உற்பத்தி செயல்முறையும் உற்பத்தி உறவுகளும்

உற்பத்தி நிகழ்முறையில், மனிதர்கள் இயற்கையின் மீது மட்டுமன்றித் தங்களுக்குள் ஒருவர் மீது மற்றவரும் செயலாற்றுகின்றனர். அவர்கள் குறிப்பிட்ட வழிமுறையில் ஒன்று சேர்ந்து உழைப்பதன் மூலமும், தம் செயல்பாடுகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதன் மூலமும்தான் அவர்கள் உற்பத்தி செய்கின்றனர்.

உற்பத்தி செய்யும் பொருட்டு அவர்கள் ஒருவருக்கொருவர் வரையறுக்கப்பட்ட தொடர்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்தச் சமூகத் தொடர்புகளுக்கும் உறவுகளுக்கும் உட்பட்டே இயற்கை மீதான அவர்களின் செல்வாக்குச் செயலாற்றுகிறது, அதாவது உற்பத்தி நடைபெறுகிறது.

உற்பத்தியாளர்கள் இடையிலான இந்தச் சமூக உறவுகளும், எந்த நிலைமைகளின்கீழ் தம் செயல்பாடுகளைப் பரிமாறிக் கொண்டு, உற்பத்திச் செயல்முறை முழுவதிலும் பங்கெடுத்துக் கொள்கிறார்களோ அந்த நிலைமைகளும், இயல்பாகவே உற்பத்திச் சாதனங்களின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும்.

புதிய போர்க்களக் கருவியான துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, படையின் ஒட்டுமொத்த அக ஒழுங்கமைப்பும் தவிர்க்கவியலாமல் மாற்றப்பட்டது. தனியாட்கள் ஒரு படையாக அமைந்து, ஒரு படையணியாகச் செயல்படுவதற்குரிய உறவுகள் மாற்றம் பெற்றன. வெவ்வேறு படையணிகள் ஒன்று மற்றொன்றோடு கொண்டிருந்த உறவும் அதுபோல மாற்றம் கண்டது.

இவ்வாறாக, உற்பத்திக்கான பொருளாயதச் சாதனங்களும் உற்பத்திச் சக்திகளும் மாற்றமும் வளர்ச்சியும் அடைவதைத் தொடர்ந்து, தனியாட்கள் உற்பத்தி செய்வதற்குரிய சமூக உறவுகள், அதாவது உற்பத்தியின் சமூக உறவுகள் மாற்றத்துக்கு உள்ளாகின்றன என்பதை காண்கிறோம். உற்பத்தி உறவுகளே அவற்றின் ஒட்டுமொத்தத்தில் சமூக உறவுகளாய் அமைகின்றன. அவையே சமுதாயமாக, இன்னும் குறிப்பாக, வரலாற்று வளர்ச்சியில் குறிப்பிட்ட ஒரு கட்டத்திலுள்ள சமுதாயமாக தனக்கே உரித்தான தனித்த பண்பியல்புகள் கொண்ட ஒரு சமுதாயமாக அமைகின்றன.

  • கார்ல் மார்க்ஸ், கூலியுழைப்பும் மூலதனமும்

இயக்கவியல் விதி: எதிர்மறைகளின் ஒற்றுமை இருப்பை சாத்தியமாக்கும்

குரல்: ஆனந்த்ராஜ்

வெங்கடேஷ் ஆத்ரேயா

எதிர்மறைகளின் ஒற்றுமை இருப்பை சாத்தியமாக்கும்; ஆனால் அவற்றின் தவிர்க்க முடியாத முரண்பாடு / மோதல் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் இயக்கம் என்பதுதான் பொருளின் இருப்பு வடிவம் என்ற கருத்தை இயக்கவியல் பொருள் முதல்வாதம் முன்வைக்கிறது மாற்றம் என்பதே பொருளின் இயல்பு நிலை. விதிவிலக்கின்றி ஒவ்வொரு பொருளுக்கும்  இவ்விரு தன்மைகள் – இயக்கம், மாற்றம் பொருந்தும் என்பது– மார்க்சீய தத்துவத்தின் புரிதல்.

மார்க்சீய தத்துவம் ஒவ்வொரு பொருளிலும் எதிர்மறை அம்சங்கள் இணைந்துள்ளன என்று கூறுகிறது. இந்த எதிர்மறை அம்சங்களின் பரஸ்பர உறவில் ஒற்றுமை, முரண்பாடு ஆகிய இரண்டு அம்சங்களும் உண்டு ஒற்றுமை என்ற அம்சம்தான் பொருளின் இருப்பை உறுதிசெய் கிறது. பொருள் தனது இருப்பை இழக்காமல் இருக்க எதிர்மறை அம்சங்களின் ஒற்றுமை அவசியமாகிறது. இருப்பை காக்கும் பங்கை அது ஆற்றுகிறது. எனினும், பொருளின் இருப்பு வடிவமே இயக்கம், மாற்றம் என்பதால், அந்த மாற்றத்திற்கான உந்துசக்தியாக இருப்பது பொருளில் புதைந்திருக்கும் எதிர்மறை அம்சங் களுக்கு இடையேயான முரண்பாடுதான்.  பொருளில் உள்ள எதிர்மறை அம்சங்களின் உறவிலுள்ள ஒற்றுமை என்ற தன்மை பொருளின் இருப்பை சாத்தியமாக்குகிறது. எதிர்மறை அம் சங்களின் உறவில் உள்ள முரண்பாடு என்ற அம்சம்தான் மாற்றத்தை சாத்தியமாக்குகிறது.  ஒற்றுமை என்ற அம்சம் தற்காலிகத் தன்மை கொண்டது. ஏனெனில் பொருள் மாறாமல், வளராமல் இருக்க இயலாது. பொருளின் தன்மை மாறும்வரை உள்ள இருப்பு என்பதை ஒற்றுமை என்ற அம்சம் சாத்தியமாக்கினாலும், இறுதியில் தவிர்க்க முடியாதது மாற்றமே.  ஒற்றுமை அம்சம் ஒரு கட்டத்தில் – பொருளின் தன்மை மாற்ற கட்டத்தில் – காலாவதி ஆகிவிடும். ஆனால், முரண்பாடு என்ற அம்சம் நிரந்தரமானது; அடிப் படையானது. அதுவே அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தன்மை மாற்றத்தை உருவாக்கி, இட்டுச் செல்கிறது. 

இயற்கையில்  பல உயிரினங்கள் முட்டை போட்டு குஞ்சு பொறித்து இனப்பெருக்கம் செய்கின்றன.  முட்டையின் ஓடுதான் குஞ்சுகள் உயிருடன்  வெளிவருவதற்கான கட்டம் வரும் வரை குஞ்சுகள் வளர்வதற்கான பாதுகாப்பை அளிக்கின்றது. ஆகவே, முட்டையின் ஓட்டுக்கும் குஞ்சுகளுக்கும் உள்ள உறவில் ஒற்றுமை என்ற அம்சம் உள்ளது.  ஆனால், முட்டையின் ஓடு உடைவதன் மூலம் தான் குஞ்சுகளின் உயிரும் அடுத்தகட்ட வளர்ச்சி யும் சாத்தியமாகும். எனவே பொறிக்கப்படும் குஞ்சுகளுக்கும் முட்டையின் ஓடுக்கும் உள்ள உறவில் முரண்பாடு என்ற அம்ச மும் உள்ளது. அதுவே, அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அவசியம் ஆகிறது. இயற்கையில் இத்தகைய நிலைமைதான் பொதுவானது.

சமூகத்தில் முதலாளித்துவ அமைப்பில் தொழிலாளி களும் முதலாளிகளும் இரு பெரும் வர்க்கங்களாக மோதுகின்றனர். நமது அனுபவம் கூறுவது என்ன? முதலாளித்துவ அமைப்பு நடப்பில் இருக்கும்பொழுது, தனது வாழ்வாதாரத் திற்கே தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தை சார்ந்து இருக்கிறது. தனது இருப்பு என்பதே வேலையும் சம்பளமும் கிடைத்தால்தான் என்ற நிலையை தொழிலாளி வர்க்கம் சந்திக்கிறது. அதேபோல், தொழிலாளிகளை வர்க்க எதிரியாக முதலாளி வர்க்கம் உணர்ந்தாலும், லாபம் ஈட்ட தொழிலாளிகளின் உழைப்பு இன்றியமையாதது என்பதை முதலாளி வர்க்கம் சந்திக்கிறது. (“செயற்கை நுண்ணறிவு” என்று தற்காலத்தில் பரவலாக பேசப்படும் AI – Artificial Intelligence இந்த நிலைமையை மாற்றாது).

எனவே முதலாளித்துவம் என்ற அமைப்பின் இருப்பிற்கு எதிர்மறையான தொழிலாளி-முதலாளி வர்க்க உறவில் உள்ள ஒற்றுமை என்ற அம்சம் அவசியமாகிறது. ஆனால், முதலாளித்துவம் வளர்வதே தொழிலாளி வர்க்கம், முதலாளி வர்க்கம் ஆகிய இரு வர்க்கங் களின் மோதலால் தான். இதுதான் இயந்திர மாக்கலுக்கும்  பெரும் வேலையின்மைக்கும், உற்பத்தி சக்திகளின் அதிவேக வளர்ச்சிக்கும்,  போட்டி முதலாளித்துவம் ஏகபோக முதலாளித் துவமாக மாறவும் இட்டுச்செல்கிறது. இதுவே  இறுதியில் வர்க்க முரண்பாடு முற்றி, தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தை வீழ்த்தி, சோசலிச அமைப்பை உருவாக்கவும் இட்டுச் செல்கிறது.  இங்கும் எதிர்மறை அம்சங்களின் ஒற்றுமை அம்சம் இருப்பையும் அவற்றின் முரண்பாடு மாற்றத்தையும் சாத்தியப்படுத்துவதை காண முடிகிறது.

அளவு மாற்றம் தன்மை மாற்றத்திற்கு இட்டுச் செல்லும்

குரல்: ஆனந்த்ராஜ்

வெங்கடேஷ் ஆத்ரேயா

இயக்கம் என்பதே பொருளின் இருப்பின் வடிவம் என்பதை ஏற்கெனவே நாம் பார்த்தோம். இயக்கம் தற்செயலான நிகழ்வும் அல்ல. இயக்கத் திற்கு அடித்தளமாக மூன்று நெறிமுறைகள் அல்லது விதிகள் உண்டு. கடந்த இதழில் இவ்விதி களை அறிமுகப்படுத்தினோம். இந்த இதழில் முதல் விதியை விளக்கலாம். இந்த விதி கூறுவது வருமாறு:   படிப்படியாக நிகழும் மாற்றங்கள் குறிப்பிட்ட கட்டம் வரை அளவு மாற்றமாகவே உள்ளன. பின்னர் ஒரு கட்டத்தில் நிகழ்ந்துள்ள அளவு மாற்றங்கள் ஒரு தன்மை மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த இயக்கவியல் விதியை  நம்முடைய அன்றாட அனுபவங்களிலேயே நாம் பார்க்க இயலும். சில எடுத்துக்காட்டுகள் இவ்விதியை விளக்க உதவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுடவைத்துக் கொண்டே இருந்தால், ஒருகட்டம் வரை அதன் வடிவத்தில் எந்த மாற்றமும் இல்லை. பிறகு அது கொதிக்க துவங்குகிறது. இது தன்மை மாற்றத் திற்கான கட்டம் என்று கொள்ளலாம். கொதி நிலை தொடரும்பொழுது நீர் வடிவம் மாறி ஆவியாகிவிடுகிறது. இவ்வாறு  தொடர்ந்து நிகழ்ந்து வந்த அளவு மாற்றம் தன்மை மாற்றத் திற்கு, – தண்ணீர் ஆவியாக மாறுவதற்கு, – இட்டுச் சென்றுவிட்டது என்பதை நாம் காண்கிறோம். இயற்கையில் இதுபோன்று, தொடர்ந்து நிகழும் அளவு மாற்றம் ஒருகட்டத்தில் தன்மை மாற்றத் திற்கு இட்டுச்சென்றுவிடுகிறது என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன.

சமூக வாழ்விலிருந்தும் இவ்விதியின் செயல் பாட்டை நாம் புரிந்துகொள்ளலாம். ஒரு ஆலை யில் வேலைபெற்று பணியில் இணையும் தொழி லாளி துவக்கத்தில் ஒரு தனி நபராக இருக்கிறார். பின்னர் அங்குள்ள தொழிற்சங்கத்தின் அறிமுகம் கிடைக்கிறது. துவக்கத்தில் இந்த தொழிற்சங்கம் என்ற “வம்பு” எல்லாம் வேண்டாம் என்ற அறிவுரை களை அவரது குடும்பமும் சுற்றமும் அவருக்கு வழங்கக்கூடும். ஆனால் ஆலையில் எழும் பிரச் சினைகள், தனது பணி தொடர்பான கள அனுப வங்கள் அவரை சங்கத்திற்கு இழுத்துவருகிறது. அவர் சங்கத்தில் தன்னை உறுப்பினராக இணைத் துக்கொள்கிறார். இந்த நிகழ்வு, அந்த தொழி லாளியைப் பொருத்த வரையில் ஒரு தன்மை மாற்றம். படிப்படியாக அவரது சிந்தனையில், புரிதலில் ஏற்பட்டுவந்த அளவு மாற்றங்கள் ஒரு கட்டத்தில் ஏற்கெனவே இருந்த நிலையில் இருந்து தாவி ஒரு புதிய நிலைக்கு அவரை செல்ல வைத்துவிட்டன.

நாம் முன்வைத்த இரு எடுத்துக்காட்டுகளும் சொல்லும் செய்தி இதுதான். படிப்படியான அளவு மாற்றங்கள் ஒரு கட்டத்தில் தன்மை மாற்றத்தை ஏற்படுத்திவிடும். இத்தகைய மாற்றம் ஒரு தாவுதல், ஒரு உடைப்பை ஏற்படுத்தி புது நிலையை கொண்டுவரும் நிகழ்வு என்று நம்மால் பார்க்க முடிகிறது.  இயற்கையிலும் சமூகத்திலும் அனைத்து செயலியக்கத்திற்கும் இந்த விதி பொருந்தும். அளவு மாற்றம், தன்மை மாற்றம் இரண்டும் வெவ்வேறு. ஆனால் அளவு மாற்றம் இன்றி தன்மை மாற்றம் நிகழாது. அதே போல், தொடர்ந்து நிகழ்கின்ற அளவு மாற்றத் தின் ஒரு கட்டத்தில் ஏற்படும் தன்மை மாற்றம் வளர்ச்சியின் புதிய கட்டத்தை குறிக்கிறது. உடைப்பு, தாவுதல் என்றோ வேறு சொற் களாலோ அழைத் தாலும் அதன் உள்ளடக்கம் ஒன்றுதான். உடைப்பு இல்லாமல், தாவுதல் இல்லாமல், வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்குப் போவது சாத்தியம் இல்லை. நிகழ்கால சமூகத்தில் அப்படி உடைப்புகளை, தாவுதல்களை நிகழ்த்த வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.