’புதிய’ இந்தியாவின்அரசியல்சாசனம்

  • உ. வாசுகி

இந்தியாவின் அரசியல் சாசனம், அரசியல் நிர்ணய சபையில் நிறைவேற்றப் பட்டதிலிருந்தே, அதனுடனான ஆர்.எஸ்.எஸ்.சின் ஒவ்வாமை, பல விதங்களில் ,வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  ”இதில் நம்முடையது என்று சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது?’ என்ற கேள்வியிலிருந்து, ”மனுவின் கோட்பாடுகளை விட சிறந்த சட்டம் எதுவும் இல்லை” என்ற வாக்குமூலம் வரை அனைத்துமே ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான ஆர்கனைசர் தலையங்கத்தில் பிரசுரிக்கப்பட்டது. ‘நம்முடையது’ என்று அவர்கள் சொல்லும்போது, அரசியல் சாசனத்தில் இருப்பது வேறு யாருடையதோ என்று பொருள்.  அதாவது ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் உள்ளிட்ட கூட்டாட்சி கோட்பாடு, சம நீதி, சமூக நீதி, அறிவியல் கண்ணோட்டம், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவுமே நம்முடையது இல்லை என்பது அவர்கள் வாதம். இந்துத்துவ ராஷ்டிரம் வந்தால், இவை எதுவுமே இருக்காது என்றுதான் இந்த வாதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் அடிப்படை நிலைபாடான இந்துத்துவ ராஷ்டிரம் அமைவதை குறிக்கோளாக வைத்தே, ஆர்.எஸ்.எஸ். – பாஜக அரசு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டு வருகிறது.

இந்துத்துவ நகல் அரசியல் சாசனம்:

சில மாதங்களுக்கு முன், வாரணாசியில் 30க்கும் மேற்பட்ட இந்து மத சாதுக்கள், இந்துத்துவ ராஜ்யத்தின் அரசியல் சாசனம் எப்படி இருக்கும் என்ற நகலை வெளியிட்டனர். இது நாள் வரை, ஆர்.எஸ்.எஸ்.சோ, பாஜகவோ, இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறவில்லை. இந்திய தலைநகர் வாரணாசி என்றும், நாடாளுமன்றம் மக்கள் பிரதிநிதிகளின் மன்றம் அல்ல; மத பிரதிநிதிகளின் மன்றம் என்றும் வரைவு அறிக்கை கூறுகிறது. இசுலாமியர்களும், கிறித்துவர்களும் இந்தியாவின் குடிமக்களாகத் தொடரலாம்; ஆனால் ஓட்டுரிமை இருக்காது என்பது அதில் ஒன்று. அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஆர்கனைசர், பஞ்சஜன்யா இதழ்களுக்கு அளித்த பேட்டியிலும் இது பிரதிபலிக்கிறது.   “இசுலாமியர்கள் இங்கு இருந்தாலும் இருக்கலாம். அவர்களின் முன்னோர்கள் இடத்துக்குப் போவதென்றாலும் போகலாம். இங்கு இருக்க வேண்டும் என்றால், அவர்களின் உயர்வு மனப்பான்மையைக் கைவிட வேண்டும். இந்துக்கள் 1000 ஆண்டுகளாக அந்நிய சதிகளை முறியடிக்க ஒரு யுத்தம் நடத்தி வருகின்றனர். யுத்தத்தில், ஆக்ரோஷமாக இருப்பது இயல்பானது” என்ற அவரின் பேச்சு, சிறுபான்மையினர் மீதான சங் அமைப்பின் நிலைபாட்டைத் தெளிவுபடுத்துவது மட்டுமல்ல; வன்முறையைத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது. அடுத்து, நீதி பரிபாலன முறை, இந்துத்துவ ராஷ்டிரத்தில் திரேதா யுகம், துவாபர யுகத்தில் பின்பற்றப்பட்ட முறையாக இருக்கும் என அந்த நகலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.  சமத்துவ அடிப்படையில் உருவாக்கப்பட்ட பல சட்டங்கள், சங் அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏதுவாக இல்லை. பல சுற்று விவாதித்து, மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்பட்ட சட்டங்கள், திருத்தங்கள், இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உட்பட நிராகரிக்கப்படும்.  இத்தகைய யுகங்கள், இந்து மத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டவை. எனவே, மத அடிப்படையிலான அசமத்துவ கோட்பாடுகள் இவற்றில் பிரதிபலிக்கும். சிறுபான்மையினரை இரண்டாம் நிலையில் நிறுத்துவது மட்டுமல்ல; பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் போன்ற பிரிவுகளுக்கும் சமநீதி இல்லை. இந்த வரைவு அறிக்கையின் மைய அம்சம், வருண அமைப்பின் அடிப்படையில்தான் அரசு நிர்வாகம் இயங்கும் எனக் கூறுகிறது. வருண, சாதிய கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. தோழர் பிரகாஷ் கராத், இந்துத்துவ ராஷ்டிரத்தைப் பற்றிக்  கூறும்போது,  அரசு நிர்வாகத்தை மதத் தலைவர்கள் நடத்துவதுதான் இந்துத்துவ ராஷ்டிரம் என இதனை எளிமையாகப் புரிந்து கொண்டு விடக்கூடாது; உள்ளடக்கம் அதை விட ஆழமானது, ஒட்டு மொத்தக் கட்டமைப்பும் அசமத்துவ அடிப்படையில், இந்துத்துவா என்கிற அரசியல் திட்டத்தின் அடிப்படையில், நிர்மாணிக்கப்படும் என்று சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சி நிரலுக்கு, இன்றைய அரசியல் சாசனம் பெரிதும் எதிராக இருப்பதால், அதனை சீர்குலைத்து, பிற்போக்கான மாற்று கதையாடலை முன்னிறுத்தும் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது.

இரண்டும் ஒன்றல்ல:

அதன் ஒரு பகுதியாகவே ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று பட்டியல் நீள்கிறது. இந்தியா முழுவதும் காவல்துறையின் சீருடை ஒரே மாதிரி இருக்க வேண்டும் என பிரதமர் சமீபத்தில் முன்மொழிந்தது இதற்கு ஒரு உதாரணம். காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் இந்த முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் எடுக்கும் சில நடவடிக்கைகள், கடந்த கால அரசாங்கமும் எடுத்ததாகக் கூட இருக்கலாம். ஆனால், இரண்டும் ஒன்றல்ல.  வகுப்புவாத சித்தாந்தத்தைப் பின்பற்றும் ஒரு கட்சி, ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு, இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறது என்ற வேறுபாடு முக்கியமானது.  இந்தி திணிக்கப்படுவதும், சமஸ்கிருதம் போற்றப்படுவதும், இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைக்கும் நோக்கம் கொண்டது. தேசிய புலனாய்வு முகமை, மாநில காவல்துறையின் எல்லையை மீறி நேரடியாகத் தலையிடலாம் என்பது, இசுலாமியர்களை அல்லது அரசியல் எதிரிகளைத் தீவிரவாதிகளாக முத்திரை குத்தும் வாய்ப்பை ஒன்றிய அரசின் கைவசம் வைக்கும் முடிவு.  இந்த வரிசையில்தான் ஆளுநரின் அதிகார மீறல் பிரச்னையும் வருகிறது.

அரசியல் ஆயுதமாக ஆளுநர்

தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட  மாநில அரசாங்கத்துக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இதனால் ஒன்றிய அரசுக்குக் கிடைக்கும் குறுகிய அரசியல் ஆதாயம் மட்டும் பகிரங்கமாகக் கண்ணுக்குத் தெரியலாம். ஆனால், விளைவு அது மட்டுமல்ல; பாஜக அல்லாத மாநில அரசுகளை செயல்பட விடாமல் தடுக்கும் அரசியல் நோக்கமும் இதில் உண்டு. அரசியல் சாசனம் கூறும் அதிகார வரம்பு மீறல், கூட்டாட்சி கோட்பாடு சிதைக்கப்படுதல் போன்ற விளைவுகளுடன்,  அனைத்து அதிகாரங்களையும் மையத்தில் குவிப்பது என்கிற ஆர்.எஸ்.எஸ். நோக்கத்தை ஒட்டியே இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகிறது. சகல அதிகாரமும் பெற்ற ஒன்றிய அரசாங்கமாக இருந்தால்தான், எதிர்ப்புகளை நசுக்கி,  இந்துத்துவ நிகழ்ச்சி நிரலையும், கார்ப்பரேட் ஆதரவு நிகழ்ச்சி நிரலையும், சுயசார்பு அற்ற அயல்துறை கொள்கையையும் துரிதமாக நடத்தி செல்ல முடியும்.

எதேச்சாதிகார பாதை

பாஜக அல்லாத மாநில அரசுகளை முடக்க ஆர்.எஸ்.எஸ். பாஜக எடுக்கும் முயற்சிகள் பலவிதம். மத்திய புலனாய்வு பிரிவு, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை போன்றவற்றைக் காட்டி அச்சுறுத்தி எதிர்க்கட்சிகளைப் பணிய வைப்பது, பல நூறு கோடிகள் கொடுத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் ஏற்பாடு, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டை முடக்கி, தேர்தல்களில் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துவது, நீதித்துறையிலும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த பிடிப்புள்ளவர்களை ஊடுருவ வைப்பது எனப் பல வடிவங்களில் இவை வருகின்றன. ஊடக சுதந்திரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி, பெரும்பாலான ஊடகங்களைத் தம் ஊதுகுழலாக்கி வைத்திருப்பதும் இதில் உள்ளடங்கும். வரி வருவாய் உட்பட நிதி பகிர்வு விஷயத்தில் மாநில அரசுகளைத் திணற வைப்பது, மாநில அரசுகளின் நல திட்டங்களை இலவசம் என்று முடக்க முயற்சிப்பது போன்ற நடவடிக்கைகள் இக்காலத்தில் அதிகம் முன்னுக்கு வருகின்றன.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்கள் சுட்டிக்காட்டுவது போல, பாஜக அரசாங்கம் கார்ப்பரேட் ஆதரவு மதவெறி கொள்கைகளை அமல்படுத்தி, இந்துத்துவ ராஷ்டிரத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றால், எதேச்சாதிகார பாதையில் செல்லத்தான் வேண்டும். ஜனநாயகமும், சுதந்திரமும், கருத்து வேறுபாடுகளும், எதிர்க்கட்சிகளும், பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களும். மக்கள் தம் விருப்பப்படி வாக்களிப்பதும் அவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும்.

இதில் முக்கியமானது, மக்களின் சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவது என்பதாகும். அனைத்துக்கும் ஒரு தர்க்க நியாயம் இருக்க வேண்டும் என்பதை மறுதலிப்பது, கருத்து சுதச்திரத்தை முடக்குவது, ஊடகங்களைத் தம் கைப்பாவையாக வைத்திருக்கும் முயற்சி, பிபிசி ஆவண படத்துக்குத் தடை, சமூக ஊடகங்கள் மீது நிர்ப்பந்தம், வெறுப்பு அரசியல் பேச்சுக்கள் போன்றவற்றைக் கூறலாம். உயர்கல்வி துறை, குறிப்பாக பல்கலைக்கழக வளாகங்கள், மாணவர்களின் சுதந்திர சிந்தனையை ஊக்குவிக்கக் கூடிய இடங்களாகும். ஆளுநர் என்பவர், பல்கலைக்கழக  வேந்தர் என்பதைப் பயன்படுத்தி, சங் சிந்தனையாளர்களைத் துணை வேந்தர்களாக நியமித்து ஊடுருவது என்பதும், சுதந்திர சிந்தனையை சீர்குலைக்கும் போக்காகும். தேசிய கல்வி கொள்கை முழுக்க முழுக்க, சங் சிந்தனை கூடாரமாகக் கல்வி நிலையங்களை மாற்றும் போக்கே.

ஆளுநரின் பங்கு பாத்திரம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் அணுகுமுறையை இந்தப் பின்புலத்தில் பார்ப்பதே பொருத்தமாக இருக்கும். அதிகார வரம்பு தெரியாமல் அவர் செயல்படவில்லை. தெரிந்தே அதை மீறுகிறார். அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணி அது.  டாக்டர் அம்பேத்கர் அவர்கள், ஆளுநருக்கு என்று எந்த வேலையும் இல்லை; அரசியல் சாசனம் வரையறுத்துள்ள கடமைகள்தான் உண்டு என சுட்டிக் காட்டுகிறார். சர்க்காரியா கமிஷன், ஆளுநர் என்பவர் தீவிர அரசியலிலிருந்து விலகி நிற்பவராகவும், தீவிர அரசியல் தொடர்புகள் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் என விளக்குகிறது. எனவே, தம் சொந்த அரசியல் – சித்தாந்த கருத்துக்களை வெளிப்படுத்த அவருக்கு அதிகாரம் இல்லை என்பது தெளிவு. தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவர் வாசிக்க மறுத்த பகுதிகள் முழுவதும் சங் சித்தாந்தத்துக்கு எதிரானவை.

மத்திய – மாநில உறவுகள் சீரமைப்புக்காக உருவாக்கப்பட்ட பல கமிஷன்கள், ஆளுநர் குறித்து பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. உதாரணமாக, சர்க்காரியா கமிஷன் (1983), ஆளுநரை அகற்றும் போது, மாநில அரசுடன் கலந்து பேச வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.  நிர்வாக சீர்திருத்த கமிஷன் (1969) அரசியல் சார்பு தன்மை இல்லாத ஒருவரையே ஆளுநராக நியமிக்க வேண்டும் என்கிறது. பூஞ்ச்சி கமிஷன் (2007). ஆளுநர்களை அகற்ற (இம்பீச்மெண்ட்) மாநில அரசுக்கு சட்ட ரீதியான அதிகாரம் வேண்டும்.; ஆளுநர் நியமனத்தில் மாநில முதலமைச்சரின் கருத்து கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

இத்தகைய சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சிவதாசன், ஆளுநரின் அதிகாரங்களை இன்னும் ஸ்தூலமாக வரையறுக்கக் கூடிய அரசியல் சாசன திருத்தம் (பிரிவு 153ஐ திருத்துவது சம்பந்தமாக) கோரி தனிநபர் மசோதாவை சமீபத்தில் முன்மொழிந்துளார். மாநில முதலமைச்சரிடம் 3 பெயர்களைப் பெற்று, அதில் ஒன்றைப் பரிசீலிக்கலாம என்ற ஆலோசனையை முன்வைத்துள்ளார். காலனிய ஆதிக்கத்தின்போது ஆளுநர்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியாக இருந்தது போன்ற அணுகுமுறை ஜனநாயக கட்டமைப்பில் பொருந்தாது என்ற அவரது வாதம்  சரியானது. மார்க்சிஸ்ட் கட்சி, ஆளுநரின் அவசியத்தைப் பற்றிக் கேள்வி எழுப்புவதோடு, மேலிருந்து நியமிக்கப்படுபவராக ஆளுநர் இருக்கக் கூடாது என்று கூறுகிறது.

நீதிபதிகள் நியமனம்

இதனை ஒட்டியே நீதிபதிகள் நியமனம் குறித்த சர்ச்சையைப் பார்க்க வேண்டும். ஒன்றிய சட்ட அமைச்சர் கிரேன் ரிஜிஜு,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு, ஒன்றிய அரசின் பிரதிநிதியை உள்ளடக்கிய தேடுதல் குழுவை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். ஏற்கனவே, அரசியல் சாசன பிரிவுகளின் சாராம்சம், அரசாங்கமே நீதிபதிகளை நியமிக்கக் கூறுகிறது என்றும், இந்த முடிவை எடுக்காவிட்டால், நீதிபதிகளின் காலி இடங்கள் நீடிக்கும் என்றும் அச்சுறுத்தும் விதத்தில் கூறி வந்தார். தற்போது உச்சநீதிமன்றத்தில் மட்டுமல்ல,  உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் ஒன்றிய அரசாங்கம் தலையிடும் வாய்ப்பை உருவாக்க முனைகிறார்.

குடியரசு துணை தலைவர், இப்பிரச்னையில், கேசவானந்த பாரதி வழக்கில், அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களை (basic tenets of constitution) வரையறுத்து, சட்டங்கள் இதற்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை கேள்விக்கு உள்ளாக்குகிறார். குடியரசு துணைத் தலைவர் பதவியும் அரசியல் சாசன அடிப்படையில் அமைந்ததாகும். தம் விருப்பம் போல் கருத்துக்களைக் கூற முடியாது.   நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பயன்படுத்தி, அரசியல் சாசனத்தை மீறியும் கூட எவ்வித சட்டத்தையும் இயற்றும் அதிகாரம் வேண்டும் என்பதே இதன் உட்பொருள்.

நீதிபதிகளே நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறையின் மாற்றங்கள் வேண்டும் என்பது உண்மைதான். நீதிபதிகள் நியமனம், இடமாற்றம், நீக்கம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கவனிக்கக் கூடிய, சார்புத்தன்மை அற்ற  கமிஷன் வேண்டும் என்பது அவசியம்தான். ஆனால், கொலிஜியத்தின் கோளாறுகளை முன்வைத்து, அந்த இடத்தில், ஒன்றிய அரசே அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஏற்பாட்டைக் கொண்டு வர, ஒன்றிய அரசு முனைவதை அனுமதிக்கக் கூடாது. பாஜக அரசின் இந்த முயற்சி, நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் போக்கு மட்டுமல்ல; தம் சித்தாந்த அடிப்படையில் தீர்ப்புகளை வழங்க வைக்கும் ஆபத்தும் மிக அதிகமாகத் தெரிகிறது. மோடியும், மோகன் பகவத்தும் முன்வைக்கும் கருத்துக்கள் எல்லாம் தீர்ப்புகளாகி விட்டால், இந்திய குடியரசின் குணாம்சம் முற்றிலும் மாற்றப்படும். எனவே, ஒன்றிய அரசின் நகர்வுகளை, ஒவ்வொன்றாகத் தனித்து பார்ப்பதை விட, ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் இந்துத்துவா என்கிற அரசியல் திட்டத்தின் வெவ்வேறு அம்சங்கள் என்ற ஒட்டு மொத்த பார்வையுடன் அணுகுவதும், பல்வேறு அரசியல் கட்சிகள், பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களை ஒருங்கிணைப்பதும், மக்கள் மத்தியில் இதனை அம்பலப்படுத்துவதும் நமக்கு முன் உள்ள மிக முக்கிய கடமையாகும்.

தாக்குதலுக்கு உள்ளாகும் அரசியல் சாசனம்

(குரல் : ஆனந்த் ராஜ் – ஆடியோ எடிட்டிங் : மதன் ராஜ்)

. வாசுகி

மத்திய பாஜக அரசு, ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் செயல்படுகிற அரசு. பிரதமர் மோடி துவங்கி, குடியரசு தலைவர், துணை தலைவர் வரை பலரும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள். மோடி ஆர்.எஸ்.எஸ்.சின் முழு நேர ஊழியர். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இவர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கு முன்பாகவே  ஆர்.எஸ்.எஸ்.சின் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள். இந்து மதத்தையும், இந்து சமுதாயத்தையும், இந்து கலாச்சாரத்தையும் வளர்த்தெடுக்க இதய சுத்தியுடன் உறுதி ஏற்றிருக்கிறார்கள். இந்த இலக்கை அடைய தம் வாழ்நாள் முழுவதும் தன்னலமற்று செயல்படுவதாக சபதம் செய்திருக்கிறார்கள். தாங்கள் இந்து ராஷ்டிரத்தின் ஒரு பகுதி என்பதும் அதன் ஓர் அம்சம்.

அரசியல் சாசனமோ மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கிறது. ஜனநாயகத்தை முன்வைக்கிறது. அறிவியல் கண்ணோட்டத்தை வளர்த்தெடுப்போம் என்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது. அதாவது சாதி, மத, பாலின பேதமில்லை என்கிறது. கூட்டாட்சி கோட்பாட்டை வெளிப்படையாக ஆதரிக்கிறது. ஆனால் இவர்களின் இந்துத்வா, மதவெறியுடன், பிராமணிய கலாச்சாரத்தை முன்வைக்கிறது. பெண்ணின் சமூகப் பங்களிப்பை நிராகரித்து, பெண்ணுரிமையை, குடும்பத்தைக் குலைக்கும் போக்காக சித்தரிக்கிறது. வலிமையான மைய அரசு, பலவீனமான மாநிலங்கள் என்பதே சங் பரிவாரத்தின் நிலைபாடு. சர்வாதிகாரி ஹிட்லர்தான் இவர்களின் ஆதர்ஷ புருஷர் என்றால், இவர்களுக்கு சாதகமாக இல்லையெனில் ஜனநாயக உரிமைகளை எந்த அளவு மிதிப்பார்கள் என்று நாம் புரிந்து கொள்ள முடியும். அதாவது, அரசியல் சாசனத்தின் அடிப்படை மாண்புகளுடன், இந்துத்வா எவ்விதத்திலும் ஒத்துப் போகவில்லை. எனவே, தங்கள் கருத்துக்களோடு வேறுபடுகிற அரசியல் சாசன அம்சங்களைத் திருத்துவதற்கும், சீர்குலைப்பதற்கும் முயற்சிக்கிறார்கள்.  வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில்,  அரசியல் சாசனத்தை மறு பரிசீலனை செய்ய, வெங்கடாச்சலையா கமிஷன் அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. கடும் எதிர்ப்பு எழுந்த பின்னணியில், அது கிடப்பில் போடப்பட்டது.

குறிப்பாக, இந்தியாவில் குடியிருக்கும் எவரும் இந்திய குடியுரிமை பெறலாம்; வேறு தகுதி எதுவும் தேவை இல்லை என்பதை மாற்றி, மத அடிப்படையில் குடியுரிமை என்ற பிரிவைக் கொண்டு வர திட்டமிடுகின்றனர். அசாமில் முன்னுக்கு வரும் சில பிரத்தியேக சிக்கல்களைப் பயன்படுத்தி, மத அடிப்படையில் குடியுரிமை என்பதை முதலில் அம்மாநிலத்தில் அமலாக்க முயற்சிக்கின்றனர்.

2015 குடியரசு தின அரசு விளம்பரத்தில் மதச்சார்பின்மை, சோஷலிசம் என்ற வார்த்தைகள் இல்லாத அரசியல் சாசன முன்னுரையே வெளியிடப்பட்டது. அமைச்சர் ஆனந்த குமார் ஹெக்டே, ஒவ்வொருவரும் மத அடையாளத்தையே முன்னிறுத்த வேண்டும்; அதற்காக அரசியல் சாசனம் மாற்றப்பட வேண்டுமானால் அதற்கு பாஜக இருக்கிறது  என்று பேசினார். (பின்னர் வருத்தம் தெரிவித்தார்) உபி முதல்வர் ஆதித்யநாத், அரசியல் சாசனத்தின் ஓர் அடிப்படை அம்சமான மதச்சார்பின்மை குறித்து,  “தேச விடுதலைக்குப் பின் கூறப்பட்ட மிகப் பெரிய பொய்” என்றார். அறிவியல் கண்ணோட்டத்தை சாசனம் முன்வைக்கும் போது, அதற்கு நேர்மறையான புனைகதைகளை உண்மை என்பதாக பிரதமர் உள்ளிட்டோர் பகிரங்கமாகப் பேசுகின்றனர்.

நான்காண்டுகளில் நடந்தது என்ன?

அரசியல் சாசன சட்டகத்தின் கீழ் வரும் நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளுக்கு ஆர்.எஸ்.எஸ். நபர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். நீதித்துறை, தேர்தல் ஆணைய செயல்பாடுகளில் கூட, இந்த நோக்கத்துடன் தலையீடுகள் நடக்கின்றன. இதை, பொதுவாக இதர ஆளும் கட்சிகள் செய்வதுடன் ஒப்பிடக் கூடாது. சங் சித்தாந்தத்தை  இந்நிறுவனங்கள் மூலம் பரப்பும் நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். இதைக் கேள்வி கேட்கும் எவரும் தேச துரோகி என முத்திரை குத்தப்பட்டு வேட்டையாடப்படுகின்றனர்.

நாடாளுமன்றம் பல விஷயங்களில் ஓரம் கட்டப்படுகிறது. அவசர சட்டங்கள் மூலம் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலை சமாளிக்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் மசோதா இதற்கோர் உதாரணம். இடது மற்றும் முற்போக்கு சக்திகளால் மசோதா கொண்டு வரும் முயற்சி முறியடிக்கப்பட்ட உடன், மாநிலங்கள் அவரவர் சட்டமன்றத்தில் இதை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றாக்கி, பாஜக ஆளும் மாநிலங்களில் அதனை முதலில் நடைமுறைக்குக் கொண்டு வந்தது நினைவிருக்கும். ஆந்திரா, தெலுங்கானாவுக்கு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு; ஜவுளித்துறை, நிலக்கரி சுரங்கம் குறித்த அவசர சட்டத்தை மறுபிரகடனம் செய்தது; பிரதமரின் தலைமை செயலாளர் நியமனம் போன்றவை இத்தகைய அவசர சட்ட உதாரணங்களில் சில. முக்கிய மசோதாக்களை, பண மசோதாவாகக் கொண்டு வந்து மக்களவையிலேயே நிறைவேற்றுவது இக்கால கட்டத்தில் நடந்திருக்கிறது.

முதன்முறையாக பெரிய விவாதத்துக்கு இடமளிக்காமல் நிதி நிலை அறிக்கை நிறைவேற்றப்பட்டது. மக்களின் வரிப்பணத்தை எதற்கெல்லாம் ஒதுக்கீடு செய்வது என்ற முக்கியமான விவாதத்தை நடத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு இல்லை. அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம், விதிகள் இடம் கொடுத்தாலும், பாஜகவைச் சேர்ந்த அவை தலைவரால்  அனுமதி மறுக்கப்பட்டது; அவை ஒத்தி வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் தீர்மானம், மாநிலங்களவை தலைவரால், அதன் தகுதி குறித்து முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் இல்லாத போதும், டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

மாநில அதிகாரம்:

இக்காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட பெரும்பாலான ஆளுநர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில், பாஜக அரசின் தந்திரங்களை, விருப்பத்துடன் நிறைவேற்றிக் கொடுத்தார்கள். டெல்லி மற்றும் புதுச்சேரியில் இது வெளிப்படையாகவே தெரிந்தது. உச்சநீதிமன்றம், துணை நிலை ஆளுநர்கள், அமைச்சரவையின் ஆலோசனையின் பேரிலேயே செயல்பட வேண்டும் என்று அளித்த தீர்ப்பு பாஜகவின் திட்டத்துக்குத் தற்போது தடங்கலை  ஏற்படுத்தியிருக்கிறது. கோவா, மணிப்பூர், மேகாலயா, கர்நாடக மாநிலங்களில் ஆளுநர்கள், பாஜகவை ஆட்சி அமைக்க முதலில் அழைத்தது, ஆட்சி அமைக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. கர்நாடகத்தில் அப்படியும் ஆட்சியை அமைக்கமுடியவில்லை என்பது வேறு விஷயம். பாஜகவின் குதிரை பேரத்துக்கு (இதர கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க) ஆளுநர்களின் தலையீடு உதவியிருக்கிறது. தமிழகத்தில் ஆளுநர், இணை அரசாங்கமாக செயல்பட முயற்சித்து வருகிறார்.

மத்தியிலிருந்து மாநிலங்களின் நிதி தேவையைப் பூர்த்தி செய்ய, இருப்பதைப் பகிர்ந்தளிக்க அரசியல் சாசன பிரிவு  280ன் கீழ் நிதிக் கமிஷன் உருவாக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்தியிலிருந்து மாநிலங்களுக்கும், மாநிலங்களுக்கு இடையேயும் நிதியை இது பகிர்ந்தளிக்கும். அதாவது, மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி கொடுப்பது கருணை அடிப்படையில் அல்ல; அரசியல் சாசனம் அளித்திருக்கும் கடமை என்பதை சரியாகப்புரிந்து கொள்ள வேண்டும். தற்போது அமைக்கப்பட்டிருக்கும் 15வது நிதிக் கமிஷனின் வரையறையே, மாநிலங்களுக்கான நிதி பகிர்வைக் குறைப்பதாக உள்ளது. மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட நிதி உதவி செய்யத்தான் வேண்டுமா என்ற கேள்வியைக் கமிஷன் எழுப்பியிருக்கிறது. ஏற்கனவே, ஊதிய கமிஷன் பரிந்துரை நிறைவேற்றம், ஜி.எஸ்.டி. அமலாக்கம்,  சமூக செலவினங்கள், இன்னும் பொதுவிநியோகமுறைக்கு அளிக்க வேண்டிய மானிய விலையிலான பொருட்கள் மத்திய அரசால் குறைப்பு போன்ற பல காரணங்களால் மாநில நிதி நிலை தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, நிதிக் கமிஷனின் இந்தக் கேள்வி வரப்போகும் ஆபத்தான நிலையைப் பிரதிபலிக்கிறது.

ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்பதும் ஆர்.எஸ்.எஸ்.சின் அகண்ட பாரத கருத்தியலின் அடிப்படையே. இதன் காரணமாகத்தான் மாநிலங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்படுகின்றன. இந்தி மறைமுகமாகத் திணிக்கப்படுகிறது. ஆதிச்சநல்லூர் துவங்கி கீழடி வரையிலான அகழ்வாராய்ச்சிகள் தமிழர் நாகரிகத்தைப் பறைசாற்றுகின்றன. கீழடியின் 5,000 அகழ் பொருட்கள் சமயச்சார்பற்ற ஒரு சமூக அமைப்பு இருந்ததை எடுத்துக் காட்டுகிறது. சங்கின் நிலைபாட்டுக்கு இது உகந்ததல்ல என்பதால், ஆராய்ச்சிக்குத் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போடப்படுகிறது. இத்திட்டத்தின் அதிகாரி இடமாற்றம் செய்யப்படுகிறார். 5,000 பொருட்களில் இரண்டே இரண்டு மட்டுமே (அதன் காலப்பகுதியை அறிவியல் பூர்வமாக நிர்ணயிப்பதற்கான) கார்பன் டேட்டிங்குக்காக ஏற்கப்பட்டது. அதே நேரத்தில் ஒன்றுமே கிடைக்காத குஜராத் அகழ்வாராய்ச்சிக்கு நிதி தொடர்கிறது.

சிறுபான்மை மக்கள் மீதான கொடூர தாக்குதல்கள்:

உள்நாட்டு எதிரிகளாக முஸ்லீம், கிறித்துவர், கம்யூனிஸ்டுகள் கோல்வால்கரால் அடையாளம் காட்டப்பட்ட பின்னணியில், அவர்கள் மீதான தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. கம்யூனிஸ்டுகளின் வலுவான தளங்களான கேரளா, திரிபுரா, மேற்குவங்கத்தில்  கூடுதல் தாக்குதல்களும், கொலைகளும் நடக்கின்றன.

2014-2017 கால கட்டத்தில் வகுப்புவாத வன்முறை 28% அதிகரித்திருக்கிறது. இக்கால கட்டத்தில் 3,000 வன்முறை நிகழ்வுகள் நடந்து, அவற்றில் 400 உயிர்கள் பறிக்கப்பட்டு, 9,000க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பசு குண்டர்களால் 78 தாக்குதல் சம்பவங்களும், அடித்துக் கொலை செய்வதும் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றில் 29 பேர் கொல்லப்பட்டு, 273 பேர் காயம் அடைந்திருக்கின்றனர். இதில் 148 பேர் படுகாயம். இதில் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு முஸ்லீம்கள், மற்றவர்கள் பெரும்பாலும் தலித்துகள். லவ் ஜிஹாத்; கட்டாய மதமாற்றம்; மக்கள் தொகையில் முஸ்லீம்கள் அதிகரிப்பு; தேசபக்தி இல்லை; பாகிஸ்தானுக்குத்தான் ஆதரவு; சர்வதேச இசுலாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்பு; மாட்டுக்கறி பிரச்னை என்று பல அடையாளங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அரங்கேற்றப்படுகிறது. லின்ச்சிங் என்று சொல்லப்படும் கும்பலாகத் திரண்டு அடித்து கொலை செய்யும் சம்பவங்களைத் தடுக்க தனி சட்டம் வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லும் அளவுக்கு இவை நிகழ்ந்திருக்கின்றன. தற்போது,  குழந்தை கடத்தல் என்ற வதந்தியின் அடிப்படையிலும் அடித்துக் கொல்லும் வன்முறைகள் நடக்கின்றன.

கிறித்துவர்களும் சங் பரிவாரத்தின் வன்முறைக்கு இலக்காகி வருகின்றனர். தேவாலயங்கள், பாதிரியார்கள், கிறித்துமஸ்/ஈஸ்டர் கொண்டாட்டங்களின் மீது சுமார் 700 தாக்குதல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட இடங்களில் இவை நடந்தன. இந்து முன்னணி ஆட்கள் பல்வேறு சொந்த, வியாபார காரணங்களால் கொல்லப்படும் போதெல்லாம் அவற்றை அரசியல் படுகொலை என்று முன்வைத்து, சிறுபான்மையினர் மீது தாக்குதல் தொடுக்கும் வாய்ப்புகளாக அவற்றைப் பயன்படுத்துவதில் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் திறமைசாலிகளாக இருக்கின்றன. தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில், மார்க்சிஸ்ட் கட்சி உரிய தலையீடு செய்திருக்கிறது.

கத்துவாவில் 8 வயது சிறுமிக்கு நடந்த குரூரமான பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக்கான காரணங்களில், அப்பகுதி முஸ்லீம்களை அங்கிருந்து விரட்டும் நோக்கமும் ஒன்று. அதாவது பாலியல் வல்லுறவு, மதவெறி ஆயுதமாக மாற்றப்படுகிறது. இதை மேலும் வலுவாகச் செய்ய அரசியல் சாசனத்தின் மதச்சார்பின்மை குறுக்கே வருகிறது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது மனுநீதிக்கு முரணாக இருக்கிறது. அரசியல் சாசனம் வந்த போதே, ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசரின் தலையங்கம், இது என்ன சாசனம், மனு ஸ்மிருதியை விட சிறந்தது வேறு உண்டா என்று எழுதப்பட்டது. கோல்வாலகர், மனுநீதி தான் இந்துக்களின் சட்டம் என எழுதினார். தீன்தயாள் உபாத்யாயா, அரசியல் சாசனம் மேற்கத்திய பாணியில் இருக்கிறது; நமது வாழ்க்கை முறையோடு இணையவில்லை எனக் குறிப்பிட்டார். இந்தக் கண்ணோட்டம்  மோடி ஆட்சியில் வலுவாக முன்வைக்கப்படுகிறது.

குற்றம் நடந்த உடன், சமூக நிர்ப்பந்தத்தால் மோடி அரசு சில லேசான கண்டன வார்த்தைகளைப் பட்டும் படாமல் சொல்கிறது. ஆனால், மறைமுகமாக குற்றவாளிகளை ஆதரிக்கிறது. கத்துவா குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்த ஊர்வலத்தில் அம்மாநில பாஜக அமைச்சர்கள் பங்கேற்றனர். குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு, அம்மாநில கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆக பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. முகமது இக்லாக்கைக் கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவர் சிறையில் இறந்த போது, அவருக்கு தேசிய கொடி போர்த்தி மரியாதை செய்யப்பட்டது. முஸ்லீம்களை அடித்துக் கொல்வது தேசபக்தி என்பதே இதன் மறைபொருள். இந்து சமூகத்துக்காக இதய சுத்தியுடன் பணி செய்வது இது தான். ஜாமீனில் வெளிவந்த 11 பேருக்கும் மாநில பொது துறை நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டது. இன்னொரு வழக்கில், குற்றவாளிகளுக்கு மாநில பாஜக அமைச்சர் மாலை போட்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்துத்வா பயங்கரவாதிகள் பலரும் விடுதலை செய்யப்படுகின்றனர். மாலேகாவ்ன், மெக்கா மஸ்ஜித் உள்ளிட்ட குற்றங்கள், குஜராத் கோத்ரா சம்பவத்துக்குப் பின் நடந்த கொடும் குற்றங்களில் சிக்கிய பலர்,  அரசு தரப்பு பலவீனமாக வழக்கு நடத்தியதன் காரணமாக விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்திய மக்கள் தொகையில் மதவழி சிறுபான்மையினர் 21% என்றாலும்,  2018-2019 நிதி நிலை அறிக்கையில், சிறுபான்மை விவகார அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்டது வெறும் 0.19% தான். சச்சார் கமிட்டி பரிந்துரைகளும், ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகளும் அரசின் நிகழ்ச்சிநிரலை விட்டு விலகி வெகுநாட்களாகின்றன.

ஜம்மு காஷ்மீரில், காஷ்மீர் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதி என்பதும் சேர்ந்தே அரசின் தவறான அணுகுமுறையை உருவாக்கியிருக்கிறது.

கருத்து சுதந்திரம்:

அரசியல் சாசனத்தின் பிரிவு 19 கருத்து சுதந்திரத்தையும், பேச்சு சுதந்திரத்தையும் அடிப்படை உரிமைகளாக அளிக்கிறது. ஆனால் மோடி ஆட்சியில் விமர்சனமும், மாற்றுக் கருத்தும் பாசிச பாணியில் அடக்கி ஒடுக்கப்படுகிறது. வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் மக்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படும்போது விமர்சித்தாலும் அடக்குமுறைதான். மாற்றுக் கருத்தை வலுவாக முன்வைத்தார்கள் என்பதற்காக கல்புர்கி முதல் கவுரி லங்கேஷ் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கருத்து சுதந்திரம் (free speech) அடக்கப்படும் அதே நேரத்தில் வெறியூட்டும் சங் பரிவாரத்தின் பேச்சுக்களுக்கு (hate speech), அது கொலை மிரட்டலாக இருந்தாலும் சரி, தாராள சுதந்திரம் உண்டு. தேசத் துரோக சட்டப்பிரிவுகள் மாற்றுக் கருத்து சொல்வோர் மீது போடப்படுகின்றன. பிரதமரை விமர்சிக்கக் கூடாது; அரசை விமர்சிக்கக் கூடாது; கண்டிக்கக் கூடாது; இவற்றை செய்தாலே தேச விரோதம் என்று முத்திரை குத்தப்படுகிறது. இந்து ராஷ்டிரம் நிச்சயமாக நாம் கனவு காணும் இந்தியா அல்ல. அங்கே தொழிலாளி வர்க்க நீதிக்கு இடம் இல்லை. சமத்துவம் கிடையாது. சாதிய அடுக்குகள்தான் தீர்ப்பு சொல்லும்.

இந்நிலை மாற, செய்ய வேண்டிய அரசியல், ஸ்தாபன கடமைகள் பல உண்டு. அதன் ஒரு பகுதியாக, பாஜக அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவதை முதன்மை கடமையாகக் கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தை சீர்குலைக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளை அம்பலப்படுத்த வேண்டும்.

ஆதாரம்: சிபிஐஎம் வெளியீடு – ”சீர்குலைக்கப்படும் அரசியல் சாசனம்”