கருத்தியல் களமும், அரசியல் அதிகாரமும்

(தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய பயிற்சிமுகாமில் ஆற்றிய உரையின் வரிவடிவம். நன்றி: அணையா வெண்மணி)

என்.குணசேகரன்

கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும் என்கிற இந்தத் தலைப்பு மிக முக்கியமான தலைப்பு. இது நாம் ஆற்றவேண்டிய மிக முக்கியமான பணிகளை நினைவூட்டுவதாக கருதுகிறேன். கருத்தியல் களத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் ஒரு இணைப்பு உள்ளது என்பதை சொல்லுவதே ஒரு முக்கியமான விஷயம் என்பது மட்டுமல்ல காலம் காலமாக மறைத்துவைக்கப்பட்டிருக்கிற அல்லது மறக்கப்பட்டிருக்கிற செய்தியை இந்தத் தலைப்பு தெரியப்படுத்துகிறது.

சிறிய கூட்டத்தின் ஆட்சி

அரசியல் அதிகாரம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக சமூகத்தின் ஒரு மேல்தட்டு, ஒரு சிறு கூட்டத்துக்குத்தான் சொந்தமாக இருந்திருக்கிறது. அதிகாரம், ஆட்சி, நிர்வாகம் என்கிற இவையெல்லாம் செழுமைப்படுத்தப்பட்டிருக்கிற ஒரு மேம்பட்ட வடிவத்தை பெற்றுள்ள இப்போதைய சமூகம் முதற்கொண்டு, இதற்கு முந்தைய காலங்களிலே மன்னர்களுடைய அரசாட்சி என்கிற முறையில் முடியாட்சி நடைபெற்ற காலம் வரைக்கும், ஆட்சி அதிகாரம் என்பது பெரும்பான்மையான மக்களை ஆள்கிற இடத்தில் ஒரு சிறு கூட்டம் தான் இருந்துவந்திருக்கிறது. உடமை வர்க்கங்கள் என்று சொல்லப்படுகிற ஒரு சிறு கூட்டம் தான் ஆளுகிற இடத்தில் இருந்திருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் நிலவுடைமைச் சக்திகளாக இருந்திருக்கலாம். அதற்கு முன், சாதியக் கட்டமைப்பு இந்திய சமூகத்தில் வேறூன்றத் தொடங்கிய காலத்தில், கிட்டத்தட்ட அடிமைகள் எஜமானர்கள் என்று இருந்த காலத்திலேயே கூட நிர்வாகம் என ஒரு அமைப்பு இருந்திருக்கிறது. ஓரளவுக்கு அரசு என்ற வடிவம் தோன்றியிருக்கிறது. அப்படிப்பட்ட காலத்திலும் ஒரு சிறு கூட்டம்தான் பெரும்பான்மையினரை அடிமைப்படுத்தியிருந்தது.

ஆனால், சாதாரண மக்களுக்கு இது வெளிப்படையாக தெரியவில்லை. உலகில் கிட்டத்தட்ட 800 கோடி மக்கள் வாழ்கிறார்கள், இதில் 99 % உழைக்கும் மக்கள் ஆவர். இந்த மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கிற கூட்டம், ஒப்பீட்டளவில் மிக மிகச் சிரியது. அமெரிக்காவில் வால்ஸ்டீரீட்டைக் கைப்பற்றுவோம் என்ற ஒரு இயக்கம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. நாங்கள் 99 சதவீதம், நீங்கள் 1 சதவீதம் என்று அவர்கள் முன்வைத்த முழக்கத்திலேயே ஒரு செய்தியை முன்வைத்தார்கள். 1% என்பதுதான் ஆளுகின்ற கூட்டம்.

இப்படி காலம் காலமாக ஒரு சிறு கூட்டம் தான் பெரும்பான்மையை அடக்கி ஒடுக்கி வந்திருக்கிறது.

அதிகாரம் செலுத்தும் வழிமுறை

இந்திய நாட்டை எடுத்துக்கொண்டால், மக்கள் தொகை 130 கோடி. இதில் ஒரு சிறு கூட்டம், ஒரு 250 கம்பெனிகள் இருக்கலாம் (அதில் 10 லிருந்து 12 கம்பெனிகள் அதானி அம்பானி போன்ற பெரும் கார்ப்ரேட் கம்பெனிகள்) இப்படிப்பட்ட ஒரு சிறு கூட்டம், மிகப் பெரும்பான்மையை அடக்கி ஆள்கிறது, நினைத்தை சாதிக்கிறது. கொரோனா பெருந்தொற்றின் காலத்திலும் சாதித்துக்கொண்டிருக்கிறது. அது எப்படி நடக்கிறது?

காலம்காலமாக இது எப்படி சாத்தியமாகிறது என்றால், அடக்குமுறைக்கான, வெகுமக்களை அடக்கி ஆள்வதற்கான இரண்டு கருவிகள் அவர்களுக்கு பயன்பட்டு வந்திருக்கிறது. ஒன்று, நேரடிடையாக அடக்குமுறையை ஏவிவிடக்கூடிய கருவிகள் அவர்களிடம் உள்ளன. ஒரு வலுவான காவல்துறை, ஒரு வலுவான இராணுவம் உள்ளது.  

மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைந்துகொண்டேயிருக்கிறது. அதே நேரத்தில், அடக்குமுறைக் கருவிகளைப் பலப்படுத்துவதற்கான நிதி உள்ளிட்ட எல்லாவிதமான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இது இந்திய நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிற விஷயம்.

உழைக்கும் மக்கள் மீது, இராணுவத்தை ஏவிவிட்டு படுகொலை செய்வது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. 1940களில் தெலுங்கானாவில் விவாசிகள் தங்கள் நிலத்துக்காக செங்கொடி ஏந்திப் போராடியபோது, அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்திய இராணுவம், (அப்போது தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்திருந்தது) பயன்படுத்தப்பட்டது. மக்களை அழித்தொழித்தது. பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். எனவே அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை இராணுவம் காவல்துறை உள்ளிட்டவை உழைக்கும் மக்களின் போராட்டங்களை நேரிடையாக ஒடுக்குவதற்கும் தாக்குவதற்கும் இருந்துகொண்டிருக்கிறது. சிறைகூட அதற்காகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.

ஆனால் இதைவிட பலமான அடக்குமுறைக் கருவி அவர்களிடம் இருக்கிறது. அதன் வழியாக உழைக்கும் மக்களுடைய ஆதரவான கருத்தைப் பெற்றே அவர்களை அடக்கிஒடுக்குகிறார்கள்.

கருத்தியல் எனும் தளம்

கருத்தியல் தளத்தில், ஆளும் வர்க்கங்களுக்கு, ஆள்வதற்கான ஒப்புதலை உருவாக்குகிறார்கள். மன்னர் தெய்வத்தின் அடையாளம் (இங்கிலாந்தில் ஒருகாலத்தில் இந்தக் கருத்து வலுவாக இருந்தது) அதாவது மன்னருக்கும் தெய்வத்துக்கும் வித்தியாசம் இல்லை என்கிற கருத்து. எனவே, தன்னை அடக்கி ஒடுக்குபவரை மன்னருக்கு சமமாக வைத்துப் பார்க்கிற அந்தக் கருத்து, அது மதத்தின் பெயரால் பதியவைக்கப்பட்டது. இந்தியாவைப் பொருத்தவரை கருத்தியல் என்கிற கோட்டையை ஆளும் வர்க்கம் பலமாகக் கட்டுவதற்கு, ஒரு அடித்தளமாக சாதியக் கட்டமைப்பு என்பது பயன்பட்டிருக்கிறது, பயன்பட்டுவருகிறது.

அதாவது கருத்தியல் தளம் என்பது அடக்கி ஒடுக்கப்படுகிற மக்கள் தன்னை அடக்கி ஒடுக்குகிற கூட்டத்துக்கு எதிராகத் திரும்பிடாமல் பார்த்துக்கொள்கிறது. அவர்கள் எல்லாவிதமான உழைப்பையும் சுரண்டி ஊதியத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், உழைப்புக்கான ஊதியம் கிடைப்பதில்லை. ஆனாலும் அவர்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் திரும்பிடாமல் இருப்பதற்கு எதிர்ப்புக் களத்துக்கு போகாமல் இருப்பதற்கு கருத்தியல் தளம் பயன்படுத்தப்படுகிறது.  

அது கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் நடக்கிறது. இவையெல்லாம் நேரடியாகத் தெரியக்கூடியவை. இன்னொரு பக்கம் அது கல்வியின் பெயரால் நடக்கிறது. ஊருக்கு ஊர் இருக்கக்கூடிய பேச்சு வழக்குகளின் ஊடாக அது நடக்கிறது. இந்த ஆளும் வர்க்கத்துக்கும் அதனால் ஆளப்படுகிற, சுரண்டப்படுகிற வர்க்கத்துக்குமான முரண்பாட்டை, வேறுபாடுகளை மட்டுப்படுத்துவதற்கு, அது வெடித்திடாமல் தடுப்பதற்கு இந்தக் கருத்தியல் களம் ஆளும் வர்க்கத்துக்கு பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தக் கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும் பிணைந்த ஒன்று.

கருத்தியல் களத்தில் நாம் செயல்படுகிற போது தீண்டாமை ஒழிப்பு முன்னணி இப்படிப்பட்ட பணியைத் துவங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சிகரமான ஒன்று. இப்போதுதான் ஏதோ கருத்தியல் களத்தில் பணியாற்றுவதாக நான் நினைக்கவில்லை. நீண்டகாலமாக அந்தப் பணி நடந்துகொண்டிருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையிடுகிற எல்லா இடங்களிலேயும் செயல்கள் மூலமாக, தலையீடுகள் மூலமாக அந்தக் குறிப்பிட்ட கிராமத்துக்கு அந்தக் குறிப்பிட்ட பகுதிக்கு ஒரு செய்தியை, ஒரு கருத்தைப் பதியவைக்கிற வேலையும் கூடவே நடந்துகொண்டிருக்கிறது. ஒரு தீண்டாமைக் கொடுமைக்கு எதிர்த்து  வினையாற்றும்போதே கருத்தியல் தளத்திலும் அது வினையாற்றுகிறது. தீண்டாமை ஒழிப்பு என்கிறபோது சாதி ஒழிப்பு என்கிற கருத்தும் பதிகிறது. சாதி ஒழிப்பு என்றால் சாதிக் கட்டமைப்புக்கான எதிர்ப்புக் குரலாக ஆகும். இவ்வாறு அது சமூக சமத்துவம் என்கிற கருத்தியலுக்கான தளத்தினை உருவாக்குகிறது.

சுரண்டலுக்கான கருத்தியல்

இன்று கருத்தியல் களத்தை தன்கைவசம் வைத்துக்கொண்டு ஆளுகிற வர்க்கம், தன்னுடைய அதிகாரத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. பெருமபான்மையான மக்கள் மீது தன்னுடைய அதிகாரத்தை அடக்குமுறைக் கருவிகளைவைத்து மட்டுமல்ல, கருத்தியல் என்ற களத்தையும் வைத்துக்கொண்டு அடக்குமுறையையும் சுரண்டலையும் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை செயல்பாட்டாளர்களாகிய நாம் உணரவேண்டியிருக்கிறது. எனவே, கருத்தியல் களம் என்பது மிக முக்கியமானது. இது ஒரு பொதுவான அறிவியல் கோட்பாடு என்றே நாம் சொல்லமுடியும். யார் இதைக் கையில் எடுக்கிறார்களோ, யார் இதை சரியாகப் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் அதில் முன்னேற்றம் காண்கிறார்கள். அந்த வகையில் கடந்த காலங்களில் இதற்கு பல உதாரணங்களைப் பார்க்கலாம்.

உலக முதலாளித்துவம் ஏற்கனவே இதை உணர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் 1970களிலேயே இதை உணர்ந்திருக்கிறது. அதனால்தான் அவர்கள் தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் போன்றிருக்கக்கூடிய ஊடகங்கள் அத்தனையும் கொண்டு, எந்தச் செய்தியை மக்களிடத்தில் கொண்டு செல்லவேண்டும், எப்படிக் கொண்டு செல்லவேண்டும் என்று வரையறுத்திருக்கிறார்கள். சோவியத் யூனியன் பற்றிய பொய்களை, உண்மை போன்று சொல்லி, சோசலிசமும் கம்யூனிசமும் மோசமானது என்கிற செய்தியை அவர்கள் கொடுப்பது என்கிற முறையில் 1970களிலேயே பக்குவப்பட்டு வந்திருக்கிறார்கள்.

அதே போன்று சின்னங்களைப் பயன்படுத்துவது. சின்னங்களைப் பயன்படுத்துவது என்றால், இந்தியாவிலேயும் தமிழ்நாட்டிலேயும் அதற்கு நிபுணர்கள் பலர் இருக்கிறார்கள். மோடி பெரிய நிபுணர். அவர் அவருடைய படங்களை எல்லா இடத்திலும் வைத்திருப்பது போன்றவை இதில் அடங்கும். இதெல்லாம் ஹிட்லர் காலத்திலேயே நடந்திருக்கிறது.   கருத்தியல் தளத்தில் ‘அவர் ஒரு பிரம்மாண்டமான மனிதர்’, ‘சரித்திரத்தை மாற்ற வந்த மகா புருஷர்’ என்கிற முறையில் சாதாரண மக்கள் மத்தியில் பதியவைப்பது. இப்படிச் சின்னங்கள் மூலமாக தங்களுடைய மேலாதிக்கத்தை பதியவைப்பது என்கிற முறையிலும் ஆளுகிற வர்க்கம் கருத்தியல் மேலாதிக்கத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு சமூக ஊடகங்கள் போன்றவை அதற்கு பயன்படுகின்றன.

பாரதிய ஜனதா கட்சியும் ஆர்எஸ்எஸ்சும் பிரம்மாண்டமாக ஐ.டி., செல் (தகவல் தொழில்நுட்பம் பிரிவு) வைத்துக்கொண்டு செய்யும் வேலைகளைஎல்லாம் நாம் அறிவோம். முதலாளித்துவமும் உலக ஏகாதிபத்தியமும் இதை செய்துகொண்டிருக்கிறது. கருத்தியல் களம் என்பது அவர்கள் மேலாதிக்கம் செய்து கொண்டிருக்கிற ஒரு முக்கயமான தளமாக இருந்துகொண்டிருக்கிறது.

மேலாண்மையும், மேலாதிக்கமும்

இப்போது நம்முடைய நோக்கம் என்பது காலம் காலமாக இருந்துகொண்டிருக்கிற பிற்போக்குக் கருத்தியலுக்கு மாறாக முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு செல்வது என்பதுதான். முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு செல்வது என்பதற்கு பதில் நான் ஒரு சின்ன மாற்றத்தை, (உண்மையில் அது பெரிய மாற்றம்) சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. முற்போக்குக் கருத்தியல் மேலாண்மை செலுத்துகிற ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.  நீங்கள் கொஞ்சம் சரியாகக் கவனித்தீர்கள் என்று சொன்னால், ஆளுகிற வர்க்கம் கருத்தியல் தளத்தில் செலுத்துகிற அந்த அடக்குமுறையை நான் மேலாதிக்கம் என்று சொல்கிறேன். அவர்கள் மேலாதிக்கம் செலுத்துகிறார்கள். தவறான விஷயங்களுக்கு மக்களை ஆட்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களை தவறான, மிகப் பொய்யான, கட்டுக் கதைகளை நம்ப வைக்கிறார்கள். இந்தக் கட்டுக் கதைகள் பொய்கள் எல்லாமே அவர்கள் கருத்தியல் தளத்தில், மேலாதிக்கம் செய்ய உதவுகிற மிக முக்கியமான விஷயங்கள். எனவே, ஆளுகிற வர்க்கம், ஒரு சிறு கூட்டம், பெருங்கூட்டத்தை தங்களுடைய கருத்துக்கு, தங்களுடைய கொள்கைக்கு தங்களுடைய அடக்குமுறைக்கு ஆதரவாக அவர்களுடைய சம்மதத்தைப் பெறுவதற்கும் அவர்களைத் தங்களுடைய கொள்கைக்குக் கொண்டுவருவதற்கும் செய்வது மேலாதிக்கம். அவர்கள் செய்வது கருத்தியல் மேலாதிக்கம். சிறு கூட்டம் கருத்தியல் தளத்தில் பெரும்பான்மை மக்களை தன்வயப்படுத்துகிறது என்று சொன்னால் அது மேலாதிக்கம்.

காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிற பெரும்பான்மை மக்களுக்காக, சுரண்டப்பட்டிருக்கிற பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்காக கருத்தியல் தளத்தில், முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு சென்று, அதில் மேலாண்மை செலுத்தவேண்டும் என்பதுதான் இன்றைக்கு நம் முன்னர் இருக்கக்கூடிய பணி. உழைக்கும் மக்களின் தரப்பு பெரும்பான்மை என்கிற காரணத்தால் அதை மேலாண்மை என்று சொல்கிறோம். இது சரியான காரணத்துக்காக, சரியான லட்சியத்துக்காக, மனித விடுதலைக்கான மேலாண்மை.

3 தளங்களில் போராட்டம்

இந்த வகையில் நம்முடைய பணி என்பது சாதியம், மதவாதம் இதையெல்லாம் எதிர்க்கிற எதிர்ப்புப் பணி மட்டும் அல்ல. அதே நேரத்தில் இது எதிர்மறை நிகழ்ச்சி நிரல் அல்ல, இது நேர்மறையான நிகழ்ச்சி நிரல்.

மூன்று தளங்களில் இதை செய்யவேண்டும் என்று நான் கருதுகிறேன். ஒன்று, இந்த சாதியம் என்கிற ஒரு மிக முக்கியமான பிற்போக்குக் கருத்தியல் தளம், அதில் செயலாற்றவேண்டிய அவசியம் இருக்கிறது. அதை முறியடிக்க வேண்டிய அவசியம இருக்கிறது. அதேபோன்று மதவாதம். வகுப்புவாதம் என்றும் மதவெறி என்றும் வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப்பொருள் இருக்கிறது என்று சொன்னாலும் கூட, இன்றைக்கு நாம் விவாதிக்கிற சூழலில், மதவாதம் என்றே வைத்துக்கொள்ளலாம். அந்த மதவாத அல்லது வகுப்புவாதக் கருத்தியல் முறியடிக்க வேண்டிய ஒரு இடத்தில் இருக்கிறது. 

மூன்றாவது, நவீன தாராளமய கருத்தியல். இந்த நவீன தாராளமயம் என்று சொல்லும்போது உடனடியாக நம்முடைய மனத்திரைக்கு முன் வருவது என்பது பொருளாதாரம் பற்றியது. நிச்சயமாக நவீன தாராளமயம் என்பது பொருளாதாரத்தோடு இணைந்தது தான். உயிர் காக்கும் மருந்து என்கிற விஷயத்தில் கூட, லாபம், மூலதனக்குவியல் என்பதற்காக அது எந்த வகையில் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்கிற கொள்கைகள் அடங்கியிருக்கிற ஒரு விஷயம்தான் நவீன தாராளமயம் என்பது.

நவீன தாராளமய கருத்தியல்

அதே சமயம் நவீன தாராளமயம் ஒரு கருத்தியலோடு தான் வந்தது. தனியார் மயம் என்ற கருத்து மக்கள் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்த நிலை இருந்தது. குறிப்பாக 1960களில் 70 வரைக்கும் கூட தனியாரிடம் ஒப்படைத்தால் அவர்கள் லாபம் பார்ப்பார்கள், மக்களைப் பார்க்கமாட்டார்கள் என்கிற நிலை இருந்தது. அதனால் தான் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் அதிகமான அளவுக்கு பொது முதலீட்டில் சுகாதார நிலையங்கள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. போக்குவரத்து உட்பட எல்லாமே அரசுத் துறையில் செயல்படுகிற ஒரு நிலை என்பது இருந்தது. இது இந்தியா முழுக்க இருந்தது. இதற்கு பல காரணங்கள் உண்டு.

1950 காலகட்டத்தில் சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அங்கே ஏற்பட்டிருக்கிறக்கூடிய வளர்ச்சி, அது பொதுத் துறை மூலமாக ஏற்பட்டிருக்கிற ஒரு வளர்ச்சி இங்கே சாத்தியம் என்ற நிலையை உருவாக்கியது. அதனுடைய விளைவாகவும் இந்தக் கருத்து என்பது மக்கள் மத்தியில் நிலவியது. ஆனாலும் ஆளுகிற வர்க்கம் தனியார் துறையை விட்டுவிடவில்லை. அதை வளர்ப்பதற்கான முயற்சிகளை திரைமறைவிலும் சிலநேரங்களில் வெளிப்படையாக வெகுவேகமாக செய்து கொண்டிருந்தார்கள். அதே சமயம், இந்த நேரத்தில் தான் பொதுத் துறையையும் கட்டமைக்கிற வேலை நடந்தது. நவீன தாராளமயம் வருகிறபோது அரசுத் தரப்பிலிருந்தே ஒரு கருத்தை அவர்கள் பதியவைத்துக்கொண்டேயிருந்தார்கள். பொதுத்துறையிடம் இருந்தால் என்றால் அங்கே ஒரு மெத்தனப்போக்கு இருக்கும், நிர்வாகத் திறன் இருக்காது, ஊழல் நிறைந்திருக்கும் என்பதை எல்லாம் சொல்லி பொதுத் துறை என்பது சரியல்ல, தனியார் துறை தான் வெகுவேகமாக செயல்படுவார்கள் என்ற ஒரு கருத்து தொடர்ந்து பதியவைக்கப்பட்டது.

இவ்வாறு கருத்தியல் தளத்தில் செயல்பட்டுக்கொண்டேதான் பொருளாதாரத் தளத்தில் நகர்ந்தார்கள். அதே போல தனிமனித உணர்வில் நவீன தாராளமயம் ஒரு கருத்தை முன்வைத்தது. அதாவது விடுதலைப்போராட்டக் காலத்தில், இளைஞர்களுக்கு சமுதாயத்துக்காக ஏதாவது செய்யவேண்டும் என்கிற சமூக அக்கறை இருந்தது. அது விடுதலைக்கு பிறகும் தொடர்ந்தது. ஒரு மனிதன் என்று பிறந்தால், சமூகத்துக்கு என்ன செய்தான் என்பதுதான் முக்கியமானது. எனவே, தன்னுடைய நலத்தைத் தாண்டி பொதுநலத்தைப் பார்க்கிற அந்த மனப்பாங்கு இருந்தது. 

தனியார்மயம் வரவேண்டும், தனியார் கொள்ளையடிக்க வேண்டும் என்றால், தனியாருக்கு ஒரு மதிப்பு ஏற்படுத்தவேண்டும் என்றால், மேற்சொன்ன தனிமனித உணர்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நீ பணக்காரனாக வேண்டும், நீ மேலும் மேலும் பணம் சேர்க்க வேண்டும், நீ கோடிஸ்வரனாக மாறவேண்டும். அது உன்னுடைய திறமை. நீ திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும், அதற்கேற்ற தொழில்நுட்பம், அதற்கேற்ற படிப்பு, அதற்கேற்ற முயற்சி, விடாமுயற்சி, பில்கேட்சைப் பார், அவரைப் பார், இவரைப் பார் என்று அது பற்றிய நூல்கள் என்ற முறையில் ஒரு தனிமனித சுயநலத்தை வலுப்படுத்துகிற கருத்தியல் என்பது பதியப்பட்டது. அந்தக் கருத்தியலைப் பதியவைத்துத் தான் ஆளும் வர்க்கம் நவீன தாராளமயத்தை கொண்டுபோனார்கள்.

முதலாளித்துவமும் சாதியும்

இந்த நவீன தாராளமயம் பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆணாதிக்க கருத்தியலை அது வலுப்படுத்தியிருக்கிறது.  ஆதிக்கக் கருத்தியலை மேலும் கிளர்ந்து எழச் செய்ததில் முக்கிய காரணியாக நவீன தாராளமயக் கொள்கைகள் இருந்தன. பிற்போக்கான கருத்தியல் என்பதில் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது சாதியக் கருத்தியலும் மதவாதக் கருத்தியலும் அதே போல நவீன தாராளமயக் கருத்தியல். இதற்குள் எல்லா விஷயங்களையும் அடக்கிவிடலாம். பெண்ணடிமைத்தனம் இதற்குள்ளேயே வருகிறது. சாதியம் என்று சொல்லுகிறபோது, சாதியம் என்கிற சித்தாந்தம் என்பது பெண்ணடிமைத்தனத்தை உள்ளடக்கியதுதான். முதலாளித்துவ சமூக அமைப்பில்கூட சாதியம் தன்னை புதுவடிவம் எடுத்து நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.

முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் கூடிகுலாவுகிற, ஒன்றிணைந்திருக்கிற ஒரு சமூகமாக இந்திய சமூகம் இருக்கிறது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசாக இந்த அரசு இருக்கிறது என்று சொல்வது சதாரண ஒரு வரி விஷயம் இல்லை. நிலப்பிரபுத்துவம் சேர்ந்திருக்கிறது என்று சொன்னால், நிலப்பிரபுத்துவத்தின் கருத்தியல் என்பதும் அதன் பொருளாகும். 

முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் இணைந்துவிட்டது என்று சொன்னால், நவீன காலமாற்றத்துக்கேற்ப சாதியமும் புது வடிவம் பெற்றிருக்கிறது என்பதுதான் அதன் பொருள். இதை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள், இந்திய சமுதாயத்தை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர்களே.

ஒரு சாதியை இன்னொரு சாதி வெறுப்பது, எல்லா சாதிகளும் அடித்தட்டிலிருக்கக்கூடிய உழைக்கும் மக்களான அருந்ததியர் உள்ளிட்ட தலித் மக்கள் மீது ஒடுக்குமுறையை பிரயோகிப்பது, ஒடுக்குமுறை மனநிலையோடு அவர்களை அணுகுவது அது நகர்புறமாக இருந்தாலும் சரி, கிராமப்புறமாக இருந்தாலும் சரி. எனவே முதலாளித்துவத்தில் அது நவீன வடிவம் பெற்று அந்த ஒடுக்குமுறையே தொடர்கிறது என்கிறபோது முதலாளித்துவத்துக்கு அது மிகப் பெரும் பயன்படுகிற ஒரு கருவியாக இருக்கிறது.

காந்தியுடைய கருத்தியலில் பல குறைபாடுகள் இருக்கலாம், ஆனால் அவர் செய்த போதனைகள் அன்றைய சாதி சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைவிட ஒரு முக்கியமான தாக்கம், இந்த சாதி அமைப்புக்கே மிகப் பெரும் ஒரு புரட்சிகரமான எதிர்ப்பை உருவாக்கி, ஒரு மாற்றுக் கருத்தியலை உருவாக்கியது என்பது டாக்டர் அம்பேத்கர் அவருடைய சிந்தனைகள்.

ஆனால், இந்த சமூகத்துக்குள்ளே சாதியத்துக்கு எதிரான இந்தக் குரல்களும் அனுமதிக்கப்பட்டு அதுவும் நடந்தகொண்டு, அதே நேரத்தில் சாதியம் என்பதை முதலாளித்துவத்துவத்துக்கு பயன்படக்கூடிய விதத்தில் அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். முதலாளித்துவம் எப்படி சாதியத்தை பயன்படுத்திக்கொண்டது என்பது ஒரு நீண்ட பெரிய ஆய்வுக்குரிய விஷயம்.

உதாரணமாக, இன்றைய காலகட்டத்தில், வாக்கு அரசியலில் முதலாளித்துவ கட்சிகள் சாதியக் குழுக்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், சாதியப் படிநிலையை எப்படி தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுததிக்கொள்கிறார்கள் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே முதலாளித்துவக் கட்சி, முதலாளித்துவப் பொருளாதாரம் இது அத்தனையிலும் சாதியம் என்பது அந்த முதலாளித்துவத்தை வளர்ப்பதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

சாதியும் மதமும்

முற்போக்குக் கருத்தியலை கொண்டு செல்லவேண்டும் என்பதன் முதல் படி, இந்த சாதியக் கருத்தியலை எதிர்த்துப் போராடவேண்டும் என்பது. சாதியம் என்று சொல்லுகிறபோது, சாதியை அழித்தொழித்தல் என்கிற நிகழ்ச்சி நிரல் முக்கியமானது. அந்த நிகழ்ச்சி நிரலை எப்படி கொண்டுசெல்லவேண்டும் என்பதை நாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது. அதே போன்று, மதவாதம் என்று சொல்லுகிறபோது, இந்து சமயத்தில் மதமும் சாதியையும் பிரித்துப் பார்க்கமுடியாது. சாதியின் இருப்புக்கு ஒரு ஆன்மீக நியாயத்தைக் கற்பித்து வழங்குவது மதம். கடவுளின் பெயரால்தான் நால்வருணம் படைக்கப்பட்டிருக்கிறது. கடவுளின் பெயரால்தான் சடங்கு சம்பிரதாயங்கள் உள்ளன. இந்து சமயம் என்று சொல்லுகிறபோது சாதி என்பதை அதிலிருந்து பிரிக்கமுடியாது. தனித்தனியாகப் பார்க்க முடியாது.

அதே சமயம் மதவாதம் என்று சொல்லுகிறபோது, பிரித்துப்பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. மத நம்பிக்கையாளர்கள் என்கிற ஒரு பிரிவு இருக்கிறார்கள். அவர்கள்தான் கோடான கோடி, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட உழைக்கும் மக்களில் மத நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மதத்தை நம்புவதும் கூட, மத நம்பிக்கையாளர்களாக இருப்பதும் கூட இன்றைய ஆளும் வர்க்கத்துக்கு சாதகமானதுதான். ஏனென்றால் ஆளும் வர்க்கத்தின் சுரண்டலை மறைப்பதற்கு, மத நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவரவர் படுகிற கஷ்டங்களுக்கு முந்தைய பிறப்பில் அவர் செய்திருக்கக்கூடிய பாவங்கள் தான் காரணம் என்று எளிதாக சொல்லிவிட்டுப் போய்விடலாம். எனவே, மதநம்பிக்கையாளர்களாக இருப்பதும் ஆளும் வர்க்கத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் சாதகமானதே. அந்த மத நம்பிக்கை என்பதும் மதம் சார்ந்த கருத்துக்கள் என்பதும் நாம் எதிர்நோக்க வேண்டிய முக்கியமான விஷயம்.

மதத்தை எதிர்த்த போராட்டம் என்பதில் இருக்கும் ஒரு சங்கடம் என்னவென்றால், தன்னுடைய வாழ்நிலை, வாழ்வாதாரச் சிக்கல்கள் இதற்கெல்லாம் ஒரு நிம்மதியைத் தருகிற ஒரு புகலிடமாக கோவில்களும் மத நம்பிக்கையும் அவர்களுக்குப் பயன்படுகிற காரணத்தால், நேரிடையாக மதத்தின் மீதான தாக்குதல் என்பது, மத நம்பிக்கையோடு இருக்கிற பெரும்பான்மை மக்களை அந்நியப்படுத்துகிற வேலையைத்தான் செய்கிறது என்பது அனுபவம். எனவே, அனைத்தையும் கணக்கிலெடுத்த அணுகுமுறை தேவை.

அடக்கப்பட்டவர்களின் பெருமூச்சாக மதம் இருக்கிறது. வாழ்க்கைச்சுமையிலிருந்து சிறிது நிம்மதி தருவதற்கான இடத்தில் மதம் இருக்கிறது என்று மார்க்ஸ் மதத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில் சுரண்டுகிற கூட்டத்துடைய கருவியாகவும் மதம் என்றும் மார்க்ஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார். மதத்துடைய பயன்பாடு பற்றிய பொதுவான நிர்ணயிப்பு இது. எனவே, மத நம்பிக்கை என்பதை இந்த அடிப்படையில் அணுகவேண்டும்.

நாம் ஒரு பிரச்சனையை / இயக்கத்தை எடுக்கிறபோது, அது குறித்து அந்த ஊரில் ஊர் கூட்டம் போடுகிறோம். அப்போது பல விஷயங்களைப் பேசுவோம். அதில் அறிவியலைப் பேசவேண்டும்.  பொருள்முதல்வாதக் கருத்தியலை மக்களுக்கு மனதில் பதிய வைப்பதற்கான வாய்ப்பாக அது அமையும். சாதி ஒழிப்பு பற்றி பேசலாம், சாதியக் கருத்தியல் பற்றி பேசலாம். பிரச்சாரத்திலேயேயும், நேரடியாகவும் கொண்டுபோகலாம். மககளிடம் நெருக்கமாகி விவாதிப்பதன்  மூலமும் கொண்டுபோகலாம்.

இந்துத்துவத்தின் நோக்கம்

அதே நேரத்தில் மதவாதம், வகுப்புவாதம், இந்துத்வாவினை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது. முதலில் இவைகளுக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை, மதநம்பிக்கைக்கும் இந்துத்வா சொல்கிற விஷயங்களுக்கும் சம்மந்தமில்லை, மதத்தை அவர்கள் அரசியல் அதிகாரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் என்கிற விஷயத்தை மக்கள் மனங்களில் பதியவைப்பது அவசியம். ஒருவரியில்/ வாக்கியத்தில் இதை நான் சொல்லிவிட்டேன், ஆனால் அதைப் பதிய வைப்பது சாதாரண விஷயம் அல்ல. ஏனென்றால் இந்துத்வாவின் மிஷினரி என்பது இந்தியா முழுவதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களின் செயல்பாடுகள் குறித்து ஏராளமான விவரங்கள் இருக்கிறது. நிறைய அமைப்புக்கள் இருக்கிறது. வரலாறு, தொல்லியல், சமூகவியல், தத்துவம் உள்ளிட்ட 70 துறைகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  ஒவ்வொன்றுக்கும் ஒரு பார்வை வைத்து அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்துத்வா என்று சொல்லுகிறபோது, முதலில் மத அடையாளம் கொண்டிருக்கிற ஒருவருக்கு படிப்படியாக மதப் பிடிமானத்தை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இது இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மதநம்பிக்கை என்று சொல்லுவது எப்போதாவது நினைவுக்கு வரும். அன்றாடம் 8லிருந்து 16 மணிநேரம் வேலைசெய்துகொண்டிருக்கும் உழைக்கும் மக்கள் மத்தியில் ஒருவருக்கு மத நம்பிக்கை என்பது ஏதாவது ஒரு நேரத்தில் வர வாய்ப்பிருக்கிறது. வாரம் ஒருமுறை கோவிலுக்கு செல்வது போன்ற வகையில் இருக்கிறது. உழைப்பாளி மக்கள் உழைப்பை செலுத்தவேண்டியிருப்பதால் எப்போதும் மதத்தைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்க நேரமில்லை. எந்த மதம் என்று கேட்டாலோ, வழிபாடு நடத்தும்போதோ ஒருவர் தன்னுடைய மதத்தை சொல்வார். மத அடையாளத்துடன் தன்னை இணைத்துக்கொள்வார். ஆனால் இந்துத்வாவாதிகள் செய்வது மதம் தான் எப்போதும் என்று உணர வைப்பது, மதப் பிடிமானத்தை ஏற்படுத்துவது.

கொரோனா காலத்திலேயும் இராமர் கோவில் கட்டுவதற்கான பணியில் இந்துத்வாவாதிகள் இறங்கினார்கள். கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் சூழலில் அடிக்கல் நாட்டுவிழாவை அவர்கள் நடத்தினார்கள். அந்த விழா தொற்றை அதிகரித்தது. இராமர் கோவில் கட்டுவது இப்போது தேவைப்படும் நிகழ்ச்சி நிரலா? இந்தியாவின் பொருளாதாரம் அதள பாதளத்தில் போய்க்கொண்டிருக்கிறது, கோடிக்கணக்கான மக்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருக்கின்றபோது, இராமர் கோவில் கட்டுகிறார்கள் என்று சொன்னால், ஒரு மத நம்பிக்கை இருக்கிறவருக்கு இந்த செய்தி போய் சேருகிறபோது நம்முடைய இராமருக்கு கோவில் கட்டுகிறார்கள் என்று மதப்பிடிமானம் வலுக்கிறது. சிறுபான்மை மதங்களுக்கு எதிராக இந்து மதப்பிடிமானத்தைக் கெட்டிப்படுத்துகிற வேலை நடந்துகொண்டிருக்கிறது. இதர மதத்தை வெறுக்கும் போது மத உணர்வு வகுப்புவாதமாக, மதவாத வடிவம் எடுக்கிறது. டெல்லியில் இந்த சூழலிலும் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. அது நீண்டகாலமாக இவர்கள் செய்துகொண்டிருக்கும் வேலை. எனவே கலவரங்களை செய்வதன் மூலம் இந்துக்களை ஐக்கியப்படுத்தும் வேலையை இந்துத்வாவாதிகள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இதில் இன்னொரு அம்சத்தையும் நாம் பார்கக வேண்டியிருக்கிறது. இந்துத்வா என்று சொல்லுகிறபோது இந்து மதம் சார்ந்தவர்களை அவர்கள் வகுப்புவாதக் கருத்தியலுக்கு கொண்டுசெல்கிறபோது, ஏதோ இந்துக்களுக்காக பாடுபடுகிற ஒரு இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார இயக்கத்தை அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் கட்டமைக்க நினைக்கிற இந்து ராஷ்டராவின் கட்டமைப்பு முழுக்க முழுக்க சாதியக் கட்டமைப்பு தான், சாதியப் படிநிலைதான், சாதிய ஒடுக்குமுறைதான். பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசி உள்ளிட்ட பெருமபான்மை ஒடுக்கப்பட்ட மக்களை ஒரு சிறு கூட்டம் அடித்தட்டில் வைத்து அவர்களை ஒடுக்குகிற முறைதான். பிராமணியம் என்ற கருத்தியல் இந்த ஏற்பாட்டுக்கு உதவுகிறது. அதே நேரத்தில் ஆளுகிற, ஆதிக்கம் செலுத்துகிற பிராமணியம் என்று சொல்லுகிறவர்களின் இன்னொரு முகம், பெருமுதலாளித்துவ கார்ப்பரேட் முகம்.

எனவே, அவர்களின் நிகழ்ச்சிநிரல் என்பது, இந்து ஒற்றுமை என்ற பெயரால் சாதிப் படிநிலையை கெட்டிப்படுத்துவது. இதற்கு சிறுபான்மை எதிர்ப்பு உதவுகிறது. இதுதான் வகுப்புவாதம். இந்த நிகழ்ச்சி நிரலை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அம்பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் எல்லோரையும் திட்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இதுதான் அவர்கள் கட்டமைக்க விருப்புகிற சமூக அமைப்பு என்று சொல்லுகிறபோது அந்தக் கருத்தியல் அம்பலப்படும்.

சமத்துவக் கருத்தியல்

நவீன தாரளமயக் கருத்தியல், மதவாதக் கருத்தியல், சாதியக் கருத்தியல் இவை மூன்றும் ஒன்றோடொன்று பிணைந்திருக்கிறது. இந்தப் பிற்போக்குக் கருத்தியலுக்கு மாறாக சமத்துவக் கருத்தியலை – சமத்துவ, மதச்சார்பற்ற, ஜனநாயக கருத்தியல் என்பதை கொண்டு செல்லவேண்டியிருக்கிறது.

சமத்துவம் என்று சொல்லுகிறபோது சாதி நீங்கிய, சாதிவேறுபாடுகள் களையப்பட்ட, சாதி ஒழிந்த அனைத்து மத நம்பிக்கை கொண்டவர்களும் ஒற்றுமையாக, இதர மத நம்பிக்கை கொண்டவர்களை மதிப்புமிக்கவர்களாகக் கருதுகிற, அப்படிப்பட்ட மத நம்பிக்கையாளர்களைக் கொண்டிருக்கிற ஒரு சமூகம். அதே நேரத்தில், இந்த சமூகம் இப்படிப்பட்ட முற்போக்குக் கருத்தியலை முன்னெடுக்கக்கூடிய ஒரு சமூகம், முழுக்க முழுக்க பொருளாதாரத்தை தன் கையில் எடுத்திருக்கும். பொருளாதாரத்தை பெரும்பான்மை மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில், பொருளாதார உற்பத்தி, அதனுடைய பலன், விநியோகம் இந்த மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் அது மாற்றும். முற்போக்குக் கருத்தியலை விதைக்கிற போது அது உடனடியாக இந்த மாற்றங்களை ஏற்படுத்திவிடாது. பொருளாதார அமைப்பில் சமத்துவம் என்று சொல்லுகிறபோது, உழைக்கும் மக்கள் பொருளாதாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவருகிற அந்த நிலை ஏற்படும். முற்போக்குக் கருத்தியல் அந்த மாற்றத்தைக் ஏற்படுத்தும். அப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறபோது, முற்போக்கு கருத்தியல் மக்களின் மனங்களைக் கவ்விப்பிடித்து, அந்த உழைக்கும் மக்கள் தங்களுக்கான அரசியல் அதிகாரத்தைக் கட்டமைப்பார்கள். இதுதான் வழி.

இதை நான் சொல்லுகிறபோது, உடனே பலருக்கு இது சாத்தியப்படுமா என்கிற அந்தக் கேள்வி வரும்.  அதற்கு வரலாறுதான் ஒரே பதில். பிற்போக்குக் கருத்தியலுக்கும் முற்போக்கு கருத்தியலுக்குமான அந்தப் போராட்டம் இன்று நேற்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இன்றைக்கு பல சட்டங்கள், முன்னேற்றங்களைப் பார்க்கிறோம். ஏராளமான போராட்டங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது என்பதே ஒரு நம்பிக்கைக்குரிய விஷயம். முற்போக்குக் கருத்தியல் என்பது பல ஆண்டு காலமாக, இன்னும் சொல்லப்போனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கடவுள் இல்லை என்று நாத்திக்கருத்துக்களை பரப்பியவர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்குகிற ஆதிக்க நிலையில் இருக்கக்கூடிய பிராமணியம் என்கிற கருத்தியலை எதிர்த்து, பிராமணர்களை எதிர்த்து இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு வரையில் அதனுடைய தொடர்ச்சி என்பது இருந்து கொண்டிருக்கிறது. எனவே நிச்சயமாக முன்னேற்றம், சாதனைகளைச் செய்யமுடியும்.

இன்றைக்கு சீனாவில், உழைக்கும் மக்களிடம் தான் பொருளாதாரக் கட்டுப்பாடு என்பது இருக்கிறது. நிறைய சாதனைகள், வெற்றிகள் இந்தப் போராட்டப் பயணத்தில் இருக்கிறது. அந்த வகையில், முற்போக்குக் கருத்தியலுக்கும் பிற்போக்குக் கருத்தியலுக்குமான போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் வரலாற்றில் வெற்றி என்பது முற்போக்குக் கருத்தியலுக்குத்தான். நாம் வெற்றிக்கான பயணத்துக்குத்தான் வரலாற்றைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கையோடு அதை செய்யவேண்டியிருக்கிறது.

உள்ளூர் சமூகங்கள்

இந்த முற்போக்குக் கருத்தியலை மிக முக்கியமாக உள்ளூர் சமூகங்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்திச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். உள்ளூர் மட்டத்தில் தனிநபர்களை அணுகக்கூடிய  வாய்ப்புக்களை முதலாளித்துவம் பெற்றிருக்கிறது. தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் அனைத்தும் தனிநபர்களை எட்டியிருக்கிறது. பிற்போக்குக் கருத்தியல் தனிநபர்களை சென்றடைந்திருக்கிறது. அது மதவாதம், சாதியவாதம், நவீன தாராளமயம் இவை எதுவாக இருந்தாலும் அது தனிநபர்களை சென்றடைந்திருக்கிறது.

அதே போன்று முற்போக்குக் கருத்தியல் தனிநபர்கள், தனிநபர்கள் வாழுகிற உள்ளூர் சமூகம், தெரு, நகர வார்டு, கிராமம் என்கிற உள்ளூர் சமூகத்தை நோக்கிச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. உள்ளூர் சமூக மக்களிடம் உரையாடுவது அவசியம். உரையாடுவதன் மூலமாக மட்டும் மாற்றம் வந்துவிடாது. செயல் முக்கியமானது. ஒரு செயல் பல கருத்துக்களை, பல பாடங்களை மக்களுக்கு இயல்பாக அனுபவங்கள் மூலமாகக் கற்றுத் தருகிறது. மக்கள் அனுபவங்கள் மூலமாக கற்றுக்கொள்கிறார்கள் என்பதை மாவோ சொல்லியிருக்கிறார். அவர்கள் அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்தவேண்டும்.

முற்போக்குக் கருத்தியலை கொண்டு செல்வதற்கு, உள்ளூர் மட்டத்திலான மதச்சார்பற்ற, அறிவியலான சமூகங்களை நாம் எங்கெங்கெல்லாம் செல்கிறோமோ அங்கெல்லாம் உருவாக்க வேண்டும். உள்ளூர் மட்டத்திலான முற்போக்கு சமூகங்களை பல்லாயிரக்கணக்கில் தமிழகத்தல் நாம் உருவாக்குகிறபோது அது மேலும் மேலும் பரவும். ஒரு அறிவியல் விதியைச் சொல்வார்கள், இயக்கவியல் விதி என்று ‘அளவு மாறுபாடு அடைய குணமாறுபாடு அடையும்’. ஒரு 10 ஊர்களில் செய்தோமென்றால் அடுத்து 11, 12 என்று போகாது, 10 நூறாகும், ஆயிரம் ஆகும், பத்தாயிரம் ஆகும், லட்சமாகும். இப்படிப்பட்ட உள்ளூர் சமூகங்களைக் கட்டி அமைத்தல் என்பது, டெல்லியின் ஆட்சி அதிகாரத்தை உழைக்கும் மக்கள் கைப்பற்றுகிற ஒரு நிலைக்கு அது கொண்டுசெல்லும். ஏனென்றால் மத்தியில் ஆட்சி என்பதுதான் இந்த முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அதிகாரம் கோலோச்சிய ஆட்சி. எனவே உள்ளூர் சமூகங்கள் வலுவாகக் கட்டமைக்கப்படுவது என்பது முற்போக்கு கருத்தியலைக் கொண்ட கோடிக்கணக்கான உள்ளூர் சமூகங்களை நாம் உருவாக்குகிறபோது, அரசியல் அதிகாரம் முற்போக்காளர்கள் கையில், உழைக்கும் மக்கள் கையில் கைவர வாய்ப்பிருக்கிறது.

காந்தியும் மதமும்

என். குணசேகரன் 
குரல்: அபிநவ் சூர்யா

இந்தியா பல தேசிய இனங்கள், பல்வேறு பண்பாடுகள், மத நம்பிக்கைகள், மொழிகள் கொண்ட நாடு. பல வேறுபாடுகள் கொண்ட இந்த நாட்டில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஒன்றுபட்ட போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது; இது உலக வரலாற்றில் ஒரு மகத்தான நிகழ்வு. சாதி, மத, இன, மொழி, தத்துவங்கள் என வேறுபாடுகள் பல்லாயிரக்கணக்கில் இருந்தாலும், அந்நிய அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து மக்கள் திரண்டு புதிய வரலாறு படைத்தனர்.

இந்த நாடு தழுவிய ஒற்றுமை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தபோதும், ஒரு முக்கிய பங்களிப்பு காந்திக்கு உண்டு. மூடநம்பிக்கைகளிலும், பின்தங்கிய நிலைமைகளிலும் வாழ்ந்துவந்த கோடானுகோடி கிராமப்புற மக்களையும் தட்டியெழுப்பி, போராட்டப் பாதையில் கொண்டு வந்த அந்த மகத்தான நிகழ்வுக்கு காந்தியின் வாழ்வும் செயல்பாடுகளும் முக்கிய பங்களிப்பு செலுத்தியது. இந்திய வரலாற்றை ஆழமாக பயில்பவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள். காந்தியின் செயல்பாடுகளும் கருத்துக்களும்தான் அவர் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அவரது இந்த உயிர்த் தியாகம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

இன்றும் காந்தி இந்திய சிந்தனை பரப்பில் முக்கிய தாக்கம் செலுத்துகிறார். அவரது வாழ்க்கை பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன. கடும் விமர்சனங்களும் தொடர்கின்றன. ஆனால் அவரது கருத்துக்களுக்கு நேரெதிரான சித்தாந்தம் கொண்டவர்களும் இன்றைக்கு அவரை தூக்கிப் பிடிக்கிற நிலையைக் காண்கின்றோம். எனவே அவரை சரியாக மதிப்பிடுவது எப்படி என்பது முக்கியமான ஒரு கேள்வி.

இஎம்எஸ் வழிகாட்டுதல்

இந்தியாவில் மார்க்சிய சிந்தனையை வலுவாகப் பதித்து மார்க்சிய இயக்கத்தை கட்டுவதில் பெரும்பங்காற்றியவர், தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்கள். அவர் காந்தியை பற்றிய துல்லியமான ஆய்வினை செய்துள்ளார். “மகாத்மாவும் அவரது தத்துவமும்” என்ற அவரது நூல் மார்க்சிய நோக்கில் காந்தியை மதிப்பீடு செய்கிறது. இந்திய பாட்டாளி வர்க்கம் அவரை எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென அந்த நூல் வழிகாட்டுகிறது.

காந்தியின் சிந்தனைகளையும் நடைமுறையையும் புரிந்துகொள்வதில் இரண்டு விதமான தவறுகள் இருப்பதாக தோழர் இ.எம்.எஸ். குறிப்பிடுகிறார். ஒன்று, அவரது சிந்தனைகளை குறைத்து மதிப்பிட்டு, காந்தியத்தை நிராகரிக்கும் வகையில் முற்றாக விமர்சிப்பது ஒரு வகை; மற்றொரு வகை, பாரபட்சமாக அவரை உச்சத்தில் வைத்து போற்றிப் புகழ்வது. இந்த இரண்டு தவறுகளையும் தவிர்க்க வேண்டுமென தோழர் இஎம்எஸ் வலியுறுத்துகிறார்.

எடுத்துக்காட்டாக, எழுத்தாளர் அருந்ததிராய், காந்தியை சாதிய முறைக்கு ஆதரவானவர் எனவும், அவரது தீண்டாமை எதிர்ப்புப் பிரச்சாரம் தலித் மக்களை இந்து மதப் பிடிக்குள் கொண்டு வருகிற நோக்கம் கொண்டது என்றெல்லாம் எழுதியுள்ளார். காந்தியை ஆதரிப்பவர்கள் மட்டுமல்லாது, அவரை விமர்சிப்பவர்களும் தங்களது கருத்துக்களுக்கு ஆதரவாக காந்தி எழுதிய எழுத்துக்கள், அவர் ஆற்றிய உரைகளையே மேற்கோள்களாக பயன்படுத்துகின்றனர்.

இந்த முரண்பாடுகளுக்கு என்ன காரணம்? அவரது 60 ஆண்டுகால எழுத்தும் பிரச்சாரமும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவர் அவ்வப்போது மாறும் சூழலுக்கு ஏற்பவும், அவர் எதிர்கொண்ட புதிய கருத்துக்கள், உண்மைகளுக்கு ஏற்பவும் தனது கருத்துக்களையும் மாறுதல்களுக்கு உள்ளாக்கி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நால் வருண அமைப்பை வலுவாக ஆதரிப்பதாக பேசும் காந்தி, பிற்போக்கு பழமைவாதம் தலை தூக்கிய நிலையில் நால்வருண அமைப்பை எதிர்ப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.

காந்தியை முற்றாக நிராகரிப்பதும், விமர்சனமற்ற வகையில் போற்றி புகழ்வதும் தவறு. தற்போதைய மாறியுள்ள காலச்சூழலில் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை சந்திக்க காந்தியின் சிந்தனை எவ்வாறு பயன்படும் என்பதே முக்கியமான கேள்வி.

மதங்களின் பன்முகத் தன்மை

பன்முக சமய கண்ணோட்டங்கள் மனித சமூகத்தில் தவிர்க்க இயலாதது என்பது காந்தியின் கருத்து. அதுவே, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு அவசியம் என அவர் கருதினார். “அனைத்து மதங்களிலும் எல்லையில்லாத அளவில் பல்வேறு பிரிவுகள் உள்ளன; முடிவற்ற மத வேறுபாடுகள் உள்ளன”என்றார் காந்தி.

“சிலர் புனித பயணம் மேற்கொண்டு புனித ஆறுகளில் குளிப்பார்கள்; மற்றவர்கள் மெக்காவிற்கு செல்வார்கள்; சிலர் கோவிலில் வழிபாடு மேற்கொள்வார்கள்; மற்றவர்கள் மசூதிகளில் வழிபடுவார்கள்; சிலர் தலைவணங்கி வழிபடுவார்கள்; சிலர் வேதங்களை படிப்பார்கள்; மற்றவர்கள் குரானை படிப்பார்கள்; சிலர் தங்களை இந்து என்று அழைத்துக் கொள்வார்கள்; மற்றவர்கள் இஸ்லாமியர்கள் என்பார்கள்”என்று விவரிக்கிறார் காந்தி.

மதங்களின் மற்றொரு முக்கியமான தன்மையையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை; “என்னை நான் இந்து என்று சொல்லிக்கொள்கிறபோது, நான் வழிபடுகின்ற முறையில், மற்ற இந்துக்களும் வழிபடுவதில்லை என்பதை நான் அறிவேன்” என்று குறிப்பிடுகிறார்.

ஆழமான, பன்முக, வேறுபாடுகள் கொண்ட மதங்கள் உள்ள நிலையில் என்ன அணுகுமுறை தேவை என்பதை காந்தி விளக்குகிறார். “மனித சமூகம் முழுமைக்கும் ஒரே ஒரு மதம் என்பது தேவையில்லை; தற்போதைய தேவை என்னவென்றால் பல்வேறு மதப் பிரிவினருக்கிடையே பரஸ்பர மரியாதை, சமமான மதிப்பு அளிப்பது, பல்வேறு மதங்களின் பக்தர்களிடையே சகிப்புத்தன்மை போன்றவையே” என்று அழுத்தமாக குறிப்பிடுகிறார் காந்தி. காந்தியின் இத்தகைய கருத்துக்கள் இந்து மதத்தின் பெயரால் இந்துத்துவவாதிகள் பிரச்சாரம் செய்கிற கருத்துக்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என்பது மறுக்கமுடியாத உண்மை.

”அனைத்து மதங்களும் உண்மையானவை; அனைத்தும் சில தவறுகளை கொண்டிருக்கின்றன; நான் என்னுடைய மதத்தைப் பின்பற்றுகிறபோது இந்து மதத்தின் மீது எந்த அளவில் என்னிடம் பற்று இருக்கிறதோ, அந்த அளவில் மற்ற மதத்தினரையும் நேசிக்க வேண்டும். இதில் வித்தியாசம் பார்க்கக் கூடாது” என்று கூறிய காந்தி, அவரது வாழ்நாள் முழுவதும் இந்த நெறியை கடைப்பிடித்து வந்தார்.

காந்தி தனது நோக்கில் இந்து மதத்தை பற்றி விளக்கினார். “இந்து மதம் எல்லா உயிர்களும் ஒரே மூல ஆதாரத்திலிருந்து தோன்றுகிறது எனவும், அந்த மூலாதாரத்தை அல்லா என்றும், கடவுள் என்றும், பரமேஸ்வரன் என்றும் அழைக்கலாம்” என்று காந்தி கருதினார். இதுதான் இந்து மதத்தின் பார்வை என்று காந்தி கூறினார். ”இஸ்லாம் மதத்தின் அல்லாவும், கிறித்துவ மதத்தின் கடவுளும், இந்துக்களின் ஈஸ்வரனும் ஒன்றே!” என்றார்.

இந்தக் கருத்தை இந்துக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிற அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா? நிச்சயமாக, இந்துத்துவவாதிகள் இந்த கருத்தை கடுமையாக எதிர்ப்பார்கள்.

சாதி முறை குறித்து

ஒடுக்குமுறை சார்ந்த சாதி கட்டமைப்பை வலியுறுத்தும் வர்ணாசிரம முறையை காந்தி ஆதரித்து வந்தது உண்மையே. இருப்பினும் அந்த சித்தாந்தத்தின் ஒடுக்குமுறை, தீண்டாமை போன்றவற்றை தொடர்ந்து எதிர்த்து வந்தார். அதே போன்று, நடைமுறை வாழ்க்கையில், அவர் சாதி வேறுபாடுகள் அடிப்படையில் மக்களை அணுகவில்லை. ஒடுக்குமுறை அடிப்படையிலான சாதிய முறையை அவரது செயல்பாடுகளில் மதத்தின் பெயரால் கடைப்பிடிக்கவில்லை. அவர் உருவாக்கி வழிநடத்திய ஆஸ்ரமத்தில் சமூக சமத்துவத்தை பின்பற்றினார்.

1934-இல், “இந்து சாஸ்திரங்கள் தற்போது நிலவும் தீண்டாமைக்கு ஆதரவு நிலையை வெளிப்படுத்துவதாக அறிந்தால், நான் இந்து மதத்தை கைவிட்டு, இந்து மதத்தை எதிர்ப்பேன்”என்று அவர் எழுதினார்.1935-இல் ஹரிஜன் இதழில் எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு “சாதி மறைய வேண்டும்” (caste has to go). அதில் “பொதுச் சிந்தனையில் எவ்வளவு விரைவாக சாதி ஒழிய வேண்டுமோ, அந்த அளவிற்கு நல்லது” என்று அவர் எழுதினார்.

காந்தியின் சமூக, பொருளாதார கருத்துக்கள் அனைத்தும் மதக் கண்ணோட்டம் சார்ந்த நெறிமுறைகள் அடிப்படையில் அமைந்துள்ளன. ஒழுக்கம், நேர்மை, உண்மைத்தன்மை போன்ற நெறிகளை அவர் இந்து மத நோக்கில்தான் வலியுறுத்தினார். இந்து மதம் மீது அவர் கொண்டிருந்த பற்றுடன் இணைந்ததாக அவரது சமூக, அரசியல் கருத்துக்கள் அனைத்தும் அமைந்துள்ளன. மதங்களுக்கிடையே சமத்துவமும் பன்முகத் தன்மையும் நிலவுகிறது என அவர் கருதியதால், அதற்கேற்ப இந்து மதம் பற்றிய விளக்கங்களை அவர் பதிவு செய்துள்ளார்.

காந்தி பார்வையில் மதச்சார்பின்மை

இந்த நடைமுறைகளும், இந்து மதம் குறித்த காந்தியின் மத நல்லிணக்கம் சார்ந்த பார்வையும்தான் இந்து மதவெறியர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் வலியுறுத்திய இந்து முஸ்லிம் ஒற்றுமை,இந்து மதத்தைப் பற்றிய மத நல்லிணக்கம் சார்ந்த அவரது கருத்துக்கள் போன்றவற்றை ஜீரணிக்க முடியாத இந்துமத வெறியர்கள் அவரை படுகொலை செய்தனர்.

மதச்சார்பற்ற அரசு என்பது என்ன? ஒரு அரசு தனது அரசியல் சட்ட அமைப்பு அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புடையதாக இருக்கக்கூடாது; அத்துடன் ஒரு மதத்தை உயர்த்திப் பிடிப்பதாக இருக்கக் கூடாது. எந்த மதத்தின் உள் விவகாரங்களிலும் தலையிடுவதாக அரசு இருக்கக்கூடாது; ஒரு குடிமகனை மதம் சார்ந்து அரசு அணுகிடக் கூடாது; ஒரு தனி மனிதனின் மத சுதந்திரத்தை அரசு பாதுகாக்க வேண்டும். இதுபோன்ற தன்மைகள் கொண்டதுதான் ஒரு மதச்சார்பற்ற அரசாக இருக்க முடியும். இந்தப் பார்வை காந்தியின் சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் நிறைந்திருந்தது.

காந்தியின் மதம் குறித்த பார்வை இயல்பாகவே அவரை ஒரு மதச்சார்பற்ற எண்ணம் கொண்டவராக வாழ்வதற்கு வித்திட்டது. அனைத்து மதங்களும் இந்து மதம் போலவே தனக்கு பிடித்தமான மதங்கள் என்று அவர் குறிப்பிட்டார்; “எல்லா மதங்களும் ஒரே உண்மையை நோக்கி பல வழிகளில் பயணிப்பவை” என்பதும் அவரது பார்வையாக இருந்தது. எந்த மதமும் வேறு மதத்திற்கு எதிரானது அல்ல என்பதையும் அவர் வலியுறுத்தி வந்தார். இந்த கருத்துக்கள் ஒரு தனி மனிதனின் மத சுதந்திரத்தை பேணி பாதுகாக்கும் கருத்துக்களாக அமைந்துள்ளன.
அதேபோன்று அரசு எந்த மதத்தையும் சாராமல் செயல்பட வேண்டும் என்பதிலும் காந்தி உறுதியாக இருந்தார்.1947-இல் அவர் “நான் எனது மதத்தின் மீது உறுதியான பற்று கொண்டவன்; நான் எனது மதத்திற்காக உயிரைக் கூட துறப்பேன்; அது என்னுடைய தனிப்பட்ட விவகாரம்; ஆனால் அரசு அதில் தலையிடக் கூடாது; அரசு மதச்சார்பற்ற முறையில் வாழ்நலன்களை பாதுகாக்கும்” என்று எழுதிய காந்தி “..மதம் ஒருவரின் தனிப்பட்ட விவகாரம்; அரசியலில் அதற்கு இடமில்லை ..” என்று அழுத்தமாக குறிப்பிட்டார்.

எனவே, காந்தி மதச்சார்பற்ற சிந்தனை கொண்டவராக வாழ்ந்தார். ஒரு மதச்சார்பற்ற இந்தியா என்கிற காந்தியின் எண்ணத்துக்கு மாறாக இன்று மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது. மதச்சார்பின்மையை காக்க காந்தியின் கருத்துக்கள் பயன்படும்.

காந்தியின் தத்துவம்

காந்தி இந்துமத தத்துவார்த்த மரபுகள் மீதான பிடிப்பு கொண்டவராக விளங்கினார். வேதாந்தம், பகவத்கீதை, உபநிடதங்கள் போன்றவை அவரது சிந்தனையில் ஆழ்ந்த தாக்கம் செலுத்தின. காந்தியின் தத்துவ சிந்தனையை ஆராய்ந்த தோழர் இ .எம்.எஸ். தனது நூலில் காந்தி ஒரு கருத்து முதல்வாதி எனக் குறிப்பிட்டார். மதம் பற்றிய காந்தியின் சிந்தனைகள் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம் கொண்டவை.

தத்துவத்தில் அடிப்படையான கேள்விகள் உண்டு. பொருளிலிருந்து சிந்தனை தோன்றியதா? சிந்தனையிலிருந்து பொருள் தோன்றியதா? பொருள் முதன்மையானதா? சிந்தனை முதன்மையானதா? -போன்றவை தத்துவப் பிரச்னைகள். மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டு இயங்குகிற, பொருட்களால் ஆன பிரபஞ்சம், இயற்கை அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டது என்றும், அனைத்தையும் இயக்குவது சிந்தனையே என்பதும் கருத்துமுதல்வாதம். இந்தக் கண்ணோட்டம் மாற்றத்தை சாதிக்கும் கடமையை கடவுளுக்கு விட்டுவிட்டு மனிதர்களை முடமாக்குறது. இதற்கு நேர்மாறானது பொருள்முதல்வாதம்.

இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் மதத்தின் பங்கினை மார்க்சியம் விளக்குகிறது. மனித வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களிலும் மதத்தின் பங்கு எவ்வாறு உள்ளது என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிற ஒரு தத்துவம் மார்க்சிய தத்துவமே. கடவுள் உண்டா,இல்லையா என்ற மேம்போக்கான ஆன்மீக, நாத்திக விவாதங்களை கொண்டதல்ல மார்க்சியம். கண்ணை மூடிக் கொண்டு, இறப்புக்குப் பிறகு சொர்க்கமா, நரகமா என்று விவாதிப்பதல்ல மார்க்சியம்.

வாழும் பூமியில் நிலவும் சமூக எதார்த்த நிலைமைகளை ஆராய்ந்து மார்க்ஸ் மதம் பற்றிய கருத்துக்களை படைத்தார். வர்க்க ரீதியாக பிளவுபட்டுள்ள சமூகத்தில் பெரும்பான்மை மனிதர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஆளாகி கரைந்து போகின்றனர். அந்த நிலையில், ஆன்மீகத்தில் தங்களை மீட்டெடுத்துக் கொள்ள மனிதர்கள் முயற்சிக்கின்றனர். அதற்கு மதம் அவர்களுக்கு புகலிடமாக அமைகிறது.

மார்க்ஸின் பிரசித்திபெற்ற கீழ்க்கண்ட மேற்கொள் இதனை விளக்குகிறது;
“மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மா இல்லாத நிலைமைகளின் ஆன்மாகவும் உள்ளது. மதம் மக்களுக்கு அபினி.” இப்படிப்பட்ட பங்கினை மதம் ஆற்றுவதால், அதன் மீதான நேரடித் தாக்குதல் பலன் தராது. வறட்டுத்தனமான கடவுள் மறுப்பு ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலைமையை மாற்றுவதற்கான போராட்டத்திலிருந்து அந்நியப்படும் நிலையை ஏற்படுத்தும்.

மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம், இயற்கையின் இயக்கத்தை மேலும் மேலும் புரிந்து கொள்ள உதவுகிறது. உலகம், பிரபஞ்சம், இயற்கை, சமூகத்தின் இயக்கப் போக்கு ஆகியவை பற்றிய அறிவு மனித சிந்தனையில் பதியும்போது கடவுளுக்கு எவ்வித பங்கும் இல்லாமல் போகிறது. இது ஒரே நாளில் நடப்பதில்லை. தொடர்ச்சியான கருத்துப் போராட்டத்தில்தான் இது ஏற்படும். இதற்கு கருத்து தளத்தில் போராட்டம் நடந்தால் மட்டும் போதாது; ஒடுக்குமுறை, சுரண்டலை மேற்கொள்ளும் அதிகார வர்க்கங்களுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தில் மனிதர்கள் மத மயக்கத்திலிருந்து மீள்கின்றனர். கடவுள் மீது பாரத்தை இறக்கி நிம்மதி காணும் நிலையிலிருந்து மாறி, தங்கள் மீதும், தங்களது வர்க்க ஒற்றுமை மீதும் நம்பிக்கை கொள்கின்றனர்.
முதலாளித்துவத்தை வீழ்த்தி, சுரண்டலற்ற புதியதோர் உலகம் படைக்கிறபோது, தங்களது எதிர்காலத்தை, கற்பிதமான கவுளிடம் விட்டு வைக்காமல் தாங்களே தங்கள் எதிர்காலத்தை உருவாக்குகின்றனர். மதம் பற்றிய விளக்கங்களை அளிக்கும் மார்க்சியம், மனித சமூகம் தனது விடுதலைக்காக இந்த பூவுலகில் நடத்த வேண்டிய வர்க்கப் போராட்டப் பாதையையும் விளக்குகிறது.

வர்க்க இயக்கமும் காந்தியும்

இந்த சிந்தனைகள் காந்தியின் மதம் பற்றிய பார்வையில் இல்லை என்பது வெளிப்படையானது. ஆனால் மார்க்சிய சமூக மாற்ற செயல்திட்டத்தில் காந்தியின் மத நல்லிணக்கப் பார்வை, மதத்தினை பன்முகத் தன்மையோடு பார்க்கிற பாங்கு உள்ளிட்டவை மக்களை ஒன்றுபட வைக்கிறது. இது வர்க்க ஒற்றுமைக்கான திறவுகோலாக அமைகிறது. மார்க்சிய செயல் திட்டத்திற்கு வாய்ப்பான சூழலை அது ஏற்படுத்துகிறது. அந்த வகையில் வர்க்க இயக்கத்தை முன்னேற்றம் கண்டிட காந்தியும் தேவைப்படுகிறார்.

ஆனால் மதம் பற்றிய அவரது ஆன்மீகப் பார்வை அறிவியல் பார்வையோடு முரண்படுகிற நிலையும் ஏற்படுகிறது. எனவே காந்தியின் ஆன்மீக பார்வையை மார்க்சிஸ்டுகள் ஏற்க இயலாது; மதத்தில் செயல்பாடு பல தருணங்களில் மனிதர்கள் செயல்படுவதற்கான திறனை மழுங்கடிப்பதாக அமைகிறது. அந்த நிலையில் மத நம்பிக்கை பிற்போக்கான பங்கினை ஆற்றுகிறது. இதில் பாட்டாளி வர்க்க கட்சி கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு அறிவுரையை லெனின் வழங்குகிறார்: “…மத நம்பிக்கைகளின் வடிவத்தில் ஏற்படுகிற வர்க்க உணர்வற்ற நிலை, அறியாமை, மூடத்தனம் போன்றவை குறித்து அக்கறையற்று இருக்க முடியாது; இருக்கவும் கூடாது.” வர்க்க உணர்வை மழுங்கடிக்கும் மூடநம்பிக்கைகளை கம்யூனிஸ்டு கட்சி எதிர்த்திட வேண்டும்.

அதே நேரத்தில், குறிப்பிட்ட பல தருணங்களில் அடக்கு முறையை எதிர்ப்பதற்கும் மத நம்பிக்கை ஊக்கமளிப்பதாக இருந்ததுண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்துள்ள விவசாயிகள் எழுச்சிகள் வீரியமாக நடைபெறுவதற்கு மத நம்பிக்கைகளும் ஓரளவு தூண்டுகோலாக பயன்பட்டுள்ளன. இலத்தீன் அமெரிக்காவில் ஏகாதிபத்திய சுரண்டலை எதிர்ப்பதற்கு கிறித்துவ மத அமைப்புக்களும், இடதுசாரிகளும் அணி சேர்ந்து போராடிய அனுபவங்களும் உண்டு.
இந்த சாதகமான மத செயல்பாட்டை பயன்படுத்துவது அவசியம். ஆனால் கருத்தியல் ரீதியாக, மதம் ஆளும் வர்க்கத்தின் கருவியாகவும், சுரண்டலை நியாயப்படுத்துகிற கருத்தியலாகவும் இருப்பதையும் கவனத்தில் கொள்ள மார்க்சியம் அறிவுறுத்துகிறது. அதனை மார்க்சிஸ்டுகள் கண்டறிந்து அம்பலப்படுத்த தயங்கக் கூடாது; அதே நேரத்தில், ஆளும் வர்க்க எதிரிகளை தனிமைப்படுத்துவதற்கு, விரிவான உழைக்கும் மக்களின் ஒற்றுமையை கட்டுவதற்கு, அனைவரும் ஒன்று சேர்கிற நிலையை உருவாக்க வேண்டும்.

லெனின் குறிப்பிட்டது போன்று, இந்த விரிவான அணியில் மதநம்பிக்கை கொண்டவர்கள், நாத்திகர்கள் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும். வர்க்க ஒற்றுமை எழுச்சியில் இணைந்திட மதநம்பிக்கை தடையாக இருக்கக்கூடாது. அவ்வாறான ஒன்றுபட்ட போராட்டம் காலப்போக்கில் மதத்தின் மீதான பிடிப்பில் தளர்வை ஏற்படுத்துகிறது. சிறிது சிறிதாக அறிவியல் ரீதியான சிந்தனையை பலப்படுத்துகிறது. மதத்தின் சிக்கலான செயல்பாடுகளை உணர்ந்து மார்க்சிஸ்டுகள் மதம் பற்றிய தங்களுடைய அணுகுமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும் என மார்க்சிய லெனினியம் போதிக்கிறது.

எனவே, காந்தியின் கருத்துக்களை முற்றாக நிராகரிப்பது சரியல்ல. அவரது கருத்துக்களில் உடன்பாடு காண்பதற்கான கூறுகளை இணைத்துக்கொண்டு, முரண்பட வேண்டிய கருத்துக்களை விமர்சித்து செயல்படும் நடை முறையை கையாள வேண்டும். இன்று இந்து மதத்தினை முன்னிறுத்தி, சுரண்டப்பட்ட மக்களை தங்களது அரசியலுக்கும், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் அணி சேர்க்கிற வேலையை இந்துத்துவா செய்து கொண்டிருக்கிற நிலையில், இந்த அணுகுமுறை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

இன்றைய சூழலில், காந்தி பிரச்சாரம் செய்த இதர மதங்கள் மீதான வெறுப்பு கூடாது என்கிற போதனையும், மதங்கள் பற்றிய பன்முகப்பார்வையும், மதநல்லிணக்க கருத்துக்களும் பெரிதும் பயன்படும். மதச்சார்பின்மையை பாதுகாக்கிற போராட்டத்திற்கும் காந்தியின் சிந்தனைகள் பயன்படும். இந்தப் புரிதலுடன் சோசலிச இலட்சியத்திற்கு போராடும் இயக்கங்கள் காந்தியின் சிந்தனைகளை அணுகிட வேண்டும்.

அதற்கு ஏற்ப தங்களது அணுகுமுறையை வகுத்து செயல்படுவதுதான் இந்திய சோசலிசத்திற்கான சரியான பாதையாக அமையும்.தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு “மகாத்மாவும் அவரது தத்துவமும்” நூலினை கீழ்க்கண்டவாறு முடிக்கின்றார்: “காந்திய நடைமுறை மற்றும் தத்துவத்திற்கு எதிராக சித்தாந்த ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் போராட்டத்தை மார்க்சிய லெனினியர்கள் நடத்த வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரச்சனைகளில் சாத்தியமான அளவில் கூட்டு செயல்பாட்டுக்கு உள்ள வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.” இந்த வழிகாட்டுதல் இன்றளவும் பொருத்தமானது. அதிலும், இன்றைய இந்துத்துவா சவாலை எதிர்கொள்ள மேற்கண்ட அணுகுமுறை மிகவும் பொருத்தமானது.

இந்திய வரலாற்றில் இஸ்லாம்

ரொமிலா தாப்பார்

பேட்டி கண்டோர்: ஜிப்சன் ஜான் – ஜிதேஷ், பி.எம்.

நன்றி: ஃப்ரண்ட்லைன்

கேள்வி: இந்திய வரலாற்றில் இஸ்லாமிய மதத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இஸ்லாமிய தன்மை  குறிப்பிடத்தக்க ஒன்றா அல்லது பெயரளவிற்கானதா என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல், இஸ்லாமியத்தோடு  தொடர்புடைய அனைத்தையும் முஸ்லிம் என்பதாக அழைக்கும் பழக்கம் நமக்கு உள்ளது. ஆக்கிரமிப்பதற்காக இந்தியாவுக்குள் வந்தவர்கள் என்று ‘முஸ்லிம்களை’ ஒரே மாதிரியாக கருதிக் கொண்டு  இஸ்லாத்தை ஒரு மதமாக நாம் கருதுகிறோம். இதற்கு முன் என்ன நடந்தது என்பதை விளக்குவதற்கு “முஸ்லீம் படையெடுப்பாளர்கள்” மூலம் பெற்ற விளைவு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவிற்குள் வந்த மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட சில வழிகளில்தான் இஸ்லாம் இந்தியாவிற்குள் வந்தது. அதைக் கொண்டுவந்தவர்கள் உலகின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் சமூகங்களிலிருந்து வந்தவர்கள் என்பது மட்டுமின்றி, அவர்கள் பின்பற்றிய மதத்தின் பதிப்புகளும் வேறுபட்டவையாக இருந்தன. எனவே, இந்தியாவில் இஸ்லாத்தின் பல்வேறு வகைகள் நடைமுறையில் இருந்தன. சிலர் தங்களுக்கு கற்பிக்கப்பட்ட இஸ்லாத்துடன் நெருக்கமாக இருந்தனர். ஆனால் பலர் இந்து நம்பிக்கை மற்றும் நடைமுறையின் சில பிரிவுகள் போன்ற உள்ளூர் மதங்களிலிருந்து கடன் வாங்கிக் கொண்டனர்.

இன்று நாம் பயன்படுத்தும் இந்த வார்த்தையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்னவென்றால், காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய காலத்தில், சமஸ்கிருதத்தில் உள்ள இந்திய ஆதாரங்களும் பிராந்திய மொழிகளும் “முஸ்லிம்களை” குறிப்பிடும்போது இஸ்லாத்துடன் இணைக்கப்பட்ட சொற்களை எப்போதாவதுதான் பயன்படுத்துகின்றன. அவற்றில் குறிப்பிடப்படும் மக்கள் இனத்தின் வரலாற்று தொடர்ச்சியைக் குறிக்கும் சொற்களால் அழைக்கப்படுகிறார்களே அன்றி,  அவர்களின் மதத்தால் அல்ல. இவ்வாறு இந்தியாவிற்குள் வந்த குழுக்கள் எவ்வாறு உணரப்பட்டன என்பது பற்றி இது நிறைய கூறுகிறது. இஸ்லாம் இந்தியாவுக்கு வந்த சில வழிகளாவன:

  • அ. எட்டாவது நூற்றாண்டில் அரேபியர்கள் சிந்து பகுதியின் மீதும், பதினோராவது நூற்றாண்டில் துருக்கியர்களும் ஆப்கானியர்களும் வட மேற்கு பகுதியின் மீதும், வடக்குப் பகுதியின் மீதும் படையெடுத்தனர் எனில், பதினாறாம் நூற்றாண்டில் முகலாயர்கள்  வட இந்தியா முழுவதையும் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தனர்.
  • ஆ. இந்தியத் துணைக் கண்டத்தின் பிற பகுதிகளில், இந்தத் தொடர்புகள் வேறு வழியில் வந்தன. அரேபியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த அரேபியர்களின் சமூகங்கள் எட்டாம் நூற்றாண்டிலிருந்து (அல்லது அதற்கு முன்னதாகவும் கூட) மேற்கு இந்தியாவுடன் வர்த்தகம் செய்து வந்தன. மேலும் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து மேற்கு இந்தியாவின் கரையோரங்களில் அவர்கள் குடியேறினர். இது உள்ளூர் சமூகங்களுக்கும் குடியேறிய அராபியர்களுக்கும் இடையே உருவான தொடர்புகளில் இருந்து பல்வேறு மதக் குழுக்கள் உருவாகவும் வழிவகுத்தது. போஹ்ராஸ், கோஜாஸ், நவாயத் மற்றும் மாபில்லாஸ் போன்ற பிரிவினர் இவ்வாறு மாற்றம் பெற்றவர்கள் ஆவர்.

இதேபோல், ஆப்கான் மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்து வட இந்தியாவுடன் வர்த்தகம் செய்தபடியே அந்த பகுதிகளில் வந்து குடியேறினர்.

  • இ. பணம் ஒன்றையே இலக்காகக் கொண்ட போர்வீரர்களும் இந்தப் பகுதிகளில் இருந்து இந்திய அரசர்களின் ராணுவங்களில் சேர்ந்து கொண்டனர். இந்த ராணுவங்களில் சிலவற்றுக்கு அரசர்களும் வேறு சிலவற்றுக்கு சுல்தான்களும் தலைமை தாங்கினர். கி.பி. ஆயிரம் ஆண்டு காலத்திய ராணுவங்களில் இதுபோன்ற அபிசீனிய, எத்தியோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றிய குறிப்புகள் உள்ளன.

அதேபோன்று அல்-இந்த் பகுதியிலிருந்தும் படைவீரர்கள் பணத்திற்காக ஆப்கானிய, துருக்கிய ராணுவப் படைகளில் பணிபுரிந்துள்ளனர். கஜினி நகரத்தைச் சேர்ந்த முகமதுவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்த திலக், அல்-இந்த் பகுதியைச் சேர்ந்த படைவீரர்களைக் கொண்ட மிகப்பெரும் படையணியுடன் அவருக்காகப் போர் செய்திருக்கிறார். அந்நாட்களில் நாடுகளின் எல்லைகள் பெருமளவிற்குத் திறந்தே இருந்தமையால் எல்லைகளைத் தாண்டி பல்வேறு தொழில்களையும் மேற்கொள்ள ஆட்களை வேலைக்கு எடுக்க முடிந்தது.

  • ஈ. இஸ்லாம் மதத்தினைப் பரப்புவதற்கான மிகப்பெரும் பிரச்சாரக் குழுக்கள் என்பது சுஃபிக்கள் என்று அழைக்கப்பட்டவர்களைக் கொண்டதாகவே இருந்தன. இவர்களில் சிலர் பாரசீகத்திலிருந்து வந்தவர்கள் எனில், மிகப் பலர் மத்திய ஆசியப் பகுதியில் இருந்து வந்தவர்கள். இஸ்லாம் மதத்தினை சேர்ந்த இவர்களது மத வடிவங்கள் அரேபியர்களின் இஸ்லாம் மதத்தைப் போன்றதாக இருக்கவில்லை. இவ்வாறு இந்தியாவிற்கு வந்த சுஃபிக்களில் சிலர் ஓரளவிற்குப் பழமைவாதிகளாக இருந்தபோதிலும், மற்றவர்கள் தங்களது மதத்தை உள்ளூர் மதங்களோடு கலக்கச் செய்தனர். அவர்களது இத்தகைய செயல்களை கட்டுப்பெட்டியான முஸ்லீம் மதகுருக்கள் ஒப்புக் கொள்ள மறுத்தனர்.

இவர்களை சுட்டிக் காட்டுகின்ற சமஸ்கிருத நூல் ஆதாரங்களில் இருந்தே இஸ்லாம் மதத்தில் நிலவிய இத்தகைய வேறுபாடுகளை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர்களது மதத்தின் பெயரால் அவர்களை சுட்டிக் காட்டுவதென்பது மிகவும் அபூர்வமாகவே உள்ளது. பெரும்பாலான நேரங்களில் அவர்களுக்கான சுட்டுப் பெயர் என்பது முந்தைய காலத்திய மேற்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்களை அடையாளப்படுத்திக் கூறப்பட்ட பெயர்களாகவே இருந்தன. இவ்வகையில் மேற்கிலிருந்து வந்தவர்கள் யவனர்கள் என்று அழைக்கப்பட்டனர். இதே பெயர்தான் கிரேக்கர்களைக் குறிப்பிடவும், நவீன காலத்தில் பிரிட்டிஷ் நாட்டவர்களைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்பட்டது. துருக்கியர்களைக் குறிப்பிட டுருஷ்காக்கள் என்ற பெயரும், ஆஃப்கானியர்களை குறிப்பிட ஷாகாக்கள் என்ற பெயரும் பயன்பட்டன. பண்டைய காலத்தில் குறிப்பிடப்பட்ட ஷாகாக்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆவர். சமஸ்கிருத குறிப்பேடுகளில் துக்ளக் வம்சத்தினர் ஷாகாக்கள் என்றே குறிப்பிடப்படுகின்றனர். டுருஷ்கா என்பது துருக்கி என்பதற்கான சமஸ்கிருதச் சொல்லாகும். குஷாணர்கள் என்பதைப் போன்று மத்திய ஆசியாவிலிருந்து வந்த மக்களைக் குறிப்பிட முன்னாளில் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது. மதத்தினால் ஏற்பட்ட வேறுபாடுகள் பெரும்பாலான நேரங்களில் அடையாளமாக இருக்கவில்லை என்றே தோன்றுகிறது. பூகோள அமைப்பும், இன அடையாளமுமே இந்தச் சுட்டுப் பெயரில் முக்கியமான அம்சங்களாக இருந்தன.

மதரீதியான சகிப்புத் தன்மை

பொதுவாகவே மத ரீதியான சகிப்புத்தன்மை என்பதே இந்திய நாகரீகத்தின் தனித்ததொரு அடையாளம் என்று போற்றப்படுகிறது. டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இந்தக் கருத்தை பெரிதும் முன்னெடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். இத்தகைய மதரீதியான சகிப்புத் தன்மை என்பது இந்திய வகைப்பட்ட மதச்சார்பின்மையே என்று விளக்கம் கூறுவது அல்லது அதற்குச் சமமானது என்றும் கூறப்படுகிறது. இந்த ஆய்வுப் பொருட்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? அந்தக் கருத்துக்கள் எந்த அளவிற்குப் பொருத்தமுடையவை?

மதச்சார்பின்மை மற்றும் மத சகிப்புத்தன்மை ஆகியவை முற்றிலும் வேறுபட்டவை. மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களின் சகவாழ்வு, ஒரு சமூகத்தில் உள்ள அனைத்து மதங்களின் சமத்துவம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தவொரு மதத்திற்கும் அன்றைய மக்கள் சமூகத்தின் சட்டங்கள் மற்றும் அதன் அரசியல் ஆகியவற்றுக்கு இடையிலான தூரத்தை பராமரித்தல் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. எனவே மதச்சார்பின்மை  என்பதும் மத சகிப்புத்தன்மை என்பதும் ஒன்றாக இருக்க முடியாது. அதுவும் போக, மத சகிப்புத்தன்மை என்பது இந்திய நாகரிகத்தின் ஒரு அடையாளமாகவும் இருந்ததில்லை. பண்டைய காலங்களிலிருந்தே சகிப்பின்மைக்கு போதுமான வரலாற்று சான்றுகள் உள்ளன. ஒவ்வொரு மதத்தின் வரலாற்றிலும் இதேதான் நடக்கிறது. உதாரணமாக, பவுத்த மதம், வேறு எந்த மதத்தையும் விட அகிம்சை குறித்த போதனைகளில் மிகவும் வலுவான முத்திரையைக் கொண்டுள்ளது. எனினும், அது ஆதிக்கம் செலுத்தும் மதமாக இருக்கும் சமூகங்களில், வன்முறையிலிருந்து அது விடுபடவில்லை. ஒரு மதத்தில் கற்பிக்கப்படுவதும், உண்மையில் கடைப்பிடிக்கப்படுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை.

எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட மதங்கள் இருந்தால், சில பரஸ்பர கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கருத்து வேறுபாடு சில நேரங்களில் இறையியலுடன்  மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நேரங்களில் அது வன்முறையாக இருக்கக்கூடிய எதிர்ப்பு வடிவத்தை எடுக்கும்.  இந்திய வரலாற்றின் ஆரம்ப கால நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வன்முறையை பாரம்பரியமாக கையாளுவது மற்றும் மதரீதியான வேறுபாடுகளைக் குறிக்கிறது, உதாரணமாக, சைவர்களுக்கும் கடவுள் மறுப்பு மதங்களான பவுத்தர்கள், சமணர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் சில சமயங்களில் வன்முறையாக வெடித்ததைக் கூறலாம். இத்தகைய வேறுபாடுகள் எழக் கூடும்தான். ஏனெனில் அரசரின் ஆதரவைப் பெறுவதற்கு அவற்றுக்கு இடையே ஒரு போட்டி உள்ளது. அதிலும் குறிப்பாக அரசர்கள் வழங்கும் பகட்டான நன்கொடைகளுக்காக. மேலும் அதிக எண்ணிக்கையில் தம்மைப் பின்தொடர்பவர்களைப் பெறுவதற்கான முயற்சிகளிலிருந்தும் போட்டி வரலாம். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு சிக்கலான சமூகத்திற்கும் இது பொருந்தும்.

சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான ஏழு தளங்களில் சுமார் 4,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பீங்கான் பாத்திரங்களில் கால்நடை மற்றும் எருமை இறைச்சி உள்ளிட்ட விலங்கு பொருட்களின் எச்சங்கள் இருப்பதை ஒரு புதிய ஆய்வு சமீபத்தில் கண்டறிந்துள்ளது. மொத்தத்தில் மாட்டிறைச்சியை தடைசெய்யும் மசோதாவை கர்நாடக அரசு நிறைவேற்றும் நேரத்தில் இந்த கண்டுபிடிப்பு வெளிப்பட்டுள்ளது. ஒரு வரலாற்றாசிரியராக இந்த  ஆய்வையும் இந்த சட்டத்தையும் நீங்கள் எவ்வாறு  பார்க்கிறீர்கள்?

இந்த ஆய்வு குறித்த விவரங்களை நான் பார்க்கவில்லை. எனவே இது குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. செய்திகளில் வரும் விஷயங்களின் நம்பகத்தன்மை குறித்து ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த செய்தி அகழ்வாராய்ச்சிகளிலிருந்து பெற்றதாக இருக்கக்கூடும். எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அத்தகைய ஆதாரத்தை முதலில் தொழில்முறை ரீதியான தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய வேண்டும். மேலும் அதைப் பற்றி விவாதிக்கவும் கருத்துத் தெரிவிக்கவும் முன்பாக அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய தேவை உள்ளது.

இந்திய சமூகம் ஒருபோதும் மாறாத, தேக்கமான ஒரு சமூகமாக இருந்ததில்லை; இப்போதும் அப்படி இல்லை. 4,600 ஆண்டு காலத்தில், நம்பிக்கை மற்றும் சமூக  நடைமுறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று நாம் எப்படி இருக்கிறோம், நாம் எதை செயல்படுத்துகிறோம் என்பதெல்லாம் இந்த மாற்றங்களிலிருந்து உருவானதே ஆகும். ஆகவே, நமது நல்வாழ்வை உறுதி செய்யும் என்று நாம் நம்புகின்ற விதிகளுக்கு இணங்க விரும்பினால், ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, தொலைதூர கடந்த காலத்திலிருந்தோ அல்லது சமீபத்திய கடந்த காலத்திலிருந்தோ  சட்டபூர்வமான தன்மையை நாம் தேடிக் கொண்டிருக்க மாட்டோம். இப்போது நாம் என்ன செய்கிறோம் என்பதற்கான அனுமதியைப் பெற ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பார்க்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. இது நிச்சயமாக தேவைப்படவில்லை. சமூகம் முன்னேறுவதற்கு மாற்றம் என்பது அடிப்படை. ஒவ்வொரு சமூகமும் அதன் விதிகளை தேவைப்படும்போதெல்லாம் மாற்றிக் கொள்கிறது. சமூக மாற்றம்  என்ற ஒன்று இருந்தால், அதற்கேற்ப சமூக விதிகளும் மாறியே ஆக வேண்டும்.

குறிப்பாக சமூகத்தின் சமூக ரீதியான வரிசைப்படுத்தலில் பதிவு செய்யப்பட்டுள்ள மாற்றங்களில் காணப்படுகிறது. எனவே, பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் ஓபிசிக்கள் [பிற பிற்படுத்தப்பட்டோர்] ஆகிய பிரிவினருக்கு சமூகத்தில் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை இன்று எழுகிறது. அவர்கள் முழு உரிமைகளைக் கொண்ட, சுதந்திரமான  குடிமக்கள். இந்நிலையில் மனு தர்ம சாஸ்திரத்தால் அவர்களுக்கு விதிக்கப்பட்டபடி கீழ்ப்படிதல் மற்றும் ஒடுக்குமுறை என்பது  தொடர்ந்து நீடிக்க முடியாது.

இதைப் போலவே, உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றிய விதிகளும் கூட அவற்றுக்குக் கீழ்ப்படியுமாறு கோரப்படும் நபர்களுடன் விவாதிக்கப்பட வேண்டும்.  கடந்த காலங்களில் இவை இருந்திருக்கலாம் என்று வெறுமனே கூறி அவர்கள் மீது இதைச் சுமத்த முடியாது. கடந்த கால ஆதாரங்கள்படி மக்கள் கால்நடை-இறைச்சி சாப்பிட்டதற்கான சான்றுகள் உள்ளன. நடப்புக் காலத்தில் இது தடை செய்யப்பட வேண்டுமானால், அதற்கான வாதம் என்பது கடந்த காலத்தில் சாப்பிடவில்லை என்பதைத் தவிர வேறு ஒன்றாகவும் இருக்க வேண்டும். ஆட்சி செய்யவும் பொதுமக்களின் கருத்தின்படியும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பல்வேறு கூட்டங்களிலும் இத்தகைய தடைகள் குறித்த பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகியவை முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும்.

அது நிரூபிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் சரி, அல்லது கருதப்படுகின்ற ஒன்றாக இருந்தாலும் சரி, தொலைதூர கடந்த காலத்திலிருந்து வருவதாக நம்பப்படும் ஒரு பாரம்பரியம் என்பது நிகழ்காலத்தில் புதிய ஒரு விதியை விதிக்க யாருக்கும் தானாகவே உரிமை வழங்கி விடாது. பாரம்பரியம் என்பது தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் ஒன்று எனவும், அவை கடந்த காலத்திலிருந்து வந்தவை போல முன்வைக்கப்படுகின்றன என வரலாற்றாசிரியர்கள் வாதிட்டு வந்துள்ளனர். ஆனால் கண்டுபிடிப்பு என்பது தற்காலத்தின் தேவைகளிலிருந்து பெறப்பட்டது; மேலும் அதை நியாயப்படுத்தவும் பயன்படுகிறது.

இங்கே அடிப்படை கேள்வி என்னவென்றால், தற்போது விதிக்கப்பட்டுள்ள விதியானது ஒரு சமகால அரசியல் கொள்கையின் தேவைகளிலிருந்து எழுகிறதா? அல்லது அதை  பாரம்பரியம் என்று நம்பும் மக்கள் சிலர் கடைப்பிடிக்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பா? அனைத்து குடிமக்களின் நலனையும் உறுதி செய்யும் சூழலில் தற்போதைய கருத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதே அரசாங்கம். அதேபோல், இவ்வாறு விதிக்கப்படுபவர்களுக்கு அந்த விதிகளைப் பற்றி விவாதிக்க, உரிமை உண்டு. அதை நிராகரிப்பது என்று அவர்கள் முடிவு செய்தால் அவ்வாறே அது நிராகரிக்கப்பட வேண்டும். ஒரு ஜனநாயகம் செயல்படுவதற்கு இத்தகைய செயல்முறை மிகவும் அத்தியாவசியமானதும் கூட.

ஆரியர்களின் தோற்றம் என்பது இந்திய வரலாற்றில் விவாதத்திற்குரிய மிக முக்கியமானதொரு கேள்வி. உங்களைப் போன்ற வரலாற்றாசிரியர்கள் மத்திய ஆசிய பிராந்தியத்திலிருந்து ஆரியர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்ததை சுட்டிக்காட்டுகின்றனர். இது ஆரியர்கள் இந்தியாவிலேயே பூர்வீகமாகத் தோன்றினார்கள் என்ற கோட்பாட்டை நிராகரிக்கிறது. சமீபத்திய டி.என்.ஏ ஆய்வுகள்  இடப்பெயர்வு குறித்த உங்களது கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்துகின்றன. இத்தகையதொரு சூழலில், உங்கள் கருத்துப்படி, ஆரம்பகால இந்தியர்கள் என்று யாரைக் குறிப்பிட முடியும்?

கடந்த 5000 ஆண்டு காலமாக உள்ள, மொழியியல், தொல்பொருள் மற்றும் மரபணு போன்ற எங்களிடம் உள்ள சான்றுகளின் அடிப்படையில் ஆராயும்போது, ​​ஆரம்பகால இந்தியர்கள் என்பவர்கள்  கலவையான, ஒரு சில மரபணு குழுக்களை அதிகம் கொண்டு உருவான ஒரு மக்கள்தொகையினர் என்பது தெளிவாகிறது. தொடக்க கால கலாச்சாரங்கள் பலவற்றுக்கும் இந்த அம்சம் பொதுவானதாகும். கலாச்சாரங்களின் முன்னேற்றத்திற்கு மக்கள், வெவ்வேறு மக்களுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள், தொழில்கள், மொழிகள், வாழ்க்கை முறைகள், நம்பிக்கை அமைப்புகள் போன்ற பல காரணிகளின் பரஸ்பர தொடர்பு தேவைப்படுகிறது. தனித்துவமானதொரு மக்கள் கூட்டத்தோடு தொடர்புடைய அதிநவீன கலாச்சாரங்கள் மற்றும் நாகரிகங்கள் மூலமே  தனித்துவமானதொரு கலாச்சாரமும் நாகரீகமும் தோன்றியது என்று வற்புறுத்த முயல்வதை ஒரு கனவு என்றே சித்தரிக்க முடியும்!

தமிழில்: வீ.பா.கணேசன்

மதம்:கூட்டு மேடையும் கம்யூனிஸ்ட்டுகளும் (சில குறிப்புகள்)

வகுப்புவாத எதிர்ப்பு கூட்டு மேடை உருவாக்குவதும் அதில் கம்யூனிஸ்டுகள் தீவிரமாக செயல்படுவதும் அவசியமானது. ஆனால் மத நம்பிக்கை, இதர முதலாளித்துவ சித்தாந்தங்கள் பற்றிய சரியான பார்வை இல்லையெனில் இம்முயற்சி தனது இலக்கை எட்டுவது சிரமம்.

“மதம் குறித்த தொழிலாளி வர்க்கக் கட்சியின் பார்வை” என்ற கட்டுரையில் கம்யூனிஸ்ட் அணுகுமுறை குறித்து லெனின் விளக்குகிறார். “விஞ்ஞான சோசலிசம் அமைப்பதை அடிப்படையாகக் கொண்ட மார்க்சிய உலகக் கண்ணோட்டம் கொண்டது… கம்யூனிஸ்ட் கட்சி” என்று துவங்குகிறார் லெனின்.

சோஷலிச சமூகம் அமைகிறபோது மதத்தை தடைசெய்ய வேண்டும் என்று டூரிங் கருத்து தெரிவித்தபோது அதனை ஏங்கெல்ஸ் கடுமையாக எதிர்த்தார். அதைக் குறிப்பிட்ட லெனின் இதுபோன்ற கோரிக்கைகள் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று எழுதுகிறார். நேரடியாக மதத்திற்கு எதிரான கோரிக்கைகள் அரசியல் ரீதியான வித்தியாசங்களை மறைத்துவிட்டு மதரீதியான வித்தியாசங்களை முக்கியமானதாக மாற்றுகின்றன: “தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியினரின் கவனத்தை திசை திருப்புகிறது. இது, தொழிலாளி வர்க்கக் கடமையிலிருந்தும் புரட்சிகர போராட்டத்திலிருந்து தடம்புரள வைக்கிறது……”

அதேநேரத்தில் மதம் என்பது தனிநபரின் நம்பிக்கை அதில் தலையிடக்கூடாது என்ற கருத்தைப் பற்றியும் சரியான புரிதல் வேண்டும் என்கிறார் லெனின். கம்யூனிஸ்ட் இதனை கூறும்போது ஆளுகிற அரசு மதத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிடக் கூடாது; அந்த அரசு மதத்தை தனிநபரிடம் விட்டுவிட வேண்டும் என்று அரசை வலியுறுத்துகின்றனர்.

ஆனால் இதன் அர்த்தம் மதத்தின் பெயரால் எது நடந்தாலும் மூட, பிற்போக்கு நம்பிக்கை அடிப்படையில் எது நடந்தாலும் பொறுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டுமென்பதில்லை. கட்சிக்குள் மார்க்சிய தத்துவார்த்தக் கண்ணோட்டமான இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆழமாக வேரூன்ற வேண்டும். மக்களிடமும், உழைக்கும் மக்களிடமும் அறிவியல் கண்ணோட்டம் வலுப்பட கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பாடுபட வேண்டும். அத்துடன் வலுவான வர்க்கப் போராட்டம் உள்ளூர் மட்டத்தில் தீவிரமாக வேண்டும்.

மத எதிர்ப்புப் பிரச்சாரம் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கருத்தினைப் பற்றி எழுதுகிறபோது லெனின் அழுத்தமாக குறிப்பிடும் கருத்துக்கள் இன்றும் பொருந்துகின்றன. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எழுதினாலும் மக்கள் மனங்களிலிருந்து மதம் அகன்றுவிடாது என்கிறார் லெனின். ஏனென்றால், அந்த மக்கள் முதலாளித்துவ உழைப்புச் சுரண்டலால் பாதிக்கப்பட்டவர்கள்: அவர்கள் கண்மூடித்தனமான முதலாளித்துவ அழிவுச் சக்திகளின் பிடியில் இருக்கிறார்கள்.

மூலதனத்தின் அதிகாரத்திற்கு எதிராக அனைத்து வடிவங்களிலும், உணர்வுப்பூர்வமாக, திட்டமிட்டவாறு, அமைப்பு ரீதியாக ஒன்றுபட்டுப் போராடும் மக்கள்தான் மதத்தின் அடிப்படைக்கு எதிராகவும் போராடக் கற்றுக் கொள்வார்கள்.

மத விமர்சனம் செய்யலாமா?

அதேநேரத்தில் மற்றொன்றையும் லெனின் குறிப்பிடுகிறார்.

மதத்தை விமர்சிக்கும் புத்தகங்கள் தேவையற்றது அல்லது தீமையானது என்ற முடிவுக்கு வரலாமா? பெரியார், அம்பேத்கர் உள்ளிட்டு பலரது மத விமர்சன நூல்களை புறக்கணிக்க வேண்டுமா? இதனை வலுவாக மறுக்கிறார் லெனின்… இல்லை, நிச்சயமாக இல்லை. (கம்யூனிஸ்ட் கட்சியின்) அடிப்படையான கடமை, சுரண்டல்காரர்களை எதிர்த்து சுரண்டலுக்கு ஆளான மக்களின் வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்துவது. ‘இந்தக் கடமைக்கு உட்பட்டுத்தான் அதன் பகுத்தறிவுப் பிரச்சாரம் அமைய வேண்டும்.’ என்று விளக்குகிறார் லெனின்.

சுரண்டலுக்கு எதிரான போராட்டம் இல்லையெனில் மத அடிப்படையில் எழும் பிற்போக்குத்தனத்தையும் வகுப்புவாதத்தையும் முறியடிக்க முடியாது. பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளில் உள்ள மத விமர்சனங்கள் மிகுந்த சக்தி வாய்ந்த வாதங்கள். கம்யூனிஸ்ட்கள் அவற்றை தங்கள் வயமாக்கிக் கொண்டு வர்க்கத் திரட்டலுக்கு பொருத்தமாக மக்களை வெறும் நம்பிக்கை என்கிற இருட்டிலிருந்து வெளிக் கொணர்ந்து வர்க்கப் போராட்டத்திற்கு பயன்படுத்த முடியும். ஆனால் சில நேரங்களில் அவை மட்டுமே பிரதானமாக முனவைத்து வர்க்கப் போராட்ட நடைமுறையை பின்னுக்குத் தள்ளுவது தவறானது.

ஒரு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தொழிலாளர்கள் திரண்டு இருக்கின்ற அந்த கூட்டத்தில் ஒரு கம்யூனிஸ்ட் கோரிக்கைகளை விளக்கிப் பேசுகின்றார். கம்யூனிஸ்ட் என்பதால் சில தொழிலாளர்கள், குறிப்பாக கடவுள் நம்பிக்கையில் தீவிரமாக இருக்கும் தொழிலாளர்கள், இவரது கருத்துக்களில் ஒன்றிணைவதில் தயக்கம் காட்டலாம் என்று அவருக்குத் தோன்றுகிறது.

அந்த சமயத்தில் உங்களுக்கு உங்கள் மதத்தின் மீது நம்பிக்கை இருப்பது போன்று நான் சோஷலிச மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவன் என்று பேச்சைத் துவங்குகிறார். இவ்வாறு பேசிய அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமா? கூடாது என்கிறார் லெனின். மக்களை கிளர்ந்தெழச் செய்வதற்கும் அவர்களுக்கு முதலாளித்துவ சுரண்டல் பற்றிய போதனை செய்வதற்கும் இதுபோன்று மத நம்பிக்கையை மதிக்கிற வகையில் கருத்துக்கள் கூறுவது தவறாகாது என்கிறார் லெனின். அதேசமயத்தில் கட்சியின் நிலைப்பாடாக சோசலிசமும் ஒரு மதம்தான் என்கிற முடிவிற்கு செல்வது தவறானது; கண்டனத்திற்குரியது என்கிறார், லெனின்.

இந்த லெனினிய வழிகாட்டுதலை இன்றைய நிலைக்குப் பொருத்திப் பார்த்து, வகுப்புவாத எதிர்ப்பிற்கும், வர்க்கங்களைத் திரட்டுவதற்கும் சில நடைமுறைகளை உருவாக்கி அவற்றைப் பின்பற்றிடலாம்.

மத நம்பிக்கையாளர்களும், நாத்திகர்களும் ஓரணியில்…

அனைத்து மதங்களும் மனித நேயத்தை வெளிப்படுத்துகிற உணர்வுகளையும் சிந்தனைகளையும் கொண்டுள்ளது. அந்த மனிதநேய கருத்துக்களை வகுப்புவாதத்தை மத நம்பிக்கையாளர்களிடமிருந்து பிரித்து, தனிமைப்படுத்திட பயன்படுத்தலாம். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் போன்று செயல்படுகிற காஞ்சி சங்கராச்சாரியார் பேசுகிற கருத்துக்கள் அனைத்தும் இந்து மதத்தின் கருத்துக்கள் அல்ல. இதனை ஆதாரப்பூர்வமாக, ஆணித்தரமாக வாதிட்டு இந்து மத நம்பிக்கை கொண்டோரை அணிதிரட்டலாம். காந்தியும் இந்துதான் அவருடைய கருத்துக்களும் காஞ்சி சங்கராச்சாரியாரின் கருத்துக்களும் ஒன்றல்ல என்று நிச்சயமாக வாதிட முடியும்.

பல பிரிவுகள் கொண்ட பௌத்த மதத்தில், அதன் கருத்துக்களை எல்லாரும் ஒரே மாதிரி பேசுவதில்லை. அஹிம்சை போதிக்கும் மதம் என்று அறியப்படுகிற பௌத்தம் இலங்கையிலும், இதர தென்கிழக்கு நாடுகளிலும் பெரும் வன்முறை கட்டவிழ்க்கப் பயன்படுத்தப்பட்டது. அதேபோன்று, இன்று இந்தியாவில் சங் பரிவாரம் பேசும் பல இந்துத்துவக் கருத்துக்கள் இந்து மதக் கருத்துக்கள் என்று எடுத்துக் கொள்ள இயலாது. எனவே ஆளுகிற கூட்டங்கள் தங்களது அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கும், உழைப்புச் சுரண்டலை தடையின்றி தொடரவும் பயன்படும் கருவியாக மதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆக இரண்டு நிலைகளில் மதம் செயல்படுகிறது. ஒருபுறம் சுரண்டல் கருவியாக அது பயன்படுகிறது மற்றொரு வகையில், மார்க்ஸ் கூறியவாறு, அடக்கி ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சாகவும் இயங்குகிறது. அனைத்து மதங்களும் மனிதநேயக் கருத்துக்களையும் கொண்டிருக்கின்றன. அதே ஆளும் வர்க்கங்களின் தேவைக்கேற்ப உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு ஏற்றவாறு மதக் கருத்துக் கள் ஏராளமான இடைச் செருகல்கள் கொண்ட கலவையாகவும் உருமாற்றம் பெற்று வருகின்றன.

முரண்பாடாகத் தெரிந்தாலும், வகுப்புவாத எதிர்ப்பு திரட்டலில் மத நம்பிக்கையாளர்களும், பகுத்தறிவாளர்கள் என்று அறியப்படுகிற நாத்திகர்களும் அங்கம் வகிக்க வேண்டும். ஏனெனில் மதவாதம் அறிவுபூர்வமான சிந்தனைக்கும் உண்மையான மனிதநேய, மத சிந்தனைக்கும் எதிரானது. இவர்களோடு, வகுப்புவாதத்தை எதிர்க்கும் தனிநபர்களின், மதச்சார்பற்ற அமைப்புகள் கொண்ட விரிவான மேடை எழுவது அவசியம். இது அனைத்திந்திய, மாநில மட்டத்தில் மட்டுமல்லாது பகுதி சார்ந்தும் அத்தகைய மக்களின் மேடைகள் எழ வேண்டும். உள்ளூர் அளவில் மிக மிக விரிவான உள்ளூர் மதச்சார்பற்ற சமூகங்கள் பணியாற்றும் சங்கம மாக இந்த மேடைகள் உருவாக வேண்டும்.

மதவாத உணர்வுகளை அகற்றுவதற்கு அறிவியல் மனப்பான்மை வளர வேண்டும். இது மதச்சார்பற்ற சக்திகள் செய்திட வேண்டிய முக்கிய கடமை. இயற்கையின் இயக்கத்திற்கு பின்னால் ஆட்டுவிக்கும் சக்தியாக இருப்பது சர்வ வல்லமை கொண்ட கடவுள் என்ற கருத்தியல் நீடிக்கும் வரை மத அடிப்படையில் மக்களைத் திரட்டும் வாய்ப்பும், வகுப்புவாதம் வளரும் வாய்ப்பும் நீடிக்கும். இயற்கையின் இயக்கம், பிரபஞ்ச இயக்கம் குறித்து இதுவரை அறிவியல் வந்தடைந்திருக்கிற முடிவுகளை சாதாரண மனிதர்களும் புரிந்து உள்வாங்கிடும் நிலை ஏற்பட வேண்டும்.

கம்யூனிஸ்ட்கள் எப்போதுமே இதில் அக்கறை காட்டி வந்தனர். சிங்காரவேலர் வாழ்நாள் முழுவதும் அறிவியலை பரப்புவதையே அன்றாடப் பணியாகக் கொண்டிருந்தார். பிரபஞ்சம் பற்றி அன்று வரை கண்டறியப்பட்ட அறிவியல் விவரங்களை அவர் தொடர்ந்து எழுதி வந்தார். தமிழ்நாட்டில் எழுந்த பகுத்தறிவுவாதம் அறிவியலை கருவியாகக் கொண்டு மத மற்றும் மூட நம்பிக்கைகளை அகற்றும் உத்தியைக் கையாளவில்லை.

பெரியார் அவ்வப்போது அறிவியலை பேசினாலும் பகுத்தறிவு இயக்கம் பொதுவாக கடவுள் நம்பிக்கை மீதான நேரடித் தாக்குதலாகவே இருந்தது. நம்பிக்கை உணர்வுக்கு மாற்றாக அறிவியல் உணர்வை ஏற்படுத்தும் கடமையில் ஓரளவிற்கு மட்டுமே அவர்கள் பயணித்தார்கள். இது அந்த இயக்கத்தின் முக்கிய குறைபாடாக அமைந்தது. இந்த வரலாற்று படிப்பினையை உணர்ந்து செயல்பட வேண்டும். இன்றைய வகுப்புவாதம் இறுகிப்போன மதப் பிடிமானத்தின் அடித்தளத்தில் கட்டப்படுகிறது.

அதன் வேர்களை அறுத்தெறிய அறிவியல் என்ற போர்வாள் பொருத்தமானது. சமூகத்தை மதத்தின் பிடியிலிருந்து விடுபடச் செய்து மத நம்பிக்கை என்பது தனிநபர் உலகத்தில் மட்டும் இருக்கும் நிலை அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. சமூகம் என்று வருகிறபோது அது மதச்சார்பின்மை வழி இயங்கிட வேண்டும். ஒவ்வொருவர் சிந்தனையிலும் அறிவியல் ஞானம் வேரூன்ற செய்திட்டால் இத்தகு மதச்சார்பின்மை சூழல் உருவாகும். உள்ளூர் அளவில் மக்களோடு நெருங்கி அறிவியலைப் பரப்பும் பணியை மதச்சார்பற்ற இயக்கங்கள் மேற்கொள்ள வேண்டும்.

மதமும் – விஞ்ஞானமும் – ஐன்ஸ்டின்

(இந்தக் கட்டுரை ஐன்ஸ்டினால் 1930இல் எழுதப்பட்டு நியூயார்க் டைம்ஸ் வார இதழில் வெளிவந்தது. 1954இல் ஐன்ஸ்டினின் கருத்துக்கள் என்ற நூலில் மீண்டும் வெளியிடப்பட்டது. 2008இல் சிறந்த விஞ்ஞானிகளின் சிறந்த எழுத்துக்கள் என்று ரிச்சர்டு ட்வாக்கின்ஸ் என்ற உயிரியல் விஞ்ஞானி தொகுத்த நூலில் இடம் பெற்றுள்ளது.)

ஆசிரியர் குறிப்பு:

மாற்றுக்கோணத்தில் மத உணர்வு மானுட மனத்தில் பிறக்க நேர்ந்ததை ஐன்ஸ்டின் இக் கட்டுரையில் அலசுகிறார்.

வரலாற்றிலே மதங்களின் தாக்கம் என்பது பலருக்கு மிகுந்த உடல் வேதனைகளையும்  சிலருக்கு ஆன்ம சுகத்தையும் தந்த கலவை என்பதை மறுக்க முடியாது. சுரண்டும் வர்க்கத்தின், தத்துவ ஆயுதமாக அது இருந்தது இன்றும் இருக்கிறது. அடையாள அரசியலின் கருப்பொருளாகவும் அதே நேரம், கோடானு கோடி மானுடர்களுக்கு ஆன்ம சுகம் தரும், மனச்சாட்சியாகவும் இருக்கிறது. கடவுள் நம்பிக்கை கொண்ட விஞ்ஞானிகளும் உண்டு, பகுத்தறிவாளர்களும் உண்டு, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கற்பிதத்தை ஏற்கவேண்டும் என்று தமிழ்நாட்டு பகுத்தறிவுவாதிகளில் ஒரு சாரார் கூறிவருதை அறிவோம். இது புதிதல்ல, 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  ஜெர்மன் நாட்டு தத்துவ ஞானி இமானுவேல் கான்ட் கடவுள் இல்லை என்றாலும், நடைமுறையில் கடவுள் என்ற கற்பிதம் தேவைப்படுவதால் கடவுள் உண்டு என வாதிட்டவர். ஐன்ஸ்டின் இயற்கைக்கு அப்பால் கடவுள் இருப்பதாக நம்புகிறவர் அல்ல, அந்த வகையில் அவர் ஒரு நாத்திகர், ஆனால் இயற்கையையே கடவுளாகக் கருதுபவர். அந்த வகையில் அவர் ஒரு ஆத்தீகர். அவர் விஞ்ஞான ஆய்வில் ஈடுபடுபவர்கள் மட்டுமே உண்மையான சமய உணர்வுள்ளவர்கள்  என்ற முடிவிற்கு நம்மை இழுக்க முன்வைக்கும் வாதங்கள் மிகவும் சுவாரஸ்யமானது. காஸ்மிக் ரீலிஜியஸ் பீலிங் என்று ஒரு உணர்வு இருப்பதாக வாதிடுகிறார்.

கடவுள் உண்டா? இல்லையா? என்ற சர்ச்சை நெடுங்காலமாக அறிவுலகத்தை  கலக்கி வருவதை நாம் அறிவோம். இன்று அரசியலில் மதவாதிகள் கை ஓங்கவே, இன்னொரு மட்டத்தில் கடவுள் வேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சையாக அறிவுலகத்தை கலக்குகிறது. மதம் விஞ்ஞானத்தையும், விஞ்ஞானி களையும் வேட்டையாடியதை மறுக்க, வரலாறுகளை திருத்தி எழுதும் முயற்சிகள்  இன்று மலிந்து விட்டது. ஆதிகால தத்துவ சர்ச்சைகளுக்கு மத சாயம் பூசவும், எல்லாம் வல்லவன் உண்டு என்று நீரூபிக்க பயன்படுத்துவதும் அதிகமாகி வருகிறது. சுரண்டும் வர்க்க சார்புள்ள தத்துவ மேதைகள் மதமில்லையேல் மானுடம் இல்லை என்று நீரூபிக்க படாதபாடு படுவதையும் காண்கிறோம். இந்நிலையில் இந்தக் கட்டுரை வாசகர்களின் சிந்தனையை கிளறி, தேடும் உணர்வைத் தூண்டும் என்பதால் வெளியிடுகிறோம்.)

– ஆசிரியர் –

ஆன்மீக இயக்கத்தையும் அதன் வளர்ச்சியையும் ஒருவர் புரிந்து கொள்ள விரும்பினால், மனித குலம் எதனைச் செய்தாலும், எதனைச் சிந்தித்தாலும் அவைகள் அனைத்தும் ஆழமாக உணர்கிறத் தேவைகளை நிறைவேற்றி திருப்தியை பெறவும், வலியைப் போக்கி சுகத்தைப்  பெறவும் தான் என்பதனை நிரந்தரமாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். மானுட படைப்புக்களும், முயற்சிகளும் மனதை கிளர்ச்சியுறச் செய்தாலும், உணர்வுகள், ஆதங்கங்கள் (குநநடiபே யனே டுடிபேiபே) என்ற  இரண்டுமே அந்த மானுட முயற்சிகளையும், படைப்புக்களையும் உருவாக்குகிற உந்து சக்தியாகும். இப்பொழுது கேள்வி என்ன வெனில் மதச் சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் அதனுடைய பரந்த பொருளில் எந்த ஆதங்கத்தினால் (நுஅடிவiடிn) அல்லது தேவையினால் மானுடம் கண்டது? சற்று யோசித்தாலே, மத சிந்தனைகளும், அனுபவங்களும் பிறக்க பலவிதமான மன உணர்வுகளே காரணம் என்பது தெரியும்.

ஆதிகால மனிதனிடம் எல்லாவற்றிற்கும் மேலாக பயமே மத உணர்வுகளைத் தூண்டியது, பசி, காட்டுமிருகங்கள், நோய், மரணம் இவைகளினால் ஏற்படும் பயம்; இதற்கு காரணம், அன்றைய கட்டத்தில் மானுட சமூகத்திற்கு காரண காரியங்கள் பற்றிய ஞானம் சரிவர வளராமை ஆகும்.

ஆதிகால மானுடன் துவக்கத்தில் உயிருடன் இருப்பதற்கான காரணத் தொடர்புகளை புரிகிற அளவிற்கு மன வளர்ச்சி பெறாத நிலையில் பசி, பயங்கர மிருகங்கள், மரணம் இவைகள் பற்றிய பயமே எல்லாவற்றிற்கும் மேலாக மத எண்ணங்களை தூண்டியிருந்திருக்கிறது. அந்தக் கட்டத்தில் மானுட மனம் சற்றேறக்குறைய தன்னைப் போன்ற ஒன்றை கற்பிதம் செய்திருக்கிறது. அதனுடைய விருப்பத்தினாலும், ஆற்றலாலும் இந்த பயங்கர நிகழ்வுகள் நடப்பதாக கருதியிருக்கிறது, நடவடிக்கைகள், பலிகள் இவைகளை செய்து அவைகளிட மிருந்து சலுகைகள் பெற முயற்சித்திருக்கின்றனர்.

அழிவுறாத அந்த சக்தியை திருப்திப்படுத்தவும், சலுகைகள் பெறவும் எடுக்கும் இந்த முயற்சிகள் பாரம்பரிய பழக்க வழக்கத்திற்கேற்ப இருந்திருக்கிறது. இங்கே நான் குறிப்பிடுவது பயத்தால் உருவாகும் மதத்தை பற்றியே.

இந்த மதம் உருவாகவில்லை என்றாலும், பூசாரி சாதி உருவாகி நிலைக்க முதல் படியாக இது இருந்திருக்கிறது.எதைக் கண்டு பயந்தனரோ அதற்கும் இவர்களுக்குமிடையே சமரசம் செய்பவர்களாகி, வழி நடத்தும் நிலையை அந்த பூசாரி சாதி உருவாக்கிக் கொண்டது. பல சமூகங்களில் வேறு காரணிகளால் தலைவராகவோ, ஆளுபவராகவோ அல்லது சலுகைகளை அனுபவிக்கும் வர்க்கமாக ஆனவர்கள் இகலோக நடவடிக்கை களோடு, இந்த பூசாரி கடமையையும் இணைத்து தங்களது பதவியை உறுதிப்படுத்த வைத்திருப்பதை காணமுடியும். அந்தவகையில் ஆட்சியாளர்களும், பூசாரி சாதியும் தங்கள் நலன்களை காக்க இணைந்திருப்பதையும் காண முடியும்.

மதம் திரள இன்னொரு முகாந்திரம் சமூக நிர்ப்பந்தமாகும். தாய், தந்தையர்கள், பெரிய சமூகத் தலைவர்கள் எல்லோருமே தடுமாறுபவர்கள், மரணம் அடைபவர்களே. வழிகாட்டவும், அன்பு செலுத்தவும், ஆதரவு நல்கவும் ஒருவர் தேவை என்ற ஆதங்கம் சமூக அல்லது தார்மீக அடிப்படையில் கடவுள் பற்றிய கருத்துருவாக்கத்திற்கு மற்றொரு காரணியாகிறது. இந்தக் கடவுள் பரிவுகாட்டுபவர், தகுதிக்கேற்ப தண்டிக்கவும், பரிசு வழங்கவும் செய்பவர். நம்புகிறவர்களின் கண்ணோட்டத்திற் கேற்ப ஆற்றலுள்ள இந்தக் கடவுள் அவர்களது குலத்தை அல்லது மனிதராசியை நேசிப்பவராகவும், பாதுகாப்பவராகவும் இருக்கிறார்; உயிரையும் கூட காப்பவராக இருக்கிறார்; துக்கம் ஏற்படுகிறபொழுது ஆறுதல் கூறுபவராக; நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றுபவராக; இறந்தவர்களின் ஆன்மாவை போஷிப்பவராக இருக்கிறார். இது சமூக அல்லது தார்மீக அடிப்படையில் உருவாகும் கடவுள் பற்றிய கருத்தாகும். யூத வேதம் பய அடிப்படையிலிருந்து, தார்மீக அடிப்படைக்கு கடவுள் பற்றிய கோட்பாட்டிற்கு வளர்ந்ததை வியக்கத்தக்க முறையில் விளக்குபவையாக இருக்கிறது. இந்த மாற்றம் புதிய ஏற்பாடெனும் வேதத்திலும் தொடர்வதையும் காணமுடியும். நாகரிகமடைந்த எல்லா மக்களின், குறிப்பாக கீழ் திசைமக்களின் மதங்கள் தார்மீக அடிப்படை கொண்டவைகளே. மதங்கள் பய அடிப்படையிலிருந்து மாறி தார்மீக அடிப்படைக்கு வந்தது என்பது மக்களின் வாழ்வில்  மிகப்பெரிய முன்னேற்றமாகும். இருந்தாலும் ஆதிகால மதங்கள் முழுவதும் பய அடிப்படை யிலும், நாகரிகமடைந்த மக்களின் மதங்கள் சுத்தமான தார்மீக அடிப்படையிலும் இருப்பதாக ஒருதலைப்பட்சமான முடிவிற்கு வந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உண்மையில் எல்லா மதங்களும் இவ்விரண்டின் கலவையாக இருக்கின்றன. இந்த வேறுபாட்டுடன்  சமூக வாழ்வின் உயர் மட்டங்களில் தார்மீக அடிப்படை கொண்ட மதமே மேலாதிக்கத்தில் உள்ளது. எல்லா வகையான மதங்களிலும் கடவுளின் அம்சங்கள் என்பது மானுட சாயலுடன் இருப்பது என்பது பொது அம்சமாகும். பொதுவாக சிறப்பாக உயர்ந்த மனப்பக்குவம் கொண்ட சமூகப் பிரிவில் உள்ள தனி நபர்களே இந்த உணர்வை தாண்டி உயர முடியும். ஆனால் மத உணர்வில் மூன்றாவது கட்டமாக ஒன்றை நான் கருதுவது உண்டு, அது அபூர்வமாக சுத்தமான வடிவில் சிலரிடம் இருக்கும், அதனை நான் பரந்த சமய உணருதல் (காஸ்மிக் ரீலிஜியஸ் பீலிங்) என்று அழைக்கிறேன். இது கடவுள் பற்றிய மானுட சாயல் இல்லாத உணர்வாக இருப்பதால் முழுமையாக இந்த உணர்வில்லாத வர்களிடம் அதனை உணர்த்துவது  மிகவும் கடினம். சிந்தனை உலகிலும், இயற்கையிலும், வெளிப்படுகிற விந்தைகளையும் உணர ஒருவனது ஆசைகளும், நோக்கங்களும் இயலாது போவதை அவன் உணருகிறான். தனது வாழ்வு சிறைபடுத்தப் பட்டிருப்பதாக கருதுகிறான்.  அண்ட சராசரங்களனைத்தையும் முழுமையாகக் கண்டு அனுபவிக்க விரும்புகிறான். இந்த பரந்த மத உணருதல் மதங்கள் தோன்றியபொழுதே தோன்றிவிட்டன. இதற்கு டேவிடின் கூற்றுகள், இன்னும் சில ஞானிகளின் கருத்துக்கள் இவைகளை உதாரணமாகக் கூறலாம். சிறப்பாக ஷோபன்ஹுயர் மூலம் அறிந்த புத்தரின் போதனை களில் இந்த உணர்வுகள் பலமாக இருப்பதை அறிகிறோம்.

எல்லா கால கட்டத்திலும் மதத்தின் தன்மைகளில் இந்த வகையான சமய உணர்வுகள் தெளிவாக இருந்திருக்கிறது. இந்த உணர்வுகள் மானுடத் தோற்றத்தில் கடவுள்  என்றோ  வேதங்கள் என்றோஅறியவில்லை, அதனால் தேவாலயங்கள் அமைத்து, அதன் மூலம் மையப்படுத்தப்பட்ட போதனைகள் என்று எதுவும் இருக்கவில்லை. எனவே ஒவ்வொரு காலகட்டத்திலும் மத எதிர்ப்பாளர்களே இத்தகைய மேன்மையான சமய உணர்வுடன் இருந்தனர். அவர்கள் காலத்தில் அவர்களை நாத்திகர்கள் என்றே கருதப்பட்டனர். சில சமயங்களில் ஞானிகளாகவும் கருதப்பட்டனர். இந்த வெளிச்சத்தில் டெமாகிரிட்டஸ், அசிசியின் பிரான்சிஸ், ஸ்பினோசா ஆகியவர்களை பார்த்தால் ஒருவரைப் போல் ஒருவர் உணர்ந்தவர்கள் எனலாம். கடவுளைப் பற்றிய கருத்தும் இல்லாமல் வேதங்களும் இல்லாமல் பரந்த சமய உணர்வை எப்படி பிறரோடு பகிரமுடியும்?

எனது கருத்து என்னவென்றால் கலை, விஞ்ஞானம் ஆகிய இரண்டும் யார் செவி மடுக்கிறார்களோ அவர்களிடம் இந்த உணர்வை எழுப்புவதையும் உயிரோட்டமுள்ளதாக வைப்பதை யும் முக்கிய கடமையாகக் கொள்ளவேண்டும். இந்த வகையில் மதத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் வழக்கத்திற்கு மாறான ஒரு உறவைப்பற்றிய கோட்பாட்டிற்கு வருகிறோம். வரலாற்று ரீதியாக பார்க்கிறபொழுது  விஞ்ஞானமும், மதமும் தீர்க்க முடியாத பகைமை முரண்பாட்டில் இருப்பதை  ஒருவர் காண்பார். காரணகாரிய நியதிகளை சந்தேகத்திற்கிடமில்லாமல் ஏற்கும் ஒருவருக்கு யாரோ தலையிட்டுத்தான் இது நடக்கிறது என்ற கருத்தை ஒரு நிமிடம் கூட ஏற்க மாட்டார். அவருக்கு பய அடிப்படையிலான மதமோ, தார்மீக அடிப்படையிலான மதமோ இவைகளால்  எந்தவிதப் பயனுமில்லை. நல்லதற்கு வரமும், கெட்டதற்கு தண்டனையும் வழங்கும் ஒரு கடவுளை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க இயலாது. ஏனெனில் ஒரு மனிதனது செயலை தீர்மானிப்பது உள்ளார்ந்தோ அல்லது புறக் காரணங்களாலோ ஏற்படும் கட்டாயத் தேவைகளே.  கடவுளின் பார்வையில் ஜடப்பொருட்களின் இயக்கத்திற்கு எவ்வாறு அவைகள் பொறுப்பாக முடியாதோ அது போலத்தான் மானுடர்களின் செயலுக்கு அவர்களைப் பொறுப்பாக்க முடியாது. எனவே தண்டனையோ, பரிசோ வழங்கும் கடவுளை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க இயலாது.

ஆகையினால்  விஞ்ஞானம் நெறி உணர்வை மழுங்கடிக்கிறது என்ற குற்றசாட்டு சுமத்தப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு அநீதியானதாகும். ஒரு மனிதனது அற நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டுமானால் பரிவு, கல்வி, சமூக பந்தம் ஆகியவைகளை அடிப்படைகளாகக் கொண்டிருக்க வேண்டும். மத அடிப்படை இவற்றிற்கு தேவையில்லை. செத்தபிறகு கிடைக்கும் தண்டனை பயமோ அல்லது பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையோ ஒருவனை நெறிப்படுத்த அவசியமென்பது உண்மையில் மானுடத்தை கேவலப்படுத்துவதாகும். எனவே ஏன் மடாலயங்கள் விஞ்ஞானத்தை எதிர்த்து சண்டையிட்டன, விஞ்ஞானிகளை வேட்டையாடின என்பதைக் காண முடிகிறது. மறுபக்கம் பரந்த சமய உணர்வே விஞ்ஞானத் தேடலுக்கு உன்னதமானதும் வலுவானதுமான உந்து சக்தியாக இருக்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். மிகுந்த முயற்சியும், ஈடுபாடுமில்லாமல் துவக்க கால விஞ்ஞானத்தை அடைந்திருக்க முடியாது என்பதை யார் உணர்கிறார்களோ அவர்கள் மட்டுமே உடனடி வாழ்க்கைக்கு அப்பால் இருக்கும் எதார்த்தத்தைக் கண்ட ஆதங்கத்தின் வலுவைப் புரியமுடியும். அண்டசரா சரங்களைப் பற்றிய என்னே அறிவுப்பூர்வமான நம்பிக்கை! எவ்வளவு பலவீனமானதாக இருந்தாலும் என்னே அதைப் புரியவேண்டும் என்ற ஆதங்கம்!

வானத்தில் உலாவும் ஜடப்பொருட்களின் இயக்க இயல் நியதிகளை விண்டுரைக்க நியூட்டனும், கெப்லரும் தனிமையில் உழைப்பை வருடக்கணக்கில் செலவழித்திருக்க வேண்டு மென்பதை யோசித்துப் பார்த்தால் புரியும். நடைமுறையில் பெறும் முடிவுகளை வைத்தே விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அறிமுகம் பெறுபவர்கள் எளிதில் தவறான கருத்துக்களுக்கு ஆட்படும் நிலைமை உள்ளது. அதிலும் அவர்களைச் சுற்றி விஞ்ஞானத்தின் மீது நம்பிக்கையற்ற உலகமிருக்கிறது. அதிலும் இத்தகைய மனப்பாங்கு கொண்டோர்களோ பரந்த உலகில் எங்கெங்கோ நூற்றாண்டுக் கால இடைவெளியில் சிதறிக்கிடக் கிறார்கள். இது போன்ற நோக்கங்களுக்கு தன்னை அர்ப்பணித் தவர்களே எண்ணற்ற தோல்விகளைச் சந்தித்த பிறகும் உறுதியுடன் தனது நோக்கங்களுக்கு விசுவாசமாக இருப்பதற்கு ஆதர்சமாக இருப்பது எது என்பதை உணர முடியும். அந்தப் பரந்த சமய உணர்வே (ஊடிளஅiஉ சநடபைiடிரள குநநடiபே) ஒருவனுக்கு இந்த பலத்தைத் தருகிறது. இன்றையப் பொருளியல் காலத்தில் ஒரு விஞ்ஞான ஆய்வாளனே உண்மையான, முழுமையான சமயம் தழுவுபவனாக இருக்கிறான் என்று இன்று வாழ்கின்ற ஒருவர் கூறியது அநியாயமல்ல.

தமிழில்: வே. மீனாட்சிசுந்தரம்