‘சுரங்கம்’ நாவல்: ஒரு ஆய்வு !

  • இரா. குமரகுருபரன்

(நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள், சங்கமாக இணைந்து எழுச்சியுற்ற கதைக் கருவைக் கொண்ட முதல் நாவல் சுரங்கம் ஆகும். சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி எழுதிய இந்த நாவலை பற்றி சர்வதேச தமிழ் ஆய்விதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம் – ஆசிரியர் குழு)

இந்தியாவின் நிலக்கரிச் சுரங்கத் தொழில் 1774-ஆவது ஆண்டில் தனியாரால் தொடங்கப்பட்டது, உலகிலேயே துரிதமாகச் செயல்படும் சுரங்கங்களில் இரண்டாவது இடம் இந்தியாவிற்கே. உலகின் மிகப்பெரும் பத்து சுரங்க விபத்துகளில் இரண்டு இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.

தன்பாத் (ஜார்கண்ட்) தோரி நிலக்கரிச் சுரங்கத்தில் 28 மே 1965-ஆம் ஆண்டு நிகழ்ந்த தீ விபத்தைத் தொடர்ந்து சுரங்கம் வெடித்துச்சிதறி 268 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்தச் சுரங்கம் தனியாரான ராஜா ராம்கருக்குச் சொந்தமானது.  இந்த விபத்தின் எதிர்வினையாக, தனியார் நிலக்கரிச் சுரங்கங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற தொழிலாளர்களின் போராட்டங்கள் வலுத்தன.  இந்நிலையில், மத்திய அரசு 1971-72 ஆம் ஆண்டில் சுரங்கங்களை நாட்டுடைமை ஆக்கியது. உலோகவியல் நிலக்கரிச் சுரங்க தேசியமயமாக்கல் சட்டம் 1972 நிலக்கரிச் சுரங்கம் (தேசியமயமாக்கல்) சட்டம் 1973 ஆகியன நிறைவேற்றப்பட்டன.

அடுத்ததாக. 27 டிசம்பர், 1975 சாஸ்நளா (ஜார்கண்ட்) நிலக்கரிச் சுரங்கம் வெடித்து அதன் உடனடி விளைவாக 32,000 கியூபிக் மில்லியன் தண்ணீர் உட்புகுந்த வெள்ளப்பெருக்கில் 383 சுரங்கத் தொழிலாளர்கள் (இதில் 130 பேர் ஒப்பந்த ஊழியர்கள்) சிக்கிப் புதைந்து மாண்டனர். இந்தச் சுரங்கம் பொதுத்துறை இஸ்கோவுக்குச் சொந்தமானது. இந்த நிறுவனம் உலகத்தரத்தில் உள்ளதாகச் சொல்லித் தப்பித்ததை எதிர்த்து வழக்கு நடைபெற்றது. நாற்பது ஆண்டுகள் கழித்து 2012 ல் விபத்து குறித்த தீர்ப்பு வெளியானது. கவனக்குறைவினால் நடைபெற்ற விபத்து என்று குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஓராண்டுச் சிறையும் ஆளுக்கு ரூபாய் 5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி

சரஸ்வதி’ சிற்றிதழ் தொடங்கிய காலம் முதலாகவே 1950களிலிருந்து சிறுகதைகளையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி வந்தவர் கு.சி. பா. என்று அழைக்கப்படும் எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி ஆவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த அனுபவம் மிக்கவர்.

ஜனசக்தி, தீக்கதிர் முதலான நாளிதழ்களிலும் தாமரை, செம்மலர், சிகரம் முதலான மாத இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகி வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இவர் எழுதிய ‘சங்கம்’ புதினம் 1985 இலக்கியச் சிந்தனை விருது பெற்றது. “செம்மலர் மாத இதழில் இவர் எழுதிய தாகம், சங்கம், சர்க்கரை உள்ளிட்ட படைப்புகள் தொடராக வெளிவந்தன. தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி. தலைமுறை மாற்றம் முதலான நாவல்கள் ஆங்கிலம், இந்தி, வங்காளி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஃபிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘சுரங்கம்’ நாவல் உபாலி நாணயக்காரவின் மொழிபெயர்ப்பில் சிங்கள மொழியில் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது

‘சுரங்கம்’ நாவலின் பின்புலம்

மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புரமோத் தாஸ்குப்தா மையத்தில் கு.சி.பா. 1998 ஆம் ஆண்டு தங்கியிருந்தபோது, அசன்சால் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான பிகாஸ் சௌதரியைச் சந்தித்தார். அவரது வேண்டுகோளை ஏற்று அவரது தொகுதியில் அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி நாவல் எழுதும் முயற்சியைத் தொடங்கினார்.

பிகாஸ் சௌதரியின் வழிகாட்டலில் தன்பாத், ஜாரியா, அசன்சால் பகுதிகளிலுள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களிடையே தங்கி எண்ணூறு அடி முதல் ஆயிரத்து நூறு அடி ஆழம் வரை கொண்ட சுரங்கங்களுக்குள் சென்று, தொழில் நுணுக்கங்களையும், தொழிலாளர்கள் படும் சிரமங்களையும், வேதனைகளையும் கற்றறிந்து மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான தமது நண்பர் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி துணையுடன் வங்காளி, இந்தித் தொழிலாளர்களிடம் பேசிப்பழகி விவாதித்து, அவர்களின் வாழ்க்கைப்பாடுகளை அறிந்து, புதினமாகப் படைத்துள்ளார்.

“மனித வாழ்வின் சிரமங்களும் பிரச்சினைகளும் எங்கும் ஒரேவகைப்பட்டதானதால் மனிதர்களைப் புரிந்து கொள்வதிலான தடைகள் இடையூறுகளாக அமையவில்லை என்பது சாதகமான விஷயம். இருப்பினும் அம் மக்களின் முழு ஆன்மாவையும் தரிசிப்பதென்பது சாத்தியமற்ற விஷயம். அம் மனிதர்களுடன் கைபிடித்து, அம்மனிதர்களுக்குள் உருவாகும் அகமனப் போராட்டத்தை வெளிப்படுத்துவதும் கடினமான ஒன்று. இச் சிரமங்களுக்கு மத்தியில்தான் அவர்களின் கரங்களைப் பற்றவும் ஆன்மாவை தரிசிக்கவும் முயன்றிருக்கிறேன்” என்று மிகுந்த தன்னடக்கத்துடன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

‘சுரங்கம்’ கதைச் சுருக்கம்

வேலை, கூலி, உயிர்ப் பாதுகாப்பு என எந்த உத்தரவாதமும் அற்ற நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், இழப்பதற்கு ஏதுமின்றி. தங்களது உழைப்புச்சக்தியை முதலாளிகளின் லாபத்திற்காக மட்டுமே விரயப்படுத்தி உழல்கின்றனர் முதலாளிமார்களின் கஜானாவை நிரப்புகிறார்கள். சிறு சிறு தவறுகளைச் சொல்லி நியாயமான கூலியையும் சுரண்டிக் கொழுக்கிறார்கள் மேலதிகாரிகள். இதைக் களைவதற்காக போராடத் தங்களுள் ஒருவனான பிகாஸ் சௌதரியிடம் தலைமைப்பண்பு இருப்பதை மக்கள் சோதனைக்காலங்களில் உணர்கிறார்கள். பிகாஸ் குண்டர்களால் தாக்கப்படுகிறான். போராட்டம் தொடர்கிறது. பண்ணையடிமைகளாக இருந்தபோதிருந்து தொடரும் அச்சம் போராட்டப்பாதை ஊடாகக் குறுக்கிட்டுத் தடைசெய்கிறது.

எப்படியாவது காலம் மாறிவிடும்; காளி கண்திறப்பாள் என்ற நம்பிக்கையுடன் இருந்த பல தொழிலாளர்கள் இப்போது நிலைமையை உணர்ந்து தொழிற்சங்க உணர்வோடு வேலைநிறுத்தத்தில் இறங்கி, நிலக்கரிச் சுரங்கத் தொழில் நாட்டு உடைமை ஆக்கப்பட வேண்டுமென அணிதிரள்கிறார்கள். சுரங்கம் அமைக்கத் தங்களது விளைச்சல் நிலங்களை இழப்பீடு ஏதுமற்று விட்டுக்கொடுத்து எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளையும் தனி அமைப்பின் கீழ் இணைத்துக்கொண்டு போராட்டம் நடத்த அறைகூவல் விடுக்கிறார் பிகாஸ். மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம், உண்ணாவிரதம், முற்றுகை, சிறை என்று பலவழிகளில் போராட்டப்பாதை தீர்மானிக்கப்படுகிறது.

இப்படி ஒருவாறாக, நிலக்கரிச் சுரங்கம் நாட்டுடைமையாக்கப்பட்டு விட்டது. ஆனால், முதலாளி அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக, அரசுத் தலைமைப் பொறுப்பு, தனி அமைச்சர், பெர்சனல் மேனேஜர், ஜெனரல் மேனேஜர் என்று நிர்வாக அமைப்பின் பெயர்களில் மட்டுமே மாற்றம். கூலி கூடினாலும், நிலக்கரி வெட்டி எடுப்பதில் அதே நடைமுறையான முறையற்ற சுரண்டல் தொடர்கிறது. தொழிற்சங்கத்தலைவராக பிகாஸ் பலமுறை எச்சரித்தும் சுரங்கக் கட்டமைப்பு சரிசெய்யப்படாத நிலையில், நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக விபத்து நேர்ந்து, பல தொழிலாளர்கள் பலியாகின்றனர். சகலபகுதித் தொழிலாளர்களும் உயிர் நீத்தோரின் நினைவாகத் திரண்டெழுப்பிய அஞ்சலி கீதம் எதிர்கால சமத்துவ வளவாழ்வுக்கான எழுச்சி கீதமாகிறது.

யதார்த்த சூழல் சித்திரிப்பு

மனிதர்கள், கறையான் புற்றுப் போன்ற குடிசைகளில் குடும்பம் நடத்துகின்றனர். கறையான் புற்றுக்கு பாம்புகள் வருவது வழக்கம்தானே? விஷப்பாம்புக்கடிக்கு இரையாகும் மக்களும் உண்டு. பன்றிகள், நாய்கள் படுத்த கெட்ட வாடை பகலில் உட்கார உதவும் கயிற்றுக் கட்டில், இரவில் குழந்தைகளிடமிருந்து கணவன் மனைவியின் அந்தரங்கம் காக்கும் தடுப்புச்சுவராக எழுந்து நிற்கும். ஆறுமணிக்கு காலைச்சங்கு ஒலித்ததும் கூண்டிலிருந்து சர்க்கஸ் வளையத்துக்குள் நுழையும் மிருகங்களைப்போல் சுரங்கத்துக்குள் நுழையும் தொழிலாளர்கள் கறையான் புற்றிலிருந்து ஈசல்கள் இறக்கை முளைத்துப் பறப்பது போல லிப்டிலிருந்து வெளியேறுகிறார்கள். மேல்பகுதி இயந்திரக் கொட்டகையில் ‘பிட் பாட்டத்தில்’ (உள் அடித்தளம்; இருப்பவர்களுக்குக் கேட்குமாறு மின்சார மணியொலிப்பு பணிநேரம் முடிவடைவதைத் தெரிவிப்பதும் விளக்கையும் ஹெல்மெட்டையும் தொப்பியையும் காவலாளியிடம் ஒப்படைத்துக் கையெழுத்திட்டு தொழிலாளர்கள் கீழிருந்து மேலாக வெளியேறுவதும் அடுத்த ‘ஷிப்ட் தொழிலாளர்கள் மேலிருந்து கீழிறங்கி அவசர அவசரமாக உள்வேலைக்கான உடைகளை மாற்றிக் கொண்டு கேப் லேம்ப்’ அறைக்குச் செல்வதும், ஹெல்மெட்-ஹெட்லைட்-பேட்டரி அணிகலன்களை இடுப்பில் இறுக்கமாகக் கட்டிக் கொள்வதும் எந்திரத்தனமாக நடைபெறுகின்றன.

தண்டா (மூங்கில் கழி கொண்டு சுவற்றைத் தட்டிப்பார்த்து சுவர்க்கூரை வலுவை சோதிப்பது, ‘சேப்டி லேம்ப்’ மூலம் மீதேன் கேஸ், கார்பன்-டை- ஆக்ஸைடு கசிவு சோதிப்பது மைனிங் சர்தார் கடமை. நீர்க்கசிவு உடைப்பு சோதனை, நீர் எந்திரம் செயல்பாட்டைக் கண்காணிப்பது ‘பம்ப் கலாசி யின் பணி, நிலக்கரிப் படிவத்தை லேசான வெடிவைத்துத் தகர்க்கும் டிரில்லர்’ உடைபட்ட கரியை வெட்டிக் குவிப்பவர், அதை இரும்புத் தொட்டியில் அள்ளிப்போட்டுப் பாரம் ஏற்றுபவர்கள் என்று மூவகைப் பிரிவினர் இங்கு உடலுழைப்புத் தொழிலாளர்கள்.

கிணற்றுத்துளை வழி மேல்தளத்திலிருந்து இறங்கிவரும் மின்சார ஏணி, குடைவுச்சுவர் வழி ஒழுகும் நீர், மேற்கூரை இற்றுவிழும் ஓட்டை ஏணி, ஏணியின் துரு வாடை, கிரீசின் எண்ணெய் கமறல் ஏற்படுத்தும் குமட்டல் வாடை இருளில் ஏணி செல்லும்போது கூரையிலும் சுவர்களிலும் புரண்டோடும் ஊற்றுவெள்ளம். சுவர்ப்பக்கவாட்டு வாய்க்காலில் மழைவெள்ள இரைச்சல், ராட்சத மின் எந்திரங்கள் பள்ளங்களில் சேகரமான நீரை உறிஞ்சி தாரையாகக்கொட்டுவது, ஏணியிலிருந்து இறங்கிய தொழிலாளர்கள் ஒரேசமயத்தில் தங்களது ஹெல்மெட்கள் மூலம் இயக்கும் பேட்டரி வெளிச்சம் குறுக்களவு பதிமூன்று அடி – உயரம் ஒன்பது அடியுள்ள குடைவுப்பாதைகள், ஐம்பது அடி தடிமனான கிளைக் குடைவுத் தூண்கள் கரிப்படிவம் வரையிலான தோண்டுமிட எல்லைகள் என்ற சித்திரிப்புகள் யதார்த்தமான சுரங்கப்பாதைக்குள் திகிலுடன் நம்மைப் பயணிக்க வைப்பன.

கதை மாந்தர்கள்

பிகாஸ் சௌதரி

கதை எழுதத் தூண்டிய பிகாஸ் சௌதரியின் சொந்த தொழிற்சங்க வாழ்க்கை காரணமாக, நாயகன் பெயரும் பிகாஸ் சௌதரியாகவே அமைந்துவிட்டது. அரசியல் தொழிற்சங்க வாழ்க்கைக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டதால் நிஜ மனிதர் தோழர் பிகாஸ் சௌதரி இறுதி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் பிகாஸ் சௌதரி குறித்த நாடாளுமன்ற இணையதள விவரக்குறிப்பு இதை உறுதிப்படுத்துகிறது மேற்கு வங்க மாநில சிபிஐ எம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், மேற்கு வங்க மாநில இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மாநில செயற்குழு உறுப்பினராகவும், நான்கு முறை மேற்கு வங்க சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருமுறை நாடாளுமன்ற அவை உறுப்பினராகவும். மத்திய அரசின் நிலக்கரித்துறை தொடர்பான ஆலோசனைக் குழுக்களிலும் உறுப்பினராக இடம்பெற்றவர். புதின நாயகனும் இவரைப்போலவே தொழிற்சங்கவாதி; மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர். தத்துவப் பார்வையும் அரசியல் வழிகாட்டுதலும் தீர்மானம் மேற்கொள்வதில் தெளிந்த ஞானமும் பெறவேண்டும். அத்தோடு நிறையப் படிக்க வேண்டும் என எண்ணினான். அன்றாட உழைக்கும் மக்கள் நடத்தும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தையும் அரசியல் பொருளாதார. நடவடிக்கைகளையும் கற்றுத்தெளிவடைய ‘கணசக்தி’ பத்திரிகையைத் தற்பொழுது முறையாகப் படிக்க ஆரம்பித்தான். “கணசக்தி” என்பது மேற்கு வங்க மாநிலத்தின் சிபிஐ (எம்) கட்சி வெளியிட்டுவரும் வங்காள நாளிதழ் ஆகும்.

ஜமுனா குமாரி

பிகாஸ் பெற்றோர் இருவரும் காலமான பின்னர் தாய் ஸ்தானத்திலிருந்து வளர்த்துப் படிக்சு வைத்த பிகாஸின் அக்கா தம்பிக்குத் திருமணம் செய்து குடியும் குடித்தனமுமானால் வாழ்க்கை முன்னேறிவிடும் என்று நம்புபவள். ஒவ்வொரு முறையும் சுரங்கத்தில் தொழிற்சங்கத்தின் வேலை நிறுத்தம், மறியல் நடக்கும் போதும் நிர்வாகம், காவல்துறையின் தாக்குதலுக்கு ஆளாகும் பிகாஸ், துர்காதேவி அருளால் உயிருக்கு ஆபத்தில்லாமல் தப்பிப்பதாக’ நம்பும் ஜமுனா குமாரி தம்பியின் சமூக வாழ்க்கைக்குத் தடை செய்யவில்லை. எனவே தம்பியின் தொழிற்சங்க சமூக வாழ்வு இடையறாது தொடர்கிறது.

சகுந்தலா தேவி

வஞ்சகனான சுரங்க முதலாளி திவாரியின் மனைவி சகுந்தலா தேவி ’கருணைமிக்க சூழல் கைதி’ பூர்வீக கிராம வாழ்க்கையை ஏக்கத்துடன் அசைபோடுபவள். ஏழையான தன் பெற்றோருடன் உறவு அறுபடக் காரணம் கணவனின் ‘ திடீர் ‘ பணக்கார புத்தியும், பணக்கார ஒழுக்கக்கேடும் என்பதை நன்குணர்ந்தவள். அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட சமூக உயர்வட்டாரம்’ பங்கேற்கும் தமது மகளின் ஆடம்பரத் திருமண நிச்சயதார்த்தத்தில் தன் பெற்றோர் பங்கேற்பது இழிவு எனக் கணவன் கருதவே மனவேதனை கொள்கிறாள். அவனைப்பழிக்கிறாள். அவ்வப்போது பல பெண்களுடன் பாலியல் சகவாசம் வைத்திருக்கும் தன் கணவனை அறிவாள். தட்டிக்கேட்டு தனது மணவாழ்வு முறிந்துபட்டால் வரும் வலியை உணரக்கூடியவள் என்பதால், எதிர்க்க இயலாது அமைதி காக்கிறாள். ஆனால் தன்னையொத்த

சீமாட்டிகளைப் போல, கணவனின் ஒழுக்கக்கேட்டிற்குத் துணை போகும் பாத்திரமல்ல. பொதுவாக வில்லன் என்றாலே அவன் மனைவியும் அப்படித்தான் என்று சித்திரிக்கும் இலக்கிய பாத்திரங்களைப் போலல்லாதது சகுந்தலாதேவியின் பாத்திரப்படைப்பு.

கதையில் இடம்பெறும் அங்கத காட்சிகள் சமூக அழுக்குகள் அலசப்படும் இடமாக அமைகின்றன.

மாண்பற்ற முதலாளித்துவம்

ஒருமுறை சுரங்கத்தினுள் சிறுவெடி வைத்துக் கரிப்படிவத்தைப் பிளந்தெடுக்கத் துளையிடும்பொழுது தண்ணீர் பீய்ச்சியடிக்கத் துவங்கி விட்டது. அதை உடனடியாக அடைத்து விடும் முயற்சியில் ஈடுபடாவிட்டால் பெரிய விரிசல் ஏற்பட்டு நீர்ப்பிரவாகம் எடுத்து விடும். உள்ளே உள்ள அத்தனை பேர்களுக்கும் ஆபத்து ஏற்படும். இந்நிலையில் ஒரு தொழிலாளி தன் முதுகை அத்துவாரத்தின் மீது சாய்த்து தன் பலங்கொண்ட மட்டும் அமுக்கி நின்று கொண்டான். தொழிலாளர்கள் முட்டுப்பலகையை எடுத்தோடி வந்தனர். உடன் புதிய நெருக்கடி ஒன்று உருவாகிவிட்டது. அவன் அமுக்கிக் கொண்டிருந்த துவார வடும்பை ஒட்டி தண்ணீர் பீய்ச்சியடிக்கத் துவங்கிவிட்டது. அவன் நகர்ந்து ஒதுங்கினால் போதும், சுவரில் பெரும்பிளவு உருவாகிவிடும் இதையுணர்ந்த பொறியாளர் உடன் ஆபத்தைத் தடுக்க அமுக்கிக் கொண்டிருந்த தொழிலாளி மீதே பலகைகளை அழுத்தி முட்டடிக்க உத்தரவிட்டான். சிலுவையில் அறையப்பட்ட ஏசுவைப் போல உயிரோடு அத்தொழிலாளி சுவற்றில் அறையப்பட்டான் தன் சக தொழிலாளியின் உடல் மீது மனதைக் கல்லாக்கிக் கொண்டு மற்றவர்கள் அவ்வேலையைச் செய்து முடித்தனர். அவர்களால் மறுத்துப் பேசமுடியாத நிலை. சுரங்கப் பாதுகாப்புக்காகவும் தன் சக தொழிலாளர்களின் உயிருக்காகவும் அவன் தவிர்க்க முடியாமல் தன் உயிரைத் தியாகம் செய்தான். அந்த கொடும் நிர்ப்பந்தத்தால் விளைந்த தியாகம், நிர்வாகத்தால் சர்வ சாதாரணமாக கடந்து செல்லப்படுகிறது.

சோசலிச எதார்த்தவாதம்

எஸ். தோதாத்ரி சோசலிச எதார்த்தவாதத்தின் அடிப்படைகள் எனும் தமது நூலில் அதன் பண்புகளைக் கீழ்க்காணுமாறு கூறுவார். “உலக இலக்கிய அரங்கில் யதார்த்தவாதம் வளர்த்து வைத்திருந்த விதிமுறைகளை அடியொற்றியே சோசலிச எதார்த்தவாதம் எழுந்தது; எதார்த்தவாதத்தில் காணப்படும் சமூக ஆய்வு முறை வகைப்பாடான பாத்திரப்படைப்பு. சமூகத்தைப் புறவயமாக (objective) ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை இதிலும் தொடருகின்றன. சமூக விமரிசனமும் ஆழமாக இடம் பெறுகிறது. இவற்றிற்கெல்லாம் மேலாக சோசலிச எதார்த்தவாதத்தில் வேறு சில புதிய அம்சங்களும் இடம்பெறுகின்றன. உழைப்பு மனிதனது வாழ்வின் அடிப்படை என்ற நோக்கம் இந்த இலக்கியங்களில் காணப்படுகிறது சமூகம் இயங்கியல் பொருள்முதல்வாத முறையில் ஆய்வு செய்யப்படுகிறது. வர்க்கப் போராட்டத்தின் தன்மை சித்தரிக்கப்படுகிறது. உழைப்பவனைச் சார்ந்து நிற்கும் போக்கு காணப்படுகிறது. இதனையொட்டிய வரலாற்று உணர்வும் மனிதநேயமும் சமூக உணர்வும் மற்ற இலக்கியங்களில் காணமுடியாத அளவிற்கு இந்தவகை இலக்கியங்களில் மிகவும் விரிவாக இடம்பெற்றுள்ளன.

வரலாற்றுச் சூழமைவு

சுரங்கம் புதினம் முழுவதுமாக தொழிலையும் தொழிற்சங்கத்தையும் வளர்ப்பதாகவும், படிப்படியாக சமூக மாற்றம் கோரியுமாக வளர்கிறது. ஒடுக்கப்பட்ட முதல் போராட்டத்தில் சுரங்க முதலாளிகளின் கூலிப்படைகளால் தாக்கப்பட்டு அதிலிருந்து பாடம் கற்றுத் தெளிகிறான் பிகாஸ்.  சகதொழிலாளிகளிடமிருந்து எழுச்சி பெறும் ஒரு தலைமைப் பண்பாளனை அடையாளம் கண்டடைந்து, மேலும் போராட்டத்திற்கு ஊக்குவிக்கிறது தொழிலாளி வர்க்கம். எதார்த்தமான சூழலுடன் கிளர்ச்சிப் பிரச்சாரம் இணையவே கூடுதல் வலு கிடைக்கிறது. போராட்டம் வெற்றிபெறுகிறது. சூழல் கனியவே, சுரங்கத்தொழில் பொதுத்துறை வசமாகிறது,

கொள்ளை லாபமீட்டும் முதலாளித்துவ அமைப்பின் மீதான உரையாடல் தொழிலாளர்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் தோற்றுவிக்கிறது. தனியார் நிலக்கரிச் சுரங்கம் தோண்ட இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நிலம் தந்து ஏமாந்த விவசாயிகளையும் போராட்டத்தில் இணைப்பதன் தேவையை உணர்த்தும் தொழிற்சங்கத்தலைவர். வர்க்க சமரசமின்றிப் போராடும் தலைமையின் அவசியம் உள்ளிட்ட அம்சங்கள் சமூக விமர்சனமாக விவாதங்களில் இடம் பெறுவதோடு முரண்பாடுகளை கூர்மைப்படுத்துகின்றன.

சுரண்டலின் உச்சம்

கூலியைக் கூட ஏமாற்றிப் பிடித்தம் செய்து சுரண்டுவது முதலாளித்துவ நடைமுறை கந்துவட்டிக்காரர்களும் சாராயக்கடைக்காரர்களும் முதலாளிகளுக்கு மறைமுகமாக சேவைபுரிவது முதலாளித்துவ சுதந்திரத்தில் அனுமதிக்கப்படுகிறது. நியாயமான கூலிகேட்டு அணிதிரளாமல் பார்த்துக் கொள்வதில் இது முதலாளிகளுக்கு உதவுகிறது. சாராயம், கந்துவட்டியில் அவதியுறும் தொழிலாளர் வர்க்கம் இற்று அழிவதை முதலாளி வர்க்கம் வெறுமனே வேடிக்கை பார்க்கிறது. தன்னுயிரைத் திரணமாக மதித்து வளமான எதிர்காலத்திற்காக உழைப்பவர்கள் ஒருமுறையே சாகிறார்கள்; அடிமைகள் அன்றாடம் சாகின்றனர் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

வர்க்கப் போராட்ட பார்வை நாவலின் ஆதாரமாக ஓடுகிறது.  தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்கள் மீண்டும் பிகாஸ் சௌதரி தலைமையில் அணிதிரள்கிறார்கள் வர்க்கப் போராட்ட எதிர்ப்பைத் தாங்கிக்கொள்ள இயலாத நிர்வாகம், தொழிலாளர்களை உளவறிய முயல்வதையும், திரள விடாமல் தடுக்க எடுக்கும் முயற்சிகளையும் அலட்சியப்படுத்திவிட்டு முன்னேறுகிறது தொழிலாளி வர்க்கம்.

வர்க்கப் போராட்டம்

‘சுரங்கம்’ புதினம் முழுவதுமே அனுபவ ரீதியான படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு தொழிலாளி வர்க்கம் முன்னேறியதைக் காணலாம். நிலக்கரிச் சுரங்க நாட்டுடைமை எவ்வாறு நிறைவேறியது? ஒன்றுபட்ட தொழிலாளர்கள் விவசாயிகளின் உருக்குப்போன்ற ஒற்றுமையினால் தான். அளவில் ஏற்படும் மாற்றம் குணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதேபோலக் குணத்தில் ஏற்படும் மாற்றம் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். குறைந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை முதலாளிகளுக்குச் சாதகமே. கூடுதல் எண்ணிக்கை இதர பகுதி தொழிலாளர்களையும் வேலை இழப்பு அச்சத்திலிருந்து விடுவிக்கிறது. ‘ஒற்றுமைக்கான போராட்டம், போராட்டத்திற்கான ஒற்றுமை என்பதை தொழிற்சங்க இயக்கம் இயங்கியல் அடிப்படையில் அணுகுவதால் முதல் தோல்வியிலிருந்து பெறும் படிப்பினை படிநிலைகளில் வெற்றியடைவதில் முடிகிறது.

முடிவுரை

நாவலின் காலகட்டம் 1975 வரைக்குமானது என்று ஆசிரியர் கு.சி.பா., நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். எண்ணற்ற போராட்டங்கள் மூலம் தனியாரிடமிருந்து பொதுத்துறைக்கு சுரங்கத்தொழில் மாறியது. இருந்தபின்னும் சுரண்டல் முறை தொடர்கிறது சுரங்கத் தொழில் இப்போது மாஃபியாக்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. கொள்ளை லாபம் ஈட்டும் சுரங்கத்தொழில் மீண்டும் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. 1972- 73 ஆம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்ட சுரங்கத்தொழில் சட்டங்கள், மார்ச் 2015 ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டு மீண்டும் தனியாருக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

கரியற்ற சக்கையான சுரங்கங்கள் கைவிடப்பட்டு வேறு இடங்களை நாடுவதற்கு ஒப்பாக தொழிலாளர்களும் சக்கையானபின் தூக்கி வீசப்படுகிறார்கள். மீண்டும் பொதுத்துறைக்கு மாற்றப்பட்டு சுரண்டல் முறைக்கு முடிவுகட்டும் வரை விடியல் இல்லை. உலகமயமாக்கல் காலகட்டத்தில் ‘மீண்டும் லாபம், அதிக லாபம் மட்டுமே குறிக்கோள்’ எனும் சுரண்டல் புதுப்புது வடிவங்களில் உருவாகிறது.

சுரங்கம் நாவலில்,“தன்பாத் சுரங்கத்தில் ஒரு தொழிலாளி பிறருக்காக எப்படி தன்னைத்தானே உயிர்ப்பலி கொடுத்துக் கொண்டான்? என்ற தொழிலாளர்களின் அடிமனதில் உறைந்துவிட்ட சித்திரம் வீரயுக எழுச்சிப்பாடலாக ஒலிக்கும். பிகாஸ் விகாஸ் என்னும் வங்கமொழிப் பதத்திற்கு ‘வெளிச்சம்’, ‘பிரகாசம்’, ‘வளர்ச்சி’ என பல பொருள் உண்டு.  சுரங்க வாயிலில் வெளிச்சம் பரவி, நிரந்தர விடியல் காணும் இந்த புதினத்தின் வெற்றியையும் அவ்வாறே சொல்லலாம். வேற்று மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியில் செய்யப்பட்ட கள ஆய்வில் விளைந்த இந்த நாவல், தமிழில் வெளியானது. பல்வேறு வட்டார மொழிகளில் வெளியாகி உணர்வூட்டுகிறது. அதில்தான் அதன் வெற்றி அடங்கியுள்ளது.

மதமும் வகுப்புவாதமும்

சீத்தாராம் யெச்சூரி

(2002 நவம்பரில் சேவியர் சமூக சேவை கல்வி நிறுவனத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)

தமிழில்: கே. ராமசுப்பிரமணியன்

இன்றைய சூழல், அச்சுறுத்துவதாகவும், வகுப்புவாத பாசிச கருமேகங்கள் சூழ்ந்துள்ளதாகவும் இருக்கிறது. நவீன இந்தியாவின் அடித்தளத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசின் தன்மையை, சகிப்புத் தன்மையற்ற பாசிச சமூகமாக மாற்றிட அனைத்து நடவடிக்கைகளும் மிக வேகமாக எடுக்கப்படுகின்றன. சமீபத்தில் அரசின் ஆதரவுடனே குஜராத் மாநிலத்தில் நடந்த உறைய வைக்கும் வகுப்புவாத படுகொலைகள், வகுப்புவாத அரக்கனின் கோர முகத்தை வெளிக்காட்டியது. இதற்கு முன்பு குஜராத்திலுள்ள கிறிஸ்துவர்களுக்கு எதிரான மத வன்முறைகள் மற்றும் ஒடிசா போன்ற பல இடங்களில் நடந்துள்ள வகுப்புவாத வெறியாட்டங்களும், கிரஹாம் ஸ்டெயின்ஸ் குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்டதும் – இவை அனைத்தும் சகிப்புத் தன்மையற்ற பாசிச முகத்தை வெளிக்காட்டுகிறது.

இன்று இந்திய நாட்டுப்பற்றாளர்கள் முன் உள்ள மிகப் பெரிய சவால் என்பது நாம் அறிந்த இந்தியாவை பாதுகாப்பதே ஆகும்.

எனக்களித்த தலைப்பிற்குள்ளே செல்வதற்கு முன்,  சமகால இந்திய அரசியலில், சமூக, பொருளாதார வாழ்வில் ஏன் இத்தகைய அபாயகரமான பண்பு மாற்றம் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

வகுப்புவாத வன்முறைகளுக்கான காரணங்கள்

இந்திய சமூக, அரசியல் நிகழ்வுகளில் வகுப்புவாத மோதல்களும், விரோதங்களும், ஒரு பகுதியாக கடந்த ஒரு நூற்றாண்டாகவே இருந்து வந்துள்ளன. இன்றைக்கு புதிய பண்புகளோடு எழுந்து வருகிற தாக்குதல்களை ஊக்குவித்து, பதட்டத்தை தொடரச் செய்திடும் மூல காரணங்கள் யாவை?

இதனை ஆராய முற்படுகையில், சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்து வந்துள்ள வர்க்க ஆட்சி நடைமுறைகளின் விளைவுகளை பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியப் பெருமுதலாளிகளும், அதன் தலைமையும், இந்திய ஏகபோக மூலதனமும் தங்களுடைய சமூக அடித்தளம் குறுகியதாக இருக்கும் காரணத்தால், தனது வர்க்க அதிகாரத்தை தொடர்வதற்கு, நிலப்பிரபுக்களின் பகுதியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டார்கள். இக்கூட்டுச் சேர்க்கையே இந்திய சமூக அரசியலின் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் உள்ளடக்கத்தையும், வழியையும் தீர்மானிக்கக் கூடிய புதிய முரண்பாடுகளின் தொகுப்பை செயல்படுத்தத் தொடங்கியது.

மேற்சொன்ன கூட்டுச் சேர்க்கையின் காரணமாக ஒருபக்கம் ஆளும் வர்க்கத்தினால் ஏகாதிபத்தியத்தின் பிடியை தீர்க்கமாக உடைத்தெறிய முடியவில்லை. மறுபக்கம் நிலப்பிரபுத்துவம் இந்திய மக்களிடையேயும், பொருளாதாரத்தின் மீதும் கொண்டுள்ள ஆதிக்கத்தைக் களையவும் முடியவில்லை.

இக்கால கட்டத்தில், நடுத்தர வர்க்கம் விரிவடைந்துள்ளது என்றபோதிலும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தினால் உள்நாட்டு சந்தை மேலும் குறுகியிருப்பதையும்  பார்க்க முடிகிறது.

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்த்தால் நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை திட்டவட்டமாக முறியடிக்காமல், உலகில் எங்கும் முதலாளித்துவம் வளர்ச்சியடையவில்லை. அவ்வாறே இங்கும், ஒரு பக்கம் ஏகாதிபத்தியத்துடன் சமரசமும், மறுபக்கம் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசமும் செய்து கொண்டதால் இந்திய பெரு முதலாளிகளால் தாங்கள் விரும்பியது போல் சுதந்திர இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்க முடியவில்லை.

நிலப்பிரபுத்துவ கட்டமைப்பின் மேல் முதலாளித்துவத்தை திணிப்பதன் மூலம்  நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை அகற்றி விடலாம் என்ற இந்தியப் பெருமுதலாளிகளின் முயற்சி பயனற்று போனது.

இந்த காலகட்டத்தில், பெருவாரியான இந்திய மக்கள் வருமானம் இல்லாமல்,  வாங்கும் சக்தியை இழந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை மேலும் குறுகத் தொடங்கியது. ஆளும் வர்க்கமோ, வாங்கும் சக்தியை பெருக்கும் விதத்தில்  முழுமையான நிலச் சீர்திருத்தம் எதையும் செய்திட முன்வரவில்லை. இந்த நிலையில், தனது முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு தடங்கல் ஏதும் ஏற்படாமலிருக்க அந்நிய சந்தையை நாட வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய முதலாளிகள் தள்ளப்பட்டனர்.

இப்போக்கின் காரணமாக, ஏகாதிபத்திய நாடுகளின் மூலதனத்தையும் தொழில்நுட்பங்களையும் கூடுதலாக சார்ந்திருக்கும் நிலைக்கு இந்தியப் பொருளாதாரம் தள்ளப்பட்டதுடன், அந்நிய நாட்டு சந்தையோடு போட்டிபோடும் நிலையும் ஏற்பட்டது. இதன் விளைவுதான் புதிய பொருளாதாரக் கொள்கையும், இந்திய மக்களின் மீதான அதனுடைய பேரழிவுத் தாக்குதல்களும் ஆகும்.

மேற்சொன்ன விதத்தில், நிலப்பிரபுத்துவத்துடன் செய்துகொண்ட சமரசம், இந்திய பெருமுதலாளிகளுக்கு பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தியது. அந்த முரண்பாட்டில் இருந்து விடுபடுவதற்கு, அபாயகரமான வகையில் ஏகாதிபத்தியத்தினை சார்ந்திருக்க வேண்டிய நிலைமையும், மறுபுறம் இதனால் ஏற்பட்ட நெருக்கடியினை பொதுமக்களின் தோள்களில் மாற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. முரண்பாட்டின் ஒரு வெளிப்பாடாக இது இருக்கையில், அதற்கு ஈடான, இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த, மற்றொரு வெளிப்பாடும் உள்ளது. நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை, தனது கட்டமைப்பில் இருந்து நீக்க முடியாத காரணத்தால் நிலப்பிரபுத்துவத்தோடு இணைந்த சமூக உணர்வுநிலை இன்றும் நிலைத்து நிற்கிறது’. இந்த நிலைமையினுடைய தாக்கத்தினால் வகுப்புவாதமும், சாதீயமும் சமூக ஒழுக்கத்தின் மீது ஆதிக்கத்தை தொடர்ந்தன. எனவே நிலப்பிரபுத்துவத்தின் மீது முதலாளித்துவத்தை திணிக்கும் இந்த முயற்சியினால், நிலப்பிரபுத்துவத்துடன் இணைந்த பிற்போக்கு உணர்வுடன் கூடவே, சீரழிந்த போட்டி உணர்வுடன் கூடிய முதலாளித்துவமும் உருவானது.

இந்நிலையில் முதலாளித்துவ வளர்ச்சியில் விளைவான வர்க்கங்களின் உருவாக்கம் (தொழிலாளி வர்க்கம் போன்றவை), ஏற்கனவே உள்ள, சாதிப்பிரிவு சமூக நிலைகளின் உள்ளாகவே உருவாகியது. முதலாளித்துவத்திற்கு முன்பு இருந்த சமூக உறவுகளை மாற்றி அமைக்காமலேயே, அதனுடன் முதலாளித்துவம் சமரசம் செய்து கொண்டதால் இந்திய சமூகத்தில் ஏற்பட்டிருக்கிற மிகச் சிக்கலான இப்பிரச்சனையின் காரணத்தையும், அதனால் ஏற்பட்டு இருக்கிற விளைவுகளையும் இந்த போக்கு மிகத் துல்லியமாக விளக்குகிறது.

ஆகவே, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி என்பது ஏற்கனவே உயிரோட்டமாக உள்ள சாதியத்தையும், சாதிய ஒடுக்குமுறைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. சமகால இந்தியாவில் சுரண்டப்படும் வர்க்கத்திற்கும், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் இடையே ஒட்டிக் கொண்டுள்ள பொதுத்தன்மையை இது துல்லியமாக காட்டுகிறது.

இவ்வாறு தரம் மலிந்த நிலப்பிரபுத்துவமும், சீரழிந்த முதலாளித்துவமும் இணைந்து, சமூகத்தின் மேல்கட்டுமானத்தில் குற்றமயமாக்கல் பெருக வழிவகுக்கின்றன. அத்துடன், சாதிய வகுப்புவாத சக்திகள் ஒன்றாக ‘வளரவும் வழிவகை செய்கின்றன. இந்த நிலைமையை ஆளும் வர்க்கங்கள் தங்களது அரசியல் மற்றும் தேர்தல் வாய்ப்புகளுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன.

மேலே குறிப்பிடப்பட்ட முரண்பாடுகளின் வெளிப்பாட்டின் அடிப்படையில், விடுதலை இந்தியாவில் மதவாத வன்முறைகளை வகுப்புவாத சக்திகள் அரங்கேற்றுகிறார்கள். நாட்டில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள நெருக்கடி, இந்திய மக்களின் மனதில் பல வருடங்களாக சேர்ந்துள்ள அதிருப்தியை மேலும் வளர்த்துள்ளது. பரபரவென்று  வளர்ந்து வருகிற நடுத்தர வர்க்க மக்களிடையேயும் இந்த அதிருப்தி வளர்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடுத்தர வர்க்கம் இன்றும் சுரண்டலுக்கு ஆளாகிற பகுதியிலிருந்து நடுத்தர வர்க்கமாக வந்தவர்களே ஆவர். சுரண்டும் வர்க்கத்தினுடைய உணர்வுகளின் ஆதிக்கத்துடன், நடுத்தர வர்க்கத்தினரின் அதிருப்தியும் இணைவதால் வகுப்புவாத சக்திகள் வளர்வதற்கு ஒரு வளமான தளம் அமைகிறது.

சமூகத்தில், பிற்போக்கு உணர்வுகள் நிலைத்து இருக்கையில், வகுப்புவாத சக்திகள் நிலவுகின்ற அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, வகுப்புவாதத்திற்கு மடை திறந்துவிட்டு, தங்களது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

அதற்காக அவர்கள் இருமுனைத் தந்திரங்களை கையாளுகின்றனர். ஒருபக்கம் இந்தியாவிலுள்ள பல தரப்பட்ட சமூகங்களாகப் பிரிந்து கிடக்கிற – ஆனால் இந்து மதத்தை தழுவக் கூடியவர்களாக உள்ள அனைவரையும் ஒன்றாகக் கட்டி இணைப்பது. மற்றொரு பக்கம், இந்து அல்லாதவருக்கு எதிராக வெறுப்புணர்ச்சியைத் தூண்டி எதிரிகளாக்குவது – உதாரணமாக முஸ்லீம், கிறிஸ்துவர் இவர்களுக்கு எதிராக –  இந்த இரண்டு முனைகளிலும் தங்களது நோக்கத்தை அடைவதற்காக அவர்கள் கையாளும் பிரச்சார இயந்திரங்கள் பாசிச வெறியோடும், நவீன தொழில்நுட்பங்களோடும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

பார்க்கப் போனால், இந்து ராஜ்யம் என்பதற்கான அடித்தளம் 1920களில் வி.டி. சாவர்க்கர் என்பவரால் போடப்பட்டது. பின்பு 1925இல் தோன்றிய ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இக்கொள்கையை தனதாக்கிக் கொண்டது. 1930 பின்பகுதி காலங்களில் ஆங்கிலேய அரசு இந்த மதப்பிரிவு நிலையினை கண்டுகொண்டு அதனை தனது சுயலாபத்திற்காகப் பயன்படுத்தியது.

இந்நோக்கத்தை வெளிப்படுத்தியவர் ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவராக பணியாற்றிய எம்.எஸ். கோல்வால்கர் தான். 1939இல் அவர் எழுதிய, நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசம் என்ற அவரது நூலில், விளக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கத் திட்டத்தில், உறைய வைக்கக் கூடிய அளவுக்கு வெளிப்படுத்திய பாசிச எண்ணங்களே இன்றும் காவிக்கும்பலுக்கு ஊக்கமளிக்கிறது.

இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே தேசிய இனம் என்ற ஆதாரமற்ற கூற்றை பொறுப்பற்று அறிவித்து விட்டு அவர் சொல்வது “(இந்த நாட்டில்) அந்நியர்களாக உள்ளவர்களுக்கு இரண்டே வழிகள் உள்ளன. ஒன்று (இந்து) தேசிய இனத்துடன் ஒன்றரக்கலந்து அதன் கலாச்சாரத்தை ஏற்று வாழ வேண்டும்; அல்லது அந்த தேசிய இனத்தின் கருணையில் அவர்கள் எவ்வளவு நாட்கள் வாழ விடுகிறார்களோ அதுவரையில் வாழ்வது. (அவர்கள் கூறும்போது) அந்த தேசிய இனத்தின் அன்பு கோரிக்கைக்கு இணங்க நாட்டை விட்டு வெளியேற வேண்டும்”.

இந்த நிலைபாட்டிலிருந்து, புத்திசாலித்தனமாக நடந்து கொண்ட முந்தைய நாடுகளின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது – இந்துஸ்தானில் உள்ள அந்நிய இனங்கள் இந்து கலாச்சாரத்தையும், மொழியையும் கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றும் இந்து மதத்திற்கு மரியாதையாக இருப்பதுடன், அந்த மதத்தை பய பக்தியுடன் அணுகிட வேண்டும். இந்து இனத்தையும், அதன் கலாச்சாரத்தையும் மகிமைப்படுத்துவது தவிர வேறு எந்த எண்ணத்திற்கும் இடம் கொடுக்கலாகாது – இது இந்த தேசத்திற்கும் சேர்த்து தான். அவர்களுக்கான தனித்துவமாக உள்ள வாழ்க்கையை விட்டு விட்டு இந்து இனத்துடன் ஒன்றிணைந்து விட வேண்டும். மற்றும் இந்து தேசத்திற்கு அடிபணிந்து வாழ வேண்டும். அவர்கள் எந்த உரிமையையும் கேட்கக் கூடாது. அவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. முன்னுரிமை அளிக்கக் கூடிய நடவடிக்கைகள் எதனையும் நினைக்கவே கூடாது. குடிமக்கள் உரிமை என்பது கூடவே கூடாது. அவர்கள் பின்பற்ற வேறு மார்க்கம் எதுவும் இருக்கக் கூடாது. நாம் ஒரு புராதான நாடு. புராதான நாடுகள் அந்நிய இனத்தை எவ்வாறு நடத்துமோ அதேபோன்று நம் நாட்டை தேர்ந்தெடுத்துள்ள அந்நிய இனத்தை நடத்துவோம்”.

புரதான அரசுகள் எப்படி நடத்தின. இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை பாதுகாத்திட ஜெர்மனி தனது நாட்டிலுள்ள யூதர் இனத்தை கொன்று குவித்தது. இனப் பெருமை மிக உயர்ந்து இருப்பதை இது வெளிக்காட்டியது. ஜெர்மனி நமக்கு காட்டுவதெல்லாம் இனத்திலும், கலாச்சாரத்திலும் அடிப்படையில் வேறுபடுகிற நிலையில் உள்ளவை ஒருங்கிணைந்து ஒன்றாக மாறுவது என்பது முடியாதது ஆகும். இதை இந்துஸ்தான் ஒரு படிப்பினையாக ஏற்று நாம் பலனடைந்திட வேண்டும்.

இதே கோல்வால்கர்தான் மகாத்மா காந்தி சுட்டு கொலை செய்யப்பட்ட போது, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டதை அடுத்து, அன்றிருந்த உள்துறை அமைச்சர் சர்த்தார் பட்டேல் அவர்களிடம் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்கக் கோரினார், “ஆர்.எஸ்.எஸ். இனி கலாச்சார அமைப்பாக மாத்திரம் செயல்படும்” என்றும் உறுதி அளித்தார். இதன் பிறகு மாற்றாக ஒரு அரசியல் அமைப்பை தேடிக் கொண்டிருந்த கோல்வால்கர், அன்றைய ஜவஹர்லால் நேரு மீது அதிருப்தியை வெளியிட்டு, மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறிய ஸ்யாம பிரசாத் முகர்ஜியை வைத்து 1951இல் ஒரு புதிய அரசியல் கட்சியை ஸ்தாபிக்க சில பிரச்சாரகர்களை அனுப்பினார். அன்றைக்கு ஸ்யாம பிரசாத் முகர்ஜியை சந்தித்துப் பேச அனுப்பப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் இன்றைய பிரதமர் (வாஜ்பாய்), மற்றொருவர் இன்றைய உள்துறை அமைச்சர் (அத்வானி). ஆக இன்றைக்கு அவதாரம் எடுத்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் முன் அவதாரமான ஜனசங்கம் இவ்வாறு தான் தொடங்கப்பட்டது.

எனவே, இன்றைக்குள்ள பாரதிய ஜனதா கட்சி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் உறுப்பு என்பதை யாரேனும் மறுப்பார்களேயானால் அவர்கள் முட்டாள்களின் கூடாரத்தில்தான் இருப்பார்கள் என்று சொல்லலாம்.

மேலும், பிறகு கோல்வால்கர் எழுதிய சிந்தனைக் கொத்து என்ற நூலில், ஒரு தனி அத்தியாயத்தில் இவ்வாறு எழுதினார்: இந்திய நாட்டு மதச்சார்பின்மையை அழிப்பதை மூன்று உள்நாட்டு எதிரிகள் தான் தடுத்து நிறுத்துகின்றன. அவை தான் ஆர்.எஸ்.எஸ். பாசிச இந்து ராஜ்யத்தை நோக்கி நடைபோடுவதையும் தடுத்து நிறுத்துகின்றன. ஆர்.எஸ்.எஸ்.சின் கண்ணோட்டத்தில் அவைகள் ஒன்று முஸ்லீம் மதத்தினர், இரண்டாவது கிறிஸ்துவ மதத்தினர். மூன்றாவது கம்யூனிஸ்ட்டுகள். ஆகவே பால் ரோப்ஸன் சொன்னது போல் “நாம் அனைவரும் ஒரே படகில் தான் சகோதரரே” (என்று அங்கு திரண்டு இருந்தவர்களைப் பார்த்துக் கூறினார்)

இதன் பிறகு கிடைத்துள்ள அனுபவங்கள் ஒரு உண்மையை கோடிட்டு காட்டுகிறது.  அதாவது இந்து மதவாத அடிப்படைவாதிகளும், முஸ்லீம் மதவாத அடிப்படைவாதிகளும் (எந்த மதத்தைச் சார்ந்த அடிப்படைவாதிகளாக இருந்தாலும்) அவர்களது இன்றைய நடவடிக்கை என்பது நமது இன்றைய நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக ஆட்சி முறை பெற்றிருக்கும் சுதந்திரத்தையும், இறையான்மையையும் நேரடியாக தாக்குவதாகவே அமைகிறது. இந்த இரண்டு சக்திகளுமே ஒன்றுக்கொன்று ஊட்டத்தை கொடுத்துக் கொள்கிறார்கள். இந்த இரண்டு சக்திகளும், மதச்சார்பின்மை, ஜனநாயகம், நாட்டுப் பற்று போன்ற நவீன கருத்துக்கள் மீது முன்னெடுக்கும் தாக்குதல்கள் ஒரேமாதிரி உள்ளன. அவர்கள் மதத்தை மையமாகக் கொண்ட ஒரு சிதைந்த தேசியத்திற்குள் தங்களை வரையறுத்துக் கொண்டுள்ளார்கள். எந்த ஒரு தேசியத்தின் உருவாக்கத்திலும், ஒற்றுமைப்படுத்தும் காரணியாக மதம் என்றைக்கும் இருந்ததில்லை; இருக்கப் போவதும் இல்லை என்ற வரலாற்று படிப்பினைகளை ஏற்க மறுக்கின்றனர். (உதாரணமாக பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷ் பிரிந்தது) மாறாக, அரசியலிலும், சமூக அமைப்பிலும் மதம் தான் ஆதிக்கம் செலுத்திட வேண்டுமென்று வாதாடுகின்றனர். இவ்வாறு அவர்கள் வரலாற்றில் விளைந்த, விஞ்ஞான அடிப்படையிலான தேசியத்தை மறுக்கின்றனர்.

வகுப்புவாதமோ அல்லது அதன் அடிப்படைவாதிகளின் தத்துவமோ மதத்தை உயர்த்திப் பிடிப்பதாகவும் இல்லை; அதை பாதுகாக்கவும் இல்லை. மாறாக, மக்களிடையே நிலவுகிற மதப் பிளவுகளைப் பயன்படுத்தி, தனது குறிப்பிட்ட அரசியல் நோக்கத்திற்காக பிளவுகளை தீவிரமாக்கவும், நிலைநிறுத்தவும் செய்கின்றனர். அவர்களது இந்த தத்துவம் மதங்களிடையே மோதலை உருவாக்கி குறிப்பிட்ட அரசியலுக்கு பயன்படுத்துவதற்கு மட்டுமே உதவுகிறது. ஆங்கிலேயர்கள் மதங்களிடையே உள்ள வெறுப்பை தங்களது காலனி ஆதிக்கத்தை நிலைநிறுத்திட பயன்படுத்தினர். பின்பு இந்த மத மோதல்கள் கட்டுக் கடங்காமல் போகவே நமது தேசத்தை இரண்டாகப் பிரிப்பதில் வெற்றி கண்டனர். இன்றும் இக்கசப்பான நிகழ்வுப்போக்கு எண்ணற்ற உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே, வகுப்புவாதம் என்பது மதங்களிலிருந்து தன்னை நீக்கிக் கொண்டு தள்ளி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. வகுப்புவாதம் பிற மதத்தினரின் பால் வெறுப்பை உண்டாக்கியும், நீடிக்கச் செய்தும், தான் இருப்பதற்கும், வளர்வதற்கும் அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறது.

மதமும் – மார்க்சியமும்

இப்படிப்பட்ட சூழலில், மார்க்சிஸ்ட்டுகளுக்கு மதம் பற்றி உள்ள புரிதலைக் குறித்து சர்ச்சைகள் அதிகமாக எழுப்பப்படுகின்றன. இதில் மிகப் பிரபலமான கருத்தாக இருப்பதும், கூறப்பட்ட சூழலில் இருந்து விலக்கி எடுத்தாளப்படுவதுமான மதம் என்பது மக்களுக்கு அபின் போன்றது என்ற மார்க்சின் கூற்று ஆகும்.

அந்த மேற்கோள் எந்த பகுதியில் இடம் பெறுகிறதோ அது, வேண்டுமென்றே,  முழுவதுமாக வெளியிடப்படவில்லை. உண்மையில் மார்க்ஸ் கூறியது மத (நம்பிக்கையோடு கூடிய) துயரம் என்பது அதே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடே ஆகும். அது உண்மையான துயரத்திற்கு எதிர்ப்பை தெரிவிப்பதும் ஆகும். மதம் (மத நம்பிக்கை) ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு. இதயமற்ற உலகில் (அரவணைக்கும்) இதயம். ஊக்கமற்ற நிலையில் ஊக்கமளிப்பதும் ஆகும். இது மக்களுக்கு அபின் போன்றது. (அக்காலத்தில் காயத்தினால் ஏற்படும் வலியை  மறந்திட அபின் கொடுக்கப்பட்டது – மொழி பெயர்ப்பாளர்)

மதத்தை அபினுடன் ஒப்பிடுவதற்கான காரணம் அபினுக்கு உள்ள குணத்தை ஒத்த விதத்தில் மதமும் ஒரு மாயையை ஏற்படுத்துவதால் தான். துயரம் தாங்க முடியாமல் இருக்கும் மனிதனுக்கு அதிலிருந்து நீக்கம் அளிக்கிறது. இதயமற்ற உலகில் (அரவணைக்கும்) இதயத்தையும், ஊக்கம் அற்ற நிலையில் ஊக்கத்தையும் அளிக்கிறது.

(அவர்களது துன்பமானது) அவர்களது உணர்வு நிலைக்கும், கட்டுப்பாட்டுக்கும் அப்பால் இருக்கும் நிலைப்பாடாகத் தொடர்கிறது என்ற துல்லியமான காரணத்தால் அவர்களை செயலற்ற தன்மைக்கு இட்டுச் சென்று மந்தப்படுத்த இந்த அபின் மக்களுக்கு தேவையாகிறது.

மதங்கள் குறித்து, மார்க்சிஸ்டுகள் கொண்டுள்ள புரிதல், அந்த மதம் ஒரு தத்துவத்தின் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதை புரிந்து கொள்வதே ஆகும். மார்க்ஸ் தான் வாழ்ந்த காலத்தில் மனிதர்களுடைய உண்மையான சுதந்திரத்தையும், அவர்களுடைய முழுமையான விடுதலையையும் எது தீர்மானிக்கிறது என்ற கேள்விக்கு விடை தேடுகையில், ஹெகலின் தத்துவமான மனதின் புரட்சி என்ற தத்துவத்தை – அதை ஃப்யூயர்பாக் அவர்களும் பரிந்துரைத்ததை – மறுத்து எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமான விளக்கத்தை அளித்தார்.

அது என்னவென்றால்; மனிதர்களுடைய உணர்வுகளை சமூக நிலைமைகளே தீர்மானிக்கிறதே தவிர அதற்கு மாறான  வகையில்  அல்ல. அதாவது, “மனிதர்களின் உணர்வுகள் அவர்கள் இருக்கும் நிலையை தீர்மானிக்கவில்லை. மாறாக, அவர்களது சமூக நிலைகளே அவர்களது உணர்வுகளை தீர்மானிக்கிறது. (Introduction to Critique of Political economy)

மேற்கண்ட முக்கியமானதும், மூல ஆதாரமான முடிவின் அடிப்படையில் மார்க்ஸ் கூறியது, “சமயப் பற்றற்ற இந்த விமர்சனத்திற்கான அடிப்படை. மனிதனே மதத்தினை உருவாக்கினான். மதம் மனிதனை உருவாக்கவில்லை.” வேறு சொற்களில் சொல்வதென்றால், மனிதர்களின் உணர்வுகள் பல விதங்களில் வெளிப்படுவது போல், உதாரணமாக, அவனது சிந்தனையும், அதன் விளைவாக ஏற்படுகிற அறிவுசார் நடவடிக்கைகளும் போல், மதமும் மனிதனுடைய சமூக வாழ்க்கையின் ஒரு விளைவுதானே அன்றி, மதம் தான் சமூக வாழ்க்கைக்கு காரணம் என்றோ, சமூக வாழ்க்கையை உண்டாக்கியது என்றோ கூறுவதற்கில்லை.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது, மதம் என்பது சமூக வரலாற்றின் உந்து சக்தியில் இருந்து விலகி தன்னைத் தானே ஆட்கொண்டதும் அல்ல; தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டதும் அல்ல. ஆகவேதான், மார்க்சிய தத்துவம் கோபர்நிகஸூக்கு கொடுத்த இடருக்காகவோ அல்லது ஏகலைவனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவோ மதத்தின் மீது குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் இந்நிகழ்ச்சிகள் அனைத்துமே மதம் ஒரு தத்துவமாக ஆதிக்கம் செலுத்துகிற காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளது என்பதை பதிவு செய்யப்பட்ட வரலாறு தெளிவாக்குகிறது.

மதம் என்பது ஒரு ஆதிக்கம் செலுத்தும் தத்துவமாக இருக்கும் நிலையில் முற்போக்காளர், பிற்போக்காளர், சொந்த நலன்களையே நோக்கும் அதிகார வர்க்கம் அல்லது சுரண்டப்படுகிற வர்க்கங்களின் கோரிக்கைகள் – இப்படி அனைத்து மனிதர்களின் உணர்வுகளில் மதப் பற்று வேறுபாடில்லாமல் வியாபித்திருக்கிறது. ஆனால், மார்க்சிய தத்துவம் ஆக்கப்பூர்வமான முற்போக்கு கருத்துக்களையும், சீர்திருத்த இயக்கங்களையும் உள்ளடக்கிய மதப் பழக்கவழக்கங்களை கவனத்தில் கொள்கிறது. உதாரணமாக, சுஃபி மற்றும் பக்தி இயக்கங்கள். அதே சமயத்தில் இந்த இயக்கங்கள் தங்களை மதப்பிடிப்புக்குள் இருத்திக் கொண்டதால், சமூகத்தில் தேவையான மாற்றங்களை செய்வதற்கு சாத்தியமில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. எந்த சமூக நிலைமைகளின் காரணமாக, குறிப்பிட்ட வடிவிலான மத நடவடிக்கைகள் ஆதிக்கம் பெற்றனவோ, அந்த சமூக நிலைமைகளை மாற்றினாலொழிய இந்த குறிப்பிட்ட மதத்துடன் இணைந்த ஒடுக்குமுறைகளை அகற்றிவிட முடியாது. இவ்வாறு மார்க்சியமானது மதங்களின் ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை அங்கீகரிக்கிறது, அவற்றின் சீர்திருத்தக் கருத்துக்களுடைய வரம்பை அறிந்துள்ளது. மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக, மனித உணர்விற்குள் பொருந்தி இருக்கும் பகுதியாக மதங்களின் வரலாற்று வளர்ச்சியைப் பார்க்கிறது.

ஆகவே மார்க்சிச தத்துவம் வரலாற்று நிகழ்வுகளுக்கு அறிவியல் விளக்கங்களை தருகிற நிலையிலும், சமூகப் போராட்டங்களில் மதங்கள் ஆற்றியுள்ள சிக்கலான பாத்திரங்களையும் கவனத்தில் கொள்கிறது.

ரோமப் பேரரசின் சிதைவுக்கு காரணமான மக்களின் பேரெழுச்சியின் விளைவாக கிறிஸ்துவ மதம் தோன்றியதை பார்த்திடலாம். அதேபோல் அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த நாடோடிகளுக்கும், நகர மக்களுக்கும் நடந்த போராட்ட விளைவுகளாலும், அபிசீனிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நாட்டை மீட்டிட எழுந்த அரேபிய தேசிய உணர்ச்சியும், அதன் மூலம் பல காலமாக உபயோகப்படாமல் இருந்த வர்த்தக வழிகளை மீட்டெடுப்பதுமே இஸ்லாம் மதம் தோன்றக் காரணம் என்பதை மார்க்சும், ஏங்கல்சும் சுட்டிக் காட்டுகின்றனர். இதுபோலவே சிதையும் நிலப்பிரபுத்துவத்திற்கும், வளரும் முதலாளித்துவத்திற்கும் நடந்த போராட்டத்தின் விளைவே பிராட்டஸ்டென்ட் சீர்திருத்தம் தோன்றக் காரணம். அழிக்க முடியாத பிராட்டெஸ்டென்டுகளின் எதிர்ப்புக் கொள்கைகளே வெல்ல முடியாத முதலாளித்துவத்தின் உதயத்திற்கு காரணமானது. (ஏங்கெல்ஸ் – ஃபயர்பாக்)

ஆகவே, மார்க்சுக்கும், மார்க்சிய தத்துவவாதிகளுக்கும், மதம் என்பது சமூக நிலைமைகளினால் ஏற்பட்ட விளைபொருளே; அதில் மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதும், வாழ்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்கிறோம். மதங்களின் வரலாறு என்பது ஒரு விதத்தில் பார்த்தால் மனித பரிணாம வளர்ச்சியின் பிரதிபலிப்பே ஆகும். இவ்வகையில் மதம் என்பது யதார்த்த உலகின் பிரதிபலிப்பு ஆகும். இயற்கையின் வலிமையும், சமூக நிகழ்வுப்போக்குகளுமே வாழ்வின் வழிகாட்டும் விதி.தால் புரிந்துகொள்ள முடியாத நிலைமையில் இயற்கையினைக் கடந்த வேற்று கிரக சக்தி ஒன்றை கற்பித்துக் கொள்வது அவர்களுக்கு அவசியமாகிறது. ஆகவே மதம் என்பது மனித குலத்திற்கு ஆறுதலையும், வாழ்வின் மீதான ஈர்ப்பையும், நிம்மதியையும் தருகிறது. அதேசமயத்தில், ஆதிக்கம் செலுத்தக்கூடிய தத்துவமாக மதம் அமைகின்றபோது, அந்த காலகட்டத்தில் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்துடைய வெளிப்பாடாகிறது.

மார்க்சும், மார்க்சிய தத்துவமும் மாத்திரமே மதங்களின் பிறப்பு, தோற்றம் மற்றும் மனித மனங்களில் அவை செலுத்தும் தாக்கம் இவைகளை அறிவியல் பூர்வமாக புரிந்து கொண்டுள்ளதால், மதங்கள் வகிக்கும் பங்கினை வழிப்படுத்துவதும், தீர்மானிப்பதும், அரசின் சமூக அமைப்புகளே என்று அடித்துச் சொல்கிறார்கள். துல்லியமான இந்தக் காரணத்தினால்தான் மார்க்சிய தத்துவம் மதங்களை குறிப்பிட்டு தாக்குவது கிடையாது. மாறாக, மதங்களின் தோற்றங்களுக்கு காரணமான சமூக நிலைகளையும் மற்றும் மனித குலத்தின் மேல் மதம் தொடர்ந்து வைத்து வருகிற பிடிமானத்திற்கான நிலைகளையுமே தாக்குகிறது. மார்க்சிய தத்துவம் மதங்களை நிலைத்திருக்கச் செய்வதற்காக உதவும் நிலைகளை, அதாவது வர்க்கத்தை ஒடுக்கும் ஒரு கருவியாக மதம் இயங்குவதை முற்றிலுமாக மாற்றிட முயல்கிறது.

மார்க்சிஸ்டுகள் பொருள்முதல்வாதிகள். பொருள்முதல்வாதிகளாக இருப்பதினால், வர்க்கமாக பிரிந்து கிடக்கும் சமூகத்தில் சிக்கலான பாத்திரமேற்று மதம் நடத்தும் விளையாட்டின் முழுமையையும் புரிந்து கொண்டுள்ளனர். மதம் என்பது சமூகத்தின் மேல் கட்டுமானமாக தொடர்கிறது. ஒரு வர்க்கமற்ற சமுதாயத்தை நிறுவினாலும் அதிலும் நீண்ட காலத்திற்கு மதம் தொடர்ந்து இருக்கும். மார்க்சிய தத்துவம் மதத்தை குறியிட்டு தாக்குவதில்லை. ஆனால் மதத்தினை தோற்றுவிக்க காரணமான சமூக நிலைகளை தாக்குவதால், இதன் அடிப்படையிலேயே மார்க்சிய தத்துவத்தின் திசைவழி அமைகிறது.

இதுவே பொருள்முதல்வாதிகளான மார்க்சிஸ்ட்டுகளின் மதத்தைப் பற்றிய புரிதலும் சிந்தனையும் ஆகும். மதத்தில் மனித நேய உள்ளடக்கமும் உள்ளது, அதே நேரத்தில் அது ஒரு வர்க்கத்தின் ஆட்சி அதிகாரத்திற்காக உபயோகப்படுத்தப்படும் கருவியாகவும் உள்ளது என்பதை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மதத்தின் பிடிமானம் தொடர்வதற்காக உள்ள சமூக நிலைகளை மாற்ற ஒரு கம்யூனிஸ்ட் முயற்சிக்க வேண்டுமே அல்லாது மதத்தை குறியிட்டு தாக்கக் கூடாது.

வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டம்

மதத்தை உயர்த்திப்பிடிக்கும் ஏகபோக உரிமையாக்கிக் கொண்ட வகுப்புவாதிகளையும், மத அடிப்படைவாத சக்திகளையும் அம்பலப்படுத்துவதும், மேற்சொன்னவாறு இன்றைக்கு நிலவும் சமூக நிலைகளுக்கு எதிராக நடத்தப்படும் ஒருங்கிணைந்த போராட்டத்தோடு இணைந்த செயல்பாடு ஆகும். இவ்வாறான மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்திட மார்க்சிஸ்டுகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யும் விழைகின்றனர்.

பார்க்கப் போனால், அடிமை இந்தியாவில், ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சி நிலைத்திருப்பதற்கான கருவியாக வகுப்புவாதத்தை உருவாக்கியும், பயன்படுத்தியும், கீழ்த்தரமானதொரு பிரித்தாளும் கொகையைக் கையாண்டார்கள்.

1857 முதல் சுதந்திரப் போரில் இந்துக்களும், முஸ்லீம்களும் இணைந்து வெளிப்படுத்திய உருக்குப்போன்ற ஒற்றுமையை கண்ட ஆங்கிலேயர்கள், அந்த ஒற்றுமையை சிதைத்தழிப்பதற்காக வகுப்புவாத அரசியலை திட்டமிட்டு கையாண்டனர். வாக்காளர்களை இந்து – முஸ்லீம் என்று பிரித்தார்கள். வங்காளத்தை இரண்டாகப் பிரித்தனர். முஸ்லீம் லீக் அமைப்பிற்கு தனித்த ஆதரவு காட்டினார்கள். இவையெல்லாம் காலனி ஆதிக்கத்தை தொடர்வதற்கான நிகழ்ச்சி நிரலாக மேற்கொள்ளப்பட்டன.

சுதந்திரத்திற்கு பிந்தைய ஆண்டுகளில், (கட்டுரையின் முன் பகுதியில் குறிப்பிட்ட)  நெருக்கடி நிலை மக்களிடையே அதிருப்தியை அதிகப்படுத்தியது. ஆளும் வர்க்கங்கள் இந்த அதிருப்தியில் இருந்து தற்காத்துக்கொள்ள, வகுப்புவாத பிரிவினையை பயன்படுத்தினார்கள். நாட்டுப் பிரிவினையைத் தொடர்ந்து, ஆழமாக வேரூன்றி நிலைத்துவிட்ட வகுப்புவாதத்தை ஒழிப்பதற்கு உணர்வுப்பூர்வமான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. குறுகிய அரசியல் நோக்கத்துடன், ஊசலாட்டமும் வகுப்புவாத சக்திகளுடனான சமரசமும் செய்துகொள்ளப்பட்டது.

இன்று இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது, பாசிசத்திற்கான முன் நடவடிக்கை என்று ஒரு புகழ்பெற்ற அறிஞர் கூறினார். இன்று நம் பொதுவாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் அது தென்படத் தொடங்கிவிட்டது. மதத்தின் பெயரால் மக்களை திரட்டும் அருவருக்கத்தக்க முயற்சிகள் தொடர்கின்றன. ஆர்.எஸ்.எஸ் வகைப்பட்ட ‘இந்து ராஷ்ட்டிராவை’ எதிர்க்கும் ஒவ்வொரு நிகழ்வின் மீதும், ஒவ்வொரு குடிமகனின் மீதும் பாசிச வெறுப்பு உமிழப்படுகிறது. நமது ஜனநாயக சமூகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவுகிறது. நம் குடியரசின் அரசமைப்புச் சட்டத்தை இழிவுபடுத்துகிறது. நிர்வாகத்தில் நேர்மையற்ற குறுக்கீடுகளைச் செய்கிறது. தன் விருப்பங்களை அடைவதற்காக சூழ்ச்சிகளைக் கையாள்கிறது. விதிகளை மீறியும், நடைமுறைகளை மீறியும், தரக்குறைவான பேரங்களைப் பேசுகிறது. இதுவரை நிகழ்ந்திராத அளவுக்கு மக்களின் மேல் பொருளாதாரச் சுமைகள் குவிக்கப்படுகின்றன. அனைத்து இடங்களிலும் ஊழல் மலிந்திருக்கிறது – என அனைத்தும் நன்றாக தென்படுகின்றன.

பாஜக ஆட்சியில் இருக்கிற இச்சில வருடங்களில், இந்த அரசின் கொள்கைகள் ஏகாதிபத்தியத்திற்கு துணை போவதாகவும், பிற்போக்கான இந்திய ஏகபோக மூலதனத்தின் நோக்கங்களுக்கு துணை செய்வதாகவும் இருக்கிறது. பார்க்கப் போனால், இந்த வாஜ்பாய் அரசு தான் அமெரிக்க அரசிற்கு, இதுவரை சுதந்திர இந்தியாவில் நடந்திராத அளவிற்கு அணுசரணையாக நடந்து கொள்கிறது. அதனுடைய பொருளாதாரக் கொள்கைகள் ஒருபக்கம் இந்தியாவின் இறையாண்மையை அடகு வைத்து விட்டது. மறுபக்கம் பெருவாரியான மக்களை வறுமை நிலைக்கு தள்ளி விட்டுள்ளது. அமெரிக்கா முன்னெடுக்கும் யுத்த நடவடிக்கைகளுக்கு இந்தியாவை கூட்டாளியாக ஆக்கியிருக்கும் அளவு அயல்நாட்டு கொள்கை வளைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் ஆட்சியில் உள்ள இச்சில வருடங்களில் நமது நாட்டில் உள்ள கல்வி முறை மீது ஒரே கண்ணோட்டத்துடன் தாக்குதல்கள் ஏவப்படுகின்றன. இந்து மத நம்பிக்கை வைத்துள்ள மக்களிடையே நிலவும் பன்முக கலாச்சாரத்தை மாற்றி,  கட்டுண்ட ஒரே இந்து கலாச்சாரமாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ் முயற்சிகளும், வகுப்புவாத பிரிவினை விஷத்தை ஆழமாக பரப்பி, சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக, முக்கியமாக கிறிஸ்துவர், முஸ்லீம்களுக்கு எதிராக, வன்முறையை விதைத்து, நமது பள்ளி மாணவர்களின் பாடத் திட்டத்தை மாற்றுகின்றனர். இவ்வாறு நமது கல்வித் துறையை சீரமைப்பதன் மூலம், வகுப்புவாத, மத வெறுப்பு எண்ணங்களை புகுத்தி அதை வலுவடையச் செய்து, காவிக் கும்பல் தங்களது பாசிச நோக்கத்திற்கான பயணத்தை எளிதாக்கிட நினைக்கின்றனர்.

இதைப்போலவே, இவ்வருடங்களில் இந்திய வரலாற்றை மாற்றியெழுதும் இடைவிடாத முயற்சிகளையும் பார்க்க முடிகிறது. தாங்கள் தான் இந்தியாவின் மறுக்க முடியாத முன்னோர்கள் என்று நிறுவிட, வரலாற்று உண்மைகளையும், ஆதாரங்களையும் திரித்துக் கூறுவது என்பது சங்க பரிவாரத்திற்கு அவசியமாகிறது. அவர்களுடைய, “இந்து ராஷ்ட்டிரா”விற்கு இந்துக்கள், இந்துக்கள் மாத்திரமே உண்மையான முன்னோர்கள் என நிரூபிக்க இந்த வரலாற்று திருத்தல் அவசியமாகிறது. எனவே, இந்துக்கள் வேறெங்கும் இருந்து இங்கு வரவில்லை என்று நிறுவிட வேண்டியுள்ளது. ஏனெனில், அவர்களும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்றாகி விட்டால், பிறகு இந்நாட்டின் மீதான அவர்களது உரிமை கோரல் என்பது, அனைத்து மற்ற மதம் சார்ந்தவர்கள் இந்நாட்டிற்கு வந்து குடியேறிய நிலையோடு ஒப்பிட்டு, வேறுபாடு காட்ட முடியாத கோரிக்கையாகி விடும்.

அன்றைய கோல்வால்கருக்கும், இன்றைய ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இந்து என்றால் ஆரியர்கள் என்றே பொருள். இந்து மதத் தலைவர்கள் ஆர்யவர்த்தா என்றே அழைக்கப்படுகிறார்கள்.

ஒரு பாசிச வெறுப்புடன் தமக்கு எதிராக உள்ள அனைத்து வரலாற்று ஆதாரங்களையும் நிராகரித்து, இந்திய வரலாற்றை மாற்றி எழுதி, இந்தியா தான் ஆரியர்கள் அவதரித்த பூமி என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் உந்துதலில், அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஆரியர்கள் தான் இந்தியாவிலிருந்து உலகைச் சுற்றி வந்தவர்கள் என்று நம்மையே நம்ப வைக்க முயற்சிப்பார்கள். ஆரிய இனம் தான் உயர்ந்தது என்ற கொள்கையோடு ஜெர்மனியில் பாசிச ஆட்சியை நிலை நாட்டிய ஹிட்லர் உண்மையில், இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவரே என்று கூட நம்மை நம்ப வைக்க இந்தக் கூட்டம் முயலும்.

அண்மை வருடங்களில், ஆர்.எஸ்.எஸ். தனது பாசிச குறிக்கோளை முன்னெடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மதவெறியைத் தூண்டி கலவரங்களை ஏற்படுத்துவதே அதன் பிரதான நடவடிக்கையாக உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் நடந்த வகுப்புவாத கலவரங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதி விசாரணைக் கமிஷன்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். தான் முக்கிய குற்றவாளி என தீர்ப்பு வழங்கியிருக்கின்றன. தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு வகுப்புவாத நடவடிக்கைகள் மிக, மிக, முனைப்பாக பெருகியுள்ளது.

குஜராத்தில் அரசே முன்னின்று முஸ்லீம் மதத்தினருக்கு எதிராக நடத்திய வகுப்புவாத படுகொலை என்பது இதுவரை நடந்தவற்றை எல்லாம் விட நடத்தப்பட்ட கீழ்த்தரமான நடவடிக்கையாகும். குஜராத்தில் நடந்துள்ளது ஒரு இன அழிப்பிற்கு ஒப்பாகும். ஆர்.எஸ்.எஸ்.-உம் அதன் பரிவாரங்களும் குற்ற உணர்வோடு வருந்துவதற்கு பதிலாக, சுரணையற்று பச்சைப் படுகொலைகளை மகிழ்வுடன் வரவேற்று இந்துக்கள் புகழ் ஓங்குக என்று பறைசாற்றினர்.

சாதி, மத, மொழி போன்ற அனைத்து வேறுபாடுகளையும் கொண்ட மக்களை ஒற்றுமைப்படுத்தும் இந்திய நாட்டுப்பற்றினை மாற்றியமைத்து, தேசிய வெறியை உண்டாக்கிட ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது.

நமது நாடு ஒற்றுமையும், பண்பும் மிகப் பரந்த பன்முகத் தன்மையும் கொண்ட நாடு. மதத்தில், மொழியில், பாரம்பரியத்தில், பழக்க வழக்கங்களில், பன்முகத் தன்மை கொண்ட இந்த நாட்டை பராமரிக்க வேண்டுமானால், பன்முகத் தன்மையின் இடையிலான ஒற்றுமையை வலுவாக்குவதன் மூலமே முடியும். அதற்குப் பதிலாக ஒற்றைத்தன்மையை  திணிக்க முற்பட்டால், அந்தப் போக்கு நம் நாட்டின் ஒற்றுமையையும், பண்பையும் நொறுக்கி விடும். இதைத்தான் வகுப்புவாத பாசிச சக்திகள் துல்லியமாக நிறைவேற்றிடத் துடிக்கின்றன.

வகுப்புவாத விஷத்தை தூவுவதும், மதத்தின் பேரால் திரட்டுவதும் – எதிர் வரும் நாட்களில் நாட்டை பிளவுபடுத்தி, “உள்நாட்டுப் போர்” மூள்வதற்கான ஆபத்தான அடித்தளத்தை உருவாக்குகின்றன. மேலும் மக்கள் ஜனநாயகத்தை நோக்கி முன்னேறுவதற்கு அடிப்படையாக உள்ள உழைக்கும் பகுதி மக்களின் ஒற்றுமையையும் வகுப்புவாதம் சீர்குலைக்கிறது. எந்த அடிப்படை வர்க்கங்களின் ஒற்றுமையைக் கொண்டு, தற்போதுள்ள ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டுமோ, அந்த அடிப்படை வர்க்கங்களின் ஒற்றுமையை இன்றைக்கு எழுந்துள்ள வகுப்புவாதம் பலவீனப்படுத்தியுள்ளது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. ஆகவே, வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டம் என்பது நமது வர்க்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்திக் கொண்டு அதே நேரத்தில், நமது நாட்டை பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்குமான போராட்டத்தோடு ஒன்றிணைந்ததும் ஆகும்.

இன்றைய இந்தியாவின் சூழலில் உழைக்கும் மக்கள் தங்களது வாழ்க்கை ஆதாரங்களை உயர்த்திக் கொள்ளவும், நேர்மையான சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் பெற்றிடவும் கையிலெடுக்கும் போராட்டங்கள் சிதைக்கப்பட்டு வகுப்புவாத பதட்டங்களுக்கும், சண்டைகளுக்கும் இப்போராட்டங்களை திசை திருப்பி விட்டுள்ளன. இப்போராட்டங்களுக்கு வலிமை ஊட்டி, வகுப்புவாத அச்சுறுத்தலை தோல்வி அடையச் செய்யாவிடில் மக்கள் விடுதலைக்கான முன்னேற்றங்கள் முறியடிக்கப்படும்.

இப்படிப்பட்ட சூழலில் வருத்தத்தை அளிக்கக் கூடிய, கொழுந்துவிட்டு எரியும் வகுப்புவாத விரோதங்களினால், தொடர்ந்து கொண்டிருக்கும் துயரங்கள் பெருகிவிடாமல் இருக்க இவ்விசயத்தில் தீவிரமாகத் தலையிடுவது நமது கடமையாகும். தெளிவான மனசாட்சியுள்ள எவரும் இப்போராட்டத்திலிருந்து விலகி நிற்க முடியாது. பொன்மொழிகள் சொல்வது போல் தீயவர்கள் வெற்றி பெற நல்லவர்கள் மௌனமாக இருப்பது ஒன்றே போதுமானது”.

இந்திய நாட்டை சிறந்த நாடாக மாற்றிட நாம் அதை பாதுகாக்க வேண்டியுள்ளது. 1947இல் அரசியல் சுதந்திரம் அடைந்த பிறகு பெறப்பட்ட சிறிய, சிறிய நன்மைகளைக் கூட அகற்றிட வகுப்புவாத சக்திகள் தாக்குதல்களை தொடுக்கின்றனர். இன்றைக்கு அனைத்து இந்திய தேச பக்தர்களின் கடமை என்பது இதுவரை கிடைத்தவற்றைப் பாதுகாத்து சிறப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதேயாகும்.