திராவிட கட்சி அரசுகளுடைய பொருளாதார கொள்கைகள் பற்றி

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா

காங்கிரஸ் ஆட்சிக்காலம்

இந்தியா விடுதலை பெற்ற பின் இருபது ஆண்டுகள் (1947 -1967) தமிழ் நாட்டில்  காங்கிரஸ் ஆட்சி செய்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழக பொருளாதாரத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன.

ஒன்றிய ஆட்சியும் மாநில ஆட்சியும் ஒரே கட்சியின் கையில் இருந்த அக்கால கட்டத்தில் கிராமப்புறங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்துவந்த தொடர் போராட்டங்களின் விளைவாக சில மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, பழைய ஜமீந்தாரி மற்றும் இனாம் நில உறவுகள் பலவீனம் அடைந்தன. குத்தகை விவசாயிகள் நிலைமையில் சில முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. கம்யூனிஸ்டுகளின் தலைமையில் குத்தகை விவசாயிகள் நடத்திய பெரும் போராட்டங்களின் விளைவாக குத்தகை விவசாயிகள் நில வெளியேற்றம் என்பது ஓரளவிற்கு தடுக்கப்பட்டது. பங்கு சாகுபடி முறையில் குத்தகை விவசாயி பங்கு கணிசமாக உயர்ந்தது. வலுவான போராட்டங்கள் நீண்ட காலம் நடந்த கீழத்தஞ்சை பகுதிகளில் நிலங்களின் உடமை குத்தகை விவசாயிகளுக்கு கிடைத்தது. ஆனால் நில உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நிலமற்ற மற்றும் ஏழை விவசாயிகளுக்கு நிலம் பகிர்ந்தளிப்பது   தொடர்பாக விவசாய இயக்கம் போராடியும் சிறிதளவு முன்னேற்றம் தான் காணமுடிந்தது. காங்கிரஸ் அரசு பெரும் நில உடமையாளர்களை ஊக்குவித்து முதலாளித்துவ அடிப்படையில் விவசாய வளர்ச்சி காண முயற்சித்தது. ஒன்றிய அரசு அளவிலும் நவீன விவசாயமும் மகசூலில் உயர்வும் வேளாண் பொருட்கள், குறிப்பாக உணவு தானியங்கள், சந்தைபடுத்தப்படுவதும் முதலாளித்துவ வளர்ச்சிக்கு அவசியம் என்பது உணரப்பட்டது. பலநோக்கு பாசன திட்டங்கள் மூலம் அணைகள் கட்டப்பட்டு பாசன விரிவாக்கம் நிகழ்ந்தது. கிராமப்புறங்களில் மின்சார வசதி விரிவாக்கப்பட்டது. இது நிலத்தடி நீர் பயன்பாட்டை அதிகப்படுத்தியது. இவை ஓரளவு வேளாண் உற்பத்தி வளர்ச்சியை சாத்தியப்படுத்தின. தொழில் துறையில் ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் அரசு முதலீடுகளும் தனியார் பெருமுதலாளிகளை ஊக்குவித்து தனியார் துறை முதலீடுகளும் நிகழ்ந்தன. தமிழகத் தொழில் வளர்ச்சிக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பாரத மிகுமின் நிறுவனம் போன்றவை இந்த முயற்சிகளுக்கு சான்றாக இன்றும் உள்ளன. முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கல்வி மற்றும் பொது சுகாதாரம் ஆகிய துறைகளிலும் மாநில காங்கிரஸ் அரசு சில முயற்சிகளை மேற்கொண்டது.   எனினும், மாநிலத்தை காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் தமிழக பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் அகில இந்திய விகிதத்தை விட சற்று குறைவாகத்தான் இருந்தது. (இதற்கு நாட்டின் பல பிறபகுதிகள் நாடு விடுதலை அடைந்தபொழுது மிகவும் பின்தங்கிய நிலையில்  இருந்ததால் அவற்றின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது என்பதும் ஒரு காரணம்)   

 1967இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தி மு க தலைமையிலான தேர்தல் கூட்டணி காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியது. அறுதி பெரும்பான்மையுடன் திமுக ஆட்சிக்கு வந்தது. அந்த வெற்றியில் கம்யூனிஸ்ட் இயக்கம் உட்பட பல அரசியல் கட்சிகள் திமுகவுடன் இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ் நாட்டில் திராவிட இயக்க பின்புலம் கொண்ட கட்சிகள் 1967 ஆம் ஆண்டில் இருந்து ஐம்பத்து ஐந்து ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இக்காலத்தில் தமிழகம் பல துறைகளில் பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பது உண்மை. இந்த வளர்ச்சியின் தன்மையையும் வேகத்தையும் நிர்ணயிப்பதில் ஒன்றிய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. இந்த 55 ஆண்டு காலத்தில் நிகழ்ந்த பல அரசியல் மாற்றங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் எதிர்ப்பு வியூகம் அமைத்து 1967இல் ஆட்சிக்கு வந்த திமுக 1971இல் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு அமைத்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பின்னர் 1975இல் நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்டது. 1976ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் ஒன்றிய அரசு திமுக ஆட்சியை கலைத்தது. இதனால் காங்கிரஸ் கட்சியுடன் திமுகவிற்கு முரண் உருவான போதிலும், 1980 இல் நடந்த மாநில மற்றும் மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு கண்டு தேர்தலை திமுக சந்தித்தது. இரு திராவிட கட்சிகளுமே உறுதியான காங்கிரஸ் எதிர்ப்பு நிலையையோ, ஒன்றிய அரசின் முதலாளித்துவ வளர்ச்சிக்கான கொள்கைகளை எதிர்க்கும் நிலையையோ கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கவில்லை. இந்த அரசியல் பின்னணியை நாம் நினைவில் கொள்ள வேண்டும். திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள பொருளாதார வளர்ச்சியின் வர்க்கத்தன்மை குறித்த சில அம்சங்களை நாம் பரிசீலிப்போம்.

நில உறவுகள்

1950கள், 60களில் திராவிட இயக்கம் மிகப் பெரிய அளவிற்கு சிறுதொழில் முனைவோர், வியாபாரிகள், உழைப்பாளி மக்கள், விவசாயிகள் இவர்களை மையப்படுத்திய இயக்கமாக வளர்ந்தது. நிலச்சீர்திருத்தம் உட்பட திமுகவில் பேசப்பட்ட காலகட்டம் அது. இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சியினுடைய நிலச்சீர் திருத்தங்களை ஏளனம் செய்து, “உச்சவரம்பா? மிச்சவரம்பா?” என்று கேட்ட கட்சி திமுக. ஆட்சிக்கு வந்தவுடனேயே சில சீர்திருத்தங்களையும் அக்கட்சி சட்டரீதியாக மேற்கொண்டது. அது அப்படி செய்திருந்தாலும்கூட, உச்ச வரம்பை 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர் என்பதிலிருந்து 15 ஆக குறைத்து சட்டம் இயற்றினாலும், தமிழகத்தில் பெருமளவுக்கு நில மறுவிநியோகம் இன்றும் நடக்கவில்லை என்ற ஒரு உண்மையை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். திமுக இயற்றிய நிலஉறவுகள் தொடர்பான சட்டங்களில் இருந்த விதிவிலக்குகளும், இச்சட்டங்கள் களத்தில் அமலாக்கப்பட்டதில் இருந்த பலவீனங்களும் இந்த நிலைமைக்கு முக்கிய பங்கு அளித்துள்ளன.

நிலச்சீர்திருத்தம் தொடர்பாக காங்கிரசை விமர்சித்த திமுகவும், அதிலிருந்து தோன்றிய அதிமுகவும் நிலச்சீர்திருத்தப் பிரச்சினையில் ஜனநாயகரீதியான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை. 1984  பிப்ரவரி கணக்குப்படி தமிழகத்தில் மொத்தம் 2 லட்சத்து நாலாயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே உபரியாக இருப்பதாக அரசு மதிப்பீடு செய்துள்ளதாகவும், அதில் 89,000 ஏக்கர் மட்டுமே உபரி என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் 71,000 ஏக்கர் நிலம் மட்டுமே விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. 1979இல் சிதம்பரத்தில் நடைபெற்ற அகில இந்திய விவசாய சங்கத்தின் தமிழக மாநில மாநாடு 20 லட்சம் ஏக்கர் தமிழகத்தில் உபரியாக உள்ளன என்ற உண்மையை வெளிக்கொணர்ந்து, அவற்றை அரசு கையகப்படுத்தவேண்டும் என்று கோரி, பல போராட்டங்களை அடுத்த பல ஆண்டுகளில் மேற்கொண்டது. ஆனால் இன்றுவரை நில உச்ச வரம்பு சட்டங்களில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படவில்லை. பல நியாயமற்ற விதிவிலக்குகள் தொடர்கின்றன. குறிப்பாக கோயில் மற்றும் அறக்கட்டளைகள் என்ற பெயரில் பழைய, புதிய நிலப்பிரபுக்கள் குவித்து வைத்துள்ள நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை. 1961-62இல் தமிழகத்தில் ஒரு ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்திருந்தோர் மொத்த நில உடமையாளர்களில் கிட்டத்தட்ட 80%. இவர்களிடம் 20% நிலப்பரப்புதான் இருந்தது. 1981-82இல் இந்த நிலைமையில் மிகச்சிறிய மாறுதலே ஏற்பட்டிருந்தது.

1985 மார்ச் 13 அன்று சட்டப்பேரவையில் ஆற்றிய தனது உரையில் தோழர் கோ. வீரையன் அவர்கள்  தமிழகத்தில் ஒரு விவசாயக் குடும்பத்திற்கு 25 சாதாரண ஏக்கர் புஞ்சை, 15 ஏக்கர் நஞ்சை நிலம் என்ற உச்சவரம்பை நிர்ணயித்து விதிவிலக்குகளை எல்லாம் நீக்கிவிட்டால், சுமார் 20 லட்சம் ஏக்கர் உபரி நிலம் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றுவரை தமிழக அரசு உபரி நிலம் என்று கையகப்படுத்தி விநியோகம் செய்துள்ளது சுமார் 2 லட்சம் ஏக்கர் என்றுதான் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. அண்மையில் அரசு இணைய தளம் தரும் தகவல் என்னவெனில் 2016 பிப்ரவரி முடிய 2,08,442 ஏக்கர்  நிலம் உபரியாக அறிவிக்கப்பட்டு, 1,90, 723  ஏக்கர் விநியோகம் செய்யபட்டிருந்தது.

(இதற்கு நேர் மாறாக இந்திய நாட்டின் நிகர சாகுபடி பரப்பில் 3 சதவீதம் மட்டுமே கொண்டுள்ள மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சி மூலம் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட உச்ச வரம்புக்கு அதிகமான நிலப்பரப்பில் 23 சதவீதம் நிலமற்றோருக்கும் ஏழை விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த நில சீர்திருத்தப் பயனாளிகள் 1.5 லட்சம். மேற்கு வங்கத்தில் உச்சவரம்பு நிலம் பெற்ற பயனாளிகள் 15 லட்சம், பங்கு சாகுபடி சீர்திருத்தங்கள் (Operation Barga)  மூலம் பயனடைந்தோர் மேலும் 15 லட்சம், ஆக மொத்தம் 3௦ லட்சம்.)

2010-11இல் தமிழகத்தின் மொத்த கிராம குடும்பங்களில் எழுபது சதத்திற்கும் மேல் நிலம் அற்றவை. நிலம் சாகுபடி செய்வோரை எடுத்துக்கொண்டால், இவர்களில் 78% ஒரு ஹெக்டேர் மற்றும் அதற்கும் குறைவாக சாகுபடி செய்வோர். இவர்களிடம் மொத்த சாகுபடி நிலங்களில் 35% உள்ளது. மறுமுனையில், பத்து ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்வோர் மொத்த சாகுபடியாளர்களில் 2.3% தான். ஆனால் இவர்களிடம் மொத்த சாகுபடி நிலப்பரப்பில் 18.5 சதம் உள்ளது. நிலம் மட்டுமல்ல. நவீன உற்பத்திக்கருவிகளும் ஒரு சிலரிடமே தமிழகத்தில் குவிந்துள்ளன. திராவிட கட்சிகள் தமது ஆட்சி காலங்களில் கிராமப்புறங்களில் முதலாளித்துவ நிலப்பிரபுக்களுக்கும் பணக்கார விவசாயிகளுக்கும் ஏனைய செல்வந்தர்களுக்கும் ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளனர்.

நிலக்குவியல் என்பதைப் பொருத்தவரையில் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சியில்  பெரிய மாற்றமில்லை என்று மட்டும் சொன்னால் அது பொருத்தமாக இருக்காது. ஏனெனில் அதன் சமூகக் கட்டமைப்பில் முக்கியமான மாற்றமிருக்கிறது. பாரம்பரியமான மேல்சாதி நிலவுடைமையாளர்கள் ஆதிக்கம் குறைந்துள்ளது. இடைச்சாதிகள் கையில் முன்பைவிடக் கூடுதலாக நிலம் உள்ளது. இது குறிப்பிடத்தக்க, ஜனநாயக தன்மை கொண்ட மாற்றம். ஆனால், இது தலித்துகளுக்குப் பொருந்தாது என்பதும் உண்மை. தலித்துகளைப் பொருத்தவரை பெருமளவுக்கு அவர்கள் நிலம் பெறவில்லை என்பதும், தமிழகத்தின் ஒரு எதார்த்தமான உண்மை. திராவிட கட்சிகள் நில உறவுகளை மாற்ற பெரும் முயற்சி எடுக்கவில்லை. இதற்கு ஒரு காரணம் அன்றைய திமுக வின் கிராமப்புற தலைமை என்பது பணக்கார விவசாயிகளிடமும் முதலாளித்துவ விவசாயிகளிடமும் இருந்தது என்பதாகும். இன்றைக்கும் கிராமப்புறங்களில் சாதிஒடுக்குமுறை தொடர்வதற்கு நில ஏகபோகமும் ஒரு காரணம். கிராமப்புறங்களில் அதிகாரங்களை நிர்ணயம் செய்வதில் நிலவுடைமை தொடர்ந்து பங்கு ஆற்றுகிறது.

முதலாளித்துவ வளர்ச்சி

1950கள், 60களில் உற்பத்தி முறைகளில் மாற்றமில்லாமல், பாசனப் பெருக்கம், ஒரு எல்லைக்குட்பட்ட  நிலச்சீர்திருத்தத்தின் காரணமாக கிடைத்திருக்கக்கூடிய கூடுதல் சாகுபடி நிலம் என்ற வகையில், வேளாண் உற்பத்தி பெருகியது. 60களின் நடுப்பகுதிக்குப் பிறகு, வேளாண் உற்பத்தியின் வளர்ச்சி என்பது பிரதானமாக பசுமைப் புரட்சி என்ற ஒரு பதாகையின் கீழ் அது இன்றைக்கு பேசப்பட்டாலும், முக்கியமாக சில தொழில்நுட்ப மாற்றங்களை மையப்படுத்தியதாக இருந்தது. ஒன்றிய அரசினுடைய பெரிய பங்கும் அதில் இருந்தது. நவீன உற்பத்தி முறைகள் புகுத்தப்பட்டன. அதற்கு முக்கியமாக நீர்வளம் தேவைப்பட்டது. ரசாயன உரங்கள், உயர் மகசூல் விதைகள், உத்தரவாதமான பாசன மேலாண்மை ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு அது தமிழகத்திலும் தனது பங்கை ஆற்றியது. வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன; வேளாண் விரிவாக்கப்பணி அமைப்பு வலுப்படுத்தப்பட்டது; தேசீய வேளாண் ஆய்வு அமைப்பு வலுப்பெற்றது; இடுபொருட்களுக்கு மானியம் வழங்கப்பட்டது; அரசு உத்தரவாத விலை கொடுத்து நெல் மற்றும் கோதுமை பயிர்களை கொள்முதல் செய்தது ஆகிய நடவடிக்கைகள் ‘பசுமை புரட்சியின் பகுதியாக இருந்தன. தமிழகத்தில் வேளாண்துறையில் மகசூல் அதற்குப் பிறகு உயர்ந்தது என்பது உண்மை.

இன்றைக்கு கிராமப்புறங்களில் விவசாயம் அல்லாத துறைகளில் பணிகள் உருவாகி இருக்கின்றன. அவை அதிகரித்துக்கொண்டும் வருகின்றன. தமிழகத்தில், குறிப்பாக மற்ற பல்வேறு துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக நகர கிராம இணைப்பு முன்னேறி இருக்கிறது. இது திராவிட இயக்கங்களின்  ஆட்சியில் மட்டும் நிகழவில்லை, முன்பும் நிகழ்ந்தது. போக்குவரத்து, கல்வி, பொதுவிநியோகம் எல்லாம் உழைப்பாளி மக்கள் மீது நிலச்சுவான்தார்களின் அதிகார பலத்தைக் குறைத்திருக்கின்றன. ஆனால், அது அறவே மறைந்துவிட்டது என்றோ, அல்லது இந்த அதிகார பலம் குறைக்கப்பட்டதனால், கிராமப்புற செல்வங்களை உருவாக்கும் உழைப்பாளி மக்களை சுரண்டுவதில் நிலவுடைமையாளர்களுக்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றோ சொல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால் அரசினுடைய பல்வேறு திட்டங்களையும் பயன்படுத்தி கிராமங்களில் நிலவுடைமையாளர்களால் பெருமளவுக்கு முன்னேற முடிந்துள்ளது. தமிழகத்து கிராமங்களில் பெரும் நிலக்குவியல், பீகார், ஜார்கண்ட், சட்டிஷ்கர், மத்திய பிரதேச  பாணியில் இல்லாவிட்டாலும், இன்றைக்குப் பல நூறு ஏக்கர்கள் வைத்திருக்கும் நிலப்பிரபுக்கள் தமிழகத்தில் இல்லை என சொல்ல முடியாது.

அகில இந்திய முதலாளித்துவ வளர்ச்சியில் பங்கு

தமிழகத்தை வளர்ச்சி விகிதத்தை ஒட்டுமொத்தமாகப் பார்த்தோமானால் குஜராத், மகாராஷ்டிரா, மாநிலங்களுக்கு அடுத்தபடியாக மாநிலத்தினுடைய மொத்த உற்பத்தி மதிப்பு அதிகரித்து வந்துள்ளது. ஆனால் உற்பத்தி வளர்ச்சியின் தன்மை எவ்வாறு இருக்கிறது? காங்கிரஸ் ஆட்சியிலும், திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் ஆதாயம் பெற்றுள்ளார்கள் என்பதுதான் பொதுவான உண்மை.

திராவிட கட்சிகளின் ஆட்சிகள் ஒன்றிய அரசின் தாராளமய கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டது இல்லை. ஏனெனில் அவர்கள் அந்தக் கொள்கையினுடைய பல அம்சங்களை ஏற்றுக் கொண்டவர்களாக மாறியுள்ளனர். தொடர்ந்து பல பத்தாண்டுகளாக திராவிட கட்சிகள் மாறி மாறி ஒன்றிய அரசில் அங்கம் வகித்தும் உள்ளனர்.

தாராளமய காலத்தில் ஊரக வர்க்க உறவுகள்

இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே தமிழகத்திலும் கிராமப்புறங்களில், கடந்த 30 ஆண்டுகளில், தனியார்மய, தாராளமய, உலகமய காலகட்டத்தில் வேளாண்துறையில் கிராமப்புறங்களில் உள்ள வர்க்க உள்முரண்பாடுகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கிராமப்புறங்களில் இன்றைக்கு பழைய பாரம்பரிய பத்தாம்பசலி நிலப்பிரபுக்கள் கிட்டத்தட்ட இல்லை எனச் சொல்லலாம். முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் இருக்கிறார்கள். அதோடு சேர்ந்து பாரம்பரியமாக கிராமப்புற நில ஏகபோகத்தில் பங்கேற்காத, ஆனால், பிறகு அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி வளர்ந்துள்ள, விவசாயம் சார்ந்த, விவசாயம் சாராத பல குடும்பங்கள் உள்ளே வந்துள்ளார்கள். அவர்கள் நவீன உற்பத்தி முறைகளைப் பயன்படுத்தி வலுவான முதலாளித்துவ விவசாயிகளாக இடம் பெற்றிருக்கிறார்கள். அதைப்போலவே, பணக்கார விவசாயிகளும் இருக்கிறார்கள்.

தற்சமயம் விவசாயத்தில் அநேகமான செயல்பாடுகள் இயந்திரமயமாகிவிட்டது. விவசாயத்தில் கூலி வேலை என்பது குறைவாகத்தான் உள்ளது. இன்றைய கிராமங்களில் விவசாயக்கூலித் தொழிலாளி என்ற பிரிவை வரையறுக்க முடியவில்லை. ஏனெனில் கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளிகள் பல வேலைகளை செய்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 2011 சமூகப் பொருளாதார கணக்கெடுப்பின்படி கிராமப்புற மொத்த உழைப்பாளிகளில் 65 சதவிகிதம் பிரதானமாக  விவசாயத்தை சார்ந்திருப்பவர்கள். அதில் ஒரு 20 சதம்தான் சாகுபடியாளர்கள். மீதம் 45 சதம் விவசாயத் தொழிலாளி என்ற கணக்கு வருகிறது. இவர்கள் அனைவரும் விவசாயத் தொழிலாளிகளாக மட்டும் இல்லை. உண்மை என்னவென்றால் நிலமற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களது வருமானம் கூலிக்கான உடல் உழைப்பை சார்ந்துள்ளது. கிராமப்புறங்களில் நிகழ்ந்துள்ள நில இழப்பு வலுவான வர்க்க வேறுபாடுகளை உருவாக்கியுள்ளது. தாராளமய வளர்ச்சி வேலையின்மை பிரச்சினையை தீவிரமாக்கியுள்ளது.  குஜராத், மகாராஷ்டிரா அளவிற்கு இல்லாவிட்டாலும் தமிழகத்திற்கும் இது பொருந்தும்..

தமிழக கிராமங்களில் தமிழக நகரங்களில் தொழில்வளர்ச்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதைவிட அதிகமாக இந்த மூன்றாம் நிலைத் தொழில்கள் வளர்ந்துள்ளன. இதனால் இரண்டாம் நிலையின் பங்கு குறைந்துள்ளது. 1960-61இல் தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் தொழில்துறையின் பங்கு 20.47 சதமாக இருந்தது. ஐந்தில் ஒரு பங்காக இருந்தது. இது வேகமாக அதிகரித்து 90-91ல் மூன்றில் ஒரு பங்கானது. 33.1 சதம். 1995-96 வரும்போது, 35 சதமாக உயர்ந்தது. ஆனால், அதற்குப்பிறகு, தொடர்ந்து அது குறைந்துகொண்டே வருகிறது.

.தமிழக அரசின் முதலீட்டுக் கொள்கைகள் பற்றி பார்ப்போம். இந்தியாவில் தாராளமய கொள்கைகளின் பகுதியாக  உழைப்பாளி மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இது தமிழகத்திற்கும் பொருந்தும். தமிழகத்தின் திராவிட கட்சிகளின் அரசுகள் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டவில்லை. பெரும் கம்பனிகளை ஊக்குவித்து முதலீடுகளை கொண்டு வருவது மட்டுமே அரசுகளின் கவனத்தில் இருந்துள்ளது. இதன் பொருள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் அளிக்கப்படுவது என்பதாகும்.

தமிழகத்தில் கிராமங்களில் வசிக்கின்ற மக்களின் சதவிகிதம்  பிற மாநிலங்களை ஒப்பிடும்போது நிச்சயமாக குறைந்துள்ளது. ஆனால், இன்றும் 50 சதவிகிதம் மக்கள்  கிராமப்புறங்களில் இருக்கிறார்கள். விவசாயத்தையும் சேர்ந்துதான் அவர்கள் வாழ்வாதாரம் இருக்கிறது. விவசாயம் மட்டுமல்ல. விவசாயக் குடும்பங்கள்கூட, விவசாயத்தில் கூலி வேலை, வெளியே கூலி வேலை, சில சிறுசிறு தொழில்கள் நடத்துவது என்று பலவகைகளில் கடுமையாக உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் கிராமப்புற உழைக்கும் மக்களுக்கு உள்ளது. மிகக் கடுமையான உழைப்பை செலுத்திய பிறகுதான்  வறுமைக்கோட்டையே எட்டுகிறார்கள். சில ஆண்டுகளுக்குமுன் நடத்தப்பட்ட, ஊரக வேளாண் குடும்பங்கள் தொடர்பான ஒன்றிய அரசின் ஆய்வும் இதனை தெளிவுபடுத்துகிறது.

தொழில் வளர்ச்சியின் வர்க்கத்தன்மை

தொழில் வளர்ச்சியில் முக்கிய அம்சம் என்னவெனில் தமிழக தொழில் வளர்ச்சி வேலை வாய்ப்புகளை வேகமாக அதிகரிக்கும் தன்மையில் இல்லை. ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே திராவிட கட்சிகள் காங்கிரசைப் போலவே பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டனர். 1970களின் துவக்கத்தில் வெடித்த சிம்சன் போராட்டத்திலேயே இதைக் காண முடிந்தது. வால்பாறையில் தேயிலை தொழிலாளர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டது, நெய்வேலியில் இரும்புக்கரம் என்பதெல்லாம் நாம் சந்தித்த சம்பவங்கள். பின்னர் 1977இல் வந்த எம் ஜி ஆர் அரசு டி வி எஸ் முதலாளிகளுக்கு அளித்த ஆதரவும் இதே வகையானதே. அடுத்துவந்த காலங்களில் ஸ்பிக், ஸ்டெர்லைட் என்று பொதுவான பெருமுதலாளி ஆதரவு நிலையை திராவிட கட்சிகளின் தலைமையிலான மாநில அரசுகள் தொடர்ந்து எடுத்துவந்துள்ளன. தாராளமய கொள்கைகள் அமலாக்கத்திற்கு வந்த பிறகு பெயரளவிற்குக் கூட பொதுத்துறை பாதுகாப்பு, தொழிலாளர் நலன், தொழிலாளர் உரிமைகள் போன்றவற்றிற்கு ஆதரவாக மாநில அரசுகள் செயல்படவில்லை. அதற்கு நேர்எதிராக, தொழில் ஊக்குவிப்பு என்ற பெயரில் வெளிப்படைத்தன்மை எதுவும் இல்லாத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவது, அதன் அடிப்படையில் நிலம்,  நீர், மின்சாரம் உள்ளிட்ட எல்லா வசதிகளையும் சலுகை கட்டணத்தில் இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு அளிப்பது என்பது இரு கழக ஆட்சிகளிலும் தொடர்கிறது. இந்த ஒப்பந்தங்களும் சரி, அவற்றின் மூலம் நிகழ்ந்துள்ள முதலீடுகளும் சரி, வேலை வாய்ப்புகளை பெருக்குவதில் மிகச்சிறிய பங்களிப்பே செய்துள்ளன. தி.மு.க ஆட்சியில் (2007 வாக்கில் என்று நினைவு) ஒரு முறை சட்ட சபையில் 6,000 கோடி ரூபாய் முதலீடு அளவிற்கு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் 20,000 வேலைகள் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. கணக்குப் பார்த்தால் இது ஒரு கோடி ரூபாய் முதலீட்டுக்கு மூன்று பணியிடங்கள் என்று வருகிறது! 2015 செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் இரண்டு  லட்சத்து  நாற்பத்தி இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக சொல்லப்பட்டது. 2016 தமிழ்நாடு பட்ஜெட் உரையில் இந்த முதலீடுகள் மூலம் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் பணியிடங்கள் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் ஒரு கோடி ரூபாய் முதலீட்டிற்கு ஒரு பணியிடம் என்று ஆகிறது! ஆக. நாட்டின் இயற்கை வளங்களை தாரை வார்த்துக் கொடுத்து, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, வரிச்சலுகைகளையும் அளித்து பன்னாட்டு இந்நாட்டு பெருமுதலாளிகளை முதலீடு செய்ய அழைப்பது எந்த விதத்திலும் வேலை வாய்ப்பை உருவாக்கிட பயன் தராது என்பது தெளிவு.  ஆனால் சிறு குறு மூலதனங்கள் மூலமும் அரசு முதலீடுகள் மூலமும் வேலை வாய்ப்பை பெருக்கும் வகையிலான தொழில் கொள்கைகளை திராவிட கட்சிகளின் அரசுகள் பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. இவர்கள் மாறி மாறி பங்கேற்ற மத்திய அரசு கூட்டணி அரசாங்கங்களிலும் இந்த பிரச்சனைகளை திராவிட கட்சிகள் எழுப்பவில்லை என்பது மட்டுமல்ல. மத்தியில் கூட்டணி ஆட்சிகளில் பங்கேற்ற பொழுது பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்தும் மத்திய அரசுகளின் தாராளமய கொள்கைகளை எதிர்த்து குரல் எழுப்பவும் இல்லை. எனினும் மக்களின் வலுவான போராட்டங்களின் விளைவாக சில நலத்திட்ட நடவடிக்கைகளை இந்த அரசுகள் மேற்கொண்டு வந்துள்ளன.

இறுதியாக

இன்று நாட்டின் அரசியல் நிலைமைகளை கணக்கில் கொண்டு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டிய பெரும் கடமை நம் முன் உள்ளது. கடந்த காலம் எப்படி இருந்தாலும், சமகால தேவைகளையும் இன்று உலகளவிலும் இந்தியாவிலும் அம்பலப்பட்டு நிற்கும் ஏகபோக கார்ப்பரேட் ஆதரவு வளர்ச்சிப்பாதையை நிராகரிக்க வேண்டியதன் அவசியத்தையும், மதவெறி அரசியலைக் கையாளும் சக்திகளை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து செயல்பட திராவிட கட்சிகளுக்கு வாய்ப்பு உள்ளது.  இது நடக்குமா என்பதை நிர்ணயிப்பதில் வர்க்க, வெகுஜன இயக்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

உலகமய காலத்தில் வாழ்விட உத்தரவாதமும் சமூக நீதியும்

ச. லெனின்

குரல்: தோழர் பீமன்

சென்னை உள்ளிட்டு தமிழகத்தின் பல இடங்களில் வாழ்விட பாதுகாப்பிற்கான போராட்டங்கள் முன்னுக்கு வந்துள்ளது. குறிப்பாக, நீர்நிலைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேம்பட்ட வாழ்விடம் வழங்குதல் என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் குடியிருப்புக்கள் அகற்றப்படுவதும், அதை எதிர்த்த மக்களின் போராட்டங்களும் தொடர்கின்றன. நகர்ப்புறங்களின் மையத்திலிருந்து, உழைக்கும் மக்களின் பெரும்பகுதியினர் நகரங்களின் விளிம்பிற்கு துரத்தப்படுகின்றனர். இதுபோன்ற நிலைகள் எதுவும் திடீர் நிகழ்வுகளோ, தவிர்க்க முடியாத விஷயங்களோ அல்ல. இதன் பின்னால் உள்ள அரசியல் பொருளாதாரத்தை விளக்கிடும்  சிறு முயற்சியை இக்கட்டுரை மேற்கொள்கிறது.

சென்னை (மெட்ராஸ்), கல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே துறைமுகம், வர்த்தகம் சார்ந்து வளர்ச்சிபெற்று வந்தன. இந்திய விடுதலைக்கு பிறகான காலப்பகுதியில் புதிய வளர்ச்சிப் போக்குகளின் விளைவாக நகரங்கள் விரிவடைந்தது. அதன் முக்கிய விளைவாக, நகரத்தின் வளர்ச்சிக்கான அடித்தளமாக விளங்கிய உழைக்கும் மக்களும் நகரங்களில் குவிந்தனர். அதேநேரம் சுரண்டல் நிறைந்த முதலாளித்துவ அமைப்பு முறையில் அவர்களுக்கு கிடைத்த குறைந்த கூலியில் குடிசை பகுதிகளில்தான் குடியிருக்க முடிகிறது. கூவம் ஆற்றங்கரையிலும், நெருக்கடி நிறைந்த, காற்றோட்டம் இல்லாத, குடிநீர், கழிப்பிடம், அடிப்படைகள் வசதிகள் ஏதுமற்ற, குறுகிய சந்துகளையே சாலைகளாக கொண்ட, மழை / வெயில் என எந்த காலத்திலும் வாழ தகுதியற்ற மூச்சுத்திணறும் சிறு அறைகளை கொண்ட அல்லது அறைகளற்ற வீடுகளில், அங்கு நிலவும் சுகாதாரமற்ற சூழலில் வாழவேண்டும் என்பது அவர்களது விருப்பமல்ல. உழைப்பாளிகளின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கொடுக்கப்படாத சூழலே அவர்களை ஏழ்மையில் தள்ளியது. அதுவே மோசமான வாழ்நிலையிலும் குடியிருப்புக்களிலும் அவர்களை வாழவைக்கிறது. ஆனால், முதலாளித்துவமும் அதன் கண்ணோட்டம் கொண்ட மேட்டிமை சிந்தனையுடையவர்களும், ஏதோ குடிசை பகுதி மக்களின் தவறான போக்கின் விளைவாகவே அவர்கள் அங்கு இருப்பதுபோன்ற கருத்துக்களை பதிவு செய்கின்றனர். முதலாளித்துவம்தான் அவர்களின் அப்படியான வாழ்நிலைக்கு காரணம் என்பதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் அரசியலும் அதில் உள்ளது.  இன்று நேற்றல்ல; மார்க்ஸ், எங்கெல்ஸ் காலத்திலேயே இப்படியான கருத்துக்களை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

“வாடகையில் சிறிதளவு பணத்தை மிச்சப்படுத்த முடியுமென்றால், அவர்கள் இருண்ட, ஈரப்பதமான, போதுமானதாக இல்லாத, சுருக்கமாகச் சொல்வதென்றால் சுகாதார நிபந்தனைகள் அனைத்தையும் கேலிக்கூத்தாக்குகின்ற குடியிருப்புக்களை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலானவற்றில் சில குடும்பங்கள் ஓர் அறைக்கட்டை, ஒரு சிறு அறையைகூட எடுத்துக் கொள்கிறார்கள். வாடகையை இயன்ற அளவுக்குக் குறைக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறார்கள். ஆனால், மறு பக்கத்தில் அவர்கள் தம்முடைய வருமானத்தை உண்மையிலேயே பாபகரமான வழியில் குடிப்பதிலும் எல்லா விதமான சிற்றின்பங்களிலும் விரயம் செய்கிறார்கள்.” என்று ஸாக்ஸ் என்பவர் பதிவு செய்கிறார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் “சாதாரண மக்கள் மதுக்கடைக்குப் போகிறார்கள். அந்தஸ்துடையவர்கள் மனமகிழ் மன்றங்களுக்குப் போகிறார்கள்” என்று தனது ஆசிரியர் இவ்வாறு கூறுவார் என்று எங்கெல்ஸ் அதை நையாண்டி செய்கிறார். மேலும் “முதலாளிகளை பொறுத்தமட்டில், குற்றம் அறியாமையாகக் குறைந்துவிடுகிறது; ஆனால் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில், அறியாமையே அவர்களுடைய குற்றத்திற்குக் காரணமாகிவிடுகிறது” என்கிறார் எங்கெல்ஸ்.

துவக்கத்தில் குடிசை பகுதிகள் இருந்த இடங்களிலேயே அதை மேம்படுத்திடும் திட்டங்களை ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். புதிய பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் உழைக்கும் மக்கள் குடியிருக்கும் நிலத்தின் மதிப்பின் மீது தனது பார்வையை செலுத்தியது. அதன் விளைவாக, குடிசை பகுதிகளை மேம்படுத்துவது என்பதிலிருந்து குடிசை பகுதிகளை அகற்றுவது  என்கிற நிலைக்கு அரசும் ஆட்சியாளர்களும் வந்தனர். அதற்கு தேவையான காரணங்களையும் கட்டமைத்தனர். தற்போது குடிசை பகுதிகளை அகற்றுவது என்பதை கடந்து இது ‘ஆக்கிரமிப்பு’ பகுதி, நீர்நிலைகள், மேய்ச்சல் நிலம் என அதன் கைகள் நீள்கிறது. அதுவும் சாஸ்தா பல்கலைக் கழகம் போன்ற பெருநிறுவனங்களின் மீது அவை நீள்வதில்லை. இருக்க இடமின்றி ஒண்டிக்குடித்தனம் செய்யும் எளிய மக்களின் வீடுகள் மீதே அரசின் புல்டோசர்களின் கைகள் நீள்கிறது. இதுவே குடியிருப்புக்கள் மீதான அரசின் வர்க்க கண்ணோட்டத்தை வெளிப்படுத்திவிடுகிறது.

குடியிருப்புகள் குறித்த அரசின் கொள்கைகள்

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குடியிருப்புகள் குறித்த ஒரு விரிவான அணுகுமுறைகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. விடுதலை இந்தியாவில் தமிழகம் சார்ந்த கொள்கை ஆவணங்களில் 1956ஆம் ஆண்டுதான் முதன் முதலாக குடிசை பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1956இல் “குடிசை பகுதி (மேம்பாடு மற்றும் அகற்றுதல்) சட்டம்” இயற்றப்பட்டுள்ளது. மனிதர்கள் வாழ தகுதியற்ற நிலையில்தான் குடிசை பகுதிகள் இருக்கிறது என்று சட்டம் கூறுகிறது. ஒன்று குடிசை பகுதி மக்களை அவர்கள் வசிக்கும் இடத்திலேயே மேம்பாட்டு பணிகளை செய்து கொடுத்து குடியிருக்க அனுமதிப்பது அல்லது அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்தில் குடியமர்த்துவது என்பதே அதன் முன்னால் இருக்கும் இரண்டு வழிகளாக அமைந்திருந்தது. இந்த இரண்டு வழிகளில் எதை அமலாக்குவது என்பதை அவ்வப்போது இருந்த சமூக, அரசியல், பொருளாதார சூழல்களே தீர்மானித்துள்ளன.

தேசிய திட்டக் குழுவின் மூலம் 1960களுக்கு முந்தைய இரண்டு தேசிய திட்டங்களிலும் குடிசை பகுதிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து பரிந்துரைகளை வழங்கியுள்ளன. குறிப்பாக, மும்பை மற்றும் கல்கத்தா சார்ந்து அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், நகர்ப்புறங்களின் விளிம்பில் அவர்களை மறு குடியமர்வு செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதற்கு கூடுதல் செலவுகளை மேற்கொள்ள வேண்டி வரும் என்பதோடு, அவர்களின் வேலை, சமூகத் தொடர்பு, கல்வி உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், அப்போது அது முன்னெடுக்கப்படவில்லை என்று டில்லி குடிசை பகுதி அகற்றம் குறித்த கட்டுரையில் கெர்ட்னர்தெரிவித்துள்ளார். 1960 முதல் 1970கள் வரை மறுகுடியமர்வு என்பதை விட அவர்கள் குடியிருக்கும் இடத்தை மேம்படுத்துவது என்பதாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், தற்போது உலக வங்கியின் கடன் மூலம் நிதி கிடைக்கிறது. மக்களின் வேலை, சமூக தொடர்பு, கல்வி குறித்த எவ்வித அக்கறையுமின்றி அரசு மக்களை நகரத்தின் விளிம்பிற்கு துரத்துகிறது.

விடுதலைக்கு பிந்தைய காலப்பகுதியில் சென்னையை நோக்கி வரும் மக்கள் கூட்டம் அதிகரித்தது. இது குடியிருப்பு குறித்த பிரச்சினைகளின்பால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. போதுமான அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் உள்ள குடிசை பகுதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வேலைகளை அரசு மேற்கொள்ளும் என்று ஆட்சியாளர்கள் தெரிவித்தனர். குடியிருப்பு பிரச்சினைக்கான அரசின் தலையீடு என்பது சமூக நிர்ப்பந்தத்தால் விளைந்ததே அன்றி அது யாருடைய கனவு திட்டமாகவும் எழவில்லை. குறைந்த வருமானமுடைய ஏழை எளிய புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் குடிசை பகுதி மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட குடியிருப்புக்களை வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சியினரை வாக்குறுதி வழங்க வைத்தது. இதன் தொடர்ச்சியாகவே, குடிநீர் வசதி, கழிப்பறைகள், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை கொண்ட குடியிருப்புகளை உருவாக்குதல் என்கிற வகையிலேயே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் “மெட்ராஸ் மாகாண வீட்டு வசதி வாரிய சட்டம் 1961” உருவாக்கப்பட்டது. இதுவே தற்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்றுள்ளது. குடிசை பகுதிகளை மேம்படுத்தி வாழ்வதற்கு தகுதியான அடிப்படை வசதிகளை கட்டமைப்பது என்கிற வகையில் இது துவங்கப்பட்டது. ஆனபோதும் அதில் போதுமான முன்னேற்றத்தை அதனால் ஏற்படுத்த முடியவில்லை.

1967இல் திமுக தமிழகத்தின் ஆட்சி பொறுப்பிற்கு வந்தது. திமுக-விற்கு சென்னையின் குடிசைபகுதி மக்களிடம் வலுவான செல்வாக்கு இருந்தது.  அவர்களை உள்ளடக்கி திட்டமிடும் நோக்கில் 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் உள்ள குடிசை பகுதிகளின் பிரச்சினைகளை மாநில அளவிளான நோக்கோடு அணுகிட வழி செய்தது. “தமிழ்நாடு குடிசை பகுதிகள் மேம்படுத்துதல் மற்றும் அகற்றுதல் சட்டம் 1971” இயற்றப்பட்டது. குடிசை பகுதிகளில் அதிகமான செல்வாக்கையும் கூடுதல் வாக்கு வங்கியையும் பெற்றிருந்த திமுக-விற்கு அப்பகுதி மக்களை அங்கிருந்து அகற்றி நகரத்தின் விளிம்பிற்கு துரத்துவது என்பது அப்போது விருப்பமானதாக இல்லை. எனவே, குடிசை பகுதிகளை கண்டறிதல், வரைமுறைப் படுத்துதல், மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலேயே புதிய கட்டிடங்களை கட்டுதல், பொதுக்கழிப்பிடங்கள் அமைத்தல், குடிநீர் விநியோகம் என்பனவற்றை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் செய்தது. பொதுவாக சமூக நல திட்டங்களை அமலாக்குதல், பொது செலவீனங்களுக்கான நிதி ஒதுக்குவது என்பதெல்லாம் எளிய மக்களுக்கு குறைந்தபட்ச ஆதாரங்களை உருவாக்கும் நோக்கம் கொண்டதாக அமைந்தது. முழுக்க வர்க்க நோக்கோடு உழைக்கும் மக்களை மையப்படுத்தி அமலாக்கப்படாத போதும், பிரபலமான வகையில் சமூக நீதி என்கிற நோக்கோடு எளிய மக்களின் ஒரு பகுதியை அது ஆசுவாசப்படுத்தியது. “ஒவ்வொரு லிபரல் அரசாங்கமும் நிர்பந்திக்கப்படும்போது மட்டுமே சமூக சீர்திருத்தச் சட்டங்களை அவை கொண்டு வரும்…..”. உழைக்கும் மக்களின் அப்படியான போராட்டங்களும் எதிர்வினைகளுமே இன்றுவரை எளிய மக்களை பாதுகாக்கின்ற சட்டங்களையும் ஆணைகளையும் சாத்தியமாக்கியுள்ளன.

மாநில அரசின் கொள்கை மாற்றம்

“ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்பதாகவே ஆரம்பக்கால நடவடிக்கைகள் துவங்கின. கொள்கை ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள் ஏழைகளின் சிரிப்பை பறித்தது. குறிப்பாக 1970களின் மத்தியில் சர்வதேச நிதியத்தின் நிதி பங்களிப்பு குடிசை பகுதிகள் மேம்பாடு குறித்த கொள்கை திட்டங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1975இல் தமிழகத்திற்கு உலக வங்கி நிதி பங்களிப்பு செய்தது. குடிசை பகுதிகள் மேம்பாட்டிற்காக 240 லட்சம் டாலரை நிபந்தனைக்குட்பட்ட கடனாக உலக வங்கி வழங்கியது. நிபந்தனையின் பகுதியாக அரசு கட்டிக் கொடுக்கும் வீடுகளுக்கு பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கும்படி கூறியது. தற்போது வரை இந்த உலக வங்கியின் கைகள் மக்களின் பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுப்பதற்கான துவக்கப் புள்ளியாக அமைந்தது. “மெட்ராஸ் நகர்புற மேம்பாட்டு திட்டம் 1இல் (1971) கொள்கை ரீதியான ஒரு மாற்றத்தை உட்கொண்டது. இதில் பயன்பாட்டாளர் பங்களிப்பு என்கிற வகையில் பணத்தை திரும்பப் பெறுதல் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது” என்கிறது 1982இல் வெளியான உலக வங்கி அறிக்கை. இதன் விளைவாக ஏழை எளிய மக்கள் வாடகை என்பதாகவோ, மேம்பாட்டிற்கான கட்டணம் என்றோ, பயன்பாட்டு கட்டணம் என்கிற வகையிலோ, பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உருவானது. இது மக்கள் மத்தியில் எதிர்வினையை உருவாக்கக்கூடும். அது ஆட்சிக்கு எதிராக திரும்பும் என்கிற சிறு அச்சம் ஆட்சியாளர்களுக்கும் உண்டு. ஆனால், இவ்வாறான கட்டணங்களை வசூலிக்காவிட்டால், தங்களின் நிதி பங்களிப்பை இழக்க வேண்டிவரும் என்றும், பணத்தை வசூலிக்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கூடுதல் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும், உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. கட்டணமில்லா குடியிருப்பு வசதி மற்றும் மேம்பாடு என்பதாக இருந்த குடிசை பகுதி கொள்கை நிலையை உலக வங்கியின் தலையீடு மாற்றியமைத்தது. பல்வேறு நேரடியான மற்றும் மறைமுக காரணங்களால் அதை ஏற்று, ஆட்சியாளர்களும் அதற்கேற்ற வகையில் கொள்கை திட்டங்களை மாற்றி அமைத்தனர். எளிய மக்களிடம் கட்டணம் வசூலிப்பதும் அரசின் பங்களிப்பை குறைப்பதும் அவர்கள் பேசிய சமூக நீதிக்கும் எதிரானது என்பது வெளிப்படை.

இதற்கு பிறகு வந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு புதிய கொள்கை திட்டத்திற்கு தன்னை முழுமையாக உட்படுத்திக் கொண்டது. திமுக ஆட்சியில் இருந்தபோது, அதனை எதிர்ப்பதற்கும், அந்த ஆட்சியை வீழ்த்தும் செயல்பாட்டிற்கும், ஒன்றிய அரசுடன் இணக்கம் பாராட்டிய அதிமுக, ஆட்சிக்கு வந்தவுடன் ஒன்றிய அரசின் கொள்கை திட்டத்திலும் தன்னை இணைத்துக் கொண்டது. மாநில நலன், தமிழ் நிலம் என்றெல்லாம் பேசிவந்த தமிழக அரசியல் களம் இந்த காலகட்டத்தில் மேலும் அமைதியானது. 1980களில் சர்வதேசிய நிதியத்தின் நிதியை ஏற்றுக் கொண்டது. உலக வங்கி கூறியபடி குடியிருப்புக்களை மேம்படுத்த அரசு செய்த செலவீனங்களை குறைத்துக் கொண்டு, மக்கள் செலுத்த வேண்டிய பயன்பாட்டு கட்டணத்தை அதிகரித்தது. ஏழைகளுக்காகவே வாழ்வதாக தனது படங்களில் நடித்ததின் விளைவாக மக்கள் மத்தியில் பெரிய பிம்பத்தை ஏற்படுத்திய எம்ஜிஆர் ஆட்சி காலத்தில்தான் இவையெல்லாம் நிகழ்ந்தது. உலக வங்கியின் பரிந்துரைகள்படி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் செயல்பட துவங்கியது. இக்காலத்தில்தான் முந்தைய 240 லட்சம் டாலர் கடன் என்பதை கடந்து 3,000 லட்சம் டாலர் கடனை சர்வதேச நிதியம் வழங்கியது. இதுவும் நிபந்தனைக்குட்பட்ட கடன் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. இதைத்தொடர்ந்து 1990களில் தாராளமயத்தை உள்ளடக்கிய புதிய பொருளாதார கொள்கையை இந்திய அரசு அமலாக்கியது, மேலும் உழைக்கும் மக்களின் குடியிருப்பு பிரச்சினையை சிக்கலாக்கியது. தற்போது தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் என்பது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றம் கண்டுள்ளது. அது பெயர் மாற்றம் மட்டுமல்ல; அதன் உள்ளடக்கமும் மாறிவிட்டது. தனியார் பங்களிப்பு, அரசின் பங்களிப்பு குறைப்பு, பராமரிப்பு பணியிலிருந்து வாரியம் வெளியேறுவது, மக்களிடம் பயன்பாட்டு கட்டணத்தை கூடுதலாக பெறுவது என்று அதன் முழுமையான சமூக நோக்கு சிதைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி எனும் திராவிட சித்தாந்தம் இங்கு கடுமையாக பாதிக்கப்படுகிறது. தனியார்மயத்தை ஆதரிப்பதும், அதனை அமலாக்குவதும், எளிய மக்களை சிக்கலுக்கு உள்ளாக்கும். அது சமூகநீதிக்கு எதிரான அப்பட்டமான செயல்பாடுதான் என்பதை அனுபவங்கள் நிருபிக்கின்றன.

புதிய பொருளாதார கொள்கை அமலாக்கப்பட்ட காலத்திலும், அதற்கு பின்னரும், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகள்தான் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் மாறி மாறி இருந்துள்ளன. இதே காலக்கட்டத்தில் ஒன்றிய அரசுடன் இரு கட்சிகளும் உறவு பாராட்டி வந்துள்ளன. திமுக கணிசமான காலம் ஒன்றிய ஆட்சியில், அமைச்சரவையிலும் பங்கேற்றுள்ளது. பொதுத்துறையை விற்க நேரும் தருணங்களில், சில எதிர்ப்புகளை தெரிவித்ததை தவிர, தனியார்மயத்தையும், தாராளமயத்தையும் உள்ளடக்கிய உலகமயமாக்கலின் புதிய பொருளாதார கொள்கைகளை இவ்வரசுகள் எதிர்த்ததில்லை. இது மாநில அரசில் அவர்கள் மேற்கொண்ட கொள்கை மாற்றங்களிலும் வெளிப்பட்டது. அது குடியிருப்பு பிரச்சினையிலும் தாக்கத்தை செலுத்தியது.

வளர்ச்சித் திட்டங்கள் அனைத்திலும் தனியார் பங்களிப்பு பிரதானமாக்கப்பட்டுள்ளது. அரசின் பங்களிப்பு வெட்டி சுருக்கப்பட்டது. இக்காலத்தில் குடிசை பகுதிகள் மேம்படுத்துவதற்கு பதிலாக அம்மக்களை நகரத்தை விட்டு அகற்றுவதற்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குறிப்பிட்ட கட்சியின் கோட்டை, இங்குள்ள வாக்குகள் இன்னாருக்குத்தான் என்றில்லாமல் இம்மக்களின் வாக்கு செலுத்தும்முறை மாற்றம் கண்டு விட்டதும், எனவே, அவர்கள் மீதான கவனமும், அவர்களை அங்கேயே தக்க வைக்க வேண்டும் என்கிற தேவையும், ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனது.

குடிசை மக்கள் குடியிருக்கும் இடம் சுகாதாரமாக இல்லை; குடிநீர் சுத்தமாக இல்லை; கழிப்பறை இல்லை; வீடுகள் காற்றோட்டத்துடன் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை என்று பிரதானமாக பேசப்பட்டது. எனவே, இவற்றை அங்கு ஏற்படுத்திக் கொடுப்பது முதன்மையாக பேசப்பட்டது. அப்புறப்படுத்துதல் என்பது இரண்டாவதாக இருந்தது. இன்று தனியார் பங்களிப்பு அதிகரித்தவுடன் புதிய வகையில் இந்த விவாதங்கள் திட்டமிட்ட வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படியான சூழலில், அவர்கள் அங்கு வாழ்வது ஆபத்தானது என்பதாக இருந்த விவாதம், கூவம் கரையோரம் அவர்கள் வாழ்வது அந்த ஆற்றை சீரழிக்கிறது என்றும், அந்த ‘ஆக்கிரமிப்பே’ சுற்றுச்சூழலை சீர்கெடுக்கிறது; இது சமூகத்திற்கே ஆபத்து என்று மாற்றப்பட்டது. கொசஸ்தலை ஆறும், அடையாறு ஆறும், கூவம் ஆறும் மாசு அடைந்ததற்கு அந்த மக்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை. மோசமான நகர்ப்புற திட்டமிடல், எவ்வித சுத்திகரிப்பும் செய்யாமல் கழிவுகளை கலப்பது போன்ற ‘வளர்ச்சிப் போக்குகளே’ காரணமாகும். ஆனால், கரையோரம் வாழும் மக்கள் மீது மிக எளிதாக பழி சுமத்தி மக்களின் பொதுப்புத்தியில் நச்சுக் கருத்தை புகுத்தி, சமூக ஒப்புதலுடன் அவர்களை நகரை விட்டே விரட்டியடிக்கிறது அரசு. இப்படியான பகுதிகளில் இருந்த மக்களை அகற்றிவிட்டு, அவை எதுவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கோடு பராமரிக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். அவ்விடங்கள் தனியாரின் கைகளுக்கு மாற்றப்படுவதும், பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிகவளாகங்கள் (மால்கள்) என கட்டிடங்களின் தொகுப்பாகவே மாறுகிறது. சென்னையில் பங்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று கூறி கரையோரம் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால், அரசின் ஆக்கிரமிப்பில் அந்த கால்வாயில் தூண்கள் போட்டுதான் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கூவம் ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த மக்கள் இதேபோல் அப்புறப்படுத்தப்பட்டனர். அதே கூவத்தின் இடையில் தூண்களைர் அமைத்துதான் மதுரவாயல் முதல் துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டம் அமையவுள்ளது. இதே கூவம் மற்றும் பக்கிங்காம் கரையோரம் இருந்த குடிசைகள் இடிக்கப்பட்ட நிலையில், பெரிய பெரிய தனியார் கட்டிடங்கள் இடிக்கப்படவில்லை. இப்படியான நிலையில் இவர்கள் முன்வைத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னவானது?

குடிசை பகுதிகள்தான் அனைத்து குற்றச் செயல்களுக்கும் ஆதாரமான இடம் என்று குறிப்பிடப்பட்டு, இது சுற்றுப்புற மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது என்கிற கருத்தும் பரவலாக்கப்பட்டது. சாராயம் காய்ச்சுவதை பார்க்கும் பார்வையோடு பீர் தொழிற்சாலை மற்றும் மது உற்பத்தி செய்யும் உரிமையாளரை பார்ப்பதில்லை. கஞ்சா உற்பத்தி எந்த குடிசை பகுதிகளிலும் நடக்கவில்லை. கப்பல்கள் மூலமாகவும், விமானம் மூலமாகவுமே கடத்தல்கள் நடக்கிறது. இந்த கனவான்கள்தானே உண்மையில் குற்றவாளிகள். ஆனால் பழி என்னவோ குடிசை பகுதி மக்கள் மீதுதானே?

நகரத்தைவிட்டு விரட்டப்பட்டவர்கள்

இயற்கை பேரிடர்களை காரணம் காட்டியும், குடிசைபகுதி மக்கள் தங்களது குடியிருப்புகளிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக, சுனாமி காலத்தில் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புகிறோம் என்கிற பெயரில், கடற்புற மக்கள் நிரந்தரமாகவே வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சென்னை துரைப்பாக்கத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வரிய குடியிருப்பு பகுதியில் சுனாமி குடியிருப்பு என்ற பெயரில் குடியிருப்புகள் உள்ளது. சென்னையின் மைய பகுதியிலிருந்து நகரத்தின் விளிம்பிற்கு துரத்தப்பட்ட மக்களின் வாழ்விட பிரச்சனை மேலும் கூடுதலான சிரமத்திற்குள் அவர்களை தள்ளியுள்ளது. துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியில் மட்டும் சுமார் 20ஆயிரம் வீடுகள் ஒரே இடத்தில் குவியலாக உள்ளது. இக்குடியிருப்பு சென்னையின் மையத்திலிருந்து பல பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  அங்கிருந்து மேலும்  10 கிலோ மீட்டர் தெலைவில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில் சுமார் 27,000 குடியிருப்புக்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் அனைவரும் சென்னையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விரட்டப்பட்டவர்களே. இவர்களுக்கான வேலை, கல்வி, சுகாதாரம் வாழ்வாதாரம் என எல்லாமும் கேள்விக்குறியாகவே உள்ளது. எந்த சுகாதார சீர்கேட்டிலிருந்து இம்மக்களை பாதுகாக்கப் போவதாக கூறி அரசு இவர்களை இவ்வளவு தெலைவில் விரட்டியடித்த்தோ அங்கு எவ்வித நலமும், சமூக பாதுகாப்பும் இல்லாமல் வசிக்கின்றனர்.

“முதலாளித்துவ வர்க்கம் நடைமுறையில் குடியிருப்பு பிரச்சினைகளை எப்படி தீர்க்கிறது என்பதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாகும். முதலாளித்துவ உற்பத்தி முறையில் நம்முடைய தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புக்கள் நோயின் பிறப்பிடங்களாக விளங்குகிறது. அத்தகைய கேவலமான பொந்துகள் மற்றும் நிலவறைகளை முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஒழிக்கப்படுவதில்லை. அவை வேறெங்காவது மாற்றப்படுபடுகிறது.” என்கிற எங்கெல்சின் வார்த்தைகளின் உண்மையை, சென்னையை விட்டு விரட்டப்பட்டுள்ள மக்களின் தற்போதைய குடியிருப்புகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

சென்னை வெள்ளதின்போதும் அதை தொடர்ந்தும் பல்வேறு குடியிருப்புக்கள் அகற்றப்பட்டன. இங்குதான் குடிசை பகுதிகளை கடந்து அடுத்த நிலையில் உள்ள பட்டா இல்லாத குடியிருப்புகளில் வாழும் மக்கள் குடியிருப்புக்களின் மீது அரசின் கைகள் நீள்கிறது. மயிலாப்பூர் கோவிந்தசாமி நகர் குடிசைமாற்று வாரியத்தால் குடியிருப்பு பகுதி என வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு பொதுநல வழக்கை பயன்படுத்தி அரசு நிர்வாகம் குடியிருப்புகளை அகற்றுகிறது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள குடியிருப்புகளுக்கு ஆட்சியர் பரிந்துரைத்த பிறகும், மேய்ச்சல் புறம்போக்கு நிலம் என்று கூறி குடியிருப்புகளை அகற்ற துடிக்கின்றனர். பயன்பாடற்ற நீர்நிலை பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர். அரசு நீர்நிலை என வரையறுத்து கரைகளை கட்டிய பிறகும், பொதுப்பயன்பாட்டில் உள்ள நிலங்களை நீர்நிலை என வகைப்படுத்தி நீதிமன்றங்களின் துணையோடு அகற்ற முயற்சிக்கின்றனர். அடுத்தகட்டமா அரசே ஒதுக்கிய நிலம், குடிசைமாற்று வாரியத்தால் குடியிருப்பு பகுதி என வரையறுக்கப்பட்ட நிலத்தில் வசிப்போரையும் அகற்ற முயற்சிக்கின்றனர். இதற்கு சாதகமாக நீதிமன்றங்களை பயன்படுத்திக் கொள்ளும் ஆட்சியாளர்கள் தங்களின் வர்க்க நிலையை எடுத்துக் காட்டுகின்றனர்.

“முதலளித்துவ உற்பத்தி முறை நீடிக்கின்ற வரை குடியிருப்பு பிரச்சினை, அல்லது தொழிலாளர்களை பாதிக்கின்ற, வேறு சமூகப் பிரச்சினைனையை தனியாக தீர்க்க முடியும் என்று நம்புவது முட்டாள்தனமே.” “பாட்டாளி வர்க்கம், அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்த உடனே பொதுநன்மையைப் பற்றிய அக்கறையினால் தூண்டப்பட்டுகின்ற நடவடிக்கைகள்  நிறைவேற்றப்படும். (உடைமை வர்க்கத்திடமிருந்து சொத்துக்கள் பறிக்கப்பட்டு உழைக்கும் மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள்) இன்றைய அரசு செய்கின்ற உடைமை பறித்தல்கள், தங்குமிட ஆணைகளைப் போல், அதுவும் சுலபமாக நிறைவேறும்.” என்கிற எங்கெல்சின் வார்த்தைகளே உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்கான போர்குரலாகும்.

——————————————————————————————————————–

CITY and Community என்கிற ஆங்கில இதழில் டிசம்பர் 2019இல் Pranath Diwakar எழுதியுள்ள A Recipe for Disaster: Framing Risk and Vulnerability in Slum Relocation Policies In Chennai, India. எனும் கட்டுரையில் உள்ள தரவுகளை அடிப்படையாக கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

ஐஃபோன்: லாபம் எங்கிருந்து குவிகிறது?

  • அபிநவ் சூர்யா

ஐஃபோன், ஐபேட், மேக்புக் போன்ற பிரபல மின்னணுக் கருவிகளை விற்பனை செய்யும் ஆப்பிள் நிறுவனமானது, இன்று சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரும் நிறுவனமாக திகழ்கிறது. அது மட்டும் அல்லாது, இந்நிறுவனம் தான் தொழில்நுட்ப ஆய்விலும் உலகின் மிக உயரிய நிறுவனமாக கருதப்படுகிறது. இந்நிறுவனம் விற்கும் ஐஃபோனின் ஒவ்வொரு புதிய வெளியீட்டையும் வாங்குவதற்காக அமெரிக்காவில் பலர் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை பார்க்கிறோம். இந்த கலாச்சாரம் ஒரு பகுதி இந்தியர்களுக்கும் தொற்றிக்கொண்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த இந்த ஆப்பிள் நிறுவனத்தின், விற்பனைப் பண்டங்கள் அனைத்தும் உற்பத்தி ஆவது சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தான். இது போன்ற பன்னாட்டு மின்னணுக் கருவி நிறுவனங்களின் உற்பத்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே இயங்கி வரும் பல நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ளும் ஆப்பிள் நிறுவனம், தன் “ஜாம்பவான்” பிம்பத்தை பாதுகாத்துக்கொள்கிற  அதே வேளையில், வளரும் நாடுகளின் தொழிலாளர்களின் நிலை குறித்து கொஞ்சமும் கவலையற்று, கடும் சுரண்டலின் வாயிலாக தன் லாப வெறியை தீர்த்துக் கொள்கிறது.

ஆப்பிள் நிறுவனத்திற்கான உற்பத்தியை மேற்கொள்ளும் தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு சொந்தமான ஆலை காஞ்சிபுரத்தில் உள்ளது. அண்மையில் 3,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் மிக மோசமான பணிச் சூழல் மற்றும் தங்குமிடம் காரணமாக ஸ்ரீபெரும்புதூரில் போராட்டம் நடத்தி சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையை ஸ்தம்பிக்க வைத்தார்கள். இதற்கு ஓராண்டு முன்பு தான் ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்துள்ள ‘விஸ்ட்ரான்’ என்ற நிறுவனம், பெங்களூரு அருகே உள்ள தன் ஆலையின் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்க,  தொழிலாளர்கள் கொதித்தெழுந்து, பின் அது பெரும் கலவரமாக வெடித்தது. இது போன்ற நிலைமை, ஆப்பிள் நிறுவனத்தால் மட்டும் ஏற்படுவதில்லை என்பதும் உண்மை. நோக்கியா நிறுவனத்தோடு ஒப்பந்தம் வைத்திருந்த ஃபாக்ஸ்கான், 2014-15இல் தன் ஸ்ரீபெரும்புதூர் ஆலைகளை திடீரென மூடி, பத்தாயிரத்திற்கும் மேலான தொழிலாளர்களை நடுத் தெருவில் நிறுத்தியது.

இப்படிப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலையும், அதன் பின்னணியில் உள்ள முதலாளித்துவ-ஏகாதிபத்திய செயல்பாடுகளையும் நாம் புரிந்து கொள்வது அவசியம்.

ஆப்பிளின் சுரண்டல் வேட்டை

ஆப்பிள் நிறுவனத்தின் சுரண்டல் வேட்டை இந்தியாவில் மட்டுமல்லாது, பல்வேறு வளரும் நாடுகளிலும் நிகழ்கிறது. சீனாவில் ஷென்சென் மற்றும் ஷெங்ஷூ ஆகிய நகரங்களில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான்  ஆலைகளில் சுமார் 12லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம், மிகக் கடுமையான சூழலில் மிக அதிக நேரம் வேலை வாங்கியதால், 2011ல் பதினான்கு தொழிலாளர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள். இந்த சம்பவம் சீன நாட்டையே  உலுக்கியது. அதன் பின் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மேல் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தொழிலாளர்கள் ஊதியம் உயர்த்தப்பட்டது. அதன் பின், ஃபாக்ஸ்கானும், இதர ஆப்பிள் ஒப்பந்த நிறுவனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உற்பத்தியை இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளுக்கு நகர்த்த தொடங்கின. இந்த வளரும் நாடுகளில் நிலவும் குறைவான கூலி, தொழிற்சங்கங்களுக்கு எதிரான சட்டங்களையும் பயன்படுத்தி, மிக மோசமான சூழலில் தொழிலாளர்களை பணியில் அமர்த்தி கொள்ளை லாபம் ஈட்டுகிறார்கள். தொழிலாளர்கள் ஓரளவு நல்ல வருமானம் பெற வேண்டுமானால் ‘ஓவர் டைம்’ (Overtime) மிக அதிகமாக புரிய வேண்டும். அவர்கள் உழைப்பு சக்தியை மறு உற்பத்தி செய்து கொள்ள கூட முடியாத அளவில் தான் கூலி விகிதம் உள்ளது.

ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்காக ஆப்பிரிக்காவில் இருந்து கனிம வளங்கள் பெறப்படுகின்றன. அந்த சுரங்கங்களில் அடிமை நிலையில் பணி புரியும் ஊழியர்கள் ஒட்டச் சுரண்டப்படுகிறார்கள். ஆபத்தான சூழலில் குழந்தைத் தொழிலாளர்களும் கூட மிக சொற்ப ஊதியத்திற்கு பணியாற்றுகிறார்கள்.

இப்படிப்பட்ட நவதாராளமய சுரண்டலை நியாயப்படுத்தி பல முதலாளித்துவ அறிஞர்களும் பேசுகிறார்கள். அதிலும், பெண்களை பணி அமர்த்துவதன் மூலம் “பெண் விடுதலை”க்கு வழிவகுப்பது போல வாதிடுகின்றனர். ஆனால் அண்மையில் ஸ்ரீபெரும்புதூரில் நாம் அதையா பார்த்தோம்? அடித்தட்டு மக்களின் மோசமான  வாழ்க்கை நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, மோசமான வாழ்க்கைச் சூழலில், கடும் வேலைச் சுமையையும் புகுத்தி, பணி இடம், விதிகள், பெண்கள் – மகப்பேறு நல சட்டங்கள் எதையுமே பின்பற்றாமல், அற்பக் கூலிக்கு (மாதம் ரூ.12,000ற்கும் குறைவு) சுரண்டுவதன் மூலம், தன் லாபத்தை கூட்டிக் கொள்ளத்தான் பன்னாட்டு மூலதனம் முயற்சிக்கிறது.

ஆனால் இவர்கள் அனைவருமே ஆப்பிளோடு ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனம் மூலம் தான் பணி அமர்த்தப் படுகிறார்கள் என்பதால் ஆப்பிள் நிறுவனம் ஏதோ தன் கையில் எந்த கறையும் படியவில்லை என பாவிக்கின்றது. ஆனால் அதன் கொள்ளை லாபமும், சந்தையில் வகிக்கும் எங்கிருந்து வருகிறது?

தொழிலாளர்கள் கூலியை விட லாபம் எத்தனை மடங்கு அதிகம் என்பதை “சுரண்டல் விகிதம்” (Rate of Exploitation) என மார்க்ஸ் வரையறுத்தார். ஆப்பிள் நிறுவனத்துடைய சுரண்டல் விகிதம் சுமார் 2500% ஆகும். அதாவது, ஆப்பிள் நிறுவனத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் உழைக்கும் அனைவரும் தங்கள் சொந்த வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக உழைக்கும் நேரம் போக, 25 மடங்கு அதிக  நேரம் உபரி ஈட்டித் தருவதற்காக உழைக்கின்றனர். இதை “கொள்ளைச் சுரண்டல்” என்றும் கூட சில மார்க்சிய அறிஞர்கள் வரையறுக்கின்றனர்.

குறைந்த கூலியில் சுரண்டல்

நவதாராளமய காலத்திற்கு முன்பு மேற்கத்திய நாடுகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் புகழ் என்பது, தங்கள் தாய் நாட்டில் எத்தனை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துகிறார்கள் என்பதன் மூலம் கணிக்கப்பட்டது. ஆனால் இன்றோ, மூன்றாம் உலக நாடுகளில், தங்கள் உற்பத்தியை திறம்பட மாற்றியமைப்பதே விதந்தோதப்படுகிறது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும், சோசலிச சக்திகளின் நலிவும் காரணமாக, உலக தொழிலாளர் இயக்க வலிமை குன்றியது இதற்கான காரணங்களில் ஒன்றாகும். கணினி நுட்ப வளர்ச்சியும், தொலைத்தொடர்பு வளர்ச்சியும் காரணமாக உற்பத்தியை உலகின் பல இடங்களிலும் நடத்தலாம் என்ற நிலைமை உருவானது. பல ஆண்டுகளாக, பொருளாதார மந்த நிலையில் சிக்கி தவித்த ஏகாதிபத்திய முதலாளித்துவம், இந்த புதிய சூழ்நிலைகளை பயன்படுத்தி, கூலி விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் உற்பத்தியை மாற்றியமைத்ததன் மூலம் லாப விகிதத்தை உயர்த்திக்கொண்டது.

சர்வதேச நிதி மூலதனத்தை தங்கள் நாட்டில் ஈர்ப்பதற்கான போட்டியில் வளரும் நாடுகள் ஈடுபட்டன. அதற்காக, இந்நாடுகளில் தொழிலாளர் நல சட்டங்கள் நலிவடையச் செய்யப்பட்டன, சுற்றுச் சூழல் பாதுகாப்பு காற்றில் விடப்பட்டது. 21ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து வெறும் பத்து ஆண்டுகளில் (பண வீக்கம் கணக்கில் கொண்ட பின்) தொழிலாளர் ஊதியம் மும்மடங்காக உயர்ந்த சீனாவிலும் கூட, நாட்டின் மொத்த செல்வ உருவாக்கத்தில், தொழிலாளர் ஊதியத்தின் பங்கு குறையவே செய்தது. இதர வளரும் நாடுகளின் நிலை குறித்து கேட்கவே வேண்டாம்.

இந்த பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் அந்நிய நேரடி முதலீட்டின் வழியாக நுழைந்தன. 2013இல் முதல் முறையாக வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளுக்குச் செல்லும் அந்நிய நேரடி முதலீடு அதிக அளவை எட்டியது. ஆனால் அண்மைக் காலங்களில் இந்த நிலையும் மாறி வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் உள்ள ஒப்பந்த நிறுவனங்களை உற்பத்தி மேற்கொள்ள செய்து, ஏற்றுமதி மூலம் பண்டங்களை வாங்கிக் கொள்கின்றன. இதனால் தொழிலாளர் சுரண்டலின் பழி முழுவதும் மூன்றாம் உலக நாடுகளையும், அந்நாட்டு நிறுவனங்களையும் மட்டுமே சேர்வதாக வியூகம் செயல்படுகிறது.

எல்லா காலங்களிலும் (மார்க்ஸ் மூலதனம் எழுதிய காலம் முதலே) சர்வதேச முதலாளித்துவ சுரண்டலுக்கு முன் மாதிரியாக திகழ்ந்து வரும் ஜவுளி உற்பத்தி நிறுவனம் தான் இப்படிப்பட்ட ஒப்பந்த நிறுவன அடிப்படையிலான உற்பத்தி மாற்றத்தை துவங்கி வைத்தது. பின்னர் வாகன உற்பத்தி நிறுவனங்களும் படை எடுத்தன. இன்று மின்னணு கருவிகள் உற்பத்தி நிறுவனங்கள் இதில் முன்னிலை வகிக்கின்றன.

வர்த்தகம் – தொழில்நுட்பம் – சுரண்டல்

காலனிய ஆதிக்க காலம் முதல், ஏகாதிபத்திய நாடுகள் வளரும் நாடுகளை சுரண்டுவதற்காக முக்கிய உத்தி ஒன்றினை கையாண்டு வருகின்றன. வளரும் நாடுகளில் நிலவும் இயற்கை வளங்களை கொண்டு உற்பத்தியாகும் பண்டங்களை (பருத்தி, தேயிலை, கனிம வளம்) பெற்றிடும் ஏகாதிபத்திய நாடுகள், அவைகளை பயன்படுத்தி ஆலை உற்பத்தி மூலம் உருவாக்கிய பண்டங்களை, குறைந்த விலைக்கு கொண்டு வந்து வளரும் நாடுகளின் சந்தையில் குவித்திடுவர். இதனால் வளரும் நாட்டு தொழில் துறை அழிந்து போகும். இதன் விளைவாக வளரும் நாட்டில் உற்பத்தி திறன் உயராமல் இருக்கும். எனவே வளரும் நாடுகளில் கூலி விகிதம் குறைவாகவே இருக்கும். இதன் மூலம் வளரும் நாட்டு மக்கள் உழைப்பை எளிதாக சுரண்டி, இயற்கை வளங்களை மலிவு விலையில் அபகரித்துக் கொள்ள முடியும்.

ஆனால் இன்றோ உற்பத்தி அனைத்தும் வளரும் நாடுகளுக்கு மாறுவதை பார்க்கிறோமே! இது எப்படி? இங்கு தான் நாம் ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை கவனிக்க வேண்டும். இப்போதும், வளரும் நாடுகளை நோக்கி உற்பத்தி வருவதற்கு காரணம், கூலி விகிதம் குறைவாக இருப்பதுதான். ஏகாதிபத்திய சூழலில், வளரும் நாடுகளில் உள்ள நிறுவனங்களுடைய பிழைப்பு, உலக மதிப்புச் சங்கிலியில் (Global Value Chain) தங்களை பிணைத்துக் கொள்வதைப் பொறுத்ததாகவே உள்ளது. எனவே ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதில் போட்டி உருவாகிறது. இந்த கடும் போட்டியின் காரணமாக தொழிலாளர்களுடைய ஊதியத்தை குறைந்த நிலையில் வைக்க ஒவ்வொரு நாட்டு முதலாளிகளும் முயல்கின்றனர்.

இவ்வாறு நடக்கும் உற்பத்தியிலும் கூட, கடும் உழைப்பைச் சார்ந்த (Labour intensive) பகுதிகள் மட்டும் தான் வளரும் நாடுகளை நோக்கி வருகின்றன. முன்னேறிய கருவிகள், தொழில்நுட்பங்கள் சார்ந்த உற்பத்தி வருவது இல்லை. எனவே வளரும் நாடுகளில் உற்பத்தி திறன் உயர்வதில்லை. எந்திரங்கள் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் வழியாக வளரும் நாடுகளின் உற்பத்தி திறன் தொடர்ந்து மேம்படுவதில்லை.

ஆப்பிள் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களின் பெயரில் ஒரு உற்பத்தி ஆலை கூட கிடையாது! பிறகு இந்த நிறுவனங்கள் எதை உற்பத்தி செய்கின்றன? எப்படி சந்தையின் உச்சத்தில் உள்ளன? இவை உற்பத்தி செய்வது அனைத்துமே மின்னணு கருவிகளின் வடிவமைப்பு (Design), பிராண்ட் (Brand), மற்றும் அறிவுசார் காப்புரிமம். இவைகளை மட்டுமே வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம், வளரும் நாடுகளில் சொற்ப விலைக்கு உற்பத்தியை நிகழ்த்தி, லாபம் ஈட்டுகிறது. பிராண்ட் மற்றும் அறிவுசார் காப்புரிமங்களை வைத்திருப்பதன் வாயிலாக, சந்தையில் போட்டியில்லாத சூழலை உருவாக்கி, ஏகபோக நிலைமையில், கூடுதலான லாபம் குவிக்கிறது.

ஆனால் இந்த அறிவுசார் காப்புரிமம் அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் முழுமையாக ஆப்பிள் உருவாக்கியதா? அதுவும் இல்லை. அவர்கள் பயன்படுத்தும் நுட்பங்களான இணையதளம் (Internet), ஜிபிஎஸ், தொடும் திரை (Touch Screen), பேச்சு கணிப்பான் (Siri) போன்ற தொழில்நுட்பங்கள் எல்லாம் அரசு ஆய்வகங்களிலும், மக்கள் பணத்தில் இயங்கும் பல்கலைக்கழகங்களிலும் உருவாக்கப்பட்டவை. இவைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கருவிகளுக்கு, அறிவுசார் காப்புரிமத்தை பன்னாட்டு நிறுவனங்கள் கோரிட, ஏகாதிபத்திய அரசுகள் அனுமதித்து உள்ளன.

உற்பத்தி ஆலைகளை வைத்திருந்த மேலை நாட்டு நிறுவனங்கள், முன்பு, வளரும் நாடுகளின் வளத்தையும் மக்கள் உழைப்பையும் சுரண்டியது போல, இன்று அறிவுசார் காப்புரிமம் வைத்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் தொழிலாளர்களுடைய உழைப்பை மலிவான கூலிக்கு சுரண்டுகின்றனர்.

வர்த்தகம் – தொழில்நுட்பம் – சுரண்டல்

இந்த நவீன ஏகாதிபத்திய சுரண்டலுக்கு, சர்வதேச வர்த்தகமும், தொழில்நுட்பமும் முக்கிய பங்காற்றுகின்றன. குறைவான ‘மதிப்புக்கூட்டல்’ (Value Added) செய்யும், கடும் உழைப்பு தேவைப்படும் உற்பத்திகள், பணிகள் மட்டுமே வளரும் நாடுகளுக்கு வருகின்றன என்பதை முன்பே பார்த்தோம். அதுமட்டுமல்லாமல், கூலியின் அளவுக்கும், வளங்களின் இருப்புக்கும் ஏற்றவாறு பல நாடுகளிலும் உற்பத்தி சிதறியிருப்பதால், பண்டத்தின் சிறு பாகத்தை மட்டுமே குறிப்பிட்ட வளரும் நாட்டில் மேற்கொள்கின்றனர். (உதாரணமாக: ஐபோனுக்கான இடுபொருட்கள் உற்பத்தியும், உதிரி பாக உற்பத்தியும் 30 நாடுகளில் நடக்கின்றன). சர்வதேச வர்க்கத்தகத்தில் 60 சதவீதம் இடைநிலைப் பாகங்களுடைய பரிவர்த்தனையாக இருக்கிறது. சர்வதேச வர்த்தகத்தில் 80 சதவீதம் பன்னாட்டு நிறுவனங்களின் கைவசம் இருக்கிறது. உற்பத்தி இவ்வாறு சிதறிக் கிடைக்கின்ற காரணத்தால், எந்தவொரு நாடும், உதிரி பாக உற்பத்தியில் எவ்வளவு முன்னேறினாலும், மொத்த பண்டத்தின் உற்பத்தியை அறிந்துகொள்ள முடியாது. உற்பத்தியை கற்றுக்கொண்டு, அதே போன்ற பண்டத்தை தங்கள் சொந்த நாட்டில் மேற்கொள்ள முடியாது. இவ்விதத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் பாதுகாக்கப்படுகிறது.

காலனி ஆதிக்கம் நிலவிய காலத்தில், ஏகாதிபத்திய நாடுகள் உற்பத்தி ஆலைகளை கட்டுப்படுத்தி வந்தன. இன்று ஏகாதிபத்திய நாடுகள் தொழில்நுட்பத்தையும் உற்பத்தி திறனையும் கட்டுப்படுத்துகிறார்கள். மேலைநாடுகளே பெரும்பான்மையான தொழில்நுட்பத்தை தங்கள் வசமாக வைத்துள்ளார்கள். அதன் மூலம் உற்பத்தித் திறனை மிக அதிகமாக பராமரிக்கிறார்கள். எனவே வளரும் நாடுகளில் உள்ள நிறுவனங்கள், தங்களின் போட்டியிடும் திறனை உயர்த்த என்ன செய்ய முடியும்? ஒரே வழி, தொழிலாளர்கள் கூலியை குறைந்த நிலையில் வைத்து, சுரண்டல் மூலம் மிக அதிக உபரி ஈட்டுவது தான். இப்படி வளரும் நாட்டு நிறுவனங்கள் ஈட்டும் உபரியில் ஒரு பெரும் பங்கை ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்கள் அபகரித்துக் கொள்கின்றன (எ.கா: ஃபாக்ஸ்கான் ஈட்டும் ஒவ்வொரு டாலர் லாபத்திற்கு ஆப்பிள் 40 டாலர்கள் லாபம் ஈட்டுகிறது).

ஆக, வளரும்-வளர்ந்த நாடுகள் இடையேயான வர்த்தகமானது, மேலளவில் சமமான வர்த்தகம் போல தென்பட்டாலும், வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்ப ஆதிக்கத்தின் காரணமாக, இது ஒரு சமநிலை அற்ற வர்த்தகமாகத் தான் திகழ்கிறது. வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கு ஈடு கொடுக்க வேண்டுமானால், வளரும் நாடுகளின் கூலி அளவு குறைவாகவும், சுரண்டல் கூடுதலாகவும் இருக்க வேண்டும். இந்த சுரண்டலின் உபரியை ஏகாதிபத்திய நாடுகள் அபகரித்துக் கொள்கின்றன.

அறிவியலற்ற பார்வை

இப்படிப்பட்ட தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வு நிலை தான் சமகால ஏகாதிபத்திய சுரண்டலுக்கு அடிப்படையாக உள்ளது. இதனை உணர்ந்த சீனா, மிக துல்லியமான அறிவியல்பூர்வமான வளர்ச்சிப் பாதையை தேர்வு செய்தது. அதன் காரணமாக இன்று தொழில்நுட்ப துறையில் மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் நிலைக்கு வளர்ந்து நிற்கிறது. இது அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் அடிப்படைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். அதனால்தான் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள், சீனா மீது தொடர் தாக்குதல் நிகழ்த்துகின்றன.

இந்தியாவிலும், மேற்சொன்ன தொழில்நுட்ப சார்பின் ஆபத்து உணரப்பட்டது. எனவே சுதந்திரத்திற்கு பின், வலுவான அரசு ஆதரவு பெற்ற ஒரு அறிவியல் வளர்ச்சி கட்டமைப்பை உருவாக்கி முன்னேற துவங்கியது இந்தியா. ஆனால் நவீன தாராளமய காலத்திலோ, தொழில்நுட்ப சுயசார்பு முற்றிலுமாக கைவிடப்பட்டது. இதனால் ஏகாதிபத்திய நாடுகளின் தொங்கு சதையாகவே இந்தியா மாறிப் போனது. 21ம் நூற்றாண்டில், “உயர் தொழில்நுட்ப” பண்டங்களை நாம்   ஏற்றுமதி செய்வதை விட பன்மடங்கு அதிகமாக இறக்குமதி தான் செய்து வருகிறோம் என்பதோடு, இந்நிலை மேலும் மோசம் தான் அடைந்து வருகிறது.

மோடி ஆட்சியின் காலத்தில், இந்த நிலை மேலும் மோசமடைந்துள்ளது. அறிவியல் அடிப்படையிலான சமூகத்தை கட்டமைப்பதற்கு பதிலாக, திரிபுகள் மற்றும் பொய்கள் அடிப்படையிலான அறிவியல், கணித, வரலாற்று கட்டுக்கதைகள் பரப்பப்படுகின்றன. இளைஞர்கள் மத்தியில் மத, பிரிவினைவாத கருத்துகளே  விதைக்கப்படுகின்றன. நாட்டின் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சியை வழி நடத்த வேண்டிய பல்கலைக்கழகங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து, இந்த கல்வி அமைப்புகள் காவிக் கூடாரமாக மாற்றப்படுகின்றன.

“மேக் இன் இந்தியா”, “தற்சார்பு” ஆகிய முழக்கங்களை வாய்ச் சவடால் மட்டும் விடும் மோடி அரசு, நம் பொதுத்துறைகளை விற்பதும், குத்தகைக்கு விடுவதும் காரணமாக பொருளாதார இறையாண்மையை கார்ப்பரேட்டுகளிடம் அடமானம் வைக்கிறது. சிறு குறுந்தொழில்கள் முடங்கும் நிலை உருவாகிறது. தொழிலாளர் நல சட்டங்களை அழித்தொழித்து, கூடுதலான ஏகாதிபத்திய சுரண்டலுக்கே வழிவகுக்கப்படுகிறது. மக்களும், அறிவுச் செல்வமும் தான் வளர்ச்சிக்கு முக்கியம் என்பதை அங்கீகரிக்க மறுப்பதன் காரணமாக, கார்ப்பரேட் நிறுவனங்களைச் சார்ந்து அடிவருடி அரசியல் செய்கிறது.

நிறைவாக

இந்த உலகமயமாக்கல் சூழலில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் தயாரிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ‘அப்டேட்’ விடுவதைப் போல, ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் முறைகளும் ‘அப்டேட்’ ஆகிக்கொண்டே போகின்றன. வளரும் நாடுகளின் குறைந்த கூலி தொழிலாளர்கள் கொண்டு இயக்கப்படும் சர்வதேச உற்பத்தி, சசுரண்டலை நவீனப்படுத்தி உள்ளது.

மூலதனத்தின் இந்த இயல்பு புதியது அல்ல. 1867இல் லாசேன் சர்வதேசம் மாநாட்டில் மார்க்ஸ் நிகழ்த்திய உரையில் இவ்வாறு குறிப்பிட்டார், “உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வரவோ அல்ல; மலிவான உழைப்பு உள்ள இடத்திற்கு உற்பத்தியை நகர்த்தவோ செய்கின்றனர். இந்த சூழலில் தொழிலாளர் வர்க்கம் தனது போராட்டத்தை வெற்றிகரமாக்கிட, தேசிய அமைப்புகள் சர்வதேசியத்தை தழுவ வேண்டும்”

பாட்டாளி வர்க்க சர்வதேச ஒற்றுமை கொண்டு, நம் தேசத்தை சூறையாடும் நயவஞ்சகர்களையும், நம் தொழிலாளர்களை கடுமையாக சுரண்டி கொழுக்கும் ஏகாதிபத்திய மூலதனத்தையும் வீழ்த்துவோம்!

ஆதாரம்:

  1. சுரண்டல் விகிதம் : ஐஃபோன் எடுத்துக்காட்டு – ட்ரைகான்டினன்டல் ஆய்வு கழகம்
  2. 21ம்  நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் – ஜான் ஸ்மித்
Prof. Prabath

பணவீக்க எதிர்ப்பு கொள்கையும், நவ தாராளமயமும்!

பேரா. பிரபாத் பட்நாயக்

Neo-Liberalism and Anti-Inflationary Policy

முதலாளித்துவ நாடுகளில் இருக்கும் மத்திய வங்கிகள் அனைத்துமே,  பணவீக்கம் அதிகரிக்கும் சூழ்நிலையை எதிர் கொள்வதற்காக, வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளார்கள்; அல்லது விரைவில் உயர்த்த இருக்கிறார்கள். பெருந்தொற்றினால் ஏற்பட்ட விளைவுகளில் இருந்து மீள்வதற்கே, உலக பொருளாதாரம் திணறுகிறது. அது தேக்க நிலையை நோக்கியும், அதிக வேலை இழப்புகளை நோக்கியும் சரிந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், உலக பொருளாதாரத்தை முன்னோக்கி உந்துவதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவின் பார்வை

அதேநேரத்தில், உலகின் பல நாடுகளுடைய மத்திய வங்கிகளுக்கும், உதாரணமாக உள்ள அமெரிக்க மத்திய வங்கி, வேலை இழப்பும் மந்த நிலையும் இருக்காது என்று மாறுபட்டுப் பேசியுள்ளது. வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடிய உத்தரவுகள், உண்மைப் பொருளாதாரத்தின் மீது குறைந்த தாக்கத்தையோ அல்லது குறுகிய கால பாதிப்பையோ மட்டுமே ஏற்படுத்தும்; பொருளாதார மீட்சியை அது பெரிதாக பாதிக்காது என்றும் அது கூறுகிறது. அவர்களின் இந்தப் பார்வை, அடிப்படையிலேயே குறைபாடான பின்வரும் காரணியால் உருவானது.

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோமி பவுல் குறிப்பிடும்போது, அமெரிக்கா தற்போது எதிர்கொள்ளும் பண வீக்கத்தை ஏற்படுத்துவது, ஊதியம் (Money Wage) உயர்வதால் ஏற்படும் அழுத்தமே என்கிறார். அதாவது மக்கள் பண வீக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள்; எனவே வட்டி விகிதத்தை உயர்த்துவதால், மக்களுக்கு பணவீக்கம் குறையப்போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறோம்; அது ஊதிய உயர்வினால் ஏற்பட்ட தாக்கத்திற்கு முடிவுகட்டி, பண வீக்கத்தை குறைத்துவிடும். இவ்வாறு நாம் மாற்றியமைக்கும் அனைத்து நடவடிக்கைகளும், ’எதிர்பார்க்கப்படும் விலை’ என்ற (எதிர்காலத்தின்) வரம்பிற்குள்ளேயே நடக்கின்ற காரணத்தினால், உண்மையான விலை என்ற வரம்பினில், அதாவது, உண்மை பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் மந்தநிலை ஏற்படுவது அரிது. மேலே சொன்ன மொத்த வாதமும் தவறு என்பது, ஒரு எளிய உண்மையோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடுகிறது. உழைக்கும் மக்கள் பணமாக பெறக்கூடிய ஊதியம், பண வீக்கத்திற்கு (விலைவாசிக்கு) பின் தவழ்ந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் உண்மை ஊதியம் குறைவதன் காரணமாக அவர்கள் தவித்து வருகிறார்கள். எனவே, அமெரிக்காவில், ஊதிய உயர்வினால் (Money Wage) ஏற்படுத்தும் அழுத்தம் காரணமாகவே, பண வீக்கம் ஏற்படுவதாக சொல்வது முற்றிலும் தவறு ஆகும்.

போர் காரணமா?

பண வீக்கத்தை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படும் மற்றும் ஒரு பொதுவான காரணமும், இதைப் போலத்தான் அமைந்துள்ளது. அதாவது, ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரின் காரணமாக பல்வேறு சரக்குகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உலக சந்தையில் எண்ணெய் மற்றும் உணவு தானியங்களுக்கு பற்றாக்குறை உருவாகியுள்ளது என்கிறார்கள். இந்த விளக்கமும் மனநிறைவினைக் கொடுப்பதாக இல்லை. போரின் காரணமாக பற்றாக்குறை உருவாகக்கூடும் என்றாலும், இதுவரை அப்படிப்பட்ட பற்றாக்குறை எதுவும் உருவாகவில்லை. போரின் காரணமாக, உலகச் சந்தையில் மேலே குறிப்பிட்ட சரக்குகளின் வரத்து குறைந்திருப்பதனை எடுத்துக்காட்டும் விபரங்கள் ஏதும் இல்லை. குறிப்பாக அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், (ரஷ்யா-உக்ரைன் இடையிலான) போரின் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறையே பண வீக்கத்திற்கு காரணம் என்பதும் தவறான வாதமே ஆகும்.

அமெரிக்காவில் லாப விகிதங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படுவதால் உண்மை ஊதியத்தில் ஏற்பட்டிருக்கும் உயர்வை விட அதிகமாக விலைவாசி உயர்வு இருக்கிறது. அதுதான் அங்கு நிலவும் பண வீக்கத்திற்கான காரணம். குறிப்பிட்ட ஒரு சரக்கிற்கு பற்றாக்குறை ஏற்படும்போதுதான் லாப விகிதம் உயர்த்தப்படும். ஆனால், இப்போது பண வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பல்வேறு பொருட்களின் மீதும், பற்றாக்குறைக்கான எந்த அழுத்தமும் இல்லை. பெருந்தொற்றின் காரணமாக, பொருட்கள் விநியோக சங்கிலியில் தடை ஏற்பட்டதால், குறைவாக விநியோகிக்கப்பட்ட சில பொருட்களின் மீதும் கூட, வழக்கத்திற்கும் கூடுதலான விலை ஏற்றப்பட்டது. அது நீடிக்கவும் செய்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அமெரிக்காவில் நிலவக்கூடிய பணவீக்கத்திற்கான காரணி, தன்னிச்சை போக்கில் லாபத்தை கூட்டிக் கொள்வதற்கான எத்தனிப்பே ஆகும். இது ஊகம் நடப்பதின் வெளிப்பாடு.

லாப நோக்கமும் பண வீக்கமும்

ஊக நடைமுறையானது, வணிகர்களிடமும் இடைத் தரகர்களிடமும் காணப்படும்; உற்பத்தியாளர்களிடம் அந்த நடைமுறை இருக்காது  என்று நினைக்கும் போக்கு பொதுவாக உள்ளது. ஆனால் அந்த நினைப்பிற்கு அடிப்படை ஏதும் இல்லை. பன்னாட்டு நிறுவனங்கள் விலையை உயர்த்துவதற்கு பின் ஊக நடவடிக்கைக்கு இடமுள்ளது. உலகின் மிகப் பெரும் பொருளாதாரமான அமெரிக்காவை, ஊக நடவடிக்கையால் தூண்டப்பட்ட பண வீக்கம் தாக்கி வருவதற்கான காரணம், இன்றுவரையிலும் அவர்கள் கடைப்பிடிக்கும் அதீத எளிமையான பணக் கொள்கையும், அதன் காரணமாக எளிதாக கடன் வழங்கப்படுவதும் ஆகும்.

“அளந்து தளர்வு தருதல்” (சேமிப்பின் மீதும், கடன்களின் மீதும் வட்டி விகிதத்தை குறைப்பதற்காக பத்திரங்களை வாங்குதல்) என்ற பெயரில், அமெரிக்க மத்திய வங்கி, பொருளாதாரத்திற்குள் அதிகமான பணத்தை தள்ளுகிறது. அதற்கு தோதான விதத்தில் குறுகிய கால கடன்களுக்கும், நீண்டகால கடங்களுக்குமான வட்டி விகிதத்தை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக்கியுள்ளது. இது, (முதலாளிகள்) தன்னிச்சையாக லாப விகிதங்களை உயர்த்திக்கொள்ள சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. (அதிகமான பணம் புழக்கத்தில் இருக்கும்படியான சூழல் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதை குறிப்பிடுகிறார்.) காலம் காலமாக அவர்கள் கடைப்பிடித்த மேற்கண்ட பணக் கொள்கையின் காரணமாக ஏற்பட்டிருக்கும் இந்த பண வீக்கத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு நம்மிடம் இருக்கும் வழிகளில் ஒன்று ‘நிதி சிக்கன நடவடிக்கை’ அல்லது (இப்போது நாம் செய்திருப்பதை போல) (ரெப்போ) வட்டி விகிதங்களை உயர்த்துவது ஆகியவைதான். இந்த இரண்டில் எதைச் செய்தாலும் பொருளாதார மந்த நிலைமையும், வேலை இழப்புகளும் உருவாக்கப்படும்.

மையமும், விளிம்பும்

இப்போது நாம் பிரச்சனையின் மூல காரணத்தை நெருங்கிவிட்டோம். சமகால முதலாளித்துவத்திற்கு உட்பட்ட பொருளாதார ஏற்பாட்டில், அமெரிக்காவில் இருக்கும் சிலரின் ஊக நடவடிக்கையை முறியடிக்க வேண்டும் எனில், அதற்காக அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் பெருமளவு வேலை இழப்புகள் நடக்க வேண்டும் (சொல்வதற்கே அபத்தமாக இருக்கிறது). நவ தாராளமய சூழலில் மூலதனம், குறிப்பாக நிதி மூலதனம், எல்லைகளைத் தாண்டிப் பாய்வதனாலேயே இந்த கருத்து எழுகிறது. ஏனென்றால், அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயர்ந்தால், உலகம் முழுவதுமே வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் (அப்படி செய்யாவிட்டால், விளிம்பில் இருக்கும் நாடுகளில் இருக்கும் நிதி மூலதனம், மையத்தில் இருக்கும் அமெரிக்காவை நோக்கி ஈர்க்கப்படும். அதனால் விளிம்பு நாடுகளின் செலவாணியின் டாலருக்கு நிகரான மதிப்பு சரியும்). வேறு வார்த்தைகளில் சொன்னால், அமெரிக்காவில் நடக்கும் ஊக நடவடிக்கைகளை நேரடியாக எதிர்கொள்வதற்கு பதிலாக, நிதி ‘தாரளமயமாக்கல்’ மூலமாக சமாளிக்கிறார்கள். அதன் காரணமாக உலகம் முழுவதும் மிகப்பெரும் வேலையின்மையை உருவாக்கப்படுகிறது. இது மூடத்தனத்தின் உச்சம்.

நிதித்துறையில் தலையீடு

அக்டோபர் புரட்சியின் காலத்தில், உலகப் பெருமந்தத்தின் மத்தியில் நின்றுகொண்டு எழுதிய ஜான் மேனார்ட் கீன்ஸ் இந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாத நிலைமையை நன்றாக அறிந்திருந்தார். எனவே, (முதலாளித்துவ சமூக ) அமைப்பினை ‘பாதுகாக்கும் தன்னுடைய நோக்கத்தை எட்டுவதற்கு, “முதலீட்டை சமூகமயப்படுத்த வேண்டும்” என்ற பெயரிலான திட்டத்தை செயலாக்க விரும்பினார். அதை செய்வதற்கு, பொருத்தமான பணக் கொள்கையும், அதோடு நிதித்துறையில் அரசின் தலையீடும் அவசியமாகும். மேலும் இந்த இரண்டுமே ஒட்டுமொத்த சமூகத்தின் தேவைகளுக்கும், நிதி சார்ந்த நலன்களுக்கும் உட்பட்டதாக இருக்கவும் வேண்டும்.

இப்படிப்பட்ட சிந்தனை நிலவிய சூழலில், உலகப் போருக்கு பிறகு விடுதலையடைந்த நாடுகள் பல புதுமையான நிதிக் கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். இந்த அமைப்புகளில் பொருளாதாரச் செயல்பாடுகளை எவ்விதத்திலும் குறைக்காமலேயே, வேலைவாய்ப்பிலும் பெருமளவு பாதிப்பு இன்றி, ஊடக நடவடிக்கைகளை நேரடியாக கட்டுப்படுத்தினார்கள். உதாரணமாக, இந்தியாவில் நீண்டகால முதலீடுகளை மேற்கொள்வதற்காக சிறப்பு நிதி நிறுவனங்கள் நிதி வழங்கினார்கள். குறுகிய கால கடன்களுக்கு வங்கிகள் நிர்ணயித்த வட்டி விகிதங்களை விடவும், இந்த நிதிக்கான வட்டி பொதுவாக குறைவாக இருந்தது. ஊக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு, வட்டி விகிதம் (மற்றும் இருப்பு விகிதம் போன்ற பாரம்பரிய கருவிகளை) மட்டுமல்லாமல், வேறு பல கருவிகளையும் வங்கிகள் பயன்படுத்தின. ஊக நடவடிக்கையின் தாக்கம் அதிகமுள்ள குறிப்பான துறைகளுக்கு கடன் வாய்ப்புகளை முறைப்படுத்துவது, நேரடியான தலையீட்டுக்கான கருவிகளில் ஒன்று ஆகும். “தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் கட்டுப்பாடுகள்” என்று அவை அழைக்கப்பட்டன. பண வீக்கத்தை கட்டுப்படுத்த நிதி மற்றும் பணம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படவில்லை. “சரக்கு விநியோகத்தில் தலையீடு செய்வதன்” மூலமாக, (ரேசன் கடைகள் போன்ற) பொது விநியோக திட்ட அமைப்புகளை ஏற்படுத்தி பணவீக்கத்தை கட்டுப்படுத்தினார்கள். இவை அனைத்துமே முதலீட்டை உறுதி செய்தன. உற்பத்தியும், வேலைவாய்ப்புகளும் – ஊக நடவடிக்கைகளால் பாதிக்கப்படாமல் தடுத்தன.

நிதித் துறையில் தாராளமயம்

உலக வங்கியும், சர்வதேச நிதியமும் அவைகளுக்கு விசுவாசமான நவ தாராளமய பொருளாதார அறிஞர்களும் மேற்சொன்ன ஏற்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்கள். இந்த நிதி ஏற்பாடுகளை “நிதி சார்ந்த அடக்குமுறை” என்றார்கள். பொருளாதார கட்டுப்பாடுகள் இருந்த நாடுகளிலெல்லாம் “தாராளமய” நடவடிக்கைகள் அமலாக்கவேண்டும் என்றார்கள். உணவு தானிய விநியோகத்தில் இப்போதும் தொடரக்கூடிய பொது விநியோக (ரேசன் கடைகள்) ஏற்பாட்டினை கைவிட்டு விட வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தினார்கள். மோடி அரசாங்கம் நிறைவேற்றிய மோசமான 3 (வேளாண்) சட்டங்களின் நோக்கம் அதுவாகவே இருந்தது. பொது விநியோக அமைப்பையும், ரேசன் திட்டத்தையும் கைவிடச் செய்யும் முயற்சியில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், நவதாராளமய ‘சீர்திருத்தங்களின்’ பெயரால் பிற ‘நிதி தாராளமயமாக்கல்’ கொள்கையை அமலாக்கிவிட்டார்கள்.

“நிதி தாராளமயமாக்கல்” என்பது, பணக் கொள்கையின் ஒரு கருவியாக வட்டி விகிதங்கள் மீது வைக்கப்படும் தனிப்பட்ட நம்பிக்கையாகிவிட்டது, மேலும் (ஏற்கனவே சொன்னதைப் போல) இது அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் வட்டி விகிதத்துடன் நேரடியாக பிணைக்கப்பட்டிருப்பதால், வேறு வழியில்லாமல் ஆக்கப்பட்டது. அரசாங்கத்தின் வருவாயும், அரசின் செலவினங்களும் “நிதிப் பொறுப்பு” என்ற பெயரால் ஒன்றோடொன்று  பிணைக்கப்பட்டுவிட்டன. அதன் காரணமாக பணக்காரர்கள் மீது அதிக வரி சுமத்தி அரசாங்கம் தனது வருவாயை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகளும் அடைக்கப்பட்டுவிட்டன. எனவே, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வட்டி வட்டி விகிதமானது, முதலீட்டையும், உற்பத்தியையும், வேலைவாய்ப்புக்களையும் நிர்ணயம் செய்கிறது.

முன்பு குறிப்பிட்டதையே இது மீண்டும் உணர்த்துகிறது. ஒரு குறிப்பிட்ட நாட்டின் உள்நாட்டு ஊக முதலாளிகள் கூட்டத்தினுடைய நடத்தை, அந்த நாட்டில் நிலவும் உற்பத்தியையும் வேலை வாய்ப்பையும் பாதிக்கிறது என்பது மட்டுமல்லாமல், அமெரிக்க நாட்டில் உள்ள குறிப்பிட்ட ஊக முதலாளிகளின் நடத்தை, ஒவ்வொரு நாட்டிலும், அதாவது உலகின் உற்பத்தியையும் வேலை வாய்ப்பையும் பாதிக்கிறது.

நவதாராளமய கட்டமைப்பு

ஒரு சில ஊக முதலாளிகளின் விருப்பங்களின் அடிப்படையில், கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகள் நிர்ணயிக்கப்படுவதற்கு அனுமதிக்காது என்ற காரணத்திற்காக, நாம் முன்பு கொண்டிருந்த (dirigiste era) நிதிக் கட்டமைப்பினை புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் டாக்டர் கே.என். ராஜ் வியந்து பாராட்டினார். அந்த கட்டமைப்பு, நிதி தாராளமயமாக்கல் நடவடிக்கைகளால் துல்லியமாக நொறுக்கப்பட்டது. மேலும், அந்த நடவடிக்கைகளே  ஒவ்வொரு நாட்டின் வேலை வாய்ப்பு நிலைமைகளும், ஒரு சில அமெரிக்க ஊக முதலாளிகளின் விருப்பத்தை சார்ந்ததாக ஆக்கியது.

பணவீக்கத்தை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளில் ஒன்றாக, வட்டி விகிதங்களை அதிகப்படுத்துகிற சிந்தனையைக் குறித்து உலகெங்கிலும் ஏராளம் எழுதப்படுகிறது. நவதாராளமய கட்டமைப்பை மனதில் கொண்டு, வேலையின்மைக்கும் பண வீக்கத்துக்கும் நடுவில் சமரசம் தேடும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை எடுப்பதாக, இந்த வாதங்கள் பொதுவாக அமைகின்றன. ஆனால், இந்த சமரசப் புள்ளிக்கான அவசியமே,  நவதாராளமய கட்டமைப்பின் காரணமாக, அரசின் வசம் இருந்த பல விதமான கருவிகள் அகற்றப்பட்டதால் எழுவதுதானே. எனவே, நவதாராளமய கட்டமைப்பினையே மாற்றி அமைப்பதன் மூலம் நாம் சமரச சிந்தனைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதுதான் முக்கியமாக சொல்ல வேண்டியதாகும். அதுபோன்ற விவாதங்கள் மிக அரிதாகவே எழுகின்றன.

தமிழில்: சிந்தன்

தமிழ் நாடு பட்ஜெட் 2022-23: தாராளமய தாக்கம் !

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

இன்றைய பன்னாட்டு சூழல் மிகவும் சவாலானதாக உள்ளது. 2008இல் வெடித்த உலக பொருளாதார நெருக்கடிக்குப் பின் பல ஆண்டுகளாகவே உலக முதலாளித்துவ அமைப்பு மந்த நிலையில் உள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் தொற்றும் அதனையொட்டி அமலாக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும் மந்தநிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. ரஷ்யா – உக்ரைன் போர் பன்னாட்டு பொருளாதார மீட்சிக்கான வாய்ப்புகளை மேலும் குறைத்துள்ளது. ஓரளவு ஏற்றுமதியை சார்ந்துள்ள தமிழ் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு இது பாதிப்பாக அமையும்.

இந்தியாவின் தேசீய பொருளாதார நிலைமை சாதகமாக இல்லை. கடந்த எட்டு ஆண்டுகளாகவே ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் தீவிர தாராளமய கொள்கைகளாலும் 2016 நவம்பர் மாதம் ஒன்றிய அரசு அமலாக்கிய பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அதனையடுத்து அமலுக்கு வந்த குளறுபடியான ஜிஎஸ்டி ஆகியவற்றாலும் விவசாயம், சிறு,குறு தொழில்கள் உள்ளிட்ட முறைசாரா துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஜிஎஸ்டி தாக்குதலாலும் கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் செல்வந்தர்களுக்கு ஒன்றிய அரசு அளித்த வருமானவரி சலுகைகளாலும் மாநிலங்களின் நிதிநிலைமையும் மோசமானது. பெரும் தொற்றும் அதனை ஒன்றிய அரசு எதிர்கொண்ட விதமும் மக்களுக்கும் மாநில அரசுகளுக்கும் எதிராகவே அமைந்தது.

எங்கே ‘திராவிட மாடல்’?

இத்தகைய சூழலில் 2022-23க்கான தமிழ் நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் 18 அன்று தாக்கல் செய்துள்ளார். அவர் தனது உரையில் பல முறை ‘திராவிட மாடல்’ என்று தனது பட்ஜட்டை வர்ணித்துள்ளார். இதன் பொருள் என்ன என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. எனினும் பொருளாதார வளர்ச்சி விகிதம் மட்டுமே இலக்கு என்று இல்லாமல் மக்களுக்கான நலத்திட்டங்களையும் அரசு முன்னெடுக்கும் என்று சிலர் இதை புரிந்து கொள்ளக் கூடும். ஆனால் உண்மையில் தமிழ் நாடு அரசின் பட்ஜட் வளர்ச்சியை ஏற்படுத்த உதவாது. இதர, மக்கள் நலன் சார்ந்த முனைவுகளும் இந்த பட்ஜட்டில் மிகக்குறைவுதான். இதன் பின்புலம் என்னவெனில் நிதி அமைச்சர் ஒன்றிய அரசின் தீவிர தாராளமய கொள்கைகளை பெருமளவிற்கு பின்பற்றுகிறார். அரசின் வரவு-செலவு இடைவெளி இலக்கை அடைவதற்கு செலவுகளை குறைப்பது மட்டுமே வழி என்ற தாராளமய கோட்பாட்டை அவர் ஏற்கிறார். இது பற்றிய விவரங்களை காண்போம்.

பட்ஜட் ஒதுக்கீடுகள் அதிகரிப்பு சொற்பமே

பல்வேறு துறைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளைப் பார்த்தாலே, மக்கள் நலன் சார்ந்த முன்னேற்றத்துக்கான முக்கியத்துவம் குறைவாகவே இருக்கிறது என்பது புலனாகும். கடந்த பட்ஜெட்டைவிட (2021-22) இந்தப் பட்ஜெட்டில் பெரும்பாலான துறைகளுக்கான ஒதுக்கீடுகள் சிறிதளவே உயர்ந்திருக்கின்றன. சில ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சில ஒதுக்கீடுகள் பணவீக்க விகிதத்தை விடவும் அதிகமாக, கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீடு 13.1 சதவீதம் உயர்ந்திருக்கிறது. போன பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 32,599.54 கோடி ரூபாய். இப்போது அது 36,895.89 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதைப்போல கிராம முன்னேற்றம் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கான ஒதுக்கீடு 22,738 கோடியிலிருந்து 26,647 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இது 17.2 சதவீத உயர்வு.
ஆனால் பெரும்பாலான மற்ற துறைகளுக்கான ஒதுக்கீடுகளில் உயர்வு எதுவும் இல்லை.

உயர்கல்வித்துறைக்கு இந்தப் பட்ஜெட்டில் 5,668.89 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 5,369.09 கோடி ரூபாய். சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கு சென்ற ஆண்டு 18,933 கோடி. ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்தப் பட்ஜெட்டில் 17,901.73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான வீழ்ச்சியை இந்த ஒதுக்கீடுகள் காட்டுகின்றன. சமூக நலன், பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகப் பாதுகாப்பு, ஆதிதிராவிடர் மற்றும் மலைசாதியினர் நலன் ஆகிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் உண்மையளவில் குறைந்துள்ளன. அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது பற்றி பட்ஜெட் மௌனம் சாதிக்கிறது.

வேளாண் துறை சார்ந்த முதலீடுகள் குறைவு

வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, சமச்சீர்வாக, தொடர்ந்து வேளாண்மையை நவீன மயமாக்குவதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அதைப்போன்றே அதிமுக்கியமான இலக்குகளை நிறைவேற்றுவதற்காகச் செலவுகளை அதிகப்படுத்தும் முயற்சிகள் என்று எதுவுமில்லை. கிராம வேளாண் தொழிலில் மதிப்புக்கூட்டல் அம்சத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் வளர்ச்சி என்பது பரவலாக்கப்படும்; கிராமப்புற வேலையின்மைப் பிரச்சினை ஓரளவு குறையும். நகர்ப்புற வேலை உத்தரவாதத் திட்டத்தை சரியான சட்டத்தின் ஆதரவோடு நகரப்புறம் முழுவதும் முன்னெடுத்துச் செல்வதற்கான முனைப்பு இல்லை. மகாத்மா காந்தி தேசிய கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தை வலுப்படுத்தவும் முயற்சி இல்லை.

2021-22 ஆண்டிலேயே சிக்கன நடவடிக்கைகள் மூலம் பற்றாக்குறையை (fiscal deficit) மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3.8 % ஆக குறைத்துள்ளார் நிதி அமைச்சர். பதினைந்தாவது நிதி ஆணையம் அனுமதித்துள்ள 4.5% என்பதை பயன்படுத்தி வளர்ச்சிக்கான முதலீடுகளை அதிகமாக செய்திருக்க முடியும். வரும் 2022-23 ஆண்டிலும் கூடுதலாக மூலதனச் செலவுகளை மேற்கொண்டிருக்க முடியும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு நிவாரணத்தை கூட்டவும், கிராக்கியை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சர் தவறி விட்டார்.

பதுங்கியிருக்கும் தாராளமய கோட்பாடு

இந்த விளைவுகள் எல்லாம், நிதிநிலையைப் உறுதிப்படுத்துவதற்கான ‘அவசர’ தேவையைப் பற்றி நிதியமைச்சர் சொன்ன கருத்துடன் ஒத்திசைவானவை. உள்நாட்டு உற்பத்தியில் சதவிகிதப் பங்கு என்ற அலகில் கடன்களைக் குறைத்தல், நிதிப்பற்றாக்குறையைச் சரிசெய்தல் ஆகியவை நிதிநிலையைப் உறுதிப்படுத்தும் அம்சங்கள். 2021ஆம் ஆண்டு ஆகஸ்டில் தனது பட்ஜெட் உரையில் பிடிஆர் இப்படிச் சொன்னார்: “நிதிநிலையைப் பலப்படுத்துதல் என்பது அடிப்படைக் கொள்கை. தமிழ்நாடு நிதிப்பொறுப்பு சட்டம் சொல்லும் விதிகளை தொடர்ந்து பின்பற்றி, இனி வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறையைக் குறைக்கும் இந்த மாநில அரசு. அதே சமயம், வளர்ச்சி சம்பந்தப்பட்ட செலவுகளுக்காக முதலீடும் செய்யப்படும்.”
இதிலிருக்கும் பிரச்சினை என்னவென்றால், நலத்திட்டங்களுக்கும், ‘வளர்ச்சித்’ திட்டங்களுக்கும் இடையில் இருப்பதாகச் சொல்லப்படும் முரண்பாடு.

கல்வி மட்டுமல்ல; உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பும் மனித மேம்பாட்டுக்கு உதவும். இத்தகைய முதலீடுகள் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்குச் சம்பந்தமில்லாதவை என்று ஏன் கருதப்படுகிறது? “பொருளாதாரக் கோணத்தில் பார்க்கும்போது, சமூகநலனும், ஒட்டுமொத்தப் பொருளாதார முன்னேற்றமும் சமன்படுத்தி கொண்டு செல்ல வேண்டிய இரண்டு (எதிர்மறை) பக்கங்கள்,” என்று தனது பட்ஜெட் உரையில் பழனிவேல் தியாகாராஜன் சொல்லியிருந்தார். இப்பார்வையில் சிக்கல் உள்ளது.

மக்கள் நலன் காக்கும் செலவுகள் வளர்ச்சிக்கு எதிரானதா?

ஏன் சமூகநலன் சார்ந்த செலவுகள் பொருளாதார வளர்ச்சிக்கு எதிராகவே வைக்கப்படுகிறது? சமூகநலத் திட்டங்கள் ஆட்சியாளர்களின் கருணைச் செயல்களாகவே ஏன் பார்க்கப்படுகின்றன? ‘உணவு, உடை, உறைவிடம், கல்வி, ஆரோக்கியம் ஆகியவை நாகரிகமடைந்த ஒரு சமூகத்தில் மக்களின் உரிமைகள்’ என்று பார்க்கப்பட வேண்டும். ‘பெரிய மனதுடன்’ அரசு அளிக்கும் கொடைகள் அல்ல இவை. பிரச்சினை என்னவெனில் ’புதிய தாராளமயக் கொள்கை’ என்பது ‘சமூக நலனோடும்’ ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியோடும்’ ஒத்துப்போவதில்லை. சமூகநலனையும் உள்ளடக்கிய, ஒட்டுமொத்த, ஜனநாயகத் தன்மை கொண்ட வளர்ச்சியை முன்னெடுப்பதும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை என்ற பார்வைக்கும், ஜனநாயக அரசாங்கத்தை ‘திறமையான’ முதலாளித்துவ தாராளமய பொருளாதாரத்திற்கு பெருந்தடையாக, தொல்லையாகப் பார்க்கும் புதிய தாராளமய சித்தாந்தத்திற்கும் இடையில்தான் உண்மையான போராட்டம் நிகழ்கிறது.

புதிய தாராளமய அமைப்பில் ஏற்படும் ‘வளர்ச்சி’ கொழுத்த நிதி மூலதனத்தின் நலன்களை மட்டுமே முதன்மையாகக் கவனித்துக் கொள்வதும், அதனால் சமத்துவமின்மையும், உழைக்கும் வர்க்கத்தினரின் பெருந்திரள் வறுமையும் அதிகரிப்பதும் உலகம் முழுவதும் காணப்படும் போக்குதான். அதற்காக வளர்ச்சியே வேண்டாமென்று பொருளல்ல. அந்த வளர்ச்சி மக்களுக்கு அதிகாரம் வழங்குவதாகவும், மக்களின் அடிப்படை மனித உரிமைகளை, பொருளாதார, சமூக, அரசியல் உரிமைகளை நிறைவேற்றுவதாகவும் அமைய வேண்டும் என்பதுதான் முக்கியம்.

உண்மை என்ன?

நாம் வாழும் இந்தக் காலகட்டத்தில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா தொற்றுப்பரவலின், ஊரடங்குகளின் கடுமையான விளைவுகள் மட்டுமல்ல; பொருளாதார வளர்ச்சி மந்தம், வேலையின்மை அதிகரிப்பு, சீறி உயரும் விலைவாசி ஆகியவையும் மக்களை வாட்டி வதைக்கின்றன. மேலும், முறைசாராத் துறையை சீரழித்த 2016-ஆம் ஆண்டின் பணமதிப்பிழப்பு என்ற நாசகார நடவடிக்கையும், 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி படு தோல்வியும், கடந்த ஐந்து ஆண்டுகளாக கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஏற்படுத்திய துன்பம் மக்களை பாடாய்ப்படுத்துகிறது.

2017-18-க்கான உழைப்பு படை ஆய்வும், 2017-18-க்கான நுகர்வோர் செலவு ஆய்வும், 2018-19 ஆண்டை மையப்படுத்தி இந்தியாவில் கிராமப்புறங்களில் இருக்கும் வேளாண் குடும்பங்களின் நிலையைப் பற்றி சமீபத்தில் வந்த தேசிய மாதிரி ஆய்வும் மக்களிடையே பரவலாக நிலவும் துயரத்தை, வாங்கும் சக்தி இழப்பை, வெளிக்காட்டின. மற்ற சில மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு பரவாயில்லைதான். ஆனாலும் கிராமப்புற தமிழ்நாட்டு வேளாண் வீடுகளில் சராசரி மாத வருமானம் பற்றிய தேசிய மாதிரி ஆய்வு தரும் தகவல்களில் இருந்து, அந்தச் சராசரி வருமானம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதை அறிய முடிகிறது. அறிவுபூர்வமாக வறுமையை ஆராய்ந்து உருவாக்கப்பட்ட எந்த வரையறையின்படி பார்த்தாலும், கணிசமான அளவு கிராமத்து மக்கள் ஏழைகள்தான் என்பது அந்த ஆய்வு உணர்த்தும் செய்தி.

ஆண்டுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7 அல்லது 8 சதவீதம் வளர்ந்திருக்கிறது என்று பல ஆண்டுகளாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்தபின்பும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இதைப் பார்க்கும்போது மனதில் தோன்றுவது இதுதான்: நமக்கு வளர்ச்சி வேண்டும் நிச்சயமாக. ஆனால் அந்த வளர்ச்சி வேறுவிதமாக இருக்க வேண்டும்.

எத்தகைய வளர்ச்சி தேவை?

கிராம முன்னேற்றம், கல்வி முன்னேற்றம், ஆரோக்கியம் பேணுதல் ஆகியவை மிக அவசியம். கிராமப்புறத்து, நகர்ப்புறத்து உட்கட்டமைப்பு, மற்றும் வேளாண் துறை ஆகியவற்றில் பொதுமுதலீடுகளை அதிகரிக்க வேண்டும். முழுமையான நில மறுவிநியோகமும், சிறுகுறு விவசாயிகளுக்கு அரசின் திட்டமிட்ட உதவிகளும் அவசியம். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு முக்கியத்துவம் தந்து, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு நிதி அடிப்படைவாதத்தைக் கைவிடுவதோடு, பெருமுதலாளி நிறுவனங்கள் மீதும் பெரும் செல்வந்தர்கள் மீதும் உரிய வருமான வரிகள் விதிக்கப்பட்டு, கறாராக வசூலிக்கப்பட வேண்டும். அதைப்போலவே முக்கியமானது, ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதிவளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டம் வரையறுத்திருப்பது போல இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியமாக கட்டமைத்துக் கொள்வதற்கு ஒரு பெரும் போராட்டம் வேண்டியிருக்கிறது.

முன்மாதிரி நடவடிக்கைகள் எங்கே?

அண்மை காலங்களில் ‘திராவிட மாடல்’ என்ற சொற்றொடர் பலரால் பயன்படுத்தப்படுகிறது. பிரபலம் அடைந்துள்ளது. எனினும் இதன் பொருள் துல்லியமாக வரையறுக்கப்படவில்லை. அண்மையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும் வெற்றி பெற்ற பொழுது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் நாடு முதல்வர் இந்த வெற்றி ‘திராவிட மாடல்’ பெற்ற வெற்றி என்று பொருள்பட கூறினார். இது அரசியல் களத்தில் கிடைத்த தேர்தல் வெற்றியை முன்வைத்து சொல்லப்பட்டுள்ளது. சிலர் திராவிட மாடலுக்கு கொடுக்கும் விளக்கம் இது பொருளாதார வளர்ச்சியையும் வறுமை ஒழிப்பு உள்ளிட்டு நலிந்தவருக்கு சமூக பாதுகாப்பையும் அளிக்கும் தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சிப் பாதை என்பதாகும். ஒரு சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று இதுதான் நாட்டுக்கே பொருத்தமான பாதை என்று முழங்குகின்றனர்.

‘திராவிட மாடல்’ பற்றிய விரிவான விளக்கமும் விவாதமும் தமிழ் நாடு பட்ஜெட் பற்றிய இக்கட்டுரையின் வரம்பிற்கு அப்பாற்பட்டது. நவீன தமிழ் நாட்டின் முக்கிய சிற்பிகளில் ஒருவரான பெரியார் அவர்களின் தலைமையில் வளர்ந்த திராவிட சமூக சீர்திருத்த இயக்கத்தின் மகத்தான ஜனநாயகப் பங்கை அங்கீகரிப்பது மிகவும் அவசியம். எனினும், பொருளாதாரக் கொள்கைகளை பொறுத்தவரையில், திராவிட கட்சிகள் என்று தங்களை கருதிக் கொள்ளும் கட்சிகள் கடந்த ஐம்பத்து ஐந்து ஆண்டுகளாக தமிழ் நாட்டு ஆட்சியாளர்களாக செயல்பட்டு வந்துள்ளனர் என்பதையும், குறிப்பாக கடந்த முப்பது ஆண்டுகளாக தீவிரமான தாராளமய கொள்கைகளை அமலாக்கிவரும் ஒன்றிய அரசாங்கங்கள் அனைத்திலும் இக்கட்சிகள் மாறி மாறி நேரடியாக பங்கேற்று அல்லது ஆதரித்து வந்துள்ளனர் என்பதையும், புறந்தள்ள இயலாது. பாராளுமன்றத்தில் தாராளமய கொள்கைகளுக்கும் அவற்றை அமலாக்கிட முன்மொழியப்பட்ட பல மசோதாக்களுக்கும் திராவிட கட்சிகள் ஆதரவு தந்து வந்துள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது.

அரசு தரும் புள்ளிவிவரக் குறியீடுகள்படி கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட துறைகளில் பல மாநிலங்களை விட தமிழ் நாடு முன்னேறியுள்ளது என்பது உண்மை. நவீன பெரும் தொழில் வளர்ச்சியிலும் ஒப்பீட்டளவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழ் நாடு திகழ்கிறது என்பதும் உண்மை. ஆனால் ஒன்றிய அரசின் அங்கமாக, அல்லது அதற்கு ஆதரவாக இருந்ததால் பல மக்கள் விரோத தாராளமய கொள்கைகளை அமல்படுத்தும் அரசுகளாக அடுத்தடுத்து வந்த திராவிட கட்சிகளின் அரசுகள் இருந்தன என்பதும் உண்மை. இதனால் நகரப்பகுதிகளிலும் கிராமப்பகுதிகளிலும் பரவலாக வறுமை தொடர்வதை தடுக்க இயலவில்லை. கிராமப்புற விவசாயக் குடும்பங்களின் வாழ்நிலை பற்றி ஒன்றிய அரசின் புள்ளியியல் நிறுவனம் நடத்திய 2018-19 ஆண்டுக்கான ஆய்வு பெரும் தொற்றுக்கு முன்பே இக்குடும்பங்களின் சராசரி மாத வருமானம் மிகக் குறைவாக இருந்தது என்பதை தெரிவிக்கிறது.

பொது உடமை இயக்கத்தின் தீவிர போராட்டங்களாலும் முயற்சிகளாலும் நில மறுவிநியோகம் உள்ளிட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் நடந்துள்ளன என்றாலும், நில விநியோகம் தமிழ் நாட்டின் ஜனநாயக இயக்கங்களின் தொடரும் சவாலாகவே உள்ளது. அண்டை கேரள மாநிலத்தில் நிலசீர்திருத்தம் பொது உடமை இயக்கத்தின் தலைமையில் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக நடந்தது. பெண்-ஆண் சமத்துவத்திற்கும் சமூக ஒடுக்குமுறைகளை தகர்க்கவும் முக்கிய பங்கு ஆற்றியது. புகழ்பெற்ற பொருளியல் அறிஞர் பேராசிரியர் அமர்த்யா சென் ஒருமுறை நவீன ஆசியாவில் வளர்ச்சி என்ற சவாலில் சாதனை புரிந்துள்ள நாடுகளாக ஜப்பான், மக்கள் சீனம், தாய்வான் மற்றும் தென் கொரியா ஆகியவற்றை குறிப்பிட்டு, இந்நாடுகளின் ஒரு பொது அம்சம் இவை அனைத்தும் முழுமையான நிலசீர்திருத்தம் நடைபெற்றுள்ள நாடுகள் என்பதை சுட்டிக் காட்டுகிறார். இந்த அனுபவங்கள் தமிழ் நாட்டு வளர்ச்சி பற்றிய விவாதத்திற்கும் வெளிச்சம் தரும்.

நீண்ட காலமாக சமூகநீதி பொதுவெளியில் உரக்கப் பேசப்பட்டும் சமூக ஒடுக்குமுறைகளும் சாதி மறுப்பு திருமணங்களை ஏற்க மறுக்கும் சமூக விழுமியங்களும் தமிழகத்தில் ஏன் தொடர்கின்றன என்பவை போன்ற கேள்விகளையும் தமிழ் நாட்டு ஜனநாயக இயக்கங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

நிதி அடிப்படைவாதம் உதவாது

ஒரு ஆண்டுக்கான தமிழ் நாடு பட்ஜெட் பற்றிய பரிசீலனை என்பதை ஒரு வரம்பிற்குள் தான் செய்ய முடியும். அதில் திராவிட மாடலை தேடுவதோ, அது இல்லை என்று சொல்வதோ, இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. நாம் சொல்வது என்னவென்றால், தமிழ் நாடு நிதி அமைச்சர் ஒன்றிய அரசும் பதினைந்தாவது நிதி ஆணையமும் முன்வைக்கும் நெறிமுறைகளை தட்டிக் கேட்க வேண்டும் என்பதுதான். தனது பட்ஜெட் உரையிலேயே நிதி அமைச்சர் ஒன்றிய அரசின் மாநில உரிமை பறிப்பு அணுகுமுறையை விமர்சித்துள்ளார். ஒன்றிய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு சட்டப்படி அளிக்கப்படும் தொகைகளை நிபந்தனையின்றி அளிக்க வேண்டும் என்றும் கோரி இருக்கிறார். இதுபோல் ஒன்றிய அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளை ஒத்த கருத்துள்ள மாநில அரசுகளுடன் இணைந்து எதிர்க்க தமிழ் நாடு அரசு முன்வர வேண்டும்.

நிதி அமைச்சர் கவனத்திற்கு இன்னும் ஓரிரு விஷயங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. பெரும் தொற்றுக்கு முன்பிருந்தே பெரும் சிக்கலில் உள்ளவை தமிழ் நாட்டின் சிறுகுறு தொழில்கள். இவை கணிசமான அளவில் தொழில் உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் பங்காற்றுபவை. மேலும் பெரும் தொழில்களைவிட குறைந்த முதலீட்டில் கூடுதல் வேலை வாய்ப்புகள் தருபவை. நகர்ப்புற வேலை திட்டத்தை முழுமையாக விரிவுபடுத்தி, சிறு,குறு தொழில்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தொழிலாளர்களுக்கு தரப்படும் கூலியில் ஒருபகுதியை இந்த வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் மானியமாக வழங்கலாம். கேரள அனுபவத்தை உள்வாங்கி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரங்கள், நிதி மற்றும் பணியாளர்கள் தந்து உதவலாம். இது ஜனநாயக பங்கேற்புக்கான வாய்ப்புகளையும் மக்களுக்கு அளிக்கும்.

வேளாண் துறையில் விரிவாக்கப் பணி அமைப்பையும் ஆராய்ச்சி அமைப்பையும் வலுப்படுத்துவதுடன், போதுமான அளவில் விளைபொருட்களை நல்ல விலையில் விற்கும் வகையில் வேளாண் விளைபொருள்களை சந்தைப்படுத்தும் குழுக்களின் எண்ணிக்கையையும் செயல்பாட்டு திறனையும் உயர்த்த உரிய ஒதுக்கீடுகள் செய்யலாம். இங்கே நாம் குறிப்பிட்டிருப்பவை சில எடுத்துக்காட்டுகளே.
நிதி அடிப்படை வாதத்தை புறம் தள்ளி மக்கள் சார் அணுகுமுறையை பின்பற்றி தமிழ் நாடு மேலும் முன்னேற நம் முன் வாய்ப்புகள் உள்ளன.

விவசாயிகள் போராட்டத்தின் படிப்பினைகள்

பிரகாஷ் காரத்

அண்மையில் வெற்றிகரமாக நடந்தேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க விவசாயிகள் போராட்டம் குறித்தும், அதன் அரசியல் பின்புலன் மற்றும் தாக்கங்கள் குறித்தும் புரிந்து கொள்வது அவசியமாக உள்ளது. மத்திய மோடி அரசின் மூன்று வேளாண் (விரோத) சட்டங்களுக்கு எதிரான இந்த போராட்டம் இக்கால அரசியல் சூழலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போராட்டம்.

செப்டம்பர் 2020இல் மோடி அரசு, பாராளுமன்ற ஜனநாயக மாண்புகள் அனைத்தையும் மீறி, எந்த விவாதமும் இன்றி, பாராளுமன்றத்தில் அநீதியான முறையில் உட்புகுத்தி இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் இயற்றியது. ஆனால் விவசாயிகள் போராட்டம் அன்றிலிருந்து மட்டும் துவங்கவில்லை. அதற்கு முன்பே இந்த மூன்று சட்டங்களும் “அரசாணை”களாக ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே போராட்ட அலைகள் துவங்கிவிட்டன. அதன் பின் சட்டமாக இயற்றியவுடன், தில்லியை நோக்கி தில்லி எல்லையில் நவம்பர் 26 அன்று பெரும் போராட்டமாக உருவெடுத்தது.

சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய வரலாற்றில், மிகவும் நீண்ட காலமாக, தொடர்ந்து உறுதியாக, முன்னெடுக்கப்பட்ட ஒன்றுபட்ட போராட்டம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாகவே மோடி அரசு இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற நிர்ப்பந்திக்கப்பட்டது. ஆக, இப்படிப்பட்ட பரந்துபட்ட தொடர் இயக்கத்தின் வளர்ச்சி, அதன் முக்கிய அம்சங்கள், அத்தியாவசிய அரசியல் கூறுகள் ஆகியவற்றை புரிந்து கொள்ளும் தேவை நமக்கு உள்ளது.

போராட்டத்தின் பின்புலன்

இந்த மூன்று சட்டங்களும், தெளிவாக, விவசாயம் மற்றும் விவசாய பொருட்கள் விற்பனையில் கார்ப்பரேட் ஊடுருவலுக்கு வழி வகுக்கவே இயற்றப்பட்டன. இந்த மூன்று சட்டங்களும், இன்று நம் நாட்டில் அமலில் உள்ள நெல், கோதுமை, மற்றும் இன்ன சில பயிர்களின் கொள்முதல் முறைக்கும், இந்த கொள்முதலின் அடிப்படையாக உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும், மேலும் அதன் பின்னர் வரும் பொது விநியோக முறைக்கும் எதிரானதாக பாவிக்கப்பட்டது.

பஞ்சாப், அரியானா மற்றும் உத்திர பிரதேசம், குறிப்பாக மேற்கு உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த மூன்று மாநிலங்களில்தான் பெரும் அளவில் நிகழும் நெல், கோதுமை கொள்முதல் முறை நிலவி வருகிறது. மேலும் “அர்தியாஸ்” என்ற முறையின் மூலம் இடைத்தரகர்கள் விளைச்சலை கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யும் முறையும் நிலவி வருகிறது. ஆக, இந்த மாநிலங்களில்தான் விவசாயிகள் எழுச்சி முதலில் ஏற்பட்டது.

ஆனால் இந்த மூன்று வேளாண் சட்டங்கள் இயற்றப்படும் முன்னரே, நாட்டின் பல பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டங்கள் வளர்ந்து கொண்டே வந்தன. பல்வேறு விவசாய சங்கங்களை இணைக்கும் கூட்டு அமைப்புகளும் உருவாகி வளர்ந்து வந்தன. இந்த விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்த “சம்யுக்த் கிசான் மோர்ச்சா” (SKM, ஒன்றுபட்ட விவசாயிகள் முன்னணி) அமைக்கப்பெறும் முன்பே, மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டபொழுது உருவான “அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு” (AIKSCC) என்ற பரந்துபட்ட தளம் இருந்து வந்தது. SKM உருவாகும் முன்னரே பல இயக்கங்களும் போராட்டங்களும் துவங்கி விட்டன. 2018லும், 2019லும் தில்லியில் மிகப்பெரும் விவசாயிகள் திரட்சி நிகழ்ந்தன.

ஆக, நாட்டில் பல காலமாக நிலவி வரும், நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கடும் வேளாண் நெருக்கடி காரணமாக ஆங்காங்கே எழும் போராட்டங்களும், அவை அனைத்தையும் ஒன்று திரட்டி அதற்கு ஒரு தேசிய அளவிலான வடிவம் அளிக்கும் கூட்டு போராட்டங்களுக்கும் ஏற்கனவே முகாந்திரம் இருந்துள்ளது. தில்லியில் 2018 செப்டம்பரில் விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய, அண்மை காலங்களின் மிகப்பெரும் வெகுஜன இயக்கம் நிகழ்ந்தது. ஆக பல்வேறு விவசாய சங்கங்களும், விவசாய வர்க்கங்களும் ஒன்றுபட்டு நிகழ்த்தும் இயக்கங்களுக்கான உந்துதல் ஏற்கனவே இருந்து வந்தது.

இந்த பின்னணியில்தான் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தின் முக்கிய ஸ்தலமான பஞ்சாப்பில் ஜூன் மாத அரசாணைக்கு பின் 32 விவசாய அமைப்புகள் கூடி, செயற்குழு அமைத்து இயக்கங்களை முன்னெடுத்தனர். சாலை மறியல், ரயில் மறியல் போன்ற போராட்டங்கள் நிகழ்ந்தன. இதன் பின்னரே போராட்டம் தில்லியின் எல்லைகளுக்கு நகர்ந்தது.

போராட்டத்தின் முக்கிய அம்சங்கள்

ஒரு ஆண்டு முழுவதும் நடந்தேறிய இந்த விவசாயிகள் போராட்டத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால், அதில் காணப்பட்ட ஒற்றுமையே! SKM அமைப்பின் கீழ், நாடு முழுவதிலும் இருந்து சிறியதும், மிகப் பெரியதும் என சுமார் 500 விவசாய அமைப்புகள் கூடி இருந்தன. இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய SKM, அனைத்து தரப்பினரிடம் இருந்து போராட்டம் மற்றும் இயக்க செயல்பாடு குறித்த பரந்துபட்ட உரையாடலை ஊக்குவிக்கும் அமைப்பு முறையை உருவாக்கியது. இப்படி பல்வேறு, பரந்துபட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்களை ஒன்றிணைத்ததே இந்த போராட்டத்தின் முதல் முக்கிய அம்சம்.

இரண்டாவதாக கவனிக்க வேண்டியது, போராட்ட வடிவ வளர்ச்சி. நவம்பர் 26, 2020ல் “தில்லி சலோ” என்ற போராட்ட அழைப்பு விடுக்கப்பட்ட பின், பஞ்சாப் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து டிராக்டர்களில் முன்னேறி வரத் துவங்கிய விவசாயிகளை தடுக்கும் முயற்சிகள் நிகழ்ந்தன. போலீஸ் அராஜகம், கண்ணீர் புகை குண்டுகள், தடியடி என அனைத்தும் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆனால் இது அனைத்தையும் மீறி விவசாயிகள் முதலில் தில்லி எல்லையிலும், பின் அரியானா, ராஜஸ்தான், மற்றும் உத்திர பிரதேச எல்லைகளையும் வந்தடைந்தனர். ஆக, தில்லி எல்லையை சுற்றி இருக்கும் ஐந்து-ஆறு ஸ்தலங்களில் முனைப்புடன் நிகழும் போராட்டமாக இது உருவெடுத்தது. ஆண்டு முழுவதும் இந்த ஸ்தலங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டங்களை நிழத்தினார். தொடர்ந்து விவசாயிகள் வந்து கொண்டிருந்தனர். பின்னர், குறிப்பாக பஞ்சாப்பில், குறிப்பிட்ட சில கிராமங்கள் 2-3 வாரங்கள் போராட்டத்திற்கு சென்று திரும்பி வந்த பின், வேறு சில கிராமங்கள் செல்லும் சுழற்சி முறையும் உருவெடுத்தது. இதனால் இது தொடர் வெகுஜன ஒருங்கிணைப்பாக நிகழ்ந்தது. பஞ்சாப், அரியானா, உத்திர பிரதேச மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், பின்னர் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்திராகண்ட் விவசாயிகளும் ஒன்றிணைந்தனர்.

இதன் மூலம் இது மிக நீண்ட கால, தொடர் போராட்டமாக மாறியது. நாம் தொலைக்காட்சிகளில் பார்த்தது போல, கூட்டு சமையல் இடங்கள், மருத்துவ சேவை பகுதிகள், மேலும் படிக்கும் அறைகளும், நூலகங்களும் கூட போராட்ட களத்தில் அமைக்கப்பட்டன. ஆக, அந்த போராட்ட களத்தில் பல நாட்களாக இருந்தவர்கள் ஒரு கூட்டு வாழ்வை நடத்த முடிந்தது.

மூன்றாவதாக. இந்த போராட்ட அழைப்பு விடுக்கப்பட்ட நவம்பர் 26, 2020 அன்று தான் இந்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய பொது வேலை நிறுத்த அறிவிப்பும் விடுக்கப்பட்டது. இரண்டும் ஒன்றாகவே நடந்தேறியது. ஆகவே, துவக்கத்தில் இருந்தே இப்போராட்டம், விவசாய-தொழிலாளர் வர்க்கங்களின் கூட்டு நடவடிக்கைகள் மூலமே வளர்ந்தது. இது ஆண்டு முழுவது நீடித்து, தொழிற்சங்கங்கள் உடனான ஒரு குறிப்பிட்ட அளவு கூட்டு முயற்சிகளும், ஒற்றுமையும், கூட்டு நடவடிக்கைகளும் தொடர்ந்து நிகழ்ந்தன.

மேலும் இந்த போராட்ட அமைப்பின் தன்மையானது, அனைத்து சாதி, மத, பிராந்திய பாகுபாடுகளை உடைத்தெறியும் வண்ணம் வளர்ந்தது. உதராணமாக அரியானா மற்றும் பஞ்சாப் இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சனை போன்ற பிரிவினைகள் உடைவதைக் கண்டோம். கூடிய விவசாயிகள் இடையே பெரும் தோழமை வளரவதைக் கண்டோம். குறிப்பாக, இரண்டு முக்கிய போராட்ட ஸ்தலங்கள் அரியானாவில் அமைந்திருந்ததால், அரியானா விவசாயிகள்தான் பெருமளவு சமையல் பொருட்கள், காய்கறிகள், பால் போன்றவற்றை அளிக்கும் பொறுப்பை ஏற்று, போராட்டம் தொடர்ச்சியாக நடப்பதை உறுதி செய்தனர். இதன் மூலம் முந்தைய பிரிவினைகளும் பாகுபாடுகளும் உடைந்து, ஒற்றுமை வளர்வதைக் கண்டோம். இதே தான் மேற்கு உ.பி.யிலும் நிகழ்ந்தது. 2013 முசாஃபர்நகர் மதக் கலவரங்களுக்கு பின்னர் ஜாட் விவசாயிகள் மற்றும் முஸ்லிம் விவசாயிகள் மற்றும் சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரிவினை ஓரளவு சீரடைவதையும், பின்னர் பெரும் பங்கெடுப்புடன், குறிப்பாக முஸ்லிம் விவசாயிகள் மற்றும் கைவினை படைப்பாளிகள் பெருமளவில் பங்கேற்று நடைபெற்ற மாபெரும் முசாஃபர்நகர் பேரணி நிகழ்ந்ததையும் கண்டோம்.மேலும் அரியானாவில் பெரும் பங்கு வகிக்கும் ஜாட் விவசாயிகள், அவர்கள் மத்தியில் இதர சாதியினர் குறித்து விதைக்கப்பட்ட தீய கருத்துக்கள், மேலும் மதப் பிரிவினைவாதம், இவை அனைத்தும் இந்த போராட்டத்தின் சூட்டில் கரைந்து போவதைக் கண்டோம். இது ஒரு முக்கிய வளர்ச்சி.

அடுத்த முக்கிய அம்சமானது, பெண்களின் பங்கெடுப்பு. பல வகுப்பினரிடத்தில் இருந்தும், பல குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் பெருமளவில் போராட்டங்களில் முழுமையாக பங்கேற்றனர். பேரணிகளில் டிராக்டர்களை ஓட்டியும் வழி நடத்தினர். முதல் முறையாக வேளாண் சமூகங்கள் மத்தியில் பெண்களை விவசாயிகளாக பெருமளவில் அங்கீகரிக்கும் மாபெரும் வளர்ச்சியும் காணப்பட்டது.இது ஒரு முக்கியமான அம்சம் ஆகும்.

இந்த மூன்று வேளாண் சட்டங்களின் தாக்கம் நாடு முழுவதிலும் சமமாக இல்லை. முன்னரே குறிப்பிட்டது போல், பஞ்சாப், அரியானா, மேற்கு உ.பி. ஆகிய பகுதிகள் முதலாளித்துவ முறையினுள் அதிக வளர்ச்சி அடைந்து, அரசு கொள்முதல், மண்டிகள் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவற்றை வலுவாக பெற்றிருந்தன. இவ்வாறு வலுவாக இல்லாத இடங்களிலும் நிச்சயமாக கிளர்ச்சிகள் காணப்பட்டன. ஆனால் தொடர் போராட்டமாக இல்லாமல், தில்லி எல்லையில் போராடும் விவசாயிகளுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், சில இடங்களில் பந்த் போன்றவை நிகழ்ந்தேறின.

மேலும் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமானது, மத்திய ஆளும் அரசும், கட்சியும் போராட்டத்தை உடைக்க பல்வேறு வழிகளை கையாண்டும், பிரிவினைவாதிகள், காலிஸ்தானிகள் எனக் கூறி ஒற்றுமையை உடைக்க பல அரசியல் நாடகங்கள் நிகழ்த்திய போதிலும், இவை அனைத்தையும் விவசாயிகள் பெரும் துணிச்சலுடன் எதிர் கொண்டனர். இந்த போராட்டம் நவம்பர் மாத கடும் குளிரிலும், மழையிலும் துவங்கியது. எனினும் பல விவசாயிகளும், ஆண்களும், பெண்களும், தங்கள் குழந்தை குடும்பங்களோடு போராட்டத்திற்கு வந்தனர். கடும் தாக்குதலை எதிர் கொண்டனர். அரசு இந்த சட்டங்களை திரும்பப் பெற முக்கிய காரணம், ஒற்றுமையை குலைக்க எவ்வளவு முயன்ற போதிலும் அதில் வெற்றி காண முடியாததே ஆகும்.

இந்த போராட்டத்தில் பங்கெடுத்தோர் பலர் இந்த குளிரை தாங்கக் கூடியவர்கள் என்றாலும், போராட்ட காலத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதைத் தவிர அரியானாவில் போலீஸ் தாக்குதலில் உயிர் நீத்த தியாகிகள், லக்கிம்பூர் கேரியில் மத்திய அமைச்சர் மகன் வண்டியேற்றி கொல்லப்பட்ட 15 தியாகிகள் என 700க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் உயிர் நீத்தனர். இவை அனைத்தையும் துணிவுடன் சந்தித்து உறுதியுடன் நின்றதே இந்த போராட்டத்தின் மிக முக்கிய அம்சம் ஆகும்.

போராட்டத்தின் அரசியல் அம்சங்கள், அரசியல் சூழல்

2019இல் கூடுதல் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி அமைத்த பின்பு, நவ தாராளமய கொள்கைகளை அதி தீவிரமாக முன்னெடுத்தது. இதனுடன் சேர்ந்து ஹிந்துத்துவ தாக்குதலும் தீவிரம் அடைந்தது. ஜம்மு காஷ்மீர் உடைக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதை கண்டோம். பின்னர் பிரிவினைவாத குடியுரிமை திருத்த சட்டம் அமலாக்கப்பட்டதைக் கண்டோம். அதன் பின் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களும், தில்லி கலவரங்களும் நடந்தேறின. இதைத் தவிர பொருளாதார ரீதியாக, தனியார்மயம் தீவிரம் அடைந்திருப்பதைப் பார்க்கிறோம். பொதுத்துறையை முற்றிலும் ஒழித்துக் கட்டும் வகையில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மூன்று வேளாண் சட்டங்களும் நவீன தாராளமய கொள்கைகளின் அங்கமே.

இந்த பின்னணியில், வேளாண் சட்டங்கள் இயற்றப்படும் முன்னர், ஒரு மாபெரும் வெகுஜன போராட்டம் ஏற்பட்டது. அது சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டம். நாடு முழுமையில் இருந்தும் மாபெரும் ஒருங்கிணைப்பைக் கண்டோம். ஆனால் பெருந்தொற்று மற்றும் நாட்டடங்கு காலத்தில் இது நிறுத்தப்பட்டது.

ஆனால் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், இந்த சட்டங்களானது பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சட்டம் என்ற தெளிவான புரிதல் இருந்தது. அதனால்தான், இதற்கு எதிராக, விவசாயிகள் வெறும் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என மட்டும் கோராமல், சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையின்படியான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உறுதி வேண்டும் என்றும், மின்சார துறையில் தனியார்மயத்திற்கு வழி வகுத்து, மின்சார விலை அதிகரிப்பிற்கு வழி வகுக்கும் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றும் சேர்த்தே முழக்கமிட்டனர். இவை அனைத்தும் போராட்டத்தின் துவக்கத்தில் இருந்தே முன்னெடுக்கப்பட்டது. ஆகையால்தான், இந்த போராட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள் அனைத்தும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கும், நவ தாராளமய கொள்கைகளுக்கும் எதிராகவே அமைந்தன. இது ஒரு முக்கிய அரசியல் கூறு.

மேலும், குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில், ஏறத்தாழ அனைத்து ஊரக குடும்பங்களும் போராட்டத்தில் பங்கெடுத்தன. இம்மாநிலத்தில் பார்த்தால், ஊரக நிலப்பிரபுத்துவ மற்றும் செல்வந்தர் விவசாயிகளின் பிரதிநிதி கட்சியான அகாளி தளம் கட்சி பா.ஜ.க உடனான கூட்டணியை முறித்துக் கொண்டது. வாஜ்பாய் காலத்திற்கு முன்பிருந்தே கூட்டணியில் இருந்து வந்த இக்கட்சி விலகியதால் பஞ்சாபில் பா.ஜ.க முற்றிலும் தனிமைப்பட்டு நின்றது. மேலும் முன்னர் கூறியது போலவே, கடுமையான மதவாத பிளவு ஏற்பட்டிருந்த மேற்கு உ.பி.யில், இந்த இயக்கத்தின் மூலம் பிளவு ஓரளவு சீரடைந்தது.

மேலும் இப்போராட்டத்தின் ஒரு முக்கிய அரசியல் அம்சம் என்னவென்றால், செப்டம்பர் 2020இல் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளித்த பிராந்திய கட்சிகளும் கூட அதன் பிறகு பின்வாங்கின. பந்த் அழைப்பு விடுக்கப்பட்ட பொழுது, முன்னர் சட்டங்களுக்கு ஆதரவு அளித்த ஆந்திராவின் YSR காங்கிரஸ் அரசும், ஒரிசாவின் பிஜு ஜனதாதள அரசும் பந்த் அழைப்பிற்கு ஆதரவு அளித்தது. மேலும் தெலுங்கானா TRS அரசும் வலுவாக எதிர்த்தது. இவை ஏதும் முன்னர் பா.ஜ.க-வை கடுமையாக எதிர்த்த கட்சிகள் அல்ல. ஆக, இந்த வேளாண் சட்டத்தின் காரணமாக, நடுநிலையாளர்களும், பா.ஜ.க ஆதரவாளர்களும் எதிர்க்குரல் எழுப்ப நிர்ப்பந்திக்கப்பட்டனர். மேலும், வெறும் இந்த சட்டம் குறித்து மட்டுமல்லாமல், இன்று நாம் பார்ப்பது போல், TRS போன்ற கட்சிகள் முழுமையாக பா.ஜ.க எதிர்ப்பு நிலைபாட்டை எடுத்துள்ளது.

அடுத்து கவனிக்க வேண்டிய முக்கியமான அரசியல் கூறு என்னவென்றால், முதல் முறையாக ஒரு தீவிர நவ தாராளமய கொள்கையில் இருந்து மோடி அரசாங்கம் பின் வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டது. இது மிகவும் முக்கிய அம்சம். ஏனெனில் இந்த போராட்டமானது, நவ தாராளமய கொள்கைகளை எதிர்த்துப் போராடி, அதை திரும்பப் பெறச் செய்ய முடியும் என்பதை காட்டியுள்ளது.

இந்த சட்டத்தை திரும்பப் பெறுவதில் ஒரு முக்கிய பங்கு வகித்தது, பஞ்சாப் மற்றும் உ.பி.யில் வரவிருந்த சட்டமன்ற தேர்தல்கள். ஏற்கனவே கூறியது போல இந்த இயக்கம்  பா.ஜ.க-வை தனிமைப் படுத்தியது. இந்த சட்டங்களை திரும்பப் பெறாவிடில், பஞ்சாப் கிராமங்களில் பிரசாரத்திற்கு நுழையக் கூட முடியாது என உணர்ந்தது பா.ஜ.க. லக்கிம்பூர் கேரியில் மத்திய அமைச்சர் ஆதரவுடன் மகன் விவசாயிகளை வண்டியேற்றி கொன்றது உ.பி. மாநிலம் முழுதும் எதிர்ப்பலைகளை எழச் செய்தது. மேலும் இந்த இயக்கத்தால் மேற்கு உ.பி.யில் ஜாட்-முஸ்லிம் ஒற்றுமை வளர்ந்ததை அடுத்து, 2017 சட்டமன்ற தேர்தலில் இங்கு 58ல் 53 இடங்களை வென்ற பா.ஜ.க., மொத்தத்தையும் இழக்கும் அபாயத்தை உணர்ந்தது. மேலும், சட்டங்களை திரும்பப் பெற்றால், அவர்களின் வழக்கமான சூழ்ச்சியான மதப் பிரிவினைவாதத்தை மீண்டும் முன்னுக்கு கொண்டு வரலாம் எனவும் நினத்தது பா.ஜ.க.

அரியானாவில் தேர்தல்கள் இல்லாதபோதும், அனைத்து சாதி விவசாயிகள்  இடையே ஒற்றுமை உண்டானது. குறிப்பாக, பெரும்பான்மை வகிக்கும் ஜாட் வகுப்பினருக்கும் இதர வகுப்பினருக்கும் இடையே தொடர் ஒற்றுமை நீடிப்பதை பா.ஜ.க. விரும்பவில்லை.

மேலும் போராட்டம் வெடித்த இடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். தில்லியின் எல்லை மாநிலங்களான அரியானா, உ.பி., பஞ்சாப் மாநிலங்களில் தான் இந்த சட்டத்தின் தாக்கம் தீவிரமாக இருந்தது. இதனால் இம்மாநிலத்தில் இருந்து ஆண்டு முழுவதும் விவசாயிகள் வர இயன்றது. இதன் தாக்கம் வேறு பகுதிகளில் இருந்திருந்தால் இப்படி ஆண்டு முழுவதுமான போராட்டத்தை நடத்த முடியாமல் போக வாய்ப்புள்ளது.

மேலும் இந்த சட்டத்தின் தாக்கம் அனைத்து வகுப்பினர் மீதும் இருந்ததால், இதை எளிதில் ஒடுக்க முடியவில்லை. குறிப்பாக பெரும்பான்மை ஜாட் வகுப்பினர் பங்கு பெற்றதன் காரணத்தால், ஒடுக்குவது கடினமானது. சீக்கிய விவசாயிகள் உள்ளேயும் ஜாட் விவசாயிகளே பெரும்பான்மை. பஞ்சாப்பில் பார்த்தால், ஏழை விவசாய வர்க்கம் முதல் முதலாளித்துவ விவசாய வர்க்கம் வரை அனைவரும் எதிர்த்தனர். இது போன்ற திடமான ஒற்றுமை இருந்தது. இதனால் ப.ஜ.க, மற்றும் அதன் அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளுக்கு இந்த போராட்டத்தை அடக்கி ஒடுக்க சிரமமாக இருந்தது. இதுவே தலித் வகுப்பினர் போன்ற ஒரேயொரு ஒடுக்கப்பட்ட சமூகம் மட்டும் தனித்து போராடி இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தி போராட்டத்தை ஒடுக்கி இருப்பார்கள். ஆனால் இந்த பெரும்பான்மை ஒற்றுமை இதை சாத்தியமற்றதாக்கிற்று. குறிப்பாக பஞ்சாப்பை பார்த்தால் இது உண்மையான வெகுஜன மக்களின் போராட்டமாக இருந்தது.

இப்போது வர்க்க ஆய்விற்கு வந்தால். பிரதானமாக இருந்தது இந்த பரந்துபட்ட உழவர்களின் ஒற்றுமைக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் இடையேயான முரண்பாடு. இயக்கத்தின் போக்கில் பல முறை, சாதாரண உழவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கூட, இந்த சட்டமானது அம்பானி மற்றும் அதானிகளுக்கான சட்டம் என குறிப்பிட்டு வந்தனர். இவர்கள் விவசாய உற்பத்தி விற்பனை துறையில் விரைவாக உள் நுழைவதை தெளிவாகவே பார்க்க முடிகிறது. இவர்கள் வந்தால் தங்கள் வாழ்வு உருக்குலையும் என்ற பார்வையும் தெளிவாகவே இருந்தது.

இரண்டாவதாக, இதுவரை வரலாறு காணாத தொழிலாளர்-விவசாய ஒற்றுமை. ஆண்டு முழுவதும் SKM தலைவர்கள் தொழிற்சங்க தலைவர்களை அழைத்து விவசாயிகளிடம் உரையாற்ற அழைப்பார்கள். கூட்டு பேரணிகள், போராட்ட தினங்கள் அனுசரிக்கப்பட்டன. பொதுத்துறை தனியார்மயத்திற்கு எதிரான போராட்டத்திற்கு SKM ஆதரவு அளித்தது. இது முக்கிய வளர்ச்சி ஆகும். ஏனெனில், வரும் காலங்களிலும், நவ தாராளமய கொள்கைகளை வலுவாக எதிர்க்க வேண்டுமாயின், இந்த தொழிலாளர்-விவசாய-விவசாய தொழிலாளர் அடிப்படை வர்க்கங்கள் ஒன்றிணைவதே அடிப்படை தேவை ஆகும்.

இந்த ஓராண்டு போராட்டம் அனைத்து விவசாய சங்கங்களுக்கும் கற்பித்தது என்னவென்றால், இப்படிப்பட்ட பரந்துபட்ட வர்க்கங்களிடையேயான ஒற்றுமையை நிலைநாட்டுவது மிக அவசியம் என்பதைத் தான். இந்த போராட்டத்தின் பங்கேற்பு அமைப்புகளை பார்த்தாலே இது புரியும். மேற்கு உ.பி.யில் முன்னாளில் பா.ஜ.க.-விற்கு ஆதரவாக செயல்பட்ட BKU சங்கம், திகாயத் போன்றோர் இந்த இயக்கத்தில் இணைந்தனர். அரியானாவில் மிக பிற்போக்கு சிந்தனையுடன் செயல்படும் “காப் பஞ்சாயத்” அமைப்புகள் தங்கள் மன நிலையை மாற்றி, பெண்களை முன் வந்து போராட ஊக்குவித்தனர். ஆக, இந்த போராட்டத்தின் அனுபவங்கள், அரசு பயங்கரவாதத்தை எதிர்க்கும் அனுபவங்கள், பரந்துபட்ட ஒற்றுமையையும் தோழமையையும் பறைசாற்றும் அனுபவங்கள் அனைத்தும் வரும் காலங்களில் மேலும் பரந்துபட்ட வர்க்க ஒற்றுமையை கட்டி அமைத்து, மோடி அரசின் கொள்கைகளை எதிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

நிறைவாக

அண்மையில் நடைபெற்றா இந்த  விவசாயிகள் போராட்டமே இதுவரை சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான, மிக தொடர்ச்சியான விவசாய போராட்டம். மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறச் செய்தது இதை வரலாற்று சிறப்பு மிக்கதாக்குகிறது. வர்க்க அடிப்படையில் பார்த்தால், ஒன்றுபட்ட விவசாயிகள்  மாபெரும் வெற்றி கண்டுள்ளனர். இந்த கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களை திரும்பப் பெறச் செய்தது நவ தாராளமய கொள்கைகள் மீதான மிகப் பெரும் தாக்குதல். மேலும் இயக்கத்தின் ஒற்றுமையின் மூலம், ஓரளவு பிராந்திய. மதப் பிரிவினைகளை கடந்து வர முடிந்துள்ளது.

போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இந்த போராட்டம், நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் வலிமைப் படுத்தும். இதன் இக்கால உடனடி தாக்கமானது, அரியானா, பஞ்சாப் மற்றும் மேற்கு உ.பி. என்ற மூன்று பகுதிகளில் பா.ஜ.க தனிமைப்படுத்தப்பட்டுள்ளது தான்.

ஆனால், பிரிவினைகள் கடக்கப்பட்டது என்று சொல்லும் பொழுது எச்சரிக்கை அவசியம். இந்த பகுதிகளில், குறிப்பாக மேற்கு உ.பி.யில் ஹிந்துத்துவா சக்திகளின் ஊடுருவல் என்பது “ராம் ஜென்ம பூமி” காலத்தில் இருந்தே மிக தீவிரமாக உள்ளது. ஊரக மக்கள் மத்தியில் இது மிக கூர்மையாக உள்ளது. போராட்டத்தால் பிரிவினைகள் சற்றே நிவர்த்தி ஆனாலும், தொடர்ச்சியான அரசியல் மற்றும் சித்தாந்த போராட்டத்தை நிகழ்த்துவது அவசியமாக உள்ளது. இல்லையேல் நிலைமை மீண்டும் மோசம் அடையும் அபாயம் உள்ளது.

மேலும் இந்த விவசாயிகள் போராட்டத்தில் இடதுசாரி அமைப்புகள், தங்கள் விவசாய-விவசாய தொழிலாளர் சங்கங்கள் மூலம் முக்கிய பங்காற்றி உள்ளனர். இந்த பகுதிகளில் இடதுசாரி அமைப்பு ஒரு வெகுஜன சக்தி இல்லாதபோதும், கிடைத்துள்ள வெற்றி இடதுசாரி சக்திகளின் மதிப்பை கூட்டியுள்ளது. SKM தலைமையிலும், களத்திலும், இடதுசாரி தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து இடைவிடாது பணி புரிவதை போராடும் விவசாயிகள்  பார்த்துள்ளனர். ஆக, இதை பயன்படுத்தி இயக்க முன்னேற்றத்திற்கும், குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மத்தியில் பலத்தை கூட்டவும் உழைக்க வேண்டும்.

இறுதியாக, இந்த போராட்டமானது, “அடிப்படை வர்க்கங்களின்” பரந்துபட்ட வகுப்பினர் இடையேயான ஒற்றுமையை பிணைப்பதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது. இந்த போராட்டத்தின் போக்கில் இதை நாம் கண்டோம். போராட்டத்தின் போக்கில் 3 பந்த் அழைப்புகள் விடுக்கப்பட்ட போது, தொழிலாளர் வர்க்கமும் சேர்ந்து பங்கேற்றது. இதனால் உழவர்கள் தனிமைப்பட்டு நிற்கவில்லை. இது வரும் காலங்களில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக, தனியார்மயத்திற்கெதிரான போராட்டமானது வெறும் தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுடன் நின்று விட்டால் போராட்டம் நிச்சயம் வெல்லாது. இதன் பிரச்சனைகளை விவசாய வர்க்கங்களும் உணர்கின்றன. தனியார்மயத்தால் மின்சார விநியோகம் தனியார் கையில் சென்றால் தங்களுக்கும் ஆபத்து என உணர்கின்றனர். தனியார்மயம் ஏற்பட்டால் இட ஒதுக்கீடு அழிந்து போகும் என ஒடுக்கப்பட்ட வகுப்பினர் உணர்கின்றனர். ஆக, இது போன்ற இணைப்புகளை மேற்கொண்டு, நவ தாராளமய கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை ஒரு வெகுஜன போராட்டமாக மாற்றி அமைப்பது வரும் காலங்களின் அவசிய தேவையாக உள்ளது. இதற்கான பாதையை விவசாயிகள் போராட்டம் காண்பித்துள்ளது.

மேலும் வரும் காலங்களில் வெறும் பொருளாதார போராட்டங்கள் மூலம் ஆளும் சக்திகளை முறியடிக்க முடியாது. தொடர்ச்சியான சித்தாந்த, அரசியல் போராட்டங்களும் அவசியமாக உள்ளது.

இந்த போராட்டம் அளித்துள்ள அநேக படிப்பினைகளை பயன்படுத்தி, வரும் காலங்களில் முன்னேறுவோம் என நம்பிக்கை கொள்வோம்! தமிழில்: அபிநவ் சூர்யா

உடைமை… உரிமை… பறிக்கும் அந்நிய நேரடி முதலீடு…

எஸ். கண்ணன்

இந்தியா போன்ற வளரும் நாட்டில் வேலைவாய்ப்பு, தொழில் நுட்பம், ஆகியவை அதிகரிக்க வேண்டுமெனில் அந்நிய நேரடி முதலீடு அவசியம் என்கின்றனர். வேலைவாய்ப்பும், தொழில் நுட்பமும் வளர்ச்சியின் பிரதான அடையாளம் என சித்தரிப்பதோடு, அதற்கு அந்நிய நேரடி முதலீடு அவசியம் என்ற பிரச்சாரத்தை, தாராளமயம் மற்றும் வலதுசாரி கொள்கையை பின்பற்றும் பாஜக போன்ற அரசுகள் தீவிரமாக மேற்கொள்கின்றன. இந்த பிரச்சாரம் உண்மையென்றால், இந்தியாவில் மட்டுமல்ல; வளர்ந்த நாடுகளிலும் வேலை வாய்ப்பு குறைந்து, வேலையின்மை அதிகரித்துள்ளது ஏன்? என்ற கேள்வி அதிக பிரசங்கித்தனமாகப் பார்க்கப்படுகிறது. 

மாஜிக் நிபுணர் பணம் வர வைப்பார்; ஆனால் அவரால் அதை பயன்டுத்தி பெரும் பணக்காரராக முடிவதில்லை. அடுத்தவருக்கு ஜோதிடம் மற்றும் பரிகாரம் சொல்பவர், தனக்கு அதை செய்து முன்னேற முடிவதில்லை. அதுபோல்தான் முதலாளித்துவம் சமூகத்தின் மீது திணிக்கும் மாஜிக் வித்தைகளும் உள்ளது. வேலைவாய்ப்பும், தொழில் நுட்பமும், வளர்ந்த நாடுகளால், வளரும் நாடுகளில் தங்கள் வணிகத்தை தக்க வைக்கும் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டும் பிழைப்பு நடத்தும் அளவிற்கே, வேலை தேடுவோருக்கு அல்லது தொழிலாளருக்கு பயன்படுகிறது. சில நேரங்களில் நீர்க்குமிழி போல் மறைந்து போவதும் நடக்கிறது. 

மூலதனம் வரும்போது, செழித்து வளரும் பல்வேறு உள்கட்டமைப்புகள், ஏற்கனவே இருந்த ஏரி, குளம், இதர நீர்நிலைகள் மற்றும் வேளாண் நிலங்கள் மீது கட்டமைக்கப் படுகிறது. ஏற்கனவே இருந்த நிலத்தை சார்ந்த வேலைவாய்ப்புகளையும், தொழில்நுட்பத்தையும் ஒழித்து, உற்பத்தி மற்றும் சேவைத்துறை மூலதனத்தை சார்ந்து நிற்கும் வேலை வாய்ப்பை உருவாக்கியது முதலாளித்துவம். அதே முதலாளித்துவம் தாராளமய கொள்கை அமலாக்கத்திற்குப் பின் அந்நிய நேரடி முதலீடுகள் என்ற பெயரில், உள்நாட்டு தொழில், தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை முடக்கி, அந்நிய மூலதனத்தை சார்ந்து நிற்கும் சூழலை உருவாக்குகிறது. தற்போது நமது நாட்டில் நோக்கியா, ஃபாக்ஸ்கான், பி.ஒய்.டி அல்லது அண்மையில் பெங்களூர் அருகில் விஸ்ட்ரான் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் ஆகியவை இதற்கு உதாரணங்களாக உள்ளன. 

அந்நிய நேரடி முதலீடு குறித்த ஆசை வார்த்தைகளில், உலக வர்த்தக மையம் குறிப்பிட்ட வரிகள் முக்கியமானது. அதாவது, உலகத் தரத்தில் வேலைவாய்ப்பு. ஒரு பன்னாட்டு நிறுவனம் அதற்கு உரிய தரத்தில் வேலை வாய்ப்பையும், ஊதியத்தையும் வழங்கும் என்ற பிரச்சாரத்தை, மேற்கொண்டது. அதுவும் மாயாஜால வார்த்தைகள் என்பதை விஸ்ட்ரான் நிரூபணம் செய்துள்ளது. 

அந்நிய மூலதனம் வந்ததும், செய்ததும்:

தாராளமய கொள்கை, தொழிலாளர் சட்டங்களில், நலத்திட்ட அரசு என்ற செயல்பாட்டில் மாற்றங்களை செய்து வருகிறது. அந்நிய மூலதனம் வருவதற்கும், எடுத்துச் செல்வதற்கும் கூட தாராளமய கொள்கை வசதிகளை உருவாக்கித் தருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 500.12 பில்லியன் அமெரிக்க டாலர் (37,00,888 கோடி ரூபாய்) அளவிற்கு, அந்நிய நேரடி முதலீடு இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. பொது முடக்க காலமான 2020 ஏப்ரல் துவங்கி, செப்டம்பர் வரை, 30 பில்லியன் டாலர் (2,22,000 கோடி ரூபாய்) வரவாகியுள்ளது. 

அடுத்ததாக, இந்தியாவில் குஜராத், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, டில்லி, தமிழ்நாடு, தெலுங்கானா என்ற வரிசையில் இந்தியா அந்நிய நேரடி மூலதன ஈர்ப்பை செய்து வருகிறது. மேற்படி மாநிலங்களைக் கடந்து, பிற மாநிலங்களில் ஏன் மூலதனத்தின் கவனம் இல்லை? மேக் இன் இந்தியாவின் ஈர்ப்பு அவ்வளவுதான் என முடிவுக்கு வர முடியாது. பிற மாநிலங்களில் குறைந்த பட்ச கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை ஆக்கிரமிக்கும் வேலையில்தான், அந்நிய நேரடி முதலீடு கவனம் செலுத்துகிறது. 

பாஜக மோடி தலைமையில் ஆட்சியமைத்த பின், 2015 ஏப்ரல் துவங்கி இன்று வரை மேக் இன் இந்தியா மூலம் 48 சதம் அந்நிய நேரடி முதலீடு, கடந்த காலங்களை விட கூடுதலாக வரவாகியுள்ளது. பாதுகாப்பு துறை உள்ளிட்டு முக்கிய துறைகளிலும் 49 சதத்தில் இருந்து 74 சதம் வரை, அந்நிய நேரடி முதலீடுகளின் வருகைக்காக, தாராளமய கொள்கை மற்றும் மேக் இன் இந்தியா, வழிவகுத்துள்ளது. அதாவது, இந்தியாவின் பொதுத்துறை மற்றும் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் அச்சத்தை விளைவிக்கும் அளவிற்கு மத்திய ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக, சலுகைகளை வாரி வழங்கியுள்ளனர். இதன் காரணமாக மூலதனம் மிகப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து கொண்டுள்ளது. 

தமிழகத்தில் முதலீடு செய்த நோக்கியா நிறுவனம், 600 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்து, இரண்டே ஆண்டுகளில் அதை, மதிப்பு கூட்டு வரி (VAT) மூலம் கிடைத்த சலுகை மூலம் மட்டும் திரும்ப எடுத்துச் செல்ல முடிந்தது. இவை அல்லாமல், இதர வரி சலுகை பெரும் உதவியாக இருந்தது, மேலும் சாஃப்ட்வேர் இறக்குமதி அரசுக்கு தெரியாமலேயே செய்து, சுமார் 21,000 கோடி ரூபாய் அரசுக்கு வரிபாக்கி வைத்தது. மேற்படி தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும் என நெருக்குதல் தரும் வேளையில், ஆலையை மூடிவிட்டுப் பறந்து விட்டது. கிடைத்து வந்த வேலை வாய்ப்பு அழிந்து போனது. இதுபோல் பல உதாரணங்கள் பல மாநிலங்களில் காண முடியும். 

Trading Economics என்ற இணைய இதழ், சீனா குறித்து பதிவிட்டுள்ள விவரங்களையும், நாம் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்து வருவதாக கூறுகிறது. அமெரிக்கா உள்ளிட்டு உலகின் பல நாடுகள் சீனா மீது கோவிட் 19 காரணமாக, முதலீடுகளை திரும்ப பெறுவதாக கூறப்பட்ட 2020 இல் மட்டுமே, 144.37 பில்லியன் டாலர் (10,90,538 கோடி ரூபாய்), முதலீடுகளை ஈர்த்துள்ளது. அதாவது இந்தியாவை போல் ஐந்து மடங்கு. காரணம் சீனாவின் உள்நாட்டு சந்தை மிக அதிக அளவில் விரிவடைந்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறிய, நல்ல விகிதாச்சாரத்தில், ஊதிய உயர்வு அளித்த நாடாக, சீனா இருப்பதும், தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட்டதும் ஆகும்.

 புதிய தொழில் நுட்பம் நமக்கு கிடைத்ததா?:

ஏங்கெல்ஸ் கம்யூனிச கோட்பாடுகளில் குறிப்பிடுவது போல், பெருவீத தொழில்களின் வளர்ச்சி, சிறு, குறு தொழில்களையும், கைவினைஞர்களையும் படிப்படியாக அழிக்கும் என்ற நிலை இப்போது இந்தியாவில் அரங்கேறி வருகிறது. அந்நிய நேரடி முதலீடு இதற்கு வழிவகுக்கிறது. பெரும் கார் தொழில் நிறுவனங்களான மாருதி, ஃபோர்டு, ஹூண்டாய் ஆகியவை இந்தியாவிற்கு வரும் போது, இங்கிருந்த அம்பாசிடர் அல்லது ஸ்டாண்டர்ட் மோட்டார் ஆகிய நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தின. புதிய ஆலைகளின் வருகையால், உதிரிபாக உற்பத்தியாளர்களான சிறு குறு தொழில் உற்பத்தியாளர்களும் பாதிப்படைவர் என்ற மார்க்சிஸ்ட் கட்சி போன்ற சக்திகளால் முன்வைக்கப்பட்ட எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது. அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய உதிரிபாக உற்பத்தியாளர்களை உருவாக்குவர் என்ற வாதம் ஏற்கப்படவில்லை. 

ஆனால் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் மேலே குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய உதிரிபாக உற்பத்தியாளர்களையும் இறக்குமதி செய்து கொண்டனர். உள்நாட்டு உதிரிபாக உற்பத்தியாளார்கள் மூடுவிழாவை நோக்கி செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு தொழில் நுட்ப உதவி என்ற தனது பொறுப்பை, பன்னாட்டு நிறுவனங்கள் நிறைவேற்றாதது காரணம் ஆகும். முதலில் இருந்த முழுபொருள் உற்பத்தி முறை மறைந்து, ஆங்காங்கு உற்பத்தி செய்து அசெம்பிள் செய்து கொள்ளும் முறை வளர்வதும், அதற்கான நிபுணத்துவம் உயர்வதும் மூலதன வளர்ச்சிக்கு பங்காற்றும் செயல் ஆகும். இது தொழில் நுட்ப பகிர்வுக்கு எந்த வகையிலும் உதவி செய்யாது. 

இந்தியாவில் கணிணி சார்ந்த சேவைத் தொழில் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் கூட இந்தியாவிற்கு அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் கணிணி சார்ந்து, 2.25 பில்லியன் டாலர் (16,650 கோடி ரூபாய்) வரவாகியுள்ளது. ஏப்ரல் 2000 முதல் ஜூன் 2019 வரை 39.47 பில்லியன் டாலர் (2, 92,078 கோடி ரூபாய்) அந்நிய நேரடி முதலீடு, கணிணி சார்ந்து வரவானதாக, தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாடுக்கான துறை சொல்கிறது. ஐ.டி நிர்வாக தொழில் முறையின், (IT Business Process Management) சந்தை 2019 இல் 177 பில்லியன் டாலராக (13,09,800 கோடி ரூபாய் )உயர்ந்தது, என்றும் மேற்படி அலுவலகம் கூறுகிறது. 2025 ல் இது 350  பில்லியன் டாலராக (25,90,000 கோடி ரூபாய்), அதாவது இரு மடங்காக, உயரும் என்றும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது தற்போது உள்ள 7.7 சதத்தில் இருந்து, 10 சதமாக உயரும் என்றும் தெரிவிக்கிறது.

இந்த விவரங்கள், மற்றொரு இடத்தில் முரண்படும் உண்மையையும் காணமுடியும். அதாவது 2015 நிதியாண்டில், 10 சதமாக இருந்த சேவைத்துறை வளர்ச்சி விகிதம் 2019 ல் 6.9 சதமாக குறைந்துள்ளது. உற்பத்தி துறையில் இதன் தாக்கம் இருக்கிறதா? என்ற கேள்விக்கான விளக்கம் பதிவு செய்யப்படவில்லை. அதாவது கணினி உற்பத்தி சார்ந்த தொழில் நுட்பம் இந்தியாவிற்கு கிடைத்ததா? போன்ற கேள்விகளை நமது அரசுகள் புறக்கணித்தே வருகின்றன. இந்தியாவில் உற்பத்தி நடந்தாலும், அதன் தொழில்நுட்பங்கள் நமக்கு பகிரப்படுவதில்லை. நமது இந்தியர்கள் கல்வி மற்றும் திறன் காரணமாக, தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்திருப்பதை, நாட்டின் பயனாக கருத முடியாது.

அடுத்து, அந்நிய நேரடி முதலீடு, நமது பொதுத்துறைகளை குறி வைத்து வரவேற்கும் பணியை ஆட்சியாளர்கள் செய்கின்றனர். மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரிகள், முன்மாதிரி வேலை வழங்கும் நிறுவனங்களாக உள்ள பொதுத்துறை நிறுவனங்களை அரசு அந்நியருக்கு தாரை வார்க்கும் செயலை துரிதப்படுத்த, தொழில் நுட்பம் போன்ற வார்த்தைகளைப் பயன் படுத்துகிறது. உண்மையில் தொழில்நுட்பம் நமக்கு வழங்கப்படுவதை விட, நமது பொதுச் சொத்துக்களை அபகரிப்பதே அதிகம் நடக்கும் என விமர்சித்தனர். இப்போது, வங்கி, காப்பீடு, எண்ணெய் போன்ற பல்வேறு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த அணுசக்தி, விண்வெளி போன்றவற்றிலும், தனியார் ஈடுபடுத்தப்படுவது, மேற்படி துறைகளில் இந்தியா சாதித்த தொழில்நுட்பம் சார்ந்த தன்நிறைவு முயற்சிகளையும், அரசின் இறையாண்மை கொள்கையையும் அழிக்கும் செயல் ஆகும். 

வேலைவாய்ப்பிலும் ஏமாற்றமே:

அண்மையில் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலுரைத்த தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத், 2014-15இல் 18,900 கோடி ரூபாய்க்கான செல்போன் உற்பத்தி, 2018-19இல் 1,70,000 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்ததாக கூறியுள்ளார். ஆனால் இதே காலத்தில் தமிழகத்தில் நோக்கியா, ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட ஆலைகள் மூடப்பட்டு சுமார் 26 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். உற்பத்தியும், விற்பனையும் உயர்ந்தாலும் கூட வேலைவாய்ப்பு உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது, உற்பத்தியில் ஆட்டோமேஷன் அதிகரிப்பை வெளிப்படுத்துகிறது. அதாவது தொழில் நுட்பம் அதிகரிப்பு ஒருபக்கம் வேலை வாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதேநேரம் குறிப்பிட்ட தொழில்நுட்பம் கருவிகள் உற்பத்தியை தங்கள் நாடுகளிலேயே தக்கவைத்துக் கொள்வதையும் காணமுடிகிறது. இதன் காரணமாக நியாயமாக உயர வேண்டிய வேலை வாய்ப்பை, அந்நிய நேரடி முதலீடு செய்த நாடுகளே தக்க வைத்துக் கொள்கின்றன. 

ஒவ்வொரு ஆண்டும், அந்நிய நேரடி முதலீட்டில் உயர்வு இருந்தாலும், வேலைவாய்ப்பு உருவாக்குவதில் இது பெரிய பிரதிபலிப்பை ஏற்படுத்தவில்லை. 2000ஆம் ஆண்டில், 5.66 சதமாக இருந்த வேலையின்மை, 2020இல் 5.4 ஆக உள்ளது, எந்தவகையிலும் மூலதன குவிப்பின் காரணமாக வேலையின்மை குறையவில்லை. வழங்கிய வேலைவாய்ப்பிலும் முழுப்பாதுகாப்புடன் வழங்கிய வேலை வாய்ப்பு குறைவாகவும், ஒப்பந்த வேலைவாய்ப்புகளை அதிகமாகவும் உருவாக்கியுள்ளது. பெருவீத தொழில்களின் வளர்ச்சியும், தொழில்நுட்ப வளர்ச்சியும், உழைப்பு சக்திக்கான விலை அல்லது கூலி மிகக்குறைந்ததாக, குறைந்த பட்ச பராமரிப்புக்கு    தேவையான கூலியை அளிக்கும், என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. பிக்ஸட் டெர்ம் எம்ப்ளாய்மெண்ட் போன்ற அரசு நடவடிக்கைகளும் இதற்கு உதவுகிறது. 

கர்நாடகா மாநிலம் விஸ்ட்ரான் நிறுவனம் மேற்குறிப்பிட்ட வகையில்தான், மிகக் குறைந்த ஊதியத்திற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. நிறுவனம் அளித்த வாக்குறுதியைக் காக்க கூடியதாகவும் இல்லை. உண்மையில், விஸ்ட்ரான் நிறுவனம் கோவிட் 19, பொது முடக்க காலத்தில் 4 மாதங்களாக குறைவாக தீர்மானித்த ஊதியத்தையும் வழங்கவில்லை.  அதேபோல் உயர்த்தி வழங்க தீர்மானித்த தொகையையும் வழங்கவில்லை. இந்த பின்னணியில் நியாயம் கேட்ட தொழிலாளர்கள் தாக்கப்படுவதும், திருப்பித் தாக்குவதும் நடைபெற்றது. எனவே வேலைவாய்ப்பு உயரவில்லை என்பது மட்டுமல்ல. கண்ணியமான வேலை மற்றும் ஊதியம், அணுகுமுறை பன்னாட்டு நிறுவனங்களால் பின்பற்றப்படவில்லை என்பதும் அப்பட்டமான உண்மையாக வெளிப்பட்டுள்ளது. 

விஸ்ட்ரான் நிறுவனத்தின் நடவடிக்கையை, அதன் வாடிக்கையாளர் என்ற பெயரில், காண்ட்ராக்ட் அளிக்கும் நிறுவனமான, ஆப்பிள் (I Phone) கண்டித்துள்ளது. சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் மரியாதை குறையும், கண்ணியமற்ற வேலை வாங்கும் முறை  என பல காரணங்கள் இருக்கலாம். இது பெயரளவிலான கண்டிப்பு அவ்வளவே. ஏனென்றால், பல்வேறு நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் கைபேசிகள் குறிப்பிட்ட நிறுவனங்களின் இலச்சினைகளுடன் (லேபிள்) சந்தைக்கு வருகிறது. ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா ஆலைமூடல் காரணமாக, ஃபாக்ஸ்கான் உற்பத்தியை நிறுத்தி வேலைவாய்ப்புகளை பறித்தது. விஸ்ட்ரான் என்பதும், ஃபாக்ஸ்கான் போன்ற ஒரு நிறுவனமே. இது பல கைபேசிகளை உற்பத்தி செய்யும் பெரிய நிறுவனங்கள் தங்களின் லேபிளை கொண்டு விற்பனை செய்வர். ஃபாக்ஸ்கான் போல விஸ்ட்ரான் எப்போது வேண்டுமானாலும் பறக்கும். இதன் மூலம் வேலைவாய்ப்பு நிரந்தரமற்றதாக இருப்பதுடன், வேலைவாய்ப்பு சந்தையில் வேலை அனுபவம் கொண்டவரும் போட்டியிடும் நிலை அதிகரிக்கும்.

உலக வர்த்தக மையத்தின் வார்த்தைகள் எங்கே?

இந்தியாவை நிர்ப்பந்திக்க கிழக்கு ஆசிய புலிகள் என சொல்லப்பட்டு, இந்தோனேசியா, தென்கொரியா போன்ற நாடுகள் சுட்டிக் காட்டப்பட்டன. இந்தியா போன்ற வளரும் நாடுகளை உறுப்பினராக்க, உலக வர்த்தக நிறுவனம் குறிப்பிட்டவை அனைத்தும், ஏற்கும்படியானதல்ல என்று, மார்க்சிஸ்ட் கட்சி, 1986-94 கட்டங்களில் நடந்த உருகுவே, சியாட்டில் மாநாடுகளின் தீர்மானங்களின் மீது விமர்சனங்களை முன்வைத்தது. குறிப்பாக உலக வர்த்தக மையம், வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு உதவ வேண்டும். தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு இவை குறித்து உலக வர்த்தக மையம் குறிப்பிட்ட எதுவும் இன்று வரை அமலாகவில்லை என்பதைப் பார்க்க முடியும். இந்தியாவிற்கு இத்தகைய உலகாளாவிய ஒப்பந்தங்கள் பலனளிக்காது என மார்க்சிஸ்ட் கட்சி கூறியது உண்மை என்பதே நிருபணம் ஆகியுள்ளது.

தென்கொரியாவின் வேலையின்மை 2001ஆம் ஆன்டில் இருந்து 4 சதம் என்பதாக இருந்தது. தற்போது 4.6 சதமாக 2020 டிசம்பரில் கணக்கிடப்பட்டு உள்ளது. இந்தோனேசியாவில், 2000இல் 6.08 சதமாக இருந்த வேலையின்மை விகிதாச்சாரம், 2020இல் 4.84 சதமாக உள்ளது. அதாவது உலக வர்த்தக மையம் சுட்டிக்காட்டிய கிழக்கு ஆசிய புலிகளின் நிலை, வேலை வாய்ப்பை பொருத்த அளவில், முன்னேற்றம் இல்லாத ஒன்றாக உள்ளது.

எனவே இந்தியாவிலும், உலகின் பிற வளரும் நாடுகளிலும் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் வேலைவாய்ப்பு அல்லது தொழில் நுட்பம் வளரவில்லை. முதலாளித்துவம் வேலையின்மையைத் தக்கவைக்கவே செய்யும் என்பது நிரூபணமாகியுள்ளது. அதேபோல் தொழில் நுட்பம் என்பதும் வளரும் நாடுகளுக்கு கிடைப்பதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி மூலதன குவிப்பிற்கான ஒரு கருவி என்று அரசியல் பொருளாதாரம் கூறுகிறது. மூலதனம் மேலும் மேலும் தன்னை விரிவாக்கிக் கொள்ள, மூலதன உடைமையாளர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்குகின்றனர். அத்தகைய உடைமையாளர்கள், வளரும் நாடுகளுக்கு அதை பகிர்ந்து கொள்ள ஒரு போதும் விரும்புவதில்லை என்பதையும் காணமுடிகிறது.

பெருநிறுவன-நிதி மூலதன கூட்டாளிகளும் அதற்குள் அமைந்த அடுக்குகளும்

பேராசிரியர் பிரபாத் பட்நாயக்

தமிழில்: வயலட்

நாம் முழுமையான ஒன்றாக காண்கிற அனைத்துமே வேறுபாடுகள் கொண்ட பல்வேறு கூறுகளால் ஆனது என்பதையும், அவைகளுக்குள்ளாக முரண்பாடுகள் உள்ளன என்பதையும் மார்க்சியப் பார்வை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. அவ்வாறு நாம் முழுமையாக பார்க்கிற ஒன்றை கருத்தாக்க அளவில் முழுமையாகவே குறிப்பிடுகிற போதும், அதன் உள்ளார்ந்த பகுதியாக அமைந்திருக்கும் இந்த முரண்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருக்க வேண்டும். எதேச்சதிகார, ஃபாசிசத்தனமான அரசுகளின் அரசியல் பொருளாதாரத்தைப் படிக்கும்போது இந்த கட்டளையை மறந்துவிடக் கூடாது.

ஏகபோக மூலதனத்தின் உறுதியான ஆதரவுடன் தான் எதேச்சதிகார, ஃபாசிச தன்மை கொண்ட அரசுகள்  என்பதை மார்க்சியர்கள் பல காலமாக பார்த்து வந்திருக்கிறோம்; அத்தகைய அரசுகள் அமைவதில் ஏகபோக மூலதனமே முக்கியப் பங்காற்றியிருக்கிறது. உதாரணத்திற்கு புகழ்பெற்ற மார்க்சிய பொருளாதார அறிஞர் மிகெல் கலெக்கி, “பெரும் தொழில்களும், வளரும் ஃபாசிச சக்திகளும்அமைத்துக்கொண்ட” கூட்டணியின்மீதுதான் 1930களில் ஐரோப்பாவில் ஃபாசிச அரசாங்கங்கள் அமையப்பெற்றன என்கிறார். அப்படிப்பட்ட அரசாங்கங்களுக்குத் தரும் ஆதரவுக்கு பதிலாக, அதனிடமிருந்து பெரிய ஒப்பந்தங்களையும் சலுகைகளையும், அவற்றின் வழியாக இலாபத்தையும், ஏகபோக மூலதனம் தன் பங்காக பிய்த்துத் தின்கிறது.. ஏகபோக மூலதனத்தின் எல்லா பிரிவுகளுமே இத்தகைய ஃபாசிச, அரை-ஃபாசிச, எதேச்சதிகார அரசாங்கங்களால் பலமாக இலாபமடைகின்றன என்றாலும் கூட, அந்த இலாபம் எல்லா பிரிவுகளுக்கும் சமமாகக் கிடைப்பதில்லை. பெரும் தொழில்களுக்குள்ளேயே ஒரு சில குழுக்கள் மட்டும் சலுகையோடு நடத்தப்படுகின்ற, அவை வழமையாக புதிய ஏகபோகக் குழுக்களாக இருக்கும். இந்த நடைமுறை குறித்து மார்க்சிய ஆராய்ச்சிகளில் நிறைய கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.

ஃபிரெஞ்சு இடதுசாரியான டேனியல் குயரின் தனது ஃபாசிசமும் பெருவணிகமும்(1936) என்ற நூலில், துணி உற்பத்தி போன்ற பாரம்பரிய தொழில்துறைகளில் இயங்கும் பழைய ஏகபோகக் குழுக்களுக்கும், ஆயுதங்கள் போன்ற கடுமையான தொழில்துறைகளில் இயங்கும் புதிய ஏகபோக குழுக்களுக்குமான வேறுபாட்டை பேசுகிறார். இந்த புதிய குழுக்கள் ஐரோப்பாவின் ஃபாசிச அரசாங்கங்களுடன் நெருக்கமான கூட்டு கொண்டிருந்திருக்கின்றன. இதேபோல ஜப்பானில் பழைய சைபாட்சுவுக்கும், (ஷின்கோ சைபாட்சு என்றழைக்கப்படும்) புதிய சைபாட்சுவுக்குமான வித்தியாசங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. (சைபாட்சு என்றால் ஏகபோக குடும்பங்களை குறிக்கும் சொல் ஆகும்)

மிட்சுய், மிட்சுபிஷி, சுமிடோமோ மற்றும் யசுடா போன்ற பழைய சைபாட்சு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும், பெரும்பாலும் பாரம்பரியமான துறைகளுக்குள்ளேயே இயங்கின. ஷின்கோ சைபாட்சுகள்,முதன்மையாக நிசான் உள்ளிட்டவை, மேற்சொன்னவர்களுக்கு நேர்மாறாக ஆயுத வியாபாரம், வெளிநாட்டில் கனிம சேகரிப்பு உள்ளிட்ட கடினமான தொழில்துறைகள் போன்ற புதிய தொழில்களில் ஈடுபட்டன. நிசான் கொரியாவில் பெருமளவு கனிமச் சுரங்கங்களை அமைத்திருந்தது. கொரியாவின் உள்ளூர் தொழிலாளர்களைப் படுமோசமான சூழல்களில் வேலை வாங்கி, கனிம வளம் குறைவாக இருந்த ஜப்பானின் போர் இயந்திர தயாரிப்புக்காக பயன்படுத்திக்கொண்டது.  இந்த ஷின்கோ சைபாட்சுகள், 1930களில் ஜப்பானின் இராணுவ அரசுக்கு மிக நெருக்கமாக இருந்தன என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்தியாவிலும் மேற்சொன்ன கருதுகோளானது எதேச்சாதிகாரத்தை நோக்கிய மாற்றப்போக்குகளில் வெளிப்பட்டது. பாரம்பரியமான ஏகபோகத்தை விடவும் ஒப்பீட்டளவில் முரட்டுத்தனமான புதிய ஏகபோகபகுதிகள் உருவானதோடு, இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்தில் வெளிப்பட்ட விஷயங்களை நாம் இவ்வாறு தொடர்புபடுத்த முடியும்.

இந்தியாவில் இப்போது நிலவுகிற சூழலை ஆராயும் போது மேற்சொன்ன புரிதல்களை மனதில் கொள்ள வேண்டும். பெருநிறுவன ஆதரவு இல்லாமல் 2014, 2019 இருமுறையும் மோடி அரசு ஆட்சியைப் பிடிப்பது சாத்தியமாகியிருக்காது என்பது வெளிப்படை. மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தில், 2014க்கு சிலகாலம் முன்பு பல பெரும் பெருநிறுவனத் தலைகள் பங்கேற்புடன் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றில்தான் மோடியை எதிர்கால பிரதமராக முன்னிறுத்தும் யோசனை வெளிப்படுத்தப்பட்டது. ஒரு எளிய விசயத்திலிருந்தே மோடியின் வளர்ச்சியில் பெருநிறுவன ஆதரவின் பங்கைப் புரிந்துகொள்ளலாம்: டெல்லியைச் சேர்ந்த ஒரு அரசுசாரா நிறுவனம் தரும் விபரங்களின்படிபடி, 2019 பாராளுமன்ற தேர்ந்தலில் பாஜகரூ. 27,000 கோடி செலவிட்டிருக்கிறது. இடதுசாரிகளை விட்டுவிடுவோம், இந்தத் தொகை வேறெந்த முதலாளித்துவ கட்சி செலவு செய்ததை விடவும் மிக அதிகம். ஏறக்குறைய ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிக்கும் ரூ.50 கோடி செலவு செய்துள்ளனர். மிக தாராளமான பெருநிறுவன நிதி உதவி இல்லாமல் இந்த அளவு செலவுகள் செய்ய வாய்ப்பேயில்லை.

தற்போதைய அரசாங்கத்தை பெருநிறுவன-வகுப்புவாத கூட்டணியில் அமைந்தது என்று அழைப்பது மிகப் பொருத்தமாகவே இருக்கும்; பெருநிறுவனங்கள் இந்தக் கூட்டணியில் நன்றாகவே இலாபம் பெற்றிருக்கின்றன. நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதற்கு மோடி அரசு ஆட்சியில் இருக்கும்வரை எந்தத் தீர்வும் தென்படவில்லை என்பதெல்லாம் உண்மைதான்; ஆனால் இந்தப் நெருக்கடி அமைப்புரீதியானது (Structural) என்பதையும் மறந்துவிடவேண்டாம். நவதாராளவாதம் முன்னோக்கிச் செல்ல வழியின்றி முட்டி நிற்பதால் ஏற்படுவது. இப்படிப்பட்ட நெருக்கடிச் சூழலிலும் மோடி அரசாங்கம், ஏகபோக முதலாளிகளின் இலாபத்திற்கு அணைபோடுவதில்லை. பொதுத்துறை நிறுவனங்களையும் சல்லிசான விலையில் அவர்களுக்கு வசமாக்குகிறது. சொல்லப்போனால் தனது நட்புக்குரிய பெருநிறுவனங்களுக்கு எப்படி உதவுவது என்பதுதான் இந்தப் நெருக்கடியைக் குறித்து இந்த அரசின் ஒரே கவலையாகும். அவற்றின் “ஜீவஆற்றலை” ஊக்குவிப்பதாகச் சொல்லி, மாபெரும் வரிக்குறைப்பினை (ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு) மோடி அரசாங்கம் அந்த பெருநிறுவனங்களுக்கு வாரி வழங்கியிருக்கிறது.

(ஜீவ ஆற்றல் எனும் சொல் முதலாளித்துவ பொருளாதார அறிஞர் கெய்ன்ஸ், நுகர்வை ஊக்கப்படுத்தும் பொருட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை குறிப்பிட பயன்படுத்திய சொல் ஆகும்)

இத்தகைய தாராள நடவடிக்கையின் பின்விளைவுகள், நிச்சயமாக, தீர்க்கவே முடியாத நெருக்கடிச் சூழலுக்கு வழிவகுப்பதாகவே அமைந்திடும்; விலக்களிக்கப்பட்ட இந்த வருமானத்தினால் பொதுச் செலவில் துண்டு விழுந்தாலோ, பொதுச் செலவை சரிகட்டுவதற்காக உழைக்கும் மக்களின் மேல் மேலும் கூடுதலான வரிகள் சுமத்தப்பட்டாலோ, இந்த நெருக்கடி இன்னும் தீவிரமே அடையும். நெருக்கடி தீவிரமடையும் பட்சத்தில்கூட, இந்த தாராளத்தின் காரணமாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிகர இலாபம் கிடைத்திருக்கும்.

அரசாங்கத்தின் உண்மை நோக்கத்தை விளக்கும் வகையில் எண்களைக் கொண்டு இந்த விளக்கத்தை தெளிவாக்கலாம். பெருநிறுவனங்களுக்குரூ. 1.5 லட்சம் கோடி ரூபாய்கள் வரிவிலக்கு கொடுத்துவிட்டு, அதே அளவு, அதாவது 1.5 லட்சம் கோடி ரூபாயை, இந்த அரசு தன்னுடைய செலவுகளில் குறைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வெளிநாட்டு வணிகத்தையும் சேர்த்தால் வரும் குழப்பத்தைத் தவிர்க்க, நம்முடையது ஒரு வெளித்தொடர்பற்ற பொருளாதாரம் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் பெருநிறுவனங்களுடைய வருமானம் கால் பங்கு என்று வைத்துக்கொண்டால், அதில் அவர்கள் மூன்றில் ஒரு பங்கை சேமிக்கிறார்கள். மீதமிருக்கும் முக்கால் பங்கு ஜி.டி.பிதொகையில் 1/3 பாகம் சேமிப்பாகிறது. ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் சேமிப்புக்கும்-ஜிடி.பிக்கும்இடையிலான விகிதம் மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது. (பொருளாதார கணக்கீடுகளின்படி ‘பெருக்க விளைவின் விகிதம்’ [value of the multiplier] என்பது சேமிப்பு விகிதத்திற்கு தலைகீழாக அமையும். மேற்சொன்ன கணக்கின்படி அது 3 ஆகும்) எனவே அரசாங்கம் தன்னுடைய செலவினைரூ. 1.5 லட்சம் கோடி குறைப்பதன் காரணமாக,ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ.4.5 லட்சம் கோடிகள் அளவுக்கு வீழ்ச்சி ஏற்படும். இதன் காரணமாக பெருநிறுவனங்களுடைய வருமானம், வரிக்கு முன் கணக்கிடும்போது, ரூ.1.1 லட்சம் கோடியாக வீழ்ச்சியடையும் (மேற்சொன்ன 4.5 லட்சம் கோடியில் கால்பங்கு). ஆனால்,வரிக்கு பிறகான கணக்கீட்டில் பெரு நிறுவனங்கள் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு லாபம் பெற்றிருப்பார்கள். பெருநிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட வரிச்சலுகையானது, அதன் செலவினங்களை அதே அளவுக்கு குறைக்கின்றது; வரிவிலக்கின் காரணமாக, பொருளாதார நெருக்கடி தீவிரமாகிறது; வேலையின்மை அதிகரிக்கிறது. ஆனாலும் வரிக்குப் பிறகான கணக்கீட்டில் பெருநிறுவன வருமானம் அதிகரிக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், அரசின் நடவடிக்கைகள் பொருளாதார நெருக்கடியைதீர்க்க அல்ல; இந்தப் நெருக்கடியின் போதும் பெருநிறுவனங்களின் இலாபம் அதிகரிப்பதை உறுதிசெய்யவே. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பெருநிறுவனங்களை மொத்தமாக இலாபமடையச் செய்தாலும், அவர்களுக்குள்ளேயே சில பெருநிறுவனங்கள் மீது சிறப்பு அக்கறை காட்டுகிறது. இவர்களை நம் நாட்டின் ஷின்கோ சைபாட்சு எனலாம், புதிய, தீவிர வணிக நிறுவனங்களான இவர்கள் இந்த அரசை ஆதரிப்பவர்கள்.

பெருநிறுவனங்களுக்கு இடையிலேயே நம்மால் ஒரு வேறுபாட்டைப் பார்க்க முடிகிறது, குறிப்பாக அம்பானி, அதானி குடும்பத்தார் முதன்மையாக இருக்கும் புதிய நிறுவனங்கள் ஒருபுறம். மோடி அரசின் சலுகைகளில் சிறப்பாக விருப்பத்துக்கு உரியவர்களாக விளங்கும் இவர்கள், இந்த கூட்டுச் சலுகையின் இலாபங்களில் பெரும் பங்குகளைப் பெறுகிறார்கள். மற்றவர்களும் மோடி அரசால் பலன் பெறுபவர்கள்தான். ஆனால் இந்த முதல் குழுவினர் அளவுக்கு அல்ல. பெருநிறுவன முதலாளிகளுக்கு இடையே இரண்டு குழுக்கள். பாரம்பரியமானவர்கள் மற்றும் தீவிரமான புதியவர்கள். இதில் இரண்டாம் குழுவினர் எதேச்சதிகார அரசோடு நெருக்கமாக இணைந்திருப்பவர்கள் என்ற இந்த கருத்தாக்கத்துக்கு சமகால இந்தியச் சூழலில் குறிப்பிட்ட அளவு மதிப்பிருக்கிறது.

அதானிக்கள் குஜராத்தில் வளர்ச்சி அடைந்ததற்கும் நரேந்திர மோடி அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்ததற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது, மோடி தேசிய அளவில் ஊடக வெளிச்சம் பெற்றபோது அதானிகளும் மத்திய அளவில் நகர்ந்தனர். மோடி 2014இல் பிரதமராக பதவியேற்க அதானியின் விமானத்தில்தான் வந்தார் என்பதே அவர்கள் இருவருக்கும் இடையிலான நெருக்கத்தைக் காட்டும். அதேபோல அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு எந்த அனுபவமும் இல்லாத பட்சத்திலும், பொதுத்துறை நிறுவனங்களைத் தாண்டி ரஃபேல் ஒப்பந்தத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டது. கள்ளக் கூட்டு  பாரபட்சத்துக்கு (க்ரோனியிசம்) இதுவே ஆகச்சிறந்த உதாரணம். அதேபோல பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் மிக மோசமாக நடத்தப்படுகிறது. அதுவும் எல்லா வழிகளிலும் முகேஷ் அம்பானியின் ஜியோவுக்கு ஏகபோக சந்தையை அமைத்துத்தர வேண்டியே. இந்த நிறுவனங்களே சிறப்பாக அரசின் விருப்பத்துக்குரியவை.

பெருநிறுவன-நிதி தன்னலக்குழுக்களை ஒரு முழுமையாகப் பார்ப்பது, அதனிடையே இருக்கும் வித்தியாசங்களையும் முரண்பாடுகளையும் புரிந்து கொள்வதற்கு தடையாக வரக்கூடாது. அமித்ஷா பங்கேற்ற ஒரு வணிக நிகழ்வில் ராகுல் பஜாஜ் வெளிப்படையாக அரசை விமர்சித்து, பல பாஜக ட்ரால்களின் (சமூக ஊடகங்கள் மூலமாக தாக்குதலில் ஈடுபடும் குழுக்கள்) வெறுப்புக்கு ஆளானதையும் இந்த அடிப்படையிலேயே புரிந்து கொள்ள வேண்டும். இந்திய ஃபாசிச வகையிலான அரசாட்சியானது, வரலாற்றில் அதையொத்த அரசாட்சிகள் வெளிப்படுத்திய அதே பண்புகளையே தானும் கொண்டிருக்கிறது.

மநுவாத பொருளாதாரமும், இந்து வலதுசாரிகளும்

அர்ச்சனா பிரசாத்

தமிழில்: சிபி நந்தன்

தில்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திலும் ஷாஹீன் பாக்கிலும் நடந்துகொண்டிருக்கும் அமைதிப் போராட்டங்கள் மீது இந்துத்துவ அமைப்புகள் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன. இந்தச் சூழலில் நாட்டின் நிதியறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரு நிகழ்வுகளையும் சமீபத்தில் நடந்து முடிந்த தில்லி மாநிலத் தேர்தலோடு இணைத்துப் பார்க்க வேண்டும். பாஜகவும் அதன் இதர அமைப்புக்களும் தேர்தலில் வென்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடந்த ஆறு ஆண்டுகளில் தாங்கள் ஏற்படுத்திய பொருளாதாரச் சீர்குலைவுகளை மறைத்து மக்களிடையே பிரிவினையைத் தூண்ட முட்டி மோதிப்பார்த்தனர். அதே சமயம் இந்த நிதியறிக்கையை உற்று நோக்கும்பொழுது, இந்த அரசின் பொருளாதாரப் பார்வை கார்ப்பரேட் மூலதனத்தின் நலன்களை முன்னிறுத்துவது தெரிகிறது. மேலும், இந்த அரசின் கொள்கைகளை பார்ப்பனீயம் வழிநடத்துவதும் புலப்படுகிறது.

அரசை கண்ணுக்குத் தெரியாத சந்தையின் கையும், ”நம்பிக்கையின் கையும்” தொடர்ந்து வழிநடத்தும் என 2019-20க்கான பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey 2019-2020) தெரிவிக்கிறது. இருப்பினும், இந்த நிதியறிக்கை(பட்ஜெட்) எல்லோருக்குமான வளர்ச்சியை (சப்கா விகாஸ்), எல்லோரோடும் சேர்ந்து அடைந்து (சப்கா சாத்) எல்லோருடைய நம்பிக்கையையும் பெருவது (சப்கா விஷ்வாஸ்) என்று குறிப்பிட்டது. அத்தோடு, பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றமும் “நாட்டின் வளத்தைப் பெருக்குபவர்களை மனதில் கொண்டு”  இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் நமது நிதியமைச்சர். இந்த அனைத்திலும் நிதியறிக்கை தோல்வி அடைந்துள்ளது என்பதே உண்மை.

இந்த நிதியறிக்கையைப் பொறுத்தவரை, நாட்டின் கட்டுமானங்களிலும் பிற துறைகளிலும் பணத்தைக் கொட்டும் கார்ப்பரேட்டுகளே நாட்டின் ‘வளத்தைப் பெருக்குபவர்கள்’. இவர்களுக்கு பெருமளவில் வரிவிலக்கு அளிப்பதிலேயே இந்த நிதியறிக்கை முழு கவனத்தையும் செலுத்துகிறது. நாட்டின் வளத்தை உண்மையாகவே பெருக்கித் தருவோரான தொழிலாளர்களைப் பற்றி இந்த நிதியறிக்கைக்கு எந்தக் கவலையும் இல்லை. இந்த உழைக்கும் வர்க்கத்தின் பெரும் பகுதியினரான பெண்கள், ஆதிவாசிகள், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோர் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ஒடுக்குமுறையைச் சந்திக்கின்றனர். இந்த நிலையே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஒவ்வொரு நிதியறிக்கையிலும் தொடர்ந்து வெளிப்படுகிறது. தொடர் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை சந்திப்பது, சமூகத்தின் ஒடுக்கப்பட்ட வகுப்புகளே என்பதால், இந்த வகுப்புகளுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது. அதாவது, நாட்டின் மொத்த உழைக்கும் வர்க்கத்துக்குமே சொற்பமான நிதியே ஒதுக்கப்பட்டிருந்தாலும், வரலாறு நெடுகிலும் ஒடுக்கப்பட்டு வரும் தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோர் இந்த நிதிநிலை ரீதியான ஒடுக்குமுறையின் தாக்கத்தை அதிகம் சந்திக்க நேரிடும்.

கடந்த இரண்டு ஆண்டுகளின் நிதியறிக்கைகளைப் பார்த்தால் இதனை ஆதாரபூர்வமாக உணர முடியும். சமீபத்திய உழைப்பாளர் கணக்கீட்டின் படி 2017-18ஆம் ஆண்டில் நாட்டின்மொத்த மக்கள் தொகையில் 19.6 விழுக்காடு தலித்துகளும், 9.3 விழுக்காடு ஆதிவாசிகளும், 42.8 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் சாதியினர் (அதாவது தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அல்லாத பிற சாதியினர்) 28.2 விழுக்காடு இருப்பதாக தெரிவிக்கின்றது. இந்த மக்கட்தொகையை மனதில்  கொண்டு செயல்பட்டிருந்தால், நிச்சயம் பெரும்பான்மையினரான ஒடுக்கப்பட்டோருக்கும், அவர்கள் நலனுக்காக இயங்கும் அமைச்சகங்கள் மற்றும் திட்டங்களுக்கும் கணிசமான நிதிஒதுக்கீட்டை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், கடந்த இரு ஆண்டுகளில், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நலனுக்காக செயல்படும் அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் திருத்தப்பட்ட நிதியின் மதிப்பீடு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மிகச் சொற்ப நிதியே ஒதுக்கப்பட்டு, செலவிடப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.045 விழுக்காடு, மொத்த செலவில் 0.33 விழுக்காடு. ஆதிவாசிகள் நலனிலும் இதே நிலைமைதான். பழங்குடியினர் விவகாரங்களுக்கான அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.032 விழுக்காடு, மொத்த செலவில் 0.23 விழுக்காடு. 

சிறுபான்மையினர் நல அமைச்சகம், உள்நாட்டு உற்பத்தியில் 0.022 விழுக்காடும் மொத்த செலவில் 0.17 விழுக்காடு நிதியும் பெற்றுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், உள்நாட்டு உற்பத்தியில் 0.013 விழுக்காட்டையும் 2020-21 ஆண்டின் மொத்த செலவில் 0.098 விழுக்காட்டையும் பெற்றுள்ளது. இதுதான் 2020-21 நிதியறிக்கையின் நிலை. 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு அமைச்சகங்களின் மொத்த ஒதுக்கீட்டைப் பார்த்தோமானால், நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 0.23 விழுக்காடு நிதியையும், 2020-21 ஆண்டுக்கான மொத்த செலவில் 1.72 விழுக்காடு நிதியையுமே பெற்றுள்ளன. இந்த நிதி ஒதுக்கீடானது, இதே மோடி அரசு தாக்கல் செய்த 2018-19 நிதியறிக்கையில் ஒதுக்கப்பட்டதை விட குறைவாகும். 2018-19 மொத்த செலவில் 1.86 விழுக்காடு நிதி இந்த நான்கு அமைச்சகங்களுக்கும் ஒதுக்கப்பட்டது, இந்த ஆண்டு வெறும் 1.72 விழுக்காடே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியானது கடந்த ஆண்டின் பட்ஜெட் ஒதுக்கீட்டை விட 0.06 விழுக்காடும், திருத்தப்பட்ட ஒதுக்கீட்டை விட 0.02 விழுக்காடும் குறைவு. அதாவது, பொருளாதார நெருக்கடியில் நாடு இருக்கும் பொழுதிலும், நாட்டின் ஒடுக்கப்பட்டோரான தலித்துக்கள், பெண்கள் ஆதிவாசிகள், சிறுபான்மையினர் ஆகியோருக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது.

நிதியறிக்கை தலைப்பு2018-19 செலவீனம்2019-20 நிதியறிக்கை ஒதுக்கீடு2019-20 திருத்தப்பட்ட ஒதுக்கீடு2020-21 நிதியறிக்கை ஒதுக்கீடு
பட்டியல் சாதியினர் நலத்திட்டங்கள்5.826.766.697.11
பழங்குடியினர் நலத்திட்டங்கள்3.954.404.524.58
சிறுபான்மையினர் நலத்திட்டங்கள்0.380.390.430.43
பாலின நிதியறிக்கை12.3311.3913.1012.24
பிற பாதிப்படையக்கூடிய குழுவினருக்கான நலத்திட்டங்கள்0.950.600.680.72

செய்த செலவு – பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் திருத்தப்பட்ட மதிப்பீடு ஆகியவற்றை காட்டும் அட்டவணை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி, 2020-21 ஆம் ஆண்டு நலத்திட்டங்களுக்காக செலவிடப்பட்ட மொத்த நிதியில், நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 25.08 விழுக்காடே ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2018-19 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மொத்த செலவை விட வெறும் 1.64 விழுக்காடு மட்டுமே அதிகம். அதேபோல், 2019-20ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 1.54 விழுக்காடு மட்டுமே அதிகம். ஆனால், இந்த ஆண்டின் மொத்த செலவு கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட செலவுகளை விட 7.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. நிதியறிக்கையின் மொத்த செலவு 7.4 விழுக்காடு உயரும் போது, மக்கள் நலனுக்கான திட்டங்களுக்கு செய்யப்படும் செலவு மட்டும் 1.54 விழுக்காடுதான் உயர்கிறது.

நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த வேளையில் மக்களின் சிக்கலைத் தீர்ப்பதில் இந்த அரசுக்கு துளியும் அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது. இந்த சமூகக் குழுக்களின் மேம்பாட்டுக்காக திட்டமிட்டு செலவிடல்களை மேற்கொள்வதற்கு பதிலாக, இந்த அரசு  தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பிற்குள் நிலவி வரும் சமூக மற்றும் பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு பாராமுகம் காட்டி வருகிறது. 

மேற்குறிப்பிட்ட தகவல்கள், சமூக ரீதியாக ஒடுக்கப்படும் பெரும் பகுதியினர் பொருளாதார ரீதியாகவும் கைவிடப்படுகிறார்கள் என்பதை  நமக்கு தெளிவுபடுத்துகின்றன. இந்தச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பொருளாதாரக் கொள்கை பார்ப்பனீயத்தோடும், ஆணாதிக்கத்தோடும் வசதியாக கைகோர்த்துக்கொண்டு பெண்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரைக் குறிவைக்கிறது. இவர்கள் மீது ஏவப்படும் சமூக மற்றும் அரசியல் ரீதியான வன்முறைகளும், பாஜக அரசின் அரசியல் நகர்வுகளுமே இதற்கு சாட்சி. சமீபத்தில், போராடும் முஸ்லிம்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரப்பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவையோ அல்லது முசாபர்நகரில் முஸ்லிம்களின் சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டதையோ எடுத்துக்கொள்ளலாம். இவை அனைத்தும், வீரியமான ஒரு இந்துத்துவ பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான திட்டமிட்ட முயற்சிகள். மேலும், 2002இல் குஜராத் தாக்குதல்களில், முஸ்லீம்கள் மற்றும் தலித்துகள்  மீதான பொருளாதாரத் தாக்குதலும் பெரும் பங்காற்றியதை இதோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த அதிர்ச்சியூட்டும் குறியீடுகள்தான் நமக்கு “சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா, விஷ்வாஸ்” எனும் பளபளக்கும் கோஷங்களுக்குப் பின்னால் இருக்கும் சமூக மற்றும் அரசியல் நிதர்சனத்தை சுட்டிக்காட்டுகின்றன. பொருளாதாரக் கொள்கைக்கும், வலதுசாரி இந்துத்துவத்தின் வெறி அரசியலுக்கும் இருக்கும் மோசமான உறவினை முகமூடியைக் கிழித்து அம்பலமாக்க வேண்டும். இது சமூக ரீதியில் அனைவரையும் ஒருங்கிணைக்கும், உழைக்கும் மக்களின் ஒற்றுமையால்தான் சாத்தியம்.

மத்திய பட்ஜெட் 2020: வருமான மறு பங்கீட்டில் பெரும் அநீதி

க.சுவாமிநாதன்

ஒவ்வொரு பட்ஜெட்டும் வருமான மறு பங்கீட்டிற்கான கருவியே. அரசின் பொருளாதாரப் பாதையே பட்ஜெட்டை வழி நடத்துவதாய் இருக்கும். இன்று கடைப்பிடிக்கப்பட்டு வரும் நவீன தாராளமயப் பாதை பெரும் நெருக்கடிக்கு இட்டுச் சென்று ஓர் முட்டுச் சந்தில் திணறி நிற்கிற நிலையில் இந்த பட்ஜெட் வெளி வந்துள்ளது. நவீன தாராள மயத்தின் ரணங்களை பா.ஜ.க அரசின் இரு முக்கியமான பொருளாதார முடிவுகளான பண மதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி அமலாக்கமும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ஆழமாக்கியிருந்தன. இதன் விளைவுகள் தொழில் மந்தம், கிராக்கி வீழ்ச்சி, வேலையின்மை, சிறு தொழில் நசிவு, விவசாய வருமானங்களில் சரிவு, உணவுப் பொருள் பணவீக்கம், அரசின் வருமான திரட்டலில் தோல்வி, ஏற்றத்தாழ்வு இடைவெளி அதிகரிப்பு என பல பரிமாணங்களில் வெளிப்படுகின்றன. ஆனால் அரசு நெருக்கடி இருப்பதாகவே ஏற்றுக் கொள்ளாமல் நவீன தாராள மயப் பாதையிலேயே பயணிக்க முனைந்துள்ளது. இதுவே மூர்க்கத்தனமான தாக்குதல்களாக பட்ஜெட்டில் வெளிப்பட்டுள்ளன.

கேள்வியாகிற நம்பகத்தன்மை

இந்த பட்ஜெட்டின் நம்பகத்தன்மை பெரும் கேள்விக் குறியாகி உள்ளது. அதில் காட்டப்பட்டுள்ள கணக்குகள், மதிப்பீடுகள் எல்லாம் உண்மை நிலைகளோடு பொருந்தவில்லை.

  • மொத்த வரி வருவாய் 2019- 20 க்கு ரூ 24,61,194 கோடிகள் பட்ஜெட் மதிப்பீடாக போடப்பட்டிருந்தது. தற்போது வெளியிடப்பட்ட திருத்திய மதிப்பீடின் அளவு ரூ 21,63,423 கோடிகள் ஆகும். அதாவது பள்ளம் ரூ 2,97,772 கோடிகள். இவ்வளவு பெரிய பள்ளம் இருக்கின்ற நிலையிலும் கூட 2020 – 21 பட்ஜெட்டில் ரூ 24, 23, 000 எதிர்பார்க்கப்படுவதாக காண்பிக்கப்படுகிறது. இது சாத்தியமான ஒன்றுதானா என்ற கேள்வி எழுவது இயல்பு.
  • மாநிலங்களுக்கான மத்திய வரி வருவாய் பங்கு என்பது 2019-20 பட்ஜெட் மதிப்பீடின் படி 8.1 லட்சம் கோடிகள் ஆகும். திருத்திய மதிப்பீடோ ரூ 6.6 லட்சம் கோடி. இதில் ஏற்பட்டிருக்கும் பள்ளம் 1.5 லட்சம் கோடி. இந்த 2020-21 பட்ஜெட்டில், ரூ 7.8 லட்சம் கோடி என மதிப்பிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இதுவும் சாத்தியம் ஆகுமா என்ற கேள்வி உள்ளது.
  • பட்ஜெட் செலவினங்களை பொருத்த வரையில் நடப்பு நிதியாண்டு பட்ஜெட் மதிப்பீடிற்கும், திருத்திய மதிப்பீடிற்குமான இடைவெளியாக ரூ 88,000 கோடி உள்ளது. ஆனாலும் 2020- 21 ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ. 27.86 லட்சம் கோடியில் இருந்து ரூ. 30.42 லட்சம் கோடிகளாக உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இது 11 சதவீத உயர்வு ஆகும். இது நடக்கவேண்டும் என்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத உயர்வு தேவைப்படும். (நடப்பு விலை மதிப்பீட்டிலான ஜி.டி.பி அடிப்படையில்) இது நடப்பது சாத்தியமற்றது.

ஆனாலும், இப்படி நிறைய எண் விளையாட்டுகள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. பொதுவாக பட்ஜெட் மதிப்பீடு, திருத்திய மதிப்பீடு, உண்மை மதிப்பீடு என்பவை வேறுபட்டுத்தான் இருக்கும் என்றாலும் அவற்றிற்கான இடைவெளி இவ்வளவு பெரிதாக இருக்கக் கூடாது. ( உண்மை நிலவரம் வெளியே வர இரண்டு ஆண்டுகள் கூட ஆகிவிடுகின்றன.) உதாரணமாக தேசிய புள்ளியியல் நிறுவனம் 2018-19 மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 6.1 சதவீதமாக அறிவித்துள்ளது. ஆனால் மே 2019 ல் வெளியிடப்பட்ட தற்காலிக மதிப்பீடுகள் 6.8 சதவீதம் என்று கூறியிருந்தன. இப்படிப்பட்ட மாறுபட்ட கணக்கீடுகள் தற்செயலானதாக தெரியவில்லை. நாடாளுமன்ற தணிக்கைக்கு உட்படாத நடவடிக்கையாக பட்ஜெட்டை மாற்றுகிற வெளிப்படைத்தன்மையற்ற அணுகுமுறையின் விளைவுகளே ஆகும்.

இந்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் (எப்.ஆர்.பி.எம்) வரையறைகளுக்காக பூச்சு (Tinkering) வேலைகளும் செய்யப்பட்டுள்ளன. எப்.ஆர்.பி.எம் என்ற சட்டத்தின் நோக்கமே ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பொருளாதார பாதையில் மக்களின் கருத்துக்கு இடமின்றி பயணிப்பதே ஆகும். 2019-20 ல் 3.3சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இப்போது 3.8 சதவீதத்தை தொட்டுள்ளது. சட்டம் மீறப்பட்டு விட்டதா? இல்லை. எப்.ஆர்.பி.எம் சட்டத்தின் பிரிவு 4 (3) ஓர் தளர்வை தருகிறது. 0.5 சதவீதம் வரை நிர்ணய விகிதத்தில் இருந்து விலகல் இருக்கலாம். அதற்காக கணக்குகளில் பூச்சு வேலை நடந்துள்ளது. முக்கியமான செலவினங்கள் வெட்டப்பட்டுள்ளன. வருமானங்கள் அதீதமாய் மதிப்பிடப்பட்டுள்ளன. இந்த எப்.ஆர்.பி.எம் சட்டம் நவீன தாராள மயப் பாதையில் இருந்து அரசு விலகி செல்லாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த பட்ஜெட் நிதி ஒழுங்கு என்ற பெயரில்தான் மூர்க்கமான பல தாக்குதல்களை தொடுத்துள்ளது.

விடை கிடைக்காத வேலையின்மை சிக்கல்

இந்திய தொழிலதிபர்களே பெரும் பிரச்சினையாக ஏற்றுக் கொள்கிற அளவிற்கு வேலையின்மை அதிகரிப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது. 2017-18 ல் 45 ஆண்டுகள் இல்லாத 6.1 சதவீதத்தை வேலையின்மை தொட்டிருந்தது. இந்த புள்ளி விவரம் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டது. பிறகு மோடி அரசாங்கம் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னர் வெளியிடப்பட்டது. நடப்பு நிதியாண்டில் மோட்டார் வாகனத் துறை பெரும் நெருக்கடியை சந்தித்தது. டாட்டா மோட்டார்ஸ், மாருதி சுசூகி போன்ற நிறுவனங்களில் ஆயிரக் கணக்கில் ஆட்குறைப்பு அரங்கேறியது. பார்லே பிஸ்கட் நிறுவனத்தில் 10000 பேர் வெளியேற்றப்பட உள்ளதாக அறிவித்தது. 90 வயதான அந்த நிறுவனம் இதுவரை சந்தித்திருக்காத நெருக்கடி அது.

காக்னிசன்ட் போன்ற மென் பொருள் நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பட்ஜெட் இதற்கான தீர்வு எதையும் உருப்படியாக முன் வைக்கவில்லை.

இவற்றுக்கான பின்புலமாக உள்ள கிராக்கி குறைவு (Demand constraint) என்கிற பிரச்சினையை அங்கீகரிக்கவோ, உரிய மாற்றை முன் வைக்கவோ இந்த பட்ஜெட் தயாராக இல்லை. மாறாக கார்ப்பரேட் வரிகளில் கடந்த ஆண்டில் அளிக்கப்பட்ட ரூ 1,45,000 வரையிலான சலுகைகள் தொடர்கின்றன. இந்த நடவடிக்கை தொழில் மந்தத்தை போக்க எந்தவொரு உந்துதலையும் தரவில்லை. ஆனாலும் அத்தகைய தலைகீழ் “தீர்வுகளை” நோக்கியே இந்த பட்ஜெட்டும் நகர்ந்துள்ளது.

பெருக்கல் விளைவுகள் இல்லை

கடந்த காலங்களில் வட்டி விகித குறைப்புகள், கடன் அடிப்படையிலான சந்தை விரிவாக்கம் போன்றவை செய்யப்பட்டு சந்தையில் தற்காலிக உந்துதல்கள் தரப்பட்டன. ஆனால் தற்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியின் உக்கிரம் அது போன்ற தீர்வுகளின் வரையறைகளை கடந்ததாக உள்ளது.

பெருக்கல் விளைவுகளை (Multiplier effect) உருவாக்கி கிராக்கியை தூண்டக் கூடிய துறைகளான விவசாயம், கிராமப் புற மேம்பாடு, பெண் நலன், குழந்தைகள் மேம்பாடு போன்றவற்றிற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் போதுமானதல்ல.

மகாத்மா காந்தி கிராம வேலை உறுதிச் சட்டத்திற்கு ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டிருப்பது அரசின் எதிர்மறை அணுகுமுறைக்கு சான்றாகும். 2019-20 ல் திருத்திய மதிப்பீடு ரூ. 71,000 கோடிகளாக இருந்தாலும் 2020-21 க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ரூ 61,500 கோடிகள் மட்டுமே. இத்திட்டத்திற்காக மாநிலங்களுக்கு தர வேண்டிய மத்திய அரசின் பங்கும் உரிய நேரத்திற்கு செல்வதில்லை. கேரளா கேட்ட தொகையில் 39 சதவீதமே அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவுக்கு 37 சதவீதம், ஆந்திர பிரதேசத்திற்கு 41 சதவீதம், ராஜஸ்தானுக்கு 44 சதவீதம் என்ற நிலைதான் உள்ளது. இத்திட்டத்தை மத்திய அரசு நடத்துகிற விதம் படிப்படியாக இத் திட்டத்தை கைவிடும் அவர்களின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

ட்ரிக்கில் அப்

கிராக்கி அதிகரிப்பிற்கு அரசின் பொது முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கு நிதி ஆதாரங்கள் தேவை. எப்படி உறுதி செய்வது? வரி வருவாயை பெருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை. அவர்கள் “சொட்டு பயன் முறைமையை” (Trickle down theory) நம்புகிறார்கள். அதாவது தொழிலதிபர்களுக்கு சலுகைகள் தரப்பட்டால் அவர்கள் ஊக்கம் அடைவார்கள்; தொழில் நடத்துவார்கள்; வேலைவாய்ப்பும் வருமானமும் பெருகும் என்பதே அந்த எதிர்பார்ப்பாகும். நவீன தாராளமயத்தின் அணுகுமுறை அது. தொழிலதிபர்களுக்கு அவ்வாறு “உந்துதல் ஊக்கம்” வழங்கப்பட்டாலும் அது “சொட்டு பயனாக” கீழே வரவில்லை. மாறாக “மேல் நோக்கி பயன் நகர்தல்” (Trickle Up) என்கிற போக்கு உள்ளது. அதாவது நகர்ப்புற, கிராமப்புற உழைப்பாளி மக்களின் வருமானத்தை மேலும் மேலும் உறிஞ்சி ஏற்றத் தாழ்வு இடைவெளியை பெரிதும் அதிகரித்துள்ளது. அண்மைய ஆக்ஸ்பாம் அறிக்கையில் நாம் அதனை பார்த்தோம்.

மேல் நோக்கி உறிஞ்சுதல் (Trickle up)

ஜனவரி 2020 ல் வெளியான ஆக்ஸ்பாம் அறிக்கை, இந்தியாவின் டாப் 1 சதவீதம் பேரிடம் உள்ள செல்வம், அடிமட்டத்தில் வாழும் 70 சதவீதம் பேர் (95 கோடி பேர்) வைத்துள்ள மொத்த சொத்துக்களில் 4 மடங்கு அதிக செல்வத்தை வைத்துள்ளனர் என்று கூறியது. 63 இந்தியப் பெரும் கோடீஸ்வரர்களிடம் இருக்கும் மொத்த சொத்து மதிப்பு இந்தியாவின் முழு ஆண்டு பட்ஜெட் தொகையை விட அதிகமாக இருக்கிறது. எந்த அளவிற்கு ஏற்றத்தாழ்வு பெரும் அகழி போல் விரிந்திருக்கிறது என்பதற்கும், “மேல் நோக்கி உறிஞ்சுதல்” (trickle up) நடந்தேறியுள்ளது என்பதற்கும் உதாரணங்கள் இவை.
அரசின் வருவாய் ஈட்டும் கொள்கைகளும் மேற்சொன்ன மாற்றத்திற்கு உதவி செய்திருக்கின்றன. மொத்த வரி வருவாயில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியில் இந்த தாக்கத்தை காண்கிறோம்.

வருமான வரியில் சலுகை கிடைத்துள்ளதா?

இந்த பட்ஜெட்டில் இரண்டு வகையான வருமான வரி கணக்கீட்டு முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு, தாமே ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம் என வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

முதலாவது ஏற்கனெவே உள்ள வருமான வரி கழிவுகளை உள்ளடக்கியது. இரண்டாவது அத்தகைய கழிவுகள் ஏதுமில்லாத வரி விகித குறைப்பு முறைமை. இதில் பலருக்கு இரண்டாம் முறைக்கு மாறினால் ஏற்கெனவே கட்டுகிற வரிகளை விட அதிகம் கட்ட வேண்டி வரும். இது போன்ற வருமான வரி சலுகைகள் அதிகமாக மூத்த குடி மக்களுக்கு இருக்கும். அவர்களுக்கு புதிய முறைமை எந்த பலனையும் தராது. இந்த இரண்டாம் முறைமை இந்த பட்ஜெட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விட இது எதிர்காலத்தில் சலுகைகளே இல்லாத சூழலை நோக்கி நகரப் போகிறது என்பதையும், இல்லங்களின் சேமிப்பு என்கிற வருவாய் ஊற்றையே சந்தைக்காக காவு கொடுக்கப் போகிறது என்பதுமே அது உணர்த்தும் அபாயமாகும்.

என்.ஆர்.ஐ தொழிலாளர் மீதான வரி முன் மொழிவுகள், வரையறைகளில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் சவுதி போன்ற நாடுகளுக்கு பிழைப்பிற்காக சென்றுள்ள சாதாரண, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். எனவேதான் இத்தகைய தொழிலாளர்கள் அதிகம் கொண்டிருக்கும் கேரள மாநிலத்தின் இடது முன்னணி அரசு உடனே எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எல்லாம் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு சிறப்பு வருமான வரி கழிவுக்கான பிரிவை உருவாக்க வேண்டுமென்று கோரி வந்த நிலையில் இருப்பதையே கேள்விக்கு ஆளாக்குகிற இந்த முன் மொழிவு எதிர்காலத்தில் பெரும் பாதிப்புகளை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும்.

வருமான திரட்டலில் அநீதியும் பள்ளமும்

கார்ப்பரேட்களுக்கான சலுகைகளும், டிவிடெண்ட் பகிர்மான வரி சலுகையும் ரூ 25,000 கோடி அளவுக்கு அரசின் வருமானத்தில் பள்ளத்தை கூடுதலாக உருவாக்கும். சில குறிப்பிட்ட தொழில்களுக்கு கார்ப்பரேட் வரிகள் 15 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டிலேயே கார்ப்பரேட் வரிகளில் வழங்கப்பட்ட பெரும் சலுகைகள் வரிவருவாயில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த பட்ஜெட் அதை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 2019 -20 ல் ரூ. 6,10,500 கோடிகள் கார்ப்பரேட் வரிக்கான பட்ஜெட் தொகையாகும். டிசம்பர் வரை வசூலாகியிருந்த தொகை ரூ.3,69,000 கோடிகள் மட்டுமே. இது 60 சதவீதம் மட்டுமே. (2018 டிசம்பரில் 64 சதவீதம்).

கார்ப்பரேட் வரிகள் மட்டுமின்றி மற்ற வரிகளுமே கடுமையான வசூல் பாதிப்புகளை சந்தித்துள்ளன. வருமான வரியில் 57 சதவீதம், ( டிசம்பர் 2018 ல் 64 சதவீதம்) மத்திய ஜி.எஸ்.டி வசூல் 60 சதவீதம் ( டிசம்பர் 2018 ல் 74 சதவீதம்), சுங்க வரி 68 சதவீதம் (2018 டிசம்பரில் 82 சதவீதம்) கலால் வரிகள் 62 சதவீதம் (டிசம்பர் 2018 ல் 67 சதவீதம்).
இந்த வருமான திரட்டல் முறைமை கூட்டாட்சி கோட்பாட்டின் மீதும் தாக்குதல் தொடுக்கிறது. மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு தர வேண்டிய வரி பங்கு ரூ. 8.1 லட்சம் கோடிகள் என்பது 2019-20 பட்ஜெட் மதிப்பீடு. ஆனால் திருத்திய மதிப்பீடு 6.6 லட்சம் கோடிகள்தான். 10 மாநிலங்களுக்கு அவர்களுக்கான பங்கில் சரிவு ஏற்பட்டுள்ளது. 2020- 21 பட்ஜெட் ரூ. 7.8 லட்சம் கோடி தரப்படும் என அறிவித்துள்ளது. இதுவெல்லாம் மலையேறுமா என்பது கேள்விக்குறி. கேரள மாநில அரசு தனது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்துள்ளது.

இது அரசின் பொருளாதார பாதையின் விளைவு ஆகும். தனது பாதையை மாற்றிக்கொள்ள அரசிடம் எந்த முன்முயற்சியும் இல்லை.

இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசு முன் வைத்துள்ள பட்ஜெட் மொழிவுகள் விபரீதமானவை. தொலை நோக்கு பார்வையற்ற ஒதுக்கீடு வெட்டுகள், மருத்துவத் துறை குறித்த கொள்கை முடிவுகள், சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு குறைப்பு, பொதுத் துறை பங்கு விற்பனை என நகர்ந்துள்ள விதம் பொருளாதார மறு பங்கீட்டில் மிகப் பெரும் வஞ்சனையை செய்யவுள்ளது.

சாதாரண மக்கள் தலையில் சுமத்தும் வகையில் இந்த பட்ஜெட் மும்முனை தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
ஒன்று சமூக நலத் திட்டங்களில் செய்துள்ள வெட்டு.
இரண்டாவது விவசாயத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி. மூன்றாவது பொதுத் துறை மீதான தாக்குதல்.

மறந்து போன முழக்கங்கள்

மிக ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட பல திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டுள்ளன. “மேக் இன் இந்தியா” பற்றிப் பேசுகிற ஆட்சியாளர்கள் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள் குறித்து கண்டு கொள்ளவில்லை. “ஆர்வமிக்க இந்தியா” (ASPIRATIONAL INDIA) என்பது பட்ஜெட்டின் “தீம் சாங்” என்றாலும் இந்திய தொழில்கள் கச்சா பொருட்களுக்கும், தொழில் நுட்பத்திற்கும் அந்நிய நாடுகளை நம்பி இருக்க வேண்டிய நிலைமையை மாற்ற ஓர் அடி கூட எடுத்து வைக்கவில்லை. உலகம் முழுவதும் 2019 ல் பதிவுக்காக தரப்பட்டுள்ள காப்புரிமை விண்ணப்பங்களில் 50 சதவீதத்தை சீனா தந்துள்ளது என்பதை இங்கு நினைவு கூருவது பொருத்தமானது. சீனாவின் இந்த வளர்ச்சி இந்திய பொருளாதாரத்திலேயே பிரதிபலிப்பதை மின்னணு உற்பத்தி, மருந்துகள் உற்பத்தி இரண்டிலும் காண முடிகிறது.

இந்திய மருந்து உற்பத்தி 140 நாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதாகும். “உலகத்தின் பார்மசி” என்று இந்தியாவை சொல்வார்கள். ஆனால் இந்த மருந்து உற்பத்திக்கு தேவையான கச்சா பொருட்கள் (API- Active Pharma Ingredients) 69 சதவீதம் சீனாவில் இருந்துதான் வருகின்றன. 1994 ல் பிளேக் நோயை எதிர்கொள்வதில் பெரும் பங்கை ஆற்றிய ஐ.டி.பி.எல் போன்ற பலமான நிறுவனங்களை உருவாக்க, வளர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்த பட்ஜெட் உணர்ந்து எதுவும் செய்யவில்லை. இன்று கரோனா வைரஸ் சீனாவிலேயே பெரும் உயிர் இழப்புகளையும், பொருளாதார பாதிப்புகளையும் உருவாக்கியுள்ள நிலையில் ஆராய்ச்சி தேவைகளை அலட்சியம் செய்வது ஆபத்தானது. இந்தியாவில் சிரிஞ்சை உற்பத்தி செயகிற நாம் ஊசிகளை இறக்குமதி செய்கின்றோம். இந்த பட்ஜெட் இறக்குமதி வரிகளை உயர்த்தி உள்நாட்டு உற்பத்திக்கான சந்தையை உறுதி செய்வதாக கூறியுள்ளது. ஆனால் இருதயங்களில் பொருத்தப்படும் ஸ்டென்டுகள், ரேடியேஷன் இயந்திரங்கள், ஹை எண்ட் ஸ்கேனர் ஆகியன வெளி நாடுகளில் இருந்தே எதிர்பார்க்கப்படுகிற நிலையில் இந்த வரி உயர்வு இறக்குமதியை குறைக்காது; மாறாக நுகர்வோர் தலையில் சுமையையே ஏற்றப் போகிறது.

மின்னணு உற்பத்தியிலும் இதே நிலைமை. இந்தியாவில் 6 ஆண்டுகளில் மொபைல் போன் உற்பத்தி தலங்கள் 2 ல் இருந்து 268 ஆக உயர்ந்துள்ளது. 4.58 லட்சம் கோடிகள் மதிப்புள்ள வணிகம் நடைபெறுகிறது. ஆனால் அவை பெரும்பாலும் வெறும் “இணைப்பு” (Assembly) தலங்களாகவே உள்ளன; அவற்றில் நடைபெறுகின்ற மதிப்பு கூட்டல் 7 முதல் 8 சதவீதம் மட்டுமே ஆகும். இறக்குமதியை சார்ந்து இருப்பதால் இதன் வருவாயில் 93 சதவீதம் சீனாவுக்கு செல்கிறது. (இந்து பிசினஸ் லைன்- 06.02.2020). ஆராய்ச்சிக்கான முனைப்பு அற்ற பட்ஜெட் இவற்றையெல்லாம் எப்படி சரி செய்யப் போகிறது? ஆர்வமிக்க இந்தியா எப்படி உருவாகப் போகிறது?

கசக்கிறது சமூக நலம்

தேசிய உடல் நலக் கொள்கை ரூ 1.12 லட்சம் கோடிகள் தேவை என கூறுகிறது. இந்த பட்ஜெட்டில் உடல் நலத்திற்கான ஒதுக்கீடு ரூ 65011 கோடிகள். 58 சதவீதம் மட்டுமே. பொது மருத்துவம் சிதைக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவமனை படுக்கை வசதி அதிகரிப்பில் 80 சதவீதத்தை தனியார் மருத்துவ மனைகளே செய்துள்ளன எனில் மருத்துவம் எவ்வளவு வணிக மயம் ஆகியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
“ஆயுஷ்மான் பாரத்” திட்டத்திற்கு சென்ற பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 6400 கோடிகள். டிசம்பர் வரை 16 சதவீதம் மட்டுமே (1014 கோடிகள்) மத்திய அரசால் செலவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் அவர்கள் கோரியுள்ள தொகை மத்திய அரசிடமிருந்து வராமல் தவிக்கின்றன. கேரளா கோரியுள்ளதில் 39 சதவீதம் மட்டுமே தரப்பட்டிருப்பது ஓர் எடுத்துக்காட்டு.

இந்த பட்ஜெட் ஓர் அபாயகரமான முன் மொழிவையும் வைத்திருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிலமும் தந்து அவர்களை மாவட்ட அரசு பொது மருத்துவ மனைகளுடன் இணைப்பது என்பதாகும். வளங்களை மடை மாற்றம் செய்வதில் எந்த அளவிற்கு இந்த பட்ஜெட் சென்றுள்ளது என்பதற்கு இது சாட்சியம்.

பட்ட காலிலேயே படும்

பட்ஜெட் பலி பீடத்தில் நிறுத்தப்பட்டுள்ள இன்னொரு காவு பொது விநியோக திட்டம் ஆகும். 2019-20 ல் உணவு மானிய ஒதுக்கீடு 1,84,220 கோடிகளாக இருந்தன. இப்போது அது 1,08,698 கோடிகளாக பெரும் சரிவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை குறைத்து காட்டுவதற்காக அரசு கடன் வாங்குவதற்கு பதிலாக இந்திய உணவுக் கழகத்தை கடன் வாங்குகிற நிலைமைக்கு திட்டமிட்டு தள்ளியுள்ளது. அரசு கடன் திரட்டினால் வட்டி குறைவாக இருக்கும். இந்திய உணவு கழகம் வங்கிக் கடன் வாங்கினால் அதிக வட்டிக்கு வாங்க வேண்டி வரும். இது உணவுப்பாதுகாப்பை சிதைக்கும்.

பிரதமரின் கிசான் திட்டத்தில் அவர்கள் இலக்கு 14.5 கோடி விவசாயிகளை தொடுவது. ஆனால் இத்திட்டத்தில் பதிவு ஆகியிருக்கிற விவசாயிகள் 62 சதவீதம் மட்டுமே. அதிலும் முழு பயன் பெற்றவர்களை மட்டும் பார்த்தால் மொத்த இலக்கில் 50 சதவீதத்திற்கு சரிந்து விடுகிறது. இப்படி பாதிக் கிணறு தாண்டுவதையே வழக்கமாக வைத்துள்ளார்கள். கிசான் ரயில் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருந்தாலும் பட்ஜெட் ரயில் விவசாயிகளை ஏற்றிக் கொள்ளாமலேயே சென்று விட்டது என்பதே உண்மை.

அரசு கொள்முதலை கைவிடுவதை நோக்கி இந்த அரசு நகர்கிறதோ என்ற சந்தேகம் வருகிற அளவிற்கு உச்சகட்ட அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்திய உணவு கழகம் எந்த அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை ஏற்கெனவே விவரித்துள்ளோம். இது அரசு கொள்முதலை கடுமையாக பாதிக்கும். சந்தை விலைகளும் அரசின் ஆதரவு விலைகளை விட குறைவாக இருப்பதால் விவசாயிகள் வருமானம் கடும் பாதிப்பிற்கு ஆளாகும். இந்த லட்சணத்தில் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாவது என்ற வாய் ஜாலங்கள் எல்லாம் எப்படி நடக்கும்?

ஒரு புறம் இப்படி வருமானம் பாதிக்கப்படும் போது மறுபுறம் டீசல், உரம், மின்சாரம், டிராக்டர்கள், ஆயில், கால்நடை தீவனம், பூச்சிக் கொல்லி மருந்து ஆகிய இடுபொருள் விலைகள் ஏறியுள்ளன. டீசல் விலைகள் கிட்டத்தட்ட 10 சதவீதமும், ஆயில் 13 சதவீதமும் அதிகரித்துள்ளன. பால் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்குவது பற்றி பட்ஜெட் பேசியுள்ளது. ஆனால் கால் நடை தீவன விலை உயர்வும், கால்நடை மருத்துவ செலவினங்களின் உயர்வும் அதை அனுமதிக்குமா என்பது கேள்வி. உர மானியம் போன பட்ஜெட்டில் ரூ 80000 கோடிகள். திருத்திய மதிப்பீடு ரூ 79997 கோடிகள். ஆனால் 2020-21 பட்ஜெட்டில் ஒதுக்கீடு ரூ 71309 கோடிகள். ஏதாவது தர்க்க நியாயம் உள்ளதா?

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கதையை முடித்து விடுவார்கள் போலிருக்கிறது. 2019- 20 ல் ரூ 71000 கோடியாக இருந்த ஒதுக்கீடு 2020-21 ல் 61500 கோடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இது 2018-19 தொகையான ரூ 61815 கோடிகளை விட குறைவான ஒதுக்கீடு ஆகும். 2018- 19 ல் கூலி பாக்கி வேறு இருந்தது என்பதையும் சேர்த்துப் பார்த்தால் எவ்வளவு குரூரமான முன் மொழிவு என்பதை புரிந்து கொள்ள இயலும்.
விவசாயக் கடன் 11 சதவீதம் உயரும் என பட்ஜெட் அறிவித்துள்ளது. இந்திய விவசாயிகளில் பெரும்பாலானோர் நிறுவனக் கடன் பெறுபவர்களாக இல்லை. கந்து வட்டி வலைக்குள் தான் இருக்கிறார்கள். எனவே இந்த அறிவிப்புகள் எல்லாம் உண்மையில் விவசாயிகளைப் போய் சேருமா?

துல்லிய தாக்குதல் பொதுத் துறை மீது

இந்த பட்ஜெட் தீர்வுகளை நோக்கி நகர்ந்திருக்க வேண்டுமென்றால் பொது முதலீடுகளை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்வதற்கு “சூப்பர் ரிச்” எனப்படும் பெரும் பணக்காரர்கள் மீது வரிகள் போடாமல் செய்ய இயலாது. உலகின் சூப்பர் ரிச் மீது 0.5 சதவீதம் வரி போட்டாலே 26 கோடி குழந்தைகளுக்கு கல்வி தர முடியும். ஆனால் வலதுசாரி பொருளாதார பாதை இத்தகைய மனிதம் கொண்ட பொருளாதார பாதையை நோக்கி தடம் மாறாது. இந்திய பட்ஜெட்டும் விதிவிலக்கல்ல.

பொதுத் துறை பங்கு விற்பனைக்கு ரூ. 2.10 லட்சம் கோடி இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி பங்கு விற்பனை முன் மொழிவு ஓர் மிகப் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. வங்கிகள், பி.பி.சி.எல், ஐ.ஆர்.சி.டி.சி உள்ளிட்ட நிறுவனங்கள் குறி வைக்கப்பட்டுள்ளன.

நியாயமற்ற எல்.ஐ.சி பங்கு விற்பனை

மட்டுமின்றி ஆயுள் காப்பீட்டின் மீது பன்முகத் தாக்குதலை இந்த பட்ஜெட் தொடுத்துள்ளது. 100 கோடி முதலீட்டை மட்டுமே கொண்ட எல்.ஐ.சி, ஆண்டு டிவிடென்டாக அரசுக்கு தருவது ரூ 2611 கோடி ஆகும். அரசின் திட்டங்களில் பத்திரங்களில் ரூ. 28 லட்சம் கோடிகள் முதலீடு, சொத்து மதிப்பில் ரூ. 32 லட்சம் கோடிகள் என வளர்ந்து நிற்கிற நிறுவனம் ஆகும்.

இறப்பு உரிமப் பட்டுவாடாவில் 98.2 சதவீதம் கொண்டிருக்கும் எல்.ஐ.சி, இன்சூரன்ஸ் பரவலில் 42 கோடி பாலிசிகள் என உலக சாதனை படைத்துள்ள நிறுவனம் ஆகும். இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் பங்குவிற்பனை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் பங்குகளை சந்தையில் பட்டியலிடப் பட்டுவிட்டால் 35 சதவீதமான பங்குகளை சந்தைக்கு கொண்டு வர வேண்டுமென்பது விதி. ஸ்டேட் வங்கியின் பங்குகளில் தற்போது 58 சதவீதம் மட்டுமே அரசு பங்குகள் உள்ளன. 2003 ல் வங்கிகளில் அரசின் பங்கை 33 சதவீதமாக குறைக்க சட்டத் திருத்தம் கொண்டு வர முயற்சித்ததை மறந்து விடக் கூடாது. ஆகவே தனியார் மயம் நோக்கிய முதற்படியாகவே பங்கு விற்பனை என்ற சொல்லாடல் நைச்சியமாக முன் வைக்கப்படுகிறது. எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு பட்ஜெட்டின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டியிருப்பதே உடனடிக் காரணம்.

இந்த பட்ஜெட் 102 லட்சம் கோடிகள் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு திரட்டப்படும் என அறிவித்துள்ளது. அதில் 39 சதவீதத்தை மட்டுமே மத்திய அரசு தரும். மீதமெல்லாம் மாநில அரசுகள், தனியார் கொண்டு வருவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியெனில் 61 சதவீதம் மத்திய பட்ஜெட்டிற்கு வெளியே இருந்து திரட்டப்பட வேண்டும். ஆயுள் இன்சூரன்ஸ்தான் நீண்ட கால சேமிப்புகளை திரட்டக் கூடிய துறை. ஒரு பக்கம் தேவை இருக்கிறது. மறு பக்கம் அதை தருகிற வல்லமை கொண்ட எல்.ஐ.சி நிறுவனம் இருக்கிறது. அதைப் பலப்படுத்துவதற்கு மாறாக குறுகிய காலத் தேவைகளுக்காக பங்கு விற்பனை என்பது பொறுப்பற்ற முன் மொழிவு ஆகும்.

ரயில்வே மேம்பாட்டிற்கு 150000 கோடிகளை ஐந்தாண்டுகளுக்குள் தருவதாக எல்.ஐ.சி ஏற்றுக் கொண்டு ஆண்டு தோறும் ரூ 30000 கோடிகளை தர புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதென்பது பொருளாதார வரலாற்றில் ஒரு சாதனை. ஒரே துறைக்கு மட்டும் இவ்வளவு நிதி கொடுப்பது சரியல்ல என்று ஐ.ஆர்.டி.ஏ என்று முட்டுக் கட்டை போடுவதாக இப்போது செய்தி. இந்த பட்ஜெட் 34000 கோடி ரயில் என்ஜீன், கோச்சுகளுக்கு தேவை என்றும், 31000 கோடி இதர ரயில் திட்டங்களுக்கு தேவை என்றும் பட்ஜெட் செய்துள்ளது. இது எங்கே இருந்து கிடைக்கும்!

இவை போதாதென்று ஏற்கெனவே உள்ள ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியத்தின் மீதான 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பு, இந்த பட்ஜெட் வருமான வரியில் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கான சலுகை உள்ளிட்ட கழிவுகளை காலப் போக்கில் நிறுத்தி விடுமென்ற சமிக்ஞை ஆகியவை இன்சூரன்ஸ் வணிகத்திற்கு எழுந்திருக்கும் புதிய அபாயங்கள் ஆகும்.

தாக்குதல் பல விதம்

ஏற்கெனவே தனியார் ரயில்கள் டெல்லியில், குஜராத்தில் தனியார் ரயில்கள் ஓட ஆரம்பித்து விட்டன. அதிக கட்டணம், மூத்த குடி மக்கள் சலுகை ரத்து, பயணப் பாதையில் அவற்றுக்கு வழி விட மற்ற ரயில்கள் தாமதம் ஆகிய அபாயங்கள் வெளி வந்துள்ளன. 150 ரயில் தடங்கள் தனியார் வசம் ஓப்படைக்கப்ப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லாப வழித் தடங்கள் தனியாருக்கு வழங்கப்பட்ட பிறகு சமூகப் பொறுப்பை அரசு ரயில்வே சுமக்க வேண்டி வரும். சில காலம் கழித்து நட்டம் என்று பேச ஆரம்பிப்பார்கள். இப்படிப் பொதுத் துறை மீது விதம் விதமான தாக்குதல்கள். பி.எஸ்.என்.எல் இப்படித்தான் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளானது. செல் சேவை அனுமதியில் தாமதம் செய்தது துவங்கி, டவர் நிர்மாணத்தில் அனுமதி இழுத்தடிப்பு, 4 ஜி சேவை தருவதற்கு நீண்ட இடைவெளி என இழுத்தடிப்பு. ஒவ்வோர் தடைக் கட்டத்திலும் நிறுவனத்தை பாதுகாக்க தொழிற்சங்கமே வீதிகளுக்கு வந்தது. அதன் உச்ச கட்டமாக 150000 தொழிலாளர்களில் 93000 பேர் ஒரே நாளில் வி.ஆர்.எஸ் என்ற பெயரில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஏர் இந்தியாவின் பங்குகள் 100 சதவீதம விற்கப்படும். ஐ.ஆர்.சி.டி.சி பங்குகள் சந்தைக்கு வரும். வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள் என வரிசையாக…. பட்ஜெட், புல்டோசரை தயார் நிலையில் வைத்திருக்கிறது.

பொதுத் துறை நிறுவனங்கள் தங்கள் சந்தையை தக்க வைக்கவும் போராட வேண்டியுள்ளது. ஒரு சிம்மை உருவி விட்டால், நம்பரை மாற்றாமல் நிறுவனத்தை மாற்றினால் சந்தை போய்விடுமென்ற நிலையில் இவ்வளவு இழுத்தடிப்பு மூலம் பி.எஸ்.என்.எல் தாக்கப்பட்டது. எல்.ஐ.சியின் சந்தை நீண்ட கால முதலீடு என்பதால் 23 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியிலும் எல்.ஐ.சி 76 சதவீத சந்தைப் பங்கை வைத்திருக்கிறது. போட்டியை எதிர் கொள்ள முடிகின்ற எல்.ஐ.சி யின் பங்கு விற்பனைக்கு அரசு எத்தனிக்கிறது. ஆகவே ஒரு புறம் அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம்… மறுபக்கம் மக்கள் மத்தியில் ஏற்படுகிற அச்சத்தை அகற்றி சந்தைப் பங்கை தக்க வைக்கிற போராட்டம் என இரு முனைகளில் நகர வேண்டியுள்ளது.

மக்கள் மத்தியில் இந்த பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு எழலாம் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியும். ஆகவே திசை திருப்பலையும் பட்ஜெட் உரையிலேயே அவர்கள் செய்துள்ளார்கள். சரஸ்வதி சிந்து என்று பேசியிருப்பது அவைகளில் ஒன்றாகும்.

முதலாளித்துவ சமூகத்தில் எல்லா பட்ஜெட்டுகளுமே மடை மாற்றத்தை ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக மாற்றுவது நடந்தேறும். ஆனால் இந்த பட்ஜெட் அதை மூர்க்கத்தனமாக அரங்கேற்றுகிறது என்பதே வித்தியாசம்.