உலகமய காலத்தில் வாழ்விட உத்தரவாதமும் சமூக நீதியும்

ச. லெனின்

குரல்: தோழர் பீமன்

சென்னை உள்ளிட்டு தமிழகத்தின் பல இடங்களில் வாழ்விட பாதுகாப்பிற்கான போராட்டங்கள் முன்னுக்கு வந்துள்ளது. குறிப்பாக, நீர்நிலைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேம்பட்ட வாழ்விடம் வழங்குதல் என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் குடியிருப்புக்கள் அகற்றப்படுவதும், அதை எதிர்த்த மக்களின் போராட்டங்களும் தொடர்கின்றன. நகர்ப்புறங்களின் மையத்திலிருந்து, உழைக்கும் மக்களின் பெரும்பகுதியினர் நகரங்களின் விளிம்பிற்கு துரத்தப்படுகின்றனர். இதுபோன்ற நிலைகள் எதுவும் திடீர் நிகழ்வுகளோ, தவிர்க்க முடியாத விஷயங்களோ அல்ல. இதன் பின்னால் உள்ள அரசியல் பொருளாதாரத்தை விளக்கிடும்  சிறு முயற்சியை இக்கட்டுரை மேற்கொள்கிறது.

சென்னை (மெட்ராஸ்), கல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே துறைமுகம், வர்த்தகம் சார்ந்து வளர்ச்சிபெற்று வந்தன. இந்திய விடுதலைக்கு பிறகான காலப்பகுதியில் புதிய வளர்ச்சிப் போக்குகளின் விளைவாக நகரங்கள் விரிவடைந்தது. அதன் முக்கிய விளைவாக, நகரத்தின் வளர்ச்சிக்கான அடித்தளமாக விளங்கிய உழைக்கும் மக்களும் நகரங்களில் குவிந்தனர். அதேநேரம் சுரண்டல் நிறைந்த முதலாளித்துவ அமைப்பு முறையில் அவர்களுக்கு கிடைத்த குறைந்த கூலியில் குடிசை பகுதிகளில்தான் குடியிருக்க முடிகிறது. கூவம் ஆற்றங்கரையிலும், நெருக்கடி நிறைந்த, காற்றோட்டம் இல்லாத, குடிநீர், கழிப்பிடம், அடிப்படைகள் வசதிகள் ஏதுமற்ற, குறுகிய சந்துகளையே சாலைகளாக கொண்ட, மழை / வெயில் என எந்த காலத்திலும் வாழ தகுதியற்ற மூச்சுத்திணறும் சிறு அறைகளை கொண்ட அல்லது அறைகளற்ற வீடுகளில், அங்கு நிலவும் சுகாதாரமற்ற சூழலில் வாழவேண்டும் என்பது அவர்களது விருப்பமல்ல. உழைப்பாளிகளின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கொடுக்கப்படாத சூழலே அவர்களை ஏழ்மையில் தள்ளியது. அதுவே மோசமான வாழ்நிலையிலும் குடியிருப்புக்களிலும் அவர்களை வாழவைக்கிறது. ஆனால், முதலாளித்துவமும் அதன் கண்ணோட்டம் கொண்ட மேட்டிமை சிந்தனையுடையவர்களும், ஏதோ குடிசை பகுதி மக்களின் தவறான போக்கின் விளைவாகவே அவர்கள் அங்கு இருப்பதுபோன்ற கருத்துக்களை பதிவு செய்கின்றனர். முதலாளித்துவம்தான் அவர்களின் அப்படியான வாழ்நிலைக்கு காரணம் என்பதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் அரசியலும் அதில் உள்ளது.  இன்று நேற்றல்ல; மார்க்ஸ், எங்கெல்ஸ் காலத்திலேயே இப்படியான கருத்துக்களை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

“வாடகையில் சிறிதளவு பணத்தை மிச்சப்படுத்த முடியுமென்றால், அவர்கள் இருண்ட, ஈரப்பதமான, போதுமானதாக இல்லாத, சுருக்கமாகச் சொல்வதென்றால் சுகாதார நிபந்தனைகள் அனைத்தையும் கேலிக்கூத்தாக்குகின்ற குடியிருப்புக்களை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலானவற்றில் சில குடும்பங்கள் ஓர் அறைக்கட்டை, ஒரு சிறு அறையைகூட எடுத்துக் கொள்கிறார்கள். வாடகையை இயன்ற அளவுக்குக் குறைக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறார்கள். ஆனால், மறு பக்கத்தில் அவர்கள் தம்முடைய வருமானத்தை உண்மையிலேயே பாபகரமான வழியில் குடிப்பதிலும் எல்லா விதமான சிற்றின்பங்களிலும் விரயம் செய்கிறார்கள்.” என்று ஸாக்ஸ் என்பவர் பதிவு செய்கிறார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் “சாதாரண மக்கள் மதுக்கடைக்குப் போகிறார்கள். அந்தஸ்துடையவர்கள் மனமகிழ் மன்றங்களுக்குப் போகிறார்கள்” என்று தனது ஆசிரியர் இவ்வாறு கூறுவார் என்று எங்கெல்ஸ் அதை நையாண்டி செய்கிறார். மேலும் “முதலாளிகளை பொறுத்தமட்டில், குற்றம் அறியாமையாகக் குறைந்துவிடுகிறது; ஆனால் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில், அறியாமையே அவர்களுடைய குற்றத்திற்குக் காரணமாகிவிடுகிறது” என்கிறார் எங்கெல்ஸ்.

துவக்கத்தில் குடிசை பகுதிகள் இருந்த இடங்களிலேயே அதை மேம்படுத்திடும் திட்டங்களை ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். புதிய பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் உழைக்கும் மக்கள் குடியிருக்கும் நிலத்தின் மதிப்பின் மீது தனது பார்வையை செலுத்தியது. அதன் விளைவாக, குடிசை பகுதிகளை மேம்படுத்துவது என்பதிலிருந்து குடிசை பகுதிகளை அகற்றுவது  என்கிற நிலைக்கு அரசும் ஆட்சியாளர்களும் வந்தனர். அதற்கு தேவையான காரணங்களையும் கட்டமைத்தனர். தற்போது குடிசை பகுதிகளை அகற்றுவது என்பதை கடந்து இது ‘ஆக்கிரமிப்பு’ பகுதி, நீர்நிலைகள், மேய்ச்சல் நிலம் என அதன் கைகள் நீள்கிறது. அதுவும் சாஸ்தா பல்கலைக் கழகம் போன்ற பெருநிறுவனங்களின் மீது அவை நீள்வதில்லை. இருக்க இடமின்றி ஒண்டிக்குடித்தனம் செய்யும் எளிய மக்களின் வீடுகள் மீதே அரசின் புல்டோசர்களின் கைகள் நீள்கிறது. இதுவே குடியிருப்புக்கள் மீதான அரசின் வர்க்க கண்ணோட்டத்தை வெளிப்படுத்திவிடுகிறது.

குடியிருப்புகள் குறித்த அரசின் கொள்கைகள்

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குடியிருப்புகள் குறித்த ஒரு விரிவான அணுகுமுறைகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. விடுதலை இந்தியாவில் தமிழகம் சார்ந்த கொள்கை ஆவணங்களில் 1956ஆம் ஆண்டுதான் முதன் முதலாக குடிசை பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1956இல் “குடிசை பகுதி (மேம்பாடு மற்றும் அகற்றுதல்) சட்டம்” இயற்றப்பட்டுள்ளது. மனிதர்கள் வாழ தகுதியற்ற நிலையில்தான் குடிசை பகுதிகள் இருக்கிறது என்று சட்டம் கூறுகிறது. ஒன்று குடிசை பகுதி மக்களை அவர்கள் வசிக்கும் இடத்திலேயே மேம்பாட்டு பணிகளை செய்து கொடுத்து குடியிருக்க அனுமதிப்பது அல்லது அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்தில் குடியமர்த்துவது என்பதே அதன் முன்னால் இருக்கும் இரண்டு வழிகளாக அமைந்திருந்தது. இந்த இரண்டு வழிகளில் எதை அமலாக்குவது என்பதை அவ்வப்போது இருந்த சமூக, அரசியல், பொருளாதார சூழல்களே தீர்மானித்துள்ளன.

தேசிய திட்டக் குழுவின் மூலம் 1960களுக்கு முந்தைய இரண்டு தேசிய திட்டங்களிலும் குடிசை பகுதிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து பரிந்துரைகளை வழங்கியுள்ளன. குறிப்பாக, மும்பை மற்றும் கல்கத்தா சார்ந்து அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், நகர்ப்புறங்களின் விளிம்பில் அவர்களை மறு குடியமர்வு செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதற்கு கூடுதல் செலவுகளை மேற்கொள்ள வேண்டி வரும் என்பதோடு, அவர்களின் வேலை, சமூகத் தொடர்பு, கல்வி உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், அப்போது அது முன்னெடுக்கப்படவில்லை என்று டில்லி குடிசை பகுதி அகற்றம் குறித்த கட்டுரையில் கெர்ட்னர்தெரிவித்துள்ளார். 1960 முதல் 1970கள் வரை மறுகுடியமர்வு என்பதை விட அவர்கள் குடியிருக்கும் இடத்தை மேம்படுத்துவது என்பதாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், தற்போது உலக வங்கியின் கடன் மூலம் நிதி கிடைக்கிறது. மக்களின் வேலை, சமூக தொடர்பு, கல்வி குறித்த எவ்வித அக்கறையுமின்றி அரசு மக்களை நகரத்தின் விளிம்பிற்கு துரத்துகிறது.

விடுதலைக்கு பிந்தைய காலப்பகுதியில் சென்னையை நோக்கி வரும் மக்கள் கூட்டம் அதிகரித்தது. இது குடியிருப்பு குறித்த பிரச்சினைகளின்பால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. போதுமான அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் உள்ள குடிசை பகுதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வேலைகளை அரசு மேற்கொள்ளும் என்று ஆட்சியாளர்கள் தெரிவித்தனர். குடியிருப்பு பிரச்சினைக்கான அரசின் தலையீடு என்பது சமூக நிர்ப்பந்தத்தால் விளைந்ததே அன்றி அது யாருடைய கனவு திட்டமாகவும் எழவில்லை. குறைந்த வருமானமுடைய ஏழை எளிய புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் குடிசை பகுதி மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட குடியிருப்புக்களை வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சியினரை வாக்குறுதி வழங்க வைத்தது. இதன் தொடர்ச்சியாகவே, குடிநீர் வசதி, கழிப்பறைகள், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை கொண்ட குடியிருப்புகளை உருவாக்குதல் என்கிற வகையிலேயே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் “மெட்ராஸ் மாகாண வீட்டு வசதி வாரிய சட்டம் 1961” உருவாக்கப்பட்டது. இதுவே தற்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்றுள்ளது. குடிசை பகுதிகளை மேம்படுத்தி வாழ்வதற்கு தகுதியான அடிப்படை வசதிகளை கட்டமைப்பது என்கிற வகையில் இது துவங்கப்பட்டது. ஆனபோதும் அதில் போதுமான முன்னேற்றத்தை அதனால் ஏற்படுத்த முடியவில்லை.

1967இல் திமுக தமிழகத்தின் ஆட்சி பொறுப்பிற்கு வந்தது. திமுக-விற்கு சென்னையின் குடிசைபகுதி மக்களிடம் வலுவான செல்வாக்கு இருந்தது.  அவர்களை உள்ளடக்கி திட்டமிடும் நோக்கில் 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் உள்ள குடிசை பகுதிகளின் பிரச்சினைகளை மாநில அளவிளான நோக்கோடு அணுகிட வழி செய்தது. “தமிழ்நாடு குடிசை பகுதிகள் மேம்படுத்துதல் மற்றும் அகற்றுதல் சட்டம் 1971” இயற்றப்பட்டது. குடிசை பகுதிகளில் அதிகமான செல்வாக்கையும் கூடுதல் வாக்கு வங்கியையும் பெற்றிருந்த திமுக-விற்கு அப்பகுதி மக்களை அங்கிருந்து அகற்றி நகரத்தின் விளிம்பிற்கு துரத்துவது என்பது அப்போது விருப்பமானதாக இல்லை. எனவே, குடிசை பகுதிகளை கண்டறிதல், வரைமுறைப் படுத்துதல், மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலேயே புதிய கட்டிடங்களை கட்டுதல், பொதுக்கழிப்பிடங்கள் அமைத்தல், குடிநீர் விநியோகம் என்பனவற்றை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் செய்தது. பொதுவாக சமூக நல திட்டங்களை அமலாக்குதல், பொது செலவீனங்களுக்கான நிதி ஒதுக்குவது என்பதெல்லாம் எளிய மக்களுக்கு குறைந்தபட்ச ஆதாரங்களை உருவாக்கும் நோக்கம் கொண்டதாக அமைந்தது. முழுக்க வர்க்க நோக்கோடு உழைக்கும் மக்களை மையப்படுத்தி அமலாக்கப்படாத போதும், பிரபலமான வகையில் சமூக நீதி என்கிற நோக்கோடு எளிய மக்களின் ஒரு பகுதியை அது ஆசுவாசப்படுத்தியது. “ஒவ்வொரு லிபரல் அரசாங்கமும் நிர்பந்திக்கப்படும்போது மட்டுமே சமூக சீர்திருத்தச் சட்டங்களை அவை கொண்டு வரும்…..”. உழைக்கும் மக்களின் அப்படியான போராட்டங்களும் எதிர்வினைகளுமே இன்றுவரை எளிய மக்களை பாதுகாக்கின்ற சட்டங்களையும் ஆணைகளையும் சாத்தியமாக்கியுள்ளன.

மாநில அரசின் கொள்கை மாற்றம்

“ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்பதாகவே ஆரம்பக்கால நடவடிக்கைகள் துவங்கின. கொள்கை ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள் ஏழைகளின் சிரிப்பை பறித்தது. குறிப்பாக 1970களின் மத்தியில் சர்வதேச நிதியத்தின் நிதி பங்களிப்பு குடிசை பகுதிகள் மேம்பாடு குறித்த கொள்கை திட்டங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1975இல் தமிழகத்திற்கு உலக வங்கி நிதி பங்களிப்பு செய்தது. குடிசை பகுதிகள் மேம்பாட்டிற்காக 240 லட்சம் டாலரை நிபந்தனைக்குட்பட்ட கடனாக உலக வங்கி வழங்கியது. நிபந்தனையின் பகுதியாக அரசு கட்டிக் கொடுக்கும் வீடுகளுக்கு பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கும்படி கூறியது. தற்போது வரை இந்த உலக வங்கியின் கைகள் மக்களின் பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுப்பதற்கான துவக்கப் புள்ளியாக அமைந்தது. “மெட்ராஸ் நகர்புற மேம்பாட்டு திட்டம் 1இல் (1971) கொள்கை ரீதியான ஒரு மாற்றத்தை உட்கொண்டது. இதில் பயன்பாட்டாளர் பங்களிப்பு என்கிற வகையில் பணத்தை திரும்பப் பெறுதல் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது” என்கிறது 1982இல் வெளியான உலக வங்கி அறிக்கை. இதன் விளைவாக ஏழை எளிய மக்கள் வாடகை என்பதாகவோ, மேம்பாட்டிற்கான கட்டணம் என்றோ, பயன்பாட்டு கட்டணம் என்கிற வகையிலோ, பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உருவானது. இது மக்கள் மத்தியில் எதிர்வினையை உருவாக்கக்கூடும். அது ஆட்சிக்கு எதிராக திரும்பும் என்கிற சிறு அச்சம் ஆட்சியாளர்களுக்கும் உண்டு. ஆனால், இவ்வாறான கட்டணங்களை வசூலிக்காவிட்டால், தங்களின் நிதி பங்களிப்பை இழக்க வேண்டிவரும் என்றும், பணத்தை வசூலிக்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கூடுதல் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும், உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. கட்டணமில்லா குடியிருப்பு வசதி மற்றும் மேம்பாடு என்பதாக இருந்த குடிசை பகுதி கொள்கை நிலையை உலக வங்கியின் தலையீடு மாற்றியமைத்தது. பல்வேறு நேரடியான மற்றும் மறைமுக காரணங்களால் அதை ஏற்று, ஆட்சியாளர்களும் அதற்கேற்ற வகையில் கொள்கை திட்டங்களை மாற்றி அமைத்தனர். எளிய மக்களிடம் கட்டணம் வசூலிப்பதும் அரசின் பங்களிப்பை குறைப்பதும் அவர்கள் பேசிய சமூக நீதிக்கும் எதிரானது என்பது வெளிப்படை.

இதற்கு பிறகு வந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு புதிய கொள்கை திட்டத்திற்கு தன்னை முழுமையாக உட்படுத்திக் கொண்டது. திமுக ஆட்சியில் இருந்தபோது, அதனை எதிர்ப்பதற்கும், அந்த ஆட்சியை வீழ்த்தும் செயல்பாட்டிற்கும், ஒன்றிய அரசுடன் இணக்கம் பாராட்டிய அதிமுக, ஆட்சிக்கு வந்தவுடன் ஒன்றிய அரசின் கொள்கை திட்டத்திலும் தன்னை இணைத்துக் கொண்டது. மாநில நலன், தமிழ் நிலம் என்றெல்லாம் பேசிவந்த தமிழக அரசியல் களம் இந்த காலகட்டத்தில் மேலும் அமைதியானது. 1980களில் சர்வதேசிய நிதியத்தின் நிதியை ஏற்றுக் கொண்டது. உலக வங்கி கூறியபடி குடியிருப்புக்களை மேம்படுத்த அரசு செய்த செலவீனங்களை குறைத்துக் கொண்டு, மக்கள் செலுத்த வேண்டிய பயன்பாட்டு கட்டணத்தை அதிகரித்தது. ஏழைகளுக்காகவே வாழ்வதாக தனது படங்களில் நடித்ததின் விளைவாக மக்கள் மத்தியில் பெரிய பிம்பத்தை ஏற்படுத்திய எம்ஜிஆர் ஆட்சி காலத்தில்தான் இவையெல்லாம் நிகழ்ந்தது. உலக வங்கியின் பரிந்துரைகள்படி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் செயல்பட துவங்கியது. இக்காலத்தில்தான் முந்தைய 240 லட்சம் டாலர் கடன் என்பதை கடந்து 3,000 லட்சம் டாலர் கடனை சர்வதேச நிதியம் வழங்கியது. இதுவும் நிபந்தனைக்குட்பட்ட கடன் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. இதைத்தொடர்ந்து 1990களில் தாராளமயத்தை உள்ளடக்கிய புதிய பொருளாதார கொள்கையை இந்திய அரசு அமலாக்கியது, மேலும் உழைக்கும் மக்களின் குடியிருப்பு பிரச்சினையை சிக்கலாக்கியது. தற்போது தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் என்பது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றம் கண்டுள்ளது. அது பெயர் மாற்றம் மட்டுமல்ல; அதன் உள்ளடக்கமும் மாறிவிட்டது. தனியார் பங்களிப்பு, அரசின் பங்களிப்பு குறைப்பு, பராமரிப்பு பணியிலிருந்து வாரியம் வெளியேறுவது, மக்களிடம் பயன்பாட்டு கட்டணத்தை கூடுதலாக பெறுவது என்று அதன் முழுமையான சமூக நோக்கு சிதைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி எனும் திராவிட சித்தாந்தம் இங்கு கடுமையாக பாதிக்கப்படுகிறது. தனியார்மயத்தை ஆதரிப்பதும், அதனை அமலாக்குவதும், எளிய மக்களை சிக்கலுக்கு உள்ளாக்கும். அது சமூகநீதிக்கு எதிரான அப்பட்டமான செயல்பாடுதான் என்பதை அனுபவங்கள் நிருபிக்கின்றன.

புதிய பொருளாதார கொள்கை அமலாக்கப்பட்ட காலத்திலும், அதற்கு பின்னரும், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகள்தான் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் மாறி மாறி இருந்துள்ளன. இதே காலக்கட்டத்தில் ஒன்றிய அரசுடன் இரு கட்சிகளும் உறவு பாராட்டி வந்துள்ளன. திமுக கணிசமான காலம் ஒன்றிய ஆட்சியில், அமைச்சரவையிலும் பங்கேற்றுள்ளது. பொதுத்துறையை விற்க நேரும் தருணங்களில், சில எதிர்ப்புகளை தெரிவித்ததை தவிர, தனியார்மயத்தையும், தாராளமயத்தையும் உள்ளடக்கிய உலகமயமாக்கலின் புதிய பொருளாதார கொள்கைகளை இவ்வரசுகள் எதிர்த்ததில்லை. இது மாநில அரசில் அவர்கள் மேற்கொண்ட கொள்கை மாற்றங்களிலும் வெளிப்பட்டது. அது குடியிருப்பு பிரச்சினையிலும் தாக்கத்தை செலுத்தியது.

வளர்ச்சித் திட்டங்கள் அனைத்திலும் தனியார் பங்களிப்பு பிரதானமாக்கப்பட்டுள்ளது. அரசின் பங்களிப்பு வெட்டி சுருக்கப்பட்டது. இக்காலத்தில் குடிசை பகுதிகள் மேம்படுத்துவதற்கு பதிலாக அம்மக்களை நகரத்தை விட்டு அகற்றுவதற்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குறிப்பிட்ட கட்சியின் கோட்டை, இங்குள்ள வாக்குகள் இன்னாருக்குத்தான் என்றில்லாமல் இம்மக்களின் வாக்கு செலுத்தும்முறை மாற்றம் கண்டு விட்டதும், எனவே, அவர்கள் மீதான கவனமும், அவர்களை அங்கேயே தக்க வைக்க வேண்டும் என்கிற தேவையும், ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனது.

குடிசை மக்கள் குடியிருக்கும் இடம் சுகாதாரமாக இல்லை; குடிநீர் சுத்தமாக இல்லை; கழிப்பறை இல்லை; வீடுகள் காற்றோட்டத்துடன் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை என்று பிரதானமாக பேசப்பட்டது. எனவே, இவற்றை அங்கு ஏற்படுத்திக் கொடுப்பது முதன்மையாக பேசப்பட்டது. அப்புறப்படுத்துதல் என்பது இரண்டாவதாக இருந்தது. இன்று தனியார் பங்களிப்பு அதிகரித்தவுடன் புதிய வகையில் இந்த விவாதங்கள் திட்டமிட்ட வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படியான சூழலில், அவர்கள் அங்கு வாழ்வது ஆபத்தானது என்பதாக இருந்த விவாதம், கூவம் கரையோரம் அவர்கள் வாழ்வது அந்த ஆற்றை சீரழிக்கிறது என்றும், அந்த ‘ஆக்கிரமிப்பே’ சுற்றுச்சூழலை சீர்கெடுக்கிறது; இது சமூகத்திற்கே ஆபத்து என்று மாற்றப்பட்டது. கொசஸ்தலை ஆறும், அடையாறு ஆறும், கூவம் ஆறும் மாசு அடைந்ததற்கு அந்த மக்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை. மோசமான நகர்ப்புற திட்டமிடல், எவ்வித சுத்திகரிப்பும் செய்யாமல் கழிவுகளை கலப்பது போன்ற ‘வளர்ச்சிப் போக்குகளே’ காரணமாகும். ஆனால், கரையோரம் வாழும் மக்கள் மீது மிக எளிதாக பழி சுமத்தி மக்களின் பொதுப்புத்தியில் நச்சுக் கருத்தை புகுத்தி, சமூக ஒப்புதலுடன் அவர்களை நகரை விட்டே விரட்டியடிக்கிறது அரசு. இப்படியான பகுதிகளில் இருந்த மக்களை அகற்றிவிட்டு, அவை எதுவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கோடு பராமரிக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். அவ்விடங்கள் தனியாரின் கைகளுக்கு மாற்றப்படுவதும், பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிகவளாகங்கள் (மால்கள்) என கட்டிடங்களின் தொகுப்பாகவே மாறுகிறது. சென்னையில் பங்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று கூறி கரையோரம் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால், அரசின் ஆக்கிரமிப்பில் அந்த கால்வாயில் தூண்கள் போட்டுதான் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கூவம் ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த மக்கள் இதேபோல் அப்புறப்படுத்தப்பட்டனர். அதே கூவத்தின் இடையில் தூண்களைர் அமைத்துதான் மதுரவாயல் முதல் துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டம் அமையவுள்ளது. இதே கூவம் மற்றும் பக்கிங்காம் கரையோரம் இருந்த குடிசைகள் இடிக்கப்பட்ட நிலையில், பெரிய பெரிய தனியார் கட்டிடங்கள் இடிக்கப்படவில்லை. இப்படியான நிலையில் இவர்கள் முன்வைத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னவானது?

குடிசை பகுதிகள்தான் அனைத்து குற்றச் செயல்களுக்கும் ஆதாரமான இடம் என்று குறிப்பிடப்பட்டு, இது சுற்றுப்புற மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது என்கிற கருத்தும் பரவலாக்கப்பட்டது. சாராயம் காய்ச்சுவதை பார்க்கும் பார்வையோடு பீர் தொழிற்சாலை மற்றும் மது உற்பத்தி செய்யும் உரிமையாளரை பார்ப்பதில்லை. கஞ்சா உற்பத்தி எந்த குடிசை பகுதிகளிலும் நடக்கவில்லை. கப்பல்கள் மூலமாகவும், விமானம் மூலமாகவுமே கடத்தல்கள் நடக்கிறது. இந்த கனவான்கள்தானே உண்மையில் குற்றவாளிகள். ஆனால் பழி என்னவோ குடிசை பகுதி மக்கள் மீதுதானே?

நகரத்தைவிட்டு விரட்டப்பட்டவர்கள்

இயற்கை பேரிடர்களை காரணம் காட்டியும், குடிசைபகுதி மக்கள் தங்களது குடியிருப்புகளிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக, சுனாமி காலத்தில் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புகிறோம் என்கிற பெயரில், கடற்புற மக்கள் நிரந்தரமாகவே வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சென்னை துரைப்பாக்கத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வரிய குடியிருப்பு பகுதியில் சுனாமி குடியிருப்பு என்ற பெயரில் குடியிருப்புகள் உள்ளது. சென்னையின் மைய பகுதியிலிருந்து நகரத்தின் விளிம்பிற்கு துரத்தப்பட்ட மக்களின் வாழ்விட பிரச்சனை மேலும் கூடுதலான சிரமத்திற்குள் அவர்களை தள்ளியுள்ளது. துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியில் மட்டும் சுமார் 20ஆயிரம் வீடுகள் ஒரே இடத்தில் குவியலாக உள்ளது. இக்குடியிருப்பு சென்னையின் மையத்திலிருந்து பல பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  அங்கிருந்து மேலும்  10 கிலோ மீட்டர் தெலைவில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில் சுமார் 27,000 குடியிருப்புக்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் அனைவரும் சென்னையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விரட்டப்பட்டவர்களே. இவர்களுக்கான வேலை, கல்வி, சுகாதாரம் வாழ்வாதாரம் என எல்லாமும் கேள்விக்குறியாகவே உள்ளது. எந்த சுகாதார சீர்கேட்டிலிருந்து இம்மக்களை பாதுகாக்கப் போவதாக கூறி அரசு இவர்களை இவ்வளவு தெலைவில் விரட்டியடித்த்தோ அங்கு எவ்வித நலமும், சமூக பாதுகாப்பும் இல்லாமல் வசிக்கின்றனர்.

“முதலாளித்துவ வர்க்கம் நடைமுறையில் குடியிருப்பு பிரச்சினைகளை எப்படி தீர்க்கிறது என்பதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாகும். முதலாளித்துவ உற்பத்தி முறையில் நம்முடைய தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புக்கள் நோயின் பிறப்பிடங்களாக விளங்குகிறது. அத்தகைய கேவலமான பொந்துகள் மற்றும் நிலவறைகளை முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஒழிக்கப்படுவதில்லை. அவை வேறெங்காவது மாற்றப்படுபடுகிறது.” என்கிற எங்கெல்சின் வார்த்தைகளின் உண்மையை, சென்னையை விட்டு விரட்டப்பட்டுள்ள மக்களின் தற்போதைய குடியிருப்புகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

சென்னை வெள்ளதின்போதும் அதை தொடர்ந்தும் பல்வேறு குடியிருப்புக்கள் அகற்றப்பட்டன. இங்குதான் குடிசை பகுதிகளை கடந்து அடுத்த நிலையில் உள்ள பட்டா இல்லாத குடியிருப்புகளில் வாழும் மக்கள் குடியிருப்புக்களின் மீது அரசின் கைகள் நீள்கிறது. மயிலாப்பூர் கோவிந்தசாமி நகர் குடிசைமாற்று வாரியத்தால் குடியிருப்பு பகுதி என வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு பொதுநல வழக்கை பயன்படுத்தி அரசு நிர்வாகம் குடியிருப்புகளை அகற்றுகிறது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள குடியிருப்புகளுக்கு ஆட்சியர் பரிந்துரைத்த பிறகும், மேய்ச்சல் புறம்போக்கு நிலம் என்று கூறி குடியிருப்புகளை அகற்ற துடிக்கின்றனர். பயன்பாடற்ற நீர்நிலை பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர். அரசு நீர்நிலை என வரையறுத்து கரைகளை கட்டிய பிறகும், பொதுப்பயன்பாட்டில் உள்ள நிலங்களை நீர்நிலை என வகைப்படுத்தி நீதிமன்றங்களின் துணையோடு அகற்ற முயற்சிக்கின்றனர். அடுத்தகட்டமா அரசே ஒதுக்கிய நிலம், குடிசைமாற்று வாரியத்தால் குடியிருப்பு பகுதி என வரையறுக்கப்பட்ட நிலத்தில் வசிப்போரையும் அகற்ற முயற்சிக்கின்றனர். இதற்கு சாதகமாக நீதிமன்றங்களை பயன்படுத்திக் கொள்ளும் ஆட்சியாளர்கள் தங்களின் வர்க்க நிலையை எடுத்துக் காட்டுகின்றனர்.

“முதலளித்துவ உற்பத்தி முறை நீடிக்கின்ற வரை குடியிருப்பு பிரச்சினை, அல்லது தொழிலாளர்களை பாதிக்கின்ற, வேறு சமூகப் பிரச்சினைனையை தனியாக தீர்க்க முடியும் என்று நம்புவது முட்டாள்தனமே.” “பாட்டாளி வர்க்கம், அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்த உடனே பொதுநன்மையைப் பற்றிய அக்கறையினால் தூண்டப்பட்டுகின்ற நடவடிக்கைகள்  நிறைவேற்றப்படும். (உடைமை வர்க்கத்திடமிருந்து சொத்துக்கள் பறிக்கப்பட்டு உழைக்கும் மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள்) இன்றைய அரசு செய்கின்ற உடைமை பறித்தல்கள், தங்குமிட ஆணைகளைப் போல், அதுவும் சுலபமாக நிறைவேறும்.” என்கிற எங்கெல்சின் வார்த்தைகளே உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்கான போர்குரலாகும்.

——————————————————————————————————————–

CITY and Community என்கிற ஆங்கில இதழில் டிசம்பர் 2019இல் Pranath Diwakar எழுதியுள்ள A Recipe for Disaster: Framing Risk and Vulnerability in Slum Relocation Policies In Chennai, India. எனும் கட்டுரையில் உள்ள தரவுகளை அடிப்படையாக கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

ஐஃபோன்: லாபம் எங்கிருந்து குவிகிறது?

  • அபிநவ் சூர்யா

ஐஃபோன், ஐபேட், மேக்புக் போன்ற பிரபல மின்னணுக் கருவிகளை விற்பனை செய்யும் ஆப்பிள் நிறுவனமானது, இன்று சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரும் நிறுவனமாக திகழ்கிறது. அது மட்டும் அல்லாது, இந்நிறுவனம் தான் தொழில்நுட்ப ஆய்விலும் உலகின் மிக உயரிய நிறுவனமாக கருதப்படுகிறது. இந்நிறுவனம் விற்கும் ஐஃபோனின் ஒவ்வொரு புதிய வெளியீட்டையும் வாங்குவதற்காக அமெரிக்காவில் பலர் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை பார்க்கிறோம். இந்த கலாச்சாரம் ஒரு பகுதி இந்தியர்களுக்கும் தொற்றிக்கொண்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த இந்த ஆப்பிள் நிறுவனத்தின், விற்பனைப் பண்டங்கள் அனைத்தும் உற்பத்தி ஆவது சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தான். இது போன்ற பன்னாட்டு மின்னணுக் கருவி நிறுவனங்களின் உற்பத்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே இயங்கி வரும் பல நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ளும் ஆப்பிள் நிறுவனம், தன் “ஜாம்பவான்” பிம்பத்தை பாதுகாத்துக்கொள்கிற  அதே வேளையில், வளரும் நாடுகளின் தொழிலாளர்களின் நிலை குறித்து கொஞ்சமும் கவலையற்று, கடும் சுரண்டலின் வாயிலாக தன் லாப வெறியை தீர்த்துக் கொள்கிறது.

ஆப்பிள் நிறுவனத்திற்கான உற்பத்தியை மேற்கொள்ளும் தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு சொந்தமான ஆலை காஞ்சிபுரத்தில் உள்ளது. அண்மையில் 3,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் மிக மோசமான பணிச் சூழல் மற்றும் தங்குமிடம் காரணமாக ஸ்ரீபெரும்புதூரில் போராட்டம் நடத்தி சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையை ஸ்தம்பிக்க வைத்தார்கள். இதற்கு ஓராண்டு முன்பு தான் ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்துள்ள ‘விஸ்ட்ரான்’ என்ற நிறுவனம், பெங்களூரு அருகே உள்ள தன் ஆலையின் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்க,  தொழிலாளர்கள் கொதித்தெழுந்து, பின் அது பெரும் கலவரமாக வெடித்தது. இது போன்ற நிலைமை, ஆப்பிள் நிறுவனத்தால் மட்டும் ஏற்படுவதில்லை என்பதும் உண்மை. நோக்கியா நிறுவனத்தோடு ஒப்பந்தம் வைத்திருந்த ஃபாக்ஸ்கான், 2014-15இல் தன் ஸ்ரீபெரும்புதூர் ஆலைகளை திடீரென மூடி, பத்தாயிரத்திற்கும் மேலான தொழிலாளர்களை நடுத் தெருவில் நிறுத்தியது.

இப்படிப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலையும், அதன் பின்னணியில் உள்ள முதலாளித்துவ-ஏகாதிபத்திய செயல்பாடுகளையும் நாம் புரிந்து கொள்வது அவசியம்.

ஆப்பிளின் சுரண்டல் வேட்டை

ஆப்பிள் நிறுவனத்தின் சுரண்டல் வேட்டை இந்தியாவில் மட்டுமல்லாது, பல்வேறு வளரும் நாடுகளிலும் நிகழ்கிறது. சீனாவில் ஷென்சென் மற்றும் ஷெங்ஷூ ஆகிய நகரங்களில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான்  ஆலைகளில் சுமார் 12லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம், மிகக் கடுமையான சூழலில் மிக அதிக நேரம் வேலை வாங்கியதால், 2011ல் பதினான்கு தொழிலாளர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள். இந்த சம்பவம் சீன நாட்டையே  உலுக்கியது. அதன் பின் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மேல் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தொழிலாளர்கள் ஊதியம் உயர்த்தப்பட்டது. அதன் பின், ஃபாக்ஸ்கானும், இதர ஆப்பிள் ஒப்பந்த நிறுவனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உற்பத்தியை இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளுக்கு நகர்த்த தொடங்கின. இந்த வளரும் நாடுகளில் நிலவும் குறைவான கூலி, தொழிற்சங்கங்களுக்கு எதிரான சட்டங்களையும் பயன்படுத்தி, மிக மோசமான சூழலில் தொழிலாளர்களை பணியில் அமர்த்தி கொள்ளை லாபம் ஈட்டுகிறார்கள். தொழிலாளர்கள் ஓரளவு நல்ல வருமானம் பெற வேண்டுமானால் ‘ஓவர் டைம்’ (Overtime) மிக அதிகமாக புரிய வேண்டும். அவர்கள் உழைப்பு சக்தியை மறு உற்பத்தி செய்து கொள்ள கூட முடியாத அளவில் தான் கூலி விகிதம் உள்ளது.

ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்காக ஆப்பிரிக்காவில் இருந்து கனிம வளங்கள் பெறப்படுகின்றன. அந்த சுரங்கங்களில் அடிமை நிலையில் பணி புரியும் ஊழியர்கள் ஒட்டச் சுரண்டப்படுகிறார்கள். ஆபத்தான சூழலில் குழந்தைத் தொழிலாளர்களும் கூட மிக சொற்ப ஊதியத்திற்கு பணியாற்றுகிறார்கள்.

இப்படிப்பட்ட நவதாராளமய சுரண்டலை நியாயப்படுத்தி பல முதலாளித்துவ அறிஞர்களும் பேசுகிறார்கள். அதிலும், பெண்களை பணி அமர்த்துவதன் மூலம் “பெண் விடுதலை”க்கு வழிவகுப்பது போல வாதிடுகின்றனர். ஆனால் அண்மையில் ஸ்ரீபெரும்புதூரில் நாம் அதையா பார்த்தோம்? அடித்தட்டு மக்களின் மோசமான  வாழ்க்கை நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, மோசமான வாழ்க்கைச் சூழலில், கடும் வேலைச் சுமையையும் புகுத்தி, பணி இடம், விதிகள், பெண்கள் – மகப்பேறு நல சட்டங்கள் எதையுமே பின்பற்றாமல், அற்பக் கூலிக்கு (மாதம் ரூ.12,000ற்கும் குறைவு) சுரண்டுவதன் மூலம், தன் லாபத்தை கூட்டிக் கொள்ளத்தான் பன்னாட்டு மூலதனம் முயற்சிக்கிறது.

ஆனால் இவர்கள் அனைவருமே ஆப்பிளோடு ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனம் மூலம் தான் பணி அமர்த்தப் படுகிறார்கள் என்பதால் ஆப்பிள் நிறுவனம் ஏதோ தன் கையில் எந்த கறையும் படியவில்லை என பாவிக்கின்றது. ஆனால் அதன் கொள்ளை லாபமும், சந்தையில் வகிக்கும் எங்கிருந்து வருகிறது?

தொழிலாளர்கள் கூலியை விட லாபம் எத்தனை மடங்கு அதிகம் என்பதை “சுரண்டல் விகிதம்” (Rate of Exploitation) என மார்க்ஸ் வரையறுத்தார். ஆப்பிள் நிறுவனத்துடைய சுரண்டல் விகிதம் சுமார் 2500% ஆகும். அதாவது, ஆப்பிள் நிறுவனத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் உழைக்கும் அனைவரும் தங்கள் சொந்த வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக உழைக்கும் நேரம் போக, 25 மடங்கு அதிக  நேரம் உபரி ஈட்டித் தருவதற்காக உழைக்கின்றனர். இதை “கொள்ளைச் சுரண்டல்” என்றும் கூட சில மார்க்சிய அறிஞர்கள் வரையறுக்கின்றனர்.

குறைந்த கூலியில் சுரண்டல்

நவதாராளமய காலத்திற்கு முன்பு மேற்கத்திய நாடுகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் புகழ் என்பது, தங்கள் தாய் நாட்டில் எத்தனை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துகிறார்கள் என்பதன் மூலம் கணிக்கப்பட்டது. ஆனால் இன்றோ, மூன்றாம் உலக நாடுகளில், தங்கள் உற்பத்தியை திறம்பட மாற்றியமைப்பதே விதந்தோதப்படுகிறது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும், சோசலிச சக்திகளின் நலிவும் காரணமாக, உலக தொழிலாளர் இயக்க வலிமை குன்றியது இதற்கான காரணங்களில் ஒன்றாகும். கணினி நுட்ப வளர்ச்சியும், தொலைத்தொடர்பு வளர்ச்சியும் காரணமாக உற்பத்தியை உலகின் பல இடங்களிலும் நடத்தலாம் என்ற நிலைமை உருவானது. பல ஆண்டுகளாக, பொருளாதார மந்த நிலையில் சிக்கி தவித்த ஏகாதிபத்திய முதலாளித்துவம், இந்த புதிய சூழ்நிலைகளை பயன்படுத்தி, கூலி விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் உற்பத்தியை மாற்றியமைத்ததன் மூலம் லாப விகிதத்தை உயர்த்திக்கொண்டது.

சர்வதேச நிதி மூலதனத்தை தங்கள் நாட்டில் ஈர்ப்பதற்கான போட்டியில் வளரும் நாடுகள் ஈடுபட்டன. அதற்காக, இந்நாடுகளில் தொழிலாளர் நல சட்டங்கள் நலிவடையச் செய்யப்பட்டன, சுற்றுச் சூழல் பாதுகாப்பு காற்றில் விடப்பட்டது. 21ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து வெறும் பத்து ஆண்டுகளில் (பண வீக்கம் கணக்கில் கொண்ட பின்) தொழிலாளர் ஊதியம் மும்மடங்காக உயர்ந்த சீனாவிலும் கூட, நாட்டின் மொத்த செல்வ உருவாக்கத்தில், தொழிலாளர் ஊதியத்தின் பங்கு குறையவே செய்தது. இதர வளரும் நாடுகளின் நிலை குறித்து கேட்கவே வேண்டாம்.

இந்த பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் அந்நிய நேரடி முதலீட்டின் வழியாக நுழைந்தன. 2013இல் முதல் முறையாக வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளுக்குச் செல்லும் அந்நிய நேரடி முதலீடு அதிக அளவை எட்டியது. ஆனால் அண்மைக் காலங்களில் இந்த நிலையும் மாறி வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் உள்ள ஒப்பந்த நிறுவனங்களை உற்பத்தி மேற்கொள்ள செய்து, ஏற்றுமதி மூலம் பண்டங்களை வாங்கிக் கொள்கின்றன. இதனால் தொழிலாளர் சுரண்டலின் பழி முழுவதும் மூன்றாம் உலக நாடுகளையும், அந்நாட்டு நிறுவனங்களையும் மட்டுமே சேர்வதாக வியூகம் செயல்படுகிறது.

எல்லா காலங்களிலும் (மார்க்ஸ் மூலதனம் எழுதிய காலம் முதலே) சர்வதேச முதலாளித்துவ சுரண்டலுக்கு முன் மாதிரியாக திகழ்ந்து வரும் ஜவுளி உற்பத்தி நிறுவனம் தான் இப்படிப்பட்ட ஒப்பந்த நிறுவன அடிப்படையிலான உற்பத்தி மாற்றத்தை துவங்கி வைத்தது. பின்னர் வாகன உற்பத்தி நிறுவனங்களும் படை எடுத்தன. இன்று மின்னணு கருவிகள் உற்பத்தி நிறுவனங்கள் இதில் முன்னிலை வகிக்கின்றன.

வர்த்தகம் – தொழில்நுட்பம் – சுரண்டல்

காலனிய ஆதிக்க காலம் முதல், ஏகாதிபத்திய நாடுகள் வளரும் நாடுகளை சுரண்டுவதற்காக முக்கிய உத்தி ஒன்றினை கையாண்டு வருகின்றன. வளரும் நாடுகளில் நிலவும் இயற்கை வளங்களை கொண்டு உற்பத்தியாகும் பண்டங்களை (பருத்தி, தேயிலை, கனிம வளம்) பெற்றிடும் ஏகாதிபத்திய நாடுகள், அவைகளை பயன்படுத்தி ஆலை உற்பத்தி மூலம் உருவாக்கிய பண்டங்களை, குறைந்த விலைக்கு கொண்டு வந்து வளரும் நாடுகளின் சந்தையில் குவித்திடுவர். இதனால் வளரும் நாட்டு தொழில் துறை அழிந்து போகும். இதன் விளைவாக வளரும் நாட்டில் உற்பத்தி திறன் உயராமல் இருக்கும். எனவே வளரும் நாடுகளில் கூலி விகிதம் குறைவாகவே இருக்கும். இதன் மூலம் வளரும் நாட்டு மக்கள் உழைப்பை எளிதாக சுரண்டி, இயற்கை வளங்களை மலிவு விலையில் அபகரித்துக் கொள்ள முடியும்.

ஆனால் இன்றோ உற்பத்தி அனைத்தும் வளரும் நாடுகளுக்கு மாறுவதை பார்க்கிறோமே! இது எப்படி? இங்கு தான் நாம் ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை கவனிக்க வேண்டும். இப்போதும், வளரும் நாடுகளை நோக்கி உற்பத்தி வருவதற்கு காரணம், கூலி விகிதம் குறைவாக இருப்பதுதான். ஏகாதிபத்திய சூழலில், வளரும் நாடுகளில் உள்ள நிறுவனங்களுடைய பிழைப்பு, உலக மதிப்புச் சங்கிலியில் (Global Value Chain) தங்களை பிணைத்துக் கொள்வதைப் பொறுத்ததாகவே உள்ளது. எனவே ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதில் போட்டி உருவாகிறது. இந்த கடும் போட்டியின் காரணமாக தொழிலாளர்களுடைய ஊதியத்தை குறைந்த நிலையில் வைக்க ஒவ்வொரு நாட்டு முதலாளிகளும் முயல்கின்றனர்.

இவ்வாறு நடக்கும் உற்பத்தியிலும் கூட, கடும் உழைப்பைச் சார்ந்த (Labour intensive) பகுதிகள் மட்டும் தான் வளரும் நாடுகளை நோக்கி வருகின்றன. முன்னேறிய கருவிகள், தொழில்நுட்பங்கள் சார்ந்த உற்பத்தி வருவது இல்லை. எனவே வளரும் நாடுகளில் உற்பத்தி திறன் உயர்வதில்லை. எந்திரங்கள் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் வழியாக வளரும் நாடுகளின் உற்பத்தி திறன் தொடர்ந்து மேம்படுவதில்லை.

ஆப்பிள் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களின் பெயரில் ஒரு உற்பத்தி ஆலை கூட கிடையாது! பிறகு இந்த நிறுவனங்கள் எதை உற்பத்தி செய்கின்றன? எப்படி சந்தையின் உச்சத்தில் உள்ளன? இவை உற்பத்தி செய்வது அனைத்துமே மின்னணு கருவிகளின் வடிவமைப்பு (Design), பிராண்ட் (Brand), மற்றும் அறிவுசார் காப்புரிமம். இவைகளை மட்டுமே வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம், வளரும் நாடுகளில் சொற்ப விலைக்கு உற்பத்தியை நிகழ்த்தி, லாபம் ஈட்டுகிறது. பிராண்ட் மற்றும் அறிவுசார் காப்புரிமங்களை வைத்திருப்பதன் வாயிலாக, சந்தையில் போட்டியில்லாத சூழலை உருவாக்கி, ஏகபோக நிலைமையில், கூடுதலான லாபம் குவிக்கிறது.

ஆனால் இந்த அறிவுசார் காப்புரிமம் அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் முழுமையாக ஆப்பிள் உருவாக்கியதா? அதுவும் இல்லை. அவர்கள் பயன்படுத்தும் நுட்பங்களான இணையதளம் (Internet), ஜிபிஎஸ், தொடும் திரை (Touch Screen), பேச்சு கணிப்பான் (Siri) போன்ற தொழில்நுட்பங்கள் எல்லாம் அரசு ஆய்வகங்களிலும், மக்கள் பணத்தில் இயங்கும் பல்கலைக்கழகங்களிலும் உருவாக்கப்பட்டவை. இவைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கருவிகளுக்கு, அறிவுசார் காப்புரிமத்தை பன்னாட்டு நிறுவனங்கள் கோரிட, ஏகாதிபத்திய அரசுகள் அனுமதித்து உள்ளன.

உற்பத்தி ஆலைகளை வைத்திருந்த மேலை நாட்டு நிறுவனங்கள், முன்பு, வளரும் நாடுகளின் வளத்தையும் மக்கள் உழைப்பையும் சுரண்டியது போல, இன்று அறிவுசார் காப்புரிமம் வைத்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் தொழிலாளர்களுடைய உழைப்பை மலிவான கூலிக்கு சுரண்டுகின்றனர்.

வர்த்தகம் – தொழில்நுட்பம் – சுரண்டல்

இந்த நவீன ஏகாதிபத்திய சுரண்டலுக்கு, சர்வதேச வர்த்தகமும், தொழில்நுட்பமும் முக்கிய பங்காற்றுகின்றன. குறைவான ‘மதிப்புக்கூட்டல்’ (Value Added) செய்யும், கடும் உழைப்பு தேவைப்படும் உற்பத்திகள், பணிகள் மட்டுமே வளரும் நாடுகளுக்கு வருகின்றன என்பதை முன்பே பார்த்தோம். அதுமட்டுமல்லாமல், கூலியின் அளவுக்கும், வளங்களின் இருப்புக்கும் ஏற்றவாறு பல நாடுகளிலும் உற்பத்தி சிதறியிருப்பதால், பண்டத்தின் சிறு பாகத்தை மட்டுமே குறிப்பிட்ட வளரும் நாட்டில் மேற்கொள்கின்றனர். (உதாரணமாக: ஐபோனுக்கான இடுபொருட்கள் உற்பத்தியும், உதிரி பாக உற்பத்தியும் 30 நாடுகளில் நடக்கின்றன). சர்வதேச வர்க்கத்தகத்தில் 60 சதவீதம் இடைநிலைப் பாகங்களுடைய பரிவர்த்தனையாக இருக்கிறது. சர்வதேச வர்த்தகத்தில் 80 சதவீதம் பன்னாட்டு நிறுவனங்களின் கைவசம் இருக்கிறது. உற்பத்தி இவ்வாறு சிதறிக் கிடைக்கின்ற காரணத்தால், எந்தவொரு நாடும், உதிரி பாக உற்பத்தியில் எவ்வளவு முன்னேறினாலும், மொத்த பண்டத்தின் உற்பத்தியை அறிந்துகொள்ள முடியாது. உற்பத்தியை கற்றுக்கொண்டு, அதே போன்ற பண்டத்தை தங்கள் சொந்த நாட்டில் மேற்கொள்ள முடியாது. இவ்விதத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் பாதுகாக்கப்படுகிறது.

காலனி ஆதிக்கம் நிலவிய காலத்தில், ஏகாதிபத்திய நாடுகள் உற்பத்தி ஆலைகளை கட்டுப்படுத்தி வந்தன. இன்று ஏகாதிபத்திய நாடுகள் தொழில்நுட்பத்தையும் உற்பத்தி திறனையும் கட்டுப்படுத்துகிறார்கள். மேலைநாடுகளே பெரும்பான்மையான தொழில்நுட்பத்தை தங்கள் வசமாக வைத்துள்ளார்கள். அதன் மூலம் உற்பத்தித் திறனை மிக அதிகமாக பராமரிக்கிறார்கள். எனவே வளரும் நாடுகளில் உள்ள நிறுவனங்கள், தங்களின் போட்டியிடும் திறனை உயர்த்த என்ன செய்ய முடியும்? ஒரே வழி, தொழிலாளர்கள் கூலியை குறைந்த நிலையில் வைத்து, சுரண்டல் மூலம் மிக அதிக உபரி ஈட்டுவது தான். இப்படி வளரும் நாட்டு நிறுவனங்கள் ஈட்டும் உபரியில் ஒரு பெரும் பங்கை ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்கள் அபகரித்துக் கொள்கின்றன (எ.கா: ஃபாக்ஸ்கான் ஈட்டும் ஒவ்வொரு டாலர் லாபத்திற்கு ஆப்பிள் 40 டாலர்கள் லாபம் ஈட்டுகிறது).

ஆக, வளரும்-வளர்ந்த நாடுகள் இடையேயான வர்த்தகமானது, மேலளவில் சமமான வர்த்தகம் போல தென்பட்டாலும், வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்ப ஆதிக்கத்தின் காரணமாக, இது ஒரு சமநிலை அற்ற வர்த்தகமாகத் தான் திகழ்கிறது. வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கு ஈடு கொடுக்க வேண்டுமானால், வளரும் நாடுகளின் கூலி அளவு குறைவாகவும், சுரண்டல் கூடுதலாகவும் இருக்க வேண்டும். இந்த சுரண்டலின் உபரியை ஏகாதிபத்திய நாடுகள் அபகரித்துக் கொள்கின்றன.

அறிவியலற்ற பார்வை

இப்படிப்பட்ட தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வு நிலை தான் சமகால ஏகாதிபத்திய சுரண்டலுக்கு அடிப்படையாக உள்ளது. இதனை உணர்ந்த சீனா, மிக துல்லியமான அறிவியல்பூர்வமான வளர்ச்சிப் பாதையை தேர்வு செய்தது. அதன் காரணமாக இன்று தொழில்நுட்ப துறையில் மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் நிலைக்கு வளர்ந்து நிற்கிறது. இது அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் அடிப்படைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். அதனால்தான் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள், சீனா மீது தொடர் தாக்குதல் நிகழ்த்துகின்றன.

இந்தியாவிலும், மேற்சொன்ன தொழில்நுட்ப சார்பின் ஆபத்து உணரப்பட்டது. எனவே சுதந்திரத்திற்கு பின், வலுவான அரசு ஆதரவு பெற்ற ஒரு அறிவியல் வளர்ச்சி கட்டமைப்பை உருவாக்கி முன்னேற துவங்கியது இந்தியா. ஆனால் நவீன தாராளமய காலத்திலோ, தொழில்நுட்ப சுயசார்பு முற்றிலுமாக கைவிடப்பட்டது. இதனால் ஏகாதிபத்திய நாடுகளின் தொங்கு சதையாகவே இந்தியா மாறிப் போனது. 21ம் நூற்றாண்டில், “உயர் தொழில்நுட்ப” பண்டங்களை நாம்   ஏற்றுமதி செய்வதை விட பன்மடங்கு அதிகமாக இறக்குமதி தான் செய்து வருகிறோம் என்பதோடு, இந்நிலை மேலும் மோசம் தான் அடைந்து வருகிறது.

மோடி ஆட்சியின் காலத்தில், இந்த நிலை மேலும் மோசமடைந்துள்ளது. அறிவியல் அடிப்படையிலான சமூகத்தை கட்டமைப்பதற்கு பதிலாக, திரிபுகள் மற்றும் பொய்கள் அடிப்படையிலான அறிவியல், கணித, வரலாற்று கட்டுக்கதைகள் பரப்பப்படுகின்றன. இளைஞர்கள் மத்தியில் மத, பிரிவினைவாத கருத்துகளே  விதைக்கப்படுகின்றன. நாட்டின் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சியை வழி நடத்த வேண்டிய பல்கலைக்கழகங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து, இந்த கல்வி அமைப்புகள் காவிக் கூடாரமாக மாற்றப்படுகின்றன.

“மேக் இன் இந்தியா”, “தற்சார்பு” ஆகிய முழக்கங்களை வாய்ச் சவடால் மட்டும் விடும் மோடி அரசு, நம் பொதுத்துறைகளை விற்பதும், குத்தகைக்கு விடுவதும் காரணமாக பொருளாதார இறையாண்மையை கார்ப்பரேட்டுகளிடம் அடமானம் வைக்கிறது. சிறு குறுந்தொழில்கள் முடங்கும் நிலை உருவாகிறது. தொழிலாளர் நல சட்டங்களை அழித்தொழித்து, கூடுதலான ஏகாதிபத்திய சுரண்டலுக்கே வழிவகுக்கப்படுகிறது. மக்களும், அறிவுச் செல்வமும் தான் வளர்ச்சிக்கு முக்கியம் என்பதை அங்கீகரிக்க மறுப்பதன் காரணமாக, கார்ப்பரேட் நிறுவனங்களைச் சார்ந்து அடிவருடி அரசியல் செய்கிறது.

நிறைவாக

இந்த உலகமயமாக்கல் சூழலில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் தயாரிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ‘அப்டேட்’ விடுவதைப் போல, ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் முறைகளும் ‘அப்டேட்’ ஆகிக்கொண்டே போகின்றன. வளரும் நாடுகளின் குறைந்த கூலி தொழிலாளர்கள் கொண்டு இயக்கப்படும் சர்வதேச உற்பத்தி, சசுரண்டலை நவீனப்படுத்தி உள்ளது.

மூலதனத்தின் இந்த இயல்பு புதியது அல்ல. 1867இல் லாசேன் சர்வதேசம் மாநாட்டில் மார்க்ஸ் நிகழ்த்திய உரையில் இவ்வாறு குறிப்பிட்டார், “உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வரவோ அல்ல; மலிவான உழைப்பு உள்ள இடத்திற்கு உற்பத்தியை நகர்த்தவோ செய்கின்றனர். இந்த சூழலில் தொழிலாளர் வர்க்கம் தனது போராட்டத்தை வெற்றிகரமாக்கிட, தேசிய அமைப்புகள் சர்வதேசியத்தை தழுவ வேண்டும்”

பாட்டாளி வர்க்க சர்வதேச ஒற்றுமை கொண்டு, நம் தேசத்தை சூறையாடும் நயவஞ்சகர்களையும், நம் தொழிலாளர்களை கடுமையாக சுரண்டி கொழுக்கும் ஏகாதிபத்திய மூலதனத்தையும் வீழ்த்துவோம்!

ஆதாரம்:

  1. சுரண்டல் விகிதம் : ஐஃபோன் எடுத்துக்காட்டு – ட்ரைகான்டினன்டல் ஆய்வு கழகம்
  2. 21ம்  நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் – ஜான் ஸ்மித்
Prof. Prabath

பணவீக்க எதிர்ப்பு கொள்கையும், நவ தாராளமயமும்!

பேரா. பிரபாத் பட்நாயக்

Neo-Liberalism and Anti-Inflationary Policy

முதலாளித்துவ நாடுகளில் இருக்கும் மத்திய வங்கிகள் அனைத்துமே,  பணவீக்கம் அதிகரிக்கும் சூழ்நிலையை எதிர் கொள்வதற்காக, வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளார்கள்; அல்லது விரைவில் உயர்த்த இருக்கிறார்கள். பெருந்தொற்றினால் ஏற்பட்ட விளைவுகளில் இருந்து மீள்வதற்கே, உலக பொருளாதாரம் திணறுகிறது. அது தேக்க நிலையை நோக்கியும், அதிக வேலை இழப்புகளை நோக்கியும் சரிந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், உலக பொருளாதாரத்தை முன்னோக்கி உந்துவதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவின் பார்வை

அதேநேரத்தில், உலகின் பல நாடுகளுடைய மத்திய வங்கிகளுக்கும், உதாரணமாக உள்ள அமெரிக்க மத்திய வங்கி, வேலை இழப்பும் மந்த நிலையும் இருக்காது என்று மாறுபட்டுப் பேசியுள்ளது. வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடிய உத்தரவுகள், உண்மைப் பொருளாதாரத்தின் மீது குறைந்த தாக்கத்தையோ அல்லது குறுகிய கால பாதிப்பையோ மட்டுமே ஏற்படுத்தும்; பொருளாதார மீட்சியை அது பெரிதாக பாதிக்காது என்றும் அது கூறுகிறது. அவர்களின் இந்தப் பார்வை, அடிப்படையிலேயே குறைபாடான பின்வரும் காரணியால் உருவானது.

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோமி பவுல் குறிப்பிடும்போது, அமெரிக்கா தற்போது எதிர்கொள்ளும் பண வீக்கத்தை ஏற்படுத்துவது, ஊதியம் (Money Wage) உயர்வதால் ஏற்படும் அழுத்தமே என்கிறார். அதாவது மக்கள் பண வீக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள்; எனவே வட்டி விகிதத்தை உயர்த்துவதால், மக்களுக்கு பணவீக்கம் குறையப்போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறோம்; அது ஊதிய உயர்வினால் ஏற்பட்ட தாக்கத்திற்கு முடிவுகட்டி, பண வீக்கத்தை குறைத்துவிடும். இவ்வாறு நாம் மாற்றியமைக்கும் அனைத்து நடவடிக்கைகளும், ’எதிர்பார்க்கப்படும் விலை’ என்ற (எதிர்காலத்தின்) வரம்பிற்குள்ளேயே நடக்கின்ற காரணத்தினால், உண்மையான விலை என்ற வரம்பினில், அதாவது, உண்மை பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் மந்தநிலை ஏற்படுவது அரிது. மேலே சொன்ன மொத்த வாதமும் தவறு என்பது, ஒரு எளிய உண்மையோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடுகிறது. உழைக்கும் மக்கள் பணமாக பெறக்கூடிய ஊதியம், பண வீக்கத்திற்கு (விலைவாசிக்கு) பின் தவழ்ந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் உண்மை ஊதியம் குறைவதன் காரணமாக அவர்கள் தவித்து வருகிறார்கள். எனவே, அமெரிக்காவில், ஊதிய உயர்வினால் (Money Wage) ஏற்படுத்தும் அழுத்தம் காரணமாகவே, பண வீக்கம் ஏற்படுவதாக சொல்வது முற்றிலும் தவறு ஆகும்.

போர் காரணமா?

பண வீக்கத்தை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படும் மற்றும் ஒரு பொதுவான காரணமும், இதைப் போலத்தான் அமைந்துள்ளது. அதாவது, ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரின் காரணமாக பல்வேறு சரக்குகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உலக சந்தையில் எண்ணெய் மற்றும் உணவு தானியங்களுக்கு பற்றாக்குறை உருவாகியுள்ளது என்கிறார்கள். இந்த விளக்கமும் மனநிறைவினைக் கொடுப்பதாக இல்லை. போரின் காரணமாக பற்றாக்குறை உருவாகக்கூடும் என்றாலும், இதுவரை அப்படிப்பட்ட பற்றாக்குறை எதுவும் உருவாகவில்லை. போரின் காரணமாக, உலகச் சந்தையில் மேலே குறிப்பிட்ட சரக்குகளின் வரத்து குறைந்திருப்பதனை எடுத்துக்காட்டும் விபரங்கள் ஏதும் இல்லை. குறிப்பாக அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், (ரஷ்யா-உக்ரைன் இடையிலான) போரின் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறையே பண வீக்கத்திற்கு காரணம் என்பதும் தவறான வாதமே ஆகும்.

அமெரிக்காவில் லாப விகிதங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படுவதால் உண்மை ஊதியத்தில் ஏற்பட்டிருக்கும் உயர்வை விட அதிகமாக விலைவாசி உயர்வு இருக்கிறது. அதுதான் அங்கு நிலவும் பண வீக்கத்திற்கான காரணம். குறிப்பிட்ட ஒரு சரக்கிற்கு பற்றாக்குறை ஏற்படும்போதுதான் லாப விகிதம் உயர்த்தப்படும். ஆனால், இப்போது பண வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பல்வேறு பொருட்களின் மீதும், பற்றாக்குறைக்கான எந்த அழுத்தமும் இல்லை. பெருந்தொற்றின் காரணமாக, பொருட்கள் விநியோக சங்கிலியில் தடை ஏற்பட்டதால், குறைவாக விநியோகிக்கப்பட்ட சில பொருட்களின் மீதும் கூட, வழக்கத்திற்கும் கூடுதலான விலை ஏற்றப்பட்டது. அது நீடிக்கவும் செய்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அமெரிக்காவில் நிலவக்கூடிய பணவீக்கத்திற்கான காரணி, தன்னிச்சை போக்கில் லாபத்தை கூட்டிக் கொள்வதற்கான எத்தனிப்பே ஆகும். இது ஊகம் நடப்பதின் வெளிப்பாடு.

லாப நோக்கமும் பண வீக்கமும்

ஊக நடைமுறையானது, வணிகர்களிடமும் இடைத் தரகர்களிடமும் காணப்படும்; உற்பத்தியாளர்களிடம் அந்த நடைமுறை இருக்காது  என்று நினைக்கும் போக்கு பொதுவாக உள்ளது. ஆனால் அந்த நினைப்பிற்கு அடிப்படை ஏதும் இல்லை. பன்னாட்டு நிறுவனங்கள் விலையை உயர்த்துவதற்கு பின் ஊக நடவடிக்கைக்கு இடமுள்ளது. உலகின் மிகப் பெரும் பொருளாதாரமான அமெரிக்காவை, ஊக நடவடிக்கையால் தூண்டப்பட்ட பண வீக்கம் தாக்கி வருவதற்கான காரணம், இன்றுவரையிலும் அவர்கள் கடைப்பிடிக்கும் அதீத எளிமையான பணக் கொள்கையும், அதன் காரணமாக எளிதாக கடன் வழங்கப்படுவதும் ஆகும்.

“அளந்து தளர்வு தருதல்” (சேமிப்பின் மீதும், கடன்களின் மீதும் வட்டி விகிதத்தை குறைப்பதற்காக பத்திரங்களை வாங்குதல்) என்ற பெயரில், அமெரிக்க மத்திய வங்கி, பொருளாதாரத்திற்குள் அதிகமான பணத்தை தள்ளுகிறது. அதற்கு தோதான விதத்தில் குறுகிய கால கடன்களுக்கும், நீண்டகால கடங்களுக்குமான வட்டி விகிதத்தை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக்கியுள்ளது. இது, (முதலாளிகள்) தன்னிச்சையாக லாப விகிதங்களை உயர்த்திக்கொள்ள சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. (அதிகமான பணம் புழக்கத்தில் இருக்கும்படியான சூழல் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதை குறிப்பிடுகிறார்.) காலம் காலமாக அவர்கள் கடைப்பிடித்த மேற்கண்ட பணக் கொள்கையின் காரணமாக ஏற்பட்டிருக்கும் இந்த பண வீக்கத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு நம்மிடம் இருக்கும் வழிகளில் ஒன்று ‘நிதி சிக்கன நடவடிக்கை’ அல்லது (இப்போது நாம் செய்திருப்பதை போல) (ரெப்போ) வட்டி விகிதங்களை உயர்த்துவது ஆகியவைதான். இந்த இரண்டில் எதைச் செய்தாலும் பொருளாதார மந்த நிலைமையும், வேலை இழப்புகளும் உருவாக்கப்படும்.

மையமும், விளிம்பும்

இப்போது நாம் பிரச்சனையின் மூல காரணத்தை நெருங்கிவிட்டோம். சமகால முதலாளித்துவத்திற்கு உட்பட்ட பொருளாதார ஏற்பாட்டில், அமெரிக்காவில் இருக்கும் சிலரின் ஊக நடவடிக்கையை முறியடிக்க வேண்டும் எனில், அதற்காக அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் பெருமளவு வேலை இழப்புகள் நடக்க வேண்டும் (சொல்வதற்கே அபத்தமாக இருக்கிறது). நவ தாராளமய சூழலில் மூலதனம், குறிப்பாக நிதி மூலதனம், எல்லைகளைத் தாண்டிப் பாய்வதனாலேயே இந்த கருத்து எழுகிறது. ஏனென்றால், அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயர்ந்தால், உலகம் முழுவதுமே வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் (அப்படி செய்யாவிட்டால், விளிம்பில் இருக்கும் நாடுகளில் இருக்கும் நிதி மூலதனம், மையத்தில் இருக்கும் அமெரிக்காவை நோக்கி ஈர்க்கப்படும். அதனால் விளிம்பு நாடுகளின் செலவாணியின் டாலருக்கு நிகரான மதிப்பு சரியும்). வேறு வார்த்தைகளில் சொன்னால், அமெரிக்காவில் நடக்கும் ஊக நடவடிக்கைகளை நேரடியாக எதிர்கொள்வதற்கு பதிலாக, நிதி ‘தாரளமயமாக்கல்’ மூலமாக சமாளிக்கிறார்கள். அதன் காரணமாக உலகம் முழுவதும் மிகப்பெரும் வேலையின்மையை உருவாக்கப்படுகிறது. இது மூடத்தனத்தின் உச்சம்.

நிதித்துறையில் தலையீடு

அக்டோபர் புரட்சியின் காலத்தில், உலகப் பெருமந்தத்தின் மத்தியில் நின்றுகொண்டு எழுதிய ஜான் மேனார்ட் கீன்ஸ் இந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாத நிலைமையை நன்றாக அறிந்திருந்தார். எனவே, (முதலாளித்துவ சமூக ) அமைப்பினை ‘பாதுகாக்கும் தன்னுடைய நோக்கத்தை எட்டுவதற்கு, “முதலீட்டை சமூகமயப்படுத்த வேண்டும்” என்ற பெயரிலான திட்டத்தை செயலாக்க விரும்பினார். அதை செய்வதற்கு, பொருத்தமான பணக் கொள்கையும், அதோடு நிதித்துறையில் அரசின் தலையீடும் அவசியமாகும். மேலும் இந்த இரண்டுமே ஒட்டுமொத்த சமூகத்தின் தேவைகளுக்கும், நிதி சார்ந்த நலன்களுக்கும் உட்பட்டதாக இருக்கவும் வேண்டும்.

இப்படிப்பட்ட சிந்தனை நிலவிய சூழலில், உலகப் போருக்கு பிறகு விடுதலையடைந்த நாடுகள் பல புதுமையான நிதிக் கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். இந்த அமைப்புகளில் பொருளாதாரச் செயல்பாடுகளை எவ்விதத்திலும் குறைக்காமலேயே, வேலைவாய்ப்பிலும் பெருமளவு பாதிப்பு இன்றி, ஊடக நடவடிக்கைகளை நேரடியாக கட்டுப்படுத்தினார்கள். உதாரணமாக, இந்தியாவில் நீண்டகால முதலீடுகளை மேற்கொள்வதற்காக சிறப்பு நிதி நிறுவனங்கள் நிதி வழங்கினார்கள். குறுகிய கால கடன்களுக்கு வங்கிகள் நிர்ணயித்த வட்டி விகிதங்களை விடவும், இந்த நிதிக்கான வட்டி பொதுவாக குறைவாக இருந்தது. ஊக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு, வட்டி விகிதம் (மற்றும் இருப்பு விகிதம் போன்ற பாரம்பரிய கருவிகளை) மட்டுமல்லாமல், வேறு பல கருவிகளையும் வங்கிகள் பயன்படுத்தின. ஊக நடவடிக்கையின் தாக்கம் அதிகமுள்ள குறிப்பான துறைகளுக்கு கடன் வாய்ப்புகளை முறைப்படுத்துவது, நேரடியான தலையீட்டுக்கான கருவிகளில் ஒன்று ஆகும். “தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் கட்டுப்பாடுகள்” என்று அவை அழைக்கப்பட்டன. பண வீக்கத்தை கட்டுப்படுத்த நிதி மற்றும் பணம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படவில்லை. “சரக்கு விநியோகத்தில் தலையீடு செய்வதன்” மூலமாக, (ரேசன் கடைகள் போன்ற) பொது விநியோக திட்ட அமைப்புகளை ஏற்படுத்தி பணவீக்கத்தை கட்டுப்படுத்தினார்கள். இவை அனைத்துமே முதலீட்டை உறுதி செய்தன. உற்பத்தியும், வேலைவாய்ப்புகளும் – ஊக நடவடிக்கைகளால் பாதிக்கப்படாமல் தடுத்தன.

நிதித் துறையில் தாராளமயம்

உலக வங்கியும், சர்வதேச நிதியமும் அவைகளுக்கு விசுவாசமான நவ தாராளமய பொருளாதார அறிஞர்களும் மேற்சொன்ன ஏற்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்கள். இந்த நிதி ஏற்பாடுகளை “நிதி சார்ந்த அடக்குமுறை” என்றார்கள். பொருளாதார கட்டுப்பாடுகள் இருந்த நாடுகளிலெல்லாம் “தாராளமய” நடவடிக்கைகள் அமலாக்கவேண்டும் என்றார்கள். உணவு தானிய விநியோகத்தில் இப்போதும் தொடரக்கூடிய பொது விநியோக (ரேசன் கடைகள்) ஏற்பாட்டினை கைவிட்டு விட வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தினார்கள். மோடி அரசாங்கம் நிறைவேற்றிய மோசமான 3 (வேளாண்) சட்டங்களின் நோக்கம் அதுவாகவே இருந்தது. பொது விநியோக அமைப்பையும், ரேசன் திட்டத்தையும் கைவிடச் செய்யும் முயற்சியில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், நவதாராளமய ‘சீர்திருத்தங்களின்’ பெயரால் பிற ‘நிதி தாராளமயமாக்கல்’ கொள்கையை அமலாக்கிவிட்டார்கள்.

“நிதி தாராளமயமாக்கல்” என்பது, பணக் கொள்கையின் ஒரு கருவியாக வட்டி விகிதங்கள் மீது வைக்கப்படும் தனிப்பட்ட நம்பிக்கையாகிவிட்டது, மேலும் (ஏற்கனவே சொன்னதைப் போல) இது அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் வட்டி விகிதத்துடன் நேரடியாக பிணைக்கப்பட்டிருப்பதால், வேறு வழியில்லாமல் ஆக்கப்பட்டது. அரசாங்கத்தின் வருவாயும், அரசின் செலவினங்களும் “நிதிப் பொறுப்பு” என்ற பெயரால் ஒன்றோடொன்று  பிணைக்கப்பட்டுவிட்டன. அதன் காரணமாக பணக்காரர்கள் மீது அதிக வரி சுமத்தி அரசாங்கம் தனது வருவாயை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகளும் அடைக்கப்பட்டுவிட்டன. எனவே, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வட்டி வட்டி விகிதமானது, முதலீட்டையும், உற்பத்தியையும், வேலைவாய்ப்புக்களையும் நிர்ணயம் செய்கிறது.

முன்பு குறிப்பிட்டதையே இது மீண்டும் உணர்த்துகிறது. ஒரு குறிப்பிட்ட நாட்டின் உள்நாட்டு ஊக முதலாளிகள் கூட்டத்தினுடைய நடத்தை, அந்த நாட்டில் நிலவும் உற்பத்தியையும் வேலை வாய்ப்பையும் பாதிக்கிறது என்பது மட்டுமல்லாமல், அமெரிக்க நாட்டில் உள்ள குறிப்பிட்ட ஊக முதலாளிகளின் நடத்தை, ஒவ்வொரு நாட்டிலும், அதாவது உலகின் உற்பத்தியையும் வேலை வாய்ப்பையும் பாதிக்கிறது.

நவதாராளமய கட்டமைப்பு

ஒரு சில ஊக முதலாளிகளின் விருப்பங்களின் அடிப்படையில், கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகள் நிர்ணயிக்கப்படுவதற்கு அனுமதிக்காது என்ற காரணத்திற்காக, நாம் முன்பு கொண்டிருந்த (dirigiste era) நிதிக் கட்டமைப்பினை புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் டாக்டர் கே.என். ராஜ் வியந்து பாராட்டினார். அந்த கட்டமைப்பு, நிதி தாராளமயமாக்கல் நடவடிக்கைகளால் துல்லியமாக நொறுக்கப்பட்டது. மேலும், அந்த நடவடிக்கைகளே  ஒவ்வொரு நாட்டின் வேலை வாய்ப்பு நிலைமைகளும், ஒரு சில அமெரிக்க ஊக முதலாளிகளின் விருப்பத்தை சார்ந்ததாக ஆக்கியது.

பணவீக்கத்தை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளில் ஒன்றாக, வட்டி விகிதங்களை அதிகப்படுத்துகிற சிந்தனையைக் குறித்து உலகெங்கிலும் ஏராளம் எழுதப்படுகிறது. நவதாராளமய கட்டமைப்பை மனதில் கொண்டு, வேலையின்மைக்கும் பண வீக்கத்துக்கும் நடுவில் சமரசம் தேடும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை எடுப்பதாக, இந்த வாதங்கள் பொதுவாக அமைகின்றன. ஆனால், இந்த சமரசப் புள்ளிக்கான அவசியமே,  நவதாராளமய கட்டமைப்பின் காரணமாக, அரசின் வசம் இருந்த பல விதமான கருவிகள் அகற்றப்பட்டதால் எழுவதுதானே. எனவே, நவதாராளமய கட்டமைப்பினையே மாற்றி அமைப்பதன் மூலம் நாம் சமரச சிந்தனைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதுதான் முக்கியமாக சொல்ல வேண்டியதாகும். அதுபோன்ற விவாதங்கள் மிக அரிதாகவே எழுகின்றன.

தமிழில்: சிந்தன்

பொருளாதாரத்தில் போட்டியிடும் திறன் பற்றி முன்வைக்கப்படும் வாதங்கள் குறித்து

பிரபாத் பட்நாயக்

தமிழில்: அபிநவ் சூர்யா

ஆர்.சி.இ.பி (RCEP) எனப்படும் தாராள வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்திய அரசாங்கம் வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், ஒரு வாதம் எழுந்துள்ளது: “பிற நாடுகளை ஒப்பிடுகையில், ஒரு சில சரக்குகளை உற்பத்தி செய்து விற்பதில் இந்தியாவிற்கு போதிய போட்டியிடும் திறன் இல்லையென்றால், அதனால் தான் அந்த சரக்குகளின் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர் என்றால், அப்படி போதிய திறன் இல்லாத நிலையில், அந்த சரக்குகளை நாம் ஏன் உற்பத்தி செய்ய வேண்டும்”? இதனுடன் தொடர்புடைய மற்றுமோர் வாதம்: “இவ்வாறு போதிய திறனற்ற உற்பத்தியாளர்களை பாதுகாப்பதன் மூலம், இறக்குமதி செய்யப்பட்ட மலிவான சரக்குகளை வாங்கியிருக்கக் கூடிய நுகர்வோரை அரசாங்கம் வதைக்கிறது – இது அநீதி இல்லையா”?

முதல் கேள்விக்கு உடனே வெளிப்படையான பதில் உள்ளது (இரண்டாவது கேள்வியை பின்னர் காணலாம்) – பெரும்பாலும் நடைமுறையில் உலக அரசுகள் தங்களின் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் சலுகைகளாலும், தங்களின் நாணயமாற்று வீதம் (Exchange Value) குறை மதிப்பீடு செய்வதாலுமே இந்த “விலைவாசியில் போட்டியிடும் திறன்” வளர்கிறது. இது வெளிநாட்டு சந்தைகளை கைப்பற்ற அந்த அரசுகள் கையாளும் உத்தி (குறிப்பாக தங்களின் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு மலையளவு சலுகைகள் வழங்கும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசுகள்). இங்கு பேசப்படும் ஆர்.சி.இ.பி (RCEP) ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும், உற்பத்திப் பொருட்களில் ஆதிக்கம் செலுத்தும் கிழக்கு ஆசிய நாடுகளும் இந்த சலுகைகள் வழங்கும் உத்தியை கடைபிடிக்கின்றன. ஆகையால் “விலைவாசியில் போட்டியிடும் திறன்” என்ற வாதம் சரியான கண்ணோட்டத்தை அளிப்பதல்ல ; எந்த ஒரு நாட்டின் விலைவாசியில் போட்டியிடும் திறனும், அந்நாட்டால் கடைபிடிக்கப்படும் நிதிக் கொள்கைகள் மற்றும் நாணயமாற்று வீதக் கொள்கைகளோடு பின்னிப் பிணைந்ததே ஆகும் – உண்மையான திறமையின் வெளிப்பாடு அல்ல. இவ்வாறு சலுகைகள் வழங்கப்படும் அந்நிய நாடுகளின் மலிவான இறக்குமதிகளுடன் போட்டியிடச் செய்து, நம் உள்நாட்டு உற்பத்தியாளர்களை சர்வதேச சந்தைக்கு இறையாக்குவது அநியாயம்!

இந்த நடைமுறைக் காரணங்களைத் தாண்டி, இன்னும் அதிகமாக விவாதிக்கப்பட வேண்டிய கோட்பாட்டுக் காரணங்களும் உண்டு. இது போன்ற “தாராள வர்த்தக” வாதங்கள் அனைத்துமே மோசடி வாதங்களே: இந்த வாதங்கள் எல்லாம், அனைத்து நாட்டு பொருளாதாரங்களும் தாராள வர்த்தகத்திற்கு திறந்து விடப்பட்ட பின்னர், அந்த எல்லா பொருளாதாரங்களும், “உழைப்பு” உட்பட, தங்களிடம் உள்ள அனைத்து வளங்களையும் முழுமையாக பயனுக்கு உள்ளாக்கி, முழு வேலைவாய்ப்பு (வேலையின்மை அற்ற) சமநிலையை அடைந்து விடும் என்று அனுமானித்துக் கொள்கின்றன. வேறு மொழியில் சொன்னால், தாராள வர்த்தக வாதமானது தன் அனுமானத்தாலேயே தாராள வர்த்தகத்தால் வேலையின்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை முற்றிலுமாக நிராகரித்து விடுகிறது. இந்த அனுமானம் எவ்வளவு போலியானது என்பது இந்தியாவின் பிரிட்டிஷ் காலனியாதிக்க கால அனுபவங்கள் காட்டுகின்றன. காலனியாதிக்க காலத்தில் தாராள வர்த்தகத்தால் இந்திய தொழில்துறை அழிக்கப்பட்டு, பெருமளவில் உண்டாக்கப்பட்ட வேலையின்மையே இன்றைய நவீனகால வறுமைக்கு மூலக் காரணம்.

உலகம் முழுமைக்கும் (அல்லது தாராள வர்த்தக உடன்பாட்டில் அங்கம் வகிக்கும் நாடுகளின் குழுமம் முழுமைக்கும்), வளங்கள் அனைத்தும் பயனுக்கு உள்ளாக்கப்படும் வரை (முதலாளித்துவத்தில் வேலையின்மை பூரணமாக ஒழிக்க இயலாது என்பதால், “ரிசர்வ் ஆர்மி” (Reserve Army) எனப்படும் குறைந்தபட்ச வேலையில்லா பட்டாளம் அடையும் வரை), மொத்த கிராக்கியை மேல்நோக்கித் தள்ள அதிகாரம் படைத்த ஒரு அமைப்பு இருந்தால், வேலையின்மை இல்லாமல் இருக்கும் (இந்த குறைந்தபட்ச அளவைத் தவிர). ஆனால் அவ்வாறு கிராக்கி குறைபாட்டை தடுக்க அதிகாரம் படைத்த அமைப்பு ஏதும் இல்லை. ஆகையால் (குறைந்தபட்ச அளவையும் தாண்டி) ஓரளவு வேலையின்மை கண்டிப்பாக எப்போதும் இருக்கும். தாராள வர்த்தக ஒப்பந்தங்கள் இந்த வேலையின்மை பளுவை, ஒரு நாட்டிலிருந்து மாற்றி வேறொரு நாட்டின் முதுகில் சுமத்துவதைத் தான் செய்கின்றன.

நிலவும் நாணயமாற்று வீதம் மற்றும் கூலி அளவில், நாடுகளிடையே விளங்கும் “விலைவாசியில் போட்டியிடும் திறனில்” இருக்கும் வேறுபாடு என்பது உண்மையாகவே நாடுகளின் இடையே விளங்கும் “உழைப்பின் உற்பத்தித் திறனில்” உள்ள வேறுபாட்டின் வெளிப்பாடு மட்டுமே என்று அனுமானித்துக் கொண்டால் கூட, அதாவது சலுகைகள் மூலம் விலை குறைப்பு இல்லை என அனுமானித்துக் கொண்டால் கூட, தாராள வர்த்தகம் உழைப்பின் உற்பத்தித் திறன் குறைவாக உள்ள நாட்டில் பல உழைப்பாளர்களை வேலையிலிருந்து தூக்கி எரியும் என்று தர்க்க ரீதியாகவே நமக்கு விளங்குகிறது.

இரண்டு கேள்விகள் உடனே எழுகின்றன: உழைப்பின் உற்பத்தித் திறன் குறைவாக இருக்கும் நாடு, அதன் போட்டியிடும் திறன் போதுமான அளவு அதிகரிக்கும் வரை தன் நாணயமாற்று வீதத்தை குறைத்துக் கொண்டு, வேலையின்மையை ஒழித்துக் கொள்ளலாமே? நாணயமாற்று வீதக் குறைப்பு என்பது உண்மைக் கூலியின் அளவைக் குறைக்கும் என்பதால், இந்த வாதம் கூற வருவது என்னவென்றால், ஒரு நாடு அதீத வேலையின்மையில் மூழ்காமல் தவிர்க்க, அந்நாட்டின் போட்டியிடும் திறன் போதுமான அளவு உயரும் வரை அதன் கூலி அளவு குறைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதைத்தான்.

ஆனால் இது தவறான சிந்தனை: அந்நாட்டில் குறையும் கூலியாளவு, அனைத்து நாடுகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டால், மொத்த கிராக்கி அளவை உயர்த்தப் போவதில்லை. ஆகையால் நாணயமாற்று வீதக் குறைப்பை கையாளும் ஒரு நாடு, அடிப்படையில் வேறொரு இடத்தில் வேலையின்மையை அதிகரிப்பதன் மூலமே தன் உள்நாட்டு வேலையின்மையை குறைக்க முடியும் – அதாவது வேலையின்மையை “ஏற்றுமதி” செய்தல். இப்படிப்பட்ட “ஏற்றுமதி”, வேலையின்மையை “இறக்குமதி” செய்யும் நாட்டிடமிருந்து பதிலடியை எதிர்கொள்ளும் – அந்த நாடும் வேலையின்மை அதிகரிப்பதை தடுக்க தன் நாணயமாற்று வீதத்தை குறைத்து கூலியை குறைத்துக்கொள்ளும். இது ஒவ்வொரு நாடும் போட்டிபோட்டுக் கொண்டு தன் கூலியளவை குறைத்துக்கொண்டு, கூலியை பாதாளத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு “நாணயமாற்று வீதப் போர்” உருவாக்கும். ஆகையால் இது தாராள வர்த்தகத்தால் ஏற்படும் வேலையின்மைக்கு தீர்வை அளிக்கும் முறை இல்லை.

மேலும், நிதி மூலதனம் ஆதிக்கம் செலுத்தும் இந்த உலகில், நாணயமாற்று வீதக் குறைப்போ (தாராள வர்த்தகம் ஏற்படுத்தும் வேலையின்மையை சமாளிக்க அரசாங்கம் இம்முறையை கையாள எதிர்பார்க்கப்படும்), அல்ல நாணயமாற்று வீதக் குறைப்பின் எதிர்பார்ப்பு கூட நிதி மூலதனத்தின் வெளியேற்றத்தை உருவாக்கி பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும். ஆகையால் தாராள வர்த்தகம் உருவாக்கு வேலையின்மையை சமாளிக்க நாணயமாற்று வீதக் குறைப்பு உதவாது.

ஆனால் இங்கு இரண்டாவது கேள்வியும் எழுகிறது: “அதிக செலவில் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களை தாராள வர்த்தகம் கொண்டு வெளியேற்றுவதில் என்ன தவறு? அதிக செலவில் உற்பத்தி செய்யும் அவர்கள் தொடர்ந்து உற்பத்தி செய்யும் திறனை இழந்தனர்” என்று கேட்கப்படக் கூடும். இதற்கான விடை எளிமையானது: அவ்வாறு சில தொழில்கள் மூடப்படுவதால் வெளியேறுவோர் வேறு ஏதேனும் தொழில்களில் உள்வாங்கப்படுவர் என்றால், அப்படிப்பட்ட வெளியேற்றம் கவலையளிக்காது; ஆனால் அப்படிப்பட்ட உள்வாங்கல் நிகழாது என்பதால் வேலையின்மையை அதிகரிக்கும் தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவதை எந்த வாதத்தாலும் நியாயப்படுத்த முடியாது. ஆகையால், ஒரு நாடு அதன் வேலைவாய்ப்பை கணக்கில் கொண்டு, சர்வதேச வர்த்தகத்தில் சில கெடுபிடிகள் விதிக்க வேண்டும்; அவ்வாறு கெடுபிடி விதிக்க வேண்டுமென உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கோருவது முற்றிலும் நியாயமானதே!

இப்படி நாம் வாதிடுவது “செயல்திறன்” (Efficiency) வாதத்திற்கு எதிரானது போல் தோன்றலாம், அதாவது எங்கு மிகச் சிறந்த செயல்திறனுடன் உற்பத்தி நடக்குமோ, அங்கு தான் உற்பத்தி நடக்க வேண்டும் என்ற வாதம். ஆனால் “செயல்திறன்” வாதம் குறிப்பிட்ட நிலையில் மட்டுமே செல்லுபடியாகும்: வளங்கள் முழுமையாக பயனுக்கு உள்ளாக்கப்படும் நிலையில், ஒரு நாடு ஒரு சில பொருட்களின் உற்பத்தியை கைவிட்டு வேறு சில பொருட்களின் உற்பத்தியில் சிறப்பிப்பதன் மூலம், வர்த்தகத்தால் பயனடைய வேண்டும். அதாவது, தாராள வர்த்தகம் துவங்குவதற்கு முன் இருந்ததை விட அதிகமான பொருட்களின் திரளை நுகர முடியும் என்றால் மட்டுமே அவ்வாறு கைவிடுதல்-சிறப்பித்தல் முறையை கையாள வேண்டும். ஆகையால், தாராள வர்த்தகத்திற்கு ஆதரவாக முன்வைக்கப்படும் “செயல்திறன்” வாதம் வளங்களின் முழு பயன்பாட்டினை அனுமானித்துக் கொள்கிறது. இது நடக்காத பொழுது, “செயல்திறன்” வாதத்தை முன்வைத்து பலதரப்பட்ட தொழில்களையும் முடக்குவது அறிவின்மையே ஆகும்!

ஆனால் இங்கு இன்னொரு கேள்வி வரும்: “அதிக செலவில் உற்பத்தி செய்யும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்க, மலிவான இறக்குமதியை தடுத்து, நுகர்வோர்களை அதிக விலை கொடுக்க நிர்பந்திப்பது நியாயமா”? இந்த வாதம் நியாயமானது போல் தோன்றினாலும், இது உற்பத்தியாளர்கள்-நுகர்வோர் இடையே ஒரு தவறான பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படும் ஒரு வாதம் ஆகும்.

அது முன்வைப்பது என்னவென்றால், மலிவான இறக்குமதியால் உற்பத்தியாளர்களில் ஒரு குழுவினர் (தொழிலாளர்கள் மற்றும் சிறு/குறு விவசாயிகள்) வருமானத்தை இழந்தாலும், இன்னொரு நுகர்வோர் குழுவினர் உள்ளனர், அவர்கள் இந்த மலிவான இறக்குமதியால் மேன்மையடைவர் என்கிறது. வேறு மொழியில் சொன்னால், தாராள வர்த்தகத்தால் உற்பத்தியாளர்களின் வருமானம் குறைந்தாலும், அது நுகர்வோரின் வருமானத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்று இந்த வாதம் கருதுகிறது.

இது அபத்தமான வாதம். உற்பத்தியாளர்களே நுகர்வோரும் ஆவர். அதையும் தாண்டி, வெளியேற்றப்பட்ட உற்பத்தியாளர்களைத் தவிர, இதர நுகர்வோரின் வருமானமும் குறையும். இது முதலில் ஒரு குழு உற்பத்தியாளர்கள் வெளியேற்றப்படுவதன் பொருளாதார தொடர் நிகழ்வுகளின் விளைவு. காலனிய இந்தியாவின் எடுத்துக்காட்டு இதை தெளிவுபடுத்தும்.

பிரிட்டனில் ஆலைகளில் எந்திரங்களால் உற்பத்தியான பொருட்களால் இந்திய கைவினைத் தொழில்கள் அழிந்து கொடுமையான வறுமை கூடினாலும், இது முதலில் சிறு விவசாயிகள் புசிக்க மலிவான இறக்குமதிப் பொருட்கள் கொண்டுவந்ததாகத் தோன்றியது. ஆனால் நாளடைவில், வேலையிழந்த கைவினைத் தொழிலாளர்கள் ஊராகச் சந்தையில் வேலைத் தேடி குவியத் துவங்கியவுடன், நிஜக் கூலி குறைந்து வாடகை உயர்ந்து, மலிவான இறக்குமதியால் “பயனடைந்ததாகக்” கூறப்பட்ட சிறு/குறு விவசாயிகளின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இவ்வாறு “Deindustrialisation” எனப்படும் உற்பத்தித் துறையின் அழிவின் விளைவு காட்டுத்தீ போல் பரவி, மொத்த உழைக்கும் வர்க்கத்தையும் பாதித்தது. இந்த காலனிய அரசு ஏற்படித்திய அழிவின் பயனாளிகள் பெரும்பாலும் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட, பிரிட்டிஷ் அரசின் ஏவல் ஆட்களாக திகழ்ந்த மிகச்சிறிய “நிலப்பிரபு” வர்க்கமாக மட்டுமே இருந்தனர்!

ஆகையால், வேலையின்மையை பெருக்கி, சிறு/குறு விவசாயிகளின் வருமானத்தை பாதிக்கும் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை எந்தச் சூழலிலும் நியாயப்படுத்த முடியாது; ஆர்.சி.இ.பி ஒப்பந்தத்திலிருந்து இந்திய அரசு வெளியேற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானதே!

இன்று நாட்டில் அறிவுசார் விவாதக் களத்தில் முதலாளித்துவத்தின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. அதனால் வேலையின்மையை பூரணமாக ஒழிப்பது சாத்தியமற்ற கனவாகப் பலராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய சோசியலிச நாடுகளில் வேலையின்மை முழுதாக ஒழிக்கப்பட்டது மட்டுமல்லாமல், அந்த பொருளாதாரங்களில் வேலையாட்களுக்கான பஞ்சம் இருந்தது என்பதை மறந்துவிட வேண்டாம்!

ஒரு குழுவைச் சேர்ந்த மக்கள், தாங்கள் உற்பத்தி செய்வதை தாங்களே நுகர்ந்தும் முதலீடும் செய்தால், வேலையின்மை உருவாக எந்தக் காரணமும் இருக்காது. குழுவில் உள்ள ஒரு சிலர், குழுவின் வேறு சிலர் உற்பத்தி செய்ததை வாங்க மறுத்து, குழுவிற்கு வெளியே உற்பத்தி ஆவதை வாங்க விரும்புவதே வேலையின்மை உருவாக முக்கியக் காரணம். அவ்வாறு ஆர்.சி.இ.பி ஒப்பந்தத்தால் உருவாகும் என எதிர்நோக்கப்பட்ட வேலையின்மையானது தடுக்கப்பட வேண்டிய ஒன்றே.

முதலாளித்துவம், சோசலிசம், சிறு உற்பத்தித் துறைகள் – 2

இக்கட்டுரையின் முதல் பகுதி: முதலாளித்துவம், சோசலிசம், சிறு உற்பத்தித் துறைகள் – 1 

பேரா. பிரபாத் பட்நாயக்

தமிழில்: ஆர். எஸ். செண்பகம்

மேற்கூறிய விவாதங்கள் இரண்டு முக்கிய உட்குறிப்புகளை கொடுக்கின்றன. 

முதலாவது உட்குறிப்பு

முதலாளித்துவம் “தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தன்முனைப்பு தன்னிச்சை நடவடிக்கைகளை எடுக்கும்” என்ற அதனுடைய இயல்பான குணாம்சத்தின் காரணமாக, மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் ஏழ்மையை விரட்டுவதில்லை.  மாறாக, முதலாளித்துவம், தன்னுடைய இருத்தலுக்கும் விரிவாக்கத்திற்குமான தேவையின் அடிப்படையில், வேலையின்மையை அதிகரிப்பது மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மையை உருவாக்குவது என்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.  எனவே, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரமானது, மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை, காலனி ஆதிக்கத்தின்போதே கபளீகரம் செய்து, அந்த நாடுகளின் வறுமை மற்றும் ஏழ்மையை நிலைத்திருக்கவும், வளரவும் செய்துள்ளது.

இப்படிச் சொல்லும்போது இதற்கு மேலும் விளக்கம் தேவைப்படுகிறது.  சந்தேகத்திற்கு இடமின்றி, நவீன தாராளவாத முதலாளித்துவத்தின் கீழ், வளர்ந்த நாடுகள் உலகச் சந்தையில் தங்களுடைய வர்த்தகத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் அவசியத்தை பூர்த்திசெய்து கொள்வதற்காக, மூன்றாம் உலக நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த கூலியை அளித்தாலே போதும் என்ற நிலையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்வகையில்,  மூன்றாம் உலக நாடுகளை நோக்கி வருகின்றன.  இதனால், இதன் இரண்டாம் கட்ட விளைவுகளாக, மூன்றாம் உலக நாடுகளில் சில இடங்களில் அதிக வளர்ச்சி ஏற்படுகிறது.  சில நாடுகள் அளவில் சிறியவையாக இருக்கும்பட்சத்தில் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியும் உயர்வடையும்.  இதனால் உள்நாட்டில் வேலைதேடும் பட்டாளத்தின் ஏழ்மை அந்நாட்டில் ஒழிக்கப்படும்.  இப்படிப்பட்ட இந்த ஒரு சில  “வெற்றிகளை” வைத்துக்கொண்டு, இதையே ஆதாரமாகக் கொண்டு, இது ஏதோ நவீன தாராளமய முதலாளித்துவத்தின் பொதுவான உள்ளார்ந்த திறன் போன்று சித்தரிக்கப்படுகிறது.  ஒருவேளை, இப்படி ஒரு  “வெற்றி” கிடைக்கவில்லை என்றால், அதற்கு உள்ளூர் காரணிகள் காரணங்களாகக் காட்டப்படுகின்றன. 

உழைக்கும் மக்களில் பெரும்பகுதியினர் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கீழ் பிழிந்தெடுக்கப்படுகின்றனர்.  ஆனாலும், நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கீழ், நடுத்தர வர்க்கத்தினர் என்ற ஒரு பிரிவினர் உருவாவதும், அவர்களுடைய வாழ்க்கைத்தரம் ஓரளவு நல்லநிலையில் இருப்பது என்பதும் ஒரு சில மூன்றாம் உலக நாடுகளில் நடக்கின்றது.  இதை முன்னிலைப்படுத்தி, மூன்றாம் உலக நாடுகளில் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் காரணமாக செழிப்பான நிலையே இருக்கிறது என்பது போன்ற ஒரு விவாதம் முன்வைக்கப்படுகிறது. 

அதேபோல, அரசு பின்பற்றும் கொள்கைகளின் காரணமாக, அவை அளிக்கும் நிர்பந்தத்தின் காரணமாக, ஏழைமக்கள் தனியார் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை தங்களுக்கான மருத்துவத்திற்கும், கல்விக்கும் நாடவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.  ஆனால், இப்படி ஏழை எளிய மக்கள் தனியாரை நாடுவதை, அவர்களுடைய பொருளாதார நிலைமை முன்னேறியதன் காரணமாக அவர்களுடைய நுகர்வு கலாச்சாரத்தின் தரம் உயர்ந்துள்ளது; மாறியுள்ளது என்று தவறான ஆதாரமாகக் காட்டப்படுகிறது.  இப்படியெல்லாம் ஆதாரங்களை காட்டி, நவீன தாராளமய முதலாளித்துவத்தின் அமலாக்கத்தின் காரணமாக மூன்றாம் உலக நாடுகளில் ஏழ்மை பெருமளவில் அதிகரிக்கிறது என்பதையோ அல்லது அதிகரித்துள்ளது என்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதிடப்படுகிறது.  முதல் பார்வையில் இது சரியானதாகத் தோன்றலாம். 

ஆனால், நாம் செய்யவேண்டியது என்னவென்றால், ஒட்டுமொத்த மூன்றாம் உலக நாடுகளிலும் மேற்சொன்ன புள்ளிவிவரங்களை எடுத்துக்கொண்டு, சில குறிப்பிட்ட அடிப்படைப் பொருட்களின் நுகர்வுப் போக்கு குறித்த புள்ளிவிவரங்களையும் வைத்துக்கொண்டு, மேலேசொன்ன ஆய்வுகளை பரிசீலனை செய்து பார்க்க வேண்டும். 

உதாரணத்திற்கு, நாம் உலக அளவில் தனிநபர் தானிய நுகர்வினை எடுத்துக்கொள்வோம்.  1980-ம் ஆண்டு, உலக அளவில் தனிநபர் தானிய உற்பத்திஅளவு 355 கிலோகிராம் ஆகும்.  இது எப்படி கணக்கிடப்படுகிறதென்றால், மூன்றாண்டுகளுக்கான 1979-1981 வரையிலான சராசரி உற்பத்தியை 1980-ம் ஆண்டு மக்கள்தொகையால் வகுத்து கணக்கிடப்படுகிறது.  2000-ம் ஆண்டிற்கும் இதேபோன்ற கணக்கீடு செய்து வருகிற அளவு 343 கிகி.  2016-ம் ஆண்டிற்கான அளவு 344.9 கிகி.  இது கிட்டத்தட்ட 2000-ம் ஆண்டின் அளவிலேயே இருக்கிறது.  அதேநேரத்தில், எத்தனால் தயாரிப்பிற்காக கணிசமான அளவு விளைதானியங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.  எனில், 1980-க்கும் 2016-ம் ஆண்டிற்கும் இடையில் தனிநபர் தானிய நுகர்வு என்பது குறைந்து போயுள்ளது என்பது தெளிவாகிறது. 

அதிலும் நுகர்வு என்பதில், நேரடி நுகர்வு மற்றும் மறைமுக நுகர்வு, இவை இரண்டும் சேர்ந்ததுதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நுகர்வு கணக்கு.  மறைமுக நுகர்வு என்பதில் பதப்படுத்தப்பட்ட உணவுகளும், விலங்குகளுக்கான தீவனங்களும் அடங்கும்.  இந்த நுகர்வு எப்போது அதிகரிக்கும் என்றால், தனிநபர் உண்மை வருமானம் அதிகரிக்கும்போது அதுவும் அதிகரிக்கும்.  ஒருவேளை மூன்றாம் உலக நாடுகளின் வறுமை ஒழிக்கப்பட்டிருந்தால், தனிநபர் தானிய நுகர்வும் அதிகரித்திருக்கும்.  ஆனால், 80-களின் துவக்கத்தில் இருந்த தனிநபர் தானிய நுகர்வை விட தற்போதைய தனிநபர் தானிய நுகர்வு அளவு குறைந்துள்ளது என்பதில் இருந்தே மூன்றாம் உலக நாடுகளில் வறுமை இன்னும் தொடர்கிறது என்பதும் அது மேலும் அதிகரித்துள்ளது என்பதும் தெளிவாகிறது. 

வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால், மூன்றாம் உலக நாடுகளின் வறுமையை முதலாளித்துவத்தின் தன்முனைப்பு தன்னிச்சை நடவடிக்கைகள் ஒழித்துவிடும் என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்லஉண்மையில், இந்நாடுகளின் வறுமை மேலும் அதிகரிக்கப்படுகிறது

இரண்டாவது உட்குறிப்பு

ஏற்கனவே நாம் முன்வைத்த விவாதங்களில் இருந்து, இரண்டாவதாக வரும் உட்குறிப்பு-தொழிலாளர்கள், விவசாயிகள், பிற சிறு உற்பத்தியாளர்கள், விவசாயக் கூலிகள் மற்றும் சிறு உற்பத்தித் துறையில் உள்ள பிற தொழிலாளர்கள் என அனைவரும் தன்னெழுச்சியாக ஒன்றிணைய வேண்டிய அவசியத்தினை நவீன தாராளமய முதலாளித்துவம் உருவாக்குகிறது என்பது ஆகும். 

நவீன தாராளமய முதலாளித்துவம் சிறு உற்பத்தியாளர்களை பிழிந்தெடுத்து, அவர்களை வேலைதேடும் தொழிலாளர் படையுடன் தள்ளிவிடுவதன் காரணமாக அவர்களுடைய வறுமை அதிகரிக்கிறது.  தொழிற்சங்கப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் உட்பட, முழுமையாக பணியிலிருக்கும் தொழிலாளர்களின் உண்மைஊதியம் குறைந்து போகிறது.  இதனால், நவீன தாராளமய முதலாளித்துவத்தை எதிர்ப்பதற்காக, தொழிலாளர் விவசாய கூட்டணி உருவாவதற்கான அவசியத்தை, அது தன்னுடைய தன்முனைப்பு தன்னிச்சை நடவடிக்கைகளின் போக்கிலேயே உருவாக்கிவிடுகிறது.

தொழிலாளர்-விவசாயி கூட்டணி பற்றி

“ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயத்தின் இரண்டு உத்திகள்” என்ற நூலில் லெனின், “முதலாளித்துவத்தை நோக்கி, பிற்காலத்தில் தாமதமாக நகரும் நாடுகளில் எல்லாம், நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த ஜனநாயகப் புரட்சி செய்து, நிலப்பிரபுக்களின் கைகளில் குவிந்து கிடக்கும் நிலக்குவியலை உடைத்து, ஏழை எளிய விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுப்பதற்கு பதிலாக, பூர்ஷ்வாக்கள் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துகொள்வதையே விரும்புகின்றனர்.  ஏனென்றால், பூர்ஷ்வாக்களின் சொத்துக்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட வரலாறு இதற்கு முன்பு உள்ளது என்பதால் அந்த அச்சத்தில் அவர்கள் இந்த நிலைப்பாட்டினை எடுக்கிறார்கள்.  தொழிலாளி வர்க்கம் மட்டுமே விவசாயிகளுக்கும் பிற பிரிவினர்க்கும் தலைமைதாங்கி ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிக்க முடியும்.  இந்த நீண்ட நெடிய புரட்சிகரப் பாதையில் பயணிக்கும்போது, ஒருவேளை அதனுடைய விவசாயக் கூட்டணியில் ஏதேனும் மாற்றங்கள் வந்தாலும், அது எங்கும் நிற்காமல் சமூகப் புரட்சியை நோக்கி தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லும்” என்று  கூறுகிறார். 

லெனின் காட்சிப்படுத்தும் இந்த ஜனநாயகப் புரட்சியின் கருத்துரு பிரான்சில் பூர்ஷ்வாக்களின் தலைமையில் நடைபெற்ற ஜனநாயகப் புரட்சியில் இருந்து முற்றிலும் வேறானது.  அதேநேரத்தில், 20-ம் நூற்றாண்டில் மூன்றாம் உலக நாடுகளில் நடைபெற்ற அனைத்து மார்க்சிய புரட்சிகளுக்கும் அடிப்படையாக அமைந்ததும் இதுதான்.  மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற கருத்துருவிலும், புதிய ஜனநாயகப் புரட்சி என்ற கருத்துருவிலும்கூட இதன் அடிப்படை அம்சங்கள்தான் காணப்படுகின்றன. 

இந்த கருத்து இன்றைக்கும் சரியானதாக, ஏற்புடையதாக, பொருத்தமானதாக உள்ளது.  இன்னும் சொல்லப்போனால், லெனின் கூறிய தொழிலாளி விவசாயக் கூட்டணியின் அவசியம் இன்றைக்கு நவீன தாராளவாத முதலாளித்துவத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள விளைவுகளினால் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.  

பூர்ஷ்வாக்கள் ஒதுங்கியது என்பது, ஜனநாயகப் புரட்சியில் இருந்து விலகும் அதன் கோழைத்தனத்தை மட்டும் காட்டவில்லை.  மாறாக, அது தான் கட்டமைத்த நவீன தாராளவாத முதலாளித்துவ ஆட்சியின் கீழ், விவசாயிகள் உட்பட சிறு உற்பத்தியாளர்களை கூடுதலாகப் பிழிந்தெடுக்கப்படுவதையும் காட்டுகிறது.

நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவ கட்டமைப்பை நோக்கி நகரும்போது உருவாகும் மற்றொரு பிரிவினர் ஜங்கர் ஸ்டைல் முதலாளிகள்.  (இவர்களுக்கு பழைய நிலப்பிரபுத்துவ உரிமைகளில் சில இப்போதும் இருக்கும்.    இவர்களிடம் பெரிய அளவில் நிலக்குவியல் இருக்கும்அதேநேரத்தில் பூர்ஷ்வாக்களை ஒப்பிடும்போது இவர்கள் இரண்டாம்பட்சமானவர்கள்இவர்களும் அரசியல்தளத்தில் இருப்பார்கள்அரசின் மானியங்களை பெருமளவில் பெறுவார்கள்இவர்களுக்கு விவசாய தொழிலாளர்களாக மாற்றப்பட்டு இவர்கள் நிலத்தில் வேலைசெய்யும் விவசாயத் தொழிலாளர்களை பிழிந்தெடுக்கும் அதிகாரம் இருக்கும்).  இப்படிப்பட்ட ஜங்கர் ஸ்டைல் முதலாளிகளாக நிலக்கிழார்கள் மாற்றப்படுகின்றனர்.  அல்லது பணக்கார விவசாயிகள் முதலாளித்துவ விவசாயிகள் என்ற நிலைக்கு வந்துவிடுகின்றனர்.  இப்படி வருவதன் காரணமாக, அவர்கள் விவசாயத்தில் மட்டுமல்லாமல், பலதரப்பட்ட தொழில்களிலும் கவனம் செலுத்துகின்றனர்.  இதன் காரணமாக நவீன தாராளமய முதலாளித்துவத்தின் தாக்குதல்களில் இருந்து இவர்கள் தப்பிவிடுகின்றனர்.  ஆனால், விவசாயிகளில் மிகப் பெரும்பான்மையினர் பிழிந்தெடுக்கப்படுவதன் காரணமாக, சோஷலிசத்தை நோக்கிய பாதையில் இந்த விவசாயி வர்க்கம் நகர்கிறது.

சிறு உற்பத்தியாளர்களின் ஆதரவை இழப்பதன் காரணமாக முதலாளித்துவம் இழந்துள்ள அரசியல் முக்கியத்துவத்தின் அளவு மிகப்பெரியது. 

பாரிஸ் கம்யூன் அனுபவம்

மேலே கூறியதன் அடிப்படையில், தொழிலாளி வர்க்கம் சோஷலிச அமைப்பை உருவாக்குவோம் என்ற சவாலை விடுக்கும்போது, பூர்ஷ்வாக்களின் சொத்துக்களுக்கு சோஷலிச சமுதாயத்தில் ஏற்படும் தாக்கமே சிறு உற்பத்தியாளர்களின் சொத்துக்களுக்கும் ஏற்படும் என்ற அச்ச உணர்வு திட்டமிட்டு விவசாயிகளின் மத்தியில் உருவாக்கப்படுகிறது.  இதன் காரணமாக விவசாயிகள் சோஷலிசத்திற்கான தொழிலாளர்களின் போராட்டத்தில் இணைந்து விடாமல் பார்த்துக் கொள்ளப்படுகின்றனர். அடோல்ஃப் தியோரஸ் இந்த அச்சத்தைதான் பிரெஞ்சு விவசாயிகள் மத்தியில் விதைத்து பாரிஸ் கம்யூனை தோற்கடித்தார். 

1879ல், பிரான்சில் நடைபெற்ற முதலாளித்துவ புரட்சியின்போது, நிலப்பிரபுத்துவ நிலக்குவியலை உடைத்ததில் பிரெஞ்சு விவசாயிகள் இலாபமடைந்தனர்.  அதேநேரத்தில், சில விவசாயிகள் இடம் பெயர வேண்டி வந்தபோது, அதற்கான வாய்ப்புகள் இருந்ததன் காரணமாக, முதலாளித்துவ வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட விவசாய நெருக்கடி என்பது கட்டுக்குள் வந்துவிட்டது.  அதனால், பாரிஸ் கம்யூனின்போது, விவசாயி  – தொழிலாளி கூட்டணி உருவாவதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது.  அதன் காரணமாக, முதலாளித்துவம் நல்ல வசதியான நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

போல்ஷ்விக் புரட்சியின் அனுபவம்

இருப்பினும், போல்ஷ்விக் புரட்சியின்போது நடந்தது வேறு.  அதற்குள், வரலாற்றில் நிலப்பிரபுத்துவத்தின் நிலத்தை கைப்பற்றி தகர்க்கும் திறனை முதலாளித்துவம் இழந்துவிட்டது.  அதனால், நிலப்பிரபுத்துவத்தின் நுகத்தடியிலிருந்து விவசாயிகள் அடையவிரும்பிய நிலம் மற்றும் விடுதலையை பூர்ஷ்வாக்களால் பெற்றுத்தர முடியவில்லை. உண்மையைச் சொன்னால், ரஷ்யாவில், பிப்ரவரி புரட்சியின்போது, முதலாளித்துவத்தின் எல்லையைத் தாண்டி பூர்ஷ்வாக்களால் செல்லமுடியாததன் காரணமாக, நில மறுவினியோகம் என்பதில், பூர்ஷ்வாக்களால் விவசாயிகளை திருப்தியடையச் செய்யமுடியவில்லை.  அதேநேரம், அக்டோபர் புரட்சி நடந்தபோது, விவசாயிகள் தாங்களே புரட்சியில் ஈடுபட்டு, நிலப்பிரபுத்துவ பண்ணைகளை கைப்பற்றி விட்டனர்.  இதில் அவர்களுக்கு போல்ஷ்விக்குகளின் ஆதரவு கிடைத்தது. 

போல்ஷ்விக்குகள், நிலங்களை தேசியமயமாக்குதல் என்ற தங்களின் திட்டத்தைக் கூட, விவசாயிகளுக்காக விட்டுக் கொடுத்தனர்.  அந்த நேரத்தில், ரஷ்யாவில் சமகாலத்தில் இருந்த சோஷலிச புரட்சியாளர்கள் கட்சி, துவக்கம் முதலே விவசாயிகளுக்கு சொந்தநிலம் வேண்டும் என்று சொல்லி வந்ததால், போல்ஷ்விக்குகள் தங்களுடைய திட்டத்தை திருடிக் கொண்டார்கள் என்று குற்றம் சாட்டியது.  அதேநேரத்தில், விவசாயிகளை பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டிருந்த இடது சோசலிச புரட்சியாளர்கள் கட்சி, போல்ஷ்விக்குகளுடன் கூட்டணி வைத்து, புரட்சிக்குப்பின் அமைந்த அரசாங்கத்தில் இணைந்தது. 

புரட்சியின் வெற்றியை தீர்மானிப்பதில் விவசாயிகளின் ஆதரவின் பங்கு

எனவே, சுருக்கமாகச் சொல்வதென்றால், விவசாயிகளின் ஆதரவு என்பது தொழிலாளிவர்க்கம் செய்யும் புரட்சியின் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  குறிப்பாக, எந்த நாடுகளிலெல்லாம், விவசாயிகள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்களோ, அங்கெல்லாம், இது உண்மையானது.  பின்னாளில் முதலாளித்துவத்திற்கு மாறிய ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் லத்தீன்அமெரிக்கா போன்றவற்றில் உள்ள மூன்றாம் உலக நாடுகளிலும்கூட இதை நாம் காணமுடியும். 

எனவே, நவீன தாராளமய உலகமயமாக்கலின்கீழ், முழுமையான நில மறுவினியோகத் திட்டம் எதுவும் இல்லாமல், விவசாயிகள் கசக்கிப் பிழியப்படும்போது, அந்த நாடுகளில் எல்லாம் தொழிலாளி – விவசாயி கூட்டணியை உருவாக்கி, ஜனநாயகப் புரட்சியை செய்துமுடித்து, சோஷலிசத்தை நோக்கி முன்னேறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.  ஆனால், அந்தந்த நாடுகளின் நிலைமைக்கேற்ப, அந்தந்த நாடுகளின் சூழலுக்கேற்ப, ஜனநாயகப் புரட்சியின் முடிவிற்குப் பிந்தைய சூழல் அமையும். 

சிறு உற்பத்தியை பாதுகாப்பதன் அவசியமும், அதன் விஞ்சிய மேம்பட்ட நிலையும்

 “விவசாயத்தை கையகப்படுத்துவதில் இருந்து பாதுகாப்பது” என்பது மட்டுமே, நிச்சயமாக, சிறு உற்பத்தியை நிரந்தரமாக தக்க வைப்போம் என்று ஏற்றுக் கொள்வதாக ஆகாது. அதாவது, கூட்டு வடிவங்களில், கூட்டமைப்புகளின் மூலம் உற்பத்தியை நோக்கி செல்வோம் என்று கட்டாயப்படுத்தாமல், சிறு உற்பத்தியின் தன்மையில் மெல்லமெல்ல மாற்றம் கொணர வேண்டியுள்ளது என்பது இதன் அர்த்தமாகும்.  அதாவது சோஷலிசத்திற்கான படிக்கல்லாக இந்த மாற்றம் இருக்கும்.

கூட்டுறவு மற்றும் கூட்டு ஐக்கிய செயல்பாடுகள் என்பவை விவசாயிகளை பிழிந்தெடுப்பதையோ அல்லது அவர்களது உரிமைகளை பறிப்பதையோ நிர்பந்திப்பதில்லை.  ஆனால், மனப்பூர்வமாக, தாமாகவே முன்வந்து, தங்கள் நிலங்களை ஒரேகுவியலில் இணைப்பதென்பது தேவைப்படுகிறது.  முதலாளித்துவ ஆக்கிரமிப்பு செய்வதுபோல புராதன மூலதனச் சேர்க்கைக்கான அவசியம் இங்கு இதில் இல்லை.

இருந்தபோதும், வரலாற்றுரீதியாகப் பார்க்கையில், புரட்சிக்கான நீண்ட நெடிய பாதையில் பயணிக்கும்போது, தொழிலாளி – -விவசாயி கூட்டணியை பாதுகாப்பது என்பதால் மட்டுமே சோஷலிசத்தின் நோக்கம் வெற்றிபெறாது.  இன்னும் சொல்லப்போனால், இதுவேகூட சோஷலிச சமுதாயக் கட்டமைப்பின் உருவாக்கத்தில் ஏற்பட்ட தோல்விக்கு முக்கிய காரணியாக அமைந்தது.  முதல்கட்டத்தில் தொழிலாளி வர்க்கம் விவசாயி வர்க்கத்துடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு அதிகாரத்தை கைப்பற்ற முடிந்தது. 

ஆனால் சோஷலிச புரட்சியை நோக்கிய முன்னேற்றப்பாதையில் சிரமம் ஏற்பட்டது.  சோவியத் யூனியனில் கூட்டு ஐக்கிய செயல்பாடுகள் என்பதை நிர்ப்பந்தப்படுத்தியபோதும்சரி, சீனாவில், கூட்டு ஐக்கிய செயல்பாடுகளுக்கு நிர்ப்பந்தம் அளிக்காதபோதும்சரி, விவசாயத் துறையில் மாற்றத்தை உருவாக்க அவசரகதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது, புரட்சியின் அடிப்படையே ஆட்டம் கண்டது.  பலவீனமடைந்தது.  மேலும், அதுவே பெரிய அளவிற்கு ஒருகட்சி சர்வாதிகாரத்திற்கு இட்டுச் சென்றது.  நாளடைவில் இது ஏற்கத்தக்கதல்ல என்பதும் நிரூபணமானது.  சுருக்கமாகச் சொல்வதென்றால், தொழிலாளி-விவசாயி கூட்டணியை தக்கவைப்பது என்பது சிரமமானது என்பது நிரூபிக்கப்பட்டது. 

நிச்சயமாக, இதற்கு பிரத்தியேகமான வரலாற்றுப்பூர்வமான காரணங்கள் இருக்கும்.  இருந்தாலும், இதற்கு சில முக்கிய தத்துவார்த்தரீதியான காரணங்களும் இருக்கின்றன.  குறைந்தபட்சம் இரண்டு பொதுவான தத்துவார்த்த நிலைப்பாடுகள் இருக்கின்றன.  நிரந்தரமான நீடித்த தொழிலாளர்- விவசாயக் கூட்டணி கட்டப்பட வேண்டுமென்றால், இந்த தத்துவார்த்த நிலைப்பாடுகளை திருத்தியமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. 

முதலாவது தவறான தத்துவார்த்தப் புரிதல்

”ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயத்தின் இரண்டு உத்திகள்”என்ற நூலில், ஜனநாயகப் புரட்சியில் இருந்து சோஷலிசத்தை நோக்கிய மாற்றம் என்பது தொழிலாளி விவசாயி கூட்டணியின் அடிப்படையில் துவங்குகிறது என்று லெனின் குறிப்பிடுகிறார்.   மாற்றத்தை நோக்கிய பயணத்தில், விவசாய வர்க்கத்தில் இருந்து தொழிலாளி வர்க்கத்துடன் கூட்டாளிகளாக வருபவர்களிடையே இடையில் சில மாற்றங்கள் வரலாம் என்பதையும் குறிப்பிடுகிறார். 

புரட்சியின் கட்டத்தை நெருங்கநெருங்க, ஆரம்பத்தில் புரட்சியின் பக்கம் நிற்கும் பணக்கார விவசாயிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதாகும்.  புரட்சியின் இறுதிக்கட்டத்தில் அவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது தெரிந்தே எதற்காக பணக்கார விவசாயிகள் மற்றும் உயர்தட்டு நடுத்தர விவசாயிகள் புரட்சியின் ஆரம்பக் கட்டத்தில் கூட்டணியில் இருக்கவேண்டும்?  என்கிற கேள்வி இங்கு எழுகிறது. 

அவர்கள் முதலில் புரட்சியின் பக்கம் நிற்காவிட்டால், புரட்சி என்பது மிகவும் சிரமமானதாக மாறிவிடும்.  மறுபுறம், புரட்சி அவர்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையுடனும், ஏதேனும் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு எதிராக அது திரும்பும் என்று எதிர்பார்க்காமலும், புரட்சியின் துவக்கத்தில் அவர்கள் இணைகிறார்கள்.  திடீரென்று அவர்களுக்கு எதிராக திரும்பும்போது, புரட்சிக்கெதிரான அவர்களின் பகைமை என்பது கசப்பானதாக மாறுகிறது.  குறிப்பாக, அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதில் இருந்து வரும் பகைமை மிகவும் கசப்பானதாக இருக்கும்.  இதனால், புரட்சியின் பாதையில் நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். 

குறிப்பாக ஏகாதிபத்திய பகைமையால் சுற்றி வளைக்கப்படும்.  ஏற்கனவே, இதனை சந்திக்கவேண்டிய சூழல் இருக்கிறது.  இதனிடையே, சமகால உலகமயமாக்கல் சகாப்தத்தில், எந்தவொரு தொழிலாளி-விவசாயி கூட்டணியும் உலகமயமாக்கலில் இருந்து துண்டித்துக்கொண்டு, அதிகார ஆதிக்கத்திற்கு உயரும்போது, பகைமையால் சுற்றி வளைக்கப்படுவது என்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.  ஒருவேளை, இந்த எல்லா கஷ்டங்களையும் தாண்டி, அனைத்து பகைமையையும், விமர்சனத்தையும் எதிர்த்து, வலுவான பலமான நடவடிக்கைகளால் அது தன்னை தக்க வைத்துக் கொண்டாலும், இந்த கஷ்டங்களையெல்லாம் எதிர்கொள்வதற்கான அத்தியாவசியமான தேவையாக ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட சர்வாதிகார ஆட்சியை உருவாக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்படும்.  இதனால் புரட்சியின் அடிப்படைத்தன்மை சிதைக்கப்பட்டுவிடும். 

வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், ஜனநாயகப் புரட்சிக்கு தேவைப்படுகிற வர்க்கசக்திகளின் சமநிலையில் மாற்றம் ஏற்படுவதென்பது சோசலிசத்தை நோக்கிய பயணத்தில் மிக முக்கியமாக தேவையாக இருக்கிறது.  வெறுமனே நிர்ப்பந்தத்தின் மூலம் சோசலிசத்தை நோக்கி நகர முடியாது.  மாறாக, ஜனநாயகப் புரட்சியில் துணைநின்ற பணக்கார விவசாயிகளின் வலிமையில் குறைவு ஏற்பட்டாலும், புரட்சியில் ஈடுபட்ட அனைத்துப் பிரிவு விவசாயிகளின் பொருளாதார நிலைமைகள் முன்னேற்றமடையும் வகையிலான ஒரு செயல்முறையின்மூலம் இதனை அடையவேண்டும்.   

மக்களுக்குச் சொந்தமான, மக்களால் கட்டுப்படுத்த முடிகிற, கூட்டமைப்புகள்தான் இந்த இரண்டு நோக்கங்களையும் நிறைவேற்றும் வழிமுறைகளாகும்.  அதாவது, அவை மிகவும் பணகக்கார விவசாயிகளின் வலிமையை குறைக்கும்.  அதேநேரத்தில், இந்த கூட்டமைப்பு முறையில், உற்பத்திசக்திகள் வளர்ச்சியடைவதும் முன்னேற்றமடைவதும் நிகழ்வதன் காரணமாக, அனைத்துப் பிரிவு விவசாயிகளின் பொருளாதார நிலையும் முன்னேற்றமடையும்.  லெனின் குறிப்பிடுகிற, சோசலிசத்தை நோக்கிய மாற்றத்தில் பணக்கார விவசாயிகளின் மீதான தாக்கம் என்பது நிர்ப்பந்தத்தினால் ஏற்படுத்தப்படுவதாக எண்ணப்படாது.  மாறாக, சுயமேம்பாட்டிற்குத் தேவையான தூண்டுதலாக பார்க்கப்படும். 

சோசலிசத்தை நோக்கி முன்னேறுவதை எளிமைப்படுத்துவதற்காக,  தொழிலாளி-விவசாயி கூட்டணி தன்னுடைய குணாம்சத்தை மாற்றிக் கொண்டாலும்கூட, விவசாயிகளினுடைய எந்தப் பிரிவினரும், பணக்கார விவசாயிகள் உட்பட பகைமையாகி விடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்கவேண்டும்.  இல்லையென்றால், அதுவே கூட புரட்சியை பலவீனப்படுத்திவிடும்.  இந்த உண்மையை லெனினே கூட, தன் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் நன்கு அறிந்திருந்தார்.

இரண்டாவது தவறான தத்துவார்த்த புரிதல்

இந்த மிக முக்கியமான வாதத்தை மறுப்பதற்கு, இரண்டாவது தத்துவார்த்த ரீதியிலான தவறான கருத்து பயன்படுத்தப்படுகிறது.  அதற்குப் பதிலாக சோசலிசத்திற்கு மாறுகின்ற இடைப்பட்ட காலத்தில் எதிர்கொள்ளும் முரண்பாடுகளின் சக்திபற்றி இந்த கருத்து வாதிடுகிறது.  சந்தைக்கான உற்பத்தி என்பது உற்பத்தியாளர்களிடையே ஒரு வேறுபாட்டினை பிரிவினையை உருவாக்குகிறது.  இதனால் முதலாளித்துவம் தோன்றுவதற்கான போக்கு கீழிருந்து உருவாகிறது என்ற நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்டு இந்த இரண்டாவது கருத்து அமைகிறது. 

சோசலிசத்திற்கு பகையான இந்த முதலாளித்துவப் போக்கினை கட்டுப்படுத்துவதற்காக முதலாளித்துவத்தின் அசல் கூறுகளான தனியார் சொத்து, மூலதனச் சேர்க்கை, சந்தை தீர்மானிக்கும் கூலியை பெறும் கூலித்தொழிலாளர்கள், தன்னார்வ பரிமாற்றங்கள், விலைஅமைப்பு முறைகள், போட்டிசந்தைகள் போன்றவை கட்டாயமாக ஒடுக்கப்படவேண்டும் என்று இந்த கருத்து வாதிடுகிறது.  இது தவறான கருத்தாகும்.  ஏனெனில், சந்தைக்கான எந்தவொரு உற்பத்தியும் சரக்குஉற்பத்தியே என்ற அடிப்படை தவறினை இது செய்கிறது. 

சரக்குஉற்பத்தி என்பது நிச்சயமாக உற்பத்தியாளர்களிடையே வேற்றுமையை உருவாக்கும். எனவே, சிறு உற்பத்தியாளர்களிடையே இருந்து முதலாளித்துவத்திற்கான போக்கு உதயமாகும் என்றெல்லாம் இந்த கருத்து வாதிடுகிறது.  ஆனால் சரக்கு உற்பத்தி என்பதேகூட சந்தைக்கான உற்பத்தியை மட்டும் குறிப்பதல்ல.  உதாரணத்திற்கு இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளாக சந்தைக்கான உற்பத்தி நடைபெற்று வருகிறது.  ஆனால், கீழிருந்து முதலாளித்துவப் போக்கு என்பது இதுவரை கவனிக்கத்தக்க வகையில் எழவில்லை.  அப்படி ஒரு போக்கு எழுந்திருக்குமேயானால், ஐரோப்பாவிற்கு முன்னரே இந்தியாவில் முதலாளித்துவம் வந்திருக்க வேண்டும்.  காலனிய சுதந்திரத்துக்கு பின்னர்தான் இந்தியாவில் முதலாளித்துவம் தோன்றியது. 

சரக்கு உற்பத்தி என்பது சந்தைக்காக தயாரிக்கப்படும் அந்த பொருள்உற்பத்தி அதனுடைய உற்பத்தியாளருக்கு பயன்மதிப்பை தருகிறதா அல்லது பரிமாற்ற மதிப்பினை தருகிறதா என்பதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.  சரக்கு உற்பத்தியில் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையிலான உறவு என்பது முற்றிலும் பொதுவானது.  தனிமனித உறவு சம்பந்தமானதல்ல.  இந்தியாவில் உள்ள எஜமான் வேலையாள் அமைப்பில் இருப்பதுபோன்று (இந்தியாவில் உள்ள சாதிகட்டமைப்பில் உயர்ஜாதியில் இருப்பவரிடம் தாழ்ந்தஜாதி என்று சொல்லப்படும் சாதியில் உள்ளவர்கள் வேலை செய்து கொடுத்துவிட்டு அவர்கள் தரும் கூலியை பெறும் முறை உள்ளதுஇதுவே எஜமான்வேலையாள் உறவுமுறை) அல்லது இந்திய பஜார்களில் பொதுவாக பொருட்களை விற்பனை செய்யும்போது அன்றாட நிகழ்வுகளில் இருப்பது போன்றவற்றில் உற்பத்தியாளர்களிடையே வேற்றுமையை நிச்சயம் உருவாக்கும் என்பதோ அல்லது இதனால் கீழிருந்து சிறு உற்பத்தியாளர்களிடமிருந்து முதலாளித்துவத்தின் போக்கு உதயமாகும் என்பதோ இல்லை.  இந்த உற்பத்தியாளர்கள் கூலித் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால்கூட, இந்தியாவில் ஒரு ஸ்வீட்கடை வைத்திருக்கும் வியாபாரிக்கும் வேலையாளுக்கும் உள்ள உறவுமுறைதான் இருக்கும்.  இங்கு சரக்கு உற்பத்தியில் இருந்து முதலாளித்துவம் உதயமாகும் என்பதற்கான இடம் இல்லை. 

இருந்தபோதும், சந்தைக்காக தயாரிக்கப்படும் அனைத்துமே சரக்கு உற்பத்தியே என்ற நம்பிக்கையில் ஒரு முதலாளித்துவப் போக்கு உருவாகிறது.  குறிப்பாக, எங்கெல்லாம் கூலித்தொழிலாளர்கள் நியமிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் இது உருவாகும்.  சோசலிச நாடுகளில் சிறு நிறுவனங்கள் மற்றும் விளிம்பு நிலை நிறுவனங்களை ஒழுங்குபடுத்தாமல், கூட்டு அமைப்புகளை உருவாக்குகிறோம் என்ற பெயரில் அவற்றை ஒடுக்கியதன் காரணமாக, அவை காணாமல் போய், புரட்சியின் சமூக அடிப்படையில் பலவீனம் ஏற்பட்டது. புரட்சியின் அடிப்படையே ஆட்டம் கண்டது. இதற்கான சமீபத்திய உதாரணம்தான் சீனாவின் கலாச்சாரப் புரட்சி.  சீனாவின் கலாச்சார புரட்சியில், சிறு உற்பத்தியாளர்களை முதலாளித்துவத்தின் மூதாதையர்கள் என்ற வெளிப்படையான கருத்தின் அடிப்படையில், அவர்களை இல்லாமல் செய்தது என்பது,  அதாவது சிறு உற்பத்தித் துறையை அழித்தது என்பது, மிகவும் தவறான தத்துவார்த்த புரிதலுக்கான சமீபத்திய உதாரணமாகும். 

சோசலிச சமுதாயத்தில் செய்ய வேண்டியது

எனவே, சோசலிசத்தில் மட்டுமே மக்கள் கூட்டாக தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும்.  பொருளாதாரம் குறித்த எதிர்காலத்தையும் தீர்மானிக்க முடியும். அரசியல் தலையீட்டின் மூலம் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்பதால், சிறு உற்பத்தியை பற்றி தவறாக வறட்டுத்தனமாக புரிந்துகொள்ளாமல், அதை அழிப்பதற்கு பதிலாக, பாதுகாப்பதன் மூலமாக மேலே குறிப்பிட்டுள்ளபடி வறுமையிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்.  சிறு உற்பத்தியை பாதுகாத்து அதுவாக தானாக மேம்பாட்டிற்காக மாறுவதற்கு உதவினால் மட்டுமே சோசலிசத்தை அதன் அடிப்படையை பலப்படுத்த முடியும்.  அதற்கு இந்த இரண்டு தவறான தத்துவார்த்த புரிதல்களையும் திருத்தி சரிசெய்ய வேண்டும். 

***

(பிரபாத் பட்நாயக் அவர்கள் மேற்கூறிய கருத்தரங்கில் தனது கருத்துரையை தொடங்கும்போது, அவரது தலைமுறையில் இருந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் தான்சானியாவின் அதிபர் ஜுலியஸ் நெய்ரே ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்ததை நினைவுகூர்கிறார்.  மூன்றாம் உலக நாடுகளில், காலனியாதிக்கத்தை எதிர்த்து, அந்தந்த நாடுகளில், விடுதலைப் போராட்டத்தை தலைமைதாங்கி நடத்திய முக்கிய தலைவர்களான – இந்தியாவின் ஜவஹர்லால் நேரு, இந்தோனேசியாவின் சுகர்ணோ, கானா குடியரசின் வாமே க்ரூமேன், காங்கோ குடியரசின் பேட்ரிஸ் லுமும்பா, மற்றும் கென்யாவின் ஜோமோ கென்யாட்டா ஆகியோரின் பட்டியலில் ஜுலியஸ் நெய்ரே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று குறிப்பிடுகிறார்.)

ஆ.சி.ஈ.பி (RCEP) ஒப்பந்தம் இந்தியாவுக்கு உகந்த ஒன்றுதானா?

பிரபாத் பட்நாயக்

தமிழில்: பிறைகண்ணன், நர்மதா தேவி

பிராந்திய அளவிலான விரிவான பொருளாதாரக் கூட்டு’ (Regional Comprehensive Economic Partnership – RCEP-ஆர்.சி.ஈ.பி) என அழைக்கப்படும் , இந்தியா உட்பட 16 நாடுகள் அங்கம் வகிக்க இருக்கும் அமைப்பை எதிர்த்து, கடந்த அக்டோபர் 24-25 தேதிகளில், நாடு முழுவதும் விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை நடத்தினார்கள். ஒப்பந்தப் பேர பேச்சுவார்த்தைகள் இறுதிப்படுத்தப்படவுள்ள நிலையில், இத்தகைய போராட்டங்கள் உச்சத்தை எட்டியிருக்கின்றன. அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் நவம்பர் 4 அன்று – ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதற்கு சற்று முன்னால் – நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. கேரள அரசும் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கிறது!

முதலில் இந்த ஆர்.சி.ஈ.பி என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம் !

ஆர்.சி.ஈ.பியில் அங்கம் வகிக்கும் தெற்காசியாவின் 16 நாடுகளில், பத்து நாடுகள் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானில் அங்கமாக இருக்கின்றன. அதாவது இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தெ.கொரியா உள்ளிட்ட ஆறு நாடுகள் ஆசியான் அமைப்புடன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் (Free Trade Agreement – FTA) இருக்கின்றன. இந்த 16 நாடுகளின் மக்கள்தொகை உலகின் சரி பாதியாகும். உலகின் 40 % உற்பத்தியும் 30 % வர்த்தகமும் இந்த நாடுகளிடம் இருக்கின்றன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இத்தகைய ஒப்பந்தங்களிலேயே இதுதான் மிகப் பெரிய ஒன்றாக இருக்கும். இந்த ஓர் அம்சமே, இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் பரம ரகசியமான முறையில் நடந்து வருவதை, மிகப்பெரும் கண்டனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

ஜனநாயகமற்ற வகையில் இந்த ஒப்பந்தம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருவது உண்மையில் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பேர பேச்சுக்கள் பரம ரகசியமாக நடத்தப்பட்டு வருகின்றன; நவம்பர் தொடக்கத்தில் அரசுகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால், எஃப்.டி.ஏ., கையெழுத்தாகும், பாதிக்கப்படப்போகும் தரப்பைக் கலந்தாலோசிக்காமல் நிறைவேற்றப்பட்ட, ஒரு ‘செய்து முடிக்கப்பட்ட வினை’யாகிடும் (fait accompli)

இந்த ஒப்பந்தத்துக்குள் வரும் இந்தியா உட்பட எந்த நாட்டின் மக்களும், அவர்கள் மீது இந்த ஒப்பந்தம் ஏற்படுத்த இருக்கும் தாக்குதல்கள் குறித்துக் கருத்து தெரிவிக்க முடியாமல் போய்விடும்.

இந்திய அரசு ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் இந்தத் தாராள வர்த்தக ஒப்பந்தத்துக்குள் நாட்டை இழுத்துச் செல்கிறது என்பதையும் தாண்டி இன்னொரு ஆபத்து இருக்கிறது. மத்திய மாநில அரசுகளின் அதிகார வரம்புகளை வரையறுக்கும் இந்திய அரசியலமைப்பின் 7-ம் அட்டவணைப்படி, விவசாயம் தற்போது மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறது.
ஆர்.சி.ஈ.பியோ, அல்லது எந்தவொரு தாராள வர்த்தக ஒப்பந்தமோ, விவசாயத்தை நிச்சயமாகப் பாதிக்கும். என்றாலும், அதன் நிபந்தனைகள் குறித்து மாநிலங்களிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை. மாநிலங்களின் அதிகார வரம்புக்குள் இருக்கும் ஒரு துறை குறித்து, மத்திய அரசு இப்படி ஒருதலைப்பட்சமாக செயல்படுவது என்பது, மாநிலங்களுடைய அரசியலமைப்பு உரிமையை அப்பட்டமாக மீறும் செயல்.

அமெரிக்காவில், அரசு நிர்வாகம் இத்தகைய பன்னாட்டு ஒப்பந்தங்களில் முன்னதாகவே கையெழுத்திட்டிருந்தாலும்கூட, நாட்டில் ஒப்பந்தம் அமலாவதற்கு முன்பாக அந்த நாட்டின் பாராளுமன்றமான காங்கிரசின் ஒப்புதலைப் பெறுவது அவசியம்.
இந்தியாவிலோ, அரசிலமைப்புச் சட்டம் அத்தகைய நடைமுறைக்கு அழுத்தம் கொடுத்தாலும், அடுத்தடுத்த மத்திய அரசுகள், பாராளுமன்ற ஒப்புதலுக்கு சமர்ப்பிக்காமலேயே, இத்தகைய தாராள வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகின்றன.

உண்மையில், ஆசியான் அமைப்பின் தாராள வர்த்தக ஒப்பந்தம், இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால், முற்றிலும் ஒருதரப்பான முறையிலேயே கையெழுத்திடப்பட்டது. கேரள அரசு, தன்னுடைய மாநிலத்தின் சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது இந்த ஒப்பந்தம் ஏற்படுத்த இருக்கும் தாக்கம் குறித்து பெருங்கவலைகள் கொண்டிருந்தது; அப்போதைய முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையிலான அரசின் தூதுக்குழு, டில்லி சென்று, மத்திய அரசிடம் தங்களுடைய கவலைகளைத் தெரிவித்தது. தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் இந்தக் குழுவைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், கேரளாவுடன் கலந்தாலோசித்த பிறகே அந்த ஒப்பந்தம் இறுதியாகக் கையெழுத்திடப்படும் என்று தனிப்பட்ட அளவில் உறுதிகூறினார். இருந்த போதிலும், அடுத்தமுறை கேரள அரசின் தூதுக்குழு நாட்டின் தலைநகரை அடைந்தபோது, தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டது! பிஜேபி அரசோ, கூட்டாட்சித் தத்துவத்தின் மீது துளிகூட மதிப்பு கொண்டிறாத நிலையில், இந்த அப்பட்டமான அரசியலமைப்பு உரிமை மீறலை வெகு இலகுவாக அடுத்த கட்டத்துக்கு நடத்திச்செல்கிறது.

ஒப்பந்தத்தின் உண்மையான அம்சங்கள் மூடிமறைக்கப்பட்டாலும், விவசாயிகள் இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் வலுவாகவே இருக்கின்றன, காரணம் விவசாயத்தை உள்ளடக்கிய இந்த வகையிலான முந்தைய தாராள வர்த்தக ஒப்பந்தங்கள் எப்போதுமே விவசாயத்துக்கு எதிராக இருந்து வருகின்றன. இந்திய உற்பத்தியாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி, ஆஸ்திரேலியா, நியுசிலாந்தில் இருந்து மானிய விலையில் இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்களின் தாக்கம் இங்கு ஏற்கனவே கவனம் பெற்றுவருகிறது. அதேபோல், இந்திய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களை, அதுவும் குறிப்பாகக் கேரள உற்பத்தியாளர்களைப் பாதிக்கக்கூடிய, இந்தோனேசியா, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவுவிலை சமையல் எண்ணெய்க்கான வாய்ப்புகளும் கவனம் பெற்றுள்ளது.

இந்திய-ஆசியான் தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்கனவே சமையல் எண்ணெய் இறக்குமதியை இந்தியாவிற்குள் அனுமதித்துவிட்டது என்பது உண்மைதான். அதேசமயம், அந்த ஒப்பந்தம் அவை மீதான வரி விதிப்புகளையும் அனுமதித்து வந்தது. இந்த ஆர்.சி.ஈ.பி ஒப்பந்தமோ, அதற்கான வாய்ப்புகளை மிகவும் குறைத்துவிடும்.
உண்மையில் இந்தக் காரணத்தால் தான், கோதுமை, பருத்தி இறக்குமதிக்கான வாய்ப்புகள் குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன. இவை இந்திய விவசாயத்துறையின் மீது பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாட்டின் தொழிலாளர் சக்தியில் சரிபாதியைக் கொண்டுள்ள வேளாண்துறை, நவீன தாராளமயக் கொள்கையால் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பிஜேபி அரசின் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மதிகெட்ட செயல்களால் அந்தப் பாதிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் ஆர்.சி.ஈ.பியின் விளைவுகள் கடுமையானவை.

ஆபத்துகள் இத்தோடு முடியவில்லை. ஆர்.சி.ஈ.பியின் ஒரு அம்சமாக வரயிருக்கும் அறிவுசார் காப்புரிமை ஆதிக்கம், விவசாயிகள் தங்களுடைய விதைகளைப் பயன்படுத்துவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும் என்பதோடு மட்டுமில்லாமல், வழக்குகள் இல்லாமல், விவசாயிகள் தங்களுடைய விதைகளைப் பயன்படுத்த முடியாத நிலையையும் உருவாக்கும்.
காப்புரிமை ஆதிக்கத்தின் கடுமையான கட்டுப்பாடுகள், மருந்துத் துறையையும் கடுமையாகப் பாதித்து, மருந்துகளின் விலையை ஏற வைத்து மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.

இத்தகைய சூழல், ‘இந்த ஒப்பந்தந்தால், இறக்குமதிகள் மலிவாகி, சரக்குகளின் விலை குறைந்து, நுகர்வோருக்கு நன்மை பிறக்கும்’ என்ற வழக்கமான வாதத்துக்கும் முரணாகவே நிலைமைகள் மாறும் என்பதை காட்டுகிறது.
மேலும் இந்த வாதம், காலனியாதிக்கத்தின் போது, இந்தியாவில் தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டதை நியாயப்படுத்த, காலனிய அரசாங்கம் முன்வைத்த வாதத்தை முற்றிலும் ஒத்திருக்கிறது.

இயந்திரங்கள் உற்பத்தி செய்த மலிவான பொருட்களின் இறக்குமதியால் விளைந்த, பெருந்திரளான வேலையின்மையையும், பெருந்திரளான வறுமையையும் நியாயப்படுத்த, இத்தகைய மலிவான இறக்குமதிகள், இத்தகைய பொருட்களின் நுகர்வோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது என அந்தக் காலத்தில் வாதிடப்பட்டது.
ஆனால், மலிவான இறக்குமதியால் ஏற்படும் பெருந்திரளான வேலையின்மைக்கும் வறுமைக்கும் எதிராகப் போராடுவது மட்டும் இங்கு கேள்வியில்லை.

இந்த மலிவான இறக்குமதியால் சிலருக்கு சிறந்த வாழ்க்கைத் தரம் கிடைக்கும் என்பது முற்றிலும் அற்பமானது. இங்கே இன்னும் ஒரு நுட்பமான புள்ளி உள்ளது.
மலிவான இறக்குமதிகள் உருவாக்கக்கூடிய விவசாயிகளின் நிற்கதியற்ற நிலை என்பது, உழைப்பை வழங்கக்கூடிய வேலையற்றோர் பட்டாளத்தை அதிகரிப்பதுடன், தங்களுடைய கூலிக்கான கோரிக்கைகளை முன்வைக்கும் வலுவற்றவர்களாக அவர்களை ஆக்கிவிடும்.
விவசாயிகள் மற்றும் பிற தொழிலாளர்களின் குறைந்த வருமானம் போன்றவற்றால், ஏற்படக்கூடிய பெருக்க விளைவுகள் வாயிலாக, தற்போது நம்முடைய பொருளாதாரம் வீழ்வதற்காக விரைந்து கொண்டிருக்கும் மந்தநிலை என்பது மேலும் தீவிரமடையும்.
மலிவான இறக்குமதிகளால் பயன்பெறக் கூடிய நபர்கள், விவசாயிகள் ஆதரவற்ற நிலையில் இருந்தாலும், தங்களுடைய வருமான துளியும் பாதிப்புக்குள்ளாத நபர்களாகவே இருப்பார்கள்.
ஆனால், விவசாயிகளின் நிற்கதியற்ற நிலை என்பது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும்போது, மாறாத வருமானம் கொண்ட உழைக்கும் மக்கள் என்று ஒருத்தரும் இருக்க முடியாது.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், விவசாயிகளின் தலையெழுத்து, நாட்டு மக்களின் தலையெழுத்தையும் பெரிய அளவில் பாதிக்கும். அவர்களின் நிற்கதியற்ற நிலை, சமூகத்தின் பரவலான ஒரு பகுதியைப் பாதிக்கும்.
இந்த உண்மை, வேறு சில சந்தர்ப்பங்களில், வேறு சில நிகழ்வுகளால் மறைக்கப்படும் என்பது உண்மைதான். உதாரணமாக, சொத்து விலைவீக்கக் குமிழி போன்றவற்றால் பொருளாதாரத்தில் ஏற்படும் மலர்ச்சி.

உண்மையில் தற்போதுவரை அந்த பாதிப்புகால் மறைக்கப்பட்டே வந்துள்ளது; விவசாய நெருக்கடி என்பது இதுவரை நடுத்தர வர்க்கத்தைப் பாதிக்கவில்லை; ஆனால், தற்போதைய சூழலில், இந்த மலர்ச்சியெல்லாம் அடங்கிவிட்ட நிலையில், அவ்வாறாக வாய்ப்பே இல்லை, அதனால், இனி மேற்கொண்டு வரக்கூடிய நிற்கதியற்ற விவசாயிகளின் நிலை என்பது, பரவலான பாதிப்பை சமூகத்தில் ஏற்படுத்தத்தான் செய்யும், அதனால், மலிவான இறக்குமதிகளால் பயனடைபவர்களாக எஞ்சப் போகிறவர்கள் சொற்ப எண்ணிக்கையிலானவர்களாகவே இருப்பார்கள்.

ஆர்.சி.ஈ.பி வெறும் விவசாயத் துறையை மட்டும் பாதிக்கப் போவதில்லை. கிழக்காசியாவில் இருந்து இந்தியாவிற்குள் குவியக்கூடிய இறக்குமதிகள் இந்திய உற்பத்தித் துறையையும் கடுமையாகப் பாதிக்கும். இரும்பு, உருக்கு, கடல்வளப் பொருட்கள், வேதிப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் துறைகள், ஏன் ஆடைத் துறைகள் கூட, ஆர்.சி.ஈ.பின் கீழான வரிவெட்டுகள் குறித்துக் கலக்கமடைந்துள்ளன.
ஒரு சிலர், ‘இப்படிப் பரவாலான உற்பத்தித் தளத்தில் இந்தியா போட்டிகளை இல்லாமல் செய்துவிட்டால், தகுதியற்ற உற்பத்திக் கூடங்களை மூடுவதன் வாயிலாக, நிலைமையை மேம்படுத்த முடியும் அல்லவா?’ எனக் கேட்கிறார்கள்.
இந்தக் கேள்வி, பொருளாதாரம் குறித்த புரிதலற்ற போக்கைக் காட்டிக்கொடுக்கிறது. ஒரு சமூகத்தால் உற்பத்தி செய்ப்பட்ட பொருட்கள்- வளங்களின் அடிப்படையில் அது எவ்வளவு விலை அதிகமாக இருந்தாலும்- அதே சமூகத்தால் முழுவதும் பயன்படுத்தப்படும்போது, அந்தச் சமூகத்தில் அதிகமான வேலைவாய்ப்புகளும், நுகர்வும் இருக்கும்.
ஆனால், அந்தச் சமூகத்து மக்கள் தங்கள் சமூகத்தில் உற்பத்தியாகாமல், வெளியில் இருந்து உற்பத்தியான பொருட்களை வேண்டினால், வேலைவாய்ப்பும், உற்பத்தியும் மட்டும் வீழ்ச்சியடையாது (இறக்குமதி மதிப்புக்கு சமமான அளவுக்கு ஏற்றுமதிகளால் இந்த நிலை சரிப்படுத்தப்படாதவரை), திருத்தத்துக்கு இடமே இல்லாத வகையில் நுகர்வும் குறையும்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், “தாராள வர்த்தம்” “திறன்” போன்ற வாதங்கள் எல்லாம், முதலாளித்துவ பொருளாதாரத்தின் தூய கருத்தியல் மரபே. அவை பொதுவாக செல்லுபடியாகாது; அவற்றை நாம் விரைவில் மறப்பது நமக்கு நல்லது.
இதுவரை ஆர்.டி.ஈ.பியின் வேலையின்மையை உருவாக்கும், அல்லது வறுமையை உருவாக்கும் விளைவுகளை மட்டுமே நாம் பார்த்தோம்.

எவ்வாறாயினும், அத்தகைய வறுமையுடன் நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் விரிவடையும் (உண்மையில் வறுமையின் பிரதிபலிப்புதான் இது).
இந்தோ-ஆசியான் எஃப்.டி.ஏ., ஏற்கனவே ஆசியான் முகாமுடன் நமது தற்போதைய பற்றாக்குறையை விரிவுபடுத்தியுள்ளது; சீனாவுடனான நமது பற்றாக்குறையைப் போலவே ஆர்.சி.ஈ.பி.,யின் கீழ் இந்தப் பற்றாக்குறை மேலும் விரிவடையும்.
சுருக்கமாகக் கூறுவெதென்றால், ஆர்.சி.ஈ.பி.,யில் கையெழுத்திடுவது என்பது, நாட்டில் வறுமையை ஏற்படுத்துவதற்காக, ஒரு பெரும் தொகையைக் (தற்போதைய விரிந்த பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக) கடன் வாங்குவதற்கு ஒப்பானது.

இந்தியாவில் வேலையின்மை நெருக்கடி

வெங்கடேஷ் ஆத்ரேயா

முதலாளித்துவ அமைப்பிற்கு முந்தைய சமூகங்களில் பொதுவாக கூலி உழைப்பு என்பது கிடையாது. எனவே பகிரங்கமாக வேலை தேடித் திரியும் வேலையில்லா பட்டாளங்களும் கிடை யாது. இதன் பொருள் அச்சமூகங்களில் மனித உழைப்பு என்ற உற்பத்திக்கான வளம் முழுமை யாக பயன்பட்டது என்பதல்ல. அவரவர்கள் சுய தொழில் செய்துவந்த நிலையில் லாப வேட்டை யாலும் போட்டியாலும் உந்தப்படாத சூழலில் உழைக்கும் அளவும் நேரமும் பல்வேறு தொழில் களுக்கு இடையேயும் பருவங்கள் சார்ந்தும் வேறு பல காரணங்களாலும் சமூகத்தில் ஒரே சீராக இருந்ததில்லை. உற்பத்தி சக்திகளின் அளவு குறை வாகவும்  அவற்றின் வளர்ச்சி மெதுவானதாகவும் இருந்த அச்சமூகங்களில் சராசரி உழைப்பு நேர மும் குறைவாக இருந்திருக்க வாய்ப்பில்லை. குடும்பங்கள் தம்மை மறு உற்பத்தி செய்து கொள் வதற்கு தங்கள் உழைப்பை அதிகம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தனர். (விதிவிலக்கு சுரண்டும் வர்க்கத்தினர் – பிறர் உழைப்பில் சுகபோக மாக வாழ்ந்துவந்த எஜமானர்களும் நிலப்பிரபுக் களும் அரச குடும்பங்களும் அவர்களது அடிவருடி களும்) 

முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகங்களில் உழைப்போர் ஒருபுறம் கடுமையாக சுரண்டப் பட்டாலும் அவர்களது உழைப்பு நேரத்தின் மீதும் உழைப்பு சக்தியின் மீதும் அவர்களுக்கு முழு உரிமை மறுக்கப்பட்ட போதிலும் அவர் களுக்கான அடிப்படை ஜீவாதார உத்தரவாதங் கள் இருந்தன. இவை இன்றைய நிலையில் இருந்து காணும்பொழுது மிகத் தாழ்வான வாழ்க்கை நிலையைத்தான் தந்தன என்றாலும், முதலாளித்துவத்திற்கு முந்தைய காலங்களில் உழைக்கும் மக்கள் அடிமைகளாகவோ, விவசாயி கள் உள்ளிட்ட சிறு உற்பத்தியாளர்களாகவோ இருந்தமையால் பகிரங்கமாக வேலை தேடித் திரியும் காட்சிகள் இல்லை. வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்ற தாக்குதல்கள் அவர்களை புலம் பெயரச் செய்ததுண்டு.  ஆனால் வேலையில்லா பட்டாளம் என்ற ஒரு சமூக நிகழ்வு அச்சமூகங் களில் இல்லை.  முதலாளித்துவத்தை நோக்கி நிலப்பிரபுத்துவ சமூகம் வேகமாக மாறிய காலத்தில்தான், உற்பத்திக்கருவிகளில் இருந்து அன்னியப்படுத்தப்பட்ட, பலவந்தமாக பிரிக்கப் பட்ட இத்தகைய பட்டாளங்கள் சமூகத்தின் அன்றாட காட்சிகளாக மாறத் துவங்குகின்றன.

வேலையின்மை

முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியில் பெரும்பகுதி உழைப்பாளிகள் கூலி தொழிலாளி களாக மாறுவதும், முதலாளிகளிடம் வேலைக்கு சேருவதும் இயல்பான நிகழ்வாக தோன்றுகிறது. முதலாளித்துவ அமைப்பில்தான் முதல்முதலாக பெருமளவில் மனிதர்கள் வேலை தேடி அலைவ தும், வேலை கிடைக்காமல் தவிப்பதும் நிகழ் கிறது. இதனை இங்கு ஏன் சொல்கிறோம் என்றால் இந்தியா இன்னமும் முழு முதலாளித் துவத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் சமூகம் என்பதை நினைவுபடுத்தவேண்டியுள்ளது. எனவே, இங்கு பகிரங்கமான வேலையில்லா பட்டாளங்கள் ஒருபக்கம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தாலும், மறுபுறம் சுயவேலை செய்வோர் மத்தியில் தங்கள் உழைப்பை முழுமை யாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளும் குறைந்து வருகின்றன. ஆனால் இவையெல்லாம் வேலையின்மை கணக்கில் வருவதில்லை. அதே சமயம், வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டோர்க்கு சமூகப் பாதுகாப்பு அற்ற நமது நாட்டில், ஏழை கள் ஏதாவது வகையில் உழைப்பை செலுத்திக் கொண்டேயிருந்தால்தான் வயிற்றை கழுவிக் கொள்ள முடியும். இதன் பொருள், பலரும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடவேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். இவர்களின் வரு மானம் மிகவும் சொற்பமாக இருந்தாலும் இவர் கள் வேலையில்லாதோர் கணக்கில் வரமாட்டார் கள். இவற்றை எல்லாம் மனதில் நிறுத்திக் கொண்டு இன்று இந்தியா  எதிர்கொள்ளும் வேலை யின்மை பிரச்சினையை பரிசீலிப்போம்.

வேலையின்மை அன்றும் இன்றும்

நாடு விடுதலை பெற்ற காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் (1928-1940) கால மகத்தான வளர்ச்சியும் மேலை நாடுகள் எதிர்கொண்ட (1929-1939) கால நீண்ட பொருளாதார பெரும் வீழ்ச்சியும் பொருளாதார வளர்ச்சியில் அரசாங் கம் மையப்பங்கு ஆற்ற வேண்டும் என்பதையும், மையப்படுத்தப்பட்ட  திட்டமிடுதல் அவசியம் என்பதையும், சுதந்திர இந்தியாவின் ஆளும் வர்க்கத்திற்கு உணர்த்தியிருந்தன. 1950 – 1966 காலத்தில் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் அமலாக்கப்பட்டன. கணிசமான அளவில் தொழில் துறை, கட்டமைப்பு துறை, நிதித் துறை, கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட மனிதவளத் துறை சார்ந்த முதலீடுகளை பொதுத்துறை மூலம் அரசாங்கம் மேற்கொண்டது. பொதுத் துறை முதலீடுகள், இறக்குமதிக்குப் பதில் உள்நாட்டில் உற்பத்தி, குறுகிய வரம்புகளுக்குட்பட்ட நிலச் சீர்திருத்தம் ஆகிய நடவடிக்கைகள் உள்நாட்டு சந்தையை விரிவடையச்செய்தன. 1900-1950  கால ஐம்பது ஆண்டு தேக்க நிலையில் இருந்து இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 4ரூ என்ற வேகத்தில் வளர்ந்தது. நகர்ப்புறங்களில் விவசாயம் அல்லாத துறைகளில் வேலை வாய்ப்புகள் வேகமாக வளர்ந்தன. மூன்றாம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் (1961 – 66) ஆலைத்துறை வேலை வாய்ப்பு ஆண்டுக்கு கிட்டத் தட்ட 6ரூ என்ற வேகத்தில் வளர்ந்தது.  நிலச்சீர் திருத்தம் கிராமப்புறங்களில் நிலப்பிரபுக்கள் கிடப்பில் போட்டிருந்த நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வர உதவியது. பொதுத்துறை முதலீடு கள் மூலம் பாசனமும் மின்சார உற்பத்தியும் அதிகரித்ததால் ஒரு பகுதி நிலங்களில் இரண்டு, மூன்று போக சாகுபடி சாத்தியமாயிற்று. 1960 களின் நடுப்பகுதியில் இருந்து திட்டமிடுதல் நெருக்கடிக்கு உள்ளாகிய போதிலும், அரசின் முதலீட்டு முடக்கத்தால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்ட போதிலும், பசுமை புரட்சி மூலம் 1966 முதல் 1980கள் வரை விவசாயத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரித்தன. அரசின் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டமும் (ஐ ஆர் டி பி – IRDP) வேலை வாய்ப்புகளை கூட்டியது. ஆனால் துல்லியமான ஆய்வுகளின் அடிப்படையிலான  வேலை வாய்ப்பு கள் மற்றும் வேலையின்மை பற்றிய தரவுகள் சேகரிக்கப்படும் முயற்சி 1970களில்தான் துவங்கி யது.

தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO – National Sample Survey Organization) 1972-73 ஆம் ஆண்டில் வேலை வேலை யின்மை பற்றிய நாடு தழுவிய ஆய்வை முதல் முறையாக நடத்தியது. அதன்பின் ஒவ்வொரு ஐந்தாண்டு காலத்திற்குப்பின் இத்தகைய ஆய்வு கள் தொடர்ந்து மேற்கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு 1972-73, 1977-78, 1983, 1987-88, 1993-94, 1999-2000, 2004-05, 2009-10 ஆகிய ஆண்டுகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. 2009-10 வறட்சி ஆண்டு என்ற காரணத்தை கூறி அன்றைய திட்டக்குழு 2011-12 ஆண்டில் மீண்டும் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுகள் அனைத்தும் பொதுவாக சிறப்பாக செய்யப்பட்டன. இவற்றில் கிடைத்த புள்ளி விவரங் கள், அவை மீதான கருத்தாழமிக்க ஆய்வுகள் அடங்கிய அறிக்கைகள் ஒவ்வொரு ஆய்வுக்குப் பின்பும் தயார் செய்யப்பட்டு அச்சடிக்கப்பட்ட வடிவிலும் கூடுதலாக அண்மை ஆண்டுகளில் இணைய தளம் வாயிலாகவும் வெளியிடப் பட்டன. வேலையின்மை பற்றியஇந்த வெளிப் படையான அணுகுமுறையை மோடி தலைமை யிலான பாஜக அரசு பின்பற்ற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வெளிவந்துள்ள இவ்வறிக்கைகள் தாராளமய காலத்தில் வேலை வாய்ப்ப்புகள் முன்பைவிட குறைவான வேகத்தில் தான் அதிகரித்துள்ளன என்பதையும் வேலை யின்மை பிரச்சினை இக்கால கட்டத்தில் அதிகரித் துள்ளது என்பதையும் காட்டு கின்றன.

2011-12க்குப்பின் 2016-17இல் அடுத்த ஆய்வு நடந்திருக்க வேண்டும். ஆனால் பாஜக அரசு ஆய்வை நடத்தவில்லை. அந்த ஆண்டில் நவம்பர் மாதம் எட்டாம் நாள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி பிரகடனம் செய்தார். அதற்குப் பிறகு பணமதிப்பிழப்பு சூறாவளி ஒருபுறமும், அதன் மோசமான விளைவுகளை மறைக்க முயலும் மோடி அரசின் பிரச்சார சூறாவளி மறுபக்கமும் மக்களை தாக்கின. பல கேள்விகள் எழுப்பப்பட்டபின் 2017-18 ஆண்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. களஆய்வு முடிந்து அறிக்கையும் தயாராகி விட்டது. டிசம்பர் 2018 இல் தேசிய புள்ளியியல் ஆணையம் அறிக்கையை ஏற்று ஒப்புதலும் அளித்துவிட்டது. ஆனால் மோடி அரசு அறிக்கையை வெளியிடா மல் இன்றுவரை இழுத்தடித்துவருகிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம் 2017-18க்கான ஆய்வு அறிக்கை வேலையின்மை விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளதை படம் பிடித்துக்காட்டுகிறது என்பதாகும். தாராளமய கொள்கைகள் மட்டு மின்றி, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக் கையும், குழப்பம் நிறைந்த ஜி எஸ் டி அமலாக்க மும் வேலையின்மை பிரச்சினையை தீவிரப்படுத்தி யுள்ளன என்பதை ஆய்வின் தரவுகள் உறுதி செய்கின்றன.

வேலையின்மை புள்ளிவிவரங்கள்: சிறு விளக்கம்

வேலையின்மை பிரச்சினையின் இன்றைய அளவு மற்றும் தன்மை ஆகியவற்றுக்குள் செல்வ தற்கு முன், வேலையின்மையை கணக்கிடுவதில் உள்ள சில நுட்பமான அம்சங்கள் பற்றி பார்ப் போம். முதலில், உழைப்பு படை என்பதன் இலக்கணத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டில் உள்ள அனைவரும் உழைப்புப் படை யில் இல்லை. குழந்தைகள், மிக அதிக வயதில் உள்ளவர்கள், பல காரணங்களால் வேலை செய்ய இயலாத நிலையில் உள்ளோர், படித்துக் கொண்டிருப் பவர்கள் என்று மொத்த மக்கள் தொகையில் ஒரு குறிப்பிடத்தக்க விகிதத்தினர் பொருளாதார உற்பத்தி சார்ந்த வேலை செய்வதும் இல்லை; அத்தகைய வேலை தேடுவதும் இல்லை. இவர் களை உழைப்பு படைக்கு அப்பால் உள்ளவர்கள் என்று அழைக்கிறோம். இவர்களில் ஒரு கணி சமான பகுதியினர் வீட்டு வேலைகளில், குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவு செய்வ தில் கடுமையாக உழைக்கும் பெண்கள் ஆவர். இவர்களின் உழைப்பு இன்றியமையாதது என்றா லும், இவ்வித உழைப்பு அதிகாரபூர்வ புள்ளிவி வரக் கணக்குகளில் தேச உற்பத்திசார் உழைப் பாக கருதப்படுவதில்லை. இந்த உழைப்பை மட்டுமே செலுத்துவோர் உழைப்பு படை என்ற கணக்கில் வருவதில்லை. மற்றொரு முக்கிய பகுதி பல்வேறு நிலை படிப்புகளில் உள்ள மாணவ மாணவியர் ஆவர்.

வேலையில் இருப்போர், வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் என்ற இரண்டு வகையினர் சேர்ந்ததுதான் உழைப்பு படை. இதில் வேலையில் உள்ளவர்கள் வேலைப்படை யில் உள்ளனர். உதாரணமாக, கடந்த ஒரு ஆண்டை கால வரம்பாக வைத்து  1,000 பேரிடம் கணக்கு எடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு கணக்கெடுக் கப்படும்பொழுது 600 பேர் கடந்த ஒரு ஆண்டில் சில நாட்களாவது ஏதோ ஒரு பணியில் – சுய தொழில் அல்லது கூலி/சம்பள உழைப்பு – ஈடுபட்டிருக்கலாம். மேலும் ஒரு சிலர் – 25 பேர் என்று எடுத்துக்காட்டுக்காக கொள்வோம் – கடந்த ஒரு ஆண்டில் வேலை தேடியும் வேலை கிடைக்காதவர்களாக இருக்கலாம். ஆக உழைப்பு படையின் எண்ணிக்கை 625. மீதி 375 (1000 – 625 = 375) பேர் குழந்தைகளாகவோ படித்துக் கொண்டிருப் பவர்களாகவோ மிகவும் முதியோர் அல்லது வேறு காரணங்களுக்காக உழைக்கும் நிலையில் இல்லாதவர்களாகவோ இருக்கலாம். இவர்கள் உழைப்பு படையில் இல்லாதவர்கள். இந்த உதாரணத்தில் வேலையின்மை விகிதம் = வேலை கிடைக்காதவர்கள் / மொத்த வேலைப் படை =  25 / 625 அல்லது 1/25, அதாவது 4%.

வேலையின்மை விகிதத்தை கணக்கிடும் பொழுது என்ன கால வரம்பை வைத்து ஒருவர் வேலை யில்லாதோர்  பட்டியலில் இடம் பெறுகிறார் என்பது ஒரு முக்கிய கேள்வி. ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன்பு ஏதோ ஒரு வேலையில் (சுய வேலை, கூலி/சம்பள வேலை) இருந்திருக்கலாம். ஆனால் கடந்த ஒருவாரம் அவருக்கு எங்கும் வேலை கிடைக்காமல் இருந்திருக்கலாம். கடந்த ஒரு ஆண்டை வரம்பாக வைத்துக்கொண்டால், இந்த நபர் வேலையில்லாதோர் பட்டியலில் இடம் பெற மாட்டார். கடந்த ஒருவாரம்தான் காலவரம்பு என்றால், இந்த நபர் வேலையில்லாதோர் பட்டியலில் இடம் பெறுவார். 

நமது நாட்டில் வேலையில் இல்லை; எனவே வருமானம் இல்லை என்றால் சாப்பாட்டுக்கு வழியில்லை என்பதுதான் பெரும்பகுதி மக்களின் நிலைமை. இதற்கு விதிவிலக்கு செல்வந்தர்கள் மட்டுமே. தமது செல்வம் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வேலை செய்யாமலே அவர்கள் வசதியாக வாழ முடியும். ஒரு ஆண்டு என்பதை கால வரம்பு என்று கொண்டால் உழைப்பு படையில்  மிகச்சிலரே வேலைஇல்லாதோர் பட்டியலில் இடம் பெறுவர். மற்றவர்கள் ஏதோ ஒரு கூலி / சம்பள வேலையில் அல்லது சொந்த விவசாயம், வர்த்தகம், தொழில் வேலைகளில் இருப்பார்கள். இவை எதுவும் கிடைக்காத நிலை யில், ஏதோ ஒரு சுய வேலையை உருவாக்கிக் கொண்டு வாழ்வாதாரத்தை தேடிக் கொண்டிருப் பார்கள். மிகச் சிலர்தான் வருடம் முழுவதும் வேலை தேடியும் கிடைக்காமல் இருப்பவர்களாக கணக்கில் வருவர்.

கடந்த ஒரு ஆண்டை கால வரம்பாக வைத்து ஒருவர் வேலையில் இருந்தார்; அல்லது இல்லை என்று முடிவுசெய்வதை  மாமூல் வேலை நிலை (usual status – US) என்று அழைப்பது வழக்கம். இதன்படி மேலே கொடுக்கப்பட்ட உதாரணத் தில் மாமூல் நிலை அடிப்படையில் வேலையின்மை விகிதம் 4ரூ. இதற்குப்பதில், “கடந்த ஒருவாரத்தில் நீங்கள் ஏதேனும் வேலை செய்தீர்களா?” என்று கேட்டு விவரம் சேகரிக்கலாம்.  கடந்த ஒருவார மாக வேலையில் இருந்ததாக நிர்ணயிக்கப்படும்  நபர்களின் எண்ணிக்கையையும், “கடந்த ஒருவார மாக வேலை தேடிக்கொண்டிருந்தேன், ஆனால் எந்த வேலையும் கிடைக்கவில்லை”  என்று சொல்லுகின்ற நபர்களின் எண்ணிக்கையையும் கூட்டினால் கிடைக்கும் எண்ணிக்கை நடப்பு வாராந்தர நிலை அடிப்படை யில் மொத்த வேலைப் படையாகும். கடந்த வாரத்தில் வேலைகிடைக்காதோரின் எண்ணிக் கையை வாராந்தர நிலை அடிப்படையிலான மொத்த வேலைப்படையின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பது ஊறுளு வேலையின்மை விகிதம் பொதுவாக, ஊறுளு வேலையின்மை விகிதம்  மாமூல் நிலை வேலையின்மை விகிதத்தை விட அதிகமாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக, 1,000 நபர்களிடம் கடந்த ஏழு நாட்களில் ஏதேனும் வேலையில் இருந்தீர்களா என்று கேட்டால் 550 நபர்கள் வேலையிலும் 50 நபர்கள் வேலை இல்லாமலும் மீதம் 400 பேர் உழைப்பு படைக்கு வெளியேயும்  இருக்க வாய்ப்பு உண்டு. இந்த நிலையில், ஊறுளு வேலை  விகிதம் 50/ (550 + 50) = 50/600 = 1/12 அல்லது 8.33%

வேலையின்மை விகிதம் நகரம்/கிராமம், பாலினம், வயது, கல்வித்தகுதி ஆகியவற்றின் அடிப்படை யில் வேறுபடும். பொதுவாக இளைஞர்கள் மத்தி யிலும் கல்வி பெற்றவர் மத்தியிலும் வேலையின்மை விகிதம் சராசரியை விட அதிகமாக இருக்கும்.

இப்பொதுவான அறிமுகத்துடன் தற்சமயம் நிலவுகின்ற வேலையின்மை விவரங்களை பரிசீலிப் போம்.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி

2017-18க்கான உழைப்பு படை பற்றிய அறிக்கையை வெளியிடாமல் மத்திய அரசு காலம் தாழ்த்து கிறது என்பதை ஏற்கெனவே நாம் குறிப்பிட் டோம். இந்த தாமதமும் தேசிய புள்ளியியல் ஆணையத்தின் பொறுப்பு தலைவர் திரு பி.சி.  மோகனன் அவர்களும் அதன் உறுப்பினர் தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜே. வி. மீனாட்சி அவர்களும் அந்த ஆணையத்தில் இருந்து தமது பதவிகளை ராஜினாமா செய்து வெளியே வந்த தற்கு ஒரு முக்கிய காரணம். இதுபற்றி திரு மோகனன் அவர்கள் அண்மையில் விளக்கி யுள்ளார். இந்த ஆய்வு அறிக்கையை அரசு வெளியிட மறுத்தாலும் பிசினஸ் ஸ்டான்டார்ட் என்ற ஆங்கில நாளிதழ் ஜனவரி மாத இறுதியில் அறிக்கையின் முக்கிய விவரங்கள் சிலவற்றை வெளியிட்டது.  இதன்படி, 1977-78 இல் இருந்து  2011-12 வரை 2% இல் இருந்து 2.5ரூ க்குள்ளேயே இருந்த மாமூல் வேலையின்மை விகிதம் 2017-18 இல் ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகரித்து 6.1 % ஆக இருந்தது. நாற்பத்தி ஐந்து ஆண்டுகளில் மிகவும் அதிகமான அளவிற்கு, பல மடங்கு வேலையின்மை விகிததம் உயர்ந்துள்ளது. பாஜக அரசிற்கே என்ற விவரத்தை மறைக்கவே  எனவே தான்அரசு இதுவரை அறிக்கை வெளிவராமல் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால் விவரங் கள் எப்படியும் வெளியே வந்துவிட்டன. இப்பொழுது தனது தேர்தல் பிரச்சாரத்தில் வேலை வாய்ப்பு பற்றி தப்பி தவறிக்கூட பாஜக பேசுவதில்லை. இந்த அறிக்கை மட்டுமல்ல. இதே காலத்தில் வெளிவந்துள்ள இரு தனியார் துறை ஆய்வுகளும் கிட்டத்தட்ட இதே மாதிரியான தகவல்களை கூறுகின்றன. ஊஆஐநு என்ற தனியார் நிறுவனம் – ‘Centre for Monitoring the Indian Economy’, அதாவது, “இந்திய பொருளாதாரத்தை கண் காணிக்கும் மையம்”, 2017 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் பணமதிப்பிழப்பு பிரச் சினையின் கடும் தாக்குதலால் 15 லட்சம் வேலை கள் இழக்கப்பட்டன என்று தெரிவித்தது. பின்னர், 2017 டிசம்பர் முதல் 2018 நவம்பர் வரையிலான காலத்தில் ஒரு கோடியே பத்து லட்சம் வேலைகள் காணாமல் போய்விட்டன என்று தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் ஆய்வுகள்  2018 மே மாதம் வேலையின்மை விகிதம் 5.14ர% ஆக இருந்தது என்றும்  ஏப்ரல் 2019இல் 7.60% ஆக அதிகரித்துள்ளது என்றும் கூறு கின்றன. இதேபோல் பெங்களூரில் உள்ள  அஜிம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகம் தனது ஆய்வு ஒன்றில் நவம்பர் 2016 முதல் 2018 முடிய 50 லட்சம் வேலை கள் இழக்கப்பட்டுள்ளன என்றும் இதற்கு ஒரு முக்கிய காரணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்றும் குறிப்பிடுகிறது. ஏற்கெனவே, மத்திய அரசின் உழைப்பு வாரியம் – லேபர் ப்யூரோ – தனது செப்டம்பர் 2016 அறிக்கை யில் மாமூல் வேலையின்மை விகிதம் 5% ஐ எட்டி விட்டது என்று பதிவிட்டது. அதன்பின் லேபர் ப்யூரோ அறிக்கைகளும் வெளிவரவில்லை. இது தற்செயலான நிகழ்வு அல்ல என்றே கருதவேண்டி யுள்ளது. பணமதிப்பிழப்பு, அதன்பின் வந்த ஜிஎஸ்டி குளறுபடி இவற்றால் பொருளாதாரம் சிதைவுற்றுள்ள நிலையில் புள்ளிவிவரங்களை வெளியிடுவதே ஆபத்து என்று மோடி அரசு கருதுகிறது. தேசிய குற்றப்பதிவேட்டு வாரியமும் மூன்று ஆண்டுகளாக அறிக்கை களை வெளியிடவில்லை. மோடி அரசின் கீழ் ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வு நிறுவனம், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற பல நிறுவனங்கள் சிதைக்கப்பட்டு வருவதைப் போல், மத்திய புள்ளியியல் அமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி தொடர்பாக அரசு தரும் விவரங்கள் நமபகத்தன் மையை இழந்துள்ளன.  வேலையின்மை பிரச் சினையில் அரசுக்கு ஆதரவான விவரங்களை வெளியிடுவதற்கு அரசால் முடியவில்லை. முத்ரா திட்டம் பற்றிய உண்மை விவரங்கள் வெளிவந்த பிறகு பெருமளவில் வேலை உருவாக்கம் நிகழ்ந் துள்ளதான கதையாடலுக்கு அதுவும் கைகொடுக்க வில்லை.

அரசு மறைத்த அறிக்கை தரும் செய்திகள்

மோடி அரசால் இன்றுவரை மறைக்கப்பட் டுள்ள 2017-18க்கான உழைப்பு படை பற்றிய அறிக்கை பல முக்கிய விவரங்களை நமக்கு தருகிறது. இதன் ஒரு முக்கிய அம்சத்துடன் தொடங்கலாம். 2011-12 முதல் 2017-18  வரையிலான ஆறு ஆண்டுகளில் வேலைப்படையில் உள்ளவர் களின் எண்ணிக்கையே குறைந்துள்ளது. 2011-12 இல் நகரப்பகுதியில் 8.915 கோடி நபர்களும் கிராமங்களில்21.488 கோடி நபர்களும் ஆக மொத்தம் 30.4 கோடி மக்கள் வேலைப்படையில் இருந்தனர்.  2017-18 இல் நகரப்புறங்களில் 8.492 கோடி நபர்களும்  கிராமங்களில்  20.10 கோடி நபர்களும் என மொத்தமாக 28.6 கோடி நபர்கள் தான் வேலைப்படையில் இருந்தனர்.  அதாவது, மக்கள் தொகை இக்காலத்தில் பெருகியிருந்தா லும் வேலையில் இருப்போர் எண்ணிக்கை சுருங்கி விட்டது. கடும் வேலைப்பஞ்சம் நாட்டில் உருவாகியுள்ளது. ஏற்கெனவே 1983, 1993-94, 2011-12 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட என் எஸ் எஸ் ஆய்வுகளில் இருந்து தாராளமய கால கட்டத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை என்ற செய்தி நமக்கு கிடைக்கிறது. ஆனால், மோடி அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைகள் தாராளமய கொள்கைகளோடு கூடுதல் தாக்குதல்களாக – பெரும் தாக்குதல்களாக வேலை வாய்ப்பை அழித்தொழிப்பதில் பங்களித் துள்ளன. நாடு பாய்ச்சல் வேகத்தில் பொருளா தார வளர்ச்சியை தனது ஆட்சியில் சாதித்து வருவதாக தம்பட்டம் அடித்துவந்த பிரதமரும் ஆளும் கட்சியினரும், இதேகாலத்தில்  வேலை யில் உள்ளோர் எண்ணிக்கையே குறைந்துள்ளது என்ற செய்தியை மூடிமறைக்க கடும் முயற்சி செய்தனர். அதையெல்லாம் தகர்த்து இப்பொழுது இந்த அறிக்கை உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

அடுத்து, வேலைவீழ்ச்சி பெரும் அளவிற்கு வேளாண் துறையை  பாதித்துள்ளது. கிராமங் களில் கடந்த ஆறு ஆண்டுகளில் விவசாயத்தில் வேலை செய்யும் (உழைக்கும் வயதில் உள்ள) ஆண்களின் சதவிகிதம் 48 இல் இருந்து  40 ஆக குறைந்துள்ளது. ஆனால் பிற துறைகளில் வேலை கள் அதிகம் உருவாகவில்லை. இதன் விளைவாக வேலையில் இல்லாத ஆண்களின் சதவிகிதம் 20 இல் இருந்து  28 ஆக அதிகரித்துள்ளது. வேலை யில் இல்லாதவர்கள் சதவிகிதம் கிராமப்புற பெண்கள் மத்தியில் 50 இல் இருந்து 76 ஆக உயர்ந்துள்ளது. வேலையின்மை பிரச்சினை கிராமப்புற பெண்களை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. கிராமப்புறங்களில் வேலைப் படையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை 2011-12 இல் 9.39 கோடியாக இருந்தது. 2017-18 இல் இது 6.48 கோடியாக, ஏறத்தாழ 3 கோடி குறைந் துள்ளது. கிராமப்புறங்களில் வேலைப்படையில் உள்ள ஆண்களின் எண்ணிக்கையும் 21.5 கோடியி லிருந்து 20.1 கோடியாக, 1.4 கோடி குறைந்துள்ளது.

வேளாண் நெருக்கடியின் இன்னொரு பரி மாணம் இது. வேலையின்மை பிரச்சினையும் வேளாண் நெருக்கடியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதையும் நாம் காணமுடி கிறது. குறிப்பாக, கிராமங்களில் கூலி வேலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 2011-12 இல் 7 கோடியே 63 லட்சமாக இருந்தது. இது    2017-18 இல் 5 கோடியே 67 லட்சமாக சரிந்துவிட்டது. கிராமப்புற பெண்களில் கூலி வேலை செய்தவர் கள் 2011-12 இல் 3 கோடியே 30 லட்சம். 2017-18 இல் இது 2 கோடியே 6 லட்சமாக, 1 கோடியே 24 லட்சம்  சரிந்து விட்டது. மொத்தத்தில், ஊரகப் பகுதிகளில் மோடி அரசின் ஆட்சிக் காலத்தில் வேலையின்மை பிரச்சினை மிகவும் கடுமையாக ஆக்கப்பட்டு இருக்கிறது.

அதிகரித்துவரும் வேலை இன்மை விகிதம்

அடுத்தடுத்து 1970களின் பிற்பகுதியில் இருந்து ஐந்தாண்டுக்கு ஒருமுறை வெளிவந்துள்ள என் எஸ் எஸ்ஒ- வின் அனைத்து அறிக்கைகளிலும் 2011-12 அறிக்கை வரை மாமூல் வேலையின்மை விகிதம் 2% லிருந்து 2.5% ஐ தாண்டவில்லை. ஆனால் முதன்முறையாக, 2017-18 ஆய்வறிக்கை மாமூல் வேலையின்மை விகிதம் 6.1% என்று ஆகியுள்ளது என சுட்டிக்காட்டுகிறது. இதுவே வேலையின்மை யின் கடுமையை குறைத்துக் காட்டுவதாகும். ஏனெனில், உழைப்புப் படையில் சரிபாதி பேர் சுய வேலையில் உள்ளவர்கள் என்பதால் அவர்கள் மத்தியில் பகுதி நேரம் வேலையில்லா நேரமாக இருக்கும் வாய்ப்பு கணிசமானது. பகிரங்க வேலை யின்மையைத்தான் நமது புள்ளிவிவரங்கள் வெளிக் கொணர்கின்றன. எனினும், கடந்த காலத்துடன் ஒப்பிடும் பொழுது இந்த கணக்கின்படியான வேலையின்மை விகிதம் மூன்று மடங்கு ஆகி யுள்ளது என்பது முக்கியமான செய்தி. மாமூல் நிலை வேலையின்மை விகிதத்திற்கு கடந்த ஒரு ஆண்டை கணக்கில் கொள்கிறோம்.  கடந்த ஏழு நாட்களை வைத்தும் வேலையின்மை கணக்கிடப் படுகிறது என்பதை நாம் ஏற்கெனவே குறிப்பிட் டோம். இதில் கிடைப்பது நடப்பு வாராந்தர அடிப்படையிலான வேலையின்மை விகிதம் – CWS (Current Weekly Status) வேலையின்மை விகிதம் என்று இது அழைக்கப்படுகிறது. இது மாமூல் வேலையின்மை விகிதத்தை விட பொருத்தமான அலகு. இதன்படி 2011-12 மற்றும்  2017-18  விவரங் கள் கீழ்க்காணும் அட்டவணையில் தரப்பட் டுள்ளன:

வாராந்தர நிலை வேலையின்மை விகிதங்கள்

2011-12 (ஆண்கள்) 3.5  (பெண்கள்) 4.2   (நகரம்) 4.4 (கிராமம்)   3.4 (மொத்தம்) 3.7       

2017-18       (ஆண்கள்) 8.8 (பெண்கள்) 9.1 (நகரம்) 9.6 (கிராமம்) 8.5 (மொத்தம்) 8.9

கடந்த ஆறு ஆண்டுகளில் வேலையின்மை நிலைமை பெரிதும் மோசமடைந்துள்ளதை பார்க்கலாம். இதில் ஒருபகுதி தாராளமய கொள் கைகளின் தாக்கம். ஆனால் ஒரு கணிசமான பகுதி பணமதிப்பிழப்பு மற்றும் குளறுபடி நிறைந்ததும், அடிப்படையில் மோசமானதுமான ஜிஎஸ்டி அமலாக்கத்தின் விளைவு.

இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை மேலும் தீவிரமாக உள்ளது. 15 வயது முதல் 29 வயது வரையிலானவர்கள் மத்தியில் வேலை யின்மை விகிதம் 13.6ரூ இல் இருந்து 27.2% வரை உள்ளது.

அடுத்து, பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்களின் நிலமை கீழே தரப்பட்டுள்ளது:

படித்தவர் வேலையின்மை விகிதம்

                                   2011-12        2017-18                      

கிராமப்புற ஆண்கள்              3.6          10.5

கிராமப்புற பெண்கள்              9.7         17.3

நகர்ப்புற   ஆண்கள்             4.0          9.2

நகர்ப்புற   பெண்கள்             10.3         19.8

பணிசார்பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி பெற்றோர் நிலைமையும் மோசமாகவே உள்ளது. அவர்கள் மத்தியில் வேலையின்மை விகிதம்  2011-12 இல்  5.9% (ஆண் 5.7%, பெண் 6.4%) ஆக இருந்தது. 2017-18 இல் 12.4% (ஆண் 13.8%, பெண் 10.4%) ஆக உயர்ந்துள்ளது.

பாஜக அரசு இந்த அறிக்கையை வெளியிட ஏன் மறுக்கிறது என்பது இதிலிருந்தே தெளிவாகிறது!

இறுதியாக

இக்கட்டுரையில் நாம் பெரும்பாலும் வேலை யின்மையின் அளவு பற்றிய விவரங்களையும் கருத்துக்களையும் விவாதித்துள்ளோம். அவை நமக்கு சொல்லும் செய்தி தாராளமய கொள்கை களால் ஏற்கெனவே அதிகரித்துவந்த வேலை யின்மை மோடி அரசின் மிகத் தவறான இரு நடவடிக்கைகளால் – பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் – மிக அதிகமான அளவிற்கு சென்றுள்ளது என்பதாகும். முறைசாராத் துறை பெரும் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த துறைதான் அதிக வேலை வாய்ப்புகளை கொண்ட துறை. கார்ப்பரேட் முதலீடுகள் மிகக் குறைந்த அளவில்தான் வேலைகளை உருவாக்கு கின்றன. பொதுத்துறை முதலீடுகள் மோடி ஆட்சியிலும் அதற்கு முன்பே அமலாக்கப்பட்டு வந்த தாராளமய கொள்கைகளாலும் சரிந்து வந்துள்ளன. இந்நிலையில் சிறு குறு விவசாயம், சிறு தொழில், சிறு வணிகம், வேளாண்மை, கைவினை தொழில்கள் போன்றவைதான் ஓரள விற்காவது வேலை வாய்ப்புகளை உருவாக்கி வந்தன. மோடி அரசு இத்துறைகள் அனைத்தை யும் அழித்துவிடுவதில் பெரும் முனைப்பு காட்டு கிறது.

கள நிலைமை உழைப்பாளி மக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. கிராமப்புற கூலி தொழிலாளி களின் வருமானம் கடந்த சில ஆண்டுகளில் பெரிதும் சரிந்துள்ளது. விவசாயிகளின் விளை பொருள் விலைகள் மேலும் சரிந்து வேளாண் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. அரசு மறைக்க முயலும் ஆய்வறிக்கை பல செய்திகளை சொல்லு கிறது. கூலி தேக்கமாக இருப்பது, சுய வேலையில் சராசரி வருமானம் மிகக் குறைவாக இருப்பது, இந்திய உழைக்கும் மக்கள் வாரம் ஒன்றிற்கு சராசரியாக 50 மணி நேரத்திற்கும் அதிகமாக பாடுபடுவது, அத்தகைய கடும் உழைப்புக்குப் பின்பும் சொற்ப வருமானத்தையே பெறுவது உள்ளிட்ட பல விஷயங்களும் பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு நிலைமைகளை மாற்ற போராட்டங் களை திட்டமிட்டு நடத்த வேண்டிய சவால் ஜனநாயக இயக்கத்தின் முன்பு உள்ளது. இக்கட்டுரை யின் அளவு வரம்பு, வாசிப்பவர்களின் பொறுமை ஆகியவற்றை கணக்கில் கொண்டு வேலை யின்மை பிரச்சினையின் பல அம்சங்களுக்குள் நாம் செல்ல இயலவில்லை. பெண்கள், தலித்து கள், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்டோர், கிராமப்புற உழைப்பாளிகள் ஆகியோர் கூடுத லாக பாதிப்புகளை சந்தித்துள்ளனர். இவை பற்றியெல்லாம் கள அளவில் திட்டவட்டமாக பரிசீலித்து கோரிக்கைகளை உருவாக்கி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது அவசர அவசியம்.

நவீன தாராளமயத்தின் நெருக்கடி: அரசியல் சமூக விளைவுகள்

(குரல்: ராம் பிரகாஷ்)

  • பிரகாஷ் காரத்

தமிழில் : க.சுவாமிநாதன்

சர்வதேச சூழலை உற்று நோக்குபவர்களுக்கு அதன் குழப்பமான, நிலையற்ற, ஊசலாட்டம் குறித்த சித்திரம் கிடைக்கும். புதிய முரண்பாடுகள், மோதல்கள், புதிய அரசியல் சக்திகளின் தோற்றம், அரசாங்கங்களில் ‘வலிமையான மனிதர்கள்‘, சூழலியல் மாற்றங்களின் எதிர்மறை விளைவுகள் பற்றிய வெளிப்படையான அறிகுறிகள், தொடர்ந்த இயற்கைச் சீற்றங்களாக வெளிப்படும் அவற்றின் தாக்கங்கள் ஆகியனவும் நமக்கு காணக் கிடைக்கின்றன.

அண்மைய ஆண்டுகளில் நாம் பார்த்த நிகழ்வுகள் இவை. எந்த “வரைமுறைகளுக்கும் உட்படாத”, பில்லியனர் டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபராக வந்தது; ஐரோப்பிய இணையத்தை விட்டு வெளியேறுகிற பிரிட்டனின் முடிவு; ஏகாதிபத்தியங்களுக்கிடையே அதிகரித்துள்ள முரண்பாடுகள் மற்றும் இரஷ்யாவிற்கும் மேற்குலகிற்குமிடையே வளர்ந்து வரும் முரண்கள்; ஐரோப்பாவில் வளர்ந்து வருகிற தீவிர வலதுசாரி சக்திகள் மற்றும் லத்தீன் அமெரிக்காவில் தொடுக்கப்படும் வலதுசாரி எதிர் தாக்குதல்கள் ஆகியனவற்றைக் குறிப்பிடலாம். இதே காலத்தில் சீனா ஓர் பொருளாதார, அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளதையும் காண முடிகிறது. உலக நடப்புகளில் சீனாவின் தாக்கம் அதிகரித்திருப்பது அதன்  வெளிப்பாடே.

தனித்தனி நிகழ்வுகளா இவை?

எப்படி இந்நிகழ்வுகளை ஆய்வு செய்கிறோம்? இந்நிகழ்வுகளின் ஊடே ஏதேனும் திட்டவட்ட இணைப்பு உள்ளதா அல்லது இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி நிகழ்வுகளா? நவீன தாராளமயத்தின் நெருக்கடி என்ற பின்புலத்தைத் தவிர்த்து விட்டு ஆய்வு செய்தால் தற்போதைய உலகப் போக்குகளை நம்மால் புரிந்து கொள்ள இயலாது. உலக நிதி நெருக்கடியாக, பிரம்மாண்டமாக 2007-08ல் வெளிப்பட்டதும், அதற்குப் பின்னர் பத்து ஆண்டுகளாகியும் மீள முடியாமல் தொடர்கிற தோல்விகளும் நவீன தாராளமயம் எதிர்கொண்டு வருகிற நெருக்கடிகளின் விளைவுகளாகும். இன்றைய பொருளாதார, அரசியல், சமூக நிகழ்வுகளும் இதன் விளை பொருள்களே ஆகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 22வது அகில இந்திய மாநாடு இக்குறிப்பிட்ட அம்சத்தைத் தெளிவாகச் சுட்டுகிறது.

“நவீன தாராளமய நெருக்கடி உருவாக்கியுள்ள புதிய முரண்கள் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே முறிவுகளுக்கும் மோதல்களுக்கும் வழிவகுக்கின்றன. பிரக்சிட் (க்ஷசுநுஓஐகூ) – பிரிட்டன் ஐரோப்பிய இணைத்திலிருந்து வெளியேறியது – போன்றவை அவை. புதிய அரசியல் சக்திகள் உருவாவதும், அதிகரிக்கும் பதட்டங்களும் அன்றாட நடப்புகளாக உள்ளன”

நாற்பது ஆண்டு ஏகாதிபத்திய உலகமயமே – அதாவது ஏகாதிபத்திய நிதிமூலதனமும், நவீன தாராளமய ஒழுங்குமுறைமையும் – பொருளாதார இன்னல்களுக்கு, நிதி நெருக்கடிகளுக்கு, வளர்ந்த மற்றும் வளர்முக நாடுகளில் ஏற்பட்டு வரும் வரலாறு காணாத ஏற்றத்தாழ்வுகளுக்கு ஊற்றுக்கண்ணாக உள்ளது.

“முதலில் அமெரிக்காதான்!”

உலகின் முதற்பெரும் முதலாளித்துவ சக்தியான அமெரிக்க ஐக்கிய நாடுகளும் நவீன தாராளமயத்தின் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. நிதிமூலதனம் பல தொழில்களை அமெரிக்காவிலிருந்து வளர்முக நாடுகளுக்கு இடம் பெயரச் செய்துள்ளது. இது வேலையிழப்புகள், உழைப்பாளி மக்களின் சமூக மதிப்பில் சரிவு ஆகியவற்றுக்கு வழிவகுத்துள்ளது. ஏகாதிபத்திய நிதி முறைமை ஊடு பரிவர்த்தனை நாணயத்திற்கு டாலரைச் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. டாலரின் மேலாதிக்கம் உலகம் முழுவதுமுள்ள மூலதனம் அமெரிக்க ஐக்கிய நாடுகளை நோக்கி வருவதை உறுதி செய்துள்ளது. ஆகவே வால்ஸ்ட்ரீட் நிதி முதலீட்டாளர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் அதீதமான இலாபங்களை அடைய முடிந்துள்ளது. உண்மை ஊதியமும், உழைப்பாளி மக்களின் வேலைகளும் இடையறாத தொடர் வீழ்ச்சிக்கு ஆளாகியுள்ளன.

அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் நவம்பர் 2016ல் தெரிவு செய்யப்பட்டதற்குக் காரணம், நவீன தாராளமயம் மற்றும் நிதி மூலதனத்தால் உந்தப்படும் உலக மயமாக்கலுக்கு எதிராக பெரும் பகுதி உழைப்பாளி மக்கள் பதிவு செய்த எதிர்ப்பு வாக்குகளே ஆகும். மீண்டும் வல்லமைமிக்க அமெரிக்காவை உருவாக்குவேன் என்றும், தொழில்களை மீட்டு அமெரிக்காவுக்கு கொண்டு வருவேன் என்றும் ட்ரம்ப் வாக்குறுதியும் அளித்தார். இது அவருக்கு உழைப்பாளி மக்களின் ஆதரவைப் பெற்றுத் தந்தது.

எனினும், ஒரு அதி தீவிர வலதுசாரி தலைமை அமெரிக்காவின் அதிபராக வந்திருப்பதும், அது நிதி மூலதனத்தின் சூறையாடலுக்கு இரையாகியுள்ளோரின் தெரிவாக இருந்திருப்பதும் முரணே ஆகும்.

“முதலில் அமெரிக்கா தான்” (ஹஆநுசுஐஊஹ குஐசுளுகூ) என்கிற வகையிலான டொனால்டு ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் நிதி மூலதனத்தின் நேசிப்பிற்குரிய கொள்கைகளுக்கு எதிரானவையாக உள்ளன. அவர் பலதரப்பு வர்த்த உடன்பாடுகள் பலவற்றிற்கு எதிராக உள்ளார்; அமெரிக்க தொழில், உற்பத்தி பொருட்களுக்கு பாதுகாப்பு சுவர்கள் வேண்டுமென அவர் விரும்புகிறார்; அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளிகள் இராணுவ செலவினங்களை அதிகரிக்க வேண்டும், அமெரிக்க இராணுவ பட்ஜெட்டை சார்ந்து இருக்கக் கூடாது என்று அவர் கோருகிறார்.

அமெரிக்க பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதற்காக சீனா, ஐரோப்பிய இணையம், கனடா, மெக்சிகோ நாடுகளின் இறக்குமதிகள் எல்லாவற்றின் மீதும் வரிகளை ட்ரம்ப் அதிகரித்துள்ளார். இந்நாடுகளும் பதில் வரிகள் மூலம் அமெரிக்காவின் நடவடிக்கைகளை எதிர் கொண்டுள்ளன. சீனாவிலிருந்து இறக்குமதியாகிற பொருட்கள் மீது 200 பில்லியன் டாலர் பெறுமான (இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் 14 லட்சம் கோடிகள்) வரிகளை ட்ரம்ப் விதித்துள்ளார். சீனாவும் இதே போன்ற பதில் வரிகள் வாயிலான எதிர்வினை ஆற்றியுள்ளது. இது வர்த்தகப் போர் மூள்வதற்கு வழி வகுத்துள்ளது. இதன் நிகர விளைவு, அமெரிக்க சரக்கு ஏற்றுமதிகளும் பாதிக்கப்படும். அமெரிக்கா வேலையிழப்புகளுக்கும் ஆளாகும்.

இந்நெருக்கடிக்கு நவீன தாராளமயத்தின் கட்டமைப்பிற்கு உட்பட்டே தீர்வு காண்பதற்கு ட்ரம்ப் முயற்சிக்கிறார். நவீன தாராளமயத்தின் முக்கிய அம்சமான நிதி மூலதனத்தின் சர்வதேச பரவலைப் பாதிக்காமல் செய்வதற்கு முனைகிறார். நவீன தாராளமய நெருக்கடிக்கு காரணமே நிதி மூலதனத்தின் குணம்தான். ஆகவே நெருக்கடியின் வேர்களைத் தொட விரும்பாத ட்ரம்பின் முயற்சிகள் நிச்சயமாய்த் தோல்வியையே தழுவும்.

மொத்தத்தில், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவதும், அரசாங்கமும்-வங்கிகளும் பெருமளவு கடன்களை வாங்கிக் குவித்திருப்பதும் இன்னொரு நிதி நெருக்கடிக்கான இருள் சூழ்ந்து வருவதையே உணர்த்துகின்றன.

முற்றுகிற முரண்கள்…

மேலும் ட்ரம்ப்பின் கொள்கைகள் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகளை உந்தித் தள்ளுவதாகவே அமையப் போகின்றன. அமெரிக்காவின் முக்கியக் கூட்டாளிகளான ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியன ட்ரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவர்களின் எதிர்ப்பு பொருளாதார தளத்தில் மட்டுமின்றி அரசியல் தளத்திலும் வெளிப்படுகிறது. உதாரணமாக ஈரானுடனான அணு உடன்பாட்டிலிருந்து வெளியேறுவதென்ற அமெரிக்காவின் முடிவை இம் மூன்று கூட்டாளிகளும் எதிர்த்துள்ளன. ஈரானுடனான அணு உடன்பாடு செல்லத்தக்கதென்ற நிலையை அந்நாடுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அதுபோல பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையிலிருந்து வெளியேறுவதென்ற ட்ரம்ப்பின் முடிவை ஐரோப்பிய இணையம் எதிர்த்துள்ளது.

இரஷ்யாவுடனான அமெரிக்காவின் முரண்கள் கூர்மையடைந்துள்ளன. ட்ரம்ப், இரஷ்ய நாட்டுடனும் அதன் அதிபர் புடினுடனும் நல்ல உறவுகளை வைத்துக் கொள்ள விரும்புவதாகக் கூறினாலும் முரண்கள் முற்றுகின்றன. அமெரிக்காவின் ஆட்சி இயந்திரம் முழுவதுமே இரஷ்யாவோடு மோதலையே விரும்புகிறது. ட்ரம்ப் ஆட்சியில் இரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

நவீன தாராளமயத்தின் நெருக்கடிகள், ஏகாதிபத்திய முகாமிற்குள் உருவாக்கும் புதிய மோதல்களையே பிரக்சிட் (BREXIT) வெளிப்படுத்துகிறது. ஐரோப்பிய இணையத்தின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான பிரிட்டன் வாக்கெடுப்பு நடத்தி அதிலிருந்து வெளியேறிவிட்டது. கருத்து வாக்கெடுப்பின் இம்முடிவு நிதி மூலதனத்தின் விருப்பங்களுக்கு மாறானதாகும். ஆனால் நவீன தாராளமயம் மற்றும் ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிரான பிரிட்டன் உழைப்பாளி மக்களின் கடும் எதிர்வினைகளே இந்த அதிரடி முடிவுக்கு காரணமாகும். கடந்த முப்பது ஆண்டுகளில் பிரிட்டன் தொழில் சீரழிவு, பெருமளவு வேலையிழப்புகளுக்கு ஆளாகியுள்ளது. இது நகரங்கள் மற்றும் பாரம்பரிய தொழில் மையங்களிலிருந்த மக்களை வறிய நிலைக்குத் துரத்தியுள்ளது.

நடப்புக் காலம், தொடர்ந்த இயற்கைச் சீரழிவுகளைக் கொண்டதாக உள்ளது. பெரு வெள்ளம், காட்டுத் தீ, பருவம் தவறிய மழை, அதிக வெப்ப விகிதங்கள், புவி நடுக்கங்கள் மற்றும் இதர இயற்கைப் பேரழிவுகள் பூமியின் பல்வேறு பகுதிகளில் நடந்தேறி வருகின்றன. இவையெல்லாம் எதிர்காலத்தில் வரவுள்ள மோசமான பருவ நிலை மாற்ற அழிவுகளுக்கான அபாய எச்சரிக்கைகளே ஆகும். இதிலுங்கூட அமெரிக்காவுக்கும் அதன் மேற்குலக கூட்டாளிகள் மற்றும் இதர உலக நாடுகளுக்கும் இடையேயான மாறுபாடுகள் ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான மற்றும் வளர்ந்த நாடுகள், வளர்முக நாடுகளுக்கிடையேயான முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தப் போகின்றன. சூறையாடுகிற குணம் கொண்ட நவீன தாராளமய முதலாளித்துவமே இக்குற்றத்திற்குக் காரணம் ஆகும். அதனால் பூமியின் எதிர்காலத்திற்கு சவால் விடுகிற இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.

வலது திருப்பம்

ஐரோப்பிய இணையத்தின் கொள்கைகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், நவீன தாராளமயக் கட்டமைப்பிற்கும் உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டவை ஆகும். பிரிட்டன் உழைப்பாளி மக்களின் பெரும்பகுதியின் கருத்து, ஐரோப்பிய இணையத்திலிருந்து வெளியேறுவதே அபாயகரமான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி என்பதாக இருந்தது. இக்காலத்தில் மலிவான உழைப்பைப் பயன்படுத்துவதற்காக ஆளும் வர்க்கங்கள் புலம் பெயர் தொழிலாளர்களை ஐரோப்பாவிற்கு கொண்டு வந்தன. இதனால், உழைப்பாளி மக்கள் மத்தியில் எழுகிற அதிருப்தியையும், கோபத்தையும் தீவிர வலதுசாரி மற்றும் நவீன பாசிச சக்திகள் பயன்படுத்துகின்றன. பிரான்சில் நேசனல் ப்ரண்ட், ஜெர்மனியில் ஆல்டர்நேடிவ், ஆஸ்திரியாவில் ஃபிரீடம் பார்ட்டி, கிரிஸில் கோல்டன் டான், இத்தாலியில் நார்தர்ன் லீக் ஆகிய அமைப்புகள் இப்பின்புலத்தைச் சார்ந்தவையாக உள்ளன. இந்த அமைப்புகள் புலம் பெயர் மக்களின் வருகை குறித்த அம்சங்களை எழுப்புகின்றன. வெளிநாட்டவர் எதிர்ப்பு, இஸ்லாமிய வெறுப்பு ஆகியனவற்றைப் பயன்படுத்தி வளர்கின்றன.

முதலாளித்துவ அமைப்பை ஆழமான நெருக்கடி பாதிக்கும் போது, அது தானாகவே இடதுசாரிகளின்; உழைப்பாளி மக்கள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு வழி வகுத்து விடாது. எவ்வாறு தீவிர வலதுசாரி, பாசிச சக்திகள், தொடர்கிற முதலாளித்துவ நெருக்கடியை பயன்படுத்தி வளர்கின்றன என்பதற்கு 1929-33 காலத்திய பெரு வீழ்ச்சி உள்ளிட்ட வரலாறு நமக்குக் காண்பித்துள்ளது. நவீன தாராளமயத்தின் கடந்த 10 ஆண்டு நெருக்கடியும் தீவிர வலதுசாரி, நவீன பாசிச சக்திகளின் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது ஐரோப்பாவுடன் மட்டும் சுருங்கியிருக்கிற போக்கு அல்ல.

இக்காலத்தில் வலது திருப்பம் உலகப் போக்காக வெளிப்பட்டுள்ளது. 1990 மத்தியில் துவங்கி 2000ன் துவக்ககாலம் வரை லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரிகள் எட்டிய முன்னேற்றங்களுக்கு எதிரான வினைகள் வலதுசாரிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. மைய-இடதுசாரிகள் அல்லது சமூக ஜனநாயக அரசாங்கங்கள் இருந்த பிரேசில், அர்ஜெண்டினாவில் வலதுசாரிகள் ஆட்சிக்கு வந்துள்ளனர். பிரேசிலில் மென்மையான கவிழ்ப்பின் வாயிலாக இது அரங்கேற்றப்பட்டுள்ளது. வெனிசூலா தற்போது நிலைகுலைவிற்கான இலக்காக மாற்றப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவின் வலதுசாரி சக்திகள் அமெரிக்காவின் ஆதரவோடே இயங்குகின்றன.

எனினும் வலதுசாரி தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களும் நடந்தேறுகின்றன. சில நாடுகளில் பின்னடைவுகள் இருப்பினும், மெக்சிகோவில் அண்மையில் இடதுசாரி சார்புள்ள அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெனிசூலாவில் சாவிஸ்டாஸ் மற்றும் இடதுசாரி சக்திகள் மதுரோ அரசைக் கவிழ்ப்பதற்கான பல்வேறு முயற்சிகளைப் போராடித் தடுத்துள்ளன.

இடதுசாரிகளுக்கு புதிய வாய்ப்புகள்

எனினும், தற்போதைய நெருக்கடியும் மற்றும் வலதுசாரி சக்திகளின் வளர்ச்சியும் இடதுசாரிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளன.

ஐரோப்பாவில் வலதுசாரி முன்னேற்றத்திற்கான காரணங்களில் ஒன்று, உழைப்பாளி மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்த பாரம்பரிய சமூக ஜனநாயகக் கட்சிகள் இழந்திருக்கிற தளத்தை வலதுசாரிகள் கைப்பற்றியிருப்பதே ஆகும். 1990களிலிருந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளை ஆட்சி செய்த சமூக ஜனநாயகக் கட்சிகள்-பிரிட்டன் லேபர் கட்சி, பிரான்சின் சோஷலிசக் கட்சி, ஜெர்மனின் சமூக ஜனநாயக் கட்சி, ஸ்பெயின், கிரீஸ் நாடுகளில் சோஷலிசக் கட்சிகள் போன்றவை – நிதி மூலதனத்தின் முன்பு சரணடைந்ததோடு நவீன தாராளமயத்தை தழுவிக் கொண்டன.

அண்மை ஆண்டுகளில் சமூக ஜனநாயகக் கட்சிகள் தங்களின் தளங்களையும் வேகமாக இழந்துள்ளன. இந்நாடுகள் பெரும்பாலானவற்றில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவீனமாக உள்ளன. நவீன தாராளமயம், உலகமயத்திற்கு எதிராக மக்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுந்த போது அந்த எதிர்ப்பிற்கு தீவிர வலதுசாரிகள் தலைமையேற்றனர். மக்களின் ஆதரவையும் பெற்றனர்.

இப்போக்குகளிலிருந்து ஓர் பாடத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. எங்கெல்லாம் இடதுசாரிகள் நவீன தாராளமயத்திற்கு எதிராக உறுதியான நிலை எடுக்க முடிந்ததோ, உழைப்பாளி மக்களின் நலன்களில் சமரசம் செய்து கொள்ளவில்லையோ அங்கெல்லாம் அவர்கள் மக்களின் அதிருப்தியை திரட்ட முடிந்துள்ளது. முன்னேறவும் முடிந்துள்ளது. பிரிட்டனின் லேபர் கட்சி இதற்கு பளிச்சிடுகிற உதாரணம். இங்கு புதிய தலைவர் ஜெரமி கார்பின் ஜீன் 2017ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் போது பெரும்பாலும் இடதுசாரித் தன்மை கொண்ட தேர்தல் அறிக்கையை முன்வைத்தார். தனியார்மயம், ஏகாதிபத்திய போர்களுக்கு எதிரான வெகுஜன இயக்கங்களும் அதற்கு பக்கபலமாக இருந்தன. லேபர் கட்சி 40 சதவீத வாக்குகளை பெற்றதோடு கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையை ஈட்டுவதையும் தடுத்து நிறுத்தியது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம், 25 வயதுக்குக் கீழான இளம் வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் லேபர் கட்சிக்கு வாக்களித்தனர் என்பதாகும்.

பிரான்சில் முதல் சுற்றில் இடதுசாரிக் கூட்டணியின் வேட்பாளர் ஜீன்லக் மெலங்கான் சற்றேறக் குறைய 20 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஸ்பெயினில் போடேமாஸ், கிரிசில் சிரிஜா போன்ற புதிய மாற்றங்களைத் தீவிரமாக முன்வைக்கிற மேடைகள் உருவெடுத்தன. ஆனால் கிரிசில் ஆட்சி அமைத்த பின்னர் சிரிஜா சிக்கன நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய இணையத்துடன் சமரசம் செய்து கொண்டது.

போர்ச்சுசுகலிலும், கிரிசிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் வெகுசன தளத்தின் மீதான பிடிமானத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது. காரணம், நவீன தாராளமயம் மற்றும் ஐரோப்பிய இணையத்தின் தனித்தன்மைக்கு இடமற்ற பொருளியல் பாதை ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்திருப்பதேயாகும்.

ஐரோப்பிய இடதுசாரிகளின் எதிர்வினைகள் மற்றும் உறுதியான நிலைபாடுகள் உள்ளிட்ட அனுபவங்கள், எவ்வாறு நிதி மூலதனம், நவீன தாராளமயத் தாக்குதல்களை எதிர் கொள்வது என்பதற்கான திசைவழியைக் காண்பிப்பனவாக உள்ளன.

இருந்தாலும் அமெரிக்காவை நவீன தாராளமய நெருக்கடியின் காரணமாக பலவீனமடைந்த சக்தியாகக் கருதினால் தவறு இழைப்பதாகி விடும். நிதி மூலதன முறைமையில் முக்கியப் பங்காற்றுவதாலும், டாலர் மேலாதிக்கத்தினாலும் அமெரிக்கா ஏகாதிபத்திய முகாமின் தலைமையாக தற்போதும் நீடிக்கிறது. இராணுவரீதியாக, அமெரிக்கா உலகின் முதற்பெரும் பலமான சக்தியாக தொடர்கிறது. அமெரிக்காவின் பலம், தலைமை தாங்கும் ஆற்றலை நம்பியே மொத்த ஏகாதிபத்திய முகாமும் இருக்கிறது.

சீனா விடுத்துள்ள எதிர் சவால்

ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக கண்ணெதிரே நிற்கிற ஒரே சவாலாக இருப்பது சீனா மட்டுமே. சீனாவின் வளர்ந்து வருகிற உறுதிப்பாடும், பாத்திரமும் உலக அளவில் தனக்கு விடுக்கப்படுகிற கேந்திர சவால் என அமெரிக்காவால் பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க முறைமைக்கு எதிர்வினையாக பல்வேறு பலதரப்பு மேடைகளில் முனைப்போடு சீனா தலையிடவும், பங்கேற்கவும் செய்கிறது. சீனாவுக்கும், இரஷ்யாவுக்கும் இடையிலான கேந்திரக் கூட்டணி ஆழமாகியுள்ளது. இந்தியாவையும், பாகிஸ்தானையும் முழுமையான உறுப்பினர்களாக உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தற்போது குறிப்பிடத்தக்க பிராந்திய உருவாக்கமாக மலர்ந்துள்ளது. பிரிக்ஸ் வங்கி, ஏசியன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மெண்ட் வங்கி, மூன்று கண்டங்களில் உள்ள 72 நாடுகள் இணைந்துள்ள பெல்ட் அண்டு ரோடு முன் முயற்சி ஆகியன குறிப்பிடத்தக்க வினைகள் ஆகும்.

இத்தகைய முன்னேற்றங்கள் பன்துருவ உலகை நோக்கிய போக்குகளை வலுப்படுத்தியுள்ளன. அமெரிக்கா, பாதுகாப்பு சுவர்களை பொருளாதாரத்தில் எழுப்புகிற சூழலில், புதிய கூட்டணிகள், புதிய அமைப்புகள் உருவாகும். அமெரிக்காவின் தன்னிச்சையான போக்குகளை அவை எதிர்கொள்ளும்.

சீனாவை எதிர்கொள்வதற்கான புவி-அரசியல் திட்டத்தை அமெரிக்கா கடந்த 20 ஆண்டுகளாக வகுத்து வருகிறது. ஆசிய பகுதியை முன்னிலைப்படுத்தி ஒபாமா ஆட்சியில் இது துவங்கியது. இந்தோ-பசிபிக் இராணுவ ஒத்துழைப்பு மற்றும் அமெரிக்கா-இந்தியா இடையே வளர்ந்து வரும் இராணுவ உறவுகள் அனைத்துமே அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு அபாயமாகக் கருதப்படும் சீனாவை எதிர்கொள்வதற்கான வியூகத்தின் பகுதிகளே ஆகும்.

நவீன தாராளமயமும் தொழிற்சங்கமும்

டாக்டர் ஹேமலதா, தலைவர்இந்திய தொழிற்சங்க மையம்

1970களில் உருவான பொருளாதார நெருக்கடிக்கு முதலாளித்துவ அமைப்பு மேற்கொண்ட எதிர்வினை நவீன தாராளமயமாகும். அமெரிக்காவும் பிரிட்டனும் 1980களில் நவீன தாராளமயத்தை அமல்படுத்தும் வண்ணம் பொருளாதார மறுகட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்த துவங்கின. இந்தத் திட்டங்கள், பன்னாட்டு நிதி நிறுவனம், உலக வங்கி போன்ற அமைப்புகளின் உதவியுடன் உலகம் முழுவதும் திணிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டுகளில் நுழையும்பொழுது உலகில் பெரும்பாலான நாடுகள் நவீன தாராளமயக் கொள்கைகளைத் தங்கள் திட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்தத் துவங்கின. சோவியத் யூனியன் சிதறியதும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவும், ஏகாதிபத்தியத்திற்குச் சாதகமான வகையில் வர்க்க பலாபலத்தில் மாற்றங்களை உருவாக்கின. சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசாங்கங்களும் நவீன தாராளமயக் கொள்கைகளை ஏற்றுச் செயல்படத் தொடங்கின. தற்போது உலகில் மிகப்பெரிய அளவில் செல்வாக்கு மிகுந்த தத்துவமாக நவீன தாராளமயம் உருவெடுத்துள்ளது.

நவீன தாராளமயக் கொள்கையின் மிக முக்கியமான நோக்கம், முதலாளிகளின் லாபத்தைப் பாதுகாப்பதுதான். மறுகட்டமைப்பு என்பது பல்வேறு நாடுகளிலும் பல்வேறு முறைகளில் செயல்படுத்தப்படலாம். ஆனால் பொதுவாக நவீன தாராளமய கொள்கை என்றால் தனியார்மயம் தாராளமயம், உழைப்பாளர்களை பணியமர்த்துவது அல்லது பணி நீக்குவது போன்ற விசயங்களில் முதலாளிகள் தங்கள் விருப்பப்படி நடந்துகொள்வது, தொழிலாளர்களின் கூலி மற்றும் இதர சலுகைகளை வெட்டும் நோக்குடன் சமூக நலத் திட்டங்களுக்கு அரசு செய்யும் செலவுகளைக் கணிசமாக குறைப்பதும், மற்ற நலன்களை வெட்டுவதும்தான் அதன் அடிப்படையாகும். தொழிற்சங்கம் அமைத்தல்; தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்கள் கூட்டு பேர சக்தியைப் பயன்படுத்துதல் போன்ற உரிமைகள், எளிய மக்களின் வாழ்வுநிலை, அவர்களுடைய ஜனநாயக உரிமைகள் ஆகிய அனைத்தும் கடும் தாக்குதலுக்கு உள்ளாகின. இத்தகைய தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களில் உழைக்கும் வர்க்கம்தான் பொதுவாக முன்னணிப் பாத்திரம் வகிக்கிறது. எனவே உழைக்கும் வர்க்கத்தின் அமைப்பு சார்ந்த வலுவை, தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்துவது, மேலும் முதலாளிகளின் தாக்குதலை எதிர்த்துப் போராடமுடியாமல் உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்குவது என்பவை நவீன தாராளமயத்தின் மிக முக்கியமான குறிக்கோள்களாகும்.

நவீன தாராளமயக் கொள்கைப்படி அரசு தலையீடு இல்லாமல் இருந்தால்தான் சந்தைப் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படும். ஆனால் நடைமுறையில் அரசு தலையீடு இல்லாமல் இருப்பது என்பது நிகழ்வதில்லை. மாறாக, முதலாளிகளுக்குச் சாதகமாக வெளிப்படையான அரசு தலையீடு என்பதுதான் நிகழ்கிறது. இதன் விளைவாக மக்களின் செல்வங்களையும், வளங்களையும் முதலாளிகளுக்கு அள்ளிக்கொடுக்க வழிவகை செய்யப்படுகிறது. ற்போது இந்தச் செயல்பாடு ஆரம்ப மூலதன சேர்க்கையின் தன்மையைப் பெற்றுள்ளது.

இந்தக் கட்டுரையில் நவீன தாராளமயத்தின் தாக்கம் தொழிலாளர்கள், தொழிற்சங்க இயக்கம் மீது, குறிப்பாக வர்க்க அடிப்படையில் இயங்கும் தொழிற்சங்கங்களின் மீது, எவ்வாறு இருக்கிறது என்பதை மட்டும் பார்ப்போம். நவீன தாராளமயத்தை செயல்படுத்தும் அனைத்து நாடுகளிலும் அமைப்பு ரீதியான தொழிலாளிவர்க்க இயக்கத்தைப் பலவீனப்படுத்தும் வகையில் கடுமையான, விடாப்பிடியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதலாளிகளுக்குச் சாதகமான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. கடுமையான போராட்டங்களின் மூலம் உழைக்கும் மக்கள் வென்றெடுத்த உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தொழிலாளர்களின் மீதும் அவர்களுடைய பணிச் சூழலின் மீதும் பல்வேறு விதமாகக் கடுமையான தாக்குதல்களை நடத்த முதலாளிகளுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்படுகிறது.

முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் ‘ஒழுங்குபடுத்தப்படாத பணி ஏற்பாடுகள்’ (non-standard work arrangements) பெரிதும் அதிகரித்துள்ளன. அதாவது, ஊசலாடும் (precarious) அல்லது எளிதில் இழக்கப்படக்கூடிய (vulnerable) பணியிடங்கள் அதிகரித்துவருகின்றன. பணி நிரந்தரம் செய்யப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் குறைந்துகொண்டே வருகிறது. இதே சமயத்தில் பகுதி நேர ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள், காசுவல் ஊழியர்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணி செய்வோர், ஒப்பந்தத் தொழிலாளர்கள் போன்ற சீரற்ற பணி செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வீட்டிலிருந்து பணி செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நிரந்தர அல்லது எப்போதும் தொடர்ந்து நடைபெறும் வேலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. பல மோட்டார் கார் நிறுவனங்களிலும் இதர தொழிற்சாலைகளிலும் தொழில் கற்போர் பல ஆண்டுகளுக்கு மிகச் சொற்ப சம்பளத்திற்குப் பணி செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். நிரந்தரப் பணியாளர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளத்தில் மிகக் குறைந்த விகித அளவு சம்பளம்தான் இவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. பெரிய பன்னாட்டு நிறுவனங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. இந்த நிலை தனியார் துறையில் மட்டுமின்றி பொதுத்துறை, அரசுத்துறைகளிலும் உள்ளது. இத்துறைகளில் வேலை செய்யும் லட்சக்கணக்கான ஊழியர்களின் பணிச்சூழல், ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்படாத பணியாளர்களின் பணிச்சூழலை ஒத்திருக்கிறது. கிட்டத்தட்ட 1 கோடிப் பணியாளர்கள் இந்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களில் பணி செய்கின்றனர். இவர்களுக்குப் பணியாளர்கள் என்ற அங்கீகாரம் கூடக் கிடையாது. இவர்களில் பெரும்பாலோர் பெண்கள்.

பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள உலக வேலைவாய்ப்பு, சமூக நிலைமை 2017 இல் உள்ள போக்கு என்ற அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 140 கோடிப்பேர் அல்லது உலகில் மொத்த உழைப்போரில் 42 சதவீதப்பேர் 2017 ல் எந்த நேரத்திலும் வேலை பறிபோகக்கூடிய நிரந்தரமற்ற பணிகளில் வேலை செய்கிறார்கள். இந்த அறிக்கையின்படி முன்னேறிவரும் (emerging) பொருளாதாரங்களில் இரண்டு பேரில் ஒருவரும் (இதர) வளரும் நாடுகளில் 5 இல் 4 பேரும் இத்தகைய நிலைமைகளில் பணியாற்றுகின்றனர். நிரந்தர வேலைகளைக் குறைப்பதும் நிரந்தரமற்ற பணிநிலைமைகள் மூலம் வேலைகளை முடித்துக்கொள்வதும் உழைப்பாளிகளுக்கு உரிய கூலியை மறுப்பதற்கும் அவர்களுக்கு மற்ற நல உதவிகளை மறுப்பதற்கும் முதலாளிகள் கையாளும் மோசமான நடவடிக்கைகளாகும். பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களும் முதலாளிகளுடைய இந்தக் கொள்ளையை சட்ட ரீதியிலான நடவடிக்கையாக மாற்றுவதற்காக தொழிலாளர் சட்டங்களைத் திருத்த முயற்சிக்கின்றன.

உழைக்கும் மக்கள் உற்பத்தி செய்யும் செல்வங்களில் உழைப்பவர்களுக்கு உரிய பங்கைக் குறைத்து முதலாளிகளின் பங்கை அதிகப்படுத்துவதற்காகவே மேற்கூறிய நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. 2017 ஆம் ஆண்டில் பன்னாட்டு நிதியம் வெளியிட்டுள்ள 2017 இல் உலகப் பொருளாதார நிலைமை என்ற அறிக்கையில் பின்வரும் விசயங்கள் தெளிவாகின்றன: 1991 ஆம் ஆண்டு முதல் 2014 வரை உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் என்று கருதப்படும் 50 நாடுகளில் 29 நாடுகளில் நாட்டு வருமானத்தில் உழைப்பவர் பங்கு குறைந்திருக்கிறது. 2014 இல் உலகின் மொத்த உற்பத்தியில் இந்த 29 நாடுகளின் பங்கு மூன்றில் இரண்டு பங்கு ஆகும். பத்து பெரும் தொழில்களில் ஏழில் உழைப்பாளர்கள் பெற்ற கூலியின் பங்கு குறைந்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் வளரும் நாடுகளில் ஒரு நாளுக்கு 3.10 டாலர்களுக்கும் குறைவாக சம்பாதிக்கும் உழைப்பாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 30 லட்சம் பேர் என்ற அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கூறிய மாற்றங்கள் கூலியின் பங்கைக் குறைப்பது மட்டுமில்லாமல், உழைக்கும் மக்களின் கூட்டு பேர சக்தியையும் பலவீனப்படுத்துகிறது. உழைப்பாளர்களின் வேலை நிரந்தரமற்றது. அவர்களுடைய குறைந்த வருமானமும் நிச்சயமற்றது. மேலும் அவர்களுடைய வேலையின் தன்மையால் பல்வேறு இடங்களில் சிதறியுள்ளனர். இதனால் இம்மக்களை தொழிற்சங்கங்களில் திரட்டுவது மிகவும் கடினமாக உள்ளது. ஒன்றிணைந்த உழைப்பாளர்களின் வலிமையைத் தொழிற்சங்கங்கள்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அத்தகைய தொழிற்சங்கங்கள் இல்லையென்றால் உழைக்கும் மக்களுக்கு முதலாளிகளோடு பேரம் பேசும் வலிமை இல்லை. ஆனால் முதலாளிகளோடு உரிமைக்காகப் போராடுவதற்கு மாற்றாக தொழிலாளர்கள் எப்படியாவது தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தால் தங்களுக்குள்ளேயே ஒருவரோடு ஒருவர் போட்டிபோட வேண்டியுள்ளது. இந்தச் சூழல் முதலாளிகளின் கையை மேலும் வலுப்படுத்துகிறது.

உலகமயமாதலும் தாராளமயமும் உற்பத்திப் பணிகளை உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது. இதன் மூலம் அவர்கள் உலகில் மிகக் குறைந்த கூலிக்குப் பணி செய்யத் தயாராயிருக்கும் உழைப்பாளர் படை எந்த நாட்டில் அதிக அளவில் இருக்கிறதோ அந்த இடத்தில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க முடியும். மேலும் தொழிற்சங்க இயக்கங்களும் தொழிலாளி வர்க்கமும் பலவீனமாக உள்ள இடங்களையும் தேர்ந்தெடுப்பார்கள். அரசாங்கங்களோ போட்டி போட்டுக்கொண்டு தங்கள் நாட்டு உழைப்பாளர்களின் சேவையைக் குறைந்த கூலிக்கு பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அளிக்க முன்வருகின்றன. வெளிநாடு மற்றும் உள்நாட்டு பெரு முதலாளிகளிடம் தொழிலாளர் சட்டங்களை எளிமைப்படுத்துவதாக உத்திரவாதம் அளித்து, அதன் விளைவாக இந்தப் பெரு நிறுவனங்கள் பாட்டாளிகளின் உழைப்பைத் தங்குதடையின்றிச் சுரண்டுவதற்கு வழி செய்கிறது. சுலபமாகத் தொழில் செய்ய உகந்த இடம் என்பதற்கான குறியீடுகளை அதிகப்படுத்துவதற்காக, பல நாடுகளின் அரசாங்கங்களும் பன்னாட்டுப் பெருமுதலாளிகள் தங்கள் நாடுகளில் முதலீடு செய்வதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.

மூலதனம் பறந்துபோய்விடும்; உற்பத்தி பிற நாடுகளுக்கும் இடங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டு, உள்ள வேலைகள் இழக்கப்படும் என்ற மிரட்டல்கள் தொழிலாளிகளையும் அவர்கள் சங்கங்களையும் தங்கள் வேலைகளைப் பாதுகாத்துக்கொள்ள கூலி மற்றும் இதர சலுகைகள் வெட்டப்படுவதை அங்கீகரிக்கும் நிலைக்குத் தள்ள பயன்படுத்தப்படுகின்றன. சங்கங்கள் இத்தகைய நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியும் நிகழ்வுகள் பல உள்ளன. ஐரோப்பாவில், சங்கங்கள் கம்பனிகளுடன் செய்து கொள்ளும் பல ஒப்பந்தங்களில் கூலி உயர்வு கோருவதில்லை; நீண்ட கால ஒப்பந்தங்கள் ஏற்பு, மேலும் வேலைகளைப் புதிய முறையில் மாற்றியமைக்கும் ஏற்பாடுகள் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ‘பெருந்தொழில்நிறுவன போட்டி (தந்திரம்)’ என்று கூறப்படுகிறது.

அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடாவில் தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரமும் வேலைப் பாதுகாப்பும் தேவையென்றால் தொழிற்சங்கங்கள் முதலாளிகளுடன் நெகிழ்வு தரும் ஒப்பந்தங்கள்என்ற பெயரில் ஒப்பந்தங்கள் போட்டுகொண்டு வேலை நிறுத்தம் செய்யும் உரிமைகளைக் கைவிட வேண்டும் என்று சங்கங்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. ஸ்வீடனில் “சிக்கனப் பகிர்வு” என்ற பெயரிலும் ஜெர்மனியில் இணைந்து நிர்வகிக்கும் சிக்கனம்என்ற பெயரிலும் கனடாவிலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் தண்டிக்கும் தன்மை கொண்ட சிக்கனம்என்றும் அழைக்கப்படும் இத்தகைய சில நடவடிக்கைகளை உதாரணமாகக் கூறலாம். இந்தியாவிலும் தொழிற்சங்கங்கள் பல இடங்களில் கூலி உயர்வைத் தவிர்க்கவேண்டுமென்றும் நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டுமென்றும் இல்லாவிட்டால் வேலை இழக்க நேரிடும் என்றும் நிர்ப்பந்திக்கப்படுகின்றன என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உண்டு.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 28 மாநிலங்கள் “வேலை செய்யும் உரிமை” சட்டங்களை இயற்றியுள்ளன. ஆனால் அந்தச் சட்டங்களுக்கு மேற்கூறிய தலைப்பு பொருந்தாது. இந்தச் சட்டங்கள் உழைப்பாளர்களின் வேலை செய்யும் உரிமையைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் அல்ல. மாறாக அவை தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணையாமல் இருக்க ‘உரிமை’, சங்கத்திற்கு சந்தா செலுத்த மறுக்கும் ‘உரிமை’ பற்றிப்பேசுகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் தொழிலாளிகள் தொழிற்சங்கத்தில் சேருவது, சங்கத்திற்கு சந்தா செலுத்துவது ஆகியவற்றை தடுத்து, தொழிற்சங்கங்களை நிதிப்ற்றாக்குறையினால் சீரழியச் செய்து இறுதியில் தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்களே இல்லாமல் செய்வதுதான் இந்தச் சட்டங்களின் நோக்கம். கனடாவில் “வேலைக்குத் திரும்புவோம்” என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசியத் துறைகள் என்று அரசு கருதும் துறைகளில் வேலை நிறுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் மீதும் தொழிலாளர்கள் மீதும் பெருந்தொகைகள் அபராதமாக விதிக்கப்படுகின்றன.

இங்கிலாந்தில் நவீன தாராளமயத் தொழிற்சங்கத்தை உருவாக்க (டோனி பிளேர் தலைமையில் இருந்த) உழைப்பாளர் கட்சி ‘பங்காளித்துவம்’ (partnership) என்ற கோட்பாட்டை முன்வைத்தது. இதன் பொருள் தொழிற்சங்க இயக்கம் வர்க்கப் போராட்டம் என்ற கருத்தை கண்டனம் செய்வதும், உற்பத்தியைப் பெருக்கி முதலாளிகளின் லாபத்தை அதிகரிப்பதுமாகும். நவீன தாராளமயம் சொன்னபடியெல்லாம் செய்ய முனையும் இத்தகைய தொழிற்சங்கங்களுக்கு அரசு ஏராளமான மானியங்களை வழங்கியது. பணியிடத்தில் கற்றல், பயிற்சி, நவீனமயமாக்கல்’ என்ற பல்வேறு சாக்குகள் கூறியும் பன்னாட்டு அரங்கில் செயல்படவும் ஏராளமான பணம் வழங்கப்பட்டது. இத்தொழிற்சங்கங்கள் நவீன தாராளமய அரசின் கைதிகள்; அவற்றின் ஓய்வூதியர்கள் என்று ஆக்கப்பட்டனர்.

தற்போதுள்ள பாஜக அரசாங்கத்தின் தொழிலாளர் சட்டங்களும் 44 மைய தொழிற்சட்டங்களை இணைத்து 4 சட்டத் தொகுப்புகளாக்கும் அதன் முயற்சியும் தொழிற்சங்க இயக்கத்தையும் தொழிலாளர்களின் கூட்டு பேர சக்தியையும் பலவீனப்படுத்தும் முயற்சியேயாகும்.

பாட்டாளிவர்க்கத்தின்மீது நவீன தாராளமயம் தொடுத்துள்ள மிக அபாயகரமானதும் மிகப்பெரியதுமான தாக்குதல், அதன் தத்துவார்த்தத் தாக்குதலாகும். நவீன தாராளமயத்திற்கு ஆதரவாகப் பேசும் கருத்தாளர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்துப் பிரச்சாரம் செய்கிறார்கள். சந்தைப் பொருளாதாரத்தைச் சார்ந்திருந்தால் போட்டி அதிகரிக்கும். இதனால் அரசுத் துறை சேவைகள் சிறப்படையும். தாராளமயம், மேலும் சுதந்திரமாக இயங்கும் சந்தைப் பொருளாதாரம் ஆகியவற்றால் மேலும் செல்வம் கொழிக்கும். மேல் தட்டுகளில் இருந்தும் செல்வச் செழிப்பு கீழ்த்தட்டுக்கும் சொட்டும். இதனால் சமூகத்தின் எல்லோருக்கும் நன்மை கிடைக்கும். நெகிழ்ந்து கொடுக்கும் உழைப்பாளர் சந்தை, வேலைவாய்ப்பும் சம்பளமும் அதிகரிக்கும். மேலும் தொழிற்சங்கங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை; தொழிலாளர்களுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துபவை. இதனால் தொழிற்சங்கங்களை ஒழிப்பது தொழிலாளர்களின் சுதந்திரத்தை மேம்படுத்தும் போன்றவை இத்தகைய கருத்துக்களாகும்.

அதனிடம் உள்ள ஏராளமான வளங்கள், அதன் அடிவருடியான பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அறிவுஜீவிகள், அதன் பிடியில் உள்ள அரசாங்கங்கள் ஆகியவை மூலம் பன்னாட்டு நிதி மூலதனத்தால் இயக்கப்படும் நவீன தாராளமயம் தனது தத்துவத்தை பரப்பி உலகம் முழுவதிலும் கோலோச்ச வைத்துள்ளது. வர்க்கச் சமரசத்தையும், திருத்தல்வாதத்தையும் ஏற்றுக்கொண்ட பல தொழிற்சங்கங்கள் மேற்கூறிய பிரச்சாரத்திற்கு இரையாகி, நவீன தாராளமயக் கொள்கைகளை ஆதரித்தன. ஐரோப்பாவிலும் இன்னும் பல வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும் அந்தக் காலகட்டத்தில் நிலவிய நெருக்கடியின் பின்னணியில் தனியார்யமும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதும் பொருளாதாரரீதியாக நன்மை பயக்கும் என்று இச்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன. பல தொழிற்சங்கங்கள் இது தவிர்க்க முடியாதது என்றும் கருதின. “(நவீன தாராளமயமாக்கத்திற்கு) மாற்றேதுமில்லை” என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய அனுபவமும் இதிலிருந்து அதிகம் வேறுபடவில்லை. துவக்கக் கட்டத்தில் இந்தியத் தொழிற்சங்க மையம்போன்ற, வர்க்கக் கண்ணோட்டத்துடன் இயங்கும் சில தொழிற்சங்கங்களைத் தவிர மற்ற சங்கங்கள், நவீன தாராளமய கொள்கைகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் நன்மை விளைவிக்கும் என்ற பிரமையையே கொண்டிருந்தன.

நவீன தாராளமயவாதிகள் இவ்வாறு கூறியவை அனைத்தும் தவறு என்பது தற்போது தெளிவாகியுள்ளது. செல்வச் செழிப்பு மேல்தட்டில் இருந்து கீழ்த்தட்டிற்கு சொட்டும் என்ற கருத்து முழுமையாகப் பொய்யானது என்பது உறுதிப்பட்டுள்ளது. இன்று காணப்படுவது இச்செல்வம் முன்பைவிட அதிக அளவில் குவிந்துள்ளது என்பதுதான். உற்பத்தித்திறன் பெருமளவில் அதிகரித்துள்ளது; உழைப்பாளர்கள் தங்கள் உழைப்பைச் செலுத்தி ஏராளமான செல்வத்தை உற்பத்தி செய்துள்ளனர்; ஆனால் ஒரு சிலரால் இந்தச் செல்வங்கள் அதிகமாக கைப்பற்றப்படுகின்றன. எந்தக் காலத்திலும் இல்லாதபடி ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. ஜனவரி 2017 ஆம் ஆண்டில், ஆக்ஸ்பாம்(OXFAM) 99%க்கான பொருளாதாரம்என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகில் 8 பேர் மட்டுமே உலகின் பாதி எண்ணிக்கையினரான மிகவும் ஏழ்மையான 362 கோடி மக்களிடம் உள்ள செல்வத்தைக் கைப்பற்றிக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். 1988 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் உலகில் மிக ஏழையான 10 சதவீதம் மக்களின் வருமானம் தலைக்கு 65 டாலர் என்ற அளவிற்கு உயர்ந்தது; ஆனால் உலகிலேயே பெரும் பணக்காரர்களான 1 சதவீதம் பேருடைய வருமானம் தலைக்கு 1180 டாலர் என்ற அளவில், அதாவது 182 மடங்கு, உயர்ந்தது.

இந்தியாவிலோ, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி இன்னும் அதிகம். அகில உலக புள்ளிவிபரங்களின்படி, உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களிடம் – மேல்மட்டத்தில் உள்ள 1 சதவீதம் பேரிடம் உலகச் செல்வத்தில் 50 சதவீதம் உள்ளது. இந்தியாவில் மிகப்பெரும் செல்வந்தர்கள் –மேல்மட்டத்திலுள்ள ஒரு சதவீதம்பேர் நாட்டின் செல்வத்தில் 58 சதவீதத்தை வைத்துள்ளனர். ஒரு பில்லியன் (=100கோடி) அமெரிக்க டாலருக்குமேல் (கிட்டத்தட்ட 7,000 கோடி ரூபாய்க்கு மேல்) சொத்துள்ளவர்கள் இந்தியாவில் 57 பேர். அவர்களிடம் உள்ள செல்வமும் அடிமட்டத்தில் இருக்கும் 70 சதவீதம்பேரிடம் இருக்கும் உள்ள மொத்தச் செல்வமும் சமம்! ( 57 பேரிடம் 214 பில்லியன் டாலர் 14,98,000 கோடி ரூபாய் செல்வம் உள்ளது. )

நவீன தாராளமயத்தின் அடிப்படையில் நடக்கும் பொருளாதார வளர்ச்சி, வேலைகளை உருவாக்காத அல்லது வேலைவாய்ப்பில் இழப்பை ஏற்படுத்தும் வளர்ச்சி என்று கூறப்படுகிறது. வேலையின்மை என்பது கவலையளிக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளது. முன்னர் குறிப்பிடப்பட்ட, உலக தொழிலாளர் அமைப்புஅளித்த அறிக்கை கீழ்க்கண்டவாறு கூறுகிறது:வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், நீண்டகால வேலையின்மை, பொருளாதாரச் சிக்கல் தோன்றுவதற்கு முன்பு இருந்ததோடு ஒப்பிடுகையில், இப்போது அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில், 2016 ஆம் ஆண்டின் 2 வது காலாண்டுப் பகுதியில் 12 மாதங்களாக அதற்கு மேலாக வேலைதேடுவோரின் பங்கு 47.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2012 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் இவ்வாறு வேலை தேடுவோர் பங்கு 44.5 சதவீதமாக இருந்தது. 2016 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த பிரிவைச் சேர்ந்த நபர்களில் மூன்றில் இரண்டு பேர், 2 ஆண்டுகளுக்கும் மேல் வேலையின்றி இருந்தார்கள்.

அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் ஏற்படும் மாபெரும் முன்னேற்றங்கள், மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, அவை மக்களை வேலையில் இருந்து நீக்க பயன்படுகின்றன. லாபத்திற்காக பேராசைப்படும் பெரும் கம்பெனிகள் உழைப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்கின்றன. மருத்துவம், கல்வி, விருந்தோம்பல், எடிட்டிங் போன்ற துறைகளிலும், மோட்டார் கார் உற்பத்தி போன்ற தொழிற்சாலைகளிலும் பயன்படவல்ல செயற்கை அறிவு, ரொபாட்டிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் இன்று உருவாக்கப்படுகின்றன. இத்தகைய தொழில்நுட்பங்கள் மிக அதிக எண்ணிக்கையிலான அளவில் தொழிலாளர்களின் வேலைகளைப் பறித்து, வேலையின்மையை மேலும் கடுமையாக்கப் போகின்றன.

தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளைப் பறித்ததால் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது என்பதற்கு எத்தகைய அத்தாட்சியும் இல்லை. உலகத் தொழிலாளர் அமைப்பின் முக்கிய அறிக்கையான உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக நிலை பற்றிய 2015ம் ஆண்டின் அறிக்கை” உலகின் மிக முன்னேறிய நாடுகள் மட்டுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆப்ரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட 63 நாடுகளில் இருந்து கிடைத்த 20 ஆண்டுகளுக்கான விபரங்களை ஆராய்ந்து இவ்வாறு கூறுகிறது:வேலை வாய்ப்புகளை வலுவிழக்கச்செய்கின்ற, மிக மோசமாக வடிவமைக்கப்பட்ட சட்ட மாற்றங்கள் . அவை குறுகிய காலகட்டத்திற்காக இருந்தாலும் சரி, அல்லது நீண்ட காலத்திற்காக இருந்தாலும் சரி நன்மை பயக்காது; வேலைவாய்ப்புகளைப் பெருக்காது.

உழைப்பாளிகளின் மீதும் தொழிற்சங்கங்களின் மீதும், வளர்ச்சி, முதலீடுகளைப் பெருக்குவது என்ற பெயரில் தாக்குதல்களும் நடவடிக்கைகளும் தொடுக்கப்பட்டு நவீன தாராளமயம் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த அம்சமான பொருளாதார நெருக்கடிகளை தடுப்பதில் தோல்வியடைந்தது. 1997ஆம் ஆண்டில் ‘கிழக்காசியப் புலிகள்’ என்று கூறப்பட்ட நாடுகளில் ஒரு பெரும் நிதி நெருக்கடி உருவாயிற்று. இது பின்னர் மற்ற நாடுகளுக்கும் பரவி உலகப் பொருளாதாரத்தில் ஒரு பெரும் பொருளாதார மந்த நிலையை 2001 ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து உருவாக்கத் துவங்கியது. இதிலிருந்து நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை அதிக காலத்திற்கு செயலாக்க முடியாது என்பது தெரிகிறது. அண்மைக்காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில், 2008 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார நெருக்கடி உருவாயிற்று. இன்றளவும் இந்தப் பிரச்சினை தொடர்கிறது. நவீன தாராளமயமாக்கத்தின் ஆதரவாளர்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்படும் மீட்சிக்கான ஒரு சில அடையாளங்களாக சுட்டிக் கொண்டிருந்தாலும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. உலகத் தொழிலாளர் அமைப்பு 2017 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு மற்றும் சமூக நோக்கம் பற்றிய தனது அறிக்கையில் கூறுகிறது: 2017 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சியைப் பற்றிய முன்மதிப்பீடுகள் சமீபகாலமாக ஒவ்வொரு முறையும் இறங்குமுகமாகவே மாற்றப்படுகின்றன (2012 ஆம் ஆண்டில் 4.6% என்பது 2016 ஆம் ஆண்டில் 3.4 % எனக் குறைந்தது). உலகப் பொருளாதாரத்தைப் பொறுத்தமட்டில் ஒரு கூடுதலான நிச்சயமற்ற நிலைமையே உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் நவீன தாராளமயகொள்கைகளின் தாக்கத்தைக் குறித்து உலகெங்கும் அதிருப்தி அதிகரித்துவருகிறது. உலகெங்கும் உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கை நிலையின் மீதும், வேலைச் சூழலின் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்த்தும் நவீன தாராளமயக் கொள்கையின் அடிப்படையில் நடத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்தும் பெரிய போராட்டங்களை நடத்த முன்வருகின்றனர். பெருமளவிலான தொழிலாளர்களைத் திரட்டி பெரும் வேலை நிறுத்தங்கள் பிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ், போர்ச்சுகல், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி போன்ற ஐரோப்பாவின் பல நாடுகளில் நடைபெறுகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் இத்தகைய போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தியாவில் 1991 ஆம் ஆண்டில் நவீன தாராளமயக் கொள்கைகள் துவக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தன. ஒன்றிணைந்த தொழிற்சங்கங்க இயக்கங்களின் தலைமையில் நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகளை எதிர்த்து 17 முறை நாடு தழுவிய பொது வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன.

நவீன தாராளமயமாக்கம், உலகமயமாக்கம் ஆகிய கொள்கைகளின் நிலையத்தகு தன்மை உலகெங்கும் அதிகமாக கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல, மனித குலத்தை வாட்டும் பல சிக்கல்களைத் தீர்க்க முதலாளித்துவம் ஏற்றதுதானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால், பல நாடுகளில் நம்பகமான ஸ்தாபன பலத்தோடு கூடிய ஒரு இடதுசாரி மாற்று என்பது இல்லை. இந்தச் சூழலில் பல நாடுகளில் வலதுசாரிகள் நிலவும் அதிருப்தியை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்துகிறார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றதில் இதனைக் காண முடிகிறது. வெள்ளை இன தொழிலாளர்களிடையே தாராளமய, உலகமய கொள்கைகளுக்கு எதிராக நிலவி ந்த கோபத்தை , அக்கொள்கைகளின் விமர்சகராக தன்னை வேஷம் காட்டிக்கொண்டு டிரம்ப் பயன்படுத்திக்கொண்டார். அமெரிக்காவில் செய்யப்படவேண்டிய வேலைகளை வெளிநாட்டிற்கு அனுப்புவதை அவர் விமர்சித்தார். NAFTA, (வட அட்லாண்டிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்) TPP (பசிபிக் பகுதி பங்காளி ஒப்பந்தம்) போன்ற அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தங்களை விமர்சித்தார். அமெரிக்க உழைப்பாளி மக்களுக்குச் சாதகமாக பொருளாதாரத்தைச் செயல்படுத்துவதாக உறுதிகூறினார். வெள்ளைத் தொழிலாளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக தேசியம், இனவெறி பிரச்சனைகளை எழுப்பினார். மேலும் முஸ்லிம்கள், வெள்ளையர் அல்லாத மக்கள், புலம் பெயர்ந்து வந்தவர்கள் இவர்கள்தான் வெள்ளைத் தொழிலாளர்களின் எதிரிகள் என்று சித்தரித்தார். ஐரோப்பாவில் பிரான்ஸ், ஸ்வீடன், ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் வலதுசாரிகள் தாக்கமும் இனவெறியும் அதிகரித்துவருகின்றன.

இந்தியாவிலும் இத்தகைய சூழல் நிலவுகிறது. காங்கிரசின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளின் தாக்கத்தால் மக்களிடையே நிலவிய அதிருப்தியையும் அந்த ஆட்சிக்காலத்தில் வெளிப்பட்ட பெரிய ஊழல்களையும் வலதுசாரி ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரத்தின் ஓர் அங்கமான பாஜக பயன்படுத்திக்கொண்டது. காங்கிரஸ் அரசு பின்பற்றிய அதே கொள்ககளை பாஜக அரசு இன்னும் அதிக முனைப்புடன் செயல்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்துத்துவக் கொள்கை வகுப்புவாரியாக மக்களை மத அடிப்படையில் பிரித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முனைகிறது. ஒருபுறம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் மக்களிடையே வகுப்புவாதத்தைத் தூண்டி ஒற்றுமையைக் குலைக்க முயல்கிறது. மற்றொருபுறம் வெளிநாட்டு உள்நாட்டு பெருநிறுவனங்களுக்கும், பெருவர்த்தக நிறுவனங்களுக்கும் நன்மை பயக்கும் சர்வதேச நிதி மூலதனத்தின் ஆணைப்படி உருவாக்கப்பட்ட நவீன தாராளமய கொள்கைகளை அமலாக்குகிறது. பாஜக/ஆர்.எஸ்.எஸ் இவை செயல்படுத்தும் வகுப்புவாதக் கொள்கைகள் நவீன தாராளமயத்திற்கு எதிராகப் போராடும் தொழிலாளர்களின் ஒற்றுமையைச் சிதைக்கிறது.

தற்போது நம் நாட்டில் நிலவும் சூழ்நிலை வலிமையான இடதுசாரி அமைப்பைக் கட்டி நவீன தாராளமயகொள்கைகளுக்கு எதிராக நம்பகமான மாற்று கொள்கைகளை நிறுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது காங்கிரசின் அரசியல் அறிக்கை இந்துத்துவா மற்றும் பிற வகுப்புவாத சக்திகளை எதிர்த்த போராட்டத்தை நவீன தாராளமயமாக்கல் கொள்கைகள் உழைக்கும்வர்க்கத்தின் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளை எதிர்த்த போராட்டத்தோடு இணைக்க வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளது. 21 வது காங்கிரசில் அரசியல் உத்திகளை மறுபரிசீலனை செய்து அளிக்கப்பட்ட அறிக்கை, இத்தகைய மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்கவேண்டுமென்றும் போராட்டங்களுக்குத் தலைமைதாங்கி நடத்தவேண்டுமென்றும் அதன் மூலம் கட்சியின் தனிப்பட்ட வலிமையை வளர்க்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளது.

எனவே தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையில் நவீன தாராளமய கொள்கைகள் ஏற்படுத்தும் பிரச்சனைகள் மீது போராட்டங்கள் நடத்தவேண்டும். இப்பிரச்சினைகளை அரசின் கொள்கைகளோடு இணைத்து இக்கொள்கைகளின் பின்னால் உள்ள அரசியலை அம்பலப்படுத்தவேண்டும். இத்தகைய போராட்டங்கள், பிரச்சாரங்கள் மூலம்தான் நம் நாட்டில் உழைக்கும் மக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் நவீன தாராளமய கொள்கைகளையும், வகுப்புவாத ஆபத்தையும் நம்மால் தோற்கடிக்க முடியும்.

முதலாளித்துவத்தில் ஏற்படும் சிக்கல்கள் தவிர்க்க முடியாதவை என்பதையும், அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும், உற்பத்தித் திறனிலும் மிகப்பெரிய முன்னேற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் இந்த முதலாளித்துவ அமைப்பு மக்களுடைய அடிப்படைத் தேவைகளைத் தீர்க்க உதவாது என்பதையும் தொழிலாளிவர்க்கத்திற்கும் இதர உழைக்கும் மக்களுக்கும் உணர்த்தவேண்டும். தற்சமயம் மகத்தான நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது. இத்தகைய காலகட்டத்தில், மதிப்பு இழந்த முதலாளித்துவத்திற்கு மாற்றுப்பாதை சோசலிசம் ஒன்றே என்ற செய்தியை மக்களிடையே பரப்ப வேண்டும்.

தமிழில்: பேரா ஹேமா