’நான் என்றும் மக்கள் ஊழியனே’ – ஏ.கே.கோபாலன்

தோழர் ஏ.கே. கோபாலனின் தியாக வாழ்வை நினைவு கூரும் வகையில் ’நான் என்றும் மக்கள் ஊழியனே’ என்ற அவரது சுயசரிதை நூலில் இருந்து சில பகுதிகள்.

தோழர் ஏ கே கோபாலன் இவ்வாறு நினைவு கூர்ந்தார்: “சுதந்திரம் கிடைத்த இரவான, ஆகஸ்ட் 14, 1947 அன்று கண்ணனூரின் பெரிய சிறைச்சாலையில், நான் தனிமைச் சிறையில் இருந்தேன். தடுப்புக் காவல் கைதிகள் வேறு யாரும் இல்லை.  இரவில் என்னால் தூங்க முடியவில்லை. சிறையின் நான்கு மூலைகளிலிருந்தும் ‘ஜே’ என்ற முழக்கம் கேட்டுக் கொண்டிருந்தது. ‘மகாத்மா காந்தி கி ஜே’, ‘பாரத் மாதா கி ஜே’ என்ற முழக்கங்களின் எதிரொலி சிறை முழுவதும் எதிரொலித்தது.  சூரிய உதயத்திற்குப் பிறகு வரும் கொண்டாட்டத்திற்காக நாடு முழுவதும் காத்துக் கொண்டிருந்தது. அவர்களில் எத்தனை பேர் இத்தருணத்திற்காக பல வருடங்களாக காத்திருந்து போராடினார்கள். அத்தகைய போராட்டத்தில் தங்களுக்கான அனைத்தையும் அவர்கள்  தியாகம் செய்திருக்கிறார்கள்.  நான் ஒருசேர மகிழ்ச்சி மற்றும் துக்கத்தின் உணர்வு வயப்பட்டிருந்தேன். எனது இளமைக்காலம் முழுவதையும் தியாகம் செய்து, இன்னமும் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருப்பதற்கான இலக்கு நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைந்தேன்.  ஆனால் நான் இப்போதும் கூட கைதியாக சிறையில் இருந்தேன்.  நான் இந்தியர்களால் – காங்கிரஸ் அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டேன், ஆங்கிலேயர்களால் அல்ல. 1927ல் இருந்து காங்கிரஸ் குறித்த நினைவுகள் என் மனதில் ஓடின.  கேரளாவின் காங்கிரஸ் இயக்கத்தில் நான் ஆற்றிய பங்கை நினைத்து பெருமைப்பட்டேன். சில காலம் கேரள காங்கிரஸின் செயலாளராகவும், அதன் தலைவராகவும், நீண்ட காலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்த ஒருவர், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை சிறையில் கொண்டாடினார்!”

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி ஜனநாயக இயக்கத்தின், தலைமை சிற்பிகளில் ஒருவரான தோழர் ஏ.கே. கோபாலன், ஒரு பன்முக ஆளுமையாக விளங்கினார். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்; சமூக சீர்திருத்தவாதி; தொழிலாளர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடியவர்; ஒரு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்; வலிமைமிக்க சொற்பொழிவாளர்; தொலைநோக்கு பார்வையுடையவர். எல்லாவற்றிற்கும் மேலாக, சிறந்த மனிதப் பண்புகளின் உருவகமாகவும்,  வெகுமக்களுக்கான மனிதராகவும் அவர் திகழ்ந்தார்.

கோபாலன் ஆசிரியராக பணிபுரிந்த ஆரம்ப காலத்தில், மகாத்மா காந்தியின் தலைமையில் இந்திய அரசியல் சூழல் சூடுபிடிக்கத் துவங்கியது.  உண்மையில், கோபாலன் மாணவராக இருந்தபோதே, பல்வேறு பொது நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1920களின் பிற்பகுதியில், அவர் காதி குறித்த செய்திகளைப் பரப்புவதிலும், வெளிநாட்டு ஆடைகள் மற்றும் பொருட்களைப் புறக்கணிக்க மக்களை தூண்டுவதிலும் தீவிரமாக ஈடுபட்டார்.  விடுமுறை நாட்களில், காதி மற்றும் சுதேசிப் பொருட்களை ஊக்குவிக்க கிராமங்களுக்குச் சென்றார். கிலாபத் இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார்.

அவரது வார்த்தைகளில் கூறுவதானால்: “1928 ம் ஆண்டு முதல் காதி குறித்த பிரச்சாரம் மற்றும் அன்னிய துணிகளை புறக்கணிக்க மக்களைத் தூண்டுவதிலும் ஆர்வம் காட்டினேன். விடுமுறை நாட்களில் காதி மற்றும் ‘சுதேசி’ பொருட்களை பரப்புவதற்காக கிராமங்களுக்குச் செல்வேன்.  நடுத்தரக் குடும்பங்களில் இராட்டையை அறிமுகம் செய்து, நூல் நூற்பு செய்து தலைமையகத்துக்கு அனுப்பி வந்தேன்.  போராட்டம் இல்லாமல் சுதந்திரம் சாத்தியமற்றது என்பதும், போராட்டம் எப்போது வந்தாலும்  தயாராக இருக்க வேண்டும் என்பதும் எனக்கு தெளிவாகத் தெரிந்தது.  இருப்பினும், இது எளிதான காரியம் அல்ல என்றும் எனக்குத் தெரியும். நான் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலைக்கு எதிராக கிளர்ச்சி செய்யாமல் அது சாத்தியமில்லை என்றும் உணர்ந்தேன்.”

ஏ கே ஜியால் பரிந்துரைக்கப்பட்ட அன்னியத் துணி புறக்கணிப்பு மற்றும் சுதேசி பிரச்சாரம் என்ற இரட்டைக் யோசனைகள், மனு கொடுப்பதை விட அமைதியான எதிர்ப்பின் பெரு மதிப்புக் கொண்ட  பயனுள்ள ஆயுதங்களாக முக்கியத்துவம் பெற்றது.  இது மக்களின் அரசியல் உணர்வை பெருமளவில் தட்டி எழுப்பியதோடு, தேசியவாத உணர்வுக்கு ஒரு புதிய உறுதியான வடிவத்தை அளித்தது. சுதேசி பிரச்சாரம் மற்றும் அன்னிய பொருட்கள் புறக்கணிப்பு ஆகியவை தந்த உணர்ச்சிகள், மக்களிடையே தேசபக்தியை பெரிய அளவில் தூண்டியது. 1930 ஆம் ஆண்டில் தேசம் கொதி நிலையில் இருந்தது.

ஏ.கே.ஜி தனது சுயசரிதையில் எழுதியுள்ளபடி: “இந்தியா முழுவதும் வீசிய ஒரு வலிமையான புரட்சிக் காற்றின் நடுவே நான் இருந்தேன்.  இளைஞர் கழகங்கள், தொழிலாளர் சங்கங்கள், புரட்சிகர அமைப்புகள், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் செயல்பாடுகள், வேலைநிறுத்தங்கள் போன்றவை அனைத்தும் என் இதயத்தில் அனுதாப அதிர்வலைகளை எழுப்பின.  எப்பொழுதாவது மட்டும் பொதுச் சேவையில் ஈடுபடுவது என்பதை  விட்டுவிட்டு … எனது முழு நேரத்தையும் நாட்டுக்கு சேவை செய்ய அர்ப்பணிக்க வேண்டும் என்ற வலுவான உந்துதல் என்னுள் இருந்தது.  எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், என்னைச் சுற்றி நடந்த கொந்தளிப்பான நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு தீவிரமான போராட்டம் தொடங்கியது. 1930 க்கு முன்பு, என்னைத் தொந்தரவு செய்த முரண்பட்ட சிந்தனைகளின் மோதல் இதுவாகும்.”

1930 ஆம் ஆண்டு, கோழிக்கோடில் இருந்து பைய்யனூர் வரை, திரு கே. கேளப்பன் தலைமையில் நடந்த ஒரு நீண்ட பிரச்சாரப் பயணத்தை வரவேற்க ஏற்பாடு செய்வதில் கோபாலன் முன்னணியில் இருந்தார். அதனைத் தொடர்ந்து, தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு, சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கேற்க, கோழிக்கோடு சென்ற  கோபாலன் கைது செய்யப்பட்டு கண்ணூர் மத்திய சிறையிலும், பின்னர் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டார். காந்தி-இர்வின் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஏ.கே.ஜி.யும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.  அதன்பிறகு சுமார் ஆறு மாதங்கள் வயநாடு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியை அமைப்பதில் பணியாற்றினார்.

 தீண்டாமை மற்றும் பிற சமூகத் தீமைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டினார்.  உண்மையில் ஆங்கிலேயர்கள் தீண்டாமை எனும் ஜனநாயகமற்ற, சமூகப் படிநிலையை மேலும் வலுப்படுத்தியதாக அவர் எண்ணினார். ஏகாதிபத்திய சக்திகள், இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை நிலைநிறுத்த அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்று முயன்றன.  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தாங்கிப் பிடித்த அஸ்திவாரங்களும், அந்நிய ஆட்சியாளர்கள் தீவிரமாக ஊக்குவித்து வந்தவைகளுமான மக்களிடையே ஒற்றுமையின்மை, பரஸ்பர அவநம்பிக்கை,  சமூகங்கள் மற்றும் சாதிகளுக்கு இடையிலான பகை, இவைகளை நன்கு உணர்ந்த ஏ.கே.ஜி, தீண்டாமை மற்றும் பிற சமூகத் தீமைகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்தினார்.

அவரது முயற்சியின் பேரில், கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி 1931-ல், குருவாயூர் கோயில் நுழைவு சத்தியாகிரகம் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியது. குருவாயூர் கோயிலுக்குள் நுழையும் பொதுப் பாதையிலும், பிரதான  தெய்வம் இருக்கும் பிரகாரத்திலும், பட்டியல் சாதியை சேர்ந்த மக்கள் நடக்க அனுமதிக்கப்படவில்லை.  கோபாலனும், பட்டியல் சாதி இளைஞர்களும்  ஒரு பேரணி நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் பேரணிப் போராட்டத்திற்கு தானே முன்வந்து தலைமைதாங்கிச் சென்றார். குருவாயூர் சத்தியாகிரகம் இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்ததோடு, விரைவில் இவ்வியக்கத்தின் எதிரொலிகள் நாடெங்கும் கேட்கத் துவங்கின. மக்கள் இந்த இயக்கத்தில் தனி ஆர்வம் காட்டத் தொடங்கினர்.  இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக, ஜனவரி 1932 இல் கோபாலன் கைது செய்யப்பட்டு, கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார். ஆனாலும் இயக்கம் தடையின்றித் தொடர்ந்தது.

ஏ,கே.ஜியின் சொந்த வார்த்தைகளில் கூறுவதானால்: ”பேரணியில் கலந்து கொண்ட பட்டியலின இளைஞர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். இனியும் அவர்கள், ‘நெல் நாற்றுகளுக்கு அடியில் வளரும் புல்’ இல்லை என்று பெருமிதம் கொண்டனர்.  பல நூற்றாண்டுகளாக காலடியில் நசுக்கப்பட்ட ஒரு சமூகப் பிரிவின் பிரதிநிதிகளாக, தீய, துர்நாற்றம் வீசும் சமூகத்தை மாற்றி, அதன் இடத்தில் ஒரு அழகான புதிய சமூக ஒழுங்கை உருவாக்குவதற்கான புனிதப் போராட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பைப் பற்றி அவர்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தனர்.  பட்டியலின மக்கள் காடுகளைச் சேர்ந்த மிருகங்கள் அல்ல என்பதை மற்றவர்களுக்குக் காட்ட ஒரு வாய்ப்பு கிடைத்ததில் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.”

இந்த இரண்டாவது சிறைவாசம் மிகவும் வித்தியாசமானது. அதிகாரிகள் மிகவும் மிருகத்தனமாக இருந்ததோடு, கைதிகளை அடித்து உதைப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.  ஆனால் ஏ.கே.ஜி பல புரட்சியாளர்களைச் சந்தித்து ரஷ்யப் புரட்சியின் தாக்கங்கள் உட்பட பல அரசியல் பிரச்சினைகளை விவாதித்ததும் இதே சிறைத் தண்டனைக் காலத்தில்தான்.  கண்ணனூர் சிறையில் “எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்” அவர்தான் என கருதப்பட்ட ஏ.கே.ஜி, விரைவில் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் முதலில் சித்த சுவாதீனமில்லாத கைதிகளுடன் அடைத்து வைக்கப்பட்டார்.  அது குறித்து அவர் நினைவு கூரும்போது: “நான் அந்த இடத்தைப் பார்த்த தருணத்தில் கண்களில் நீர் வர அதிர்ச்சியில் மூழ்கிப் போனேன். ஆம். அதிகார வர்க்கத்தின் கண்களுக்கு நான் ஒரு பைத்தியக்காரனாக இருந்தேன்.  தான் பிறந்த நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபடுவது ஏகாதிபத்தியவாதிகளின் பார்வையில் பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம். பைத்தியக்காரத்தனத்தில் பல வகைகள் உள்ளன. நான் ஒரு ‘அரசியல் பைத்தியம்’ என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.  உலகில் அடக்குமுறைகள் இருக்கும் வரை இந்தப் பைத்தியக்காரத்தனம் மறையாமல் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.”  ஆறு நாட்கள் நீடித்த உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு,  இறுதியாக அவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டார்.

சிறையில் இருந்த ஆறுமாதங்களில், சொல்ல முடியாத கொடுமைகள் அவரை உடல் ரீதியாக சிதைத்ததேயன்றி, உணர்வுரீதியாக இல்லை. அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்ற அறிவுரையை பொறுமையின்றி ஒதுக்கித் தள்ளினார்.  அவர் பின்னர் எழுதியது போல், “ஓய்வு! என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. சுதந்திரத்துக்காக அர்ப்பணிப்புடன் போராடியவன் என்ற முறையில், நாடு முழுவதும் தடியடி சத்தம் எதிரொலிக்கும் போது, ஆயிரக்கணக்கான மக்கள் போர்க்களத்தில் நுழையும் போது, உறுதியான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, நான் எப்படி ஓய்வை நினைத்துப் பார்க்க முடியும்?”

சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் குருவாயூர் திரும்பினார். பின்னர், திருவிதாங்கூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு கண்ணூர் மற்றும் பெல்லாரி சிறைகளில் அடைக்கப்பட்டார்.  விடுதலையானதும், சமூக சமத்துவத்திற்காக அயராத பாடுபட்டவரான, ஏ.கே.ஜி அனைத்து விதமான அநீதிக்கும் எதிராக இடைவிடாமல் போராடும் போராளியாக இருந்தார்.  சமூக சமத்துவத்திற்காகவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினருக்கு அவர்களின் பல நூற்றாண்டுகள் பழமையான துன்பங்களை சமாளிக்க, முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

1934-ல் கேரளாவில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவானபோது, அந்தக் கட்சியின் தீவிர உறுப்பினரானார் கோபாலன். அதே ஆண்டில், கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் ஆனார்.  ஏ.கே.ஜி அக்காலத்தின் முக்கிய பிரச்சனைகளாக வறுமை, பசி மற்றும் வேலையின்மை இருப்பதை உணர்ந்தார். மக்கள் மத்தியில் ஒரு பொதுவான விரக்தி இருந்தது. புதிய சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்கின்ற ஆர்வம் இளைஞர்களிடையே இருந்தது.  1936 ஆம் ஆண்டில், கோபாலன் தனது சகாக்களுடன் சேர்ந்து, உண்ணாவிரத ஊர்வலம் மற்றும் வேலையின்மைக்கு எதிரான நெடும் பயணத்தை நடத்த முடிவு செய்தார். அந்த நெடும்பயணம் 966 கிலோமீட்டர்கள் நடந்து கடந்து, இறுதியாக மெட்ராஸை அடைந்தது.  வேலையற்றோர் மற்றும் பசியால் வாடும் இளைஞர்களின் இந்த நெடும் பயணத்தை கண்ணூரில் இருந்து மெட்ராஸ் வரை நடத்தியதற்காக, ஏ.கே.ஜிக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் தொழிலாளர்களை ஒன்று திரட்டுவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கினார்.

ஏ.கே.ஜி கூறுகிறார், “1938 வரை, நான் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றினேன். அவர்களின் போராட்டங்களில் பங்கேற்றேன்.  அவர்களைப் பற்றியும் அவர்களின் பிரச்சினைகளைப் பற்றியும் கூடுதலாக அறிய முடிந்தது. நாட்டின் உட்பகுதி விவசாயிகளின் பரிதாபகரமான நிலைமைகளைக் கவனித்தேன்.  தன் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்துச் சம்பாதித்த அனைத்தையும், நில உரிமையாளருக்கு வழங்கும் ஏழை விவசாயிகளிடம் வர்க்க உணர்வைத் தூண்டுவது மிகவும் எளிதானது என்பதை நான் கண்டு கொண்டேன்.  அவர்கள் பல நூற்றாண்டுகளாக துன்புறுத்தலுக்கு ஆளானதால், சுதந்திரத்தின் அர்த்தம் அவர்களுக்குத் தெரியாது. ஒற்றுமையான நடவடிக்கைகளின் மூலம் தங்களின் துயரம் விலகக் கண்டபோது, அவர்கள் புதிய சுயமரியாதை பெற்றதோடு, தங்களின் அடக்குமுறையாளர்களுக்கு இனியும் பயப்பட மாட்டார்கள்.”

முந்தைய திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் வரலாற்றில் 1938 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமானது. அந்த ஆண்டு, ஏ.கே.ஜி அரசின் அடக்குமுறைக்குப் பொறுப்பேற்கக் கோரி புகழ்பெற்ற திருவிதாங்கூர் பிரச்சாரப் பயணத்தை வழிநடத்தி, ஜூலை 1938 இல் அலுவாவில் கைது செய்யப்பட்டார்.  1939 ஆம் ஆண்டு பினராயில் நடந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் கூட்டத்தில், ஏ.கே.ஜி, தோழர்கள் பி.கிருஷ்ணபிள்ளை மற்றும் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு அங்கமாக சோசலிஸ்ட் கட்சி செயல்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  இதனால் தலைமறைவாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஏ.கே.ஜி தனது சுயசரிதையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஒரு சத்தியாகிரகியாக இருந்து, பின்னர் சோசலிஸ்ட் மற்றும் அர்ப்பணிப்புள்ள மக்கள் ஊழியராக மாறியபின், சிறைவாசத்திற்கு எப்போதும் தயாராக இருந்த நான், தலைமறைவு வாழ்க்கைக்கு மாற வேண்டியிருந்தது. நான் ரகசியமாக வேலையில் ஈடுபடுபவன் அல்ல.  அதுவரை நான் எப்போதும் பொதுமக்களின் பார்வையிலேயே பணியாற்றி வந்தேன்.” ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியில், தலைமறைவாக இருந்து வேலைகள் செய்வதைக் கற்றுக்கொண்டார்.  “பொதுமக்கள் பார்வையில் இருந்து விலக்கி எங்களை சிறையில் அடைப்பது ஏகாதிபத்தியத்தின் தேவையாக இருந்தது; கைது செய்வதைத் தவிர்ப்பதும், வேலை செய்வதும் எங்களுடைய தேவையாக இருந்தது. எனவே, தலைமறைவாக வேலை செய்வதே, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டமாக நான் கண்டேன்.”

மார்ச் 24, 1941 இல் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ள தடுப்புக் காவல் முகாமுக்கு அனுப்பப்படும் வரை ஓராண்டுக்கும் மேலாக அவர் தலைமறைவாக இருந்தார்.  இங்கிருந்து தான் ஏ.கே.ஜி தனது புகழ்பெற்ற  தப்பியோட்டத்தை நிகழ்த்திக் காட்டினார். பல சிறைத் தண்டனைகளில் மிக மோசமான கொடுமைகளை அனுபவித்த ஏ.கே.ஜி, கடைசியில் முதல் வகுப்பு கைதிகளுக்கு அளிக்கப்பட்ட ஆடம்பரமான வசதிகளிலிருந்து வெளிவர சிறை உடைப்பை நாடியது நகைமுரணானது.

சுதந்திரப் போராட்டம் ஒரு தீர்க்கமான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஏ.கே.ஜி சிறையை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்தார். 1941 செப்டம்பர் 25, அன்று இரவு, ஏ.கே.ஜி மற்றும் இருவர் தங்கள் சிறை அறையின்  சுவரில் துளையிட்டு தப்பித்தனர்.  வெளியில் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் அவர் இறுதியாக கேரளாவை அடைந்தார். இ.எம்.எஸ் உட்பட பல தலைவர்கள் சிறையிலிருந்து விரைவில் விடுவிக்கப்பட்டாலும், ஏ.கே.ஜி மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற காவல்துறை மறுத்து விட்டது.  கேரளாவில் இருப்பது பாதுகாப்பற்றதாக இருந்ததால், அவர் வட இந்தியாவில் கான்பூருக்குச் சென்றார். அங்கு பல்வேறு வேலைகளைச் செய்தபடி தலைமறைவு கம்யூனிஸ்ட் கட்சிப் பணிகளையும் தொடர்ந்தார்.

அதிகாரத்தை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மும்முரமாக இருந்தபோது, போருக்குப் பிந்தைய காலத்தில் இந்தியா முழுவதும் வெகுமக்கள் போராட்டங்கள் வெடித்தன.  ஏ.கே.ஜி, புன்னப்புரா-வயலார் போராட்டம், பீடித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், சிராக்கல்லில் நடந்த விவசாயிகள் கிளர்ச்சி என அனைத்துப் போராட்டங்களிலும் தீவிரமாக பங்கேற்றார்.  மலபாரில் நடந்த போராட்டத்தை ஒடுக்கவும், தலைவர்களைக் கைது செய்யவும் மெட்ராஸிலிருந்த பிரகாசம் தலைமையிலான அரசு தன்னால் இயன்றதனைத்தையும் செய்தது.

சுதந்திர தினத்தன்று, மெட்ராஸ் அரசு ஏ.கே.ஜி. தவிர அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தது. ஆனால் ஏ.கே.ஜி. தைரியமான போராட்டத்தால் பெற்ற சுதந்திரத்தை கொண்டாட முடியாமல் சிறைக்குள் தனிமையில் இருந்தார்.

இருப்பினும் அவர் சிறைக்குள் சுதந்திர தினத்தைக் கொண்டாடினார். மறுநாள் காலை, தன்னுடன் வைத்திருந்த தேசியக் கொடியை ஏந்தியவாறு சிறை வளாகம் முழுவதும் நடந்தார்.  அனைத்து கைதிகளும் கூடியிருக்க, சிறைக் கூடத்தின் கூரையில் கொடி ஏற்றப்பட்டது. ஏ.கே.ஜி கூடியிருந்த கைதிகளிடம் சுதந்திரத்தின் மேன்மை குறித்துப் பேசினார்.  மேலும் தனது வாழ்நாள் முழுவதும், ஏ.கே.கோபாலன் தனது இளமைப் பருவத்தில் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு உண்மையாக இருந்தார், மக்கள் நலனுக்காக எங்கும் எப்போதும் போராடினார்.

லெனினும் புரட்சிகர கட்சியும்

குரல்: பூங்கொடி மதியரசு

அன்வர் உசேன்

ஜனவரி 21 லெனின் நினைவு தினம். அவர் மறைந்து 98 ஆண்டுகள் கடந்துவிட்டன. சமூக மாற்றத்துக்கான சோசலிச புரட்சியை சாத்தியமாக்க வேண்டும் எனில் கம்யூனிஸ்டு கட்சி அவசியம் என்பதும் அத்தகைய கட்சி அந்தந்த சமூகத்துக்கு பொருத்தமான சித்தாந்த கோட்பாடுகளையும் ஸ்தாபன கோட்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும் எனும் ஆழமான புரிதலையும் உருவாக்கிய மாபெரும் அமைப்பாளர் லெனின் அவர்கள்.

“அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தனது போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு ஸ்தாபனம் எனும் ஆயுதம் தவிர வேறு எதுவும் இல்லை” – வி.இ.லெனின்

“அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தனது போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு ஸ்தாபனம் எனும் ஆயுதம் தவிர வேறு எதுவும் இல்லை” என லெனின் மிக தெளிவாக கூறினார். “மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையில் உருவான சித்தாந்த ஒற்றுமை, ஸ்தாபன ஒற்றுமையின் வழியாக மேலும் உறுதிப்படுவதன் மூலம்தான் தொழிலாளி வர்க்கம் வெல்லற்கரிய சக்தியாக பரிணமிக்க முடியும்” எனவும் லெனின் வலுவாக பயிற்றுவித்தார். சோசலிசப் புரட்சிக்காக போராடும் ஒவ்வொரு கம்யூனிஸ்டு கட்சிக்கும் சித்தாந்த ஒற்றுமையும் அந்த சித்தாந்தத்தை செயல்படுத்துவதற்கு இசைந்த அமைப்பு கோட்பாடுகளும் தவிர்க்க முடியாத ஒன்று என்பது லெனின் உருவாக்கிய மிக முக்கியமான பாடம் ஆகும்.

கட்சி இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை

மார்க்சும் ஏங்கெல்சும் கம்யூனிஸ்டு கட்சியின் தேவையினைக் குறித்து எதுவும் சொல்லவில்லை என்றும் அப்படிப்பட்ட சர்வாதிகார அமைப்பை உருவாக்கியது லெனின்தான் எனவும் சில மேற்கத்திய ‘ஆய்வாளர்கள்’ சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது உண்மைக்கு முற்றிலும் மாறானது.

தொழிலாளர்கள் ‘தங்களை ஒரு வர்க்கமாகவும், அதன்மூலம் ஓர் அரசியல் கட்சியாகவும்’ உருவாக்கிக்கொள்வதை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே குறிப்பிடும் மார்க்சும் எங்கெல்சும், “முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல்” ஆகியவை இரண்டையும் கம்யூனிஸ்டுகளின் கடமைகளாக வகுத்துள்ளார்கள்.

முதல் அகிலம் எனப்படும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் எங்கெல்ஸ் கீழ்க்கண்டவாறு அறிவுறுத்தினார்:

“அனைத்து இடங்களிலும் அனுபவம் நமக்கு எடுத்து காட்டுவது என்னவெனில் தொழிலாளர்களை பழைய கட்சிகளின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி சுயேச்சையான பாட்டாளி வர்க்க கட்சியை உருவாக்குவதுதான். இந்த கட்சிக்கு தனது சொந்த கொள்கைகள் இருக்க வேண்டும்; அந்த கொள்கைகள் ஏனைய கட்சிகளின் கொள்கைகளிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும்”

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஸ்பானிய பிரிவுக்கு 1871ம் ஆண்டு எங்கெல்ஸ் எழுதிய கடிதம்…

எனவே கம்யூனிஸ்டு கட்சி கட்டமைப்பு கோட்பாடுகள் ஆகியவையெல்லாம் சர்வாதிகார விருப்பத்துடன் லெனின் உருவாக்கியவை என்பது மிகப்பெரிய அவதூறு என்பது மிகை அல்ல. உண்மையில், லெனின் வழிகாட்டிய கம்யூனிஸ்டு கட்சிகளில்தான், கட்சிக்குள் மிக உயர்ந்த செழுமையான ஜனநாயகம் உள்ளது. மார்க்சும் எங்கெல்சும் சுயேச்சையான கட்சியை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தினாலும் அதன் கட்டமைப்பையும் அதன் பல்வேறு உட்கூறுகளையும் வடிவமைத்த சிற்பி லெனின் ஆவார். புரட்சிகர சித்தாந்தத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஒரு புரட்சிகர அமைப்பு இல்லாமல் சமூக மாற்ற புரட்சி சாத்தியம் இல்லை என்பதை லெனின் தொடர்ந்து வலியுறுத்தினார். ரஷ்ய சோவியத் புரட்சியின் மூலம் அதனை நிரூபித்தும் காட்டினார். பின்னர் நடந்த சீனப் புரட்சியிலிருந்து வியட்நாம் புரட்சி வரை அனைத்தும் கம்யூனிஸ்டு கட்சிகளால்தான் சாத்தியமாக்கப்பட்டன. 

இன்று சில இடதுசாரி சக்திகள் இந்தியாவிலும் வெளி தேசங்களிலும் சமூக மாற்றத்துக்கு கம்யூனிஸ்டு கட்சி தேவையில்லை எனவும் கம்யூனிஸ்டு கட்சிகள் காலாவதியாகி விட்டன எனவும் கூறுகின்றனர். ஆனால் கம்யூனிஸ்டு கட்சி இல்லாமல் எந்த ஒரு சமூக முன்னேற்றத்தையும் வலுவாக தொடர்ச்சியாக செயல்படுத்துவது சாத்தியம் இல்லை என்பதுதான் அனுபவங்களில் அறிய முடிவது. பிரிட்டனில் தொழிலாளர் கட்சியில் ஜெர்மி கோபின் அனுபவமும் அமெரிக்க ஜனநாயக கட்சியில் பெர்னி சாண்டர்ஸ் அனுபவமும் பழைய கட்சிகளை ஒரு எல்லைக்கு மேல் முற்போக்கு பாதையில் செலுத்த இயலாது என்பதை நிரூபிக்கின்றன.

கிரேக்கத்தில் மிகவும் நம்பிக்கையோடு உருவான இடதுசாரிகளின் சிர்சியா ஆட்சி இன்று அடையாளம் தெரியாமல் மறைந்து போனது வேதனையான உதாரணம் . இதே நிலைதான் ஸ்பெயினில் பொடோமஸ் எனும் இடதுசாரி அமைப்புக்கும் உள்ளது. இந்த பட்டியலில் சேர்க்க வேண்டிய இன்னொரு இயக்கம் “இயற்கை சூழலை பாதுகாக்க” உருவான “Greens Party” எனப்படும் பசுமை கட்சிகள் ஆகும். மேற்கண்ட இந்த இயக்கங்கள் இடதுசாரிகள்தான் என்றாலும் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படையான கம்யூனிஸ்டு கட்சிக்கு இருக்கும் அறிவியல் பூர்வமான சமூகக் கோட்பாடுகளும் வர்க்க அணுகுமுறைகளும் இல்லாததால் நாளடைவில் அவை பின்னடைவை சந்தித்துள்ளன.

இந்தியாவிலும் சிலர் தங்களை “புதிய இடதுசாரிகள்” என அழைத்து கொண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் காலாவாதியான பழைய இடதுசாரிகள் எனவும் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை எனவும் உளறுகின்றனர். அவர்களுக்கு மேற்சொன்ன உதாரணங்கள் உதவும்.

யார் கட்சி உறுப்பினர்?

1903ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் (அன்று ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி) போல்ஷ்விக் பிரிவினரான லெனின் ஆதரவாளர்களுக்கும் மென்ஷ்விக் பிரிவினருக்கும் கடும் கருத்து மோதல் உருவான முக்கிய அம்சம் “கட்சி உறுப்பினர் ஆவதற்கு யாருக்கு தகுதி உள்ளது?” என்ற கேள்விதான்.  ஒருவர் கட்சி திட்டத்தை ஏற்றுக்கொண்டாலே போதுமானது; அவர் கட்சி உறுப்பினர் ஆகிவிடலாம் என மென்ஷ்விக் பிரிவின் தலைவரான மார்டோவ் வாதிட்டார். ஒரு படி மேலே போய் “வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் எவர் ஒருவரும் கட்சி உறுப்பினராக ஆவதற்கு நாம் அனுமதிக்க வேண்டும்” எனவும் மார்டோவ் கூறினார்.

இந்த கருத்தை லெனின் மிகக்கடுமையாக நிராகரித்தார். ஒருவர் கட்சி உறுப்பினர் ஆவதற்கு கீழ்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும் என வாதிட்டார்:

 • கட்சி திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 • கட்சி அமைப்பு ஏதாவது ஒன்றில் இணைந்து பணியாற்ற வேண்டும்.
 • கட்சி கட்டுப்பாடுக்கு தன்னை உட்படுத்தி கொள்ள வேண்டும்.

அரசு இயந்திரத்தை எதிர்த்து போராடும் ஒரு அமைப்பின் உறுப்பினர்கள் ஊசலாட்டம் இல்லாதவர்களாகவும் வர்க்க உணர்வை பெற்றவர்களாகவும் தொழிலாளி வர்க்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தொழிலாளி வர்க்கத்தின் மிகவும் உன்னதமான வர்க்க உணர்வு படைத்த போராளிகள்தான் கட்சியில் உறுப்பினராக வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படைதான் கட்சியாக உள்ளது; வர்க்கம் முழுவதுமே கட்சி அல்ல என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சி தரமானதாக செயல்படுவதற்கு அதன் உறுப்பினர்களின் தரம் உயர்ந்திருக்க வேண்டியது மிக அவசியம். கட்சி உறுப்பினர்களின் தரத்தை உயர்த்துவதன் அவசியத்தை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கட்சி உறுப்பினர்கள் தரம் குறித்து 2015 கொல்கத்தா பிளீனம் கீழ்கண்ட சில முக்கிய அம்சங்களை முன்வைக்கிறது:

 • கட்சி உறுப்பினர்கள் முதலில் துணைக்குழு உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டாலும் பெரும்பாலான துணைக்குழுக்கள் செயல்படுவது இல்லை; அவற்றை செயல் படுத்துவதற்கான முனைப்புகளும் குறைவாக உள்ளன.
 • துணைக்குழு உறுப்பினர்கள் பரீட்சார்த்த உறுப்பினர்களாக உயர்வு பெறும் பொழுது தேவையான தகுதிகள் பெற்றனரா என்பது பல சமயங்களில் ஆய்வு செய்யப்படுவது இல்லை.
 • உறுதியற்ற முறையில் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதாலும் அவர்களுக்கு முறையான அரசியல் பயிற்சியும் கட்சி அமைப்பு பற்றிய புரிதல் போதிக்கப்படாததாலும் அவர்களின் அரசியல் உணர்வு கீழ்மட்டத்தில் உள்ளது.
 • கட்சி உறுப்பினர்களின் கணிசமான பிரிவினர் கிளைக்கூட்டங்களில்/ அரசியல் வகுப்புகளில்/கட்சி இயக்கங்களில் பங்கேற்பது இல்லை.
 • இந்த குறைகள் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். கட்சி உறுப்பினர்களை சேர்ப்பதில் ஒரு அடிப்படையான மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். வர்க்க/ வெகுமக்கள் போராட்டங்களில் பங்கேற்பு என்பதுதான் கட்சி உறுப்பினர் சேர்ப்புக்கான அடிப்படை தகுதிகளாக இருக்க வேண்டும்.
 • ஐந்து கடமைகளான கிளைக்கூடங்களில் பங்கேற்பு/கட்சி வகுப்புகள் மற்றும் போராட்டங்களில் திருப்திகரமான பங்கேற்பு/ ஏதாவது ஒரு வெகு மக்கள் அமைப்பில் செயல்படுவது/ லெவி தருதல்/கட்சி பத்திரிக்கைகளை படித்தல் ஆகியவற்றின் அடிப்படையில்தான் கட்சி உறுப்பினர் பதிவு புதுப்பிக்கப்பட வேண்டும்.

இந்திய சமூகத்தை சூறையாடுவதற்காக  கை கோர்த்துள்ள வகுப்புவாதிகள் – கார்பரேட்டுகள் கூட்டணியை ஒருசேர எதிர்கொள்ளும் தகுதி படைத்த ஓரே அரசியல் இயக்கம் கம்யூனிஸ்டு கட்சிதான். அந்த கடமையை நிறைவேற்ற கம்யூனிஸ்டு கட்சியின் தரமும் அதன் உறுப்பினர்களுடைய தரமும் மேலும் உயர்ந்த தளத்திற்கு செல்ல வேண்டும். இந்த வரலாற்று கடமையை நிறைவேற்றிட கட்சி உறுப்பினர்களின் தரம் குறித்த லெனின் போதனைகள் நமக்கு வழிகாட்டியாக செயல்படும்.

ஜனநாயக மத்தியத்துவம்

இணையற்ற கட்சி அமைப்பாளர் என்ற முறையில் லெனின் அவர்களின் மகத்தான பங்களிப்பு ‘ஜனநாயக மத்தியத்துவம்’ எனும் கோட்பாடு ஆகும். கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு கோட்பாடுகளின் உயிர்நாடி அதுவே. ஜனநாயக மத்தியத்துவத்தை புறந்தள்ளிவிட்டு தனது புரட்சிகர நோக்கங்களை கம்யூனிஸ்டு கட்சி சாத்தியமாக்கிய அனுபவம் இல்லை. புரட்சிக்கு பின்னரும் கட்சியின் செயல்பாட்டில் (அரசின் செயல்பாட்டில் அல்ல) ஜனநாயக மத்தியத்துவம் தொடர்வது அவசியம்.

முதலாளித்துவவாதிகளால் மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகும் சில முக்கிய கோட்பாடுகளில் ஒன்று ஜனநாயக மத்தியத்துவம் ஆகும். சில சமயங்களில் கட்சி ஊழியர்கள் கூட இந்தக் கோட்பாடு குறித்து ஊசலாட்டம் அடைகின்றனர்.

கட்சி பொறுப்புகளுக்கு தேர்தல் மூலம் தேர்வு செய்வது

ஒவ்வொரு கமிட்டியும் தன் கீழ் உள்ள கமிட்டிகளுக்கும் மேல் உள்ள கமிட்டிகளுக்கும் தனது பணி குறித்து தெரிவிப்பது

கட்சி உறுப்பினர்களின் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பது

கூட்டு முடிவு தனி நபர் பொறுப்பு என்ற முறையில் செயல்படுவது

ஆகிய முக்கிய அம்சங்களுடன் இணைந்து சிறுபான்மை கருத்து உடையவர்கள் பெரும்பான்மை கருத்துக்கு கட்டுப்படுவது என்பது ஜனநாயக மத்தியத்துவத்தின் முக்கிய உட்கூறுகள் ஆகும். இதனை நமது கட்சி அமைப்பு சட்டம் தெளிவாக கூறுகிறது.

ஜனநாயகமும் மத்தியத்துவமும் முரண்பட்ட அம்சங்கள் போல தோன்றினாலும் உண்மையில் அவை ஒன்றுக்கொன்று இயைந்தவை. ஒரு குறிப்பிட்ட சூழலில் எந்த அம்சம் கூடுதல் அழுத்தம் பெறவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் சரியான அணுகுமுறை தேவைப்படுகிறது.

லெனின் வழிகாட்டுதலில் கம்யூனிஸ்டு அகிலம் 1921ம் ஆண்டு உருவாக்கிய “கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் கோட்பாடுகள்” எனும் மிகச்சிறந்த ஆவணத்தில் ஜனநாயக மத்தியத்துவம் குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது:

“கம்யூனிஸ்டு கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் என்பது பாட்டாளி வர்க்க ஜனநாயகமும் மத்தியத்துவமும் இரண்டறக் கலந்த பிரிக்க முடியாத (fusion) கோட்பாடாக இருக்க வேண்டும். ஒன்றிலிருந்து இன்னொன்றை பிரிக்க முடியாத உண்மையான செழுமைப்படுத்தப்பட்ட புத்தாக்க கலவையாக (synthesis) இருக்க வேண்டும்” என முன்வைக்கிறது.

மத்தியத்துவம் என்பது தலைமையின் கைகளில் அதிகாரங்களை குவித்து கொள்வது என பொருள் அல்ல; அல்லது கட்சி உறுப்பினர்கள் மீது தலைமை தனது மூர்க்கத்தனமான அதிகாரத்தை திணிப்பது என்பது அல்ல. மாறாக கம்யூனிஸ்டு நடவடிக்கைகளை செயலாக்கத்தை மத்தியத்துவப்படுத்துவது என்று பொருளாகும் எனவும் இந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

விவாதங்களில் ஜனநாயகம்! அமலாக்கத்தில் மத்தியத்துவம்!

கருத்துகள் விவாதிக்கப்படும் பொழுது அனைவரும் தமது கருத்துகளை தமது கிளைகள் அல்லது குழுக்களில் விரிவாக பேசும் உச்சபட்ச ஜனநாயகமும் முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் கட்சி ஒரே மனிதனாக நின்று செயல்படுத்தும் மத்தியத்துவமும் இணைந்து இருப்பது ஜனநாயக மத்தியத்துவத்தின் முக்கிய அம்சம் ஆகும். இந்த கோட்பாட்டினை அமலாக்கும் பொழுது பல பிரச்சனைகள் உருவாகின்றன. விவாதங்களுக்கு பின்னர் கருத்தொற்றுமை மூலம் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது சாலச்சிறந்தது. ஆனால் கருத்து வேறுபாடுகள் இருந்தால் வாக்கெடுப்பு மூலம் முடிவு என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது. வாக்கெடுப்பில் பெரும்பான்மை கருத்துதான் முடிவாக உருவாகும். இந்த முடிவுதான் சிறுபான்மை கருத்து உடையவர்களையும் கட்டுப்படுத்தும். ஆனால் சிறுபான்மை கருத்துடையவர்கள் முடிவை அமலாக்குவதில் சுணக்கம் காட்டுவதோ அல்லது தமது சிறுபான்மை கருத்துகளை தமது கிளை அல்லது கமிட்டிக்கு வெளியே முன்வைப்பதோ கட்சியின் ஒற்றுமைக்கு பயன்படாது; அது ஜனநாயக மத்தியத்துவத்துக்கு விரோதமான செயல் ஆகும்.

சமீப காலங்களில் சிலர் தமது  மாறுபட்ட கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவதும் அவ்வாறு பதிவிடுவது தமது உரிமை எனவும் வாதிடுகின்றனர்.  அத்தகையோர் லெனின் அவர்களின் கட்சி வாழ்க்கையை உள்வாங்குவது பயன் தரும்.

“அமைப்பு(ஸ்தாபனம்) இல்லாமல் ஒற்றுமை சாத்தியம் இல்லை; சிறுபான்மை கருத்துடையோர் பெரும்பானமை கருத்துக்கு தலைவணங்காமல் அமைப்பு சாத்தியம் இல்லை” என லெனின் தெளிவாக குறிப்பிடுகிறார்.

“விமர்சிக்கும் சுதந்திரமும் செயல்பாட்டுக்கான ஒற்றுமையும்” எனும் சிறு பிரசுரத்தில் லெனின் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“ஒரு உதாரணத்தை எடுத்து கொள்வோம். கட்சி மாநாடு நாடாளுமன்ற (டூமா) தேர்தல்களில் பங்கேற்பது என முடிவு செய்தது. தேர்தல்களில் பங்கேற்பது என்பது ஒரு மிக முக்கியமான முடிவார்ந்த செயல் நடவடிக்கை! தேர்தல் காலத்தில் தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் எனவோ அல்லது  பங்கேற்புக்கு எதிராக விமர்சனம் செய்யும் உரிமையோ எந்த கட்சி உறுப்பினருக்கும் கிடையாது. ஏனெனில் இது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை சீர்குலைக்கும். ஆனால் தேர்தல்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக பங்கேற்பு குறித்து விமர்சனம் செய்யும் உரிமை ஒவ்வொரு கட்சி உறுப்பினருக்கும் முழுமையாக உண்டு”

விமர்சிக்கும் சுதந்திரமும் செயல்பாட்டுக்கான ஒற்றுமையும்

ஜனநாயகம் மற்றும்  மத்தியத்துவம் என்பது என்ன? செயல் நடவடிக்கைகளுக்கான முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு விமர்சனத்துக்கான முழு சுதந்திரமும் முடிவு எடுக்கப்பட்ட பின்னர் செயல் நடவடிக்கையில் ஒற்றுமையும் இருக்க வேண்டும். முடிவினை அமலாக்கும் பொழுது அங்கு விமர்சனத்துக்கு இடமில்லை. லெனின் முன்வைக்கும் விமர்சன உரிமைக்கும் செயல் நடவடிக்கைகளுக்கும் உள்ள இயக்கவியல் இணைப்பை உள்வாங்குவது மிக அவசியம். இரண்டில் எந்த அம்சத்தை தவறாக பயன்படுத்தினாலும் அது தீங்காகவே முடியும்.

லெனின் வாழ்வு கற்றுதரும் படிப்பினை

தனது நியாயமான கருத்து நிராகரிக்கப்பட்டதாக ஒருவர் நினைத்தால் என்ன செய்வது? அதற்கும் லெனின் வாழ்வு நமக்கு படிப்பினையை தருகிறது. 1917 பிப்ரவரியில் ரஷ்ய தொழிலாளி வர்க்கமும் ஏனைய உழைப்பாளிகளும் முதலாளித்துவ வர்க்கங்களை பிரதிநித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளும் இணைந்து ஜார் மன்னனுடைய ஆட்சியைத் தூக்கியெறிந்தனர். ஒரு ஜனநாயக குடியரசை நிறுவுவது என்பதே குறிக்கோள். ஆனால் ஆட்சியைக் கைப்பற்றிய முதலாளித்துவவாதிகள் வழக்கம் போல உழைப்பாளிகளுக்கு துரோகம் இழைக்க முனைந்தனர்.  எனவே பிப்ரவரி முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை சோசலிச  புரட்சியாக நீட்டிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக லெனின் கணித்தார். எனவே அதற்காக “ஏப்ரல் ஆய்வு குறிப்புகள்” எனும் ஆவணத்தை உருவாக்கினார். அதனை போல்ஷ்விக் கட்சி முன் வைத்தார். ஆனால் கட்சி அதனை  ஏற்கவில்லை. மிக முக்கியத்துவம் வாய்ந்த பீட்டர்ஸ்பர்க் கமிட்டி 13க்கு 2 என்ற வாக்கு விகிதத்தில் லெனின் கருத்தை நிராகரித்தது. மாஸ்கோ மற்றும் பல கமிட்டிகளும் லெனின் கருத்தை நிராகரித்தன. பிராவ்டா பத்திரிக்கை லெனின் கருத்தை கண்டித்து கட்டுரை வெளியிட்டது. பல முக்கிய தலைவர்களும் லெனின் கருத்தை ஏற்கவில்லை. ஆனால் லெனின் பொறுமையாக தனது கருத்தின் நியாயத்தை விளக்கினார்.  புறச்சூழல்கள் குறித்து எடுத்துரைத்தார். 

நீண்ட கருத்து பரிமாற்றத்துக்கு பின்னர் போல்ஷ்விக் கட்சி லெனின் கருத்தை (பெரும்பான்மை அடிப்படையில்) அங்கீகரித்தது. அதற்கு பின்னர் இந்த கருத்தை கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிப்பதை லெனின் உத்தரவாதப்படுத்தினார். மென்ஷ்விக்குகளும் லெனின் கருத்தை ஏற்க வேண்டிய சூழல் உருவானது. எல்லாவற்றிற்கும் மேலாக புரட்சியின் தேவையை பெரும்பான்மையான உழைப்பாளிகளும் அங்கீகரிப்பதையும் லெனின் உத்தரவாதப்படுத்தினார். அதற்கு பின்னர்தான் புரட்சி எழுச்சிக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. தனது கருத்தின் நியாயத்தை பெரும்பான்மையோர் ஏற்கும்வரை பொறுமையாக லெனின் செயல்பட்டார். தான் சரியென நினைக்கும் கருத்தை பெரும்பான்மை நிராகரித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை லெனின் வாழ்வு நமக்கு கற்று கொடுக்கிறது.

லெனின் கருத்தை எல்லா சமயங்களிலும் போல்ஷ்விக் கட்சி ஏற்றுக்கொண்டதில்லை. பல சமயங்களில் அவரது கருத்து நிராகரிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உதாரணத்தையே எடுத்து கொண்டால் போல்ஷ்விக் கட்சி புரட்சிக்கு அறைகூவல் விட வேண்டும் என முடிவு செய்தபொழுது சியனோவ்/கமனொவ் எனும் இரு தலைவர்கள் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல; அவர்கள் மென்ஷ்விக் பத்திரிக்கைகளில் பகிரங்கமாக புரட்சி அறைகூவல் தவறு என பேட்டி அளித்தனர். இது லெனினுக்கு கடும் கோபத்தை உருவாக்கியது. ஏனெனில் இது புரட்சியை காட்டி கொடுக்கும் செயலாகும். எனவே அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என லெனின் மத்தியகுழுவுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் கட்சி அந்த இரு தலைவர்களின் கடந்தகால சேவையை கருத்தில் கொண்டு அவர்கள் தவறை உணர்ந்தால் கட்சியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என தீர்மானித்தது. அதன்படி அவர்கள் தவறை உணர்ந்ததாக வெளிப்படுத்தினர். பின்னர் கட்சியில் தொடர்ந்து செயல்பட்டனர்.

சில சமயங்களில் லெனின் கருத்து சிறுபான்மையாக இருந்தது. ஆனால் அவர் பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்பட்டார். சில சமயங்களில் விட்டுக்கொடுத்தார். சில அடிப்படை முக்கிய பிரச்சனைகளில் இடைவிடாது கட்சிக்குள் போராடினார். தனது கருத்தை கட்சி ஏற்றுக்கொள்ள வைப்பதில் முனைப்பு காட்டினார். அதே சமயத்தில் சிறுபான்மை கருத்து பெரும்பான்மை கருத்துக்கு கட்டுப்படுவது எனும் ஜனநாயக மத்தியத்துவத்தின் முக்கிய அம்சத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்; தனது செயல்பாடுகளில் கடைபிடித்தார். அதே சமயத்தில் ஜனநாயகம் இல்லாமல் மத்தியத்துவம் சாத்தியம் இல்லை என்பதிலும் லெனின் உறுதியாக இருந்தார். முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு உச்சபட்ச ஜனநாயக விவாத உரிமை அனைத்து உறுப்பினர்கள் மற்றும் கமிட்டுகளுக்கு இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

ஜனநாயக மத்தியத்துவம் மாறாநிலை கோட்பாடு அல்ல!

ஜனநாயக மத்தியத்துவம் அனைத்து சூழல்களிலும் அனைத்து கட்சிகளுக்கும் ஒரே மாதிரியாக பொருந்தும் கோட்பாடு அல்ல. ஓரே கட்சியின் நீண்ட பயணத்தில் கூட வெவ்வேறு காலகட்டங்களில் வெவேறு அணுகுமுறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உருவாகலாம். 1903 முதல் 1912ம் ஆண்டு வரை போஷ்விக்குகளும் மென்ஷ்விக்குகளும் இணைந்து செயல்பட்டனர். 1912ல் போல்ஷ்விக் கட்சி சுயேச்சையான அமைப்பாக செயல்பட்டது. இரு சூழல்களிலும் ஜனநாயக மத்தியத்துவம் குறித்து  ஒரே மாதிரியான அணுகுமுறை லெனின் கொண்டிருக்கவில்லை. போல்ஷ்விக் கட்சி உதயமான பின்னர் அமைப்பு கோட்பாடுகள் செழுமைப்படுத்தப்பட்டன. ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடும் அதற்கேற்றவாறு செழுமைப்பட்டது.

ஒரு கட்சி  அடக்குமுறைக்கு உள்ளாகும் பொழுது அங்கு மத்தியத்துவம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனைய சமயங்களில் ஜனநாயக அம்சம் கூடுதல் அழுத்தம் பெற வேண்டும். எனினும் முடிவுகள் எடுப்பதற்கு முன்பு உச்சபட்ச ஜனநாயகமும் அந்த முடிவுகளை அமலாக்குவதில் ஒன்றுபட்ட செயல்பாட்டின் அடிப்படையிலான மத்தியத்துவமும் அனைத்து சூழல்களுக்கும் பொருந்தும். ஜனநாயக மத்தியத்துவம் தவறானது என அதனை கைவிட்ட பல கட்சிகள் காணாமல் போய்விட்டன என்பதும் அனுபவம் ஆகும்.

ஜனநாயக மத்தியத்துவம் என்பது வெறும் பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்படுவது மட்டுமல்ல; ஜனநாயக மத்தியத்துவத்தின் செழுமை என்பது கட்சிக்குள் வெளிப்படையான விரிவான விவாத உரிமை/கட்சி உறுப்பினர்களின் சித்தாந்த அரசியல் உணர்வை அதிகரித்தல்/ கட்சி உறுப்பினர்களையும் அவர்கள் சார்ந்த கிளைகளையும் செயல்பட வைத்தல்/ விமர்சனம் சுயவிமர்சனத்தை ஊக்குவித்தல்/குழுவாத போக்குகளை தவிர்த்தல்/ கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசாமல் இருத்தல் ஆகிய அம்சங்களுடனும் இணைந்துள்ளது.  இதனை நமது கட்சியின் அமைப்புசட்டம் தெளிவாக முன்வைக்கிறது. அதுவே லெனின் நமக்கு புரட்சிகர கட்சி அமைப்பு பற்றி கற்று தரும் பாடம் ஆகும். அத்தகைய ஒரு வலுவான கட்சியை உருவாக்க உறுதியேற்போம்!   

– கட்டுரைக்கு உதவிய நூல்கள் :

1) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் – லெனின்

2) விமர்சன உரிமையும் செயல்பாட்டுக்கான ஒற்றுமையும் – லெனின்

3) கட்சி அமைப்பின் கோட்பாடுகள்-கம்யூனிஸ்டு அகிலம்

4) லெனினும் புரட்சிகர கட்சியும் – பால் பிளான்க்

5) 2015 CPI(M) பிளீனம் ஆவணம்

6) CPI(M) கட்சி அமைப்பு சட்டம்.

வ.உ.சி: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சமூக நீதிக்கான குரலும்

கே. பாலகிருஷ்ணன்

நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முத்திரை பதித்தவர் வ.உ.சி. பிரிட்டிஷ் ஆட்சிக்கு  எதிராக விடுதலைப் போராட்டத்தை முதன்முதலில் மக்கள் இயக்கமாக மாற்றியவர். மனு கொடுத்து மன்றாடும் இயக்கமாக காங்கிரஸ் இருந்து வந்த நிலையில் வெள்ளை கம்பனிகளுக்கு போட்டியாக மக்கள் ஆதரவோடு கப்பலோட்டிய தமிழன்.  தொழிலாளர்கள், உழைப்பாளர்கள், கொத்தடிமைகள் என்ற நிலையை மாற்றி பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி போராட வைத்தவர். பிரிட்டிஷ் புகுத்திய ஆங்கில மோகத்திற்கு எதிராக விடுதலை இயக்கத்தில் மக்களை தமிழ் வழி நின்று திரட்டியவர். சாதி அபிமானம், மத அபிமானம் ஆகியவை மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளே என புதிய வெளிச்சத்தை பாய்ச்சியவர். அவ்வாறு பிரிட்டிஷ் பேயாட்சியை எதிர்த்து தனித்த அடையாளங்களோடு விடுதலை போராட்டப் பயணத்தை மேற்கொண்ட பெருமை கொண்டவர் வ.உ.சி.

..சி யின் எலும்பும் ராஜ துவேசத்தை ஊட்டும்

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எந்த அளவு இவர் மீது கோபம் கொண்டிருந்தார்கள் என்பதற்கு அவருக்கு திருநெல்வேலி நீதிமன்ற நீதிபதி பின்ஹே வழங்கிய தீர்ப்புரையை படித்தாலே புரியும்.

“சிதம்பரம் பிள்ளை மேன்மை தாங்கிய மன்னர் பிரானது பிரஜைகளில் இரு வர்க்கத்தாரிடையே (ஆங்கிலேயர்,  இந்தியர்) பகைமையையும், வெறுப்பையும் ஊட்டுபவர். அவர் வெறுக்கத்தக்க ராஜதுரோகி. அவருடைய எலும்புகள் கூட சாவுக்குப் பின் ராஜ துவேசத்தை ஊட்டும்”.

அவருக்கு வழங்கிய தண்டனையும் அளவுக்கு அதிகமானதாகும். ராஜதுரோக குற்றச்சாட்டுக்கு  20  ஆண்டுகள், சுப்பிரமணிய சிவாவுக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததற்காக மேலும்  20  ஆண்டுகள்,  மொத்தத்தில் இரட்டை ஆயுள் தண்டனைகள். இத்தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக 40 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டுமென அந்த நீதிபதி தீர்ப்பு எழுதினார்.  

இந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது தண்டனை  6  ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆனாலும் வ.உ.சி ஒரு ராஜதுரோகி என்ற நீதிபதி பின்ஹேவின் கருத்தில் நாங்களும் உடன்படுகிறோம் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்புரையில் குறிப்பிட்டனர்.

சிறைக் கொடுமை

வ.உ.சி.யையும், சுப்பிரமணிய சிவாவையும் அந்தமான் சிறைக்கு அனுப்ப உத்தரவிட்டனர். ஆனால் அந்தமான் சிறையில் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்த காரணத்தினால் அவரை முதலில் கோவை சிறையிலும், பிறகு கண்ணனூர் சிறையிலும் அடைத்தனர். கோவை சிறையில் இவருக்கு இழைக்கப்பட்ட கொடுமை வேறு எந்த அரசியல் கைதிக்கும் இழைக்கப்பட்டதாக கூற முடியாது. எருதுகள் கட்டி இழுக்க வேண்டிய செக்கை, சுட்டெரிக்கும் வெயிலில்  இவரது தோளிலே கட்டி இழுக்க வைத்ததும், அவர் தட்டு தடுமாறி கீழே விழுந்த போதும், அவரை சவுக்கால் அடித்தும் கொடுமைபடுத்தியுள்ளனர். வ.உ.சி.யின் மீதான கொடுமை தாங்காமல் சிறை அதிகாரிகளுக்கே தெரியாமல் சக கைதிகள் செக்கை இழுத்துச் செல்ல உதவுவார்களாம். இன்றைக்கும் கோவை சிறைச்சாலையில் வ.உ.சி. கட்டி இழுத்த அந்த செக்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இவ்வளவு பெரிய செக்கை இழுக்குமாறு வ.உ.சி.யை சித்தரவதை செய்த கொடுமையை எண்ணி அதிர்ச்சியடைவர்.

ஒரு வழக்கறிஞர்; விடுதலைக்குப் போராடக் கூடிய ஒரு அரசியல் போராளி; ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்; தமிழ் இலக்கியத்தில் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர் என அனைத்தையும் காலில் போட்டு மிதித்து விட்டு வ.உ.சி க்கு சொல்ல முடியாத கொடுமைகள் இழைக்கப்பட்டன. வ.உ.சி.க்கு இழைக்கப்பட்ட கொடுமையானது, அவர் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் என்பது மட்டுமல்ல; மாறாக, இந்திய விடுதலை குறித்து அவர் கொண்டிருந்த மாறுபட்ட அணுகுமுறையும் காரணமாகும்.

இளமை பருவத்தில் நீதிக்கான குரல்

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து 18ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே தென்னகத்தில் பெரும் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பிரிட்டிஷாரைப் எதிர்த்த போராட்டத்தில் பாஞ்சாலக் குறிச்சியில் வீரபாண்டிய கட்டப்பொம்மன் கைது செய்யப்பட்டு தூக்கிலடப்பட்டார்.  ஊமத்துரையும்,  சிவகங்கையில் மருது சகோதரர்கள், திண்டுக்கல்லில் கோபால் நாயக்கர்,  கோயம்புத்தூரில் கான்கிசா கான்,  மலபாரில் கேரள வர்மன் இப்படி பலரும் இணைந்து பிரிட்டிஷ் அரசை எதிர்த்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி போராட்டத்திற்கு திட்டமிட்டனர். இத்திட்டத்தை அறிந்த பிரிட்டிஷ் ராணுவத்தினர் அதை முறியடித்து கலகப் படை வீரர்கள் அத்தனை பேரையும் கைது செய்து கொடூர அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டனர். மருதுபாண்டியர்,  வெள்ள மருது ஆகியோரை திருப்பத்தூரில் தூக்கிலிட்டனர். அதே தேதியில் மருதுபாண்டியரின் மகன்கள் சிவத்தம்பி,  சிவஞானம், வெள்ளமருதுவின் மகன்கள் கருத்தம்பி,  குட்டித்தம்பி, முத்துச்சாமி,  ராமநாதபுரம் மன்னர் முத்துக்கருப்ப தேவர் ஆகிய அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். தாத்தாக்கள், மகன்கள், பேரன்கள் என வித்தியாசமில்லாமல் கைது செய்த அனைவரையும் பிரிட்டிஷார் கூட்டம் கூட்டமாக தூக்கிலேற்றினார்கள். மருதுபாண்டியரின் தலை துண்டிக்கப்பட்டு காளையார் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவருடைய உடல் திருப்பத்தூரில் புதைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்த இத்தகைய போராட்டங்கள் கொடூரமாக அடக்கப்பட்டாலும், பல நூற்றுக்கணக்கான பேர் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டாலும், மக்கள் மத்தியில் இவர்களின் தியாகம் வீரகாவியங்களாக பேசப்பட்டு வந்தன. இவர்களைப் பற்றிய நாட்டுப்புற பாடல்கள், கதைகள் கிராமங்கள் தோறும் பாடப்பட்டு வந்தன. இத்தகைய பாடல்களை கூட பாடக் கூடாது என்ற பிரிட்டிஷாரின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை.

இந்த தியாக வடுக்கள் நிறைந்திருந்த அந்த பகுதியில்தான்  1872ஆம் ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வ.உ.சி ஒட்டப்பிடாரத்தில் பிறந்தார். இளம் பருவம் முதலேயே இந்த வீர காவியங்கள் அவரது சிந்தனையில் ஆழமாக பதிந்தன. பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரி படிப்பை முடித்து அரசு வேலையில் சேர்ந்த வ.உ.சி க்கு அரசு அலுவலகத்தில் பணிபுரிவதில் ஆர்வமில்லை. பிறகு வழக்கறிஞர் படிப்பு முடித்து வழக்கறிஞராக பணியாற்றினார். வழக்கறிஞராக பணியாற்றும்போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவசமாகவே வாதாடினார். தவறு செய்யும் அரசு அதிகாரிகள், நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட யாரானாலும் அவர்களை எதிர்த்து வழக்கு தொடுத்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தார். அதேபோல ஜமீன்தார்கள், பண்ணையார்கள், போலீசார் ஆகியோர் சாதாரண ஏழை விவசாயிகள் மீது தொடுத்து வந்த தாக்குதல்களை எதிர்த்து, தாக்கியவர்கள் மீது வழக்கு தொடுத்து அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தந்தார். பொதுமக்களிடம் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபட்ட துணை நீதிபதிகள் மீது வழக்காடி அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தது போன்ற காரணங்களால் வ.உ.சி.யினுடைய செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்தது. ஏழைகள், அடித்தட்டு மக்கள், விவசாயக் கூலிகள், பணக்காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள் வ.உ.சி.யை நாடிவந்து தங்களுக்கு நியாயம் கேட்கும் நிலை உருவானது. அதிகாரிகள், நீதிபதிகள், காவல்துறையினர் இவர் மீது கடும் கோபம் கொண்டிருந்தனர்.

ஏழை மக்களுக்காக குரலெழுப்பிய வ.உ.சி. படிப்படியாக பிரிட்டிஷ் ஆட்சி ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்க முன்வந்தார். அதன்மூலம் பிரிட்டிஷ் ஆட்சியை ஒழித்துக் கட்டுவதன் மூலமே மக்களுக்கு அமைதியான நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முடியும் என்ற முடிவுக்கு வந்து தேசிய இயக்கத்தில் கலந்து கொள்ள முடிவெடுத்தார்.

மூன்று கோட்பாடுகள்

வ.உ.சி மூன்று முக்கியமான கோட்பாடுகளை வலியுறுத்தி வந்தார். அதாவது கூட்டுறவு இயக்கம்,  சுதேசி இயக்கம்,  தொழிலாளர் இயக்கம் என்ற இந்த மூன்றையும் முன்னிறுத்தினார். தூத்துக்குடியில் சுதேசி பண்டக சாலை ஒன்றை அமைத்து சுதேசிப் பொருட்களை வாங்கி விற்கும் பணியை தொடங்கி வைத்தார். சுதேசி நூற்பாலை ஒன்றை கட்டி அதை செயல்படுத்தினார். சென்னை விவசாய சங்கம் என்ற அமைப்பை துவக்கினார். இவருடைய மொத்த நோக்கமும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு மாற்றாக சுதேசிப் பொருளாதாரத்தை பலப்படுத்திட வேண்டுமென்பதே. தொழிலாளர்கள், விவசாயிகள் வாழ்வு மேம்படுவது,  மாணவர்களுக்கு சுதேசி கல்வியை போதிப்பது,  தரிசு நிலங்களை விலைக்கு வாங்கி விவசாயிகளையும்,  தொழிலாளர்களையம் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயத்தை மேம்படுத்துவது என்ற கொள்கையை பிரகடனப்படுத்தினார்.

ஏற்றுமதி, இறக்குமதி கப்பல் போக்குவரத்து முழுவதும் பிரிட்டிஷ் கைவசமே இருந்தது. சில சுதேசி கம்பெனிகள் கப்பல்களை இயக்கினாலும் பிரிட்டிஷ் கம்பெனிகளோடு போட்டி போட முடியாமல் அது தள்ளாடிக் கொண்டிருந்தன. பிரிட்டிஷ் கம்பெனிகள்தான் இந்தியா, இலங்கை, ரங்கூன்,  மலேசியா போன்ற நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்வது, கொண்டு வருவது என்ற வியாபாரத்தை நடத்தி கொள்ளை லாபம் ஈட்டி வந்தனர். பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேசன் கம்பெனிக்கு போட்டியாக,  சுதேசி நேவிகேசன் கம்பெனி என்ற கம்பெனியை வ.உ.சி துவக்கினார். வாடகைக்கு கப்பல் எடுத்து ஓட்டி நடத்த முடியாது என்கிற அடிப்படையில் கப்பல்களை விலைக்கு வாங்கி சொந்தமாக இயக்க முடிவு செய்தார். இந்த கம்பெனிக்கான பங்குதாரர்களை சேர்ப்பதற்கு நாடு முழுவதும் பயணம் செய்து பங்குகளை சேர்த்தார். இவ்வாறு இந்த பங்குகளை சேர்க்க பம்பாய் நகரத்தில் அவர் தங்கியிருந்த போது அவரது மூத்த மகன் உலகநாதன் உடல் நலமின்றி மரணமடைந்தார். அவரது இறுதி நிகழ்ச்சிக்கு கூட வரமுடியாமல் சுதேசி நேவிகேசன் கம்பெனிக்கு பங்குகளை திரட்டும் பணியில் முழு வீச்சுடன் ஈடுபட்டிருந்தார். இந்த கம்பெனியில் இயக்குநர்களாக 15பேர் இருந்தார்கள்.

சுதேசி கப்பல் இயக்குவது பொதுமக்கள் மற்றும் பயணிகள், வியாபாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பிரிட்டிஷ் கம்பெனியின் கட்டணத்தை விட அதிக கட்டணம் கொடுத்து சுதேசி கப்பலில் பயணிப்பதை அனைவரும் பெருமையாக கருதினார்கள். சுதேசி கப்பல் வெற்றிகரமாக இயங்குவது நாடு முழுவதும் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இதுகுறித்து திலகர் வ.உ.சிதம்பரம்பிள்ளை சுதேசி கப்பல் இயக்குவது, சுதேசி இயக்கத்திற்கு அவர் செய்துள்ள பெரும் பணி என பாராட்டினார். எங்கள் சாம்ராஜ்யத்தில் சூரியன் மறையாது எனக் கொக்கரித்த பிரிட்டிஷ் முதலாளிகளை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்கியது எண்ணிப் பார்க்க முடியாத இமாலய சாதனையாகும். சுதேசி கம்பெனி இயங்குவது பிரிட்டிஷ் கம்பெனிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. நாளடைவில் ஒவ்வொரு மாதமும் இக்கம்பெனிகளுக்கு பெரும் நட்டம் ஏற்படும் என்கிற நிலை உருவானது. எனவே பிரிட்டிஷ் கம்பெனி கப்பல் உரிமையாளர்கள் சுதேசி கப்பலை முடக்கி விட வேண்டும்;  இதற்கு பொறுப்பாக இருக்கிற வ.உ.சி. யை மிரட்டி பணியவைப்பது; பணியாவிட்டால் சிறைக்கு அனுப்பிட வேண்டும் என அனைத்து முயற்சிகளிலும் வரிந்து கட்டி செயல்பட்டனர். தங்கள் கப்பல் மீது சுதேசி கப்பல் மோதி விட்டது என பொய்ப்புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இத்தகைய சதிகளை எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, மக்களின் ஆதரவோடு வ.உ.சி முறியடித்தார். பிரிட்டிஷாரின் இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களின் ஆதரவு வ.உ.சி.க்கு இருந்தபோதும் சுதேசி கம்பெனியின் பங்குதாரர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டது. இவர்களைப் பொறுத்தவரை லாபமே குறி. சுதேசி உணர்வை பயன்படுத்தி லாபமடைய வேண்டுமென்பதே இவர்களுடைய அடிப்படையான எண்ணம்.

எனவே, பிரிட்டிஷாரின் நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வ.உ.சி.யை கம்பெனி நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென வற்புறுத்தினார்கள். ஆனால் வ.உ.சி.யோ சுதேசி கப்பல் கம்பெனி நடத்துவதை ஏகாதிபத்திய எதிர்ப்பின் பகுதியாகவே மேற்கொண்டிருந்தார். எனவே, இவர்களின் நிர்ப்பந்தத்திற்கு ஆரம்பத்தில் அடிபணிய மறுத்த வ.உ.சி. வேறு வழியின்றி நாடு முழுவதும் இரவு – பகலாக அலைந்து கண்ணின் இமை போல காத்து உருவாக்கிய சுதேசி கம்பெனியிலிருந்து கடைசியாக வெளியேறினார்.

பாரதி – வ..சி. இரட்டையர்கள்

பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயரும், வ.உ.சி. யின் தந்தை உலகநாதப் பிள்ளையும் எட்டையபுரம் சமஸ்தானத்தில் ஒரே காலத்தில் பணியாற்றியுள்ளனர். குடும்ப ரீதியாக இவர்களுக்குள் நெருக்கம் இருந்தாலும் பாரதியும் – வ.உ.சியும் சொந்த ஊரில் சந்தித்துக் கொள்ளவில்லை.  1906ஆம் ஆண்டுவாக்கில் சென்னைக்கு சென்ற வ.உ.சி  “இந்தியா” என்ற பத்திரிகையின் அலுவலகத்திற்கு சென்ற போதுதான் பாரதியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் இருவரோடு மண்டையம் திருமாலாச்சாரி, சீனிவாச ராகவாச்சாரியார் ஆகியோர் நெருங்கி பழகியதன் விளைவாக நாளடைவில் வ.உ.சி. தேசிய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடலானார். இவர்களது முயற்சியில் சென்னை ஜன சங்கம் என்ற தேசாபிமானச் சங்கம் அமைக்கப்பட்டது. பின்னர் தூத்துக்குடி திரும்பிய வ.உ.சி. சுதேசி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடலானார்.

1907ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மாநாடு சூரத் நகரில் நடைபெறவிருந்தது. இதற்கு முன்னர் கல்கத்தாவில் நடந்த மாநாட்டிலேயே காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அது மோதலாக உருவாகியிருந்தது. தீவிரவாதிகள் எனவும், மிதவாதிகள் எனவும் காங்கிரஸ் தலைவருக்குள் இரண்டு பிரிவு உருவாகியிருந்தது. லால் – பால் – லால் என்று அழைக்கப்பட்ட லாலா லஜபதிராய், பால கங்காதர திலகர்,  பிபன் சந்திரபால் ஆகியோர் தீவிரவாதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டார்கள்.

அதாவது,  இவர்கள் சுதேசி, சுயராஜ்ஜிய சுதந்திரத்திற்கு இந்தியா போராட வேண்டுமென்றனர். இன்னொரு பிரிவுக்கு தலைவராக இருந்த திரசா மேத்தா, கோபால கிருஷ்ண கோகுலே, ராஷ் பிகாரி போஸ், சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோர் மிதவாதக் கருத்துக்களை கொண்டிருந்தனர்.

காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட இருவேறுபட்ட கருத்துக்களுக்கு இந்திய சமூகத்தில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களும் முக்கியமான காரணமாகும். ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டபோது ‘மேன்மை தங்கிய’ பிரிட்டிஷ் அரசுக்கு மனு கொடுத்து மன்றாடும் இயக்கமாகவே துவக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் முதலாளிகள் தங்களது மூலதனத்தை கொண்டு இந்திய மக்களை சுரண்டிய போதிலும் உள்நாட்டில் ஒரு வலுவான முதலாளித்துவம் வளராமல் பார்த்துக் கொண்டார்கள். அவ்வாறு உள்நாட்டு முதலாளித்துவம் வளருமானால் அது தங்களை எதிர்த்து குரல் கொடுக்க முனையும் என்பதை சரியாகவே கணித்து எச்சரிக்கையோடு இருந்தனர். ஆனாலும் பிரிட்டிஷ் குடையின் நிழலிலேயே உள்நாட்டு முதலாளித்துவம் படிப்படியாக வளர்ந்ததும், உலக அளவில் பல நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் இந்தியாவில் புதியதொரு சூழ்நிலையை உருவாக்கின. அதாவது, உள்நாட்டு முதலாளிகள் மனு கொடுத்து மன்றாடினால் மட்டும் தங்களை வளர்த்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தனர். இத்தகைய புதிய வளர்ச்சிப் போக்குகளின் விளைவாக சுயராஜ்ஜியம், சுதேசி பொருட்கள் விற்பனை, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு போன்ற கோஷங்கள் எழுந்தன. இத்தகைய கோஷங்களை திலகர் தலைமையிலான தீவிரவாதக்குழு எழுப்பிய நிலையில் மக்களது பேராதரவு இவருக்கு பின்னால் திரண்டது. எனவே கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின்போது தீவிரவாதக்குழுவின் தலைவராக இருந்த திலகரை தலைவராக்க வேண்டுமென பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மிதவாதக்குழுவினர் சமரச ஏற்பாட்டின் மூலம் இதை முறியடித்தனர். இந்த நிலையில் 1907ஆம் ஆண்டு சூரத் நகரில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டில் அவர் தலைமை பொறுப்பு ஏற்க வேண்டுமென்ற குரல்கள் நாடு முழுவதும் வலுவடைந்திருந்தது. சென்னையிலிருந்த பாரதிக்கும் இந்த கருத்து ஆழமாக இருந்தது.

சுயராஜ்ஜியத்துக்கான செயல்திட்டம்

பாரதி – வஉசி தலைமையில் சூரத் மாநாட்டிற்கு ஏராளமானோர் சென்றார்கள். நாடு முழுவதிலுமிருந்து வந்தவர்கள் மாநாட்டு அரங்கில் கூடியபோது, மாநாடு துவங்கிய உடனேயே தலைவர் தேர்தலில் கடும் மோதல் ஏற்பட்டது. மிதவாத குழுவினர் ஏற்பாடு செய்திருந்த குண்டர்கள் தாக்குதலால் கூட்டம் தொடர முடியாமல் மாநாடு கலைந்தது. அதனை தொடர்ந்து அடுத்த நாள் அரவிந்தர் தலைமையில் நடந்த தேசியவாதிகள் மாநாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்குமான பொறுப்பாளர்கள் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி வங்கத்துக்கு – அரவிந்தர்,  மராட்டியத்திற்கு திலகர், சென்னை மாகாணத்திற்கு வ.உ.சி பொறுப்பாளர்களாக தீர்மானிக்கப்பட்டார்கள். ஆரம்ப முதலே சுதேசி, சுயராஜ்ஜிய கோட்பாடுகளோடு திலகரின் ஆதரவாளராக இருந்த வ.உ.சி சுயராஜ்ஜியத்தில் தமிழ்நாட்டுக்கு பொறுப்பாளராக தீர்மானிக்கப்பட்டது இயற்கையானதே.

சென்னை திரும்பிய வ.உ.சி.யும்,  பாரதியும் சுயராஜ்ஜியத்துக்கான செயல்திட்டத்தினை நிறைவேற்றினார்கள். சென்னையை தொடர்ந்து வ.உ.சி தூத்துக்குடி சென்று தனது பணிகளை துவக்கினார். சுயராஜ்ஜிய ஆட்சிக்கு முதல் வழி கடல் வாணிபத்தை கைப்பற்ற வேண்டும். வெள்ளையர்களின் கம்பெனிகளை திவாலாக்க வேண்டும் என்ற நோக்கோடு துவக்கப்பட்டதே சுதேசி நேவிகேசன் கம்பெனி.

வங்காளப் பிரிவினையை எதிர்த்து போராடியதால் கைது செய்யப்பட்ட பிபின் சந்திரபால் விடுதலையானதைக்  கொண்டாட வேண்டுமென திலகர் அறைகூவல் விடுத்தார். பல நகரங்களில் சிறப்பாக கொண்டாட வ.உ.சி ஏற்பாடு செய்தார். திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் கலந்து கொண்டு உரையாற்றினர். மக்கள் எழுச்சியுடன் திரண்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. வெள்ளையர்களையும் அவர்களது எடுபிடிகளையும் மக்கள் புறக்கணித்தார்கள். மக்களின் உணர்ச்சி கண்டு நடுங்கிய பிரிட்டிஷ் அதிகாரிகள் வ.உ.சி.யையும் – சிவாவையும் மிரட்டி பணிய வைக்கப் பார்த்தார்கள். மார்ச் 9ஆம் தேதி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என மாஜிஸ்திரேட் எழுதி கொடுக்க வற்புறுத்தினார். இருவரும் மறுத்து விட்டனர். இருவரையும் அழைத்து மாவட்ட கலெக்டர் விஞ்ச் மிரட்டிய விபரங்களை பாரதியார் பாடல்கள் மூலம் பதிவு செய்துள்ளார். அப்பாடல்களில் கலெக்டர் எவ்வாறு மிரட்டினார்; அதற்கு வ.உ.சி. எவ்வாறு எதிர்குரல் கொடுத்தார் என்பதையும் வடித்துள்ளார். 

தனது மிரட்டலுக்கு பணிய மறுக்கும் இருவரையும் ஓராண்டு பாளை சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிடுகிறார். செய்தியறிந்து நெல்லை நகரமே போர்க்களமாகிறது. மக்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்கள், பலர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். ஆஷ் என்ற உதவி கலெக்டரை துப்பாக்கியால் சுட்டு ஒரு இளைஞன் உள்பட 4 பேர் மரணமடைந்து விடுகிறார்கள். போலீசார் மீது மக்கள் நடத்திய எதிர்தாக்குதலில் கலெக்டர் விஞ்சுக்கு மண்டை உடைந்தது.

இந்த கலகத்துக்கு தலைமை தாங்கியதாக காரணம் கூறியே வ.உ.சி – சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில்தான் வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இத்தண்டனை என்பது இந்த சம்பவத்தை கணக்கில் கெண்டு கொடுக்கப்பட்டவையல்ல. வெள்ளயர்களை எதிர்த்து கப்பல் ஓட்டியது; மக்கள் திரள் போராட்டங்களை உருவாக்கியது போன்ற பழைய காழ்ப்புணர்ச்சிகளின் தொகுப்பாகவே இத்தண்டனை அமைந்திருந்தது.

சிறையிலிருந்து விடுதலையான வ.உ.சி சென்னைக்கு வந்தார். குடும்பத்தை நடத்துவதற்கு வியாபாரத்தில் ஈடுபட்டார். ஆனால் அதில் உரிய பலன் ஏற்படவில்லை. சிறை தண்டனை பெற்றதால் வழக்கறிஞராக பணியாற்றும் உரிமை பறிக்கப்பட்டிருந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அந்த உரிமை அவருக்கு வழங்கப்பட்டு மீண்டும் தூத்துக்குடியில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். சிறந்த தேச பக்தராகவும், இந்திய விடுதலைக்கு அளப்பரிய தியாகத்தை செய்த வ.உ.சி. தனது கடைசி நாட்களில் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தார் என்பது வேதனை மிக்கதாகும்.

வ.உ.சி. சிறந்த இலக்கியவாதியுமாவார். தனது சுய சரித்திரத்தை செய்யுள் வடிவில் எழுதியதில் வ.உ.சி.யே முதலும் கடைசியுமாவார். சிறைத் தண்டனையின்போதும் அதற்கு பின்னரும் இலக்கிய பணியில் தனது கவனத்தை செலுத்தினார். தமிழ்நாட்டில் விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு எளிய தமிழை பயன்படுத்தினார். மேடைப் பேச்சு என்பதை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். பிரிட்டிஷ் அரசு ஆங்கில கல்வி மூலம் ஆங்கில மோகத்தை புகுத்தியது. ஆங்கில மோகமும் சமஸ்கிருத மோகமும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தாய்மொழி தமிழுக்கு உத்வேகம் அளித்தவர் வ.உ.சி. எழுதுவன எல்லாம் எளிய நடையில் இருத்தல் வேண்டும். மக்களுக்கு அர்த்தமாகும் இலக்கியத்திலேதான் உயிர் உண்டு என வலியுறுத்தினார். திருக்குறளின் அறத்துப் பாலுக்கு விளக்க உரை எழுதியுள்ளார். முழு திருக்குறளுக்கும் விளக்கவுரை எழுத வேண்டுமென்ற  அவரது ஆசை நிறைவேறவில்லை.

தொழிலாளர் இயக்கத்தில் வ..சி

திருநெல்வேலி பாபநாசத்தில் ஹார்வி என்ற பிரிட்டிஷ் கம்பெனி நூற்பாலை இயக்கி வந்தது. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் கோரல் மில் (பவள ஆலை) என்ற நூற்பாலையை உருவாக்கியிருந்தார்கள். இந்த தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்பட்டு வந்தனர். 10 வயது, 12 வயது சிறுவர்கள் கூட ஈவு இரக்கமின்றி சுரண்டப்பட்டனர். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்க வேண்டும். இடையில் ஓய்வெடுக்கவோ, விடுமுறை எடுக்கவோ கூடாது என்கிற காட்டுத் தர்பார். இந்தக் கொடுமையான தொழிலாளர் சுரண்டலை கண்ட வ.உ.சி கோரல் தொழிலாளர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட வற்புறுத்தினார். வ.உ.சி.யின் அறைகூவலுக்கேற்ப தொழிலாளர்களும், 1908ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பிரிட்டிஷ் நிர்வாகம் 144 தடையுத்தரவு போட்டு தொழிலாளர்களை நூற்றுக்கணக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது. குண்டர்களை ஏவி தொழிலாளர்களை தாக்கியது. மில் நிர்வாகமும், காவல்துறையும் தொடுத்த அனைத்து தாக்குதல்களையும் எதிர்த்து தொழிலாளர்கள் உறுதியாகப் போராடினார்கள். தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்குச் சென்று வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும்,  பவானந்த ஐயங்காரும் கூட்டங்களை நடத்தி தொழிலாளர்களை உற்சாகப்படுத்தினர். தொழிலாளர்களின் உறுதியை கண்ட நிர்வாகம் 10 நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு போராட்டம் முடிவுக்கு வந்தது. இது உரிமைக்கு போராடும் அனைத்துப் பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் எழுச்சியை பெற்றது. இது தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோர் மீது தொழிலாளர்கள் நம்பிக்கை பல மடங்கு உயர்ந்தது.

இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய வ.உ.சி.யை தொழிலாளர்களும், மக்களும் தங்களது தலைவராக ஏற்றுக் கொண்டாடினார்கள். பிரிட்டிஷ் எஜமானர்களை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியது புதிய வரலாறாகும். தொழிலாளர்கள் போராட்டம் தொழிற்சங்க ,இயக்கம் என்று எதுவும் கேள்விப்படாத நேரத்தில் எத்தனை கொடுமைகள் நடந்தாலும் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும என்பதே பிரிட்டிஷாரின் விதி. அந்த விதியை மாற்றி எழுதியவர் வ.உ.சி.

தேசிய நோக்கும் சமூக சமத்துவப் பார்வையும்

ஆரம்பத்திலிருந்தே தேச விடுதலைப் போராட்டத்தில் காங்கிரசின் அணுகுமுறையில் மாறுபட்ட கருத்து கொண்டிருந்தார். சூரத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு பின்னர் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரசிலிருந்து விலகியே இருந்தார். அதேசமயம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அவரது வாக்குமூலத்தின்படியே திலகர்,  லாலா லஜபதிராய்,  அரவிந்தர் உள்ளிட்ட தலைவர்களோடு நெருக்கமாக இருந்து பூரண சுயராஜ்யத்திற்கு உறுதியாக குரல் கொடுத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் சாதி மத சனாதான கருத்துக்கள் கோலோச்சி இருந்த நிலையில் சாதியும் மதமும் மக்கள் ஒற்றுமையை சீர்குலைத்து சுதேசி சிந்தனையை பாழ்படுத்தி விடுமென முழக்கமிட்டவர்.

தேசிய தலைவர்கள் பிராமணர், பிராமணர் அல்லாதோர் பிரச்சினையை பேச மறுத்த காலத்தில், தேசிய சிந்தனையில் வ.உ.சி தீவிரமாக இருந்தபோதும் இப்பிரச்சனை சமூகத்தில் நிலவிவருவதை சுட்டிக் காட்டி அதற்கு தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தினார்.   தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சி ஏற்பட்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்கும் இட ஒதுக்கீட்டு கொள்கையை செயல்படுத்தினார்கள். நீதிக்கட்சியோடு எந்த தொடர்பையும் கொண்டிராத வ.உ.சி. தமிழகத்தில் நிலவும் பிராமணர், பிராமணரல்லாதோர் பிரச்சனைக்கு தீர்வு காண அரசு உத்தியோகத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செயல்படுத்திட வேண்டுமென வற்புறுத்தினார்.

தேசிய சிந்தனையோடு பல்வேறு போராட்டங்களை வ.உ.சி. முன்னெடுத்தார். அதேநேரம் சாதி மத சிக்கல்கள் குறித்தும், சமூக சமத்துவத்திற்காகவும் குரல் கொடுத்தார். இவர் வாழ்ந்தபோதும்  இவர் மறைந்த பிறகும் இவரது அளப்பரிய தியாகத்தை காங்கரஸ் கட்சி அங்கீகரிக்க மறுத்துவிட்டது. ஆனால் மக்கள் என்றென்றும் அவரை நினைவில் வைத்து போற்றுகின்றனர். ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமாகவும் தொழிலாளி வர்க்கத்தை திரட்டுவதற்கான வடிவமாகவும் வ.உ.சி திகழ்கிறார்.

லெனின் 150: லெனினும் இந்திய விடுதலை போராட்டமும்

குரல்: ஆனந்த்ராஜ்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

தோழர் லெனின் பிறந்தது 1870 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி. அவர் பிறந்து 150 ஆண்டுகள் ஆகியும், அவர் 1924 ஜனவரி மாதம் மறைந்து 96 ஆண்டுகள் முடிந்தும், லெனின் அவர்களின் மகத்தான புரட்சிகர பங்களிப்பு நமது சமகால பிரச்சினைகளுக்கும் வெளிச்சம் காட்டும் வகையில் அமைந்துள்ளது.

மார்க்ஸ் – எங்கெல்ஸ் காலத்திற்குப் பின் மார்க்சீயத்தை முன்னெடுத்து சென்று சமகால பிரச்சினைகளை புரிந்துகொள்ளவும் புரட்சிகர இயக்கத்தை வலுப்படுத்தவும் ஆகப்பெரிய பங்களித்தவர் தோழர் லெனின். மார்க்ஸின் மூலதனம் நூல் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு மூலதனத்தை மையப்படுத்தி ஒரு சில பெரும் மூலதனங்களின் ஆதிக்கத்திற்கு இட்டுச்செல்லும்; போட்டி முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக மாறும் என்பதை தெளிவுபடுத்தியிருந்தது. காலனி ஆதிக்கம் பற்றியும், வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் நடைபெற்றுவந்த வர்க்கப் போராட்டங்களின் மீது காலனி ஆதிக்க அமைப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றியும் மார்க்ஸ்-எங்கெல்ஸ் இருவரும் மிகச்சரியான சில கருத்துக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக  முன்வைத்தனர் என்பது உண்மை.

எடுத்துக்காட்டாக, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இந்தியாவை நாசப்படுத்தியது பற்றியும் அதன் வீழ்ச்சிக்கான சாத்தியப்பாடுகள் பற்றியும் அற்புதமான இரு கட்டுரைகளை 1853இல் நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன் பத்திரிக்கையில் மார்க்ஸ் எழுதியுள்ளார். எனினும், காலனி ஆதிக்கமும் அதன் முரண்பாடுகளும் உலக முதலாளித்துவத்தின் மீது விளைவிக்கக்கூடிய தாக்கங்கள் பற்றி மார்க்ஸும் எங்கெல்ஸும்  முழுமையாக ஆய்வு செய்யவில்லை. அவர்கள் வாழ்ந்த காலத்தில் அது மையப்பிரச்சினையாகவும் இல்லை. மேலை நாடுகளின் முதலாளித்துவ வளர்ச்சிக்கும் அதன் ஆரம்ப மூலதன திரட்டலுக்கும் காலனிகள் ஆற்றிய பங்கை மார்க்ஸ் மூலதனம் நூலில் விவரிக்கிறார். ஆனால் காலனி நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியும் நவீன தொழிலாளி வர்க்கத்தின் சமூகப் பங்கும் துவக்க நிலையில் இருந்த பின்புலத்தில் இப்பிரச்சினைகள் மார்க்ஸின் படைப்புகளில் மைய இடம் பெறவில்லை. இந்த இடைவெளியை இட்டுநிரப்புவதில் தோழர் லெனினின் பங்கு மிக முக்கியமானது.

காலனி ஆதிக்கம் உலக முதலாளித்துவத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும், இதற்கு இணையாக, காலனி நாடுகளில் உருவாகும் தேச விடுதலை இயக்கங்கள் முதலாளித்துவத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்க இயக்கத்தின் புரட்சிகர இயக்கத்திற்கு எவ்வளவு முக்கியமானவை என்பது பற்றியும் 1905இல் இருந்தே லெனின் தீவிரமாக சிந்தித்து வந்தார். இதனையொட்டி இந்தியாவிலும் சீனாவிலும், பொதுவாக ஆசிய கண்டத்திலும் ஏற்பட்டுவந்த அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களை அறிந்துகொள்வதில் அவர் கவனம் செலுத்தி வந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சி தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் இயக்கங்கள் மலர காரணமாக அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து பல காலனி நாடுகளில் முதலாளித்துவம் வேகம் அடைந்த சூழலில் காலனிகளிலும் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல்  பிரவேசம் துவங்கி வளர ஆரம்பித்தது. இந்தியாவில் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் பிரவேசம் பற்றி 1908ஆம் ஆண்டில் ஒரு முக்கிய பதிவு செய்கிறார் லெனின். இதில் துவங்கி இந்த கட்டுரையில், லெனினுக்கும் இந்திய விடுதலை போருக்கும் உள்ள உறவின் ஒரு சில முக்கிய அம்சங்களை நாம் சுருக்கமாக பார்ப்போம்.

இந்தியா பற்றி லெனின்

 ப்ரோலெதாரி (Proletary) என்ற, லெனினை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த, பத்திரிக்கையில் 1908 ஜூலை 23 இதழில், “உலக அரசியலில் தீப்பற்றி பரவக்கூடிய பொருட்கள் என்ற தலைப்பில் லெனின் பின்வருமாறு எழுதுகிறார்:

இந்தியாவில் தங்களது எழுத்தாளர்களுக்காகவும் அரசியல் தலைவர்களுக்காகவும் சாதாரண மக்கள் போராடத் துவங்கியுள்ளனர்…….. இந்திய ஜனநாயகவாதியான திலக் மீது பிரிட்டிஷ் குள்ளநரிகள் விதித்துள்ள தண்டனையை எதிர்த்து வீதிகளில் ஆர்ப்பாட்டங்களும் பம்பாய் நகரில் வேலை நிறுத்தமும் நிகழ்ந்துள்ளன. இந்தியாவிலும் கூட உணர்வுபூர்வமான அரசியல் வெகு மக்கள் போராட்டத்தை நடத்தும் அளவிற்கு தொழிலாளி வர்க்கம் வளர்ந்துள்ளது. இதன் பொருள், ரஷ்ய பாணியில் இந்தியாவில் செயல்படும் பிரிட்டிஷ் சர்வாதிகார ஆட்சி அழிந்தே தீரும் என்பதாகும்.

ஐரோப்பிய நாடுகளில் பாட்டாளி வர்க்க இயக்கங்கள் சில பின்னடைவுகளை சந்தித்த நேரத்தில் 1913இல் ‘பின் தங்கிய ஐரோப்பாவும் முன்னேறிய ஆசியாவும்’ என்ற தலைப்பில் லெனின் எழுதிய கட்டுரையில் அவர் கூறுகிறார்:

ஆசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஜனநாயக இயக்கம் வளர்ந்து, விரிவடைந்து, வலுப்பெற்று  வருகிறது……….பல கோடி ஆசிய உழைப்பாளி மக்களுக்கு நம்பத் தகுந்த நேச சக்தியாக வளர்ந்த நாடுகளின் தொழிலாளி வர்க்கம் உள்ளது. இதன் வெற்றியை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இதன்மூலம் ஐரோப்பிய (உழைக்கும்) மக்களும் ஆசிய (உழைக்கும்) மக்களும் விடுதலை பெறுவார்கள்.

அக்டோபர் புரட்சியின் தாக்கம்

1917ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்ந்த புரட்சியில் கொடுங்கோலன் ஜார் மன்னனின் ஆட்சி ரஷ்ய மக்களால் தூக்கி எறியப்பட்டது. ஆனால் இந்த மக்கள் எழுச்சியின் தலைமை சமரச போக்கு கொண்ட கட்சிகளின் கையில் இருந்தது. நிலைமை வேகமாக மாறியது. அடுத்த சில மாதங்களில் தொழிலாளிகளும், விவசாயிகளும், போர்முனையிலிருந்து போரை நிராகரித்து பெரும் எண்ணிக்கையில் திரும்பி வந்துகொண்டிருந்த ராணுவ வீரர்களும், வீதிகளில் இறங்கி தங்கள் கோரிக்கைகளுக்காக போராடினர். இவர்களின் போராட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமான முன்னணிப் படையாக லெனின் தலைமையில் செயல்பட்டுவந்த ரஷ்ய சமூக ஜனநாயக கட்சி – போல்ஷெவிக் கட்சி –  அமைந்தது. ரஷ்யா முழுவதும் தொழிலாளிகள், விவசாயிகள், ராணுவ வீரர்கள் இணைந்த ஜனநாயக அமைப்புகள் – இவை “சோவியத்” என்று அழைக்கப்பட்டன – மிக வேகமாக பரவின.  1917 அக்டோபர் மாதத்தில் போல்ஷெவிக் கட்சியின் தலைமையில் உழைக்கும் மக்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். ரஷ்ய சோசலிச குடியரசு பிறந்தது.   ரஷ்யாவில் நிகழ்ந்த இந்த மகத்தான புரட்சி உலகெங்கும் பெரும் தாக்கத்தை விளைவித்தது. அக்டோபர் புரட்சியைக்கண்டு ஏகாதிபத்திய முதலாளித்துவ வல்லரசுகள் பதறின.

ஏன் பதறின? உழைக்கும் மக்களே ஆட்சி நடத்த முடியும்; வலுவான பொருளாதார, அரசியல், சமூக வளர்ச்சியை, திட்டமிட்ட சோசலிச பொருளாதார வளர்ச்சியை சாதித்து உழைக்கும் மக்களின் வாழ்வை பன்மடங்கு மேம்படுத்த முடியும் என்று பின்னர் உலகிற்கு நிரூபித்தது அக்டோபர் புரட்சி. இப்புரட்சியின் வர்க்கத்தன்மையை, இது முதலாளித்துவம் என்ற அமைப்பிற்கே விடப்பட்ட பெரும் சவால்; இப்புரட்சி நிலைத்துவிட்டால் முதலாளித்துவமும் முதலாளி வர்க்கமும் வரலாற்று போக்கில் காலாவதி ஆகிவிடுவர் என்பதை ஏகாதிபத்திய முதலாளித்துவம் உணர்ந்தது. எனவேதான், ஏகாதிபத்திய வல்லரசுகள் அனைத்தும் கைகோர்த்துக் கொண்டு, அக்டோபர் புரட்சியை முளையிலேயே கிள்ளி எறிய முனைந்தன. 1918 மே மாதமே 14 ஏகாதிபத்திய முகாம் நாடுகளின் துருப்புக்கள் ரஷ்யாவிற்குள் நுழைந்து எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு ஆதரவாய் போரிட்டன. ஆனால் செம்படை மக்கள் ஆதரவுடன் இரண்டு ஆண்டுகள் மிகக்கடுமையாக போரிட்டு வெற்றி பெற்றது. சோசலிச ரஷ்யாவை எளிதில் அழித்துவிடலாம் என்ற ஏகாதிபத்தியக் கனவு தகர்ந்தது. இந்த நிகழ்வுகள், ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த காலனி நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. கொடுங்கோல் ஜார் மன்னனை வீழ்த்தி, ஏகாதிபத்திய நாடுகளின் படைகளையும் விரட்டி அடித்த சோசலிச ரஷ்யாவின் மீதும், போல்ஷெவிக் கட்சி மீதும், அதன் தலைவர் லெனின் மீதும் இந்தியா உள்ளிட்ட   காலனி நாடுகளில் மிகப்பெரிய மரியாதையும் நேச உணர்வும் ஏற்பட்டன. இதன் ஒரு விளைவாக அன்றைய காலனி இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து நாட்டை விடுவிக்க வேண்டுமென்ற வேட்கையுடன், இதனை செய்து முடிக்க சோசலிச ரஷ்யா சென்று அந்நாட்டின் தலைவர்களின் ஆலோசனையும் உதவியும் பெறலாம் என்ற என்ணத்துடன் துடிப்புமிக்க பல இந்தியர்கள் ரஷ்யாவிற்கு பயணித்தனர். (இவர்களில் பலரும் தேச பக்தர்கள் தான்; கம்யுனிஸ்டுகள் அல்ல.) சிலர் ரஷ்யா சென்று திரும்பி வருகையில் ஆஃப்கனிஸ்தான் தலைநகரான காபுலில் தங்கி பிரிட்டிஷ் காலனி அரசுக்கு எதிராகவும் இந்திய விடுதலைக்காகவும் செயல்பட்டனர். 1920ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  காபுலில் செயல்பட்டுவந்த  “இந்திய புரட்சியாளர்கள் அமைப்பு” தனது பேரவை கூட்டத்தில் இந்திய விடுதலைப்போருக்கு சோவியத் ரஷ்யா அளித்த ஆதரவுக்கும், காட்டிய நட்பு உணர்வுக்கும் நன்றி தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றி லெனினுக்கு அனுப்பியது. இத்தீர்மானத்தை பெற்றுக்கொண்டு அளித்த பதிலில், லெனின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக இந்திய மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு ரஷ்ய உழைப்பாளி மக்களின் முழு ஆதரவை தெரிவித்தார்.

லெனின் பாய்ச்சிய புத்தொளி

லெனின் புரட்சி பற்றித்தான் 24 மணி நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார் என்றால் அது மிகையாகாது. மார்க்ஸீய நிலைபாட்டில் நின்று, கள அனுபவங்களின் அடிப்படையில், சமகால அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார தளங்களில் மார்க்ஸீய புரிதலை மேம்படுத்திக்கொண்டே இருந்தவர் லெனின். அந்த அடிப்படையில், அவர் வாழ்ந்த காலத்தில் ரஷ்யாவில் சோசலிச புரட்சி வெற்றிபெற தொழிலாளி-விவசாயி கூட்டு என்பது இன்றியமையாதது என்ற நிலைப்பாட்டிற்கு ஆழமான கள அனுபவமும் (குறிப்பாக, 1905 ரஷ்ய விவசாயிகளின் எழுச்சி) மார்க்சீய புரிதலும் லெனினை இட்டுச்சென்றது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜனநாயக புரட்சியில் விவசாயிகளின் பங்கு பற்றி லெனின் முன்வைத்த புரிதல் மார்க்சீயத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல் கல் எனலாம்.

மார்க்ஸ் எங்கெல்ஸ் காலத்தில் முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள வலுவான தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் சோசலிச புரட்சி நிகழும் என்ற கருத்து மேலோங்கியிருந்தது. 19ஆம் நூற்றாண்டில் 1871 பாரிஸ் நகரிலும் வேறு சில தருணங்களிலும் தொழிலாளிவர்க்கம் அரசியல் ரீதியாக கிளர்ந்து எழுந்தது என்றாலும், சோசலிச புரட்சி நடத்தி ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள இயலவில்லை. பிரிட்டன், ஃப்ரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில் சோசலிச சக்திகள் ஆட்சிக்கு வர இயலவில்லை. இப்பிரச்சினையை புரிந்துகொண்டு செயல்பட  1916 ஜூன் மாதத்தில் லெனின் எழுதி முடித்த, அவரது மிக முக்கியமான படைப்பான ஏகாதிபத்தியம் – முதலாளித்துவ வளர்ச்சியின் உச்ச (இறுதி) கட்டம்  என்றநூல் வழிகாட்டியது. இந்த நூல் ஏகாதிபத்தியம் உலகம் முழுவதையும் இணைத்துள்ள நிலையில், இந்த ஏகாதிபத்திய சங்கிலியின், இணைப்பின் பலவீனமான கண்ணியில் புரட்சி வெடிக்கக்கூடும் என்ற புதிய பார்வையை கொடுத்தது. இந்த புரிதலின் அடிப்படையில்தான் ‘ஏகாதிபத்தியம் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நுழைவாயில்’ என்று  1917 அக்டோபர் புரட்சிக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே லெனினால் கூற முடிந்தது.     அன்றைய ஏகாதிபத்திய அமைப்பின் பலவீனமான கண்ணியாக இருந்த ரஷ்யாவில் நடந்த 1917 அக்டோபர் புரட்சிக்கு தலைமை தாங்கி லெனின் கூற்று சரியென்று போல்ஷெவிக் கட்சி நிரூபித்துக்காட்டியது.[i]

இவ்வாறு தொழிலாளி-விவசாயி கூட்டணியின் அவசியத்தையும், உலக ஏகாதிபத்திய அமைப்பின் பின் தங்கிய, பலவீனமான பகுதிகளில் சோசலிச புரட்சி வெடிக்கும் வாய்ப்பு உண்டு என்பதையும் முன்வைத்ததோடு இல்லாமல், இப்புரிதலை விரிவுபடுத்தி,  கடும் காலனி ஆதிக்க சுரண்டலுக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளிலும் நாட்டு விடுதலைக்கான எழுச்சிகள் நிகழும் காலமாக ஏகாதிபத்திய காலம் அமையும் என்பதையும் லெனின் தெளிவுபடுத்தினார். வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும், ஏகாதிபத்தியத்தால் சுரண்டப்படும் காலனி நாடுகளின் உழைப்பாளி மக்களும் நேச சக்திகள் என்ற முக்கியமான கருத்தை லெனின் வலுவாக முன்வைத்தார். இவ்விரு சக்திகளும் வலுப்பெற்று அவர்கள் போராட்டங்கள் வெற்றி அடைவது மானுடம் உலகளவில் சோசலிச புரட்சியை நோக்கி பயணிக்க மிக அவசியம் என்ற புரிதலை சர்வதேச பொது உடைமை இயக்கத்தில் லெனின் கொண்டு சென்றார்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாம் மாநாடு  

19ஆம் நூற்றாண்டின் இறுதி 30 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவம் வேகமாக வளர்ந்ததுடன் தொழிலாளி வர்க்கமும் அதன் அரசியல் அமைப்புகளும் வலுப்பெற்று வந்தன. இதில் அன்றைய ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி என்ற பெயரில் இயங்கிய கம்யூனிஸ்டுகள் அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் கணிசமான இடங்களைப் பெறும் அளவிற்கு அக்கட்சி செல்வாக்கு பெற்றிருந்தது. ஆனால் ஒருகாலத்தில் ஐரோப்பாவிற்கே வழிகாட்டியாக இருந்த அக்கட்சியில் திருத்தல்வாதம் தலைதூக்கியது. இதன் விளைவாக, 1914ஆம் ஆண்டு பல நாடுகளின் தொழிலாளி வர்க்கங்களை ஒன்றிணைத்து, ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே மூண்ட லாபவெறி காக்கும் போரை எதிர்த்து உழைப்பாளி மக்கள் காவு கொடுக்கப்படுவதை தடுப்பது என்ற தனது சர்வதேசக் கட்மையை நிறைவேற்றுவதற்குப் பதில் இக்கட்சி ஜெர்மானிய பேரரசின் யுத்தத்தை ஆதரிக்கும் நிலை எடுத்தது. இந்த பின்னடைவின் அடிப்படை காரணங்களை லெனின் தனது ஏகாதிபத்தியம் நூலிலும், ‘ஏகாதிபத்தியமும் சோசலிச(இயக்க)த்தின் பிளவும்என்ற கட்டுரையிலும் விரிவாக விளக்கியுள்ளார். சோசலிசம் இவ்வாறு எதிர்கொண்ட நெருக்கடியான பன்னாட்டு சூழலில், அக்டோபர் புரட்சிக்கெதிராக ஏகாதிபத்திய வல்லரசுகள் படையெடுத்த பின்னணியில்தான் 1919ஆம் ஆண்டு மார்ச் 2 முதல் 6 வரை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியில் மாஸ்கோவில் நடந்த சர்வதேச மாநாட்டில் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை நோக்கி உலகம் பயணித்திட உதவும் இலக்குடன்  பல்வேறு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சக்திகளையும் உறுப்பினர்களாக கொண்ட, பரஸ்பர உதவிக்கான அமைப்பாக “கம்யூனிஸ்ட் அகிலம்” என்ற புதிய அமைப்பு பேரியக்கமாக பிறந்தது. 

கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாம் மாநாடு 1920ஆம் ஆண்டு ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெற்றது.துவக்க நிகழ்ச்சிகள் மட்டும் பெட்ரோகிராட் நகரில் நடந்தன. பின்னர் மாநாடு மாஸ்கோவில் நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட பல காலனி நாடுகளில் விடுதலை போராட்டங்களில் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை எவ்வாறு இருக்கவேண்டும் என்பது பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க விவாதம் இடம் பெற்றது. இதில் லெனின் அவர்களின் பங்கு மிக முக்கியமானது.

தேச விடுதலை போராட்டங்களும் கம்யூனிஸ்ட் அகிலமும்

இந்த மாநாட்டின் ஒரு முக்கிய விவாதப்பொருள் ‘காலனி நாடுகளின் பிரச்சினை’ என்பதாகும். இப்பிரச்சினை குறித்து, அச்சமயம் நிலவிய உலக சூழலை கணக்கில் கொண்டு, லெனின் சமர்ப்பித்த முன்மொழிவுகள் கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்டிருந்தன:

·          உலகளவில் ஒடுக்கும் தேசங்கள், ஒடுக்கப்படும் தேசங்கள் என்று நாடுகள் வேறுபடுத்தி பார்க்கப்பட வேண்டும். கம்யூனிஸ்ட் அகிலம் ஒடுக்கப்படும் தேசங்களின் மக்கள் பக்கம் நிற்கும்.

·          ஏகாதிபத்திய நாடுகள் நடத்திய முதல் உலகப் போருக்குப்பின் உலக அரசியல் அமைப்பிலும் பல்வேறு தேச மக்களுக்கு இடையிலுமான பரஸ்பர உறவுகள், சோவியத் ரஷ்யா, அதன் தலைமையில் உள்ள பல சோவியத் குடியரசுகள் மற்றும் சோவியத் வடிவிலான ஜனநாயக இயக்கங்கள் ஆகியவற்றின் மீது விரல்விட்டு என்ணக்கூடிய ஏகாதிபத்திய நாடுகள் நடத்தி வரும்  யுத்தத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது.

·         பின்தங்கிய காலனி நாடுகளில் எந்த தேச விடுதலை இயக்கமும் முதலாளித்துவ ஜனநாயக தன்மை கொண்டதாகத்தான் இருக்க முடியும். காரணம், இங்கு மக்களில் பெரும்பகுதியினர் தம்வயம் உற்பத்திக்கருவிகளை வைத்துக்கொண்டு, சிறு/குறு/பெரு சுய உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள். இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவது முதலாளித்துவ உற்பத்தி உறவுகளே. எனினும், பின்தங்கிய, காலனி நாடுகளில் நடந்துவரும் தேச விடுதலைக்கான போராட்டங்களை “தேசீய-புரட்சிகர” இயக்கங்கள் என்று கம்யூனிஸ்ட் அகிலம் வரையறுக்கிறது. காரணம், இந்த இயக்கங்களின் தலைமையும் தன்மையும் எல்லா இடங்களிலும், எல்லா கட்டங்களிலும் முதலாளித்துவ-ஜனநாயகத்தன்மையுடன் தான் இருக்கவேண்டும் என்பது அவசியம் அல்ல.

·         கம்யூனிஸ்டுகள் என்ற முறையில் நாம் (அகிலம்) காலனிகளில் முதலாளி வர்க்கத்தினர் தலைமையிலான தேச விடுதலை இயக்கங்களுக்கு கீழ்க்காணும் நிபந்தனைகளுடன் ஆதரவு அளிப்போம்:  அவை உண்மையில் புரட்சிகரமாக இருக்கவேண்டும். மேலும் இந்த இயக்கத்தவர், நாம் சுரண்டப்படும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் புரட்சிகர உணர்வுபெறும் வகையிலும் கல்வியூட்டி, அமைப்புரீதியாக திரட்டுவதற்கு தடையாக இருக்கக்கூடாது.

·          வளர்ந்த நாடுகளின் தொழிலாளி வர்க்கம் பின் தங்கிய காலனி நாடுகளின் உழைப்பாளி மக்களுக்கு உதவ வேண்டும்.

·          சோவியத் குடியரசுகளில் வெற்றி பெற்றுள்ள தொழிலாளி வர்க்கம் பின்தங்கிய நாடுகளுக்கு ஆதரவு அளிக்கவேண்டும். இது சாத்தியமாகும் பொழுது, பின்தங்கிய நாடுகள் முன்னேறுவது சாத்தியமாகும்.

அகிலத்தின் லெனினிய நிலைபாடும் இந்தியாவும்

1920இல் நிலவிய இந்திய சூழலுக்கு இவை பொருத்தமாகவே இருந்தன. இந்தியாவில் 1880களிலேயே முதலாளிவர்க்கம் அரசியல் களத்திற்கு வந்துவிட்டது. அதன் அரசியல் கருவியாகத்தான் இந்திய தேசீய காங்கிரஸ் உருவானது. அங்கொன்றும் இங்கொன்றுமாக 1860களிலிருந்தே தொழிலாளிகளின் போராட்டங்கள் நிகழ்ந்திருந்தபோதிலும், தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் பிரவேசம் 1920களில் தான் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஏற்படத் துவங்கியது. ஆகவே, இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைமை முதலாளி வர்க்கத்திடம் தான் இருந்தது. அதேசமயம் காந்தி அவர்கள் விடுதலை இயக்கத்தில் முக்கிய பங்கு ஆற்றத்துவங்கிய பிறகுதான் அது விரிவான மக்கள் இயக்கமாக மாறத்துவங்கியது. இதில் கோடிக்கணக்கான விவசாயிகளின் பங்கேற்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அன்றைய நிலமையில் துவக்க நிலையில் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கம் அடுத்துவந்த பல பத்தாண்டுகளில் தேச விடுதலை போராட்டத்தில் இருந்து தனிமைப்பட்டு விடாமல் இருக்க கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாம் மாநாட்டு வழிகாட்டுதல் பெரிதும் உதவியது. அகிலத்தின் இரண்டாம் மாநாட்டின் காலனி எதிர்ப்பு இயக்கங்கள் தொடர்பான நிலைபாட்டை உருவாக்கியதில், ஆழ்ந்த மார்க்ஸீய தத்துவார்த்த ஞானத்துடன் இப்பிரச்சினையைப்பற்றி லெனின் முன்வைத்த கருத்துக்கள் ஆகப்பெரிய பங்கு வகித்தன.


[i] 1916ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லெனின் எழுதிய ‘ஏகாதிபத்தியமும் சோசலிசத்தில் பிளவும் என்ற முக்கியமான கட்டுரை. மேலை நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர வளர்ச்சியை தடுப்பதில் காலனிகளை ஏகாதிபத்திய நாடுகள் சுரண்டி அபரிமிதமான உபரிகளை பெறமுடிந்த நிலை எத்தகைய பங்கு ஆற்றியது என்று இக்கட்டுரையில் விளக்குகிறார். (https://www.marxists.org/archive/lenin/works/1916/oct/x01.htm)

லெனின் 150: புதியதொரு சகாப்தம்

பிரகாஷ் காரத்
தமிழில்: ச. லெனின்

(ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத ‘ஃபிரண்ட்லைன்’ இதழில் வெளியான கட்டுரை)

வாசித்தவர்: உ.வாசுகி

வரலாற்றுச் சிறப்புமிக்க ரஷ்யப் புரட்சி உலகம் முழுமைக்குமான ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில் (2017) இருபதாம் நூற்றாண்டின் நிகழ்வுகளை சற்றே பின்னோக்கிப் பார்ப்பது ரஷ்யப் புரட்சியின் முக்கியத்துவம் மற்றும் அதன் தற்கால பொருத்தப்பாடு குறித்து மதிப்பிட உதவும்.

மனிதகுல வரலாற்றிலேயே தன்னைச் சுரண்டிய ஆளும் வர்க்கத்தைத் தூக்கியெறிந்துவிட்டு சுரண்டலற்ற ஓர் அரசு உருவானது ரஷ்யப் புரட்சியால்தான். அதன் மூலமே முதலாளித்துவத்திற்கு உறுதியானதொரு மாற்றாக சோஷலிசம் உலக வரலாற்றில் முதன்முறையாக முன்னுக்கு வந்தது. தற்கால உலகிலும் ரஷ்யப் புரட்சி நீடித்த பொருத்தமுடையதாக இருப்பதற்கு இந்த உள்ளீடே சான்றாகும்.

ரஷ்யப் புரட்சி என்பது ஜாரின் எதேச்சாதிகாரத்திற்கு எதிரான புரட்சி மட்டுமல்ல; அது ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு எதிரான சோஷலிச குணாம்சம் கொண்ட ஒரு புரட்சியாகும். இதற்கு ஒரு சர்வதேசிய முக்கியத்துவம் உண்டு. லெனினோ, போல்ஷ்விக்குகளோ இப்புரட்சியை தங்கள் நாட்டிற்கு மட்டுமேயானதாகப் பார்க்கவில்லை. அவர்கள் இதை உலக சோஷலிச புரட்சிக்கான முன்னோடியாகவே பார்த்தனர்.

ரஷ்யப் புரட்சியை அதன் ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கத்தைப் பிரித்து விட்டு புரிந்துகொள்ள முடியாது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மார்க்சிய புரிதலை லெனின் மேம்படுத்தினார். அது அவரது உண்மையான, முக்கியமான பங்களிப்பாகும். இந்தப் புரிதலை அடிப்படையாகக் கொண்டே புரட்சிக்கான உத்தி உருவாக்கப்பட்டது. முதலாளித்துவத்தின் உலகளாவிய வளர்ச்சியின் அம்சத்தை மார்க்ஸ் முன்னுணர்ந்திருந்த போதிலும் அவரின் மறைவிற்குப் பிறகே முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக வளர்ந்தது.

மார்க்சிய அணுகுமுறையில் லெனினுக்கு இருந்த மேதமையின் விளைவாக ஏகபோக முதலாளித்துவத்திற்குத் தவிர்க்க முடியாத தேவையாக, உலகளாவிய அமைப்பு முறையைக் கொண்ட ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சி உள்ளது என்பதை அவர் கண்டுணர்ந்தார். இதை உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான உறுதியான நடைமுறையோடும், நீண்ட கால உத்தியோடும் அவர் இணைத்தார்.

முழுமையானதொரு முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்திற்குப் பிறகே சோஷலிசப் புரட்சி சாத்தியம் என்ற வழக்கமான மார்க்சிய புரிதலை லெனினின் இந்த ஏகாதிபத்தியம் பற்றிய புரிதல் உடைத்தெறிந்தது. முதலாளித்துவ வளர்ச்சி முழுமையடையாத நிலையிலும் கூட ஏகாதிபத்திய காலகட்டத்தில் ஏற்றத்தாழ்வான முதலாளித்துவ வளர்ச்சியின்போதும் சோஷலிசப் புரட்சி வெற்றியடையும் சாத்தியம் உள்ளது என லெனின் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த உலகமும், உலக முதலாளித்துவ முறைமையின் கீழ் ஏகாதிபத்தியத்தால் கொண்டுவரப்பட்டுவிட்டது. அதன் பலவீனமான கண்ணியில் தாக்குதல் தொடுத்தால் அதை உடைத்தெறிய முடியும் என்றார் லெனின். ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகளின் விளைவே முதலாம் உலகப் போர் என்றும் அதன் விளைவாக ஜாரின் ஆளுகையில் இருந்த ரஷ்யா அத்தகைய பலவீனமான கண்ணியாக உள்ளது என்பதையும் லெனின் தான் முதலில் சுட்டிக் காட்டினார்.

ரஷ்யப் புரட்சியின் இரண்டாவது முக்கியமான நீண்டகால உத்தி என்பது சோஷலிசப் புரட்சியைக் கட்டியமைக்க முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை தொழிலாளி வர்க்கம் தலைமையேற்று நடத்தலாம் என்பதாகும். எவ்விதத் தடையுமின்றி சோஷலிச கட்டத்தை அடைய தொழிலாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சிக்குத் தலைமை ஏற்க வேண்டியதன் அவசியம் குறித்து முதன்முதலில் வாதாடியதும் லெனின்தான்.

முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கும் சோஷலிசப் புரட்சிக்கும் இடையே மிகப்பெரிய சீனப் பெருஞ்சுவர் எதுவும் இல்லை என்றார் லெனின். இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே ஜார் ஆட்சியைத் தூக்கியெறிந்த பிப்ரவரி புரட்சிக்குப் (முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி) பிறகு, “ புரட்சி இதோடு முடிவடைந்துவிடவில்லை; சோஷலிசப் புரட்சியை நோக்கி நாம் முன்னேற வேண்டும்” என்று லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி அறைகூவல் விடுத்தது.

இத்தருணத்தில் லெனின் நாடு கடத்தப்பட்டிருந்தார். பிப்ரவரி புரட்சியின்போது தாயகம் திரும்பிய லெனின், தனது “ஏப்ரல் ஆய்வுரை”யில் பிப்ரவரி புரட்சியானது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் முழுமையை அடைந்து விட்டது என்று வாதிட்டார். இந்தப் புரட்சிக்குப் பிறகு அமைந்துள்ள முதலாளித்துவத் தலைமையை உழைக்கும் வர்க்கம் ஏற்கக் கூடாது; நாம் மேலும் முன்னேறி தொழிலாளி- விவசாயிகளை அணிதிரட்டி, அதிகாரத்தைக் கைப்பற்றி சோஷலிச கட்டத்தை அடைய வேண்டும் என்றார் லெனின்.

முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை தொழிலாளி வர்க்கம் தலைமையேற்று நிறைவேற்றிய பிறகு சோஷலிச கட்டத்தை நோக்கி முன்னேறுவதற்கு படைப்பாற்றல் மிக்க இரண்டு முக்கியமான உத்தியை போல்ஷ்விக் கட்சி மேற்கொண்டது. ஒன்று விவசாயத் திட்டம்; மற்றொன்று தேசிய இனங்கள் குறித்த திட்டமாகும்.

விவசாயி-தொழிலாளி ஒற்றுமையை உருவாக்கும் உத்தியை கருத்தில் கொண்டே விவசாயத் திட்டம் உருவாக்கப்பட்டது. நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்போம் என்ற முழக்கத்தின் மூலம் தொழிலாளர்களுடன் ரஷ்ய விவசாயிகளை அணிசேர்க்க முடியும். முதலாளித்துவம் வளர்ந்து வரக்கூடிய அரைநிலப்பிரபுத்துவ நாட்டில் லெனின் புரட்சிக்கான உத்தியாக விவசாயி-தொழிலாளர்களின் ஒற்றுமையை முன்வைத்தார். “முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்குப் பிறகு, நிலப்பிரபுத்துவத்திற்கு முடிவு கட்டுங்கள்; உழுபவனிடமே நிலத்தை ஒப்படையுங்கள்!” என்ற கோரிக்கையை முன்வைத்து போல்ஷ்விக்குகள் வாதிட்டனர்.

இதையே “அமைதி, நிலம், ரொட்டி(உணவு)” என்ற ரஷ்யப் புரட்சியின் முழக்கம் எதிரொலித்தது. நிலப்பிரபுத்துவத்திற்கு முடிவு கட்டுவது; நிலக் குவியலை உடைத்தெறிவது என்ற போல்ஷ்விக்குகளின் உறுதியான திட்டமே ரஷ்யப் புரட்சியில் விவசாயி-தொழிலாளியை ஓரணியில் நிற்க வைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. பிப்ரவரி புரட்சி வரையில் ஆலைத் தொழிலாளர்களும் ஜார் ஆட்சி ராணுவத்தில் அதிருப்தியோடு இருந்த வீரர்களுமே போல்ஷ்விக் கட்சியில் அதிகம் இருந்தனர். இந்த ராணுவ வீரர்களைத்தான் ‘சீருடையில் உள்ள விவசாயிகள்’ என லெனின் அழைத்தார். ஜாரின் ராணுவம் வெறிச்சோடிக் கலைந்தபோது இந்த ராணுவ வீரர்களே ‘உழுபவனுக்கே நிலம்’ என்ற போல்ஷ்விக்குகளின் செய்தியை விவசாயிகளிடம் எடுத்துச் சென்றனர்.

தேசிய இனங்கள் குறித்த பிரச்சனைகள்

ஜாரின் ஆதிக்கத்தில் இருந்த ரஷ்யா பல்வேறு தேசங்களை உள்ளடக்கிய ஒரு பேரரசாக இருந்தது. ஜாரின் எதேச்சாதிகார நுகத்தடியின் கீழ் நூற்றுக்கும் அதிகமான தேசிய இனங்கள் அடிமைப்பட்டு இருந்தன. ஜார் பேரரசின் தேசிய ஒடுக்குமுறையால் வேதனையுற்றவர்களுக்கு தேசியம் குறித்த கேள்விகள் முக்கிய அம்சமாக இருந்தன. ஜாரை தூக்கியெறியும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையை முதன்முதலில் போல்ஷ்விக்குகளே முன்வைத்தனர்.

“பிரிந்து செல்வதற்கான முழு உரிமை; விரிவான, தேசிய மற்றும் உள்ளூர் தன்னாட்சி, சிறுபான்மையினருக்கு விரிவான உரிமைகள்” ஆகியவையே தேசிய இனங்கள் குறித்த பிரச்சனைகளுக்கு புரட்சிகர தொழிலாளர்களின் திட்டம் என லெனின் பதிலளித்தார். பல்வேறு தேசிய இனங்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் உத்தியை போல்ஷ்விக்குகள் கையாண்டதே ரஷ்யப் புரட்சிக்கு முன்பும் பின்பும் ஆன வெற்றிக்குக் காரணமாகும். இத்தகைய பல்வேறு தேசிய இனங்களின்  ஒருங்கிணைவே சோவியத் சோஷலிச ஒன்றியங்களின் குடியரசு அமைய அடித்தளம் இட்டது.

தேசிய இனங்கள் குறித்த இந்த உத்தி ரஷ்யாவிற்கான அடித்தளம் மட்டுமல்ல; இதையே பின்னர் 1920ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் அகிலத்தில் தேசிய இனங்கள் குறித்த பிரச்சனைகளுக்கான தீர்வாகவும் லெனின் முன்வைத்தார். இதன் மூலம் காலனியம், தேசியம் குறித்த பிரச்சனைகளுக்கான நீண்ட கால, நடைமுறை உத்திகளுக்கு ரஷ்யப் புரட்சி ஒரு புதிய வழியைக் காட்டியது.

அரசும் புரட்சியும்

அரசு அதிகாரத்தைக் கையில் எடுப்பதில் ரஷ்யப் புரட்சி கவனம் செலுத்தியது. ஆளும் வர்க்கத்தின் கீழ் இருந்த அரசைத் தூக்கி எறிந்துவிட்டு தொழிலாளி வர்க்கம் ஒரு புதிய அரசை நிறுவ வேண்டியது அவசியம் என்று ரஷ்யப் புரட்சிக் காலத்தில் எழுதப்பட்ட அரசும் புரட்சியும் என்ற நூலிலேயே லெனின் அழுத்தமாகக் கூறியிருந்தார். 1871-இல் நிகழ்ந்த பாரீஸ் கம்யூன் அனுபவங்கள் குறித்த மார்க்சின் பகுப்பாய்வை கருத்தில் கொண்டே, அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது புரட்சியின் மையமான பணி என்று லெனின் கூறினார். இந்த தத்துவார்த்த ரீதியான உறுதிதான் முதலாளித்துவ அமைப்பிற்கு உள்ளேயே சீர்திருத்த நடவடிக்கைகள் போதுமானது என்று பேசிய சமூக ஜனநாயக வாதத்தை உடைத்தெறிந்தது.

உலக அளவிலான தாக்கம்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை ஏகாதிபத்தியங்களின் பேரரசுகளே நீடித்து வந்தன. பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்ட்ரோ-ஹங்கேரி, ஜப்பான், ரஷ்யா ஆகிய பேரரசுகளே உலகை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்தன. இத்தாலி, போர்ச்சுக்கல் போன்ற சிற்றரசுகளும் இருந்தன. இத்தகைய பழைய காலனிய முறைக்கெல்லாம ரஷ்யப் புரட்சி முடிவு கட்டியது. ஜார் பேரரசு தூக்கி எறியப்பட்ட அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு உலகில் அநேகமாக ஒரே ஒரு பேரரசு மட்டுமே எஞ்சியிருந்தது.

தொழிலாளர் –விவசாயிகளின் கூட்டுறவில் எழுந்த ரஷ்யப் புரட்சி காலனிய, அரைக்காலனிய நாடுகளில் விடுதலைக்கான போராட்டங்களுக்கு வலுவான உந்துதலைக் கொடுத்தன. ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்கப் பகுதிகளில் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு அது ஊக்கமளித்தது. காலனிய நாடுகளில் நடைபெற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு சோவியத் அரசு தனது முழு ஆதரவை நல்கியது. இந்தியாவிலும் கூட ரஷ்ய நாட்டின் விவசாயி-தொழிலாளர் புரட்சியானது இந்திய தேசிய காங்கிரஸ், புரட்சிகர குழுக்களைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் மத்தியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஜனநாயகத்திற்கான போராட்டங்களிலும் ரஷ்யப் புரட்சியின் வலுவான தாக்கம் இருந்தது. பாசிசமே ஜனநாயகத்தின் மிகப்பெரும் எதிரியாகும். பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் உலக கம்யூனிஸ்டுகளும் சோவியத் ரஷ்யாவும் அளப்பரிய தியாகத்தை செய்தனர். பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தில்  சுமார் இரண்டரை கோடி சோவியத் மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.

மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் நாடாளுமன்ற-ஜனநாயக முறையைப் பின்பற்றினாலும் கூட, பொருளாதாரத்தில் அவை எதேச்சாதிகாரத்தையே அமலாக்கி வந்தன. இங்கிருந்த தொழிலாளி வர்க்கம் தங்கள் நாடுகளில் போராட்டங்களை நடத்தி குறிப்பிடத்தக்க பயன்களை பெற்றது. சோவியத் ஒன்றியத்தின் தாக்கத்தின் விளைவாகவே மேற்கு ஐரோப்பாவில் தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி, ஓய்வூதியம் போன்ற பல மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.

ரஷ்யப் புரட்சியானது உலகப் புரட்சிகர இயக்கங்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் வழிகாட்டியாக விளங்கியது. ஆசியாவில் சீனா, வியட்நாம், கொரியாவிலும், பின்னர் உலகின் மேற்குப் பகுதியில் இருந்த கியூபாவிலும் புரட்சிகள் வெற்றிகரமாக நடந்தேறவும், உடனடி மற்றும் நீண்டகால உத்திகளுக்கான தத்துவார்த்த அடித்தளத்தையும் அது வழங்கியது.

ரஷ்யப் புரட்சி நடந்து முடிந்து நூறாண்டுகளுக்குப் பிறகும் கூட அதன் பெருமையைச் சீர்குலைக்கும் வேலைகள் தொடர்ந்து நடைபெற்ற வருகின்றன. ரஷ்யாவில் தீவிரவாதத்தின் மூலம் சர்வாதிகார அரசு அமைக்கப்பட்டது என்பது போன்ற சதித்தனமான எழுத்துக்கள் ஆற்று வெள்ளம்போல் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையிலும் கூட அந்த முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2017 நவம்பர் 7ஆம் தேதி வெளியான ‘கார்டியன்’ இதழின் தலையங்கம் இவற்றுக்குப் பதில் சொல்லும் முறையில் அமைந்துள்ளது. அதில் “ரஷ்யப் புரட்சியின் தன்மையை திருத்திக் கூறுவதற்கு ஏன் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியான முயற்சிகள் நடந்து வருகின்றன? ஏனெனில் திடுக்கிடும் வகையில் அதற்கான பொருத்தப்பாடு இன்றும் நீடித்து வருகிறது. புதிய தாராளவாத முதலாளித்துவம் நெருக்கடியில் ஆழ்ந்துள்ள இத்தருணத்தில், ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்கத்தைத் தொடர்ந்து நீடித்துவரும் இவ்வேளையில், உலக அளவிலான ஏற்றத்தாழ்வு அதற்கு முந்தைய நிலைகளை எல்லாம் விஞ்சியுள்ள நிலையில், முதலாளித்துவத்தின் அதீதமான பேராசையால் உலக அளவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள சீரழிவு போன்றவற்றுக்கு ரஷ்யப் புரட்சி பதில் அளிக்கிறது. இவை இவ்வாறு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு மாற்று உள்ளது. அதுதான் சோஷலிசம்” என்று குறிப்பிட்டுள்ளது.

அக்டோபர் புரட்சியைப் போன்றதொரு புரட்சி மீண்டும் உருப்பெறாது என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எனினும் அக்டோபர் புரட்சி நடைபெற்று முடிந்து நூறாண்டுகளுக்குப் பிறகும் கூட அதைத் தொடர்ந்த 20ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தேறிய புரட்சிகளின் அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது எதிர்காலத்தில் உருவாக இருக்கின்ற புரட்சிகள், அக்டோபர் புரட்சியின்போது நிலவிய, சாதாரண, ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீரர்கள் ஆகியோர் தங்கள் எதிர்காலத்தை தங்களது கைகளில் எடுத்துக் கொண்டார்கள் என்ற அத்தியாவசியமான அம்சங்களின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்படும் என்று கூறுவதே இங்கு பொருத்தமானதாக இருக்கும்.

நன்றி: ஃபிரண்ட்லைன்

பெரியார் – சுயமரியாதை இயக்கமும் சோசலிசமும்

(புது தில்லியில் கடந்த 2018, ஜனவரி 3-4 தேதிகளில், அம்பேத்கர் பல்கலைகழகமும், அசோகா பல்கலைகழகமும் இணைந்து நடத்திய ‘திராவிடவியல், தேசியம், கூட்டாட்சித்தத்துவம்’ என்ற தலைப்பிலான ஆய்வரங்கத்தில் முன்வைக்கப்பட்ட கட்டுரை. )

ஆர்.விஜயசங்கர் (ஆசிரியர், பிரண்ட்லைன்)

தமிழில்: ரமணி

தென்னிந்திய லிபரல் கூட்டமைப்பும் (South Indian Liberal Federation) 1916ல் வெளியிடப்பட்ட பிராமணரல்லாதோர் கொள்கை அறிக்கையும் சென்னை மாகாணத்தில் ஒரு புதிய அரசியல் போக்கு மலர்ந்ததையும்,  அது சென்னை மாகாணத்தின் அரசியல் தளத்தில் செல்வாக்கு செலுத்தவுள்ளது என்பதையும், அது மட்டுமல்லாமல் பிற்காலத்தில் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக செல்வாக்கை செலுத்திக் கொண்டிருக்கும் என்பதையும் வெளிப்படுத்துவதாக அமைந்தன. அவர்களின் அரசியல் கொள்கைகளைத் தாங்கி வந்த ‘நீதி’ என்ற பத்திரிக்கையின் பெயரைக் கொண்டு, அந்தக் கூட்டமைப்பானது  ‘நீதிக்கட்சி’ என்றே அறியப்பட்டது. அந்த (பிராமணரல்லாதோர் கொள்கை) அறிக்கை அன்றைக்கு நிலவிவந்த சிக்கலை  கீழ்வருமாறு முன்வைத்தது:

(மெட்ராஸ்) மாகாணத்தின் மக்கள் தொகையான 4 கோடி 15 லட்சம் பேரில், 4 கோடிப் பேர் பிராமணர் அல்லாதவர்கள். வரி செலுத்துவோரில் கணிசமானவர்கள் அதே பிரிவைச் சார்ந்தவர்கள். அவர்களில் ஜமீந்தார்கள், நிலப்பிரபுக்கள் மற்றும் விவசாயிகளும் அடங்குவர்.  அன்றைய மெட்ராசில் நிலவிவந்த நிலைமை என்னவென்றால் பெரும்பான்மையாக இருந்த அவர்கள் அதற்குரிய அந்தஸ்தோடு அரசியலில் பங்காற்ற முடியவில்லை.  தேசத்தின் பொது அரசியலில் தங்களது செல்வாக்கை குறைந்த அளவே  செலுத்த முடிந்தது; அல்லது முற்றாக செலுத்த இயலவில்லை. திட்டமிட்டு முயற்சியில் ஈடுபடக்கூடிய இன்றைய காலகட்டத்தில் அவர்களின் பொதுநலனை பாதுகாக்க, வளர்த்தெடுக்க அவர்களுக்கென ஒரு அமைப்பு இல்லை. அரசியலில் எதிராளியை, மற்றும் எதிரணி நிபுணர்களை எதிர்கொள்ள அதே அளவு தகுதியுள்ள அவர்களது தரப்பு உண்மைகளை எடுத்துரைக்க தகுதியான நபர்கள் அவர்கள் சார்பில் யாருமில்லை; பத்திரிகையும் இல்லை.  ஆகையால் அவர்களது அரசியல் செல்வாக்கு (15 லட்சமே உள்ள பிராமணர்களோடு ஒப்பிடும் போது) கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியது.

அந்த அறிக்கை எவ்வாறு பிராமணரல்லாத சமூகம் பாதிப்பிற்கு ஆளானது என்பதை எடுத்துரைக்கிறது.  மெட்ராஸ் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினர் சர். அலெக்சாண்டர் கார்டியு அவர்களின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி 1892க்கும்  1904க்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற மாகாண ஆட்சிப்பணித் தேர்வுகளில் (Madras Provincial Civil Services) வெற்றி பெற்ற பதினாறு பேரில் பதினைந்து பேர் பிராமணர்கள் என்பதை தெரிவித்துள்ளது.  கார்டியு அவர்கள் கூற்றுப்படி உதவிப் பொறியாளர்கள், துணை ஆட்சியர்கள், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் ஆகிய பதவிகளை பிராமணர்கள் ஏகபோகமாக அனுபவித்து வந்தது தெட்டத் தெளிவாக தெரிய வருகிறது.  மெட்ராஸ் பல்கலைக் கழகம், மெட்ராஸ் சட்டப் பேரவை போன்ற அமைப்புகளிலும் இதே நிலைமையே தொடர்ந்தது. அரசியல் தளத்தில் அந்த கொள்கை அறிக்கை சுட்டிக் காட்டியிருப்பது என்னவென்றால் மெட்ராஸ் மாகாணத்திலிருந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்வான பதினைந்து பேரும் பிராமணர்களே.  இது எவ்வாறு அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும் என்ற கேள்வியை அறிக்கை எழுப்பியுள்ளது.

அந்த கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், உயர்மட்ட அதிகார மையங்களில் இருந்து பெறப்பட்ட சான்றாதாரங்களைக் கொண்டிருந்தன. மற்றவர்களைக் காட்டிலும் பிராமணர்களுக்கு  காலங்காலமாக  கிட்டிய கல்விப் பின்புலம், அதன் தொடர்ச்சியாக நவீன கல்வி, குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டு முற்பகுதியில் ஆங்கிலக் கல்வி கற்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த உண்மையை பிரிட்டிஷ் அரசு ஆவணப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பிராமணர்கள்  உயர்கல்வியில் மேலாதிக்கம் பெற்றவர்களாக இருந்தனர்.  1881-82ல் இருந்த பொதுக் கல்வி இயக்ககத்தின் அறிக்கை  (Director of Public Instruction) குறிப்பிடுவது என்னவென்றால், நுண்கலை மற்றும் இளங்கலை இரண்டு பிரிவுக்கும் சேர்த்து நடத்தப்பட்ட தேர்வுகளில் 125 பிராமணர்களுக்கு ஒருவர் வீதமும் 5,888 இதர இந்துக்களுக்கு ஒருவர் வீதம் இருந்ததாக தெரிவிக்கிறது.  சிவில் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வேளாண்மை பள்ளிக்கூடங்கள் பெரும் எண்ணிக்கையில் பிராமண சமூகத்தைச் சார்ந்த மாணவர்களை ஈர்ப்பதும் அதே சமயம் இளங்கலை அறிவியல் படிப்பில் அதிகமாகும் ஏற்றத்தாழ்வு அதே அளவில் இருந்து வருவதையும் சுட்டிக் காட்டுகிறது.

ஆங்கிலவழி உயர்கல்வியில் பிராமணர்களின் ஏகபோகம், 1857ல் நடந்த முதல் சுதந்திரப் போருக்குப் (சிப்பாய் கலகம்) பின்னர் விரிவடைந்த, மத்தியத்துவப்படுத்தப்பட்ட, மற்றும் இந்திய மயமாக்கப்பட்ட அதிகார வர்க்கப் பணியிடங்களிலும் பிராமணர்கள் ஏகபோகமாக அனுபவிப்பதற்கு வழிவகுத்தது.   நிபுணத்துவ துறைகளான (liberal professions) சட்டம், மருத்துவம், மற்றும் ஆசிரியப் பணி ஆகியவற்றில் அவர்களின் மேலாதிக்கம் சரியாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிராமணர்கள், பிராமணர் அல்லாதவர்கள் என இரு பிரிவாகப் பிரித்து ஒரு சட்டகத்துக்குள் அடக்குவதன் பல்வேறு அடிப்படைகளில், பிரிட்டிஷ் அரசு இந்தியாவை காணும் பார்வையும் ஒன்றாகும்.   தினமும் அரசு நிர்வாகத்தில், கிட்டத்தட்ட வாழ்வின் அனைத்து தளங்களிலும் எதிர்கொள்ளவேண்டிய மிகவும் சிக்கலான சாதி-மத பிரமைகளை உள்வாங்கி  முடிவுகளை மேற்கொள்ள வேண்டியது ஆட்சியாளர்களின் நடைமுறைத்தேவையாக எழுகிறது.  துப்புரவான ஆங்கிலேய அல்லது காலனி ஆதிக்க வகைப்படுத்துதலை சமூகத்தின் மீது திணிப்பதன் வழியாக தனது கட்டுப்பாட்டைக் கொண்டுவர பிரிட்டிஷ் ஆட்சி விரும்பியது.  உள்ளூர் சமூகமோ அவர்களின் வகைப்படுத்துதலில் காணப்பட்ட துல்லியத்தன்மையோ, துப்புரவினையோ கொண்டிருக்கவில்லை.  பிரிட்டிஷ் ஆட்சியின் சொற்பயன்பாடுகள் பெரும் எண்ணிக்கையிலான உள்பிரிவுகளை ஒன்றாக்கி ஒரே வகைப்பாட்டில் அடக்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  சென்னை மாகாணத்தில் இருந்த பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறித்து கல்வித் துறையின் அறிக்கையை “இர்சிக்” சுட்டிக் காட்டுகிறார்.  1870-71 வாக்கில் கல்வித்துறையானது பள்ளி மாணவர்களை  பிராமணர்கள், இதர இந்துக்கள், கிழக்கிந்தியர்கள், ஐரோப்பியர்கள், முகமதியர்கள், தேசிய கிறிஸ்துவர்கள் மற்றும் பார்சிகள் என பிரித்தது.  1880-ன் முற்பகுதியில் இந்துக்களின் வகைப்பாடு  பிராமணர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் இதர இந்துக்கள் என மாற்றியமைக்கப்பட்டது. அந்த நூற்றாண்டின் இறுதிவாக்கில் பிராமணர்கள், பிராமணர் அல்லாதவர்கள் என வகைப்படுத்தப்பட்டது.

சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் தலைவர்களாக,  பிராமணர் அல்லாத நான்கு கோடி பேர்களின் பிரதிநிதியாக, பிராமணர்கள் இருப்பதை இந்த கொள்கை அறிக்கை கேள்விக்குள்ளாக்கியது. இதே விதமாக பிரதிநிதித்துவ உரிமை குறித்த கேள்வியை வர்க்க நோக்கில் முன்வைத்தோமென்றால் அது நீதிக் கட்சியின் தலைமைக்கு சரியாகவே பொருந்தியது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஏ.என். சட்டநாதன் (1969) குறிப்பிடுகிறார், நெருக்கமாக பிணைக்கப்பட்ட சமூகத்தில் பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாத, அவர்களை அறிந்திராத, அவர்கள் மொழியில் உரையாடாத  பணக்காரர்களில் உயர் வகுப்பினருடையதாகவே அந்த அமைப்பு இருந்தது. சமூகத்தை மாற்றியமைக்கும் நோக்கமோ அல்லது பெரும்பான்மை மக்கள் பயனுற அவர்களின் வாழ்நிலையை உயர்த்தும் நோக்கமோ அவர்களுக்கு இல்லை. … உள்ளூர் சுயாட்சி அமைப்புகளின் ஏற்பாடாக அமைந்த மாவட்ட அவைகளிலும், பொதுச் சேவைகளிலும் பிராமணர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், டாக்டர் அன்னி பெசண்ட் அம்மையாரால் துவக்கப்பட்டு சென்னையில் பிரபலமடைந்த “ஹோம் ரூல்” இயக்கத்திலும் பிராமணர்கள் செல்வாக்கு பெருகிவருவதைக் குறித்துமே அவர்கள் கவலைப்பட்டனர்.

நீதிக் கட்சி கட்டமைக்க விரும்பிய ‘பிராமணர் அல்லாதார் அடையாளத்தின்’ உள் முரண்பாடுகள், நீதிக்கட்சி தொடங்குவதற்கு பத்தாண்டுக்கு முன்னதாகவே தெரியத் தொடங்கியிருந்தன. தமிழ் நாட்டின் சமூக-பொருளாதார வரலாற்றைப் பார்த்தோமென்றால் பிராமணரல்லாதார் இயக்கம் தோன்றுவதற்கு முந்தைய நூற்றாண்டிலேயே பள்ளர், பறையர், பள்ளியர்கள் (pallis) ஆகிய கொத்தடிமைகளை வைத்திருப்பதில் பிராமணரல்லாத நிலப்பிரபுக்கள் பிராமண நிலப்பிரபுக்களுக்கு சற்றும் சளைத்தவர்களாக இல்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது..  பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தீவிர அடிமை முறை இருந்தது குறித்து தர்மா குமார் தெரிவித்திருப்பது. “ வெள்ளாள (பிராமணரல்லாதார்) விவசாயிகள் அடிமைகளை வைத்திருந்தனர்.  அவர்களை விற்கவும், அடகு வைக்கவும், மற்றும் வாடகைக்கு விடவும் செய்தனர் (அதில் கிடைக்கும் வருமானம் அடிமையின் உரிமையாளருக்கே சொந்தமாகும் ).

மேலும் பள்ளியர்களை வகைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களைப் பற்றி அவர் குறிப்பிடும்போது “1819-ல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் இங்கு அடிமைகளாக இருப்பது இரு சாதியைச் சார்ந்தவர்கள் மட்டுமே, ஒன்று பள்ளர், மற்றொன்று பறையர் ஆகும்.  அதே சமயம் பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் (சென்னை மாகாண ஆட்சியர்) அவர்கள் தெரிவித்திருப்பது “வேளாண் பணிகளில் ‘அடிமைகளாக’ உள்ள சாதியினர் பள்ளி, பள்ளன், பறையன் ஆகும்.  பள்ளி சாதியினர் பிராமணர்களுக்கு அடிமைகளாக இருந்தவர்கள்; மற்ற இரு சாதியினரும் பிராமணர் அல்லாதவர்களுக்கு அடிமைகளாக இருந்தவர்கள்.  அதே சமயம் 1881-ல் வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிப்பது என்னவென்றால் பள்ளி சாதியினர் பண்ணை அடிமைகளாக இருந்தவர்கள்;  வெள்ளாள சமூகத்தினருக்கு அடிமைகளாக இருந்தனர் என்கிறது.  விவசாயத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ஒரு சமயத்தில் தமிழகத்தில் வறண்ட பகுதிகளிலிருந்து பெரும் பகுதி மக்கள் இடம் பெயர்ந்து மற்ற பகுதிகளுக்குச் சென்றனர்.  அது வறட்சிக்கு இட்டுச் சென்றது.  பேரலை போல் தாக்கி பல பகுதிகளை பொது மயானமாக மாற்றியது. சாதி அடுக்குமுறை சமூக-பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தியது.  இந்த கசப்பான உண்மைகள் பிராமணரல்லாதோர் அறிக்கையில் இடம் பெறவில்லை.

நீதிக்கட்சியின் இந்தக் குறுகிய கண்ணோட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் வேறு யாருமல்ல, ஈ.வெ.ரா. பெரியார் தான்.  பிராமணல்லாதார் அடையாளத்திற்கு ஒரு புதுப் பரிமாணம் உருவாக்கியதில் வெற்றி கண்டவர் அவரே. 1926-ஆம் ஆண்டு மதுரையில் ஒரு பிராமணரல்லாதார் மாநாட்டில் அவர் பேசியது வருமாறு: “முதலாவதாக நமது இயக்கம் என்றால் என்னவென்று சாதாரண மக்களுக்குப் புரிய வைத்திருக்கிறோமா? நாம் சாதாரண மக்களின் அனுதாபத்தை பெற ஏதாவது செய்திருக்கிறோமா? நமக்காக அரசு பதவிகளைப் பெற்றிருக்கிறோம். விருதுகள் பெற்றிருக்கிறோம். ஆனால் இவற்றின் மூலம் சாதாரண மக்கள் பயனடைந்திருக்கிறார்களா?  நமக்குக் கிடைத்த அதிகாரத்தையும், பதவியையும் பயன்படுத்தி பிராமணர்கள் முன்னேறுவதைத் தடுத்திருக்கிறோம். அதில் சந்தேகத்திற்கு இடமில்லை.  ஆனால் மக்களின் துயரங்களிலிருந்து அவர்களை விடுவித்திருக்கிறோமா?  மக்களை அடிமைகளாக, ஏழை கூலித் தொழிலாளியாக, பாட்டாளியாக வைத்திருக்கும் மூட நம்பிக்கையிலிருந்து அவர்கள் விடுபட ஏதாவது செய்திருக்கிறோமா?  நமக்கு பதவிகளும், விருதுகளும் தேவையில்லை என்று சொல்லவில்லை.  அவற்றை பெறுவது மட்டும் நமது நோக்கமல்ல.   நான் பிராமணரல்லாதோர் எனச் சொல்லும் போது 90 சதவீதமாக உள்ள ஏழைகள், ஏதுமற்றவர்களைத்தான் சொல்கிறேன்.  ராஜாக்கள், மற்றும் ஜமீந்தார்களைச் சொல்லவில்லை.  இங்கே கூடியுள்ள உங்களைப் பார்த்துக் கேட்கிறேன்.  நாம் உண்மையிலேயே பிராமணரல்லாதோர் நலனுக்காக பாடுபட உறுதியோடு இருக்கிறோமா? அல்லது ஒரு சிறிய பகுதியினரின் நலனுக்காக இருக்கிறோமா?  இந்தப் பிரச்னையில் புத்திசாலித்தனத்துடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட, உறுதியேற்க எல்லாத் தலைவர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.”

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் தேவை குறித்தும் அதை காங்கிரஸ் தலைமை ஏற்கும்படி செய்திட தான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்ற பின்னணியில் 1927-ல் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினார்.  இதே காரணங்களுக்காக உடனே நேரிடையாக நீதிக் கட்சியில் போய்ச் சேரவில்லை.  நீதிக்கட்சியை விட்டு விலகி இருக்காவிட்டாலும். 1925ல் ராமநாதன் அவர்களால் துவக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தை தனது சர்வதேசப் பார்வைக்கு உகந்ததாக, மறுமலர்ச்சிக்கான புதிய சிந்தனைகளுக்கு அகலக் கதவு திறந்து வைத்திருக்கும் அமைப்பாக, தொண்ணூரு வயது வரையிலும் எந்த நோக்கத்திற்காக தனது அரசியல் வாழ்க்கையை அர்ப்பணித்து இருந்தாரோ, அதற்கு ஏற்ப சுயமரியாதை இயக்கம் இருந்ததால், அவ்வமைப்பை தனது நோக்கத்திற்கு உகந்ததாகக் கருதினார்.  சுயமரியாதை இயக்கம் பிராமணரல்லாதார் அடையாளத்திற்கு ஒரு தனித்துவமான, மாறுபட்ட பரிமாணத்தைத் தந்தது. மேலும் அந்த இயக்கத்தை ஜனநாயகப்படுத்தியது.  சமூக அடித்தளத்தை விரிவுபடுத்தவும் செய்தது.

அவர் பார்வையில் பிராமணரல்லாதார் என்பவர் கலாச்சார அடிப்படையில் பிராமணர்களால் அடிமைப்படுத்தப்பட்டவர்கள்; பொருளாதார, அறிவுசார் வளங்கள் பெற தடுக்கப்பட்டவர்கள் என்பதேயாகும்.  சுயமரியாதையுடன், கண்ணியத்துடன் கூடிய ஒரு மனிதனாக மீண்டெழ இவையே உதவும்.  பிராமணீயம் பிராமணரல்லாதார் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றின் உதவியுடன் தத்துவார்த்த அடிப்படையில் சாதி அமைப்பை ஆதரிக்கவும், நிலை நிறுத்தவும் உதவுகிறது. பிராமணரல்லாதார் இயக்கத்தில் உயர் பிரிவினரின் கட்டுப்பாட்டு எல்லைகளை சுயமரியாதை இயக்கத்தினர் தகர்த்தனர்.  ஈ.சா.விஸ்வநாதன் கூற்றுப்படி, சுயமரியாதை அமைப்பினர் தாழ்த்தப்பட்டவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்களான நாடார்கள், அகமுடையார்கள், இசை வேளாளர்கள், செங்குந்தர்கள், வன்னியகுல சத்திரியர்கள் ஆகியோரை நோக்கிச் சென்றனர்.  இந்தச் சாதியினரில் பெரும்பான்மையானவர்கள் விவசாயக் கூலிகள், பயிற்சி இல்லா தொழிலாளிகள், தமிழக மாவட்டங்கள் அனைத்திலும் சமமாக பரவி இருப்பவர்கள். 

ஈ.சா.விஸ்வநாதன் ‘ஈ.வெ.ரா. பெரியாரின் அரசியல் வாழ்வு’ என்ற தனது நூலில் குறிப்பிடும்போது,  சுயமரியாதை இயக்கத்தினர் தங்களது சாதிப் பெயரினை விட்டொழித்து, சாதி அடையாளங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு,  சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரித்து,  பெண் விடுதலைக்கு பாடுபட்டனர்.  குழந்தைத் திருமணத்தை எதிர்த்தனர். வரதட்சிணைக்கு எதிராக செயல்பட்டனர்.  விதவைத் மறுமணத்தை ஆதரித்தனர்.  சொத்தில் பெண்ணுக்கு உரிமை கோரி போராடினர். விவாக ரத்து உரிமை கோரினர்.  மேலும் இது போன்றவற்றுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். 1942-ல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்களது சாதிப் பெயரை கைவிட்டார்கள் என்கிறார்.

இந்த சுயமரியாதை இயக்கம் பிராமணரல்லாதாரை அடிமைப்படுத்தியிருக்கும் ஆரிய கலாச்சாரத்திற்கு மாற்றாக தீவிர சமூக சீர்திருத்தம், மதச்சார்பின்மை, அறிவியலை வளர்த்தெடுப்பது போன்றவற்றை செயல்படுத்தும் அமைப்பாகும்.  இவ்வமைப்பு மாகாணத்தில் பிராமணரல்லாத மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது.  ஈ.சா.விஸ்வநாதன் தெரிவிப்பது என்னவெனில் “இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குழு, (பெரியாரின்) சுயமரியாதை இயக்கத்தினர், தமிழ்ப்பற்றாளர்கள், சாமியார்கள், பெண்கள், ஆதி திராவிடர்கள். உழைப்பாளி மக்கள், மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் இணைந்த, நீதிக்கட்சியை விட ஒரு நெகிழ்வான அரசியல் சக்தியாக சென்னை மாகாணத்தில் உருவானது. சுயமரியாதை இயக்கம் மற்றும் நீதிக்கட்சியில் இருந்த முற்போக்காளர்களால் நடத்தப்பட்ட ஆலய நுழைவுப் போராட்டங்களில் நூற்றுக்கணக்கான ஆதிதிராவிடர் உள்ளிட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.  

இந்தத் திட்டங்கள், அதனை செயல்படுத்துவது ஆகியவற்றின் மீது பிராமணர்கள் மட்டுமல்லாது, மதம் குறித்த பெரியாரின் கருத்தை ஏற்க மறுத்த நீதிக்கட்சித் தலைவர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பினை சந்தித்தது.  இந்தப் புதிய முற்போக்கான, மதச்சார்பற்ற அடையாளம் சாதிப் பிரிவினையால் பயனடைந்து வரும் பிராமணரல்லாதோரில் இருந்த சில சுயநல சக்திகளை ஆட்டம் காண வைத்தது.  பிராமணரல்லாதோர் இயக்கம் சந்தித்த அடுத்த மாற்றம் அவர்களுடைய அச்சத்தை தீவிரப்படுத்தியது  முக்கியமாக இந்த அமைப்பு சாதி அடையாளத்துடன் கூடியதானாலும், வர்க்க வளையத்திற்குள் நுழைந்தது. 

அன்றைக்கு சென்னை மாகாணத்தில் தொழிற்சாலைகள் எண்ணிக்கை பெருகியதும். அதன் விளைவாக தொழிலாளி வர்க்க சமூகம் சுயமரியாதை இயக்கத்தின் சமூகப் பின்புலத்தை வர்க்க அடிப்படையில் தீவிரமாக மாற்றியமைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியது.  தொழிலாளி வர்க்க, சோசலிச தலைவர்களான எம். சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகியோர் சுயமரியாதை இயக்கத்தோடு இணைந்து செயல்பட்டதும், அவர்கள் பெரியாரிடம் செல்வாக்கு பெற்றவர்களாக அமைந்தமையினால் அந்த இயக்கத்தை சீர்திருத்தக் கண்ணோட்டத்திலிருந்து, புரட்சிகர திசைவழியில் நடத்திச் சென்றனர்.  1917-ல் ரஷ்யாவில் போல்ஷ்விக் தலைமையில் புரட்சி வெற்றி பெற்றதும், இந்தியாவில் தொழிலாளி வர்க்கம் தோன்றியதும் இந்த வளர்ச்சிக்கு பின்புலமாக இருந்தது. கம்யூனிஸ்ட் அறிக்கை தமிழாக்கம் செய்யப்பட்டு, தொடராக பெரியாரால் நடத்தப்பட்ட ‘குடி அரசு’பத்திரிகையில் வெளிவந்தது.  பெரியார் அதற்கு ஆழமான கருத்துரை வழங்கியிருந்தார். அதில் குறிப்பிட்டிருந்தது என்னவென்றால் இந்தியாவில் சூழ்நிலை கனிந்திருந்தாலும், புரட்சி இதுவரை வராததற்குக் காரணம் இங்கு பணக்காரர் ஏழை இவர்களுக்கிடையிலான மோதல்களை சாதிக் கட்டுமானம் முகமூடியாக மறைத்து நிற்கிறது. ஒரு வலிமையான சோசலிச கண்ணோட்டத்துடன் கூடிய ஈரோடு திட்டம் பின்னர் வெளிவந்தது.

தமிழுக்கு எதிராக, சமஸ்கிருதத்திற்கு ஆதரவாக சலுகைகள் காட்டுவதை எதிர்த்து உருவான தனித்தமிழ் இயக்கம், (அதே ஆண்டு துவக்கப்பட்ட) பிராமணல்லாதோர் இயக்கத்துடன் இணைந்து இரட்டையர் போல் செயலாற்றியது.  ராஜாஜி அரசு பள்ளிக் கல்வியில் இந்தியை கட்டாய பாடமாக திணித்த போது அதனை எதிர்த்து தமிழ்நாடு பொங்கி எழுந்தது.  இந்த எதிர்ப்புப் போராட்டங்களில் பிராமணரல்லாதார் இயக்கத்தின் சமூக  நீதி மற்றும் தமிழுக்கான நீதி ஆகியவை சங்கமித்ததன் விளைவாக திராவிட தேசியம் வளர்வதற்கான அடித்தளம் உருவாக்கப்பட்டது.  சுயமரியாதை இயக்கத்தின் சோசலிச கட்டம், அடிப்படை சமூக நீதித் திட்டம், மற்றும் தனித்தமிழ் இயக்கத்தால் வளர்க்கப்பட்ட பேராண்மை இவற்றின் ஒன்றிணைவு  அவன்/அவளின் சாதி, வர்க்கம், மொழி போன்ற பல்வேறு அடுக்குகளைக் கொண்ட அடையாளங்கள் உடைய தமிழ் மக்களின் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்ற நோக்கத்தை தூண்டிவிட்டது.

சோசலிசம் நோக்கிய பெரியாரின் திருப்பம் ஒரு சில பகுதியினருக்கு அபாய

சங்கொலியாக இருந்தது.  குறிப்பாக பிராமணரல்லாதவர்களில் ஒரு பகுதியினர், பிரிட்டிஷ் அரசு ஆகியோரே அப்பகுதியினர்.  அரசியல் தளத்தில் வர்க்கம் பெரிய அளவில் நுழைவது பிராமணரல்லாதார் இயக்கத்தில் இருந்த நில உடைமையாளர்கள் தங்கள் அதிகாரம், இதுவரை பெற்ற சலுகைகள் மற்றும் தங்களது சொத்திற்கு ஆபத்து வரும் எனக் கருதினர்.  பெரும் எண்ணிக்கையில் மக்களை ஈர்க்கக் கூடிய ஒரு சமூக சீர்திருத்தவாதி புரட்சியாளராக மாறுவது, குறிப்பாக தேசிய இயக்கம் பெருகி வரும் கால கட்டத்தில், சோவியத் யூனியனில் சோசலிசம் திட்டவட்டமான நிலையை எட்டும் சூழலில் பிரிட்டிஷ் அரசிற்கு மிகப் பெரும் கவலையளிக்கும் விஷயமாக இருந்தது.  வளர்ந்து வரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது கடுமையான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது.  இதுவரை பிராமணரல்லாதார் இயக்கம் பெற்ற நன்மைகளைப் பாதுகாக்க வேண்டி, குறிப்பாக மாகாணத்தில் காங்கிரஸ் கட்சியில் பிராமணர்கள் கை மேலோங்கி உள்ள சூழலில், நீதிக்கட்சியின் அரசியல் வீழ்ச்சி கண்கூடாக காணப்பட்ட நிலையில், பெரியார் மீண்டும் சமூக சீர்திருத்த வட்டத்திற்குள் வந்து சேர்ந்தார்.

இருப்பினும், பெரியார் அவருடைய அரசியல் பயணத்தில் ஒரு சிக்கலான கட்டத்தில் பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும், அச்சு ஊடகம் வாயிலாகவும் வெளிப்படுத்திய சமூக சீர்திருத்தம், சோசலிசம் குறித்த கருத்துக்கள் மக்கள் மனங்களை கவ்விப் பிடித்தன – அடுத்த நூற்றாண்டு வரை மக்களிடம் அழிக்கவியலாத செல்வாக்கு செலுத்தும் அரசியல் சக்தியாகின.

மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*

குரல்: தேவி பிரியா

– பிரடெரிக் எங்கெல்ஸ்

சகல செல்வத்தினுடைய தோற்றுவாயும் உழைப்பே என அரசியல் பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். உண்மையிலே அதுதான் தோற்றுவாய் – இயற்கைக்கு அடுத்தபடியாக; அதற்கு இயற்கை மூலாதாரமாக வழங்கும் பொருளை அது செல்வமாக மாற்றுகிறது. ஆனால் அளவிடற்கரிய வகையில் அதை விட அது இன்னும் அதிகமும் கூட. ஓர் அர்த்தத்தில், உழைப்பு மனிதனையே படைத்தது என்று நாம் கூறவேண்டிய அளவுக்கு அது மனித வாழ்வு முழுவதற்கும் முதன்மையான அடிப்படை நிபந்தனையாக உள்ளது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், இன்னும் திட்டமாக நிர்ணயிக்கப்படாத, மூன்றாம் காலக்கூறு (Tertiary period) எனப் புவியியல்வாதிகள் அறிந்துள்ள பூமியின் வரலாற்றின் ஒரு சகாப்தத்தில் – அதனுடைய முடிவுக்கட்டத்தில் இருப்பதற்கு அதிக சாத்தியக்கூறு உண்டு – மிகவும் உன்னதமான வளர்ச்சி பெற்ற மனிதக் குரங்கு இனமானது வெப்பமண்டலத்தில் – தற்போது இந்துமாகடலின் அடியில் ஒரு வேளை மூழ்கிப்போன ஒரு பெரும் கண்டமாக இருக்கலாம் – ஏதோ ஓர் இடத்தில் வாழ்ந்தது. நம்முடைய இந்த மூதாதையர்களைக் குறித்த ஒரு உத்தேசமான வர்ணனையை டார்வின் நமக்குக் கொடுத்துள்ளார். அவர்கள் முழுமையாகவே உரோமத்தால் மூடப்பட்டிருந்தனர்; அவர்கள் தாடிகளையும் கூர் முனையுள்ள காதுகளையும் பெற்றிருந்தனர் ; மரங்களின் மீது கூட்டங்கூட்டமாக வாழ்ந்தனர்.

மரமேறுதல் என்பது கை கால்களுக்கு வித்தியாசப்பட்டதொழில்களைப் பகிர்ந்து விடுகிறது; அவர்களுடைய வாழ்க்கைமுறையில் தட்டையான நிலத்தின் மீது நிலை பெயர்ந்து செல்ல வேண்டிஏற்பட்ட போது இந்த மனிதக் குரங்குகள் படிப்படியாகக் கைகளைப்பயன்படுத்தும் பழக்கத்தைக் கைவிட்டன; மேலும் மேலும் அதிகமாக ஒரு நிமிர்ந்த உடற்பாணியையே அனுசரித்தன. மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலையில் இது நிர்ணயமானதொரு படி ஆகும். தற்போதுள்ள எல்லா மனிதக் குரங்குகளுக்கும் நிமிர்ந்து நிற்கவும் பாதங்களினால் நடக்கவும் இயலும்; ஆனால் அது அவசரகாலங்களிலேதான், அதுவும் விகாரமாகத்தான். அவற்றினுடைய இயல்பான நடை பாதி நிமிர்ந்தும் பாதி குனிந்தும் செல்லும் நடை, அதில் அவை கைகளையும் பயன்படுத்துகின்றன. பெரும்பாலானவை தங்களது முஷ்டியின் விரல் கணுக்களைப் பூமியின் மீது ஊன்றிக் கால்களை உள்இழுத்து நீண்ட கைகளிடையே உடலை ஊசலாட்டிச் செலுத்துகின்றன – நடக்கும் திறனில்லாத ஒருவர் கவைக் கோல்களினால் நடந்து செல்வதற்கு ஒப்பாக இதனைக் கூறலாம்.

பொதுவாக, நான்கு கால்களினால் நடப்பது முதல் இரண்டு கால்களினால் நடப்பது வரை உள்ள இடைநிலைக் கட்டங்களை எல்லாம் இன்றைய மனிதக் குரங்குகளிடமே காணலாம். இருந்தாலும், பின் சொன்ன நடை அவற்றில் எதற்கும் தாற்காலிகமாகச் சமாளித்துக் கொள்வதற்கு மேலாக முக்கியத்துவம் உடையதாக இருக்கவில்லை. உரோமம் படர்ந்த நமது மூதாதையரிடையே நிமிர்ந்த நடை என்பது முதலில் ஒரு விதியாகவும் பின்னர் கால அடைவில் ஓர் அவசியமாகவும் ஆயிற்று, இதற்குள்ளாக கைகளுக்குப் பல்வேறுவகையான இதர வேலைகளின் பொறுப்பும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதைப் புரிய முடியும். மனிதக் குரங்குகளிடையே ஏற்கெனவே கைகளும் பாதங்களும் பயன்படுத்தப் படுவதில் சிறிது வித்தியாசம் இருக்கிறது. மேலே சொன்னதற்கொப்ப, மரமேறுவதில் கைகளுக்கும் பாதங்களுக்கும் வெவ்வேறு உபயோகங்கள் உள்ளன. கீழ்ப்படியில் உள்ள சில பாலூட்டிகள் தங்களது முன்பாதங்களை உபயோகிப்பதைப் போல உணவைச் சேகரிக்கவும் பிடிக்கவுமே கைகள் பிரதானமாக உபயோகிக்கப் படுகின்றன.

மரங்களில் தங்களுக்குக் கூடுகளைக்கட்டிக் கொள்ளவும் அல்லது உதாரணமாக சிம்பன்ஸி குரங்கைப் போலத் தங்களை பருவமாற்ற நிலைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கிளைகளிடையே கூரைகள் வேய்ந்து கொள்ளவும் கூடப் பல மனிதக் குரங்குகள் கைகளைப் பயன்படுத்துகின்றன. பகைவர்களிடம் இருந்து காத்துக் கொள்ளத் தங்களது கைகளினால் கழிகளைப் பிடிக்கின்றன; தங்களது கைகளைக் கொண்டு எதிரிகளைப் பழங்களாலும் கற்களாலும் தாக்குகின்றன. அவை கூண்டில் பிடிபடும் போது மனிதர்களிடமிருந்து சில சிறிய செயல்களை ஒத்த வடிவத்தில் செய்யத் தங்களது கைகளைப் பயன்படுத்துகின்றன. இதில்தான், மனிதனை அதிகபட்சம் ஒத்தமனிதக் குரங்குகளின் வளர்ச்சியடையாத கைக்கும் லட்சக்கணக்கான ஆண்டுகளின் உழைப்பினால் உன்னதமான சிறப்பு பெற்றுள்ள மனிதக் கைக்குமிடையே உள்ள பெரிய இடைவெளியை ஒருவன் காண்கிறான். இந்த இரு கைகளிலும் உள்ள எலும்புகளும் தசைகளும் எண்ணிக்கையிலும் பொதுவான இணைப்பு ஏற்பாட்டிலும் ஒரே மாதிரியானவை; ஆனால் எந்தக் குரங்கின் கையும் ஒத்த மாதிரி செய்யமுடியாத நூற்றுக்கணக்கான செயல்களை மிகக் கீழ்ப் படியிலுள்ள ஒரு காட்டுமிராண்டியின் கை செய்ய முடியும் – எந்தக் குரங்கின் கையும் எந்தக்காலத்திலும் மிகக் கரடுமுரடான கல் கத்தியைக் கூட உருவாக்கியதில்லை.

மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலையான பல்லாயிரமாண்டுகளில் நமது மூதாதையர்கள் படிப்படியாகத் தங்களது கைகளைப் பொருந்தியவாறு பழக்கப்படுத்தக் கற்றுக்கொண்ட முதற்செயல்கள் மிக சாதாரணமானவையாக மட்டுமே இருந்திருக்க முடியும். எவரிடையே மிருகங்களையொத்த நிலைக்கு மீண்டும் திரும்பக் கூடிய நிலைமை அதிகமாகவிருக்கவும், அதேசமயத்தில் உடல் துறையிலும் பின்னடைவு ஏற்படுவதும் அனுமானிக்க இயலுகிறதோ, அப்படிப்பட்ட மிகக் கீழ்ப்படியிலிருந்த காட்டுமிராண்டிகளும் கூட அந்த இடைநிலைவாசிகளை விட எவ்வளவோ மேம்பட்டவர்களே. முதல் சக்கிமுக்கிக் கல் மனிதக் கையினால் கத்தியாக உருவாக்கப்படுவதற்கு முன்பு ஒப்பு நோக்கினால் நாமறிந்த வரலாற்றுக்காலம் அற்பமாகிவிடுகிற ஒரு காலக்கூறு கடந்து விட்டிருக்கக்கூடும். ஆனால் நிர்ணயமான அடி எடுத்து வைக்கப்பட்டாகிவிட்டது; கை சுதந்திரம் பெற்று விட்டது; இனிமேற்கொண்டு அது மேலும் மேலும் அதிக நுண்திறத்தைப் பெறமுடியும்; இவ்வாறு பெறப்பட்ட அதிக நெகிழ்ச்சித்திறமும் வழி வழியாக அடையப்பட்டு தலைமுறைக்குத் தலைமுறை பெருகி வந்தது.

இவ்வாறாக கை உழைப்பிற்கான உறுப்பு என்பது மட்டுமல்ல, உழைப்பின் விளைபயனும் அதுவே. உழைப்பு, எப்பொழுதும் புதியசெயல்களுக்குப் பொருந்தியவாறு அமைத்துக் கொள்ளல், இவ்விதத்தில் விசேஷ வளர்ச்சி அடைந்த தசைகள், தசை நார்கள், காலத்தின் மிக நீண்டகூறுகளில் எலும்புகள் இவற்றை வழி வழியாகப் பெறுதல், இவ்வாறுவழி வழியாகப் பெறப்பட்ட நுண்ணயங்களைப் புதிய, மேலும் மேலும்கூடுதலான சிக்கலான செயல்களுக்குத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தல் ஆகியன ஒரு ரஃப யேலின் ஓவியங்களையும் ஒரு தொர்வால்ட்ஸனின் சிற்பங்களையும் ஒரு பகனீனியின் சங்கீதத்தையும் செப்பிடுவித்தையின் விளைவு போல முன்கொண்டு வந்து நிறுத்தத்தக்க மகோன்னதத் தேர்ச்சியை மனிதனின் கைக்கு அளித்தன. ஆனால் கை மட்டும் தனித்து இருக்கவில்லை; அது முழு மொத்தமான, உயர்ந்தபட்ச பல்கூட்டுத்தொகுதியான அங்கஜீவியின் ஓர் உறுப்பாகும். கை என்ன நற்பயனைப்பெற்றதோ, அதை அது பணி புரிந்த உடலமைப்பு முழுவதும் பெற்றது; இது இரண்டு வழிகளில் நடந்தேறியது.

முதலாவதாக, வளர்ச்சியின் பரஸ்பரத் தொடர்பு விதி என டார்வின்அழைத்ததற்கொப்ப உடலமைப்பு அந்த நற்பயனைப் பெற்றது. ஓர்அங்கஜிவியின் தனிப்பட்ட உறுப்புகளின் பிரத்யேகத் தன்மை வாய்ந்தவடிவங்கள் எப்போதுமே மேலீடாக அவற்றுடன் தொடர்பற்றதாகத் தெரிகிற இதர உறுப்புகளின் குறிப்பிட்ட வடிவங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன என்று அந்த விதி அறிவிக்கிறது. இவ்வாறாக ஜீவ அணுக் கருவற்ற சிவப்பு ரத்த அணுக்களையும் முதுகெலும்பின் முதல் எலும்புடன் இரட்டை மூட்டுகளால் இணைக்கப்பட்ட தலையையும் உள்ள எல்லா மிருகங்களும் எவ்வித விதிவிலக்குமின்றித் தங்களது குட்டிகளுக்குப் பாலூட்டப் பால் சுரப்பிகள் பெற்றிருக்கின்றன. அதைப்போலவே, பாலூட்டும் மிருகங்களின் பிளவுபட்ட குளம்புகள் என்பது அசைபோடுவதற்கான பல் கூறடங்கிய வயிற்றைப் பெற்றிருப்பது என்பதுடன் முறையாக இணைக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்டவடிவங்களில் மாற்றங்கள் என்பதில் உடலினுடைய இதர உறுப்புகளின்வடிவங்களில் மாற்றங்கள் என்பன அடங்கியுள்ளன- இந்தத் தொடர்பை நம்மால் விளக்க முடியவில்லையெனினும் இது உண்மையே. நீலக்கண்களைப் பெற்ற தூய வெள்ளைப் பூனைகள் எப்போதுமே அல்லது கிட்டத்தட்ட எப்போதுமே செவிடாக உள்ளன. படிப்படியாக மேலும் மேலும் நிறைவுபெற்று வந்த மனிதக் கையும் இதை ஒத்து ஒரே அளவில் நிமிர்ந்த நடைக்கு உகந்த வகையில் பாதங்கள் பொருந்திவந்தமையும் சேர்ந்து இந்தப் பரஸ்பரத் தொடர்பு இணைப்பின் காரணமாக அங்க ஜீவிகளின் இதர உறுப்புகள் மீது நிச்சயமாக எதிர்ச்செயல் கொண்டன. இருந்தபோதிலும் கூட, யதார்த்த உண்மையைப் பொதுப்படையாக அன்றி அதற்கு மேல் அதிகமாகச் சொல்லுவதற்குச் சாத்தியமல்லாத வகையில் போதுமான அளவுக்கு இந்தச் செயற்பாடுபரிசீலிக்கப் படவில்லை.

உடலமைப்பின் இதர பகுதிகளின் மீது கையினுடைய வளர்ச்சியின்நேரடியான, எடுத்துக் காட்டத்தக்க செயலாட்சி அதைவிட அதிகமுக்கியத்துவம் உடையதாகும். நமது வானர மூதாதையர்கள் சமூகஉணர்வு கொண்டவர்களாக இருந்தனர் என்பது ஏற்கெனவே கவனத்தில்கொள்ளப்பட்டது; மிருகங்களிலேயே மிக அதிக சமூக உணர்வுகொண்ட மனிதனின் தோற்றத்தை சமூக உணர்வில்லாத மிக சமீபத்திய மூதாதையரிடையே தேடுவது சாத்தியமில்லை என்பது தெளிவு. கையின்வளர்ச்சியுடன், உழைப்புடன் இயற்கையின் மீது ஆளுகை கொள்வதுதொடங்கியது; ஒவ்வொரு புதிய முன்னேற்றத்தோடும் மனிதனுடையஅறிவெல்லை விரிவாகி வந்தது. இயற்கைப் பொருள்களின் அது வரைஅறியப்படாமல் இருந்த புதிய பண்புகளைத் தொடர்ந்தாற்போலஅவன் கண்டுபிடித்துக் கொண்டிருந்தான். மற்றொருபுறம், பரஸ்பரஆதரவு, கூட்டுச் செயல் என்பதற்கான வழக்குகளைப் பெருக்கியும்ஒவ்வொரு தனி நபருக்கும் இவ்வித கூட்டுச் செயலின் நல்லாதாயத்தைத்தெளிவுபடுத்தியும் சமூக உறுப்பினர்கள் நெருங்கிக் கூடி வர உழைப்பின்வளர்ச்சி அவசியமாகவே உதவி புரிந்தது. சுருக்கமாகக் கூறுவதென்றால்உருவாகிக் கொண்டிருந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வதற்கு ஏதோ ஒன்று உள்ளவர்களாகிற நிலையை எய்தினர். தேவைஎன்பது ஓர் உறுப்பைப் படைத்தது; மனிதக் குரங்கின் வளர்ச்சியுறாதகுரல்வளை மெதுவாக ஆனால் நிச்சயமாகச் சுரபேதத்தின் மூலம்இன்னும் கூடுதலான வளர்ச்சி பெற்ற சுரபேதத்தை உற்பத்தி செய்யமாற்றியமைக்கப்பட்டது; வாயின் உறுப்புகள் படிப்படியாக ஒருதீர்க்கமான ஒலிக்குப் பின் மற்றொன்றாக உச்சரிக்கக் கற்றுக் கொண்டன.

உழைப்பிலிருந்தும் அதனுடைய மாற்றப் போக்கிலிருந்தும் மொழியின் பிறப்பை விளக்குவது ஒன்றே சாலவும் பொருத்தமுடையது என மிருகங்களுடன் ஒப்பிட்டு நோக்குங்கால் நிரூபிக்கப்படுகிறது. மிக அதிகபட்சம் வளர்ச்சி பெற்ற மிருகங்களுக்கும் தங்களுக்குள்பரஸ்பரத் தொடர்பு கொள்ள அவசியமான அந்தச் சிறிய அளவுக்கும்கூடத் தீர்க்கமான பேச்சு தேவைப்படுவதில்லை. இயற்கை நிலையில்அதற்குப் பேசுவதற்கு அல்லது மனிதப் பேச்சைப் புரிவதற்குச்சாத்தியப்படவில்லை என்பதினால் தனக்கு ஏதோ ஒரு தடை இருப்பதானஉணர்ச்சி எந்த மிருகத்திற்கும் இல்லை. மனிதனால் பழக்கப்படும்பொழுது இது முற்றாகவே வேறுபடுகிறது. நாயும் குதிரையும்மனிதனுடன் கொண்ட நட்புக் கூட்டு காரணமாக, அவற்றினுடையகருத்து வீச்சின் எல்லைக்குள், எம்மொழியையும் புரிய எளிதாகக் கற்றுக்கொள்ளுகிற அளவுக்குத் தீர்க்கமான பேச்சைக் கூர்ந்து கேட்கக் கூடியகாதுகளை வளர்த்துக் கொண்டுள்ளன. மேலும், அவற்றுக்கு முன்புஅப்பாற்பட்ட தாக இருந்த, மனிதனின் பால் அபிமானம், நன்றியுணர்வு,முதலான உணர்ச்சிகளைக் கொள்ளுவதற்கான திறனையும் அவைபெற்று உள்ளன. இப்படிப்பட்ட மிருகங்களுடன் அதிகமாகப் பழகவாய்ப்புள்ள ஒருவன், அனேக வழக்குகளில் அவை இப்பொழுதுபேசுவதற்குச் சாத்தியமற்ற தங்களது நிலையை ஒரு குறைபாடாகஉணருகின்றன என்ற நம்பிக்கையிலிருந்து எளிதாகத் தப்பிக்க முடியாது;இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக, இந்தக் குறைபாடு இனி நேர் செய்யமுடிகிற ஒன்றல்ல; ஏனெனில் அவற்றினுடைய வாய்த் தொனிஉறுப்புகள் ஒரு திட்டமான திசையில் மிகப் பிரத்யேகத் தன்மை பெற்ற விட்டன.

ஆனாலும் வாய்த் தொனி உறுப்புகள் உள்ளவற்றில் இந்தத்திறமின்மையும் குறிப்பிட்ட வரையறைகளுக்குள் மறைந்து விடுகிறது.பறவைகளின் குரல் கொடுக்கும் உறுப்புகள் மனிதனுடையவற்றை விடஎவ்வளவு மாறுபட முடியுமோ அவ்வளவு மாறுபட்டிருந்தாலும் கூட,எல்லா விலங்குகளிலும் பறவைகள் மட்டுமே பேசுவதற்குக் கற்றுக்கொள்ள வல்லவை: மிகவும் அருவருக்கத்தக்க குரலைக் கொண்டுள்ளகிளிதான் மிகச் சிறப்பாகப் பேசுகிறது. கிளி என்ன பேசுகிறதோ, அதைப்புரிந்து கொள்வதில்லை என்று யாரும் ஆட்சேபிக்க வேண்டாம்.மனிதர்களுடன் பேசவும் நட்புறவு கொள்ளவுமான இன்பத்திற்காகமட்டும் கிளி ஒரேயடியாய் மணிக் கணக்கில் பேசும்; தொடர்ந்தாற்போலத்தனது சொற்செல்வம் முழுவதையும் திரும்பத் திரும்ப ஒப்பிக்கும் என்பதுஉண்மையே. ஆனால் அதனுடைய கருத்துகளின் வீச்சு எல்லைக்குட்பட்டுதான் சொல்வதைப் புரிந்து கற்றுக்கொள்ள முடியும். வசைச் சொற்களின்பொருளைப் பற்றிய கருத்தைப் பெறத்தக்க வகையில் ஒரு கிளிக்குஅவற்றைச் சொல்லிக் கொடுங்கள் (வெப்ப மண்டலத்திலிருந்துதிரும்புகிற மாலுமிகளின் ஓர் இன்பமான பொழுதுபோக்கு இது); பிறகுஅதைத் தொந்தரவு செய்யுங்கள்; வசைச் சொற்களை பெர்லினில் உள்ளஒரு தள்ளுவண்டிப் பழம் விற்பவனைப் போல மிகப் பொருத்தமாகஉபயோகிக்க அது தெரிந்து கொண்டிருக்கிறது என்பதைக் கண்டறிவீர்கள். தின்பண்டங்கள் கொடுக்கக் கெஞ்சும் போதும் இது பொருந்துகிறது.

முதலில் உழைப்பு, அதன் பின்னரும், அத்துடன் சேர்ந்தும் பேச்சு-இந்த மிக முக்கியமான இரண்டு தூண்டுகைகளின் செயலாட்சியினால்மனிதக் குரங்கின் மூளை படிப்படியாக மனிதனுடைய மூளையாகமாறியது; இது அதை ஒத்ததாக இருந்தபோதிலும் அதை விட இன்னும்பெரிதாகவும் இன்னும் நேர்த்தியாகவும் இருந்தது. மூளையின்வளர்ச்சியுடன் கைகோத்துக் கொண்டு அதனுடைய மிக உடனடியானகருவிகளான புலன்களின் வளர்ச்சியும் சென்றது. பேச்சின் படிப்படியானவளர்ச்சியுடன் ஒத்த வகையில் கேட்கும் உறுப்பும் செம்மையடைவதுஎன்பது தவிர்க்க முடியாமல் தொடர்ந்ததைப் போல மூளையின் வளர்ச்சிமுழுவதையும் தொடர்ந்து எல்லாப் புலன்களும் செம்மையடைந்தன.மனிதனுடையதை விடப் பருந்தின் கண்கள் மிக தூரத்தைப் பார்க்கின்றன;ஆனால் மனிதனுடைய கண்கள் பருந்தினதைவிடக் கணிசமாகவேஅதிகமானவற்றைப் பொருள்களில் உய்த்துணருகின்றன. மனிதனதைவிட நாயின் முகரும் உணர்வு மிகக் கூர்மையானதே; ஆனாலும்மனிதனுக்கு வெவ்வேறான பொருள்களைக் குறிக்கிற திட்டமானஅறிகுறிகளாக உள்ள வாசனைகளில் நூற்றில் ஒரு பகுதியைக் கூடஅதனால் வகைவேறுபாடு காணமுடியாது. மனிதக் குரங்கு ஸ்பரிசஉணர்வைக் கரடுமுரடான, ஆரம்ப நிலையில் மட்டுமே பெற்றிருக்கும்;மனிதக் கையின் வளர்ச்சியுடன் அக்கம்பக்கமாகவே, அதுவும் உழைப்பின்மூலமாக, வளர்ச்சி பெற்றது.

மூளை, அதன் பணியாட்களான புலன்கள், மேலும் மேலும் தெளிவுபெறும் பகுத்தறிவு, பொதுமைப்படுத்தவும் முடிவு காணவும் உள்ள திறன்ஆகியவற்றின் வளர்ச்சி உழைப்பின் மீதும் பேச்சின் மீதும் ஏற்படுத்தியஎதிர்ச் செயற்பாடு உழைப்பு, பேச்சு இவற்றின் கூடுதலான வளர்ச்சிக்குத்திரும்பத் திரும்பத் தூண்டுகைகளை அளித்து வந்தது. மனிதக்குரங்கிலிருந்து வேறுபட்டவனாக மனிதன் இறுதியாக மாறியவுடன்இந்த வளர்ச்சி முற்றுப்பெற்று விட வில்லை; ஆனால் ஒட்டுமொத்தத்தில்கூடுதலான வலு மிக்க முன்னேற்றத்தைப் பெற்றது; இது வெவ்வேறுகாலங்களில் வெவ்வேறு மக்களினங்களிடையே அளவிலும் திசையிலும்மாறுபடவும் அங்குமிங்கும் ஸ்தல அல்லது தற்காலிகப் பின்னேற்றத்தால்இடைமறிக்கப்படவும் செய்தது. இந்தக் கூடுதலான அபிவிருத்தி,முழு வளர்ச்சி பெற்ற மனிதன் தோன்றியவுடன் செயலுக்கு வந்தபுதியதோர் ஆக்கக் கூறான சமூகம் என்பதினால் ஒரு புறத்தில் வலுவுடன்முன்னோக்கி உந்தப்படவும் மறுபுறம் இன்னும் திட்டமான திசைகளில்வழி நடத்தப்படவும் செய்தது.மரமேறிகளான குரங்குகளின் கூட்டத்திலிருந்து மனித சமூகம்தோன்றுவதற்குள் லட்சக்கணக்கான ஆண்டுகள் – மனிதனுடையஆயுளில் ஒரு வினாடிக்கு இருப்பதை விட அதிக முக்கியத்துவம்இதற்குப் பூமியின் வரலாற்றில் ஏதும் இல்லை*– நிச்சயமாகவேகடந்து சென்றன. ஆனால் இறுதியாக அது தோன்றத்தான் செய்தது.

குரங்குகளின் ஒரு கூட்டத்திற்கும் மனித சமூகத்திற்கும் இயல்பு ரீதியானவேறுபாடாகத் திரும்பவும் நாம் எதைக் காண்கிறோம்? உழைப்பு.பூகோளச் சூழ்நிலைகளால் அல்லது அண்டையிலுள்ள மந்தைகளின்எதிர்ப்பால் வரையறை செய்யப்பட்ட தீனிப் பிரதேசத்திற்குள்இரை தேடிக் கொண்டிருப்பதுடன் ஒரு மனிதக் குரங்குக் கூட்டம்திருப்தியடைந்தது; புதிய தீனிப் பிரதேசங்களைப் பெறுவதற்காக அதுகுடி பெயர்ச்சிகளை அல்லது போராட்டங்களை மேற்கொண்டது; தனதுகழிவுப் பொருளைக் கொண்டு அப்பிரதேசங்களுக்குத் தன்னுணர்வின்றிஉரமளித்ததைத் தவிர்த்து அவை இயற்கை நிலையில் அளித்ததற்குமேலாக வலிந்தெடுக்க அது திறனற்றிருந்தது. எல்லாத் தகுந்ததீனி நிலங்களும் வியாபிக்கப்பட்டவுடன் மனிதக் குரங்குகளின்மொத்த தொகையில் பெருக்கம் ஏற்படவில்லை; அதிகபட்சம்அவற்றின் எண்ணிக்கை ஒரே நிலையில் தங்கிவிட்டது. ஆனால் எல்லாமிருகங்களும் பெருமளவு உணவை விரயம் செய்கின்றன; அத்துடன்கூடுதலாக, உணவின் அடுத்த தலைமுறையை முளையிலேயே அழித்துவிடுகின்றன. வேட்டைக்காரனைப் போலன்றி ஓநாய் தனக்கு அடுத்த ஆண்டிற்குக் குட்டிகளை உணவாக அளிக்கும் பெண்மானை விட்டுவைப்பதில்லை; முழு வளர்ச்சி பெறுவதற்கு முன்னரே இளம் புதர்களைத்தின்று விடுகிற கிரேக்க நாட்டு வெள்ளாடுகள் நாட்டிலுள்ள எல்லாமலைகளையும் பசுமையின்றி வெறிச்சோட வைத்தன. மிருகங்களின்இந்தச் “சூறையாடும் பொருளாதாரம்”, இனவகைகள் தங்களதுவழக்கமான உணவைக் கைவிட்டு இதர வகைக்கு ஏற்றவாறு தங்களைஅமைத்துக் கொள்ள நிர்ப்பந்தித்து அவை படிப்படியாக நிலைமாறுதல்அடைவதில் முக்கியப் பாத்திரம் வகிக்கிறது: இதன் புண்ணியத்தால்அவற்றின் ரத்தம் ஒரு வேறுபட்ட இரசாயன ஆக்கத்தைப் பெறவும்உடலமைப்பு படிப்படியாக வேறுபடவும் செய்கிறது; அதே பொழுதில்தங்களைத் திருத்தியமைத்துக் கொள்ளாத இனவகைகள் சிறுகச் சிறுகஇறந்து விடுகின்றன. நமது மூதாதையர்கள் மனிதக் குரங்கிலிருந்துமனிதனாக மாறியதில் இந்தச் சூறையாடும் பொருளாதாரம் பெரும்அளவில் நற்பங்காற்றியுள்ளது என்பதில் யாதோர் ஐயமும் இல்லை.

மனிதக் குரங்குகளில் புத்திக் கூர்மையிலும் சூழ்நிலைமைகளுக்குப்பொருந்தியவாறு அமைத்துக் கொள்வதிலும் மற்றெல்லாவற்றையும் விடமேலோங்கி நின்ற ஓர் இனத்தில் இந்தச் சூறையாடும் பொருளாதாரம்உணவாக உபயோகிக்கப்பட்ட செடிகளின் எண்னிக்கையைத்தொடர்ந்து பெருக்குவதற்கும் உணவு வகைச் செடிகளின் உண்ணத்தக்கபகுதிகளை மேலும் மேலும் கூடுதலாக உண்ணப்படுவதற்கும் இட்டுச்சென்றது. சுருக்கத்தில், “உணவு மேலும் மேலும் பல்வகையதாயிற்றுஉடலுக்குள் செல்லும் பொருட்சத்துகளின் வகையும் அவ்வாறேயாயிற்று;இந்தப் பொருட்சத்துகளே மனிதனாக மாறுவதற்கான இரசாயனஆதாரப்படிகளாகும். ஆனால் அவை அத்தனை சேர்ந்தும் கூட இன்னும்உழைப்பு என்ற சொல்லிற்குப் பொருத்தமான பொருளைப் பெற்றுவிடவில்லை. உழைப்புக் கருவிகளைச் செய்வதிலிருந்தே உழைப்புஆரம்பமாகிறது. நாம் காண்கிற மிகப் புராதனமான உழைப்புக்கருவிகள்-இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள, வரலாற்றுக் காலத்திற்குமுற்பட்ட மனிதனின் வழிவழியாக வந்த உடை மைகளைக் கொண்டும்வரலாற்றுக் காலத்தின் ஆரம்ப மக்களுடையவும் மிக மிக முதிர்ச்சியற்றதற்காலத்துக் காட்டுமிராண்டிகளுடையவும் வாழ்க்கைப் பாங்கைக்கொண்டும் நிர்ணயிப்பதெனில் மிகப் புராதன உழைப்புக் கருவிகள் தான்என்ன? வேட்டையாடுவதற்கும் மீன் பிடிப்பதற்குமான அக்கருவிகளில்முன்சொன்னவை அதே சமயத்தில் ஆயுதங்களாகவும் பயன்பட்டன.

வேட்டையாடுதல், மீன் பிடித்தல் என்றால் தாவர உணவை மட்டும்உட்கொள்வது என்பது மாறி அத்துடன் இறைச்சியையும் உபயோகிக்கிறநிலை ஏற்பட்டது என்று பொருள்; மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலை மாற்றப்போக்கில் இது மற்றொரு முக்கியமான படியாகும். அங்கஜீவியின் வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான எல்லாமுக்கியமான ஆக்கக் கூறுகளும் ஏறக்குறையப் பக்குவப்பட்ட நிலையில் இறைச்சி உணவில் உள்ளன; ஜீரணத்திற்கு ஆகும் நேரத்தைக் குறைத்ததின் மூலமாக அது தாவர வாழ்விற்கு ஒத்த, உடலின் தாவரத் தன்மை சார்ந்த இதர மாற்றப்போக்குகளையும் குறைத்தது; இவ்வாறு மிருக வாழ்வுஎன்பது செயல்திறனுடன் வெளிப்பட்டுச் செயல்படுவதற்குக் கூடுதலானநேரம், பொருள், சக்தி ஆகியவற்றை அது பெற்றுக் கொடுத்தது. உருவாகிவந்த மனிதர் தாவர இனத்திலிருந்து விலகிச் சென்ற அளவுக்கு மனிதர் மிருகத்தை விட மேல் நிலைக்கு உயர்ந்தார். இறைச்சியுடனேயே அக்கம்பக்கமாக ஏற்பட்டதாவர உணவின் பழக்கம் காட்டுப் பூனை, காட்டு நாய் ஆகியவற்றை மனிதனுக்கு ஊழியர்களாக மாற்றியதைப்போலவே, தாவர உணவிற்கு அக்கம்பக்கமாக இறைச்சி உணவையும்பொருந்த அமைத்துக் கொண்டது உருப்பெற்று வந்த மனிதன் உடல்வலுவையும் சுதந்திரத்தையும் பெறுவதில் நற்பங்காற்றியது. ஆயினும் இறைச்சி உணவு மிக அதிகபட்சம் மூளைக்கே நற்பயனை விளைவித்தது; அதனுடைய ஊட்டத்திற்கும் வளர்ச்சிக்கும் தேவையான பொருள்களை இப்பொழுது இன்னும் செழுமையாக அது பெற்றது; எனவே தலைமுறைக்குத் தலைமுறை அதிக விரைவாகவும் முழுநிறைவாகவும் அபிவிருத்தியடைய அதற்குச் சாத்தியமாயிற்று. தாவர உணவு உண்போருக்கு முழு மதிப்புக் கொடுத்த போதிலும், சொல்லவேண்டியதென்னவெனில் இறைச்சி உணவின்றி மனிதர் வாழ்நிலைபெற்று விடவில்லை. இறைச்சி உணவினால் ஏதோ ஒரு காலத்தில் நாமறிந்த சகல மக்கள் இனங்களிலுமே நரமாமிசப்பட்சணியாக மாறஅது இட்டுச் சென்றது எனினும் (பெர்லின் வாசிகளின் மூதாதையர்களானவெலெடாபியன்கள் அல்லது வில்ட்ஸியன்கள் ஆகியோர் பத்தாவதுநூற்றாண்டு வரைக்கும் தங்களது பெற்றோரை உண்பதை வழக்கமாகப்பெற்றிருந்தனர்) அது இன்று நமக்கு முக்கியமல்ல.

இறைச்சி உணவு நிர்ணயமான முக்கியத்துவம் உடைய இரண்டு புதியமுன்னேற்றங்களுக்கு இட்டுச் சென்றது – நெருப்பைப் பயன்படுத்தல்,மிருகங்களைப் பழக்குதல். முதலாவது அரை ஜீரண நிலையில் உணவைவாய்க்கு வழங்கியதால் ஜீரண மாற்றப்போக்கை மேலும் சுருக்கியது;இரண்டாவது வேட்டையாடுவதோடு கூட இறைச்சி இன்னும்அபரிமிதமாகவும் ஒழுங்காகவும் கிடைப்பதற்கான புதியதொருதோற்றுவாயைத் திறந்து விட்டது; மேலும், பாலிலும் அதைச்சேர்ந்த விளைபொருள்களிலும் ஊட்டத்தில் இறைச்சிக்குக் குறைந்தபட்சம் சமமான மதிப்புள்ள புதியதோர் உணவுப் பண்டத்தைஅளித்தது. இவ்வாறு இவ்விரண்டு முன்னேற்றங்களும் மனிதனுடையவிடுதலைக்குப் புதிய சாதனங்களாக விளங்கின. மனிதனுடையவும்சமூகத் தினுடையவும் அபிவிருத்திக்கு அவை மகத்தான முக்கியத்துவம்உடையனவாக இருந்தாலும், அவற்றின் மறைமுக விளைவுகளைப் பற்றிஇங்கு நாம் விரித்துக் கூறினால் அது நம்மை வேறு புறம் வெகு தூரம்இட்டுச் சென்று விடும். உண்ணத்தக்கவற்றை எல்லாம் உண்ணக் கற்றுக்கொண்டதைப் போலவே மனிதன் எந்த சீதோஷ்ண நிலையிலும் வாழவும்கற்றுக்கொண்டான். குடியிருக்கத்தக்க உலகம் முழுவதிலும் அவன் வியாபித்தான்; தனது சொந்தப் போக்கில் அதை முழுமையாகச் சாதித்தஒரே மிருகம் அவனே. எல்லா சீதோஷ்ண நிலைகளுக்கும் தங்களைப்பழக்கப்படுத்திக் கொண்ட இதர மிருகங்கள் – வீட்டுப் பிராணிகளும்பூச்சி இனங்களும் – தங்களது சொந்தப் போக்கில் சுயேச்சையாகஅவ்வாறு மாறவில்லை; மனிதனுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றிச்சென்றே அவ்வாறு மாறின. ஒரே மாதிரியான வெப்ப சீதோஷ்ணநிலை நிலவிய தனது அசல் குடியிருப்புப் பிரதேசத்திலிருந்து மனிதன்வேனிற்காலம், பனிக்காலம் என வருடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளகுளிர் பிரதேசங்களுக்குப் பெயர்ந்து சென்றதானது புதிய தேவைகளை– குளிரையும் ஈரத்தையும் எதிர்த்துக் காப்பாகப் புகலிடமும் உடுப்பும்என்பதாக – படைத்தது; இதனால் உழைப்புக்கான புதிய துறைகளும்செயலுக்கான புதிய வடிவங்களும் தோன்றின; இவை மேலும் மேலும்மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்தின.

கைகள், பேச்சு உறுப்புகள், மூளை இவற்றினுட ையஒருங்கிணைப்பான செயற்பாட்டினால் – ஒவ்வொரு தனி மனிதனிடத்தில்மட்டுமின்றிச் சமூகத்திலும் கூட-மனிதர்கள் மேலும் மேலும் சிக்கல்மிகுந்த காரியங்களை நிறைவேற்றத் திறன் பெற்றனர்; மேலும்மேலும் உயர்ந்த குறிக்கோள்களைத் தங்களுக்கு நிர்ணயித்துக்கொள்வதும் அவற்றை அடைவதும் அவர்களுக்குச் சாத்தியமாயிற்று.ஒவ்வொரு தலைமுறையின் வேலையும் கூட வித்தியாசப்பட்டது;கூடுதலான செய்நேர்த்தியும் பல்வகைத் தன்மையும் அது பெற்றது.வேட்டையாடுவது, கால்நடைகளை வளர்ப்பது என்பதுடன்விவசாயமும் சேர்ந்தது; அதைத் தொடர்ந்து நூற்பு, நெசவு வேலைகள்,உலோக வேலைகள், மண் பாண்டங்கள் செய்தல், கடற்பயணம்ஆகியனவும் வந்தன. வாணிபம், தொழில் இவற்றுடன் இறுதியாகக்கலைகளும் விஞ்ஞானமும் தோன்றின: குலங்கள் தேசங்களாகவும்அரசுகளாகவும் வளர்ந்தன. சட்டமும் அரசியலும், அவற்றோடுமனிதனுடைய உள்ளத்தில் மனித விவகாரங்களின் அந்த வினோதமானபிரதிபிம்பமான மதமும் எழுந்தன. உள்ளத்தின் விளைபொருள்களாகமுதலாவதாகத் தோற்றமளித்தவையும் மனித சமூகங்களில் மேலாதிக்கம்செலுத்தியவையுமான இந்த எல்லாப் பிம்பங்களுக்கும் எதிராகஉழைக்கும் கையின் மிகையான தன்னடக்கம் உள்ள விளைபொருள்கள்பின்னணிக்குச் சென்றன; சமூக வளர்ச்சியின் மிக ஆரம்ப கட்டத்திலேயே(உதாரணமாக, புராதனக் குடும்பத்திலேயே) உழைப்புக்குத் திட்டம்வகுத்த உள்ளம் தன்னுடையதன்றி இதர கைகளால் அவ்வாறுதிட்டமிடப்பட்ட உழைப்பை நிறைவேற்றவும் சாத்தியமாக்கியதால்அது இன்னும் கூடுதலாகவே நிகழ்ந்தது. நாகரிகத்தினுடைய துரிதவளர்ச்சியின் பெருமை முழுவதும் உள்ளத்திற்கே, மூளையின் வளர்ச்சிக்கும் செயலுக்குமே வழங்கப்பட்டது. (எவ்வாறாயினும் உள்ளத்தில்புலன் நுகர்ச்சி செய்யப்பட்டு அதில் பிரதிபலிக்கிற) தங்களுடையதேவைகளிலிருந்தன்றிக் கருத்துகளிலிருந்தே எழுகின்றன என்று தங்களுடைய செயல்களை விளக்க மனிதர்கள் வழக்கப்படுத்திக்கொண்டனர்; எனவே காலப் போக்கில், விசேஷமாகப் பண்டைய உலகின்வீழ்ச்சிக்குப் பிறகு மனிதர்களின் மனதில் மேலாதிக்கம் செலுத்தியஒரு கருத்துமுதல்வாத உலகக் கண்ணோட்டம் எழுந்தது. டார்வின்கருத்தோட்டத்தைச் சேர்ந்த அதிகப் பொருள்முதல்வாத இயற்கைவிஞ்ஞானிகள் கூட மனிதனுடைய ஆரம்ப பிறப்பைக் குறித்து ஒருதெளிவான கருத்தை இன்னும் கூடப் பெற இயலாத அளவுக்கு அதுஇன்னும் மனிதர் களை ஆட்சி செய்து வருகிறது; ஏனெனில் அதனுடையகருத்தியல் செல்வாக்கின் கீழ்ப்பட்டுள்ள அவர்கள் அதில் உழைப்புஆற்றியுள்ள பங்கை அங்கீகரிப்பதில்லை.

ஏற்கெனவே சுட்டிக் காட்டியது போல, மிருகங்கள் தங்களதுசெயல்களால் – மனிதனைப் போலவே, ஆனால் அந்த அளவுக்குஇல்லாமல் இருந்தாலும் – சுற்றுச்சார்புகளை மாற்றுகின்றன; இந்தமாற்றங்கள் தங்களது முறைக்கு அவற்றை நிகழ்த்தியவர்களின் மீதுஎதிர்ச்செயல் புரிந்து அவர்களை மாற்றுகின்றன என்பதையும் கண்டோம்.இயற்கையில் எதுவுமே தனிமைப்பட்ட நிலையில் நிகழ்வதில்லை.ஒவ்வொன்றும் மற்ற ஒவ்வொன்றையும் பாதிக்கிறது, பாதிக்கப்படுகிறது.பெரும்பாலான இனங்களில் இந்தப் பல தரப் பட்ட இயக்கமும் பரஸ்பரச்செயற்பாடும் மறக்கப்படுவதால் மட்டுமே நமது இயற்கை விஞ்ஞானிகள்மிக எளிய விஷயங்களிலும் கூட ஒரு தெளிவான உட்பார்வைபெறுவதினின்றும் தடுக்கப்படுகின்றனர். கிரேக்க நாட்டில் வெள்ளாடுகள்காடுகள் புத்துயிர் பெறுவதை எப்படி தடுத்தன என்பதைக் கண்டோம்;செயின்ட்ஹெலேனா தீவில் ஆரம்பத்தில் குடியேறியவர்களால் கொண்டுவரப்பட்ட வெள்ளாடுகளும் பன்றிகளும் ஏறக்குறையப் பூரணமாகவேஅங்கிருந்த பழைய செடிகொடியினத்தையே ஒழித்து விடுவதில் வெற்றிகண்டு, பின்னால் வந்த மாலுமிகள், குடியேறியவர்கள் இவர்களால்கொணரப்பட்ட செடிகள் பரவுவதற்கு இவ்வாறு வழி வகுத்தன.

ஆனால் மிருகங்கள் சுற்றுச்சார்புகள் மீது எவ்வித உட்கருத்தின்றிஅவற்றைப் பொறுத்த வரை தற்செயலாகவும் நிரந்தரமான பாதிப்பைநிகழ்த்துகின்றன. ஆனால் மனிதர்கள் மிருகங்களிடமிருந்து விலகிச்செல்கிற அளவுக்கு இயற்கையின் மீது அவர்களின் பாதிப்பு முன்கூட்டியேநிர்ணயித்த, திட்டமான குறிக்கோள்களை நோக்கிய திசைமுகம் கொண்ட,முன்னரே சிந்தித்துத் திட்ட மிட்ட செயலின் இயல்பை மேலும் மேலும்கொள்கிறது. அவை என்ன செய்கின்றன என்பதை உணராமலேயேமிருகங்கள் ஓர் இடத்தில் உள்ள செடிகொடியினத்தை அழிக்கின்றன.மனிதன் அதை அழிப்பது அவ்வாறு செய்வதினால் விடுபடுகிறநிலத்தில் வேளாண்மைப் பயிரை விதைக்க அல்லது மரங்களை அல்லதுதிராட்சைக் கொடிகளை நடு வதற்காகவேயாம்; விதைப்பதைப் போலப்பல மடங்கை அவை அளிக்கின்றன என்பதை அவன் அறிவான்.உபயோககரமான செடிகளையும் வீட்டுப் பிராணிகளையும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு அவன் மாற்றி கண்டங்கள் அனைத்தின் மாவடை, மரவடை வகைகளையே இவ்வாறு மாற்றிவிடுகிறான்.

இதை விட இன்னும் அதிகமாக. செயற்கை இனப் பெருக்கத்தின் மூலம்செடிகளும் மிருகங்களும் மனிதனுடைய கையினால் அடையாளம்தெரியாத அளவுக்கு மாற்றப்படுகின்றன. நமது தானிய வகைகள்எந்தக் காட்டுச் செடிகளிலிருந்து தோன்றினவோ, அவை பயனற்றவகையில் இன்னும் கூடத் தேடப்பட்டு வருகின்றன. மிகவித்தியாசப்பட்ட வளர்ப்பினங்களைச் சேர்ந்த நமது நாய்கள் அல்லதுஇவற்றிற்குச் சமமான எண்ணிக்கையுள்ள வளர்ப்பினங்களைச் சேர்ந்தகுதிரைகள் எந்தக் காட்டு மிருகங்களின் வழிமரபாக வந்தன என்பதைக்குறித்து இன்னும் சர்ச்சை உள்ளது.

முன்கூட்டியே சிந்தித்த, திட்டமிட்ட முறையில் செயல்படமிருகங்களுக்கு உள்ள ஆற்றலைக் குறித்து சர்ச்சை புரிய நமக்குமனதிற்படாது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இதற்குஎதிர்மாறாக, எங்கெங்கு புரோடோபிளாஸம், உயிருள்ள அல்புமின்நிலை வாழ்ந்து எதிர்ச்செயல் புரிகிறதோ, அதாவது திட்டமான புறநிலைத்தூண்டுகைகளின் விளைவாக மிகச் சாதாரணமானவையாக இருந்தாலும்திட்டமான சலனங்களை உண்டாக்கி நிறைவேற்றுகின்றதோ,அங்கெல்லாம் கரு உருவத்தில் திட்டமிட்ட செயல்முறை நிலைவாழ்கிறது. ஒரு நரம்பு அணு இருக்கிறதா என்பது ஒரு புறமிருக்க ஓர்அணு கூட இன்னும் இல்லாத இடத்தில் கூட இவ்வாறான எதிர்ச்செயல்நிகழ்கிறது. பூச்சிகளை உண்ணும் செடிகள் உளவிழிப்பின்றிச் செய்தாலும்கூட தங்களுடைய இரையைப் பிடிக்கும் முறையில் திட்டமிட்டசெயலின் ஏதோ ஒன்று இருக்கிறது. மிருகங்களில் உளவிழிப்புள்ளதிட்டமிட்ட செயலுக்கான திறன் என்பது அவற்றின் நரம்பு மண்டலஅபிவிருத்தியுடன் தகவுப் பொருத்தம் உடையதாகும்; பாலூட்டிகளில்அது இன்னும் கணிசமான உயர் மட்டத்தை அடைகிறது. இங்கிலாந்தில்நரி வேட்டையின்போது தன்னைத் துரத்துகிறவர்களிடமிருந்துதப்பிக்க ஸ்தலத்தைப் பற்றிய தனது சிறந்த அறிவை நரி எவ்வாறுஒரு பிழையுமின்றி உபயோகிக்கிறது என்பதையும் மோப்பத்தைஇழக்கும்படிச் செய்ய நிலத்தில் உள்ள எல்லாச் சாதகமானஅம்சங்களையும் அது எவ்வளவு நன்கு உணர்ந்து பயன்படுத்துகிறதுஎன்பதையும் ஒருவன் தினசரி கவனிக்க முடியும். மனிதனுடன் உறவுபூண்டதின் புண்ணியத்தால் மிக ஓங்கிய வளர்ச்சி பெற்ற நமது வீட்டுப்பிராணிகளிடையே குழந்தைகளுக்குச் சரி ஈடாக உள்ள சூழ்ச்சித்திறமுள்ள செயல்களை ஒருவன் இடைவிடாமல் கவனிக்கமுடியும்.தாயின் கர்ப்பத்தில் உள்ள மனிதக் கருவின் வளர்ச்சி வரலாறு பலபத்து லட்சம் ஆண்டுகளாக நடந்தேறிய நமது மிருக மூதாதையர்களின்புழுவிலிருந்து தொடங்கிய உடல் பரிணாமத்தின் சுருங்கிய புனர்நிகழ்வேயாம்; இதைப் போலவே, மனிதக் குழந்தையின் உள வளர்ச்சிஅதே மூதாதையர்களின்-குறைந்த பட்சம், பிற்காலத்தவருடைய-அறிவுத் துறை வளர்ச்சியின் இன்னும் கூடுதலான சுருங்கிய புனர்நிகழ்வு மட்டுமேயாகும். ஆனால் எல்லா மிருகங்களின் எல்லாத் திட்டமிட்டசெயல்கள் சேர்ந்தாலும் பூமியின் மீது அவற்றினுடைய மனோசித்தத்தின்முத்திரையை இடுவதில் அவை வெற்றி பெற வில்லை. அதுமனிதனுக்கே விடப்பட்டது.

சுருக்கத்தில், ஒரு மிருகம் தனது சுற்றுச் சார்பைச் சும்மா பயன்படுத்தமட்டுமே செய்கிறது; தனது வெறும் இருத்தலால் மட்டும் இதில்மாற்றங்களை உண்டாக்குகிறது; மனிதன் தனது மாற்றங்களால் தனதுகுறிக்கோள்களுக்கு அதை ஊழியம் புரியச் செய்கிறான், அதற்குஎசமானனாகிறான். மனிதனுக்கும் இதர மிருகங்கள் அனைத்திற்கும்உள்ள இறுதியான, சாராம்சமான வித்தியாசம் இதுவே: இந்தவித்தியாசத்தை நிகழ்த்துவது உழைப்பே என்பதை மீண்டும் ஒரு தடவைகுறிப்பிட வேண்டும்.

*

இருந்தபோதிலும் இயற்கையின் மீது நமது மனித வெற்றிகளைவைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றிஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. ஒவ்வொருவெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்கிற விளைவுகளைநிகழ்த்துகிறது என்பது உண்மையேயாயினும் இரண்டாவது, மூன்றாவதுநிலைகளாக நாம் எதிர்பார்க்காத, முற்றிலும் வேறுபட்ட பலன் களையும்அளிக்கிறது; இவை பல தடவைகளிலும் முதலில் சொன்னதைரத்து செய்துவிடுகின்றன. மெசப்பொடேமியா, கிரீஸ், ஆசியாமைனர், இன்னும் இதர இடங்களிலும் சாகுபடி நிலங்களைப்பெறுவதற்காகக் காடுகளை அழித்த மக்கள் காடுகளை அழித்ததுடன்கூடவே நீர்த் தேக்கங்களையும் தண்ணீர் ஒருங்கு சேரும் இடங்களையும்ஒழித்ததினால் அவர்கள் அந்த நாடுகளின் தற்போதைய திக்கற்றநிலைக்கு அடிகோலியதாகக் கனவும் கூடக் காணவில்லை. ஆல்ப்ஸ்மலைகளில் குடியேறிய இத்தாலியர்கள் வட புறச் சரிவுகளில் அவ்வளவுபரிவுடன் பேணிக் காக்கப்பட்ட பைன் மரக் காடுகளைத் தென் புறச்சரிவுகளில் பூரணமாக வெட்டிப் பயன்படுத்தி விட்டபொழுது, அவ்விதம்செய்ததின் மூலம் அப்பிரதேசத்துப் பால் பண்ணைத் தொழிலின் அடிவேர்களையே வெட்டி விட்டதின் சூசகத்தையும் கூடக் காணவில்லை;அதன் மூலம் வருடத்தின் பெரும் பகுதியில் மலைச் சுனைகளுக்குத்தண்ணீர் இல்லாமல் செய்து விட்டதைப் பற்றியும் மழைக் காலங்களில்கூடுதலான வெள்ளப் பெருக்குடன் அவை சமவெளிகளில் பாய்வதற்குவகை செய்யப்பட்டது என்பதைப் பற்றியுமோ, அந்த அளவு சூசகமும்கூடக் காணவில்லை. ஐரோப்பாவில் உருளைக் கிழங்கை யார் பரவவைத்தனரோ, அவர்கள் அந்த மாச்சத்துள்ள கிழங்குகளுடன் அதேசமயத்தில் கண்டமாலை என்ற வியாதியையும் கூடப் பரப்ப ஏதுவாயினர் என்பதை அவர்கள் அறியவில்லை. இவ்வாறாக அயல்நாட்டு மக்கள்மீது வெற்றிவாகை சூடியவனைப் போல, இயற்கைக்குப் புறத்தில்நிற்கும் ஒருவனைப் போல, இயற்கையின் மீது எவ்விதத்திலும் நாம்ஆளுகை புரியவில்லை என்பதும் அதற்குப் பதிலாக நமது சதை, ரத்தம்,மூளை இவற்றுடன் இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம் அதன் நடுவில்வாழ்கிறோம் என்பதும் இயற்கையின் நியதிகளைக் கற்றுக் கொண்டுஅவற்றைப் பொருந்தியவாறு கடைப்பிடிப்பதில் இதர எல்லாப்பிராணிகளைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்பதிலேயேஅதன் மீது நமது ஆளுகை அடங்கியுள்ளது என்பதும் ஒவ்வொருபடியிலும் நமக்கு நினைவூட்டப்படுகிறது.

உள்ளபடியாகவே, கடந்து போகும் ஒவ்வொரு நாளும் நாம்இந்த நியதிகளை மேலும் நன்கு புரிந்துகொண்டும் இயற்கையின்பரம்பரையான செல்வழியில் நாம் குறுக்கிடும்போது உண்டாகும் உடனடிவிளைவுகளையும் எதிர்காலத்தில் நிகழும் விளைவுகளையும் புலனாக்கிக்கொண்டும் வருகிறோம். குறிப்பாக, இந்த நூற்றாண்டில் இயற்கைவிஞ்ஞானங்களில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றங்களுக்குப்பிறகு குறைந்தபட்சம் நமது தினசரி உற்பத்திச் செயல்களின்இயற்கையான எதிர்கால விளைவுகளையும் கூட உணரவும் எனவேஅவற்றைக் கட்டுப்படுத்தவும் கூடிய நிலையில் எப்பொழுதையும்விட இன்றுள்ளோம். இது முன்னேற்றம் அடைய அடைய மனிதர்கள்இயற்கையுடன் தங்களுக்குள்ள ஒருமைப்பாட்டை மேலும் மேலும் உணருவது மட்டுமின்றி – ஐரோப்பாவில் பண்டையகிரேக்க – லத்தீன் நாகரிகம் �ணமடைந்த பிறகு தோன்றி கிறிஸ்துவமதத்தில் மிக அதிக நுட்பம் பெற்ற, மனது – பருப்பொருள் என்பதையும் மனிதன் – இயற்கை என்பதையும் உடல் – ஆன்மா என்பதையும்வேறுபடுத்தி எதிர்நிலைப்படுத்துகிற பொருளற்ற, இயற்கைக்குமுரணான கருத்தானது மேலும் மேலும் சாத்தியமில்லாமல் போகும். உற்பத்தித் துறையில் நமது செயல்களின் கூடுதலான தொலைவிலுள்ளஇயற்கையான பலன்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதில் ஒருசிறிதைக் கற்றுக்கொள்ள நமக்குப் பல்லாயிரமாண்டுகள் உழைப்புதேவைப்பட்டது; ஆனால் இந்தச் செயல்க ளி ன் கூ டு த ல ா னதொலைவிலுள்ள சமுதாய ரீதியான பலன்களைப் பற்றியது இன்னும்அதிகக் கடினமுள்ளதாக இருக்கிறது. உருளைக் கிழங்கைப் பற்றியும்அதன் பலனாக விளைந்து பரவிய கண்டமாலை வியாதியைப்பற்றியும் மேலே சொன்னோம். ஆனால் உருளைக் கிழங்கு உணவுடன்தொழிலாளிகள் கட்டுப்பட்டுப் போனதால் பல நாடுகளில் பாமரமக்கள் பகுதிகள் அனைத்தின் வாழ்க்கை நிலைமைகளில் நிகழ்ந்தவிளைவுகளுடன் ஒப்பிட்டு நோக்கினாலும் அல்லது உருளைக்கிழங்கு ஒன்றை மட்டுமே அல்லது கிட்டத்தட்ட அதை மட்டுமேஉணவாகக் கொண்ட ஐரிஷ் மக்களில் பத்து லட்சம் பேரைப் புதைகுழிக்கு அனுப்பியும் அத்துடன் இருபது லட்சம் பேரைக் கடல்கடந்து குடிபெயரவும் செய்த, அயர்லாந்தில் 1847இன் உருளைக்கிழங்கு நோய் நிகழ்த்திய பஞ்சத்துடன் ஒப்பு நோக்கினாலும்கண்ட மாலை என்பது எந்த மூலைக்கு? மதுபானங்களை வடிக்கஅராபியர்கள் கற்றுக் கொண்ட போது, அவ்விதம் செய்ததின் மூலம்அவர்கள் அப்பொழுது இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தஅமெரிக்கக் கண்டத்தின் பூர்வீகக் குடிகளைக் களைந்தெறிவதற்கானபிரதான கருவிகளில் ஒன்றைச் சிருஷ்டித்துக் கொண்டிருப்பதாகஅவர்கள் மூளையில் கிஞ்சிற்றும் தோன்றவில்லை. அதன் பின்னர்அந்த அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்தபொழுது, அவ்வாறுசெய்ததின் மூலம் ஐரோப்பாவில் என்றோ ஒழிக்கப்பட்டுப் போனஅடிமைத்தனத்துக்குப் புத்துயிரளிப்பதாகவும் நீக்ரோ அடிமைவர்த்தகத்திற்கு அடிகோலுவதாகவும் அவர் அறியவே இல்லை.பதினேழாவது, பதினெட்டாவது நூற்றாண்டுகளில் நீராவி எஞ்சினைப்படைக்க உழைத்த மனிதர்களுக்கு, உலகம் முழுவதிலும் வேறு எதைக்காட்டிலும் சமூக உறவுகளைப் புரட்சிகரமாக்குகிற ஒரு சாதனத்தைஅவர்கள் தயாராக்கிக் கொண்டிருக்கின்றனர் என்ற எண்ணமேஇல்லை; விசேஷமாக ஐரோப்பாவில் ஒரு சிறுபான்மையோர் கையில்செல்வத்தைக் குவித்தும், பெரும்பான்மையோரின் உடைமைகளைப்பறித்தும் இந்தச் சாதனம் முதலில் முதலாளி வர்க்கத்திற்குச் சமூக,அரசியல் மேலாதிக்கத்தை அளிப்பதையும் ஆனால் பிற்பாடுமுதலாளி வர்க்கம் துக்கியெறியப்படுவதிலும் எல்லாவித வர்க்கப்பகைமைகளும் ஒழிக்கப்படுவதிலும் மாத்திரமே முடிவு பெறக் கூடிய,முதலாளி, பாட்டாளி வர்க்கங்களிடையில் வர்க்கப் போராட்டத்தைத்தோற்றுவிப்பதையும் தனது விதியாகக் கொண்டிருந்தது. ஆனால்இந்தத் துறையிலும் கூட நீண்ட, அடிக்கடி குரூரத் தன்மை வாய்ந்தஅனுபவத்தின் மூலமாகவும் வரலாற்று விஷயாதாரங்களை சேகரித்துப்பகுப்பாய்வு நடத்தியதின் மூலமாகவும் நமது உற்பத்திச் செயல்களின்மறைமுகமான, மேலும் தொலைவிலுள்ள சமூக விளைபயன்களைப்பற்றித் தெளிவானதொரு கண்ணோட்டம் பெற நாம் படிப்படியாகக்கற்று வருகிறோம்; எனவே இந்த விளைபயன்களையும் கட்டுப்படுத்திமுறைப்படுத்த ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைத்தது.

எனினும் இவ்வாறு முறைப்படுத்தல் என்பதற்கு வெறும் அறிவுமட்டும் போதாது; ஏதோ ஒன்று அதிகமாகவும் தேவையாகிறது. இன்றுவரை நிலைப்பிலுள்ள நமது உற்பத்தி முறையில் ஒரு முழுப் புரட்சியும்,அதே சமயத்தில் நமது இன்றைய சமூக அமைப்பு முழுவதிலும் ஒருபுரட்சியும் தேவைப்படுகின்றன.

இதுவரை நிலைப்பிலிருந்து வரும் எல்லா உற்பத்தி முறைகளும்உழைப்பினுடைய மிக அடுத்த, நேரடியான பயன் அளிக்கிற விளைவைப்பெறுவதை மட்டுமே வெறும் குறிக்கோளாகக் கொண்டிருந்தன. பிற்பாடு மட்டுமே வெளிப்படுகிற, படிப்படியாகத் திரும்பத் திரும்பச்செய்யப்படுவதாலும் திரட்சி பெறுவதினாலும் மட்டுமே பயன்தருகின்ற மேலும் கூடி வரும் விளைவுகள் பூரணமாகவே உதாசீனம்செய்யப்பட்டன. முதலாக இருந்த நிலப் பொது உடைமை, ஒருபுறம், உடனடியாகக் கிட்டக்கூடியதுடன் மட்டுமே பொதுவாகவரையறுக்கப்பட்ட அறிவு வரம்பு பெற்ற மனிதகுல வளர்ச்சிமட்டத்துக்கு ஒத்திசைந்திருந்தது; மற்றொரு புறம், அது இந்தப்பூர்வீகத் தன்மை வாய்ந்த பொருளாதாரத்தின் சாத்தியப்பாடுள்ள தீயவிளைவுகளை நேர் செய்ய இடமளிக்கிற நிலத்தின் ஓர் உபரியைமுன்னூகம் செய்து கொண்டது. இந்த உபரி நிலம் தீர்ந்த பிறகுபொதுவான உடைமை என்பதும் நசித்தது. இருந்தாலும் உற்பத்தியின்உயர் வடிவங்கள் அனைத்தும் மக்கள்தொகை பல்வேறு வர்க்கங்களாகப்பிரிக்கப்படுவதற்கும் அதன் மூலம் ஆளும் வர்க்கம், ஒடுக்கப்படுகிறவர்க்கம் இவற்றிடையே பகைமை தோன்றுவதற்கும் இட்டுச் சென்றன.இவ்வாறாக ஆளும் வர்க்கத்தின் நலன்களே உற்பத்தியை முன்னோக்கிநடத்திச் செல்லும் காரணியாக அமைந்தன; ஏனெனில் ஒடுக்கப்பட்டமக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பண்டங்களை அளிப்பதுடன்உற்பத்தி கட்டுப்பட்டு விடவில்லை. மேற்கு ஐரோப்பாவில் ஓங்கிப்பரவியுள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையில் இது முழுக்க முழுக்கஅமுலாக்கப்பட்டுள்ளது. உற்பத்தியிலும் பரிவர்த் தனையிலும்மேலாதிக்கம் கொண்டுள்ள தனிப்பட்ட முதலாளிகள் தங்களுடையசெயல்களின் மிக உடனடியான பிரயோசனமுள்ள பலன்களைப் பற்றிமட்டுமே கவலைப்பட முடிகிறவர்களாக உள்ளனர். உண்மையில்இந்தப் பிரயோசனமுள்ள பலன் என்பதும் கூட-உற்பத்தி செய்யப்படுகிறஅல்லது பரிவர்த்தனைக்குட்படுகிற பண்டத்தின் பிரயோ சனம் என்பதேபிரச்சனையாக இருப்பதால் – பின்னணிக்குள் வெகு தூரம் பின்வாங்கிப்போய், விற்பனையினால் கிடைக்கும் லாபம் மட்டும் ஒரே உந்தும்சக்தியாகிவிடுகிறது.

முதலாளி வர்க்கத்தின் சமூகவியலான, மூலச் சிறப்புள்ள அரசியல்பொருளாதாரம் உற்பத்தி, பரிவர்த்தனை ஆகிய துறைகளில்உண்மையாகவே குறிக்கோள்களாகக் கொள்ளப்படுகின்ற மனிதச்செயல்களின் சமூக விளைவுகளை மட்டுமே பிரதானமாக ஆராய்கிறது.சமூக அமைப்பின் தத்துவார்த்த வெளியீடாக உள்ள அத்துடன் இதுமுழு ஒத்திசைவு உள்ளதாகவே இருக்கிறது. தனிப்பட்ட முதலாளிகள்உடனடியான லாபத்திற்காக உற்பத்தியிலும் பரிவர்த்தனையிலும்ஈடுபட்டிருப்பதால் முதலில் மிக நெருங்கிய, மிக அடுத்துள்ளவிளைவுகள் மட்டுமே கணக்கிலெடுக்கப்பட வேண்டும். ஒரு தனிப்பட்டஉற்பத்தியாளன் அல்லது வியாபாரி உற்பத்தி செய்த அல்லது விலைக்குவாங்கப்பட்டசரக்கை வழக்கமான பேராசைப்பட்ட லாபத்துடன் விற்கும் வரை அவன் அத்துடன் திருப்தியடைகிறான்; அதன் பிறகு அந்தச்சரக்கிற்கோ அல்லது அதை வாங்குபவர்களுக்கோ என்ன நேர்கிறதுஎன்பதைப் பற்றி அவன் கவலை கொள்பவனாக இல்லை. அதேசெயல்களின் இயற்கை விளைபயன்களுக்கும் இதுவே பொருத்தமாகஉள்ளது. கியூபாவில் மலைச் சரிவுகளில் இருந்த காடுகளைத் தீயிட்டுக்கொளுத்தி மிகவும் உயர்ந்த லாபகரமான காப்பிச் செடிகளின் ஒருதலைமுறைக்குப் போதுமான உரத்தை அந்தச் சாம்பலிலிருந்து பெறஸ்பானிய காப்பித் தோட்ட முதலாளிகள் என்ன கவலைப்பட்டார்கள்-வெப்பப் பிரதேசத்துக் கன மழை பின்னால் பாதுகாப்பற்ற மேல்படிவமண் முழுவதையும் அடித்துக் கொண்டு போய் பாறைகளை மட்டும்மொட்டையாக விட்டுச் சென்றது என்பதைப் பற்றித்தான் அவர்கள்என்ன கவலைப்பட்டார்கள்! சமூகத்தைப் போலவே இயற்கைசம்பந்தமாகவும் கூட இக்காலத்திய உற்பத்தி முறை உடனடியான, மிகஉருப்படியான விளைவுகளைப் பற்றி மட்டுமே பிரதானமாக அக்கறைகொண்டுள்ளது; பிறகு இந்த நோக்கத்தின் பால் திசைமுகம் திரும்பியுள்ளசெயல்களின் எதிர்கால விளைவுகள் மிக வேறுபட்டவையாக, இயல்பில்பெரும்பாலும் நேர் முரணானவையாக மாறிவிடுகின்றன என்றும்தொழில்துறையின் பத்தாண்டு கால சக்கரவட்டச் செல்வழி காட்டியதுபோல அளிப்புக்கும் தேவைக்கும் இருந்த நல்லிணக்கம் நேர் எதிரானதாக-“வீழ்ச்சியில்” *ஜெர்மனியும் கூட சிறிது பூர்வாங்க அனுபவத்தை அதைக்குறித்து பெற்றது-மாறி விடுகிறது என்றும் தன் சொந்த உழைப்பைஅடிப்படையாகக் கொண்டுள்ள தனி உடைமை அத்தியாவசியமாகவேஉழைப்பாளிகளின் உடைமை கவரப்பட்டு வெளியேற்றப்படுவதாகவளர்ந்து உழைப்பாளிகளல்லாதவர் கைகளில் மேன்மேலும் செல்வம்குவிக்கப்படுகிறது என்றும் மேலும் ஆச்சரியம் வெளியிடப்படுகிறது….**

1876 இல் பி. எங்கெல்சினால்எழுதப்பட்டது…

 • இக்கட்டுரை முதலில் “அடிமைப்படுத்தலின் மூன்று முக்கியமான வடிவங்கள்” என்னும் விரிவான நூலுக்கு ஒரு முன்னுரையாகத் திட்டமிடப்பட்டது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை; ஆகையால் முடிவில் எங்கெல்ஸ், அவர் எழுதிய முன்னுரைக்கு “மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்” என்னும் தலைப்பைக் கொடுத்தார். மனித உடலமைப்பின் உருவாக்கத்தில் உழைப்பு மற்றும் கருவிகளின் உற்பத்தி வகித்த ஜீவாதாரமான பாத்திரத்தை எங்கெல்ஸ் ஆராய்கிறார்; நீண்ட வரலாற்றுப் போக்கின் விளைவாகக் குரங்கு குண ரீதியில் புதிய
  பிறவியாக, மணிதனாக எப்படி மாறியது என்பதை அவர் எடுத்துக்காட்டுகிறார். இக்கட்டுரை அநேகமாக 1876 ஜூனில் எழுதப் பட்டிருக்க வேண்டும்.
 • இங்கு கையெழுத்துப் பிரதி துண்டாக நின்றுவிடுகிறது.-ப.ர்,

எங்கெல்ஸ் என்ற புரட்சியாளன் !

ரகுராம் நாராயணன்

(ஜெர்மனியின் ரைன் பகுதியிலும் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியிலும் செயல்பட்டு வந்த பருத்தி ஆலைகளின் உரிமையாளரான பிரெடெரிக் எங்கெல்ஸ் (சீனியர்) –  அவரது மனைவி எலிசபெத் பிரான்சிஸ்கா மெளரிஷியா தம்பதியினருக்கு நவம்பர் 28, 1820 ஆண்டு பிறந்தார் பிரெடெரிக் எங்கெல்ஸ். அவர் பிறந்த 200 வது ஆண்டு நவம்பர் 28, 2019 தொடங்குகிறது. இந்தக் கட்டுரை கார்ல் மார்க்ஸ் – எங்கெல்ஸ் இடையிலான அறிமுகத்திலிருந்து தொடங்குகிறது. அவரின் மிக முக்கியமான படைப்புகள் மற்றும் பங்களிப்புகளை நமக்கு கவனப்படுத்துகிறது – ஆசிரியர் குழு)

துடிப்புமிக்க இளைஞராக இருந்த பிரெடெரிக் எங்கெல்ஸ், தனது புரட்சித் தோழன் கார்ல் மார்க்சுடன் பழகுவதற்கு முன்னரே (அக்டோபர் 1842) மார்க்ஸ் ஆசிரியராக இயங்கிய ரைனிஸ் ஜைதுங் பத்திரிக்கைக்கு கட்டுரைகள் எழுதியிருந்தார். “உள்நெருக்கடிகள் பற்றிய ஆங்கிலேயர்களின் பார்வை”, “உள் நெருக்கடிகள்”, “இங்கிலாந்தில் பாட்டாளி வர்க்கத்தின் நிலை” மற்றும் “கார்ன் விதிகள்” போன்றவை அவரின் முக்கியமான கட்டுரைகளாகும். இங்கிலாந்தின் சமூக அமைப்பையும், வெவ்வேறு வர்க்கங்களையும், வர்க்கங்களுக்கு இடையேயான சமூக உறவுகளையும் மிக நுட்பமாக ஆராய்ந்து அக்கட்டுரைகளை அவர் எழுதினார்.

இங்கிலாந்தில் வளர்ந்து கொண்டிருந்த பாட்டாளி வர்க்க இயக்கமான “சார்டிஸ்டு இயக்கத்தை” அவர் ஆர்வமுடன் நோக்கினார். அந்த இயக்கத்தின் பாட்டாளிகளைச் சந்தித்தார். அதே சமயம் “சட்டரீதியான புரட்சி என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று” என மிகச் சரியான விமர்சனத்தையும் அவர் முன்வைத்தார்.

அவர் எழுத்தராகப் பணிபுரிந்த நிறுவனத்தில் பணியாற்றிவந்த அயர்லாந்தைச் சேர்ந்த மேரி பர்ன்ஸ் என்பவரை மணம் புரிந்தார். அவரோடு இணைந்து மான்செஸ்டர் நகரில் உள்ள கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்றார்.

சோசலிச, கம்யூனிச இயக்கங்கள் குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டார். ஆங்கிலேய சோசலிஸ்டுகளின் பத்திரிக்கையான “நியூ மாரல் வேல்டிற்க்காக எழுதிய கட்டுரையில் “ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள மனித நாகரீகம் வளர்ச்சியடைந்த நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி முதலான நாடுகள் அனைத்திலும் பொதுச்சொத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகக் கட்டமைப்பைப் புரட்சியின் மூலம் உருவாக்குவது தவிர்க்கமுடியாததாகவும், அவசியமானதாகவும் உள்ளது” என முன்வைத்தார். அதேசமயம் அவர் கற்பனாவாத கம்யூனிசத்தை ஏற்கவில்லை.

மார்க்ஸ்–எங்கெல்ஸ் சந்திப்பு:

கார்ல் மார்க்சும் ரூகேவும் இணைந்து நிறுவிய டச்சு-பிரன்சு ஆண்டறிக்கை என்ற பத்திரிக்கையில் அரசியல் பொருளாதார விமர்சனத்தின் வரையறுப்பு என்ற கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரை மார்க்சும், எங்கெல்சும் இணைந்து பணிபுரியவும், விவாதிக்கவும் உதவியாக அமைந்தது. 1844 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியிலிருந்து மான்செஸ்டர் நகருக்குச் செல்லும் வழியில் பாரிஸ் நகரில் எங்கெல்ஸ், மார்க்சை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது மார்க்சுடன் சுமார் 10 நாட்கள் தங்கியிருந்தார். மார்க்சுடனான இச்சந்திப்பைப்பற்றி “1844 இல் பாரீஸ் நகரில் மார்க்சை சந்தித்தபோது தத்துவார்த்த தளத்தில் அவருடன் இணைந்து இயங்குவது என்ற முடிவை இருவரும் எட்டினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே காலகட்டத்தில் ஹெகலின் மாணவர்களான ப்ருனோ பவுர்(Bruno Bauer) உள்ளிட்டவர்களுக்கு எதிரான தத்துவச் சமருக்கு கார்ல் மார்க்ஸ் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார்.1844ஆம் ஆண்டில் மார்க்சும், எங்கெல்சும் இணைந்து “புனிதக் குடும்பம் அல்லது விமர்சன பகுப்பாய்வின் மீதான விமர்சனம்” என்ற நூலை எழுதினார்கள். 1845இல் வெளியான இந்நூலே அவர்கள் இருவரும் பொறுப்புகளை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு எழுதத் தொடங்கிய முதல் நூல் ஆகும்.

1844 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பர்மன் நகருக்குத் திரும்பிய எங்கெல்ஸ் கம்யூனிஸம் மற்றும் சோசலிஸத்திற்கு ஆதரவாக பர்மன் மற்றும் எல்பேர்பில்த் நகரங்களில் பிரச்சாரங்களில் பங்கேற்றார். பிப். 8 நடைபெற்ற முதல் கூட்டத்தில் சுமார் 40 நபர்கள் பங்கேற்றனர். பிப். 15, இரண்டாவது கூட்டத்தில் 130 பேரும், 22 ஆம் தேதி கூட்டத்தில் சுமார் 200 பேரும் பங்கேற்றனர்.  எங்கெல்ஸ் தனது சொற்பொழிவில் முதலாளித்துவத்தால் நேர்ந்த, நேர்ந்து கொண்டிருக்கின்ற, நேரஇருக்கின்ற பல இன்னல்களை விரிவாக விளக்கியிருந்தார். சுருக்கமாக “தாராளவாதம் என்பது பொருளாதாரத்தைச் சீர்குலைப்பது, சுரண்டல் நிறைந்தது, ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டிற்கு எதிராகப் பகைமையை  வளர்த்துக் கொண்டு போர்முனையில் சந்திக்க வைப்பது, சுயலாபத்திற்காகபொதுநலம்என்ற பெயரில் ஒவ்வொருவருக்கு இடையேயும் பகைமையை வளர்க்கிறது, சமூகத்தின் பெரும்பான்மையானவர்களை ஏழைகளாகவும், சிலரை மிகவும் வளமிக்க பணக்காரர்களாகவும் மாற்றுவது, சமூகத்தைத் தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலைக்கு இட்டுச் செல்வது, முரண்பாடான பொருள்உற்பத்தி மற்றும் நுகர்வுகலாச்சாரம் என முதலாளித்துவம் பல சிக்கல்கள் நிறைந்தது” எனக் கடுமையாகச் சாடினார்.

பாட்டாளி வர்க்கம் பற்றிய ஆய்வு:

நவம்பர் 19, 1844 இல் மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்சின் ஆகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான இங்கிலாந்து பாட்டாளி வர்க்கத்தின் நிலையைப் பற்றி மார்க்சுக்கு தெரியப்படுத்தினார். பாட்டாளி வர்க்கத்தின் நிலையை எழுதும்போது எங்கெல்ஸின்வயது 24 மட்டுமே. தொழிற்சங்கம் மற்றும் வேலைநிறுத்தம் பற்றிப் பேசிய முதல் கம்யூனிஸ்டு எங்கெல்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. “பொதுவேலைநிறுத்தம் என்பது உழைக்கும் மக்களை ஒரு பெரும் போராட்டத்திற்காக தயார்ப்படுத்துகிற ஒரு இராணுவப் பள்ளி என்றும், அப்பெரும் போராட்டத்தை ஒருவராலும், ஒருபோதும் தடுத்து நிறுத்த இயலாது என்றும், உழைக்கும் மக்கள் யாவரையும் ஒரே இயக்கமாக இணைக்கும் பாலமே பொதுவேலைநிறுத்தம்” எனக் கூறியுள்ளார்.

1845 ஆம் ஆண்டில் பாரிஸிலிருந்து பிரஸ்ஸல்ஸ் நகருக்கு மார்க்ஸ் குடிபெயர்ந்தார். தன்னுடைய பதிப்பாளர் உடனான ஒப்பந்தத்தின்படி “அரசியல் மீதான விமர்சனம் (Critique of Politics)” மற்றும் அரசியல் பொருளாதாரத்தின் இரண்டு தொகுதிகளின் கையெழுத்துப் பிரதியை மிக விரைவாக முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். இவ்விரு தொகுதிகளை முடிக்கவேண்டுமெனில் அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்திருந்த பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகள் பலவற்றை வாசிக்க வேண்டியிருந்தது. மார்க்சின் ஆங்கிலப் புலமை சற்று குறைவு. ஆகையால் எங்கெல்சையும் தன்னுடன் இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்றார்.

ஜூலை 12, 1845லிருந்து ஆகஸ்ட் 21 ஆம்தேதி வரை மான்செஸ்டர் நகரில் இருவரும் தங்கியிருந்தனர். அப்போது இங்கிலாந்தின் புகழ்பெற்ற நூலகமான சாத்தம்(Chatham) நூலகத்தில் பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகள், புத்தகங்கள் எனப் பலவற்றை இருவரும் வாசித்தனர். இருவரும் சார்டிஸ்ட் இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் லீக் ஆப் ஜஸ்ட்-ன் தலைவர்கள் பலரைச் சந்தித்தனர். சார்டிஸ்ட் இயக்கக் குழுஉறுப்பினர்களையும், அவ்வியக்கத்தின் இடதுசாரி உறுப்பினர்களையும் சந்தித்தனர். ஆகஸ்ட் மாத மத்தியில் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த ஜனநாயக வாதிகளின் கூட்டத்தில் மார்க்சும், எங்கெல்சும் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் முடிவில் “சகோதர ஜனநாயக வாதிகள் (Fraternal Democrats)” என்னும் ஒரு குழு தோற்றுவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எழுதிய கட்டுரையில் எங்கெல்ஸ் “வெவ்வேறு தேசங்களில் நிலவுகின்ற அநீதிக்கும், தேசியவாதத்திற்கும் எதிரானதாகவும், மனித நேயத்திற்கு ஆதரவாகவும் பாட்டாளி  வர்க்கம் வளர்ந்து வருகின்றது. பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே தேசிய வாதத்தை அழித்தொழித்து, தேசங்களுக்கிடையே சகோதரத்துவத்தையும் நட்புறவையும் வென்றெடுக்க இயலும்” என முதல்முறையாக “சர்வதேசியம்” வேண்டி அறைகூவல் விடுத்தார்.

விஞ்ஞான கம்யூனிசத்தின் பிறப்பு:

1845 ஆம் ஆண்டு ஹெகலின் தத்துவார்த்தங்களை விமர்சிக்கும் விதத்திலும், அதே ஆண்டு வெளிவந்த பயர்பாக்கின் கட்டுரைகளை விமர்சிக்கும் விதத்திலும் மார்க்சும், எங்கெல்சும் இணைந்து மிகப்பெரிய தத்துவார்த்த போரில் ஈடுபடத் துவங்கினர். இத்தத்துவார்த்த போரின் இறுதிவடிவமே உலக கம்யூனிச வரலாற்றின் மிகவும் புகழ்பெற்ற படைப்பான “ஜெர்மானிய சித்தாந்தம்(German Ideology)”ஆகும்.

ஜெர்மன் சித்தாந்தத்தில் இருவரும் முதலாளித்துவ அமைப்பில் அரசு என்பது சுதந்திரமாகத் தனித்துச் செயல்படுகிறது என்று நிலவிவந்த மாயையைத் தகர்த்தெறிந்துள்ளனர். மேலும் தற்போது நிறுவப்பட்டுள்ள அரசு என்பது “முதலாளிகளின் சொத்துகளைப் பாதுகாக்கவும், அவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்ளத் தேவையான அனைத்து நிபந்தனைகளைக் கொண்ட அமைப்பு” என அறிவியல் பூர்வமாக நிறுவியுள்ளனர். மேலும் ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆளும் வர்க்கம் பெருந்திரளான மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான ஆளும் வர்க்க கருத்தாக்கங்களைக் கொண்டிருந்தது. அதாவது ஆளும் வர்க்கம், சமூகத்திலிருந்த உற்பத்தி சக்திகளைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த அதேநேரத்தில் தத்துவார்த்தக் கோட்பாடுகளையும், அறிவார்ந்த கோட்பாடுகளையும் தனக்குக் கீழ் கட்டுப்படுத்தியே வைத்திருந்தது.

ஜெர்மன் சித்தாந்தத்தில் மார்க்சும், எங்கெல்சும் கம்யூனிச சித்தாந்தத்தை “கற்பனாவாத கம்யூனிசம்” என்னும் நிலையிலிருந்து “விஞ்ஞான கம்யூனிசம்” என்னும் உயர்ந்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அக்காலகட்டத்தில் ஸ்டிர்னர் என்பவர் “கம்யூனிச சமூகத்தில் தனியுடைமை சொத்து அழித்தொழிக்கப்படுவதால் ஒவ்வொருவரின் தனித்தன்மையும் அழிக்கப்படுகிறது என்றும் ஒவ்வொரு தனிமனிதர்களும் சமூகத்தின் அடிமையாகும் அபாயம் உள்ளது” எனக் குற்றம் சாட்டிப் பல இடங்களில் கம்யூனிசத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த மார்க்சும், எங்கெல்சும் “தனியுடைமை சொத்து என்பது முதலாளித்துவ அமைப்பில் பின்பற்றப்படும் தனிமனிதத்துவத்துக்கான அடிப்படைக் கூறாகும். முதலாளித்துவ அமைப்பு சொத்து ஏதுமில்லாத பெருவாரியான மக்களின் தனித்தன்மையை சூறையாடுகின்றது. அவ்வாறு சூறையாடப்பட்ட பாட்டாளி மற்றும் ஏழை, எளிய மக்களின் தனித்தன்மையை முதலாளித்துவத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டங்களின் மூலமே வென்றெடுக்க இயலும்” என ஜெர்மன் சித்தாந்தத்தில் விவரித்துள்ளனர்.

“சுதந்திரம் என்னும் கருத்தாக்கத்திற்கு வரலாற்றுரீதியான அணுகுமுறைகளை அளித்ததோடு, ஒவ்வொரு சகாப்தத்திலும் நிலவியிருந்த ஒடுக்குமுறைகள் மற்றும் சமூக உறவு முறைகளுக்குத் தகுந்தாற் போன்று, ஒடுக்கப்பட்ட மக்கள் குழு ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரத்தைப் போராட்டத்தின் மூலம் வென்றெடுத்தனர். சமூக உறவு முறையின் மிகவும் உச்சகட்ட வளர்ச்சியான கம்யூனிச சமூகத்தில் மட்டுமே, மனித குலம் முழுமையான சுதந்திரத்தை அடைய முடியும்.” என இருவரும் வாதிட்டனர்.

இடைவிடாத விமர்சனத்துக்குள்ளான இப்படைப்பை கையெழுத்துப் பிரதி வடிவத்திலேயே நாங்கள் பல காலம் வைத்திருந்தோம் என 1859 ஆம் ஆண்டு மார்க்ஸ் வேடிக்கையாகக் கூறியிருந்தார். இவ்வரிய நூலின் முதற்பதிப்பு சோவியத் ஒன்றியத்தில் 1933 ஆம் ஆண்டுதான் வெளியிடப்பட்டது.

கம்யூனிஸ்ட் லீக் உருவானது:

மார்க்சும், எங்கெல்சும் “லீக் ஆப் ஜஸ்ட்” அமைப்பில் இணைந்தபிறகு சங்கத்தின் முதல் மாநாடு ஜூன் 2 ஆம் தேதி 1847 ஆம் ஆண்டு லண்டன் நகரில் துவங்கியது. பாரிஸ் கமிட்டியின் பிரதிநிதியாக எங்கெல்சும், பிரஸ்ஸல்ஸ் கமிட்டியின் பிரதிநிதியாக வில்ஹம் வொல்ஃப் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். பொருளாதார நெருக்கடியின் காரணமாக மார்க்ஸ் இம்மாநாட்டில் கலந்துகொள்ள இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதுதான் அந்த அமைப்பின் பெயர் “கம்யூனிஸ்ட் லீக்” என மாற்றம் செய்யப்பட்டது. சங்கத்தின் முதன்மையான நோக்கமாக இருந்து வந்த “அனைவரும் சகோதரர்களே” என்பது “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” என பிரகடனம் செய்யப்பட்டது. இம்மாநாடு கம்யூனிஸ்டுகளின் பொதுவேலைத் திட்டத்தைத் தயாரிக்குமாறு எங்கல்சிடம் கேட்டுக்கொண்டது. வினா-விடை வடிவத்தில் “கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (Principles of Communism)” எனும் சிறு புத்தகத்தை இதனை ஒட்டியே எங்கெல்ஸ் எழுதினார்.

கம்யூனிஸ்ட் லீகின் இரண்டாவது மாநாடு அதே ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி துவங்கியது. இம்மாநாட்டில் மார்க்சும் கலந்து கொண்டார். பின்னாளில் இம்மாநாட்டை மார்க்ஸ் “முதல் அகிலம்” எனக் கூறினார். பத்து நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் அனைவரும் கம்யூனிஸ்டுகளுக்கான “பொது வேலைத்திட்டம்” ஒன்றைத் தயாரிக்குமாறு மார்க்சையும் எங்கல்சையும் கேட்டுக் கொண்டனர்.

முதல் அகிலம் முடிவடைந்தபிறகு எங்கெல்ஸ் பாரிஸ் நகருக்கும் மார்க்ஸ் பிரஸ்ஸல்ஸ் நகருக்கும் திரும்பினர். 1848 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதிக்குள் பொது வேலைத்திட்டத்தை அவர்கள் எழுதி முடித்தார்கள். இதற்கு “கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை” எனப் பெயரிட்டனர்.

கிளர்ச்சிப் போராட்டக் களத்தில்:

1848 முதல் 1849 வரையிலான இடைப்பட்ட காலங்களில் மார்க்ஸ் மற்றும் எங்கல்சின் இருவரது வாழ்வும் போராட்டம் நிறைந்ததாகவே இருந்தது. பிப்ரவரி 22 முதல் 24 ஆம் தேதி வரை குடியரசு வேண்டி மற்ற சமூக அமைப்புகளுடன் இணைந்து பாரிஸ் நகரத் தொழிலாளர்கள், பிரான்சு நாட்டில் நடைபெற்று வந்த லூயிஸ் பிலிப்பேயின் ஏகாதிபத்திய முடியாட்சியை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதே காலகட்டத்தில் இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா எனப் பல நாடுகளில் குடியரசு வேண்டி பல எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்றன. பெல்ஜியத்திலும் ஜனநாயக வாதிகள் பலர் குடியரசு வேண்டி கிளர்ச்சிப் போராட்டங்களைத் துவங்கினர்.

கம்யூனிஸ்ட் லீகின் பிரஸ்ஸல்ஸ் குழு தினமும் கூடி கிளர்ச்சிப் போராட்டங்களைப் பற்றி விவாதிப்பது வழக்கம். பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சங்கக் கமிட்டி மிக விரிவான இயக்கத்தை ஆரம்பிக்கவும், முனிசிபல் கமிட்டியின் கவுன்சில்கள் ராணுவ அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவற்றில் பூர்சுவா சிவில் படையுடன் தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரவும் தீர்மானித்தது. ஜனநாயக சங்கமே நேரடியாகத் தொழிலாளர்களை ஆயுதபாணியாக்கத் தொடங்கியது. இதற்குச் சுமார் இரு வாரங்களுக்கு முன்புதான் மார்க்சிற்கு அவருடைய தகப்பனாருடைய சொத்துக்களிலிருந்து பங்குத்தொகையாக பணம் கிடைத்தது. அதிலிருந்து கணிசமான அளவு தொகையை தொழிலாளர்களுக்கு ஆயுதங்கள் வாங்க அவர் செலவிட்டார்.

1848 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மார்க்சும், எங்கெல்சும் அக்காலகட்டத்தில் ஜெர்மனியில் ஏற்பட்ட கிளர்ச்சியில் பங்கேற்பதற்காகத் தங்கள் தாய்நாடு திரும்பியதோடு, சொந்தமாக பத்திரிக்கையொன்றை துவக்க முடிவு செய்து ரைனிஷ் ஜைதுன் பத்திரிக்கையை புதிப்பித்து புதிய ரைனிஷ் ஜைதுங் எனும் பெயரில் வெளியிட்டனர்.

எங்கெல்ஸ் இப்பத்திரிகைக்கு கட்டுரைகள் எழுதியது மட்டுமின்றி, பத்திரிக்கையின் பதிப்பாசிரியர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். மார்க்ஸ் “எங்கெல்ஸ் ஒரு கலைக்களஞ்சியம், இரவு-பகல் பாராமல் மிகவும் களிப்பாகத் தன் பணியைச் செவ்வனே செய்து முடிக்கும் திறமை பெற்றவர்” என புகழ்ந்துள்ளார் கார்ல் மார்க்ஸ். தெற்கு ஜெர்மனியில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்திலிருந்த சமயத்தில் மார்க்சும், எங்கெல்சும் பாட்டாளிகளை ஒன்றிணைப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தனர். எல்பேர் பில்த் செல்லும் வழியில் சுமார் 400 உழைப்பாளிகளைக் கொண்ட கிளர்ச்சிப் படையொன்றை மே 10, 1849 ஆம் தேதி சொளிங்கேன் எனும் ஊரில் உருவாக்கினர். இக்கிளர்ச்சிப் படையுடன் எல்பேர் பில்த் நகரில் உள்ள பாலம் ஒன்றை அடையும்போது தேவாலயம் சென்று கொண்டிருந்த தனது தந்தையை சந்தித்தார் எங்கெல்ஸ். ஆங்காங்கே நடைபெற்று வந்த கிளர்ச்சிப் போராட்டங்களில் பங்கேற்ற எங்கெல்சை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இக்கிளர்ச்சிப் போராட்டங்களுக்கிடையில் மார்க்சும், எங்கெல்சும் இணைந்து நடத்தி வந்த பத்திரிக்கையின் இறுதிப்பதிப்பைக் குறிக்கும் விதத்தில் “சிகப்பு நிறத்தில்” மே 19, 1849 ஆம்தேதி வெளியிட்டனர்.

1851 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் லீக் கலைக்கப்பட்டது. மார்க்ஸ் முதலில் பாரிஸ் நகருக்கும் பிறகு லண்டன் நகருக்கும் இடம்பெயர வேண்டியதாயிற்று. பிரஷ்ய அரசு மார்க்சுக்கு குடியுரிமை தர மறுத்துவிட்டது.

தந்தையின் ஆலையில் எங்கெல்ஸ்:

எங்கெல்ஸ் இரு காரணங்களுக்காகவே மான்செஸ்டர் நகரில் உள்ள தனது தந்தை பங்குதாரராகவுள்ள நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். மார்க்சின் குடும்பத்திற்குப் பொருளாதார உதவி அளிக்கவும், ஐரோப்பியக் கண்டம் முழுவதும் பரவிவந்த கிளர்ச்சிகளை ஐரோப்பிய அரசுகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிய பின், புரட்சியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அடுத்த புரட்சிப் போராட்டத்திற்கு தங்களை தயார்ப்படுத்தி கொள்வதற்குக் காலஅவகாசம் தேவைப்படுகிறது என்பதை மனதில் கொண்டும் அவர் இதைச் செய்தார். 1850 முதல் 1869 ஜூலை வரை பணியாற்றினார்.

மார்க்ஸ் அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டெய்லி எனும் பத்திரிக்கைக்கு கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அப்போது ஆங்கிலத்தில் குறைந்த புலமையுடையவராக இருந்த மார்க்ஸ் எங்கெல்சின் உதவியை நாடினார். மார்க்சின் கட்டுரைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் எங்கெல்ஸ். பின்னர் அதே பத்திரிக்கைக்கு மார்க்சின் பெயரிலேயே எங்கெல்ஸ் பல கட்டுரைகளை எழுதி அனுப்பினார்.

எங்கெல்ஸ் “துருக்கி நாட்டின் உண்மையான பிரச்சினை”, “துருக்கியின் பிரச்சினைகள் (The Turkish Question)” மற்றும் “ஐரோப்பியக் கண்டத்தில் துருக்கி என்னவாகவுள்ளது? (What is to Become of Turkey in Europe?)” போன்ற கட்டுரைகளில் ஐரோப்பியக் கண்டத்தின் மிகப் பெரிய பேரரசுகளான இங்கிலாந்து மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் துருக்கி நாட்டின் உள்விவகாரங்களில் ஈடுபட்டு வருவதைக் கடுமையாகச் சாடியிருந்தார். ஐரோப்பியப் பேரரசுகளின் தலையீட்டால் தனிநாடு பெற்றிராத ஸ்லாவோனிய இன மக்களின் விடுதலையை நசுக்கிய துருக்கி அரசையும் அவர் கடுமையாகச் சாடினார். இக்கட்டுரைகளின் வாயிலாக எங்கெல்ஸ் இன விடுதலைக்கு ஆதரவாக இருந்தார் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இச்சமூகம் மற்றும் உலக வரலாற்றின் தனது புரிதலிலிருந்து எதிர்காலத்தில் வரஇருந்த புரட்சி இயக்கங்களையும் அவர் யூகித்திருந்தார். “ஐரோப்பியக் கண்டத்தில் ஏற்பட்ட புரட்சிகர அடையாளங்கள் 1789 ஆம் ஆண்டு முதல் நிதானமாக முன்னேறியிருந்தது. ஐரோப்பியப் புரட்சிகளின் அரணாக வார்சா (Warsaw), தெப்ரஜின் (Debreczin) மற்றும் புச்சறேஸ்ட் (Bucharest) ஆகிய இடங்கள் இருந்தன. அடுத்த கட்ட முன்னேற்றமடைந்த புரட்சி பீட்டர்ஸ்பர்க் (Petersburg) மற்றும் கோன்ச்டண்டி நோப்லே (Constantinople) ஆகிய இடங்களாக இருக்க வேண்டும்” என அவர் கணித்திருந்தார். எங்கெல்சின் இக்கணிப்பை தோழர் லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சி உண்மையென நிரூபித்துக் காட்டியது.

இந்தியாவைக் குறித்து எங்கெல்ஸ்:

1856 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அன்றைய உலகின் பேரரசுகள் அனைத்தும் தங்களுடைய சந்தையை விரிவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைக் காலனி நாடுகளாகப் பங்கிட்டுக் கொண்டிருந்தது. முதலாளித்துவ சக்திகளின் காலனி வெறியை நுட்பமாகக் கவனித்து அவர்களின் கோர முகத்தை வெளிக்கொணர்ந்தார் ஏங்கெல்ஸ். காலனி நாடுகளில் ஏற்பட்ட தேசிய விடுதலை இயக்கங்களைக் கவனிக்கத் தவறவில்லை. இதுபற்றிய கட்டுரை ஒன்றில் “பொருளாதாரம், இராணுவம் மற்றும் பொதுப்பணித் துறையென மூன்று துறைகளை மட்டுமே கொண்டிருந்த கீழை நாடுகளில் முதல் இரண்டு துறைகளும் இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டிலிருந்தது. மேலும் பொதுப்பணித் துறையைக் கைவிட்டதோடு கீழை நாடுகளின் முக்கிய தொழிலான விவசாயத்தை முற்றிலுமாக அழித்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கெல்சின் காலனி ஆதிக்கம் பற்றிய கருத்தை அடிப்படையாகக் கொண்டு மார்க்ஸ் பின்னாளில் “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி” எனும் புகழ்பெற்ற நூல் ஒன்றை எழுதினார். தேசிய எழுச்சியில் ஆர்வம் கொண்ட எங்கெல்ஸ் இந்தியாவில் 1806ஆம் ஆண்டு நடைபெற்ற வேலூர் சிப்பாய்கள் எழுச்சி, 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்கள் கலகம் பற்றி பல கட்டுரைகளை எழுதினார். அவற்றில் “டெல்லியைக் கைப்பற்றுதல் (The Capture of Delhi)”, “லக்னோவின் விடுதலை (The Relief of Lucknow)”, “வின்தமின் தோல்வி(The Defeat of Windham)” மற்றும் “இந்தியாவில் கிளர்ச்சி (The Revolt in India)” போன்றவை முக்கியமான கட்டுரைகளாகும்.

இக்கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் உதவியுடன், பின்னாளில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை மார்க்சிய மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாத பார்வையுடன் தொடர்கட்டுரைகளைத் தோழர் இ.எம்.எஸ். எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் சிப்பாய்க் கலகத்தைப் பற்றி எழுதிய பல கட்டுரைகளில் ஒன்றில் “கலகத்தை ஒடுக்கியபின் இந்தியாவின் பெரும்பகுதிகளை பிடிக்கத் தொடங்கிய இங்கிலாந்து அரசு மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனியின் காலனி ஆதிக்கத்தை இந்திய மக்கள் முன்பை காட்டிலும் அதிகமாகவே வெறுத்தனர்” எங்கெல்சின் இக்கூற்றை இந்திய விடுதலைப் போராட்டம் நிரூபித்துக் காட்டியது.

தொடர் எழுத்தும், இயக்கப் பணியும்:

மனிதவியலாளர் (anthropologist) எங்கெல்ஸ் அவர்கள் அறிவியலையும் விட்டுவைக்கவில்லை. அறிவியலின் உட்பிரிவுகளான இயற்பியல், உடல் உட்கூறு அமைப்பியல், கரிமவேதியியல் மற்றும் உடலியங்கியல் பற்றியும் கற்கத் துவங்கினார். மேலும் மத்தியாஸ் ஸ்ஹெளேய்டன் (Matthias Scheleiden) அவர்களின் செல் பற்றிய கண்டுபிடிப்புகளிலும், தியோடர் ஸ்வான் அவர்களின் ஆற்றல் பரிமாற்ற விதிகளிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார் எங்கெல்ஸ்.

முதலாளித்துவ முறை பிறந்த சில ஆண்டுகளிலேயே குறிப்பாக 1857 ஆம் ஆண்டு ஐரோப்பியக் கண்டத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படத் துவங்கியது. இப்பொருளாதார நெருக்கடியால் மேலும் உத்வேகமடைந்த எங்கெல்ஸ் “பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகே கம்யூனிச மற்றும் சோசலிச புரட்சி இச்சமூகத்தில் சாத்தியப்படும்” என நம்பிக்கை தெரிவித்தார். கட்டுரைகள் பல எழுதிவந்த எங்கெல்ஸ் பிரசுரங்கள் எழுதவும் துவங்கியிருந்த அத்தருணங்களில் “Po and the Rhine” எனும் தலைப்பில் மூன்றாவது நெப்போலியனின் அரசியல் நடவடிக்கைகளை விவரிக்கும் விதத்தில் பிரசுரத்தைப் பெயரின்றி ஜெர்மனியில் வெளியிட்டார். ஜெர்மானிய பாட்டாளிகளுடனான தங்களது உறவை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாக மார்க்சும் எங்கெல்சும் தாஸ் வொலக்(Das Volk) எனும் ஜெர்மானியப் பத்திரிகையில் தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதினர்.

1860 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எங்கெல்சின் தந்தை காலமானார். அவர் இறந்து இரண்டு நாட்களுக்குப் பிறகே  எங்கெல்சால் தனது சொந்த ஊருக்குச் செல்ல முடிந்தது. அவரது தந்தையின் சொத்துக்கள் பங்குபிரித்தபோது மான்செஸ்டர் நகரில் உள்ள எர்மென் மற்றும் எங்கெல்ஸ் நிறுவனத்தில் 10,000 பவுண்டுகள் மதிப்புள்ள பங்குகள் எங்கெல்சுக்கு கிடைத்தது. அவருடைய தந்தையாரின் மரணம் எங்கெல்சை பொருளாதார ரீதியாக உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 1863 ஆம் ஆண்டு சனவரி 6 ஆம் தேதி எங்கெல்சின் மனைவி மேரி பர்ன்ஸ் காலமானார்.

சுமார் 19 ஆண்டுகள் தான் பணியாற்றிவந்த நிறுவனத்திலிருந்து 1869 ஆம் ஆண்டு சூன் 30ஆம் தேதி எங்கெல்ஸ் ஓய்வு பெற்றார். மார்க்சின் மகள் எலீனார், எங்கெல்ஸ் ஓய்வுபெற்ற தினத்தை இவ்வாறு நினைவு கூர்ந்துள்ளார். “அன்றைய தினம் நான் ஜெனரல் எங்கல்சுடன் இருந்தேன். சுமார் 19 ஆண்டுகள் அவர் அடைந்த வேதனைகளை நான் நன்கு அறிந்திருந்தேன். அன்று வெகுசீக்கிரமாகவே அலுவலகம் சென்ற எங்கெல்சின் வருகைக்காக நாங்கள் காத்திருந்தோம். சில மணி நேரத்திற்குப் பிறகு தன் கைத்தடியைக் காற்றில் சுழற்றியவாறு முகம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க, பாட்டு ஒன்றைப் பாடிக்கொண்டே  அவர் வந்தார். பிறகு நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து திராட்சை ஒயினை அருந்தி அந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடினோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். அப்பணியிலிருந்து ஓய்வுபெற்றபிறகு எங்கெல்ஸ் தன்னை முழுவதுமாகப் பாட்டாளி வர்க்க இயக்கப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார்.

1867 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேசிய பொதுச்சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முடிவுகளின்படி 1869 மற்றும் 1870 ஆண்டுகளில் அயர்லாந்து நாட்டின் வரலாற்றையும், பல நூற்றாண்டுகளாகப் பிரிட்டிஷ் அரசிடம் அடிமைப்பட்டுக் கிடக்கின்ற இதர நாடுகளைப் பற்றியும் வாசிக்கத் துவங்கினார். இத்தகைய காலகட்டங்களில் அயர்லாந்து நாட்டில் ஏற்பட்ட புரட்சி இயக்கங்களுக்கு ஆதரவாளராகவிருந்த தனது முதல் மனைவி மேரி பர்ன்ஸின் சகோதரி லிஸ்ஜி பர்ன்ஸை மணந்துகொண்டார். “பண்டைய அயர்லாந்து” எனும் தலைப்பில் இரண்டாவது அத்தியாயத்தை எழுதத் துவங்கியபோது 1870 மற்றும் 1871 ஆம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பிரான்கோ-பிரஷ்யா போர் பற்றி எழுதுமாறு பாரீஸ் கம்யூன் எங்கெல்சை கேட்டுக் கொண்டது.

1870 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி லண்டன் நகருக்குக் குடிபெயர்ந்த எங்கெல்ஸ் மார்க்ஸ் வீட்டிற்கு மிக அருகிலேயே வசித்தார். லண்டன் நகருக்குக் குடிபெயர்ந்த நாள்முதல் இருவரும் சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

பாரீஸ் நகரத்தில் பாட்டாளிகளின் கிளர்ச்சி:

1871 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி பாரீஸ் நகர உழைப்பாளிகள் ஆயுதமேந்திய போராட்டத்தைத் துவங்கினார்கள். இக்கிளர்ச்சிப் போராட்டத்திற்கு சில காலம் முன்னரே சர்வதேச ஜெனரல் கவுன்சிலின் உறுப்பினரான எங்கெல்ஸ், பாரீஸ் நகரில் துவங்கிய புரட்சிப் போராட்டங்களைப் பற்றிச் சொற்பொழிவாற்றினார். இதைத் தொடர்ந்து மார்க்சுக்கு எழுதிய கடிதமொன்றில் “பாரீஸ் நகரில் ஆயுதமேந்தி போராடத் துவங்கியுள்ள பாட்டாளி மக்களைக் காப்பாற்ற வேண்டும். ஒரு அமைதியான சூழல் திரும்பும்வரை அனைத்துப் பாட்டாளிகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் ஜெர்மன் படைகளிடமிருந்து கிளர்ச்சியாளர்களை ஒடுக்கிவிடாதவாறு காக்க வேண்டும். இல்லையெனில் கிளர்ந்தெழுந்துள்ள பாட்டாளி வர்க்கம் 20 ஆண்டுகளுக்கு முன்னிருந்த அவலநிலையை நோக்கித் தள்ளப்பட்டு விடும்” எனக் கூறினார்.

1871, செப்டம்பர் 17 ஆம் தேதி லண்டன் நகரில் துவங்கிய மாநாட்டில் புரட்சி பற்றி உரையாற்றிய எங்கெல்ஸ் “புரட்சி என்பது உச்சக்கட்டமான ஓர் அரசியல் போராட்டம். இந்தச் சமூகத்தில் உள்ள அவலநிலையை மாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் புரட்சிக்கான அரசியல் போராட்டங்களிலும், புரட்சிக்காகப் பாட்டாளி மக்களைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபடுவதும் தலையாய கடமையாகும். பாட்டாளி வர்க்கத்திற்கான நமது அரசியலில் எக்காரணத்தைக் கொண்டும் முதலாளித்துவ கட்சிகளையோ, நிறுவனங்களையோ அண்டிப் பிழைக்கக் கூடாது என்றும், பாட்டாளி வர்க்கத்திற்கென தன்னிச்சையான குறிக்கோள்களும், கொள்கைகளும் அவசியம்” எனக் கூறினார். இம்மாநாட்டிற்குப் பிறகு அகிலத்தின் ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாட்டிற்கான தொடர்பாடல் குழுவிற்கு செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாட்டில் உள்ள புரட்சியாளர்களுடனான தனது நட்பை வளர்த்துக் கொண்டார்.

பக்கூனிஸ்டுகளுக்கு எதிரான போராட்டம்:

1870 களின் துவக்கத்தில் கற்பனாவாத கம்யூனிச கொள்கைகள் சமூகத்தில் மீண்டும் தலையெடுக்கத் துவங்கியது. பல பாட்டாளி குழுக்களும், சமூக ஜனநாயக வாதிகளும் இணைந்து செயல்படத் துவங்கியிருப்பதை மார்க்ஸ்-எங்கெல்ஸ் மற்றும் இதர விஞ்ஞானரீதியான கம்யூனிஸ்டுகளும் எச்சரிக்கையுடன் கவனித்தனர்.

பக்கூனிஸ்டுகளின் வேலைத் திட்டத்தைப் பகுப்பாய்வு செய்து மார்க்சும் எங்கெல்சும் கீழ்க்கண்டவாறு விவரித்தனர். “அது வெறும் பகட்டான வெற்று வார்த்தைகளால் ஆன கருத்துக் குப்பையைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இந்தக் கருத்துக்கள் வெகுகாலத்திற்க்கு முன்பே செத்துவிட்டவை. அவை சில முதலாளித்துவ அசடுகளைப் பயமுறுத்துவதற்கு உதவுமேயன்றி வேறு எதுவும் செய்யத் திறனற்றவை அல்லது அகிலத்தின் உறுப்பினர்களுக்கு எதிராகப் போனபார்ட்டிஸ்டுகளோ அல்லது இதர காவல்துறை மற்றும் வழக்குமன்ற அதிகாரிகளோ சாட்சியமாக உபயோகப்படுத்துவதற்கு உதவுமேயன்றி வேறு எதற்கும் பயன்படாது.” அராஜக வாதம், தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான புரட்சிகரமான தத்துவத்திற்கும் ஒத்துவராததும் பகைமையானதுமாகும் என்று அவர்கள் நிரூபித்தனர்.

1872 – 73 ஆம் ஆண்டு காலங்களில் எங்கெல்ஸ் எழுதிய புத்தகம், கட்டுரை மற்றும் பிரசுரங்கள் என அனைத்திலும், அனைத்து விதமான அராஜகவாதத்திற்கு எதிரான தங்களது கருத்துக்களை வெளியிட்டனர்.

டூரிங்கிற்கு எதிர்ப்பு:

பல்வேறு தரப்பட்ட குட்டி பூர்ஷ்வா கற்பனாவாதக் கருத்துக்களும் புத்தம்புதிய பாணிகளில் பூர்ஷ்வா தத்துவஞான மற்றும் பொருளாதார தத்துவக் கருத்துக்களும் வளர்ந்து கொண்டிருந்தன. யுஜின் டூரிங் (Eugen Duhring) பெர்லின் பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியராக இருந்தார். அவர் தன்னை “ஒரு புதிய உலகு தழுவிய சர்வாம்ச விஞ்ஞான முறையின் சிற்பி” என்று வர்ணித்துக் கொண்டார். தத்துவ ஞானம், அரசியல் பொருளாதாரம் மற்றும் சோசலிசக் கருத்துக்கள் கொள்கைகள் என எல்லாவற்றையும் விமர்சனம் செய்துவந்த அவர் மார்க்சியத்தையும் தாக்கினார்.

மார்க்ஸ் மற்றும் எங்கெல்சின் செல்வாக்கின்கீழ் கட்சித்தலைவர்கள் டூரிங்கியனிஸத்திற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர். 1877 ஜனவரி 3 ஆம் தேதியிலிருந்து 1878 ஜூலை 7 ஆம் தேதி வரை எங்கெல்ஸ் ஜெர்மானிய சோசலிஸ்டு தொழிலாளர் கட்சியின் பத்திரிக்கையான வோர்வார்ட்ஸில் தொடர்ச்சியாக விமர்சனக் கட்டுரைகள் எழுதினார். எங்கெல்சின் அக்கட்டுரைகளில் சில பிரசுரங்களாகவும் வெளியிடப்பட்டன.

அவற்றில் தத்துவ ஞானத்தில் இயக்கவியல் பொருள் முதல் வாதம் பற்றி விவரித்துள்ளார். டூரிங், பொருள் மற்றும் அதன் இயக்கங்களை வேறுவேறாகப் பார்த்தார். ஆனால் “பொருளின் இயக்கம் என்பது அப்பொருளின் இருத்தலுக்கான காரணமேயன்றி இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பது தவறாகும்” என்றார் எங்கெல்ஸ்.

மார்க்ஸ் மறைவிற்குப் பின்

1878 செப்டம்பர் 12 ஆம்தேதி எங்கெல்சின் மனைவி லிஸ்ஜெ பர்ன்ஸ் காலமானார். “அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பாட்டாளியான என் மனைவி என்னுடைய வாழ்க்கையின் மிகவும் கடினமான காலங்களைக் கடந்து செல்வதற்கு உறுதுணையாகவும், பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் மிகவும் ஆர்வத்துடனும் ஈடுபட்டிருந்தார்” என எங்கெல்ஸ் கூறினார்.

1881 ஆம் ஆண்டு கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வாடிய மார்க்சின் மனைவி ஜென்னி மார்க்ஸ் அதே ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அப்போது படுத்த படுக்கையாக இருந்த மார்க்ஸ் தனது மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நலம் தேறி வந்து கொண்டிருந்த மார்க்சிற்கு அடுத்ததாக மீண்டும் ஒரு துயர நிகழ்வு நிகழ்ந்தது. மார்க்சின் மூத்த மகள் ஜென்னி மார்க்ஸ் 1883, ஜனவரி 11 ஆம் தேதி இறந்தார். மார்க்ஸ்  ஏழ்மையில் வாடிய போதெல்லாம் அவரது குடும்பச் சுமையை எங்கெல்ஸ் ஏற்றுக் கொண்டார். தன் ஆருயிர் மனைவி மற்றும் அருமை மகள் இறந்தபிறகு மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருந்த மார்க்ஸ் அதே ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி இரத்தபோக்கு காரணமாக மதியம் 2:45 மணியளவில் நாற்காலியில் அமர்ந்தவாறே உயிர் நீத்தார். அவர் இறந்து மூன்று நாட்களுக்குப் பிறகு மார்ச் 17 ஆம் தேதி லண்டன் ஹைகேட் கல்லறையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது “அரசுகள், அவை எதேச்சதிகார அரசுகளாயினும் சரி, குடியரசுகளாயினும் சரி, அவர்களுடைய பிரதேசங்களிலிருந்து அவரை வெளியேற்றி நாடு கடத்தினார்கள். பூர்ஷுவாக்கள் அவர்கள் பழமைவாதிகள் ஆயினும் சரி, அதிதீவிர ஜனநாயக வாதிகள் ஆயினும் சரி,  அவர் மீது அவதூறுக் குப்பைகளை எறிவதில் ஒருவருக்கொருவரை மிஞ்சுவதில் போட்டி போட்டனர்.  இவற்றையெல்லாம் அவர் நூலாம்படையைத் தள்ளிவிடுவதைப் போல் துடைத்துத் தள்ளினார்… கோடிக்கணக்கான தோழர்களின் துயரம் பெருக, கண்கள் குளமாக இந்த மாமனிதர் மறைந்து விட்டார். நான் உச்சி மீதிருந்து உறுதியாக ஒன்று கூற முடியும். அவருக்கு எத்தனையோ மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தவர்கள் இருந்திருந்தாலும் தனிப்பட்ட விரோதி ஒருவர்கூட இருந்ததில்லை. யுகயுகாந்திரத்திற்கு அவர் பெயர் நிலைத்து நின்று நீடித்திருக்கும். அதேபோல் அவருடைய மாபெரும் பணியும் என்றும் நிலைத்திருக்கும்.” இவ்வாறு எங்கெல்ஸ் மார்க்சுக்கு புகழஞ்சலி செலுத்தினார்.

மார்க்சின் மறைவிற்குப் பிறகு ஐரோப்பிய சோசலிஸ்டுகளின் தலைவராகவும், உலக பாட்டாளி வர்க்கத்தினரை வழிநடத்திச் செல்லும் பொறுப்பை எங்கெல்ஸ் ஏற்றார்.

மூலதனத்தின் முதல் தொகுதி மட்டுமே மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் வெளியிடப்பட்டது. மூலதனத்தின் மற்ற இரு தொகுதிகளை வெளியிடும் பொறுப்பை எங்கெல்ஸ் ஏற்றுக் கொண்டு திறம்பட செய்து முடித்தார். “இதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் மார்க்ஸ் போன்ற மாமனிதரின் ஒவ்வொரு பொன்னான வார்த்தையும் மிகவும் முக்கியமானது. இவ்வாறு கடினமாக உழைப்பதை நான் மிகவும் மகிழ்ச்சியான தருணமாகவே கருதுகிறேன். ஏனென்றால், என் நீண்ட நாள் நண்பன் மீண்டும் என்னருகில் இருப்பதாகவே உணருகிறேன்” எனக் கூறியுள்ளார். ஒருகால் எங்கெல்ஸ் இல்லாமல் இருந்திருந்தால் மூலதனம் என்னும் அறியப் படைப்பைப் பற்றி நாம் அறிந்து கொள்ளாமலேயே இருந்திருப்போம்.

மார்க்ஸ் இறந்தபிறகு “குடும்பம், தனிச்சொத்து, அரசுஆகியவற்றின்தோற்றம்” என்னும் புத்தகத்தை இரண்டே மாதங்களில் எழுதி முடித்தார். இப்புத்தகத்தில் மனிதகுல வரலாற்றையும், எவ்வாறு மனித சமூகம் பழமையான சமூகத்திலிருந்து தனிச்சொத்தை அடிப்படையாகக் கொண்ட வகுப்புவாத சமூகமாக மாறியது என்பதை விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்து விவரித்துள்ளார். “நவீன சோசலிஸத்தின் அடிப்படையான கூறுகளைக் கொண்ட முக்கிய நூல்களில் ஒன்று” என லெனின்  இந்நூலைப் பற்றிக் கூறியுள்ளார்.

மார்க்சின் மறைவிற்குப் பிறகு உலக பாட்டாளி வர்க்க புரட்சியாளர்களை வழிநடத்திய எங்கெல்ஸ் ஐரோப்பியக் கண்டங்களில் உள்ள பல நாடுகளில் சோசலிஸ கட்சிகளைத் தோற்றுவித்ததில் பெரும் பங்காற்றினார். 1885 ஆம் ஆண்டுகளில் பெல்ஜியத்திலும் மற்றும் சுவீடனிலும், 1887 ல் நார்வே நாட்டிலும், 1888ல் சுவிட்சர்லாந்திலும் மற்றும் ஆஸ்திரியாவிலும், 1879 ல் ஸ்பெயினிலும் பொதுவுடைமைக் கட்சிகளைத் துவக்குவதில் அரும்பணியாற்றினார். எங்கெல்சின்  வீடு இருந்த  122, ரிஜென்டு பார்க் சாலை அக்கால புரட்சியாளர்களின் “புனிததளமாகவேகருதப்பட்டது.

1893 ஆம் ஆண்டு ஆயுதக் குறைப்பு பற்றிப் பேசிய எங்கெல்ஸ் “ஐரோப்பாவால் ஆயுதங்களைக் குறைக்க முடியுமா?” என்னும் கட்டுரையொன்றை எழுதினார். அக்கட்டுரையில் உலக அமைதியை நிலைநாட்டவும் ஆயுதப் பெருக்கத்தைத் தடுக்கவும் முதலாளித்துவத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் எவ்வாறு போராட வேண்டும் எனவும் விவரித்துள்ளார். 8 மணி நேர வேலை வேண்டி லண்டன் நகரில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட எங்கெல்ஸ் முதலாளித்துவ அமைப்பில் நிகழ்ந்துவந்த மாற்றங்களை உற்றுக் கவனித்து வந்தார்.

1894 ஆம் ஆண்டு தனது உயிலை எழுதிய எங்கெல்ஸ், தனது சொத்தின் பெரும்பான்மையான பகுதியை மார்க்சின் குடும்பத்தினருக்கே எழுதி வைத்தார். தன்னுடைய 74 ஆவது வயதில் பவுல் லஃபர்குவெ (Lafargue) அவர்களுக்கு எழுதிய கடிதமொன்றில் “நான் இரு இளைஞர்களைப் போன்றே பணியாற்ற விரும்புகிறேன். முதலாவது இளைஞனுக்கு 40 வயதும், இரண்டாவது இளைஞனுக்கு 34 வயதுமாக இருக்கவேண்டும்.” (ஆம். தனது 74 வயதை இரண்டாகப் பிரித்துப் பார்த்தார்.)

1894 ஆம் ஆண்டிலிருந்து புற்றுநோயால் அவர் அவதியுற்றார். 19 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனைவாதிகளில் ஒருவரான எங்கெல்ஸ், 1895 ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி காலமானார். மார்க்சியம் என்ற தத்துவம் நிலைத்திருக்கும் வரையில் எப்படி மார்க்சின் பெயர் நிலைத்திருக்குமோ, அதே போன்று மார்க்சின் இணைபிரியாத் தோழனான எங்கெல்சின் பெயரும் அவரோடு இணைந்து என்றும் நிலைத்திருக்கும்.

அவரது இறுதிச் சடங்கில் சொற்பொழிவாற்றிய வில்ஹெம் லிம்கினெட்ச் “உலக பாட்டாளி வர்க்க மக்களின் தலைவரும், போராளியுமான ஏங்கெல்ஸ் அமைத்துக்கொடுத்த புரட்சிகர பாதையில் நாம் பயணிப்பதின் மூலம் முதலாளித்துவ முறையை அழிக்க முடியும்” எனக் கூறினார்.

“ஜென்ரல் ஏங்கெல்ஸ் இன்று நம்மை விட்டுப் பிரிந்த போதிலும், எண்ணற்ற பாட்டாளி வர்க்க படைகளை வழிநடத்திய தலைவர்களான மார்க்ஸ், ஏங்கெல்ஸின் கருத்துக்களைக் கொண்டு உலகத் தொழிலாளர்கள் ஒன்று கூடுவதன் மூலம் அவர்களுடைய தத்துவார்த்த கோட்பாடுகள் மென்மேலும் வலுவடைவதோடு சுரண்டலற்ற சமுதாயத்தை அமைப்பதில் வெற்றி காண இயலும்” எனப் பவுல் லஃபர்குவெ கூறினார்.

தோழர் லெனின் குறிப்பிடுவதைப் போல, “ஒவ்வொரு பாட்டாளியும் ஏங்கெல்ஸின் வாழ்க்கையை அறிந்து கொள்வது அவசியம்”

மார்க்சை பயில்வது என்பது என்ன?

ஜி ஜின்பிங்

தமிழில்: முனைவர் சந்திரகுரு

(மார்க்ஸ் பிறந்த நாள் இருநூற்றாண்டு விழாவை ஒட்டி மக்கள் சீனத்தின் குடியரசுத்தலைவர் ஜி ஜின்பிங் ஆற்றிய உரையின் பகுதிகள்)

உயர்ந்த இலட்சியங்களைப் பேணுவதாகவும், மனிதகுலத்தின் விடுதலைக்கான போராட்டத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டதுமாக அமைந்தது மார்க்சினுடைய வாழ்க்கை. “தொழிலைத் தேர்ந்தெடுப்பது குறித்து இளைஞர் ஒருவரின் சிந்தனைகள்” என்ற தலைப்பில் உயர்நிலைப் பள்ளி இறுதித் தேர்விற்கான கட்டுரை ஒன்றை 1835ஆம் ஆண்டில் 17 வயதான மார்க்ஸ் எழுதியிருந்தார். அதில் “நாம் அனைவரும் மனிதகுலத்திற்குத் தேவையான அனைத்தையும் செய்கின்ற வகையில் பொருத்தமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம் என்றால், எந்தவொரு சுமையும் நம்மைப் பணியவைக்க முடியாது. ஏனெனில் அவையனைத்தும் அனைவருக்கும் நன்மையளிக்கின்ற வகையில் நாம் செய்கின்ற தியாகங்களாக இருக்கின்றன. எனவே நமக்கு கிடைக்கின்ற அந்த மகிழ்ச்சியானது மிகக் குறுகிய, வரையறைக்குட்பட்ட, சுயநலம் சார்ந்த மகிழ்ச்சியாக இல்லாமல், கோடிக்கணக்கானவர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும். நமது செயல்கள் எந்தவித ஆரவாரமுமின்றி அமைதியானவையாக, ஆனாலும் நிரந்தரமாக நீடித்திருப்பவையாக, நமது சாம்பல் மீது மேன்மக்கள் கண்ணீரைச் சிந்துகின்ற வகையில் இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் கரடுமுரடான வாழ்க்கைப் பயணத்தில், வறுமையையும், நோய்களையும் மார்க்ஸ் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும், அவர் இறுதிவரை உறுதியாகப் போராடி, தான் கொண்டிருந்த லட்சியங்களில் இருந்து சிறிதும் விலகாமல், மனிதகுலத்தின் விடுதலைக்கான உயர்ந்த லட்சியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட, பெருமை மிகுந்த வாழ்வை வாழ்ந்து காட்டினார்.

மகத்தான தத்துவம் உதயம்:

மார்க்சுடைய பெயரால் அழைக்கப்படும் தத்துவமான மார்க்சியம், அவர் நமக்கு விட்டுச் சென்ற மிக மதிப்பு வாய்ந்த, செல்வாக்குமிக்க மரபியமாகும். சூரியனைப் போல் தகதகக்கும் இக்கோட்பாடு மனித சமூகத்திற்கு அதன் வரலாற்றின் போக்கை எடுத்துக் காட்டி, அதன் விடுதலைக்கான பாதையை மினுமினுக்கச் செய்கிறது.

விமர்சனம் என்ற ஆயுதத்தை, எவ்விதத்திலும், ஆயுதத்தைக் கொண்ட விமர்சனத்தினால் மாற்றீடு செய்ய முடியாது. பெளதீக சக்தியை எதிர்கொண்டு வீழ்த்துவது பெளதீக சக்தியால்தான் சாத்தியம்; ஆனால், ஒரு தத்துவக் கருத்தும் கூட வெகுமக்களை இறுகப் பற்றியவுடன் பொருளாயத வலிமையாக மாறிவிடும்.” என்று ஒருமுறை மார்க்ஸ் குறிப்பிட்ட கருத்து பிரபலமானது. தத்துவம், அரசியல், பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம் என்று தலையாய மூன்று பகுதிகளை மார்க்சியம் கொண்டுள்ளது. அவற்றைத் தனித்தனியே பார்த்தால், ஜெர்மானிய தத்துவம், பிரிட்டிஷ் அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு கற்பனாவாத சோசலிசம் ஆகியவற்றிலிருந்து அவை தோன்றியுள்ளன. இருந்த போதிலும் மார்க்சியத்திற்குள் இவற்றை இறுதியாக மாற்றியமைத்ததற்கான அடிப்படைக் காரணங்களாக மார்க்ஸ் கொண்டிருந்த ஆழமான அவதானிப்புகள், அவர் வாழ்ந்த காலத்திலும், மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கான வடிவம் குறித்த அவரது ஆழ்ந்த அறிவிலும் வேர்கொண்டிருந்தன. “உலகத்தையே மாற்றும் வகையில் கண்டறியப்பட்ட கருத்துக்களையோ, உருவாக்கப்பட்ட கொள்கைகளையோ அடிப்படையாகக் கொண்டடு அமைதவை அல்ல கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ளும் கோட்பாட்டு முடிவுகள். பொதுவான வார்த்தைகளில் சொன்னால், அவை நம் கண்களுக்கு முன் நடந்துகொண்டிருக்கும் வரலாற்று இயக்கத்திலிருந்து, வர்க்கப் போராட்டத்திலிருந்து எழுகின்ற வர்க்க உறவு நிலைமைகளில் இருந்தே அந்த முடிவுகளை வந்தடைகிறார்கள்.

மனித குல வரலாற்றின் நெடிய போக்கை கணக்கில் கொண்டால் மட்டுமே, நம்மால் வரலாற்று இயக்கப் போக்குகளின் சாரத்தையும், சமகால வளர்ச்சிகளின் திசைப்போக்குகளையும் குறித்த பார்வையை வந்தடைய முடியும். மார்க்சின் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் பற்றிக் கூறும் போது, “மனித சமுதாயம் உருவாக்கிய எதனையும் மறுதலிக்காமல், அவையனைத்தையும் நன்கு ஆய்ந்தறிந்து அவர் விமர்சனப்பூர்வமாக மாற்றியமைத்தார். அவற்றை மறுபரிசீலனை செய்தார், விமர்சனத்திற்கு உள்ளாக்கினார், மனித சிந்தனையை உருவாக்கிய தொழிலாளி வர்க்க இயக்கத்தின் மீது அதனை உறுதி செய்தார்., முதலாளித்துவ வரையறைகளால் சூழப்பட்ட அல்லது முதலாளித்துவ முடிவுகளால் பிணைக்கப்பட்டுள்ள மக்களால் வந்தடைய முடியாத தீர்மானங்களை அவர் வரையறுத்தார்” என்று குறிப்பிடுகிறார் லெனின். மார்க்சின் சிந்தனைகள் உருவான காலத்திலிருந்தே, கால நிலைமைகளை மாற்றியமைக்கவும் தொடங்கின; அவரின் கருத்துக்களும், கோட்பாடுகளும்

அறிவியல் ரீதியிலான தத்துவம்:

மார்க்சியம் என்பது ஒரு அறிவியல் கோட்பாடாக இருக்கின்றது. அது மனித சமுதாயத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. தன்னுடைய விஞ்ஞான சோஷலிசம் குறித்த கருத்துக்களை மார்க்ஸ்  உருவாக்கிய காலத்திற்கு வெகு முன்பிருந்தே இருந்து வந்த கற்பனாவாத சோசலிஸ்டுகள் சமுதாயத்தைப் பீடித்திருக்கும் துன்பங்களைக் கண்டு துயரம் அடைபவர்களாக, மிகச்சிறந்த சமுதாயம் குறித்த நல்ல பல கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தாலும், சமுதாயத்தின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்புகளை புரிந்து கொண்டவர்களாக அவர்கள் இல்லாததால், தங்களுடைய கொள்கைகளை அடைவதற்கான சிறந்த வழி எதுவும் அவர்களுக்கு கிட்டவில்லை. இதன் விளைவாக, சமுதாய வளர்ச்சியின் மீது உண்மையான தாக்கத்தை அவர்கள் கொண்டிருந்த கருத்துக்களால் ஏற்படுத்த இயலவில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க பொருள்முதல்வாதம்,  உபரி மதிப்பு குறித்த கோட்பாடு போன்ற மார்க்சிடமிருந்து உருவான கருத்துக்கள் மனித சமுதாயத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பொதுவான கட்டமைப்புகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன. முதலாளித்துவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்ற குறிப்பிட்ட விதிகளை அவை வெளிப்படுத்தின. தேவை என்ற உலகில் இருந்து சுதந்திரம் என்ற உலகை நோக்கி மனிதகுலம் நகர்வதற்கு இத்தகைய கண்டுபிடிப்புகள் வழிவகுத்தன. மேலும் மனிதகுலம் தனக்கான  சுதந்திரம் மற்றும் விடுதலையை உணர்ந்து கொள்வதற்கான பாதையில் ஒளிபாய்ச்சுபவையாகயும் அவை இருந்தன. .

மார்க்சியம் என்பது மக்கள் சார்ந்த கோட்பாடாக இருக்கிறது. தங்களுடைய சுயமரியாதையை மக்கள் அடையும் வகையில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட சிந்தனையாக அது இருந்தது. மிகப் பரந்ததாக, ஆழ்ந்ததாக மார்க்சியம் இருந்த போதிலும், மனிதகுல விடுதலைக்கான குறிக்கோள் என்று அதனை ஒரே வாக்கியத்தில் மிகச் சுருக்கமாக நம்மால் கூற முடியும். சமுதாயத்தில் மேலாதிக்கம் கொண்ட கோட்பாடுகளாக, மார்க்சின் காலத்திற்கு முன்னால் இருந்த கோட்பாடுகள் அனைத்தும் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கின்ற வகையிலேயே இருந்தன. ஆனால் மார்க்சியம்தான் மக்களுடைய பார்வையில் மனிதகுலத்திற்கான சுதந்திரம் மற்றும் விடுதலைக்கான வழியைத் தேடுகின்ற முதல் கோட்பாடாக இருந்தது. எந்த அடக்குமுறையோ அல்லது சுரண்டலோ இல்லாத, மக்கள் அனைவரும் சமமாகவும் சுதந்திரமாகவும் வாழ்கின்ற சிறந்த சமுதாயத்தை இறுதியில் உருவாக்குவதற்கான வழியைத் தெளிவுபடுத்திக் காட்டுவதற்கான அறிவியல் கோட்பாடுகளை மார்க்சியம் பயன்படுத்துகிறது, மக்கள் மத்தியில் நன்கு வேரூன்றியுள்ளதால், மார்க்சியத்தின் செல்வாக்கானது காலம் மற்றும் எல்லைகளைத் தாண்டியதாக இருக்கிறது. வரலாற்றை முன்னெடுத்துச் செல்லுகின்ற பாதையே மனிதகுலத்திற்கான சரியான பாதை என்பதை மார்க்சியம் தெளிவுபடுத்துகிறது.

நடைமுறைக்கு வழிகாட்டி:

மார்க்சியம் என்பது ஒரு நடைமுறைக் கோட்பாடாக இருக்கிறது. தங்கள் செயல்களின் வழியாக உலகை மாற்றுவதை நோக்கி மக்களை அது வழிநடத்துகிறது. “சமூக வாழ்க்கை அனைத்தும் அவசியமான வகையில் நடைமுறைக்கானதாக உள்ளது”, மேலும்

“தத்துவஞானிகள் இந்த உலகை பல்வேறு வழிகளில் விளக்கியுள்ளனர்; ஆனால் அதனை மாற்ற வேண்டியதுதான் முக்கியம்”

என்கிறார். இருத்தலையும், நடைமுறையையும் உள்ளடக்கியிருப்பதே மார்க்சியத்தின் பண்பாகும், அதன் நடைமுறைத்தன்மையே மார்க்சிய கோட்பாட்டை மற்ற கோட்பாடுகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. படிப்போடு தன்னை ஒடுக்கிக் கொள்ளும் புலமை என்றில்லாமல், மார்க்சியமானது வரலாற்றில் மக்களுடைய பங்கில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டதாக இருக்கிறது. மனிதகுலத்தின் விடுதலையை முன்னெடுப்பதற்கான நடைமுறையில்தான் மார்க்சியம் உருவானது, தெளிவானது, மேம்பாடடைந்தது. அது இந்த உலகத்தைப் புரிந்து கொள்ளவும், மாற்றியமைக்கவும் மக்களுக்கு உள்ளூக்கம் தருகின்ற ஆற்றல் மிகுந்ததாக இருக்கிறது.

மார்க்சியம் எல்லையற்று, தொடர்ந்து வளர்கின்ற தத்துவமாக இருக்கின்றது. எப்போதும் காலத்தை முந்தி நிற்கிறது. மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரமல்ல என்றும், அது நடைமுறை மாற்றங்களின் ஊடாக வளர்க்கப்படுகிற, செயல்முறைகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறது என்றும் திரும்பத் திரும்ப மக்களிடம் மார்க்ஸ் அறிவுறுத்தி வந்தார். மார்க்சிய தத்துவ வளர்ச்சியின் வரலாறானது காலம், நடைமுறை மற்றும் அறிதல் ஆகியவற்றின் மாற்றங்களுக்கிணங்க, மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தவர்களால் தொடர்ந்து முன்னேற்றப்பட்ட ஒன்றேயாகும். இந்த வரலாறு, மனிதகுlலத்தின் கலாச்சார மற்றும் அறிவுசார் சாதனைகள் அனைத்தையும் தன்னகத்தே எடுத்துக் கொண்டு தொடர்ந்து தன்னைத் தெளிவுபடுத்திக் கொள்கிற வரலாறாகும். எனவேதான், மார்க்சியம்  தன்னுடைய கவர்ச்சிகரமான இளமைத்தன்மையை தக்கவைத்துக் கொண்டு சமகால வளர்ச்சிப் போக்குகளில் புதிய பிரச்சனைகளை ஆராய்வதுடன், மனிதகுலத்தை எதிர்கொள்கின்ற புதிய சவால்களுக்கு பதிலளிப்பதாகவும் இருக்கிறது.

தத்துவார்த்தக்கருவி:

“அறிவியலின் உச்சாணிக் கொம்பில் ஏற விரும்புகின்ற ஒரு நாடு, தத்துவார்த்த சிந்தனைகள் எதுவுமின்றி அதனை அடைய முடியாது” என்று ஏங்கெல்ஸ் ஒரு முறை கூறினார். சீனர்களாகிய நாம் தேச மறுசீரமைப்பை அடைய வேண்டுமென்றால், அதேபோன்று தத்துவார்த்த சிந்தனைகள் எதுவுமின்றி அடைய முடியாது. மார்க்சியம் என்பது நமது கட்சிக்கும், தேசத்துக்கும் வழிகாட்டுகின்ற கோட்பாடாக இருக்கிறது. இந்த உலகைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கும், அதன் அடிப்படை வடிவங்களைப் புரிந்து கொள்வதற்கும், அதன் உண்மையை அறிந்து கொள்வதற்கும், மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் நாம் பயன்படுத்துகின்ற வெல்ல முடியாத, மிகச் சிறந்த கோட்பாட்டுக் கருவியாக மார்க்சியம் இருக்கிறது. 

மார்க்சியக் கருத்துக்களும், கோட்பாடுகளும் மிகப் பரந்து, ஆழமானவையாக இருக்கின்றன, திரும்பத் திரும்ப படித்தாலும் கூட அவை எக்காலத்திற்கும் பொருந்தும் வகையிலேயே இருக்கின்றன. இந்தப் புதிய யுகத்தில், மார்க்சைப் படிக்க வேண்டிய தேவை சீனக் கம்யூனிஸ்டுகளுக்கு இன்னும் இருக்கிறது. மார்க்சியத்தைப் பயில்வதோடு, அதை நடைமுறையிலும் நாம் கடைப்பிடிக்க  வேண்டியிருக்கிறது. அதன் மூலம், இந்தப் புதிய யுகத்தில் இன்னும் உறுதியான நம்பிக்கையுடனும், ஞானத்துடனும் சீன சோசலிசத்தை நாம் நிலைநிறுத்தி மேம்படுத்த முடியும்.  

மனித சமூக மேம்பாடு:

மார்க்சைப் பயில்வதற்கு, மனித சமுதாயத்தின் வளர்ச்சிக் கட்டங்கள் குறித்த மார்க்சின் சிந்தனையை கற்று, கடைப்பிடிப்பது அவசியம்.  மனித சமுதாயம் இறுதியில் கம்யூனிசத்தை நோக்கியே நகரும் என்பதை தன்னுடைய ஆய்வுகளின் மூலம் மார்க்ஸ் வெளிப்படுத்தினார். எதிர்காலச் சமுதாயத்தில் “ஒவ்வொருத்தருக்குமான முன்னேற்றமே அனைவருக்குமான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்கிற வகையில் நாம் இணைந்திருக்க வேண்டும்” என்பதை உறுதியாக நம்பிய மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோர், “பாட்டாளி வர்க்கத்திற்கு இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர வேறெதுவும் இல்லை. அவர்கள் வெற்றி காண வேண்டிய உலகம் இருக்கிறது.” என்று கூறினர். தங்கள் மீதும், சமுதாயத்தின் மீதும், மனித வளர்ச்சியின் மீதும் ஆளுமை கொண்டவர்களாக மக்கள் மாறிய பிறகு வரலாற்றின் அலை முன்னோக்கி மட்டுமே நகரும் என்றும், நடப்பில் உள்ள நிலைமைகளின் தொடர்ச்சியான மாற்றங்களின் மூலம் உணரக்கூடியதாக கம்யூனிச லட்சியம்   இருக்கும் என்றும் மார்க்ஸ் உறுதியுடன் நம்பினார். கம்யூனிஸ்டுகளின் தடுமாற்றமில்லாத லட்சியங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கான தத்துவார்த்த அடித்தளத்தை மார்க்சியம் நிலைநிறுத்துகிறது. உலகளாவிய கண்ணோட்டங்கள், இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் ஆய்வு நெறிமுறைகள் குறித்த திறம் நம்மிடம் அவசியம் இருக்க வேண்டும். கம்யூனிசத்தை உணர்ந்து கொள்வது என்பது ஒவ்வொரு அடியாக இலக்கை நோக்கி நாம் எடுத்து வைக்கின்ற வரலாற்றுச் செயல்முறை என்பதை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இணைந்து முன்னெடுக்கும் லட்சியமான சீன சோஷலிசம் மற்றும் தற்போது நாம் ஈடுபட்டிருக்கும் முயற்சிகள் ஆகியவற்றை கம்யூனிசத்தின் உன்னத லட்சியத்துடன் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. சீன சோசலிசத்தின் பாதை, கோட்பாடு, அமைப்பு, கலாச்சாரம் ஆகியவற்றின் மீது முழு நம்பிக்கையுடன் நாம் இருக்க வேண்டும். சீனக் கம்யூனிஸ்டுகளின் கருத்தியல்கள், நம்பிக்கைகளுடன் நம்மைப் பிணைத்துக் கொள்ள வேண்டும். மார்க்சைப் போல நாம் இருக்க வேண்டும். நமது வாழ்நாள் முழுவதும் கம்யூனிசத்திற்காகப் போராட வேண்டும்.

மக்களுடைய நிலைப்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் வகையில் மார்க்சின் சிந்தனையை கற்று, கடைப்பிடிப்பது, மார்க்சைப் பயில அவசியமாகும். மக்களுடன் நெருக்கமான உறவைப் பேணுவது மார்க்சியத்தின் தனித்துவமான தன்மையாக இருக்கிறது. மார்க்சின் கூற்றுப்படி, வெகுமக்களின்  செயல்பாடுகளே வரலாற்றுச் செயல்பாடுகளாகும். தங்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கு மக்களைத் தயார்ப்படுத்துவதையே, மார்க்சின் வாழ்க்கையைப் பின்தொடர்கிற ஒருவர் அறிகிறார். நமது அடிப்படையான நிலைப்பாடு என்பது மக்களுக்கானது என்பதையும், மக்களுடைய நல்வாழ்வுக்காகப் போராடுவதே நமது அடிப்படையான பணி என்பதையும் நாம் எப்போதும் உறுதிசெய்துகொண்டே இருக்க வேண்டும். மக்கள் அனைவருக்காகவும் முழுமனதுடன் பணி புரிவது என்ற நமது அடிப்படைக் கொள்கைக்கு உறுதுணையாக இருந்து வெகுஜன வழியை நாம் முன்னெடுக்க வேண்டும். மக்களுடைய பிரதான நிலைப்பாடுகளையும், அவர்களின் படைப்பாற்றலையும் நாம் மதிக்க வேண்டும். அவர்களோடு எப்போதும் நெருக்கமான உறவை நாம் வைத்திருக்க வேண்டும். துளைக்க இயலாத பெருஞ்சுவருக்குள் நமது பலத்தை வழிநடத்த வேண்டும். வரலாற்றை முன்னகர்த்தும் வகையில் மக்களை ஒன்றிணைத்து, அவர்களுக்குத் தலைமையேற்று வழிநடத்த வேண்டும். இது வரலாற்றின் வளர்ச்சிக் கட்டங்களுக்கு இசைவான தேர்வாக அவசியம் இருக்கவேண்டும் என்பதுடன், நமது சொந்த முயற்சியில், நம்முடைய நோக்கங்களுக்கு உண்மையாக இருக்கின்ற வகையில், கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பாகவும் இருக்கிறது.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி:

மார்க்சைப் பயில்வதற்கு, உற்பத்தி சக்திகள் மற்றும் உறவுகள் குறித்த மார்க்சின் சிந்தனையை கற்று, கடைப்பிடிப்பது அவசியமாகின்றன. உற்பத்தியின் பொருளுயாத சக்திகளே எல்லா சமூக நிலைமைகளுக்குமான பொருளியல் முன்நிபந்தனைகளை உருவாக்குகின்றது, மேலும் குறிப்பிட்ட கட்டத்தில் அடைந்துள்ள உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஏற்ப நிலவும் உற்பத்தி உறவுகளின் ஒட்டுமொத்தமே ஒரு சமூகத்தின் பொருளாதார அடித்தளமாக பார்க்கப்படுகிறது. உற்பத்தி சக்திகளே ஒரு சமுதாயத்தை முன்னேற்றும் ஆற்றல் வாய்ந்த, புரட்சிகரமான காரணிகளாக இருக்கின்றன. “மனிதர்களுக்கு பெருமளவில் கிடைக்கும் இந்த உற்பத்தி சக்திகள் சமுதாயத்தின் இயல்பை நிர்ணயிக்கின்ற ஆற்றலைக் கொண்டுள்ளன”. உற்பத்தி சக்திகளுக்கும், அவற்றின் உறவுகளுக்கும் இடையிலான மற்றும் பொருளாதார அடித்தளத்திற்கும், பெரிய கட்டுமானங்களுக்கும் இடையிலான பரஸ்பரத் தொடர்புகளும், கட்டுப்பாடுகளுமே சமுதாய வளர்ச்சியை முழுமையாக நிர்வகிக்கின்றன. தேசிய உற்பத்தி சக்திகளைக் கட்டவிழ்த்து விடுவதும் வளர்த்தெடுப்பதும் சோசலிசத்தின் அடிப்படைக் கடமைகளாகும். இதுகுறித்து தொடர்ந்து ஆராய்வதும், கடினமாக உழைப்பதும் சீனக் கம்யூனிஸ்டுகள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதில் இருந்து, குறிப்பாக சீர்திருத்தங்கள் மற்றும் சந்தையைத் திறந்து வைத்ததில் இருந்து, தேசிய உற்பத்தி சக்திகளை கட்டவிழ்த்து, வளர்ச்சி காண்பதில் உறுதியான வழிகளில் மக்களை வழிநடத்தியதன் மூலம், மேற்குலக நாடுகள் பல நூற்றாண்டுகள் எடுத்துக் கொண்டதற்கு மாறாக 70 ஆண்டுகளுக்குள்ளாகவே நமது கட்சி சாதித்திருக்கிறது. இதன் மூலம் ஏற்பட்ட நமது நாட்டின் அதிவேக உயர்வு நம்மை உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்றியிருக்கிறது.

மக்கள் ஜனநாயகம்:

மார்க்சைப் பயில்வதற்கு, மக்கள் ஜனநாயகம் குறித்த மார்க்சின் சிந்தனையை கற்பதும், கடைப்பிடிப்பதும் அவசியம். “பாட்டாளி வர்க்க இயக்கம் என்பது தன்னறிவு கொண்ட, மிகப்பெரும்பான்மையினரின் நலனைப் பாதுகாக்கும், மிகப்பெரும்பான்மையினரின் விடுதலைக்கான இயக்கமாகும்”, “பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வரும் போது, பழைய அரசு இயந்திரத்தைக் கொண்டே நிர்வகிக்க முடியாது” என்றும், “முந்தைய அரச அதிகாரம் தகர்க்கப்பட வேண்டும்… அதற்குப் பதிலாக புதிய, உண்மையான ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும்” என்றும் மார்க்சும், எங்கல்சும் குறிப்பிட்டுள்ளனர். அரச அமைப்புகள் பொதுமக்களைக் கட்டுப்படுத்துவதிலிருந்து மாறி அவர்களுக்கு சேவை செய்பவையாக, மக்களின் மேலாண்மையை ஏற்றுக் கொள்பவையாக இருக்க வேண்டும். அரசியல் வளர்ச்சியில் சோசலிசப்பாதையை சீன குணாதிசயங்களுடன் நாம் தொடர்ந்து தக்க வைத்திருக்க வேண்டும். கட்சித் தலைமையோடு சுமூகமாக ஒருங்கிணைந்திருப்பதை உறுதி செய்து, மக்களைக் கொண்டு நாட்டை வழிநடத்துவது மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கு உறுதியளித்து சீனாவின் சோசலிச ஜனநாயக முன்னேற்றத்திற்கான வழியினை வகுக்க வேண்டும். மக்களைக் கொண்டு நாட்டை வழிநடத்துவதற்கான நிறுவன அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். சீனாவின் ஆட்சி முறை, திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதை விரைவுபடுத்த வேண்டும். மக்களின் உற்சாகம், முன்முயற்சி, படைப்பாற்றல் ஆகியவற்றிற்கான முழு சுதந்திரத்தை வழங்கி மக்கள் ஜனநாயகத்தை முழுமையாக உறுதியாகத் திறம்படச் செயல்படுத்த வேண்டும்.

கலாச்சார மேம்பாடு:

மார்க்சைப் பயில்வதற்கு, கலாச்சார மேம்பாடு குறித்த மார்க்சிய சிந்தனைகளைக் கற்றலும், பின்பற்றுதலும் அவசியமாகும். வேறுபட்ட பொருளாதார சூழல் மற்றும் சமுதாய நிலைமைகளின் காரணமாக மக்களிடயே வேறுபட்ட கருத்துக்களும், கலாச்சாரங்களும் உருவாகும் என மார்க்ஸ் நம்பினார். இவ்வாறு கருத்துக்களையும், கலாச்சாரங்களையும் பொருளாதார அடித்தளமே தீர்மானிக்கிறதென்றாலும் அவையும் எதிர்வினை செய்கின்றன.  வளர்ச்சியடைந்த கருத்துகளும், கலாச்சாரமும் வெகுமக்களால் ஏற்கப்பட்டவுடன், தவிர்க்க முடியாத பெளதீக சக்தியாக மாற்றம் பெறுகின்றன. நேர்மாறான விதத்தில்,  காலம் கடந்த அல்லது தவறான கருத்துக்களை கைவிடாமல் தொடர்ந்தால் அவை சமூக முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாகின்றன. தத்துவ விழிப்புணர்வும், பண்பாட்டு உறுதியும் தேச முன்னேற்றத்திற்கான சக்திகளாகும்; மேம்பட்ட மதிப்பீடுகளும், சிந்தனைச் சுதந்திரமும் ஒரு சமூகத்தின் மூலாதாரங்களாகும். ஒரு தேசத்தின் மையச் சிந்தனையை வடிவமைப்பதாகவும், மாற்றியமைப்பதாகவும் இருக்கிறது. சீன நிலைமைகளோடு ஒன்றிச் செயல்படும் அதே சமயம் நாம் நவீனமயம், உலக நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தையும் தழுவுகிற தேவை நம் தேசத்தின் முன் உள்ளது. மார்க்சியமே நம்மை வழிநடத்துகின்ற சிந்தனை என்ற நிலைப்பாட்டை நாம் உறுதிப்படுத்த வேண்டும். மேம்பட்ட சோசலிசக் கலாச்சாரத்தை வளர்த்து, சோசலிசக் கலாச்சார, ஒழுக்க நெறிகளை கடைப்பிடிப்பதை வலுப்படுத்த வேண்டும். சமுதாய வளர்ச்சியின் அனைத்துப் பகுதிகளும் முக்கியமான சோசலிச விழுமியங்களால்  ஊக்குவிக்கப்பட்டுள்ளனவா என்பதையும், நம்முடைய சிறந்த பாரம்பரியக் கலாச்சாரத்தின் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் மற்றும் புதுமையான வளர்ச்சிக்கு அவை ஊக்கமளிக்கின்றனவா என்பதையும் நாம் கண்டறிந்து கொள்ள வேண்டும். தங்களுடைய அரசியல் விழிப்புணர்வு மற்றும் தார்மீக மதிப்பீடுகளை நமது மக்கள் உயர்த்திக் கொள்ள உதவுவதோடு, நேர்த்தியான கலாச்சாரத்தை அவர்கள் பாராட்டுவதற்கும் நாம் உதவ வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், நம்மால் சீனக் கலாச்சாரத்திற்கு புத்துணர்வை அளிக்க முடியும்.

சமூக வளர்ச்சிக்கு மார்க்சியம்:

மார்க்சைப் பயில்வதற்கு, சமூக வளர்ச்சி குறித்த மார்க்சிய சிந்தனைகளைக் கற்றலும், நடைமுறைப்படுத்தலும் அவசியம். எதிர்காலச் சமூகத்தில் “உற்பத்தி என்பது, அனைவருக்கும் செல்வத்தை வழங்கிடும் நோக்கில் கணக்கிடப்பட்ட ஒன்றாக இருக்கும்” என்றும் “அனைவருக்குமானவற்றை அனுபவித்திட அனைவரும் பங்கேற்பது” அதன் வெளிப்பாடாக இருக்கும் என்றும் மார்க்சும் ஏங்கல்ஸும் கூறினர். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, கோதா வேலைத் திட்டம் குறித்த திறனாய்வு, மூலதனம் மற்றும் பிற மார்க்சின் படைப்புகளின் மீது ஏங்கெல்ஸ் தொடர்ந்து தனது கருத்துக்களை வெளியிட்டார். “ஆரோக்கியமான, பயனுள்ள வேலை, போதுமான செல்வம், ஓய்வு, உண்மையான, முழுமையான சுதந்திரம் ஆகியவற்றை அனைவருக்கும் தருவதாக சோசலிசத்தின் கீழ் உள்ள சமூகம் இருக்க வேண்டும்”. நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் விரும்புகிறார்கள், அவர்கள் அதனை அடைவதற்கு உதவுவதை நம் இலக்காகக் கொள்ள வேண்டும். மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கான தத்துவத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும், மக்கள் முன் இருக்கின்ற மிக முக்கியமான உடனடிப் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கான பாதுகாப்பான வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தி தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். அனைவருக்குமான சமூகம், சமூக நீதியுடைய சமூகம் என்பனவற்றை முன்நிறுத்தி, உயர்தரத்திலான குழந்தைப் பராமரிப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ சேவைகள், முதியோர் பராமரிப்பு, வீட்டு வசதி, சமூக உதவி ஆகியவற்றைப் பெறுவதற்கான உத்தரவாதத்தை ஏற்படுத்த வேண்டும். சீர்திருத்தங்களாலும், சமூக மேம்பாட்டினாலும் கிடைக்கும் பலன்கள் அனைத்து மக்களையும் நியாயமான வழியில் சென்றடைவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், முழுமையான மனித வளர்ச்சியை ஊக்குவித்து, அனைவராலும் வளமையைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

மனிதர்களும் இயற்கையும்:

மார்க்சைப் பயில்வதற்கு, இயற்கைக்கும் மக்களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய மார்க்சிய சிந்தனைகளை கற்பதும், பின்பற்றுதலும் தேவைப்படுகின்றன. “இயற்கையின் மூலமே மனிதன் உயிர் வாழ்கிறான்” என்பதை மார்க்ஸ்  உணர்ந்திருந்தார். மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான வளமான மண், ஆறுகள், ஏரிகள், மீன் வளம் மிகுந்த கடல்கள் என்று அனைத்தையும் கொண்டிருக்கும் இயற்கை, உற்பத்திக்குத் தேவையான ஆதாரங்களையும் மனிதனுக்கு வழங்குகிறது. மனிதர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான சூழலைக் கொண்டதாக இயற்கை உலகம் இருக்கிறது. மனிதர்களாகிய நாம் இயற்கையோடு இயைந்து உற்பத்தி செய்ய, வாழ, வளர்ச்சி அடைய முடிந்தால், இயற்கை என்பது நமக்குத் தேவையான அனைத்தையும் கொடையாக வழங்கும். இருப்பினும், மனிதன் தன்னுடைய அறிவினாலும், கண்டறியும் மேதைமையாலும் இயற்கையின் ஆற்றலைக் கட்டுப்படுத்தும் போது, இயற்கை அவனைத் தாக்குகிறது”. இயற்கையே அனைத்து உயிர்களுக்கும் தாய்.  மனிதகுலமும், இயற்கையும் இணைந்து ஒரு உயிரியல் சமூகமாக இருக்கின்றன. மனித இனம் இயற்கையைப் போற்றி, அதன் வழிகளைப் பிந்தொடர்ந்து, அதனைப் பாதுகாக்க வேண்டும். மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை நாம் உறுதி செய்ய வேண்டும், தெளிவான நீர்நிலைகளும், பசுமையான மலைகளும் விலைமதிப்பற்ற சொத்துக்கள் என்பதை உறுதியாக உணர்ந்து, உளப்பூர்வமாக இந்தப் புரிதல் மீது நாம் செயல்பட வேண்டும். சுற்றுச்சூழல் பண்பாட்டைக் கட்டமைத்து, அழகானதொரு சீனாவை உருவாக்குவதற்காக சமுதாயத்தின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், தெளிவான நீர்நிலைகள், பசுமையான மலைப் பகுதிகளில் வாழும் மக்கள் இயற்கை, வாழ்க்கை, இருத்தல் ஆகியவற்றின் அழகை ரசிப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அதிகமான உற்பத்தி, உயர்வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் ஆகியவற்றைக் கொண்ட நீடித்த வளர்ச்சி மாதிரி ஒன்றை நாம் மேற்கொள்ள வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சி:

மார்க்சிய அரசியல் கட்சியை வளர்ப்பதற்கான மார்க்சிய சிந்தனைகளைக் கற்றலும், கடைப்பிடித்தலும் மார்க்சைப் பயில்வதற்கு அவசியமாகும். “முதலாளி வர்க்கத்திற்கு எதிரான போராட்ட உழைக்கும் வர்க்கத்தின் போராட்டமானது பல்வேறு வளர்ச்சிக்கட்டங்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது, எல்லாச் சூழலிலும், எல்லாவிடத்திலும் அந்த இயக்கத்தின் நலனை ஒட்டுமொத்தமாக பிரதிபலிக்கின்றனர்” என்பதை மார்க்ஸ் விளக்கியுள்ளார், “பாட்டாளி வர்க்கத்தின் ஒட்டுமொத்த நலன் அல்லாமல் தனிப்பட்ட விருப்பங்கள் ஏதுமில்லை”, இது தவிர “மிகப்பெரும்பான்மையானவர்களின் நலனுக்காக”, ஒரு கம்யூனிச சமுதாயத்தை உருவாக்குவதற்காக போராடவும் அவசியம் உள்ளது. “கட்சியின் இயக்கத்தின் அளவுமட்டத்தைக் கொண்டு ஒட்டுமொத்த உலகிற்கும் முன்னுதாரணங்களை” ஒரு கம்யூனிஸ்ட் கட்சி நிச்சயம் உருவாக்க வேண்டும். எப்போதும் மக்களுடன் இணைந்து நின்று அவர்களின் நலன்களுக்காக போராடுவதாக இருப்பதே, மார்க்சிய அரசியல் கட்சிக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் இடையேயான அடிப்படை வேறுபாடாக இருக்கிறது. நமது போராட்டங்கள், திட்டங்கள், நோக்கங்கள், கனவுகளை ஒருங்கிணைத்து, அரசியல் நேர்மையை நிலைநிறுத்துவதன் அவசியத்தை உணர்ந்து, பெருமளவில் சிந்தித்து, தலைமையைப் பின்பற்றி அதனோடு நம்மை நேர்நிறுத்திக் கொள்ள வேண்டும். கட்சியின் மீது முழுமையான, கண்டிப்பான ஆளுமையை முன்னெடுத்துச் செல்ல நாம் தொடர்ந்து போராட வேண்டும். அரசியல் ரீதியாக கட்சியைப் பலப்படுத்தவும், ஒட்டுமொத்த கட்சித் தலைமையை பலப்படுத்தவும், மத்திய குழு மற்றும் அதன் மையப்படுத்தப்பட்ட, ஐக்கியப்பட்ட தலைமையின் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். உண்மையை முன்னிறுத்தி, தவறுகளைச் சரிசெய்து கொள்கிற கம்யூனிஸ்ட்களின் அரசியல் தன்மையை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நமது மக்களின் ஆதரவை முழுமையாகப் பெற்றதாக, தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்வதற்கான தைரியம் மிக்கதாக, அனைத்து சவால்களையும் எதிர் கொள்ளும் திறன் கொண்டதாக, அனைத்து காலகட்டத்திலும் முன்னணியில் இருக்கின்ற துடிப்பான மார்க்சிய ஆளும் கட்சியாக கட்சியைக் கட்டியமைக்க வேண்டும்.

புதியன படைப்பாக்கம்:

அறிவியல் கோட்பாடுகளை அணுகுவதற்கு அறிவியல் அணுகுமுறை தேவைப்படுகிறது. “மார்க்சின் ஒட்டுமொத்த சிந்தனைகளும் ஒரு வழிகாட்டுத் தொகுப்பாக, வழிமுறையாக அமைந்திருக்கவில்லை. முன்பே தயாரிக்கப்பட்ட சூத்திரங்களை அதிலிருந்து பெற முடியாது, கூடுதலாக ஆய்ந்து அறிவதற்கோ, ஆய்வுக்கான வழிமுறையைப் பெறுவதற்கோ உதவுகிறவை அல்ல” என்று தன்னுடைய ஆழ்ந்த கருத்துக்களை ஏங்கெல்ஸ் ஒருமுறை வெளியிட்டார், அவர் மேலும் குறிப்பிடுகையில், கோட்பாடுகள் எனப்படுபவை “வரலாற்று விளைபொருள்களாக இருப்பதால், அவை வெவ்வேறு காலங்களில் வேறுபட்ட வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. எனவே அவற்றின் உள்ளடக்கங்களும் மிகவும் மாறுபட்டவையாகவே இருக்கின்றன.” என்றார். விஞ்ஞான சோசலிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நம்மால் நிராகரிக்க முடியாது. ஒருவேளை அவ்வாறு நிராகரித்து ஒதுக்கிவிட்டால், சோசலிசம் என்பதே காணாமல் போய் விடும். அதே நேரத்தில், விஞ்ஞான சோஷலிசம் என்பது மாறாத கொள்கை அல்ல. வெறுமனே நமது வரலாற்றையும் கலாச்சாரத்தையும் தொடருகின்ற வகையில் பிரதியெடுக்கின்ற வகையிலோ அல்லது வெறுமனே இயந்திரத்தனமாக மரபுவழியிலான  மார்க்சிய ஆசிரியர்களின் கருத்துக்களைப் பயன்படுத்துகின்ற வடிவத்திலோ, அல்லது பிற நாடுகளில் சோசலிசம் நடைமுறைப்படுத்தப்படுவதை மறுபதிப்பு செய்வதாகவோ அல்லது வெளிநாட்டில் இருந்து வருகின்ற நவீனமயமாக்கலின் போலியாகவோ சீனாவில் நடைபெற்றிருக்கும் மிகப் பெரிய சமூக உருமாற்றம் என்பது இருக்கவில்லை. சோசலிசம் என்பதற்கு மரபுசார்ந்த, மாறுபடாத வடிவம் என்பது பொருளல்ல. நாட்டின் குறிப்பிட்ட சூழல், வரலாறு, கலாச்சார மரபுகள், சமகாலத் தேவைகள் ஆகியவற்றோடு, விஞ்ஞான சோசலிசத்தின் அடிப்படைக் கொள்கைகளை நெருக்கமாக இணைப்பதன் மூலமாகவும் சோசலிச நடைமுறைகளை பரிசீலித்து, ஆய்வு செய்து தொடர்ந்து முன்னெடுப்பதாலும் மட்டுமே, அதன் செயல்திட்டம் சாத்தியமாகும்.

இந்தக் கோட்பாட்டின் வலிமை என்பது அதனைத் தொடர்ச்சியாக புத்தாக்கம் செய்வதிலேயே இருக்கிறது. மார்க்சியத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது சீன கம்யூனிஸ்டுகளின் புனிதமான கடமையாக இருக்கிறது. சமகால சீனாவிலிருந்து பெறப்பட்ட ஏராளமான, எழுச்சி தருகின்ற அனுபவங்களைப் பயன்படுத்துவதன் மூலமாகவும், மனிதகுலத்தின் அனைத்து நாகரிகங்கள் குறித்த பரந்த உலகளாவிய பார்வையைப் பயன்படுத்தியும் இந்த உலகைப் பற்றிய ரகசியங்களை அறிந்து கொள்ளவும், அதன் தலைமையை நாம் ஏற்கவும் மார்க்சியத்தைக் கடைப்பிடிப்பதற்கான உறுதியுடன் தொடர்ந்து நாம் இருக்க வேண்டும். நம்மை நாமே விஞ்சுகிற வகையில் தொடர்ச்சியாக நம்மை புதுப்பித்துக் கொண்டு, நமது முன்னேற்றத்திற்காக மற்றவர்களின் பலங்களிலிருந்து பரவலாக கற்றுக் கொள்கின்ற வேளையில் நமது அடித்தளங்களைத் தொடர்ந்து பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இறுதியாக, கம்யூனிஸ்ட் கட்சியின் ஆளுமை, சோசலிச வளர்ச்சி, மனித சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சி, இந்த 21ஆம் நூற்றாண்டில், இன்றைய சீனாவில் மார்க்சியத்தின் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்றவற்றிற்கு  உள்ளீடாய் இருக்கின்ற விதிகளைப் பற்றி நமது புரிதலை விரிவாக்கிக் கொள்ள வேண்டும்.

தோழர்களே,

மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய சிந்தனையாளருக்கு மரியாதை செலுத்துவதற்கும், மார்க்சியத்தின் அறிவியல்பூர்வ உண்மை மீது நமக்கிருக்கும் உறுதியான நம்பிக்கையைத் தெரிவிப்பதற்கும் மார்க்சை நாம் இன்று நினைவு கூர்கிறோம்.

“இதுவரை நடந்திராத மிகப்பெரிய பிரம்மாண்டமான புரட்சி, பிரம்மாண்ட புரட்சிக்கான வாய்ப்பு, நமது பொருள்வாதக் கருத்தை விரிவாக்கி தொடர்வதற்கும், தற்போதைய காலகட்டத்தில் அதனைப் பயன்படுத்துவதற்குமான வாய்ப்பை, நமக்கு அளித்திருக்கிறது.” என்று ஏங்கெல்ஸ் ஒருமுறை கூறினார். நமக்கு முன்பாக இருக்கின்ற பாதையில் மார்க்சியத்தை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மனித சமுதாயத்திற்காக மார்க்சும் ஏங்கல்ஸும் எதிர்பார்த்தவற்றை சீனா முழுமைக்கும் என்றும் நிரந்தரமாக இருப்பதாக விரிவுபடுத்தி அனைவரும் வியக்கத்தக்க எதிர்காலத்தை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

(பெய்ஜிங், மே 4, 2018)

எங்கெல்ஸ் 125: மார்க்சியத்தின் அடித்தளம் எங்கெல்ஸ்

ச. லெனின்

பொதுவாக, மார்க்ஸ் என்றோ, எங்கெல்ஸ் என்றோ, தனித்தனியாக அறியப்படுவதைவிட மார்க்ஸ்-எங்கெல்ஸ் என்று இணைந்தே அவர்கள் அறியப்பட்டனர். ஆனால் எங்கெல்ஸ் குறித்து எழுதும் பலர் எங்கெல்ஸ் மார்க்சின் மறு பாதி மட்டுமல்ல; எங்கெல்சுக்கு என்று தனித்த அடையாளம் உண்டு என்று வேண்டுமென்றே எழுதுகின்றனர். நிச்சயம் அவரின் தனித்த படைப்புகள், அவருக்கேயான தனித்த அடையாளத்தை கொடுக்கும். ஆனால் அதுவும் மார்க்சியம் என்கிற வரையறைக்குள்தான் அடங்கும் என்பதை தெரிந்தே அவர்கள் கதையாடுகின்றனர். உண்மையில் சொல்லப்போனால் எங்கெல்ஸ் தான் முதல் மார்க்சிஸ்ட். மார்க்சின் எழுத்துக்கள் மீதான முதல் விமர்சகரும், அந்த எழுத்தை கவனமாக மேம்படுத்துபவரும் அவரே.

தங்களுக்கான தனித்த அடையாளம் என்று அவர்களுக்குள் எந்த தன்முனைப்பும் மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இருந்ததில்லை. மார்க்சின் எழுத்துக்களுக்கு ஒரு தனி வாசகர் கூட்டமே இருந்தது. மூலதனம் எழுதும் பணியில் மார்க்ஸ் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது, பல பத்திரிக்கைகளில் மார்க்சின் ஒப்புதலுடன் மார்க்சின் பெயரில் வந்த கட்டுரைகளை எழுதியது எங்கெல்ஸ்தான். இதை எங்குமே எங்கெல்ஸ் குறிப்பிட்டது கிடையாது. ரஷ்ய புரட்சிக்கு பிறகு மார்க்ஸ், எங்கெல்ஸ் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் போது மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்தே இந்த தகவலை வெளிக்கொண்டு வந்தது.

முதலாளித்துவ சிந்தனைப் போக்குதான் தனி மனிதர்களை முன்னிறுத்தி சமூகத்தை பின்னால் தள்ளும். இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறை குறித்து மார்க்சும் எங்கெல்சும் கூறும் போது கூட, இது தங்களது தனித்த கண்டுபிடிப்பல்ல என்றும், எங்களுக்கு முந்தையவர்களின் பங்களிப்புகளை சற்று மேம்படுத்தி நாங்கள் வழங்கியுள்ளோம் என்றே குறிப்பிடுகின்றனர்.

மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவருக்கும் தனிப்பட்ட திறமைகளும், ஆளுமைகளும் உண்டு. அதில் யாருக்கும் இருவேறு கருத்து கிடையாது. மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் ஒருங்கிணைவுக்கு பிறகுதான் வர்க்கம், வர்க்கப் போராட்டம் என்கிற புரிதலும், கற்பனாவாத சோஷலிசம் என்பதிலிருந்து விஞ்ஞான சோஷலிசம் என்கிற வளர்ச்சியும், இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்கிற ஆய்வு கண்ணோட்டமும் சாத்தியப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த ஒருங்கிணைவு இல்லாமல் போயிருந்தால் இருவரும் தனித்தனியே பெரிய ஆளுமைகளாக இருந்திருக்கலாமே அன்றி, மக்களுக்கான செழுமைப்படுத்தப்பட்ட ஒரு தத்துவம் கிடைத்திருக்குமா? என்பது மிகப் பெரிய கேள்வியே.

அரசியல் பொருளாதாரம்

1859-ம் ஆண்டு வெளியான “அரசியல் பொருளாதாரம் குறித்த விமர்சனம்” என்கிற நூல் மார்க்சின் ஆகச் சிறந்த பங்களிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக அந்த நூலின் இரண்டாம் பாகத்தை மார்க்ஸ் எழுதத் துவங்கினார். அதுவே “மூலதனம்” நூலாக வடிவம் எடுத்தது.

அரசியல் பொருளாதாரம் குறித்த ஒரு துவக்கப் புள்ளியை முதலில் வைத்தவர் எங்கெல்ஸ் தான். 1843-ம் ஆண்டின் இறுதியில் அவர் எழுதிய “அரசியல் பொருளாதாரம் குறித்த விமர்சனம் பற்றிய ஒரு பார்வை (outline)” என்ற சிறு கட்டுரை மூலம் முதலில் அதை துவக்கி வைக்கிறார். அக்கட்டுரையின் முதல் வரியிலேயே “வர்த்தகம் விரிவானதன் ஒரு இயற்கை நிகழ்வு போக்காகவே அரசியல் பொருளாதாரம் நிலைபெற்றது. துவக்க நிலையில் உள்ள, அறிவியல் பூர்வமற்ற, சிறு வர்த்தகத்தை அறிவியல் தன்மையோடு, விரிந்து பரந்த அங்கீகாரம் பெற்ற, பித்தலாட்ட வேலைகளை செய்வதற்கான முறையாக மாற்றி அமைத்துள்ளது” என்று முதலாளித்துவ முறையை எங்கெல்ஸ் விமர்சிக்கிறார்.

மேலும் தனிச் சொத்துடமை இருக்கும் வரை “தேச வளம்” (national wealth) என்கிற வார்த்தையே அர்த்தமற்றதாகும் என்றும், பொதுச் சொத்து என்பதே தனிச் சொத்துடையோரின் நலன்களை பேணுவதற்காக இருப்பதுதான் என்கிறார் எங்கெல்ஸ்.

மார்க்சும் எங்கல்சும் மேஜை புரட்சியாளர்கள் அல்ல. 1848-49 ஆண்டுகளில் ஜெர்மனியில் நடந்த புரட்சியில் அவர்கள் இருவரும் நேரடியாக பங்கேற்றனர். 1849-ம் ஆண்டு ப்ரஷ்ய முடியாட்சிக்கு எதிரான ஆயுதம் தங்கிய புரட்சியில் எங்கெல்ஸ் பங்கேற்றார். அதோடு ப்ரசில்ஸ்-இல் கம்யூனிஸ்ட் இயக்க அமைப்பை உருவாக்குதல், ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் அமைப்பை கட்டுதல், ஜெர்மன் தொழிலாளர் அமைப்பு, கம்யூனிச புரட்சிக்கான சர்வதேச அமைப்பு, முதல் சர்வதேச அகிலம், இரண்டாம் சர்வதேச அகிலம் (எங்கல்ஸ்) உள்ளிட்டவைகளை கட்டியமைப்பதில் மார்க்சும் எங்கெல்சும் தீவிரமாக பங்கேற்றனர்.

கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்

எங்கல்ஸின் “கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்” என்ற நூல் 1880-ம் ஆண்டு வெளியானது. இதில் வர்க்கப் போராட்டத்தையும், இயக்கவியல் வரலாற்று பொருள்முதல் வாதத்தையும் தெளிவாக விளக்கி, சோஷலிசம் என்பது கற்பனையல்ல; அது வரலாற்று வளர்ச்சிப் போக்கில் தவிர்க்கமுடியாத கட்டம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைப்பார்.

“முதலாளித்துவ முறையிலான உற்பத்தியின் முதிர்ச்சியுறாத நிலைமைகளுக்கும் முதிர்ச்சியுறாத வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்திசைவான முதிர்ச்சியுறாத கொள்கைகளே முன்வைக்கப்பட்டன. சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை, வளர்ச்சியுறாத பொருளாதார நிலைமைகளில் இன்னமும் மறைந்து கிடந்த அந்தத் தீர்வினை கற்பனாவாதிகள் மனித மூளையிலிருந்து உருவாக்க முயன்றார்கள்”. (அதேபோல்)”அந்தக் காலகட்டத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறையும், அதோடுகூட, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையேயான பகைமையும் இன்னமும் அரைகுறை வளர்ச்சியையே கண்டிருந்தன. இங்கிலாந்தில் அப்போதுதான் தோன்றியிருந்த நவீனத் தொழில்துறை, ஃபிரான்சில் இன்னமும் அறியப்படாததாகவே இருந்தது. ஆனால், நவீன தொழில்துறை ஒருபுறம் மோதல்களை வளர்க்கிறது. உற்பத்தி முறையில் ஒரு புரட்சியையும், உற்பத்தி முறையின் முதலாளித்துவத் தன்மைக்கு முடிவு கட்டுதலையும் அவசியமாக்கும் மோதல்களை வளர்க்கிறது. தான் தோற்றுவித்த வர்க்கங்களுக்கு இடையேயான மோதல்களை மட்டுமின்றி, தான் உருவாக்கிய அதே உற்பத்தி சக்திகளுக்கும் பரிவர்த்தனை வடிவங்களுக்கும் இடையேயான மோதல் களையும் வளர்க்கிறது.” என்கிறார்.

முதலாளித்துவத்தின் ஆரம்பக்கட்டத்தில் “சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்குச் சற்றும் திறனற்றிருந்த அந்த தொழிலாளி வர்க்கம் ஒடுக்கப்பட்ட, துயருறும் பகுதியாகவே தோற்றமளித்தது. தனக்குத் தானே உதவிக் கொள்ளும் திறனற்றிருந்த அந்நிலையில், அதிகம் போனால் வெளியிலிருந்தோ அல்லது மேலிடத்திலிருந்தோதான் தனக்குத் தேவையான உதவியைப் பெற்றிட முடியும். இந்த வரலாற்றுச் சூழ்நிலை சோஷலிசத்தின் நிறுவனர்கள் மீதும் செல்வாக்குச் செலுத்தியது. முதலாளித்துவ முறையிலான உற்பத்தியின் முதிர்ச்சியுறாத நிலைமைகளுக்கும் முதிர்ச்சியுறாத வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்திசைவான முதிர்ச்சியுறாத கொள்கைகளே (கற்பனாவாத சோஷலி

ஸ்டுகளால்) முன்வைக்கப்பட்டன.”

வளர்ச்சியடையாத முதலாளித்துவ காலத்தில், முதிர்ச்சியடையாத பாட்டாளி வர்க்கத்தின் காலத்தில் கற்பனாவாத சோஷலிஸ்டுகள் மனித மூளையின் சிந்தனையின் மூலமே உருவாக்கிட முடியும் என்று முயன்றனர். உண்மையில் சமூக மாற்றத்திற்கான தத்துவத்தை ஒருவரின் அகவய புரிதலால் மட்டுமே உருவாக்கிட முடியாது. சமூக எதார்த்தமும், வரலாற்று ரீதியான வளர்ச்சிப்போக்கும் அதற்கு மிக மிக அவசியம். சமூகம் உடைமைகளை மொத்தமாக கொண்ட பெரு முதலாளிகளாகவும், உடைமையற்ற பாட்டாளிகளாகவும் பிளவுற்ற சூழலையும், பிரம்மாண்ட உற்பத்திச் சக்திகள் இதுநாள் வரை தனிநபர்களைச் செழிப்பாக்கவும், சாதாரண மக்களை அடிமையாக்கவுமே பயன்படுத்தி வந்தன என்ற சமூக எதார்த்தத்தை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்து மார்க்சும் எங்கல்சும் விஞ்ஞான சோஷலிசத்தை முன்வைத்தனர். அதுவரை யாரும் மேற்கொள்ளாத இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அதை வகுத்தளித்தனர்.

இனிமேலும் சோஷலிசம் என்பது ஏதோவொரு அறிவுசார்ந்த மூளையின் தற்செயலான கண்டுபிடிப்பில்லை. வரலாற்று ரீதியாக வளர்ச்சி பெற்ற இரு வர்க்கங்களான பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையே நிகழும் போராட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவு ஆகும். சாத்தியமான அளவுக்குக் குறைகளற்ற, முழுநிறைவான, ஒரு சமுதாய அமைப்பை உற்பத்தி செய்வது சோஷலிசத்தின் பணியாக இனியென்றும் இருக்கப் போவதில்லை; இந்த வர்க்கங்களும் அவற்றுக்கு இடையேயான பகைமையும் தவிர்க்க முடியாதவாறு உதித்தெழக் காரணமாக இருக்கும் நிகழ்வுகளின் வரலாற்று-பொருளாதாரத் தொடர்ச்சியை நுணுகி ஆய்வதும், இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட பொருளாதார நிலைமைகளில் இந்த மோதலுக்கு முடிவு கட்டுவதற்கான சாதனங்களைக் கண்டறிவதும்தான் சோஷலிசத்தின் பணியாகும்.

முந்தைய கால சோஷலிசம் நடப்பிலுள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையையும் அதன் பின்விளைவுகளையும் கண்டித்தது உண்மை தான். ஆனால், அவற்றை விளக்கிட, அதனால் முடியவில்லை. முதலாளித்துவத்தில் தவிர்க்க முடியாதபடி தொழிலாளி வர்க்கம் சுரண்டப்படுவதை, எந்த அளவுக்குக் கடுமையாக கண்டித்ததோ, அந்த அளவுக்குத் தெளிவாக, இச்சுரண்டல் எதில் அடங்கியிருந்தது, அது எவ்வாறு தோன்றியது என்பதை அதனால் எடுத்துக்காட்ட முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் முதலாளித்துவம் தவிர்க்க முடியாதது என்பதை போலவே, அதன் வீழ்ச்சியும் தவிர்க்க முடியாதது என்பதை சுட்டிக்காட்டியதோடு, உபரி மதிப்பு என்ற மார்க்சின் கண்டுபிடிப்பு மூலம் இதுநாள்வரை இரகசியமாக இருந்து வந்த, முதலாளித்துவத்தின் சாராம்சத் தன்மை தோலுரித்துக் காட்டப்பட்டது என்கிறார் எங்கெல்ஸ் .

கற்பனாவாத சோஷலிஸ்டுகள் முயன்றது போல் சோஷலிசம் என்பது அறிவுசார் சிந்தனையின் தற்செயல் கண்டுபிடிப்பு அல்ல. மாறாக அது சுரண்டப்படும் வர்க்கமான பாட்டாளி ( தொழிலாளி ) வர்க்கத்திற்கும், அவர்களை சுரண்டும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையே நிகழும் போராட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவாகவே சோஷலிசம் பிறக்கும் என்று மார்க்சும் எங்கல்சும் கூறினர்.

வேலைப் பிரிவினை

மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இடையே ஒரு வேலைப்பிரிவினை இருந்தது என்றும், மார்க்ஸ் முதலாளித்துவ பொருளாதாரத்தின் முழு வடிவத்தையும் அதன் சுரண்டலையும் பற்றி எழுத தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டார் என்றும், எங்கெல்ஸ் மார்க்சியத்தின் அடிப்படைகளான இயக்கவியல் குறித்தும், விஞ்ஞான சோஷலிசம் பற்றியும், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் குறித்தும் எழுதினார் என்று சிலர் கூறுகின்றனர். மார்க்ஸ் எது குறித்து எழுதுகிறார் என்று எங்கெல்சுக்கும், எங்கெல்ஸ் எதில் கவனம் செலுத்துகிறார் என்று மார்க்சுக்கும் நன்றாகவே தெரியும். இருவரும் இணைந்து எது பற்றி எழுதுவது என்றும் முடிவு செய்து எழுதியுள்ளனர். அவர்களின் எழுத்துக்களை பார்த்தால் இருவரும் தத்துவம், பொருளாதாரம், இயக்கவியல் என பல தளங்களில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் என்பது புரியும். மார்க்ஸ் தனது மூலதனம் நூலுக்கான வேலையை 1859-ல் வெளியான “அரசியல் பொருளாதாரம் குறித்த விமர்சனம்” எனும் நூலுக்கு முன்பிருந்தே துவங்கிவிட்டார். மூலதனம் நூலுக்கான வேலைக்கு மார்க்ஸ் கூடுதல் நேரம் ஒதுக்கினார் என்ற போதும், ஃபாயர்பாக் பற்றிய ஆய்வறிக்கை, தத்துவத்தின் வறுமை, பாரிசில் ஜூன் புரட்சி, பிரான்சில் வர்க்கப் போராட்டம், லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமெர் என வரலாற்று பொருள்முதல்வாதம் குறித்தும், தத்துவம் இயக்கவியல் பற்றியும் மார்க்ஸ் இக்காலத்தில் எழுதியுள்ளார். இங்கிலாந்தின் நிலைமை, இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை, கம்யூனிஸத்தின் கோட்பாடுகள், ஜெர்மனியில் விவசாயிகள் புரட்சி, ஜெர்மனியில் புரட்சியும் எதிர் புரட்சியும் ஆகிய நூல்களை எங்கெல்ஸ் இதே காலத்தில் எழுதியுள்ளார். இக்காலத்தில்தான் புனிதக் குடும்பம், ஜெர்மன் தத்துவம், கம்யூனிஸ்ட் அறிக்கை போன்றவற்றை மார்க்சும் எங்கெல்சும் இணைந்து எழுதியுள்ளனர். இவை தவிர பல்வேறு இதழ்களில் கட்டுரைகளும், மாநாட்டு அறிக்கைகளும் முன்மொழிவுகளும் என இன்னும் எத்தனையோ முக்கியமான அம்சங்களை மூலதனம் முதல் தொகுதி வெளிவருவதற்கு முன்பே எழுதியுள்ளனர்.

1883-ல் மார்க்ஸ் மறைந்த பிறகு மார்க்சின் கையெழுத்தை அறிந்தவரும், மார்க்சின் கருத்துக்களை மற்ற எவரைவிடவும் நன்கு அறிந்திருந்த ஒரே நபர் எங்கெல்ஸ்தான். எங்கெல்ஸிடம் தான் தனது அனைத்து குறிப்புக்களையும் ஒப்படைக்குமாறு மார்க்ஸ் தனது மகளிடம் கேட்டுக் கொண்டார். மூலதனம் நூலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தொகுதிகள் எங்கெல்ஸ் இல்லையெனில் வெளிவந்திருப்பதற்கான வாய்ப்பே இல்லை.

தனது உடல் நலம் பாதிக்கப்பட்ட போது கூட எங்கு மூலதனம் நூலின் பணிகளை முடிக்காமல் போய்விடுவோமோ என்றே எங்கெல்ஸ் கவலைப்பட்டுள்ளார். ஆனால் இதே கால கட்டத்தில்தான் எங்கல்சின் சிறந்த படைப்புகளான “குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” “ லுத்விக் ஃபாயர்பாக் மற்றும் மூலச் சிறப்புமிக்க ஜெர்மன் தத்துவத்தின் முடிவு” ஆகிய நூல்களை எழுதினார். தான் இறப் பதற்கு ஓராண்டுக்கு முன் மூலதனம் நூலின் இறுதி பகுதியான மூன்றாம் தொகுதியையும் வெளியிட்டு, தான் தீர்மானித்த பணியையும் சிறப்பாக செய்து முடித்தார் எங்கெல்ஸ்.

“மார்க்சும் அவர் குடும்பத்தினரும் கொடிய வறுமையில் சிக்கித் துன்பப்பட்டார்கள். எங்கெல்ஸ் மட்டும் தன்னல மறுப்புடன் எப்போதும் பண உதவி செய்து கொண்டே இருந்திராவிட்டால் மார்க்ஸ் மூலதனம் என்ற நூலை எழுதி முடித்திருக்க முடியாது என்பது மட்டுமல்ல; தவிர்க்க முடியாதபடி அவர் வறுமையால் மடிந்திருப்பார்” என்று லெனின் குறிப்பிடுகிறார்.

மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் அவர் வாழ்வதற்கும், காலத்தை வென்று மார்க்ஸ் என்றும் நிலைத்து நிற்பதற்கும், மார்க்சிய தத்துவம் வலுவான அடித்தளம் பெறுவதற்கும் எங்கெல்சின் அயராத பங்களிப்பே அனைத்திற்கும் அடிப்படையாக திகழ்ந்தது என்பதே உண்மை.