தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – மதுக்கூர் ராமலிங்கம்

(குரல் : ஆனந்த் ராஜ்)
கட்சித் திட்டம் கூறுவது:

சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பாலான இந்திய மக்கள் பங்கேற்று அதை வெற்றிகரமாக்கினர். சமூக தீங்குகளான சாதியம், சமூகப் பகைமை போன்றவற்றிலிருந்து விடுதலை, ஜனநாயக கட்டமைப்புக்குள் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவற்றையே மக்கள் சுதந்திரம் என கருதினர்.புதிய அரசுக்கு தலைமை ஏற்ற பெருமுதலாளி வர்க்கம் ஜனநாயகப்புரட்சியின் அடிப்படை கடமைகளை நிறைவேற்ற மறுத்தது.

சாதி மற்றும் பாலியல் ஒடுக்குமுறைக்கு தீர்வு காணப்பட நிலச்சீர்த்திருத்தம் உள்ளிட்ட புரட்சிகர மாறுதல் தேவையாகிறது என்று கூறும் கட்சித்திட்டம் பழைய சமுதாய அமைப்பை தூக்கி எறிய தேவையான அடிப்படை வர்க்கப் பிரச்சனையான நிலம், கூலிக்கான போராட்டம் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம் அவசியம் என்று வரையறை செய்கிறது. சமூக சீர்திருத்த இயக்கங்கள் மூலம் சாதிய முறை மற்றும் அதன் அனைத்து வடிவத்திலான சமூக ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டியது ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம், வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.

பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூக அரசியல் வாழ்வில் சுயேச்சையான பங்கு பெண்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படையான நிபந்தனையாகும். ஏற்றத்தாழ்வான நிலையை எதிர்த்த போராட்டமும் சமத்துவத்திற்கான பெண்களின் போராட்டமும் சமூக விடுதலைக்கான இயக்கத்தின் பகுதியே ஆகும்.
சமூக சீர்திருத்தம் என்பது புரட்சியை நீர்த்துப் போக வைப்பது அல்ல. மாறாக, ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தின் தவிர்க்க முடியாத பகுதி சமூக சீர்திருத்த இயக்கம் என்கிற தெளிவு தேவையாகிறது. புரட்சியின் ஜனநாயகக் கட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால்தான் அடுத்தடுத்த கட்டத்தை எய்துவது சாத்தியமாகும் என்ற தெளிவுடன் நம்முடைய பணியின் ஒரு பகுதியாக சமூக சீர்த்திருத்தத்திற்கான இயக்கம் மாற்றப்பட வேண்டும்.

சமூக சீர்திருத்தம் என்றால் என்ன?

சமூக சீர்த்திருத்தம் என்பது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள சாதியம், பெண்ணடிமைத் தனம், மூடநம்பிக்கை போன்றவற்றை அகற்றி முற்போக்கு குணாம்சம் கொண்டதாக மாற்றுவதாகும். சமூக சீர்திருத்தம் என்பதன் அடித்தளம் பொருளியல் துறையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தே அமைகிறது.

பொருளாதார அடித்தளத்தில் மாற்றம் நிகழும் போது, மேல் கட்டுமானமான அரசு , சட்டம், மதம், கல்வி, கலை இலக்கியம், குடும்பப் பழக்கவழக்கங்கள், சடங்குகள் ஆகியவற்றிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால், இவை எந்திரகதியில் நிகழ்வது இல்லை. சமூகம் முற்போக்கான திசைவழியில் முன்னேறுவதற்கான போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்த வேண்டியுள்ளது.

நிலப்பிரபுத்துவத்தின் மிச்சசொச்சங்களை அகற்றுவதற்கான போராட்டத்தை நடத்துவது அவசியம். முதலாளித்துவம் வளர்ந்த நாடுகள லும் கூட இந்தப் போராட்டம் நடந்திருக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது.

சாதியை அடிப்படையாகக் கொண்ட இந்திய சமூகத்தில் சமூக சீர்திருத்தத்திற்கான இயக்கம் தீயின் தீவிரத்துடன் இயங்க வேண்டியுள்ளது. சாதியம், பெண்ணடிமைத்தனம், மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடர வேண்டியுள்ளது. ஆளும் வர்க்கம் இதுகுறித்து கவலை கொள்ளாது. இன்னும் சொல்லப்போனால், இந்தக் கேடுகளை தனது ஆதிக்கத்திற்கு அனுசரணையாக மாற்றிக் கொள்ளும். சமூகத்தில் புரட்சிகர மாற்றத்தை இலக்காக கொண்ட தொழிலாளி வர்க்கத்தின் தோள்களில் இந்தக் கடமையும் சுமத்தப்பட்டுள்ளது.

வங்கத்தில் ராஜாராம் மோகன்ராய் துவக்கி வைத்த பிரம்ம சமாஜம் வடஇந்தியாவில் தயானந்த சரஸ்வதியால் துவக்கப்பட்ட ஆரிய சமாஜம், மராட்டியத்தில் மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரி பூலே நடத்திய இயக்கம், கேரளத்தில் அய்யன்காளி, நாராயணகுரு உருவாக்கிய எழுச்சி, ஆந்திராவின் வீரேசலிங்கம், கர்நாடகத்தின் பசவண்ணா ஆகியோர் சாதியம், பெண்ணடிமைத்தனம் ஆகிய இரண்டுக்கும் எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுவுடைமை இயக்கம் நடத்திய நிலத்திற்கான இயக்கம் மற்றும் உழவர்களின் கிளர்ச்சியின் உள்ளார்ந்த அம்சமாக சமூக சீர்திருத்தமும் இருந்தது என்பதை மறுக்க முடியாது.

வர்ணாசிரம அநீதியை முன்வைத்த வேத மரபுக்கு எதிரான மரபை முன்வைத்த தமிழகம் சமூக சீர்திருத்த இயக்க வரலாற்றில் தனித்துவம் பெற்றுள்ளது என்றே கூறலாம். சமூக சீர்திருத்த இயக்கத்தில் முன்னின்ற மாநிலங்களில் ஒன்று தமிழகம். இன்றளவும் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தாக்கம் தமிழ் மண்ணில் அழுத்தமாக வேர் கொண்டுள்ளது. தமிழகத்தைப் புரிந்து கொள்ள, மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை நடைமுறைப்படுத்த, இடது ஜனநாயக அணியை வலுவாக கட்டிட தமிழக சமூக சீர்திருத்த இயக்க வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

சமூகமும், வர்க்கமும்

சங்க காலம் தமிழர்களின் பொற்காலம் என்று வியந்தோதுகிற போக்கு இருக்கிறது. அந்த சமூகத்தில் சாதி இல்லை, பெண்ணடிமைத்தனம் இல்லை. எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தது என்று கூறுவதெல்லாம் மிகையானவையே ஆகும். இனக்குழு சமூகத்திற்கு அடுத்த நிலையிலான சங்ககாலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய திணைகள் இருந்தன. சங்க கால சமுதாயத்தை மேய்ச்சல் சமுதாயமாக மாறியதன் முதல்படி என்பர். பின்னர், நதிக்கரைகளில் வேளாண் சமூகம் உருவானது.துவக்கத்தில் கால்நடைகளுக்காக குழுக்கள் போரிட்ட நிலையில், பின்னர் வேளாண் நில விரிவாக்கத்திற்காக குறுநில மன்னர்கள் போரிட்டனர். வேளாண் சமூகம் வளர்ந்த நிலையில், அடித்தள மக்களின் நிலை மிகவும் மோசமாகவே இருந்ததோடு, வர்க்கப் பிரிவினைகளும் தோன்றி விட்டன.

“பருவ வாணத்து படுமலை கடுப்ப
கருவை வேய்ந்த கவின் குடிச்சீறுர்”

என்கிறது பெரும்பாணாற்றுப்படை. அதாவது, ஊருக்கு ஒதுக்குப்புறமாக குடிசைகளில் ஒருபகுதி மக்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களது வைக்கோல் வேய்ந்த கூரை மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, கருமையானது என்று பேசுகிறது பெரும்பாணாற்றுப்படை.

பெரும்பாணாற்றுப்படையின் மற்றொரு பாடல் உழைத்துக் கொடுத்த விவசாயத் தொழிலாளர்கள், வரகரிசியை உண்டு, வயிற்றை நிரப்புகையில், பெரும் நிலப்பிரபுக்கள் வெண்ணை போன்ற அரிசியை பெட்டைக்கோழி வறுவ லோடு சாப்பிடுகின்றனர் என்று கூறுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலமற்ற விவசாயிகள் ஒடுக்கப்பட்டவர்களாகவும், நிலமுள்ள வேளாளர்கள் உயர்ந்தவர்களாகவும் கருதப்பட்டனர். இது பொருளியல் வாழ்வில் மட்டுமல்ல, சமூக வாழ்விலும் பிரதிபலித்தது.

ஆனால், அதே நேரத்தில், வைதீகக் கொள்கைகளுக்கு எதிரான குரல்களும் சங்க இலக்கியப் பாடல்களில் ஒலிக்கின்றன என்பதை மனங்கொள்ள வேண்டும். பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற நான்கு அடுக்கை கடவுளின் பெயரால் வைதீகம் முன்வைக்கிறபோது, துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற இந்த நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகள் இல்லை என்கிறார் மாங்குடி மருதனார்.

ஐம்பூதங்களால் ஆனதுதான் இவ்வுலகம் என்று ஆன்மாவை பின்னுக்குத் தள்ளுகிற சிந்தனையும், உடலுக்கு உணவே பிரதானம் என்கிற குரளும் சங்க இலக்கியத்தில் இருக்கிறது.
ஒரு அரசனின் வலிமை படைப்பெருக்கத்தால் அல்ல, அறநெறிகளினாலேயே அளவிடப்படும் என்று மதுரை மருதன் இளநாகனாரும், அரசனே முதல் என்ற மோசிகீரனாரின் பாடலுக்கு எதிராக குடிமக்கள் தான் முதல் என்று சொல்லும் ஒளவையின் குரலையும் சங்க இலக்கியத்தில் கேட்க முடிகிறது.

வைதீக மரபில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெற வாய்ப்பே இல்லை. அவ்வாறு கல்வி பெற முயன்றால், கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. புறநானூற்றில் பாண்டிய நெடுஞ்செழியன், கீழ்க்குடியில் பிறந்த ஒருவன் கல்வி கற்றால், மேல்குடியில் பிறந்தவனும் அவனை சேர்த்துக் கொள்வான் என்று பாடுவது பொதுக் கல்வியின் தேவையைப் பேசுகிறது.

பிறப்பால் மனிதனைப் பிரித்த வைதீக மரபுக்கு எதிராக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவனின் குறளும், தாவரத்துக்கு ஓர் அறிவு உண்டு என்று அறிவியல் பேசிய தொல்காப்பியமும், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் அறைகூவலும், யாயும் யாயும் யாராகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் என்ற செம்புலப் பெயல் நீரார் என்ற புலவரின் சித்தரிப்பும் மனங்கொள்ளத்தக்கவை. பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தலும் அதனினும் இலமே என்ற சிந்தனையும் சங்க இலக்கியப் பாடல்களில் தெறிக்கிறது.

சமண, புத்த மதங்கள்

வேத மரபு என்பது பிரமாணம் எனும் வேள்விச் சடங்கையும், உபநிசத் எனப்பட்ட தத்துவ சிந்தனைகளையும் மையமாகக் கொண்டது. தீயில் சமைத்து சாப்பிடுவதன் பெருமையை உணர்ந்த மனிதன், தீயைப் பாதுகாக்க முயன்றான். அந்தப் பணியே வேள்வியாக மாறியது. புரோகிதர்கள் அதற்கு புனிதம் சேர்த்து, தங்களை வளமைப்படுத்திக் கொண்டனர். யாகம் குறித்து கேள்வி எழுப்பக் கூடாது என்று கட்டளையிடப்பட்டது. இதன் ஊடுருவலை சங்க இலக்கியத்திலேயே காண முடிகிறது.

வேள்வியால் வேளாண்மைக்கும் கால்நடைகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது. உழைத்து உண்பவர், பிறர் உழைப்பில் வாழ்பவர் என்ற இரு பிரிவு உருவானது. சாதியின் பெயரால் இது நியாயப்படுத்தப்பட்டது.

பசுவை பலியிட்டு நடத்தப்பட்ட யாகத்தை தடுத்த ஆபுத்திரன் வேதியர்களால் அடித்து விரட்டப்பட்ட கதையை புத்த மதகாப்பியமான மணி மேகலை பேசுகிறது. நீலகேசி எனும் பெண், தத்துவத்திலும் விவாதத்திலும் சிறந்து விளங்கியதை நீலகேசி எனும் சமண நூல் எடுத்துரைக்கிறது.

வேத மரபுக்கு எதிராகப் புறப்பட்டவையே சமண, புத்த மதங்கள். சாதியத்திற்கு எதிராகவும் கல்வியை பொதுவாக்கவும் இந்த மதங்கள் பெரும் பணியாற்றியுள்ளன.

வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் என்று புகாரில் வாழும் கண்ணகியை பாடிய இளங்கோவடிகள் மதுரைக்காண்டத்தில் பேரரசனை நோக்கி தேரா மன்னா என அழைக்க வைத்தது சாதாரணமான ஒன்றல்ல. அந்தச் சிலப்பதிகாரம் சமண இலக்கியமாகும்.

பசியைப் பெரும் பாவி என்று பேசும் சீவக சிந்தாமணியின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார், பசி வந்தால், உடல் மட்டுமல்ல, உள்ளப் பண்புகளும் போய்விடும் என்கிறார்.இது சமண இலக்கியம். இதைத்தான் ‘பசி வந்திட பத்தும் பறந்து போகும்’ என்றது பின்னாளில் விவேக சிந்தாமணி.

பௌத்த இலக்கியமான மணிமேகலை உலகின் உண்மையான நெறி வாழ்வு எதுவென்றால், கொடுமையான பசியைக் களைவதே என்றும் உண்டி கொடுத்தவர் உயிர் கொடுத்தவர் என்றும் பேசுகிறது.
மலை மீது அழைத்துச் சென்று தன் மனைவியை தள்ளிவிட்டுக் கொல்ல முயன்ற கணவனை, அந்த மலையிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்றவர் குண்டலகேசி. தன்னைக் கொல்ல வருபவன் கணவனேயானாலும், தற்காத்துக் கொள்ள அவனைக் கொல்வது கற்பு நிலைதான் என்று குண்டலகேசி கதை பேசுவதும் இவரை சமண, பௌத்த மதங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கவை.

திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் சமண, புத்த மடங்கள், பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன. அனைத்து சாதியினருக்கும் கல்வி வழங்க முற்பட்டதால் பின்னாளில், தமிழில் கல்விக்கூடங்களுக்கு பள்ளி என்ற பெயர் இதனாலேயே வந்தது. வர்ணாசிரம அதர்மத்தின் பெயரால், அனைவருக்கும் கல்வி மறுக்கப்பட்ட பின்னணியில், சாதி வித்தியாசம் இல்லாமல் சமண, புத்த மதங்கள் கல்வி கொடுத்துள்ளன. வஜ்ரநந்தி என்பவர் மதுரையில் (கி.பி.470) திராவிடச் சங்கம் நிறுவியதாகவும் நீலகேசி, குண்டலகேசி உள்ளிட்ட நூல்கள் தோன்ற இந்த சங்கமே காரணம் என்கிறார் வரலாற்றாசிரியர் கே.கே.பிள்ளை.

எனினும் கி.பி.7 ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் என்ற பெயரில் எழுந்த சைவ, வைணவ புயலை எதிர்த்து சமண, புத்த மதங்களால் நிற்க முடியவில்லை. வேத மரபு வெகுஜனத் தன்மையுடன் மக்களைக் கவர்ந்தது. சமண, புத்த மதங்களை மட்டுமல்ல, அதைப் பின்பற்றியவர்களையும் கொடூரமாக அழித்தது. மறுபுறத்தில் அன்பே சிவம் என்று ஓதியது. இந்த சமயக் காழ்ப்பில் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் நீராலும், தீயாலும் தின்னப்பட்டன.

பேரரசுகளின் துணையோடு சைவ, வைணவ மதங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. வர்ணாசிரமம் மற்றும் யாக முறைக்கு எதிரான புத்த, சமண மதங்களின் தாக்குதலை சமாளிக்க பெரியபுராணம் உள்ளிட்ட பெருங்கதையாடல்களை உருவாக்கினர். ஆவுரித்து தின்றாலும் அவரும் இறைவனடி சேர முடியும் என்று ஒருபுறத்தில் கூறினாலும் மறுபுறத்தில் சதி நெருப்பில் நந்தன் வெந்தான். வர்ணாசிரமப் பிடியை விட்டு விடாமலே பெரும்பகுதி மக்களை வைதீக மதத்திற்குள் இழுக்க முயன்றனர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர். சைவ, வைணவ மதப்பிரிவுகள் பக்தி இயக்கத்தை வெகுஜன மக்கள் இயக்கமாக மாற்ற முயன்றனர். இதற்கு இசை, கலை போன்றவற்றை வலுவாக பயன்படுத்தினர். பல்வேறு சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களை நாயன்மார்களாகவும், ஆழ்வார்களாகவும் சித்தரித்தனர். இதன் மூலம் இழந்த செல்வாக்கை மீட்டனர். அதே நேரத்தில், நிலவுடமை உறவுகளில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

வணிகர்கள் சமண மதத்தை ஆதரித்ததால், வேளாண் சார்ந்த வேளாளர்களுக்கும் வணிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வேளாண் நிலப்பிரபுக்கள் சமண மதத்திலிருந்து பல்லவ, பாண்டிய மன்னர்களை சைவ மதத்திற்குள் இழுத்தனர். பிரம்மதேயம், தேவதான முறைகள் மூலம் பிராமணர்கள் மற்றும் வேளாளர்கள் நிலங்களை மீண்டும் கைப்பற்றினர். குத்தகை விவசாயிகளிடம் கொடூரமான வரி வசூலிக்கப்பட்டது. திருவையாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட 1429 ஆம் ஆண்டு கல்வெட்டில் அளவுக்கு அதிகமான வரி வசூலிக்கப்படுவதை எதிர்த்து இடங்கை, வலங்கை சாதியினர் கலகம் செய்ததாகவும், வரி விதிப்பில் மாற்றம் செய்யும் போது தங்களையும் கலந்து கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறது. தென்ஆற்காடு மாவட்டம் திருவாடி எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1446 ஆம் ஆண்டு கல்வெட்டில், வரிக் கொடுமைக்கு பயந்து விவசாயிகள் பெருமளவு இடம்பெயர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

வரிக் கொடுமையை எதிர்த்து கோவில்களின் மீது ஏறி கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குறித்த செய்திகளும் உண்டு.

சித்தர்களின் கலகக்குரல்

சைவம், வைணவத்தால் சமண, புத்தம் ஒடுக்கப்பட்ட 14 ஆம் நூற்றாண்டில் சித்தர்கள் புறப்பட்டனர். சித்தர்கள் சமண மரபினை சேர்ந்தவர்கள். கடந்த காலம் என்பது முற்றிலும் அழிந்து விடுவதில்லை. அதன் மிச்சசொச்சம் ஏதேனும் ஒரு வடிவத்தில் வெளிப்படும். சமணத்தின் வேத மறுப்பினை சித்தர்கள் வெளிப்படுத்துவதாக அருணன் கூறுகிறார்.
சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர், இடைக்காட்டு சித்தர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், கடுவெளிச் சித்தர், குறுமுனிவர், அழுகணிச் சித்தர், நந்தீஸ்வரர், ராமதேவர், கொங்கணவர், ரோமரிஷி, திருமூலர், கருகூரார், பொதிகைச் சித்தர் என 17 சித்தர்களோடு சேர்த்து காகபுசுண்டர் என 18 சித்தர்கள் பட்டியலிடப்படுகின்றனர். சிவவாக்கியர், பட்டினத்தார் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அகப்பேய், அழுகணி ஆகியோர் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் பிற்காலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வரையறுக்கப்படுகிறது.

ஆதிச் சித்தர் என்று அழைக்கப்படும் சிவவாக்கியர், ஆதி உண்டு, அந்தம் இல்லை அன்று நாலு வேதமில்லை என முன்னாளில் வேதமில்லை என்கிறார். வேதத்தை மறுத்தவர் ஆன்மா குறித்த கதையாளர்களையும் விட்டுவைக்கவில்லை.
“கறந்த பால் முலைபுகா, கடைந்த வெண்ணெய் மோர்புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல்புகா
விரிந்த பூவும், உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா
இறந்தவர் பிறப்பதில்லை, இல்லை, இல்லையே”
என மறுபிறப்பு இல்லை என்று புரோகிதத் தின் அடிமடியிலேயே கைவைக்கிறார்.

“நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணமுணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ”
என உருவ வழிபாட்டை மறுக்கிறார். தேரில் சிலையை வைத்து தேர்த் திருவிழா நடத்துவதை செம்பை வைத்து இழுப்பதாக கூறுகிறார். நாலு வேதம் ஓதுபவர்களை பாவிகள் என்று சபிக்கிறார்.
என் சாமி, உன் சாமி என்று மோதிக் கொள்வதையும் சாடியுள்ளார் சிவவாக்கியர்.

“பிறந்தபோது கோவணம் இலங்கு நூல் குடுமியும்
பிறந்துடன் பிறந்தவோ பிறங்கு நாற் சடங்கலோ
மறந்த நாலு வேதமும் மனத்துலே உதித்தவோ
நிலம் பிளந்து வான் இடிந்து நின்றதென்ன வல்லீரே”
என பிராமணியத்தின் மீது நேரடியாகத் தாக்குதல் தொடுத்து பிறக்கிறபோதே பூணூல் குடுமி வேதத்துடன் பிறந்தீர்களா எனக் கேட்கிறார்.

புலால் உணவு இன்றைக்கும் பிரச்சனையாக உள்ளது. அசைவம் சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள் என இன்றைக்கும் கூட கட்டமைக்கப்படுகிறது. சிவவாக்கியர் மீன் இறைச்சியை சாப்பிடாவிட்டாலும், மீன் இருக்கும் நீரில் தானே குளிக்கிறீர்கள், அதைத்தானே குடிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி, மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்; மாட்டிறைச்சி அல்லவா மரக்கறிக்கு இடுவது என்று கேள்வி எழுப்புகிறார். பிராமணர்களை மட்டுமல்ல, சைவம் பேசிய வேளாளரையும் மூடர்கள் என்று சாடியுள்ளார் சிவவாக்கியர். இறைச்சி, தோல், எலும்பிலே அந்தந்த சாதிக்கென இலக்கம் இடப்பட்டிருக்கிறதா என்றும் சிவவாக்கியர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் மாதவிடாய் பெரும்பாவம், தீட்டு என்று கூறு வதையும் சிவவாக்கியர் அன்றைக்கே கண்டித்துள்ளது தனிச்சிறப்பு. போலி ஆசாரங்களையும், கோவில் உருவ வழிபாட்டையும், சாதி ஒடுக்கு முறைகளையும் எதிர்த்து வலுவான குரலாக சிவவாக்கியரின் குரல் உள்ளது.
உலக வாழ்வை வெறுத்து, பெண்களை இழிவாகக் கருதுகிற பார்வை பட்டினத்தாரிடம் உண்டு என்றாலும் வாழ்க்கை நிலையில்லாதது என்றபோதும், அதையே நினைத்துக் கொண்டு வாழாமல் போவது மரணத்தைவிட கொடுமையானது. மரணத்திற்கு முந்தைய மரணம் செயலற்ற தன்மைக்கு கொண்டுபோய் விடும் என்று பேசியுள்ளார்.
பத்திரகிரியார் என்ற சித்தர், “உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும், புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்” என்று கேட்கிறார். அதாவது, உளியால் செதுக்கப்பட்ட சாமி சிலை, புளிபோட்டு விளக்கப்பட்ட சிலை யெல்லாம் எப்போது உண்மைப் பொருளாகும் என கேட்டுள்ளார்.

சாங்கியம் போதித்த ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின்படி, சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலத்தில் என்றும் கேட்கிறார்.
இன்னும் ஒருபடி மேலே போகிறார் பாம் பாட்டிச் சித்தர்.
“சதுர்வேதம், ஆறுவகைச் சாத்திரம் பல
தந்திரம், புராணம், கலை சாற்றும் ஆகமம்
விதம் விதமான வேறு நூல்களும்
வீணான நூல்களே என்று ஆடாய் பாம்பே”
என வேதம், சாத்திரம், ஆகமம் அனைத்தும் வீணே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.

சாதி எதிர்ப்பின் உச்சத்திற்கு செல்லும் பாம்பாட்டிச் சித்தர் சாதி மறுப்பு திருமணத்தையும் ஆதரித்துள்ளது போற்றத்தக்கது.
“சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்
சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்
வீதிப் பிரிவினிலே விளையா டிடுவோம்
வேண்டாத மனையினில் உறவு செய்வோம்”

என்பது பாம்பாட்டிச் சித்தரின் பெருமை குரல். சாதிக்கொரு வீதி வந்துவிட்ட 15 ஆம் நூற்றாண்டில் எல்லா வீதிக்கும் செல்வோம் என்பதும் விலக்கி வைக்கப்பட்ட வீடுகளிலும் மண உறவு கொள்வோம் என்பதும் அவரது விருப்பமாக இருந்துள்ளது.
குதம்பைச் சித்தர் ஏழை மக்களுக்கு வீடு இல்லாதபோது, தேவாரம் எதற்கு என கேட்கும் வகையில், “தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை, தேவாரம் ஏதுக்கடி – குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி” என்று கேட்டுள்ளார். சமஸ்கிருத மந்திரங்களை வெறும் சத்தங்கள் என்றும் புறந்தள்ளுகிறார்.

சித்தர்கள் மரபு ஒரு இயக்கமாக மலராமல் போனாலும், நிலப்பிரபுத்துவ பின் புலத்தினாலான சாதியம், சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றை சாடிய மரபு என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கும் சமூக சீர்திருத்தவாதிகளால் எடுத்தாளப்படுவதாக சித்தர்களின் பாடல்கள் உள்ளன.

சமண, புத்த மதங்கள் அழித்தொழிக்கப்பட்ட நிலையில், பிராமணிய மதத்தின் மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள், வழிபாட்டில் சமத்துவத்தை கொண்டிருந்த இஸ்லாமிய மதத்தின் பெருமளவில் சேர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் அரபு நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் அல்ல.

சமண மதத்தில் இருந்தவர்களில் ஒருபகுதியினரும் இஸ்லாமிய மதத்தை தழுவியுள்ளனர். இஸ்லாம் மதத்தின் ஒரு பிரிவாக கருதப்படுகிற சூபியிசம் தமிழகத்திலும் வேர் கொண்டது. சித்தர்கள் பாணியிலான சூபி அறிஞர்களின் பாடல்கள் மற்றும் போதனைகள் சமத்துவத்தை முன்னிறுத்துபவை. இதில் சமூக சீர்திருத்த நோக்குகளை காண முடியும்.

விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூர், பாளையக்காரர்களின் கைக்கு வந்தது. மைசூர் ராணுவத்தின் தளபதியாக இருந்த ஹை தர் அலி ஆட்சியை கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த, திப்பு சுல்தான் பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார். விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டதாகவும் விளைச்சல் இல்லாத நிலங்கள் அரசால் எடுக்கப்பட்டு, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. அவரது ஆட்சியில் அனாதைப் பெண்களையும் குழந்தைகளையும் விற்பது தடை செய்யப்பட்டது.

ஆடம்பரமாக திருமணங்கள் நடத்தப்பட்ட நிலையில் ஒருவரின் வருவாயில் ஒரு சதவீதம் மட்டுமே திருமணத்திற்கு செலவு செய்யப்பட வேண்டும் என திப்புவின் அரசு உத்தரவிட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தோல்சேலை அணிய தடை விதிக்கப்பட்டு, பெண்கள் மேலாடையின்றி இருந்தனர். இதை மாற்ற திப்புவின் அரசு உத்தரவிட்டது. இது மரபு என்று வாதிடப்பட்ட நிலையில், மரபென்றால் மனமாற்றம் செய் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

இராமானுஜரும் சீர்திருத்தமும்

ஆதி சங்கரரின் அத்வைதம், மத்துவாச்சாரி யாரின் துவைதம், இராமானுஜரின் விசிஷ்டாத் வைதம் ஆகியவை தத்துவங்களாக அறியப் பட்டாலும் தனித்தனி இயக்கங்களாகவும் வளர்ந்தன. இவர்களில் ஒப்பீட்டு அளவில் இரா மானுஜர் சீர்திருத்த நோக்கம் கொண்டவராக இருந்துள்ளார். இவர் 1017 ஆம் ஆண்டு பிறந்து 1137 ஆம் ஆண்டு மறைந்ததாக கூறப்படுகிறது.
வைணவத்தை பரப்பியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. தாழ்த்தப்பட்ட மக்களை இவர் ‘திருக்குலத்தார்’ என்று பெயரிட்டு அழைத்தார். இதைப் பின்பற்றிய காந்தி பின்னாளில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ‘ஹரிஜன்’ என்று பெயரிட்டு அழைத்தார். வைணவத்தை சீர்திருத்தம் செய்து மக்கள் இயக்கமாக மாற்ற முயன்றார்.

திருக்கோஷ்டியூர் நம்பி என்பவரின் கட்டளையை மீறி திருக்கோஷ்டியூர் கோவில் மதில் சுவர் மீது ஏறி நின்று சாதி வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சொர்க்கம் செல்ல ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை இவர் கூறினார். உயர்சாதியினர் மட்டுமே சொர்க்கம் செல்ல, தாம் நரகத்திற்குச் சென்றாலும் பரவாயில்லை என்று அவர் இவ்வாறு செய்தாராம். வழிபாட்டில் வடமொழி ஆதிக்கம் செலுத்திய நிலையில், தமிழையும் முன்னிறுத்தியதும், பெண்கள் வழி பாட்டில் பங்கேற்கும் வகையில் சில நெகிழ்வுத் தன்மையை உருவாக்கியதும் இராமானுஜரின் சாதனைகளாக பார்க்கப்படுகிறது. வைணவத்தில் தென்கலைப் பிரிவை உருவாக்கிய இவர், வைணவத்தின் பரவலாக்கத்திற்கே உழைத்தார் என்ற போதும், அதில் சில சமூக சீர்திருத்த கண்ணோட்டம் இருந்தது. பல்வேறு சாதியினரும் நாமம் போட்டு, பூணூல் அணிவித்து, அந்தணர் என்று இவர் அறிவித்ததாகவும் தகவல் உண்டு.

கிறிஸ்துவ போதகர்களின் தொண்டு

ஆங்கில ஏகாதிபத்தியம் இந்தியாவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு முன்பே கிறிஸ்துவ போதகர்கள் தங்களுடைய பணியை இந்தியாவில் செய்து வந்துள்ளனர். கத்தோலிக்க கிறிஸ்துவ பிரிவைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர், ராபர்ட் டி நோபிளி, ஜான் டி பிரிட்டோ, புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்த சீகன் பால்கு மற்றும் ஹென்றி புளூட்ச் ஆகியோர் தமிழகத்தின் பல பகுதிகளில் பணியாற்றினர். மதம் மாற்றுவதே அவர்களது நோக்கமாக இருந்த போதும், மக்களிடம் இருந்த சாதிப் பிரிவுகள் அவர்களது கவனத்தை ஈர்த்தது.

புராட்டஸ்டண்ட் பிரிவினர் 1858இல் சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய போதகர்கள் மாநாட்டில் சமர்ப்பித்த அறிக்கை சாதியை வன்மையாக கண்டிக்கிறது.

“சாதி என்பது அடிப்படையில் ஒரு மத நிறுவனமாகும். இது இந்தியாவின் பயங்கரமான கேடாகும். எவ்வித தயக்கமுமின்றி வன்மையாக, வெளிப்படையாக இதை கண்டிக்க வேண்டியது அனைத்து போதகர்கள் மற்றும் திருச்சபையினரின் கடமையாகும். சாதியின் பெயரால் ஒரு பகுதி கிறிஸ்தவர்களோடு மண உறவு கொள்ள மறுக்கும் எவரும் கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்கிற தகுதியுடையவர் அல்ல”.

1727 – இல் தரங்கம்பாடியில் பணியாற்றிக் கொண்டிருந்த புராட்டஸ்டண்ட் பாதிரியார்கள் தயாரித்த அறிக்கையில், “கிறிஸ்துவ தன்னடக்கம், ஒற்றுமை என்பவற்றிற்கு அக்கம்பக்கமாக சாதி ஒழுங்கு முறையும் நீடிக்க அனுமதிக்கலாம் என்றும் பறையர்கள் மற்றும் சூத்திரர்களை ஒரு கஜம் தள்ளி உட்கார வைக்க அனுமதிக்கலாம் என்றும் நீண்ட விவாதத்திற்கு பிறகு முடிவு செய்தோம். ஆனால், பிரசாதம் வழங்குவதில் வேறுபாடு காண்பிக்கப்படவில்லை.”

பிராமணிய அடிப்படையிலான சாதியம் கிறிஸ்துவத்தையும் விட்டு வைக்கவில்லை. உயர் சாதியினரை ஈர்க்க முயன்று பெருமளவு வெற்றி பெறாத நிலையில், அடித்தட்டு மக்களை நோக்கி அவர்களது கவனம் திரும்பியது. 1850க்கு பிறகு புராட்டஸ்டண்ட் பிரிவு சாதி வேறுபாட்டை திருச்சபை விதிகளுக்கு எதிரானதாக மாற்றியது.
19 ஆம் நூற்றாண்டில் கூட தமிழகத்தில் அடிமைகள் இருந்தனர். கிறிஸ்துவ போதகர்கள் இதுகுறித்து, இங்கிலாந்து அரசின் கவனத்தை ஈர்த்ததால், 1843 – இல் அடிமை ஒழிப்புச் சட்டம், மற்றும் 1861-இல் இந்தியன் பீனல் கோடு ஆகியவை நிறைவேற்றப்பட்டன. அடிமை முறை முற்றாக ஒழிக்கப்படவில்லை என்றபோதும், சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டதே குறிப்பிடத்தக்க ஒன்றுதான்.

ஐரோப்பாவில் ஏற்பட்ட நவீன கல்வி முறையை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அறிமுகப்படுத்தியவர்கள் கிறிஸ்துவ போதகர்களே. 1830ல் துவங்கிய கல்வித்துறையில் கவனம் செலுத்தினர். 1854-இல் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை காரணமாக முதன்முறையாக, “பொதுக் கல்வித்துறை” உருவானது. இந்தக் கல்விக் கொள்கையின் காரணமாகவே சென்னை, மும்பை பல்கலைக்கழகங்கள் உருவாகின.

விஜயநகரத்தில் அமைந்திருந்த மகாராஜா கல்லூரியின் முதல்வராக இருந்த ராமானுஜாச்சாரி 1910இல் இவ்வாறு எழுதியுள்ளார், “கிறிஸ்துவர்களினால் பெரும் பலன் அடைந்தவர்கள் பஞ்சமர்களே. பஞ்சமர்களுக்கு ஆதரவாக சில கிறிஸ்துவ போதகர்கள் துவக்கிய போராட்டமே இவர்களின் பரிதாப நிலை குறித்து மாகாண அரசின் கண்களை திறந்தது. அவர்களுக்கான தனிப்பள்ளிகளை துவக்குமாறு அரசே செய்தது. பஞ்ச காலத்தில் அடித்தட்டு மக்களுக்கு கஞ்சி ஊற்றி காப்பாற்றுவதிலும் கிறிஸ்தவ போதகர்கள் அதிக தொண்டாற்றியுள்ளனர்.

நோயை பாவத்துடன் போட்டு, குழப்பி, மக்களை பயமுறுத்தி வைத்திருந்தனர். இதுகுறித்து, கேத்ரின் மோயா என்ற ஐரோப்பிய ஆய்வாளர் கூறுகையில், “ஏதாவது ஒருவருக்கு நோய் வந்துவிட்டால், கடவுளே அந்த நோயை வீட்டிற்கு கொண்டுவந்து விட்டதாக கருதுகிறார்கள். இந்து சமூகத்தில் உள்ள பெண்கள், ஆண்களைவிட அதிக மூட வழக்கங்களில் நம்பிக்கை உள்ளவர்கள். யாருக்காவது நோய் வந்துவிட்டால், மருத்துவத்தை நாடுவதில்லை. குலதெய்வத்திற்கு பூஜை போடுகிறேன், வீரனுக்கு பொங்கல் இடுகிறேன், காளிக்கு அபிஷேகம் செய்கிறேன், காட்டேரிக்கு ஆடு வெட்டி நெய் பொங்கல் இடுகிறேன் என்றெல்லாம் வேண்டிக் கொள்கின்றனர்” என்று கூறியுள்ளார். நவீன மருத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் கிறிஸ்துவ போதகர்கள் பணியாற்றியுள்ளனர்.

ஆனால், அதே நேரத்தில் சாதியம், கிறிஸ்துவத்தையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் 35 சதவீதத்திற்கும் குறைவான மக்களே கிறிஸ்துவ மதத்தை பின்பற்றியிருந்தனர். இந்து மதத்தில் பிராமணர் உள்ளிட்ட உயர்சாதியினர் 26 சதவீதமும் தலித் மக்கள் 31.3 சதவீதமும் உள்ளனர். ஆனால், கிறிஸ்துவ மதத்தில் உயர்சாதியினர் 33.3 சதவீதமும் தலித் மக்கள் 41.8 சதவீதமும் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க சபைகளில் 65 சதவீதம் தலித்துகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சாதியத்தோடு கிறிஸ்துவமும் சமரசம் செய்து கொண்டு தலித்துகள் மற்றும் நாடார்களுக்கு தனி இடுகாடு, தனி வழிபாட்டுத்தலங்கள் உருவாக்கப்பட்டன. இதை எதிர்த்து பெரும் கலகங்களும் நடந்துள்ளன, நடந்தும் வருகின்றன.

உதாரணமாக, நெல்லை மாவட்டம் வடக்கன் குளம் கத்தோலிக்க தேவாலயத்தில், நாடார்கள் மற்றும் தலித்துகளுடன், ஒன்றாக அமர்ந்து வேளாளர் மற்றும் உயர்சாதியினர் பிரார்த்தனை செய்ய மறுத்து கலகம் செய்ததால், நூதனமான நுழைவு வாயில் உருவாக்கப்பட்டது. அந்த தேவாலயம் இதனால் டவுசர் சர்ச் என்று அழைக்கப்பட்டது. அதாவது, உயர்சாதியினர் வர ஒரு வழி, பிற சாதியினர் வர ஒரு வழி என இரண்டாக டவுசர் வடிவில் கட்டப்பட்டது. போதகர் எந்த வழியில் வருவது என்று பிரச்சனை ஏற்பட்டதால், அவர் இடையில் உள்ள மூன்றாவது வழியாக வந்து பிரார்த்தனையை எல்லோருக்கும் பொதுவாக ஏறெடுத்தார்.

நெடுங்காலத்திற்கு பிறகு இந்த டவுசர் வடிவு கிழிக்கப்பட்டது.
பால்ய விவாஹம், உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை உள்ளிட்ட பல்வேறு சமூக கேடுகளை சட்டத்தின் மூலம் தடை செய்வதற்கும் கிறிஸ்துவ போதகர்களின் தொண்டு பயன்பட்டுள்ளது.
வைகுண்டசாமி, வள்ளலார் போன்றவர்கள் மத வரம்புக்குள் நின்று கொண்டே வைதீக மரபை எதிர்த்துப் போராடியதோடு சாதியம், மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளனர்.
கிறிஸ்தவ போதகர்களின் பிரச்சாரத்திற்கு எதிர்வினையாக 18-ஆம் நூற்றாண்டில் ராஜராம் மோகன்ராயால் உருவாக்கப்பட்ட பிரம்ம சமாஜம் அமைப்பும் தியோசாபிகல் சொசைட்டி அமைப்பும் சமூக சீர்திருத்தத் துறையில் சில பணிகளைச் செய்துள்ளது.

தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சமூக சீர்திருத்த இயக்கமும் முகிழ்ந்தது. தீவிரவாதிகள் என்று வர்ணிக்கப்படுபவர்கள் இந்து பழமைவாதத்தை முன்னிறுத்துபவர்களாகவும், மிதவாதிகள் என்று கூறப்பட்டோர் சமூக சீர்திருத்தத்துறையிலும் கவனம் செலுத்துவர்களாகவும் இருந்தனர்.

மகாகவி பாரதியார், முன்சீப் வேதநாயகம் பிள்ளை, அ.மாதவய்யா, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் வழியே சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் வெடித்து வெளிவந்தன.
அயோத்திதாசர் தமிழக சமூக சீர்திருத்தத் துறையில் தனித்த கவனம் பெறுபவர். சாதியத்திற்கு எதிராகவும், அனைத்து மக்களுக்கும் கல்வி கேட்டும் அவர் நடத்தியுள்ள போராட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதே வழியில் இரட்டை மலை சீனிவாசனின் பணியும் அமைந்தது.

காங்கிரசிலிருந்து வெளியேறி பெரியார் தொடக்கிய சுயமரியாதை இயக்கம் கடவுள் என்ற வரம்புக்கு வெளியே நின்று சமூக சீர்திருத்தத்தை அழுத்தமாக முன்வைத்தது. அதன் தாக்கம் இன்றைளவும் தமிழகத்தில் உள்ளது. முன்னதாக நீதிக்கட்சியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம், மதிய உணவுத்திட்டம் போன்ற நடவடிக்கைகளும் முக்கியமானவை.
தேவதாசி முறையை எதிர்த்து மூவலூர் இராமிர்தம் அம்மையாளர் உள்ளிட்டோர் நடத்தியுள்ள கருத்தியல் களப்போராட்டங்கள் காத்திரமானவை.

தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கம் தோன்றி வளர்ந்த நிலையில் சமூக சீர்திருத்த பிரச்சாரமும் போராட்டமும் அதன் இயல்பான பகுதியாக அமைந்தன. சிங்காரவேலர் இந்தத் துறையின் முன்னோடியாகத் திகழ்கிறார்.

சோசலிசமே அம்பேத்கரின் இலக்கு !

ஆனந்த் டெல்டும்டே

(அண்ணல் அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனைகளைத் தாராளமயக் கண்ணோட்டம் கொண்டதாகத் திரிக்கும் முயற்சிகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக, அம்பேத்கரின் பேரனும், இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த முற்போக்குச் சிந்தனையாளருமான ஆனந்த் டெல்டும்ப் டே எழுதிய கட்டுரையை மார்க்சிஸ்ட் வாசகர்களுக்கு வழங்குகிறோம். – ஆசிரியர் குழு)

தமிழில்: மகிழ்நன்

சர்வதேச நிதியமும், உலக வங்கியும் நவதாராளமய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்த கட்டளையிட்ட போது, அரசின் கண்ணோட்டத்தில் ’நல்லவர்’ பட்டம் வாங்க வேண்டும் என்ற விருப்பில் பொருளாதார அறிவு இருந்தோ, இல்லாமலோ ஆதரித்த அறிவு சீவிகளின் ஆதரவோடு, 1991 ஆம் ஆண்டு நரசிம்மராவின் அரசு, நம் நாட்டில் நாமே செய்து கொள்ளும் சீர்திருத்தம் என்றும், வேறு வழியே இல்லை என்றும் பொய் சொல்லி, நவதாராளமய கொள்கைகளை அறிமுகப்படுத்தியது.

சுயலாபத்திற்காகச் சில சக்திகள் இரண்டு வகைத் தோராயத் தர்க்கங்களை முன்வைத்து பொருளாதார அரசியல் என்பதை எப்பொழுதும் தலித் சிந்தனை தளத்திலிருந்து முற்றிலுமாக அகற்றி, அதைக் கம்யூனிஸ்டுகளோடு சுருக்கிவிட்டனர்.

அதில் முதன்மையானது, கம்யூனிஸ்டுகள் பொருள்முதல்வாதிகள் ஆவர்; பொருளாதாரம் பொருளோடு தொடர்புடையது, ஆகவே அது குறித்துச் சிந்திப்பதே கம்யூனிசம்.

அடுத்தது, தீண்டப்படாத தலித் மக்கள் அம்பேத்கரைப் பின்பற்றுபவர்கள். அம்பேத்கர் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானவர். ஆகவே, தீண்டப்படாத மக்கள் பொருளாதார அரசியலிலிருந்து விலகியே இருக்க வேண்டும். இந்தப் பிரச்சாரங்களில் எவையும் சரியானவை இலையென்றாலும் வெகுச்சாதாரணமாக உண்மை போலவே நம் மீது வீசப்படுகின்றன.

அந்த அறிவுஜீவிகள்(!) நம்முடைய போராட்டம் என்பது ரொட்டிக்கானது மட்டுமல்ல, மாறாக அது சுயமரியாதைக்கானது என்று அடிக்கடி பெருமிதத்தோடு முழங்குவர். ஆகையால், பொருளாதாரம் தொடர்பான பரந்த விவாதம் எதுவும் தீண்டப்படாத மக்களிடையே நிகழ்த்தப்படவில்லை. ஆனாலும், உள்ளுக்குள் இருக்கும் சில சக்திகள் அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகத் தம் தொண்டை தண்ணீர் வற்ற கத்துகின்றனர். அவர்களுக்குரிய பலனை அரசாங்கங்கள் உரிய(!) முறையில் தந்தும் விடுகிறது. தொடக்கக் காலத்தில், இவற்றை வெறும் சந்தர்ப்பவாதம் என்றுதான் கருதி வந்தேன். ஆனால் பிற்காலத்தில், மிசஸ் போன்ற நவதாராளமய நச்சு வைரசை பரப்பும் நிறுவனங்களின் ஆதரவுடன் தலித் முதலாளியம், தலித் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் போன்றவற்றிற்கான பிரச்சாரத்தையோ, அம்பேத்கரை சுதந்திர பொருளாதாரவாதி என்று திரிப்பதையோ பிரதான விசச்சூழலாக மாற்றிவிட்டனர்.

லுத்விக் வோன் மிசஸ் இன்ஸ்டியூட்டில் ”அம்பேத்கர் – மறக்கப்பட்ட தாராளமய சந்தை பொருளாதாரவாதி ” [http://blog.mises.org/16519/ambedkar-the-forgotten-free-market-economist/ ] என்ற தலைப்பில் அம்பேத்கரிடம் பிறர் இது காணத்தவறிய மிக முக்கியமான அம்சம் ஒன்றைக் கண்டுபிடித்தது போன்ற ஒரு குயுக்தி மனிதன் ’முட்டாள்தனமான’ ஆய்வொன்றை சமர்ப்பித்துள்ளார்.

சுதந்திர பொருளாதாரவாதி என்று அம்பேத்கரை அழைப்பது என்பது வெறும் அவதூறு மட்டுமல்ல, அவரை மிகக்கடுமையாக இழிவுப்படுத்துவதாகும். அண்ணல் அம்பேத்கர் குறித்து அதிகமாக எழுதப்பட்டும், அம்பேத்கர் எதற்காக உழைத்தார் என்பதைப் புரிந்து கொள்ளாமல்தான் தலித்துகள் இருக்கின்றனர் என்பது மிகப்பெரிய சோகம் ஆகும். இந்தக் கட்டுரையின் நோக்கம், நவதாராளமய கொள்கைகளைப் பொறுத்தவரையில் அம்பேத்கரின் அணுகுமுறை என்னவாக இருக்கக் கூடும் என்பதை அறிந்து கொள்வதுதான்.

 

சுதந்திர சந்தையைப் புரிந்து கொள்வது

பணம் என்னும் பரிமாற்ற ஊடகத்தின் வழியாகப் பண்ட பரிமாற்றம் நடக்கும் இடம்தான் சந்தை. வாங்கும் திறனை பொறுத்து, அதாவது அவனது பாக்கெட்டில் எவ்வளவு பணமிருக்கிறது என்பதைப் பொறுத்துதான் வாடிக்கையாளரின் மதிப்பை சந்தை தீர்மானிக்கிறது என்பது வெளிப்படை. ஒரு மனிதனோ, குடும்பமோ தங்களுக்குத் தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்ய முடியாது என்ற நிலையில் பண்டமாற்றத்திற்கான களமாக ஆதி நாகரிகம் தொட்டு சந்தை என்பது பங்காற்றியிருக்கிறது. கிராமத்தினர் காய்கறிகளை உற்பத்தி செய்தாலும், அவற்றைச் சமைக்கத் தேவையான எண்ணையோ, உப்போ இல்லாத பட்சத்தில், கிராமப்புற சந்தைக்குச் சென்று தங்களிடம் உபரியாக இருக்கும் காய்கறிகளைக் கொடுத்து உப்பையோ, எண்ணெய்யையோ பெற்று வந்தனர். தொடக்கத்தில் பண்டமாற்றத்தில் ஈடுபட்டுவந்தாலும், பண்டமாற்றை எளிதாக்கும் வேலையைப் பணம் செய்தது. பணத்தின் கண்டுபிடிப்பு பரிவர்த்தனையை இலகுவாக்கினாலும், தேக்கி வைப்பதை ஊக்குவித்தது. தானியங்களும், உப்பும் சேதாரத்திற்கு உள்ளாகும் (நட்டத்தை உண்டாக்கும்) என்ற நிலையில், பணத்தைச் சேமித்து வைக்க முடியும் என்பது வெகுவாக வரவேற்ப்புக்கு உள்ளாக்கியது. குறிப்பாக, வாங்கும் சக்தியோடு சூதாடும் சுதந்திர சந்தையை ஊக்குவித்தது.

சுதந்திர சந்தையானது வாங்குபவரையும், விற்பவரையும் சமம் என்று யூகித்துக் கொள்வதோடு, இரு தரப்பாரும் சம அளவிலான தரவுகளோடும், அந்தத் தரவுகளின் அடிப்படையில் வந்த புரிதலின் அடிப்படையில் வகுத்த உத்தேச விலையின் அடிப்படையிலேயே வணிகம் நடைபெறுவதாகவும் கருதிக் கொள்கிறது.

இந்தச் சுதந்திர சந்தையால் (தேவைக்கு அதிகமாகச் சிலர் சொத்து சேர்த்துக் கொள்வதையும், அதன் விளைவாகப் பிறர் மீது பணம் மற்றும் தரவின் அடிப்படையிலும் அதிகாரம் செலுத்தும் படியான நிலையை உருவாக்கியிருக்கிறது) உருவாக்கப்பட்டிருக்கும் நிஜ உலகில் இந்த யூகம் எதார்த்தத்தில் இல்லாத ஒன்றாகவே இருக்கிறது. நடைமுறையில் இருக்கும் ஏற்றத்தாழ்வான சூழலில் சுதந்திர சந்தையானது சுரண்டலுக்கே வழிவகுப்பதாக இருக்கிறது. தனிநபரோ அல்லது சில வணிகர்களோ ஒன்றாக இணைந்து பொருட்களின் விலையை நிர்ணயிப்பதற்குப் பெயர் பொதுவாகத் தனியுரிமை ( Monopoly ) என்றும் சிலருரிமை ( Oligopoly ) எனவும் முறையே அழைக்கப்படுகிறது. சுதந்திர வணிகர்களைப் பொறுத்தமட்டில் விலை நிர்ணய பொறிமுறையின் ஊடாக வளங்களின் தேவை மற்றும் பகிர்மானத்தைச் சமநிலைப்படுத்துவதற்குச் சந்தை என்பதே சிறந்த இடம் என்று மிகையாகப் போற்றப்படுகிறது. ஆனால், தேவையையும், பகிர்ந்தளிப்பையும் அதிகாரம் உள்ளவர்கள் தங்கள் வசதிக்கேற்ப உண்மை நிலைக்குப் புறம்பாகத் திரிப்பதோடு, குவிப்புக்கே அனைத்து வழிகளையும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

பொருளாதாரத் துறையைப் பொறுத்தவரையில் சந்தை தோல்வி என்பது சிலரின் சுயலாப அணுகுமுறையால் ஏற்பட்டது என்றும் சமாதானப்படுத்திக் கொண்டு, பொதுநோக்கோடு சிந்தித்தால் அதை நிவர்த்திச் செய்யலாம் என்று சொல்லலாம்தான்.

ஆக, சந்தை என்பது பண்டமாற்றுக்கான இலகுவான வழிமுறை என்று கூறுபவர்கள், தங்களது தெளிவான கருத்தியல் சாய்வினால், கருத்தியல் பிழை காரணமாகவோ அல்லது திட்டமிட்டே அந்தத் தவறை செய்யும் நோக்கோடோ செய்கிறார்கள் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

”ரூபாயின் சிக்கலை” தவறாக வாசித்தறிதல்

அம்பேத்கரை பணவிய(Monetarist), சுதந்திர சந்தை அல்லது தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் ஆதரவாளர் என்று அடையாளப்படுத்துபவர்கள் ஒன்று அவரது ரூபாயின் சிக்கல் என்னும்(D.Sc) பட்டய ஆய்வை தவறாகப் புரிந்திருக்க வேண்டும் அல்லது தீய நோக்கோடு வாசித்திருக்க வேண்டும்.

இதில் அவருடைய காலப் பண மாற்று முறையைக் குறித்த ஆய்வையே அம்பேத்கர் முன்வைக்கிறார். எ.கா: தங்கத்திட்டம் (எதிர்) தங்க பரிமாற்றுத் திட்டம். மிகவும் ஆணித்தரமாக ஜான் மேநார்ட் கீய்ன்ஸ் உள்ளிட்ட அன்றைய பிரபல பொருளாதாரவாதிகளின் கருத்தோடு மிகக்கடுமையாக முரண்பட்டு நின்றதோடு, முந்தைய தங்கத்திட்டத்தையே ஆதரித்து நின்றார்.

தரப்படுத்தப்படாத நாணய மதிப்பு என்பது அரசின் மீது மிகக்கடுமையான நிதி சுமையைக் கூட்டுவதாகவும் அமையும் என்று கூறியவர், அதன் விளைவாக விலைவாசி உயர்வு என்பது அடித்தட்டு மக்கள் மீது அந்தச் சுமையைக் கூட்டுவதாக அமையும் என்று கருதிய அண்ணல் அம்பேத்கர் தரப்படுத்தப்பட்ட நாணய திட்டமாகத் தங்கத்திட்டத்தைக் கண்டுகொண்டு அதனைத் தீவிரமாக ஆதரித்தார்.

(எட்வின் கேனன் என்ற ஆசிரியர் அண்ணலின் ஆய்வு குறித்து அந்த நூலுக்கு வழங்கிய முன்னுரையில்,

“விலைகள் உயரும் போது கூடுதலான லாபத்தை அடையலாம் என்பதைத் தவிர வேறு எதையும் சிந்திக்க முடியாதவர்களிடம் இந்த வாதம்(அதாவது அம்பேத்கரின் வாதம்) எடுபடாது; ஆனால், இந்த அதிகப்படியான, உழைத்துச் சம்பாதிக்காத லாபத்தை எந்த மிகப்பெரும்பான்மையான மக்களிடமிருந்து பிழிந்து எடுக்கப்படுகிறதோ, அந்த மக்கள்பால் கொஞ்சம் அனுதாபம் கொள்பவர்கள் இதை ஏற்பார்கள் என நான் நம்புகிறேன்.)

இது தான் ஆய்வின் மையப் புள்ளி.

தனியார் முகவர் எதிர் அரசாங்க ஊழியர்களின் திறன் வீணாகும் தன்மைக்கு எதிராகவோ அல்லது மதிப்பை நிர்ணயிக்கும் சந்தையின் இயங்கும் வழிமுறை குறித்தோ இந்த ஆய்வில் ஆங்காங்கே சில தவறான கணிப்புகள் இருக்கிறதுதான். அவருடைய இந்த ஆய்வானது அன்றைய சூழலை மையமாகத் தன் பேசு பொருளை அமைத்துக் கொண்டது. இதை வைத்து அம்பேத்கர் கருத்தியல் சார்படிப்படையில் சோசலிசத்திற்கு எதிராகவோ, ஆதரவாகவோ இருந்தார் என்ற முடிவிற்கு வருவது அடிமுட்டாள்தனமாகும்.

இளவயது அம்பேத்கர் மீது எவ்வகையான தாக்கங்கள் இருந்தன என்பதைக் குறித்து ஒருவர் அறிந்து கொள்ள விளைந்தாலே அவரைக் குறித்து இன்னும் தெளிவான சித்திரம் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. அவருடைய கொலம்பியா ஆசிரியர்களில் பலர் பேபியன்கள்(Fabian). குறிப்பாக, அம்பேத்கரின் மனதில் ஆழமாகப் பதிந்த ஜான் டேவி அமெரிக்காவில் புகழ்பெற்ற பேபியன்.

வறியவர்களுக்கு உதவ வேண்டும், அமெரிக்காவில் மட்டுமில்லாது பிற பிரதேசங்களிலும் ஒடுக்குமுறை வடிவங்களை ஒழிக்கக் கல்வியை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற அம்பேத்கரின் ஆர்வத்தைப் பேரா.டெவி வெகுவாக ஊக்குவித்தார். டெவியின் தாக்கம் எந்தளவுக்கு அம்பேத்கரிடம் ஆழமாக இருந்ததென்றால் 1952 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தொகுத்ததற்காகக் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் சிறப்பு எள்.எள்.டி பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்ட தருணத்தில் தன்னுடைய துணைவியார் சவிதா அம்பேத்கருக்கு எழுதிய கடிதத்திலும் கூட”இதுவரையிலான என்னுடைய வாழ்க்கையின் ஒட்டுமொத்த அறிவுத்துறை சார் செயல்பாடுகளுக்கு நான் பேரா.ஜான் டேவிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.” என்று பிற்காலத்திலும் அவரை நினைவுகூர்வதை அவர் தவிர்த்துவிட வில்லை.

1884 ஆம் ஆண்டுப் பிரிட்டிஷ் சோசலிச இயக்கமான ஃபேபியன் சொசைட்டியின் தொடக்கத்தோடு ஃபெபியனிசம் தோற்றம் பெற்றது. இங்கிலாந்துக்கு வெளியேயும் தன் அபிமானிகளை உருவாக்கிய அதன் நோக்கம் என்பது, புரட்சிகர வழியில் அல்லாமல் படிப்படியாக ஜனநாயக சோசலிசத்தை உருவாக்குவதுதான். சோசலிசம் என்பது பரிணாம வளர்ச்சி போல நடைமுறைக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று கருதிய அவர்கள் மார்க்சியத்தின் புரட்சிகர அரசியலை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஆயினும் பேபியனிஸ்டுகள் என்பவர்கள் சாரத்தில் சோசலிஸ்டுகள்தான்.

அண்ணல் அம்பேத்கர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்ஸில் கற்ற போதுதான் ”ரூபாயின் சிக்கல்” என்ற அவரது டி.எஸ்.சிக்கான ஆய்வேட்டை சமர்ப்பித்தார். ஃபேபியனிசத்தின் கோட்டையாகக் கருதப்பட்ட, ஃபேபியன் சங்கத்தால் நிறுவப்பட்ட அந்தப் பல்கலைக்கழகத்தைப் பெர்னாட் ஷா, சிட்னி மற்றும் பேட்ரிக் வெ போன்ற ஆளுமைகள் இணைந்து உருவாக்கியதோடு மடுமில்லாமல், அந்தப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தும் வந்தனர். ஆக, அம்பேத்கர் தன் ஆய்வை மேற்கொண்ட அறிவுத்தளம் என்பது சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்டதுதான்.

’கற்பி, புரட்சி செய், ஒன்று சேர்’ என்ற (அம்பேத்கரிய இயக்கங்களிடையே பிரபலான) முழக்கம் கூடப் பிரபலமான ஃபேபினிச முழக்கம்தான். பகிஸ்கிரித் பாரத் (புறக்கணிக்கப்பட்ட இந்தியா) என்னும் தன்னுடைய பத்திரிக்கைக்கு இலக்காகவும், தொண்டர்களுக்கும் அதையே தாரக மந்திரமாக வழங்கினார்.

ஆக, முக்கியமான இந்த அம்சத்தைத் தவறவிட்டு, அது அமிழ்ந்தே/ மறைந்தே இருக்கும்படியான லட்சணத்திலேயே இதுகாறும் அம்பேத்கரைக் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருக்க முடியாது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அம்பேத்கரின் வாழ்க்கையை ஆய்வு செய்வார்களேயானால் அவருடைய பெரும்பாலான கருத்தியல் நிலைப்பாடுகளில் ஃபேபியன் கருத்தாக்கம் செல்வாக்கு செலுத்துவதை உணரலாம்.

1960ல் தோன்றிய பணவிய கோட்பாட்டை அம்பேத்கரின் ஆய்வுகளில் (அம்பேத்கர் இவ்வுலகத்தை விட்டு மறைந்த பிறகும், ரூபாயின் சிக்கல் ஆய்வை சமர்ப்பித்து ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் கழித்தும்) தேடிக் கண்டுபிடிக்க முனைவது சுத்த பைத்தியக்காரத்தனம். கீனிசியனிசம்(Keynesianism) என்ற ஒரு கோட்பாடு கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், தன்னைத் தானே சீர் செய்து கொள்ளும் மரபான சந்தை ஒழுங்குமுறையைத்தான் பெரும்பாலான பொருளாதார வாதிகள் ஆதரித்தனர். அதில் பணமுறை சார்ந்தோ, நிதிக் கொள்கை சார்ந்தோ அரசின் தலையீடு இருக்க வேண்டும் என்று அவர்கள் கோரவில்லை. அம்பேத்கரும் 1930களின் மரபார்ந்த இந்தப் பொருளாதாரவாதிகள் இடையேதான் பணி புரிந்து வந்தார் என்பதைக் குறித்து எந்தச் சந்தேகமும் எழ வாய்ப்பில்லை. 1930களில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகத்தான் கீன்ஸ் என்னும் நபர், மொத்த தேவையை உருவாக்க அரசின் நிதிக் கொள்கையில் மாற்றம் வர வேண்டும் என்ற ஒரு கோட்பாட்டை முன்வைத்தார். போருக்கு பிந்தைய காலத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியிலிருந்து கீனிசியனிசம்தான் முதலாளித்துவத்தைக் காப்பாற்றியது. முதலாளித்துவத்தைக் காத்தது மடுமில்லாமல் அதன் பொன்னாட்களை உருவாக்கிக் கையளித்தது.

ஆனால், 1960 களில் முதலாளித்துவம் மீண்டும் ஒரு நெருக்கடியைச் சந்தித்த போது, நிதிக் கொள்கையைவிட, பணக் கொள்கையில் மாற்றம் வேண்டும் என்று கூறியவர், அதுவே வேலைவாய்ப்பை பெருக்குமென்று என்ற கருத்தை முன்வைத்து, சிகாகோ பள்ளியைச் சார்ந்த மில்டன் ஃபிரிட்மேன் (Milton Friedman) தலைமையில் கீனிசியினசத்திற்கெதிராக எதிர்புரட்சிகர நடவடிக்கை நிகழ்த்தப்பட்டது.

அந்தக் கொள்கை மாற்றமானது மரபார்ந்த பொருளாதாரக் கண்ணோட்டத்தின் சில கூறுகளை, சுதந்திர சந்தைக்கு ஆதரவான தலையிடா கொள்கைக்கு நியாயம் சேர்க்க சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இந்நேரத்தில், தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் சந்தை கோட்பாடும், சுதந்திர சந்தைக்கு ஆதரவான பணவிய கோட்பாடு ஒன்றல்ல என்பதை நினைவு கூர்வதும், புரிந்து கொள்வதும் மிகவும் அவசியமாகிறது. ஆக, அம்பேத்கர் சுதந்திர பொருளாதாரத்திற்கு ஆதரவானவர் என்றோ, குறிப்பாகச் சோசலிசத்திற்கு எதிரானவர் என்றோ புரிந்து கொள்வது குயுக்தியானது.

சாரத்தில் உறுதியான சோசலிஸ்ட் :

அண்ணல் அம்பேத்கரைத் தெரியும் என்று அறிவித்துக் கொள்பவர்களில், மிக மேலோட்டமாகத் தெரிந்து கொண்டவர்கள் கூட “ என்னுடைய சமூகச் சித்தாந்ததமானது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் மூன்று சொற்களில் பொதிந்திருப்பதாக உணர்கிறேன். எனது சித்தாந்தத்தின் வேர்கள் மதத்தில் உள்ளதே அனறி, அரசியல் தத்துவத்தில் இல்லை. அவற்றை எனது ஆசான் புத்தனிடத்தில் இருந்தே பெற்றேன்.” என்ற வாசகத்தை அறிந்திருப்பார்கள் என்றே கருதுகிறேன்.

மனித வாழ்க்கையின் எதிர்காலம் குறித்த அவரது கண்ணோட்டம் இந்தச் சொற்களில் அடங்கியுள்ளதோடு, பௌத்தம் தழுவுவதற்கான முக்கியமான காரணமாகவும் அவையே இருந்தன. இதை எப்படிப் புரிந்து கொள்வது? அந்தச் சொற்கள் பிரெஞ்சு புரட்சியின் கிளர்ச்சியூட்டும் கோஷமாகவும், ஊக்கமாகவும் இருந்தது என்பதையும், புத்த மதத்தில் எங்கும் காணப்படவில்லை என்பதை உலகறியும். ஆனாலும், பிரெஞ்சு புரட்சியில் அது பூர்சுவா வர்க்கத்தின் வெற்று கோஷமாகவும், பௌத்தத்தில் அவை உள்ளடக்கமாகவே இருப்பதும்தான் அம்பேத்கர் அப்படிக் கூறுவதன் காரணமாக இருக்க வேண்டும். புத்தர் எதிர்பார்த்ததைப் போல மனித சமூகம் அவற்றை முழுமையாகப் பிரதிபலிக்க வேண்டும் என்று அண்ணல் எதிர்பார்த்தார். ஆனால், அந்த எதிர்பார்ப்பு என்பது கற்பனாவாத உலகில்தான் சாத்தியம்.

மனித சமூகத்தின் உயர்ந்த இலக்காகப் பிரதான முரண்பாடுகள் களையப்பட்டு, ஒவ்வொரு மனிதனும் தம் ஆற்றலுக்கேற்ப பங்களித்து, தனக்குத் தேவையானதை பெற்றுக் கொள்ளும் ஏற்பாடான கம்யூனிசத்தை மார்க்ஸ் கனவு கண்டார். இந்த லட்சியங்கள் ஒன்றோடொன்று ஒத்துப் போகவில்லையா? ஆம் என்றால், மார்க்சிய பொருள்முதல்வாதம் எப்படிச் சோசலிசத்தைக் கடந்து கம்யூனிசத்தை நோக்கியதாக இருக்கிறதோ, அதேபோல, அம்பேத்கரின் தத்துவார்த்த நிலைப்பாடும் சோசலிசத்தை அங்கீகரிப்பதோடு, ஏறக்குறைய மார்க்ஸை ஒத்ததாகவே இருக்கிறது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.

கம்யூனிஸ்டுகளோடு, கம்யூனிசத்தோடும் அம்பேத்கருக்கு இருந்த முரணான கருத்துகளை மட்டுமே வைத்துக் கொண்டு மார்க்சிய விரோதி என்றும், மார்க்ஸ் சொன்ன அனைத்திற்கும் எதிரியென்றும் சிலர் கட்டமைக்க முயல்கிறார்கள். இதைச் செய்வதன் மூலம் அவரை எதிர்முகாமிற்குள் தள்ளுகிறார்கள்.

முதலாளித்துவ ஆதரவாளர், உலகமய ஆதரவாளர், சுதந்திர சந்தையின் ஆதரவாளர் என்று அவரைத் திரிப்பதன் ஊடாகவே அதைச் செய்கிறார்கள். ஏற்கனவே விளக்கியதைப் போல, கொலம்பியா மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்ஸின் பேராசிரியர்களின் தாக்கம் அம்பேத்கருக்கு அவருடைய சிறு வயதிலேயே இருந்தது, அவர் சோசலிசத்தின் மீது நாட்டம் கொண்டவராக இருந்தாலும், மார்க்சியத்தின் புரட்சிகர வழிமுறைகளோடு முரண்பாடு இருந்தது. மார்க்சியம் குறித்துக் கிட்டத்தட்ட அதே மாதிரியான அணுகுமுறையைக் கொண்டிருந்த அவர், தன்னுடைய வழிமுறைகளை மதிப்பிடும் அடிப்படை அலகாகவும் மார்க்சியத்தையே கருதினார். அம்பேத்கர் குறித்த இந்த மதிப்பீட்டை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், அவர் சோசலிஸ்ட் என்பதை மறுக்கவே முடியாது. தத்துவார்த்த ரீதியான சாய்வில் மட்டுமல்ல, தம் வாழ்நாள் நெடுக்க சோசலிச லட்சியங்களையே ஆதர்சமாகப் பின்பற்றினார்.

அவருடைய முதல் அரசியல் கட்சியான இந்திய தொழிலாளர் கட்சி, இங்கிலாந்தில் செயல்பட்டு வந்த ஃபேபியன் தொழிலாளர் கட்சியின் அடியொற்றித்தான் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே, பரவலாக அறியப்பட்டதைப் போல, தீண்டப்படாத மக்களுக்கு இரண்டு எதிரிகள் எனப் பார்ப்பனியத்தையும், முதலாளித்துவத்தையும் அடையாளம் காட்டியிருந்தார். அடையாள அளவில் தீவிர இடதுசாரிகள் நம் சமூகத்தை அரைக் காலனிய, அரை நிலப்பிரபுத்துவச் சமூகம் என்று வரையறுப்பதோடு ஒத்துப் போகின்ற முழக்கமாகத்தான் அவரின் பிரகடனமும் இருக்கிறது. உண்மையில் இந்திய தொழிலாளர் கட்சியானது, சோசலிச லட்சியத்தை வரித்துக் கொண்ட, செங்கொடி ஏந்திய கட்சியாகவே இருந்தது. சாதியையும், வர்க்க வேறுபாட்டைப் போராட்டங்களின் வழி எப்படி ஒழிக்க இயலும் என்று சாலைகளில் நிகழ்த்திக் காண்பித்த கட்சி அது.

அந்தக் கட்சி தனது இடது அரசியல் பாதையில் வெற்றியடைந்தாலும், அன்றைய அரசியல் மதவாத திசையில் திரும்பிக் கொண்டிருந்த சூழலில், தமது அரசியல் செயற்பாடுகளைக் கைவிட நேர்ந்தது. 1942 க்ரிப்ஸ் கமிசன் சமர்ப்பித்த அறிக்கை இதர சிறுபான்மையினரின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு, தாழ்த்தப்பட்டோர் நலனை நிராகரித்தது அவரை உடனடியாக வேறு முடிவெடுக்க நிர்ப்பந்தித்தது. தனது உத்தியை மாற்றிக் கொண்டு, இந்திய தொழிலாளர் கட்சியைக் கலைத்துவிட்டு, சாதி கட்சி போன்ற தோற்றம் கொண்ட பட்டியல்சாதிகள் கூட்டமைப்பை உருவாக்கச் செய்தது. இதே காலக்கட்டத்தில் வைசிராயின் நிர்வாகக் குழுவிலும் அவர் நியமிக்கப்பட்டார். தீண்டப்படாதவர்கள் மதவாத அரசியலிலிருந்து விடுவிக்கும் வேலையைத் தீவிரமாகச் செய்து கொண்டே, அரசியல் நிர்ணய குழுவிற்குப் பட்டியல்சாதிகளின் கூட்டமைப்பின் சார்பாகப் பரிந்துரைகளின் வரைவையும் கையளித்தார் என்பதையும் நினைவில் கொள்ளல் வேண்டும். பிற்காலத்தில் காலனிய காலத்திற்குப் பின்பான இந்தியாவில் அரசு சோசலிசம் என்ற அவருடைய விளக்கத்தின் அடிப்படையில் “மாநிலங்கள் மற்றும் சிறுபான்மையினர்” என்ற தலைப்பில் வெளிவந்தது.

அம்பேத்கர் சோசலிசத்திற்கு எதிராக இருந்தாரென்று அம்பேத்கரைத் திரிக்கும் போலி அறிவுஜீவிகள் சொல்லும் முதன்மையான காரணம் அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையில் ‘சோசலிசம்’ என்ற சொல்லை இணைப்பதை அம்பேத்கர் எதிர்த்தார் என்பது. அப்படித் திரிபு வேலை செய்பவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அரசியலமைப்புச் சட்டம் என்பது அம்பேத்கர் வரிக்கு வரி எழுதியது கிடையாது; அது அரசியல் நிர்ணய சபையில் கூட்டு மனசாட்சி. அம்பேத்கருடைய பணியானது அந்தக் குழுவிற்கிடையில் கருத்தொற்றுமை கொண்டு வருவதுதான். அரசியல் நிர்ணய சபையில் அவருடைய பங்கை, அவருடைய பணி எல்லையை வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும். சோசலிசம் என்ற சொல்லை சேர்ப்பதைப் பொறுத்தவரையில் அவருடைய கருத்தே நேரடியாகக் கிடைப்பது நல்வாய்ப்பாகும், அதனூடாக அவர் மீது வீசப்படும் சந்தேகக் கணைகளை அவரே வீழ்த்துகிறார்.

”அரசின் கொள்கை எப்படி இருக்க வேண்டும். சமூக, பொருளாதாரத் துறையில் சமுதாயம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை எல்லாம், காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மக்களே முடிவு செய்ய வேண்டிய விசயங்களாகும். இவற்றை அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்க முடியாது; ஏனெனில், அத்தகைய ஏற்பாடு ஜனநாயகத்தை அழித்துவிடும். அரசின் சமூக அமைப்பு ஒரு குறிப்பிட்ட அமைப்பு முறையினைப் பெறும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் நாம் கூறினால், தாங்கள் எத்தகைய சமூக அமைப்பு முறையில் வாழ விரும்புகிறோம் என முடிவு செய்து கொள்கின்ற மக்களின் உரிமையை நாம் பறித்துக் கொள்கிறோம் என்பது என்னுடைய கருத்தாகும்.”

மேலும், சோசலிசம் என்ற சொல்லை பெயரளவில் மட்டும் இணைப்பதில் அவருக்கு ஏன் உடன்பாடில்லை என்று விளக்குவதோடு, அரசியல் அமைப்பு சட்டத்தின் கூறுகளாகச் சோசலிசம் எப்படி இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்

அரசியலமைப்புச் சட்டத்தில் நாம் இணைந்துள்ள அடிப்படை உரிமைகளைத் தவிர, அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் பற்றிக் கூறும் இதர பிரிவுகளையும் நாம் சேர்த்துள்ளோம் என்ற உண்மையை என்னுடைய மதிப்பிற்குரிய பேராசிரியர் ஷா கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. பாகம் 4ல் கண்டுள்ள விதிகளை என்னுடைய மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் படித்துப் பார்ப்பாரேயானால், சட்டமன்றமும், நிருவாகமும் அவற்றின் கொள்கையை வகுத்துக் கொள்வதில் சில குறிப்பிட்ட கடமைப் பொறுப்புகளை மேற்கொள்ள இந்த அரசியலமைப்புச் சட்டம் பணித்துள்ளதைக் காண்பார்.

இதுபற்றிக் கூறும் விதி 31 ஐ சட்டம் பணித்துள்ளதை காண்பார். இந்த விதி கூறுவதாவது: பின்வருபவற்றை அடைய அரசு தன்னுடைய கொள்கையை நெறிப்படுத்துதல் வேண்டும்:

 • குடிமக்கள், ஆணும், பெண்ணும் சரிநிகராகப் போதிய வாழ்க்கையை நடத்துவதற்கான உரிமை பெறுதல்;
 • பொதுவான நலனைப் பேணும் வகையில் சமுதாயத்தின் மூலப்பொருள் ஆதாரங்கள் மீதான சொத்துரிமையினையும், கட்டுப்பாட்டினையும் பகிர்ந்தளித்தல்;
 • பொருளாதார அமைப்பின் செயல்பாட்டினால் உற்பத்தி சாதனங்களும், செல்வமும் சமுதாய நலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஒரு சிலரிடம் குவிந்துவிடாதபடிப் பார்த்துக் கொள்ளுதல்;
 • ஆண், பெண் இருபாலருக்கும் சம்மான வேலைக்குச் சமமான கூலி கிடைக்கச் செய்தல்;

அனேகமாக இம்மாதிரி வகையிலான இதர இனங்களும் உள்ளன. நான் பேராசிரியர் சாவிடம் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்:

நான் இங்குக் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளில் சோசலிச நோக்கமும் உள்ளடக்கமும் இல்லையா? இல்லையென்றால், இதைவிட மேலாகச் சோசலிசம் என்பதுதான் என்ன என்று என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.

எனவே, நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தச் சோஷலிசக் கோட்பாடுகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன என்றும், இந்தத் திருத்த்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை என்றும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். -அண்ணல் அம்பேத்கர் (தொகுதி 27, பக்கம் 6-7), 15 நவம்பர், 1948

அவருடைய கடைசிச் சில உரைகளில் ஒன்றான காத்மாண்டு உரையின், போது பௌத்தத்தையும், மார்க்சியத்தையும் ஒப்பிட்டுத்தான் பேசினார். அதாவது, அவருடைய தேர்வுகளில் இறுதிக்காலத்திலும் கூட மார்க்சியம் இரண்டாவது தேர்வாக இருந்தது. இரண்டு சித்தாந்தங்களில் லட்சியங்கள் ஒன்றென்றாலும், வழிமுறைகள் வேறு என்று கருதிய அவர், புத்தரின் வழிமுறையை ஒப்பீட்டளவில் சிறந்ததாகவும், வன்முறையற்றதாகவும், ஜனநாயகமானதாகவும் கண்டார். ஒடுக்குமுறையற்ற, சுரண்டலற்ற சமத்துவச் சமூகத்தைச் சமைப்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது, அது சோசலிச சமூகத்தில்தான் சாத்தியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். மார்க்ஸாகட்டும், அம்பேத்கராகட்டும் சோசலித்துக்கு அப்பாலுள்ள ஒரு கற்பனையைக் குறித்தும் கனவு கண்டனர். எவ்வகையிலும் அப்படியான சமத்துவச் சமுதாயம் என்பது மனித பேராசையையும், சொத்து குவிப்பையும் அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவச் சமூக அமைப்பில் சாத்தியமேயில்லை.

சுதந்திர சந்தை பொருளாதாரத்தை வலியுறுத்தும், முதலாளித்துவமாகட்டும் அல்லது நவதாராளமயமென்னும் முதலாளித்துவத்தின் தீவிர பிரதியாகட்டும் சமூக நீதிக்கான அச்சே அங்கே சுழல வாய்ப்பில்லை. மாறாக, சமூக அமைப்பில் அவரவர் தகுதிக்கேற்பதான் பொறுப்புகள் கிடைக்கும் என்று சமூக நீதிக்கெதிரான கருத்துகளைப் பரப்புவதும், சமத்துவமின்மை இருந்தால்தான், வளர்ச்சி அடைய வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும் என்பது போன்ற அநீதிக்குத் துணை போகும் வாதம் அங்கே மேலெழும். இப்படியான ஏற்றத்தாழ்வுகளையும், அநீதியையும் வலியுறுத்தும் முதலாளித்துவத்திற்கும், நவதாராளமய உலகமயமாக்கலுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவர்தான் அம்பேத்கர் என்று பேசுவதே மிகப்பெரிய மோசடியன்றி வேறில்லை

சாதிய நிலவுடமையைவிட முதலாளித்துவம் முற்போக்கானது. அடிப்படையில் நிலவுடமை கட்டுகளிலிருந்து தொழிலாளியை விடுவிக்கும் ஆற்றல் கொண்டது என்ற புரிதலின் அடிப்படையில்தான் முதலாளித்துவத்தின் வளர்ச்சி சாதியை அமைப்பைத் தகர்க்கும் என மார்க்ஸ் கணித்தார். ஆனால், அம்பேத்கரோ முதலாளித்துவமும், பார்ப்பனியமும் ஒரே நேரத்தில் இயங்குபவை மட்டுமல்ல, ஒன்றையொன்று சார்ந்து இயங்குவதோடு, ஒன்றுக்கொன்று உதவி செய்வதாகவும் இருக்கிறது என்று கணித்தார். அதுமட்டுமில்லாமல், ஒன்றுக்குப் பலமுறை தன்னைச் சோசலிஸ்ட் என்று அறிவிக்கவும் செய்திருக்கிறார். அம்பேத்கர் குறித்த இந்தப் புரிதலில்லாமல் பேசுபவர்கள், அவரைக் குறித்துப் பேசாமல் இருப்பதே நலம்.

அம்பேத்கரும் உலகமயமாக்கலும்

சர்வதேச முதலாளித்துவத்தின் தீவிர வடிவமான உலகமயமாக்கலுக்கும் அம்பேத்கருக்கும் இருக்கும் தொடர்பு குறித்துப் பேசுபவர்கள் யூகத்தின் அடிப்படையில்தான் பேசுகிறார்கள். ஆனால், தேவதைகள் நுழைய அச்சப்பட்டும் இடத்திற்குப் பயணிக்கும் முட்டாள்கள் இருக்கவே செய்கிறார்கள். உலமயமாக்கலுக்கு ஆதரவான தங்களது ஆதரவை நேரடியாக வெளிப்படுத்தும் துணிவில்லாமல், அம்பேத்கர் ஒருவேளை வாழ்ந்திருந்தால் உலகமயமாக்கலை ஆதரித்திருப்பார் என்று புளுகித் தள்ளுகிறார்கள். அறிவாளுமை மிக்கவர்களாக, மக்கள் செல்வாக்குள்ள இது போன்ற குயுக்தியாளர்களைப் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக அறிந்திட வாய்ப்பில்லாத அப்பாவிகள், மிக எளிதாக நம்பியும் விடுகிறார்கள்.

ஆனால், உலகமயமாக்கல் என்பது என்ன என்பது குறித்துப் புரிந்து கொண்டால், உலகமயமாக்கல் தொடர்பாக அம்பேத்கர் என்ன நிலைப்பாடு எடுத்திருப்பார் என்பதைப் புரிந்து கொள்வதும் மிக எளிது.

கீனியனிசம் மற்றும் கம்யூனிச சவாலை எதிர்கொள்ள முடியாத தாராளவாதத்தின் எழுச்சியுற்ற தீவிர வடிவம்தான் உலகமயமாக்கல். தனிநபர்வாதம், வளர்ச்சிக்குப் போட்டிதான் அடிப்படை, சுதந்திர சந்தையே முன்மாதிரி போன்ற கருத்துகளால்தான் உலகமயமாக்கலின் அடித்தளம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. அது ஒவ்வொரு தனி நபரையும் ஒட்டுமொத்தமாக உலகத்தோடு போட்டியிடச் செய்து, வலியது வாழும் என்ற டார்வினிய கோட்பாட்டின் மூலம் சமத்துவமின்மை, சுரண்டல் மற்றும் சமூக அநீதிகளை நியாயப்படுத்துகிறது. அதாவது பணக்காரர்களுக்கு ஆதரவான, ஏழைகளுக்கெதிரான அநீதியான இரட்டை நிலைப்பாடு கொண்ட தத்துவம், அது தோற்றவர்களை முற்றாக நிராகரித்துவிட்டு வென்றவர்களைத் தலையில் தூக்கி வைத்து ஆடும். ஆக, அதன் செயல்பாடு என்பது தாக்குப்பிடிக்க முடியாதததாகவும், சகித்துக் கொள்ள முடியாததாகவும் இருக்கிறது.

எளியவர்களையும் ஏழைகளையும் கணக்கிலேயே கொள்ளாத தனியார்மயமாக்கல், கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், தாராளமயமாக்கல் என்று பரவலாக அறியப்படும், இதைப் பொருளாதாரக் கொள்கை என்று அலங்காரம் செய்து வேறு பொட்டலத்தில் மடித்துத் தருகின்றனர்.

சோவியத் யூனியன் வீழ்ந்ததால் பெற்ற துணிச்சலைக் கொண்டு, ஊடக தொழில்நுட்பத்தின் வழி சர்வதேச மூலதனம் வகுத்துக் கொண்ட யுக்திதான் இது. மனித இனத்தின் இருப்பையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் விளைவுகளைக் குறித்தும் கூடக் கிஞ்சித்தும் அக்கறையே இல்லாமல்தான், சுரண்டலின் வழி மூலதனத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான வழிமுறையை வடிவமைக்கிறது. இதனால், மக்களிடம் இருக்கும் சொற்ப உடமைகளும் பறிக்கப்பட்டுச் சந்தைக்குக் கொண்டுவரப்படுகிறது.

அரசோ மக்களுக்குக் கல்வி, சுகாதாரத்தை உறுதி செய்யும் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, சர்வதேச மூலதனத்தைப் பெருக்கிக் கொள்ளும் சுயநல சக்திகளுக்கு ஏதுவாகத் தரகு வேலை செய்வதைத் தன் வேலையாகக் கொண்டிருக்கிறது.

உலகமயமாக்கலின் பண்பு இதுதான் எனும் போது, மனித சமூகத்தின் விடுதலையைச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கனவு கண்ட அம்பேத்கர் உலகமயத்தை எப்படி ஆதரித்திருக்க முடியும். ஆக, அம்பேத்கருக்கு எதிரான கருத்துநிலைகளைப் பட்டியலிட்டால் கண்டிப்பாக உலகமயமாக்கல் அதில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும்.

உலகமயமாக்கலும் தலித்துகளும் :

பூமி பந்து முழுவதும் உலகமயமாக்கல் ஏற்படுத்திய சீரழிவை பற்றிய தெளிந்த சித்திரத்தை அடையாள அரசியலால் வயிறு நிரப்பும் தலித்துகள் கண்டிப்பாகக் காண சகிய மாட்டார்கள்தான். சுதந்திர சந்தை பொருளாதாரம் என்பது எந்த அளவுக்கு ஒவ்வொரு நாட்டிலும் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறதோ அதே அளவு நேர் விகிதத்தில் சமத்துவமின்மையும் பெருகியிருக்கிறது. நிரந்தர வேலை, ஜனநாயவெளி , இருப்பிடம், நல்ல சுற்றுச்சூழல், சமூகப் பாதுகாப்பு என அனைத்தும் பெருந்திரளான மக்களுக்கு மறுக்கப்படுவது பரவலாக நடக்கிறது. ஆனால், அடையாள அரசியலில் திளைக்கும் தலித்துகள் சாதி என்னும் பிரத்தியேகமான சிக்கலை எதிர்கொள்ளும் தனிக்குழுவினர் நாங்கள் என்று வாதிடுவதோடு நிறுத்திக் கொண்டு, (தலித் மக்களையும்) மிகக்கடுமையாகப் பாதிக்கும் மலை போன்ற பிரச்சினைகள் குறித்துத் திட்டமிட்டுக் கண்டுங்காணாமல் இருக்கிறார்கள். தலித்துகளுக்கிடையே குழுவாதம் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது என்பது கெட்டுவாய்ப்பாக இருந்தாலும், மேற்கண்ட பொறுப்பில்லாத வாய்ப் பந்தல்கள், தலித்துகள் சமகாலத்தில் உண்மையாகச் சந்திக்கும் சிக்கல்கள் எவை, எவை என்பதின் மீது கவனம் செலுத்தவே நம்மைத் தூண்டி விடுகின்றது.

உலகமயமாக்கல் சமூகப் படிநிலையில் கீழிருக்கிற மக்களையே அதிகம் பாதிக்கிறது எனும் போது, தலித்துகள்தான் அதனால் அதிகம் பாதிக்கப்படுகிறாகள் என்பது வெள்ளிடைமலை. ஆனால், அவற்றைப் பேசுவதும் தலித்துகளுக்கு ஈர்ப்புடையதாக இருக்காதுதான். ஆனால், அதைப் புரிந்து கொள்ள, உலகமயம் தலித்துகள் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்துப் பேச, நாம் அவர்களின் விடுதலைக்கான முன்வரைவு வேலைத்திட்டம் போன்ற ஒன்றை முன்வைக்கலாம்.

அந்த வேலைத்திட்டம் என்பது நான்கு அதிகாரப்படுத்துதல்கள் மீது கவனம் குவிக்க வேண்டும்

 1. தனிநபர் அதிகாரப்படுத்துதல்
 2. சமூக-பொருளாதார அதிகாரப்படுத்துதல்
 3. சமூக- அரசியல் அதிகாரப்படுத்துதல் மற்றும்
 4. சமூக – கலாச்சார அதிகாரப்படுத்துதல்

இந்த நான்கு அதிகாரப்படுத்துதலும் ஒரு வேளை சாதிக்கப்பட்டால், தலித்துகளின் விடுதலை ஏறக்குறையச் சாத்தியமாகிவிட்டது என்று ஒருவர் முடிவுக்கு வரலாம். ஒவ்வொரு அதிகாரப்படுத்துதலுக்கும் சில மாதிரி லட்சியங்களைக் கீழ்க்கண்டவாறு உருவாக்கிக் கொள்வோம்.

அ) தனிநபர் அதிகாரப்படுத்துதலுக்குக் கல்வி மற்றும் வேலை,

ஆ) சமூக-பொருளாதார அதிகாரப்படுத்துதலுக்கு நிலச்சீர்திருத்தம் மற்றும் வேலை

இ) சமூக-அரசியல் அதிகாரப்படுத்துதலுக்கு ஜனநாயகத்தன்மை

ஈ) சமூக-கலாச்சார அதிகாரப்படுத்துதலுக்கு நவீனத்தன்மை

இந்தத் துறைகள் ஒவ்வொன்றிலும் உலகமயமாக்கல் என்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்தால் உண்மையான சித்திரம் நமக்குப் புலப்படும்.

உலகமயமாக்கலின் உண்மையான தாக்கம் என்பது அரசு தன்னுடைய பொறுப்பிலிருந்து தன்னை நீக்கிக் கொண்டு, பொதுத்துறைகளைத் தனியாருக்கு விடுவது. திறன் மேம்பாட்டுக்கு முக்கியக் குறியீடாகக் கருதப்படும் கல்வி என்பது தலித் மக்களின் கைக்கு எட்டாக்கனியாகிக் கொண்டே இருக்கிறது. கல்வித்துறை என்பது மிக வேகமாக வணிகமயமாகி வருவதையும், படிநிலைக்கேற்ப தரம் தீர்மானிக்கப்படுவதையும் மிக வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது. இந்தப் படிநிலை ஏறக்குறைய பண்டைய சாதிய படிநிலையோடு ஒத்துப் போவதாகவே இருக்கிறது.

சுகாதாரச் சேவை துறையைப் பொறுத்தவரை ஏற்கனவே பெரும்பாலும் தனியார்மயமாகித்தான் இருந்தது, தற்போது, பொதுத்துறையிலிருந்து ஏறக்குறையக் காணாமலேயே போய்விட்டது.

நிலச்சீர்திருத்தத்தை எடுத்துக் கொண்டால், அந்தப் பணியே முற்றிலுமாக நின்று போனது, நிலச்சீருத்தத்திற்கு மாறாக, வளர்ச்சியின் பெயரால் கார்ப்பரேட்டுகள் நிலத்தைப் பிடுங்குவதுதான் தொடங்கியிருக்கிறது. இதன் விளைவாக நில உரிமை என்பது மேலும் குறைந்திருப்பதோடு, நிலமற்ற தலித்துகளின் எண்ணிக்கை மேலும் கூடிப்போயிருக்கிறது. வேலைகள் மிக வேகமாகக் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. தலித் மக்களுக்குக் கிடைத்து வந்த பொதுத்துறை வேலைகள் 1997க்கு பிறகு மிக வேகமாகக் குறைந்து வருவது, இட ஒதுக்கீட்டை மிகத் தீவிரமாகக் காணாமல் போகச் செய்து கொண்டிருக்கிறது.

ஜனநாயகத்தை எடுத்துக் கொண்டால் மக்களுக்கு மிகக்குறுகிய வரம்புக்குட்பட்ட தேர்வுரிமையை மட்டும் வழங்கிவிட்டு அது வெறும் அடையாளமாகவே இருக்கிறது. தேர்தல் அமைப்புக்கு வெளியே சின்ன முனக்கலை கூட இந்த அமைப்பு அனுமதிப்பதில்லை. எளிய விமர்சனம்கூடத் தலித் இளைஞர்கள் மீது நக்சல், மாவோயிஸ்ட் முத்திரைக்குக் குத்துவதற்குக் காரணமாகிறது.

இறுதியாக நவீனம் பற்றிப் பேச வேண்டும். ஆதிக்கம் செலுத்தும் உரையாடல் வெளியில், உலகமயமாக்கலோடு ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பை பொறுத்தி பார்க்கும் உரையாடல்கள் பிரதானமாக இருப்பதால், இதைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமானதாய் இருக்கலாம்,

நவீனமென்றால் மூலம் எது என்று வேற்றுமை பார்க்காமல், சிதைந்து போன பண்டைய மரபுகளையும், வழக்கங்களையும் அறிவியல் அணுகுமுறையோடு அணுவது என்றாகிறது. இதுகாறும் நடைமுறையில் அது அப்படியில்லை. உண்மையில் நவீனம் என்பது கலப்பு என்பதாகத்தான் நடைமுறையில் இருக்கிறது. அதுவும் குறிப்பாக உள்ளூர் உயர்வர்க்கத்தினர் எதை உயர்வாகக் கருதுகிறார்களோ, அதனோடு உலகளாவிய கலாச்சாரம் இணைவதாகவே இருக்கிறது.

ஒருவிதக் குற்றவுணர்வோடும், தயக்கத்தோடும்தான் 1980கள் வரை பேசப்பட்டு வந்த இந்துக்களின் சாதி உள்ளிட்ட பண்டைய மரபுகள், தற்போது வன்மத்தோடுதான் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. நவதாராளமய தலைமுறைகள் அவற்றைப் பெருமையாகவே பேசி வருகின்றது. சாதிய அடக்குமுறைகள் சாதியத்தை அளப்பதற்கான அளவுகோலாக (சாதிய அடக்குமுறைகளைத்தான் மிகச்சிறந்த அளவுகோலாக நான் பார்க்கிறேன்) பார்ப்போமெனில், சாதியம் என்பது உலகமயமாக்கலின் விளைவாக வெகுவாகக் கூடியிருப்பதை உணரலாம்.

ஆக, உலகமயமாக்கல் என்பது தலித்துகளின் முன்னேற்றத்துக்காக நாம் எடுத்துக் கொண்ட மாதிரி திட்டத்தை மிகக் கடுமையாகச் சிதைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், உலகமயமாக்கலால் மிகப்பலமாகப் பலன் பெற்ற சில தலித்துகள் கண்டிப்பாக இருப்பர்தான். இலவே இல்லை என்று கூற முடியாது. உலகமயமாக்கல் இப்படி மந்தையிலிருந்து சிலருக்கு எல்லா வளங்களையும் அளிக்கும்படிதான் உருவாக்கப்பட்டிருக்கிறது, அப்படி மேலே வந்தவர்களை அடையாளங்காட்டி போட்டி போடும் திறனிருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னேறலாம் என்பது போன்ற தோற்றத்தை அது உருவாக்குகிறது.

தலித் முதலாளியம், தலித் பூர்சுவா அல்லது தலித் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் மற்றும் சிலவற்றுக்காகப் பிரச்சாரம் செய்யும் ’பிரச்சாரக்’குகளுக்குப் பிரச்சினையின் முழுப் பரிமாணம் குறித்துச் சிறிய புரிதல் கூட இல்லை; அதைக்கூட விடுங்கள் எதிரியை சித்தாந்தத்தைக் கைக்கொள்வது தற்கொலைக்கு ஒப்பானதில்லையா?

முடிவுரை

தலித் உளவியலில் மிக முக்கியமான இடத்தை அண்ணல் அம்பேத்கர் வகிக்கிறார். அவர் அவர்களின் லட்சியம், தத்துவம் மற்றும் மேலான விசயங்களைப் பிரதிபலிப்பவராக இருக்கிறார். அவரோடு ஒத்துப் போகாத விசயங்களைத் தலித்துகள் தமதாகக் காணுவது மிகக்கடினம். இதைப் பல்வேறு குழுக்களும் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஏற்கனவே அந்தத் தீய சக்திகள் அவரை வெற்று வழிபாட்டு அடையாளமாக மாற்றிவிட்டனர். ஆக, எதைக் குறித்து ஆய்வு செய்வதானாலும் அவரைக் குறிப்புக்காக அணுகுதல் இயல்பாக நடக்கிறது. இதன் விளைவாக, அவரோடு ஒத்துப் போகாத விசயங்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதும், அவரோடு ஒத்துப் போகிற விசயங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுவதும் நடக்கின்றன. உலகமயமாக்கல் அப்படியானதொரு சங்கதியாக இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளாக இங்கே நடைமுறையில் இருக்கும் உலகமயமாக்கல் தலித் மக்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது. ஆனாலும், அம்பேத்கருக்கு இணக்கமான சிந்தனை என்று கருதப்படுவதால், உலகமயமாக்கலுக்கு எதிரான தங்களின் எதிர்வினையைக் கூடத் தலித் மக்கள் ஆற்றவில்லை. தலித்துகள் முதலில் அடையாளம் கண்டு கொள்ள வேண்டியது என்பது உண்மையான புரட்சிகர அம்பேத்கரின் முகத்தைத்தான். அப்படியான அம்பேத்கரின் புரட்சிகர முகமென்பது கண்டிப்பாகச் சோசலிச முகம்தான். அவர் உண்மையைத் தொடர்ந்து தேடிக் கொண்டிருந்தார், மக்களின் இருப்புக்கு-சுதந்திரத்திற்கு உத்தரவாதமான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்துவம் ஆகியவற்றை லட்சியமாகக் கொண்ட சமூகத்தைக் கனவு கண்டார். இதைப் பொத்தாம் பொதுவாகத் தலித்துகள் புரிந்து கொண்டிருந்தாலே சுயநலமிகளின் வலைகளிலிருந்து தலித்துகள் எளிதாக வெளியே வந்திருப்பர்.

சர்வதேச மூலதனம் தனது வெறியாட்டத்தை மறைக்கப் பயன்படுத்திய மெலிதான சொல்தான் உலகமயமாக்கல். சாரத்தில் அது முதலாளித்துவமானாலும், அதிலும் தீவிரமானது, தன்னுடைய இருப்பைக் குறித்தே கவலைப்படாமல் லாபவெறியை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. முதலாளித்துவம் கூலியின் உழைப்பிலிருந்து சுரண்டும் உபரிக்கு எல்லை வகுத்து வைத்திருந்தது, கூலியானவர் மறுநாள் மீண்டும் உழைக்கவும், முழுமையடைந்த பொருட்களைச் சந்தையில் வாங்க அவருக்கு வாங்கும் சக்தியை காப்பதும் அது தன் பணியாகக் கருதிற்று.

தொழில்நுட்ப வளர்ச்சியால் நந்தத்தன்மை ஊட்டப்பட்ட உலகமயமாக்கல் என்பதோ, கூலியுழைப்பை குறைத்து எடை போடுவதிலும், இருக்கின்ற சொற்க தொழிலாளர்களையும் வெளியேற்றுவதிலும் மிகத்தீவிர முனைப்போடு இருக்கிறது. சந்தையை நுகர முடியாத, வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை மக்களை, ஒட்டுண்ணிகள் போல இந்தக் கிரகத்தின் வளங்களை நுகர்பவர்களாகக் கருதி அவர்களை வெளியேற்றி அழித்திட ஆர்வம் கொண்டதாக இருக்கிறது. இப்படியான லாபவெறி அமைப்பு என்பது அம்பேத்கரின் சிந்தனைக்கு முற்றிலும் எதிரானது என்பதைப் புரிந்து கொள்ள எந்த அறிவுஜீவித்தன்மை தேவையில்லை என்பது வெளிப்படை.

வனச்சட்டம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை

வரலாற்றில், கடவுள் நம்பிக்கையை ஆதிக்க சக்திகள் பயன்படுத்தி உருவாக்கிய தடங்கல்கள் காரணமாகவும், பின்னர் நம்மை அடிமைப்படுத்திய காலனிய வாதிகளின் சுரண்டல் வெறியாலும், அதற்கும் பின்னர் பெரு முதலாளிகளின் கையில் அரசியல் அதிகாரம் சிக்கிவிட்டதாலும், இந்திய மக்களின் ஒரு பகுதியினர் பழைய குடி வாழ்வைத் தாண்டி நடைபோட இயலாமல் போனது. அவர்கள் காடுகளைப் பேணி வாழ்ந்தனர். காடுகள் அவர்களைப் பேணியது. காடுகள் அழிவதற்கு அவர்கள் தான் காரணம் என்று, இன்று ஆளுவோர் பிதற்றுகின்றனர்.

இன்று இந்தியாவில் நம்மில் ஒருசிறு பகுதியினர் பழங்குடி வாழ்விலும், பெரும்பகுதியினர் நவீன வாழ்வு முறையிலும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. வரலாற்றோடு நடைபோடவிடாமல் தடுக்கப்பட்ட அம்மக்களை அந்நியமாக்கியும், ஆராய்ச்சிப் பொருளாகப் பார்க்கவும் நமது நாட்டு மேல்தட்டு தர்ம பிரபுக்கள் பிரச்சாரக் கருவிகள் மூலம் சாதனைகள் புரிந்து வருகின்றனர். அம்மக்களை மிருக ராசிகளில் ஒன்றாகப் பார்த்துச் செல்லப் பிராணிகள்போல் காக்க கடும் முயற்சிகள் செய்கின்றனர்.

அவர்கள் நமது ரத்தத்தின் ரத்தங்கள். செம்மொழியாம் தமிழ்மொழி அவர்கள் உதிரத்திலிருந்து உதித்தது என்பதையே நமது அறிவுலகம் ஏற்கத் தயாரில்லை. நல்லவேளையாக இந்திய அரசி யலில் இடது சாரிகளின் தீர்மானகரமான பாத்திரம் இப்பொழுது உருவானதால் பழங்குடி மக்களின் பிறப்புரிமைகளைப் பாதுகாக்கும் பிரச்சனை, ஏடுகளிலும், ஆளும் மன்றங்களிலும் பேசும் பொரு ளானது, சட்டங் கள் இல்லாமல் அந்த உரிமைகளை அவர்கள் பெற முடியாது என்பதும் தெளிவானது. மக்கள் நலச்சட்டங்களைச் செயல்பட இயலாமல் செய்யும் ஷரத்துக்களை உருவாக்கும் சூழ்ச்சி கள் கற்ற ஆளும் கூட்டம், பெயரளவிற்கு வனச்சட்டம் கொண்டுவர அரும் பாடுபட்டனர். மார்க்சிஸ்ட்டுகளும், இதர இடதுசாரிகளும் அதனை எதிர்த்து நின்றனர். இதற்காக, மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம், சர்ச்சைகள் ஒரு தனிக்காவியமாகும். ஆனால், நாட்டு மக்கள் இதனை அறிய வாய்ப்பில்லை. பழங்குடி மக்களைத் தங்களது வாக்குவங்கிகளுக்குப் பயன்படாத ஜீவன்கள் என்பதால்,பூர்சுவா கட்சிகள் எடுத்த நிலைபாடுகளையும் நாட்டு மக்கள் அறியார்.

இடதுசாரிகளின் குரல் நாடாளுமன்றத்திலே ஒலிப்பதால்தான் இன்று ஓரளவு பாதுகாப்பை நல்கும் வனச்சட்டம் வந்துள்ளது. இந்தச் சட்டம் பற்றிய சில விபரங்களை இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.

பழங்குடி மக்களின் பொருளாதாரம் காட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உப்பையும், உடையையும் தவிரத் தங்களுக் குத் தேவையான அனைத்தையும் அவர்கள் காடுகளி லிருந்தே பெற்றனர். இது 16 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய நிலை. காடுகள் முழுவதும் பழங்குடிச் சமூகத்திற்குச் சொந்தமாக இருந்தது. தனி நபர் களுக்கு உடமை என்றில்லாவிட்டாலும் சுதந்திரமாகப் பயன்படுத்தி வந்தனர். மன்னர்கள் ஆண்ட காலத்திலும் வரிவசூல் செய்தார்களே தவிர, அம்மக்களிடமிருந்து நிலங்களை அபகரிக்கவில்லை. காடுகள் அழிக்கப்பட்டு விளை நிலங்களாகவும், நீர்நிலைகளும் உருவாக்கப்பட்டன. குடிகளாக வாழ்ந்த மக்கள் சேர்ந்து வாழும் ஊர்களாக வாழும் நிலை ஏற்பட்டது. புதிய ஊர்களும் உருவாக்கப்பட்டன. “காடுகொன்று நாடாக்கி” எனப் பட்டினப்பாலை உட்பட ஏராள மான இலக்கியங்களில் ஆதாரங்கள் உள்ளன.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் காடுகள் அழிப்பு

1805 இல் பிரிட்டிஷாரின் கண் வனத்தின் மீதுபட்டது. 1846 இல் முதல் வனச்சட்டம் கொண்டு வரப்பட்டது. பழங்குடி மக்கள் காட்டைத் தங்கள் பிழைப்பிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் பிரிட்டிஷ் அரசு, காட்டை வியாபார ரீதியாகப் பயன்படுத்த ஆரம்பித்தது. 1854 ஆம் ஆண்டு வனக்கொள்கை அதை வெளிப் படுத்தியது. சென்னை ராஜதானியில் 1856 இல் வன இலாகா என்றத் துறை அமைக்கப்பட்டது. இத்துறை மூலம் 1865 இல் முதல் வன ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேற்படிச் சட்டம் மற்றும் ஆணைகள் மூலம் அனைத்து வனப் பகுதிகளும் “வனப்பாதுகாப்பு” என்ற பெயரில் ஆங்கிலேயரின் நேரடி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதனால், ஆதிவாசிகள் காடுகளில் சுதந்திரமாக உலவத் தடை கொண்டுவரப்பட்டது. இத்தடை பழங்குடி மக்களின் வாழ் வையும், பொருளாதாரத்தையும் சீர்குலைத்து சின்னாபின்னமாக்கிவிட்டது.

“இயற்கையை ஒருமுறை கெடுத்தால், அது பதிலுக்கு பலமுறை நம்மை கெடுத்துவிடும்” என ஏங்கல்ஸ் கூறுகிறார். ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்கள் வளர்ச்சி, கொள்ளை லாபம் என்ற நோக்கில் காட்டைப்பயன்படுத்தத் துவங் கினர். இரயில் பாதைகள் அமைக்கவும், கப்பல்கள் கட்டுவதற்கும், பிரம்மாண்ட மான சொகுசு மாளிகைகளை அமைப்பதற்கும், இந்தியக் காடுகளில் இருந்த வானுயர்ந்த மரங்களை வெட்டியது மட்டுமல்லாமல், மர ஏற்றுமதிக்காகவும் காடுகளை அழித்தது. இதே காலத்தில், நிலங்களை உணவு தானிய உற்பத்திக்கு மட்டுமே பழங்குடி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் பணப்பயிர் உற்பத் திக்கு மாற்றியது பிரிட்டிஷ் காலனிய அரசு. பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகள் ஏராளமான காப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். எந்த அளவுக்கு இதில் அரசு ஆர்வம் காட்டியது என்பதற்கு, 1885 இல் ஏற்காடு மலைப் பகுதியில் மட்டும், 10, 789 ஏக்கர் நிலப்பரப்பில் 331 காப்பித் தோட்டங்கள் இருந்தன என்றால், நாடு முழுவதும் எவ்வளவு இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இத்தகைய தோட்டங்களில் அடிமைகளாகவும், பின்னர் கூலிக் காரர்களாகவும் ஆதிவாசிகள் ஆக்கப்பட்டனர்.

காட்டையே தங்களது தாய் வீடாகவும், கடவுளாகவும் பாவித்த மக்கள், காடுகள் தங்கள் கண் முன்னே வெட்டி அழிக்கப்பட்டதைக் கண்டு கண்ணீர்விட்டனர். சட்டமும், நிர்வாக ஏற்பாடுகளும், வனத்துறை அதிகாரிகளும் அம்மக்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. வனத்தைப் பாதுகாப்பதற்கு அம்மக்கள் அறிந்திருந்த முறைகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது இந்தப் புதிய அணுகு முறை. விஞ்ஞானப் பூர்வமாகக் காட்டை நிர்வகிக்கிறோம் என்ற பெயரில் வனத்திலிருந்து மக்களை முற்றிலும் அந்நியப்படுத்தும் செயலில் வனத்துறை ஈடுபடுத்தப்பட்டது. 1882 ஆம் ஆண்டு மதறாஸ் வன ஆணையின் படி, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளை அரசு அறிவித்தது. இந்த ஆணைப்படி 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 11,72,314 ஏக்கர் அதாவது 1672 சதுர மைல் பரப்பளவுள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக ஆக்கப்பட்டது. இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அனுமதி பெற்றே மக்கள் பயன்படுத்த வேண்டும். அதிலும், வரையறுக்கப்பட்ட, அதாவது விறகுகள், விவசாயத்திற்குத் தேவையான மரக்கட்டைகள், மூங்கில்கள், மூலிகைகள் போன்ற வற்றை சிறிய அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள அனுமதி உண்டு. மீறினால் ரூபாய் 500 அபராதம் அல்லது ஆறுமாதம் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்பட்டது.

இதேகாலத்தில் பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகள் ஆதிவாசிகளிடமிருந்து நிலங்களை மிகக்குறைந்த விலைக்கு வாங்கி எஸ்டேட்டுகளை உருவாக்கினர். 1860 இல் ஏற்காடு மலையில் ஒரு ஏக்கர் நிலத்தை எட்டு அணாவுக்கு வாங்கியுள்ளனர். இந்த விபரம் 1869 ஆம் ஆண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளது. மற்ற பல மலைகளில் நல்ல கம்பளிக்கும், சீமைச்சாரயத்திற்கும் நிலங்கள் உரிமை மாற்றம் செய்யப்பட்டன. அப்போது வனத்துறை மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பிலே இருந்தது. இதைப்பயன்படுத்தி பல மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மக்களிடமிருந்து நிலங்களை அபகரித்து தனதாக்கிக் கொண்டுள்ளனர். ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்கள் இப்படி மோசடி செய்ததைத் தொடர்ந்து மற்றவர்களும் மலைகளில் குடியேறி நிலங்களை வளைக்கவும், வாங்கவும் தொடங்கினர். இப்படித்தான் பழங்குடி மக்களிடமிருந்து காடுகள் பறிபோனதின் ஆரம்ப வரலாறு. இவ்வளவுக்குப் பிறகும் பிரிட்டிஷார் நமது நாட்டை விட்டுச் செல்லும் போது, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 40 சதம் காடுகளாக இருந்தது.

பழங்குடி மக்களின் எழுச்சிகள்

நாட்டின் தலை சிறந்த மானுடவியலாளர்களில் ஒருவரான அமரர் திரு.கேஎஸ்.சிங் அவர்கள் ஆதிவாசிகளுக்கும், நிலத்திற்குமுள்ள உறவு குறித்து இவ்வாறு கூறுகிறார். “பழங்குடி மக்களைப் பொறுத்த வரையிலும் நிலம் என்பது ஒரு ஏக்கர் என்ற கணக்கீட்டிற்குட்பட்ட ஒரு பொருளல்ல. மாறாக, அது அவர்களின் சமூகப் பண்பாட்டு மரபின் ஒரு பகுதி. அவர்களுடைய மூதாதையரின் கல்லறை. அவர்கள் தங்கள் முன்னோர்களோடு கொண்டுள்ள பிணைப்பிற்கு அடையாளம்”. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு, வனத்தோடு ஆதிவாசிகளுக்குள்ள இத்தகைய பண்புகளைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. அவர்கள் வனத்தைச் ‘சரக்காகவே’ பார்த்தனர்.

ஆதிவாசிகள் தங்களின் நில உரிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், பிரிட்ஷாரின் ஏஜெண்டுகளாக இருந்து வரிவசூ லில் ஈடுபட்ட ஜமீன்தார், ஜாகீர்தார்களின் கொடுமைகளுக்கு எதிரா கவும் மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். செங்கொடி இயக்கத் தலைவர்களின் தலைமையில் மகாராஷ்ட்ராவில் ‘வார்லிகள்’ எழுச்சி, திரிபுராவில் மன்னர்களை எதிர்த்து எழுச்சி, பீகாரில் சந்தால் எழுச்சி, தமிழகத்தில் கொல்லிமலையை ஜமீன்தார் பிடியிலிருந்து விடுவிக்கும் போராட்டம், வனத்துறை அதிகாரிகளின் அத்து மீறல்களை எதிர்த்தும், வரிக்கொடுமைக் கெதிராகவும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் ஓரளவிற்காவது காட்டின் மீதான தங்களது பிடிமானத்தை ஆதிவாசிகள் தக்க வைத்துக் கொண்டனர். பழங்குடி மக்களின் ஒற்றுமையும், வீரம் செறிந்த போராட்டமும் செங்கொடி இயக்கத் தலைவர்களின் தன்னலமற்ற உதவியும் அம்மக்களைப் பாதுகாத்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

டாக்டர். அம்பேத்கரின் தொலைநோக்கு

நாடு விடுதலை பெற்ற பிறகு மாமேதை டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சாசனம் பழங்குடி மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டத்தை வகுத்தது. இவை ஐந்தாவது மற்றும் ஆறாவது அட்டவணைப் பகுதிகள் என அழைக்கப்ப டுகின்றன. இவ்வட்டவணையிலுள்ள பிரிவுகள் பழங்குடி மக்கள் வாழுமிடங்களை ஐந்தாவது மற்றும் ஆறாவது அட்டவணையின் கீழ் கொணர்ந்து அவர்களின் நலன்களைப் பாதுகாத்தல், மாநில ஆளுநரின் கடமைகள் குறித்துத் தெளிவான வரையறைகளை முன்வைக்கின்றன. அதன்படி,

 • பழங்குடிப் பகுதிகளில் பழங்குடி அல்லாதோருக்கு நிலமாற்றம் செய்யப்படுவது தடை செய்யப்பட வேண்டும்.
 • பழங்குடிகளுக்கு முறையாக நிலம் வழங்கப்படுதல் வேண்டும்.
 • பழங்குடி மக்களுக்கு கடன் அளிப்பவர்களுக்கான வழிமுறை களைக் கொணர்தல் வேண்டும்.
 • மேற்க்கண்டவற்றை நடைமுறைப்படுத்த தேவைப்பட்டால் சட்டங்கள் இயற்றவோ அல்லது சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். குடியரசுத் தலைவரி ஒப்புதலுடன் இவை நடைமுறைக்கு வரும். மேற்கண்ட விதிகளை அமல்படுத்த, நெறிப்படுத்த மாநிலப் பழங்குடி ஆலோசனைக் குழுக்கள் இருக்கும்பட்சத்தில் அவை கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.
 • பழங்குடிகள் வாழும் பகுதிகளில் சிறப்பு நிர்வாகப் பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
 • பழங்குடிகளின் நலனுக்கென மத்திய அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
 • சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் இடங்களை ஒதுக்க வேண்டும்.
 • தனிப்பட்ட நியமனங்களை வழங்க வேண்டும்.
 • பழங்குடி மக்கள் வளர்ச்சிக்காக சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
 • தேவைப்பட்டால் பழங்குடி மக்கள் நலனை மத்தியஅரசின் நேரடிக் கண்காணிப்பில் கொணரலாம்.

இந்த அரசியல் சாசனப் பிரிவுகளே இதுகாறும் பழங்குடி மக்களின் நில உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும், பாதுகாப்புக்கும் ஆதாரமாக விளங்குகின்றன.

பழங்குடி மக்கள் குறித்த இந்திய அரசின் கொள்கை

1952 இல் ஜவஹர் லால் நேருவின் பழங்குடிகள் குறித்த பஞ்சசீலக் கொள்கை இந்திய அரசு பழங்குடிகளின்பால் எத்தகைய அணுகு முறைகளைக் கடைபிடிக்கப் போகிறது என்பதை வெளியிட்டது. அவை,

 1. பழங்குடியினர் தங்களது சொந்தப் புத்திக் கூர்மையைப் பயன்படுத்தி மேம்பாடடைவதற்கு அனுமதிக்க வேண்டும்.
 2. நிலம் மற்றும் வனத்தில் பழங்குடியினருக்குரிய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.
 3. அதிக அளவில் வெளியாரை சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்து பழங்குடியினர் தாங்களே நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள இயலும் வகையில் பழங்குடியினர் குழுக்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
 4. பழங்குடியினர் வகுப்பின் சமூக மற்றும் கலாச்சார அமைப்பு களுக்குப் பாதகமின்றி அவர்களுக்கான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 5. பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான குறியீடு அவர்களுடைய வாழ்க்கைத் தரமாகத்தான் இருக்க வேண்டுமேயொழிய செலவிடப்பட்டத் தொகையாக இருக்கக் கூடாது.

பழங்குடி மக்களின் பிரச்சனைகளைப் பற்றி ஓரளவு அறிந்தவர்கள் கூட, மேற்குறிப்பிட்ட நேருவின் கொள்கைப்படி ஆளுகின்ற வர்களோ, அதிகார வர்க்கமோ சிறிய அளவில் கூட நடந்து கொள்ளவில்லை என்பதை அறிய முடியும். மாறாக “படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்” என்ற பழமொழிக்கொப்ப எதிர் மறையான நடவடிக்கைகளையே மேற்கொண்டனர்.

இந்திய ஆட்சியாளர்களும் வனத்திலிருந்து மக்களை மேலும் மேலும் அந்நியப்படுத்தும் விதத்திலேயே சட்டங்களை இயற்றினர். 1927 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட வனச்சட் டத்தை வைத்துக் கொண்டே 1972 ஆம் ஆண்டு கானுயிர் பாதுகாப்புச் சட்டம், 1976 ஆம் ஆண்டு வன (திருத்தச்) சட்டம், வனப்பாது காப்புச் சட்டம் 1980, வனப்பாதுகாப்பு (திருத்தச்) சட்டம் 1988 போன்ற சட்டங்கள் மூலம் மக்களை வனத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையைத் தொடர்ந்தது. வனத்தில் காலங்காலமாக வாழ்ந்து வந்த மக்களை 1988 வனப்பாதுகாப்பு (திருத்தச்) சட்டம் ‘ஆக்கிரமிப் பாளர்கள்’ என முத்திரைக் குத்தியது. இதனால், அரசுக்கும், மக்க ளுக்குமான முரண்பாடுகளும், மோதல்களும் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை.

எனவே தான், இந்த மோதல் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து அம்மக்களை அமைதியாக வாழவிட வனச்சட்டத்தை மாற்றியமைப்பது அவசியம் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக் கப்பட்டது. வனத்தின் மீதான அம்மக்களின் பாரம்பரிய உரிமைகள் சட்ட ரீதியான உரிமைகளாக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட் டது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிவாசிகள் குறித்த பிரகடனம் இவ்வாறு குறிப்பிடுகிறது. “ஆதிவாசி நிலங்களை மீட்பது, சட்டத்திலுள்ள ஓட்டைகளை அடைப்பது, மோசடி நில மாற்றத்திற்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது போன்றவை நமது அடிப்படைக் கோரிக்கைகளாகும்… ஆதிவாசிகள் வனங்களில் வாழும் உரிமையை மீட்பது, வனப் பொருட்களைச் சந்தைப்படுத்தக் கூட்டுறவு விற்பனை நிலையங்களை அரசின் உதவியுடன் நிறுவுதல், தாவரம் மற்றும் மூலிகைகளைப் பற்றி ஆதிவாசிகளின் பாரம்பரிய அறிவுச் சொத்தைப் பேணுதல் ஆகியவை முக்கிய விசயங்கள்” எனக்குறிப்பிடுகிறது. இந்தக் கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப நாடு முழுவதுமுள்ள பழங்குடி மக்களை ஒன்று திரட்டவும், பாதுகாக்கவும், மார்க்சிஸ்ட் கட்சி முயற்சிகளை மேற்க்கொண்டு அகில இந்திய அளவில் ஒரு சிறப்பு மாநாட்டையும் நடத்தியது.

உச்சநீதி மன்றத்தின் அதிரடி உத்தரவு

உச்சநீதி மன்ற வழக்கு ரிட் மனு எண் 202/95 இடைக்கால மனு எண் 703 இன் மீது 23.11.2001 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு பழங்குடி மக்கள் தலையில் பேரிடியாக இறங்கியது. நமது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டப்படி, தனி நபரின் பெயரில் பதிவு செய்யப்படாத எந்தவொரு நிலமும் அரசுக்குச் சொந்தமாகும். இதைப்பயன்படுத்தித்தான் உரிய ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி சட்டம் எனும் ஆயுதத்தின் மூலம் அரசும், அதிகாரிகளும் பழங்குடி மக்களை தங்கள் வாழ்விடங்களிலிருந்து வெகுசுலபமாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். மலையுடன் மக்களுக்குள்ள தாய் – மகள் உறவைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், சட்டம் – விதி என்ற அடிப்படையை மட்டும் கணக்கில் கொண்டு பிரச்சனைகள் அணுகப்பட்டு வந்ததற்கு உச்ச நிதிமன்றத் தீர்ப்பே சாட்சி. அதாவது, “30.9.2002 க்குள் வன நிலங் களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட வேண்டும்” என்பது. இந்தத் தீர்ப்பு ஒரு மனிதனை ஒரே நேரத்தில் ஆயிரம் தேள்கள் கொட்டினால் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துமோ அத்தகைய அதிர்ச்சியலைகளை நாடு முழுவதுமுள்ள பழங்குடி மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த அநியாயமான உத்தரவுக் கெதிராக இடதுசாரிகள் குறிப்பாக, மார்க்சிஸ்ட் கட்சி மக்களை அணிதிரட்டி யது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுகிற மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் இந்த உத்தரவை அமல்படுத்தமாட் டோமென்றும், தீர்ப்புத் திருத்தப்பட வேண்டும் என்றும் கோரியது.

ஆதிவாசிகளுக்கு எதிரான பி.ஜே.பி அரசின் நடவடிக்கை

ஆனால், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த பி.ஜே.பி. அரசு, நிராயுதபாணியான பழங்குடி மக்கள் மீது உச்ச நீதி மன்ற உத்தரவு எனும் பலமிக்க ஆயுதத்தை ஏந்தி, களத்தில் இறங்குவதற்கான உத்தரவுகளை 3.5.2002 அன்று அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும், வனத்துறைத் தலைவர்களுக்கும் அனுப்பியது. அப்போது, தமிழகத்தை ஆண்டுக் கொண்டிருந்த ஏழைகளின் ‘சகோதரி’ ஜெயலலிதா மேற்படி மத்திய அரசின் உத்தரவுகளை சிரமேற்கொண்டு அமல்படுத்தத் துரிதமாக உத்தரவிட்டார். மத்திய அரசின் உத்தரவை தமிழகத்தில் செயல்படுத்த ஒரு கமிட்டியையும், செய்து முடிப்பதற்கான காலவரையறையையும் தீர்மானித்து 17.6.2002 அன்று தமிழக முதன்மை வனப்பாதுகாவலர் ஒரு உத்தரவை வெளியிட்டார்.

இந்த நில வெளியேற்ற உத்தரவுக்கெதிராக தமிழகத்தில் தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தால் மாநிலம் முழுவதும் பெரும் போராட்டங்கள் நடத்தப் பட்டன. நிலவெளியேற்றத்தை எதிர்த்துப் போராடிய தலைவர்கள் மீதும், மக்கள் மீதும் வனத்துறையினரால் போடப்பட்ட பொய் வழக்குகள் இன்றுவரை நடைபெற்று வருகின்றன. ஆனால், ஒரு ஆதிவாசியோ அல்லது விவசாயிகளோ தங்கள் நிலத்திலிருந்தும் – குடியிருப்புகளிலிருந்தும் அப்புறப்படுத்தப்படாமல் பாதுகாத்தது செங்கொடி இயக்கம் என்றால் மிகையல்ல. இதேபோல் நாடு முழுவதும் எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்தன.

புதிய சட்டத்தை உருவாக்குவதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான முயற்சிகள்

இந்த நிலையில்தான் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. கட்சி தோற்கடிக்கப்பட்டு, மத்தியில் இடதுசாரிகளின் ஆதரவுடன் தான் அரசு அமைய முடியுமென்ற அரசியல் சூழல் ஏற்பட்டது. இந்த வாய்ப்பை மக்களுக்குச் சாதகமாக பயன்படுத்த இடதுசாரித் தலைவர்கள் திட்டமிட்டனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் எந்தத் திட்டத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டது. அதில் ஒரு அம்சம், “பழங்குடி மக்களை காடுகளிலிருந்து வெளியேற்றும் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்பதும், அவர்களின் காடு களின் மீதான பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாக்கும் விதத்தில் ஒரு புதியச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதும்”. இந்தக் கோரிக்கை பழங்குடி மக்களைப் பொருத்த வரை மிக மிக முக்கிய மான கோரிக்கையாகும். இடதுசாரிக் கட்சிகளின் வற்புறுத்தலால், காடுகளிலிருந்து மக்களை வெளியேற்றும் உத்தரவு 2004 ஜூலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒரு புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.

பழங்குடி மக்களின் (காடுகள் மீதான உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2005, மத்திய அரசால் 2005 டிசம்பர் 13 ஆம் தேதி நாடாளு மன்றத்தில் வைக்கப்பட்டது. இந்த மசோதாவைப் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி 2005 நவம்பர் மாதம் 18 ஆம் தேதி நாடுமுழுவதும் பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த மசோதாவில் நோக்கங்களாக குறிப்பிட்டிருப்பதாவது, “காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்களை யும், காடுகளையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. ஒன்றில்லாமல் மற்றொன்று உயிர் வாழவே இயலாது. காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் சுற்றுப்புற ஆதார வளங்களைப் பாதுகாப்பது குறித்து பழமையான இலக்கியங்களும், எழுத்துக்களும் சுட்டிக்காட்டி வந்துள்ளன. எனினும் காலனியாதிக்க ஆட்சியில் பொருளாதார லாபங்களுக்காக அந்த யதார்த்தமானது புறக்கணிக்கப்பட்டு வந்தது” என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளது. மேலும், “நமது நாட்டின் விடுதலைக்குப் பிறகு இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நமது உற்சாகத்தின் விளைவாக காலனியாதிக்கத்தில் உருவாக்கப்பட்டிருந்த சட்டங்களையே நாம் தொடர்ந்து பின்பற்றி வந்துள்ளோம். பழங்குடி மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்த இயற்கை வளப்பாதுகாப்பு என்ற நமது நாட்டின் வளம் மிக்க பாரம்பரியத்திலிருந்து கற்றுக் கொள்வதற்கு மாறாகக் காடுகளின் வளங்களைப் பாதுகாக்க சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளையே நாம் மேற்கொண்டு வந்தோம் என மிகச் சரியாகவே விமர்சித்துள்ளது. எனவே, பலத் தலைமுறை களாக அனைத்து விதமானக் காட்டு நிலங்களின் மீது உரிமை கொண்டிருந்த காடுகளில் வசிக்கும் பழங்குடி பிரிவினரின் காடுகளின் மீதான உரிமையை அங்கீகரித்து, அவர்கள் உயிர் வாழ்வதற்கு காட்டு நிலங்களின் மீதான நியாயமான தேவையை, காட்டினை அடிப்படையாகக் கொண்ட ஆதார வளங்களைப் பயன்படுத்துவதற்கான தேவையையும் அடிப்படையான அம்ச மாகக் கொண்டதாகவே இந்தச் சட்டம் திகழும்” என குறிப்பிடப் பட்டுள்ளது. இருப்பினும், இந்த மசோதா பழங்குடி மக்களின் வனத்தின் மீதான முழுமையான உரிமைகளைப் பாதுகாக்கும் விதத்தில் அமையவில்லை. மேலும், பாரம்பரிய வனத்தில் வாழ்ந்து வரும் மற்ற இன மக்களைப் பற்றி இம்மசோதாவில் எதுவும் குறிப் பிடப்படாமல் இருந்தது. அது மட்டுமல்லாமல், உண்மையில் பழங்குடி மக்களாக இருந்தும், பட்டியலில் சேர்க்கப்படாத காரணத்தால் பாதிக்கப்படக் கூடிய மக்கட் பகுதியினரும் இருந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக 1980 அக்டோபர் 25 ஆம் தேதிக்கு முன்பாக மலையில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்பது பெருமளவு பழங்குடி மக்களை வெளியேற்றவே இந்தச்சட்டம் வகை செய்யும் என நாடாளுமன்றத் தில் மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எச்சரித்தது. இதன் விளைவாக, வேறு வழியின்றி காங்கிரஸ் அரசு நாடாளுமன்றக் கூட்டு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியது. இக்கூட்டுக்குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆக்கப் பூர்வமான பங்களிப்பின் மூலம் இப்போதைய சட்டம் கொண்டு வரப்பட்டது.

புதிதாக உருவாக்கப்ட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி 2006 ஜூலை 18 ஆம் தேதி நாடுமுழுவதும் பழங்குடி மக்கள் பங்கேற்ற பெரும் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது. நாடாளுமன்றத்திற்குள்ளேயும் தொடர்ந்து இந்தப் பிரச்சனையை எழுப்பியது. 2006 நவம்பர் மாதம் 24 ஆம் தேதி நாடுமுழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் செயற்படும் பழங்குடி மக்கள் அமைப்புகளின் தலைவர்கள் தோழர். பிருந்தா காரத் தலைமையில் இந்தியப் பிரதமர் டாக்டர். மன் மோகன்சிங் அவர்களைச் சந்தித்து இந்த மசோதாவை நடைபெற விருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டுமென வற்புறுத்தினர். நவம்பர் மாதம் 29 ஆம் தேதி மேற்படி கோரிக்கையை வற்புறுத்தி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான பழங்குடி மக்கள் பங்கேற்ற ஒரு பெரும் பேரணியை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது.

இந்த நிர்பந்தங்களின் விளைவாக, இந்திய நாட்டில் முதன் முறையாக, ஆதிவாசிகளுக்கும், வனத்தைச் சார்ந்து வாழும் மற்றவர்களுக்கும், மிக, மிக, மிகச் சாதகமான வரலாற்றில் முத்திரை பதிக்கத்தக்கச் சட்டம் 2006 டிசம்பர் 15 ஆம் தேதி நாடாளுமன்றத் தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், மீண்டும் ஓர் விடுதலைப் பெரு மகிழ்ச்சியை பழங்குடி மக்கள் பெற்றுள்ளனர். வரலாற்றில் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்தச் சட்டத்தின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சாதனை

இந்தச் சட்டம், பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் மக்களின் (காடுகளின் மீதான உரிமைகளை அங்கீ கரிக்கும்) சட்டம் 2006 என அழைக்கப்படும். இந்தச் சட்டத்தில் உள்ள சாதகமான அம்சங்கள் பின்வருமாறு.

 1. 2005 டிசம்பர் 13ஆம் தேதிக்கு முன்பாக காடுகளில் வசிக்கும், ஆக்கிரமித்து விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு இச் சட்டம் பொருந்தும்.
 2. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஏக்கருக்கு மிகாத அளவு நிலம் வழங்கப்படும். இந்த நிலத்தை பரம்பரையாகப் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர விற்க அனுமதி கிடையாது. இந்த நிலம் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் கூட்டாகவே பதிவு செய்யப்படும்.
 3. பழங்குடிகள் அல்லாத பரம்பரையாக வனத்தைச் சார்ந்து வாழும் மற்றவர்கள் மூன்று தலைமுறைகளாகக் காடுகளில் தொடர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும். ஒரு தலைமுறை என் பது 25 ஆண்டுகள் எனக் கணக்கிடப்படும்.
 4. வனச் சிறு மகசூல்களை இலவசமாக சேகரிக்கவும், விற்கவும் உரிமை.
 5. மக்கள் தங்கள் சொந்தத் தேவைக்கு மட்டும் வியாபார நோக்கமில்லால் மரம், மூங்கில் உள்ளிட்ட வனப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ள உரிமை.
 6. பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த பாதைகள், நீர்நிலைகளைப் பயன்படுத்த உரிமை.
 7. மேய்ச்சலுக்கான உரிமை.
 8. சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், ஜாகீர்தாரர்களால் உரிமைகள் ஏதேனும் வழங்கப்பட்டிருந்தால் அவை அங்கீகரிக்கப்படும்.
 9. காட்டு நிலங்களின் மீது எந்தவொரு மாநில அரசோ அல்லது உள்ளூர் அதிகார அமைப்போ வழங்கியுள்ள பட்டாக்கள் அல்லது ஈனாம்களை அவர்களது பெயருக்கு மாற்றிக் கொள்வதற்கான உரிமை.
 10. வனக் கிராமங்களை (Forest Settlement) வருவாய்க் கிராமங்களாக மாற்றிக் கொள்வதற்கான உரிமை.
 11. காடுகளில் உயிரியல் மற்றும் கலாச்சார ஆதாரங்கள் தொடர்பான பாரம்பரியமான அறிவு மற்றும் அறிவுச் சொத்து ஆகியவற்றிற்கான ஒட்டு மொத்த குழுவிற்கான உரிமை மற்றும் உயிரியல் ஆதாரங்களை அணுகுவதற்கான உரிமை.
 12. காட்டு வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை செய்வதற்கான உரிமை.

மேற்படி சட்டத்தின்பயனாளிகளைக் கிராமசபை முடிவு செய்யும். மேல்முறையீட்டுக்கான கமிடிகளுக்கும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

அநேகமாக, வேட்டையாடும் உரிமையைத் தவிர பழங்குடி மக்களின் பாரம்பரிய உரிமைகள் அனைத்தும் இச்சட்டத்தின் மூலம் மீட்கப்பட்டுள்ளன. வனவிலங்குச் சரணாலயங்கள், தேசீயப்பூங்காக் களில் வசிக்கும் மக்களைப் பொருத்தவரை அவர்களின் ஒப்புதலு டன் மறுவாழ்வுக்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதுவரை அவர்கள் வெளியேற்றப்பப்படமாட்டார்கள்.

பிற்காலத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்காகக் காட்டு நிலங் களை எடுக்கும்போது ஒரு ஹெக்டேரில் 75 மரங்களுக்கு மிகாத பகுதிகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் கீழ்கண்ட நோக்கங்களுக்காக கிராமசபையின் பரிந்துரையின் அடிப்படையிலேயே மேற்கொள்ள வேண்டும். அவை, பள்ளிக் கூடம், மருத்துவமனை, அங்கன்வாடி, நியாயவிலைக்கடை, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள், குளம் மற்றும் தடுப்பணைகள், குடிதண்ணீர், மழைநீர் சேகரிப்பு, சிறு பாசன கால்வாய்கள், சாலைகள், தொழில் நுடபப் பயிற்சி நிலையங்கள், சமுதாயக் கூடங்கள் ஆகிய நோக்கங்களுக்கு மட்டுமே நில மாற்றம் செய்யலாம்.

இதில் பழங்குடியினர் அல்லாத மற்ற இனத்தவரை பொருத் தவரை மூன்று தலைமுறை என்பதற்கான கால அளவை (75 ஆண்டு கள்) குறைக்க வரும் கூட்டத் தொடரில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

எனவே, இந்தச்சட்டம் பழங்குடி மக்களின் வாழ்வில் ‘ஒரு வரலாற்றுத் திருப்புமுனை’ என்றே சொல்ல வேண்டும். தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சில குறைபாடுகள், விதிகள் உருவாக்கப்படும் போது, அது சரி செய்யப்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது.

ஒவ்வொரு பழங்குடியினருக்கும் உரக்கச் சொல்லுவோம்

மக்களுக்குச் சாதகமான இந்தச் சட்டத்தை விரைவில் அமல்படுத்தச் செய்ய மார்க்சிஸ்ட் கட்சி தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும். அதே நேரத்தில், இந்தச்சட்டம் குறித்த விழிப்புணர்வை மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டியது நாம் செய்ய வேண்டிய உடனடிக்கடமை. இச்சட்டத்தின் பலனை தகுதி யற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் நமக்கிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பழங்குடி மக்களின் நில உடைமையைப் பாதுகாப்பதற்காக செங் கொடி இயக்கம் மேற்கொண்ட முயற்சிகளையும், இந்தச் சட்டத் தைக் கொண்டு வர மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகளையும் மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும்.

எல்லாவற்றிற்கும்மேலாக, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பழங்குடி மக்களின் மத்தியில் இடதுசாரி சக்திகளின் வலுவை அதிகப்படுத்தவும், ஸ்தாபனத்தை விரிவுபடுத்துவதும் அவசியம். அதோடு பழங்குடி மக்களின் ஒற்றுமையும், அவர்களின் தொடர்ச்சி யான வற்புறுத்தலும் தான் இச்சட்டத்தை அமல்படுத்தச் செய்வதில் முக்கியப் பங்காற்ற வேண்டியிருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

இந்த வரலாற்றுச் சாதனையை மலைகளில் வசிக்கும் மக்களின் இல்லங்கள் தோறும் எடுத்துச் செல்வோம். எப்படி வாழ்ந்தவர்கள் யாரால் வீழ்த்தப்பட்டார்கள், எவரால் மீட்கப்பட்டார்கள் என்ற வரலாற்றை ஒவ்வொரு பழங்குடிக்கும் உரக்கச் சொல்லுவோம்!

பி.எஸ்.ஆரின் நூற்றாண்டு: வாழ்வும் பணியும்

“ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால் ஒரு வேளை பிரபலமான அறிவாளியாகலாம். மாபெரும் ஞானியாகலாம். மிகச்சிறந்த கவிஞராகலாம். ஆனால், அவர் ஒரு குறையில்லாத உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது.

ஆனால், மனிதன் தன்னுடைய சகமனிதர்களின் பரிபூரணத்திற்காக, நன்மைக்காக பாடுபடுவதன் மூலமாகவே தன்னுடைய சுயபரிபூர்ணத்துவத்தை அடைய முடியும்.

நாம் தேர்ந்தெடுக்கும் தொழில், மனித குலத்தின் நன்மை, நமக்கு முக்கியமான வழிகாட்டியாக இருக்க வேண்டும். மிகவும் எண்ணற்ற மனிதர்களை மகிழ்ச்சியடையச் செய்தவரே மிகவும் அதிகமான மகிழ்ச்சியுடையவராகிறார் என்று அனுபவம் தெரிவிக்கிறது.”

– காரல் மார்க்ஸ்

பி.சீனிவாசராவ் அவர்களின் நூற்றாண்டு 2007 ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அவரது வாழ்வும், அவர் ஆற்றிய பணியும் இன்றைய தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் அமையும்.

54 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். சுமார் 19 ஆண்டுகள் மட்டுமே தஞ்சை மாவட்டத்தில் கட்சிப் பணியாற்றினார். ஆம்! 1907 ஏப்ரல் மாதத்தில் கர்நாடகத்தில் பிறந்து 1961 செப்டம்பர் மாதத்தில் தஞ்சை மாவட்டத்தில் இறந்தார். குறுகிய காலத்தில் அனைவராலும் போற்றக்கூடிய அளவுக்கு வளர்ந்தார். உயர்ந்தார் என்றால் அது எவ்வாறு?

1943 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திற்கு பி.எஸ்.ஆர். செல்கிறபோது, அவருக்கு தமிழில் பேச முடியும். ஆனால் சரியாக படிக்கவும், எழுதவும் தெரியாது. மொழி புதிது, மக்களும் புதியவர்கள். இத்தகைய தடைகளை மீறி பி.எஸ்.ஆர். விவசாயிகள் இயக்கத் தலைவராக, கம்யூனிஸ்ட் தலைவராக, சிறந்த போராளியாக எவ்வாறு ஜொலிக்க முடிந்தது? “பி.சீனிவாசராவ் செய்த சேவையின் மதிப்பு எல்லோராலும் உணரப்படக்கூடிய காலம் வரும்” அவரோடு கட்சிப் பணியாற்றிய தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜீவா இவ்வாறு கூறியிருக்கிறார்.

பி.எஸ்.ஆர். கர்நாடகத்தில் தென்கனரா பகுதியில் பிறந்து பெங்களூரில் உள்ள கிருத்துவ கல்லூரியில் கல்வி பயின்றார். சுதந்திரப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தபோது, “மாணவர்களே அந்நியக் கல்வி முறையை எதிர்த்து வெளியேறுங்கள்” பெற்றோர்களே! பிள்ளைகளை அந்நியர்கள் நடத்தும் கல்லூரிகளுக்கு அனுப்பாதீர்கள்” என 1920 இல் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கட்டளையிட்டது. காங்கிரஸ் கமிட்டியின் அறைகூவலை ஏற்று 1920களில் கல்லூரிப் படிப்பை தூக்கியெறிந்துவிட்டு, வெளியேறிய தேசப்பற்று மிக்க பல மாணவர்களில் பி.எஸ்.ஆரும் ஒருவர்.

சுதந்திர வேட்கையால் கல்லூரியை விட்டு வெளியேறிய பி.எஸ்.ஆர். நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று பிறகு சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சென்னை திரும்பினார்.

சென்னையில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்நியத் துணி விற்பனைக்கு எதிரான மறியலில் கலந்து கொண்டார். காவல் துறையினரால் கடுமையானத் தாக்குதலுக்கு உள்ளானார். காங்கிரஸ் கட்சியிலும், பிறகு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் சேர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்டார். பி.எஸ்.ஆர். கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது அமீர் ஹைதர்கானை (தென் மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் முக்கியமான பங்காற்றியவர்) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அமீர் ஹைதர்கான் தான் பி.எஸ்.ஆர் ஐ கம்யூனிஸ்ட்டாக்கினார்.

சென்னையில் பி.எஸ்.ஆர்., பி.ராமமூர்த்தி, ஜீவா போன்றவர்கள் இணைந்து கட்சிப் பணியாற்றியிருக்கிறார்கள். 1943 ஆம் ஆண்டு கட்சியின் மாநிலக்குழு கூடி தஞ்சையில் விவசாயிகளை திரட்டிட கம்யூனிஸ்ட் கட்சி முயற்சிக்க வேண்டும் என்று முடிவெடுத்தபோது பி.எஸ்.ஆர். தஞ்சைக்கு செல்கிறார்.

பி.எஸ்.ஆர். தஞ்சைக்கு செல்ல வேண்டுமென்று கட்சியின் மாநிலக்குழு முடிவெடுத்து அவர் சென்றபோது அவருக்கு மண்ணைத் தாலுக்கா களப்பால் கிராமத்தில் களப்பால் குப்புவின் தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. காக்கி அரைக்கால் சட்டையிலும், வெள்ளை அரைக்கை சட்டையிலும் செக்கச் செவேலென்று நெடிய உருவமுடைய பி.எஸ்.ஆர். வர வேற்பை ஏற்றுக் கொண்டு ஏற்புரையாற்றினார்.

“நீங்களெல்லாம் தாய் வயிற்றில் பத்து மாதம் கருவாகி உருவாகி வெளியே வந்தவர்கள்தான். உங்கள் மிராசுதாரர்களும் கார்வாரிகளும் கூட அப்படிப் பிறந்தவர்கள்தானே? அவர்களைப் போன்றே நீங்களும் மனிதர்கள்தான்! உங்களுக்கும் அவர்களுக்கும் தலைக்கு இரண்டு கை, இரண்டு கால்தானே? வேறென்ன வித்தியாசம்? அடித்தால், திருப்பியடி! சாணிப்பால் புகட்டினால் சாட்டையால் அடித்தால், அது சட்ட விரோதம்! அப்படித் தண்டிக்க வருவோரை முட்டியை உயர்த்தி ஓட ஓட விரட்டியடி! அடியாட்கள் ஆயுதங் களுடன் தாக்க வந்தால், பிடித்து கட்டிப்போடுங்கள். ஒருவர், இருவருக்கு தொல்லை கொடுத்தால் ஊரே திரண்டு தற்காத்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையும், உறுதியும்தான் சங்கம்.

எல்லா ஊர்களிலும், நமது கொண்டான் கொடுத்தான் களிருப்பதால், அங்கெல்லாம் போய்க் கொடி ஏற்றுங்கள். எல்லா இடங்களிலும் சங்கம் வந்து விட்டால், அடிக்குப் பதிலடி கொடுப் போம் என்று தெரிந்தால், நம்மை வாட்டி வதைக்கும், “எஜமானர்கள்” பயப்படுவார்கள். பழைய காலம் போல், போலீசும் காட்டு ராஜா தர்பார் நடத்தப் பயப்படும். அவர்கள் சட்டப்படி நடக்கச் செய்வதில் சங்கத்தின் வார்த்தைக்கு மதிப்பு ஏற்படும். நாங்களிருக்கும் தைரியத்தில் நீங்கள் துணிந்து செயல்படுங்கள்”

பி.எஸ்.ஆர். ஆற்றிய உரையை படிப்போர் அன்று கீழத் தஞ்சையில் இருந்த அரசியல் சமூகப் பொருளாதாரச் சூழலை புரிந்து கொள்ள முடியும். தஞ்சை மாவட்டத்தில் நிலங்கள் அனைத்தும் விரல்விட்டு எண்ணக்கூடிய நிலச் சுவான்தார்கள், மடாதிபதிகள், மடங்கள் மற்றும் ஜமீன்தார்கள் போன்றோருக்கு சொந்தமாக இருந்தது. தமிழகத்திலேயே நிலக்குவியல் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில்தான் அதிகம். மறுபுறத்தில் விவசாயத்தில் அன்றாட சாகுபடி வேலைகளைச் செய்யும் தலித் பண்ணையாட்கள், தலித் மக்களின் பெரும்பான்மையோர் நிலமற்றவர்களாகவும், பண்ணை யாட்களாகவும் வேலை செய்து வந்தார்கள். சாதி இந்து மக்களில் பெரும்பாலோர் குத்தகை சாகுபடிதாரர்களாக இருந்தார்கள். நிலச்சுவான்தார்கள் அனைவரும் சாதி இந்துக்கள்தான். இதில் ஒரு பகுதியினர் உயர்சாதியைச் சார்ந்தவர்கள். தலித் பண்ணையாட்கள் தீண்டாமை கொடுமைக்கும் நிலப்பிரபுத்துவத்தின் கொடுமையான சுரண்டலுக்கும் ஆளாகியிருந்தார்கள். குத்தகைய விவசாயிகள் சாகுபடிதாரர்களாக இருந்தாலும், நிலவுடைமையாளர்களின் கடுமையான சுரண்டலுக்கும், ஒடுக்குதலுக்கும் உள்ளானார்கள். அன்றைய ஆங்கிலேயே காலனியாதிக்க அரசு நிலச்சுவான்தார் களுக்கு அரணாகவும், பண்ணையாட்களுக்கும் குத்தகை விவசாயி களுக்கும் எதிராகவும் இருந்தது. இதனால்தான், 1940களில் விவசாயிகள் இயக்கம் நிலப்பிரபுத்துவத்தையும் தீண்டாமை கொடுமையையும் எதிர்ப்பதோடு, காலனியாதிக்கத்தையும் எதிர்த்து பேராட வேண்டியிருந்தது. சாதியும், நிலவுடைமையும் தீண்டாமை கொடுமையும் பின்னிணிப் பிணைந்து இருந்த சூழல்தான் ஒன்றுபட்ட தஞ்சையில், குறிப்பாக கீழத்தஞ்சையில்.

பி.எஸ்.ஆர். தனக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை கூடியிருந்தவர்களின் சிந்தனையில் மின்சாரத்தை பாய்ச்சியது போல் ஆயிற்று. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பண்ணை யாட்கள் மற்றும் சாதி இந்து குத்தகைதாரர்கள் மத்தியில் புதிய தெம்பு ஏற்பட்டது.

தென்பரை

பி.எஸ்.ஆர். தஞ்சைக்கு செல்வதற்கு முன்பே தென்பரை (கோட்டூர் ஒன்றியம்) கிராமத்தில் குத்தகை விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தென்பரையில் உள்ள பெரும்பகுதி நிலத்திற்கு சொந்தக்காரரான உத்திராபதி மடத்தை எதிர்த்து, குத்தகை விவசாயிகள் போராடிக் கொண்டிருந்தார்கள். தென்பரை கிராமத்திற்கு மாவட்டத்தில் உள்ள மற்ற தலைவர்களோடு சென்ற பி.எஸ்.ஆர். தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க முதல் கிளையை துவக்கி வைத்து கொடியேற்றுகிறார். குத்தகை விவசாயிகள் போராட்டம் சில கோரிக்கைகளை வென்றெடுத்தது.

தென்பரையில் செங்கொடி இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி காட்டுத் தீயைப் போல் கீழத்தஞ்சை முழுவதும் பரவியது. குத்தகை விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி மாவட்டத்தில் உள்ள பண்ணை யாட்களையும் உற்சாகப்படுத்தியது. தீண்டாமை கொடுமைக்கு எதிராக நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராக விவசாயிகள் சங்கமும், கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களை பாதுகாக்கும். தங்களுக்கு கொடுமையிலிருந்து விடுதலை பெற்றுத் தருமென தலித் மக்கள் உண்மையாகவே நம்பினார்கள்.

தினமும் கிராமம், கிராமமாக பி.எஸ்.ஆர்.ரும் மற்ற தலைவர்களும் சென்று விவசாயச் சங்கக் கொடியையும், கம்யூனிஸ்ட் கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார்கள். விவசாயிகள் சங்க கிளைகளும், கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகளும் பரவலாக துவங்கப் பட்டது. விவசாய சங்கத்தினுடைய உதயமும், கம்யூனிஸ்ட் கட்சியினுடைய துவக்கமும் கீழத் தஞ்சை முழுவதும் பரபரப்பான சூழலை உருவாக்கியது. மணலி கந்தசாமி, ஆர்.அமிர்தலிங்கம், பி.எஸ். தனுஷ்கோடி, ஏ.கே.சுப்பையா, கே.ஆர்.ஞானசம்பந்தம், ஏ.எம். கோபு, எம்.பி.கண்ணுசாமி, மணலூர் மணியம்மை போன்ற மாவட்டத் தலைவர்களும் பி.எஸ்.ஆர்.உடன் கிராமம், கிராமமாக சென்று விவசாயச் சங்கக் கிளைகளையும், கட்சிக் கிளைகளையும் உருவாக்கினார்கள்.

சாணிப்பால், சாட்டையடி போன்ற தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும், பண்ணையாளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்தும், குத்தகைய விவசாயிகளுக்கு பாதுகாப்பு மற்றும் நியாயமானக் குத்தகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி போன்ற வட்டங்களில் பரவலாக இயக்கம் துவங்கியது. இதனுடைய பிரதிபலிப்பாக கீழத் தஞ்சை முழுவதும் தலித் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டது.

தலித் மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியின் விளைவாக காவல்துறை தலையிட்டு விவசாயச் சங்கப் பிரதிநிதிகளையும், நிலச்சுவான்தார்கள் பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி 1944 இல் ஒப்பந்தம் உருவானது.

சாணிப்பால் சாட்டையடிக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டது. பண்ணையாளுக்கு அளிக்கப்பட்ட கூலி உயர்த்தப்பட்டது. குத்தகைய விவசாயிகளின் கோரிக்கையின் ஒரு பகுதியும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குறிப்பாக இந்தப் பேச்சுவார்த்தையின் போது நிலப்பிரபுக்களும் – தலித் பிரதிநிதிகளும் சமமாக உட்கார்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நிலச்சுவான்தார்கள் கையில் இருந்த சாட்டையை கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாயச் சங்கமும் பறித்து மோசமான தீண்டாமைக் கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

கீழத் தஞ்சையில் தீண்டாமை கொடுமை அக்காலத்தில் பல வடிவங்களில் இருந்தது. சாதி இந்துக்கள் தெருக்களில் தலித் மக்கள் செல்ல முடியாது. பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது. டீ கடைகளில் தலித் மக்களுக்கு சமமான இடமில்லை. தலித் மக்கள் கோவிலுக்குச் செல்ல முடியாது. இதுபோன்ற மோசமான வடிவத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமைகளுக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் முடிவு கட்டியது. சாதிய வேறுபாடும், தீண்டாமை கொடுமையின் மிச்ச சொச்சமும் கீழத் தஞ்சையில் இன்றும் நீடித்தாலும் அதன் குரூரத்தன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்ததில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பெரும் பங்குண்டு. இத்தகைய போராட்டத்தில் பி.எஸ்.ஆர். பிரதான பங்காற்றினார்.

1944 ஆம் ஆண்டின் பண்ணையாட்களுக்கு கூலி உயர்வும், குத்தகை விவசாயிகளுக்கு அதிகப் பங்கும் அளிக்கக்கூடிய ஒப்பந்தம் மன்னார்குடியில் உருவானது. இந்த ஒப்பந்தத்தில் நிலச்சுவான் தார்கள் கையெழுத்திட்டாலும், அமலாக்குவதற்கு மறுத்து வந்தனர். 1946 ஆம் ஆண்டு நீடாமங்கலத்தில் ஒரு முத்தரப்பு மாநாடு நடை பெற்றது. இதில் அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் பாஷ்யம் அய்யங்காரும், நிலச்சுவான்தார்கள் பிரதிநிதிகள் சிலரும் விவசாயச் சங்கத்தின் சார்பில், பி.எஸ்.ஆரும் மற்ற தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமே மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அனந்தநாராயணன் கமிஷன் வழங்கிய “கூலி உயர்வை” ரத்து செய்ய வேண்டும் என்பதே. சாமியப்ப முதலியார் என்ற நிலப்பிரபு குடும்பத்திற்கு வழக்கறிஞராக பணியாற்றுபவர் தான் மாநில அமைச்சர் பாஷ்யம். இந்தப் பின்னணியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது, அமைச்சரின் பேச்சு நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாகவே அமைந்தது. பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பி.எஸ்.ஆர்., “ஏஜண்டுகள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று அமைச்சரைப் பார்த்து கேட்க”, அமைச் சரோ! “அதனை நான் வலியுறுத்த முடியாது என்று கூறினார்”. கொதித்தெழுந்த பி.எஸ்.ஆர். பிறகு ஏன் இக்கூட்டத்தை கூட்டினீர் கள் என்று கேட்க? அமைச்சர் பாஷ்யம் பி.எஸ்.ஆரிடம் நான் யார் தெரியுமா என்று கேட்டார்? பி.எஸ்.ஆர். மிக அமைதியாக தெரியுமே! நீங்கள் வருவாய்த்துறை அமைச்சர் பாஷ்யம் என்று கூற, சூடேறிய அமைச்சர், “நான் நினைத்தால் எட்டு மணி நேரத்தில் போலீஸ் இங்கே வந்து விடும்” என்று கூறினார். அதற்கு பதிலடியாக பி.எஸ்.ஆர். உங்களுக்கு எட்டு மணி நேரம் தேவை! ஆனால், நான் “புரட்சி ஓங்குக!” என்று குரல் கொடுத்தால், அடுத்த நிமிடமே நீங்கள் சுற்றி வளைக்கப்படுவீர்கள் என்று கோபத்தோடு கூறினார். நிலப்பிரபுவின் வாலாக செயல்பட்ட பாஷ்யம் பேச்சுவார்த்தையை நிறுத்தி விட்டு ஓடிப்போய் விட்டார்.

இதற்குப் பின் பி.எஸ்.ஆர். கூலி உயர்வு பெறும் வரையில் யாரும் நிலத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று விவசாயி களுக்கு கூற, போராட்டத்தின் வீச்சைக் கண்டு கலங்கிப்போன நிலப்பிரபுக்கள் “நெல் கூலி உயர்வுக்கு ஒத்துக் கொண்டனர்” பி.எஸ்.ஆரின் பெருங் கோபம் நிலப்பிரபுக்களுக்கு கிலிப்பிடிக்க வைத்தது என்றால் மிகையாகாது.

நாடு விடுதலையடைந்த பிறகு சுதந்திர ஆட்சியில் பண்ணையாட்களுக்கும், குத்தகை விவசாயிகளுக்கும் விடுதலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆட்சி மாறினாலும், நிலச்சுவான்தார்கள் அணுகு முறையில் மாற்றம் ஏற்படவில்லை. ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசின் கொள்கையிலும் மாற்றம் இல்லை.

1948 – 51 ஆம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. தோழர். பி.எஸ்.ஆர். மற்ற மாநிலத் தலைவர்களைப் போல் தலைமறைவாகச் செயல்பட வேண்டியிருந்தது. இவருடைய தலைக்கு அன்றைய மாநில அரசு விலை வைத்தது. உழைப்பாளி மக்களின் நலனே தன்னுடைய வாழ்க்கை என்ற அடிப்படையில் பல சிரமங்களையும் ஏற்று பி.எஸ்.ஆர். செயல்பட்டார்.

1952 ஆம் ஆண்டு திருத்துறைப் பூண்டியில் பி.எஸ்.ஆர். முன் முயற்சியில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் குத்தகை விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இதில் 60 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அன்றைய சென்னை மாகாணத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற ராஜாஜி தலைமையிலான அரசு சாகுபடிதாரர் மற்றும் பண்ணை யாள் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வந்தது. பண்ணையாள் முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கக்கூடிய மற்றும் குத்தகை விவசாயி களை நிலத்தை விட்டு வெளியேற்றுவதற்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய இச்சட்டம் விவசாயிகள் இயக்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

தலைவர்களை உருவாக்கிய தலைவர்

கீழத் தஞ்சையில் நடைபெற்ற மகத்தான இயக்கத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகள் இயக்கமும் தலைமை தாங்கியது. தமிழகத்திலேயே தீண்டாமை கொடுமை ஒப்பீட்டளவில் பெருமளவிற்கு ஒழிக்கப்பட்டுள்ளது என்றால் இதன் பெருமை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கே. இத்தகைய சாதனையை ஓரிரு தலைவர்கள் சாதித்ததல்ல மக்கள் இயக்கம்தான் மாற்றத்திற்குக் காரணம். கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டுத் தலைமை வலுவான இயக்கத்திற்கு வழிகாட்டியது. இருப்பினும் இம்மகத்தான இயக்கத்தில் பிரதான பாத்திரம் வகித்தவர் பி.எஸ்.ஆர். 1940 களில் துவங்கிய இவ்வியக் கத்தால் பண்ணையாட்களும், சாதாரண விவசாயிகளும் விவசாயத் தொழிலாளிகளும் தலைவர்களானார்கள். பிற்காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக உயர்ந்தார்கள். இத்தகைய தலைவர்களை உருவாக்குவதில் பி.எஸ்.ஆருக்கு முக்கியப் பங்குண்டு. இதனால்தான் இவரை தலைவர்களை உருவாக்கிய தலைவர் என்று கூறுவார்கள்.

ஒருமுறை மாநாட்டில் நிறைவுரையாற்றுகிறபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னரான மறைந்த தோழர் பி.டி.ரணதிவே அவர்கள் ஒரு இயக்கம் வெற்றிபெற இரண்டு முக்கிய அம்சங்கள் தேவை என்றார். முதலாவது, சரியான கொள்கை இருக்க வேண்டும். இரண்டாவது, கொள்கைக்காக தியாகம் செய்யும் செயல்வீரர்கள் இருக்க வேண்டும். இந்த இரண்டு அம்சங்களும் சேர்ந்திருந்தால் அந்த இயக்கம் வெற்றி பெறும். கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழகத்தில் நிலக்குவியல் அதிகமாக இருந்ததும், தீண்டாமை கொடுமை மோசமான வடிவத்தில் இருந்ததும் ஒன்றுபட்ட தஞ்சையில் குறிப்பாக கீழத்தஞ்சையில்தான். (கீழத்தஞ்சை என்பது இன்றைய திருவாரூர், நாகை மாவட்டங்கள்) தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துப் பல இயக்கங்கள் குரல் கொடுத்தன. தந்தை பெரியார் சாதி வேறுபாட்டை, சாதிக் கொடுமையை கடுமையாக எதிர்த்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதேபோல் காந்திஜி தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்றார். தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் போராட்டத்திற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்தார். டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணல் காந்திஜி, டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் தீண்டாமைக் கொடுமை யையும், சாதிக் கொடுமையையும் எதிர்ப்பதில் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. இருப்பினும் எங்கு கம்யூனிஸ்ட் இயக்கம் பலமாக இருக்கிறதோ அங்குதான் தீண்டாமைக் கொடுமை ஒப்பீட்டளவில் ஒழிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் கேரளா, திரிபுரா, தமிழகத் தில் கீழத்தஞ்சை. காரணம் இங்கெல்லாம் சாதிக் கொடுமையை எதிர்ப்பதோடு கம்யூனிஸ்ட் இயக்கம் நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்தது. நில விநியோகத்திற்காகப் போராடியது.

கீழத்தஞ்சையில் கம்யூனிஸ்ட் இயக்கம் சாணிப்பால், சாட்டையடி என்ற அப்பட்டமான தீண்டாமைக் கொடுமையை எதிர்த்ததோடு நிலப்பிரபுத்துவ கொடுமைகளையும் சேர்த்து எதிர்த் தது. பி.எஸ்.ஆர். 1947 இல் எழுதி வெளியிட்ட “தஞ்சையில் நடப்ப தென்ன” என்ற பிரசுரத்தில் கீழத்தஞ்சையில் தலித் பண்ணை யாட்கள் சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் நிலச்சுவான் தார்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தார்கள். சாதிக் கொடுமையும் நிலப்பிரபுத்துவ, சுரண்டலும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை விளக்கியிருக்கிறார்.

“பண்ணையாட்களெல்லாம் பெரும்பாலும் ஆதிதிராவிட மக்களே. இவர்கள் நாள்முழுவதும் வேலை செய்தாலும்அரை மரக்கால் நெல்தான். …. அவர்களது மனைவி மார்களும் குழந்தை குட்டிகளும் மிராசுதார் பண்ணையில் பாடுபட வேண்டும் என்பதை யும் மறந்துவிடாதீர்கள். ஐந்து வயதுகூட நிரம்பாத பச்சிளம் குழந் தைகள் மிராசுதாரின் மாடுகளை மேய்க்க வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள்…. பண்ணையாட்களின் பரிதாபம் இத்துடன் நிற்கவில்லை. ஒரு சிறு குற்றம் செய்தாலும் போச்சு. மரத்தில் கட்டிப்போட்டு ஈவு இரக்கம் இல்லாமல் மிராசுதார் அடிப்பார் அல்லது அவரது ஏஜண்டுகள் அடிப்பார்கள்”.

கீழத்தஞ்சையில் அக்கால நிலப்பிரபுக்கள் பலர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களாகவும், திராவிட இயக்கத்தை சார்ந்தவர் களாகவும் இருந்தார்கள். ஆனால் தலித் பண்ணையாட்களை இரண்டு விதமானக் கொடுமைகளுக்கு உட்படுத்துவதில் நிலப் பிரபுக்க ளுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாக்கிய அணுகுமுறையை கீழத்தஞ்சை யில் நிலைமைக்கேற்ப அமலாக்குவதில் பி.எஸ்.ஆர். பிரதானப் பங்காற்றினார்.

1952 ஆம் ஆண்டு பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் வந்த பிறகு அடுத்த சில ஆண்டுகளில் நிலப்பிரபுக்கள், பண்ணையாள் என்ற தன்மை மாறி நிலச்சுவான்தார்கள் விவசாயத் தொழிலாளி என்ற நிலைமை உருவானது. சாணிப்பால், சாட்டையடிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு, பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்ட பிறகு, குத்தகை விவசாயிகளுக்கு ஓரளவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்ட பிறகு புதிய நிலைமை உருவானது. புதிய நிலைமைக்கேற்றவாறு கோரிக்கை உருவானது. கூலி உயர்வு, குத்தகை விவசாயிகளுக்கு நியாயமான பங்குக்காக மற்றும் தொடர்ச்சியான இயக்கங்களுக்கு தலைமை தாங்கிய பி.எஸ்.ஆர். கீழத்தஞ்சையில் விவசாயிகளின் இயக்கத் தலைவராக மட்டுமல்ல மாநில விவசாயிகளின் சங்கத் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

நில உச்சவரம்புச் சட்டத்தை திருத்தி நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு நிலவிநியோகம் செய்திட வேண்டுமென்று 1961 ஆம் ஆண்டு மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. பி.எஸ்.ஆர். பல மாவட்டங்களுக்குச் சென்று விவசாயிகள் மறியல் போராட்டத்திற்கு வழிகாட்டினார்.

தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான அ7ரசு கொண்டு வந்த நில உச்சவரம்புச் சட்ட மசோதாவை திருத்தி நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு நில விநியோகம் செய்ய வேண்டி வற்புறுத்தி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் நடைபெற்றது. மறியல் தயாரிப்பிற்காக எழுதிய கட்டுரையில் பி.எஸ்.ஆர். கீழ்வருமாறு கூறுகிறார்.

“1958 இல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருந்த கேரள சர்க்கார் நிலவுறவு மசோதாவை வெளியிட்டது. உச்சவரம்பை 5 பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு இருபோக நிலம் 15 ஏக்கர் என இந்த மசோதா நிர்ணயித்தது.

இந்தியா பூராவிலும் இது ஒரு பெரிய பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. இதனால் தான் காங்கிரஸ் மகாசபை கூட, தன்பெயர் போன நாகபுரி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. எல்லா ராஜ்யங்களும் 1959 இறுதிக்குள் நிலவுடைமை உச்ச வரம்புச் சட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்று இந்தத் தீர்மானம் பணித்தது.

சென்னை ராஜ்ய சர்க்காரும் 1960 ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நிலவுடைமைக்கு உச்சவரம்புக் கட்டும் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தது. இந்த மசோதா பரிசுரிக்கப்படுவதற்குள்ளாகவே, நிலவுடை மைக்கு உச்சவரம்புக் கட்டும் நோக்கத்தையே சிதறடிக்கும் முறையில் நிலச்சுவான்தார்கள் நிலங்களை மற்றவர்கள் பெயருக்கு மாற்றுவதையெல்லாம் முடித்துவிட்டார்கள். இந்த நில மாற்றங்களை ரத்து செய்வதற்கு சர்க்கார் எத்தகைய நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த மாற்றங்களுக்கெல்லாம் சர்க்கார் உடந்தையே.

சென்னை உச்சவரம்பு நிர்ணய மசோதா, 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர் என்று உயர்வான உச்ச வரம்பை நிர்ணயித்தது மட்டுமின்றி, இதர ராஜ்யங்களின் மசோதாக்களில் உள்ள எல்லாப் பாதகமான அம்சங்களும் இம்மசோதாவிலும் உள்ளன.

மேற்கண்ட மாநிலந் தழுவிய விவசாயிகள் மறியல் போராட் டத்தில் பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் கலந்து கொண்டார்கள். எதிர்காலத்தில் கீழத்தஞ்சையில் ஒரளவுக்கு நடைபெற்ற நிலவிநி யோகத்திற்கு இப்போராட்டம் நிர்பந்தமாக அமைந்தது.

இத்தகைய மறியல் போராட்டம் நடைபெறுகிறபோது தோழர் பி.எஸ்.ஆர். மாநிலம் முழுவதும் சென்றார். ஓய்வின்றி அலைந்ததால் அவர் உடல் நலம் குன்றி இருந்தார். 1961 செப்டம்பர் 29 ஆம் தேதி கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் தஞ்சையில் இரவு பின்நேரத்தில் அவர் இறந்தார்.

தஞ்சை மாவட்டமே கண்ணீர் வடித்தது. அமரர் பி.எஸ்.ஆர் ரின் இறுதி நிகழ்ச்சி தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன் தலைமையில் இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாயிற்று. தோழர் பி. ராமமூர்த்தி, எம். கல்யாண சுந்தரம், எம்.காத்தமுத்து, கே.டி.கே.தங்கமணி, கே.ரமணி, பார்வதி கிருஷ்ணன், கே.டி. ராஜூ மற்றும் பலர் பேசினார்கள். இரங்கல் கூட்டம் இரவு 1.10 மணிக்கு முடிவடைந்தது. இக்கூட்டத்தில் என்.சங்கரய்யா, ஏ.பாலசுப்பிரமணியன், வி.பி.சிந்தன் போன்ற பல தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

பி.எஸ்.ஆர். மறைவிற்குப் பிறகு அவரைப் பற்றி எழுதிய கட்டுரையில் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன், பி.எஸ்.ஆரின் குணநலன்களைப் பற்றி எழுதியிருக்கிறார். “வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்றுதான் அவர் எப்போதும் பேசுவார். ஒளிவு மறைவென்ற பேச்சுக்கே இடமில்லை. தவறுகள் அல்லது அநீதி என்று அவர் கருதியதைக் காரசாரமாகக் கண்டிக்கத் தவறமாட்டார். அரசியல் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய குறைபாடுகளை நீக்கிக் கொள்ள, இத்தகைய அவரது பிரதிபலிப்புகள், பல சந்தர்ப்பங்களில் எனக்கு உதவி புரிந்திருக்கின்றன.

பி.எஸ்.ஆர். பற்றி பி.ராமமூர்த்தி கூறியது. “மாவீரர் தோழர் .பி. சீனிவாசராவ் அவர்களை 1930 ஆம் வருடத்திலிருந்து எனக்குத் தெரியும். 1930 ஆம் வருடம் தேசிய மறியல் போராட்டத்தில் அவர் செய்த வீரத் தியாகங்கள் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அந்நிய துணி பகிஷ்கார மறியலில் தன்னந்தனியாக நின்று மறியல் செய்வார். கொடூரமான தடியடிப் பிரயோகத்தில் அவர் மண்டை உடைந்து ரத்தம் ஓடும். ஜனங்கள் இதைப்பார்த்து ஆத்திரமுற்று கதர் துணியை அதிகமாக வாங்கிக் கட்டுவார்கள். அன்று கதர் கடைகளில் அதிக வியாபாரம் நடந்தால், “இன்று சென்னையில் சீனிவாசராவ் மறியலா?” என்று கேட்பார்கள். என்னைப் போன்ற தோழர்களைக் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொண்டு வருவதற்கு அரும்பாடுபட்டார்.”

பி.எஸ்.ஆர். பற்றி ஏராளம் கூற முடியும். அர்ப்பணிப்பு, கொண்ட கொள்கையில் உறுதி, தெளிவு, வாழ்க்கையில் எளிமை, நேர்மை என விளக்கிக் கொண்டே போகலாம். அண்ணல் காந்திஜியை அவருடைய இறுதிக்காலத்தில் நாட்டு மக்களுக்கு அவர் விடுக்கும் செய்தி என்ன என்று கேட்டபோது, என் வாழ்வுதான்தான் விடுக்கும் செய்தி எனக் கூறினார். அதைப்போலவே பி.எஸ்.ஆர் இன் வாழ்வும், பணியும் தான் இன்றைய தலைமுறைக்கு அவர் விடுத்த செய்தியாக எடுத்துக் கொள்வோம்.

பி.எஸ்.ஆர். இன் நூற்றாண்டு ஏப்ரல் 10, 2007 இல் நிறைவுறுகிறது. ஆனால், அவர் துவக்கிய பணி நிறைவு பெறவில்லை. மகத்தான பணியை முன்னெடுத்துச் செல்ல உறுதியேற்போம்.