண்டா?

பா ஜ க / ஆர் எஸ் எஸ் அம்பேத்கரை சுவீகரிக்க முயல்வது நகைப்புக்கு உரியது. சங்க பரிவாரம் அம்பேத்கரை தங்களுக்கு தத்துவார்த்த அடிப்படையில் நெருங்கியவர் என்று சித்தரிக்க முயல்வது தலித் மக்கள் மத்தியிலும் அம்பேத்கர் அவர்களை மதிக்கும், போற்றும் கோடிக்கணக் கான மக்கள் மத்தியிலும் சங்க பரிவாரத்தின் செல்வாக்கை புகுத்தும் குறுக்குவழி முயற்சிதான். சில ஆண்டுகளாகவே இது நடக்கிறது. பா ஜ க மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு முயற்சிகள் அதிகமாகியுள்ளன. 2015ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஆங்கில வெளியீடான ஆர்கனைசர் பத்திரிக்கையும் இந்தி ஏடான பாஞ்சஜன்யாவும் பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்களை புகழும் சிறப்பு மலர்களை வெளி யிட்டனர். மோகன் பகவத் பிப்ரவரி 2015 இல் ஆற்றிய ஒரு உரையில் அம்பேத்கர் சங்க பரி வாரத்தின் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர் என்றே ஒரு போடு போட்டார்! இன்றும் ஆர் எஸ் எஸ் இந்த தன்மையில் தனது பிரச்சாரத்தை தொடர்கிறது. ஆனால் உண்மை முற்றிலும் வேறு.

பா ஜ க இந்துத்வா கோட்பாட்டை ஏற்று கடைப்பிடிக்கிறது. தனது பொருளாதாரக் கொள்கைகளை பொருத்தவரையில் நவீன தாராளமய கொள்கைகளை மிகத்தீவிரமாக அமலாக்குகிறது. இந்த இரண்டையுமே டாக்டர் அம்பேத்கர் முழுமையாக எதிர்த்தவர்.

அம்பேத்கரும் இந்துத்வாவும்
இந்துத்வா தத்துவம் பிராமணீய இந்து மத கோட்பாடுகளை முன் நிறுத்துகிறது. சாதி அமைப்பையும் சாதி அடிப்படையிலான சமூக ஒடுக்கு முறையையும் ஒரு போதும் பா ஜ க எதிர்த்ததில்லை. மதசார்பற்ற இந்தியா என்ற கோட்பாட்டை நிராகரித்து இந்து ராஷ்டிரம் என்ற முற்றிலும் தவறான கோட்பாட்டை முன்வைக்கிறது. இந்திய மக்களை நேசித்த, தலித் மக்களுக்காக மட்டுமின்றி அனைத்து இந்திய உழைப்பாளி மக்களின் மேம்பாட்டிற்காக அரும் பாடுபட்ட அம்பேத்கர் எந்த மதத்தினரையும் வெறுக்கவில்லை. ஆனால் மிகத்தெளிவாக ஒன்று சொன்னார்: “பிராமணீய இந்துமதம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இதன் அடிப் படையில், இந்த மதம் ஜனநாயகத்திற்கு முற்றிலும் முரணானது.”

சாதி அமைப்பை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று முன்பின் முரணற்று முழங்கியது மட்டுமின்றி அதற்காக தனது வாழ்நாளில் கணிசமான பகுதியை செலவழித்தவர் அம்பேத்கர். அற எஸ் எஸ் இயக் கத்தின் மூலவர்களில் முக்கியமான நபரான சவர்க்கார் பற்றி அம்பேத்கர் கூறுகிறார்: “சவர்க் கார் இந்தியாவில் முஸ்லிம், இந்து என்று இரு பிரிவினர் உள்ளனர். இருந்தபோதிலும், இந்தியா இருதேசங்களாக பிளவுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறார். இருவரும் ஒரு நாட்டில் வாழ வேண்டும். அந்த நாட்டின் அரசியல் சாசனம் இந்துக்களின் ஆதிக்கத்தின் அடிப்படையில் இருக்கவேண்டும். அவர்கள்கீழ் இஸ்லாமியர்கள் இருக்கவேண்டும் என்பது சவர்க்கரின் நிலைப் பாடு.” இவ்வாறு ஆர் எஸ் எஸ் சின் இந்துராஷ்டிரா தத்துவத்தை அம்பலப்படுத்தி, இந்து, முஸ்லிம், கிறித்தவர், சீக்கியர், புத்திஸ்ட் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் இணைந்து சமமாக வாழும் நாடாக இந்திய இருக்கவேண்டும் என்று வாதாடுகிறார், அம்பேத்கர். “இந்து ராச்சியம் ஒன்று உருவானால், அதைவிட மிகக்கொடிய துயரம் இந்த நாட்டுக்கு வர முடியாது” என்று கூறினார்.

அம்பேத்கர் தலைமையில், அவரது மிகச் சிறந்த பங்கின் அடிப்படையில் உருவான இந்திய அரசியல் சாசனத்தை ஆர் எஸ் எஸ் கடுமையாக சாடியது. நவம்பர் 26, 1949 அன்று அரசியல் சாசனம் இறுதி செய்யப்பட்டது. நான்கு நாட்கள் கழித்து நவம்பர் 30 அன்று ஆர் எஸ் எஸ் அமைப்பு மனுஸ்மிருதி தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக இருந்திருக்க வேண்டும் என்று பொருள் பட தனது ஏட்டில் தலையங்கம் தீட்டியது.

ஆர் எஸ் எஸ் தத்துவத்திற்கு நேர் மாறாக, ‘சமூக, பொருளாதார மறுமலர்ச்சிக்கான திட்டத்தின் அடிப்படையில், பல பிரிவினரும் கலந்த அரசியல் கட்சிகள் உருவாவது அவசியம். இதன் மூலம் இந்து ராச்சியம், முஸ்லிம் ராச்சியம் என்ற இரு அபாயங்களையும் தவிர்க்க முடியும்.’ என்று அம்பேத்கர் வலியுறுத்தினார்.

தத்துவ அடிப்படையில் ஆர் எஸ் எஸ் அமைப்பை அம்பேத்கர் நிராகரித்தார் என்பது தெளிவாக உள்ளது. நடைமுறையில் நமது அனுப வம் என்னழூ அம்பேத்கர் பெயரை பயன்படுத்த முயன்றுவரும் பா ஜ க வின் கடந்த மூன்றாண்டு ஆட்சியிலும் சாதி ஒடுக்குமுறைக்கு பக்கபலமாக மத்திய அரசும் பா ஜ க தலைமையிலான மாநில அரசுகளும் செயல்படுவதை நாம் பார்க்கிறோம். அவர்களின் தலித் விரோத, முஸ்லிம் விரோத போக்குகள் அம்பலமாகி வருகின்றன. சமூக நீதிக்கு எதிர்ப்பு, இட ஒதுக்கீடு தேவையில்லை என்று அவ்வப்பொழுது அதன் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகள், நிலச்சீர்திருத்தத்தை கிடப்பில் போடுவது மட்டுமின்றி நில ஏகபோகத்தை ஊக்குவிப்பது உள்ளிட்ட பா ஜ க கொள்கைகளும் நடைமுறைகளும் அம்பேத்கர் அவர்களுக்கும் சங்க பரிவாரத்திற்கும் இடையே நிலவுவது முழு முரண்பாடு தான் என்பதை காட்டுகிறது.

அம்பேத்கரும் தாராளமயமும்
பா ஜ க ஆர் எஸ் எஸ் அரசாங்கத்தின் தீவிர தாராளமய கொள்கைகளை அம்பேத்கர் பல பத்தாண்டுகளுக்குமுன்பே தத்துவ அடிப்படையில் நிராகரித்தார். பொருளாதார வளர்ச்சியில் அரசு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். முழு மையான நிலசீர்திருத்தம் வேண்டு மென்றார். முதலாளித்தவ பொருளா தார அமைப்பில் அதிகரிக்கும் ஏற்றத் தாழ்வுகளை அவர் அறிந்திருந்தார். அவற்றை சாடினார்.

“நிலம் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும். அரசு கூட்டு உறவு அடிப் படையில் பாடுபடும் விவசாயிகளின் குழுக்களுக்கு நிலத்தை குத்தகைக்கு தர வேண் டும். வேளாண் வளர்ச்சிக்கு அனைத்து உதவி களையும் அரசு செய்ய வேண்டும்” என்று அம்பேத்கர் கூறியுள்ளார். இந்திய அரசியல் சாசன வரைவு கட்டத்தில் சில முன்மொழிவுகளை அம்பேத்கர் வைத்தார்:
பொருளாதார சுரண்டலை அரசு எதிர்க்க வேண்டும்
முக்கியமான தொழில்கள் அரசுடமையாகவும், அரசால் நடத்தப்படுபவையாகவும் இருக்க வேண்டும்.

இதர அடிப்படையான தொழில்கள் அரசால் அல்லது அரசு நிறுவனங்களால் நடத்தப்பட வேண்டும்.
வேளாண் தொழில், அரசு நிலங்களை கையகப்படுத்தி, விவசாயிகளின் கூட்டமைப்பு களுக்கு குத்தகை கொடுத்து, நடந்த்தப்பட வேண்டும்.

அம்பேத்கர் தெளிவாக சொன்னார்: “அரசு சோசலிசம் இந்தியாவின் வேகமான தொழில் வளர்ச்சிக்கு மிக அவசியம். தனியார் துறை இதனை செய்ய இயலாது.”
தாராளமய தத்துவத்தை அம்பேத்கர் கடுமையாக தாக்கினார். “அரசு தலையிடாவிட்டால் சுதந்திரம் (வெல்லும்) என்ற கூற்றை பற்றி அவர் சொல் கிறார்: யாருக்கு இந்த சுதந்திரம்? நிலபிரபுக் களுக்கு குத்தகையை கூட்டவும், முதலாளி களுக்கு வேலை நேரத்தை கூட்டவும் கூலியை குறைக்கவும் தான் இந்த சுதந்திரம்!”

எனவே சங்க பரிவாரம் அம்பேத்கரை சுவீகரிக்க முயல்வது முற்றிலும் அபத்தமானது. அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு என்று அனைத்து தளத்திலும் அம்பேத்கர் ஆர் எஸ் எஸ் /சங்க பரிவாரத்திலிருந்து முற்றிலும் முரண்படுபவர். முற்போக்கு முகாமிற்கு அவரது சிந்தனைகள் பேராயுதமாக அமையும்.