கட்சி திட்ட ஆவணம் – சிபிஐ(எம்)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)


கட்சி திட்டம்

1964-ஆம் ஆண்டு அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
2000ஆவது ஆண்டு அக்டோபர் 20 முதல் 23 வரை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் சிறப்பு மாநாட்டில் புதுப்பிக்கப்பட்டது.

அறிமுகம்

1.1 இந்திய மக்களின் முற்போக்கு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, புரட்சிகரப் பாரம்பரியத்தை கம்யூனிஸ்ட் கட்சி தன்னகத்தே கொண்டுள்ளது. ரஷ்யாவில் நிகழ்ந்த அக்டோபர் சோசலிசப் புரட்சியினால் ஈர்க்கப்பட்ட உறுதிமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளின் சிறிய குழு ஒன்று 1920இல் கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கியது. கட்சி துவக்கப்பட்டது முதலே பூரண சுதந்திரம் மற்றும் அடிப்படையான சமூக மாற்றத்திற்காகப் போராடுவதை தன் முன் உள்ள இலக்காகக் கொண்டிருந்தது. வர்க்கச் சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறைகளற்ற ஒரு சோசலிச சமுதாயத்தை இந்தியாவில் அமைக்க கட்சி உறுதி பூண்டிருந்தது.

1.2 இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய அம்சமாக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசிய விடுதலை இயக்கங்களும், சோசலிசம் மற்றும் ஜனநாயகத்திற்கான போராட்டங்களும் உலகம் முழுவதும் நடந்து வந்தன. பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற நோக்கத்திற்கேற்ப கட்சி இத்தகைய போராட்டங்களுக்கு தனது ஆதரவைத் தொடர்ந்து நல்கி வந்தது. தேச விடுதலையை வென்றெடுக்கவும், சோசலிசம் என்ற இலக்கை எட்டவும், இறுதி இலக்கான கம்யூனிசத்தை நோக்கி முன்னேறவும் மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகளை கட்சி ஏற்றுக்கொண்டது. பூரண சுதந்திரம் என்ற கோரிக்கை முழக்கத்தை நாட்டில் முதன் முதலாக எழுப்பியவர்கள் கம்யூனிஸ்ட்டுகளே. 1921இல் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிலேயே கம்யூனிஸ்ட்டுகள் இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தனர்.

1.3 பூரண சுதந்திரம் கோரிய அதே வேளையில், சுயராஜ்யம் என்ற முழக்கத்திற்கு தீவிர மாற்றம் கோரும் உள்ளடக்கம் வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட்டுகள் வலியுறுத்தினர். நிலப்பிரபுத்துவ ஒழிப்பு, நிலவுடைமை ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுவது மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை ஒழிப்பது போன்ற முக்கிய மாற்றங்களை உள்ளடக்கிய சமூகப் பொருளாதார மாற்றத்திற்கான உறுதியான திட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் முன்மொழிந்தனர்.

1.4 விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற அதே வேளையில், தொழிலாளர்களை தொழிற்சங்கங்களிலும், விவசாயிகளை விவசாயிகள் சங்கத்திலும், மாணவர்களை அவர்களுக்கான சங்கங்களிலும் மற்றும் இதர பகுதியினரை அவரவர்களுக்கான வெகுஜன அமைப்புகளிலும் அணிதிரட்டிடும் பணிகளில் கம்யூனிஸ்ட்டுகள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். இத்தகைய முயற்சியின் பலனாகத்தான் தேசிய அளவில் அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய மாணவர் சம்மேளனம் ஆகியவை உருவாக்கப்பட்டதோடு, அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசும் வலுவாக்கப்பட்டது. முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய மக்கள் நாடக மன்றம் போன்ற முற்போக்கான பண்பாட்டு மற்றும் இலக்கிய அமைப்புகளை உருவாக்கவும் கம்யூனிஸ்ட்டுகள் முன் முயற்சி எடுத்தனர்.

1.5 இந்தியாவில் கம்யூனிசத்தை தடமற்றுப் போகும்படி அழித்து விட வேண்டுமென்பதில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உறுதியோடு இருந்தனர். வளர்ந்து கொண்டிருந்த கம்யூனிஸ்ட் குழுக்கள் மீது கொடூரமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். புரட்சிகரச் சிந்தனைகள் பரவுவதைத் தடுப்பதற்காக கம்யூனிஸ்ட் இலக்கியங்களுக்கு தடை விதித்தனர். கம்யூனிச இயக்கத்தின் துவக்க காலத் தலைவர்கள் மீது பெஷாவர் (1922), கான்பூர் (1924), மீரட் (1929) என தொடர்ச்சியான சதி வழக்குகளை தொடுத்தனர். 1920இல் கட்சி துவக்கப்பட்ட உடனேயே சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டது. இருபதாண்டுகளுக்கு மேல் கட்சி சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட சூழலிலேயே இயங்க வேண்டியதாயிற்று. கடுமையான அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், பூரண சுதந்திரம் மற்றும் அடிப்படையான சமூக மாற்றத்திற்காக மக்களைத் திரட்டும் பணியில் கட்சி சீரான முன்னேற்றம் கண்டுவந்தது.

1.6 ஏகாதிபத்தியத்திற்கெதிராக கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த வீரஞ்செறிந்த, தொடர்ச்சியான நிலைபாடுகள், பல்வேறு புரட்சிகரக் குழுக்களையும், போராளிகளையும் கட்சியில் இணைய ஈர்த்தது. பஞ்சாபின் கத்தார் இயக்கத் தலைவர்கள், பகத்சிங்கின் தோழர்கள், வங்கத்தின் புரட்சியாளர்கள், பம்பாய் மற்றும் சென்னை மாகாணங்களின் போர்க்குணம் மிக்க தொழிலாளி வர்க்கப் போராளிகள், கேரளம், ஆந்திரம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்த தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்புக் குணம் கொண்ட காங்கிரஸ்காரர்கள் ஆகியோர் அவ்வாறு ஈர்க்கப்பட்டவர்களில் அடங்குவர். இவ்வாறு நாடு முழுவதும் உள்ள சிறந்த போராளிகள் கட்சியில் இணைந்ததால், கட்சி செழுமை பெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான விடுதலைப் போராட்ட இயக்கத்துடனும், பின்னர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியுடனும் கம்யூனிஸ்ட் கட்சி நெருங்கிய ஒத்துழைப்புடன் பணியாற்றி வந்த அதே வேளையில், சுயேச்சையான பாட்டாளி வர்க்கக் கட்சியைக் கட்டி வளர்ப்பதற்காகவும் தொடர்ச்சியாகப் பணியாற்றி வந்தது.

1.7 இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் இந்திய மக்களிடையே சக்திமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு எழுச்சிகள் தோன்றின. நாட்டின் பல பகுதிகளில் இத்தகைய எழுச்சிகளுக்குத் தலைமை தாங்குவதில் கம்யூனிஸ்ட் கட்சி முன்நின்றது. தேபாகா, புன்னப்புரா வயலார், வடக்கு மலபார், வொர்லி ஆதிவாசிகள், திரிபுரா பழங்குடி இன மக்கள் எழுச்சி போன்றவை இத்தகைய எழுச்சிகளில் முக்கியமானவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக வரலாற்றுச் சிறப்புமிக்க தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம் அமைந்தது. பல மன்னராட்சிப் பிரதேசங்களில் பொறுப்பான அரசாங்கத்தை உருவாக்குவதற்கென மக்கள் இயக்கங்களில் கம்யூனிஸ்ட் கட்சியும் முன்னணிப் பங்கை வகித்தது. பிரெஞ்ச் மற்றும் போர்த்துக்கீசிய ஆதிக்கத்திலிருந்த பாண்டிச்சேரி மற்றும் கோவா பகுதிகளில் விடுதலைப் போராட்டங்களை உருவாக்குவதிலும், ஆதரிப்பதிலும் கம்யூனிஸ்ட் கட்சி முனைப்பான பங்காற்றியது.

தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களின் போராட்ட அலை மற்றும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய தேசிய ராணுவ வீரர்களை விடுதலை செய்யக் கோரி நடந்த கிளர்ச்சி ஆகியவற்றின் உச்ச வடிவமாக 1946ல் நடைபெற்ற கப்பற்படை எழுச்சி அமைந்தது. பாசிசம் முறியடிக்கப்பட்டது மற்றும் மூண்டெழுந்த விடுதலைப் போராட்ட இயக்கங்களின் சர்வதேசப் பின்புலத்தில் எழுந்த இந்திய மக்களின் பேரெழுச்சியை சமாளிக்க, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், பெரு முதலாளித்துவக் கட்சிகளான காங்கிரஸ், முஸ்லிம் லீக் தலைவர்களும் சமரசம் செய்து கொண்டனர். இதன் விளைவாக முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் கீழ் இந்தியா, பாகிஸ்தான் என நமது நாடு இரு சுதந்திர நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. தேசிய விடுதலை இயக்கம், முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையில் இருந்தது இந்த சமரசத்திற்கு உதவியது. இவ்வாறாக, அன்னிய ஏகாதிபத்திய ஆட்சிக்கு முடிவு கட்டுவதை முதன்மையாகக் கொண்டு அமைக்கப்பட்ட பொதுவான தேசிய ஐக்கிய முன்னணி என்ற கட்டம் முடிவுக்கு வந்தது.

1.8 நாடு விடுதலை பெற்ற பின்னரும், கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து அடக்குமுறைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. 1948ஆ-ம் ஆண்டு முதல் 1952ஆ-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியாளர்களின் மூர்க்கத்தனமான தாக்குதல்களை, குறிப்பாக தெலுங்கானா பகுதியில் கம்யூனிஸ்ட்டுகள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தொடர்ச்சியான அடக்குமுறையால், குறிப்பாக மேற்குவங்கத்தில் அரைப் பாசிச காலத்திய தாக்குதல்கள், பின்னர் திரிபுராவில் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள், கேரளம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்சித் தோழர்கள் மீது தொடுக்கப்பட்ட கொலைவெறித் தாக்குதல்கள் போன்றவற்றாலும், புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதிலிருந்து கட்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. சீர்குலைவுப் பிரிவினைவாத இயக்கங்களால் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் எழுந்த காலங்களில் மக்கள் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் கட்சி முன்னணியில் நின்றது. பஞ்சாப், திரிபுரா, அசாம், மேற்குவங்கம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பிரிவினைவாத மற்றும் பிளவுவாத சக்திகளை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தீரமிக்க தோழர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

1.9 இவ்வாறு கம்யூனிஸ்ட் இயக்கம் துவக்கப்பட்ட காலத்திலிருந்தே இந்திய அரசியலில் முற்போக்கானதொரு பங்கினை ஆற்றி வந்துள்ளது. வெகுஜன அடித்தளம், மக்களை ஈர்க்கும் தன்மை மற்றும் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சி முறைக்கு மாற்றான கொள்கைகள் ஆகியவற்றால் நாட்டின் அரசியல், சமூக நிகழ்முறையில் கம்யூனிஸ்ட் இயக்கம் குறிப்பிடத்தக்க சக்தியாகத் திகழ்ந்து வருகிறது. 1957இல் கேரளத்தில் அமைக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையும் அதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இடதுசாரிகள் தலைமையில் மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் அமைந்த அரசுகளும் மக்களுக்குச் சாதகமான கொள்கைகளை நிறைவேற்றும் முயற்சிகள் மூலம் வழிகாட்டும் அரசுகளாகச் செயல்பட்டு வருகின்றன. இப்போதுள்ள, கட்டமைப்புக்குள்ளேயே நிலச்சீர்திருத்தத்தை அமலாக்குவது, அதிகாரப்பரவல், பஞ்சாயத்து முறைக்கு உத்வேகம், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு உத்தரவாதம், நாட்டில் மாற்றுக் கொள்கைகளுக்காகப் போராடிவரும் ஜனநாயக சக்திகளை வலுவாக்குவது போன்ற பணிகளை இந்த அரசுகள் செய்துள்ளன. இந்தக் கடுமையான போராட்டப் பாதையில் கட்சி கணிசமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. சுயவிமர்சன அடிப்படையில் தனது வெற்றிகளையும், தோல்விகளையும் பகுத்தாய்வதில் கட்சி உறுதி பூண்டிருப்பதால், தனது தவறுகளிலிருந்து பாடம் பயின்று, நமது சமூகத்தின் திட்டவட்டமான சூழலுக்கேற்ப மார்க்சிய – லெனினியத்தைப் பொருத்தும் ஆற்றலைக் கட்சி வளர்த்துக் கொண்டு வருகிறது.

1.10 திருத்தல்வாதத்திற்கு எதிராக நடத்தப்பட்ட நெடியதொரு போராட்டத்திற்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அமைக்கப்பட்டது. 1964இல் கட்சித் திட்டம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்தப் புரிதலின் அடிப்படையிலான தொலைநோக்கு உத்தியையும் (ஷிவக்ஷீணீவமீரீஹ்), நடைமுறை உத்தியையும் (ஜிணீநீவவீநீள) திருத்தல்வாதத்திலிருந்தும், வறட்டுவாதத்திலிருந்தும் பாதுகாத்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் சோவியத் யூனியன், இதர சோசலிச நாடுகள் மற்றும் உலக கம்யூனிச இயக்கத்திற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. எனவே, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் உலக கம்யூனிச இயக்கத்தின் அ பவங்கள் குறித்து ஒரு மறு மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியமாகிறது. நாடு விடுதலை பெற்ற பிறகுள்ள அரை நூற்றாண்டுக் காலத்தில் நமது நாட்டில் பெரும் மாற்றங்களும், வளர்ச்சிப் போக்குகளும் ஏற்பட்டுள்ளன. 1964ஆ-ம் ஆண்டுக்குப் பிந்தைய வளர்ச்சிப் போக்குகள் மற்றும் அ பவத்தை ஆய்வு செய்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது திட்டத்தைப் புதுப்பித்துள்ளது.

1.11 புரட்சிகர இயக்கத்தின் இன்றைய காலகட்டத்தில், புரட்சிகர சக்திகள் எத்தகைய தொலைநோக்கு இலக்கை அடைய வேண்டுமென்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய மக்களின் முன் வைக்கிறது. சோசலிச சமுதாயத்தை அடைவதற்கு படிக்கட்டான மக்கள் ஜனநாயகத்தை அமைப்பதற்கு தொழிலாளர்களும், விவசாயிகளும், அனைத்துப் பகுதி உழைக்கும் மக்களும், முற்போக்கு ஜனநாயக சக்திகளும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக நடத்திடும் போராட்டத்திற்கு வழிகாட்டும் வகையில் கட்சி இத்திட்டத்தை முன்வைக்கிறது.

தற்கால உலகில் சோசலிசம்

2.1 இருபதாம் நூற்றாண்டில் உலகம் பல முக்கியமான மாற்றங்களைக் கண்டுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்ட நூற்றாண்டாக இது அமைந்திருந்தது. 1917 அக்டோபரில் வெடித்த சோசலிசப் புரட்சி துவங்கி பல புரட்சிகர நிகழ்ச்சிகளை இந்த நூற்றாண்டு கண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது பாசிசம் முறியடிக்கப்பட்டதானது மிகப்பெரிய நிகழ்வாகும், இதில் சோவியத் யூனியன் முக்கியப் பங்காற்றியது. வரலாற்றுச் சிறப்புமிக்க சீனப்புரட்சி, தொடர்ந்து வியட்நாம், கொரியா, கியூபா ஆகிய நாடுகளில் புரட்சிகர சக்திகளின் வெற்றி, கிழக்கு ஐரோப்பாவில் சோசலிச அரசுகள் நிறுவப்பட்டமை போன்றவையெல்லாம் ஏகாதிபத்தியத்திற்கும், சோசலிசத்திற்கும் நடந்த பிரம்மாண்டமான மோதலின் விளைவுகள் ஆகும். இந்த நூற்றாண்டில்தான் காலனி நாடுகள் தேசிய விடுதலை இயக்கங்களை நடத்தி அரசியல் விடுதலை பெற்றன. மார்க்சிய – லெனினிய கோட்பாடுகள் அறிவித்தபடி, மேற்கூறிய இந்த வெற்றிகள் உலக வரலாற்றில் புதிய காலகட்டத்தைக் குறிக்கின்றன. இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இத்தகைய புரட்சிகர நிகழ்வுகளும், அறிவியல், தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வளர்முக மாற்றமும் முன்னெப்போதும் நினைத்துக் கூடப் பார்த்திராத வகையில் மனிதகுல முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய வாய்ப்பு வாசல்களைத் திறந்துவிட்டன.

2.2 சோசலிச முறையைப் பின்பற்றிய நாடுகள் எழுச்சிமிகு புதிய பாதையை வகுத்தன. சோவியத் யூனியன் அமைக்கப்பட்ட பிறகுதான், மனிதகுல வரலாற்றிலேயே முதன்முறையாக உழைக்கும் மக்கள் வர்க்கச் சுரண்டலற்ற ஒரு சமூகத்தில் வாழ்ந்தனர். வேகமான தொழில் வளர்ச்சி எட்டப்பட்டது. நிலப்பிரபுத்துவத்தின் மிச்சசொச்சங்கள் ஒழிக்கப்பட்டன. பொருளாதாரம், பண்பாடு, அறிவியல் ஆகிய துறைகளின் அனைத்து நிலைகளிலும் ஏற்பட்ட வளர்ச்சியால் பெரும்பகுதி மக்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்தது. உழைக்கும் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. வறுமை, கல்லாமை ஒழிக்கப்பட்டது. வேலையின்மை போக்கப்பட்டது. சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி ஆகிய துறைகளில் விரிவான சமூகப் பாதுகாப்பிற்கான வலைப் பின்னல்கள் உருவாக்கப்பட்டன. அறிவியல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரும் முன்னேற்றம் எட்டப்பட்டது. – இவை சோசலிச நாடுகளின் அளப்பரிய சாதனை ஆகும். முதலாளித்துவம் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிராத, ஒப்பீட்டு அளவில் பின்தங்கிய சமூகங்களில்தான் இத்தகைய மாபெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. சமூகப் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சூழல், ஆக்கிரமிப்பு, சதிச் செயல்கள், ஏகாதிபத்திய அச்சுறுத்தல் ஆகிய சிரமமான நிலைமையைச் சமாளித்தே இந்த நாடுகளில் சோசலிசத்தை நிர்மாணிக்க வேண்டியிருந்தது. சோவியத் யூனியனின் சாதனைகள் முதலாளித்துவ நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. மக்கள் நல அரசு என்ற கோட்பாட்டின் கீழ் தங்கள் நாட்டின் குடிமக்களுக்கு சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தி விரிவாக்குமாறு ஆளும் வர்க்கங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டன.

2.3 இருந்தபோதும், சோசலிச நிர்மாணம் எ ம் பழக்கப்படாத பாதையில் சென்ற சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்த ஏனைய சோசலிச நாடுகள், கடுமையான, தவறுகளைப் புரிந்தன. சோசலிச நிர்மாணம் என்பது நீண்டகாலத் தன்மையுடையது என்பதை சரிவரப் புரிந்து கொள்ளாமை, அரசு மற்றும் கட்சி குறித்த தவறான புரிதல், பொருளாதாரம் மற்றும் அதன் நிர்வாகத்தில் காலத்திற்கேற்ற மாற்றங்களைச் செய்யாமை, கட்சி, அரசு மற்றும் சமூகத்தில் சோசலிச ஜனநாயகத்தை ஆழப்படுத்தத் தவறியது, அதிகார வர்க்க மனோபாவத்தின் வளர்ச்சி, தத்துவார்த்த உணர்வு நிலையில் ஏற்பட்ட சிதைவு போன்றவற்றால் இத்தகைய தவறுகள் நேர்ந்தன. சோசலிசத்தைச் சீர்குலைக்க ஏகாதிபத்தியம் எடுத்துவந்த தொடர்ச்சியான முயற்சிக்கு இந்த தவறுகள் உதவின. இத்தகைய பிறழ்வுகளால் மார்க்சிய லெனினியம் செல்லத்தக்கதல்ல என்றாகிவிடாது. மாறாக, அவை புரட்சிகரத் தத்துவம் மற்றும் நடைமுறைகளிலிருந்து விலகிச் சென்றதன் விளைவு என்பதே ஆகும். சோவியத் யூனியன் மற்றும் இதர சோசலிச நாடுகளின் சிதைவும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பின்னடைவும் உலகில் புதிய நிலைமையை உருவாக்கின. இந்த நிலைமைகளால் தைரியமடைந்துள்ள ஏகாதிபத்தியத்திடமிருந்து இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் சோசலிச சக்திகள் மீண்டும் சவாலை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய பின்னடைவுகள் ஏற்பட்டிருந்த போதும், தவறுகளிலிருந்து பாடம் பயின்று கம்யூனிச இயக்கமும், புரட்சிகர சக்திகளும் மீண்டும் அணிவகுத்து ஏகாதிபத்தியம் மற்றும் பிற்போக்கு சக்திகள் விடுத்துள்ள சவாலை எதிர்கொள்ளும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நம்பிக்கை கொள்கிறது.

2.4 இருபதாம் நூற்றாண்டின் வளர்ச்சிப் போக்கில், குறிப்பாக 1917-க்குப் பிறகு, சில திருகல்களும், திருப்பங்களும், வெற்றிகளும், தோல்விகளும் ஏற்பட்டிருந்தபோதும் மனிதகுல வளர்ச்சியில் சோசலிசமும், மக்கள் போராட்டங்களும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. புரட்சிகர மாற்றங்கள் வரலாற்றில் சில தனித்திறம் வாய்ந்த பாய்ச்சல்களை ஏற்படுத்தியுள்ளதோடு நவீன நாகரீகத்தில் சில அழிக்க முடியாத தடங்களையும் பதித்துள்ளன. சமூக விடுதலை மற்றும் சோசலிச மாற்றம் என்ற வழிமுறை நீண்டகாலத் தன்மையுடையதும் சிக்கலானதுமாகும். முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச் செல்வது ஒரே தடவையில் நிகழ்ந்துவிடக்கூடியதல்ல. ஆனால், அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னரும் கூட வர்க்கங்களின் தீவிரமான போராட்டம் நீண்ட காலம் நடக்கும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

2.5 மனிதகுலத்தைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் ஆற்றல் உலக முதலாளித்துவத்திற்கு இல்லை. அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு உற்பத்தி சக்திகள் பெருமளவு வளர்ச்சி கண்டிருப்பதால் முதலாளித்துவ நாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இந்த வளர்ச்சியால் வேலைவாய்ப்பு அதிகரிக்கவில்லை என்பதோடு வருமானம் மற்றும் செல்வத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் பெருமளவு அதிகரித்துள்ளன. மிக அதிகமான விகிதத்தில் உபரி மதிப்பு உறிஞ்சப்படுவதால் தொழிலாளர்களைச் சுரண்டுவது தீவிரமாகியுள்ளது. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி வருமானத்தையும், செல்வத்தையும் ஒரு சில தனிநபர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் குவிப்பதற்கே பயன்படுத்தப்படுகிறது. ஏகாதிபத்தியம், சூறையாடலையும், சீர்குலைவையும் தன்னகத்தே கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டில் லட்சக்கணக்கான மக்கள் பலியாவதற்குக் காரணமாக அமைந்த காட்டுமிராண்டித்தனமான இரண்டு உலகப் போர்களில் மனிதகுலத்தை ஏகாதிபத்தியம் இறக்கிவிட்டது. ஒட்டுமொத்த பொருளாதார தேவைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, வளர்ச்சியடைந்த முதலாளித்துவப் பொருளாதாரத்தின் பிரிக்க முடியாத பகுதியாக ஆயுதத் தயாரிப்பு தொழில், ஆக்கப்பட்டுள்ளது. அரசு பின்வாங்கி விலகி நிற்கவேண்டும் என்ற நவீன தாராளமய முன்மொழிவுகள், உழைக்கும் வர்க்கம் மற்றும் சாமானிய மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டப் பலன்கள் ஈவிரக்கமின்றி வெட்டப்படுதலுக்கு இட்டுச் சென்றுள்ளன. வேலைவாய்ப்பைப் பெருக்காத வளர்ச்சி, நிரந்தரமற்ற வேலை, வருமானத்திலும், செல்வத்திலும் சமச்சீரற்ற நிலை போன்றவைதான் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். நிலையற்ற நிதி அமைப்பு, வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் தேக்கம் அல்லது குறைவான வளர்ச்சி வீதம், செல்வாதாரங்களை வீணடிப்பது அல்லது முறையற்ற வகையில் பயன்படுத்துவது போன்றவை முதலாளித்துவ அமைப்புக்குள் இருந்து வரும் நெருக்கடியின் அடையாளங்கள் ஆகும். லாபவெறி உந்தித் தள்ள பன்னாட்டு நிறுவனங்கள் எடுக்கும் மூர்க்கத்தனமான முயற்சிகள், பணக்கார நாடுகளின் படாடோபமான நுகர்வு முறை போன்றவற்றால் சுற்றுப்புறச்சூழல் பாழடிக்கப்பட்டு, பொதுவாக உலகின் உயிர்வாழ் சூழலுக்கும் குறிப்பாக மூன்றாவது உலக நாடுகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் எழுந்துள்ளது. முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த அடிப்படை முரண்பாடான, வளர்ந்து கொண்டேயிருக்கும் உற்பத்தி சமூகமயமாக்கலுக்கும், உபரி மேன்மேலும் தனியார் சொத்தாக மாறுவதற்கும் இடையிலான முரண்பாடு மேலும் தீவிரமாகி இருக்கிறது.

2.6 இப்போதைய முதலாளித்துவக் கட்டத்தில், நிதி மூலதனத்தின் குவிப்பும், சர்வதேச மயமாக்கலும் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. உலக அளவில் தடையின்றித் தாவும் நிதி மூலதனம் நாடுகளின் இறையாண்மையைத் தாக்குவதோடு, நாடுகளின் பொருளாதாரங்களில் தங்குதடையின்றி நுழைந்து கொள்ளை லாபம் குவிக்கவும் முற்பட்டுள்ளது. ஏகாதிபத்தியம் இந்த ஊக நிதி மூலதனத்திற்கு சேவை செய்யும் வகையில், நிதி மூலதனம் புகுவதற்கான தடைகளைத் தகர்ப்பதோடு, உலகின் அனைத்துப் பாகங்களிலும் நிதி மூலதனத்திற்குச் சாதகமான நிபந்தனைகளைத் திணிக்கிறது. காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய இந்த நியாயமற்ற உலக நடைமுறையை நிலைநிறுத்த சர்வதேச நிதியம், உலகவங்கி, உலக வர்த்தக அமைப்பு போன்றவை கருவிகளாக உள்ளன. ஊக நிதி மூலதனத்தின் இந்தப் புதிய ஆதிக்கம் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வளர்ச்சியை மந்தப்படுத்தியுள்ளது. மூன்றாம் உலக நாடுகளிலோ சுரண்டலைத் தீவிரப்படுத்துகிற, கடனை அதிகரிக்கிற விஷச்சக்கரமாக இது மாறியுள்ளது. வளர்ச்சி குறைந்த முதலாளித்துவ நாடுகளுக்கோ வர்த்தகம், தொழில் மற்றும் விவசாய உற்பத்தி, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் சேவைத் துறைகளில் ஏகாதிபத்திய மூலதன நலன்களோடு இணைந்து போகும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சியடைந்த, பணக்கார முதலாளித்துவ நாடுகள் ஒருபுறம், பெரும்பகுதி மக்கள் வாழும் மூன்றாம் உலகநாடுகள் மறுபுறம் என ஏகாதிபத்திய முறை உலகை இரு கூறாகப் பிரித்துள்ளது. இருபதாம் நூற்றாண்டின் கடைசி இருபது ஆண்டுகளில் பணக்கார நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்குமான இடைவெளி வெகுவாக அதிகரித்துள்ளது. ஏகாதிபத்தியத்தால் விரைவுபடுத்தப்படும் உலகமயமாக்கலால் இந்த இடைவெளி மேலும் அதிகரித்துள்ளது.

2.7 பழைய காலனி ஆதிக்க முறை முடிவுக்கு வந்த நிலையில், நவீன காலனி ஆதிக்க முறையைப் பின்பற்றிவந்த ஏகாதிபத்தியம், சோவியத் யூனியனின் சிதைவுக்குப் பிறகு, உலக ஆதிக்கத்திற்கான தனது முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது பொருளாதார, அரசியல், ராணுவ வல்லமையைப் பயன்படுத்தி மேலாதிக்கத்தை நிறுவ மூர்க்கமாக முயல்கிறது. நேட்டோ விரிவாக்கம் மற்றும் உலகம் முழுவதும் ராணுவத் தலையீடு ஆகியவற்றின் பக்கபலத்தோடு, ஏகாதிபத்தியத்தால் இயக்கப்படும் உலகமயமாக்கல் ஏகாதிபத்திய முறையை திணிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. மாறியுள்ள சக்திகளின் பலாபலத்தில் ஏற்பட்டுள்ள பாதகமான சூழலுக்கிடையேயும், சோசலிச நாடுகளான சீனா, வியட்நாம், கியூபா, கொரியா, லாவோஸ் ஆகியவை சோசலிச லட்சியத்தில் உறுதிபூண்டு பணியாற்றி வருகின்றன. இப்போதுள்ள சோசலிச நாடுகளைச் சீர்குலைக்க ஏகாதிபத்தியம் முனைப்புடன் செயல்படுவதோடு, தத்துவார்த்த, பொருளாதார, அரசியல் துறைகளில் அவற்றிற்கெதிராக விடாப்பிடியான போரை நடத்திவருகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள தகவல் தொடர்புத்துறைப் புரட்சியைப் பயன்படுத்தியும், சர்வதேசத் தகவல் தொடர்பு சாதனங்களைத் தனது பிடியில் வைத்திருப்பதன் மூலமும் முதலாளித்துவ எதிர்ப்பு சிந்தனைகளையும், சோசலிசத்தையும் இருட்டடிப்புச் செய்து மதிப்பிழக்கச் செய்யவும் ஏகாதிபத்தியம் தீவிரமாக முயல்கிறது.

2.8 இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், சர்வதேச அளவில், சக்திகளின் பலாபலம் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக இருந்தபோதும், புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி உற்பத்தி சக்திகளை தொடர்ந்து வளர்த்து வந்தும்கூட, முதலாளித்துவம் நெருக்கடியைத் தன்னகத்தே கொண்டதாகவும், அடக்குமுறை, சுரண்டல், அநீதி ஆகிய தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. முதலாளித்துவத்திற்கு ஒரே மாற்று சோசலிசமே ஆகும். எனவேதான், இந்தக் காலகட்டத்தின் மையமான சமூக முரண்பாடாக ஏகாதிபத்தியத்திற்கும், சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடு தொடர்கிறது. நவீன தாராளமயத்தின் உலகளாவிய தாக்குதலின் காரணமாக ஏகாதிபத்திய நாடுகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு மிகவும் தீவிரமடைகிறது, இந்த முரண்பாடு மேலும் முன் க்கு வந்து கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் கீழ் சமச்சீரற்ற வளர்ச்சி காரணமாக ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடு தொடர்ந்து நீடிக்கிறது. மேற்கூறப்பட்டுள்ளபடி, முதலாளித்துவத்தின் தற்போதைய தன்மைகளால், உழைப்புக்கும், மூலதனத்திற்கும் இடையிலான முரண்பாடு தீவிரமாகிறது. இந்த அனைத்து முரண்பாடுகளும் தொடர்ந்து தீவிரமடைந்து உலக நிகழ்வுகளில் தங்கள் தாக்கத்தைச் செலுத்தும்.

2.9 ஏகாதிபத்தியத்தையும் அதன் சுரண்டல் முறையையும் எதிர்த்து அயராத போராட்டத்தினை நடத்த உழைக்கும் வர்க்கமும், அதன் கட்சிகளும் தத்துவார்த்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். இன்றைய அநீதியான உலக முறையைப் பாதுகாத்து நிலைநிறுத்த முயலும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்று முறியடிக்க இடது, ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளின் உலகளாவிய ஒற்றுமையை உருவாக்குவது அவசியமாகும். பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராட உறுதி பூண்டுள்ளது, மேலும், ஏகாதிபத்தியம் திணிக்கும் உலகமயமாக்கல் பொருளாதார முறையை எதிர்த்தும், சமாதானம், ஜனநாயகம், சோசலிசத்திற்காகவும் போராடும் உலகம் முழுவதுமுள்ள அனைத்து சக்திகளுட ம் தனது ஒருமைப்பாட்டை தெரிவிக்கிறது.

சுதந்திரமும் அதற்குப் பின்னரும்

3.1 சுதந்திரப் போராட்டத்தில் பெருமளவிலான இந்திய மக்கள் உத்வேகத்துடன் பங்கேற்று அதை வெற்றிகரமாக்கினர். தேசபக்தக் கனல் கொழுந்துவிட்டெரியப் போராடிய மக்கள், சுதந்திர இந்தியாவில் தங்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்பினர். துயரம் மிகுந்த வறுமைக்கும், சுரண்டலுக்கும் ஒரு முடிவு வரும் என்று எதிர்பார்த்தனர். நிலம், நியாயமான ஊதியம், வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என்பதே சுதந்திரம் என மக்கள் கருதி இருந்தனர். சமூகத் தீங்குகளான சாதியம், சமூகப் பகைமை போன்றவற்றிலிருந்து விடுதலை, ஜனநாயக கட்டமைப்புக்குள் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவற்றையே மக்கள் சுதந்திரம் எனக் கருதினர்.

3.2 உழைக்கும் வர்க்கம், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், அறிவு ஜீவிகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் எனப் பெரும்பகுதி மக்களது பங்கேற்பின் காரணமாகவே விடுதலைக்கான தேசிய இயக்கம் வெற்றி கண்டது. ஆனால் முதலாளி வர்க்கத்தின் கைகளில்தான் அதன் தலைமை இருந்தது. புதிய அரசுக்குத் தலைமையேற்ற பெரு முதலாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைக் கடமையைப் பூர்த்தி செய்ய மறுத்தது. உற்பத்தி சக்திகளின் விலங்குகளை உடைத்தெறிவதில்தான், இந்திய சமூகத்திற்கு புத்துயிரளிக்கும் பாதை அமைகிறது. புல்லுருவித்தனமான நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டு விவசாயத் தொழிலாளர்களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். அன்னிய மூலதன ஆதிக்கப் பிடியிலிருந்து தொழில் வளர்ச்சி விடுவிக்கப்பட்டிருந்தால், சுயசார்பு பொருளாதாரத்துடன் கூடிய முன்னேறிய, தொழில் வளர்ச்சி மிகுந்த நாடாக மாற வழியேற்பட்டிருக்கும். ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை நிறைவேற்றுவதால் ஏற்படும் தொடர் விளைவுகளை எண்ணி அச்சமுற்ற பெரு முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுக்களுடன் ஒரு கூட்டை அமைத்துக் கொண்டதோடு, ஏகாதிபத்தியத்துடனும் சமரசம் செய்து கொண்டது. முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவக் கூட்டின் பிரதிபலிப்பாகவே காங்கிரஸ் ஆட்சியாளர்களின் கொள்கைகள் இருந்தன. தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில் பின்பற்றப்பட்ட முதலாளித்துவப் பாதையின் தன்மை ஆளும் வர்க்கங்களின் இந்த தன்மையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டது.

3.3 நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான அளவற்ற இயற்கை வள ஆதாரம் இந்தியாவிடம் உள்ளது. ஏராளமான விளைச்சல் நிலங்கள், பாசன வசதி, பல்வேறு பகுதிகளில் பல்வேறுபட்ட பயிர்களை விளைவிப்பதற்குச் சாதகமான பருவச் சூழல், வளமான கனிமச் செல்வம், மின் உற்பத்திக்கான நல்ல வாய்ப்பு என அனைத்தும் உள்ளன. இந்தியாவில் பெருமளவிலான மனித வளம் உள்ளதோடு அறிவியல், தொழில்நுட்ப, நிர்வாக, அறிவுத் திறன் போன்ற சிறந்த வளங்களும் இந்திய மக்களிடம் ஏராளமாக உள்ளன. இந்த வளங்களை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக, அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிய பெரு முதலாளிகள் தங்களது குறுகிய சுயநலனை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை வகுத்துக் கொண்டனர்.

3.4 சுதந்திரத்திற்குப் பிறகு முதலாளி வர்க்கம் ஏகாதிபத்தியத்துடன் ஒட்டி உறவாடியும், முரண்பட்டும் தங்கள் இரட்டைத் தன்மையை வெளிப்படுத்தியது. அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்ட பெரு முதலாளி வர்க்கம் குறிப்பிட்டதொரு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை வகுத்துக் கொண்டது. பெரு முதலாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவத்துடன் உறவை நீடித்துக் கொண்டே, ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டது. அரசு அதிகாரத்தின் மீதான தனது பிடிப்பை வலுப்படுத்திக் கொள்வதற்காக ஒருபுறத்தில் மக்கள் மீது தாக்குதல் தொடுத்தது. மறுபுறத்தில் ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவத்துடனான மோதல் மற்றும் முரண்பாட்டை நிர்ப்பந்தம், பேரம், சமரசம் ஆகிய வழிகளில் தீர்த்துக் கொண்டது. இந்த வகையில் அன்னிய ஏகபோகத்துடன் வலுவான இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு, நிலப்பிரபுக்களுடன் அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்கிறது. தாராளமயத்திற்குப்பின், அன்னிய மூலதனத்திற்கு பொருளாதாரத்தைத் திறந்துவிட வேண்டுமென்றும், சர்வதேச நிதி மூலதனத்துடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பெருமுதலாளி வர்க்கம் தீவிரமாக வாதிட்டு வருகிறது. பொதுத்துறைகளையும், ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் தனியார்மயமாக்க வேண்டும் என்று வலியுறுத்துவதில் முன்னணியில் உள்ளது.

3.5 சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆரம்ப ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகளிடமிருந்து நியாயமான உதவி பெற இயலாததால் இந்தியப் பெருமுதலாளி வர்க்கம், சோவியத் யூனியனிடம் உதவி கோரியது. முதலாளித்துவத்தை வளர்க்க அரசு வழிநடத்தும் முதலாளித்துவப் பாதையை இவர்கள் மேற்கொண்டனர். ஏகாதிபத்தியம், சோசலிசம் என்ற இரண்டு முகாம்களையும் பேரம் பேசுவதற்குப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் நிலையை வலுவாக்கிக் கொண்டனர். திட்டமிட்ட பொருளாதாரம், முதலாளித்துவப் பாதையின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்டது. சிறு பகுதியினரான, சுரண்டல் வர்க்கத்தின் நலன் அடிப்படையிலேயே பட்ஜெட் மற்றும் பொதுவான பொருளாதாரக் கொள்கைகள் பிரதானமாகத் தீர்மானிக்கப்பட்டன. பெருமளவிலான திட்டங்களுக்கு முதலீடு செய்வதற்குத் தேவையான பெரும் நிதியாதாரம் தனியாரிடம் இல்லாதிருந்ததால், கனரகத் தொழில்கள், கட்டமைப்புத்துறை ஆகியவை பொதுத்துறை மூலம் வளர்க்கப்பட்டன. ஏகாதிபத்திய ஏகபோகங்களைச் சார்ந்திருப்பதை விடுத்து, ஓரளவு தொழில்மயமாக்குவதற்கு பொதுத்துறை நிறுவனங்களைக் கட்டுவது உதவியது.

3.6 இந்தியா போன்ற வளர்ச்சியடையாத நாட்டில், அரசு அதிகாரம் பெருமுதலாளி வர்க்கத்திடம் உள்ள நிலையில் திட்டமிட்ட பொருளாதாரம் என்பது முதலாளித்துவ வளர்ச்சிக்கு உத்வேகமூட்டுவதாகவும் அதற்கான திசையை வழங்குவதாகவும் அமையும். அரசாங்கக் கொள்கைகளின் வரையறைகளுக்கு உட்பட்டுக் கிடைக்கும் நிதி ஆதாரங்களை அவர்களுக்கு உகந்த முறையில் பயன்படுத்த இது வழிவகுக்கிறது. தொழில் விரிவாக்கம் குறிப்பாக கனரக மற்றும் எந்திர தயாரிப்புத் தொழில் போன்றவை அரசு பொதுத்துறையின் கீழ் வளர்க்கப்பட்டதில் இந்தத் திட்டங்களின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சத்தைப் பார்க்கலாம். சோசலிச நாடுகளின், குறிப்பாக சோவியத் யூனியனின் தொடர்ச்சியான ஆதரவு காரணமாகவே இவை சாத்தியமாயின. வங்கி, காப்பீட்டுத்துறை போன்ற நிதித்துறையையும், எண்ணெய் மற்றும் நிலக்கரித் தொழிலையும் தேசிய மயமாக்கியதன் மூலம் அரசுத்துறை விரிவாக்கப்பட்டது.

3.7 அரைகுறை மனதோடு எடுக்கப்பட்டாலும், தொழில்மயமாக்கு வதற்கான வேறு சில கொள்கை முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, புதிய காப்புரிமைச் சட்டம், நமது சந்தையில் அன்னியப் பொருட்கள் மற்றும் மூலதனம் நுழைவதற்கு கட்டுப்பாடு, சிறுதொழில்களுக்கு பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் நிலவிய இந்தச் சூழலில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய நடவடிக்கைகளால், ஏகாதிபத்திய சக்திகளையே சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலைமையையும், பின்தங்கிய பொருளாதாரத் தன்மையையும் ஓரளவுக்கு மாற்ற உதவியதோடு தொழில் வளர்ச்சிக்கான தொழில்நுட்ப அடித்தளமும் நிறுவப்பட்டது.

3.8 பொதுத்துறை வளர்ச்சி, குறிப்பிட்ட அளவிலான திட்டமிடுதலின் மூலம் அரசின் தலையீடு, தொடர்ந்து வந்த அரசுகள் பின்பற்றிய கொள்கைகளின் காரணமாக செல்வப் பெருக்கமும் ஏகபோகங்களின் வேகமான வளர்ச்சியும் ஏற்பட்டன. பெரு முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையில் அரசுத்துறையும்கூட முதலாளித்துவத்தைக் கட்டமைக்கும் கருவியானது. பொதுத்துறை நிதி நிறுவனங்களின் பெரும்பாலான கடன் வசதியை பெரு முதலாளிகளே பயன்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து வந்த அரசுகளின் பட்ஜெட் மற்றும் வரி விதிப்புக் கொள்கைகள் பொது மக்களிடமிருந்து நிதியாதாரத்தை வசூலித்து, முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் சிறுபகுதிக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதாகவே வடிவமைக்கப்பட்டன. பெருமளவு வரி ஏய்ப்பானது கறுப்புப் பணக் குவிப்பிற்கு வழி வகுத்தது. இது தனியார் மூலதனக் குவிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு வழிமுறையாகும். முதலாளித்துவ வளர்ச்சிக்காக திட்டச் செலவு என்ற பெயரில் பொதுமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோர் ஈவிரக்கமின்றி சுரண்டலுக்கு உள்ளாயினர். அடிப்படையான நிலச்சீர்திருத்தம் செய்யப்படாததால் உள்நாட்டுச் சந்தை தொடர்ந்து குறுகிய அளவிலேயே இருந்தது. அன்னிய மூலதனத்தை சாராமல், உள்நாட்டு தொழில் வளரவோ விரிவடையவோ முடியவில்லை. அரசு முதலாளித்துவத்தின் இந்த வடிவத்திற்கு பெருமளவிலான அன்னிய மற்றும் உள்நாட்டுக் கடன்களே நிதி ஆதாரமானது. ஏகபோகங்களின் வளர்ச்சி, அன்னிய மூலதன ஊடுருவல் அதிகரிப்பு போன்றவை இந்தப் பாதையின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

3.9 ஆளும் வர்க்கங்கள் 1950கள் முதல் பின்பற்றி வந்த முதலாளித்துவப் பாதை, நெருக்கடிமிக்கதாகவே இருந்து வந்ததோடு, தேக்க நிலையையும் எட்டியது. பெருமுதலாளிகள் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துகொண்டதால், உள்நாட்டுச் சந்தை விரிவடையாமல் போனதோடு, விவசாயிகளின் வாங்கும் சக்தியும் போதுமான அளவுக்கு அதிகரிக்க வழியில்லாமல் போய்விட்டது. தொழில்மயம் ஆக்குவதற்கான முதலீட்டுக்காகவும், அரசுச் செலவுகளுக்காகவும் வெளிநாட்டு, உள்நாட்டுக் கடன்களையே சார்ந்திருந்ததன் விளைவாக, அன்னியச் செலாவணி கையிருப்பு, நிதிப்பற்றாக்குறை ஆகிய இரண்டிலும் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிதி நெருக்கடி இறுதியில் காங்கிரஸ் அரசு ஐ.எம்.எப்., உலக வங்கியின் நிபந்தனைகளை ஏற்பதற்கு இட்டுச் சென்றது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க அன்னிய நிதி மூலதனத்துடன் ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ளுதல், பொருளாதாரத்தைத் திறந்து விடுதல் போன்றவற்றில் இந்தியப் பெருமுதலாளிகள் இறங்கினர்.

3.10 ஆரம்பத்தில் முதலாளித்துவ வளர்ச்சிக்கான போதிய கட்டமைப்பு வசதிகளைச் செய்ய பெரு முதலாளிகளிடம் தேவையான மூலதனம் இன்மையால் அரசுத் தலையீட்டை இவர்கள் விரும்பினர். அதன்பின் சில பத்தாண்டுகளில் போதுமான மூலதனத்தைப் பெரு முதலாளிகள் சேர்த்துக் கொண்டனர். அரசு உதவியதால் வளர்ச்சித் திட்டங்களாலும் மானியங்களாலும் கொழுத்தன. 1980களின் மத்தியில் அரசிற்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கேந்திரத் தொழில்களில் நுழையவும், பொதுத்துறை நிறுவனங்களைத் தாங்களே எடுத்துக் கொள்ளவும், அன்னிய மூலதனத்துடன் சேர்ந்து புதிய பகுதிகளில் விரிவடையும் அளவிற்கும் பெரு முதலாளிகள் தயாராக இருந்தனர். இத்துடன் அரசு கடைப்பிடித்து வந்த முதலாளித்துவப் பாதையில் ஏற்பட்ட நெருக்கடியும் சேர்ந்து தாராளமயத்தைப் புகுத்துவதற்கான உள்நாட்டு அடித்தளம் அமைக்கப்பட்டது. சோவியத் யூனியன் சிதறுண்டு போனதால், கொள்கைகளில் வேகமாக மாற்றம் ஏற்பட்டு ஐ.எம்.எப்., உலகவங்கி கட்டளைகளை ஏற்கும் நிலைமை உருவாகியது.

3.11 எண்பதுகளின் மத்தியில் ராஜீவ்காந்தி ஆட்சிக்காலத்தில் பொருளாதாரத்தை தாராளமயமாக்கி, திறந்துவிடும் வகையில் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் கொணருமாறு நிர்ப்பந்தம் செய்யப்பட்டது. இறக்குமதி தாராளமயமாக்கல், குறுகிய காலக் கடன்கள் அதிகரிப்பு காரணமாக பெரும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. இத்துடன், சர்வதேச நிலைமையும் மாறியதால், 1991ஆம் ஆண்டில் கட்டமைப்பைச் சரிக்கட்டுவதற்காகக் கடன் பெற காங்கிரஸ் அரசு ஐஎம்எப், – உலகவங்கியின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, தாராளமயமாக்கல் கொள்கைகள் மேலும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. 1991 முதல் தொடர்ந்து வந்த அரசுகள் தாராளமயமாக்கல் மற்றும் கட்டமைப்பைச் சரிக்கட்டும் கொள்கைகளை பின்பற்றியதால், அன்னிய மூலதனத்திற்கு பொருளாதாரம் திறந்து விடப்பட்டது. பொதுத்துறையைச் சீர்குலைக்கும் பணி தொடர்ந்தது. இறக்குமதி தாராளமயமாக்கப்பட்டது. அரசு/பொதுத்துறைகளின் செயல்பாட்டுக்கென்று நீண்டகாலமாக ஒதுக்கப்பட்டிருந்த பகுதிகள் அன்னிய மற்றும் இந்திய ஏகபோகங்களுக்கு திறந்துவிடப்பட்டன. பொதுத்துறை நிறுவனங்களை அழித்துவிடும் நோக்கோடு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டன. அந்த நிறுவனங்கள் தனியார் ஏகபோகங்களுக்கு மலிவான விலையில் விற்கப்பட்டன. இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டதால் உள்நாட்டு உற்பத்திப் பொருட்களுக்கு பதிலாக அன்னியப்பொருட்கள் குவிந்தன. இதன் விளைவாக பெருமளவில் ஆலைகள் மூடப்பட்டு பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டனர். நிதித்துறையைத் திறந்துவிடுமாறு சர்வதேச நிதி மூலதனம் தொடர்ச்சியாக நிர்ப்பந்தம் செய்கிறது. வங்கித்துறையை தனியார் மயமாக்குதல், காப்பீட்டுத் துறையைத் திறந்துவிடுதல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. 1994இல் காட் உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திட்டதன் மூலம் உலக வர்த்தக அமைப்பின் அதிகாரத்தை ஏற்க வேண்டியதாயிற்று. காப்புரிமை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களும் சேவைத் துறைகள் திறந்துவிடப்பட்டதும் ஏகாதிபத்திய மூலதனத்தின் நலன்களுக்கு உதவியது. இத்தகைய நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தும் பொருளாதார இறையாண்மையை பாதிக்கச் செய்துள்ளன.

3.12 தாராளமய, தனியார்மயப் பாதை பெரு முதலாளிகளுக்கு ஏராளமான பலனைத் தந்துள்ளது. புதிய வர்த்தக நிறுவனங்கள் தோன்றி பெருமுதலாளித்துவ நிறுவனங்களாக விரிவடைந்துள்ளன. 1957ஆம் ஆண்டில் 22 ஏகபோக நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ. 312.63 கோடியாக இருந்ததிலிருந்து 1997இல் ரூ. 1,58,004.72 கோடியாக, அதாவது 500 மடங்கு உயர்ந்துள்ளது. தாராளமயமாக்கலின் கீழ் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும், வசதி படைத்த பகுதியினருக்கும் வருமான வரி விகிதம் குறைப்பு, செல்வவரி போன்ற மற்ற வரிகள் ரத்து என ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்பட்டன. இத்தகைய கொள்கைகளால் வசதிபடைத்த வர்க்கத்தினர் கொழுத்ததோடு, அவர்களது ஆடம்பரப் பொருள் நுகர்வுக்கான சந்தையும் விரிவடைந்தது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய அன்னிய மூலதனத்துடன் கூட்டு சேர்ந்து இந்தப் பொருள்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டன அல்லது இறக்குமதி செய்யப்பட்டன. அன்னிய மூலதனத்தின் தங்கு தடையற்ற நுழைவின் காரணமாக உள்நாட்டுத் தொழிலின் முக்கியத் துறைகள் பாதிக்கப்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை வாங்கி வருகின்றன. பெரு முதலாளியல்லாத முதலாளிகளில் சில பகுதியினர் அன்னிய மூலதனத்துடன் கூட்டுச் சேர விரும்பிய போதும், பெருமளவிலான நடுத்தர மற்றும் சிறு முதலாளிகள் தாராளமயத்தினால் கடுமையாகத் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3.13 தாராளமயமாக்கல் காலக்கட்டத்தில் அன்னியக் கடன் மற்றும் உள்நாட்டுக் கடன் ஆகிய இரண்டுமே உயர்ந்துள்ளன. வருவாயின் பெரும்பகுதி, வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே செலவிடப்படுகிறது. பொது முதலீடுகளும், செலவுகளும் குறைக்கப்பட்டுவிட்டதால் வளர்ச்சிப் பணிகள் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. தாராளமயமாக்குதல் காரணமாக சமூக, பொருளாதார, பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் தீவிரமடைந்துள்ளன. அரசின் புள்ளி விபரங்கள் அடிப்படையில் கூட வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வோர் எண்ணிக்கை குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொது விநியோக முறை சுருக்கப்பட்ட பின்னணியில், அத்தியாவசியப் பண்டங்களின், குறிப்பாக உணவுப் பண்டங்களின் விலை உயர்வு ஏழை மக்களை கடுமையாகத் தாக்கியுள்ளது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் நலத் திட்டங்களுக்கான சமூகத் துறை செலவுகள் வெட்டிச் சுருக்கப்படுவதால் உழைக்கும் மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது.

3.14 முதலாளிகளும், அரசாங்கமும் ஏற்றியுள்ள கடும் சுமையின் பெரும் பகுதியை உழைக்கும் வர்க்கம்தான் தாங்க வேண்டியுள்ளது. தொடர்ந்து ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியால் தொழிலாளர்களின் உண்மை ஊதியம் உயர்வதில்லை. தொழில்துறை நெருக்கடி ஒரு நோய் போலத் தொடர்வதால், தொழிற்சாலை மூடல், ஆட்குறைப்பு போன்ற தாக்குதல்களை தொழிலாளர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக என்று சொல்லப்பட்ட தொழிலாளர் சட்டங்களில் பல குறைபாடுகள் உள்ளன. அந்தச் சட்டங்கள் கூட அமல்படுத்தப்படுவதில்லை. சட்டங்களை மீறுவதே தொழிலதிபர்களின் நியதி என்றாகிவிட்டது. ரகசிய வாக்கெடுப்பு மூலம் தொழிற்சங்க அங்கீகாரமும், கூட்டுப்பேர உரிமையும் மறுக்கப்படுகின்றன. தாராளமயம், தனியார்மயத்தின் தாக்குதலால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிக்கப்படுகிறது. அவர்களுக்கு எத்தகைய சமூகப் பாதுகாப்பும் இல்லை. தாராளமயமாக்கல் கொள்கையின் ஒரு பகுதியாக தொழிலாளர் நலன் சார்ந்த விதிமுறைகள் நீக்கப்பட வேண்டுமெனவும் கோரப்படுகிறது. நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாக தொழிலாளர்கள் பெற்ற பலன்களும், உரிமைகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிரந்தரப் பணிகள், ஒப்பந்த அல்லது தற்காலிகப் பணிகளாக மாற்றப்படுகின்றன. உழைக்கும் பெண்களுக்கு குறைவான ஊதியமே தரப்படுவதோடு, முதலில் பணிநீக்கம் செய்யப்படுவதும் அவர்கள்தான். குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பதோடு, அக்குழந்தை தொழிலாளர்களே மிக மோசமான சுரண்டலுக்கும் ஆளாகின்றனர். அணிதிரட்டப்பட்ட தொழில்களுக்கு வெளியேயுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பும் இல்லை. அரசாங்கம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்சக் கூலியும் மறுக்கப்படுகிறது. பெருமளவிலான அணிதிரட்டப்படாத துறைகளில் உள்ள ஆண், பெண் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை மிகவும் பரிதாபகரமானதாகும். அபாயகரமான சூழ்நிலையில் சொற்பக் கூலிக்காக அவர்கள் நீண்ட நேரம் உழைக்க வேண்டியுள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் ஓயாத உழைப்பின் மூலமும், அவர்களை சுரண்டுவதன் மூலமும்தான் முதலாளிகள், பெரும் ஒப்பந்தக்காரர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் பெறுகின்றனர்.

3.15 விவசாயப் பிரச்சனையே முக்கியமான தேசியப் பிரச்சனையாக இந்திய மக்கள் முன் நிற்கிறது. கிராமப்புறங்களில், நிலப்பிரபுத்துவ ஒழிப்பு, கந்துவட்டிக்காரர் வியாபாரிகளின் சுரண்டலுக்கு முடிவு, சாதி மற்றும் பாலியல் ஒடுக்குமுறைக்கு தீர்வு ஆகிய இலக்குகளைக் கொண்ட தீவிரமானதும் முழுமையானதுமான நிலச் சீர்திருத்தம் உள்ளிட்ட புரட்சிகர மாறுதல்களே இதற்கான தீர்வாகும். விவசாயப் பிரச்சனைகளுக்கு முற்போக்கான, ஜனநாயக முறையிலான தீர்வு காணவில்லையென்றாலும், அதை கையிலெடுக்கக்கூட தவறியது என்பது இந்தியாவின் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆட்சியின் திவால்தன்மையை வெளிப்படுத்துகிறது.

3.16 சுதந்திரத்திற்குப் பிறகு, காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பதற்குப் பதிலாக, அரை நிலப்பிரபுத்துவ நிலப்பிரபுக்களை, முதலாளித்துவ நிலப்பிரபுக்களாக மாற்றுகிற, பணக்கார விவசாயப் பகுதியினரை வளர்த்து விடுகிற விவசாயக் கொள்கைகளைப் பின்பற்றினர். சட்டப்பூர்வமாக இருந்த பழைய நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்க கொண்டுவரப்பட்ட சட்டரீதியான நடவடிக்கைகள் அனைத்தும் பெரும் தொகையை நஷ்ட ஈடாகப் பெறவும், பெருமளவு நிலத்தை தக்கவைத்துக் கொள்ளவும் வழி செய்தன. குத்தகைதாரர் சட்டத்தின்படி சொந்தச் சாகுபடி செய்யப் போவதாக கூறி நிலத்தைத் திரும்பப் பெற உரிமை வழங்குவதானது, லட்சக்கணக்கான குத்தகை விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்ற வகை செய்தது. பெருமளவு நிலக்குவிப்பை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் நில உச்சவரம்புச் சட்டங்களில் போதுமான ஓட்டைகள் விடப்பட்டன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் உபரிநிலம் எடுக்கப்படவும் இல்லை. விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படவும் இல்லை. கிராமப்புறங்களில் மாற்றங்களுக்கான வரலாற்று ரீதியான வாய்ப்புக்கு மாபெரும் துரோகமிழைத்ததுதான் காங்கிரசின் சாதனைகளில் ஒன்றாகும். இப்போதுள்ள சட்டங்களைக் கொண்டே மேற்குவங்கம், கேரளம், திரிபுரா ஆகிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும்தான் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

3.17 காங்கிரஸ் அரசாங்கங்களும், அதற்குப் பின்வந்த அரசாங்கங்களும் வகுத்த விவசாயக் கொள்கைகள் நிலப்பிரபுக்களுக்கும் பணக்கார விவசாயிகளுக்கும் உதவுவதாகவே வகுக்கப்பட்டன. அரசு கடன்களும் நிதி ஒதுக்கீடும் அவர்களுக்கே செய்யப்பட்டன. வங்கி மற்றும் கூட்டுறவுக்கடன் வசதிகளை இந்தப் பகுதியினரே வளைத்துக் கொண்டனர். 1960களின் பிற்பகுதியில் விவசாயத்தில் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டதோடு அரிசி, கோதுமை போன்றவற்றில் அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. உணவு தானியம் மற்றும் பணப் பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க இரசாயன உரங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. இவற்றால், விவசாயத்துறை வளர்ச்சியடைந்தாலும் அத டன் ஏற்றத் தாழ்வுகளும் அதிகரித்தன. பெருமளவு உணவு தானிய உற்பத்தி செய்ததன் மூலம் இந்தியா சுயசார்பை அடையும் நிலை ஏற்பட்ட போதும் கோடிக்கணக்கான மக்கள் போதிய உணவு கிடைக்காமல் பட்டினியாலும், ஊட்டச்சத்துக் குறைவாலும் வாடுகிறார்கள்.

3.18 விவசாய உறவுகளில் கிராமப்புறங்களில் முதலாளித்துவ உறவு முறை வெகுவாக வளர்ந்துள்ளது. இதன் முக்கிய அம்சங்களாவன : கிராமப்புற உழைக்கும் மக்களில் பெரும் பகுதியினர் கூலி உழைப்பாளர்களாகிவிட்டனர். கிராமப்புற மக்கள் தொகையில் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை முன்பை விட அதிகரித்துள்ளது. விவசாயிகளிடையே ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. சந்தைக்காகவே உற்பத்தி என்றாகிவிட்டது. காலகாலமாக குத்தகை விவசாயம் செய்துவந்த உழவடைதாரர்கள் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளில் கிராமப்புற பணக்காரர்கள் குறிப்பாக நிலப் பிரபுக்கள் மறு முதலீடுகளைச் செய்வதால் இதுவரை இல்லாத அளவுக்கு மூலதனம் அதிகரிக்க அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

3.19 விவசாயத்தில், முதலாளித்துவ உறவு முறையே அகில இந்திய அளவில் முக்கியப் போக்கு என்பது தெளிவாகி விட்டபோதும், பிராந்திய மற்றும் உட் பிராந்தியப் பகுதிகளில் விவசாய உறவு முறைகளில் வேறுபாடுகளும் முதலாளித்துவ உறவு முறைகளான உற்பத்தி மற்றும் பரிவர்த்தனையில் சமச்சீரற்ற தன்மையும் நிலவுகின்றன. விவசாயத்தில் முதலாளித்துவ முறை முன்னேறிய பகுதிகளும், கிராமப்புற பொருளாதாரத்தில் வர்த்தக விவசாய முறையில் பணம் கொடுக்கல் வாங்கல்களும் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளும் நாட்டில் உள்ளன. விவசாய உறவு முறைகளில் பண்டைய முறையிலான நிலப்பிரபுத்துவம், குத்தகை முறை, காலத்திற்கொவ்வாத பணி முறைகள், கட்டாய உழைப்பு, அடிமைத்தனம் ஆகியவை இன்றைக்கும் முக்கியப் பங்காற்றுகிற பகுதிகளும் உள்ளன. நாடு முழுவதும் சாதியப் பாகுபாடும், சாதிய ஒடுக்குமுறையும், மிக மோசமான பாலியல் அடக்கு முறைகளும், ஏழைகளை, கந்து வட்டிக்காரர்களும் வர்த்தக மூலதனக்காரர்களும் சுரண்டுவதும் தடையின்றி நீடிக்கின்றன. இந்திய விவசாயத்தில் முதலாளித்துவ வளர்ச்சி என்பது பழைய வடிவங்களை உறுதியான முறையில் ஒழித்து உருவாக்கப்படவில்லை. முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறை மற்றும் சமூக அமைப்பு முறையெனும் சீரழிந்த வடிவத்தின் மீது பொருத்தப்பட்டது. நவீனத்தின் வளர்ச்சி, காலத்திற்கு ஒவ்வாதவற்றை தவிர்த்துவிடவில்லை. முதலாளித்துவமானது எண்ணற்ற வழிமுறைகளில் விவசாயத்திலும் கிராம சமூகத்திலும் ஊடுருவுகின்றன என்ற விதிக்கு இந்தியா ஒரு மிகப் பெரிய நிகழ்கால எடுத்துக்காட்டாக உள்ளது.

3.20 சுதந்திரத்திற்குப் பிந்தைய 50 ஆண்டுகளில் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவக் கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருவதாலும், ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களைக் கொண்ட 70 சதவீத விவசாயப் பகுதியினரிடம் உற்பத்திச் சாதனங்களோ, சொத்துக்களோ இல்லாத நிலையால், மிகக்குறைவான வருமானமே பெறும் நிலையே இருப்பதாலும் இவர்கள் கொடூரமான வறுமையால் பீடிக்கப்பட்டு துயரம் மிகுந்த வாழ்க்கை நிலைமையில் உழல்கின்றனர். இந்தியாவில் இருப்பதைப் போன்று நிலையாக நீடிக்கும் கிராமப்புற வறுமையின் அளவு உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை. அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படியே கூட இந்தியா சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளுக்குப் பிறகும் 28 கோடியே 50 லட்சம் பேர் கிராமப்புற இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர். இருந்தபோதும் வறுமைக்குப் பல பரிமாணங்கள் உண்டு. வருமானப் பற்றாக்குறையால் மட்டும் அது உருவாவதில்லை. மக்களுக்கு வறுமை பல வழிகளில் வெளிப்படுகிறது. கிராமப்புற ஏழைகளிடம் மிகக் குறைவான நிலமோ அல்லது நிலமே இல்லாத நிலையோதான் உள்ளது. அவர்களிடம் வேறு வகையான உற்பத்திச் சாதனங்களும் இல்லை. நிலக்குவிப்பு மற்றும் நில உடைமையில் ஏற்றத்தாழ்வு என்பது, பெரும் மாற்றம் ஏதுமின்றித் தொடர்கின்றது. நீர்ப்பாசன ஆதாரமும் இவ்வாறே கிராமப்புற பணக்காரர்களின் கைகளில் பெருமளவு குவிந்து கிடக்கிறது. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நியாயமான வட்டி விகிதத்தில் கடன் பெற வழி இல்லாதிருப்பதால், மிக அதிகமான வட்டிக்கு கடன் வாங்கி அதிலேயே மூழ்கிவிடுகின்றனர். பெண் தொழிலாளர்களுக்கு குறைந்த கூலி மற்றும் கூலியில் பாரபட்சம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் ஆகும். விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 180 நாட்களுக்கும் குறைவாகவே வேலை கிடைக்கின்றது. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் ஊட்டச்சத்து அற்றவர்களாக உள்ளனர். கிராமப்புற எழுத்தறிவு மிகக்குறைவாகவே உள்ளது. குடிநீரோ, மருத்துவ வசதிகளோ இல்லாத சுகாதாரமற்ற குடியிருப்பு பகுதிகளில்தான் கிராமப்புற ஏழை மக்கள் வாழ்கின்றனர்.

3.21 பெரும்பாலான கிராமப்புற பகுதிகளில் நிலப்பிரபுக்கள்- பணக்கார விவசாயிகள் – ஒப்பந்தக்காரர்கள் – பெரும் வர்த்தகர்களிடையே பலமான இணைப்பு ஏற்பட்டு, இவர்கள்தான் கிராமப்புறச் செல்வந்தர்களாக உள்ளனர். இடதுசாரிகள் பலமாக உள்ள மாநிலங்களைத் தவிர பஞ்சாயத்து அமைப்புகள், கூட்டுறவுச் சங்கங்கள், கிராமப்புற வங்கி மற்றும் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் போன்றவற்றை இவர்களே கட்டுப்பாட்டில் வைத்துள்ளதோடு, முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவக் கட்சிகளின் கிராமப்புறத் தலைவர்களாகவும் இவர்களே உள்ளனர். இந்தப் பகுதியினரால் உறிஞ்சப்படும் உபரி, வட்டித் தொழிலிலும் ஊக நடவடிக்கைகளிலும், வீட்டு மனை அபிவிருத்தியிலும், விவசாயம் சார்ந்த தொழில்களிலும் முதலீடு செய்யப்படுகின்றன. கிராமப்புற ஆதிக்க வர்க்கத்தினர் சாதியப் பிடிப்பைத் தங்களுக்கு ஆதரவு திரட்டப் பயன்படுத்திக் கொள்வதோடு, கிராமப்புற ஏழை மக்களை பயமுறுத்திப் பணிய வைக்க வன்செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இந்திய அரசியல் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த பின்பும் நிலப்பிரபுக்களின் எதிர்ப்பு காரணமாக எந்த ஒரு மத்திய அரசாங்கமும் விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை உத்தரவாதப்படுத்தவில்லை. விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமையை முன்னேற்றவோ, சமூகப் பாதுகாப்பு தரவோ முன்வரவில்லை.

3.22 கிராமப்புற பொருளாதாரம் மிக வேகமாக வணிகமயமாகி வருவதால் உணவு தானியங்கள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கான சந்தை வெகுவாக விரிவடைந்துள்ளது. விவசாயப் பொருட்கள் மீதான தங்கள் பிடியை ஏகபோக வர்த்தக நிறுவனங்கள் இறுக்கியுள்ளன. தாராளமயமாக்கலின் விளைவாக உலகளாவிய சந்தையில் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்கள் மேம்பட்ட தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயப் பொருட்களுக்கான விலை நிர்ணயிப்பை முன்பைவிட அதிகமாக தங்களது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன. விலையில் ஏற்படும் திடீர் ஏற்ற இறக்கங்களும், சமச்சீரற்ற பரிவர்த்தனையும் நிரந்தரமான அம்சங்களாக மாற்றப்பட்டு விட்டதால் விவசாயிகளைச் சுரண்டுவது தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இதன் விளைவாக விவசாயப் பொருட்களை விற்பவர் என்ற முறையிலும், தொழில்துறைப் பொருட்களை வாங்குபவர் என்ற முறையிலும் விவசாயி கடுமையாக உறிஞ்சப்படுகிறார்.

3.23 அரசு வழிநடத்தும் முதலாளித்துவ வளர்ச்சிப்பாதைக்கு பிறகு வந்த தாராளமயக் கொள்கைகளால், 20ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக் கொள்கைகளில் அபாயகரமான பிற்போக்கான திருப்பம் ஏற்பட்டுள்ளது. விவசாயம், பாசனம் மற்றும் இதர கட்டமைப்புப் பணிகளுக்கான பொது முதலீட்டைக் குறைப்பது; முறைசார் துறைகளின் மூலம் தரப்படும் கடன் வசதியை வெகுவாகக் குறைப்பது போன்றவற்றை உள்ளடக்கிய இந்தக் கொள்கையால், கிராமப்புற ஏழைக் குடும்பங்கள் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கான திட்டங்கள் வெட்டப்படுகின்றன. ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்கேற்ப ஏற்றுமதி சார்ந்த விவசாயக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதன் விளைவாக நில உபயோகம் மற்றும் பயிர்முறை மாறி வருகிறது. உணவு தானிய உற்பத்தியின் முக்கியத்துவம் பின்னுக்குத் தள்ளப்படுவதாலும் உணவு உற்பத்தியில் இந்தியாவின் சுயசார்பு வேரறுக்கப்படுவதாலும் இறையாண்மைக்கு நேரடியான அச்சுறுத்தல் ஏற்படுகிறது. உலகவர்த்தக அமைப்பின் உத்தரவுக்கேற்ப விவசாயப் பொருட்கள் இறக்குமதி மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதால் விவசாயிகளின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நில உச்சவரம்புச் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யுமாறு மாநில அரசுகளுக்கு பெருமளவு நிர்பந்தம் தருவதோடு, இந்திய பெரு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அந்நிய விவசாய நிறுவனங்களுக்கு நிலங்களைக் குத்தகைக்கு விடவேண்டும் என்றும் நிர்ப்பந்தம் செய்யப்படுகிறது. விதை, பால்வளம் மற்றும் இதர விவசாயத் துறைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைகின்றன. உலக வர்த்தக அமைப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்ப்பந்தங்கள் காரணமாக உயிரியல் ஆதாரங்களின் மீதான இந்தியாவின் சுதந்திரத்தைக் கைவிடும் முறையிலும், விவசாயிகள் மற்றும் உண்மையான பயிரிடுவோரது உரிமைகளை மறுக்கும் முறையிலுமான கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. அரசு சார்பு விவசாய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க அமைப்புமுறை பலவீனப்படுத்தப்படுகிறது.

3.24 விவசாயத் துறையில் அரசு வழிநடத்தும் முதலாளித்துவ வளர்ச்சியின் காரணமாக கிராமப்புற பணக்காரர்களான நிலப் பிரபுக்கள், முதலாளித்துவ விவசாயிகள், பணக்கார விவசாயிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் அடங்கிய பிரிவினருக்கும், விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் அடங்கிய பெரும்பகுதி கிராமப்புற மக்களுக்கும் இடையிலான வேற்றுமை கடுமையாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயத்தில் தாராளமயமாக்கல் கொள்கை கிராமப்புற ஏழைகள் மீதான சுமையை மேலும் அதிகரித்துள்ளது. இத்தகைய சுரண்டல்முறைதான் கிராமப்புற மக்களின் ஒட்டுமொத்த வறுமைக்குக் காரணம் ஆகும். நில ஏகபோகத்தை உடைத்து நொறுக்காமல், ஏழை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கடன் சுமைக்கு முடிவு கட்டாமல் நாட்டில் பொருளாதார, சமூக மாற்றத்திற்கான அடிப்படையை உருவாக்க முடியாது.

3.25 ஏகாதிபத்தியத்தால் செயல்படுத்தப்படும் உலகமயமாக்கலும், இந்திய ஆளும் வர்க்கம் பின்பற்றும் தாராளமயமாக்கல் கொள்கையும், இந்தியாவின் அனைத்துத் துறைகளிலும் ஏகாதிபத்திய ஊடுருவல் அதிகரிக்க வழி ஏற்படுத்தியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், ஏகாதிபத்திய நிதி மூலதனத்திற்கும் நமது பொருளாதாரத்தைத் திறந்துவிட்டதுதான் இந்திய சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், அவை ஊடுருவி செல்வாக்கு செலுத்துவதற்கு அடிப்படையான காரணமாக அமைந்திருக்கிறது. நிர்வாகத்துறை, கல்வி அமைப்பு, தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் பண்பாட்டுத் துறை ஆகியவை ஏகாதிபத்திய ஊடுருவலுக்கு இலக்காகிக் கொண்டிருக்கின்றன.

3.26 சோசலிசத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டதன் விளைவாக உலகில் சக்திகளின் பலாபலத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால், பழமைவாத சக்திகள், பிற்போக்கு மற்றும் இனவெறி சக்திகளின் வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள தாக்கம் இந்தியாவிலும்கூட பிரதிபலிக்கிறது. ஏகாதிபத்தியம் இத்தகைய சக்திகளின் வளர்ச்சியை, நாட்டின் ஒற்றுமையை பலவீனப்படுத்துவதற்கும் தனது பிடிமானத்தையும் செல்வாக்கையும் அதிகப்படுத்துவதற்கும் பயன்படுத்த முயல்கிறது. பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சக்திவாய்ந்த சர்வதேசத் தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி நமது நாட்டின் சமூகப் பண்பாட்டு வாழ்க்கையில் நேரடியாகத் தலையிட ஏகாதிபத்தியத்திற்கு வழிவகுக்கிறது. நுகர்வு மனப்பான்மை, சுயகர்வம் மற்றும் செல்லரித்துப்போன நெறிமுறைகள் ஆகியவற்றின் பிரச்சாரகர்களாக சர்வதேச தகவல் தொடர்பு சாதனங்கள் செயல்பட்டு நமது சமூகத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியும் உள்ளன. இதே நெறிகளைத்தான் பெரு முதலாளிகள் மற்றும் இதர வர்த்தக நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிற இந்திய ஊடகங்கள் திட்டமிட்டு பரப்பிவருகின்றன. ஆரோக்கியமான, ஜனநாயக, மதச்சார்பற்ற பண்புகளின் வளர்ச்சிக்கு இத்தகைய பிற்போக்குத்தனமான போக்கை எதிர்ப்பது அவசியம்.

3.27 1950-இல் நிறைவேற்றப்பட்ட இந்தியக் குடியரசின் அரசியல் சாசனம், அரசு பின்பற்ற வேண்டிய வழிகாட்டும் நெறிமுறைகளாக கீழ்க்கண்டவற்றைக் கூறியுள்ளது. அவையாவன: ஒவ்வொரு குடிமக க்கும் வாழ்க்கைக்குத் தேவையான வசதிகள் மற்றும் வேலை செய்யும் உரிமை; செல்வக்குவிப்புக்கு வழிவகுக்காத பொருளாதார முறை; கல்விபெறும் உரிமை மற்றும் குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி பெறுவதற்கான வசதி; தொழிலாளர்களின் வாழ்க்கைக்கான ஊதியம், ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமவேலைக்குச் சம ஊதியம் எனும், இந்த நெறிமுறைகள் ஒன்றுகூட நடைமுறைப்படுத்தப் படவில்லை. அரசியல் சட்ட நியதிகளுக்கும், முதலாளித்துவ ஆட்சியாளர்களின் நடைமுறைக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பது சுதந்திரத்திற்கு பிந்தைய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ முறையின் மீதான கடுமையான கண்டனமாகத் திகழ்கிறது.

அயல்துறைக் கொள்கை

4.1 எந்தவொரு அரசு மற்றும் அதன் அரசாங்கத்தின் அயல்துறை கொள்கையானது, இறுதியில், அதன் உள்நாட்டு கொள்கையின் வெளிப்பாடுதானே தவிர வேறு எதுவுமல்ல. அந்த அரசு மற்றும் அரசாங்கத்தின் தலைமை ஏற்றுள்ள வர்க்கம் அல்லது வர்க்கங்களின் நலன்களையே அது பிரதானமாக பிரதிபலிக்கிறது. இந்திய அரசாங்கத்தின் அயல்துறைக் கொள்கை என்பது நமது முதலாளி வர்க்கத்தின் இரட்டைத்தன்மையான, அதாவது, ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு அதே நேரம் அதனுடனான சமரசம் மற்றும் ஒத்துழைப்பு என்பதையே பிரதிபலிக்கிறது. கடந்த ஐம்பதாண்டுகளில் பின்பற்றப்பட்ட அயல்துறைக் கொள்கையைப் பார்த்தாலே இந்த இரட்டைத்தன்மை தெளிவாகத் தெரியும். ஐம்பதுகளின் மத்தி வரையிலான ஆரம்பக்கட்டத்தில் பிரிட்டன் மற்றும் இதர ஏகாதிபத்திய சக்திகளை திருப்திப்படுத்தும் முறையிலான ஒதுங்கிச் செல்லும் கொள்கையையே இந்திய அரசாங்கம் பின்பற்றியது. எனினும் ஐம்பதுகளின் மத்தியில் ஒரு புதிய நிலைபாடு துவங்கியது. ஏகாதிபத்தியம், சோசலிசம் என உலகம் இருவேறு அணிகளாக கூர்மையாகப் பிரிந்து நின்ற நிலையில், ஏகாதிபத்திய அணி சார்பிலிருந்து விலகி நிற்பதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகின. கூட்டுச்சேராக் கொள்கைக்கு ஆதரவாகவும், ராணுவ அணிகளில் சேர்வதற்கு எதிராகவும், சமாதானத்தை வலியுறுத்தியும், காலனி ஆதிக்கத்திற்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவு தருவதாகவும் அயல்துறைக் கொள்கை மாறியது.

4.2 இந்தக் கொள்கையின் விளைவாக சோவியத் யூனியன் மற்றும் சோசலிச நாடுகளுடன் நட்புறவு ஏற்பட்டது. இருந்தபோதும், 1962இல் சீனாவுடன் எல்லை மோதல் ஏற்பட்ட நிலையில், ராணுவ உதவி பெறுவதற்காக அமெரிக்க மற்றும் மேற்கத்திய சக்திகளுடன் ஒத்துழைக்கும் நிலை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் காலக்கட்டத்திற்குப் பிறகு அயல்துறைக் கொள்கைகள் மீண்டும் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மைபெற்றது. 1971இல் வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் சோவியத் யூனியனுடன் நட்புறவு உடன்பாடு ஆகியவை அயல்துறைக் கொள்கையில் புதியதொரு கட்டத்தை ஏற்படுத்தியது. தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவு, உலக சமாதானம் என எழுபதுகளில் சர்வதேச அரங்கில் இந்தியா முனைப்பாக பணியாற்றியது.

4.3 வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை, இந்திய முதலாளித் துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான முரண்பாடு, காஷ்மீர் பிரச்சனையினாலும், பாகிஸ்தானை தனது நடவடிக்கைகளுக்கான தளமாகப் பயன்படுத்துவது என்ற அமெரிக்க கொள்கைத் திட்டத்தினாலும் வெளிப்பட்டது. புதிதாக விடுதலை பெற்ற நாடுகளில் தலையாய நாடான இந்தியாவில், முதலாளி வர்க்கம் கூட்டுச்சேரா கொள்கையைப் பின்பற்றியது நாட்டின் நலனுக்கு பெருமளவு உதவியது. எனினும், ஆளும் வர்க்கத்தின் வர்க்கத்தன்மை காரணமாக இந்தக் கொள்கையில் ஊசலாட்டமும் இருந்தது. அன்னிய மூலதனத்திற்கு ஆதரவான உள்நாட்டுக் கொள்கைக்கும், சுயேச்சையான அயல்துறைக் கொள்கைக்கும் இடையிலான முரண்பாடு எப்போதும் இருந்து வந்தது.

4.4 சோவியத் யூனியன் சிதறுண்டுபோனது, உள்நாட்டில் தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை செயலாக்கம் ஆகியவற்றால் இருபதாம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் அயல்துறைக் கொள்கை ஒரு புதிய கட்டத்தை எட்டியது. நீண்டகாலமாக பின்பற்றப்பட்டுவந்த கூட்டுச்சேராக் கொள்கை மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அயல்துறைக் கொள்கையிலிருந்து பின் வாங்குவதற்கான பணிகள் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் துவங்கியது. சுயசார்புக் கொள்கையிலிருந்து விலகியதும் அன்னிய மூலதன கோரிக்கை மற்றும் தாராளமயமாக்கல் வழியில் இந்தியா சென்றதும், அயல்துறைக் கொள்கை சார்ந்த ஏராளமான நிலைபாடுகளை மாற்றிக் கொள்ளுமாறு ஏகாதிபத்தியம் நிர்ப்பந்தம் செய்ய வழிவகுத்தது. தொண்ணூறுகளில் இந்திய அரசாங்கம் அமெரிக்காவுடன் ராணுவப் பயிற்சி மற்றும் கூட்டுப் பயிற்சிக்கான ராணுவ ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டது. 1998இல் பாஜக தலைமையிலான அரசு, அதிகாரத்திற்கு வந்தபிறகு, ஏகாதிபத்திய ஆதரவுப் போக்கு மேலும் பலமடைந்துள்ளது. அமெரிக்காவின் இளைய பங்காளி என்ற கொள்கையை பின்பற்றுமளவுக்கு பாஜக அரசு அயல்துறைக் கொள்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத் திட்டத்திற்கேற்ப, நீண்டகாலமாக இருந்த கூட்டுச்சேராக் கொள்கை அடிப்படையிலான நிலைபாடுகள் கைவிடப்பட்டன. உலக அளவில் சீனா, ரஷ்யா நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் தொலைநோக்கு அடிப்படையிலான சதித்திட்டத்திற்கு ஆதரவாக இந்தியாவையும் சேர்க்க முயல்வது நமது அயல்துறைக் கொள்கைக்கு உண்மையிலேயே அபாயகரமானதாகும்.

4.5 பொக்ரானில் 1998 மே மாதத்தில் அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்ட பிறகு, பாஜக தலைமையிலான அரசு அணு ஆயுத மயமாக்கல் வழியில் செல்ல முயல்வது இந்தியாவின் அயல்துறை மற்றும் அணுசக்தி கொள்கையில் அபாயகரமானதொரு புதிய கட்டமாகும். இந்தியா நடத்திய அணு ஆயுத சோதனைக்கு பாகிஸ்தானும் பதிலளித்துள்ளதால் இந்த துணை கண்டத்தில் அணு ஆயுதப் போட்டி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. குறுகிய தேசிய இனவெறி அடிப்படையிலான அணு ஆயுதக் கொள்கையானது நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வந்த கூட்டுச்சேராக் கொள்கைக்கும் சமாதானத்திற்கும் எதிரானதாகும். இதனால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான ஏகாதிபத்திய நிர்பந்தங்களுக்கு இந்தியா மேலும் ஆட்படும் அளவிற்கு பலவீனமடைந்துள்ளது.

4.6 கூட்டுச்சேராக் கொள்கையை மீண்டும் நிலைநிறுத்தவும், ஏகாதிபத்திய நிர்பந்தங்களை தடுத்து நிறுத்தவும், தற்போது ஏகாதிபத்திய ஆதரவு திசைவழியில் மாற்றப்பட்டுள்ள அயல்துறைக் கொள்கையை மாற்றவும் ஒரு பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய பொறுப்பு இடது மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு உள்ளது. உலக விவகாரங்களில் இந்தியா சுயேச்சையான நிலையை மேற்கொள்ளவும், நாட்டின் பொருளாதார சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் இத்தகைய கொள்கைதான் இந்தியாவிற்கு உதவும்.

அரசு கட்டமைப்பும் ஜனநாயகமும்

5.1 இன்றைய இந்திய அரசு என்பது, பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிற முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியின் கருவியாகும். இந்த அரசு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை பின்பற்றும் பொருட்டு, அன்னிய நிதி மூலதனத்துடனான தனது ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டு வருகிறது. நாட்டு மக்களின் வாழ்க்கையில் அரசின் பங்கையும், செயல்பாட்டையும் வர்க்கத் தன்மைதான் முக்கியமாகத் தீர்மானிக்கிறது.

5.2 அரசு அமைப்பு முறைக்கு கூட்டாட்சி என்று பெயரிடப்பட்டிருந்தாலும் மத்திய அரசிடம்தான் பெரும்பகுதி அதிகாரமும், ஆதாரமும் குவிக்கப்பட்டுள்ளன. மொழியின் பொதுத்தன்மை அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பெரு முதலாளிகள் ஆரம்பத்தில் எதிர்த்தபோதும், வெகுஜன இயக்கங்களும், போராட்டங்களும் ஏற்படுத்திய நிர்ப்பந்தம் காரணமாக மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்கு ஒத்துக்கொண்டனர். நிர்வாக வசதி கருதி சிறிய மாநிலங்கள் அமைப்பதாக கூறிக்கொண்டு பாஜக தலைமையிலான அரசாங்கம் மொழிவாரி மாநிலம் என்ற கோட்பாட்டின் மீது புதிய தாக்குதலைத் தொடுத்துள்ளது. இதனால் கூட்டாட்சி முறை மேலும் வலுவிழக்கும். அரசியல் சாசனத்தின் 356வது பிரிவில் இயல்பாகவே உள்ளடங்கியுள்ள ஜனநாயக விரோத அம்சங்களைப் பயன்படுத்தி மத்திய அரசு, தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களைப் பதவி நீக்கம் செய்ததன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றங்களைக் கலைத்ததன் மூலம் கூட்டாட்சி முறையை சீர்குலைக்கவும், மாநில சுயாட்சி மீது தாக்குதல் தொடுக்கவும் இதைக் கருவியாகப் பயன்படுத்தி வந்துள்ளன. மாநிலங்களுக்கு குறைவான அதிகாரங்களே உள்ளதால், மத்திய அரசாங்கங்களையே சார்ந்திருக்க வேண்டிய நிலையில் மாநிலங்களின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

5.3 இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்குமிடையே முரண்பாடுகள் வளர்வது இயல்பானது. இந்த முரண்பாடுகளின் அடிப்படையில் பெருமுதலாளிகள் ஒருபுறம், மாநிலங்களின் முதலாளிகள், நிலப்பிரபுக்கள் உள்ளிட்ட பெரும்பான்மை மக்கள் மறுபுறம் என்கிற ஆழமான முரண்பாடும் நிலவி வருகிறது. முதலாளித்துவத்தின் சமச்சீரற்ற பொருளாதார வளர்ச்சியின் தீவிரத்துவம் காரணமாக இந்த முரண்பாடு தொடர்ந்து மேன்மேலும் அதிகரித்து வருகிறது. இந்த முரண்பாட்டின் அரசியல் வெளிப்பாடுதான் மக்களின் மொழி, இன உணர்வைப் பிரதிபலிக்கிற, பொதுவாக பிராந்திய முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிற பிராந்தியக் கட்சிகளின் தோற்றம் ஆகும்.

5.4 சுதந்திரத்திற்குப் பிறகு பின்பற்றப்பட்ட முதலாளித்துவ – நிலப் பிரபுத்துவக் கொள்கைகளால் தேசஒற்றுமை என்பது பிரச்சனைக்குரியதாகி தீவிரமடைந்தது. பெரும் எண்ணிக்கையிலான சிறுபான்மை தேசிய இனங்கள் மற்றும் இனக்குழுக்களின் தாயகமாக உள்ள நாட்டின் வடகிழக்கு பிராந்தியம் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையினால் ஏற்பட்ட சமச்சீரற்ற வளர்ச்சியாலும், பிராந்திய ஏற்றத் தாழ்வாலும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இது பிரிவினை வாதம் கோரும் தீவிரவாதிகளின் விளைநிலத்திற்கு வகை செய்கிறது. இதை ஏகாதிபத்திய நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்கின்றன. தீவிரவாதிகளின் வன்செயல்களாலும், இன மோதல்களாலும் வளர்ச்சிப் பணிகளுக்கும், ஜனநாயக நடவடிக்கைகளுக்கும் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

5.5 அரசியல் சாசனத்தின் 370வது பிரிவின்படி ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தும், சுயாட்சியும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இந்த மாநில சுயாட்சி உரிமைகள் பறிக்கப்பட்டு வந்ததால் இம்மாநில மக்களிடத்தில் அந்நியமாதல் அதிகரித்தது. பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பிரிவினைவாத சக்திகள் இதைப் பயன்படுத்திக் கொண்டன. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் இந்த சர்ச்சையை பயன்படுத்திக்கொண்டு இந்தியாவை நிர்ப்பந்தம் செய்வதோடு, இந்தப் பிராந்தியத்தில் தலையீட்டையும் அதிகரித்துள்ளது. ஜனநாயக வழிமுறையில் நாட்டு ஒற்றுமை சார்ந்த முக்கியமான பிரச்சனையை முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்கம் தீர்க்கத் தவறியதன் வெளிப்பாடே வடகிழக்கு பிராந்திய மற்றும் காஷ்மீர் பிரச்சனைகளாகும்.

5.6 ஏழு கோடி மக்கள்தொகை கொண்ட ஆதிவாசிகளும், பழங்குடி மக்களும் முதலாளித்துவ, அரை நிலப்பிரபுத்துவத்தின் கொடூர சுரண்டலுக்கு பலியாகியுள்ளனர். அவர்களது நிலம் அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. அவர்களது வன உரிமை மறுக்கப்படுகிறது. ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நிலப்பிரபுக்களின் கொத்தடிமைகளாக, மலிவான உழைப்பாளிகளாக அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஒருசில மாநிலங்களில் பழங்குடி மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில், அவர்களின் தனித்துவம் வாய்ந்த மொழியையும் பண்பாட்டையும் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். பழங்குடி மக்கள் தங்களின் தனித்தன்மையையும் பண்பாட்டையும் பாதுகாத்துக் கொள்ளும் அதே நேரத்தில் புதிய விழிப்புணர்வை பெற்றுள்ளனர். முன்னேற்றம் காண்பதற்காக தங்களது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதில், முதலாளித்துவ -நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களின் இரக்கமற்ற கொள்கையால், அவர்களது தனித்தன்மைக்கும், இருத்தலுக்குமே அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், பழங்குடி மக்களிடையே சில பகுதியினரிடம் பிரிவினைவாதப் போக்கு வளர்ந்துள்ளது. பழங்குடி மக்கள் வாழும் ஒன்றிணைந்த பகுதிகளிலும், அவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளிலும் அவர்களது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள பிராந்திய சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்பது ஜனநாயக பூர்வமான, நியாயமான கோரிக்கையே ஆகும். பழங்குடி மக்களின் பாரம்பரிய ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியாக, முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, ஒப்பந்தக்காரர் கூட்டு, பழங்குடி தலைவர்களுக்கு சில சலுகைகளை வழங்கிவிட்டு அந்த மக்களின் நியாயமான உரிமைகளை மறுப்பதோடு அவர்களை மிருகத் தனமாகவும் ஒடுக்குகிறது.

5.7 மதச்சார்பின்மைக் கோட்பாடும், மதச்சார்பற்ற ஜனநாயக மதிப்பீடுகளும் அரசியல் சாசனத்தில் பொதிந்துள்ளது என்று அரசின் பெரு முதலாளி வர்க்க தலைமை பறைசாற்றிக் கொள்கிறது. எனினும், நடைமுறையில் மதச்சார்பின்மை முதலாளி வர்க்கத்தால் நாசமாக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டையே முற்றாகத் திரித்துக் கூற முயல்கிறது. அரசியலையும், மதத்தையும் முற்றாகப் பிரிப்பது என்பதற்குப் பதிலாக அரசு மற்றும் அரசியல் நிகழ்முறைகளில் அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் சமமாக தலையிடுவதற்கான சுதந்திரம் என்பதே மதச்சார்பின்மையின் பொருள் என மக்களை நம்ப வைக்க முயல்கின்றனர். மதச்சார்பின்மைக்கு எதிரான போக்குகளை உறுதியுடன் எதிர்ப்பதற்கு பதிலாக முதலாளி வர்க்கம் அதற்கு சலுகை வழங்கி வலுப்படுத்துகிறது. மதவெறி மற்றும் பாசிசத் தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான கூட்டம் வளர்ந்து, மத்தியில் ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ளதால் மதச்சார்பின்மை அடித்தளத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசு, நிர்வாகம், கல்வி அமைப்பு, தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை மதவெறி மயமாக்க திட்டமிட்ட வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரும்பான்மை மதவெறியின் வளர்ச்சி சிறுபான்மை மதவெறி சக்திகளை வலுப்படுத்தும், மேலும் நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்து விளைவிக்கும். பெரு முதலாளிகளில் ஒரு பகுதியினர் பாஜக மற்றும் அதன் மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவளிப்பது நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு தொடர்ச்சியான ஆபத்தை ஏற்படுத்தும்.

5.8 எனவே, மதச்சார்பின்மைக் கோட்பாடுகளைத் தொய்வின்றி செயலாக்க வேண்டுமென்பதற்காக சமரசமற்ற போராட்டத்தை நடத்த நமது கட்சி உறுதிபூண்டுள்ளது. மதச்சார்பின்மைக் கொள்கையிலிருந்து ஒரு சிறு விலகல் ஏற்பட்டால் கூட அதை அம்பலப்படுத்துவதோடு போராடவும் வேண்டும். ஒவ்வொரு மதத்தினரின் உரிமைகளை அது பெரும்பான்மை மதமாக இருந்தாலும் சரி, அல்லது சிறுபான்மை மதமாக இருந்தாலும் சரி -அல்லது எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் சரி அவர்களது உரிமைகளை கட்சி பாதுகாக்கும். அதே நேரத்தில் நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் நிர்வாக நிகழ்முறைகளில் மதத்தை நுழைக்கும் எந்த வடிவத்தையும் கட்சி எதிர்த்துப் போராடும். பண்பாடு, கல்வி மற்றும் சமூகத்தில் மதச்சார்பற்ற, ஜனநாயக மதிப்பீடுகளை உயர்த்திப் பிடிக்கும். மதவெறி அடிப்படையிலான பாசிச போக்குகளின் ஆபத்து வலுப்பெற்று வருவதை எதிர்த்து அனைத்து நிலைகளிலும் உறுதியாகப் போராடும்.

5.9 முதலாளித்துவ சுரண்டல் நிலை காரணமாக அரசியல் சாசனத்தில் சிறுபான்மை மக்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகள்கூட செயல்படுத்தப்படவில்லை. பொருளாதார, சமூகத்துறைகளில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு சம வாய்ப்பு இல்லாததோடு அவர்களுக்கு எதிராக பாரபட்சமும் காட்டப்படுகிறது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான மதக் கலவரங்களும், வன்முறைத் தாக்குதல்களும் நிரந்தரமான ஒன்றாக்கப்பட்டுவிட்டது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் அமைப்புகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக வெறுப்புணர்ச்சியைத் தூண்டி வருவதோடு கிறிஸ்தவ மக்களைக் குறிவைத்து தாக்கியும் வருகின்றன. இதனால் சிறுபான்மை மக்களிடையே அந்நியப்படுத்தப்படும் உணர்வும், பாதுகாப்பற்ற உணர்வும் ஏற்படுவதால், அவர்களிடையே பழமைவாத போக்குகள் தோன்றி மதச்சார்பின்மை அடித்தளம் பலவீனப்படுத்தப்படுகிறது. சிறுபான்மை மதவெறி, சிறுபான்மை மக்களை தனிமைப் படுத்துவதால், அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் பொதுவான இயக்கத்திற்கு தடை ஏற்படுத்துகிறது. ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை வலுப்படுத்துவதற்கான போராட்டத்தில் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மிக முக்கிய அம்சமாகும்.

5.10 சாதிய ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டுவதிலும் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ முறை தோல்வி கண்டுள்ளது. இதனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மிக மோசமான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். தீண்டாமை என்பது சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், தலித் மக்கள் தீண்டாமை மற்றும் பாரபட்சத்தின் இதர வடிவங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதற்கு எதிராக தலித் மக்களிடம் வளர்ந்து வரும் விடுதலை உணர்வு கொடூரமான ஒடுக்குமுறை மற்றும் வன்செயல் மூலம் எதிர்கொள்ளப்படுகிறது. சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதியான தலித் மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியில் ஒரு ஜனநாயக உள்ளடக்கம் உள்ளது. சாதிகளாக பிரிக்கப்பட்ட சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுகிறார்கள்.

5.11 அதே நேரத்தில், வாக்கு வங்கிகளைத் திரட்ட வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திற்காகவே சாதிய உணர்வுகள் தூண்டிவிடப்பட்டு, சாதிய பகைமைகள் ஏற்படுத்தப்படுவதன் மூலம் பொதுவான ஜனநாயக இயக்கங்களிலிருந்து அடித்தட்டு மக்களைப் பிரிக்கும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. சாதித் தலைவர்கள் பலரும், சில முதலாளித்துவ அரசியல் கட்சித் தலைவர்களும் சுத்த சுயம்புவான சாதிய அறைகூவல் மூலம் மக்களிடமுள்ள சாதிப் பிரிவுகளை குறுகிய தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி, அனைத்து சாதியிலும் உள்ள ஒடுக்கப்பட்ட பகுதியினரின் பொதுவான இயக்கத்தை கட்டுவதற்கு எதிராக உள்ளனர். பழைய சமுதாய அமைப்பை தூக்கியெறியத் தேவையான அடிப்படை வர்க்கப் பிரச்சனைகளான நிலம், கூலிக்கான போராட்டம் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை இவர்கள் புறக்கணிக்கிறார்கள்.

5.12 சாதிய ஒடுக்குமுறை, சாதிய பாரபட்சம் என்ற பிரச்சனைக்கு நீண்டதொரு வரலாறு உள்ளது. இது முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக முறையிலேயே ஆழமாக வேரோடிவிட்டது. முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையிலான சமூகம் ஏற்கெனவே இருந்த சாதிய முறையுடன் சமரசம் செய்துகொண்டது. இந்திய முதலாளி வர்க்கமே கூட இந்த சாதிய வேறுபாடுகளை வளர்த்து விடுகிறது. தலித் மக்களில் மிகப் பெரும் பகுதியினர் உழைக்கும் வர்க்கத்தின் பகுதியாக உள்ள நிலையில், சாதிய முறைக்கும், தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் எதிரான ஒற்றுமை, உழைக்கும் மக்களின் ஒற்றுமையே ஆகும். சமூக சீர்திருத்த இயக்கங்கள் மூலம் சாதிய முறை மற்றும் அதன் அனைத்து வடிவத்திலான சமூக ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டியது ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.

5.13 சுதந்திரப் போராட்டத்தில் சமமாகப் பங்கேற்ற பெண்கள், இந்தியா விடுதலை பெற்றவுடன் பல நூற்றாண்டுப் பழமைவாய்ந்த நிலப்பிரபுத்துவ தளைகளிலிருந்தும், பாலியல் ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை கிடைக்கும் என்று நம்பினார்கள். அவர்கள் முன்னேறுவது ஒரு புறம் இருப்பி ம் ஐம்பதாண்டுகால முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சி ஆணாதிக்கம் என்பதையே அனைத்து துறைகளிலும் நிரந்தரமாக்கிவிட்டது. பெண்களாகவும், உழைப்பாளிகளாகவும், குடிமக்களாகவும் பெண்கள் பல்வேறு நிலைகளில் சுரண்டப்படுகிறார்கள். பொருளாதாரத்துறை, சமூகத்துறை என இரண்டிலும் தாராளமயமாக்கல் புதிய பாலியல் சுரண்டல் முறையைக் கொண்டு வந்துள்ளதால், பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரித்து வருகின்றன. பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூக, அரசியல் வாழ்வில் சுயேச்சையான பங்கு பெண்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படையான நிபந்தனையாகும். ஏற்றத்தாழ்வான நிலையை எதிர்த்தப் போராட்டமும், சமத்துவத்திற்கான பெண்களின் போராட்டமும் சமூக விடுதலைக்கான இயக்கத்தின் பகுதியே ஆகும்.

5.14 ஐம்பதாண்டுகால முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியில் அரசு அதிகாரத்தின் அனைத்து அமைப்புகளும் சிதிலமடைந்துவிட்டன. முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையின் பிரதிபலிப்பான, அதிகபட்சமாக மத்தியத்துவப்படுத்தப்பட்ட அதிகார வர்க்கமுறையின் அடிப்படையிலேயே நிர்வாக முறை உள்ளது. சுரண்டல் வர்க்கத்தின் நலனைப் பாதுகாக்க பணிவுடன் சேவை செய்கிற, மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் கையிலேயே அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளன. அதிகார வர்க்கத்தின் அபரிமிதமான வளர்ச்சி, ஆளும் வர்க்கத்துடன் அதற்குள்ள வலுவான கூட்டு, அதிகாரிகள் மத்தியில் பரவலாக இருந்து வரும் லஞ்சம் போன்றவற்றால் சமூகத்தின் ஜனநாயகக் கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது.

5.15 தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதர பகுதி உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகவே நீதித்துறை நிறுவப்பட்டுள்ளது. கோட்பாட்டு அளவில் பணக்காரர்களும், ஏழையும் சமம் என்று சம்பிரதாயபூர்வமாகக் கூறப்பட்டாலும், நீதித்துறை அமைப்பு, சாராம்சத்தில் சுரண்டும் வர்க்கத்தின் நலனை பாதுகாப்பதாகவும், அவர்களது வர்க்க ஆட்சியை உயர்த்திப் பிடிப்பதாகவுமே உள்ளது. நீதித்துறை, நிர்வாகத்திலிருந்து பிரிக்கப்பட்டது என்கிற முதலாளித்துவ ஜனநாயக கோட்பாடு முழுமையாக செயல்படுத்தப்படாததால், நிர்வாகத்துறையின் பிடிப்புக்கும், செல்வாக்கிற்கும் உட்பட்டதாகவே நீதித்துறை உள்ளது. அரசியல் சாசனத்தின்படியான ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் அடிப்படை உரிமைகளை உயர்த்திப் பிடித்த தீர்ப்புகளைக் கூட ஆளும் வர்க்கம் திசைதிருப்பிய உதாரணங்களும் உண்டு. நீதிபதிகள் பதில் சொல்ல வேண்டிய கடமையை உண்டாக்கும் பலமான ஏற்பாடு இல்லாததால் நீதித்துறையின் சில பகுதிகளில் லஞ்ச நடைமுறைகள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. இதனால் நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கை குறைகிறது.

5.16 இந்தியா சுதந்திரமடைந்த பின்பும் ராணுவத்துறையில் காலனி ஆதிக்க பாரம்பரியச் சுவடே நீடிக்கிறது. எல்லையை பாதுகாப்பதே ராணுவத்தின் பணியாக இருந்தபோதும் சுரண்டலுக்கு உள்ளாகும் மக்களின் நலன்களுக்கும், ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கும் இடையிலான மோதல் வெளிப்படையாக வரும்போது ஆளும் வர்க்கம் தனது நலனை பாதுகாத்துக் கொள்ள ஆயுதப்படை மற்றும் துணை ராணுவப் படைகளையே மேன்மேலும் சார்ந்துள்ளது. விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் குடும்பங்களிலிருந்து வரும் ராணுவ வீரர்கள் மிகக் கடுமையான பணிகளைப் புரிய வேண்டியுள்ளது. ஆளும் வர்க்கம் ராணுவத்தினரை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி வைத்துள்ளதோடு, அவர்களது ஜனநாயக உரிமைகளையும் பறிக்கிறது. மக்கள் இயக்கங்களை ஒடுக்குவதற்கான கருவியாகவே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. காவல்துறை அரசியல் ஆதாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதோடு, பல இடங்களில் லஞ்சத்திற்கு ஆளாகி, ஏழைகளுக்கு எதிரான சுரண்டும் ஏற்பாட்டின் பகுதியாகவே உள்ளது.

5.17 ஒட்டுமொத்தமாக நாட்டின் உழைக்கும் மக்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோருடன் ஒப்பிடும்போது பெரு முதலாளிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளான நிலப்பிரபுக்கள் சிறுபான்மையினரே ஆவர். ஆனால் அவர்கள் நிலவுடைமை, மூலதனம் மற்றும் அனைத்து உற்பத்திக் கருவிகளையும் கையிலே வைத்துள்ளதால் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்திச் சுரண்டுகின்றனர். நாடாளுமன்ற ஜனநாயக முறையில் முதலாளித்துவ அரசு அதிகாரமும், அரசாங்கமும் பெரும்பான்மை மக்களின் வாக்குகள் மூலம் தேர்வு செய்யப்பட்டாலும், சாராம்சத்தில் அவர்களது அரசியல், பொருளாதாரம் பிரதிநிதித்துவப்படுத்துவது இந்தச் சிறுபான்மையினரின் அதிகாரமே ஆகும்.

5.18 இந்தியக் குடியரசின் அரசியல் சாசனம் வயது வந்தோர் வாக்குரிமை மூலம் நாடாளுமன்றத்தை தேர்வு செய்யும் உரிமையையும், சில அடிப்படை உரிமைகளையும் மக்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் பெரும்பாலான உரிமைகள் திரித்துக் கூறப்படுகின்றன, சிதைக்கப் படுகின்றன. அரசு அதிகார அமைப்புகளே கூட இவற்றை மீறவும் செய்கின்றன. தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதரப் பகுதி ஜனநாயக மனோபாவம் கொண்ட மக்களைப் பொறுத்தவரை இந்த அடிப்படை உரிமைகள் செயல்படாமல் முற்றிலும் முடக்கி வைக்கப்படுகின்றன. பல லட்சக்கணக்கான மக்கள் வாழும் பகுதிகளில் கூட மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, கூட்டம் கூடும் உரிமை கூட மறுக்கப்படுகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதர பகுதி ஜனநாயக மனோபாவம் கொண்ட மக்கள் தங்களது அரசியல், பொருளாதார உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும்போது அரசு அமைப்புகளின் வன்முறை அவர்களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமான வடிவம் கொள்கிறது. எந்தவித விசாரணையுமின்றி சிறையில் அடைக்கும் கொடுங்கோன்மைச் சட்டங்கள் சர்வசாதாரணமாக நிறைவேற்றப்படுகின்றன. அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள தேசிய அவசரநிலைக்கான விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்க அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்படுகின்றன. 1975இல் பிரகடனப்படுத்தப்பட்ட உள்நாட்டு அவசர நிலை ஜனநாயகத்தின் மீதான மிக மோசமான அச்சுறுத்தலாகும்.

5.19 ஜனநாயக இயக்கங்களின் நிர்ப்பந்தம் காரணமாக பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிர்வாகத்தை பரவலாக்கும் சில சட்டபூர்வ நடவடிக்கைகளை அரசு எடுத்தது. இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்கள் உள்ள மேற்குவங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் அதிகாரப்பரவல் மற்றும் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையிலான அதிகாரப் பங்கீடு என முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இடதுசாரிகள் தலைமையிலான மாநிலங்களைத் தவிர இதர மாநிலங்களில் பஞ்சாயத்து முறை ஜனநாயக விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக, கிராமப்புறங்களில் உள்ள நிலப்பிரபுக்கள், கந்து வட்டிக்காரர்கள், ஒப்பந்தக்காரர்களின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.

5.20. முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியினரால் பல்லாண்டுகளாகவே இந்திய மக்களின் பண்பாட்டு வளர்ச்சி தடைப்பட்டுள்ளது. மதம் மற்றும் மரபின் பெயரால் பெண்களையும், ஒடுக்கப்பட்ட சாதியினரையும் இழிவுபடுத்தும் பொல்லாத பழக்க வழக்கங்களும், மதிப்பீடுகளும் நிரந்தரமாக்கப்படுகின்றன. எது நமது பண்பாட்டின் முற்போக்கான, ஆரோக்கியமான மரபுகளோ அவை மதவெறித் தத்துவங்களால் இழிவுபடுத்தப்படுகின்றன. சாதிய மற்றும் மூட நம்பிக்கைகளை முதலாளித்துவ பண்பாடு தக்க வைத்துக் கொள்கிறது. மக்களின் பண்பாட்டு நல்லுணர்வை பேணி வளர்ப்பது ஒரு புறமிருக்கட்டும், எழுத்தறிவையே கூட அரசு உதாசீனப்படுத்துகிறது. பத்திரிகை மற்றும் மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் சுரண்டும் வர்க்கம் மற்றும் ஏகாதிபத்திய நிறுவனங்கள்தான் பத்திரிகை சுதந்திரம், கூட்டம் கூடும் உரிமை பிரச்சாரம் செய்யும் உரிமை போன்றவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இவர்களது அளவு கடந்த ஆதார வளங்களோடு உழைக்கும் மக்களால் போட்டி போட முடியாததால், பெயரளவுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைக்கூட அவர்களால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.

5.21 கறுப்புப்பணம் அமோகமாக வளர்ந்து சமூகத்தை கவ்விப்பிடித்துள்ள நிலையில், லஞ்சம் வகைதொகையின்றி வளர்ந்துள்ள பின்னணியில், முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசின் கருவிகள் சீரழிந்து போயுள்ளன. தாராளமயமாக்கல் உயர்மட்ட அளவில் லஞ்சத்தைப் பெருமளவு அதிகரிக்கச் செய்துள்ளது. பொதுப் பதவிகளை வகிப்போர், உயரதிகாரிகள் மற்றும் முதலாளித்துவ அரசியல்வாதிகள் ஆகியோரின் லஞ்சக் கூட்டால் சட்டம் கவிழ்க்கப்படுவதோடு பொது நிதியையும் கொள்ளையடிக்கச் சாதகமான நிலை உருவாக்கப்படுகிறது. இதனால் ஜனநாயகமும், குடிமக்களின் உரிமைகளும் கேலிக்கூத்தாக்கப்படுகின்றன. தேர்தல்களில் ஏராளமாக பணம் செலவழிக்கப்படுவது, அரசியல் கிரிமினல்மயமாவது, கள்ள வாக்குப் போடுவது, வாக்குச் சாவடிகளை கைப்பற்றுவது போன்றவற்றால் நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

5.22 எனினும், எல்லோருக்கும் பொதுவான வயது வந்தோர் வாக்குரிமை, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களை ஜனநாயகத்திற்கான போராட்டத்திற்காகவும், தங்கள் நலனை பாதுகாத்துக் கொள்வதற்குமான கருவிகளாக மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். உள்நாட்டு நெருக்கடி நிலைப்பிரகடனம் போன்ற நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட போதெல்லாம் எதேச்சதிகார முயற்சிகளை மக்கள் எதிர்த்திருக்கின்றனர். இந்தியாவில் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் வடிவமாக இருந்தாலும், மக்களின் முன்னேற்றத்திற்கான ஒரு அங்கமாக உள்ளது. மக்கள் தங்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அரசு விவகாரங்களில் ஓரளவு தலையிடுவதற்கும், ஜனநாயக மற்றும் சமூக வளர்ச்சிக்கான போராட்டங்களை நடத்துவதற்கும் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை சில வாய்ப்புகளை வழங்குகிறது.

5.23 நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கோ, ஜனநாயகத்திற்கோ உழைக்கும் மக்களிடமிருந்தோ, அவர்களது நலனை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடமிருந்தோ ஆபத்து வரவில்லை. சுரண்டும் வர்க்கங்களிடமிருந்துதான் ஆபத்து வருகிறது. தங்களது குறுகிய நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நாடாளுமன்ற அமைப்பின் உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ இதை பலவீனப்படுத்தி தங்கள் கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பெரு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவச் செல்வாக்கிலிருந்து விடுபட்டு நாடாளுமன்ற அமைப்புகளைத் தங்களது முன்னேற்றத்திற்கு பயன்படுத்த மக்கள் முற்பட்டால், இந்த வர்க்கங்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கவும் தயங்குவதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களை மத்திய அரசாங்கம் பலமுறை கலைத்ததிலிருந்து இது தெளிவாகும். இந்த ஆளும் வர்க்கங்கள் எந்த அளவு படுமோசமான நிலைக்குச் செல்லும் என்பதற்கு அனைத்து அரசியல் சாசன நெறிமுறைகளையும் மீறி மேற்குவங்கம் மற்றும் திரிபுராவில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அப்பட்டமான, அரைப்பாசிச அடக்குமுறைகள் கண்கூடான எடுத்துக் காட்டுகளாகும். சர்வதேச நிதி மூலதனத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவும், தாராளமயமாக்கல் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணமாகவும் ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டுவரப்போவதாகவும், நாடாளுமன்ற ஜனநாயக முறையைத் துண்டாடவுமான பேச்சுக்கள் உலவுவது எதேச்சதிகாரத்தின் அடையாளங்கள் ஆகும். மக்கள் நலனைப் பாதுகாக்க நாடாளுமன்ற ஜனநாயக முறை மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக விடப்பட்டுள்ள இத்தகைய மிரட்டல்களை முறியடிக்க வேண்டியது ஆகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தகைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளை நாடாளுமன்றத்திற்கு வெளியிலான நடவடிக்கைகளோடு இணைத்து கவனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மக்கள் ஜனநாயகமும் அதன் திட்டமும்

6.1 இன்றைய முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆட்சியின்கீழ், வறுமை, பசி, வேலையின்மை, சுரண்டல் ஆகிய பின் தங்கிய நிலைமைகளிலிருந்து மக்களை விடுதலை செய்ய முடியாது என்பதையே அனுபவம் காட்டுகிறது. சுதந்திரம் பெற்றதிலிருந்து அரசு அதிகாரத்தில் தொடர்ச்சியாக இருந்துவரும் பெரு முதலாளி வர்க்கம் ஒருபுறம் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி மக்களைச் சுரண்டி தனது வர்க்க நலனை வலுப்படுத்திக் கொண்டுள்ளதோடு, மறுபுறத்தில் ஏகாதிபத்தியத்துடனும், நிலப்பிரபுத்துவத்துடனும் பேரம் பேசியும், சமரசம் செய்து கொண்டும் வருகிறது. வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில், வளர்ந்துவந்த முதலாளித்துவம் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயத்தை முற்றாக ஒழித்தது. அதன் சாம்பலிலிருந்தே முதலாளித்துவம் வளர்ச்சியடைந்தது ஆனால், இந்தியாவில் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயத்தை சிதைக்காமல், அதன் மீதே முதலாளித்துவம் உருவாயிற்று. தங்களது காலனி ஆட்சியின் போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோ அல்லது சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சிக்குவந்த இந்திய முதலாளிகளோ முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தை உடைத்தெறிய முன்வரவில்லை. முதலாளித்துவம் வளர்ச்சி அடைய அதற்கு முந்தைய சமூகம் நொறுக்கப்பட வேண்டுமென்பது மிக முக்கிய முன் நிபந்தனையாகும். இன்றைய இந்திய சமூகமானது, ஏகபோக முதலாளிகளால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதிய, மத மற்றும் ஆதிவாசி அமைப்புகளைக் கொண்ட ஒரு வினோதமான கலவையாக உள்ளது. முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பை அழிப்பதில் விருப்புக் கொண்ட அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றுபடுத்தி அந்த சமூக அமைப்பிற்குள் இருக்கும் அனைத்து புரட்சிகர சக்திகளையும் ஒன்றிணைத்து, மக்கள் ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவதன் மூலம் சோசலிசத்தை நோக்கிய மாற்றத்திற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள வேண்டிய கடமை உழைப்பாளி வர்க்கத்திற்கும் அதன் கட்சிக்கும் இருக்கிறது.

6.2 சோசலிசம் மற்றும் கம்யூனிசத்தை நிர்மாணிக்கும் தனது லட்சியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுதி கொண்டுள்ளது. பெருமுதலாளி வர்க்கத்தின் தலைமையிலான இன்றைய அரசு மற்றும் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசாங்கத்தின் கீழ் இதை அடைய முடியாது என்பது தெளிவு. பாட்டாளி வர்க்க அரசின் தலைமையின் கீழ்தான் ஒரு உண்மையான சோசலிச சமூகத்தை அமைப்பது சாத்தியமாகும். நமது நாட்டில் சோசலிசத்தை நிர்மாணிப்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுதியோடுள்ள அதேவேளையில், பொருளாதார வளர்ச்சியின் நிலை, தொழிலாளி வர்க்கத்தின் அரசியல், தத்துவார்த்த, ஸ்தாபன முதிர்ச்சி நிலை ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான, தொழிலாளி – விவசாயி கூட்டில் உறுதியான அடித்தளம் உடைய, உண்மையான அனைத்து நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை உள்ளடக்கிய மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதை மக்கள் முன்பு உடனடி இலக்காக கட்சி வைக்கிறது. இப்போதைய முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசை நீக்கிவிட்டு அந்த இடத்தில் மக்கள் ஜனநாயக அரசை நிறுவுவதே முதன்மையான, முக்கியமான தேவையாகும். இந்தியப் புரட்சியில் நிறைவேறாத ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றுவதன்மூலமே, நாட்டை சோசலிசத்திற்கான பாதையை நோக்கி அழைத்துச் செல்ல முடியும். மக்கள் ஜனநாயக அரசு பின்வரும் கடமைகளையும், திட்டங்களையும் நிறைவேற்றும்.

6.3 அரசு கட்டமைப்புத் துறையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களுக்கும் உண்மையான சமத்துவம் மற்றும் சுயாட்சி தந்து அதன் அடிப்படையில் இந்திய யூனியனின் ஒற்றுமையைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்ல பணியாற்றுவதோடு, கூட்டாட்சி, ஜனநாயக அரசு கட்டமைப்பை வளர்த்தெடுக்க கீழ்க்கண்ட அம்சங்களைப் பின்பற்றும்:

(I) மக்களே இறையாண்மை கொண்டவர்கள். அரசு கட்டமைப்பின் அனைத்து அங்கங்களும் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவை. வயது வந்தோர் வாக்குரிமை மற்றும் திரும்ப அழைக்கும் உரிமையுடன் கூடிய விகிதாச்சார பிரதிநிதித்துவ நெறிமுறையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே அரசு அதிகாரத்தை செயல்படுத்தும் உயர் அதிகார அமைப்பினர் ஆவர். அகில இந்திய அளவில், மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகள் இருக்கும். பெண்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் உத்தரவாதப்படுத்தப்படும்.

II) இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உண்மையான சுயாட்சியும், சமமான அதிகாரமும் வழங்கப்படும். ஆதிவாசி மக்கள் வாழும் பகுதி அல்லது ஒத்த சமூக மற்றும் பண்பாட்டு முறையைப் பின்பற்றும் குறிப்பிட்ட இன மக்கள், தொடர்ச்சியாகவும் வரையறுக்கப்பட்ட பகுதிகளிலும் வாழ்ந்தால் அந்தப் பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட மாநில அமைப்புக்குட்பட்ட பிரதேச சுயாட்சி வழங்கப்படும். அந்தப் பகுதிகளின் வளர்ச்சிக்கு முழு உதவி செய்யப்படும்.

III) மாநிலங்களில் மேலவை இருக்காது. மாநில ஆளுநர்கள் மேலேயிருந்து நியமிக்கப்பட மாட்டார்கள். அனைத்து நிர்வாகப் பணிகளும் சம்பந்தப்பட்ட மாநிலம் அல்லது உள்ளாட்சி நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். சாதி, மத, வகுப்பு, தேசிய இன, பாலின அடிப்படையில் எத்தகைய பாரபட்சமும் காட்டப்படாமல் இந்தியக் குடிமக்கள் அனைவரும் அரசினால் சமமாக நடத்தப்படுவார்கள்.

IV) நாடாளுமன்றம் மற்றும் மத்திய நிர்வாகத்தில் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் என்பது அங்கீகரிக்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் தேசிய மொழியில் பேசும் உரிமை வழங்கப்படுவதோடு, மற்ற அனைத்து மொழிகளிலும் அதே நேரத்தில் மொழிபெயர்க்கவும் ஏற்பாடு செய்யப்படும். அனைத்து சட்டங்கள், அரசாங்க உத்தரவுகள் மற்றும் தீர்மானங்கள் அனைத்து தேசிய மொழிகளிலும் கிடைக்கும். மற்றமொழிகளை விலக்கிவிட்டு, இந்திமொழியை மட்டுமே ஆட்சிமொழியாக ஆக்குவது என்பது கட்டாயப்படுத்தப் படமாட்டாது. பல்வேறு மொழிகளுக்கும் சமத்துவம் அளிப்பதன் மூலம் மட்டுமே நாடு முழுவதும் அதனை தகவல் தொடர்பு மொழியாக ஏற்கச் செய்ய முடியும். அதுவரை, இந்தி மற்றும் ஆங்கிலப் பயன்பாடு என்ற இப்போதைய ஏற்பாடு தொடரும். கல்வி நிலையங்களில் உயர் நிலைவரை தாய்மொழியில் பயிலும் உரிமை உத்தரவாதப்படுத்தப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழியிலேயே அனைத்து பொதுத்துறை மற்றும் அரசு நிறுவனங்களில் நிர்வாகம் நடைபெறுவது உறுதி செய்யப்படும். மாநிலத்தில் மாநில மொழியுடன் தேவையையட்டி ஒரு பிராந்தியத்திலுள்ள சிறுபான்மை அல்லது சிறுபான்மையினர் மொழியையும் இணைத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும். உருதுமொழி மற்றும் அதன் எழுத்து வடிவம் பாதுகாக்கப்படும்.

V) இந்தியாவின் ஒற்றுமையை மேலும் உறுதியாக்குவதற்காக, மாநிலங்களிடையேயும், பல்வேறு மாநில மக்களிடையேயும் பொருளாதார, அரசியல், பண்பாட்டுத் துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வளர்த்து மேம்படுத்த மக்கள் ஜனநாயக அரசு முயற்சிகள் மேற்கொள்ளும். தேசிய இனங்கள், மொழிகள், பண்பாடுகளின் பன்முகத்தன்மை மதிக்கப்படுவதோடு வேற்றுமையில் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான கொள்கை வகுக்கப்படும். பிற்பட்ட மற்றும் பலவீனமான மாநிலங்கள், பிராந்தியங்கள், பகுதிகள் தங்கள் பிற்பட்ட தன்மையிலிருந்து விரைவாக மீள நிதி மற்றும் இதர உதவிகள் தந்து சிறப்புக்கவனம் செலுத்தப்படும்.

VI) மக்கள் ஜனநாயக அரசு, உள்ளாட்சி நிர்வாகத்துறையைப் பொறுத்தவரை விரிவான ஒருங்கிணைப்புடன் கிராம நிலை முதல் உயர்நிலை வரை உள்ளாட்சி அமைப்புகள் மக்களால் நேரடியாக தேர்வு செய்ய ஏற்பாடு செய்வதோடு, இந்த அமைப்புகளுக்கு போதுமான அதிகாரமும் பொறுப்பும் நிதியும் வழங்கும். உள்ளாட்சி அமைப்புகளின் முனைப்பான செயல்பாட்டில் மக்களை ஈடுபடுத்த முயற்சி எடுக்கப்படும்.

VII) நமது அனைத்து சமூக மற்றும் அரசியல் அமைப்புகளில் ஜனநாயக உணர்வினை ஊட்ட மக்கள் ஜனநாயக அரசு பாடுபடும். தேசிய வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஜனநாயக வடிவிலான முன்முயற்சியையும், கட்டுப்பாட்டையும் கொண்டுவரும். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் இதர உழைக்கும் மக்களின் வர்க்க, வெகுஜன அமைப்புகள் இதில் முக்கியப் பங்காற்றும். மக்களின் ஜனநாயக விருப்பங்களுக்கேற்ப நாட்டின் சட்டம் இயற்றும் அமைப்புகள் மற்றும் நிர்வாக எந்திரங்கள் தொடர்ந்து பொறுப்புடன் செயல்பட மக்கள் ஜனநாயக அரசு நடவடிக்கை எடுக்கும். மக்கள் மற்றும் அவர்களது அமைப்புகள் அரசின் நிர்வாகம் மற்றும் பணிகளில் முனைப்புடன் பங்கேற்பது உறுதி செய்யப்படும். அரசு மற்றும் நிர்வாகத்தில் அதிகாரவர்க்க நடைமுறையை ஒழிக்கச் செயலாற்றும்.

VIII) மக்கள் ஜனநாயக அரசு கறுப்புப்பணத்தை வெளிக்கொணரும், லஞ்சத்தை ஒழிக்கும், பொதுவாழ்க்கையில் ஈடுபடுவோரின் பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளை தண்டிக்கும்.

IX) நீதித்துறை நிர்வாகத்தில் ஜனநாயக மாற்றங்களை அறிமுகப் படுத்தும். உரிய காலத்தில், நேர்மையாக நீதி வழங்கப்படுவது உறுதிசெய்யப்படும். நலிந்த மக்கள் சிரமமின்றி சட்டப்படியான நிவாரணம் பெறும் வகையில் இலவச சட்ட உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

X) ராணுவத்தினிடையே தேசபக்தி, ஜனநாயகம் மற்றும் மக்களுக்கு சேவை செய்யும் உணர்வை மக்கள் ஜனநாயக அரசு ஊட்டும். அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்தரம், பணிபுரிவதற்கேற்ற சூழல், பண்பாட்டுத் துறை வசதிகள் போன்றவற்றை செய்து தருவதோடு, அவர்களது குழந்தைகளுக்கு கல்வி வழங்கப்படும். திடகாத்திரமான வர்களை ராணுவப் பயிற்சியில் சேர உற்சாகப்படுத்துவதோடு, அவர்களுக்கு நாட்டின் சுதந்திரம் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊட்டப்படும்.

XI) முழுமையான மனித உரிமை உத்தரவாதப்படுத்தப்படும். மக்களின் உரிமைகள் மீறப்படாமல் பார்த்துக்கொள்ளப் படுவதோடு, நாட்டின் எந்தப் பாகத்திலும் குடியேறும் உரிமையும் பாதுகாக்கப்படும். விசாரணையின்றி சிறையில் யாரும் அடைக்கப்படமாட்டார்கள். மனசாட்சியின்படி நடந்துகொள்ள தங்குதடையற்ற சுதந்திரம், மதநம்பிக்கை மற்றும் வழிபாட்டு உரிமை, பேச்சுரிமை, பத்திரிகை சுதந்திரம், கூட்டம் கூடும் உரிமை, வேலைநிறுத்தம் செய்யும் உரிமை, அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் அமைக்கும் உரிமை, இடம் பெயரும் மற்றும் பணியாற்றும் உரிமை, மாற்று கருத்துக்கூறும் உரிமை ஆகியவை உத்தரவாதப்படுத்தப்படும்.

XII) அனைத்து குடிமக்களுக்கும் வேலை செய்யும் உரிமை அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்தப்படும். மதம், சாதி, பாலினம், இனம் மற்றும் தேசிய இன வேறுபாடுகள் இன்றி அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை, சமவேலைக்கு சம ஊதியம் உறுதி செய்யப்படும். ஊதியம் மற்றும் வருமானத்தில் உள்ள பரவலான ஏற்றத்தாழ்வு படிப்படியாக குறைக்கப்படும்.

XIII) ஒரு சாதியினர் மீதான மற்றொரு சாதியினரின் சமூக ஒடுக்குமுறை ஒழிக்கப்படும். தீண்டாமை மற்றும் சமூக அடக்குமுறையின் அனைத்து வடிவங்களும் சட்டத்தினால் தண்டிக்கப்படும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பணி மற்றும் இதர கல்வி வசதிகளில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படும்

XIV) பெண்களுக்கு எதிரான சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பாரபட்சங்கள் நீக்கப்படும். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் நிலம் உள்ளிட்ட சமமான வாரிசு சொத்துரிமை வழங்கப்படும். அனைத்து சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் சம உரிமைகள் என்ற அடிப்படையில் சமூக, பொருளாதார, குடும்பப் பாதுகாப்பு சட்டங்கள் செயலாக்கப்படும். தொழில் மற்றும் சேவைத் துறையில் பெண்களுக்கு அனுமதி உத்தரவாதப்படுத்தப்படும். குடும்பக் கட்டமைப்பை ஜனநாயகப்படுத்துவது என்ற முயற்சியின் பகுதியாக குழந்தை பாதுகாப்பு மற்றும் குடும்பப் பணிகளில் பொருத்தமான ஆதரவுமுறை உருவாக்கப்படும்

XV) அரசின் மதச்சார்பற்றத் தன்மை உறுதி செய்யப்படும். நாட்டின் அரசு மற்றும் அரசியல் நிகழ்முறை தொடர்பான விவகாரங்களில் மதநிறுவனங்களின் தலையீடு தடை செய்யப்படும். மத ரீதியான சிறுபான்மையோர் பாதுகாக்கப்படுவதோடு, அவர்களுக்கு எதிரான எத்தகைய பாரபட்சமும் தடுக்கப்படும்.

XVI) அனைத்து நிலைகளிலும் விரிவான மற்றும் அறிவியல் பூர்வ கல்வி கிடைக்க பொதுக் கல்வி நிறுவன முறை வளர்க்கப்படும். மேல் நிலைக் கல்வி வரை இலவச மற்றும் கட்டாயக்கல்வி வழங்கப்படும். கல்வியில் மதச்சார்பற்ற தன்மை உத்தரவாதப்படுத்தப்படும். உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப் படும். முழு அளவிலான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். விளையாட்டு நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்கும் விரிவான விளையாட்டுக் கொள்கை நிறைவேற்றப்படும்.

XVII) சுகாதாரம், மருத்துவம் மற்றும் மகப்பேறு சேவைகளை இலவசமாக வழங்குவதற்கு தேவையான விரிவான ஒருங்கிணைப்பு ஏற்பாடு செய்யப்படும். குழந்தைகளுக்கு, மழலையர் பள்ளிகள் மற்றும் காப்பகங்கள், உழைக்கும் மக்களுக்கு ஓய்வு இல்லங்கள் மற்றும் மனமகிழ் மையங்கள், முதுமைக்கால ஓய்வூதியம் போன்றவை உறுதி செய்யப்படும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிற, கட்டாயப்படுத்தாத மக்கள் தொகைக் கொள்கையை மக்கள் ஜனநாயக அரசு ஊக்குவிக்கும்.

XVIII) சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்படும். உயிரியல் சமநிலையை பாதுகாப்பதற்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை வகுக்கும். ஏகாதிபத்திய சுரண்டலிலிருந்து நாட்டின் பன்முக உயிரியல் தன்மை மற்றும் உயிரியல் ஆதாரங்கள் பாதுகாக்கப்படும்.

XIX) உடல் ஊனமுற்றோர் முழு குடிமகனாக சமூகத்தில் ஒருங்கிணைந்து வாழ்வதற்கான உரிமைகள் உத்தரவாதப் படுத்தப்படும். முதுமையடைந்த குடிமக்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்குரிய உரிமை குறித்த விஷயத்தில் அரசு முக்கிய கவனம் செலுத்தும். மொத்தத்தில் அடிப்படை உரிமை என்று கருதப்படுகிற சமூக உரிமைகளே மக்கள் ஜனநாயக அரசின் அடிப்படையான கோட்பாடாக அமையும்.

XX) ஜனநாயக, மதச்சார்பற்ற அணுகுமுறை கொண்ட ஒரு புதிய முற்போக்கான மக்கள் பண்பாட்டை வளர்த்தெடுக்க நமது மக்களின் ஆக்கப்பூர்வமான திறமைகளை மக்கள் ஜனநாயக அரசு மற்றும் அரசாங்கம் உரமூட்டி வளர்க்கும். மக்களது பொருளியல், பண்பாட்டு வாழ்க்கையை செழுமைப்படுத்த இலக்கியம், கலை மற்றும் பண்பாட்டை வளர்க்க, வளப்படுத்த தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சாதிய, பாலின பாகுபாடுகள், மதவெறியில் எழும் வெறுப்புணர்வுகள், அடிமைப்புத்திகள், மூட நம்பிக்கைகளிலிருந்து மக்களை விடுவிக்க அது உதவும். அறிவியல் அணுகுமுறையை வளர்த்தெடுக்கும். பழங்குடி மக்கள் உள்ளிட்ட மொழிவழி தேசிய இன மக்களின் தனித்துவமான மொழி, பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையை நாடு முழுவதுமுள்ள மக்களின் பொது அபிலாஷைகளுக்கு இயைந்த முறையில் வளர்த்தெடுக்க உதவும். இதர நாடுகளில் வாழும் மக்களோடு நமது மக்களுக்கு சகோதரபூர்வமான உணர்வு வளர பாடுபடுவதோடு, இன மற்றும் தேசிய அடிப்படையிலான பகை உணர்வைக் கைவிடுவதற்கான உணர்வும் வளர்க்கப்படும்.

XXI) மின்னணு தகவல் தொடர்பு சாதனத் துறையில் ஒரு பொது ஒளிபரப்பு முறைக்கு அழுத்தம் தரப்பட்டு, தகவல் தொடர்புத்துறை வளர்த்தெடுக்கப்படும். தகவல் தொடர்பு சாதன சொத்துக்கள் தனியார் கைகளில் குவிவது மற்றும் இந்திய தகவல் தொடர்பு சாதன சொத்துக்களில் அன்னியருக்கு உரிமை அனுமதிக்கப்படமாட்டாது. இந்தத் துறையில் ஜனநாயகக் கட்டுப்பாடு மற்றும் பதில் சொல்லும் பொறுப்பு உறுதி செய்யப்படும்.

6.4 விவசாயம் மற்றும் விவசாயிகள் சார்ந்த துறையில்: கிராமப்புறங்களில் 70 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவின் பொருளாதாரம் விவசாயம் சார்ந்ததாகும். விவசாயத்துறை வளர்ச்சியும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் விரிவான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாகும்.

இந்த இலக்கை எட்டுவதற்கு மக்கள் ஜனநாயக அரசு கீழ்க்கண்டவற்றை செயல்படுத்தும் :

(1) தீவிர நிலச்சீர்திருத்தத்தைச் செயல்படுத்துவதன் மூலம் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்படும். விவசாயத் தொழிலாளர் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் வழங்கப்படும்.


(2) வட்டிக் கடைக்காரர்கள் மற்றும் நிலப்பிரபுக்களுக்கு ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறு கைவினைஞர்கள் தரவேண்டிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

(3) பெரிய வர்த்தகர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் திடீர் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க அரசு தலைமையிலான சந்தை முறை வளர்த்தெடுக்கப்படும். விவசாயிகள், கிராம கைவினைஞர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நீண்டகால, குறைந்த வட்டியிலான கடன்கள் உத்தரவாதப்படுத்தப்படும். விவசாய விளைபொருளுக்கு நியாய விலை உறுதி செய்யப்படும்.

(4) பாசன வசதி மற்றும் மின்சார வசதி அதிகரிக்கப்படுவதோடு, இவற்றில் முறையான மற்றும் சமமான பங்கீடு, விவசாயத்துறை வளர்ச்சிக்கு உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு உத்வேகம், விவசாய முறையை மேம்படுத்த விவசாயிகளுக்கு உதவி, தரமான விதைகள் மற்றும் நவீன தொழில்நுட்பம் மூலம் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும்.

(5) விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமான கூலி, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், வாழ்க்கைத்தரம் ஆகியவற்றிற்கான உத்தரவாதம்.

(6) விவசாயம் மற்றும் இதர பணிகளுக்கு விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களுக்கான கூட்டுறவு அமைப்புகளை தன்னார்வ அடிப்படையில் வளர்ப்பது.

(7) மக்களுக்கு உணவு தானியம் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் மலிவாகக் கிடைக்க விரிவான பொது வினியோக முறை அறிமுகப்படுத்தப்படும்.

6.5 இந்தியா, பொருளாதார வளர்ச்சியில் வேறுபட்ட நிலைகளைக் கொண்ட பல்வேறு வகையான சமூக, பொருளாதார முறைகளைக் கொண்ட மிகப்பெரிய நாடாகும். எனவே பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி சக்திகளின் விரைவான வளர்ச்சி அவசியமாகிறது. மேலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் சீரான முன்னேற்றம் கொண்டுவர வேண்டுமானால் மக்கள் ஜனநாயக அரசு பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளில் அரசுடமை மூலம் ஒரு தீர்மானகரமான பாத்திரத்தை வகிப்பதோடு, இதர துறைகளில் கட்டுப்படுத்துகிற, வழிகாட்டுகிற பாத்திரத்தை அரசு வகிக்க வேண்டியுள்ளது. பொதுத்துறைக்கு மேலாதிக்கம் தரும், பல்வேறு வடிவ சொத்துடமை கொண்டதாக, பன்முக கட்டமைப்பு கொண்டதாக மக்கள் ஜனநாயகப் பொருளாதாரம் அமையும். உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு வெளிநாடுகளின் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் அதே நேரத்தில் சுயசார்பு பொருளாதாரத்தை பலப்படுத்துவதில் நாடு உறுதியோடு நிற்கும்.

6.6 தொழில் மற்றும் தொழிலாளர் துறைகளில்: விவசாயிகளின் குறைவான வாங்கும் சக்தியால் மட்டுமின்றி ஏகபோக நிறுவனங்களின் இறுக்கமான பிடி, அன்னிய மூலதன ஊடுருவல் அதிகரிப்பு, கிட்டத்தட்ட உற்பத்தியின் அனைத்துத் துறைகளிலும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் பல்வேறு வடிவிலான ஆதிக்கம் ஆகியவற்றாலும் நமது தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது. ஏகபோகங்களின் கைகளில் சொத்துக்கள் குவிவதால், பொருளாதார வளர்ச்சி குலைக்கப்படுவதோடு, பரந்த அளவில் ஏற்றத்தாழ்வுகளும் வளர்கிறது. வெளிநாட்டு மூலதனத்தை சார்ந்திருப்பது மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டளைகளுக்கு அடிபணிவதால் சுரண்டலும், தவறான வடிவிலான வளர்ச்சியும் ஏற்படுகிறது. இதனால் மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது. எனவே, தொழில் துறையில் மக்கள் ஜனநாயக அரசு கீழ்க்கண்ட பணிகளைச் செய்யும்:

(1) தொழில், நிதி, வர்த்தகம் மற்றும் சேவைத்துறைகளில் இந்திய மற்றும் அன்னிய ஏகபோகங்களை ஒழிப்பதற்கு அவர்களது சொத்துக்களை அரசுடமையாக்குவது உள்ளிட்ட பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

(2) நவீனமயப்படுத்துதல், ஜனநாயக மயப்படுத்துதல், அதிகார வர்க்க கட்டுப்பாடுகளிலிருந்து விடுவித்தல், லஞ்சத்தை கட்டுப்படுத்துதல், கறாரான பொறுப்புணர்ச்சியை நிர்ணயித்தல், நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கேற்பை உறுதி செய்தல், போட்டியை சமாளிக்கும் ஆற்றலை வளர்த்தல் போன்றவற்றின் மூலம் பொதுத்துறை தொழில்கள் வலுப்படுத்தப்படும். இவற்றின்மூலம் இந்தத் துறையால் பொருளாதாரத்தில் மேலாதிக்க நிலையை அடைய முடியும்.

(3) முன்னேறிய தொழில்நுட்பம் பெறவும், உற்பத்தி திறன்களை மேம்படுத்தவும் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் நேரடி அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும். ஒட்டுமொத்த பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு நிதி மூலதனத்தின் தடையற்ற வருகை கட்டுப்படுத்தப்படும்.

(4) கடன், கச்சாப்பொருள், நியாயமான விலை போன்றவற்றை அளிப்பதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவி செய்யப்படும். சந்தை வசதி செய்துதருவதிலும் உதவப்படும்.

(5) நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீரானதாகவும், திட்டமிட்டதாகவும் அமைய பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள் ஒழுங்குபடுத்தப்படும், ஒருங்கிணைக்கப்படும். அன்னிய வர்த்தகம் முறைப்படுத்தப்படும்.

(6) தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் விரைவாக மேம்பட கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்:

(அ) வாழ்க்கைச் சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

(ஆ) பணி நேரம் படிப்படியாக குறைக்கப்படும்.

(இ) அனைத்து வகை இயலாமை மற்றும் வேலையின்மைக்கு எதிராக சமூக காப்பீடு, தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி வழங்கப்படும்

(ஈ) ரகசிய வாக்கெடுப்பு மூலம் தொழிற்சங்க அங்கீகாரம், கூட்டுபேர உரிமை, அதேபோன்று வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை உத்தரவாதம் செய்யப்படும்.

(உ) குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்படும்.

(7) தொழிலாளர், விவசாயிகள், கைவினைஞர்களுக்கு அதிகபட்ச வரி விலக்கு, விவசாயம், தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளில் அடுக்கு அடுக்கான வரி விதிப்பு முறை; பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு விலைவாசிக் கொள்கையை முனைப்பாக செயல்படுத்துவது.

6.7 அயல்துறை கொள்கை: உலக சமாதானத்தை பாதுகாத்தல், ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எதிர்த்தல், சர்வதேச உறவுகளை ஜனநாயகப்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியா உரிய பங்கினை செலுத்த மக்கள் ஜனநாயக அரசு கீழ்க்கண்டவற்றை நிறைவேற்றும்:

(1) நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் அனைத்து நாடுகளுடன் உறவுகள் வளர்க்கப்படும். ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் உள்ள வளர்முக நாடுகளுடனும் நேசபூர்வ ஆதரவும், உறவும் வளர்க்கப்படும். வளரும் தெற்கத்திய நாடுகளுக்குள் ஒத்துழைப்பு வளர்க்கப்படும், ஏகாதிபத்திய நாடுகளின் ஆதிக்கத்தை முறியடிக்க கூட்டுச்சேரா இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டப்படும்.

(2) அனைத்து சோசலிச நாடுகள் மற்றும் அமைதியை நேசிக்கிற அரசுகளுட ம் நட்புறவும், ஒத்துழைப்பும் வளர்க்கப்படும். ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்காக நடைபெறும் அனைத்துப் போராட்டங்களுக்கும் ஆதரவு நல்கப்படும்.

(3) அணு ஆயுதப்போர் அச்சுறுத்தலை நீக்கவும், உலகளாவிய அணு ஆயுத ஒழிப்பிற்காகவும் பாடுபடுதல், பெருமளவு நாசத்தை ஏற்படுத்தும் அணு, ரசாயன, உயிரியல் ஆயுதங்களையும் அழித்தல், இத்தகைய ஆயுதங்களை தயாரிப்பதையும், சோதனை செய்வதையும் தடை செய்தல், அனைத்து அன்னிய ராணுவ தளங்களையும் ஒழிக்குமாறு கோருதல், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பைப் பெறுதல் மற்றும் உயிர்வாழ் சூழலைப் பாதுகாத்தல்.

(4) பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், நேபாளம், பூட்டான், இலங்கை, பர்மா ஆகிய இந்தியாவின் அண்டை நாடுகளுடன் நிலவும் வேறுபாடுகள், சர்ச்சைகள் போன்றவற்றை சமாதான முறையில் தீர்த்து நட்புறவை வளர்க்க இடைவிடாத, சிறப்பு முயற்சி மேற்கொள்ளுதல். தெற்காசிய ஒத்துழைப்பை வளர்த்தல்.

மக்கள் ஜனநாயக முன்னணியைக் கட்டுதல்

7.1 இந்தியப் புரட்சியின் அடிப்படையான கடமைகளை முழுமையாகவும், முழு நிறைவாகவும் பூர்த்தி செய்வதற்கு இப்போதுள்ள பெருமுதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசை அகற்றிவிட்டு, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் மக்கள் ஜனநாயக அரசை நிறுவுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

7.2 தற்போதைய வளர்ச்சிக் கட்டத்தில் நமது புரட்சியின் தன்மையானது நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய, ஏகபோக எதிர்ப்பு மற்றும் ஜனநாயக ரீதியிலானதாக இருக்கிறது. நமது புரட்சியின் கட்டமானது அதை அடைவதற்கான போராட்டத்தில் வர்க்கங்கள் வகிக்கும் பங்கினைக் கொண்டும் தீர்மானிக்கப்படுகிறது. இன்றைய சகாப்தத்தில், சோசலிசத்தை அடைவதற்கான பாதையில் முன்னேறிச் செல்வதற்கு தேவையான ஒரு முன் நடவடிக்கையான ஜனநாயகப் புரட்சிக்கு பாட்டாளி வர்க்கம் தலைமையேற்க வேண்டியுள்ளது. இது பழைய பாணி முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி அல்ல, மாறாக, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அணிதிரட்டி நடத்தப்படும் புதிய வகையிலான மக்கள் ஜனநாயகப் புரட்சி ஆகும்.

7.3 நமது விவசாயத்துறை அதேபோன்று தொழில்துறை உற்பத்தி சக்திகள் மீதான நிலப்பிரபுத்துவ மற்றும் அரை – நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்களை துடைத்தெறிய, விவசாயிகள் நல க்கான தீவிர விவசாய சீர்திருத்தங்களை செய்ய வேண்டியது மக்கள் ஜனநாயகப் புரட்சியின் முதலாவதும், முதன்மையானதுமான கடமையாகும். இத்துடன் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தின் மிச்ச சொச்சங்களான சாதி மற்றும் கிராமங்களின் மிக நீண்டகால பின்தங்கிய தன்மை காரணமாக கட்டிக்காக்கப்படும் சமூக முறைகள் ஆகியவற்றையும் துடைத்தெறிய தேவையான சமூக முறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தக் கடமையானது விவசாயப் புரட்சியை பூர்த்தி செய்ய வேண்டியதுடன் பிரிக்க முடியாத அளவுக்கு இணைந்த ஒன்றாகும். உண்மையாகச் சொல்லப்போனால் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அச்சாணியே இந்த விவசாயப் புரட்சிதான். ஏகாதிபத்தியம், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம், சர்வதேச ஏகபோக மூலதனத்தின் பல்வேறு அமைப்புகள் ஆகியவற்றின் நாசகர விளைவுகளிலிருந்து நமது மக்களின் பொருளாதார, அரசியல், சமூக வாழ்க்கையை விடுவிக்க வேண்டியது இரண்டாவது உடனடி கடமையாகும். ஏகபோக மூலதனத்தின் சக்தியை உடைக்கும் கடமையுடனும் இது தொடர்புடையதாகும்.

7.4 எனினும், இன்றைய சூழலில் பெரு முதலாளி வர்க்கத்தையும் அரசில் தலையாய பங்கு வகிக்கும் அதன் பிரதிநிதிகளையும் எதிர்த்துப் போராடி முறியடிக்காமல் புரட்சியின் இத்தகைய அடிப்படையான, ஆதாரமான கடமையை நிறைவேற்ற முடியாது. தங்கள் வர்க்க ஆதிக்கத்திற்கு முட்டுக்கொடுக்க இவர்கள் நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டு வைத்துள்ளனர். அன்னிய ஏகபோக மூலதனத்தை பாதுகாக்கவும், அதன் ஊடுருவலுக்கு மேலும் வகை செய்யவும், தங்களிடமுள்ள அரசு அதிகாரத்தை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். அன்னிய ஏகபோகத்துடன் சமரசம் மற்றும் ஒத்துழைப்பு, இந்திய பெரும் நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டு என முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை அவர்கள் தீவிரமாக கடைப்பிடிப்பது பதிலுக்கு நமது நாட்டில் ஏகபோக மூலதனம் வளர்வதற்கு தீவிரமாக வகை செய்கிறது. மக்கள் ஜனநாயகப் புரட்சி, நிலப்பிரபுத்துவம் மற்றும் அன்னிய ஏகபோக முதலாளித்துவத்தை சமரசமின்றி எதிர்ப்பதோடு மட்டுமின்றி அதனுடன் சேர்த்து அன்னிய நிதி மூலதனத்துடன் சமரசம் செய்து ஒத்துழைக்கும் நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டு வைத்திருக்கும், அரசுக்கு தலைமை தாங்கும் பெரு முதலாளித்துவத்தையும் எதிர்க்கிறது.

7.5 தொழிலாளி வர்க்கம் மற்றும் அதன் அரசியல் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையின் கீழன்றி மக்கள் ஜனநாயக முன்னணியை வெற்றிகரமாகக் கட்டவோ, புரட்சியை வெற்றி பெறச் செய்யவோ முடியாது. வரலாற்று ரீதியில், நவீன சமுதாயத்தில் தொழிலாளி வர்க்கத்தைத் தவிர வேறு எந்த ஒரு வர்க்கமும் இந்தப் பணியை ஆற்றக்கூடியதாக இல்லை என்ற உண்மையை நமது காலத்தின் மொத்த அனுபவமும் தெளிவாக உணர்த்துகின்றது.

7.6 தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு மையமானதும், அடித்தளமானதும் ஆகும். நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், நீண்டகால விளைவுகளைத் தரும் ஜனநாயக மாற்றத்தைக் கொண்டுவரவும், ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை உறுதிப் படுத்தவும் இந்தக் கூட்டணி மிக முக்கியமான சக்தியாக இருக்கும். புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் இதர வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியின் வலிமை, ஸ்திரத்தன்மை ஆகியவற்றையே முக்கியமாக சார்ந்துள்ளது.

7.7 விவசாயத்தில் முதலாளித்துவம் ஆழமாக ஊடுருவியுள்ளதால், விவசாயிகளிடையே தெளிவான முரண்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, புரட்சியில் பலவகைப்பட்ட பகுதியினரும் பல்வேறு வகையான பாத்திரத்தை வகிப்பார்கள். நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளித்துவ வாதிகளின் ஈவு இரக்கமற்ற சுரண்டலுக்கு கிராமப்புறங்களில் மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகள் ஆளாகியுள்ளனர். இவர்கள் தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படையான கூட்டாளிகளாக இருப்பார்கள். நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ நிலப்பிரபுக்களின் கந்துவட்டி மூலதனத்தாலும், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முதலாளித்துவ சந்தையாலும், கிராமப்புறங்களில் உள்ள நடுத்தர விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புற வாழ்க்கையில் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தால் இவர்களது சமூக நிலையும் பல்வேறு வகைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மக்கள் ஜனநாயக முன்னணியில் நம்பகமான கூட்டாளிகளாக இருப்பார்கள்.

7.8 விவசாயப் பகுதியினரில் பணக்கார விவசாயிகள் ஒரு செல்வாக்குப் படைத்த பகுதியினர் ஆவர். முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ விவசாயக் கொள்கைகளால் இவர்களில் சில பகுதியினர் ஐயத்திற்கிடமின்றி பலம் பெற்றுள்ளனர். மேலும் சுதந்திரத்திற்குப் பிறகு வந்த ஆட்சிகளாலும் இவர்கள் பலம் பெற்றுள்ளனர். தங்களது பண்ணைகளில் விவசாயத் தொழிலாளர்களை கூலிக்கு அமர்த்துவது என்ற தன்மையின் காரணமாக இவர்கள் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அணியுடன் இணையும் நிலையில் உள்ளனர். ஆனால் இடைவிடாத விலைகளின் ஏற்ற இறக்கத் தாக்குதல், ஏகபோக வர்த்தகர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் உள்ள சந்தையின் சூறையாடல் காரணமாக அவர்கள் முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ அரசாங்கத்திற்கு எதிராக எழுகிறார்கள். அவர்களிடம் ஊசலாட்ட குணம் உள்ளபோதும் சில தருணங்களில் அவர்களையும் மக்கள் ஜனநாயக முன்னணியில் கொண்டுவரமுடியும். இவர்களும் மக்கள் ஜனநாயகப் புரட்சியில் பங்கு வகிக்க முடியும்.

7.9 முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியால் நகர்ப்புற மற்றும் கிராமப்புற நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் எண்ணிக்கையிலான நடுத்தர வர்க்க ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழில்முறையாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் புதிய பிரிவினர் ஆகியோர் முக்கியமான பகுதியினராகவும், செல்வாக்கு செலுத்தும் பகுதியினராகவும் உள்ளனர். முதலாளித்துவம் மேலும் வளர்வதாலும், தாராள மயமாக்கல் கொள்கைகளாலும், நடுத்தர வர்க்கத்தினருக்கிடையேயான வேறுபாடுகள் ஆழமடைந்து வருகின்றன. ஆதாயமடையும் மேல்தட்டினர் ஏனைய நடுத்தர வர்க்கத்தினரின் அணுகுமுறையைப் பகிர்ந்து கொள்வது இல்லை. இருந்தபோதும் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களின் விலைகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், அரசு விதிக்கும் அதிகமான வரிகளால் ஏற்படும் விளைவுகளாலும், வேலையின்மை பிரச்சனை தீவிரமாகி வருவதாலும், வாழ்க்கைக்கு தேவையான வசதி குறைபாடுகளாலும் இவர்களில் கணிசமான பகுதியினர் பாதிப்படைந்துள்ளனர். மக்கள் ஜனநாயக முன்னணியில் இவர்களை கூட்டாளிகளாக இருக்கவைக்க முடியும், இருப்பார்கள். புரட்சிக்காக இவர்களை வென்றெடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் பட வேண்டும். இந்தப் பிரிவினரை ஜனநாயக லட்சியங்களுக்காக அணிதிரட்டுவதில் முற்போக்கான அறிவு ஜீவிகளின் பணி முக்கியமான ஒன்றாகும்.

7.10 இந்திய முதலாளி வர்க்கம் ஒரு வர்க்கம் என்ற முறையில் ஏகாதிபத்தியத்துட ம், நிலப்பிரபுத்துவ, அரை-நிலப்பிரபுத்துவ விவசாய முறைமையுட ம் பல வழிகளிலும் மோதல்களையும், முரண்பாடுகளையும் கொண்டுள்ளது. ஆனால், சுதந்திரம் அடைந்த பிறகு அரசு அதிகாரத்தின் மீதான தங்கள் பிடியைப் பயன்படுத்தி பெரு முதலாளிகளும் ஏகபோக முதலாளிகளும் இந்த முரண்பாடுகளையும், மோதல்களையும் சமரசம், நிர்ப்பந்தம், பேரம் ஆகியவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ள விரும்புகின்றனர். இதற்கான வழிமுறையில் அவர்கள் நிலப்பிரபுக்களுடன் அதிகாரத்தை பங்கிட்டுக்கொள்கின்றனர். இவர்கள் மக்கள் விரோத, கம்யூனிஸ்ட் விரோதத் தன்மை கொண்டவர்கள், மக்கள் ஜனநாயக முன்னணியையும், அதன் புரட்சிகர இலட்சியங்களையும் உறுதியோடு எதிர்ப்பவர்கள் ஆவர்.

7.11 ஏகபோகம் அல்லாத முதலாளிகளாக உள்ள, பெருமுதலாளிகள் அல்லாதவர்கள் பல வழிகளிலும் பெருமுதலாளிகளிடமிருந்தும், பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்தும் சமமற்ற போட்டியைச் சந்திக்கின்றனர். முதலாளித்துவத்தின் நெருக்கடி, பன்னாட்டு நிறுவனங்களின் தங்குதடையற்ற நுழைவு காரணமாக இவர்களுக்கும் அன்னிய மூலதனத்திற்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடையும். பெருமுதலாளி வர்க்கம் தனது நெருக்கடியைத் தீர்க்க பொருளாதாரத்தில் தனக்குள்ள ஆதிக்கத்தைப் பயன்படுத்தியும் அரசில் தனக்குள்ள தலைமை பாத்திரத்தைப் பயன்படுத்தியும் தனது பலவீனமான சகோதர வர்க்கத்தின் தலையில் கை வைக்கும், இதனால் பெருமுதலாளி அல்லாத முதலாளிகள் அரசு அதிகாரத்தை எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவார்கள், மக்கள் ஜனநாயக முன்னணியில் இவர்கள் ஒரு இடம் பெறமுடியும். ஆயினும், இவர்கள் இன்னமும் பெருமுதலாளிகளுடன் இணைந்து அதிகாரத்தை பங்கிட்டுள்ளவர்கள் என்பதையும், இந்த ஆட்சி அமைப்பிலேயே மேலும் முன்னேற முடியும் என்று அதிக நம்பிக்கை கொண்டுள்ள வர்கள் என்பதையும் கவனமாக மனதில் இருத்த வேண்டும். புறநிலை ரீதியாக இவர்களுக்கு முற்போக்கான பாத்திரம் இருந்தாலும்கூட இந்திய பெரு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியத்தின்பால் இவர்களுக்குள்ள பலவீனமான வர்க்க நிலைமைகளின் காரணமாக ஒருபுறத்தில் பெருமுதலாளி மற்றும் அன்னிய மூலதனம், மறுபுறத்தில் மக்கள் ஜனநாயக முன்னணி என இரண்டுக்குமிடையே நிலையற்றத் தன்மையையும், ஊசலாட்டத்தையும் வெளிப்படுத்தும். இவர்களது இரட்டைத் தன்மை காரணமாக ஒரு நிலையற்ற கூட்டாளியாக பங்கேற்பது என்பதுகூட, வர்க்க சக்திகளின் பலாபலத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தும், ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் மக்கள் இடையேயான முரண்பாடு கூர்மையடைவதைப் பொறுத்தும், பெருமுதலாளிகள் தலைமையிலான அரசுக்கும் ஏனைய முதலாளித்துவப் பிரிவினருக்கும் இடையிலான முரண்பாடு ஆழமாவதைப் பொறுத்தும் என பல்வேறு திட்டவட்டமான நிலைமைகளைப் பொறுத்தே அமையும்.

7.12 இவர்களது பிரச்சனைகள் குறித்து இடைவிடாத, திட்டவட்டமான ஆய்வை மேற்கொள்வதன் மூலம் இவர்களை ஜனநாயக முன்னணிக்கு வென்றெடுப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்திய ஏகபோகங்களுக்கும், அன்னிய ஏகாதிபத்திய போட்டியாளர்களுக்கும் எதிரான இவர்களது அனைத்துப் போராட்டங்களுக்கும் ஆதரவு தருவதற்கு கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் தொழிலாளி வர்க்கம் தவறவிட்டு விடக்கூடாது.

7.13 தொழிலாளி வர்க்கமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யும் மக்கள் ஜனநாயகப் புரட்சியை கட்ட வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தையும், பெரு முதலாளிகள் தலைமையிலான தற்போதைய இந்திய அரசுடன் மோதவேண்டியிருக்கும் என்பதையும் கவனத்தில் கொண்டு, பெருமுதலாளிகள் உள்ளிட்ட இந்திய முதலாளிகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்குமிடையில் முரண்பாடுகள், மோதல்கள் இருப்பதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள், அன்னிய நிதிமூலதனம் ஆகியவை தங்கு தடையில்லாமல், சுதந்திரமாக நுழைய இந்திய பொருளாதாரத்தை திறந்துவிடுவதால் இந்த முரண்பாடு மேலும் தீவிரமடையும். இத்தகைய அம்சத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கவனமாக ஆராயும் அதே வேளையில், ஏகாதிபத்தியத்தை தனிமைப்படுத்தவும், ஜனநாயக முன்னேற்றத்திற்கான மக்கள் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு வேறுபாட்டையும், பிளவையும், முரண்பாட்டையும், மோதலையும் பயன்படுத்திக்கொள்ள முயலவேண்டும். உலக சமாதானம், ஏகாதிபத்திய ஏதிர்ப்பு தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளிலும் அரசுக்கு தாராளமான ஆதரவுதர தொழிலாளி வர்க்கம் தயங்காது. ஏகாதிபத்தியத்துடன் மோதுகிற அனைத்து பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகள், நமது நாட்டின் இறையாண்மையை வலுப்படுத்துதல் மற்றும் சுயேச்சையான அயல்துறைக் கொள்கை தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளிலும் ஆதரவு தரத்தயங்காது. ஏனெனில் இவை நமது நாட்டின் உண்மையான நலன்களுடன் தொடர்புடையவை ஆகும்.

7.14 சுதந்திரத்திற்குப் பிறகும் கூட பிற்போக்கு மற்றும் எதிர்புரட்சிப் போக்குகள் நிலவின, நிலப்பிரபுத்துவ கருத்தாக்கத்தின் ஆழமான தாக்கம் காரணமாக இருந்த பின்தங்கிய தன்மையை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். சமீபத்திய பத்தாண்டுகளில், காங்கிரசுக்கு எதிரான அதிருப்தி அதிகரித்து வந்ததன் காரணமாக காங்கிரஸ் வேகமாக வீழ்ச்சியடைந்த நிலையில், காங்கிரஸ் கட்சி விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவதற்கு அவர்கள் கடுமையான முயற்சி மேற்கொண்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சி ஒரு பிற்போக்கு கட்சியாக உள்ளதோடு, பிளவுவாத, மதவெறி அடித்தளத்தைக் கொண்டதாகவும், இதர மதங்களுக்கு எதிரான பகையுணர்ச்சி, சகிப்பற்றத் தன்மை, தீவிர தேசிய இனவெறி என பிற்போக்கு உள்ளடக்கத்தைக் கொண்டதாகவும் உள்ளது. பாரதிய ஜனதா கட்சி சாதாரண முதலாளித்துவக் கட்சி அல்ல, பாசிசத் தன்மை கொண்ட ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தினால் வழிகாட்டப்படுகிற, ஆதிக்கம் செலுத்துகிற ஒன்றாகும். பாஜக அதிகாரத்தில் இருப்பதால், அரசு அதிகாரத்தையும், அரசு எந்திரத்தையும் ஆர்.எஸ்.எஸ்.-சினால் கருவிகளாக பயன்படுத்திக்கொள்ளமுடிகிறது. இந்துத்துவா தத்துவம் பழமைவாதத்தை வளர்க்கிறது, இந்து ராஷ்டிரத்தை நிறுவும் நோக்குடன் இந்தியாவின் பன்முகப் பண்பாட்டை நிராகரிக்கிறது. இத்தகைய மதவெறி அணுகுமுறை பரப்பப் படுவதால், சிறுபான்மை பழமைவாதம் வளர வழிசெய்கிறது. அரசியலில் மதச்சார்பற்ற அடிப்படைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதோடு, இடது மற்றும் ஜனநாயக இயக்கத்திற்கு பெரும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெருமுதலாளிகள், நிலப்பிரபுக்களில் கணிசமான பகுதியினரும், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியமும், பாஜகவுக்கு அனைத்து வகையான ஆதரவையும் வழங்குகின்றனர்.

7.15 இத்தகைய அனைத்து வகையான கூறுகளின் அடிப்படையில் தேசத்தின் அனைத்து தேசபக்த சக்திகளையும், அதாவது முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தின் அனைத்து மிச்ச சொச்சங்களையும் துடைத்தெறிய ஆர்வம் கொண்டோர், விவசாயிகளின் நல க்காக விவசாயப் புரட்சியை முழுமையாக முன்னெடுத்துச் செல்வோர், அன்னிய மூலதனத்தின் தங்குதடையற்ற நுழைவை எதிர்ப்போர், இந்தியாவின் பொருளாதார, சமூக, பண்பாட்டு வாழ்க்கையில் தீவிர மறுகட்டமைப்பை கொண்டுவர தடையாயுள்ள அனைத்து முட்டுக்கட்டைகளையும் நீக்குவோர் என நாட்டின் அனைத்து தேசபக்த சக்திகளையும் ஒன்றுபடுத்துவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தன் முன்னுள்ள கடமையாகக் கொள்கிறது.

7.16 தொழிலாளி – விவசாயி கூட்டை மையமாகக் கொண்டு அனைத்து தேசபக்த, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையின் மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் லட்சியங்களை அடைவதற்கான போராட்டம் சிக்கலானதும், நீண்டகால தன்மை கொண்டதும் ஆகும். வேறுபட்ட சூழல்களில் வெவ்வேறு கட்டமாக இதை நடத்த வேண்டியிருக்கும். புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கின் தனித்துவ கட்டங்களில் பல்வேறு வர்க்கங்களும், ஒரே வர்க்கத்தின் பல்வேறு பகுதியினரும், பல வகைப்பட்ட நிலைபாடுகளை எடுப்பார்கள். ஒரு பலமான கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே வெகுஜன இயக்கங்களை வளர்த்தெடுத்து, தொலைநோக்கு இலக்கை அடைவதற்கு பொருத்தமான ஐக்கிய முன்னணி உத்தியை உருவாக்கி மாற்றங்களை உருவாக்குவதன்மூலம் இத்தகைய பிரிவினரை தனது அணிக்குள் ஈர்க்க முடியும். இத்தகைய கட்சியால்தான் மிகுந்த அக்கறைகொண்ட, சகல தியாகங்களுக்கும் தயாராக உள்ள பகுதியினரை தனது அணிக்குள் கொண்டுவந்து புரட்சிகர இயக்கத்தின் பாதையில் ஏற்படும் பல்வேறு திருகல்கள், திருப்பங்களின் போது மக்களுக்கு தலைமை தாங்கிச் செல்ல முடியும்.

7.17 வேகமாக மாறிவரும் அரசியல் சூழலின் தேவைகளை சந்திக்க பல்வேறு இடைக்கால கோஷங்களை கட்சி உருவாக்க வேண்டியிருக்கும் என்பது வெளிப்படையானதாகும். ஆளும் வர்க்கங்களின் தலைமையிலான தற்போதைய அரசை இறக்கி, தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வலிமையான கூட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய ஜனநாயக அரசு மற்றும் அரசாங்கத்தை நிறுவும் கடமையை மக்கள் முன்வைக்கிறபோதே, இப்போதுள்ள வரையறைக் குள்ளேயே மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய திட்டத்தை நிறைவேற்றுகிற, மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, நிறைவேற்றுகிற அரசாங்கங்களை அமைப்பதற்கான வாய்ப்புகளை கட்சி பயன்படுத்திக்கொள்ளும். இத்தகைய அரசாங்கங்களை அமைப்பது உழைக்கும் மக்களின் புரட்சிகர இயக்கத்தை வலுப்படுத்தவும், மக்கள் ஜனநாயக முன்னணியை கட்டும் பணிக்கும் உதவும். எனினும் நாட்டின் பொருளாதார, அரசியல் பிரச்சனைகளுக்கு அடிப்படையான வகையில் தீர்வு காணாது. எனவே, திட்டவட்டமான சூழலைப் பொறுத்து மாநிலங்களிலோ அல்லது மத்தியிலோ இத்தகைய அரசாங்கங்கள் அமைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும்போதே இப்போதுள்ள பெருமுதலாளிகள் தலைமையிலான முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசை நீக்க வேண்டியதன் தேவையை மக்களுக்கு கற்பித்து வருவதோடு, அதன் மூலம் வெகுஜன இயக்கத்தை வலுப்படுத்தும்.

7.18 மக்கள் ஜனநாயகம் மற்றும் சோசலிச சமூக மாற்றத்தை அமைதியான வழியில் அடையவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) விழைகிறது. வலிமையான வெகுஜன புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுப்பதன் மூலமும், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடைபெறுகிற போராட்டங்களை இணைப்பதன் மூலமும் பிற்போக்கு சக்திகளின் எதிர்ப்பை முறியடிக்க தொழிலாளி வர்க்கமும், அதன் கூட்டாளிகளும் முயல்வதோடு, அமைதியான வழிமுறையில் இத்தகைய மாற்றங்களைக் கொண்டுவர பாடுபடுவர். எனினும், ஆளும் வர்க்கங்கள் தங்களது அதிகாரத்தை ஒருபோதும் தாமாக விட்டுத்தரமாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக, சட்டத்திற்கு புறம்பாகவும், வன்முறை மூலமாகவும் இதைப் பின்னுக்குத்தள்ள முயல்வார்கள். எனவே, நாட்டின் அரசியலில் ஏற்படக் கூடிய திருப்பங்கள், திருகல்களையும் கவனத்தில் கொண்டு அனைத்து சூழ்நிலைகளையும் சந்திக்கின்ற வகையில் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுதல்

8.1 மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது புரட்சிகரத் திட்டத்தை இந்திய மக்கள் முன் வைக்கிறது. சோசலிசத்திற்கும், சுரண்டலற்ற சமூகத்தை நோக்கி முன்னேறுவதற்கும் மக்கள் ஜனநாயகப் புரட்சியானது வழிவகுக்கும். இந்திய மக்களை விடுதலை செய்யும் இத்தகைய புரட்சிக்கு விவசாயிகளுடன் கூட்டணி அமைத்து தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கும். உழைக்கும் மக்களின் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சியானது, ஏகாதிபத்தியம், ஏகபோக முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றிற்கு எதிராக நடத்தப்படும் போர்க்குணமிக்க போராட்டங்களுக்கு தலைமைதாங்க வேண்டியுள்ளது. மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளை நமது நாட்டில் நிலவும் நிலைமைகளுக்கு ஏற்ப திட்டவட்டமான வகையில் பயன்படுத்துவதன்மூலம் அரசியல், தத்துவார்த்த, பொருளாதார, சமூக, பண்பாடு என்கிற அனைத்து முனைகளிலும் நாம் வெற்றிகாணும்வரை நீண்ட நெடிய போராட்டங்களைக் கட்சி நடத்தவேண்டியுள்ளது.

8.2 சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் மூர்க்கத்தனமாக கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரம் நடத்திவருகிற நிலையில் தத்துவார்த்தப் போராட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் தீவிரப்படுத்த வேண்டியது இன்றியமையாத கடமையாகும். ஆளும் வர்க்கங்களின் பிரதானமான தத்துவார்த்த ஆயுதமாக உள்ள கம்யூனிச எதிர்ப்பை கம்யூனிஸ்ட்டுகள் அம்பலப்படுத்தி அதை எதிர்த்துப் போராடுகிறார்கள். நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ தத்துவச் செல்வாக்கிலிருந்து மக்களை விடுவிப்பதற்காகவும், அவர்களது அரசியல் உணர்வுநிலையை உயர்த்துவதற்காகவும், ஏகாதிபத்தியத்தின் தூண்டுதலோடு நடக்கும் உலகமயம், தாராளமயம், சுதந்திரச் சந்தைப் பொருளாதாரம் ஆகியவற்றின் ஆதரவாளர்களது பிரச்சாரத்தை எதிர்ப்பதற்கும் கம்யூனிஸ்ட்டுகள் இடைவிடாத போராட்டத்தை நடத்துகின்றனர்.

8.3 மதரீதியான பழைமைவாதம், பத்தாம் பசலித்தனம், மதவெறி, சாதியம் ஆகியவை மக்களைப் பிளவுபடுத்தி அவர்களது ஜனநாயக உணர்வுகளைக் குலைக்கின்றன. முதலாளித்துவ தேசிய வாதம், தேசிய இனவெறி ஆகியவற்றை ஏகாதிபத்திய சக்திகளின் துணையோடு பிற்போக்குச் சக்திகள் ஜனநாயக இயக்கத்தின் வளர்ச்சியைக் குலைப்பதற்குப் பயன்படுத்துகின்றன. இத்தகைய பிளவுவாதக் கருத்துக்கள், சக்திகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் உறுதியான போராட்டத்தை நடத்த வேண்டும்.

8.4 அனைத்து முனைகளிலும் போராடுகிற புரட்சிகர இயக்கத்திற்கு வழிகாட்டுகிற ஒரு வெகுஜன புரட்சிக் கட்சியைக் கட்டுவது இன்றியமையாததாகும். இத்தகைய ஒரு கட்சியானது வெகுஜன இயக்கங்களை வளர்ப்பதன் மூலமும் அரசியல் ரீதியாக, தத்துவார்த்த ரீதியாக தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதன்மூலமும் மக்கள் மத்தியில் தனது தளத்தை இடைவிடாது விரிவுபடுத்த வேண்டும். இதற்கு ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட வலிமையான, கட்டுப்பாடான கட்சி தேவைப்படுகிறது. தொழிலாளி வர்க்கம் மற்றும் அனைத்துப்பகுதி உழைக்கும் மக்களுக்கு தனது வரலாற்றுக் கடமையை செய்வதற்காக கட்சி தனக்குத்தானே இடைவிடாது போதித்துக் கொள்ள வேண்டும், மீண்டும் மீண்டும் போதித்துக் கொள்ள வேண்டும். தனது தத்துவார்த்தக் கொள்கை நிலையை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். மேலும் தனது ஸ்தாபன ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

8.5 மக்கள் ஜனநாயக அரசாங்கத்தை நிறுவுவதும், இத்தகைய கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதும், மக்கள் ஜனநாயக அரசில் தொழிலாளி வர்க்க தலைமை இருப்பதும், இந்தியப் புரட்சியின் ஜனநாயகக் கட்டத்துடன் நிறுத்திவிடாமல் உற்பத்தி சக்திகளை வளர்ப்பதன்மூலம் சோசலிச மாற்றத்தை நோக்கிய கட்டத்திற்கு மாறிச்செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

8.6 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்தத் திட்டத்தை மக்கள் முன்பு வைக்கிறது. ஒரு ஜனநாயக தேசிய முன்னேற்றத்திற்காகப் போராடுவது எனும் தங்களின் லட்சியத்தைப் பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை மக்கள் உணர்ந்து கொள்வதற்காக இன்றைய காலத்தின் பிரதான உடனடிக் கடமைகளை கட்சி வரையறுத்துள்ளது. இத்தகைய கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும், இந்த இலக்குகளை அடைவதற்காகவும் மக்கள் ஜனநாயக முன்னணியில் ஒன்றுபடும்படி உண்மையான ஜனநாயகப்பூர்வ வளர்ச்சியில், செழிப்பான வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வமுள்ள உழைக்கும் மக்கள், தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், மாதர்கள், மாணவர்கள், இளைஞர்கள், அறிவுஜீவிகள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோருக்கு நமது கட்சி அறைகூவல் விடுக்கிறது.

8.7 நமது மக்களின் வீரஞ்செறிந்த மரபுகளையும், நமது பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் உன்னதமான, மதிப்புமிக்க அம்சங்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முன்னெடுத்துச் செல்கிறது. தேசபக்தியுடன் பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தை சிபிஐ(எம்) ஒன்றிணைக்கிறது. முழுமையான விடுதலைக்குரிய சரியான பாதையை காட்டக்கூடிய ஒரே வழியான மார்க்சிய, லெனினியத்தின் அறிவியல்பூர்வ தத்துவம் மற்றும் கோட்பாடுகளைத் தனது அனைத்து செயல்பாடுகள் மற்றும் போராட்டங்களுக்கு வழிகாட்டியாகக் கொண்டுள்ளது. தனது அணியில் மிகவும் மேம்பட்ட, மிகவும் செயலூக்கமுள்ள, சற்றும் சுயநலமற்ற உழைக்கும் மக்களின் புதல்வர்களையும், புதல்விகளையும் ஒன்றுபடுத்தி அவர்களை உறுதிமிக்க மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்டுகளாகவும், பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதிகளாகவும் வளர்த்தெடுக்க கட்சி அயர்வின்றி முயற்சி மேற்கொள்கிறது. ஒரு ஜனநாயகப்பூர்வ முன்னேற்றத்திற்கான போராட்டத்திற்காகவும், இந்தத் திட்டத்தை வென்றடைவதற்கான ஒரு வலிமையான மக்கள் ஜனநாயக முன்னணியைக் கட்டுதல் என்ற மாபெரும் கடமையை நிறைவேற்றுவதற்காகவும், அனைத்து தேசபக்த, ஜனநாயக சக்திகளையும் ஒன்றுபடுத்தும் கடமைக்காகவும் தனது அனைத்து சக்திகளையும், ஆதாரங்களையும் கட்சி அர்ப்பணிக்கிறது.

8.8 உலகை ஆதிக்கம் செய்யவிரும்புகிற அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியமானது இந்தியாவின் பொருளாதாரம், அரசியல் அமைப்பு மற்றும் இறையாண்மையைக்கூட அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்தத் தாக்குதலை நேருக்கு நேர் துணிவுடன் எதிர்கொள்ள அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் முற்போக்கு சக்திகளை ஒன்றிணைக்க வேண்டியது தொழிலாளி வர்க்கம் மற்றும் அதன் கட்சியின் மிகமுக்கியமான கடமையாகும். பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடிப்பதன் மூலமும், உலகம் முழுதுமுள்ள கம்யூனிஸ்ட் சக்திகளிடையே நோக்கம் மற்றும் செயல்பாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலமும் – புரட்சிகரப் போராட்டங்களின் மூலமும் சோசலிசத்தைக் கட்டுவதற்கு தலைமைதாங்கிய கம்யூனிஸ்ட் இயக்கங்களின் அனுபவங்களிலிருந்து பாடங்களைப் பெறுவதன் மூலமும், சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவிற்கான காரணங்களை பகுத்தாய்வதன்மூலமும் மட்டுமே நமது புரட்சிகரக் கடமையை நிறைவேற்ற முடியும். வலது திரிபுவாதம் மற்றும் இடது அதிதீவிரவாதத் திரிபுகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுதிபூணுகிறது. மக்கள் ஜனநாயக முன்னணியைக் கட்டுவதற்காக, வர்க்க சக்திகளின் பலாபலத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கான போராட்டத்தில் இந்திய மக்களைத் திரட்டும் கடமையை அது முன்னெடுத்துச் செல்லும்.

8.9 இந்தத் திட்டத்தை தொழிலாளி வர்க்கம் மற்றும் புரட்சிகர முன்னணிப் படையின் தலைமையில், மார்க்சிய -லெனினிய போதனைகளின் வழிகாட்டுதலோடு நமது நாட்டு மக்கள் நிறைவேற்றுவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நம்பிக்கை கொள்கிறது. நமது மகத்தான நாடான இந்தியாவும் ஒரு வெற்றிகரமான மக்கள் ஜனநாயக நாடாக மலர்ந்து சோசலிசத்திற்கான பாதையில் முன்னோக்கிச் செல்லும் என்று நமது கட்சி நம்பிக்கை கொள்கிறது.