– பிரகாஷ் காரத்
இந்துத்துவா வகுப்புவாத சக்திகளையும், ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தையும் எதிர்கொள்ள, அரசியல் தளத்திலும், சித்தாந்த தளத்திலும், சமூக மற்றும் பண்பாட்டு தளத்திலும் திட்டவட்டமான அணுகுமுறைகளை உருவாக்கி முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இது நம்முடைய முக்கிய நிகழ்ச்சி நிரலாக உள்ளது.
வகுப்புவாத சக்திகளை எதிர்கொள்வது பற்றி, கடந்த காலத்தில் எடுத்த முடிவுகள் இப்போது போதுமானதாக இல்லை. முந்தைய நிலையில், வகுப்புவாத சக்திகள் சில பிரிவினை திட்டங்களை முன்னெடுத்து இந்து மக்களின் ஆதரவை பெற முயல்வதுடன், சிறுபான்மையினருக்கு எதிரான திட்டங்களை முன்னெடுப்பார்கள். ஆனால் இப்போது இந்துத்துவா வகுப்புவாத சக்திகள் அரசு அதிகாரத்துடன் இயங்குகிறார்கள். இது கடந்த கால சூழலில் இருந்து மாறுபட்டது. இப்போதைய புதிய நிலைமைகளை பயன்படுத்தி, குடியரசின் தன்மையையே மாற்றியமைத்து, அரசியல் சாசனத்தை மாற்றியமைத்து, ‘இந்து ராஷ்ட்டிராவை’ நோக்கி செயல்பட்டு வருகிறார்கள். ஆதரவுத் தளத்தை விரிவாக்கிட, முந்தைய காலத்தில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இருந்து இது மாறுபட்டது ஆகும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிப்படையான இலக்குகளை நிறைவேற்றக்கூடிய போக்கினை நாம் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டியுள்ளது.
பாஜக எப்படிப்பட்ட கட்சி ?
மேம்படுத்தப்பட்ட நம்முடைய கட்சி திட்டம், பாரதிய ஜனதா கட்சியை பிற முதலாளித்துவ கட்சிகளைப் போன்ற இன்னொரு சாதாரண முதலாளித்துவக் கட்சியாக பார்க்கவில்லை. பாஜகவை உருவாக்கியதும், வளர்த்தெடுப்பதும் பாசிச வகைப்பட்ட தத்துவத்தால் வழிநடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமாகும். அவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது, அரசு இயந்திரத்தை பயன்படுத்தி ‘இந்து ராஷ்ட்டிராவை’ நோக்கிய பயணத்தை வேகப்படுத்த முயற்சிப்பார்கள் என்று நம் திட்டத்திலேயே குறிப்பிட்டுள்ளோம். 2000 ஆண்டில் நமது கட்சி திட்டத்தை மேம்படுத்திய போது வாஜ்பாய் அரசாங்கம் இருந்தது.
‘இந்து ராஷ்ட்டிரா’ என்பது இந்து ராஜ்ஜியம் அல்ல. அதாவது அது மத தலைவர்களின் ஆட்சி அல்ல. (ஈரான் நாட்டில் நடப்பதை மத தலைவர்களின் ஆட்சி எனலாம், அதனை ஒத்த ஆட்சியாக இது இருக்காது). ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆட்சி என்பதுதான் ‘இந்து ராஷ்ட்டிரா’ என்பதன் பொருள் ஆகும். ஏற்கனவே அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்ட பின்னணியில் ‘இந்து ராஷ்டிரத்தைக்’ கட்டமைக்கும் பணியும் ஏற்கனவே துவங்கி விட்டது. பாஜக மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ளது. அரசமைப்பின் அடிப்படையான சில அம்சங்களையும், குணாம்சத்தையும் மாற்றியமைக்க முயல்கிறது. நீதித்துறையினுடைய தன்மையையும், அதிகார வர்க்கத்தின் தன்மையையும், ராணுவத்தின் தன்மையையும் மாற்றியமைக்க முயல்கிறார்கள்.
அக்னிபத் திட்டத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அந்த திட்டத்தின் நோக்கம் என்ன?. ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முறையை அரசியல் அடிப்படையிலானதாக திட்டமிட்ட விதத்தில் மாற்றியமைப்பதுதான் அதன் நோக்கம். இவ்வகையில் அவர்கள் ராணுவத்தில் ஆள் எடுக்கும் தன்மையையே மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள்.
பரந்துபட்ட உத்தி அவசியம்
எனவே இதுதான் இப்போதைய நிலை என்கிறபோது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தேர்தல் களத்தில் மட்டும் நடத்தினால் போதாது என்பதை உணர முடியும். தேர்தல் கால உத்திகள் மட்டும் பலன் கொடுக்காது. அவர்கள் தேர்தல் களத்திலும், அரசியல் தளத்திலும் மட்டுமே செயல்படுவதில்லை. தங்களை கலாச்சார அமைப்பு என்று கூறிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ், இந்திய குடியரசின் பண்பு நலன்களை மாற்றியமைப்பதையே இலக்காக கொண்டு செயல்படுவதை ஒட்டுமொத்தமாக கணக்கில் எடுத்து, அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான உத்தியோடு செயல்பட வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்/பாஜக அமைப்புகளால், இந்திய தேசியம் என்ற பெயரில் இந்து பெரும்பான்மை வகுப்புவாதத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளது. 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானத்தில் இதை நாம் குறிப்பிட்டுள்ளோம். மக்களின் மனங்களில் தாக்கம் ஏற்படுத்தி, கருத்தை மாற்றியமைக்க அவர்களால் முடிந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வாழும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சாதாரண மக்களின் மனங்களில் தம் கருத்துக்களை ஆழமாக பதித்துள்ளார்கள். அவர்கள் மட்டுமே உண்மையான தேசியவாதிகள் என்றும், தேசத்தின் மீது அக்கறை கொண்ட சக்திகள் என்றும் பதிய வைத்துள்ளார்கள்.
இந்துக்கள் வலுவடைந்தால்தான் தேசம் வலுப்படும் என்கிறார்கள். இந்த வாதத்தின் மற்றொரு பகுதி இஸ்லாமியர்கள் இந்த தேசத்தை பலவீனமாக்குகிறார்கள் என்பதாகும். இந்துக்கள் என்றால் ’நாம்’, இஸ்லாமியர்கள் என்றால் ’அவர்கள்’. ‘நாம்’ – எதிர் – ‘அவர்கள்’ என்ற உணர்வினை உருவாக்கியுள்ளார்கள். இது கணிசமான மக்களை சென்று சேர்ந்திருக்கிறது.
குறிப்பாக உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இதுதான் நிலைமை. பாஜகவை மக்கள் வலுவான தேசியவாத சக்தியாக பார்ப்பதுடன், பெரும்பான்மை மக்களுக்கு நல்லது செய்வதற்கே அவர்கள் இருப்பதாக பார்க்கிறார்கள். இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்வது?
கடந்த 21, 22 மற்றும் 23 மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்திலும், அரசியல் ஸ்தாபன அறிக்கையிலும் ‘இந்துத்துவாவை எதிர்கொள்வது’ என்ற தலைப்பிலான பகுதி இடம்பெற்று வந்துள்ளது. கடந்த காலங்களில் நாம் பொதுவாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போராடியிருக்கிறோம். பல மாநிலங்களில் இதர முதலாளித்துவக் கட்சிகளை எதிர்த்துப் போராடியிருக்கிறோம். ஆனால் இது அதிலிருந்து வேறுபட்ட ஒன்றாகும். அதனால்தான் நமது தீர்மானங்களில் தனியாக குறிப்பிட வேண்டி வந்தது.
எனவே 2015ஆம் ஆண்டில் இருந்து தனித்துவமாக, இதுபோல சில திட்டவட்டமான உத்திகளை உருவாக்க முயற்சிக்கிறோம். அரசியல் செயல்பாடுகளிலும், கருத்தியல் செயல்பாடுகளிலும் இந்துத்துவா சக்திகளை எதிர்கொள்ளும் விதத்தில் பணிகளை திட்டமிட்டு முன்னெடுக்க கட்சியை தயார்ப்படுத்த வேண்டியுள்ளது. பல தளங்களிலும் நாம் கால் பதிக்க வேண்டியுள்ளது என்பதை கட்சி அணிகளுக்கு உணர்த்திட வேண்டும்.
கட்சியும், பல்வேறு வர்க்க வெகுஜன அரங்கங்களும், தமது வேலை பாணியை மாற்றியமைக்க வேண்டும். கருத்தியல் தளத்திலும், சமூக – பண்பாட்டுத் தளத்திலும், கல்வித் தளத்திலும் பணிகளை திட்டமிட வேண்டும். கடந்த காலத்தில் இந்த பணிகளை பொதுவாக அலட்சியப்படுத்தியே வந்திருக்கிறோம். கட்சி சில முழக்கங்களை முன்னெடுக்கும், தேர்தலை எதிர்கொள்ளும், வர்க்க – வெகுஜன அமைப்புகள் சில முழக்கங்களை முன்னெடுப்பார்கள், போராட்டங்களை நடத்துவார்கள்.
கருத்தியல் தளத்தில் கட்சி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பேசிவந்திருக்கிறோம். ஆனால் இதுவரை அதில் என்ன செய்திருக்கிறோம்? பொதுவாக நம்முடைய கட்சி தொழிலாளி வர்க்க கட்சியாகும். நம்முடைய கட்சியினுடைய கருத்தியல் என்பது தொழிலாளி வர்க்க கருத்தியலே. ஆனால் மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில் வாழும் தொழிலாளர்களோடு பேசினால் அவர்களில் கணிசமானோர் பின்பற்றும் சித்தாந்தம் இந்துத்துவா சித்தாந்தமாக உள்ளது. இந்துத்துவாவை பின்பற்றிக் கொண்டே சிலர் நம்முடைய சங்கங்களிலும் இருப்பார்கள். அதுதான் இப்போதைய சூழல்.
எனவே கருத்தியல் தளத்தில் நடத்த வேண்டிய போராட்டத்தில் நாம் முன்னேற வேண்டியுள்ளது. தொழிற்சங்கம் மட்டுமே இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியாது. கட்சிக்கு தான் அதில் கூடுதலான பங்கு உள்ளது. எனவே அரசியல் தளத்தில் மட்டுமல்லாது, கருத்தியல் மற்றும் சமூக தளத்திலும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.
சில மாநிலங்கள் இந்த சூழலில் விதிவிலக்காக அமைந்துள்ளன. தமிழ்நாட்டினை உதாரணமாக பார்க்கலாம். தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகள் பிரதான இடத்தில் இல்லை. ஆனாலும் அவர்கள் வளர முயற்சிக்கிறார்கள். இன்றுள்ள நிலைமையை கணக்கில் எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டிலோ, ஆந்திராவிலோ, கேரளத்திலோ ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய செல்வாக்கிற்கு மக்கள் உட்பட மாட்டார்கள் என்ற நினைப்பில் இருந்துவிடக் கூடாது. ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் அவர்கள் கணிசமான செல்வாக்கை பெற்றுள்ளார்கள். பிரதான சக்தியாக உள்ளார்கள். தெலங்கானாவிலும் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளார்கள். தமிழ் நாட்டில் ஒரு பெரிய சக்தியாக வளர்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்களுக்கு தெரியும். அதற்கு இந்த மாநிலத்தின் அரசியல், கருத்தியல், சமூக சூழல் ஒரு காரணமாக உள்ளது. திராவிட சித்தாந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை சொல்லலாம். ஆனாலும் அவர்கள் இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், தமது குறைபாடுகளை மீறி முன்னேறுவதற்கும் பல தளங்களிலும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பட்டியல் இனத்தின் மீது குறி !
ஆர்.எஸ்.எஸ் என்றால் ”உயர்” சாதி அமைப்பு எனபலர் நினைக்கிறார்கள். ஆம் அவர்கள் சிந்தனை, கருத்தியல் இரண்டிலும் நிச்சயமாக “உயர்” சாதி ஆதிக்க கருத்தியல் கொண்டவர்கள்தான். ஆனால் ”உயர்” சாதியினரை மட்டும் கொண்ட கட்சியாக மட்டுமே அவர்கள் இல்லை.
உத்திரப்பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் ஓபிசி யை சேர்ந்த பெரும்பகுதியினர் பாஜக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அதே போல் தலித் மக்களில் குறைந்த பட்சம் 50 சதவிகிதம் பாஜக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமானது?. முன்பு ”உயர்” சாதியினர் கட்சியாக பார்க்கப்பட்ட கட்சி, இன்றைக்கு ஓபிசி, எஸ்சி /எஸ்டி மத்தியிலும் வளர்ந்திருக்கிறது என்றால் இது எப்படி நடந்தது? அவர்கள் குறிப்பாக சில சாதிகளைக் குறிவைத்து தங்களுடைய பணிகளைச் செய்தார்கள். அனைத்து இந்து மக்களின் பிரச்சனைகளையும் எடுப்பவர்களாக, அவர்களுக்கான கட்சியாகவும் தங்களை அடையாளப்பட வைப்பதற்கான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த காலத்தில் ஆர்எஸ்எஸ் உருவாக்கிய அரசியல் கட்சி யான ஜன சங்கத்தை பனியா கட்சி என்று சொல்வதுண்டு, அதற்குப் பிறகு பாஜக உருவான பின்பும் தொடக்க கட்டத்தில் அவர்களை பனியா கட்சி என்றே குறிப்பிடப்பட்டு வந்தது.
பனியா என்பது வடமாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பட்ட சமூகம். குறிப்பாக வியாபாரிகள் வணிகர்கள்; அவர்கள் ஜெயின் அல்லது குப்தாக்களாக இருக்கலாம். மார்வாடிகளாக இருக்கலாம். ஒரு வியாபாரம் செய்யக்கூடிய சமூகம். அவர்கள் மத்தியில் பாஜக வலுவாக இருந்தது. எனவே பாஜக அல்லது அதற்கு முன்னதாக ஜனசங்கத்தினுடைய வளர்ச்சி என்பது நகர்ப்புறங்களைச் சார்ந்து இருந்தது. ஆனால் இன்றைக்கு உத்தரப்பிரதேசத்தில் பட்டியலினத்துக்கான தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளில் அவர்கள் வெற்றிபெற முடிகிறது.
மாயாவதியினுடைய பகுஜன் சமாஜ் கட்சி இருக்கிறது என்பது உண்மைதான். அந்த கட்சி யார் மத்தியில் இருக்கிறது என்று சொன்னால், பட்டியல் சாதிகளில் உள்ள குறிப்பிட்ட துணை சாதி மத்தியில்தான் அவர்கள் ஆழமாக இருக்கின்றனர். பட்டியல் இனத்தின் இதர துணை சாதிகளுக்குள் பாஜக ஏகமாக வளர்ந்துள்ளது. பட்டியல்/பழங்குடி பிரிவினரை அவர்கள் குறிவைக்கிறார்கள்.
கடந்த 30, 40 ஆண்டுகளாகவே ஆர்எஸ்எஸ் பழங்குடியினர் மத்தியில் ஆழமாக வேலை செய்து வந்தது. ஒரு நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில்தான் அவர்கள் பணியாற்றி வந்தார்கள். இவர்களின் ஊடுருவலை நாம் கவனித்து நோக்க வேண்டும்.
பாஜக என்பது நால் வருணத்தில் நம்பிக்கை உள்ள கட்சிதான், மதவாதத்தைப் பின்பற்றுகிற கட்சிதான். இருந்தாலும் அவர்களுடைய அரசியல் நோக்கத்திற்காக அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் தேவை அவர்களுக்கு இருக்கிறது. அதனை முயற்சிக்கிறார்கள்.
தெரிந்த பல அமைப்புகள் ஆர்எஸ்எஸ் அமைப்புகளாக இருக்கும். இந்து முன்னணி போல சிலதை சொல்லலாம். ஆனால், தெரியாமல் பல்வேறு அமைப்புகள், என்ஜிஓ-கள் ஆர்எஸ்எஸ் வழிகாட்டி நடத்தக்கூடிய அமைப்புகளாக இருப்பார்கள். குறிப்பாக இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் அவர்களுக்கு நிதி என்பது ஒரு பிரச்சனையாக இல்லை.
கேரளாவில் பழங்குடியின மக்கள் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதம் கூட இருக்க மாட்டார்கள். ஆனாலும் ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய பெரும்பகுதி என்ஜிஓ கள் செயல்படும் பகுதி பழங்குடியின மக்கள் பகுதிதான். எனவே ஆர்எஸ்எஸ் நடவடிக்கைளுடைய எல்லை என்ன ?ஆழம் என்ன ? அதனுடைய தன்மை என்ன? வகைகள் என்ன ? என்பதை சரியாக புரிந்துகொண்டு எதிர்க்க வேண்டும்.
கருத்தியல் நடவடிக்கைகள்
இதற்கான திட்டத்தை உருவாக்குவதற்கான பரந்த வழிகாட்டுதல், 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் ஸ்தாபன அறிக்கையில் தெளிவாக தரப்பட்டுள்ளது. அதில் முதல் விசயம், கருத்தியல் நடவடிக்கைகள் ஆகும். இந்துத்துவ வகுப்புவாத கருத்தியலை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கான ஏராளமான விபரங்களை கொண்ட பிரசுரங்கள், வகுப்பு குறிப்புகள், பிரச்சார கருவிகளை, சமூக வலைத்தள உள்ளடக்கங்களை உருவாக்க வேண்டும். இவற்றை உள்ளூர் மட்டத்திலேயே சுலபமாக செய்துவிட முடியாது. கட்சியின் மத்தியக்குழுவும், மாநிலக்குழுவும் இணைந்து குறிப்பிட்ட காலவரையறைக்குள் இதனை முடிக்க வேண்டும். சமூக வலைத்தளத்தையும் வலுப்படுத்தி கருத்தியல் பிரச்சார நோக்கில் பயன்படுத்த வேண்டும்.
இரண்டாவது விசயம், கட்சி மக்களோடு உயிரோட்டமான தொடர்பில், இரண்டற கலந்திருக்க வேண்டும் என்கிற மாஸ்லைன் கடைப்பிடிப்பது. மக்கள் மத்தியில் நம்முடைய தலையீடுகளும், பணிகளும் விரிவாக நடக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இது கட்சிக்கும், வெகுஜன அமைப்புகளுக்கும் பொருந்தும். மக்களோடு உயிர்ப்பான ஒரு தொடர்பில் இருக்க வேண்டும் என்பது கொல்கத்தா பிளீனத்தில் இருந்தே சொல்லப்படுகிறது. மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு என்று சொல்வதன் மற்றொரு அம்சம், பல்வேறு நல நடவடிக்கைகளை, சமூக சேவை நடவடிக்கைகளை முன்னெடுப்பது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இது போன்ற பணிகளை மேற்கொள்கிறார்கள். நாம் கட்சியாகவும், வர்க்க வெகுஜன அமைப்புகளின் வழியாகவும் இதனைச் செய்ய வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கல்வி தளத்தில் செயல்படுகிறது. அவர்களை போல ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களை நாம் நடத்த முடியாது. ஒன்றிரண்டு நடத்தலாம். ஆனால் இளைஞர், மாணவர் அமைப்புகள் கல்வி தளத்தில் பங்களிக்க முடியும். உதாரணமாக மாலை நேர கல்வி (டியூசன்) மையங்கள் நடத்தலாம். தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் நடத்தலாம். படிப்பு வட்டங்கள், நூலகங்களை நடத்த முடியும்.
அதே போல, பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பண்பாட்டு நடவடிக்கை என்றாலே கலைக்குழு அமைப்பு, பாடல்குழு, வீதிநாடகக்குழு என்பது மட்டுந்தான் நினைவில் வருகிறது. அந்த பணிகள் இன்னும் பரந்து பட்டதாக இருக்க வேண்டும். நமக்கு அப்பாற்பட்ட மக்களை ஈடுபடுத்தகூடிய விதமான நடவடிக்கைகளாக செய்ய வேண்டும். உதாரணமாக புத்தகத் திருவிழாக்களை சொல்லலாம். மாணவ/மாணவியருக்கான பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தலாம். இந்த நடவடிக்கைகளை கட்சியாக மட்டும் நடத்த முடியாது. வர்க்க வெகுஜன அமைப்புகளும் செய்ய வேண்டும். குறிப்பாக தொழிற்சங்கள் சில முயற்சி எடுத்து, தொழிலாளர் வாழும் பகுதிகளில் பண்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.
அடுத்து வளர்த்தெடுக்க வேண்டியது பாலர் சங்கம், சில மாநாடுகளாகவே நாம் பாலர் சங்கம் பற்றி பேசுகிறோம். இந்த விசயத்தில் தீவிர முன்முயற்சி ஏதும் இல்லை. அதனால்தான் பாலர் சங்கத்தை உருவாக்குவதை மாநாட்டின் கடமையாகவே நாம் வரையறுத்திருக்கிறோம். கேரளாவில் இவ்விசயத்தில் நமக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. ஒரு பரந்த அமைப்பாக பாலர் சங்கத்தை கட்டமைத்திருக்கிறார்கள். பாலர் சங்கத்தை உருவாக்கும் போது, கட்சி ஏற்கனவே கணிசமாக இருக்கும் பகுதி, செல்வாக்கு இருக்கும் பகுதியில் தொடங்கினால், இதர பகுதிகளுக்கும் விரிவாக்க முடியும் என்பது கேரள அனுபவம்.
மத விழாக்கள்
கோவில் திருவிழாக்களிலும், மத விழாக்களிலும் பங்கெடுத்தல் அடுத்து வருகிறது. பொதுவாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கோவில்களை, மத நம்பிக்கைகளை பயன்படுத்துகிறார்கள். கோவில் என்று சொல்லும் போது மதம் சார்ந்த நடவடிக்கைகள் இருக்கும். அடுத்து கோவில் திருவிழாக்கள் என்று சொல்லும் போது அது மதம் சார்ந்த நடடிவடிக்கையாக மட்டும் இல்லாமல் ஒரு சமூகம் சார்ந்த நடவடிக்கையாகவும் இருக்கும் ஏரளாமான மக்களுடைய பங்கேற்பும் இருக்கும். நாம் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க முடியாது.
திருவிழாக்களை நாம் முற்றிலும் நிராகரித்துவிட முடியாது. ஆனால் எந்த திருவிழாவில் பங்கேற்பது. எந்த அளவில் பங்கேற்பது என்பது பற்றி ஓரே சீரான முடிவினை மேற்கொள்ள முடியாது. ஒவ்வொரு திருவிழாவின் தன்மையை பொருத்து முடிவு செய்ய வேண்டும். சில திருவிழாக்கள் முழுக்க முழுக்க மதம் சார்ந்த நடவடிக்கையாக மட்டும் இருக்கும். அதில் சமூக ரீதியான பங்கேற்பு பெரியதாக இருக்காது. எனவே ஒவ்வொரு திருவிழாக்களின் தன்மையை கணக்கில் எடுத்து உள்ளூர் மட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும்.
கோயில்களுக்கும் சமூக வாழ்க்கையில் பாத்திரம் உள்ளது. அவைகளை ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகள் கையகப்படுத்துகிறார்கள். இந்துத்துவா நடவடிகைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். நாம் அதனை அப்படியே தங்குதடையில்லாமல் அனுமதிக்க முடியாது. எனவே கோயில் நிர்வாகத்தில் நாமும் தலையிட வேண்டும். அதற்காக கட்சியின் முக்கிய ஊழியர்கள் அதனை செய்ய முடியாது. கட்சி ஆதரவாளர்கள், மதச்சார்பற்ற மனநிலை கொண்ட நம்பிக்கையாளர்கள் அதில் இணைந்திட முடியும். இது அத்தனை எளிதாக இருக்காது. ஆனால் நாம் இதன் மூலமே கோயில்களை ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டுக்கான களமாக மாறாமல் தடுக்க முடியும்.
விளையாட்டு விழாக்கள், யோகா பயிற்சி போன்ற வேறு பல சமூகம் சார்ந்த நடவடிக்கைகளும் அவசியமே.
பொதுவாகவே மக்கள் மத்தியில் மத உணர்வு அதிகரித்துள்ளது. (மதவாதத்தை குறிப்பிடவில்லை). கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் மத்தியிலும் மத உணர்வு கூடுதலாகியுள்ளது. மதத்திற்கு எதிரான போராட்டத்தை நாம் நடத்துவதில்லை. அதற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. மதவாத சக்திகள், மதவெறி சக்திகளை எதிர்த்த போராட்டத்திற்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறோம்.
நேரடியாக மதத்தை விமர்சிக்காத அதே சமயத்தில் அறிவியல் ரீதியான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், அதே போல முற்போக்கான சிந்தனைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மூடநம்பிக்கைகளையும், பழமைவாதத்தையும் எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும். இதுபோன்ற முயற்சியின் மூலம் சமூகத்தை அறிவியல் பாதையில், முற்போக்கு பாதையில் செலுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
சிறுபான்மை வகுப்புவாதம்
ஆர்எஸ்எஸ் இந்துத்துவச் சக்திகள் வளர்கிறார்கள். அந்த வளர்ச்சி மட்டும் தனியாக நடப்பதில்லை. இன்னொரு பக்கம் இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளும் வளர்கிறார்கள். அதிலிருந்தும் ஆர்.எஸ்.எஸ் பலனடைகிறது. 1990 களில் கோவையில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம்.
பொதுவாக நாடு முழுவதுமே இஸ்லாமிய மக்கள் மிக மோசமான தாக்குதலுக்கு ஆளாகிவருகிறார்கள். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இரண்டாம்தர குடிமக்களாக வேகமாக மாற்றப்பட்டு வருகிறார்கள். எல்லாக் குடிமக்களுக்கும் உரிய அடிப்படையான உரிமைகள் கூட இஸ்லாமிய மக்களுக்குமறுக்கப் படுகின்றன. எனவே இந்த மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளப்படுகிறார்கள். அந்த மாதிரியான சூழலில் அவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாத, தீவிரவாத அமைப்புகள் பக்கம் திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அதனுடைய அரசியல் கட்சியான எஸ்டிபிஐ, அதைப்போல ஜமாத்-இ-இஸ்லாமி அதனுடைய அரசியல் கட்சியான வெல்பேர் பார்ட்டி போன்றவற்றை நோக்கி ஒரு பகுதி சிறுபான்மையினர் திரும்ப வாய்ப்பு இருக்கிறது.
தீவிரவாத போக்குகள் சிறுபான்மை மக்கள் மத்தியிலிருந்து வந்தாலும் அதை கடுமையாக எதிர்க்க வேண்டும். இந்துத்துவ சக்திகளை எதிர்த்து விட்டு, சிறுபான்மை தீவிரவாதத்தை எதிர்க்கவில்லை என்று சொன்னால், சாதாரண மக்களுக்கு நம் மீது நம்பகத்தன்மை வராது. அது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு சாதகமாகிவிடும். நம்முடைய நோக்கம் அனைத்து மதங்களையும் சார்ந்த மக்களை ஒரே அணியில் இணைத்து மதவெறிக்கு எதிரான, மதவாதத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளூர் அளவில் திட்டமிட்டு, திட்டவட்டமாக முன்னெடுக்க வேண்டும். மாநில அளவிலும், அகில இந்திய அளவிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நாடும், நாட்டு மக்களும் எதிர்கொள்ளும் தீவிர அபாயத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.
தமிழில்: உ.வாசுகி
தொகுப்பு: எம்.கண்ணன் (தீக்கதிர்)