விவசாயிகள் போராட்டத்தின் படிப்பினைகள்

பிரகாஷ் காரத்

அண்மையில் வெற்றிகரமாக நடந்தேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க விவசாயிகள் போராட்டம் குறித்தும், அதன் அரசியல் பின்புலன் மற்றும் தாக்கங்கள் குறித்தும் புரிந்து கொள்வது அவசியமாக உள்ளது. மத்திய மோடி அரசின் மூன்று வேளாண் (விரோத) சட்டங்களுக்கு எதிரான இந்த போராட்டம் இக்கால அரசியல் சூழலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போராட்டம்.

செப்டம்பர் 2020இல் மோடி அரசு, பாராளுமன்ற ஜனநாயக மாண்புகள் அனைத்தையும் மீறி, எந்த விவாதமும் இன்றி, பாராளுமன்றத்தில் அநீதியான முறையில் உட்புகுத்தி இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் இயற்றியது. ஆனால் விவசாயிகள் போராட்டம் அன்றிலிருந்து மட்டும் துவங்கவில்லை. அதற்கு முன்பே இந்த மூன்று சட்டங்களும் “அரசாணை”களாக ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே போராட்ட அலைகள் துவங்கிவிட்டன. அதன் பின் சட்டமாக இயற்றியவுடன், தில்லியை நோக்கி தில்லி எல்லையில் நவம்பர் 26 அன்று பெரும் போராட்டமாக உருவெடுத்தது.

சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய வரலாற்றில், மிகவும் நீண்ட காலமாக, தொடர்ந்து உறுதியாக, முன்னெடுக்கப்பட்ட ஒன்றுபட்ட போராட்டம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாகவே மோடி அரசு இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற நிர்ப்பந்திக்கப்பட்டது. ஆக, இப்படிப்பட்ட பரந்துபட்ட தொடர் இயக்கத்தின் வளர்ச்சி, அதன் முக்கிய அம்சங்கள், அத்தியாவசிய அரசியல் கூறுகள் ஆகியவற்றை புரிந்து கொள்ளும் தேவை நமக்கு உள்ளது.

போராட்டத்தின் பின்புலன்

இந்த மூன்று சட்டங்களும், தெளிவாக, விவசாயம் மற்றும் விவசாய பொருட்கள் விற்பனையில் கார்ப்பரேட் ஊடுருவலுக்கு வழி வகுக்கவே இயற்றப்பட்டன. இந்த மூன்று சட்டங்களும், இன்று நம் நாட்டில் அமலில் உள்ள நெல், கோதுமை, மற்றும் இன்ன சில பயிர்களின் கொள்முதல் முறைக்கும், இந்த கொள்முதலின் அடிப்படையாக உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும், மேலும் அதன் பின்னர் வரும் பொது விநியோக முறைக்கும் எதிரானதாக பாவிக்கப்பட்டது.

பஞ்சாப், அரியானா மற்றும் உத்திர பிரதேசம், குறிப்பாக மேற்கு உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த மூன்று மாநிலங்களில்தான் பெரும் அளவில் நிகழும் நெல், கோதுமை கொள்முதல் முறை நிலவி வருகிறது. மேலும் “அர்தியாஸ்” என்ற முறையின் மூலம் இடைத்தரகர்கள் விளைச்சலை கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யும் முறையும் நிலவி வருகிறது. ஆக, இந்த மாநிலங்களில்தான் விவசாயிகள் எழுச்சி முதலில் ஏற்பட்டது.

ஆனால் இந்த மூன்று வேளாண் சட்டங்கள் இயற்றப்படும் முன்னரே, நாட்டின் பல பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டங்கள் வளர்ந்து கொண்டே வந்தன. பல்வேறு விவசாய சங்கங்களை இணைக்கும் கூட்டு அமைப்புகளும் உருவாகி வளர்ந்து வந்தன. இந்த விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்த “சம்யுக்த் கிசான் மோர்ச்சா” (SKM, ஒன்றுபட்ட விவசாயிகள் முன்னணி) அமைக்கப்பெறும் முன்பே, மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டபொழுது உருவான “அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு” (AIKSCC) என்ற பரந்துபட்ட தளம் இருந்து வந்தது. SKM உருவாகும் முன்னரே பல இயக்கங்களும் போராட்டங்களும் துவங்கி விட்டன. 2018லும், 2019லும் தில்லியில் மிகப்பெரும் விவசாயிகள் திரட்சி நிகழ்ந்தன.

ஆக, நாட்டில் பல காலமாக நிலவி வரும், நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கடும் வேளாண் நெருக்கடி காரணமாக ஆங்காங்கே எழும் போராட்டங்களும், அவை அனைத்தையும் ஒன்று திரட்டி அதற்கு ஒரு தேசிய அளவிலான வடிவம் அளிக்கும் கூட்டு போராட்டங்களுக்கும் ஏற்கனவே முகாந்திரம் இருந்துள்ளது. தில்லியில் 2018 செப்டம்பரில் விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய, அண்மை காலங்களின் மிகப்பெரும் வெகுஜன இயக்கம் நிகழ்ந்தது. ஆக பல்வேறு விவசாய சங்கங்களும், விவசாய வர்க்கங்களும் ஒன்றுபட்டு நிகழ்த்தும் இயக்கங்களுக்கான உந்துதல் ஏற்கனவே இருந்து வந்தது.

இந்த பின்னணியில்தான் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தின் முக்கிய ஸ்தலமான பஞ்சாப்பில் ஜூன் மாத அரசாணைக்கு பின் 32 விவசாய அமைப்புகள் கூடி, செயற்குழு அமைத்து இயக்கங்களை முன்னெடுத்தனர். சாலை மறியல், ரயில் மறியல் போன்ற போராட்டங்கள் நிகழ்ந்தன. இதன் பின்னரே போராட்டம் தில்லியின் எல்லைகளுக்கு நகர்ந்தது.

போராட்டத்தின் முக்கிய அம்சங்கள்

ஒரு ஆண்டு முழுவதும் நடந்தேறிய இந்த விவசாயிகள் போராட்டத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால், அதில் காணப்பட்ட ஒற்றுமையே! SKM அமைப்பின் கீழ், நாடு முழுவதிலும் இருந்து சிறியதும், மிகப் பெரியதும் என சுமார் 500 விவசாய அமைப்புகள் கூடி இருந்தன. இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய SKM, அனைத்து தரப்பினரிடம் இருந்து போராட்டம் மற்றும் இயக்க செயல்பாடு குறித்த பரந்துபட்ட உரையாடலை ஊக்குவிக்கும் அமைப்பு முறையை உருவாக்கியது. இப்படி பல்வேறு, பரந்துபட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்களை ஒன்றிணைத்ததே இந்த போராட்டத்தின் முதல் முக்கிய அம்சம்.

இரண்டாவதாக கவனிக்க வேண்டியது, போராட்ட வடிவ வளர்ச்சி. நவம்பர் 26, 2020ல் “தில்லி சலோ” என்ற போராட்ட அழைப்பு விடுக்கப்பட்ட பின், பஞ்சாப் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து டிராக்டர்களில் முன்னேறி வரத் துவங்கிய விவசாயிகளை தடுக்கும் முயற்சிகள் நிகழ்ந்தன. போலீஸ் அராஜகம், கண்ணீர் புகை குண்டுகள், தடியடி என அனைத்தும் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆனால் இது அனைத்தையும் மீறி விவசாயிகள் முதலில் தில்லி எல்லையிலும், பின் அரியானா, ராஜஸ்தான், மற்றும் உத்திர பிரதேச எல்லைகளையும் வந்தடைந்தனர். ஆக, தில்லி எல்லையை சுற்றி இருக்கும் ஐந்து-ஆறு ஸ்தலங்களில் முனைப்புடன் நிகழும் போராட்டமாக இது உருவெடுத்தது. ஆண்டு முழுவதும் இந்த ஸ்தலங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டங்களை நிழத்தினார். தொடர்ந்து விவசாயிகள் வந்து கொண்டிருந்தனர். பின்னர், குறிப்பாக பஞ்சாப்பில், குறிப்பிட்ட சில கிராமங்கள் 2-3 வாரங்கள் போராட்டத்திற்கு சென்று திரும்பி வந்த பின், வேறு சில கிராமங்கள் செல்லும் சுழற்சி முறையும் உருவெடுத்தது. இதனால் இது தொடர் வெகுஜன ஒருங்கிணைப்பாக நிகழ்ந்தது. பஞ்சாப், அரியானா, உத்திர பிரதேச மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், பின்னர் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்திராகண்ட் விவசாயிகளும் ஒன்றிணைந்தனர்.

இதன் மூலம் இது மிக நீண்ட கால, தொடர் போராட்டமாக மாறியது. நாம் தொலைக்காட்சிகளில் பார்த்தது போல, கூட்டு சமையல் இடங்கள், மருத்துவ சேவை பகுதிகள், மேலும் படிக்கும் அறைகளும், நூலகங்களும் கூட போராட்ட களத்தில் அமைக்கப்பட்டன. ஆக, அந்த போராட்ட களத்தில் பல நாட்களாக இருந்தவர்கள் ஒரு கூட்டு வாழ்வை நடத்த முடிந்தது.

மூன்றாவதாக. இந்த போராட்ட அழைப்பு விடுக்கப்பட்ட நவம்பர் 26, 2020 அன்று தான் இந்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய பொது வேலை நிறுத்த அறிவிப்பும் விடுக்கப்பட்டது. இரண்டும் ஒன்றாகவே நடந்தேறியது. ஆகவே, துவக்கத்தில் இருந்தே இப்போராட்டம், விவசாய-தொழிலாளர் வர்க்கங்களின் கூட்டு நடவடிக்கைகள் மூலமே வளர்ந்தது. இது ஆண்டு முழுவது நீடித்து, தொழிற்சங்கங்கள் உடனான ஒரு குறிப்பிட்ட அளவு கூட்டு முயற்சிகளும், ஒற்றுமையும், கூட்டு நடவடிக்கைகளும் தொடர்ந்து நிகழ்ந்தன.

மேலும் இந்த போராட்ட அமைப்பின் தன்மையானது, அனைத்து சாதி, மத, பிராந்திய பாகுபாடுகளை உடைத்தெறியும் வண்ணம் வளர்ந்தது. உதராணமாக அரியானா மற்றும் பஞ்சாப் இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சனை போன்ற பிரிவினைகள் உடைவதைக் கண்டோம். கூடிய விவசாயிகள் இடையே பெரும் தோழமை வளரவதைக் கண்டோம். குறிப்பாக, இரண்டு முக்கிய போராட்ட ஸ்தலங்கள் அரியானாவில் அமைந்திருந்ததால், அரியானா விவசாயிகள்தான் பெருமளவு சமையல் பொருட்கள், காய்கறிகள், பால் போன்றவற்றை அளிக்கும் பொறுப்பை ஏற்று, போராட்டம் தொடர்ச்சியாக நடப்பதை உறுதி செய்தனர். இதன் மூலம் முந்தைய பிரிவினைகளும் பாகுபாடுகளும் உடைந்து, ஒற்றுமை வளர்வதைக் கண்டோம். இதே தான் மேற்கு உ.பி.யிலும் நிகழ்ந்தது. 2013 முசாஃபர்நகர் மதக் கலவரங்களுக்கு பின்னர் ஜாட் விவசாயிகள் மற்றும் முஸ்லிம் விவசாயிகள் மற்றும் சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரிவினை ஓரளவு சீரடைவதையும், பின்னர் பெரும் பங்கெடுப்புடன், குறிப்பாக முஸ்லிம் விவசாயிகள் மற்றும் கைவினை படைப்பாளிகள் பெருமளவில் பங்கேற்று நடைபெற்ற மாபெரும் முசாஃபர்நகர் பேரணி நிகழ்ந்ததையும் கண்டோம்.மேலும் அரியானாவில் பெரும் பங்கு வகிக்கும் ஜாட் விவசாயிகள், அவர்கள் மத்தியில் இதர சாதியினர் குறித்து விதைக்கப்பட்ட தீய கருத்துக்கள், மேலும் மதப் பிரிவினைவாதம், இவை அனைத்தும் இந்த போராட்டத்தின் சூட்டில் கரைந்து போவதைக் கண்டோம். இது ஒரு முக்கிய வளர்ச்சி.

அடுத்த முக்கிய அம்சமானது, பெண்களின் பங்கெடுப்பு. பல வகுப்பினரிடத்தில் இருந்தும், பல குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் பெருமளவில் போராட்டங்களில் முழுமையாக பங்கேற்றனர். பேரணிகளில் டிராக்டர்களை ஓட்டியும் வழி நடத்தினர். முதல் முறையாக வேளாண் சமூகங்கள் மத்தியில் பெண்களை விவசாயிகளாக பெருமளவில் அங்கீகரிக்கும் மாபெரும் வளர்ச்சியும் காணப்பட்டது.இது ஒரு முக்கியமான அம்சம் ஆகும்.

இந்த மூன்று வேளாண் சட்டங்களின் தாக்கம் நாடு முழுவதிலும் சமமாக இல்லை. முன்னரே குறிப்பிட்டது போல், பஞ்சாப், அரியானா, மேற்கு உ.பி. ஆகிய பகுதிகள் முதலாளித்துவ முறையினுள் அதிக வளர்ச்சி அடைந்து, அரசு கொள்முதல், மண்டிகள் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவற்றை வலுவாக பெற்றிருந்தன. இவ்வாறு வலுவாக இல்லாத இடங்களிலும் நிச்சயமாக கிளர்ச்சிகள் காணப்பட்டன. ஆனால் தொடர் போராட்டமாக இல்லாமல், தில்லி எல்லையில் போராடும் விவசாயிகளுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், சில இடங்களில் பந்த் போன்றவை நிகழ்ந்தேறின.

மேலும் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமானது, மத்திய ஆளும் அரசும், கட்சியும் போராட்டத்தை உடைக்க பல்வேறு வழிகளை கையாண்டும், பிரிவினைவாதிகள், காலிஸ்தானிகள் எனக் கூறி ஒற்றுமையை உடைக்க பல அரசியல் நாடகங்கள் நிகழ்த்திய போதிலும், இவை அனைத்தையும் விவசாயிகள் பெரும் துணிச்சலுடன் எதிர் கொண்டனர். இந்த போராட்டம் நவம்பர் மாத கடும் குளிரிலும், மழையிலும் துவங்கியது. எனினும் பல விவசாயிகளும், ஆண்களும், பெண்களும், தங்கள் குழந்தை குடும்பங்களோடு போராட்டத்திற்கு வந்தனர். கடும் தாக்குதலை எதிர் கொண்டனர். அரசு இந்த சட்டங்களை திரும்பப் பெற முக்கிய காரணம், ஒற்றுமையை குலைக்க எவ்வளவு முயன்ற போதிலும் அதில் வெற்றி காண முடியாததே ஆகும்.

இந்த போராட்டத்தில் பங்கெடுத்தோர் பலர் இந்த குளிரை தாங்கக் கூடியவர்கள் என்றாலும், போராட்ட காலத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதைத் தவிர அரியானாவில் போலீஸ் தாக்குதலில் உயிர் நீத்த தியாகிகள், லக்கிம்பூர் கேரியில் மத்திய அமைச்சர் மகன் வண்டியேற்றி கொல்லப்பட்ட 15 தியாகிகள் என 700க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் உயிர் நீத்தனர். இவை அனைத்தையும் துணிவுடன் சந்தித்து உறுதியுடன் நின்றதே இந்த போராட்டத்தின் மிக முக்கிய அம்சம் ஆகும்.

போராட்டத்தின் அரசியல் அம்சங்கள், அரசியல் சூழல்

2019இல் கூடுதல் பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி அமைத்த பின்பு, நவ தாராளமய கொள்கைகளை அதி தீவிரமாக முன்னெடுத்தது. இதனுடன் சேர்ந்து ஹிந்துத்துவ தாக்குதலும் தீவிரம் அடைந்தது. ஜம்மு காஷ்மீர் உடைக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதை கண்டோம். பின்னர் பிரிவினைவாத குடியுரிமை திருத்த சட்டம் அமலாக்கப்பட்டதைக் கண்டோம். அதன் பின் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களும், தில்லி கலவரங்களும் நடந்தேறின. இதைத் தவிர பொருளாதார ரீதியாக, தனியார்மயம் தீவிரம் அடைந்திருப்பதைப் பார்க்கிறோம். பொதுத்துறையை முற்றிலும் ஒழித்துக் கட்டும் வகையில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மூன்று வேளாண் சட்டங்களும் நவீன தாராளமய கொள்கைகளின் அங்கமே.

இந்த பின்னணியில், வேளாண் சட்டங்கள் இயற்றப்படும் முன்னர், ஒரு மாபெரும் வெகுஜன போராட்டம் ஏற்பட்டது. அது சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டம். நாடு முழுமையில் இருந்தும் மாபெரும் ஒருங்கிணைப்பைக் கண்டோம். ஆனால் பெருந்தொற்று மற்றும் நாட்டடங்கு காலத்தில் இது நிறுத்தப்பட்டது.

ஆனால் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், இந்த சட்டங்களானது பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சட்டம் என்ற தெளிவான புரிதல் இருந்தது. அதனால்தான், இதற்கு எதிராக, விவசாயிகள் வெறும் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என மட்டும் கோராமல், சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையின்படியான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உறுதி வேண்டும் என்றும், மின்சார துறையில் தனியார்மயத்திற்கு வழி வகுத்து, மின்சார விலை அதிகரிப்பிற்கு வழி வகுக்கும் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றும் சேர்த்தே முழக்கமிட்டனர். இவை அனைத்தும் போராட்டத்தின் துவக்கத்தில் இருந்தே முன்னெடுக்கப்பட்டது. ஆகையால்தான், இந்த போராட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள் அனைத்தும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கும், நவ தாராளமய கொள்கைகளுக்கும் எதிராகவே அமைந்தன. இது ஒரு முக்கிய அரசியல் கூறு.

மேலும், குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில், ஏறத்தாழ அனைத்து ஊரக குடும்பங்களும் போராட்டத்தில் பங்கெடுத்தன. இம்மாநிலத்தில் பார்த்தால், ஊரக நிலப்பிரபுத்துவ மற்றும் செல்வந்தர் விவசாயிகளின் பிரதிநிதி கட்சியான அகாளி தளம் கட்சி பா.ஜ.க உடனான கூட்டணியை முறித்துக் கொண்டது. வாஜ்பாய் காலத்திற்கு முன்பிருந்தே கூட்டணியில் இருந்து வந்த இக்கட்சி விலகியதால் பஞ்சாபில் பா.ஜ.க முற்றிலும் தனிமைப்பட்டு நின்றது. மேலும் முன்னர் கூறியது போலவே, கடுமையான மதவாத பிளவு ஏற்பட்டிருந்த மேற்கு உ.பி.யில், இந்த இயக்கத்தின் மூலம் பிளவு ஓரளவு சீரடைந்தது.

மேலும் இப்போராட்டத்தின் ஒரு முக்கிய அரசியல் அம்சம் என்னவென்றால், செப்டம்பர் 2020இல் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளித்த பிராந்திய கட்சிகளும் கூட அதன் பிறகு பின்வாங்கின. பந்த் அழைப்பு விடுக்கப்பட்ட பொழுது, முன்னர் சட்டங்களுக்கு ஆதரவு அளித்த ஆந்திராவின் YSR காங்கிரஸ் அரசும், ஒரிசாவின் பிஜு ஜனதாதள அரசும் பந்த் அழைப்பிற்கு ஆதரவு அளித்தது. மேலும் தெலுங்கானா TRS அரசும் வலுவாக எதிர்த்தது. இவை ஏதும் முன்னர் பா.ஜ.க-வை கடுமையாக எதிர்த்த கட்சிகள் அல்ல. ஆக, இந்த வேளாண் சட்டத்தின் காரணமாக, நடுநிலையாளர்களும், பா.ஜ.க ஆதரவாளர்களும் எதிர்க்குரல் எழுப்ப நிர்ப்பந்திக்கப்பட்டனர். மேலும், வெறும் இந்த சட்டம் குறித்து மட்டுமல்லாமல், இன்று நாம் பார்ப்பது போல், TRS போன்ற கட்சிகள் முழுமையாக பா.ஜ.க எதிர்ப்பு நிலைபாட்டை எடுத்துள்ளது.

அடுத்து கவனிக்க வேண்டிய முக்கியமான அரசியல் கூறு என்னவென்றால், முதல் முறையாக ஒரு தீவிர நவ தாராளமய கொள்கையில் இருந்து மோடி அரசாங்கம் பின் வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டது. இது மிகவும் முக்கிய அம்சம். ஏனெனில் இந்த போராட்டமானது, நவ தாராளமய கொள்கைகளை எதிர்த்துப் போராடி, அதை திரும்பப் பெறச் செய்ய முடியும் என்பதை காட்டியுள்ளது.

இந்த சட்டத்தை திரும்பப் பெறுவதில் ஒரு முக்கிய பங்கு வகித்தது, பஞ்சாப் மற்றும் உ.பி.யில் வரவிருந்த சட்டமன்ற தேர்தல்கள். ஏற்கனவே கூறியது போல இந்த இயக்கம்  பா.ஜ.க-வை தனிமைப் படுத்தியது. இந்த சட்டங்களை திரும்பப் பெறாவிடில், பஞ்சாப் கிராமங்களில் பிரசாரத்திற்கு நுழையக் கூட முடியாது என உணர்ந்தது பா.ஜ.க. லக்கிம்பூர் கேரியில் மத்திய அமைச்சர் ஆதரவுடன் மகன் விவசாயிகளை வண்டியேற்றி கொன்றது உ.பி. மாநிலம் முழுதும் எதிர்ப்பலைகளை எழச் செய்தது. மேலும் இந்த இயக்கத்தால் மேற்கு உ.பி.யில் ஜாட்-முஸ்லிம் ஒற்றுமை வளர்ந்ததை அடுத்து, 2017 சட்டமன்ற தேர்தலில் இங்கு 58ல் 53 இடங்களை வென்ற பா.ஜ.க., மொத்தத்தையும் இழக்கும் அபாயத்தை உணர்ந்தது. மேலும், சட்டங்களை திரும்பப் பெற்றால், அவர்களின் வழக்கமான சூழ்ச்சியான மதப் பிரிவினைவாதத்தை மீண்டும் முன்னுக்கு கொண்டு வரலாம் எனவும் நினத்தது பா.ஜ.க.

அரியானாவில் தேர்தல்கள் இல்லாதபோதும், அனைத்து சாதி விவசாயிகள்  இடையே ஒற்றுமை உண்டானது. குறிப்பாக, பெரும்பான்மை வகிக்கும் ஜாட் வகுப்பினருக்கும் இதர வகுப்பினருக்கும் இடையே தொடர் ஒற்றுமை நீடிப்பதை பா.ஜ.க. விரும்பவில்லை.

மேலும் போராட்டம் வெடித்த இடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். தில்லியின் எல்லை மாநிலங்களான அரியானா, உ.பி., பஞ்சாப் மாநிலங்களில் தான் இந்த சட்டத்தின் தாக்கம் தீவிரமாக இருந்தது. இதனால் இம்மாநிலத்தில் இருந்து ஆண்டு முழுவதும் விவசாயிகள் வர இயன்றது. இதன் தாக்கம் வேறு பகுதிகளில் இருந்திருந்தால் இப்படி ஆண்டு முழுவதுமான போராட்டத்தை நடத்த முடியாமல் போக வாய்ப்புள்ளது.

மேலும் இந்த சட்டத்தின் தாக்கம் அனைத்து வகுப்பினர் மீதும் இருந்ததால், இதை எளிதில் ஒடுக்க முடியவில்லை. குறிப்பாக பெரும்பான்மை ஜாட் வகுப்பினர் பங்கு பெற்றதன் காரணத்தால், ஒடுக்குவது கடினமானது. சீக்கிய விவசாயிகள் உள்ளேயும் ஜாட் விவசாயிகளே பெரும்பான்மை. பஞ்சாப்பில் பார்த்தால், ஏழை விவசாய வர்க்கம் முதல் முதலாளித்துவ விவசாய வர்க்கம் வரை அனைவரும் எதிர்த்தனர். இது போன்ற திடமான ஒற்றுமை இருந்தது. இதனால் ப.ஜ.க, மற்றும் அதன் அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளுக்கு இந்த போராட்டத்தை அடக்கி ஒடுக்க சிரமமாக இருந்தது. இதுவே தலித் வகுப்பினர் போன்ற ஒரேயொரு ஒடுக்கப்பட்ட சமூகம் மட்டும் தனித்து போராடி இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தி போராட்டத்தை ஒடுக்கி இருப்பார்கள். ஆனால் இந்த பெரும்பான்மை ஒற்றுமை இதை சாத்தியமற்றதாக்கிற்று. குறிப்பாக பஞ்சாப்பை பார்த்தால் இது உண்மையான வெகுஜன மக்களின் போராட்டமாக இருந்தது.

இப்போது வர்க்க ஆய்விற்கு வந்தால். பிரதானமாக இருந்தது இந்த பரந்துபட்ட உழவர்களின் ஒற்றுமைக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் இடையேயான முரண்பாடு. இயக்கத்தின் போக்கில் பல முறை, சாதாரண உழவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கூட, இந்த சட்டமானது அம்பானி மற்றும் அதானிகளுக்கான சட்டம் என குறிப்பிட்டு வந்தனர். இவர்கள் விவசாய உற்பத்தி விற்பனை துறையில் விரைவாக உள் நுழைவதை தெளிவாகவே பார்க்க முடிகிறது. இவர்கள் வந்தால் தங்கள் வாழ்வு உருக்குலையும் என்ற பார்வையும் தெளிவாகவே இருந்தது.

இரண்டாவதாக, இதுவரை வரலாறு காணாத தொழிலாளர்-விவசாய ஒற்றுமை. ஆண்டு முழுவதும் SKM தலைவர்கள் தொழிற்சங்க தலைவர்களை அழைத்து விவசாயிகளிடம் உரையாற்ற அழைப்பார்கள். கூட்டு பேரணிகள், போராட்ட தினங்கள் அனுசரிக்கப்பட்டன. பொதுத்துறை தனியார்மயத்திற்கு எதிரான போராட்டத்திற்கு SKM ஆதரவு அளித்தது. இது முக்கிய வளர்ச்சி ஆகும். ஏனெனில், வரும் காலங்களிலும், நவ தாராளமய கொள்கைகளை வலுவாக எதிர்க்க வேண்டுமாயின், இந்த தொழிலாளர்-விவசாய-விவசாய தொழிலாளர் அடிப்படை வர்க்கங்கள் ஒன்றிணைவதே அடிப்படை தேவை ஆகும்.

இந்த ஓராண்டு போராட்டம் அனைத்து விவசாய சங்கங்களுக்கும் கற்பித்தது என்னவென்றால், இப்படிப்பட்ட பரந்துபட்ட வர்க்கங்களிடையேயான ஒற்றுமையை நிலைநாட்டுவது மிக அவசியம் என்பதைத் தான். இந்த போராட்டத்தின் பங்கேற்பு அமைப்புகளை பார்த்தாலே இது புரியும். மேற்கு உ.பி.யில் முன்னாளில் பா.ஜ.க.-விற்கு ஆதரவாக செயல்பட்ட BKU சங்கம், திகாயத் போன்றோர் இந்த இயக்கத்தில் இணைந்தனர். அரியானாவில் மிக பிற்போக்கு சிந்தனையுடன் செயல்படும் “காப் பஞ்சாயத்” அமைப்புகள் தங்கள் மன நிலையை மாற்றி, பெண்களை முன் வந்து போராட ஊக்குவித்தனர். ஆக, இந்த போராட்டத்தின் அனுபவங்கள், அரசு பயங்கரவாதத்தை எதிர்க்கும் அனுபவங்கள், பரந்துபட்ட ஒற்றுமையையும் தோழமையையும் பறைசாற்றும் அனுபவங்கள் அனைத்தும் வரும் காலங்களில் மேலும் பரந்துபட்ட வர்க்க ஒற்றுமையை கட்டி அமைத்து, மோடி அரசின் கொள்கைகளை எதிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

நிறைவாக

அண்மையில் நடைபெற்றா இந்த  விவசாயிகள் போராட்டமே இதுவரை சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான, மிக தொடர்ச்சியான விவசாய போராட்டம். மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறச் செய்தது இதை வரலாற்று சிறப்பு மிக்கதாக்குகிறது. வர்க்க அடிப்படையில் பார்த்தால், ஒன்றுபட்ட விவசாயிகள்  மாபெரும் வெற்றி கண்டுள்ளனர். இந்த கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களை திரும்பப் பெறச் செய்தது நவ தாராளமய கொள்கைகள் மீதான மிகப் பெரும் தாக்குதல். மேலும் இயக்கத்தின் ஒற்றுமையின் மூலம், ஓரளவு பிராந்திய. மதப் பிரிவினைகளை கடந்து வர முடிந்துள்ளது.

போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இந்த போராட்டம், நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் வலிமைப் படுத்தும். இதன் இக்கால உடனடி தாக்கமானது, அரியானா, பஞ்சாப் மற்றும் மேற்கு உ.பி. என்ற மூன்று பகுதிகளில் பா.ஜ.க தனிமைப்படுத்தப்பட்டுள்ளது தான்.

ஆனால், பிரிவினைகள் கடக்கப்பட்டது என்று சொல்லும் பொழுது எச்சரிக்கை அவசியம். இந்த பகுதிகளில், குறிப்பாக மேற்கு உ.பி.யில் ஹிந்துத்துவா சக்திகளின் ஊடுருவல் என்பது “ராம் ஜென்ம பூமி” காலத்தில் இருந்தே மிக தீவிரமாக உள்ளது. ஊரக மக்கள் மத்தியில் இது மிக கூர்மையாக உள்ளது. போராட்டத்தால் பிரிவினைகள் சற்றே நிவர்த்தி ஆனாலும், தொடர்ச்சியான அரசியல் மற்றும் சித்தாந்த போராட்டத்தை நிகழ்த்துவது அவசியமாக உள்ளது. இல்லையேல் நிலைமை மீண்டும் மோசம் அடையும் அபாயம் உள்ளது.

மேலும் இந்த விவசாயிகள் போராட்டத்தில் இடதுசாரி அமைப்புகள், தங்கள் விவசாய-விவசாய தொழிலாளர் சங்கங்கள் மூலம் முக்கிய பங்காற்றி உள்ளனர். இந்த பகுதிகளில் இடதுசாரி அமைப்பு ஒரு வெகுஜன சக்தி இல்லாதபோதும், கிடைத்துள்ள வெற்றி இடதுசாரி சக்திகளின் மதிப்பை கூட்டியுள்ளது. SKM தலைமையிலும், களத்திலும், இடதுசாரி தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து இடைவிடாது பணி புரிவதை போராடும் விவசாயிகள்  பார்த்துள்ளனர். ஆக, இதை பயன்படுத்தி இயக்க முன்னேற்றத்திற்கும், குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மத்தியில் பலத்தை கூட்டவும் உழைக்க வேண்டும்.

இறுதியாக, இந்த போராட்டமானது, “அடிப்படை வர்க்கங்களின்” பரந்துபட்ட வகுப்பினர் இடையேயான ஒற்றுமையை பிணைப்பதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது. இந்த போராட்டத்தின் போக்கில் இதை நாம் கண்டோம். போராட்டத்தின் போக்கில் 3 பந்த் அழைப்புகள் விடுக்கப்பட்ட போது, தொழிலாளர் வர்க்கமும் சேர்ந்து பங்கேற்றது. இதனால் உழவர்கள் தனிமைப்பட்டு நிற்கவில்லை. இது வரும் காலங்களில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக, தனியார்மயத்திற்கெதிரான போராட்டமானது வெறும் தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுடன் நின்று விட்டால் போராட்டம் நிச்சயம் வெல்லாது. இதன் பிரச்சனைகளை விவசாய வர்க்கங்களும் உணர்கின்றன. தனியார்மயத்தால் மின்சார விநியோகம் தனியார் கையில் சென்றால் தங்களுக்கும் ஆபத்து என உணர்கின்றனர். தனியார்மயம் ஏற்பட்டால் இட ஒதுக்கீடு அழிந்து போகும் என ஒடுக்கப்பட்ட வகுப்பினர் உணர்கின்றனர். ஆக, இது போன்ற இணைப்புகளை மேற்கொண்டு, நவ தாராளமய கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை ஒரு வெகுஜன போராட்டமாக மாற்றி அமைப்பது வரும் காலங்களின் அவசிய தேவையாக உள்ளது. இதற்கான பாதையை விவசாயிகள் போராட்டம் காண்பித்துள்ளது.

மேலும் வரும் காலங்களில் வெறும் பொருளாதார போராட்டங்கள் மூலம் ஆளும் சக்திகளை முறியடிக்க முடியாது. தொடர்ச்சியான சித்தாந்த, அரசியல் போராட்டங்களும் அவசியமாக உள்ளது.

இந்த போராட்டம் அளித்துள்ள அநேக படிப்பினைகளை பயன்படுத்தி, வரும் காலங்களில் முன்னேறுவோம் என நம்பிக்கை கொள்வோம்! தமிழில்: அபிநவ் சூர்யா

வளர்ச்சி என்ற பெயரில் நிகழும் வன்முறைக்கு எதிராக…

விஜூ கிருஷ்ணன்

தமிழில்: என். சுரேஷ் குமார்

கார்ப்பரேட் ஆதரவு சக்திகள், அரசின் துணையோடு பெருமளவு நிலங்களை கையகப் படுத்த முயற்சிக்கின்றன. எனினும், அவர்களது இந்த நடவடிக்கைகளை,  நில உரிமையாளர்கள் மற்றும் நிலத்தை சார்ந்தவர்கள் முன்னெப் போதும் இல்லாத அளவிலான ஒற்றுமையோடு எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

இந்தியா முழுமையும் கற்பனைக்கெட்டாத வகையில் நில அபகரிப்பு அரங்கேறி வருகிறது. மத்திய, மாநில அரசுகள், இந்திய, அந்நிய நிறு வனங்கள் மற்றும் தனிநபர்களும் கூட பெருமளவு நிலங்களை, மிகக் குறைந்த விலை கொடுத்து வாங்குகின்றனர்; அல்லது நீண்ட கால ஒப்பந்தம் மூலம் கையகப்படுத்துகின்றனர். சிறப்புப் பொருளா தார மண்டலங்கள், தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலங்கள், தொழில்துறை கூடங் கள், பொருளாதாரக் கூடங்கள், ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல புதிய பெயர்களோடு முன்னெடுக் கப்படும் பிரம்மாண்டமான திட்டங்கள் என்ற போர்வையில், இவர்கள் தடையற்ற மூலதன திரட்சிக்குச் சாதகமாகத் திகழ்பவர்களேயன்றி வேறல்லர்.

இவ்வாறான ஆக்கிரமிப்புகள், பலம் கொண்ட கார்ப்பரேட்டுகளின் சார்பாக, அரசின் தீவிர மான, திமிர்த்தனமான தலையீட்டையே வெளிப் படுத்துகின்றன.

நாடு முழுவதும் அரங்கேறுகிற இத்தகைய தளவாடக் கூடங்கள், தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆகியவை பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சூறையாடி வருகின்றன. முன்பு காலனியாதிக்க காலத்தில், எப்படி தேச எல்லைகள், அப்பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்களுக்கு அற்ப மதிப்பளித்து, வெறும் காகிதங்களில் வரைபடங்களாக வரையப்பட்டனவோ, அதனையொத்த ஒரு நடவடிக்கை இது எனலாம். ஆனால், காலனியாதிக்க யுகத்தைப் போலன்றி, இத்திட்டங்கள் மிகப் பெரும் கொந்தளிப்புகளை உருவாக்கியுள்ளன.

இவை பெருமளவு நிலங்களிலிருந்து அங்கிருந்த மக்களை அப்புறப்படுத்தியுள்ளன. இந்தப் பிரம் மாண்டமான கட்டமைப்புத் திட்டங்கள், தொழில் துறை கூடங்கள், சுரங்கங்கள், துறைமுகங்கள் மற்றும் பாசனம், நிலம் மற்றும் மனை சார்ந்த திட்டங்கள், விவசாயிகள், பழங்குடி மக்கள், வனவாசிகள், மீனவ சமூகத்தினர் மற்றும் ஏற் கனவே நிலையற்ற வாழ்நிலையில் உழலும் விளிம்பு நிலை மக்களை வெளியேற்றுகிற நடவடிக்கையை உள்ளடக்கியதாக உள்ளன. போராடிப் பெற்ற நில உரிமைகளை கிழித்தெறியவும், இந்த வாழ் வாதாரச் சூறையாடல் வகைசெய்கிறது.

மேலும்,  மாற்று இடம் வழங்கி, மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்ற வாய்ப்புகள் ஏதுமின்றி, அனைத்து நீதிக் கோட்பாடுகளையும் இது காற்றில் பறக்க விட்டுள்ளது. மூலதனத்தின் கண்மூடித்தனமான இத்தாக்குதல் எதிர்ப்புக்குள் ளாகாமல் இல்லை. நில அபகரிப்பு நடைபெற்ற இடங்களிலெல்லாம், அனைத்துத் தரப்பு மக்கள் கூட்டாக இணைந்தும், பாதிக்கப்பட்ட மக்கள் முன்னெப்போதும் கண்டிராத ஒற்றுமை உணர்வோடும் தொய்வற்ற போராட்டங்களை முன்னெடுப்பதை நம்மால் காண முடிகிறது.

நவீன தாராளமய முன்னெடுப்பு

பழமையான காலனியாதிக்க கால நிலம் கையகப்படுத்தல் சட்டம் 1894ன் படி நிலங்களை அபகரிப்பிற்கு எதிரான பெரும் எதிர்ப்புகள், பல்லாண்டுகளாகவே, இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும், கொடூரமான அடக்குமுறைக்கு ஆளாயின; உயிர் பலிகளும் ஏற்பட்டன. காங் கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) அரசு, பலதரப்பட்ட உடைமை யாளர்களுடனான விரிவான கலந்தாய்வு மற்றும் பாராளுமன்ற விவாதங்களுக்குப் பின்பு, உரிய இழப்பீடு மற்றும் வெளிப்படையான நிலம் கையகப்படுத்தல் உரிமையை உறுதி செய்ய,  நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம் 2013 ஐ நிறை வேற்றிட நிர்ப்பந்திக்கப்பட்டது.

நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம் 2013 பல குறைபாடுகளைக் கொண்ட தாக இருந்தது. அகில இந்திய விவசாயிகள் சங்கம், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்ட மைப்பு போன்ற அமைப்புகள் மற்றும் இடது சாரிக் கட்சிகளால் அவை சுட்டிக்காட்டப்பட்டு, பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தங்களாக கொண்டு வந்ததன் மூலம், விவசாயிகளின், நிலம் சார்ந்து பிழைப்பவர்களின் நலன்களை பாது காக்க வல்லதாக வலுப்படுத்தப்பட்டது. இச்சட்டத் தின் இறுதி வடிவமானது, (காங்கிரஸ் மற்றும் பாஜக இடையிலான சமரசத்தைத் தொடர்ந்து) நீர்த் துப் போனதாக இருந்தாலும், முந்தைய காலனிய காலத்து சட்டத்தை விட மேம்பட்டதாகவே இருந்தது. குறிப்பாக, முன்னரே தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும் என்ற நெறிமுறை, சமூக தாக்கம் குறித்த மதிப்பீட்டு கொள்கை இணைப்பு மற்றும் தேசத்தின் உணவுப் பாதுகாப்பு நலன் களை உறுதி செய்வது ஆகியன ஆகும்.

ஆட்சிக்கு வந்த பின், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம் 2013 மீதான அதன் முந்தைய நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்கிய தோடு, டிசம்பர் 2014-ல் அவசரச் சட்டங்கள் வாயிலாக சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளப் பார்த்தது. கார்ப்பரேட் லாபமீட்டலுக்கும், நிலச் சூதாட்டத்திற்கும் உகந்த வகையில் நில அபகரிப் பினை இது இலகுவாக்கியது. நடைமுறையில், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும் கூட இல்லாத வகையில் தனியார் கம்பெனிகளுக்காவும் நிலங் களை கையகப்படுத்தலாம்; அதற்கு ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை என்ற சாரத்தைக் கொண்டிருந்ததால், காலனியாதிக்கத்தை விட மிகவும் பிற்போக்கான நிலைக்குத் தள்ளியதாக இத்திருத்தம் அமைந்தது.

காலனியாதிக்க சட்டத்தின்படி, விவசாயி களின் ஒப்புதலைக் கோராமலேயே, பிரத்யேக அதிகார கோட்பாட்டின் கீழ் வலுக்கட்டாயமாக நிலங்களைப் பறிக்க முடியும். எனினும், அவை அரசின் திட்டங்களுக்காக மட்டுமே செய்யப் பட்டது. பாஜக அரசானது, ஜெர்மனியின் நாஜி காலத்திய நடவடிக்கைகளைப் போன்று, சட்டங் கள் இயற்றப்பட்டுவிட்டால், பொது பயன்பாடு என்ற பெயரில் கட்டுப்பாடற்ற நிலக் கையகப் படுத்தலை மேற்கொள்ள தடையேதும் இருக்க முடியாது என்கிறது.

இதன் விளைவாக, காலனியாதிக்க நிலம் கையகப்படுத்தல் சட்டம் 1894ன் கொடூரமான பல சரத்துக்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளிடமும், நிலம் சார்ந்து பிழைப்பவர் களிடமும் ஒப்புதல் கோருவது அவசியம் என்ற பிரிவை அகற்றியதன் மூலம், சமூகம் மீதான தாக்கத்தின் மதிப்பீட்டை முற்றிலுமாகத் துடைத்தெறிந்துள்ளது. புதிய பிரிவின் கீழான திட்டங்களுக்கு இந்நிபந்தனைகளிலிருந்து விலக்களிக்கப்படுகின்றது.

இது ஐந்து பகுதிகளை உள்ளடக்கிய சிறப்புப் பிரிவாகும். அதில் தொழிற்சாலைக் கூடங்கள் மற்றும் படுபாதகமான பொது-தனியார் கூட்டு என்ற பெயரிலான கட்டமைப்புத் திட்டங்களுக் கான நிலங்களும் அடங்கும். பெரும்பாலான கையகப்படுத்தல்கள் இவ்விரு பிரிவின் கீழ் வந்து விடுகிற காரணத்தால், நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம் 2013 லிருந்த குறைந்தபட்ச பாதுகாப்புகளையும் இல்லாமல் செய்து விட்டனர். அதோடு, வல்லுனர்களைக் கொண்ட மறுஆய்விற்கான வாய்ப்பும் மறுக்கப் பட்டு விட்டது.

அரசு, தொழிற்சாலைக் கூடங்களுக்கான வரையறையை, அக்கூடங்களுக்குச் செல்லும் குறிப்பிட்ட சாலை அல்லது தண்டவாளங்களின் இருபுறமும் உள்ள ஒரு கிலோமீட்டர் வரையி லான நிலங்களையும் உள்ளடக்கியது என மாற்றியிருக்கிறது. அகில இந்திய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், தேவையான அளவிற்கு மட்டுமே நிலங்கள் கையகப்படுத்தப் படுவதையும், நில உரிமையாளர்கள் சட்டப்பூர் வமாக பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் வழிவகைகள் அவசியம் என கோரிக்கை விடுத் துள்ளன.

நீர்த்துப் போகும் சமூக உரிமைகள்

எனினும், நில உரிமையாளர்கள், நிலம் சார்ந்தவர்கள் ஆகியோரின் உரிமைகள் மற்றும் சமூக உரிமைகள் நீர்த்துப் போகச் செய்யப்பட் டுள்ளன. மேலும், அடிப்படை வெளிப்படைத் தன்மை கோட்பாடுகள் கண்டு கொள்ளப்பட வில்லை. பல பயிர் விளையும் விளைநிலங்கள் மற்றும் நன்செய் விளைநிலங்களும் கூட எவ்வித நிபந்தனைகளுமின்றி அபகரிக்கப்படலாம் என்ற தன் வாயிலாக, உணவு பாதுகாப்பு சார்ந்த பாது காப்பு அம்சங்கள் யாவும் முற்றிலுமாக கைவிடப் பட்டுள்ளன.

நில உரிமையாளர்கள், நிலம் சார்ந்தவர்கள் நலன்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை மறுவாழ்வு, மீள் குடியேற்றத்திற்கான வாய்ப்பு கள் இதன்மூலம் முழுவதுமாக மறுக்கப்பட் டுள்ளன. நிலப் பயன்பாடு குறித்த கொள்கை களுக்கான முன்மொழிவுகள் ஏதும் மத்திய, மாநில அரசுகளிடம் இல்லை. அதிவேகமாக விரிவாகும் வருவாய், நிலப்பயன்பாட்டில் மாற்றங் களுக்கு வழிவகுப்பதோடு, கார்ப்பரேட் நிறுவனங் களின் கைகளில் முடிவில்லா லாபம் கொழிக்க இது வகை செய்கிறதே தவிர, உண்மையான நில உரிமையாளர்கள், நிலம் சார்ந்தவர்களுக்கு உரிய பங்கினை அளித்திட எந்த வழிமுறைகளும் செய்யப் படவில்லை.

குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்கப்படும் என அரசு சொல்வதென்பதும், குடும்பத்தின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை முழுவதுமாகப் பறித்து விட்டு, பெயரளவிற்கான ஒரு வேலையை தருவதேயாகும். இது இந்தியாவில் விவசாயம் என்பது பெரும்பாலும் விவசாயிகள் ஒட்டு மொத்த குடும்பமாக ஈடுபடுகிறார்கள் என்ற அடிப்படையை தகர்ப்பதாகும். மேலும், பலருக்கு ஏற்படும் இழப்புகளை ஒரு சிலருக்கு, பெயரளவில் பணி வழங்கி ஈடுசெய்யமுடியாது.

ஒன்றுதிரளும் பாதிக்கப்பட்டோர்

இந்த நடவடிக்கைகள் நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத எதிர்ப்பலைகளை உருவாக்கியது. தங்கள் நிலம் பறிப்பு, இருந்த ஒரே வாழ்வாதாரமும் இழப்பு என்ற வகையில், விவசாயிகள், நிலம் சார்ந்தவர்கள் ஒன்றுபட் டுள்ளனர். விவசாயிகளின் அமைப்பான அகில இந்திய விவசாயிகள் சங்கம், ஏனைய விவசாயத் தொழிலாளர்கள், ஆதிவாசிகள், தலித்துகள், வனவாசிகள் உள்ளிட்ட அனைவரையும் இணைத்து ‘பூமி அதிகார் அந்தோலன்’ (நில உரிமைகளுக் கான இயக்கம்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, பெரும் எதிர்ப்பியக்கம் கட்டமைக்கப்பட் டுள்ளது. எதிர்க்கட்சிகளும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவசரச் சட்டத்திற்கு எதிராக ஒன்று திரண்டுள்ளன. அரசியல் நெருக் கடிகளாலும், தேர்தலைக் கணக்கில் கொண்டும் மத்திய அரசு இம்முன்மொழிவுகளை ஒத்தி வைத்தது என்றாலும், அது தற்காலிகமானதே.

பாஜகவின் அதிரடி முயற்சிகள்

இருக்கின்ற நிலச்சீர்திருத்தம், நிலம் கையகப் படுத்தல், நில குத்தகை மற்றும் நிலப்பயன் பாட்டுச் சட்டங்களை புரட்டிப் போடுகிற முயற்சி கள் அதிவேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளன. டுஹசுசு 2013ஐத் திருத்துகிற தொடர் முயற்சிகள் தோல்வி கண்டதால், பா.ஜ.க நிலச்சீர்திருத்தத் திற்கான தன்னுடைய நிகழ்ச்சி நிரலை, தான் அல்லது தனது கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நிலச்சட்டங்களில் கைவைப்பதன் மூலம் அமலாக்க முனைந்துள்ளது.

சுதந்திரமாக செயல்படுவதாக பாசாங்கு கூட செய்யாத, நிதி ஆயோக், நிலம் சார்ந்த சட்டங் களில் உள்ள பயனுள்ள பல சரத்துக்களை நீர்த்துப் போகச் செய்ய பரிந்துரைத்துள்ளது. பல மாநிலங்கள், அதன் நில உச்சவரம்பு மற்றும் நிலப் பயன்பாட்டுச் சட்ட திட்டங்களைத் திருத்தி யுள்ளன. வசுந்தரா ராஜே தலைமையிலிருந்த பாஜக அரசு, ராஜஸ்தானில், சிறப்பு முதலீட்டு பகுதிச் சட்டம் மற்றும் நிலக் குவிப்பு திட்டத்தை சட்டமாக்கியுள்ளது.

ஆகஸ்ட் 2016ல் குஜராத், உரிய நிவாரணம் மற்றும் வெளிப்படையான நிலம் கையகப் படுத்தல் உரிமை, மறு வாழ்வு, மீள்குடியேற்றம் (குஜராத் சட்டத்திருத்தம்); ஆந்திராவில், நில சேகரிப்புச் சட்டம் என்ற பெயரிலும்; தெலுங்கானா 123 அரசு ஆணை வெளியிட்டு, அது உயர்நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்டதால், உரிய நிவாரணம் மற்றும் வெளிப்படையான நிலம் கையகப்படுத்தல் உரிமை, மறு வாழ்வு, மீள் குடியேற்றம் (தெலுங்கானா சட்டத்திருத்தம்) சட்டம் 2016 போன்ற சட்ட ரீதியான முயற்சிகள்,  நிலம் கையகப்படுத்துவதை இலகுவாக்கியது.

ஜார்க்கண்ட் பா.ஜ.க அரசானது, சோட்டா நகர் குத்தகை சட்டம் 1908ல் திருத்தங்களை மேற்கொண்டதோடு, சட்ட விரோத நில உரிமை மாற்றத்திற்கு எதிராகவும், சட்ட விரோதமாக மாற்றப்பட்ட பழங்குடி நிலங்களை அதன் உண் மையான உரிமையாளர்களுக்கே மீண்டும் தரு வது என்ற சரத்துக்களையும் கொண்ட சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம் 1949லும் சட்டத் திருத்தங்களை மேற்கொண்டது.

பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நவீன தாராளமயக் கொள்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதே நேரத்தில், காங்கிரஸ்- ஐக்கிய ஜனதா தளம் ஆளும் கர்நாடகா, பிஜூ ஜனதா தளம் ஆளும் ஒடிசா ஆகியவையும் இதில் சளைத்தவையல்ல. அவர்களும் நில அபகரிப்பினை எளிமையாக்கும் சட்டதிட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினரான தலித்து கள், ஆதிவாசிகள் இக்கொள்கைகளினால் மிகக் கொடூரமான தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். பஞ்சாயத்து (பட்டியல் பகுதிகளுக்கான விரி வாக்கம்) சட்டம் 1996, வன உரிமை கள் சட்டம் 2006, அரசியலமைப் பின் 5வது அட்டவணை உள்ளிட்டவை, சந்தே கத்திற்கு இடமின்றி பழங்குடியினர் நிலங்களை விற்பதோ, அவர்களுக்குள் மாற்றுவதோ தடை செய்யப்பட்டுள்ளது அல்லது தடுக்கப்பட்டுள் ளது என்று கூறினாலும், வளம்மிக்க அப்பகுதிகள் அதிகமாக குறி வைக்கப்படுவதோடு, இப்பகுதி களில்தான் சட்டத்திற்கு புறம்பான நில அபகரிப்பு புகார்கள் அதிகமாக எழுந்துள்ளன.

துயரங்களுக்கு இட்டுச் செல்லும் கூடங்கள்

இப்பின்னணியில் பெருமளவு நிலம் கையகப் படுத்தல், விவசாய நிலங்கள், வன நிலங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கென, சுரங்கம், தொழிற்சாலைகள் மற்றும் நகர்மய மாதலுக்கான சீரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங் கள் மற்றும் தொழில்மயமாக்கல் என்ற பெயரில் நிலம் கையகப்படுத்தலானது பெரும்பாலும் முறையற்ற வகைகளிலும், நில மனை விற்பனை நோக்கத்திற்கென தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு குறிப் பிடப்பட்ட நிலங்களுள் பயன்படுத்தப்படாதவை பற்றிச் சொல்லியுள்ளது. 2014-ல் சிறப்புப் பொருளா தார மண்டலங்களுக்கு ஒதுக்கப்பட்ட 45,053.63 ஹெக்டேர் நிலத்தில், 28,488.48 ஹெக்டேரில் மட்டுமே பணிகள் துவங்கப்பட்டுள்ளன. 17 மாநிலங்களில் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக வும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

96.58 சத சிறப்புப் பொருளாதார மண்டல நிலங்களை உபயோகிக்காமல் ஒடிசா மாநிலம் இதில் மிக மோசமான, முதன்மைக் குற்றவாளி யாக உள்ளது. இம் மாநிலத்தில், சட்டத்திற்குப் புறம்பாக இந்த நிலங்களை அடமானம் வைத்து, பத்தாண்டுகளில், ரூ.75,000 கோடிகளுக்கும் மேலாக பெறப்பட்டுள்ளது. 2 சதவீதத் திட்டங் கள் மட்டுமே தொடங்குவதற்கான  தயார் நிலை யில் உள்ளன. கையகப்படுத்தப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் அதனைச் சார்ந்த நிலங்களை குறிவைத்துப் பெற்ற பெரும்பான்மை நிறுவனங் கள் அவற்றின் சொந்த மதிப்பை உயர்த்திக் கொள்வதைத் தவிர வேறெதற்கும் அவற்றைப் பயன்படுத்தவில்லை.

பொதுப்பயன்பாடு என்று சொல்லி சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கென கையகப் படுத்தப்பட்ட பல ஹெக்டேர் நிலங்கள் பின்னர் வேறு பல காரணங்களுக்காகப் பயன்படுத்தப் பட்டன; அல்லது விற்கப்பட்டுள்ளன. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு என கைப் பற்றப்பட்ட நிலங்களை மடைமாற்றிய பல நிறுவனங்களில் ரிலையன்ஸ் குழுமம் மற்றும் எஸ்ஸார் ஸ்டீல்ஸ் ஆகியவை உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறப்புப் பொருளாதார மண்டல சட்டம் 2005 அமலாக்கப்பட்டதிலிருந்து, 60,374.76 ஹெக் டேருக்கான 576 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு முறையான ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 45,635.63 ஹெக் டேர் அளவுள்ள 392 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான அறிவிக்கை மார்ச் 2014ல் வெளியிடப்பட்டது. அறிவிக்கப்பட்ட 392ல் வெறும் 152 மட்டுமே செயல்பட்டன. மேலும், தணிக்கை அறிக்கையின்படி, சிறப்புப் பொருளா தார மண்டலங்களால் இந்தியப் பொருளா தாரத்தில் குறிப்பிடத்தக்க எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்ட கேள்வி யின்படி, முந்தைய சட்டங்கள் தான் மேம்பாட் டுக்கான திட்டங்களைத் தடுத்தன என்ற அரசின் வாதங்கள் முரணானவை என்பதை தெளிவு படுத்தி உள்ளது. 804 தொழிலகத் திட்டங்களில் 8 சதம் மட்டுமே நிலம் கையகப்படுத்தல் பிரச்சினைகளினால் தடைபட்டவை ஆகும்.

தொழிற்சாலை மற்றும் பொருளாதார கூடங் களின் சங்கிலித் தொடர் நாடு முழுவதும் திட்ட மிடப்பட்டது. டெல்லி – மும்பை தொழிற் கூடத்திற்கு 1,483 கி.மீ நீளமுள்ள, 6 மாநிலங் களைச் சார்ந்த பகுதிகள் ஒதுக்கப்பட்டது. தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலத்திற்கென 6 லட்சம் ஹெக்டேர் கணக்கிடப்பட்டுள்ளது. (ஒரு ஏக்கர் – 0.4 ஹெக்டெர்). விசாகபட்டினம் – சென்னை தொழிற்சாலை கூடங்கள் 800 கி.மீ நீளத்தில், கிழக்குக் கடற்கரைக் கூடத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது.

ஆந்திராவில் மட்டும் 4 முனைகள் மற்றும் 11 சாத்தியமான தொகுப்புகளுக்கென 79,960 ஏக்கர் நிலம் கையகப்படுத்த எண்ணி யுள்ளனர். இதற்கெனக் கண்டறியப்பட்ட 560 கிமீ நீளமுள்ள மூன்று முனைகளும் (தமிழகம், கர் நாடகம், ஆந்திரம் தலா ஒன்று) கொண்ட, சென்னை – பெங்களூரு தொழிற்சாலை கூடத்திற் கென, 47,563 ஏக்கருக்கும் மேலான நிலம் கையகப் படுத்தப்படும் அபாயம் உள்ளது. அமிர்த்ஸர் – கொல்கத்தா தொழிற்கூடத்திற்கென 1,840 கி.மீ ல், இதுவரை 17 முனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெங்களூரு – மும்பை பொருளாதாரக் கூடம், 1,000 கிமீ நீளத்தில், கர்நாடகா, மகாராஷ் டிராவில் 10, ஏனையவற்றில் தலா 2 கூடங்கள் அமையவுள்ளன. இப்புள்ளிவிவரங்கள் ஒரு சிறு அடையாளமே.

நாடு முழுவதும், ஏழு பிரத்யேக சரக்குப் பெட்டக ரயில் கூடங்களுக்கான திட்டமும், வடிவமைப்பும் பல கட்டங்களில் தயாராகி வருகின்றன. மெக்கின்சி மற்றும் வெவ்வேறு நிதியாளர்களான உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் ஜப்பான் வங்கி ஆகியவை சித்தரிக் கின்ற, தளவாடங்கள் வீணடிப்பைக் குறைப்பதற் கான முயற்சி மற்றும் சீனாவை எட்டுவதற்கான சர்வதேச ஒத்துழைப்பு என்பது, சுதந்திர வர்த்த கம் மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுக்கு உதவக்கூடிய ஐ.எம்.எஃப், உலகவங்கி, உலக வர்த்தக நிறுவனம் மற்றும் சர்வதேச பொருளா தார கூட்டமைப்பு ஆகியவற்றின் ஒன்றிணைந்த மற்றும் சர்வதேசக் கூடங்களின் வலைபின்னலின் ஒரு பகுதியே ஆகும்.

அது சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு உகந்த சட்டங்கள் மற்றும் நீதி அதிகாரத்திற்கான அனைத்து உபகரணங்களோடு, கட்டணத் தடைகள் ஏது மற்ற தடையற்ற சரக்கு பரிமாற்றத்தை அனுமதிக் கிற வகையில் அமலாகும். லைசென்ஸ்டு லார் சென்சி நூலின் ஆசிரியர் நிக்கோலஸ் ஹில்யார்டு, கட்டமைப்பு, நிதி., மற்றும் குளோபல் சவுத், இதனை இடத்தை காலத்தால் நிர்மூலமாக்குவது என்கிறார்.

அவர் மேலும் சொல்கிறார்: இது, பெரிய துரிதமான, ரயில்வே, சாலைகளை விடப் பெரியது; ஆழமான, பெரிய துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை விடப் பெரியது. தற்போது திட்ட மிடப்படும் கூடங்கள் யாவும், விலை நிர்ணயம் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்கப்படும் சுதந்திர வர்த்தக மண்டலங்களுமாகும். இத்தகைய பெரும் கூடங்கள், மிகப் பெரிய அளவில் செல்வ வளத்தை உறிஞ்சிடவே உலகம் முழுவதும் கட்டமைக்கப் படுகின்றன என்றும் அவர் சொல்கிறார்.

ஆந்திர மாநில மூலதன பகுதி மேம்பாட்டு ஆணையம் 8,603 ச.கிமீ (21 லட்சம் ஏக்கர்) அளவுள்ள நிலத்தைக் குறிவைத்துள்ளது. தயா ராகி வரும் தலைநகரமான அமராவதி 53,621 ஏக்கரில் அமையவுள்ளது. அதில் 32,000 ஏக்கர் நிலம், பல்வகைப்பட்ட,  பல போக விளைநிலங் களாகும். அவை யாவும், அப்பட்டமாக மிரட்டி, கட்டாயப்படுத்தி பறித்து, சேர்க்கப்பட்ட நிலங் களாகும். ஐரோப்பா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட எந்தவொரு பெரிய நாடு களின் தலைநகரங்கள் கூட இத்தனை பெரிய அளவு நிலத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஆந்திர அரசு, மசூலிப்பட்டின துறைமுகம் மற்றும் தொழிலகக் கூடத்திற்கென ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தை கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. ஒரு பொருத்தமான துறைமுகத்திற்குத் தேவையானதை விட பலப்பல மடங்கு நிலங்களை கையகப்படுத்தும் பெரும் நடவடிக்கையாகும் இது. மாநில அரசு 4 லட்சம் ஏக்கரை இதுவரை கையகப்படுத்தியுள்ளதோடு நிலவங்கிக்கென இன்னும் ஏழு லட்சம் ஏக்கர் நிலங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. தெலுங்கானா அரசும் 6 லட்சம் ஏக்கரை கையகப் படுத்தியுள்ளதோடு, இன்னும் பல லட்சம் ஏக்கர் நிலத்தை கைப்பற்ற திட்டமிடுகிறது.

நிதி ஆயோக், கடற்கரையோர பொருளாதார மண்டலங்களை சீரமைக்கப் பரிந்துரைத்துள்ளது. அவற்றில் 2,000 முதல் 3,000 சதுர கி.மீ. அல்லது 5 முதல் 7.5 லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள, சுற்றுச் சூழல் சீரழிவிற்கு ஆளாகக் கூடிய நிலங்களை உள்ளடக்கிய, இரண்டு திட்டங்கள் திட்டமிடப் பட்டுள்ளன. சாகர்மாலா திட்டம், 12 துறைமுகங்கள், 1,208 தீவுகளென விரிவாக்கப்பட உள்ளது. ஊடக தகவல் ஆணையத் தகவலின்படி, 2015 முதல் 2035 வரை படிப்படியாக, 415 திட்டங்களை, சுமார் 8 லட்சம் கோடி முதலீட்டில், புதிய துறை முகங்கள், துறைமுக நவீனமயம், மேம்பட்ட துறைமுக இணைப்பு, துறைமுகத்துடன் பிணைக் கப்பட்ட தொழில்மயம், கடற்கரையோர சமூக மேம்பாடு போன்றவை செயல்படுத்தப்பட உள்ளன.

உத்தரபிரதேசத்தில் நிலம் கையகப்படுத்தலால் 23,000 கிராமங்கள் பாதிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. யமுனா விரைவு பாதையைப் பொறுத்தவரை 1.43 லட்சம் ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டுள்ளது. கங்கை விரைவு பாதைக்கு 37,362 ஏக்கர், பிரத்யேக சரக்கு கூடங்களுக்கென ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் கைய கப்படுத்தப்பட உள்ளன. யமுனா விரைவு பாதைக் கென எடுக்கப்பட்ட நிலங்களில் பெருமளவு நிலங்கள், கோல்ஃப் மைதானம், ஃபார்முலா 1 ரேஸ் தடங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை தராத திட்டங்களுக்கென பயன்படுத்தப்படுகின்றன. முன்மொழியப்பட்டுள்ள 100 ஸ்மார்ட் சிட்டி திட்டமும் பரந்துபட்ட இடம்பெயர்விற்கே வழிவகுக்கும்.

இத்திட்டங்களுக்கென தவறாகப் பயன்படுத்தப்படும் தண்ணீர், கடும் ஏற்றத்தாழ்விற்கும், பற்றாக்குறைக்கும் இட்டுச் செல்லும் என்பதே உண்மை. குறிப்பாக, மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள ஸ்மார்ட் சிட்டியான மணிப்பூர், சுற்றுச்சூழல் சீரழிவுக்கான அபாயம் மிக்கதாகும். அது மக்கள் தொகையில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவதோடு, முக்கியமாக பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் சமூகப் பதற்றத்திற்கு வித்திடுவதுமாகும்.

பிரம்மாண்ட பாசனத் திட்டங்களான போலாவரம் அணை, மல்லனாசாகர் (ஆந்திரா/தெலுங் கானா) ஆகியன ஒடிசா, சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடும் தாக்கங்களை உருவாக்குவதோடு, பெரிய அளவு நிலஅழிவிற்கும் வழிவகுக்கும். அரசு விவரங்களின் படி, ஆந்திரா, தெலுங்கானா, போலாவரம் திட்டம், 276 கிராமங்களைப் பாதிக் கின்ற வகையில், ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை உள்ளடக்கியதாகும். மல்லனாசாகர் திட்டத்திற்கு, 18,000 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டதில் 16 கிராமங்கள், 5,000 ஏக்கர் உள்ளடங்கியதாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது குடிபெயரும் மக்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை நர்மதா பள்ளத்தாக்கு மக்களின் மிக மோசமான மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அனுபவங்களே சுட்டிக்காட்டும்.

இவ்வாறு நிலம் கையகப்படுத்தப்பட்ட இடங்களிலெல்லாம், விளிம்பு நிலையில் உள்ள நிலமற்ற, குத்தகைதாரர்கள், விவசாயத் தொழி லாளர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் உள்ளிட்ட மக்களே மிகக்கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர். ஆந்திராவில் தலித் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள், அதனையொத்த மேல் சாதியினரின் நிலங்களை விட மிகக் குறைவான விலை கொடுத்து பறிக்கப் பட்டுள்ளது.

எவ்வித இழப்பீடோ அல்லது மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றங்கள் இல்லாமல் அரசு தன்னிச்சையாக நிலங்களை எடுத்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பயனற்ற நிலங்கள் பற்றிய சர்வே, பல தலைமுறைகளாக பயிர் செய்து வரும் சிறிய, நடுத்தர விவசாயிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு பயன்பட்டுள்ளது. கர்நாடகாவில், பாஹிர்ஷகும் விளைச்சல்தாரர்கள் என அழைக்கப்படும் 40 லட்சம் பயிரிடுவோர் அம்மாநில காங்கிரஸ் அரசின் கொள்கையால் நிலங்களிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்தில் உள்ளனர்.

நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கையானது செல்வ வளம் மற்றும் வாழ்வாதாரங்களை மக்களிடமிருந்து பறித்து, கார்ப்பரேட்டுகளுக்கு மடைமாற்றும் வகையில் திரட்டிடும் ஆகப் பெரும் முதன்மை கருவியாக உருவெடுத்துள்ளது. அரசின் பாத்திரம் மிகப் பெரும் ஏமாற்றமளிப் பதாக இருப்பது இனியும் தொடர முடியாது. அதிகாரவர்க்கத்தின் சார்பாக அரசு அதி தீவிரமாக தலையிட்டு, அவர்கள் வைத்திருக்கும் சிறு நிலத்திலிருந்து மக்களை வெளியேற்றுவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இருந்த சட்டரீதியான பாதுகாப்புகள் அனைத்தையும் தகர்த்தெறியவும் அனுமதிக்கிறது.

FRA மற்றும் PESA ஆகிய சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டு, பட்டியலிடப்பட்ட பகுதிகளில் லட்சக்கணக்கானோர் வன உரிமை, நில பட்டா, விண்ணப்பங்கள் ஆகியவை  திட்டமிட்டு மறுக்கப்பட்டன. இமாச்சலப் பிரதேசத்தில் தலித் மக்களுக்கான நிலங்கள்; ஆந்திரா, தெலுங்கானாவில் ஏழை மக்களுக்கான டி ஃபார்ம் பட்டாக்கள், தலித் நிலம் மற்றும் ஏனைய மாநிலங்களில் உள்ள எளிய மக்களின் நிலங்கள் தற்போது அபகரிப்பிற்கென குறிவைக்கப்பட்டு வருகின்றன. குத்தகை விவசாயிகள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் ஆகியோர் மறுவாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் வாழ்நிலை பாதுகாப்பு மறுக்கப்பட்டவர்களாக உள்ளனர். LARR 2013ஐ மறுதலிப்பதால் நிலம் சார்ந்து இருப்பவர்களுக்கான குறைந்த பட்ச பாதுகாப்பும் சூறையாடப்பட்டுவிட்டது.

வேதாந்தா வழக்கில், 2013ல் உயர்நீதிமன்றம் 12 கிராமப்புற பஞ்சாயத்துக்கள் ஒடிசாவின் நியாம்கிரி மலையின், டோங்கியா கொந்த், குடியாகந்தா மற்றும் ஏனைய மலைவாழ் மக்கள், மலைகளின் மீதான மதம் சார்ந்த மற்றும் ஏனைய உரிமைகளை அவர்களே தீர்மானிக்கலாம் என தீர்ப்பளித்தது. மேலும், நியாம்கிரி மலையடிவாரத்தில் உள்ள லாஞ்சிகார் சுரங்கத்தில் பாக்சைட்டை வெட்டியெடுப்பது, அவர்களது பாரம்பரிய மத உரிமைகளை பாதிக்கிறதா, இல்லையா என்பதை அவர்களே தீர்மானிக்கலாம் என்று உரிமையையும் வழங்கியது.

மேலும், சிறப்பு வாய்ந்த இத்தீர்ப்பு, சுரங்கத்தால் உரிமைகள் பாதிக்கப்படுமானால், சுரங்கம் தோண்ட வழங்கப்பட்ட உரிமை ரத்து செய்யப் பட்டதாக கருதப்படும் என்றும் தீர்ப்பளித்தது. ஒடிசா சுரங்க நிறுவனம், வேதாந்தாவுடன் கைகோர்த்து திட்டமிட்ட சுரங்கத் திட்டத்தை அந்த 12 கிராம பஞ்சாயத்துகள் ஏக மனதோடு நிராகரித்தன. சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டத்திற்கு வழங்கிய ஒப்புதலை ரத்து செய்தது.

பழங்குடி மக்கள் ஒப்புதல் பெறுவதை கைவிடச் செய்ய பாஜக தலைமையிலான பா.ஜ.க கூட்டணி அரசு தொடர்ந்து முயற்சித்தது. சமீபத்திய உதாரணமாக, ஜார்க்கண்டில் விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நிலங்களாக மாற்ற அனுமதிக்கும் வகையில் பழங்குடி மக்களின் நில உரிமையை பாதுகாத்து வந்த குத்தகைதாரர் சட்டத்தை திருத்தியது. மிகக்குறைவான மதிப்பீடு மற்றும் அப்பட்டமான உரிமை மறுப்பு ஆகியவற்றின் மூலம் தலித் நிலங்கள் பெருமளவில் கையகப்படுத்தப்பட்டது என பல்வேறு பகுதிகளிலிருந்தும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

எழுச்சி மிக்க எதிர்ப்பு

 விவசாயிகள், வாழ்வாதாரத்திற்காக நிலத்தை சார்ந்திருப்போர் ஒன்றுபட்டு மூலதனத்தின் தாக்குதலை எதிர்கொள்வதில்தான் அவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்பதை நன்கு உணர்ந்துள்ளனர். போலாவரம், மல்லனா சாகர், நர்மதா, வனம், சிறப்பு பொருளாதார மண்டலம், தொழிற்சாலை கூடங்கள், துறைமுகம் என  அனைத்து வகைத் திட்டங்களுக்கு எதிராகவும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் அடக்குமுறைக்கு மத்தியிலும் உறுதியான எதிர்ப்புகளும், போராட்டங்களும் எழுந்து வருகின்றன.

பல வகையான தொழில்மயமாதல், கனிம வள சுரண்டல், வனச் சுரண்டல், நீராதாரங்கள் சுரண்டல் உள்ளிட்ட பல கூறுகளை கவனமாக ஆய்வு செய்து, செய்த தவறுகளிலிருந்து பெற்ற படிப்பினைகளையும் இணைத்து மேற்கொள்ளப்பட்ட நிலம் கையகப்படுத்துதலை எதிர்த்த இயக்கம் மேம்பட்டதொரு நிலையை அடைய உதவியுள்ளது. பகுதி பகுதியாக பிளவுபடுதலுக்கு மாறாக, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும், வலைப்பின்னல் தொடர்புடனான ஒன்றுபட்ட எதிர்ப்பியக்கங்கள் அவசியம் என்பதை போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளும் உணர்ந்துள்ளன.

நிலம் கையகப்படுத்தலை எதிர்த்து தொடங்கப்பட்ட பாரத் அதிகார் அந்தோலன் தற்போது பல மாநிலங்களிலும் விரிவடைந்துள்ளது. நர்மதா பள்ளத்தாக்கில் 40,000 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதற்கு எதிரான போராட்டத்திற்கு தீவிரமான ஆதரவு, கந்தார் அணை பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட்ட போராட்டத்துடனான இணைப்பு, டெல்லி – மும்பை தொழிற்சாலை கூடத்தின் ரெய்காடு மாவட்ட கையகப்படுத்தலுக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டங்களில் பரந்து பட்ட பிணைப்புகள் வலுப்பட்டுள்ளன.

மேலும் இது, அரசின் உபரி நிலங்களில் பல தலைமுறைகளாக பயிர் செய்து வரும் விவசாயிகளை பெருமளவில் வெளியேற்றுவதற்கு எதிராகவும் மற்றும் ஆதிவாசிகள் மற்றும் பாரம்பரிய வனவாசிகளின் வன உரிமைகளை பாதுகாக்கும் போராட்டங்களோடும் பிணைக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பொருளாதார மண்டலம், தொழில்மயம் மற்றும் இன்னும் பல பெயர்களில் கையகப் படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பல வருடங்களாகப் பயன்படுத்தப்படாமலேயே உள்ளன. இவை நிலமற்றவர்களை திரட்டுவதற்கான மற்றும் மீட்கப்பட வேண்டிய நிலங்களாக மாறப் போகின்றன. ஜமீன் வாப்சி என்ற முழக்கம் எதிர்காலத்திற்கான தெளிவான அறைகூவலாக அமையும்.

கனிம வளங்கள், வனங்கள் மற்றும் நீர் ஆதாரங்களை கொள்ளையடிக்க வழிவகை செய்வதை நோக்கமாகக் கொண்ட கண்மூடித்தனமான நில கையகப்படுத்தலுக்கு எதிரான போராட்டமானது நில மறு பங்கீடு சீர்திருத்தத்தை நோக்கிய போராட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். மேலும், அது வீடற்றவர்களுக்கு வசிப்பிடங்களையும், வாழ்வாதாரத்திற்கான பாதுகாப்பினையும் உறுதி செய்வதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியும் ஆகும்.

விவசாயிகளைப் பொறுத்தவரை, முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிந்து கிடக்கும் வருமானத்தால் தள்ளாடி வருகின்ற, பெரிய அளவிலான கட்டாய நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கைகளால் தங்களின் ஒரே வாழ்வாதாரத்தை அவர்கள் இழந்து நிற்கும் நிலையில், மிக நீண்ட காலமாக தடைபட்டிருந்த, பரந்துபட்ட ஒற்றுமை கொண்ட எதிர்ப்பு மேடையினை உருவாக்குவதற்கான நல்ல வாய்ப்பினையும் இது ஏற்படுத்தி யுள்ளது.

(கட்டுரையாளர், இணைச் செயலாளர், அகில இந்திய விவசாயிகள் சங்கம்)

விவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …

– அசோக் தாவாலே

தமிழில்: வீ.பா.கணேசன்

குரல்: நிவேதா

விவசாயப் புரட்சியின் நோக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சித் திட்டம் இந்தியப் புரட்சியின் தற்போதைய கட்டத்தை  மக்கள் ஜனநாயகம் என்ற கட்டமாக விவரிக்கிறது. அது வரையறுத்துள்ள மூன்று முக்கிய கடமைகள் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஏகபோக மூலதன எதிர்ப்பு, நிலப் பிரபுத்துவ எதிர்ப்பு ஆகியவை ஆகும்.

விவசாயப் புரட்சியே மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அச்சாணியாகக் கருதப்படுகிறது.

இதை விளக்கும் வகையில் பாரா 3. 15-ல் கட்சித் திட்டம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது

“விவசாயப் பிரச்சனை என்பதே இந்திய மக்களின் முன்பாக உள்ள மிக முக்கியமான தேசியப் பிரச்சனையாகத் தொடர்ந்து நீடிக்கிறது. அதனை தீர்த்து வைப்பதற்கு கிராமப்புறத்தில் நிலவி வரும் நிலப்பிரபுத்துவம், வட்டிக்காரர்-வியாபாரிகளின் கூட்டுச் சுரண்டல், சாதி-பாலினம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒடுக்குமுறை போன்றவற்றை முற்றாக நீக்குவதையே இலக்காகக் கொண்ட தீவிரமான, முழுமையான விவசாய சீர்திருத்தங்கள் உள்ளிட்ட புரட்சிகரமான மாற்றம் தேவைப்படுகிறது. இந்தியாவில் நடைபெற்று வரும் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ ஆட்சியின் திவால் நிலைமை விவசாயப் பிரச்சனையை முற்போக்கான, ஜனநாயகபூர்வமான வழியில் தீர்ப்பதற்கல்ல; அதை அவ்வாறு அணுகுவதிலும் தவறியுள்ளது என்பதை மிகத் தெளிவாக வெளிப் படுத்துகிறது.”

ஒரு விவசாயப் புரட்சியை நோக்கி முன்னேறு வதற்காக 1940களில் கம்யூனிஸ்ட் கட்சியும் அகில இந்திய விவசாயிகள் சங்கமும் தொடர்ச்சியாக வரலாற்றுச் சிறப்புமிக்க, மகத்தான போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியுள்ளன. இந்தப் போராட்டங்கள் அனைத்துமே இந்தியாவின் விவசாய இயக்கத்தின் வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் தெரிந்தது போலவே, வஙகாளத்தில் தேபகா, கேரளாவில் வடக்கு மலபார் மற்றும் புன்னப்புரா-வயலார், திரிபுராவில் கணமுக்தி பரிஷத், அசாமில் சுர்மா பள்ளத்தாக்கு, தமிழ் நாட்டில் கீழத்தஞ்சை, மகாராஷ்ட்ராவில் தானே மாவட்டத்தில்  வொர்லி ஆதிவாசிகள் ஆகிய போராட்டங்கள் உள்ளடங்கியிருந்தன. இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் விளங்கு வதுதான் தெலுங்கானாவில் நடைபெற்ற விவசாயி களின் ஆயுதந்தாங்கிய போராட்டம்.
இந்தப் போராட்டங்கள் அனைத்துமே நிலப் பிரபுத்துவத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்து நடைபெற்றவை ஆகும். ஜமீன்தாரி முறையை ஒழித்து, தீவிரமான நிலச்சீர்திருத் தங்களை கொண்டுவர வேண்டுமென அவை கோரின. நிலப்பிரச்சனையை தங்களின் முக்கியமான நிகழ்ச்சி நிரலாகக் கொண்டே அவர்கள் போராடினர். விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் இதற்கான சட்டங்களை இயற்றி, கணிசமான அளவிற்கு நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் நிலமற்றவர்களுக்கு நிலத்தை மறுபங்கீடு செய்து தருவது ஆகியவற்றுக் கான ஒரு திட்டத்தை கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் நிறைவேற்றியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான, இடதுசாரிகளின் தலைமையிலான அரசுகள் மட்டுமே என்பதொன்றும் தற்செயலான விஷயமல்ல. இந்த நிலச்சீர்திருத்தங்களின் மூலம் பயன் பெற்றவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினரே ஆவர்.

விடுதலைக்குப் பிந்தைய பயணத்தின் பாதை
விடுதலைக்குப் பின்பு தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் அரசுகளின் விவசாயம் தொடர்பான கொள்கைகள் என்பவை அரை நிலப்பிரபுத்துவ நிலப்பிரபுக்களை முதலாளித்துவ நிலப்பிரபுக்களாக மாற்றுவதையும், பணக்கார விவசாயிகள் என்ற பிரிவை வளர்த்தெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகவே இருந்தன. இந்தக் கொள்கைகள் விவசாயிகள் மத்தியில் இருந்த வர்க்க வேறுபாடுகளுக்கு வழிகோலுவதாகவும், அதை மேலும் தீவிரப்படுத்துவதாகவும் இருந்தன.

பசுமைப் புரட்சி குறித்து ஆய்வு செய்த எஸ். ஆர். பிள்ளை எழுதியிருந்தார்: மூன்று தெளிவான நோக்கங்களுக்காகவே ஆளும் வர்க்கங்கள் பசுமைப் புரட்சிக்கான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தன:

ஒன்று, விவசாயப் புரட்சி குறித்த அச்சம்; இரண்டாவது, விவசாயத்தில் முதலாளித்துவ வகைப்பட்ட (உற்பத்தி) உறவு களை வளர்த்தெடுப்பது; மூன்றாவது, இரண்டு வகையான நலன்களுக்கு, அதாவது இந்திய முதலாளிகள் மற்றும் உரங்கள், பூச்சிக் கொல்லி கள், களைக்கொல்லிகள், விவசாயத்திற்கான இயந்திரங்கள் ஆகியவற்றை உருவாக்கும் விவசா யம் தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் நலன்களுக்கு, சேவை செய்வது. பசுமைப் புரட்சியின் தொழில்நுட்பமானது அதிக விளைச்சல் தரும் விதைவகைகள், நவீன இடுபொருட்களைப் பயன்படுத்தி விவசாயத்தில் உற்பத்தித்திறன், உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்கும் நோக்கம் கொண்டதாக இருந்தது.

இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியா திரும்பிப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. அதைத் தொடர்ந்து முடிவேயில்லாத விவசாய செழிப்பு மிக்க ஒரு புதிய சகாப்தம் உருவாகும்.

விவசாயத்துறையின் நோய்கள் அனைத்தையும் தீர்ப்பதற்கான இந்த மருந்து அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்துப் பகுதிகளுக்குமானது அல்ல என்பதும் மிக விரைவிலேயே தெளிவாகத் தெரிய வந்தது.

பாசன வசதி, கடன் வசதி மற்றும் இதர அம்சங் களைக் கொண்ட நிறுவனரீதியான கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு வளர்ச்சி பெற்றுள்ள பகுதிகளுக்கு மட்டுமே இந்த விதைகளையும், உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும், விவசாய கருவிகளையும் விநியோகம் செய்வது என்ற  ‘தேர்ந்தெடுக்கப்பட்ட நடைமுறைத் தந்திரம்’ என்பதன் அடிப்படையில் அமைந்ததாக இருந்தது. உற்பத்தித் திறனையும், உற்பத்தியையும் அதிகரிப் பதற்கு உதவி செய்வதாக இது இருந்தது.

எனினும் அதனோடு கூடவே இரண்டு வகையான அசமத்துவமும் வளர்ந்தது –“பகுதிகளுக்கு இடையிலான ஏற்றத் தாழ்வு; விவசாயிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு.”
இந்த அனுபவத்தின் அடிப்படையில், 1979-ம் ஆண்டில் வாரணாசியில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 23வது தேசிய மாநாடு வழக்கத்தை விட மாறுபட்ட ஒரு முடிவை மேற்கொண்டது. அது கீழ்க்கண்டவாறு துவங்கியது:

“ கட்டமைப்பு ரீதியான இந்த மாற்றங்கள், அவற்றின் பல்வேறு வகைப்பட்ட விளைவுகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, நிலப்பிரபுத்துவத்தை முழு மையாக ஒழிப்பது; நிலமற்றவர்களுக்கும் ஏழை களுக்கும் நிலத்தைப் பகிர்ந்தளிப்பது ஆகியவை விவசாயப் புரட்சியின் மைய முழக்கமாக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதோடு, இந்த முழக்கத்தை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும்  என்ற முடிவுக்கும் நாம் வந்துள்ளோம். எனினும் இந்த கோஷத்தை வைத்துக் கொண்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நம்மால் செயலில் இறங்க முடியாத நிலையே நீடிக்கிறது. (நமது) மையமான கோஷமாக இதைத் தொடர்ந்து எழுப்பி வந்தாலும் கூட, உபரி நிலம், பினாமி நிலங்கள், தரிசு நிலங்கள் போன்றவற்றுக் கான போராட்டங்களை தொடர்ந்து நாம் நடத்தி வந்தாலும் கூட, விவசாயத் தொழிலாளர்களின் கூலி, வீட்டு மனை, குத்தகைக் குறைப்பு, குத்தகைதாரர்களுக்கு உற்பத்தியில் 75 சதவீதப் பங்கு, நிலத்திலிருந்து வெளியேற்றுவது, கிராமப் புற கடன்சுமையை முற்றிலுமாக அகற்றுவது அல்லது குறைப்பது, விவசாய விளைபொருட் களுக்கு கட்டுப்படியாகும் விலை, மலிவான கடன்வசதி, வரிச்சுமையைக் குறைப்பது, தண்ணீர், மின்சாரம் போன்றவற்றுக்கான கட்டணங்களைக் குறைப்பது, காவல்துறை யின் மறைமுகமான அல்லது நேரடியான உதவியுடன் நிலப்பிரபுக்களின் குண்டர்படை யின் தாக்குதல்கள், தலித்துகள் மீதான சமூகரீதியான ஒடுக்குமுறை, நிர்வாகத்தில் நிலவி வரும் ஊழல் போன்ற பல்வேறு பிரச் சனைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை விவசாய சங்கத்திற்கு ஏற்படுகிறது.

விவசாயத்தில் ஈடுபட்டு வரும் ஏழை, நடுத்தர, பணக்கார விவசாயிகள் என அனைத்துப் பிரிவினரையும் பாதிக்கக் கூடிய விஷயங்களாக இவை அமைகின்றன. இவற்றின் மீதான இயக்கங்களில் இவர்கள் அனைவரையும் அணிதிரட்ட முடியும். மிகச் சிறிய அளவில் இருக்கும் நிலப்பிரபுக்களை தனிமைப்படுத்த விவசாயத் தொழிலாளர்கள், ஏழைவிவசாயிகள் ஆகியோரை மையமாகக் கொண்டு விவசாயி களின் அதிகபட்ச ஒற்றுமையை வளர்த்தெடுக்க இந்தப் பிரிவினர் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்.”

நவதாராளவாதக் கொள்கைகளின் தாக்குதல்கள்

மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால் நவதாராள வாதக் கொள்கைகள் நாட்டில், குறிப்பாக விவசாயத் தில், 1991-ம் ஆண்டில் தொடங்கப்பட்டன. கட்சித் திட்டத்தின்  பாரா 3.22 மற்றும் 3.23 ஆகியவை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
“அரசினால் தொடங்கி வைக்கப்பட்ட முதலாளித் துவ வளர்ச்சி முடிவுற்றதைத் தொடர்ந்து வந்த தாராளமயக் கொள்கைகள் விவசாய, கிராமப்புற வளர்ச்சிக்கான கொள்கைகள் 20-ம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் அபாயகரமான, பிற் போக்குத்தனத்தை நோக்கித் திரும்புவதற்கு வழிவகுத்தது. விவசாயம், பாசன வசதி மற்றும் இதர கட்டமைப்பு பணிகள் ஆகியவற்றில் அரசின் முதலீடு குறைவது; கிராமப்புறக் குடும்பங்களை பெரிதும் பாதிக்கும் வகையில் முறைப்படுத்தப் பட்ட பிரிவிலிருந்து கிடைத்து வந்த கடன் வசதி மிகக் கூர்மையாக குறைந்தது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்தக் கொள்கைகள் இருந்தன. கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கான திட்டங்கள் ஆகியவையும் வெட்டிக் குறைக்கப்பட்டன. நில உச்சவரம்பு சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யவும், பெரும் நிறுவனங்கள், விவசாயப் பொருட்கள் சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டுவரும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நிலத்தை குத்தகைக்கு விடவும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி தரப்பட்டது. விவசாய உற்பத்தியிலும் கூட பன்னாட்டு நிறுவனங்கள் இப்போது நுழைந்து வருகின்றன…

இந்த தாராளமயமாக்கலின் விளைவாக, மிக உயரிய தொழில்நுட்பங்களை தங்கள் கைகளில் வைத்துள்ள, உலகச் சந்தையை செயல்படுத்தி வருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் விவசாய உற்பத்திப் பொருட்களின் விலைகளின் மீது அதிகமான, நேரடியான கட்டுப்பாட்டை செலுத்துகின்றன. பாரபட்சமான பரிமாற்ற விலைகள், அதன் கடுமையான ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றின் மூலமாக விவசாயிகளைத் தீவிரமாகச் சுரண்டுவ தென்பது நிரந்தரமான அம்சமாக மாறிவிட்டது. இதன் விளைவாக விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பவர் என்ற வகையிலும், (விவசாயத்திற்காக) தொழில்துறை உற்பத்திப் பொருட்களை வாங்குபவர் என்ற வகையிலும் விவசாயி அறவே சுரண்டப் படுகிறான்.”

மத்திய அரசின்  கொள்கைகள்  ஏழை, சிறு, நடுத்தர விவசாயிகளை மேலும் ஓட்டாண்டி யாக்குவதை அது விரைவுபடுத்தும்: நகர்ப்புறத் திலும் கிராமப்புறங்களிலும் இருக்கின்ற வேலை யில்லாத இளைஞர்களின் எண்ணிக்கையை அது மீண்டும் இதுவரை கண்டிராத அளவிற்கு உயர்த்தும் என்று ஹர்கிஷன்சிங்  சுர்ஜித் அன்று குறிப்பிட்டார்.

இந்த எச்சரிக்கைகள் எவ்வளவு சரியானவை என்பதை கடந்த 25 ஆண்டுகளில் விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிகத் தெளிவாக நிரூபிக்கின்றன.

2003-ல் அ இ வி ச வும் அ இ வி தொ ச  – வின் ‘மாற்று விவசாயக் கொள்கை’ என்ற ஆவணம் நாட்டின் விடுதலைக்குப் பின்பு விவசாயத் துறையில் முதலாளித்துவ ரீதியான வளர்ச்சியை இரண்டு கட்டங்களாக விரிவாகப் பிரித்திருந்தது.

1) 1947முதல் 1990 வரையிலான அரசின் ஆதரவுடன் கூடிய காலகட்டம்.

2) 1991லிருந்து துவங்கிய தாராளமய, தனியார்மய, உலகமயமாக்கல் கால கட்டம்.

இந்தப் பின்னணியில் கிராமப்புறங்களில் இரண்டு முக்கிய முரண்பாடுகளை அந்த ஆவணம் கீழ்க்கண்டவாறு விவரித்திருந்தது:

“இந்திய விவசாயத்தில் தற்போதைய சூழ்நிலை யானது இரண்டு முக்கிய முரண்பாடுகளை சித்தரிப்பதாக உள்ளது என்பதை மேற்கண்ட ஆய்வு தெளிவாக எடுத்துக் கூறுகிறது. இவற்றில் முதலாவது நிலப்பிரபுக்கள், பெருமுதலாளித் துவ விவசாயிகள், பெரும் வணிகர்கள், வட்டித் தொழில் செய்வோர் ஆகியோரையும் அவர் களது கூட்டாளிகளையும் உள்ளடக்கிய பிரி வினருக்கும் விவசாயத்தொழிலாளர்கள், ஏழை, நடுத்தர விவசாயிகள், கிராமப்புறக் கைவினைஞர் கள் உள்ளடங்கிய பிரிவினருக்கும் இடையே யான கூர்மையான பிளவு. இரண்டாவது ஏகாதி பத்தியத்தின் கட்டளைக்கு இணங்க செயல்படுத் தப்படும் அரசின் தாராளமய, தனியார் மய, உலகமயக் கொள்கைகளுக்கு பெருந்திரளான விவசாயிகளிடமிருந்து மட்டுமின்றி கிராமப்புற செல்வந்தர்களில் ஒருபிரிவினரிடமிருந்தும் அதிகரித்துவரும் எதிர்ப்புணர்வு ஆகும்.”

இந்தத் தாராளமயமாக்கல் கட்டத்தில் ஆரம்ப மூலதனக் குவிப்பு இந்திய விவசாயத்தை அழித்து இந்திய விவசாயிகளின் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. நிலச்சீர்திருத்தம் என்பதற்கான அர்த்தமே இப்போது தலைகீழாக மாறி யுள்ளது. நிலத்தில் உழைப்பவர்களுக்கு நிலம் என்பதாக அது இல்லை; மாறாக, பெருநிறு வனங்களுக்கே நிலம் என்பதாக அது மாறி யுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள், திட்டமிடப்பட்ட தொழில் வளாகங்கள் ஆகிய வற்றுக்கான கொள்கையிலும், மோடி தலைமை யிலான பாஜக ஆட்சி பதவியேற்ற துவக்க நாட்களிலேயே  நிலம் கையகப்படுத்தலுக்கான அவசர சட்டத்தை கட்டாயமாக திணிப்பதற்கான முயற்சிகள் ஆகியவற்றில் மிகவும் வெளிப்படையாகவே தென்பட்டது. ஒன்றுபட்ட விவசாயி களின் கள அடிப்படையிலான போராட்டங்கள், நாடாளுமன்றத்தின் மேலவையில் எதிர்க்கட்சி களின் ஒன்றுபட்ட முயற்சிகள் ஆகியவை இணைந்த வகையில் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

விவசாயம் குறித்த நவதாராளமயக் கொள்கை கள் மூலமாக விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து லாபத்தை அதிகரிக்க முயற்சி செய்யப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளாக கடன்சுமையால் வாடிய லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்ற பேரழிவான அம்சத்தை இந்தக் கொள்கைகள்தான் தீவிரப்படுத்திவந்தன.

மானியங்களை வெட்டிக் குறைப்பது; உற்பத்திச் செலவை பெருமளவிற்கு அதிகரிக்க வழிவகுக்கும் வகையில் விவசாய இடுபொருட்களின் உற்பத்தித் துறையில் பேராசை பிடித்த பன்னாட்டு நிறுவனங்கள், பெருநிறுவனங்களுக்கு நாட்டின் கதவுகளை அகலத் திறந்து வைப்பது; அந்நிய நிதிமூலதனத்தின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான, கட்டுப்படியாகும் விலையைத்தர தொடர்ந்து மறுப்பது; விவசாய உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதும் அதன் விளைவாக விவசாயிகளின் நிலைமை மேலும் மோசமாவது; சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை வரிசையாக கையெழுத்திடுவது; விவசாயத்திற் கான முறையான கடன்வசதியை சுருக்குவது; அதை பெருநிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்வது; இதன் விளைவாக விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களையே பெரிதும் நம்பியிருக்கச் செய்வது; வறட்சி, வெள்ளம், சூறைக்காற்று போன்ற இயற்கைப் பேரழிவுகள் மட்டுமின்றி, பூச்சிகள், காட்டுவிலங்குகள் ஆகியவற்றின் தாக்குதல்களுக்கும் பயிர்கள் இலக்காவது; விவசாயிகளுக்குப் பயனளிப்பதற்குப் பதிலாக காப்பீட்டு நிறுவனங்களுக்கே பயனளிக்கும் வகையில் போலியான காப்பீட்டு வசதியை வடி வமைப்பது; நீர்ப்பாசனம், மின்சாரம் போன்ற விவசாயிகளுக்கு அத்தியாவசியமான துறைகளில் அரசு முதலீட்டை கடுமையாக வெட்டிக் குறைப்பது ஆகிய நவதாராளமயத்தின் முக்கிய அம்சங்கள் விவசாயத்தின் மீது தொடுத்துள்ள தாக்குதல் கள் விவசாயிகள் கடன்சுமையில் அழுந்துவதை அதிகரிக்கச் செய்துள்ளதோடு, அதிர்ச்சியூட்டத் தக்க வகையில் விவசாயிகளின் தற்கொலைகளையும் அதிகரித்துள்ளன.

மிக மோசமான குற்றவாளி – பாஜகவின் மோடி ஆட்சி

ஏகாதிபத்தியத்தின் கட்டளைகளுக்கு அடிபணிந்து விவசாயம், தொழில்துறை மற்றும் இதர துறைகளில் நவதாராளமயக் கொள்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதில் நரேந்திர மோடியின் தலைமை யிலான தற்போதைய பாஜகவின் மத்திய அரசு தான் மிக மோசமான குற்றவாளியாக உள்ளது.

இயற்கையாகவே, பாஜக தலைமையிலான மாநில அரசுகளும் இக்கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றி வருகின்றன.
தாராளமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட காலத்தில் விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய பரிசீலனையை கல்கத்தா ப்ளீனத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க ‘விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அரங்கங்களில் குறிப்பிட்ட சில கடமைகள்’ என்ற ஆவணத்தை யும் விவசாய அரங்கத்தில் செய்யப்பட்ட வேலைகள் குறித்த பரிசீலனை ஆகியவற்றை 2017 ஜனவரியில் திருவனந்தபுரத்தில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு விவாதித்து ஏற்றுக் கொண்டது.
2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக வின் தேர்தல் அறிக்கை விவசாயிகளின் முன் வைத்த  ‘அச்சே தின்’ (நல்ல நாள்) தொடர்பாக கூறிய ஒவ்வொரு வாக்குறுதிக்கும் துரோகம் செய்த அரசு, நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக ஆட்சி.

கடந்த நான்காண்டு கால பாஜக ஆட்சி ஏற்பத்திய விளைவுகள்:

 • தீவிரமாகியுள்ள விவசாய நெருக்கடியும், விவசாயி களின் தற்கொலைகள் குறையாத நிலையும்;
 • நிலமில்லாத நிலையும், நிலம் தொடர்பான ஏற்றத்தாழ்வும் மிக வேகமாக அதிகரித்திருப்பது;
 • இதுவரை கண்டிராத வகையில் நிலங்கள் பறிக்கப் படுவதும், விவசாயிகளிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்படுவதும்;
 • (ஆதிவாசிகளின்) வன உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் வன ஆதாரங்கள் கொள்ளையடிக்கப்படுவது;
 • நிதி தொடர்பான தாராளவாதமும் கடனில் மூழ்கும் நிலையும்;
 • சுதந்திரமான வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியான தாராளவாதம் மீதான கவர்ச்சி;
 • பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி என விவசாயி களின் மீதான தாக்குதல்;
 • விவசாயத்தை நிறுவனமயமாக்கல்;
 • விவசாயி களின் வருமானத்திற்கு பதிலாக துயரங்களே இரட்டிப்பானது;
 • விவசாய விளைபொருட்களின் விலைகள் முடிவேயின்றி வீழ்ந்து கொண்டே போவது;
 • வறட்சி, வெள்ளம், அரசின் கவலையற்ற போக்குகளுக்கிடையே மனிதர்களின் துயரங்கள் தீவிரமானது;
 • மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புறுதித் திட்டம் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு ஆகியவற்றின் மீதான தாக்குதல்;
 • விவசாயத்துறையில் பணிபுரியும் பெண் களின் மீதான தாக்குதல் அதிகரிப்பு;
 • கால்நடை வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் அரசின் அறிவிக்கை;
 • காட்டு விலங்குகள் மற்றும் அலைந்து திரியும் கால்நடைகளின் அச்சுறுத்தல்கள்;
 • பருவநிலை மாற்றம் மற்றும் பாரீஸ் உச்சிமாநாட்டில் மேற் கொள்ளப்பட்ட சமரசம்;
 • இவை அனைத்திற்கும் மேலாக கவலைதரத்தக்க வகையில் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை மீதான எதேச்சாதிகார, வகுப்புவாதத் தாக்குதல்கள்.

நாடுதழுவிய அளவில் விவசாயிகளின் எதிர்ப்பு
இத்தகைய பின்னணியில் பாஜக அரசின் விவசாயக் கொள்கைகளுக்கு விவசாயிகளின் எதிர்ப்பு மேலும் விரிவடைந்துள்ளதும் தீவிரமாகி யுள்ளதும் வியப்பை ஏற்படுத்தாது.

விவசாயி களின் இந்த எதிர்ப்பு இரண்டு முக்கிய பகுதி களைச் சுற்றியே அமைந்துள்ளது:

நிலம் மற்றும் நிலம் தொடர்பான விஷயங்களுக்காக நடை பெறும் போராட்டங்கள்; இயற்கையாகவே கடனிலிருந்து விடுதலை பெறுவது மற்றும் விவசாயப் பொருட்களுக்கான கட்டுப்படியாகும் விலை ஆகியவற்றைச் சுற்றியுள்ள விவசாயிகளின் துயரங் களுக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவை ஆகும்.

தமிழில்: வீ.பா.கணேசன்

தீவிரமாகும் கிராமப்புற முரண்பாடுகள்

 

டாக்டர். விஜூ கிருஷ்ணன்
தேசிய இணை செயலாளர், அகில இந்திய விவசாயிகள் சங்கம்

இந்திய வேளாண்மை அமைப்பின் திட்டவட்டமானதொரு பகுப்பாய்வின் மையப்புள்ளி நமக்கு உணர்த்தும் உண்மை என்னவென்றால், நம்  கிராமப்புறத்தில் அதிகரித்து வரும் முதலாளித்துவ அமைப்பின் வளர்ச்சிப் போக்கேயாகும். இது பிராந்தியங்களுக்கேற்ப வேறுபடும் தன்மையோடும் சமநிலையற்றதொரு முதலாளித்துவ வளர்ச்சிப்போக்குடனும் காலப்போக்கில் அதிகரித்து  வந்துள்ளது. நிலப்பிரபுத்துவச் சுவடுகள்,  பழமைவாத  சமூக உருவாக்கம் ஆகியவையே சுரண்டலுக்கும் வழிவகுக்கின்றன.  நாட்டின் பெரும்பகுதியில் முழுமை பெறாத நிலச்சீர்திருத்தம் மேற்குறிப்பிட்ட நிலப்பிரபுத்துவச் சுவடுகள், நியாயத்திற்கு முரணான நிலவுடைமைச் சமூகம் ஆகியவை தொடர்வதற்கும் அதிமுக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைகிறது.

நவீன தாராளமய ஆட்சி தாக்கம்:
கால் நூற்றாண்டுகால நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள் நாட்டை கடுமையான விவசாய நெருக்கடிக்கு இட்டுச்சென்றதோடு  முரண்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏழை – பணக்காரச் சக்திகளுக்கு இடையிலான இடைவெளி நீண்டுள்ளதோடு சமத்துவமின்மை அதிகரித்தே வருகிறது. இத்தகைய சுரண்டல் அமைப்பின் பலன் என்பது மக்கள் மீதான கடும் பொருளாதாரச் சுமைகளை திணித்து, வருமானத்தை ஒடுக்கி வேலைவாய்ப்புகளை சுருக்கியதைத் தவிர வேறொன்றும் இல்லை. மேலும் இதுவே மக்களின் பஞ்சம், பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கும் முழுமுதற்காரணமாகும்.

நிலக்குவியலும் விவசாய மற்றும் விவசாயம் சாராத இதர வருமானமும் இதன் மூலம் சொத்துகளும் பெருக்கமடைகிறன. முதலாளித்துவ சக்திகளின் வளர்ச்சி முடுக்கி விடப்படுவதாலும், விரிவடைவதாலும் விவசாயிகளின் வறுமை அதிகரித்து நிலங்கள் பறிக்கப்பட்டு, அவர்கள்  பாட்டாளி வர்க்கமாக உருமாறியுள்ளனர். பரந்துபட்ட புதிய பகுதி ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் விவசாயம் சார்ந்தோ அல்லது சாராத அத்துக்கூலி தொழிலாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்களே பெரும்பகுதி கிராமப்புற தொழிலாளி வர்க்கத்தை சார்ந்தவர்கள். கந்துவட்டிக்கடன் என்னும் சுருக்கு கயிற்றால் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் நிலம் பிடுங்கப்பட்டு, வறுமைக்குள்ளாகி இன்று சிறு, குறு நிலத்தை சொந்தமாக வைத்துள்ள விவசாயி, நாளை நிலமற்ற குத்தகை விவசாயியாகவோ விவசாயக்கூலி தொழிலாளியாகவோ மாறி, விரைவில்  பாதுகாப்பற்ற கிராமப்புற முறைசாராத் தொழிலாளியாகவோ அல்லது நகர்ப்புறத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளியாகவோ தள்ளப்படுவார். இக்காரணிதான் நமது வர்க்க வெகுஜன அமைப்புகளின் தேவையான, வெகுவாக ஒருங்கிணைக்கப்பட்ட, போராட்ட நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகளை நமக்கு உணர்த்துகிறது.

பணக்காரச் சக்திகளின் ஆதிக்கம்
ஊரக பணக்கார சக்திகளுக்கிடையேயான  கூட்டு-உறவுநிலை ஒருபுறமும் நிலமற்ற அத்துக்கூலித்தொழிலாளர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்ட வெகுஜன ஏழை விவசாயிகள் மறு புறமும் இருப்பது நாட்டின் பெரும்பகுதிகளில் நிலவும் கூர்மையான பிரிவினை வெளிப்படையாகவே தெரிவதை நாம் பார்க்கிறோம். குறிப்பாக நிலப்பிரபுக்கள், பெரிய முதலாளித்துவ விவசாயிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பெருவணிகர்கள் அடங்கிய ஊரக பணக்காரர்களுக்கிடையான நெருக்கமான கூட்டு-உறவுநிலைதான் கிராமப்புறங்களில் ஆதிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது. இச்சக்திகளின் அடிப்படை அதிகாரம் என்னவெனில் நிலங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதே ஆகும்.

இவர்களே கந்துவட்டிக்கு கடன் கொடுப்பது, தானிய அரவை செய்வது, பால்பண்ணை, வணிகம் செய்வது , உணவு தானியங்கள் மற்றும்  விதை, உரம், செயற்கை மற்றும் இயற்கை உரம் உள்ளிட்ட  வேளாண் இடுபொருள்களில்  ஊகவணிகம் செய்வது, உற்பத்தித்துறை, வீட்டுமனைப் பிரிவு, கட்டுமானம், சினிமா தியேட்டர், பெட்ரோல் மற்றும் டீசல் நிலையங்கள், போக்குவரத்து, விவசாய இயந்திரங்களைக் குத்தகைக்குவிடுவது மற்றும் பெரும் பணம் கொழிக்கும் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட கிராமப்புறங்களில் பெரிதும் வருமானம் தரக்கூடிய தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் விளைவாக இவர்களின் செல்வாக்கும் தாக்கமும் கிராமப்புறத்தின் மூலை முடுக்கெங்கும் பரவிக்கிடக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகள், விவசாயக் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு கிராமப்புற பாட்டாளி வர்க்கத்தினரும் பல்வேறு வழிகளில் மேற்குறிப்பிட்ட ஊரக பணக்காரர்களிடம் கட்டுப்பட்டு இருக்கிறார்கள். ஒடுக்கும் வர்க்கத்தினருக்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்தினருக்கும் இடையே, சுரண்டல்காரர்களுக்கும் சுரண்டலுக்குள்ளாபவர்களுக்குமிடையே பல்வேறு இணைப்புகள் தொடர்ந்து இங்கே நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

கிராமப்புற அளவிலான சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் கிராமப்புற பணக்காரச் சக்திகளுக்கிடையேயான நெருக்கமான கூட்டு –உறவு நிலை ஆகியவற்றின் அளவு பிராந்தியங்களுக்கேற்ப கடுமையாகவோ அல்லது சற்று குறைவாகவோ மாறுபடக்கூடும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஆய்வு அறிக்கை

நவீன தாராளமய ஆட்சிக்காலத்தில் விவசாய வர்க்கத்தினர் மத்தியில் வேளாண்சார் உறவுகளுக்கிடையே ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு  அறிக்கையில் (பத்தி 3.21) பின்வருமாறு குறிப்பிடுகிறது:

பெரும்பாலான கிராமப்பகுதிகளில்  நிலப்பிரபுக்களுக்கும் பணக்கார விவசாயிகளுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் பெரும் வர்த்தகர்களுக்கும் இடையே அதிகாரம்மிக்க நெருக்கமான கூட்டு-உறவு உயர்ந்துள்ளது. அவர்கள் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள், ஊரக வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்களின் (இடதுசாரிகள் வலுவாகவுள்ள மாநிலங்கள் தவிர்த்து) ஆதிக்கம் செலுத்துவது மட்டுமின்றி பூர்ஷ்வா (நிலப்பிரபுத்துவ –முதலாளித்துவ) அரசியல் கட்சிகளின் கிராம அளவிலான அனைத்து தலைமைப்பொறுப்புகளையும் தங்கள்  கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இத்தகைய பிரிவினரால் மேற்கண்ட அமைப்புக்களில் இருந்து சுரண்டப்படும் உபரி கொள்ளை லாபமே கிராமப்புறங்களில் கந்து வட்டி, ஊகவணிக செயல்பாடு,  வீட்டுமனைப் பெருக்கம் மற்றும் வேளாண்சார் தொழிற்சாலைகளில் மூலதனமாக விதைக்கப்படுகிறது. கிராமப் பகுதியிலிருக்கும் மேலாதிக்க வர்க்கத்தினர் அங்கிருக்கும் ஏழைவர்க்கத்தினருக்கு எதிராக ஆதரவைத்திரட்டி வன்முறை மூலம் அச்சுறுத்துவதற்கு தங்கள் மேலாதிக்க வர்க்க–சாதியச் சேர்க்கை அடையாள உத்தியை கையாண்டு ஏழைவர்க்கத்தினரை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகின்றனர்.

பழங்குடி சமூக ஒடுக்குமுறைக்கெதிராக

மேல்குறிப்பிட்ட கூட்டு உறவு நிலை ஏழைப்பகுதியினரை குறைந்த கூலி கொடுப்பது; குறைந்த விலை நிர்ணயம் செய்வது; அதிகமான வாடகை வசூலிப்பது; வட்டி வாங்குவது; குடிநீர் கட்டணம்; டிராக்டர்- பயிர் அறுவடை இயந்திரம் வாடகை; மற்றும் இதர வேளாண் இயந்திரங்கள், சேமிப்பு கிட்டங்கிகளுக்கு கட்டணம் போன்று பல்வேறு வகை சுரண்டல்களுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு சென்று சேரவேண்டிய அரசு திட்டங்களின் சலுகைகளை பெரிய பணக்காரர்களே அனுபவித்து வருகின்றனர். இந்த சூழலில் வர்க்க போராட்ட, வேளாண் வர்க்க இயக்கங்களின் வளர்ச்சி என்பது அடிப்படையில் நிலப்பிரபுத்துவ சுரண்டல் சக்திகளுடன் இணைந்த ஊரக பணக்கார கூட்டு சக்திகளை எதிர்த்த போராட்டமாக அமையவேண்டும்.

இங்கே விவாதிக்கப்படும் கிராமப்புற பணக்காரக் கூட்டுக்காரர்களுக்கும் அப்பகுதி ஏழை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் அடங்கிய ஏழைகளுக்கும் இடையேயான முரண்பாடு, அவர்களின் விவசாயம் மற்றும் விவசாயம் சாரா முதலாளித்துவ நடவடிக்கைகளிலிருந்தே தோற்றம் பெறுகிறது.  அனைத்து வகையான சுரண்டல் பிரச்சினைகளுக்கு எதிராக உறுதியோடு போராடாதவரை வலுவான ஒன்றுபட்ட இயக்கங்கள் சாத்தியமற்றதாக ஆகிவிடும். இத்தகைய ஊரக பணக்கார கூட்டு சக்திகளை எதிர்த்துப் போராட கிராமப்புற நிலமற்ற அத்துக்கூலித்தொழிலாளர்கள், ஏழை சிறு, குறு விவசாயிகள், விவசாயம் சாரா கைத்தொழிலாளர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்ட அனைத்துவகை வெகுஜன கிராமப்புற ஏழைகள் சேர்ந்து  பரந்துபட்ட ஒற்றுமையை கட்டமைக்க வேண்டியது மிகவும் தேவையான செயல்திட்டமாகும். இத்தகைய ஒற்றுமை, சமூக (சாதிய) ஒடுக்குமுறைக்கெதிராகவும் பழங்குடிகள் மீது தொடுக்கப்படும் சுரண்டலுக்கெதிராகவும் கட்டி எழுப்பியதாக அமைய வேண்டும். இந்த திரட்டல்கள் மாநிலங்களுக்கேற்ப மாறுபடும் தன்மையோடு இருக்கும். அதேநேரத்தில் வளர்ச்சிப்போக்கின் முக்கிய நோக்கத்தில் மாற்றமிருக்காது. பிரச்சினைகளை கண்டறிந்து, நுட்பமாக உத்திகளை உருவாக்கி, கோரிக்கை முழக்கங்கள், போராட்ட இயக்கங்களின் பாதைகளை அந்தந்த மாநிலங்கள் மாவட்ட நிலைமைகளின் தன்மைக்களுக்கேற்ப அலசி ஆராய்ந்து, திட்டவட்டமான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும்.

வழிகாட்டும் போராட்டங்கள்
கேரளம், மேற்கு வங்காளம், தமிழகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் இதர பகுதிகளில் நடைபெற்ற சட்டக்கூலிக்கான கோரிக்கை இயக்க போராட்டங்கள் கிராமப்புற ஏழை வர்க்கத்தினை இங்கே விவாதித்த கிராமப்புற பணக்காரக் கூட்டுசக்திகளை எதிர்த்து ஒன்றுதிரட்டுவதற்கு  வரலாற்று ரீதியாக உதவியது. கிராமப்புற பணக்காரக் கூட்டுசக்திகளை எதிர்த்த போராட்டத்தில் ஏழை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கடுமையான சமூக, வர்க்க ஒடுக்குமுறை தாக்குதலுக்கு ஆளாயினர்.

தங்களது இன்னுயிரை செங்கொடி இயக்கத்திற்காகவும், விவசாயிகள் – விவசாயத்தொழிலாளர்கள் உரிமைகளுக்காகவும் மிகப்பெரிய தியாகம் செய்த தஞ்சை- கீழ்வெண்மணி தியாகிகள் நம் போற்றுதலுக்குரிய  விவசாயிகள் – விவசாயத்தொழிலாளர்கள் (இவர்களில் பெரும்பான்மை தலித் பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது) . குத்தகை வாடகை விவசாயிகள் மீது அளவுகடந்த வாடகை வசூல் சுரண்டலை எதிர்த்து மேற்குவங்கத்தில் நடைபெற்ற தெபாகா எழுச்சி (1946-47) , தெலுங்கானா போர் (1946-51) மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் நன்கு அறியப்பட்டவை. மேற்கண்ட ஆய்வுகளின் அடிப்படையிலும், இடதுசாரிகளின் புகழ்பெற்ற போராட்ட இயக்கங்களின் உத்வேகத்தின் விளைவாகவும் தற்போதைய சூழ்நிலைக்கு தகுந்த வகையில் போராட்ட இயக்கங்களின் தொடர் திட்டங்களை நாம் திட்டமிடவேண்டும். விவசாய தொழிலாளர்கள், ஏழை சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், மற்றும் நலிவுற்ற வெகுஜன வர்க்கத்தின் நலன்களை மையப்படுத்தி பாட்டாளி விவசாய வர்க்கத்தினை ஒன்றுதிரட்டி கட்டியமைத்து கிராமப்புற பணக்காரக் கூட்டுசக்திகளின் சுரண்டலை எதிர்த்து கோரிக்கைகளை உருவாக்கி வலுவான  போராட்ட இயக்க முழக்கங்களை முழங்கிட வேண்டும்.

பிரத்தியேகமான கோரிக்கை முழக்கம்
நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ வர்க்கங்களுக்கு எதிரான விவசாயிகளின் கோரிக்கை மட்டுமல்லாமல், அவர்களால் எதிர்க்கப்படும் கோரிக்கைகள் குறித்தும் தெளிவான வரையறையுடன் நமது கோரிக்கைகள் வடித்தெடுக்கப்பட வேண்டும். ஏழை சிறு குறு / நடுத்தர விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கைத்தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் தள்ளுபடி , கடன் வசதிகள், வேளாண் இடுபொருள்களுக்கான மானியங்களின் பயன்களை கிராமப்புற  பணக்காரக் கூட்டு சக்திகள் சுரண்டுவதைத் தடுக்கும் வகையில் கோரிக்கைகள் அமைய வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர விவசாய வர்க்கத்தினருக்கென  போனஸ் வகையிலான கூடுதல் ஊக்கத்தொகை, தானிய சேமிப்பு வசதிகளில்  சலுகை மற்றும் போக்குவரத்து மானியங்கள் போன்ற சிறப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும். இதுபோல் இவர்களுக்கான கடன்களில் மிகக் குறைந்த வட்டிமுறை, வட்டியில்லா அல்லது  பிரத்தியேகமான வட்டி மானியத்தை உறுதிப்படுத்தும் வகையில் போராட்ட கோரிக்கைகள் ஒன்றுபட்டு உயரும்பொழுது பலன்கள் கிடைக்க கிராமப்புறத்தில் சிறப்புகளம் காண்போம்.

தீவிரமடையும் கிராமப்புற பணக்காரக்கூட்டு சக்திகளுக்கும் ஏழை பாட்டாளிக்குமான முரண்பாடுகளின் மதிப்பீட்டில் நமது தலையீடுகளின் கள அனுபவங்கள் என்ன ?

ஆந்திரப்பிரதேசத்தில் குத்தகை விவசாயிகளை ஒன்றுதிரட்டி ‘ஆந்திரப்பிரதேச குத்தகை விவசாய சங்கம்’ தோற்றுவிக்கப்பட்டது. இச்சங்கம் பணக்காரக் கூட்டுச்சக்திகளோடு நேரடியாக முரண்படக்கூடிய பிரச்சினைகளை கோரிக்கைகளாகக் கொண்டு போராடி வருகிறது.

ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேசத்தில், அகில இந்திய விவசாயிகள் சங்கம் (ஏ.ஐ.கே.எஸ்), அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.ஏ.டபிள்யூ.யு) மற்றும் இதர இயக்கங்களின்  தலைமையில் நடைபெற்ற கூட்டுப்போராட்டத்தின் பலனாக உழவுத்தொழிலில் ஈடுபடும் பெரும்பான்மை குத்தகை விவசாயிகளுக்கு கடன் பெறும் தகுதி அட்டை வழங்குவதற்கு வழிவகுக்கும் விவசாய உற்பத்தியாளர் அங்கீகாரச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குத்தகை விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பயிர் செலவினத்துக்கு அது நாள் வரை கந்து வட்டிக்கு கிராமப்புற பணக்கார கூட்டுச் சக்திகளிடம் சிக்கித்தவித்து வந்த நிலையிலிருந்து மேற்கண்ட போராட்டத்தினாலும் அதன் நிர்ப்பந்தத்தினாலும் இயற்றப்பட்ட சட்டத்தின் பயனால் சற்று மீண்டு எழுந்து வருவது பணக்காரக்கூட்டு சக்திகளுக்கு சற்று பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கே பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நிலமற்ற மற்றும் ஏழை விவசாய குடும்பத்தினரிடமிருந்து நிலப்பிரபுக்கள் வாடகைக்கு வாடகை விடும் கொடுமை பொதுவான நடைமுறையாக உள்ளது.

வாடகை குறைப்பு கோரிக்கை, மானியங்கள் கிடைக்க வழிவகை செய்வது, போலியான இடுபொருள்கள் விற்பனை செய்வதோடு விவசாயிகளின் விளைபொருளுக்கு மிகக்குறைந்த விலை நிர்ணயம் செய்வது போன்ற விவசாய விரோத செயல்களில் ஈடுபடும் பெரிய வர்த்தகர்களை எதிர்த்த இயக்கம், கண்மூடித்தனமாக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராகவும் மற்றும் நிலத்தை விட்டு வெளியேறிய நிலப்பிரபுக்கள் தாங்கள் பயிர் செய்யாமல் நிலத்தை தரிசாக விட்டு வைப்பார்களேயொழிய காலம் காலமாக உழுதுவரும் நிலமற்ற ஏழை குத்தகை விவசாயிக்கு நிலத்தை குத்தகை வாடகைக்குக்கூட பயிரிட மறுக்கும் சூழலை எதிர்த்த பல்வேறு கோரிக்கை முழக்கங்கள் போராட்டங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நமது அகில இந்திய விவசாயிகள் சங்கம் (அ.இ.வி.ச) மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்துடன் (அ.இ.வி.தொ.ச) தலித் மற்றும் ஆதிவாசி சங்கங்கள் இணைந்த ஒன்றுபட்ட கூட்டுப்போராட்டத்தினை முன்னெடுக்கும் பொழுது அப்பகுதியில் பிரதான முன்னேற்றத்தை அடைய வழிவகுக்கும் என்பது திண்ணம்.

எழுச்சிகரமான ராஜஸ்தான், மகாராஷ்டிர விவசாயிகளின் கூட்டுப்போராட்டங்கள்…

சமீபத்திய ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிர மாநில விவசாயிகளின் போராட்டங்களில் கிராமப்புற பணக்கார விவசாயி கூட்டுச்சக்திகளின் வழக்கமான கோரிக்கைகளிலிருந்து நம் கட்டுரையின் முற்பகுதியில் முன்வைத்த ஏழை எளிய பாட்டாளி வர்க்க விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஓர் தெளிவான வரையறை கொண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது ஏழை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கிராமப்புற இதர தொழிலாளர்கள், கைவினை கலைஞர்கள் மற்றும் இதர பாட்டாளிகள் கொண்ட விரிவடைந்த ஒற்றுமையை கட்டுவதில் வெற்றியடைந்துள்ளது.

கர்நாடகம், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டம் (பரவலாக ரேகா இது என்று அழைக்கப்படுகிறது / 100 நாள் வேலைத்திட்டம் என  அழைக்கப்படுகிறது) தொழிலாளர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட பிரிவினர். நமது அ.இ.வி.ச, அ.இ.வி.தொ.ச மற்றும் பழங்குடி மக்களுக்கான தேசிய மேடை (ஏ.ஏ.ஆர்.எம்) ஆகிய அமைப்புகளின் தலைமையில் ஒன்றிணைந்து, காண்ட்ராக்ட் ஒப்பந்தக்காரர்கள் கிராமப்புற பணக்காரக் கூட்டுசக்திகளோடு சேர்ந்து தேசிய ஊரக வேலைவாய்ப்பு தொழிலாளர்களின் உணவில் மண்ணை அள்ளிப்போடுவதற்கு ஒப்பான பெரிய இயந்திரங்களை பயன்படுத்துதல் என்ற போர்வையில் ஊழல் செய்து மக்கள் வரிப்பணத்தை உண்டு கொழுப்பது, தொழிலாளர்களின் கூலிப் பணத்தை கொள்ளையடிப்பது, ஜாப் கார்டு என்று அழைக்கப்படும் ரேகா அட்டையை கைப்பற்றி பிணையம் போன்று வைத்து கொண்டு கூலிப்பணத்தை தராமல் இருப்பது உள்ளிட்ட அநியாயங்களை எதிர்த்த போராட்டத்தின் மூலம் ஒன்று திரண்டுள்ளனர்.

இத்தகைய ஒன்றுபட்ட பரந்த மேடை சுரண்டும் வர்க்கத்திற்கு எதிராக சுரண்டலுக்குள்ளாகும் வர்க்கத்தினரை திரட்டுவதில் நல்ல பலனை ஈட்டியுள்ளது. அவர்கள் பரவலாக நடைபெறும் அரசு திட்டங்களின் ஊழலுக்கெதிராகவும், ஏழை விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு திட்டத்தின் பலன்களை கிடைக்க செய்யாமல் , கிராமப்புற பெரிய பணக்காரக்கூட்டுச்சக்திகள் அனுபவிக்கும் ஏற்பாடுகளை செய்யும் நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ கட்சிகளின் உள்ளூர் தலைவர்களின் அநீதியான செயல்பாடுகளுக்கு எதிராகவும் கடும் போராட்டக்குரலை எழுப்பினர்.

தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்த வர்க்க போராட்டங்கள்…

மற்றுமொரு போராட்டக்களம் என்பது கட்டுமானத்துறையில் தொழிலாளர்களை சுரண்டலுக்குள்ளாக்கும் பெரிய காண்டிராக்டர் மற்றும் இடைத்தரகர்களை எதிர்த்த போராட்டமாகும். அத்தகைய கிராமப்புற பாட்டாளி தொழிலாளி வர்க்கத்தினரை குறிப்பாக கட்டுமான தொழிலாளர்களை தொழிற்சங்கத்தின் அங்கத்தினராக மாற்றும் களச்செயல்பாட்டை சிஐடியூ தொழிற்சங்கம் வலியுறுத்தியதன் விளைவாக தொழிலாளர்கள் பலனடைந்துள்ளனர்.

இதேபோல் பீடி சுற்றும் தொழிலாளர்கள், தலை சுமைப்பணி தொழிலாளர்கள், ஊராட்சி தூய்மைப்பணி ஊழியர்கள் மற்றும் தொழிலாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கெதிரான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஊழியர்கள் (ஆஷா ஊழியர்கள்) போன்றோர்கள் தான் சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பிரமாண்டமான தொழிற்சங்க போராட்டங்களை நடத்தியவர்களில் முக்கியமானவர்கள். இத்தகைய சங்கங்கள் தங்களுடைய போராட்டங்களில் மட்டும் நின்றுவிடாமல் கிராமப்புற ஏழைகள் மற்றும் விவசாய வர்க்கத்தினரின் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் போராடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கத.

நவீன தாராளமய மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிரான பூமி அதிகார அந்தோலன் இயக்கம்

குறிப்பிட்ட பிரச்சினைகளின் மீதான ஒன்றுபட்ட போராட்டங்களை கட்டும்போது சில சமீபத்திய அனுபவங்கள் கசப்பான ருசிகரம். பூமி அதிகார அந்தோலன் என்று அழைக்கப்படுகின்ற நில உரிமை மீட்புக்குழு கூட்டமைப்புடனான இயக்கத்தில் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான போராட்டத்தில் வெறும் நிலம் கையகப்படுத்துதல் பிரச்சினைக்கு எதிராக திரள்வது  மட்டுமின்றி நில உரிமைக்கான போராட்டமாக அதனை மாற்றி முன்னெடுக்க வேண்டும் என்று அ.இ.வி.ச மற்றும் அ.இ.வி.தொ.ச முன்வைத்தபோது கிராமப்புற பணக்கார கூட்டுச்சக்திகளுக்கு விசுவாசமான சில அமைப்புகள் வெளியேறிவிட்டன.

கடன் தள்ளுபடி மற்றும் கட்டுப்படியான விலை நிர்ணயம் என்ற இரு பிரதானமான கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் 2017 ல் துவக்கப்பட்ட அகில இந்திய கிசான் சங்கர்ஷ் கோ-ஆர்டினேஷன் கமிட்டி எனப்படும் விவசாயிகளின் கூட்டுப்போராட்ட ஒருங்கிணைப்புக்குழு இந்தியா முழுவதும் உள்ள 187 சங்கங்கள் மற்றும் அமைப்புகளை உள்ளடக்கிய மிகப்பரந்துபட்ட விரிவடைந்த மேடையாகும். பணக்கார விவசாயக்கூட்டுச்சக்திகள் மட்டுமே பலன்பெறும் வகையில் வழக்கமான கடன் தள்ளுபடி திட்டம் போல் அமைந்து விடாமல் ஏழை எளிய விவசாயிகள் நேரடியாக பலன்பெறுகின்ற வகையில் நாம் முன்னர் விவாதித்த கடன் தள்ளுபடி திட்டம் குறித்த வரையறைகளுடன் கோரிக்கை வைக்க வேண்டும் எனும் முழக்கத்திற்கு இதில் உள்ள சில அமைப்புகள் உடன்பட மறுக்கும் சிக்கல் ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ,தமிழகம் மற்றும் இன்னபிற மாநிலங்களிலும் நிலவி வருகிறது.

தமிழகத்தில் ருசிகரமோ மிகவும் வினோதமானது. நாம் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தை எதிர்த்து கிராமப்புற பணக்காரக் கூட்டுச்சக்திகளின் நலனை பாதுகாக்க நினைக்கும் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பாட்டாளி வர்க்க விவசாயிகளின் நலன்களுக்கெதிராக சவால் விடுக்கிறது.

பூமி அதிகார அந்தோலன் என்று அழைக்கப்படுகின்ற நில உரிமை மீட்புக்குழுவானது மக்கள் விரோத நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வண்ணம் மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்ட நிலைப்பாட்டில் தெளிவான முடிவெடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் இத்தகைய இரண்டு முக்கிய போராட்ட குணாம்சம் 187 சங்கங்கள் அடங்கிய அகில இந்திய கிசான் சங்கர்ஷ் கோ-ஆர்டினேஷன் கமிட்டி எனப்படும் விவசாயிகளின் கூட்டுப்போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் வேலைத்திட்டத்தில் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமூக ஒடுக்குமுறைக்கெதிராக
தீண்டாமைக் கொடுமை, நில உரிமை, கல்வி உரிமை , பொது சுகாதாரம், அடிப்படையாக குடியிருக்கும் வீடு போன்றவை மறுக்கப்படுவது, பலிகடாவாக்கப்பட்ட சமூகக் குழுக்களின் மனிதர்களை அவர்கள் தொழிலாளியாக வேலைசெய்யும் பகுதியில் தொழிலாளர்களுக்குள் சமூகப் பிளவை ஏற்படுத்துவது, அவர்களை ஒதுக்குப்புறத்தில் தனிமைப்படுத்தி தங்கவைப்பது போன்ற சமூக ஒடுக்குமுறைகள் மற்றும் சமூக இழப்புக்கும் எதிரான போராட்டங்கள் சில மாநிலங்களில் நடந்தாலும் இன்னும் கூர்மையான அதிக அளவிலான இயக்கங்கள் கட்டாய தேவையாகும்.

எங்கெல்லாம் மேற்கண்ட திட்டம் திறம்பட நடந்தேறுமோ அங்கெல்லாம் சமூக ஒடுக்குமுறைக்குள்ளான பகுதியினர் வர்க்கப்போராட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் அனைத்து வர்க்கமும் ஒன்று சேரவும் தயக்கமின்றி அனைவரும் சாதிய ஒடுக்குமுறைக்கெதிராக போராடவும் இயலும்.

பீகார் , கர்நாடகா நில உரிமை மற்றும் தலித் ஆலய நுழைவு வெற்றி போராட்டங்களும்
பீகார் மாநிலத்தில் உபரி நிலத்தினை அனுபவித்து வரும் நிலமற்ற ஏழைகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த போராட்டத்திலும், கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் கிராமப்புற பெரும்பணக்காரக் கூட்டுச்சக்திகளுக்கு எதிரான பரந்துபட்ட ஒற்றுமையை கட்டியதன்  பலனாக நில உரிமை மற்றும் தலித் ஆலய நுழைவு போராட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளோம்.

பெரும்பணக்கார கூட்டுச்சக்திகள் ஆதிக்கம் செலுத்தி அவர்களின் நலன்களுக்காகவே அரசு மற்றும் இதர அனைத்து வகையிலான பலன்களை ருசிபார்த்து வரும் மாநிலங்களில் கூட்டுறவுத்துறையை ஜனநாயகப்படுத்துவது என்பது மிக முக்கியமான பிரச்சினையை சரிசெய்யும் பணியாகும்.

கேரளம், திரிபுராவில் நாம் கூட்டுறவுத்துறையை ஜனநாயகப்படுத்துவதில் நல்ல முன்னேற்றத்தை அடைந்ததன் விளைவாக இன்ன பிற மாநிலங்களும் இதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளன. கர்நாடகாவின் பெல்தங்காடி கூட்டுறவுச்சங்கத்தின் மூலம் குறைந்த / நியாயமான வாடகை விலையில் விவசாய இயந்திரங்கள் வாங்கி பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டதால், பெரும்பணக்கார கூட்டுச்சக்திகளிடம் அளவுக்கதிகமான வாடகையில் விவசாய இயந்திரங்கள் வாங்கி பயன்படுத்த வேண்டிய அவல நிலை தடுக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவின் தன்டேவாடா அடுத்த மாவோயிஸ்ட்களின் கோட்டையான நபராங்பூர் மாவட்டத்தில் ஆதிவாசிகளை திரட்டி ஐயாயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்களை உரிமைப்போராட்டத்தில் பெற்று தற்பொழுது ஆதிவாசிகள் உழுது விவசாயம் செய்து வருகிறார்கள். அங்கு மக்காச்சோளம் தான் பிரதானமான பயிர்.

மத்திய பாஜக – நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தேர்தல் அறிக்கையில் அளித்த விவசாய விளைபொருள் உற்பத்தி செலவில் ஒன்றரை மடங்கு விலைகொடுப்போம்   வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்படியாகாத குறைந்தபட்ச ஆதார விலையைக்கூட தர மறுக்கிறார்கள் வர்த்தகர்கள்.

விளைபொருட்களை பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்  செய்யும் கட்டமைப்பு முறைகள் பெரும்பணக்காரக்கூட்டுச்சக்திகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஒரு சிலரிடம் மட்டுமே உள்ளது. நாம் உழவர் கூட்டுறவு அமைப்பை உருவாக்கி மேற்கண்ட பிரச்சினைகளின் சாத்தியக்கூறுகளை கள ஆய்வு செய்து தீர்வு காணும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். பரந்த ஒற்றுமையை கட்டியதன் பயனாக மக்கள் தற்பொழுது நெருக்கமாக ஒன்றிணைந்து ஏழை எளிய மக்களின் பயன்பாட்டிற்காக, சிறந்த பள்ளி கல்வி நிலையங்களை ஏற்படுத்தி,  நன்கு கற்றறிந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பது, ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டமைத்து பொது சுகாதாரம் பேணி காப்பது போன்ற மக்கள் நல பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இறுதியாக..

கிராமப்புற பெரும்பணக்கார கூட்டுச்சக்திகளின் சுரண்டலை எதிர்த்த போராட்ட முயற்சிகளை ஆங்காங்கே எடுத்த போதிலும், இதுகுறித்து நாம் விவாதித்த பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான கிராமப்புற நிலமற்ற அத்துக்கூலித்தொழிலாளர்கள், ஏழை சிறு , குறு விவசாயிகள், விவசாயம் சாரா கைத்தொழிலாளர்கள், கைவினைஞர்கள் உள்ளிட்ட இதர தொழிலாளர்கள் , அனைத்துவகை வெகுஜன கிராமப்புற ஏழைகள் சேர்ந்த பரந்துபட்ட ஒற்றுமையை கட்டி, அவர்கள் அனைவரையும் ஒன்றுத்திரட்டி இன்னும் அதிகப்படியான போராட்ட புரட்சிப்போரினை முன்னெடுத்து நாம் விவாதித்த  தீவிரமாகி வரும் கிராமப்புற முரண்பாடுகளை களைந்திட களம் காண்பதே அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதற்கும், இறுதியாக எதிர்கொள்ள இருக்கும் ”மக்கள் ஜனநாயக புரட்சிக்கு” முன் இன்றைக்கு நம் முன்னேயுள்ள மிகவும் அடிப்படையான சவால் இதுவென்றால் மிகையாகாது.

தமிழில்: சமூகநேசன் எழில்ராஜூ