மார்க்சிய பார்வையில் அறிவியல் வளர்ச்சி

அபிவ் சூர்யா

அறிவியல் மற்றும் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மானுட வரலாற்றில் எப்போதுமே முக்கிய பங்கு வகித்து வந்திருந்தாலும், தற்காலத்தில் இதன் தாக்கமும் முக்கியத்துவமும் உச்சத்தை எட்டியுள்ளது. யார் அறிவியல் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றனர்; யாரிடத்தில் தொழில்நுட்ப மேம்பாடு நிரம்பி உள்ளது போன்றவை தேசங்கள் இடையேயான உறவுகளையும், சர்வதேச அளவில் சுரண்டல் முறையின் தன்மைகளையும் தீர்மானிக்கின்றது.

இப்படிப்பட்ட அறிவியல் வளர்ச்சி எப்படி நிகழ்கிறது? அதன் போக்கு என்ன? அதன் போக்கை எது தீர்மானிக்கிறது?  தற்காலத்தில் நிலவும் உற்பத்தி முறைக்கும் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இடையே என்ன தொடர்பு? உற்பத்தி முறையில் ஏற்படும் நெருக்கடி அறிவியல் வளர்ச்சியை எப்படி பாதிக்கும்? இது போன்ற கேள்விகளுக்கு மார்க்சிய ஆய்வு முறைப்படி விடை கண்டறிந்து, அதன் வாயிலாக புரட்சியின் பாதையில் அறிவியல் ஆற்றும் பணிகளையும், அதை நிர்ணயிக்க ஆற்ற வேண்டிய கடமைகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.

முதலாளித்துவ அறிஞர்கள், அறிவியல் என்பதை வெறும் லாபத்திற்கான கருவியாக மட்டுமே புரிந்து கொள்கின்றனர். இதனால் லாப நோக்கை மேம்படுத்தும் வகையில் அறிவியலுக்கான கட்டமைப்புகள் இருப்பின் (அதாவது அறிவியல் குறித்த கொள்கைகள், காப்புரிமம் குறித்த சட்டங்கள் போன்றவை) அது அனைத்து தரப்பினருக்கும் சாதகமாக அமையும் என வாதிடுகின்றனர். அதுவும் நவ தாராளமய ஆதரவாளர்கள், கட்டற்ற வர்த்தகம் மற்றும் சந்தை பொருளாதாரத்தின் விளைவாக மூன்றாம் உலக நாடுகளும் தொழில்நுட்பத்தை பெற்று வளர்ச்சி அடையலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் இது ஏகாதிபத்திய சுரண்டலை நியாயப்படுத்தும் அப்பட்டமான நச்சு சொல்லாடலே ஆகும். அறிவியல் என்பது உற்பத்தியை பெருக்கி லாபத்தை கூட்ட வல்ல “தங்க முட்டையிடும் வாத்து” என்றே பார்ப்பதால், அந்த அறிவியல் தொழில்நுட்பங்களை எந்த ஏழை நாட்டிற்கும் வளர்ந்த நாடுகள் தானாக அளிக்காது என்பது தெளிவாக தெரிகிறது.

அறிவியலை புறந்தள்ளுவதா?

உண்மையில், அறிவியல் என்பது ஆளும் வர்க்கங்களின் கையில் இருக்கும் சுரண்டல் கருவி மட்டுமே அல்ல. மானுட மேம்பாட்டிற்கான மகத்தான கண்டுபிடிப்புகளை அறிவியல் நமக்கு எப்போதும் அளித்து தான் வருகின்றது. அண்மைக்கால பின் நவீனத்துவ சித்தாந்தங்கள், அறிவியலையே முற்றாக புறந்தள்ளவும் சொல்கின்றன. அது மக்கள் மத்தியில் அறிவியல் ஆர்வம் பெருகுவதை தடுக்கின்றது. இதுவும், சுரண்டும் வர்க்கத்திற்கே சாதகமாக அமைந்து விடுகின்றது.

உழைக்கும் மக்கள் அறிவியலை வெறுப்பதனால், அதன் மீதான தங்களின் நியாயமான உரிமையை கோராமல் போய் விடுகின்றனர். இதன் விளைவாக அறிவியல் வளர்ச்சி மீதான கட்டுப்பாடு சுரண்டும் வர்க்கம் கையில் வலுவாக சென்றடைகிறது. இது உழைக்கும் வர்க்கத்தின் சக்தியை மேலும் வலுவிழக்கச் செய்கிறது. அண்மை காலங்களில் இது போன்ற அறிவியல் குறித்த பிற்போக்கான புரிதல் இடதுசாரி இயக்கங்கள் மத்தியிலும் ஊடுருவத் துவங்கி உள்ளன. இந்த பின் நவீனத்துவ போக்குகளின் காரணமாக “இடதுசாரிகள் பிற்போக்காளர்கள்” என முத்திரை குத்த வலதுசாரி சக்திகளுக்கு ஏதுவாக உள்ளது.

ஆனால் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த தெளிவான புரிதலை மார்க்சிய ஆய்வு மட்டுமே வழங்க முடியும். “லாப நோக்கமே அறிவியலுக்கு சிறந்தது” என்ற வலதுசாரி புரிதலையும், “லாபத்திற்கு மட்டுமே அறிவியல்” என்ற “சர்வதேச சதித் திட்டம்” நிலவுவது போல சித்தரிக்கும் நுட்பமாற்ற புரிதலையும் புறந்தள்ளி, அறிவார்ந்த முறையில் அறிவியல் வளர்ச்சியை அணுகுவது அவசியமாகும்.

இயங்கியல் பொருள்முதல்வாதமும் அறிவியலும்

மார்க்சியம் என்பது இயங்கியல் விதிகளை பொருளியல் தளத்தில் பொருத்தி, இந்த அண்டத்தையும், மானுட சமூகத்தையும் புரிந்து கொள்கிறது. “இயங்கியல்”, அதாவது எதிர்மறைகளின் உறவாடல் மற்றும் மோதல் வழியாக வளர்ச்சி என்ற கோட்பாட்டின் அடிப்படையில், வளர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதலில் அந்த காலகட்டத்தில் நிலவும் எதிர்மறையான சக்திகளை புரிந்து கொள்வது அவசியம். “பொருள்முதல்வாதம்” என்றால் இந்த எதிர்மறை சக்திகளை எவரின் எண்ண ஓட்டங்களிலும் தேடாமல், “பொருள்” அல்லது பொருளியல் தளத்தில் தேட வேண்டும் என்கிறது. ஆக, மார்க்சிய ஆய்வு என்பது அந்த அந்த வரலாற்று சூழலுக்கும் ஏற்ப, அந்த அந்த கால கட்டத்தில் நிலவும் பொருள்நிலை சக்திகளையும் அதன் முரண்பாடுகளையும் புரிந்து கொள்வதில் அடங்கி உள்ளது. இதே போல தான் அறிவியல் குறித்த மார்க்சிய பார்வையும் அமைய வேண்டும்.

இதனை சுறுக்கமாக சொன்னால், “அறிவியல்” என்பது – மனிதர்கள் மேற்கொள்ளும் சமூக உற்பத்தி முறையின் ஒரு அங்கமாக உள்ள மனித உழைப்பில் ஒரு பகுதியை அறிவு மேம்பாட்டிற்காக ஒதுக்கி வைக்கப் படுவதையே “அறிவியல்” என்கிறோம். மனிதர்களின் மற்ற உழைப்பைப் போலவே இந்த “அறிவியல்” உழைப்பும் முக்கியமான பணியாற்றுகின்றது. இந்த உழைப்பின் மூலமாக இயற்கை மற்றும் இந்த அண்டத்தின் உண்மைகளை வெளிக்கொணர முடியும். இயற்கையோடு மனிதன் உறவாடுவதே “உற்பத்தி”. இதனால் இந்த “அறிவியலில்” செலுத்தப்படும் உழைப்பானது இயற்கையோடு மனிதன் கொண்டிருக்கும் உறவினை மேம்படுத்துகிறது. வழிநடத்துகிறது.

இந்த சுறுக்கமான விளக்கத்தின் மேல் இயங்கியல் பொருள்முதல்வாத ஆய்வை பொருத்தி பார்ப்போம். இப்போது “அறிவியல்” என்பதும் ஒரு வகை மனித உழைப்பு, மற்றும் அதன் வெளிப்பாடு தான். ஆக, மற்ற மனித உழைப்பு போலவே, இந்த உழைப்பும் ஒரு “சமூக” உற்பத்தி முறையின் அங்கமாகத் தான் நிகழ்கிறது. ஆக, எந்த ஒரு காலத்திலும், அறிவியல் ஆய்வு முறையின் நோக்கம் என்ன, அது எப்படி வழி நடத்தப்படுகிறது, முன்னேற்றத்திற்கான அதன் திட்டம் என்ன, அறிவியல் கண்டுபிடிப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, அறிவியல் ஆய்வில் யார் ஈடுபடுகின்றனர் மற்றும் யார் ஒதுக்கப்படுகின்றனர் என்பது போன்ற அனைத்தையும் வெறும் முந்தைய கால அறிவியல் வளர்ச்சியின் நிலை மட்டும் தீர்மானிப்பதில்லை. அந்த அந்த காலத்தில் நிலவும் சமூக அமைப்பும், உற்பத்தி முறையும் தீர்மானிக்கின்றது.

ஆனால் சமூக சூழல் அறிவியல் மீது தாக்கம் ஏற்படுத்துவது போலவே, அறிவியல் கண்டுபிடிப்புகளும் சமூகத்தின் பொருளியல் வாழ்வின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்படி சமூகத்தின் மீது ஏற்பட்ட தாக்கம், மீண்டும் அறிவியல் ஆய்வின் வளர்ச்சிப் பாதையின் மேல் சுழற்சியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஆக, அறிவியலில் ஈடுபட்டுள்ள “அறிவுசார்” உழைப்பின் மீது, சமூகத்தில் நடக்கும் வர்க்கப் போராட்டங்கள் பிரதிபலிக்கும். சமூக சூழலுக்கு ஏற்ப, இந்த “அறிவுசார்” உழைப்பின் தன்மை, தரம் ஆகிய அனைத்துமே அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எந்த ஒரு காலத்திலும், அறிவியல் வளர்ச்சியின் போக்கு எதேச்சையாகவோ, கையளவு மனிதர்களின் அசாதாரண திறமையால் மட்டுமோ ஏற்படுவது இல்லை.

மனித வாழ்வில் ஏற்படும் இயங்கியல் மாற்றங்களானது அறிவியல் “எப்படி பயன்படுத்தப்படுகிறது” என்பதை மட்டும் தீர்மானிப்பதில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகளின் தன்மை மற்றும் தரத்தையும் கூட தீர்மானிக்கின்றது.

மார்க்சிய புரிதலில் அறிவியல்

“மனிதனின் இருப்பே சிந்தனையை தீர்மானிக்கின்றது” என்பது மார்க்சிய கூற்று. அறிவியல் என்பதை “அறிவுப்பூர்வமான சிந்தனைகளின் உற்பத்தி” என புரிந்து கொண்டால், மனிதனின் இருப்பும், மனிதனின் அன்றாட பொருளியல் வாழ்விற்கான உழைப்பு மற்றும் உற்பத்தியும் தானே இந்த “அறிவுப்பூர்வமான சிந்தனைகளின்” உற்பத்தியையும் தீர்மானிக்க வேண்டும்? இதன் காரணமாகத் தான், ஆதிகால மனித சமூகத்தில் “அறிவியல்” என்பதற்காக தனியே எந்த உழைப்பையும் ஒதுக்கி வைக்காத போதும், அறிவியல் வளர்ச்சி ஏற்படத் தான் செய்தது. ஏனென்றால் அன்றாட வாழ்வின் பொருளியல் உற்பத்தியில் ஏற்படும் உழைப்பின் பழக்க வழக்கங்கள் தான் அறிவுப்பூர்வமான சிந்தனைகளுக்கு அடிப்படை.

எனவே, அறிவியலின் எந்த வளர்ச்சியும் வெறும் ஒரு மனிதனின் மூளையில் “உதிப்பது” அல்ல. ஒரு சிந்தனையின் உண்மை தன்மையானது, அன்றாட வாழ்வின் உழைப்பின் வாயிலாகத் தான் நிரூபணம் ஆகிறது. ஆகையால் அன்றாட பொருளியல் வாழ்வின் முன்னேற்றம் தான், அறிவியல் முன்னேற்றத்தையும் தீர்மானிக்கின்றது. இதன் பொருள், எந்த ஒரு கால கட்டத்திலும், “மனித உழைப்பு எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகிறது” என்பதே அறிவியலின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது என்பதாகும். குறிப்பிட்ட காலத்தின் “உற்பத்தி முறை” (எ.கா. – ஆதி பொதுவுடைமை, நிலப்பிரபுத்துவம்,..) அதற்கு அடிப்படையாக அமைகிறது.

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், அதன் காலத்தில் நிலவும் நிலவும் உற்பத்தி முறையில் “அளவு மாற்றம்” ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக உற்பத்தி முறையில் முரண்பாடுகளும், நெருக்கடிகளும் உருவாகின்றன. இந்த நெருக்கடியானது அறிவியலில் தாக்கம் செலுத்துகிறது. “சிந்தனை” மற்றும் “செயல்” (Theory and Practice) இரண்டிற்கும் இடயே விரிசல் உண்டாக்கின்றது. உற்பத்தி முறையில் ஏற்படும் “புரட்சிகர” மாற்றமானது, “சிந்தனை முறை”, அதாவது அறிவியல் முறையிலும் மற்றதை ஏற்படுத்தும்.

இதை ஒரு உதாரணம் கொண்டு புரிந்து கொள்ளலாம். இயற்கையில் நிலவும் கடுமையான சூழலில் உயிர் பிழைக்க போராடும் ஆதி கால மனிதனின் சிந்தனைகள் எல்லாம் இயற்கையில் திறம்பட பிழைப்பதை நோக்கியே இருக்கும். அப்படிப்பட்ட சமூகத்தில் “அறிவார்ந்த சிந்தனைகள்” அனைத்துமே பிழைத்திருப்பதற்கான மேம்பட்ட வழிமுறைகளை நோக்கியதாக இருக்கும். ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஒரு கண்டுபிடிப்பாளரின் சிந்தனைகள் முழுவதும், விற்பனைக்கான ஒரு பண்டத்தை உருவாக்குவதை நோக்கி மட்டுமே இருக்கும்.

இப்போது ஆதி கால மனித சமூகத்தில் நெருக்கடி உண்டானால் என்னாகும்? இப்போது ஆதி மனிதனின் போராட்டம் இயற்கையோடு இல்லாமல், சக மனிதர்களோடு போராட்டம் என மாறிப் போனால், என்னாகும்? இது நாள் வரை “பிழைத்திருப்பது” என்பதை நோக்கி கட்டமைக்கப்பட்ட “அறிவுச் சிந்தனைகளின்” இலக்கு மாற்றப்படும். எனவே சிந்தனைகள் நெருக்கடியை எதிர்கொள்ளும். மனிதர்களோடு போராட்டம் என்ற இலக்கை நோக்கிய சிந்தனைகள் வெளிப்படும். ‘பிழைத்திருப்பதற்கான’ சிந்தனைகளை அமலாக்க பயன்படுத்தப்பட்டு வந்த வழிமுறைகள், கட்டமைப்புகள் பயன் குறைந்தவையாக ஆகிடும்.

இவ்வாறுதான் உற்பத்தி முறையில் ஏற்படும் நெருக்கடி, அறிவியல் முறையிலும் பிரதிபலிக்கின்றது.

அறிவியலை வளர விடாமல் தடுக்கும் உத்தியோடு சிலர் செயல்படுகிறார்கள் என்றோ, குறிப்பிட்ட வர்க்கம் முயற்சிக்கிறது என்றோ ‘சதித்திட்ட கதையாடலை’ மார்க்சியம் முன்வைப்பதில்லை. அறிவியலின் உண்மையைத் தேடிக் கண்டறியும் அடிப்படையை, வலிமையை மார்க்சியம் அங்கீகரிக்கின்றது. ஆனால் எந்த ஒரு காலத்திலும் புதிய சிந்தனை/கண்டுபிடிப்புகளில் ஏற்படும் நெருக்கடியானது அக்கால உற்பத்தி முறையில் ஏற்படும் நெருக்கடியின் விளைவு என்றே அது விளக்குகிறது.

முதலாளித்துவமும் அறிவியலும்

மேற்கண்ட புரிதலினை, தற்கால முதலாளித்துவ உற்பத்திக்கு பொருத்தி, இந்த சூழலில் அறிவியல் வளர்ச்சியை புரிந்த கொள்வதை மார்க்ஸ், எங்கல்ஸ் தொடங்கி பல மார்க்சிய அறிஞர்கள் செய்துள்ளனர்.

முதலாளித்துவ முறையில் நிலவும் போட்டியின் விளைவாக, அதிவேக அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி, மூலதனத்திற்கு அவசியமாக இருக்கிறது என்பதை தனது “மூலதனம்” நூலில் மார்க்ஸ் விவரித்துள்ளார். ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகள் மீதான ஏகபோக கட்டுப்பாடு என்பது முதலாளித்துவத்தின் ஒரு சிறு அம்சம் மட்டுமே. முதலாளிகளுக்கு இடையிலான போட்டியின் காரணமாகவும், முதலாளி-தொழிலாளி இடையிலான வர்க்கப் போராட்டம் காரணமாகவும், முதலாளி வர்க்கம் அறிவியல் வளர்ச்சியைக் கொண்டு எந்திரமயமாக்கலை விரைவு படுத்துகிறது. இதன் விளைவாக லாப விகித நெருக்கடி உருவாகிறது. அதீத உற்பத்தி நெருக்கடி உருவாகிறது.

ஆனால் முதலாளித்துவத்தின் அடிப்படை நெருக்கடி என்ன? முதலாளித்துவம் வளர வளர உழைப்பு மேலும் மேலும் “சமூகமயம்” ஆகிறது (அதாவது மேலும் மேலும் தொழிலாளர்களின் உழைப்பு அனைவரும் சேர்ந்து புரியும் “சமூக” உழைப்பாக மாறுகிறது). ஆனால் உழைப்பின் பலனான உற்பத்தி பண்டங்கள் தனிச்சொத்து குவியலுக்கு செல்கின்றன. இதுவே முதலாளித்துவத்தின் அடிப்படையான சிக்கல். இது நாள் வரை முதலாளித்துவத்தில் அறிவியல் முறையானது தனிச்சொத்து குவியலை மேம்படுத்தவே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் “சமூகமயம்” ஆன தொழிலாளி வர்க்கத்தின் தேவைகளுக்கு எழுச்சிபெறும்போது முன்பு கட்டமைக்கப்பட்ட அறிவியல் முறை அந்த தேவைகளுக்கு முரணாக அமைகிறது. இந்த நெருக்கடியானது அறிவியலிலும் பிரதிபலிக்கின்றது.

முதலாளித்துவ முறையில் அறிவியல் தழைக்கும் என்று முதலாளித்துவத்தின் ஆதரவாளர்கள் கூறி வந்தாலும், உண்மையில் மேற்சொன்ன நெருக்கடி ஏற்பட்ட பின், அறிவியல் நச்சுப்படுகிறது. முதலாளித்துவத்தில் “அறிவு” வர்த்தகமாக்கப்பட்டதன் விளைவாக, அறிவியல் ஆய்வும் சந்தை நிபந்தனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறது. இப்போது நிகழ்த்தப்பட்டுவரும் “டிஜிட்டல் புரட்சி” என்பதன் அடிப்படையை பார்த்தால் கூட, மக்களின் தரவுகளை சேகரித்து, விளம்பரப் பிரச்சாரங்கள் மூலம் நம் ஜனநாயகத்தை சீர்குலைத்து, உழைப்பின் மீது மூலதனத்தின் ஆதிக்கத்தை வலுப்பெறச் செய்யும் விதமாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த “டிஜிட்டல் புரட்சி”க்கு அடிப்படையாக உள்ள இணையதளம், நுண்கணினி (Microprocessor), போன்ற தொழில்நுட்பங்கள் எல்லாம் மக்கள் செல்வத்தின் மூலம் பொதுப் பல்கலைக்கழகங்களில் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் தனியாருக்கு அதன் காப்புரிமங்கள் உரிமையாக்கப்பட்டன. இது, தொழிலாளி வர்க்கத்தின் தேவைகளை தீர்க்க முடியாத முதலாளித்துவ அமைப்பில், அறிவியலுக்கு ஏற்பட்டிருக்கும் ஆழமான நெருக்கடியின் ஒரு உதாரணமாகும்.

வளரும் அறிவியலை, மூலதனம் தனது லாப நோக்கங்களுக்காக கட்டுப்பாட்டில் வைப்பதனால் மக்கள் மத்தியில் அறிவியல் மீதான ஆழமான அவநம்பிக்கை வளர்வதை பார்க்கிறோம். உலகின் மிகப்பெரும் முதலாளித்துவ பொருளாதாரமான அமெரிக்காவில் கூட இதை பார்க்கலாம். சுகாதாரத்தில் தனியார் ஏகபோகம், நவீன மருந்து தொழில்நுட்பத்தை தனியார் காப்புரிமம், புதிய ஆய்வுகள் பணக்காரர்களின் நோய்களுக்கு மட்டுமே தீர்வு தேடுவது போன்ற போக்குகளின் காரணமாக மக்கள் ஏமாற்ற உணர்வுக்கு ஆளாகின்றனர். இதனால் அறிவியலற்ற “மாற்று” முறைகள் பிரபலமாவது, தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரம் போன்ற போக்குகள் எழுவதும், அறிவியல் அடிப்படையிலான மருத்துவ முறைக்கு எதிர்ப்பு உருவாவதையும் பார்க்கிறோம்.

இது போன்ற நெருக்கடியும், அறிவியலுக்கு எதிரான  போக்குகளும் கல்வி, வேளாண்மை போன்ற பல துறைகளில் காணப்படுகிறது. உலகம் முழுவதும் வெளிப்படுகிறது. அறிவியலுக்கு எதிராக முழக்கமிட்டு வலதுசாரிகள் வெற்றிபெறுகிறார்கள். கொரோனா பெருந்தொற்றின் காலத்தில், சோசலிச நாடுகள் மக்களை அறிவியல் பூர்வமாக ஒன்று திரட்டி போராடினார்கள், ஆனால் முதலாளித்துவ நாடுகள் மக்களை கைவிட்டன, போராட்டத்தையும் கைவிட்டன. இதுவே முதலாளித்துவத்தில் “சிந்தனை” மற்றும் “செயல்” (Theory and Practice) இரண்டிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசலின் தெளிவான வெளிப்பாடு.

அறிவியல் துறையில் உழைப்பின் தன்மையை பார்த்தால், அதுவும் நெருக்கடியிலேயே உள்ளது. ஏகாதிபத்திய நாடுகள், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் பல்லாயிரம் தொழில்நுட்ப பட்டதாரிகளை அடிமட்ட பணியில் அமர்த்திக் கொண்டு, முன்னேறிய தொழில்நுட்பத்தையும் சர்வதேச திறமைகளையும் தன் வசம் குவித்து வைத்துள்ளன. இது ஏகாதிபத்திய நாடுகளுக்கும் – வளரும் நாடுகளுக்கும் இடையேயான முரண்பாட்டை கூர்மையாக்குகிறது. மேலும் “அறிவுசார்” உழைப்பிற்கும், உடல் உழைப்பிற்கும் இடையிலான முரண்பாட்டையும், இயற்கை பற்றிய அறிவியலுக்கும், சமூக அறிவியலுக்கும் இடையிலான விரிசலையும் தொடரச் செய்கிறது. இவை எல்லாம் உழைப்பு தளத்தில் முதலாளித்துவ நெருக்கடியின் வெளிப்பாடே.

அதிலும் குறிப்பாக, இன்று மானுடம் சந்திக்கும் மிகப்பெரும் சவால் “பருவநிலை மாற்றம்” பற்றிய பிரச்சனையில், அடிப்படை காரணம் என்ன?

முதலாளித்துவத்தில் “அந்நியமாதல்” கோட்பாட்டை மார்க்ஸ் விவரித்தார். தொழிலாளர் உழைப்பை செலுத்தி உருவாக்குவது தான் பண்டங்கள். ஆனால் அதிலிருந்து அவர்கள் அந்நியமாக்கப்பட்டு, அது தனிச்சொத்து குவியலுக்கு செல்கிறது. ஆக, மனிதர்கள் தம் உழைப்பின் பலனிலிருந்து அந்நியமாக்கப்படுகின்றனர். இதன் காரணமாக மனித உழைப்புக்கும், இயற்கைக்கும் இடையேயான “உயிரோட்டமான பிணைப்பு” முறிவுற்று போகிறது. இவ்வாறு தன் உழைப்பில் இருந்தே அந்நியமாகிப் போகும் தொழிலாளி, அந்த உழைப்பு எப்படி ஒருங்கிணைக்கப்பட வேண்டும், இயற்கையோடு இயைந்து எப்படி செயலாற்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கிற அதிகாரமோ, வழிமுறையோ இல்லாமல் போகிறார். இதன் காரணத்தால், மூலதனம் தன் லாப நோக்கிற்கு வேண்டியது போல  செயல்பட்டு, அது உழைக்கும் மக்களையும் பாதிக்கிறது, இயற்கையையும் பாதிக்கிறது. அதுபற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் தன்னை பெருக்கிக் கொண்டிருக்கிறது. இதுவே “பருவநிலை நெருக்கடி”யின் அடிப்படை ஆகும்.

இன்று இந்த பருவ நிலை நெருக்கடிக்கு தீர்வு காண அறிவியல் முறைகள் இருப்பினும் கூட, அதனை அமலாக்க இங்கே உள்ள கட்டமைப்பு, மூலதனக் குவியலினை இலக்காக கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து பருவ நிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதற்கு, ஏகாதிபத்திய நிதி மூலதனம் தடையாக இருக்கின்றது.

அறிவியல் குறித்த தத்துவார்த்த போக்குகள்

முதலாளித்துவத்தில் அறிவியலின் நெருக்கடி பற்றி புரிந்து கொண்டோம். இங்கே “அறிவியல்” குறித்த மார்க்சிய தத்துவார்த்த போக்குகளின் பரிணாமம் குறித்து பார்ப்போம்.

இயங்கியல் பொருள்முதல்வாத கோட்பாட்டை மேலும் வலுவாக்கும் விதமாக எங்கல்ஸ் இந்த கோட்பாட்டை இயற்கை மற்றும் அண்டத்தையும் புரிந்து கொள்ள பயன்படுத்தி எழுதிய நூல்  தான் “இயற்கையின் இயங்கியல்”. இதன் மூலம் அறிவியலாளர்களுக்கு இயங்கியல் பார்வை ஏன் அவசியம் என்பது குறித்தும் விவரித்தார். இவ்வாறு அறிவியல் ஆய்வில் இயங்கியலை பயன்படுத்தும் தத்துவத்தை ஜே.டி.பெர்னால், ஜே.பி.எஸ்.ஹால்டேன், ஐன்ஸ்டீன் உட்பட பல விஞ்ஞானிகளும் முன்னெடுத்துச் சென்றனர்.

அறிவியல் மற்றும் சமூகத்திற்கு இடையேயான உறவு குறித்த தத்துவங்களும் மார்க்சிய மரபில் பரவலாக புகழ் பெற்றன. முதலாளித்துவ நெருக்கடியால் அறிவியல் நசுக்கப்படாததன் காரணத்தால் சோவியத் ஒன்றியத்தில் அறிவியல் தழைத்தோங்கியது. மக்களின் வாழ்வியல் கலாச்சாரத்தோடு அறிவியல் ஒன்றிப் போனதன் விளைவாக, தொழிலாளர் வர்க்கத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அறிவியல் ஆய்வுக்குள் “ஆலை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு”, “சமூக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்” போன்ற துறைகள் பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்பட்டு தழைத்தன. இதன் தொடர்ச்சியாக அறிவியல் குறித்த தத்துவ விவாதங்களும் விரிவடைந்தன. போரிஸ் ஹெசன் அவர்களின் பணி எவ்வாறு நியூட்டனின் ஆய்வுகள் பதினேழாம் நூற்றாண்டின் வர்த்தகம் சார் முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் தொடர்புடையது என்பதைக் காட்டியது. நிகோலாய் புக்கரின், நிகோலாய் வாவிலோவ் போன்றோரின் அறிவியல்-சமூகம் குறித்த ஆழமான விவாதங்கள், அறிவியல் தன் முழு திறனை வெளிக்கொண்டு வர சோசலிச சமூகத்தில் தான் முடியும் என்பதை நிறுவின.

இரண்டாம் உலகப்போருக்கு பின், பிரபல பரிணாம வளர்ச்சி விஞ்ஞானிகளான ரிச்சர்ட் லேவின்ஸ், ரிச்சர்ட் லியோன்டிஃப் போன்றவர்கள் மார்க்சியத்தின் மூலம் அறிவியல் வளர்ச்சியை புரிந்து கொள்ளும் பணியை தொடர்ந்தனர். ஆனால் 1970களில் தொடங்கி, இடதுசாரி ஆய்வாளர்கள் மத்தியிலும் தவறான புரிதல்கள் எழத் தொடங்கின. ஆர்.எம்.யங் என்ற மார்க்சிய ஆய்வாளர், அதி தீவிர நிலைபாட்டை எடுப்பதாக எண்ணி, “அறிவியல் என்றாலே முதலாளித்துவ அறிவியல் மட்டும் தான்” என வாதிட்டார். ஆனால் இது பொருள்முதல்வாத புரிதலுக்கு எதிரானது. இதனைத் தொடர்ந்து எழுந்த பின் நவீனத்துவ கோட்பாடுகள் இடதுசாரி போர்வையில் முற்றிலும் அறிவியலற்ற கோட்பாடுகளை முன் வைத்தன. அவர்கள் மார்க்சிஸ்டுகள் முதலாளித்துவத்தில் அறிவியல் மீது வைக்கும் அதே குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டே கருத்துமுதல்வாத கோட்பாட்டு நிலை எடுக்கின்றனர். இவர்கள், “அறிவியல் மூலம் உண்மை நிலையை கண்டறியவே முடியாது. அந்தந்த வர்க்கங்களின் நலனுக்கு ஏற்றார்போல கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றன” என வாதிட்டார்கள். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின், நவ தாராளமய காலத்தில் இந்த கோட்பாடுகள் மேலும் வலுப்பெற்றன.

இப்படிப்பட்ட பொருள்முதல்வாதத்திற்கு எதிரான கோட்பாடுகள் அறிவியலில் மனித உழைப்பின் பங்கையும், அறிவியல்-உழைப்பு-இயற்கை இடையேயான உறவையும் நிராகரிக்கின்றன. அறிவியல் என்பதை மனித உழைப்பின் அங்கமாக பார்ப்பதையும், அறிவியலின் நெருக்கடியை உற்பத்தி முறையின் நெருக்கடியின் பிரதிபலிப்பாக பார்ப்பதையும் நிராகரிப்பதன் மூலமாக, இந்த பின் நவீனத்துவ கோட்பாடுகள், இயங்கியல் போராட்டம் வழியாக மனித சமூகம் அடையும் வளர்ச்சியையும், அந்த போராட்டத்தில் அறிவியல் ஆற்றும் பங்களிப்பையும் முற்றிலுமாக மறைக்கின்றன.

இறுதியாக

மனித சமூகத்திற்கு அப்பாற்பட்டு நின்று அனைத்து மானுட பிரச்சனைகளுக்கும்  நூதன தீர்வை அளிக்கக் கூடியதாக அறிவியலை பார்க்கும் பார்வையும் தவறு. அதே வேளையில், அறிவியலின் உண்மை அறியும் திறனை முற்றிலுமாக நிராகரித்து, அறிவியல் மொத்தமும் முதலாளித்துவ அறிவியல் என நிராகரிப்பதும் தவறு.

மார்க்சிய புரிதல் மூலம் மட்டுமே இந்த இரண்டு தவறுகளையும் களைந்து, மனித உழைப்பின் வடிவமான அறிவியலின் ஆற்றலை உணரும் அதே வேளையில், அந்த அந்த காலத்தின் சமூக கட்டமைப்பு எவ்வாறு அறிவியல் வளர்ச்சியின் தன்மையை தீர்மானிக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடியும். மார்க்சிய புரிதலால் மட்டுமே கோவிட் தடுப்பு மருந்து போன்ற அறிவியலின் வியக்கத்தக்க சாதனைகளை அங்கீகரிக்கும் அதே வேளையில், அணு ஆயுதம் போன்ற அறிவியலின் கோர முகத்தையும் புரிந்து கொள்ள முடியும். மார்க்சிய புரிதலால் மட்டும் தான் அறிவியலின் உண்மை திறனை புரிந்து கொண்டு, அந்த திறன் உழைக்கும் மக்களுக்கு பயன்பட தேவையான இயக்கங்கள் மற்றும் போராட்டங்களை கட்டமைக்க முடியும். இப்படிப்பட்ட போராட்டங்கள் மூலம், இக்கால ஏகாதிபத்திய சூழலில் அறிவியல்-முதலாளித்துவம் இடையேயான முரண்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, அதை கூர்மைப்படுத்த இயலும். அறிவியல் பற்றிய மார்க்சிய புரிதல் மட்டுமே பிற்போக்கு சித்தாந்தங்களை எதிர்க்கும் அதே வேளையில், முதலாளித்துவ தளையில் இருந்து இருந்து அறிவியலை விடுவிக்க உதவும்.

மதமும் வகுப்புவாதமும்

சீத்தாராம் யெச்சூரி

(2002 நவம்பரில் சேவியர் சமூக சேவை கல்வி நிறுவனத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)

தமிழில்: கே. ராமசுப்பிரமணியன்

இன்றைய சூழல், அச்சுறுத்துவதாகவும், வகுப்புவாத பாசிச கருமேகங்கள் சூழ்ந்துள்ளதாகவும் இருக்கிறது. நவீன இந்தியாவின் அடித்தளத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசின் தன்மையை, சகிப்புத் தன்மையற்ற பாசிச சமூகமாக மாற்றிட அனைத்து நடவடிக்கைகளும் மிக வேகமாக எடுக்கப்படுகின்றன. சமீபத்தில் அரசின் ஆதரவுடனே குஜராத் மாநிலத்தில் நடந்த உறைய வைக்கும் வகுப்புவாத படுகொலைகள், வகுப்புவாத அரக்கனின் கோர முகத்தை வெளிக்காட்டியது. இதற்கு முன்பு குஜராத்திலுள்ள கிறிஸ்துவர்களுக்கு எதிரான மத வன்முறைகள் மற்றும் ஒடிசா போன்ற பல இடங்களில் நடந்துள்ள வகுப்புவாத வெறியாட்டங்களும், கிரஹாம் ஸ்டெயின்ஸ் குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்டதும் – இவை அனைத்தும் சகிப்புத் தன்மையற்ற பாசிச முகத்தை வெளிக்காட்டுகிறது.

இன்று இந்திய நாட்டுப்பற்றாளர்கள் முன் உள்ள மிகப் பெரிய சவால் என்பது நாம் அறிந்த இந்தியாவை பாதுகாப்பதே ஆகும்.

எனக்களித்த தலைப்பிற்குள்ளே செல்வதற்கு முன்,  சமகால இந்திய அரசியலில், சமூக, பொருளாதார வாழ்வில் ஏன் இத்தகைய அபாயகரமான பண்பு மாற்றம் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

வகுப்புவாத வன்முறைகளுக்கான காரணங்கள்

இந்திய சமூக, அரசியல் நிகழ்வுகளில் வகுப்புவாத மோதல்களும், விரோதங்களும், ஒரு பகுதியாக கடந்த ஒரு நூற்றாண்டாகவே இருந்து வந்துள்ளன. இன்றைக்கு புதிய பண்புகளோடு எழுந்து வருகிற தாக்குதல்களை ஊக்குவித்து, பதட்டத்தை தொடரச் செய்திடும் மூல காரணங்கள் யாவை?

இதனை ஆராய முற்படுகையில், சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்து வந்துள்ள வர்க்க ஆட்சி நடைமுறைகளின் விளைவுகளை பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியப் பெருமுதலாளிகளும், அதன் தலைமையும், இந்திய ஏகபோக மூலதனமும் தங்களுடைய சமூக அடித்தளம் குறுகியதாக இருக்கும் காரணத்தால், தனது வர்க்க அதிகாரத்தை தொடர்வதற்கு, நிலப்பிரபுக்களின் பகுதியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டார்கள். இக்கூட்டுச் சேர்க்கையே இந்திய சமூக அரசியலின் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் உள்ளடக்கத்தையும், வழியையும் தீர்மானிக்கக் கூடிய புதிய முரண்பாடுகளின் தொகுப்பை செயல்படுத்தத் தொடங்கியது.

மேற்சொன்ன கூட்டுச் சேர்க்கையின் காரணமாக ஒருபக்கம் ஆளும் வர்க்கத்தினால் ஏகாதிபத்தியத்தின் பிடியை தீர்க்கமாக உடைத்தெறிய முடியவில்லை. மறுபக்கம் நிலப்பிரபுத்துவம் இந்திய மக்களிடையேயும், பொருளாதாரத்தின் மீதும் கொண்டுள்ள ஆதிக்கத்தைக் களையவும் முடியவில்லை.

இக்கால கட்டத்தில், நடுத்தர வர்க்கம் விரிவடைந்துள்ளது என்றபோதிலும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தினால் உள்நாட்டு சந்தை மேலும் குறுகியிருப்பதையும்  பார்க்க முடிகிறது.

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்த்தால் நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை திட்டவட்டமாக முறியடிக்காமல், உலகில் எங்கும் முதலாளித்துவம் வளர்ச்சியடையவில்லை. அவ்வாறே இங்கும், ஒரு பக்கம் ஏகாதிபத்தியத்துடன் சமரசமும், மறுபக்கம் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசமும் செய்து கொண்டதால் இந்திய பெரு முதலாளிகளால் தாங்கள் விரும்பியது போல் சுதந்திர இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்க முடியவில்லை.

நிலப்பிரபுத்துவ கட்டமைப்பின் மேல் முதலாளித்துவத்தை திணிப்பதன் மூலம்  நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை அகற்றி விடலாம் என்ற இந்தியப் பெருமுதலாளிகளின் முயற்சி பயனற்று போனது.

இந்த காலகட்டத்தில், பெருவாரியான இந்திய மக்கள் வருமானம் இல்லாமல்,  வாங்கும் சக்தியை இழந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை மேலும் குறுகத் தொடங்கியது. ஆளும் வர்க்கமோ, வாங்கும் சக்தியை பெருக்கும் விதத்தில்  முழுமையான நிலச் சீர்திருத்தம் எதையும் செய்திட முன்வரவில்லை. இந்த நிலையில், தனது முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு தடங்கல் ஏதும் ஏற்படாமலிருக்க அந்நிய சந்தையை நாட வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய முதலாளிகள் தள்ளப்பட்டனர்.

இப்போக்கின் காரணமாக, ஏகாதிபத்திய நாடுகளின் மூலதனத்தையும் தொழில்நுட்பங்களையும் கூடுதலாக சார்ந்திருக்கும் நிலைக்கு இந்தியப் பொருளாதாரம் தள்ளப்பட்டதுடன், அந்நிய நாட்டு சந்தையோடு போட்டிபோடும் நிலையும் ஏற்பட்டது. இதன் விளைவுதான் புதிய பொருளாதாரக் கொள்கையும், இந்திய மக்களின் மீதான அதனுடைய பேரழிவுத் தாக்குதல்களும் ஆகும்.

மேற்சொன்ன விதத்தில், நிலப்பிரபுத்துவத்துடன் செய்துகொண்ட சமரசம், இந்திய பெருமுதலாளிகளுக்கு பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தியது. அந்த முரண்பாட்டில் இருந்து விடுபடுவதற்கு, அபாயகரமான வகையில் ஏகாதிபத்தியத்தினை சார்ந்திருக்க வேண்டிய நிலைமையும், மறுபுறம் இதனால் ஏற்பட்ட நெருக்கடியினை பொதுமக்களின் தோள்களில் மாற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. முரண்பாட்டின் ஒரு வெளிப்பாடாக இது இருக்கையில், அதற்கு ஈடான, இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த, மற்றொரு வெளிப்பாடும் உள்ளது. நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை, தனது கட்டமைப்பில் இருந்து நீக்க முடியாத காரணத்தால் நிலப்பிரபுத்துவத்தோடு இணைந்த சமூக உணர்வுநிலை இன்றும் நிலைத்து நிற்கிறது’. இந்த நிலைமையினுடைய தாக்கத்தினால் வகுப்புவாதமும், சாதீயமும் சமூக ஒழுக்கத்தின் மீது ஆதிக்கத்தை தொடர்ந்தன. எனவே நிலப்பிரபுத்துவத்தின் மீது முதலாளித்துவத்தை திணிக்கும் இந்த முயற்சியினால், நிலப்பிரபுத்துவத்துடன் இணைந்த பிற்போக்கு உணர்வுடன் கூடவே, சீரழிந்த போட்டி உணர்வுடன் கூடிய முதலாளித்துவமும் உருவானது.

இந்நிலையில் முதலாளித்துவ வளர்ச்சியில் விளைவான வர்க்கங்களின் உருவாக்கம் (தொழிலாளி வர்க்கம் போன்றவை), ஏற்கனவே உள்ள, சாதிப்பிரிவு சமூக நிலைகளின் உள்ளாகவே உருவாகியது. முதலாளித்துவத்திற்கு முன்பு இருந்த சமூக உறவுகளை மாற்றி அமைக்காமலேயே, அதனுடன் முதலாளித்துவம் சமரசம் செய்து கொண்டதால் இந்திய சமூகத்தில் ஏற்பட்டிருக்கிற மிகச் சிக்கலான இப்பிரச்சனையின் காரணத்தையும், அதனால் ஏற்பட்டு இருக்கிற விளைவுகளையும் இந்த போக்கு மிகத் துல்லியமாக விளக்குகிறது.

ஆகவே, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி என்பது ஏற்கனவே உயிரோட்டமாக உள்ள சாதியத்தையும், சாதிய ஒடுக்குமுறைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. சமகால இந்தியாவில் சுரண்டப்படும் வர்க்கத்திற்கும், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் இடையே ஒட்டிக் கொண்டுள்ள பொதுத்தன்மையை இது துல்லியமாக காட்டுகிறது.

இவ்வாறு தரம் மலிந்த நிலப்பிரபுத்துவமும், சீரழிந்த முதலாளித்துவமும் இணைந்து, சமூகத்தின் மேல்கட்டுமானத்தில் குற்றமயமாக்கல் பெருக வழிவகுக்கின்றன. அத்துடன், சாதிய வகுப்புவாத சக்திகள் ஒன்றாக ‘வளரவும் வழிவகை செய்கின்றன. இந்த நிலைமையை ஆளும் வர்க்கங்கள் தங்களது அரசியல் மற்றும் தேர்தல் வாய்ப்புகளுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன.

மேலே குறிப்பிடப்பட்ட முரண்பாடுகளின் வெளிப்பாட்டின் அடிப்படையில், விடுதலை இந்தியாவில் மதவாத வன்முறைகளை வகுப்புவாத சக்திகள் அரங்கேற்றுகிறார்கள். நாட்டில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள நெருக்கடி, இந்திய மக்களின் மனதில் பல வருடங்களாக சேர்ந்துள்ள அதிருப்தியை மேலும் வளர்த்துள்ளது. பரபரவென்று  வளர்ந்து வருகிற நடுத்தர வர்க்க மக்களிடையேயும் இந்த அதிருப்தி வளர்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடுத்தர வர்க்கம் இன்றும் சுரண்டலுக்கு ஆளாகிற பகுதியிலிருந்து நடுத்தர வர்க்கமாக வந்தவர்களே ஆவர். சுரண்டும் வர்க்கத்தினுடைய உணர்வுகளின் ஆதிக்கத்துடன், நடுத்தர வர்க்கத்தினரின் அதிருப்தியும் இணைவதால் வகுப்புவாத சக்திகள் வளர்வதற்கு ஒரு வளமான தளம் அமைகிறது.

சமூகத்தில், பிற்போக்கு உணர்வுகள் நிலைத்து இருக்கையில், வகுப்புவாத சக்திகள் நிலவுகின்ற அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, வகுப்புவாதத்திற்கு மடை திறந்துவிட்டு, தங்களது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

அதற்காக அவர்கள் இருமுனைத் தந்திரங்களை கையாளுகின்றனர். ஒருபக்கம் இந்தியாவிலுள்ள பல தரப்பட்ட சமூகங்களாகப் பிரிந்து கிடக்கிற – ஆனால் இந்து மதத்தை தழுவக் கூடியவர்களாக உள்ள அனைவரையும் ஒன்றாகக் கட்டி இணைப்பது. மற்றொரு பக்கம், இந்து அல்லாதவருக்கு எதிராக வெறுப்புணர்ச்சியைத் தூண்டி எதிரிகளாக்குவது – உதாரணமாக முஸ்லீம், கிறிஸ்துவர் இவர்களுக்கு எதிராக –  இந்த இரண்டு முனைகளிலும் தங்களது நோக்கத்தை அடைவதற்காக அவர்கள் கையாளும் பிரச்சார இயந்திரங்கள் பாசிச வெறியோடும், நவீன தொழில்நுட்பங்களோடும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

பார்க்கப் போனால், இந்து ராஜ்யம் என்பதற்கான அடித்தளம் 1920களில் வி.டி. சாவர்க்கர் என்பவரால் போடப்பட்டது. பின்பு 1925இல் தோன்றிய ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இக்கொள்கையை தனதாக்கிக் கொண்டது. 1930 பின்பகுதி காலங்களில் ஆங்கிலேய அரசு இந்த மதப்பிரிவு நிலையினை கண்டுகொண்டு அதனை தனது சுயலாபத்திற்காகப் பயன்படுத்தியது.

இந்நோக்கத்தை வெளிப்படுத்தியவர் ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவராக பணியாற்றிய எம்.எஸ். கோல்வால்கர் தான். 1939இல் அவர் எழுதிய, நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசம் என்ற அவரது நூலில், விளக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கத் திட்டத்தில், உறைய வைக்கக் கூடிய அளவுக்கு வெளிப்படுத்திய பாசிச எண்ணங்களே இன்றும் காவிக்கும்பலுக்கு ஊக்கமளிக்கிறது.

இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே தேசிய இனம் என்ற ஆதாரமற்ற கூற்றை பொறுப்பற்று அறிவித்து விட்டு அவர் சொல்வது “(இந்த நாட்டில்) அந்நியர்களாக உள்ளவர்களுக்கு இரண்டே வழிகள் உள்ளன. ஒன்று (இந்து) தேசிய இனத்துடன் ஒன்றரக்கலந்து அதன் கலாச்சாரத்தை ஏற்று வாழ வேண்டும்; அல்லது அந்த தேசிய இனத்தின் கருணையில் அவர்கள் எவ்வளவு நாட்கள் வாழ விடுகிறார்களோ அதுவரையில் வாழ்வது. (அவர்கள் கூறும்போது) அந்த தேசிய இனத்தின் அன்பு கோரிக்கைக்கு இணங்க நாட்டை விட்டு வெளியேற வேண்டும்”.

இந்த நிலைபாட்டிலிருந்து, புத்திசாலித்தனமாக நடந்து கொண்ட முந்தைய நாடுகளின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது – இந்துஸ்தானில் உள்ள அந்நிய இனங்கள் இந்து கலாச்சாரத்தையும், மொழியையும் கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றும் இந்து மதத்திற்கு மரியாதையாக இருப்பதுடன், அந்த மதத்தை பய பக்தியுடன் அணுகிட வேண்டும். இந்து இனத்தையும், அதன் கலாச்சாரத்தையும் மகிமைப்படுத்துவது தவிர வேறு எந்த எண்ணத்திற்கும் இடம் கொடுக்கலாகாது – இது இந்த தேசத்திற்கும் சேர்த்து தான். அவர்களுக்கான தனித்துவமாக உள்ள வாழ்க்கையை விட்டு விட்டு இந்து இனத்துடன் ஒன்றிணைந்து விட வேண்டும். மற்றும் இந்து தேசத்திற்கு அடிபணிந்து வாழ வேண்டும். அவர்கள் எந்த உரிமையையும் கேட்கக் கூடாது. அவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. முன்னுரிமை அளிக்கக் கூடிய நடவடிக்கைகள் எதனையும் நினைக்கவே கூடாது. குடிமக்கள் உரிமை என்பது கூடவே கூடாது. அவர்கள் பின்பற்ற வேறு மார்க்கம் எதுவும் இருக்கக் கூடாது. நாம் ஒரு புராதான நாடு. புராதான நாடுகள் அந்நிய இனத்தை எவ்வாறு நடத்துமோ அதேபோன்று நம் நாட்டை தேர்ந்தெடுத்துள்ள அந்நிய இனத்தை நடத்துவோம்”.

புரதான அரசுகள் எப்படி நடத்தின. இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை பாதுகாத்திட ஜெர்மனி தனது நாட்டிலுள்ள யூதர் இனத்தை கொன்று குவித்தது. இனப் பெருமை மிக உயர்ந்து இருப்பதை இது வெளிக்காட்டியது. ஜெர்மனி நமக்கு காட்டுவதெல்லாம் இனத்திலும், கலாச்சாரத்திலும் அடிப்படையில் வேறுபடுகிற நிலையில் உள்ளவை ஒருங்கிணைந்து ஒன்றாக மாறுவது என்பது முடியாதது ஆகும். இதை இந்துஸ்தான் ஒரு படிப்பினையாக ஏற்று நாம் பலனடைந்திட வேண்டும்.

இதே கோல்வால்கர்தான் மகாத்மா காந்தி சுட்டு கொலை செய்யப்பட்ட போது, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டதை அடுத்து, அன்றிருந்த உள்துறை அமைச்சர் சர்த்தார் பட்டேல் அவர்களிடம் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்கக் கோரினார், “ஆர்.எஸ்.எஸ். இனி கலாச்சார அமைப்பாக மாத்திரம் செயல்படும்” என்றும் உறுதி அளித்தார். இதன் பிறகு மாற்றாக ஒரு அரசியல் அமைப்பை தேடிக் கொண்டிருந்த கோல்வால்கர், அன்றைய ஜவஹர்லால் நேரு மீது அதிருப்தியை வெளியிட்டு, மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறிய ஸ்யாம பிரசாத் முகர்ஜியை வைத்து 1951இல் ஒரு புதிய அரசியல் கட்சியை ஸ்தாபிக்க சில பிரச்சாரகர்களை அனுப்பினார். அன்றைக்கு ஸ்யாம பிரசாத் முகர்ஜியை சந்தித்துப் பேச அனுப்பப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் இன்றைய பிரதமர் (வாஜ்பாய்), மற்றொருவர் இன்றைய உள்துறை அமைச்சர் (அத்வானி). ஆக இன்றைக்கு அவதாரம் எடுத்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் முன் அவதாரமான ஜனசங்கம் இவ்வாறு தான் தொடங்கப்பட்டது.

எனவே, இன்றைக்குள்ள பாரதிய ஜனதா கட்சி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் உறுப்பு என்பதை யாரேனும் மறுப்பார்களேயானால் அவர்கள் முட்டாள்களின் கூடாரத்தில்தான் இருப்பார்கள் என்று சொல்லலாம்.

மேலும், பிறகு கோல்வால்கர் எழுதிய சிந்தனைக் கொத்து என்ற நூலில், ஒரு தனி அத்தியாயத்தில் இவ்வாறு எழுதினார்: இந்திய நாட்டு மதச்சார்பின்மையை அழிப்பதை மூன்று உள்நாட்டு எதிரிகள் தான் தடுத்து நிறுத்துகின்றன. அவை தான் ஆர்.எஸ்.எஸ். பாசிச இந்து ராஜ்யத்தை நோக்கி நடைபோடுவதையும் தடுத்து நிறுத்துகின்றன. ஆர்.எஸ்.எஸ்.சின் கண்ணோட்டத்தில் அவைகள் ஒன்று முஸ்லீம் மதத்தினர், இரண்டாவது கிறிஸ்துவ மதத்தினர். மூன்றாவது கம்யூனிஸ்ட்டுகள். ஆகவே பால் ரோப்ஸன் சொன்னது போல் “நாம் அனைவரும் ஒரே படகில் தான் சகோதரரே” (என்று அங்கு திரண்டு இருந்தவர்களைப் பார்த்துக் கூறினார்)

இதன் பிறகு கிடைத்துள்ள அனுபவங்கள் ஒரு உண்மையை கோடிட்டு காட்டுகிறது.  அதாவது இந்து மதவாத அடிப்படைவாதிகளும், முஸ்லீம் மதவாத அடிப்படைவாதிகளும் (எந்த மதத்தைச் சார்ந்த அடிப்படைவாதிகளாக இருந்தாலும்) அவர்களது இன்றைய நடவடிக்கை என்பது நமது இன்றைய நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக ஆட்சி முறை பெற்றிருக்கும் சுதந்திரத்தையும், இறையான்மையையும் நேரடியாக தாக்குவதாகவே அமைகிறது. இந்த இரண்டு சக்திகளுமே ஒன்றுக்கொன்று ஊட்டத்தை கொடுத்துக் கொள்கிறார்கள். இந்த இரண்டு சக்திகளும், மதச்சார்பின்மை, ஜனநாயகம், நாட்டுப் பற்று போன்ற நவீன கருத்துக்கள் மீது முன்னெடுக்கும் தாக்குதல்கள் ஒரேமாதிரி உள்ளன. அவர்கள் மதத்தை மையமாகக் கொண்ட ஒரு சிதைந்த தேசியத்திற்குள் தங்களை வரையறுத்துக் கொண்டுள்ளார்கள். எந்த ஒரு தேசியத்தின் உருவாக்கத்திலும், ஒற்றுமைப்படுத்தும் காரணியாக மதம் என்றைக்கும் இருந்ததில்லை; இருக்கப் போவதும் இல்லை என்ற வரலாற்று படிப்பினைகளை ஏற்க மறுக்கின்றனர். (உதாரணமாக பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷ் பிரிந்தது) மாறாக, அரசியலிலும், சமூக அமைப்பிலும் மதம் தான் ஆதிக்கம் செலுத்திட வேண்டுமென்று வாதாடுகின்றனர். இவ்வாறு அவர்கள் வரலாற்றில் விளைந்த, விஞ்ஞான அடிப்படையிலான தேசியத்தை மறுக்கின்றனர்.

வகுப்புவாதமோ அல்லது அதன் அடிப்படைவாதிகளின் தத்துவமோ மதத்தை உயர்த்திப் பிடிப்பதாகவும் இல்லை; அதை பாதுகாக்கவும் இல்லை. மாறாக, மக்களிடையே நிலவுகிற மதப் பிளவுகளைப் பயன்படுத்தி, தனது குறிப்பிட்ட அரசியல் நோக்கத்திற்காக பிளவுகளை தீவிரமாக்கவும், நிலைநிறுத்தவும் செய்கின்றனர். அவர்களது இந்த தத்துவம் மதங்களிடையே மோதலை உருவாக்கி குறிப்பிட்ட அரசியலுக்கு பயன்படுத்துவதற்கு மட்டுமே உதவுகிறது. ஆங்கிலேயர்கள் மதங்களிடையே உள்ள வெறுப்பை தங்களது காலனி ஆதிக்கத்தை நிலைநிறுத்திட பயன்படுத்தினர். பின்பு இந்த மத மோதல்கள் கட்டுக் கடங்காமல் போகவே நமது தேசத்தை இரண்டாகப் பிரிப்பதில் வெற்றி கண்டனர். இன்றும் இக்கசப்பான நிகழ்வுப்போக்கு எண்ணற்ற உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே, வகுப்புவாதம் என்பது மதங்களிலிருந்து தன்னை நீக்கிக் கொண்டு தள்ளி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. வகுப்புவாதம் பிற மதத்தினரின் பால் வெறுப்பை உண்டாக்கியும், நீடிக்கச் செய்தும், தான் இருப்பதற்கும், வளர்வதற்கும் அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறது.

மதமும் – மார்க்சியமும்

இப்படிப்பட்ட சூழலில், மார்க்சிஸ்ட்டுகளுக்கு மதம் பற்றி உள்ள புரிதலைக் குறித்து சர்ச்சைகள் அதிகமாக எழுப்பப்படுகின்றன. இதில் மிகப் பிரபலமான கருத்தாக இருப்பதும், கூறப்பட்ட சூழலில் இருந்து விலக்கி எடுத்தாளப்படுவதுமான மதம் என்பது மக்களுக்கு அபின் போன்றது என்ற மார்க்சின் கூற்று ஆகும்.

அந்த மேற்கோள் எந்த பகுதியில் இடம் பெறுகிறதோ அது, வேண்டுமென்றே,  முழுவதுமாக வெளியிடப்படவில்லை. உண்மையில் மார்க்ஸ் கூறியது மத (நம்பிக்கையோடு கூடிய) துயரம் என்பது அதே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடே ஆகும். அது உண்மையான துயரத்திற்கு எதிர்ப்பை தெரிவிப்பதும் ஆகும். மதம் (மத நம்பிக்கை) ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு. இதயமற்ற உலகில் (அரவணைக்கும்) இதயம். ஊக்கமற்ற நிலையில் ஊக்கமளிப்பதும் ஆகும். இது மக்களுக்கு அபின் போன்றது. (அக்காலத்தில் காயத்தினால் ஏற்படும் வலியை  மறந்திட அபின் கொடுக்கப்பட்டது – மொழி பெயர்ப்பாளர்)

மதத்தை அபினுடன் ஒப்பிடுவதற்கான காரணம் அபினுக்கு உள்ள குணத்தை ஒத்த விதத்தில் மதமும் ஒரு மாயையை ஏற்படுத்துவதால் தான். துயரம் தாங்க முடியாமல் இருக்கும் மனிதனுக்கு அதிலிருந்து நீக்கம் அளிக்கிறது. இதயமற்ற உலகில் (அரவணைக்கும்) இதயத்தையும், ஊக்கம் அற்ற நிலையில் ஊக்கத்தையும் அளிக்கிறது.

(அவர்களது துன்பமானது) அவர்களது உணர்வு நிலைக்கும், கட்டுப்பாட்டுக்கும் அப்பால் இருக்கும் நிலைப்பாடாகத் தொடர்கிறது என்ற துல்லியமான காரணத்தால் அவர்களை செயலற்ற தன்மைக்கு இட்டுச் சென்று மந்தப்படுத்த இந்த அபின் மக்களுக்கு தேவையாகிறது.

மதங்கள் குறித்து, மார்க்சிஸ்டுகள் கொண்டுள்ள புரிதல், அந்த மதம் ஒரு தத்துவத்தின் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதை புரிந்து கொள்வதே ஆகும். மார்க்ஸ் தான் வாழ்ந்த காலத்தில் மனிதர்களுடைய உண்மையான சுதந்திரத்தையும், அவர்களுடைய முழுமையான விடுதலையையும் எது தீர்மானிக்கிறது என்ற கேள்விக்கு விடை தேடுகையில், ஹெகலின் தத்துவமான மனதின் புரட்சி என்ற தத்துவத்தை – அதை ஃப்யூயர்பாக் அவர்களும் பரிந்துரைத்ததை – மறுத்து எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமான விளக்கத்தை அளித்தார்.

அது என்னவென்றால்; மனிதர்களுடைய உணர்வுகளை சமூக நிலைமைகளே தீர்மானிக்கிறதே தவிர அதற்கு மாறான  வகையில்  அல்ல. அதாவது, “மனிதர்களின் உணர்வுகள் அவர்கள் இருக்கும் நிலையை தீர்மானிக்கவில்லை. மாறாக, அவர்களது சமூக நிலைகளே அவர்களது உணர்வுகளை தீர்மானிக்கிறது. (Introduction to Critique of Political economy)

மேற்கண்ட முக்கியமானதும், மூல ஆதாரமான முடிவின் அடிப்படையில் மார்க்ஸ் கூறியது, “சமயப் பற்றற்ற இந்த விமர்சனத்திற்கான அடிப்படை. மனிதனே மதத்தினை உருவாக்கினான். மதம் மனிதனை உருவாக்கவில்லை.” வேறு சொற்களில் சொல்வதென்றால், மனிதர்களின் உணர்வுகள் பல விதங்களில் வெளிப்படுவது போல், உதாரணமாக, அவனது சிந்தனையும், அதன் விளைவாக ஏற்படுகிற அறிவுசார் நடவடிக்கைகளும் போல், மதமும் மனிதனுடைய சமூக வாழ்க்கையின் ஒரு விளைவுதானே அன்றி, மதம் தான் சமூக வாழ்க்கைக்கு காரணம் என்றோ, சமூக வாழ்க்கையை உண்டாக்கியது என்றோ கூறுவதற்கில்லை.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது, மதம் என்பது சமூக வரலாற்றின் உந்து சக்தியில் இருந்து விலகி தன்னைத் தானே ஆட்கொண்டதும் அல்ல; தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டதும் அல்ல. ஆகவேதான், மார்க்சிய தத்துவம் கோபர்நிகஸூக்கு கொடுத்த இடருக்காகவோ அல்லது ஏகலைவனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவோ மதத்தின் மீது குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் இந்நிகழ்ச்சிகள் அனைத்துமே மதம் ஒரு தத்துவமாக ஆதிக்கம் செலுத்துகிற காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளது என்பதை பதிவு செய்யப்பட்ட வரலாறு தெளிவாக்குகிறது.

மதம் என்பது ஒரு ஆதிக்கம் செலுத்தும் தத்துவமாக இருக்கும் நிலையில் முற்போக்காளர், பிற்போக்காளர், சொந்த நலன்களையே நோக்கும் அதிகார வர்க்கம் அல்லது சுரண்டப்படுகிற வர்க்கங்களின் கோரிக்கைகள் – இப்படி அனைத்து மனிதர்களின் உணர்வுகளில் மதப் பற்று வேறுபாடில்லாமல் வியாபித்திருக்கிறது. ஆனால், மார்க்சிய தத்துவம் ஆக்கப்பூர்வமான முற்போக்கு கருத்துக்களையும், சீர்திருத்த இயக்கங்களையும் உள்ளடக்கிய மதப் பழக்கவழக்கங்களை கவனத்தில் கொள்கிறது. உதாரணமாக, சுஃபி மற்றும் பக்தி இயக்கங்கள். அதே சமயத்தில் இந்த இயக்கங்கள் தங்களை மதப்பிடிப்புக்குள் இருத்திக் கொண்டதால், சமூகத்தில் தேவையான மாற்றங்களை செய்வதற்கு சாத்தியமில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. எந்த சமூக நிலைமைகளின் காரணமாக, குறிப்பிட்ட வடிவிலான மத நடவடிக்கைகள் ஆதிக்கம் பெற்றனவோ, அந்த சமூக நிலைமைகளை மாற்றினாலொழிய இந்த குறிப்பிட்ட மதத்துடன் இணைந்த ஒடுக்குமுறைகளை அகற்றிவிட முடியாது. இவ்வாறு மார்க்சியமானது மதங்களின் ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை அங்கீகரிக்கிறது, அவற்றின் சீர்திருத்தக் கருத்துக்களுடைய வரம்பை அறிந்துள்ளது. மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக, மனித உணர்விற்குள் பொருந்தி இருக்கும் பகுதியாக மதங்களின் வரலாற்று வளர்ச்சியைப் பார்க்கிறது.

ஆகவே மார்க்சிச தத்துவம் வரலாற்று நிகழ்வுகளுக்கு அறிவியல் விளக்கங்களை தருகிற நிலையிலும், சமூகப் போராட்டங்களில் மதங்கள் ஆற்றியுள்ள சிக்கலான பாத்திரங்களையும் கவனத்தில் கொள்கிறது.

ரோமப் பேரரசின் சிதைவுக்கு காரணமான மக்களின் பேரெழுச்சியின் விளைவாக கிறிஸ்துவ மதம் தோன்றியதை பார்த்திடலாம். அதேபோல் அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த நாடோடிகளுக்கும், நகர மக்களுக்கும் நடந்த போராட்ட விளைவுகளாலும், அபிசீனிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நாட்டை மீட்டிட எழுந்த அரேபிய தேசிய உணர்ச்சியும், அதன் மூலம் பல காலமாக உபயோகப்படாமல் இருந்த வர்த்தக வழிகளை மீட்டெடுப்பதுமே இஸ்லாம் மதம் தோன்றக் காரணம் என்பதை மார்க்சும், ஏங்கல்சும் சுட்டிக் காட்டுகின்றனர். இதுபோலவே சிதையும் நிலப்பிரபுத்துவத்திற்கும், வளரும் முதலாளித்துவத்திற்கும் நடந்த போராட்டத்தின் விளைவே பிராட்டஸ்டென்ட் சீர்திருத்தம் தோன்றக் காரணம். அழிக்க முடியாத பிராட்டெஸ்டென்டுகளின் எதிர்ப்புக் கொள்கைகளே வெல்ல முடியாத முதலாளித்துவத்தின் உதயத்திற்கு காரணமானது. (ஏங்கெல்ஸ் – ஃபயர்பாக்)

ஆகவே, மார்க்சுக்கும், மார்க்சிய தத்துவவாதிகளுக்கும், மதம் என்பது சமூக நிலைமைகளினால் ஏற்பட்ட விளைபொருளே; அதில் மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதும், வாழ்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்கிறோம். மதங்களின் வரலாறு என்பது ஒரு விதத்தில் பார்த்தால் மனித பரிணாம வளர்ச்சியின் பிரதிபலிப்பே ஆகும். இவ்வகையில் மதம் என்பது யதார்த்த உலகின் பிரதிபலிப்பு ஆகும். இயற்கையின் வலிமையும், சமூக நிகழ்வுப்போக்குகளுமே வாழ்வின் வழிகாட்டும் விதி.தால் புரிந்துகொள்ள முடியாத நிலைமையில் இயற்கையினைக் கடந்த வேற்று கிரக சக்தி ஒன்றை கற்பித்துக் கொள்வது அவர்களுக்கு அவசியமாகிறது. ஆகவே மதம் என்பது மனித குலத்திற்கு ஆறுதலையும், வாழ்வின் மீதான ஈர்ப்பையும், நிம்மதியையும் தருகிறது. அதேசமயத்தில், ஆதிக்கம் செலுத்தக்கூடிய தத்துவமாக மதம் அமைகின்றபோது, அந்த காலகட்டத்தில் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்துடைய வெளிப்பாடாகிறது.

மார்க்சும், மார்க்சிய தத்துவமும் மாத்திரமே மதங்களின் பிறப்பு, தோற்றம் மற்றும் மனித மனங்களில் அவை செலுத்தும் தாக்கம் இவைகளை அறிவியல் பூர்வமாக புரிந்து கொண்டுள்ளதால், மதங்கள் வகிக்கும் பங்கினை வழிப்படுத்துவதும், தீர்மானிப்பதும், அரசின் சமூக அமைப்புகளே என்று அடித்துச் சொல்கிறார்கள். துல்லியமான இந்தக் காரணத்தினால்தான் மார்க்சிய தத்துவம் மதங்களை குறிப்பிட்டு தாக்குவது கிடையாது. மாறாக, மதங்களின் தோற்றங்களுக்கு காரணமான சமூக நிலைகளையும் மற்றும் மனித குலத்தின் மேல் மதம் தொடர்ந்து வைத்து வருகிற பிடிமானத்திற்கான நிலைகளையுமே தாக்குகிறது. மார்க்சிய தத்துவம் மதங்களை நிலைத்திருக்கச் செய்வதற்காக உதவும் நிலைகளை, அதாவது வர்க்கத்தை ஒடுக்கும் ஒரு கருவியாக மதம் இயங்குவதை முற்றிலுமாக மாற்றிட முயல்கிறது.

மார்க்சிஸ்டுகள் பொருள்முதல்வாதிகள். பொருள்முதல்வாதிகளாக இருப்பதினால், வர்க்கமாக பிரிந்து கிடக்கும் சமூகத்தில் சிக்கலான பாத்திரமேற்று மதம் நடத்தும் விளையாட்டின் முழுமையையும் புரிந்து கொண்டுள்ளனர். மதம் என்பது சமூகத்தின் மேல் கட்டுமானமாக தொடர்கிறது. ஒரு வர்க்கமற்ற சமுதாயத்தை நிறுவினாலும் அதிலும் நீண்ட காலத்திற்கு மதம் தொடர்ந்து இருக்கும். மார்க்சிய தத்துவம் மதத்தை குறியிட்டு தாக்குவதில்லை. ஆனால் மதத்தினை தோற்றுவிக்க காரணமான சமூக நிலைகளை தாக்குவதால், இதன் அடிப்படையிலேயே மார்க்சிய தத்துவத்தின் திசைவழி அமைகிறது.

இதுவே பொருள்முதல்வாதிகளான மார்க்சிஸ்ட்டுகளின் மதத்தைப் பற்றிய புரிதலும் சிந்தனையும் ஆகும். மதத்தில் மனித நேய உள்ளடக்கமும் உள்ளது, அதே நேரத்தில் அது ஒரு வர்க்கத்தின் ஆட்சி அதிகாரத்திற்காக உபயோகப்படுத்தப்படும் கருவியாகவும் உள்ளது என்பதை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மதத்தின் பிடிமானம் தொடர்வதற்காக உள்ள சமூக நிலைகளை மாற்ற ஒரு கம்யூனிஸ்ட் முயற்சிக்க வேண்டுமே அல்லாது மதத்தை குறியிட்டு தாக்கக் கூடாது.

வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டம்

மதத்தை உயர்த்திப்பிடிக்கும் ஏகபோக உரிமையாக்கிக் கொண்ட வகுப்புவாதிகளையும், மத அடிப்படைவாத சக்திகளையும் அம்பலப்படுத்துவதும், மேற்சொன்னவாறு இன்றைக்கு நிலவும் சமூக நிலைகளுக்கு எதிராக நடத்தப்படும் ஒருங்கிணைந்த போராட்டத்தோடு இணைந்த செயல்பாடு ஆகும். இவ்வாறான மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்திட மார்க்சிஸ்டுகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யும் விழைகின்றனர்.

பார்க்கப் போனால், அடிமை இந்தியாவில், ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சி நிலைத்திருப்பதற்கான கருவியாக வகுப்புவாதத்தை உருவாக்கியும், பயன்படுத்தியும், கீழ்த்தரமானதொரு பிரித்தாளும் கொகையைக் கையாண்டார்கள்.

1857 முதல் சுதந்திரப் போரில் இந்துக்களும், முஸ்லீம்களும் இணைந்து வெளிப்படுத்திய உருக்குப்போன்ற ஒற்றுமையை கண்ட ஆங்கிலேயர்கள், அந்த ஒற்றுமையை சிதைத்தழிப்பதற்காக வகுப்புவாத அரசியலை திட்டமிட்டு கையாண்டனர். வாக்காளர்களை இந்து – முஸ்லீம் என்று பிரித்தார்கள். வங்காளத்தை இரண்டாகப் பிரித்தனர். முஸ்லீம் லீக் அமைப்பிற்கு தனித்த ஆதரவு காட்டினார்கள். இவையெல்லாம் காலனி ஆதிக்கத்தை தொடர்வதற்கான நிகழ்ச்சி நிரலாக மேற்கொள்ளப்பட்டன.

சுதந்திரத்திற்கு பிந்தைய ஆண்டுகளில், (கட்டுரையின் முன் பகுதியில் குறிப்பிட்ட)  நெருக்கடி நிலை மக்களிடையே அதிருப்தியை அதிகப்படுத்தியது. ஆளும் வர்க்கங்கள் இந்த அதிருப்தியில் இருந்து தற்காத்துக்கொள்ள, வகுப்புவாத பிரிவினையை பயன்படுத்தினார்கள். நாட்டுப் பிரிவினையைத் தொடர்ந்து, ஆழமாக வேரூன்றி நிலைத்துவிட்ட வகுப்புவாதத்தை ஒழிப்பதற்கு உணர்வுப்பூர்வமான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. குறுகிய அரசியல் நோக்கத்துடன், ஊசலாட்டமும் வகுப்புவாத சக்திகளுடனான சமரசமும் செய்துகொள்ளப்பட்டது.

இன்று இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது, பாசிசத்திற்கான முன் நடவடிக்கை என்று ஒரு புகழ்பெற்ற அறிஞர் கூறினார். இன்று நம் பொதுவாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் அது தென்படத் தொடங்கிவிட்டது. மதத்தின் பெயரால் மக்களை திரட்டும் அருவருக்கத்தக்க முயற்சிகள் தொடர்கின்றன. ஆர்.எஸ்.எஸ் வகைப்பட்ட ‘இந்து ராஷ்ட்டிராவை’ எதிர்க்கும் ஒவ்வொரு நிகழ்வின் மீதும், ஒவ்வொரு குடிமகனின் மீதும் பாசிச வெறுப்பு உமிழப்படுகிறது. நமது ஜனநாயக சமூகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவுகிறது. நம் குடியரசின் அரசமைப்புச் சட்டத்தை இழிவுபடுத்துகிறது. நிர்வாகத்தில் நேர்மையற்ற குறுக்கீடுகளைச் செய்கிறது. தன் விருப்பங்களை அடைவதற்காக சூழ்ச்சிகளைக் கையாள்கிறது. விதிகளை மீறியும், நடைமுறைகளை மீறியும், தரக்குறைவான பேரங்களைப் பேசுகிறது. இதுவரை நிகழ்ந்திராத அளவுக்கு மக்களின் மேல் பொருளாதாரச் சுமைகள் குவிக்கப்படுகின்றன. அனைத்து இடங்களிலும் ஊழல் மலிந்திருக்கிறது – என அனைத்தும் நன்றாக தென்படுகின்றன.

பாஜக ஆட்சியில் இருக்கிற இச்சில வருடங்களில், இந்த அரசின் கொள்கைகள் ஏகாதிபத்தியத்திற்கு துணை போவதாகவும், பிற்போக்கான இந்திய ஏகபோக மூலதனத்தின் நோக்கங்களுக்கு துணை செய்வதாகவும் இருக்கிறது. பார்க்கப் போனால், இந்த வாஜ்பாய் அரசு தான் அமெரிக்க அரசிற்கு, இதுவரை சுதந்திர இந்தியாவில் நடந்திராத அளவிற்கு அணுசரணையாக நடந்து கொள்கிறது. அதனுடைய பொருளாதாரக் கொள்கைகள் ஒருபக்கம் இந்தியாவின் இறையாண்மையை அடகு வைத்து விட்டது. மறுபக்கம் பெருவாரியான மக்களை வறுமை நிலைக்கு தள்ளி விட்டுள்ளது. அமெரிக்கா முன்னெடுக்கும் யுத்த நடவடிக்கைகளுக்கு இந்தியாவை கூட்டாளியாக ஆக்கியிருக்கும் அளவு அயல்நாட்டு கொள்கை வளைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் ஆட்சியில் உள்ள இச்சில வருடங்களில் நமது நாட்டில் உள்ள கல்வி முறை மீது ஒரே கண்ணோட்டத்துடன் தாக்குதல்கள் ஏவப்படுகின்றன. இந்து மத நம்பிக்கை வைத்துள்ள மக்களிடையே நிலவும் பன்முக கலாச்சாரத்தை மாற்றி,  கட்டுண்ட ஒரே இந்து கலாச்சாரமாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ் முயற்சிகளும், வகுப்புவாத பிரிவினை விஷத்தை ஆழமாக பரப்பி, சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக, முக்கியமாக கிறிஸ்துவர், முஸ்லீம்களுக்கு எதிராக, வன்முறையை விதைத்து, நமது பள்ளி மாணவர்களின் பாடத் திட்டத்தை மாற்றுகின்றனர். இவ்வாறு நமது கல்வித் துறையை சீரமைப்பதன் மூலம், வகுப்புவாத, மத வெறுப்பு எண்ணங்களை புகுத்தி அதை வலுவடையச் செய்து, காவிக் கும்பல் தங்களது பாசிச நோக்கத்திற்கான பயணத்தை எளிதாக்கிட நினைக்கின்றனர்.

இதைப்போலவே, இவ்வருடங்களில் இந்திய வரலாற்றை மாற்றியெழுதும் இடைவிடாத முயற்சிகளையும் பார்க்க முடிகிறது. தாங்கள் தான் இந்தியாவின் மறுக்க முடியாத முன்னோர்கள் என்று நிறுவிட, வரலாற்று உண்மைகளையும், ஆதாரங்களையும் திரித்துக் கூறுவது என்பது சங்க பரிவாரத்திற்கு அவசியமாகிறது. அவர்களுடைய, “இந்து ராஷ்ட்டிரா”விற்கு இந்துக்கள், இந்துக்கள் மாத்திரமே உண்மையான முன்னோர்கள் என நிரூபிக்க இந்த வரலாற்று திருத்தல் அவசியமாகிறது. எனவே, இந்துக்கள் வேறெங்கும் இருந்து இங்கு வரவில்லை என்று நிறுவிட வேண்டியுள்ளது. ஏனெனில், அவர்களும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்றாகி விட்டால், பிறகு இந்நாட்டின் மீதான அவர்களது உரிமை கோரல் என்பது, அனைத்து மற்ற மதம் சார்ந்தவர்கள் இந்நாட்டிற்கு வந்து குடியேறிய நிலையோடு ஒப்பிட்டு, வேறுபாடு காட்ட முடியாத கோரிக்கையாகி விடும்.

அன்றைய கோல்வால்கருக்கும், இன்றைய ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இந்து என்றால் ஆரியர்கள் என்றே பொருள். இந்து மதத் தலைவர்கள் ஆர்யவர்த்தா என்றே அழைக்கப்படுகிறார்கள்.

ஒரு பாசிச வெறுப்புடன் தமக்கு எதிராக உள்ள அனைத்து வரலாற்று ஆதாரங்களையும் நிராகரித்து, இந்திய வரலாற்றை மாற்றி எழுதி, இந்தியா தான் ஆரியர்கள் அவதரித்த பூமி என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் உந்துதலில், அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஆரியர்கள் தான் இந்தியாவிலிருந்து உலகைச் சுற்றி வந்தவர்கள் என்று நம்மையே நம்ப வைக்க முயற்சிப்பார்கள். ஆரிய இனம் தான் உயர்ந்தது என்ற கொள்கையோடு ஜெர்மனியில் பாசிச ஆட்சியை நிலை நாட்டிய ஹிட்லர் உண்மையில், இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவரே என்று கூட நம்மை நம்ப வைக்க இந்தக் கூட்டம் முயலும்.

அண்மை வருடங்களில், ஆர்.எஸ்.எஸ். தனது பாசிச குறிக்கோளை முன்னெடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மதவெறியைத் தூண்டி கலவரங்களை ஏற்படுத்துவதே அதன் பிரதான நடவடிக்கையாக உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் நடந்த வகுப்புவாத கலவரங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதி விசாரணைக் கமிஷன்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். தான் முக்கிய குற்றவாளி என தீர்ப்பு வழங்கியிருக்கின்றன. தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு வகுப்புவாத நடவடிக்கைகள் மிக, மிக, முனைப்பாக பெருகியுள்ளது.

குஜராத்தில் அரசே முன்னின்று முஸ்லீம் மதத்தினருக்கு எதிராக நடத்திய வகுப்புவாத படுகொலை என்பது இதுவரை நடந்தவற்றை எல்லாம் விட நடத்தப்பட்ட கீழ்த்தரமான நடவடிக்கையாகும். குஜராத்தில் நடந்துள்ளது ஒரு இன அழிப்பிற்கு ஒப்பாகும். ஆர்.எஸ்.எஸ்.-உம் அதன் பரிவாரங்களும் குற்ற உணர்வோடு வருந்துவதற்கு பதிலாக, சுரணையற்று பச்சைப் படுகொலைகளை மகிழ்வுடன் வரவேற்று இந்துக்கள் புகழ் ஓங்குக என்று பறைசாற்றினர்.

சாதி, மத, மொழி போன்ற அனைத்து வேறுபாடுகளையும் கொண்ட மக்களை ஒற்றுமைப்படுத்தும் இந்திய நாட்டுப்பற்றினை மாற்றியமைத்து, தேசிய வெறியை உண்டாக்கிட ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது.

நமது நாடு ஒற்றுமையும், பண்பும் மிகப் பரந்த பன்முகத் தன்மையும் கொண்ட நாடு. மதத்தில், மொழியில், பாரம்பரியத்தில், பழக்க வழக்கங்களில், பன்முகத் தன்மை கொண்ட இந்த நாட்டை பராமரிக்க வேண்டுமானால், பன்முகத் தன்மையின் இடையிலான ஒற்றுமையை வலுவாக்குவதன் மூலமே முடியும். அதற்குப் பதிலாக ஒற்றைத்தன்மையை  திணிக்க முற்பட்டால், அந்தப் போக்கு நம் நாட்டின் ஒற்றுமையையும், பண்பையும் நொறுக்கி விடும். இதைத்தான் வகுப்புவாத பாசிச சக்திகள் துல்லியமாக நிறைவேற்றிடத் துடிக்கின்றன.

வகுப்புவாத விஷத்தை தூவுவதும், மதத்தின் பேரால் திரட்டுவதும் – எதிர் வரும் நாட்களில் நாட்டை பிளவுபடுத்தி, “உள்நாட்டுப் போர்” மூள்வதற்கான ஆபத்தான அடித்தளத்தை உருவாக்குகின்றன. மேலும் மக்கள் ஜனநாயகத்தை நோக்கி முன்னேறுவதற்கு அடிப்படையாக உள்ள உழைக்கும் பகுதி மக்களின் ஒற்றுமையையும் வகுப்புவாதம் சீர்குலைக்கிறது. எந்த அடிப்படை வர்க்கங்களின் ஒற்றுமையைக் கொண்டு, தற்போதுள்ள ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டுமோ, அந்த அடிப்படை வர்க்கங்களின் ஒற்றுமையை இன்றைக்கு எழுந்துள்ள வகுப்புவாதம் பலவீனப்படுத்தியுள்ளது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. ஆகவே, வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டம் என்பது நமது வர்க்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்திக் கொண்டு அதே நேரத்தில், நமது நாட்டை பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்குமான போராட்டத்தோடு ஒன்றிணைந்ததும் ஆகும்.

இன்றைய இந்தியாவின் சூழலில் உழைக்கும் மக்கள் தங்களது வாழ்க்கை ஆதாரங்களை உயர்த்திக் கொள்ளவும், நேர்மையான சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் பெற்றிடவும் கையிலெடுக்கும் போராட்டங்கள் சிதைக்கப்பட்டு வகுப்புவாத பதட்டங்களுக்கும், சண்டைகளுக்கும் இப்போராட்டங்களை திசை திருப்பி விட்டுள்ளன. இப்போராட்டங்களுக்கு வலிமை ஊட்டி, வகுப்புவாத அச்சுறுத்தலை தோல்வி அடையச் செய்யாவிடில் மக்கள் விடுதலைக்கான முன்னேற்றங்கள் முறியடிக்கப்படும்.

இப்படிப்பட்ட சூழலில் வருத்தத்தை அளிக்கக் கூடிய, கொழுந்துவிட்டு எரியும் வகுப்புவாத விரோதங்களினால், தொடர்ந்து கொண்டிருக்கும் துயரங்கள் பெருகிவிடாமல் இருக்க இவ்விசயத்தில் தீவிரமாகத் தலையிடுவது நமது கடமையாகும். தெளிவான மனசாட்சியுள்ள எவரும் இப்போராட்டத்திலிருந்து விலகி நிற்க முடியாது. பொன்மொழிகள் சொல்வது போல் தீயவர்கள் வெற்றி பெற நல்லவர்கள் மௌனமாக இருப்பது ஒன்றே போதுமானது”.

இந்திய நாட்டை சிறந்த நாடாக மாற்றிட நாம் அதை பாதுகாக்க வேண்டியுள்ளது. 1947இல் அரசியல் சுதந்திரம் அடைந்த பிறகு பெறப்பட்ட சிறிய, சிறிய நன்மைகளைக் கூட அகற்றிட வகுப்புவாத சக்திகள் தாக்குதல்களை தொடுக்கின்றனர். இன்றைக்கு அனைத்து இந்திய தேச பக்தர்களின் கடமை என்பது இதுவரை கிடைத்தவற்றைப் பாதுகாத்து சிறப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதேயாகும்.

மார்க்சிய நோக்கில்இயற்கை அறிவியலும் சமூக அறிவியலும்:ஒரு பொருத்தப்பாடு

ச. லெனின்

இயற்கை மீதான இயற்கையின் ஒரு பகுதியான உயிரினங்களின்  தலையீடு, உயிரினங்கள்  தோன்றிய காலந்தொட்டே உள்ளது. புலிகள் தங்களின் உணவிற்காக மான்களை வேடையாடுகின்றன. பாம்பு தவளையையும் பூனை எலியையும் உண்கின்றன. இதுவே இயற்கையின் விதியாகும். இங்கு விதி என்பது அதனதன் தலைவிதியல்ல. அதுவே உணவுச் சங்கிலியின் விதி (Rule). பலர்  இதை தக்கன பிழைக்கும் (survival of the fittest – தகுதியுடையது பிழைக்கும்) என்ற ஹெர்பெட் ஸ்பென்சரின் வார்த்தைகளோடு  இணைத்துப் பேசுகின்றனர். இதை டார்வினின் தத்துவம் என்றும் வாதிடுகின்றனர். உண்மையில் இதை இயற்கைத் தேர்வு (Natural selection)  என்றே டார்வின் விளக்கினார்.

இயற்கைத் தேர்வு – தக்கன பிழைக்கும்

1859இல் வெளியான டார்வினுடைய சிறந்த படைப்பான ‘உயிரினங்களின் தோற்றம்’ என்கிற  நூலில் டார்வின் ‘இயற்கைத் தேர்வு’ எனும் பதத்தையே பயன்படுத்தியுள்ளார். அதன் எளிமையான மாற்றுப் பதமாகவே ‘தக்கன பிழைக்கும்’ என்கிற பதத்தைத் தனது ‘உயிரியலின் கோட்பாடுகள்’ என்கிற நூலில் (1864இல்) முதன் முதலில்  ஸ்பென்சர் பயன்படுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார். தனது கருத்துருவுக்கு இப்படியான ஒரு வார்த்தை பிரயோகம் இருப்பதையே ஆல்ஃப்பிரெட் ரசூல் என்கிற தனது  நண்பர் ஒருவர் 1866இல் எழுதிய  கடிதத்தின் மூலம்தான் டார்வினே அறிந்துகொள்கிறார்.

எளிமையாக இது இருப்பதால் இவ்வார்த்தை  பிரயோகத்தை  டார்வின் ஏற்றுக்கொண்டதாகவும் பதிவாகியுள்ளது. ஆனபோதும்  fit –  தக்கன என்கிற வார்த்தைக்கு வலிமையான என்கிற பொருளில்  டார்வின் பயன்படுத்தவில்லை. மாறாகச் சூழல் மற்றும் அதன் தேவைக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் ஆற்றலையே தகுதியுடையது என்றார் டார்வின். அதாவது டைனோசர்கள் வலிமையுடையவைதான். ஆனால் அவை இயற்கைத் தேர்வில் மறைந்து போயின. அதேசமயம் சிறிய கரப்பான் பூச்சிக்கள் வெகுகாலமாக உயிர் வாழ்கின்றன. இங்கு தகுதியுடையது கரப்பான் பூச்சிதானே அன்றி டைனோசர்கள் அல்ல.

‘பருவகால மாற்றத்தால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு அடையும் மாற்றத்தை முன்வைத்து இயற்கைத் தேர்வு என்ன வழியில் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இம்மாற்றத்தின்போது அவ்விடத்தில் வாழ்பவை உடனடியாக ஒரு மாற்றத்தைப் பெறுகின்றன. சில உயிரினங்கள் மறைந்தும் போகலாம்’ என்கிறார் டார்வின். டார்வின், ஸ்பென்சர் பயன்படுத்திய ‘தக்கன’ என்ற பதத்தை கையாண்டது வலுசார்ந்த  என்கிற பொருளில் அல்ல. மாறாக அதன் உள்ளடக்கம் சார்ந்தே பயன்படுத்தினார். மாற்றத்திற்கேற்ப அதன் தகவமைவையே அவர் சுட்டினார்.

ஆதிக்கம் நிறைந்த கோட்பாடுகள்

‘தக்கன பிழைக்கும்’ என்கிற பதம்  எப்போது கூடுதலான விவாதப் பொருளானதென்றால், ஆதிக்க சக்திகள் (ஆளும் வர்க்கம்) டார்வினுடைய இயற்கை சார்ந்த கோட்பாடுகளை சமூகத்திற்கான கோட்பாடுகளுடன் பொருத்தினர். ஆனால் டார்வின் உண்மையில் கூறிய ‘இயற்கைத் தேர்வு’ என்பதை விடுத்து ஸ்பென்சரின் தக்கன பிழைக்கும் என்பதாக அதைக் கையாண்டனர். ஆதிக்கம் செலுத்தும் வலிமையானவர்களே தகுதியுடையவர்கள் என்றும், எனவே அது நிலைத்து நிற்கிறது;  அது நிலைத்து நிற்கும் என்றும் வாதிட்டனர். ஆரியமே சிறந்தது; அதுவே உலகை ஆளும் தகுதியுடையது என்று பேசிய நாசிசத்தின் வீழ்ச்சியோடு ஸ்பென்சரின் கோட்பாடுகளை சமூக கோட்பாடுகளாகப் பொருத்தும் ஆதிக்க சக்திகளின் இப்போக்கு ஓரளவிற்கு முடிவுக்கு வந்தது. ஆனால், இன்றும் ஆதிக்க கருத்து நிலையை வலியுறுத்த நினைக்கும் பலரும், தக்கன பிழைக்கும் என்கிற ஸ்பென்சரின் வாதத்தை டார்வினின் வாதமாக முன்வைப்பது வாடிக்கையாகவுள்ளது.

இந்த தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கும் வகையிலும் டார்வின் உண்மையில் சொன்ன அர்த்தத்தில் அதை வெளிப்படுத்தும் நோக்கிலும் தற்போது ‘தக்கன பிழைக்கும்’ என்கிற பதமே உயிரியல் துறையில் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, டார்வின் உண்மையில் பயன்படுத்திய ‘இயற்கைத் தேர்வு’ என்கிற பதமே இப்போது நிலைத்து நிற்கிறது.

இயற்கை அறிவியலும் சமூக அறிவியலும்

இயற்கை விதிகளை சமூக விதிகளோடு தக்கன பிழைக்கும் என்கிற நோக்கோடு பொருத்திப் பார்ப்பதில் ஆளும் வர்க்கம் எவ்வாறு தோல்வியைத் தழுவியது என்று மேலே குறிப்பிட்டிருந்தோம். அதையே உழைக்கும் வர்க்கம் எவ்வாறு இயற்கைத் தேர்வு என்கிற அடிப்படையில் சமூக விதிகளோடு பொருத்தியது?

மார்க்சியம் இயற்கை   அறிவியலும்  சமூக அறிவியலும்  இணைத்தே  அதன் கோட்பாடுகளை நிலை நிறுத்தியது.   எல்.எச்.மார்கன்  எழுதிய ‘பண்டைய சமூகம்’  என்கிற  பண்டைய  சமூக வளர்ச்சியின் போக்குகளையும், டார்வின் எழுதிய மனித பரிணாமத்தின் படிமலர்ச்சி குறித்து பேசும் ‘உயிரினங்களின் தோற்றம்’ என்கிற இயற்கை விஞ்ஞானத்தையும் மார்க்சியம் தனது கண்டுபிடிப்புகளுக்கான ஆதாரமாக்கிக்கொண்டது.

டார்வினின் ‘உயிரினங்களின் தோற்றம்’ என்கிற புத்தகத்தின் முதல் பதிப்பு 1,250 பிரதிகள்தான்  அச்சிடப்பட்டது. அந்த முதல் பிரதியை வாங்கி வாசித்தவர்களில் எங்கெல்சும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.  எல்.எச்.மார்கனின் நூலை அடிப்படையாகக் கொண்டே எங்கெல்ஸ் தனது ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ எனும் படைப்பை உருவாக்கினர். மார்க்ஸ் தனது தலைசிறந்த மூலதனம் நூலின் முதல் தொகுதியை டார்வினுக்கு சமர்ப்பிக்க விரும்பினார்.

மார்க்சியத்தின் பிரிக்கமுடியாத பகுதியாக இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும் விளங்குகின்றன.

இயற்கை பற்றிய பொருள்முதல்வாத பார்வையே இயக்கவியல் பொருள்முதல்வாதமாகும். ஏதோ ஒரு சக்திதான் (கடவுள் எனும் கருத்து) இயற்கையைப் படைத்தது என்பதை சொல்வது கருத்து முதல்வாதமாகும். இயற்கை அண்டத்தில் உள்ள உலகம் என்கிற பொருளில், மனிதன் ஒரு உயிருள்ள பொருள். அவன் தலையிலுள்ள மூளை என்கிற பொருளில் உதித்த ஒன்றே கடவுள் என்ற கருத்து பொருள்முதல்வாதம்.

மனிதன் என்ற உயிரினம் உருவாவதற்கு முன்பே, அவன் மூளை உலகம் குறித்துச் சிந்திக்கத் தொடங்குவதற்கு முன்பே உலகம் இருந்தது. அந்த உலகத்தின் பிரதிபலிப்பே மனித சமூகத்தின் சிந்தனையாகும். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே டார்வினின் கண்டறிதல் அமைந்தது.

இயக்கமும் மாற்றமும்

‘சிந்தனையின்றி பொருள் இருக்க முடியும். ஆனால் பொருளின்றி சிந்தனை ஏதும் இருக்க முடியாது.’ அந்தப் பொருள் இடைவிடாது இயங்கிக்கொண்டுள்ளது. இவ்வியக்கம் பொருளில் இடைவிடாமல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இயக்கம் எப்படிப் பொருளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ, அதேபோல் பொருளில் ஏற்படுகிற மாற்றம் அதன் இயக்கத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

‘ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணமும் அதுவாகவும் அது அல்லாததாகவும் இருக்கிறது… இயக்கம் இல்லாத பொருள் எங்குமே ஒருபோதும் இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. உலகிலுள்ள பொருளின் ஒவ்வொரு தனித்தனி அணுவும் மேற்சொன்ன இயக்க வடிவங்களில் ஏதோவொன்றிலோ அல்லது ஒரே வேளையில் பல வடிவங்களிலோ இருக்கிறது. ஒரு பருப்பொருள் ஓய்வு நிலையில் (Rest)  உள்ளது; சமநிலையில் (Equilibrium) உள்ளது என்பதெல்லாம் ஒப்பீட்டு அளவில்தான். ஏதோவொரு திட்டவட்டமான இயக்க வடிவத்துடன் தொடர்புபடுத்தித்தான் அது ஓய்வு நிலையில் அல்லது சமநிலையில் உள்ளது என்றே கூறமுடியும்.’’ என்கிறார் எங்கெல்ஸ்.

அனைத்து உயிரினங்களும் ஒரு சில தினங்களில் உருவாக்கப்பட்டவையல்ல. கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்ற இடையறாத மாற்றங்களின் வழியே பொருளின் உள்ளியல்பில் ஏற்பட்ட மாற்றங்களாலும் அதன் மீதான புறநிலைகளின் தாக்கத்தின் விளைவாகவுமே உயிரினம் உருவானது. இப்படியான தொடர் நிகழ்வுகளாலும் தொடர் இயக்கத்தாலும் ஏற்பட்ட மாற்றங்களே இன்றைய மனித இனமாகப் பரிணமித்துள்ளது என்று டார்வின் நிறுவினார்.

இயற்கைத் தேர்வின் அடிப்படையில் ‘ஒவ்வொரு உயிரினமும் தனித்தனியாக, அநாதியாகப் படைக்கப்படவில்லை. மாறாக, உயிரினங்கள் அனைத்தும், மற்ற உயிரினங்களின் வழித்தோன்றல்களே என்பது தெரியவரும்’ என்று தனது விரிவான உயிரியல் ஆராய்ச்சியின் மூலம் டார்வின் விளக்கினார். உலகமும் உயிரினங்களும் ஏதோவொரு ஆற்றலால் (கடவுளால்) படைக்கப்பட்டது என்கிற கருத்து முதல்வாதத்திற்கு எதிரான பொருள்முதல்வாத கோட்பாட்டிற்கு டார்வினுடைய கண்டறிதல் வலுசேர்த்தது. ‘இயற்கைத் தேர்வினை, நாள்தோறும் மணிக்கணக்கில் ஆழ்ந்து நோக்கும் செயலாகக் கருதலாம். நம்மால் மிக மெதுவாக நடக்கும் மாற்றங்களைக் காணமுடிவதில்லை’ என்று கூறுகிறார் டார்வின். இதை எங்கெல்ஸ் விவாதித்த ஓய்வு நிலை, சமநிலை (Rest, Equilibrium) என்பதோடு ஒப்புநோக்க வேண்டிய ஒன்றாகும்.

ஆதிக்கத்தின் மொழியல்ல இயற்கைத் தேர்வு

மார்க்சியம் இயற்கை அறிவியலை சமூக அறிவியலோடு இணைத்துப் பொருத்தியது ஆதிக்க சிந்தனையோடு அல்ல. ஆகவேதான் தக்கன பிழைக்கும் என்று அதை முன்வைக்காமல், இயற்கைத் தேர்வு என்கிற வகையிலேயே அதை அணுகியது.

‘இயற்கைத் தேர்வுதான் உயிர்களிடையே நிலவும் மாறுபாடுகளுக்கான மையமான வழிமுறை. ஆனால், அது மட்டுமே வழிமுறையன்று.’ ‘மாறிய நிலைமைகளுக்கு உயிரினங்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளுகிறபோது, அம்மாறுபாடு பத்திரப்படுத்தப்படுகிறது. இயற்கைத் தேர்வு இவ்வாறாக உயிரினங்களின் முன்னேற்றத்திற்குரிய வசதியை உண்டாக்கித் தருகிறது.’ அவ்வாறே சமூகத்திலும் பழைய சமூக அமைப்பு, அடுத்தகட்ட சமூக வளர்ச்சிக்கான கருவைச் சுமந்தே நிற்கும். புதிய சமூக அமைப்பே இயற்கைத் தேர்வாக இருக்குமானாலும், மாற்றத்திற்கு ஏற்றவகையில் அதன் உறுப்பினர்கள் செயலாற்றவேண்டியது அவசியமாகும். இல்லையேல் அதன் வளர்ச்சிப்போக்கில் சிதைவையே சந்திக்க நேரிடும். அது படிப்பினையாக அமையுமேயன்றி, படிக்கட்டாக அமையாது.

எப்படி இயற்கையின் எல்லா நடவடிக்கைகளுக்கும் இயக்கவியல் அடிப்படையாக அமைகிறதோ, அதேபோல் வரலாற்றின் எல்லா நடவடிக்கைகளுக்கும், அந்தந்த காலத்தில் நிலவிய பொருளுற்பத்தி முறையும் அதன் இயக்கப்போக்குமே முதன்மைக் காரணமாகும். இதையே மார்க்சும் எங்கெல்சும்  வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றனர். சோஷலிச சமூகம் அமைவது என்பது சமூகம் வந்தடைய வேண்டிய  இயல்பான படிநிலை (இயற்கைத் தேர்வு) என்று மார்க்சும் எங்கெல்சும் கூறினர். அது வலிந்து திணிக்கப்படுவதல்ல; மாறாக, சமூக வளர்ச்சி விதியின் அடிப்படையில், அது வந்தடையும் இடமே சோஷலிசம் என்று விளக்கினர்.

மனித உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் தாய்ப்பாலைத் தவிர வேறெந்த உணவிலும் இல்லை என்கிறது அறிவியல். ஆனால் அனைத்து ஊட்டச்சத்துக்களும் எங்கள் தயாரிப்பில் நிறைந்துள்ளது என்று நிறுவனங்கள், தங்களின் பொருட்களுக்கான விளம்பரத்தை மேற்கொள்கின்றன. இதில் எது உண்மை என்பதை அனைவரும் அறிவர். சத்துபானங்கள் வலிந்து திணிக்கப்படுபவை. ஆனால், இயல்பாகக் குழந்தைகள் தேடிச்சென்று அருந்துவது தாய்ப்பால்.

மாற்றமெனும் உயிர் விதி

‘இயங்கியல் என்பது இயற்கை, மானுட சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின் இயக்கம், வளர்ச்சி ஆகியன குறித்த பொதுவிதிகளைப் பற்றிய அறிவியலே தவிர வேறொன்றுமல்ல’ என இயற்கை அறிவியலில் ஏற்படும் வளர்ச்சிப்போக்கை சமூகத்தின் வளர்ச்சிப்போக்குடன் இணைத்து முன்வைக்கிறார் எங்கெல்ஸ்.

இயக்கமும் அதன் விளைவான மாற்றமும் தவிர்க்கமுடியாத ஒரு உயிர் விதியாகும். மனித சமூக விதியும் இத்தகையதே. மனித சமூகத்தின் வரலாறும் மாற்றங்களோடே வளர்ந்துவந்துள்ளது. இதையே எல்.எச்.மார்கனின் ‘பண்டைய சமூகம்‘ நூல் விளக்கியது. மார்க்சியத்தின் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்திற்கு இந்நூல் கூடுதல் சான்றாதாரமாக அமைந்தது. எந்தப் பொருளும் எப்படி நிலையானதாக இல்லையோ, அதேபோல் எந்த சமூக அமைப்பும் நிலையானதாக இல்லை. உயிரினங்கள் எவ்வாறு மாற்றங்களுக்கு உட்பட்டு வளர்ந்து, மனிதனின் நிலைக்கு உயர்ந்துள்ளனவோ, அதேபோல் மனித சமூகமும் மாற்றங்களுக்கு உட்பட்டதே. அந்த மாற்றங்களின் வழியே அது ஒரு மேம்பட்ட சமத்துவ சமூகத்தை வந்தடையும் என்கிறது மார்க்சியம்.

ஆளும் வர்க்கமோ, சமூகம் நிலையானது என்றும், எல்லாம் மாயை என்றும் வாதிடுகின்றன. மதம் எனும் வழியில் சிந்திப்பதை நிறுத்தும்போதே தெளிவான மனத்தை கண்டடைவீர்கள் என்றும், அந்த நிலையில்தான் பிரபஞ்சத்தோடு ஒன்றிணைகிறீர்கள் என்கிறது. சிந்திப்பதால்தான் நாம் மனிதன் என்ற நிலையில் இருக்கிறோம். சிந்திப்பதை நிறுத்தினால்தான் பிரபஞ்சத்தோடு ஒன்றிணைகிறீர்கள் என்றால் அது மனிதனின் மரணத்தையே குறிப்பதாகும். ஆளும் வர்க்கம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எதுவும் மாற்றம் இல்லாமல் நிலைத்திருக்கிறது என்ற கருத்தை மக்கள் மத்தியில் விதைக்கிறது. எல்லாம் ஒருவனின் ஆட்டுவித்தலுக்கு இணங்க ஆடுகிறோம் என்கிறது. ஏனெனில் மாற்றம் இவர்களையும் மாற்றி, புதியனவற்றுக்கு பாதை போடும் என்ற அவர்களின் அச்சமே இதற்குக் காரணம். பழையனவற்றின் போதாமைதான், புதிய ஒன்றின் தேவையை உருவாக்குகிறது. போதாமைகளை நிவர்த்திசெய்ய, புதியது பூப்பதை யாரும் தடுத்திட முடியாது. நீங்கள் மலர்களைக் கொய்யலாம் ஆனால், வசந்தங்களைத் தடுக்கமுடியாது என்கிற நெருடாவின் வார்த்தைகளைப் போல், மாற்றங்களுக்கு அணை கட்ட முடியாது.

சடுதி மாற்றம்

இந்த உலகம் மாயை அல்ல; அது உண்மை. அது எப்போதும்  மாறிக்கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த சமூகமும் மாறிக் கொண்டுள்ளது என்றார் மார்க்ஸ்.

இயக்கம் அல்லது மாற்றம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று படிப்படியாக மாறி பொருள் உருமாற்றமடைவது. இரண்டாவது முழுமையாக புதிய ஒன்றாக திடீரென ஒரு மாற்றத்தைப் பெறுவது. தற்போது நாம் வாழும் இந்த சமூக அமைப்பும் நிலையாக இருப்பதுபோல் தோன்றினாலும், அது பல்வேறு மாற்றங்களை தன்னகத்தே நிகழ்த்திக்கொண்டேதான் உள்ளது. உயிர்மலர்ச்சியும் சாதாரணமாக மந்தமாகவும் பரந்த வடிவில் மாற்றங்களுடனும் வளர்ந்துகொண்டுள்ளது. ஒரு வெடிப்புபோல் சமூகப்புரட்சி பாய்ச்சல் வேகத்தில் அடுத்த சமூகநிலைக்கு உந்தித்தள்ளப்பட்டு மாற்றத்தை சந்திக்கிறது. இதை உயிரியலில் சடுதிமாற்றம் (Mutation) என்பர். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியிலும் இப்படியான திடீர் வடிவமாற்றம் காலந்தோறும் நிகழ்ந்துவருகிறது.

சிறிதுசிறிதாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் மாற்றங்கள் அளவு ரீதியான ஒரு மாற்றத்தை உருவாக்கிக்கொண்டேயிருக்கும். இது ஒரு முதன்மைக் கட்டத்தை எட்டும்போது, அது பொருளின் முழு வடிவத்தையுமே மாற்றிவிடுகிறது. இதையே அளவு மாற்றம் குணமாற்றத்தை உருவாக்கும் என்கிறது இயக்கவியல் விதி.

எதிர்மறைகளிடம் நிலவும் ஒற்றுமையும் மோதலுமே, இயக்கம் மற்றும் மாற்றத்திற்கான அடிப்படையாக திகழ்கிறது. ‘உயிர் உலகைச் சார்ந்த ஒவ்வொரு செல்லிலும்கூட இணைப்பு, பிளவு எனும் எதிர்மறை இயக்கங்கள் பரந்த வடிவில் பணியாற்றிக்கொண்டிருக்கும்.’ மனித சமூகத்தில் ஆளும் வர்க்கத்திற்கும் ஆளப்படுகிற வர்க்கத்திற்குமிடையே மோதலும் இருக்கும் இணக்கமும் இருக்கும். தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கம் ஆகியோரிடையே இருக்கும் இணக்கமே உற்பத்தி, முரண்பாடு தொழிலாளர்களின் போராட்டங்களாக வெடிக்கும். முரண்பாடுகள் முற்றும்போது அது சமூகப்புரட்சியாக மலரும். அதுவே முன்பு நாம் விவாதித்த சடுதிமாற்றத்தை நோக்கி இட்டுச்செல்லும்.

‘இந்த மோதல்களில் சிறிது காலம் அமைதி நிலைக்கும். (ஓய்வு நிலை, சம நிலை / Rest, Equilibrium) அப்போது நாம் பொருள் நிலையாக உள்ளதெனப் பிரமிப்போம். ஆனால் ஓய்வு நிலையும் சமநிலையும் தற்காலிகமானவையே…. பிரபஞ்சம் இயக்க மயமானது; மாற்ற மயமானது. சமூகமும் இயக்க மயமானது; மாற்ற மயமானது. மனித சமூகம் நிரந்தரமாக மாறிக்கொண்டே இருக்கும். … சமூகத்தை மாற்ற வேண்டுமென்பது உத்தேசமோ கனவோ அல்ல. அதுவே எதார்த்தம்.’ என்று ஆளும் வர்க்கத்திற்கு நேரெதிரான கருத்தை இயற்கை அறிவியலின் துணைகொண்டு முன்வைக்கிறது மார்க்சியம்.

பின்னோக்கியல்ல, முன்னோக்கியே…

இயற்கையும் சமூகமும் எப்போதும் முன்னோக்கியே பயணிக்கின்றன. இயற்கைத் தேர்வில் அது ‘கெடுதலானவற்றை ஒதுக்கி நல்லவற்றைச் சேர்த்துவைக்கிறது’ என்கிறார் டார்வின். எப்படி இயற்கைத் தேர்வில் பல உயிரினங்கள் அழிந்து மறைகின்றனவோ, அதேபோல் சமூக அமைப்பும் காலத்திற்கேற்ற புதிய அமைப்புமுறையைக் கண்டடைகிறது. சமூகமும் அதன் வளர்ச்சிக்கு கேடானவற்றைத் தூக்கிச் சுமப்பதில்லை. மனித சமூகத்திற்கு கேடானவற்றை இயற்கையின் விதி போலவே, சமூக விதியும் தூக்கியெறிகிறது. அது வலிந்து திணிக்கப்படுவதில்லை. இயல்பாக உருவாகிறது. ஆனால் முரண்பாடுகளின் வெளிப்பாடாக மேல் எழும் புதிய அமைப்பு, பழைய அமைப்புமுறையை வீழ்த்தியே பரிணமிக்கும்.

‘உயிரினங்கள் மறைவதும் இயற்கைத் தேர்வும் நாம் பார்த்தவரை இரண்டும் கைகோர்த்து செல்லுகின்றன. இயற்கைத் தேர்வு உயிருக்கு ஆதாரமான மாற்றங்களைப் பேணும் பணியைச் செய்கிறது. இவ்வாறு இயற்கைத் தேர்வின்வழி உருவான ஒவ்வொரு புதிய உயிர் வடிவமும் போராட்டத்தில் வெற்றிகொள்கின்றன’ என்று டார்வின் குறிப்பிடுகிறார்.

இயற்கைத் தேர்வைப் போலவே பழைய சமூகத்தின் மறைவிலிருந்தே, புதிய சமூக அமைப்பு உதித்தெழுகிறது. ஆளும் வர்க்கத்தினர் முன்வைப்பதுபோல் அவர்கள் ’தகுதியுடையவர்கள்‘ என்று கூறிக் கொள்வதால் நிலைக்கப் போவதில்லை. இயக்கம், மாற்றம் என்கிற சமூக வளர்ச்சியின் விதி, நிலையானவர்கள் என்று தங்களை பிரகடனப்படுத்திக் கொள்பவர்களையும் நிலைகுலையச்செய்யும். சமூகத்தின் தேர்வாக முற்போக்கான ஒரு சமத்துவ சமூகம், உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத்திலிருந்து உதித்தெழும்.

  • உதவிய நூல்கள்
  • 1.   ஜார்ஜ் தாம்சன், மனித சாரம் (தமிழில்- எஸ்.வி.ராஜதுரை), விடியல் பதிப்பகம், கோவை, 2005.
  • 2.   சார்லஸ் டார்வின், உயிரினங்களின் தோற்றம், (தமிழில் சுருக்கம்- ராஜ்கௌதமன்), விடியல் பதிப்பகம், கோவை, 2010.
  • 3.   பிரபாகர் சான்ஸ்கிரி, மனிதக் கதை (தமிழில்- க.மாதவ்), பாரதி புத்தகாலயம், சென்னை, 2008)
  • 4.   ஜார்ஜ் பொலிட்சர், மார்க்சிய மெய்ஞ்ஞானம், (தமிழில்- ஆர்.கே.கண்ணன்), என்.சி.பி.எச் பதிப்பகம், சென்னை, 2004 (மூன்றாம் பதிப்பு).
  • 5.   வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1987.

அறிவுசார் சொத்து, அறிவில் ஏகபோக உரிமை மற்றும் வாடகை பொருளாதாரம் !

பிரபிர் புர்கயஸ்தா

இருபதாம் நூற்றாண்டில், பொது நிதியில் பல்கலைக்கழகங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன. அதே சமயம் தொழில்நுட்ப மேம்பாடு பெரும்பாலும் பெரிய நிறுவனங்களின் ஆராய்ச்சி மேம்பாட்டுக் (R&D) கூடங்களில் நடைபெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டோடு – எடிசன், சீமெண்ட்ஸ், வெஸ்டிங்ஹவுஸ், கிரகம் பெல் போன்ற தனித்த கண்டுபிடிப்பாளர்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த நூற்றாண்டில், பெரும் நிறுவனங்கள் தொழில் உற்பத்தி சார்ந்த ஆய்வகங்களை உருவாக்கின. அங்கே, எதிர்காலத்திற்கான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் விதத்தில் முன்னணி விஞ்ஞானிகளையும்,தொழில்நுட்ப வல்லுனர்களையும் ஒன்றாக திரட்டினர். இந்தக் கட்டத்தில், மூலதனம் இன்னும் உற்பத்தியை விரிவாக்கிக் கொண்டிருந்தது. உற்பத்தி மூலதனத்தின் மீது நிதி மூலதனத்துடைய ஆதிக்கம் ஏற்கனவே தொடங்கி விட்டிருந்த போதிலும், அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் வலுவான உற்பத்தி தளங்கள் அமைந்திருந்தன.

இந்தக் கட்டத்தில், அறிவியல் கண்டுபிடிப்புகள் பொதுச் சரக்காகக் கருதப்பட்டன. பல்கலைக் கழகங்களிலும், பொது நிதியில் இயங்கக்கூடிய  ஆராய்ச்சி நிறுவனங்களிலும் நடைபெற்றன. அதே சமயம் தொழில்நுட்ப மேம்பாடுகள், பெரும்பாலும் பெரு நிறுவனங்களில் நடந்தன. அறிவியல் ஆராய்ச்சியில் புதிய அறிதல் நிகழ்த்தப்பட்டதும், தொழில் நுட்பத்தில் அதனை புகுத்தி புதிய பொறியமைவுகள் உருவாக்கப்பட்டன. கருத்துக்களை பொறியமைவுகளாக மாற்றியமைப்பதுதான் கண்டுபிடிப்புகளின் பாத்திரமாக இருந்தது.

பொறியமைவுகளில் பயன்படுத்தப்படும் பயனுள்ள கருத்துக்களை பாதுகாக்கும் விதமாக அறிவுசார் சொத்துரிமை – காப்புரிமை அமைப்புக்கள் உருவாகின. எனவே, தொடக்கத்தில் காப்புரிமங்களுக்கு ஒரு பொதுவான நோக்கம் இருந்தது – பொதுவில் தரப்பட்டுவிட்ட ஒரு கண்டுபிடிப்பிற்கு, குறிப்பிட்ட காலத்திற்கான ஏக உரிமையை அரசு உறுதி செய்வதுதான் அதன் அடிப்படை.

பல நூற்றாண்டுகளாக இருந்த இந்த அமைப்புமுறையில் மாற்றம் இரண்டு வேறுபட்ட மாற்றங்களை ஒட்டி ஏற்பட்டது. முதலாவது, அறிவு உற்பத்தி மையங்களான பல்கலைக் கழக அமைப்புக்கள், புதிய தாராளவாத ஒழுங்கிற்கு ஏற்ப, வணிக நிறுவனங்களாக செயல்படத் தொடங்கிய மாற்றம். இரண்டாவது அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்கும் இடையிலான வேறுபாடு மங்கலாகிவிட்ட நிலைமை. உதாரணமாக, மரபணுவியலை எடுத்துக்கொண்டால், அந்தத் துறையில் அடையும் எந்தவொரு முன்னேற்றமும் – எவ்வித வேறுபாடும் இன்றி – காப்புரிமத்திற்குரிய, சந்தைப்படுத்தும் வாய்ப்புடைய பொறியமைவுகளின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கின்றன. இதே போன்ற நிலைமைதான் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப துறை கண்டுபிடிப்புகளிலும் நிலவுகிறது. அறிவியலின் பல்வேறு துறைகளும், இதன் விளைவாக, உற்பத்தி முறைக்கு மிக நெருக்கமாக செயல்படும் நிலை உருவானது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், நிதி மூலதனத்திற்கும், உற்பத்தி மூலதனத்திற்கும் இடையில் ஒரு விரிசல் உருவாவதைக் காண முடிந்தது. இன்று, நிதி மூலதனமானது தன்னிச்சையான நிதி மூலதனமாகவேசெயல்படுகிறது. தொழில்நுட்பம் மீதான கட்டுப்பாட்டின் மூலம் ஒரு முனையிலும், சந்தை மீதான கட்டுப்பாட்டின் வழியாக இன்னொரு முனையிலும் அது உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. மூலதனத்தின் இந்தக் கட்டத்தில், ஊகம் மற்றும் வாடகையைச் சார்ந்துதான் அது வாழ்கிறது. உற்பத்தி மூலதனத்தின் ஒரு பகுதியாக பொருள் வடிவிலான மூலதனத்தில் இருந்து, அறிவு மூலதனம் தனித்துத் தெரிகிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொழில்துறை அமைப்பின் ஒரு பகுதியாகவே செயல்பட்ட ஆய்வு மேம்பாட்டுக்கூடங்கள் (R&D) அழிந்துபோனதுடன் இணைந்த நிகழ்வாக, பல்கலைக்கழக அமைப்புக்கள் நேரடியாகவே வணிக தேவைகளுக்காக அறிவை உற்பத்தி செய்யும் இடங்களாக மாற்றமடைந்தன. நிதி மூலதனம் பல்கலைக் கழக அறிவியலை நேரடியாக கட்டுப்படுத்தின. முதலீடுகளின் வழியாக அல்ல. ‘அறிவை’ வாங்குவதன் வழியாக – பல்கலைக் கழகங்களின் ஆய்வுகளுடைய காப்புரிமங்களை வாங்குவதன் மூலமாக ஏகபோக உரிமை செயல்பட்டது. இந்த ஏகபோகத்தின் மூலமாக அது ஆலை மூலதனத்தின் மீதான ஆதிக்கத்தைச் செலுத்திட வாய்ப்பை உருவாக்குகிறது.

மூலதனத்தை இவ்வகையில் அது ‘தூய’ நிதி மூலதனமாகவும், அறிவின் மீதான தனது ஏகபோக உரிமையை பயன்படுத்தி – காப்புரிமம்,பதிப்புரிமை, தொழில் வடிவமைப்புகள் மீதான உரிமை ஆகியவைகளைக் கொண்டு – வாடகை பெற்றுக்கொள்வதும், இன்றைய காலகட்ட மூலதனத்தின் பண்புகள் ஆகும். இத்துடன் இணைந்து முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் மேலும் மேலும்’சேவை’ சார்ந்த பொருளாதாரங்களாக மாற்றமடைந்தன. சாரத்தில், அவர்கள் உலகளாவிய நிதி, உற்பத்திக்கு தேவையான அறிவு, சில்லறை விநியோகம் மற்றும் உலக ‘பிராண்டுகள்’ ஆகியவற்றின் வழியாக தங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்துகின்றனர்.

இந்தக் கட்டமைப்பில்தான் பல்கலைக் கழகங்கள்மூலதனத்தால் கைப்பற்றும் போக்கு அதிகரிக்கிறது – அதனை பல்கலைக் கழக நிறுவனமயமாதல் என்கின்றனர். இப்போதும் கூட புதிய அறிவை உற்பத்தி செய்வதற்கான நிதி, பொது நிதியில் இருந்துதான் வருகிறது. ஆனால், அதன் கண்டுபிடிப்புகள் தனியார்மயமாவது அதிகரித்து வருகிறது. பாய் டோல் சட்டம் மற்றும் அதைப் போன்ற இன்ன பிற சட்டங்கள் உலகின் பல பகுதிகளில் கொண்டு வரப்படுவது இதற்கு உதவுவதற்காகத்தான். பொதுச் சரக்காக உருவாக்கப்பட்ட அறிவை தனியார்மயப்படுத்தும் இயக்கமாக இது நடக்கிறது.

பொது நிதியில் உருவான அறிவியலை தனியார் அறிவியலாக மாற்றியமைப்பது, தனியார் நிதியின் உதவியோடு செய்யப்படுவதில்லை. அறிவியல் நிறுவனங்கள் இப்போதும் பொது நிதியில்தான் இயங்குகின்றன. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும், இந்தியா போன்ற நாடுகளிலும் அதுதான் நிலைமையாக உள்ளது. அதே சமயம் அறிவியல் ஆராய்ச்சியின் ‘சார்பு’ தனியார் மூலதனத்தால் தீர்மானிக்கப்படும் நிலைமை அதிகரித்துள்ளது. அப்படிப்பட்ட அறிவு உற்பத்தி அமைப்பில், அறிவியல் குறித்த ஆழமான ஆய்வுகள் உடனடியாக வணிக அடிப்படையிலான பலன்கள் தராவிட்டால், தொழிற்சாலைகளால் முக்கியமானதாக கருதப்படும் ஆராய்ச்சிகளை விடவும் குறைவான முன்னுரிமையே தரப்படுகின்றன. இவ்வகையில், நீண்ட கால ஆராய்ச்சிகள் மதிப்பிழக்கின்றன. குறுகிய காலத்தில் கிடைக்கும் பலன்களுக்கே முக்கியத்துவம் கிடைக்கிறது – பல்கலைக் கழக ஆராய்ச்சிகளுக்கு காப்புரிமம் பெறுவதனை ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தும் செயலாக பல்கலைக் கழக நிர்வாகங்களும், விஞ்ஞானிகளும் காண்கிறார்கள்.

இந்த நிலைமாற்றத்தின் விளைவுகள் வெளிப்படையாக தெரிகின்றன. இந்தியாவில் உதாரணமாக, 1970- 80களில் விவசாய உற்பத்தி பெருக்கத்திற்கான (பசுமைப் புரட்சிக்கான) உந்துதல் பொது அறிவியல் தளத்தில் இருந்தே வந்தது. இன்று, மரபணுவியல் புரட்சியை சில தனியார் நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. அவை அடுத்த ‘பசுமைப்புரட்சியை’ முன்னெடுக்க வாய்ப்புள்ளவையாகவும் பார்க்கப்படுகின்றன. IARI, ICAR, போன்ற வேளாண் பல்கலைக் கழகங்கள் மான்சாண்டோ போன்ற பெருநிறுவனங்களோடும், அவற்றின் நோக்கங்களோடும் கூடுதாலாக இணைக்கப்படுகின்றன.  இதற்கு நேர்மாறாக, அவற்றின் ஆரம்ப இலக்கு, அறிவியலின் முன்னேற்றங்களை வேளாண் துறையில் பயன்படுத்துவதாகவே இருந்தது.

அமெரிக்காவின் பாய் டோலே சட்டத்தின் மூலம் அறிவியலை தனியார் லாபநோக்கில் பயன்படுத்திக் கொள்ள வழி ஏற்படுத்தப்பட்டது. 1980 ஆம் ஆண்டில்அமலாக்கப்பட்ட அந்த சட்டமானது, அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு என்ற பெயரில், பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகளை தனியார் சொத்தாக மாற்ற முடியாது என்ற பொதுவான புரிதலை தலைகீழாக மாற்றியது. பொது வளங்களை பயன்படுத்தி செய்த ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை பல்கலைக்கழகங்களும், பொது ஆராய்ச்சி நிறுவனங்களும் காப்புரிமம் செய்துகொள்ள இந்த சட்டம் அனுமதித்தது. அமெரிக்காவின் பார்ச்சூன் என்ற இதழ், மருந்துப் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு இந்தச் சட்டம் ஒரு காரணமாக அமைந்திருப்பதை அம்பலப்படுத்தியது. “1980களில் 12 பில்லியன் டாலர்களாக  இருந்த அமெரிக்கர்களின் மருத்துவ செலவு 2003இல் 179 பில்லியன் டாலர்களாக பலமடங்கு அதிகரித்தது”. மேலும் அந்தக் கட்டுரையில் பாய் டொலே சட்டம் அறிவியலில் மேம்பாட்டுக்கு உதவுவதற்கு பதிலாக, பின்னடைவை ஏற்படுத்தியது என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.மருந்து உற்பத்தித் துறையில் கண்டுபிடிப்பிற்கு நிகராக கருதப்பட்ட, புதிய மூலக்கூறுகளை கண்டறிவது குறைந்தது. மிகச் சில நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும், விஞ்ஞானிகளும் பல மடங்கு பணக்காரர்களாக ஆயினர்.  அறிவியல் முன்னேற்றத்திற்கான செலவுகள் மக்கள் தலையில் சுமத்தப்பட்டன.

போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானியான சால்க் ஒருமுறை அந்த மருந்தின் காப்புரிமம் யாரிடம் உள்ளது என்ற கேள்வியை எதிர்கொண்டார். அப்போது அவர், ‘மக்கள்’ என பதில் சொன்னார். இந்த பதிலைத்தான் சில விஞ்ஞானிகளிடம் நாம் இப்போது எதிர்பார்க்கிறோம். கடந்த இருபது ஆண்டுகளில் அறிவுசார் சொத்துரிமை என்ற பெயரில் ஒரு புதிய வகைப்பட்ட‘தனியார் சொத்துரிமை’ உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய காலத்தில் தனித்தனியாக இருந்த பல்வேறு உரிமைகள் இப்போது ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்படுகின்றன. பதிப்புரிமை, காப்புரிமம் உள்ளிட்ட அறிவுசார் சொத்து உரிமைகள், விற்பனை இலச்சினை, வணிக ரகசியங்கள் மற்றும் தொழிற்சாலை வடிவமைப்புகள் என பலவகைகளில் அந்த தனியார் சொத்துடைமைகள் ஒரே பெயரில் ‘அறிவுசார் சொத்துடைமை’ ஆகியுள்ளன. இந்த நடைமுறைக்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன.  ஒன்று, தனி நபர்களுடைய படைப்பாற்றலை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பெருநிறுவனங்களுடைய உரிமைக்கு வழி ஏற்படுத்தப்படுகிறது. இந்த உரிமைகளை பயன்படுத்தும் வழிமுறைகளும் தொடர்ந்து விரிவாகின்றன.

புதிய ‘அறிவுசார் சொத்து உரிமை’ விதிகளுடைய தாக்கம், உலக வர்த்தக நிறுவனத்தின் விதிமுறைகளோடு இணைந்து முன்னெடுக்கப்படுகின்றன. சமூகத்தால் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வந்த அறிவுச் சொத்துக்கள் தனியாரால் கையகப்படுத்தப்பட இது வாய்ப்பை உருவாக்கியது. இந்த காப்புரிம சட்டகம், வாழ்க்கை முறைகள், மரபணு ஆதாரங்கள், மரபணு விபரங்கள் என வாழ்க்கை அறிவியளின் பல பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வழிமுறைகளை காப்புரிமம் செய்தல், கணிணி அறிவியலின் செயல்முறைகளை காப்புரிமம் செய்தல், தொழில் முன்னெடுக்கும் வழிமுறைகளும் கூட காப்புரிமத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல், மென்பொருட்கள், மின்னியல் முறைகளில் சேமிக்கப்பட்ட செய்திகளுக்கும் காப்புரிமம் விரிவாக்கப் பட்டுள்ளது. பாரம்பரியஅறிவும், உயிரி ஆதாரங்களும் பல்வேறு மக்கள் குழுக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவற்றை உலக பெருநிறுவனங்கள் கடத்துவதும் நடக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு நிறுவனங்கள் பங்களிப்பது என்ற நடைமுறை மாற்றப்பட்டு, அறிவுத்துறையில் ஏகபோகம் செலுத்திடவும் அதன் மூலமாக சந்தையில் இருந்து அதீத லாபத்தைக் குவிப்பதற்கும் திசை திருப்பப்பட்டுவிட்டது.

இந்த முறையின் விளைவுகள் மிக வெளிப்படையாக தெரிகின்றன.காப்புரிமை இருப்பதால் எச்ஐவி தொற்றுநோய்க்கான உயிர்காக்கும் மருந்துகளை பெரும்பான்மையான மக்களால் இன்று பணம் கொடுத்து வாங்க முடியாத நிலை உள்ளது. அறிவுசார் சொத்துரிமையின் அதிகாரம் காரணமாக, உயிர் ஆபத்து மிகுந்த நோய்க்கு ஆளானவர்கள் சாகிறார்கள். வேளாண் துறையில் நடப்பது இன்னும் மோசமான ஒன்றாகும். உயிரி அறிவியல், உயிரி தகவல் துறை, விதை உற்பத்தி பெருநிறுவனங்கள், பெருநிறுவன தாவர உற்பத்தி ஆகியவைதான் உலக வேளாண்துறையையும் அதன் வழியாக உணவு உற்பத்தியையும் கட்டுப்படுத்துகின்றன. உணவுப் பொருட்களின் விலை ஏற்கனவே விண்ணை முட்டுகிற சூழலில், மேற்சொன்ன ஆதிக்கம் பரவலாகுமென்றால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்ய முடிகிறது.

இருபதாம் நூற்றாண்டின் சிறப்பான கண்டுபிடிப்பு மென்பொருட்கள் ஆகும், அவை 18 வது நூற்றாண்டின் சட்ட வழிமுறையை பயன்படுத்தி – பதிப்புரிமத்தின் மூலம் – அதில் ஏகபோகம் உருவாக்கப்பட்டது. மென்பொருட்களை எல்லோரும் அணுக முடியாமல் செய்வதானது, அதனுடைய குறுகிய ஆயுட்காலம் மற்றும் அதன் செயல்பாட்டு இயல்பிற்கு ஒத்துவரவில்லை. எனவே காப்புரிம விதிகளை சற்று மாற்றியமைத்து பயன்படுத்துகிறார்கள். இப்போது பல நாடுகளில் மென்பொருட்கள் காப்புரிமம் பெற்று செயல்படுகின்றன. மனித நடவடிக்கையின் அனைத்து துறையிலுமே தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. எனவே அனைத்து துறையிலும் பதிப்புரிமைகளும், காப்புரிமங்களும் நுழைந்துவிட்டன. அறிவுப் பொருளாதாரம் என்பது வாடகைப் பொருளாதாரமே ஆகும். அறிவுத்துறை கண்டுபிடிப்புகளில் ஏகபோக உரிமையின் மூலம் வாடகை குவிக்கப்படுகிறது.

அறிவுத்துறையை மூடி வைப்பதன் மூலம் மக்களை அதிலிருந்து விலக்கி வைப்பதற்கான வெளிப்படையான முயற்சிதான் அறிவுசார் சொத்துரிமைஅமைப்பினுடையவிளைவு ஆகும். கடந்த 500 ஆண்டுகளாக பொதுவெளி எப்படி வெகுமக்கள்பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டதோ, அதே வகையில்தான் இதுவும் நடந்தது. அறிவுசார் சொத்துரிமை என்ற சட்ட ஆயுதத்தை பயன்படுத்தி, பொதுவில் பெறப்பட்டஅறிவினை தனியார் சொத்தாக மாற்றுகின்றனர். இதுபோன்ற கட்டுப்பாடு நிச்சயம் இரண்டு வகைகளில் தீங்கானது. மற்றவர்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவது மட்டுமல்ல; எல்லையற்ற முறை பயன்படுத்தப்படும் ஒன்றிற்கு அதற்கான விலையையும் நிர்ணயிக்கிறது. முந்தைய காலங்களில் நடைபெற்ற தனி உரிமை நடவடிக்கைகளை விடவும்அறிவுசார் சொத்துரிமை அமைப்பு அதிக அநீதியானதாகும். அறிவுசார் சொத்து உரிமையின் பல்வேறு வடிவங்களுக்கு எதிரான போராட்டம், உலக பொது வெளி மற்றும் சிறப்பு அறிவின் பல்வேறு வடிவங்களை பாதுகாக்கும் நோக்கத்தில் நடக்கிறது.

அறிவையும், அறிவியலையும் தனியார்மயப் படுத்துவதன் விளைவாக அறிவியலே மாறுதலுக்கு உள்ளாகிறது. முன்பு போல அறிவியல், இயற்கையை அறிந்துகொள்ளும் ஒரு கூட்டுச் செயல்பாடாக, திறந்த நடவடிக்கையாக இல்லை. ஒரு ஆய்வு அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன் அதற்கு காப்புரிமம்பெற்றுவிடும் அவசியத்தை கொண்ட,  ரகசியம் காக்க வேண்டிய ஒரு நடவடிக்கையாக மாறிவிட்டது. கருத்துக்களுக்கு‘வணிக’ மதிப்பு இருக்கிற காரணத்தால் அவை பகிரப்படுவதும் இல்லை. கூட்டாக செயல்படுவதற்கான சூழல்நிலைகள் பிரகாசமாக இருக்கும் காலத்தில் இவ்வாறாக நடந்துகொண்டிருப்பதுதான் நகைமுரண்.

அறிவியல் ஒரு திறந்த நடவடிக்கையாக, கூட்டான செயல்பாடாக மீண்டும் மாற்றப்படுவது அவசியம் என்கிற புரிதலில்தான் ‘பொதுவெளி இயக்கம்’ உருவானது. சூழலை தனியார்மயப் படுத்துவதற்கு எதிராக சூழலியல் மற்றும் உயிர்ச் சூழல் காப்பு இயக்கங்கள் எழுந்தபோது அவர்கள் பொது நிலங்களை காக்க குரல் கொடுத்தனர். புல் வெளிகள், வனங்கள், மீன் வள ஆதாரங்கள், கடல் மற்றும் வாழும் சூழலை தனியார் கையகப்படுத்துவதை அவர்கள் எதிர்த்தனர். அந்தப் பொது வெளிகள் இப்போதும் இயற்கை வளங்களே; அவை எல்லையில்லாதவை என்பதாக கடந்த நூற்றாண்டுகளில் கருதப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அவற்றிற்கு ஒரு எல்லை உண்டு என்பதும், சுரண்டலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதும் புரிந்துகொள்ளப் பட்டுள்ளது. இயற்கையின் விதிகளும், மரபணு குறித்த அறிவும் எவ்வகையிலும் அதற்கு குறைந்தவை அல்ல. அவற்றை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.

பொது வெளியை, எல்லையற்றதாக கருதும் முதலாளித்துவம் தனது குப்பைகளை அந்த பொது வெளியில் கொட்டுவதற்கு உரிமை கோருகிறது. அதே சமயம், குறிப்பிட்ட அளவே உள்ள பொது வெளியின் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்தி, ஏகபோகஉரிமையையும் கேட்கிறது.

பல்வேறு வளஆதாரங்களையும், சமூகங்களையும்ஒருங்கிணைத்து கொண்டுவரும் சாத்தியம் இப்போது போல வேறெப்போதும் ஏற்பட்டதில்லை. புதிய அறிவை உருவாக்க இவையெல்லாம் வழிவகுக்கின்றன. உழைப்பு மேலும் மேலும் சமூக மயமாகியுள்ளது, அனைத்து உழைப்பாக மாறியுள்ளது. அதனை பயன்படுத்தி மக்களின் பொது நன்மைக்கான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சிக்கு இடையூறாக அறிவுசார் சொத்துடைமையின் தனியார் கையகப்படுத்துதல் நோக்கம் செயல்படுகிறது.

சமூக கட்டமைப்பு வாதமும், தொழில்நுட்ப நிர்ணயவாதமும்

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சமூக ஆய்வுகள் என எவற்றை அழைக்கிறோம்? அல்லது அறிவியல் குறித்தும், அறிவியல் கொள்கை குறித்துமான சமூக ஆய்வுகள் எப்படி இருக்க வேண்டும்? என்ற வாதம்  தற்போது  பல்வேறு களங்களில் நடைபெற்று வருகின்றது. இந்த வாதங்கள், சமூக அமைப்பில் தொழில்நுட்பங்கள் செலுத்தும் தாக்கம் குறித்தும், சமூக அமைப்பு தொழில்நுட்பங்கள் மீது செலுத்தும் தாக்கம் குறித்ததும் ஆனவை. அதிலிருந்து எழும் முக்கியமான கருத்து சமூக கட்டமைப்பு வாதம்.

சமூக கட்டமைப்பு வாதத்தினை முன்வைக்கும்அறிஞர்களில் ஒரு பகுதியினர், தொழில்நுட்பம் என்பது தனித்துவமான பாணியில், உள் ஒழுங்கில் இருந்து வெளிப்படக்கூடியதல்ல என்கின்றனர். சமூகத் தேர்வுகள் பலவற்றிற்கு இடையிலான தொடர்புகளில் இருந்தே தொழில்நுட்பங்கள் வெளிப்படுகின்றன என்பது அவர்களின் வாதம். இதை மட்டும்தான் அவர்கள் குறிப்பிட்டார்கள் என்றால் நாம் அவர்களோடு எதிர்வாதம் செய்வதற்கு பெரிதாக ஏதும் இருக்காது. அவர்கள் முன்வைக்கும் கருத்தில் மிக முக்கிய பிரச்சனை என்னவென்றால், சமூகத்தில் வர்க்கமோ, சமூக உற்பத்தியோ இருப்பதாக அவர்கள் பார்க்கவில்லை. இதைத் தவிர்த்த வெறும் சமூகப் பார்வையை மட்டும் முன்வைக்கிறார்கள். சமூக காரணிகள் பலவற்றில் உற்பத்தி முறையும், அதில் ஏற்படும் வெற்றிகரமான மாற்றங்களும் ஒரு சிறு பகுதி என அவர்கள் பார்க்கிறார்கள். உதாரணமாக, இளைஞர்கள் வேகமாகச் செல்லும் மிதிவண்டியை விரும்புவார்கள் என்பதை எடுத்துக் கொள்ளலாம்.தொழில்நுட்ப திறன் மூலமாக அந்த விருப்பத்தை நிறைவு செய்யலாம் என்பது ஒரு வாய்ப்பு மட்டுமே. இன்ன பிற வழிமுறைகளும் உள்ளன என்பதுதான் சமூக கட்டமைப்பு வாத அறிஞர்களின் கருத்து. அவர்களிடம் காணப்படும் இன்னொரு பிரச்சனை தொழில்நுட்பம்  முடிவில்லாத ஒன்று; நெகிழ்வுத்தன்மை கொண்டது. ஒரே பிரச்சனைக்கு அதனால் பல விதமான தீர்வுகளைத் தர முடியும் என அது நம்புகிறது. அந்த தீர்வுகளில் இருந்து நாம் இறுதியாக தேர்வு செய்வது, சமூகத்தில் அதிகம் பேரால், குழுக்களால், முன்னணியினரால் விரும்பப்படுகிற ஒன்றாக இருக்கும் என்கிறார்கள்.

சமூக கட்டமைப்பு வாதிகள் சமூகத்தின் தேர்வுகளுக்கிடையே நடுநிலை வகிக்கும் கொள்கையைப் பின்பற்றுகின்றனர். உதாரணமாக, கலாச்சார முன்னுரிமைக்கும், பொருளாதார தேவைக்கும் இடையே நடுநிலைமையை கடைப்பிடிக்கிறார்கள். வர்க்கமும், வர்க்க நலன்களும் அந்த விளக்கத்திற்குள் காணாமல் போய் விடுகிறது. சமூக கட்டமைப்புவாதிகள் மீதான தனது விமர்சனத்தில் ரஸ்ஸல் இந்த விசயத்தைக் குறிப்பிடுகிறார். “ தொழில்நுட்ப தேர்வுகள் சமூக கட்டமைப்பிற்கு உட்பட்டவை என்ற அவர்களுடைய வாதத்தை நாம் ஏற்போமென்றால், அதன் தொடர்ச்சியாக சார்பு வாதம் வருகிறது. சமூகத்தின் விருப்பங்களுக்கு எது தேவையோ அதனை சார்ந்து தொழில்நுட்ப தேர்வு ஏற்படுவதாக – வேறு வார்த்தையில் சொன்னால், அரசியல் நடுநிலை ஆகிறது”. தொழில்நுட்ப சுதந்திரத்திற்கும், அடக்குமுறைக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் அது காண்பதில்லை. எனவே, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் இது செலுத்தும் தாக்கத்தையும் அது பேசுவதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியை தீர்மானிக்கும் சமூக தேர்வுகள் எப்படி சுதந்திர மனநிலையில் இருந்து உருவாக வேண்டும் என்பதை அது சொல்வதில்லை. எனவே அறிவுத்தளத்தில் போராடுவதற்கான எந்த உதவியையும் அந்த வாதம் முன்வைப்பதில்லை.

சமூக கட்டமைப்புவாதிகளிடம் காணப்படும் இன்னொரு பிரச்சனை, தொழில்நுட்பம் எல்லையற்றது, நெகிழ்வுத்தன்மை கொண்டது என்ற பார்வையாகும். அதாவது, வடிவமைப்பும், அதற்கான இடமும் எல்லையற்றது என அவர்கள் நம்புகின்றனர். சமூக கட்டமைப்புவாதம் எல்லையற்ற விருப்பத்தேர்வுகள் சாத்தியம் என நம்புகிறது. மேலும், சமூக காரணிகளுக்கு ஏற்ப ஒருவர் தனது இறுதி விருப்பத் தேர்வை முடிவு செய்கிறார் என்றும் அது பார்க்கிறது. மேலும், அவர்கள் தொழில்நுட்பத்தைக் குறித்து விளக்கும்போது, வெகு சில சாத்தியங்களே இருக்கின்றன என்றும் சொல்கின்றனர். நம்மிடம் உள்ள வெகு சில சாத்தியங்களில் இருந்து பலனுள்ள ஒன்றை தேர்வு செய்வது, அதே சமூக கட்டமைப்புவாதம் முன்வைக்கும் தொழில்நுட்ப ‘கட்டமைப்பு பணி’ என்ற கருத்தோடு முரண்படுகிறது.

மேற்சொன்ன சமூக கட்டமைப்புவாதத்தின் இன்னொரு பிரதிபலிப்புதான் தொழில்நுட்ப நிர்ணயவாதம். அவர்களுடைய கருத்தின்படி மார்க்ஸ், எங்கெல்ஸ் தொடங்கி, பெர்னல் போன்ற மற்ற பல மார்க்சியவாதிகள்அனைவருமேஅறிவியலுக்கு வெளியில் இருந்து அறிவியலை பார்க்கிறார்கள் என அது குற்றம் சாட்டுகிறது. பெர்னல் எழுதிய வரலாற்றில் அறிவியல் என்ற புத்தகத்தை வெளியில் இருந்து எழுதப்பட்ட சிந்தனையின் அதீத வெளிப்பாடாக காணும் அதே சமயத்தில் அவர் எழுதிய அறிவியலின் சமூக இயங்குமுறை என்ற புத்தகம் தொழில்நுட்பநிர்ணயவாதம் அல்லது அறிவியல்வாதபடைப்பாக பார்க்கிறார்கள். தொழில்நுட்ப நிர்ணயவாதம் என்றால் என்ன? தொழில்நுட்பங்கள் மட்டுமே சமூகத்தை உருவாக்குகின்றன என்பதுதான் அந்த வாதத்தின் பொருள். சமூகத்தில் இருந்து ஒப்பீட்டளவில் தொழில்நுட்பங்கள் தனித்து இயங்குகின்றன, தொழில்நுட்பம் வளர்வதற்கு தக்க சமூகத்தை அது படைக்கிறது என்பதும் அவர்களின் வாதம் ஆகும்.

தொழில்நுட்ப நிர்ணயவாதத்தின் முதல் பகுதியை எடுத்து பகுத்துப் பார்ப்போம். தொழில்நுட்பம்தான் சமூக மாற்றத்தை உருவாக்குகிறதா? மார்க்சிய நோக்கில் பார்த்தால், உற்பத்தி சக்திகளில்ஏற்படுகிற மாற்றம் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலில் அடைகிற முன்னேற்றத்தால் ஏற்படுகிறது. உற்பத்தி சக்திகள் முன்னேற்றமடையும்போது அவை சமூகத்தில் நிலவும் உற்பத்தி உறவுகளுக்கிடையே மோதலை அதிகப்படுத்துகிறது. இருப்பினும், மார்க்சியவாதிகள் அனைவருமே உற்பத்தி அமைப்பில் அறிவியலும், தொழில்நுட்பமும் எப்படி விளைபொருளாகவும் இருக்கின்றன என்பதையும் இணைத்தே காண்கிறார்கள். ஒன்றுக்கொன்று தொடர்புடைய இணைந்த செயல்பாடாக அது இருக்கிறது எனினும் மாற்றமின்றித் தொடர்வதில்லை. சில வர்க்கங்களின் சமூக ஆதிக்கம் காரணமாக தொழில்நுட்பத்தை நிலை மாறாமல் தொடர வைக்க முயற்சி நடந்தாலும் கூட மெல்ல மெல்ல அது மாற்றத்திற்கு உட்பட்டு இறுதியில் சமூகத்தை மாற்றியமைக்கும். ஆனால் தொழில்நுட்பத்தை நிர்ணயிக்கிற சக்தியாக சமூகமும், சமூகத்தை நிர்ணயிக்கிற சக்தியாக தொழில்நுட்பமும் இருக்கிறது. தொழில்நுட்பத்திற்கும், சமூகத்திற்கும் இடையிலான இயக்கவியல் உறவினை பிறகு பார்ப்போம்.

சமூகத்தில் நிலவும் வர்க்க உறவுகளில் இருந்துதான் தொழில்நுட்பத்தின் வகைப்பாடு எழுகிறது என்ற வாதம் ஒரே விவாதத்தின் இன்னொரு பகுதியாகும். அறிவியலும் அவ்வாறே. தொழில்நுட்ப கருவிகளுக்கு சமூக பாத்திரம் உண்டு. எனவே அவை சமூக உறவுகளோடு இணைந்திருக்கின்றன. “நூற்பாலை காலத்தில் நிலவுடைமைஆதிக்க சமூகம் நிலவுகிறது. நீராவி ஆலையின் காலத்தில் ஆலை முதலாளியைக் கொண்ட சமூகம் பிறக்கிறது’ என்கிறார் மார்க்ஸ். (தத்துவத்தின் வறுமை, 2வது அத்தியாயம்)

ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். தொழிலாளர் பற்றாக்குறை கொண்ட பொருளாதாரத்தில் தொழிலாளர்களின் உழைப்பிற்கு அதிக செலவு ஆகலாம். எனவே தானியங்கி தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் தரத்தை மேம்படுத்தி, உழைப்பிற்கான செலவினத்தையும் குறைக்க வேண்டி வரும். உழைப்பாளர்கள் உபரியாக உள்ள சமுதாயத்தில், உழைப்பிற்கான செலவு குறைவாக இருக்கக் கூடும். அங்கே தானியங்கி தொழில்நுட்பம் லாபகரமானதாக இருக்காது.  எனவே, சில குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டும் தானியங்கி முறை பயன்படுத்தப்படுகிறது, பகுதியளவு தானியங்கித்தன்மைதான் விருப்பமான உற்பத்தி வடிவமாக இருக்கக் கூடும். எனவே தொழில்நுட்பங்கள் சமூக நிலைமைகளிலேயே கூடுதலாக நிலைபெற்றிருக்கின்றன.

இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். பசுமைப் புரட்சியின்போது கலப்பின விதைகளுக்கு ஆதரவான வாதம் எழுந்தது. விதை தயாரிப்பு நிறுவனங்களின் ஏகபோகத்திற்கான வாய்ப்பை அது உருவாக்கியது. எனவே கலப்பின விதை உருவாக்கம் என்பது விதைகளின் விருப்பம் அல்ல. அது வர்க்கங்களின் தேர்வு. இதே காரணத்திற்காகத்தான் இந்தியாவில் பி ட்டி பருத்தி வகைகள் ஊக்குவிக்கப்பட்டன. இதனை பயன்படுத்தி மான்சாண்டோ நிறுவனம் விதைச்சந்தையில் தன் பிடியை தக்க வைத்துக் கொண்டது.

இந்த புரிதலில் பார்க்கும்போது தொழில்நுட்பம் சமூக உறவுகளை பிரதிபலிக்கிறது. சமூக உறவுகளும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நிலையை பிரதிபலிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தைப் பொறுத்து, அதனால் தாக்கம் பெற்ற சமுதாயத்தை நாம் பார்க்க முடியும். தொழில்நுட்ப நிர்ணயவாதம் இதனை ஒருவழிப் பாதையாகக் காண்கிறது. மார்க்சியம் இந்த நிகழ்முறையை இருவழிப்பாதையாகப் பார்க்கிறது. தொழில்நுட்பம் சமூக அமைப்பினை உருவாக்குகிறது, இயக்கவியல் நிகழ்முறையில், தொழில்நுட்பமானது சமூக அமைப்பினால் தாக்கத்திற்கு உள்ளாகிறது.

தொகுத்துச் சொன்னால்…

அறிவியலால் என்ன செய்ய முடியும் என்பதற்கும், அறிவியல் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பற்கும் இடையிலான வேறுபாடுதான் போராட்டம் நடக்கிற தளம். இது அறிவியலிற்கு உள்ளேயும் நடக்கிறது. விரிந்த சமூகப் பரப்பிலும் நடந்து கொண்டிருக்கிறது. இது மனித சமுதாய மேம்பாட்டிற்காக வளங்களை திருப்பிவிடும் பெரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். எனவே இந்தப் போராட்டம், சமுதாயத்திலும்,அறிவியலிலும் நிலவக்கூடிய பகுத்தறிவற்ற நிலைமைக்கு எதிரான ஒன்றாகும். சமூக அக்கறையுடைய அறிவியல் அறிஞர்களும், அறிவியல் உணர்வுடைய முற்போக்கு பிரிவு மக்களும் இந்த போராட்டத்தை இணைந்து முன்னெடுக்க வேண்டும். அறிவியல் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்வதை மேலும் ஜனநாயகப் படுத்துவதும் இதில் உள்ளடங்கியுள்ளது; மிக சில அறிவியல் அறிஞர்கள் மட்டும் கூடி சமுதாயத்திற்கு என்ன தேவை என்பதை முடிவு செய்துவிட முடியாது. பெர்னலும் சமூக பொறுப்புனர்வு கொண்ட அறிவியலாளர்களை உருவாக்க போராடிய பிற அறிஞர்களும் இந்தப் புரிதலில் இருந்துதான் போராடினார்கள். உலக சமாதானத்திற்கான, அணு ஆயுதங்களுக்கு எதிரான அறிவியல் அறிஞர்கள் இந்த புரிதலோடுதான் செயல்பட்டார்கள்.  முற்போக்கு இயக்கங்கள், அறிவியலை பரவலாக்கிடும் நோக்கத்துடன் தொடர்ந்து இயங்குவதற்கான காரணம் இதுதான்.

இன்றைக்கு, அறிவியலிலும் (தொழில்நுட்பத்திலும்) மாற்றுப்பார்வைகள்  உருவாகியுள்ளன. அவற்றை எதிர்த்தும் போராட வேண்டிய நிலைமை இருக்கிறது. அறிவியலும்,தொழில்நுட்பமும் இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக அவர்களின் தத்துவப்பார்வை உள்ளது. (பெரும்பாலும் இவர்கள் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் ஒன்றாகவே பார்க்கின்றனர்). இந்தப் பார்வையின் அடிப்படையில் இயற்கையை புரிந்துகொள்வதும், அதன் மீது ஆதிக்கம் செலுத்துவதும் ஒன்றே. அதைத்தான் அறிவியலின் தத்துவமாக கொள்கின்றனர். எனவே, இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தும் தத்துவமானது நமது புவிக்குஆபத்தும் ஆகும். நாம் இந்தக்கருத்தின் அடிப்படையில் பார்த்தோம் என்றால் அறிவியலை பின்னுக்குத் தள்ளினால்தான் உலகத்தை காத்திட முடியும் என்றாகிறது. அறிவியல் எதிர்ப்பு, தொழில்நுட்ப எதிர்ப்பு கருத்துக்கள் இந்த அடிப்படையில் இருந்துதான் எழுகின்றன. அவர்களுக்கு அறிவியலும், தொழில்நுட்பமும், வளர்ச்சியும்தான் ‘எதிரிகள்’; மூலதனம் அல்ல. வர்க்கப் பிரச்சனைகளில் இருந்து அவர்கள் துண்டித்துக்கொள்கின்றனர். யார் எதனை உடைமையாகக் கொண்டுள்ளனர் என்பதையோ, பயனாளர்கள் யார் என்பதையோ அவர்கள் பார்ப்பதில்லை.

உலகம் ஒரே நிலையில் இருக்காது என்பதுதான், அறிவியலில் இருந்து பின் வாங்குவது மற்றும் மறைமுகமாக முன்னேற்றத்தில் இருந்து பின்வாங்குவதன் பிரச்சனை ஆகும். எந்த ஒரு காலகட்டத்திலும், சமூகம் இயற்கையுடன் ஒரு சமநிலையை பராமரித்துக் கொண்டே உள்ளது. இந்த சமநிலையில் இருந்து வெளியேறுவது சாத்தியமே இல்லை. முன்னேறிச் செல்லவேண்டும்; அல்லது பின்னோக்கி இழுக்கப்படுவதை தவிர்க்க முடியாது. இப்போதைய முதலாளித்துவ சமூக அமைப்பினை அப்படியே தக்கவைப்பதற்கும், உலகின் மொத்த மக்கள் தொகையையும் உயிரோடு வைத்திருப்பதற்கும் அப்பாற்பட்டது. அறிவியலை புறந்தள்ள வேண்டும் என்ற வாதமானது, இப்போதுள்ளதை விடவும் சிறந்த சமுதாயத்தைக் கட்டமைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்து பின்வாங்குவதே ஆகும். அறிவினை வளர்த்தெடுக்காமல் நம்முடைய உற்பத்திக் கருவிகளை வளர்ப்பதும் சாத்தியமில்லை. நாம் இப்போது அடைந்திருக்கும் முன்னேற்றங்களை தக்கவைத்துக் கொள்வதும் கூட சாத்தியமில்லை.

இரண்டு உதாரணங்களை எடுத்துக் கொள்வோம். முதலாவது, மருந்துத் துறை. குறிப்பிட்ட ஆண்டி பாயாட்டிக் மருந்துகளை பயன்படுத்தும்போது, பாக்டீரியா கிருமிகள் அதற்கு தக்க தன்னை தகவமைத்துக் கொள்ளும் என்பது எளிய பரிணாம உண்மை ஆகும். புதிய மருந்துகளை உருவாக்குவதை நிறுத்திவிட்டோம் என்றால் அதனால் என்ன விளையும்? இதுவரை நாம் பயன்படுத்திவரும்ஆயுதங்களான மருந்துகள் காலப்போக்கில் பயனற்றதாகி விடும். அப்போதும் கூட நாம் வேறுபட்ட ஆண்டி பயாட்டிக் மருந்துகளை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம் என்றாலும், நமக்கு தேவையான பலனை அது கொடுக்காது. இதுமட்டும் அல்லாமல், புதிய நோய்களும்எழக்கூடும் என்பதை இத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.  எச்.ஐ.வி / எய்ட்ஸ் ஒரு எடுத்துக்காட்டு. உலகப் பெரும் நிறுவனங்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் அறிவியலாளர்களுடைய பகட்டான கண்டுபிடிப்பாக மட்டும் புதிய மருந்துகளை பார்க்க முடியாது. அவை அத்தியாவசிய தேவைகளும் ஆகும்.

நம்முடைய எதிர்ப்பு சக்தியும் பரிணாமம் அடைந்து, நோய்களுக்கு உடலே எதிர்ப்புத்தன்மை பெற்றிட  முடியும் என்பதும் சாத்தியம்தான். அப்படித்தான் மனித குலம் தன் தொடக்க காலத்தில் பிழைத்துவந்தது. அதில் பிரச்சனை என்னவென்றால், மனித சமூகமே தன்னை தகவமைப்பதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதற்குள் சமூகத்தில் ஒரு பேரழிவும் நிகழ்ந்துவிடக் கூடும். இதனை நாம் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஏனென்றால் பிளேக், கறுப்பு நோய் போன்ற தொற்றுநோய்களால் ஏற்பட்ட பேரழிவுகள் முடிந்து நீண்ட காலம் ஒன்றும் ஆகவில்லை.

இன்னொரு உதாரணம், உணவு உற்பத்தி. 2000 ஆண்டுகளுக்கு முன் மனித குலத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 30 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக 1600 ஆண்டுகள் எடுத்தது. 250 ஆண்டுகளில் இந்த மக்கள்தொகை அடுத்த இரட்டிப்பு மடங்கை எட்டியது (1850 – 120 கோடி) அடுத்து வந்த 50 ஆண்டுகளில் அது 600 கோடியை எட்டியது.

மால்தூஸ் என்ற அறிஞர், மனித குலத்தின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும்போது, உணவு உற்பத்தி நேர்கோட்டில்தான் உயரும் எனில், உலகம் உணவுப் பற்றாக்குறைக்கு ஆளாகும் என கணித்தார். அறிவியலும் தொழில்நுட்பமும் முன்னேறிய காரணத்தால், உணவு உற்பத்தியும் தேவைக்கு ஏற்ப உயர்ந்தது. மால்தூஸ் முன்வைத்த கருத்து பொய்த்துப் போனது. ஒருவேளை அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ச்சி காணாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?. உணவு உற்பத்தி தேவையான அளவிற்கு நடந்திருக்காது. மக்கள் குறைவான வளர்ச்சியை எதிர்கொண்டால் கூட, இன்னொரு 50 ஆண்டுகள் மட்டுமே தாக்குப் பிடித்திருக்க முடியும்.

சில குறிப்பிட்ட துறைகளில் அறிவின் எல்லைகளுக்கு வரம்பிடுவது சாத்தியமும் இல்லை. செயற்கையாக நாம் சில ஒழுங்குகளை உருவாக்கி வரம்புகளைஅமைக்கலாம் – அறிவியலில் எல்லா அறிவியலும்இயக்கவியலாக ஒன்றோடு ஒன்றி இணைந்தவையே ஆகும். நாம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இயற்கையை புரிந்துகொள்ளத் தொடங்கினால் அது மற்றொரு எல்லையின் புதிரையும் விடுவிக்கும்.

அறிவியலை சரியாகவோ/தவறாகவோ பயன்படுத்துவதற்காக இந்த வாதத்தை நாம் முன்வைக்கவில்லை. அறிவியலை பயன்படுத்தும் சமூகக் குழுக்கள், வர்க்கங்கள்,  நாடுகள் அவற்றை சரியாகவோ, தவறாகவோ பயன்படுத்தலாம். ஆனால் அது அறிவியலின் சார்பு நிலை அல்ல. ஒரு அறிவியலாளரோ, அறிவியல் பணியாளரோ எந்தச் சார்பும் இல்லாமல், அறிவை மட்டும் படைப்பதில்லை. அவர்கள் மனிதர்களையும், சூழலையும் அழித்து மிகச் சிலருக்கு மட்டும் பலன் கொடுக்கக் கூடிய ஒரு அறிவைக் கூடக் கண்டுபிடிக்கலாம். எனவே, சமூகத்தில் நடக்கும் போராட்டத்தை அறிவியலிடம் இருந்து பிரித்துப் பார்ப்பதும் சாத்தியமில்லை. இரண்டும் இணைந்துதான் முன்னேற முடியும். பெரும் எண்ணிக்கையிலான மனிதத் திரளின் தேவைகளுக்கு அறிவியல் பயன்பட வேண்டும். பிரச்சனைகளை தேர்வு செய்வதும், அதற்காக தரப்படும் தீர்வுகளும், அறிவியல் அதில் பயணிக்கும் திசைவழியும், நாம் நடத்தும் பெரும் போராட்டத்தின் ஒரு பகுதியே ஆகும்.

இந்தக் கட்டுரையை, நான் ஹெலினா ஷீஹானின் மேற்கோளுடன் முடிக்கிறேன். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சமூகம் பற்றிய எனது நிலைப்பாட்டை அவர் இந்த பத்திகளில் அடக்கி விட்டார்.

“பெர்னலின் பாரம்பரியத்தைப் பின்பற்றிய இடதுசாரிகள் அறிவியலோடு இணைந்து பயணித்தனர். அறிவியலுடைய அறிவாற்றல் திறமையையோ அல்லது சமூக சாத்தியங்களையோ அதில் இருந்து நீக்கிவிட்டுப் பார்ப்பது ஒரு இடதுசாரிக்கு உகந்த செயல் அல்ல என்றே நான் கருதுகிறேன். இடதுசாரிகள்அறிவியலோடு இணைந்து நிற்க வேண்டும்; விமர்சனப் பூர்வமான மறுகட்டமைக்க வேண்டும். சமூகப் பொறுப்புள்ள அறிவியலை முன்னெடுக்க வேண்டும், ஆனால் அதே சமயம் அறிவியலின் உயர்ந்த சாத்தியக்கூறுகளுடன் உடன் நிற்க வேண்டும். உலக மூலதனத்தின் ஒரு பகுதியாக அறிவியலை மாற்றியமைக்கும் முயற்சிக்கு எதிராக தீவிரமான விமர்சனத்தை முன்னெடுக்க வேண்டும். அறிவியலின் முற்போக்கான சாத்தியங்களுக்கு பாதை அமைப்பது இடதுசாரிகளாக இருக்க வேண்டும்.”

இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் சவால் இதுதான்.

(இந்தக் கட்டுரை கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன் எழுதப்பட்டது)

தமிழில்: மோசஸ் பிரபு

ஜே.டி. பெர்னலின் வரலாற்றில் அறிவியல் ஒரு பின்னணி

அ. பாக்கியம்

பிரிட்டிஷ் அறிவியல் அறிஞர் ஜே. டி. பெர்னால் அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் பிரபலமானது வரலாற்றில் அறிவியல் என்ற புத்தகம். நான்கு பாகங்களை கொண்ட மிகப் பெரிய நூலான இந்தப் புத்தகத்தின் முதல்பாகம் மட்டும் 1400 பக்கங்களைக் கொண்டது.  இந்த ஆங்கிலப் புத்தகம்  இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. இந்தப் புத்தகம் அறிவுலகில் மட்டுமல்ல; சமுதாயம் முழுமைக்கும் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்திய புத்தகம். பெர்னால் புத்தகத்தின் முக்கியத்துவம் கருதி தென்சென்னை சோழிங்கநல்லூர் அறிவியல் இயக்கம் ஏற்பாடுசெய்த கூட்டத்தில் குவாண்டம் இயங்கியல் பேராசிரியர். வி. முருகன் அவர்கள் தொடர் சொற்பொழிவாற்றினார். அந்தச் சொற்பொழிவுகளை பாரதி புத்தகாலயம் புத்தகமாக கொண்டு வந்துள்ளது.

ஆங்கிலப் புத்தகத்தைப் படிப்பதற்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு பேராசிரியர் முருகன் அவர்களின் இந்தப் புத்தகம் அரிய வாய்ப்பாகும். புத்தகத்தின் முக்கிய அம்சங்களை எளியமுறையில், புரிந்துகொள்ளக்கூடிய வகையில், உள்ளூர் உதாரணங்களோடு விளக்கி இருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பாகும். ஒரு நாடகத்தின் கட்டியங்காரனாக மட்டுமல்ல; புத்தகத்தின் தாக்கங்களையும் முருகன் அவர்கள் மிகச்சிறப்பான முறையில், வாசிப்பதற்கு எவ்வித தடையுமின்றி கொடுத்திருப்பது மேலும் சிறப்பாகும்.

நாம் அறிவியலின் வரலாற்றைப் படித்திருப்போம். ஆனால் வரலாற்றில் அறிவியலின் பங்குபற்றி அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துவதுதான் இந்தப் புத்தகத்தின் அடிப்படை. சமுதாய மாற்றத்தில் அறிவியலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதேபோல் அறிவியல் வளர்ச்சியில் சமுதாயத்திற்கும் முக்கிய பங்கு உள்ளது. நமது சிந்தனைகளை சமூக கட்டமைப்புதான் தீர்மானிக்கிறது என்பதை பல்வேறு உதாரணங்களோடு நிரூபிக்கப்பட்டுள்ளது. வரலாற்றியலின் வளர்ச்சிவிதிகளை அறிவியல்ரீதியில் அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் வளமிக்க துணையாகும்.

அறிவியல் என்றால் என்ன?

அறிவியல் என்பதற்கான பொருளை நான்கு வரிகளுக்கான விளக்கமாக அளிப்பதை ஜே.டி. பெர்னால் ஏற்றுக் கொள்ளவில்லை. அறிவியல் என்பதற்கு பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அந்த விளக்கங்களையும் கடந்து அறிவியலின் வரையறை இருக்கிறது என்பதை அடுக்கடுக்கான விவாதங்களை முன்வைத்துள்ளார். இறுதியாக, அறிவியல் பற்றி அவர் முடிக்கிறபொழுது ஐந்து அம்சங்களை குறிப்பிட்டுவிட்டு கீழ்க்கண்ட பகுதியோடு முடிக்கிறார்.

“அறிவியல் என்பது பழங்காலத்திலிருந்தே உள்ளது. அது மாறிக்கொண்டே இருக்கிறது. அறிவியலை சமூகத்திலிருந்து தனியாகப் பிரித்துப்பார்க்க முடியாது. இதுபோன்ற காரணங்களால் அறிவியலை இன்னதென்று துல்லியமாகவும் சுருக்கமாகவும் வரையறுக்க முடியாது. அறிவியலுக்கு இரண்டு முகங்கள் உண்டு. அவை உள்கட்டமைப்பு, வெளியில்உள்ள சமூகத்தின் தாக்கம். இந்த இரண்டு விஷயங்களையும் சேர்த்துப் பார்த்தால்தான் அறிவியலை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இந்த நிலை நமக்கு உணர்த்தும் செய்தி∶ சமுதாயம் மாறிக்கொண்டே இருப்பதால் அறிவியல் என்றால் என்ன என்ற புரிதலும் மாறிக்கொண்டே இருக்கிறது” என்று விடை பகர்கிறார்.

உலகையே அழிக்க வல்லது என்று தெரிந்தும் அணுகுண்டுகளை தயாரித்துக்கொண்டு இருக்கிறோம்? புவி வெப்பமயம் பூமிக்கு ஆபத்து என்று தெரிந்தும் நாம் ஏன் அதை அனுமதித்துக் கொண்டிருக்கிறோம்?

மேற்கண்ட அம்சங்களை புரிந்துகொள்வதற்கு இன்றிருக்கும் அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்புகளை புரிந்துகொண்டால் மட்டும் போதாது. வரலாற்று ரீதியிலான உறவுகளை புரிந்துகொண்டால் மட்டும்தான் மேற்கண்ட கேள்விகளுக்கு விடைகாண முடியும் என்பதை விளக்குகிறார். அப்படி ஏற்படும் புரிதலின் அடிப்படையில்தான் அறிவியலை மக்களுக்காக பயன்படுத்த தேவையான சூழ்நிலைகள் எவை? அவற்றை உருவாக்குவது எப்படி? என்று சிந்திக்க முடியும்.

வரலாற்றில் அறிவியலின் பங்கை ஆய்வுசெய்து அறிவியலின் சார்புநிலைகளையும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற அல்லது தேக்கத்திற்கு ஏற்ற வகையில் அறிவியல் வளர்ச்சியில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அவர்கள் விளக்கியுள்ளார்கள். அறிவியல் வளர்ச்சியும் மக்களுக்கு எதிராக ஆளும் வர்க்கத்திற்கு பயன்பட்டது என்பதை அறிவியல் பூர்வமான வார்த்தைகளில் விளக்கியுள்ளார்கள்.

புதிய கண்டுபிடிப்புகள் பயன்பாட்டிற்கு வந்தவுடன் முதலில் அதை ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாகத்தான் லாபம் ஈட்டும் நோக்கத்தோடுதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மின்சார பல்பை கண்டுபிடித்த உடன் அது பொதுமக்களுடைய வாழ்விடங்களுக்கு செல்வதைவிட இருட்டியபிறகும் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்குதான் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா தடுப்புஊசி கண்டுபிடிக்கப்பட்டது. அதை இலவசமாக பொதுமக்கள் அனைவருக்கும் கொண்டுசெல்ல வேண்டும். மாறாக, புதிய கண்டுபிடிப்புகள் சந்தையில் அதிக விலைக்கு விற்பனைசெய்து சுரண்டப்படுகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக செத்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

ஆனால், முதலாளித்துவம் எப்பொழுதுமே நடுநிலை என்ற பதாகையின் பின்னால்  ஒளிந்துகொண்டுதான் செயல்படும். மார்க்சிய சித்தாந்தம் வளர்ந்து வரக்கூடிய காலகட்டத்தில் கார்ல் மார்க்ஸ் சித்தாந்தம் வர்க்கச் சார்புடையது என்று ஆதாரங்களை முன்வைத்தார். முதலாளித்துவ அறிஞர்கள் சித்தாந்தத்தின் சார்புநிலை ஆபத்தானது. அது அறிவியலை பாதிக்கும் என்று மார்க்சியத்தை தாக்கிக் கொண்டிருந்தனர். தோழர் லெனின் இதற்கான பதிலை ஆணித்தரமாக எடுத்து கீழ்கண்டவாறு முன்வைத்து

முதலாளித்துவ  வர்க்கம் சார்புநிலையற்றது; எந்த வர்க்கத்தையும் சாராதது என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. சிந்தாந்த சார்புநிலை கோட்பாடு விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று முதலாளித்துவவாதிகள் முன்வைக்கிறார்கள். இது மக்களை ஏமாற்றவும் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் வலுப்படுத்துவதற்கும் செய்யக்கூடியதாகும். சார்புநிலையை மறைத்து, அதற்கான உண்மையை மறைத்து, விஞ்ஞான நேர்மையற்ற முறையில், அறிவியல் ஆராய்ச்சிகளை தன்னுடைய சுரண்டலுக்கு ஏற்றவகையில் முதலாளித்துவ வர்க்கம் மாற்றி அமைத்துக்கொள்கிறது என்று கடுமையாக சாடுகிறார்.

பொருளாதாரப்போக்குதான் அறிவியல் வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தையும் தேக்கத்தையும் தீர்மானிக்கும் மிகமுக்கியமான காரணம் என ஒரு பொதுவான கருத்தை ஜே.டி. பெர்னால் முன்வைக்கிறார். இதற்கான ஆதாரங்களை கிரீஸ், எகிப்து, மெசபடோமியா, ரோம, இந்தியா, சீனா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வரலாற்றுரீதியான வளர்ச்சிப்போக்குகளையும் அதில் ஏற்பட்ட மாற்றங்களையும் தெளிவாக முன்வைக்கிறார். பொருளாதார நெருக்கடிகள் அறிவியல் வளர்ச்சிப்போக்கில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது என்று இந்தப் புத்தகத்தின் வாயிலாக நாம் புரிந்துகொண்டால் தற்போது நமது நாட்டில் நடந்துகொண்டிருக்கக்கூடிய போக்குகளை இணைத்து தெரிந்துகொள்ள முடியும்.

அன்று இருந்த ரோமானிய பொருளாதாரத்தில் செல்வம் ஒரு சிலரிடம்

குவிந்து இருந்தது. அடிமைகளும் மக்களும் ஏழ்மையில் இருந்தனர். சமூகத்தில் ஒரு நெருக்கடி உருவாகியது. அங்கு நிலவிய ஏழ்மையானது சந்தைப்பொருள்களுக்கான தேவையை குறைக்கிறது. வியாபாரிகள் நிலையும் கைவினைஞர்கள் நிலையும் மோசமானது. எனவே அறிவியல் செய்வதற்கான ஊக்கம் இல்லை. ஏற்கனவே செய்துவைத்த அறிவியலின் வளர்ச்சியும் அதன் துடிப்பை இழந்துவிட்டது. இறுதியாக அலெக்சாண்டிரியா நூலகம் எரிந்ததுபோல் அல்லது குளிப்பதற்கு தண்ணீரை சுடவைப்பதற்கு எரிபொருளாக புத்தகங்களை உபயோகிப்பது போன்ற பல வழிகளில் அழிந்து விடும்.

இந்தியாவைப்பற்றி ஜே.டி. பெர்னால் குறிப்பிடும்பொழுது “ஜாதிய கட்டமைப்புகள் நன்றாக வேரூன்றியதால், இந்து மதம் உறைந்து போனது. அது மிகவும் ஸ்திரமான சமுதாயம். ஆனால் வளர்ச்சிக்குரிய வாய்ப்புகளை விலையாக கொடுத்துவிட்டு நன்கு ஸ்திரமாக செயல்பட்ட சமுதாயம். வளர்ச்சி இல்லாவிட்டாலும் பரவாயில்லை; சாதிய கட்டமைப்பு மாறாமல் தொடரவேண்டும் என்ற கண்ணோட்டம்தான் இருந்தது.”

இன்றைய இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்

தவிக்கிறது.மோடி ஆட்சியில் கார்ப்பொரேட்களிடம் செல்வக் குவிப்பும், மறுபக்கம் வறுமை தாண்டவமாடுகிறது.  வகுப்புவாதிகள் அறிவியல் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்துகின்றனர். ஆய்வுகளைத் தடுக்கின்றனர். மூடப் பழக்கவழக்கங்களை வளர்ப்பது வரலாற்றை திருத்துவது, விஞ்ஞானிகளை, படுகொலை செய்வது, வேதத்தில் அனைத்தும் இருக்கிறது என்று இதர புத்தகங்களை அழிப்பது நமது நாட்டில் அன்றாட காட்சிகளாக மாறிவிட்டன. இந்திய பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடையது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

ரோமானிய, கிரேக்க நாகரீகத்திற்கும், அதற்குப் பின்வந்த நாகரிகங்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது. அது கிறிஸ்தவ மதமும் இஸ்லாமிய மதமும் ஆகும். கடவுள், நம்பிக்கை, மதங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவை எல்லா காலங்களிலும் இருந்தன. ஆனால் கிறிஸ்துவ மதமும் இஸ்லாமிய மதமும் அவற்றுக்கு முன்பிருந்த மதங்களில் இருந்து மாறுபட்டவை. அவை நிர்வாக அமைப்பில் செயல்பட்டவை. இந்த மதங்களின் நிர்வாக அமைப்புகள் ஒரு அரசியல் நிர்வாக அமைப்பிற்கு இணையானவை. அரசுகளைவிட நிலைத்ததன்மை உள்ளவை. மக்களின் சிந்தனைகளில் மிகப்பெரிய அளவிற்கு ஆட்சிபுரிந்தது. அரசியல்தளத்திலும் மிகுந்த சக்திவாய்ந்தவை. இஸ்லாமிய மதமும் கிறிஸ்துவ மதமும் அறிவியல் வளர்ச்சியை தடுத்தன என்று பெர்னால் சுட்டிக்காட்டுகிறார். இந்த மதங்களை பெர்னால் கடுமையாக சாடவில்லை. மாறாக, இந்த மதங்கள் தோன்றியதற்கான பொருளாதார சூழ்நிலைகளை சுட்டிக் காண்பிக்கிறார்.

இந்தப் புத்தகத்தை வாசிப்பதன் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிப்போக்குகளை தெரிந்துகொள்ள முடியும். கி.பி.1400 ஆண்டுகளுக்கு முன்பு, சீனா, கிரீஸ், இந்தியாவிலும் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால் இங்கெல்லாம் ஏன் தொழில்புரட்சி ஏற்படவில்லை? ஏன் நவீன அறிவியல் வளர்ச்சி ஏற்படவில்லை? ஐரோப்பாவில் மட்டும் ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை பல புதிய பரிணாமங்களுடன் அவர் விளக்கியுள்ளார்.

குறிப்பாக, கிரீஸ் நாகரீகத்தில் எந்திரஇயலில் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தது. அவர்கள் அடைந்திருந்த அந்த வளர்ச்சியை தொழில்புரட்சியில் பெரும்பங்காற்றிய நீராவி என்ஜின் மற்றும் துணிநெய்வது ஆகிய தொழிலில் ஏற்பட்ட நுணுக்கங்களை அடைவதற்குப் போதுமானது. ஆனாலும் ஏன் அங்கு தொழில்புரட்சி நடைபெறவில்லை? என்பதற்கான பொருளாதார ரீதியிலான விளக்கங்களை அவர் முன்வைத்துள்ளதையும் நாம் அறிந்துகொள்ள  முடியும்.

“தொழில்புரட்சியை நோக்கி போவதற்கான பொருளாதாரத்தேவை அன்று இல்லை. அதனால் தொழில்புரட்சியை நோக்கிப் போவதற்கான ஊக்கமும் ஆர்வமும் அன்று எழவில்லை. பெருமளவில் பொருட்களை உருவாக்கத் தேவையான சந்தை அப்போது  இல்லை. செல்வந்தர்களுக்கு கையால் உருவாக்கப்பட்ட பொருட்கள் போதுமான அளவில் கிடைத்தன. ஏழைகளுக்கு பொருட்களை வாங்கும் சக்தி இல்லை. அவை இல்லாமலேயே ஏழைகள் வாழ்ந்தார்கள். பொருளாதார சூழ்நிலையின் காரணமாகத்தான் தொழில்புரட்சியை நோக்கி  அவர்கள் செல்லவில்லை.

கி.பி. 1000 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் தொழில்நுட்பங்கள் முக்கிய பங்காற்றின. குறிப்பாக, சீனா கண்டுபிடித்திருந்த குதிரையின் கழுத்துப்பட்டை,  கம்பாஸ் (கப்பல் செல்லும் திசையை சுட்டிக் காட்டும் கருவி) வெடிமருந்து, காகிதம், அச்சுஇயந்திரம் ஆகியவை ஐரோப்பாவின் நிலப்பிரபுத்துவம் கண்டுபிடிக்கவில்லை. அவை கிழக்கு நாடுகளிலிருந்தும், சைனாவிலிருந்தும் கிடைத்தவை. இந்தத் தொழில்நுட்பங்களும் அவற்றால் ஏற்பட்ட வியாபாரத்தின் வளர்ச்சியாலும் ஐரோப்பாவின் நிலப்பிரபுத்துவம் உடைந்தது. 

இதேபோன்று, கிரேக்க, ரோமானிய நாகரீகம் அழிந்தாலும் அவர்களுடைய அறிவியலையும், தொழில்நுட்பங்களையும் தொடர்ந்து எடுத்துச்சென்று செழுமைப்படுத்தியது இஸ்லாமிய நாகரீகத்தின் முக்கிய பங்காகும். ஐரோப்பாவினர்தான், அரபுநாடுகளில் வளர்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் முழுப்பயன்களை அடைந்தவர்கள் என்று பெர்னால் கூறுகிறார்.

தத்துவார்த்த வளர்ச்சியில் கிரேக்க நாட்டில் அயோனி பள்ளியின் வளர்ச்சியை, அதன் சிறப்புகளை, குறிப்பிட்டு விவரிக்கிறார். அதேநேரத்தில், சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்கள் இயற்கை தத்துவம், அறிவியல் வளர்வதற்கு எவ்வாறு தடையாக இருந்தார்கள்? முற்போக்கான தத்துவத்தை மடைமாற்றியதில் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் பங்கு பிற்போக்குத்தனமாக இருந்தது என்பதை வலுவான முறையில் எடுத்துரைக்கிறார். சாக்ரடீஸ் இயற்கைஆய்வுகளை மடைமாற்றி வாழ்க்கைக்கான ஆய்வாகக் கொண்டு சென்றார். இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று போதித்தார். பிளாட்டோ ஜனநாயக அமைப்பை வெறுத்ததுடன் அடிமைமுறையை ஆதரிக்கவும் செய்தார்.

அரிஸ்டாட்டிலின் இயற்பியல் அடுத்த 1800 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்தது. அனைத்தும் தவறானவை. அரிஸ்டாட்டில் இயற்பியலை தூக்கி எறிந்ததே கலிலியோ செய்த மாபெரும் சாதனை என்று பெர்னால் கூறுகிறார்.

நகரங்களில் இருந்துதான் நாகரீகங்கள் வந்தன என்ற கருத்தை மறுத்து நாகரீகங்களின் வளர்ச்சிப்போக்கில் நகரங்கள் உருவாகின என்ற கருத்தை முன்வைக்கிறார். நகரங்களும் அரசு அமைப்பும் தோன்றியதை அளவு மாற்றத்தில் இருந்து உருவான பண்பு மாற்றமாக பெர்னால் குறிப்பிடுகிறார்.

இந்தப் புத்தகத்தில் வரலாற்றில் அறிவியலின் பங்கு அதன் நாகரீக காலங்களை தனித்தனியாகப் பிரித்து அதனுடைய வேறுபாடுகளையும் தொடர்புகளையும் ஆய்வு செய்கிறார். வரலாற்றில் அறிவியல் என்ற இந்தப் புத்தகம் வாசகர்களுக்குப் புதிய வெளிச்சத்தைக் கொடுக்கும். முடநம்பிக்கையை மட்டுமல்ல; அறிவியல் தொடர்பான மூடநம்பிக்கைகளையும் அகற்றும்.

கருந்துளை; அறிதல், அறிவியல், இயக்கவியல் பொருள் முதல்வாதம்!

இரா.சிந்தன்

மனிதகுலம், தனது முதல் கருந்துளை படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது. அறிவி யல் ஆராய்ச்சியில் இது ஒரு புதிய உயரம். கருந் துளை என்றால், அண்டத்தில் காணப்படுவதி லேயே புரிந்துகொள்ள சிக்கலான பொருளாகும். ஏற்கனவே நாம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற் கொண்டிருக்கிறோம், இப்போது நாம் அதனைப் படம்பிடிக்கும்முயற்சியில் முன்னேறியுள்ளோம். அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் அனுமானித்த ஒன்றை, கண்ணுற்றுக் காண்பது மிக முக்கியமானது.  இப்போது  நமக்கு கிடைத்திருப்பது, எம் 87 என அழைக்கப்படுகின்ற கேலக்சி எனப்படும் ஒரு அண்டத்தின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கருந்துளையின் படமா கும். பூமியில் இருந்து  5,349 கோடி  ஒளியாண் டுகள் தொலைவில் அது அமைந்திருக்கிறது. அதாவது அங்கிருந்து ஒளி  நம்மை வந்து அடைய சுமார் 5,349 கோடி ஆண்டுகள் ஆகும். நம் சூரியனுடைய நிறையை விட 65 லட்சம்  மடங்கு பெரியதாக அந்தக் கருந்துளை உள்ளது.

கருந்துளையை படம்பிடித்தல் எப்படி சாத்தியமானது என்பது குறித்து ஏராளமான கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன. இந்த முயற்சி, இனி வரும் நாட்களில் பூமியை விட பெரிய தொலைநோக்கியை ஏற்படுத்துவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு நடந்தால் கருந்துளை பற்றிய வேறு பல சந்தேகங் களுக்கும் விடை கிடைக்கும். ஐன்ஸ்டீனின் தத்து வம் எவ்வளவு தூரம் சரி; குவண்டாம் தத்துவத் துடன் ஐன்ஸ்டீன் தத்துவத்தை இணைத்து புதிய இயற்பியல் தத்துவத்தை ஏற்படுத்துவது போன்ற, மேலும், வானில் அறிய முடியாத பல உண்மை களை கூர்நோக்கி ஆராய முடியும். 

கருந்துளை என்பது என்ன?

சூரியன் போன்ற விண்மீன்களை எடுத்துக் கொண்டால் அவற்றுள் எப்போதும் எதிரும் புதிருமான முரண்பட்ட இரண்டு விசைகள் செயல்பட்டுக் கொண்டிருகின்றன. முதலாவதாக அவற்றின் சொந்த நிறை ஏற்படுத்தும் ஈர்ப்பு விசை காரணமாக அவை சுருங்கும்.  அவ்வாறு சுருங்கும்போது மையத்தில் அழுத்தம் கூடி கருப் பிணைவு ஆற்றல் எனும் ஒருவகை  அணுவிசை ஏற்படும். இதன் காரணமாகவே  சூரியன் ஒளிர் கிறது. வெப்ப ஆற்றல் எல்லாவற்றையும் விரிவு படுத்தும். ஆகவே இந்த விரிவுபடுத்தும் வெப்ப விசை சுருங்க செய்யும் ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்பட்டு எப்போதும் சூரியனுள் எதிர் எதிர் முரண்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும்.  சூரியன் நிலையாக இருப்பதும் ஒளிர்வதும் இந்த எதிர் எதிர்முரண்களின் செயலால்தான். எதிர்மறை களின் ஒற்றுமையும், முரண்களும் என்ற இயக்க வியல் பொருள்முதல்வாத விதி இங்கே நமக்கு தெளிவாக புலப்படுகிறது.

பருப்பொருள் அளவில் ஏற்படுகின்ற மாற்றம் அதன் பண்பிலும் மாற்றத்திற்கு இட்டுச் செல்லும்  என்ற பொருள்முதல்வாத இயக்கவியல் விதிக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவை விட விண்மீனின் நிறை கூடினால் அதன் தன்மை மாறிவிடும். சூரியனை போல சுமார் மூன்று மடங்குக்கு மேலே நிறை கொண்ட விண்மீன்கள் தமது வரலாற்றில் ஒரு கட்டத்தில் சொந்த ஈர்ப்பு விசையின் காரணமாக சுருங்கி வெள்ளைக்குள்ள விண்மீன் என்ற ஒரு வகை விண்மீனாக மாறும்  என முதன்முதலில் கூறியவர் விஞ்ஞானி சந்திரசேகர் . இவர்தான் குறிப்பிட்ட விண்மீனின் நிறை கூடக் கூட அந்த விண்மீனின் தன்மை மாறுபடும் என முதலில் நிறுவியவர்.

அதே போல சூரியனை விட சுமார் இருபது மடங்கு கூடுதல் நிறை கொண்ட ராட்சச குண்டு விண்மீன்கள், தமது இயல்பு வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் அந்த விண்மீன் வெளியிடும் வெப்ப ஆற்றல், அதன் ஈர்ப்பு விசையை தாக்கு பிடிக்க முடியாமல் போகும். ஈர்ப்பு விசையின் கை ஓங்குவதுடன் அந்த விண்மீன்  தனக்குள்ளேயே சுருங்கத் தொடங்கும். இப்படி சுருங்கத் தொடங் கும் விண்மீன்கள் “ஸ்வார்ஸ் சைல்ட்” விட்டம் என்ற அளவுக்கு சுருங்குகின்றன.

அவ்வாறு “ஸ்வார்ஸ் சைல்ட்” விட்டம் எனும் அளவுக்கு குறைவாக சுருங்கி போனால் அதன் ஈர்ப்பு விசை வெகுவாக அதிகரிக்கும். இவ்வாறு உருவாவதுதான் கருந்துளை.

கருந்துளைகளுக்கு ஈர்ப்பு விசை எந்த அளவுக்கு  உச்சமாக இருக்குமெனில்,  அது தான் வெளியிடும் வெளிச்சத்தைக் கூட தானே விழுங் கிக்கொள்ளும். அதன் மீது ஒளியை பாய்ச்சினால் அதனை திரும்ப பிரதிபலிக்கவும் செய்யாது.  இதன் காரணமாக கருந்துளைகளைப் பார்க்க முடியாது. எனவே, அவைகளை ஆராய்வதும் எளிதல்ல. 

சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையிலேயே கருந்துளையின் இருப்பு குறித்த முதல் அனு மானம் எழுந்தது. ஆய்வுகள் தொடங்கின. இது நாள் வரையில் கருந்துளைகள் அண்டங்களில் நிலவுவதற்கான தற்செயல் ஆதாரங்கள்தான் கிடைத்து வந்தன. இப்போது கருந்துளையின் படம் கொடுக்கும் சில விபரங்கள் சார்பியல் கோட்பாட்டின் அனுமானங்களை மேலும் உறுதிப்படுத்துகின்றன. 

சார்பியல் கோட்பாடும் கருந்துளைகளும்:

19 ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் ஒளியின் திசை வேகத்தை கணக்கிடும் அளவுக்கு இயற்பியல் முன்னேற்றமடைந்தது. ஒளியின் திசைவேகமானது, ஆராய்ச்சியாளரின் திசை வேகத்திற்கு ஏற்ப மாற்றத்திற்கு உள்ளாகும் என்றுதான் அதுவரை நிலவிவந்த விசையியல் (மெக்கானிக்ஸ்) அறிஞர்கள் நம்பினார்கள். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒளியின் திசைவேகம் நிலையானது என்ற முடிவு வந்தது. இக்கண்டுபிடிப்பு விசையியல் மற்றும் மின் காந்தவியல் (எலெக்ட்ரோ மேக்னெட்டிக்ஸ்) ஆகிய துறைகளிடையே முரண்பாட்டை ஏற்படுத்தியது.

இச்சிக்கலைத் தீர்க்கும் ஆராய்ச்சியில் ஈடு பட்ட ஐன்ஸ்டைன், அதன் முடிவில், 1905ஆம் ஆண்டு, சிறப்பு  சார்பியல் கோட்பாட்டை வகுத் தளித்தார். அந்தச் சமயத்தில் அவர் ஸ்விட்சர் லாந்து நாட்டின் காப்புரிமை அலுவலகம் ஒன்றில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வந்தார் என்பதையும் இங்கே குறிப்பிடவேண்டும். மேற் சொன்ன கோட்பாடுதான் ஐன்ஸ்டைனின் மேதமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.

1905ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைன் மொத்தம் நான்கு கருத்துகளை வெளியிட்டு அறிவியல் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதில்  இரண்டு கருத்துகள் சார்பியல் தொடர்பான வையாகும். மேலும் ஒன்று நிறையைஆற்றலாக மாற்ற முடியும் என நிரூபித்த சமன்பாடான நு=ஆஊ2 என்பதும், மற்றொன்று அணுக்களின் இருப்பை நிரூபித்தலும் ஆகும். சார்பியல் குறித்தான ஐன்ஸ்டைனின் கருத்துக்கள், காலம் – வெளி ஆகியவை இரண்டும் அறுதியானவை அல்ல. எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல. காலத்தையும், வெளியையும் உணர்கிற நபர் அல்லது பொருட்களின் இயக்கத்தை சார்ந்து, காலம், வெளி ஆகிய இரண்டுமே வேறுபடும். மேலும் காலம், வெளி இரண்டும் ஒன்றில்லாமல் மற்றொன்று தனித்திருக்காது. எனவே, காலம், வெளி ஆகியவைகளை காலம்-வெளி என இணைத்துக் குறிப்பிடவேண்டும் எனவும் நிறுவுகிறார்.

அதன் பிறகு, மேற்சொன்ன சிறப்பு சார்பியல் கோட்பாட்டினை அடித்தளமாக கொண்டு, ஈர்ப்பு விசையை விளக்குவதற்கானமுயற்சியில் ஐன்ஸ்டைன் ஈடுபடுகிறார். 10 ஆண்டுகள் கழித்து, இவ்வாராய்ச்சியின் முடிவில்  பொது சார்பியல் கோட்பாட்டை வெளியிடுகிறார். காலம்-வெளி இரண்டினுடைய வளைவின் காரணமாக ஏற் படுகிற விளைவே ஈர்ப்பு விசை என்றும், பெரும் நிறை கொண்ட ஒரு பொருளை ஒளி கடந்து செல்லும்போது அது வளைகிறது எனவும் குறிப்பிடுகிறார். 

மேற்சொன்ன கோட்பாட்டு விளக்கங்களின் அடிப்படையிலேயே கருந்துளையின் இருப்பு முதலில் அனுமானிக்கப்பட்டது. இந்த அனு மானங்கள் விஞ்ஞான ஆய்வுகளின் வழியே பரிசோதிக்கப்படுகின்றன. கருந்துளை பற்றிய ஐன்ஸ்டைனின் கருத்தை நவீன காலம் வரையில் விஞ்ஞானிகள் தொடர்ந்து வளர்த்தெடுக்கின்றனர்.

1974ஆம் ஆண்டு ஸ்டீபன் ஹாக்கிங் வகுத்துக் கொடுத்த கோட்பாடு கருந்துளைகளின் இருப்பை புரிந்துகொள்ள உதவுவதாக அமைந்தது. கருந் துளைகள் வெளியிடும் கதிரியக்கம் (ரேடியேசன்) பற்றிய கருத்துக்களையும் அவரே  வெளியிட்டார். ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு பின் அவரது குழுவினர் கருந்துளைகளின் இயக்கம் குறித்த மேலும் சில கருத்துகளை வெளியிட்டனர். அதாவது கருந்துளைக்குள் ஈர்க்கப்படும் எந்த ஒரு பொருளும் அதன் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதும் மேலும் கருந்துளைகளில் இருந்து ஹாக்கிங் கதிரியக்கம் மட்டுமல்லாது போட்டான் இழைகள் வெளியேறலாம் எனவும் குறிப்பிட்ட னர். (போட்டான் இழைகள் குறித்த கருத்து நிரூபிக்கப்படாத அனுமானமே) இப்படியான ஆராய்ச்சிகள் பிரபஞ்ச வெளியைப் புரிந்து கொள்ள நமக்கு உதவுகின்றன.

கருந்துளைகளும் கருத்துமுதல்வாதிகளும்

அறிவியலில், அனுமானங்களுக்கு இடம் உண்டு; கற்பனைகளுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. ஆனால் அந்த கற்பனைகளும், அனுமானங்களும் மந்திரத்தில் விழும் மாங்காய்கள் அல்ல. ஐன்ஸ் டைன் முன்வைத்த சிறப்பு சார்பியல் கோட்பாடு, ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வந்த இருவேறு அறிவியல் உண்மைகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் இருந்து உதித்தது என்பதை குறிப்பிட்டோம். அதனை மேலும் கூர்ந்து நோக்கினால் அனுமானங்களுக்கு உள்ள இயக்கவியல் அடிப்படையும் புரிபடும்.

காலம் குறித்த மனிதர்களுடைய அறிவு மிக இயல்பானது என்றே தோன்றுகிறது.  ஏனென் றால் மனிதர்கள் பிறந்தது முதலே காலத்தோடு உறவாடுகிறார்கள். காலத்தைக் கணக்கிட்டு பயன்படுத்துகின்றனர். எனவே இந்த அறிவு போதுமானது போல் தோன்றுகிறது. ஆனால், மனித ஆராய்ச்சி, விண்ணைத் தாண்டி வெளியை எட்டுகிறபோது, முற்றிலும் புதிய சூழலில், காலம் குறித்த அறிவு வளர்த்தெடுக்கப்படவேண்டிய ஒன்று என்பது புரிகிறது.

ஒளியின் வேகத்தில் பயணிப்பது சாத்தியமே இல்லாத ஒருவருக்கு, வேகத்திற்கேற்ப நிறை அதிகரிக்கும் என்ற உண்மை அனுபவத்தில் புரியாது. பல்வேறு கதிர்களையும், அணுப்பிளவு களையும்ஆராய்கிற நவீன காலத்திற்கு ஐன்ஸ் டைன் தத்துவ வெளியில் ஏற்படுத்திய புரட்சிகர மாற்றம், எத்தனை முக்கியமானது என்பது புரிகிறது.

ஒரு குவளையில் தண்ணீர் இருக்கிறது. குடித்து முடித்தவுடன் காலியாகி விட்டதாகச் சொல்கிறோம். இல்லை; குவளைக்குள் காற்று நிறைந்து விட்டது. மேற்சொன்ன தகவல் அன்றாட உரையாடலுக்கு தேவைப்படும் தகவ லாக இல்லை. ஆனால் அறிவியல் இவ்வுண் மையை சாதாரணமாக கடந்து செல்லாது. அண்டத்தில் பல்வேறு துகள்கள், வாயுக்கள், கோள்கள், ஆற்றல் என நிறைந்திருக்கின்றன. இவை நிறைந்துள்ள வெளியை காலியிடம் என்பதா? வேறு எப்படிக் குறிப்பிடுவது என நுணுகி ஆராயும்.

ஒரு ஆப்பிள் பழம், மரத்திலிருந்து கீழே விழுவதைக் கொண்டு புவி ஈர்ப்பினை வரையறுக் கத் தொடங்கலாம். அதுவே, பூமியும், சூரியனும் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொண்டிருப்பதும், நிலவும் பூமியும் ஒன்றை ஒன்று ஈர்த்தபடி சுழன்று கொண்டிருப்பதும் தெரியவரும்போது, ஈர்ப்பு விசையின் வரையறைகள் மாறுகின்றன.

காலம் ஒரு நேர்கோட்டில் பயணிப்பதாக நியூட்டன் கருதினார். அவருடைய கோட்பாடு இயற்பியலில், விசையியலில் தாக்கம் செலுத் தியது. காலம் என்ற குவளைக்குள்ளே அனைத் தும் இருப்பதாகவும், மாறிவருவதாகவும் நியூட்டன் அனுமானித்தார். ஈதர் என்ற ஒரு கற்பனை பொருளையும் அவர் வசதிக்காக அனுமானித்துக் கொண்டார். ஐன்ஸ்டைன் மேற்சொன்ன அனு மானங்களை காலாவதியாக்கினார். 

உண்மையில் ஒளியின் இயல்பு குறித்த திட்ட வட்டமான கண்டுபிடிப்புதான், அதுவரையிலான போக்குகளை புரட்டிப் போட்டது. நியூட்டனின் கருத்துக்களுடைய எல்லையை புரிய வைத்தது. ஐன்ஸ்டனின் கோட்பாடானது, காலனம், வெளி  குறித்த புரிதலில் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்தது. மேற்சொன்னவைகளில் இருந்து பார்த்தால், ஐன்ஸ்டைனின் கோட்பாடு உருவான இயக்கவியல் அடிப்படையும் புரியும். இயற்பியலில் ஒட்டுமொத்த மனித சமூகம் முன்னேற்றமடைந்த இரு வேறு கட்டங்களோடு இணைத்து புரிந்து கொள்ள முடியும்.

வெளி என்பது அனைத்து பொருட்களும் இடம்பெற்றுள்ள, நகர்கின்ற கலனாகும் (ஒரு பாத்திரம் போல). காலம் என்பது எண்ணற்ற நகர்வுகளின் அண்டம் தழுவிய ஓட்டம். மேற் சொன்ன பார்வையை ஈர்ப்புவிசையோடு இணைத்து பொது சார்பியல்கோட்பாட்டை ஐன்ஸ்டைன் உருவாக்கினார். அது நியூட்டனின் ஈர்ப்புவிசைத் தத்துவத்தின் மெய்த்தன்மையை நிரூபித்து அதனை வளர்த்தெடுத்தது.

சூரியனை நெருங்கிச் செல்லும் வெளிச்சக் கதிர்கள் சிறிதளவு வளையும் என்பதும், சூரியனை சுற்றி கோள்கள் நகரும் பாதை ஒரே நீள்வட்ட மல்ல என்பதும், அது சற்றே மாறி மாறி ரோசாப் பூவின் இதழோரங்களை ஒத்த வடிவத்தில் அமைந்திருப்பதும், ஈர்ப்புவிசை காரணமாகத் தான். சூரியனில் இருந்து வெளிவருகிற ஒளியா னது பூமியைஅடையும்போது செம்மை நிறம் பெறுகிறது என்பதையும் அவர் நிரூபித்தார். 

சிறப்பு, சார்பியல் கோட்பாட்டின் அடிப் படையில் வெளியும் காலமும் ‘காலவெளி’ (Space-Time) என்ற பிரிக்க முடியாத ஒரு கட்ட மைப்பு என்ற வரையறைக்கு அவர் வந்தார். அதன் பொருள், இனிமேல் காலம் என ஒன்றோ, வெளியென ஒன்றோ கிடையாது என்பதல்ல. காலம் அதனுடைய தனித்தன்மையைக் கொண் டுள்ளது, வெளி அதற்கேற்ற தன்மையைக் கொண்டிருக்கிறது ஆனால் இவை இரண்டும் ஒன்றில்லாமல் தனித்து நின்று பொருள் தருகிறவை அல்ல என்பதே ஆகும்.

சார்பியல் கோட்பாட்டையும், கருந்துளைகள் பற்றிய அனுமானங்களையும் கருத்துமுதல்வாதத் திற்கான எடுத்துக்காட்டாக கைப்பற்றும் முயற்சிகள் ஆரம்ப காலத்திலேயே தொடங்கி விட்டன. அதாவது, அறிவியலால் அறியவே முடியாத ஒன்று உண்டு என்றும், அண்டம் படைக்கப்பட்ட ஒன்றே என்றும் மேற்சொன்ன கோட்பாடுகள் நிறுவி விட்டதாக அவர்கள் முன்வைக்கின்றனர். உண்மைக்கு மாறாக, மேற் சொன்ன வகையில் கருத்துக்களை முன்வைக்கிற வர்கள் முதலாளித்துவத்தின் தேவையில் இருந்தே செயல்படுகின்றனர். காரண காரியத்தை தாக்கி அழிப்பதே அவர்களுடைய கெட்ட நோக்கம்.  அறிவியலுக்கு விரோதமான கருத்துமுதல்வாதத்தை திணிக்க, அறிவியலையே கையகப்படுத்திக் கொள்கிற முயற்சிகளை, பொருள்முதல்வாதிகள் தொடர்ந்து எதிர்க்க வேண்டியுள்ளது. மேலும் அதனை காரண காரியத்தை பாதுகாத்து முன்னெடுக்கவும் வேண்டியுள்ளது.

சார்பியல் கோட்பாட்டை முன்வைத்து அறிவியலைத் திரிப்பவர்கள் பற்றி லெனின் குறிப்பிடும்போது, “ஐன்ஸ்டைன், பொருள் முதல் வாதத்தின் அடிப்படையின் மீது எந்த தாக்கு தலையும் நடத்தவில்லை” ஆனால் அவருடைய கோட்பாடு, மிகப்பெரிய எண்ணிக்கையிலான முதலாளித்துவ அறிஞர்களால் கைப்பற்றப்பட்டிருக் கிறது. இந்த நிலைமை ஐன்ஸ்டைனுக்கு மட்டும் ஏற்படவில்லை, இயற்கை அறிவியலை சீர்திருத்தி அமைத்த பெரும்பாலான அறிஞர்களுக்கு நேர்ந் துள்ளது” என்றார்.

அறிவியலும்  மார்க்சியமும் 

மனித குல வரலாற்றில் அறிவியலின் பங்களிப்பு பற்றி எங்கல்ஸ் விதந்தோதுகிறார். அவரது காலத்தில் நிக்கோலஸ் கோபர்நிகஸ், பூமிதான் சூரியனை சுற்றிவருகிறது என்ற உண்மையை உலகுக்குச் சொன்னபோது இதுவொரு ‘புரட்சிகர நடவடிக்கை’ என்றார் எங்கல்ஸ். அதே போல மார்க்சும் எங்கல்சும் சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை வரவேற்றுக் கொண்டாடியதை நாம் அறிவோம்.

மனித அறிவை தத்துவப் பார்வையில் நோக்கும் போது, புலனறிதல், பகுத்தறிதல் என இருவேறு கட்டங்களாக சொல்லலாம். புலனறிதலை மட்டும் சார்ந்து சிந்திக்கும்போது அது அனுபவ வாதத்திற்கு வழிகோலுகிறது. பகுத்தறிவை மட்டும் சார்ந்து நின்றால் அது பகுத்துப் பார்த்து, ஆய்வு செய்கிற திறனை புலனுணர்தலுக்கு மேலான ஒரு உயர்நிலையாக நிலைநிறுத்தி விடுகிறது. மார்க்சியம் இவை இரண்டையும் கணக்கிலெடுக்க வேண்டும் என்கிறது. அறிவுச் செயல்பாடு என்பது உண்மை நிலையைப் பற்றி புலன்களின் உணர்வு மற்றும் பகுத்து நோக்கி ஆராயும் நடவடிக்கை ஆகிய இரண்டுமே பிரதிபலிப்பதன் ஒருங்கிணைவே என்கிறது மார்க்சியம்.

மேலும் அது அறிவியல் ஆராய்ச்சிகளைப் பற்றி குறிப்பிடும்போது, விஞ்ஞானிகளின் ‘அனுமானங்களுக்கு’ ஒரு முக்கிய இடம் இருப்பதை அங்கீகரிக்கிறது. புனைவாற்றலுக்கு உள்ள முக்கியத்துவத்தையும் கணக்கில் கொள் கிறது. இத்தகைய புனைவாற்றல் இயல்புணர்வு ஒரு மாயாஜாலம் போல நேர்வது அல்ல; மனித குலத்தின் கடந்த கால சமுதாய அறிவாற்றலை உள்வாங்கிய ஒரு தனிநபருடைய அறிவாற்றல் மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றில் இருந்து தான் வெளிப்படுகிறது.

உத்தேசக் கருத்துக்களில் இருந்து உருவாகும் அனுமானங்கள், புனைவுகள் என்பதோடு முடிந்து விட்டால் அது அறிவியல் ஆகாது. அந்த அனு மானத்தை சாரப்படுத்தி, அதனை பகுத்தாய்ந்து பின்னர் நிரூபணம் செய்வது அவசியம். இதிலிருந்து தான் கோட்பாடுகள் பிறக்கின்றன. மேலும் ஒரு குறிப்பிட்ட அறிவுக் கட்டத்தில் சரி என அறியப் பட்ட கருத்துக்கள், மற்றொரு கட்டத்தில் மேலும் மேம்படுத்தப்படவேண்டிய நிலைமைக்கு வருகின்றன. நியூட்டனின் மேதமையோ, பாரடே வின் ஆய்வுக் கருத்துக்களோ போலியானவை அல்ல. அவர்களின் அனுமானங்கள் அறிவி யலுக்கு விரோதமானவையோ அல்ல. ஆனால் அறிவின் வளர்ச்சிக் கட்டத்தில் அவை மேலும் திட்டவட்டமாக வேண்டும். அறிவு வளர்ச்சியும் இயக்கவியலுக்கு உட்பட்டது என்பதையே கருந்துளை பற்றிய வரலாற்றுப் பருந்துப் பார்வை நமக்கு விளக்குகிறது.

பொதுவானதில் இருந்து, குறிப்பான ஒன்றை நோக்கி நகர்வதும். குறிப்பான நிகழ்வுகளை, பொதுவானவைகளுடன் இணைப்பதுமே மார்க் சிய நோக்கு. இந்த இயக்கம் தொடர்ந்து நடக் கிறபோதுதான் அறிவு வளர்கிறது.

கருத்துளை ஒளியை உமிழாது; அதன் மீது விழும் ஒளியையும் பிரதிபலிக்காது – அப்படி என்றால் எப்போதும் காட்சியே தராத பொருளாக இருக்குமா?  ஐன்ஸ்டீனுக்கே பெரும் கலக்கம் ஏற்பட்டது.   காட்சியே தராத ஒன்றை சந்தர்ப்ப சூழல் தரவுகள் கொண்டு அனுமானம் செய்யலாம். ஆனால் எப்போதும் காட்சியே தராது என்றால் அது மெய்யாக இருக்கிறது என அறிவியல் பார்வையில் ஏற்றுக் கொள்வது கடினம்.  எனவேதான் நேரடிச் சான்று தேடி அலைந்தனர் விஞ்ஞானிகள்.   ஐன்ஸ்டீன்னின் தத்துவத்தை வைத்து மேலும் கருந்துளையை கூர்ந்து ஆராய்ந்தபோது அதன் அருகே குறிப் பிட்ட தொலைவில் செல்லும் ஒளி கற்றை கருந் துளையை வலம் வந்து வந்த திசையிலேயே வெளிப் படும் என கண்டனர். அதாவது கருந்துகளை இருந்தால் அங்கே ஒளிவட்டம் போல காட்சி தரவேண்டும்.

ஏற்கனவே எம் 87  கேலக்சி மையத்தில் கருந் துளை உள்ளது என அனுமானம் செய்து வைத் திருந்தோம். அங்கே கண்ணுக்கு தெரியாத கருந் துளையை சுற்றி ஒளிவட்டம் இருக்கிறதா என தேடி எடுத்த புகைப்படமே தற்போது வெளியாகி யுள்ள புகைப்படம்.  இரண்டு ஆண்டுகள் போராடி, உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் இணைந்து செயல்பட்டு  ஒரு படத்தை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக, இதுவரை இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என சந்தேகத் துடன் வெறும் அனுமானமாக இருந்த கருந் துளை எனும் வான்பொருள் மெய்யாக  இருக்கிறது எனபது உறுதியாகியுள்ளது. இப்படி ஒவ்வொரு நாளும் மனித அறிவுப் பரப்பு புதிய திசையில் விரிவடைந்து வருகிறது.

இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை குறித்து லெனின் “எழுதும்போது எலெக்ட்ரோன் குறித்து எப்போதும் எல்லாம் அறிந்துவிட்டோம் என்ற நிலை ஏற்படாது” என்றார். அதாவது எப்போதும் அறிவுத் தேடல் இருந்து கொண்டே தான் இருக் கும் என்றார் லெனின். அந்தந்த காலகட்டத்தில் உள்ள உற்பத்தி சக்திகள், அதாவது கருவிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப நமது அறிவின் ஆழம் அமை யும். நிலை மறுப்பின்  நிலை மறுப்பு மற்றும் பருப்பொருளில் ஏற்படும் அளவு மாற்றம் பண்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற இயக்கவியல் விதிக்கு இணங்க, புதிய அறிவியல் துறைகளின் பிறப்புக்கும், நவீன கோட்பாடுகள் வளர்த் தெடுக்கப்படுவதற்கேற்ற, புதிய அனுமானங்கள், புதிய ஆய்வுகளுக்குமான சூழல் பிறந்து கொண்டிருக்கிறது.

நம்பிக்கை , அறிவியல், பொருள்முதல்வாதம் …

தற்போது மக்களின் ‘நம்பிக்கை’ பற்றிய விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. ஆதம்பாலம், இராமர் பாலமாக மாற்றப்படடு மக்களின் நம்பிக்கையில் அரசு தலையிடுவதா என்றெல்லாம் ஆவேசக் குரல்கள் எழுப்பப்படுகின்றன. நம்பிக்கைகளில் பல ரகங்கள் உண்டு, பல நம்பிக்கைகள் வாழ்க்கை நடைமுறைகளில் குறுக்கீடோ, இடையூறுகளையோ ஏற்படுத்தாதவை. உதாரண மாக, ஒருவருக்கு ‘இறப்புக்குப் பிறகு மோட்சம் கிடைக்க வேண்டும்; அதனால் இப்பிறப்பில் நிறைய நல்ல காரியங்கள் செய்து புண்ணியம் பெற வேண்டும்’ என்று நினைத்தால், அந்த நம்பிக்கையால் அதிக பாதிப்புகள் ஏற்படுவதில்லை. சில சமயம், இப்படிப்பட்ட நம்பிக்கைகள் சமூகத்திற்கு ஓரளவு நன்மைகளையும் கூட ஏற்படுத்தலாம்.

ஆனால், சில நம்பிக்கைகள் சமூகத்திற்கு ஊறு விளைவிப்பவை; சில, மிகுந்த ஆபத்தையும் ஏற்படுத்துபவை. உதாரணமாக ‘சதி’ பற்றிய நம்பிக்கை. இன்னமும் பல இடங்களில் நிலவி வருகின்ற – மனிதர்களுக்கு கொடுமைகளை இழைக்கின்ற – பல நம்பிக்கைகள் உள்ளன. பெண்ணடிமைத் தனம், சாதி ஒடுக்குமுறை சார்ந்த பிற்போக்குத்தனம் நிறைந்த நம்பிக்கைகளும் உள்ளன. நம்பிக்கை ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றுதான். எனினும், சமூக அமைதிக்கும், ஒற்றுமைக்கும், சமூக நலனுக்கும், சமத்துவக் கோட்பாடுகளுக்கும் எதிராக இருக்கின்ற நம்பிக்கைகள் மனிதர்களின் சிந்தனையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

தனி மனிதர்களின் நம்பிக்கையில் அரசு தலையிடக் கூடாது என்பது சரியானது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் எந்தவொரு சமயக் கருத்தின்மீது நம்பிக்கை வைக்கவும், அந்த நம்பிக்கையை பிரச்சாரம் செய்திடவும், ஒரு சமயத்தின்மீது நம்பிக்கையை கைவிட்டு வேறொரு சமயத்திற்கு மாறிடவும் அனுமதி அளிக்கிறது. இந்த உரிமைகள் மதிக்கப்படவும், பாதுகாக்கப் படவும் வேண்டும்.

அதே நேரத்தில், சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நம்பிக்கை சார்ந்த செயல்பாடுகளை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. அந்த ஆபத்திலிருந்து சமூகத்தைப் பாதுகாக்க அரசு சட்ட ரீதியாகச் செயல்படுதல் வேண்டும். அது மட்டுமல்ல, அறிவியலுக்குச் சிறிதும் தொடர்பற்ற மூட நம்பிக்கைகளை ஒழிக்க அரசே பிரச்சாரம் செய்திடல் வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனது ‘வழிகாட்டும் நெறிகள்’ பகுதியில் மக்கள் மத்தியில் அறிவியல் சிந்தனைகளையும், உணர்வுகளையும் (Scientific Temper) மேம்படுத்த அரசு முயற்சிக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.

அரசியல் அதிகாரத்திற்காக ‘நம்பிக்கை’
இந்துத்துவவாதிகளுக்கு வரலாற்றுப் போராசிரியர் ரோமிலா தாப்பர் எழுப்பிய கேள்விகள் அர்த்தம் பொதிந்தவை. (இந்து, செப். 28, 2007)
ஒரு கடற்பாலம் இடிக்கப்பட்டால், ஒரு நம்பிக்கையே அழிந்து போகுமா? அந்த அளவிற்கு அந்த நம்பிக்கை பலவீனமானதா? கோடிக்கணக்கான மக்களிடையே ஒரு சமய நம்பிக்கை இருக்கிறதென்றால், அதனைப் பாதுகாக்க மக்களை ஏன் திரட்டுகிறீர்கள்? இதற்காக ஏன் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்துகிறீர்கள்? அந்த நம்பிக்கையின் பெயரால் ஏன் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறீர்கள்?

ராமர் பிறந்த இடம் அல்லது ராமர் பாலம் – எதுவாக இருப்பினும் மக்கள் உள்ளத்தில் மட்டுமே குடியிருக்க வேண்டிய அந்த நம்பிக்கையை மூலதனமாக்கி, மக்களைத் திரட்டுவது என்பது ஒரு சுயநல அரசியல் நோக்கத்தை, அதிகாரப் பசியைத் தான் எடுத்துக்காட்டுகிறது. அரசியல் அதிகாரத்திற்காக நம்பிக்கையைப் பயன்படுத்துவது ஒரே சமயத்தில் சமய நம்பிக்கைகைளையும், நவீன சமுதாயத்தின் ஜனநாயகக் கோட்பாடுகளையும் கேவலப்படுத்துவது ஆகும்.
இத்தகு சமய நம்பிக்கையை பாதுகாக்க அறிவியலும் சேவை செய்ய வேண்டுமென்று கூறுவது, மிகவும் கேவலமானது. இந்தியத் தொல்லியல் துறை அறிவியல் ரீதியாக வளர்ச்சி பெற்ற ஒரு நிறுவனம். அறிவியல் முறைகளால் அவர்கள் பாக் ஜலசந்தியில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் ஏதுமில்லை என்று நிறுவினர். ஆனால் அவர்களை எதிர்த்து போராட்டம் நடத்துவது எனில், என்ன அர்த்தம்? ஆதாரமற்ற ஒரு சமய நம்பிக்கைக்காக அறிவியல் நிறுவனங்கள் கூஜா தூக்க வேண்டும் என்பது எத்தகைய மடமை. இதுதான் போலி அறிவியல். இதில் கைதேர்ந்தவர்கள் இந்துத்துவவாதிகள். ரோமிலா தாப்பர் குறிப்பிட்டவாறு சமய நம்பிக்கைக்கு ஒரு தனியிடம் இருக்கிறது; அதே போன்று அறிவியல், வரலாறு அனைத்திற்கும் அவற்றுக்கென்று செயல்படு தளங்கள் உள்ளன. ஒன்று, மற்றொன்றில் குறுக்கிடவோ, இடையூறு செய்திடவோ கூடாது.

நம்பிக்கை குறித்து, கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்? அனைத்து நம்பிக்கைகளையும் எதிர்ப்பதாக பகிரங்க பிரகடனம் செய்வதால் பயனில்லை. இது, மக்களிடமிருந்து கம்யூனிஸ்டுகளை தனிமைப்படச் செய்திடும். அதிகம் சடங்கு சம்பிரதாயம் சாராத, மனத்தளவிலான நம்பிக்கைகள் கொண்டவர்களை அணுகுகிறபோது அவர்களின் நம்பிக்கைகளை கம்யூனிஸ்டுகள் அங்கீகரிக்கவும், மதிக்கவும் வேண்டும். இதன் பொருள் அந்த நம்பிக்கைகளை ஆதரித்து, ஏற்றுக் கொள்வது என்பதல்ல. நம்பிக்கையை அல்ல, நம்பிக்கை கொண்டோரை மதிக்க வேண்டும். ஒருவரின் நம்பிக்கைகள் அவரது தனிப்பட்ட விவகாரம், அவரது உரிமை என்பதை கம்யூனிஸ்டுகள் அங்கீகரிக்க வேண்டும். இது உழைப்பாளி மக்களை வர்க்கபோராட்டத்தில் திரட்டிடவும், அவர்களை நெருங்கிடவும் வாய்ப்பான சூழலை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில், மூடநம்பிக்கைகளையும், ஒடுக்குமுறை சார்ந்த நம்பிக்கைகளையும், அவற்றையொட்டிய சடங்குகள், சம்பிரதாயங்களையும் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பதில் தயங்கிடக் கூடாது. இதனால் சமூக நலனுக்கும், எதிர்கால முன்னேற்றத் திற்கும் ஏற்படக் கூடிய பாதிப்புகளை பொறுமையாக மக்கள் மத்தியில் விளக்கிட வேண்டும். சமூக நலனுக்கு ஒவ்வாத பழக்கங்களை மக்களைத் திரட்டியே ஒழிக்க வேண்டும்.

‘நம்பிக்கை’ குறித்து சமூகவியலாளர் அச்சின் விநாயக் கீழ்க்கண்ட கருத்தை முன்வைக்கிறார்.
“நம்பிக்கைகளில் நல்லதும் உள்ளன; தீயனவும் உள்ளன; நம்பிக்கைகளின் தன்மை குறித்து விவாதத்திற்கு உள்ளாக்கிடாமல் இருப்பது அறிவுத்திறத்திற்கு உகந்ததல்ல; அவ்வாறு இருப்பது அறநெறிகளை வளர்ப்பதற்கும், அரசியல் பொறுப்புணர்வுக்கும் உகந்தது அல்ல, அதிலும் குறிப்பாக தவறானதோர் நம்பிக்கையாக இருந்தால், அதனை அலட்சியப்படுத்திடக்கூடாது,”
(Communal-ism Contested: அச்சின் விநாயக்)

இதுவே சரியானதோர் அணுகுமுறையாகும். எனவே நம்பிக்கைகளை அறிவுத்திறன் கொண்டு பரிசோதனைக்கு உள்ளாக்குவது அவசியமானது. நீண்டகால நோக்கில் சமூகத்தில் சமய நம்பிக்கைகளின் ஆதிக்கத்தை குறைத்திடவும் இது வழிவகுக்கும். ‘நேரடி யுத்தம்’ எனும் அணுகுமுறையைவிட, மக்களோடு இணைந்து அந்த நம்பிக்கைகளை அறிவு எனும் பரிசோதனைக் களத்தில் ஈடுபடுத்துவது உகந்ததாக இருக்கும். இதைச் செய்வதற்கான மிக உறுதியான பாதையாக அறிவியல் பாதை விளங்குகிறது.
நம்பிக்கை நீக்கம்; அறிவியலின் பங்கு
அறிவியல் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது. முதலாளித்துவ முறை ஏற்படுத்தியுள்ள தடை மட்டும் இல்லையெனில், அறிவியல் அனைத்து மக்களும் உன்னதமான வாழ்க்கை வாழ்ந்திட வழி வகுத்திருக்கும். முதலாளித்துவ வர்க்கங்கள் தனது இலாப வேட்டைக்கு அறிவியலைப் பயன்படுத்துவதால், அனைத்து மக்களுக்குமான அறிவியல் இன்னமும் எட்டாக்கனியாக இருந்து வருகின்றது.

கம்யூனிஸ்டுகள் ‘நம்பிக்கை’ பற்றி மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை, அறிவியல் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் கடமையோடு இணைந்தது.
சாதாரண வாழ்க்கையில், இதையொட்டி பல்வேறு போக்குகளைக் காண்கிறோம். ஒரு பேராசிரியரோ, அறிவிய லாளரோ, அறிவியல் பற்றிய ஆழமான அறிவு கொண்டிருந் தாலும், அறிவியலுக்கும் அப்பாற்பட்ட சக்தி உள்ளது என்று கூறி, பல்வேறு நம்பிக்கைகளுக்கு ஆளாவதை நாம் காண்கிறோம். பொருள் முதல்வாதம் சார்ந்த அறிவியலுக்கான போராட்டம் தான், நம்பிக்கைகளின் ஆதிக்கத்திலிருந்து சமூகத்தை விடுவிக்கும்.
உண்மையான அறிவியலின் கூர்முனையை மழுங்கச் செய்யும் போக்குகள் அறிவியல் தத்துவத்துறையில் நிகழ்கின்றன. அறிவியலுக்குள், இரண்டு விதமான போக்குகள் உள்ளன, அறிவியல் யதார்த்தவாதம் (Scientific Realism) என்பது முற்போக்கான அணுகுமுறை ஆகும். இது ஒரு முகாம் என எடுத்துக்கொண்டால், இதற்கு எதிரான பாசிட்டிவிசம் (positivism) அல்லது நேர்காட்சி வாதம் என்பது போன்ற பல போக்குகள் ஒன்றடங்கிய முகாம் மற்றொரு பிரிவு ஆகும்.

அறிவியல் துறையினை தத்துவ நோக்கில் எப்படி அணுகுவது? தத்துவக் களத்தில் நாம் இரண்டு பார்வைகளை எதிர் கொள்கிறோம். யதார்த்த உலகின் இருப்பை முதன்மைப் படுத்துவது, பொருள் முதல்வாதம். நமது சிந்தனை, விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு பொருள் உள்ளது என்பதை அங்கீகரிப்பது பொருள் முதல்வாதம். சிந்தனை, பொருளின் பிரதிபலிப்பே என அது வாதிடுகிறது. அது மட்டுமல்லாது, பொருள் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நிறுவி, அந்த இயக்கத்திற்கான அடிப்படை விதிகளை விளக்குவது இயக்க வியல் பொருள் முதல்வாதம்.

இதற்கு நேர் எதிரான பார்வை கருத்து முதல்வாதம். பொருளின் இருப்பு சிந்தனை சார்ந்தது. கருத்தே பொருளுக்கு அடிப்படை. கடவுள் இவ்வுலகைப் படைத்தார் என்ற மிகப் பழமையான நம்பிக்கை கருத்து முதல்வாதத்திற்கு முக்கிய மானது. பொருளே உண்மையானது அல்ல, மாயை என வாதிட்டு பரப்பிரம்மம் மட்டுமே ஒரே உண்மை என்று நிறுவ முயலும் அத்வைதம், கருத்து முதல்வாதத் தத்துவத்திற்கு இந்திய தத்துவம் வழங்கிய ‘நன்கொடை’. ஆன்மீகத்தை தவிர்த்துப் பார்த்தால், கருத்து முதல்வாதம் பல்வேறு வடிவங்களில் நீடித்து வருகின்றது. முதலாளித்துவ முறையில், வெளிப்படையாகத் தெரியாமல், உள்ளார்ந்து நடைபெற்று வரும் உழைப்புச் சுரண்டலை உழைப்பாளி அறிந்து கொள்வதில்லை. தனது வாழ்க்கையைக் காப்பாற்றி வருவது முதலாளி கொடுக்கும் ஊதியம் என அவன் நம்புகிறான். இவை போன்ற பல யதார்த்தத்திற்கு முரணான சமூகக் கருத்துக்கள் அனைத்துமே கருத்து முதல்வாத வகையைச் சார்ந்தது.

எல்லாத் தத்துவப் பிரிவுகளும் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ மேற்கண்ட இரண்டு உலகப் பார்வைகளில் ஒன்றை உரித்தாக்கிக் கொண்டிருக்கும்.
இதில் அறிவியல் எதைச் சார்ந்தது? யதார்த்த உலகை, நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை அங்கீகரிப்பதால் பொருள் முதல்வாதமே அறிவியலின் அடிப்படையாக உள்ளது. அறிவியலை பொருள்முதல்வாதப் பார்வை கொண்டு விளக்குவதுதான் ‘அறிவியல் யதார்த்தவாதம்‘ என்று அழைக்கப்படுகிறது. அறிவியல் தத்துவத் துறையில் அறிவியல் யதார்த்தவாதம் மிக முக்கியமான போக்கு.
கருத்து முதல்வாதிகளும் அறிவியலை பொருள் முதல் வாதத்திடம் விட்டுவிட அனுமதிப்பதில்லை. அவர்களும் அயராது போராடுகிறார்கள். பொருள்முதல்வாதத்தின் இயற்கையான கூட்டாளியான அறிவியலை ஹைஜாக் செய்திட அவர்கள் இடைவிடாது முயற்சித்து வருகின்றனர்.
தத்துவத் தளத்தில் நடைபெறும் இந்தப் போராட்டமும் ஒருவர்க்கப் போராட்டமே. ஏனெனில் அனைத்து மக்களுக்கு மான அறிவியல் என்பனை அறிவியல் யதார்த்த வாதமே சாதிக்க வல்லது. கருத்துமுதல்வாதம் சார்ந்த அறிவியல் உழைப்பாளி மக்களுக்கு எதிரானது; முதலாளித்துவ வர்க்க நலனுக்கு சேவை செய்திடுவது. உதாரணமாக, புதிய புதிய அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு மிக நவீன, சக்தி படைத்த ஆயுதங்கள் உருவாக்கப்படுகின்றன; ராணுவ ஆயுதத் தளவாடங் களை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆயுத விற்பனை செய்து கொழிக்கவே இந்த அறிவியல் ஆராய்ச்சியை பயன்படுத்துகின்றன. அதே நேரத்தில், உலகம் முழுவதும் வறுமையை ஒழிக்க அறிவியலை பயன்படுத்திடலாம் என்று கூறினால், அதற்கு பலத்த எதிர்ப்பு உள்ளது. வறுமையில் வாடுவோர், இது தங்களது தலைவிதி எனக்கருதி அல்லல் வாழ்க்கை வாழ்ந்திட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அறிவியலின் பிரமாண்டமான வளர்ச்சி உரிய பலனை ஏற்படுத்துவதில்லை.

அறிவியல் யதார்த்தவாதம்
எனவே, வர்க்கப் போராட்டத்தின் எதிரொலியாகவே அறிவியல் களத்தில் தத்துவப் போராட்டங்கள் நிகழ்கின்றன. பொருள் முதல் வாதம் சார்ந்த அறிவியல் யதார்த்த வாதம் ஒருபுறம் கருத்து முதல்வாதம் சார்ந்த அறிவியல் பற்றிய பார்வைகள் மறுபுறம், என இரு முகாம்கள் இன்று கருத்துரீதியாக மோதிக் கொள்கின்றன.
சிறந்த சிந்தனையாளரும், சிறந்த இயற்பியல் அறிவிய லாளருமான டி.ஜெயராமன் மேற்கண்ட போராட்டத்தை தனது கட்டுரை ஒன்றில் விளக்குகிறார். (ஆங்கில மார்க்சிஸ்ட், ஜனவரி – மார்ச் 2007) இந்தப் போராட்டத்தில் கருத்துமுதல்வாதிகளின் கை ஓரளவு ஓங்கியுள்ளதாக அவர் வருத்தத்தோடு குறிப்பிடுகின்றார். இது சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட ஒரு போக்கு. இதற்கு வலுவடைந்து வரும் உலகப் பன்னாட்டு மூலதன ஆதிக்கமும் முக்கிய காரணம். அறிவியல் யதார்த்த வாதத்தைப் பாதுகாக்கவும், வளர்த்திடவும் மேலும் வலுவான சித்தாந்தப் போராட்டத்தை நடத்திட வேண்டியுள்ளது.
அறிவியல் யதார்த்தவாதம் என்பதை எப்படி வரையறுப்பது?
அறிவியல் யதார்த்தவாதம் என்பதை பல அறிவியல் தத்துவவாதிகள் விளக்கியுள்ளனர். இதில் கிறிஸ்டோபர் நோரிஸ் எனும் தற்காலத்திய தத்துவவாதியின் வரையறுப்பே சிறந்ததாக ஜெயராமன் குறிப்பிடுகிறார். நோரிஸ் முதலில், மிக அடிப்படையான விஷயமாக எடுத்துக்கொள்வது புற உலகின் இருப்பு, இதுதான் துவக்கப்புள்ளி. இந்தப்புற உலகு பொருட் களால் ஆனது. நமது அகம் (மனம்) புற உலகைப் பற்றி சிந்தித்து உண்மைகளை ஆராய்கிறது. இதையொட்டி பல கருத்துக்கள் உருவாகின்றன. புற உலகு பற்றி, அக உலகில் ஆயிரம் விளக்கங்கள், ஆயிரம் வரையறைகள், நம்பிக்கைகள் தோன்ற லாம். ஆனால் இவையெல்லாம் உண்மையானவையா பொய்யா வையா, என்பதைத் தீர்மானிப்பதற்கு எது உரைகல்?. யதார்த்த மான, நிஜமான, புற உலகு பற்றிய அறிவியல் பரிசோதனை சார்ந்த புரிதல்தான்.

அறிவியல் யதார்த்த வாதம் பல பரிசோதனை நடைமுறை களை அடிப்படையாகக் கொண்டது. தெரிந்தவைகளைக் கொண்டு, தெரியாதனவற்றை அறிவது, காரண காரியத் தொடர்பு களிலிருந்து உண்மைகளை அறிவது, தெரிந்த உண்மைகளிலிருந்து கருதுகோள்களை (Hypothesis) உருவாக்கி, அவற்றை பரிசோதனைகளுக்கு உள்ளாக்குவது போன்ற வழிமுறைகள் அறிவியல் யதார்த்தவாதத்திற்கு முக்கியமானவை. இத்தகு பரிசோதனை செயல்பாடுகளிலிருந்து கண்டறிந்த அறிவியல் கோட்பாடுகளும், உண்மைகளும்தான் நடை முறையில் பயன்படுத்தப்பட்டு பல வெற்றிகரமான படைப்பு களுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் இட்டுச் சென்றிருக்கிறது. நோய்களைக் குணப்படுத்துவது, விமானங்களை வானில் செலுத்துவது, உள்ளிட்ட ஏராளமான மனித சாதனைகள் அனைத்தும் இத்தகைய அறிவியல் பரிசோதனைகளால் வந்தடைந்த உண்மைகளால்தான் உருவாக்கப்பட்டன.

ஒரு கருத்து உண்மையானதா என்பதை யதார்த்த நிலை பற்றிய அறிவாராய்ச்சிகள்தான் முடிவுக்கு வரவேண்டும். மாறாக, ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அக்கருத்து ஏற்றதா என்று பார்த்து அவர் உண்மையை தேடுதல் கூடாது.
புற உலகைப் பற்றிய உண்மைகளில் பலவற்றை மனித சமுதாயம் கண்டறிந்துள்ளது. சில இன்னமும் அறியப்படாமல் உள்ளது. பின்னாளில் இவைகளும் அறியப்படக் கூடும். சில தற்போது நமக்குள்ள பரிசோதனை செயல்பாடுகளுக்கும், பரிசோதனைக் கருவிகளுக்கும் அப்பாற் பட்டதாக உள்ளதே தவிர, அவற்றை அறிய முடியாதது என்பதில்லை. இன்னமும் அறியப்பட வேண்டுவன இருக்கிறதே அன்றி, அறிய முடியாதது எதுவுமில்லை என்பதே அறிவியல் யதார்த்தவாதத்தின் மிக முக்கியமான கருப்பொருள்.
அறிவியல் தத்துவப் பார்வைகள்
பொருளின் இருப்பைத் துல்லியமாக அறிவது என்பது ஒரு சிக்கலான நிகழ்வு. இதையொட்டி தத்துவத்தில் இரண்டு உட்பிரிவுகள் உள்ளன. ஒன்று, பொருளின் இருப்பு பற்றியது (Ontology) மற்றொன்று பொருளை அறிவது (Epistemology). இந்த நுட்பமான இரண்டு தன்மைகளை ஒன்றிணைந்த வகையில் அறிவியல் யதார்த்தவாதம் அணுகுகிறது. இந்த பார்வைக்கு மாறாக பல்வேறு அறிவியல் தத்துவப் பார்வைகள் உருவாகியுள்ளன.

உதாரணத்திற்கு, தத்துவவியலாளர் ஹீயும் ‘பொருளின் இருப்பையும், அதன் தன்மைகளையும் அறிந்து கொள்வது இயலாது; அப்படி அறிய முயற்சித்து நாம் வந்தடையும் கருத்துக்கள் உண்மையானவை என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை‘ என்று வாதிடுகிறார். இதே போன்றே பெயரோ பெண்ட் என்பவர் ‘பொருளை பற்றி நாம் பெறும் முடிவுகள் தாறுமாறாகவும் இருக்கலாம்’ என்று கூறுகிறார். அதாவது, பொருளை அறிய முடியாது என்ற முடிவுக்கு சூசகமாக இந்த பார்வைகள் இட்டுச் செல்கின்றன. இதன் மூலம் அறிவியலின் பயன்பாட்டை, வெகுமக்கள் திரளுக்கு பலன் கிட்டுவதற்கு பதிலாக, அதனை குறுக்கிட முயற்சிக்கின்றனர்.

இதுபோன்று ஏராளமான போக்குகள் அறிவியல் தத்துவத் துறையில் (Philosophy of Science) தொடர்ந்து உருவாகி வந்துள்ளன. இவை அறிவியல் யதார்த்தவாதத்தை உருக் குலைக்க முயற்சிக்கின்றன. இதன் மூலம் அறிவியல் துறை, பொருள் முதல் வாதத்தோடு கொண்டுள்ள இயல்பான இணைப்பைத் துண்டிக்க முயற்சிக்கின்றனர். உண்மையில் அறிவியல், பொருள் முதல்வாதத்தோடு பிரிக்க இயலாத பிணைப்பு கொண்டது.

ஒரு அறிவியல் யதார்த்தவாதி, மார்க்சிய பொருள் வாதத்தின் பல நிலைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளாதவராகக் கூட இருக்கலாம். உதாரணமாக, மார்க்சிய பொருள் முதல் வாதம் சமூகத்தை ஆராய்கிறபோது, பொருளாதார உறவுகளும், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும்தான் சமூகத்தின் அடிப்படை கட்டுமானமாக காண்கிறது. இந்த அடிப்படை மீதுள்ள மேற்கட்டுமானம் தான், சமயம், அரசியல், நீதி உள்ளிட்ட பல நிறுவனங்கள். இதை ஒரு அறிவியல் யதார்த்தவாதி ஏற்றுக் கொள்ளாமல் கூட இருக்கக் கூடும். ஆனால், பொருள் முதல்வாதம் வலியுறுத்துகிற, பொருள்தான் சிந்தனைக்கு அடிப்படை என்பதை அவர் ஏற்றுக் கொள்கிறார். பொருளின் இருப்பே, பல பரிசோதனை செயல்பாடுகள் மூலம் பொருட்களின் தன்மைகளையும், அவை பற்றிய உண்மைகள் மற்றும் கோட்பாடுகளையும் கண்டறிய உதவுகிறது. இந்த வகையில் மார்க்சிய பொருள் முதல்வாதத்தின் பிரிக்க முடியாத உடன்பிறப்பாக அறிவியல் யதார்த்தவாதம் அமைகிறது.

போலி அறிவியல்
இந்த போக்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, போலி அறிவியல் என்பது இன்று, உலா வருகிறது. இது இந்தியாவில் இந்துத்துவா வடிவத்தில் ஊடுருவி வருகின்றது. இஸ்லா மியர்கள், கிறித்துவர்கள் போன்றோரைவிட இந்துக்கள் தான் உயரிய நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் கொண்டவர்கள் என்ற கருத்து இந்த போலி அறிவியலின் உட்கருத்து. இதனை நிறுவிட, வேத காலம் பொற்காலம் என்ற வாதத்துடன், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் அன்றே கண்டு பிடிக்கப் பட்டன என்று கூறி போலி அறிவியலைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். வேத கணிதம், வேத ஜோதிடம் என்ற அவர்களது சரக்கெல்லாம் இந்த வகை சார்ந்ததே. இந்துக்களை மதவெறி அடிப்படையில் ஒன்றுபடுத்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே இந்த போலி அறிவியலின் நோக்கம்.

தற்போது நடைபெற்று வருகின்ற இராமர் பாலச் சர்ச்சை இதற்கோர் உதாரணம். நம்பிக்கை என்ற அளவில் இருப்பவற்றை அறிவியல் உண்மை போன்றும், வரலாறாகவும் சித்தரித்து, தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனை இன்று இந்திய இந்துத்துவவாதிகள் போலி அறிவியலை பயன்படுத்துகின்றனர். ஆனால் ஹிட்லர் காலத்தி லேயே இது பாசிசத்திற்குப் பயன்பட்டது. குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தவன்தான் மனிதன் என்பது டார்வினின் அறிவியல் ரீதியான கண்டுபிடிப்பு. ஆனால் இதைப் பயன்படுத்தி, பரிணாம வளர்ச்சியில் முழுமையடைந்த அதிக ‘சுத்தமான‘ இனம், வெள்ளை ஜெர்மானிய ஆரியர்களே என்றும், உயர்ந்த பண்பாட்டு நாகரீகம் அவர்களுடையது என்றும் ஹிட்லரும், அவனது கூட்டமும் பிரச்சாரம் செய்தது. அறிவியல் போர்வையில் பரப்பப்பட்ட இந்த போலி அறிவியல் கருத்து, இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவிப்பதில் முடிந்தது. இந்திய நாட்டிலும் இதே வகையிலான இந்துத்துவ போலி அறிவியல் பல்லாயிரக்கணக்கான மக்கள் அழித்திடக் காரணமாக அமைந்தது. இது தொடர வேண்டுமா என்பதே தற்போதுள்ள முக்கிய கேள்வி.

இந்துத்துவாவை அரசியல் களத்தில் எதிர்த்துப் போராடினால் மட்டும் போதாது. மேற்கண்டவாறு அறிவியல் போர்வையில் பரப்பப்படும் மூடத்தனங்களை எதிர்த்த போராட்டமும் தேவை. இந்த போலி அறிவியலுக்கு எதிராக அறிவியலுக்கு யாதார்த்தவாதம் அமைந்துள்ளது. இயக்கவியல் பொருள் முதல்வாதத்தின் பிரிக்க முடியாத அம்சமாக அறிவியல் யாதார்த்தவாதம் அமைந்துள்ளது. மார்க்சிஸ்டுகள் அறிவியல் யதார்த்தவாதம் காக்கவும், வளர்க்கவும், தத்துவத்துறையில் போராட வேண்டும்.

கம்யூனிஸ்ட்டுகள் சித்தாந்தத் துறையில் ஆற்ற வேண்டிய கடமைகளை கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம்.
பல்வேறு நம்பிக்கை கொண்டோராக மக்கள் இருப்பினும், நம்பிக்கை வைத்துக் கொள்வதற்கான அவர்களது உரிமையை மதிக்க வேண்டும். (இதற்கு விதிவிலக்காக மூடநம்பிக்கைகளையும், ஒடுக்குமுறை நம்பிக்கைகளையும் அணுகிட வேண்டும்.)

  1. இதனால் மக்களிடம் ஏற்படும் நெருக்கத்தை வர்க்கப்போராட்ட அணி திரட்டலுக்கு பயன்படுத்த வேண்டும். இதன் ஊடாக, அறிவியல் பார்வையை அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
  2. போலி அறிவியலை அடையாளம் கண்டு அம்பலப்படுத்த வேண்டும்.
  3. அறிவியல் துறையில் குழப்பங்களை ஏற்படுத்தி வரும் பல கருத்து முதல்வாத போக்குகளுக்கு எதிராக, அறிவியல் யதார்த்தவாதத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
  4. அறிவியல் யதார்த்த வாதத்திற்கு அஸ்திவாரமாக விளங்கிடும் இயக்கவியல் பொருள் முதல் வாத அணுகுமுறையை சமூகத்தின் சிந்தனையாக மாற்றிட முயற்சிக்க வேண்டும்.

இவை அனைத்தையும், வரிசைக்கிரமமாக, நிகழ்ச்சி நிரல் அமைத்து செயல்படுத்துவது இயலாது. இந்தப் பணிகளை கம்யூனிஸ்ட்டுகள், சிறப்பாக மேற்கொள்வதற்கு வாய்ப்பான தளம், உள்ளூர் சமூகம். உள்ளூர் சமூக மக்களின் உணர்வு மட்டம் அறிந்து அதற்கேற்ற வகையில் மேற்கண்ட ஐந்து வகை சித்தாந்தக் கடமைகளை கம்யூனிஸ்ட்டுகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த சித்தாந்தப்பணி மிக முக்கியமானது. இதில் கம்யூனிஸ்ட்டுகள் அடையும் வெற்றி, சமூக மாற்றத்தை, சோசலிசத்தை சாத்தியமாக்குவது. ஏனெனில், தத்துவத் துறையில் எடுத்துச் செல்லப்படுகிற கருத்துக்கள் மக்கள் மனதை இறுக்கமாகக் கவ்விப் பிடிக்கின்ற போது, அந்தக் கருத்துக்கள் ஒரு பெரும் சக்தியாக மாறிடும். மார்க்ஸின் வார்த்தைகளில் அது “பௌதீக சக்தியாக” (Material Force) மாறிடும்.