சோசலிச பதாகையை உயர்த்திப் பிடிக்கும் சீன கம்யூனிஸ்டுகள் !

  • அருண் குமார்

2022 அக்டோபர் 22 அன்று,  சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC)-யின் 20வது மாநாடு வெற்றிகரமாக நிறைவுற்றது. உலக பொருளாதாரத்தில், சீனா முக்கிய பங்கை வகிப்பதால் இந்த மாநாடு கூர்ந்து கவனிக்கப்பட்டது.

2021இல் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 17.7 லட்சம் கோடி டாலர்களை எட்டியது. இது உலகின் மொத்த உற்பத்தி மதிப்பில் 18.5 சதவீதம் ஆகும். 2013 முதல் 2021 வரை சீன பொருளாதாரம் சராசரியாக 6.6 சதவீதம் வளர்ந்தது. இது உலக பொருளாதார வளர்ச்சி விகிதமான 2.6 விட அதிகம். 2013-2021 காலத்தில் உலக உற்பத்தி மதிப்பில் சீனாவின் பங்கு சராசரியாக 38.6 சதவீதமாக இருந்தது. ஜி-7 நாடுகள் செய்த மொத்த பங்களிப்பை விட இது அதிகம் ஆகும். அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி, சர்வதேச வர்த்தகத்தில் மிக அதிகமாக ஈடுபடும் நாடாக 2020ஆம் ஆண்டில் உயர்ந்தது சீனா. 2021ஆம் ஆண்டிலும் இந்த முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டு 6.9 லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான வர்த்தகத்தில் ஈடுபட்டது.

தனிநபர் சராசரி தலா வருமானத்தை 2012ஆம் ஆண்டு இருந்த நிலையில் இருந்து இரட்டிப்பாக்கி 11,890 டாலர்கள் என்ற அளவை எட்டியுள்ளது சோசலிச சீனா. வருமான அளவு உயர்வு, கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டின் காரணமாக சீன மக்களின் சராசரி ஆயுள் 77.9 ஆண்டுகளாக உயர்ந்தது. இது உலக சராசரியை விட 5.2 ஆண்டுகள் அதிகம் ஆகும். இது சோசலிச முறையின் மேம்பாட்டை உணர்த்தி,  அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவையெல்லாம் மாநாட்டின் மீதான முக்கியத்துவத்திற்கு காரணமாக அமைந்தன.

49 லட்சம் கட்சி அமைப்புகளில் செயல்படும் 9.6 கோடி கட்சி உறுப்பினர்களில் இருந்து 2,296 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றார்கள். மாநாட்டு அறிக்கையை தயாரிப்பதற்கு மாபெரும் ஜனநாயக செயல்முறைகள் நடைமுறைபடுத்தப்பட்டன. கட்சியின் மத்தியக் குழுவின் கீழ் இயங்கும் 54 கல்வி மையங்கள் 26 முக்கிய தலைப்புகளில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு 80 அறிக்கைகளை தயாரித்தன. அவை மாநாட்டு வரைவு அறிக்கைக்கு அடிப்படையாக அமைந்தன. வரைவு அறிக்கை குறித்து 85.4 லட்சம் கருத்துகள் இணையத்தின் மூலம் பெறப்பட்டன. 20வது மாநாட்டில் முன் வைக்கப்பட்ட வரைவு அறிக்கையின் மேல் 4,700 கருத்துக்கள் வந்தன.

இந்த மாநாட்டின் பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்ட கடந்த 5 ஆண்டுகளை ‘நிகழ்வுகள்மிக்க காலம்’ என குறிப்பிட்ட அறிக்கை, ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதார,  அரசியல், கலாச்சார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டை முன்னெடுக்கும் ஐந்து-தள ஒருங்கிணைந்த திட்டப் பணியில் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ‘முழுமையான மக்கள் ஜனநாயக செயல்முறைகளை ஊக்குவிப்பது, முன்னேறிய சோசலிச கலாச்சாரத்தை வளர்ப்பது, மற்றும் பொது மக்கள் நலனை மேம்படுத்துவது’ ஆகியவற்றிலும் கட்சி வெற்றி கண்டிருப்பதாக அறிக்கை குறிப்பிட்டது. இந்த காலகட்டத்தில்தான், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு இலக்குகளில் ஒன்றான ‘கடும்வறுமையை ஒழித்து’, மதிப்பு மிக்க செழிப்பான சமுதாயத்தை உருவாக்குதல் எட்டப்பட்டது. இப்போது, நூற்றாண்டின் இரண்டாவது இலக்கினை நோக்கி நாட்டை வழிநடத்துகிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி. 2049 ஆம் ஆண்டிற்குள், இணக்கமான, வளர்ந்த சோசலிச சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், சீன பிரதமருமான லீ கச் சியாங் அவர்கள் மக்களின் அடிப்படை நலனை பாதுகாப்பதே கட்சியின் முதன்மையான கடமை என குறிப்பிட்டார். அனைத்து மக்களின் பொதுநலன் பாதுகாக்கப்பட்டு, அனைவரும் உயர்வடைந்தால்தான் வளர்ச்சியை நோக்கிய, நவீன மயமாக்கலின் பலன்களை முழுமையாகவும், நியாயமாகவும் பகிர்ந்து கொள்வதாக அமையும் என்றார்.

கடும் வறுமையை ஒழிக்கும் பணியிலும், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக முழுமையான போரினை முன்னெடுத்து மக்களின் உயிர்களையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் பணியிலும் கட்சியை வழிநடத்தியது இந்த கோட்பாடுகள்தான். முதலாளித்துவ நாடுகளைப் போல, பொருளாதார நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், மக்களின் உயிர்களை முதன்மைப்படுத்தி செயல்பட்டது சீனா.

மாநாட்டின் முன்பாக அறிக்கை சமர்ப்பித்து பேசிய, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங், கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளை மறவாது இருக்க வேண்டும்; மார்க்சியத்தின்மீதும், சோசலிசத்தின்மீதும் மாறாத பற்றுறுதியுடன் இருக்க வேண்டும் என்றார். கட்சி தனது தன்மையையும், தான் வகிக்க வேண்டிய பாத்திரத்தையும், உறுதிப்பாட்டினையும் மாறாமல் கடைப்பிடிக்கும் என்றார்.

“மார்க்சியம் வேலை செய்கிறது. குறிப்பாக, சீன நிலைமைகளுக்கும், நம் காலத்தின் தேவைகளுக்கும் பொருத்தி அமலாக்கினால்” என்பதுதான் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சீன தன்மையிலான சோசலிசத்திற்கும் காரணம் என்று ஜின் பிங்  கூறினார். “சீனா தன் தன்மையை மாற்றிக்கொண்டு, சோசலிச முறையை கைவிட்டு, ஒரு நாளும் ‘மடை மாறிப் போகாது'” என உறுதியுடன் அவர் கூறினார்.

சீனா ஒரு நாளும் மிரட்டல்கள் மற்றும் அழுத்தங்களுக்கு அடிபணியாது என்றும், எந்த ஒரு சவாலையும் தைரியமாக எதிர்கொள்ளும் என்று உறுதியுடன் பேசினார். ‘காலத்தின் தேவைகளுக்கும்’, ‘மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும்’  விடை அளிப்பதற்கான மாறாஉறுதியுடனும் முனைப்புடனும் முன் நகர்ந்தால் மட்டுமே கட்சி முன்னேறிச் செல்லும் என குறிப்பிட்டார். கம்யூனிஸ்டுகள் எப்போதுமே சுயவிமர்சனங்களுக்கு தயாராக இருந்து, சோசலிச கட்டமைப்பின் பாதையில் வரும் அனைத்து தடைகளையும் தாண்டி செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும். இந்த திசைவழியில் ஊழலுக்காக ஊற்றுக்கண்கள் நீடிக்கும்வரை அதற்கு எதிராக உறுதியுடன் கட்சி போராடும் எனவும் அவர் வாக்களித்தார்.

ஒழுங்காய்வுக்கான மத்தியக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் கட்சி ஊழலுக்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்தி வருவதாகவும்,  அது நல்ல பலன்களை அளித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது. அந்த அறிக்கையில் ஊழல் சார்ந்த வழக்குகளில் 74,000 பேர் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 48 சதவீதம் பேர் 18வது மாநாட்டிற்கு முன் தவறு செய்தவர்கள் என்றும், 11.1 சதவீதம் பேர் மட்டுமே 19வது மாநாட்டிற்கு பின் குற்றம் செய்தவர்கள் என்றும், இது ஊழல் குற்றங்கள் குறைந்து வருவதை காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சித் தலைமையின் இடைவிடாத முயற்சிகள் காரணமாக, பொதுமக்களிடம் 2022ஆம் ஆண்டு மேற்கொண்ட மாதிரி ஆய்வில் கட்சியின் கடுமையான சுய-ஆளுகை ‘மிகத் திறம்பட’ செயல்படுவதாக 97.4 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இது 2012 இல் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை விட 22.4 சதவீதம் அதிகம். கட்சி நிர்வாகிகளின் இணையர்கள் மற்றும் பிள்ளைகளின் தொழில் நடவடிக்கைகள் மீதான கண்காணிப்பு அதிகரித்துள்ளது. 2015லிருந்து 4,700 நிர்வாகிகளின் இணையர்கள் மற்றும் பிள்ளைகளின் தொழில் செயல்பாடுகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்ட கவனம் ‘முக்கிய துறைகள் மற்றும் முக்கிய இடங்கள்’ என்றும், அங்கே ‘புலிகளை வெளியேற்றி,  பூச்சிகளை நசுக்கி,  நரிகளை வேட்டையாடி ‘ ஊழலுக்கு எதிரான போரில் வெற்றி காண வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது அந்த அறிக்கை.

1982க்குப் பின் கட்சியின் அமைப்புச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது  தொடர்நடவடிக்கையாக இருந்து வருகிறது. ‘புதிய கோட்பாட்டு கண்டுபிடிப்புகள் மற்றும் செயல்பாட்டின் பரிணாம வளர்ச்சி’ ஆகியவற்றின் தேவைகளில் இருந்து இது மேற்கொள்ளப்படுகிறது. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் ‘திட்டமிட்ட சிந்தனை’யை பிரதிபலிப்பதாகவும், ‘தற்கால சூழல் மற்றும் சீன நிலைமைகளுக்கு மார்க்சியத்தை பொருத்திப் பார்ப்பதில் கிடைத்துள்ள அண்மைக்கால முன்னேற்றங்கள்’ ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை பிரதிபலிப்பதாகவும் உள்ளன. சீன தேசம் புத்துயிர் பெறுவதை சீனாவின் நவீனமயமாக்கலுக்கான பாதை மூலம் முன்னேற்றிக் கொண்டு செல்வதே கட்சியின் பிரதான கடமையாக நிர்ணயிக்கப்பட்டு, கட்சியின் புதிய அமைப்புச் சட்டத்தில் அது சேர்க்கப்பட்டது.

கட்சியின் தொடக்க கால நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள், அதன் முக்கிய சாதனைகள், கடந்த நூறு ஆண்டுகளின் வரலாற்றுப் படிப்பினைகள் ஆகியவற்றையும் அமைப்புச் சட்டத்தில் சேர்க்க மாநாடு ஒப்புதல் அளித்தது. போர்க்குணத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் போராடும் திறனை வளர்த்துக் கொள்வது பற்றிய குறிப்பையும் மாநாடு அமைப்புச் சட்டத்தில் சேர்த்தது.

மேலும் ஒரு முக்கிய திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது. ‘பொது உடைமை என்பதே முக்கிய பங்கு வகித்து, இதர பலதரப்பட்ட முறைகள் அதனுடன் சேர்ந்து வளரும் முறை,  உழைப்புக்கேற்ற விநியோகம் என்பதே முக்கிய பங்கு வகித்து, இதர விநியோக முறைகள் அதனுடன் சேர்ந்து நிலைக்கும் முறை, மற்றும் சோசலிச சந்தை பொருளாதார முறை, ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை சோசலிச பொருளாதார முறை, இவையே சீன தன்மைகளைக் கொண்ட சோசலிசத்தின் முக்கிய தூண்கள்’ என்ற கோட்பாட்டை அமைப்புச் சட்டத்தில் சேர்ப்பதுதான் அந்த திருத்தம்.

கட்சியின் அனைத்து மட்டங்களிலும் உள்ள நிர்வாகிகள் சிறப்பு-நடத்தையை எதிர்பார்க்கும் எண்ணம் மற்றும் செயல்களை எதிர்ப்பது, ஊழல் நடவடிக்களை எதிர்ப்பது போன்ற கண்ணோட்டத்துடன் கட்சி ஒழுக்கம் குறித்த அத்தியாயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்கால சவால்களை சந்திக்க தேவையான புதிய கடமைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கட்சி உறுப்பினர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. விரிவான, முழுமையான, கூடுதல் வலுவான வழிமுறை கொண்ட மக்கள் ஜனநாயகத்தை வளர்ப்பது, ஜனநாயகத் தன்மை கொண்ட தேர்தல்கள், கருத்துக் கேட்பு, முடிவெடுப்பு, நிர்வாகம், மற்றும் மேற்பார்வை போன்றவற்றிற்கான சிறந்த அமைப்பு மற்றும் வழிமுறைகளை நிறுவுதல் ஆகியவற்றையும் கட்சி அமைப்புச் சட்டத்தில் சேர்க்க மாநாடு ஒப்புதல் அளித்தது.

205 உறுப்பினர்கள், 171 மாற்று உறுப்பினர்கள் கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மத்திய குழுவையும், 133 உறுப்பினர்கள் கொண்ட மத்திய ஒழுங்காய்வு ஆணையத்தையும் மாநாடு தேர்வு செய்தது. 23 அக்டோபர் அன்று கூடிய புதிய மத்தியக் குழு, கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் ஜி ஜின் பிங் அவர்களை தேர்வு செய்தது. தோழர் ஜின் பிங் அவர்களை உள்ளடக்கிய 7-உறுப்பினர்கள் கொண்ட நிலைக்குழுவினையும்,அரசியல் தலைமைக்குழுவையும் மத்தியக்குழு தேர்வு செய்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஆயுதப்படை ஆணையத்தின் தலைவராகவும் ஜி ஜின் பிங் தேர்வு செய்யப்பட்டார்.

நிறைவுரையில், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு போராடும் துணிவும், வெற்றி பெறும் திறனும் உள்ளதாக ஜி அவர்கள் குறிப்பிட்டார். “இந்த புதிய காலத்தின் புதிய பயணத்தில், புதிய,  மேலும் பெரிய, உலகையே வியக்கச் செய்யும் அற்புதங்களை படைக்கும் முழு தைரியமும், திறனும் எங்களுக்கு உண்டு”. 23 அக்டோபர் அன்று ஊடகங்களை சந்தித்த ஜி ஜின் பிங் அவர்கள், இந்த மாநாடானது ‘பதாகையை உயர்த்திப் பிடித்து, சக்திகளை ஒன்று திரட்டி,  ஒற்றுமை மற்றும் உறுதியை பாராட்டும்’ மாநாடு எனக் கூறினார்.

சீனாவில் சோசலிச சமுதாயத்தை கட்டமைக்கும் முயற்சியில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாம் அனைவரும் வாழ்த்து தெரிவிப்போமாக.

(கட்டுரையாளர், சி.பி.ஐ(எம்) மத்தியக் குழு உறுப்பினர்)

தமிழில்: அபிநவ் சூர்யா

லத்தீன் அமெரிக்கா: இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் வெற்றி பெறுவது எப்படி?

அருண் குமார்

உலகின் மிகவும் சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்று, லத்தீன் அமெரிக்கா. இங்கு நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு வரலாற்று காரணங்களும் உள்ளன, அரசியல் செயல்பாடுகள், பொருளாதாரக் கொள்கைகள் ஆகிய காரணங்களும் உள்ளன.

அமெரிக்க சமூகவியல் ஆய்வு குறிப்புகள் (தொகுதி 71, 2006), லத்தீன் அமெரிக்காவில் நிலவும் அரசியலுக்கும் ஏற்றத்தாழ்விற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கி இவ்வாறு குறிப்பிட்டது: “நில உடைமை மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் நிலவும் ஏற்றத்தாழ்வு, காலனிய அமைப்பில் இருந்து தோற்றமெடுத்தவை. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய பகுதிகளில் நிலவும் ஏற்றத்தாழ்வின் ஆழமான வேர்கள் தத்துவார்த்த ரீதியான விளக்கங்களின் மையமாக அமைந்துள்ளன. சுதந்திரத்திற்குப் பிறகு, சொத்துக்கள் மற்றும் வருமானத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு அரசியல் செல்வாக்கில் ஏற்றத்தாழ்வை மேலும் வலுப்படுத்தியது. இதனால் அரசியல் நிறுவனங்கள் மற்றும் கொள்கைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வின் விஷச் சுழலை அது நிலைநிறுத்தியது.”

நீடித்த காலனிய ஆட்சிக் காலம், ஜனநாயகம் இன்மை, கணிசமான காலத்திற்கு தன்னலக் குழுக்களின் ஆட்சி என இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கான வரலாற்றுரீதியான காரணிகளைக் குறிப்பிட்டு, அது மேலும் கூறுகிறது: “லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதி நாடுகளில் நீண்ட காலமாகவே பெரும் நில உடமையாளர்கள் மலிவான மிகப்பெரும் தொழிலாளர் சக்தியை சார்ந்து இருந்தனர். லத்தீன் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள சமூகங்கள் உட்பட, தேசியப் பொருளாதாரத்தில் பெரும் நில உடமையாளர்கள் முக்கியப் பங்காற்றினர். ஜனநாயகத்தின் உறுதியான மற்றும் பயனுள்ள எதிரிகளாகவும் அவர்கள் இருந்தனர் (மூர், 1966; ருஸ்கிமீயர், ஸ்டீபன்ஸ் மற்றும் ஸ்டீபன்ஸ் 1992). நில விநியோகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு விவசாயத் துறையில் வருமான ஏற்றத்தாழ்வில் நேரடியான தாக்கம் செலுத்துகிறது.

மேலும், அதிக எண்ணிக்கையிலான தனித்திறமையற்ற புலம்பெயர்ந்தோர் மூலம், நகர்ப்புறத் துறையில் வருமான ஏற்றத்தாழ்வின் மீது இது நீடித்த, மறைமுக விளைவினைக் கொண்டிருக்கிறது. நகரங்களில் உள்ள வேலையில்லாதவர்களின் பட்டாளத்தைப் பெருக்குகிறது. இதனால் கீழ்மட்டத்தில் ஊதியம் குறைகிறது. லத்தீன் அமெரிக்கா வரலாற்று ரீதியாக நில விநியோகத்தில் மிக அதீதமான ஏற்றத்தாழ்வைக் கொண்டுள்ளது. மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் அசாதாரணமான அதீத வருமான ஏற்றத்தாழ்விற்கு இது காரணமாகிறது.

நவதாராளவாத பொருளாதார தத்துவம் தீவிரமாக அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்ட உலகின் முதல் பகுதியும் லத்தீன் அமெரிக்காதான். இப்பகுதிக்கு அருகாமையில் இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் , இந்நாடுகளின் சமூக, பொருளாதார, அரசியல் நடைமுறைகளில் மீண்டும் மீண்டும் தலையிட்டு, அதன் பொருளாதார நெருக்கடிகளுக்கும் பங்களித்தது. சர்வாதிகார ஆட்சிகள் மற்றும் வலதுசாரி சர்வாதிகார ஆட்சிகளின் நீடித்த ஆட்சியையும் அமெரிக்கா ஊக்குவித்தது. இது ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எப்போதும் வழிவகுத்தது.

20 ஆம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டில் இருந்து, மக்கள் எதிர்ப்புகள் மற்றும் சமூக இயக்கங்களின் வளர்ச்சியுடன் இவை அனைத்தும் மாறத் தொடங்கின. இத்தகைய எதிர்ப்புகள் மற்றும் இயக்கங்களின் அலையில், சர்வாதிகாரம், பாரம்பரிய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு மாற்றாக, இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகள் எழுந்தன. அவர்கள் மக்கள் தேர்தல்களில் வெற்றி பெற்று, அரசாங்க அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்றுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கினர்.

ஒரு விஷயத்தை இங்கே வலியுறுத்துவது அவசியம் என்று கருதுகிறேன். இந்த இடதுசாரி, முற்போக்கு சக்திகளில் பெரும்பாலானவை, புதிய தாராளவாத, சர்வாதிகார ஆட்சி மாதிரியை விமர்சிப்பது, மாற்று வழிகளை வழங்குவது என்பதோடு தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டன. அவர்களில் ஹ்யூகோ சாவேஸைப் போன்ற மிகச் சிலரே, முதலாளித்துவத்திற்கு மாற்றாக சோசலிசத்தை நிறுவும் (பொலிவேரிய சோசலிச மாதிரி அல்லது 21 ஆம் நூற்றாண்டு சோசலிசம் பற்றிய அவரது கருத்தாக்கத்தில் உள்ளார்ந்த தத்துவ மற்றும் நடைமுறை வரம்புகள் எதுவாக இருந்தாலும்) ஒரு முறையான மாற்றத்தைப் பற்றி சிந்தித்தார்கள். இதைக் கொண்டு, இந்த இடதுசாரி, முற்போக்கு அரசாங்கங்கள் செய்த சாதனைகளைப் பார்த்து நாம் பாராமுகமாக இருக்கக் கூடாது.

அரசியல் மற்றும் பொருளாதாரம்:

1990களின் பத்தாண்டுகள், சர்வாதிகாரம் மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான அவர்களின் தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் இடதுசாரி மற்றும் முற்போக்கு இயக்கங்களின் மறுமலர்ச்சியைக் கண்டது. ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் மற்றும் மக்களின் உரிமைகள் ஆகிய இரு முக்கியமான முழக்கங்கள் அவர்களின் எழுச்சிக்கு பங்களித்தன. இந்த முழக்கம் மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்துடன் இணைந்தது. உதாரணமாக, வெனிசுலாவில், 1989இல், கராகசோவில் ஒரு பெரிய போராட்டம் நடந்தது. அங்கு புதிய தாராளமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடிய நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அப்போதைய ஆட்சியால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த அடக்குமுறை புதிய தாராளமயக் கொள்கைகளை பின்பற்றும் அரசாங்கத்தின் எதேச்சாதிகாரத் தன்மையை அம்பலப்படுத்தியது. சாவேஸ் மற்றும் இடதுசாரிகள், முற்போக்கு சக்திகள் தங்கள் இயக்கத்தை உருவாக்கி, அரசாங்கத்திற்கு எதிராக இந்த அதிருப்தியை உருவாக்கினர்.

சாவேஸ் கூறியது போல்: “கரகாசோ பொலிவேரியன் புரட்சியின் இயந்திரத்தை பற்றவைத்த தீப்பொறி”. இந்த அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் ஒரு முக்கியமான பாடம் என்னவென்றால், அரசியலை (அதிகாரத்துவம்) பொருளாதாரத்துடன் (நவ தாராளமயம்) இணைத்து அதை ஒரு மாற்று அரசியல் சக்தியாக வெளிப்படுத்துவது முக்கியம். லத்தீன் அமெரிக்காவில் உள்ள இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் இந்த உறவை நன்கு புரிந்து கொண்டனர். அவர்கள் தங்கள் நிறுவன அமைப்புகளுக்குள்ளும் சமூகத்திலும் பங்கேற்பு ஜனநாயகத்தைப் பற்றிப் பேசி தங்கள் இயக்கங்களை உணர்வுபூர்வமாகக் கட்டமைத்தனர்.

1990 களின் பிற்பகுதியில் சாவேஸ் தொடங்கி, பிரேசிலில் லூலா, பொலிவியாவில் மொரேல்ஸ், ஈக்வடாரில் கொரியா, அர்ஜென்டினாவில் கிர்ச்னர்ஸ் (நெஸ்டர் மற்றும் கிறிஸ்டியானா இருவரும்) வரை அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பல இடது, முற்போக்கு அரசாங்கங்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கைகளில் ஒன்று முடிவெடுக்கும் செயல்பாட்டில் மக்கள் பங்கேற்பினை அவர்கள் உறுதி செய்தே ஆகும். அவர்கள் அந்தந்த நாடுகளில் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்த முயன்றனர்; மேலும் வெனிசுலாவில் உள்ள சமூக கவுன்சில்கள் போன்ற மாற்று ஜனநாயக கட்டமைப்புகளையும் அவர்கள் உருவாக்கினர்.

வெனிசுலா முழுவதும் 200-400 குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான சமூக கவுன்சில்கள் உருவாக்கப்பட்டன. அவை ஒவ்வொன்றுக்கும் உள்கட்டமைப்பு மற்றும் சமூகத் திட்டங்களை மேம்படுத்த 60,000 அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டன. அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு எது தேவை என்பதைத் தீர்மானித்து, திட்டங்களை வடிவமைத்து இந்தப் பணத்தைச் செலவழித்தனர். அனைத்து முடிவுகளும் அந்த சமூகத்தின் குடிமக்களின் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டன.

கட்டுமானம், எரிவாயு விநியோகம், பொதுப் போக்குவரத்து மற்றும் சிமெண்ட் தூண்கள் உற்பத்தி போன்ற துறைகளில் சமூக கவுன்சில்களின் அதிகார வரம்பிற்குள் சமூக உற்பத்தி நிறுவனங்களை உருவாக்குவதை சாவேஸ் ஊக்குவித்தார். மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகளைத் தீர்மானிக்கவும், (பதுக்கல் மற்றும் பணவீக்கத்தை நிறுத்தும் நோக்கத்துடன்) சூப்பர் ஸ்டோர்களில் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கும்  இந்த கவுன்சில்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இத்தகைய ஜனநாயகரீதியான வெளிகளைப் பயன்படுத்துவதன் மூலம் இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்தது. எனினும் ஜனநாயகம் மட்டும் போதாது. மக்களின் பொருளாதார நிலை மேம்படுவதற்கும் அது துணையாக இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட ஆய்வு இவ்வாறு சுட்டிக் காட்டியது: “நீண்ட ஜனநாயக ஆட்சி காலம் வசதியற்றவர்களின் நலன்கள் குறித்துப் பேசுவதற்கு அனுமதிக்கிறது. ஜனநாயகம் இந்த நலன்கள் குறித்துப் பேசப்படும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது என்பதைப் போலவே அவை பாதுகாக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்காது. இடதுசாரிக் கட்சிகள் மூலம் வசதியற்றவர்களின் நலன்களை வெளிப்படுத்துவது – இடதுசாரி கட்சிகள் சட்டமியற்றும் செல்வாக்கை அடைய போதுமான அளவுக்கு வலுவாக வளர்ந்தால் – சமூகப் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான செலவினங்கள் உட்பட ஏற்றத்தாழ்வைக் குறைக்க முழு அளவிலான கொள்கைகளை வடிவமைக்க முடியும்.

சமூக நல நடவடிக்கைகள்:

இந்த புரிதலானது ஆளும் வர்க்கங்கள் பின்பற்றி வரும் நவதாராளவாத கொள்கைகளுக்கு மாற்று பார்வையை இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகள் முன்னிறுத்துவதற்கு வழிகாட்டியது.

வெனிசுலாவில், 2002 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு சாவேஸ் மீண்டும் ஆட்சியைப் பொறுப்பேற்றவுடன், ‘இயக்கங்கள்’ என அழைக்கப்படும் பல சமூக நலத் திட்டங்களைத் தொடங்கினார். 2003 ஆம் ஆண்டு கியூபாவின் உதவியுடன், மக்களுக்கு, குறிப்பாக குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, இலவச மருத்துவ சேவையை வழங்குவதற்காக, 2003ஆம் ஆண்டில், அத்தகைய முதல் பணியான பரியோ அடெண்ட்ரோ (Barrio Adentro) தொடங்கப்பட்டது.

கல்வியின் நோக்கம் இலவச கல்வியை வழங்குவதாக மாறியது. இலவச எழுத்தறிவு வகுப்புகளுக்கு மிஷன் ராபின்சன், உயர்நிலைப் பள்ளிக் கல்விக்கான மிஷன் ரிபாஸ் மற்றும் பல்கலைக்கழக கல்விக்கான மிஷன் சுக்ரே என்பதாக இயக்கங்கள் உருவாயின. அதிகாரத்துவப் போக்கு மற்றும் விதிமுறைகளியே மூழ்கிக் கிடக்கும் போக்கு (ரெட் டேபிசம்) மிகக் குறைந்த அளவிலேயே இருந்ததால், இவற்றில் பல இயக்கங்கள் மிகவும் வெற்றிகரமானதாக இருந்தன. மேலும், மக்களின் பங்கேற்பு மற்றும் ஆர்வத்தின் காரணமாக இந்த இயக்கங்களின் உண்மையான நோக்கங்கள் விரிவடைந்தன. பரியோ அடெண்ட்ரோ ஆரம்ப சுகாதாரத்தை வழங்குவது போலவே,  நோய்களைக் கண்டறியும் மையங்கள் மற்றும் சிறப்பு மருத்துவமனை  ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இவை, இந்த திட்டங்களின் மீதான மக்கள் ஈடுபாட்டை மேலும் அதிகரித்தன. அதே நேரத்தில் அவர்களுக்கு பெரும் நன்மையையும் அளித்தன.

சாவேஸ் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பத்தாண்டிற்குள் இத்தகைய கொள்கைகளின் விளைவாக, வறுமையில் வாடும் மக்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது. மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், தீவிர வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கையில் 72 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டது. ஏனெனில், ஒவ்வொரு நபருக்கான சமூகச் செலவும் மூன்று மடங்கிற்கும் அதிகமானது; மேலும் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும், ஒதுக்கீட்டில் பாதியளவு சமூகச் செலவு மற்றும் வறுமைக் குறைப்புக்கு சென்றது.

மேலும், சிசு மற்றும் குழந்தை இறப்பு விகிதங்கள் மூன்றில் ஒரு பங்கு குறைந்தது. பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் பாதிக்கு மேல் குறைந்துள்ளது. சராசரி கலோரி உட்கொள்ளல் அதிகரித்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இறப்புகள் பாதிக்கு மேல் குறைந்துள்ளன. லத்தீன் அமெரிக்காவில் கல்வியறிவின்மையை முற்றிலுமாக ஒழித்த இரண்டாவது நாடாக வெனிசுலா ஆனது. இந்தப் பத்தாண்டில் மாணவர் சேர்க்கை விகிதம் 138 சதவீதம் அதிகரித்து உயர்கல்வித் துறையில் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் நன்கு தெரியக்கூடிய வகையில் பயன்கள் ஏற்பட்டன.

பணக்காரர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட சலுகையாக இதுவரை இருந்த கல்வி, அனைவரும் இலவசமாக அணுகக் கூடிய உரிமையாக மாற்றப்பட்டது. வேலையின்மை வீழ்ச்சியடைந்தது.  ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் முறையான துறையில் பணியமர்த்தப்பட்டனர்.  குறைந்தபட்ச ஊதியம் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்தது. இது முழு லத்தீன் அமெரிக்க கண்டத்திலும் பார்க்க மிக அதிகமானதாக இருந்தது. இந்தப் பத்தாண்டில் முதியோர் மற்றும் ஊனமுற்றோர் நலத்திட்டங்களின் வரம்பு இரண்டு மடங்காக அதிகரித்தது. இதுவரை வேலை செய்யாத மூத்த குடிமக்கள், பாதுகாப்பற்ற பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஊதியத்தில் 60-80 சதவீதம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. 61 வயதுக்கு மேற்பட்ட இல்லத்தரசிகள், ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முழுமையான ஓய்வூதியம் பெற்றனர்.

பிரேசிலில், 2003இல் முதல் தொழிலாளர் ஜனாதிபதி லூலா பதவிக்கு வந்த பிறகு,   அரசு நிர்வாகம் மக்களை உள்ளடக்கிய திட்டங்களால் குறிக்கப்படுவதாக அமைந்தது. மற்ற சமூக ஆதாயங்களுக்கிடையில் – வறுமையை 37.5 சதவீதத்திலிருந்து 20.9 சதவீதமாகக் குறைத்தது. மேலும் தீவிர வறுமை 13.2 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. இது நடுத்தர வர்க்கத்தின் தரவரிசையை (மக்கள் தொகையில் 38 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக) உயர்த்தியது. இறுதியாக, பல லட்சக்கணக்கான பிரேசிலியர்களின் வருமானத்தை அதிகரித்தது.

ஆயிரக்கணக்கான குடும்பங்கள் முதல் முறையாக நுகர்வோர் சந்தைகளை அணுகும் வாய்ப்பினைப் பெற்றனர். லூலா அரசு ஏழைகளுக்கான வீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக மின்ஹா ​​காசா, மின்ஹா ​​விடா (எனது வீடு, எனது இல்லம்) என்ற திட்டம் அறிமுகமானது. அதேபோல், கல்வியறிவின்மையை ஒழிப்பதற்கான கொள்கைகளை லூலா செயல்படுத்தினார். பள்ளிகளில் குழந்தைகளின் வருகையுடன் உணவு மானியங்களை இணைத்தார். கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம், இந்த சேவைகளில் அரசாங்க சேவைகளின் தரம் மேம்படுத்தப்பட்டது. தேவையான ஆலோசனைகளையும் நிபுணர்களையும் வழங்குவதன் மூலம் கியூபா இந்த நடவடிக்கைகளுக்கு உதவியது.

பொலிவியாவில், மொரேல்ஸ் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, இதே போன்ற நலத்திட்டங்கள் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டன. இப்போது அது உலகளாவிய அளவில் இலவச சுகாதாரப் பாதுகாப்பு, இலவச கல்வி மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்கும் நாடாக மாறியுள்ளது. முழு லத்தீன் அமெரிக்க கண்டத்திலும் முழுமையான கல்வியறிவு பெற்ற மூன்றாவது நாடாக பொலிவியா ஆனது. பொலிவியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தேவையின் அடிப்படையில் அரசுப் பத்திரங்களைப் பெறுகிறார்கள். மேலும் இவை குழந்தைகளை பள்ளியில் இருக்க வைத்தன; பெரியவர்களின் துன்பங்களைத் தணித்தன; மேலும் குழந்தை இறப்பை பாதியாகக் குறைத்தன. சமையல் எரிவாயு, மின்சாரம், இணையம், குழாய் நீர், மற்றும் தேவைப்படுபவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் வீடுகளை அரசு மானியம் வழங்குகிறது. இவற்றின் மூலம் வறுமை பாதிக்கு மேல் குறைக்கப்பட்டுள்ளது.

இயற்கை வளங்கள் மற்றும் கேந்திரமான நிறுவனங்களின் தேசியமயம் மற்றும் ஏழையான பெரும்பான்மையினரின் தேவைகளுக்கு சேவை செய்ய இந்த அபகரிக்கப்பட்ட நிறுவனங்களின் இலாபங்களை முதலீடு செய்வது ஆகியவற்றின் காரணமாக இந்த நடவடிக்கைகள் சாத்தியமானது.  மொரேல்ஸ் தலைமையிலான கட்சியான MAS, இந்த அரைக்கோளப் பகுதியில் ஏழ்மையிலிருந்து விடுபட்ட நாடுகளில் ஒன்றாக பொலிவியாவை மாற்றியுள்ளது. மேலும் சமத்துவமான வருமானம் கொண்ட முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாகவும் அதை மாற்றியுள்ளது.

இங்கே, சிலி உதாரணத்தை மேற்கோள் காட்டுவது சரியாக இருக்கக்கூடும். 2011இல் கல்வியை தனியார்மயமாக்குவதற்கு எதிராகவும், கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்தும் மாணவர்களின் போராட்டத்திலிருந்து தொடங்கி, மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து சமீபத்தில் நடந்த (2019-2020) போராட்டம் வரை, மாற்று நிர்வாகத் தத்துவத்தின் அவசியத்தைப் பிரச்சாரம் செய்ய மக்கள் அணிதிரட்டல்கள் பயன்படுத்தப்பட்டன. அரசாங்கம் தமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதோடு மட்டுப்படுத்தாமல், அவர்கள் புதிய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை ஒருமுகப்படுத்தி, அவற்றை ரத்து செய்யக் கோரினர். பினோசே சர்வாதிகார காலத்தில் உருவாக்கப்பட்ட சிலியின் அரசியலமைப்பின் மூலமே இத்தகைய கொள்கைகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டதை அவர்கள் கண்டறிந்தனர்.

அனைவருக்கும் சுகாதாரம், இலவச பொதுக் கல்வி, அனைவருக்கும் அரசு வழங்கும் ஓய்வூதியத் திட்டங்கள் ஆகியவற்றுக்கான மக்கள் கிளர்ச்சிகளின் மீது அரசியலமைப்பின் வரம்புகளுடன் மாநில அரசு கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறை தோல்வியுற்றது. இந்தப் பிரச்சாரத்தில் ஆயுதம் ஏந்திய அவர்கள், அரசியலமைப்பை மாற்றி எழுதுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரினர். பெரும்பான்மையான மக்கள் (கிட்டத்தட்ட 71 சதவீதம்) புதிய அரசியலமைப்பிற்கு வாக்களித்தனர்.

அப்போதைய பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்க அரசாங்கம் விரும்பிய போது, ​​அவர்கள் புதிய அரசியலமைப்பு சபையை தெரிவு செய்வதற்கான கோரிக்கையை முன்வைத்து வெற்றிபெற்றனர். 155 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் நவதாராளவாத எதிர்ப்புக் கொள்கைகளுக்கான மேடையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியை (மே 7) சமீபத்தில் முடித்திருக்கிறது. எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகளை சரிசெய்ய இப்போது ஒரு ‘இணக்கக் குழு’வால் அது சரிபார்க்கப்பட்டு வருகிறது. இந்த முழு செயல்முறையையும் இரண்டு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு புதிய அரசியல் அமைப்பு குறித்து மீண்டும் மக்கள் முன் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

மாணவர்கள், தொழிற்சங்கங்கள், பெண்கள் இயக்கங்கள், கம்யூனிஸ்டுகள், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பழங்குடியின குழுக்களுடன் சேர்ந்து இந்த முழு செயல்முறையிலும் முக்கிய பங்கு வகித்தன. அவர்களின் விடாமுயற்சியின் காரணமாக, 1973இல் சால்வடார் அலெண்டேவுக்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, முதல்முறையாக சிலியின் அதிபராக அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசு, புதிய அரசியலமைப்பில் இடம் பெறும் என்ற நம்பிக்கையுடன், அதன் மாற்றுக் கொள்கைகளை செயல்படுத்துவதாக உறுதியளித்தது.

இன்னும் செயலாக்கப்படாத வரைவு அரசியலமைப்பு பொதுத் தளத்தில் இப்போது கிடைக்கிறது. அனைவருக்கும் ‘ஊட்டச்சத்தான, முழுமையான மற்றும் கலாச்சார ரீதியாக பொருத்தமான உணவு’ மற்றும் ‘விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடு’ ஆகியவற்றுக்கான உரிமை ஆகியவை அதில் உள்ளன. அதிக அதிகாரம் கொண்ட பகுதிகளைக் கொண்ட, பரவலாக்கப்பட்ட ஓர் அரசை இது பரிந்துரைக்கிறது. இது சிலி மக்களின் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கிறது. பழங்குடியினரின் பல்வேறு பேச்சு மொழிகளை சிலியின் அதிகாரப்பூர்வ மொழிகளாக அங்கீகரிக்கிறது.  மனுக்கள் மூலம் தேசிய அளவிலான, பகுதியளவிலான மற்றும் உள்ளூர் மட்டங்களில் குடிமக்களின் முன்முயற்சிகளுக்கு அரசியலமைப்பு இடம் அளிக்கிறது. 3 சதவீத மக்கள் ஒரு சட்டத்தை முன்மொழிந்தால், அதன்மீது ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும். மேலும் 5 சதவீத மக்கள் சேர்ந்து வாக்களித்து ஒரு சட்டத்தை நிராகரிக்கக் கோரலாம். அனைத்து மக்கள் பிரதிநிதித்துவக் கூட்டங்களும் ஆண்-பெண் சமத்துவத்தைக் கொண்டிருக்குமாறும் இது அறிவுறுத்துகிறது. பாலின வன்முறைகள் ஒழிக்கப்பட வேண்டும்; பாலின, இனப்பெருக்க உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்; கண்ணியமான மரணத்திற்கான உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளது.

இயற்கையை மதிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்று இந்த அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இது, மனிதர்களுக்கு நீர் உபயோகத்தில் முதல் முன்னுரிமையை அளிக்கிறது.  இரண்டாவதாக, நீர்நிலைகளின் சுற்றுச்சூழல் பராமரிப்புக்கும், அதன் பிறகு வணிக நோக்கங்களுக்காக இல்லாத தனியாருக்கும் பயன்பாட்டு உரிமை கிடைக்கிறது. இந்த அரசியலமைப்பு காலநிலை மாற்றத்தை அங்கீகரிப்பதோடு, செயல்படுவதற்கும் ஆற்றல் மாற்றத்திற்கும் பொறுப்பாக விளங்குகிறது. கலாச்சார, வரலாற்று மற்றும் புவி பற்றிய பார்வை ஆகியவற்றுக்கான பழங்குடியின மக்களின் அமைப்புகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு சமத்துவமும், சமவாய்ப்பும் வழங்கப்படுகின்றன. நிலங்கள், பிரதேசங்கள் மற்றும் வளங்களுக்கான மக்களின் உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பழங்குடி மக்களிடமிருந்து நிலத்தை அபகரித்த வரலாற்று செயல்முறை ஒப்புக் கொள்ளப்பட்டு, அதன் மறுசீரமைப்புக்கும் முன்மொழியப்பட்டது.

அரசியலமைப்பானது சிலியை ஒரு துணைநிலை மாநிலம் என்பதிலிருந்து சமூக மற்றும் ஜனநாயக சட்டத்திற்கான (மனித உரிமைகள், சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, வேலைநிறுத்தம் மற்றும் வேறுபல உரிமைகளுக்கு அரசு உத்தரவாதம் அளிக்கின்ற) ஒரு மாநிலமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீதி, ஜனநாயகம், உணவு, இறையாண்மை ஆகியவற்றுக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.

சிலியின் அரசியலமைப்பு என்பது சிலி நாட்டு மக்களின் உள்நாட்டு அனுபவங்களிலிருந்து மட்டுமல்ல; இடதுசாரி மற்றும் முற்போக்கு சக்திகளால் ஆளப்படும் லத்தீன் அமெரிக்காவின் பல்வேறு நாடுகளின் மக்களின் அனுபவங்களிலிருந்தும் உருவானது. உதாரணமாக, மொரேல்ஸ் பல பிரச்சனைகளை எதிர்கொண்டார். மாற்றுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் இருந்து வலதுசாரி கட்சிகள் மற்றும் ஆளும் வர்க்கங்களால் அவர் தடுக்கப்பட்டார். அவருக்கு பணம் மறுக்கப்பட்டது; எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை தேசியமயமாக்குவதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டார். இந்தத் தடைகளை முறியடிக்க, அவர் அரசியலமைப்பை மீண்டும் எழுத முனைந்தார். எண்ணெய் மற்றும் எரிவாயு கையிருப்புக்களை தேசியமயமாக்கும் சட்டங்களை இயற்றவும், அனைத்து பொலிவியர்களும் இயற்கை வளங்களின் மீது சமமான உரிமையை கொண்டிருப்பதை உறுதிசெய்யும் வகையில் பல செயல்களை மேற்கொள்ளவும் உதவியது. ஒரு புதிய அரசியலமைப்பின் மூலம் மட்டுமே, அவர் மத சுதந்திரம் மற்றும் தேவாலயத்தை அரசிலிருந்து பிரிக்கவும், கல்வி, சமூக பாதுகாப்பு மற்றும் நிலத்திற்கான உரிமைகளை உறுதிப்படுத்தவும் முடியும்.

இதேபோல், வெனிசுலாவின் பொலிவேரியன் அரசியலமைப்பு சாவேஸின் கீழ் தொழிலாளர் கூட்டுறவுகளை உருவாக்குவதற்கும், சில தொழில்களில் முடிவெடுக்கும் செயல்முறைகளில் அவர்களின் தலையீட்டிற்கும் அனுமதி அளித்தது. அத்தகைய தொழிலாளர்களின் கூட்டுறவுகள், அவை வலுவாக இருந்த இடங்களிலெல்லாம் லாபத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த முறையில் மக்கள் சக்தி பயன்படுத்தப்பட்டது.

முடிவுரை:

ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல், இத்தகைய சாதகமான பலன்கள் இருந்தபோதிலும், இந்த இடதுசாரி மற்றும் முற்போக்கு அரசாங்கங்கள் சில வரம்புகளுக்கு உட்பட்டிருந்தன என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும். அவர்கள் நடத்திய பொதுநல அரசு பெரிய அளவில் மறுபகிர்வு செய்தது என்பது உண்மைதான். எனினும் முதலாளித்துவ அமைப்பில் உள்ள உள்ளார்ந்த வரம்புகள் காரணமாக, அவர்களால் சுரண்டல் முறையை முழுமையாக மாற்றவோ அல்லது அரசு இயந்திரத்தின் மீதான ஆளும் வர்க்கங்களின் கட்டுப்பாட்டைக் குறைக்கவோ முடியவில்லை. பெரும்பாலும் தேர்தல்களில் (ஈக்வடார் மற்றும் பிரேசில் போன்ற) கட்சிகள் சந்திக்கும் தோல்விகளிலும், ஆட்சிக் கவிழ்ப்புகளைத் தடுக்கத் தவறியதிலும் (ஹோண்டுராஸ், பொலிவியா) இந்த வரம்பு பிரதிபலிக்கிறது. இருப்பினும், நிகழ்வுகள் சுட்டிக்காட்டுவது போல், இந்த பின்னடைவுகள் நிரந்தரமாகவில்லை. பிரேசிலில் இடதுசாரி சக்திகள் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளன. இதேபோல், பொலிவியாவில், ஒரு வருடத்திற்குள், அவர்களால் ஆட்சி கவிழ்ப்பை முறியடித்து, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடிந்தது.

சிபிஐ(எம்) இன் 20வது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தத்துவார்த்த பிரச்சினைகளுக்கான தீர்மானம் இந்த வரம்புகளை சுட்டிக்காட்டி கூறியது: “இந்த அரசாங்கங்கள் ஒரு சோசலிச மாற்றை அமைக்கவில்லை என்றாலும், அவை ‘அகநிலை காரணி’யை வளர்ப்பதற்கான போராட்டத்தில் சாதகமான முன்னேற்றங்களை எடுத்துக் கூறுவதாக அமைகின்றன. ஏகாதிபத்தியம் மற்றும் நவ-தாராளவாத முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு தீர்க்கமான சவாலை எழுப்ப முடியும். இந்த அரசுகளின் வெற்றியானது ‘அரசியலுக்குக் கட்டளையிடுவதற்கு’ அவர்கள் எவ்வாறு உறுதியுடன் செயற்படுகிறார்கள் என்பதையும், ‘அரசியலே அவர்களின் பொருளாதாரக் கொள்கைகளை தீர்மானிக்கிறது’ என்பதை உறுதி செய்வதிலும் அடங்கியுள்ளது என்றும் தீர்மானம் கூறியது.

விஞ்ஞான சோசலிசத்தின் உயரிய சித்தாந்தத்தால் வழிநடத்தப்படும் ஒரு வலுவான தொழிலாள வர்க்க இயக்கம் மட்டுமே அரசியலுக்குக் கட்டளையிடும் நிலைக்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்பதை வரலாற்று அனுபவம் நமக்குக் கற்பிக்கிறது. மேலும் அது உழைக்கும் பிரிவுகளுடன் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டு, மக்கள் சார்பான பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிக்க அவர்களை வழிநடத்த வேண்டும்.

தமிழில்: வீ. பா. கணேசன்

(கட்டுரையாளர், சி.பி.ஐ(எம்) மத்தியக்குழு உறுப்பினர்)