மோடி ஆட்சியின் மூன்றாண்டுகள்: வகுப்புவாத பிளவு அரசியல்

– க.கனகராஜ்

அனைவருக்கும் வளர்ச்சி, அனைவருக்குமான இந்தியா என்கிற முழக்கத்தோடு 2013ம் ஆண்டு முதல் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய நரேந்திர மோடி அந்த காரணங்களுக்காகவே 2014 தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்றார். ஆனால் கடந்த மூன்றாண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் மத்திய அரசின் கொள்கையின் தாக்கத்தால் மிகப்பெரிய சரிவை இந்தியா கண்டு வருகிறது. மூன்றாமாண்டு நிறைவு விழாவை கொண்டாட வழக்கம் போல ஒரு பேர் வைத்தார்கள். அதற்கும் MODI (Making of developed India) என்றே பெயர் வைத்தார்கள். அதாவது வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குதல். இந்தியா முழுவதும் 900 நகரங்களில் கொண்டாட்டங்கள் நடத்துவது, மோடியின் கடிதங்களை 10 கோடி குறுஞ்செய்திகளாக பொதுமக்களுக்கு அனுப்புவது, 400 பத்திரிகைகளில் முதல் பக்க விளம்பரங்களை வெளியிடுவது, மோடியின் கண்ணோட்டங்களையே சாதனைகளையும் 30 நொடி, 60 நொடி விளம்பரங்கள் மூலம் தொலைக்காட்சிகளிலும், வானொலி களிலும் 22 நாள் ஒளிபரப்புவது, 300 நகரங்களில் பல்துறை ஊடக கண்காட்சிகளை நடத்துவது, ‘நேற்றும் – இன்றும்’ என புத்தகம் வெளியிடுவது என்றெல்லாம் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாக இந்த எல்லா திட்டங்களையும் அவர்கள் மூட்டைக்கட்டி வைப்பதற்கு காரணம் ஒவ்வொரு துறையிலும் சரிவை சந்தித்திருப்பது தான்.

ஆயினும் இந்தியா முழுவதும் சமீபத்திய தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது விவசாயிகள் பிரச்சனை தீவிரமாக வெடித்துக் கிளம்பிய மகாராஷ்டிரா, ஹரியானா, உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், தேர்தல்களிலும் பிஜேபி மிகப் பெரிய வெற்றிகளை பெற்றுள்ளது. இது இந்தியாவின் எதிர்காலம் குறித்த ஆழமான கேள்விகளையும், கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

(மூன்றாண்டுகளில் அரசியல், வகுப்புவாதம், பொருளாதாரம் ஆகிய முனைகளில் பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து உ.வாசுகி, க.கனகராஜ், வெங்கடேஷ் ஆத்ரேயா ஆகியோர் எழுதியுள்ளனர்.)

பிஜேபி 2014ம் ஆண்டு தேர்தல் அறிக்கை யில் மிகவும் அலங்காரமான வார்த்தைகள், சொற் றொடர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி ஒரு புதிய இந்தியாவை வளங்களும், அமைதியும் பூத்துக் குலுங்கும் ஒரு இந்தியாவை உருவாக்கப் போவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியது. ஆனால் தேர்தல் அறிக்கையில் கடைசி பகுதியில் உள்ள சில அம்சங்கள் பலராலும், கவனிக்கப்பட முடியாத அளவிற்கு அல்லது கவனித்தாலும் புறக்கணிக்கத் தக்க வகையில், அவர்களின் சொல்லாடல்கள் அமைந்துள்ளன.

தேர்தல் அறிக்கையில்
தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் – சமமான வாய்ப்பு என்றவகையில் ஒரு பகுதி எழுதப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதி பல பத்தாண்டு கள் கடந்த பிறகும் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லீம்கள் வறுமையில் உழல்கிறார்கள், நவீன இந்தியா அனைவருக்கும் வாய்ப்பளிப்பதாக அமைய வேண்டும். இந்தியாவின் முன்னேற்றத் தில் அனைவரும் சம பங்காளிகளாக இருக்க வேண்டும். இந்திய மக்களின் எந்தவொரு பகுதி பின்தங்கினாலும் இந்தியா முன்னேற முடியாது என்றெல்லாம் அது தேர்தல் அறிக்கையில் உறுதி யளித்திருந்தது. அதுமட்டுமின்றி முஸ்லீம்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப் படும் என்றும், உருது மொழி பாதுகாக்கப்பட்டு அதை வளர்ப்பதற்கு திட்டங்கள் உருவாக்கப் படும் என்றும் உறுதியளித்திருந்தது.
ஆனால், தேர்தல் அறிக்கையின் இறுதி பகுதி யில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமருக்கு கோயில் கட்டுவோம் என்றும், பசுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த அனைத்து நடவடிக்கைகள் எடுப்போம் என்றும், இந்தியா வில் உள்ள அனைத்து மொழிகளையும் பாதுகாக்க வும், மேம்படுத்தவும் முக்கியமான நடவடிக்கை கள் எடுக்கப்படும் என்றும், பொது சிவில் சட்டத்தை உருவாக்குவோம் என்றும் அறிவித் திருந்தது.
இந்த அறிக்கையை வாசிக்கும் போதே பாஜக எப்படியெல்லாம் சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளி இருப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி வைத்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். வளர்ச்சி என்கிற தோற்றத்தை முன் னிறுத்தி வகுப்புவாத வெறியை கிளப்புவதன் மூலம் தேசத்தை பிளவுபடுத்தி, வளர்ச்சியின்மை, வளர்ச்சி குறைவு அல்லது பின்னோக்கிய வளர்ச்சி எதுவானாலும் மறைந்து போகும் அளவிற்கு தனது நிகழ்ச்சி நிரலை அது அமைத்துக் கொண்டது.

மோடியின் பொய்யுரைகள்
மக்களின் துயரங்களை அவர்கள் உணராத படி திசை திருப்புவதற்காக பல பிரச்சனைகளில் அது தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இன்னும் குறிப்பாக தான் சிரமத் தில் இருக்கும் போதெல்லாம் முன்வைப்பதை நழுவ விட முடியாத நிகழ்ச்சி நிராக அது வைத் திருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் சில விஷயத்தை போகிற போக்கில் பேசுவது போல சொல்லிவைத்து விட்டு போனார். முதலாவதாக, உத்தரப்பிரதேசத்தில் இடுகாடுகள் இருக்கும் பரப்பளவையும், சுடுகாடுகளுக்கான பரப்பள வையும் ஒப்பீட்டு இடுகாடுகளுக்குத் தான் அதிக நிலம் இருக்கிறது என பேசினார். அதன்பொருள் முஸ்லீம்களுக்கான மயானங்கள் கூடுதல் பரப் பளவில் இருப்பதாக பெரும்பான்மை மக்களுக்கு செய்தி அனுப்புவது தான் நோக்கம். இஸ்லாமி யர்கள் பினங்களை எரிப்பது கிடையாது. ஆனால் பின்னர் கிடைத்த விபரங்கள் பிரதமரின் பேச்சு உண்மைக்கு புறம்பானது என்பதை நிறுவியது. இந்து மற்றும் முஸ்லீம் மக்களிடையே வன்மத்தை யும், பகையையும், முரண்பாட்டையும், தீராத மோதலையும் உருவாக்கும் நோக்கம் கொண்டது. உண்மை விபரங்கள் வெளிப்படுவதற்கு முன் பாகவே மோடி நினைத்தது நிறைவேறிவிட்டது.
இதற்கு முன்பு ஆண்ட அரசாங்கங்கள் எல்லாம் முஸ்லீம்களுக்கு மிக அதிகமாய் சுடு காட்டு இடத்தைக் கூட சலுகை அளிப்பது போன்றும், இந்து மக்களை வஞ்சித்து விட்டது போன்றும் நம்பச் செய்தார். தேர்தல் அறிக்கை யில் இந்தியா சுதந்திரம் அடைந்து பல பத்தாண்டு கள் ஆன பின்பும், இஸ்லாமிய மக்கள் வறுமை யில் வாடுவதாக சொன்ன பிரதமர் தான் இந்த விஷயத்தை ஊதிபெரிதாக்கினார்.

பொய்களின் சங்கிலித் தொடர்
இதேபோன்று தீபாவளி தினத்தன்று உத்தரப்பிர தேசத்தில் செலவழிக்கப்படும் மின்சாரம் ரம்ஜான் தினத்தன்று செலவழிக்கப்படும் மின்சாரத்தை விட குறைவு என்று அவர் கூறினார். எனவே இதை சரிசெய்வதற்கான ஒரு அரசாங்கம் வரவேண் டாமா என்று கேட்டார். அவர் இந்து என்றோ, முஸ்லீம் என்றோ பேசவில்லை. ஆனால், தீபா வளியும், ரம்ஜானும் குறியீடுகளாக்கப்பட்டு வன்மத்திற்கு உரமிட்டன. உண்மையில் அதற்கு பின்பு கிடைத்த புள்ளி விபரங்கள் பிரதமரின் கூற்று உண்மையல்ல என்பது மட்டுமல்ல, அப்பட்டமான பொய்; மோசடி என்பதை வெளிப் படுத்தியது. ஆனாலும் என்ன? ஏற்கனவே பிளவு பட்டிருந்த மனங்களுக்கு இடையே அவரால் மிகப்பெரிய சுவரை ஏற்படுத்த முடிந்தது. அவர் எதிர்பார்த்தது போலவே சுவற்றிற்கு இருபக்கம் இருந்து ஒருவரை எதிர்த்து வன்மத்தை வளர்த் துக் கொண்டனர். எல்லாவற்றையும் விட தேர் தலுக்கு முன்பாக கான்பூரில் நடந்த ரயில் சாவு களுக்கு காரணமான சதிகாரர் நேபாளத்தில் இருக்கிறார் என்று பேசிவிட்டு போனார். அதற்கு பின்னர் தேர்தல் முடிந்த பிறகு ரயில்வேத்துறை உயர் அதிகாரி கான்பூரில் நடந்தது விபத்தே தவிர நாச வேலை அல்ல என்று உறுதிப் படுத்தினார். மோடி அவர்களின் இந்த பற்ற வைப்பு ஏற்கனவே பொதுபுத்தியில் உருவாக்கப் பட்டுள்ள சதிச்செயல், நாசவேலை, தீவிரவாதம், பயங்கரவாதம் இவையெல்லாம் இஸ்லாமியர் களின் இஷ்டபூர்வமான நடவடிக்கை என்று கட்டமைக்கப்பட்டிருந்த பொதுபுத்தியில் எவ்வித மதவெறி நோக்கமும் இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட 100 பேர் வரை உயிரிழக்க காரண மானவர்கள் முஸ்லீம்கள். அதற்கு காரணம் அவர்கள் பின்பற்றுகிற மதம். இவர்கள் கொழுத்து அலை வதற்கான காரணம் இதுவரையிலும் இந்தியாவை ஆண்ட அரசியல் கட்சிகள் அவர்களுக்கு ஏராள மாய் சலுகைகள் அள்ளி கொடுத்துவிட்டார்கள். அவர்களை தட்டிக் கேட்பதற்கு ஒரு துணிச்சல் மிக்க 56 அங்குலம் மார்பு கொண்டு ஒரு மனிதன் வந்துவிட்டார். அவர் தான் இந்த தீய சக்தி களிடமிருந்து தங்களை காக்கப் போகிறார் என் கிற எண்ணத்தை உருவாக்கிவிட்டது.

இவர் இதை இப்படி பற்ற வைத்தப் பிறகு இந்துக்களுக்கு போதுமான இடுகாடு வேண்டும் என்றால், தீபாவளியை ரம்ஜான் போல கொண்டாட வேண்டுமென்றால், தீவிரவாதத்தால் இந்தியர்கள் இறக்காமல் இருக்க வேண்டுமென்றால், மோடி யின் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற உணர்வை பொதுவெளியில் உருவாக்கியது. இதற்கு எதிராக எவர் நின்றாலும் அவர் பெரும் பான்மை சமூகத்திற்கு எதிரானவர், இந்தியாவின் மீது தேச பக்தியற்றவர் என்கிற அடுத்த நிலைக்கு மாநிலத் தலைவர்கள் இந்த பிரச்சாரத்தை முன்னிறுத்தி சென்றார்கள்.
முஸ்லீம்கள் குறிப்பிட்ட பகுதியில் கூடுதல் எண்ணிக்கையோடும் பெரும்பான்மை சமூகங் கள் சூழப்பட்டுள்ள பகுதிகளிலும் இந்தப் பகுதி யில் எங்களுக்கு எதிரான வாக்குகள் முஸ்லீம் களின் வாக்குகளாகத்தான் இருக்க முடியும். எனவே தேர்தலுக்குப் பின்பு எங்களுக்கு எதிராக வாக்களித்ததாக தெரியும்பட்சத்தில் முஸ்லீம் குடியிருப்புகள் தாக்கப்படும். அவர்கள் நிம்ம தியாக வாழ முடியாது. இந்த பகுதியில் குடியிருக்க வும் முடியாது என்கிற பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பிஜேபிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் கூட வேறுவழியின்றி ஆதரவாக வாக்களித்தார்கள். இல்லையேல் தங்களுடைய ஒட்டுமொத்த வாழ் வாதாரமும், வாழ்வும், வாரிசுகளும் சிதைக்கப் படும் என்கிற நீங்கா அச்சத்தை அவர்களால் உருவாக்க முடிந்தது. தேர்தலுக்கு பின்பும் கூட இந்த அச்சம் இருப்பதின் காரணமாக எதிர்ப்பு களை செயல்படவிடாமல் செய்ய முடிகிறது. இதனால் இன்னும் பலமாகவும் அச்சுறுத்தல் என் கிற நிலைமையிலிருந்து நேரடியான தாக்குதல் என்ற நிலைமைக்கு இது மாறியது.

மாட்டிறைச்சி வன்முறைகள்
இதேபோன்று தாத்ரியில் இக்லாக் மாட்டி றைச்சி வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்டு கொல்லப்பட்ட தினத்திலின்று இன்னும் கூடு தலாக இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள், வெளியி லிருந்து வந்த மதத்தை பின்பற்றுபவர்கள், ஆக்கிர மிப்பாளர்களின் மதத்தை பின்பற்றுபவர்கள், விடுதலைக்கு முன்பு இருந்த தேசத்தை இரண்டா கப் பிரித்து அண்டை நாடாக இருந்து கொண்டு தொல்லைக் கொடுத்து கொண்டிருக்கும் பாகிஸ் தானுக்கு ஆதரவானவர்கள் என்கிற பொதுப் புத்தி தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்டு ஒரு பிளவை உருவாக்குவதற்கான முயற்சியை அவர் கள் மேற்கொள்கிறார்கள். அப்பாவி மக்களிடம் இன்னும் சொல்லப்போனால் படித்த இளைஞர் கள் பலரிடமும் கூட இந்த பேச்சுக்கு ஒரு அங்கீ காரமும், ஆதரவும் கிடைத்திருப்பது அவர் களுக்கு ஊக்கமளித்திருக்கிறது.

பிரித்தாளும் சூழ்ச்சி
எனவே ஆளும் வர்க்கம் நெருக்கடியில் சிக்கிக் கொள்கிற போது அதிலிருந்து திசை திருப்பு வதற்கு வகுப்புவாத நிகழ்ச்சி நிரல் பயன்படுத்தப் படுகிறது. மக்களின் மீதான தாக்குதலுக்கு எதிராக போராடுவதற்கு பதிலாக ஒருவருக் கொருவர் கற்பனையான பிரச்சனைகள் அல்லது எதிரிகள் கட்டமைக்கப்பட்டு பரஸ்பரம் மோதிக் கொள்ள உந்தித்தள்ளுகிறது. இந்தியா இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் மிகக்கடுமையான நெருக்கடிகளுக்கிடையே எவ்வித கவலையும் அற்று பாஜக இருப்பதற்கான காரணம் இந்த வகுப்புவெறியை பொதுவெளியில் கட்டமைத்து வைத்திருப்பது தான். பள்ளி பாடங்கள் மூலமாக ஒவ்வொரு கலாச்சார நடவடிக்கைகயிலும் தலை யிடுவதன் மூலமாக பிற மதத்தவர்களால் தங் களது பொருளாதாரம், வேலைவாய்ப்பு பறிக்கப் பட்டிருக்கிறது என்று நம்ப வைக்கப்படுவதும் இவற்றிலிருந்து மதவெறி கொண்ட ஒருவரால் தான் நம்மை காக்க முடியும் என்கிற மனநிலையில் கட்டமைப்பதுமே அடிப்படையான காரணமாக இருக்கின்றது.

தமிழகத்திலும் மதவெறித்திட்டம்
இதுவே இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவாலாக முன்நிற்கிறது. சங்பரிவார் அமைப்புகள் சமீப காலத்தில் தமிழகத்தை எவ்வாறு மதத்தின் அடிப்படையில் வன்மத்தை கட்டமைக் கிறார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக் கிறோம். திருப்பூரில் தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் பிணம் தொங்கிக் கொண்டிருந்த இடத்தில் பிரதமர் படத்திற்கும், இந்து முன்னணி பாஜக கொடிகளுக்கு செருப்பு மாலை அணி விக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இது ஒரு கொலை போலவும், அரசியல் எதிரிகள் அல்லது மதவன்முறையாளர்களால் இது நிகழ்த்தப்பட்டது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. பின்னர் இது தற்கொலை என்பது உறுதியானது. அதா வது சங்பரிவார் அமைப்புகள் ஒரு தற்கொலையை கொலை எனவும், அது மத தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது என்றும் நம்ப வைக்க முயற் சித்தார்கள். அது முறியடிக்கப்பட்டு விட்டது. ஆனால் இந்த ஜோடனை செய்தவர்கள் அதுவும் ஒரு பிணத்தைச் சுற்றிலும் இவ்வளவு ஏற்பாடு களை செய்தவர்கள் யார் எங்கிற கேள்வி வெளி யில் வராமல் பார்த்து கொண்டார்கள். ஆனால் அது கொலை என்று அவர்கள் கூறியது பொது மக்களிடம் ஏற்புத்தன்மை பெற்றிருந்தால் மிகப் பெரிய வன்முறை வெடித்து இஸ்லாமிய மக்களும், அவர்களது சொத்துக்களும் அழிவுக்குள்ளா கியிருப்பார்கள்.
இதேபோன்று சமீபத்தில் ஜூன் 22ந் தேதியன்று ராமநாதபுரத்தில் பாஜக நிர்வாகிகள் ஒருவரும், அவரது தகப்பானாரும் தாக்கப்பட்ட சம்பவத்தை யொட்டி பாஜக நிர்வாகிகள் அது முஸ்லீம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட வன் முறை என்று பொதுவெளியில் பிரச்சாரம் செய்தார் கள். நல்லவேளை சில நாட்களுக்குள்ளேயே உண்மை யான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்தனை பேரும் இந்து பெயர் களை தாங்கியவர்கள். ஆனால் ஒரு மத மோதலை உருவாக்கும் நோக்கத்தோடு உடனடி யாக முஸ்லீம் தீவிரவாதிகள் தாக்கி விட்டார்கள் என்று பாஜகவின் மூத்த நிர்வாகிகளே பேசுகிறார் கள். இது தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் அடிப்படையான செயல் படும் முறையாக இந்தியா முழுவதும் இருக்கிறது. தங்களுக்கு இருக்கும் ஆட்சியதிகாரத்தை பயன் படுத்திக் கொண்டு சமூக அமைப்பில், அரசமைப் பில் ஒவ்வொரு துறையிலும் இதைச் செய்வதன் மூலமாக தங்கள் அரசியல் பலத்தை மேம்படுத் திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

 

வரலாற்றைத் திரித்து வழங்குதல்!

ஜியா உஸ் சலாம்

தமிழில் தழுவி எழுதியவர்: கி.ரா.சு.

பாஜக ஆட்சிக்கு வரும்போது வரலாற்றைத் திரித்து அனைவரின் மனங்களிலும், குறிப்பாக இளம் மனங்களில் மதவெறியைத் திணிக்கும் வகையில் வரலாற்றைத் திரித்து எழுதுவது வழக்கமாகி விட்டது. இதை வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும் பார்த்தோம்; ராமஜென்ம பூமி விஷயத்திலும் பார்த்தோம்; இப்போதும் பார்க்கிறோம். இப்போது பல்கலைக்கழகங்களிலேயே ஊடுருவும் போக்கு மோசமாக அரங்கேறி வருகிறது.

ராஜஸ்தான் பல்கலைக்கழகப் பாடப்புத்தகத்திலேயே அங்குள்ள பாஜக அரசு இதனை அரங்கேற்றியுள்ளது. மேவாரின் ஆட்சியாளரான ராணாபிரதாப்பை ஹல்திகட்டி போரில் வென்றவராகச் சித்தரிக்கும் ஒரு பாடத்தை ராஜஸ்தான் பல்கலை தன் பாடதிட்டத்தில் சேர்த்துள்ளது. மேலும் அப்போரில் அவர் முகலாயர்களை அழித்தொழித்து விட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு வரலாற்றில் எந்த ஆதாரமும் கிடையாது. இந்தப் புத்தகத்தின் பெயர் ராஷ்டிர ரத்தன்: மகாராணா பிரதாப் (ஆர்யவ்ரத் சன்ஸ்க்ரித் சன்ஸ்தான், தில்லி, 2007) எழுதியவர் சந்திரசேகர் ஷர்மா. அவர் 1576ல் நடந்த ஹல்திகட்டிப் போரில் ராணா பிரதாப்தான் வென்றதாகவும், முகலாயர்கள் வெல்லவில்லை என்றும் எழுதியுள்ளார்.

வரலாற்றை அரசியலாக்குவது என்ற இந்த முயற்சியின்பால் தன் ஆற்றாமையைப் பதிவுசெய்துள்ள பிரபல வரலாற்று நிபுணர் சதீஷ் சந்திரா இவ்வாறு கூறியுள்ளார்: “தாராளமான, மதச்சார்பற்ற குரல்கள் இத்தகைய சீர்குலைக்கும் போக்கை அனுமதிக்காது என்று நம்புகிறேன்.” மத்தியகால இந்தியாவைப் புரிந்துகொள்ள அவரதுசுல்தனேட்டிலிருந்து முகலாயர்கள்வரைஎன்ற நூல்தான் அடிப்படை நூலாகக் கருதப்படுகிறது. அதில் அவர் சுட்டிக்காட்டுகிறார்: “மான்சிங் என்ற ரஜபுத்திரரின் தலைமையிலான அக்பரின் படைக்கும், ஹக்கிம்கான் சுர் என்பவரின் தலைமையிலான ஆஃப்கான் படை உள்ளிட்ட ராணா பிரதாப் சிங்கின் படைக்கும் இடையிலான போர் முதலில் வெற்றிதோல்வியின்றி முடிவுற்றது. அதனை இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையிலான போர் என்றோ, ரஜபுத்திரர்களின் சுதந்திரத்துக்கான போர் என்றோ கருத முடியாது. ஏனென்றால் இருபுறமும் ரஜபுத்திரர்கள் இருந்தனர்.” ஆனால் இதைத்தான் தற்போது ராஜஸ்தான் அரசு நிறுவ விரும்புகிறது.

சந்திரசேகர ஷர்மா உதய்பூரின் அரசு மீரா கன்யா மகாவித்யாலயாவில் ஆசிரியர். அந்தக் காலத்தில் ராணா பிரதாப் தனது ராஜ்ஜியத்தின் மீதான பிடியை இழக்கவில்லை என்று நிறுவுவதற்கு ஹல்திகட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்த சில மத நிலப்பதிவேடுகளையும், ராணா பிரதாப்பின் சில நிர்வாக முடிவுகளையும் அவர் அடிப்படையாக எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஒரு பாஜக சட்டசபை உறுப்பினரான மோகன்லால் குப்தா ராஜஸ்தான் பல்கலையில் வரலாறு கற்பிக்கப்படும் முறை மாற்றப்பட வேண்டுமென்று வாதிட்டார். இதை ஆதரித்துப் பேசிய, மேலும் மூன்று சட்டசபை உறுப்பினர்களான முன்னாள் உயர்கல்வி அமைச்சர் காளிசரண் சரஃப், பள்ளிக்கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சர் ராஜ்பால் சிங் ஆகியோர், பல்கலையின் பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டுமென்றும், ராணா பிரதாப் இப்போரில் வென்றவராகக் காட்டப்பட வேண்டுமென்றும் வாதிட்டனர். பிறகு பல்கலையின் வரலாற்றுத்துறை இப்புத்தகத்தை மாற்றுப்பார்வையை அளிப்பதற்கான தனது குறிப்புப் புத்தகங்களுக்கான பட்டியலில் ஒன்றாகச் சேர்த்துவிட்டது.

ஆனால் இதைக் கல்வியாளர்கள் ஏற்கவில்லை. மேற்கூறிய புத்தகம் கூறுவதுபோல் ஹல்திகட்டி போர் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையிலானதல்ல என்று அவர்கள் வாதிடுகின்றனர். இரண்டு படைகளிலுமே இந்துக்களும், முஸ்லீம்களும் கலந்திருந்தனர். ஷேர்ஷா சூரியின் பரம்பரையில் வந்த இஸ்லாம்கான் சூர் மேவார் அரசருக்கு ஆதரவாகப் போரிட்டார். அதே சமயத்தில் அக்பரின் படைக்குத் தலைமை தாங்கியவர் அம்பேரின் அரசர் ராஜா மான்சிங். முகலாயர்களுக்கு ராணா பிரதாப்பின் சகோதரரான சக்தி சிங்கின் ஆதரவும் இருந்தது.

ஹல்திகட்டியில் நடந்தபோர் 1576, ஜூன் 18 அன்று வெறும் நான்கு மணி நேரம்தான் நடந்தது என்று கூறப்படுகிறது. சந்திரசேகர் ஷர்மா எழுதியுள்ளது போல் சூரிய உதயத்திலிருந்து, சூரிய மறைவு வரை நடைபெறவில்லை. அது பாரம்பரியமுறையில் காலாட்படை, யானைப்படையுடனேயே நடத்தப்பட்டது. ஏனென்றால் அந்தக் கடுமையான நிலப்பரப்பில் முகலாயர்களால் தமது ஆயுதங்களைக் கொண்டுவர முடியவில்லை. அந்த ஆயுதங்கள்தான் அவர்களது பலமும்கூட. பாரம்பரிய முறையிலான போரில் ரஜபுத்திரர்களின் கை மேலோங்கியிருந்தது.

அலிகார் முஸ்லீம் பல்கலைஆசிரியரான பேரா. சையத் அகமத் ரிசாவி, தமது மத்தியகால இந்தியா பற்றிய புத்தகத்தில் குறிப்பிடுகிறார்: “ராணா பிரதாப்புடன் மற்ற ரஜபுத்திரர்களின் கடுமையான தாக்குதல் முகலாயர்களின் இடது, வலதுபுறப் படைகளை நாசம் செய்வதற்கு இட்டுச் சென்றதுடன், மத்தியில் மான்சிங் படைகள்மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.. ஆனால் அக்பர் வந்துவிட்டார் என்ற புரளியால் நிலை மாறி, ரஜபுத்திரர்கள் பின்வாங்க நேர்ந்தது. ஜூலையில் ராணா பிரதாப் தான் இழந்த சில நிலங்களை மீட்டு கும்பல்காவைத் தனது தளமாக்கிக் கொண்டார். விரைவில் அக்பர் தானே நேராக வந்து போரிட்டதில் கும்பல்கா உள்ளிட்ட பல நிலப்பகுதிகளை ராணா பிரதாப்பிடமிருந்து கைப்பற்றிக் கொண்டார். ராணா பிரதாப் மேவாரின் தென்பகுதியில் இருந்த மலைப்பகுதிக்குத் தப்பிச் செல்ல நேர்ந்தது.”

முகலாயர்களின் படையெடுப்பு அத்துடன் முடிந்து விடவில்லை. ஜலோரின் ஆஃப்கான் தலைவர் மீதும், இதார், சிரோஹி, பன்ஸ்வாரா, டுங்கர்புர், புண்டு ஆகியவற்றின் ரஜபுத்திரத் தலைவர்கள் மீதும் நிர்ப்பந்தம் செலுத்தினர். மேவார், குஜராத், மால்வாவின் எல்லைகளில் அமைந்த இந்த அரசுகள் அப்பகுதியில் ஆதிக்க சக்தியின் மேலாண்மையைக் காலங்காலமாக மதித்து வந்தவை. இதன் விளைவாக, அவை முகலாயர்களுக்குக் கீழ்ப்படிந்தன. புண்டியிலும், அதன் அருகாமையிலுள்ள சில இடங்களிலும் தன் ஆட்சியை நிறுவ ராவ் சர் ஜான் ஹாடாவின் மூத்தமகன் டூடா ராணா பிரதாப்புடன் கைகோர்த்திருந்தார். டூடாவின் தகப்பனாரான சர் ஜான் ஹாடாவும் அவர் இளைய சகோதரரான போஜும் முகலாயர்களுடன் இந்தப் போரில் கைகோர்த்திருந்தனர். ராணா பிரதாப் இறுதியில் மலைகளுக்குத் தப்பியோடினார்.

சதீஷ் சந்திரா இவ்வாறு கூறுகிறார்: “ராணா பிரதாப் ஹல்திகட்டி போரில் வென்றதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. வீரமிக்க போருக்காக அவர் அறியப்படுகிறார். அவரது கொரில்லா போர்முறை பின்னர் சிவாஜியால் பின்பற்றப்பட்டது. அக்பருடனான அவரது போரை மதப் போராக வகைப்படுத்துவது தவறு. தற்கால அரசியல் பார்வையில் வரலாற்றை நாம் பார்க்க முடியாது. ராணா பிரதாப் துணிவும், வீரமும் மிக்கவர் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால் அவருக்கு பில்களும், ஆஃப்கானியர்களும் ஆதரவளித்தனர். பெரும்பாலான ரஜபுத்திரர்கள் அக்பருக்கு அடிபணிந்துவிட்ட காலத்தில் அவர் சில கொள்கைகளுக்காக நின்றார். சுதந்திரம் அடையும்வரை அவருக்கு எந்த சிலையும் இல்லை. உதய்பூரில் அவர் பெயரில் எந்த சாலையும் இல்லை. இப்போது அரசியல் காரணங்களுக்காக அவரைப் பற்றி அரசியல் தலைவர்கள் பேசுகின்றனர். அவரைப் பொறுத்தவரை இந்துத்துவாவுடன் எந்தத் தொடர்புமில்லை. அவரை இன்று இந்து வீரர் என்று புகழ்பவர்கள், இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையில் தீராத பகையை மூட்ட பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் மத்தியகால இந்தியா பற்றி எழுதியதை காப்பியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.”

அது ஒரு மத மோதலல்ல

ஹல்திகட்டி போரும், ராணா பிரதாப்புக்கும், முகலாயர்களுக்கும் இடையிலான போரும் இரண்டு மதங்களுக்கு இடையிலான போர்களல்ல; அது ஏகாதிபத்திய மேலாதிக்கத்துக்கான போர். அதில் முகலாயர்கள் தீர்மானகரமான வகையில் வென்றனர். இதில் முகலாயர்களுக்கு ஏராளமான ரஜபுத்திரர்களின் ஆதரவும் இருந்தது. ராணா பிரதாப்புக்கு ஆஃப்கானியர்களின் ஆதரவு இருந்தது.

ஆக, இந்த முரண்பாட்டை ஏன் ராஜஸ்தான் பல்கலைக்கழகம் உருவாக்குகிறது என்பது தெளிவு. இளம் மனங்களில் மதவெறியை விசிறிவிடும் பணிதான் அதன் நோக்கம். இத்தகைய வரலாற்றை போதிப்பதன் மூலம் அதைச் செய்யவே விரும்புகிறார்கள்.

மேவார் போன்ற சிறு, சிறு ராஜ்ஜியங்களின் ஆட்சியாளர்களை மகாராணா என்றும், சிவாஜி போன்றவர்களை வீர சிவாஜி என்றும் போற்றும் ஒருவகை புகழ்பாடுதலின் பகுதிதான் மேற்கூறிய திரிபுவாதமும்.

ரெசாவி கூறுகிறார்: மத்தியகால வரலாற்றில் சிறு, சிறு ராஜ்ஜியங்களின் ஆட்சியாளர்கள்கூட தம்மை மேலானவர்களாகக் காட்டிக்கொள்ள பெரிய பட்டங்களைச் சூடிக்கொண்டனர். மேவாரின் அரசர் தன்னை மகாராணா என்று அழைத்துக் கொண்டார். அந்தப் பட்டம் ரஜபுத்திர தலைவர்களிடையே ராணாவை மிக முக்கியமானவராக்கியது. அம்பேரின் கச்சவாகாக்களையும், புண்டேலாக்களையும் ஒப்பிடுகையில் மார்வாரும், மேவாரும் பெரிய ரஜபுத்திர தலைவர்கள்தான். கச்சவாகாக்கள் முகலாயர்களுடன் கைகோர்த்தபிறகுதான் வெளிச்சத்துக்கு வந்தார்கள். முகலாயர்கள் இல்லாமலேயேகூட மார்வாரும், மேவாரும் புகழ் பெற்றிருந்தன.”

சதீஷ் சந்திரா கூறுகிறார்: “அவர்கள் (அரசியல்வாதிகள்) எல்லா இடங்களிலும் வரலாற்றைத் திரிக்க விரும்புகின்றனர். அவர்கள் எவ்வளவுதான் கடுமையாக முயன்றாலும் அவர்களால் வரலாற்றைத் தீர்மானிக்க முடியாது. ராணா பிரதாப் வீரமிக்க, ஆனால் தனிமையான போரை நிகழ்த்தினார். ரஜபுத்திரர்களில் ஒரு பகுதியினர்தான் அவருக்கு ஆதரவளித்தனர். அவர்களில் பெரும்பாலோரை அக்பர் ஏற்கனவே வென்றுவிட்டார்.”

அக்பர் ரஜபுத்திரர்களையும், கத்ரிக்களையும் தமது நிர்வாகத்தில் இணைத்துக்கொள்ள விரும்பினார். அக்பர் நிர்வாகத்தில் பன்னிரண்டு திவான்களில் எட்டுப்பேர் கத்ரிக்களும், காயஸ்தாக்களுமாவர். எனவே மதமோதல் என்ற கட்டுக்கதையை இதுவே அம்பலப்படுத்தும்.

இன்னொருபுறம் முகலாயக் குறிப்புகள் சிவாஜியை சிவா என்றே குறிப்பிடுகின்றன. மாராத்தாக்கள் மிகவும் பிற்காலத்தில்தான் பேஷ்வாக்களின் கீழ் மேலெழுந்தனர். ரெசாவி கூறுகிறார்: “சிவாஜியும், சாம்பாஜியும் சிறு மலைக்கோட்டைகளின் குறுந்தலைவர்களேயாவர். அவர்கள் பாதுகாப்பு மாமூல் வசூலித்தே வாழ்ந்து வந்தனர். சிவாஜி புரந்தர் போரில் ரஜபுத்திர மிர்சா ராஜா ஜெய்சிங்கால் தோற்கடிக்கப்பட்டார். அதற்கு முன் அவருடன் போரிட்ட முகலாய தளபதிகள் செய்ஷ்டா கானும் ஜஸ்வந்த்சிங் ரத்தோருமாவர். சிவாஜியை ஆக்ராவில் அவுரங்கசீபின் கோட்டைக்குக் கொண்டு வந்தபோது சபையில் அவரை எள்ளிநகையாடியவர் வேறு யாருமல்ல; இந்த ரத்தோர்தான். அவர் ஜெய்சிங்கின் மகன் ராம்சிங்கின் கோட்டையில் சிறைவைக்கப்பட்டு, அங்கிருந்து தப்பினார்.

கதைகள் வரலாறானால்?

கதைகளை வரலாறுகளாக்குவது எதில் சென்றுமுடியும்? நமது சமூகத்தின் ஒற்றுமையைக் குலைக்க இதைத்தான் மதவெறி அமைப்புகள் செய்து வருகின்றன. இளம் மனங்களில் விஷத்தை விதைக்க இவற்றைப் பள்ளி, கல்லூரிப் புத்தகங்களில் திணிக்கின்றன.

நாஜிக்களும் இதைத்தான் செய்தனர். பாகிஸ்தானும் இதைத்தான் செய்தது. அக்பர் பற்றிய குறிப்புகளே பாகிஸ்தான் பாடப்புத்தகங்களிலிருந்து அகற்றப்பட்டு விட்டன. இந்துக்களுடனும், ரஜபுத்திரர்களுடனும் சேர்ந்து இஸ்லாமுக்கு ஊறுவிளைவித்தவர் என்று அக்பரைப் பற்றி பாகிஸ்தான் பள்ளிகள் போதிக்கின்றன. இந்தியாவிலோ அக்பர் உண்மையில் மோசமானவர் என்று இளம் மனங்களில் விதைக்க முயற்சி நடக்கிறது. ஏன்? ஏனென்றால் இந்த அடிப்படைவாதிகள் அக்பரின் மதமற்ற போக்கைக் கண்டு அஞ்சுகின்றனர். அக்பரின்சுல்குல்(நிறைந்த அமைதி அல்லது அமைதிப்படுத்திக் கொள்வது என்ற கொள்கை) இந்து, முஸ்லீம் அடிப்படைவாத சக்திகளுக்குஅச்சமூட்டுகிறது என்கிறார் ரெசாவி.

1585ல் அக்பரின் சபைக்கு வருகைதந்த பாதிரியார் மொன்சரேட் அக்பர் அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவதன் மூலம் அனைத்தையும் எதிர்க்கிறார் என்கிறார். அதுதான் பாகிஸ்தானிய முல்லாக்களுக்குஅச்சமூட்டுகிறது. அதுதான் இந்தியாவில் இந்துத்துவப் பரிவாரங்களுக்கு அச்சமூட்டுகிறது. அவர்கள் இருவருக்கும் பல கட்டுக்கதைகள் சூழ்ந்த அவுரங்கசீப்தான் உண்மை நாயகர். முஸ்லீம் அடிப்படைவாதிகளுக்கு அவர் ஒரு இறைத்தூதர், இந்து அடிப்படைவாதிகளுக்குத் தமது வெறுப்பைப் பரப்ப அவர் ஒரு அடையாளம்.

இந்திய மக்கள் முட்டாள்களல்ல. அரசர்களுக்கு எந்தமதமும் கிடையாது என்பது அவர்களுக்குத் தெரியும். அந்த அரசர்களுக்கு எந்தமதமும் கிடையாது. ஆனால் அவர்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல மதங்களைத் தற்கால ஆட்சியாளர்களைப் போல் உபயோகித்தனர்.

முகலாயர்கள் முஸ்லீம்கள் என்பதாலேயே ராணா பிரதாப்பும், சிவாஜியும் அவர்களை எதிர்த்ததாக சில அரசியல் தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. ராணா, சிவாஜி ஆகியோரின் படைகளில் பெருமளவு முஸ்லீம் தளபதிகளும், வீரர்களும் நிறைந்திருந்தனர். முகலாய படையில் இந்துக்களான ரஜபுத்திரர்கள் இருந்தனர். இந்து பத்பத் ஷாகி என்று அவர் அழைத்த படைகளுக்கு சிவாஜி தலைமை தாங்கினார். பீட்டர் முண்டி போன்றோர் தற்போது கூறுவதை நம்புவதானால், பெரும்பாலான அவரது சிறைகளில் பிராமணர்களே நிறைந்திருந்தனர். அவர் சவுத்தையும், சர்தேஷ் முக்தியையும் (மாமூல்) முஸ்லீம் விவசாயிகளே இல்லாததால் இந்து விவசாயிகளிடமிருந்தே வசூலித்தார்.

ஆக, பாபரை வரவேற்று முடிசூட்டிய ராணா சங்காவாக இருக்கட்டும்; ராணா பிரதாப்பாக இருக்கட்டும்; சிவாஜியாக இருக்கட்டும்;அவர்கள் முகலாயர்கள் வெளிநாட்டினர் என்பதற்காகவோ, முஸ்லீம்கள் என்பதற்காகவோ எதிர்த்துப் போரிடவில்லை. மாறாக ஏகாதிபத்திய மேலாதிக்கம் என்பதற்காகவே எதிர்த்துப் போரிட்டனர்; அல்லது ஒரு அரசருக்கெதிராக இன்னொருவர் போரிட்டனர்.

1961ல் வெளிவந்த ஒரு இந்திப்படம் ஜெய்சித்தூர். அது ராணா பிரதாப்பின் புகழ்பெற்ற குதிரை சேட்ட அவரது உயிரைப் போரில் காப்பாற்றியது குறித்த லதா மங்கேஷ்கரின் ஒரு பாடலை உள்ளடக்கியது. ஆனால் அந்தப் படத்தில் ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது, அதாவது இந்தக்கதை வரலாறல்ல; கட்டுக்கதை என்பதே அது.

இவர்கள் வரலாற்றை கட்டுக்கதைகளால் நிரப்ப முயல்வதற்கு எதிராக நாம் இந்த எச்சரிக்கையைத்தான் கொடுக்கவேண்டியுள்ளது.

Thanks: Frontline, March 31, 2017.

வகுப்புவாத தேசியத்தை வீழ்த்தும் மாற்று எது?

உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அரசியல் சக்திகளிடையே யும், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடையேயும், நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளன. ஊடகங் கள் வெளியிட்டுள்ள தரவுகளை மட்டும் வைத் துக் கொண்டு, இதனை மதிப்பீடு செய்வது பலன் தராது. இந்தத் தரவுகளுக்கு காரணமான சூழல், அந்தச் சூழல் உருவாக்கப்பட்ட அடிப்படை ஆகியவை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

இந்தத் தேர்தல் முடிவுகள், மாநிலத்தை ஆட்சி செய்த கட்சிகள் அல்லது கூட்டணி ஆகிய வற்றுக்கு எதிராக அமைந்துள்ளன என்பது பொதுவான செய்தி. கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்திருந்தாலும், அதில் ஆளுநர் மற்றும் பாஜகவின் குதிரை பேரம் அப்பட்டமாக வெளிப்பட்டது. மற்றொரு பொதுவான செய்தி, மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக மீதான அதிருப்தி இந்த மாநிலத் தேர்தல்களில் பிரதிபலிக்கவில்லை. காரணம் மாநில முதலாளித்துவ கட்சிகள் அல்லது காங்கிரஸ், பாஜகவின் மத்திய ஆட்சி மீதான அதிருப்தியை அறுவடை செய்ய இயலவில்லை; அதற்கேற்ற உத்தியும் அவர்களிடம் இல்லை. இடதுசாரிகள், அமைப்பும் வலுவுடன் இல்லை.

பஞ்சாபில் பாஜக படுதோல்வி அடைந்தது. என்றாலும் அது மத்திய ஆட்சி மீதான அதிருப்தி யின் விளைவு என்ற முடிவுக்கு முழுதாக வரக் கூடியதாக இல்லை. காரணம், பாஜக பஞ்சாபில் அகாலி தளத்துடன் கூட்டணியில் இருந்தது. மாநில ஆட்சி, பாதல் குடும்ப ஆதிக்கத்தின் மீதான வெறுப்பு இருந்தது. பாஜக கூட்டணியில் பங்கு வகித்ததன் காரணமாக சீக்கியர்களிடம், இந்துத்துவா மேலாதிக்கம் சிறு பாதிப்பை ஏற் படுத்தியிருக்கக் கூடும்.

அதேநேரம் சில குறிப்பான செய்திகளையும் இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஒன்று, பாஜக உத்தரப்பிரதேசம், உத்தர்கண்ட் மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற திட்டமிட்டு செய்த பணிகள். தனக்கு வலு இல்லாத, மணிப்பூரிலும் குதிரை பேரத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பது. அதே போல், நிர்வாக அமைப்புகளில் திணிக்கப்படும் இந்துத்துவக் கொள்கை. (உதாரணமாக ஆளுநர் களின் செயல்பாடு) மேலும் இந்த தேர்தலில் பாஜகவின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலும் வகுப்பு வாத கலவரங்களும், ஊடக மேலாதிக்கமும் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தியுள்ளன.

பாஜகவின் திட்டமிடல்:
ஐந்து மாநிலத் தேர்தலிலுமே வெற்றி பெற்றாக வேண்டுமென்ற முனைப்பில் பாஜக இருந்தது. குறிப்பாக உத்தரப்பிரதேசம் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம். அங்கே வெல்வதன் மூலம், தானொரு வெல்லற்கரிய சக்தி எனக் காட்டிக் கொள்வதும். அதை இந்தியா முழுமைக்கும் பொதுமைப் படுத்துவதும் பாஜகவின் விருப்ப மாக இருந்தது. அதற்கேற்றவகையில் திட்ட மிட்டது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2014 நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன்பாகவே இந்துத்துவா சக்திகள் தீவிர கவனத்தை மேற்கொண்டு வந்தன.

முதலில், அணிகளைத் தயார் செய்வது. உ.பி யில் மட்டும் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் 1.80 கோடி. அதில் செயல்படும் கட்சி உறுப்பினர் களாக 67,605 நபர்களை மாற்றியுள்ளது பாஜக. இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு. வாக்கு சாவடி மட்டத்தில் 1.47 லட்சம் பொறுப்பாளர் களை உருவாக்கி, அவர்களுடைய முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து, அவர்களுடனான தொடர்பை வலுப்படுத்தியுள்ளது. இந்த வாக்கு சாவடிகளில் குறைந்தது 10 பேர் கொண்ட கமிட்டி அமைத்து, 13.50 லட்சம் ஊழியர்களை உருவாக்கியுள்ளது. 100 – 125 வாக்குச் சாவடி களைக் கொண்ட மண்டலங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. மண்டல ஊழியர்கள் ஒரு லட்சம் பேருக்கும், மாவட்ட அளவில் 15 ஆயிரம் பேருக் கும் பிரத்யேகப் பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.

இரண்டாவது, பிரச்சாரம். அமித் ஷாவின் நேரடிப் பார்வையில் விளம்பர நிறுவனங்கள் உதவியுடன் செயல்பட்டனர். 34 தாமரை மேளாக் கள் நடத்தப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றி லும் 60 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. நாடகப் பிரச்சாரம் பெரும் ஈர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. 8574 நாடகங் கள் நடத்தப்பட்டுள்ளன. வீடியோ வேன்கள் மாநிலம் முழுவதும் பயணம் செய்துள்ளன. இவற்றின் மூலம் 47 லட்சம் பேரைச் சந்தித் துள்ளனர். மனதோடு பேசுவோம் என்ற வீடியோ ரத நிகழ்வு மூலம், நிறைய பகுதிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ கான்ஃ பரன்ஸ் மூலம் அமித் ஷா நேரடியாக 74,200 இளைஞர்களுடன் உரையாடியுள்ளார்.

மூன்றாவது, சமூக வலைத்தளங்களைப் பயன் படுத்தியது. பாஜக சமூகவலைத் தளங்களை மிக அதிகமாக பயன்படுத்தி வருகிறது. பாஜக4உபி (க்ஷதுஞழருஞ) என்ற பெயரில் பல குழுக்கள் உருவாக்கப் பட்டன. குறிப்பாக வாட்ஸாப் குழுக்கள் மிகப் பெரிய பங்களிப்பு செய்துள்ளன. 10,344 வாட்ஸாப் குழுக்கள் மூலம் 15 லட்சம் மக்களை இணைத் துள்ளனர். பாஜக தனக்கு உள்ள பொருள் செல்வாக்கு காரணமாக, முழுநேர ஊழியர் களாக தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள், மாநிலத்தில் 5,031 நபர்களை நியமித்து செயல் படுத்தியுள்ளது. இவை அனைத்தும் பாஜகவின் சொந்த செல்வாக்கில் உருவாக்கப்பட்டவை. இதர ஊடகங்களும் பாஜகவிற்கு சாதகமாக, ஒரு தலைப் பட்சமாக செயல்பட்டன என்பதும் முக்கியமானது.

பாஜகவின் ஊடக மேலாதிக்கம்:
அச்சு, மின்னணு ஊடகங்கள் என அனைத்துமே எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல், பாஜகவிற்கு சாதகமாக செயல்பட்டன. குறிப்பாக கருத்து உருவாக்கத்தில் பாஜகவிற்கு சாதகமான வாக் காளரின் மனநிலையை உருவாக்க, இத்தகைய பாரபட்சமான செயல்பாடு பயன்பட்டது. உதாரணத்திற்கு டெய்னிக் ஜாக்ரன் டெய்லி என்ற இதழ், தேர்தல் ஆணையத்தின் தடையை மீறி, கருத்துக் கணிப்புக்கு அப்பாற்பட்டு, வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தி, அதை 6 கட்ட தேர்தல்கள் நடக்க உள்ள நிலை யில் வெளியிடவும் செய்தது. இது அப்பட்ட மான சட்டமீறலாகும்.
டெய்னிக் ஜாக்ரன் டெய்லி உ.பியின் முதல் கட்டத் தேர்தலில் 73 தொகுதிகளுக்கு 60- ல் பாஜக வெற்றி பெறுமென செய்தி வெளி யிட்டது. அது பின்னர் நடந்த 6 கட்ட வாக்குப் பதிவில் பிரதிபலித்துள்ளதை பல்வேறு ஆய் வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக நடுநிலை வாக்காளர்கள் எனக் கருதப்படுவோர் வெற்றி பெறும் கட்சிக்கு ஆதரவாக, தங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளனர்.

திட்டமிட்ட வகுப்புவாதப் பிரச்சாரம்:
மேலே குறிப்பிட்ட பாஜகவின் ஊடகம், பிரச் சாரத் திட்டமிடல், அதன் நிகழ்ச்சி நிரலான, வகுப்புவாத அணிதிரட்டலுக்கு ஏற்ப தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டது. அதேபோல் ஒரு பொய்யைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்வதன் மூலம் அதை உண்மையாக்க முடியும் என்ற திசையிலேயே பாஜக செயல்பட்டது. உதாரணமாக இஸ்லாமி யர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள் கின்றனர். காரணம் அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில்லை. முத்தலாக் மூலம் அதிக திருமணம் செய்து கொள்கின்றனர் போன்ற வற்றைச் சொல்லலாம். முத்தலாக் போன்றவை கைவிடப்பட வேண்டும் என கம்யூனிஸ்டுகள் உள்பட, விமர்சனம் செய்கின்றனர். ஆனால் அதிகமாக முத்தலாக் மூலம் கூடுதல் திருமணங் கள் நடைபெறுவதாக கூறுவது பொய் பிரச் சாரம் என்பதை அறிய வேண்டியுள்ளது.
உ.பி. யில் தேர்தல் பிரச்சாரம் செய்ய கணிசமான ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் பயன்படுத்தப்பட்ட னர். மேற்கு உ.பியில், “குஜராத் முஸ்லிம்கள் மனி தனின் மண்டை ஓட்டை வைத்து பேருந்துகளில் இடம் பிடிப்பர். இதன் காரணமாக இந்துக்கள் பாதிக்கப்பட்டனர். பாஜக ஆட்சி வந்த பின்தான் முஸ்லிம்களின் இத்தகைய செயல் ஒழிந்தது. உ.பியில் 2012 ஆண்டைப் போல் முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றால், காவலர்களைக் கொண்டு, இந்துப் பெண்களைத் தூக்கிச் செல்வர்” எனப் பிரச்சாரம் செய்துள்ளனர். உண்மைக்கு புறம் பான இந்த வெறுப்பு அரசியல் பிரச்சாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமியருக்கான இடுகாடுகள் ( கபர்ஸ் தான் ) மிக அதிகம் என்றும், இந்துக்களுக்கான மயானங்கள் குறைவு என்றும் பிரதமர் மோடியே பிரச்சாரம் செய்தார். இது அப்பட்டமான பொய் பிரச்சாரம் மட்டுமல்ல. திட்டமிட்ட வெறுப்பு அரசியல் ஆகும். இத்தகைய வெறுப்பு அரசியலுக்கு ஊடகங்களும் துணை செய்தன. இது `ஹிட்லரின் நாஜிக் கட்சி ஆட்சிக்கு வருவதற்காக, யூதர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக செய்த பொய்ப் பிரச்சாரத் தைப் போன்றது. மோடி, யோகி ஆதித்யநாத் அல்லது மகேஷ் சர்மா என நபர்கள் மட்டும் பொறுப்பல்ல. இந்த பிரச்சாரம் திட்டமிடப் பட்ட ஒன்று. இந்து ராஷ்ட்ரா என்ற முழக்கத்தை, சாவர்க்கர், கோல்வால்கர் போன்றோர் முன் வைக்கும்போதே பிறந்ததாகும். உதாரணத்திற்கு பாஜக இத்தேர்தலில், பசு பாதுகாப்பு என்ற முழக்கத்தை தீவிரமாக்கியது.
முகம்மது இக்லக் என்பவர் கொல்லப்பட்டார். மீரட் சுற்றுவட்டாரப்பகுதி தொழில் வளர்ச்சி பெற்ற பகுதி. இருந்தாலும் மக்கள் சிந்தனையில், தொழில் வளர்ச்சிக்கேற்ற, வளர்ச்சி ஏற்பட வில்லை. இடதுசாரிகளோ, பாஜகவுக்கு எதிரான கருத்துவலிமை கொண்ட அமைப்புகளோ செயல்படவில்லை. எனவேதான் பாஜக தலைவர் கள் ஒருபுறம் பசு பாதுகாப்பு என முழங்கவும், மறுபுறம் மாட்டிறைச்சித் தொழிற்சாலையையும் நடத்த முடிந்தது. இந்த முழக்கம் தேர்தலுக்குப் பயன்பட்டது.

புதிய முதல்வர் ஆதித்யநாத், சட்டவிரோத மாட்டிறைச்சி கூடம் தடை செய்யப்படும் என அறிவித்து செயல்படுகிறார். இதுபோன்ற காரணத்தால், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச பாஜக அரசுகள் பசுவதையில் ஈடுபடுவோருக்கு ஆயுள்தண்டனை, மரண தண்டனை என கூவு கின்றன. பாஜகவின் இந்த உணவு வெறுப்பு அரசியலை காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் வலுவான எதிர் பிரச்சாரத்தின் மூலம் எதிர்கொள்ளவில்லை.
உணவு, உற்பத்தியின் தன்மைக்கேற்றது. உ.பி., உள்ளிட்ட வட இந்தியாவின் மையப் பகுதி முழுவதும், மேய்ச்சல் மற்றும் விவசாய உற்பத்தி சார்ந்தது. எனவே உணவுப் பொருள் பட்டியலில் மேய்ச்சலுக்கு உள்ளான கால்நடைகள் இருப்பது இயல்பு. குறிப்பாக உழைப்பாளி மக்களின் உணவாகவும் கால்நடைகள், அமைகின்றன. இந்த பண்பாட்டு அம்சம் அல்லது உற்பத்தி வளர்ச்சி குறித்த பார்வை, முதலாளித்துவ கட்சிகளுக்கு இல்லை. அதன் விளைவே ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவாரத்தின் வெறுப்புப் பிரச்சாரத்தை முறியடிக்க முடியவில்லை.

சாதித் திரட்டலுக்கு உதவிய லவ் ஜிகாத்:
இந்துத்துவா வகுப்புவாதம், மத அடிப் படையில் மட்டும் மக்களைப் பிளவுபடுத்த வில்லை. சாதி ரீதியில் அரசியல் செய்து வந்த கட்சிகளிலும் சரிவை ஏற்படுத்திய முழக்கமாக லவ் ஜிகாத் அமைந்தது. பாஜக மத்திய ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியவுடன் முன்வைத்த முழக்கம் லவ் ஜிகாத். அதாவது, இஸ்லாமிய இளைஞர்கள் ஆடம்பர உடை அணிந்து இந்துப் பெண்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் வீசும் காதல் வலையில் இந்துப் பெண்கள் மயங்கும் நிலை உள்ளது போன்ற கருத்துக்களை விதைத் தனர்.
சமாஜ்வாதி யாதவ் சாதியினரின் வாக்கு களைக் பெரும்பான்மையாகக் கொண்ட கட்சி, பாஜகவின் மேற்குறிப்பிட்ட வகையிலான பிரச் சாரம், உ.பியின் இதர சாதிய இந்துக்கள் என்ற பிரிவினரிடம் ஏற்புடையதாக அமைந்தது. அதன் விளைவு அத்தகைய குணம் கொண்ட சிறு அரசி யல் கட்சிகள் பாஜகவுடன் தேர்தல் உடன்பாடு செய்து கொண்டன. அது பாஜகவின் வாக்கு சதத்தைத் தக்கவைக்கவும், இந்த அளவிற்கான வெற்றிக்கும் வழிவகுத்தது. மீரட் போன்ற மேற்கு உ.பி.யில் ஜாட் பிரிவினர் வசிக்கும் பகுதியில் கணிசமான மனமாற்றத்தை, இது போன்ற பிரச் சாரங்கள் உருவாக்கின. காதல் மீதும் வெறுப்பு அரசியலை மேற்கொள்ள முடியும் என்பதற்கான உதாரணமாக இது அமைந்துள்ளது. ஆதித்யநாத் முதல்வர் பொறுப்பேற்றபின் ரோமியோக்களை ஒழிக்கும் காவலர் படையை அமைத்துள்ளது இந்தப் பின்னணியில்தான். இது மனித குல வளர்ச்சிக்கு எதிரானது.

பொதுவாகக் கலவரங்கள் மூலம் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டு தனது ஆதரவு தளத்தை விரிவாக்கம் செய்துகொண்டுள்ளன என்பதை இடதுசாரிகளுக்கு அப்பாற்பட்ட ஜனநாயக எண்ணம் கொண்ட ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியாவில் 2012 ல் 668 வகுப்புக் கலவரங்கள் நடந்துள்ளது. அதில் உ.பி. யில் நடந்தது 118. 2013 ல் மொத்தம் 823 கலவரங் கள் நடந்துள்ளன. அதில் உ.பி.யில் மட்டும் 247. 2014 ல் மொத்தம் 644, உ.பி.யில் மட்டும் 133. இந்த கலவரங்கள் உ.பி.யை மையப்படுத்தி கவனம் செலுத்தப்பட்டதைக் குறிப்பிடுகிறது.
அதே நேரத்தில் மொத்த வகுப்பு கலவரங் களும் உ.பி., குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் நடந்துள்ளது. பாஜக நீண்ட காலமாக ஆட்சியில் உள்ள குஜராத், ம.பி., காங் கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடகா, காங்கிரஸ் வசம் இருந்து பாஜக கைப்பற்றிய ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா. இது வெளிப்படுத்தும் உண்மை நீண்டகாலமாக பாஜக ஆட்சியில் இருப்பதற்கும், காங்கிரஸ் அல்லது பிராந்திய முதலாளித்துவ கட்சிகளிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றவும், பாஜகவிற்கு பிரதான ஆயுதமாக கலவரங்கள் பயன்படுகின்றன.
உ.பி.யில் நடந்துள்ள கலவரங்கள் பாஜகவிற் கான வாக்கு வங்கியைப் பலப்படுத்தியுள்ளன. குறிப்பாக முசாஃபர் நகர் பகுதியில் நடந்த கலவரங்கள் 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரும், பாஜகவின் செல்வாக்கு வாக்கு சதத் தில் பிரதிபலிக்கக் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக முதல்வர் ஆதித்யநாத், ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினர்; இந்து யுவ வாகினி என்ற குண்டர் படையைக் கொண்டவர். அது நடத்திய தாக்குதல்கள் குறைத்து மதிப்பிடக் கூடியது அல்ல.

இரட்டையர்களாக செயல்படும் தாராளமயம் மற்றும் வகுப்பு வாதம்:
வகுப்புவாதம் எல்லா இடங்களிலும் தாராள மய பொருளாதாரக் கொள்கைகளுக்கு உதவி செய்து வருகிறது. தாராளமயம், வகுப்புவாதம் போன்ற அடிப்படைவாதத்தைத் தன் வளர்ச் சிக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. எனவே இரண்டும் இரட்டையர்களாகச் செயல்பட்டு வருகின்றன. கடந்த காலத்தில் பிரிட்டிஷ் காலனி யாதிக்க ஆட்சி, இந்தியாவில் மக்களைப் பிளவு படுத்தும் அரசியலை கையாண்டது. சுரண்டலை தொடர்ந்து செயல்படுத்தவும், காலனியாதிக்கத் திற்கு எதிராகப் போராடிய மக்களைப் பிளவு படுத்தவும் இந்த கொள்கை பயன்பட்டது.
இன்றைய பாஜக இதே போன்றதொரு பிளவு வாதக் கொள்கையைத்தான் கையாண்டு வருகிறது. விலைவாசி உயர்வு, வறுமை உள்ளிட்ட பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகும் மக்களின் எதிர்ப் புணர்வை திசைதிருப்பி, இந்துத்துவ நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், வடிவமைக்கப்பட் டுள்ளது. இன்று காலனியாதிக்கத்திற்கு பதிலாக நவகாலனியாதிக்கம் பின்பற்றப்படுவதால், பாஜக ஆட்சியாளர்களே செயல்படுத்துகிறார்கள். அந்த வகையில் புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் பணியை, பாஜகவின் மத்திய ஆட்சி சிறப்பாக செய்கிறது.
மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத் தப்பட்ட போது, வளர்ச்சி என்ற முழக்கம் பேரிரைச்சலாக இருந்தது. இந்த மூன்று ஆண்டு களில், எந்த ஒரு துறையிலும் சிறப்பான வளர்ச் சியைப் பெற்றதாகக் குறிப்பிட்டு சொல்ல முடி யாது. அதேநேரம் மேலே குறிப்பிட்ட எண்ணிக் கையில் வகுப்புவாத கலவரங்கள் நடந்துள்ளன. ஆதித்யநாத் மற்றும் அவர் போல் உள்ள பரி வாரங்கள் கொடூர வார்த்தைப் பிரயோகங்களை சிறுபான்மையினரை நோக்கிப் பேசியபோது, மோடி கண்டுகொள்ளவில்லை. அதுவே மோடி தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் கேள்வி கேட் காமல் திசை திருப்புகிறது. அத்தகைய விஷத் தன்மை கொண்ட பிரச்சாரகர் ஆதித்யநாத்தை, ஒரு பெரிய மாநிலத்தின் முதல்வராக ஆர்.எஸ். எஸ். தேர்வு செய்துள்ளது.

ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல், இந்துத்துவாவின் கொள்கை அமலாக்கத்திற்கு, மோடியும், ஆதித்யநாத்தும் செயல்படுவார்கள் என ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்க்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களின் சலுகைகளைப் பாது காக்க இந்த அணுகுமுறை பயன்படும் என்றே கருதுகின்றனர். அதனால்தான் எந்த ஒரு ஊடக மும் ஆதித்யநாத் தேர்வை விமர்சிக்கவில்லை. தாராளவாதத்தை ஆதரிக்கிற மாநில முதலாளித்துவ கட்சிகளும், இந்த அபாயத்தை உணர்ந்து, கருத் துப் பிரச்சாரம் எதையும் செய்யவில்லை. கம்யூ னிஸ்டுகள் இது குறித்து விமர்சித்து வருகின்றனர்.

மோடி அரசின் ‘செல்லாநோட்டு’ அறிவிப் பின் போது, அதற்குக் கண்டனம் தெரிவித்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள், பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி – களப் போராட்டம் மூலமான நிர்ப்பந்தத்தைத் தர வில்லை. பாஜக மத்திய அரசும் தேர்தலை காரண மாக வைத்து, முதலில் வெளிவந்த 500 ரூபாய் நோட்டுக்களை, உ.பி போன்ற இடங்களில் விநி யோகம் செய்தது. இது உ.பியில் விரைவில் பணத் தட்டுப்பாட்டைப் போக்க பயன்பட்டது. அந்த வகையிலும் பாஜக தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டது.

சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மாநிலக்கட்சிகள்தான் என்றபோதிலும் அவர்கள் பிராந்திய அடையாளங்களை முன்வைக்கவில்லை, உத்தரப் பிரதேசத்தில் பிராந்திய அரசியலும் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கவில்லை. தங்களை தேசிய அடையாளங்களுடன் இணைத்துப் பார்த் துக் கொள்ளும் உ.பி. மக்களுக்கு பாஜகவின் ‘இந்து தேசியவாத’ அழைப்பு ஈர்ப்பைக் கொடுத் துள்ளது. வகுப்புவாத நெடியுடன் அந்தப் பிரச் சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மாறாக சக்திகள், கொள்கை அடிப்படையிலான மாற்றை அவை முன்நிறுத்தவில்லை.
“பிராந்திய முதலாளித்துவ கட்சிகள் வகுப்பு வாதத்தை எதிர்த்தாலும், தாராளமய பொருளா தாரக் கொள்கைகளுக்கு உதவுகிற போது, வகுப் புவாதத்துடன் சமரசம் செய்து கொள்கிறது. மக்களை துன்பத்தில் இருந்து மீட்கவில்லை,” என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மதிப்பீடு சரியானது. வகுப்புவாதத்தை எதிர்ப்பதற்காக தேர்தல்அணி மட்டும் ஏற்படுத்துவது பலன் கொடுக்காது. எனவே, உத்தரப்பிரதேசத்தில் மாற்றுக் கொள் கைகளுடன் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டி யிட்டன. அமைப்பு வலிமை குறைவானதன் காரணமாக, இந்தச் செய்தியை மக்களிடம் சென்று சேர்க்கமுடியவில்லை.

ஆட்சி நிர்வாகத்தில் பாஜக:
ஆளுநர் நியமனம் மத்தியில் ஆளும் கட்சியின் விருப்பத் திற்கு உரியவராக இருக்கிறார். வரம்புகள் மீறப் பட்டுள்ளன. மோடி ஆட்சிக்கு வந்தபின் 26 ஆளுநர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். குறிப்பிட்ட துறையின் பிரமுகர் என அந்தஸ்தில் யாரும் நிய மிக்கப் படவில்லை. கேரள ஆளுனர் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி. அவர் நியமனம் முன் எப் போதும் இல்லாத ஒன்று என்பதனால் சர்ச் சைக்கு உரியதாக இருந்தது.
மோடி பிரதமர் பொறுப்பு ஏற்றபின், அருணா சலப்பிரதேசம், உத்தர்காண்ட் மாநிலங்களில் ஆளுநர்களின் அத்து மீறலைப் பார்த்தோம். தொடர்ந்து டில்லி, புதுச்சேரி பிரதேசங்களிலும் சர்ச்சை எழுந்துள்ளது. திரிபுரா ஆளுநர், சமூக வலைத்தளத்தில் பாஜக ஆதரவு செய்திகளை வெளியிட்டுள்ளார். இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. ஆளுநர் அரசியல் சட்டபடி அங்கீ கரிக்கப்பட்டவரா என்பதில் நீண்ட சர்ச்சை நடந்து, இறுதியாக அரசியல் சட்ட அங்கீகாரம் கிடைத்தது. இப்போது அப்படி ஒரு அங்கீகாரம் தேவையில்லை என்று சொல்லும் அளவிற்கு, கோவா, மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுக் குப் பின் ஆளுநர்களின் நடவடிக்கைகள் அமைந் துள்ளன.
தனிக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க எந்த அடிப்படையில் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்பதை, சர்க்காரியா, அவரைத் தொடர்ந்து வெங்கடாச்சலய்யா ஆகியோர் அளித்த பரிந்துரைகள் தெளிவுபடுத்துகின்றன. முதலில் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட கட்சி களின் எண்ணிக்கையைப் பொறுத்து அழைப்பு விடுக்க வேண்டும். அடுத்து தனிப்பெரும் கட்சிக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து, பின் பெரும் பான்மையை நிருபிக்க செய்ய வேண்டும். மூன்றா வதாக தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்துக் கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க வேண் டும். நான்காவதாக தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்துக் கொண்ட, ஆட்சியில் இடம் பெறும் சுயேட்சைகள் கொண்ட அணிக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
கோவாவில் மிருதுளா சின்ஹா, மணிப்பூரில் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் செய்தது அரசி யல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எதேச் சதிகார அரசு அமைகிற போது, இருக்கிற உரிமை களும் பறிபோகும் என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும். அதாவது, உ.பி.யில் பாஜக 39 சதமும், கோவாவில் 30 சத வாக்குகளையும், மணிப்பூரில் 35 சத வாக்குகளையும், பெற்றுள்ள நிலையில் இந்த எதேச்சாதிகாரம் தலைதூக்குகிறது. மத்தி யில் பாஜக 31 சத வாக்குகளைப் பெற்றுள்ள சூழலில் எதேச்சாதிகாரத்தைப் பின் பற்றுகிறது. எனவேதான் தேர்தல் சீர்திருத்தம் அவசியம். விகிதாச்சார பிரதிநிதித்துவம் மிக அதிகமான முக்கியத்துவம் பெறுகிறது.
நிறைவாக:
உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் நியமிக் கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். தன் வகுப்புவாத நிகழ்ச்சிநிரலை தீவிரமாக முன்னெடுக்கிறது. இந்தச் சூழலை எதிர்கொள்ள களத்தில் முன்நிற்க வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளும், மதச்சார்பின்மைக்கான சக்திகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். மக்கள்விரோதப் பொருளா தாரக் கொள்கைகளையும் தொடர்ச்சியாக அம் பலப்படுத்த வேண்டும். கதம்பக் கூட்டணிகள் அல்லாமல், பொதுக்கொள்கைகள் மற்றும் திட்டங்களின் அடிப்படையில், பாஜகவுக்கு எதி ரான கட்சிகள் இணைந்து போராட வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயகம், சமூகநீதி மற்றும் மக்களை மையப்படுத்திய பொருளாதாரக் கொள்கை களுக்கான அணிசேர்க்கைதான் வகுப்புவாத-தேசியத்தை எதிர்கொள்வதற்கான மாற்று வழியாகும். சமூகத்தில் வலுப்பெற்றுவரும் வகுப் புவாத உணர்வுகளை அழித்து மதச்சார்பின்மை எண்ணங்களை வலுப்படுத்திட சமூகத்தளத்தி லும் பணியாற்றவேண்டும்.
இந்த இலட்சியங்களைக் கொண்ட இடது ஜனநாயக அணி அமைப்பதென்றே மார்க்சிஸ்ட் கட்சியின் எதிர்காலப்பார்வை அமைந்துள்ளது. அந்த லட்சியத்தை அடைவதில்தான் இந்தியா வின் எதிர்காலமும் அமைந்துள்ளது.