புனையப்படும் பொய் ‘வரலாறு’!

பேரா. ஆதித்ய முகர்ஜி

(பாசிச தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய அரசியலுக்கு வசதியாக இந்திய வரலாற்றை சிதைத்து பொய்களை வரலாறாக புனையும் முயற்சியினை அம்பலப்படுத்தும் கட்டுரை)

‘வரலாறு‘ என்பதையே முழுவதுமாகத் திரித்து, அதை மக்களிடையே ‘வெறுப்பு மனப்பான்மை‘யை வளர்த்தெடுக்கும் ஒரு கருவியாகச் சிலர் பயன்படுத்தி வருவதை, இந்தியா, பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.  நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த விடுதலை இயக்கம் இந்திய தேசம் குறித்து கொண்டிருந்த ஒளிமிகுந்த கனவுகளைச் சிதைத்துச் சீரழிப்பதற்கும், 1947இல் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, நம் நாடு ஒரு ‘ஜனநாயகக் குடியரசாக‘ மலர்ந்ததன் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்வதற்கும், மிகவும் இழிவான முறையில் ‘வரலாறு‘ பயன்படுத்தப்படுகிறது.  இத்தகைய போக்குகளின் காரணமாக, இந்திய நாட்டின் பெருமைக்குரிய பண்புநலன்களும், இந்தியாவின் எதிர்காலமுமே கேள்விக்குறியாய் மாறி நிற்கிறது.

காலனி ஆதிக்க கண்ணோட்டம்

காலனியாட்சி முடிவுக்கு வந்த 20ஆம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை, வரலாற்றியல் கல்வியில் அதன் ஆதிக்கமும், ஆளுமையும் நீடித்தது.

இந்தப் பின்னணியிலேயே, காலனியாதிக்கத்தின் கண்ணோட்டத்திலிருந்து இந்திய வரலாறு எழுதப்பட்டது என்பதையும், இந்திய சமூகத்தில் பிளவையும், பிரிவினையையும் உருவாக்கி வளர்த்திடும் விதத்திலும், காலனியாட்சியை ஆதரித்து நியாயப்படுத்தும் தன்மையிலும் வரலாற்றியல் வடிக்கப்பட்டது என்பதையும் இத்தருணத்தில் நாம் உணர வேண்டியது அவசியம்.

இந்தியாவில் இன்று தங்களுக்குத் தாங்களே ‘உண்மையான தேசியவாதிகள்‘ என்று வேடமிட்டுக் கொண்டு, மக்களிடையே மத அடிப்படையில் வெறுப்புணர்வைத் தூவி, பிரிவினையைத் தூண்டும் பாசிச சக்திகள், மேற்சொன்ன ‘காலனித்துவ விளக்கத்தைத்‘ தான், தங்களுக்குச் சாதகமான முறையில் பயன்படுத்திக் கொள்கின்றன.  இந்தியாவில் வாழும் பல கோடிக்கணக்கான சிறுபான்மை மக்களின் நலன்களைப் புறக்கணிப்பதற்கும், ஜனநாயக பூர்வமான  உரிமைகளை நசுக்குவதற்கும் பாசிச ஆட்சியாளர்கள் மேற்கூறிய காலனித்துவ விளக்கத்தைக் கையிலெடுத்துக் கொள்கின்றன.  இந்தச் சூழலில், இந்திய வரலாற்றின் காலனித்துவ விளக்கம் என்ன என்பதைச் சுருக்கமான முறையில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

தொழிற்புரட்சியின் பயனாக 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், உலகின் முதலாவது தொழில்வள நாடாக பிரிட்டன் உருவானது.  அதன் நீட்சியாக, காலனியாதிக்கத்தின் இரண்டாவது நிலையான, ‘தொழில் மூலதன காலகட்டமும்‘ (1813 – 1858) துவங்கியது.  அத்தருணத்தில், இந்தியாவின் பொருள் உற்பத்தி முறைகள், மிகவும் பழமையானதாக, காட்டுமிராண்டித் தனமாக இருப்பதாகவும், அது உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்றும் ஒரு வாதம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்டது.  மிக வேகமாக வளர்ந்து வரும் பிரிட்டன் பொருளாதாரத்திற்கு அனுகூலமாக இருந்து உதவிடும் வகையில், இந்தியா தன்னுடன் இணைக்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் முடிவுசெய்தது…

இந்தக் காலகட்டத்தில்தான், இந்தியாவின் சரித்திரத்தை எழுத முற்பட்ட பிரிட்டிஷ் வரலாற்றியலாளர்கள், வகுப்புவாத அடிப்படையில், இந்தியாவில் முதலில் ‘இந்து ஆட்சி‘யும், தொடர்ந்து ‘முஸ்லிம் ஆட்சி‘யும் நடைபெற்றதாக முழுவதும் பிழையாக வரையறுத்த விபரீதம் நிகழ்ந்தது.  பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்கள் ஒருபடி மேலே போய், “இடைக்காலத்தில் இந்தியாவில் நடைபெற்ற முஸ்லிம் ‘கொடுங்கோலாட்சி‘யை அகற்றி, இந்தியாவுக்குப் பல நன்மைகளை பிரிட்டிஷ் ஆட்சி செய்து வருவதாகவும்” விளக்கம் கூறத் தலைப்பட்டனர்.  (அவர்கள் இவ்விடத்தில் ‘கிறிஸ்தவ ஆட்சி‘ என்று குறிப்பிடாமல் ‘பிரிட்டிஷ் ஆட்சி‘ என்று குறிப்பிட்டதும் கூர்ந்து கவனிக்கத் தக்கது). கிட்டத்தட்ட 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரையிலும் மேற்சொன்ன கருத்தோட்டமே மேலாதிக்கம் செலுத்தி வந்தது.

நிதி மூலதன காலகட்டம்

காலனியாதிக்கத்தின் மூன்றாம் நிலையான ‘நிதி மூலதன’ காலகட்டத்திற்குள் 19ஆம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் பிரிட்டன் அடியெடுத்து வைத்த போது, உலகின் பல நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள், விரைவான தொழில்மயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன.  இதையடுத்து, காலனியாதிக்கத்தை விரிவுபடுத்துவது, ஏற்கனவே தங்கள் ஆளுகையில் உள்ள காலனிய நாடுகளில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது ஆகிய அம்சங்களில் பிரிட்டன் உள்ளிட்ட ஆதிக்க நாடுகள் அக்கறை செலுத்த ஆரம்பித்தன.  புதுப்புது நாடுகளைத் தங்களது காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதில் இந்த நாடுகளிடையே கடுமையான போராட்டமும், போட்டியும் நிலவியது.  தமது நாடுகளில் புதிதாக நிறுவப்பெற்ற தொழிற்சாலைகளுக்கு கச்சாப் பொருள்கள் கிடைக்கச் செய்வதற்கும், ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கான சந்தையை விரிவுபடுத்துவதற்கும் இந்த நாடுகளுக்கு, காலனி விரிவாக்கம் என்பது அவசியமான ஒன்றாக ஆகியிருந்தது. 

காலனியாதிக்கம் இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்குச் சென்ற சூழலில் நிகழ்ந்த அணுகுமுறை மாற்றத்தைத் தோழர் வி.ஐ. லெனின் மிக எளிதாக விளக்கியுள்ளார். “அந்நிய மூலதனம் என்கிற புதிய அம்சம் வர்த்தக பரிமாற்றத்திற்குள் புகுந்துள்ள நிலையில், இதுகாறும் விற்பனையாளர், வாங்குபவர் என்றிருக்கும் உறவைவிட, இனி கடன் கொடுப்பவர், கடன் பெறுபவர் என்கிற உறவு நிலைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கிட்ட வாய்ப்புள்ளது” என்பது அவரது கூற்று.

நிதி மூலதன நுழைவின் இன்னொரு முகமாக, ‘காலனிய நாட்டினர் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்வது’ என்கிற வாதம் மறைந்துபோய், ‘காலனி தேசத்து மக்கள் சுய ஆட்சி என்பதற்கு எந்தக் காலத்திலும் தகுதியற்றவர்கள்‘ என்ற கூக்குரல் வேகமாகக் கேட்க ஆரம்பித்தது. ‘என்றேனும் ஒரு நாள், ஆட்சி நிர்வாகத்தை இந்தியர்களிடம் ஒப்படைத்துவிட்டு பிரிட்டிஷார் வெளியேறுவார்கள்‘ என்கிற நம்பிக்கைக்கும் பேச்சுக்கும் எள்ளளவும் இடமில்லை என்பதாக ஆட்சியாளர்களின் எண்ணப்போக்கு அழுத்தம் திருத்தமாக வெளிப்பட்டது.  அப்போது பம்பாய் மாகாணத்தின் ஆளுநராக இருந்த சர் ரிச்சர்டு டெம்பிள், “இங்கிலாந்து, இந்தியாவைத் தனது முழு ஆளுகைக்குள்ளாகவே எப்போதும் வைத்திருக்க வேண்டும்.  ஏனெனில், ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நிரந்தரமாக நீடித்து நிலைத்திருக்கும்‘ என்கிற உறுதிமொழியுடன் கணிசமான அளவு மூலதனம் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது,” என்று 1880ஆம் ஆண்டில் எழுதிய குறிப்பு ஒன்றில் கூறியுள்ளார். 

காலனிய ஆய்வாளர்களின் தவறான கூற்று

இந்திய வரலாறு குறித்த காலனிய / வகுப்புவாத விளக்கவுரை, இந்து-முஸ்லிம் மோதல் காரணமாக நேரிட்ட ‘மனவேதனைகள்‘ குறித்து மீண்டும் மீண்டும் உரையாடலை மேற்கொள்கிறது.  பிரபல இந்து கருத்தியலாளரான கே.எம். முன்ஷி, 1951இல் சமர்ப்பித்த ஆய்வறிக்கையொன்றில், தற்போது ஆஃப்கானிஸ்தானத்தில் உள்ள கஜினி பகுதியின் சுல்தானாக விளங்கிய மன்னன் முகம்மது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1026இல் நடத்திய படையெடுப்பில் சோமநாதர் ஆலயம் தாக்குதலுக்குள்ளானது குறித்த தனது தரவுகளை வெளியிட்டுள்ளார். இந்தப் படையெடுப்பின்போது, சோமநாதர் கோயில் தாக்கப்பட்டது, “ஒரு தேசியப் பேரழிவாக, மறக்கவியலாத மாறாத வடுவாக, இந்துக்களின் மனதில் பதிந்துவிட்டது” என்று முன்ஷி குறிப்பிடுகிறார். இதன் மூலம் 19ஆம் நூற்றாண்டில் காலனியாட்சி உருவாக்கிய கருத்தாக்கத்தையே முன்ஷியும் எதிரொலிக்கிறார். ஆனால், 1026இல் இந்துக்களின் மனதிற்கு ஏற்பட்டுவிட்ட ‘காயங்களுக்குப்‘ பழி தீர்த்திடும் வகையில் எதிர்வினை ஆற்றிட வேண்டும் என்கிற பேச்சும் வாதமும், 800 வருடங்கள் கடந்து, 1843இல் தான் எழுப்பப்படுகிறது.  பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினரால் இப்பிரச்னை எழுப்பப்படுகிறது. 

இவ்வாறாக, 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்படுகிற ‘காலனிய வரலாற்றாய்வு‘, இந்தியாவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே பல நூற்றாண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருவது போன்ற ஒரு சித்திரத்தைத் தீட்ட முனைந்துள்ளது. இதையொட்டியே, இந்து, முஸ்லிம் என இரு தேசக் கோட்பாட்டை உருவாக்கி, இருவரும் தனித்தனி தேசங்கள் என வரையறை செய்தது.  ஆனால் புகழ்பெற்ற வரலாற்றியல் அறிஞர் ரொமிலா தாப்பர், காலனிய ஆய்வாளர்களின் மேற்சொன்ன அத்தனை கூற்றுகளையும் வன்மையாக மறுப்பதோடு, தகுந்த ஆதாரங்களுடன் தனது கருத்தாக்கங்களை முன்வைக்கிறார்.  பண்டைய நாட்களிலும், இடைப்பட்ட காலத்திலும் உலகெங்கிலும் படையெடுப்புகளின்போது, அதன் ஒரு பகுதியாக, மத வழிபாட்டுத் தலங்களைத் தாக்குவதும், அவற்றிலிருந்து மதிப்பு வாய்ந்த, விலையுயர்ந்த பொருள்களைக் கொள்ளையடிப்பதும், மத வேறுபாடுகள் கடந்து, எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும் நடந்து வந்துள்ள நிகழ்வே என்பதை எடுத்துரைக்கும் பேராசிரியர் ரொமிலா தாப்பர், 1026ஆம் வருடத்திய தாக்குதலும் அவ்வாறான ஒன்றே என  விளக்குகிறார்.  150 வருடங்கள் கழித்து, ஒரு இந்து மன்னனால் சோமநாதபுரம் ஆலயம் புதுப்பித்துக் கட்டப்படுகிறது.  இதையொட்டிக் கிடைத்துள்ள பதிவுகளில், கஜினி முகம்மதுவால் சோமநாதர் ஆலயம் தாக்கப்பட்டது பற்றிய எந்தவிதக் குறிப்பும் இல்லை.  250 வருடங்களுக்குப் பிறகு, சோமநாதர் கோயிலுக்குச் சொந்தமான ஒரு இடத்தில் இஸ்லாமிய வணிகர் ஒருவரால் மசூதி ஒன்று கட்டப்படுகிறது.  அப்பகுதியை ஆளும் இந்து மன்னர், உள்ளுர் வணிகர்கள், ஆலயத்தில் பூசை செய்வோர் என அனைவரிடமும் முறையான அனுமதியைப் பெற்று, மசூதி எழுப்பப்பட்டது.    இந்த இந்துக்களின் உள்ளங்களில் மேலே குறிப்பிட்ட வடுக்களும், வேதனைகளும் பதிந்து கிடந்ததாகச் செய்தி ஏதுமில்லை. அப்படி எதுவும் இந்துக்களின் நினைவுகளில் நிழலாடவில்லை. அத்தகைய ‘நினைவுகள்‘, காலனிய ஆட்சிக் காலத்தில்தான், மத/வகுப்புவாதக் கண்ணோட்டத்தில் உருவாக்கம் பெற்று பரவலாக எடுத்துச் செல்லப்பட்டன என்பதை ரொமிலா தாப்பர் அறுதியிட்டு விளக்குகிறார்.

சரியான முறையில் தொகுக்கப்பட்ட இந்திய வரலாறு

இந்திய தேசத்தின் விடுதலைக்குப் பிறகே, இந்தியாவின் வரலாற்றைச் சரியான முறையில் கொண்டு செல்வதற்கான களம் ஓரளவு கிட்டியது.  காலனிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட இந்திய வரலாற்றின் குறைபாடுகளையும், குளறுபடிகளையும் அகற்றி, இந்தியக் கண்ணோட்டத்தில் தேசத்தின் சரித்திரத்தைப் புரிந்து கொள்வதற்கும், பண்டைய நாட்களிலிருந்து தற்காலம் வரையிலுமான இந்திய சமூகக் கட்டமைப்பு, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அளவீடுகளை அறிந்து கொள்வதற்கும் உதவிடும் வகையில் தலைசிறந்த வரலாற்றியல் வல்லுநர்களை வைத்து ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வழிபிறந்தது.  1960-களிலும், 1970-களிலும் இந்தியாவின் பெருமைமிக்க பல்கலைக் கழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் இதற்கான பணிகள் முறைப்படி துவங்கின.

இந்திய வரலாற்றின் நுணுக்கங்களைச் சரியான கோணத்தில் இந்திய பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் 1960-களில்  தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் சார்பில் சில முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  உலக அளவில் அங்கீகாரம் பெற்ற தலைசிறந்த வரலாற்றியல் கல்வியாளர்களான ரொமிலா தாப்பர், பிபின் சந்திரா, ஆர்.எஸ். சர்மா, சதீஷ் சந்திரா போன்றோர், தமது சமூகக் கடமையின் ஒரு பகுதியாக, தங்கள் பொன்னான நேரத்தைச் செலவிட்டு, பள்ளிக் குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்களைத் தயார் செய்து கொடுத்தனர்.  எடுத்துக் காட்டாக, 6ஆம் வகுப்பில் பயிலும் 11 வயது சிறார்களுக்கான பாடப்புத்தகத்தை ரொமிலா தாப்பர் தயாரித்து வழங்கினார்.  நானறிந்த வரையில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு முக்கியத்துவத்துடன், இத்தனை பெரிய அளவில் கல்விசார்ந்த இத்தகைய பணி அரசின் சார்பில் மேற்கொள்ளப்படவில்லை.  இதன் விளைவாக மிக அருமையான பாடப் புத்தகத் திரட்டுகள் பள்ளி மாணவர்களுக்கு வசப்பட்டன.  50ஆண்டுகள் கடந்து இன்றும் அவை கல்வி வளாகங்களில் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. 

ஆர்எஸ்எஸ் ன் மனப்போக்கு ஒரு பாசிச மனப்போக்கு

அறிவியல்பூர்வமான, மதச்சார்பற்ற கல்விக்கு, வகுப்புவாதக் கண்ணோட்டத்துடனான எதிர்ப்பும், தாக்குதலும் துவக்கத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பிடமிருந்து வந்து கொண்டிருந்தது.  ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங் எனப்படுகிற ஆர்எஸ்எஸ் அமைப்பு, ஒரு தனியார் இராணுவம் போலச் செயல்படுவதையும், ஹிட்லர் காலத்திய ஜெர்மனியின் நாஜிக்கள் போன்று அவர்களது பயிற்சிகள் அமைந்திருப்பதையும் குறித்து ஜவஹர்லால் நேரு ஆரம்ப நாட்களிலேயே எச்சரிக்கை விடுத்தார்.  ‘ஆர்எஸ்எஸ்இன் மனப்போக்கு ஒரு பாசிச மனப்போக்கு‘ என்று தனது மதிப்பீட்டை நேரு வெளிப்படையாகவே தெரிவித்தார். 

மகாத்மா காந்தியின் படுகொலையையடுத்து, துணைப்பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேலின் முழு சம்மதத்துடன், ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டு, அதன் 25,000 செயல்பாட்டாளர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.  ஆனால் தடை விலக்கிக் கொள்ளப்பட்டு, அனைவரும் விடுதலையானதும், ஆர்எஸ்எஸ் அமைப்பு, கருத்தியல் ரீதியான தன்னுடைய தாக்குதலை தேசத்தின் மீது தொடுக்க ஆரம்பித்தது.  இதன் பின்விளைவுகளை நன்கு உணர்ந்திருந்த நேரு, ஆர்எஸ்எஸ் இன் அபாயகரமான செயல்முறைகள் பற்றிய தனது ஆதங்கத்தையும், எச்சரிக்கையையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.  அதையொட்டி அனைத்து மாகாண முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில்தான் “ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் முழுமையான மனப்போக்கும், பாசிச மனப்போக்கே” என்றும், ‘அவர்களது நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும் ‘ என்றும் நேரு குறிப்பிட்டார். இத்தாலி நாட்டின் புகழ்பெற்ற அறிஞர் மார்சியா கசோலரி தனது ஆழமான ஆய்வுகள் மற்றும் நேரடி கள விசாரணைகள் மூலம், “ஆர்எஸ்எஸ் தலைவர்கள் உள்ளிட்ட இந்து வகுப்புவாதச் சிந்தனையாளர்கள் அனைவரும் இத்தாலி மற்றும் ஜெர்மனியில்அரங்கேற்றப்பட்ட பாசிச மாடல் நடவடிக்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அதைப் பாராட்டிக் கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள்” என்றும், “இவர்களது முக்கியத் தலைவரான பி.எஸ். மூஞ்சே, இத்தாலிக்கு நேரடியாகவே வருகை புரிந்து, சர்வாதிகாரி முசோலினியைச் சந்தித்து, அவரது அறிவுரையையும், ஆலோசனையையும் பெற்றவர்” என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மதவாத பாடத்திட்டம்

‘அரசியலில் நாங்கள் ஒருபோதும் ஈடுபட மாட்டோம்’ என்று எழுத்துபூர்வமாக வழங்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில்தான் ஆர்எஸ்எஸ் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதையடுத்து தாங்கள் ஒரு ‘கலாச்சார அமைப்பு‘ தான் என்று ஆர்எஸ்எஸ் மீண்டும் மீண்டும் கூறிக் கொள்கிறது.  ஆனால் இன்னொருபுறம், பிரிவினையைத் தூண்டி வெறுப்பினை உமிழும் தனது மோசமான கருத்தியலைப் பிஞ்சு உள்ளங்களின் நெஞ்சிலே பரப்பி, பதியச் செய்திடும் நோக்கத்துடன் ‘சரஸ்வதி சிசு மந்திர்‘ என்கிற பெயரில் நாடு முழுவதும் பல்லாயிரக் கணக்கான கல்வி நிறுவனங்களைத் துவக்கி ஆர்எஸ்எஸ் நிர்வகித்து வருகிறது.  இத்தகைய தன்மையில் முதலாவது பள்ளி 1952இல் ஆர்எஸ்எஸ்-ன் அன்றைய தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.  (கோல்வால்கரின் விநோதமான வரலாற்று மற்றும் புவியியல் ஞானம், பல நேரங்களில் பரிகசிப்புக்கு ஆளானதுண்டு.  “ஆரியர்கள் வட துருவத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் என்று சொல்ப்படுகிறது. இருக்கக் கூடும். ஆனால் உண்மையில் வட துருவமானது அப்போது இந்தியாவில்தான் இருந்தது. இன்றைய பீகார் மற்றும் ஒரிசா பகுதிகளில் தான் வட துருவம் நிலை கொண்டிருந்தது.  பின்னர் ஆரியர்கள் இங்கேயே தங்கிவிட, வட துருவம் மட்டும் இடம் பெயர்ந்து, இப்போதுள்ள இடத்திற்குச் சென்று விட்டது” என்பது கோல்வால்கரின் புகழ்பெற்ற வாதம்). 

ஆண்டுகள் செல்லச்செல்ல, ஆர்எஸ்எஸ்இன் வலைப்பின்னலும் அதிகரித்தே வந்துள்ளது.  1977இல் 500 என்றிருந்த ஆர்எஸ்எஸ் பள்ளிகளின் எண்ணிக்கை, 1993-94இல் 6,000 ஆகவும், 1999இல் 14,000 ஆகவும் உயர்ந்துவிட்டது.  இந்தப் பள்ளிகளின் மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் வகுப்புவாதக் கருத்தியல் இளம் மாணவச் செல்வங்களின் மூளைக்குள் பலவந்தமாகத் திணிக்கப்படுகிறது.  இந்தப் பள்ளிகளையும் தாண்டி, உ.பி., குஜராத், ம.பி., கர்நாடகம் உள்ளிட்ட பிஜேபி ஆளும் பல மாநிலங்களில் அரசுப் பள்ளிகள் வாயிலாகவும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் புகுத்தப்படுகிறது.

ஆர்எஸ்எஸ் பள்ளிகளில் 9 வயதும், 10 வயதும் உடைய நான்காம்/ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வரலாற்றுப் புத்தகத்தில், “இந்தியாவுக்குள் நுழைந்து இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள், ஒரு கையில் வாளும், இன்னொரு கையில் குரானும் கொண்டு வந்தார்கள்”, “நான்கு திசைகளிலும் படையெடுத்துச் சென்ற அவர்கள், எதிரில் வருகிற எல்லோரையும் கொல்வது, வழிபாட்டுத் தலங்களை இடிப்பது, பல்கலைக் கழகங்களைத் தகர்ப்பது, நூல் நிலையங்களைக் கொளுத்துவது, பிற மதங்களின் புனித நூல்களை எரிப்பது, தாய்மார்களையும், சகோதரிகளையும் மானபங்கப் படுத்துவது என அத்தனை கொடூரச் செயல்களிலும் ஈடுபட்டனர்“, “நீதி, நியாயம், கருணை போன்றவையெல்லாம் அவர்கள் அறியாதவை“ என்று இஸ்லாம் வளர்ச்சி குறித்த பாடத்தில் இடம் பெற்றுள்ளது.

(இந்து வகுப்புவாதக் கும்பலால் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும், புனே நகரில் பந்தார்கர் நூலகம் அடித்து நொறுக்கப்பட்டதையும், 2002இல் குஜராத்தில் தாய்மார்களும், சகோதரிகளும் பாலியல் வன்கொடுமைக்குள்ளானதையும் நாம் மறந்துவிட வேண்டும்).

ஆர்எஸ்எஸ்இன் இன்னொரு வெளியீடு, கிறிஸ்தவர்களை தேசவிரோதிகளாகவும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பவர்களாகவும் சித்தரிக்கிறது.  “கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் செய்த சதித் திட்டத்தின் காரணமாகவே இந்திய நாடு துண்டாடப்பட்டது“, “கிறிஸ்தவ மிஷினரிகள் நாகாலாந்து, மேகாலயா, அருணாசலப் பிரதேசம், பீகார், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் தேசவிரோதக் கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. இவர்களால் இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் அபாயம் நேரிட்டுள்ளது“ என்று மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

குஜராத்தின் பள்ளிப் பாடப் புத்தகத்தில் ஹிட்லருக்குப் புகழ்மாலை சூட்டப்படுகிறது.  இன்னொரு நூலில், மெக்கா மசூதியின் மையப்பகுதியில் உள்ள காபா கட்டிடம், சிவலிங்கமாகச் சித்தரிக்கப்படுகிறது. டில்லியின் முதலாவது முஸ்லிம் ஆட்சியாளரான குத்புதீனால் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது குதுப்மினார். ஆனால் இது 4ஆம் நூற்றாண்டில், சமுத்திரகுப்தரால் எழுப்பப்பட்ட ‘விஷ்ணு ஸ்தம்பம்’ என்று கற்பிக்கப் படுகிறது. வகுப்புவாதக் கண்ணோட்டத்துடன், முற்றிலும் உண்மைக்கு மாறான செய்திகள் ஆர்எஸ்எஸ் பள்ளிகளுக்கும் அப்பால் நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்படுகின்றன.  

ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவ அகராதியின்படி, இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ‘வெளியாட்கள்‘ ஆவர்.  இந்திய நாட்டின் மீதான அவர்களுடைய பற்றும், விசுவாசமும் கேள்விக்குரியது.  இந்துக்களின் ‘புண்ணிய பூமி‘ இந்தியாவிலேயே உள்ளது.  ஆனால் இஸ்லாமியர்களுக்கு அரேபியாவின் மெக்காவிலும், கிறிஸ்தவர்களுக்கு பாலஸ்தீனத்தின் ஜெருசலேமிலும் இருக்கிறது.  ஆக, இந்துக்கள் மட்டுமே ‘இந்திய தேசம்‘ என்கிற அடையாளத்துக்குச் சொந்தம் கொண்டவர்கள்  என்பதுதான் ஆர்எஸ்எஸ்-இன் நிலைபாடு. 

பார்த்த மாத்திரத்திலேயே பரிகாசத்துக்குரிய இத்தகைய விளக்கவுரையின் மூலமாகத்தான், முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் அந்நியப்படுத்தி, அவர்களை ‘வேறானவர்கள் (Others)‘ என்று வகைப்படுத்துகிறது ஆர்எஸ்எஸ்.  இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இந்தியாவின் குடியுரிமை மறுக்கப்பட வேண்டும் என்பதே இதன் உள்ளடக்கம். 

ஒரு வாதத்திற்கு ஆர்எஸ்எஸ்-இன் மேற்கூறிய ‘விளக்கம்‘ ஏற்றுக் கொள்ளப்படுமானால், ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஏன் ஆசியாவிலேயே தென் கொரியாவிலும் வாழ்ந்து வரும் கிறிஸ்தவ சமூகத்தினர், தத்தம் நாடுகளில் குடியுரிமை கோர முடியாது – காரணம் அவர்களது புண்ணிய பூமி பாலஸ்தீனத்தில் இருக்கிறது.

2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிஜேபி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன், கல்வி நிலையங்களைக் காவிமயப் படுத்தும் ஆர்எஸ்எஸ்-இன் முயற்சிக்குப் புதிய வலு கிட்ட ஆரம்பித்தது.  2019-இல் பிஜேபி கட்சி நாடாளுமன்றத்தில் தானே அறுதிப் பெரும்பான்மையை அடைந்துவிட்டதால், கூட்டணிக் கட்சிகளுடனான கலந்தாலோசனை போன்ற எந்தவித நிர்ப்பந்தமும் இன்றி, ஆட்சியதிகாரத்தைத் தனது விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் வந்து சேர்ந்தது.

கல்விப் புலத்தில் வகுப்புவாத சக்திகள்

மாணவர்களுக்குப் புதிதாகப் புகுத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பாடத் திட்டம், தேசத்தந்தை மகாத்மா காந்தி ஒரு இந்து தீவிரவாதியால் படுகொலை செய்யப்பட்ட உண்மை நிகழ்வை உரைக்க மறுக்கிறது.  இந்திய தேசிய இயக்கத்தில் முன்னணிப் பங்கு வகித்த மாபெரும் தலைவர்கள் பற்றிய பாடத்தில், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பிரிட்டிஷாருடன் 30 வருடங்களுக்கு மேலாக வீரச் சமர் புரிந்து, அதில் முழுவதுமாக 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, அரும் பாடுபட்ட மகத்தான தலைவர் ஜவஹர்லால் நேரு பற்றிய சிறு குறிப்பு கூட  இடம் பெறவில்லை.

ஆனால் நேருவைப் பற்றிய எதிர்மறையான குறிப்பு மட்டும் பாடத் திட்டம் முழுவதும் பரவிக் கிடக்கிறது.  இந்திய தேசம் சந்தித்த அத்தனை பிரச்னைகளுக்கும் முழுமுதற் காரணம் நேருவும், அவர் பின்பற்றிய கொள்கைகளும்தான் என்று வன்மையாகச் சாடும் இந்த வரலாற்றுப் பாடத் திட்டம், போகிற போக்கில், முழுவதும் கற்பனையான கற்பிதமாகக் கூறப்படுகிற, நேருவின் மூதாதையர்களின் முஸ்லிம் (!) மதச் சார்பு பற்றியும் பேசுகிறது.  (பிஜேபி-யின் தலைவர் ஒருவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வார இதழில், ‘காந்தியைக் கொன்ற கோட்சே, நேருவையும் சுட்டுத் தள்ளியிருக்க வேண்டும்‘ என்று வெளிப்படையாக எழுதியிருந்ததை இவ்விடத்தில் நினைவுபடுத்த வேண்டியுள்ளது). 

கல்விப் புலத்தில் வகுப்புவாத சக்திகள் ஆக்ரோஷமாக நடத்துகிற கருத்தியல் ரீதியான தாக்குதலானது, தேசத்தின் வரலாற்றைத் தங்கள் விருப்பம் போல திரித்துக் கூறுவது என்பதையும் கடந்து, பொது வெளியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.  அது, இடைவிடாத தொடர் பிரசாரங்கள் மூலம், பழங்கால புராணக் கதைகள் குறித்த மாயத் தோற்றத்தையும், போலி பெருமித உணர்வையும் பெரும்பான்மை சமூக மக்களின் மனதில் பதியவிடுகிறது.  பின்னர் அதே பெரும்பான்மையினருக்கு, சிறுபான்மை மக்களிடமிருந்து அச்சுறுத்தலும், ஆபத்தும் ஏற்படப் போவதாக ஒரு பொய்யான பிம்பத்தைக் கட்டமைக்க எத்தனிக்கிறது.  இதன் மூலம் பெரும்பான்மை மக்களின் மனதில் அச்சவுணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் நிரந்தரமாக அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிக்கிறது.  உலகின் பல பகுதிகளிலும், தனது மேலாதிக்கத்தைத் திணிக்க முற்படும் பாசிச சக்திகள், இது போன்ற அணுகுமுறையையே பின்பற்றுகின்றன என யேல் பல்கலைக் கழகத்தின் தத்துவவியல் பேராசிரியர் ஜாசன் ஸ்டான்லி எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியுள்ளார்.

பொய்யான பிம்பத்தைக் கட்டமைத்தல்

ஒருசில உதாரணங்களை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.  இன்றைய பிரதமர், 2014ஆம் ஆண்டு தான் பதவியேற்ற சில மாதங்களில் மும்பையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றில், புராணக் கதைகளில் கூறப்படும் புனைவுகளை வரலாற்றுடன் அப்பட்டமாக இணைத்து, உரை நிகழ்த்தினார்.  விநாயகப் பெருமானின் கதையானது, ‘இந்தியாவில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே பிளாஸ்டிக் சர்ஜரி நடத்தப்பட்டதற்கான‘ சான்று என பிரதமர்  முழங்கினார்.  இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் மிகவும் பிரபலமான மருத்துவர்களும், திரை நட்சத்திரங்களும், வர்த்தகத்தில் சாதனை படைத்து வரும் பெரிய வணிகர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத் தக்கது.  இது போன்றே, மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநரும், தற்போதைய குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர், 2020 ஜனவரியில் கொல்கத்தாவில் நடைபெற்ற அறிவியல், பொறியியல் கண்காட்சியைத் துவக்கி வைத்து ஆற்றிய உரையில், ‘மகாபாரதத்தின் முக்கிய வீரனான அர்ஜுனன், நியூக்ளியர் சக்தி படைத்த அம்புகளைக் கொண்டே போரில் எதிரிகளை வீழ்த்தினான்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.  ஆர்எஸ்எஸ் அமைப்பின் அன்றைய தலைவரான  சர்சங்சலாக் கே.எஸ்.சுதர்சன்,‘பரத்வாஜ முனிவரும், போஜ ராஜனும், புதிய விமானங்கள் வடிவமைப்பது பற்றி மட்டுமல்ல; அவற்றில் ஒவ்வொரு விமானத்தையும் எவ்வளவு உயரத்தில் பறக்கவிடுவது என்பது பற்றியும், அதில் எழும் பிரச்னைகளை எவ்வாறு சரிசெய்வது என்பது பற்றியும் கூட விரிவான உரையாடல் நடத்தியதாகக் கூறியுள்ளார்.

இவ்வாறு ‘இந்துக்கள்‘ கடந்த காலங்களில் ‘அளப்பரிய சாதனைகளைப்‘ படைத்திருந்தாலும், இன்று அவர்கள் மிகுந்த சோதனைகளைச் சந்தித்து வருகிறார்கள் என்கிற கற்பிதம் வகுப்புவாத சக்திகளால் தொடர்ந்து உருவாக்கப்படுகிறது.  கடந்த நூற்றாண்டுகளில் முஸ்லிம்களால் இந்துக்கள் என்னென்ன ‘சித்திரவதைகளை‘ அனுபவித்தார்கள் என்று மீண்டும் மீண்டும் மக்களுக்கு ‘நினைவூட்டப்‘ படுகிறது.  தேசத்தின் தலைநகர் புது டில்லியிலிருந்து மிக அருகாமையில் இருக்கும் ஹரியானா மாநிலத்தின் கிராமப்புறங்களில் ஒரு கதை சொல்லப்படுவதை நானே பலமுறை கேட்டுள்ளேன்.  முகலாய மன்னன் அவுரங்கசீப்பிடம் தினந்தோறும் இரவில் கணிசமான எண்ணிக்கையில், உயர்சாதியினர் அணிந்து கொள்ளும் பூணூல் சரடுகளைக் கொண்டுவந்து காட்டிய பிறகு தான் உறங்கச் செல்வானாம்.  நிறைய இந்துக்கள் கொல்லப்பட்டனர் அல்லது மதம் மாற்றப்பட்டனர் என்ற செய்தியைக் கேட்ட பிறகுதான் அவனுக்குத் தூக்கம் வருமாம்.  நான் வரலாற்றுப் பாடம் கற்பிக்கும் பணியில் உள்ளவன் என்பதைத் தெரிவித்தவுடன், என்னிடம் இந்த ‘வரலாறு’ உடனடியாகச் சொல்லப்படுகிறது.

பிஜேபி அரசு புது டில்லியின் ஒரு சாலைக்கு இடப்பட்டிருந்த அவுரங்கசீப்பின் பெயரை அகற்றியதை, தனது வீரச் செயலாகப் பெரிதும் விளம்பரப்படுத்திக் கொண்டது.  வலிமைமிக்க உள்துறை அமைச்சர் பதவியைத் தன் வசம் வைத்திருக்கும் திருவாளர் அமித் ஷா, இந்தியாவுக்குள் வங்கதேச முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் தினந்தோறும் ‘ஊடுருவிக் கொண்டிருப்பதாகவும்‘, நாட்டின் பல பகுதிகளிலும் ‘கறையான்கள் போலப் பரவி‘, அவர்கள் நடமாடிக் கொண்டிருப்பதாகவும், அவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் அடிக்கடி ‘எச்சரிக்கை‘ விடுத்து வருகிறார். முஸ்லிம்களால் இந்துக்களுக்கும், இந்தியாவுக்கும் ஆபத்து காத்திருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றம், நாடு முழுவதும் நெருப்பாகப் பற்றிப் பரவச் செய்யப்படுகிறது. இந்துக்களுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் ஒன்றுசேர்ந்து வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் என பல முனைகளிலிருந்தும் பிரசாரம் மேற்கொள்ளப் படுகிறது.  இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, முஸ்லிம்கள் தங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள ‘பலதார மண முறை‘யைப் பயன்படுத்திக் கொண்டு, மிகவும் அதிகமான எண்ணிக்கையில் பெருகி வருவதாகவும், வெகு விரைவில் நாட்டின் மக்கள் தொகையில் இந்துக்களைப் பின்னுக்குத் தள்ளி முஸ்லிம்கள் முந்திச் சென்று, பெரும்பான்மையை எட்டி விடுவார்கள் என்றும் ஒரு கருத்து உரத்த குரலில் முன்வைக்கப்படுகிறது.  தேசத்தின் அத்தனை தரவுகளையும், பல்வேறு புள்ளி விவரங்களையும், மக்கள் தொகை கணக்கீடுகளையும் மூடி மறைத்து, முழுவதும் பொய்யான ஒரு வாதம், மிகவும் திட்டமிட்டு உலவ விடப்படுகிறது. இத்தகைய ஒரு வாதத்தை வைத்துக் கொண்டு, உத்தரப்பிரதேசத்தில் ‘மக்கள் தொகை கட்டுப்பாடு மசோதா‘ ஒன்று நிறைவேற்றப்பட்டு, அதிக குழந்தைகள் உள்ள ஏழை இஸ்லாமியர் குடும்பங்கள் தண்டனைக்குள்ளாக்கப்படும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. 

பாசிசச் சிந்தனையாளர்கள் பின்பற்றும் இன்னொரு பொதுவான வழிமுறை, பெரும்பான்மை சமூகத்தவரிடம், பாலியல்  ரீதியாக அவர்களுக்குப் பெரும் இடர்ப்பாடுகள் இருப்பதாக அச்சமூட்டுவது.  இதன் ஒரு வடிவமாகவே, அப்பாவி இந்துப் பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் காதல் என்ற பெயரில் குறி வைப்பதாகவும், அவர்களைக் கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொள்வதாகவும் ஓயாத பிரசாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது.  ‘லவ் ஜிகாத்‘ என்று வர்ணிக்கப்படுகிற இந்தக் ‘குற்றத்தை‘ தடுத்து நிறுத்துவதற்கென்று, பிஜேபி ஆளும் மாநிலங்களில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.  இது மட்டுமன்றி, காலனிய ஆட்சிக் காலத்திய தேசத் துரோகச் சட்டம், சமீப ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ‘உபா‘ சட்டம் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்தி, ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கயவர்களாகவும், கிரிமினல் குற்றவாளிகளாகவும் சித்தரிக்கும் கவலைக்குரிய போக்கு அதிகரித்துள்ளது. 

சிறுபான்மை சமூகத்தினர் மீதான பொதுவெளி தாக்குதல்களும், ஏன் கும்பல் படுகொலைகளும் சமீப ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளன.  அரசு நிர்வாகம் இத்தகைய கொடூர நிகழ்வுகளைக் கண்டும் காணாமல் கடந்து செல்கிறது.  அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2021-ஆம் வருடத்திற்கான தனது ஆண்டறிக்கையில், சர்வதேச அளவிலான மத சுதந்திரம் பற்றிய குறிப்பில், ‘இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தினர் தாக்குதலுக்குள்ளாவது, படுகொலை செய்யப்படுவது,  அச்சுறுத்தல்களுக்கு ஆளாவது போன்ற கொடுமைகள் ஆண்டு முழுவதும் அரங்கேறி வந்துள்ளன‘ என்று தெரிவித்துள்ளது.

அயோத்தியில் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி, அது தான் இந்து கடவுள் இராமர் பிறந்த இடம் என்று வலதுசாரி வகுப்புவாத சக்திகள் நடத்திய பிரசாரத்தின் பின்னணியில் 1992-இல் இடித்துத் தள்ளப்பட்டது. தற்போது அங்கே கட்டப்பட்டு வரும் மிகப் பெரிய இராமர் கோயிலுக்கு 2021-இல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  இதே போன்ற பிரச்னைகள் வேறு இடங்களை மையமாக வைத்து தற்போது மீண்டும்  எழுப்பப்படுகிறது.  1991-ஆம் வருடம் இந்திய நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய வழிபாட்டுத் தலங்கள் சட்டம், அனைத்து இறை வழிபாட்டு இடங்களும் நாடு விடுதலையடைந்த 1947 ஆகஸ்ட் 15 தேதியில் இருந்த நிலையில் அவ்வாறே பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக வரையறுத்துள்ளது.  ஆனால் அந்தச் சட்டத்தை முழுவதுமாக அவமதிக்கும் வகையில், மதுராவில் ஷாகி இத்கா மசூதியைக் குறிவைத்து, கிருஷ்ண ஜன்மஸ்தான் பிரச்னை எழுப்பப் படுகிறது.  அதே போல, வாரணாசியின் ஞானவாபி மசூதியின் நீரூற்றுப் பகுதியில் சிவலிங்கம் இருப்பதாகவும், அங்கு வழிபாடு நடத்த அனுமதியளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படுகிறது. 

உண்மைகளை மறைத்தல்

மேற்கூறிய மூன்று இடங்களிலும் இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு அவற்றின் மீது மசூதிகள் எழுப்பப்பட்டதாகவும், இதுபோல் நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட மசூதிகள் கட்டப்பட்டதாகவும், வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும் என்றும், இந்து மதத்தின் பெருமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், அதுவே இந்துக்களின் மனதில் உள்ள காயங்களுக்கு மருந்தாக அமைந்திடும் என்றும், ஆர்எஸ்எஸ்-இன் தீய பிரசாரம் உரத்த குரலில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இவற்றின் உள்ளே ஒளிந்திருக்கும் உண்மை திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.  அயோத்தி, மதுரா, காசி ஆகிய மூன்று நகர்களிலுமே, பல நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக இந்துக்களும், இஸ்லாமியர்களும் அமைதியாகவும், இணக்கமாகவும், பரஸ்பர புரிதலுடன் தோளோடு தோள் நின்று வாழ்ந்து வந்துள்ளனர்.  அவரவர் கடவுளுக்குப் படைக்கப்படும் பிரசாத காணிக்கைகளைப் பகிர்ந்து பரிமாறிக் கொள்ளும் தன்மையில் மக்களிடையே நல்லெண்ணமும், ஒன்றுபட்ட உணர்வும் பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ளது.

இந்த ஒற்றுமைச் சூழலை உடைத்திடும் விதமாகவே, இந்துக்களுக்கு வலி, வேதனை, மாறாத வடு, மனதில் காயம், துயர நினைவுகள் என்று பல கற்பனைகள் உள்நோக்கத்துடன் உருவகம் பெற்றுள்ளன.  காலனிய ஆட்சியில் இந்திய சமூகத்தை இரு கூறாக்கி எதிரெதிர் திசையில் நிறுத்துவதற்கு சோமநாதர் ஆலயம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை முன்னரே பார்த்தோம்.  இத்தகைய முயற்சிகளின் ஊடாகவே அரசியல் களத்தில் ‘பெரும்பான்மை‘ வாதம் முன்னிறுத்தப்படுகிறது. உ.பி. முதல்வர் உள்பட பிஜேபி-யின் முன்னணித் தலைவர்கள், ‘80 : 20‘ என்று பேசி, இந்து வாக்குகளை ஒருங்கிணைக்க யத்தனிப்பதும் கவனிக்கத் தக்கது.

இந்திய பண்பாட்டின் அடிப்படையான பொது பாரம்பரியக் கூறுகளை மறுதலித்து, இஸ்லாமிய எதிர்ப்புணர்வை வலியப் புகுத்திடும் தன்மையில் தேசத்தின் வரலாற்றைத் திரித்துக் கூறுவதும், கடைந்தெடுத்த பொய்களுக்கு மெய்யான தோற்றம் தருவதும் வகுப்புவாத சக்திகளின் இன்றைய நடைமுறையாய் மாறியுள்ளது.  முகலாயர் ஆட்சியின் முக்கிய நிகழ்வுகளும், சாதனைகளும் கூட சர்ச்சையாக்கப்படுகின்றன. மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பெற்ற, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகால், அதன் எழில்மிகு கட்டிடக் கலைக்கும், நிபுணத்துவம் நிறைந்த வடிவமைப்பிற்கும் பெயர் பெற்றது.  ஆனால் தாஜ் மகால் ஒரு இந்து மன்னரால் கட்டப்பட்ட  இந்து கோயில் என்றும், அதன் பெயர் ‘தேஜோ மகால்‘ என்றும் ஒரு புதிய விவாதம் கிளப்பி விடப்படுகிறது. இத்தகைய சர்ச்சைக்குரல் அறுபதாண்டுகளுக்கு முன்பே, 1960-களில் ‘விநோதமாகச் சிந்திக்கும் விந்தை மனிதர்‘ புருஷோத்தம் நாகேஷ் ஓக் என்பவரிடமிருந்து எழுந்தது.  அபத்தமாகக் கருதப்படும் இவரது விவாதம் இதோடு முடியவில்லை.  பகவான் கிருஷ்ணரின் போதனைகளை உரைக்கும் ‘கிருஷ்ண நீதி‘ என்பதிலிருந்து தான் ‘கிறிஸ்தவ மதம்‘ உதித்தது என்றும், இந்து மதத்தில் துறவிகளின் வாழ்விடமாக சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் ‘வாதிகா‘ என்ற வார்த்தையிலிருந்துதான் ‘வாடிகன்‘ நகருக்குப் பெயரிடப்பட்டது என்றும், மெக்காவின் ‘காபா‘ சிவலிங்கத்தின் வடிவம் என்றும் அவர் அடுக்கிக் கொண்டே போகிறார்.  பல பத்தாண்டுகளாக இவரது மேற்கூறிய சர்ச்சைக் கருத்துக்கள், மனப்பிறழ்வு கொண்ட ஒருவரிடமிருந்து வெளிப்படுகிற, ஓரங்கட்டப்பட வேண்டிய உளறல்கள் என்றே எள்ளி நகையாடப்பட்டன.  ஆனால் இன்று, ‘ஓரங்கட்டப்பட்ட‘ இந்தக் கருத்துக்களுக்கு உயரிய இடம் வழங்கப்பட்டு, அதை விமர்சிப்பவர்கள் தேசவிரோதிகளாகவும், இடதுசாரி-மதச்சார்பற்ற சிந்தனையை முன்னிறுத்தி, இந்து உணர்வுகளை உதாசீனம் செய்பவர்களாகவும், முஸ்லிம்களையும், ஏனைய சிறுபான்மையினரையும் தாஜா செய்து திருப்திப்படுத்துவதற்காக, இந்துக்களை அவமதிப்பவர்களாகவும் முத்திரையிடப்படுகின்றனர்.

“அண்மைக் காலங்களில் இந்து வகுப்புவாதப் பேச்சாளர்கள், வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கி வெறுப்பூட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்” என்று தி எகானமிஸ்ட் ஏடு அக்கறையுடன் அம்பலப்படுத்துகிறது.  ‘முஸ்லிம்களைக் கூண்டோடு நாட்டைவிட்டு வெளியேற்றுவோம்‘, ‘முஸ்லிம் பெண்களைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவோம்‘ என்றெல்லாம் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் இவர்கள் கொக்கரிப்பது வாடிக்கையாகி வருகிறது. பீகார் மாநில பிஜேபி தலைவர்களுள் ஒருவரான ஹரிபூஷன் தாகுர் பச்சல், கடந்த மே 7 அன்று ஒரு பேரணியில், ‘இந்து பண்டிகைகளில் இராவணனின் கொடும்பாவி எரிக்கப்படுவதைப் போல, இஸ்லாமியர்கள் அனைவரும் உயிரோடு கொழுத்தப்பட வேண்டும்‘ என்று பேசினார்.  வெளிப்படையாகவே வன்முறையைத் தூண்டும் தங்களுடைய வார்த்தை விளையாட்டுகள் மீது ஆளும் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்பதை நன்கு அறிந்த இந்த இந்துத்துவ வெறியர்கள், ‘இந்துக்கள் அனைவருக்கும் ஆயுதங்கள்  அளிக்கப்பட வேண்டும்‘ என்றும், ‘இந்தியாவின் நன்மைக்காக, இஸ்லாமியர்கள் மீது ஒரு இனப்படுகொலை நடத்தப்பட வேண்டும்‘ என்றும் பகிரங்கமாக அறைகூவல் விடுத்து, பொது வெளியில் முழங்கி வருகிறார்கள். 

சிறுபான்மையினர் எதிர்ப்பு மனநிலை

ஒரு தேசத்தின் உருவாக்கம் என்பது, படிப்படியாக நடைபெறும் வரலாற்று நிகழ்வு.  ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்களின் ஆணைகளைக் கொண்டோ, நிரந்தரமாக வரையப்பட்ட விதிகளைக் கொண்டோ அது நடைபெற இயலாது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.  தேச வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் திடீர் திருப்பங்களும் மாற்றங்களும் தவிர்க்க இயலாதவை.  1990-களில் யுகோஸ்லேவியா மறைந்து புது நாடுகள் உருவானதும், 1971-இல் நமக்கு மிக அருகே, பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசம் பிறந்ததும்,  தேசங்களின் வரலாற்றுத் திருப்பங்களுக்கான சமீபத்திய எடுத்துக் காட்டுகளாக உள்ளன.  14-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடைபெற்ற சண்டையில் துருக்கிய முஸ்லிம்கள் வெற்றி பெற்று, செர்பிய கிறிஸ்தவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.  அந்தப் போரின் ‘வலி மிகுந்த நினைவுகள்‘, 600 வருடங்கள் கடந்தபின், பழிதீர்க்கும் மனநிலையோடு மீண்டும் மீண்டும் பேசப்பட்டதால், 1995-இல் யுகோஸ்லேவியாவின் ஸ்ரெப்ரீனிகா பகுதியில், 8,000-க்கும் மேற்பட்ட போஸ்னிய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்பகுதியில் ஐந்து நூற்றாண்டுகளாக இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இணக்கமான சூழலில் அமைதியாகவே வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தியாவில் ‘இஸ்லாமியக் கொடுங்கோன்மை‘ என்ற பெயரில் ‘நினைவுகளை வன்முறைப்படுத்தும்‘ போக்கு நீடித்தால், யுகோஸ்லேவியாவின் கதியே இங்கும் நிகழும் என்று கூறினால் அது நிச்சயம் மிகையல்ல.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த அறிஞரான மிச்சேல் குக்லெயில்மோ, இந்தியாவில் அண்மைக் காலமாக வகுப்புவாத சக்திகள் வலுப்பெற்று, இந்தியாவை மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்ற தன்மையிலிருந்து, ‘இந்து ராஷ்டிரமாக‘ மாற்றிட, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதை, போதிய ஆதாரங்களுடன் உறுதிபட எடுத்துரைத்துள்ளார்.  ஆட்சியாளர்கள் ஆணவத்தோடு தங்கள் வழிமுறைகளைச் செயல்படுத்தும் விதம், இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்குமா? என்று கேள்வியெழுப்பும் சூழலைக் கொணர்ந்து நிறுத்தியுள்ளது.  ஸ்வீடன் நாட்டின் வீ-டெம் இன்ஸ்டிடியூட்,  அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஃப்ரீடம் ஹவுஸ் நிறுவனம், தி எகானமிஸ்ட் ஏட்டின் அறிவுத்திறன் பிரிவு ஆகிய அனைத்து ஆய்வு அமைப்புகளும், இன்றைய இந்தியாவை ஒரு முழுமையான ஜனநாயக நாடாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. இந்தியாவில் ‘ஜனநாயகப் பின்னடைவு‘ நிகழ்ந்து வருவதாக அறுதியிட்டுக் கூறும் இந்த சர்வதேச அமைப்புகள், இந்தியாவின் இன்றைய யதார்த்த நிலையை , ‘ஓரளவே சுதந்திரமான ஜனநாயகம்‘, ‘குறைபாடுமிக்க ஜனநாயகம்‘, ‘தேர்தல்வழி சர்வாதிகாரம்‘ என்று அடையாளப்படுத்துகின்றன. 

இவ்வாறு இந்தியா தரமிறக்கம் செய்யப்பட்டிருப்பதற்கு, இன்றைய ஒன்றிய அரசு திட்டமிட்டு பரவச் செய்யும் ‘சிறுபான்மையினர் எதிர்ப்பு மனநிலை‘ மற்றும் அதையொட்டி நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், மனித உரிமை மீறல் சம்பவங்கள், குறைந்து வரும் கருத்துச் சுதந்திரம், ஒடுக்குமுறைக்கு ஆளாகும் ஊடக சுதந்திரம், சிவில் சமூகத்தின் தேக்க நிலை  போன்றவையே பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

ஆக்கபூர்வமான முயற்சிகள் தேவை

அண்மைக்காலமாக, வரலாற்றை அப்படியே திரித்துக் கூறுவதும், உண்மைக்குச் சிறிதும் தொடர்பில்லாத அப்பட்டமான பொய்களைப் பெருமளவில் உற்பத்தி செய்து, அவற்றையும் வரலாறு என்றே அடையாளப்படுத்துவதும் அனைவரையும் அச்சம் கொள்ளச் செய்யும் விதத்தில் மிக வேகமாக நடந்தேறி வருகிறது.  இருப்பினும், இவற்றுக்கான தகுந்த எதிர்வினையும், இத்தகைய போக்குகளைத் தடுப்பதற்குரிய ஆவேசமான செயல்பாடும் போதுமான வேகம் பெறாமல், தேவைப்படுகிற அழுத்தமும் இல்லாமல் முடங்கிக் கிடப்பது போலத் தெரிகிறது.  1999-2005இல் பாசிச சக்திகளைத் தடுப்பதற்கான போராட்டம் பலம் வாய்ந்ததாக இருந்தது.  1977-79 வருடங்களிலோ, வகுப்புவாத சக்திகளின் தீய முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறியும் அளவுக்கு எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலித்தது.  ஆனால் இன்று எதிர்ப்பியக்கம் ஆமை வேகத்தில் நடைபெறுவதும், பொது வெளியில் பலத்த மௌனம் நிலவி வருவதும் உண்மையிலேயே ஆழ்ந்த கவலைக்குரிய அம்சம்…

இவ்வாறாக, இடர்கள் நிறைந்த ஒரு காலச் சூழலில், ஒரு சிலர் முன்வந்து உண்மையான வரலாற்றை எழுதித் தொகுக்க முன்வருவதால் மட்டும், வரலாற்றியல் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ள இயலாது.  சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஆளுமை செலுத்தக் கூடிய, உறுதிமிக்க அரசியல் தலையீடுகளே இன்று உடனடித் தேவையாக உள்ளன. 

நாட்டின் பல பகுதிகளிலும் தன்னெழுச்சியாக நடைபெற்று வருகிற போராட்ட, பிரசார இயக்கங்கள் வருங்காலத்தின் மீதான நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சுகின்றன.  கணிசமான எண்ணிக்கையிலான மதிப்புவாய்ந்த மூத்த குடிமக்கள், முக்கியப் பதவிகளை வகித்த முன்னாள் அரசு உயரதிகாரிகள், இராணுவத்தில் உயர்நிலை பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றியவர்கள், அயல்நாட்டுத் தூதர்களாகவும், இன்ன பிற துறை தலைவர்களாகவும் செயல்பட்ட வல்லுநர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ஊடிளேவவைரவiடியேட ஊடினேரஉவ ழுசடிரயீ அமைப்பு, ஜனநாயக வழிமுறைகளைப் புறக்கணித்தும், அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து வழுவியும் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சிப்பதோடு, அதற்கு எதிரான பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.  இதுபோன்றே, அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது துணிவுடன் இயங்கும் செய்தி ஏடுகள், சுதந்திரமான ஊடக நிறுவனங்கள், உண்மையை உரக்கப் பேசும் பத்திரிகையாளர்கள், அறிவார்ந்த சமூகத்தின் பிரதிநிதிகளாக விளங்கும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், முற்போக்குக் கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், சரித்திரத் தேர்ச்சி கொண்ட வரலாற்றியல் அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என அனைவரும் படைவரிசையாய் நின்று, தேசத்தின் ஜனநாயக மரபுகளைக் காக்கவும், கூட்டாட்சி தத்துவத்துடன் அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்தவும் ஓங்கிக் குரல் எழுப்பி பாடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய ஆக்கபூர்வமான முயற்சிகள் மூலம், இந்திய வரலாறு சிதைக்கப்படுகிற கொடுமை தடுத்து நிறுத்தப்பட்டு, உண்மை வரலாறு நிலைபெற வேண்டும்.  ஜனநாயகம் வெற்றிகண்டு சாதனை படைக்க வேண்டும்.

(ஆங்கில மார்க்சிஸ்ட் (ஜனவரி – ஜூன் 2022) இதழில் வெளியானது.)

தமிழில்: கடம்பவன மன்னன்

இந்தியாவிற்கான கல்விக் கொள்கை எப்படி அமைய வேண்டும்?

பேரா. ஜவகர்நேசன்
தமிழில்: அ.அன்வர் உசேன்

கல்வி என்பது இன்று மிகவும் உற்று கவனிக்கப்படுகின்ற, விவாதிக்கப்படுகின்ற அம்சமாக மாறியுள்ளது. கல்வியுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் தமது குறுகிய மற்றும் சுய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் எனும் இறுதி நோக்கத்துடன் கல்வி மீது தமது மேலாதிக்கத்தை செலுத்த முனைகின்றனர்.

அரசாங்கங்கள் அதீத அதிகாரங்களை கொண்டிருக்கலாம்; சந்தை சக்திகள் நிதி அதிகாரத்தை பெற்றிருக்கலாம்; சமூகத்தின் பல தரப்பினரை பிரதிநித்துவப்படுத்தும் பிரிவுகள் சமூக மேலாதிக்கத்தை பெற்றிருக்கலாம் (இந்திய சூழலில் சமூக அமைப்பில் சில விசேட அதிகாரங்களை பெற்றுள்ள சமூக பிரிவுகள் உட்பட); இத்தகைய அதிகாரங்கள் கொண்ட ஒவ்வொரு பிரிவும் தமது சொந்த நலன்கள் மற்றும் தேவைகளை மட்டுமே நிறைவேற்றிகொள்ள முயல்கின்றார்கள். ஆனால் கல்வி இத்தகைய பழமையான மாறாத இரும்பு பிடியை கொண்டுள்ள சக்திகளை தனது பரிசுத்தமான வடிவத்தின் வரம்பிற்குள் இணைத்துகொள்ளாது. அதன் பரிசுத்த வடிவத்தின் மூலம் கல்வி கற்கப்படுமானால், சமூகம் தனது பகுத்தறிவின் மூலம் கூட்டு மனசாட்சியாகப் பரிணமிக்கிறது. அப்பொழுது மேற்கண்ட எத்தகைய சக்தியின் தாக்கமும் இல்லாமல் அது இருக்கும்.

எனவே மேற்கண்ட சக்திகள் எப்பொழுதுமே “கல்வி கொள்கையை” தமது சொந்த நலன்களுக்கு உகந்ததாக வடிவமைக்க கடுமையாக முயற்சிக்கின்றார்கள். அதில் அதிர்ச்சியடைவதற்கு எதுவுமில்லை. ஏனென்றால், கோட்பாடுகள்/ வரையறைகள்/ விதிகள்/ சட்டங்கள் /வழிகாட்டல்/ நெறிமுறைகள்/அளவுகோள்கள்/விழுமியங்கள்/நம்பிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளவையே கொள்கைகள் ஆகும். எனவே, கல்வி எப்படி இயங்க வேண்டும் என்பதை இவை கொள்கைகள் கட்டுப்படுத்துகின்றன.

எனவே, இதன் விளைவு, மேற்சொன்ன சக்திகளின் நலன்களை மையக் கருவாகக் கொண்டுதான் கொள்கைகளின் பல்வேறு அம்சங்களும் உருவாக்கப்படுகின்றன. இதிலிருந்து மாறுபட்டு, பரிசுத்தமான கல்வியின் அம்சங்களை உத்தரவாதப்படுத்தும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்பட்டால், சமூகத்தின் அனைத்து பிரிவினரும் உண்மையான கல்வியை பெற்றிருப்பார்கள். கல்வி பெறுவதில் ஏற்றத்தாழ்வுகளும், குறுகிய முனைப்புகளும் இல்லாமல் போயிருக்கும். மனிதகுலம் பரிணமித்த காலத்திலிருந்து கல்வி இதற்காகவே பயன்பட்டிருக்கும்.

சுதந்திர இந்தியாவில் இந்த இலக்கை எட்ட முடிந்துள்ளதா? இல்லையா? 1949ம் ஆண்டு மாண்புமிகு முனைவர் ராதாகிருஷ்ணன் குழுவிலிருந்து 2020ம் ஆண்டு புதிய கல்வி கொள்கை முன்வைக்கப்பட்டது வரை இத்தகைய கொள்கைகள் கல்வியில் ஆக்கபூர்வமான வளர்ச்சியை உருவாக்கவில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. சிற்சில மாற்றங்கள் உருவாகியிருக்கலாமே தவிர, அடிப்படை வளர்ச்சியை முன்னேற்றத்தை இந்த கொள்கைகள் கொண்டுவரவில்லை.

இந்திய கல்வி கொள்கைகளின் புதிர்களும் குறைகளும்

டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆணையம் என அழைக்கப்பட்ட உயர் கல்வி ஆணையம்(1949) பல்கலைக்கழக கல்விக்கு ஒரு கட்டமைப்பு/ பாட பிரிவுகளுக்கான உள்ளடக்கம்/தேர்வு சீர்திருத்தங்கள் ஆகியவற்றை முன்வைத்தது. சாதி அல்லது வேறு எந்த வேறுபாடும் இன்றி அனைவரும் கல்வியை பெறுவதற்கான வாய்ப்புகளை முன்மொழிந்தது; இந்திய அரசியல் அமைப்பு/கலாச்சாரம்/மதம்/இந்திய விழுமியங்கள்/ சமத்துவம்/ சமூக நீதி ஆகியவற்றுக்கு இசைந்த முறையில் கல்விமுறையை மாற்றியமைத்திட பல ஆலோசனைகளை முன்வைத்தது.

முதலியார் ஆணையம் என அறியப்பட்ட பள்ளி கல்வி ஆணையம் (1952) ஒரே மாதிரியான சீரான பாடத்திட்டம்/மும்மொழி கொள்கை/தொழில் கல்வி/ தேர்வு சீர்திருத்தம் மற்றும் போதனை முறைகளை ஆய்வு செய்தது.

கல்வியின் அனைத்து பிரிவுகள் குறித்தும் ஆய்வு செய்த முதல் ஆணையம் கோத்தாரி ஆணையம் என அறியப்பட்ட இந்திய கல்வி ஆணையம்தான்(1964-66). இந்த ஆணையம் 4 படிநிலைகள் கொண்ட சீர்திருத்த கடமைகளை முன்மொழிந்தது:

1) கல்வியின் திறன் நிலையை அதிகரிப்பது;
2) சமூக/தேசிய ஒருங்கிணைப்பை சாதிப்பது;
3) நவீனமயத்தை விரைவுபடுத்துவது;
4) தார்மீக மற்றும் ஆன்மீக விழுமியங்களை உருவாக்குவதன் மூலம் மாணவர்களிடையே நல்லொழுக்கத்தை வலுவாக்குவது.

அது முன்வைத்த சில குறிப்பான நடவடிக்கைகள்: பொதுவான பள்ளி கல்விமுறை/ தொழில் கல்வி/ பணி அனுபவம்/மும்மொழிக் கொள்கை/ கல்வி பெறுவதில் சம வாய்ப்பு/ கல்வி கட்டமைப்பு/ பாடத்திட்டம் மேம்படுத்துதல்/ போதனை முறைகள்/ தரமான பாட புத்தகங்கள்/ ஆசிரியர்கள் பிரச்சனைகள்/ பள்ளி வளாகங்கள்/ மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு/ வயது வந்தோர் கல்வி/ தொலைதூர கல்வி ஆகியவை ஆகும்.

கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 1968ம் ஆண்டு இந்திய அரசாங்கம் “தேசிய கல்வி கொள்கையை” உருவாக்கியது. இதில் முன்வைக்கப்ட்ட ஆலோசனைகள்:

• 14 வயது வரை கட்டாய கல்வி;
• கல்விக்கு நாட்டு வருவாயில் 6% செலவிடுதல்

இருபது ஆண்டுகளுக்கு பின்னர் 1986ம் ஆண்டு “கல்வி பற்றிய தேசிய கொள்கை” உருவாக்கப்பட்டது. இரண்டு முறை இந்த கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 1992ம் ஆண்டு “செயல்பாட்டுக்கான திட்டம்” உருவானது. இந்த திட்டத்தில் சமத்துவத்துக்கான கல்வி; பொதுவான பள்ளி கல்வி முறை; ஆசிரியர்கள் நியமனம்; கணிணி கல்வி; பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள்/பிற்படுத்தப்பட்ட மக்கள்/ பெண்கள் ஆகிய பிரிவினரின் கல்வி முன்னேற்றம் குறித்த அம்சங்கள் இடம் பெற்றன.

இறுதியாக 2020ம் ஆண்டு “தேசிய கல்வி கொள்கை 2020” அறிவிக்கப்பட்டது. இந்த கொள்கை சொல்வது என்ன? இந்திய அதீத தேசிய வெறி/ இந்திய தற்பெருமை/ கல்வி காவிமயம் ஆகியவை தவிர வேறு எதுவும் இந்த கொள்கையில் இல்லை.

இந்த கொள்கை “தேசிய அரசை” ஒரு முற்றிலும் முடிவான, சர்வ அதிகாரங்களையும் கொண்ட அதிகார மையமாக முன்வைக்கிறது. கல்வியை வரையறுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் இரும்புக் கரம் கொண்டு செயல்பட முயல்கிறது. இந்திய சமூகத்தின் பன்முகத்தன்மை குறித்தோ, பல மாநிலங்களை கொண்ட ஒன்றியமே இந்தியா என்பது குறித்தோ, அது இம்மியளவும் கவலைப்படவில்லை. இது இட்லரின் நாசிசம் அல்லது முசோலினியின் பாசிசம் முன்வைத்த “தேசிய கல்வியின்” அப்பட்டமான பிரதி அல்லாமல் வேறு இல்லை. நாசிசமும் பாசிசமும் பொதுவான கலாச்சார மற்றும் இன ரீதியியிலான விழுமியங்களை அடிப்படையாக கொண்டுள்ளன. அதே போல நாசிசமும் இந்துத்துவாவும் பொதுவான கலாச்சார மற்றும் இன அடிப்டையிலான விழுமியங்களை கொண்டுள்ளன.

இந்துத்துவாவும் பாசிசமும் வெவ்வேறு அல்ல; ஒன்றுதான் எனும் முடிவுக்கு இரு கோட்பாடுகளை ஆய்வு செய்யும் எவர் ஒருவரும் அறிய முடியும். “தேசிய கல்வி கொள்கை 2020”ன் அடிப்படை தத்துவம் இந்துத்துவாதான்! இந்துத்துவாவை கழித்துவிட்டால், இப்போதைய கல்விக் கொள்கைக்கும் இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட கல்வி கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. மையப்படுத்தப்பட்ட கல்வி முறை/ மும்மொழி கொள்கை/சமமான கல்வி வாய்ப்புகள்/ கல்விச் சேர்க்கையின் முக்கியத்துவம் ஆகியவைதான் முன்வைக்கப்படுகின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலகிற்கு தத்துவத்தையும் மருத்துவத்தையும் அறிவியலையும் கொடுத்த ஒரு நாடு, இப்போது சுதந்திரத்தின் 70 ஆண்டுகளுக்கு பிறகும் கூட, சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்தல், சேர்க்கையை மேம்படுத்துதல் ஆகியவற்றை பேசும் சூழலிலேயே இருப்பது பரிதாபத்திற்குரியதுதான். அனைவருக்கும் தரம் மிக்க கல்வியை கொடுப்பதைக் குறித்து விவாதிக்க வேண்டிய நேரத்தில் நாம் விடுதலையின் போது முன்னுக்கு வந்த கல்வித் தேவைகளை பூர்த்தி செய்யவே போராடிக் கொண்டிருக்கிறோம்.

எது சாதிக்கப்பட வேண்டுமோ அதில் ஒரு மிகச்சிறிய பகுதிதான் இந்த 70 ஆண்டுகளில் கல்வியில் சாதிக்கப்பட்டுள்ளது. பல அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நிலை! கல்வி கொள்கைகள் என எவை பரிந்துரைக்கப்பட்டனவோ அவை சமூகத்துக்கும் தேசத்துக்கும் பொருத்தமற்றவையாகவே இருந்தன.

1949ம் ஆண்டு சூழலுடன் ஒப்பிடும் பொழுது சில முக்கிய அளவுகோள்களான கற்றல் விகிதம்/பள்ளி, கல்லூரி, பல்கலை கழகங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை/ பள்ளி மற்றும் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை/ கல்வி பெறும் வாய்ப்பு (ஆனால் சமத்துவ வாய்ப்பு அல்ல) ஆகியவை சமீப காலம் வரை அதிகரிக்கும் போக்கை காண முடிகிறது என்பது உண்மைதான்! பல கல்வி கொள்கைகள் உருவாக்கப்பட்டதன் பயனாக ஒரு பகுதியளவான முன்னேற்றம் சாதிக்கப்பட்டுள்ளது. பல ஏற்றத்தாழ்வுகள் பாரபட்சங்கள் இருந்தாலும் தேவை ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இன்னும் மிகப்பெரிய அளவுக்கு கூடுதலாக சாதிக்கப்பட வேண்டியுள்ளது.

இத்தனைக்கு பிறகும் எழும் அடிப்படை கேள்வி என்னவென்றால், பல்வேறு கல்வி கொள்கைகளின் வினைப்பொருளாக கல்வி தனது இலக்குகளையும் நோக்கங்களையும் அடைந்திருக்கிறதா! இல்லை என்பதே சரியான பதிலாக இருக்க இயலும். கல்வியின் உண்மையான இலக்குகள் என்பது என்ன? அது என்ன செய்திருக்க வேண்டும்? ஜனநாயக பூர்வமான/ நியாயமான/ நாகரீகம் நிறைந்த /சுய சிந்தனையாற்றல் கொண்ட ஒரு சமூகத்தை அது பரிணமிக்க செய்திருக்க வேண்டும். சமூக ரீதியாக/அரசியல் ரீதியாக/பொருளாதார ரீதியாக சமத்துவம் கொண்டதாக சமூகம் இருந்திருக்க வேண்டும். அறிவு திறன்/படைப்பாற்றல் ஆகியவை மூலம் சமத்துவம் அடிப்படையிலான பொருளாதார திறன் உருவாகியிருக்க வேண்டும். இந்த சாதனைகள் என்பது சாதி/இனம்/பாலினம் ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் கடந்து நிகழ்ந்திருக்க வேண்டும். இவைதான் கல்வி கொள்கைகள் எந்த ஒரு தேசத்திலும் கண்ணுக்கு தெரியும் அளவில் நிகழ்த்தியிருக்க வேண்டும்.

கடந்த 70 ஆண்டுகளில் சுதந்திர இந்தியாவில் ஆறு முக்கிய கொள்கைகள் கல்வி குறித்து உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த கொள்கைகள் சில சிறிய முன்னேற்றங்களை உருவாக்கியிருந்தாலும் அடிப்படை மாற்றத்தை உருவாக்கவில்லை. உதாரணத்திற்கு மனித வளம் மற்றும் அறிவுசார் அம்சங்களில் உலக குறியீடு பட்டியலில் இந்தியாவின் இடம் பல சிறிய நாடுகளை ஒப்பிடும் பொழுது மிகவும் பின் தங்கியுள்ளது. மனிதவள மேம்பாடு குறியீடில் 131வது இடம்; சமூக முன்னேற்ற குறியீடில் 117வது இடம்; புதிய கண்டுபிடிப்பு படைப்பாற்றல் குறியீடில் 48வது இடம்; என சீனாவுடன் ஒப்பிடும் பொழுது மோசமாக உள்ளது. சர்வதேச மாணவர் மதிப்பீடு திட்ட பட்டியலில் 2009ம் ஆண்டு இறுதியாக பங்கேற்ற பொழுது 72வது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் கல்வி முறை சிறந்த முறையில் செயல்பட்டிருக்குமானால் இந்த முக்கிய அளவுகோள்களில் இந்தியா சிறப்பான இடத்தை பிடித்திருக்க வேண்டும். உண்மை என்னவென்றால் இந்த கொள்கைகளில் பெரும்பலானவை ஒரே மாதிரியான கருத்துகளையே திரும்பத் திரும்ப முன்வைத்தன. மும்மொழி கொள்கை/ மையப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள்/ தேசியமயமாக்கப்பட்ட ஒழுங்குமுறை / பொதுவான ஒரே மாதிரியான கல்விமுறை/ கல்வி கட்டமைப்பு மேம்படுத்துதல் போன்ற கருத்துகளையே முன்வைத்தன.

ஆனால் அவர்கள் கல்வியின் உண்மையான தத்துவம் என்ன என்பதை உணர முற்படவில்லை. இந்தியாவில் நீண்ட காலமாக உள்ள தனித்துவமான பிரச்சனைகளான சமத்துவமற்ற சமூகம்/ அடக்குமுறைகள்/ சமூக ரீதியாக உருவாக்கப்பட்ட பொருளாதார வறுமை/ சமூக வன்முறைகள்/ மனித உரிமைகள்/ சகிப்பற்ற தன்மை/ சமூக மேலாதிக்கம்/ அதிகரிக்கும் காட்டுமிராண்டித்தனம்/ சமுதாய வளர்ச்சியில் சரிந்துவரும் அறிவியல் விழுமியங்கள் ஆகியவை அகற்றப்படும் வகையில் கல்விகொள்கைகள் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தப்படவில்லை. மேலே கண்ட கொள்கைகள் எதுவும் இந்தியாவின் இத்தகைய தனித்துவ பிரச்சனைகளை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தவில்லை. இந்த பிரச்சனைகள்தான் இந்தியாவின் அறிவுசார்/அறிவியல் பூர்வமான முன்னேற்றம் மற்றும் பொருளாதார உற்பத்தி திறன் மிக குறைந்த அளவு இருப்பதற்கு அடிப்படை காரணம் என்பது உணரப்படவில்லை.

இதற்கு மாறாக இந்தியாவின் கல்வி குறித்து திசைவழியை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட முதல் ஆணையமான டாக்டர் ராதா கிருஷ்ணன் ஆணையம் தனது கொள்கையை இந்திய சூழலுக்கு ஏற்ப தகவமைக்க முற்றிலும் தவறிவிட்டது. அந்த ஆணையத்தின் கால கட்டத்திலேயே அதன் பரிந்துரைகள் குறிப்பாக கலாச்சாரம்/மதம்/சமூகம் குறித்து பொத்தாம் பொதுவாக இருந்தன என விமர்சனங்ககள் எழுந்தன.

டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆணையம் நமது கல்விமுறை “இந்தியத் தன்மையற்று” உள்ளது எனவும், அதனை “இந்திய மயமாக்க” வேண்டும் எனவும் ஆலோசனையை முன்வைத்தது. பிரிட்டஷ் ஆட்சியால் கல்வி “இந்தியத் தன்மையற்றதாக” ஆக்கப்பட்டது என ஆணையம் கருதியது. இந்திய பாரம்பரியம்/கலாச்சாரம்/மதங்கள் மற்றும் விழுமியங்கள் ஆகியவை மூலம் இந்திய மயமாக்கப்பட வேண்டும் என கருதிய ஆணையம் அவற்றை துல்லியமாக வரையறுக்க தவறியது. இதற்கு பிறகு உருவான ஆணையங்களும் “இந்திய மயம்” என்பது என்ன என்பதை வரையறுப்பதில் கவனம் செலுத்தவில்லை.

ஆனால் தேசிய கல்வி கொள்கை 2020 “இந்திய மயம்” என்பது இந்துத்துவாதான் என முன்னெடுக்கிறது. இந்திய தேசியம்/இந்திய பாரம்பரியம்/ இந்திய கலாச்சாரம்/ இந்திய பெருமை/ இந்திய முதன்மை/ இந்திய தத்துவம் என இவற்றின் பெயரால் இந்துத்துவா கருத்துகளை கல்வி கொள்கையில் முன்வைக்கிறது.

இப்பொழுது நாம் ஒன்றை எளிதாக புரிந்துகொள்ளலாம். டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆணையம் தொடங்கி பின்வந்த பல ஆணையங்களும் தமது அணுகுமுறைகள் அல்லது இந்திய மயம் என்ன என்பதை தெளிவாக வரையறுக்காத காரணத்தால் 2020ல் “இந்திய மயம்” என்ற பெயரில் இந்துத்துவா கொள்கைகள் கல்விமுறையில் புகுத்தப்படுவதற்கு வழிவகை செய்துவிட்டன.

உண்மையில் வருத்தம் அளிக்கும் ஒன்று என்னவெனில் சமூக அமைப்பு முறையில் கல்வியின் பங்கு குறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆணையம் என்ன கூறுகிறது என்பதுதான்: “நமது சமூக அமைப்பு முறைக்காக கல்வி (மாணவர்களை) தயார்ப்படுத்துகிற படியால், நமது கல்விமுறை தனது வழிகாட்டல் கோட்பாடுகளை சமூக அமைப்புமுறை கொண்டிருக்கும் குறிக்கோள்களிலிருந்தும், அது கட்டமைக்க இருக்கும் நாகரீகத்தின் தன்மையிலிருந்தும் கண்டுகொள்ள வேண்டும்” என சொல்கிறது.

ஆணையம் நமது அரசியல் அமைப்பு விழுமியங்களான சுதந்திரம்/ சகோதரத்துவம்/ சமத்துவம்/மதச்சார்பின்மை ஆகியவற்றை கல்விமுறை வலுப்படுத்த வேண்டும் என கூறினாலும் சமூக அமைப்பின் மீதே கூடுதலான நம்பிக்கையை வைத்தது. சமூக அமைப்பிலிருந்துதான் வழிகாட்டல் கோட்பாடுகளை கல்விமுறை கண்டெடுக்க வேண்டும் என கூறியது. அப்படியானால் அனைவருக்கும் சமமான, நியயமான கல்வி என்பதை எப்படி வென்றெடுக்க முடியும்?

மாநில அடிப்படையில் கல்விக் கொள்கை ஏன் தேவை?

கல்வி கொள்கையின் சட்டரீதியான அதிகார எல்லை, நாம் கவனிக்க வேண்டிய அடுத்த அம்சம். அதிகார எல்லை என்பது வெறும் பூகோள எல்லைகள் மட்டுமல்ல; அது தனது குணாம்சத்தை தேசம் எனும் கோட்பாடிலிருந்து பெறுகிறது. தேசம் என்பது பூகோளம்/அரசியல் சட்டம்/விதிகள் ஆகியவற்றால் உருவாகியது அல்ல; மாறாக அங்கு வாழும் மக்களால்; சமூகத்தில் அந்த மக்கள் அங்கம் வகிக்கும் தனித்துவத்தால் தேசம் என்பது உருவாகிறது.

தேசம் எனும் கருத்தியல் என்பது சமூகத்தின் (மக்களின்) சமூக பொருளாதார – அரசியல் தேவைகளின்படி அரசு (மாநிலம்) தன் தேவைகளை முழுமையாக பிரதிபலிப்பதும் அல்லது அதன்பால் வடிவெடுப்பதும் தவிர வேறல்ல. பன்மைத்தன்மை கொண்ட பிரதிநிதித்துவத்துடன் சமூகங்கள் இருக்கும் பொழுது அவை வெவ்வேறு தனித்துவம் கொண்ட கருத்தியலை பிரதிபலிக்கின்றன. அதன் பொருள் என்னவென்றால் அரசியல் சட்ட அடிப்படையில் ஒரே தேசமாக இணைந்து இருந்தாலும் அவை பல்வேறு தேசங்களாக உள்ளன.

“அரசியல் சட்ட அடிப்படையில் உள்ள தேசம் (தேச – அரசு)” என்பதும் “கருத்தியல் அடிப்படையில் உள்ள தேசம்” என்பதும் வெவ்வேறு ஆகும். அரசியல் சட்ட அடிப்படையிலான தேசம் என்பது பல்வேறு சட்டங்களால் மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்தால் உருவாக்கப்படுகிறது. ஆனால் கருத்தியல் அடிப்படையிலான தேசம் என்பது அங்கீகரிக்கப்படுகிற சமூகத்தால் அதன் சமூக உட்கூறுகளால் பிரதிநித்துவப் படுத்தப்படுகிறது.

கல்வியின் சட்ட எல்லைக்கோடு என்பது கருத்தியல் அடிப்படையிலான தேசத்துக்கு மட்டுமே பொருந்துவதாக இருக்க வேண்டும். அரசியல் அடிப்படையிலான தேசத்துக்கு அல்ல! ஒரே கல்வி கொள்கை பல கருத்தியல் தேசங்களுக்கு பொருந்த முடியாது. இந்திய அரசு-தேசம் என்பது பல கருத்தியல்கள் கொண்ட தேசங்களை உள்ளடக்கியுள்ளது. தமிழ் தேசம்/மலையாள தேசம்/ தெலுகு தேசம்/வங்காள தேசம்/இந்தி தேசம் என பல மொழிகள்/ கலாச்சாரம்/ இனம் கொண்டதாக உள்ளது.

இந்த வகையில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தனி கருத்தியல் கொண்ட தேசம் ஆகும். ஒவ்வொரு தேசத்துக்கும் தனி கலாச்சாரம்/பாரம்பரியம்/அறிவியல் தேவைகள்/சமூக குணங்கள்/ உள்ளூர் அறிவு/அனுபவம் என தனித்தனியாக உள்ளன. இவை அனைத்துக்கும் ஒரே கல்வி கொள்கை என்பது இருக்க இயலாது. இதனை புரிந்துகொண்ட காரணத்தினால்தான் அமெரிக்கா/ ரஷ்யா/ பிரிட்டன்/ஐரோப்பா போன்ற முற்போக்கான நாடுகள் தமது தேசம் முழுமைக்கும் ஒரே கல்வி கொள்கை என்பதை உருவாக்கவில்லை.

இது குறித்து தீர்மானகரமாக சொல்லப்பட வேண்டியது என்னவெனில் கல்வி கொள்கையின் எல்லைக்கோடு என்பது கருத்தியல் அடிப்படையிலான தேசத்துக்கு பொருந்துவதாக இருக்க வேண்டும். இது இந்திய சூழலில் மாநிலங்களே ஆகும். கல்வி என்பதும், கல்வி கொள்கை என்பதும், முற்றிலும் மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகவே பார்க்கப்பட வேண்டும்.

நம் நாட்டில் உருவாக்கப்பட்ட கல்வி கொள்கை எதுவும் இந்த பிரச்சனையை புரிந்துகொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் மாநில அளவில் உருவான கல்வி கொள்கைகள் கூட கல்வி சம்பந்தப்பட்ட தரவுகள் மற்றும் சில பிரச்சனைகளை பேசியதே தவிர கல்வியின் அடிப்படைக் கொள்கைகள் பற்றி ஆய்வு செய்யப்படவில்லை. ஒருவேளை இதனால்தான் சமூகத்தின் அடித்தட்டில் கல்வி தனது இலக்குகளை செயல்பட வைப்பதில் இதுவரை உருவாக்கப்பட்ட கொள்கைகள் எதுவும் வெற்றி அடைய இயலவில்லை போலும். இங்கும் அங்குமாக சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் தரமான கல்வி என்பது ஒரு தொலைதூரக் கனவாகவே இன்னும் உள்ளது.

கல்வி உருவாக்கல்- கொள்கை தேவைகள்

மேலும் கல்வியின் மீதான மாநில அரசின் சட்ட வரம்பினைக் குறித்த மேற்கண்ட வாதங்கள் மட்டுமின்றி தனிமனிதர்களின் மட்டத்திலும் கல்வி செயல்பட வேண்டும். ஏனெனில் கல்வி தனி மனிதர்களிடத்தில்தான் மாற்றத்தை உருவாக்குகிறது. இந்த மாற்றம் என்பது என்ன? கல்வி தனிமனிதனை சிந்திக்க வைக்க வேண்டும்; அந்த தனி மனிதனை சுய உணர்வு மற்றும் சுய அறிதல் கொண்டவராக ஆக்க வேண்டும்; அதன் விளைவாக அந்த தனி மனிதர் சுயமாக ஆய்வு செய்து சரியான முடிவை மேற்கொள்ள வேண்டும். இது இரண்டு விளைவுகளை உருவாக்குகிறது. ஒன்று தனி மனிதரை சுயமாக சிந்திக்க வைக்கிறது. இரண்டு அதன் மூலம் உண்மையை (அறிவை) அறிய/உருவாக்க வைக்கிறது.

எனினும் கல்வியாளர்கள் மற்றும் கல்வி கொள்கை உருவாக்குபவர்கள் இப்பொழுதும் கூட அறிவு பெறும் முறையை அங்கும் இங்கும் மாற்றுவதன் மூலம் சிந்தனையை மேம்படுத்த முடியும் எனும் பிரமையில் கல்விக்கான நிகழ்ச்சி நிரலையும் பாடத்திட்டங்களையும் உருவாக்கி கொண்டுள்ளனர். ஆனால் நரம்பியல் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே சிந்தனை என்பது அறிவாற்றலைச் சாராதது, சுயேச்சையாக உள்ளது என்பதை நிரூபித்துவிட்டனர். மூளையின் வெளிப்பகுதியாகிய புறணிதான் சிந்தனையின் மையம் என நம்பப்பட்டு வந்தது. இப்பொழுது சிந்தனை என்பது புறணியை சார்ந்தது இல்லை என்று நிலைநாட்டப்பட்டுள்ளது.

தனி நபர்கள் கல்வி நிகழ்வில் கற்பித்தலில்/கற்றலில்/பாடத்திட்டங்கள் உருவாக்குவதில் எவ்வாறு ஈடுபடுகின்றனர் என்பது குறித்த மறுசிந்தனை அவசியம். இதனை கல்வி கொள்கைகள் ஆய்வு செய்ததே இல்லை.

சிந்தனை என்பது உள்ளார்ந்ததாகவும், புறச்சூழலிலும் சமூகத்திலும் இருந்து விடுபட்டும் சுயேச்சையான ஒன்றாகவும் இருக்கிறதா?

டெஸ்கார்ட்டஸ்/கான்ட்/ஹெகல் போன்ற பல தத்துவ ஆசிரியர்கள் சிந்தனைதான் புற உலகு; புற உலகுதான் சிந்தனை எனும் முடிவுக்கு பரிணாம ரீதியாக வந்தனர். இந்த கருத்தினை நவீன நரம்பியல் அறிவியலும், அளவு இயங்கியலும் (quantum mechanics) உறுதிபடுத்தியுள்ளன.

சிந்தனை என்பது பெருமளவில் புற உலகத் தன்மை கொண்ட சுயநினைவாற்றலால் விளையும் நிகழ்வாகும். அது உண்மையின் சாம்ராஜ்யத்துக்குள் பயணிக்கும் அனுபவமாகும். புற உலகின் அனுபவமும் அதன் விளைவாக உருவாகும் காரண காரியங்களும் அல்லது கேள்விகளும் ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழலில்தான் நிகழ்கின்றன. தங்களது சுயசிந்தனையை சுதந்திரமாக செயல்படுத்தும் வாய்ப்பினை, தனி மனிதர்களும், சமூகமும் பெற்றிருந்தால்தான் அங்கே உண்மையான சிந்தனைகள் வருவது சாத்தியமாகும்.

இந்த சாத்தியத்தை ஏற்படுத்த மிக முக்கிய தேவை “ஜனநாயகமும் சமத்துவமும்” ஆகும். இந்த குணாம்சம்தான் சமூகத்தில் உள்ள தனிநபர்களை சிந்திக்கவும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும் அவை குறித்து ஆய்வு செய்யவும் வாய்ப்பினை உருவாக்குகின்றன. இதன் மூலம்தான் சுயசிந்தனை நிகழ்வு ஒரு தொடர் நிகழ்வாக நடக்கின்றது. இவ்வாறு உருவாகும் அறிவு பொதுவானதாகவும் சமூகத்தின் கூட்டு சிந்தனையாகவும் அமைகிறது. நாளடைவில் இந்த அறிவு சமூகம் முழுமைக்கும் பொதுவானதாகிறது. இதன் பொருள் என்னவென்றால், அந்த சிந்தனை சமூக அங்கீகாரம் பெறுகிறது. எனவே சிந்தனைக்கு சொந்தமான சமூகப் பிரிவு அதிகாரம் கொண்டதாகிறது. சமூக அடக்குமுறையால் அடக்கப்படுபவர்களை விடுதலை செய்ய இது முக்கியமான வழியாகும். அத்தகைய கல்விமுறையை கட்டமைப்பது என்பது அடக்கப்பட்டவர்களுக்கு சமத்துவமற்ற, ஜனநாயகமற்ற, சமூக முறையை எதிர்கொள்ள ஆற்றலை தர உதவும். இவ்வாறு அது சாதிய முறைகளை அழிக்க வழிகோலும்.

கல்வியின் உண்மையான நோக்கங்கள் நிறைவேற வேண்டுமெனில், இந்த மனித சிந்தனை அதன் அனைத்து அம்சங்களிலும் ஒன்றிணைந்து பரிணமிக்கும் வகையில் கல்வி கொள்கை உருவாக்கப்பட வேண்டும். ஆனால் அத்தகைய குணாம்சம் இந்திய சமூகத்தில் இல்லை. இந்திய சமூகம் பெருமளவு சமத்துவமற்றதாகவும் ஜனநாயகமற்ற முறையிலும் உள்ளது. இதனை எதிர்க்கும் வகையில் கல்விமுறை இருக்க வேண்டும். சமூகம் முரண்பட்ட கட்டமைப்பை கொண்டிருக்கும்பொழுது, கல்வி பற்றிய எதிரெதிர் கண்ணோட்டங்களை கொண்டிருக்கும்பொழுது, கல்விமுறையை எப்படி நியாயமாக வடிவமைப்பது என்பது மிக முக்கியமான சவால் ஆகும்.

கல்வி கொள்கையை வகுப்பதற்கு பொருத்தமான வழிமுறைகளை கைக்கொள்வதன் மூலம் கல்வி செயல்பாட்டினை மேம்படுத்த வேண்டும். சமூக கட்டமைப்பை கருத்தில் கொண்டதாக அதனை முடுக்கிவிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட வசதிபடைத்த மேல்தட்டு சமூகத்துக்கு சாதகமாக இல்லாமல், எந்த பிரிவும் ஒதுக்கப்படாமல், எவ்வித பாரபட்சமும் இன்றி, மனித அனுபவத்தை மொத்தமாக உள்வாங்குவதற்கு தேவையான காரணிகளை பெற்றிருக்குமாறு கல்வி செயல்பாடு உருமாற வேண்டும். அத்தகைய மனித அனுபவமே பாடப்பிரிவுகளாகவும் கற்பிக்கும் விடயங்களாகவும் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் எந்த பாகுபாடுமின்றி வழங்கப்பட வேண்டும்.

அனைத்து சமூக கூறுகளும் கருத்துக்களை சுதந்திரமாக பரிமாறிக்கொள்வதற்கும் தமது அனுபவங்கள்/நம்பிக்கைகள்/விழுமியங்களை பதிவு செய்வதற்கும் ஏதுவாக போதுமான இடமும் வாய்ப்பும் ஒருங்கே பெற்றிருப்பதே உதாரண சமூகமாகும். பரந்துபட்ட பிரிவினரின் அந்த கூட்டு அனுபவங்களை கற்பவருக்கு மடைமாற்றம் செய்கிற பணியை கல்வியின் மூலம் திறம்பட செய்வதற்கு இந்த உதாரண சமூகமே ஏதுவாக இருக்கும்.

சமூக பிரிவினர்களுக்கு நடுவில் அனுபவப் பகிர்வு அதிகமாக நடக்கும்போது கற்றல் திறன் அதிகமாக இருக்கும். கற்றல் திறன் என்பது சமூகத்தின் தடைகளை தாண்டும் திறன் ஆகும். அறிவாற்றலை – உள்ளூர் அறிவாற்றலை- தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கான தேவையை பூர்த்தி செய்வதாகும். ஒரு சமூகம் தனக்குதானே உகந்த முறையில் செயல்பட்டு அறிவு வளர்ச்சியின் மூலம் தொடர்ந்து தன் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதாகும். இதை செய்வதற்கு கருத்துகள்/தகவல்/அனுபவம்/கலாச்சாரம் போன்றவைகளை பல்வேறுபட்ட சமூக கூறுகள் நன்கு பரிமாறிகொள்வதற்கு உகந்த சமூக கட்டமைப்பும் ,சமூக முறையையும், பிணைப்பினையும் கொண்டிருக்க வேண்டும். இதனை உறுதி செய்வது கல்விக் கொள்கையின் இலக்காக இருக்க வேண்டும். மேலும், சர்வதேச அறிவாற்றல்கள் மூர்க்கத்தனமாக உலா வரும் வேளையில், உள்ளூர் மக்களின் அறிவாற்றலை பாதுகாக்கவும், முன்னெடுக்கவும் மேற்சொன்ன அமைப்பு தேவை.

அறிவாற்றல் என்பதில் சர்வதேச அல்லது உள்ளூர் என வித்தியாசம் உண்டா என்று கேட்டால், அறிவாற்றல் என்பது உலகம் முழுமைக்கும் உரியதுதான்! உள்ளூர் மக்களின் அறிவாற்றல் என குறிப்பிடுவது அடக்கப்பட்ட/ஒடுக்கப்பட்ட மக்களின் அனுபவம் ஆகும். பொதுவாக அது சமூக அங்கீகாரம் பெறுவது இல்லை. இத்தகைய அங்கீகாரம் இல்லையெனில் அவர்களது அறிவு கூட்டாக பிரதிபலிக்கப்படும் ஒட்டுமொத்த சமூக சிந்தனையில் இடம் பெறுவது இல்லை.

மறுபுறத்தில் உள்ளூர் மக்களின் அறிவாற்றல் என்பது தனிச்சிறப்புடன் விளங்கும் சமூக கூறுகளால் கொண்டாடப்படும் பழங்கால அறிவாற்றலை தூக்கி பிடிப்பது என்று பொருள் அல்ல. பழங்கால அறிவாற்றல் என்பது சமூகத்தில் சில மேல்தட்டு பிரிவினரின் அறிவாற்றலாக மட்டுமே இருந்தது. அந்த மக்களின் அனுபவத்திற்கு அதில் இடமில்லை. எனவே உள்ளூர் மக்களின் அறிவாற்றல் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் சிந்தனை. அவர்கள் எப்படி பல்வேறு சமூக சூழல்களை எதிர்கொண்டார்கள் எனும் அனுபவத்தின் கூட்டு சிந்தனையாகும். அதுவே அறிவாகும்.

உள்ளூர் மக்களின் அறிவாற்றலை பயன்படுத்த கல்வி முறை தவறுமென்றால், அந்தக் கல்வியின் விளைவாக உருவாகும் மனித ஆற்றலில் அவ்வறிவு புலப்படுவதும் இல்லை. எனவே அத்தகைய அறிவாற்றலை வென்றெடுப்பது என்பது அனைத்து மக்களின் அறிவாற்றலின் அனைத்து அம்சங்களையும் – கலாச்சாரம்/ விழுமியங்கள்/மொழி/இயற்கை வளங்கள்/சுற்று சூழல் – உள்ளடக்கியதாக இருப்பதாகும்.

கல்வியை பொறுத்தவரை தனிநபரும் சமூகமும் பிரிக்க முடியாதவை. இரண்டுமே முக்கியம். இவை இரண்டும் கல்வி உருவாவதில் ஒன்றுக்கொன்று உதவுகின்றன. ஏனைய பிரிவுகளான மைய அரசு/சந்தை சக்திகள்/கல்வி அமைப்புகள் கல்வியை உருவாக்க வழிகோலும் பங்கை மட்டுமே செலுத்துகின்றன. கொள்கை மற்றும் சட்டங்களை உருவாக்குபவர்கள் இதனை புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

இந்த அடிப்படை அம்சத்தை இந்திய கல்வி உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு உகந்த வழியில் கல்வி கொள்கை உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இந்த 70 ஆண்டுகளில் என்ன நடந்தது? அரசாங்கங்கள் தனக்கு விசுவாசமான குடிமக்களை உருவாக்க முயன்றன; சந்தை சக்திகள் தமக்கு தேவையான மனித வளத்தை உருவாக்க முயன்றன; சமூகத்தின் மேல் தட்டில் இருந்தவர்கள் அவர்களின் இடத்தை தக்க வைத்து கொள்ளவும், தமது அதிகாரத்தை வலுவாக்கவும் முயன்றனர். இந்த இலக்குகளை நோக்கிதான் கல்வி கொள்கைகள் உருவாக்கப்பட்டன.

கல்வியும் சந்தை சக்திகளும்

உலக வர்த்தக அமைப்பு / நவீன தாரளமய சந்தை சக்திகள்/ அரசு ஆகிய மும்மூர்த்திகள் உருவாக்கிய நவீன நுகர்வு கலாச்சாரம் கல்வியில் செலுத்தும் தாக்கம் கவலை தருகிறது. கல்விக்கு அவசிய தேவைகளாக உள்ள தனிநபர்கள் மற்றும் சமூகங்களுடைய சுதந்திர விருப்பத்தை/ உரிமையை இந்தச் சக்திகள் உதாசீனம் செய்துவிட்டார்கள். கல்வியின் கவனக் குவிப்பினை மக்களிடமிருந்து சந்தைக்கும், அறிவாற்றலிருந்து உற்பத்தி பொருட்களுக்கும் இவை மடைமாற்றிவிட்டன.

இவை கல்வியை சந்தை சூழலில் தனிநபர்களை விருப்பம் போல பயன்படுத்தும் ஒரு கருவியாக மாற்றிவிட்டன. அவர்களை வேலை தேடுபவர்களாகவும் தொழில் முனைவர்களாகவும் மாற்றிவிட்டன. இதன் விளைவாக கல்வியின் இலக்கு என்பது வேலைவாய்ப்புக்கு தகுதி பெறுவது என்பதாக, கல்வியின் பரந்த நோக்கத்துக்கு எதிரான ஒரு புதிய அணுகுமுறை உருவாகியது. தனி நபர்கள் ஒன்றும் சந்தை பொருள்கள் அல்ல; விருப்பம் போல அவர்களை பயன்படுத்த! ஆனால் கல்வியின் விளைவுகளில் ஒன்றாக, ‘வேலைக்குத் தயாரான நிலைமை’யும் ஆகிப்போனது. இந்தப் போக்கு கல்வியுடைய தத்துவத்தை மீறும் செயலாகும். ஏனெனில் சந்தையின் இசைவுப்படி மாணவர்கள் மிகக்குறுகிய திறன் தொகுப்புகளுடன் உருவாக்கப்படுகின்றனர். இது கல்வியே அல்ல.

கடந்த கால/ நிகழ்கால கல்விக் கொள்கைகள் மேற்சொன்ன கருத்துகளுக்கே அழுத்தம் கொடுத்தன. அதனை எட்டுவதற்கு பல பரிந்துரைகளை முன்வைத்தன. அவை பெரும்பாலும் சந்தையின் தேவைகளை கல்வியின் வழியாக அடைவதும், அதன் மூலம் தயாரிக்கப்பட்ட தனிநபர்களை எப்படி பயன்படுத்துவது என்பதை நோக்கியுமே இருந்தன. சந்தையின் தேவைக்கு ஏற்ப கல்வி உருவானது. கல்வியின் உண்மையான தேவை பின்னுக்குத் தள்ளப்பட்டது. வேலை வாய்ப்பு திறனை அதிகரிக்கும் வகையிலான பாடத்திட்டங்கள் அல்லது தொழிற்கல்விக்கான அதிக பரிந்துரைகள் ஆகியவை கல்வியை சந்தையின் தேவைக்கு ஏற்ப தகவமைக்கும் முயற்சிகளின் பல வெளிப்பாடுகள் ஆகும்.

அதற்கு அப்பாற்பட்ட மற்றொரு பெரிய பாரபட்சம், பரம்பரை அடிப்படையிலான தொழிற்கல்வி தருவதைப் பற்றிய கொள்கைகள் ஆகும். தொழில் மற்றும் சமூகத்தின் தேவைக்கு ஏற்ப கல்வி வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. எனினும் அத்தகைய கல்வி பாரபட்சமாகவும் பரம்பரை அடிப்படையிலும் இருக்க கூடாது.

இந்திய பொருளாதார சமூக சூழல்கள்/ நவீன நுகர்வு கலாச்சாரம்/ நவீன தாராளமய சந்தைகள் ஆகியவை அறிவாற்றலை உருவாக்குவதிலும், மனித சிந்தனை போக்கிலும் பாதகமான பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளன. அதே சமயத்தில் இன்னொரு புறம் பல பெரிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் பாதகமான தாக்கத்தை உருவாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவு/ ஆழ் கற்றல்/இயந்திர கற்றல்/சைபர் இயற்பியல் முறைகள்/ கணிணி செயல்பாடுகள் ஆகியவையும் கூட அறிவாற்றல் உற்பத்தியில், சிந்தனை உருவாக்கத்தில், சில மேல்தட்டு சுயநல சக்திகளுக்கு சாதகமான தாக்கத்தை விளைவித்துள்ளன.

ஏற்கனவே ஜனநாயகமற்று உள்ள அறிவாற்றல் சூழலை மேலும் கூடுதலாக ஜனநாயகமற்றதாக ஆக்கும் நிலைமையே இதன் விளைவாக உருவாகும். இத்தகைய நவீன தொழில் நுட்பங்களின் பாதக அம்சங்களை தடுக்கும் அதே சமயத்தில், அதன் சாதக அம்சங்களை முன்னெடுக்கும் பெரிய பங்கு கல்விக்கு இருக்கிறது. அவ்வாறான கல்வியின் மூலம் இந்த தொழில்நுட்பங்களை கொண்டு அறிவினை பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாக்கவும், சமூக பொருளாதார மாற்றங்களை பெற்றிடவும் முடியும்.

சமீபத்திய இந்திய கொள்கைகள் இவற்றை கணிக்கவே இல்லை. எதையுமே சொல்லவில்லை. குறிப்பாக நவீன இயற்பியல் விதிகள், குவாண்டம் மெகானிக்ஸ் போன்றவை அதி வேக கணிணி செயல்பாடுகளுக்கும், தொலைதூரங்களுக்கு அதிவேகத்தில் தகவல் சென்றடையும் சாத்தியங்களுக்கும், தகவல் உருவாக்க பெருக்கத்திற்கும் வழிவகுக்கின்றன. இவை மனித சிந்தனை ஆற்றலில் ஊடுருவும் பொழுது நமது வாழ்வு முறையும் சமூகம் இயங்கும் தன்மையும் கூட பெரிய மாற்றத்துக்கு உள்ளாகும்.

நமது பொருளுலகுக்கு அப்பாலும், ஆன்மீகம் என்ற பெயரிலும் உருவகப்படுத்திவந்த கருத்தியல்கள் இல்லாமல் போகின்றன. அனேகமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் தரக்கூடிய இடத்துக்கு அறிவியலே முன்னேறியுள்ளது. இதற்கு முன்னால் மனித மூளையினால் விடை காண முடியாது என கருதப்பட்ட கேள்விகள் கூட இன்றைக்கு அறிவியல் ஆய்வுகளின் மூலமாக பதில் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே தார்மீக மதிப்பீடுகளுக்காக ஆன்மீகம் அல்லது மதம் எனும் வரையறைக்குள் சிந்திக்க நிலை இல்லை. மாறாக அவை அறிவியலாலும், மனித சிந்தனையினாலும் வரையறுக்கப்படும். இதற்குத்தான் கல்வி வழிவகுக்க வேண்டும். கல்வி என்பது அறிவியலிற்கும், மனித சிந்தனைக்கும் மட்டுமே உட்பட வேண்டும். அதனைக் கடந்து மதம் அல்லது ஆன்மீகம் பக்கம் செல்லக்கூடாது.

இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார தளங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் பாதகமான பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் எனில் கல்வி கொள்கைளை முன்னெடுக்கும்போது மேற்சொன்னவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இருபத்தொன்றாம் நூற்றாண்டையும், அதற்கு பிறகு வரவுள்ளதுமான சூழ் நிலைமைக்கு இசைந்ததாக கல்வியை உருவாக்கிட வேண்டும்.

தமிழகத்தின் கல்வி கொள்கைகள் வகுப்பதற்கான சில முக்கிய கருத்துகளும் கோட்பாடுகளும் மேலே முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கணக்கிலெடுத்து செயல்படுவதன் மூலம் தமிழகத்தில் கல்வி ஆக்கபூர்வமானதாகவும் பயனுள்ளதாகவும் சமூகத்தை பிரதிபலிப்பதாகவும் உருவாக்கப்பட வேண்டும். ஒரு பரந்துபட்ட தளத்தில் கல்வியின் பல்வேறு அம்சங்களுக்காக பன்முக தலையீடுகளும் தீர்வுகளும் உருவாக்குவதற்கு மேற்சொன்ன கோட்பாடுகள் முனைகின்றன.

தமிழ்நாடு ஒரு முக்கிய தேசியத்தைக் கொண்ட மாநிலம் என்ற முறையில் தனித்துவமான சமூக கூறுகள் கொண்டுள்ளது. எனவே தமிழகத்துக்கென தனியான ஒரு கல்வி கொள்கை தேவைப்படுகிறது. தற்போதைய மற்றும் எதிர்கால சமூகத்தின் தேவைகள்/சமூக மாற்றம்/பொருளாதார அமைப்பு/ தொழில்நுட்ப முன்னேற்றங்கள்/சூழலியல் மாற்றங்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக தேவைப்படும் புதிய அறிவாற்றல் தேவைகளையும், திறன் மேம்பாட்டினையும் கணக்கில் கொண்டு, இந்த நூற்றாண்டுக்கும், பின்னர் வரவுள்ள சூழ்நிலைமைகளையும் எதிர்கொள்ளும் வகையில், கல்வி கொள்கையை உருவாக்கிட வேண்டும்.

கல்வியும் கம்யூனிஸ்டுகளும்

ஜி. செல்வா               

கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைத்துள்ள ‘தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019’ இந்திய மக்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த வரைவு அறிக்கை குறித்து மிக விரிவாக விவாதித்து, விமர்சனபூர்வமாக நீண்ட குறிப்பொன்றை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளது. இந்த வரைவு அறிக்கையை முழுமையாக நிராகரிக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது. இந்தக் கருத்துக்கு ஆதரவாக இந்திய மக்களை அணி திரட்டும் முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டு வருகிறது.

இந்தச் சூழலில் தேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு ஆதரவாகப் பேசியும் எழுதியும் வரும் சிலர் ‘எதிர்க்கட்சிகள் என்றாலே ஆளுங்கட்சியின் கொள்கையை எதிர்ப்பதுதானே நடைமுறை’ என குறுகிய பார்வையோடும், இன்னும் ஒரு படி மேலே சென்று “கம்யூனிஸ்டுகளுக்கு கல்வி குறித்து என்ன பார்வை உள்ளது?” எனவும் கேள்வி எழுப்புகின்றனர். இந்தக் கேள்விகளுக்கு முகம் கொடுத்து விவாதிப்பதன் மூலம் கல்வி குறித்த கம்யூனிஸ்டுகளின் பார்வையை இக்கட்டுரை எடுத்துரைக்க முயல்கிறது.

தீர்க்கமான பார்வை

“கல்வியின் மீது சமூகம் ஏற்படுத்தும் தாக்கத்தை கம்யூனிஸ்டுகள் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை. அதனுடைய தன்மையை மட்டுமே மாற்றுகிறார்கள்” என 1848-லேயே கம்யூனிஸ்டுகளின் அடிப்படைப் பார்வையை மார்க்ஸும் எங்கெல்ஸும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் பிரகடனம் செய்துவிட்டனர். “குழந்தைகளை வணிகப் பொருள்களாக, உழைப்புக் கருவிகளாக மாற்றிவிட்டு, பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே நெருக்கமான உறவு குறித்து பேசும் பேச்சுக்கள் எல்லாம் அருவருக்கத்தக்கதாக மாறிவிட்டதாக” கம்யூனிஸ்டு அறிக்கை குறிப்பிபிட்டது இன்றைக்கும் பொருத்தமானதே!

“பொருளாதார சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண, முழுமையாக வளர்ச்சி பெற்ற மனிதர்களை வளர்த்தெடுக்க, கல்வியும் உற்பத்தி உழைப்பும் திட்டமிட்டு இணைக்கப்பட்ட பல்தொழில்நுட்ப கல்வியை அடிப்படையாகக் கொண்டு கல்வி அமைப்பு உருவாக்க வேண்டுமென” கூறியதுடன், சோஷலிச சோவியத் யூனியனில் அதை வளர்த்தெடுத்தும் காண்பித்தார் மாமேதை லெனின்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் இந்தியா பெற்றிருந்த கல்வி அறிவைவிட மிகவும் பின்தங்கி இருந்த சீனா, தோழர் மாவோ தலைமையில் புரட்சிக்குப் பின் கல்வித்துறையில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. இன்று உலகத்தின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களை அதிகமாகக் கொண்ட நாடுகளின் வரிசையில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை, வணிக மேலாண்மை என அனைத்துத் துறைகளிலும் சீனா இன்று ஆதிக்கம் செலுத்துவதற்கு, அது கல்வித் துறையில் ஏற்படுத்திய மாற்றங்கள் முக்கியக் காரணமாகும்.

சுருங்க சொன்னால், கம்யூனிஸ்டுகளுக்கு கல்வி குறித்து தீர்க்கமான பார்வை உண்டு. முதலாளித்துவ சமூகம் கட்டமைக்கும் சமூக கட்டமைப்புக்கு மாறாக, சமமான – தரமான கல்வியை அனைவருக்கும் அளிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு கம்யூனிஸ்டுகள் செயலாற்றி வருகின்ன்றனர். அவ்வாறே, தற்போதுள்ள முதலாளித்துவ சமூகங்களில் வழங்கப்படும் கல்விமுறை குறித்து கூர்மையான விமர்சன விழிப்புணர்வோடு, உழைக்கும் மக்களை வளர்த்தெடுப்பதிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன.

விடுதலைக்கு முன் இந்திய கல்வி

ஐரோப்பியர்கள் இந்தியாவை வெற்றிகொள்வதற்கு முந்தைய இந்திய சமூகநிலை குறித்து தோழர் இ.எம்.எஸ். கீழ்க்கண்டவாறு வரையறுக்கிறார்: “வருண சாதி அமைப்புமுறை உருவானவுடன் அதைப் பராமரிக்கவும், நியாயப்படுத்தவும் உதவும் வகையில் சுரண்டல் அமைப்பு முறையை சுற்றி ஒரு தனியான சமய – சித்தாந்த தத்துவார்த்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அடிமைச் சுரண்டல் முறைக்கு பொருத்தமான சமய தத்துவார்த்த கட்டமைப்பிலிருந்து வேறுபட்ட ஒரு கட்டமைப்பு இந்தியாவில் அமைக்கப்பட்டது. இதுதான் இந்து மதம், இந்து தத்துவம், இந்து கலாச்சாரம் என்ற வடிவத்தில் தோன்றியது. இதையே இந்து வகுப்புவாதிகள் புனிதமான இந்திய கலாச்சாரம் என அழைக்கின்றனர்” என்றார்.

இந்தப் பண்பாட்டில், உழைக்கும் மக்களுக்கு, அதாவது சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும், கல்வி முழுமையாக மறுக்கப்பட்டது. “சூத்திரர்களுக்கு கடவுள் விடுத்துள்ள ஒரே வேலை பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று பிரிவினருக்கும் பணிவோடு ஊழியம் செய்வதே” என்கிறது மனுஸ்மிருதி. பிறப்பின் அடிப்படையில் நால்வர்ணங்களாக பிரித்த அமைப்பில் சூத்திரர் நிலை கிட்டத்தட்ட அடிமை நிலையாக இருந்தது என்றால், இந்த நால்வர்ணத்துக்கு அப்பாற்பட்ட தலித் மக்களின் நிலையோ முற்றிலும் அடிமைநிலைதான்!

இந்த இழிநிலைக்கு எதிராக சமூக சீர்திருத்தப் போராளிகள் தொடுத்த இடைவிடாத சித்தாந்தக் அறப்போராட்டங்கள் வாயிலாகவே, ஒடுக்கப்பட்ட பிரிவினர் கல்வி வாசனையை நுகர முடிந்தது. இவர்களின் குரல்களுக்கு செவிமடுப்பதுபோல் நடித்துக் கொண்டே வெள்ளை ஏகாதிபத்தியம் வேரில் வெந்நீரை ஊற்றும் வேலையை செய்தது. கல்வித் துறையில் சதி ஆட்டம் ஆட ஆரம்பித்தது. இந்தியாவில் தாய்மொழிக் கல்விக்கு மாற்றாக ஆங்கில வழிக்கல்வியை திணித்தது ‘1813 சாசனம்’; எண்ணத்திலும் அறிவாற்றலிலும் ஆங்கிலேய அடிமைகளை உருவாக்க முயன்றது ‘மெக்காலே கல்விக் கொள்கை’; இதற்கு ஏற்றாற்போன்று போதனா முறையை உருவாக்கியது ‘1854 சார்லஸ் உட் நடவடிக்கை’; தேர்வுகளை கண்டுபிடித்தது ‘1882 ஹன்டர் கமிஷன்’. இத்தகைய குழுக்களின் பரிந்துரையுடன் நவீன இந்தியக் கல்வி முறை கட்டமைக்கப்பட்டது.

இதற்கு மாற்றாக கல்வியின் உள்ளடக்கம் – பயிற்றுமொழியைக் குறித்தெல்லாம் விடுதலைப் போரில் பங்கெடுத்த தேசியத் தலைவர்கள், காங்கிரஸ் காரர்கள், கம்யூனிஸ்டுகள் கூர்மையான கருத்துக்களை, விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். ஒரு சில இடங்களில் அதை பரிசோதனையாகவே செய்து காட்டவும் முயன்றனர். ஜோதிராவ் பூலே, சாவித்திரி பாய் பூலே தொடங்கி தாகூர், காந்தி, பெரியார், அம்பேத்கர், சிங்காரவேலர் உள்ளிட்ட பலர் கல்வித் தளத்தில் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.

வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வெகுண்டெழுந்த மக்களின் உணர்வுகளையும் தேசத் தலைவர்களின் கனவுகளையும் பிரதிபலிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950-ல் இயற்றப்பட்டது. “அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பத்தாண்டுகளுக்குள் அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களது 14 ஆவது வயது முடியும்வரை இலவச கட்டாயக் கல்வி தர அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்க வேண்டும்” என அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தியது. ஆனால் அதை நிறைவேற்ற ஒரு சட்டம் வருவதற்கே, விடுதலை அடைந்த இந்தியாவில் சுமார் 60 ஆண்டு காலம் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

விடுதலை இந்தியாவில் கல்வி

“விடுதலைக்கு பிந்தைய ஆரம்ப ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து நியாயமான உதவி பெற இயலாததால், இந்திய பெருமுதலாளி வர்க்கம் சோவியத் யூனியனிடம் உதவி கோரியது. முதலாளித்துவத்தை வளர்க்க, அரசு வழிநடத்தும் முதலாளித்துவப் பாதையை முதலாளிகள் தேர்ந்து கொண்டனர். ஏகாதிபத்தியம், சோஷலிசம் என்ற இரண்டு முகாம்களையும் பேரம் பேசுவதற்கு பயன்படுத்திக் கொண்டு தங்கள் நிலையை உருவாக்கிக் கொண்டனர். திட்டமிட்ட பொருளாதாரம் முதலாளித்துவப் பாதையில் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்டது” (சிபிஐ-எம் கட்சி திட்டம்) இதற்கு உகந்த பாதையில் திட்டமிட கல்வித்துறையில் பல்கலைக்கழகக் கல்வி குறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் (1948-49), உயர் கல்வி – தொழில்நுட்பக் கல்வி குறித்து லட்சுமணசாமி (1952-53) ஆகியோர் தலைமையில் இரண்டு குழுக்களை நேரு அரசு அமைத்தது. தொடர்ந்து, கல்வியில் நவீனமயமாக்கலை முன்மொழிவதற்கு 1964இல் அப்போதைய பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் டாக்டர் டி.எஸ். கோத்தாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு இரண்டு ஆண்டுகள், 12 உண்மை அறியும் குழுக்கள், ஏழு செயல் அமைப்புக் குழுக்கள் என இயங்கி 9,000 பேரிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, 2,400 பக்க அறிக்கையை 1966 ஜுன் 29 அன்று சமர்ப்பித்தது. இதுவே ‘கோத்தாரிக் கல்விக் குழு’ என அழைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் பரிந்துரையின் பேரிலேயே 1968 ‘தேசிய கல்வி கொள்கை’ உருவாக்கப்பட்டது. ஆட்சியில் இருக்கும் அதிகார வர்க்கத்தினர் கோத்தாரிக் கல்விக் குழுவின் பரிந்துரைகளில் சமச்சீர்கல்வி, அருகாமைப் பள்ளிகள், கல்விக்கு ஜி.டி.பி.யில் 6 சதவீதத்தை ஒதுக்கீடு செய்தல் போன்ற பரிந்துரைகளுக்கு மாற்றாக, தங்களுக்கு உகந்த மும்மொழிக் கொள்கை, தனித்தொகுதி மையங்கள், பல்கலைக்கழக நிர்வாக முறைகளில் தேவைப்படும் மாற்றங்கள் உள்ளிட்ட ஆலோசனைகளை மட்டுமே ஏற்று செயல்பட ஆரம்பித்தது.

சுதந்திர இந்தியாவின் தொடக்க ஆண்டுகளில் முதலாளித்துவ வளர்ச்சிக்கு உகந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு ஏற்ற மூலதனம் இல்லாததால், அரசுத் தலையீட்டை இந்தியப் பெருமுதலாளிகள் விரும்பினர். எனவே கல்வி, விவசாயம், தொழில் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளில் அரசின் மூலதனம் செலவிடப்பட்டது. 1980-களின் மத்தியில் இதில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் அரசுக்கு என ஒதுக்கப்பட்ட தொழில்களில், பொதுத்துறை நிறுவனங்களை தாங்களே எடுத்துக்கொண்டு அந்நிய மூலதனத்தோடு சேர்ந்து புதிய பகுதியில் விரிவடைய தயாராகியிருந்தது. இதற்கு ஏற்றாற்போல் பொருளாதாரக் கொள்கையை, கல்விக் கொள்கையை வடித்தெடுக்கும் திட்டம் ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் தொடங்கியது.

கல்வியை வழங்குவது அரசின் கடமை என்பது காலாவதியாகிப் போன முழக்கமாக மாற்றப்பட்டது. இரு வேறு கல்வி முறை கூர்மையாக பிரித்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. உற்பத்தித் துறைக்கு மாறாக, வணிக, சேவைத் துறைக்கு உகந்ததாக கல்வி அமைப்பு செயல்படத் தொடங்கியது. இத்தகைய தாராளமய, தனியார்மய பாதை பெருமுதலாளிகளுக்கு ஏராளமான பலன்களை தந்தது. புதிய வர்த்தக நிறுவனங்கள் தோன்றி பெருமுதலாளித்துவ நிறுவனங்களாக விரிவடைந்தன. 1957-ம் ஆண்டில் 22 ஏகபோக நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ. 312.63 கோடியில் இருந்து, 1997-ல் ரூ. 1,58,00,472 கோடியாக, அதாவது 500 மடங்கு, உயர்ந்திருந்தது.

“மக்களுக்கு கல்வி கொடுக்கும் கடமையில் இருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும்”, “இனி கல்வி என்பது உலக சந்தையின் ஒரு பண்டமாக கருதப்படும்” என 1990-ல் உலக வங்கியும் ஐ.நா.வும் இணைந்து நடத்திய ‘எல்லோருக்கும் கல்விக்கான உலக மாநாட்டில்’ வெளியிடப்பட்ட ‘ஜோமிதியன் பிரகடனம்’ கூறியது. இதைத் தொடர்ந்து 1995-ல் உலக வர்த்தக அமைப்பானது ‘கல்வி, மருத்துவம் உட்பட அனைத்து சேவைகளும் வாங்க, விற்க, பொருளை ஈட்டக்கூடிய பொருட்களாக’ மாற்றியது. இதற்கேற்ற வகையில் ‘காட் ஒப்பந்தங்கள்’ உருவாக்கப்பட்டன. இதற்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் முழுமையாக அந்நிய மூலதனத்துக்குத் திறந்து விடப்பட்டது. இது கல்விக் கொள்கையிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், பன்னாட்டு உறைவிடப் பள்ளிகள் போன்றவைவை புற்றீசல்போல் உருவெடுக்கத் தொடங்கின.

வாஜ்பேயி ஆட்சி காலத்தில் கல்வி

கல்வியாளர்களை கொண்டே கல்வி குறித்து ஆய்வு அறிக்கைகள் பெற்றுக்கொண்டு வந்த இந்திய அரசு முதல்முறையாக வாஜ்பேயி காலத்தில் இந்தியப் பெருமுதலாளிகள் அம்பானி – பிர்லா தலைமையில் குழு அமைத்து ‘கல்வி சீரமைப்புக்கான ஒரு கொள்கை வரையறை’யை உருவாக்கியது. இக்குழு பெரும் லாபம் தரக்கூடிய சந்தையாக கல்வியைப் பார்த்தது. கல்விக் கட்டணத்தை முழுமையாக மாணவரிடமிருந்து வசூலிக்க வேண்டும், உயர்கல்வியை தனியார்மயமாக்கி, அதில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என அம்பானி – பிர்லா அறிக்கை கூறியது. ‘கல்வி என்பது எதிலும் பொருந்திக்கொள்கிற மலிவான, அதே நேரத்தில் புது திறன்களையும் புதுமைகளையும் ஏற்றுக்கொள்கிற தொழிலாளர்களை உருவாக்கித் தருகிற ஒன்றாக இருக்க வேண்டும்’ என ஓங்காரமாய் பேசியது. மேலும், ‘பல்கலைக்கழக – கல்வி நிறுவன வட்டாரங்களில் அரசியல் நடவடிக்கைகளை தடை செய்யும் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ எனவும் அம்பானி – பிர்லா குழு வற்புறுத்தியது.

அதே வாஜ்பேயி ஆட்சியே பாடப்புத்தகங்களில் திட்டமிட்டு இந்துமத அடிப்படைவாத கருத்துக்களைத் திணித்தது. பல்கலைக்கழகங்களில் வேத ஜோதிடம், வேதக் கணிதம் ஆகியவற்றை பாடதிட்டங்கள் ஆக்கினர். சிறுபான்மை மக்களுக்கு எதிரான அவதூறுக் கருத்துக்கள், மதவெறியைத் தூண்டும் சிந்தனை ஓட்டம் பாடப்புத்தகங்களாக மாற்றப்பட்டன. கல்விப் புலங்களில், ஆய்வு நிறுவனங்களிலிருந்து, இடதுசாரி ஆய்வாளர்கள் நீக்கபட்டு ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவோடு 2004ல் ஆட்சி பொறுப்புக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு குறைபாடுகளுடன் கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு உகந்தாற்போன்று கல்வித்துறையில் மாற்றம் கொண்டுவர சாம் பிட்ரோடா தலைமையில் ‘தேசிய அறிவுசார் ஆணைய’த்தை அரசு உருவாக்கியது.

மோடி அரசின் மோசடி வித்தை

அதிகார வர்க்கத்தின் சுரண்டல் தன்மைக்கு ஏற்றாற் போன்று கல்விக் கொள்கையும் காலம்தோறும் மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதன் தொடர்ச்சியாகவே இன்றைய ஆர்எஸ்.எஸ். – பா.ஜ.க. தலைமையிலான அரசு வெளியிட்டுள்ள கஸ்தூரிரங்கன் தலைமையிலான ‘தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019’ -ஐ காண வேண்டியுள்ளது.

பா.ஜ.க. ஆட்சி 2014-ல் வந்தவுடனேயே அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி புதிய கல்விக் கொள்கையை உருவாக்க டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்தார். இதில் ஒருவர் மட்டுமே கல்வியாளர். இக்குழு 2016 மே மாதம் 90 பரிந்துரைகளை அரசுக்கு கொடுத்தது. ஆனால், அவை என்னவானது என யாருக்கும்தெரியாது.

இதைத் தொடர்ந்து ‘புதிய தேசிய கல்விக் கொள்கை’யை உருவாக்க விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் 2017 ஜூன் 24 அன்று 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. எவ்விதமான வெளிப்படையான காரணங்களையும் அறிவிக்காமல் இந்த குழுவுக்கு ஐந்து முறை காலநீட்டிப்பு அளிக்கப்பட்டு 2018 டிசம்பர் 15 அன்று அன்றைய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதே அறிக்கையை பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு புதிதாக பொறுப்பேற்ற மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பொக்ரியாலிடம் மே 29 அன்று இரண்டாவது முறையாக கஸ்தூரி ரங்கன் வழங்கியதாக அதிகாரபூர்வமான செய்தி வந்தது.

கஸ்தூரிரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு பற்றி நாடறிந்த கல்வியாளர்கள் கூர்மையாக பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த முனைவர் சந்திரகுரு, அக்குழுவில் பணியாற்றிய ஒவ்வொருவர் குறித்தும் விரிவாக ஆய்வு செய்துள்ளார். 11 பேர் கொண்ட குழுவின் அறிக்கை, அரசிடம் அறிக்கை கொடுக்கப்படும்போது 9 பேர் கொண்ட குழுவாக மாறிவிட்டது.

இவர்களில் இந்த அறிக்கையை முழுமையாக உருவாக்கி வடித்தெடுத்தவர் பெங்களூரைச் சேர்ந்த எம்.கே.ஸ்ரீதர். இவர் படிக்கும் போதே ஏ.பி.வி.பி. அமைப்பின் தேசிய செயலாளராக இருந்தவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை சிதைக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சிந்தனாவாதி.

மனு ஸ்மிருதி தொடங்கி, மெக்காலே கல்விக் கொள்கை, ராஜீவ் காந்தியின் புதிய கல்விக் கொள்கை, அம்பானி பிர்லா குழு, சாம் பிட்ரோடா குழு என இதற்கு முன் அமைக்கப்பட்ட அனைத்து குழுக்களின் ஆலோசனைகளை கலந்து இன்றைய சந்தை பொருளாதாரத்துக்கு உகந்தாற்போன்று ‘ஆர்.எஸ்.எஸ். ஆய்வகத்தில்’ செய்த கலவைதான் டாக்டர் கஸ்தூரி ரங்கன் குழு உருவாக்கிய ‘புதிய கல்விக் கொள்கை’.

இந்திய மரபைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் புவியியல் பற்றிய அறிவை விரிவுபடுத்தவும், இந்தியர் என்ற பெருமிதம் கொள்ளவும், சுயமதிப்பீடு அதிகரிக்கவும் வழிவகை செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை வரைவு அறிக்கை ஆங்காங்கே பேசிச் செல்கிறது. அதாவது புராதன பண்பாட்டுப் பெருமை என்ற பெயரில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத, பிற்போக்கு, பழமைவாத, சாதிய கருத்துக்களை கல்வியில் திணிப்பதற்கு திட்டமிட்டு பரிந்துரைகளை கொடுத்திருக்கிறார் கஸ்தூரி ரங்கன். விமர்சனப் பார்வையை மழுங்கடிக்கக் கூடிய வகையில் பழைய கல்வி முறையை போற்றிப் புகழ்ந்து குரு-சிஷ்ய உறவு குறித்தெல்லாம் வரைவு தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியவர்கள் ஆலாபனை பாடியிருக்கிறார்கள்.

பேச வேண்டியதை பேசாதது ஏன்?

தற்போதைய இந்தியக் கல்வி கொள்கை குறித்து ஏராளமான விமர்சனங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. நடைமுறையிலுள்ள கல்வி முறைக்கு மாற்றாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது திட்டத்தில், “அனைத்து நிலைகளிலும் விரிவான – அறிவியல்பூர்வமான கல்வி கிடைக்க பொதுக் கல்வி நிறுவன முறை வளர்க்கப்படும். மேல்நிலைக் கல்விவரை இலவச – கட்டாயக் கல்வி வழங்கப்படும். கல்வியில் மதச்சார்பற்ற தன்மை உத்தரவாதப்படுத்தப்படும். உயர்கல்வி – தொழிற்கல்வி நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும். முழு அளவிலான ஆராய்ச்சி – வளர்ச்சி நிறுவனங்கள் மூலம் அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். விளையாட்டு நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் விரிவான விளையாட்டுக் கொள்கை நிறைவேற்றப்படும்” எனக் கூறியுள்ளது.

ஆனால் பா.ஜ.க. அரசு சார்பாக முன்மொழியப்பட்டுள்ள வரைவறிக்கையோ தற்போதைய கல்வித் துறையில் நிலவும் பலவீனங்கள் குறித்து எதுவும் பேசாமல், அல்லது இத்தகைய பிரச்சினைகளுக்கு ஏன் புதிய தீர்வுகளை முன்மொழிகிறோம் என தர்க்க அடிப்படையில் எதுவுமே பேசவில்லை. ‘நீ படிக்கக்கூடாது.. உனக்கு படிப்பு ஒரு கேடா.. நீ எல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு’. இப்படிக் காலம்காலமாக சொல்லப்பட்டுவந்த வார்த்தைகளை நவீன இந்தியாவில் எப்படி நயமாக சொல்வது என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். மூளை அதிகார வர்க்கத்துக்கு வழிகாட்டியுள்ளது. எட்டாம் வகுப்பை தாண்டவே மூன்று பொதுத்தேர்வு. அதற்கடுத்து 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எட்டு மாதத்துக்கு ஒருமுறை 40 தாள்களுக்குத் தேர்வு. இதில் தேர்ச்சி பெற்றாலும் மதிப்பெண் பெற்றாலும் உயர்கல்வி பயிலவோ கல்லூரிக்கோ செல்ல முடியாது. அவ்வாறு செல்வதற்கு ‘தேசிய தகுதித் தேர்வு’ எழுத வேண்டும். இதில் எடுக்கக்கூடிய மதிப்பெண்களை பொறுத்தே உயர்கல்விக்குச் செல்ல முடியும். இவையெல்லாம் எதிர்கொண்டு கல்லூரிக்குப் போய் பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி. படித்தாலும் அதற்கு மதிப்பில்லை. அதற்குப் பிறகு நாடுதழுவிய அளவில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்ணை வைத்துதான் எந்த மேற்படிப்பைப் படிப்பது என்று மதிப்பிடப்படும். பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் இதே நிலைதான்.

டியூஷன் சென்டர், கோச்சிங் சென்டர் அதற்கேற்றாற் போன்று நோட்டுப் புத்தகம், ஆடியோ, வீடியோ பயிற்சி வகுப்புகள் நடத்தி, கொள்ளை லாபத்தைச் சுரண்டுவதற்கு இயலாமல் முட்டு சந்தில் மாட்டிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு சிக்கெடுத்து, சீரெடுத்து சாமர்த்தியமாக வழிகாட்டி இருக்கிறார்கள் சாவர்க்கர் வீட்டுப் பிள்ளைகள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்திய மக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை இல்லாது ஒழிக்க ‘தரம்’ என்கிற அஸ்திரத்தை ஏவியுள்ளார் கஸ்தூரி ரங்கன். கல்விரீதியாகவும் சமூகரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமைகள்கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாததற்கு யார் காரணம் என்கிற கேள்வியை கஸ்தூரி ரங்கன் ஏனோ எழுப்பவில்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று, தனியார் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு குறித்து வற்புறுத்த இயலாது என வரைவு அறிக்கை பேசுகிறது. அரசுப் புள்ளிவிவரங்களே தலித் பழங்குடியின மக்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வன்முறைகள் அதிகரித்து வருவதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இடஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இடங்களில்கூட முழுமையாகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இல்லாததை புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இத்தகைய சூழலில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசுவது எந்த விதத்தில் நியாயம்?

ஒற்றை அதிகாரத்துக்கான ஒற்றையடிப் பாதை

1990-களுக்குப் பிறகு பேசிய பல குழுக்களின் கண்ணோட்டத்துக்கு வடிவம் கொடுக்கக்கூடிய வகையில், இந்த கல்விக் குழுவின் அறிக்கை அனைத்து அதிகாரங்களையும் மையப்படுத்தும் போக்குக்கு முழு முற்றாக வழிகாட்டியுள்ளது. தற்போது 93 சதவீத கல்வித் துறை அதிகாரம் மாநில அரசுகளின் கையில்தான் உள்ளது. அதை முற்றாக மையப்படுத்தும் போக்குக்கு உகந்த மாற்றங்களை ஏற்படுத்த பல்வேறு புதிய அமைப்புகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் தலைமையில் மையப்படுத்தப்பட்ட அதிகாரம் கொண்ட ராஷ்டிரிய சிக்க்ஷா ஆயோக் (ஆர்.எஸ்.ஏ.) உருவாக்குவது என முன்மொழியப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு இல்லாத கல்வித் துறையின் சுதந்திரம் குறித்து பெருமை பேசும் இந்த அறிக்கைதான், மறுபுறத்தில் 16 பேர் கொண்ட பிரதமர் தலைமையிலான குழுவுக்கு ஒட்டுமொத்த அதிகாரத்தை தூக்கிக்கொடுத்துள்ளது.

நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளை சிதைக்கும் முயற்சியை கச்சிதமாக வகுத்துக் கொடுத்துள்ளது கஸ்தூரி ரங்கன் அறிக்கை.

பல ஆபத்தான விளைவுகளை உருவாக்கும் ‘தேசிய ஆராய்ச்சி நிறுவனம்’ என்ற மற்றொரு மையப்படுத்தப்பட்ட சர்வாதிகார அமைப்பை உருவாக்கவும் ஆலோசனை வகுத்துக் கொடுக்கப் பட்டுள்ளது. “இத்தகைய ஆராய்ச்சி நிறுவனங்கள் மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரானவை. இந்த அமைப்புகள் இயந்திர கதியாக செயல்படுவதற்கே வழிவகுக்கும். தனிப்பட்ட ஆராய்ச்சியாளரின் அறிவு தாகத்துக்கு பூட்டுப் போட்டு விடும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

தாய்மொழிக் கல்வியை தகர்க்க, இந்தி மொழியை திணிக்க, மும்மொழி கல்வித் திட்டத்தை புகுத்த, வகைதொகையில்லாமல் வியாக்கியானங்களை பேசியிருக்கிறது வரைவறிக்கை. அதுபோல எல்லா மொழிகளுக்கும் அடிப்படை சமஸ்கிருத மொழி என கதை விட்டுள்ளார் ராக்கெட் நிபுணர் கஸ்தூரி ரங்கன்.

எங்கும் வணிகமயம், எதிலும் வணிகமயம்

உலகத்திலேயே அதிக அளவில், சுமார் 31 கோடி மாணவர்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இத்தனை மாணவர்கள் உருவானதற்குத் தனியார் துறை பங்களிப்புதான் காரணம் எனப் பலர் விதந்தோதி வருகின்றனர். ஆனால், அது முழு உண்மையல்ல. அரசுக் கல்வி நிலையங்களின் வாயிலாகவே மாணவர்கள் கல்வி பயில்வதற்கான தளமும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பல்வேறு புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அதிலும் குறிப்பாக சமூகரீதியாக, கல்விரீதியாகப் பின்தங்கிய பிரிவினர் கல்வி பயிலும் இடமாக அரசுக் கல்வி நிலையங்களே இன்றும் விளங்கி வருகின்றன.

கல்வி என்பது சமூக மாற்றத்துக்கான கருவியாக இருப்பதால் சமத்துவமாகக் கல்வி பெறும் வாய்ப்பை அனைவருக்கும் ஏற்படுத்தித் தருவதுதான் அரசின் கடமை என அரசியலமைப்புச் சட்டம் சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால், கல்வித்துறையில் வணிகமயம் என்பது சமத்துவ சமூகநீதியை குழிதோண்டிப் புதைத்துள்ளது. இதுவரை இந்திய கல்வி குழுக்கள் கொடுத்த பரிந்துரைகளை எல்லாம் ஒரு படி தாண்டி தனியார் பள்ளிகளும், தனியார் உயர்கல்வி நிலையங்கள் போன்று, தங்கள் விருப்பம்போல் கல்வி கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என முழு அனுமதி அளிக்கிறது இந்த வரைவு.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 2016-17 ஆண்டு அறிக்கையின்படி இந்தியாவில் பழங்குடி இனத்தினர் 5.2%, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 14.3%, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 34%, முன்னேறிய வகுப்பினர் 46.5% என்ற விகிதாச்சாரத்தில் மாணவர்கள் உயர்கல்வி பெற்று வருவதாகக் கூறுகிறது. இத்தகைய அசமத்துவ நிலை மாற்றுவதற்கு அரசு கல்வி நிலையங்களும் சமூகநீதி கோட்பாடும் மிக அவசியம். ஆனால் சமூகநீதி கோட்பாட்டுக்கு எதிராக இடஒதுக்கீட்டு முறையை ஒழித்துக் கட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கூட்டத்தினர் குத்தீட்டியோடு களமிறங்கியுள்ளனர்.

இந்திய உழைப்பாளி வர்க்கத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து புதிய கல்விக் கொள்கை கிஞ்சித்தும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. எவ்வித துறைசார்ந்த அறிவும் இன்றி உழைப்பதற்கான சக்தியை மட்டுமே கொண்ட பெரும்பாலான உழைக்கும் கூட்டத்தை உருவாக்கி, நவீன இயந்திரங்களின் உதவியோடு மலினமாக உழைப்புச் சுரண்டலை நடத்த ஏகாதிபத்திய அமைப்புகளின் சதி திட்டத்துக்கு சாஷ்டாங்கமாக காலில் விழுந்து வரவேற்பு கொடுத்துள்ளது வரைவு அறிக்கை.

எல்லா மட்டத்திலும் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் என்பதினூடாக தேர்வுக்கான பயிற்சி மையங்களை தெருவுக்குத் தெரு திறந்து வைத்து பெருமுதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்ட வழி காட்டியுள்ளது வரைவு அறிக்கை. எத்தகைய சமூகச் சீர்கேடுகளை இது இந்திய சமூகத்தில் ஏற்படுத்தப் போகிறது என்பது குறித்து அக்கறை கொள்ளாதது வெட்கக்கேடு. உதாரணத்துக்கு தற்போது ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத டெல்லி பயிற்சி மையம் ஒன்றில் பயில 50 லட்ச ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. 50 லட்சம் கொடுத்து பயின்று ஐ.ஏ.எஸ். ஆகும் அதிகாரியிடம் சமூக அக்கறையை எதிர்பார்க்க இயலுமா?

செய்ய வேண்டியது என்ன?

ஜனநாயக விழுமியங்களை வளர்த்தெடுக்க வேண்டிய கல்வி நிலையங்களில் முழுமுற்றாக ஆசிரியர், மாணவர் ஜனநாயக உரிமைகளை பறித்து நட்ட நடு ஆற்றில் நிறுத்தியுள்ளது கஸ்தூரி ரங்கன் குழு.

கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு முன்மொழிந்துள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 -ஐ முழுமையாக நிராகரிப்போம்!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை பாதுகாக்கக்கூடிய, பலப்படுத்தக்கூடிய, புதிய கல்வி முறையைக் காண போராட்டத்தை முன்னெடுப்ப்போம்!

காவி மயமாகும் கல்வி

ச. லெனின்

“நடை, உடை, பாவனைகளில் ஆங்கிலேயரைப் பின்பற்றக்கூடிய ஒரு புதிய தலைமுறையை உருவாக்கும் நோக்கத்தை புதிய கல்விமுறை கொண்டிருக்கிறது”  என்றான் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்க்கான கல்வி திட்டத்தை வடிவமைத்த மெக்காலே. இன்று ஆர்.எஸ்.எஸ்.தனது திட்டத்தின் அடிப்படியில், அதன்  இந்து ராஷ்ட்ரா கொள்கையை, பிஞ்சு உள்ளங்களில் திணிக்கும் வகையில்  பாடத்திட்டத்தை  மாற்றி வருகிறது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு தங்கள் நிர்வாகத்தை நடத்த இடைநிலை அதிகாரிகளையும், போதுமான உயர்நிலை அதிகாரிகளையும் உருவாக்குவதே அவர்களுடைய  கல்வி திட்டத்தின் கூடுதல் அம்சமாக இருந்தது. விடுதலைக்கு பின்பும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ஏற்ற வகையில், அதிகார வர்க்கத்தையும், குமாஸ்தாக்களையும், உழைப்பாளர்களையும் உருவாக்குவதையே விடுதலைக்கு பிந்தைய கல்வி கொள்கைகள் கொண்டிருந்தன.  ஒருசில பிரத்யேக கல்விநிலையங்கள் மட்டும் சில பிரத்யேக கல்வி முறையை பயிற்றுவித்ததை தவிர மற்றவை எல்லாம் இதையே செய்துவந்தன.

ஆனபோதும், ஆளும் வர்கத்தின் தேவையை கருத்தில் கொண்டேனும் கல்வி பரவலான மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. சாதி போன்ற சமூக கொடுமைகளாலும், மண்டிக்கிடந்த பழமைவாதங்களாலும் முடங்கிக்கிடந்த பலரின் கல்வி வாய்ப்பு திறக்கப்பட்டது.  குறிப்பாக சமூக சீர்திருத்த இயக்கங்களால் ஓரளவு விழிப்புணர்வு பெற்றிருந்த தென் மாநிலங்கள் இதில் கூடுதலாக பயனடைந்தன. துவக்கத்தில் பள்ளிக்கல்விக்கும், தொழிற்கல்விக்கும் கூடுதலாக கவனம் கொடுக்கப்பட்டது. பிறகு நாட்டின் சுயசார்பு தேவையின் அடிப்படியில் ஆய்வித்துறைக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஐ.ஐ.டி களும், இதர பல உயர் கல்வி நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன.

“மனிதனை மனிதன் சார்ந்துள்ள சமூகத்தில் மக்கள் அனைவருக்கும் வாழ்வியல் தேவைகள் உள்ளன. இத்தேவைகளை பெறுவதற்க்கான வாய்ப்பு அனைவருக்கும் இருக்க வேண்டும்.  அவ்வாய்ப்பு தொடர்ந்து வளர வேண்டும்; அதன் மூலம் அதற்க்கான பொது கருத்து உருவாக வேண்டும். இதுவே சமூக தொடர் வளர்ச்சியாகும்” இப்படியான புரிதலோடு இளம் தலைமுறையினரை சமூக அறிவு ஜீவிகளாக (organic intelectual) உருவாக்குவதே உயர்கல்வியில் முக்கிய நோக்கம் என்கிறார் பிரபாத் பட்நாயக். ஆனால்  இதுவரை இந்திய வரலாற்றில் இத்தகைய புரிதலோடு கல்விக்கொள்கை வகுக்கப்படாத போதும், கல்வியின் வீச்சால் பல அறிவு ஜீவிகளும், சிந்தனையாளர்களும் உருவாகினர்.

1990 களுக்கு பிறகு இந்தியா பின்பற்றும் புதிய பொருளாதார கொள்கையின் விளைவாகவும், சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் கட்டளைகளை பின்பற்றியதாலும் நிதி பற்றாக்குறையைஅது சந்தித்தது. இதன் நேரடி விளைவாக கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் நல செலவுகள் வெட்டப்பட்டு, கல்வி உள்ளிட்ட சேவைகள் தனியார்மயம் ஆனது. அது சமூக அறிவு ஜீவிகள் உருவாவதையே முடக்கி, ஆளும் வர்கத்தின் வளர்ச்சிக்கு தேவையான உழைக்கும் கூட்டத்தை மட்டும் உருவாக்கும் வேலையை செய்கிறது.

“பசியுள்ளவன் புத்தகத்தை நாடுவான்” என்றார் பெர்ட்லாட் பெர்ச். அவன் நாடுகின்ற புத்தகம் அவனை பசியோடு வைத்திருக்கும் சமூக காரிணிகளை சொல்வதாக இருக்க வேண்டும். ஆனால் அவன் நாடுகின்ற புத்தகத்தில், அவனது பசிக்கு காரணம் அவன் முற்பிறவியில் செய்த பாவம் தான் என்று சொல்லும் வகையில் பாட திட்டங்களை மாற்றுகிறது ஆளும்  ஆர்.எஸ்.எஸ்.- பி.ஜே.பி. அரசு.

கல்வியை காவி மயமாக்குவதுதான் பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்-இன் முக்கியமான நோக்கம். வலுவான ஆர்.எஸ்.எஸ் சிந்தனை கொண்டவர்களையே இந்திய வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற நாட்டின் பல முக்கியமான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைமை பொறுப்பிற்கு நியமிக்கபட்டுள்ளனர். இந்திய வரலாற்றை திருத்தி எழுத 2016 ஆம் ஆண்டு ஒரு குழுவை பிஜேபி அரசு அமைத்துள்ளது கவனிக்கத்தக்கது.

இந்து புராணங்களுக்கு ஏற்றபடி இந்திய வரலாற்றை மாற்றி எழுத அவர்கள் முயல்கின்றனர். மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக இருக்கும் இந்தியாவை சகிப்புத்தன்மையற்ற, பாசிச இந்து ராஷ்ட்ராவாக மாற்ற ஆர்.எஸ்.எஸ் திட்டமிடுகிறது. எனவே, உயர் கல்வியையும், ஆய்வு புலத்தையும் முழுமையாக வகுப்புவாத நிலைக்கு அது மடைமாற்றுகிறது.  இதை எதிர்க்கும் மாணவர்கள் ஒடுக்கப்படுவதோடு, அவர்களின் எதிர்காலமே பாதிப்புக்கு உள்ளாகும் வகையில் நிர்வாக ரீதியாகவும் கடுமையாக பழிவாங்கப்படுகிறார்கள். உதாரணமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித்தின் முனைவர் பட்ட ஆய்வு எவ்வித காரணமுமின்றி சமர்ப்பிக்கவே அனுமதிக்கப்படவில்லை.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்திய உயர் கல்வி ஆணையச் (பல்கலைக்கழக மானியக்குழு சட்டம் 1956-ஐ திரும்பப் பெறுதல்) சட்டம் 2018 என்கிற வரைவு சட்டத்தை வெளியிட்டுள்ளது.
இச்சட்டம் நிறைவேற்றப்படுமானால் மாநில சட்டமன்றங்கள் மூலம் இதுநாள்வரை உருவாக்கப்ட்ட பல்கலைக்கழகங்களுக்கான சட்டங்கள் அனைத்தும்  காலாவதியாகிவிடும். இது நமது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைத்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படைகளையே மாற்றும் செயலாகும். இந்தியாவில் உள்ள அனைத்து உயர்கல்வி நிலையங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும். அதோடு மட்டுமல்லாமல் உயர்கல்வியை முழுமையாக சந்தையிடம் ஒப்படைக்கும் சரத்துக்களும் இந்த வரைவு சட்டத்தில் உள்ளது.

தாராளமான தனியார்மயம்

உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 6 சதவிகிதத்தை கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்பது 1964-66ல் கோத்தாரி கல்விக்குழு பரிந்துரைத்த காலம் தொட்டு முன்வைக்கப்படும் கோரிக்கையாகும். 2013-14 ஆண்டு 0.71 சதம் மட்டுமே ஜிடிபி-யிலிருந்து கல்விக்கு ஒதுக்கப்பட்து. பிஜேபி அரசோ அதை மேலும் படிப்படியாக குறைத்து 2018-19 ஆம் ஆண்டு ஜிடிபி-யிலிருந்து வெறும் 0.45 சதத்தை மட்டுமே கல்விக்காக ஒதுக்கியது. பொதுக் கல்விக்கான நிதியை தொடர்ந்து வெட்டிச் சுருக்கி, கல்வியில் தனியார் மயத்தை வேகமாக அமல்படுத்துகிறது.

30 மாணவர்களுக்கு குறைவான மாணவர்கள் உள்ள பள்ளியை மூட அரசு வலியுறுத்துகிறது.  பிஜேபி ஆளும் மாநிலங்களில் பள்ளிக் கல்வியை வேகமாக தனியாரிடம் தாரை வார்க்கும் நிகழ்வுகள் தொடர் கதையாகியுள்ளது. ராஜஸ்தான் அரசு 300 அரசுப் பள்ளிகளை தனியார் மற்றும் பொதுக்கூட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு மஹாராஷ்ட்ரா அரசு 4,093 அரசு பள்ளிகளை மூடியுள்ளது. மேலும் மஹாராஷ்ட்ரா அரசு தனியார் கம்பெனிகள் பள்ளிக்கூடங்களை நடத்திட அனுமதிக்கும் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது.

பள்ளிகளில் சத்துணவிற்கான நிதியை குறைத்து குழந்தைகளின் வயிற்றிலடிப்பதில் தொடங்கி, கல்விக்காக அரசு ஒதுக்கும் நிதி ஒவ்வொன்றையும் வெட்டி, தனியாரிடம் தான் கல்வி பெறவேண்டும் என்கிற நிலைக்கு மக்களை தள்ளுகிறது. ஆனால் இதற்கெல்லாம் மாறாக கேரள இடதுசாரி அரசு செயல்பட்டு வருகிறது. அங்கு தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாற்றி வருகின்றனர்.

பக்கோடா விற்பதும் வேலை தான்

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்று 2014ம் ஆண்டு தேர்தல் களத்தில் வாக்குறுதி கொடுத்த மோடி, இப்போது பக்கோடா விற்பதும் வேலை தான் என்கிறார்.

ஆண்டுதோறும் சுமார் இரண்டு கோடியே நாற்பத்தி ஆறு லட்சம் பேர் புதிதாக வேலை தேடும் களத்திற்கு வருகின்றனர். ஆனால் கடந்த 2014 முதல் 2017 அக்டோபர் வரை உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்போ வெறும் 8,23,000 மட்டுமே என்கிறது சர்வதேச தொழிலாளர் ஆணையம். சீனாவில் ஒரு நாளைக்கு சுமார் ஐம்பதாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகிறது, ஆனால் இந்தியாவோ ஒரு நாளைக்கு 450 பேருக்குத்தான் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. இதே வேகத்தில் போனால் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வழங்க சுமார் 77 ஆண்டுகள் ஆகும்.

நாட்டில் 55 சதமானோர் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். அதிலும் சமூக ரீதியாக பின்தங்கியுள்ள தலித் மற்றும் ஆதிவாசி மக்கள் பெரிய அளவில் இருக்கும் இடமும் இதுதான். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று கூறிய மோடி அதில் ஒரு துளியை கூட செய்யவில்லை. 2014-15 க்கு கிராமப்புற வருமானம் என்பது எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தேங்கிப் போய் நிற்கிறது. தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் மூலம் கிடைத்து வந்த வேலை வாய்ப்பையும் அரசு தட்டிப் பறிக்கிறது. தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை சரியாக நிறைவேற்ற குறைந்தபட்சம் எண்பதாயிரம் கோடி வரை  தேவைப்படும். ஆனால் அரசு இத்திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியோ  ஐம்பத்தைந்தாயிரம் கோடி மட்டுமே.

பொதுத்தறை நிறுவனங்கள்

இதுவரை ஒரு லட்சத்து தொண்ணுhற்றி ஆறு லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளது. இது கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்த பத்து ஆண்டுகளில் விற்கப்பட்டதைவிட அதிகமாகும். பொதுத்துறை நிறுவனங்களில்தான் சமூக நீதியை பாதுகாக்கும் வகையிலான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. எல்லாம் தனியார் மயம் என்கிறபோது சமூக நீதியும் அடிபட்டு போய்விடுகிறது. தனியார் துறையில் இடஒதுக்கீடு என்கிற கோரிக்கையை கேட்கக் கூட இந்த அரசு தயங்குகிறது.

பொதுத்துறை நிறுவனங்களிலேயே மூன்றில் ஒருபகுதியினர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகத்தான் உள்ளனர். தனியார் துறையிலோ 40 முதல் 60 சதம் பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர். நிரந்தர தொழிலாளர்களை விட இவர்களின் ஊதியம் 30 முதல் 50 சதம் வரை குறைவாகும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று 2016 ஆம் ஆண்டே கூறிய போதும் இதை அமல்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை.

நாட்டின் உழைக்கும் மக்களில் 93 சதமானவர்கள் முறைசாரா தொழிலாளர்களே. குறிப்பாக கட்டுமானம், போக்குவரத்து, விடுதி ஆகிய துறைகளில் முறைசாரா தொழிலார்கள் அதிகம் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும் பகுதியினர் கிராமப்புற வறுமை காரணமாக நகர்ப்புறங்களுக்கு பிழைப்பு தேடி வந்தவர்களே ஆவர். கட்டுமான தொழிலாளர்களின் நலன் காக்க கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து சுமார் 37,400 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் 9,000 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. அதிலும் பெரும் பகுதி நிர்வாக செலவுகளே ஆகும்.

சிறிய அளவிளான வேலை வாய்ப்புகளையும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கமும் முடக்கிவிட்டது. இருந்த சிறு குறு தொழிலும் அதனால் கிடைத்துவந்த வேலையும் பறிபோனது. சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சம் பேர் 2017 ஆம் ஆண்டு துவக்கத்திலேயே வேலை இழந்தனர் என்கிறது இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம். அதே ஆண்டு ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வேலை இழப்பை மேலும் அதிகப்படுத்தியது.

முதலாளிகளின் அரசு

நாட்டின் மக்கள் தொகையில் சுமார் அறுபது சதவீதம் பேர் முப்பத்தி ஐந்து வயதுக்குட்பட்டவர்களாவர். இது தேச வளர்ச்சிக்கான மிகப்பெரிய உழைப்பு சக்தி ஆகும். முதலாளித்துவத்தின் நலன்களுக்காக இந்த இளம் இந்தியர்களுக்கான வாய்ப்பு வசதிகளை அரசு செய்ய மறுக்கிறது.

முதலாளித்துவத்திற்கு எப்போதும் குறைந்த கூலியிலே தொழிலாளர்கள் தேவை. எனவே வேலையில் உள்ள தொழிலாளர்களை போல் பல மடங்கு வேலையற்ற உழைப்பாளர்கள் கூட்டம் இருப்பதையே முதலாளித்துவம் விரும்பும். இந்த வேலையற்ற கூட்டத்தையே தயார் நிலையிலான தொழிலாளர் படை  என்றார் மார்க்ஸ்.

 

பொய்களை கட்டவிழ்த்து, கலவரங்களை அரங்கேற்றி மக்கள் விரோத அரசின் மீதான கோபத்தை மடைமாற்றி தப்பிக்கும் திட்டத்தையே ஆர்எஸ்எஸ், பிஜேபி கையாளும் பாசிச வழிமுறையாகும். பாசிச சக்திகள் பெரு முதலாளிகளின் விருப்பங்களை சுமந்துகொண்டே  தனது அடிப்டைவாத கொள்கையையும் அமலாக்கும். எனவே இந்த இரண்டு அபாயங்களையும் சேர்த்தே எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இப்போது உள்ளோம்.

இந்தியக்கல்வி யாருக்கானது? ஒரு மார்க்சியப் பார்வை

– இல. சண்முகசுந்தரம்

தமிழகத்தின் சமீபகால கல்விப் போராட்டங்களும், மத்திய அரசின் நீட் பிடிவாதமும் இந்தியக் கல்வி மீதான ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்பியுள்ளது.  தரமான கல்வி என்ற வாய்ப்பு யாருக்கானது, எந்த நோக்கத்திற்கானது என்பதே அந்தக் கேள்வியாகும்.

பள்ளிக்கல்வியில் எந்த மாற்றமும் முன்மொழியாமல், நாடெங்கும் உள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தைப் பற்றிச்  சிறிதும் அக்கறையும் கொள்ளாமல், வெறுமனே ஒரு நுழைவுத்தேர்வின் மூலம் இந்தியக் கல்வியின் தரத்தை மேம்படுத்துகிறோம் என்று சொல்கிறார்களே, அதுவெப்படி சாத்தியம்? உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளால் இந்தியக் கல்வியின் தரம் உயருமெனில், ஏன் இன்று வரை அரசுப் பள்ளிகள், கல்லூரிகளின் தரம் உயரவில்லை? கல்விக்காக செலவழிக்கும் ஆற்றல்மிக்கவர்களான  தரமானவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கான தொழிற்கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அரசு செய்யப்போவதென்ன?

இங்கேதான் அடிப்படையான அந்தக் கேள்வி எழுகிறது. ஏனிந்த நிராகரிப்புகள்? ஏனித்தனை வடிகட்டித் தேர்வுமுறைகள்? இப்படி வடிகட்டித் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்குக் கொடுக்கப்படும் தரமான கல்வியும், உயர் வேலைவாய்ப்பும் ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டியை எடுத்துக்காட்டுகிறதே, ஏனிந்த போட்டியை உருவாக்குகிறார்கள்? சம்பாதிக்கவேண்டுமெனில் இதுதான் ஒரே வழி எனத் தனது பொருளாதாரத் தேவைக்காக பலரை முந்திச் செல்லும் மனநிலையை உருவாக்குகிறார்களே, இதுதான் கல்வியின் நோக்கமா? அப்படியெனில், கல்வி என்பது மனிதநேயத்தைப் போதிப்பது, தனிமனித ஒழுக்கநெறிகளைக் கற்றுத்தருவது, சமூக நோக்கில் ஒருவரைத் தயார் செய்வது, தேச நலனில் அக்கறை கொள்ளச் செய்வது என்று காலங்காலமாக வியாக்கியானம் தருகிறார்களே, அதற்கான கல்வி எங்கு, யாருக்கு தரப்படுகிறது?

கல்வியைப் பொறுத்தவரை அளவு மற்றும் தரம் குறித்த விவாதம் எப்போதும் புதியதல்ல. ஆளும் வர்க்கம் தனது நலனுக்கு எது பொருந்துகிறதோ அதை எப்போதும் எடுத்துக்கொள்கிறது என்பதே உண்மையாகும்.  இந்தியப் பல்கலைக்கழகங்களில் இந்தியத் தேசியத்திற்கான போராட்டம் எழுந்தபோது, 1902ல், தரத்தை மட்டுமே நாம் எப்போதும் மனதில் கொள்ளவேண்டும் அளவை அல்ல எனச் சொல்கிறார் கர்சன் பிரபு. இங்கு அவர் தரம் என்று குறிப்பிடுவது உயர்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக கல்விநிலையத்தில் அனுமதித்தால் போராட்டம் அதிகரிக்காது என்ற பொருளில் இருந்தே ஆகும்.  அவர் அமைத்த குழுவும் பின்வருமாறு கூறியது.

 

உயர்கல்வியைப் பொறுத்த அனைத்து விசயங்களுக்கும் திறனைத்தான் முதலும், முக்கியமுமான விசயமாகக் கருதவேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை, ஒப்பீட்டளவில் ஒரு குறைந்தபட்ச எண்ணிக்கை கொண்ட இளைஞர்கள் மட்டுமே நல்ல தரமான தாராளமான கல்வியைப் பெறவேண்டும். மற்றபடி, பெருமளவிலான இளைஞர்கள் போதுமான வழிகாட்டுதல்கள் இல்லாத கீழ்த்தரமான பட்டங்களைப் பெறும் அளவில் தேர்ச்சி மட்டுமே பெறவேண்டும்.  ( ராலே குழு 1902, பக்கம் 14).

ஆக, இதுதான் உயர்கல்வியைப் பொறுத்தவரை இன்றுவரை நமது அரசுகளின் கொள்கையாகும். இலட்சக்கணக்கான மாணவர்கள் சாதாரணப் பட்டங்களை வாங்கிக்கொண்டு வேலையற்றவர்களாக மாறிக்கொண்டிருக்க, ‘தரமான சிலரையோ இலட்சங்களில் ஊதியம் பெறும் தகுதியுடையவராக அரசே உருவாக்குகிறது.

வர்க்க சமூகத்தில் கல்வி;

சமூகத்தின் பொருள்சார் சக்தியை எந்த வர்க்கம் ஆள்கிறதோ அந்த வர்க்கம்தான் அறிவுசார் சக்தியையும் ஆள்கிறது. பொருள் உற்பத்திக்கான ஆதாரங்களைத்  தனது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் ஆளும் வர்க்கம், அதன் விளைவாகவே அறிவுசார் உற்பத்தியையும் கட்டுப்படுத்துகிறது என ஜெர்மன் தத்துவ நூலில் மார்க்சும், எங்கெல்சும் வரையறுத்ததுதான் கல்வி குறித்த அடிப்படை மார்க்சியப் பார்வையாகும்.

ஆதிகாலம் தொட்டு கல்வியின் நோக்கத்தை மார்க்சின் பார்வையில் அணுகினால், காலங்காலமாகவே கல்வியின் உள்ளடக்கமும், நோக்கமும், வடிவமும் எப்படிக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பது எளிதில் புரியும். எந்த  வர்க்கம் நாட்டை ஆள்கிறதோ அந்த வர்க்கத்திற்குச் சேவை செய்யும் பணியாளர்களை, தொழிலாளர்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்டிருக்கும் கட்டமைப்பே கல்விநிறுவனங்கள் என்பதும், அதற்கேற்ப ஆட்சியாளர்கள் உருவாக்கிய கொள்கைகளே கல்விக்கொள்கைகள் என்றும் நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

குறிப்பாக, கல்வியின் விழுமியங்கள் எனச்சொல்லப்படும் கூற்றுகளும், வர்க்க சார்புள்ளவையே ஆகும். ஆளும் வர்க்கம் தனக்கு ஆதரவான சிந்தனைகளை மட்டுமே ஒழுக்கம் என்ற பெயரில் கல்வியில் அனுமதித்துவந்துள்ளது என்பதையும் காலங்காலமாக நாம் காணமுடியும். ஒழுக்கம் என்பது பொதுவானது, நியாயத்தின் அடிப்படையிலானது என்ற எதிர்பார்ப்பே வர்க்கமாக இருக்கும் சமூகத்தில் பெரும் மோசடியாகும். இது குறித்து எங்கல்ஸ் கூறுவது கல்வியின் உள்ளீடு குறித்த மார்க்சியப் பார்வையின் மிக அடிப்படை அம்சமாகும்.

இதுவரை சமூகம் வர்க்கப்பகைமைகளோடுதான் முன் நகர்ந்து சென்றுள்ளது. எனவே, ஒழுக்கநெறி என்பது எப்போதும் வர்க்கச்சார்பு ஒழுக்கநெறியே ஆகும். ஒடுக்குதலையும், ஆளும் வர்க்கத்தின் நலன்களையும் நியாயப்படுத்துவதாகவே அந்த ஒழுக்கநெறிகள் கட்டமைக்கப்பட்டன என்று எங்கல்ஸ் கூறுவதுதான் கல்விநிலையங்கள் தோறும் போதிக்கப்பட்டுள்ள ஒழுக்கமாகும்.

சோசலிசக் கல்வி மற்றும் முதலாளித்துவக் கல்விமுறைக்கு இடையிலான அடிப்படை வர்க்க வேறுபாட்டை அறிய மருத்துவக்கல்வி சிறந்த உதாரணமாகும். சோசலிசத்தைப் பொறுத்தவரையில் மருத்துவம் என்பது ஒரு அடிப்படை உரிமை. ஆனால், முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை மருத்துவம் என்பது இலாபங்கொழிக்கும் ஒரு துறை. அவ்வளவுதான்.  இந்தியாவின் மருத்துவக்கொள்கை உணர்த்தும் சில உண்மைகளை இப்போது காணலாம்.

மருத்துவம்- சேவையா, தொழிலா?

அமெரிக்காவில் இருக்கும் மருத்துவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர் என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. இந்திய மருத்துவர்கள் இல்லாத நாடே உலகில் கிடையாது எனவும் அத்தகவல் கூறுகிறது. இவர்களில் எவரும் சோசலிச கியுபா மருத்துவர்கள் போன்று சேவை செய்ய வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் கிடையாது. அனைவரும் சம்பாதிக்கச் சென்றவர்களே ஆவர். இவர்களில் கணிசமானோர் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற அரசு நிறுவனங்களில் பயின்றவர்கள்தான்.

அதுமட்டுமல்ல, இந்தியாவில் உயர் மருத்துவமனைகளில் தொழில் செய்வோர் மற்றும் தனிப்பட்ட கிளினிக் வைத்து தொழில் செய்வோர் என மொத்த மருத்துவர்களில் கணிசமானோர் அரசின் நிதியில் படித்தவர்கள்தான். தங்களது திறமையால் தாங்கள் சம்பாதிப்பதாக சொல்லிக்கொள்ளும் இவர்களுக்கான இப்படியான கட்டுப்பாடற்ற சுதந்திரத் தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தருவதுதான் முதலாளித்துவ சமூக அமைப்பு முறையின் அடிப்படையாகும்.

அரசின் நிதியில் படித்தவர்களைக்கொண்டு அரசின் சார்பான சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவது மட்டுமே அரசின் நோக்கமெனில், இன்று என்னவாகியிருக்கும்?? தனியார் கிளினிக், நடுத்தர மருத்துவமனைகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் வளர்ந்திருக்காது. மாறாக, அடிப்படை சுகாதாரக் கட்டமைப்பு பலமாகியிருக்கும். அதுதான் சோசலிச நாடுகளில் நிகழ்கிறது. சோசலிச நாடுகளின் செல்வாக்கினால் வெளியிடப்பட்ட அல்மா ஆட்டா பிரகடனமும், மருந்து சாராத, சிகிச்சை சாராத பொது சுகாதாரக் கட்டமைப்பைத்தான் எடுத்துரைக்கிறது. ஆனால், அப்படி நிகழ்ந்திருந்தால், மருந்து சார்ந்த,  மருத்துவமனை சார்ந்த தொழிலாக இன்றைய மருத்துவம் வளர்ந்திருக்காதே. இதை பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளுமா, ஏற்றுக்கொள்ளாதல்லவா. எனவே, மருத்துவத் துறையை ஒரு இலாபங்கொழிக்கும் தொழிலாக மாற்ற என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்துள்ளார்கள்.

ஏனெனில், இந்திய மருந்துத்துறையின் வர்த்தகம் 2015-16ல் 36.7 பில்லியன் டாலர் மதிப்புள்ளதென புள்ளிவிபரம் சொல்கிறது.  அதாவது இந்திய மதிப்பில், 2354305000000  ரூபாயாம். வருடத்துக்கு 17 சதம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்றும் சொல்கிறது 2017, மே17 தி இந்து தமிழ் நாளிதழ் கட்டுரை. ஆக, பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் உள்ள மருந்துக் கம்பெனிகளும், பணக்கார நாடுகளின் ஆதிக்கத்தில் உள்ள உலகவங்கியும் தனது ஏகபோக ஆதிக்கத்திற்கு ஏற்ப மருத்துவக் கொள்கைகளை வகுத்து, அதை அமல்படுத்தும் வகையில், திறமைக்கேற்ற சம்பாத்தியம் என்பதை கல்வியின் நோக்கமாக, வேலைவாய்ப்பின் நோக்கமாக முன்னிறுத்துகிறது.

அப்படியெனில், இந்திய நாட்டின் மருத்துவக் கல்வியையும், நாட்டின் மருத்துவக் கொள்கையையும் தீர்மானிக்கையில் மருத்துவத்தை ஒரு இலாபங்கொழிக்கும் தொழிலாகப் பார்க்கும்  முதலாளித்துவத்தின் நலன்தானே முன்னிறுத்தப்படும். ஆக, நடப்பது அதுதான். ஒவ்வோராண்டும் இலக்கு வைத்து வியாபாரம் செய்யத்துடிக்கும் பன்னாட்டுக் கம்பெனிகள் மருந்துவிற்பனைப் பிரதிநிதிகள் முதல் பரிசோதனை மையம்வரை அதற்கான கல்வியையும், கட்டமைப்பையும் உருவாக்கிக்கொள்கிறார்கள். தரமான மருத்துவக்கல்வி என்று அதற்குப் பெயரிட்டுக் கொள்கிறார்கள்.

பள்ளி இறுதித்தேர்வில் பொதுத்தேர்வையே சந்திக்காத கியூபா மாணவர்களால் தரமான மருத்துவர்களாக மாறமுடிகிறது. அதே போன்று, கியூபா நாடும் சுகாதாரக் கட்டமைப்பில் உலகின் சிறந்த நாடாக மாறமுடிகிறது. ஆனால், உலகெங்கும் தன் மருத்துவர்களை சம்பாதிப்பதற்காக அனுப்பும் இந்தியாவால் சிறந்த சுகாதாரக் கட்டமைப்பு கொண்ட நாடாக மாறமுடியவில்லை. இதுதான் சோசலிச கியூபா மற்றும் முதலாளித்துவ இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையேயான மருத்துவக் கொள்கைகளின் அடிப்படையில் பொதிந்திருக்கும் வர்க்க நோக்கமாகும்.

மருத்துவக்கல்வியை மட்டுமல்ல,  பொறியியல் கல்வி உள்பட, எத்துறையின் கல்வியை எடுத்துக்கொண்டாலும் அதை இக்கண்ணோட்டத்தோடு அணுகிப்பார்த்தால், எந்த வர்க்கத்தின் நலனுக்காக பொறியாளர்களும், பட்டதாரிகளும் உருவாக்கப்படுகிறார்கள் என்று புரியும்.

ஆக, படிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் போட்டியை உருவாக்கி, பிறரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னுக்கு வரவேண்டும் என்ற மனநிலையை உருவாக்கும் கல்விமுறையையும், வேலை வாய்ப்புச் சூழலையும் வைத்துக்கொண்டு மனித மாண்புகளை உயர்த்துவதே கல்வியின் நோக்கம் எனக் கூறுகிறார்களே, அது பொய்யுரை அல்லவா. வாய்ப்பு அனைவருக்கும் தரப்படுகிறது. ஆனால், அவரவர் தகுதிக்கேற்பவே கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்ற புரிதலை ஏற்படுத்தி பாகுபாட்டை நிருபணம் செய்யும் இந்த அமைப்புமுறையே முதலாளித்துவ அமைப்பை நிலைநிறுத்தும் கல்விமுறையாகும்.

மாறாக, அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வேலை எனப் பாகுபாடற்ற கல்வியமைப்பு மற்றும் வேலைவாய்ப்புச் சூழலை முன்மொழிவதே சோசலிசத்தின் அடிப்படையாகும். ஆக, முதலாளித்துவம் முன்மொழியும் கல்வி முறை மற்றும் சோசலிசம் முன்மொழியும் கல்வி முறை என இரண்டையும் வர்க்க அடிப்படையில் புரிந்துகொண்டால்தான் கல்வித்துறையில் ஏற்படும் பிரச்னைகளின் போதும், போராட்டங்களின்போதும் சரியான பாதையை மாணவர் சமூகத்திற்குக் காட்டமுடியும். குறிப்பாக, கல்வி குறித்த அரசின் ஒவ்வொரு கொள்கை முடிவின் பின்னும், எந்த வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கிறது என்பதையும் அதை மறைக்கும் வண்ணம் எப்படி வண்ணக் கலவையில் கவர்ச்சிகரமான மேல்பூச்சை செய்திருக்கிறார்கள் என்பதையும் மாணவர் சமூகத்தின் முன்  வெளிச்சம்போட்டு காட்டவேண்டுமெனில், கல்வியின் வர்க்கச் சார்பு குறித்த பார்வை மிக அவசியமாகும்.

வங்கிக்கடன் திட்டம் கொண்டுவருகையில் அது கல்விக்கான கடனுதவித் திட்டம் என்றொரு மாயையை உருவாக்கினார்கள். ஆனால், உண்மை என்ன? கல்விக்கட்டணத்தை வங்கி ஏற்றுக்கொள்ளும் என்ற நினைப்பில், உயர்கல்வியின் கட்டண உயர்வில் ஏற்பட்ட உயர்வையும் மக்கள் உணரவில்லை, தொடர் விளைவையும் உணரவில்லை. மொத்தத்தில், வங்கிக்கடன் மூலம் உயர்கல்வியை முழுவதும் தனிநபர் பொறுப்பாக்கி அரசு அதிலிருந்து முற்றிலும் விலகி விட்டது. 2005ல் 63.2 சதம் மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கின்றனர் என்கிறது புள்ளிவிபரம். இன்று இது சுமார் 75 சதம் வரை ஆகிப்போயிருக்கும்

ஆக, உயர்கல்வி தனியார் மயம் மற்றும் அதிகக் கட்டணம் என்ற இரண்டு விதமான மோசடிகளை மறைத்து, தனியார் முதலாளிகளின் கல்லாவை நிரப்புவது மற்றும் மாணவர்களை கடனாளி ஆக்குவது என்பதே அந்தத் திட்டத்தின் பலனும், நோக்கமும் ஆகும். முதலாளித்துவ வர்க்கத்திற்கு சேவை செய்யும் அரசு எனும் இயந்திரத்தின் அடிப்படைக் குணாம்சத்தைப் புரிந்துகொண்டால்தான் இதுபோன்ற திட்டங்களின் வர்க்க நோக்கத்தை அறிந்துகொண்டு மக்களிடையே பேச இயலும். அதை அறிந்துகொள்ள வேண்டுமெனில் மார்க்சியப் பார்வையில் கல்வியின் வரலற்றையும் அறிந்துகொள்ள வேண்டும்.

வர்ணாசிரம நோக்கில் கல்வி;

இந்தியாவில் காலனி ஆட்சிக்கு முந்தைய காலத்தில் கல்வியமைப்பு முறை என்றொரு கட்டமைப்பைக் காண இயலாது எனினும், வர்ணாசிரமக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட குலக்கல்வி முறையே இந்திய நிலப்பிரபுத்துவ அமைப்பின் கல்வி முறையாகும். வேதம் ஒதுவதும், நாட்டை ஆள்வதும் மட்டுமே கற்பித்தலுக்கு உரியவையாக பார்க்கப்பட்ட வர்ணாசிரமத்தில், இவையிரண்டும் பிராமணர், ஷத்திரியர் என அவரவருக்குண்டான வர்ண அடிப்படையில் பிரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் மட்டுமே வழங்கப்பட்டன. சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தை சமூகத்தில் நிலைநிறுத்திடவும் இக்கல்விமுறைதான் உதவியது. இதர பிரிவினர் கற்கவே கூடாது எனச் சொன்ன இந்தக் கல்விமுறையை மீறுவது  குற்றம் என சட்டமும் சொல்லியது. வேதமும் சொல்லியது.

குறிப்பாகதிறமையிருப்பினும், ஆர்வமிருப்பினும்  வேறொரு குலத்தில் பிறந்தவன் வில்வித்தை கற்றால் கூட குற்றம் என்பதே அன்றைய தனிமனித ஒழுக்க நெறியாகும். அடிமைப்பட்டுக் கிடப்பதே அன்றைய ஒழுக்கநெறியாகும். ஏகலைவனின் கட்டைவிரல் பறிக்கப்பட்ட அநீதி கல்வி மறுப்பின் சூழலை எடுத்துக்காட்டும் வரலாற்றுச் சம்பவம் மட்டுமல்ல, ஒழுக்க நெறிகள் என்பது எப்போதும் சமூகத்திற்கு பொதுவானதாக முன்வைக்கப்படவில்லை, ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாகவே முன்வைக்கப்பட்டன என்பதற்கும் அதுவே சரியான உதாரணமாகும்.

ஆடை, மண்பாண்டம், உணவு உற்பத்தி என எல்லாத் தொழில்களும் அன்று இருந்தாலும் இயந்திரமற்ற உற்பத்திச் சூழல் இருந்தததால் உற்பத்திக்கான தனித்த தொழிலாளர்கள் தேவை எழவில்லை. எனவே, இத்தொழில்களுக்கான கல்வியை குலக்கல்வியாக வாய்மொழியாக பரம்பரை அறிவு மூலம் கற்றுக்கொண்டனர். நீண்ட காலத்துக்கு வர்ணாசிரமம் இக்கல்விமுறையைத்தான் உறுதிப்படுத்தியிருந்தது.

காலனியாதிக்கத்தில் கல்வி

ஆனால், ஆங்கிலேயரின்  வருகையினால், இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்ய வேண்டிய தேவை எழுந்தபோது, ஆளும் வர்க்கம் சில நெகிழ்வுகளை இந்த வர்ணாசிரமத்தில் செய்துகொண்டனர். குறிப்பாக, சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்போருக்கு உயர்ந்த வாய்ப்புகள், தாழ்ந்த நிலையில் இருப்போருக்கு அவர்களுக்கு ஏற்ற வாய்ப்புகள் என வழங்கப்படும் முதலாளித்துவ அமைப்பு முறையை ஒத்திருந்த இந்தியச் சமுக அமைப்பு முறையை, அப்படியே ஒரு கல்வி அமைப்பு முறையாக மாற்றி, அதனடிப்படையில் புதியதோர் சமூக அமைப்புமுறையையும் உறுதிப்படுத்திக்கொண்டனர்.

ஆங்கிலேயர்கள் மற்றும் அன்றைய முதலாளிகள் உருவாக்கிய தொழிற்சாலைகளில் பணி புரிய திறன் மற்றும் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வேலைத் தன்மைக்கு ஏற்ப பல மட்டங்களில், அதாவது, இயந்திரங்களை இயக்க, சீர் செய்ய, பராமரிக்க, உருவாக்கிட என தகுதி வாரியாகப் பிரித்து உருவாக்குவது, அவர்களை நிர்வாகம் செய்யும் நிர்வாகிகளை உருவாக்குவது, வியாபாரத்திற்கான, பரிவர்த்தனைக்கான நபர்களை உருவாக்குவது, ஆட்சியில் உதவுவதற்கான நபர்களை உருவாக்குவது என கல்வித்திட்டங்களை உருவாக்கிய ஆங்கிலேயர்கள் வர்ணாசிரமம் சார்ந்தே பல அடக்குமுறையோடு இதை வகுத்தெடுத்தனர்.

ஆயினும், தொழில்புரட்சியினால் ஏற்பட்ட ஒரே மாற்றம் என்னவெனில், இயந்திரங்களோடு நேரடி உழைப்புத்தொழிலில் ஈடுபட வேண்டியிருந்ததால் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை பயிற்சி பெற்ற தொழிலாளர்களாக கல்வி அமைப்பினுள் அனுமதிக்க வைத்ததே ஆகும். இந்த மாற்றமும் உழைப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டிய முதலாளித்துவத்தின் தேவையில் இருந்து குறிப்பாக,  உடல் உழைப்பை தொழில்நுட்பக் கல்வியோடு இணைக்கவேண்டிய தேவையில் இருந்து  எழுந்ததே ஆகும். ஆக, காலனி ஆட்சியில் கல்வி என்பது ஆங்கிலேயரின் நலனில் இருந்தே திட்டமிடப்பட்டதே ஆகும்.

சுதந்திர இந்தியாவில் கல்வி;

இதை மூன்று கட்டங்களாக பிரித்தறிவது எளிதாக அமையும். சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவில் இரண்டு கல்வி ஆணையங்கள் நேருவின் காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்டன. தொழில்நுட்பம், மூலதனம், திறன் என இந்திய முதலாளித்துவம் அடிப்படைக் கட்டமைப்பைக்கூட பெறாத காலகட்டம் அது. எனவே, தகுதிவாய்ந்த தொழில்நுட்பப் பட்டதாரிகளை உருவாக்க மட்டுமல்ல, பள்ளிக் கல்வியில் பத்து பைசா செலவழிக்கக்கூட எந்தவொரு முதலாளியும் அன்று முன்வரவில்லை.

இந்திய முதலாளித்துவம் குழந்தைப் பருவத்தில் உள்ளது என்று கூறிய நேரு அதை ஊட்டி வளர்ப்பதற்கு எல்லா வழிமுறைகளையும் கல்விக்கொள்கை மூலம் திட்டமிட்டுக் கையாண்டார். அரசியல் சுதந்திரத்தை பொருளாதார சுதந்திரமாக மாற்றவேண்டும் என்று அடிக்கடி கூறிய நேரு அதையே கல்விக்கொள்கையின் அடிப்படையாக்கினார். இரண்டு கல்விக்குழுக்களும் அதைத்தான் செய்தன.

பயிற்சி மற்றும் திறன் பெற்ற தொழிலாளர்களை அதிகம் உருவாக்குவதன் மூலம் நாட்டை பொருளாதாரச் சார்புள்ள நாடாக மாற்றலாம் என்று முன்மொழிந்த அரசின் கல்விக்கொள்கை, இதன் மூலம் பொதுவான தேச வளத்தை அதிகப்படுத்திக்கொள்ளலாம் என்று கூறினாலும், இதன் நோக்கம் முதலாளித்துவத்தின் தேவையான அதிக உற்பத்திக்கான பயிற்சி பெற்ற  தொழிலாளர்களை உருவாக்குவதே ஆகும்.

1948ல் பல்கலைக்கழக கல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட டாக்டர். ராதாகிருஷ்ணன் கல்விக்குழு பொருளாதாரச் சார்புள்ள நாட்டிற்கான உடனடித் தேவை பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்களை அதிகம் உருவாக்குவதே என்று அறிவித்தது. அத்தோடு தனியார் கல்விநிலையங்களை உள்ளூர் குழுமம் மூலம் உருவாக்கி அதற்கு அரசின் மானியத்தைப் பெறலாம் எனவும் பரிந்துரைத்தது. குறிப்பாக, கல்வி வாய்ப்புகளை திறமையின் அடிப்படையில் வழங்கவேண்டும் என பரிந்துரை செய்ததும் இக்குழுவே ஆகும். தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப பயிற்சி பெற்ற தொழிலாளர்களை உருவாக்கவேண்டும் என்று சொன்னதன் நோக்கம் முதலாளித்துவத்தின் தேவையே ஆகும்.

பொருளாதார சுதந்திரத்தை அடைவதே தேசிய அளவிலும், சமூக அளவிலும் மிகப்பெரும் பிரச்னையாகும். பொதுவான செல்வச் செழிப்பை அதிகப்படுத்துவது, பயனுள்ள ஜனநாயக சமூகத்தைக் கட்டமைப்பது, சாதி மற்றும் மதப் பாகுபாடுகளைக் கடப்பது, ஏழை மற்றும் பணக்காரன் ஆகியோருக்கு இடையிலான வேறுபாடுகளைக் கடப்பது, கலாச்சார மட்டத்தின் உயரம் செல்வது ஆகியவை நம் முன்னுள்ள முக்கியப் பிரச்னைகளாகும். இந்தப் பிரச்னைகளைத் தீர்த்து நம்முன் உள்ள இலட்சியத்தை நாம் வேகமாக அடையவேண்டுமெனில், பொதுநலனை முன்னிறுத்தி மிகச் சீராகவும் வலுவாகவும் திட்டமிட்டுச் செயல்பட்டால் கல்வியே மிகச்சிறந்த ஆயுதமாகும். நாகரீகமுள்ள சமூகமாக நாம் செயல்பட விரும்பினால், உயர்கல்வியை வருங்கால தலைமுறையின் மிக முக்கிய அடிப்படை அக்கறைக்குரியதாக மாற்றவேண்டும் என ராதாகிருஷ்ணன் குழு  கூறுகிறது.( பக்கம் 411)

1952ல் இடைநிலைக் கல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட லஷ்மணசுவாமி முதலியார் குழுவும், நாட்டின் செல்வத்தை அதிகப்படுத்த வேண்டுமெனில் உற்பத்தி செயல்திறன் மிக்க தொழிலாளர்களை, தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்கவேண்டும் என்றே முன்மொழிந்தது. நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களை மறுசீரமைப்பு செய்வது என்ற தலைப்பின் கீழ் பின்வருமாறு அக்குழு கூறியது. இந்தியாவின் மிக முக்கியமான பிரச்னை என்னவெனில், நாட்டின் செல்வவளத்தை அதிகரிக்கும் பொருட்டு உற்பத்தித் திறனை அதிகரிப்பதே ஆகும். இதன் மூலம் மக்களின் வாழ்நிலையையும் உயர்த்தமுடியும் என பக்கம் 23ல் குறிப்பிட்டது.

கல்விக் குழுக்களும், முதலாளித்துவத்திற்கான கல்வியும்

அடுத்ததாக, 1968ல் வெளியான கோத்தாரி கல்விக்குழு பல நல்ல ஆலோசனை அளித்தாலும் ஆளும் வர்க்கம் அதை முற்றிலும் நிராகரித்துவிட்டு தனக்குச் சாதகமான தரம் வாய்ந்த கல்விமையங்கள், பல்கலைக்கழக நிர்வாகம் போன்றவற்றை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொண்டது. இக்காலத்தில் வேலையின்மைக்கு எதிராக நடந்த போராட்டங்கள் மற்றும் மாநில அரசியல் சூழல் மாற்றத்தில் மாணவர்களின் பங்கு ஆகியவற்றையும் கவனித்த ஆளும் வர்க்கம், கல்வியில் புதிய மாறுதல்களை முன்மொழிந்தது.

இதன் விளைவாகவே, 1969ல் ஐடிஐ, பாலிடெக்னிக்குகள் அதிகம் உருவாக்கப்பட்டன, பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஐஐடி, என்.ஐ.டிக்கள், அப்போதைய ஆர்இசிக்களும் இக்காலத்தில் அதிகம் திறக்கப்பட்டன.  அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட்ட இத்தொழில்நுட்பக் கல்விநிலையங்கள் மூலம் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொண்டது. இவர்களுக்கு வேலை கொடுக்கும் விதத்தில் தனியார் மூலதனம் திட்டமிட்டுச் செயலாற்றி தனது தேவையைப் பூர்த்தி செய்துகொண்டது.

ஆக, உற்பத்தி செயல்திறன்மிக்க தொழிலாளர்கள் மற்றும் தரம் மிகுந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இன்று நாட்டில் அதிகம்தான். சந்தேகமில்லை. ஆனால், இதனால் யாருக்குப் பலன் கிடைத்திருக்கிறது? ஏனெனில்,  அரசின் வருமானம் மற்றும் செல்வத்தை விடவும் இன்று  பல மடங்கு வளர்ந்திருப்பது இந்திய முதலாளித்துவத்தின் செல்வ மதிப்பே ஆகும். ஆக,  இந்த 70 ஆண்டுகளில் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள இந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்குத் தேவையானதை திட்டமிட்டதோடு, அதை உருவாக்கிக்கொடுத்ததும் முதலாளித்துவ வர்க்க சார்புள்ள இந்தியக்கல்வி அமைப்பு முறைதான் என்பதற்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்?

ஏற்றத்தாழ்வை ஒழிப்பது, சாதிமத வேறுபாடுகளைக் களைவது என்று ஒவ்வொரு குழுவும் எழுதி வாசித்த வசனங்களெல்லாம் இன்றும் அப்படியே இருக்கின்றன. ஆக, இவ்வசனங்கள் எல்லாம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளுக்கு எழுதப்பட்டவை அவ்வளவே என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

தீவிர தனியார்மயத்தின் தேவையிலிருந்து, 1978ல் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து ஒத்திசைவுப்பட்டியலுக்கு மாற்றும் முடிவை மத்திய அரசு மேற்கொண்டது. இதன் மூலம் மத்திய அரசு கல்வியில் எந்தக் கூடுதல் பொறுப்பையும் எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, தொழில்நுட்பக்கல்வி, மருத்துவக்கல்வி, பல்கலைக் கழக என அறிவுசார் சக்தியை தீர்மானிக்கும் அதிகாரத்தையும், பள்ளிக்கல்வி உள்பட கல்வி குறித்த புதிய மாறுதல்கள் மற்றும்  சட்டமியற்றும் அதிகாரத்தையும் தன்னிடம் எடுத்துக்கொண்டது அவ்வளவுதான். எனவே, கல்வி ஒத்திசைவுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட பின்புதான், மத்திய அரசின் கொள்கைகளின் காரணமாக தொழில்கல்வி தனியார் மயம் தீவிரப்படுத்தப்பட்டது.

தொழில் வளர்ச்சியின் ஒரு பகுதியாக உருவான தொழிலாளர் இயக்கங்கள், இந்திய பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக செலுத்திய தாக்கமும், வேலையின்மைக்கு எதிரான இளைஞர் போராட்டமும் இக்காலம் வரை குறிப்பிடத்தக்கதாகும். எனவே, பள்ளி முதலே தனியார் பள்ளியில் படித்தால் கீழ்ப்படிதல் மனோபாவம் மற்றும் சமூகமயமற்ற சந்ததியினராக மாணவர்கள் உருவாவர் என இக்காலத்தில் திட்டமிட்டனர்.  சமூக நோக்கமற்ற ஒரு புதிய இளைஞர் சமூகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டதே இராஜீவ் அரசின் புதிய கல்விக்கொள்கையாகும்.

1986ல் புதிய கல்விக்கொள்கையை இராஜீவ்காந்தி அறிமுகப்படுத்தினார்.  நவோதயா பள்ளிகளைத் திறந்து அறிவாற்றல் மிகுந்த மாணவர்களின் முழுத்திறனையும் வெளிப்படுத்தும் கல்விமுறையே அரசின் இலக்கு என்று அறிவித்ததோடு, மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மனப்பாடக் கல்விமுறையை ஊக்கப்படுத்திய இக்கல்விக்கொள்கை ஆங்கில ஆங்கில வழிக் கல்வியையும் ..

இதன் மூலம், பெரு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையானத் தொழிலாளர்களை உருவாக்கும் நோக்கத்தை அரசு செவ்வனே செய்தது. கட்டுப்பாடற்று திறக்கப்பட்ட தொழில்கல்வி நிலையங்களால் வேலையின்மையும் பரவலாகத் தொடங்கியது. எனவே, பயிற்சி பெற்றால் மட்டும் போதாது, திறமை அதிகமாக உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும் எனும் கண்ணோட்டம் தீவிரமாய் பரப்புரை செய்யப்பட்டது. வேலைக்கான தேர்வு முறைகள் இன்னும் கடினமாக்கப்பட்டதன் காரணமாக, கணிசமான இளைஞர்கள் திறனற்றவர்களாக முத்திரை குத்தப்பட்டனர். நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு என அறிமுகப்படுத்தப்பட்டு கல்வியும், வேலைவாய்ப்பும் முற்றிலும் திறமை சார்ந்ததாக மாற்றப்பட்டது. இவ்வாறாக, பாகுபாடுகள், அநீதிகள் நியாயப்படுத்தப்பட்டன.

சில புதிய படிப்புகள் தொழிற்சாலைகளின் தேவைகளுக்காகவே நிறைய உருவாக்கப்பட்டன.  உதாரணத்துக்கு, இப்போது ஹோட்டல் மற்றும் மருத்துவமனைகளை கார்ப்பரேட் தொழிலாக கட்டமைக்கிறார்கள் என்பதால், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், மருத்துவமனை நிர்வாகப் படிப்பு, கேட்டரிங் என புதிய வகை பயிற்சிகளை, திறனைப் பெற்ற தொழிலாளர்களை உருவாக்குகிறார்கள். தனது திறமைக்கான  வேலைவாய்ப்பு இதுவே என்றும் இவ்வளவு செலவழித்துப் படித்தால் மட்டுமே வேலை கிடைக்கும் என்றும் எவ்வித எதிர்ப்புமின்றி மாணவர்களை ஏற்றுக்கொள்ள வைத்துவிடுகிறார்கள். உணவு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடத் தொடங்கிய முதலாளித்துவம் உணவுப் பரிந்துரை, ஊட்டச்சத்து பரிந்துரை, உணவுத்தயாரிப்பு என சுமார் 40 படிப்புகளை இதில் மட்டும் உருவாக்கியுள்ளது. இதுதான் சந்தைமுறை கல்வியமைப்பாகும்.

 

குறைந்த மதிப்பெண் பெற்றவர் ஐஐடியில் படித்தால் அதற்கேற்ற ஊதியம், நடுத்தர மதிப்பெண் பெற்றவர் பாலிடெக்னிக் படித்தால் அவருக்கேற்ற ஊதியம், நல்ல மதிப்பெண் பெற்றவர் பொறியியல் படித்தால் அதற்கேற்ற ஊதியம், உயர்ந்த மதிப்பெண் பெற்று ஐஐடியில் படித்தால் அதற்கேற்ற அதிக ஊதியம் என்பது தான் தொழில்நுட்பக் கல்விக்கொள்கையின் அடிப்படையாகும். முதலாளித்துவத்தின் தேவையை இப்படித்தான் பூர்த்தி செய்கின்றன நமது கல்வியமைப்பு.

 

ஆக, கல்வி வரலாற்றை வாசிக்கையில், ஆளும் வர்க்கம் என்பது எப்போதும் உழைக்கும் மக்கள் மீது தனது அதிகாரத்தைத் தக்கவைக்க ஒடுக்குமுறையை மட்டும் பயன்படுத்துவதில்லை, மாறாக தனது ஆளும் வர்க்கக் கருத்தியலையே பயன்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள இயலும். இதுவே மார்க்சியம் எடுத்துரைக்கும் மாபெரும் உண்மையாகும்.

முதலாளித்துவ சமூகத்தில் கல்வி

முதலாளித்துவ சமூகத்தில் கல்வியின் அடிப்படை நோக்கமே திறன் வாய்ந்த மற்றும் படியத் தகுந்த தொழிலாளர்களை மீளுற்பத்தி செய்வதே ஆகும் என கல்வியை மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்த லூயிஸ் அல்தூசரின் கணிப்புகள் மிக முக்கியமானதாகும். தொழிலாளர் வர்க்க மாணவர்களை அவர்களின் துணை வர்க்கநிலையான மத்திய தர வர்க்கத்துக்கு கொண்டு சென்று ஏற்க வைத்து சமூகப்படுத்தும் நிகழ்வை மட்டுமே கல்விக்கொள்கைகள் செய்துள்ளன என்று கூறும் இவர், கல்வி என்பது முதலாளித்துவ சமூகத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யும் விதத்தில் ஒவ்வொரு தனிநபரையும் உழைப்பு எனும் உலகிற்கு தயார் செய்கிறது, பள்ளியின் மூலம் இதுதான் நிகழ்கின்றன என்கிறார்.

பள்ளி என்பது முதலாளித்துவ சமூகம் போல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் சொல்வதை மாணவர் அடிபணிந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுபோல், எஜமானர் சொல்வதை அடிபணிந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என முதலாளித்துவ சமூகத்தைப் புரிந்துகொள்ளச் செய்யப்பட்டிருக்கிறது. முதலாளித்துவம் என்பது இயல்பானது, நியாயமானது என்ற தோற்றமே இத்தகைய கல்வி மூலம் கிடைக்கப்பெறுகிறது என்கிறார் அல்தூசர்.

 

பவ்லஸ் மற்றும் ஜிண்டிஸ் ஆகியோரின் மார்க்சிய நோக்கிலான கல்வி ஆய்வுகளும் மிக முக்கியமானதாகும். பணி புரியும் இடத்தைப் பிரதிபலிப்பதைப்போல்தான் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதையும் கடின உழைப்பு மனநிலையோடு செய்து பழகுதல், கீழ்ப்படிதல் ஒழுக்கம் சார்ந்து செயல்படுதல் ஆகியவை தொழிற்சாலையின் தேவைக்கேற்ற பயிற்றுவிப்புகளாகும். பள்ளிகள் நம்மிடம் என்ன கருத்தை உருவாக்குகின்றன என்றால் வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாக ஒரே மாதிரியாகவே வழங்கப்பட்டிருக்கின்றன. யாருக்கு முன்னேற வேண்டும் என்ற எண்ணமும், கடின உழைப்பும், திறனும் இருக்கிறதோ அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எடுத்துரைக்கின்றன. இதன் மூலம் அனைவரும் சமம் கிடையாது. சிலர் தகுதி, திறமை என அறிவில் உயர்ந்தவராக இருக்கிறார்கள், எனவே அவர்கள் உயர்ந்த பணிகளுக்குச் செல்கிறார்கள் எனச்சொல்லி அசமத்துவத்தை நியாயப்படுத்துகிறது பள்ளிக்கல்வி அமைப்பு என்கிறார்கள்.

 

கல்வி வளமான வாழ்வுக்கானது என்கிறார்கள். ஆனால், நல்ல கல்வி பெறவேண்டுமெனில் குழந்தை முதலே குடும்பத்தை விட்டுப் பிரியவைத்து விடுகிறார்கள். குழந்தமைப் பருவத்தையே பிடுங்கிவிடுகிறார்கள். சற்று வளர்ந்து விபரம் தெரிந்தவுடன் தொலைதூரப் படிப்புக்கும் அனுப்பிவிடுகிறார்கள். அப்புறம், வேலை. அதுவும் தொலைதூரத்தில், குடும்பம் ஒரிடம், தந்தை ஒரிடம், தாய் ஒரிடம், பெற்றோர் ஒரிடம், குழந்தை ஒரிடம் என்பதெல்லாம் இன்று தரமான கல்வியின் பொருட்டும், தரமான வேலைவாய்ப்பின் பொருட்டும் சாதாரணமானதாக மாற்றப்பட்டிருக்கிறது. உறவுகளைப் பிரித்துவிட்டு தாய் தினம், தந்தையர் தினம் எனக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது முதலாளித்துவம்.

 

பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு முன்வைக்கும் கல்வி சீர்திருத்தங்கள், பாசிசம் எப்போதும் முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் வர்க்கக்குணம் கொண்டது என்பதை மிகத் தெளிவாய் சொல்கின்றன. அந்நியப்பல்கலைக்கழகங்கள், அதிக அளவில் மத்தியப்படுத்தப்பட்ட மத்திய கல்வி நிறுவனம் எனத்தொடரும் ஆபத்துகளின் உச்சம் கல்வியை முழுவதும் சந்தை சார்ந்ததாக மாற்றுவதே ஆகும். கல்வியை காவிமயமாக்கி, தனது இந்துத்துவா அரசியல் நலனுக்கான கல்வியைத் திணிப்பது பாஜகவின் செயல்களில் ஒன்றெனினும், நோக்கம் உலகவங்கியின் ஒப்பந்தங்களில் கையொப்பமிடக் காரணமாய் இருந்த முதலாளித்துவ அடிவருடலே ஆகும்.

ஒன்று, கல்வியை மறைமுகமாக வழிநடத்திய இந்திய முதலாளித்துவம் இப்போது வெளிப்படையாக வழிநடத்தத் துவங்கியுள்ளது. இரண்டு, இந்திய அரசை விடவும் செல்வாக்கு மிகுந்ததாக, செல்வவளம், திறன், தொழில்நுட்பம் என பலமிக்கதாக இந்திய முதலாளித்துவம் வளர்ந்து நிற்கிறது. ஆக, இந்திய மனித வளம் யாருக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை மார்க்சிய நோக்கில் கவனிக்கையில் மட்டும்தான், முதலாளித்துவத்தின் இந்த மட்டற்ற வளர்ச்சி புரிபடும்.

கல்வியில் எந்த ஒழுக்கம் போதிக்கப்பட்டிருக்கிறது? ஏன் மனித மாண்புகள் சிதைந்துவருகின்றன? பெண்கள் ஏன் சக மனுசியாய் பாவிக்கப்படவில்லை? சாதியும், தீண்டாமையும் ஏன் ஒழியவில்லை? பாகுபாடுகளும், அநீதிகளும் ஏன் தொடர்கின்றன? இயற்கை வளம் கொள்ளை போகையில் சமூகம் ஏன் உணர மறுக்கிறது? என்ற எல்லாக் கேள்விகளுக்குமான விடை இந்தக் கல்வியமைப்பிற்குள் தான் குவிந்துகிடக்கிறது.

சோசலிசச் சிந்தனையாளரும், விஞ்ஞானியுமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பின்வரும் கூற்று,  முதலாளித்துவம் கல்வி முறையை எப்படி சீர்கெடுக்கிறது என்பதையும், சோசலிசக்கல்வி முறையை அதற்கான மாற்றாக ஏன் முன்னெடுக்கவேண்டும் என்பதையும் தெளிவாய் எடுத்துரைக்கிறது.

தனிமனிதர்களின் சிதைவையே முதலாளித்துவத்தின் மிக மிக மோசமான கேடாகக் கருதுகிறேன். நமது மொத்தக் கல்வி அமைப்பே இந்தக் கேட்டினால் கெட்டுக் கிடக்கிறது. ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப்பான்மை மாணவனுக்குள்ளே வளர்க்கப்படுகிறது. அவன் தன்னுடைய எதிர்கால முன்னேற்றத்துக்குப் பொருளாதாய வெற்றிகளைப் பூஜிப்பதற்கே பயிற்றுவிக்கப்படுகிறான். இத்தகைய மோசமான கேடுகளையெல்லாம் களைவதற்கு ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது என நான் நம்புகிறேன்.

ஒரு சோசலிஷப் பொருளாதார அமைப்பை நிறுவி, சமூக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி. அத்தகைய ஒரு பொருளாதார அமைப்பில் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் சமுதாயத்துக்கே சொந்தமானதாக இருக்கும். திட்டமிட்ட முறையில் அவை பயன்படுத்திக் கொள்ளப்படும். சமுதாயத்தின் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்பாக அது இருக்கும். செய்யப்பட வேண்டிய வேலைகள், வேலை செய்ய முடிகிற அனைவருக்கும் இடையேயும் பகிர்ந்தளிக்கப்படும்.

ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும். ஒருவருக்கு அளிக்கப்படும் கல்வி, அவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை வளர்ப்பதோடு, தற்கால சமுதாயத்தில் இருப்பதைப்போல அதிகாரத்தையும் அதன் வெற்றியையும் போற்றுகின்ற மனப்பான்மைக்குப் பதிலாக, சக மனிதர்கள் மீதான ஒரு அக்கறை உணர்வை அவருக்குள்ளே வளர்ப்பதற்கு முயலும் என்கிறார் ஐன்ஸ்டீன்.(1949 மே மன்த்லி ரிவிவ்யூ, சோசலிசம் எதற்காக கட்டுரை)

அப்படியெனில், இப்போதிருக்கும் பள்ளி, கல்லூரி அமைப்புமுறைகளை மீறி சோசலிசத்திற்கான போராட்டத்தை எவ்வாறு நடத்துவது என்பதும்  இயல்பான ஒரு கேள்வியாய் எழும். கம்யூனிஸ்டு அறிக்கை அதற்குத் தெளிவான பதில் சொல்லுகிறது.

முதலாளித்துவ வர்க்கமே, பாட்டாளி வர்க்கத்துக்குத் தன் சொந்த அரசியல் கல்வியின் கூறுகளையும், பொதுக் கல்வியின் கூறுகளையும் வழங்குகிறது. வேறு சொற்களில் கூறுவதெனில், முதலாளித்துவத்தோடு போரிடுவதற்கான படைக்கலங்களைப் பாட்டாளி வர்க்கத்துக்கு முதலாளித்துவமே வழங்குகிறது என்று சொல்லும் கம்யூனிஸ்ட் அறிக்கையின் அறைகூவல், ஆங்கிலேயர்கள் அளித்த அடிமைக் கல்வியையும், அதிலிருந்தே உதித்தே இந்திய விடுதலை போரையும் நமக்கு அனுபவமாய் உணர்த்துவதோடு, இன்னும் நம்பிக்கையாய் முன்செல்லவும் வெளிச்சம் பாய்ச்சுகிறது.