இந்தியமக்களின் விடுதலை – கம்யூனிஸ்டுகளின் தெளிவான மாற்றுப்பார்வை

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

சுதந்திர இந்தியாவின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டை அதிகார பூர்வமாக கொண்டாடிவரும் ஒன்றிய அரசின் தலைமை விடுதலை இயக்கத்தில் பங்கேற்காத ஒன்றாகும். இத்தலைமையின் அரசியல்-தத்துவார்த்த முன்னோடிகள் காலனி அரசிடம் மண்டியிட்டு, மன்னிப்புக் கேட்டு, சேவகம் புரிந்தவர்கள். அவர்களது இலக்கு, மதசார்பற்ற, பல்வேறு மொழிவழி தேசீய இனங்களும் தன்னாட்சி பெற்று இணைந்து வாழும் இந்திய ஒன்றியம் அல்ல. மாறாக, பெரும்பான்மை என்ற போர்வையில், இந்துராஷ்டிரா என்ற இலக்கைத்தான் இன்றைய ஆட்சியாளர்களின் அன்றைய குருமார்கள் முன்வைத்தனர். மகாத்மா காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனையிலிருந்து தப்பிய சவார்கர், முஞ்சே, ஆர் எஸ் எஸ். ஸின் பயங்கர இந்து ராஷ்டிரா இலக்கணத்தை விரிவாக முன்வைத்த கோல்வால்கர் உள்ளிட்ட அனைத்து ஆர் எஸ் எஸ் தலைவர்களுக்கும் எந்த ஒரு கட்டத்திலும் இந்திய மக்களின் விடுதலை இலக்காக இருந்ததில்லை. பன்முக இந்திய தேசத்தின் அரசியல் விடுதலையும் ஆர் எஸ் எஸ்  இலக்காக என்றுமே இருந்ததில்லை.

இந்திய தேசீய காங்கிரசின் விடுதலை இயக்கப் பார்வை

இந்திய விடுதலை இயக்கத்தில் தலைமை பாத்திரத்தை வகித்த காங்கிரஸ் கட்சி அரசியல் விடுதலை என்ற இலக்கை அக்கட்சி துவங்கி பல பத்தாண்டுகள் முன்வைக்கவில்லை. 1885 இல் துவக்கப்பட்ட இந்திய தேசீய  காங்கிரஸ் கட்சி 1930 இல் தான் இந்திய தேசத்தின் முழுவிடுதலை என்ற முழக்கத்தை  முறையாக அதன் அகில இந்திய மாநாட்டில் பிரகடனப்படுத்தியது. மக்கள் எழுச்சியின் காரணமாக விடுதலை முழக்கத்தை இவ்வாறு முன்வைத்தபோழுதும், விடுதலை  பெற்ற இந்தியா எத்தகைய சமூகமாக இருக்கவேண்டும் என்பது பற்றியெல்லாம் காங்கிரஸ் விரிவாகவோ ஆழமாகவோ பேசவில்லை. அடுத்தடுத்து வந்த காலங்களில் விவசாயிகளையும் தொழிலாளிகளையும் இதர பகுதி உழைப்பாளி மக்களையும் விடுதலை இயக்கத்தில் விரிவாக பங்கேற்க வைப்பதற்கு அவர்களது அன்றாட வாழ்வுசார் கோரிக்கைகளையும் முன்வைக்க வேண்டும் என்ற அவசியத்தை காங்கிரஸ் தலைமை, முன்பின் முரணின்றி இல்லாவிடினும் ஓரளவாவது உணர்ந்தது. இதனால் தான் உழுபவனுக்கு நிலம் சொந்தம், குறைந்தபட்சக்கூலி, வேலை நேரம் வரையறுக்கப்படுவது போன்ற பிரச்சினைகள் பற்றி அது பேசியது. 1930களில் மேலை ஏகாதிபத்திய நாடுகள் பெரும் வீழ்ச்சியில் பத்தாண்டு காலம் சிக்கி உழைக்கும் மக்கள் பெரும் வேலையின்மை, வறுமை பிரச்சனைகளை  சந்தித்துக்கொண்டிருந்த காலத்தில் சோசலிச சோவியத் ஒன்றியம் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி மூலம் அனைவருக்கும் வேலையையும், தொடர்ந்து உயரும் வாழ்க்கை நிலையையும் உறுதிப்படுத்திய அனுபவம் இந்திய தேசீய காங்கிரஸ் தலைமையின் ஒருபகுதியினரை சோசலிசம் பற்றியும் திட்டமிடுதல் பற்றியும் பேச வைத்தது. எனினும் காங்கிரஸ் கட்சி விடுதலை இயக்க காலத்திலும், அதன் பின்பும், சொற்களைத் தாண்டி இத்திசைவழியில் வெகுதூரம் பயணிக்கவில்லை. முதலாளித்துவ வளர்ச்சிப்பாதைதான் காங்கிரஸ் கட்சியின் கனவாக விடுதலைபோராட்ட காலத்திலும் அதன் பின்பும் இருந்தது. இதுபற்றி தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாத் மிகச்சிறப்பாகவும் தெளிவாகவும் இந்திய சுதந்திரப்போராட்ட வரலாறு என்ற புத்தகத்திலும் நெருக்கடியில் இந்தியாவின் திட்டமிடல் என்ற நூலிலும் விளக்கியுள்ளார்.

எத்தகைய மாண்புகளும் விழுமியங்களும் இந்திய விடுதலை போராட்டத்தில் உயர்த்திப் பிடிக்கப்படவேண்டும் என்பதிலும் காங்கிரஸ் முன்னுக்குப்பின் முரணான நிலைபாடுகளைத்தான் கொண்டிருந்தது. சாதி அமைப்பையும் சமூக ஒடுக்குமுறைகளையும் தீவிரமாக காங்கிரஸ் எதிர்க்கவில்லை. பொதுவாக மதசார்பின்மை என்ற விழுமியத்தை ஏற்றுக்கொண்ட போதிலும் நடைமுறையில் காங்கிரஸ் கட்சி அதனை முரணின்றி பின்பற்றவில்லை. பெரும்பாலும் நிலப்ரபுக்களையும் ஜமீன்தார்களையும் மன்னராட்சிகளையும் எதிர்த்து காங்கிரஸ் களம் இறங்கவில்லை. மாறாக, இந்திய முதலாளிகளின் நலம் காக்கும் நோக்குடனே செயல்பட்ட காங்கிரஸ் இயக்கம், கிராமப்புற ஆதிக்க சக்திகளுடன் மோதலை தவிர்க்கவே முயன்றது. சாதி ஒடுக்குமுறையை தகர்க்கவோ, பழங்குடி மக்களின் உரிமைகளை நிலைநாட்டவோ காங்கிரஸ் தலைமை குறிப்பிடத்தக்க எந்த முயற்சியும் எடுத்ததாக சான்றுகள் இல்லை. விடுதலைக்குப்பின் இந்திய தேசீய காங்கிரஸ் பகிரங்கமாகவே கிராமப்புற பெருநில உடமையாளர்களுடன் சமரசம் செய்துகொண்டது. மக்கள் எழுச்சியின் காரணமாகவும் முதலாளித்துவ வளர்ச்சியின் தேவை அடிப்படையிலும் கிராமப்புற மற்றும் வேளாண் உற்பத்தி உறவுகளில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒரு எல்லைக்கு உட்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை காங்கிரஸ் மேற்கொண்டது. ஆனால் அடிப்படையில் பெருமுதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியைத்தான் காங்கிரஸ் நடத்திவந்தது. அப்பாதையின் நெருக்கடி 1980 – 1991 காலத்தில் மேலும் மேலும் தீவிரமடைந்த பின்னணியில், பன்னாட்டு அரங்கில் சோவியத் ஒன்றியத்திலும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அமைப்புகள் தகர்க்கப்பட்ட சூழலில், 1991 இல் இருந்து காங்கிரஸ் நவீன தாராளமய கொள்கைகளை தீவிரமாக அமலாக்கியது. இந்த நிகழ்ச்சிப்போக்குகள் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் இந்திய அரசின் வர்க்கத்தன்மை பற்றிய கீழ்கண்ட மதிப்பீடு மிகச்சரியானது என்று நிரூபிக்கின்றன: “இந்திய அரசு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் அரசு. இதற்கு தலைமை தாங்குவது பெருமுதலாளிகள். இப்பெருமுதலாளிகள் மேலும் மேலும் கூடுதலாக அந்நிய நிதி மூலதனத்துடன் இணைந்து செயல்படுகின்றனர்.”

இக்கட்டுரையின் நோக்கம் விடுதலை இயக்கத்திலும் அதன் பின்பும் இந்திய தேசீய காங்கிரஸ் எடுத்த பல்வேறு நிலைபாடுகள், அவற்றில் இருந்த முரண்கள் மற்றும் அவற்றின் வர்க்கத்தன்மை ஆகியவற்றை ஆய்வது அல்ல. எனினும் இந்திய நாட்டின் விடுதலை இயக்கத்தையும் இந்திய மக்களின் விடுதலை என்ற இலக்கையும்  பொது உடமை இயக்கம் எவ்வாறு முன்பின் முரணின்றி இணைத்துப் பார்த்தது என்பதை புரிந்து கொள்ள உதவும் வகையில் தேச விடுதலை இயக்கத்திற்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை தொடர்பான கருத்துக்கள் இங்கே இடம் பெற்றுள்ளன.

விடுதலை இயக்கத்தில் கம்யூனிஸ்டுகளின் மாற்று பார்வை

இந்திய தேசீய காங்கிரஸ் என்ற அரசியல் அமைப்பின் வாயிலாக இந்திய முதலாளிவர்க்கம் 1885 ஆம் ஆண்டிலேயே அரசியல் களம் புகுந்துவிட்டது. இதற்குப்பின் பல பத்தாண்டுகளுக்குப் பின் தான் நவீன தொழிலாளி வர்க்கம் உருவாகி எண்ணிக்கையில் வேகமாக அதிகரித்த நிலையில், உலகெங்கும், குறிப்பாக ரஷ்யாவிலும் எழுந்த புரட்சிகர அலைகளின் பின்புலத்தில் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வும் விடுதலை வேட்கையும் வேகமாக வளர்ந்து அரசியல் களத்திற்கு வருகிறது.1917இல் ரஷ்யாவில் வெடித்த மகத்தான அக்டோபர் புரட்சியின் தாக்கம் இதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது.

1921இல் காங்கிரஸ் முன் கம்யூனிஸ்டுகள் வைத்த கடிதம்

1920இல் முதன்முறையாக கூடிய அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி ) வளர்ந்துவந்த தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஒரு குறியீடு என்றால், 1921இல் காங்கிரஸ் கட்சியின்  அகமதாபாத் நகரில் கூடிய அகில இந்திய கமிட்டி கூட்டத்திற்கு இந்திய பொது உடமை இயக்கத்தின் துவக்கத்தில் பங்கேற்ற M.N.ராய் மற்றும் அபானி முகர்ஜி ஆகிய இருவரும் சமர்ப்பித்த கடிதத்தின் வாயிலாக முன்வைக்கப்பட்ட அறைகூவல் விடுதலை இயக்கத்தில் சில இடதுசாரி கருத்துக்களை பிரகடனப்படுத்தியது. நிறைகுறைகள் இருந்தாலும், இது கவனிக்கத்தக்க ஆவணம். அடுத்த ஆண்டு கயாவில் காங்கிரஸ் கூடிய பொழுதும் இக்கடிதம் அனுப்பப்பட்டது. இக்கடிதம் முழு சுதந்திரம் – “பூரண ஸ்வராஜ்” – என்ற கோரிக்கையை விடுதலை இயக்கத்தில் முதன் முறையாக எழுப்பியது. இந்த கோரிக்கையை 1929 இல் தான் காங்கிரஸ் ஏற்றுகொண்டது. அது மட்டுமல்ல; விடுதலைப் போராட்டத்தில் விவசாயிகளையும் தொழிலாளிகளையும் இதர உழைக்கும் மக்களையும் ஈர்க்கும் வகையில் அவர்களின் உடனடி வாழ்வுசார் பிரச்சினைகளை காங்கிரஸ் கையில் எடுக்க வேண்டும் என்று கடித வடிவிலான இந்த பிரகடனம் வலியுறுத்தியது. அது கூறியது: “(காங்கிரஸ்) தொழிற்சங்கங்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளை தனது கோரிக்கைகளாக ஏற்கட்டும்; விவசாய சங்கங்களின் திட்டத்தை தனது திட்டமாக ஏற்கட்டும்…. விரைவில் எந்த இடையூறும் காங்கிரஸ் முன்னேறுவதை தடுக்க இயலாது. தங்களின் பொருள்சார் நலனுக்காக உணர்வுபூர்வமாக போராடும் அனைத்து மக்களின் எதிர்கொள்ள முடியாத வலிமை காங்கிரசுக்கு பின்பலமாக இருக்கும்.” இந்த அறைகூவலை தொடர்ந்து தோழர் சிங்காரவேலர் காங்கிரஸ் கட்சியின் கயா மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் என்ற முறையில் முழு சுதந்திரம் என்ற முழக்கத்தை ஏற்குமாறு வற்புறுத்தி உரை நிகழ்த்தினார்.

வகுப்புவாத எதிர்ப்பில் இடதுசாரிகள்

தொடர்ந்து காலனி அரசின் கடும் தாக்குதலுக்கு உள்ளான போதிலும் கம்யூனிஸ்ட் கட்சி தன்னை புனரமைத்துக்கொண்டு 1926ஆம் ஆண்டு மே மாதத்தில் வகுப்பு வாதவாத பிரச்சினை பற்றி தனது அறிக்கையை வெளியிட்டது. 1922 முதல் 1927 வரை ஏராளமான வகுப்பு கலவரங்கள் நிகழ்ந்தன. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்கள் வகுப்புவாத சிந்தனைகளுக்கும் செயல்பாட்டுக்கும் மாறினர். இந்துமஹாசபா தலைவராக இருந்த சவார்கர் எழுதிய இந்துத்வா என்ற புத்தகம் 1923இல் வெளிவந்தது. 1925இல் ஆர் எஸ் எஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. இத்தகைய சூழலில் கம்யூனிஸ்ட் கட்சி வகுப்புவாதத்தை சமரசமின்றி எதிர்ப்பது என்ற தனது நிலைபாட்டை உறுதிபட கடைப்பிடித்தது. காங்கிரசைப் போல் அல்லாமல், வகுப்புவாத அமைப்பை சார்ந்த எவரும்  கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக முடியாது என்ற நிலையை அது ஏற்கெனவே எடுத்திருந்தது. தோழர்கள் முசபர் அஹமதும் பாகர்ஹட்டாவும் இணைந்து வெளியிட்ட கடிதத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் அந்நிய மற்றும் இந்திய முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களால் சமமாக சுரண்டப்படுகின்றனர் என்றும், இருசாராரின் பொருளாதார நலன்களும் ஒன்றானவையே என்றும் வலியுறுத்தினர். வர்க்க பேதமற்ற சமூகத்தை இருசாராரும் இணைந்து உருவாக்க முன்வரவேண்டும் என்றும் அக்கடிதம் அறைகூவல் விடுத்தது. காலனி ஆதிக்க சுரண்டலை எதிர்க்கவும் அழைத்தது.

1930இல் கம்யூனிஸ்டுகள் முன்வைத்த நடவடிக்கைக்கான திட்டம்

1920கள் முழுவதும் காலனி அரசால் வேட்டையாடப்பட்டு வந்தபோதிலும் கம்யூனிஸ்டுகள் உறுதியுடன் எதிர்காலப் பணிகள் பற்றி முனைப்புடன் சிந்தித்தனர். 1930ஆம் ஆண்டு நடவடிக்கைக்கான நகல் திட்டம் என்ற கம்யூனிஸ்ட் கட்சி ஆவணம்  இந்திய மக்களின் விடுதலை பற்றி கம்யூனிஸ்டுகளின் கண்ணோட்டத்தை பதிவு செய்தது. அது கூறியது:

இந்திய மக்களின் அடிமைத்தளைகளை அழித்தொழிக்கவும், தொழிலாளி வர்க்கத்தையும் விவசாயிகளையும் அவர்களை கசக்கிப் பிழியும் வறுமையில் இருந்து விடுவிக்கவும், தேசத்தின் விடுதலையை அடைவது அவசியம். விவசாய புரட்சி என்ற பதாகையை உயர்த்திப் பிடிப்பது அவசியம்……இந்தியாவின் புரட்சிகர விடுதலைக்கு பிரிட்டிஷ் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் விவசாய புரட்சியை சாதிப்பது தான் அடிப்படை.

இதனை செய்வது யார் என்ற கேள்விக்கு அந்த அறிக்கை தொடர்ந்து கூறியது:

உலக வரலாறும் இந்தியாவில் வர்க்கப் போராட்டம் அளித்துள்ள படிப்பினைகளும் இந்திய மக்களின் விடுதலை, தேச அடிமைநிலையை ஒழிப்பது, தேச வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கும் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிவது, (சுரண்டும் வர்க்கங்களின்) நிலங்களை பறிமுதல் செய்து, புரட்சிகர தன்மையிலான மிகப்பெரிய அளவிலான ஜனநாயக புனரமைப்பை சாதிப்பது ஆகிய அனைத்தும் தொழிலாளி வர்க்கத் தலைமையின் கீழ் மட்டுமே சாத்தியம் என்பதை நிரூபிக்கின்றன.

1930 அறிக்கை முன்வைத்த மக்களுக்கான கோரிக்கைகள் 

மக்களுக்கான விரிவான திட்டத்தையும் அறிக்கை முன்வைக்கிறது. அதன் அனைத்து அம்சங்களையும் நாம் இங்கே விளக்கவோ விவாதிக்கவோ இயலாது. எனினும் நம்மை வியக்க வைக்கும் வகையில் தொலைநோக்குப் பார்வையுடன் பல விஷயங்களை அத்திட்டம் முன்வைத்துள்ளதை கோடிட்டுக் காட்டலாம். ஆவணம் முன்வைக்கும் கோரிக்கைகளில் சிலவற்றை பார்ப்போம்:

  • பிரிட்டிஷ் ஆட்சியை தூக்கி எறிந்தபின், அனைத்து (அந்நிய) கடன்களையும் ரத்துசெய்தல்; அனைத்து பிரிட்டிஷ் தொழிற்சாலைகள், வங்கிகள், ரயில், கடல் மற்றும் நதி சார் போக்குவரத்து, மலைத்தோட்டங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நாட்டுடமை ஆக்குதல்.
  • நிலப்பிரபுக்களின் நிலங்கள், வனங்கள், இதர சொத்துக்கள் ஆகியவற்றை நட்டஈடுஇன்றி பறிமுதல் செய்து உழைக்கும் விவசாயிகளிடம் ஒப்படைத்தல். (இது, மன்னர்கள்,பிரிட்டிஷ் அரசு அலுவலர்கள், லேவாதேவிகாரர்கள் ஆகியோருக்கும் பொருந்தும்). வங்கிகளுக்கும் லேவாதேவிக்காரர்களுக்கும் விவசாயிகள் தரவேண்டிய கடன்கள் ரத்து செய்யப்படும். அனைத்து ஆண்டான்-அடிமை ஒப்பந்தங்களும் ரத்தாகும்.
  • எட்டு மணி நேர வேலைநாள், தொழிலாளர் பணிநிலைமைகளில் மிகப்பெரிய முன்னேற்றம், கூலி உயர்வு ஆகியவை உறுதிசெய்யப்படும். வேலைகிடைக்காதவர்களுக்கு அரசு பராமரிப்பு வழங்கப்படும்
  • ஊடக சுதந்திரம், தொழிலாளர்களுக்கான அமைப்பு மற்றும் வேலை நிறுத்த உரிமை.
  • மறியலுக்கு தடை விதித்தல் உட்பட அனைத்து தொழிலாளர் விரோத சட்டங்கள் ரத்தாகும்.
  • அரசில் இருந்து மதம் முழுமையாக விலக்கப்படும்.
  • சாதி அமைப்பும் சாதி ஒடுக்குமுறைகளும் முழுமையாக அழித்தொழிக்கப்படும்.

பெண்கள் உரிமைகள்

இந்திய சமூகத்தில் பெண்களின் துயரநிலையை முடிவுக்கு கொண்டுவர பல நடவடிக்கைகளை 1930ஆம் ஆண்டு அறிக்கை பேசுகிறது. பெண்களின் முழுமையான சமூக, பொருளாதார, சட்டரீதியான சமத்துவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடும் என்று ஆவணம் கூறுகிறது. இதுபற்றிய விவரமான கருத்துக்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அன்றே, கருவுற்றிருக்கும் பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறுக்கு முன்பு இரண்டு மாதம், பின்பு இரண்டு மாதம் முழு சம்பளத்துடன், தக்க இலவச மருத்துவ வசதிகளுடன்  விடுப்பு தரப்படவேண்டும் என்று அறிக்கை கூறியுள்ளது. பெண்கள் வேலை செய்யும் ஆலைகளில் ஆலை உடைமையாளர் செலவில் குழந்தை காப்பகங்கள் அமைக்கப்பட்டு செயல்படவேண்டும் என்ற கோரிக்கையையும் இந்த ஆவணம் முன்வைத்துள்ளது. பெண்தொழிலாளர்கள் அவர் தம் சிசுவிற்கு பாலூட்ட தனி அறை, இப்பெண்களுக்கு 6 மணி நேரம் மட்டுமே வேலைநாள் என்ற கோரிக்கைகளும் அறிக்கையில் இடம் பெறுகின்றன.

கல்வி, இளைஞர் நலம்

16 முதல் 20 வயதுவரையிலான இளைஞர்களுக்கு வேலைநாள் நான்கு மணிநேரமாக இருக்கவேண்டும் என்றும் 16 வயதுக்கு குறைவான குழந்தைகளை பணி அமர்த்தக்கூடாது அறிக்கை கோருகிறது. 16 வயதுவரை, கட்டாய இலவச கல்வி அரசால் வழங்கப்படவேண்டும் என்றும் அது கோருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் பாடபுத்தகங்கள், உணவு, உடை ஆகியவை அரசால் வழங்கப்படவேண்டும் என்பது அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

1930கள், 1940கள்

கட்சியின் முதல் திட்ட ஆவணம் 1930 இல் தயார் செய்யப்பட்டது. அப்பொழுது மீரட் சதிவழக்கு நடந்துகொண்டிருந்தது. மீரட் சதிவழக்கில் சிறை சென்ற தோழர்கள் வெளியே வந்தபிறகு நகல் அரசியல் கருத்துரு ஒன்று டிசம்பர்  1933 இல் அன்றைய “தற்காலிக (புரோவிஷனல்)”   மத்தியக் குழுவால் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 1936 இல் மூன்றாவது திட்ட ஆவணம் – நடவடிக்கைக்கான மேடை – ஏற்றுக்கொள்ளப்பட்டது. முந்தைய இரு ஆவணங்களில் இருந்த சில தவறுகளை நீக்கிய  இந்த ஆவணத்தின் அடிப்படையில் சர்வதேச அகிலத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் இணைப்பு பெற்றது. பின்னர் 1943இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  முதல் அகில இந்திய மாநாட்டில் கட்சி திட்டம் தொடர்பான வழிகாட்டுதல்கள் தரப்பட்டன. சர்வதேச மற்றும் இந்திய நிலைமைகள் பற்றிய மதிப்பீடுகள் தொடர்பாக  இந்த ஆவணங்களில் சில வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாட்டு விடுதலையிலும் மக்கள் விடுதலையிலும் உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி மக்களை விடுதலை இயக்கத்தில் திரட்டவேண்டும் என்ற புரிதல் தொடர்ந்தது. பின்னர், கம்யூனிஸ்ட் இயக்கத்தில் புரட்சியின் கட்டம் பற்றியும், அதன் தலைமை வர்க்கம் பற்றியும், பங்கேற்கும் வர்க்கங்கள் பற்றியும், இந்திய அரசின் வர்க்கத்தன்மையை மதிப்பீடு செய்வதிலும், அதிலிருந்து புரட்சியின் பாதையை இனம் காண்பதிலும் கடுமையான வேறுபாடுகள் எழுந்தன. நீண்ட போராட்டத்திற்குப்பின், மக்கள் ஜனநாயக புரட்சி என்ற இலக்கை நோக்கி இயக்கம் பயணிக்க வேண்டும் என்ற, விடுதலை இயக்க காலத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்த  புரிதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தொடர்ந்து முன் எடுத்துச் சென்றுள்ளது. இந்த வரலாறுக்குள் செல்வது இக்கட்டுரையின் வரம்பிற்கு அப்பாற்பட்டது.

இறுதியாக

இக்கட்டுரையின் நோக்கம், முதலாளித்துவ கட்சிகளைப்போல் இல்லாமல், கம்யூனிஸ்ட் இயக்கம் வர்க்கப் பார்வையில் நின்று விடுதலை இயக்கத்தில் செயல்பட்டது என்பதை தெளிவு படுத்துவது தான். அரசியல் விடுதலையின் அவசியத்தை நன்கு உணர்ந்து, இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஊசலாடிக்கொண்டிருந்த பொழுதே, 1921இலேயே முழுவிடுதலை என்ற கோரிக்கையை முன்வைத்த கம்யூனிஸ்டுகள் வெறும் அரசியல் விடுதலை மட்டும் நமது நோக்கமாக இருக்கமுடியாது என்பதையும் வலுவாக முன்வைத்தனர். வர்க்க அடிப்படையில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கையில் எடுப்பது அவசியம் என்று வலியுறுத்தினர். இத்தகைய பாதையின் மூலம் தான் உண்மையான ஜனநாயகத்தன்மை கொண்ட நாடாக இந்தியா மாற இயலும் என்பதை 1921,1930 ஆவணங்களில் மட்டுமின்றி, அதற்குப் பின்பும், விடுதலைப் போராட்ட காலத்திலும், இன்று வரையிலும் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். அதேபோல் சமூக ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டு வருவதும் பழங்குடி மக்களின் சம உரிமைகளை நிலை நாட்டுவதும் பாலின சமத்துவத்தை நோக்கி பயணிப்பதும் இந்திய நாட்டு மக்களின் விடுதலைப் பயணத்தின் இன்றியமையாத அம்சங்கள் என்ற புரிதலுடன் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி செயல்படுகிறது. இந்தியா பல மொழிவழி தேசீய இனங்களைக்கொண்ட நாடு என்பதையும் மக்களின் முழுமையான விடுதலை என்பதன் இலக்கணத்தின் பகுதியாக முன்வைக்கிறது. அதேபோல், மதச்சார்பின்மையையும் நவீன இந்தியாவின் இலக்கணத்தின் பகுதியாக நாம் பார்க்கிறோம். நவீன தாராளமய கொள்கைகளை நிராகரித்து, வலுவான பொதுத்துறை, திட்டமிட்ட பொருளாதாரம் என்ற திசைவழியில் பயணித்தால் தான் ஏகாதிபத்திய தாக்குதலை எதிர்த்து நிற்கவும், பாடுபட்டு பெற்ற அரசியல் விடுதலையை பாதுகாக்கவும் இயலும். இந்த அம்சங்கள் அனைத்தும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் சமகாலப்படுத்தப்பட்ட திட்டத்தில் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கப்பட்டுள்ளன.

சமகாலத்தில் பல்வேறு அரசியல் பார்வைகளும் “மாடல்களும்” உரத்த குரலில் முன்வைக்கப்படுகின்றன. ஒருபுறம் ஆர் எஸ் எஸ் சின் கார்ப்பரேட் இந்துத்வா மாடல் ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம் மதசார்பின்மை பற்றி அவ்வப்பொழுது பேசினாலும் தாராளமய பாதை தான் சரியான மாடல் என்று காங்கிரஸ் கருதுகிறது. விவசாய புரட்சியின்றி, சில சமூக சீர்திருத்த முனைவுகள், சில நலத்திட்டங்கள் மற்றும் தாராளமய கொள்கைகள் மூலம் வளர்ச்சி காணலாம் என்ற சில மாநில முதலாளித்துவ கட்சிகளின் மாடல்கள் முன்மொழிகின்றன. கம்யூனிஸ்ட் இயக்கம் சமூக ஒடுக்குமுறையையும் பொருளாதார சுரண்டலையும் இணைந்தே எதிர்ப்பது தான் சரியான, புரட்சிகரமான வர்க்கப்பார்வை என்ற புரிதலில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதுதான் மக்கள் விடுதலை என்ற இலக்கை அடைய சரியான பாதை. எனவே தான், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் விவசாயிகளையும் இதர உழைக்கும் மக்களையும் திரட்டி போராடுவதோடு, சாதி ஒடுக்குமுறையை தகர்ப்பது, பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவது, பழங்குடி மக்களின் உரிமைகளை உயர்த்திப்பிடிப்பது, தாராளமய பாதையை நிராகரிப்பது, பொதுத்துறையை வலுப்படுத்துவது, மாநில உரிமைகளுக்கு குரல் கொடுப்பது, மதசார்பின்மையை பாதுகாப்பது ஆகிய அம்சங்களும் மக்கள் ஜனநாயக புரட்சிப் பயணத்தின்  இன்றியமையாத அம்சங்கள் என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு

நிலோத்பல் பாசு

1920ஆம் ஆண்டு அக்டோபர் 17 அன்று தாஷ்கெண்ட் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்ட நிகழ்வினைக் கொண்டாடும் வகையில் கட்சி மேற்கொண்ட ஓராண்டு கால கொண்டாட்டங்கள் இன்று நிறைவுபெறுகின்றன.  எனினும் கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே ஜனநாயக, மதசார்பற்ற, சாதி, இனம், மதம், பொருளாதார அந்தஸ்து ஆகியவற்றை எல்லாம் கடந்து சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் அனுபவிக்கும் குடிமக்களைக் கொண்ட ஒரு மக்கள் குடியரசாக இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றி அமைப்பது என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோள் இன்னமும் நிறைவேறாமலே நீடித்து வருகிறது. மிக மோசமான பின்னடைவுகளையும் அது சந்தித்து வந்துள்ளது. அதிலும் குறிப்பாக சமீப ஆண்டுகளில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் இந்த அடிப்படைக் குறிக்கோள்களே கேள்விக்கு உரியவையாக மாறியுள்ளன. ஏற்றத்தாழ்வு, சுரண்டல், அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் மதத்தின் அடிப்படையில் நீர்த்துப் போவது, சாதி மற்றும் பாலின அடிப்படையிலான பாரபட்சம் ஆகியவற்றை மிக மோசமான அளவில் நாம் அனுபவித்துக் கொண்டு வருகிறோம். இத்தகையதொரு பின்னணியில் விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கை நினைவு கூர்வதென்பது முக்கியமானதாக ஆகிறது. இன்று அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள அரசியல் ரீதியான சுதந்திரம், குடிமக்களின் சமத்துவம் ஆகிய இந்தக் கருத்துக்களை நிலைநிறுத்துவதில் கம்யூனிஸ்டுகளின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பின்னணி

பிரிட்டிஷ் ஆட்சியின் வரலாறும் அது நமது மக்களை கொடூரமாகச் சுரண்டியதுமே விடுதலைக்கான நமது போராட்டத்தை உந்தித் தள்ளியது. இந்திய மக்களின் விரிந்து பரந்த, பல்வேறு வகைப்பட்ட நிலைமைகளில் மக்களின் எண்ணிலடங்கா போராட்டங்களே நாடு தழுவிய அளவிலான விடுதலைப் போராட்டமாக உருவெடுக்க வழிவகுத்தன. இந்தப் போராட்டங்கள் ஒவ்வொன்றின் உடனடிக் காரணமாக இருந்தது பிரிட்டிஷ் பேரரசினை நிலைத்து நிற்கச் செய்துவந்த முக்கிய செயலான கொள்ளையும் பறிமுதலுமே என்பதை இங்கு மீண்டும் வலியுறுத்த வேண்டியது பொருத்தமானதாக இருக்கும்.

இந்தக் காலனிய சுரண்டலுக்கு எதிரான முதலாவது அணிதிரட்டப்பட்ட வெளிப்பாடு பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இருந்த இந்திய வீரர்களின் எழுச்சியில் வெளிப்பட்டது. இந்த எழுச்சி தொடங்கிய 1857 மே 10லிருந்து 1957 செப்டெம்பர் 20 அன்று மீண்டும் தில்லியை கைப்பற்றுவதற்கு பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு நான்கு மாதங்கள் பிடித்தன. ஆனால் கிளர்ந்து எழுந்த வீரர்களின் மீது மீண்டும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டவும், இந்த எழுச்சியின் பிடியில் இருந்த வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை மீண்டும் கைப்பற்றவும் அவர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆயிற்று.

காலனிய வரலாறு குறித்து எழுதப்பட்ட பெரும்பாலான எழுத்துக்கள் இந்தக் கலகத்தின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடவே முயற்சித்தன. எனினும் ஒரு சில எழுத்துக்கள் அப்போதிருந்த சூழலை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டின. இந்த எழுச்சிக்கான உடனடி தூண்டுதல் இந்திய சிற்றரசர்கள் ஆளும் பகுதிகளில் தங்களது ஆட்சியதிகாரத்தை பிரிட்டிஷ் காலனி ஆதிக்கவாதிகளிடம் இழந்து நின்றவர்கள், பிரபுக்கள், ஜமீன்தார்கள் ஆகியோரிடையே நிலவிய அதிருப்தி, இந்திய வீரர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பேரழிவை எதிர்கொண்டு வந்த பெருந்திரளான சாதாரண உழைக்கும் மக்கள் ஆகியோர் ஒன்று திரண்டு கிளர்ந்து எழுந்ததே ஆகும்.

நாடு தழுவிய அளவில் ஏற்பட்ட கிளர்ச்சியை ‘சிப்பாய் கலகம்’ என்று குறைத்து மதிப்பிட்டு, மக்களின் பங்கினை குறைத்துக் காட்டவும் முயற்சித்த பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களின் முயற்சிகளை மறுதலிக்கும் வகையில் இந்தக் கலகத்தை ‘இந்து-முஸ்லீம்களின் நாடுதழுவிய எழுச்சி’ என்று கார்ல் மார்க்ஸ் வகைப்படுத்தியது மட்டுமின்றி, “உண்மையில் ராணுவத்தில் ஏற்பட்ட எழுச்சி என்பது நாடு தழுவிய ஓர் எழுச்சியே” என்றும் குறிப்பிட்டார்.

இந்த எழுச்சியினால் ஏற்பட்ட மிகப் பெரும் தாக்கத்தைப் போலவே, அது நீடித்து நிற்கத்  தவறியதற்கான பாடங்களும் அதே அளவிற்கு மிகவும் ஆழமானவை. நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்ட இந்திய சிற்றரசர்கள் பலரும், பெரும் ஜமீன்தாரர்களும் பிரிட்டிஷாரின் பக்கத்தில் உறுதியாக நின்றனர். இதனை அங்கீகரித்த வகையில் அன்றைய கவர்னர் ஜெனரல் கானிங் பிரபு வெளிப்படையாகவே இவ்வாறு குறிப்பிட்டார்: “ அவர்கள் (சிற்றரசர்கள்) மட்டும் இந்தப் புயலின்போது தடுப்பணைகளாகச் செயல்படாமல் இருந்திருந்தால் இந்தப் பெருவெள்ளப் பேரலையில் நாங்கள் ஒரேயடியாக அடித்துச் செல்லப்பட்டிருப்போம்.”

இதற்கு பிரிட்டிஷாரின் எதிர்வினையானது சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு பாடத்தை வலியுறுத்தியது: இந்தியாவின் விடுதலைப் போராட்டம் என்பது நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டமாகத்தான் இருக்க வேண்டும். பெரும் எண்ணிக்கையிலான விவசாய மக்களை விவசாய நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் அணிதிரட்டாமல், விடுதலைக்கான இயக்கம் எப்போதுமே வெற்றி பெறாது.

பிரிட்டிஷாரும் 1857 எழுச்சியில் தகுந்த பாடத்தைக் கற்றுக் கொண்டனர். இந்துக்கள், முஸ்லீம்கள், சிற்றரசர்கள் ஆகிய பிரிவினரை பொதுவானதொரு நோக்கம் உள்ளவர்களாக நீடிக்க அனுமதித்தால், பிரிட்டிஷ் ஆட்சியை நிலைத்துநிற்கச் செய்ய முடியாது என்பதே அந்தப் பாடமாகும். அக்காலத்திய சம்பவங்களை தொகுத்தளித்த பிரிட்டிஷ்காரரான தாமஸ் லோவே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:  “ பசுவை கொன்று  அதன் இறைச்சியை உண்பவர்களும், பசுவை வணங்குபவர்களும், பன்றியை வெறுப்பவர்களும், பன்றி இறைச்சியை உண்பவர்களும் ஒன்று சேர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும்!” இயற்கையாகவே இந்த முடிவுதான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ‘பிரித்து ஆளும்’ சூழ்ச்சியை தீவிரமாகச் செயல்படுத்தக் காரணமாக இருந்தது.

விடுதலைப் போராட்டத்தில் தங்களது பங்கினை வரையறுக்கும்போது கம்யூனிஸ்டுகள் இந்தப் பாடங்களை நன்கு உள்வாங்கிக் கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க ஆண்டுகள்

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வெடித்தெழுந்த இந்திய மக்களின் உள்ளூர் அளவிலான போராட்டங்கள் மற்றும் அதன் பல்வேறு நீரோட்டங்களையும் உள்வாங்கிக் கொள்வதில் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருந்தபோதிலும், அதற்கு உடனடியான ஊக்கம் அளித்தது மகத்தான அக்டோபர் புரட்சியின் வெற்றி என்பது மிகத் தெளிவான உண்மையாகும். குறிப்பாக, காலனியம் பற்றிய தனது கொள்கையின்மூலம் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்குவதற்கு வழிவகுத்தார். இந்தியாவில் மட்டுமின்றி, மற்ற இடங்களிலும் தொடக்கத்தில் புரட்சியாளர்கள் சிறு சிறு குழுக்களின் வடிவத்தில் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலும் குடியேறி மார்க்சியத்தை தழுவிக் கொண்டவர்கள் இதில் அளித்த பங்கு குறிப்பிடத்தக்கதாகும். இதுபற்றி முசாஃபர் அகமது குறிப்பிட்டார்: “ வெளிநாட்டில் நிறுவப்பட்ட கட்சி ஸ்தாபனத்தின் விரிவுபடுத்தப்பட்ட வடிவமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகும்.” 1922-23ஆம் ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகளின் மீது திணிக்கப்பட்ட பெஷாவர் கம்யூனிஸ்ட் சதிவழக்கிலிருந்து இந்த உண்மை மிகத் தெளிவாகப் புலப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பத்து பேரில் ஒன்பது பேர் கட்சியின் வெளிநாட்டுக் கிளையில் உறுப்பினர்களாக இருந்தவர்கள். அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்த இளம் கட்சியின்மீது பெஷாவர் சதிவழக்கு (1922-23), கான்பூர் சதிவழக்கு (1924), அரசுக்கு மோசமான இகழ்ச்சியைப் பெற்றுத் தந்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான 31 தலைவர்கள் தண்டனை பெற்ற, மீரட் சதிவழக்கு (1929) ஆகியவற்றிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எத்தகைய அதிர்ச்சியை கொடுத்தது என்பதை நம்மால் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

எனினும் பின்னாளில் என்ன நடக்கவிருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், புதிதாகப் பிறந்த அந்தக் கட்சி இந்திய அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற துடிப்புடன் 1921ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முழுமையான விடுதலைக்கான தீர்மானம் ஒன்றை முன்வைத்தது. கட்சியின் சார்பில் இத்தீர்மானத்தை முன்வைத்த மவுலானா ஹஸ்ரத் மோஹானி, சுவாமி குமரானந்த் ஆகியோர் விடுதலைப் போராட்டத்தின் மிக உயிரோட்டமான எதிர்பார்ப்புகளை எடுத்துக் கூறினர். முழுமையான விடுதலை என்ற இந்தத் தீர்மானம் இறுதியில் 1929ஆம் ஆண்டில்தான் காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மக்களுடனான தொடர்புகள்: விவசாய – தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அகமதாபாத் மாநாட்டில் கம்யூனிஸ்டுகள் இத்தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு முன்பாக, எம். என். ராய், அபானி முகர்ஜி ஆகிய இருவரும் மாநாட்டிற்கு வெளிப்படையான  ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தனர். காங்கிரஸ் கட்சியிடம் அக்கடிதம் இவ்வாறு கோரியிருந்தது: “ தொழிற்சங்கங்களின் குறைந்தபட்சக் கோரிக்கைகளை உங்களது சொந்தக் கோரிக்கைகளாக ஏற்றுக் கொள்ளுங்கள்; விவசாய சங்கங்களின் திட்டத்தை உங்களது சொந்தத் திட்டமாக ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது எவ்விதமான தடைகளும் தடுத்து நிறுத்தமுடியாத ஒரு சக்தியாக காங்கிரஸ் மாறும். தங்களின் பொருளாயத நலன்களுக்காகப் போராடுகின்ற மக்கள் அனைவரின் தடுத்து நிறுத்தமுடியாத வலிமை அதன் பின்னே இருக்கும்.”

பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து விடுதலை பெறுவதற்கான ஒட்டுமொத்த தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக, விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கினை விரித்துக் கூறுவதாகவே கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறை இருந்தது. மிக விரிவான அளவில் தொழிலாளர்களையும், விவசாயிகளையும், சமூகரீதியான பாரபட்சம் மற்றும் சாதிய படிநிலை ஆகியவற்றால் பாதிப்பிற்கு ஆளானவர்களையும் சமூகப் பிரச்சனைகளுக்கான போராட்டங்களிலும், வர்க்கப் போராட்டங்களிலும் அணிதிரட்டுவதற்கு அழுத்தம் தரப்பட்டது. இது விடுதலைக்கு மட்டுமே ஆனதல்ல என்பது வெளிப்படை. மாறாக, சோஷலிசத்தை நிறுவுவது என்ற இறுதி நோக்கத்துடன் அவர்களது பொருளாயத நிலைமைகளில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கானதாகும். சந்தேகத்திற்கு இடமின்றி இது தேசிய இயக்கத்தில் புதியதொரு போக்கே ஆகும்.

தொடக்க நாட்களிலிருந்தே இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வளர்த்தெடுப்பது என்ற பிரச்சனையில் கம்யூனிஸ்ட் கட்சி தலையீடு செய்தது. பிரிட்டிஷாரின் ஆதரவு பெற்ற, இந்து மகாசபா, முஸ்லீம் லீக் ஆகியவற்றால் பின்பற்றப்பட்டு வந்த வகுப்புவாதப் பிரிவினைகளை அது எதிர்த்துப் போராடியது.

கம்யூனிஸ்ட் தலையீட்டின் மற்றொரு அம்சம் சாதிய ஒடுக்குமுறை போன்ற சமூகப் பிரச்சனைகளில் தலையீடு செய்ததாகும். நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிகழ்ச்சிநிரலுடன் இதை இணைக்கவும் முயற்சிக்கப்பட்டது. இதன் நோக்கம் சாதிய அமைப்பினை சீர்திருத்துவதல்ல; மாறாக, அதனை முற்றிலுமாக அழித்தொழிப்பதே ஆகும்.

தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியினால் அணிதிரட்டப்பட்ட விவசாயிகள் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து நிற்க காங்கிரஸ் மறுத்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் மீது நம்பிக்கை இழந்தனர். இது தங்களின் சொந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் அணிதிரள வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்களிடையே வளர்வதற்கும் வழிவகுத்தது. உள்ளூர் அளவிலும், பகுதி அளவிலும் போராட்டங்கள் வெடித்தெழுந்தன. அதிலும் குறிப்பாக,  இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய எழுச்சியின் ஒரு பகுதியாக அவை வேகமெடுத்தன.  வங்கத்தில் தேபகா போராட்டம், கேரளாவின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற விவசாயிகளின் எண்ணற்ற போராட்டங்கள், மகாராஷ்ட்ராவில் வார்லி ஆதிவாசி மக்களின் போராட்டம், பீகாரில் பக்ஷாத் போராட்டம், அசாமில் சுர்மா பள்ளத்தாக்கு விவசாயிகளின் போராட்டம் என பெரும் எண்ணிக்கையில் விவசாயிகள் போராட்டங்களில் அணிதிரண்டனர். இவை அனைத்திலுமே மிகப் பெரியதாக அமைந்திருந்தது நிஜாமின் ஆட்சிக்கு எதிராக தெலுங்கானாவில் ஒரு ஆயுதப் போராட்டம் என்ற வடிவத்தை மேற்கொண்ட விவசாயிகளின் எழுச்சியே ஆகும்.

அதேபோன்று கல்கத்தா, கான்பூர், பம்பாய், சென்னை போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரயில்வே, நிலக்கரி சுரங்கங்கள், சணல், பருத்தி, தேயிலைத் தோட்டங்கள் போன்ற மிக முக்கியமான தொழில் துறைகளிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்தத் தொழிலாளர்களின் போராட்டங்களிலேயே மிகவும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது பம்பாயில் கப்பற்படை எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்து பம்பாய் நகர தொழிலாளர்கள் அனைவரும் வீதிகளில் வந்திறங்கியது அரசியல் தன்மை கொண்ட ஒன்றாகவும் மாறியது.

பல்வேறு போக்குகள்: கத்தார் கட்சி, புரட்சிகர தேசிய வாதிகள், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி

அக்டோபர் புரட்சியின் மகத்தான தாக்கமும் சோவியத் யூனியனின் உருவாக்கமும் உழைக்கும் மக்களிடையே நம்பிக்கையை தோற்றுவித்தது. சமரசமற்ற வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு கொண்ட தீவிரமான இயக்கங்கள் மற்றும் அரசியல் வடிவங்களுக்கும் அது உத்வேகம் அளித்தது. கனடாவிலும் அமெரிக்காவிலும் சென்று குடியேறியவர்களை பெரிதும் உள்ளடக்கியிருந்த கத்தார் இயக்கமும் இவற்றில் அடங்கும். பெரும்பாலும் பஞ்சாபிலிருந்து சென்று இந்த நாடுகளில் குடியேறியவர்களின் போராட்டமானது இறுதியில் கத்தார் கட்சி தோன்றுவதற்கு வழிவகுத்தது. இந்தியாவிற்குத் திரும்பி வந்த பெரும்பாலான கத்தார் கட்சி உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கிக் கவரப்பட்டதோடு, பெருமளவில் விவசாய சங்கத்தின் மூலம் பணிகளில் ஈடுபட்டனர்.

இதேபோன்ற செயல்முறை தங்களது ரகசிய குழுக்களின் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக தனிப்பட்ட ஆயுதம் தாங்கிய செயல்களில் ஈடுபட்டு வந்த புரட்சிகர தேசியவாதிகளை கவர்ந்திழுத்தது. இதைத் தொடர்ந்து இத்தகைய புரட்சியாளர்கள் பெரும்பகுதியினர் கம்யூனிஸ்ட் கட்சியின் சமரசமற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வினால் கவரப்பட்டனர். இந்தக் குழுக்களுக்கு உள்ளேயே தத்துவார்த்த ரீதியான போராட்டம் உருவானது. பகத்சிங் மற்றும் இதரர்களின் தலைமையிலான இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு ராணுவம் இந்தப் போராட்டத்தை சிறப்பாக வெளிக் கொண்டு வந்தது. அதேபோன்று வங்காளம், பஞ்சாப், வட இந்தியாவின் சில பகுதிகளில் செயல்பட்டு வந்த குழுக்களும் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி கவர்ந்திழுக்கப்ப்ட்டன.

மற்றொரு முக்கியமான நிகழ்வு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி உருவானதாகும். தேசிய இயக்கத்தின் மிக முக்கியமான அரசியல் அமைப்பு என்ற வகையில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்திருந்த போதிலும், காங்கிரஸ் தலைமையின் சமரசங்களால் நம்பிக்கையிழந்து போன காங்கிரஸின் சில பிரிவினர் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியை உருவாக்கினர். அதேநேரத்தில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான உழைக்கும் மக்களை விடுதலைப் போராட்டத்தில் அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தை அதிகமான அளவில் உணர்ந்திருந்த நிலையில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியினர் கம்யூனிஸ்டுகளுக்கு நெருக்கமாக வந்தனர். எனினும் ஒரு அடிப்படையான வேறுபாட்டை இங்கு வலியுறுத்த வேண்டும். காங்கிரஸிற்குள் இருந்தபடியே செயல்பட்டு வந்த காங்கிரஸ் சோஷலிஸ்டுகள், காங்கிரஸ் கட்சியை உண்மையானதொரு ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக மாற்றுவது என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வந்தனர். அதேநேரத்தில் கம்யூனிஸ்டுகளின் அடிப்படையான அணுகுமுறை என்பது காங்கிரஸ் கட்சியுடன் எந்தவித மோதலும் இன்றி, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான உழைக்கும் மக்களை சுயேச்சையானதொரு அரசியல் சக்தியாக உருமாற்றுவது என்பதாகவே இருந்தது. காங்கிரஸ் கட்சிக்குள்ளும், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிக்குள்ளும் செயல்பட்டு வந்த கம்யூனிஸ்டுகளிடம் இந்தப் போக்கு தொடர்ந்து இருந்து வந்தது. எனினும் இது இறுதியில் ஒரு பிளவிற்கு வழிவகுத்து, காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் முக்கியமான தலைவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் அங்கமாக மாறினர்.

தனது தனித்துவமான குறிக்கோளை தொடர்ந்து பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை கம்யூனிஸ்ட் கட்சி அங்கீகரித்தது. அதே நேரத்தில் இதர தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு கொண்ட அரசியல் அமைப்புகளோடு தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததன் மூலம் தேசத்தின் மீது பற்று கொண்ட விரிவான பகுதியினரை கவர்ந்திழுக்கவும் அதனால் முடிந்தது.

விரிவான அடித்தளத்துடன் வெகுஜன அமைப்புகள்

1920ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதனோடு கூடவே அதே ஆண்டில் தொழிற்சங்க அமைப்பான அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸும் (ஏஐடியுசி) உருவானது. தொடக்க காலத்தில் ஒரு சில குறிப்பான சீர்திருத்தப் போக்குகள் அதில் நிலவிய போதிலும், தொழிற்சங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பானது விரிவான அடித்தளம் கொண்ட ஒரு தொழிற்சங்க மேடைக்கான வழியை உருவாக்கியது.

1930களில் அதிகரித்துக் கொண்டே வந்த வெகுஜன போராட்டங்களின் பின்னணியில் விரிவான அடித்தளம் கொண்ட அகில இந்திய அமைப்புகளுக்கான அவசியமும் தேவையும் உணரப்பட்டது. இறுதியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம், முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் 1936ஆம் ஆண்டில் உருவாயின. மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்த மேடைகளும் அமைப்புகளும் தங்களுக்குத் தொடர்பான துறைகளில் இருந்த அறிவுசார் பிரிவினரை இணைப்பதற்கான கருவிகளாக மாறின. இந்த அமைப்புகள் கம்யூனிஸ்டுகளால் தலைமை தாங்கப்பட்டதோடு, குறிப்பிட்ட வர்க்கத்தின் மற்றும் சாதாரண மக்களின் பிரச்சனைகளை கையிலெடுக்க மக்களை ஒன்றிணைக்கும் வலுவான கருவிகளாகவும் உருமாற்றம் பெற்றன. விரிவான மக்கள் பிரிவினரை அணிதிரட்டியதன் மூலம் விடுதலைக்கான இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் பங்கினையும் இவை ஆற்றின. மேலும் பிரிட்டிஷ் அரசின் உந்துதலால் உருவான ‘பிரித்தாளும்’ கொள்கைக்கு எதிராகவும் இவை திறம்படச் செயல்பட்டன.

போருக்குப் பிந்தைய எழுச்சி

இரண்டாம் உலகப் பெரும்போர் நடைபெற்று வந்த காலத்தில் (1939-45), இக்காலப்பகுதியில் கட்சியின் மீதான தடை தொடர்ந்து நீடித்து வந்த போதிலும், தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்களிடையே கட்சி மேற்கொண்ட  தொடர்ச்சியான பணிகளின் விளைவாக கட்சி ஸ்தாபனம் குறிப்பிட்ட சில பகுதிகளில் விரிவடைந்தது.  போருக்குப் பின்பு வெடித்தெழுந்த வெகுஜன போராட்டங்களின் எழுச்சியில் தொழிற்சாலைகளில் வேலைநிறுத்த நடவடிக்கைகள், விவசாயப் போராட்டங்கள், மாணவர்களின் கிளர்ச்சி ஆகியவற்றில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் வெகுஜன அமைப்புகளும் மிக முக்கியமான பங்கினை வகித்தன. இந்திய கப்பற்படை மாலுமிகளின் எழுச்சிக்கு ஆதரவாகவும், (நேதாஜியின்) இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்றும், கட்சி மேற்கொண்ட அரசியல் ரீதியான தலையீடு கம்யூனிஸ்டுகளின் முக்கியமான பங்கினை எடுத்துக் காட்டின. அதிகாரத்தை இந்தியர்களிடம் ஒப்படைத்து விட்டு பிரிட்டிஷார் நாட்டை விட்டு வெளியேறும் செயல்முறையையும் அது விரைவுபடுத்தியது.

மக்களின் ஒற்றுமையை நோக்கி… ஜனநாயக, மதசார்பற்ற குடியரசைப் பாதுகாக்க…

இன்று நாம் எதிர்கொண்டுவரும் அச்சுறுத்தல் என்பது இதுவரை நாம் கண்டிராத தன்மை கொண்டதாகும். கம்யூனிஸ்டுகளுக்கு உத்வேகமூட்டிய தொலைநோக்கு, விடுதலைப் போராட்டத்தின்போது அவர்களின் பங்கேற்பும், எண்ணிலடங்காத் தியாகங்களும் நவீனமான, முன்னோக்கிய பார்வை கொண்ட, ஜனநாயக ரீதியான, மதசார்பற்றதொரு குடியரசாக தன்னைத் தகவமைத்துக் கொண்ட சுதந்திரமானதொரு இந்தியாவிற்காகவே ஆகும். துரதிர்ஷ்டவசமாக, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் எந்தவிதமான பங்கையும் வகித்திராத, அதிகபட்சமாகப் போனால், வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தப் போராட்டத்தின்போது மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க மட்டுமே முயற்சித்து வந்த அதே சக்திகள், இப்போது தங்களது திட்டங்களுக்கு கம்யூனிஸ்டுகள் மிகப்பெரும் தடையாக இருப்பதைக் காண்கின்றனர். எனவே, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் நாம் வகித்த பங்கினையும், அந்த மகத்தான பாரம்பரியத்தில் இருந்து நேரடியாக வெளிப்படும் அரசியல் அமைப்புச் சட்ட மதிப்பீடுகளையும் உறுதியுடன் பாதுகாப்பதே கம்யூனிஸ்ட் கட்சி உருவான நூற்றாண்டினை கொண்டாடுவதை அர்த்தமுள்ளதாகச் செய்யும்.

அக்டோபர் 18, 2020

பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் வெளியானது

தமிழில்: வீ. பா. கணேசன்

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப நாட்கள்

முசாபர் அகமது

(“இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப நாட்கள்” என்ற கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு: “தீக்கதிர்” நாளிதழில் தொடர்ந்து வெளியிடப்பட்டது. 1976 ஆம் ஆண்டு புதுமை புத்தகாலயம் சார்பில் நூல் வடிவில் வெளியிடப்பட்டது – சி.பி.ஐ(எம்) கருவூலம்)

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1925 டிசம்பரில்தான் ஸ்தாபிக்கப்ட்டது என்று 1959ல் கட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கருதுகிறது. “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தினம் 1920 அக்டோபர்-17” என்று கட்சியின் மத்தியக்குழு அறிவிக்கிறது. எப்படியெனில், அன்றுதான் சோவியத் நாட்டிலுள்ள தாஷ்கண்டில் ஒன்று கூடிய இந்தியப் புரட்சிவாதிகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தார்கள். அன்று முதல் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும், கட்சியையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை ஆரம்பமானது.

ரஷ்யப் புரட்சியின் எதிரொலி

1917இல் ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி நடந்தது. இந்தப் புரட்சியை பற்றி ஏகாதிபத்திய உலகம் ஏராளமான அவதூறுகளைப் பரப்பியது. எடுத்துக்காட்டாக, ரஷ்யாவில் பெண்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டனர் என்றும், குழந்தைகள் தாயிடமிருந்து பறிக்கப்பட்டனர் என்றும், இது போன்ற வேறு பல அவதூறுகளும் ஏகாதிபத்திய உலகத்தினால் பரப்பப்பட்டன. இப்படிப்பட்ட அவதூறுகள் அள்ளி வீசப்பட்டாலும் ரஷ்யப் புரட்சியின் எதிரொலி நமது நாட்டிலும் ஒலிக்கவே செய்தது.

கிலாபாத் இயக்கம்

மேற்கு வங்கத்தில் பயங்கரவாதப் புரட்சி இயக்கத்தின் ஆரம்ப முன்னேற்றம் பின்னுக்குத் தள்ளப்பட்ட போதிலும், அந்த ஆண்டில் ஏனைய பல இயக்கங்கள் வீறு கொண்டு முன்னேறின. கிலாபாத் இயக்கமும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரும் இயக்கமும் இங்கு குறிப்பிடத்தக்கவை. ஏராளமான பெரிய கூட்டங்களும், ஊர்வலங்களும், தடைசெய்யப்பட்டன.

அக்காலத்தில் கல்கத்தாவில் எல்லா கூட்டங்களிலும் ஊர்வலங்களிலும் நான் கலந்து கொள்வது வழக்கம். 1918 முதல் பல இடங்களிலும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் வெடித்தெழ ஆரம்பித்தன. 1919இல் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. கொஞ்ச காலம் வரை நாட்டில் பெரும் கண்டன இயக்கங்கள் நடந்து கொண்டிருந்தன. 1919இல் சீர்திருத்தச்சட்டம் (The Reforms Act) நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்தும் பலத்த கண்டனங்கள் எழுந்தன.

1920இல் அரசியலையே எனது வாழ்க்கையாக்கிக் கொள்ளுவது என முடிவு செய்தேன். அதற்கு முன்னர் நான் ஒரு இலக்கியக் கழகத்தின் முழு நேர ஊழியனாகப் பணிசெய்து வந்தேன். இந்தக் கழகத்தின் மூலம் 49ஆம் வங்க ரெஜிமெண்டின் (பட்டாளத்தின் ) ஹவில்தாராக இருந்த காஸி நஸ்ருல் இஸ்லாமை தெரிந்து கொண்டேன். அவர் பின்னர் ஒரு கவிஞராக நாடு முழுவதும் பிரபலமடைந்தார். வங்க ரெஜிமெண்ட் கலைக்கப்பட்டதை தொடர்ந்து அவர் என்னுடன் சேர்ந்து கல்கத்தாவில் வசிக்க ஆரம்பித்தார்.

‘நவ யுக்’ ஏடு

ஏ.கே பஸலுல் ஹக் என்பவர் அன்று ஓர் இடதுசாரித் தலைவராக அறிமுகமானார். அவர் வங்கத்தில் ஒரு பிரசுரம் கொண்டுவரத் தீர்மானித்தார். அதற்கு நஸ்ருல் இஸ்லாமும், நானும் பொறுப்பேற்றுக் கொண்டோம். எங்களது கூட்டு ஆசிரியர் குழுவின் சார்பில் ‘நவ யுக்’ என்னும் மாலை நாள் இதழ் வெளிவந்தது. நஸ்ருல் இஸ்லாமின் கனல் பறக்கும் எழுத்து வண்ணத்தினால் முதல் நாளிலிருந்தே பத்திரிக்கை பிரசித்தி பெற்றது. பெரும்பாலும் வழக்கமாகத் தலையங்கங்களை நான்தான் எழுதுவேன்.

‘நவ யுக்’ பத்திரிக்கையானது பிற வங்கப் பத்திரிக்கையிடமிருந்து வேறுபட்ட தன்மையுடையதாக இருந்தது. காரணம் அது தொழிலாளர்கள் விவசாயிகள் ஆகியோரைப் பற்றிய செய்திகளைக் கொண்டிருந்தது. திரு. பஸலுல் ஹக் (இடதுசாரி தலைவர் ) இதைத் தடுக்கவில்லை என்பது மட்டுமல்ல. இந்தச் சிறப்பு அம்சத்தை ஊக்கப்படுத்தவும் செய்தார்.

உணர்ச்சிமயமானவை

என் நண்பர் ஒருவர் கூறினார் “வங்கப் பத்திரிக்கைகள் முழுமையாகவே உணர்ச்சிமயமானவை. நீங்கள் பத்திரிக்கையின் கொஞ்ச இடத்தை  சாதாரண மக்களைப்பற்றி – குறிப்பாக தொழிலாளர்களை, விவசாயிகளைப் பற்றி எழுதுவதற்கு ஒதுக்கி வையுங்கள்”

நான் அவரது வேண்டுதலுக்கு முற்றிலும் உடன்பட்டேன். ஏற்கனவே கப்பலில் வேலை செய்பவர்களுக்கும், விசைப்படகுகளில் வேலை செய்பவர்களுக்குமிடையே என் பணியை ஆரம்பித்திருந்தேன்.

நான் பிறந்த இடத்தில் வங்காள விரிகுடாவிலுள்ள ‘ஸான்ட்விப்’ என்னும் தீவில்தான் நான் பிறந்தேன்) வசிக்கும் மக்களில் அதிகமான பேர் வழக்கமாக கப்பலில் வேலை செய்பவர்கள்தாம். இப்பொழுதும் அங்குள்ள ஏராளமான மக்கள் கப்பலில் வேலை செய்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி எழுதுவதைக் காட்டிலும் கப்பல் ஊழியர்களைப் பற்றி நான் அதிகமாக எழுதினேன். இவர்களின் பிரச்சனைகளுக்கு ‘நவ யுக்’ பத்திரிக்கையில் முக்கியத்துவம் கொடுத்தேன். இந்தப் பத்திரிகையில் எழுதுவதன் வாயிலாக மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்தை நோக்கி கவரப்படுவேன் என்பதை அன்று நான் கனவில்கூட கருதவில்லை.

கம்யூனிஸ்ட் அகிலம்

1920இல் கூடிய கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது காங்கிரஸ், காலனி நாடுகள் பற்றிய லெனினது கோட்பாட்டை ஏற்றுக் கொண்டது.  அதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் அகிலம் காலனி நாடுகளுடன் தொடர்பு கொள்ள முயன்றது.

ரஷ்யப் புரட்சி நடந்தது முதலே பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் மிக அதிக எச்சரிக்கையுடன் இருக்கத் துவங்கியது. இங்கும் ஏதாவது நடந்து விடுமோ என்று – குறைந்தது ஒரு கம்யூனிஸ்ட்கட்சியாவது உருவாகிவிடுமோ என்று-  இந்திய அரசாங்கம் அஞ்சியது. அதனால், அரசாங்கம் தனக்கு ஒரு மத்திய ரகசிய புலனாய்வுத் துறையைப் புதிதாக உருவாக்கியது. பல்வேறு பிரதேசங்களிலிருந்த அரசியல் ஊழியர்களின் செயல்களை இந்தப் புலனாய்வுத்துறை மிகக் கவனமாக கண்காணித்து வந்தது.

மத்திய இரகசியப் புலனாய்வுத்துறையின் உளவாளிகள் நாடெங்கும் பரப்பப்பட்டனர். இந்த உளவாளிகள் உளவு வேலைகளுக்காக வெளிநாடுகளுக்குக் கூட அனுப்பப்பட்டனர். இப்படிப்பட்டதொரு சூழலில் எங்களில் சிலர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிகக் கஷ்டமான பணிகளை நிறைவேற்றச்சென்றோம்.

இலட்சியம்

எங்களது இலட்சியம், இந்தியாவில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிக்க வேண்டுமென்பதாக இருந்தது. கம்யூனிஸ்ட் அகிலத்தினால் நான் உத்வேகமூட்டப்பட்டேன் என்பதை உறுதியுடன் சொல்லுகிறேன். கல்கத்தா, பம்பாய், லாகூர் ஆகிய இடங்களை மையமாகக்கொண்டு நாங்கள் செயல்பட ஆரம்பித்தோம்.

1921இல் பிரான்சிலும், சீனாவிலும் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதற்கு முன்முயற்சி எடுத்தவர்களுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் நாங்கள் மிகவும் குறைவானவர்களாக இருந்தோம். மிகக் குறைந்தபட்சம் எனது திறமையின்மை பற்றி முழுதும் உணர்ந்திருந்தேன்.  மார்க்சிசத்தைப் பற்றிய எனது ஞானம் ஆழமின்றி மேலோட்டமாக இருந்தது. அனுபவமில்லாத துறையில் நான் நுழைந்தபோது எனக்கிருந்த ஒரே கைமுதல் மக்களிடம் நான் பெற்றிருந்த நம்பிக்கையும், கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டுதல்களின் மீதான எனது நம்பிக்கையுமே என்பதை நான் உணர்ந்தேன்

என் கையில் பணமோ, ஜீவிதத்திற்கான வேறு மார்க்கமோ இல்லை. இப்படிப்பட்ட வேளையில் நான் மனமொடிந்து போகாமலிருந்ததற்கு முக்கிய காரணம் எனது மன வலிமைதான். அந்த மனவலிமை இல்லாமலிருந்திருந்தால் இன்று முப்பத்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நான் எங்கு போய்ச் சோந்திருப்பேன்! அதுபற்றி எண்ணும்போது நான் வியப்பில் மூழ்கிவிடுவேன்.

‘ஹிஜ்ரத்’ இயக்கம்

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவுவதற்காக கல்கத்தாவின் திட்டங்களைத் தயாரித்துக்கொண்டிருந்த சமயத்தில் கவிஞர் நஸ்ருல் இஸ்லாமும் அந்தப் பணியில் கலந்து கொண்டார். எனினும், அவர் இறுதியில்  கட்சியில் சேரவில்லை. ஆனால், அவர் எல்லா சமயங்களிலும் எங்கள் ஆதரவாளராக இருந்து வந்தார். பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட ‘லேபர் ஸ்வராஜ்’ என்ற கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவராய் ஆனார் அவர்.

எனது பணிகளோடு இணைந்து முன்னேறிச் செல்ல விரும்புவதாக பயங்கரவாதப் புரட்சியாளர்கள் சிலர் என்னிடம் சொன்னார்கள். அந்த விஷயத்தில் தங்களது உதவியையும் தருவதாக அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அவர்களது நிலைப்பாட்டிற்கு எனது நிலைபாட்டோடு ஒருமைப்பாடு இல்லையென்பது பிறகு தெளிவானது.

1922இல் முதலில் அப்துல் ரசாக் கானும், அடுத்து அப்துல் ஹலீமும் என்னுடைய பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கினர். ஒத்துழையாமை இயக்கம் நடந்த காலத்தில் ரசாக் கான் ஒருமுறையும், அப்துல் ஹலீம் மூன்று முறைகளும் சிறை தண்டனை ஏற்றனர்.

1922இல் வேறொருவரும் எங்கள் நண்பரானார். அவர் பெயர் குத்புதீன் அகமது. ஒரு காலத்தில் ‘அல் ஹிலால், அல் பிலால்’ ஆகியவற்றை நடத்துவதில் மௌலானா அப்துல்கலாம் ஆஸாத்தின் சக ஊழியராக இருந்தார். அக்காலத்தில், கல்கத்தாவில் மார்க்சிஸ்ட் இலக்கியங்கள் கிடைப்பது மிக மிக அரிதாக இருந்தது. அவை எங்கேனும் கிடைத்தால்கூட, அவற்றை வாங்க எங்களுக்கு யாதொரு வசதியுமில்லை. ஜனாப், குத்புதீன் ஏராளமான புத்தகங்கள் வாங்குவதையும், படிப்பதையும் ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரிடம் இருந்துதான் நான் ஃப்லிப்ஸ் ரைஸர் எழுதிய ‘ரஷ்யப் புரட்சி பற்றிய எனது நினைவுகள்’ என்ற நூலை வாங்கிப் படித்தேன். ரஷ்யப் புரட்சி பற்றி நான் படித்த முதல் புத்தகம் அதுதான். 18 ஷில்லிங் விலையுள்ள அந்தப் புத்தகத்தை கொடுத்து வாங்க எங்களால் இயலவில்லை.

ஜனாப் குத்புதீனின் வீட்டு வாசல் எங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும். பிறகு அவர் ‘லேபர் ஸ்வராஜ்’ என்ற மற்றொரு கட்சியின்  ஸ்தாபகரானார். இரண்டாவது உலகப் பெரும்போர் நடந்த காலத்தில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1948 பிப்ரவரி1ம் தேதியன்று அவர் காலமானார்.

அந்தச் சமயத்தில் ஏனைய சிலரும் எங்களோடு சேர்ந்தனர். எல்லோரையும் பற்றி நான் சொல்ல ஆரம்பித்தால் இந்தக் கட்டுரை மிக அதிகம் நீண்டு விடும். ஆகவே, அதைச் செய்ய நான் துணியவில்லை.

பம்பாயைப் பற்றி குறிப்பிடும் போது ஸ்ரீபாத் அமிர்த டாங்கேயின் பெயரைத்தான் முதலில் குறிப்பிட வேண்டும். கல்லூரிப் புகுமுக வகுப்பில் படிக்கும்போது மாணவர் இயக்கத்தில் கலந்து கொண்டதால் அவர் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் காந்தியத் தத்துவத்தை விரும்பாததால், 1921லேயே “காந்தி வெர்சஸ் லெனின்” என்ற நூலொன்றை ஆங்கிலத்தில் எழுதினார். அது அந்தக் காலத்தில் செய்ய முடியாத பெருந்தீவிரச் செயலாக இருந்தது. 1922இல் அவர் “சோஷலிஸ்ட்” என்ற ஆங்கில வார இதழொன்றைத் துவக்கினார். இந்தப் பெயரில் வேறொரு இதழ் முன்னெப்போதும் வந்ததில்லை. டாங்கே தொழிலாளர்களுடன் என்னைக் காட்டிலும் அதிகத் தொடர்பு வைத்திருந்தார். பம்பாயிலிருந்த மற்றவர்களைப் பற்றி நான் பிறகு சொல்கிறேன்.

‘குலாம் ஹுசேன் லாகூரில் செயல்பட்டுக் கொண்டிருந்தார். ஏற்கனவே அவர் ஓர் அரசாங்கக் கல்லூரியில் (பெஷாவரில் உள்ள இஸ்லாமியக் சுல்லூரியில்) பொருளியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஹுசேன், முகமத் அலியின் நண்பராக இருந்தார்.

ஒரு சமயம் லாகூர் மாணவர்கள் சிலர் புரட்சிப் பணிகளுக்குத் தங்களைத் தயார் செய்து கொள்ள இந்தியாவுக்கு வெளியே சென்றிருந்தார்கள். அக்குழுவில் முகமது அலியும் ஒருவர். ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் அவர் ரஷ்யாவுக்குச்சென்றார், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். குலாம் ஹு சேனை காபூலுக்கு அழைத்தவரும், அவருக்கு மார்கசிஸத்தின்பால் பற்று ஏற்பட செய்தவரும் அவர்தான்.

இறுதியில் குலாம் ஹுசேன் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிப்பதற்காக தம்முடைய அரசாங்க வேலையைத் துறந்தார். பின்னர் லாகூருக்குத் திரும்பினார். அங்கிருந்து அவர் “இன்குலாப்” என்ற உருது மாத இதழை ஆரம்பித்தார். பிரசித்தி பெற்ற தென்மேற்கு ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் செயலாளரானார்.

கான்பூர் சிறையில்

1921இல் நான் கான்பூர் சிறையில்தான் முதலில் டாங்கேயைக் கண்டேன். எனினும், கடிதத்தின் வாயிலாக ஏற்கனவே அவருடன் தொடர்பு கொண்டிருந்தேன். ஆனால், குலாம் ஹுசேனை நான் ஒரு போதும் கண்டது இல்லை. அதுமட்டுமல்ல, கடிதத்தின் மூலம் கூட அவருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டதில்லை.

1922இல் சென்னையில் பழக்கம் வாய்ந்த வழக்கறிஞரான மலயாபுரம்  சிங்காரவேலு, தம்மை ஒரு கம்யூனிஸ்ட் என தாமாகவே அறிவித்துக்  கொண்டார். மார்க்சிஸ்ட் நூல்களைக் கொண்ட அவரது நூலகம் மிகப் பிரமாதமாக இருந்தது. அவர் தொழிலாளர் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார்.

இந்திய (கம்யூனிஸ்ட்) கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. அந்நிய நாட்டில்தான் என்பதை இங்குச் சுட்டிக்காட்டுகிறேன். 1920ஆம் ஆண்டின் நடுவில் ‘ஹிஜ்ரத்’ என்றழைக்கப்பட்ட மக்கள் மத்தியில் செல்வாக்கும், சக்தியும் கொண்ட ஓர் இயக்கம் சண்டீகரிலும், பஞ்சாபிலும் ஆரம்பமானது,

அடக்கு முறையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தன் நாட்டை விட்டு- தன் நண்பர்களை விட்டு வெளிநாடு செல்லுதல் என்பதே ‘ஹிஜ்ரத்’ என்னும் சொல்லின் பொருள். இந்த இயக்கத்தின் விளைவாக சுமார் 18 ஆயிரம் முஸ்லீம்கள் இந்தியாவை விட்டு ஆஃப்கானிஸ்தானுக்குச் சென்றனர். பிறகு மக்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவதற்கான அனுமதியை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மறுத்தது.

ஆப்கானிஸ்தான் இந்தியாவைக் காட்டிலும் பின் தங்கிய நாடாக  இருந்தது. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் இந்தப் புதிய முயற்சியை இளைய முகாஜிர்மார்களும், (ஹிஜ்ரத் இயக்கத்தில் சேர்ந்தவர்களும்) விரும்பவில்லை. தாங்கள் துருக்கிக்குச் சென்று யுத்தத்தில் துருக்கி பக்கம் சேரப் போவதாக அவர்கள் நிர்ப்பந்திக்க ஆரம்பித்தனர். கடைசியில் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அதற்கான அனுமதியை வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டது.

இந்த இளைஞர்கள் இந்துகுஷ் கணவாயைக் கடந்து திர்மீஸை (இப்போது இந்தப் பிரதேசம் தாஜிகஸ்தானில் இருக்கிறது) அடைந்தனர். அங்கிருந்து அவர்கள் படகு மூலம் அமுதாரியைக் கடக்கும் பொழுது டாக்மென் இனத்தைச் சேர்ந்த சிலர் அவர்களைத் தாக்கினர். இவர்களுக்குப் பிரிட்டிஷ் காரர்களிடமிருந்து பணமும், ஆயுதங்களும் கிடைப்பது வழக்கம்.

செம்படையினர் காப்பாற்றினர்

இந்தத் தாக்குதல் நடக்கும்போது செம்படை அங்கு வந்து சேர்ந்ததனால் இந்த முஸ்லீம் இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர். முஸ்லிம்களான அவர்கள், முஸ்லீம்களான துருக்கியர்களால் தாக்கப்பட்டது அவர்களிடத்தில் பெரியதொரு பிரதிபலிப்பை உண்டாக்கியது. அதனால் அவர்கள் கிர்க்கியில் எதிர்ப்புரட்சியாளர்களுக்கு எதிராக செம்படையுடன் சேர்ந்து ஆயுதமேந்திப் போராடினார்கள்.

பிறகு இந்த இளைஞர்களில் சிலர் தாஷ்கண்டிலிருக்கும் இராணுவப் பள்ளியில் சேர்ந்தனர். இந்தப் பள்ளியில் பயின்று கொண்டிருந்தபோதே, அவர்கள் மாஸ்கோவில் புதிதாக நிறுவப்பட்ட “ஈஸ்ட்டர்ன் யுனிவர்சிட்டி” (கீழ்த்திசை பல்கலைக்கழகம்)யில் சேர்ந்தார்கள்.

அங்கு கொஞ்ச காலம் வரை படித்து பின்னர், மார்க்சிசமே தங்களது கொள்கையென உறுதிமொழி ஏற்றனர். அப்போது அவர்கள் அங்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தனர். அதற்குப் பிறகு “ஈஸ்ட்டர்ன் யுனிவர்சிட்டி நீடித்திருந்தது வரை” இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு கிளை அங்கு செயல்பட்டது. ஒரு சமயம் பஞ்சாபைச் சோத்த நமது நைனாசிங் அந்தக் கிளையின் செயலாளராகப் பணியாற்றினார்.

இந்தியாவுக்குத் திரும்புதல்

‘ஈஸ்ட்டர்ன் யுனிவர்சிட்டி’ யில் ஒன்பது மாதங்கள் படித்த பின்னர் தங்களது சொந்த நாட்டுக்கு வருவதற்கும் அங்கு இயங்குவதற்கும் இந்திய தோழர்கள் விரும்பினர். அவர்களில் இருவர் இரான் நாட்டு வழியே இந்தியாவுக்குத் திரும்புவதில் வெற்றி பெற்றனர். மற்ற சிலரால் இந்தியாவுக்கு திரும்பி வருவதற்கான சரியான வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் பாமீர் வழியே இந்தியாவுக்குத் திரும்புவதற்காக ஆலோசித்தனர்.

அதன் விளைவாக, பாமீர் வரை அவர்களைக் கொண்டு சேர்க்க பாதுகாப்புக் குழு ஒன்றைக் கம்யூனிஸ்ட் அகிலம் அனுப்பி வைத்தது. இந்தியாவுக்கு உட்பட்டிருந்த சித்ரால் எனும் இடம் வரை அத்தோழர்களுடன் பாதுகாப்புக் குழுவினரும் வந்து சேர்ந்தனர். அங்கு அவர்களை இந்தியப் போலீஸ் கைது செய்தது. பிறகு அவர்கள் விசாரணைக் கைதிகளாக நீண்ட காலம் வரை பெஷாவர் சிறையிலிருந்தனர்.

பெஷாவர் சதிவழக்கும், தண்டனையும்

1923ஆம் ஆண்டில் இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. சிலருக்கு ஓராண்டு சிறையென்றும், இருவருக்கு பத்தாண்டுகள் கடுஞ்சிறையென்றும், ஒருவருக்குப் பத்தாண்டுகள் சிறையென்றும் தண்டனை விதிக்கப்பட்டது. பெஷாவர் சதிவழக்குத்தான் உண்மையில் இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள்  மீதான முதலாவது சதிவழக்கு, எனினும், இந்தச் செய்தி அட்டோக்கு நதியின் இக்கரைக்கு வந்து சேரவில்லை. அக்காலத்தில் வடமேற்கு எல்லைப் பிரதேச நிலைமை அப்படி இருந்தது.

பெஷாவர் வழக்குக் கைதிகளில் – பின்னர் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டவர்கள் மீர்அப்துல் மஜீத், பிரோஸ்தீன் மன்சூர், கூஹார் ரஹான் கான் ஆகியோர் ஆவர்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிப்பதற்கு இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களிலும் இந்தியாவுக்கு வெளியிலும் நடத்திய முயற்சிகள்தாம் முதலில் சொல்லப்பட்டவை என்றாலும், 1925 டிசம்பருக்கு முன்பு கட்சியின் மத்தியக் கமிட்டி உருவாக்கப்படவில்லை.

கான்பூர் சதிவழக்கு

1923 மே மாதத்தில் கான்பூரில் சௌக்கத் உஸ்மானியும் (இவர் மாஸ்கோவிலிருந்து ஈரான் வழியாகத் திரும்பி வந்திருந்தார்) கல்கத்தாவில் நானும் கைது செய்யப்பட்டோம். சில நாட்களுக்குப்பிறகு லாகூரில் குலாம் ஹுசேனும் கைது செய்யப்பட்டார்.

வங்காளச் சிறைச்சட்டம் 1818ன்படி (1818வது ரெகுலேஷன் 111) எங்கள் மூவரையும் விசாரணையின்றி வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர். 1923ஆம் ஆண்டு டிசம்பரில் நளினி குப்தாவையும் கைது செய்து விசாரணையில்லாமல் சிறையிலிட்டனர். அவர் எந்த ஒரு கட்சியிலும் உறுப்பினராக இருக்கவில்லை. என்றாலும், அவர் தம்மை ஒரு தேசியப் புரட்சிவாதியென்று அறிவித்துக் கொண்டார். அதிதீவிர செயல்களுடன் தாம் வைத்திருந்த பற்றின் காரணமாக, அவர் ஐரோப்பாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே எங்களது செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றினார்.

இந்தியன் பீனல் கோடு, 121ஏ பிரிவின்படி இந்திய அரசாங்கத்திற்காக கான்பூர் மாவட்ட மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் 1924 மார்ச் மாதத்தில் ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் பிரதிகளாக –

(1) எஸ் ஏ டாங்கே, (2) சௌக்கத் உஸ்மானி, (3) முசாபர் அகமது (4) நளினி குப்தா, (5) குலாம் ஹுசேன், (6) சிங்காரவேலர் (7) ராமச்சந்திரலால் சர்மா, (8) மனபேந்திர நாத் ராய் (எம்.என் ராய்) ஆகியோர் இருந்தனர்.

ஆரம்பத்தில் நால்வர் மட்டுமே கோர்ட்டில் ஆஜராக்கப்பட்டனர். சிங்காரவேலு செட்டியார் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரைக் கோர்ட்டுக்குக் கொண்டு வரவில்லை. அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். குலாம் ஹுசேன் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டு, கருணைக்கு இரைஞ்சி தமது சுதந்திரத்தை விலைக்கு விற்றார்.

ராமச்சந்திரலால் சாமா பாண்டிச் சேரியில் இருந்ததனால், அவர் பிரெஞ்சு அரசாங்கத்தின் பாதுகாப்பிலிருந்தார். அதனால், அவரைக் கோர்ட்டுக்குக் கொண்டு வர முடியவில்லை. எம் என் ராய் ஐரோப்பாவில் இருந்தார். அதனால், அவரைக் கோர்ட்டுக்குக் கொண்டு வருவதென்ற பிரச்னையே எழவில்லை.

சோவியத் எதிர்ப்புக்காக

மத்திய இரகசிய புலனாய்வுத் துறையின் டைரக்டர் கானல் கேயின் வேண்டுகோளின்படி பத்திரிகைகள் இந்த வழக்கை கான்பூர் போல்ஷெவிக் சதிவழக்கு என்று விசேடமாகக் குறிப்பிட்டன. இதன் மூலம் சோவியத் எதிர்ப்புப் பிரச்சாரத் தேவைக்காக சோவியத் ரஷ்யாவையும் உட்படுத்துவதென கேய் கருதினார்.

இந்த வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, ஒருவரை அடிக்கடி பார்வையாளர் காலரியில் கண்டேன். அவரது பெயர் சத்யபக்தன். அது எவ்விதத்தில் பார்த்தாலும் அவரது தாய்-தந்தையர் இட்ட பெயராக இல்லை. காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் இருக்கும் போது அவர் தமக்கு வைத்துக் கொண்ட பெயரே இது. ஒருவேளை, அங்கு அவருக்கு சத்தியத்துடன் ஏராளமான பரிசோதனைகள் நடந்திருக்க வேண்டும்.

இந்த வழக்கு பிறகு செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. ஜட்ஜ் ஒவ்வொருவருக்கும் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார். இந்த ஜட்ஜ் எச் எல் ஹோமே என்பவர் ஒரு பிரசித்தி பெற்ற நபர். இவர்தான்  பிரசித்தி பெற்ற சௌரி சௌரா வழக்கில் 172 பேரைத் தூக்கிலிட்டுக் கொல்ல தீர்ப்பளித்தார்.

வெவ்வேறான நான்கு சிறைகளுக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்த எங்களது கழுத்திலும், காலிலும் இரும்புச் சங்கிலிகள் பிணைக்கப் பட்டிருந்தன. அக்காலத்தில் உத்திரப்பிரதேச சிறைகளில் அப்படிச் செய்வதுதான் வழக்கமாக இருந்தது.

புற உலகிலிருந்து எங்களை முற்றிலும் தனிமைப்படுத்தினர். ஒரு பக்கத்தில் இப்படியிருக்க, மறு பக்கத்தில் முதலில் சொல்லப்பட்ட சத்ய பகதன் என்பவர் தாம் ஒரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியிருப்பதாகப் பத்திரிகைகளில் அறிவித்தார்.

ஒரு தடவை ராய்பரேலி மாவட்டச் சிறையில் நான் இரத்த வாந்தி எடுத்தேன். சரியான உணவு தேவையான அளவு கிடைக்காததினாலும் தங்கும் வசதி மோசமாக இருந்ததனாலும் ஏற்பட்ட ஆரோக்கியச் சீர்குலைவே இதற்குக் காரணம்.

சிறையிலிருக்கும் சிவில் சர்ஜன் என் உடல்நிலையைப் பற்றிக் குறிப்பிடும்போது என் உடல்நிலை சிறிதும் மோசமில்லை என்று சொன்னாலும், நான் படிப்படியாக பலவீனமடைந்தே வந்தேன். கடுங்குளிரில் வாடுவதினால் எனக்கு மிக அதிகம் தூக்கம் குறைந்து போனது.

இந்த நிலையிலிருந்த என்னை அல்மோரா மாவட்டச் சிறைக்கு மாற்றினர். விடுதலைக்காலம் முடிவதற்கு முன்னரே உடல்நிலை மோசமான காரணத்தால் இந்திய அரசாங்க உத்தரவுப்படி 1925ஆம் ஆண்டு செப்டம்பரில் என்னை விடுதலை செய்தனர்.

கான்பூர் மாநாட்டில்

சத்தியபக்தனின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை நான் அங்கு பத்திரிகையில் முதன்முதலில் படித்தறிந்தேன். டிசம்பர் கடைசி வாரத்தில் கான்பூரில் ஒரு கம்யூனிஸ்ட் மாநாடு நடக்கவிருக்கிறதென்பதையும் பத்திரிக்கைகளில் படித்தேன். மாநாட்டில் தலைமை வகிப்பதற்காக, லண்டனிலிருக்கும் சபூர்ஜி சாக்லத்வாலாவைக் கேட்டுக் கொண்டனர். முதலில் மாநாட்டில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டதாகவும், கடைசியில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு அதற்கான அனுமதியை வழங்க மறுத்து விட்டதாகவும் சொல்லப்பட்டது.

அல்மோராவில் இருந்த எனக்கு சத்தியபக்தன் ஒரு கடிதம் அனுப்பிபினார். சிறையிலிருந்து விடுதலையான என்னை அதில் வாழ்த்தியிருந்தார். கான்பூர் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமெனவும் என்னை அவர் கடிதத்தில் அழைத்திருந்தார்.

தன்னம்பிக்கை

அந்த வேளையில், நான் பெரும்பாலும் உடல்நலமடைந்திருந்தேன். அதுமட்டுமன்றி, அல்மோராவில் தட்பவெப்ப நிலை டிசம்பர் கடைசியில் தண்ணீரைப் பனிக்கட்டியாக்கும் நிலையை அடைந்திருந்தது. கான்பூரை அடைந்தபோது அங்கு எஸ்.வி காட்டே, கே.எல் ஜோக்லேகர், ஆர். எஸ் நிங்கார் ஆகியோர் முன்கூட்டியே வந்திருந்ததைக் கண்டேன். அவர்களைக் கண்டபோது எனக்குத் தன்னம்பிக்கை – கிட்டத்தட்ட மீண்டும் கிடைத்தது.

எப்படியெனில், சிறையில் இருந்தபோது இந்த மூவரைப் பற்றியும் டாங்கேயிடமிருந்து தெரிந்து கொண்டேன். கான்பூரில் அயோத்யா பிரசாத், ஜானகி பிரசாத், பாகர்ஹட்டா முதலிய ஏனைய சிலரையும் நான் முதன்முதலாக தெரிந்து கொண்டேன்.

கான்பூர் மாநாடு

கான்பூர் மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராக மௌலானா ஹஸ்ரத் மொகானியும், முக்கியத் தலைவராக சிங்காரவேலு செட்டியாரும் இருந்தனர். (எங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, சிங்காரவேலு செட்டியார் கான்பூர் கோர்ட்டில் ஆஜரான போதிலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் விரும்பவில்லை. உண்மையில் அவருக்கு எதிராக அதிகமான சான்றுகள் இல்லை) 

கருத்து மோதல்

மாநாட்டின் ஆரம்பத்திலேயே எங்களது கருத்து, சத்தியபக்தனின் கருத்தோடு மோதியது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழக்கப்படி கட்சியின் பெயர், ”கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா” என இருக்க வேண்டுமென்று நாங்கள் கருதினோம். சத்யபக்தனோ தனக்குச் சர்வ தேசியத்தில் நம்பிக்கை இல்லை என்பதைத் தெரிவித்தார். தம்முடைய கட்சி இந்தியத் தன்மையைக் கொண்டதாக இருக்க வேண்டுமென்பது அவரது கருத்து.

நாங்கள் எங்கள் கருத்தில் ஊன்றி நின்றோம். சத்திய பக்தன் தம்முடைய காகிதங்களையும் ஃபைல்களையும் விட்டுவிட்டு மாநாட்டு இடத்தை விட்டே போய்விட்டார். அவர் தமது கட்சியில் 300க்கு மேலான உறுப்பினர்கள் இருப்பதாகச்சொன்னார். இவர்கள் யார் யார் என்பதை எங்களால் ஒருபோதும் அறிய முடியவில்லை. மாநாட்டுக்குப் பிறகு நான் ஒருபோதும் சத்யபக்தனைக் காணவில்லை. ஒருமுறை பம்பாயில் அவரை எஸ்.வி.காட்டே கண்டதாகக் கேள்விப்பட்டேன். தான் அரசியலிலிருந்து விலகிவிட்டதாக காட்டேயிடம் சத்யபக்தன் சொன்னாராம்.

மத்தியக் கமிட்டி உருவானது

பல்வேறு இடங்களிலுள்ள கம்யூனிஸ்டுகளை ஒன்று சேர்த்து நாங்கள் கான்பூரில் முதலாவதாக ‘கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி) யின் ஒரு மத்தியக் கமிட்டியை அமைத்தோம். மாநாடு பகிரங்கமாக நடந்தது. அதனால் மத்திய கமிட்டியும் பகிரங்கமாகவே உருவாக்கப்பட்டது.

இதன்பேரில் நாட்டிற்குள்ளும் வெளியிலுமிருந்து வந்த ஏராளமான விமாசனங்களை நாங்கள் எதிர்நோக்க நேர்ந்தது. இந்த விமாசனங்களுக்கு நாங்கள் தகுதி உடையவர்கள்தாம். ஆனால் எங்களுக்கு வேறுவழி கிடைக்கவில்லை என்பதையும் மறக்கக் கூடாது.

கான்பூர் மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டிருக்கவில்லையெனில் சத்யபக்தனின் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்காலத்தில் எங்களது நடவடிக்கைகளை பெருமளவில் தடுத்திருக்கும்.

கான்பூர் மாநாட்டைத் தொடர்ந்து கொஞ்சகாலம் வரை மௌலானா ஹஜரத் மொஹானி எங்களோடு சேர்ந்து நின்றார். அவர் பிரபலமான உருது கவிஞராகவும், சுதந்திரப்போராட்டத்தில் முன்னணி வீரராகவும் திகழ்ந்தார். பலமுறை அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஏராளமான கொடுமைகளையும் ஏற்றிருக்கிறார். காங்கிரசின் அலகாபாத் மாநாட்டில் முழு சுதந்திரத்திற்கான தீர்மானத்தை அவர் சமர்ப்பித்தார்.

இந்தத் தீர்மானத்தைப் பிரதிநிதிகள் நிராகரித்தனர். இந்தத் தீர்மானத்தைச் சமர்ப்பித்த காரணத்திற்காக அவர் மீது செஷன்ஸ் கோர்ட் விசாரணை நடத்தி அவருக்கு ஆயுள் முழுவதும் சிறையிலிருக்கும் தண்டனை விதித்தது. எனினும், பம்பாய் ஹைகோர்ட் அந்தத் தண்டனையை ரத்து செய்தது. அவர் 1927இல் கட்சியை விட்டு விலகி முஸ்லீம் லீகில் சேர்ந்தார். முஸ்லீம் லீகில் சேர்ந்ததை நாங்கள் ஆதரிக்கவில்லை. எனினும் பெருந்தலைவர்கள், 1928 ஜனவரியில் கல்கத்தாவில் கூடிய மாநாட்டில் கலந்து கொண்டனர்.

கூட்டுச் செயலாளர்கள்

கான்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டியை உருவாக்கியபோது எஸ். வி. காட்டே, ஜானகி பிரசாத், பாகர் ஹட்டா ஆகியோர் அதன் கூட்டுச் செயலாளர்களாயினர். 1927இல் ஜானகி பிரசாத்தின் நடவடிக்கையின் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதற்குப் போதிய காரணங்களும் இருந்தன. தம்மீது எங்களுக்கு நம்பிக்கை ஏற்படாது என்பதை உணர்ந்தபோது, ஜானகி பிரசாத் தாமாகவே எங்களிடமிருந்து போய்விட்டார்.

பொதுச் செயலாளர்

அதற்குப் பின்னர் எஸ். வி. காட்டே கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். 1929 மார்ச் 20 வரை அவர் இந்தப் பதவியில் நீடித்தார். சிறிது காலத்திற்குப் பிறகு அவர் மீண்டும் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1926 முதல் 1929 ஜனவரி வரை மத்தியக் கமிட்டியின் ஏராளமான இரகசிய கூட்டங்கள் நடந்தன. சில ஆண்டுகளில் மத்தியக்கமிட்டி நான்கு முறை கூட கூடியிருக்கிறது. 1928 அக்டோபரில் பம்பாயில் கூட மத்தியக் கமிட்டி கூட்டத்தை ‘யுத்தக்குழு’ என்று எதற்காக மீரத் செஷன்ஸ் கோர்ட் ஜடஜ் குறிப்பிட்டாரென்பது எனக்குத் தெரியவில்லை. 1928இல் கட்சிக்காக ஓர் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.

‘தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சி’

இங்கு, தொழிலாளர்கள், விவசாயிகள் கட்சியைப் பற்றி சிலவற்றை சொல்வது அவசியம். நான் 1923இல் கைது செய்யப்பட்ட பிறகு, 1926 ஜனவரி 2இல் கல்கத்தாவுக்குத் திரும்பினேன். நான் கல்கத்தாவுக்கு திரும்புவதற்கு முன்பு அங்கு ஒரு கட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்திய காங்கிரஸின் லேபர் ஸ்வராஜ் கட்சி என்ற பெயரால் அது அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தக் கட்சியின் சார்பில் ‘லங்கால்’ என்றொரு வார இதழ் வெளியிடப்பட்டது. இக்கட்சியின் முதலாவது இதழில் நஸ்ருல் இஸ்லாமின் பிரசித்தி பெற்ற ’சாம்யவாதி’ என்னும் கவிதையொன்று வெளியிடப்பட்டது. இந்தக் கவிதை ரஷ்ய மொழியில் கூட மொழி பெயர்க்கப்பட்டிருந்தது என்பதைக் கேள்விப்பட்டேன். ஆனால் நான் அந்த மொழிபெயர்ப்பைப் பார்த்ததில்லை.

நான்கு நண்பர்கள் முன் முயற்சி செய்ததுதான் “லேபர்  ஸ்வராஜ்’ கட்சி உருவாக்கப்பட்டது. இரண்டு நண்பர்களின் பெயர்களை ஏற்கனவே நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஹேமந்தகுமார் சர்க்கார், சம்ஸுதீன் ஹுசேன் ஆகியோர் ஏனைய இருவர். கடைசியாகக் குறிப்பிட்ட நண்பர் அப்துல் ஹலமின் சகோதரர். இன்று நஸ்ருல் இஸ்லாமை  தவிர மற்ற எவரும் உயிருடன் இல்லை. அவர்கூட மூளை செயலற்ற நிலையை அடைந்து இறந்தது போன்ற நிலையில் வாழ்கிறார்.

1926 பிப்ரவரியில் கிருஷ்ணா நகரில் (நாடியா மாவட்டம்) விவசாயிகளின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் லேபர் ஸ்வராஜ் கட்சியின் பெயரை ‘பெஸண்ட்ஸ் அண்ட் ஒர்க்காஸ் பார்ட்டி’ (விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி) என மாற்றினர். இனிமேல் இந்திய தேசியக் காங்கிரஸின் கீழ் இக்கட்சி செயல்படாது என்பதுதான் இதன் பொருள்.

கிருஷ்ணாநகர் மாநாட்டில் விவசாயிகளின் பிரதிநிதிகள் அதிகம் பேர் வந்திருந்ததால் கட்சிப் பெயரின் ஆரம்பத்தில் ‘ஓர்க்கர்ஸ்’ என்பதைச் சேர்க்க முடியவில்லை. எனவேதான் ‘பெசண்ட்ஸ்’ என்பது முதலில் வந்தது. ஆனால் அடுத்து நடைபெற்ற மாநாட்டில் இந்தப் பெயர் ’ஓர்க்கர்ஸ் அண்ட பெசண்ட்ஸ்’ என மாற்றப்பட்டது. படிப்படியாக நான் கட்சியின் ‘லங்கால்’ என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் ஓர் உறுப்பினரானேன். இந்தச் சமயத்தில் பத்திரிக்கையின் பெயர் ‘கண வாணி’ என மாற்றப்பட்டது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதமாக்கப்படவில்லை என்றாலும், அதன் பெயரில் வெளிப்படையாகச் செயல்படுவது கஷ்டமாகவே இருந்தது.

தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியின் மாநாடு

கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றிய தீர்மானங்கள் உண்மையில் தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியின் மூலம் செயல்படுத்தப்பட்டன. இந்தக் கட்சியின் துண்டுப் பிரசுரங்கள் அனைத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டிதான் தயாரித்தது.

வங்கத்தில் தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியில் கம்யூனிஸ்ட்கள் அல்லாதவர்கள்தான் அதிகம் பேர். அதனால் எங்களது நடவடிக்கைகளுக்கு ஒரு கஷ்டமும் ஏற்படவில்லை. 1927ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே பம்பாயிலும் தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி உருவாக்கப்பட்டுவிட்டது. எஸ். எஸ். மிராஜ்கர், கட்சியின் செயலாளராக இருந்தார். அந்த ஆண்டில் நடந்த அகில இந்தியத் தொழிற்சங்க மாநாட்டில் பஞ்சாப்பைச் சேர்ந்த சோகன் சிங் ஜோஷ், பாக்சிங் கனேடியன் ஆகியோருடன் எங்களுக்கு ஆரம்பப் பழக்கம் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் சோகன் சிங் ‘கீர்த்தி’ என்ற ஒரு மாத இதழ் ஆசிரியராக இருந்தார். குருமுகி லிபியில் பஞ்சாபி மொழியில் அந்த இதழ் வெளிவந்துகொண்டிருந்தது.

மாஸ்கோவில் உள்ள ‘கிழக்கத்திய உழைப்பாளர் பல்கலைக்கழக’ கத்திலிருந்து திரும்பி வந்த சந்தோக் சிங் என்பவர் இந்த இதழின் ஸ்தாபகர். அவர் க்ஷயரோகத்தினால் பாதிக்கப்பட்டு, கஷ்டப்பட்டு இறுதியில் நோயினாலேயே மாணம் அடைந்தார். அவருடனோ அப்துல் மஜீத்துடனோ எங்களுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கவில்லை.

1924இல் சிறையிலிருந்து விடுதலையான பிறகு அவர் லாகூரில் தம்முடைய பணியை ஆரம்பித்தார். பஞ்சாபில் பிரபல நௌஜவான் பாரத் சபையின் ஸ்தாபகர்களாக இருந்த மிகச் சிலருள் ஒருவராக அப்துல் மஜீத் இருந்தார்.

சோகன்சிங்குடன் நாங்கள் சில விவாதங்கள் நடத்தினோம். சம்பந்தப்பட்ட விவாதங்களின் பலனாக, 1927இல் பஞ்சாபில் கீர்த்தி-கிஸான் எனும் கட்சி உருவாக்கப்பட்டது. பஞ்சாபிலும் தொழிற் சங்கப் பணிகள் பரவிக் கொண்டிருந்தன என்பதைச் சொல்லத் தேவையில்லையல்லவா?

விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி

மீரத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு அழைக்கப்பட்டதையொட்டி நானும் பிலிப்ஸ் ப்ராட்டும்1928 அகடோபரில் மாநாட்டுக்குச் சென்றோம். அப்துல் மஜீத், சோகன்சிங் ஜோஷ். பூரண சந்திர  ஜோஷி (பி.ஸி.ஜோஷி) ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

எம்.ஏ. பட்டம் பெற்ற பிறகு அச் சமயத்தில் அலகாபாத்தில் சட்டக் கல்லூரியில் பி. ஸி. ஜோஷி படித்துக் கொண்டிருந்தார். கடிதங்கள் மூலம் அவருடன் தொடர்பு கொள்ள என்னால் முடிந்தது. மீரத் மாநாட்டில்தான் நான் அவரை முதன் முதலில் கண்டேன்.

மீரத் மாநாட்டில் உத்திரப் பிரதேசத்திற்கும் தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக பி.ஸி. ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டிசம்பர் மாதக் கடைசி வாரத்தில் தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியின் அகில இந்திய மாநாட்டைக் கல்கத்தாவில் நடத்தவேண்டுமென பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் கட்சிகளை ஒன்றுசேர்த்து, ஓர் அகில இந்திய தொழிலாளர்கள் – விவசாயிகள் கட்சியை உருவாக்க வேண்டுமெனவும்-மாநாடு நடப்பதற்கு முன்னரே நாங்கள் முடிவு செய்திருந்தோம் அதற்குப் பின்னர் மாநாடு நடத்தி, அகில இந்தியக்கட்சி உருவாக்கப்பட்டது. சோகன்சிங் ஜோஷ் மாநாட்டின் தலைவராக இருந்தார்.

இந்த மாநாட்டின் சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி இரண்டு முறை கூடியது. ஒரு கூட்டம், மாநாடு நடந்து கொண்டிருந்தபோது நடந்தது. மற்றொரு கூட்டம் 1929 ஜனவரியின் ஆரம்பத்தில்-அதாவது மாநாட்டின் கடைசியில் கூடியது.

இரண்டாவது கூட்டத்தில் எனது பரிந்துரையின் பேரில் பி.ஸி. ஜோஷியும், சோகன்சிங் ஜோஷும் கட்சியில் சேர்க்கப்பட்டனர். பஞ்சாப்பைச் சேர்ந்த சீக்கியர் மத்தியிலிருந்து முதலாவதாக அதிகாரப் பூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர் சோகன்சிங் ஜோஷ்தான். சந்தோக் சிங்கை கட்சியின் உறுப்பினராக மதிப்பிடுவதென்றால் சோகன்சிங்குக்கு இரண்டாவது இடம்தான் கிடைக்கும்.

பி.ஸி.ஜோஷியின் பெயரை ஓரிடத்திலும் எழுதக்கூடாதென்று தீர்மாணிக்கப்பட்டது. 1927-28இல் குறிப்பாக1928இல் நடந்த தொழிலாளர் போராட்டத்திற்குப்பிறகு அடக்குமுறையின் ஆபத்து உருவாகுமென்பது எங்களுக்குத் தோன்றியது. அதனால் இளைஞரான பி.ஸி ஜோஷியைப் பாதுகாப்பதற்காக அவரைப் பொறுத்தளவில் முதலில் சொல்லப்பட்டவாறு தீர்மானித்தோம். ஆனால் நாங்கள் எண்ணியவாறு அவரைப் பாதுகாக்க முடியவில்லை.

கல்கத்தாவில் தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியின் மாநாடு நடந்துகொண்டிருந்தபோது, தோழர் கங்காதர் அதிகாரி ஜெர்மனியிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார். ஆறு ஆண்டு காலம் வரை அவர் ஜெர்மனியில் இருந்தார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் பௌதீக இரசாயனத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றபின், டாக்டர் அதிகாரி, கொஞ்சகாலம் அங்கு பணி செய்தார். அவர் ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்ததால் இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியிலும் அவரை உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டோம். மத்தியக்கமிட்டிதான் இதற்கான முடிவு செய்தது.

அதுவரை இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் அகிலத்துடன் அதிகாரபூர்வமாக இணைக்கப்படவில்லை. நாங்கள் விரும்பியிருந்தால் அது நடந்திருக்கும். கட்சி உறுப்பினர்கள் மிகக் குறைவானவர்களாக இருந்ததால் நாங்கள் அதற்குத் திட்டமிடவேயில்லை. எனினும் கம்யூனிஸ்ட் அகிலமானது தனது ஓர் அங்கம் என்ற நிலையில் எங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது காங்கிரஸின் நிர்வாகக் குழுக்கூட்டத்தில் எங்கள் கட்சியைச்சேர்ந்த உறுப்பினர்கள் இருவரை குழுவுக்கு மாற்றுப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை அறிந்தோம். எங்களது மத்தியக் கமிட்டிக் கூட்டமும் இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்தது. இந்தப் பிரதிநிதிகள் இருவரில் ஒருவரை கம்யூனிஸ்ட் அகிலத்தின் நிர்வாகக்குழுவுக்கு அனுப்புவதென மத்தியக்கமிட்டி முடிவு செய்தது. ஆனால் இதைச் செய்வதற்கு முன்பே மீரத் சம்பவங்கள் எங்கள் மீது விழுந்தன.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் விமர்சனம்

தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியின் மாநாட்டிற்கு கம்யூனிஸ்ட் அகிலத்தின் நிர்வாகக்குழு ஒரு செய்தி அனுப்பியது. மாநாட்டின் ஆரம்பத்தில் இந்தச்செய்தி எங்களுக்குக் கிடைத்தது. செய்தியின் ஆரம்பத்தில் தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சி கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஒரு பகுதி அல்லவென்பது தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. இரண்டு வர்க்கங்களின் அடிப்படையில் ஒரு கட்சியை உருவாக்குவதற்கு எதிரான விமர்சனம் அதில் இருந்தது. அதனால் ஒரே வர்க்கத்தின் அடிப்படையில் ஒரு அரசியல் கட்சியை உருவாக்க வேண்டியதிருந்தது. அந்தச் சமயத்தில் இது குறித்து ஏதாவது விவாதிப்பதற்கு எங்களால் முடியவில்லை. ஏனெனில், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டிக் கூட்டம் அப்போதுதான் நடந்து முடிந்துவிட்டிருந்தது. எனினும் தனிப்பட்ட அளவில் எங்களில் பெரும்பாலானவர்களுக்கும் இந்த விமர்சனத்தின் பிரதான உள்ளடக்கம் என்னவென்பது புரிந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியும், மறக்கவொண்ணா மீரத் சதிவழக்கும்

1927ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் பல பகுதிகளிலும்  தொழிலாளர்களின் போராட்டங்கள் துவங்கின. 1928இல் இந்தப் போராட்டங்கள் வலிமை பெற்று விரிந்தளவில் பற்றிப் படர்ந்தது.

கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மட்டுமல்ல; தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சியின் உறுப்பினர்களும் பரந்த அளவில் உணர்வுபூர்வமாக இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். வேலை நிறுத்தக் கூட்டங்களில் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமல்ல; அரசியல் பிரச்சினைகளைப் பற்றியும் சொற்பொழிவுகள் நடந்தன

பம்பாயிலும், வங்கத்தில் சில இடங்களிலும் தொழிலாளர் மத்தியில் நமது தலைமை வலிமைப்படுத்தப்பட்டது. 1928இல் தொழிலாளர் போராட்டங்களின் விளைவினால் தொழிற்சங்க இயக்கம் போராட்ட வலிமை படைத்த புதியதொரு வடிவத்தைப் பெற்றது. இந்த இயக்கத்தின் தன்மை முற்றிலும் புதியதாக இருந்தது.

1923இல் தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தின் வழியாக இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு வலிமை கொண்ட கட்சியாக ஆக்குவதற்கு ஏற்றதொரு மகத்தான சந்தர்ப்பம் கிட்டியது. தொழிலாளர்களிடையே இருந்த புரட்சிகரமான ஒரு பகுதியினர் கட்சியில் சேருவதற்கு இச்சந்தர்ப்பம் இடமளித்தது.

முதல் முழக்கம்

1928இல் நடந்த போராட்டத்திற்கு உழைக்கும் மக்களிடையில் பொதுவாக செல்வாக்கைப் பெறவும் முடிந்தது. அவர்களில் ஏராளமானவர்கள் கட்சிக்கு வருவதற்குத் தயாராயினர். ஆனால் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் எங்களைக் கடுமையாகத் தாக்குவதற்காக தனது ஆயுதங்களை கூர்மையாக்கிக் கொண்டிருந்தது. சட்ட மன்றத்தில் பொதுப் பாதுகாப்புச் சட்டம் வந்தபோது அதன் உட்பொருள் எங்களுக்குப் புரிந்தது

அந்தக் காலத்தில் தலைமறைவாகச் செயல்படுவதற்கு தேவையான யாதொரு ஏற்பாடும் எங்களிடம் இருக்கவில்லை. இக்காலத்தில்தான் பம்பாயில் எஸ்.வி தேஷ்பாண்டேயும் பி.டி.ரணதிவேயும் கட்சியில் சேர்க்கப்பட்டனர். ஒத்துழையாமை இயக்க நாட்களில் தேஷ்பாண்டே தம்முடைய சகஊழியர்களை ஈடுபடுத்தினார்.

பி.டி. ரணதிவே பல்கலைக்கழகத்தில் பெயர்பெற்ற மாணவராய் விளங்கினார். அவருக்கு எம் ஏ பொருளியலில் முதல் மார்க கிடைத்தது. டாகடர் காங்காதர் அதிகாரி, அவரது சிற்றன்னை மகன் ஆவார். டாக்டர் அதிகாரியிடமிருந்து உத்வேகம் பெற்ற ரணதிவே கம்யூனிஸ்ட் கட்சிக்கு கவரப்பட்டார்.

1929 பிப்ரவரியில் சைமன் கமிஷனுக்கு எதிராகப் பெரியதொரு ஊர்வலம் நடத்துவதற்கு நாங்கள் கல்கத்தாவில் இந்திய தேசியக் காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்தோம். எங்கள் சார்பாக பலவகை முழக்கங்களைக் கொண்ட அட்டைகள் ஊர்வலத்தில் தாங்கி வரப்பட்டன. இதுதான் அந்த ஊர்வலத்தில்  இருந்த ஒரு சிறப்பு:

“புரட்சி ஓங்குக !” இந்த முழக்கத்தைத்தான் அந்த ஊர்வலத்தில் நாங்கள் முதன் முறையாக ஒலித்தோம்.

முழு சுதந்திரத்திற்கான தீர்மானத்தைக் காங்கிரஸின் அகமதாபாத் மாநாட்டில் சமர்ப்பித்த குற்றத்திற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் தனக்கு எதிராகக் குற்றஞ் சாட்டித் தொடுத்த வழக்கின் நடுவே, மௌலானா ஹஸ்ரத் மொஹானிதான் இந்த முழக்கத்தை இந்தியாவில் முதலாவதாக எழுப்பினாரெனச் சிலர் சொல்வதுண்டு.  

ஒருநாள் தமது அறிக்கையை அவர் எனக்கு வாசித்துக் காட்டினார். அந்த முழக்கம் அவரது அறிக்கையில் இருந்ததா என்பது இப்போது எனக்கு நினைவில்லை. அந்த முழக்கம் அவரது அறிக்கையில் இருந்ததென்றால், அதை இந்தியாவில் முதலாவதாக எழுப்பிய பெருமை அவரையே சேரும். இல்லையெனில், அந்த முழக்கத்தை இந்தியாவில் முதலாவதாக எழுப்பியவர்கள் நாங்கள் தான்.

இதற்குப் பிறகு கல்கத்தாவில் எங்களது கடைசி இயக்கம் கிளைவ் சணல் ஆலையில் நடத்திய வேலை நிறுத்தம்தான். திடீரென மறக்க முடியாத 1929 மார்ச் 20 வந்து சேர்ந்தது.

மீரத் சதிவழக்கு

உண்மையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள் 1929 மார்ச் 20.

பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து நாங்கள் எதிர்நோக்கியிருந்த ஆபத்தான தாக்குதல் முடிவில் வந்து சேர்ந்தது அன்றுதான். அன்றைய தினம் மீரத்தில் உள்ள மாவட்ட மாஜிஸ்திரேட்டின் வாரண்டின்படி, இந்தியாவிலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும் 31 பேர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெஞ்சமின், ப்ரான்சிஸ், ப்ராட்லியையும், ப்லிப்ஸ் ஸ்ப்ராட்டுவும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள். அவர்கள் கம்யூனிஸ்ட் அகிலத்தின் கட்டளைப்படி எங்களுக்கு உதவி செய்ய வந்தவர்கள்.

முசாபர் அகமது, சாஸுல் ஹுடா, அயோத்யா பிரசாத், சோஹன் சிங் ஜோஷ், மீர்அப்துல் மஜீத், பூரணசந்திர ஜோசி, ஸ்ரீபாத் அமிர்த டாங்கே, சச்சிதானந்த விஷ்ணு காட்டே, கேசவுநில் ஜோகலேகர், சாந்தாராம் சவ்லா, ராமமிராஜ்கர், ரகுநாத் சிவராம் நிம்புகார், காங்காதர் மொரேஸ்வார் அதிகாரி, சௌகத் உஸ்மானி, ஆகியோர் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தனர்.

பிரதிவாதிகளின் பட்டியலில் கடைசியாக மேலும் இருவர் சேர்க்கப்பட்டனர். அவர்களில் எச்.எல். ஹச்சின்ஸன் என்பவரும் ஒருவர். எந்தவொரு கட்சியிலும் உறுப்பினராய் இருக்கவில்லை. அமீர் ஹைதர் கான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராய் இருந்தார். அவரைக் கைது செய்ய முடியவில்லை.

கைது செய்யப்படுவதற்கு முன்னர் ராதாரமன் மித்ரா தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியில் சேருவதென்ற தமது ஆவலைத் தெரிவித்திருந்தார். சிபநாத் பானர்ஜியும். கிசோரிலால் கோஷூம் யாதொரு கட்சியிலும் உறுப்பினராக இருக்கவில்லை. எனினும் அவர்கள் எங்களது ஒரு நல்ல நண்பராக இருந்தனர். ஏனைய பிரதிவாதிகள் தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியில் அங்கத்தினராயிருந்தனர்.

வழக்கு நடந்து கொண்டிருந்த சமயத்தில், ஓர் அறிக்கை வெளியிடுவதற்கான வாய்ப்பு பிரதிவாதிகளுக்குக் கிடைத்தது. தருகின்ற அறிக்கையானது, இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் நாடெங்கும் பரப்புவதற்கு ஏற்ற வகையிலுள்ள ஓர் அறிக்கையாக இருக்க வேண்டுமெனத் தீர்மானித்திருந்தோம்.

கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் மார்க்சிஸம் பயின்றது எங்கே?

கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருக்கையில் ஒவ்வொரு பிரதிவாதியும் ஒவ்வொரு அறிக்கையைத் தந்தனர். தொழிலாளர்கள் – விவசாயிகள் கட்சியைச் சோந்த பலர் தாங்கள் கட்சியின் உறுப்பினர்களென்பதை ஒப்புக்கொள்ளவில்லை. கம்யூனிஸ்டுகள், முன்னரே நிச்சயித்தபடி அறிக்கைகள் தந்தனர். தனித்தனியாக அறிக்கைகள் தருவதற்குப் பதிலாக அவர்கள் ஒரு கூட்டறிக்கையாகத் தந்தனர்.

நமது கட்சி உறுப்பினர்கள் இந்த அறிக்கையை வாசித்தார்களென்றால்-குறிப்பாக கூட்டறிக்கையை வாசித்தார்களென்றால் அவர்களுக்குப் பயனளிப்பதாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் கட்சியின் உறுப்பினர்கள்தான் என்பதை கோர்ட்டில் ஒப்புக்கொண்டனர்.

தரணிகாந்த் கோஸ்வாமி, கோபேந்தர கிருஷ்ண சக்கரவர்த்தி, கோபால் பாசக் ராதாரமன் மித்ரா, ஆகியோர் மனச் சாட்சிப்படி தாங்கள் கம்யூனிஸ்டுகள்தான் என்பதை அறிவித்தனர். கட்சியின் ஆலோசனைப்படி பி.சி.ஜோஷியும் அத்தகையதொரு அறிக்கையை அளித்தார். அவ்வாறு அவர் அறிவிக்கக் காரணம், அவர் இந்திய கமயூனிஸ்ட் கட்சியில் ஓர் உறுப்பினர்தான் என்பதற்கு எவ்விடத்திலும் யாதொரு சான்றும் இருந்ததில்லை.

சௌதரி தரம்பீர் சிங், மாஜிஸ்திரேட் கோர்ட் மூலம் விடுதலை செய்யப்பட்டார். சிவநாத் பானர்ஜியும், கிஸோரிலால் கோஷூம் செஷன்ஸ் கோர்ட் மூலம் விடுதலையாயினர் எஞ்சியவர்களில் சிலரை ஆயுள்காலம் முழுவதும் நாடுகடத்துவதற்கும், மற்ற சிலரை 12 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 8 ஆண்டுகள், 5 ஆண்டுகள், 4ஆண்டுகள் என சிறைத் தண்டனை அனுபவிக்கவும் கோர்ட் தீர்ப்பளித்தது.

செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன்பு 68 வயதான பழைய இஞ்சினியர் பண்டிராஜ் தேஜ்டி காலமானார். ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அவர் புனாவுக்குச் சென்றிருந்தார். அவர் பம்பாயில் உள்ள தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சியின் தலைவராக இருந்தார். வழக்கு செஷன்ஸ் கோர்ட்டில் ‘கமிட்’ செய்யப்பட்ட பின்னர் அரசாங்தத் தரப்பு வக்கீல் லாங்போர்ட் ஜேம்ஸ் காலமானார்.

உலகத்தின் மிகப்பெரிய வழக்குகளில் ஒன்று

1929 மார்ச் 20-ம் தேதிதான் நாங்கள் கைது செய்யப்பட்டோம். 1933 ஜனவரி 16-ம் தேதியன்று செஷன்ஸ் ஜட்ஜ் தீர்ப்பை வாசித்தார். இந்த வழக்கிற்காக அச்சிடப்பட்ட காகிதங்கள் பத்தாயிரம் முழுப்பக்கங்கள் வரும்.  மீரத் சதிவழக்கு என்பது உலகத்தின் மிகப் பெரிய வழக்குகளில் ஒன்றாயிருந்தது.

செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பை அறிவிப்பதற்குச் சற்று நேரத்திற்குமுன் சௌக்கத் உஷ்மானி கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவதைத் தவிர வேறு யாதொரு வழியுமில்லை என்ற விதத்தில் நடந்து கொள்ள ஆரம்பித்தனர். ஆயுள் காலம் முழுவதும் நாடு கடத்தலும், ஆண்டுகள் பலவாக கடுஞ்சிறையும்.  12 ஆண்டுகால கடுஞ்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபிறகு நிம்ப்கரின்  பலவீனம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அவரும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மீரத் சதிவழக்கின் கால கட்டத்திலிருந்துதான் கம்யூனிஸ்ட் கொள்கையும், கருத்தும் இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்டன. வங்காளச் சிறைகளிலும், தனிமைச் சிறைகளிலும் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் மார்க்சிய இலக்கியங்களைப் படிக்க ஆரம்பித்தனர்.

சிறையிலிருந்து விடுதலை ஆன பிறகு அவர்களில் பலர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். 1929இல் எங்கள் மீதான வழக்குகள் ஆரம்பமானதற்குப் பிறகு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து எம்.என்.ராய் வெளியேற்றப்பட்டார்.

ஒருசமயம் அவர் கம்யூனிஸ்ட் அகிலத்தின் கிழக்குப் பிரிவின் தலைவராக இருந்தார். அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றியதற்கான காரணம் என்னவென்பது எங்களுக்குத் தெரியவில்லை. எனினும் அவரது நடவடிக்கையில் எனக்கு ஆட்சேபணை இருந்தது. அவரை வெளியேற்றியதற்கான காரணங்களில் ஒன்றாக எனது ஆட்சேபனையும் இருக்குமோ என்பது பற்றிய விவரம் கிடைப்பதற்கு எனக்கு எவ்வித சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை

கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அவர் இந்தியாவுக்குத் திரும்பி வந்து எதாவது ஒரு செயலில் ஈடுபடுவார் என்று நாங்கள் கருதியிருந்தோம். உண்மையில் அவர் அவ்வாறே செய்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் ‘புரட்சிக் குழு’ என்பதன் பேரில் அவர் இரகசியக் குறிப்புக்களை விநியோகிக்க ஆரம்பித்தார்.

மீரத் சதி வழக்கிற்குப் பிறகு

1930-ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட் அகிலத்துடன் இணைக்கப்பட்டது. அதற்குப் பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் ‘புரட்சிக்குழு’வின் பேரில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதை எம்.என். ராய் நிறுத்திக் கொண்டார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கம்பூனிஸ்ட் அகிலத்தில் இணைப்புக் கிடைத்த சமயத்தில்தான் இந்தோ-சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட் அகிலத்தில் இணைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலுக்கான நகல்திட்டம் பிரசுரிக்கப்பட்டது.

1930 டிசம்பர் 19ஆம் தேதியன்று நகல் திட்டம் ‘இன்டர் நேஷனல் ‘கரஸ்பான்டன்ஸ்’ என்ற பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டது. பம்பாயைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுக்கு, அகில இந்திய கட்சி விஷயத்தில் ஏற்பட்ட பிளவு, கருத்து வேறுபாடுகள் ஆகியவை காரணமாக இந்தச்சமயத்தில் கம்யூனிஸ்ட் அகிலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்திருந்த இணைப்பை ரத்து செய்துவிட்டது.

கல்கத்தாவை சேர்ந்த தோழர்கள் (ஹலீம் உள்பட) கல்கத்தா கமிட்டி ஆஃப் தி கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கல்கத்தாகுழு) என்னும் பெயரில் செயல்பட ஆரம்பித்தனர். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு விரிந்த கூட்டத்திலோ கம்யூனிஸ்ட் அகிலத்தின் மத்தியக்கமிட்டி கூட்டத்திலோ, கல்கத்தாவின் கமிட்டியை குறித்து ஸ்டாலின் குறிப்பிட்டார். எந்தக் கூட்டத்தில் என்பது எனக்குத் தெளிவாக நினைவில்லை

கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓர் அகில இந்திய வடிவம் தரவேண்டுமென கல்கத்தா கமிட்டி எழுப்பிய வேண்டுகோளுக்கு பம்பாயிலிருந்து யாதொரு பிரதிபலிப்பும் உண்டாகவில்லை. அப்போது அவர்கள் பல வழிகளின் மூலம் கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு அறிக்கைகள் அனுப்பினர்.

1932ஆம் ஆண்டின் கடைசியில் ப்லிப்ஸ் ஸ்பாரட்டுக்கும், பெல் ப்ராட்டுக்கும் எனக்கும் கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு அறிக்கை அனுப்புவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. இந்த அறிக்கைகள் பயனளிப்பவையாக இருந்தன.

அடக்குமுறை கொடுமைகளுக்கிடையிலும் மீண்டும் கட்சியை புனரமைத்தல்

1932 மேமாதம் சீனா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் மத்திய கமிட்டிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு பகிரங்கக்கடிதம் அனுப்பின, அந்தக் கடிதத்தில் அக்கட்சிகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், நடவடிக்கை முறைகளை கடுமையாக விமர்சித்திருந்தன. நடவடிக்கைக்கான நகல் திட்டத்தின் அடிப்படையில் அகில இந்தியக் கட்சியை உருவாக்க நிர்பந்திக்கவும் செய்தன.

ஓராண்டுக்கு மேலான பின்னர்,1933 ஜூலை 16ஆம் தேதியன்று மீண்டும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் கடிதம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தது. இந்தக் கடிதத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் விமர்சனம் கிட்டத்தட்ட கடுமையாகவும் உறுதியாகவும் இருந்தது.

சோவியத், சீனக் கம்யூனிஸ்ட கட்சிகளின் நடவடிக்கைகளிலிருந்து பல உதாரணங்களைத் தந்து இந்தியாவில் ஓர் அகில இந்தியக் கட்சியை உருவாக்குவதற்கான தேவையை இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்குப் பல வழிகளிலும் விளக்கிட சீன கம்யூனிஸ்ட் கட்சி முயன்றது. தொடர்ந்து அது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்கத்தா கமிட்டியினுடைய நடவடிக்கைகளை வாழ்த்தவும் செய்தது. மேலும் பின்வருமாறு குறிப்பிடவும் செய்தது:

“எனவேதான். ஓர் அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட வேண்டுமென்ற அறைகூவலை விடாப்பிடியாக ஏற்றுக் கொண்டும், கட்சி வேலைகளை அகில இந்திய மட்டத்தில் விரிவுபடுத்த வேண்டிய தேவையைப் புரிந்து கொண்டும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்படுகின்ற தேவையில்லாத கோஷ்டிப் பூசல்களை ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக்கொண்டும், வலுவான, ஒருமைப்படுத்தப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட் கட்சியைத் தட்டியெழுப்பி, புதியதொரு அத்தியாயத்தை உருவாக வேண்டுமென வேண்டுகோள் விடுத்துக் கொண்டும்,  வரும் ‘கல்கத்தா கமிட்டி ஆப் தி கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியாவை (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்கத்தா குழுவை) நாங்கள் வாழ்த்துகிறோம்.

மீரத் சதிவழக்கில் எங்களுக்கு எதிராகச் சொல்லப்பட்ட மோசமான தண்டனைக்கு எதிராக அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தோம். 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதியன்று இந்த அப்பீலின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. எங்கள் மீதான தண்டனைகள் தளர்த்தப்பட்டன. டாங்கே, உஸ்மானி ஆகியோர் மீதும், என் மீதும் உள்ள தண்டனை 3 ஆண்டுகள் கடுஞ்சிறையாகத் தளர்த்தப்பட்டது.

பிலிபஸ் ஸ்ப்ராட்டின் மீதான தண்டனை 2 ஆண்டுகள் கடுஞ்சிறையாகவும் காட்டே, பென்பராட்லி மிராஜ்கர் ஜோகலேக்கர், நிம்ப்கார், சோகன்சிங் ஜோஷ், அப்துல் மஜீத், தரானி கோஸ்வாமி ஆகியோரின் மீதான தண்டனை 1 ஆண்டு கடுஞ்சிறையாகவும், கோபால் சகரவர்த்தி மீதான தண்டனை 7 மாதங்கள் கடுஞ்சிறையாகவும் தளர்த்தப்பட்டது. தேசாயி ஹச்சின்ஸன் ராமன்மித்ரா முதலிய 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

டாகடர் அதிகாரி, பி.ஸி ஜோஷி அயோத்யா பிரசாத், ஷாம்ஸுல் ஹூதா, கோபால் பாஸ்க் ஆகியோர் அதுவரை அனுபவித்த சிறைத் தண்டனையை (1933 ஆகஸ்ட் 30 வரை) அவர்களுக்கு தண்டனையாக வழங்கப்பட்டது. அதாவது அதே நாளில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பதே அதன் பொருள். ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களும் நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் கல்கத்தா கமிட்டியின் உதவியுடன் மீண்டும் கட்சியை உருவாக்க முயன்றனர். பம்பாய் தோழர்கள் சிலர் இந்த முயற்சிக்கு வந்தனர். சிலர் வரவில்லை. இந்த முயற்சியின் பயனாக 1933 டிசம்பர் மாதத்தில் கட்சியின் ஒரு இரகசிய மாநாடு கல்கத்தாவில் நடந்தது. அந்த மாநாட்டில் கட்சிக்குப் புதியதொரு அரசியல் திட்டமும், அமைப்புச் சட்டமும் நிறைவேற்றப்பட்டன. புதிய மத்தியக் கமிட்டியும் தேர்ந்தெடுக்கப்பட்டது. டாக்டர் அதிகாரி பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் செய்திகள் அடங்கிய அறிக்கையுடன் பென் பிராட்லி ஐரோப்பாவிற்குச் சென்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மறுபடியும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் உறுப்பினரானது.

நடைமுறையில் சட்ட விரோதமாக இருந்தாலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை இந்திய அரசாங்கம் அதிகாரப் பூர்வமாக தடை செய்துவிட்டதாக ஒருபோதும் அறிவித்திருக்கவில்லை. மீரத் சதிவழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சட்ட விரோதமானதாக அறிவித்துள்ள ஓர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பெற பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தினால் முடிந்தது. அதனால் 1934இல் கம்யூனிஸ்ட் சுட்சியை சட்ட விரோதமானது என அறிவிக்கும் இந்திய அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தது.

கடைசியாக ஒன்று…

ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு நான் எனது கட்டுரையை முடித்து கொள்கிறேன். ஆர். பாமி தத்தும், பென் பிராட்லியும் சேர்ந்து ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயக முன்னணி’ அறிக்கையை எழுதி உருவாக்குவதற்கு முன்னர், கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினர்களாக இருந்ததில்லை என்று நமது தோழர்களில் பலர் கருதுகின்றனர். இந்தக் கருத்து தவறானதாகும். ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க முயன்றவர்கள் காங்கிரஸ் கட்சியிலும் இருந்திருக்கிறார்கள்.

1926க்கு முன்பு நான் மட்டுமே காங்கிரசில் உறுப்பினனாக இல்லாமலிருந்தேன். கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டியில் (1925இல் உருவாக்கப்பட்டது) இருந்த 3 உறுப்பினர்கள் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியிலும் உறுப்பினராயிருந்தனர். மீரத் சதிவழக்கின் பிரதிவாதிகளில் எழுவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் இருந்தவர்களே. இந்த எழுவரில் ஐவர் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார்கள்.

இந்திய தேசிய காங்கிரசுக்குள் நாட்டின் முழு சுதந்திரத்திற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக மீண்டும் மீண்டும் போராடியது கம்யூனிஸ்ட் கட்சி. எல்லா சமயங்களிலும் அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. தவறான கருத்தின் அடிப்படையில் வரலாற்று ரீதியான பிசகு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை கருதித்தான் இந்த உண்மைகளை நான் இங்கு சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்துப் போராட்டங்கள் : தோற்றமும், இயக்கத்தின் மீதான தாக்கமும்

(கட்சியின் நூற்றாண்டை முன்னிட்டு “பீப்பிள்ஸ் டெமாக்ரசி” யில் வெளிவந்த தொடர் கட்டுரைகளை அடிப்படையாக கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தமிழில் சுருக்கமாக: அபிநவ் சூர்யா )

சுதந்திரத்திற்கு பின் முதல் பொதுத் தேர்தல்

சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும், தடைகளும் தாக்குதலும் நிறைந்த கடுமையான சூழலிலும் கூட ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஏகாதிபத்தியத்திற்கும், பிற்போக்கு சக்திகளுக்கும் எதிராக மக்களை திரட்டும் பணியை அயராது மேற்கொண்டது. இந்த சூழலில் தான் 1952 -இல் முதல் பொதுத் தேர்தலை எதிர்கொண்டது. பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோதும், அத்தேர்தலில் பல இடங்களில் வென்று மிகப்பெரும் எதிர்கட்சியாக உருவெடுத்தது. தேர்தலுக்கு பின் உடனடியாக மூன்றாவது அகில இந்திய மாநாட்டை நடத்துவதற்காக கட்சி ஆயத்தமானது.

இதர கட்சிகளை கையாள்வது குறித்தும், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மத்தியக் குழு தொடர்ந்து விவாதித்தது. மிக நீண்ட ப்ளீனம் கூட்டம் 1952  டிசம்பர் 30 முதல் 1953 ஜனவரி 10  தேதிவரை  நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கட்சியின் மூன்றாவது அகில இந்திய மாநாடு 1953 டிசம்பர் 27 –ம் தேதி முதல் 1954 ஜனவரி 4 -ம் தேதி வரை மதுரையில் நடைபெற்றது. மாநாட்டில் ‘கட்சி திட்டம்’ அங்கீகரிக்கப்பட்டது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில் கட்சியின் ஊழியர்களுக்கும் வெகுஜனங்களுக்கும் பத்திரிக்கைகள் மூலம் உழைக்கும் வர்க்க கருத்தியலை கற்பிப்பதன் தேவையும், கட்சி அறிக்கைகளை பிரச்சாரப்படுத்துவதன் தேவையும் முன்னிறுத்தப்பட்டது. மத்தியத்தர வர்க்கங்களிலிருந்து வரும் பல கட்சி உறுப்பினர்களும் தத்துவார்த்த ரீதியாக வளராமலும், மார்க்சிய-லெனினிய தத்துவங்களை தொழிலாளி-விவசாயி வர்க்கங்களிடையே திட்டமிட்ட முறையில் கொண்டு செல்ல பயிற்சி பெறாமலும் உள்ளனர் என்பதை அரசியல் தீர்மானம் குறிப்பிட்டது.

“கட்சியில் ‘தலைவர் – ஊழியர்’ பண்பு அதீதமாக காணப்படுகிறது. பரந்துபட்ட விவாதங்கள், மேல் குழுக்களில் மட்டுமே நடப்பதும், முடிவுகளை நடைமுறையில் செயல்படுத்துவதில் மட்டுமே கீழ்நிலை குழுக்கள் முனைப்பு காட்டுவதும், கட்சியின் ஊழியர்களின் வளர்ச்சியை பாதிக்கிறது” என்றது அந்த ஆவணம். இந்த நிலையை சரி செய்ய தீர்மானம் முன்வைக்கப்பட்டது. கீழ்நிலை குழுக்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை ஆய்வு செய்து தீர்வு கண்டறியும் அளவு வளர மேல்நிலை குழுக்கள் வழிவகை செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

உட்கட்சி போராட்டம் துவக்கம்

மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்படுவது கம்யூனிஸ்டுகளின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டால் மட்டுமே நாட்டின் முன்னேற்றத்தை நோக்கிய பொருளாதார, அரசியல் வாழ்வின் மறுகட்டமைப்பில் வெகுஜன மக்களின் ஜனநாயகப் பங்களிப்பு முழுமையடையும் என்ற புரிதல் கட்சிக்கு இருந்தது. மொழி வாரியாக அமைக்கப்பட்ட மாநிலங்களில் தாய் மொழியிலேயே கல்வி முறை இருக்கவேண்டும் என்றும் கட்சி கோரிக்கை வைத்தது.

இந்த காலத்தில் நேரு அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்த முக்கிய விவாதங்கள் கட்சிக்குள் எழுந்தன.  இந்திய அரசின் வெளியுறவு கொள்கைகள் குறித்தும், ஐந்தாண்டு திட்டங்கள் குறித்தும், ‘சோஷலிச பாணி சமூகத்தை கட்டமைப்போம்’ என்ற காங்கிரஸ் கட்சியின் ஏமாற்று கோஷங்கள் குறித்தும் விவாதங்கள் எழுந்தன. கட்சியின் ஒரு பகுதியினர் இந்த கோஷங்களால் ஏமாந்தனர். தேசிய முதலாளி வர்க்கம் இரண்டாக பிளவுற்றதாக வாதிட்டனர். ஏகாதிபத்தியத்துடனும், நிலப்பிரபுத்துவத்துடனும் முழுமையாக கைகோக்கும் ஏகாதிபத்தியம் ஒருபுறமும், ஏகாதிபத்திய-நிலப்பிரபுத்துவத்தை எதிர்க்கும் நேரு தலைமையிலான “இடது காங்கிரஸ்” மறுபுறமும உள்ளதாக வாதிட்டனர். இந்த கண்ணோட்டம் மத்தியக்குழுவினால் நிராகரிக்கப்பட்டாலும், கட்சிக்குள் தொடர்ந்து நிலவியது. இந்த சூழலில்தான் கட்சியின் நான்காவது மாநாடு பாலக்காடு நகரில் 1956 ஏப்ரல் 19 முதல் 29 வரை  நடைபெற்றது.

சர்வதேச கம்யூனிச இயக்கம், குறிப்பாக சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி கண்ட மாற்றங்கள் கட்சி மாநாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1956 ல் நடைபெற்ற சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடும், தவறான ஆய்வின் அடிப்படையில் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் திரிபுவாத சக்திகளுக்கு வலுவூட்டியது.

பாலக்காடு மாநாட்டில் மத்தியக் குழு வரைவு தீர்மானத்தில் இப்படிப்பட்ட திரிபுவாத முன்மொழிவுகள் நிறைந்திருந்தன. கட்சிக்குள் வர்க்க முரண்பாடு கண்ணோட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய இது வலு சேர்த்தது. இந்த போக்கை மறுத்த மத்தியக் குழுவின் ஒரு பகுதியினர், மாற்று வரைவை முன் வைத்தனர். இந்த வரைவு, இந்திய அரசின் வர்க்க தன்மை குறித்த தெளிவான பார்வையையும், திரிபுவாதத்திற்கு எதிரான விமர்சனங்களையும் முன்வைத்தது. தீவிர விவாதங்கள் நடைபெற்றன. வர்க்க எதிரியுடன் கைகோக்குமாறு கோரியவர்களால் கட்சியில் பெரும்பான்மையை பெற முடியவில்லை.

நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில், சர்வதேச அளவில் சோஷலிச சக்திகள் வலுவுற்றுவிட்டதாகவும், ஏகாதிபத்தியத்தின் தாக்கம் நலிந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டது. இதனால் “பாராளுமன்ற முறைகள்”மூலமே சமூக மாற்றத்தை அடைந்துவிடலாம் என்ற எண்ணம் சிலர் மத்தியில் வலுவுற்றது. திட்டம் சார்ந்த கேள்விகளில் கட்சி பிளவுபட்டு இருந்ததை இந்த விவாதங்கள் உணர்த்துகின்றன.

தேர்தல் வெற்றிகள், தீவிரமடையும் போராட்டங்கள்

1957 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு சதவீதம் இரட்டிப்பானது, இரண்டாவது மிகப்பெரும் கட்சியாகவும் உருவெடுத்தது. கேரளாவில் பெரும்பான்மையை வென்றது. தேர்தலுக்கு பின், கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க்கி “வெகுஜன கட்சியாக” கட்டமைக்க மத்தியக்குழு அழைப்பு விடுத்தது. அமிர்தசரஸ் நகரில் கட்சியின் ஐந்தாவது “சிறப்பு” மாநாடு 1958 ஏப்ரல் 6 முதல் 13 வரை  நடைபெற்றது. “திரிபுவாத, பிரிவினைவாத போக்கிற்கு எதிராக போராடி, இந்திய நிலையை கருத்தில் கொண்டு, மார்க்சிய – லெனினியத்தை பொருத்தி, திட்டங்களை வகுக்க” கட்சியின் செயல்திட்டத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

“பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வென்று, வெகுஜன போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம்” பிற்போக்கு சக்திகளை திறம்பட எதிர்த்து, “மக்கள் நலனிற்கான பாராளுமன்றம் மூலம் சமூக-பொருளாதார அமைப்பில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவர முடியும்” என்றது தீர்மான அறிக்கை. இது “பாராளுமன்ற மோகம்” கட்சிக்குள் ஊடுருவியதை உணர்த்துகின்றது. 1957 பொதுத் தேர்தல் வெற்றிகள் இதற்கு ஊக்கமளித்தன.

கட்சி நடத்தும் பல பத்திரிக்கைகளும் மக்களுக்கு புரியாத கஷ்டமான மொழியிலும், தரவுகள் சரிவர அளிக்காமலும் கட்டுரைகளை வெளியிடுவதாக கட்சி மாநாடு விமர்சித்தது. கட்சியின் கீழ்நிலைகளிலிருந்து வரும் விமர்சனங்களை கணக்கில் கொள்ளாமல் செயல்படும் அதிகாரத்துவ போக்கு பரவலாக இருந்ததையும் மாநாடு சுட்டிக்காட்டியது. மேலும் “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்”, “ஜனநாயக மத்தியத்துவம்” ஆகிய அம்சங்களை எதிர்ப்போரையும் மாநாடு விமர்சித்தது. இந்த அனைத்து போக்குகளையும் எதிர்க்க மாநாட்டில் உறுதியேற்கப்பட்டது.

அரசியல், தத்துவார்த்த ஞானத்தின் தரத்தை கணக்கில் கொள்ளாமல், “உட்கட்சி ஜனநாயகம்” என்ற பெயரில் குழுக்களின் உறுப்பினர் எண்ணிக்கைகளும் அதிகரிக்கப்பட்டன. ஆக, அமைப்பின் பணிகளில் திரிபுவாத போக்கின் தாக்கம் வெளிப்படையாக தெரியத் துவங்கியது.

ஒன்றுபட்ட கட்சியின் இறுதி மாநாடு

அமிர்தசரஸ் மாநாட்டிற்கு பின்னரும் கூட கட்சிக்குள் வேறுபாடுகள் நிலவின. திரிபுவாத சக்திகளால் காங்கிரஸ் மீதான மென்மையான போக்கு அதிகரித்தது. இந்நிலையில்தான் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி மத்திய காங்கிரஸ் அரசால் கலைக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் அரசாங்கம் கலைக்கப்பட்டதற்கு எதிராக வரலாறு காணாத போராட்டத்தை கட்சி முன்னெடுத்தது. கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டாலும், ஈ.எம்.எஸ் நம்பூத்ரிபாத் செல்லுமிடமெல்லாம் அவருக்கு குவியும் கூட்டங்கள் அதிகரித்தன. இந்த தருணத்தில் தான் இந்தியா-சீனா இடையேயான எல்லைப் போராட்டம் வெடித்தது. இதை பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியும், பிற்போக்கு சக்திகளும் கம்யூனிஸ்ட் கட்சியை தாக்கினர்.

இந்த மோதல்கள் குறித்து 1959-61 இடையேயான இரண்டு ஆண்டுகளில் 10 அறிக்கைகளை கட்சி வெளியிட்டது. சியாங் காய்-ஷேக் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவுடன் தலாய் லாமா நடத்திய, தோல்வியுற்ற எதிர்புரட்சி இந்தியா-சீனா இடையேயான நல்லுறவை பாதித்தது என அறிக்கைகள் குறிப்பிட்டன. ஆனால் ஹிந்து மகாசபை, ஜன சங், காங்கிரஸில் உள்ள வலதுசாரி சக்திகள் அனைவரும் “திபெத்”பகுதியின் நிகழ்வுகளை திரித்துக் காட்டி, தங்கள் சொந்த பிற்போக்கு திட்டத்திற்கு அதைப் பயன்படுத்திக் கொண்டனர்.

இச்சூழலில்தான் கட்சியின் ஆறாவது மாநாடு 1961 ஏப்ரல் 7 முதல் 16 வரை விஜயவாடா நகரில் நடைபெற்றது. இதுவே ஒன்றுபட்ட கட்சியின் கடைசி மாநாடு ஆகும்.

தற்கால கொள்கைகள் குறித்தும், சர்வதேச கம்யூனிச இயக்கம் சந்திக்கும் தத்துவார்த்த சவால்கள் குறித்தும் மிக முக்கியமான வேறுபாடுகள் கட்சிக்குள் எழுந்தன. தேசியக் குழுவின் பெரும்பான்மை பகுதியினரால் கட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்மானம் திரிபுவாத புரிதலை அப்பட்டமாக வெளிகாட்டியது. ஆறாவது மாநாட்டில் அதன் வரலாற்றிலேயே மிக மோசமான நெருக்கடியை கட்சி சந்தித்தது.

மாநாட்டில் முன்வைக்கப்பட்ட அமைப்புசார் அறிக்கை, அமிர்தசரஸ் மாநாட்டின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தோல்விகளை சுட்டிக்காட்டியது. “பாராளுமன்ற மோகம்” போன்ற போக்குகள் கட்சியில் வளர்ந்ததாலும், அதை களையெடுக்க கட்சியின் எந்த நிலையிலுள்ள குழுக்களும் முன் வராததாலும், கட்சியில் தவறான போக்குகள் தலைதூக்கியதை அந்த அறிக்கை கண்டறிந்தது. கட்சியின் தலைமை குழுக்கள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் உள்ள வழக்கங்களாலேயே “முதலாளித்துவ பாராளுமன்றமும், அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட போராட்டங்களுமே மக்களின் நம்பிக்கையை வெல்லும் ஒரே வழி” என்ற சிந்தனை கட்சிக்குள் வளர்ந்ததற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டது.

சோஷலிச சிந்தனைகள் மக்கள் மனத்தில் மெல்ல மெல்ல வளர்ந்தால், மெல்ல மெல்ல காங்கிரஸ் அரசாங்கத்தை இடதுசாரி கட்சிகள் வெளியேற்றக் கூடும் என்ற சிந்தனை கட்சிக்குள் தலைதூக்கியது. “திரிபுவாதிகள் மார்க்சியத்தின் புரட்சிகர உணர்வை அழித்து, மக்கள் மத்தியில் சோசியலிசத்தின் மீதான நம்பிக்கையை நிலைகுலையச் செய்வர். அவர்கள் தொழிலாளி வர்க்க புரட்சியின் வரலாற்று அவசியத்தையும், முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்திற்கு மாறும் இடைப்பட்ட காலத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் அவசியத்தையும் மறுப்பவர்கள். அவர்கள் மார்க்சிய-லெனினிய கட்சியின் தலைமை பங்கை மறுப்பவர்கள். சர்வதேச தொழிலாளர் வர்க்க ஒற்றுமை, லெனினிய கோட்பாட்டு ரீதியான கட்சி கட்டமைப்பு, முக்கியமாக ஜனநாயக மத்தியத்துவம் ஆகியவற்றை அவர்கள் ஏற்பதில்லை. அவர்கள் கம்யூனிச கட்சியை போர்க்குணமிக்க புரட்சிகர அமைப்பிலிருந்து வெறும் ஒரு விவாத மேடையாக மாற்ற நினைப்பவர்கள்” என்று அந்த ஆவணம் குறிப்பிட்டது.

கட்சி மீதான தாக்குதல்கள்

1962 பொதுத் தேர்தல் முடிந்த நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் கோஷ் மறைந்தார். புதிய செயலாளரை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் தேசியக் குழுவில் விவாதிக்கப்பட்டது. கட்சிக்குள் இருந்த சலசலப்புகளை பயன்படுத்தி, கட்சியின் செயல் திட்டம் அனுமதிக்காதபோதும், திரிபுவாத பிரிவினர் “தலைவர்” என்ற புதிய பதவியை உருவாக்கினர். ஒரு சமரசம் ஏற்பட, எஸ்.ஏ.டாங்கே தலைவர் பொறுப்பிற்கும், ஈ.எம்.எஸ். நம்பூத்ரிபாத் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து நடந்த தேசியக் குழு கூட்டத்தில் சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநாடு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த ஆவணத்தின் பல தவறான முடிவுகளும் விமர்சனமின்றி ஏற்கப்பட்டன. அதில் முக்கியமானது, “சோவியத் ஒன்றியம் அடுத்த தலைமுறைக்குள் கம்யூனிச சமூக கட்டமைப்பை முடித்து விடும்”என்று கூறி ஏகாதிபத்திய சக்திகளின் தாக்கத்தை குறைத்து மதிப்பிட்டது.

இந்த சூழலில் இந்திய-சீன போர் 1962 அக்டோபரில் வெடித்தது. காங்கிரஸ் அரசாங்கம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. ( 1962 – 1968 சீன போரினால் அவசர நிலை அறிவிக்கப்பட்டது ) முசாஃபர் அகமத், ஏ.கே.கோபாலன், சுந்தரய்யா, பி.டி.ரணதிவே, ஹர்கிஷன் சுர்ஜித் போன்ற முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

டாங்கே தலைமையிலான திரிபுவாத பிரிவினர், கட்சியின் புரட்சிகர பிரிவினர் மீதான இந்த தாக்குதலை பயன்படுத்தி, திரிபுவாத போக்குகளை முன்னெடுக்க முயன்றனர். “தேச விரோதிகள்”, “சீன ஆதரவாளர்கள்” எனக் கூறி கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டிக்க மறுத்தனர்.  பிற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து, டாங்கே போன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஆதரவும் கிடைத்தது அரசாங்கத்திற்கு உற்சாகமூட்டியது. டாங்கே குழுவினரை  தவிர இதரப் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் காங்கிரசின் நடிவடிக்கைகளுக்கு எதிராக கடுமையாக போராடினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, டாங்கே தலைமையிலான திரிபுவாத பிரிவினர் மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற பல இடங்களில் புரட்சிகர பிரிவினரை வெளியேற்றி, கட்சியை கைப்பற்றினர்.

இதுபோன்ற பல தத்துவார்த்த போராட்டங்களை கடந்தே கம்யூனிச இயக்கம் இன்று நூறாவது ஆண்டை அடைந்துள்ளது. சர்வதேச சூழலும், உள்நாட்டு சூழலும், கட்சியின் அமைப்பு, செயல்பாடு, நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் மீது பல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவை அனைத்தும் கட்சி மாநாடுகளில், அதன் ஆவணங்கள் மற்றும் முடிவுகளில் பிரதிபலிக்கின்றன.

கம்யூனிஸ்ட் இயக்கம்: நூறாண்டுகள் கடக்கும் போராட்ட வரலாறு!

குரல்: அபிநவ் சூர்யா

ஜி. ராமகிருஷ்ணன்

இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்

– கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

இந்தக் கட்டுரை கடந்த 100 ஆண்டு காலத்தில் நாடு முழுவதும் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார தளங்களில் கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டங்களை, தமிழ்நாட்டை மையப்படுத்தி விவரிக்க முயல்கிறது.

உலகைக் குலுக்கிய ரஷ்ய புரட்சி 1917 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அக்காலகட்டத்தில் கல்கத்தாவிலிருந்து வெளியாகி வந்த ஒரு நாளிதழ் “ஜார்ஆட்சியின் வீழ்ச்சி இந்தியாவிலும் அந்நிய அதிகார வர்க்கத்தை ஒழித்துக் கட்டக் கூடிய ஒரு புதிய காலத்தின் துவக்கமாக அமைந்துள்ளது” என எழுதியது. உண்மையில் இப்படியான எழுச்சி இந்தியாவில் நடந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் கடும் தடுப்பு நடவடிக்கைகளை 1919 ஆம் ஆண்டிலேயே பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கி விட்டது. புரட்சியாளர்கள் வேட்டையாடப்பட்டார்கள்.  கம்யூனிஸ்ட் இயக்கத்தை கருவிலேயே அழிக்க முயற்சித்தது ஆங்கிலேயர் அரசு. இந்தப் பின்னணியில்தான் இந்திய புரட்சியாளர்கள் ரகசியமாக சோவியத் யூனியனுக்குப் பயணம் செய்து, தாஷ்கண்ட் நகரில் 1920ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையை உருவாக்கினார்கள். 

இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகளின் செயல்பாடுகளை தடுக்க சதி வழக்குகளை ஏவியது. 1923ஆம் ஆண்டு, பெஷாவர் சதி வழக்கினை ஏவியதன் மூலம் பல கம்யூனிஸ்டுகளைக் கைது செய்யத் துவங்கியது. 1924ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட்டுகள் மீது கான்பூர் சதி வழக்கு போட்டது. 

மீண்டும் 1929இல் 31 கம்யூனிஸ்ட் தலைவர்களை கைது செய்து, மீரட் சதிவழக்கினைத் தொடுத்தது. “பிரிட்டிஷ் மன்னரிடமிருந்து, பிரிட்டிஷ் இந்தியாவின் இறையாண்மையை பறிப்பதற்கான சதியில் ஈடுபட்டதாக” அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.  இந்தியாவில் நடந்துவரும் வர்க்கப் போராட்டத்தில் இது ஒரு அத்தியாயம் என அன்றைய தலைவர்கள் இதனைக் கருதினார்கள். மீரட் சதிவழக்கின் விசாரணைமேடையை கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தையும், நோக்கத்தையும், தத்துவத்தையும் பிரச்சாரம் செய்யவாய்ப்பாக பயன்படுத்தினார்கள். நீதிமன்றத்தின் மூலமாக கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டங்கள் தேச மக்களுக்குச் சென்றடைந்தது. 

கைது செய்யப்பட்ட தலைவர்கள், இந்த சூழ்நிலையை, சந்தித்து விவாதிப்பதற்காக பயன்படுத்தினார்கள். இதனடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி 1931ஆம் ஆண்டு தனது திட்டத்தை வெளியிட்டது. 

பலவிதமான அடக்குமுறைகளுக்கு ஆளான கம்யூனிஸ்ட்டு கட்சித் தலைவர்கள்,  1933ஆம் ஆண்டில் சதிவழக்கிலிருந்து விடுதலையான பிறகே கட்சியின் மத்தியக்குழுவை அமைத்தார்கள். நாட்டின் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகள் உருவான பின்னணியில், சென்னையில் தோழர்கள் பி. சுந்தரய்யா, எஸ்.வி. காட்டே உதவியோடு, தோழர்கள் பி.ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ், ப. ஜீவானந்தம், ஏ.எஸ்.கே. அய்யங்கார், டி.ஆர். சுப்பிரமணியம், கே. முருகேசன், நாகர்கோவில் சி.பி. இளங்கோ, சி.எஸ்.சுப்பிரமணியம், திருத்துறைப்பூண்டி முருகேசன்ஆகியோரைக் கொண்ட முதல் கிளை 1936ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

சென்னைக்கு பிறகு தமிழகத்தில் தஞ்சை, கோவை, மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் உருவானது. இப்பின்னணியில் மாநில அளவில் இயக்கத்திற்கு வழிகாட்டிட 1942ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் தோழர்கள் பி. ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ், ப. ஜீவானந்தம், எம். கல்யாணசுந்தரம், சி.எஸ். சுப்பிரமணியம், ஆர்.கே. கண்ணன் ஆகியோரைக் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. மோகன் குமாரமங்கலம் மாநிலச் செயலாளராகவும், எம்.ஆர். வெங்கட்ராமன் உதவிச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1943ஆம் ஆண்டு கட்சியின் அகில இந்திய பணிக்காக மோகன் குமாரமங்கலம் மும்பைக்குச் சென்ற போது எம்.ஆர். வெங்கட்ராமன் மாநிலச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

மார்க்சிய – லெனினிய கொள்கையின் அடிப்படையில் 1931ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தோடு, விவசாயப் புரட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்நிய ஆங்கிலேயர் ஆட்சியை தூக்கியெறிவதோடு, சாதிய அமைப்பு முறையை ஒழித்து விவசாயப் புரட்சியின் மூலம் தான் ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் அடிமைபடுத்தப்பட்ட மக்களுக்கு சமூக, பொருளாதார, கலாச்சார சட்டரீதியான விடுதலையை பெற முடியும் என்ற அடிப்படையில் கீழ்க்கண்ட திட்டங்களை கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது.

*         அந்நிய ஆங்கிலேயர் ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். பிரிட்டிஷ்துருப்புக்களை வெளியேற்ற வேண்டும். 

*     தேசத்தின் பல பகுதிகளில் இருக்கும் மன்னர் ஆட்சிகளை அகற்றி தேசிய அளவில் ஒரு கூட்டாட்சியை உருவாக்க வேண்டும்.

*         ஆங்கிலேயர்களுடைய, நிலப்பிரபுக்களுடைய, மன்னர்களுடைய நிலங்களை நட்ட ஈடு கொடுக்காமல் கைப்பற்றி நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட வேண்டும். சாதி, மத,  பாலின வேறுபாடுகளை அகற்றி மக்கள் மத்தியில் சமத்துவத்தை உருவாக்கிட வேண்டும்.

*         ஆங்கிலேயர்களுக்கு சொந்தமான தொழிற்சாலைகளை, வங்கிகளை, ரயில்வேயை, தோட்டங்களை, நீர்வழிப் போக்குவரத்து நிறுவனங்களை பறிமுதல் செய்து தேச உடமையாக்க வேண்டும்.

*         அரசு முற்றிலுமாக மதத்திலிருந்துவிலகியிருக்க வேண்டும்.

*        இன ரீதியில், மத ரீதியில் உழைப்பாளி மக்களை பிளவுபடுத்திட முயற்சிக்கும் ஆங்கிலேய அரசின் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

*         காண்ட்ராக்ட் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும். 8 மணி நேர வேலையுடன், ஆர்ப்பாட்டம், மறியல், வேலைநிறுத்தம் போன்ற உரிமைகளோடு தொழிற்சங்கங்கள் செயல்படக் கூடிய உரிமைகள் வேண்டும்.  தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை ரத்து செய்திட வேண்டும்.

*         ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

*          16 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி, அவர்களின் தாய்மொழியில் அளித்திட வேண்டும். மாணவர்களுக்கு இலவச உணவு, சீருடை, பாடப் புத்தகங்களை அரசே வழங்கிட வேண்டும்.

*      பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம்  அளித்திட வேண்டும்.  

 மேற்கண்ட  திட்டங்களை பிரகடனப்படுத்தியதோடு, இதனடிப்படையில் தொழிலாளர்கள்,  விவசாயிகள் மற்றும் அனைத்து பகுதி உழைக்கும் மக்கள் கிளர்ந்தெழ வேண்டுமெனவும் கட்சி அறைகூவல் விடுத்தது.

பண்ணையடிமை முறையை ஒழித்திட

1942 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அமைக்கப்பட்டு, அதன் முதல் கூட்டத்திலேயே தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளை திரட்டுவது பற்றி விவாதிக்கப்பட்டது. தஞ்சையில் குறிப்பாக, கீழத்தஞ்சையில் (இன்றைய நாகை, திருவாரூர்) நிலங்கள் அனைத்தும் விரல்விட்டு எண்ணக் கூடிய நிலச்சுவான்தாரர்கள், மடங்கள், கோவில்களுக்கு சொந்தமாக இருந்தன. மக்கள் தொகையில் 30 சதவிகிதமாக இருந்த தலித் மக்கள் நிலச்சுவான்தாரர்களிடம் பண்ணையடிமைகளாக இருந்தார்கள். பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக அவர்களிடம் குத்தகை விவசாயிகளாக இருந்தனர்.

பண்ணையடிமைகளின் குடும்பம் – பெற்றோர், மனைவி, குழந்தைகள் குறிப்பிட்ட பண்ணையார்களிடம் வேலை செய்தார்கள். ஆண்கள் வயலில் வேலை செய்ய வேண்டும். பெண்கள் ஆடு, மாடு மேய்ப்பதோடு, நடவு நடுவது, களையெடுப்பது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும். பண்ணையடிமைகளின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாது. 6 வயது சிறுவர்கள் மாடு மேய்க்க வேண்டும். 10 வயதில் மாட்டுத் தொழுவத்தை கூட்டிக் கழுவ வேண்டும். 15 வயதானால் மாட்டு வண்டிகளை ஓட்ட வேண்டும். 18 வயதானால் அப்பாவைப் போல் வேலை செய்ய வேண்டும். சூரிய உதயத்திற்கு முன் வேலைக்கு சென்று, சூரியன் அஸ்தமித்தபிறகே வீடு திரும்ப முடியும். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு தீண்டாமைக் கொடுமை கோரமான வடிவில் தஞ்சை மாவட்டத்தில் நிலவியது.

குத்தகைதாரர்கள் விளைச்சலில் நான்கில் மூன்று பங்கை குத்தகையாக அளித்திட வேண்டும். சில சமயங்களில் ஐந்தில் நான்கு பங்கை கூட கொடுக்க வேண்டியிருக்கும். எப்படியிருந்தாலும் அதே நிலத்தை அடுத்தாண்டு நிலச்சுவான்தார் குத்தகைக்கு தருவாரா என்பதில் உத்தரவாதம் இல்லை. இத்தகைய பின்னணியில்தான் பண்ணையடிமைகளையும், விவசாயிகளையும் திரட்டிட கம்யூனிஸ்ட் கட்சி களமிறங்கியது. 

மாநிலக் குழுவின் முடிவின் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்திற்குச் சென்ற பி. சீனிவாசராவ் தலித் மக்கள் மத்தியில் பேசுகிற போது, ’நிலச்சுவான்தாரர்கள், குண்டர்கள் உங்களை சாட்டையால் அடித்தால், நீங்கள் திருப்பி அடியுங்கள்’ என்றார். குத்தகை விவசாயிகளின் பிரச்சனையையொட்டி திருவாரூர் மாவட்டம் தென்பறை கிராமத்தில் முதன்முதலாக விவசாயிகள் சங்க கொடி ஏற்றப்பட்டது. குத்தகை விவசாயிகளை திரட்டி, ’விவசாயிகளுக்கு 18 சதவிகித குத்தகைக்குப் பதிலாக 67 சதவிகிதம்’ என்ற கோரிக்கையை விவசாயிகள் சங்கம் முன்வைத்தது. விவசாய சங்கத்தின் முயற்சியை முறியடிக்க மிராசுதாரர்கள் விளைச்சல் நிலத்திற்கு தீ வைக்க முயற்சித்தார்கள். விவசாயிகளுடைய தீவிர போராட்டத்தால் களத்துமேட்டிலேயே குத்தகையை அளந்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தென்பறையில் நடந்த போராட்டத்தின் வெற்றி தலித் மக்கள் உள்ளிட்டு அந்த மாவட்டத்து மக்கள் அனைவரின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

சாணிப் பால் சாட்டையடிக்கு எதிராகவும், மற்றும் பல வடிவங்களிலான தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும் மாவட்டம் முழுவதும் தலித் மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். கீழத்தஞ்சை முழுவதும் போராட்டக்களமாக மாறியது. 1944ஆம் ஆண்டு நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், ’சாணிப்பால், சாட்டையடி ஒழிக்கப்பட்டது’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் உருவானது.  விவசாயிகளுக்கும், தலித் மக்களுக்கும் எதிரிகளாக இருந்தவர்கள் நிலச்சுவான்தாரர்கள். விவசாயிகளும், பண்ணையடிமைகளும் நிலச்சுவான்தாரர்களின் நிலப்பிரபுத்துவ கொடுமையையும், தீண்டாமைக் கொடுமையையும் எதிர்த்து போராடுகிறபோது, ஆங்கிலேய அரசின் நிர்வாகம் நிலச்சுவான்தாரர்களுக்கு ஆதரவாக நின்றது. இதனால் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, தீண்டாமைக் கொடுமை எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ சுரண்டல் எதிர்ப்பு என்ற வடிவத்தில் நிகழ்ந்தது. கீழத்தஞ்சையில் தீண்டாமை கொடுமையும், நிலப்பிரபுத்துவ சுரண்டலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருந்தது. தஞ்சை மாவட்டத்தில் பண்ணையடிமைகளாக இருந்த தலித் மக்களும், விவசாயிகளாக இருந்த பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த மக்களும் ஒன்றிணைந்து போராடியதால்தான் அவர்கள் போராட்டம் வெற்றியடைந்தது. இப்போதும் தமிழகத்தில் ஒப்பீட்டளவில் தீண்டாமைக் கொடுமை கீழத்தஞ்சையில் (நாகை, திருவாரூர்) ஒழிக்கப்பட்டதற்கு இதுதான் காரணம். 

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து, 1952 ஆம் ஆண்டு ராஜாஜி முதலமைச்சராக வந்த போது தஞ்சாவூர் சாகுபடிதாரர், பண்ணையாள் பாதுகாப்பு அவசரச்சட்டத்தை கொண்டு வந்தார். தஞ்சையில் ஒரு கூட்டத்தில் பேசுகிற போது, ’தஞ்சை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் கம்யூனிஸ்ட் என்ற பேய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து அவர்களை விடுவிக்கத்தான் இந்த சட்டம். நிலச்சுவான்தாரர்களே இதை ஏற்றுக்கொள்ளுங்கள்!’ என்று ராஜாஜி பேசினார். இச்சட்டம் அமலுக்கு வந்த பிறகு, குறிப்பிட்ட நிலச்சுவான்தாரர்களிடம் வேலை செய்து வந்த பண்ணையடிமைகள் விடுவிக்கப்பட்டு, தினக் கூலி விவசாய தொழிலாளர்களாக மாறினார்கள். குத்தகை விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்றுவது தடுக்கப்பட்டது.

இதற்கு பிறகு விவசாயத் தொழிலாளர்கள் மாவட்டம் முழுவதும் கூலி உயர்வுக்காகப் போராடினார்கள். இப்போராட்டத்தை ஒடுக்கிட நிலச்சுவான்தாரர்களுக்கு ஆதரவாக மாநில அரசு நின்றது. நிலச்சுவான்தாரர்களின் குண்டர்களும், காவல்துறையும் அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்கிட முற்பட்டார்கள். ஆனால், போராட்டம் தொடர்ந்து வெற்றி முகமாகச் சென்றது.

1968ம் ஆண்டு கூலி உயர்வுக்கான போராட்டம் கீழத்தஞ்சை முழுவதும் நடந்த போது, ஒருபுறம் அரசு அந்த போராட்டத்தை ஒடுக்கிட முற்பட்டது. மறுபுறம் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில், நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் துவங்கப்பட்டு, கிராமம், கிராமமாக போராடும் தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதையொட்டி தான், 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ந் தேதி வெண்மணியில்,  44 தலித் மக்களை நிலச்சுவான்தாரர்களும், அவர்களின் குண்டர்களும் உயிரோடு எரித்துக் கொன்றனர்.  வெண்மணியில் தலித் மக்களை எரித்துக் கொன்று விட்டால், கம்யூனிஸ்ட் இயக்கத்தை அழித்து விடலாம் என்று நிலச்சுவான்தாரர்கள் கருதினார்கள். ஆனால் முன்பை விட கம்யூனிஸ்ட் இயக்கம் வீறு கொண்டு எழுந்தது.

வெண்மணி கோரச்சம்பவத்திற்கு பிறகு கணபதியா பிள்ளை கமிசனை மாநில அரசு அமைத்தது. அந்த கமிசனுடைய சிபாரிசின் அடிப்படையில் தான் முதன்முறையாக விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டம் உருவானது.

கீழத்தஞ்சையில் தலித் மக்கள் அனைவருமே நிலச்சுவான்தாரர்களின் இடங்களில் தான் குடிசைப் போட்டு வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு சொந்தமான மனையோ, வீடோ இல்லை. விவசாயத் தொழிலாளர்கள் ஆண்டாண்டு காலமாக வசித்து வரும் நிலங்களை அவர்களுக்கே மனைப்பட்டா வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியது. போராட்டத்தின் நிர்பந்தத்தால் மாநில அரசாங்கம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தலித் மக்களுக்கு மனைப்பட்டா வழங்கியது.

1961ஆம் ஆண்டு கேரளாவைப் போல் தமிழகத்திலும் நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வர வேண்டும்; உச்சவரம்பை 30 ஏக்கரிலிருந்து 15 ஏக்கராக குறைக்க வேண்டுமென்று தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திமுக ஆட்சியில் உச்சவரம்பை 15 ஏக்கராகக் குறைத்துச் சட்டம் இயற்றினாலும், உபரி நிலம் விநியோகம் செய்யப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நில உச்சவரம்பு சட்டத்தைப் பயன்படுத்தி உபரி நிலங்களை விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோகிக்க வேண்டுமென்று வீரமிக்க போராட்டத்தை நடத்தியது. போராட்டத்தில் காவல்துறை, நிலச்சுவாந்தாரர்கள், குண்டர்கள் ஆகியோரின் அடக்குமுறைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. போராட்டத்தின் விளைவாக, சுமார் 3 லட்சம் ஏக்கர் உபரி நிலம் விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. தமிழகத்தில், அரசு அதிகாரத்திற்கு வராமலேயே போராட்டத்தின் மூலமாக உபரி நிலம் விநியோகம் செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம் தான் அடிப்படையாக இருந்தது. 

இவ்விடத்தில் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் பங்களிப்பைக் குறிப்பிட வேண்டியுள்ளது. சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக தோழர் இ.எம்.எஸ். இருந்தபோது, 1939 ஆம் ஆண்டு மலபார் குத்தகை விவசாயிகள் சம்பந்தமாக, அரசு அமைத்த ஆணையத்தில் ஓர் உறுப்பினராக இருந்து அவர் அளித்த அறிக்கை, நிலப்பிரபுத்துவம், குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நிலச் சீர்திருத்தம் போன்ற அம்சங்களில் தீர்வு காண வழிகாட்டும் ஆவணமாக இன்றைக்கும் உள்ளது.   

ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள்:

1936ஆம் ஆண்டு ஏஐடியுசியினுடைய மாநிலக்குழு உருவாக்கப்பட்டு அதனுடைய வழிகாட்டுதலின் அடிப்படையில், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சென்னை, நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளில் திட்டமிட்ட முறையில் தொழிலாளர்களை திரட்டிட  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மாநிலத்தில் ஆலைத் தொழிலாளர்களின் பொருளாதார கோரிக்கைகளுக்காக நடைபெறும் போராட்டங்கள் எல்லாம் அந்நிய ஆட்சியான ஆங்கிலேயர் அரசுக்கு எதிரான போராட்டங்களாகவே மாறியது. ஆங்கிலேய அரசு நிர்வாகம் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்காகப் போராடிய போது, ஆலை நிர்வாகங்களுக்கு ஆதரவாக நின்றது. தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்கிட போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பல பகுதிகளில் பல தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

1946ஆம் ஆண்டு பம்பாய் கப்பற்படை வீரர்கள் ஆங்கிலேய அரசின் ராணுவத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்தபோது, ராணுவம் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 270 பேர் கொல்லப்பட்டனர். இந்திய கடற்படை வீரர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் நடந்தன. சென்னையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இத்தகைய சூழல்தான் இந்திய விடுதலைக்கான நிர்ப்பந்தத்தை உருவாக்கியது.

1940களில் கோவையில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் வீரஞ்செறிந்த பல போராட்டங்களை நடத்தினார்கள். ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர்கள் போராடிய போது, போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். லட்சுமி மில் தொழிலாளர் போராட்டத்தின்போது தொழிலாளர்களுக்கும் – கருங்காலிகளுக்கும் நடந்த மோதலில் ஒரு கருங்காலி இறந்து விட்டான். இதையொட்டி 4 சின்னியம்பாளையம் தொழிலாளர்கள் மீது கொலை வழக்கு தொடுக்கப்பட்டு அவர்கள் நான்கு பேரும் தூக்கிலிடப்பட்டனர். இவ்வாறு மாநிலம் முழுவதும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக, உரிமைகளுக்காக போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். இத்தகைய போராட்டத்தினால் அந்நிய ஆட்சியின்போது பல தொழிலாளர்கள் நலச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. 1926ஆம் ஆண்டு இந்திய தொழிற்சங்க சட்டம், 1946ஆம் ஆண்டு தொழிற்சாலை நிலையாணை சட்டம், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறு சட்டம் போன்று பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்கிய தொழிற்சங்கங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக மட்டுமல்லாமல், அந்நியர் ஆட்சிக்கு எதிராக போராடியதோடு, மதச்சார்பின்மைக்காகவும் பாடுபட்டார்கள்.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்ற இஸ்லாமியர்கள் என அப்பாவி மக்கள் வன்முறைகளுக்கு ஆளானார்கள். ரயில் போக்குவரத்தை துரிதப்படுத்தினால் தான் மோதலை தவிர்க்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் வட இந்திய மாநிலங்களைச் சார்ந்த ரயில்வே தொழிலாளர்கள் கலவர பகுதிகளுக்குச் சென்று ரயிலை இயக்க மறுத்தனர். பிரதமர் நேரு இந்தியா – பாகிஸ்தான் பகுதிகளில் ரயிலை இயக்க  ரயில்வே தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். திருச்சியை மையமாக கொண்ட தட்சிண ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தினுடைய தலைவர்களாக இருந்த கே. அனந்த நம்பியார், எம். கல்யாண சுந்தரம் இருவரும், இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ரயிலை இயக்குவதற்கு தொழிலாளர்கள் செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். திருச்சி, மதுரை, கொல்லம், விழுப்புரம், ஷொரனூர் ஆகிய பகுதிகளிலிருந்து 150 ரயில்வே டிரைவர்கள், பயர்மேன்கள் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குச் சென்று, லூதியானாவை மையமாகக் கொண்டு 5 மாதங்கள் ரயில்களை இயக்கினார்கள். இதற்காக அண்ணல் காந்திஜி அவர்களே தட்சிண ரயில்வே சங்க தொழிலாளர்களைப் பாராட்டினார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

தேசிய இனங்களின்உரிமைக்காக

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தவுடன் கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் மொழிவழி மாநிலம் அமைக்க வேண்டுமென்ற முழக்கத்தை முன்வைத்து போராடியது. தமிழ்மொழி பேசக் கூடிய மக்களின் எல்லைகளைக் கொண்ட தமிழ்நாடு உருவாக்கப்பட வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி கோரியது. இக்கோரிக்கைக்காக சென்னையில் கட்சி ஊர்வலத்திற்கு தலைமை தாங்கிய எம்.ஆர். வெங்கட்ராமன், ஜீவாஉள்ளிட்டோர் காங்கிரஸ் ஆட்சியின் போலீசாரால் தாக்கப்பட்டு அவர்களின் மண்டை உடைந்தது. நாடு முழுவதும் நடைபெற்ற இயக்கத்தின் பின்னணியில்  மத்திய அரசு மொழிவழி மாநிலங்களை அமைத்தது.

இதற்கு பிறகு மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென்று தியாகி சங்கரலிங்கனார் விருதுநகரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை 1956ஆம் ஆண்டு ஜூலை 27இல் துவக்கினார். மாநில முதலமைச்சராக இருந்த காமராஜர் இந்த கோரிக்கைக்கு செவிமடுக்கவில்லை. பி. ராமமூர்த்தி, கே.டி.கே. தங்கமணி உள்ளிட்டோர் சங்கரலிங்கனாரைச் சந்தித்து, ’உங்கள் கோரிக்கைகளை நாங்கள் ஏற்கிறோம்; இதற்காகப் பாடுபடுகிறோம்; நீங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடாது; உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்’ என கோரினார்கள். அவர் ஏற்கவில்லை. 77 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சங்கரலிங்கனார் உயிர்நீத்தார்.. அவர் இறப்பதற்கு முன்னதாக என்னுடைய போராட்டத்தை ஆதரித்த கம்யூனிஸ்ட்டுகளிடம் என்னுடைய உடலை கொடுக்க வேண்டுமென்று அரசு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார். மதுரையில் நடைபெற்ற சங்கரலிங்கனாரின் இறுதி நிகழ்ச்சியில் கே.பி. ஜானகியம்மாள் கலந்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக பி. ராமமூர்த்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்கு மெட்ராஸ் மாகாணம் என்பதை மாற்றி “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட வேண்டுமென்ற தீர்மானத்தை அளித்தார். அந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக இருந்த பூபேஷ்குப்தா இத்தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த திமுக தலைவர் அண்ணா இந்த தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார். காங்கிரஸ் அரசு தீர்மானத்தை ஏற்கவில்லை. 1967ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியும், திமுகவும் இணைந்து தேர்தலை எதிர்கொண்டோம். திமுக ஆட்சி அமைத்தது. தமிழ்நாடு பெயர் சூட்டலுக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.

சட்டமன்றத்தில் ஆட்சி மொழி குறித்த தீர்மானம் குறித்து நடந்த விவாதத்தில், தமிழகத்தில் கல்வி நிலையங்களில் பாட மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும், நிர்வாக மொழியாகவும் தமிழை கொண்டு வர வேண்டுமென்றும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பாடநூல்கள் மொழியாக்கம் உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளையும் முடிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ. பாலசுப்பிரமணியமும், என். சங்கரய்யாவும் வலியுறுத்தினார்கள். சங்கரய்யா பேசுகிற போது, நாடாளுமன்றத்தில்,  ‘அகில இந்திய அளவிலான பப்ளிக் சர்வீஸ் கமிசன் தேர்வை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுத வேண்டுமென்று காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது; தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களில் உள்ள மொழிகளில் சர்வீஸ் கமிசன் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டுமென்ற திருத்தத்தையும் முன்வைத்தார். விவாதங்களுக்கு பதில் அளிக்கிறபோது, அன்றைய முதலமைச்சர் அண்ணா, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழ் பாட மொழியாக, நிர்வாக மொழியாக, நீதிமன்ற மொழியாக ஆக்க வேண்டுமென்பதை ஏற்றார். மத்திய அரசின் பப்ளிக் சர்விஸ் கமிசன் தேர்வு பற்றி எதுவும் கூறவில்லை. இப்பிரச்சனையில் பல மாநிலங்களிலிருந்து  நிர்ப்பந்தம் வந்த பிறகு, மத்திய அரசாங்கம் நடத்தும் தேர்வுகளில் அவரவர் மொழிகளில் தேர்வுகள் எழுதலாம் என முடிவை மாற்றியது.

1952ஆம்ஆண்டிலேயே சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையின் மீது தோழர் பி. ராமமூர்த்தி முதன்முறையாகத் தமிழில் உரையாற்றினார்.  “ நம் நாடு சுதந்திரம் அடைந்து 5 வருடங்கள் ஆகியும் நாம் இன்னும் இந்த அந்நிய பாஷையை வைத்துக் கொண்டு பேச வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பது வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் சுதந்திரம் வந்த பிறகு இப்படிப்பட்ட ஒரு காட்சியை நாம் காண முடியாது” எனப் பேசினார். 

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியும், பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ், தமிழர்கள், தமிழ்மொழி, தமிழர் கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றியுள்ளது.

தமிழக தொழில் வளர்ச்சிக்காக

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையானது உருக்கு மற்றும் மின்சாரம். நாடு சுதந்திரம் அடைந்த போது உருக்கு, மின்சாரஉற்பத்தியில் மிகவும் பின்தங்கியிருந்தது. இந்தத்துறைகளில் உற்பத்திக்காக, பிரதமர் நேரு அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளிடம் உதவி கேட்டார். ஆனால், அந்த நாடுகள் உதவி செய்ய மறுத்துவிட்டன. 1953ஆம் ஆண்டு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்கு சென்ற போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஏ.கே. கோபாலன், சோவியத் தலைவர் ஸ்டாலினை சந்தித்து இந்திய தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். நாடு திரும்பிய ஏ.கே.ஜி. பிரதமர் நேருவைச் சந்தித்து சோவியத் யூனியனிடம் கேளுங்கள் என்று வலியுறுத்தினார். இதற்கு பிறகு தான் இந்திய அரசின் வேண்டுகோளுங்கிணங்க பிலாய், ரூர்கேலா என்ற இரண்டு உருக்காலைகளை சோவியத் நாடு உருவாக்கி கொடுத்தது. மேலும், மின் உற்பத்திக்காக சோவியத் யூனியனுடைய தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியோடு நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி சுரங்கம் வெட்டும் அனல் மின்நிலையமும் உருவாக்கப்பட்டது. இன்று இந்தியாவில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 4140 மெகாவாட்டை உற்பத்தி செய்யக் கூடிய மிகப்பெரிய எரிசக்தி நிறுவனமாக விளங்குவதற்கு சோவியத்யூனியன் உதவி முக்கியமான காரணம் ஆகும். நெய்வேலியில் சுரங்கம் வெட்டும் பணியை மத்திய அரசாங்கம் கைவிட எண்ணியபோது, பி. ராமமூர்த்தி, பிரதமர் நேருவைச் சந்தித்து திட்டத்தை தொடரக் கேட்டதுடன், தமிழக சட்டமன்றத்திலும் பேசினார். நிறுவனத்தை நிலைநாட்ட முக்கியப் பங்காற்றினார். 

திருச்சி பி.ஹெச்.இ.எல். நிறுவனம், ஜெர்மனி நாட்டின் பன்னாட்டுக் கம்பனி சீமன்ஸிடம் இருந்து தொழில்நுட்பத்தைப் பெற ஒப்பந்தம் போட வேண்டுமென்று 1978ஆம் ஆண்டு அன்றைய மத்திய அரசு முடிவு செய்தது. திருச்சி பி.ஹெச்.இ.எல் நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு துவங்கப்பட்டது. வேறு எந்த நாட்டு உதவியும் அதற்குத் தேவையில்லை என்று பி. ராமமூர்த்தி வலியுறுத்தியதால் திருச்சி ஃபெல் நிறுவனம் பாதுகாக்கப்பட்டது.

இதைப்போன்று சேலத்தில் உருக்காலை துவக்க வேண்டுமென்று வலியுறுத்தியதும் கம்யூனிஸ்ட் இயக்கம் தான். இவை மட்டுமல்லாமல் கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பஞ்சாலை உள்ளிட்ட தொழில்களையும், மாநிலத்தில் இதர தொழில்களையும் பாதுகாப்பதற்கு கம்யூனிஸ்ட் இயக்கம் அரும்பாடுபட்டுள்ளது. 

1959 ஆம் ஆண்டு இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான கேரள அரசை நேரு பிரதமராகவும், இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சி தலைவராகவும்  இருந்தபோது தான் கலைத்தார்கள். 

மார்க்சிஸ்ட் கட்சி உருவான பின்:

1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கல்கத்தா அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது; அவ்வாண்டு டிசம்பர் மாதமே நாடு முழுவதும் தோழர்கள் இ.எம்.எஸ். ஜோதிபாசு தவிர, மற்ற அகில இந்திய மாநில தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கியமான தலைவர்கள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட அனைவரும் 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் விடுதலை செய்யப்பார்கள். இப்படி தொடக்கம் முதல் இன்று வரை ஆளும் வர்க்கங்களுடைய கொடுமையான அடுக்குமுறைகளை எதிர்கொண்டே மார்க்சிஸ்ட் கட்சி வலுவாக செயல்பட்டு வருகிறது. இப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசை சீர்குலைப்பதற்கு காங்கிரஸும், பாஜகவும் முயற்சித்து வருகின்றன.

1964 இல் இருந்து இதுவரையிலான 50 ஆண்டுகால வரலாற்றை தனியாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. இருப்பினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான பிறகு, தமிழகத்தில் மாறி வரும் அரசியல் பொருளாதார சூழலுக்கு ஏற்ப, புதிய உத்தியை உருவாக்கி அரசியல் அரங்கில் தனது முத்திரையைப்பதித்து வருகிறது. நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில், கட்சியினுடைய பிரதிநிதித்துவம், எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசுகளுடைய கொள்கைகளை எதிர்த்து ஒரு மாற்றுக் கொள்கையை முன்வைத்து மக்கள் நலனைப் பாதுகாப்பதில் முன்னிலை வகித்து வருகிறது.

தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அரங்கங்களில் ஏற்கனவே இருக்கக்கூடிய ஆதரவு தளத்தை விரிவுபடுத்திட இந்த உழைக்கும் மக்களின் வர்க்க நலன்களைப் பாதுகாக்க வீரம்செறிந்த போராட்டங்கள் நடந்துள்ளன. இந்த அரங்கங்களில் அகில இந்திய அமைப்புகள் உருவான போது, அவைகளின் தலைமையில் மாநிலக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, துடிப்போடு செயல்பட்டு வருகின்றன. 

மாணவர், வாலிபர், மாதர் அரங்கங்களில் அநேகமாக புதிதாகத் துவங்க வேண்டிய நிலையில் இருந்து, மாநில அமைப்புகளை உருவாக்கிப் பல களப்போராட்டங்களை நடத்தி, மாநிலத்தில் இந்த அமைப்புகள் பரவலாக வேர்விட்டன.

தீண்டாமை ஒழிப்புக்காக, சிறுபான்மை மக்களின் நலனுக்காக, மாற்றுத் திறனாளிகளுக்காக, மக்கள் ஒற்றுமைக்காக, கலாச்சார தளத்தில் முற்போக்கு கலை இலக்கியத்திற்காகப் பல அமைப்புகளையும், மேடைகளையும் உருவாக்கி, அவ்வமைப்புகள் சம்பந்தப்பட்ட அரங்கங்களில் வலுவாகச் செயல்பட்டு வருகின்றன. 

கடந்த 50 ஆண்டுகளில், குறிப்பாக 1991 ஆம் ஆண்டு நவீன தாராளமயக் கொள்கை அமலாக்கம் தொடங்கிய 30 ஆண்டுகளில், கட்சியும், வர்க்க, வெகுஜன அமைப்புகளும், நவதாராளமயப் பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக ஒரு மாற்றுக்கொள்கையை முன்வைத்து மகத்தான பல இயக்கங்களை நடத்தியுள்ளன. 

தமிழகத்தில் கல்விக்காக, வேலைவாய்ப்புகாக. மனித உரிமைக்காக, தீண்டாமை ஒழிப்புக்காக, பெண்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், வர்க்க, வெகுஜன அமைப்புகளும் நடத்திய போராட்டங்கள், பெற்ற வெற்றிகள், இவற்றிக்காக செய்த தியாகங்கள் தனியாகப் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

வரலாறு நெடுக ஆளும் வர்க்கங்களின் அடக்குமுறைகளை எதிர்கொண்டே கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்திருக்கிறது. பல நாட்டு அனுபவமும் அதுதான். ஸ்பெயின் தேசத்தில் பாசிசம் அந்த நாட்டில் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த முதல் பெண் தோழர் டொலேரஸ் (லாபாசனாரா) பேசுகிறபோது  “நாங்கள் சாவைக் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல. காரணம் எங்களுக்கு சாவில் மரணம் இல்லை” என்று உறுதிபடக் கூறினார். வெண்மணியில், ”கேட்ட கூலி உயர்வைத் தருகிறோம்; செங்கொடியைஇறக்குங்கள்” என்று நிலச்சுவான்தாரர்கள், குண்டர்கள் கேட்டபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள், தலித் மக்கள், ”நாங்கள் மனிதர்களாக நிமிர்ந்து நிற்பதற்குப்போராடியது இந்தச் செங்கொடி. உயிரே போனாலும் செங்கொடியை இறக்குவதென்ற பேச்சே இல்லை” என்று உறுதிபடக் கூறினார்கள்.கோவை சின்னியம்பாளையத்து தொழிலாளர்கள் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு முதல் நாள், அவர்களைப்பார்க்கச் சென்ற பி.ராமமூர்த்தி, எம். பூபதி, கே. ரமணி, ஆகிய தலைவர்களிடம், “எங்கள் நான்கு பேர்களை அழித்துவிட்டால், செங்கொடியை, கம்யூனிச தத்துவத்தை அழித்துவிட முடியாது; எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான தோழர்கள் முன்னணிக்கு வருவார்கள்” என உறுதியாகக் கூறினார்கள். மார்க்சிஸ்ட் கட்சி, மார்க்சிய, லெனினிய வழிகாட்டுதலில்  ஆளும் வர்க்க அரசை எதிர்த்து, கரத்தாலும், கருத்தாலும்உழைக்கக்கூடிய உழைப்பாளி மக்களை ஒன்று திரட்டி, அடக்குமுறைகளை எதிர்கொள்ளும்; வெற்றிபெறும். 

தாஷ்கண்ட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் வெளியானது

புகழ்பெற்ற இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாறு, தாஷ்கண்ட் நகரில் அக்டோபர் 17, 1920 அன்று “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி” உருவாக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. மாதம் இரு முறை வரவிருக்கும் இக்கட்டுரைத் தொடரில், கடந்த நூறாண்டுகளாக இந்திய கம்யூனிச இயக்கத்தின் முக்கிய நிகழ்வுகள், போராட்டங்கள், தியாகங்கள், முக்கிய கொள்கை முடிவுகள் குறித்த வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கவுள்ளோம்!

அக்டோபர் 17, 1920 அன்று, சோவியத் ஒன்றியத்தை சேர்ந்த துர்க்கிஸ்தான் குடியரசின் தலைநகரான தாஷ்கண்ட் நகரில் நிகழ்ந்த சந்திப்பில் “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி” உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அந்த சந்திப்பில் எம்.என்.ராய், எவெலின் ட்ரென்ட்-ராய், அபானி முகர்ஜி, ரோசா ஃபிடிங்கோவ், முகமது அலி, முகமது ஷஃபிக் மற்றும் எம்.பி.டி.ஆச்சார்யா ஆகியோர் பங்கேற்றனர். முகமது ஷஃபிக் கட்சியின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்த துவக்க சந்திப்பில் கம்யூனிச அகிலத்தின் (Communist International) கோட்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு, “இந்திய நிலைமைகளுக்கு உகந்த” ஒரு கட்சித் திட்டத்தை உருவாக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

எம்.என்.ராய் , 1920-ல் மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாம் பொதுக்குழு கூட்டத்தில், மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக பங்கேற்றார். அபானி முகர்ஜியும், ஆச்சார்யாவும் அதே கூட்டத்தில் ஆலோசகர்கள் என்ற அடிப்படையில் பங்கேற்றனர். முகமது ஷஃபிக் இதில் ஒரு பார்வையாளராக பங்கேற்றார்.

அமெரிக்க கம்யூனிஸ்டான எவெலின், தோழர் எம்.என்.ராயின் துணைவியார் ஆவார். ரஷ்ய கம்யூனிஸ்டான ரோசா, அபானி முகர்ஜியை மணம் முடித்தார்.

அந்த குழுவிலிருந்த இந்தியர்கள், அளவில்லா தேசப்பற்று உணர்வின் உந்துதலால், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை தூக்கியெறிய ஒரு புரட்சிகர இயக்கத்தையோ அல்லது ஆயுதம் தாங்கிய போராட்டத்தையோ ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் இந்தியாவிலிருந்து வெளியேறிச் சென்ற இளைஞர்கள். எம்.என்.ராயும், அபானி முகர்ஜியும் இந்த வகையில் அடங்குவர். முகமது அலியும், முகமது ஷஃபிக்கும் பிரிட்டிஷாரை எதிர்க்க உதவி தேடி தாஷ்கண்ட் நகரம் சென்ற “முகாஜிர்”கள். இந்த புரட்சியாளர்களின் சாகசங்கள், துணிச்சலான பயணங்கள் பற்றி வேறொரு தருணத்தில் பேசவேண்டும்.

தாஷ்கண்ட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கத்திற்கு அடிநாதமாக அமைந்த உண்மை என்னவென்றால், உலகத் தொழிலாளர்களின் புரட்சிகர இயக்கமும், இந்தியாவில் நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்பதுதான்.

ரஷ்யாவில் 1917-ல்நிகழ்ந்த அக்டோபர் புரட்சி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புரட்சியின் தன்மை குறித்த செய்தி பிரிட்டிஷ் காலனியாக இருந்த இந்தியாவை வந்து சேர்வதற்கு முன்னால், வெளிநாட்டு வாழ் இந்திய புரட்சியாளர்களை அடைந்தது. அவர்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோசலிசப் புரட்சியால் ஈர்க்கப்பட்டனர்.

பெர்லினில் வாழ்ந்து வந்த ஒரு புரட்சியாளர்களின் குழு, மாஸ்கோவில் இருந்த போல்ஷெவிக் புரட்சியாளர்களை தொடர்பு கொள்ள முடிவெடுத்தனர். அக்குழுவின் தலைவர் வீரேந்திரநாத் சட்டோபாத்யாய். அக்குழுவில் பூபேந்திரநாத் தத், முகமது பர்க்கத்துல்லா, நளினி குப்தா மற்றும் பலர் இருந்தனர்.

அமெரிக்காவில், பிரிட்டிஷாரை எதிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டு, “கோமகட்டா மாரு” நிகழ்விற்குப் பின்பு நசுக்கப்பட்ட, எழுச்சிமிக்க “கத்தார் கட்சி”யின் தலைவர்கள் ரஷ்ய புரட்சியாளர்களை தொடர்பு கொள்ள முயன்றனர்.

இந்தியாவிலிருந்து, 1920-21ல் ஒத்துழையாமை-கிலாபத் இயக்கத்தின் சமயத்தில், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க விரும்பிய பல கிலாபத் போராளிகள் ஆப்கானிஸ்தான் சென்றனர். அங்கிருந்து பலரும் தாஷ்கண்ட் நகரம் சென்றடைந்தனர். சோவியத் அதிகாரிகள் அந்த முகாஜிர்களை வரவேற்று, பிரிட்டிஷாருக்கு எதிரான அவர்களின் போராட்டத்திற்கு துணை புரிய தயாராக இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியுடனும் போல்ஷெவிக் புரட்சியாளர்களுடனும் தொடர்பு கிடைத்த பின், அவர்களில் சிலர் கம்யூனிசத்தை தழுவினர் – அதில் 25 பேர், 1921-ல் மாஸ்கோவில் “கிழக்கு நாடுகளின் உழைப்பாளர்களின் கம்யூனிச பல்கலைக்கழகம்” துவங்கப்பட்டபோது, அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எம்.என்.ராய், கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தாஷ்கண்ட் நகரிலுள்ள மத்திய ஆசிய பணியகத்திற்கு பிரதிநிதி ஆக்கப்பட்டார். இந்தப் பொறுப்பில் இருந்த பொழுதுதான் முகாஜிர்கள் பலரையும் தொடர்பு கொள்ளத் துவங்கினார் – முகாஜிர்கள் பலரும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பெற்றது குறித்து பெரும் ஆர்வம் கொண்டனர்.

உலகம் முழுவதும் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடக்கத்தில் சிறியதொரு புரட்சியாளர்களின் குழுக்களால் உருவாக்கப்பட்டவையே. சீனாவில், 1921-ல் ஷாங்காய் நகரில் 13 பிரதிநிதிகளின் சந்திப்பின் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தோசீனத்தில் (பிற்காலத்தில் வியட்நாம், கம்போடியா, லாவோஸ் என தனி நாடுகளாகஉருவானது இந்தோசீனம்), இந்தோசீன கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சியத்தை தழுவி பிரான்சில் வாழ்ந்து கொண்டிருந்த இந்தோசீன குடியேற்ற வாசிகளால் துவங்கப்பட்டது.

தாஷ்கண்ட் நகரில் உருவாக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் குழுவின் பதிவுகள், அவர்கள் மேலும் இரண்டு சந்திப்புகள் நடத்தியதைக் காட்டுகின்றன. டிசம்பர் 15, 1920-ல் நடந்த அந்த சந்திப்பில் இருந்து, மேலும் மூன்று பேர் கட்சியின் பரீட்சார்த்த உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டது தெரிய வருகிறது. அப்துல் ஆதேர் சேராய், முகமது அலி ஷாகாஜி மற்றும் அக்பர் ஷா (சலீம்). மூன்று மாத தகுதி காணும் காலம் முடிந்த பின் பரீட்சார்த்த உறுப்பினருக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து கிடைக்கும்.

அந்நேரத்தில், தாஷ்கண்ட் நகரில், பெருமளவில் முகாஜிர் மற்றும் குடிபெயர்ந்த புரட்சியாளர்களைக் கொண்ட இந்திய புரட்சிகர கமிட்டி இருந்தது. இந்த அமைப்பிலிருந்துதான் கிழக்கு நாடுகளின் உழைப்பாளர்களின் கம்யூனிச பல்கலைக்கழகத்தில் சேர நபர்கள் பதிவு செய்யப்பட்டனர்.

பெர்லினைச் சேர்ந்த, வீரேந்திரநாத் சட்டோபாத்யாய் தலைமையிலான குழு இறுதியாக 1921-ல் கம்யூனிச அகிலத்தின் தலைமையை சந்திக்க மாஸ்கோ வந்ததை இங்கே குறிப்பிடுவது மேலும் சுவையூட்டும். இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்ற பின்னரே கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கருதினர். அவர்கள் தேசிய விடுதலைக்காக கம்யூனிச அகிலத்தின் உதவியை நாடினர். அவர்கள் எம்.என்.ராய் மற்றும் அவரின் குழு “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி”யாக அங்கீகரிக்கப்படுவதை விரும்பவில்லை. கம்யூனிச அகிலத்தின் ஆணையம் ஒன்று, அனைத்து தரப்பு விவாதங்களையும் கேட்டறிந்த பின்னர், தாஷ்கண்ட் நகரில் உருவாக்கப்பட்ட கட்சியை இந்திய கம்யூனிஸ்ட் குழுவாக அங்கீகரித்தது.

கம்யூனிச அகிலத்துடன் இணைந்து செயல்பட அவசியமாகிய “கட்சித் திட்டம்” ஒன்றை தாஷ்கண்ட் நகரில் உதித்த இந்த கம்யூனிஸ்ட் கட்சியால் இறுதி செய்ய முடியவில்லை. எனினும், இந்தக் குழு, குறிப்பாக எம்.என்.ராய், இந்தியாவில் பல இடங்களிலும் உருவாக்கப்பட்டு வந்த பல கம்யூனிச குழுக்களிடம் சென்று கம்யூனிச கருத்துக்களை பரப்ப முக்கிய பங்காற்றினர்.

எம்.என்.ராயும் அபானி முகர்ஜியும், 1921-ல் அகமதாபாதில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் அகில இந்திய கமிட்டியின் அமர்வுக்கு ஒரு திறந்த கடிதம் எழுதினர்.

அந்த அறிக்கையில் அவர்கள் அறிவுறுத்த, காங்கிரஸ் “தொழிற்சங்கங்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளை அதன் சொந்த கோரிக்கையாக ஆக்கிட; விவசாய சங்கங்களின் திட்டத்தை அதன் சொந்த திட்டமாக ஆக்கிட; காங்கிரஸை எந்தவொரு தடையும் தடுத்து நிறுத்த இயலாத நேரம் கூடிய விரைவிலேயே வரும்; முனைப்போடு தன் பொருளியல் தேவைகளுக்காக போராடும், அசைக்க இயலாத சக்தியான பெருவாரியான மக்களின் ஆதரவை அது பெறும்”, என்று எழுதினார்.

கட்சி உருவானதில் இருந்தே, இந்தியாவின் எந்தவொரு கட்சியோ, குழுவோ செய்வதற்கு முன்பே, “பூரண சுதந்திரம்” என்ற முழக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பி வந்தது. எம்.என்.ராய் காங்கிரசின் அகமதாபாத் அமர்விற்கு திறந்த மடல் அனுப்பிய அதே நேரத்தில், காங்கிரசின் உள்ளேயே ஹஜ்ரத் மொகானி என்பவர் “விடுதலை” (சுவராஜ்) என்பதை “அந்நிய ஆட்சியிலிருந்து பூரண சுதந்திரம் அடைவது” என்பதாக வரையறுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி இந்த தீர்மானத்தை, நடைமுறைக்கு ஒத்துவராத தீர்மானம் எனக் கூறி எதிர்த்தார்.

கம்யூனிச அகிலத்தின் உதவியோடு, எம்.என்.ராய் இந்தியாவின் பல கம்யூனிச குழுக்களையும் தொடர்பு கொள்ள முனைந்தார். எஸ்.ஏ.டாங்கே (பம்பாய்), முசாஃபர் அகமது (கல்கத்தா), சிங்காரவேலர் (மதராஸ்) மற்றும் பலருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பது பற்றியும், அவர்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது குறித்தும் ஆலோசனை கூறி அவர் கடிதங்கள் எழுதினர்.

1922 முதல் 1923 வரை, பெர்லினிலிருந்து என்.என்.ராய் பதிப்பித்து வெளியிட்ட “இந்திய விடுதலையின் முன்னணிப் படை” (Vanguard of Indian Independence) என்ற இதழே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அதிகாரப்பூர்வ இதழாகும். இந்த இதழ் இந்தியாவில் கம்யூனிச பரப்புரைக்கும், கருத்துப் பரவலுக்கும் உதவியது. அப்படிப்பட்ட கம்யூனிச பரப்புரை தன் ஆட்சிக்கு ஏற்படுத்தும் ஆபத்தை உணர்ந்த பிரிட்டிஷ் அரசாங்கம், அந்த இதழ் இந்தியாவில் நுழையக்கூடாது என தடை விதித்தது.

1920-ல் தான் அகில இந்திய தொழிற் சங்க காங்கிரஸ் (AITUC) நிறுவப்பட்டது – அந்த வகையில், அது முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. சீர்திருத்தவாத சார்புடன் அது துவங்கப்பட்ட போதிலும், கம்யூனிஸ்டுகளின் பங்கெடுப்பால், சில ஆண்டுகளிலேயே உழைக்கும் வர்க்கத்தின் போர்க்குணம் உள்ள அமைப்பாக அது மாறியது.

இதனடிப்படையில், 1920 தாஷ்கண்ட் நகரில் “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி” உருவாக்கப்பட்டது. அதையே இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியமைப்பதற்கான முதல் படியாக நாம் பார்க்க வேண்டும்.

அக்டோபர் 17, 1920-ல் நடைபெற்ற கூட்டத்தின் நிகழ்வுக் குறிப்புகள் (மினிட்ஸ்):

அக்டோபர் 17, 1920-ல், தாஷ்கண்ட்டில் துவங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் பின்வருமாறு: 1) எம்.என்.ராய், 2) எவெலின் ட்ரென்ட்-ராய், 3) ஏ.என்.முகர்ஜி, 4) ரோசா ஃபிடிங்கோவ், 5) முகமது அலி (அகமது ஹாசன்), 6) முகமது ஷஃபிக் சித்திகி, 7) ஆச்சார்யா (எம்.பிரதிவாதி பயங்கர்).

கட்சியில் சேர விரும்பும் நபர்களுக்கு (பரீட்சார்த்த உறுப்பினர்களுக்கு) மூன்று மாத தகுதி காணும் காலத்தை நிபந்தனையாக நிறுவும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்கிறது.

தோழர் ஷஃபிக் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

மூன்றாம் கம்யூனிச அகிலம் பிரகடனம் செய்த கோட்பாடுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டு, இந்திய நிலைமைக்கு ஏற்புடைய ஒரு கட்சித் திட்டத்தை உருவாக்கும் பொறுப்பை ஏற்கிறது.

தலைமை: எம். ஆச்சார்யா

செயலாளர்: ராய்

முத்திரை

தமிழில்: அபிநவ் சூர்யா

செவ்வியல் நூல்: மார்க்சியமும், தேசிய இனப் பிரச்சனையும் …

மார்க்சியமும், தேசிய இனப்பிரச்சனையும் என்ற சிறு புத்தகத்தை தோழர் ஸ்டாலின் 1913-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எழுதினார். சிறுபான்மை தேசிய இனங்களோடும், பண் பாட்டுக் குழுக்களோடும் போல்ஷ்விக்குகள் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்; பரந்துபட்ட தொழிலாளிவர்க்க ஒற்றுமையைக் கட்டமைப்பதற்கான சரியான உத்தி எது என்ற கேள்வி அப்போது விவாதப் பொருளாக இருந்தது. குறிப்பாக, யூத தொழி லாளர்கள் மத்தியில் இயங்கிய பண்ட் என்ற அமைப்பு ஒரு தேசியத்திட்டத்தை முன்வைத் திருந்தது, காகஸஸ் பகுதிக்கான தன்னாட்சி மற்றும் கலாச்சார தேசிய தன்னாட்சி என்ற கோரிக்கைகள் காகேஷியர்கள் தரப்பிலிருந்து எழுந்தன. இத்தகைய கோரிக்கைகளை மார்க்சிய கண்ணோட்டத்தில் எப்படி அணுக வேண்டும் என்ற குழப்பம் நிலவியது. ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் ‘கலைப்பாளர்கள்’, சந்தர்ப்பவாத நிலைப் பாடுகளை மேற்கொண்டார்கள். அந்த வாதங் களுக்கு பதிலளிக்கும் வகையிலும், பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையி லும் இந்த சிறு பிரசுரம் எழுதப்பட்டது.

ஆஸ்த்ரியாவின் (ஜெர்மன்) நன்கு அறியப் பட்ட சிந்தனையாளரான ஓட்டோ பேர், மற்றும் ஸ்ப்ரிங்கர் ஆகியோரின் எழுத்துகளும், பண்ட் அமைப்பின் தீர்மானங்களும், காகேசியர்களின் நிலைப்பாட்டினையும், கலைப்பாளர்களின் சந்தர்ப் பவாதத்தையும் முன்வைத்து, அவற்றின் பலவீனங் களைச் சுட்டிக்காட்டி – இயக்கவியல் நோக்கில் சரியான நிலைப்பாட்டிற்கு வந்தடைவதே இப்பிர சுரத்தின் நோக்கமாகும். ஓட்டோ பேர் மற்றும் காவுட்ஸ்கி ஆகியோர் ஜெர்மானிய மொழியில் எழுதியிருந்த கருத்துக்களை, நிக்கோலாய் புகாரி னுடைய உதவியுடன் ஸ்டாலின் அறிந்து கொண்டு இப்புத்தகத்தை எழுதினார். 1913-ம் ஆண்டு எழுத்தாளர் மாக்சிம் கார்க்கிக்கு எழுதிய கடிதத்தில் தோழர் லெனின் இக்கட்டுரை யைப் பாராட்டியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
சோவியத் அனுபவத்தின் முக்கியத்துவம்
உலகின் முதல் சோசலிச அரசான சோவியத் ஒன்றியம் தேசிய இனப்பிரச்சனையில் முன்னுதாரண மாக செயல்பட்டது. லெனின் தலைமையிலான புரட்சி அரசாங்கம் கடைப்பிடித்த தேசிய இனக் கொள்கை, உலகம் முழுவதும் தேசிய இயக்கங் களின் மீது தாக்கம் செலுத்தியது.

சோவியத் ஒன்றியத்தில் 1918-ம் ஆண்டில் தேசிய இனங்களின் விஷயங்களைக் கவனிக்க ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. ஸ்டாலின் அதன் முதல் மக்கள் அமைச்சராக நியமிக்கப் பட்டார். லெனின் வழிகாட்டுதலுடன், தேசிய இனக் கொள்கை பற்றி முக்கிய பேச்சாளராக அவர் இருந்தார். தேசிய இனங்களின் மக்கள் அமைச்சகத்தின் கீழ் பல பிரிவுகள் ஏற்படுத் தப்பட்டன. மிகச் சிறிய குழுக்களான பாஷ் கிர்கள், டாட்டர்கள் உள்ளிட்டோருக்கான பிரிவுகள் தொடங்கப்பட்டு சுவாஷ் மொழியில் அவர்களுடைய பிரச்னைகள் பற்றி புகார் அளிக்க தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இவை தவிர, மாவட்ட, கிராம சோவியத்துகள் மக்கள் கூட்டங் களை நடத்தி, மிகவும் சிறிய குழுக்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில், செய்தித்தாள்கள் வாசிப்பது, முக்கிய தகவல்கள்,பிரகடனங்களை அவர்களுடைய மொழியில் வாசித்து காண்பித்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டனர். போல்ஷ் விக்குகள் இப்பணிகளை உணர்வுப்பூர்வமாக வும், சோசலிச அமைப்பை பாதுகாத்து பரந்து பட்ட ஒற்றுமையை முன்னெடுக்கும் விருப்பத் தோடும், அர்ப்பணிப்போடும் மேற்கொண் டார்கள். 1922-ம் ஆண்டில், பல தேசங்கள் முன்வந்து சோசலிச அமைப்பில் இணைந்தன. சோவியத் ஒன்றியம் உருவாகியது.சரியான மார்க் சிய – லெனினிய அணுகுமுறையே அதற்குக் காரணமாகும். எனவே சோவியத் அனுபவத்தைக் கற்பது நமக்கு அவசியமான ஒன்று.

தேசம் என்பது என்ன?

பொதுப்பயன்பாட்டில் தேசம் என்ற சொல்லும், நாடு, அரசு ஆகிய சொற்களும் தெளிவற்று ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. அவை அப்படியல்ல. தேசம் என்ற கருத்தாக்கம் உருவாகி உறுதிபெற்றுவந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட இந்தப்புத்தகம் தேசம் பற்றிய மார்க்சியக் கோட் பாட்டினை விவரிக்கிறது.

முதல் அத்தியாயத்தில் தேசம் குறித்த தெளி வான வரையறைவிளக்கப்பட்டுள்ளது. “ஒரு தேசம் என்பது, ஒரு பொதுவான மொழி, எல்லை, பொருளாதார வாழ்வு மற்றும் (பொதுவான) உளவியல்கட்டமைப்பு (psychological make-up) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலைபெற்ற மக்கள் சமூகமாகும்” என்பதே அந்தவரையறையா கும். எனவே, மேற்சொன்ன அனைத்து அடிப் படைகளும் ஒருங்கே அமையும் போதுதான் அதுவொரு தேசமாகிறது. மேலும், ‘வரலாற்று ரீதியாக’ சமூகம் உருவாவது என்ற நிகழ்வு, வரலாற்று விதிகளுக்கு உட்பட்டுமாறக் கூடிய ஒன்றேயாகும்.‘நிலைபெற்ற’ அந்த மக்கள் சமூகம், என்றென்றைக்கும் மாறாத ஒன்றுமல்ல என தெளிவுபடுத்துகிறது.

அதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு உதாரணங்களும், அன்றைய உலகில் நிலவிய பல்வேறு களச் சூழல்களையும், காரணிகளையும் ஒப்பிட்டுக் காட்டுகின்றன. பேரரசர் ஒருவரின் ஆளுகைக்குஉட்பட்ட பேரரசைஒரு ‘தேசம்’ என்று அழைக்க முடியாது. ஏனென்றால் எவ்விதப் பிடிப்பும் இல்லாமல் சேர்க்கப்பட்ட பல்வேறு குழுக்களின் சேர்ப்பாக அது அமைந்தது. ரஷ்யா விற்குள் அப்போதிருந்த போலந்து தேசமும், ஆஸ்திரியாவிற்குள் அமைந்துள்ள செக் தேசமும் பொது மொழியோடு இயங்கின. பல்வேறு மொழி கள் பேசப்பட்டாலும் அவற்றின் ஒருமைப்பாடு பாதிக்கப்படவில்லை. ஒரே மொழியைக் கொண் டிருந்தாலும், இங்கிலாந்தும் அமெரிக்காவும் ஒரே தேசமாக இல்லை. ஏனென்றால் அவற்றின் எல்லைப்பகுதிகளில் நிலவும் மாற்றங்கள் காரண மாக இருவேறு தேசங்களாகவே அவை அமையப் பெற்றன. அயர்லாந்து உருவாக்கப்பட்ட விதத்தை கவனித்தால், அதில் ‘உளவியல்கட்டமைப்பு’ ஒரு முக்கியக் காரணியாக வெளிப்பட்டது. இவ்வாறு உலகச் சூழலை விவரிக்கும் முதல் அத்தியாயம், “அனைத்து காரணிகளும் ஒருங்கே அமையும் போது மட்டுமே அது ஒரு தேசம் என்றாகிறது” என விளக்குகிறது. பிற்பகுதியில் தேசம் குறித்து நிலவிய கோட்பாடுகளையும், அந்தக் கோட் பாடுகளில் காணப்பட்ட முரண்களையும் விளக்குகிறது.

முதலாளித்துவமும் – தேசமும்
பொதுவான பொருளாதார வாழ்வும் பொரு ளாதார ஒன்றிணைப்பும் ஒரு தேசத்தின் பிரதான அம்சங்களில் ஒன்று என்பதை மேலே பார்த் தோம். தேசம் என்ற வகையினம் முதலாளித் துவத்தோடு இணைந்த ஒன்றாகவே உதயமாகிறது. முதலாளிகளுக்கு ஒரு நிரந்தர சந்தைதேவை. எனவே‘தேசங்கள்’ அவசியமாகின்றன. இதன் காரணமாக முதலாளிகள் தேசியவாத முழக்கங் களை எழுப்புகின்றனர். வரலாற்றின் போக்கில் முதலாளித்துவ அரசாங்கங்களின் உருவாக்கத்தை கவனித்தால் அவற்றில் பல்வேறு போக்குகளும் தென்படுகின்றன. ஐரோப்பாவின் மேற்கில் அமைந்த பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி போன்ற அரசுகள், சுதந்திர ‘தேசிய அரசுகளாக’ உருவாகின. கிழக்கு ஐரோப் பாவிலோ ‘பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட அரசுகள்’ உருவாகின. இந்த இரண்டு போக்குகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் முதலா ளித்துவ வளர்ச்சிக்கும், தேசியவாத முழக்கங் களுக்குமான நேரடித் தொடர்பு புரியவருகிறது.

முதலாளித்துவதேசியவாதிகள் “பிளவுபடுத்தி ஆளுதலுக்காக” தேசிய இனத்தைத் தூண்டி விடுவதும் காலங்காலமாக நடந்துவருகிறது. அவை மாபெரும் இனப் படுகொலைகளில் முடிந் திருக்கின்றன. “எங்கெல்லாம் அடிப்படை மனித உரிமைகள் கூட இல்லையோ, அங்கெல்லாம் இது (தேசியவாதம்) கொடூரமான வடிவத்தை எடுக்கிறது” மேலும், “எங்கெல்லாம் (தேசியவாதம்) இவ்வாறு தூண்டப்பட்டு (முதலாளித்துவ வர்க்கத் திற்கு) வெற்றி கிடைத்ததோ அங்கெல்லாம் பாட்டாளி வர்க்கத்திற்கு மிகப்பெரும் கேடு ஏற்படுத்துவதாக (தேசியவாதம்) அமைந்தது. பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர் களை ஒன்றுபடுத்துவதற்கும் இது மாபெரும் தடையாக அமைந்தது.
முதலாளிவர்க்கத்திற்கு உள்ள ‘சொந்த’ , ‘உள்நாட்டு’ சந்தைக்கான விருப்பத்தைத் தாண்டி, குறிப்பிட்ட தேசிய இனத்தின் ஆதிக்கமும், தேசியவாத முழக்கங்களுக்கு அடிப்படையாக அமைகிறது. அதாவது, ஒரு சமூகத்தில் குறிப் பிட்ட தேசிய இனத்தைச்சார்ந்த ஆளும் வர்க்கங் கள், மற்றவற்றை ஒடுக்கும் நிலையை இப்புத்தகம் குறிப்பிடுகிறது. அவ்வாறுஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பல்வேறு வாய்ப்புகளை, ஒடுக்கும் தேசிய இனத்தின் ஆளும் வர்க்கங்கள் முடக்கு கிறார்கள். எனவே ஒடுக்கப்படும் தேசிய இனத் தின் மத்தியிலிருந்துமுதலாளிகளும் இயக்கமாக கிளர்ந்தெழும் முனைப்பு உருவாகிறது.

முதலாளிகள் தலைமையேற்கும்போது, அந்தப் போராட்டங்களுக்கு வெளிப்புறத்தே ‘தேசிய அளவிலான தன்மையே’ உள்ளது. ஆனால் “சாராம்சத்தில் … முதலாளித்துவ நலனுக்காகவும், முதலாளித்துவ லாபத்திற்காகவும் நடைபெறும் முதலாளித்துவப் போராட்டமாகவே இருக்கும்.” இங்கே, ஒரு எழுச்சி முதலாளிகளின் தலைமை யில் உருவாகும்போது, அதில் பாட்டாளி களும், விவசாயிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டால் தான் வலிமையான தேசிய இயக்கமாக அது மாற்றமடைகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

தொழிலாளி வர்க்கமும் – தேசமும்
ஒரு தேசிய இனம் அடக்குமுறைக்கு ஆளாக் கப்படும்போது அவை அந்த தேசிய இனத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களையே அதிகம் பாதித்தன. எனவே, பாட்டாளிவர்க்கம் தேசிய அடக்குமுறைக்கு எதிராக நுட்பமான வழிகளி லும், கரடு முரடான வழிகளிலும் போராட வேண்டும் என்பதுடன், தேசங்களை ஒன்றுக்கு ஒன்று எதிராக தூண்டிவிடும் கொள் கையை எதிர்த்து அனைத்து வடிவங்களிலும் போராட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். தேசிய இனங் களின் ஒற்றுமையைப் பாதுகாத்துக் கொண்டே ஜனநாயக உரிமைகளுக்காக போராடு வது ஒட்டு மொத்த பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும்.

இந்த நேரத்தில், தோழர் ஸ்டாலின் சுட்டிக் காட்டும் எச்சரிக்கையை எப்போதும் மனதில் நிறுத்தவேண்டும். ‘தேசியப் பிரச்சனைக ளானவை, பாட்டாளிவர்க்கத்தின் பெரும்பகுதியினரை சமூகப் பிரச்சனைகள், வர்க்கப் போராட்டப் பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்புகின்றன. அவை முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக் கும் ‘பொதுவான’ பிரச்சனைகளில் கவனம் செலுத்தச் செய்கின்றன’. தேசிய இனப் பிரச்சனை களை பயன்படுத்திக்கொள்ளும் முதலாளித்துவ வர்க்கம், தொழிலாளி வர்க்க ஒற்றுமையை இரத் தத்திலும் கண்ணீரிலும் மூழ்கடிக்கச் செய்யும். எனவே இவ்விசயத்தில் சரியான புரிதலுடன் கூடிய சரியான எதிர்வினை மிக மிக அவசியமாகும்.

இவ்விடத்தில் அப்போது ரசிய சமூக ஜன நாயகவாதிகள் (போல்ஷ்விக்குகள்) முன்வைத்து வந்த சுயநிர்ணய உரிமை பற்றி ஸ்டாலின் குறிப் பிடுகிறார், “ ஒரு தேசிய இனத்தின் வாழ்க்கையில் வலுக்கட்டாயமாக குறுக்கிடுவதற்கோ, அதன் பள்ளிகளையும் மற்ற நிறுவனங்களையும் அழிப் பதற்கோ அதன் பழக்கவழக்கம் மற்றும் மரபு களை மீறுவதற்கோ, அதன் மொழியை நசுக்கு வதற்கோ, அவர்களின் உரிமைகளை ஒடுக்கு வதற்கோ ஒருவருக்கும் உரிமையில்லை” என அறுதியிட்டுக் கூறுகிறார்.
இதன் பொருள் தேசிய இனத்திற்கு கேடு பயக்கக்கூடிய மரபு மற்றும் நிறுவனங்களை, பாட்டாளிவர்க்கம் அப்படியே ஏற்கவேண்டும் என்பதல்ல. மாறாக ஒரு தேசிய இனத்தைச் சார்ந்த உழைக்கும் மக்களைக் காப்பாற்றும் நோக்கில், அத்தகைய மரபுகளையும் நிறுவனங் களையும் எதிர்த்துப் போராடவேண்டும்.

இவ்வகையில் பாட்டாளி வர்க்கத்தின் நிலைப் பாடு சாராம்சத்தில் வேறுபட்ட ஒன்றாகும். பாட்டாளிவர்க்க நலனை அடிப்படையாக வைத்துக்கொண்டு, தேசிய இனச் சிக்கல்களுக்கு தீர்வுகாண்பது என்ற அடிப்படையிலேயே ஒவ்வொரு உத்தியும் அமைகிறது.

தேசிய இன வாதம் நச்சாகும்போது
முதலாளித்துவ வர்க்கத்தால் முன் மொழியப் படும் வெளிப்படையான தேசியவாதத்தை சமாளிக் கலாம். அதே சமயம் “சோசலிசக் கவசத்தால் பாதுகாக்கப்பட்ட தேசிய இனவாதம் … தொழி லாளர்கள் மத்தியிலே வேரூன்றும்போது … நச்சுக் கருத்துக்களைப் பரப்புகிறது. பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே நம்பிக்கையின்மையையும், பிளவுறும் தன்மையை யும் உருவாக்கும் ஆபத்தான கருத்துக்களையும் படரவிடுகிறது” என்கிறார்ஸ்டாலின்.

இத்தகைய சூழலை எதிர்கொள்ள வலுவான தத்துவார்த்தப் போராட்டம் அவசியமாகும். தேசிய இனச்சிக்கல்கள் எழும் போது பாட்டாளி வர்க்க சித்தாந்தப்பார்வையில் சரியான தீர்வு களை முன்னெடுக்கவேண்டும். அவ்வகையில் தவறான போக்குகளை வீழ்த்த வேண்டும். தேசிய இனங்களின் உரிமை என்று சொல்லும் போது அதில் பாட்டாளி வர்க்க நலனும் வெளிப் படுகிறது, அந்த தேசத்திற்குட்பட்ட முதலாளி கள், பிரபுக்கள், மதகுருக்களின் நலன்களும் வெளிப்படுகின்றன. எனவே பாட்டாளி வர்க்கம் தனது வர்க்கத்தின் நலனை மனதிற்கொண்டே இப்பிரச்சனையில் தலையிடவேண்டும்.

சோசலிசம் வந்த பிறகே தீர்வா?
தேசிய இனப்பிரச்சனைகளுக்கு, சோசலிச சமூக அமைப்புதான் முடிவான தீர்வைக் கொடுக்க முடியும். அதன் பொருள் சோசலிசம் வரும் வரையில் இப்பிரச்சனைகளில் அமைதிகாக்க வேண்டும் என்பதல்ல. முதலாளித்துவ அமைப் பிற்குள்ளே, தேசிய இனங்களின் சுய வளர்ச்சிக் கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த உழைப்பது பாட்டாளிவர்க்கத்தின் கடமையாகும். ஒரு தேசிய இன ஆதிக்கத்தின் கீழ் மற்ற தேசிய இனங்கள் இருப்பதான சூழலில், உழைக்கும் வர்க்க விடு தலை சாத்தியமாகாது. எனவே, ஜனநாயக சூழலை ஏற்படுத்துவது முதன்மையான கடமை.

மேலும், பாட்டாளிவர்க்கம் குறிப்பிடும் சுய நிர்ணயம் என்பதும் கூட ஏட்டில் உள்ள உரிமை அல்ல. பிரத்யேக நிலைமைகளுக்கு ஏற்றவாறு நடைமுறைப் படுத்த வேண்டும். எனவே, அந்த உரிமைகளை அனுபவிப்பதற்கு ஏற்ப சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டியது அவசியம். பாட்டாளி கள் குறிப்பிடும் சுய நிர்ணயம் என்பது வர்க்க நலன் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படு கிறது. எனவே, முதலாளித்துவ முழக்கங்களை அப்படியே ஏற்காது.

தன்னாட்சி உரிமை குறித்த விவாதம்
தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு என்ற முறை யில் ‘தேசிய தன்னாட்சி’, ‘கலாச்சார தேசிய தன்னாட்சி’ மற்றும் ‘வட்டாரத் தன்னாட்சி’ ஆகிய கோரிக்கைகள் பேசப்படுகின்றன. பண்ட் அமைப்பும், காகேஷியர்களும், ஆஸ்திரிய அறிஞர் களும், சமூக ஜனநாயகக் கட்சியினுள் நடைபெற்ற விவாதங்களிலும் இவை அனைத்தும் இடம் பெறுகின்றன. இவை அனைத்தையும் முன்வைத்து விவாதிக்கும் ஸ்டாலின் – தேசியத் தன்னாட்சி, கலாச்சார தேசிய தன்னாட்சி ஆகிய வாதங் களின் பலவீனங்களை சுட்டிக்காட்டுகிறார். பாட்டாளிவர்க்க ஒற்றுமை, சோசலிசப் புரட்சி யின் வெற்றி என்ற இலக்கில் பற்றி நிற்கும் அதே சமயம் – தேசிய இனங்களின் ஜனநாயக உரிமை களிலும் சமரசம் செய்துகொள்ளாத ஒரு தீர்வை எட்டுவது குறித்து விவாதிக்கிறார்.

உலகம் முழுவதும் நிலவும் தேசிய இனச் சிக்கல்களுக்கான தீர்வு, ஒரு நாட்டைப் போல மற்றொன்றில் அமையாது. அது வரலாற்று நிலைமைகளைப் பொறுத்து எட்ட வேண்டிய ஒன்றேயாகும். “சூழ்நிலைமைகள் மற்ற எதையும் போல மாற்றமடைவது ஆகும். எனவே ஒரு குறிப்பிட்ட தருணத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு இன்னொரு தருணத்தில் முற்றிலும் பொருந்தாமல் போகலாம்” “குறிப் பிட்ட தேசிய இனத்தின் பருமையான வரலாற்று நிலைமைகளைப் பொருத்தே (பிரச்சனைகளுக் கான) தீர்வு என்பது அமையும்” என்கிறார். ஆஸ்திரியாவில் எழும் பிரச்சனைகளுக்கு நாடாளு மன்ற அமைப்பை அடிப்படையாகக் கொண்டு முடிவுகாணும் அதே சமயம், ரஷ்யாவின் தேசிய இனப்பிரச்சனை நாட்டின் விடுதலை என்ற முக்கியப் பிரச்சனையின் ஒரு பகுதியாக அமைந்திருப்பதை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

தேசிய இனங்களின் சமத்துவம்
வளர்ச்சியடையாத எல்லாதேசங்களையும் ஒரு பொதுவான உயர்தர கலாச்சார நீரோட்டத் திற்கு கவர்ந்திழுப்பதே சமூக ஜனநாயகம் முன் வைக்கும் முற்போக்கான தீர்வாகும். வட்டாரத் தன்னாட்சி அதற்கு உதவுமென்றால் ஏற்றுக் கொள்ளத் தக்கதே. வட்டாரத் தன்னாட்சியும், பிராந்தியத் தன்னாட்சியும் பிரதான அம்சங்கள். அதே சமயம் சிறுபான்மையினருக்கான செயற் கையான கட்டமைப்பைக் கொடுப்பதை விட உண்மையான உரிமைகளை உறுதி செய்ய வேண் டும். சொந்த மொழியைப் பயன்படுத்துவதற்கான வசதி, சொந்தமான கல்வி நிலையங்கள், மொழி, கல்வி போன்ற அனைத்திலும் தேசிய இனங் களுக்கு சம உரிமை கண்டடைவது மிக முக்கியம்.

“சோசலிசப் புரட்சியும் தேசங்களின் சுயநிர்ணய உரிமையும்” என்றதலைப்பில் 1916-ம் ஆண்டில் லெனின் எழுதிய ஆய்வுக்கட்டுரையில், “சிறு சிறுஅரசுகளாகப் பிளவுண்டுள்ளதையும், தேசங்கள் தனிமைப்பட்டுக் கிடப்பதையும் ஒழிப் பது மட்டுமின்றி தேசங்களை நெருங்கவைத்து ஒன்று கலப்பதும் சோசலிசத்தின் நோக்கமாகும்” என்று குறிப்பிடுகிறார். அந்த நோக்கத்தை சில உத்தரவுகளின் மூலம் எட்ட முடியாது என்பதை யும், அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகளின் மூலமே படிப்படியான மாற்றங்களை அடைய முடியும் என்பதையும் லெனின் தலைமையில் சோவியத் போல்ஷ்விக்குகள் முன்னெடுத்த முயற்சிகளும் அனுபவங்களும் காட்டுகின்றன. இந்தச் சிறுபிரசுரம், நமக்கு சிறந்த வழிகாட்டி யாகவும். வரலாற்றுச் சூழல்களை ஆய்வு செய்து முடிவுகளை வந்துசேர்வதற்கான கையேடாகவும் விளங்குகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 5

முப்பெரும் எதிரிகள்

ஆர்.சந்திரா

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் முன்வைக்கும் மிக முக்கிய அம்சம் புரட்சியின் கட்டத்தை பற்றிய நிர்ணயிப்பு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது திட்டத்தை முதலில் தனது ஏழாவது மாநாட்டில் 1964 இல் உருவாக்கியது. பின்னர் 2௦௦௦ ஆண்டில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கட்சி திட்டம் சமகாலப்படுத்தப்பட்டது. புரட்சியின் கட்டம் பற்றிய 1964 ஆம் ஆண்டு நிர்ணயிப்பைத்தான் சமகாலப்படுத்தப்பட்ட திட்டமும் முன்வைக்கிறது.

புரட்சியின் கட்டம் மக்கள் ஜனநாயக கட்டம் என்பது கட்சி திட்டத்தின் நிர்ணயிப்பு. மக்கள் ஜனநாயக புரட்சி கட்டத்தில் இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் வர்க்கங்கள் எவை; மக்கள் ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய வர்க்கங்கள் எவை என்பதை திட்டம் நமக்கு எடுத்துரைக்கிறது.       

சோஷலிச சமுதாயத்தை அடைவதற்கு படிக்கட்டான மக்கள் ஜனநாயகத்தை அமைப்பதற்கு தொழிலாளர்களும், விவசாயிகளும், அனைத்து பகுதி உழைக்கும் மக்களும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்த வேண்டும் [கட்சி திட்டம் 1.11] என்று திட்டம் கூறுகிறது.

புரட்சியை வெற்றிகரமாக நடத்த வேண்டுமென்றால், சமுதாயத்தில் எந்தெந்த வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தில்  ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். அவைகளிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்ற எந்தெந்த வர்க்கங்களுடன் இணைந்து போராட வேண்டும்; எந்த வர்க்கம்  அதற்குத் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். இந்திய புரட்சியின் இத்தகைய பிரச்சினைகளை சரியாக புரிந்து கொள்ள கட்சி திட்டம் நமக்கு உதவுகிறது.  நமது நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை இனம் காண வேண்டி உள்ளது. எதிரி வர்க்கங்கள் எவை என்று கண்டு பிடித்து அவற்றை வீழ்த்தும் தந்திரங்களை வகுக்க வேண்டி உள்ளது.  

இந்தியா விடுதலை பெற்ற பின்னர் கடந்த எழுபது ஆண்டுகளில் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருவதால், பெரு வாரியான மக்கள் சொல்லொணாத் துயரில்  அல்லல்பட்டு வருகின்றனர். ஏழைகள் வசம் இருக்கும் நிலம் மிகவும் குறைவானதாகும்.  நிலக்குவிப்பு தொடர்கின்றது. கிராமப்புறங்களில்  நிலப்பிரபுக்கள்பணக்கார விவசாயிகள் பெரும் வணிகர்கள் இடையே பலமான இணைப்பு இருப்பதை நமது கட்சி திட்டம் சுட்டிக்காட்டுகிறது. பெரு முதலாளிகளால் தலைமை  தாங்கப்படும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ  வர்க்க ஆட்சியில்   அவர்களுக்கு  ஆதரவாக செயல்படும் அரசு அவற்றிற்கு  சாதகமான கொள்கைகளை கடைப்பிடிப்பதால்  நகர்ப்புறங்களிலும் உழைக்கும் வர்க்கம் அப்பட்டமான சுரண்டலுக்கு ஆளாகி உள்ளதை காண முடியும். முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை பின்பற்றுவதுடன், அந்நிய மூலதனத்தின்  ஆதிக்கமும் அதிகரித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை, வளர்ந்த முதலாளித்துவ நாடுகளைப் போல இல்லாமல், முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயத்தின் மீது முதலாளித்துவம் உருவாகி உள்ளதை பார்க்க முடியும். இந்திய சமூக அமைப்பு வினோதமான ஒன்று என்பதை கட்சி திட்டம் சுட்டிக்காட்டுகின்றது: “… ஏகபோக முதலாளிகளால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதிய, மத மற்றும் ஆதிவாசி அமைப்புகளைக் கொண்ட வினோத கலவையாக உள்ளது.”  

புரட்சியின் கட்டம் பற்றி திட்டம் பின்வருமாறு கூறுகிறது:

நமது நாட்டில் சோசலிசத்தைக் கட்ட வேண்டும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி இலக்காக ஏற்றுக்கொள்கிறது. அதேசமயம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் தன்மையையும் தொழிலாளிவர்க்கத்தின் அரசியல்தத்துவார்த்த பக்குவத்தையும் அதன் அமைப்பு வலுவையும் கணக்கில் கொண்டு, உடனடி இலக்காக மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதை மக்கள் முன் வைக்கிறது. உறுதியான தொழிலாளிவிவசாயி கூட்டணி அடிப்படையில், தொழிலாளிவர்க்கத்தின் தலைமையில், அனைத்து உண்மையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளின் கூட்டணி என்ற அடிப்படையில் இது நிகழும்.” (திட்டம், பத்தி 6.2)

மக்கள் ஜனநாயக புரட்சிகட்டத்தில் இந்திய சமுதாயத்தில் மூன்று முக்கியமான முரண்பாடுகள் உள்ளன. அவை வருமாறு:

] நிலப்பிரபுத்துவத்திற்கும், பெரும் எண்ணிக்கையில் உள்ள விவசாயிகளுக்குமிடையிலான முரண்பாடு;

] ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய மக்களுக்கும் இடையேயான முரண்பாடு;

] முதலாளிகளுக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையே உள்ள முரண்பாடு 

இந்த மூன்று முரண்பாடுகள் இன்றும் இருப்பதனால்தான்,  மக்கள் ஜனநாயக புரட்சி என்ற இலக்கை அடைவதற்கு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக முதலாளித்துவ எதிர்ப்புப்  பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டுமென   கட்சித் திட்டம்   வலியுறுத்துகிறது.

நிலப்பிரபுக்களுக்கும், விவசாயிகளுக்கும்  இடையேயான முரண்பாடு அடிப்படை முரண்பாடு என்பதை கட்சி திட்டம் தெளிவாக கூறுகிறது.

பெரு முதலாளிகள் தலைமையிலான  முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசு அந்நிய ஏகபோக மூலதனத்தை பாதுகாக்கவும், அதை மேலும் வலுப்படுத்துவதற்கும்  ஏற்ப கொள்கைகளை வகுத்து கடைபிடித்து வருகிறது. எனவே,..”   மக்கள்ஜனநாயக புரட்சி நிலப்பிரபுத்துவம், அந்நிய ஏகபோக முதாளித்துவத்தை சமரசமின்றி எதிர்ப்பதோடு மட்டுமின்றி, அதனுடன் சேர்ந்து  அந்நிய நிதி மூலதனத்துடன் சமரசம் செய்து ஒத்துழைக்கும் நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டு வைத்திருக்கும் அரசுக்கு தலைமை தாங்கும் பெரு முதலாளித்துவத்தையும்  எதிர்க்கிறது” என்பதை கட்சி திட்டம் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. முதலாளி தொழிலாளி வர்க்க முரண்பாடு மேலே மூன்றாவது முரண்பாடாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், மக்கள் ஜனநாயக புரட்சி கட்டத்தில் நாம் குறிப்பாக ஏகபோக முதலாளிகளைபெருமுதலாளிகளைஎதிர்க்கிறோம் என்றும் திட்டம் தெளிவுபடுத்துகிறது.

ஆக கட்சி திட்டம் நமக்கு வலியுறுத்துவது, நமது இன்றைய மக்கள் ஜனநாயக புரட்சி கட்டத்தில் நிலப்பிரபுக்கள், ஏகபோக முதலாளிகள், ஏகாதிபத்தியம் ஆகியவையே இந்திய மக்களின் முப்பெரும் எதிரிகளாக அமைகிறார்கள் என்பதாகும்.

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 4

காலனி ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போரில் விவசாயி களை ஈர்க்க காங்கிரஸ் கட்சி ‘உழுபவனுக்கு நிலம் சொந்தம்’ என்ற முழக்கத்தை முன்வைத்தது. ஆனால் நாடு விடுதலை அடைந்த பின்னர் நீர்த்துப்போன நில உச்சவரம்பு சட்டங்கள் பெரும்பாலும் அமலாக வில்லை. (விதி விலக்கு: இடதுசாரிகள் தலைமையிலான மாநில அரசுகள்) 1950 களின் இறுதியில் நாடு முழுவதும் சுமார் 6 கோடியே 3 லட்சம் ஏக்கர் நிலம் உச்சவரம்புக்கு மேல் உள்ளதாக பேராசிரியர் மகாலாநோபிஸ் அறிக்கை தெளிவாக்கியது.
இன்றுவரை இதில் பத்தில் ஒரு பங்கு கூட கையகப்படுத்தப்பட்டு ஏழை மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு மறுவிநியோகம் செய்யப்பட வில்லை. நில ஏகபோகம் தொடர்வது இந்திய முதலாளிவர்க்கம் – குறிப்பாக அதன் பெரு முதலாளித்தலைமை – நிலப்பிரபுக்களுடன் செய்து கொண்டுள்ள சமரசத்திற்கான முக்கிய வெளிப்பாடு.
கிராமப்புறங்களிலும் விவசாயத்திலும் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கட்சி திட்டம் கவனத்தில் கொள்கிறது. விடுதலை பெற்ற இந்தியாவில் கிராமப்புறங்களிலும் குறிப்பாக விவசாயத்திலும் முதலாளித்துவ உறவுகள் வலுப்பெற்றிருக்கின்றன.
1960-ளில் உணவு நெருக்கடி ஏற்பட்ட பின்புலத்தில் பசுமை புரட்சி என்ற பெயரில் புதிய வேளாண் கொள்கைகள் அமலுக்கு வந்தன.
நவீன தொழில் நுட்பத்தை கொண்டுவந்து நிலப்பிரபுக்களையும் பணக்கார விவசாயிகளை யும் ஊக்கம் அளித்து விவசாயத்தை (முதலாளித்துவ உறவுகளின் அடிப்படையில்) நவீனப்படுத்துவதே பசுமை புரட்சியின் வர்க்க உள்ளடக்கம். “உழுபவனுக்கு நிலம்” உள்ளிட்ட நிலச்சீர்திருத்த முழக்கங்கள் பின்னுக்குப் போயின. இந்த மாற்றத்தில் அரசு கேந்திரமான பங்கு வகித்தது.
உயர்மகசூல் விதைகள், மான்ய விலை யில் உரம் உள்ளிட்ட ரசாயனங்கள் பயன்பாடு, பாசன வசதி உத்தரவாதம், அரசின் வேளாண் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க அமைப்புகள் மூலம் தொழில்நுட்ப உதவி, நாட்டுடைமையாக் கப்பட்ட வங்கி அமைப்பின் மூலம் கடன் வசதி ஆகியவற்றை அரசு பெருவிவசாயிகளுக்கு கொண்டு சென்றது. அவர்கள் மூலம் இதர விவசாயிக ளையும் நவீன உற்பத்திக்கு ஈர்த்தது. “பசுமை புரட்சி” என்று அறியப் பட்ட இந்த நடவடிக்கைகள் வேளாண் உற்பத்தி திறனை உயர்த்தவும் உணவு தானிய உற்பத்தி மக்கள் தொகையை விட வேகமாக அதிகரித் திடவும் வழிவகுத்தன. மகசூல் உயர்ந்து, உற்பத்தி ஒருபுறம் பெருகினாலும், இதன் முதலாளித்துவ உள்ளடக்கத்தை கட்சி திட்டம் கறாராக வரை யறுத்தது.
1980 களின் பிற்பகுதியில் தொடங்கி அரசு பின்பற்றி வந்த முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையின் முரண்பாடுகளின் விளைவாக வேளாண் துறையில் அரசு முதலீடு சரியத்துவங்கியது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் ஏற்பட்ட உள் நாட்டு பொருளாதார நெருக்கடி, உலகளவில் சோசலிசம் பின்னுக்குத் தள்ளப்பட்ட பன்னாட்டு சூழல், இவையிரண்டும் இந்திய ஆளும் வர்க்கங் களை நவீன தாராளமய கொள்கைகளுக்கு இட்டுச் சென்றது. இதன் தொடர்ச்சிதான் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்டு வரும் தாராளமய, தனியார்மய உலகமய கொள்கைகள். இக்கொள்கைகள் வேளாண் துறையில் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளன.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளை கடந்த பதினைந்து ஆண்டுகளில் தற்கொலைக்கு தள்ளியுள்ளன. 2000 – ஆண்டில் திட்டம் சமகாலப்படுத்தப் பட்ட பொழுது, பத்தாண்டு காலம் இக்கொள் கைகள் அமலாக்கப்பட்டதன் விளைவுகளை கட்சி திட்டம் சரியாக மதிப்பீடு செய்தது. முதலாளித்துவ உறவுகள் வேளாண் துறையில் கணிசமாக வளர்ந்துள்ளதையும், அந்நிய கம்பனிகள் முதல் முறையாக நேரடியான தாக்கத்தை நமது வேளாண்துறையில் ஏற்படுத்திவருவதையும் திட்டம் தெளிவாகக் குறிப்பிட்டது.
அதே சமயம், அனைத்துப்பகுதி விவசாயி களும் வேளாண் நெருக்கடியில் வேறுபாடின்றி பாதிக்கப்படவில்லை. ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் அரசின் வேளாண் கொள் கைகளால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்
பணக்கார விவசாயிகள் அரசின் கொள்கைகள் காரணமாக ஓரளவு பயன்பெற்றிருந்தாலும், அரசின் கொள் கைகள் அவர்களில் பலரையும் பாதித்துள்ளது என்பதையும் அவர்களையும் ஆளும் வர்க்கங் களுக்கு எதிராகத் திரட்டமுடியும்.
கணிச மான நிலங்களை கையில் வைத்துக்கொண்டும், பல நவீன உற்பத்திகருவிகளிலும் ஏகபோக வலுப் பெற்றும், கூட்டுறவு அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு இயந்திரத்தின் பல்வேறு பகுதிகள் இவற்றையும் இயக்குபவர்களாகவும் கிராமப்புறங்களில் பெரும் நிலப்பிரபுக்கள், பெரு முதலாளித்துவ விவசாயிகள் கொண்ட ஒரு ஆளும் வர்க்கம் உருவாகியுள்ளதை திட்டம் பதிவு செய்தது.
திட்டம் அங்கீகரிக்கப்பட்டு பதினைந்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அண்மையில் அரசியல் தலைமைக்குழு அமைத்த வேளாண் துறையில் நிலவும் வர்க்க முரண்பாடுகள் குறித்த ஆய்வுக்குழுவும் இந்த நிர்ணயிப்பை உறுதி செய் துள்ளன.
இந்த ஆளும் வர்க்கம் கிராமங்களில் சாதி ஆதிக்க பாதுகாவலனாகவும், பாலின ஒடுக்கு முறையை பராமரிக்கும் வண்ணமும் செயல்பட்டு வருவதை எதிர்த்தும் பாலின மற்றும் சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் நாம் நடத்த வேண்டிய போராட்டங்கள் மக்கள் ஜனநாயக முன்னணி அமைக்கும் பணியின் பகுதியாகும்.
கிராமப் புற செல்வந்தர்களுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் பொருளாதார மட்டத்தில் மட்டும் அல்ல, பழங்குடி மக்கள், தலித்துகள், பெண்கள் உரிமை பாதுகாப்பு, விடுதலை ஆகியவற்றுக்கான அரசியல், சமூக தளங்களிலும் நடத்தப்பட வேண்டும்.
மக்கள் ஜனநாயகப்புரட்சி ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், ஏகபோக முதலாளிவர்க்கம் ஆகிய மூன்று எதிரிகளை வீழ்த்தும் போராட்டம் என்பதையும் இதன் அச்சாணி தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான தொழிலாளி – விவசாயி கூட்டணி என்பதையும், இந்த வர்க்கக் கூட்டணியின் மிகவும் நம்பகமான ஆணிவேர் ஏழை விவசாயிகள் மற்றும் வேளாண் தொழி லாளிகள் உள்ளிட்ட கிராமப்புற தொழிலாளி கள் என்றும் திட்டம் நமக்கு உணர்த்துகிறது.

புரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷ்விக் கட்சியின் வரலாறு

– ஜி.செல்வா

1903-ல் குறைந்த எண்ணிக்கையில் தலைமறைவு புரட்சிக் குழுக்களாக இருந்த இயக்கம், ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட கட்சியாக 1912-ல் உருவெடுக்கிறது. 1917-ல் சோசலிசப் புரட்சியை தலைமை தாங்கி வழிநடத்த 3 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக பல்கிப் பெருகுகிறது. அதுதான் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்).

“புரட்சிகளின் நூற்றாண்டாக” இருபதாம் நூற்றாண்டை மாற்றி ரஷ்யாவில் புரட்சியை நடத்தி, சோசலிச பாதைக்கு அடித்தளமிட்டு, உலகமெல்லாம் பாட்டாளி வர்க்க கருத்துக்கள் வெடித்து எழும்ப வித்திட்டது ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி. இதன் வரலாற்றை மிகக் கச்சிதமாக மார்க்சிய, லெனினிய சித்தாந்த பார்வையில், எழுதப்பட்ட புத்தகம்தான் “சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு” என்னும் நூல்.

நூல் உருவான பின்னணி

உலக மக்களுக்கு ஆதர்ஷ சக்தியாக சோசலிசப் பாதையில் சோவியத் யூனியன் முன்னேறிக் கொண்டிருந்த காலம். அப்போது சோசலிச கட்டுமானத்தைத் துரிதப்படுத்துவதில் ஏற்பட்ட அளவிடற்கரிய பிரச்சனைகள், சோவியத் யூனியன் எதிர்கொண்ட அபாயங்கள் மற்றும் சவால்களால் கட்சி ஊழியர்களுக்கு தத்துவார்த்த, அரசியல் பயிற்சி அளிப்பது முக்கியத்துவம் பெற்றது.

மார்க்சிய – லெனினிய அடிப்படை ஞானத்தில் தேர்ச்சி பெற்று அதனை சோசலிச கட்டுமானத்தில் முறையாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலுவாக வலியுறுத்திய ஸ்டாலின் அனைத்து நடைமுறைப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்குத் தேவையானது கட்சி ஊழியர்களுக்கு சித்தாந்தப் பயிற்சி அளிப்பதும் அவர்களை அரசியல் ரீதியில் பயிற்றுவித்து வலுப்படுத்துவதும்தான் எனக் கருதினார்.

இதற்கு உதவியாய் கட்சி வரலாற்றை சொல்லித் தரும் வகையில் புத்தகம் எழுதுவதற்கு ஸ்டாலின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 1937 ஏப்ரல் மாதத்தில் அக்குழுவினர் எழுதியதை அரசியல் தலைமைக் குழு சரிபார்த்து கொடுத்தது. அதன் ஆலோசனைகளை ஏற்று அடுத்த நான்கு மாதங்களில் மேம்படுத்தப்பட்டு புத்தகமாக உருவெடுத்தது.

இப்புத்தகம் 1938 செப்டம்பர் 9ஆம் தேதி முதல் தொடராக 50 லட்சம் பிரதிகள் வெளியான ‘பிராவ்தா’ கட்சி நாளிதழில் வெளியிடப்படுகிறது. 1938 அக்டோபர் 1ஆம் தேதி “சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு” என்ற நூலாக வெளியிடப்படுகிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதற்காக மிகக் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

1939 மே மாதத்தில் இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு 3 மாதத்திற்குள் 70,000 நூல்கள் விற்பனை ஆயின. அதே காலகட்டத்தில் 28 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1953க்குள் ரஷ்யாவில் மட்டும் 301 முறை பதிப்பிக்கப்பட்டு 42,82,60,000 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.

1947 ஜனவரி மாதம், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராக இருந்தவரும், சமரன் பத்திரிகையின் ஆசியரிரும், ஜூலியஸ் பூசிக்கின் தூக்கு மேடைக் குறிப்பு நூலை தமிழில் மொழி பெயர்த்தவருமான எம்.இஸ்மத் பாஷாவால் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது பதிப்பு 1979 டிசம்பர் மாதம் ஸ்டாலின் நூற்றாண்டு விழாவின்போது சென்னை புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. நவம்பர் புரட்சி நூற்றாண்டினை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் இந்நூலினை மீண்டும் பதிப்பித்துள்ளது.

1883 முதல் 1937ஆம் ஆண்டு வரையிலான வரலாறு சுமார் 600 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நூலின் மையக் கருவாக விளங்கும் கருத்துக்களை இக்கட்டுரையில் சுருக்கமாக பார்க்கலாம்.

கரு உருமாறி வெளியேறும் காலக்கட்டம்

புரட்சியாளர் லெனின், அரசியல் தளத்திற்கு வருவதற்கு முன்பாகவே, ரஷ்ய தேசத்தில் உழைக்கும் மக்களுக்கான போராட்ட அமைப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. ஜார் ஆட்சியின் கொடுமைக்கும், சுரண்டலுக்கும் உள்ளாகியிருந்த மக்கள் வெடித்துக் கிளம்பினர். அதே காலக்கட்டத்தில் ரஷ்யாவின் நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களிலும் தொழிற்சாலைகள் அமைந்ததால் முதலாளித்துவம் வளர்ச்சியடையத் தொடங்கி இருந்தது.

1875-ல் தென் ரஷ்ய தொழிலாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது ஒன்பது மாதங்களுக்குள் ஆட்சியாளர்களால் நிர்மூலமாக்கப்படுகிறது. 1878-ல் வட ரஷ்ய தொழிலாளர் சங்கத்தை ஒரு தச்சுத் தொழிலாளியும், பிட்டரும் இணைந்து உருவாக்குகின்றனர். இப்படிப்பட்ட அமைப்புகள் உருவானது குறித்தும், உருவாக்கியவர்கள் குறித்தும் மிகச் சுவையான செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. 1881-1886 காலகட்டங்களில் மட்டும் 48 வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. இதில் 80 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

ரஷ்யாவில் முதல் மார்க்சிஸ்ட் குழு 1883-ல் ஜி.வி.பிளக்கனோவ் தலைமையில் “தொழிலாளர் விடுதலைக் குழு” என்ற பெயரில் அமைக்கப்படுகிறது. இவ்வமைப்பு மார்க்ஸ், ஏங்கல்ஸ் நூல்களை ரஷ்ய மொழியில் வெளியிடுகிறது. கம்யூனிஸ்ட் அறிக்கை, கூலி உழைப்பும் மூலதனமும், கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் ஆகிய நூல்களை வெளிநாடுகளில் அச்சடித்து, ரஷ்ய நாட்டு தொழிலாளிகளிடம் விநியோகிக்கின்றனர்.

இக்காலக் கட்டத்தில் ‘நரோத்னிக்’ என்ற அமைப்பினரும், பிளக்கனோவும் நிகழ்த்திய சித்தாந்தப் போராட்டம் மிக முக்கியமானது. நரோத்னிக் என்ற ரஷ்ய வார்த்தையின் பொருள் ‘மக்களிடம் செல்வது’. புரட்சிகர எண்ணம் கொண்ட படித்த இளைஞர்கள் இந்த அமைப்பில் சேர ஆரம்பித்தனர். இவர்கள் ரஷ்யாவில் தற்செயலான நிகழ்வுப் போக்குதான் முதலாளித்துவம். எனவே, இது வளராது என்றும், கிராமப்புற விவசாயிகள் தான் புரட்சிகரமானவர்கள், தனிசிறப்பு வாய்ந்த தனி நபர்களால்தான் சரித்திரம் உருவாக்கப்படுகிறது என்றும் கருதினர்.

இவர்களுக்கு எதிராக பிளக்கனோவும், அவரைத் தொடர்ந்து லெனினும் நடத்திய உரையாடல், எழுத்துக்கள் மிக விரிவாக இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. இதே பிளக்கனோவ், எதிர்காலத்தில் லெனினின் கருத்துக்கு எதிர் திசைக்கு சென்றார். இருந்தாலும் அவரது பங்களிப்பு இந்நூலில் உரிய முறையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிளக்கனோவ் 1895-ல் வெளியிட்ட ‘சரித்திரத்தின் ஒருமைவாத வளர்ச்சியைப் பற்றி’ என்ற புத்தகம் ரஷ்ய மார்க்சிஸ்டுகளின் ஒரு தலைமுறை முழுவதையும் அறிவியல் பக்குவப்படுத்த பணிபுரிந்தது என லெனின் கூறியுள்ளார்.

தத்துவ அடிப்படையில் தொழிலாளி வர்க்க இயக்கத்தைக் கட்ட முதல் வேலையைச் செய்தது ‘தொழிலாளர் விடுதலைக் குழு’ என லெனின் புகழாரம் சூட்டியுள்ளார். எனவேதான் அக்காலகட்டத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சியை ‘கரு உருமாறி வெளியேறும் வளர்ச்சியில்’ இருந்ததாக லெனின் கூறினார்.

புரட்சிகர தத்துவம் : புரட்சிகர இயக்கம்

புரட்சிகரமான தத்துவம் என்றால் என்ன? புரட்சிகரமான இயக்கம் என்றால் என்ன? தத்துவத்திற்கும், நடைமுறைகளுக்குமான தொடர்பு எப்படி இருக்க வேண்டும்? இப்படியான கேள்விகளுக்கு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறும், அதில் லெனினும் அவர்தம் தோழர்களின் எழுத்துகளும், செயல்பாடுகளுமே நமக்கு விடையாக அமையும்.

லெனின் என்னும் மனிதரின் ஆளுமையும், அவர் புரட்சிகர இயக்கத்தில் இணைந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களும், மிக விரிவாக இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.

மார்ச்சைப் பற்றி அவர் தெரிந்து கொண்டிருந்த அசாதாரணமான விஷய ஞானம், அன்றைய ரஷ்யாவில் நிலவிய அரசியல், பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்றவாறு மார்க்சியத்தைப் பொருத்திக் காண்பிப்பதில் அவருக்கிருந்த திறமை, தொழிலாளர்களின் லட்சியம், நிச்சயம் வெற்றியடையும் என்பதில் அவருக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, அமைப்புகளை உருவாக்குவதில் அவர் காட்டிய தனிச்சிறப்பு வாய்ந்த ஆற்றல் ஆகியவையெல்லாம் லெனினை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மார்க்சிஸ்டுகள் அனைவராலும் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட தலைவராக ஏற்கச் செய்தன.

1898-ல் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சி (ஸிஷிஞிலிறி) முதல் மாநாட்டில் 9 பேர் தான் பங்கு கொண்டனர். அப்போது லெனின் நாடு கடத்தப்பட்டு சைபீரியாவில் இருந்ததால் பங்கெடுக்க முடியவில்லை. இம்மாநாட்டிலிருந்துதான் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

நரோத்னிக்குள் மற்றும் ‘பொருளாதாரவாதிகள்’ அதாவது பொருளாதார கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் போராட்டங்களில் மட்டும்தான் தொழிலாளர்கள் ஈடுபட வேண்டும் என விடாப்பிடியாக கருதும் குழுவினர். இவர்களின் கருத்தோட்டத்திற்கு எதிராக லெனின் நடத்திய சித்தாந்தப் போராட்டம் மிகத் தெளிவாக நூலில் சொல்லப்பட்டுள்ளது. லெனினது மிக முக்கியப் படைப்பான ‘ரஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சி’ நூலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள் இன்றைய இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு மிக தேவையான ஒன்றே. வேதனை என்னவெனில் இந்நூல் இதுவரை தமிழில் வெளிவரவில்லை.

லெனின் எழுதுகிறார் “உடனடியாக நிறைவேற்ற வேண்டிய வேலையை நம்முன் இன்று சரித்திரம் வைத்திருக்கிறது. இந்த உடனடியான வேலை மிகமிகப் புரட்சிகரமானது. மற்ற நாட்டு பாட்டாளிகளின் முன் நிற்கின்ற உடனடியான வேலைகள் யாவற்றையும் விட மிகவும் புரட்சிகரமான வேலையாகும். இந்த வேலையைச் செய்து முடித்தால், ஐரோப்பிய பிற்போக்கிற்கு மட்டுமல்லாமல் ஆசியாவின் பிற்போக்கிற்கும் மிகவும் வலுவான கோட்டையாக திகழும் ஜார் ஆட்சியை அழித்து ஒழிப்பதால், புரட்சிகரமான சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்துக்கு ரஷ்ய பாட்டாளி வர்க்கம் முன்னணிப் படையாக ஆகும்”. எவ்வளவு தீர்க்கமான, தெளிவான பார்வை. அதை நோக்கி லெனின் நடத்திய பயணம்தான் கற்க வேண்டிய பாடம்.

கட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என உலக கம்யூனிச இயக்கத்துக்கு வலுவான கருத்தியலை கொடுத்தது மட்டுமல்லாமல் நடைமுறைப்படுத்தியும் காண்பித்தவர் லெனின். கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன செயல்பாடுகளை கொச்சையாக, கேலியாக, விஷமத்தனமாக இன்றும் அதிகார வர்க்கத்தினர் எழுதியும், பேசியும் வருகின்றனர். சில நேரங்களில் இக்கருத்துக்கள் கம்யூனிஸ்ட் ஊழியர்களிடத்தும் செல்வாக்கு செலுத்தும்.

புரட்சி நடத்த வேண்டுமானால் புரட்சிகர இயக்கம், அதாவது கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும், எப்படி கட்ட வேண்டும் என்பதற்கு இந்நூலில் உள்ள விசயங்கள் இன்றும் நமக்கு வழிகாட்டும்.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்ற கருத்தியல் ரீதியான போராட்டம் இரண்டு குழுக்களாகப் பிளவுபட நேர்ந்தது. லெனினைப் பின்பற்றியவர்கள் போல்ஷ்விக்குகள் (அதாவது பெரும்பான்மை உறுப்பினர்கள் என்ற அர்த்தத்தில்) என்றும், எண்ணிக்கையில் குறைவாக இருந்தவர்கள் மென்ஷ்விக்குகள் எனவும் அழைக்கப்பட்டனர்.

போல்ஷ்விக்குகளுக்கும், மென்ஷ்விக்குகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலின் காரணங்கள், அக்காலகட்டத்தில் லெனின் எழுதிய நூல்களிலிருந்து பல்வேறு கருத்துக்கள்  இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது.

ரஷ்ய நாட்டிற்குள் மட்டும் இக்கருத்துப் போராட்டத்தை லெனின் நடத்தவில்லை. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்த சமூக ஜனநாயக கட்சிகளுடனும் சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி வந்தார். “ஏங்கெல்ஸ் காலமான பிறகு மேற்கு ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகள் சீரழிந்து போனதை போல்ஷ்விக்குகள் பார்த்தனர். ஏங்கெல்ஸ் காலத்தில் சமூகப் புரட்சிகர கட்சிகளாக இருந்த இயக்கங்கள் “சமூக சீர்திருத்தக் கட்சிகளாக” மாறி சீரழிந்து போயின. அவை ஒவ்வொன்றும் அமைப்பு ரீதியில், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதக் குழுக்களுடைய தொங்கு சதையாக ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டன. அத்தகைய கட்சிகளால் பாட்டாளிகளுக்குப் பயன் எதுவும் இல்லை. தொழிலாளி வர்க்கத்தை அக்கட்சிகளால் வழிகாட்டி புரட்சியை நோக்கி அழைத்துச் செல்ல முடியாது என்பதை போல்ஷ்விக்குகள் தெளிவாக உணர்ந்தனர்”.

உண்மையான மார்க்சியக் கட்சியை பெற்றிருக்க விரும்புகிற எல்லோருக்கும் ஒரு உதாரணமாகத் திகழும் புதிய கட்சியை, போல்ஷ்விக் கட்சியைப் படைப்பதற்கு போல்ஷ்விக்குகள் விரும்பினார்கள். என்ன நேர்ந்தபோதிலும், எத்தகைய கஷ்டங்கள் வந்தபோதிலும் மனம் தளராமல் உறுதியுடன் விடாப்பிடியாக உழைத்து வந்தனர்.

இந்த வேலையில் லெனினுடைய நூல்கள் கட்சிக்கு மிகவும் அடிப்படையான – செல்நெறியை நிர்ணயிக்கும்படியான பங்கு வகித்தன. லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூல்தான் அதற்கு அவசியமான கருத்தையும், கண்ணோட்டத்தையும் கொடுத்து தயாரிப்பு செய்தது. லெனின் எழுதிய “ஓரடி முன்னால் ஈரடி பின்னால்” என்ற நூல்தான் அத்தகைய கட்சிக்கு அமைப்பு ரீதியான தயாரிப்பாக இருந்தது. லெனின் எழுதிய, “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு நடைமுறை உத்திகள்” என்ற புத்தகம்தான் அரசியல் ரீதியான தயாரிப்பாக இருந்தது. கடைசியாக லெனின் எழுதிய “பொருள் முதல்வாதமும், அனுபவவாத விமர்சனமும்” என்ற புத்தகம் கட்சிக்குத் தத்துவ ரீதியான அடித்தளமாக இருந்தது.

இப்படியாக கட்டப்பட்ட கட்சி புரட்சிக்கு மட்டுமல்ல, புரட்சிக்குப் பின்னரும் சோசலிசப் பாதை நோக்கி, இயந்திர தொழில்மயமாக்குவதற்கு சோவியத் ஆட்சி மேற்கொண்ட அனைத்திற்கும் உதவிகரமாக இருந்ததுதான் இந்நூலின் வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

புரட்சி… புரட்சி… புரட்சி…

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறே மூன்று புரட்சிகளின் வரலாறுதான். 1. 1905ஆம் ஆண்டு நடந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி 2. 1917 மார்ச்சில் நடைபெற்ற முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி 3. 1917-ல் நடைபெற்ற நவம்பர் சோசலிஸ்ட் புரட்சி. எப்படி இத்தகைய புரட்சிகள் சாத்தியமாயின?

எங்கள் தேவை

துண்டுத் துணி அல்ல;

முழு ஆடை

பருக்கைகளல்ல

முழுச் சாப்பாடு

ஒரு வேலை மட்டுமல்ல;

முழுத் தொழிற்சாலையும் எங்களுக்குத் தேவை.

நிலக்கரி, தாதுப்பொருள், உலோகக் கரி

அத்தனையும் எங்களுக்குத் தேவை

எல்லாவற்றுக்கும் மேலாக

நாட்டின் ஆளும் அதிகாரமும்

எங்களுக்குத் தேவை

நல்லது

இவ்வளவும் எங்களுக்குத் தேவை

ஆனால்

நீங்கள் கொடுப்பது என்ன?

இது பிரக்டின் கவிதை வரிகள். இக்கவிதை வரிகளின் சாராம்சம்தான் மூன்று புரட்சிகளின் போதும் ரஷ்ய தொழிலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் ஜார் ஆட்சியை நோக்கிய, அதிகார வர்க்கத்தை நோக்கிய உணர்வுமிக்க முழக்கங்களாக மாறின.

ரஷ்ய தேசத்தின் வளர்ச்சியில் ஒரு சரித்திரப்பூர்வமான கட்டம் முழுவதையும் முதல் ரஷ்யப் புரட்சி (1905) குறித்தது.

இப்புரட்சி மக்களின் பரம விரோதி ஜார் ஆட்சி என்றும், முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்குத் தலைமை தாங்குவதாக தொழிலாளி வர்க்கம் மட்டும்தான் இருக்க முடியும். ஊசலாடியபோதும் பாடுபடும் விவசாய வர்க்கம் தான் தொழிலாளி வர்க்கத்துடன் கூட்டுறவை ஏற்படுத்திக் கொள்ளத்தக்க முக்கியமான சக்தி என்பதும் நிரூபணமாயிற்று.

புரட்சியை குலைத்துக் கலைத்துவிடுவதை மென்ஷ்விக்குகள் தங்கள் பாதையாக கருதினர். எழுச்சியின் மூலம் ஜார் ஆட்சியை வீழ்த்துவதற்குப் பதில் அதை “சீர்படுத்துவது” எனக் கூறினர். இவ்விதம் சமரச சகதியில் மென்ஷ்விக்குகள் சிக்கினர். கட்சியிலும் தேசத்திலும் ஒரே ஒரு புரட்சிகரமான மார்க்சிஸ்ட் சக்தி, போல்ஷ்விக்குகள்தான் என நிரூபிக்கப்பட்டது.

இப்புரட்சி தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து 1908 முதல் 1912ஆம் ஆண்டு வரை மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் புரட்சிக்கான வேலை செய்வது கடினமான தாகமாக மாறியது. இந்தச் சூழல்களுக்கு ஏற்றாற்போல் போல்ஷ்விக்குகள் நடைமுறை உத்திகளை மாற்றினர்.

சட்ட விரோதமான நடவடிக்கைகளையும், சட்டப்பூர்வமான செயல்பாடுகளையும் திறமையாக இணைத்தனர். கட்சி விரோதமான பேர்வழிகளுக்கு எதிராக பிளக்கனோவ் உடன் சேர்ந்து தற்காலிக அணியை லெனின் அமைத்தார். இது கட்சிக்கு சாதகமாகவும், கட்சி விரோதிகளுக்கு பாதகமாகவும் இருக்க வேண்டும் என்பதே அடிப்படை.

இந்த நடைமுறை உத்தி எப்படி போல்ஷ்விக்குகளின் புரட்சிப் பணிக்கு சாத்தியமாயிற்று என்பதை நூலை வாசிக்கும்போது தெளிவாக உணரலாம். பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பு இயக்கம், தொழிலாளர் தொகுதியில் வெற்றி பெறுதல், சங்கத் தேர்வுகளில் பெற்ற வாக்குகள் என தொடர்ந்தது போல்ஷ்விக்குகளின் வெற்றிப் பயணம்.

முதலாவது உலக யுத்தம் தொடங்குவதற்கு முன்பே, லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் அதை உணர்ந்தனர். யுத்தம் என்பது முதலாளித்துவத்துடன் இரண்டறக் கலந்து நிற்கிற தவிர்க்க முடியாத விளைவு என்று லெனின் சுட்டிக் காட்டினார். யுத்தத்திற்கு எதிராக எத்தகைய நிலைபாடுகளை மேற்கொள்ள வேண்டுமென லெனின் எழுதியும், பேசியும் வந்தார். “சமாதானம் நிலவ வேண்டும்” என்ற லட்சியத்துடன், “பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றியடைய வேண்டும்” என்ற லட்சியத்தைப் போல்ஷ்விக்குகள் இணைத்தனர். இந்த காலக்கட்டத்தில்தான் 1916-ல் லெனின் எழுதிய நூல் “ஏகாதிபத்தியம் : முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்”. இந்நூல் உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு லெனின் வழங்கிய அறிவுக் கருவூலம். இதன் வாயிலாக மார்க்சியத்தை லெனின் வளர்த்தெடுத்த நிகழ்வும் நடந்தேறியது. அதேபோல் இந்த யுத்த காலத்தின்போது லெனின் எழுதிய எழுத்துக்கள், இப்புத்தகத்தில் மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன.

ஏகாதிபத்தியம் குறித்து லெனின் ஆய்வு செய்த பல்வேறு விசயங்களை சுட்டிக்காட்டுகிறது இந்நூல். “தனியாக ஒரு தேசத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், தனிதேசத்தில் சோசலிசம் வெற்றியடைய முடியாது என்றும், நாகரிகத்தில் முதிர்ந்த சகல தேசங்களிலும் ஒரே சமயத்தில்தான் அது வெற்றியடையும் என்றும் அக்காலத்திய மார்க்சிஸ்டுகள் சிலர் கருதினர். ஆனால், லெனினோ ஏகாதிபத்திய முதலாளித்துவத்தைப் பற்றிய உண்மையான புள்ளி விவரங்களை ஆதாரமாகக் கொண்டு இன்றைக்கு உபயோகமற்ற கருத்து என நிராகரித்தார்”. பழைய கருத்துக்கு மாறாக புதிய கருத்தை வளர்த்தெடுத்தார். இதன்படி ஒரே சமயத்தில் எல்லா தேசங்களிலும் சோசலிசம் வெற்றியடைவது என்பது அசாத்தியம். தனியான ஒரு முதலாளித்துவ நாட்டில் சோசலிசம் வெற்றியடைவதும் சாத்தியம் தான்” என்றார்.

இதுதான் யுத்தம், சமாதானம், புரட்சி ஆகியவற்றைப் பற்றிய பிரச்சனைகளில் போல்ஷ்விக்குகள் கைக்கொண்ட தத்துவமும், நடைமுறை உத்தியுமாகும். இந்தக் கொள்கைகளை கொண்டுதான் ரஷ்யாவில் நடைமுறை வேலைகளை போல்ஷ்விக்குகள் நிறைவேற்றினர்.

விளைவு போல்ஷ்விக்குகள் மார்ச் மாத இரண்டாவது புரட்சியில் ஜனநாயகப் புரட்சியில் வெற்றி பெற்றனர். இதை நூலின் வாயிலாக வாசிக்க வாசிக்க புரட்சிகர உணர்வுகளும், சிந்தனைகளும் பெருக்கெடுத்து வருவதை வாசகரால் உணர முடியும்.

இதைத் தொடர்ந்து தற்காலிக அரசாங்கம் அமைந்தவுடன், அதில் பங்கு பெறவும் மந்திரி பதவிகள் பெறவும் மென்ஷ்விக்குகள் உள்ளிட்ட குழுவினர் வாய் பிளந்து காத்துக் கிடக்க, லெனினோ சோசலிசப் புரட்சியை நோக்கி களத்தை விரிவுபடுத்தினார்.

முதலாளித்துவ புரட்சிகர கட்டத்திலிருந்து சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்கு முன்னேறி செல்வதற்கு கட்சிக்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் வழிகாட்டினார். அது “ஏப்ரல் கொள்கை” என்ற நூலின் வழியாக நடந்தேறியது. மாறும் சூழல்களை மிக லாவகமாக உணர்ந்து, மார்க்சிய பகுப்பாய்வில் வர்க்கங்களின் நிலை அறிந்து வழிகாட்டிய லெனின் நமக்குப் பேராசானாகத் திகழ்கிறார்.

போல்ஷ்விக் கட்சியினால் வழிகாட்டப்பட்டு ஏழை விவசாயிகளுடன் கூட்டுறவு ஏற்படுத்திக் கொண்டு, ராணுவ வீரர்கள், கடற்படையினரின் ஆதரவையும் பெற்று, முதலாளிகளுடைய அதிகாரத்தை தொழிலாளி வர்க்கம் அடியோடு வீழ்த்தியது. நவம்பர் 7 சோசலிசப் புரட்சி முதலாளித்துவத்தை தகர்த்து தவிடுபொடியாக்கியது.

சோசலிசத்தை நோக்கி…

நவம்பர் புரட்சியைத் தொடர்ந்து லெனின் தலைமையிலான புரட்சிகர அரசு மேற்கொண்ட பயணம், உலகக் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு பாடம். பன்னாட்டு முதலாளித்துவ சக்திகளிடமிருந்தும், உள்நாட்டில் வெண் படைகளை சமாளித்தும், புரட்சி மீதான மக்களின் ஆசைகளை, வேண்டுகோளை நிறைவேற்ற லெனின் எடுத்த நிலைபாடுகள், செயல்பாடுகள் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த சோசலிசப் பாதை எவ்வளவு கடுமையாக இருந்திருக்கும் என்பதை சார்லஸ்  பெட்டில்ஹெய்ம் என்ற பிரெஞ்சு பொருளாதார நிபுணரின் கணிப்பின் மூலம் அறிய முடிகிறது. “சோவியத் யூனியனில் சோசலிசத்தைக் கட்டுவதற்காகப் பணிக்கப்பட்டவர்களில் நான்கில் மூன்று பேர் ஜார் மன்னனின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த முன்னாள் ஊழியர்கள். ஒரு புரட்சிகரமான சமுதாயத்தைக் கட்டியமைக்க எந்த வகையிலும் பொருத்தமற்றவர்கள். அதேவேளையில் சோவியத் பொருளாதாரம் போருக்கு முன்பிருந்த நிலையிலிருந்து 10 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. இத்தகைய கடினமான சூழ்நிலையில் தங்களின் வாழ்க்கையை வேறு எங்காவது அமைத்துக்கொள்ள வாய்ப்புடைய படித்தவர்கள் உள்ளிட்ட 20 லட்சம் மக்கள் ரஷ்யா¬விட்டு வெளியேறினர்”.

இப்படியான சூழல்களுக்கு மத்தியில் தான் சோசலிசத்திற்கான அடித்தளத்தை லெனின் நிறுவினார். லெனின் மறைவைத் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி வீறுநடை போட்டது. சோசலிசப் புரட்சியை கொச்சைப்படுத்தி ட்ராட்ஸ்கி எழுதிய எழுத்துக்களுக்கு எதிராக ஸ்டாலின் தத்துவார்த்த போரை உறுதியுடன் நடத்திச் சென்றார். அவர் எழுதிய “லெனினியத்தின் அடிப்படைகள்” என்ற புத்தகம் போல்ஷ்விக்குகள் கையில் சக்தி மிக்க ஆயுதமாக மாறியது.

இயந்திர தொழில்மயமாக்கலும், கூட்டுப் பண்ணை அமைப்பு முறைகளும் எவ்வாறு நிகழ்ந்தேறின. அதன் பலன்கள் எப்படி சோசலிசத்தை உயர்த்திப் ¤படிக்க உதவிற்று போன்றவை மிக விரிவாக நூலில் படித்து அறிய முடியும்.

நிறைவாக

“சோவியத் யூனியனின் உழைக்கும் மக்கள், சோசலிசத்திற்காக வெற்றிகரமாகப் போராடிய அனுபவமும், படிப்பினைகளும் இந்நூலில் காணக் கிடைக்கின்றன.

சோசலிசத்திற்கான போராட்டத்தில் மார்க்சிய போதனைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. மேலும், அப்போராட்டத்தின் ஊடே லெனினும், ஸ்டாலினும் அவற்றை எவ்வாறு மேலும் வளர்த்தெடுத்தனர் என்பதை விளக்குகிறது.

மார்க்சிய – லெனினியத்தின் அடிப்டைக் கருத்துக்களை அறிமுகப்படுத்தி, அவற்றை எவ்வாறு நடைமுறையில் செயல்படுத்தி வளர்த்தெடுப்பது, எவ்வாறு அவற்றுக்காகப் போராடுவது என்பதை எடுத்துக் காட்டுகிறது. சமுதாய வளர்ச்சியின் விதிகளைப் பற்றிய அறிவைத் தந்து நம்மை ஆயத்தமாக்குகிறது. உலகம் முழுவதும் கம்யூனிசத்தின் வெற்றி நிச்சயம் என்ற நமது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது” என மார்க்சிய அறிஞர் மாரிஸ் கார்ன்ஃபோர்த் “மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி” எனும் நூலில் இப்புத்தகத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நாட்டில் மக்கள் ஜனநாயக புரட்சியை மூல உத்தியாகக் கொண்டு சிபிஐ(எம்) செயல்பட்டு வருகிறது. இப்புரட்சியை நிறைவேற்றுவதற்கு புரட்சிகர கட்சியை கட்டுவது மிக அவசியம். நவம்பர் புரட்சி நூற்றாண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில் புரட்சிகர கட்சியை கட்டுவதற்கு, புரட்சியை நடைமுறையில் சாத்தியப்படுத்திய போல்ஷ்விக் கட்சியின் வரலாறு மிகப்பெரும் உதவியாக இருக்கும் என்பது நிச்சயம்.