எங்கெல்ஸ் 200: இணையவழி தொடர் உரைகள் – நிகழ்ச்சிநிரல்

மார்க்சிஸ்ட் இதழ் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து, மாமேதை எங்கெல்ஸ் தொடர்பான இணைவழி தொடர் உரைகளை ஒளிபரப்பவுள்ளோம். எங்கெல்சின் எழுத்துக்களை தமிழ் வாசகப் பரப்பிற்கும் அறிமுகம் செய்வதாகவும், பரவலாக்குவதாகவும் இந்த முயற்சி அமைகிறது. இந்நிகழ்வுகளின் இறுதியில், நவம்பர் 28, 2020 அன்று, சிவப்பு புத்தக தினம் நிகழவுள்ளது. தமிழகமெங்கும் 10 ஆயிரம் இடங்களில் ‘கம்யூனிசத்தின் கோட்பாடுகள்’ நூல் வாசிக்கப்படவுள்ளது. இதற்காக 1 லட்சம் புத்தக பிரதிகள் அச்சிடும் பணிகள் நடந்துவருகின்றன. மேலும், ஒலி வடிவில் இந்த புத்தகத்தை மார்க்சிஸ்ட் செயலி வழியே கேட்கலாம்.

கீழ்க்காணும் உரைகள், குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் மாலை 7 மணிக்கு நேரலையாக கேட்கலாம். (Youtube I Facebook )

28.09.2020 – கம்யூனிசத்தின் கோட்பாடுகள் – சீத்தாராம் யெச்சூரி (தொடக்க நிகழ்வு)

5.10.2020 – 21 ஆம் நூற்றாண்டிற்கு எங்கெல்ஸ் – என்.குணசேகரன்

12.10.2020 – கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் – ஜி.ராமகிருஷ்ணன்

19.10.2020 – குடியிருப்புப் பிரச்சினை – அ.பாக்கியம்

26.10.2020 – டூரிங்குக்கு மறுப்பு – மு.சிவலிங்கம்

2.11.2020 – இயற்கையின் இயக்கவியல் – டாக்டர் த வி.வெங்கடேஸ்வரன்

9.11.2020 ஜெர்மன் சித்தாந்தம் – பேரா.முத்துமோகன்

15.11.2020 – மனிதக்குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைக் கட்டத்தில் உழைப்பு வகிக்கும் பாத்திரம் – சகஸ்ரநாமம்

16.11.2020 – இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமைகள் – அ.சவுந்தரராசன்

17.11.2020 – குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் – பேரா.வீ.அரசு

18.11.2020 – எங்கெல்ஸ் முன்னுரைகள் – இரா.சிந்தன்

19.11.2020 – அரசு பற்றிய எங்கெல்ஸின் எழுத்துக்கள் – ச.லெனின்

20.11.2020 – எங்கெல்ஸின் எழுத்துக்களில் தொழிலாளி வர்க்கம் – எஸ்.கண்ணன்

21.11.2020 – ஜெர்மனியில் விவசாயப் புரட்சி – வி.மீனாட்சி சுந்தரம்

22.11.2020 – எங்கெல்சும் மார்க்சின் மூலதனமும் – டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா

23.11.2020 – புனிதக் குடும்பம் – வீ.பா.கணேசன்

24.11.2020 – எங்கெல்சும் அறிவியலும் – டாக்டர் டி.ஜெயராமன்

25.11.2020 – எங்கெல்ஸ் கடிதங்கள் – உ.வாசுகி

26.11.2020 – ஜெர்மனியில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் – ஆர்.பத்ரி

27.11.2020 – வரலாற்றில் பலப்பிரயோகம் வகிக்கும் பாத்திரம் – ச.தமிழ்ச்செல்வன்

28.11.2020 – லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவத்தின் முடிவும் – டி.கே.ரங்கராஜன்

பி.சுந்தரய்யா நினைவு தினம்: மார்க்சிஸ்ட் இதழ் இனி மின் நூல் வடிவிலும் கிடைக்கும்…

பி.டி.எப் டவுன்லோட்

மின் நூல் வடிவில் படிக்க செயலியை பயன்படுத்தவும்

ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1913 ஆம் ஆண்டு பிறந்தவர் தோழர் பி.சுந்தரய்யா. தனது 17 வயதிலேயே படிப்பைத் துறந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி தண்டனை பெற்றவர்.
பிறகு கம்யூனிச சித்தாந்தத்தினை வாழ்க்கை இலட்சியமாக ஏற்றார். உழைக்கும் மக்களையும் விவசாயத் தொழிலாளர்களையும் திரட்டடுவதிலும், மாபெரும் மக்கள் இயக்கங்களை உருவாக்குவதிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

ஹைதராபாத் நிஜாம் மன்னனுக்கு எதிராக நடைபெற்ற நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றதில்  தோழர் சுந்தரய்யாவிற்கு  முக்கிய பங்கு உணடு.

வரலாற்றில் தெலுங்கானா போராட்டம் என்று அழைக்கப்படுகிற அந்தப் போராட்டம் பல லட்சக்கணக்கான விவசாயிகள் ,விவசாயத் தொழிலாளர்களையும் ஈர்த்த போராட்டம். தலைமுறை தலைமுறையாக நிலத்தில் உழுது பாடுபட்டு வரும் மக்களை அடிமைகளாக வைத்திருந்த நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக, நிலத்தில் உழுபவருக்கே உரிமை என்று விவசாயப் புரட்சி நிகழ்ச்சி நிரலை முன்னுக்கு கொண்டு வந்த போராட்டம்.

அந்தப் போராட்டத்தில் தலைமை தாங்கிய கம்யூனிஸ்டுகள் இந்திய சோசலிச மாற்றத்தில் விவசாயிகளின் புரட்சிகரமான பங்கினை உயர்த்திப் பிடித்தனர். இத்தகு  பாரம்பரியம் கொண்ட போராட்டம்.

தோழர் சுந்தரையா “தெலுங்கானா மக்கள் போராட்டமும், அதன் படிப்பினைகளும்” என்கிற சுமார் 600 பக்க நூலில் போராட்ட வரலாற்றை பதிவு செய்துள்ளார். இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கான மாற்றமும், பாட்டாளிவர்க்க அதிகாரமும் மலர வேண்டும் என்று போராடுகிற அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் நூல் அது. பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் இந்த போராட்டத்தில் உயிர் நீத்தனர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நீண்ட  தியாக வரலாற்றில் தெலுங்கானா போராட்டத்திற்கு முக்கிய இடம் உண்டு.

1964-ஆண்டில் மார்க்சிஸ்ட் கட்சி  உதயமானபோது அதன் பொதுச் செயலாளராக  தேர்ந்தெடுக்கப்பட்டு  மார்க்சிஸ்ட் கட்சி வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றியவர். 1985 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி அன்று தோழர் சுந்தரய்யா மறைந்தார்.

இன்று கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில்,’எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்’ என்று ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தோழர் சுந்தரய்யா வாழ்க்கையை  நினைவுகூர்வது சோசலிச இலட்சியத்தின் மீதான உறுதிப்பாட்டை வலுப்படுத்த உதவிடும்.

தமிழகத்தில் மார்க்சிய தத்துவத்தை ஏந்திப் பிடித்து, உலக நடப்புகளையம் நாட்டு நடப்புகளையும் மார்க்சிய லெனினிய பார்வையில் விளக்குகிற கட்டுரைகளை மார்க்சிஸ்ட் மாத இதழ் வெளிக்கொண்டு வருகிறது.

இன்று மின் நூல் வடிவமெடுத்து மேலும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களை சென்றடைய உள்ளது.

இன்று தோழர் க.பாலகிருஷ்ணன் அவர்கள் தோழர் சுந்தரய்யாவிற்கு  அஞ்சலி செலுத்தி மார்க்சிஸ்ட் இணையதளத்தில் மின் நூல் பிரிவினை துவக்கி வைக்கிறார்.

வாசகர்கள் தொடர்ந்து நல்லாதரவு அளிக்க கோருகிறோம்.

இன்றைய தினத்திற்கு மேலும் ஒரு சிறப்பு உள்ளது. இன்று உலகில் வியட்நாம் நாடு சோசலிச நாடாக சாதனைகள் பல படைத்து வருகிறது. வியட்நாமில் புரட்சி நடத்தி சோசலிசத்தை உருவாக்கிய ஹோசிமின் பிறந்த தினம். 1890ஆம் ஆண்டு மே 19 அன்று பிறந்த மாபெரும் பாட்டாளி வர்க்கத்தின் உன்னதமான தலைவர் ஹோசிமின் வாழ்க்கையையும் நினைவுகூர்வது அவசியம்.

– என்.குணசேகரன்
மார்க்சிஸ்ட் ஆசிரியர் குழு.

இந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்கு

தேவி பிரசாத் சட்டோபாத்யாயா நூற்றாண்டு நிகழ்வு

 • வீ.பா.கணேசன்

அறிவியல் மனப்பான்மையையும் மதச் சார்பின்மையையும் தமது இரு கண்களாகக் கருதுவோர் அனைவரும் ஒருபுறமும், இந்துத்துவவாதிகள், அவர்களது புரவலர்கள், பரிவாரங்கள் மறுபுறமும் நிகழ்த்திவரும் ‘வாழ்வா, சாவா?’ என்ற போராட்டம் நடைபெற்று வரும் இத்தருணத்தில்தான் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் நூற்றாண்டும் வந்து சேர்ந்துள்ளது.

இந்தியாவின் தத்துவ மரபு என்பது ஆன்மிகம் தவிர வேறல்ல; மேற்கத்திய தத்துவங்களுக்கெல்லாம் மாறாக, மனிதனின் ஆன்ம மீட்சியை மட்டுமே முன்னுரிமையாகக் கொண்ட மேன்மை படைத்தது என்று சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் தலைமையில் இந்தியாவின் நவீன தத்துவ ஆசிரியர்கள் ஆழமாக நிறுவத் தலைப்பட்ட நேரத்தில்தான் இந்திய வரலாற்றில் வேத மரபை மறுத்தொதுக்கும் தத்துவங்களே பெருமளவில் நிலவியதையும், அவை வேத மரபினரால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட போதிலும் வேத மரபினை உயர்த்திப் பிடிக்கும் எழுத்துக்களில் வாதப் பிரதிவாதங்களாக ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் அதன் எச்சங்களைக் கொண்டே இந்திய தத்துவ உலகில் உலகாயத மரபின் பெருமையை நிலைநாட்டிய பெருமை பெற்றவர் பேராசிரியர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா.

மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல் வாத, இயங்கியல் அடிப்படையிலான அவரது  போர்க்குணமிக்க பொருள்முதல்வாதக் கருத்துக்களைப் பயின்றும், அவற்றை மக்களிடம் எடுத்துச் சென்று சிந்தனைக் களத்தில் போராடுவதன் மூலம் மட்டுமே அவரது இந்தப் பிறந்தநாள் நூற்றாண்டை நாம் கொண்டாட வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் மாத இதழின் நோக்கமாக அமைந்திருந்தது.

இந்த முயற்சியின் தொடக்க நிகழ்வாக சென்னை பச்சையப்பன் கல்லூரியின் தத்துவத் துறை, பாரதி புத்தகாலயம் ஆகியவற்றோடு இணைந்து மார்க்சிஸ்ட் மாத இதழ் கடந்த பிப்ரவரி 16 ஞாயிறன்று சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தேவி பிரசாத் சட்டோபாத்யாய குறித்த முழுநாள் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து தொடங்கி தமிழகத்தின் புகழ்பெற்ற கல்லூரிகளின் தத்துவத் துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று இந்திய தத்துவ மரபின் ஒளிவிளக்காகத் திகழ்ந்து வரும் தத்துவ அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் உயரிய பங்களிப்புகளை முன்வைத்தனர். அவர்களது முன்வைப்புகளின் ஒரு சிறு தொகுப்பே இக்கட்டுரை. (சென்னை கல்லூரிகளைச் சேர்ந்த தத்துவத் துறை மாணவர்கள் பெருமளவில் பங்கேற்ற இக்கருத்தரங்கில் எழுத்துபூர்வமாக முன்வைக்கப்பட்ட கட்டுரைகளில் முதலாவதாக தோழர். ப.கு. ராஜனின் “அறிவியல்-தத்துவம்-ஊடாடல் – தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் பதிவுகள்” என்ற கட்டுரை இந்த இதழில் வெளியாகிறது. மற்ற கட்டுரைகள் அடுத்து வரும் இதழ்களில் வெளிவரும்)

காலை அமர்விற்கு சென்னை பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர் என். சேட்டு அவர்கள் தலைமை வகித்தார். பச்சையப்பன் கல்லூரி, தத்துவத் துறை தலைவர் வி. சீனிவாசன் அவர்களின் வரவேற்புரை ஆற்றினார்.

பேரா. கருணானந்தம் (துறைத் தலைவர் (ஓய்வு), வரலாற்றுத் துறை, விவேகானந்தா கல்லூரி, சென்னை) :

“வரலாறு இல்லாத தத்துவமும் தத்துவம் இல்லாத வரலாறும் பயனளிப்பதில்லை. தத்துவம் மக்களது உளப்பாங்குகளை வடிவமைக்கிறது. அது அவர்கள் மீது சில தளைகளையும் பூட்டியிருக்கிறது. அவற்றை உடைத்தெறிந்து முன்னேற முடியாமல் நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். அத்தகையதொரு நிலைமையில்தான் அந்த தத்துவத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாகிறோம். இந்தப் பின்னணியில்தான் தேவி பிரசாத் அவர்களின் பெருமையை நாம் உணர வேண்டியுள்ளது. இந்திய தத்துவங்கள் நம் முன்னால் தவறாக முன்வைக்கப்படுகின்றன என்பதை அம்பலப்படுத்தியவரும் அவரே. வேதங்களை, வேத யக்ஞங்களை, வேத சமூகத்தின் கட்டமைப்பை எதிப்பவர்கள் நாத்திக வாதிகள். அவர்கள் முன்வைத்த இருப்பை மாற்ற வேண்டிய தத்துவம் பற்றி அவர் பேசினார். தத்துவத்தை மனிதப்படுத்துவது என்பதைச் செய்தவர் அவர். அவரது முயற்சிகளை பரவலாக எடுத்துச் செல்லும் முயற்சியே இந்த விழா என்றே நான் கருதுகிறேன்.”

முனைவர் எம். வெங்கடாசலபதி, துறைத்தலைவர், தத்துவத் துறை, சென்னை பல்கலைக்கழகம்:

“நவீன இந்திய தத்துவ உலகில் இன்றியமையாத, வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்புச் செய்தவர் பேரா. தேவி பிரசாத் அவர்கள். கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக இந்திய சமூகத்தை அழுத்தி வந்த மடமை, சுரண்டல் ஆகியவற்றை மக்களிடையே எடுத்துக் கூறியவர்கள் என டாக்டர் அம்பேத்கர், பேரா. தேவி பிரசாத் ஆகியோரை கூறலாம். ஒரு மாணவராகவும், ஆசிரியராகவும் இந்திய தத்துவ மரபில் வேத மரபையே பிரதான தத்துவங்கள் என முன்வைத்திருந்த நிலையில் இந்தியாவின் முக்கிய தத்துவ மரபுகள் அனைத்துமே வேத மறுப்பு தத்துவங்கள்தான் என்பதை உணர்த்தி, உலகாயதம் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் அவர். அவருடையது ஒரு சித்தாந்தப் புரட்சி ஆகும். இந்திய சித்தாந்தங்களில் பெரும்பாலானவை பொருளை மையமாகக் கொண்டவையே. எனினும் அவை இரண்டாம் தரமாகப் பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்திய தத்துவ மரபில் அதன் முக்கிய இருப்பை, தாக்கத்தை அழுத்தமாக எடுத்துக் கூறி புதுப்பாதை சமைத்தவர் பேரா. தேவி பிரசாத்.

முனைவர் கிருஷ்ணன், துறைத் தலைவர், தத்துவத் துறை, விவேகானந்தா கல்லூரி, சென்னை:

“இந்திய தத்துவ மரபில் கருத்துமுதல் வாதம் எப்படி உருவானது என்பதை அறிந்து கொண்டால் மட்டுமே அதற்கெதிராக உயர்ந்து நிற்கும் பொருள்முதல் வாதத்தை உங்களால் துய்க்க முடியும் என்பதை தனது நூல்கள் மூலமாக எடுத்துக் காட்டியவர் பேரா. தேவி பிரசாத். மதச் சார்பின்மை, அறிவியல் பூர்வமான அணுகுமுறை, பகுத்தறிவுப் போக்கு ஆகியவற்றின் மொத்த உருவம் தான் பொருள்முதல் வாதம் என்பதை ஆய்வு பூர்வமாக இந்திய தத்துவ உலகில் நிறுவியவர் அவர்.”

உணவு இடைவேளைக்குப் பின்பு தொடங்கிய மதிய அமர்விற்கு மார்க்சிஸ்ட் மாத இதழின் ஆசிரியர் தோழர் என். குணசேகரன் தலைமை வகித்தார்.

முனைவர் எஸ். பன்னீர் செல்வம், துறைத்தலைவர்(ஓய்வு), தத்துவத் துறை, சென்னை பல்கலைக்கழகம்:

“இந்திய தத்துவ உலகின் பேராசிரியராகத் திகழ்ந்த டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் பிரம்மத்தை முன்னிறுத்தியே பவுத்தம், சமணம் உள்ளிட்ட இந்திய தத்துவங்களை அறிமுகம் செய்கிறார். இந்தப் பின்னணியில் வேத மறுப்புக் கொள்கையை வேத மரபு நூல்களில் இருந்தே பெயர்த்தெடுத்து வெளிக்கொண்டு வந்த பேரா. தேவி பிரசாத் பாலி, சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளை அறிந்தவராக இருந்தபோதிலும் மற்ற மொழிகளை அறிந்திராதது பற்றி வருந்தினார். இந்திய தத்துவ மரபில் புதிய அணுகுமுறைக்குத் தடம் பதித்த தேவி பிரசாத்தின் அடியொற்றி ஆன்மீக மரபை மீறிய வகையில் இந்திய தத்துவ மரபை வரும் தலைமுறையினரிடையே எடுத்துச் செல்ல அவரது எழுத்துக்கள் பெரிதும் உதவும்.”

பேரா. ஆ. தே. ரேவதி, தத்துவத் துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை: “இந்திய தத்துவத் துறையானது கடந்த பல ஆண்டுகளாகவே எந்தவொரு அறிவியல்பூர்வமான உண்மையை அடிப்படையாகக் கொண்டதாக இல்லாத வகையிலேயே அதன் பாடக் கட்டமைப்பு இருந்து வந்துள்ளது. இந்தப் பின்னணியில் ஒரு பேராசிரியராக இருந்த தேவி பிரசாத் அவர்கள் இதை உடைத்து நொறுக்கும் வகையில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். வேத மரபிற்கு எதிரான தனது ஆய்விற்கு அகழ்வாராய்ச்சி உண்மைகளையும் பயன்படுத்திய முதல்வரும் அவரே. அறிவியல் முறைப்படியான ஆய்வு என்பதே அவரை இயங்கியல் வகைப்பட்ட சிந்தனைக்கு இட்டுச் சென்றது. இந்தப் போக்கை அவரது நூல்கள் நெடுகிலும் நம்மால் காண முடியும்.”

இறுதியாக சிறப்புரை ஆற்றிய பேரா. அருணன்: ” எனது தத்துவத் தேடல் கடவுள் உண்டா, இல்லையா? என்பதில் இருந்துதான் தொடங்கியது. அந்த வகையில் எனது சிந்தனைக்குப் பாதை சமைத்துத் தந்த பேராசிரியர் தேவி பிரசாத் அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். இந்தியா என்ற பெயர் புதிதாக இருந்தாலும், இந்தத் துணைக்கண்டம் நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வந்துள்ளது. இந்திய தத்துவ மரபிலே கடவுள் மறுப்பு என்ற மரபு உண்டா? என்ற கேள்வி எழுந்தபோது, அது நாத்திக மரபாக, இன்னும் சொல்லப்போனால் வேத மறுப்பு மரபாக இருந்தது என்பதை வேத மரபு நூல்களிலிருந்தே உதாரணங்களைக் கொண்டு முதலில் எடுத்துக் கூறியவர் தேவி பிரசாத். இத்தகைய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டுதான் நான் மார்க்சிய வாதியாக ஆனேன்.

ஆன்மீக மரபுதான், வேத மரபுதான் இந்திய தத்துவ மரபு என்று அடித்துச் சொல்லிக் கொண்டிருந்த காலத்திலே, அதை மறுத்து, வேத மறுப்பு மரபும் இந்திய தத்துவ மரபின் பிரிக்க முடியாத ஒரு பகுதிதான் என்பதை வலுவான ஆதாரங்களைக் கொண்டு நிலைநாட்டியவர் அவர். இந்த உலகமே பிரதானம். அதன் இயங்கு நிலையில் ஒரு கட்டத்தில்தான் உணர்வு என்பது வந்தது என்பதை நிறுவியதுதான் உலகாயதம். அதைப் பற்றி அதன் எதிரிகள், குறிப்பாக ஆதி சங்கரர் எடுத்துக் காட்டிய உதாரணங்களைக் கொண்டே உலகாயதம் பற்றி நம்மால் தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

நமது தத்துவ மரபு பன்மைத் தன்மை கொண்டது என்பதை நிரூபித்தவர் தேவி பிரசாத் அவர்கள். ஆதி சங்கரரின் மாயா வாதத்தை உடைத்து நொறுக்கி அதன் சமூக நோக்கத்தை அம்பலப்படுத்தியவர் அவர். ஒவ்வொரு தத்துவத்திற்கும் பின்னால் உள்ள சமூக நோக்கை அவர் செய்தது போன்று அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவதுதான் நாம் தேவி பிரசாத் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு தருணத்தில் அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என்று கருதுகிறேன்.”

10 ஆயிரம் இடங்களில் #கார்ல்மார்க்ஸ்200 கொண்டாட்டம் – சிறப்புக் கட்டுரை …

மார்க்சிஸ்ட் கட்சியின் அனைத்துக் கிளைகளும் சுமார் 10 ஆயிரம் இடங்களில் மார்க்ஸ் 200 வாசிப்பு நிகழ்வை வரும் மே.4 ஆம் தேதி முன்னெடுக்கவுள்ளனர். அதனையொட்டி வெளியிடப்பட்ட சிறப்புக் கட்டுரை மற்றும் அதன் ஒலி வடிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Docx கோப்பு : Karl Marx for Reading

PDF கோப்பு: Karl Marx for Reading PDF

Audio : DOWNLOAD (MP3) (60 MB)

காரல் மார்க்ஸ்

(இக்குறிப்பு               லெனின் எழுதிய “காரல்மார்க்ஸ்” என்ற அறிமுக கட்டுரையை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டது. )

 1. வாழ்க்கை

காரல் மார்க்ஸ் ஜெர்மனியில் ட்ரையர் நகரில் 1818 மே 5-ம் தேதியன்று பிறந்தார். அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். மேற்படிப்பிற்காக முதலில் பான், பின்பு பெர்லின் நகர்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து தந்தையின் விருப்பத்திற்காக சட்டம் படிக்கத் தொடங்கிய மார்க்ஸ் வரலாறு, தத்துவம் ஆகியவற்றை முக்கிய பாடங்களாகக் கற்றார். தத்துவ மேதை எபிக்யூரஸ் பற்றிய ஆய்வை சமர்ப்பித்து  முனைவர் பட்டம் பெற்றார்.

இளம்பருவம்

மாணவப் பருவத்தில் அவர் ஒரு பேராசிரியராக விரும்பினார். எனினும் அன்றிருந்த பிற்போக்கு அரசின் கொள்கை அன்றைய முன்னணி இடதுசாரிகளான லுத்விக் ஃபாயர்பாக், ப்ரூனோ பாயர் போன்ற பேராசிரியர்களை பல்கலைக்கழகங்களில் நுழைவதைத் தடுத்தது. எனவே ஆசிரியர் கனவைத் துறந்து “புதிய ரைனிஷ்” என்ற செய்தித்தாளில் ஆசிரியராகச் சேர்ந்து 1842-ஆம் ஆண்டு அக்டோபரில் அதன் முதன்மை ஆசிரியராக உயர்ந்தார்.

அவரது பொறுப்பில் இந்த இதழ் பெருமளவிற்கு புரட்சிகரமான, ஜனநாயக எண்ணங்களைத் தூண்டுவதாக வளர்ந்து வந்த நிலையில், அரசாங்கம் அதை தினமும் மூன்று முறை தணிக்கை செய்யத் தொடங்கியது. 1843 ஜனவரி -1 அதை முற்றிலுமாக முடக்கிவிட அரசு திட்டமிட்டிருப்பதை அறிந்த மார்க்ஸ் பத்திரிக்கையை காப்பாற்றுவதற்காக அதற்கு முன்பே ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார். இருப்பினும் அந்தப் பத்திரிக்கை முற்றிலுமாக நின்று போனது.

அரசியல் வாழ்க்கை

கார்ல் மார்க்ஸ், முதலாளித்துவ சிந்தனை கொண்டவரான ஆர்னால்ட் ரூஜ் என்பவருடன் சேர்ந்து ஜெர்மன்-பிரான்ஸ் தொகுப்பு என்ற இதழை பாரீஸ் நகரில் இருந்து கொண்டு வர திட்டமிட்டு அங்கு சென்றார். முதல் இதழோடு அது நின்று போனது. அவ்வாறு வெளியான முதல் இதழ் மார்க்ஸ்-எங்கல்ஸ் ஆகியோரின் கட்டுரைகளைக் கொண்டதாக இருந்தது. அந்த கட்டுரைகள் பொருள்முதல்வாதம், கம்யூனிசம் போன்ற  கொள்கைகளை விளக்குவதாக அமைந்தன. மார்க்சிய தத்துவம் உருவாகத் துவங்கிய காலம் அது.  சமூகத்தில் இருந்த அனைத்தையும் இரக்கமேயின்றி விமர்சிப்பதாகவே மார்க்சின் எழுத்துகள் இருந்தன.

1844 செப்டம்பரில் பிரடரிக் எங்கல்ஸ் பாரீஸ் நகரில் தங்கியிருந்த சில நாட்களில் மார்க்ஸ்-எங்கல்ஸ் இருவருக்குமிடையே துளிர்விடத் தொடங்கிய நட்பு, வாழ்நாள் முழுவதும் நீடித்தது. பாரீஸ் நகரில் அப்போதிருந்த பல்வேறு உயர் நடுத்தர  வர்க்கத்தினர் பேசி வந்த, போலியான சோசலிச கருத்துகளை எதிர்த்து இருவரும் கடுமையாகப் போராடி வந்தனர். 1845-ல் பயங்கரமான புரட்சியாளர் என அறிவிக்கப்பட்ட மார்க்ஸ் பாரீஸ் நகரிலிருந்து இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டார். பெல்ஜியம் நாட்டின் தலைநகரான ப்ரசெல்ஸ் நகரில் சென்று தங்கினார்.

1847-ல் மார்க்சும் எங்கல்சும் கம்யூனிஸ்ட் லீக் (கம்யூனிஸ்ட் கழகம்) என்ற ரகசிய பிரச்சாரக் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வந்தனர். அந்த ஆண்டு  லண்டனில் நடைபெற்ற அதன் இரண்டாவது காங்கிரசில், கம்யூனிச கொள்கைகள் பற்றிய பிரசுரம் ஒன்றை உருவாக்கும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மார்க்ஸ்-எங்கல்ஸ் இணைந்து உருவாக்கி, 1848 பிப்ரவரியில் வெளியான கம்யூனிஸ்ட் அறிக்கையானது சமூக வாழ்க்கை பற்றிய புதிய உலகக் கண்ணோட்டம் அந்த அறிக்கையில் இருந்தது. சமுகம் எப்போதும் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் வந்துள்ளது என்ற இயங்கியல் பார்வை அதில் இருந்தது. இயற்கையின் பொருள்கள், சமுகம் ஆகியவற்றின் வளர்ச்சி பற்றிய முழுமையான, ஆழமான தத்துவமான இயங்கியல் பொருளாதாரம் அதில் இருந்தது. சமூகங்களில் உள்ள வர்க்கங்களின் போராட்டமே வரலாற்றை உந்தித் தள்ளுகிறது என்ற கருத்தினை அது கொண்டிருந்ததது. புதியதொரு கம்யூனிச சமூகத்தைப் படைக்கவிருக்கும் வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் வரலாறுரீதியான, புரட்சிகரமான பாத்திரத்தை எடுத்துக் கூறும் இலக்கிய நயமிக்க ஆவணமாக “கம்யூனிஸ்ட் அறிக்கை”  திகழ்ந்தது.

1848 பிப்ரவரியில் புரட்சி வெடித்தெழுந்ததைத் தொடர்ந்து பெல்ஜியத்திலிருந்தும் மார்க்ஸ் வெளியேற்றப்பட்டார். அங்கிருந்து பாரீஸ் சென்ற அவர் மார்ச்சில் அங்கு நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு ஜெர்மனியின் கோலோன் நகருக்குச் சென்றார். புரட்சி கருத்துகளுக்காக அவர் எந்த நாட்டிலும் இருக்க விடாமல் பிற்போக்கு அரசுகளால் தொடர்ந்து நாடு கடத்தப்பட்டார்.

1848 ஜூன் 1 முதல் 1849 மே 19 வரையிலான காலத்தில் ‘புதிய ரைனிஷ் செய்தித்தாள்’ என்ற இதழின் முதன்மை ஆசிரியராக செயல்பட்டார். அங்கு ஆட்சியைக் கைப்பற்றிய எதிர்ப்புரட்சி சக்தி மார்க்சின் மீது சதிவழக்கு ஒன்றை தொடுத்தது. 1849 பிப்ரவரியில் இந்த சதிவழக்கிலிருந்து மார்க்ஸ் விடுதலை செய்யப்பட்டபோதிலும் ஜெர்மனியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அங்கிருந்து பாரீஸ் சென்ற மார்க்ஸ் 1849 ஜூன் 13-ல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து லண்டன் நகருக்கு குடிபெயர்ந்த மார்க்ஸ் தன் வாழ்நாள் முழுவதும் அங்கேயே வசித்து வந்தார்.

கல்லூரிப் பருவத்திலேயே அவரது சிறு பருவத் தோழியும் காதலியுமான ஜென்னியை திருமணம் செய்ய உறுதி செய்யப்பட்டிருந்தது. மார்க்ஸ் 1843-ல் அவரை திருமணம் திருமணம் செய்து கொண்டார். ஜென்னி, அன்றைய பிரஷ்ய நாட்டின் பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அன்றைய அரசில் அவரது சகோதரர் உள்துறை அமைச்சராக இருந்தார். மேல்தட்டு குடும்பப் பின்னணி கொண்ட ஜென்னி, மார்க்சின் அனைத்துவகையான சமூக நடவடிக்கைகளிலும் உற்ற துணைவராய் அவருடனே இருந்து நாடு நாடாக அலைந்தார். இறுதியில், ஜென்னி 1881 டிசம்பர் 2-ல் புற்றுநோயால் உயிரிழந்தார்.

நிரந்தர வேலை ஏதுமின்றி வாழ்நாள் முழுவதும் அன்றைய பிற்போக்கு அரசுகளால் விரட்டியடிக்கப்பட்டு வாழ்ந்த மார்க்ஸ்-ஜென்னி தம்பதியருக்கு முதலில் பிறந்த குழந்தைகள் லண்டன் நகரில் சிறுவயதிலேயே உயிர் நீத்தன. வறுமைக்கிடையே வளர்ந்த அவர்களுடைய மூன்று மகள்கள் சமூக சிந்தனையுடன் மார்க்சின் பணிகளில் பங்கேற்றனர். இவர்கள் மூவருமே அன்றைய பிரிட்டிஷ், பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த சோசலிஸ்டுகளை திருமணம் செய்தனர்.

எங்கல்சின் தன்னலமற்ற, தொடர்ச்சியான நிதியுதவி மட்டும் மார்க்சுக்கு கிடைக்காமலிருந்தால், அவர் தனது புகழ்பெற்ற நூல்களை பதிப்பிக்க முடிந்திருக்காது. அது மட்டுமல்ல; வறுமையின் விளைவாக, எண்ணற்ற நோய்களை எதிர் கொண்டு மிகச் சில ஆண்டுகளிலேயே மார்க்ஸ் உயிர் நீத்திருப்பார்.

மார்க்சும் எங்கல்சும் முதலாம் அகிலம் எனப்படும், சர்வதேச தொழிலாளர் சங்கத்தினை உருவாக்கி 1864-ம் ஆண்டிலிருந்தே அதன் உயிரும் உடலுமாய் செயல்பட்டு வந்தனர்.

மார்க்ஸ், தனது தத்துவார்த்த வாசிப்பு, எழுத்துப் பணிகளுக்கு மத்தியில், சர்வதேச தொழிலாளர் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டார். பாட்டாளி வர்க்கத்திற்கு விரோதமான கருத்துகளை இரக்கமேதுமின்றி எதிர்த்துப் போராடுவதிலும், பல்வேறு நாடுகளிலும் வளர்ந்து வந்த பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு வழிகாட்டுவதிலும் முன்னணியில் இருந்தார்.

1872-ல் உலகம் முழுவதிலும் தொழிலாளி வர்க்க இயக்கம் செழிப்புற்று வளர்ந்து வந்த நிலையில், மார்க்ஸ் தனது “மூலதனம்” என்ற மகத்தான  நூலினை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். அரசியல் பொருளாதாரம் குறித்து பல நூல்களை படைத்தார். மனித சமூகத்தின் மேன்மைக்காகவே தன் வாழ்நாளெல்லாம் சிந்தித்து வந்த மார்க்ஸ் 1883 மார்ச் 14 அன்று நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.

 1. மார்க்சியம் என்பது என்ன?

19ம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான தத்துவப் போக்குகள் இருந்தன. அவற்றை இவ்வாறு குறிப்பிடலாம்.

 1. ஜெர்மன் தத்துவ ஞானம்,
 2. ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம்,
 3. பிரெஞ்சு சோசலிசம்

இந்த மூன்று துறைகளையும் ஆராய்ந்து இந்த மூன்றிலும் தனது சொந்த சிந்தனை பங்களிப்பினை செய்தார் மார்க்ஸ். அவரது  கருத்துகள் முழுவதுமாகச் சேர்ந்தே நவீனகால விஞ்ஞான சோசலிசம் என்ற புதிய சமுகத்தை உருவாக்குவதற்கான தத்துவம் மலர்ந்தது.  

பொருள்முதல்வாதம்

1844-45 ஆண்டுக் காலத்தில் மார்க்சின் கருத்துகள் உருவம் பெற்றன. அக்காலம் முதல் அவர் ஒரு பொருள்முதல்வாதி;

அண்டம் அனைத்தும்  பொருட்களாலேயே ஆனது, பொருளே அனைத்துக்கும்  ஆதாரம்; அனைத்து இயற்கை  நிகழ்வுகள் பொருட்களுக்கிடையே நடக்கும் வினை, எதிர்வினைகளே என பொருள்முதல் வாதம் எடுத்துரைக்கிறது.

மார்க்ஸ் அன்று லுத்விக் ஃபாயர்பாக் என்பவரின் பொருள்முதல்வாதத்தைப் பின்பற்றினார்.

ஃபாயர்பாகின் பொருள்முதல்வாதம் உள்ளிட்ட “பழைய” பொருள்முதல்வாதம்” அனைத்திலும் பல குறைபாடுகள் உள்ளன என்று மார்க்சும் எங்கல்சும் கருதினார்கள். அவை வருமாறு;

(1) இந்தப் பொருள்முதல்வாதம் இயந்திரத் தன்மை கொண்டது. பொருளைப் பற்றி வளர்ந்து வந்த  வேதியியல் துறை, உயிரியல் துறை, பிறகு வளர்ந்த  மின்சாரத் துறை ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கிற மிகமிக நவீனமான முன்னேற்றங்களை அது கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறுகிறது;

(2) பழைய பொருள் முதல்வாதத்தில்  வரலாற்று வளர்ச்சி  பற்றிய சரியான புரிதல் இல்லை. பொருளின் வளர்ச்சி பற்றிய கண்ணோட்டம் அதில் முழுமை பெறவிவில்லை;

(3) “மானுட சாரம்” எனப்படுவது, சகல “சமுதாய உறவுகளின் ஒரு “தொகுதியே” என்று அது கருதவில்லை; உலகத்தை “மாற்றியமைப்பதே முதன்மையான வேலை. ஆனால் , பழைய பொருள் முதல்வாதத்தில் உலகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து விளக்குவதோடு  நின்றுவிட்டது. உலகை மாற்றி அமைப்பதற்கான, “புரட்சிகரமான நடைமுறைச் செயல்பாட்டின்” முக்கியத்துவத்தை அது புரிந்து கொள்ளவில்லை.

இயக்கவியல்

மார்க்சிற்கு முந்தைய தத்துவ மேதை ஹெகல் ஆவார். அவரது, தத்துவஞானத்தின் புரட்சிகரமான அம்சத்தை மார்க்ஸ் ஏற்றுக்கொண்டு அதை மேலும் வளர்த்தார். ஹெகலுடைய இயக்கவியலானது வளர்ச்சியைக் குறித்த மிகவும் முழுமையான, உள்ளடக்கத்தில் மிகமிக வளம் நிறைந்த, மிகுந்த ஆழமுள்ள போதனை. அந்த இயக்க இயலைக் காப்பாற்றி அதனை இயற்கை பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தினைக் உருவாக்கியவர்கள் மார்க்சும், எங்கல்சும்தான்.

எங்கல்ஸ் எழுதுகிறார்: “அப்படி அப்படியே தயார் நிலையில் உள்ள பொருட்களின் தொகுதியாக உலகத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது, இயக்கப் போக்குகளின் ஒரு தொகுதியாகத்தான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்; இந்த இயக்கப் போக்குகளின் தொகுதியிலே மாற்றம் அடையாதவை போல் பார்வைக்குத் தோன்றுகிற பொருட்களும், அதே போல் அவை பற்றி மூளைக்குள்ளே நிழலாடுகிற சிந்தனை பிம்பங்களும், கருத்துருவங்களும், தோன்றியபடியும் மறைந்தபடியும் இருக்கும்படியான இடையறாத மாறுதலுக்கு உட்படுகின்றன – இது மகத்தான அடிப்படைக் கருத்தாகும். ”

“இயக்க இயல் வகைத் தத்துவஞானத்துக்கு இறுதியானதோ, உயர்வானதோ, புனிதமானதோ எதுவுமே கிடையாது. எல்லாவற்றின் தற்காலிகத் தன்மையையும் அது வெளிப்படுத்துகிறது. எல்லாவற்றிற்குள்ளேயுமுள்ள தற்காலிகத் தன்மையையும் அது வெளிப்படுத்துகிறது. உருவாகிக் கொண்டும் மறைந்து கொண்டும் இருக்கிற, கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு முடிவில்லாமல் ஏறிச் சென்றபடியேயிருக்கிற, இடையறாத இயக்கப் போக்கு ஒன்றைத் தவிர வேறு எதுவும் நிலைத்து நிற்க முடியாது. “

சமுகம், பொருள் வளர்ச்சியைப் பற்றிய அதிக வளம் பொருந்திய தத்துவமாக இயக்கவியல் திகழ்கிறது. அதன் இயல்புகளில் சிலவற்றை பின்வருமாறு தொகுக்கலாம்:

 • வரலாற்றில் ஏற்கெனவே கடந்துவிட்ட கட்டங்களே திரும்ப வந்து கொண்டிருப்பது போலத் தோன்றினாலும், அந்தக் கட்டங்கள் வேறு வகையில், முந்தியதை விட உயர்ந்த நிலையில், திரும்ப வந்து கொண்டிருப்பதான வளர்ச்சி நிகழ்கிறது. இது “நிலை மறுப்பின் நிலை மறுப்பு” எனப்படும்.
 • வளர்ச்சி எனப்படுவது, நேர்கோடாக இல்லாமல் சுழலேணி போன்று சுழன்று சுழன்று மேலேறும்.
 • திடீர்ப் பாய்ச்சல்கள், பெருவிபத்துகள், புரட்சிகளின் மூலம் வளர்ச்சி ஏற்படும்; அளவு மாற்றம் பண்பு மாற்றமாக  உருமாறுதல்;
 • குறிப்பிட்ட பொருள், குறிப்பிட்ட நிகழ்வு, குறிப்பிட்ட சமுதாயத்திற்குள் செயல்படுகிற பல்வேறு சக்திகள், போக்குகள் அனைத்தும் உள்ளுக்குள் முரண்பாடுகள் மோதல்கள் கொண்டவை; அவையே  வளர்ச்சிக்கான உள்தூண்டுதல்கள்;
 • எந்தவொரு நிகழ்வும், அதன் எல்லா அம்சங்களும் ஒன்றையொன்று சார்ந்து நின்று, ஒன்றோடொன்று மிகவும் நெருக்கமான, பிரிக்க முடியாத தொடர்பு கொண்டிருக்கின்றன.

வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டம்

பழைய பொருள்முதல்வாதத்தின் முரண்பாடுள்ள தன்மையையும், முழுமையற்ற தன்மையையும், ஒரு சார்பான தன்மையையும் உணர்ந்து கொண்ட பிறகு மார்க்ஸ் “சமுதாயத்தைப் பற்றிய விஞ்ஞானத்தை… பொருள்முதல்வாத அடிப்படைக்கு இணக்கமாகக் கொண்டுவந்து அந்த அடிப்படை மீது அதை மீண்டும் அமர்த்துவது” அவசியம் எனக்கண்டார்.

வரலாறு  என்பது எண்ணற்ற வேறுபாடுகளையும் பல்வகை முரண்பாடுகளையும் கொண்டுள்ள  ஓர் இயக்கப் போக்காக உள்ளது. அவை  திட்டவட்டமான விதிகளால் இயங்குகிற ஒரு சீரான இயக்கப் போக்காக விஞ்ஞான அடிப்படையில் பயில்வதற்கு மார்க்ஸ்  வழி காட்டினார்.

மக்கள் தங்களுடைய வரலாற்றைத் தாங்களே உருவாக்கிக் கொள்கின்றனார். ஆனால் மனிதர்களின், மக்கள் பெருந்திரளின் செயல் நோக்கங்களை நிர்ணயிப்பது எது? மனிதனின் வரலாற்று நடவடிக்கை அனைத்திற்கும் அடிப்படையாக அமைவது பொருளாயத (Material) வாழ்வின் உற்பத்தி, மற்றும் முதலாளி தொழிலாளி போன்ற உற்பத்தி உறவுகள்தான்.

அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு என்ற தனது நூலின் முன்னுரையில் மனித சமுதாயத்தையும் அதன் வரலாற்றையும் பற்றிய பொருள்முதல்வாதத்தின் அடிப்படையான கோட்பாடுகளைக் குறித்துப் பின்வரும் சொற்களில் மார்க்ஸ் ஒரு முழுமையான வரையறுப்பைத் தருகிறார்:

“மனித வாழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமுதாய உற்பத்தியில் திட்டமிட்ட உறவுகளில் மனிதர்கள் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அத்தியாவசியமானவை; மனிதர்களின் விருப்பத்தின்படி அமையாமல் சுதந்திரமாக அமைபவை. இந்த உற்பத்தி உறவுகள் அவர்களது பொருளாயத உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் ஒரு திட்டவட்டமான கட்டத்திற்கு பொருத்தமாக அமைகின்றன. “இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டு மொத்தமே சமுதாயத்தின் பொருளாதார அமைப்பாக, உண்மையான அடித் தளமாக அமைகிறது. அதன் மீதுதான் சட்டம், அரசியல் வகைப்பட்ட மேல் கட்டுமானங்கள் எழுகிகின்றன.

“அந்த அடித்தளத்துக்குப் பொருத்தமாகவே சமுதாய உணர்வின் சில குறிப்பிட்ட வடிவங்கள் உருவாகின்றன… மனிதர்களின் உணர்வு அவர்களின் வாழ்நிலையை வரையறுப்பதில்லை; அதற்கு மாறாக, அவர்களுடைய சமுதாய வாழ்நிலைதான் அவர்களின் உணர்வை வரையறுக்கிறது.

“சமுதாயத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடையும்போது  உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினுடைய வடிவங்களாக இருந்த உற்பத்தி உறவுகள், அந்த உற்பத்திச் சக்திகளுக்கே விலங்குகளாக மாறிவிடுகின்றன. அதன் பிறகுதான் சமுதாயப் புரட்சியின் சகாப்தம் துவங்குகிறது. பொருளாதார அடித்தளத்தின் மாற்றத்துடன் கூடவே பிரம்மாண்டமான மேல்கட்டுமானம் முழுவதும் ஏறத்தாழ விரைவாக மாற்றமடைகிறது.

“இத்தகைய மாற்றங்களைக் கவனிக்கும் போதெல்லாம், உற்பத்தியின் பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் பொருளாயத மாற்றத்தையும் – இதை இயற்கை  விஞ்ஞானத்தினால் துல்லியமாக வரையறுக்க முடியும் – சட்டம், அரசியல், மதம், அழகியல் அல்லது தத்துவஞானம் போன்றவற்றில் – சுருங்கச் சொன்னால், எந்தச் சித்தாந்த வடிவங்களில் மனிதர்கள் இந்த மோதலை உணர்ந்து போராடித் தீர்க்கிறார்களோ, அந்தச் சித்தாந்த வடிவங்களில் – ஏற்படும் மாற்றத்தையும் வேறுபடுத்திக் காண வேண்டும்.

வர்க்கப் போராட்டம்

திகைப்பூட்டும் புதிர் போல், குழப்பமானதாகத் தோன்றும் மாற்றங்கள் இடையறாது நிகழ்கின்றன. இதற்கு அடிப்படையாக இருக்கும் விதிகள் என்னவென்பதைக் கண்டுபிடித்து  ஒரு வழிகாட்டுகிறது மார்க்சியம்.

வர்க்கங்களாக சமுகம்  பிளவுண்டிருக்கிறது. ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு வர்க்கத்திற்கும் ஒரு செயல்படுகிற பாத்திரம் உள்ளது.  சமுகத்தில் வர்க்கங்கள் வகிக்கும் நிலைமை, வாழ்க்கை முறை, ஆகியவற்றால்  வேறுபாடுகள் பல  ஏற்படுகின்றன. இதனால்  ஒன்றோடொன்று முரண்படும் நிலை ஏற்படுகிறது. உதாரணமாக, முதலாளிக்கு மேலும் மேலும் இலாபம் தேவை; , தொழிலாளிக்கு ஊதியம் உயர்வது முக்கியம்; இது போன்ற மாறுபட்ட வேட்கைகள் உள்ளதால் மோதல்கள் உருவாகின்றன.

“இதுநாள் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்” என்று கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் எழுதினார்.

ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப்பகை கொண்டவர்களாக மாறுகின்றனர். சில நேரங்களில் மறைவாகவும் சில நேரங்களில் பகிரங்கமாகவும், இடையறாத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதும் புரட்சிகரமாக மாற்றி புதிய அமைப்பினை உருவாக்குகிறது. ”பிரபுத்துவ சமுதாயத்தின் இடிபாடுகளிலிருந்து முளைத்தெழுந்துள்ள தற்கால முதலாளித்துவச் சமுதாயம் வர்க்கப் பகைமைகளுக்கு முடிவுகட்டிவிடவில்லை; பழையவற்றின் இடத்தில் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் நிலைநாட்டியிருக்கிறதே தவிர வேறில்லை. ”

“இந்த முதலாளித்துவ வர்க்கச் சகாப்தத்தின் தனி இயல்பு என்னவென்றால் வர்க்கப் பகைமைகளை இது சுருக்கி எளிமையாக்கியுள்ளது: சமுதாயம் ஒட்டுமொத்தமாய் மேலும் மேலும் பெரும்பகை கொண்ட இரு முகாம்களாய், எதிரும் புதிருமான இரு பெரும் வர்க்கங்களாய் – முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமுமாய் – பிளவுண்டு வருகிறது. ”

வரலாற்று மாற்றங்கள், வளர்ச்சி பற்றிய மார்க்சின் இந்த கண்டுபிடிப்புகள் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வரும் உழைக்கும் மக்களுக்கு விடுதலைக்கான பாதையை காட்டுகிறது. அடித்தட்டு பாட்டாளி மக்கள் உன்னதமான வாழ்க்கை வாழ்வதற்கான சோசலிச சமுகத்தை அமைத்திட மார்க்சியம் வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழ்கிறது.

மார்க்சின் பொருளாதாரப் போதனை

வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் உற்பத்தி உறவுகளை, அவற்றின் தோற்றம், வளர்ச்சி, நலிவு ஆகிய கட்டங்களிலே பரிசீலனை செய்வது – இதுதான் மார்க்சின் பொருளாதாரப் போதனையின் உள்ளடக்கம்.

மதிப்பு

பண்டம் என்பது, முதன் முதலாக மனிதத் தேவையை நிறைவு செய்யும் ஒரு பொருளாகும். இரண்டாவதாக, அது இன்னொரு பொருளுடன் பரிமாற்றம் செய்து கொள்ளத்தக்க பொருளுமாகும். ஒரு பொருளின் பயனுடைமை அதை பயன் மதிப்பு கொண்டதாக ஆக்குகிறது.

பொருட்கள் ஒவ்வொன்றும் வேறு வேறானவையும் ஒன்றுக்கொன்று ஒப்பிட முடியாதவைகளாகவும் இருக்கின்றன. அதாவது பயன்மதிப்பு வெவ்வேறு கொண்டவை. பரிமாற்ற மதிப்பு என்பது எல்லா வகையான பயன் மதிப்புகளை, முற்றிலும் வேறுபட்ட  பயன் மதிப்புகளைக் கூட  ஒன்றுடன் ஒன்று சமப்படுத்துகிறது. இதனை அன்றாட அனுபவம் நமக்குக் காட்டுகிறது.

ஒன்றோடொன்று எப்போதும் சமப்படுத்தப்பட்டு வரும் இந்தப் பொருட்களுக்குப் பொதுவாயுள்ள அம்சம் எது? அவற்றின் பொது அம்சம் என்னவென்றால் அவை எல்லாம் உழைப்பினால் உருவான உற்பத்திப் பொருட்களாக இருப்பதுதான்.

குறிப்பிட்ட பயன் மதிப்புள்ள ஒரு குறிப்பிட்ட பண்டத்தை உற்பத்தி செய்வதற்குச் சமுதாய வழியில் அவசியமான உழைப்பின் அளவைக் கொண்டுதான், சமுதாய வழியில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டுதான், அம்மதிப்பின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

உபரி மதிப்பு

பண்ட உற்பத்தி வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பணம் மூலதனமாக மாறுகிறது. பண்டப் புழக்கத்தின் பொதுச் சூத்திரம் பின்வருமாறு: C (பண்டம்)- M (பணம்)- C (பண்டம்); அதாவது ஒரு பண்டத்தை வாங்குவதற்காக மற்றொரு பண்டத்தை விற்பது என்பதுதான். இதற்கு மாறாக, மூலதனத்தின் பொதுச் சூத்திரம் M – C – M ; அதாவது (இலாபத்துக்கு) விற்பதற்காகவே வாங்குவது என்பதாகும்.

புழக்கத்திற்குக் கொண்டுவரும் பணத்தின் ஆரம்ப மதிப்பில் ஏற்படுகிற அதிகரிப்பை மார்க்ஸ் உபரி மதிப்பு என்று அழைத்தார்.

பண்டப் புழக்கத்திலிருந்து உபரி மதிப்பு தோன்ற முடியாது; ஏனெனில், பண்டப் புழக்கம் ஒன்றுக்கு ஒன்று ஈடு செய்யும் மதிப்புகளின் பரிமாற்றத்தைத் தான் கண்டிருக்கிறது.

விலையைக் கூட்டிவிடுவதிலிருந்தும் உபரி மதிப்பு தோன்ற முடியாது; ஏனென்றால்  வாங்குபவர்கள், விற்பவர்களுடைய பரஸ்பர நஷ்டங்களும் இலாபங்களும் ஒன்றையொன்று சமமாக்கிச் சரி செய்துவிடும்.

“மதிப்பைத் தோற்றுவிக்கும் ஆதாரமாய் அமையும் சிறப்பு இயல்புடைய பயன் மதிப்புள்ள ஒரு பண்டத்தைச் சந்தையில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்” அப்படிப்பட்ட பண்டம் ஒன்று உண்டு. அது தான் மனிதனின் உழைப்புச் சக்தி.  உழைப்பு மதிப்பைப் படைக்கிறது.

பணத்தின் சொந்தக்காரன் உழைப்புச் சக்தியை அதன் மதிப்புப்படி வாங்கிக் கொள்கிறான், மற்ற ஒவ்வொரு பண்டத்தின் மதிப்புப் போலவே இந்த மதிப்பும் இதன் உற்பத்திக்கு வேண்டிய, சமுதாய வழியில் அவசியமான உழைப்பு நேரத்தினாலேயே நிர்ணயிக்கப்படுகிறது (அதாவது, அது அந்தத் தொழிலாளியும் அவனது குடும்பமும் பிழைத்திருப்பதற்கு வேண்டிய செலவு).

உழைப்புச் சக்தியை வாங்கிய பணச் சொந்தக்காரருக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ள உரிமையுண்டு: அதாவது, அந்த உழைப்புச் சக்தியை நாள் முழுவதும் பன்னிரண்டு மணி நேரம் பயன்படுத்துவதாக வைத்துக் கொள்வோம். வேலை வாங்க அவருக்கு உரிமையுண்டு. இருந்தாலும், ஆறு மணி நேரத்தில் (“அவசியமான” உழைப்பு நேரம்) தொழிலாளி தனது பிழைப்புச் செலவைச் சரிக்கட்டுமளவுக்கு உற்பத்திப் பொருளைச் செய்கிறார். அடுத்த ஆறு மணி நேரத்தில் (“உபரி” உழைப்பு நேரம்) “உபரி” உற்பத்திப் பொருளை அல்லது உபரி மதிப்பைச் செய்கிறார். இதற்கு முதலாளி அந்தத் தொழிலாளிக்குப் பணம் கொடுப்பதில்லை, எனவே உற்பத்தியின் இயக்கப் போக்கிலிருந்து பார்க்கையில் மூலதனத்தில் காணக்கூடிய இரண்டு பகுதிகளை வேறுபடுத்துவது அவசியமாகும்;

(இயந்திரங்கள், உழைப்புக் கருவிகள், கச்சாப் பொருட்கள் முதலிய) உற்பத்திச் சாதனங்களுக்காகச் செலவாகிற நிலையான மூலதனம்; இதன் மதிப்பு கொஞ்சமேனும் மாறுபடாமல் (ஒரே மொத்தமாகவோ பகுதியாகவோ) தயாரான உற்பத்திப் பொருளின் பால் மாற்றப்படுகிறது; அடுத்தது, மாறுபடும் மூலதனம்: இது உழைப்புச் சக்திக்காகச் செலவழிக்கப்படுகிறது. இந்த மூலதனத்தின் மதிப்பு ஒரு நிலையாக இருப்பதில்லை; உழைப்பின் இயக்கப் போக்கில் அது உபரி மதிப்பைப் படைத்த வண்ணம் வளர்கிறது.

மூலதனத்தின் தோற்றத்திற்கு வரலாற்று வழிப்பட்ட முன்தேவைகள் உள்ளன.  முதலாவதாக, தனிநபர்களின் கையிலே ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பணம் குவிய வேண்டும். அதே சமயம் பண்டங்களின் உற்பத்தி ஒப்பீட்டு அளவில் முன்னேறியிருக்க வேண்டும். (உற்பத்தி முறையில் வளர்ச்சி)

இரண்டாவதாக, இரண்டு அர்த்தங்களில் “சுதந்திரமான” உழைப்பாளி இருக்க வேண்டும். அதாவது, தனது உழைப்புச் சக்தியை விற்பதில் எல்லா விதமான கட்டுப்பாடுகளிலிருந்தும் தடைகளிலிருந்தும் விடுபட்டவன் என்ற அர்த்தத்திலும், நிலத்திலிருந்தும், பொதுவாக எல்லா உற்பத்திச் சாதனங்களிலிருந்தும் விடுபட்டவன் என்ற அர்த்தத்திலும். யாருடனும், எதனோடும் இணைக்கப்படாத கட்டறுந்த உழைப்பாளி, அதாவது தனது உழைப்புச் சக்தியை விற்பதைத் தவிர வேறெந்த வழியிலும் பிழைக்க முடியாதவராக  “பாட்டாளி” இருக்க வேண்டும்.

இரண்டு அடிப்படையான முறைகளின் மூலமாக உபரி மதிப்பை அதிகப்படுத்த முடியும்; வேலை நேரத்தை அதிகப்படுத்துவது, அவசியமான வேலை நேரத்தைக் குறைப்பது.

சார்புநிலை உபரி மதிப்பின் உற்பத்தியைப் பகுத்தாராய்கையில் மார்க்ஸ், மூன்று வரலாற்றுக் கட்டங்களையும் பரிசீலிக்கிறார். அவை: 1) சாதாரணக் கூட்டுறவு; 2) உழைப்புப் பிரிவினையும் பட்டறைத் தொழிலும்; 3) இயந்திரங்களும் பெருவீதத் தொழிலும்.

மிக மிகப் புதுமையானதும் முக்கியமானதும் மூலதனத்தின் திரட்சி பற்றிய மார்க்சின் பகுப்பாய்வாகும். மூலதனத்தின் திரட்சி என்றால் உபரி மதிப்பின் ஒரு பகுதி மூலதனமாக மாற்றப்படுவது; உபரி மதிப்பை முதலாளி சொந்தத் தேவைகளையோ, மன விருப்பங்களையோ நிறைவு செய்வதற்காகப் பயன்படுத்தாமல் புதிய உற்பத்திக்காகப் பயன்படுத்துவது.

உபரி மதிப்பு உற்பத்திச் சாதனங்களுக்கு ஒரு பங்காகவும், மாறு படும் மூலதனத்துக்கு ஒரு பங்காகவும் பிரிக்கப்படுகிறது. (மூலதனத்தின் மொத்தத் தொகையில்) – இதில் மாறுபடும் மூலதனம் அதாவது உழைப்பாளிக்கு கொடுக்கப்படும் பங்கினை விட, நிலையான மூலதனத்தின் பங்கு அதிகமாக்கப்படுவது முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கில் முக்கியமானது. அது சோசலிசத்தை நோக்கிய மாறுதலுக்கான இயக்கப்போக்கிலும் உயர் முக்கியத்துவம் பெறுகிறது.

மூலதனத்தின் திரட்சியானது தொழிலாளர்களுக்குப் பதிலாய் இயந்திரங்களைக் கொண்டு வேலைகளை முடித்துக் கொள்ளும் போக்கை விரைவுபடுத்தி, ஒரு கோடியில் செல்வத்தையும் இன்னொரு கோடியில் வறுமையையும் உண்டாக்கி ” தயார் நிலையில் உள்ள தொழிலாளர்களின் படை” (வேலையில்லாப் பட்டாளம்) என ஒன்றைத் தோற்றுவிக்கிறது.

மேற்கண்ட நிலைமை, உற்பத்திச் சாதனங்களை வளர்த்தெடுக்கும் மூலதனத் திரட்சி மற்றும் கடன் ஆகியவை மூன்றும் – முதலாளித்துவ நாடுகளில் அவ்வப்போது ஏற்பட்ட மிகை உற்பத்தி நெருக்கடிகளின் காரண காரியங்களைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.

இந்த நெருக்கடிகள் முதலில் சராசரியாக பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பட்டு வந்தன; பின்பு, இதைவிட நீண்ட, குறிப்பாகச் சொல்ல முடியாத கால இடைவெளியில் நிகழ்ந்தன.

முதலாளித்துவத்தின் கீழ் ஏற்படுகிற மூலதனத் திரட்சி வேறு; புராதன மூலதனத் திரட்சி என்று சொல்லப்படுவது வேறு என்பதை இங்கு நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். புராதன மூலதனத் திரட்சி என்று சொன்னால் உற்பத்திச் சாதனங்களிலிருந்து உழைப்பாளியைப் பலாத்காரமாகப் பிரித்துவிடுவது; நிலத்திலிருந்து விவசாயிகளைத் துரத்திவிடுவது; சமுதாயப் பொது நிலங்களைத் திருடிக் கொள்வது; காலனிகள், தேசியக் கடன்கள், காப்பு வரிகள் முதலான பல ஏற்பாடுகள் புராதன மூலதனத் திரட்சியின் முனைப்புக் கூறுகளாகும். “புராதன மூலதனத் திரட்சி” என்பது ஒரு கோடியில் “சுயேச்சையான ” பாட்டாளியைத் தோற்றுவித்து, மற்றொரு கோடியில் பணத்திற்கான சொந்தக்காரனை, முதலாளியை, தோற்றுவிக்கிறது.

“முதலாளித்துவ மூலதனத் திரட்சியின் வரலாற்று வழிப்பட்ட போக்கை” மார்க்ஸ் விவரிக்கிறார்: “நேரடியான உற்பத்தியாளர்களின் சொத்தைப் பறிமுதல் செய்யும் வேலை, ஈவிரக்கமற்ற படு மூர்க்கத்துடன், மிகமிக வெட்கக்கேடான, மிக மிக ஆபாசமான, மிக அற்பத்தனமான, மிகமிக இழிவான, அருவருக்கத்தக்க வெறியுணர்ச்சிகளால் தூண்டப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. ”

அதாவது சுயேட்சையான உழைப்பாளி, உழைப்பினடிப்படையில் ஒன்றிணைந்து அதுவரை உருவாக்கிவந்த தனிச் சொத்து முறை  அகற்றப்படுகிறது. (விவசாயி, கைத் தொழில் செய்வோர் சொந்தமாகக் கொண்டிருந்த தனிச் சொத்து நீக்கப்பட்டு) அந்த இடத்தினை முதலாளித்துவ தனிச்சொத்து கைப்பற்றிக்கொள்கிறது.

இந்த முதலாளித்துவத் தனிச்சொத்து, பிறருடைய, பெயரளவில் சுயேச்சையான, உழைப்பைச் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இப்பொழுது யாருடைய சொத்து பறிமுதல் செய்யப்பட வேண்டுமென்றால் தனக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் உழைப்பாளியல்ல; பல தொழிலாளிகளைச் சுரண்டிக் கொண்டிருக்கிற முதலாளிதான்.

வறுமையும் ஒடுக்குமுறையும் அடிமைத்தனமும் இழிநிலையும் சுரண்டலும் மலைபோல் வளர்ந்திருக்கின்றன. எனினும், இதனோடு கூடவே தொழிலாளி வர்க்கத்தின் கிளர்ச்சியும் வளர்கின்றது. தொழிலாளி வர்க்கம் எப்போதும் எண்ணிக்கையில் பெருகிக் கொண்டேயிருக்கும் வர்க்கமாகும்; மேலும் முதலாளித்துவ உற்பத்திப் போக்கு என்ற  ஏற்பாட்டாலேயே அந்த வர்க்கம் கட்டுப்பாடும் ஒற்றுமையையும் ஒழுங்கமைப்பையும் பெற்று வளர்கிறது. எந்த உற்பத்தி முறை மூலதனத்தின் ஏகபோகத்துடன் கூடவே முளைத்து, அதனுடனேயே, அதன் அடியிலேயே தழைத்துச் செழித்ததோ, அந்த உற்பத்தி முறைக்கு மூலதனத்தின் ஏகபோகமே விலங்காகிவிடுகிறது. உற்பத்திச் சாதனங்கள் ஓரிடத்தில் குவிந்து கிடப்பதும், உழைப்பு சமுதாயமயமாகுவதும் இறுதியில் ஒரு நிலையை எட்டும்போது அவற்றிற்கும் அவற்றின் முதலாளித்துவ மேலோட்டுக்கும் பொருத்தமற்றுப் போய்விடுகிறது. இந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனிச்சொத்துக்குச் சாவுமணி அடிக்கப்படுகிறது. உடைமை பறித்தோர் உடைமை நீக்கம் செய்யப்படுகிறார்கள்” (மூலதனம், தொகுதி 1)

மூலதனத்தின் இரண்டாம் தொகுதியில் மொத்த சமுதாய மூலதனத்தின் மறு உற்பத்தியைப் பற்றி மார்க்ஸ் செய்யும் பகுப்பாய்வு மிகமிக உயர்ந்த அளவிலே புதுமையானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது.

இங்கேயும்கூட மார்க்ஸ் பொருளாதாரத்தின் ஏதோ ஒரு சிறு பகுதியை ஆராயாமல் அந்தப் பொருளாதாரம் முழுவதையுமே ஆராய்கிறார். சமுதாய உற்பத்தி முழுவதையும்: 1) உற்பத்திச் சாதனங்களின் உற்பத்தி, 2) நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி என்று இரண்டு பெரும் பகுதிகளாக மார்க்ஸ் பிரிக்கிறார்.

மதிப்பின் விதியை அடிப்படையாகக் கொண்டு, இலாபத்தின் சராசரி விகிதம் அமையும் பிரச்சினையை மூலதனத்தின் மூன்றாம் தொகுதி தீர்த்து வைக்கிறது.

உபரி மதிப்பின் தோற்றத்தை மார்க்ஸ் முதலில் பகுத்தாராய்கிறார்; பிறகு அது இலாபமாகவும், வட்டியாகவும், நில வாடகையாகவும் பிரிவதைக் கவனிக்கப் புகுகிறார், இலாபம் என்பது உபரி மதிப்புக்கும், ஒரு தொழில் நிலையத்தில் போடப்பட்ட மொத்த மூலதனத்திற்கும் இடையேயுள்ள விகிதமேயாகும்.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் அனைத்துப் பொருட்களுடைய மதிப்புகளின் மொத்தத் தொகை பொருட்களுடைய விலைகளின் மொத்தத் தொகையோடு ஒத்திருக்கிறது; ஆனால், போட்டியின் காரணமாக, தனித்தனி தொழில் நிலையங்களிலும் தனித்தனி உற்பத்திக் கிளைகளிலும் அவற்றின் மதிப்புகளுக்குச் சமமாகப் பொருட்கள் விற்கப்படுவதில்லை; அதற்குப் பதிலாக அவற்றின் உற்பத்தி விலைகளுக்குச் சமமாகத்தான் விற்கப்படுகின்றன. இந்த உற்பத்தி விலை என்பது செலவழிக்கப்பட்ட மூலதனமும் சராசரி இலாபமும் சேர்ந்த கூட்டுத் தொகைக்குச் சமமானதாகும்.

இவ்வாறு விலைகளுக்கும் மதிப்புகளுக்குமிடையே வேற்றுமையுள்ளது, இலாபங்கள் ஒன்றோடொன்று சமப்படுத்தப்படுகின்றன என்ற மறுக்கமுடியாத, அனைவருக்கும் தெரிந்த, உண்மையை மார்க்ஸ் மதிப்பின் விதியை அடிப்படையாகக் கொண்டு முழுமையாக விளக்கிவிடுகிறார்; சந்தையால் மட்டுமே ஒன்றுக இணைக்கப்பட்டிருக்கிற தனித்தனி பண்ட உற்பத்தியாளர்களைக் கொண்ட சமுதாயத்தில், இந்த விதியானது சராசரியான, சமுதாய அளவிலான, பெரும்பாலும் வழக்கில் உள்ள விதியாகத்தான் வெளிப்பட முடியும் என்பது மிகமிக இயல்பானதொரு விசயமாகும்;

(இவையல்லாமல், மூலதனம் நூலின் மூன்றாம் தொகுதியில் நில வாடகையின் தத்துவமும் விளக்கப்படுகிறது. )


“கிராமப்புற உழைப்பாளிகள் பரவலான பகுதிகளுக்குச் சிதறடிக்கப்படுவது இந்த உழைப்பாளிகளின் எதிர்ப்புச் சக்தியை உடைத்தெறிகிறது; ஆனால் நகரத் தொழிலாளர்களிடையே உள்ள குவியும் தன்மையோ அவர்களுடைய எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகிறது. நகரத் தொழில்களைப் போலவே நவீனகால விவசாயத்திலும் ஈடுபடுத்தப்படுகிற உழைப்பின் அதிகரித்த உற்பத்தித் திறனும் அளவும் உழைப்புச் சக்தியை வீணடித்து, நோய்நொடிகள் மூலமாக நாசப்படுத்தி உருவாக்கப்படுகின்றன. மேலும், முதலாளித்துவ முறையிலான விவசாயத்தில் ஏற்படும் முன்னேற்றமெல்லாம் உழைப்பாளியைக் கொள்ளையடிக்கும் கலையில் மட்டுமல்ல; விளைநிலங்களைக் கொள்ளையடிக்கும் கலையிலும் ஏற்படுகிற முன்னேற்றமாகும்.

ஆகவே, எல்லாச் செல்வங்களுக்கும் அசல் ஊற்றுக் கண்ணாயுள்ள விளைநிலத்தையும் உழைப்பாளியையும் உறிஞ்சிவிடுவதின் மூலமாக மட்டுமே முதலாளித்துவ உற்பத்தியானது தொழில் நுட்பத்தை வளர்க்கவும், பல்வேறு இயக்கப் போக்குகளை ஒரு சமுதாய முழுமையில் இணைத்து வைக்கவும் செய்கிறது. ” (மூலதனம், தொகுதி 1, 13ம் அத்தியாயத்தின் இறுதி. )

சோசலிசம்

மேலே சொன்னதிலிருந்து வெளிப்படையாகத் தெரிவது இதுதான். முற்றிலும் தனிச்சிறப்பான இன்றைய சமுதாயத்தின் பொருளாதார இயக்க விதியிலிருந்தே மார்க்ஸ், முதலாளித்துவச் சமுதாயம் சோசலிச சமுதாயமாக மாற்றமடைவது தவிர்க்க முடியாததாகும் என்ற முடிவுக்கு வருகிறார்.

இந்த மாற்றத்திற்கு, அறிவுத் துறையிலும் அறநெறித் துறையிலும் உந்து சக்தியாக விளங்குவதும், நேரடியாக இருந்து இம்மாற்றத்தை நிறைவேற்றும் செயல்பாட்டாளர்களாக விளங்குவதும், பாட்டாளி வர்க்கமே. இந்த வர்க்கத்துக்கு முதலாளித்துவமே பயிற்சியளிக்கிறது. முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் பாட்டாளிகள் நடத்துகிற போராட்டம் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது; அந்த வடிவங்களின் உட்பொருள் வளமும் மேலும் மேலும் அதிகரிக்கிறது; தவிர்க்க முடியாத முறையிலே இந்தப் போராட்டம் பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்ட அரசியல் போராட்டமாக உருவெடுக்கிறது.

உற்பத்தி சமுதாய மயமாக்கப்படுவதன் விளைவாக உற்பத்திச் சாதனங்கள் சமுதாயச் சொத்தாக மாற்றப்படுவது, “இதுவரை பறித்துக் கொண்டிருந்தவர்களிடமிருந்து பறிமுதல் செய்வது” நிகழ்ந்தே தீரும். உழைப்பின் உற்பத்தித் திறனில் மகத்தான அதிகரிப்பு, வேலை நேரத்தைக் குறைப்பது, தொடக்ககால, சிதறிய நிலையிலுள்ள, சிறு அளவிலான உற்பத்தி அழிந்ததில் எஞ்சிக்கிடக்கும் மிச்ச சொச்சங்களை நீக்கிவிட்டு, கூட்டு முறையில் அமைந்த, மேம்படுத்தப்பட்ட உழைப்பை நிலைநாட்டுவது -இவையெல்லாம் இந்த மாற்றத்தினால் ஏற்படும் நேரடி விளைவுகளாகும். விவசாயத்திற்கும் தொழிலுக்கும் இடையேயுள்ள ஒட்டுறவை முதலாளித்துவம் இறுதியில் வெட்டிவிடுகிறது.

தன்னியல்பாய் வளர்ந்த, கொடிய முதலாளித்துவ வடிவத்தில் – உற்பத்தி வேலை முறைக்குத் தொழிலாளி இருக்கிறானே தவிர, தொழிலாளிக்காக உற்பத்தி வேலை முறையில்லை என்ற முதலாளித்துவ வடிவத்தில் – அது ஊழலுக்கும் அடிமைத்தனத்துக்கும், கேடு விளைவிக்கும் அபாயகரமான தோற்றுவாயாகிவிடுகிறது.

தொழிலாளி வர்க்கம், “தன்னையும் தேசத்துக்குள் ஒரு பகுதியாக்கிக் கொள்ளாமல்”, தானும் “தேசியத் தன்மை” பெறாமல் அது பலம் பெற முடிவதில்லை; பக்குவம் பெற முடியவில்லை; உருவாக முடியவில்லை. ஆனால் முதலாளித்துவத்தின் வளர்ச்சி மேலும் மேலும் தேசிய ரீதியான தடைகளை உடைத்தெறிகிறது; தேசியத் தனி வாழ்வை அழிக்கிறது; தேசியப் பகைமைகளுக்குப் பதிலாக வர்க்கப் பகைமைகளை உருவாக்குகிறது. எனவே, வளர்ச்சியுற்ற முதலாளித்துவ நாடுகளில், “தொழிலாளிகளுக்குத் தேசம் ஒன்றும் கிடையாது” என்பது முழுக்க முழுக்க உண்மையாகும்; மேலும், குறைந்தபட்சம் நாகரிகமடைந்துள்ள நாடுகளிலாவது இருக்கும் தொழிலாளிகளின் “ஒன்றுபட்ட போராட்டம்”. . . “பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்குத் தேவையான முதல் நிபந்தனைகளில் ஒன்றாகும்” என்பதும் முழுக்க முழுக்க உண்மை.

அரசு என்பது ஒழுங்கமைக்கப்பட்ட அடக்குமுறைக் கருவியாகும். சமுதாய வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமரசப்படுத்த முடியாத வர்க்கங்களாகச் சமுதாயம் பிளவுண்டபோது, வெளிப் பார்வைக்குச் சமுதாயத்துக்கு மேலே நின்று கொண்டு, ஓரளவுக்குச் சமுதாயத்திலிருந்து விலகியும் இருக்கிற “அதிகாரம்” இல்லாமல் சமுதாயம் வாழ முடியாத போது, அரசு தவிர்க்க முடியாதபடி தோன்றியது.

அரசு என்பது, வர்க்க முரண்பாடுகளுக்கு உள்ளிருந்தே உதித்து, “மிகவும் வலிமை வாய்ந்த, பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகிற வர்க்கத்தின் அரசாக ஆகிறது; அந்த வர்க்கம், அரசின் மூலமாக, அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கமாக ஆகிறது; இவ்வகையில் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை ஒடுக்கி வைத்து, சுரண்டிக் கொண்டேயிருக்க அது புதிய சாதனங்களைப் பெறுகிறது. இவ்வாறுதான் பண்டைக் கால அரசு, அனைத்திற்கும் மேலாக, அடிமைகளை ஒடுக்கி வைத்திருப்பதற்காக அமைந்த அடிமை உடைமையாளர்களின் அரசாக இருந்தது; அதே போலத்தான் நிலப்பிரபுத்துவ அரசு என்பதும் பண்ணையடிமைகளாகிய விவசாயிகளையும் கொத்தடிமைகளையும் ஒடுக்கி வைத்திருப்பதற்காக அமைந்த பிரபு வம்சத்தினரின் அரசாக இருந்தது; அதே போலத்தான், நவீன காலப் பிரதிநிதித்துவ அரசும் கூலியுழைப்பை மூலதனம் சுரண்டுவதற்கென அமைந்த கருவியாகும்.

முதலாளித்துவ அரசின் மிகமிகச் சுதந்திரமான, மிகமிக முற்போக்கான வடிவம் என்றுள்ள ஜனநாயகக் குடியரசும் கூட இந்த உண்மையை எந்த விதத்திலும் அழித்துவிடவில்லை, ஆனால் வெறுமனே அதன் வடிவத்தை மாற்றுகின்ற  வர்க்கங்களை ஒழிப்பதில் கொண்டு போய்விடுவதன் மூலம் சோசலிசமானது அரசை ஒழிப்பதிலும் கொண்டுபோய் விடும்.

சுருக்கமாக இங்கு விவரிக்கப்பட்ட மார்க்சின் கருத்துகளை மேலும் ஆழமாக பயில வேண்டும். மார்க்ஸ் எங்கல்ஸ், லெனின் ஆகியோரின் கருத்துகளை வாசித்து உள்வாங்கிட வேண்டும். அப்போதுதான் மார்க்சிய லெனினிய தத்துவத்தை பயன்படுத்தி இந்தியாவில் சுரண்டல் இல்லாத சோசலிச சமுதாயத்தை படைக்க இயலும்.

இந்திய சமூகச் சூழல், பொருளாதார உறவுகள், காலனியம் இவை பற்றியெல்லாம் மார்க்ஸ் ஏராளமாக எழுதியுள்ளார். அன்றைய பிரிட்டிஷ் காலனியாட்சியின் கொடூரமான சுரண்டல் பற்றியும் ஏராளமான விபரங்களைச் சேகரித்து அவர் பதிவு செய்துள்ளார். இந்திய மக்கள் காலனி ஆதிக்கத்தின் நுகத்தடியிலிருந்து விடுதலை பெறவேண்டும் அதுவே இந்தியச் சிக்கல்களுக்கு சரியான தீர்வாக அமையும் என்று, இந்திய விடுதலைக்காக முதல் குரல் கொடுத்தவர் காரல் மார்க்ஸ்.

மார்க்சிய லெனினிய அடிப்படையில் இந்தியாவில் சோசலிசத்தை நோக்கிச் செல்ல பாட்டாளி வர்க்கத் தலைமையில் மக்கள் ஜனநாயக அரசு அமைய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாக எடுத்துரைக்கிறது. மக்கள் ஜனநாயக புரட்சியை முன்னெடுத்துச் செல்ல, மார்க்சின் 2௦௦-வது பிறந்த தினத்தில் உறுதியேற்போம்.

மார்க்சியம் வெல்க. !!

மக்கள் ஜனநாயகப் புரட்சி ஓங்குக!!

தமிழில் முதல் ஒலி இதழாக மார்க்சிஸ்ட் வெளியீடு !

வணக்கம். இனி நீங்கள் மார்க்சிஸ்ட் கட்டுரைகளை கேட்கவும் முடியும்.

எழுத்தறிவுக் குறைபாடுகளோ, பார்வைத் திறன் சிக்கலோ, பயண நேர களைப்போ, இனி வாசிப்புக்கு ஒரு தடையில்லை. மார்க்சிஸ்ட் இதழின் கட்டுரைகளின் கடினம் கருதி தயக்கம் இருப்பினும் கூட, இனி வாசிப்புக்கு உதவியாக ஒலித்துணை இருக்கப் போகிறது.

தமிழ்ப் பரப்பில் மார்க்சிய தத்துவம், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக சிந்தனைகளைத் தாங்கி வெளிவரும் ஏடு, மார்க்சிஸ்ட் இதழாகும். கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியாகி, வெள்ளிவிழாக் கண்டுள்ள மார்க்சிஸ்ட். தனது பயணத்தில், நவீன வசதிகளை ஈர்த்துக் கொண்டு புதிய புதிய வாசகர்களை நாடி வருகிறது.

செயலி, இணையதளம் மற்றும் அச்சு ஊடகம் வழியே மட்டுமல்ல வெவ்வேறு புது வாய்ப்புகள் தேடி, அதிலெல்லாம் மார்க்சிய வாசிப்பை உங்களிடம் சேர்க்கவே உழைக்கிறோம்.

அச்சுப் பிரதி ஒவ்வொரு மாதமும் 18 ஆயிரம் என்ற எண்ணிக்கையைக் கடந்து முன்னேறிவருகிறது.

அதே சமயம் செயலியும், இணையமும் மேம்படுத்தப்படுகிறது. ஒலி வடிவில் கட்டுரைகளை கொடுக்க டி டி எஸ் தொழில்நுட்பமும், மனிதக் குரலை பதிவு செய்கிற தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட உள்ளன. கணிணி வழியாக டி டி எஸ் நுட்ப மேம்பாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட ஸ்ரீனிவாசன், பத்மகுமார், மோகனம், ராமன், நாகராஜன், ஹேமா , மற்றும் ஐ ஐ டி மெட்ராஸ் சார்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள் உழைத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.

இவ்வசதியை மேலும் மேம்படுத்த கைகோர்க்க விரும்பும் எவரும் எங்களோடு இணைந்து செயல்பட இரு கரம் சேர்த்து அழைக்கிறோம்.

ஜனவரி மாதம் 2018 முதல் மார்க்சிஸ்ட் இதழ் கட்டுரைகள் தமிழில், ஒலி வடிவிலும் கிடைக்கும். இனி வரும் நாட்களில் தன்னார்வளர் பங்கேற்பு மூலம் இவ்வசதி புத்தக வாசிப்புக்கும் வளர்த்தெடுக்கப்படும்.

மார்க்சிஸ்ட் இதழின் புதிய முயற்சிகளை ஆதரித்து, ஊக்கப்படுத்தும் வாசகர்களுக்கு நன்றி. ஆண்டு சந்தா சேர்ப்பு மற்றும் வாசகர் வட்ட அமர்வுகளை இடைவிடாமல் நடத்தும் உங்கள் ஒத்துழைப்பை தொடர்ந்து வேண்டுகிறோம். அதன் அடித்தளத்தில்தான் மார்க்சிஸ்ட் இதழின் வெற்றி அமைந்துள்ளது.

கூடுதலாக ஒரு இனிப்பான செய்தி, மார்க்சிஸ்ட் இதழின் செயலியில் இனிமேல் வாசகர் வட்டம் ஒருங்கிணைப்பதும் சாத்தியமாகியுள்ளது. செயலிக்கு உள்ளாகவே விவாதிக்க வசதி உள்ளது. உடனே, புதிய பொழிவில் மார்க்சிஸ்ட் செயலியை தரவிறக்குங்கள்.

நன்றி, வணக்கம்.

சோசலிச எழுத்திற்கான பயிலரங்கு – பி.கே.ராஜன்

பாரதி புத்தகாலயமும் லெஃப்ட் வேர்ட் (Left Word ) பதிப்பகமும் இணைந்து நடத்திய ‘சோசலிச எழுத்திற்கான பயிலரங்கு’ (Workshop On Socialist Writings) மே 31, ஜூன் 1 ஆகிய இரு நாட்களூம் சென்னை காப்பீட்டு ஊழியர் சங்க அரங்கில் நடைபெற்றது. தமிழகத்தில் ஊடகவெளியிலும் நூல் பதிப்பு வெளியிலும் பரந்து பட்ட இடதுசாரி நிலைபட்டில் நின்று (புனைவற்ற) எழுத்து பணியாற்றி வரும் 35 எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர். கலந்து கொண்டவர்கள் பெரும்பான்மையோர் இளவயதினர். லெஃப்ட் வேர்ட் பதிப்பகத்தின் தலைமை பதிப்பாசிரியர், பேராசிரியர்.விஜய் பிரசாத் மட்டுறுத்துனராக இருந்து இரு நாள் பயிலரங்கை நடத்தினார்.

புகழ்பெற்ற பத்திரிக்கையாளர், ‘Everyone Loves a Good Drought’ (’எல்லோரும் ஒரு நல்ல வரட்சியை நேசிக்கின்றனர்’ –  விரைவில் பாரதி புத்தகாலய வெளியீடாக தமிழில் வரவிருக்கின்றது) நூலின் ஆசிரியர் பி.சாய்நாத் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தியதுடன் இரு நாட்களிலும் விவாதங்களின் போதும் பங்கேற்று நிறைவுரையும் ஆற்றினார். மூத்த பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான இரா.ஜவஹர், சோசலிச தமிழ் எழுத்து என்பது குறித்து ஒரு அமர்வில் பேசினார்.

’சோசலிச எழுத்தின் அடிப்படைகள்’ குறித்து விஜய் பிரசாத் அவர்கள் மார்க் நோவாக் அவர்களுக்கு அளித்த நேர்காணல், பயிலரங்கிற்கு ஒரு வாரம் முன்பே தமிழ்ப்படுத்தப்பட்டு (தமிழில் : சி.சுப்பாராவ்) பங்கேற்பாளருக்கு அளிக்கப்பட்டிருந்தது. (பார்க்க : புத்தகம் பேசுது ஜூன் 2017) அது இருநாள் விவாதங்களுக்கு ஒரு துவக்கப் புள்ளியாக இருந்தது.

பி.சாய்நாத் ஒரு இடதுசாரியாக, இந்திய மாணவர் சங்கத்தில், ஜே.என்.யூவில் இருந்து பணீயாற்றிய பின்புலத்திலிருந்து இந்திய ஊடகத்துறைக்குள் சென்று பணியாற்றிய தன் அனுபவங்களை துவக்க உரையின் பகுதியாகப் பகிர்ந்துகொண்டது இருநாள் பயிலரங்கிற்கான களத்தை அமைத்துக் கொடுத்தது. ஒரு நிகழ்வை செய்தியை எழுதும்போது அதன் பின்புலம், வரலாற்று நிகழ்வுப் போக்கில் அதன் இடம் ஆகியவை பற்றிய விவரங்கள்தான் செய்திக்கு மேலாக பெருமதியை எழுத்திற்கு அளிக்கும் என்பதை விளக்கினார். இன்றைய ஊடகக் கதையாடலின் மையமாக இருக்கும் ‘மாடு” என்பதை எடுத்துக் காட்டாக கொண்டு அவர் அதன் பல அம்சங்களை விளக்கினார். எந்தவொரு நிகழ்விலும் பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவங்களோடு சேர்த்து பதிவு செய்வது அவசியம். ஒரு சோஷலிச எழுத்தாளர் கணிணி முன்பு மட்டும் அமர்ந்து செய்திகளைச் சேகரிக்கக்கூடாது. அவர் பிரச்னையோடு தொடர்புடைய மக்களைச் சந்திக்க வேண்டும். அவர்களுடன் உரையாட வேண்டும். அவர்கள் பார்வையிலிருந்து பிரச்னைகளைப் பார்க்கத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் பார்க்கும்போது ஒரு புதிய பரிமாணம் வெளிப்படுவதை உணர்ந்துகொள்ளலாம் என்பதை தனக்கே உரிய நகைச்சுவையுடனும் ஏராளமான அனுபவம் சார்ந்த எடுத்துக் காட்டிகளுடனும் விளக்கினார்.

இன்றைய ஊடகப் பெருவெடிப்பின் காலத்தில் இடதுசாரி எழுத்து வாசிப்பவர்களை உள்ளிழுத்து வாசிக்க வைப்பதாக இருக்க வேண்டியதன் இன்றியமையாமை, அவ்வாறு இருப்பதற்கு தேவையான கூறுமுறை நுட்பங்கள் ஆகியவை விஜய் பிரசாத்தால் பல்வேறு எடுத்துக் காட்டுகளுடன் விளக்கப்பட்டது.

விஜய் பிரசாத் முன்மொழிந்து விளக்கிய சில அம்சங்கள்

 • மொழி என்பது எலும்புபோல் இருக்கவேண்டும். ஒவ்வொரு சொற்றொடரும் பளிரென்று, தெளிவாக மிளிரவேண்டும். அனைவருக்கும்எளிதில் புரிதல் வேண்டும். புரியாத எழுத்தாக குழூவுக்குறியாக எழுதுபவரின் மேதா விலாசத்தைப் பரைசாற்றுவதற்காக எழுதப்படும் எழுத்து உண்மையில் எதனையும் சாதிக்காது.
 • வெடிக்கும் வாக்கியங்களை கொண்டதாக ’எழுத்து’ இருக்க வேண்டும். அத்தகைய வாக்கியங்களை ஒருபோதும் வாசகர்கள் மறக்க மாட்டார்கள். எடுத்துக்காட்டுக்கு ரோசா லம்சம்பர்கின் இந்த வாக்கியம். “Proletarians of all countries, unite in peace-time and cut each other’s throats in war!”  “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் – அமைதி காலத்தில் – போரில் ஒருவர் கழுத்தை ஒருவர் அறுங்கள்.”
 • எழுத்துநடைக்கு சோஷலிச எழுத்திலிருந்தே பல எடுத்துக் காட்டுகளை எடுத்துக்கொள்ளலாம். கார்ல் மார்க்ஸின் பிரான்ஸில் உள்நாட்டுப் போர், தெளிவாகவும் நேர்த்தியாகவும் எப்படி எழுதுவது என்று கற்றுக்கொடுக்கும். லெனினின் சிறிய அரசியல் பிரசுரங்கள் (எ-கா : ஓரடி முன்னால் ஈரடி பின்னால், ஏப்ரல் கொள்கை) ஒரு வாதத்தை எப்படி அழகாகவும் வலுவாகவும் முன்வைப்பது என்பதைக் கற்றுக்கொடுக்கும்.
 • போலியான வார்த்தைகளை எடுத்து உடைத்துக் காட்டவேண்டும். ஜனநாயகம், மதச்சார்பின்மை, வளர்ச்சி, முன்னேற்றம், வல்லரசு ஆகிய பதங்களில் உள்ள போலித்தனத்தை வெளிக்கொணர வேண்டும். அவ்வாறு செய்யும்போது அவற்றின் மெய்யான அர்த்தம் என்ன என்பது புரியவரும்.

சோஷலிச எழுத்து எப்படி இருக்கவேண்டும்? எனும் வினாவிற்கு பி. சாய்நாத் பகிர்ந்துகொண்ட சில யோசனைகள்

 • சொல்லவரும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிலுள்ள உண்மையை வெளியில் கொண்டுவரவேண்டும்.
 • புனிதங்களுக்குள் சிக்கிக்கொள்ளவேண்டாம். அறிவியல் என்னும் பெயரோடு வரும் எல்லாமே உயர்ந்தவை; நவீன தொழில்நுட்பம் கேள்விக்கு அப்பாற்பட்டது என்றெல்லாம் கருதவேண்டியதில்லை. இது அரசியல் அதிகார மையங்களுக்கும் பொருந்தும்.
 • என்ன நடந்தது என்பதை விவரித்தால் மட்டும் போதாது. ஒரு விஷயம் ஏன் அப்படி நடந்தது என்பதை ஆய்வு செய்து நிகழ்வுப் போக்கை (Process) வெளிப்படுத்தவேண்டும்.
 • எழுதப்படும் எல்லாமே புலனாய்வு எழுத்துதான். வெளிப்பார்வைக்குத் தெரியாதவற்றைத் தோண்டித் துருவி வெளிக்கொணர வேண்டும்.
 • எல்லாவற்றையும் கதைகளாகச் சொல்லவேண்டும். வெறும் புள்ளிவிவர விளக்கங்கள் அனைவரையும் சென்றடையாது.
 • எதையும் எளிமையாகச் சொல்ல வேண்டும். அது சாத்தியம்.
 • எளிய, கிராம மக்களிடம்கூட நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அவர்களைப் பற்றிய எழுத்துகளிலும் அந்த உணர்வு பிரதிபலிக்கவேண்டும். வறட்டுத்தனமில்லாது மெல்லிய நகைச்சுவை இழையோட எழுத வேண்டும்.
 • சார்பு இன்றி எழுதுதல் சாத்தியம் இல்லை. நடுநிலை வகிப்பது என்பது அதிகாரத்துக்குச் சார்புநிலை எடுப்பதாகவே சென்றுமுடியும்.
 • வாசிப்பு இல்லாமல் எழுத்து இல்லை.
 • நல்ல எழுத்து நேர்மையானதாக இருக்கும்.

தமிழ் சோசலிச எழுத்து, அதன் வரலாறு குறித்து எடுத்துரைத்த இரா.ஜவஹர் விளக்கிய சில முக்கியமானப் புள்ளிகள்

 • ஒரு சொற்றொடரில் நான்கைந்து சொற்களுக்கு மேலாக இல்லாமல் எழுதலாம். ஆங்கிலத்தில் வருவது போன்ற கூட்டு வாக்கியங்களை தமிழில் பிரதி எடுக்க வேண்டியதில்லை.
 • நெரடி மொழியில் (active voice) இயன்ற மட்டும் எழுதுதல் தெளிவு தரும். எ.ஆ : மரம் ராமனால் வெட்டப்பட்டது என்பதற்கு பதிலாக ராமன் மரத்தை வெட்டினான் என எழுதுவது நல்லது.
 • எழுதியதை வாய்விட்டுப் படித்துப் பார்க்கலாம். அல்லது யாராவது சாதாரணமான வாசகரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி கேட்கலாம்.

முதல் நாள் முடிவில் பங்கேற்பாளர்களுக்கு சில தலைப்பில் ஓரிரு பத்திகள் எழுதிவரக் கூறி, அடுத்த நாள் அந்த எடுத்துக் காட்டுகளில் உள்ள நல்ல மற்றும் மேம்படுத்தக் கூடிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.

மேலும் அறிவுஜீவிகளின் வகைகள், ‘சோசலிச அறிவுஜீவி’ ஆகியன குறித்து அண்டோனியோ கிராம்ஸ்கியின் கோட்பாடுகளின் அடிப்படையில் இடதுசாரி எழுத்தாளர்கள் சோசலிச அறிவுஜீவிகளாக அவற்கு செய்ய வேண்டிய முயற்சிகள் குறித்து விஜய் பிரசாத் விளக்கினார்.

நடைமுறையில் இடதுசாரி எழுத்தாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், பல சிக்கலான விவகாரங்கள் குறித்து எழுதுவதில் இருக்கும் வரம்புகள், சாத்தியங்கள் ஆகியவை குறித்தும் சுதந்திரமான, மனம் திறந்த வாதங்கள் மிகுந்த தெளிவையும், நம்பிக்கையையும் அளித்தன.

லெஃப்ட் வேர்ட் பதிப்பகத்தின் நிர்வாக ஆசிரியர் சுதன்வா தேஷ்பாண்டேயும் கலந்துகொண்டு அவரது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டது ஒரு அதிகப்படியான பரிமானத்தை அளித்தது. அனுபவங்களின் பகிர்வு மூலம் பங்கு பெற்ற அனைவரும் தாம் பெரிதும்பயன் பெற்றது குறித்தும் கற்றுக்கொண்டது பற்றியும் கூறினார்கள். ஆனால் பயிலரங்கை நடத்தியவர்களும் தாம் மிக்கப் பயன்பெற்றதாகக் கூறியது, கற்றல் எப்போதும் இருவழி நிகழ்வுதான் என்பதை நிணைவூட்டியது

மார்க்சிஸ்ட் ஆண்ட்ராய்ட் ‘செயலி’

1989 ஆம் ஆண்டு முதல் வெளியாகிவரும் தத்துவார்த்த மாத இதழ் மார்க்சிஸ்ட். எமது பயணத்தின் அடுத்த தொழில்நுட்ப வளர்ச்சியாக அமைந்தது மார்க்சிஸ்ட் செயலி.

மார்க்சிஸ்ட் ரீடர் – ஆண்ட்ராய்ட் செயலி ஏப்ரல் 5, 2017 அன்று வெளியிடப்பட்டது. நடைபெற்ற வெளியீட்டு நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் ஆசிரியர் என்.குணசேகரன் தலைமையேற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் செயலியைத் தொடங்கிவைத்தார்.

மார்க்சிஸ்ட் செயலியை தரவிறக்கம் செய்ய, ஆண்ட்ராய்ட் அலைபேசியில் இருந்து  Marxist Reader : https://play.google.com/store/apps/details?id=com.marxist.android இந்த முகவரியை சொடுக்கவும்.

செயலியில் உள்ள வசதிகள்:

1) மார்க்சிஸ்ட் இணையதளத்தில் கட்டுரைகள் ஏற்றப்பட்ட அடுத்த நொடியில் கட்டுரைகளைப் பெறலாம்.

2) இரவுக்கும், பகலுக்கும் ஏற்ற முறையில் வண்ணங்கள் மாற்றும் வசதி.

3) 5 வண்ணங்களுக்கிடையே தேர்வு செய்துகொள்ளும் வசதி.

3) கட்டுரைகளை தானாக புக் மார்க் செய்து, விட்ட இடத்திலிருந்து தொடரும் வசதி.

4) உடனுக்குடன் கருத்துக்களை அனுப்பலாம். தனித்தனியாக கட்டுரைகள் மீதும், மொத்தமாகவும்.

5) இணையத்தில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையும் தேடுபொறியைப் பயன்படுத்தி சுலபமாகத் தேடலாம்.

6) மாத வாரியாகத் தேட, பெட்டக வசதி உண்டு.

7) வாசகர் வட்டங்களில் இணைந்திடுவதற்கான வசதி.

8) கட்டுரைகளில் இருந்து மேற்கோள்களை எடுத்து பகிரும் வசதி.

9) மார்க்சிஸ்ட் இணைய லின்க் எங்கிருந்து தேர்வு செய்தாலும், செயலியில் படிக்கும் வசதி.

விரைவில் வாட்சாப், இ-மெயில், டெலகிராம், பேஸ்புக் குழுக்கள் ஏற்படுத்தி, அதிலும் தொடர்ந்து இணைந்திருக்கவும், மார்க்சியக் கல்வியை வளர்த்துக்கொள்ளவும் செய்யலாம்.

செயலியை தரவிரக்கம் செய்துகொண்டு, மார்க்சிஸ்ட் இதழ்களைத் தொடர்ந்து வாசிக்கவும், விவாதிக்கவும், தத்துவார்த்த விவாதங்களைத் தொடரவும் கேட்டுக் கொள்கிறோம்.

சிறப்பான முறையில் செயலியை வடிவமைத்த தோழர் கலீல் ஜாகீர் பாராட்டுக்குரியவர். முகப்பு ஓவியம் கோ.ராமமூர்த்தி.

– ஆசிரியர் குழு.