இந்திய விடுதலைப் போராட்டத்தின் வர்க்கத் தன்மை

குரல்: தேவிபிரியா

கி.தீபான்ஜன்

வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் (ஜே.என்.யூ)

பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கமும் அதற்கு எதிராக எழுந்த மிகப்பெரிய மக்கள் எழுச்சியான சுதந்திரப் போராட்டமும் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான காலமாகும். தற்கால இந்திய சமுதாயத்தில் நிலுவையிலுள்ள பல சிந்தனை ஓட்டங்கள் மேற்கண்ட காலத்தில் உருவானதுதான். இந்திய தேசிய போராட்டத்தின் துவக்கமும் 1885இல் அமைக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் உருவாக்கம் மற்றும் அதன் வளர்ச்சியோடு பொதுவாக இணைத்து பார்க்கப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தேசிய அளவிலான ஒரு இயக்கம் உருவானதற்கு பல அரசியல் சமுதாய கலாச்சார மற்றும் பொருளாதார காரணங்கள் உள்ளன. பற்பல காரணங்கள் இருப்பினும் இந்த கட்டுரையின் நோக்கம் இந்திய சுதந்திர போராட்டத்தின் வர்க்கத் தன்மையை ஆராய்வதாகும்.

சுதேசி முழக்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பொதுக்கல்வி முறை துவங்கப்பட்டது. இதனால் ஆங்கிலக் கல்வி பெற்ற உயரடுக்கு இந்தியர்கள் உருவானார்கள். இவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தை சார்ந்தவர்களாகவும், உயர் சாதியை சார்ந்தவர்களாகவும் இருந்தனர். இவர்கள் ஆங்கில கல்வி அறிவை பெற்று இருந்தாலும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. பெரும்பாலான அரசாங்க வேலைகள் முதல் பெருவியாபாரம் வரை ஆங்கிலேயர்களின் ஆதிக்கம்தான் நீடித்தது. இந்த நடுத்தர வர்க்க நுண்ணறிவு உள்ளவர்களின் எண்ணிக்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல மடங்காக உயர்ந்தது. அவர்கள் பெரும்பாலும் இந்தியா முழுவதிலும் இருந்த ராஜதானி தலைநகரங்களில் காணப்பட்டனர். இந்த நடுத்தர வர்க்க நுண்ணறிவு உள்ளவர்களின் அபிலாசைகள்தான் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானதற்கான பிரதான காரணம்.

அக்காலம் இந்திய முதலாளித்துவம் வலுபெறாத காலம். இந்திய முதலாளிகள் தன்னைத்தானே ஒரு வர்க்கமாக திரள வேண்டும் என்ற ஒரு யோசனை உருவான காலம். வரலாற்று அறிஞர் சுமித் சர்க்கார் கூறுகையில் ”1860களில் பிரிட்டிஷ் ஆட்சி நிறுவப்பட்ட பிறகு ஆங்கிலேய முதலாளிகளுக்கு தங்கள் வியாபாரத்தை நிறுவுவதற்கும் செயல்படுத்துவதற்கும் பணியாளர்கள் தேவைப்பட்டனர். இந்தத் தேவையை பூர்த்தி செய்தவர்கள்தான் அப்போது இருந்த இந்திய முதலாளிகள். 1920கள் வரை இந்திய முதலாளி வர்க்கம் பெரும்பாலும் தரகு முதலாளிகளாகதான் இருந்தார்கள். 1905ல்தான் முதன்முதலாக சுதேசி இயக்கம் வங்காளத்தில் நடைபெற்றபோது வெள்ளையர் பொருட்கள் புறக்கணிப்பு, இந்தியப் பொருட்கள், இந்திய கல்வி, இந்திய வியாபாரம் போன்ற முழக்கங்கள் ஒலித்தன. அப்போதுதான் இந்திய முதலாளிகள் முதல்முறையாக சுய உற்பத்தியினால் லாபம் கண்டனர்” என்கிறார்.

போராட்டமும் சமரசமும்

”1914-1947 வரையிலான காலகட்டத்தில் இந்திய முதலாளித்துவம் ஆங்கிலேய வியாபாரத்தோடு போட்டி போட்டு வளர்ந்த காலம்” என்கிறார் பிபின்சந்திரா. “இந்தியா சுதந்திரம் அடையும் தருணத்தில் இந்திய நிறுவனங்கள் 72-73% உள்நாட்டு சந்தையை பிடித்ததாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட வங்கித்துறையில் 80% மேலான வைப்பு வைத்திருந்தார்கள்” என்றும் அவர் கூறுகிறார். “1920களின் நடுப்பகுதியில் முதலாளிகள் தங்களுடைய நீண்டகால வர்க்க நலனை சரியாக யூகித்து, தைரியமாகவும் வெளிப்படையாகவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தார்கள்” என்றும் கூறுகிறார்.

இப்படியொரு நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும், எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும், தங்களின் வர்க்க நலனை பாதிக்காத அளவில் இருக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருந்தார்கள். அவர்கள் முடிந்த அளவிற்கு அரசியலமைப்புக்கு உட்பட்ட முறையில்தான் போராட்டம் நடத்த விரும்பினார்கள். சட்ட ஒத்துழையாமை இயக்கம் வெகுநாட்களுக்கு மேல் நீடித்தால், புரட்சிகர சக்திகள் இயக்கத்தை திசை திருப்பி விடுவார்கள் என்ற அச்சமும், நீண்டநாள் இயக்கம் தொடர்ந்தால் அவர்களுடைய தினசரி வியாபாரம் பாதிக்கப்படும் என்பதும் அதற்கான காரணமாகும். இவை அவர்களின் வர்க்க நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எண்ணினர். ஒரு பக்கம் இத்தகைய தயக்கங்கள் இருந்தாலும், பெருந்திரள் சட்ட ஒத்துழையாமை இயக்கம் நடக்கும் பொழுது அவர்கள் தங்களுடைய வர்க்க பலன்களை அடைவதில் குறியாக இருந்தார்கள். சட்ட ஒத்துழையாமை இயக்கம் வெகுநாட்கள் நீடிக்கும் சூழல் வரும்போதெல்லாம் பெரும்பாலான நேரங்களில் அரசாங்கத்திற்கும் காங்கிரசுக்கும் இடையிலான மத்தியஸ்தர்களாக செயல்பட்டனர். அவர்கள் வர்க்கம் சார்ந்த ஸ்தூலமான சலுகைகளை பேச்சுவார்த்தையின்போது பெற முயன்றனர். அவர்களின் கோரிக்கை நிறைவேறினால் போராட்டத்தில் சமரசம் ஏற்படும். கோரிக்கை நிறைவேறாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று மிரட்டலும் விடுத்தனர். இத்தகைய நிலையில் இவர்களுக்கு பக்கபலமாக நின்றது காங்கிரசும் காந்தியும்தான்.

1931இல் சட்ட ஒத்துழையாமை இயக்கம் நாடெங்கும் பரவி போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, இந்திய முதலாளிகளின் பிரதிநிதியான ஜி.டி. பிர்லா, இன்னொரு முதலாளிகளின் பிரதிநிதியான புருஷோத்தம் தாஸ்க்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் “எள்ளளவும் சந்தேகமில்லை நமக்கு இப்பொழுது தரப்படும் சலுகைகள் அனைத்தும் முழுக்க முழுக்க காந்திஜியால்தான்…. நாம் விரும்புவதை அடைய வேண்டுமென்றால், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இயக்கம் சோர்வடைய விடக்கூடாது”. என்று குறிப்பிட்டுள்ளார்.

கம்யூனிஸ்டுகளின் போராட்ட யுக்தி

உலகமெங்கும் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த நாடுகளிலெல்லாம், 1917இல் தோழர் லெனின் தலைமையில் நடந்த ரஷ்ய புரட்சி உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. இந்தியாவிலும் ரஷ்ய புரட்சியின் கருத்தோட்டங்களின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தது. இந்தியாவில் பெரும்பான்மையாக இருந்த விவசாயத் தொழிலாளர்களுக்கும் நகர்ப்புற தொழிலாளர்களுக்கும், தங்களின் கோரிக்கைகளுக்காக போராடுவதற்கு ரஷ்யப் புரட்சி உத்வேகம் அளித்தது. தொழிற்சங்கங்கள் பிறந்தன. தொழிலாளர்களின் போராட்டங்கள் வளர்ந்தன. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவாயிற்று. நாடெங்கும் கட்சி கிளைகள் உருவாயின. கம்யூனிஸ்ட் தோழர்களின் செயல்பாடு வெகுஜனங்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு கண்டது. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைந்து செயல்பட்டனர். கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் தாக்கம் பொதுவெளியில் மட்டும் அல்லாமல், காங்கிரஸ் இயக்கத்திற்குள்ளேயும் வலுவடைந்தது. இளம் காங்கிரஸ்காரர்கள் மார்க்சிய சித்தாந்தத்தினால் ஈர்க்கப்பட்டனர். முதல்முறையாக அகில இந்திய அளவில் மாணவர் அமைப்பும், தொழிற்சங்கங்களும் உருவாகின. கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டுதல்படி, கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் இயக்கத்திற்கு உள்ளேயே இருந்து செயல்பட்டனர். இப்படியான ஒரு அரசியல் சூழல் குறித்து இந்திய முதலாளி வர்க்கம் அச்சம் கொண்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில், காலனிய நாடுகள் குறித்த ஆரம்ப ஆய்வு அறிக்கையில் (Preliminary theses on the national colonial question) கீழ்காணும் அம்சங்களை தோழர் லெனின் சுட்டிக்காட்டினார். 

காலனிய நாடுகளில் நடைபெறும் தேசிய போராட்டம் ஒரு முதலாளித்துவ ஜனநாயக இயக்கமாக மட்டும்தான் இருக்க முடியும்.  ஏனெனில், பின்தங்கிய நாடுகளில் பெரும்பகுதி மக்கள் பூர்ஷ்வா முதலாளித்துவ உறவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகளே. மேலும்,  பெரும்பாலான நேரங்களில் ஒடுக்கப்பட்ட நாடுகளின் முதலாளி வர்க்கம், தேசியப் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள். அதேசமயம், அந்த வர்க்கம் அந்நிய முதலாளிகளுடனும் நல்லிணக்கத்தோடு செயல்படுகின்றன. அதாவது புரட்சிகர இயக்கங்களும், புரட்சிகர வர்க்கங்களும் வலுவடையும்போது  உள்நாட்டு முதலாளிகளும் ஏகாதிபத்தியமும் ஒன்றிணைந்து எதிர்க்கும் என்றும் லெனின் எச்சரித்தார்.

ஆகவே, முதலாளித்துவ ஜனநாயக இயக்கத்திற்கு உள்ளே புரட்சிகர சக்திகளையும் சீர்திருத்தவாதிகளையும் வேறுபடுத்தி காட்ட வேண்டிய அவசியம் உள்ளது. தேசிய முதலாளிகளுக்கு அவர்களின் நாட்டு விடுதலைக்கான போராட்டத்தில் ஒரு முக்கிய பங்கு உள்ளது என்கிற வகையில், காலனிய நாடுகளின் முதலாளித்துவ விடுதலைப் போராட்டங்களை புரட்சிகரமானதாக உள்ளவரை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க வேண்டும் என்றார் லெனின். விவசாயிகளையும் பெரும்பாலான உழைப்பாளி மக்களையும் முதலாளிகள் தலைமையிலான விடுதலை போராட்டங்களில் திரட்டும்போது  முட்டுக்கட்டைகள் உருவாக்கக்கூடாது. கம்யூனிஸ்டுகள் இந்த முதலாளித்துவ ஜனநாயக இயக்கத்திற்கு உள்ளேயிருந்து கட்சி ஸ்தாபனங்களை உருவாக்க வேண்டும், கட்சி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், தொழிலாளர்கள் விவசாயிகளை திரட்டி போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் இரண்டாவது அகிலம் வழிகாட்டியது. இதனடிப்படையில்தான் இந்தியாவிலும் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் இயக்கத்துக்குள்ளே இருந்து செயல்பட்டனர். 

முதலாளிகளுக்கு சாதகமான செயல்திட்டம்

”1920களின் கடைசியில் காங்கிரஸ் கட்சிக்குள் கம்யூனிஸ்ட்களின் செயல்பாடு, கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் ஈர்க்கப்படும் காங்கிரசின் இளம் ஊழியர்கள், இவைகளை கண்டு முதலாளிகள் கவலை அடைந்தனர். எனவே, காங்கிரஸ் இயக்கத்திற்குள் தங்களையும் பெருமளவில் உறுப்பினர்களாக இணைக்துக் கொள்வதென அவர்கள் முடிவு செய்தனர். அதனடிப்படையில் பல முதலாளிகள் காங்கிரசில் தங்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்” என்கிறார் பிபன் சந்திரா.

”காந்தி எந்த ஒரு போராட்டம் அறிவித்தாலும், இயக்கத்தின் தலைமை மற்றும் போக்கு குறித்து மிக கவனமாக இருப்பார். 1920இல் ஒத்துழையாமை இயக்கம் அறிவித்தார். தொழிலாளர்களும் பெருமளவில் பங்கெடுத்தார்கள். தொழிலாளர்களின் போராட்டம் ஆங்கிலேய தொழிற்சாலைகளுக்கும் முதலாளிகளுக்கும் எதிராக இருக்கும் வரை கவலை கொள்ளமாட்டார். ஆனால் தொழிலாளர்களின் போராட்டம் இந்திய முதலாளிகளுக்கு எதிராக நடக்கும்போது, உடனடியாக ஏதாவது காரணத்தை காட்டி போராட்டத்தை வாபஸ் பெற்று விடுவார். இதுதான் 1921இல் பம்பாய் நகரில் நடைபெற்ற தொழிலாளர்கள் போராட்டத்தின்போதும் நடந்தது. எனவே, காந்தியினுடைய போராட்ட வடிவமும், நிலைபாடும் இந்திய முதலாளிகளுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக இருந்தது. அதனால்தான் தேசிய நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் காங்கிரஸ் இயக்கத்தோடு காந்தியோடு எந்தவிதமான தத்துவார்த்த ரீதியான, செயல்பாட்டு ரீதியான பிரச்சினையையும் இருந்ததில்லை. அப்படியே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் காங்கிரஸ் கமிட்டிக்கு உள்ளேயே விவாதித்து தனக்கு சாதகமான முடிவை எடுக்கும் அளவிற்கு முதலாளிகள் வலுவாக இருந்தனர். காந்தியின் வருகைக்குப் பிறகு தேசியப் போராட்டம் வெகுஜனப் போராட்டமாக உருவானது. ஆனால், அந்தப் போராட்டத்தின் உள்ளடக்கம், அதை வழிநடத்திய நுண்ணறிவு உள்ளவர்களின் சிந்தனையோட்டமும் குணாம்சமும் முதலாளித்துவத்திற்கு சாதகமாகவே இருந்தது” என்கிறார் பேராசிரியர் இர்பான் அபிப்.

முற்போக்கு பாதையை தடுத்த சமரசம்

தோழர் இ.எம்.எஸ். குறிப்பிடுவதுபோல, இந்திய விடுதலை என்பது ஆங்கில ஏகபோக முதலாளித்து வர்க்கத்திற்கும், இந்திய நிலப் பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே நடந்த ஒரு சமரசம் ஆகும். இந்திய முதலாளிகள் சுதந்திரத்திற்குப் பிறகும் நாட்டின் பொருளாதார, அரசியல், சமுதாய, கலாச்சார வளர்ச்சியை முதலாளித்துவப் பாதையிலேயே உருவாக்க விரும்பினர். அதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பாதையிலேயே நிலப்பிரபுத்துவத்தையும் முதலாளித்துவத்திற்கு முந்தைய நிறுவனங்களையும் அடிப்படையாகக் கொண்டு, அப்பொழுது மேலோங்கியிருந்த பிற்போக்கான ஆதிக்க வர்க்கங்களின் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்த நிலைமை உருவானதற்கான காரணத்தை அறிய சுதந்திர போராட்டத்தின் துவக்க காலங்களுக்கு செல்ல வேண்டும். இ.எம்.எஸ். கூறுகிறார், “இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைமை பூர்சுவா தேசியவாதிகளாக இருந்தமையால் அவர்களால் அவர்களின் வர்க்க நலனை மீறி பார்க்க இயலவில்லை. இத்தகைய நிலைப்பாடு அவர்களின் சமுதாய பொருளாதார தத்துவங்களை வழி நடத்தியது. சமுதாயத்தில் நிலவிய பல்வேறு பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு காணுவதில் திறன் அற்றவர்களாக இருந்ததுதான் இந்தியாவின் தேசிய பிரச்சினைகளுக்கு காரணம்.” 

இ.எம்.எஸ். சுதந்திரப் போராட்டத்தின் தலைவர்களின் சமுதாய சிந்தனையை மேலும் விளக்குகிறார். “சுதந்திர போராட்டத்தின் ஆரம்பகட்டத்தில் (துவக்ககால மதப்பழமைவாத) தீவிரவாத தேசியவாதம் என்பது, உண்மையில் ஒரு பழமைவாத சக்தி. அவர்கள் நாட்டினுடைய காலாவதியான அனைத்து சமுதாய கலாச்சார விஷயங்களையும் பாதுகாக்க முற்பட்டனர். நவீனத்துவத்தின் உந்து சக்தியாக இருக்க வேண்டியே முதலாளித்துவ வளர்ச்சி அன்றைய ஆட்சியாளர்களுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டது” என்கிறார் இ.எம்.எஸ்.

மேலும்  மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிரவாத தேசியவாதிகளுக்குமான வேறுபாட்டையும் சமூக கலாச்சார சிந்தனைப் போக்கையும் அவர் விளக்குகிறார். மிதவாதிகளை நவீனத்துவவாதிகள் என்றும், அவர்கள் இந்தியாவையும் பிரிட்டன் நாட்டைப்போல ஒரு முதலாளித்துவ நவீனத்துவப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணினர். ஆங்கிலேயர்கள் அதை செய்ய தவறுவதன் மீதே  அவர்களது கோபமிருந்தது. தீவிரவாத தேசியவாதிகளுடன் ஒப்பிடுகையில் மிதவாதிகள் சமுதாய கலாச்சார அம்சத்தில் முற்போக்கானவர்களே. தீவிரவாத தேசியவாதிகள் நாட்டில் காலாவதியான அரசியல் மற்றும் சமூக கலாச்சார நிறுவனங்களை அன்னிய முதலாளித்துவத்திற்கு எதிராக பாதுகாத்தனர். தேசியப் போராட்டம் இந்த தீவிரவாத தேசியவாதிகளால் தலைமை தாங்கப்பட்டதால், பிற்போக்கான சமூக அம்சங்கள் மறையாமல் பாதுகாக்கப்பட்டன. இதுவே ஆங்கிலேயே ஏகபோக முதலாளித்துவத்திற்கு, இந்திய நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே சுதந்திர இந்தியாவில் உருவான சமரசத்திற்கான அடிப்படை என்கிறார் இ.எம்.எஸ். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது திட்டத்தில் “தங்களது காலனி ஆட்சியின் போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோ அல்லது சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இந்திய முதலாளிகளோ முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தை உடைத்தெறிய முன்வரவில்லை. முதலாளித்துவம் வளர்ச்சி அடைய அதற்கு முந்தைய சமூகம் நொறுக்கப்பட வேண்டுமென்பது மிக முக்கிய முன் நிபந்தனையாகும். இன்றைய இந்திய சமூகமானது, ஏகபோக முதலாளிகளால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதிய, மத மற்றும் ஆதிவாசி அமைப்புகளைக் கொண்ட ஒரு வினோதமான கலவையாக உள்ளது. முதலாளித்துவதிற்கு முந்தைய சமூக அமைப்பை அழிப்பதில் விருப்பு கொண்ட அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றுபடுத்தி, அந்த சமூக அமைப்பிற்குள் இருக்கக் கூடிய அனைத்து புரட்சிகர சக்திகளையும் ஒன்றிணைத்து மக்கள் ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவதன் மூலம் சோசலிசத்தை நோக்கிய மாற்றத்திற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள வேண்டிய கடமை உழைப்பாளி வர்க்கத்திற்கும் அதன் கட்சிக்கும் இருக்கிறது.” என்கிறது.

விடுதலைப் போரில் காங்கிரஸின் வர்க்க அணுகுமுறை

இரா. வேல்முருகன்

1947ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதியன்று டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டிருந்த யூனியன் ஜாக் கொடி அகற்றப்பட்டு, அந்த இடத்தில் மூவர்ணக் கொடி  ஏற்றப்பட்டது. தங்களின் நீண்டகால சுதந்திர கனவு ஈடேறிவிட்டதாக இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் குதூகலித்து கொண்டாடினார்கள்.

ஆனால் இந்த விடுதலை நாள் கொண்டாட்டத்தில் காந்தி பங்கேற்கவில்லை. மாறாக அப்போது நடைபெற்ற வகுப்பு கலவரங்களில் இருந்து நவகாளியிலும், பீகாரிலும் அமைதியை நிலைநாட்ட அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அதே நாளில் ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் சிறைச்சாலையில் விடுதலை போராட்ட கைதிகளாக அடைபட்டிருந்தனர். இந்திய மக்களுக்கு விடுதலை நாள் செய்தியை கேட்டு ஒரு பத்திரிக்கையாளர் காந்தியை அணுகிய போது ” என் இதயம் வறண்டு போய்விட்டது” என அவர் மிகுந்தவேதனையுடன் பதிலளித்தார்.

காங்கிரஸ் கட்சி 

காங்கிரஸ் கட்சி 1885 இல் துவங்கப்பட்டபின் முதல்20 ஆண்டுகள்  வரை பிரிட்டிஷ் காலனி அரசிடம் மனு கொடுக்கும் பணியை மட்டுமே செய்து வந்தது  என்றால் மிகையாகாது. 1896-97  ஓர் ஆண்டில் மட்டும்  சுமார் 45 லட்சம் மக்கள் பஞ்சத்தில் மடிந்துபோனார்கள். 1899 – 1900 வரை 12.50 லட்சம் மக்கள் மாண்டுபோனார்கள். 1860 முதல் 1908 வரை 48 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் இத்தகைய பெரும் பஞ்சம் நீடித்து, ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் செத்து மடிந்தனர். இதற்கு எதிராக பெரும் போராட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்தவில்லை.

ஆனால் இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக இந்திய நாட்டின் இளைஞர்கள் அதிதீவிர குழுக்களாக உருவாகிவந்தனர். மகாராஷ்ட்ராவில் சாபேகர் சகோதரர்கள் போன்ற இளைஞர்கள் மித்ரமேலா, அபிநவ் பாரத் போன்ற அமைப்புகளை உருவாக்கி போராடினார்கள். வங்கத்தில் அனுசீலன் சமிதி, யுகாந்தர் குழு போன்ற அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் வங்கப் பிரிவினையை பிரிட்டிஷ் அரசு திரும்பப் பெறச் செய்ததில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தன. இதே கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தீவிரமாக செயல்படவேண்டும் என லாலா லஜபதி ராய் , பாலகங்காதர திலகர், விபின் சந்திர பால் போன்றோரும், பிரிட்டிஷ் அரசின் கோபத்திற்கு ஆளாகாமால் மிதமாக செயல்பட வேண்டும் என கோபாலகிருஷ்ண கோகலே, அன்னிபெசன்ட் அம்மையார் போன்றோரும் இரண்டு குழுக்களாக செயல்பட்டனர்.

ஜாம்ஷெட்பூரில்  டாட்டா – புதிய ஜவுளி ஆலையை  (சுதேசி ஆலை) துவக்கினார் அப்போது இந்திய தேசிய முதலாளிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி தீவிரவாத தலைவர்கள் லால்-பால்-பால் அந்நிய பொருட்கள் புறக்கணிப்பு, தேசிய கல்வி கொள்கை, சுதேசி போராட்டம், சுயராஜ்யம் (தன்னாட்சி) போன்ற சீர்திருத்த கொள்கைகளை முன்வைத்தார்களே ஒழிய இந்திய மக்களுக்கான முழு சுதந்திரம் என்ற கோரிக்கை அவர்களிடத்தில் எழவில்லை. 1905ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கோபாலகிருஷ்ண கோகலே தலைமை உரையாற்றிய போது இந்திய நாடாளுமன்றத்தில் இந்தியாவின் ஆட்சி நடைபெறவேண்டும் என்பதுதான் காங்கிரஸ் குறிக்கோள். காலப்போக்கில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு உட்பட்டு காலனி நாடுகள் சுயமாக ஆட்சியை எப்படி நடத்துகிறார்களோ, அதேபோன்று இந்தியர்களும் அரசாட்சி நடத்துவோம் என்றார். இருபதாம் நூற்றாண்டின்  துவக்கத்தில் பிரிட்டிஷ் ஆட்சி கொள்கையை மென்மையாக விமர்சிப்பது,அரசியல் சீர்திருத்தங்கள் உருவாக்குவது இதன் மூலம் சில சலுகைகளை பெறுவதுதான் காங்கிரசின் நோக்கமாக இருந்தது.

காந்தியின் தலைமை 

“ஊழியர்களும் மக்களுமே இந்த உலகின் ஆகப் பெரிய செல்வம், மிக உயர்ந்த தீர்மானகரமான சக்தி, மிக உயர்ந்த மூலதனம், அவர்கள் இல்லாமல் உலகில் எந்த புரட்சியும் சாத்தியமில்லை” என்பதை உணர்ந்த மகாத்மா காந்தி இதனை சரியாக பயன்படுத்தினார்”. காந்தியின் தலைமையின் கீழ் இந்திய முதலாளி வர்க்கம் வெகுமக்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கியது. “மகாத்மா காந்தியின் தலைமையில் செயல்பட்ட முதலாளித்துவ வர்க்க தலைமையானது பிரிட்டிஷாரை பேச்சுவார்த்தை மேடைக்கு அழைத்து கொண்டு வருவதற்காகவே வெகு மக்கள் பங்கேற்கும் போராட்டத்தை நடத்துவது என்ற வியூகத்தையும் அதற்கேற்ப உத்திகளையும் மிகவும் விரிவான முறையில் திட்டமிட்டு நடத்தியது.” அதனால்தான் காந்தி நடத்திய ஒத்துழையாமை போராட்டமாக இருந்தாலும் சரி, சட்டமறுப்பு இயக்கமாக இருந்தாலும் சரி, வெகுமக்கள் எழுச்சியை உருவாக்கி இந்திய தேசிய முதலாளிகளின் நலனுக்கு ஏற்ப சில உடன்பாடுகளோடு போராட்டத்தை திரும்ப பெற்றார்  .

பீஹாரில் சம்பரான் மாவட்டம்  விவசாயிகள் போராட்டத்தில் மகாத்மா காந்தி பங்கெடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் அழைத்தனர். விவசாயிகளின் அழைப்பின் பேரில் காந்தி அங்கே சென்றதோடு அல்லாமல் அகிம்சா போராட்டத்தை அங்கு நடத்தி வெற்றியும் பெற்றார். இதேபோல் குஜராத் மாநிலத்திலுள்ள கெட்டா விவசாயிகளின் கோரிக்கைக்கான சத்தியாகிரக போராட்டத்திற்கு வழிகாட்டியது மட்டும் இல்லாமல், சத்தியாகிரக போராட்டத்தை நடத்தி வெற்றியும்  கண்டார். இதன் காரணமாக காந்தியின் புகழ் இந்தியா முழுவதும் பரவியது.

வெள்ளை ஏகாதிபத்தியத்தின் ரௌலட் சட்டத்தை எதிர்த்து அகிம்சை வழியில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்தது. மகாத்மா காந்தி எவ்வித நிபந்தனையும் இன்றி ஒத்துழையாமை இயக்கம் என அறிவித்து திலகர் போன்ற தீவிர தேசிய தலைவர்களை எல்லாம் ஓரங்கட்டியது என்றாலும், ஒத்துழையாமை இயக்கத்தையும், கிலாபத் இயக்கத்தையும் இணைத்து மாபெரும் மக்கள் எழுச்சியை உருவாக்க முடிந்தது.

ஒத்துழையாமை இயக்கம் அறிவித்ததுடன் காந்தி மகாராஷ்டிராவில் இருந்து ரயிலில் புறப்படும்போது கைது செய்யப்பட்டார், பம்பாய், டில்லி போன்ற இடங்களில் நடந்த வன்முறை. இந்த வன்முறைக்கு எதிராக மக்கள் போராடியபோது டாக்டர் சத்பாலும், டாக்டர் சைபுத்தீன் கிச்சிலுவும் நாடு கடத்தப்பட்டனர். இதற்கு எதிராக நடந்த எழுச்சியின் துவக்கம்தான் ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர், மைக்கேல் டயர், லார்டு ஷெட்லாந்து நடத்திய மிருகத்தனமான மனிதத்தன்மையற்ற துப்பாக்கிச்சூடு. இதில் ஏராளமான மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர், பல நூற்றுக்கணக்கான மக்கள் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த படுகொலை நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் மக்களை கிளர்ந்தெழ செய்தது. இந்த போராட்டத்தின் உச்சமாக உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டம் அருகில் உள்ள ஒரு சிறிய நகரமான சௌரி சவ்ரா காவல் நிலையத்தை கிராம மக்களே ஒருங்கிணைந்து முற்றுகை இட முயற்சி செய்தனர். அப்போது காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 3 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.இதை தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட மக்கள் காவல் நிலையத்தை சூறையாடினார்கள். இதில் 22 காவலர்கள் மாண்டனர். இதில் 228 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 172 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. காந்தி இந்த தண்டனையை வரவேற்றார்.  ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர் நரேன் பட்டாச்சார்யா நாடுமுழுவதும் பெரும் போராட்டங்களை நடத்தினார்.பின்னர் இதன் விளைவாக 110 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகவும்,19 பேருக்கு தூக்குதண்டனையாகவும் மாறியது.

இப்போராட்டத்திற்கு பிறகு ஏதோ மக்கள் பெரும் தவறை செய்ததை போல் மக்களை நொந்துக் கொண்டு காந்தி ஒத்துழையாமை போராட்டத்தை திரும்ப பெற்றார்.

பூரண சுயராஜ்யமும் கம்யூனிஸ்டுகளும்

1920 ஆம்ஆண்டு தாஷ்கண்டில் அமைக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளைதான் இந்தக் கோரிக்கையை முதலில் முன்வைத்தது. 1921ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும், 1922கயா காங்கிரஸ் மாநாட்டிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த அபானி முகர்ஜியும், எம்.என்.ராயும் தயாரித்த பூரண சுயராஜ்யம் என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் இந்த தீர்மானம் பெரும் கருத்து மோதலை உருவாக்கியது. இதன் விளைவாக மௌலானா ஹஷ்ரத் மொஹானி முழு விடுதலை தீர்மானத்தை மாநாட்டில் முன்மொழிந்தார். ஆனால் காந்தி இந்த தீர்மானத்தை தோற்கடித்ததோடு நில்லாமல் எம்.என்.ராயின் இந்த முயற்சி அரைவேக்காட்டுத்தனம் என்றும் சாடினார்.

தேசிய முதலாளிகளும், காங்கிரஸ் கட்சியும் பூரண சுயராஜ்யம் என்ற இந்த நிலைபாட்டிற்கு வருவதற்கு சுமார் பத்தாண்டுகள் தேவைப்பட்டது . 1929ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில்தான் பூர்ண சுயராஜ்யம் கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

1928ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாய தொழிலாளர்களின் போராட்டத்திலும்,பம்பாய், குஜராத், உத்திரபிரதேசம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற வேலை நிறுத்தம் மற்றும்  குஜராத் விவசாயிகளின் வரிகொடா இயக்கம் ஆகியவற்றில் சுமார் 1.50 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். அதேபோன்று தென்னிந்திய இரயில்வே வேலைநிறுத்தம், தொழிற்தகராறு மசோதா  போராட்டத்தில் சுமார்  5 லட்சம் மக்கள்  பங்கேற்றனர்.  இந்த சூழலில்தான் வேறு வழியின்றி காந்தியால் பூரண சுயராஜ்யம் என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டு மாநாடும்  ஏகமனதாக அங்கீகரித்தது.

காந்தி இர்வின் உடன்படிக்கை

1930 ஏப்ரல் 6ஆம் தேதி ‘உப்பு சத்தியா கிரகம்’ காந்தி தலைமையில் துவங்கப்பட்டது. இப்போராட்டம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை காந்தி விதித்திருந்தார். நாடு முழுவதும் சத்தியகிரகிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் மே 5ஆம் தேதி வரை காந்தி சுதந்திரமாக விடப்பட்டிருந்தார். காந்தியை தவிர, நேரு, வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். இப்போராட்டம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

நான் கைது செய்யப்பட்டால் எனது தோழர்களோ , பொதுமக்களோ பதட்டம் அடைய தேவையில்லை. நமக்கு வழிகாட்டுவது கடவுள்தான் நானில்லை. ஒவ்வொரு கிராமமும் உப்பு உற்பத்தி செய்யட்டும். உத்தரவை மீறி உப்பு கொண்டு வரட்டும். மதுபானக்கடைகள், கஞ்சா மையங்கள், அந்நிய துணிக்கடைகள் முன்னால் பெண்கள் மறியல் நடக்கட்டும். ஒவ்வொரு குடும்பத்தின் இளைஞர்களும் பெரியவர்களும் நூல் நூற்கட்டும்.அந்நிய துணிகள் எரிக்கப்படட்டும். இந்து, இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் அனைவரின் இதயமும் ஒன்றிணையட்டும். பள்ளி கல்லூரிகளை விட்டு மாணவர்கள் வெளியேறட்டும். அரசு ஊழியர்கள் பணியில் இருந்து விலகட்டும். மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திகொள்ளட்டும். அப்போது முழு சுயராஜ்யம் வந்து நமது கதவுகளைத் தட்டும் என்றார் காந்தி.

அனைத்து  மக்களையும் தனது அகிம்சா போராட்டத்தில் கொண்டுவருவதற்கு காந்தி முயன்றார். அவர் தொடங்கிய உப்பு சத்தியாகிரக போராட்டம் மக்கள் போராட்டமாக உருமாறி மாபெரும் எழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கியது. இதுவரை வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்த பெண்கள், குழந்தைகள் என அனைத்து பகுதி மக்களும் இப்போராட்டத்தில் இணைந்தனர். ஆனால் இப்போராட்டம் வெளிப்படையாகவே இந்திய ஜவுளி ஆலை முதலாளிகள் நலன்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே அமைந்தது. அந்நிய துணி பகிஷ்கரிப்பும், சுதேசிய ஆதரவு பிரச்சாரமும் இந்திய ஆலை முதலாளிகளின் நலன்களையும் பாதுகாக்க பயன்பட்டதே ஒழிய சுயராஜ்யம் என்பது பின்னுக்குப் போனது.

1931ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் நாள் காந்தி – இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் ஏற்கனவே 1929 ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற மாநாட்டில் கொண்டு வந்த பூரண சுயராஜ்யம் என்ற இலக்கை நீர்த்துப் போக செய்து சில நிபந்தனைகளுடன் காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது. “சில நிபந்தனைகளுடன் உப்பு தயாரிக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டது, அத்துடன் அந்நிய துணிக்கடைகள் மற்றும் மதுபானக்கடைகள் முன் மறியல் செய்வதற்கான உரிமை,காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக செயல்பட அனுமதி, இவற்றிற்கெல்லாம் மேலாக அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட சத்தியாகிரகிகளை விடுதலை செய்வது போன்ற பிரிவுகள் அதில் அடங்கியிருந்தன. ஆனால் காந்தியின் முதலாளி வர்க்க நலனுக்கு சிறிது கூட பங்கம் வந்துவிடக்கூடாது என்ற சிந்தனையில் சுயராஜ்யம் என்ற நிலைபாட்டிலிருந்த கீழிறங்கி வந்தது மட்டும் அல்ல; விடுதலை போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்த பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் உள்ளிட்ட அதிதீவிர இயக்கத் தோழர்களின் தூக்குத்தண்டனை குறித்தோ, தீவிர போராட்ட வீர்ர்கள் குறித்தோ மவுனம் சாதித்ததோடு அவர்களின் தண்டனையும் நியாயமே என்பதுதான் காந்தியின் நிலைபாடாக இருந்தது.

இந்த உடன்படிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடத்திலும் மக்கள் மத்தியிலும் இரண்டு விதமான உணர்வு உருவாகியது. அதே நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஒரு உண்மை புரிய வைக்கப்பட்டிருந்தது. தாங்கள் கடைப்பிடிக்கும் இந்த மோசமான அடக்குமுறைகளால் மக்களின் எழுச்சியை தடுத்து நிறுத்தமுடியாது என்பதையும் பிரிட்டிஷார் புரிந்துகொண்டனர். 

காங்கிரசின் நெருக்கடியும் மக்கள் எழுச்சியும்

1933ஆம் ஆண்டு சத்தியாகிரகப் போராட்டத்தை காந்தி விலக்கிக் கொண்ட பிறகு காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் நெருக்கடி நிலவியது. இதன் விளைவாக காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து செயல்பட்ட முற்போக்காளர்கள், சோசலிஸ்டுகள் சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு, வித்தல்பாய் பட்டேல், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்களெல்லாம் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தனி அமைப்பாக செயல்படும் நிலைக்கு வந்துவிட்டனர். இவையனைத்தையும் காந்தி எதிர்க்கவில்லை. காரணம் நேரு காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வரை எந்த பாதிப்பும் இல்லை என காந்தி புரிந்து வைத்திருந்தார். “நேருவின் கருத்துக்கள் காங்கிரசின் கொள்கையுடன் அடிப்படையில் மாறுபட்டு விலகிச்செல்லும் அளவிற்கு தெளிவானதொரு வடிவத்தை எடுத்துள்ளதாக நான் கருதுவதில்லை. எனவே அவரது கம்யூனிச சிந்தனையை கண்டு யாரும் அச்சமடைய வேண்டாம்” என்றார் காந்தி. இந்த புரிதலில் இருந்துதான் இடதுசாரிகள் பக்கம் மக்கள் சென்றுவிடாமல் தடுக்க ஜவஹர்லால் நேருவை தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அனுமதித்தார் காந்தி.

விவசாயிகள் கோரிக்கைகளை காங்கிரஸ் திட்டத்தில் சேர்க்கவேண்டும் என கோரிக்கைகளை வைத்தனர். ஆனால் காங்கிரஸ் இக்கோரிக்கையை நீண்ட காலமாக புறக்கணித்து வந்தது. காங்கிரஸ் கட்சியே விவசாயிகளின் கட்சிதான் என வாதிட்டது. ஆனால் 1935ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் தனித்து இயங்கும் விவசாய சங்கம் துவக்கப்பட்டது. “உழுபவனுக்கே நிலம் சொந்தம், நிலவுடைமையை ஒழிப்போம்” என்பது போன்ற கோஷங்களுடன் அது உதயமானது.

தொழிலாளர்கள் இதற்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து செயல்பட்டனர். ஆனால் தற்போது காங்கிரஸ் கட்டுப்பாட்டில் இருந்து விலகி சுயமாகச் செயல்படும் தொழிற்சங்கமாக உருவெடுத்தது. 1920களில் துவங்கிய ஏஐடியுசி பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர்களின் நலன் காக்க ஏகாதிபத்தியம் மற்றும் தேசிய முதலாளிகளை எதிர்த்தும் இயக்கம் நடத்தும் அளவிற்கு வர்க்க அரசியல் தெளிவடைந்திருந்தனர். இதை பொறுக்க முடியாத முதலாளித்துவத்தின் தேசிய தலைமை தொழிற்சங்கத்தை உடைக்க காங்கிரஸ் கட்டுப்பாட்டில் செயல்படும் தொழிற்சங்கத்தை உருவாக்க முயற்சித்தார்கள். ஆனால் இந்த காலத்தில் பாம்பே, கான்பூர், டில்லி, கல்கத்தா, நாக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சங்கம் வேகமாக வளர்ந்தது மட்டுமல்ல; அது வெகுமக்களையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டது.

இதேபோன்று ரவீந்திரநாத் தாகூர், சரோஜினி நாயுடு, முன்ஷி பிரேம்சந்த் போன்ற உயரிய எழுத்தாளர்கள் எல்லாம் இணைந்து இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், நாடு முழுவதும் செயல்பட்ட இளைஞர், மாணவர் குழுக்களையெல்லாம் ஒருங்கிணைத்து அனைத்திந்திய இளைஞர் மாணவர் அமைப்புகள் துவங்கின. இந்த அமைப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்து பூரண சுயராஜ்யம் பெறவேண்டும் – அதாவது   “இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி அகற்றப்பட்டு அந்த இடத்தில் தொழிலாளி – விவசாயிகள் நலன் காக்கும் ஆட்சி அமைக்க வேண்டும்” என்ற பொருள்பட 1936இல் லக்னோவில் கூடிய கிசான் காங்கிரஸ் முடிவெடுத்தது. இத்தகைய போக்குகளால் காங்கிரஸ் கட்சி கலக்கமடைந்தது.  அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தயாரானது.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் 

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்க தீர்மானத்தை ஜவஹர்லால் நேரு முன்மொழிந்தார் என்பதுதான் மிக முக்கியமான செய்தி. அத்தீர்மானத்தில் கம்யூனிஸ்டுகள் கொடுத்த திருத்தத்திற்கும் நேருதான் பதிலளித்தார். காங்கிரஸ் கட்சியின் அனைத்து குழுக்களையும், பிரிவினரையும் இணைத்து தனது பின்னே அணிவகுக்க செய்து, தீர்மானத்தை கிட்டத்தட்ட கம்யூனிஸ்டுகளை தவிர ஒருமனதாக நிறைவேற்றிட காந்தியால் முடிந்தது. ஆகஸ்ட் 8 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்க தீர்மானத்தை நிறைவேற்றிய உடன் இரவோடு இரவாக பொழுது விடிவதற்குள் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

 சரியான திட்டமிடல் இல்லாமல் துவக்கியதன் விளைவாக பிரிட்டிஷ் அரசாங்கம் இப்போராட்டத்தை கடுமையாக ஒடுக்க முடிந்தது. நாடுமுழுவதும் சுமார் 2,000 சத்தியாகிரகிகள் கைது செய்யப்பட்டனர் இருந்தாலும் இப்போராட்டம் குறிப்பிடத்தக்க எந்த விளைவையும் உருவாக்கவில்லை. இரண்டாம்  உலக யுத்தத்தின் போக்குகள் ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் ஆகிய பாசிசஅணிக்கு எதிராக திரும்பியதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் போருக்கு பிறகு இந்தியாவை ஆட்சி செய்ய முடியாது. ஆனாலும், உடனடியாக இந்தியாவை ஒப்படைக்கும் மனநிலையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இல்லை. ஆனால், காங்கிரசும், முஸ்லிம் லீக்கும் ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி கொடுத்து பேச்சுவார்த்தை மூலம் இந்திய தேசிய முதலாளிகள் அதிகாரத்தை கைப்பற்றிட முயற்சி செய்தனர்.எனினும் அவர்கள் இதில் வெற்றியடையவில்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு வெகுஜன எழுச்சி ஏற்பட்டது. நாடு முழுவதும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், வங்காளத்தில், விளைச்சலில் ஐந்தில் மூன்று பங்குக்கு உரிமை கோரிய குத்தகை விவசாயிகளின் தேபாகா போராட்டம்,  பம்பாய் ஆர்.ஐ.என் (பிரிட்டிஷ் கப்பற்படை மாலுமிகள்) போராட்டம், அவர்களுக்கு ஆதரவான பம்பாய் தொழிலாளர்களின் போராட்டம்,  விவசாயிகளின் உரிமைக்காகவும் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் 400க்கும் மேற்பட்ட தோழர்களை பலிகொடுத்து போராடிய கேரள புன்னப்புரா வயலார் எழுச்சி, வடக்கு மலபார், கையூர், திரிபுரா பழங்குடி இன எழுச்சி என இப்படி ஏராளமான வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்கள் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் இக்காலத்தில் நடந்தன.  

கூலி விவசாயிகள், ஏழை விவசாயிகளின் உரிமைக்காக உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கோரிக்கைக்காக முன்வைத்து 4000க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாய தொழிலாள தோழர்கள் உயிரை ஈந்து நடத்திய தெலுங்கானா ஆயுத எழுச்சி, மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் வோர்லி பழங்குடி மக்களை  கந்துவட்டி கும்பலிடமிருந்தும், நிலப்பிரபுக்களிடம் இருந்தும் விடுவிக்க நடந்த வீரம் செறிந்த போராட்டம், கீழைத்தஞ்சையில் விவசாயிகள் போராட்டம் இவை அனைத்தையும் தலைமை தாங்கி நடத்தியது கம்யூனிஸ்டுகள்தான். ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் முன்னணி பகுதியாக கம்யூனிஸ்டுகள் மாறினார்கள். சுதந்திரத்திற்காக ஏற்பட்ட வெகுஜன எழுச்சியை இந்திய தேசிய முதலாளி வர்க்கம் தங்களின் சுயநலனுக்காக பயன்படுத்தியது. தேசிய முதலாளித்துவ வர்க்கம் சமரச போக்கில் ஈடுபட்டு பிரிட்டிஷ் அரசிடமிருந்து சமாதான ரீதியில் அதிகாரத்தை மாற்றிக்கொள்ள முயன்றனர்.

1946ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் பிரிட்டிஷ் – இந்திய கப்பற்படை வீரர்கள் நடத்திய எழுச்சி. பிரிட்டிஷார் கடைபிடித்து வந்த இனப் பாகுபாட்டு கொள்கைக்கு எதிராக ஒரு மாதத்திற்கு முன்பாக இந்திய விமானப் படைவீரர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த அனைத்து பிரிவினர் மத்தியிலும் இனப்பாகுபாட்டிற்கு எதிரான உணர்வு இதேபோன்று இருந்து வந்தது. ஆனால் கடற்படை வீர்ர்கள் நடத்திய கலகத்திற்கு ஈடான வடிவத்தை வேறு எந்த போராட்டமும் எட்டவில்லை.

கடற்படை வீரர்களின் எழுச்சி உலக யுத்தத்திற்கு பிந்தைய காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சியில் மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக கருதப்படுகிறது. பிரிட்டிஷ் இந்தியாவின் தரைப்படை,விமானப்படை மற்றும் கடற்படை வீரர்களோடு இணைந்து மாபெரும் எழுச்சியாக உருவாகிய இப்போராட்டத்திற்கு ஆரம்பத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இயக்கங்கள் ஆதரவு அளித்தன. ஆனால் பின்னர் காங்கிரசும், முஸ்லிம் லீக்கும் போராட்டத்திற்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றன. ஆனால் கம்யூனிஸ்டுகள் கப்பற்படை எழுச்சிக்கு வழிகாட்டியது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்த அனைத்து தொழிலாளர்களையும் இணைத்து காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கின. இந்த போராட்டங்களுக்கு பிறகே, இனியும் இந்தியாவை ஆட்சிசெய்ய முடியாது என்ற நிலைக்கு பிரிட்டிஷார் வந்தனர்.

இந்திய விடுதலை என்பது நம் பாட புத்தகத்தில் படித்தது போல் கத்தியின்றி, இரத்தமின்றி பெறப்பட்டதல்ல. மகாத்மா காந்தியின் ஆளுமைமையை கண்டு அஞ்சி நடுங்கி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விடுதலையை கொடுத்துவிடவில்லை. காங்கிரஸ் கட்சி  நடத்திய ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என அவர்கள் நடத்திய இந்த மூன்று போராட்டத்தினால் மட்டுமே நாடு விடுதலை அடைந்துவிடவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லிம் லீக், கத்தார் கட்சி, மித்ரமேலா, அபிநவ் பாரத், அனுசீலன் சமிதி, யுகாந்தர் குழு, இந்துஸ்தான் குடியரசு ராணுவம், இந்துஸ்தான் குடியரசு சோசலிஸ்ட் ராணுவம், பாரத் மாதா சங்கம், ஏஐடியுசி, கிசான் சபா, அனைத்திந்திய மாணவர், இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் இப்படி நூற்றுக்கணக்கான அமைப்புகள் நடத்திய போராட்டங்களில் லட்சகணக்கான மக்கள் எழுச்சியாக பங்கெடுத்ததும் கூட அதற்குக் காரணம் என்பதையும் வரலாற்றிலிருந்து மூடி மறைத்துவிட முடியாது.  

லெனின் 150: லெனினும் இந்திய விடுதலை போராட்டமும்

குரல்: ஆனந்த்ராஜ்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

தோழர் லெனின் பிறந்தது 1870 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி. அவர் பிறந்து 150 ஆண்டுகள் ஆகியும், அவர் 1924 ஜனவரி மாதம் மறைந்து 96 ஆண்டுகள் முடிந்தும், லெனின் அவர்களின் மகத்தான புரட்சிகர பங்களிப்பு நமது சமகால பிரச்சினைகளுக்கும் வெளிச்சம் காட்டும் வகையில் அமைந்துள்ளது.

மார்க்ஸ் – எங்கெல்ஸ் காலத்திற்குப் பின் மார்க்சீயத்தை முன்னெடுத்து சென்று சமகால பிரச்சினைகளை புரிந்துகொள்ளவும் புரட்சிகர இயக்கத்தை வலுப்படுத்தவும் ஆகப்பெரிய பங்களித்தவர் தோழர் லெனின். மார்க்ஸின் மூலதனம் நூல் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு மூலதனத்தை மையப்படுத்தி ஒரு சில பெரும் மூலதனங்களின் ஆதிக்கத்திற்கு இட்டுச்செல்லும்; போட்டி முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக மாறும் என்பதை தெளிவுபடுத்தியிருந்தது. காலனி ஆதிக்கம் பற்றியும், வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் நடைபெற்றுவந்த வர்க்கப் போராட்டங்களின் மீது காலனி ஆதிக்க அமைப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றியும் மார்க்ஸ்-எங்கெல்ஸ் இருவரும் மிகச்சரியான சில கருத்துக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக  முன்வைத்தனர் என்பது உண்மை.

எடுத்துக்காட்டாக, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இந்தியாவை நாசப்படுத்தியது பற்றியும் அதன் வீழ்ச்சிக்கான சாத்தியப்பாடுகள் பற்றியும் அற்புதமான இரு கட்டுரைகளை 1853இல் நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன் பத்திரிக்கையில் மார்க்ஸ் எழுதியுள்ளார். எனினும், காலனி ஆதிக்கமும் அதன் முரண்பாடுகளும் உலக முதலாளித்துவத்தின் மீது விளைவிக்கக்கூடிய தாக்கங்கள் பற்றி மார்க்ஸும் எங்கெல்ஸும்  முழுமையாக ஆய்வு செய்யவில்லை. அவர்கள் வாழ்ந்த காலத்தில் அது மையப்பிரச்சினையாகவும் இல்லை. மேலை நாடுகளின் முதலாளித்துவ வளர்ச்சிக்கும் அதன் ஆரம்ப மூலதன திரட்டலுக்கும் காலனிகள் ஆற்றிய பங்கை மார்க்ஸ் மூலதனம் நூலில் விவரிக்கிறார். ஆனால் காலனி நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியும் நவீன தொழிலாளி வர்க்கத்தின் சமூகப் பங்கும் துவக்க நிலையில் இருந்த பின்புலத்தில் இப்பிரச்சினைகள் மார்க்ஸின் படைப்புகளில் மைய இடம் பெறவில்லை. இந்த இடைவெளியை இட்டுநிரப்புவதில் தோழர் லெனினின் பங்கு மிக முக்கியமானது.

காலனி ஆதிக்கம் உலக முதலாளித்துவத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும், இதற்கு இணையாக, காலனி நாடுகளில் உருவாகும் தேச விடுதலை இயக்கங்கள் முதலாளித்துவத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்க இயக்கத்தின் புரட்சிகர இயக்கத்திற்கு எவ்வளவு முக்கியமானவை என்பது பற்றியும் 1905இல் இருந்தே லெனின் தீவிரமாக சிந்தித்து வந்தார். இதனையொட்டி இந்தியாவிலும் சீனாவிலும், பொதுவாக ஆசிய கண்டத்திலும் ஏற்பட்டுவந்த அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களை அறிந்துகொள்வதில் அவர் கவனம் செலுத்தி வந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சி தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் இயக்கங்கள் மலர காரணமாக அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து பல காலனி நாடுகளில் முதலாளித்துவம் வேகம் அடைந்த சூழலில் காலனிகளிலும் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல்  பிரவேசம் துவங்கி வளர ஆரம்பித்தது. இந்தியாவில் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் பிரவேசம் பற்றி 1908ஆம் ஆண்டில் ஒரு முக்கிய பதிவு செய்கிறார் லெனின். இதில் துவங்கி இந்த கட்டுரையில், லெனினுக்கும் இந்திய விடுதலை போருக்கும் உள்ள உறவின் ஒரு சில முக்கிய அம்சங்களை நாம் சுருக்கமாக பார்ப்போம்.

இந்தியா பற்றி லெனின்

 ப்ரோலெதாரி (Proletary) என்ற, லெனினை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த, பத்திரிக்கையில் 1908 ஜூலை 23 இதழில், “உலக அரசியலில் தீப்பற்றி பரவக்கூடிய பொருட்கள் என்ற தலைப்பில் லெனின் பின்வருமாறு எழுதுகிறார்:

இந்தியாவில் தங்களது எழுத்தாளர்களுக்காகவும் அரசியல் தலைவர்களுக்காகவும் சாதாரண மக்கள் போராடத் துவங்கியுள்ளனர்…….. இந்திய ஜனநாயகவாதியான திலக் மீது பிரிட்டிஷ் குள்ளநரிகள் விதித்துள்ள தண்டனையை எதிர்த்து வீதிகளில் ஆர்ப்பாட்டங்களும் பம்பாய் நகரில் வேலை நிறுத்தமும் நிகழ்ந்துள்ளன. இந்தியாவிலும் கூட உணர்வுபூர்வமான அரசியல் வெகு மக்கள் போராட்டத்தை நடத்தும் அளவிற்கு தொழிலாளி வர்க்கம் வளர்ந்துள்ளது. இதன் பொருள், ரஷ்ய பாணியில் இந்தியாவில் செயல்படும் பிரிட்டிஷ் சர்வாதிகார ஆட்சி அழிந்தே தீரும் என்பதாகும்.

ஐரோப்பிய நாடுகளில் பாட்டாளி வர்க்க இயக்கங்கள் சில பின்னடைவுகளை சந்தித்த நேரத்தில் 1913இல் ‘பின் தங்கிய ஐரோப்பாவும் முன்னேறிய ஆசியாவும்’ என்ற தலைப்பில் லெனின் எழுதிய கட்டுரையில் அவர் கூறுகிறார்:

ஆசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஜனநாயக இயக்கம் வளர்ந்து, விரிவடைந்து, வலுப்பெற்று  வருகிறது……….பல கோடி ஆசிய உழைப்பாளி மக்களுக்கு நம்பத் தகுந்த நேச சக்தியாக வளர்ந்த நாடுகளின் தொழிலாளி வர்க்கம் உள்ளது. இதன் வெற்றியை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இதன்மூலம் ஐரோப்பிய (உழைக்கும்) மக்களும் ஆசிய (உழைக்கும்) மக்களும் விடுதலை பெறுவார்கள்.

அக்டோபர் புரட்சியின் தாக்கம்

1917ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்ந்த புரட்சியில் கொடுங்கோலன் ஜார் மன்னனின் ஆட்சி ரஷ்ய மக்களால் தூக்கி எறியப்பட்டது. ஆனால் இந்த மக்கள் எழுச்சியின் தலைமை சமரச போக்கு கொண்ட கட்சிகளின் கையில் இருந்தது. நிலைமை வேகமாக மாறியது. அடுத்த சில மாதங்களில் தொழிலாளிகளும், விவசாயிகளும், போர்முனையிலிருந்து போரை நிராகரித்து பெரும் எண்ணிக்கையில் திரும்பி வந்துகொண்டிருந்த ராணுவ வீரர்களும், வீதிகளில் இறங்கி தங்கள் கோரிக்கைகளுக்காக போராடினர். இவர்களின் போராட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமான முன்னணிப் படையாக லெனின் தலைமையில் செயல்பட்டுவந்த ரஷ்ய சமூக ஜனநாயக கட்சி – போல்ஷெவிக் கட்சி –  அமைந்தது. ரஷ்யா முழுவதும் தொழிலாளிகள், விவசாயிகள், ராணுவ வீரர்கள் இணைந்த ஜனநாயக அமைப்புகள் – இவை “சோவியத்” என்று அழைக்கப்பட்டன – மிக வேகமாக பரவின.  1917 அக்டோபர் மாதத்தில் போல்ஷெவிக் கட்சியின் தலைமையில் உழைக்கும் மக்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். ரஷ்ய சோசலிச குடியரசு பிறந்தது.   ரஷ்யாவில் நிகழ்ந்த இந்த மகத்தான புரட்சி உலகெங்கும் பெரும் தாக்கத்தை விளைவித்தது. அக்டோபர் புரட்சியைக்கண்டு ஏகாதிபத்திய முதலாளித்துவ வல்லரசுகள் பதறின.

ஏன் பதறின? உழைக்கும் மக்களே ஆட்சி நடத்த முடியும்; வலுவான பொருளாதார, அரசியல், சமூக வளர்ச்சியை, திட்டமிட்ட சோசலிச பொருளாதார வளர்ச்சியை சாதித்து உழைக்கும் மக்களின் வாழ்வை பன்மடங்கு மேம்படுத்த முடியும் என்று பின்னர் உலகிற்கு நிரூபித்தது அக்டோபர் புரட்சி. இப்புரட்சியின் வர்க்கத்தன்மையை, இது முதலாளித்துவம் என்ற அமைப்பிற்கே விடப்பட்ட பெரும் சவால்; இப்புரட்சி நிலைத்துவிட்டால் முதலாளித்துவமும் முதலாளி வர்க்கமும் வரலாற்று போக்கில் காலாவதி ஆகிவிடுவர் என்பதை ஏகாதிபத்திய முதலாளித்துவம் உணர்ந்தது. எனவேதான், ஏகாதிபத்திய வல்லரசுகள் அனைத்தும் கைகோர்த்துக் கொண்டு, அக்டோபர் புரட்சியை முளையிலேயே கிள்ளி எறிய முனைந்தன. 1918 மே மாதமே 14 ஏகாதிபத்திய முகாம் நாடுகளின் துருப்புக்கள் ரஷ்யாவிற்குள் நுழைந்து எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு ஆதரவாய் போரிட்டன. ஆனால் செம்படை மக்கள் ஆதரவுடன் இரண்டு ஆண்டுகள் மிகக்கடுமையாக போரிட்டு வெற்றி பெற்றது. சோசலிச ரஷ்யாவை எளிதில் அழித்துவிடலாம் என்ற ஏகாதிபத்தியக் கனவு தகர்ந்தது. இந்த நிகழ்வுகள், ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த காலனி நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. கொடுங்கோல் ஜார் மன்னனை வீழ்த்தி, ஏகாதிபத்திய நாடுகளின் படைகளையும் விரட்டி அடித்த சோசலிச ரஷ்யாவின் மீதும், போல்ஷெவிக் கட்சி மீதும், அதன் தலைவர் லெனின் மீதும் இந்தியா உள்ளிட்ட   காலனி நாடுகளில் மிகப்பெரிய மரியாதையும் நேச உணர்வும் ஏற்பட்டன. இதன் ஒரு விளைவாக அன்றைய காலனி இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து நாட்டை விடுவிக்க வேண்டுமென்ற வேட்கையுடன், இதனை செய்து முடிக்க சோசலிச ரஷ்யா சென்று அந்நாட்டின் தலைவர்களின் ஆலோசனையும் உதவியும் பெறலாம் என்ற என்ணத்துடன் துடிப்புமிக்க பல இந்தியர்கள் ரஷ்யாவிற்கு பயணித்தனர். (இவர்களில் பலரும் தேச பக்தர்கள் தான்; கம்யுனிஸ்டுகள் அல்ல.) சிலர் ரஷ்யா சென்று திரும்பி வருகையில் ஆஃப்கனிஸ்தான் தலைநகரான காபுலில் தங்கி பிரிட்டிஷ் காலனி அரசுக்கு எதிராகவும் இந்திய விடுதலைக்காகவும் செயல்பட்டனர். 1920ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  காபுலில் செயல்பட்டுவந்த  “இந்திய புரட்சியாளர்கள் அமைப்பு” தனது பேரவை கூட்டத்தில் இந்திய விடுதலைப்போருக்கு சோவியத் ரஷ்யா அளித்த ஆதரவுக்கும், காட்டிய நட்பு உணர்வுக்கும் நன்றி தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றி லெனினுக்கு அனுப்பியது. இத்தீர்மானத்தை பெற்றுக்கொண்டு அளித்த பதிலில், லெனின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக இந்திய மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு ரஷ்ய உழைப்பாளி மக்களின் முழு ஆதரவை தெரிவித்தார்.

லெனின் பாய்ச்சிய புத்தொளி

லெனின் புரட்சி பற்றித்தான் 24 மணி நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார் என்றால் அது மிகையாகாது. மார்க்ஸீய நிலைபாட்டில் நின்று, கள அனுபவங்களின் அடிப்படையில், சமகால அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார தளங்களில் மார்க்ஸீய புரிதலை மேம்படுத்திக்கொண்டே இருந்தவர் லெனின். அந்த அடிப்படையில், அவர் வாழ்ந்த காலத்தில் ரஷ்யாவில் சோசலிச புரட்சி வெற்றிபெற தொழிலாளி-விவசாயி கூட்டு என்பது இன்றியமையாதது என்ற நிலைப்பாட்டிற்கு ஆழமான கள அனுபவமும் (குறிப்பாக, 1905 ரஷ்ய விவசாயிகளின் எழுச்சி) மார்க்சீய புரிதலும் லெனினை இட்டுச்சென்றது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜனநாயக புரட்சியில் விவசாயிகளின் பங்கு பற்றி லெனின் முன்வைத்த புரிதல் மார்க்சீயத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல் கல் எனலாம்.

மார்க்ஸ் எங்கெல்ஸ் காலத்தில் முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள வலுவான தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் சோசலிச புரட்சி நிகழும் என்ற கருத்து மேலோங்கியிருந்தது. 19ஆம் நூற்றாண்டில் 1871 பாரிஸ் நகரிலும் வேறு சில தருணங்களிலும் தொழிலாளிவர்க்கம் அரசியல் ரீதியாக கிளர்ந்து எழுந்தது என்றாலும், சோசலிச புரட்சி நடத்தி ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள இயலவில்லை. பிரிட்டன், ஃப்ரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில் சோசலிச சக்திகள் ஆட்சிக்கு வர இயலவில்லை. இப்பிரச்சினையை புரிந்துகொண்டு செயல்பட  1916 ஜூன் மாதத்தில் லெனின் எழுதி முடித்த, அவரது மிக முக்கியமான படைப்பான ஏகாதிபத்தியம் – முதலாளித்துவ வளர்ச்சியின் உச்ச (இறுதி) கட்டம்  என்றநூல் வழிகாட்டியது. இந்த நூல் ஏகாதிபத்தியம் உலகம் முழுவதையும் இணைத்துள்ள நிலையில், இந்த ஏகாதிபத்திய சங்கிலியின், இணைப்பின் பலவீனமான கண்ணியில் புரட்சி வெடிக்கக்கூடும் என்ற புதிய பார்வையை கொடுத்தது. இந்த புரிதலின் அடிப்படையில்தான் ‘ஏகாதிபத்தியம் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நுழைவாயில்’ என்று  1917 அக்டோபர் புரட்சிக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே லெனினால் கூற முடிந்தது.     அன்றைய ஏகாதிபத்திய அமைப்பின் பலவீனமான கண்ணியாக இருந்த ரஷ்யாவில் நடந்த 1917 அக்டோபர் புரட்சிக்கு தலைமை தாங்கி லெனின் கூற்று சரியென்று போல்ஷெவிக் கட்சி நிரூபித்துக்காட்டியது.[i]

இவ்வாறு தொழிலாளி-விவசாயி கூட்டணியின் அவசியத்தையும், உலக ஏகாதிபத்திய அமைப்பின் பின் தங்கிய, பலவீனமான பகுதிகளில் சோசலிச புரட்சி வெடிக்கும் வாய்ப்பு உண்டு என்பதையும் முன்வைத்ததோடு இல்லாமல், இப்புரிதலை விரிவுபடுத்தி,  கடும் காலனி ஆதிக்க சுரண்டலுக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளிலும் நாட்டு விடுதலைக்கான எழுச்சிகள் நிகழும் காலமாக ஏகாதிபத்திய காலம் அமையும் என்பதையும் லெனின் தெளிவுபடுத்தினார். வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும், ஏகாதிபத்தியத்தால் சுரண்டப்படும் காலனி நாடுகளின் உழைப்பாளி மக்களும் நேச சக்திகள் என்ற முக்கியமான கருத்தை லெனின் வலுவாக முன்வைத்தார். இவ்விரு சக்திகளும் வலுப்பெற்று அவர்கள் போராட்டங்கள் வெற்றி அடைவது மானுடம் உலகளவில் சோசலிச புரட்சியை நோக்கி பயணிக்க மிக அவசியம் என்ற புரிதலை சர்வதேச பொது உடைமை இயக்கத்தில் லெனின் கொண்டு சென்றார்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாம் மாநாடு  

19ஆம் நூற்றாண்டின் இறுதி 30 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவம் வேகமாக வளர்ந்ததுடன் தொழிலாளி வர்க்கமும் அதன் அரசியல் அமைப்புகளும் வலுப்பெற்று வந்தன. இதில் அன்றைய ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி என்ற பெயரில் இயங்கிய கம்யூனிஸ்டுகள் அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் கணிசமான இடங்களைப் பெறும் அளவிற்கு அக்கட்சி செல்வாக்கு பெற்றிருந்தது. ஆனால் ஒருகாலத்தில் ஐரோப்பாவிற்கே வழிகாட்டியாக இருந்த அக்கட்சியில் திருத்தல்வாதம் தலைதூக்கியது. இதன் விளைவாக, 1914ஆம் ஆண்டு பல நாடுகளின் தொழிலாளி வர்க்கங்களை ஒன்றிணைத்து, ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே மூண்ட லாபவெறி காக்கும் போரை எதிர்த்து உழைப்பாளி மக்கள் காவு கொடுக்கப்படுவதை தடுப்பது என்ற தனது சர்வதேசக் கட்மையை நிறைவேற்றுவதற்குப் பதில் இக்கட்சி ஜெர்மானிய பேரரசின் யுத்தத்தை ஆதரிக்கும் நிலை எடுத்தது. இந்த பின்னடைவின் அடிப்படை காரணங்களை லெனின் தனது ஏகாதிபத்தியம் நூலிலும், ‘ஏகாதிபத்தியமும் சோசலிச(இயக்க)த்தின் பிளவும்என்ற கட்டுரையிலும் விரிவாக விளக்கியுள்ளார். சோசலிசம் இவ்வாறு எதிர்கொண்ட நெருக்கடியான பன்னாட்டு சூழலில், அக்டோபர் புரட்சிக்கெதிராக ஏகாதிபத்திய வல்லரசுகள் படையெடுத்த பின்னணியில்தான் 1919ஆம் ஆண்டு மார்ச் 2 முதல் 6 வரை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியில் மாஸ்கோவில் நடந்த சர்வதேச மாநாட்டில் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை நோக்கி உலகம் பயணித்திட உதவும் இலக்குடன்  பல்வேறு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சக்திகளையும் உறுப்பினர்களாக கொண்ட, பரஸ்பர உதவிக்கான அமைப்பாக “கம்யூனிஸ்ட் அகிலம்” என்ற புதிய அமைப்பு பேரியக்கமாக பிறந்தது. 

கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாம் மாநாடு 1920ஆம் ஆண்டு ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெற்றது.துவக்க நிகழ்ச்சிகள் மட்டும் பெட்ரோகிராட் நகரில் நடந்தன. பின்னர் மாநாடு மாஸ்கோவில் நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட பல காலனி நாடுகளில் விடுதலை போராட்டங்களில் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை எவ்வாறு இருக்கவேண்டும் என்பது பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க விவாதம் இடம் பெற்றது. இதில் லெனின் அவர்களின் பங்கு மிக முக்கியமானது.

தேச விடுதலை போராட்டங்களும் கம்யூனிஸ்ட் அகிலமும்

இந்த மாநாட்டின் ஒரு முக்கிய விவாதப்பொருள் ‘காலனி நாடுகளின் பிரச்சினை’ என்பதாகும். இப்பிரச்சினை குறித்து, அச்சமயம் நிலவிய உலக சூழலை கணக்கில் கொண்டு, லெனின் சமர்ப்பித்த முன்மொழிவுகள் கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்டிருந்தன:

·          உலகளவில் ஒடுக்கும் தேசங்கள், ஒடுக்கப்படும் தேசங்கள் என்று நாடுகள் வேறுபடுத்தி பார்க்கப்பட வேண்டும். கம்யூனிஸ்ட் அகிலம் ஒடுக்கப்படும் தேசங்களின் மக்கள் பக்கம் நிற்கும்.

·          ஏகாதிபத்திய நாடுகள் நடத்திய முதல் உலகப் போருக்குப்பின் உலக அரசியல் அமைப்பிலும் பல்வேறு தேச மக்களுக்கு இடையிலுமான பரஸ்பர உறவுகள், சோவியத் ரஷ்யா, அதன் தலைமையில் உள்ள பல சோவியத் குடியரசுகள் மற்றும் சோவியத் வடிவிலான ஜனநாயக இயக்கங்கள் ஆகியவற்றின் மீது விரல்விட்டு என்ணக்கூடிய ஏகாதிபத்திய நாடுகள் நடத்தி வரும்  யுத்தத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது.

·         பின்தங்கிய காலனி நாடுகளில் எந்த தேச விடுதலை இயக்கமும் முதலாளித்துவ ஜனநாயக தன்மை கொண்டதாகத்தான் இருக்க முடியும். காரணம், இங்கு மக்களில் பெரும்பகுதியினர் தம்வயம் உற்பத்திக்கருவிகளை வைத்துக்கொண்டு, சிறு/குறு/பெரு சுய உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள். இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவது முதலாளித்துவ உற்பத்தி உறவுகளே. எனினும், பின்தங்கிய, காலனி நாடுகளில் நடந்துவரும் தேச விடுதலைக்கான போராட்டங்களை “தேசீய-புரட்சிகர” இயக்கங்கள் என்று கம்யூனிஸ்ட் அகிலம் வரையறுக்கிறது. காரணம், இந்த இயக்கங்களின் தலைமையும் தன்மையும் எல்லா இடங்களிலும், எல்லா கட்டங்களிலும் முதலாளித்துவ-ஜனநாயகத்தன்மையுடன் தான் இருக்கவேண்டும் என்பது அவசியம் அல்ல.

·         கம்யூனிஸ்டுகள் என்ற முறையில் நாம் (அகிலம்) காலனிகளில் முதலாளி வர்க்கத்தினர் தலைமையிலான தேச விடுதலை இயக்கங்களுக்கு கீழ்க்காணும் நிபந்தனைகளுடன் ஆதரவு அளிப்போம்:  அவை உண்மையில் புரட்சிகரமாக இருக்கவேண்டும். மேலும் இந்த இயக்கத்தவர், நாம் சுரண்டப்படும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் புரட்சிகர உணர்வுபெறும் வகையிலும் கல்வியூட்டி, அமைப்புரீதியாக திரட்டுவதற்கு தடையாக இருக்கக்கூடாது.

·          வளர்ந்த நாடுகளின் தொழிலாளி வர்க்கம் பின் தங்கிய காலனி நாடுகளின் உழைப்பாளி மக்களுக்கு உதவ வேண்டும்.

·          சோவியத் குடியரசுகளில் வெற்றி பெற்றுள்ள தொழிலாளி வர்க்கம் பின்தங்கிய நாடுகளுக்கு ஆதரவு அளிக்கவேண்டும். இது சாத்தியமாகும் பொழுது, பின்தங்கிய நாடுகள் முன்னேறுவது சாத்தியமாகும்.

அகிலத்தின் லெனினிய நிலைபாடும் இந்தியாவும்

1920இல் நிலவிய இந்திய சூழலுக்கு இவை பொருத்தமாகவே இருந்தன. இந்தியாவில் 1880களிலேயே முதலாளிவர்க்கம் அரசியல் களத்திற்கு வந்துவிட்டது. அதன் அரசியல் கருவியாகத்தான் இந்திய தேசீய காங்கிரஸ் உருவானது. அங்கொன்றும் இங்கொன்றுமாக 1860களிலிருந்தே தொழிலாளிகளின் போராட்டங்கள் நிகழ்ந்திருந்தபோதிலும், தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் பிரவேசம் 1920களில் தான் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஏற்படத் துவங்கியது. ஆகவே, இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைமை முதலாளி வர்க்கத்திடம் தான் இருந்தது. அதேசமயம் காந்தி அவர்கள் விடுதலை இயக்கத்தில் முக்கிய பங்கு ஆற்றத்துவங்கிய பிறகுதான் அது விரிவான மக்கள் இயக்கமாக மாறத்துவங்கியது. இதில் கோடிக்கணக்கான விவசாயிகளின் பங்கேற்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அன்றைய நிலமையில் துவக்க நிலையில் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கம் அடுத்துவந்த பல பத்தாண்டுகளில் தேச விடுதலை போராட்டத்தில் இருந்து தனிமைப்பட்டு விடாமல் இருக்க கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாம் மாநாட்டு வழிகாட்டுதல் பெரிதும் உதவியது. அகிலத்தின் இரண்டாம் மாநாட்டின் காலனி எதிர்ப்பு இயக்கங்கள் தொடர்பான நிலைபாட்டை உருவாக்கியதில், ஆழ்ந்த மார்க்ஸீய தத்துவார்த்த ஞானத்துடன் இப்பிரச்சினையைப்பற்றி லெனின் முன்வைத்த கருத்துக்கள் ஆகப்பெரிய பங்கு வகித்தன.


[i] 1916ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லெனின் எழுதிய ‘ஏகாதிபத்தியமும் சோசலிசத்தில் பிளவும் என்ற முக்கியமான கட்டுரை. மேலை நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர வளர்ச்சியை தடுப்பதில் காலனிகளை ஏகாதிபத்திய நாடுகள் சுரண்டி அபரிமிதமான உபரிகளை பெறமுடிந்த நிலை எத்தகைய பங்கு ஆற்றியது என்று இக்கட்டுரையில் விளக்குகிறார். (https://www.marxists.org/archive/lenin/works/1916/oct/x01.htm)