சிறப்புமிகு சோவியத் ஒன்றியம்
முதலாளித்துவத்துடன் ஒப்பிடுகையில், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம், குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகச் செயல்பட்டது.
பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம் எதையெல்லாம் உருவாக்கமுடியும் என்பதற்கு, சோவியத் ஒன்றியம் ஒரு நிலையான உதாரணமாகும். முழு நேர வேலைவாய்ப்பு, உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியம், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, வேலை நேர உச்சவரம்பு, இலவச மருத்துவம் மற்றும் கல்வி (உயர்கல்வி உட்பட), மானியத்துடன் கூடிய விடுமுறைகள், கட்டுப்படியாகும் விலையில் வீடுகள், குறைவான குழந்தை பராமரிப்புச் செலவுகள், குறைந்த செலவில் பொதுப் போக்குவரத்து மற்றும் ஏறத்தாழ சமமான வருமானம். நம்மில் பெரும்பாலானோர் இந்த வசதிகளை விரும்புகிறோம். ஆயினும், இவற்றை நிரந்தரமாக அடைய முடியுமா? சோவியத் ஒன்றியம் இந்த வசதிகளை உருவாக்கியது.
சோவியத் ஒன்றியத்தில் பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம் நடைமுறையிலிருந்தபோது, 1928 முதல் 1989 வரை, போர்க்காலம் தவிர பிற சமயங்களில், நம்பிக்கையளிக்கும் விதத்தில் பொருளாதாரம் ஆண்டுதோறும் வளர்ச்சி அடைந்தது. தெளிவாகக் கூறுவதென்றால், முதலாளித்துவப் பொருளாதாரங்கள் ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பின்னடைவை தவறாது சந்தித்து, பெரிய மந்தநிலையில் மூழ்கியிருந்த போதும், சோவியத் பொருளாதாரம் இடையறாது வளர்ந்து, அனைவருக்கும் எப்பொழுதும் வேலைவாய்ப்புகளை வழங்கியது. சோவியத் ஒன்றியத்தின், பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரமானது, செயல்பட முடியாதது என்ற முதலாளித்துவ பிரச்சாரத்தை பொய்ப்பித்து, குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியது. மாறாக, பெருவாரியான மக்களுக்கு வேலையின்மை மற்றும் உச்சக்கட்ட வறுமையை அளித்த, பொருளாதார மந்தம் மற்றும் பின்னடைவுகளை வழக்கமாகக் கொண்டிருந்த, முதலாளித்துவ பொருளாதாரம்தான் செயல்பட முடியாததாக உள்ளது. இன்று, எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவம் சுருங்கி, சுணக்கமடைந்து, எண்ணற்ற மக்களை செயலற்ற நிலைக்குக் கட்டாயமாகத் தள்ளியுள்ளது என்பது தெளிவு.
சோவியத் வீழ்ச்சியில் ஏகாதிபத்தியத்தின் பங்கு
உண்மையில் சோவியத் ஒன்றியத்தின் அழிவுக்கு வழிவகுத்தவை எவையெனில், சோவியத்தின் பொருளாதாரத்தை அழிப்பதற்கு திட்டமிட்டவகையில் தொடர்ந்த மேற்குலகின் முயற்சிகள்; ரீகன் நிர்வாகத்தின் கூர்மைப்படுத்தப்பட்ட பனிப்போர்; இந்த இக்கட்டான சூழலில் இருந்து வெளிவர ஒரு வழி கண்டுபிடிக்கத் தெரியாத சோவியத் தலைமையின் இயலாமை ஆகியவையே ஆகும்.
1980களில் பனிப்போரின் பாதிப்புகள் சோவியத் ஒன்றியத்தில் தெரிய ஆரம்பித்தன. தனது தத்துவார்த்த எதிரியான அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிராக, சோவியத் மேற்கொண்ட இராணுவப் போட்டி பலவகையிலும் அதன் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது. பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்த போதிலும், கடந்த காலத்தைவிட மெதுவான வேகத்திலேயே வளர்ச்சி இருந்தது.
முதலாவதாக, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அதன் சிறந்த வளங்கள் இராணுவத்தால் ஏகபோகமாக்கிக் கொள்ளப்பட்டன. குடிமக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறந்த விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் இயந்திரக் கருவிகளின் பயன்பாடு, இராணுவத்திற்கு மட்டுமானதாக ஆக்கப்பட்டது.
இரண்டாவதாக, சோவியத்தின் பொருளாதாரத்தை முடக்குவதற்காக ரீகன் நிர்வாகத்தால் வெளிப்படையாகவே ஆயுதப் போட்டி புதுப்பிக்கப்பட்டது. இதற்கு ஈடுகொடுக்க, சோவியத்தின் இராணுவச் செலவினங்கள் உயர்த்தப்பட்டன. அமெரிக்க ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக, சோவியத் ஒன்றியம் தனது தாங்கும் சக்தியை மீறி, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய சதவிகிதத்தை, இராணுவத்திற்காக செலவழித்தது. அதே நேரத்தில், அமெரிக்கர்களும் இராணுவத்திற்காக ஒரு பெரும் தொகையை செலவழித்தபோதிலும், அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரத்தின் மொத்த தேசிய வருமானத்தில் அது சமாளிக்கக்கூடிய அளவுக்கே இருந்தது.
மூன்றாவதாக, முக்கியமான மூலப் பொருட்களுக்காக, சோவியத் ஒன்றியம் வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருந்தது. தன் நாட்டை மண்டியிடச் செய்வதற்காக மற்ற நாடுகள் விநியோகத்தைத் தடை செய்யும் அபாயங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, சோவியத் ஒன்றியம் தனது பரந்துபட்ட சொந்த எல்லைக்குள்ளிருந்து மூலப்பொருட்களை அகழ்ந்து எடுக்க முடிவு செய்தது. இது, நாட்டைத் தன்னிறைவு அடையச்செய்த அதே வேளையில், உள்நாட்டு ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்கச் செய்தது. எளிதில் கிடைத்துவந்த வளங்கள் தீர்ந்துவிட்டதால், கடினமான வழிகளில், புதியதாக மூலப் பொருட்களைத் தேடவேண்டிய தேவை ஏற்பட்டது. இது உற்பத்தி செலவை அதிகரித்தது.
நான்காவதாக, நாட்டின் பாதுகாப்பிற்காக சோவியத்துகள், கிழக்கு ஐரோப்பாவுடனும் மூன்றாம் உலக நாடுகளுடனும் நட்பை நாடினர். ஆனால் நட்பு பாராட்டிய நாடுகளைவிட சோவியத் ஒன்றியம் பொருளாதார பலத்துடன் இருந்தது. எனவே, அது தன்னுடன் இணைந்த சோஷலிச நாடுகளையும், மேற்கத்திய சக்திகளின் ஆக்கிரமிப்பிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளப் போராடிய பிற நாடுகளின் விடுதலை இயக்கங்களையும் பாதுகாக்க, அந்த நாடுகளுக்கு அச்சாணியாகவும், அவற்றிற்குப் பொருளாதார நலன்களை வழங்கக் கூடியதாகவும் மாறியது. எனவே, அதன் கூட்டாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், வாஷிங்டன், கம்யூனிச எதிர்ப்புக் கிளர்ச்சிகளுக்கு ஆதரவாக சூழ்ச்சி செய்து, ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்தது. இதனால் மாஸ்கோ தன் கூட்டாளிகளுக்காகச் செய்யும் செலவுகள் அதிகரித்தன. இதன் காரணமாக, சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து, அதன் பொருளாதார வளர்ச்சியை தீவிரமாக பாதித்தன.
நாட்டின் கடைசித் தலைவரான மைக்கேல் கோர்பச்சேவ் நட்பு நாடுகளிடமிருந்து இராணுவ தளங்களைத் திரும்பப்பெற்று, பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்து, அமெரிக்காவுடன் ஒத்துழைக்க உறுதியளித்தார். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, மேற்கத்திய பாணி சமூக ஜனநாயகத்திற்கு சோவியத் ஒன்றியத்தை மாற்ற முனைந்தார். ஆனால், அவரது பொருளாதார மற்றும் அயலுறவு சரணாகதிக் கொள்கைகள், பொருளாதார தேக்கத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு பதிலாக பேரழிவிற்கே வழிவகுத்தன. சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்புக் கரங்கள் விலக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா, ஈராக்கில் தொடங்கி யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், மீண்டும் ஈராக், பின் லிபியா என சிறியதும் பெரியதுமாக உலகம் முழுவதும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளில் இறங்கியது. கோர்பச்சேவ் பொருளாதாரத் திட்டமிடலைக் கைவிட்டு, சந்தைப் பொருளாதாரத்தை செயல்படுத்துவதற்கான வழியை அகலத் திறந்துவிட்டதானது, நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியது. ஐந்து ஆண்டுகளுக்குள் ரஷ்யாவில், வேலையின்மை, வீடில்லாமை, சுரண்டல், பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவை வன்மத்துடன் மீண்டும் குடியேறின.
1991 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, சோவியத் ஒன்றியம் என்பது அதிகாரப்பூர்வமாக இல்லாது ஒழிந்த நிலையில், கோர்பச்சேவ், “நாம் ஒரு புதிய உலகில் வாழ்கிறோம். பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. நமது பொருளாதாரம் மற்றும் சமூக விழுமியங்களைச் சிதைத்த இராணுவமயமாக்கல் மற்றும் வெறித்தனமான ஆயுதப் போட்டி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகப்போரின் அச்சுறுத்தல் நீக்கப்பட்டது” என்று கூறினார். (ராபர்ட்ஸ், 1999). இதனால் மேற்குலகில் கோர்பச்சேவின் புகழ் பரவியது. ஆனால் ரஷ்யர்கள் சோர்வுற்றிருந்தனர். முதலாளித்துவத்திற்கு மாற்றாக, உலகில் முதன்முதலில் உருவான முயற்சி ஏன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது என்பதற்கான உண்மையான காரணங்கள் கோர்பச்சேவின் வார்த்தைகளுக்குள் அடங்கியிருந்தன. சோவியத் பொருளாதார அமைப்பு செயல்படமுடியாது என நிரூபிக்கப்பட்டதால் அல்ல. உண்மையில் அது முதலாளித்துவத்தை விட சிறப்பாகச் செயல்பட்டது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் தொடங்கி, ரீகன் ஆட்சிக்காலத்தில் வீரியத்துடன் வளர்ந்த ஆயுதப் போட்டியால், சோவியத் ஒன்றியத்தின் பொருளாதாரத்தை வீழ்த்த முயன்ற பகையாளியான அமெரிக்காவிற்கு, சோவியத்தின் தலைமை அடிபணிந்ததே அதன் அழிவுக்கான உண்மையான காரணம். நாட்டின் 99 சதவீதம் பேருக்கு செழிப்பை அளித்த சோவியத் பொருளாதாரம் போற்றி வளர்க்கப்பட்டிருந்தால், மேல்மட்டத்தில் உள்ள ஒரு சதவீதம் பேருக்கு மட்டுமே பயன்தரும் தனியார்மய சந்தைப் பொருளாதாரங்களை அது மதிப்பிழக்கச் செய்திருக்கும். சுதந்திரச் சந்தைப் பொருளாதாரத்தில், மேல் மட்டத்தில் இருக்கும் ஒரு சதவீதத்தினரின் தனி உரிமையாக சொத்துக் குவிப்பு, சமூகப் பாதுகாப்பு, சொகுசு வாழ்க்கை அமைய, பெருவாரியான மக்களின் வேலையின்மை, வறுமை, பசி, கீழ்மை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவை இன்றியமையாதவையாக உள்ளன.
தோழர் ஸ்டாலின் ஒலித்த எச்சரிக்கை
பொதுவுடைமை அடிப்படையில் திட்டமிட்ட பொருளாதாரம், ஸ்டாலினின் வழிகாட்டுதலின் கீழ் கட்டியெழுப்பப்பட்டது. அவர் ஒருமுறை தீர்க்க தரிசனத்தோடு, “சோவியத் குடியரசைத் தகர்ப்பதில் முதலாளித்துவம் வெற்றி பெற்றால், அனைத்து முதலாளித்துவ மற்றும் காலனி நாடுகளிலும் ஓர் இருண்ட சகாப்தம் அரங்கேறும். ஒடுக்கப்பட்ட மக்களின், தொழிலாளி வர்க்கத்தின் குரல்வளை நெறிக்கப்படும். கம்யூனிசத்தால் அடைந்த முன்னேற்றங்களை இழக்க நேரிடும்”, என எச்சரித்தார். (ஸ்டாலின், 1954). “நம் நாடு தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராவதற்கு 10 ஆண்டுகள் மட்டுமே உள்ளன”‘ என நாஜிப் படையெடுப்பு ‘ஆபரேஷன் பார்பரோசா’விற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் துல்லியமாகக் கூறியதுபோலவே, முதலாளித்துவத்தினால் வீழ்த்தப்படுவதன் பின்விளைவுகளையும் துல்லியமாகக் கணித்தார்.
உண்மையாகவே நாம் தற்போது இருண்ட சகாப்தத்தில் உள்ளோம். இராணுவ வலிமையைப் பயன்படுத்தி, வாஷிங்டனுக்கு தன்னுடைய பிற்போக்குத்தனமான நிகழ்ச்சி நிரலைத் தொடர பரப்பளவு அதிகரித்துள்ளது. கியூபாவும் வடகொரியாவும் பொதுவுடைமையை மையப்படுத்தி திட்டமிடுகின்றன. ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பொருளாதாரத் தடைகள், தந்திரமாகத் தனிமைப்படுத்தல் மற்றும் இராணுவ ரீதியான துன்புறுத்தல்கள் (சோவியத் பொருளாதாரத்திற்கு செய்ததுபோலவே) ஆகியவற்றைப் பயன்படுத்தி அப்பொருளாதாரங்களை நாசம் செய்துவருகின்றன. இதன் மோசமான விளைவுகளை, பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிடலின் குறைபாடுகள் என போலியாகக் குற்றம் சுமத்திவிடலாம். உண்மையில் அவை முறையாகத் திட்டமிடப்பட்டு, இரகசியமாக நடத்தப்படும் போரின் விளைவுகளாகும். சோவியத் பொருளாதார அமைப்பு தோல்வியுற்றது என்று திட்டமிட்டு பரப்பப்பட்டதானது, கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் உட்பட பலரையும், பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிடல் அமைப்பு உள்ளார்ந்த குறைபாடுடையது என்ற முடிவுக்கு இட்டுச்சென்றது. கம்யூனிஸ்டுகள், சமூக ஜனநாயகக் கட்சிகளுக்குத் தாவினர்; அல்லது தீவிர அரசியலை முற்றிலுமாகக் கைவிட்டனர். சமூக ஜனநாயகக் கட்சிகளோ வலதுசாரிகளாக மாறி, சீர்திருத்தங்களைத் தவிர்த்து, புதிய தாராளமயத்தைத் தழுவின. எனவே, மேற்கத்திய அரசுகளுக்கு, பொதுவுடைமைக்கான கோரிக்கைகளை மழுங்கடிக்கவேண்டிய அவசியம் இல்லாது போயிற்று. அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்ற இலக்கை முழுவதுமாகக் கைவிட்டு, இனி பொது சேவைகள் மக்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்காது என்று அறிவித்தன (கோட்ஸ், 2001). அதே நேரத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகளில் கொண்டுவரப்பட்ட தனியார்மயமானது கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. அது, முன்னரே கணித்தபடி, ஊதிய மட்டத்தில் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சோவியத் ஒன்றியம் தோல்வியைத் தழுவிய நாள், மூலதனத்திற்கு ஒரு நல்ல விடியல் நாளாகும். ஆனால் மற்றவருக்கோ, ஸ்டாலின் எச்சரித்தபடி, அது குரல்வளையை நெறித்த நாளாகும்.
நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவம்
உலகின் மிகப்பெரிய முதலாளித்துவப் பொருளாதாரங்கள் 2008லிருந்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. சில, சிக்கன நடவடிக்கை எனும் மரணச் சுழலில் அகப்பட்டுள்ளன. இன்னும் சில, மெல்ல மெல்ல வளர்ந்துவரும் மந்த நிலையின் பிடியில் சிக்குண்டுள்ளன. சிக்கனம் என்ற பெயரில் பொது சேவைகளை அகற்றுவது என்பது, பரிந்துரைக்கப்பட்ட போலியான தீர்வு. உண்மையான தீர்வு கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை. அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, ஐரோப்பாவின் சில பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை இரட்டை இலக்கத்தைத் தொட்டுள்ளது. இளைஞர்களின் வேலையின்மை இன்னும் அதிகமாக உள்ளது. ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் வசிக்கும் கிரீஸில் 37 இலட்சம் பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள் (வாக்கர் மற்றும் ககௌனகி 2012).
மேலும், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சோவியத் ஒன்றியத்தை சிதைக்க, திட்டமிட்டு செயல்பட்டதுபோல், இந்த நெருக்கடியும் ஏதோ வெளிப்புற சக்திகளால் திட்டமிடப்பட்டு முதலாளித்துவத்திற்கு அழிவைக் கொண்டு வருவதாகக் கூற முகாந்திரம் இல்லை. அப்படி யாரும் திட்டமிட்டு அதை மூச்சுத்திணற வைக்காத போதிலும்கூட, முதலாளித்துவம் செயல்படவில்லை என்பதை சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இதற்கு நேர்மாறாக, தொடங்கப்பட்டதிலிருந்தே குறிவைக்கப்பட்டு பழிக்கு இலக்கான சோவியத் ஒன்றியத்தின் திட்டமிட்ட பொருளாதாரம், இரண்டாம் உலகப்போர் ஆண்டுகளைத் தவிர பிற சமயங்களில், ஒருபோதும் மந்தநிலையில் தடுமாறவில்லை; முழுமையான வேலைவாய்ப்பு வழங்கத் தவறவில்லை. ஆனாலும், சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் ஆதரவாளர்கள் உட்பட பலரும், இது செயல்பட முடியாது என்றே கருதுகின்றனர். இது, முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கருத்து.
பொதுவுடைமை அடிப்படையில் திட்டமிட்ட பொருளாதாரத்தில் உள்ளார்ந்த பலவீனம் இருந்ததாலேயே அது தோல்வியடைந்தது என்பதாக சோவியத் ஒன்றியத்தின் அனுபவம் நமக்குக் காட்டவில்லை. மாறாக, நீடித்த பொருளாதார வளர்ச்சி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு, இலவச மற்றும் கட்டுப்படியாகும் விலையில் அளிக்கப்பட்ட பொதுச் சேவைகளின் விரிவான பட்டியல், ஏறத்தாழ சமத்துவமான வருமானம் என முதலாளித்துவத்தால் செய்ய முடியாததை பொதுவுடைமை செய்யமுடியும் என்பதை நிரூபித்தது. ஒரு வருடம் இரு வருடமல்ல; தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் தலைமை பொதுவுடைமையிலிருந்து பின்வாங்கும்வரை இது நடந்தது. உயர்மட்டத்தில் இருக்கும் தனிவுடைமையைப் பாதுகாக்கும், ஒரு சதவிகிதத்தினர், தங்களுக்கு எதிரான இப்பொருளாதார அமைப்பை நசுக்க, அரசியல், இராணுவ, பொருளாதார மற்றும் கருத்தியல் ரீதியான அனைத்து வழிகளையும் பயன்படுத்துவார்கள் என்பதைக் கண்கூடாகக் காணமுடிந்தது. ஆனாலும், கீழ்மட்டத்தில் உள்ள 99 சத மக்களுக்காக அது நின்றது. (இன்று கியூபா மற்றும் வட கொரியாவிற்கு எதிராக இதே முயற்சி தொடர்கிறது).
சோவியத் ஒன்றியத்தின் தோல்வி ஓர் இருண்ட காலத்திற்குள் நம்மைத் தள்ளியுள்ளது. ஆயினும், அதை இழிவுபடுத்தி அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராகப் போராட, பொதுவுடைமை சிறப்பாக செயல்பட்டதை வெளிப்படுத்தும், 1928 முதல் 1989 வரையிலான சோவியத்தின் அனுபவம், நமக்கு உள்ளது.
பொதுவுடமைப் பொருளாதார சாதனைகள்
வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பொருளாதார மந்தம், ஒருபுறம் செல்வக்குவிப்பு, மறுபுறம் வறுமை மற்றும் சுரண்டல் ஆகிய முதலாளித்துவத்தின் தீமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததிலும், பரந்த இலவசப் பொது சேவைகளை வழங்கியதிலும் சோவியத் பொருளாதார அமைப்பு முறையின் நன்மைகள் அறியப்பட்டன. வேலையின்மை ஒழிப்பு, சோவியத் பொருளாதார அமைப்பின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று. சோவியத் ஒன்றியம் அனைவருக்கும் வேலை வழங்கியது மட்டுமல்லாது, வேலை ஒரு சமூகக் கடமையாகக் கருதப்பட்டு, அரசியலமைப்பு சட்டத்தில் பொறிக்கப்பட்டது. 1936-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம், சோவியத் ஒன்றியத்தின் குடிமக்களுக்கு வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்கியது. அதாவது, அவர்களது வேலையின் அளவு மற்றும் தரத்திற்கு ஏற்ப பணம் பெறுவதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மறுபுறம், வேலை செய்யாமல் வேறு வழிகளில் வாழ்க்கை நடத்துவது தடை செய்யப்பட்டது. வட்டி, கருப்புச் சந்தை, ஊக வணிக இலாபம் ஆகியவற்றின் மூலம் வருமானம் பெறுவது சமூக ஒட்டுண்ணித்தனம் என்று கருதப்பட்டு சட்டவிரோதமாக்கப்பட்டது (சைமன்ஸ்கி, 1984). உழைப்பு, பற்றாக்குறையாக இருந்ததால் வேலை தேடுவது எளிதாக இருந்தது. இதன் வெளிப்படையான பலன்களாக, தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் பணியாளர்களின் நலனில் அதிக கவனம் செலுத்துவது ஆகியவற்றில் அவர்களது பேரம் பேசும் ஆற்றல் அதிகமானது (கோட்ஸ், 2003).
சோவியத் அரசியலமைப்பு சட்டம், 1977-இன் 41வது பிரிவு ஒரு வாரத்திற்கான வேலை நேரத்தை 41 மணி நேரம் என வரையறுத்தது. இரவுநேரப் பணியில் உள்ள தொழிலாளர்கள், 7 மணி நேரம் வேலை செய்தால், முழு ஊதியம், அதாவது 8 மணி நேரத்திற்கான ஊதியம் பெற்றனர். சுரங்கம் போன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவோர் அல்லது தொடர்ந்து விழிப்புடன் இருக்கவேண்டிய மருத்துவர்கள் ஆகியோர், 6 அல்லது 7 மணி நேரம் வேலை செய்தால், முழு ஊதியம் பெற்றனர். சிறப்பு சூழ்நிலைகள் தவிர, பிற சமயங்களில் கூடுதல் நேரம் வேலை செய்வது தடைசெய்யப்பட்டது (சைமன்ஸ்கி, 1984).
1960இல் இருந்து ஊழியர்களுக்கு, சராசரியாக ஒரு மாதம் விடுமுறை கிடைத்தது (கீரன் மற்றும் கென்னி, 2004; சைமன்ஸ்கி, 1984). மானியத்துடன் கூடிய ஓய்வு விடுதிகளில், விடுமுறையைக் கழிக்க வசதி ஏற்படுத்தப்பட்டது (கோட்ஸ், 2003).
60 வயதில் ஆண்களுக்கும் 55 வயதில் பெண்களுக்கும் என, அனைத்து சோவியத் மூத்த குடிமக்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது (லெரூஜ், 2010). அரசியலமைப்புச் சட்டம், 1977, பிரிவு 43இன் படி ஓய்வூதிய உரிமை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலன்கள் உத்திரவாதம் செய்யப்பட்டன. இது, முதலாளித்துவ நாடுகளில் உள்ளதைப்போல், அரசியல்வாதிகளின் தற்காலிக விருப்பங்களின்பாற்பட்டதல்ல; மாறாக திரும்பப் பெறப்பட முடியாதது.
சோவியத்தின் அரசமைப்பு சட்டம் 1936, பிரிவு 122-இன் படி, பெண்களுக்கு, பல சலுகைகளுடன், முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பும் உத்தரவாதப்படுத்தப்பட்டது. மேலும், 1936-ஆம் வருட அரசியலமைப்புச் சட்டம் மகப்பேறு இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் மழலையர் பள்ளிகள் இணைந்த, பரந்த கட்டமைப்பை ஏற்படுத்த ஏற்பாடு செய்தது. திருத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டம், 1977இன் பிரிவு 53, ஒவ்வொரு குழந்தைப் பிறப்பிற்கும் மானியம்; பெரிய குடும்பங்களுக்கு, குழந்தைகளுக்கான பணப்பயன்கள், நிதிச் சலுகைகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் குழந்தைப் பராமரிப்பில் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஒரு பரந்த கட்டமைப்பை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என வரையறுத்தது. குழந்தைப் பராமரிப்பிற்கான ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கிய முதல் நாடு சோவியத் ஒன்றியம்தான் (சைமன்ஸ்கி, 1984).
அதேபோல் அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 122-இன் படி சோவியத் ஒன்றியத்தில் பெண்களுக்கு பொருளாதாரம், ஆட்சியதிகாரம், பண்பாடு, சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும், கல்வி, வேலைவாய்ப்பு, ஓய்வு, பொழுதுபோக்கு, சமூகக் காப்பீடு உட்பட அனைத்திலும் ஆண்களுக்கு நிகராக சம உரிமை வழங்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் பல முதன்முதல்களில் ஒன்று, கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி, அதற்கான மருத்துவ சேவை இலவசம் என அறிவித்ததாகும் (ஷெர்மன் 1969). பெண்களை அரசின் உயர் பதவிகளில் அமர்த்திய முதல் நாடும் இதுதான். மத்திய ஆசியப் பகுதியிலிருந்த சோவியத்தின் பகுதிகளில், இஸ்லாத்தின் பழமைவாத பெண் ஒடுக்குமுறையில் இருந்து அவர்களை விடுவிக்க, தீவிரப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இது, இப்பகுதிகளில் பெண்களின் வாழ்க்கை நிலையில் ஓர் அடிப்படை மாற்றத்தை உருவாக்கியது (சைமன்ஸ்கி, 1984).
1977 அரசியலமைப்பு சட்டப்பிரிவு-44, வீட்டுவசதி உரிமையை உறுதி செய்தது. ஆயினும், ஆஸ்திரியா மற்றும் மேற்கு ஜெர்மனியை ஒப்பிடும்போது, ஒரு நபருக்கு நகர்ப்புற வீட்டு வசதிக்கான இடம் பாதியளவே இருந்தது. ஏனெனில், ஜார் மன்னர் ஆட்சிக்காலத்தில் போதிய அளவு கட்டிடங்கள் இல்லை. மேலும் இரண்டாம் உலகப் போரின் போது பெருமளவில் வீடுகள் இடிக்கப்பட்டன. இதுபோக, சோவியத் ஒன்றியம் கனரகத் தொழில் வளர்ச்சிக்கே முக்கியத்துவம் அளித்தது. அக்டோபர் புரட்சிக்கு முன்பு, சாதாரண மக்களுக்கு, நகர்ப்புறத்தில், போதுமான வீடுகள் கட்டப்படவில்லை. புரட்சிக்குப் பிறகு புதிய வீடுகள் கட்டப்பட்டன. ஆனாலும் வீட்டு வசதி போதுமானதாக இல்லை. தொழில்துறைக் கட்டுமானத்திற்கு மூலதனம் தேவையாக இருந்ததால், வீடு கட்டுவதற்காக பெரும் பணம் செலவழிக்க இயலவில்லை. இரண்டாம் உலகப் போரின்போது கூடுதலாக, நாஜிப் படையெடுப்பினால், சோவியத் குடியிருப்புகளில் மூன்றில் ஒரு பங்கில் இருந்து பாதிவரை அழிக்கப்பட்டிருந்தது (ஷெர்மன் 1969). நகரவாசிகள், பொதுவாக தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசித்தனர். சட்டப்படியான வாடகை மிக மிகக் குறைவு. மொத்த குடும்ப நுகர்வுச் செலவு நாலு முதல் ஐந்து சதவீதம் இருந்தபோது, வாடகை சுமார் 2 அல்லது 3 சதவீதம் மட்டுமே இருந்தது (சைமன்ஸ்கி, 1984; கீரன் மற்றும் கென்னி, 2004). அமெரிக்காவை ஒப்பிடும்போது, இது கடுமையாக வேறுபட்டது. அங்கு, ஒரு சராசரிக் குடும்பத்தின் வரவு செலவுத் திட்டத்தில், கணிசமான பங்கை வாடகை எடுத்துக்கொண்டது (சைமன்ஸ்கி, 1984). இன்றும் கூட நிலைமை அப்படியே உள்ளது.
உணவு மற்றும் பிற அடிப்படை அத்தியாவசிய தேவைகள் மானிய விலையிலும், ஆடம்பரப் பொருட்கள் அவற்றின் மதிப்பை விட மிக அதிகமான விலைக்கும் விற்கப்பட்டன.
பொதுப் போக்குவரத்து மிகப் பரவலான இடங்களை உள்ளடக்கி, திறமையாகவும் அதே நேரத்தில் மிகக் குறைவான கட்டணத்துடனோ இலவசமாகவோ வழங்கப்பட்டது. 1930-களில் இருந்து 1970-கள் வரை சுரங்கப்பாதைக் கட்டணம் வெறும் எட்டு சென்ட்களாக மாறாமல் இருந்தது (சைமன்ஸ்கி, 1984). முதலாளித்துவ நாடுகளில், இதனோடு ஒப்பிடக் கூடியதாக எப்பொழுதும் எதுவுமே இருந்ததில்லை. காரணம் என்னவெனில், திறமையான, மலிவான, விரிவான பொதுப் போக்குவரத்தானது, ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், பெட்ரோலிய நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் இலாபம் ஈட்டும் வாய்ப்பை கடுமையாகப் பாதிக்கும். எனவே, இந்நிறுவனங்கள் தங்கள் இலாபத்தைப் பாதுகாப்பதற்காக, தங்களுக்குள்ள செல்வாக்கை, செல்வத்தை, தொடர்புகளைப் பயன்படுத்தி, தனியார் போக்குவரத்திற்கு மாற்றாக, சிறந்த, மலிவான, பொதுப் போக்குவரத்து வளர்வதைத் தடுக்கின்றன. தனியார்துறை தொடர்ந்து வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என எதிர்பார்க்கும் அரசாங்கங்கள், தனியார் தொழில்துறையை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியுள்ளது. இதை மாற்றுவதற்கான ஒரே வழி, மூலதனத்தை பொதுச் சொத்தாக ஆக்குவதே. அப்பொழுதுதான், மக்களுக்காக எனத் திட்டமிடப்பட்ட இலக்குகளை அடையமுடியும்.
சோவியத் ஒன்றியம் தனது முதலாளித்துவப் போட்டியாளர்களை விட சுகாதாரப் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தது. வேறு எந்த நாட்டிலும், சோவியத் ஒன்றியத்தைவிட அதிக மருத்துவர்களோ, மருத்துவமனைகளோ இல்லை. 1977-இல் சோவியத் ஒன்றியத்தில் 10,000 பேருக்கு 35 மருத்துவர்களும் 212 மருத்துவமனைப் படுக்கைகளும் இருந்தன. இது அமெரிக்காவில், 18 மருத்துவர்கள் மற்றும் 63 படுக்கைகளாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). மிக முக்கியமாக, சுகாதாரம் சோவியத் ஒன்றியத்தில் இலவசமாக இருந்தது. ஆனால் அமெரிக்க குடிமக்கள் இதற்காகப் பணம் செலுத்தவேண்டும் என்பது சோவியத்தில் காட்டுமிராண்டித்தனமாகக் கருதப்பட்டது. சோவியத் குடிமக்கள், இந்த விஷயத்தை நம்ப முடியாமல், அமெரிக்க சுற்றுலாப் பயணிகளிடம், மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினர் (ஷெர்மன் 1969).
பல்கலைக்கழகக் கல்வியும் இலவசம். முதுகலை மாணவர்களுக்கு, பாடப்புத்தகங்கள், தங்கும் அறை, உணவு மற்றும் பிற செலவுகளுக்கும் போதுமான அளவு உதவித்தொகைகள் கிடைத்தன (ஷெர்மன் 1969, சைமன்ஸ்கி, 1984).
சோவியத் ஒன்றியத்தில், முதலாளித்துவ நாடுகளை ஒப்பிடும்போது, வருமான ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவு. அதிகபட்ச வருமானத்திற்கும் சராசரி வருமானத்திற்கும் இடையேயான வித்தியாசம், ஒரு மருத்துவருக்கும் சராசரி தொழிலாளிக்கும் இடையேயான வருமான வேறுபாடு, அமெரிக்காவில் சோவியத் ஒன்றியத்தைவிட 8 முதல் 10 மடங்கு அதிகமாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). படித்த உயர் வர்க்கத்தினரின் அதிக வருமானம் என்பது, ஒரு சாதாரண வீடு அல்லது கார் வாங்கக்கூடியதை விட அதிக சிறப்புரிமையை வழங்கவில்லை (கோட்ஸ், 2000). கனடாவுடன் ஒப்பிடுகையில், 2010இல் அதிக ஊதியம் பெறும் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளில், முதல் 100 நபர்களின் வருமானம், சராசரி முழுநேர ஊதியத்தை விட 155 மடங்கு அதிகமாக இருந்தது. சராசரி முழுநேர ஊதியம் 43,000 டாலர்களாகும் (மாற்றுக் கொள்கைகளுக்கான கனடிய மையம், 2011). கார்ப்பரேட் உயர்வர்க்கத்தினர் ஒரே வாரத்தில் இதைவிடப் பத்து மடங்கு அதிகமாக, அதாவது 4,30,000 டாலர்கள் வருமானம் ஈட்டினர்.
சோவியத் ஒன்றியத்தில் வருமான வித்தியாசம் குறைவாக இருந்ததற்கான காரணம் என்னவென்றால், அனைத்து சோவியத் குடிமக்களுக்கும் எந்தக் கட்டணமும் இன்றி அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் அத்தியாவசியச் சேவைகள் கிடைத்ததாகும். எனவே, வருமான வித்தியாசத்தைவிட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் கிடைக்காத தன்மையின் அளவு மிகக் குறைவாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). பல உலக நாடுகளின் தலைநகரங்களில் உள்ள, ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள், மற்றும் மன்னர்களின் ஆடம்பரமான மாளிகைகள் போன்ற வீடுகளில் சோவியத் தலைவர்கள் வசிக்கவில்லை (பேரன்டி, 1997). உதாரணமாக, கோர்பச்சேவ், நான்கு குடும்பங்கள் இருந்த ஓர் அடுக்குமாடிக் கட்டிடத்தில் வசித்துவந்தார். லெனின்கிராட் கட்டுமானத்துறையின் தலைமை அதிகாரி, ஒரு படுக்கையறை கொண்ட குடியிருப்பிலும், மின்ஸ்கில் ஓர் உயர்மட்ட அரசியல் அதிகாரி, மனைவி, மகள், மருமகனுடன் இரு படுக்கையறைகள் கொண்ட குடியிருப்பிலும் வசித்துவந்தனர் (கோட்ஸ் & வேய்ர், 1997). ஆளும் உயர்வர்க்கத்தினரை, சோவியத் ஒன்றியத்தின் விமர்சகர்கள், சுரண்டுபவர்கள் என குற்றம் சாட்டினர். ஆனால், அவர்களது மிதமான வருமானம் மற்றும் பொருட்கள் பயன்பாடு, இந்த மதிப்பீட்டின் மீது கடுமையான சந்தேகத்தை எழுப்புகின்றது. உண்மையில் சோவியத்தின் ஆளும்வர்க்கம் சுரண்டும் தன்மையது என்று கூறுவது மனிதகுல வரலாற்றில் மிக வினோதமானது.
தமிழில்: சோபனா