மோடி அரசின் மோசடி பட்ஜெட் 2019

வெங்கடேஷ் ஆத்ரேயா

பாஜக தலைமையிலான மத்திய அரசு இன்னும் இரண்டே மாதங்களில் காலாவதியாக உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடந்து புதிய அரசாங்கம் அமையும் வரையிலான, வரும் 2019-20 நிதியாண்டின் முதல் மூன்று மாதங்கள் வரை, அரசு நடத்துவதற்கான வரவு செலவு திட்டம் முன்வைக்க  மட்டுமே இந்த அரசுக்கு அதிகாரம் உண்டு. இதனை ஏற்று,  நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே சமர்ப்பிக்க உள்ளோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, பின்னர் அதை மீறி 2019-20 நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை மத்திய அரசின் சார்பாக பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் சமர்ப்பித்துள்ளார். நடப்பு ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திலும் மாற்றங்களை செய்துள்ளார். கொடுத்த வாக்குறுதிகளை மீறுவதும்  அவற்றை செயல்படுத்த மறுப்பதும் பாஜகவிற்குப் புதிதல்ல.

இருபெரும் பிரச்சினைகள்

இன்று இந்திய மக்கள் எதிர்கொள்ளும் இருபெரும் பொருளாதார பிரச்சினைகள் தொடரும் தீவிர வேளாண் நெருக்கடியும் கடுமையான வேலையின்மையும் ஆகும். இவை பற்றி பட்ஜெட் என்ன சொல்லுகிறது?

 கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜக செல்வாக்கு பரவலாக உள்ள சில வட இந்திய மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் இரு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய விவசாய சங்கம் எழுச்சிமிக்க மக்கள்திரள் போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள்  ஒன்றிணைந்து தில்லியில் வரலாறு காணாத பேரணியை நடத்தின. ஐந்து வட மாநிலங்களில் பாஜக அரசுகள் தூக்கி எறியப்பட்டன. விவசாயிகள் முன்வைத்த இருமுக்கிய கோரிக்கைகளில் ஒன்று கடன் ரத்து, மற்றொன்று வேளாண் விளைபொருட்களுக்கு பேராசிரியர் சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் பரிந்துரைத்த சூத்திரத்தின் அடிப்படையிலான விலையில் அரசு கொள்முதல்.

 கடன் ரத்து கோரிக்கையை மத்திய அரசு பட்ஜெட் உரை முற்றிலும் புறக்கணித்து உள்ளது. விளைபொருள் கொள்முதல் விலை பற்றி முற்றிலும் தவறான தகவலை பட்ஜெட் உரை முன்வைக்கிறது. விவசாயிகள் வெளிப்படையான செலவுடன் அவர்களது உழைப்புக்கு பணமதிப்பு கணக்கிட்டு, நிலவாடகைக்கும் கணக்கிட்டு, விவசாயிகள் போட்டுள்ள முதலுக்கான வட்டியையும் கணக்கிட்டு இவற்றை கூட்டி கிடைக்கும் தொகையுடன் அதில் பாதி அளவை சேர்த்து வரும் தொகை தான் சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைக்கும் கொள்முதல் விலை. இதை கொடுக்கிறோம் என்று 2014 தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் உச்சநீதி மன்றத்தில் இது இயலாது என்று அறிவித்தது பாஜக அரசு. பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளின் விவசாயப் பேரெழுச்சிக்குப்பின் சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரை அடிப்படையில் கொள்முதல் விலை கொடுத்துவிட்டோம் என்று பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும். உண்மையில் நிலவாடகை, முதலுக்கான வட்டி ஆகியவை அரசு சொல்லும் விலையில் இடம் பெறவில்லை.

இப்படி உண்மைகளை மறைத்துக்கொண்டே, இரண்டு  ஹெக்டேருக்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நேரடியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் நிதி அமைச்சர். நடப்பு ஆண்டில் இருந்தே இத்திட்டம் துவங்கும் என்றும் நடப்பு ஆண்டில் இதற்கென ரூபாய் 20,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இது விவசாயிகளுக்கு அரசு அளிக்கும் மாபெரும் வரம் என்ற பாணியில் ஆளும் கட்சி ஆசாமிகள் பிரச்சாரம் செய்கின்றனர். உண்மை என்ன? பயன்பெற தகுதியுள்ள குடும்பங்களை முதலில் எடுத்துக்கொள்வோம். ஆண்டுக்கு 6000 ரூபாய் என்றால் மாதம் 500 ரூ. தினசரி என்று பார்த்தால் ஒரு குடும்பத்திற்கு 17 ரூபாய்க்கும் குறைவு. ஐந்து உறுப்பினர் கொண்ட குடும்பத்திற்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 4 க்கும் குறைவு. இதையா விவசாயிகள் கேட்டார்கள்?

கட்டுபடியாகும் விளைபொருள் விலை, கடன் ரத்து, நிலச்சீர்திருத்தம், விவசாயத்தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்குதல், வேளாண் துறைக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், வேளாண் விரிவாக்க அமைப்பையும் ஆராய்ச்சி அமைப்பையும் வலுப்படுத்துவது  என்பதையெல்லாம் ஆட்சிக்காலம் முழுவதும் புறக்கணித்து விட்டு, விவசாயிகளை கேவலப்படுத்தும் வகையில் 2 ஹெக்டேர் மற்றும் அதற்குக் குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு நாளொன்றிற்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 3 சொச்சம் தரும் “திட்டத்தை” விவசாயிகளுக்கு வரப்ரசாதம் என்பதுபோல் பட்ஜெட்டில்  அறிவித்திருப்பது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் வகையில் அமைந்துள்ளது.

இதுமட்டுமல்ல. இந்த சலுகை கூட நிலத்தில் பாடுபடும் அனைவருக்கும் கிடைக்காது. குத்தகை விவசாயிகளுக்கு இத்தொகை கிடையாது. நில உடமையாளருக்குத்தான். மேலும் பாசனம் பெறும் நிலம் பாசனம், இல்லாத நிலம் என்று வேறுபடுத்தாமல் 2 ஹெக்டேர் என்ற வரம்பு போடப்பட்டுள்ளது. களத்தில் நில உடமை பதிவு ஆவணங்கள் முறையாக சமகாலப்படுத்தப்படாத நிலையில், திட்டத்தின் பயன் ஓரளவு நிலபலம் உள்ள பகுதியினருக்கே கிடைக்கும். ஏழை விவசாயிகளுக்கு மிகக்குறைந்த பயன் தான் இருக்கும். விவசாய நெருக்கடியின் கடுமையான தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் விவசாயத்தொழிலாளிகளுக்கு இத்திட்டம் எந்தவகையிலும் பயன் அளிக்காது.

ஏற்கெனவே மத்திய அரசின் திட்டத்தைவிட மேம்பட்ட பணப்பயன் அளிக்கும் திட்டங்களை தெலுங்கானா அமலாக்கி வருகிறது. ஒதிசா மாநில அரசும் தெலுங்கானா திட்டத்தைவிட பணப்பயன் குறைவு என்றாலும் மத்திய அரசைவிட அதிகமான பணப்பயன் தரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முதலாளித்துவ மாநில அரசுகளின் திட்டங்களும்  வேளாண் நெருக்கடிக்கு தீர்வுகாணும் தன்மையிலான திட்டங்கள்  அல்ல. எனினும்  மத்திய அரசின் அப்பட்டமாக அரசுபணத்தை பயன்படுத்தி தேர்தல் நெருக்கத்தில் வாக்குக்கு காசுதரும் தன்மையிலான லஞ்ச நடவடிக்கைபோன்று அவை இல்லை. 

வேலையின்மை பிரச்சினை

2௦14 தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடியும் பாஜகவும் மீண்டும் மீண்டும் கொடுத்த வாக்குறுதி ஆண்டுக்கு ஒருகோடிக்கும் அதிகமாக புதிய பணியிடங்களை உருவாக்குவது என்பதாகும். ஆனால் நிகழ்ந்துள்ளது என்ன?

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய அரசின் நிறுவனமான தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (National Sample Survey Organization-NSSO) ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, மிக அதிக எண்ணிக்கையில் குடும்பங்களை அறிவியல் பூர்வ அடிப்படையில் தேர்வு செய்து  தேச அளவில் வேலையில் உள்ளவர், வேலை தேடுவோர், உழைப்பு படையில் இல்லாதவர் என்று மக்களை வகைப்படுத்தி ஆய்வு செய்துவருகிறது. இதன்படி 2011-12 முழு ஆய்வு நடந்தது. பின்னர்  2016-17இல் நடந்திருக்கவேண்டும். ஆனால் அப்படி நடந்தால் மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பெரும் சேதம் வேலையின்மையை மிகக்கடுமையாக ஆக்கியிருப்பது அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில் மோடி அரசு அந்த ஆண்டில் ஆய்வு நடத்த அனுமதிக்கவில்லை. பின்னர் இந்த ஆய்வு 2௦17-18 ஆண்டை அடிப்படையாகக்கொண்டு தேசிய மாதிரி ஆய்வு அமைப்பால் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு ஜூலை 2018 முடிக்கப்பட்டு, அதன் அறிக்கை டிசம்பர் மாதம் சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வ குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் தொடர்ந்து இந்த அறிக்கையை வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை எதிர்த்து தேசிய புள்ளியியல் ஆணையத்தின் இரு உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர் என்பது ஊரறிந்த செய்தி. மத்திய அரசுக்கு இந்த அறிக்கையை வெளியிட விரும்பாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த அறிக்கை வேலையின்மை நிலைமை எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மோசமாகியுள்ளதை தெளிவாக்குகிறது. 1972-73 முதல் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு தொடர்ந்து நடத்திவந்துள்ள முழு சுற்று ஆய்வுகளில் (1972-73, 1977-78, 1983, 1987-88, 1993-94, 1999-2000, 2004-05, 2009-10, 2011-12, 2017-18) மிக அதிகமான வேலையின்மை விகிதம் 2017-18 சுற்றில் தான் நிகழ்ந்துள்ளது.

இங்கே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும். இந்திய நாட்டில் உழைப்பாளி மக்களுக்கு சமூக வாழ்வாதார பாதுகாப்பு மிகக் குறைவு. எனவே முழுமையாக  வேலை செய்யாமல் இருப்பவர்கள் குறைவாகவே இருப்பார்கள். (செல்வந்தர்கள் மட்டுமே வேலை செய்யாமல் வாழ முடியும்! ஏழைகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் அந்த வாய்ப்பு கிடையாது!!) ஏதோ ஒருவேலையில் (சுயவேலை, கூலிவேலை) – மிகக்குறைவான ஊதியமோ வருமானமோ கிடைத்தாலும் – இருந்தே ஆகவேண்டும். வேலையில்லா ஏழைகளுக்கு உணவு, உடை, உறைவிடம் எதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. எனவே ஆய்வுகளில் கிடைக்கும் வேலையின்மை விகிதம் உண்மையான வேலையின்மை அளவையும் மிகவும் குறைத்து மதிப்பிடுகிறது. வேலையில் இருப்பதாக கருதப்படுவோரின் மோசமான பணி நிலைமைகள் பற்றிய விவரங்களும் இத்தகைய ஆய்வுகளில் பெருமளவிற்கு கிடைப்பதில்லை. மேலும் இந்திய உழைப்புப்படையில் சரிபாதிக்கும் சற்று அதிகமானவர்கள் சுயவேலை செய்பவர்கள். இவர்கள் கணிசமான நேரம் வேலையின்றியே உள்ளனர். உதாரணமாக, இரண்டு ஏக்கர் அல்லது அதற்கு குறைவான நிலம் உள்ள விவசாயக் குடும்பத்தில்  உழைக்கும் வயதிலான  குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் வருடம் முழுவதும் வேலை இருக்க வாய்ப்பே இல்லை. பகுதிநேர வேலையின்மை என்பது – பொருளாதார அறிஞர்கள் இதனை ‘மறைமுக வேலையின்மை‘ என்று அழைக்கிறார்கள். – நமது நாட்டில் நிலவும் சமூக பொருளாதார அமைப்பின் ஒரு மிகப்பெரிய கேடு.  இதையெல்லாம் நாம் புரிந்து கொள்வது அவசியம் என்பது ஒருபுறம்.

மறுபுறம், அரசு வெளியிட மறுத்த தேசிய மாதிரி ஆய்வு 2௦17-18 அறிக்கை – ஊடகம் ஒன்றின் முயற்சியால் பொதுவெளிக்கு வந்துள்ள அறிக்கை – தரும் விவரமும் மிக முக்கியமானது. நமது நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் – பாஜக ஆட்சியில் – வேலையின்மை பிரச்சினை பூதாகாரமாக அதிகரித்துள்ளது என்பதை அறிக்கை விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. வேலையின்மை பற்றிய 2011-12 ஆய்வு விவரங்களையும் 2௦17-18 ஆய்வு விவரங்களையும் ஒப்பிட்டால் வேலையின்மை  மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று தெளிவாகத் தெரிகிறது.  தேசிய மாதிரிஆய்வு அமைப்பின் அறிக்கை மட்டுமல்ல. இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் ( Centre for Monitoring Indian Economy – CMIE) தரும் விவரங்களின்படி, நவம்பர் 2௦17 முதல் நவம்பர் 2௦18 வரையிலான ஒரு ஆண்டில் வேலையில் உள்ளவர் எண்ணிக்கை  ஒரு கோடியே பத்து லட்சம் குறைந்துள்ளது என்பது தெரிகிறது. எனவே வேலையின்மை பிரச்சினை பாஜக ஆட்சி அமலாக்கிவரும் கொள்கைகளால் மிகவும் கூர்மையாகியுள்ளது. இதில் பொதுவான தாராளமய கொள்கைகளின் தாக்கம் மட்டுமல்ல, பணமதிப்பிழப்பு நடவடிக்கையும்  மிகுந்த குழப்பங்களுடன் அவசரகோலமாக திணிக்கப்பட்ட  சேவை மற்றும் சரக்குவரி – ஜிஎஸ்டி – அமலாக்கமும் முக்கிய பங்கு ஆற்றியுள்ளன. இவ்விரு நடவடிக்கைகளும் பொதுவாக பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது மட்டுமின்றி குறிப்பாக விவசாயம், சிறு குறுதொழில்கள் உள்ளிட்ட முறைசாராத்துறைகளை பெரிதும் பாதித்துள்ளன. வேலையின்மையை கடுமையாக தீவிரப்படுத்தியுள்ளன.

தொடரும் மக்கள் விரோத வரி கொள்கை

மேலே விவரிக்கப்பட்டுள்ள இருபெரும் பிரச்சினைகளைப் பற்றி எந்த நடவடிக்கையையும் ஆலோசனைகளையும் பட்ஜெட் முன்வைக்கவில்லை. அதற்கு மாறாக தேர்தல் நோக்கிலான பட்ஜெட் முன்மொழிவையே நாம் காண்கிறோம். 12 கோடி விவசாயிகள் குடும்பங்களுக்கு நேரடி பணம் பட்டுவாடா என்பது அப்பட்டமாக மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கும் முயற்சி. அதேபோல் தான் தனிநபர் வருமான வரி தொடர்பான சலுகைகளும். இவற்றால் பயன் அடைவோருக்கு கிடைக்கும் பணப்பயன் குறைவாகவே இருக்கும். ஆனால் பேரோசையை இவை ஏற்படுத்தும் என்று பாஜக நம்புகிறது. இதிலும் தில்லுமுல்லு உள்ளது. 2௦14 தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தனிநபர் வருமான வரி வரம்பை ஆண்டுக்கு  3 லட்சம் என்பதிலிருந்து 5 லட்சம் ஆக்குவோம் என்று அருண் ஜெயிட்லி ட்வீட் செய்தார்.மேடைக்கு மேடை பேசினார். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் செய்யவில்லை. இந்த ஆண்டும் செய்யவில்லை. வருமானவரிக்கு உள்ளாகும் வருமானம் ஐந்துலட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் செலுத்தவேண்டிய வரிக்கு முழு  ரிபேட் அளிக்கப்படும் என்று மட்டுமே பட்ஜெட் முன்மொழிவு கூறுகிறது. வருமான வரி வரம்பு உயர்த்தப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க, தனிநபர் வருமான வரி தொடர்பான மாற்றங்களை இடைக்கால பட்ஜெட்டில்  கொண்டு வருவது என்பதே நெறிமுறைகளை மீறுவதாகும். இதில் மேலும் கவனிக்க வேண்டியது தனிநபர் வருமான வரி மற்றும் இதர நேர்முக வரி சலுகைகளால் அரசுக்கு ஏற்படும் வரி வருமான இழப்பு சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் என்று பட்ஜெட் விவரங்கள் தெரிவிக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களைப் பொருத்தவரையில் சென்ற பட்ஜெட்டிலேயே அவர்கள் மீதான வரிவிகிதம் குறைக்கப்பட்டுவிட்டது. வரிவிலக்கு ஷரத்துகள் தொடர்கின்றன. மேலும் சொத்துவரி பாஜக ஆட்சியால் முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது. வாரிசுவரி கிடையாது. மறுபுறம் பாஜக ஆட்சியில் ஆண்டு தோறும் மறைமுகவரிகள் ஏற்றப்பட்டுவந்துள்ளன. தனது முதல் நான்கு பட்ஜெட்டுகளில் கச்சா எண்ணய் மீதான  கலால் வரி உயர்வுகள் மூலம் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டைவிட கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. தனது ஐந்து பட்ஜெட்டுகளிலும் இந்த பட்ஜெட்டிலும் பாஜக தொடர்ந்து செல்வந்தர்கள் மீதான வரிச்சுமையை குறைத்து சராசரி உழைப்பாளி மக்கள் மீதான  வரிச்சுமையை உயர்த்தியுள்ளது. இந்தியாவில், மொத்த குடும்ப சொத்துமதிப்பில் மேல்மட்ட 1% குடும்பங்கள் கையில் 63% க்கும் அதிகமாக உள்ளது  என்ற விவரம் இந்தியாவில் நிலவும் பிரம்மாண்டமான சொத்து மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகளை நமக்கு உணர்த்துகிறது. இப்படிப்பட்ட நாட்டில் சொத்துவரியும் வாரிசுவரியும் இல்லை என்பது அரசின் கொள்கைகள் மீது செல்வந்தர்கள் செலுத்தும் செல்வாக்கை காட்டுகிறது. அதேபோல், தனி நபர் வரி வருமான விகிதம் (3௦% + சர்ச்சார்ஜ்) கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதான வரி விகிதத்தை விட அதிகமாக உள்ளது. ஆண்டுக்கு ரூபாய் 25௦ கோடிக்கு குறைவாக விற்பனை மதிப்பு கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வருமான வரிவிகிதம் 3௦% இல் இருந்து 25% ஆக சென்ற ஆண்டு பட்ஜெட்டில் ஆக்கப்பட்டது. ஆக, பெரும் செல்வந்தர்களும் பெரும் கம்பனிகளும் இந்திய அரசின் வரவு செலவு கொள்கை உட்பட அரசின் பொருளாதார கொள்கைகளை தீர்மானிக்கின்றனர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

பட்ஜெட்டின் ஒதுக்கீடுகள்

விவசாயிகளுக்கும் ஏழை மக்களுக்கும் வாரி வழங்கி விட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மத்திய அரசின் மக்கள் நலன் சார்ந்த துறைகளுக்கும் திட்டங்களுக்குமான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படவில்லை. மொத்த பட்ஜெட்டில் தொடர்ந்து சொற்பமாகவே அவை உள்ளன. கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கு மிகவும் அவசியமான, வேலை பெறுவதை சட்ட பூர்வ உரிமையாக்கிய வேலை உறுதி சட்டத்தின் அடிப்படையில் மன்ரேகா அல்லது ரேகா அல்லது நூறுநாள் திட்டம் என்று அழைக்கப்படும் ஊரக வேலை உறுதி திட்டம் 2௦௦6 இல் இருந்து அமலில் உள்ளது. இடதுசாரி இயக்கங்களும் சில சிவில் சமூக அமைப்புகளும் முதலாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கொடுத்த நிர்ப்பந்தத்தினால் தான் ரேகா சட்டம் வந்தது. இச்சட்டத்தின்படி விருப்பம் தெரிவிக்கின்ற ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஒரு ஆண்டில் 1௦௦ நாட்கள் வேலையை அரசு கொடுக்கவேண்டும். இதன்மூலம் கிராமப்புற ஏழை உழைப்பாளி மக்களுக்கு வேலையும் அதன் மூலம் வருமானமும் கிடைக்கும். ரேகா பணிகள் மூலம் கிராமங்களில் பாசனம் உள்ளிட்ட உற்பத்தி சொத்துக்கள் உருவாக்கப்படும். இந்த அருமையான திட்டத்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக அரசு சின்னாபின்னமாக்கி அழிக்க முற்பட்டுவருகிறது. வேலை நாட்களை குறைத்துள்ளது. நிதி ஒதுக்கீடுகளை கடுமையாக வெட்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, நடப்பு நிதி ஆண்டில் ரேகாவிற்கான ஒதுக்கீடு (திருத்தப்பட்ட மதிப்பீடு) 61,௦84 கோடி ரூபாய். ஆனால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் வரும் நிதி ஆண்டிற்கு ரேகாவிற்கு ரூ 6௦,௦௦௦ கோடி தான் ஒதுக்கியுள்ளது. துவக்கத்தில் இருந்த மாதிரி ரேகா திட்டத்திற்கு பொருத்தமான ஒதுக்கீடு செய்வதாக இருந்தால் அது இத்தொகையைப்போல் இரண்டு மடங்கு இருக்க வேண்டும். ரேகாவில் உழைத்துள்ள மக்களுக்கு வர வேண்டிய கூலி பாக்கித்தொகை பல ஆயிரம் கோடி ரூபாய்களை தாண்டிவிட்டது. உண்மையில், பாஜக அரசு இந்த திட்டத்தை மூடி விடும் நோக்கில் உள்ளது.  ஊரக உழைப்பாளி மக்களின் கடும் களப்போராட்டங்கள் நடத்தி இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டை பெரிதும் உயர்த்துவது அவசியம். ரேகா திட்டத்தில் பயன்பெறுவோரில் கணிசமானவர்கள் சிறு குறு விவசாயிகள், குறிப்பாக பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேறுபல மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கும் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது அல்லது மிகவும் சொற்ப அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. ஆரோக்கியம் மற்றும் கல்வித் துறை சார்ந்த திட்டங்களின் ஒதுக்கீடுகளில் நாம் இதைக்காண முடிகிறது. கடந்த ஆண்டும் மொத்த திருத்தப்பட்ட மதிப்பீடை விட மிகவும் சொற்பமாகவே வரும் ஆண்டுக்கான அரசின் ஒதுக்கீடுகள் உயர்த்தப்பட்டுள்ளன. விவசாயிகளின் வாக்குகளை குறிவைத்து நேரடி பண பட்டுவாடா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ 20,000 கோடி ரூ என்பதன் பெரும்பகுதி இவ்வாறு பிற திட்டங்களை வெட்டி கணக்கில் வந்துள்ளது.

வளங்களை திரட்டுதல்

  ஒருபட்ஜெட்டின் முக்கிய அம்சம் மக்கள் நலனுக்காக வகுக்கப்படும் திட்டங்களுக்கு உரிய ஒதுக்கீடுகளை செய்திட பொருத்தமான முறையில் அரசு வளங்களை திரட்ட வேண்டும் என்பதாகும். ஆனால் நாம் பாஜக அரசு பெரும் கம்பனிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் தொடர்ந்து வருமான வரிச்சலுகைகள் அளித்துவருவதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். இந்த ஆண்டும் செல்வந்தர்களிடம் இருந்தோ பெரும் கம்பனிகளிடம் இருந்தோ வளர்ச்சிக்கான வளங்களை திரட்டும் எந்த முயற்சியும் இல்லை. மாறாக வருமான வரி தொடர்பாக அறிவி க்கப்பட்டுள்ள சலுகைகளால் அரசுக்கு  சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி இழப்பு ஏற்படும் என்று பட்ஜெட் உரை கூறுகிறது என்பதை நாம் ஏற்கெனவே குறிப்பிட்டோம். ஜிஎஸ்டியின் கீழ் மத்திய பட்ஜெட் மூலமாக மறைமுக வரிகளை உயர்த்துவது சாத்தியமில்லை என்பதாலும் தேர்தல் நெருக்கத்தில் இருப்பதாலும் கொடுத்தல் வரிவிதிப்பு முயற்சிகள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இல்லை. எனினும் பல மானியங்கள் வெட்டப்பட்டுள்ளன அல்லது தேவைக்கு மிகக்குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளன. இது தவிர, வரி இழப்பாலும் தேர்தல் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்களாலும் அரசுக்கு  ஏற்படும்  வருமான இழப்பை எதிர்கொள்ள பாஜக அரசு தொடர்ந்து அரசு கடைப்பிடிக்கும் முக்கிய தந்திரம் பொதுத்துறை சொத்துக்களை விற்பதாகும். 2017-18 இல் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளது. இது பட்ஜெட்டில் சொல்லப்பட்டதைவிட 25௦௦௦ கோடி ரூ கூடுதல் ஆகும்.   2018-19 இல் இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன்மூலம் 80,000ரூ திரட்டப்பட்டுள்ளதாக பட்ஜெட் ஆவனங்கள் கூறுகின்றன. 2019-20 இல் ரூ 90,000 கோடி அளவிற்கு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்படும் என்று பட்ஜெட் உரை கூறுகிறது. இது தாராளமய கொள்கைகளின் மிக மோசமான அம்சங்களில் ஒன்று. மக்கள் சொத்தை படிப்படியாக  தனது நண்பர்களுக்கு தாரை வார்க்கும் ஏற்பாட்டை தான் மோடி அரசு அரங்கேற்றி வருகிறது. தற்சமயம் தனியார் நிறுவனங்கள் பொதுத்துறை பங்குகளை வாங்கும் நிலையில் இல்லை. எனவே மோடி அரசு  பொதுத்துறை நிறுவனங்களான  LIC, ONGC போன்ற நிறுவனங்களை நிர்ப்பந்தப்படுத்தி  அரசு விற்கும் பங்குகளை வாங்க வைக்கிறது. அரசின் தாராளமய கொள்கைகளால் இந்தப்பங்குகளின் மதிப்பு எதிர்காலத்தில் சரியும்பொழுது நட்டமடைவது இத்தகைய பொதுத்துறை நிறுவனங்களே. படிப்படியாக அவற்றையும் தனியாருக்கு தாரை வார்க்கும் பாதையில் தான் தாராளமய அரசுகள் பயணிக்கும். இதைத்தான் மோடி அரசு செய்துவருகிறது.

இப்படியெல்லாம் கணக்கு காட்டுவதில் பல ஜால வித்தைகள் செய்தாலும் அரசின் பிஸ்கல் பற்றாக்குறை இலக்கை மீறியுள்ளது. பிஸ்கல் பற்றாக்குறை என்பது அரசின் மொத்த செலவில் இருந்து கடன் அல்லாத வரவுகளை கழித்தால் கிடைக்கும் தொகை. இது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில்  3% க்குக் குறைவாக இருக்கவேண்டும் நமது நாட்டில் ஒரு அபத்தமான சட்டம் உள்ளது. அந்த இலக்கை நோக்கி பயணிக்க மக்கள் நலன் சார்ந்த செலவுகளையும் மக்களுக்கான மானியங்களையும் அரசு தொடர்ந்து வெட்டி வருகிறது. கார்ப்பரேட்டுகள் மீதும் செல்வந்தர்களின் மீதும் உரிய வரிவிதித்து அதனை வசூல் செய்தாலே பற்றாக்குறை குறைந்துவிடும். ஆனால் அப்படி செய்தால் கார்ப்பரேட்டுகளும் முதலீட்டாளர்களும் ஊக்கம் இழந்து கடைகளை மூடிவிடுவார்கள் என்ற மிரட்டலின்கீழ் இன்று செல்வந்தர்கள் மென்மையாக அணுகப்படுகின்றனர், மறுபுறம் மக்கள் வாட்டப்படுகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளிவைக்க நாட்டிற்கு தேவை தலைவர்களை மாற்றுவது அல்ல. கொள்கைகளை மாற்றுவதாகும்.

இறுதியாக

பட்ஜெட் புள்ளிவிவரங்களையும் அரசு தரும் விவரங்களையும் வைத்துதான் நாம் பலவிஷயங்களைப்பேச வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த புள்ளிவிவரங்களின் நமபகத்தன்மை தொடர்ந்து சரிந்து வருகிறது. இது பாஜக ஆட்சியின் “சிறப்பு சாதனை”. எடுத்துக்காட்டாக, 2016-17ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சிவிகிதம் 7.1% என்று அரசு முன்பு கூறியது. இது அதன் முந்தைய ஆண்டின் வளர்ச்சி விகிதத்தில் இருந்து ஒரு சரிவைக் காட்டியது. நிபுணர்கள் அனைவருமே இந்த சரிவு  மோடியின் நவம்பர் 2016  செல்லாக்காசு நடவடிக்கையால் தான் என்று ஒருமனதாக கூறினார். ஆனால் அரசு அதனை ஏற்க தயாராக இல்லை. எனினும் அன்றைக்கு அதிகார பூர்வமாக வளர்ச்சிவிகிதம் 7.1% என்றே பதிவாகியது. இப்பொழுது தேர்தல் நெருங்கும் வேலையில் செல்லாக்காசு நடவடிக்கையை நியாயப்படுத்தும் கதையாடலின் பகுதியாக 2016-17ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சிவிகிதம்   8.2% என்று அறிவிக்கப்பட்டுள்ளது! வேலையின்மை தொடர்பான அறிக்கையை வெளியிட மறுத்ததும் இதனால் தான். பல சட்டபூர்வமான அமைப்புகளை நாசப்படுத்திவரும் மோடி அரசின் அந்நடவடிக்கைகளின் வரிசையில் புள்ளியியல் நிறுவனமும் சிக்கியுள்ளது. பட்ஜெட் பற்றிப்பேசும் பொழுது இவற்றை எல்லாமும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

வரும் வாரங்களில், நாட்களில் பட்ஜெட் பற்றிய அரசின் பிரச்சாரமும் கதையாடலும் மேலும் மேலும் பொய்களின் தொகுப்பாக உலாவரும். இதனை உண்மைகளின் அடிப்படையிலான நமது பிரச்சாரத்தால் நாம் முறியடிக்க வேண்டும். இது நம்முன் உள்ள முக்கிய அரசியல் கடமையாகும்.

ஒப்பனை பட்ஜெட் 2017 – 2018 (மத்திய பட்ஜெட் குறித்து)

 

வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

2017 பிப்ரவரி 1 அன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெயிட்லி தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட் இரண்டு வகையில் ‘புதுமையானது’ என்று பேசப்பட்டது. ஒன்று, பிப்ரவரி இறுதிநாள் வழக்கமாக தாக்கல் செய்துவரப்பட்ட மத்திய பட்ஜெட் இந்த ஆண்டு பிப்ரவரி முதல நாளில் தாக்கலானது. இரண்டு, ரயில்வே துறைக்கு கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து விவாதிக்கப்பட்ட முறையை மாற்றி, இந்த ஆண்டு தனி ரயில்வே பட்ஜெட் கைவிடப்பட்டு, ரயில்வே தொடர்பான வரவு செலவு விவரங்கள் பொது பட்ஜெட்டின் பகுதியாகவே இடம் பெற்றன. இவ்விரு மத்திய அரசு முடிவுகளுமே சர்ச்சைக்கு உரியவை.

முதலாவதாக, இந்தியாவின் அனைத்துப்பகுதிகளையும் இணைக்கும் ரயில்வே துறை பிற துறைகளைப் போல் பார்க்கப்படுவது சரியல்ல. நாட்டின் பாதுகாப்ப்புக்கும் ஒற்றுமைக்கும் மிக முக்கிய பங்காற்றும் துறை ரயில்வே. இந்திய நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிக முக்கியமான சேவையை சகாய விலையில் அளித்துவரும் துறை.   மேலும் கணிசமான அளவில் வரவு-செலவு கொண்ட துறை. இத்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கலும் தனி விவாதமும் பயனளித்திருக்கும். ஆனால் அரசு ஏன் துறையில் பணியாற்றும் உழைப்பாளி மக்களின் கருத்துக்களையோ, ரயில்வே சேவையை பயன்படுத்தும் சாதாரண மக்களின் கருத்துக்களையோ கேட்காமல், பொருட்படுத்தாமல், இந்த முடிவை எடுத்தது?  காரணம் இது தான்: இரயில்வே பட்ஜட்டை பொதுபட்ஜட்டின் பகுதியாக ஆக்குவது ரயில்வே துறையை தனியார் மயமாக்குவது என்ற திட்டத்தின் பகுதியாகவே அமைகிறது.

இரண்டாவதாக, மத்திய பட்ஜட்டை பிப்ரவரி முதல் நாள் சமர்ப்பிப்பதால், வரும் ஆண்டிற்கான வரவு-செலவு முன்மொழிவுகளில் தரப்பட்டுள்ள விவரங்களின் தயாரிப்பில் அனுமானங்கள் கூடுதல் பங்கு வகிக்கின்றன. ஏனெனில், தற்சமயம், நடப்பு நிதி ஆண்டான 2016-17இல் இந்தியப் பொருளாதாரத்தின் முதல் ஆறு மாதங்களுக்கான செயல்பாடு பற்றிய விவரங்கள் தான் அரசிடம் உள்ளது. எனவே மொத்த ஆண்டிற்கான விவரங்கள் ஊக அடிப்படையில் தான் இடம் பெரும் நிலை ஏற்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசு நிதித்துறையின் ஆவணமான பொருளாதார ஆய்வறிக்கை நடப்பு ஆண்டு வளர்ச்சி, வரி வசூல் உள்ளிட்ட பல அம்சங்களில் போதுமான தரவுகள் இன்றி எழுதப்பட்டுள்ளதும் இதனால் தான்.

பட்ஜெட் எதிர்கொள்ளும் சூழல்

பட்ஜெட் என்பது அரசு பயன்படுத்தும் பல பொருளாதார ஆயுதங்களில் ஒன்று தான். அவ்வப்பொழுது வேறு பல புதிய கொள்கைகளையும் பொருளாதார நடவடிக்கைகளையும் அரசு கையாளுகிறது. மேலும், நமது நாட்டில் நிலவும் பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் கொண்டால், அரசின் பொருளாதார நடவடிக்கைகளை நிர்ணயம் செய்வதில் செல்வந்தர்களுக்கும் இந்நாட்டு, பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கும் அதிகமான செல்வாக்கும் பங்கும் உண்டு என்பது புரியும்.

அடுத்து, மத்திய அரசின் பட்ஜெட் சூன்யத்தில் போடப்படுவது அல்ல. குறிப்பிட்ட பன்னாட்டு, இந்நாட்டு பொருளாதார சூழலில் பட்ஜெட் உருவாக்கப்பட்டு முன்மொழியப்படுகிறது. தாராளமய கொள்கைகளின்  தீவிரமாக அமலாக்கம் 1991இல் துவங்கிய பொழுது நமது நாட்டின் ஏற்றுமதி மதிப்பையும் இறக்குமதி மதிப்பையும் கூட்டி தேச உற்பத்தி மதிப்பால் வகுத்தால் அத்தொகை 14% ஆகத்தான் இருந்தது. இப்பொழுது அத்தொகை 50 % ஐயும் தாண்டி விட்டது. மேலும் நமது நாட்டுக்குள் அந்நிய நிதி மூலதனம் வருவதும் வெளியே செல்வதும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் வருகையும் செல்கையும் பன்னாட்டு சூழலை பெருமளவிற்கு சார்ந்ததாக உள்ளது. எனவே முந்தைய காலங்களைப் போல் இல்லாமல், இப்பொழுது பட்ஜெட்டின் தன்மையை நிர்ணயிப்பதில் பன்னாட்டு பொருளாதார அரசியல் சூழலின் பங்கு கூடியுள்ளது.

தற்சமயம், கடந்த ஒன்பது ஆண்டுகளாக உலக முதலாளித்தவ அமைப்பில் நிலவும் பொருளாதார மந்த நிலை தொடர்கிறது. உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும் சூழலில் சிறிது முன்னேற்றம் ஏற்படலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள போதிலும் இது நடப்பது நிச்சயமல்ல. மொத்தத்தில், பன்னாட்டு சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு நமது நாட்டின் சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதி மதிப்பு கூடுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. அதுமட்டுமின்றி கச்சா எண்ணய் விலை நீண்டகாலம் சரிந்து வந்த நிலை மாறி மீண்டும் உயரத்தொடங்கிவிட்டது. இது நமது இறக்குமதி செலவுகளை உயர்த்தவும் உள்நாட்டில் விலை உயர்வை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதி ஆகியுல்லதும் நமது அந்நிய செலாவணி ஈட்டலுக்கு சிக்கலை உண்டாக்கக்கூடும். இவற்றை எல்லாம் கணக்கில் கொள்வதோடு நடப்பு ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் எந்த நிலையில் உள்ளது என்பதையும் கணக்கில் கொண்டு பட்ஜெட் மதிப்பீடு செய்யப்படவேண்டும்.

பொருளாதார ஆய்வறிக்கை

மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை நடப்பு ஆண்டின் வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் முன்வைக்கப்பட்ட 7.6 % இலக்கை விட 1.1 % வரை குறையக்கூடும் என்றும், அது 6.5 – 6.75% என்ற அளவில் இருக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது. மேலும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதையும் அறிக்கை பதிவு செய்கிறது. இருந்தாலும் அரசு ஆவணம் என்ற வகையில் நீண்ட காலப்பார்வையில் சில நன்மைகள் ஏற்படலாம் என்றும் அது கூறுகிறது. ஆனால் அவை ஏற்படுமா என்பதை அறுதியிட்டு சொல்ல இயலாது என்பதையும் ஒத்துக்கொள்ளுகிறது. எனினும் குறைவான தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள அறிக்கை பொதுவாக நடப்பு ஆண்டு பொருளாதார நிலைமை பற்றி உற்சாகமூட்டுவதாக பேசவில்லை. அதேசமயம் தாராளமய அணுகுமுறையைப் பற்றி நின்று அரசின் வரி கொள்கைகள் மற்றும் ஒதுக்கீட்டு தேவைகள் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அரசின் செலவுகள் கட்டுப்படுத்தப்படவேண்டும், வரவு-செலவு பற்றாக்குறை தொடர்ந்து இதன்மூலம் குறைக்கப்படவேண்டும் என்ற சிக்கன நடவடிக்கை அணுகுமுறையை அறிக்கை பொதுவாக தழுவி நிற்கிறது.

பட்ஜெட்டின் உள்ளடக்கம்

மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தைக் கூற வேண்டியுள்ளது: பட்ஜெட் உரை வேறு, பட்ஜெட் வேறு! மூன்றில் இரண்டு பகுதி மக்கள் கிராமங்களில் வாழும், ஏழை மக்கள் நிறைந்த முதலாளித்வ இந்தியாவில் நிதி அமைச்சர் உரை வேளாண்மை பற்றியும் ஊரக வளர்ச்சி பற்றியும் விவசாயிகள் பற்றியும், ஏழ்மை பற்றியும் ஏழை எளிய மக்கள் பற்றியும் தேன் ஒழுகப் பேசும். ஆனால், நிதி ஒதுக்கீடுகள், வளங்களை திரட்டும் வழிகள் ஆகியவை பெரும் பணமுதலைகளுக்கு சாதகமாகவும் ஏழை மற்றும் உழைப்பாளி  மக்களுக்கு எதிராகவே அமையும். ஜைட்லியின் 2017-18 பட்ஜெட் இதே பாணியில் தான் அமைந்துள்ளது.

இந்த பட்ஜெட் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்தியுள்ள பெரும் பொருளாதார நாசத்தின் பின்னணியில் முன்மொழியப்படும் பட்ஜெட். ஆனால் தனது உரையில் நிதி அமைச்சர் இந்த நாசகர நடவடிக்கையை மிகவும் சிலாகித்து பேசியுள்ளார். இதற்கு நேர் மாறாக உண்மைகள் உள்ளன என்பதை அமைச்சரின் துறையே தந்துள்ள மத்திய அரசு பொருளாதார ஆய்வறிக்கையால் கூட மறைக்க முடியவில்லை. தன் பணம் எடுக்க வரிசையில் நின்றவர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், ரொக்கம் இல்லாததால் சிகிச்சை பெற இயலாமல் இறந்தவர்கள், படிப்பை தொடர முடியாமல் போன மாணவர்கள் என்று இந்த நடவடிக்கையால் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் உயிர் இழந்துள்ளனர். விவசாயம் நிலைகுலைந்துள்ளது. அறுவடை செய்த தானியத்தை விற்க இயலாமலும், விற்றிருந்தால் பழைய நோட்டுகளை வைத்து சகுபடிவேலைகளை துவக்க முடியாமலும் வட நாட்டின் பல மாநிலங்களில் விவசாயிகள் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். ஏராளமான சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. எண்ணற்ற கூலிதொழிலாளிகள் வேலை இழந்தாது, அதில் புலம் பெயர்ந்து வந்தவர்கள் தட்டித்தடுமாறி சொந்த ஊர் சென்றது உள்ளிட்ட கொடுமைகள் அரங்கேறியுள்ளன. பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. கடும் கிராக்கி சரிவு ஏற்பட்டுள்ளது. இதோடு நாட்டின் தென் பகுதிகளில் கடும் வறட்சியும் நிலவுகிறது. இத்தகைய சூழலில் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது?

கிராக்கியை தூக்கி நிறுத்த பட்ஜெட் அரசின் ஒதுக்கீடுகளையும் முதலீடுகளையும் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. செல்லாக்காசு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், சிறு குறு தொழில்முனைவோர், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள கூலி தொழிலாளிகள் ஆகியோருக்கு நிவாரணம் வழங்கும் என்றும் நியாயமாக எதிர்பார்க்கப்பட்டது. விவசாயிகளுக்கு கடன் ரத்து, சிறு குறுதொழில்களுக்கு வரிச்சலுகைகள், செல்லாக்காசு நடவடிக்கையால் இறந்தவர் குடும்பங்களுக்கும் வேலை இழந்தவர்களுக்கும் நட்ட ஈடு உள்ளிட்டு எந்த நிவாரணத்தையும் பட்ஜெட் வழங்கவில்லை. இரண்டு மாத வட்டி கழிவு, சிறு நடுத்தர தொழில்கள் தொடர்பாக் அறிவிக்கப்பட்டுள்ள வரி சலுகை ஆகியவை மிகக்குறைவான அளவு நிவாரணம் ஆகும். சம்பளம் வாங்கும் உழைப்பாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறு அளவிலான வருமான வரி சலுகைகள் கண்துடைப்பு தான். ஏனெனில், மறைமுக வரிகள் கடுமையாக கடந்த ஆண்டில் உயர்ந்துள்ளன.

ஒதுக்கீடுகள்

ஒரு பட்ஜெட்டின் மையமான அம்சங்கள் வரவு மற்றும் செலவு விவரங்கள் தான். முதலில் செலவு – அதாவது, ஒதுக்கீடுகள் – பற்றி பார்ப்போம்.

2016-17 ஆண்டில் மத்திய அரசின் மொத்த செலவு திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ20 லட்சம் கோடிக்கு சற்று அதிகம். வரும் ஆண்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீடு கிட்டத்தட்ட  ரூ21.5 லட்சம் கோடி. இது 5% உயர்வுதான். பணவீக்கத்தைகூட ஈடுகட்டாது. நடப்பு ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 13.4% ஆக இருந்த மத்திய அரசின் த்த செலவு வரம் ஆண்டில் 12.7% ஆகக்குறைய உள்ளது. கிராக்கியை மேம்படுத்த வேண்டிய சூழலில் அரசின் ஒதுக்கீடு பொருத்தமானது அல்ல. கிராக்கியை உயர்த்தி பொருளாதாரத்தில் மீட்சி கண்டிட உதவாது.

துறைவாரி ஒதுக்கீடுகள் பற்றிய விவரங்கள் விவசாயத்தையும் கிராமங்களையும் மையப்படுத்தி பட்ஜேட் அமைந்துள்ளது என்ற நிதி அமைச்சரின் வாதத்திற்கு எதிராகவே உள்ளன. வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளுக்கான மொத்த ஒதுக்கீடு ரூ 167,768  கோடியில் (2016-17 திருத்தப்பட்ட மதிப்பீடு) இருந்து ரூ 187,223 கோடியாக இந்த பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது. இது சொற்பமே. கல்வி மற்றும் ஆரோக்கிய துறைகளுக்கான ஒதுக்கீடு ரூ 114,806 கோடியில் இருந்து ரூ 130,215 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே இத்துறைகளுக்கான ஒதுக்கீடுகள் மிகச்சொற்பம் என்பதால் இதையும் குறிப்பிடத்தக்க உயர்வாக கருத முடியாது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரு மிகப்பெரிய பாதிப்பு முறைசாரா துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும் அதனால் பல லட்சக்கணக்கான வேலைகள் இழக்கப்பட்டதும் ஆகும். இந்த பட்ஜெட்டில் குறிப்பாக வேலை இழப்பு பிரச்சினை கணக்கில் கொள்ளப்பட்டு வேலைகளை உருவாக்குவதற்கு மிகக் கூடுதலான ஒதுக்கீடு செய்யபட்டிருக்க வேண்டும். ஆனால், கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கான மத்திய அரசின் ஒதுக்கீடு 2016-17 திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ 47,499 கோடியில் இருந்து ரூ   48,000 கோடியாக மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இத்தொகை குறைந்தபட்சம் இரட்டிப்பாக்கப் பட்டிருக்கவேண்டும். இங்கு இன்னொருசெய்தியையும் சொல்ல வேண்டும். ஆண்டுக்கு 1 கோடிப்பேருக்கும் அதிகமானோர் நமது உழைப்பு படைக்குள் வருகின்றனர். ஆனால் கடந்த ஆண்டில் 1,35,௦௦௦ பணியிடங்களைத்தான் நமது பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்திக் கொடுத்தது. இத்தகைய சூழலில் பட்ஜெட் ஒதுக்கீடுகள் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.இதைப் பற்றி பட்ஜெட்டில் கவனம் ஏதும் இல்லை.

மத்திய பட்ஜெட்டில் மொத்த ஒதுக்கீட்டில் பழங்குடி மக்களுக்கு 1.48   % ம் தலித் மக்களுக்கு 2.44 % ம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் இப்பிரிவினர்களின் பங்குகளை விட இவை மிகக் குறைவு ஆகும். அதேபோல், பாலின அடிப்படையில் பார்த்தால் பெண்களுக்கான ஒதுக்கீடு 5.3 % என்ற அளவில் தான் உள்ளது.

கட்டமைப்புகளுக்கான மொத்த மூலதன  ஒதுக்கீடும் ஜி டி பி யின் பங்கு என்ற அடிப்படையில் கணக்கிட்டால் சிறிதளவு குறைந்துள்ளது. விவசாயிகளின் தலா வருமானத்தை ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவோம் என்ற அரசின் முழக்கம் பட்ஜெட் ஒதுக்கீடுகளில் பிரதிபலிக்கவில்லை என்பதையும் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

வங்கிகள் மூலம் விவசாயத்திற்கு பத்து லட்சம் கோடி ரூபாய் கடன் தர இலக்கு முன்வைக்கப்பட்டாலும், இது நடக்குமா என்பது சந்தேகமே. மேலும் இது விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வும் அல்ல. பெரும் கம்பனிகளின் வாராக்கடனில் ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடிக்கு மேல் திரும்பாது என்று கணக்கு எழுதப்பட்டுள்ள நிலையில் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் விவசாயிகளுக்கு கடன் ரத்து இல்லை என்பது வேதனைக்குரியது.

பட்ஜெட்டின் வரி விதிப்பு முன்மொழிவுகள் 

பா ஜ க அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து செவந்தர்களுக்கு வரி சலுகைகளை கொடுத்துவருகிறது. இதனால் ஏற்படும் வரி இழப்பை சரி செய்ய மறைமுக வரிகளை – சரக்குகள் மற்றும் சேவைகள் மீதான வரிகளை – அதிலும் குறிப்பாக கலால் (எக்சைஸ்) வரிகளை உயர்த்திக்கொண்டே  வருகிறது. சொத்து வரியை அறவே ரத்து செய்து விட்டது. சொத்து மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகள் இமயமலை அளவிற்கு அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கைகள் அரசின் வர்க்கத்தன்மையை தெளிவு படுத்துகின்றன. இந்த ஆண்டும் அதே கதை தான் . பட்ஜெட் அளித்துள்ள நேர்முக வரி சலுகைகளால் அரசுக்கு 2௦ ஆயிரம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். பட்ஜெட் விவரங்களை ஆராய்ந்தால், இந்த மறைமுக வரிச்சுமை எழுபத்தி ஐயாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும் என்று அரசு எதிர்பார்ப்பது தெரிகிறது. கலால் வரிகளை தொடர்ந்து உயர்த்தி வருவதை அரசின் புள்ளிவிவரங்களே தெளிவுபடுத்துகின்றன. எக்சைஸ் வரி வசூல் 2015- 16 இல் இரண்டு லட்சத்து எண்பத்தி எட்டாயிரம் கோடி ரூபாய். நடப்பு (2016-17) ஆண்டில் இது மூன்று லட்சத்தி எண்பத்தேழு ஆயிரம் கோடி ரூபாயாக கிட்டத்தட்ட ஒருலட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.  பட்ஜெட் மதிப்பீடு மூன்று லட்சத்து பதிநெட்டாயிரம் கோடி என்று சென்ற ஆண்டு இது முன்மொழியப்பட்டு அதைவிட கூடுதலாக எழுபது ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அனைத்து உழைப்பாளி மக்களையும் தாக்கும் பெட்ரோல் டீசல் விலையுயர்வுகள் கலால் வரி உயர்வு  மூலம் இவ்வாறு நிகழ்கிறது.  இத்தகைய பட்ஜட்டைக்காட்டிலும் கூடுதல் கலால் வரி  வசூல் என்பது கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட அறுபது ஆயிரம் கோடி ரூபாய். நடப்பு ஆண்டில் எழுபதாயிரம் கோடி ரூபாய். இந்த கண்ணுக்குத்தெரியாத வரிக்கொள்ளையை மறைக்க குறைந்த வருமான வரி செலுத்தும் ஐந்து லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் பெறுவோருக்கு கண்துடைப்பாக சில நேர்முக வரிச்சலுகைகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

2017-18 பட்ஜெட்டில் 1.3 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக வருமான வரி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகவும் மிகையான எதிர்பார்ப்பு. செல்லாக்க் காசு நடவடிக்கையால் எதிர்காலத்தில் வரி ஏய்ப்பு குறைந்துவிடும் என்று அரசு கற்பனையில் மிதக்கிறது. அனைத்துப்பழய செல்லா நோட்டுகளும் வங்கிகளுக்குள் வந்துள்ள நிலையில் வைக்கப்போரில் ஊசி தேடும் பணியில் அரசு இறங்கியுள்ளது. இது ஏராளமான சிறு நடுத்தர மக்களை துன்புறுத்த உதவும். பெரும் கம்பனி கொள்ளையர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள். மக்கள் பணம் வங்கிகளுக்குள் வந்துள்ள நிலையில் இனி குறைந்த வட்டியில் வங்கிகள் கடன் கொடுக்க இயலும் என்ற தவறான கருத்தை பட்ஜெட் உரையில் அமைச்சர் முன்வைத்துள்ளார். வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பது தொடர்பான நிபந்தனைகள் நீங்கிவிட்டால் மக்கள் பணத்தை வெளியே எடுப்பார்கள். எனவே இந்த பணத்தை வைத்து  கடன் வழங்குவது சாத்தியமல்ல. இன்னும் சொல்லப்போனால் அரசின் செல்லாக்காசு நடவடிக்கை வங்கிகள் மீதான நம்பிக்கையை தகர்த்துள்ள நிலையில் ரொக்கம் கைவசம் வைத்துக்கொள்ளப்படுவது கூடலாம்.

இந்த பட்ஜெட் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வரிச்சலுகை அளித்துள்ளது. ஆனால் இச்சலுகை ஒரு ரியல் எஸ்டேட் குமுழியை வேண்டுமானால் உருவாக்கலாம். உண்மையான வளர்ச்சிக்கு உதவாது.

அரசியல் கட்சிகளுக்கு பெருமுதலாளிகள் அளிக்கும் நன்கொடைகளை நியாயப்படுத்தும் நடவடிக்கையிலும் நிதி அமைச்சர் தேர்தல் நிதி தொடர்பான தனது பட்ஜெட் முன்மொழிவுகளில் இறங்கியுள்ளார். இதுவும் கருப்பு பணத்தை ஒழிக்க உதவாது.

மொத்தத்தில் இந்த பட்ஜெட்டின் பின் உள்ள பொருளாதார தத்துவம் நாட்டு வளர்ச்சியில் அரசு ஆற்ற வேண்டிய முக்கிய பங்கை மறுக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கும் செல்வந்தர்களுக்கும் வரிசலுகை அளித்து ஒக்குவித்து மட்டுமே முதலீடுகளை அதிகப்படுத்தி வளர்ச்சியை அடைய முடியும் என்று கருதுகிறது. அரசின் வரவு செலவு பற்றாக்குறையையை செலவுகளைக் கட்டுப்படுத்தி மட்டுமே  குறைக்க வேண்டும் என்றும் கருதுகிறது. பன்னாட்டு நிதி மூலதனம் தங்கு தடையின்றி நாட்டுக்குள்ளே வருவதும் வெளியே செல்வதும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் செலவு குறைப்பு நடவடிக்கை தான் அரசின் தந்திரமாகி விட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் அதையே பிரதிபலிக்கிறது. நாடும் மக்களும் எதிர்கொள்ளும் கடும் பிரச்சனைகளை இந்த பட்ஜெட் தீர்க்க உதவாது. மாறாக, தீவிரப்படுத்தும்.

முன்கூட்டியே பட்ஜெட் – சரியான முடிவா?

  1. பொதுவாக நமது நாட்டில் மத்திய அரசின் வரவு செலவு அறிக்கை பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளில் மக்களவையில் சமர்ப்பிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி 1 அன்றே வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது சரியான முடிவா?

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து தடாலடியாக பல புதிய முடிவுகளை அறிவித்து அதன் ஆட்சியின் அவலங்களை மறைக்க, திசை திருப்ப முயன்று வருகிறது. இதுவும்  – செல்லாக்காசு நடவடிக்கை போலவே – இந்த வரிசையில் வருகிறது. அது மட்டுமின்றி ரயில்வே துறைக்கு தனி வரவு-செலவு அறிக்கை என்பதை நீக்கி விட்டு, அதன் அம்சங்களை பொது பட்ஜெட்டின் பகுதியாக  தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது.  இவ்விரண்டு முடிவுகளுமே சர்ச்சைக்கு உரியவை. ஜனநாயக மாண்புகளின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை. தன்னிச்சையாக மத்திய அரசு இந்த முடிவுகளை எடுத்துள்ளது.

ரயில்வே துறை வரவு செலவு அறிக்கை தனியாக இதுவரை தாக்கல் செய்யப்பட்டதன் காரணங்களில் இத்துறை ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் மிக முக்கியமானது என்பதும் நாட்டின் ஒருங்கிணைப்பும் பாதுகாப்பும் இதில் மையப்பங்கு  வகிக்கின்றன என்பதும் இரண்டு குறிப்பிடத்தக்க காரணங்களாகும். இது தவிர வேறு காரணங்களும் உள்ளன. எனவே, ரயில்வெ  பட்ஜெட் தனியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால் ரெயில்வே பட்ஜெட்டை  மத்திய பொது பட்ஜெட்டுடன் இணைப்பதில் உள்ள அரசின் அஜண்டா ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவது, மானியங்களை வெட்டுவது போன்ற நோக்கங்கள் கொண்டதாகும்.

மத்திய அரசின் வரவு செலவு அறிக்கையைப் பொருத்த வரையில், நடப்பு ஆண்டு வளர்ச்சிப் போக்கு, இதுவரை அரசால் செய்யப்பட்டு உள்ள செலவுகள்,வந்துள்ள வரவுகள், இதன் அடிப்படையில் வரும் ஆண்டு பொருளாதார செயல்பாடுகள் பற்றிய மதிப்பீடு ஆகியவற்றை செய்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி துவக்கத்தில் இருக்காது.குறிப்பாக, நடப்பு ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளுக்கான – ஒன்பது மாதங்களுக்கான – விவரங்கள் – பிப்ரவரி இறுதியில் தான் கிடைக்கும். பொருளாதார ஆய்வறிக்கை தயாரிப்பும் பாதிக்கப்படும், சரியான விவரங்கள் அடிப்படையில் அமையாது.   இத்தகைய விவரங்கள் இன்றி பட்ஜெட் தயாரிப்பது சரியாக இருக்காது. ஆனால் பா ஜ க அரசுக்கு இதைப்பற்றி கவலையில்லை. உத்தர் பிரதேசம் மற்றும் சில மாநிங்களில் நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தல்களை மனதில் கொண்டு பட்ஜெட் தாக்கலை  பிப்ரவரி முதல் தேதிக்கு கொண்டு வர அரசு விரும்புகிறது. இது சரியான தரவுகளின் அடிப்படையில் பட்ஜெட் தயாரிக்க உதவாது.

  1. பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, மற்றும் அதன் தாக்கம் ஆகிய பின்னணியில் வரவிருக்கும்பட்ஜெட் எப்படி இருக்கும்?

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை – இதை நாம் செல்லாக்காசு நடவடிக்கை என்றே அழைக்கலாம்! –  கிராக்கியை வீழச்செய்து மந்த நிலையை உருவாக்கியுள்ளது. விவசாயமும் தொழில் துறையும் மட்டுமின்றி சேவை துறையும் கூட  பாதிக்கப்பட்டுள்ளது. பல கோடி மக்களின் வேலை வாய்ப்பும் வாழ்வாதாரங்களும் கடுமையான இழப்புக்கு உள்ளாகியுள்ளன. இத்தகைய சூழலில் பட்ஜெட்டில் அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், விவசாய மற்றும் இதர முறைசாரா தொழிலாளர்கள்,சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் ஆகிய பகுதியினருக்கு சலுகைகள் வழங்குவதாக பட்ஜெட் இருக்கவேண்டும் என்பதே ஜனநாயக கோரிக்கையாக இருக்க முடியும். அதேபோல், கிராக்கியை மேம்படுத்தும் வகையில் அரசு கூடுதல் பொது முதலீடுகள் மேற்கொள்வது அவசியம். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். இதனால் வரவு – செலவு இடைவெளி அதிகரிப்பதை, செல்வந்தர்கள், கார்ப்பரேட்டுகள் மீதான நேர்முக வரிகள் கறாராக வசூல் செய்து குறைக்க இயலும். பல வரிவிலக்குகளை நீக்குவதும் பொருத்தமாக இருக்கும்.  மறுபக்கத்தில்  கடும் விவசாய மற்றும் கிராம பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படவேண்டும். மேலும் ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்படவேண்டும். நகரப்புரங்களிலும் வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

பா ஜ க தனது கடந்த மூன்று பட்ஜெட்டுகளிலும் நேர்முக வரிகளை  குறைத்துவந்துள்ளது. மறைமுக வரிகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வரிக்கொள்கை மாறவேண்டும். கடந்த பட்ஜெட்டில் சொத்து வரியையே மத்திய அரசு நீக்கியது. கருப்புப்பண முதலைகளுக்கு  வருமான மூலத்தை தெரிவிக்காமல் வரிகட்ட சலுகை திட்டத்தை முன்வைத்தது. இத்தகைய கொள்கைகள் கைவிடப்படவேண்டும்.

ஆனால் தாராளமய கொள்கைகளை தீவிரமாக பின்பற்றிவரும் பா ஜ க அரசு நாம் பரிந்துரைக்கும் திசைவழியில் பயணிக்காது. எனவே, மேலும் பலசுமைகளை மக்கள் தலையில் ஏற்றும். அதேசமயம் கவர்ச்சிகரமான, ஆனால் மிகக்குறைந்த ஒதுக்கீடு கொண்ட பல திட்டங்களை அரசு அறிவிக்கக்கூடும். இதைத்தான் நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

மத்திய பட்ஜட் 2008 – 09: பாதையில் மாற்றம் இல்லை!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஐந்தாவது நிதி நிலை அறிக்கையைத் ‘தேர்தல் பட்ஜெட்’ என்றும், சாமானியர்களுக்கு சலுகை அளிக்கும் பட்ஜட் என்றும், முதலாளிகளைக் கண்டு கொள்ளாத பட்ஜட் என்றும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. உண்மை என்ன?

“ஒளிரும்” பட்ஜட்டா?

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், இந்த பட்ஜட் முந்தைய UPA பட்ஜட்டுகளிலிருந்து பெரிதும் வேறுபட்டிருப்பது போல் தோன்றும். பெருமுதலாளிகளுக்கு திரு.சிதம்பரம் அவர்கள் (இங்கு சிதம்பரம் என்பது தனிநபரின் அடையாளம் அல்ல, யூ.பி.ஏ அரசையே குறிக்கும்) வருடந்தோறும் பட்ஜட்டில் வாரி வழங்கும் வரிச்சலுகைகள் இம்முறை காணப்படவில்லை. பெரும் விளம்பரம் பெறுகின்ற வகையில், விவசாயக் கடன்கள் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது 4 கோடி விவசாயிகளுக்குப் பயன்தரும் என்று அமைச்சர் சொல்கிறார். மேலும், இக்கடன் ரத்து சலுகையின் மொத்தமதிப்பு ரூ.60000 கோடி என்று கூறுகிறார். இந்த அறிவிப்பின் விளைவாக சிறு, குறு விவசாயிகள் (2 ஹெக்டேர், அதாவது கிட்டத்திட்ட 5 ஏக்கர் நிலம் அல்லது அதற்குக்குறைவான நிலம் வைத்திருப்பவர்கள்) மார்ச் 31, 2007 வரை வணிக வங்கிகள், மண்டலக் கிராம வங்கிகள் மற்றும் கூட்டுறவுக் கடன் அமைப்பு களில் வாங்கியிருந்து, டிசம்பர் 31, 2007 வரை கட்டப்படாமல் இருந்த கடன் பாக்கிகள், 29.02.2008 வரை கட்டப்படாமல் இருக்குமானால் அவை முழுமையாக ரத்து செய்யப்படும். பிற விவசாயிகளுக்கு 25 % கடன் ரத்தாகும். இதனால் 3 கோடி சிறு, குறு விவசாயிகளும் 1 கோடி பிற விவசாயிகளும் பயனடைவார்கள் என்பது நிதி அமைச்சர் தரும் கணக்கு.

கொள்கையளவில் இந்த அறிவிப்பு வரவேற்க்கத்தக்கதே. இந்த அறிவிப்பு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது பட்ஜட் உரையில் தெளிவுபடுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு அரசு இழப்பை ஈடுகட்டுமா என்பதும் தெரியவில்லை. எனினும், கடன் ரத்து வரவேற்கத்தக்கது. சிறு, குறு விவசாயிகள் முழுப்பயன் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால் இதுபற்றி ஒரு விமர்சனப்பார்வையும் அவசியம். அதற்குப்பின்னர் வருவோம். ஆனால், ஒன்றைக்குறிப்பிட வேண்டும். பெருமுதலாளிகள் பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்குப் பொதுத் துறை வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் உள்ள நிலையில் அதுபற்றி மௌனமாக இருந்த சில குரல்கள் இன்று ஊடகங்கள் வாயிலாக ‘விவசாயிகள் கடன் ரத்து ஆபத்தனாது. வாங்கிய கடனைத் திருப்பித் தரவேண்டும் என்ற சிந்தனையையே அழித்துவிடும்’ என்று கூப்பாடு போடுவது வேடிக்கையாகவும், அதேசமயம் வேதனையாகவும் உள்ளது.

விவசாயிகள் கடன் ரத்து பற்றிய அறிவிப்பு தவிர வேறு சில வரவேற்கத்தக்க அம்சங்களும் இந்த பட்ஜட்டில் உள்ளன. தனிநபர் வருமானவரி விகிதங்கள் தொடர்பான பட்ஜட் பரிந்துரைகள் மத்தியதர உழைப்பாளி மக்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக ஏற்பட்டு வந்துள்ள விலைவாசி உயர்வின் பின்னணியில் இவை பார்க்கப்பட வேண்டும். அதேபோல், பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கி, ஓராண்டுக்குள் விற்றால் கிடைக்கும் லாபத்தின் மீதான வரியை – இதற்குப் பெயர் “குறுகிய கால மூலதன லாப வரி” – இரண்டு ஆண்டுகளுக்கு முன் 20 %த்திலிருந்து 10 %மாக சிதம்பரம் குறைத்திருந்தார். இது யூக வணிகத்தை ஆதரிக்கும் தேவையற்ற நடவடிக்கை என்றும், அரசுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படுத்தும் என்றும் நாம் இதை விமர்சித்திருந்தோம். இந்த ஆண்டு பட்ஜட்டில், இந்த வரி 10 %த்திலிருந்து 15 %மாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மீண்டும் 20 %மாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலும், 15 %மாக்கியது வரவேற்கத்தக்கதே. இன்னொரு வரவேற்கத்தக்க நடவடிக்கை, பங்குச்சந்தை யூகவணிகத்தின் மீது போடப்பட்டுள்ள STT (Securities Transaction Tax) வரியைப் போன்று சரக்குச் சந்தை யூக வணிகத்தின் மீது போடப்பட்டுள்ள CTT (Commodity Transaction Tax).

ஆனால் மேற்குறிப்பிட்டவைகளும் வேறு ஒன்றிரண்டு சிறு நடவடிக்கைகளும் வரவேற்கப்படலாம் என்றாலும், 2008 – 2009 க்கான மத்திய பட்ஜட் நிச்சயமாக, ‘ஒளிரும் பட்ஜட்’ அல்ல,

பட்ஜட்டும் இன்றைய இந்தியப் பொருளாதார நிலமையும்

நாம் பட்ஜட் பற்றிய விரிவான விமர்சத்திற்குள் போகும் முன்பு ஒருசில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. பட்ஜட் என்பது ஏதோ விண்வெளியில் இருந்து இங்கே இறங்கி வருவது அல்ல. நிலவும் சமூக – பொருளாதார அமைப்பின் தன்மையை ஒட்டியே ஆட்சியாளர்கள் பட்ஜட்டைத் தயார் செய்கின்றனர். குறிப்பாக, தொழிலும் நிலமும் ஏகபோகமாக சமூகத்தின் ஒரு சிறு பகுதியினர் கையில் உள்ள நாடு இந்தியா. அரசின் பொருளாதாரக் கொள்கைகள், இந்த உற்பத்திச் சொத்துக்குவியல் மற்றும் அதன் விளைவாகப் பெரும் உடைமையாளர்களுக்கு உள்ள மாபெரும் அரசியல் – பொருளாதார செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன என்பது நாம் அறியாதது அல்ல. நிலவும் ஏற்றத்தாழ்வு மிக்க சமூக – பொருளாதார அமைப்பு, அதன் அடிப்படையில் செல்வந்தர்களுக்கு – சாதகமாகவே அமையும் பொருளாதாரக் கொள்கைகள் என்ற வியூகத்திற்கு உள்ளே தான், அதைச் சார்ந்து தான் பட்ஜட் போடப்படுகிறது. ஆகவே, பட்ஜட்மூலமாக மக்களுக்குச் சாதகமான பெரிய மாற்றங்களை எதிர்பார்ப்பது யதார்த்தமானது அல்ல.

அப்படியானால், பட்ஜட்டை விவாதிப்பதில் அர்த்தமேயில்லை என்று முடிவு செய்து விடலாமா? நிச்சயமாக அப்படி முடிவு செய்யக்கூடாது. காரணம், அரசின் பல பொருளாதாரக் கொள்கைக் கருவிகளில் ஒன்று தான் பட்ஜட் என்றாலும், அது ஒரு முக்கியக் கருவியாகும். 2008 – 09ல் இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 53 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மத்திய பட்ஜட் மதிப்பிடுகிறது. மத்திய பட்ஜட் மூலம் செலவிடப்படும் தொகை ரூ.7.5 லட்சம் கோடியாகும். ஆகவே, நாட்டின் மொத்த உற்பத்தியில் 14 % மத்திய பட்ஜட் மூலம் செலவிடப்படுகிறது. ஆகவே பட்ஜட் முக்கியத்துவம் வாய்ந்தது. பட்ஜட் மூலம் மக்கள் வாழ்வு மகத்தான வகையில் மாறிவிடும் என்ற பொருளில் அல்ல, ஆளும் வர்க்கக் கொள்கைகளை அம்பலப்படுத்தவும், முற்போக்கு சக்திகளை ஒன்று திரட்டி மக்களுக்குக் குறைந்த பட்ச நிவாரணம் பெறவும் நாம் போராட வேண்டிய களம் என்ற வகையில் பட்ஜட் முக்கியத்துவம் பெறுகிறது.

பன்னாட்டு, இந்நாட்டு – பொருளாதார நிலைமைகள்

பட்ஜட் விண்வெளியில் போடப்பட்டு இறங்கிவருவதில்லை என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். பட்ஜட்டில் பன்னாட்டு, உள்நாட்டு பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. பன்னாட்டுச்சூழலின் முக்கியத்துவம் இன்று கூடியுள்ளது. 2000 – 01 ல் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பையும், இறக்குமதி மதிப்பையும் சுட்டிக்காட்டினால், அது தேசத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 22 %மாக இருந்தது. இத்தொகை 2006 – 07 ல் 34 %மாக உயர்ந்துவிட்டது. நம்நாட்டுப் பொருளாதாரம் மேலும் மேலும் பன்னாட்டுப்பொருளாதாரத்தின் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது என்பதை இது காட்டுகிறது. அதுமட்டுமல்ல, பன்னாட்டு நிதி மூலதனம் இந்தியப்பங்குச் சந்தையில் குறுகிய காலத்திற்குள் மிகுந்த லாபம் ஈட்டவும், பின்னர் வெளியே செல்லவும், மீண்டும் வரவும் தங்குதடையின்றி கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்பதும் பன்னாட்டுப் பொருளாதார நிலைமைகளும், நிகழ்வுகளும் நம்பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை பட்ஜட்டில் கணக்கில் கொள்ள வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன.

இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான உலக முதலாளித்துவம் ஒரு மந்த நிலையைச் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது நம் நாட்டின் ஏற்றுமதி வாய்ப்புகளைப் பாதிக்கும். மேலும் டாலர் நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியும், நமது ஏற்றுமதிப் பொருட்களின் டாலர் விலையை உயர்த்தி, விற்பனையைக் கடினமாக்குகிறது. மறுபுறம், மேலை நாடுகளில் யூக வணிகத்தில் பங்குச் சந்தை லாபம் ஈட்ட வாய்ப்புகள் குறையும் போது, அந்நிய நிதிமூலதனம் நமது நாட்டுப் பங்குச் சந்தைக்குப் படையெடுத்து நமக்கு சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும்.

இவற்றையெல்லாம் பட்ஜட் கணக்கில் கொண்டு, சரியாக எதிர்கொள்கிறதா என்பது ஒரு முக்கியமான கேள்வி.

அதேபோல் பட்ஜட்டுக்கு முன்பாக நிதி அமைச்சர் தயாரித்து மக்களவையில் தாக்கல் செய்யப்படும் 2007 – 08 க்கான பொருளாதார ஆய்வு அறிக்கை, இந்த ஆண்டு வளர்ச்சி வேகம் சற்றுக் குறைந்துள்ளதையும், பணவீக்க கருமேகங்கள் சூழ்ந்து வருவதையும் நடப்பு ஆண்டு வேளாண் உற்பத்தி வளர்ச்சி 2.4 % என்ற நிலையில், இலக்கில் 60 %மாக மட்டுமே உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது. உணவு தானிய உற்பத்தி ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக தேக்க நிலையில் உள்ளதும் ஆழ்ந்த கவனத்திற்குரிய விஷயம்.

இதிலிருந்து வேளாண் உற்பத்திப் பெருக்கம், உணவுப்பாது காப்பு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, 1,50,000 க்கும் அதிகமான விவசாயிகளின் தற்கொலைகள் வெளிப்படுத்தும் ஆழமான வேளாண் மற்றும் கிராமப்புறப் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பது ஆகியவை பட்ஜட்டின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பது தெளிவு. ஆனால் பட்ஜட் 2008 – 09 அவ்வாறு உள்ளதா?

பட்ஜட்டும் தேசிய குறைந்தபட்ச பொதுத்திட்டமும்

பன்னாட்டு, இந்நாட்டு நிலைமைகளையும், நாட்டுப் பொருளாதாரமும் மக்களும் சந்திக்கும் முக்கியப் பிரச்சனைகளையும் இந்த பட்ஜட் கவனத்தில் கொண்டுள்ளதா என்ற கேள்வியே நாம் மேலே எழுப்பியுள்ளது போலவே, மூன்றாவது முக்கிய கேள்வியை எழுப்ப வேண்டும். யு.பி.ஏ அரசு தான் ஏற்றுக்கொண்டுள்ள தேசிய குறைந்தபட்சத் திட்டத்திற்கு நியாயம் வழங்குகிறதா? கல்வி, மக்கள் நல்வாழ்வு, ஊரக வளர்ச்சி, கிராமப்புற வேலை உத்தரவாதச் திட்டம் தொடர்பான என்.சி.எம்.பி. வாக்குறுதிகளை நிறைவேற்ற பட்ஜட் உண்மையிலேயே முயல்கிறதா?

அல்லது தொடர்ந்து பெரும் செல்வந்தர்களிடமிருந்து நாட்டு வளர்ச்சிக்குத் தேவையான வளங்களை வரிபோட்டுத் திரட்டி, மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் செலவிடுவதற்குப் பதிலாக, செல்வந்தர்களைத் தப்பவிட்டு, செலவைக்குறைத்து, ஃபிஸ்கல் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதிலேயே குறியாக உள்ளதா?

பிரச்சனைகளை சந்திக்க மறுக்கும் பட்ஜட்

2003 – 04 ம் ஆண்டுக்குப் பின், தொடர்ந்து 4 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் கிட்டத்தட்ட 8.5 % வேகத்தில் வளர்ந்து வருவதாகப் பெருமை கொள்ளும் அரசு, இந்த வளர்ச்சி பெருமுதலாளிகளுக்குப் பெரும் லாபத்தைக் கொடுத்துள்ள பின்னணியில், அதைச்சரியாக வரி வசூல் செய்து, நாட்டுக்கு மிக அவசியமான வேளாண்மை, பாசனம், ஊரக வளர்ச்சி போன்ற துறைகளில் அதிகமாக முதலீடு செய்திருக்க முடியும். ஆனால், அப்படிச் செய்யவில்லை. அரசின் ஃபிஸ்கல் பற்றாக்குறையை தேச உற்பத்தி மதிப்பில் 2.5 %மாகக் குறைந்துள்ளதை சாதனையாகக் காட்டுகிறது பட்ஜட்! மத்திய திட்ட ஒதுக்கீடு மிகக் குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளது. வேளாண்மை, ஊரக வளர்சிசி, பாசனம் மற்றும் வெள்ளக்கட்டுப்பாடு ஆகியவற்றிற்கான மத்திய திட்ட ஒதுக்கீடு 18 % உயர்த்தப்பட்டுள்ளதை, தேச உற்பத்தி 13 % பண அளவில் அதிகரித்துள்ள பின்னணியில் பார்த்தால், இது பெரிதல்ல என்று புரியும். (விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டால் இரண்டுமே 12 %, 7 % என்றாகும்).

கல்விக்கு ஒதுக்கீடு 20 % அதிகம் என்று தம்பட்ட மடிக்கப்படுகிறது. ஆனால் இன்னமும் கல்விக்கான மத்திய, மாநில அரசுகளின் ஒதுக்கீடு தேச உற்பத்தியில் 4 %மாகவே உள்ளது. என்.சி.எம்.பி. இலக்கான 6 % தூரத்தில் உள்ளது. மக்கள் நல்வாழ்வுக்கான ஒதுக்கீடு 15 % உயர்த்தப்பட்டுள்ளது. தேச உற்பத்தியின் 13 % வளர்ச்சியை ஒட்டியே உள்ளதால், மத்திய, மாநில அரசுகளின் மொத்த மக்கள் நல்வாழ்வுச் செலவு என்.சி.எம்.பி. இலக்கான தேச உற்பத்தியில் 2 – 3 % என்பதை எட்டுவது பார்வையிலேயே இல்லையா என்ற ஐயம் எழுகிறது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் (ICDS – அங்கன் வாடித்திட்டம்) 9 லட்சம் மையங்களில் செயல்படும் என்று பட்ஜட் கூறுகிறது. உச்ச நீதிமன்ற ஆணையின்படி, இத்திட்டம் நாடுமுழுவதும் அனைத்து குக்கிராமங்களுக்கும், சில நெறி முறைகளின் கிழ், தரமான வகையிலும், சமத்துவமான முறையிலும் விஸ்தரிக்கப்பட வேண்டும். அப்படியானால், 15 லட்சம் தரமான அங்கன்வாடி மையங்கள் தேவை. ஆனால் பட்ஜட் ஒதுக்கீடு இதை கணக்கிலேயே கொள்ளவில்லை.

தேசிய கிராமப்புற வேலை உறுதிச்சட்டம் இடதுசாரிக் கட்சிகளும், வெகுஜன அமைப்புகளும் இதர  பல மக்கள் இயக்கங்களும் போராடிப் பெற்ற சட்டம். அதன் கீழ் உள்ள தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டம் 2006 – 07 ல் 65 மாவட்டங்களில் செய்யப்பட்டது. 2007 – 08 ல் 130 மாவட்டங்களாக விஸ்தரிக்கப் பட்ட பொழுது, பட்ஜட் ஒதுக்கீடு குறைவாகவே உயர்த்தப்பட்டதை சென்ற ஆண்டு விமர்சித்திருந்தோம். இந்த ஆண்டு பட்ஜட்டில் இத்திட்டம் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் – மொத்தம் 596 – விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக பட்ஜட் அறிவிக்கிறது. ஆனால் ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் தனது பட்ஜட் உரையில், “இதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள், செலவு செய்துவிட்டு வந்து கேளுங்கள், தருகிறேன்” என்று ‘தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்’ என்ற பாணியில் வசனம் பேசி இருக்கிறார். அப்படியானால், அவர் பட்ஜட்டில் அறிவித்த வரவு – செலவு பற்றிய, பற்றாக்குறை பற்றிய புள்ளி விபரங்கள் என்ன  ஆகும்? அல்லது அவர் முன்வைக்கும் விவரங்கள் எதையுமே நம்பகத்தன்மை வாய்ந்ததாகக் கருதக் கூடாதோ?

இடதுசாரிகளின் தொலைநோக்குப் பார்வை

பட்ஜட் பற்றிய தங்களது பரிந்துரைப் பட்டியலில், இப்பிரச்சனைகளைப் பற்றி தெளிவாக இடதுசாரிக் கட்சிகள் எழுப்பியிருந்தனர். கல்வி, மக்கள் நல்வாழ்வுத் துறைகளுக்கு உரிய ஒதுக்கீடு, வேளாண்துறை மற்றும் ஊரக வளர்ச்சிக்குக் கணிசமான ஒதுக்கீடு, விவசாயிகளுக்குக் கடன் நிவாரணம், பங்குச்சந்தை மூலதன லாபத்தின் மிது வரிவிதித்தல், உணவுப் பாதுகாப்பு, தேவையற்ற லாபம் மற்றும் வருமான வரி விலக்குகளை நீக்குதல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பரிந்துரைகளை இடதுசாரிக் கட்சிகள் முன் வைத்தன. ஆனால், மேற்கூறியவற்றைப் பரிசீலித்தால், பட்ஜட் விவசாயிகள் கடன் நிவாரணம், பங்குச் சந்தை மூலதனவரி விகித உயர்வு போன்ற ஓரிரு விஷயங்களை அங்கீகரித்துவிட்டு, வேறு பலவற்றை புறக்கணித்துவிட்டது புரியும்.

தானிய விலைகள் பன்னாட்டுச் சந்தைகளில் விஷம்போல் ஏறி வருகையில் உள்நாட்டு தானிய உற்பத்தி தேக்கமாக உள்ள நிலையில் பொதுவிநியோக அமைப்பை மத்திய அரசு தொடர்ந்து சீர்குலைத்து வருகிறது. இந்த பட்ஜட்டில் உணவு மான்யம் 6 % தான் உயர்ந்துள்ளது. இது பணவீக்கத்தைக் கூடச் சந்திக்காது.

அதேபோல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவோ, அந்நிய மூலதனத்தின் பங்குச் சந்தை யூக வணிகத்தால் ஏற்படும் பொருளா தார ஏற்ற இறக்கப் பாதிப்புக்களைத் தவிர்க்க அந்நியப் பண மூலதன வரவைக் கட்டுப்படுத்தவோ பட்ஜட் முன்வரவில்லை.

பாதை மாறவில்லை

மொத்தத்தில் யூ.பி.ஏ. அரசின் தனியார் மய, உலகமய, தாராள மயப் பாதை மாறவில்லை. இடதுசாரி இயக்கங்களின் வலுவான தலையீட்டின் விளைவாக ஓரிரு சலுகைகளை உழைக்கும் மக்களுக்கு அளிக்க வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அவ்வளவுதான். மற்றபடி, மத்திய அரசின் மக்கள் விரோதப் பாதையை பட்ஜட் தொடர்கிறது. இதை எதிர்த்துப் போராட வேண்டியதும், மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியதும் மிக மிக அவசியம், அவசரம்.