இன்று இந்திய சமூகத்தில் அதிகரித்து
வரும் அனைத்து வகையான அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார சிக்கல்களை இன்றைய அரசியலை அவதானிக்கும் ஒவ்வொருவருமே
எதிர்நோக்கி வருகின்றனர். ஓர் எதிர்க்கட்சியின் வேலை என்பது ஆளும் கட்சியின்
அனைத்து நடவடிக்கைகளையும் குறைகூறுவது மட்டுமே என்பதற்கு மாறாக கம்யூனிஸ்ட்
இயக்கம் சுயமாக பரிசீலித்து, நாட்டை எதிர்நோக்கி வரும் பிரச் சனைகளை எதிர்கொள்வதற்கான தனது செயல்
பாட்டிற்கான அணுகுமுறையை உருவாக்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். தொழிற் புரட்சி
தலையெடுத்த காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த எண்ணற்ற பிரச்சனைகளை மார்க்சிய
ஆசான்கள் அன்று எதிர்கொண்டார் களெனில், இன்றைக்குத் தலையெடுத்துள்ள செயற்கை நுண்ணறிவு
தொழில்நுட்பம் போன்ற, இன்றைய காலப்பகுதியில் நாம் சந்திக்கின்ற, சந்திக்கவிருக்
கும் பிரச்சனைகளும் கணக்கில் அடங்காதவையே.
அவ்வகையில் இந்த ஆண்டு மே மாதம் நடை
பெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்குப்
பிறகு நாட்டில் உருவாகியுள்ள கடினமானதொரு சூழ்நிலை மார்க்சிய ஆதரவாளர்கள்
மத்தியில் பல பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. உலகின் பல நாடுகளைப் போன்றே
இந்தியாவும் வலதுசாரிப் பாதையை நோக்கித் திரும்பியுள்ளதா என்ற கேள்வியும்
நம்மிடையே எழுந்துள்ளது. இத்தகைய
பின்னணியில் அரசு, நாடாளுமன்றம், தேர்தல் ஆகியவை குறித்தும் ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சியின்
இலக்குகள் பற்றியும் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் சீரிய கருத்துக்கள் இந்த விஷயத்தில் தற்கால
நடப்புகளை ஆய்வு செய்வதற்கு வழிகாட்டுகின்றன.
ஒரு வர்க்கம் என்ற வகையில் அதன் அளவு
எவ்வளவு சிறியதாக இருப்பினும் சரி,
அதன் வளர்ச்சி எவ்வளவு குறைவாக இருந்தபோதிலும்
சரி, பாட்டாளி
வர்க்கம் தன்னை முதலில் ஓர் அமைப்பாகவும், பின்னர் ஓர் அரசியல் கட்சியாக வும்
அணிதிரட்டிக் கொள்ள வேண்டும் என்று பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க
பாத்திரம் குறித்து உறுதிப்பட எடுத்துக் கூறியது மார்க்ஸ்-எங்கெல்ஸின் கம்யூனிஸ்ட்
அறிக்கை.
1848-ம் ஆண்டில் ஜெர்மனியில் உருவான
கிளர்ச்சிக்குப் பிந்தைய சூழலில்,
ஒரு நாடாளு மன்றம் உருவாகும் வாய்ப்பு
இருக்குமானால் தொழிலாளர்களின் கட்சி தன் வேட்பாளர்களை முன்நிறுத்த வேண்டும்
என்றும், அக்கட்சியின்
தனிப்பட்ட நடவடிக்கையின் மூலம் வெற்றி பெறும் ஒரு சில வேட்பாளர்களின் இருப்பு
அத்தகைய அவையில் மிக முக்கியமானதாகும் என்றும் ஜெர்மன் தொழிலாளர் கட்சியின்
மத்தியக் குழுவிற்கு மார்க்ஸ் அறிவுரை வழங்கி யிருந்தார்.
ஜெர்மனியில் புரட்சிகர சூழ்நிலை தணிந்த
நிலையில் மார்க்சின் இந்த 1848 மார்ச் மாத கடிதம் கட்சியின் பொதுக் கவனத்திற்கு
வைக்கப் படவில்லை என்றபோதிலும், ஜெர்மனியில் முதலாவது வெகுஜன சோஷலிச தொழிலாளர் கட்சி
உருவாக்கப்படுவதையும், தனது வர்க்க நலன்களை முன்னெடுத்துச் செல்ல ஜெர்மன் நாடாளுமன்றத்தை
அது பயன்படுத்திக் கொள் வதையும் மார்க்ஸ்- எங்கெல்ஸ் ஆகியோரால் தங்கள்
வாழ்நாளிலேயே காண முடிந்தது.
அதைப் போன்றே அன்றைய ஜெர்மானிய சமூக
ஜனநாயக கட்சியின் தலைவரும், புரட்சிகர கோட்பாடுகளை திருத்தி செயல்பட்டு வந்தவரும் நாடாளுமன்ற
வாதத்தில் மூழ்கிப் போனவரு மான பெர்ன்ஸ்டைன் போன்றவர்களின் சந்தர்ப்ப வாதப் போக்கை
எதிர்த்து மார்க்சும் எங்கெல்சும் தங்கள் கருத்துக்களை சுட்டிக் காட்டுகையில், நவீன சமூகப்
புரட்சியின் மிகப்பெரும் உந்து சக்தியாக விளங்கும் முதலாளி வர்க்கத்திற்கும்
பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான
வர்க்கப் போராட்டத்தை இயக்கத்திலிருந்து ஒருபோதும் அகற்றலாகாது. தொழிலாளி
வர்க்கம் தனது சொந்த வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவே தனது வர்க்கத்தின் விடுதலையை
வென்றடைய முடியும் என்பதையும் அவர்கள் ஆழமாக வலியுறுத்தினர்.
ஜெர்மனியில் 1871-ல் வலிவு பெற்ற
பிஸ்மார்க் கின் ஆட்சிக் காலத்தில் 1878 முதல் 1891 வரை நடைமுறையில் இருந்த
சோஷலிசத்தைத் தடை செய்யும் சட்டங்களுக்கு மத்தியிலும் 1884-ல் 5 லட்சம் வாக்குகளைப்
பெற்றிருந்த ஜெர்மன் தொழிலாளர் கட்சியின் செல்வாக்கு 1890-ல் இரண்டு மடங்கானது.
அது மீண்டும் 1898-ல் மேலும் இரண்டு மடங்காக உயர்ந்தது. (1912-ல் அக்கட்சி 40
லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு களைப் பெற்றது.) இந்தப் பின்னணியில் கட்சி யின்
வளர்ச்சியை சுட்டிக்காட்டிய எங்கெல்ஸ் ப்ரான்சில் வர்க்கப் போராட்டங்கள் என்ற
மார்க்சின் நூலுக்கு 1895-ல் எழுதிய முன்னுரை யில் ஜெர்மன் நாடாளுமன்றத்தைப்
பயன்படுத்து வதன் முக்கியத்துவம் குறித்து கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்:
“அனைவருக்குமான வாக்குரிமை என்பது
வேறெந்த பயனையும் அளிக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கும் நமது
ஆதரவாளர் களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க நமக்கு வாய்ப்பளிக்கிறது.
தொடர்ச்சியாகவும் துரிதமாக வும் நமக்கு அதிகரித்து வரும் ஆதரவு என்பது நமது
வெற்றியை உறுதிப்படுத்தும் அதே நேரத் தில் நம் எதிரிகளுக்கு கலக்கத்தையும்
ஏற்படுத்து கிறது. அவ்வகையில் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாகவும் அது மாறுகிறது.
நமது சொந்த வலிமையையும், நம்மை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளின் வலிமையையும் அது நமக்கு
உணர்த்துவதோடு நம்மை விட்டு விலகி நிற்கும் விரிவான பகுதி மக்களிடையே தேர்தல்
நேரத்தில் சென்று நமது கருத்துக்களை பரப்புவதற்கான வாய்ப்பையும் இவை நமக்கு
வழங்குகின்றன. நாடாளுமன்றத்தில் நமது உறுப்பினர்கள் மக்களின் பிரச்சனைகளைப்
பேசுவது போலவே, நமக்கு எதிரான தாக்குதல்கள் குறித்தும் மக்களிடையே உரக்கப் பேச
முடிகிறது. நமது பொதுக் கூட்டங் கள், பத்திரிக்கைகள் ஆகியவற்றின் மூலமாக மக்களிடம்
நாம் பேசுவதை விட மேலும் அதிக மான சுதந்திரத்துடன் நம்மால் பேச முடிகிறது. இந்த
விஷயத்தில் நாடாளுமன்றத்திலும் பொது வெளியிலும் சோஷலிச கருத்தோட்டங்களுக்கு எதிரான
சட்டங்கள் பயனற்றவை என்பதை நம்மால் தொடர்ந்து நிரூபிக்கவும் முடிந்துள்ளது.”
(மார்க்ஸ்-எங்கெல்ஸ் தொகுப்பு நூல்கள் தொகுதி 27, பக். 516)
எனினும் இத்தகைய தேர்தல் வெற்றிகளின்
விளைவாக கட்சியின் நீண்ட கால இலக்குகளை கட்சித் தலைவர்கள் ஒதுக்கித் தள்ளும்
போக்கை மேற்கொள்வதை உணர்ந்து கொண்ட எங்கெல்ஸ் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியில் தலையெடுத்துள்ள
இந்தப் போக்கிற்கு எதிராகவும் குரல் கொடுத்தார். 1891-ம் ஆண்டின் கட்சித்
திட்டத்திற்கான நகல் குறித்த தனது விமர்சனத்தில் இதைச் சுட்டிக் காட்டிய எங்கெல்ஸ்
இத்தகைய சந்தர்ப்ப வாதம் மிகவும் அபாயகரமானது என்றும் குறிப்பிட்டார்.
1871-ம் ஆண்டில் பிரெஞ்சு பாட்டாளி
வர்க்கம் மிகக் குறுகிய காலத்திற்கு பாரீஸ் நகரைக் கைப்பற்றியிருந்த போதிலும்
இறுதியில் பெரும் அழிவுக்கு வழிவகுத்த பாரீஸ் கம்யூன் நிகழ்வில் கிடைத்த
அனுபவத்தைக் கணக்கில் கொண்ட மார்க்சும் எங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் ஒரே
ஒரு முக்கிய திருத்தத்தை மேற்கொண்டனர். “ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் அரசு
இயந்திரத்தை தனக்கு ஆதரவாகவும், தனது நோக்கங்களுக்காகவும் பாட்டாளி வர்க்கத்தால் பயன்படுத்த இயலாது.
பொருளாதார ரீதியாக வலிமைமிக்க ஆளும் வர்க்கத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் வகையில்
உருவாக்கப்பட்ட அரசை புதியதொரு சோஷலிச சமூகத்தைப் படைக்க விழையும் தொழிலாளர்கள்
கையி லெடுத்து அப்படியே பயன்படுத்திக் கொண்டு விட முடியாது” என்றும் அவர்கள்
குறிப்பிட்ட னர்.
மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நவீன அரசு
என்பது கூலி உழைப்பை மூலதனம் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவியே என குடும்பம், தனிச்சொத்து, அரசு
ஆகியவற்றின் தோற்றம் என்ற தனது நூலில் குறிப்பிடும் எங்கெல்ஸ் “அனைவருக்குமான வாக்குரிமை என்பது தொழிலாளி
வர்க்கம் எந்த அளவிற்கு முதிர்ச்சி அடைந்துள்ளது என்பதைக் காட்டும் ஓர் அளவுமானியே
ஆகும். நவீன உலகில் அதுவே போதுமானது. பொதுமக்களின் கருத்தை வெளிப் படுத்தும் இந்த
அளவுமானி தொழிலாளர் களிடையே கொதிநிலை அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டும்போது, அவர்களும் சரி, முதலாளி களும்
சரி, தாங்கள்
எங்கே நிற்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வார்கள்” என்றும் விரிவாக
எடுத்துரைத்துள்ளார்.
மார்க்சிய ஆசான்களின் தெளிவான இந்தக்
கருத்துக்களை உள்வாங்கி தொழிலாளி வர்க்கத் தின் வலிமையை அதிகரிக்கும் வகையிலான
வர்க்கப் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தும் கடமையை மேற்கொள்வதே இன்றைய தேவை
யாகும். அதே நேரத்தில் சோஷலிச சமூகம் குறித்த சிந்தனையை பெரும்பகுதி உழைக்கும்
மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான அனைத்து வகையான வாய்ப்புகளையும்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசான்களின் அறிவுரை யையும் நாம் முழுமையாக
கையகப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது.
கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியாகி 170 ஆண்டுகளுக்குப்
பிறகும் கூட, உலகெங்கிலும்
பல்வேறு பரிசோதனைகளுக்கும், சோதனை
களுக்கும் பிறகும் கூட, சமூகத்தின்
அவலங்களுக் கான மாமருந்தாக சோஷலிச கருத்தாக்கம் செயலூக்கம் மிக்கதொரு தத்துவமாக
இன்றள வும் தொடர்ந்து நீடித்து வருகிறது. சமகாலப் பிரச்சனைகளை இணையற்ற
உத்வேகத்துடன் எதிர்கொண்ட மார்க்சும் எங்கெல்சும் வழங்கி யுள்ள அறிவுரைகள் நமக்கு
உரிய வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள் என்பதை உணர்ந்து செயல்படுவதே இக்காலப்
பகுதியின் தேவையாகும்.
(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
அரசியல் தலைமை குழு, சமூக நீதி குறித்த மார்க்சிய அணுகுமுறையை உள்ளடக்கிக் கட்சியின்
தெலுங்கானா மாநிலக்குழுவுக்கு அனுப்பிய குறிப்பை விளக்கும் வகையில் எழுதியது)
ஒரு
மெடலின் இரு பக்கங்கள்:
”ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகளின் கடமைகள்”
என்ற தலைப்பில் 1897ல் தோழர் லெனின் எழுதிய
ஒரு சிறு பிரசுரம் வர்க்கப் புரட்சியின் உள்ளடக்கத்தில்
உள்ள ஜனநாயகம், சோஷலிசம் என்ற இரண்டு கூறுகளை விவரிக்கிறது. ரஷ்ய சமூக ஜனநாயக கட்சி,
நரோத்னய வோல்யா, நரோத்னய ப்ராவோஆகிய 3 கட்சி திட்டங்களின் நடைமுறை சார்ந்த வேறுபாடுகளை
விளக்குவதே இதன் நோக்கம். குறிப்பாக நரோத்னய வோல்யா, ப்ராவோ ஆகிய இரண்டு கட்சிகளும்
தம் திட்டம் மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளை ‘ஜனநாயகக் கடமைகள்’ என்பதை மட்டும் அடிப்படையாக
வைத்து முன்னெடுக்கின்றன, ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் அணுகுமுறை இதிலிருந்து வேறுபட்டது,
மூன்றிலும் இது தான் சரியானது என்பதைத் தோழர் லெனின் நிறுவுகிறார். இந்த வாதங்களை இந்திய
சூழலில் பொருத்திப் பார்ப்பது அவசியம். ஏனெனில்,
இந்திய சமூகம் சாதி-வர்க்கம் என்பது பின்னிப் பிணைந்த சூழலாக இருக்கிறது. சாதியம்,
பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும், வர்க்க சுரண்டலுக்கு
எதிரான போராட்டமும் வர்க்க போராட்டத்தின் இரண்டு ஒருங்கிணைந்த அம்சங்கள் என்பதே மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு. எனவே, ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகள் வர்க்க போராட்டத்தின்
ஜனநாயக உள்ளடக்கத்தையும், சோஷலிச உள்ளடக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும், இரண்டும்
ஒரு மெடலின் (அல்லது நாணயத்தின்) இரு பக்கங்கள் என்று லெனின் வாதிடுவது, இந்திய சூழலுக்குப்
பொருந்தக் கூடியதே.
ஜனநாயக உள்ளடக்கம் என்பது பாகுபாடுகளை,
கொடுமைகளை, எதேச்சாதிகாரத்தை எதிர்த்த போராட்டம். பாகுபாடுகள் என்பது ரஷ்ய சூழலில்
தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை, மத ரீதியான துன்புறுத்தல், இதர சமூகப் பிரிவுகள்
மீதான ஒடுக்குமுறை போன்றவற்றை உள்ளடக்கியவை. ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவது, காவல்துறையின்
ஒடுக்குமுறை போன்றவை எதேச்சாதிகார அம்சங்கள். சோஷலிச உள்ளடக்கம் என்பது, வர்க்கங்களைத்
திரட்டி உற்பத்தி கருவிகளின் தனியுடமையை ஒழித்து, முதலாளித்துவத்தைத் தகர்த்து, பாட்டாளி
வர்க்கத்தின் கையில் அரசியல் அதிகாரத்தைக் கொண்டு வருவதற்கான போராட்டம். இரண்டும் தவிர்க்க
இயலாத விதத்தில் ஒன்றுக்கொன்று இணைந்தவை.
பல்வேறு சமூகப்பிரிவுகள் சந்திக்கும்
ஒடுக்குமுறைகளைக் கையில் எடுத்தால் வர்க்க ஒற்றுமை சீர்குலையும் என்ற பார்வை தவறு, அதே சமயம் வர்க்கப்பார்வையைப் புறம் தள்ளி பாகுபாடுகளையும், ஒடுக்குமுறைகளையும் தனித்துப்
பார்ப்பதும் தவறு என்று லெனின் வாதிடுகிறார். சமூக ஒடுக்குமுறை எதிர்ப்பு மற்றும் ஜனநாயக
உரிமைகளுக்கான போராட்டத்தில் பல பிரிவுகள் இணையும். ஒடுக்கப்படும் தேசிய இனங்கள், மதப்
பிரிவுகள், குட்டி முதலாளிகள், அறிவுஜீவிகள்
எனப் பலரும் அவரவர் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக அணி திரள்வர். இத்தகைய போராட்டங்களின்
வலுவான தோழராக தொழிலாளி வர்க்கம் நிற்க வேண்டும், இத்தகைய பிரச்னைகளைக் கையில் எடுப்பவராகவும்
தொழிலாளி வர்க்கம் திகழ வேண்டும். ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான போராட்டத்தில் இது
முக்கியமானது.
அதே சமயம் ஆளும் வர்க்கங்களுக்கு
எதிரான சமரசமற்ற போராட்டத்தை அனைத்துப் பரிமாணங்களிலும் தொழிலாளி வர்க்கத் தலைமையே
நடத்த முடியும். குறிப்பான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் அமைப்புகள், குழுக்கள்,
சமூகப் பிரிவுகள் அவ்வொடுக்குமுறையைத் தவிர
இதர விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் ஒரு தேசிய
இனமோ, சமூகப் பிரிவோ, இவர்கள் மீதான ஒடுக்குமுறை இவர்களை ஒன்றிணைப்பதைக் காட்டிலும்,
இவர்களுக்கிடையே உள்ள வர்க்க முரண்பாடுகளே பல முடிவுகளைத் தீர்மானிக்கும். அரசியல்
மற்றும் சமூக முறைமையை முழுமையாக ஜனநாயகப்படுத்தும் கடமையைத் தொழிலாளி வர்க்கமே செய்ய
முடியும். இந்நிலைபாட்டில் ஒரு நீடித்த தன்மையும் தொழிலாளி வர்க்கத்துக்கே இருக்க முடியும்.
தொழிலாளி வர்க்கக் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியின் தோழர்கள் இதைப் புரிந்து கொள்ள
வேண்டும் என்று தோழர் லெனின் விரிவாக விளக்குகிறார்.
இந்தப் பின்புலத்தில், சமூக ஒடுக்குமுறையையும்,
வர்க்க சுரண்டலையும் இந்திய சூழலில் ஒருங்கிணைத்துப் பார்ப்பது கூடுதல் தெளிவை அளிக்கும்.
சமூக நீதி குறித்த பிரச்னைகளில் தலையிடுவதன் முக்கியத்துவம் குறித்து மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகளில், கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஒரு சில மாநிலங்களில் முன்னேற்றம் உண்டு. வேறு சில மாநிலங்கள் இன்னும் துவக்க நிலையில்
நீடிக்கின்றன. இதில் முறிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு
வருகின்றன. சமூக பிரச்னைகள் குறித்த நமது பணிகளை மேற்கொள்ளும்
போது, அடையாள அரசியலைப் பின்பற்றும் சமூக அமைப்புகள்,
தனிநபர்களோடு கூட்டாக செயல்பட நேரிடுகிறது. இந்த அனுபவத்தின் வாயிலாகப் பல கேள்விகளும்
எழுகின்றன. இவை பிரதானமாக சமூக நீதியின் தன்மை, இதில் ஒரு புரட்சிகர இயக்கத்தின் பாத்திரம்
தொடர்பானவை.
ஒரு புறத்தில் சமூகப் பிரச்னைகளில்
தலையீடு செய்வது வர்க்க போராட்டத்திலிருந்து திசை திருப்பும், வர்க்க இயக்கத்தை பலவீனப்படுத்தும்
என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. மறு புறம்,
தற்கால இந்தியாவில் தொடர்ந்து நீடித்து வரும் சாதிய அமைப்பு, அதனுடன் தொடர்புடைய ஒடுக்குமுறை
ஆகியவற்றின் பின்னணியில் கட்சியின் பிரதான அரசியல் செயல்பாடு சமூக நீதி குறித்ததாக
இருக்க வேண்டும் என்ற கருத்து வருகிறது.
சமூக
நீதி, வர்க்க போராட்டத்தை திசை திருப்புமா?
சாதிய பிரச்னைக்கு நீண்டதொரு வரலாறு
இருக்கிறது. இது முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக அமைப்புகளிலேயே வேர் பிடித்து நின்றதாகும்.
மற்ற பல நாடுகளில் நடந்ததைப் போல், இந்தியாவில் முந்தைய சமூக அமைப்பை முற்றிலும் தகர்த்து
முதலாளித்துவம் நிறுவப்படவில்லை எனக் கட்சி திட்டம் சுட்டிக்காட்டுகிறது. நிலப்பிரபுத்துவத்தோடும்,
அதனுடன் இணைந்து நின்ற சாதிய அமைப்போடும் சமரசம் செய்து கொண்ட முதலாளித்துவம், சாதிய வேறுபாடுகளை வளர்த்து விட்டு, அதைத் தன் சுரண்டலுக்கு
சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. சமூக ஒடுக்குமுறையின் கூர்முனையை சந்திக்கும் தலித்
மக்களில் பெரும்பாலோர் உழைக்கும் வர்க்கமாக இருக்கின்றனர். அதாவது வர்க்க சுரண்டலைக்
கூடுதலாக சந்திக்கும் பகுதியினராகவும் இருக்கின்றனர். இந்நிலையில், சாதிய அமைப்பு முறைமை
மற்றும் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக ஒற்றுமையைக் கட்டுவது, வர்க்க ஒற்றுமைக்கான
முன்நிபந்தனையாகும். சாதிய அமைப்பை ஒழிப்பதும்,
அனைத்து வித சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடுவதும், மக்கள் ஜனநாயகப் புரட்சியின்
முக்கியமானதொரு பகுதி ஆகும். இவ்வாறாக, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது
வர்க்க சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தோடு பின்னிப் பிணைந்தது எனக் கட்சி திட்டத்தின் பாரா 5.12 அழுத்தமாகக் கூறுகிறது. சமூக நீதிக்குக் குரல் கொடுப்பது, திட்டம் சார்ந்த
நிலைபாடாகும். அது வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். எனவே, சமூக ஒடுக்குமுறை
பிரச்னைகளில் தலையீடு செய்வது வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கும் என்பது கட்சியின் திட்டத்தைப்
புரிந்து கொள்ளாததன் வெளிப்பாடே.
மூன்று வகைகளில் இந்த விஷயம் குறித்து,
கட்சித் திட்டம் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. ஒன்று, சாதிய அமைப்புக்கு எதிராகவும்,
தலித்துகள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடுவதென்பது உழைக்கும் மக்களின் வர்க்க
ஒற்றுமையை வளர்த்தெடுப்பதற்கு மிகவும் அத்தியாவசியமானதாகும். இரண்டாவது, சமூக ஒடுக்குமுறையை
எதிர்த்துப்போராடுவது என்பது புரட்சிகர நடவடிக்கையின் மிக முக்கியமானதொரு பகுதியாகும்.
மூன்றாவதாக, வர்க்க சுரண்டலுக்கு எதிரான போராட்டமும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான
போராட்டமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததாகும். எனவே, சமூகப் பிரச்னைகளின் முக்கியத்துவத்தை
புறக்கணித்தோ, ஒதுக்கித் தள்ளியோ, நிராகரித்தோ, குறைத்து மதிப்பிட்டோ வர்க்க ஒற்றுமையைக்
கட்டவும் முடியாது, வர்க்க போராட்டத்தை வளர்த்தெடுக்கவும் முடியாது.
இந்தப் புரிதல், கட்சி வகுப்புகளில்
பேசுவதற்கும், கேட்பதற்குமானது மட்டுமல்ல, நடைமுறை சார்ந்தது. இதற்கென தமிழகத்தில்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைக்கப்பட்டு, அது, சமூக ஒடுக்குமுறை பிரச்னைகளைக் கையிலெடுத்தால்
கடமை முடிந்து விடும் என்று எண்ணி விடக்கூடாது. 3 விதமான அணுகுமுறை மேற்கொள்ளப்பட வேண்டும்.
உழைக்கும் வர்க்கத்தைச்
சார்ந்தவர்களிடம் சாதி, பாலினம், வகுப்புவாதம் மற்றும் இதர பாகுபாடுகளுக்கு எதிராக
தொடர்ச்சியான தத்துவார்த்த போராட்டம் நடத்தப்பட வேண்டும். தலைமையின் கண்ணோட்டம், அவ்வமைப்பை
சார்ந்த உறுப்பினர்கள் அத்தனை பேரின் கண்ணோட்டமாகவும் இருப்பதில்லை. இது உருவாக்கப்பட
வேண்டும்.
வர்க்க ஒற்றுமைக்கு
எதிரான சமூக பாகுபாடுகளைக் கடைப்பிடிப்பதை விட்டு அவர்கள் விலகும் வகையில் சமூக சீர்திருத்த
முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அனைத்து வர்க்க வெகுஜன
அமைப்புகளும் ஆளும் வர்க்கங்களால் கட்டவிழ்த்து விடப்படும் சமூக ஒடுக்குமுறை சார்ந்த
பிரச்னைகளில் (நேரடியாகவும் இருக்கலாம் அல்லது ஒடுக்குமுறைக்குக் களம் அமைத்துக் கொடுக்கும்
கொள்கை அல்லது நடவடிக்கையாக இருக்கலாம்) கவனம் செலுத்த வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூக
பிரிவினரின் ஜனநாயக உரிமைகளுக்காக நடக்கும் போராட்டங்கள் மற்றும் கூட்டு மேடைகளில்
இணைய வேண்டும்.
அரசியல்
நடைமுறையின் குவிமையமாக சமூக நீதி இருக்க வேண்டுமா?
சுரண்டப்படும் வர்க்கங்களின், ஒடுக்கப்படும்
சமூகப்பிரிவினரின் முழுமையான விடுதலை தான்
உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும். ஆனால்
இன்றைய சூழலில், சமூக நீதி என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது.
அதாவது, ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு,
பிரதிநிதித்துவம், அங்கீகாரம், சமமாக நடத்துதல் போன்றவற்றைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
இக்கோரிக்கைகளுக்காகப் போராடுவது வர்க்கப்
போராட்டத்தின் ஒரு முக்கிய பகுதி. ஆனால் பிரதான நிகழ்ச்சி நிரலாக சமூக நீதி இருக்க
வேண்டும் என்ற கருத்து, அது வர்க்கப் போராட்டத்தின் முக்கிய பகுதி என்பதைக் காட்டிலும் முழுமையே அது தான் என்ற பொருள்படுகிறது. மேற்கூறிய அம்சங்களுடனான சமூக நீதி, சமூகத்தின் அனைத்து
அம்சங்களையும் உள்ளடக்கியதாக எப்படி ஆகமுடியும்? வர்க்க சுரண்டல் குறித்த பிரச்னைகளுக்கு
இடம் எங்கே? ஒடுக்கப்படும் சாதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் விடுதலை கிடைத்து விடுமா?
வர்க்கத்திரட்டல் தேவையில்லையா? சாதிகளுக்குள் இருக்கும் வர்க்க முரண்பாட்டை எதில்
சேர்ப்பது? இது வர்க்கத்துக்கும் சமூகப் பிரிவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கணக்கில்
எடுப்பதாக இல்லை. ஒடுக்குமுறையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் விடுதலை அளிப்பதில்
தொழிலாளி வர்க்கத்தின் பாத்திரத்தைப் புறம் தள்ளுவதாக இருக்கிறது.
சமூக நீதிக்கான போராட்டம், வர்க்க
போராட்டத்தின் ஜனநாயக அம்சத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்று தான் கூறமுடியும்.
வர்க்க போராட்டத்தின் சோஷலிச பகுதியை இது பிரதிநிதித்துவம் செய்ய இயலாது. இரண்டுக்கும்
உள்ள வேறுபாட்டை மங்கச் செய்து, தெளிவற்றதாக்கி
அனைத்தையும் சமூக நீதிக்குள் உள்ளிழுத்துக் கொள்வது வர்க்க பிரச்னைகளையும், வர்க்க
அமைப்புகளையும் புறக்கணிப்பதாகும். இது, வர்க்க அரசியலைக் கைவிட்டு, அடையாள அரசியல்
முழக்கங்களை எவ்வித விமர்சனமும் இன்றி ஏற்றுக் கொள்வதற்கே வழி வகுக்கும்.
தொழிலாளி வர்க்கத்தின் விடுதலையே
உண்மையான, முழுமையான சமூக நீதியை சாத்தியமாக்கும். மார்க்சிஸ்ட் கட்சி முன்வைக்கும்
மக்கள் ஜனநாயகமானது சமூக நீதியையும் உள்ளடக்கியது. ஆனால் மேற்கூறிய புரிதல், மக்கள்
ஜனநாயகம் என்ற கோஷத்துக்கு மாறாக சமூக நீதி என்ற கோஷத்தைப் பிரதானப்படுத்துகிற தவறுக்கு
இட்டுச் செல்லும். சமூக நீதிக்கு மட்டும் அழுத்தம் தருபவர்கள் சமூக அமைப்புகளையும்,
வர்க்க அமைப்புகளையும் ஒரே தட்டில் வைக்க முயல்கின்றனர். இவற்றுக்கு இடையில் உள்ள பண்பு
ரீதியான வேறுபாடுகளை அங்கீகரிக்கத் தவறுகின்றனர். வர்க்க அமைப்புகள் வர்க்கத் திரட்டலுக்காக
அமைக்கப்பட்டவை. புரட்சிகர இயக்கத்தில் இவற்றுக்கு சிறப்பானதொரு இடமும், பங்கும் உண்டு.
முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சுரண்டல் எதிர்ப்பு இவற்றின் நிகழ்ச்சி நிரலில் உள்ளன.
சாதி மதம் கடந்த வர்க்க ஒற்றுமை இதன் அடிப்படை.
ஆனால் சமூக அமைப்புகள் குறிப்பாக
சாதி, மத அடிப்படையில் செயல்படும் அமைப்புகள் வளர்த்தெடுக்கும் ஒற்றுமை என்பது ஒரு
சமூகக்குழு என்ற அடிப்படையைக் கொண்டதாகும். அவற்றால் தன்னெழுச்சியாக உருவாக்கப்படும்
உணர்வும் கூட அந்த அடையாளத்தின் அடிப்படையிலேயே இருக்கும். ஒரு சமூகக் குழுவின் பிரச்னை
என்னும் போது அக்குழுவிற்குள் நிலவும் வர்க்க வேறுபாடுகளும், சுரண்டல்களும் இதன் வரையறைக்குள்
வராது. சமூக ரீதியாகப் பின்தங்கிய பிற்பட்ட வகுப்பினரில் கணிசமானோர் பெரும் வசதி படைத்தவர்கள்,
தம் சமூகத்தில் உள்ள ஏழைகளை சுரண்டக் கூடியவர்கள். சிறுபான்மையினரும் அப்படித் தான்.
சமூகப்பிரிவு என்பதை மட்டும் வைத்துப் பார்த்தால், வர்க்க வித்தியாசங்களைப் புறம் தள்ளும்
நிலை தான் ஏற்படும். இத்தகைய அமைப்புகள், மார்க்சிஸ்ட் கட்சி வழி காட்டும் அமைப்பாக
இருந்தாலும், அமைப்பின் உள்ளார்ந்த தன்மையில் பெரிய வேறுபாடு எதுவும் வந்து விடாது.
பாதிக்கப்படும் சமூகக் குழு என்ற அடிப்படையிலேயே அதன் செயல்பாடு அமையும். இதில் மாற்றம்
காண விரும்பினால், சமூகப் பிரச்னைகளை சுயேச்சையாக எடுப்பதும், இப்பகுதியினரின் உண்மையான,
ஜனநாயக பூர்வமான கோரிக்கைகள் மீதான கூட்டு மேடைகளில் ஒருங்கிணைந்து பணியாற்றுவதும்
இதன் மூலம், வர்க்க ஒற்றுமைக்கு எதிரான நடவடிக்கைகளை யாராவது முன்னெடுக்கும் போது அவற்றை
விழிப்போடு அம்பலப்படுத்துவதும் தேவை. சாதி என்கிற அடையாளத்துக்குள்ளேயே நிறுத்தாமல்,
பொது ஜனநாயக நீரோட்டத்தில் இவர்களை இணைக்க வேண்டும். அனைத்து சுரண்டல்களுக்கும், அநீதிகளுக்கும்
காரணமான முதலாளித்துவ சமூக அமைப்பை நொறுக்கும் அரசியலில் இறக்க வேண்டும். இதற்குள்
செயல்படும் கம்யூனிஸ்டுகள் அடையாள அரசியலின் செல்வாக்கில் சிக்கி விடக் கூடாது. வர்க்க
பார்வையை விட்டு விடக் கூடாது. வர்க்க போராட்டத்தின் சோஷலிச அம்சத்தை மேற்கொள்வதில்
வர்க்க அமைப்புகளின் இடத்தை சமூக அமைப்புகள் பெற்று விட முடியாது. எனவே சமூக நீதி புரட்சிகர
இயக்கத்தின் அரசியல் நடைமுறையின் பிரதான நிகழ்ச்சி நிரலாக இருக்க முடியாது.
ஒட்டு
மொத்த சுரண்டலுக்கு எதிராக:
சாதி ஒழிப்பு நடக்க வேண்டும் என்றால்
மனமாற்றம் மட்டுமே போதாது. சாதி முறைமை நீடிப்பதற்கு
உகந்ததாக இருக்கக் கூடிய பவுதீக சூழல் மாற வேண்டும். மனமாற்றத்துக்கும் அது தான் களம்
அமைக்கும். பவுதீக சூழல் மாறுவது என்பது பொருளாதார சுரண்டலை ஒழிப்பதுடன் தொடர்புடையது.
கிராமப்புறங்களில் தீவிர நில சீர்திருத்தத்துடன் இணைந்தது. முழுமையான நில சீர்திருத்தமே
சாதி ஒழிப்புக்கான பவுதீக சூழலை ஏற்படுத்தும். பெருவாரியானோர் விவசாய தொழிலாளர்கள்
என்னும் போது, அவர்களது உணவு பாதுகாப்பு போன்ற பிரச்னைகள், விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டால்
இழப்பீடு ஆகியவற்றுக்கும் குரல் கொடுக்க வேண்டும். முறையான வேளாண் கொள்கைக்குப் போராட
வேண்டும். நிலம், கூலி, உணவு என்ற மூன்று அடிப்படையான பிரச்னைகளும் பவுதீக சூழலின்
முக்கிய பகுதிகள். இவையெல்லாமே கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருக்கும் முதலாளித்துவ
நிலப்பிரபுத்துவ ஆட்சியில் சாத்தியமில்லை.
பொதுவாக சமூக நீதிக்குக் குரல்
கொடுப்பவர் அனைவரும், மேற்கூறிய அதன் சகல பரிமாணங்களிலும்
முன்னுக்கு வரும் பிரச்னைகளில் தலையீடு செய்ய வந்து விட மாட்டார்கள். குறிப்பாக முதலாளித்துவ
கட்சிகள் இத்தகைய ஒட்டு மொத்தக் கண்ணோட்டத்தோடு செயல்பட முடியாது. அவர்கள் எந்த வர்க்கத்தின்
அரசியல் பிரதிநிதியோ, அவர்களின் நலன் சார்ந்தே நிலைபாடு எடுப்பார்கள். அடையாள அரசியல்
சார்ந்து செயல்படும் அமைப்புகள், குழுக்கள், தனிநபர்களும் சில குறிப்பான பாகுபாடுகளை
எடுப்பார்களே தவிர, பாகுபாடுகளின் மூலாதாரம், அதற்குக் காரணமாக இருக்கக் கூடிய நவீன
தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில், அதன் ஊற்றாக இருக்கக் கூடிய சர்வதேச
நிதி மூலதனம், ஏகாதிபத்திய எதிர்ப்பில் பொதுவாக உறுதி பட நின்று விடமாட்டார்கள்.
பகுதி பகுதியாகப் பார்த்து ஒட்டு
மொத்தத்தைத் தவற விடக் கூடாது. ஒட்டுமொத்தம் என்ற பெயரில் பகுதிகளின் பிரத்தியேக பிரச்னைகளை
ஒதுக்கி விடவும் கூடாது. பகுதிகளின் பிரத்தியேக பிரச்னைகளை, ஜனநாயக உரிமை மறுக்கப்படுவதைக்
கையில் எடுப்பதற்கான ஒற்றுமையைக் கட்டுவதன் மூலம், ஒட்டுமொத்த சுரண்டும் காரணிகளுக்கு
எதிரான போராட்டமாக அதை மாற்ற வேண்டும். சமூக பிரச்னைகளில் தலையீடு செய்வதில் சில மாநிலங்களில்
இன்று கட்சிக்கு இருக்கும் பலவீனத்தைக் களைவது என்ற பெயரில், அடையாள அரசியலைத் தழுவுவது
என்ற அடுத்த எல்லைக்குப் போய் விடக் கூடாது.
சமூக நீதி பிரச்னையை ஒரு ஜனநாயக பிரச்னையாகப் பார்ப்பதால் தான், தீண்டாமை
போன்ற ஒடுக்குமுறையை எதிர்ப்பதில், தலித்துகள் மட்டும் திரட்டப்பட்டால் போதாது, அனைத்து
சாதிகளிலும் உள்ள ஜனநாயக சக்திகள் திரள வேண்டும் என்ற கருத்தியல் மார்க்சிஸ்ட் கட்சியால்
முன்வைக்கப்படுகிறது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அத்தகைய பார்வையுடன் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கண்ணோட்டத்தில் வர்க்க ஒற்றுமையும் அடங்கியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சாதியில்
உள்ள ஆதிக்க சக்திகளைத் தனிமைப்படுத்தி எதிர்க்க வேண்டும், ஒட்டு மொத்த சாதியை ஆதிக்க
சாதி என்று வரையறுப்பது அதில் உள்ள உழைப்பாளி வர்க்கங்களையும் தள்ளி விடுவதாக அமையும்.
பிற்பட்ட பிரிவினரில் நிலவும் வர்க்க முரண்பாடுகளைக் கணக்கிலெடுத்து இட ஒதுக்கீட்டை
அணுக வேண்டும் என்பது கூட வர்க்க நலன் முன்னுக்கு நிறுத்தப்படும் அணுகுமுறையாகும்.
சமூக
சீர்திருத்தவாதிகள் மற்றும் பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சமூக நீதி
பங்களிப்பு குறித்த அணுகுமுறை என்னவாக இருக்க வேண்டும்?
இப்பகுதி விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய பகுதி. சுருக்கமாக
சொல்ல வேண்டுமானால், சமூக சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பு இந்திய சமூகத்தில் சில முக்கிய
மாற்றங்களை ஏற்படுத்த உதவியிருக்கிறது. அவை போற்றப்பட வேண்டும். அவர்களின் பாரம்பரியத்தை
முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தில் பெரியார் அவர்கள் முன்வைத்த சமூக நீதி கோட்பாடுகள்
மற்றும் அம்பேத்கர் அவர்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியவை
என்பதில் சந்தேகமே இல்லை. ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நலனுக்காக இடைவிடாது போராடிய போர்வீரர்கள்
அவர்கள். சமூக நீதிக்கான போராட்டத்தில் கூட்டாளிகளாக இருக்கக் கூடிய தீவிர ஜனநாயகவாதிகளாகவே
முற்போக்கு அம்பேத்கரியவாதிகளை, பெரியாரிஸ்டுகளையும் நாம் கருத வேண்டும். ஆனால் அம்பேத்கரியத்துக்கும்
மார்க்சியத்துக்கும் இடையில் பெரிதாக வேறுபாடு இல்லை, இருப்பதும் சிறு சிறு மேலெழுந்தவாரியான
வித்தியாசங்களே என்ற கருத்தும், இந்தியாவிற்கு மார்க்சியம் மட்டுமே போதாது என்ற கருத்தும்,
அம்பேத்கரியமும் மார்க்சியமும் இணக்கம் காண முடியும் என்ற கருத்தும் பொதுவாக முன்வைக்கப்படுகின்றன.
பெரியாரியத்துடனும் இவ்வாறே மார்க்சியம் ஒப்பு நோக்கப்படுகிறது. இவற்றை ஏற்பதற்கில்லை.
மார்க்சியம் என்பது முதலாளித்துவ அமைப்பை உடைத்து நொறுக்க விரும்பும் தொழிலாளி வர்க்கத்தின்
புரட்சிகர தத்துவமாகும். அம்பேகரியம் சாதிய அமைப்பின் மீது தீவிர தாக்குதலைத் தொடுக்கிறது,
சில அரசியல் பொருளாதார பிரச்னைகளில் முற்போக்கு நிலைபாட்டைக் கொண்டதாக இருக்கிறது,
ஆனால் முதலாளித்துவத்தை எதிர்க்கும், தகர்க்கும் ஆயுதமாக அது இல்லை. இன்றைய முதலாளித்துவ
நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் சாதி ஒழிப்பை நிறைவேற்ற முடியாது. ஒரு வேளை வாதத்துக்காக
முடியும், சாதி ஒழிந்து விடுகிறது என்றே வைத்துக் கொள்வோம். சாதி ஒழிந்தால் போதும்
என்றால், பிறகு முதலாளித்துவத்தை எதற்கு எதிர்க்க வேண்டும்? எனவே அம்பேத்கரியம் முதலாளித்துவ
அமைப்புக்குள்ளேயே நின்று தான் சாதி ஒழிப்புக்கான சீர்திருத்தங்களை முன்வைக்கிறது.
ஒட்டு மொத்த வர்க்க சுரண்டலுக்கு இதில் தீர்வு இல்லை. எனவே தத்துவம் என்ற முறையில்
மார்க்சியமும் அம்பேதக்ரியமும் வேறுவேறானவை.
இந்தப்
பின்னணியில் சிவப்பு – நீலம் ஒற்றுமை, ஜெய் பீம்-லால் சலாம் போன்ற கோஷங்களை எப்படிப்
பார்ப்பது?
சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான இடதுசாரிகள்
மற்றும் தலித்திய அமைப்புகளின் கூட்டு இயக்கங்களுக்கான கோஷங்கள் என்ற முறையில் இவற்றை
முன்வைக்கலாம். ஆனால் இடதுசாரி-தலித் ஒற்றுமை
என்பதை அரசியல் உத்தி அல்லது அரசியல் முன்னணிக்கான அடிப்படையாக மாற்றி விட முடியாது.
ஏனெனில் இந்த ஒற்றுமை மட்டும் புரட்சிக்கான அணி சேர்க்கைக்குப் போதாது. அனைத்து சாதி,
மத சமூகப்பிரிவுகளில் இருக்கும் உழைப்பாளி மக்களின் ஒற்றுமையும் தேவை. இடது ஜனநாயக அணி என்பதற்குள் வர வேண்டிய ஒடுக்கப்பட்ட
சமூகப் பிரிவினர் என்ற முறையில் இத்தகைய சக்திகளை நாம் அரவணைக்க வேண்டும். இதில் வர
வேண்டிய பிரிவுகள் மேலும் பல உண்டு. வர்க்க
சேர்க்கையில் புரட்சிகர சக்திகளுக்கு சாதகமான மாற்றம் ஏற்படுவதே புரட்சிக்கு இட்டுச்செல்லும்
முக்கிய காரணியாகும். வர்க்கத் திரட்டல் என்ற அடிப்படையான கடமைக்கு பதிலியாக வேறு எதையும்
நிறுத்த முடியாது.
இந்தியாவில் முதலாளித்துவம் – தொழிலாளி
வர்க்கம் என்ற இரண்டு நவீன வர்க்கங்கள் சாதிய படிநிலைகளால் ஏற்கனவே பிளவுபட்டுள்ள சமூக
அமைப்பின் மீதே உருவாகியிருக்கின்றன. எனவே சமூக ஒடுக்குமுறையா அல்லது வர்க்க சுரண்டலா
என்று இரண்டையும் எதிரும் புதிருமாக நிறுத்தக் கூடாது. இரண்டும் பின்னிப்பிணைந்துள்ளன,
ஒன்றின் மீது ஒன்றாகப் படிந்துள்ளன. பல்வேறு சாதிகள், சமூகப்பிரிவுகளிலிருந்து வருபவர்களே
உழைக்கும் வர்க்கத்தின் பகுதியினராக இருக்கிறார்கள். ஏற்கனவே சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளும்,
புதிதாகத் தொழிலாளி வர்க்கத்துக்குள்ளே வந்து சேருபவர்கள் கொண்டு வரும் பாகுபாடான பிற்போக்கு
பழக்க வழக்கங்களும் வர்க்க ஒற்றுமையை வளர்த்தெடுப்பதை சிக்கலாக்கி விடுகிறது. மறுபுறம்
முதலாளித்துவ சக்திகளும், அடையாள அரசியல்வாதிகளும் வாக்கு வங்கி அரசியலுக்காக இந்த
அடையாளங்களைத் திட்டமிட்டு பயன்படுத்துகிறார்கள். சாதியின் வரம்புக்குள்ளேயே அவர்களை
அடக்கி வைத்து, பொதுவான ஜனநாயக இயக்கத்தின் பகுதியாக அவர்கள் மாறிவிடாமல் கவனமாகப்
பார்த்துக் கொள்கிறார்கள். பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்பதை விட, அரசியல் சுய லாபத்துக்கு
இப்பிரச்னைகளைப் பயன்படுத்துவது என்பது அதிகரித்து வருகிறது.
கருத்துக்களுக்கும், வாதங்களுக்கும்
பதில் வாதங்களை வைப்பதற்கு பதிலாக, சொல்லுபவர் சாதி மட்டுமே ஏற்புக்கும் நிராகரிப்புக்குமான
பதில்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது அடையாள அரசியலின் ஒரு பகுதி தான். இதன் படி
பார்த்தால் பிரதமர் பிற்பட்ட சாதியாகவும், குடியரசு தலைவர் தலித்தாகவும், கட்சியின்
முக்கிய பொறுப்பில் சிறுபான்மை வகுப்பாரும், பாதுகாப்பு துறை அமைச்சராகப் பெண்ணும்
உள்ள பாஜக ஆட்சி சிறந்தது என்ற முடிவுக்குத் தான் போக வேண்டியிருக்கும்.
இச்சூழலில் வர்க்க போராட்டத்தின்
ஜனநாயக உள்ளடக்கம், சோஷலிச உள்ளடக்கம் இரண்டின் முக்கியத்துவத்தையும், முதலாளித்துவ
கட்சிகள், சமூகக் குழுக்கள், பிரிவுகள் எப்படி இப்புரிதலில் இருந்து வேறுபட்டு, அடையாள
அரசியலின் பக்கம் நிற்கிறார்கள் என்பதையும் புரிந்து கொண்டு, சமூக ஒடுக்குமுறை மற்றும்
வர்க்க சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை வர்க்கப் பார்வையுடன் ஒருங்கிணைத்து நடத்த
வேண்டியது அவசியம்.
பிப்ரவரி மாத தமிழ் மார்க்சிஸ்ட் இதழில் மத்திய மோடி அரசின் மோசடி பட்ஜெட்
பற்றி விரிவாக பரிசீலித்தோம். அடுத்து இக்கட்டுரையில்
தமிழக அரசின் 2019-2020 நிதியாண்டிற்கான பட்ஜெட் பற்றி பார்ப்போம்.
2௦11 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து அதிமுக தலைமையிலான மாநில அரசு தமிழகத்தில்
ஆட்சி புரிந்து வருகிறது. கிட்டத்தட்ட கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசும், எட்டு ஆண்டுகளாக மாநில அதிமுக அரசும் பின்பற்றிவரும்
பொருளாதாரக் கொள்கைகளால் தமிழக மக்கள்
தொடர்ந்து பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மத்திய – மாநில அரசுகளின் கொள்கைகளால் இந்தியப் பொருளாதாரமும், தமிழகப் பொருளாதாரமும் நிலைகுலைந்து உள்ளன. இரு அரசுகளும்
பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக தம்பட்டம் அடித்துக்கொண்டாலும், இதனை
நியாயப்படுத்தும் முயற்சியில் நம்பகத்தன்மையற்ற புள்ளிவிவரங்களை அள்ளி வீசினாலும், மக்களின் வாழ்க்கை அனுபவம் அரசு கூறும் வளர்ச்சியை பிரதிபலிக்கவில்லை. மாறாக,
பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் குளறுபடிமிக்க ஜி எஸ் டி வரி அமலாக்கமும் முறைசாராத் துறைகளில் பெரும் சீர்குலைவை
ஏற்படுத்தியுள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்க்கத் திராணியற்றதாக மாநில அரசு
உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே தமிழக விவசாயிகளும் கிராமப்புற
தொழிலாளிகளும் நகர்ப்புற உழைக்கும் மக்களும் காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக
அறிவிக்க வேண்டும்; விவசாயிகளின்
விளைபொருளுக்கு சாமிநாதன் கமிஷனின் பரிந்துரைப்படி கட்டுபடியாகும் விலை
உறுதிப்படுத்தப்படவேண்டும்; தொடர்ந்து மக்களை
வாட்டிவதைக்கும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம்
அளிக்கப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட
கோரிக்கைகளை முன்வைத்து, இரு
அரசுகளுக்கும் எதிராக வலுவான போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். இத்தகைய சூழலில்தான்,
மக்களவைக்கும் 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால்
திடீரென்று மக்கள் மீது கரிசனம் காட்டுவதுபோல் இரு அரசுகளும் தங்கள் பட்ஜெட்டுகளில்
நடித்துள்ளனர்.
மத்திய அரசின் அடிவருடியாக மாநில அரசு
ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு (2019) மார்ச் மாத
துவக்கத்தில் வெளியிட்டுள்ள இந்திய மாநிலங்கள் பற்றிய புள்ளிவிவரக் கையேடு (Handbook of Statistics of Indian States)தமிழகத்தின் மாநில தனிநபர் நிகர உற்பத்தி (per capita net state domestic product) குறித்த விவரங்களை தந்துள்ளது. இதன்படி 2௦11 –
12 இல் இது ரூ 92,984 ஆக இருந்தது. இத்தொகை
2017-18 இல் ரூ 1,26,179 ஆக இருந்தது. நிதி அமைச்சர்
பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் தமிழ் நாட்டின் சராசரி தலா வருமானம் 2011-12 இல் ரூ 1,03,600 ஆக இருந்ததாகவும் 2017-18 இல் ரூ 1,42,267 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறுகிறார். பன்னீர்செல்வம் கணக்கு ரிசர்வ் வங்கி
கணக்கிற்கு சற்று வேறுபட்டு உள்ளது. ஆனால் அதுவல்ல முக்கிய பிரச்சினை. இந்த சராசரி
கணக்கு என்பதே ஒரு ஏமாற்று வேலை என்பதை
நாம் புரிந்துகொள்ள வேண்டும். சராசரி மாநில தலா வருமானம் ஆறு ஆண்டுகளில் சுமார் 35
சதவீதம் அதிகரித்துள்ளது என்பதன் பொருள் சராசரி தமிழரின்
வருமானம் அவ்வாறு உயர்ந்தது என்பது அல்ல. உண்மையில், மாநில வருமானத்தின்
பெரும்பகுதி ஒரு சிறிய பகுதி செல்வந்தர்களை – குறிப்பாக பெருமுதலாளிகளையும்,
கிராமப்புற செல்வந்தர்களையும் – சென்றடைகிறது. உழைப்பாளி மக்கள் தங்கள் உழைப்பால்
உருவாக்கும் செல்வத்தில் ஒரு பகுதி மட்டுமே அவர்களுக்கு கூலியாக, சம்பளமாக, இதர
உழைப்புசார் வருமானமாக வந்து சேருகிறது. உபரிகள் செல்வந்தர்களுக்கு செல்கிறது.
இதுதான் இந்தியாவிலும் நடக்கிறது, தமிழ்நாட்டிலும் நடக்கிறது. இப்படி தங்கள்
கொள்கைகளால் செல்வந்தர்களுக்கு சேவை செய்துவிட்டு, தேர்தல் வருவதையொட்டி மத்திய
பட்ஜெட்டை போலவே மக்களுக்கு சில ரொட்டித் துண்டுகளை வீசுகிறது மாநில அரசு. பட்ஜெட்
முன்வைக்கும் மொத்த ஒதுக்கீட்டிலோ, துறைவாரி ஒதுக்கீட்டிலோ, குறிப்பிடத்தக்க
முன்னேற்றம் ஏதும் இல்லை. இதற்கு ஒரு காரணம், மத்திய மாநில நிதி உறவுகளின் தன்மை.
ஜி எஸ் டி அமலாக்கம் மாநிலங்களின் சுயேச்சையான வரிக்கொள்கை என்ற பேச்சுக்கே இடம்
கொடுக்கவில்லை. முன்பு மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்த பல வரி இனங்கள் ஜி எஸ்
டி கவுன்சிலின் அதிகாரத்திற்கு விடப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல், புகையிலை மற்றும் சாராயத்தின் மீதான மாநில எக்சைஸ்
வரிகள் மட்டுமே மாநில அரசின் கையில் உள்ளன. மாநில அரசுகளின் வரிவிதிப்பு கொள்கை
என்ற ஒன்று கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது.
வழிகாட்டும் கேரளா
நிதி அதிகாரங்களை மைய அரசிடம் குவிக்கும் கொள்கையை தீவிரமாக
அமலாக்கி வரும் பாஜக ஆட்சியில் மத்திய
அரசிடம் மண்டியிட்டு நிற்கும் நிலையை நோக்கி மாநில அரசுகள் தள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கேரள அரசு மத்திய அரசின் இந்த கொள்கைகளை எதிர்ப்பதோடு, பிற
மாநிலங்களையும் கூட்டு போராட்டத்திற்கு அழைத்து, இணைத்து வருகிறது. ஆனால் தமிழக
அரசு, பதினைந்தாம் நிதிக்குழுவின் மோசமான பணி வரையறைகளை (terms of reference) எதிர்த்துக்
கூட வாய் திறக்க தயாராக இல்லை; கேரள அரசின் அழைப்பையும் கண்டுகொள்ளவில்லை.
குறைந்தபட்ச
அதிகார வரம்புகளால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தனது மாநில பட்ஜட் மூலம் கேரள அரசு
மக்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது. மாநில பொதுத்துறை நிறுவனங்களை சீரமைத்து லாபம்
ஈட்ட வைத்துள்ளது. இடது ஜனநாயக முன்னணி அரசு 2௦16 இல் பொறுப்பேற்ற பொழுது
கேரளாவின் 4௦ மாநில பொதுத்துறை நிறுவனங்களில் எட்டு மட்டுமே லாபம் ஈட்டின. நடப்பு
நிதியாண்டிற்குள் இந்த எண்ணிக்கை 2௦ ஆகிவிடும்.
மாநில
அரசுக்கு தேவையான நிதி ஆதாரங்களை திரட்டுவதில் பல நூதனமான அணுகுமுறைகளை கேரளா அரசு
பரிசோதித்து வருகிறது, அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது. கேரளாவிற்கு வெளியே
வாழும் மலையாளிகளை புதிய கேரளம் அமைப்பதற்கான பணிகளில் ஈர்த்து இணைத்து வருகிறது.
கேரளத்தில் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், நிலைத்தகு முறையில் பயன்படுத்தவும் பட்ஜட் மூலம் முன்முயற்சிகள் அமலாக்கப்படவுள்ளன.
உள்ளாட்சி அமைப்புகளின் ஜனநாயக செயல்பாட்டை உறுதிப்படுத்தி, நிதி, அதிகாரம்,
ஊழியர்கள் என அனைத்து வழிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை புதிய
கேரளம் அமைக்கும் பணியில் முழுமையாக இணைத்து வருகிறது கேரள அரசு. இதில் பட்ஜெட்
முக்கிய பங்கு ஆற்றுகிறது. அரசு பள்ளிகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த
இரண்டு ஆண்டுகளில் மட்டும் பொதுக்கல்வி பள்ளிகளில் 2.5 லட்சம் மாணவர்கள் கூடுதலாக
பதிந்துள்ளனர். கல்வியில் தனியார் கொள்ளையையும் ஊழலையும் தடுத்து நிறுத்திட
உறுதியான நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்துவருகிறது.
மத்திய
அரசு திட்டக்குழுவையே கலைத்துவிட்டது. பெரும்பாலான மாநிலங்களும் இதனை
பின்பற்றியுள்ளன. ஆனால் கேரளாவில் திட்டமிடுதல் தொடர்கிறது. அதுமட்டுமல்ல. திட்ட
மொத்த நிதியில் தலித் மக்களுக்கான உப திட்டத்திற்கு 9.81%, பழங்குடி மக்களுக்கான உப
திட்டத்திற்கு 2.83% என்று அவ்விரு பிரிவினருக்கும் அவர்களது
மக்கள் தொகை விகிதத்தை விட கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
கேரளா
மக்கள் தொகையில் முதியோர் பங்கு 13% ஆகும்.
ஒவ்வொரு அருகமைப் பகுதிக்கும் ரூ.5,௦௦௦ ஒதுக்கப்பட்டு குடும்பஸ்ரீ திட்டம் மூலமாக
உதவி தேவைப்படும் முதியோருக்கு உதவிட
பட்ஜெட் ஏற்பாடு செய்துள்ளது.
கடும்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் அரசின் பெரும் முயற்சியாலும் மக்கள்
ஒற்றுமையாலும் மீண்டுவரும் நிலையில் கேரள பட்ஜெட் இந்த மீட்சியை முன்னெடுத்துச்
செல்ல பல முன்மொழிவுகளை கொண்டுள்ளது.
கேரள
மாநில வளர்ச்சியை மேம்படுத்த மூலதனச்செலவு கடந்த ஆண்டு அளவை விட 53%
அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்
இத்தகைய
முனைவுகள் எதுவும் இல்லாத தமிழக பட்ஜெட் கடந்த ஆண்டுகளின் கணக்குகளை அங்கொன்றும்
இங்கொன்றுமாக மாற்றி ஒரு வரவு செலவு கணக்கை சமர்ப்பித்துள்ளது. இதில் வேளாண்
நெருக்கடி தொடர்பாகவோ, வேலையின்மை தொடர்பாகவோ எந்த முனைவும் இல்லை. அரசு
மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளுக்கான வளங்களை திரட்டுவதில் முனைவுகள் இல்லை.
தமிழகத்தின் இயற்கை வளங்களை திரட்டிடவோ, உரிய தொகைக்கு அரசுக்கு சொந்தமான வளங்களை
தனியாருக்கு தற்காலிக பயன்பாட்டிற்கு ஏலம் விடுவதிலோ, மக்கள் நல நோக்கில் இருந்து
எந்த முனைவுகளும் இல்லை.
ஆளுநர்
உரைபோலவே, பட்ஜெட் உரையும் மத்திய அரசு, ஜிஎஸ்டி
உட்பட பல்வேறு இனங்களின் கீழ் மாநில அரசுக்கு தரவேண்டிய கணிசமான தொகைகளை
குறிப்பிடுகிறது. ஜி எஸ் டி யாக ரூபாய் 5,454 கோடி, ஜிஎஸ்டி நட்ட ஈடாக ரூ 455 கோடி 2017-2018க்கு மத்திய அரசிடம்
இருந்து மாநில அரசுக்கு இன்னும் வரவேண்டியுள்ளது. இந்த
தாமதம் மாநில அரசின் நிதி நிலைமையை பாதிக்கிறது என்று
பட்ஜெட் உரை குறிப்பிடுகிறது. பதினான்காம்
நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் அமலாக்கப்படுவதால் விகிதாச்சார அளவில் தமிழகத்துக்கு
மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய வரிபகிர்வு வருமானம் குறைந்துள்ளதை பட்ஜெட்
சுட்டிக்காட்டுகிறது. ஆனால் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க மறுக்கிறது.
பட்ஜெட்டின்
ஒதுக்கீடுகள் எந்தவகையிலும் வளர்ச்சிக்கு உதவவில்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு
ஊரக வளர்ச்சிக்கான ஒதுக்கீடு. கடந்த 2018-19 நிதியாண்டில் இத்துறைக்கு ரூ 17,869 கோடி , இந்த
ஆண்டு ரூ 18,274 கோடி தான். மாநில உற்பத்தி மதிப்பு
கிட்டத்தட்ட 9 % அதிகரிக்கும் என்று பட்ஜெட் குறிப்பிடுகிறது. ஆனால் கடும்
நெருக்கடியில் தமிழக ஊரகப்பகுதிகள் உள்ள நிலையிலும்கூட ஊரக வளர்ச்சிக்கு ஒதுக்கீடு
மிக சொற்பமாகவே உயர்த்தப்பட்டுள்ளது. இதேதான் வேறு பல
துறைகளுக்கும் பொருந்தும். உயர்கல்விக்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ 4,620 கோடி
ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட குறைவாக ரூ 4,584 கோடி
ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்விக்கு கடந்த ஆண்டு ரூ 27,206
கோடி. இந்த ஆண்டு ரூ 28,758 கோடி, அதாவது சுமார் 5%
உயர்வு தான்.
வரி
வருமானத்தை உயர்த்தும் வாய்ப்பு மாநிலங்களுக்கு பெரிதும் குறைந்துள்ள நிலையில் பிற
வருமான வாய்ப்புகளை தேட வேண்டியுள்ளது. ஆனால் தமிழக அரசு அத்தகைய முயற்சிகளை
செய்வதற்குப் பதில் அயல்நாட்டு முதலீட்டளர்கள் உள்நாட்டுப் பெருமுதலாளிகள் ஆகியோரை
மையப்படுத்தியே தனது கொள்கைகளை அமைத்துக் கொண்டுள்ளது. மத்திய அரசை எதிர்த்து,
ஜனநாயக அடிப்படையில் மத்திய மாநில நிதி உறவுகளை மாற்றி அமைக்க பிற மாநிலங்களுடனும்
ஜனநாயக சக்திகளுடனும் இணைந்து போராட வேண்டியுள்ளது. இதற்கும் மாநில அரசு தயாராக
இல்லை. எனவே தமிழக மக்களின் இன்னல்கள், இந்த அரசின்கீழ் தொடரவே செய்யும்.
பட்ஜட்டிற்குப் பின்
பட்ஜட்டில் விவசாயிகளுக்கும் ஏழை மக்களுக்கும்
சாதகமான முனைவுகள் இல்லாத நிலையில், பட்ஜட்டிற்குப்பின் தமிழக அரசு
வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் தருவதாக
அறிவித்துள்ளது. எந்தவிதமான திட்டமிடுதலும் ஆலோசனையும் இல்லாமல், வெறுமனே காசை விட்டெறிந்து மக்களை அவமானப்படுத்துகிற பாணியில் இந்த
நடவடிக்கை உள்ளது. மேலும், மத்தியில் உள்ள ஆளும் கட்சியைப்போலவே, வாக்காளரின்
வாக்குக்கு அரசு செலவில் காசு கொடுக்கின்றது போல்தான் இது
அமைந்துள்ளது. தற்சமயம் இத்திட்டம் அமலாக்கப்படுவதில் வெடித்துள்ள பெரும்
பிரச்சினைகளும் குழப்பங்களும் ஊழலும் அன்றாட பத்திரிகை செய்திகளாக மாறியுள்ளன.
மொத்தத்தில், விவசாயிகளின், கிராமப்புற உழைப்போரின்
நலன்களையும் கோரிக்கைகளையும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக புறந்தள்ளி
விட்டுவிட்டு,
திடீரென்று தேர்தல் நேரத்தில் காசு கொடுத்து சரிக்கட்டும் முயற்சியாகவே
தமிழக பட்ஜெட் அமைந்துள்ளது. மத்தியில் ஆளும் கட்சியும்,
மாநிலத்தில் ஆளும் கட்சியும் தேர்தல் களத்தில் இணைந்து நிற்பது போலவே மக்களுக்கு
உதவாத பட்ஜட்டுகளைப் போடுவதிலும் ஒற்றுமையாக உள்ளனர்!
மத்திய
அரசின் தலைமையில் உள்ள கட்சியும் மாநிலத்தில் ஆட்சி நடத்திவரும் கட்சியும் – பாஜகவும் அதிமுகவும் – இன்று தேர்தல்
களத்தில் இணைந்துள்ளன. மிகுந்த சந்தர்ப்ப வாதத்துடன் பாமக போன்ற கட்சிகள்
இவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளன. தேர்தல் தந்திரத்தின் பகுதியாக வாக்குகளை அரசுப்பணம்
கொடுத்து விலைக்கு வாங்கும் முயற்சியை மக்கள் கட்டாயம் முறியடிப்பார்கள். அவர்கள்
அனுபவம் மத்திய மாநில அரசின் கொள்கைகள் வேளாண் நெருக்கடியையும் வேலையின்மையையும்
தீவிரப்படுத்தியுள்ளன என்பதுதான். அவர்கள் அனுபவம் இந்த அரசுகளின் கொள்கைகளால்
கல்வியும் ஆரோக்கியமும் மக்களுக்கு எட்டாக்கனியாக ஆகியுள்ளன என்பதுதான். அவர்கள்
அனுபவம் மத்திய அரசு தமிழக மக்களுக்கு பேரிடர் ஏற்பட்டபொழுது – ஒக்கி புயலில்,
காஜா புயலில், வார்தா சூறாவளியில் –
மத்திய அரசு சொற்ப அளவிலேதான் உதவியது என்பதுதான்.
அவர்கள் அனுபவம் மாநில அரசு பேரிடர் காலத்தில் தனது கடமையை செவ்வனே
நிறைவேற்றவில்லை என்பதுதான். ஆகவே காசுக்கு வாக்குகளை
வாங்குவதற்கான பெரும் முயற்சி வெற்றி அடையாது என்பதே நமது கணிப்பு.
பாஜக தலைமையிலான மத்திய அரசு இன்னும் இரண்டே மாதங்களில்
காலாவதியாக உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடந்து புதிய அரசாங்கம் அமையும்
வரையிலான, வரும் 2019-20 நிதியாண்டின் முதல் மூன்று
மாதங்கள் வரை, அரசு நடத்துவதற்கான வரவு செலவு திட்டம்
முன்வைக்க மட்டுமே இந்த அரசுக்கு அதிகாரம்
உண்டு. இதனை ஏற்று, நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட்
மட்டுமே சமர்ப்பிக்க உள்ளோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, பின்னர் அதை மீறி 2019-20 நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை
மத்திய அரசின் சார்பாக பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் சமர்ப்பித்துள்ளார்.
நடப்பு ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திலும் மாற்றங்களை செய்துள்ளார். கொடுத்த வாக்குறுதிகளை
மீறுவதும் அவற்றை செயல்படுத்த மறுப்பதும்
பாஜகவிற்குப் புதிதல்ல.
இருபெரும்
பிரச்சினைகள்
இன்று இந்திய மக்கள் எதிர்கொள்ளும் இருபெரும் பொருளாதார பிரச்சினைகள்
தொடரும் தீவிர வேளாண் நெருக்கடியும் கடுமையான வேலையின்மையும் ஆகும். இவை பற்றி பட்ஜெட்
என்ன சொல்லுகிறது?
கடந்த இரண்டு
ஆண்டுகளாக பாஜக செல்வாக்கு பரவலாக உள்ள சில வட இந்திய மாநிலங்கள் உட்பட நாடு
முழுவதும் இரு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய விவசாய சங்கம்
எழுச்சிமிக்க மக்கள்திரள் போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட
விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து தில்லியில்
வரலாறு காணாத பேரணியை நடத்தின. ஐந்து வட மாநிலங்களில் பாஜக அரசுகள் தூக்கி
எறியப்பட்டன. விவசாயிகள் முன்வைத்த இருமுக்கிய கோரிக்கைகளில் ஒன்று கடன் ரத்து, மற்றொன்று வேளாண் விளைபொருட்களுக்கு பேராசிரியர் சுவாமிநாதன்
தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் பரிந்துரைத்த சூத்திரத்தின் அடிப்படையிலான
விலையில் அரசு கொள்முதல்.
கடன் ரத்து
கோரிக்கையை மத்திய அரசு பட்ஜெட் உரை முற்றிலும் புறக்கணித்து உள்ளது. விளைபொருள்
கொள்முதல் விலை பற்றி முற்றிலும் தவறான தகவலை பட்ஜெட் உரை முன்வைக்கிறது.
விவசாயிகள் வெளிப்படையான செலவுடன் அவர்களது உழைப்புக்கு பணமதிப்பு கணக்கிட்டு, நிலவாடகைக்கும் கணக்கிட்டு, விவசாயிகள் போட்டுள்ள முதலுக்கான
வட்டியையும் கணக்கிட்டு இவற்றை கூட்டி கிடைக்கும் தொகையுடன் அதில் பாதி அளவை சேர்த்து வரும் தொகை
தான் சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைக்கும் கொள்முதல் விலை. இதை கொடுக்கிறோம் என்று 2014
தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன்
உச்சநீதி மன்றத்தில் இது இயலாது என்று அறிவித்தது பாஜக அரசு. பின்னர் கடந்த இரண்டு
ஆண்டுகளின் விவசாயப் பேரெழுச்சிக்குப்பின் சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரை அடிப்படையில்
கொள்முதல் விலை கொடுத்துவிட்டோம் என்று பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது. இது
முற்றிலும் தவறான தகவல் ஆகும். உண்மையில் நிலவாடகை, முதலுக்கான வட்டி ஆகியவை அரசு சொல்லும் விலையில் இடம்
பெறவில்லை.
இப்படி உண்மைகளை மறைத்துக்கொண்டே, இரண்டு ஹெக்டேருக்கு குறைவாக நிலம்
உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நேரடியாக வழங்கப்படும் என்று
அறிவித்துள்ளார் நிதி அமைச்சர். நடப்பு ஆண்டில் இருந்தே இத்திட்டம் துவங்கும்
என்றும் நடப்பு ஆண்டில் இதற்கென ரூபாய் 20,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இது விவசாயிகளுக்கு அரசு அளிக்கும் மாபெரும் வரம் என்ற பாணியில் ஆளும் கட்சி
ஆசாமிகள் பிரச்சாரம் செய்கின்றனர். உண்மை என்ன? பயன்பெற தகுதியுள்ள குடும்பங்களை முதலில் எடுத்துக்கொள்வோம். ஆண்டுக்கு 6000
ரூபாய் என்றால் மாதம் 500 ரூ. தினசரி என்று பார்த்தால் ஒரு குடும்பத்திற்கு 17 ரூபாய்க்கும் குறைவு. ஐந்து
உறுப்பினர் கொண்ட குடும்பத்திற்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 4 க்கும் குறைவு. இதையா
விவசாயிகள் கேட்டார்கள்?
கட்டுபடியாகும் விளைபொருள் விலை, கடன் ரத்து,
நிலச்சீர்திருத்தம், விவசாயத்தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்குதல், வேளாண்
துறைக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், வேளாண் விரிவாக்க அமைப்பையும் ஆராய்ச்சி அமைப்பையும்
வலுப்படுத்துவது என்பதையெல்லாம்
ஆட்சிக்காலம் முழுவதும் புறக்கணித்து விட்டு, விவசாயிகளை கேவலப்படுத்தும் வகையில்
2 ஹெக்டேர் மற்றும் அதற்குக் குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு நாளொன்றிற்கு நபர்
ஒருவருக்கு ரூபாய் 3 சொச்சம் தரும் “திட்டத்தை” விவசாயிகளுக்கு வரப்ரசாதம்
என்பதுபோல் பட்ஜெட்டில் அறிவித்திருப்பது
வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் வகையில் அமைந்துள்ளது.
இதுமட்டுமல்ல. இந்த சலுகை கூட நிலத்தில் பாடுபடும் அனைவருக்கும் கிடைக்காது.
குத்தகை விவசாயிகளுக்கு இத்தொகை கிடையாது. நில உடமையாளருக்குத்தான். மேலும் பாசனம்
பெறும் நிலம் பாசனம், இல்லாத நிலம் என்று
வேறுபடுத்தாமல் 2 ஹெக்டேர் என்ற வரம்பு போடப்பட்டுள்ளது. களத்தில் நில உடமை பதிவு ஆவணங்கள் முறையாக சமகாலப்படுத்தப்படாத
நிலையில், திட்டத்தின் பயன் ஓரளவு நிலபலம் உள்ள பகுதியினருக்கே
கிடைக்கும். ஏழை விவசாயிகளுக்கு மிகக்குறைந்த பயன் தான் இருக்கும். விவசாய
நெருக்கடியின் கடுமையான தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் விவசாயத்தொழிலாளிகளுக்கு
இத்திட்டம் எந்தவகையிலும் பயன் அளிக்காது.
ஏற்கெனவே
மத்திய அரசின் திட்டத்தைவிட மேம்பட்ட பணப்பயன் அளிக்கும் திட்டங்களை தெலுங்கானா
அமலாக்கி வருகிறது. ஒதிசா மாநில அரசும் தெலுங்கானா திட்டத்தைவிட பணப்பயன் குறைவு
என்றாலும் மத்திய அரசைவிட அதிகமான பணப்பயன் தரும் திட்டத்தை
அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முதலாளித்துவ மாநில அரசுகளின் திட்டங்களும் வேளாண் நெருக்கடிக்கு தீர்வுகாணும் தன்மையிலான
திட்டங்கள் அல்ல. எனினும் மத்திய அரசின் அப்பட்டமாக அரசுபணத்தை
பயன்படுத்தி தேர்தல் நெருக்கத்தில் வாக்குக்கு காசுதரும் தன்மையிலான லஞ்ச
நடவடிக்கைபோன்று அவை இல்லை.
வேலையின்மை பிரச்சினை
2௦14 தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடியும் பாஜகவும்
மீண்டும் மீண்டும் கொடுத்த வாக்குறுதி ஆண்டுக்கு ஒருகோடிக்கும் அதிகமாக புதிய
பணியிடங்களை உருவாக்குவது என்பதாகும். ஆனால் நிகழ்ந்துள்ளது என்ன?
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய அரசின்
நிறுவனமான தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (National Sample Survey Organization-NSSO) ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, மிக அதிக எண்ணிக்கையில் குடும்பங்களை
அறிவியல் பூர்வ அடிப்படையில் தேர்வு செய்து
தேச அளவில் வேலையில் உள்ளவர், வேலை தேடுவோர், உழைப்பு படையில் இல்லாதவர்
என்று மக்களை வகைப்படுத்தி ஆய்வு செய்துவருகிறது. இதன்படி 2011-12 முழு ஆய்வு நடந்தது. பின்னர் 2016-17இல்
நடந்திருக்கவேண்டும். ஆனால் அப்படி நடந்தால் மோடி அரசின் பணமதிப்பிழப்பு
நடவடிக்கையால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பெரும் சேதம் வேலையின்மையை மிகக்கடுமையாக
ஆக்கியிருப்பது அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில் மோடி அரசு அந்த ஆண்டில் ஆய்வு
நடத்த அனுமதிக்கவில்லை. பின்னர் இந்த ஆய்வு 2௦17-18 ஆண்டை
அடிப்படையாகக்கொண்டு தேசிய மாதிரி ஆய்வு அமைப்பால் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு
ஜூலை 2018 முடிக்கப்பட்டு, அதன் அறிக்கை டிசம்பர் மாதம்
சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வ குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் தொடர்ந்து இந்த
அறிக்கையை வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை எதிர்த்து தேசிய
புள்ளியியல் ஆணையத்தின் இரு உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர் என்பது ஊரறிந்த
செய்தி. மத்திய அரசுக்கு இந்த அறிக்கையை வெளியிட விரும்பாமல் இருப்பதற்கு முக்கிய
காரணம் இந்த அறிக்கை வேலையின்மை நிலைமை எப்பொழுதும் இல்லாத அளவிற்கு
மோசமாகியுள்ளதை தெளிவாக்குகிறது. 1972-73 முதல் தேசிய மாதிரி
ஆய்வு அமைப்பு தொடர்ந்து நடத்திவந்துள்ள முழு சுற்று ஆய்வுகளில் (1972-73,
1977-78, 1983, 1987-88, 1993-94, 1999-2000, 2004-05, 2009-10, 2011-12, 2017-18)
மிக அதிகமான வேலையின்மை விகிதம் 2017-18
சுற்றில் தான் நிகழ்ந்துள்ளது.
இங்கே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும். இந்திய நாட்டில்
உழைப்பாளி மக்களுக்கு சமூக வாழ்வாதார பாதுகாப்பு மிகக் குறைவு. எனவே
முழுமையாக வேலை செய்யாமல் இருப்பவர்கள்
குறைவாகவே இருப்பார்கள். (செல்வந்தர்கள் மட்டுமே வேலை செய்யாமல் வாழ முடியும்!
ஏழைகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் அந்த வாய்ப்பு கிடையாது!!) ஏதோ ஒருவேலையில்
(சுயவேலை, கூலிவேலை) – மிகக்குறைவான ஊதியமோ வருமானமோ கிடைத்தாலும் – இருந்தே
ஆகவேண்டும். வேலையில்லா ஏழைகளுக்கு உணவு, உடை, உறைவிடம் எதற்கும் எந்த
உத்தரவாதமும் கிடையாது. எனவே ஆய்வுகளில் கிடைக்கும் வேலையின்மை விகிதம் உண்மையான
வேலையின்மை அளவையும் மிகவும் குறைத்து மதிப்பிடுகிறது. வேலையில் இருப்பதாக
கருதப்படுவோரின் மோசமான பணி நிலைமைகள் பற்றிய விவரங்களும் இத்தகைய ஆய்வுகளில்
பெருமளவிற்கு கிடைப்பதில்லை. மேலும் இந்திய உழைப்புப்படையில் சரிபாதிக்கும் சற்று
அதிகமானவர்கள் சுயவேலை செய்பவர்கள். இவர்கள் கணிசமான நேரம் வேலையின்றியே உள்ளனர்.
உதாரணமாக, இரண்டு ஏக்கர் அல்லது அதற்கு குறைவான நிலம் உள்ள விவசாயக்
குடும்பத்தில் உழைக்கும் வயதிலான குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் வருடம்
முழுவதும் வேலை இருக்க வாய்ப்பே இல்லை. பகுதிநேர வேலையின்மை என்பது – பொருளாதார
அறிஞர்கள் இதனை ‘மறைமுக வேலையின்மை‘ என்று அழைக்கிறார்கள். – நமது நாட்டில்
நிலவும் சமூக பொருளாதார அமைப்பின் ஒரு மிகப்பெரிய கேடு. இதையெல்லாம் நாம் புரிந்து கொள்வது அவசியம்
என்பது ஒருபுறம்.
மறுபுறம், அரசு வெளியிட மறுத்த தேசிய மாதிரி ஆய்வு 2௦17-18 அறிக்கை – ஊடகம் ஒன்றின்
முயற்சியால் பொதுவெளிக்கு வந்துள்ள அறிக்கை – தரும் விவரமும் மிக முக்கியமானது. நமது
நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் – பாஜக ஆட்சியில் – வேலையின்மை பிரச்சினை
பூதாகாரமாக அதிகரித்துள்ளது என்பதை அறிக்கை விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன.
வேலையின்மை பற்றிய 2011-12 ஆய்வு விவரங்களையும்
2௦17-18 ஆய்வு விவரங்களையும் ஒப்பிட்டால் வேலையின்மை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று தெளிவாகத்
தெரிகிறது. தேசிய
மாதிரிஆய்வு அமைப்பின் அறிக்கை மட்டுமல்ல. இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும்
மையம் ( Centre for Monitoring Indian Economy –
CMIE) தரும் விவரங்களின்படி, நவம்பர் 2௦17 முதல் நவம்பர் 2௦18 வரையிலான ஒரு ஆண்டில் வேலையில் உள்ளவர் எண்ணிக்கை ஒரு கோடியே பத்து லட்சம் குறைந்துள்ளது என்பது
தெரிகிறது. எனவே வேலையின்மை பிரச்சினை பாஜக ஆட்சி அமலாக்கிவரும் கொள்கைகளால்
மிகவும் கூர்மையாகியுள்ளது. இதில் பொதுவான தாராளமய கொள்கைகளின் தாக்கம் மட்டுமல்ல,
பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் மிகுந்த
குழப்பங்களுடன் அவசரகோலமாக திணிக்கப்பட்ட
சேவை மற்றும் சரக்குவரி – ஜிஎஸ்டி – அமலாக்கமும் முக்கிய பங்கு
ஆற்றியுள்ளன. இவ்விரு நடவடிக்கைகளும் பொதுவாக பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது
மட்டுமின்றி குறிப்பாக விவசாயம், சிறு குறுதொழில்கள் உள்ளிட்ட முறைசாராத்துறைகளை
பெரிதும் பாதித்துள்ளன. வேலையின்மையை கடுமையாக தீவிரப்படுத்தியுள்ளன.
தொடரும் மக்கள் விரோத வரி கொள்கை
மேலே விவரிக்கப்பட்டுள்ள இருபெரும் பிரச்சினைகளைப் பற்றி
எந்த நடவடிக்கையையும் ஆலோசனைகளையும் பட்ஜெட் முன்வைக்கவில்லை. அதற்கு மாறாக
தேர்தல் நோக்கிலான பட்ஜெட் முன்மொழிவையே நாம் காண்கிறோம். 12 கோடி விவசாயிகள்
குடும்பங்களுக்கு நேரடி பணம் பட்டுவாடா என்பது அப்பட்டமாக மக்களின் வாக்குகளை
விலைக்கு வாங்கும் முயற்சி. அதேபோல் தான் தனிநபர் வருமான வரி தொடர்பான சலுகைகளும்.
இவற்றால் பயன் அடைவோருக்கு கிடைக்கும் பணப்பயன் குறைவாகவே இருக்கும். ஆனால்
பேரோசையை இவை ஏற்படுத்தும் என்று பாஜக நம்புகிறது. இதிலும் தில்லுமுல்லு உள்ளது.
2௦14 தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தனிநபர் வருமான வரி வரம்பை ஆண்டுக்கு 3 லட்சம் என்பதிலிருந்து 5 லட்சம் ஆக்குவோம்
என்று அருண் ஜெயிட்லி ட்வீட் செய்தார்.மேடைக்கு மேடை பேசினார். ஆனால் கடந்த நான்கு
ஆண்டுகளில் செய்யவில்லை. இந்த ஆண்டும் செய்யவில்லை. வருமானவரிக்கு உள்ளாகும்
வருமானம் ஐந்துலட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் செலுத்தவேண்டிய வரிக்கு
முழு ரிபேட் அளிக்கப்படும் என்று மட்டுமே
பட்ஜெட் முன்மொழிவு கூறுகிறது. வருமான வரி வரம்பு உயர்த்தப்படவில்லை. இது ஒருபுறம்
இருக்க, தனிநபர் வருமான வரி தொடர்பான மாற்றங்களை இடைக்கால பட்ஜெட்டில் கொண்டு வருவது என்பதே நெறிமுறைகளை மீறுவதாகும்.
இதில் மேலும் கவனிக்க வேண்டியது தனிநபர் வருமான வரி மற்றும் இதர நேர்முக வரி
சலுகைகளால் அரசுக்கு ஏற்படும் வரி வருமான இழப்பு சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய்
என்று பட்ஜெட் விவரங்கள் தெரிவிக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களைப்
பொருத்தவரையில் சென்ற பட்ஜெட்டிலேயே அவர்கள் மீதான வரிவிகிதம்
குறைக்கப்பட்டுவிட்டது. வரிவிலக்கு ஷரத்துகள் தொடர்கின்றன. மேலும் சொத்துவரி பாஜக
ஆட்சியால் முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது. வாரிசுவரி கிடையாது. மறுபுறம் பாஜக
ஆட்சியில் ஆண்டு தோறும் மறைமுகவரிகள் ஏற்றப்பட்டுவந்துள்ளன. தனது முதல் நான்கு
பட்ஜெட்டுகளில் கச்சா எண்ணய் மீதான கலால்
வரி உயர்வுகள் மூலம் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டைவிட கிட்டத்தட்ட ஒரு
லட்சம் கோடி ரூபாய் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. தனது ஐந்து பட்ஜெட்டுகளிலும்
இந்த பட்ஜெட்டிலும் பாஜக தொடர்ந்து செல்வந்தர்கள் மீதான வரிச்சுமையை குறைத்து
சராசரி உழைப்பாளி மக்கள் மீதான வரிச்சுமையை
உயர்த்தியுள்ளது. இந்தியாவில், மொத்த குடும்ப சொத்துமதிப்பில் மேல்மட்ட 1%
குடும்பங்கள் கையில் 63% க்கும் அதிகமாக உள்ளது என்ற விவரம் இந்தியாவில் நிலவும் பிரம்மாண்டமான
சொத்து மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகளை நமக்கு உணர்த்துகிறது. இப்படிப்பட்ட
நாட்டில் சொத்துவரியும் வாரிசுவரியும் இல்லை என்பது அரசின் கொள்கைகள் மீது
செல்வந்தர்கள் செலுத்தும் செல்வாக்கை காட்டுகிறது. அதேபோல், தனி நபர் வரி வருமான
விகிதம் (3௦% + சர்ச்சார்ஜ்) கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதான வரி விகிதத்தை விட
அதிகமாக உள்ளது. ஆண்டுக்கு ரூபாய் 25௦ கோடிக்கு குறைவாக விற்பனை மதிப்பு கொண்ட
கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வருமான வரிவிகிதம் 3௦% இல் இருந்து 25% ஆக சென்ற
ஆண்டு பட்ஜெட்டில் ஆக்கப்பட்டது. ஆக, பெரும் செல்வந்தர்களும் பெரும் கம்பனிகளும் இந்திய
அரசின் வரவு செலவு கொள்கை உட்பட அரசின் பொருளாதார கொள்கைகளை தீர்மானிக்கின்றனர்
என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
பட்ஜெட்டின் ஒதுக்கீடுகள்
விவசாயிகளுக்கும் ஏழை மக்களுக்கும் வாரி வழங்கி விட்டதாக
தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மத்திய அரசின் மக்கள் நலன் சார்ந்த துறைகளுக்கும்
திட்டங்களுக்குமான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படவில்லை. மொத்த பட்ஜெட்டில் தொடர்ந்து
சொற்பமாகவே அவை உள்ளன. கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கு மிகவும் அவசியமான, வேலை பெறுவதை
சட்ட பூர்வ உரிமையாக்கிய வேலை உறுதி சட்டத்தின் அடிப்படையில் மன்ரேகா அல்லது ரேகா
அல்லது நூறுநாள் திட்டம் என்று அழைக்கப்படும் ஊரக வேலை உறுதி திட்டம் 2௦௦6 இல்
இருந்து அமலில் உள்ளது. இடதுசாரி இயக்கங்களும் சில சிவில் சமூக அமைப்புகளும்
முதலாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கொடுத்த நிர்ப்பந்தத்தினால் தான் ரேகா
சட்டம் வந்தது. இச்சட்டத்தின்படி விருப்பம் தெரிவிக்கின்ற ஒவ்வொரு கிராமப்புற
குடும்பத்திற்கும் ஒரு ஆண்டில் 1௦௦ நாட்கள் வேலையை அரசு கொடுக்கவேண்டும். இதன்மூலம்
கிராமப்புற ஏழை உழைப்பாளி மக்களுக்கு வேலையும் அதன் மூலம் வருமானமும் கிடைக்கும்.
ரேகா பணிகள் மூலம் கிராமங்களில் பாசனம் உள்ளிட்ட உற்பத்தி சொத்துக்கள்
உருவாக்கப்படும். இந்த அருமையான திட்டத்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக அரசு
சின்னாபின்னமாக்கி அழிக்க முற்பட்டுவருகிறது. வேலை நாட்களை குறைத்துள்ளது. நிதி
ஒதுக்கீடுகளை கடுமையாக வெட்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, நடப்பு நிதி ஆண்டில்
ரேகாவிற்கான ஒதுக்கீடு (திருத்தப்பட்ட மதிப்பீடு) 61,௦84 கோடி ரூபாய். ஆனால் இந்த ஆண்டு
இடைக்கால பட்ஜெட் வரும் நிதி ஆண்டிற்கு ரேகாவிற்கு ரூ 6௦,௦௦௦ கோடி தான்
ஒதுக்கியுள்ளது. துவக்கத்தில் இருந்த மாதிரி ரேகா திட்டத்திற்கு பொருத்தமான
ஒதுக்கீடு செய்வதாக இருந்தால் அது இத்தொகையைப்போல் இரண்டு மடங்கு இருக்க வேண்டும்.
ரேகாவில் உழைத்துள்ள மக்களுக்கு வர வேண்டிய கூலி பாக்கித்தொகை பல ஆயிரம் கோடி
ரூபாய்களை தாண்டிவிட்டது. உண்மையில், பாஜக அரசு இந்த திட்டத்தை மூடி விடும்
நோக்கில் உள்ளது. ஊரக உழைப்பாளி மக்களின்
கடும் களப்போராட்டங்கள் நடத்தி இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டை பெரிதும்
உயர்த்துவது அவசியம். ரேகா திட்டத்தில் பயன்பெறுவோரில் கணிசமானவர்கள் சிறு குறு
விவசாயிகள், குறிப்பாக பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வேறுபல மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கும் ஒதுக்கீடு
குறைக்கப்பட்டுள்ளது அல்லது மிகவும் சொற்ப அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. ஆரோக்கியம்
மற்றும் கல்வித் துறை சார்ந்த திட்டங்களின் ஒதுக்கீடுகளில் நாம் இதைக்காண
முடிகிறது. கடந்த ஆண்டும் மொத்த திருத்தப்பட்ட மதிப்பீடை விட மிகவும் சொற்பமாகவே
வரும் ஆண்டுக்கான அரசின் ஒதுக்கீடுகள் உயர்த்தப்பட்டுள்ளன. விவசாயிகளின் வாக்குகளை
குறிவைத்து நேரடி பண பட்டுவாடா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ 20,000 கோடி ரூ என்பதன்
பெரும்பகுதி இவ்வாறு பிற திட்டங்களை வெட்டி கணக்கில் வந்துள்ளது.
வளங்களை திரட்டுதல்
ஒருபட்ஜெட்டின் முக்கிய அம்சம் மக்கள் நலனுக்காக
வகுக்கப்படும் திட்டங்களுக்கு உரிய ஒதுக்கீடுகளை செய்திட பொருத்தமான முறையில் அரசு
வளங்களை திரட்ட வேண்டும் என்பதாகும். ஆனால் நாம் பாஜக அரசு பெரும் கம்பனிகளுக்கும்
செல்வந்தர்களுக்கும் தொடர்ந்து வருமான வரிச்சலுகைகள் அளித்துவருவதை ஏற்கெனவே
குறிப்பிட்டோம். இந்த ஆண்டும் செல்வந்தர்களிடம் இருந்தோ பெரும் கம்பனிகளிடம்
இருந்தோ வளர்ச்சிக்கான வளங்களை திரட்டும் எந்த முயற்சியும் இல்லை. மாறாக வருமான
வரி தொடர்பாக அறிவி க்கப்பட்டுள்ள சலுகைகளால் அரசுக்கு சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி
இழப்பு ஏற்படும் என்று பட்ஜெட் உரை கூறுகிறது என்பதை நாம் ஏற்கெனவே
குறிப்பிட்டோம். ஜிஎஸ்டியின் கீழ் மத்திய பட்ஜெட் மூலமாக மறைமுக வரிகளை
உயர்த்துவது சாத்தியமில்லை என்பதாலும் தேர்தல் நெருக்கத்தில் இருப்பதாலும்
கொடுத்தல் வரிவிதிப்பு முயற்சிகள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இல்லை. எனினும் பல
மானியங்கள் வெட்டப்பட்டுள்ளன அல்லது தேவைக்கு மிகக்குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளன.
இது தவிர, வரி இழப்பாலும் தேர்தல் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்களாலும்
அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பை எதிர்கொள்ள பாஜக அரசு தொடர்ந்து
அரசு கடைப்பிடிக்கும் முக்கிய தந்திரம் பொதுத்துறை சொத்துக்களை விற்பதாகும். 2017-18 இல் பொதுத்துறை
நிறுவனங்களின் பங்குகளை விற்று மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல்
பெற்றுள்ளது. இது பட்ஜெட்டில் சொல்லப்பட்டதைவிட 25௦௦௦ கோடி ரூ கூடுதல் ஆகும். 2018-19 இல் இவ்வாறு பொதுத்துறை
நிறுவனங்களின் பங்குகளை விற்பதன்மூலம் 80,000ரூ
திரட்டப்பட்டுள்ளதாக பட்ஜெட் ஆவனங்கள் கூறுகின்றன. 2019-20
இல் ரூ 90,000 கோடி அளவிற்கு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள்
விற்கப்படும் என்று பட்ஜெட் உரை கூறுகிறது. இது தாராளமய கொள்கைகளின் மிக மோசமான
அம்சங்களில் ஒன்று. மக்கள் சொத்தை படிப்படியாக
தனது நண்பர்களுக்கு தாரை வார்க்கும் ஏற்பாட்டை தான் மோடி அரசு அரங்கேற்றி
வருகிறது. தற்சமயம் தனியார் நிறுவனங்கள் பொதுத்துறை பங்குகளை வாங்கும் நிலையில்
இல்லை. எனவே மோடி அரசு பொதுத்துறை
நிறுவனங்களான LIC, ONGC போன்ற நிறுவனங்களை நிர்ப்பந்தப்படுத்தி
அரசு விற்கும் பங்குகளை வாங்க வைக்கிறது. அரசின் தாராளமய கொள்கைகளால்
இந்தப்பங்குகளின் மதிப்பு எதிர்காலத்தில் சரியும்பொழுது நட்டமடைவது இத்தகைய
பொதுத்துறை நிறுவனங்களே. படிப்படியாக அவற்றையும் தனியாருக்கு தாரை வார்க்கும் பாதையில்
தான் தாராளமய அரசுகள் பயணிக்கும். இதைத்தான் மோடி அரசு செய்துவருகிறது.
இப்படியெல்லாம் கணக்கு காட்டுவதில் பல ஜால வித்தைகள்
செய்தாலும் அரசின் பிஸ்கல் பற்றாக்குறை இலக்கை மீறியுள்ளது. பிஸ்கல் பற்றாக்குறை
என்பது அரசின் மொத்த செலவில் இருந்து கடன் அல்லாத வரவுகளை கழித்தால் கிடைக்கும்
தொகை. இது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில்
3% க்குக் குறைவாக இருக்கவேண்டும் நமது நாட்டில் ஒரு அபத்தமான சட்டம்
உள்ளது. அந்த இலக்கை நோக்கி பயணிக்க மக்கள் நலன் சார்ந்த செலவுகளையும் மக்களுக்கான
மானியங்களையும் அரசு தொடர்ந்து வெட்டி வருகிறது. கார்ப்பரேட்டுகள் மீதும்
செல்வந்தர்களின் மீதும் உரிய வரிவிதித்து அதனை வசூல் செய்தாலே பற்றாக்குறை
குறைந்துவிடும். ஆனால் அப்படி செய்தால் கார்ப்பரேட்டுகளும் முதலீட்டாளர்களும்
ஊக்கம் இழந்து கடைகளை மூடிவிடுவார்கள் என்ற மிரட்டலின்கீழ் இன்று செல்வந்தர்கள்
மென்மையாக அணுகப்படுகின்றனர், மறுபுறம் மக்கள் வாட்டப்படுகின்றனர். இதற்கு
முற்றுப்புள்ளிவைக்க நாட்டிற்கு தேவை தலைவர்களை மாற்றுவது அல்ல. கொள்கைகளை
மாற்றுவதாகும்.
இறுதியாக
பட்ஜெட் புள்ளிவிவரங்களையும் அரசு தரும் விவரங்களையும்
வைத்துதான் நாம் பலவிஷயங்களைப்பேச வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த
புள்ளிவிவரங்களின் நமபகத்தன்மை தொடர்ந்து சரிந்து வருகிறது. இது பாஜக ஆட்சியின்
“சிறப்பு சாதனை”. எடுத்துக்காட்டாக, 2016-17ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சிவிகிதம் 7.1% என்று அரசு முன்பு கூறியது. இது அதன் முந்தைய ஆண்டின் வளர்ச்சி
விகிதத்தில் இருந்து ஒரு சரிவைக் காட்டியது. நிபுணர்கள் அனைவருமே இந்த சரிவு மோடியின் நவம்பர் 2016 செல்லாக்காசு நடவடிக்கையால் தான் என்று ஒருமனதாக
கூறினார். ஆனால் அரசு அதனை ஏற்க தயாராக இல்லை. எனினும் அன்றைக்கு அதிகார பூர்வமாக
வளர்ச்சிவிகிதம் 7.1% என்றே பதிவாகியது. இப்பொழுது தேர்தல்
நெருங்கும் வேலையில் செல்லாக்காசு நடவடிக்கையை நியாயப்படுத்தும் கதையாடலின்
பகுதியாக 2016-17ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சிவிகிதம் 8.2% என்று
அறிவிக்கப்பட்டுள்ளது! வேலையின்மை தொடர்பான அறிக்கையை வெளியிட மறுத்ததும் இதனால்
தான். பல சட்டபூர்வமான அமைப்புகளை நாசப்படுத்திவரும் மோடி அரசின் அந்நடவடிக்கைகளின்
வரிசையில் புள்ளியியல் நிறுவனமும் சிக்கியுள்ளது. பட்ஜெட் பற்றிப்பேசும் பொழுது இவற்றை
எல்லாமும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
வரும் வாரங்களில், நாட்களில் பட்ஜெட் பற்றிய அரசின்
பிரச்சாரமும் கதையாடலும் மேலும் மேலும் பொய்களின் தொகுப்பாக உலாவரும். இதனை
உண்மைகளின் அடிப்படையிலான நமது பிரச்சாரத்தால் நாம் முறியடிக்க வேண்டும். இது
நம்முன் உள்ள முக்கிய அரசியல் கடமையாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின்
மூலவரான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்,
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக உலக அளவில் அன்றே போற்றப்பட்டவர்.
கான்பூரில் 1925 இல் நடைபெற்ற இந்திய பொதுவுடமைக்
கட்சி மாநாட்டிற்கு தலைமையேற்று நடத்தியவர் என்ற பெருமையும் உண்டு.
சர்வதேச தொழிலாளர் அமைப்புடன்
தொடர்புடைய சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பும்
கொண்டிருந்த சிங்காரவேலர் எந்த ஒரு பொறுப்பையும் தீவிர கொள்கை பிடிப்புடனும்
சமரசமற்ற முறையிலும் நிறைவேற்றி வந்தார் என்பது தனிச்சிறப்பாகும்.
ஈ.வே.ரா பெரியார் போன்ற தலைவர்களுடன்
மிக நெருக்கமாக இருந்தபோதிலும் தனது கம்யூனிஸ்ட் கொள்கைக்கு சிறிதேனும் பங்கம்
வருவதாய் இருந்தால் காந்தி உள்ளிட்ட எவ்வளவு பெரிய தலைவர்களையும், நண்பர்களையும் உதறித் தள்ளிவிடுவார் என்பது அவரது
வரலாற்றை படிப்போர் அறிய முடியும்.
1925 ஆம் ஆண்டு சுயராஜ்ஜிய கட்சி
சார்பில் சென்னை மாநகராட்சி தேர்தலில் யானைகவுனி வட்டத்தொகுதியில் நீதிக்கட்சியில்
அன்று மிகவும் பிரபலமாக விளங்கிய மதனகோபால் நாயுடு என்பவரை தோற்கடித்து வெற்றி
பெற்றார். இந்த தொகுதி அவர் சார்ந்த மீனவ சமுதாய மக்கள் எவரும் இல்லாத தொகுதி
குறிப்பிடத்தக்கது.
சென்னை நகரசபை உறுப்பினராக தேர்வு
செய்யப்பட்ட சிங்காரவேலர், அந்நாளில் ஆங்கிலப்
புலமை மிகுந்த பேச்சாளர்களில் ஒருவராக இருந்தபோதிலும் தனது துவக்க பேச்சை
தமிழிலேயே ஆற்றினார் என்பது அவரின் தமிழ் பற்றை பறைசாற்றுகிறது.
இன்றும் சட்ட சபைகளிலும், நகர்மன்றங்களிலும் முதல்வர்களையும், மேயர்களையும் பாராட்டுவதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்வதை
பார்க்கிறோம். அன்றும் இந்த நிலை இருந்தது என்றே தோன்றுகிறது. எனவே தான் தனது
பேச்சில் “நகரசபை உறுப்பினர்கள் நகரசபை நடவடிக்கையின் போது ஒருவரை ஒருவர்
பாராட்டிக்கொண்டு நேரத்தைப் பாழாக்குவதற்கு பதிலாக நகர சுகாதார மேம்பாட்டிற்கு
உழைக்கலாம். நகரசபையின் இப்போதைய முதற் கடமை நகரத்தின் சாக்கடை மற்றும் பொது
சுகாதாரத்தை பற்றி கவலைப்படுவதுதான். இன்றுள்ள வசதிகள் நகரத்திற்கு போதும் என்பதை
நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். நகரசபை நிர்வாகம் மோசமாக இருக்கிறது நகரத்தின் இறப்பு
விகிதம் மோசமாக இருக்கிறது. நகரத்தின் இறப்பு விகிதம் ஐரோப்பா அல்லது
அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் மிக அதிகமாகும். இனி பிறக்கும் ஒரு சிசுவும் இறக்காமல்
பார்த்துக்கொள்ள வேண்டும்.
அன்று மாநகராட்சி கட்டடத்தின் முன்பாக
பிரிட்டிஷ் அரசு அழகுணர்ச்சியின் பேரால் பீரங்கிகளை நிறுத்தியிருந்தது அவை போர்
உணர்ச்சியைத் தூண்டுகின்றன என்பதால் அவற்றை நீக்க வேண்டும் என்று சிங்காரவேலர்
தீர்மானம் கொண்டு வந்தார். அன்றைக்கு கர்னல் நீல் என்ற பிரிட்டன் படைப்பிரிவின்
தளபதியாக இருந்த கொடுங்கோலன் சிலையை அகற்ற வேண்டுமென போராடினார்.
சிங்காரவேலர் தாம் வகித்த வசித்த
நகரசபை உறுப்பினர் பொறுப்பை பயன்படுத்தி மக்கள் நலப் பணிகளை உவப்புடன் ஆற்றினார்.
அவராற்றிய பணிகள் கட்சிகளை இணைத்தல்,
நகரச் சுத்தம், கல்வி வளர்ச்சிப்பணிகள், கடல் குளிப்போர் பாதுகாப்பு, சூதாட்ட தடுப்பு என
பன்முகத் தன்மை கொண்டதாக இருந்தது.
சிங்காரவேலர் ஏழைகளின் வீடுகளுக்கும்
மருத்துவர்கள் சென்று மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென்றார். தொற்று நோய்
தடுப்புக்காக சானிடரி ஆய்வாளர்களை நியமிக்க அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென
வற்புறுத்தினார்.
சிங்காரவேலர் சமுதாயப் பணியுணர்வையும்
விழிப்புணர்வையும் தருவதில் கல்வியே அடிப்படையாக அமைகிறது என்று கருதினார்.
மாநகராட்சி பள்ளிகளை அதிக அளவில் திறக்க
வாதாடினார். இவர் கல்விக் குழுவில் பொறுப்பேற்றிருந்த காலத்தில்தான் ஏழைக்
குழந்தைகளுக்கு நகராட்சியின் பொறுப்பில் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.
காமராஜர் பள்ளிகளில் ஏழைகளுக்கு மதிய உணவு திட்ட்டம் வழங்குவதற்கு 50 ஆண்டுகளுக்கு
முன் முன்பாகவே சிங்காரவேலர் சென்னை மாநகராட்சி இலவச உணவு திட்டத்தை
அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலில் குளிப்போர் பாதுகாப்பிற்காக
சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் ஓர் இயங்கு மருந்தக ஊர்தியும், உயர் நீதிமன்றக் கடற்கரையில் ஓர் இயங்கு மருந்தக
ஊர்தியும் சிங்காரவேலரின் முன் முயற்சியால் நிறுவப்பட்டது.
சுயராஜ்ஜிய கட்சியின் சார்பில்
சிங்காரவேலர் நகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் நகர் மன்றக்
கூட்டத்தில் இவர் தம்மை ஒரு பொதுவுடமைச் சார்பாளராகவே அறிமுகப்படுத்திக் கொண்டார்.
நகரசபையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பொதுவுடமை இயக்கத்தைச் சார்ந்த சக்லத்
வாலாவை வரவேற்க ஏற்பாடு செய்தார், கம்யூனிஸ்டுகளை
இழிவுபடுத்த ‘மாஸ்கோ ராஸ்கல்’ என்றழைத்த
போது அதனை ஏற்றுக்கொண்டு தாம் பொதுவுடமை சார்பாளர்தான் என்று அச்சமின்றி
வெளிப்படையாகவே பறை சாற்றிக்கொண்டார்.
மக்கள் பணியையும், பொதுவுடமை கொள்கைகளையும் முன் வைத்தே சிங்காரவேலர்
இயங்கி வந்ததை அவரின் வாழ்வின் நடவடிக்கைகள் நமக்கு புலப்படுத்துகின்றன.
மார்க்ஸ் பிறந்த 200 ஆம் ஆண்டை முன்னிட்டு மார்க்சிஸ்ட் இதழில் நாம் தொடர்ந்து பல்வேறு சிறப்பு கட்டுரைகளை கடந்த ஆண்டு முழுவதும் வெளியிட்டு வந்தோம். அதன் நிறைவாக, சீனாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற மார்க்ஸ் பிறந்த நாள் இருநூற்றாண்டு விழாவில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், மக்கள் சீனத்தின் குடியரசுத்தலைவருமான ஜி ஜின்பிங் மார்க்ஸ் குறித்தும், மார்க்சியத்தை பயில்வதின் அவசியம் குறித்தும், சீனாவில் அதை அமலாகும் விதம் குறித்தும் ஆற்றிய உரையின் பகுதி “மார்க்சை பயில்வது என்பது என்ன?” என்ற கட்டுரையாக கொண்டுவரப்பட்டுள்ளது. இக்கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் முனைவர் தா.சந்திரகுரு மொழியாக்கம் செய்துள்ளார்.
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தோழர் சிங்காரவேலரின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் (18.02.1860 – 11.02.1946) என இரண்டும் பிப்ரவரி மாதத்தில் வருவதை கருத்தில் கொண்டு தோழர் சிங்கரவேலரின் பரந்த மார்க்சிய ஞானம் மற்றும் அனைத்து தளத்திலும் அதைப் பரப்புவதற்கு அவர் மேற்கொண்ட முறை, விவசாய தொழிலாளி ஒற்றுமை குறித்த ஆழ்ந்த புரிதல் ஆகியவற்றை உள்ளடக்கி தோழர் என்.குணசேகரன் எழுதிய “சிங்காரவேலரின் மார்க்சியப் பார்வை” எனும் கட்டுரை அமைகிறது. அதேபோல் சென்னை நகராட்சியில் சிங்காரவேலர் நகரசபை உறுப்பினராக இருந்த போது அவர் ஆற்றிய பணியை தோழர் க. உதயகுமார் எழுதிய ” நகரசபை உறுப்பினராக சிங்காரவேலரின் மக்கள் பணி” என்கிற சிறு தொகுப்பு விளக்கும்.
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய மத்திய பி.ஜே.பி அரசு வரம்புகளை மீறி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. தேர்தலை முன்னிட்டு சில பளபளப்பான அறிவிப்புகளை செய்திருந்தாலும் விவசாயம் மற்றும் வேலையின்மை பிரச்சனைகளை அது தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கார்ப்பரேட்களுககு சேவை செய்யும் மத்திய அரசின் செயலையும், புள்ளிவிபரங்களையும் மறைப்பதோடு தவறான புள்ளிவிபரங்களை திணிப்பதையும் தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயாவின் “மோடி அரசின் மோசடி பட்ஜெட் 2019″ என்கிற கட்டுரை விளக்குகிறது.
மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த வி.பி.சிங் அரசு நடந்து கொண்ட முறையில் கோட்பாட்டு ரீதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதன் மீது வைத்த விமர்சனங்களை உள்ளடக்கிய, அதனூடாக சாதி குறித்த வர்க்க பார்வை, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன்? என்றும் முற்பட்டோர், பிற்பட்டோர், தீழ்த்தப்பட்டோர் என்கிற பிரிவினையை ஏற்படுத்தி சமூக பிளவை அதிகப்படுத்தும் முயற்சிகளை முறியடித்தான் என பல்வேறு அம்சங்களை விளக்கி தோழர் இ .எம்.எஸ் எழுதி 1990 களில் வெளியான “இட ஒதுக்கீடு ஏன் ? எவ்வாறு?” என்ற சிறு பிரசுரத்தின் சுருக்கம் காலத்தின் தேவை கருதி பிரசுரிக்க பட்டுள்ளது.
லெனின் சிந்தனைகள் ஏன் லெனினியம் என அழைக்கப்படுகிறது?
ஒரு நாட்டில் நிகழ்ந்த சோசலிசப் புரட்சி அனுபவத்தில் உலகப் புரட்சிக்கான பொதுக் கோட்பாடுகளை உருவாக்கிய
படைப்பாற்றலின் சிகரம், லெனினது வாழ்க்கையும் அவரது சிந்தனைகளும். எனவேதான் லெனின்
லெனினியமாக இன்றும் வாழ்ந்து, அவரது எழுத்துக்கள் வழியாக வழிகாட்டி வருகின்றார்.
கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு மிகப் பெரிய சவாலாக
இருக்கும் பிரச்னை, தத்துவத்தையும் நடைமுறையையும்
இணைத்து, எவ்வாறு வெற்றியை சாதிப்பது என்பதுதான்.
சில சந்தர்ப்பங்களில் நடைமுறை தேவைகளில் ஆதாயம்
காண தத்துவத்தை பலி கொடுக்கும் தவறு நிகழ்வதுண்டு. குறிப்பிட்ட நிலைமைகளை துல்லியமாக
ஆராய்ந்திடாமல் வெறும் தத்துவ சொல்லாடல்களை முழக்கி தவறுகள் செய்கிற நிலையும் ஏற்படுவதுண்டு.
இந்த இரண்டு வித தவறுகளையும் களைந்து புரட்சியை
நோக்கி முன்னேறிட லெனினியத்தில் ஆழமான பயிற்சி தேவைப்படுகிறது.
புரட்சியின் பொதுக் கோட்பாடுகள்
மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் லுகாக்ஸ் “லெனினது
ஒருங்கிணைந்த சிந்தனையைப் பற்றிய ஆய்வு” (Lenin: A study in the Unity of His
thought) என்ற நூல், நிலைத்த புகழ்பெற்ற நூல். இது அடுத்தடுத்த மார்க்சிய தலைமுறைகளை லெனினியத்தில் நெறிப்படுத்தியது.
கல்வியாளர்கள், அறிவுஜீவிகள் என அறியப்படுகிற
பலர், மார்க்சியம் பற்றி ஒரு கருத்தை தொடர்ந்து எழுதி வருகின்றனர். ‘மார்க்ஸ் ஐரோப்பிய
நிலைமைகளில் எழுதிய கருத்துக்கள் எல்லாம் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தாது; அது மேலைநாட்டுத்
தத்துவம்; கீழை நாடுகளுக்குப் பொருந்தாது’ என்ற கருத்துக்களை பல கோணங்களில் வாதிட்டு
வருகின்றனர்.
மார்க்ஸ்
ஆங்கிலேய தொழிற்சாலை உற்பத்தி முறைகளை ஆராய்ந்துதான் பல கண்டுபிடிப்புக்களை உருவாக்கினார்
என்பது உண்மையே. ஆனால் பிரிட்டிஷ் நாட்டு தொழில் நிலைமைகளில் துவங்கி உலக முதலாளித்துவத்த்தின்
வரலாற்று வளர்ச்சியையும், அது இயங்குகிற அடிப்படை விதிகளையும் உருவாக்கினார். குறிப்பான
ஒரு நிகழ்விலிருந்து பொது விதிகளுக்கு வந்தடைந்த மார்க்சின் மேதைமையை மேலோட்டமான சிந்தனைக்கு ஆட்பட்ட அறிவுஜீவிகளால்
உணர முடியாது.
அதே போன்று, லெனின், ரஷ்ய நாட்டின் சமூகப்
பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து பல முடிவுகளுக்கு வந்தது உண்மைதான். ஆனால் உலகளாவிய
சோஷலிச மாற்றத்தை நோக்கிய, புரட்சிக்கு வழிகாட்டுகிற புரட்சியின் பொதுக் கோட்பாடுகளை
கண்டறிந்தவர் லெனின். லெனினியத்தின் மகத்துவம் இது. இதனையும், ஆழ்ந்த வாசிப்பு இல்லாத
சாதாரண ‘அறிவுஜீவிகள்’ உணர வாய்ப்பில்லை.
கனவிலிருந்து சாத்தியப்பாடு நோக்கி…
“லெனின் எப்போதுமே பிரச்சனைகளை இந்த சகாப்தத்தின்
பிரச்னைகள் என்ற முழுமைத் தன்மையுடன் பார்த்தார்” என்று ஜார்ஜ் லுகாக்ஸ் எழுதுகிறார்.
இதில் முக்கிய சில அம்சங்கள் அடங்கியிருக்கின்றன.
1)
முதலாளித்துவத்தின் இறுதிக் கட்டமாக தற்போதைய காலம் விளங்குகிறது.
2)
இது பாட்டாளி வர்க்கத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
3) அதாவது, முதலாளித்துவ வர்க்கத்திற்கும், பாட்டாளி
வர்க்கத்திற்குமான இறுதிப் போராட்டத்தை நடத்திட எண்ணற்ற வாய்ப்புக்களை தவிர்க்க இயலாதவாறு
இன்றைய நிலை நமக்கு ஏற்படுத்தி தருகிறது.
4)
இந்த இறுதிப் போராட்டமே, மனித குல விடுதலைக்கு இட்டுச் செல்லும்.
இதுவே லெனினிய சிந்தனைகளின் அடிப்படை.
வரலாறு உருவாக்கியுள்ள இன்றைய காலம், முதலாளித்துவத்தின்
இறுதிக் கட்டம் என்ற அழுத்தமான இடத்திலிருந்துதான் லெனின் தனது அனைத்துச் செயல்பாடுகளையும்
அமைத்துக்கொண்டார். புரட்சியை கனவு என்கிற நிலையிலிருந்து, புரட்சியை சாத்தியமான ஒன்றாக
அணுகுகிற தனிச்சிறப்பு கொண்டது லெனினியம்.
புரட்சி என்ற விரிந்த பார்வையிலிருந்து அன்றாடப்
பிரச்னைகளை அணுகும் கலையை லெனினியம் கற்றுத் தருகிறது. லெனியத்தின் பிரிக்க முடியாத
கூறு, மார்க்ஸ், ஏங்கல்ஸ் வகுத்தளித்த இயக்கவியல் பொருள்முதல்வாதம்.
இயக்கவியலும் புரட்சியும்
லெனின் ஹெகலின் இயக்கவியல் பற்றிய வாசிப்பினை
இலண்டன் அருங்காட்சியக நூலகத்தில் மேற்கொண்டார். இந்தக் காலம் அவரது வாழ்க்கையில் மிகவும் சோதனையான காலம்.போல்ஷ்விக்
கட்சி மிகவும் சிதைந்து இருந்த நிலை. பிரச்சாரம், கிளர்ச்சி எதையும் செய்ய இயலாத ஒரு
சூழல். முதல் உலகப் போர் மூண்ட சர்வதேச சூழ்நிலை.
இந்த பாதகமான சூழலை வாசிப்பு மற்றும் ஆய்வுக்கான
வாய்ப்பாக லெனின் பயன்படுத்திக் கொண்டார். ஒரு புறம் ஹெகலிய இயக்கவியலையும், மறுபுறம், அதுவரை உருவாக்கப்பட்ட ஏகாதிபத்தியம் பற்றிய தத்துவங்களையும்
ஆராய்ந்தார் லெனின்.
மார்க்ஸ் தனது மூலதனம் பற்றிய ஆய்வுகளுக்கு
ஹெகலின் இயக்கவியல் ஆய்வு முறையை பின்பற்றினார். ஹெகலின் பார்வையில் உள்ள குறைபாடுகளைக்
களைந்து மார்க்ஸ் தனக்கே உரித்தான இயக்கவியல் பொருள்முதல்வாதம் எனும் ஆய்வுமுறையை உருவாக்கினார்.
இயக்கவியல் குறித்த ஆழமான வாசிப்பினை மேற்கொண்டு,
அந்த அறிவியல் முறையை முழுமையாக சுவீகரித்த
நிலையில்தான் லெனின் புரட்சி பற்றிய நிலைபாடுகளை எடுத்தார். இரண்டு தளத்தில் இந்த நிலைபாடுகளை
அவர் மேற்கொண்டார். ஒன்று உலகச்சூழல்; மற்றொன்று ரஷ்ய சூழல்.
உலக முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் எனும்
நிலைக்கு மாறுகிற நிகழ்வினையும், அதன் பல தன்மைகளையும் லெனின் கண்டறிந்து அதன் எதிர்கால
வரலாற்றுக் கட்டத்தை அவர் காண்கின்றார். இது முதலாளித்துவ முறையின் இறுதிக்கட்டம் எனவும்,
அடுத்து, சோஷலிச புரட்சி யுகம் துவங்குகிறது எனவும் லெனின் முடிவுக்கு வருகின்றார்.
இதுவே அவரது ”ஏகாதிபத்தியம்:முதலாளித்துவத்தின் உச்சகட்டம்”என்ற நூலின் சாராம்சம்.
அனைத்துப் பொருட்களும், சமூக நிலைமைகளும்
மாறிக் கொண்டும், இடையறாது இயங்கிகொண்டும் இருக்கின்றன; அனைத்திலும் இயங்கும் உள்முரண்பாடுகள்
மாற்றங்களாக வெடிக்கின்றன என்பது போன்ற பல இயக்கவியல் விதிகள் முதலாளித்துவம் பற்றிய
லெனின் சிந்தனைக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.
இதே போன்று ரஷ்ய நிலைமைக்கும் இயக்கவியலைப்
பொருத்தி பல முடிவுகளுக்கு லெனின் வருகின்றார். கெரென்ஸ்கி தலைமையிலான முதலாளித்துவ
ஆட்சி மாற்றம் 1917-பிப்ரவரியில் நடந்த அந்த நிகழ்வு நிரந்தரம் அல்ல. அது அடுத்த கட்டமான
சோசலிசப் புரட்சியை நோக்கிச் செல்ல வேண்டும் என லெனின் அழுத்தமான ஒரு கருத்துக்கு வந்தடைகிறார்.
தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்
என்ற கருத்துகளைக் கொண்ட “ஏப்ரல் கருத்தாய்வுரைகள்” எனும் குறிப்பை அவர் வெளியிட்டார்.
தனது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு ஏற்பட்ட போதும் விடாப்பிடியாக போராடி புரட்சியை வெற்றி
பெறச் செய்தார். இது உயரிய இயக்கவியல் அறிவின் வெளிப்பாடு. இது வரலாற்று இயக்கத்தில்
சோசலிசப் புரட்சிதான் என்ற அடுத்த கட்டம் என்பதை ஆழமாக உணர்ந்த நிலையில் ஏற்பட்ட அசாதாரணமான
துணிவு.
அடுத்த கேள்விகள்
முதலாளித்துவத்தின் அழிவும்,புரட்சியின் பிறப்பும்
தவிர்க்க இயலாதது என்ற முடிவினை மார்க்சிய வழியில் வந்தடைந்த லெனின் அடுத்து சில கேள்விகளை
எழுப்பினார்.
புரட்சி
எனும் சமூகச் சித்திரத்தை தீட்டிடும் பணியினை யார் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்?
எந்த வர்க்கம் புரட்சிக்குத் தலைமையேற்று வெற்றி வகை சூடிடும்?
லெனினுக்கு முந்தைய தலைமுறையினரும் இதனை சிந்தித்துள்ளனர்.
பொதுப்படையாக, புரட்சிக்கு,“மக்கள் தலைமை”ஏற்பார்கள் என்று தெளிவற்ற கருத்துக்களை அவர்கள்
கொண்டிருந்தனர். ரஷ்யாவில் தோன்றிய நரோத்னியம் இப்பிரச்னையை வெகுவாக குழப்பிக்கொண்டிருந்தது.
முதலாளித்துவத்தை அழிக்கும் வல்லமையும் ஆற்றலும்
கொண்டது பாட்டாடளி வர்க்கமே என்ற முடிவுக்கு ஏற்கனவே மார்க்ஸ் வந்தடைந்தார். அதனை முதலாளித்துவம்,
போர்வெறி கொண்டு, நாடுகளை பங்கு போட்டுக் கொள்ளும் மூர்க்கத்தனத்தோடு, ஏகாதிபத்தியமாக
வடிவெடுத்த சூழலில், பாட்டாளி வர்க்கப் புரட்சி கருத்தாக்கத்தை லெனின் வளமை கொண்டதாக
மாற்றினார்.
அதிலும் ரஷ்ய நிலைமைகளை துல்லியமாக ஆராய்ந்து
தொழிலாளி வர்க்கத்தின் முக்கிய நேச சக்தியாக விவசாயப் பிரிவினர் விளங்குவார்கள் என்பதையும்,
புரட்சியை அரங்கேற்றுவது “தொழிலாளி-விவசாயி” கூட்டணி என்பதையும் நிறுவினார் லெனின்.
இந்தக் கூட்டணி ஒடுக்கப்படுகிற, சுரண்டப்படுகிற வர்க்கங்களின் புரட்சிக் கூட்டணி என்று
கூறினார் அவர். இதனை வார்த்தைகளால் விளக்கியது மட்டுமல்ல; நடைமுறையில் அந்தக் கூட்டணியை
உருவாக்கி ரஷ்யாவில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தினை கைப்பற்றும் புதிய வரலாற்றையும்
லெனினியம் படைத்தது.
இது தானாக நிகழ்ந்திடாது. தலைமையேற்கும் தகுதியை
பாட்டாளி வர்க்கம் உணர்வு ரீதியில் பெற்று உயர்ந்திட வேண்டும். இது புரட்சிகர கட்சியான
கம்யூனிஸ்ட் கட்சி ஆற்ற வேண்டிய கடமை. அத்தகைய கட்சியை எவ்வாறு கட்ட வேண்டும் என்பதனையும்
லெனினியம் விளக்குகிறது. புரட்சி, இந்த சகாப்தத்தில் பிறப்பெடுக்க உள்ளது என்ற பின்னணியில்தான்
கட்சிக் கோட்பாடுகளை லெனின் வரையறுத்தார்.
புரட்சிகர கட்சி
உழைக்கும் வர்க்கங்கள் புரட்சிகர கட்சியின் தலைமையை ஏற்று, திரள்கிறபோதுதான் சோஷலிஸ்ட் புரட்சி வெற்றி பெறும். அந்தக் கட்சி வெறும் சொல்லளவில் புரட்சி முழக்கத்தைக் கொண்டதாக இருக்கக் கூடாது. அது .மார்க்சிய வரலாற்றுக் கோட்பாட்டினை நன்கு சுவீகரித்து இருக்க வேண்டும். வர்க்கங்களின் போராட்டம் வரலாற்றினை எவ்வாறு மாற்றி வந்துள்ளது என்பதனை துல்லியமாக அது புரிந்து கொண்டு சோஷலிச வியூகம் அமைக்கும் கட்சியாக அது இருக்க வேண்டும்.
முதலாளித்துவ,
நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் அரசை வீழ்த்தி, அந்த வர்க்கங்களால் ஆண்டாண்டு காலமாக
அடக்கி ஒடுக்கப்பட்டு, சுரண்டப்பட்டு வந்த பாட்டாளி வர்க்கம், ரஷ்யப் புரட்சியை நிகழ்த்தியது.
இதனை தொழிலாளி, விவசாயி உள்ளடங்கிய பாட்டாளி
வர்க்கம் சாதிக்க முடிந்ததற்கு கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் அமைப்புக்களும் முக்கிய
பங்காற்றின. இந்த மகத்தான கடமைகளை சாதித்திட லெனினியம் பாதை அமைத்தது.
அதாவது, முதலாளித்துவ ஆளும் வர்க்கம் தனது
சுரண்டல் நலனுக்கான கருத்துக்களையே சமூகத்தின் கருத்தாக மாற்றிவிடுகிறது. முதலாளித்துவ
அரசின் பொருளாதாரக் கொள்கைகள் ஒருபுறம் முதலாளிகளின் மூலதனத்தைப் பெருக்கிடும். மறுபுறம்
உழைக்கும் மக்களின் நலனை பாதிக்கும். ஆனால், அந்தக் கொள்கைகள் , தனக்கும் பயன் தரும் என்று தொழிலாளியை நம்ப வைத்து,
தொழிலாளர்களையும் தனது செல்வாக்கு வளையத்திற்குள் முதலாளித்துவ வர்க்கம் தக்க வைத்துக்
கொள்கிறது.
அதிலிருந்து உழைக்கும் வர்க்கத்தை மீட்டெடுக்க
மார்க்ஸ் புரட்சிகர அமைப்பின் தேவையை உணர்த்தினார்.லெனின் புரட்சிகர கட்சி ஸ்தாபனம் எனும் கருவியை வடிவமைத்து
அதனை திறம்பட முன்னெடுக்க வேண்டுமென வழிகாட்டினார்..
ரஷ்யாவில் உழைக்கும் வர்க்கம் முதலாளித்துவ
நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் முடங்கி, பின்தங்கிய உணர்வு நிலையில், இருந்தது. அதனை
உணர்வு ரீதியில் புரட்சிக்கு தயார் செய்தது, உள்ளூர் கிளையிலிருந்து, மேல்மட்டம் வரை
கட்டப்பட்ட, கம்யூனிஸ்ட் அமைப்புக்கள்.
தத்துவம், நடைமுறை
1902-ல் லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?”
கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு வழிகாட்டி நூல். முதலாளித்துவ அரசினை எதிர்த்த போராட்டங்கள்
எழுவது இயல்பானது. ஆனால் கம்யூனிஸ்டுகள் பின்தங்கிவிடக்கூடாது. போராட்டங்களுக்கான தத்துவப்
பின்னணியை தொழிலாளர்களுக்கு விளக்கிட வேண்டும்.
அதாவது, முதலாளித்துவ முறைதான் வாழ்வியல்
நெருக்கடிகளுக்கு அடிப்படைக் காரணம்; அதனை தூக்கி ஏறிய வேண்டும் என்பதுதான் தத்துவ
போதனை; முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களை அகற்ற
உரிய நடைமுறைகளை வகுத்திட வேண்டும். தத்துவம்,
நடைமுறை என்ற இரண்டு உலகிலும் இடையறாமல் சஞ்சரித்து, இடையறாமல் பயணம் செய்யும் கட்சிதான் புரட்சியை சாதிக்கும்.
அப்படிப்பட்ட கட்சியை கட்ட வேண்டும் என்று
அழுத்தமாக வலியுறுத்துவது லெனினியம்.
“இடதுசாரி கம்யூனிஸம்; ஓர் இளம் பருவக் கோளாறு”
என்ற நூலில் லெனின் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிக்கு மூன்று முக்கிய அம்சங்கள் கட்டாயமாகத்
தேவை என்று லெனின் வரையறுக்கின்றார்.
1. தொழிலாளி
வர்க்கத்தின் முன்னணி முதற்படையான கட்சிக்கு புரட்சிகர வர்க்க உணர்வு அவசியம்.
2. அமைப்புரீதியாகத் திரண்ட புரட்சிக்காரர்கள்
கொண்ட கட்சிக்கு ஒரு சரியான புரட்சி நடத்துவதற்கான தொலைநோக்கு உத்தியும், அன்றைய சூழலுக்கான
நடைமுறை உத்தியும் அவசியம்.
3. கட்சி,
மிக விரிவான அளவில் உழைக்கும் மக்களோடு நெருங்கிய தொடர்பும் , பிணைப்பும் கொண்டதாக
இருக்க வேண்டும்.
இந்த மூன்று வரையறைகளை நன்கு ஆராய்ந்தால்,
தத்துவப் பணியும் நடைமுறையும்,பின்னிப் பிணைந்திருப்பதைக் காண முடியும். முதல் இரண்டு
அம்சங்களும், முக்கியமாக, தத்துவத் தளத்தில் கட்சி நடத்தும் போராட்டம். மூன்றாவது அம்சம்
கட்சி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிற களப் போராட்டம்.
இந்த மூன்றும் இல்லாத கட்சி எப்படி இருக்கும்?
இதற்கு லெனின் வார்த்தைகள் கடுமையானவை. இந்த மூன்றும் இல்லாத நிலையில் கட்சியில் மிஞ்சுவது “வார்த்தை சித்து விளையாட்டுக்களும், கோமாளித்தனமும்தான்”
என்கிறார் லெனின்.
முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ந்த சூழலில்,
மார்க்சியத்தை வளர்த்து, புதியப் பங்களிப்புக்களை உருவாக்கியவர் லெனின். புரட்சி மாற்றத்தை
நிகழ்த்திட, அரசியல் வியூகங்களையும் கட்சிக் கோட்பாடுகளையும் உருவாக்கிய மகத்துவம்
லெனினையே சாரும்.
இன்றைய சவால்களை சந்திக்கவும் லெனினியம் தேவை.
லெனினது வாழ்க்கையும், சிந்தனைகளும் புதிய
தத்துவ வெளிச்சத்தை அளித்து வருகின்றன.
2018-ம் ஆண்டு நம்மிடமிருந்து விடை பெறுவதற்கு சற்று முன்பாக வங்க சினிமாவின் மூவேந்தர்கள்
என போற்றப்பட்டவர்களில் கடைசி வேந்தரான மிருணாள் சென்னும் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுக்
கொண்டார்.
அவர் மறைவு
குறித்த செய்திகளை தேசிய ஊடகங்களில் பார்த்தபோது ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. கொல்கத்தாவிற்கு வெளியே இளம்
இயக்குநர்கள் உள்ளிட்ட இளம் தலைமுறையினருக்கு அவர் பற்றிய பல விவரங்கள் அவரது
மறைவுக்குப் பின் வெளியிடப்பட்ட கட்டுரைகளில் இருந்துதான் தெரிய வந்துள்ளது.
இதற்கு முக்கிய
காரணம் மேற்கு வங்கத்துக்கு வெளியே அவரின் படங்கள் பெரிதாக கொண்டு போகாததுதான். இந்த விதத்தில் மூவேந்தர்களில்
மற்ற இருவரிடமிருந்து இவர் வேறுபட்டவர். முதலாமவர் சத்யஜித் ராய்.
அவரின் பெரும்பாலான படங்கள் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
ஆனால் அவர் பெயரும் அவரின் துவக்க காலப் படங்களான அபு ட்ரையாலஜி (Apu
Trilogy) என்று அழைக்கப்படும் அபு என்ற கதாநாயகனை மையமாகக் கொண்ட மூன்று
படங்களும் பலருக்கும் தெரிந்திருக்கிறது.
மூன்றாவது
வேந்தரான ரித்விக் கட்டக்கின் பெயர் கூட வங்கத்துக்கு வெளியே உள்ள இளம் தலைமுறையினருக்குத்
தெரிந்திருக்கவில்லை. ஆனால் இந்திய சினிமா, உலக சினிமா மீது மோகம் கொண்ட பலருக்கு
ரித்விக் கட்டக்கின் பெயரும், படங்களும் தெரிந்துள்ளது.
சத்யஜித்
ராய் தன் குடும்ப, பண்பாட்டு பின்னணி காரணமாக உலகறியப்பட்ட திரைப்பட மேதையாய் திகழ்ந்தார்.
திரை மொழியில் அவருக்கிருந்த ஆளுமை, இந்திய கதைகளை
உலக ரசிகர்களுக்கு சொல்ல வைத்தது.
ரித்விக்
கட்டக் கிழக்கு வங்கத்தில் பிறந்திருந்தாலும், மேற்கு வங்கத்தில் 8 முழுநீளப்
படங்களை எடுத்தவர். வங்கப் பிரிவினையின் பாதிப்பு அவரின் எல்லாப்
படங்களிலும் இருந்தது.
மிருணாள்
சென் பிறந்தது கிழக்கு வங்கமாக இருந்தாலும் வளர்ந்தது முழுக்க முழுக்க மேற்கு வங்கத்திலும், குறிப்பாக கொல்கத்தா நகரத்திலும்தான்.
அவரின் குடும்பம்
சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியோடு இணைந்திருந்தது. பின்னர் இப்டா (IPTA)
என அழைக்கப்படும் நாடகக் குழுவோடும் தொடர்பில் இருந்தார். இதன் காரணமாக அடிப்படையில் தீவிர இடதுசாரி சிந்தனை கொண்டவராக அவர் இருந்தார். இப்டாவில்தான் தன் வருங்கால மனைவி கீதாவை
அவர் சந்தித்தார். ஏழு ஆண்டுகள் காதலித்த பின்னர் அவரை திருமணம்
செய்து கொண்டார். சென்னின் பல படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
அவரின் திரைப்பயணம் முழுவதும் அவர் கூடவே நடிகையாக, உதவியாளராக, விமர்சகராக, மேலாளராக
இருந்தார்.
27 படங்களை இயக்கிய மிருணாள் சென் வங்க சினிமாவில் மட்டுமல்லாமல், இந்திய சினிமாவிலும் மிக முக்கிய நபராக கருதப்படுவதற்குக் காரணம் என்ன?
திரை மொழியை
முறையாகப் பயின்று பயிற்சி பெற்று படம் எடுத்தவர் அல்ல மிருணாள் சென். மாறாக தனக்கென ஒரு திரை மொழியை
உருவாக்கிக் கொண்டவர். அதற்கு அடிப்படை அவரின் தீவிரமான கருத்துக்களும்
அரசியல் நிலைப்பாடுமே ஆகும். ருடால்ஃப் ஆர்ன்ஹைம் (Rudolf
Arnheim) எழுதிய “சினிமா ஒரு கலை” என்ற திரைப்பட அழகியல் பற்றிய புத்தகத்தைப் படித்து, சினிமா மீது மோகம் கொண்டார். ஆனாலும் அவரின் அழகியல்
அவரது சமூக அரசியல் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்தது.
அவரின் மூன்றாவது
படமான பைஷே ஷ்ராவண் வெளிவந்தபோதுதான் உலக அளவில் அவர் கவனிக்கப்பட்டார். பின்னர் அவரின் எட்டாவது படமான
புவன் ஷோம் வெளிவந்ததும் ஒரு சர்வதேச இயக்குநராக அவர் நிலைபெற்றார். இப்படம் தேசிய
திரைப்பட வளர்ச்சிக் கழக நிதியுதவியுடன் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டது.
அதுவரை பார்த்திராத வகையில் ஒரு புதுவிதமான படமாக அது அமைந்திருந்தது.
இப்படத்தை இந்திய சினிமாவின் ‘புதிய அலை’யின் தொடக்கம் என்றே சொல்லலாம். தொழில்நுட்பம் மற்றும்
அழகியல் ரீதியாக இப்படத்தை இன்று பார்க்கும்போது பக்குவப்படாத படம் போன்று தோன்றலாம்.
ஆனால் 60களின் இறுதியில் எடுக்கப்பட்ட இந்தப் படம்
அதே நேரத்தில் பல தென் அமெரிக்க படங்களோடு ஒத்திருந்தது.
புரட்சியின்மீதும், பெரிய சமூக மாற்றத்தின்
மீதும் நம்பிக்கை கொண்டிருந்த இடதுசாரி மாணவர்களும் இளைஞர்களும் இத்தகைய
படங்களை விரும்பிப் பார்த்தனர். அப்போது கல்லூரி மாணவனாக இருந்த
நான், எழுபதுகளில் வெளியான லத்தின் அமெரிக்க திரைப்படம் என்றாலே
அது மார்க்சிய, இடதுசாரி படமாகத்தான் இருக்க வேண்டும் என்று நம்பினேன்.
அது உண்மையாகவும் இருந்தது. இவர்களது படங்கள்
‘மூன்றாவது சினிமா’ என்று அழைக்கப்பட்டன.
மிருணாள் சென்னின் அப்போதைய படங்கள் ‘மூன்றாவது
சினிமா’ பிரிவின் படமாக கருதப்பட்டு உலகமெங்கும் முக்கிய திரைப்பட
விழாக்களில் திரையிடப்பட்டன.
புவன் ஷோமின்
தொடர்ச்சியாக மிருணாள் சென் கல்கத்தாவை அடித்தளமாகக் கொண்டு மூன்று படங்களை எடுத்தார். “இண்டர்வ்யூ”, “கல்கத்தா 71”, “பதாதிக்” ஆகிய மூன்று
படங்களும் சேர்ந்து கல்கத்தா ட்ரையாலஜி என அழைக்கப்பட்டன.
70களின் தொடக்கத்தில் உலகெங்கும் அரசியல் கொந்தளிப்பு நிலவியது. இளைஞர்களும் மாணவர்களும் தீவிர இடதுசாரி அரசியலால் கவரப்பட்டனர். இந்தியாவின் கல்கத்தா நகரம் அதை பிரதிநிதித்துவப்படுத்துவதாக விளங்கியது.
கல்கத்தா நகரின் அப்போதைய சூழலைத்தான் சென் இந்த மூன்று படங்களில் காண்பித்தார்.
70களின் இறுதியில் இந்த தீவிர இடதுசாரி இயக்கம் படிப்படியாக தன் தீவிரத் தன்மையை
இழந்தது. அதன் தொடர்ச்சியாக 80களின் தொடக்கத்தில்
இந்திய நடுத்தர வர்க்கம் உளவியல் ரீதியாக பல மாறுதல்களைக் கண்டது. குழப்பம், குற்ற உணர்வு, மரபுகளை
உடைப்பதில் தயக்கம் என பல அம்சங்களை கொண்டதாக இந்திய நடுத்தர வர்க்கம் மாறியது.
80களின் படைப்பாளிகளுக்கு அது ஒரு பொற்காலமாக இருந்தது
என்றே சொல்லலாம். நடுத்தர வர்க்க கதாபாத்திரங்களைக் கொண்டு பல
அற்புதமான கதைகளும், நாவல்களும், திரைப்படங்களும்
அப்போது படைக்கப்பட்டன.
மிருணாள்
சென்னின் திரைப்படங்களிலும் அது வரவேற்கத்தக்க மாற்றங்களை கொண்டு வந்தது. அவரும் நடுத்தர வர்க்கத்தின்
மனச் சிக்கல்களை, குற்ற உணர்வை, எதிர்காலம்
குறித்த பயத்தை அற்புதமாக தன் திரைப்படங்களில் கொண்டு வந்தார்.
என்னைப்
பொறுத்தவரையில் 80களிலும், 90களின் தொடக்கத்திலும் அவர் எடுத்த படங்களைத்தான்
சலிப்படையாமல் பார்க்க முடிகிறது. முக்கியமாக அவரின் இரண்டு படங்களைப்
பற்றி இங்கு குறிப்பிட வேண்டும்.
முதலில் “ஏக் தின் ப்ரதி தின்”
(ஒரு நாளும் ஒவ்வொரு நாளும்). அவரது படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் அது.
இப்படத்தில்
மம்தா சங்கர் பிரதான கதாபாத்திரமாக நடித்திருப்பார். அந்த நடுத்தரக் குடும்பத்தில் 30 வயதைத் தாண்டிய அவர் மட்டுமே சம்பாதித்துக் கொண்டிருப்பாள். திருமணம் என்பதை அவளோ, அவள் குடும்பமோ சிந்திக்க முடியாத
சூழல். அவளது வருமானத்தை மட்டுமே நம்பி
அந்தக் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. அப்பா உடல்நிலை சரியில்லாமல் படுக்கையிலேயே இருப்பார். ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் அவள் சகோதரன். சிறுவயது
தங்கை. எப்போதும் வீட்டு வேலை என்றிருக்கும் அம்மா. வேலையில் இருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அவள் வீட்டுக்கு வந்து விடுவாள்.
படம் தொடங்கும்
அந்த நாளில் வழக்கமான நேரம் தாண்டியும் அவள் வீடு வந்து சேரவில்லை. முதலில் ஏன் தாமதம் என எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர். இரவு
ஏழு மணி, எட்டு மணி ஆகும்போது அவளுக்கு என்ன ஆகிவிட்டதோ என்ற
கவலை எல்லோரையும் தொற்றிக் கொள்கிறது. அவள் அலுவலகம்,
வழக்கமாக அவள் செல்லும் இடங்கள் என விசாரிக்கின்றனர். இரவு 10 மணியைத் தாண்டிய உடன் அவள் விபத்தில் சிக்கியிருப்பாளோ
என மருத்துவ மனை, சவக்கிடங்கு என தேடுகின்றனர். நடு இரவைத் தாண்டிய உடன் அவர்களின் கவலை பயமாக மாறுகிறது. திருமணமாகாத அவள் யாருடனாவது ஓடிப்போயிருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றி,
இனி இந்தக் குடும்பத்திற்கு எப்படி வருமானம் எனும் பயமாய் மாறி அவர்களிடையே
பெருத்த நிசப்தம் நிலவுகிறது. விடிந்தும் விடியாத காலைப் பொழுதில்
அவள் வீடு திரும்புகிறாள். இரவெல்லாம் அவள் எங்கே இருந்தாள் என்று
கேட்க யாருக்கும் தைரியம் இல்லை. ஆழ்ந்த நிசப்தம் தொடர்கிறது.
அத்தோடு படம் முடிகிறது. நடுத்தர மற்றும் கீழ்
நடுத்தர குடும்பத்தின் எதிர்காலம் குறித்த பயத்தை இத்தனை ஆழமாய் அதற்கு முன்பு வேறு
எந்தப் படமும் சொல்லியதில்லை.
ஒரு திரைப்பட
விழாவில் திரையிடலுக்குப் பின் நிகழ்ந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு ஆண் நிருபர்
பின்வரும் கேள்வியைக் கேட்டார்:
“அன்றிரவு அவள் எங்கு, யாருடன் இருந்தாள்?
அதை ஏன் நீங்கள் காண்பிக்கவில்லை?”
மிருணாள்
சென்னுக்கோ கோபம் கொந்தளித்தது.
“அவள் எங்கிருந்தால் உனக்கென்ன? நான் சொல்ல மாட்டேன்
போ!” என்று கத்தினார்.
இன்னொரு
படம் ‘காரிஜ்’.
“முடிந்து போன வழக்கு” என இப்படம் ஆங்கிலத்தில்
அழைக்கப்பட்டது. “ஏக் தின் ப்ரதி தின்” படத்தை விட இப்படம்
ஒரு படி மேலே இருந்தது. காரணம் இப்படத்தின் திரைக்கதையும் கட்டமைப்பும் ஆகும்.
அதனால்தான் கான் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டு,
நடுவர்களின் சிறப்புப் பரிசை வென்றது. சிறந்த திரைக்கதைக்கான
தேசிய விருதையும் பெற்றது. முதன் முறையாக சென் இப்படத்திற்காக
நான்கடுக்கு மாடியை கலை இயக்குநர் மூலம் கட்டியிருந்தார். இப்படத்தில்தான்
நிதிஷ் ராய் முதன்முதலாக கலை இயக்குநராக பணியாற்றினார். இப்படத்திற்காக
சிறந்த கலை இயக்குநருக்கான தேசிய விருதையும் பெற்றார். பின்னாளில்
இந்தியாவின் தலைசிறந்த கலை இயக்குநராகவும் மாறினார்.
“காரிஜ்”
நடுத்தர வர்க்கத்தின் குற்ற உணர்வை நுணுக்கமாக ஆராய்ந்தது. இளம் தம்பதி ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு குழந்தை. அவர்களுக்கு உதவியாக ஒரு சிறு
பையன் வீட்டிலேயே இருந்து வேலை செய்கிறான். பீகாரில் இருந்து
வந்த அந்தச் சிறுவன் இரவில் மாடிப்படியின் கீழேதான் உறங்குவான். குளிர்காலத்தின்போது வீட்டின் சமையல் அறையில் உறங்குகிறான். எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்ட அந்தச் சமையலறையில் வெப்பத்திற்காக வைக்கப்பட்டுள்ள
கரியிலிருந்து வெளிப்படும் வாயுவால் தூக்கத்திலேயே மூச்சடைத்து இறந்து போகிறான்.
அந்த இளம் தம்பதி அதிர்ச்சியில் அடுத்து என்ன செய்வது என்று திகைத்துப்
போகின்றனர். பீகார் கிராமத்திலிருந்து சிறுவனின் தந்தை வருகிறார்.
தங்களை என்ன செய்து விடுவாரோ என அத்தம்பதி பயத்தில் உறைகின்றனர்.
அவர் சிறுவனின் உடலை இறுதிச் சடங்குக்காக எடுத்துக் கொண்டு செல்கிறார்.
கூடவே அச்சிறுவனோடு விளையாடிய அத்தெருவின் பல அனாதைச் சிறுவர்களும் செல்கின்றனர்.
சடங்குகளை முடித்த தந்தை அச்சிறுவர்களோடு மீண்டும் தம்பதியினரின் வீட்டுக்கு
வருகிறார். தம்பதியைக் கடந்து நேராகப் படியேறி தம்பதியின் குழந்தை
இருக்கும் அறைக்கு செல்கிறார். தங்களிடம் எதிர்ப்பைக் காட்ட முடியாமல்
குழந்தையை ஏதாவது செய்து விடுவாரோ என்று திகிலுடன் தம்பதியினர் அவரையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
குழந்தையை சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த தந்தை பின்னர்
கையெடுத்துக் கும்பிட்டு விட்டு வெளியேறுகிறார். எல்லாச் சிறுவர்களும்
அவரையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒரே ஒரு சிறுவன் மட்டும்
அங்கேயே நின்று கொண்டிருக்கிறான். அடுத்து அந்த வீட்டில் வேலை
செய்யப்போகும் சிறுவனாக அவன் இருப்பானோ என்ற தொனியில் படம் நிறைவடைகிறது.
கட்டுக்கடங்காத
கலகக்காரனாய் தன் திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய மிருணாள் சென் பின்னாளில் முதிர்ந்த
கலைஞனாய், தன்
அரசியல், சமூகப் பார்வையை மாற்றிக் கொள்ளாமல் அதன் எல்லைகளை மட்டும்
விரிவுபடுத்திக் கொண்டு ஆழமான, அமைதியான படங்களை எடுத்தார்.
தன் கடைசிப் படமான ‘அமர் புவன்’-ஐ 2003-ம் ஆண்டு எடுத்தார். இப்படத்தில் நந்திதா தாஸ் பிரதான பாத்திரத்தில்
நடித்தார்.
2004-ல் “இன்று புதிதாய் பிறந்தேன்” என்ற தலைப்பில் தன் சுயசரிதையை வெளியிட்டார். இதன் தமிழ்ப்
பதிப்பை கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டது. 2005-ல் சினிமா கலைஞர்களுக்குத்
தரப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அவருக்கு வழங்கப்பட்டது.
கடைசி வரை
தன் கோபத்தையும் முற்போக்கு சிந்தனையையும் துளியும் மாற்றிக் கொள்ளாமல் இளம் தலைமுறையினரை
எப்போதும் அரவணைக்கும் எளிய மனிதராக அவர் வாழ்ந்தார்.
உலக சினிமாவின்
அத்தனை ஜாம்பவான்களோடும் நேரடி உறவில் இருந்தார். இளம் திரைப்பட இயக்குநர்கள், மாணவர்களோடு பாசப்பிணைப்பில் இருந்தார். அவர் மனம் சோர்வுறும்போதெல்லாம்
பூனா திரைப்படக் கல்லூரிக்குச் சென்று அங்குள்ள மாணவர்களோடு நேரத்தைச் செலவிடுவார்.
இந்த மாபெரும்
மனிதரோடு என்னுடைய
20வது வயதில் எனக்கும் ஒரு நேரிடல் நிகழ்ந்தது. பட்டப்படிப்பை முடித்து விட்டு, சினிமா, இடதுசாரி அரசியல் மீது ஒரு விடலைத்தனமான ஆர்வத்தோடு சுற்றித் திரிந்த நாட்களில்
பதிப்பகத் துறையில் இருந்த என் தோழர்கள் சிலர் இந்தியாவின் ஒரே இடதுசாரி திரைப்பட இயக்குநரான
மிருணாள் சென்னின் புத்தகம் ஒன்று ஆங்கிலத்தில் Views on Cinema என வந்திருப்பதாகவும், அதை தமிழில் மொழிபெயர்க்குமாறும் கேட்டுக் கொண்டனர். நானும் துணிச்சலோடு மேலும் இரு தோழர்களின் உதவியோடு அந்த
நூலை மொழிபெயர்த்து முடித்தேன். சினிமா ஒரு பார்வை என்ற தலைப்பில் அந்தப் புத்தகம் 1980-ல் வெளியிடப்பட்டது. மேற்கு வங்க இடதுசாரி முன்னணி அரசின் ஐந்தாண்டு நிறைவை ஒட்டி அப்போது கலைவாணர்
அரங்கில் ஒரு திரைப்பட விழா நடந்தது. அதில் மிருணாள் சென்னின்
‘ம்ருகயா” திரைப்படம் திரையிடப்பட்டது.
படம் முடிந்து கலைவாணர் அரங்கத்தின் படிக்கட்டுகளில் மிருணாள் சென்னை
கண்டபோது ஓடோடிச் சென்று உங்கள் புத்தகத்தை தமிழாக்கம் செய்தது நான் தான் என என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஒருவித ஆச்சரியத்தோடு
என்னை ஆரத் தழுவிக் கொண்டார். அந்தத் தழுவலினூடே
அவர் பிடிக்கும் சிகரெட் வாசனையை உணர்ந்தேன்.
அந்தப் புத்தகம்
என்னுள் ஏற்படுத்திய தாக்கம்
காரணமாகவே அடுத்த சில மாதங்களில் தேசிய திரைப்பட
ஆவணப் பாதுகாப்பகம் (NFAI) நடத்திய திரைப்பட ரசனை வகுப்பில் சேர்ந்தேன்.
அதன் தொடர்ச்சியாய் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில்
சேர்ந்தேன். இன்று என் வாழ்வில் எல்லாம்
சினிமா என்றாகி விட்டது.
கடந்த டிசம்பர் 30-ம் தேதி இரவு மிருணாள் சென்
மறைந்து விட்டார் என்ற செய்தியை கேள்விப்பட்ட உடன் பல ஆண்டுகளுக்கு முன் கலைவாணர் அரங்கின்
படிக்கட்டுகளில் நிகழ்ந்த அவரின் அணைப்பும், அவரின் சிகரெட் வாசனையும்தான்
நினைவலைகளாய் ஓடியது.
* Head of Department, Direction
L V Prasad Film and TV Academy
Chennai.
“பிரபுத்துவ மீத மிச்சங்களுக்கும், முதலாளித்துவத்துக்கும் எதிரான எங்கள் போராட்டத்தில், நாங்கள் ருஷ்யாவின் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் ஒன்றுபடச் செய்வதில் வெற்றி பெற்றோம். மூலதனத்தையும், பிரபுத்துவத்தையும் எதிர்த்து விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டதுதான் எங்களுடைய வெற்றி அவ்வளவு சுபலமாக காரணமாய் இருந்தது” என்று குறிப்பிடுகிறார் லெனின்.
ரஷ்ய புரட்சியின் இந்த அனுபவம் உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கான முக்கியமான படிப்பினையாக அமைகிறது. பிரெஞ்சு புரட்சியின் போது ” விவசாய வர்க்கம், முதலாளி வர்க்கத்தின் உதவிப்படையாக செயலாற்றியது. இதன் விளைவாக, அங்கு முதலாளி வர்க்கத்தின் அரசியல் சக்தியை அதிகமாக பெருக்குவதில் கொண்டு போய் விட்டது.” என்று கூறுகிறார் ஸ்டாலின். மற்ற மேற்கத்திய நாடுகளைப்போல் அல்லாமல் ரஷ்ய முதலாளிய புரட்சியின் போது அங்கு வர்க்க போராட்டம் வளர்ந்திருந்ததோடு, தொழிலாளி வர்க்கம் சுயேச்சையான அரசியல் சக்தியாகவும் வளர்ந்திருந்தது. 1902 ஆம் ஆண்டு நடந்த விவசாயிகளின் போராட்டம் மற்றும் அதை தொடர்ந்த பல்வேறு எழுச்சிகளில் கிடைத்த படிப்பினைகளின் மூலம் தேர்ச்சியடைந்த விவசாயி வர்க்கம் “தொழிலாளி வர்க்கத்துடன் தோளோடு தோள் நின்று, அதன் தலைமையின் கீழ் போரிட்டது. நிலம் மற்றும் சமாதானம் ஆகியவற்றை தொழிலாளி வர்க்கப் புரட்சியின் மூலம் பெற்றது” என்கிறார்.
பாரிஸ் கம்யூன் தொழிலாளி வர்க்கத்தின் வெற்றியாக அமைந்தாலும் நேச சக்திகளான, சமூகத்தின் பெரும் பகுதியாக விளங்கிய விவசாய வர்க்கத்தை இணைக்காதது, அதை மிக விரைவில் வீழ்த்த முதலாளித்துவத்திற்கு எளிதாக அமைந்தது. “அதிகாரத்தை கைப்பற்ற முதலில் நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு போக வேண்டும். கட்சி கிராமங்களிலும் வலுவடைய வேண்டும்” என்கிறார் ஏங்கல்ஸ். அதன்படி ரஷ்ய கம்யூனிஸ்டுகள் மிக அதிகமாகவே கிராமங்களில் தங்களுக்கான ஆதரவை திரட்டுவதில் வெற்றி பெற்றனர் என்கிறார் ஸ்டாலின்.
புரட்சியில் விவசாயிகளின் பாத்திரத்தை நிராகரித்த மென்ஷ்விக்குகளின் கருத்தை எதிர்த்ததோடு, முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை, தொழிலாளி வர்க்க புரட்சியை நோக்கி உடனடியாக முன்னேறுவதற்கு பயன்படுத்துவது என்பதை லெனின் வலியுறுத்தினார். அதுவே ரஷ்யாவில் வெற்றிகரமான தொழிலாளி வர்க்க புரட்சியை சாத்தியப்படுத்தியது.
பிரெஞ்சு புரட்சியின் அனுபவங்களும், பாரீஸ் கம்யூனின் படிப்பினைகளும் விவசாயி-தொழிலாளி ஒற்றுமையே வெற்றிகரமான புரட்சிக்கான அடிப்படை என்பதை கற்றுத் தந்துள்ளது. சீன புரட்சியின் வெற்றியும் விவசாயி-தொழிலாளியின் ஒற்றுமையின் அவசியத்தை சுட்டுகிறது. எனவேதான் “தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு மையமானதும், அடித்தளமானதுமாகும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் வலியுறுத்துகிறது.
ரஷ்ய, சீன புரட்சிகளின்அனுபவங்களை கருத்தில் கொண்டு, இந்திய சமூகத்தின் பிரத்யேக சூழல்களை கவனத்தில் இருத்தி “முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தின் மிச்ச சொச்சங்களை சாதி மற்றும் கிராமங்களின் மிக நீண்டகால பின்தங்கிய தன்மை காரணமாக கட்டிக் காக்கப்படும் நடைமுறைகள் ஆகியவற்றையும் துடைத்தெறிய தேவையான சமூக முறை சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறது கட்சி திட்டம்.
இந்திய பிரத்யேக தன்மை
இந்திய சமூகத்தில் சாதியும், வர்க்கமும் பின்னிப் பிணைந்துள்ளது. “இந்தியாவின் முதலாளித்துவத்தை, தனித்த இந்திய இயல்புகளுடன் கூடிய முதலாளித்துவமாகப் பார்க்கவேண்டும். இந்திய விடுதலைக்குப் பின், இங்கே வளர்ச்சியடைந்த முதலாளிகள், நிலப்பிரபுத்துவத்துடனும், அரை நிலப்பிரபுத்துவ உறவுகளோடும் சமரசம் செய்துகொண்டனர். இந்தியாவில் விவசாயப் புரட்சி முழுமையடைந்து, உற்பத்தி உறவுகளில் ஜனநாயக மாறுதல்கள் நடக்கவில்லை. வளர்ந்து வரும் முதலாளித்துவ அமைப்பின் ஒரு பகுதியாக சாதீய அதிகாரப் படிநிலைகளும், சாதீய சமூக வடிவங்களும் தொடர்ந்து நீடிக்கின்றன.” என்பதை நமது கட்சி ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
தொழிலாளி, விவசாயி,விவசாய தொழிலாளி உள்ளிட்ட உழைக்கும் மக்களை ஒருங்கிணைத்து திரட்டுவதன் மூலமே மக்கள் ஜனநாயக புரட்சியை சாத்தியப்படுத்த முடியும். ஆனால் வர்க்கங்களாக மட்டுமில்லாமல் சாதி அடையாளங்களையும் கொண்டே, நாம் வர்க்கமாக திரட்ட வேண்டிய பகுதி மக்கள் உள்ளனர். நமது பணி இந்த புரிதலின் அடிப்படையில் அமைந்திடவேண்டியுள்ளது.
உங்களை எதிர்நோக்கும் பணி உலகின் கம்யூனிஸ்ட்டுகளை இதற்கு முன் எதிர் நோக்கியிராத ஒன்றாகும். கம்யூனிசத்தின் பொதுத் தத்துவத்தையும், நடைமுறையையும் ஆதாரமாய்க் கொண்டு நீங்கள் ஐரோப்பிய நாடுகளில் இல்லாதவையான பிரத்யேகமான நிலைமைகளுக்கு உங்களைத் தகவமைத்துக் கொண்டாக வேண்டும்” என்று 1919 ஆம் ஆண்டு கீழ்த்திசை மக்களது கம்யூனிஸ்ட் நிறுவனங்களின் இரண்டாவது அகிலத்தில் லெனின் குறிப்பிட்டார்.
இந்திய உற்பத்தி முறையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் முதலாளித்துவம் வளர்ந்திருந்தாலும், “இந்திய முதலாளித்துவ அமைப்பில் வர்க்கங்களின் வளர்ச்சியானது, சாதீய அடுக்கமைவும், பிரிவுகளும் கொண்ட சமூக நிலைமைகளுக்கு உட்பட்டே நிகழ்கிறது. இந்திய முதலாளிகளில் பெரும் பகுதியினர், சில குறிப்பிட்ட சாதிகளில் இருந்துதான் வந்திருக்கின்றனர்.
விடுதலைக்கு பிறகான இந்திய முதலாளிகளில் டாட்டா (பார்சி) தவிர மற்ற முதலாளிகள் எல்லாம் பனியா சாதியினர்தான். அதேசமயம் கொத்தடிமைகளாகவும், ஒட்டச் சுரண்டப்படும் தொழிலாளர்களாக ஆதிவாசி மக்களும், தலித் மக்களுமே உள்ளனர்”. ஏழை விவசாயிகளாகவும்,கூலித் தொழிலாளர்களாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களே உள்ளனர்.
பிரிவினைகளை கடந்த ஒருங்கிணைவு
பொது எதிரியான முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட வேண்டிய தொழிலாளி மற்றும் விவசாயிகள் சாதி என்கிற பிரிவினையால் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். தொழிலாளி, விவசாயிகளிடேயே வர்க்க உணர்வை வளர்த்தெடுப்பதற்கு சாதி தடையாக அமைகிறது. ஒருங்கிணைந்த எதிர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள, சாதி, முதலாளி வர்க்கத்திற்கு சாதகமாக உள்ளது. அதே சமயம் ஒடுக்கப்படும் மக்களுக்காக பேசுவதாக கூறும் அடையாள அரசியல் பேசும் பின் நவீனத்துவ வாதிகள் ஒருங்கிணைந்த போராட்டத்தை நீர்த்துப் போக வைக்கும் வகையிலேயே தங்களின் யுக்திகளை முன்வைக்கின்றனர். இது இயல்பாகவே முதலாளிகளுக்கு சாதகமாக அமைந்திடுகிறது.
“ஜனநாயகம், ஜனநாயகப் புரட்சி என்றாலே சாதிப் பிளவுகளையும், ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக் கட்டுவதுதான். அவ்வாறில்லாமல் ஜனநாயகம் பிறக்காது. சோசலிசத்தை எட்டுவதற்கே இதுவொரு முன் நிபந்தனையாகும். நாம் முன்னெடுப்பது தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. சாதி அமைப்பையே ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டமாகும். சாதிப் படிநிலை அமைப்பில், ஒவ்வொரு சாதியும் இன்னொன்றை ஒடுக்குகிறது. அனைத்து அநீதியான சாதிய கட்டமைப்பிற்கும், நியாயங்களுக்கும் முடிவு கட்ட வேண்டும். இந்தப் போராட்டம், வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே” என்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
ஒடுக்கப்படும் மக்களின் தனித்துவமான பிரச்சனைகளை அங்கீகரித்து போராடுவதோடு,பிரதான எதிரியை வீழ்த்துவதற்காக உழைக்கும் மக்களின் ஐக்கியத்தையும் உருவாக்குவது அவசியமானதாகும். ஆகவேதான் கட்சி தீண்டாமைக்கு எதிராகவும், அதேசமயம் சுரண்டப்படும் அனைத்து மக்களின் விடுதலைக்காகவும் போராடுகிறது. ஒருங்கிணைந்து போராட வேண்டிய வர்க்கங்களை பிரித்தாளும் வேலையை முதலாளித்துவ-நிலப்பிரவுத்துவ அமைப்பு செய்கிறது. அதை எதிர்கொண்டு, பிரிவினையை தடுத்து, உழைக்கும் மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கிட வேண்டிய கடமை கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு.
அகச்சூழலும், புறச்சூழலும்
“கிராமப்புற ஏழைகள் மற்றும் நகர்ப்புற தொழிலாளர்களிடையே ஏற்படக்கூடிய ஒற்றுமை அதிக எண்ணிக்கையிலான மக்கள் திரளை ஒன்றுபடுத்தும். அவர்கள் (ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவானவர்கள்) லட்சக்கணக்கில் என்றால் நாம் கோடிக்கணக்கில் அணி திரள்வோம்” என்றார் லெனின்.
இந்த ஒற்றுமையை, ஐக்கியத்தை அகச்சூழலும், புறச்சூழலுமே தீர்மானிக்கிறது. கட்சிக்குள்ளும், தொழிலாளி, விவசாயி இயக்கங்களுக்குள்ளும் தொடர்ச்சியான பிரச்சாரமும், களத்தில் அவர்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதும் அவர்களை இந்த ஒன்றுபடுதலுக்கு தயார்ப்படுத்தும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை கடுமையாக தாக்கும் ஆட்சியாளர்களின் கொள்கை அவர்களை ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு உந்தித் தள்ளும்.
கடந்த செப்டம்பர் 5ம் தேதி டெல்லியில் நடைபெற்ற தொழிலாளர், விவசாயி மற்றும் விவசாய தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டம் இதன் சிறு வெளிப்பாடே ஆகும். அயோத்தியில் கோவில் வேண்டாம், விவசாய கடனை ரத்து செய்யுங்கள் என்ற முழக்கத்தோடு நவம்பர் 29, 30-ல் டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகளின் பேரணி சாதி, மத பேதங்களை கடந்த ஒருங்கிணைந்த போர்க் குரலே. வரும் ஜனவரி 8, 9 ஆம் தேதிகளில்தொழிற்சங்கங்கள்அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தத்திற்கு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த ஒருங்கிணைவு காலத்தின் தேவை என்பதோடு புறச்சூழல் அதனை உறுதிப் படுத்துகிறது.
“கடந்த காலங்களில் இல்லாத நிலைமைகள் இந்த வர்க்கங்களுக்கிடையே இத்தகைய ஒற்றுமையினை உருவாக்கி இருக்கின்றன. இந்தியாவில் இன்றைய நவீன தாராளவாத ஆட்சி தொழிலாளர்களையும் விவசாயிகளையும் வரலாறு காணாத வகையில் இந்த அளவிற்கு இணைந்திருக்கிறது” என்கிறார் பேரா. பிரபாத் பட்நாயக்.
“நகர்ப்புற தொழிலாளர்களுடன் ஒருங்கிணைந்து போராடத் தவறினால், வாட்டி வதைக்கும் பல்வேறு கொத்தடிமை முறைகளிலிருந்தோ, இல்லாமை மற்றும் வறுமை நிலையிலிருந்தோ கிராமப்புற ஏழைகள் தங்களை விடுவித்துக் கொள்ள முடியாது” என்கிறார் லெனின். அதே போல் ” பரவலான விவசாயப்பெருங்குடி மக்களின் உதவியோடுதான் பாட்டாளி வர்க்கப் புரட்சி கூட்டு இசையாக மாறும். அது இல்லையென்றால் எல்லா விவசாய நாடுகளிலும் பாட்டாளி வர்க்கம் தனிப்பட்டு அதன் கடைசி பாட்டாக மாறிவிடும் அபாயம் உண்டு” என்று எச்சரிக்கிறார் மார்க்ஸ். மேற்கண்ட வரிகள் இந்திய சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வை உடைத்து நொறுக்க தொழிலாளி – விவசாயிகளின் ஒற்றுமையின் அவசியத்தை எடுத்துரைக்கிறது.
வரலாற்றின் பகுதிகளில் முதலாளித்துவ சக்திகளுக்கு உதவிப் படையாக வைக்கப்பட்டிருந்த விவசாய வர்க்கத்தை, ரஷ்ய, சீன அனுபவங்களிலிருந்து தொழிலாளி வர்க்கத்தின் நேச சக்தியாக இணைத்திட வேண்டியுள்ளது. ஆளும் வர்க்கத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பதோடு அதற்குத் தேவையான உதவிகளை மேற்கொள்வதில் தொழிலாளி வர்க்கம் முனைப்புடன் செயலாற்றிட வேண்டும். “விவசாயி வர்க்கத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்களின் அடிமை விலங்குகளை அறுக்கவும், சுரண்டலை ஒழிக்கவும், வறுமை படுகுழியிலிருந்து கரை ஏறவும், ஒடுக்குமுறையிலிருந்து விடுபடவும் விவசாயி வர்க்கம் நடத்தும் போராட்டங்களுக்கு தொழிலாளி வர்க்கம் தவறாது ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறார் ஸ்டாலின்.
“விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக தொழிலாளி வர்க்கம் உணர்வுபூர்வமாக செயல்படாமல், அக்கோரிக்கைகளுக்காக போராடாமல், புரட்சிக்கு தேசிய உள்ளடக்கம் அளிக்க முடியாது. புரட்சியும் முன்னேறி செல்ல முடியாது.” தொழிலாளி வர்க்க ஒற்றுமையையும், தொழிலாளி வர்க்க கூட்டாளிகளாக விளங்கக்கூடிய விவசாயி வர்க்கத்தை தன்னோடு நெருக்கமாக இணைத்துக் கொள்வதும் பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும். இது புரட்சியை சாத்தியப்படுத்துவதற்கான முன் நிபந்தனையாகவும் அமைகிறது. தொழிலாளி வர்க்கம், உழைக்கின்ற பெரும்பகுதி விவசாயிகளின் ஒற்றுமையை சார்ந்திருப்பதன் மூலமும், தன்னை சுற்றி உழைக்கும் விவசாய பகுதியினரை அணிதிரட்டுவதன் மூலமாகவும் மட்டுமே, தொழிலாளி வர்க்கம் தன்னை விடுவித்துக்கொள்வதோடு, மூலதனத்தின் ஒடுக்குமுறையிலிருந்து உழைக்கும் விவசாயிகளையும், மனித இனத்தையும் விடுவிக்கின்ற தன் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முடியும் என்று லெனின் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.” பாட்டாளி “வர்க்கத்துடன் நகமும் சதையுமாக கட்சி இணைந்து” இப்பணிகளை வழிநடத்தி முன்னோக்கி அழைத்துச் சென்றிட வேண்டும்.
புரட்சி என்பது வாய்ச்சொல் அல்ல
“வாழ்க்கை கடினமானதாக இருக்கிறது. எனவே கலகம் செய்யுங்கள் என்று சொன்னால் மட்டும் போதாது. ஒவ்வொரு மேடைப் பேச்சாளனும் இதனைச் செய்ய முடியும். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை” என்று தனது “கிராமப்புற ஏழை மக்களுக்கு” என்கிற நூலில் லெனின் குறிப்பிடுகிறார். மேடைப் பேச்சாளர் போல் பேசிவிட்டு, செயலில் இறங்காமல் இருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல. மார்க்சியம் என்பதே செயலக்கான வழிகாட்டிதான். அந்த வகையில் உள்ளூர் சமூகத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கினை இப்புத்தகத்தில் பேசும் லெனின், தொழிலாளர்கள் விவசாயிகளிடையே நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டு,ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை வர்க்க கண்ணோட்டத்தோடு விளக்கி புரிய வைத்திடவேண்டுமென்கிறார். பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டங்களோடு நின்று விடாமல், அதற்கு அடிப்படை காரணமாக விளங்கும் அரசியல், தத்துவார்த்த அம்சங்களை புரிய வைப்பதும்தான் கம்யூனிஸ்டுகளின் கடமை என்கிறார்.
எப்படி நவீன தாராளமயக் கொள்கை தொழிலாளியை ஒட்டச் சுரண்டுகிறதோ, அதேபோல் கிராமப்புற விவசாயியையும், அவர்களின் எளிய வாழ்க்கையையுமே அது சீரழித்து விடுகிறது. வாழ வழியின்றி நகர்ப்புறங்களில்அத்துக்கூலிகளாக வேலை செய்ய அவர்கள் தள்ளப்படுகின்றனர். “ஒரு சுயேச்சையான விவசாயி என்ற நிலையிலிருந்து விவசாயக் கூலியாக மாறி விடுகின்றனர். அல்லது ஒரு தொழிலாளியாக மாறிவிடுகின்றனர். அதனால்தான் இப்படிப்பட்ட விவசாயிகள் எல்லாம் அரைப் பாட்டாளிகள் என்று அழைக்கப் படுகின்றனர். அவர்களும் நகர்ப்புற தொழிலாளர்களின் சகோதரர்களே” என்கிறார் லெனின்.
பாட்டாளிகளும், அரை பாட்டாளிகளும்
நகரங்களில் வேலை செய்யும் முறைசாரா தொழிலாளர்களில் பெரும்பாலோர் கிராம பொருளாதார சீரழிவினால் விவசாயத்தை விடுத்து இடம் பெயர்ந்து வந்தவர்களே. படித்து முடித்து வேலை தேடி நகரங்களுக்கு வருபவர்களை விட வாழ வழியற்று பிழைப்புக்காக இடம் பெயர்பவர்களே அதிகமாக உள்ளனர். இந்தியாவில் சுமார் 90 சதம் உழைக்கும் மக்கள் முறைசாரா தொழிலிலேதான் ஈடுபடுகின்றனர். எனவேதான் இவர்களை திரட்ட தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கட்சி வலியுறுத்துகிறது. முதலாளிகளுக்கு குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களின் கூட்டம் கிடைப்பதற்கு இது உதவுகிறது. முதலாளித்துவம் எப்போதும் வேலையில்லா தொழிலாளர் பட்டாளம் (Lobour Reserve Army) இருப்பதை விரும்பும், அதை அப்படியே பராமரிக்கும். ஏனெனில் அப்போதுதான் அதற்கு குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களை பெற முடியும். தொழிலாளர்களின் பேரம் பேசும் உரிமையை மறுக்க ஏதுவாக இருக்கும். தொழிலாளர்களின் உரிமையை பறிக்க உதவும்.
“கிராமப்புற பாட்டாளிகளும், அரைப் பாட்டாளிகளும்தான் இப்படிப்பட்ட (முறைசாரா) வேலைகளை பார்க்கின்றனர். வேலை எங்கு கிடைக்கிறது என்று ஊர் ஊராகச் சென்று தேடித் திரியும் இவர்கள் பெயரளவில் விவசாயிகள். உண்மையில் கூலி உழைப்பாளர்களே ஆவர். இவர்கள் அனைவரும் நகர்ப்புறத் தொழிலாளர்களுடன் இணைந்து ஒரே சங்கத்தின் கீழ் அணி வகுக்க வேண்டும். கிராமப்புறங்களைச் சென்றடையும் ஒவ்வொரு வெளிச்ச ரேகையும் அறிவு வளர்ச்சியும் இந்த ஒற்றுமையை பலப்படுத்தி ஐக்கியத்தை ஏற்படுத்தும்” என்கிறார் லெனின்
கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தாமல் நகரங்களை நோக்கி வெளியேறும் குறைந்த கூலி தொழிலாளர்களை கட்டுப்படுத்த முடியாது. அது கட்டுப்படுத்தப்படாத வரை வேலையற்ற தொழிலாளர் படைக்கு பஞ்சமிருக்காது. இது தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதில் முதலாளிகளுக்கு கூடுதலான உதவி புரியும். “பாட்டாளிகள் கூட்டத்துடன் விவசாயிகள் தள்ளப்படுவதிலிருந்து எந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் நாம் விவசாயிகளை காப்பாற்றுகிறோமோ இத்தகைய விவசாயிகளை அவர்கள் விவசாயிகளாக இருக்கும் போதே எளிதாக நம் பக்கம் வென்றெடுக்க முடியும் அளவிற்கு, எளிதாகவும் சமூக மாற்றம் வெற்றி பெறும்” என்கிறார் ஏங்கல்ஸ்.
விவசாயிகளின் வாழ்நிலை மேம்பாட்டிற்கான போராட்டம் விவசாயிகளை காப்பாற்றுவதோடு, தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதற்கு உதவும் வேலையற்ற தொழிலாளர் படையை குறைக்கும். தொழிலாளர்களின் பொருளாதார கோரிக்கையை கடந்த இணைந்த அரசியல் போராட்டம் என்பது விவசாயிகள் உள்ளடங்கிய ஒட்டு மொத்த சமூகத்தின் விடுதலைக்கான போராட்டமாக அமையும். அத்தகைய விடுதலைக்கான போராட்டத்தின் அச்சாணியாகவே தொழிலாளர் விவசாயி ஒற்றுமை அமைகிறது.
முதலாளித்துவ ஒழிப்பே உண்மையான சமூக விடுதலை
மூலதனத்தின் வீழ்ச்சிதான் விவசாயிகளை உயர்த்தமுடியும் ஒரு முதலாளித்துவ எதிர்ப்பு, பாட்டாளி அரசாங்கத்தால்தான் விவசாயியின் பொருளாதார வறுமையை, அவனது சமூக சீர்கேட்டை முறிக்க முடியும்”. “ஒரு வர்க்கத்திடமிருந்து எடுக்காமல் மற்றொரு வர்க்கத்திற்குக் கொடுக்க முடியாது” என்கிறார் மார்க்ஸ். முதலாளித்துவத்தை ஒழித்து, அதனிடமிருந்து எடுத்து ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கொடுக்கும் ஆற்றலை கொண்டிருப்பது பாட்டாளி வர்க்கமே. எனவே “விவசாயிகள் முதலாளித்துவ ஆட்சி அமைப்பை ஒழிப்பதை கடமையாகக் கொண்டுள்ள நகர்ப்புறப் பாட்டாளி வர்க்கத்தை தங்களுடைய இயற்கையான தோழனாக, தலைவனாக காண்கின்றனர்” என்று தனது “லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்” புத்தகத்தில் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.
ஒட்டுமொத்த சமூக விடுதலைக்கான போராட்டம் இல்லாமல், தொழிலாளர்களுக்கான விடுதலையோ, விவசாயிகளுக்கான வாழ்வோ, ஒடுக்கப்பட்டு, நசுங்கிக் கிடக்கும் மக்களின் வாழ்வில் வெளிச்சமோ, தனித்தனியே சாத்தியமில்லை. அரசுகள் இவர்களின் கோரிக்கைகளின்பால் கனிவோடு செவி சாய்க்கப் போவதில்லை. ஏனெனில் “அரசாங்கமே வசதி படைத்தவர்களின் கைகளில்தான் இருக்கிறது. பிறரது உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் நபர்களுக்கு எதிராக உழைப்பாளர்கள் தங்களிடையே ஒற்றுமையை வளர்த்துக் கொள்வதுடன் ஏழைகள் அனைவரையும் ஒரே உழைக்கும் வர்க்கமாக – பாட்டாளி வர்க்கமாக ஒன்றுபடுத்திட வேண்டும்”என்று வலியுறுத்தும் லெனின், ஒன்றுபட்டு முதலாளி வர்க்கத்திற்கு எதிராக நடத்தும் போராட்டம் எளிதாக இருக்காது என்ற போதும், இறுதி வெற்றி சமூகத்தின் பெரும்பான்மையாக இருக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கே கிட்டும் என்று கூறியதோடு, அத்தகைய வெற்றியை ரஷ்யாவில் சாத்தியப்படுத்தியும் காட்டினார்.
“தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் தொழிலாளி விவசாயி ஒற்றுமை என்கிற கோட்பாடு மற்றும் ஜனநாயக புரட்சியை சோஷலிச புரட்சியாக வளர்ப்பது என்ற கோட்பாடுகளை சிறப்பாக செழுமைப்படுத்தி, செயல்படுத்தியதானது மகத்தான ரஷ்யபுரட்சியின் வெற்றியாகும்” அத்தகைய அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு, தொழிலாளி, விவசாயி, விவசாய தொழிலாளி மற்றும் இன்ன பிற ஏழை மக்களை ஒருங்கிணைத்து மக்கள் ஜனநாயகப் புரட்சியை வென்றெடுப்போம்.
உதவிய நூல்கள் மற்றும் தரவுகள்:
லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம்புரூமேர் – கார்ல் மார்க்ஸ்
கீழ்த்திசை மக்களது கம்யூனிஸ்ட் நிறுவனங்களின் இரண்டாம்
அகில ருஷ்ய காங்கிரசில் லெனின் ஆற்றிய உரை (1919, நவம்பர் 22)
(தேவி பிரசாத் சட்டோபாத்யாயா நினைவு கருத்தரங்கில் தோழர் இ.எம்.எஸ். முன்வைத்த ஆய்வுரை)
(ஆங்கில மார்க்சிஸ்ட் ஜனவரி – மார்ச் 1995 இதழில் வெளியானது.)
மறைந்த தேவி பிரசாத் சட்டோபாத்யாயா நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில் இணைந்து கொண்டிருப்பது, எனக்கு பெருமிதமும், பெருமகிழ்வும் தருகிறது.
தேவி பிரசாத் ஒரு முன்னோடி – இந்திய தத்துவ சிக்கல்களுக்கு (தீர்வு காண்பதில்) மார்க்சிய சித்தாந்தத்தை பொருத்துவதில் அவர் ஒரு முன்னோடி என்று குறிப்பிடுவேன். அவருக்கும் முன்னதாக, மார்க்சிய சித்தாந்தத்தின் இன்னொரு முன்னோடி இருந்தார். அவர்தான் டி.டி.கோசாம்பி. கோசாம்பியும்,தேவி பிரசாத்தும் தத்துவச் சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ரொமிலா தாப்பர், ஆர்.எஸ். சர்மா மற்றும் பலர் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.
நான் மேற்கண்ட துறைகள் எவற்றிலும் நான் வல்லுநர் என்று கூறிவிட முடியாது. நானொரு அரசியல் செயல்பாட்டாளன். இந்திய பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் செயல்பாட்டாளனாக இருக்கிற காரணத்தால், தத்துவம், அரசியல் பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், அழகியல் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. மேற்கண்ட பாடப் பொருள்களை உள்வாங்கி நிறைய கற்றுக்கொண்டேன். அந்த வகையில் சில கண்ணோட்டங்களை எடுத்துரைக்கிறேன்.
இந்தியாவில் தத்துவமும், அறிவியலும் குறித்து உரையாடுவதற்கான இந்தக் கருத்தரங்கின் தலைப்பிற்குள் மட்டும் நின்று நான் பேசப் போவதில்லை. பண்டைக் காலத்திலிருந்து ஜூலை 10, 1994 வரையிலான காலத்தில் இந்தியாவில் தத்துவமும், அறிவியலும், சமூகமும் குறித்ததாக என் பேச்சினை அமைத்திருக்கிறேன்.
எனது உரையின் நோக்கம் இதுதான். ஏன் அப்படி? ஏனென்றால், நான் ஒரு கல்வியாளன் அல்ல; அரசியல் செயல்பாட்டாளன். பன்னெடுங் காலமாய், தத்துவவாதிகள் இப்பேரண்டத்தை பல வழிகளில் விளக்கியுள்ளனர். செய்ய வேண்டியது என்னவெனில், அதனை மாற்றியமைப்பதுதான் என்ற மார்க்சிய முன்மொழிவை ஏற்றுக்கொண்டுள்ள ஒருவன்.
மிகப்பெரும் பங்களிப்புகளை நமக்குக் கொடுத்து உயர்ந்து நிற்கும் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ். ஆனால் அவர் நடைமுறையில் புரட்சிகர செயல்பாட்டாளராகவும் இருந்தார். அவர் தனது தத்துவ எழுத்துகளின் வழியே உலகைப் புரிந்துகொள்ளவும், தனது நடவடிக்கைகளின் வழியே அதனை மாற்றியமைக்கவும் முயன்று கொண்டிருந்தார்.
கார்ல் மார்க்சின் தத்துவ எழுத்துகளின் தரத்தோடு என்னை ஒப்பிட்டுக் கொள்ளவில்லை. தத்துவம் குறித்த எனது புரிதல் நேரிடையானதல்ல. நானே சொந்தமாக மேற்கொண்ட தத்துவப் பாடம் ஏதுமில்லை. இந்திய தத்துவம் பற்றி பேசும்போது, நான் கோசாம்பி, தேவி பிரசாத் உள்ளிட்டவர்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன். மார்க்சிய கல்வியாளர்களான கோசாம்பி, ரொமிலா தாப்பர், ஆர்.எஸ். சர்மா மற்றும் பலரிடமிருந்து இந்திய வரலாற்றையும். இந்தியக் கல்வியாளர்கள் பலரிடமிருந்து, அரசியல் பொருளாதாரத்தையும் கற்றுக் கொண்டேன்.
ஆனால், பெரும்பாலும் எனது கல்வி, செயல்பாடுகளின் வழியாகத்தான் நடந்தது. அந்த செயல்பாடுகள் எனக்கு ‘இந்தியாவின் நிகழ்காலமும் எதிர்காலமும் என்ன?’ என்ற கேள்வியை என் முன் எழுப்பின. அந்தக் கேள்வி உங்களுக்கும் எழ வேண்டும்.
இப்போதைய நிகழ்கால அரசியலுக்குள் நான் செல்லவில்லை, ஒருமுறை பண்டித நேரு எழுப்பிய கேள்வியை இங்கே திண்ணமாக எழுப்பலாம். “இந்தியா எங்கே இருக்கிறது, எங்கே செல்கிறது”
பழமையை மீட்டமைத்தல்:
இந்தக் கேள்விகளை அவர் 1930களின் தொடக்கத்தில் எழுப்பினார். இந்தக் கேள்வியை 1994 ஆம் ஆண்டில் நான் மீண்டும் கேட்கும்போது, எனக்கு முன்னே எழும் பலதரப்பட்ட பார்வைகள் எழுகின்றன. அவற்றில் ஒன்றாக பழமைக்குத் திரும்புவதும் இடம் பெற்றிருக்கிறது.
பழமைக்குத் திரும்புவது என்றால், உபநிடதங்களின் இந்தியா; வேதங்களின் இந்தியா; அதுதான் மெய்யான இந்தியா என்பதாகும். அதனைத் தொடர்ந்து முஸ்லிம் இந்தியா, கிறித்துவ (ஆங்கிலேய) இந்தியா, மார்க்சிய இந்தியா ஆகியவையும் வருகின்றன.
இவையெல்லாமே அன்னிய சித்தாந்தங்கள்; இந்து வாழ்க்கை வழிமுறை மட்டுமே இந்தியாவுடையது என்ற கருத்தாக்கமானது ஒரு சித்தாந்தம் என்ற நிலையில் மட்டும் நின்று மறைந்து விடவில்லை, அது நடைமுறையிலும் பொருத்தப்படுகிறது. மகாத்மா காந்தியை படுகொலை செய்த நடைமுறையில் அதனை நாம் கண்டுணர்ந்தோம், அண்மையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் கண்டோம். மதுராவிலும் வாரணாசியிலும் மேலும் 3 ஆயிரம் இடங்களிலும் அமைந்துள்ள மசூதிகளை இடித்து நொறுக்குவோம் என்ற அச்சுறுத்தல்களிலும் அதனை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். என்னைப் பொறுத்தமட்டில் அது இந்திய விரோத சித்தாந்தமாகும். மேற்கண்ட கருத்தை கைக்கொண்டுள்ளவர்கள் தாங்கள் இந்திய சித்தாந்தத்தை கைக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அது இந்திய விரோத தத்துவம் என்ற வாதத்தை நான் வைக்கிறேன்.
ஏன் அவ்வாறு சொல்கிறேன்? பலவகைப்பட்ட சமூகங்களின் கலப்பாகவும், கலாச்சாரங்களும் இந்தியாவில் உள்ளன. இந்த நாடு பல மதச் சமூகங்களை ஒருங்கே கொண்டுள்ளது. இந்து சமூகத்தில் பல சாதிகள் உள்ளனர். பழங்குடிகள், மொழி, பண்பாட்டுக் குழுக்கள் இங்கே உள்ளனர். இந்த மண், வேற்றுமையில் ஐக்கியம் கொண்ட மண்ணாகும். இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் பீடத்தில் ஏற்றி, இதுதான் இந்தியா என்று சொல்வது இந்திய விரோதமே என்பேன். செயலூக்கம் மிக்க இடதுசாரி அரசியல்வாதியாக 60 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் நான் கண்டடைந்த புரிதல் இதுதான். எனது மேற்கண்ட புரிதலில் இருந்துதான் இந்திய தத்துவம் எதிர்கொண்டுவரும் சிக்கலையும் பார்க்கிறேன்.
நான் அதனை மேற்கொள்ளும்போது, (எனக்குள்) தேவிபிரசாத் எழுப்பிய கேள்வியை எழுப்பிக் கொள்கிறேன். இந்தியாவில் பொருள்முதல்வாத பாரம்பரியம் இருந்துவந்ததா? தேவிபிரசாத் தனது புகழ்பெற்ற உலகாயதம் என்ற புத்தகத்தை எழுதுகிறவரை நம்மிடம் நிலவிவந்த கருத்துப்பதிவு இதுதான். ஐரோப்பியக் கண்டம் எப்போதும் ‘பொருள்முதல்வாதக்’ கண்ணோட்டத்திலேயே இருந்து வந்தது. இந்தியா எப்போதும் ‘கருத்துமுதல்வாதக்’ கண்ணோட்டம் கொண்டதாக இருந்துவந்தது என்றுதான் பன்னாட்டு, இந்நாட்டு அறிஞர்கள் என அனைவருமே கருதினார்கள்; கூறிவந்தார்கள். இந்தக் கருத்தாக்கத்தை தேவிபிரசாத்தின் ஒற்றைப் படைப்பான உலகாயதம் சுக்குநூறாக்கியது.
சுமார், 40 ஆண்டுகளுக்கு முன் அந்தப் புத்தகத்தை வாசித்தபோது எனது சிந்தனையில் வெளிச்சம் பரவியது. இந்தியாவுக்கும் பொருள்முதல்வாத வரலாறு உண்டு. கிரீஸ், ரோம் போன்ற பிற ஐரோப்பிய நாகரீகங்களைப் போலவே இந்தியாவின் பண்டைச் சமூகத்திலும் கருத்துமுதல் வாதத்திற்கும், பொருள்முதல்வாதத்திற்கும் இடையிலான போராட்டம் காணப்பட்டது. உலகாயதம் மட்டுமல்ல; தேவிபிரசாத்தின் மற்ற பல படைப்புகளும் இந்தச் சாரத்தை உறுதிப்படுத்துகின்றன. “இந்திய தத்துவத்தில்அழிந்துபோனவையும், நிலைத்திருப்பவையும்” என்ற புத்தகம் லோகாயதம் என்ற புத்தகத்தின் விரிவாக்கப்பட்ட, மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். அது பண்டை இந்தியாவில் பொருள்முதல்வாதம் மற்றும் அவற்றின் வர்க்க வேர்களைக் குறித்து விரிவாக விவரிக்கிறது.
மாறுபடும் உலகக் கண்ணோட்டங்கள்:
பொருள்முதல்வாதம் எங்கிருந்துஎழுகிறது? கருத்துமுதல்வாதம் எங்கிருந்துஎழுகிறது? அவைகளுக்கு இடையிலான போராட்டம் எங்கே நடக்கிறது? பண்டைக்கால மற்றும் இடைக்கால இந்தியாவில் பொருள்முதல்வாதம் எவ்வாறு வீழ்த்தப்பட்டது? இவற்றைக் கண்டறிய விரும்பும் எவரும், வர்க்கப் போராட்டங்களை நோக்கி நகர வேண்டும்.
இயற்கையோடு உழைத்துவந்த மக்கள்தான், இயற்கையின் பல்வேறுபட்ட போக்குகளையும் நெருங்கிப் புரிந்து கொண்டார்கள். அவர்கள்தான் பொருள்முதல் வாதத்தைப் படைத்தார்கள் என தேவிபிரசாத் குறிப்பிடுகிறார். அவர்களின் உலகக் கண்ணோட்டமானது பொருள்முதல்வாத நோக்கில் அமைந்தது.
மறுபக்கம், பண்டை கிரேக்கத்தில் அடிமைகளை உடைமையாகக் கொண்டிருந்த சிறுபான்மை எண்ணிக்கையினர் இருந்தார்கள். இந்தியாவில் அவர்கள் இருபிறப்பாளர்களாக அறியப்பட்டனர். (துவைதர்கள் என அழைக்கப்பட்ட வர்ணங்கள் பூணூல் அணியும் சடங்கு மேற்கொண்டு, அதன் மூலம் இரண்டாவது பிறப்பெடுக்கின்றனர் என்ற நம்பிக்கையில் இருந்து இந்தப் பெயர் வருகிறது )பார்ப்பனர்கள், சத்திரியர்கள், வைசியர்கள்தான் அந்த இருபிறப்பாளர்கள். அவர்களே சுரண்டும் வர்க்கங்களாக அமைந்திருந்தனர். அவர்களுக்கு இயற்கையின் நிகழ்வுப் போக்குகளுடன் உயிரோட்டமான தொடர்பு எதுவும் இல்லை. எனவே அவர்களுடைய உலகக் கண்ணோட்டம் ஊகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதிலிருந்துதான் கருத்துமுதல் வாத தத்துவப் போக்கு எழுந்தது.
சாமானிய மனிதனைப் பொறுத்தமட்டில், அவர்கள் கரத்தால் உழைப்பவர்கள் மட்டுமல்ல; கருத்தாலும் உழைக்கிறார்கள், இயற்கையோடு நெருக்கமாகப் பிணைந்துள்ளனர். எனவே அவர்கள்தான் பொருள்முதல்வாதத்தை உருவாக்கி வளர்த்தெடுக்கிறார்கள். இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன.
பண்டைய கிரேக்கம் மற்றும் ரோமாபுரியில் உடைமையாளர்களும், அடிமைகளும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதைப் போலவே, இந்தியாவில் இருபிறப்பாளர்களும், சூத்திரர்களும் மோதினார்கள். இருபிறப்பாளர்களும் தங்களுக்குள் மோதிக் கொண்டார்கள். தொடக்க காலத்தில் சத்திரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அதைத் தொடர்ந்து பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்கு வந்தார்கள். சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவோராக, இருபிறப்பாளர்களில் எவரேனும் ஒருவர் இருந்து வந்தார்.
இந்த இருபிறப்பாளர்களின் ஆதிக்கமே, பொருள்முதல் வாதத்தின் வீழ்ச்சிக்கும், கருத்துமுதல் வாதத்தின் முகிழ்ப்புக்கும் காரணமாக அமைந்தது. இருபிறப்பாளர்களின் ஆதிக்கத்தின் காரணமாகவே, அதனை எதிர்த்த போராட்டத்தின் வெளிப்பாடாகவே பொருள்முதல்வாதத்தின் எழுச்சியும் நிகழ்ந்தது. தேவிபிரசாத் எழுதிய இரண்டு முக்கிய புத்தகங்களான உலகாயதம் மற்றும் “இந்திய தத்துவத்தில்அழிந்துபோனவையும், நிலைத்திருப்பவையும்” ஆகிய இரண்டிலும் இது தெளிவாக விளக்கப்பட்டது. “பண்டைய இந்தியாவில் அறிவியலும், சமூகமும்” போன்ற படைப்புகளில் அது மேலும் விரிவாக அலசப்பட்டது.
பண்டைய கிரேக்கத்தைப் போலவே, பண்டைய இந்தியாவிலும் கருத்துமுதல் வாதத்திற்கும் பொருள்முதல் வாதத்திற்கும் இடையிலான போராட்டம் இருந்து வந்தது. ஆனால் இரண்டு நாடுகளிலும் வரலாற்றின் போக்குகள் வேறுபட்டன. கிரேக்கத்தில் இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டமும், இரண்டு தத்துவங்களுக்கு இடையிலான போராட்டங்களும், பழைய அடிமைச் சமூகத்தை மாற்றி நிலவுடைமைச் சமூகத்தையும், நிலவுடைமைச் சமூகத்தை அகற்றி அந்த இடத்தில் முதலாளித்துவ சமூகத்தையும் நிலைகொள்ளச் செய்தன. வேறு சொற்களில் குறிப்பிட்டால், உடைமையாளர்களை எதிர்த்த அடிமைகளின் கலகத்தை தொடர்ந்து, நிலவுடைமை அமைப்புக்கு எதிரான கலகங்கள் ஐரோப்பாவின் பண்புக்கூறுகளாக அமைந்தன.
இந்தியாவிலோ, மேற்கண்ட கலகங்களும் புரட்சிகளும் நடந்தேறவில்லை. இருபிறப்பாளர்களுக்கும், சூத்திரர்களுக்கும் இடையிலான போராட்டத்தில் உடைமை வர்க்கங்களுக்கும், உழைக்கும் வர்க்கங்களுக்கும் இடையிலான முதல் போராட்டத்திலேயே, சூத்திரர்கள் வீழ்த்தப்பட்டனர்.
உழைக்கும் மக்கள், சுரண்டும் வர்க்கங்களால் வீழ்த்தப்பட்டனர். உழைக்கும் மக்களின் இந்தத் தோல்வியையும், உடைமை வர்க்கங்களின் வெற்றியையும் தொடர்ந்து, பொருள்முதல் வாதத்தின் நிலைத்திருத்தலும் வீழ்ச்சிக்கு ஆளானது. கருத்துமுதல்வாதம் ஆதிக்க இடத்தைப் பிடித்தது. இதற்கு என்ன சாட்சி?
உடைமை வர்க்கங்களுக்கும், உழைக்கும் வர்க்கங்களுக்கும் இடையில் ஆயுதமேந்திய போராட்டங்களுக்கும், உழைக்கும் வர்க்கத்தின் தோல்விக்கும் சாட்சிகள் ஏதுமில்லை. ஆனால் இரண்டு வர்க்கங்களுக்கும் இடையிலான தத்துவார்த்த போராட்டங்களுக்கு சாட்சியம் இருக்கிறது. இந்தியா முழுவதும் பரவி நிலவிய புத்தமும், சமணமும்தான் அந்த சாட்சிகள். புத்தமும், சமணமும் இருபிறப்பாளர்களின் ஆதிக்கத்திற்கு எதிரான சூத்திரர்களின் கலகங்களின் வெளிப்பாடுகளேயாகும். சில காலத்திற்கு பார்ப்பனியத்திற்கு மேலாக புத்தம் நிலவுவதாக தோன்றியது. ஆனால் அது வீழ்த்தப்பட்டது. புத்தம், சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பரவியுள்ளது, ஆனால் அது பிறப்பெடுத்த சொந்த நாட்டில் வீழ்த்தப்பட்டது.
ஏனெனில், தேவிபிரசாத் சுட்டிக் காட்டியதைப் போல, புனித அதிகாரத்தையும், அரச அதிகாரத்தையும், உடைமை வர்க்கங்கள், அதாவது இருபிறப்பாளர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர். அதாவது சத்திரியர்களும், பார்ப்பனர்களும் இணைந்து தத்துவார்த்த நிலையில் புத்தத்தினையும், பொருள்முதல்வாதத்தின் இதர வடிவங்களையும் தாக்கி அழித்திட முடிந்தது. புத்தமும், சமணமும் மட்டுமல்ல, சாங்கியம், சார்வாகம் ஆகியவையும் பொருள்முதல் வாதத்தின் தத்துவ வடிவங்களாகவும், உழைக்கும் மக்களின் சித்தாந்தங்களாகவும், தத்துவங்களாகவும் இருந்தன. அவை வீழ்த்தப்பட்டன; அகற்றப்பட்டன. பொருள்முதல்வாத படைப்புகளும் கூட இப்போது நமக்கு கிடைக்கவில்லை.
எதிரிகளின்படைப்புகளின் வழியே பொருள்முதல்வாதம்:
சார்வாகம் அல்லது பொருள்முதல் வாத தத்துவங்களின் பிற முறைகளைக் குறித்து அறிய வேண்டுமென்றால், அவற்றை எதிரிகளின் எழுத்துகளின் வழியாகவே அறிந்து கொள்ள முடிகிறது என்பதுதான் உண்மை. உதாரணமாக, லோகாயதத்தின் பல பகுதிகளையும், பொருள்முதல்வாத எழுத்துகள் பலவற்றையும் சங்கரர் தனது எழுத்துகளில் மேற்கோள் காட்டுகின்றார். எதற்காக? அவற்றை தாக்குவதற்காக. பூர்வ பக்சா என அழைக்கப்படுவது எது?, சங்கரர் பொருள்முதல் வாதிகளின் ஏராளமான எழுத்துகளில் இருந்து மேற்கோள்களை பயன்படுத்தியுள்ளார். ஆனால் அந்த (பொருள்முதல் வாதிகளின் சொந்த) படைப்புகள் நமக்கு கிடைக்கவில்லை. அவசியம் என சங்கரர் கருதிய பகுதிகள் மேற்கோள்களாக பயன்படுத்தப்பட்டன, பின்னர் அவை அழிக்கப்பட்டன. சித்தாந்த பக்சா என்பது பூர்வ பக்சாவுக்கு பிறகு வந்ததாகும். பூர்வ பக்சா முதலில் (மேற்கோளாக) தரப்பட்டு பின் (வாதங்களால்) தகர்க்கப்படுகிறது. அந்த தகர்ப்புதான் சித்தாந்த பக்சா என அழைக்கப்படுகிறது. பூர்வ பக்சா தரப்பட்டதற்கான காரணமே, சித்தாந்த பக்சாவை நிலைநாட்டுவதற்காகத்தான். இவ்வகையில்தான், லோகாயத வாதிகளின் பல எழுத்துகளும், சார்வாகர்கள் மற்றும் பலரின் படைப்புகளும் நமக்கு கிடைக்கின்றன.
புத்த செவ்வியல் படைப்புகள், பிற நாடுகளில் கிடைக்க வேண்டும். திபெத் நாட்டில் புத்த எழுத்துகளின் பெரும் தொகுப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். யாரும் அவை குறித்து ஆய்வு மேற்கொள்ளவில்லை. தத்துவ நிலை மட்டுமல்ல; சமூக வழக்கங்களின் நிலைமையும் அதுதான். புத்தம் ஒரு பெரிய இயக்கமாக இருந்தது. புத்தம் நாடு முழுவதும் பரவியிருந்தது. ஆனால் அது தத்துவப் போராட்டத்தில் அது பல கருத்துமுதல் வாத தத்துவவாதிகளால் வீழ்த்தப்பட்டது, அவர்களில் உச்சத்தில் இருந்தவர் சங்கரர். அவர் புத்தத்தை வீழ்த்தியதுடன், பண்டைய இந்தியாவில் பொருள்முதல்வாதத்தின் இருப்பானது ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
பண்டைய இந்திய அறிவியல் குறித்த வரலாற்றறிஞர் பி.சி. ராய், இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘சங்கரர், புத்தத்தை எதிர்த்து பெற்ற வெற்றியானது இந்தியாவில் அறிவுத் தேக்கத்தின் தொடக்கமாக அமைந்தது. அதுவரை பொருள்முதல்வாதத்திற்கும், கருத்துமுதல் வாதத்திற்கும் தீவிரமாக நடந்து வந்த போராட்டம், புத்தத்திற்கு எதிரான கருத்து முதல்வாதத்தின் வெற்றியோடு முடிவுக்கு வந்தது. இந்த தகர்ப்பு, சொந்த சிந்தனைகள் அனைத்துக்கும் முடிவைக் கொண்டு வந்தது. கருத்துகளின் போராட்டத்தை முடித்து வைத்தது. அதனால்தான் கி.பி. 8-9 நூற்றாண்டுகளின் காலகட்டத்தில், இந்திய சமூகம், இந்திய அறிவியல், இந்திய கலைகள், இந்திய இலக்கியம் என அனைத்தும் தேக்க நிலைக்கு செல்லத் தொடங்கின.
இலக்கியத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால். காளிதாசர் மற்றும் இதர சிறப்புவாய்ந்த எழுத்தாளர்களின் செவ்வியல் சமஸ்கிருத படைப்புகளைப் போல அல்லாமல், இலக்கியம் ஒரே வகைப்பட்டதாகி (so formalized) அதன் உயிரோட்டத்தை இழந்தது. கருத்துமுதல்வாதத்தின் கைகளில் புத்தம் அடைந்த வீழ்ச்சியானது சங்கரரின் தத்துவத்தை செழுமைப்படுத்தியது என்பதன் பொருள் இந்த நாட்டின் அறிவுச் சூழல் தேக்கமடைந்தது என்பதேயாகும்.
பொருள்முதல்வாதத்தை வீழ்த்தி கருத்துமுதல்வாதம் அடைந்த வெற்றியின் காரணமாக, அறிவுச் சூழலில் ஏற்பட்ட இந்த தேக்கத்தை அடுத்து, மக்களிடையேயும் ஆளும் வர்க்கங்களுக்கிடையேயும் குழு மோதல்கள் எழுந்தன. அவை அதிக வலுவோடு நடைபெற்றன. இந்தியாவைக் குறித்ததான கட்டுரையில் மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல, ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கும் எதிராக இருந்தனர், அப்படியான சூழலிலேயே ஆங்கிலேயர்கள் நுழைந்தனர். மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல, சமூகத்தில் நிலவிய அறிவுத் தேக்கம், நாட்டில் சமூக-அரசியல் சிதைவுக்கு வழிவகுத்தது, அது அன்னிய ஆட்சிக்கு வழிவகுத்தது.
அன்னிய ஆட்சிக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. மார்க்ஸ் சொன்னதைப் போல அவற்றிற்கும் இரண்டு பாத்திரங்கள் இருந்தன. முதலாவது அழிவுப்பணி. பழையதை அழித்தல். சாதிச் சமூகத்தை அழித்தல். பெரிய அளவில் அதை அவர்கள் செய்தார்கள் [That they did to a large extent]. மேலும், அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான வேலைகளும் இருந்தன, அதாவது புதிய சமூகத்தைக் கட்டமைத்தல். அந்தப் பாத்திரத்தை அவர்கள் ஆற்றவில்லை. அதைத்தான் மார்க்ஸ், புதிய ஒன்றைப் பெறாமலேயே பழைய உலகத்தை இந்தியர்கள் இழந்தது பெரும் சோகம் என்று குறிப்பிட்டார்.
நாம் புதிய ஒன்றைப் பெறாதபோதும், புதிய சமூகத்திற்கான விதைகள் விதைக்கப்பட்டன. நவீன ஜனநாயக இயக்கங்கள், விடுதலை இயக்கங்கள் ஆகியவையே அந்த விதைகள் ஆகும். விடுதலை இயக்கத்தின் வழியே புதிய தத்துவ கண்ணோட்டங்களும், ஏராளமான அரசியல் செயல்பாடுகளும் பிறப்பெடுத்தன. வங்கத்திலிருந்து ராம் மோகன் ராயும், மகாராஷ்டிராவில் பூலேவும், கேரளத்தில் ஸ்ரீ நாராயண குருவும் மேலும் பலரும் புதிய சிந்தனையாளர்களாக முன்வந்தனர், அவர்கள் மக்களிடையே புதிய சிந்தனைகளைத் தூவினார்கள்.
இதிலிருந்துதான் இந்திய அரசியல் பொருளாதாரம் எழுந்தது. 1860 களின் தொடக்கத்தில், தாதாபாய் நவ்ரோஜி. ரானடே உள்ளிட்ட ஏராளமான சிந்தனாவாதிகள் எழுந்தனர். அவர்கள் இந்திய அரசியல் பொருளாதாரத்தின் முன்னோடிகளாக அமைந்தனர். அவர்கள்தான் நவீன ஜனநாயக அரசியல் இயக்கத்தின் முன்னோடிகளும் ஆவர். ஆங்கிலேய ஆட்சி நிறுவப்பட்டு விட்ட காலத்தில், இந்திய மண்ணில் புதிய சமூகத்திற்கான விதைகள் தூவப்பட்டதாக மார்க்ஸ் குறிப்பிட்டுக் கூறியதன் வெளிப்பாடுகளாக இவைகளைக் காணலாம். இதன் காரணமாகவே நவீன இயக்கங்கள் உருவாகி வளர்ந்தன.
கோபால கிருஷ்ண கோகலே, திலகர், காந்தி உள்ளிட்ட புதிய சமூக-பொருளாதார மற்றும் அரசியல் தத்துவவாதிகள், இதிலிருந்தே உருவாகினர். புதிய தத்துவ கண்ணோட்டங்களின் தொடக்கமாக அவர்கள் அமைந்தார்கள், பண்டைய இந்தியாவின் தத்துவங்களை நவீன காலத்திற்கு முன்னெடுத்து வந்தார்கள். உதாரணமாக, அவர்களில் தனித்து தெரியும் சிந்தனையாளரான விவேகானந்தர், பார்வைக்கு ஒரு சாமியாராக இருந்தாலும், அரசியல் புரட்சியாளராவார். அவர் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்களின் காலம் முடிந்தது என்றார். இப்போது சூத்திரர்களின் காலம் தொடங்கியுள்ளது. சூத்திரர்களின் காலம் என்பதை நவீன மார்க்சிய வார்த்தையில் குறிப்பிட்டால் பாட்டாளி வர்க்க ஆட்சியே. சுவாமி விவேகானந்தருக்கு இந்த எண்ணம் இருந்ததா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் ஏதோ புதியதாக வரப்போகிறது என அவரால் கணிக்க முடிந்தது. அந்த புதியது, சூத்திரர்களின் எழுச்சியே. இந்தப் பார்வையில்தான் பூலே, ஸ்ரீ நாராயண குரு ஆகியோர் தங்களது வீரியம் மிக்க சமூக-பண்பாட்டு இயக்கங்களைக் கட்டமைத்தனர். இருந்தாலும், அரசியல் விடுதலை இயக்கத்தோடு அவர்களுக்கு உயிரோட்டமான தொடர்பு இருக்கவில்லை. திலகரும், காந்தியும் மேலும் பலரோடு இணைந்து ஒரு புதிய தத்துவ நோக்கை வளர்த்தெடுத்தனர். அது புதிய சமுதாயத்தை உருவாக்குவது பற்றிய மக்கள் விருப்பங்களுக்கு வடிவம் கொடுத்தது. அந்த விருப்பங்கள் பட்டினிப் பட்டாளத்துடைய (தரித்திர நாராயணர்கள்) விருப்பங்களேயாகும்.
நவீன அரசியல் சக்தி:
1920களின் தொடக்கத்தில் இந்திய மக்கள் அரசியல் சக்தியாக உருவெடுத்தனர். பம்பாய் தொழிலாளி வர்க்கம் அரசியல் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே, ஒரு புதிய சமூகம் உருவாகி வளர்ந்து வந்தது. மேற்சொன்ன வேலை நிறுத்தத்தை, ஒரு புதிய இந்தியாவினுடைய, இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் காலம் பிறப்பெடுத்திருப்பதாக குறிப்பிட்டு விதந்தோதினார் லெனின். இந்திய விடுதலைக்கான முந்தைய இயக்கங்களில் மற்ற வர்க்கங்கள், மக்களின் பிற பகுதியினர் பங்கெடுத்தார்கள். லோகமான்ய திலகர் கைது செய்யப்பட்டதை ஒட்டி, பம்பாய் தொழிலாளி வர்க்கம் மேற்கொண்ட போராட்டமானது இந்திய தொழிலாளி வர்க்கத்தை விடுதலை இயக்கத்திற்குள் இழுத்து வந்தது.
அந்தக் காலத்தில், அந்தப் போராட்டமானது பம்பாய் என்ற ஒரு நகரத்திற்குள்ளேதான் நடந்தது. லோகமான்ய திலகரின் கைதும், சிறையடைப்பும் என்ற ஒரு பிரச்சனையைச் சுற்றியதாகவே அந்தப் போராட்டம் எழுந்தது. ஆனால்,அடுத்த பத்தாண்டுகளில், இந்திய உழைக்கும் வர்க்கமானது, நாடு தழுவிய தனது முதல் அமைப்பை சாத்தியமாக்கியது. அனைத்திந்திய தொழிலாளர் காங்கிரஸ் உடன் இணைந்து நாட்டின் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் குழுக்களும் உருவெடுத்தன. பம்பாயில் டாங்கே, கல்கத்தாவில் முசாபர்அஹமது, மெட்ராசில் சிங்காரவேலர் ஆகியோர் கம்யூனிசத்தின் இந்திய முன்னோடிகளாக அமைந்தனர். இந்த முன்னோடிகள், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசுடன் இணைந்து, கம்யூனிஸ்ட் குழுக்களை ஒருங்கிணைத்தனர். விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாகவே இது நடந்ததென்றாலும், பாட்டாளி வர்க்கமும், நடுத்தர வர்க்கமும், இன்னமும் முதலாளித்துவ தலைமையின் கீழாகத்தான் செயல்பட்டு வந்தது என்ற போதிலும், ஒரு வர்க்கமாக தானே, தனது கோரிக்கைகளுக்காக முன்னெழுந்து வந்தன.
அந்தக் கணம் முதலே, ஒரு புதிய தத்துவம் வளரத் தொடங்கியது. அந்தத் தத்துவம்தான் எங்கள் தலைமுறையின் முன்னத்தி ஏர்கள் பெரும் பங்கெடுத்து வளர்த்ததும், நாங்கள் பின்னர் இணைந்து கொண்டதுமான தத்துவமாகும். கடந்த 60 ஆண்டுகளில் எனது தலைமுறை, நடைமுறைப் பணிகளில் மட்டும் பங்களிப்பைச் செய்திடவில்லை. மார்க்சிய தத்துவம், அரசியல் பொருளாதாரம், சமூகவியல், அரசியல் அறிவியல், அழகியல் என பலவற்றிலும் பங்களிப்பைச் செய்தது என்பதை இங்கே பெருமிதத்துடன் குறிப்பிடுவேன். மாறிவரும் உலகம் குறித்ததான மார்க்சிய கருதுகோளினை புரிந்து கொள்வதுடன், நடைமுறையிலும் பயன்படுத்துவது இவ்வாறுதான் சாத்தியமாகும். இப்படித்தான் நாம் மேம்படுத்திக் கொள்ள முடியும்.
எனவே, இந்தியாவில் சமூகமும், அறிவியலும், தத்துவமும் என்பதை ஒரு தொடர்ச்சியாகவே நான் பார்ப்பேன். இந்த தொடர்ச்சி சில சமயங்களில் தடைப்படலாம். ஆனால் தொடர்ச்சி இருந்து கொண்டிருக்கும். அந்த தொடர்ச்சியானது, இந்திய மக்கள் தாங்களே வளர்ந்து வருகிறார்கள் என்பதேயாகும். நாம் 1994 ஆம் ஆண்டிற்கு வரவேண்டும். 21 ஆம் நூற்றாண்டுக்கான பார்வையை வசப்படுத்தி செயல்படவேண்டும் என்கிறேன்.
இந்திய மக்கள் அனைத்து வகைகளிலும் மேம்பட்டுள்ளதாகக் காண்கிறோம். அவர்கள் தங்களின் சொந்த தத்துவத்தை வளர்த்தெடுத்துள்ளனர். அந்த தத்துவமானது இந்து தத்துவம் அல்ல. இந்து தத்துவமும் அதில் உள்ளடங்கிய பகுதி. முஸ்லிம் தத்துவ நோக்கும், கிறித்துவ தத்துவ நோக்கும், மார்க்சிய தத்துவ நோக்கும் அதில் உள்ளடங்கியுள்ளது. இந்தியத் தத்துவம் எனக் குறிப்பிடுவதில் இவை எல்லாமே பகுதிகளாகும். இந்துத்துவ கூட்டத்தாரின் பார்வைக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து முன்னிறுத்தி வரும் பார்வை இதுவே. இந்துத்துவ வாதிகளுக்கு இந்து தத்துவமும், வேத தத்துவமுமே இந்திய தத்துவமாகும். அவர்கள் வேதகால கணிதத்தையும் தொடங்கி விட்டனர். அனைத்தையுமே வேதகாலத்திற்கு பின்நோக்கி இழுத்துச் செல்ல வேண்டுமென பார்க்கிறார்கள்.
நிச்சயமாக நாம் வேதகால பண்பாட்டை மதிக்கிறோம். வேத கலாச்சாரம் குறித்து பெருமைப்படும் அதே சமயத்தில், அந்த கலாச்சாரத்திற்கு சில கண்டிப்பான வரம்புகள் இருந்தன என்பதையும் கவனத்தில் கொள்ளத் தவறவில்லை. பண்டைக் காலத்தில் ஐரோப்பாவை ஒத்த நிலையிலும், அதனை முந்திக்கொண்டும் இருந்த இந்தியாவானது, நவீன காலத்தில் பின்தங்கியதற்கு அதுதான் காரணமாகும்.
வேதகால கலாச்சாரத்தின் வரம்புகளில் ஒன்று குறித்து எனது சொந்த அனுபவத்திலிருந்தே குறிப்பிட முடியும். சிறுவனாக இருந்தபோது, 6 ஆண்டுகளை ரிக் வேதம் கற்பதற்காக செலவிட வேண்டியிருந்தது. கற்றேன் என்று சொல்வது சரியான சொல்லாக இருக்காது. அந்தப் பொருளில் எதுவும் நடக்கவில்லை. ஒவ்வொரு வார்த்தையையும் திருப்பிச் சொல்வதற்கு பழகினேன். அப்படித்தான் அந்த ஆறு ஆண்டுகளும் மனப்பாடம் செய்து ரிக் வேத மந்திரங்களை திரும்பச் சொன்னேன். அவை என் வாழ்நாளில் வீணாக்கப்பட்ட ஆண்டுகள். நிச்சயம் நொறுக்கப்பட வேண்டிய வேதகால பண்பாட்டுப் பகுதிகளில் இவையும் அடங்கும்.
நமது பண்டைய பண்பாட்டுக் களஞ்சியத்தின் ஒரு அங்கமாக ரிக் வேதம் உள்ளது உண்மைதான். ஆனால் நான் அதை கற்கவில்லை. மனப்பாடம் செய்யும்போது என்ன பொருள் புரிந்துவிடும்?, அதிலிருந்து என்ன அறிந்து கொண்டிருக்க முடியும்?, சமீபத்தில்தான் எனது நண்பர் மலையாளத்தில் குறிப்புகளுடன் 8 பாகங்களாக அச்சிடப்பட்ட ரிக் வேதத்தை கொடுத்தார். அந்தக் களஞ்சியத்தை நாம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக கண்டு மகிழ்கிறோம். அதே சமயம், வேத எழுத்துகள், மாற்றக்கூடாத சமய மரபின் பகுதிகளாக்கப்பட்டதையும் மறுக்க முடியாது. (இவ்வகையில்) வேதகால எழுத்துகள் மனிதர்களின் சிந்தனையை மேம்படுத்த பயன்படுத்தப்படவில்லை. மாறாக, அவர்களை அடிமைப்படுத்த பயன்படுகின்றன. இந்த மரபு நொறுக்கப்பட வேண்டும். இந்த மரபை உடைத்தால்தான் நம்மால் மார்க்சிய தத்துவ நோக்கையும், புதிய அரசியல் பொருளாதாரத்தையும் இன்ன பிறவற்றையும் வளர்த்தெடுக்க முடியும்.
தனது படைப்புகளின் வழியே தேவி பிரசாத் நமக்கு கொடுத்துச் சென்றுள்ள செய்தி இதுதான். இதன் காரணமாகவே மார்க்சிஸ்ட்களுக்கு மட்டுமல்லாது, நம் கலாச்சாரத்தைக் குறித்து ஆழ்ந்து படிக்க விரும்பும் அனைவருக்குமே அவருடைய பணி ஒரு சொத்தாக அமைந்திருக்கிறது. எனவேதான் நான் இந்த கருத்தரங்கில் ஒருவனாக இடம் பெற்றிருப்பதை பெருமிதமாகவும், பெரு மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன். அவரது பணிகளை கற்றுத்தேர்ந்து அதில் பயனடைய நான் முயற்சித்துள்ளேன், அவர் தன் வாழ்க்கையில் அவற்றை எப்படி இந்திய சமூகத்தை மாற்றியமைக்கும் நோக்கில் பயன்படுத்தினாரோ, அதே வகையில் நானும் பயன்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கிறேன். மேலும் அனைத்து பிற்போக்குச் சிந்தனைகளையும், காலம் கடந்துவிட்ட ‘இந்துத்துவா’ என்று அழைக்கப்படும் கலாச்சாரத்தையும் தாக்கி வீழ்த்த பயன்படுத்திக் கொள்கிறேன். நான் சொல்ல விரும்பியதன் சாரம் இதுதான்.