அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்

உ. வாசுகி

அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவி என்றார் மார்க்ஸ். ஒரு நாட்டில் உள்ள அரசின் வர்க்கத் தன்மையைப் பொறுத்து, ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு ஏற்பவே அரசின் அங்கங்களும், அதிகார கட்டமைப்பும் அமையும். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவின் அரசியல் சாசனம், சுதந்திரத்துக்குப் பின் நவீன இந்தியா எத்தகையதாக கட்டமைக்கப்பட வேண்டும் என்ற பல நீரோட்டங்களின் கருத்து மோதல்களில் உருவானது. இந்திய முதலாளி வர்க்கத்தின் தலைமையிலான தேசிய நீரோட்டம், இடதுசாரி கருத்தோட்டம், ஆர்.எஸ்.எஸ். முன்வைத்த இந்து இந்தியா போன்ற பிரதான கருத்தியல்களில் ஆர்.எஸ்.எஸ்.சின் கண்ணோட்டம் நிராகரிக்கப்பட்டு, ஜனநாயக சோஷலிச குடியரசு என்ற அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. பின்னர் மதச்சார்பின்மையும் இணைக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பங்களிப்பு இதில் முக்கியமானது.

கூட்டாட்சிக் கோட்பாடு இதில் இடம் பெற்றதற்கு முக்கிய காரணம் தேச விடுதலை போராட்டங்களில் மக்கள் பங்கேற்பும் , மொழி வழி மாநிலங்களுக்காகவும், மொழி கலாச்சாரம் பாதுகாக்கப்படுவதற்காகவும் பல்வேறு தேசிய இனங்கள் நடத்திய வெகுமக்கள் போராட்டங்களும்தாம். இவற்றில் இடதுசாரிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. பல்வகை தேசிய இனங்கள், மொழிகள் உள்ளடங்கிய மாநிலங்கள் இணைந்த ஒன்றியம்தான் இந்தியா என்ற சாராம்சம் அரசியல் சாசனத்தில் இடம் பெற்றது. இந்தியாவில் பெரு முதலாளிகள் பெரிதும் வளர்ச்சியடையாத காலமாகவும் அது இருந்தது.

அரசியல் சாசனம் “வடிவத்தில் கூட்டாட்சி தன்மை (federal) கொண்டதாக இருந்தாலும், குணாம்சத்தில் மத்திய அரசிடம் அதிகார குவிப்புக்கு (unitary) வழி வகுப்பதாக உள்ளது” என்பது அன்றைக்கே கம்யூனிஸ்டுகளின் விமர்சனமாக அமைந்தது. பிரதான அதிகாரங்கள், வருவாய் மற்றும் வளங்களின் மீது கட்டுப்பாடு போன்றவை மத்திய அரசின் பொறுப்பில் இருந்தன. மாநில அரசுகளைக் கலைக்கும் உரிமை மத்திய அரசிடம் இருந்தது. நிதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மத்திய அரசை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமையில்தான் மாநிலங்கள் வைக்கப்பட்டன. ஆளுநர்கள் மத்திய அரசின் முகவர்களாக செயல்பட்டனர். பொதுப்பட்டியலில் உள்ள அம்சங்கள் மீது முடிவெடுக்கும்போது கூட மாநிலங்களுடன் கலந்து பேசுவதற்கான ஏற்பாடு இல்லை. காலப்போக்கில் இந்த முரண்பாடு அதிகரித்தது. மத்திய மாநில உறவுகளை மறு வரையறை செய்யக்கோரி, 1977-ல் மேற்கு வங்க இடது முன்னணி அரசு 15 அம்ச கோரிக்கை சாசனத்தை உருவாக்கியது. வேறு பல கட்சிகளும் இந்நிலைபாட்டை எடுத்தன. 1983-ல் ஸ்ரீநகரில் நடந்த மாநாடு இத்தகைய கட்சிகளை ஒருங்கிணைத்தது. அதிகார பரவல் என்பது மைய அரசை பலவீனப்படுத்தாது; மாறாக அடித்தளத்தை வலுப்படுத்தும் என்று தோழர் ஜோதிபாசு அம்மாநாட்டில் முன்வைத்தார். அதே வருடம் மத்திய மாநில உறவுகளை மறு சீரமைப்பு செய்ய சர்க்காரியா கமிஷனை மத்திய அரசு அமைத்தது. இதன் அறிக்கை பல அடிப்படை முரண்பாடுகளைத் தீர்க்க உதவவில்லை. 1990-ல் தேசிய முன்னணி அரசு, மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலை (Inter-State council) உருவாக்கியது. இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இதுவும் அடிப்படை பிரச்னைகளுக்கு வழிகாட்டவில்லை. மேலும் பல புதிய சிக்கல்கள் முளைத்தன. 2007-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மீண்டும் ஒரு கமிட்டியை, மத்திய மாநில உறவுகள் சம்பந்தமாக அமைத்தது. அதன் வரம்பும் கூட மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் நிர்ணயிக்கப்பட்டது.

பொதுவாக, அரசியல் சாசனத்தில் இருந்த கூட்டாட்சி அம்சங்களை வலுப்படுத்தும் விதமாக, மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முறையிலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீடுகள், நிலைபாடுகள் அமைந்தன. மத்திய முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசின் அதிகார குவிப்பை நிலைநிறுத்துவதாகவே காங்கிரசின் செயல்பாடுகள் இருந்தன. அரசின் வழிகாட்டுதல் மற்றும் உதவியோடு இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சி பாதை போடப்பட்டது. இந்தத் தேவைக்கு ஏற்றாற் போல் மாநில உரிமை வரம்பை மீறும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்தன. மாநில முதலாளித்துவ கட்சிகளைப் பொறுத்தவரை, அவற்றின் தோற்றம் மாநில உரிமைகள், மொழி, கலாச்சாரம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டாலும், மாநில உரிமைகளுக்கான அவர்களின் வலுவான குரல், நவீன தாராளமய காலகட்டம் மாநில முதலாளிகளின் வளர்ச்சிக்குக் கதவைத் திறந்து விட்ட பின்னணியில், தளர்ந்து போனது.

இந்திய முதலாளித்துவத்தின் தடையற்ற வளர்ச்சிக்கு அரசின் கட்டுப்பாடுகள் ஒரு கட்டத்தில் தடையாக மாறின. 1990களில் நவீன தாராளமய கொள்கைகள் சுவீகரிக்கப்பட்ட பின்னணியில், சர்வதேச நிதி மூலதனம் விருப்பம் போல் லாபத்தைத் தேடி உலகம் சுற்றுவதற்கு ஏதுவாக அரசின் பங்கு பாத்திரம் மாறியது. ஒருங்கிணைந்த சந்தை உருவாவது முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பலனளிக்கும் என்ற நிலையில், மத்திய அரசின் கையில் மேலும் அதிகாரங்கள் மாறவும், மாநில உரிமைகள் நீர்த்துப் போகவுமான நடவடிக்கைகள் பின்தொடர்ந்தன. பெரு முதலாளிகளின் வர்க்க பிரதிநிதியான காங்கிரஸ் இந்தப் பாதையில்தான் செயல்பட்டது. பின்னர் வந்த பாஜக அதிகார குவிப்பை அடுத்த கட்டத்துக்கே கொண்டு போனது. நிதி மற்றும் வருவாய் பகிர்வு குறித்த அதிகார குவிப்பு பிறிதொரு கட்டுரையில் இடம் பெறும். அரசியல் பாதிப்புகளை இங்கு பரிசீலிக்கலாம்.

பாஜக ஆட்சியில் அதிகார குவிப்பு:

பாஜக ஆட்சியில் பெருமளவு அதிகாரங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தம் வசம் குவித்துக் கொள்வதை வெறும் எதேச்சாதிகார நடவடிக்கையாக, மீறலாக மட்டும் பார்க்க இயலாது. பாஜக அரசு இப்படித்தான் இயங்கும். அதன் சித்தாந்தம் அப்படி. வேறு வகையிலான அறிவிப்புகள், வாய் ஜாலங்கள் அனைத்தும் புலியின் மீது போர்த்தப்பட்ட பசு தோல்தான்.

ஆர்.எஸ்.எஸ்.சின் வழிகாட்டுதலில் இயங்கும் பாஜக அரசு, கார்ப்பரேட்டுகளின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றிருக்கிறது. தீவிரமான கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், ஏற்க மறுக்கிற மாநிலங்களின் எதிர்ப்பை நசுக்கவும் அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிக்கப்பட வேண்டியிருக்கிறது. சர்வதேச நிதி மூலதனம் நாடு நாடாக போவதற்கும், வெளியேறுவதற்கும் ஒரு தேசமே கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும் என்னும்போது, மாநிலங்களும் அப்பாதையில் செல்ல நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றன. ஒரு பரந்து விரிந்த ஒருங்கிணைக்கப்பட்ட சந்தை நவீன தாராளமய காலத்தின் கட்டாயம்.

மறுபுறம், இந்துத்வ சித்தாந்தத்துக்கு ஏதுவாக ஒரே தேசம் – ஒரே கலாச்சாரம் – ஒரே மொழி என்ற ஒற்றை வடிவத்தைத் திணிக்கவும் அதிகார குவிப்பு மேலும் மேலும் தேவைப்படுகிறது. பாஜகவின் கலாச்சார தேசியம் என்ற சொல்லாடலும் சரி, அதன் கருத்தியலும் சரி, இந்தியாவின் பன்மைத் தன்மையை நிராகரிப்பதாகவே இருக்கிறது. தேசிய இனங்களின் பன்மைத் தன்மையை அங்கீகரிப்பதோடு தொடர்புடையதுதான் மாநில உரிமைகளுக்கான அங்கீகாரம். அது இல்லை என்றால் இது இருக்காது. இந்தப் பின்னணியிலேயே பாஜக அரசின் நடவடிக்கைகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக, மானிய வெட்டு என்பது இவர்கள் பின்பற்றும் பொருளாதார கொள்கையின் ஒரு முக்கிய அம்சம். கொள்கை அடிப்படையில் இடதுசாரிகளும், மக்கள் போராட்டங்களின் வெப்பத்தில் இதர மாநில அரசுகளும், பொது விநியோக முறையை பலப்படுத்த வேண்டும் என்று கோருகின்றன. மானியத்தைக் குறைக்கும் நோக்குடன் வறுமை கோட்டைத் தீர்மானித்து, அதற்கேற்றாற் போல் அரிசி, கோதுமையை குறைப்பது, மண்ணெண்ணெயை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள் காங்கிரஸ் ஆட்சியில் துவங்கின. தற்போது பாஜக ஆட்சி அதனைத் தீவிரமாக அமல்படுத்துகிறது. இது கேரளா, தமிழகம் போன்ற பொதுவிநியோக முறை ஓரளவு பலமாக இருக்கும் மாநிலங்களைக் கடுமையாக பாதித்துக் கொண்டிருக்கிறது. நேரடி பணப்பட்டுவாடா மூலம் பொதுவிநியோக முறையை முற்றிலும் சீரழிக்கும் நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரிக்கின்றன. தற்போதைய ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு என்பது பொதுவிநியோக முறையை நாசமாக்குவது மட்டுமல்ல; மாநில அரசாங்கங்கள் தம் மக்களுக்கு உணவு வழங்கும் அதிகாரத்தை மீறுவதாகவும் அமைகிறது. உலக வர்த்தகக் கழகத்தின் நிர்ப்பந்தங்கள், தம் குறுகிய அதிகாரங்களுக்கு உட்பட்டு சில நலத் திட்டங்களை அமல்படுத்த முயற்சிக்கிற மாநில அரசுகளுக்குத் தடையாக அமைகிறது. எனவே, சர்வதேச ஒப்பந்தங்கள் போடும் போது நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டியிருக்கிறது. ஜி.எஸ்.டி., நீட் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மாநிலங்களின் உரிமைகளை மீறக்கூடியவையாகவே அமைந்தன.

மொழி என்பது ஒரு தேசிய இனத்தின் மைய அம்சங்களில் ஒன்று. இந்தி திணிப்பை வலுவாக எதிர்த்த மாநிலங்களில் முதன்மையானது தமிழகம். இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு, சமஸ்கிருத வளர்ச்சிக்குக் கூடுதல் நிதி ஒதுக்குவது, அகில இந்திய தேர்வுகள் சிலவற்றில் இந்தி, ஆங்கிலம் இரண்டை மட்டும் பயன்படுத்தியது, ரயில்வேயில் உள்ளக தொடர்புக்கு தமிழைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டது போன்ற நடவடிக்கைகள் மோடி ஆட்சியில் அடிக்கடி நடக்கின்றன. தேசிய வரைவு கல்வி கொள்கையின் மூலம் தமிழகத்தின் இரு மொழிக் கொள்கையை மறைமுகமாக மாற்ற முயற்சிக்கப்பட்டது. ஒவ்வொரு கட்டத்திலும் பலத்த எதிர்ப்புக்கிடையேதான் இது மாற்றிக் கொள்ளப்பட்டது. ஆனால் அடுத்த வாய்ப்பு வரும் போது மீண்டும் முயற்சிக்கப்படுகிறது. எனவே மாநிலங்களின் எதிர்ப்பை அங்கீகரித்து, எடுத்த முயற்சியை விட்டு விடுவது என்பது பாஜகவின் நோக்கமல்ல. தற்காலிகமாக விட்டுக் கொடுப்பது அல்லது தகர்த்து முன்னேறுவதுதான் அதன் உத்தியாகத் தெரிகிறது.

ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பதிலும் மாநிலங்களின் உரிமைகள் கடுமையாக மீறப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் பதவிக்காலத்தை அதிகரிப்பது அல்லது குறைப்பது என்ற உள்ளடக்கம் இதில் உண்டு. ஆளுநரின் மறைமுக ஆட்சிக்கும் இதில் பரிந்துரை செய்யப்படுகிறது.

17வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு, நிலைக் குழுக்களோ, அவைக் குழுக்களோ உருவாக்கப்படவில்லை. எனவே, பல்வேறு மசோதாக்கள் முறையாக தயாரிக்கப்படாமல் நேரடியாக நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டன. பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, ஆழமாக ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய, மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடிய மசோதாக்களை தெரிவுக் குழுவுக்காவது விட வேண்டும் என்ற எதிர் கட்சிகளின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மக்களவையில் உள்ள மிருக பலத்தை வைத்து இந்த மசோதாக்கள் அனைத்தும் வரிசையாக நிறைவேற்றப் பட்டன. இவற்றில் பலவற்றில் மாநில உரிமைகள் வலுவாக மீறப்பட்டுள்ளன.

அனைத்து மாநில மக்கள் பிரதிதிகளும் இடம் பெறும் நாடாளுமன்றமும், அது சம்பந்தமாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் புறக்கணிக்கப்பட்டு, பிரதமர் அலுவலகம் சார்ந்து முடிவுகள் எடுக்கப்படுவதும் கூட்டாட்சிக்கு முரணானது.

வரைவு தேசிய கல்விக் கொள்கை:

தற்போதைய வரைவு கொள்கையின் ஒரு பிரதான அம்சம் மையப்படுத்துதல். உதாரணமாக பிரதமர் தலைமையிலான ராஷ்டிரிய சிக்‌ஷா ஆயோக் என்ற அமைப்பின் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் ஒட்டு மொத்த கல்வி நடவடிக்கைகள் இருக்கும் என்றும், ஆராய்ச்சி செய்ய வேண்டிய முக்கிய பிரச்னைகள் என்ன என்பதை இனி தேசிய ஆராய்ச்சி கழகம்தான் தீர்மானிக்கும் என்றும், இக்கழகம் தொழிலதிபர்கள், கார்ப்பரேட்டுகளின் நிதியைக் கொண்டு இயங்கும் என்றும் முன்மொழிவுகள் உள்ளன. கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழும் போது, நேர்மாறாக, அதனை மத்திய பட்டியலுக்கு அதிகாரபூர்வமாகக் கொண்டு செல்லாமலேயே, அத்தகைய விளைவுகளை இக்கொள்கை ஏற்படுத்துகிறது.

தேசிய மருத்துவ ஆணையம்:

இதிலும் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவம் சார்ந்த அனைத்து அம்சங்களையும் இந்தக் கமிஷன் கட்டுப்படுத்தும் என்பது வருகிறது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50% இடங்களுக்கான கல்வி கட்டணம் அவர்களின் விருப்பத்துக்கு விடப்படுகிறது. மீதி 50%க்கு கட்டணம் வசூலிக்க பொதுவான வழிகாட்டுதல்தான் இருக்குமாம். அதற்கு ‘உட்பட்டு’ தனியார் மருத்துவ கல்லூரிகளே நிர்ணயித்துக் கொள்ளலாம். மாநில அரசு நிர்ணயிக்க இங்கு ஏதும் இல்லை. 6 மாத சுருக்கப்பட்ட பயிற்சி பெற்று கிராமப்புறங்களில் மருத்துவம் பார்க்கலாம் என்பதும், எக்ஸ்ரே டெக்னிஷியன், லேப் டெக்னிஷியன், கம்பவுண்டர் உள்ளிட்டோர் கூட இதனை செய்யலாம் என்பதும், நகர்ப்புற, கிராமப்புறங்களுக்கிடையே மருத்துவ சிகிச்சை தரத்தில் நிலவும் பாகுபாடுகளை இது சட்டபூர்வமாக்குகிறது. மாநில அரசின் அதிகார வரம்பை மீறுகிறது. ஐந்தரை ஆண்டு மருத்துவ படிப்புக்குப் பிறகு, மீண்டும் ஒரு தேர்வு எழுதப்பட வேண்டும் என்ற நிபந்தனை, பல்கலைக்கழகம் மருத்துவ பட்டம் கொடுக்குமா? இந்தத் தேர்வை நடத்தும் முகமையின் சார்பில் பட்டம் கொடுக்கப்படுமா? என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

தகவல் உரிமை சட்டத் திருத்தத்தின்படி மாநில தகவல் ஆணையரின் ஊதியமும், பதவிக் காலமும் இனி மத்திய அரசின் கையில்தான். தேசிய புலனாய்வு முகமை திருத்த சட்டத்தில், எந்த மாநிலத்தில் உள்ள எவரை வேண்டுமானாலும் மத்திய உள்துறை அமைச்சகம், பயங்கரவாதி என்று முத்திரை குத்தி, மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலே அவரைக் கைது செய்து, அவரின் சொத்துக்களைக் கைப்பற்றலாம் என்ற பிரிவு உள்ளது. விசாரணை செய்வதிலும் மாநில காவல்துறையை ஈடுபடுத்தப்போவதில்லை. சட்டம் ஒழுங்கு மாநில அதிகாரம் என்பது இதில் நீர்த்துப் போகிறது.

தொழிலாளர் நல சட்டத் திருத்தம்:

தொழிலாளர் நலன் என்பது மத்திய – மாநில பொதுப் பட்டியலில் உள்ளது. 44 தொழிலாளர் நல சட்டங்கள் வெறும் நான்கு தொகுப்பாக மாற்றப்படும் என்று மாநிலங்களுடன் விவாதிக்காமல், நிதிநிலை அறிக்கையின்போது நிதியமைச்சர் உரையில் அறிவிக்கப்படுகிறது. இவற்றில் ஊதியம் குறித்த தொகுப்பு தற்போது சட்டமாகியிருக்கிறது.

குறைந்த பட்ச ஊதியம் குறித்து 15வது இந்திய தொழிலாளர் மாநாடு வழங்கிய பரிந்துரையும், பின்னர் ராப்டகாஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், இவற்றை ஏகமனதாக ஏற்று உருவாக்கப்பட்ட 45 மற்றும் 46வது இந்திய தொழிலாளர் மாநாடுகளின் பரிந்துரைகளும் இச்சட்டத்தில் இடம் பெறவில்லை. 7வது ஊதிய குழு பரிந்துரைத்த ரூ.18,000 என்பதும் புறந்தள்ளப்பட்டு தேசிய அடிமட்ட ஊதியம் ரூ.4628 என தொழிலாளர் நலத்துறை அமைச்சரால் தன்னிச்சையாக அறிவிக்கப்படுகிறது. முறைசாரா துறையில் முதலாளி, மத்திய அரசு நிர்ணயிப்பதையோ அல்லது மாநில அரசு நிர்ணயிப்பதையோ தரலாம் என்று பச்சை கொடி காட்டியிருப்பது, குறைவான கூலிக்கே இட்டு செல்லும். சில குறிப்பிட்ட மாநிலங்களில் தொழிற்சங்க இயக்கம் போராடி தியாகம் செய்து பெற்ற பலன்கள் கூட தொடர முடியாது. உதாரணமாக, கேரள அரசு ரூ.18,000 குறைந்தபட்ச ஊதியம் என்பதை சட்டரீதியாக்கியிருக்கிறது. சட்டங்களை மீறும் முதலாளிகளுக்கு அதிகமான அபராதம் விதிக்கப்படுவதற்கான சட்டமும் உள்ளது. ஆனால் அகில இந்திய சட்டம் வரும் போது, மாநில சட்டங்களை அமல்படுத்துவது மிகுந்த சிரமத்துக்குள்ளாகும்.

ஆளுநர்கள் அரசியல் ஆதாய கருவிகளாய்:

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்திலேயே ஆளுநர் நியமனம் குறித்த விமர்சனம் இருக்கிறது. மேலிருந்து தன்னிச்சையாக நியமனம் செய்வது கூட்டாட்சிக்கு முரணானது. ஒரு வேளை அப்படிப்பட்ட பதவி தேவை என்றால், மாநில முதல்வர்கள் பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை குடியரசு தலைவர் தேர்வு செய்து ஆளுநராக நியமனம் செய்வது என்ற வழியைப் பின்பற்றலாம். இது சர்க்காரியா கமிஷன் பரிந்துரையிலும் இடம் பெற்றிருக்கிறது. உலக அளவில் கூட்டாட்சி அமைப்பை வைத்திருக்கும் பிரதான நாடுகள் எவற்றிலும் மத்திய அரசு ஆளுநரை நியமனம் செய்யும் முறை இல்லை. அதே போல், மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்கள் ஆளுநர்/குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் போது எல்லையற்ற காலம் அதைக் கிடப்பில் போட்டு வைப்பதானது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் பணிகளை முடக்கும் நடவடிக்கையே. எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதும் மார்க்சிஸ்ட் கட்சியின் பரிந்துரையாக உள்ளது. மாநிலங்களின் கவுன்சில் இதற்கான அரசியல் சட்டத்திருத்தம் வேண்டும் என்று பலமுறை விவாதித்த பிறகும், அது அமல்படுத்தப்படவில்லை. ஆளுநர்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக இருப்பது பற்றியும், மாநில அரசை பகிரங்கமாக விமர்சிப்பது, அவர்களின் கருத்துக்களுக்கு முரண்படுவது போன்ற அம்சங்களும் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டியிருக்கிறது. புதுவை, தமிழக ஆளுநர்களின் அணுகுமுறை இதற்கு அண்மைக்கால உதாரணமாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கலைப்பது, கவிழ்ப்பது மற்றும் எந்தக் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது, எப்போது அழைப்பது போன்ற அம்சங்களில் மத்திய அரசின் செயல்கருவியாக ஆளுநர் செயல்பட்டதை அருணாச்சல பிரதேசம், உத்தராகண்ட், தமிழ்நாடு, கோவா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பார்த்தோம். இது இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன.

குதிரை பேரம்:

ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பில் அதன் கொள்கைகளை சொல்லி போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், இன்னொரு கட்சியால் விலைக்கு வாங்கப்படும் குதிரை பேரமானது ஜனநாயகத்தைக் கேலி கூத்தாக்குவதாகும். மாநில மக்களின் விருப்பத்தை/முடிவை கொல்லைப்புற வழியாக தட்டிப் பறிப்பதாகும். தற்போது பாஜக ஆட்சியில், வாடிக்கையாக, அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கையாக இது பெருமளவு மாறிவிட்டது. கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த குதிரை பேரம், அடுத்து ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தைக் குறி வைத்து செய்யப்படுகிறது.

மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து:

11 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து இந்திய அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கிறது. முதன்முதலில் அரசியல் சாசனத்தின் ஓர் அம்சமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது. ஆனால் படிப்படியாக அது நீர்த்துக் கொண்டே வந்தது. அண்மை காலத்தில் மாநில அரசு கலைக்கப்பட்டு, குடியரசு தலைவரின் ஆட்சியின் கீழ் இருக்கும் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்று கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்திய பிறகும், தேர்தல் ஆணையம் முன்வரவில்லை.

தற்போது, ஒரு சில மணி நேரங்களில் நாடாளுமன்றத்தின் மூலமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, அதன் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்று, பல்லாண்டுகளாக அம்மாநிலம் அனுபவித்து வந்த உரிமைகளைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது பாஜக அரசு. இனி சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக அது இருக்க முடியாது என்பது மட்டுமல்ல; மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் அது இயங்க வேண்டியிருக்கும். இந்து இந்தியாவில், முஸ்லீம்கள் கணிசமாக இருக்கும் மாநிலம் சிறப்பு அந்தஸ்துடன் இயங்கலாமா என்ற மதவெறி நிகழ்ச்சி நிரலோடு சேர்த்து, இனி கார்ப்பரேட்டுகளுக்கு அதன் இயற்கை வளங்களை அள்ளிக் கொடுக்க முடியும் என்பதும் உள்ளது. நாடாளுமன்றப் பெரும்பான்மையின் கொடுங்கோன்மையைப் பயன்படுத்தி ஒரு மாநிலத்தையே இந்திய வரைபடத்தில் சிதைக்க முடியும் என்றால், இனி எந்த மாநிலத்தையும் எதுவும் செய்யலாம். ஜனநாயக படுகொலை என்பதோடு சேர்த்து, இந்தியாவின் சாரமாக இருக்கும் கூட்டாட்சியை மியூசியத்தில் அடைத்து வைத்து காட்சி பொருளாக்கும் ஏற்பாடே இது.

விடுதலை போராட்டத்தில் பங்களிப்பு செய்யாத ஆர்.எஸ்.எஸ்., காந்தி படுகொலைக்குப் பின் தடை செய்யப்பட்டு, மீண்டு வந்து, அதன் எண்ணற்ற அமைப்புகள் மூலமாக பாசிச உத்திகளைப் பயன்படுத்தி, தற்போது அரசியல் அதிகாரம் பெரும்பான்மை பலத்தோடு கைக்கு வந்த சூழலில், நாட்டின் விடுதலைக்குப் பிறகு மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட தனது நிகழ்ச்சி நிரலை ஒவ்வொன்றாக அமல்படுத்துகிறது. இதுதான் பாஜக அரசு பயணிக்கும் திசைவழியாக உள்ளது. மக்களின் மனநிலையை ஜனநாயகப்படுத்தி, போராட்ட ஒற்றுமையை ஏற்படுத்தும் பணியில் களத்திலும், கருத்தியல் தளத்திலும் முன்னிலும் வேகமாக இடதுசாரிகள் செயல்பட வேண்டிய நேரம் இது.

17வது மக்களவை தேர்தல் முடிவுகள்: உறுதிப்படுத்தப்பட்ட வலதுசாரி திருப்பம்

உ.வாசுகி

நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தீர்மானகரமான வெற்றியை ஈட்டி ஆட்சியை அமைத்திருக்கிறது. பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் தனியாக 37.4ரூ,  கூட்டணியாக 45ரூ பெற்றிருக்கிறது. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அது 50ரூ வாக்கு சத வீதத்தைத் தாண்டியுள்ளது. இமாசல பிரதேசத் தில் 69.11ரூ, உத்தராகண்டில் 61ரூ பெற்றுள்ளது. தமிழகம், கேரளா, ஆந்திரா, ஓரளவு தெலுங் கானாவில் இந்தப் போக்கு பிரதிபலிக்கவில்லை. மறுபக்கம் இடதுசாரிகள் பெரும் தோல்வியை சந்தித்துள்ளனர். அவர்களின் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது. இவை குறித்துப் பரிசீலித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு, இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்தி, நிலைமைகளில் முன்னேற்றம் காணவும், அடுத்து மக்கள் மீது வரவிருக்கும் கடும் தாக்குதல்களை எதிர்கொள்ள வும் சில கடமைகளை முன்மொழிந்திருக்கிறது.

உலக அளவில் முதலாளித்துவத்தின் தொடர் நெருக்கடி  பல்வேறு நாடுகளில் அரசியலில் வலதுசாரி திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் இதைப் பட்டியலிட்டுள்ளார். இஸ்ரே லின் நேதன்யாகு மீண்டும் தேர்வு,  துருக்கியில் எர்டோகன் மீண்டும் தேர்வு, ஆஸ்திரேலியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி அமோக வெற்றி. லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் வலதுசாரிகள் முன்னேறி வருகிறார்கள். பிரேசிலில் போல் சனோரோ இதற்கு மோசமான ஓர் உதாரணம். ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் பிரான்சில் லே பென் தலைமையிலான  தீவிர வலதுசாரி கட்சி மிகப்பெரும் கட்சியாகவும், இத்தாலியில் மாட்டியோ சால்வினியின் மிக மோசமான பிற்போக்கான கட்சி அந்நாட்டின் ஆகப்பெரும் கட்சியாகவும் தேர்வாகியுள்ளன. ஜெர்மனியில் ஆல்டர்னேடிவ் ஃபார் ஜெர்மனி என்ற வலதுசாரி கட்சி 10ரூ வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருக் கிறது. ஹங்கேரியில் விக்டர் ஓப்ரான் தலைமை யிலான வலதுசாரி கட்சி வெற்றிபெறும் நிலை யில் உள்ளது. இங்கெல்லாம் நவீன தாராளமய கொள்கைகளின் தொடர் விளைவுகளால் அனைத்துப் பகுதி மக்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். வலதுசாரி சக்திகள், பிரச்னைகளை மறைப்பது என்பதை விட, பிரச்னைகளுக்குக் காரணம் புலம்பெயர் தொழிலாளி கள், கறுப்பின மக்கள், இசுலாமியர்கள் என்று கைகாட்டி பெரும்பான்மை மத/இன/உள்நாட்டு மக்களின் ஆதரவைப் பெறுகின்றனர்.

வெகுமக்கள் அதிருப்தியை சரியான அரசியல் பாதையில் கொண்டு செல்ல இடதுசாரிகள் வலுவாக இல்லாத போது, மாயத்தோற்றங் களால், வார்த்தை ஜாலங்களால், இன, மத, தேசிய வெறியைக் கிளப்பும் வலதுசாரிகள் அதை அறுவடை செய்கிறார்கள் என்ற மதிப்பீடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடந்த அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானத்திலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. எந்த நவீன தாராளமயப் பாதை மக்களுக்குக் கொடுமையான பிரச்னைகளை ஏற்படுத்துகிறதோ, அதே கொள் கைகளைத்தான் வலதுசாரி கட்சிகளும் கடைப் பிடிக்கிறார்கள் என்பது பல்வேறு காரணிகளால் மறைக்கப்படுகிறது. இந்த சர்வதேச போக்கினைப் போலவே இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வலதுசாரி அரசியல் திருப்பம் தற்போது வலுவாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பாஜகவின் தீவிர மதவெறி, தேசியவாதப் பிரச்சாரம்  

செல்லா நோட்டு, ஜிஎஸ்டி, வேலையின்மை, விவசாயிகள் நெருக்கடி உள்ளிட்ட ஏராளமான வாழ்வுரிமை பிரச்னைகளில் பாஜக அரசுக்கு எதிராக மக்களின் கடும் அதிருப்தி தலை தூக்கி யிருந்ததை வெளிப்படையாகக் காண முடிந்த போதும், அது ஏன் தேர்தலில் பிரதிபலிக்கவில்லை? பாஜகவுக்கும், அதன் கூட்டணிக்கும் வாக்குகள் எப்படி குவிந்தன? என்பது முக்கியமான கேள்வி.  ஆர்.எஸ்.எஸ்.சின் வழிகாட்டுதலில் தேர்தலை சந்தித்த பாஜக, 2014 தேர்தலைப் போல் வளர்ச் சியை மையப்படுத்தி பிரச்சாரத்தைக் கட்டமைக்க வில்லை. ஐந்தாண்டுகளில் அனைத்து துறைகளி லும் பெரும் தோல்வியை அடைந்துள்ள சூழலில்  அது சாத்தியமும் இல்லை. எனவே 2019ல் தேசத் தின் பாதுகாப்பு, பாகிஸ்தானுக்கு பதிலடி, அதை  மோடியால்தான் செய்ய முடியும் என்கிற ரீதியில் ‘இந்து’ இந்தியாவைப் பாதுகாக்க ‘இசுலாமிய’ பாகிஸ்தானை முறியடிக்க வேண்டும் என்று எழுப்பப்பட்ட பாஜகவின் தீவிர மதவெறி, தேசியவாத குரல் வலுவாக எடுபட்டுள்ளது. 5 ஆண்டுகளில் நடந்த  சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களும், பசு பாதுகாப்பு, கர் வாப்சி, லவ் ஜிகாத் கருத்தியல் பிரச்சாரங்களும் இதற்குக் களம் அமைத்துக் கொடுத்துள்ளன. 

தேசம், தேசிய அரசு, தேசிய உணர்வு போன் றவை முதலாளித்துவ வளர்ச்சியின்போது முழு மைப்பட்ட கருத்தியல்கள். இவற்றுக்கு வர்க்க பரிமாணம் உண்டு. ஆளும் வர்க்கம் தனது நலனுக்காக இவற்றைப் பயன்படுத்தும். எனவே தொழிலாளி வர்க்கத்தின் கண்ணோட்டத்தி லிருந்து இவற்றின் உள்ளடக்கத்தை வரையறை செய்ய வேண்டும். இந்த வித்தியாசத்தைக் கணக்கில் எடுக்காமல் தேசியம் என்ற ஆளும் வர்க்கத்தின் ஒற்றை வார்த்தையில் வீழ்ந்து விட முடியாது. தீவிர தேசியம், தேசிய வெறி, மதவெறி யின் அடிப்படையிலான கலாச்சார தேசியம் போன்ற கருத்தியல்கள் இந்துத்வ கோட்பாட்டின் அம்சங்கள் என்பதைப் பார்க்கத் தவறக் கூடாது.

புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் அதன் அனைத் துப் பரிமாணங்களிலும் தேசிய வெறியை ஏற்ற பயன்படுத்தப்பட்டது. பாலாகோட்டில் இந்திய விமானப்படை கொடுத்த பதிலடி பெருமிதம் ஏற்படுத்த உதவியது. இதோடு சேர்த்து, இதனை எதிர்கொள்ள, பலமற்ற காங்கிரஸ் உதவாது,  தேசத்துக்கு வலுவான தலைவர், பாதுகாவலர் தேவை, அது மோடி தான் என்ற வகையில் பிரச்சாரம் முன்வைக்கப்பட்டது. தொகுதி வேட்பாளர் யாராக இருந்தாலும் பரவாயில்லை. மோடிக்கு வாக்களியுங்கள் என்பதே ஜனாதிபதி தேர்வு போல பிரச்சார உத்தியாக அமைந்தது. சவுகிதார் என்று பெயர் சூட்டிக் கொண்டதோ, பாலாகோட்டில் தாக்குதல் தொடுக்க இந்திய விமானப்படையே தயங்கிய போது, எனது அடிப்படை அறிவில் பட்டதை அதிகாரிகளுக் குச் சொல்லி தாக்குதல் நடத்த வழி காட்டினேன் என்று மோடி கூறியது, ஒரு புறம் கேலிக்கு உரிய தாக இருந்தாலும்,  கவனமாகத் திட்டமிடப்பட்ட பிரச்சாரம் என்பது தெளிவாகிறது. பாஜகவின் ஒட்டுமொத்த பிரச்சாரம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவாரங்களின் கதை வசனம் இயக்கம் தயாரிப்புதான். உதாரணமாக, இமாச்சல பிரதேசத் தில் 4 தொகுதிகளிலும் லட்சக்கணக்கான வாக்கு கள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றிருக் கிறது. அநேகமாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஆயுத படையில் பணியாற்றுபவர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்கள் அல்லது போரில் கணவனை இழந்த பெண்கள் உள்ளனர். இப்பிரச்சாரம் அவர்கள் மத்தியில் வெகுவாக எடுபட்டிருக்கிறது. இத்தகைய நிலைமை வாழ்வுரிமை பிரச்னை களைப் பின்னுக்குத்தள்ளியிருக்கிறது.

இது சமூக வலைத்தளத்தின் மூலம் நுட்பமாக மக்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி யும், புதிய தகவல்-தொடர்பு சாதனங்களும் பயன்படுத்தப்பட்டு, 25 கோடி பேருக்கு அவரவர் மொழியில், தனிப்பட்ட முறையில் செய்தி அனுப் பப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய அளவிலான, சிக்கலான புள்ளிவிவரங்களை படு வேகத்தில் ஒழுங்குபடுத்தி, ஆய்வு செய்து கொடுக்கும் பிக் டேட்டா அனலிட்டிக்ஸ் (அதிக அளவிலான புள்ளிவிவரங்களை அலசி ஆராயும்) முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

உயர் கல்வி நிறுவனங்கள், அரசியல் சாசன அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், நீதித்துறை, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வு பிரிவு, ரிசர்வ் வங்கி என பல்வேறு இடங்களில் தலைமைப் பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ். நபர் கள் அமர்த்தி வைக்கப்பட்டார்கள். தீவிர மத வெறி, தேசிய வெறி உணர்வுகளை உருவாக்கித் தக்க வைப்பதில் இந்நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்தன. 

கார்ப்பரேட்டுகளின் ஆதரவும், பணப் பயன்பாடும்

இந்திய கார்ப்பரேட்டுகளும், பெரும் தொழில் நிறுவனங்களும் மிகப்பெரும் அளவில் பாஜக வுக்கும், மோடிக்கும் ஆதரவு அளித்துள்ளனர். மொத்த தேர்தல் செலவில் 45ரூ (சுமார் ரூ.27,000 கோடி) பாஜகவால் மட்டுமே செலவழிக்கப் பட்டிருக்கிறது. தேர்தல் செலவினங்களை தேர்தல் ஆணையமே செய்திட வேண்டும். அதுவரை வேட்பாளர் செலவுக்கு மட்டுமல்ல; கட்சிகளின் தேர்தல் செலவுக்கும் உச்சவரம்பு வைக்க வேண் டும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், பொருளாதாரத்தில் ஓரளவு சம தளத்தில் நின்று கட்சிகள் போட்டியிட முடியும். ஆளும் கட்சி என்ற அடிப்படையிலும், மிக வெளிப்படையான ஆளும் அரசியல்வாதி கள்- அதிகார வர்க்கம்- கார்ப்பரேட்டுகளின் கள்ளக் கூட்டணி (குரோனி கேபிடலிசம்) காரண மாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மிகப் பெரும் நிதியாதாரம் பாஜகவின் கைக்கு வந்திருக்கிறது.

மோடியின் ஆட்சியில் முகேஷ் அம்பானியின் தொழில் சாம்ராஜ்யம் 23 பில்லியன் டாலர் மதிப்பிலிருந்து 55 பில்லியன் டாலராக உயர்ந் திருக்கிறது. அதாவது, அம்பானியின் வாழ்நாள் காலத்தில் சேர்த்த சொத்தை விட, மோடியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சி அவருக்கு அதிக சொத்தைக் கொடுத்திருக்கிறது. மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போதே கவுதம் அதானி யின் சொத்து 5000ரூ உயர்ந்தது. 2014-18ல் அது 4 மடங்குக்கு மேலாக அதிகரித்து 2.6 பில்லியன் டாலராக உள்ளது. பாபா ராம்தேவின் பதஞ்சலி சாதாரணமாக ஆரம்பித்து, தற்போது 2018ல் 6 பில்லியன் டாலர் பிசினசாக மாறி, இந்தியாவின் முதல் 20 பணக்காரர்களில் ஒருவராக ராம்தேவ் ஆகிவிட்டார்.  தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்த ரூ.4,794 கோடி நன்கொடையில் சுமார் 95ரூ பாஜகவுக்கே சென்றிருக்கிறது.

சமூக ஊடகத்துக்கு, விளம்பரத்துக்கு, நமோ டிவி துவங்கி நடத்துவதற்கு, ஊழியர்களும், பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் தங்கிப் பணியாற்றவும், கட்டமைப்பு வசதிகளுக்கும், உப கரணங்களுக்கும்,  ஊடகங்களுக்கும் என கோடிக் கணக்கில்  பாஜகவால் பணம் செலவிடப்பட்டிருக் கிறது. பல மாநிலங்களில் இதர கட்சியின் முன்னணி ஊழியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர் கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கின்றனர். மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஸ்லீப்பர் செல்லாகப் பணியாற்ற பாஜக ஊழியர்களை அனுப்பியுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில், ஒரு பக்கத்துக்கு ஒருவர் பொறுப்பு, அதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாக்காளர்களின் ஆதரவைப் பெற செயல்படு வதற்கு ஒருவர் பொறுப்பு எனப் போடப்பட்ட னர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வேட் பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளுக்கு இறுதி செய்யப்பட்டு, அவர்களை வெற்றி பெற வைக்க, ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரை ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வந்து தங்கிப் பணியாற்றிய உதாரணங்கள் உண்டு.  குடும்பங்களை நேரிலும் சந்தித்தனர். வாக்களித்தால் அந்தக் குடும்பத்துக்கு வேண்டிய அரசு நலத் திட்டங்களை வாங்கிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். சில தொகுதிகளில் எதிர்கட்சியினரின் போட்டி வேட்பாளரை நிறுத்த பாஜக நிதி செலவழித் திருக்கிறது. மஹாராஷ்டிராவில் ஓவைசியின் எம்.ஐ.எம். கட்சியும், பிரகாஷ் அம்பேத்கரின் பகுஜன் மஹாசங் கட்சியும் சேர்ந்து  வாஞ்சித் பகுஜன் அஹாதி என்ற அணியாக நின்று தேர்தலை சந்தித்தனர். இது மதச்சார்பற்ற கட்சிகளின் வாக்குகளைப் பிரித்தது. ஹெலிகாப்டரில் பறந்து பறந்து இவர்கள் பிரச்சாரம் செய்ய பாஜக நிதி கொடுத்திருப்பார்கள் என்ற ஊகங்கள் நிலவு கின்றன.

மேற்கு வங்கத்தில்  ராய்கஞ்ச் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்ததை ஒட்டி, நீண்ட கால காங்கிரஸ் தலை வர் மறைந்த  பிரியரஞ்சன் தாஸ் முன்ஷியின் மனைவி தீபா தாஸ் முன்ஷியைத் தாங்கள் ஆதரிப்ப தாகக் கூறி பாஜக போட்டியிட வைத்தது.  அதே போல் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அம்பரீஷின் தொகுதியான மாண்டியாவை மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு விட்டுக் கொடுத்த சூழலில், அம்பரீஷின் மனைவி சுமலதாவை சுயேச்சை வேட்பாளராக நிற்க வைத்துத் தன் ஆதரவைத் தெரிவித்தது. அவரை வெற்றி பெறவும் வைத்தது. இவ்வாறு பல்வேறு தளங்களில் ஆர்.எஸ்.எஸ்./பாஜகவின் உத்திகள் அமல்படுத்தப்பட்டன. 

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு

நேர்மையான, நியாயமான தேர்தலை நடத் தும் வகையில் தேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகள் இருக்கவில்லை. பாஜக தரப்பில், குறிப்பாக மோடி, அமித் ஷா போன்றவர்கள், தீவிரவாத தாக்குதல்களை அரசியலாகப் பயன்படுத்தியது; சட்ட விரோதமாக நமோ டிவியைத் துவக்கியது; மத வெறியை எழுப்பும் வகையில் பேசியது போன்றவை குறித்து எதிர்க்கட்சிகள் அளித்த புகார்களை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இத்தகைய அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது இனியும் பதவியில் இருக்கும் அரசாங்கம் மட்டுமே தேர்தல் ஆணைய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் முறை நீடிக்கக் கூடாது. லோக் பால் உறுப்பினர்களைத் தேர்வு செய்ய ஒரு குழு (கொலிஜியம்) இருப்பதைப் போல்,  தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் தேர்வுக்கும் ஒரு குழு அமைக்க வேண்டும். பதவிக் காலம் முடிந்த பின், தேர்தல் ஆணைய உறுப்பினர்களுக்கு வேறு பொறுப்பு/பதவிகள் அளிப்பதைத் தடை செய்ய வேண்டும்.  மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்வதற் கான அனுமதி தேர்தல் ஆணையத்திடம் பெறுவ தும் கடினமாக இருந்தது. டயமண்ட் ஹார்பர் தொகுதியில் தேர்தல் காலத்தில் 90 நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரிய போது 18க்குத்தான் அனுமதி கிடைத்தது.

இதர காரணிகள்

அரசு நலத் திட்டங்கள், குறிப்பாக உஜ்வாலா இலவச எரிவாயு இணைப்பு திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் போன்றவை பல ஏழை குடும்பங்களுக்கு நம்பிக்கை ஊட்டியிருக் கிறது. பெண்களின் வாக்குகள் கடந்த தேர்தலை விட அகில இந்திய அளவில் பாஜகவுக்கு 7ரூ அதிகரித்திருப்பது இதன் விளைவாக இருக்கக் கூடும். தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பாக அல்லது தேர்தல் அன்று பலரின் வங்கிக் கணக்குக்கு மானியங்கள் நேரடி பணப்பலனாக சேர்க்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் பயிர் காப் பீடு, உதவி தொகை, பல்வேறு விஷயங்களுக் கான  மானிய தொகை கொடுக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் 86ரூ சிறு குறு விவசாயி களுக்கு 4 ஆண்டு கால நிலுவை மானிய தொகை ஒரேயடியாக தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டிருக்கிறது.

இதர கட்சிகளின் சாதிய அணி திரட்டலை முறியடித்து, தமக்கு சாதகமாக அதனை மாற்ற பல நுட்பமான திட்டமிடல் (மைக்ரோ சோஷி யல் என்ஜினியரிங்) பாஜக தரப்பில் செய்யப் பட்டிருக்கிறது. உதாரணமாக, உபி மாநிலத்தில், பகுஜன் சமாஜ் கட்சி, தலித் வகுப்பினரில் ஜாதவ் என்ற பிரிவினரைத் தன் செல்வாக்கில் வைத்துக் கொண்டபோது,  ஜாதவ் அல்லாத தலித் பிரி வினரை பாஜக தன் வசமாக்கியது. சமஜ்வாதி கட்சி யாதவ சமூகத்தில் செல்வாக்கு செலுத்திய பின்னணியில், யாதவ் அல்லாத பிற்பட்ட வகுப் பினரை பாஜக அணி திரட்டியது. அதே போல் பல்வேறு பழங்குடியின சமூகங்களை ஒருங்கிணைத்தது. ‘இந்துக்கள்’ என்ற அடையாளம் கொடுத்து பல்வேறு சாதிகளை  திரட்டியது.

மின்னணு வாக்கு இயந்திரங்கள்

இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி, தவறான முறையில் வாக்குகளை பாஜக பெற்றதாக ஊடகச் செய்திகள் வருகின்றன. ஃபிரண்ட்லைன் பத்திரிகை, மஹாராஷ்டிராவில் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டப்படி பெற்ற விவரங்களைப் பயன்படுத்தி, தேர்தல் ஆணையம் வாங்கிய இயந்திரங்களுக் கும், பயன்படுத்திய இயந்திரங்களுக்கும் இடையே 19 லட்சம் இயந்திரங்கள்  இடைவெளியாக இருந்தன; அப்படியானால் அவை எங்கே என்ற கேள்வியை எழுப்பியது. 370 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும், மின்னணு இயந்திரத்தில் எண்ணப் பட்ட வாக்குகளுக்கும் இடையே வேறுபாடு இருந்தது என்று ஊடகச் செய்திகள் வந்துள்ளன. உதாரணமாக, பீஹாரில் பாட்னாசாஹிப் தொகுதியில் 65,000 வாக்குகளும், குஜராத்தில் ஆனந்த் தொகுதியில் 1,32,000 வாக்குகளும் பதிவான வாக்குளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமாக இருந்துள்ளன. இப்பிரச்னை காரணமாகத் தேர்தல் ஆணையத் தால் இதுவரை அகில இந்திய அளவில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த வாக்கு சதவீதத்தை அறிவிக்க முடியவில்லை. மின்னணு வாக்கு இயந்திரம் பற்றி இவ்வாறு எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து ஆய்வு செய்வது  என்று  மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளது.

காங்கிரசின் தோல்வி

2014 தேர்தலை விட 8 தொகுதிகளில் கூடுதலாக 52ல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு சதவீதத்தையும் அது தக்க வைத்துக் கொண் டுள்ளது. பாஜகவைத் தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை, செல் வாக்கு சரிந்துள்ள நிலையில் இடதுசாரி கட்சி களால்  செய்ய இயலவில்லை. அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்துடன் செயல்பட்ட காங்கிரஸ் அப்பணியை செய்திருக்க வேண்டும். ஆனால் அதில் மிகுந்த பலவீனம் இருந்தது. உதாரணமாக, டெல்லியில் ஆம் ஆத்மியுடனும், உபியில் பகுஜன் சமாஜ், மற்றும் சமஜ்வாதி கட்சிகளுடனும் காங்கிரஸ் கூட்டு வைத்திருந்தால் சில தொகுதிகளிலாவது பாஜகவை முறியடிக்க முடிந்திருக்கும்.  அவர்கள் சமீபத்தில் சட்டமன்றத்தில் வெற்றி பெற்ற ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசத்திலும் இதர கட்சிகளை ஒருங்கிணைக்கவில்லை. மேற்கு வங்கத்தில் ஏற்கனவே அவரவர் வெற்றி பெற்ற 6 தொகுதிகளில் பரஸ்பரம் போட்டி வேண்டாம் என்ற இடது முன்னணியின் குறைந்தபட்ச வேண்டுகோளைக் கூட அக்கட்சி நிராகரித்து விட்டது. கேரளாவில் வயநாட்டில் அதன் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி இடது ஜனநாயக முன்னணியை எதிர்த்துப் போட்டியிட்டார். பாஜக எதிர்ப்பைக் காட்டிலும் இடதுசாரிகளுக்கு எதிரான போட்டிக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுத்ததான தோற்றமே ஏற்பட்டது.

பாஜகவின் மதவெறி நடவடிக்கைகளைத் தேர்தலுக்கு முன்னும், தேர்தல் பிரச்சாரத்தின் போதும் தேவையான அளவு அம்பலப்படுத்த காங்கிரஸ் தவறி விட்டது. மென்மையான இந்துத்வாவைக் கடைப்பிடித்தது. முரண்பாடு இந்துத்வாவுக்கும் மதச்சார்பின்மைக்கும் தானே தவிர, மென்மையான இந்துத்வாவுக்கும், கடுமை யான இந்துத்வாவுக்கும் அல்ல.  இதர கட்சிகளும் இது குறித்த திறன் மிக்க பிரச்சாரத்தை நடத்த வில்லை.

மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் உத்தி

பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும்; நாடாளு மன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் கூடுதலாக இடம் பெற வேண்டும்; மத்தியில் ஒரு மதச்சார்பற்ற அரசை அமைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் உத்தியின் உள்ளடக்கமாக இருந்தது. மாநிலத்துக்கு மாநிலம் நிலைமைகள் வித்தியாசமாக இருந்த பின்னணி யில், அகில இந்திய அளவில் ஒரு கூட்டணி சாத்தியம் இல்லை என்ற புரிதலோடு, பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருமுகப்படுத்தி குவிக்க வேண்டும் என்ற அளவில், மாநிலங்களில் இந்த உத்தியை அமல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பாஜக தோற்கடிக்கப் பட்டது. பொதுவாக உத்தியின் 3 அம்சங்களும் நிறைவேறவில்லை என்பதே தேர்தல் முடிவுகள் காட்டும் செய்தியாகும்.

கேரளாவைப் பொறுத்தவரை இடது ஜனநாயக முன்னணிக்கு 5.1ரூ வாக்குகள் குறைந்துள்ளன. காங்கிரசுக்கு 5.10ரூம், பாஜகவுக்கு 4.76ரூம் அதிகரித்துள்ளன. பொதுவாக சட்டமன்றத்துக் கும் நாடாளுமன்றத்துக்கும் வித்தியாசமாக வாக்களிப்பது கேரளாவின் அனுபவம்.  மேலும், இடது ஜனநாயக முன்னணி 1977ல் ஒரு தொகுதி கூட வெற்றி பெறாததும், 2004ல் 20க்கு 18ல் வெற்றி பெற்றதும் நிகழ்ந்திருக்கிறது. பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்த சிறுபான்மை வகுப்பினரும் (மக்கள் தொகையில் இவர்கள் சுமார் 45ரூ), இதர சக்திகளும் மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரசால் முடியும் என்ற நம்பிக்கையோடு அவர்களுக்கு வாக்களித்தனர். மேலும், சபரிமலை பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியும், மாநில அரசும் எடுத்த நிலைபாடு சரியானது, இதைத் தவிர வேறு நிலைபாட்டை எடுத்திருக்க முடியாது. ஆனால், துவக்கத்தில் நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்த காங்கிரஸ், பாஜக கட்சிகள், மாநில அரசுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் எதிராக இதனை மாற்ற முடியும் என்ற நிலையில், எதிர் நிலை எடுத்து, கடுமையான பிரச்சாரம் செய்ததில், மத நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் ஒரு குழப்பம் ஏற்பட்டது. அதில் ஒரு பகுதியினர், பாரம்பர்யமாக மார்க் சிஸ்ட் கட்சிக்கு வாக்களிப்பவர்கள், மாற்றி வாக்களித்துள்ளனர். இவர்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. சபரிமலை பிரச்னையில் சரியான நிலைபாடு எடுத்திருந்தாலும், வெவ் வேறு அளவில் பல்வேறு பகுதிகளில் இதனால் பாதிப்பு நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் மாநில அரசின் நடவடிக்கைகள் மீது பொதுவாக இருக் கும் நன்மதிப்பு வாக்குகளாக ஏன் மாறவில்லை என்று பரிசீலிக்க வேண்டும். பாஜக ஒரு தொகுதி யில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், வாக்கு சதவீதம் 15ரூக்கு மேல் என்பது ஒரு அபாய எச்சரிக்கையே. பல்வேறு தொகுதிகளில் பாஜக, தன் ஒரு பகுதி வாக்குகளை காங்கிரசுக்கு மடை மாற்றம் செய்யும் வழக்கமான வேலை இந்தத் தேர்தலிலும் நடந்தது.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அடைந் திருக்கும் படு தோல்வி, கட்சியின் வரலாற்றிலேயே இதுவரை காணாதது. இடது முன்னணிக்கு 7.44ரூ மட்டுமே வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. கடும்  வன் முறை, அச்சுறுத்தல்கள், வாக்குச்சாவடி கைப் பற்றல் ஆகிய பிரச்னைகளுக்கு மத்தியில் தேர்தல் நடந்தது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மீதான எதிர்ப்புணர்வு வலுவாக இருந்தது. அவர்களின் வன்முறையை முறியடிக்க இடது சாரிகளை விட பாஜகவால்தான் முடியும் என்ற உணர்வு இருந்தது. அதேபோல் பாஜகவைத் தோற்கடிக்க நினைத்தவர்கள், திரிணமூல் காங் கிரசையே மாற்றாகப் பார்த்தார்கள். பாரம்பரிய மாக இடதுசாரிகளுக்கு வாக்களிக்கும் ஒரு பகுதியினர் திரிணமூல் மீதான வெறுப்பின் காரணமாக பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். இது மதவெறியைக் குறைத்து மதிப்பிடுவதாகும். மக்கள் பிரச்னைகளில் போராட்டங்களை உருவாக் கும்போது இடது முன்னணிக்கு ஆதரவாக வரும் மக்கள், தேர்தலில் அதே அளவு ஆதரிக்கவில்லை.

பொதுவாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக இடது முன்னணியின் சரிந்து வரும் வாக்கு சதவீ தம், அதிக அளவு வன்முறையை சந்திக்க வேண்டிய நிலை போன்றவையும் இதற்கு ஒரு காரணம்.  சிறுபான்மை மத அடிப்படைவாதிகளை திரிண மூல் காங்கிரஸ் தாஜா செய்யும் முறையானது, பெரும்பான்மை மதவாதத்தை தூண்டி விட பாஜகவுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு மத வெறியைக் கிளப்பி விடும் சூழலில், ஜனநாயகத் துக்கான இடதுசாரிகளுக்கான வெளி குறைகிறது. தேர்தல் களத்தில் திரிணமூல், பாஜக இரண்டு கட்சிகள்தான் நிற்கின்றன; மற்ற கட்சிகள் அருகில் கூட இல்லை என்ற திட்டமிட்ட பிரச் சாரத்தை ஊடகங்கள் செய்தன. கடந்த 50 ஆண்டு களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவ முடியாத மேற்கு வங்கத்தில் திரிணமூல் ஆட்சியில் ஷாகாக்கள் அதிகரித்துள்ளன. 47 மதவெறி தாக்குதல்கள் நடந்துள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் 209 மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் சேர்த்து சுமார் 40,000 பேர் குடியிருப்பிலிருந்து வெளி யேற்றப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில்தான் கட்சி உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். மத வெறிக்கு எதிரான வலுவான, சித்தாந்த ரீதியான போராட்டத்தை மக்கள் மத்தியில் செய்வதன் மூலமாகத்தான் இந்த இரு கட்சிகளின் போட்டி மதவெறி அபாயத்தைக் குறைக்க முடியும். இடது சாரிகளின் அரசியல் செல்வாக்கிலிருந்து விலகிச் சென்றவர்களை மீட்டெடுப்பது முன்னுரிமை கடமையாக இருக்கிறது.

திரிபுராவில் வன்முறை, அச்சுறுத்தல், நிர்வாகம் மற்றும் காவல்துறையின் முழு உதவி, தேர்தல் ஆணையத்தின் பாராமுகம் போன்றவை பாஜக வெற்றி பெற உதவி செய்தன. திரிபுரா மேற்கு தொகுதியில் மொத்த வாக்குச்சாவடிகளில் 50ரூக்கும் மேல் கள்ள ஓட்டு, வாக்குச்சாவடி கைப் பற்றல் நடந்த பின்னணியில் மறு வாக்குப்பதிவு கேட்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் ஒரு குழுவும் விசாரணை செய்து, பிரச்னை நடந் தாகவே அறிக்கை கொடுத்தது. ஆனாலும் 168 வாக்குச்சாவடிகளில், அதாவது நாம் கோரியதில் 20ரூ வாக்குச்சாவடிகளில் மட்டுமே மறு வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. இந்த 168 வாக்குச்சாவடி களில் மறுவாக்குப்பதிவு என்பதும் கூட, இந்தியாவிலேயே மிக அதிகமான ஒன்றாகும். கிழக்கு தொகுதியிலும் பல பிரச்னைகள் நடந்தன. பெரும்பாலான இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி யின் ஊழியர்கள் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்யவே போக முடியவில்லை. தொடர்ச்சி யான வன்முறைக்கு மத்தியில் கட்சி கிளைகளில் பெரும்பகுதியை கூட்டவே முடியவில்லை.

பொதுவாக

மார்க்சிஸ்ட் கட்சியின் சொந்த பலமும், மக்கள் பிரச்னைகளில் தலையீடு செய்யும் திறனும் பல வீனமடைந்துள்ளது. வாக்கு சதவீதம் தொடர்ந்து சரிகிறது. வர்க்க, வெகுஜன அமைப்புகள் மூலமாகக் கிடைக்கும் தொடர்புகளை அரசியல்படுத்துவ தில் குறைபாடு உள்ளது. போராட்டங்களில் வருபவர்களை அரசியல்படுத்தத் தவறும்போது, வெகுஜன தளம் உருவாகாது; தேர்தல் வாக்குகளி லும் அது பிரதிபலிக்காது. இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டியிருக்கிறது. அடிப் படை வர்க்கங்களின் வாக்குகள் கிடைப்பதில்லை. இவற்றை சரி செய்வதற்கு கூடுதல் கவனத்தோடு அரசியல் ஸ்தாபன பணிகளை ஆற்ற வேண்டும். இழந்த தளங்களை மீட்க வேண்டும். ஸ்தாபன பிளீனம் எடுத்த முடிவுகளை அமல்படுத்தியது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக, மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு என்ற ஸ்தாபன பிளீனத்தின் சாராம்சத்தை உள்வாங்க வேண்டும்.

வரவிருக்கும் 5 ஆண்டுகளில், பாஜக அரசு உழைக்கும் மக்களின் வாழ்வுரிமை மீது கூடுதல் தாக்குதல்களைத் தொடுக்கும். மத அடிப்படை யில் மக்களைப் பிரிக்கும் வேலையைக் கடுமை யாக முன்னெடுக்கும். கருத்துச் சுதந்திரம் பறிப்பு, போராட்டங்கள் ஒடுக்கப்படுவது போன்ற நட வடிக்கைகள் அதிகரிக்கும். பொதுத்துறை தனி யார்மயமாக்கப்படுவது விரைவாகும். கார்ப் பரேட்டுகளுக்கு சாதகமாக நிலங்கள் பறிக்கப் படும். தலித், சிறுபான்மை, பெண்கள் மீதான  ஒடுக்குமுறை அதிகரிக்கும். மதச்சார்பின்மை மீது பெரும் தாக்குதல் வரும். மதச்சார்பற்ற, ஜனநாயக பூர்வமான இந்திய கட்டமைப்பு இந்து ராஷ்டிர மாக மாற்றப்பட திட்டமிட்ட முயற்சிகள் தீவிர மாக மேற்கொள்ளப்படும். திரிபுரா, மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளைப் பின்னுக்குத் தள்ளிய பின், கேரளாதான் அடுத்த குறி. பரந்து பட்ட மக்களைத் திரட்டியே நம்மால் இவற்றை எதிர்கொள்ள முடியும்.

இது சோர்வடையும் தருணமல்ல; பரிசீலனை செய்து, படிப்பினைகளைப் பெற்று, துணிச் சலாக முன்னேற வேண்டிய நேரம். சவால்களை எழுச்சியோடு சந்திக்க வேண்டிய நேரம். தேர்தல் வெற்றி தோல்விகளைத் தாண்டிய கண்ணோட்டம் இடதுசாரிகளுக்கு உண்டு. சமூக மாற்றத்தை ஏற்படுத்த, அரசியல் மாற்றை முன்னெடுக்க, சோஷலிசத்தை நோக்கி முன்னேற உறுதி பூண்டுள்ள இயக்கம் இது. இடதுசாரிகள் எதிர்ப்பது இந்த அல்லது அந்த அரசியல் கட்சி மட்டுமல்ல. ஏகாதி பத்திய, ஏகபோக, நிலப்பிரபுத்துவ சக்திகள், சாதியம், மத வெறி, பணபலம் உள்ளிட்ட எதிரி களை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் உண்டு. இடதுசாரிகள் வீழ்ந்து விட்டனர் என்று பிரச் சாரம் செய்யப்படுகிறது. உலக அளவிலும், இந்தியாவிலும் இதை விட மோசமான நிலைக் குத் தள்ளப்பட்டபோதெல்லாம் மீண்டு வந்திருக் கும் இயக்கம்தான் மார்க்சிய இயக்கம். அரசியலில் வலதுசாரி திருப்பத்துக்கு ஒரே பதில் இடதுசாரி திருப்பம்தான். இதை அடைய குறுக்கு வழி எதுவும் கிடையாது. இடை விடாத அரசியல், ஸ்தாபன, சித்தாந்த செயல்பாடு கள் இதற்குத் தேவைப்படுகின்றன.

இந்துத்துவாவை எதிர்கொள்வது எப்படி?

(வரலாற்று அறிஞர் கே.என். பணிக்கரின் பார்வையில்)

– என்.குணசேகரன்

இந்துத்துவா இயக்கம், தமிழ்நாட்டின் முற்போக்கு  பாரம்பரியம், கலாச்சாரக் கூறுகளுக்கு  முரணானது. தமிழகத்தில் உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வில் பொதுவாக, மனிதநேயமும் மத நல்லிணக்கமும் காலம் காலமாக நிலைத்திருந்தது. இவற்றை அழித்து  வலுவாக இங்கு  காலூன்றிட சங்கப் பரிவார இயக்கங்கள் தீவிரமாக முயற்சிக்கின்றன. இந்த இயக்கங்களும், இவை ஏற்படுத்திடும் வகுப்புவாத உணர்வுகளும் வளர்வது, தமிழகத்தின் தொன்மையான கலாச்சார சிறப்புகளுக்கெல்லாம் விடப்பட்டுள்ள சவால். அது மட்டுமல்ல; நமது பாரம்பரியத்தின் மகத்தான கூறுகள் அனைத்தையும் சுவீகரித்து வளர்ந்து வரும் மதச்சார்பற்ற, இடதுசாரி உணர்வுகளுக்கும் இயக்கங்களுக்கும் இது எதிர்காலத்தில்  பெருந்தடையாக அமைந்திடும்.

சமூகத்தில் மதச்சார்பற்ற உணர்வுகளை மக்கள் நடுவில் வலுவாக வேரூன்றச் செய்திட வேண்டும். இதற்கான கருத்துப் பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்படல் வேண்டும். இது மட்டும் செய்தால் போதாது. மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடுத்த வேண்டும். தெரு, ஊர், ஊராட்சி, நகர அளவில் உள்ளூர் வடிவிலான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படல் வேண்டும். இத்தகு நடவடிக்கைகளில் பெருந்திரளான மக்களை ஈடுபடச் செய்திடும் போது, மதச்சார்பற்ற உணர்வுகள் வலுப்பெற்றுவிடும்; வகுப்புவாத விஷக்காற்று பரவிடாமல் மக்களே தடுப்புச் சுவர்களாக மாறிவிடுவார்கள்.

இந்த நிலையை தமிழகத்தில் எவ்வாறு ஏற்படுத்துவது?மதச்சார்பற்ற நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை? வகுப்புவாதம் குறித்து இப்போதுள்ள புரிதல்கள் யாவை? உண்மையில்,வகுப்புவாதம் எத்தகையது?

இந்த கேள்விகளுக்கு பேராசிரியர் கே.என். பணிக்கரின் எழுத்துகள் வழிகாட்டுகின்றன. வகுப்புவாதம் குறித்த அவரது ஆழமான பார்வையை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகளை இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.

வகுப்புவாதம் எவ்வாறு வளர்கிறது?

வகுப்புவாதம் வளர்கிறது என்பதற்கு அடையாளமாக மூன்று வகையான நிகழ்வுகளை மையமாக வைத்துத்தான் பலர் பேசியும், எழுதியும் வருகின்றனர்.

முதலாவதாக ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சிறுபான்மை வகுப்புவாத அமைப்புகள் தங்களது பகுதியிலோ அல்லது மாநிலத்திலோ பரவலான அளவில் செயல்பட்டு வருகின்றன என்றால் அதனை வகுப்புவாத வளர்ச்சியாக பலர் கருதுகின்றனர்.

இந்தப் பார்வை வகுப்புவாத அமைப்புகள் செயல்படாத இடங்களில் வகுப்புவாதம் வளராது என்றும், செயல்படும் சில பகுதிகளில் தான் அந்த உணர்வு இருப்பதாகவும்  கருதிட  இடமளிக்கிறது. இது தவறானது.

இரண்டாவதாக, இரண்டு மதப்பிரிவினருக்கு இடையில் வகுப்புவாதக் கலவரங்கள் நடைபெற்று உயிரிழப்புகள், பொருட்சேதம் போன்றவையெல்லாம் ஏற்பட்டால், அந்தக் கலவரம் நடந்த இடத்தில் வகுப்புவாதம் வளர்ந்துள்ளது என்று பலர் கருதுகின்றனர். ஆக மதக்கலவரம் நடக்கும்போது தான் வகுப்புவாதம் வளர்கிறது என்ற முடிவுக்கு பலர் வருகின்றனர். இந்தப் பார்வையிலும் குறை உள்ளது. கலவரம் நடக்கும் இடங்களில் மட்டுமே வகுப்புவாதம் இருப்பதாகவும், இதர இடங்களில்  இல்லை; அந்த இடங்களில் வகுப்புவாதம் வளர வாய்ப்பில்லை என்ற முடிவுக்கும் இட்டுச் செல்லுகிற குறைபாடு இதில் உள்ளது.

மூன்றாவதாக பா.ஜ.க போன்ற வகுப்புவாதக் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவது, ஆட்சி அமைப்பது போன்ற அரசியல் மாற்றங்கள் நடந்தால் வகுப்புவாதம் வளர்ந்துள்ளதாக பலர் கருதுகின்றனர். இது, வகுப்புவாதத்தை வெறும் அரசியல் நிகழ்வாக மட்டும் பார்க்கிற பார்வை. இதுவும் பலரின் அணுகுமுறையாக உள்ளது.

இதில் உள்ள தவறு எது?, வகுப்புவாத அரசியல் கட்சிகளின் செயல்பாட்டை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டு சங்கப்பரிவாரம் மற்றும் இதர வகுப்புவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தப் பார்வை கவனத்தில் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக, அண்மையில் பாஜக தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவிற்கும் தற்போதைய அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரக் கொள்கை சிக்கல்களில் கடுமையான கருத்துச் சண்டை நடந்தது. நாட்டின் பொருளாதாரத்தை நாசப்படுத்தி விட்டதாக அருண் ஜெட்லியை சின்ஹா குற்றம் சாட்டினார். இந்த கருத்துச் சண்டைகளை விளக்கி பல வார, தினசரி பத்திரிக்கைகள் செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டன. இதையொட்டி பலர் இந்த சண்டை பா.ஜக. வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும் என கருதினர்.

ஆனால் இதுபோன்ற கட்சிக்குள் உள்ள சண்டைகள் என்பன சங்கப்பரிவாரத்தின் ஏராளமான வகுப்புவாத ஸ்தாபனங்களில் ஒன்றான பா.ஜ.க.வில் மட்டும்தான். இதே காலத்தில், பல சங்கப்பரிவாரங்களின் செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளன. பசுப்பாதுகாப்பு என்ற முறையில் நடைபெறும் வன்முறைகள், பத்மாவதி திரைப்படத்தையொட்டி கிளப்பப்படுகிற இந்து மதவெறி, சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடந்து வருகிற தாக்குதல்கள், வெறுப்பு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உள்ளூர் மட்டத்தில்  மதவெறி தூண்டப்படுகிற அவர்களது பிரச்சாரங்கள் பெரிதாக பலரின் கவனத்தை ஈர்ப்பதில்லை.

வகுப்புவாதத்தை அரசியல் நிகழ்வாக மட்டும் பார்ப்பதில் மற்றொரு குறைபாடும் உள்ளது. வகுப்புவாத அரசியல் கட்சிகள் தேர்தலில் தோல்வி அடைந்தால் வகுப்புவாதம்  தடைபட்டு விட்டது என்ற முடிவுக்கு இந்தப்பார்வை இட்டுச் செல்கிறது. 1984ம் ஆண்டு வெறும் இரண்டு பாராளுமன்ற இடங்களை மட்டும் வென்ற பாரதீய ஜனதா ஆட்சிக்கு அந்தத் தேர்தலோடு அதன் வளர்ச்சி தடைபடவில்லை. அதன் பிறகு ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்தது. எனவே வகுப்புவாத வளர்ச்சி என்பது வெறும் அரசியல் நிகழ்வாக மட்டும் பார்ப்பது சரியல்ல.

தற்போது கூட பிரதமர் மோடி அரசு மக்களிடையே வெறுப்பை வேகமாக ஈட்டி வருகிறது. முந்தைய காங்கிரஸ் அரசின் பொருளாதார கொள்கைகளை மோடி அரசு மேலும் முனைப்புடன் அமலாக்கி வரும் நிலையில் ஏமாற்றம் அதிகரிக்கிறது. அத்துடன் சங்கப் பரிவாரங்கள் வகுப்புவாத தாக்குதல்களை அதிகரித்து வருவதும் வெறுப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்நிலைமைகளை கண்டு சிலர் வகுப்புவாத எதிர்ப்பினை மெல்லியதாக,மேலோட்டமாக மேற்கொண்டால் போதும் என கருதுகின்றனர். இது தவறானது.

ஆக, வகுப்புவாதம் குறித்த பார்வைக்கு மூன்று அளவுகோல்களை எடுத்துக்கொள்கின்றனர். 1. வகுப்புவாத சங்பரிவாரங்களின் வளர்ச்சி, 2. மதக்கலவரங்கள் 3. அரசியல் நிகழ்வுகள். இந்த மூன்றுமே வகுப்புவாத வளர்ச்சியின் பல்வேறு வெளிப்பாடுகள்தான். ஆனால் இவை மட்டுமே வகுப்புவாதம் என்று கருதுவது தவறு. இவை வகுப்புவாதத்தின் முழுமையான உண்மைத் தன்மையை வெளிப்படுத்தவில்லை.

வகுப்புவாதம் என்பது இதைவிட ஆழமானது; மிக நுண்ணிய அளவில், உடனடி பார்வைக்கு தென்படாதவாறு, அடிமட்டத்தில் மக்களின் உணர்வில் சிறிது சிறிதாக வளர்ந்து வரும் தன்மை கொண்டது.

இதன் வளர்ச்சி இரண்டு கட்டங்களில் நிகழ்கிறது.

வகுப்புவாதத்தின் முதற்கட்டம்

சமூகத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் பல அடையாளங்கள் உண்டு. தந்தை, தாய், சகோதரி, சகோதரன் என உறவு ரீதியிலும், தொழிலாளி, விவசாயி என தொழில் ரீதியிலும் பல அடையாளங்கள் உண்டு. இந்த பல வகையான அடையாளங்களில் ஒன்றுதான், இந்து, முஸ்லீம், கிறித்துவர் என்ற மத அடிப்படையிலான  அடையாளம். இது ஒவ்வொரு மனிதனின் வழிபாட்டுமுறை, சடங்குகள் போன்ற செயல்பாடுகள்  வழியாக வெளிப்படுகிறது. தொன்றுதொட்டு, இந்த வழிபாட்டு முறைகள், சடங்குகள் அனைத்தும் பெரும்பாலும் குடும்பம் அல்லது கோயிலை மையமாகக் கொண்டு கடைபிடிக்கப்படுகின்றன.

ஆனால் இதில் பெரும் மாற்றம் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது. ஊர்வலம், கூட்டங்கள் போன்ற வடிவங்களில் மதச்சடங்குகள், நடத்தப்படுகின்றன. அவை பொது இடங்களில் மக்களை பங்கேற்கச் செய்து நடத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக விநாயகர் வழிபாடு என்பது குடும்ப வழிபாடாக இருந்த நிலை மாறி விநாயகர் ஊர்வலம் என்று பிரம்மாண்டமாக மக்களைக் கூட்டி, நடத்திடும் நிகழ்ச்சிகளாக நடத்தப்படுகின்றன.இது போன்று எல்லா மாநிலங்களிலும் பொதுத்தளத்தில் வழிபாட்டு முறைகள் நடத்துகிற வழக்கம் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு பொது நிகழ்ச்சியாக இந்த வழிபாட்டு முறைகள் மாறுகிறபோது மத நம்பிக்கை அல்லது வெறும் மத அடையாளம் மட்டும் உள்ள ஒருவருக்கு ஒரு கேள்வி எழுகிறது. இந்துவாக இருக்கும் நான் இந்துக்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொள்வது கட்டாயம் அல்லவா? ராமருக்கு கோயில் கட்ட வேண்டுமென்று ஊர்வலம் நடக்கிறபோது, அதை ஆதரிப்பது இந்துவாகிய எனது கடமை அல்லவா? என்கிற கேள்விகள் இந்துவாகிய  ஒருவரின் மனத்தை நெருக்குகின்றன. அவர் இதையெல்லாம் ஆதரிக்க வேண்டிய மனரீதியான அடக்குமுறைக்கு (Coercion) ஆளாகிறார்.

இதுபோன்ற தருணங்கள் அதிகரிக்கிற போது, ஒவ்வொருமுறையும் அவருக்கு தான் இந்து என்ற உணர்வு வலுப்பெறுகிறது. சிறிது சிறிதாக இந்து என்ற மத அடையாளத்தோடு மட்டும் வாழ்ந்து வந்த ஒருவர், சடங்குகளும்,வழிபாடுகளும், பொது நிகழ்ச்சிகளாக மாறுகிற போது, மிகுந்த மதப்பிடிமானம் (Religiousity) கொண்டவராக மாறுகிறார். இவ்வாறு மத அடையாளம் என்ற நிலை முற்றி, மதப்பிடிமானமாக மாறுவது வகுப்புவாத உணர்வின் முதற்கட்டம்.

வகுப்புவாதமும் சமூகப் பிளவும்

இந்து என்ற மத அடையாள உணர்வு சிறிது சிறிதாக கெட்டிப்படுத்தப்பட்டு மதப்பிடிமானம் என்ற உணர்வு நிலைக்கு ஒருவர் வருகிறபோது அவரிடம் பல்வேறு கருத்துகள் கொண்டு செல்லப்படுகின்றன. அதில் முக்கியமானது ‘இந்து மதத்திற்கு முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் எதிரிகள்’ என்கிற பிரச்சாரம். இந்த ‘எதிரி’ எனும் பிரச்சாரம் மிக வலுவான அளவில் ஒருவரை வகுப்புவாதியாக மாற்றுகிறது.

ஒவ்வொரு சிக்கலிலும் இந்து என்கிற கோணத்திலேயே அணுகும் நிலை ஏற்படுகிறது.கிரிக்கெட் விளையாட்டு கூட மத அடிப்படையில் சங்கப் பரிவாரத்தினர் பாகிஸ்தானுக்கு எதிராக வெறி ஏற்படுத்துவதற்கு பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததே. மோடியும் பல தேர்தல் பிரச்சாரங்களின் போது எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்,இந்து எதிரிகள் என பிரச்சாரம் செய்வதுண்டு.

வகுப்புவாத ஸ்தாபனங்கள் எடுக்கும் ஒவ்வொரு சிக்கலும், ஒவ்வொரு நடவடிக்கையும் இந்த சமூகப் பிளவை வேகமாக்குகிறது. இரு மதப்பிரிவினருக்கும் இடையே இதர அடையாளங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மத அடையாளமே மேலோங்கி நிற்கும் நிலை வலுப்பெறுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். ஒரு விழா எடுத்தது பலருக்கு நினைவிருக்கும். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது முஸ்லீம் மதவெறியர்களிடமிருந்து இந்துக்களை காப்பாற்றியவர்கள் என்று ஏறத்தாழ எழுபதுபேரை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் விழாவை நடத்தினர்.அதனை முஸ்லீம்களைத் தூற்றிடவும், அன்றைய பிரிவினையின் போது அனைத்துத் தரப்பிலும் மதவெறியர்கள் இருந்தார்கள் என்ற உண்மையை மறைத்து, வெறுப்பு உணர்வுகளை மீண்டும் பெரிதுபடுத்தவும் அப்பிரச்சனையை பயன்படுத்தினர். இவ்வாறு அவர்கள் ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கும் மேலாக இதே போன்ற பல பிரச்சினைகளை எடுத்து சமூகத்தை பிளவுபடுத்தும் வேலையை இடைவிடாது செய்து வருகின்றனர்.

வேறு எங்கோ நடந்திடும் மதக் கலவரங்கள், பற்றிய செய்திகள் தொலைக்காட்சி,செய்தித்தாள்களில் வரும் போது,இந்துவாக இருப்பவர் மதக் கண்ணோட்டத்தில் இந்துக்களுக்கு ஆதரவாக நிலை எடுக்கவும், இஸ்லாமியராக இருப்பவர் இஸ்லாமியர்களுக்கு  ஆதரவாக நிலை எடுப்பதும் வழக்கமாக மாறிவிடுகிறது. சட்ட ரீதியாக அல்லது  ஜனநாயகக் கோட்பாடுகள் அடிப்படையில் அணுகிடும் பார்வை கைவிடப்படுகிறது. அயோத்தியில் கோயில் கட்டுவது குறித்து சட்டப்பூர்வமான தீர்ப்பினை மதிக்க வேண்டியதில்லை என்ற கருத்து பலருக்கு ஏற்படுவதற்கு இந்த வகுப்புவாத உணர்வே காரணம்.

கல்வி, வரலாறு, ஆன்மீகம், கோயில், உடற்பயிற்சிக்கூடங்கள், ஷாகாக்கள் என பல வகைகளில் செயல்பட்டு வரும் ஏராளமான இந்துத்துவா ஸ்தாபனங்கள் சமூகப் பிளவை ஏற்படுத்தி வகுப்புவாத உணர்வை நீண்டகாலமாக மக்கள் நடுவில் வேகமாக பரப்பி வருகின்றனர். பொதுவாக ஏற்படும் மதப்பிடிமானம் வகுப்புவாத ஸ்தாபனங்களால் வகுப்புவாதம் என்ற நிலைக்கு உயர்ந்து, சமூகம் பிளவுபடும் நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு பிளவுபட்ட சமூகத்தில் இந்து உணர்வு மேலோங்கி நிற்பதுதான் இந்தியாவை மத அடிப்படையிலான இந்து ராஷ்டிரம் என்ற பாசிச அரசை உருவாக்கிட வழிவகுக்கும்.இதுவே அவர்களது தொலைநோக்கு.

1990ம் ஆண்டுகளில் உலகமயம், தாராளமயம் தீவிரமாக பின்பற்றப்பட்ட போது, வகுப்புவாத உணர்வுகளும் வேகமாக வளர்ந்தன. உலகமயம் நுகர்வுக் கலாச்சார உணர்வுகளை வலுப்படுத்தியது.

வாழ்க்கை வசதிக்கான பொருட்களை அடைய வேண்டுமென்ற மோகம், வெறி, குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிகரித்தது. விரும்பிய பொருட்களை அடைய இயலாதபோது. தனது வரலாற்று வேர்களை மகத்தானதாக கருதிடும் உணர்வு உருவாக்கப்பட்டது. ‘ இந்துக்களின் வரலாற்றுப் பாரம்பரியம், வேத காலத்தில் இந்து ராஷ்டிரம் கோலோச்சி ஆண்ட பொற்காலம்’ போன்ற கருத்துகளுக்கு நுகர்வு கலாச்சாரத்தால் ஆட்டுவிக்கப்பட்டவர்கள் இயல்பாகவே ஈர்க்கப்பட்டனர். தங்களுக்கு நுகர்ப் பொருட்கள் கிடைக்க இயலாமைக்கு வேற்று மதத்தினர்தான் காரணம் என்று சிந்திக்கின்றனர். பெரும்பான்மை வகுப்புவாதம் மட்டுமல்ல, சிறுபான்மை வகுப்புவாதமும் இதே காலகட்டத்தில் விரிவாகவும் வேகமாகவும் வளர்ந்தது. எனவே உலகமயமும், வகுப்புவாதமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக விளங்குகின்றன.

தமிழ்நாட்டில் வகுப்புவாதம்

தமிழ்நாட்டில் நீண்டகாலமாக இந்து முஸ்லீம் வகுப்புவாத ஸ்தாபனங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மதச் சார்பற்ற பாரம்பரியம் வலுவாக இருந்த வந்த போதிலும், 1990ம் ஆண்டுகளில் உலகமயச் சூழலில் சமூகப் பிளவு ஏற்படுத்தும் முயற்சிகள் தமிழ்ச் சமூகத்திலும் நிகழ்ந்து வந்துள்ளது.1980ம் ஆண்டுகளில் மண்டைக்காடு கலவரம் மற்றும் பல இடங்களில் நடைபெற்ற வகுப்பு மோதல்கள்,கோவையில் நடைபெற்ற நிகழ்வுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் வேகமாக வளரத் துவங்கின. பிறகு, தேர்தல்களில் தங்களது திராவிட கருத்தோட்டங்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் அதிமுக, திமுக இரண்டும் மாறி மாறி பா.ஜ.க.விற்கு அளித்து வந்துள்ள ஆதரவு, போன்ற பல காரணங்களால் தமிழக அரசியல், சமூக தளத்தில் முக்கிய இடத்தை சங்கப்பரிவாரம் பிடித்துள்ளது.

எனினும், திராவிட கட்சிகளின் வெகுமக்கள் செல்வாக்கு நீடித்து வருவது அவர்களுக்கு முக்கிய தடையாக இருந்து வருகின்றது. இதற்காக அவர்கள் பல கபடத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தமிழக அரசியலில் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போன்று அஇஅதிமுக பிளவுபட்டிருக்கிற நிலையில் எடப்பாடி – பன்னீர்செல்வம் குழுக்களை பயன்படுத்தி தமிழகத்தில் வகுப்புவாதக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இதனை உணர்ந்து எதிர்கொள்ள  வேண்டியது கட்டாயமானது.

திராவிட இயக்கத்தை கடத்திட சூழ்ச்சி

பாஜகவின் தமிழகத் தலைவர் அண்மையில் “இந்துத்துவா, திராவிட கலாச்சாரத்திற்கு எதிரானது அல்ல” என்று கூறினார். இதற்கு ஒரு பின்னணி உண்டு. பத்தாண்டுகளுக்கு முன்பு பாரதீய ஜனதா கட்சியின் ஊழியர் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. டெல்லியிலிருந்து வந்த ஒரு தலைவர் கீழ்க்கண்டவாறு ஊழியர்களுக்கு அறிவுரை கூறினார்.

“தமிழக அரசியல் மாறிக் கொண்டு வருகிறது. இந்த மாற்றத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் திராவிட இயக்க பாரம்பரியத்தை கிண்டல் செய்திடக் கூடாது. நாத்திகம் தான் திராவிட இயக்க பாரம்பரியம் என்று கருதுவது தவறு”.

“ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் பரவலாக மக்கள் வழிபடும் தெய்வங்களான அய்யனார், மாரியம்மா – போன்ற அனைத்தையும் திராவிட இயக்க பாரம்பரியம் இல்லையென்று நாம் புறக்கணிக்கலாமா? தெய்வ பக்தியையும், தெய்வத்தின் முன் அனைவரும் சமம் என்ற வலியுறுத்தும் திராவிட பாரம்பரியத்தின் அந்தப் பகுதி உண்மையில் இந்துத்துவாவை சேர்ந்ததாகும்.”

இதுவே தமிழகத்தில் அவர்களது உத்தியாக இருந்து வருகின்றது. திராவிட இயக்கப் பாரம்பரியத்தை தனதாக்கிக் கொண்டு இந்துத்துவாவை பரப்பிடும் சூழ்ச்சி இதன் அடிப்படையில் தான் நடைபெற்று வருகின்றது.

திராவிட பாரம்பரியத்தையும், ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாரம்பரியத்தையும் ஒருங்கே சேர்த்து இந்துத்துவாவை நோக்கி மக்களை கொண்டு செல்லும் கபடத்தனம் இங்கே வெளிப்படுகிறது. திராவிட இயக்கம் சமுதாயத்தின் அடித்தட்டில் இருந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து பிராமணியத்திற்கு எதிராக அவர்களைத் திரட்டியது. அவ்வாறு திரட்டிடும் போது, பிராமணியம், மதப்போர்வையில் பாதிக்கப்பட்ட மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி, அறியாமைக் கடலிலிருந்து அவர்கள் வெளியே வாராமல் தடுத்திருந்தது. எனவே திராவிட இயக்கம் மதத்திற்கு எதிராகவும், மதச்சாயம் பூண்டு கடைபிடிக்கப்பட்டு வந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது. எனவே, மத எதிர்ப்பும் நாத்திகமும், மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து பிராமணியத்திற்கு எதிராக அவர்களைத் திரட்டிட பயன்பட்ட கருவிகள். இத்தோடு ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் இணைப்பது திருகல் வேலை அல்லவா?

தமிழக ஆன்மீக பாரம்பரியத்திற்கும் விரோதமானது இந்துத்துவா

ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாடல்களில் உள்ள  சொற்செறிவும்,ஆன்மீகக் கருத்துச் செறிவும் பல பகுதி தமிழ் மக்களை ஈர்த்தவை. அவர்களது பாடல்களின் அடிநாதமாக விளங்கும் ஒரு கருத்தை தமிழறிஞர் டாக்டர் தெபொ.மீனாட்சி சுந்தரனார் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

“அன்பேசிவம் என்பது திருமூலர் துணிபு. இந்தத் துணிபுடன் அகப்பாட்டு என்ற பெயர்ப் பொருத்தத்தை நாம் அணுக வேண்டும். அதனை ஆராய்ந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் தாம் அனுபவித்த கடவுள் இன்பத்தை நமக்கு விளக்க வரும்போது. இத்தகைய அகப்பாடல்களாகவே பாடிக் காட்டுகிறார்கள்.

“ஆண்டவனே காதலனாக, தொண்டர்கள் காதலியாக பாடுகின்ற பாட்டையெல்லாம் வெறும் காதல் கதைகள் என்று கொள்வதற்கில்லை.காதற் கதையையும், தாண்டி விளங்கும் கடவுள் இன்ப அன்பின் காட்சியே அங்கெல்லாம் காண்கிறோம்”

நமது கேள்வியெல்லாம் ஆழ்வார்களும், நாயன்மார்களும் விளக்குகிற, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் போன்ற தமிழறிஞர்களுக்கெல்லாம் உயரியதாக விளங்கிய ‘அன்பின் காட்சிக்கும்’ இந்துத்துவாவிற்கும் என்ன தொடர்பு? அன்பு என்கிற மனித நேய குணத்திற்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத – மனிதர்களை, அவர்கள் சிறுபான்மையினர் என்பதற்காகவே கண்ட துண்டமாக வெட்டிப் படுகொலை செய்திடும் இந்த மதவெறிக் கூட்டத்திற்கும் ஆழ்வார்கள் நாயன்மார் பாரம்பரியத்திற்கும் என்ன உறவு? ஆக, திராவிட இயக்க பாரம்பரியத்திற்கும் முரணானது இந்துத்துவா. அதே நேரத்தில் அன்பு, மனிதநேயம் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழகத்தின் ஆன்மீக பாரம்பரியத்திற்கும் முரணானது இந்துத்துவா. இரண்டையும் ஒன்று சேர்த்து இரண்டு தரப்பினரையும் வென்றெடுக்க முனைகிறது. இந்துத்துவா கூட்டம் இந்த இரண்டு தரப்பாரும் சேர்ந்து தமிழகத்தை இந்தத் தீமையிலிருந்து பாதுகாக்க வேண்டியது முக்கிய கடமையாக தற்போது முன்நிற்கிறது.

அன்றாட வாழ்க்கையில் தலையிடும் சங்கப்பரிவாரம்

மாநில ரீதியாக, திராவிட இயக்க சித்தாந்தத்தை கடத்திட இந்துத்துவா கூட்டம் முயல்கிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள மக்களின் சாதி, மத, கலாச்சார நடவடிக்கைகளை அறிந்து அதற்கேற்ற உத்திகளை அவர்கள் கடைபிடிக்கின்றனர்.

ராமர் கோயில் கட்டும் இயக்கத்தை பிரச்சாரம் செய்யும் போதே ஸ்தல அளவில் இருக்கும் மாரியம்மன், காளியம்மன் தெய்வங்களுக்கும் விழா எடுக்கும் பணியை அவர்கள் மேற்கொள்கின்றனர் ஒரே கடவுள் ஒரே கலாச்சாரம், ஒரே நாடு என்ற பாசிச கொள்கையை அடைய, தனி தனி கலாச்சாரங்களை அழித்தொழிக்கும் பணியை அவர்கள் மேற்கொள்கின்றனர். இது மிகவும் தந்திரமாக மேற்கொள்ளப்படுகிற கலாச்சார ஒடுக்குமுறை. இந்த ஒடுக்குமுறைக்கெதிராக பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டுவது கட்டாயம்.

இத்துடன், சமூகத்தில் உள்ள பல பிரிவினர்களிடம் செயல்பட்டு இந்துத்துவாவிற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். குடும்பம் மற்றும் உள்ளூர் பகுதி மட்டங்களில் மக்களோடு பிணைப்புகளை ஏற்படுத்தி, தங்களது அமைப்புகளின் நடவடிக்கைகளில் மக்களை பங்கேற்கச் செய்து வருகின்றனர். கோயிலை மையமாக வைத்து மக்களைத் திரட்டும் பணி நடைபெற்று வருகின்றது. பெண்கள், மாணவர்கள் இளைஞர்கள் போன்றோரை ஆன்மீகம், கல்வி சேவைப்பணிகள், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என பல்வேறு செயல்பாடுகள் மூலமாக திரட்டுகின்றனர். குழந்தைகள், சிறுவர்கள் ஆகியோரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. சாதியரீதியில் மக்கள் திரண்டுள்ள பகுதிகளில் அதற்கேற்ற முறையில் சாதியத் தலைவர்களை அரவணைப்பது, உள்ளிட்ட பல உத்திகளைக் கையாண்டு மக்களைத் திரட்டுகின்றனர். தலித் மக்களைத் திரட்ட விசேட கவனம் செலுத்துகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஆதரவு இல்லாமல் ஓட்டுகளைப் பெற இயலாது. சங்கப்பரிவாரம் தீண்டாமைக்கெதிரானது என்ற தோற்றம் வரும் வகையில் பல நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கலாச்சாரத்தில் தலையீடு

அன்றாட வாழ்க்கையின் அத்தனைச் செயல்பாடுகளும் கலாச்சாரத்தில் அடங்கும். தமிழக மக்களின் வாழ்வில் மாறுபட்ட பல வாழ்க்கை நடைமுறைகள் உள்ளன. எனினும் சில பாரம்பரிய நடவடிக்கைகள், மதச் சடங்குகள் போன்றவற்றில் பொதுவான தன்மைகள் அதிகமாக உள்ளன. சங்கப்பரிவாரம் கலாச்சாரம் என்பது மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது என்ற பார்ப்பதில்லை. கலாச்சாரம் என்பது முழுக்க முழுக்க மதம் சார்ந்ததாகவே அவர்கள் அணுகுகின்றனர். மதம் சார்ந்த சடங்குகள், பாரம்பரிய நடவடிக்கைகளில் மக்களைத் திரட்டி மக்களது உணர்வில் மதப்பிடிமானத்தை ஏற்படுத்துகின்றனர். விளக்குப் பூஜை, விநாயகர் ஊர்வலம், கோயில் திருவிழா போன்ற அவர்களது பல நடவடிக்கைகள் இந்த நோக்கில்தான் நடத்தப்படுகின்றன. இதற்காகவே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அவர்கள் கலாச்சார ஸ்தாபனம் தான் என்று சொல்லிக் கொள்கின்றனர். உண்மையில் மனித வாழ்க்கையின் பல்வேறு வகையான இசை, நாடகம், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் மக்களின் ஆர்வங்களையெல்லாம் அடக்கி ஒடுக்கிவிட்டு மதக் கலாச்சார நடவடிக்கைகளில் மனிதர்கள் அதிக கவனம் செலுத்திட வற்புறுத்தப்படுகின்றனர்.

மதம் தவிர்த்த இதர துறைகளில் ஈடுபாடு இருந்தால் அதையும் பயன்படுத்த சங்கப்பரிவாரத்தினர் தயங்குவதில்லை. உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற துறைகளில் ஆர்வம் உள்ளோரை ஈர்க்கவும் அவர்கள் வாய்ப்பு ஏற்படுத்துகின்றனர். உடற்பயிற்சிக்கான இளைஞர், மாணவர்களின் ஆர்வத்திற்கு தீனிபோடவும், அதே நேரத்தில் அவர்களுக்கு மூளைச் சலவை செய்து இந்துத்துவா கருத்துகளை புகுத்தவும் ஷாகாக்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

மதம் போன்றே, சாதியும் மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கினை ஆற்றுகிறது. இன்றைய தேர்தல் ஜனநாயக அமைப்பில் சாதிய ரீதியாக மக்கள் தங்களுக்குள் ஒருங்கிணைப்பை உருவாக்கிக் கொள்வது தங்களது நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும், பதவி, அந்தஸ்து உள்ளிட்ட பல நன்மைகள் பெற்றிடவும் உதவிகரமாக இருக்கிறது. இது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குகிறது. சாதிய நடைமுறைகள், ஒவ்வொரு சாதியையும் அடையாளப்படுத்துகிற பாரம்பரிய நடவடிக்கைகள் அனைத்தும் மக்களின் கலாச்சாரத்தில் முக்கிய அங்கமாக இருப்பதால்,அதனையும் சங்கப்பரிவாரத்தினர் பயன்படுத்த முனைகின்றனர். சாதிய நடைமுறைகளோடு இணைந்து தங்கள் பக்கம் இழுத்திட அவர்கள் முயற்சிகள் செய்து வருகின்றனர்.

ஆக, சாதி, மதம், பாரம்பரியம் உள்ளிட்ட கலாச்சாரத்தின் அத்துணை அம்சங்களிலும் தலையிட்டு வகுப்புவாத உணர்வை உறுதியாக நிலைபெறச் செய்திட சங்பரிவாரத்தினர் முயற்சிக்கின்றனர். இந்த உண்மைகளை உணர்ந்து மதச்சார்பற்ற சக்திகள் தங்களது அணுகுமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

மதம்: மார்க்சிஸ்ட்களின் அணுகுமுறை

மதம் ஒரு சித்தாந்தம்; அது சுரண்டுகிற வர்க்கங்களின் கருவியாக செயல்படுகிறது என்பதே மார்க்சியத்தின் மையமான கருத்து. அதே நேரத்தில் மதம் இரண்டுவித, செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. ஒரு புறம், மக்களுக்கு தங்களது துன்ப துயரங்களுக்குக் காரணமாக இருக்கின்ற எதார்த்த நிலையை மறைக்கிறது. உண்மை நிலைமைகளை மக்களிடமிருந்து மறைக்கச் செய்து அவர்களை மயக்கத்தில் ஆழ்த்துகிறது. இதையொட்டியே மார்க்சின் வாசகங்கள் – ‘மதம் ஒரு அபின்’ ‘அடக்கப்பட்டவர்களின் பெருமூச்சு’ – பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால்,இது, மதத்தின் இரண்டு வித செயல்பாடுகளில் ஒன்று.

மற்றொரு வகை செயல்பாடும் மிக முக்கியமானது. சமூகத்தில் உள்ள நிலைமைகளை எதிர்க்கவும், எதிர்த்துப் போராடவும் மக்களுக்கு தேவையான துணிவையும் மதமே வழங்குகிறது. இது பல தருணங்களில் நிகழ்கின்றது. மக்களின் மத நம்பிக்கையே சமூக நிலைமைகளை மாற்றவும், தங்களது துன்ப துயரங்களுக்கு மாற்றினை நாடவும் மக்களுக்கு உறுதியையும், நம்பிக்கையும் வழங்குகிறது.

இதற்கு ‘’ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. இந்திய நாட்டில் வேளாண்மை அமைப்புகள் உருவாவதற்கு முன்பே விவசாயிகளின் எழுச்சிகள், குறிப்பாக ஆதிவாசி மக்களின் போராட்டங்கள் நடந்துள்ளன. இதற்கெல்லாம் அவர்களது மத நம்பிக்கை உத்வேகம் அளித்துள்ளது. அதே போன்ற கிறித்துவ மத போதனைகள் இலத்தீன் அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் மக்கள் எழுச்சிக்கு தூண்டுகோலாக அமைந்திருக்கின்றன.

இந்தியாவில் மத்திய காலத் துவக்கத்தில் நடைபெற்ற பல விவசாயிகளின் புரட்சிகளைப் பற்றி ஆய்வு செய்துள்ள வரலாற்றுப் பேராசிரியர் ஆர்எஸ் சர்மா, “… இந்தப் புரட்சிகளின் தன்மையை ஒருவர் ஆராயும் போது, அடக்குமுறையாளர்களுக்கு எதிராக விவசாயிகள் திரண்டதற்கு மதம் ஆற்றிய பங்கினையும் சரியாக உணர வேண்டும்.” என்று வலியுறுத்துகிறார். மதம் முக்கிய பங்காற்றுவது என்பது விவசாய வர்க்க எழுச்சியின் தனி சிறப்பியல்பாகத் திகழ்கிறது. இது பல நாடுகளில் நிகழ்ந்துள்ளதை வரலாற்றில் காண முடியும்.

இந்த வகையான மதத்தின் செயல்பாட்டில் மார்க்சிஸ்ட்கள் தலையீட்டிற்கு பெரும் வாய்ப்புகள் உள்ளன. மத நம்பிக்கை உள்ளவர்களோடு தொடர்பு வைத்து, அவர்களது உள்ளத்தில் இதர மதத்தினர் மீதான வெறுப்பை வகுப்புவாதிகள் ஏற்படுத்துகின்றனர். வகுப்புவாதிகளின் இந்தக் கருத்துகள் எல்லாம் உண்மையில் குறிப்பிட்ட மதத்தின் கருத்துகளாக இருக்காது. மக்களை திரித்துக் கூறும் வழக்கம் எல்லா மத வகுப்புவாதிகளிடமும் உண்டு. எடுத்துக்காட்டிற்கு இந்து முன்னணி சார்பில் இராம கோபாலன் பிரச்சாரம் செய்திடும் கருத்துகள் பெரும்பாலும் உண்மையான மதக் கருத்துகள் இல்லை. அதைப்போல முஸ்லீம் தீவிரவாதிகள் பலர் அவ்வப்போது பரப்பிடும் வன்முறை கருத்துகள் குரானில் இருப்பதில்லை. மத நல்லிணக்கத்தையும், மனித நேயத்தையும் விரும்புகிற சாதாரண மத நம்பிக்கை கொண்ட மக்களை மதத்தின் பெயரால் வகுப்புவாதிகள் திசை திருப்புகிறபோது, ஏன் இவற்றை மார்க்சிஸ்ட்கள் அம்பலப்படுத்தக் கூடாது? உண்மையான மதக் கருத்துகளுக்கு பகைமையானது என்பதை ஏன் நிறுவிடக் கூடாது? இதன் மூலம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை வகுப்புவாத எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்களாக மாற்றிட முடியும்.

இதைச் செய்திட வேண்டுமென்றால் மார்க்சிஸ்ட்களுக்கு கடவுள் நம்பிக்கை கொண்ட பெருந்திரள் மக்களோடு தொடர்பும் பிணைப்பும் கட்டாயம் என்பது, மட்டுமல்ல; அவை வலுப்பெற வேண்டும். மத நம்பிக்கை கொண்டோருடன் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் (Dialogue) தேவை. இதைச் செய்வதற்கு மார்க்சிஸ்ட்கள் தங்களது மதம் பற்றிய பார்வையை கைவிட வேண்டும் என்பதில்லை. மதம் ஒரு சித்தாந்தம் எனும் வகையில் அதற்கான சித்தாந்த ரீதியான எதிர்ப்புக் கொள்கையை கைவிடாமலே மேற்கண்ட அணுகுமுறையை பின்பற்ற முடியும்.

மக்களிடையே மதச்சார்பின்மையை வளர்த்திட..

மக்களிடையே மதச் சார்பற்ற உணர்வுகளை மேம்படுத்திட ஏராளமான மதச்சார்பற்ற நடவடிக்கைகள் நடைபெற வேண்டும். இந்த நடவடிக்கைகள் வழியாக மக்களிடம் வகுப்புவாத, மதப்பிடிமான உணர்வுகள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க இயலும். மதச்சார்பற்ற உணர்வுகள் நிரந்தரமாக குடிகொள்ளும் நிலையை உருவாக்க மதச்சார்பற்ற நடவடிக்கைகள் தான் மிகவும் அவசியமானது.

ஆனால் பல நேரங்களில் மதச்சார்பற்ற நடவடிக்கைகள் எப்போதாவது ஒரு முறை எடுக்கப்படும் நடவடிக்கையாக உள்ளது. எங்காவது கலவரம் நடந்தால் அதைக் கண்டித்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் அல்லது கருத்தரங்கங்கள், விஸ்வஹிந்து பரிஷத் கோயில் கட்ட வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடத்தினால், அதனை எதிர்த்து ஒரு நாள் தர்ணா எனும் வகையில்தான் தற்போதைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன. மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் மிக முக்கியமானது, அவை தொடர்ச்சியான தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டிற்கு, ஒரு கிராமத்தில் ஒரு படிப்பகம் திறப்பது என்று முயற்சி துவக்கப்படுகிறது என்றால் இது தொடர் முயற்சிகளுக்கு இட்டுச் செல்லும் படிப்பகத்திற்கான இடம் கண்டுபிடிப்பது, செய்தித்தாள்கள், புத்தகங்கள் அளிப்பற்கான கொடையாளிகளை அணுகுவது, படிப்பகத்தில் வந்த மக்களை படிக்கச் செய்வதற்கு ஆர்வத்தை தூண்டுவது. அவ்வப்போது படிப்பகத்தில் பல கட்டுரைகளை கூட்டாக படித்துக் காட்டுவதற்கும், அதனை கேட்பதற்குமான மக்களை திரட்டுவது – என வகைகளில் இந்த ஒரு சிறிய முயற்சி தொடர் முயற்சிகளுக்கு இட்டுச் செல்லும். எனவே தளராத தொடர்ச்சியான முயற்சிகள் என்பது மதச்சார்பற்ற நடவடிக்கைக்குரிய ஒரு முக்கிய சிறப்பியல்பு.

மற்றொரு மிக முக்கியமான குறைபாடு களையப்படல் வேண்டும். பொதுவாக தற்போது நடைபெறும் மதச்சார்பற்ற நடவடிக்கைகள் மக்களை வெறும் பார்வையாளராக இருக்கச் செய்கிறது. ஆர்ப்பாட்டம், தர்ணா தெருமுனைக் கூட்டம், கருத்தரங்கம் உள்ளிட்ட இந்த வடிவங்கள் மக்களிடம் கருத்துகளை கொண்டு செல்கிற வழக்கமான வடிவங்கள். இந்த வடிவங்கள் முக்கியமானவையே. அவற்றை கைவிட வேண்டியதில்லை. ஏனெனில் இவை ஜனநாயக நடைமுறைகள்.

ஆனால் மக்களின் மதச்சார்பற்ற உணர்வை நிரந்தரமாக அவர்கள் மனதில் நிலை நிறுத்துவதற்கு இந்த வடிவங்கள் போதுமானதல்ல. இதற்கு உள்ளூர் மட்டத்தில், உள்ளூர் மக்களை செயல்பாடுகளில் ஈடுபட வைத்திடும் வடிவங்கள் தேவை. எடுத்துக்காட்டாக, முன்பு குறிப்பிடப்பட்ட படிப்பகம். அதனை நிறுவிட வேண்டுமென்றால் அந்த பணியில் ஏராளமான உள்ளூர் மக்களை ஈடுபடுத்த வேண்டியிருக்கும். இதுபோன்ற உள்ளூர் மக்கள் ஈடுபடும் பல வடிவங்களை கையாள வேண்டும். அவற்றையொட்டி எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளூர் மட்டத்தில் இருக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் அகில இந்திய மாநில, மாவட்ட அளவிலான இயக்கங்கள் அவசியமானவையே. ஆனால் மக்கள் நடுவில் மதச்சார்பற்ற, உணர்வை ஏற்படுத்திட, எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளூர் மட்டத்தில் இருத்தல் கட்டாயம். மாநில மாவட்ட இயக்கங்களை பாதிக்காமலே அவற்றை நடத்திட இயலும். உள்ளூர் அளவிலான செயல்பாடுகளில்தான் அதிக அளவிலான மக்களை ஈடுபடச் செய்திட இயலும். தொடர்ச்சியாகவும் அவர்களை ஈடுபட வைக்க முடியும்.

எண்ணற்ற வாய்ப்புகள்

பல்வேறு மத நம்பிக்கை கொண்டவர்கள் இணக்கமாக வாழ்வதற்கு “மத நல்லிணக்கம் காப்போம்” என்ற முழக்கம் எழுப்பப்படுவதுண்டு.பல கட்சிகள், அமைப்புக்கள்  பல்வேறு மதச் சின்னங்களை அணிந்து, நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.

அனைத்து மதம் சார்ந்தவர் களும், பொருளாதார , கலாச்சார உறவுகளால் காலம் காலமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அன்றாட வாழ்வில் பல சர்ச்சைகள் , கருத்து மோதல்கள் இருந்தாலும், உள்ளுரில் மத அடிப்படையில் மோதல்கள் குறைவு .ஆனால் 1990-க்குப் பிறகு இந்த நிலை மாறி, மத நல்லிணக்கம் மிகவும் பலவீனப்பட்டுப் போனது. மத நல்லிணக்கம் காக்க அடையாளப்பூர்வ பிரச்சாரம் நிகழ்ச்சிகள் போதுமானவை அல்ல.
மதம் சாராத வாழ்வாதாரத் தேவைகளுக்காக, ஒன்றுபடுகிற போதுதான் மத நல்லிணக்க உணர்வை ,  நிலையான மதச்சார்பற்ற கண்ணோட்டம் மக்களிடம் வளரும். எனவே, மக்களிடம்  நெருக்கமாக மேற்கொள்ளப்படும்,தொடர்ச்சியான மதச்சார்பற்ற  நடவடிக்கைகள் அவசியம்.

மதச்சார்பற்ற நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் விரிந்து பரந்துள்ளன. தமிழகத்தில் பாரம்பரியமாக இது போன்ற பல நடவடிக்கைகள் நிகழ்ந்து வருகின்றன. மக்கள் திரளாக கூடுகிற விழாக்கள், நிகழ்ச்சிகள் ஏராளமாக கிராம, நகர அளவில் நடைபெற்று வருகின்றன. இவற்றில் தலையிட்டு மதச்சார்பற்ற உணர்வுகளை வளர்ப்பதற்கு திட்டமிட்ட பல முன்முயற்சிகள் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கிராமங்களில் நடைபெறும் கோயில் விழாக்கள்; கிராமம், தெரு அளவில் ஏராளமானோர் இயல்பாகவே பாடல் இயற்றும் திறன் படைத்தவர்கள் இருக்கின்றனர். ஆறு மாதம் கழித்தோ ஒரு வருடம் கழித்தோ வர இருக்கின்ற கோயில் திருவிழாவில் ஒரு இசை நிகழ்ச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தி அதில் பாட இருக்கும் பாடல்களை அங்கிருப்போரை வைத்து உருவாக்குவது. இதே போன்று விழாவின் போது ஒரு நாடகம் நடத்திட அங்குள்ளவர்களையே தேர்ந்தெடுத்து உருவாக்குவது. விழாவின்போது கண்காட்சி வைப்பதற்கான ஓவியங்களை வரைவதற்கான ஒரு குழுவை உருவாக்குவது – இவ்வாறு விழா என்கிற வாய்ப்பை மட்டும் வைத்து பலரது பங்கேற்புக்கு வழி வகுக்கும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

குடிநீர், சுகாதாரம் போன்ற பலவற்றை அடிப்படையாக வைத்து மக்கள் இயக்கங்களை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கும் ஆற்றுப்படுகைச் சார்ந்த மக்களை மையமாக வைத்து அந்த ஆற்றின் வளத்தை பாதுகாக்கும் நீடித்த இயக்கம் ஒன்றை உருவாக்கிடலாம். மக்களின் அடிப்படைப் சிக்கல்களுக்காக நிலைத்து நீடிக்கும் மக்கள் இயக்கங்கள் உள்ளூர்மட்டத்தில் உருவாக்கும் மதச்சார்பற்ற நடவடிக்கைகளே. சமூக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பலரை ஈடுபடுத்தி செயலாற்றக்கூடிய வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

குடும்ப விழாக்கள் ஏராளமானோர் பங்கேற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இவற்றில் பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. எனினும் பல பாரம்பரிய நடவடிக்கைகளில் கலந்து கொள்வது மதச்சார்பற்றவாதிகளுக்கு அந்த மக்களோடு தொடர்பு கொள்ளவும் அவர்களோடு ஒன்றிணையவும் வாய்ப்பாக அமையும். சடங்குகள் எனும் பெயரால் நடைபெறும் மூட நம்பிக்கையோடு கூடிய செயல்பாடுகளிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள வேண்டுமே தவிர அவற்றில் ஈடுபடும் மக்களோடு உறவை துண்டித்துக் கொள்ளக் கூடாது. அந்த உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். பல சந்தர்ப்பங்களில் சடங்குகள் பெயரால் நடக்கும் பல அநீதிகளுக்கு இந்த சடங்குகளை கையாளும் மக்களே தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தவறான இந்த நடைமுறைகளை எதிர்க்க வேண்டுமே தவிர, அந்த மக்களிடமிருந்து மதச்சார்பற்றவாதி தனிமைப்பட்டுவிடக்கூடாது.

இவ்வாறு சமூகத்தில் நிலவும் எண்ணற்ற வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்துகிறபோது, வகுப்புவாதத்தை முறியடிக்க முடியும். அதுமட்டுமல்லாது, மதச்சார்பற்ற இடதுசாரி சிந்தனைகளுக்கும் இயக்கங்களுக்கும் தளமாக சமூகத்தை மாற்றிட முடியும்.மதச்சார்பற்ற சமுகமே சோசலிசத்தை அமைப்பதற்கான அடித்தளம்.

குடியரசின் மாண்புகளைப் பாதுகாப்போம்! மக்கள் நலன்களை முன்னேற்றுவோம்!

பிரகாஷ் காரத்

தமிழில். சி.சுப்பாராவ்

1950ல் குடியரசு அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டது சுதந்திர இந்தியாவின் முக்கியமான சாதனையாகும், ஐம்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன், அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை தனது குடிமக்களுக்கு ஜாதி, மத, இன, பால் பேதமின்றி சம உரிமை அளிக்கும் ஜனநாயகக் குடியரசாக அறிவித்தது. இப்போது நினைத்துப் பார்த்தால், வயது வந்தோருக்கான வாக்குரிமையுடன் கூடிய பாராளுமன்ற ஜனநாயக முறையை உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் மிகப் பெரிய சாதனைதான் என்று தெரிகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் சொல் அமைப்பிலும், செயல்படும் முறைகளிலும், பல தடைகளும் எல்லைகளும் கொண்டதாக  இருந்தாலும் கூட, சாமானியனும் அரசியலில் ஈடுபட அது வழி வகுத்தது. பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய இந்திய அரசுச்சட்டம் 1935 ன் படி, வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், நியமன உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப் பட்ட அரசியலமைப்புச் சட்டமானது, 1947ல் அதிகாரத்திற்கு வந்த ஆளும் வர்க்கத்தின் முத்திரையைப் பெற்றதில் வியப்பில்லை. எனினும், தேச விடுதலைப் போராட்டத்தின் போது மக்களிடையே இருந்த எதிர்பார்ப்புகளையும் அது முன்னெடுத்துச் சென்றது.

இவற்றில் சில வழிகாட்டும் கொள்கைகளில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. அடிப்படை உரிமைகள் மக்களின் சில குடி உரிமைகளைப் பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளன. அதே நேரத்தில், வழிகாட்டும் கொள்கைகளை நீதிபூர்வமாக நடைமுறைப்படுத்தும் கட்டாயமில்லை. நடைமுறையில் பல அடிப்படை உரிமைகள் மீறப்படுவதும், அவை அணுக முடியாத உயரத்தில் இருப்பதும் மக்களின் வாழ்பனுபவமாகும். அரசியலமைப்புச் சட்டத்தில் தரப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததன் முக்கியக் காரணம் இந்திய அரசின்  அடிப்படைத் தன்மையில் – அதன் நிலப்பிரபுத்துவ, பூர்ஷ்வாத் தன்மையில் உள்ளது. அரசியல் ஜனநாயகம் ஒரு புறமாகவும், செல்வக்குவிப்பும், பொருளாதார ஆதாரங்கள் குவிப்பும் மறுபுறமாகவும் முரண்பட்ட நிலையை உருவாக்குகின்றன.

பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு அரசியலமைப்புச் சட்டம் தான் ஒரு கட்டமைப்பைத் தந்துள்ளது. இந்த முறையை ஏற்றுக் கொண்டுள்ள பல முன்னாள் – காலனி நாடுகளைக் காட்டிலும், இங்கு அது உயர்வாக இயங்குகிறது. ராணுவம், அதிகார வர்க்கம் ஆகியவற்றை அரசியல் கட்டுப்பாட்டில் வைக்கவும், ஓரளவு சுதந்திரமான நீதித்துறை ஆகியவற்றை இது அளித்துள்ளது.

இந்தியா போன்ற ஒரு வளர்ந்து வரும் முதலாளித்துவ நாட்டில் ஜனநாயக முறை பெற்று இருக்கும் அடிப்படை குறுகியதாக இருந்தாலும், அதற்கும் தடைகள் இருந்தாலும் அவைகளை மீறி, பாரளுமன்ற ஜனநாயகம் தன் ஜீவனை, உயிர்ப்பை பல அண்டுகளாகக் காப்பாற்றி வருவது பாராட்டுக்குரியது. சுதந்திரத்திலிருந்து இன்று வரை ஜனநாயகத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளனவே தவிர குறையவில்லை. அனைத்து மட்டத் தேர்தல்களிலும், சாதாரண மக்கள் உற்சாகத்தோடு பங்கேற்கிறார்கள். கிராமப்புற ஏழைகளும், ஒடுக்கப்பட்டோரும் தேர்தல்களை, சந்தேகக் கண்ணோடு பார்ப்பதில்லை. மாறாக, பல இடங்களில், கிராமப்புறங்களில், வன்முறை மூலம், நிலப்பிரபு / ஆதிக்க ஜாதியினர் ஏழைகளை, தலித்துகளை வாக்களிக்க விடாமல் தடுப்பதைப் பார்க்கிறோம். உட்கட்சி ஜனநாயகத்தைத் தம் கட்சிக்குள் கொண்டு வருவதில் பல கட்சிகள் தோல்வியடைந்தாலும், அது ஒட்டு மொத்தமாக கட்சி அரசியல் முறையின் சிதைவில் முடியவில்லை. கட்சி அரசியல் முறையின் உயிரோட்டத்திற்குச் சாட்சியாக, அரசியல் கட்சிகள் பல்கிப் பெருகி வருகின்றன. நாட்டின் அரசியலை இருகட்சி முறைக்கு மாற்ற நினைத்தவர்களின் ஆசையில் மண் விழுந்தது.

பல குறைபாடுகளும், எல்லைகளும் இருந்தாலும், குடியரசு அரசியலமைப்பு பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஒரு அடித்தளம் அமைத்துத் தந்துள்ளது. ஜனநாயகத்தில் வெகுஜனப் பங்கேற்பை ஏற்படுத்தி, அரசியல் சட்டப் பூர்வ மதிப்பை அளித்துள்ளது. இது 1950 களில் தோன்றிய அரசியல் முறையின் சாதகமான அம்சமாகும்.

ஆனால், இவைகளால் ஜனநாயக முறையின் ஆபத்தான குறைபாடுகளையும், அது சந்திக்கும் சவால்களையும் மறைக்க முடியவில்லை. நவீன தாராளமயக் கொள்கைகள், தடையில்லாத தனியார் மயம் என்று போய்க்கொண்டிருக்கும் இன்றைய முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில், பொருளாதார அமைப்பின் வர்க்கப் படிநிலையிலிருந்து அரசியல் ஜனநாயகம் சிறிது சிறிதாக விலகி வருகிறது. அரசியலமைப்பின் சிற்பி.டாக்டர்.அம்பேத்கர் இப்பிரச்சனை குறித்து சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளார். சமூக, பொருளாதார ஜனநாயகம் இல்லாத இடத்தில் அரசியல் ஜனநாயகம் வெற்றி பெற இயலாது என்பதை புரிந்து கொள்ளத் தவறும் இரண்டாவது தவறான தத்துவப் பார்வை, பாராளுமன்ற ஜனநாயகத்தை பலகீனப்படுத்திவிடும் ஊறு உள்ளது. சுதந்திர இந்தியாவில் முன்பு எப்போதையும் விட இப்போது இருப்பவர் – இல்லாதவர்களிடையே உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது. பெரும்பாலோருக்கும் பயனளிக்கவில்லை என வெளிப்படையாகத் தெரிந்த போதிலும் கூட, அத்தகைய பொருளாதார வளர்ச்சி போற்றப் படுகிறது. அரசியலமைப்பின் வழிகாட்டும் கொள்கைகளில் கூறப்பட்டுள்ள வேலைவாய்ப்பு உரிமை, கல்வி, உழைப்போர்க்கு வாழ்வதற்கேற்ற ஊதியம், குழந்தைகளுக்கு இலவசக்கட்டாயக்கல்வி என்ற பல்வேறு வாக்குறுதிகளிலிருந்து அரசு பின்வாங்குவது தற்போது அதிகமாகியுள்ளது.

குறைபாடுகளும், சவால்களும்

சமூகத்தில் சமத்துவம் நிலவுவதாக காட்டும் தோற்றத்தைக் கூட ஏற்படுத்த இயலாமல் குடியரசு தோல்வியடைந்துள்ளது தெளிவு. அரசியலமைப்பின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள கண்துடைப்பு நடவடிக்கையாக இடஒதுக்கீடு  ஆகிவிட்ட நிலையில், தலித்துகள் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். 8.4 கோடி ஆதிவாசிகள் நிலப்பிரபுத்துவ – லேவாதேவி – காண்டிராக்டர்களின் வட்டாரத்தால் கடுமையாகச் சுரண்டப்படுகின்றார்கள். இதற்கும் மேலாக, அவர்களது நிலம், வாழ்க்கை, வாழிடம் அனைத்தையும் பிடுங்கும் இடையறாத தாரளமய, தனியார்மயத்திற்கு அவர்கள் இரையாகிறார்கள். ஆதிவாசிகளின் மீதான உட்சபட்சத் தாக்குதலை கலிங்கா நகர் படுகொலையில் பார்த்தோம். குடியரசாகி ஐம்பத்திஆறு ஆண்டுகளான பின்னும், அரசு மக்களுக்கு எழுத்தறிவே தரவில்லை யெனும் போது, 14 வயது வரைக்கும் கட்டாயமான, இலவசக்கல்வி குறித்து நாம் பேச முடியுமா? மக்கள் தொகையில் முப்பத்தி ஐந்து சதம் கல்வியறி வில்லாதவர்கள் தான்.

மற்ற உலக நாடுகளோடு ஒப்பிட முடியாத அளவு கோரமான வறுமை இந்தியாவில் நிலவுகிறது. பசி, ஊட்டச்சத்துக்குறைவு, நோய்கள் என இது தொடர்பான பிரச்சனைகள் ஏராளம். முழுமுதல் அடிப்படையான தோல்வி வறுமை ஒழிப்பில் தான்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்படும் தாரளமய, தனியார்மயக் கொள்கைகள் ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோதப் போக்கை நாட்டில் பரப்பியுள்ளன. தாரளமய சித்தாந்தங்களின் விளைவாக ஜனநாயகத்தின் மீது புதுத் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளன. உழைக்கும் வர்க்கத்தைக் தட்டி வைக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. 1990 களில் பா.ஜ.க.வின் வளர்ச்சி அப்பட்டமான மதவாதத்தின் வளர்ச்சி; வலது சாரி சர்வாதிகாரத்தை நோக்கிய சாய்வு என்று கொள்ளலாம். பா.ஜ.க. வும் அதன் தலைவர் திரு.எல்.கே.அத்வானியும் தற்போதுள்ள பாராளுமன்ற ஆட்சி முறையை மாற்றி ஜனாதிபதி ஆட்சி முறை ஏற்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்ததில் வியப்பொன்றும் இல்லை. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பதில் சில கட்டுப்பாடுகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கே கல்வித் தகுதிகள், இவைபற்றியெல்லாம் பல வதந்திகள் உலவுகின்றன. இவை ஏதோ சில தனிநபர்கள் அல்லது அரசியல் கட்சிகள் கூறுவதாக நினைப்பது தவறு. இவை சர்வதேச நிதி மூலதனத்தைத் தேடும் மிகப் பெரிய பண முதலைகளின் ஜனநாயக விரோதக் கொள்கைகள்.

இது போன்ற கொள்கைகளை நாட்டின் மிக உயரிய நீதி அமைப்பும் வெளியிடுகிறது. மக்களின் கூட்டுப் போராட்ட உரிமைகளை அது சகித்துக் கொள்வதில்லை. ஹர்த்தால்கள், பந்த்கள் தடை செய்யப்படுகின்றன. கூட்டங்கள் நடத்துவது, கண்டம் தெரிவிப்பது போன்ற நடவடிக்கைகளுக்குப் பல கட்டுப்பாடுகள். மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுப்பது இப்படி தொழிலாளர்கள் குறித்த பழமைவாதப் போக்கை உச்ச நிதிமன்றத்தின் பல தீர்ப்புகளில் காணலாம். அரசியலிலும், பொருளாதாரத்தில் மட்டும் வலதுசாரிச் சிந்தனைகள் தோன்றுகின்ற நிலையைத் தாண்டி, தற்போது நிலவும் பழக்க வழக்கங்களை நிலைபெறச் செய்வது, ஜாதிய வெறுப்புணர்வுகளை மங்கவிடாமல் வளர்ப்பது, விஞ்ஞானத்திற்கும், பகுத்தறிவிற்கும் பொருந்தாத விஷயங்களை தலைமேல் வைத்துக் கொண்டாடுவது – இவைகளும் தான் இன்றைய நிலவரமாக உள்ளது. சுதந்திரம் அடைந்த புதிதில், ஜனநாயக நெறிகளையும், விஞ்ஞானப் பூர்வமான அணுகுமுறையையும் பாதுகாக்கப்போவதாக ஆளும் பூர்ஷ்வா வர்க்கம் அன்று பேசியதற்கும், இப்போது நடப்பதற்கும் சம்பந்தமே இல்லை. பா.ஜ.க. ஆட்சியில், அனைத்துத் துறைகளிலும் மதவாதமும், சமூகக் கட்டுப்பெட்டித் தனமும் ஊடுருவின. இன்றும் அதில் பெரும்பகுதி நேராக்கப்படாமலேயே உள்ளது.

அனைத்து மட்டங்களிலும் உள்ள ஊழலால், அரசாங்க அமைப்பின் எல்லாத் துறைகளும் சீரழிந்துவிட்டன. அரசியல் கட்சிகள் உரிமை கொண்டாடும் அம்சமாக ஊழல் ஆகிவிட்டது. இதுவரை அதிகார பீடத்தில் ஏறாத அரசியல் கட்சி, ஜாதிச் செல்வாக்கில் ஆட்சிக்கு வரும் போது மக்கள் ஏற்றுக் கொள்வது அதிகரித்துள்ளது. வளர்ச்சிக்கான அரசின் திட்டங்கள், நலப்பணிகள் மக்களைச் சென்று அடையாததன் முக்கியக் காரணம் மேல்மட்ட அதிகாரிகள், பூர்ஷ்வா அரசியல் வாதிகள் ஆகியோர் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பது தான்.

எனினும், இத்தகைய எல்லா பாதகமான அம்சங்களும், பாராளுமன்ற ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து விடவில்லை. பூர்ஷ்வா வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தின் வடிவமாக இருந்தாலும் கூட, இன்றைய பாராளுமன்ற அமைப்பு மக்களின் முன்னேற்றத்தையும், பிரதிநிதித்துவப்படுத்துகிறது.. அது மக்களுக்குத் தங்கள் நலன்களைப் பாதுகாக்க சில வாய்ப்புக்களைத் தருகிறது. ஓரளவு அரசின் செயல்பாடுகளில் மக்களால் தலையிட முடிகிறது. சமூக முன்னேற்றத்திற்கும், ஜனநாயக முன்னேற்றத் திற்குமான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வழி வகுக்கிறது.

இறையாண்மையின் வீழ்ச்சி

குடியரசின் இறையாண்மைத் கோட்பாட்டிற்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றொரு ஆபத்தான விஷயமாகும். குடியரசாகிப் பல ஆண்டு களுக்கு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதன் சுயேச்சையான செயல்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் பெருமை சேர்ப்பதாக இருந்தது. 1991 ல் தாராளமயக் கொள்கைகள் வந்தபோது, அணிசேராக் கொள்கையை கைவிட முன்வைப்பப்பட்ட வாதங்கள் இறுதியில் சுயேட்சையான அயலுறவுக் கொள்கையை கைவிட வழிவகுத்தது. ஆறாண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் போது, அமெரிக்காவின் இயல்பான துணையாக இருப்பது தான் நமது குறிக்கோள் என்ற ரீதியில் செயல்பட்ட போது இது அதிர்ச்சி தருகிற முறையில் வெளிப்பட்டது. பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம், நமது பொருளாதாரக் கொள்கைகளில் அமெரிக்கா மற்றும் சர்வதேச நிதி மூலதனங்களின் தாக்கம் ஆகியன வெளியுறவுக் கொள்கைகளில் மேலும் மாற்றத்தை ஏற்படுத்தியது.  சுயேட்சையான வெளிநாட்டுக் கொள்கை, பல துருவ உலக உறவை பலப்படுத்துவது என்று வாக்குறுதி அளித்த ஐக்கிய முற்போக்கு அணி அரசு இப்பொழுது ஆளும் வர்க்கங்களின் நிலைபாடான அமெரிக்வின் அரசியல் பங்காளியாக இருப்பது என்ற நிலைபாட்டை உறுதி செய்து வருகிறது. இந்திய – அமெரிக்க ராணுவ ஒப்பந்தமும், ஜூலை 2005 ல் பிரதமர் வாஷிங்டனில் அளித்த கூட்டு அறிக்கையும் சுயேட்சையான வெளியுறவுக் கொள்கை தேய்ந்து போனதைத்தான் காட்டுகின்றன. கடந்த செப்டம்பரில் ஈரான் அணுசக்தி விஷயத்தில் சர்வதேச அணுசக்தி குழுமத்தில் ஈரானுக்கு எதிராக வாக்களித்தது இந்தியாவின் அமெரிக்க சார்புக்கு முக்கியமான அடையாளமாகும்.

இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் கோரிக்கைகளை முன்வைப்பதில் தயக்கம் காட்டாமல் அமெரிக்கா நடந்து கொள்கிறது. வடகிழக்கில் குண்டு வெடிப்புச் சம்பவத்தைப் புலனாய்வு செய்ய அமெரிக்க உள்நாட்டு புலனாய்வு அமைப்பை அனுப்புவதாக அமெரிக்கத் தூதரால்  சொல்ல முடிகிறது.  இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி மூலதனத்தை உயர்த்தாமல் நம்பிக்கைத் துரோகம் செய்ததாகக் குற்றம் சாட்டவும் முடிகிறது. ஈரான் – இந்தியா – பாகிஸ்தான் கூட்டு முயற்சியாக எரிவாயு குழாய் இணைப்புத் திட்டத்தை இந்தியா செயல்படுத்தக் கூடாது என அமெரிக்கா எச்சரிக்கவும் முடிகிறது. முன்னாள் இருந்த பா,ஜ,க, தலைமையிலான அரசும் சரி, இப்பொழுது ஐக்கிய முற்போக்கு அணியும் சரி, அமெரிக்காவுடன் இணைந்து, அமெரிக்காவின் ஜனநாயகத்தைப் பரப்புவது என்ற போர்வையில், அதன் மேலாதிக் கத்தை திணிக்கும் முயற்சிக்கு  உதவுவதில் எந்தத் தவறும் இருப்பதாகக் கருதவில்லை. இன்றைய அரசியல் அமைப்பில் வெளிப்படும் அனைத்து ஜனநாயக விரோதப் போக்குகளையும் சி.பி.எம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மதச்சார்பின்மையை உள்ளடக்கிய ஜனநாயக நெறிகளைப் பாதுகாப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மதவாத ஆபத்தை எதிர்த்து, நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க, அரசியல் ஜனநாயகத்தை வலுப்படுத்தி, நாட்டின் அரசியலில், இடதுசாரிகள் தான் மாற்று என்பதை உணர்த்த இன்னும் அதிகமான பணிகள் செய்ய வேண்டும்.

பாராளுமன்ற ஜனநாயக முறையை வலுப்படுத்த, தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம். பணபலம் மற்றும் அடியாள் பலத்தைக் கட்டுப்படுத்த தேர்தல்களில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் (Proportional Representation) அடிப்படையான தேவையாகும். தேர்தல் செலவிற்கு என நிர்ணயிக்கப்பட்ட தொகையில் அனைத்து செலவீனங் களையும் அடக்கும் விதமாக சட்டங்கள் கடுமைக்கப்பட வேண்டும். தேர்தல் பிரச்சாரத்திற்கான அனைத்துப் பொருட்களை யும் அரசே தரும் விதமாக சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

1994 ல் ஒன்பது பேர் அடங்கிய உச்ச நீதி மன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் மதச்சார்பின்மை தான் அரசியலமைப்பின் ஆதாரம் என்றும், அதன் பொருள் அரசில் மதம் தலையிடுவதும், மதத்தில் அரசு தலையிடுவதும் இன்றி, இரண்டும் தனித்தனியாக இருப்பது என்று வரையறுத்தது. இந்த வரையறை அரசியமைப்பில் தெளிவாக இடம் பெற வேண்டும்.

இன்றைய நிலையில், பொருளாதாரக் கொள்கைகளின் மோசமான போக்கை எதிர்த்து இடதுசாரிகளும், சி.பி.எம்.மும் போராட வேண்டும். வர்க்கப் பிரச்சனைகளான நிலச் சீர்திருத்தம், கூலி, வேலை வாய்ப்பு, பொதுத்துறை பாதுகாப்பு, உழைக்கும் மக்களைப் பாதிக்கும் தாரளமயத்தை எதிர்த்துப் போராட்டம். இவையனைத்தும், வர்க்கப் போராட்டத்தையும், வெகுஜன இயக்கத்தையும் விரிவு படுத்த அடித்தளமாக அமைய வேண்டும். பெண்ணுரிமை, தலித்துகள், ஆதிவாசிகள் முன்னேற்றம், சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டோரின் உரிமையைப் பாதுகாக்கும் அனைத்துப் போராட்டங்களையும் இடதுசாரிகள் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். மதவாத விஷத்திற்குப் புத்துயிர் அளிக்க பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கூட்டணி செய்யும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்க சார்பு நிலையை எதிர்ப்பது, குடியரசு, இறையாண்மை மாட்சியைப் பாதுகாப்பதில் சுயேட்சையான வெளியுறவுக் கொள்கை அவசியம் என்பதை நிறுவுவது, நமது போராட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த இருபது மாதங்களாக ஆட்சியில் இருக்கும் சூழலில் இப்பணிகள் அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். ஐ.மு.கூ. அரசை மக்கள் நலப் பணிகளைச் செய்ய வலியுறுத்தும் அனைத்து வேலைகளையும் தற்போது நடந்து வருகின்றன. இப்பாதையில் மேலும் நடைபோட செப்.29 வேலை நிறுத்தம் நமக்கு உத்வேகம் அளித்துள்ளது. இந்தியர்கள் தங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமையை ஏகாதிபத்தியத்திடம் ஒப்படைக்க மாட்டார்கள் என்பதை அறிவிக்க, எதிர்வரும் அமெரிக்க அதிபர் புஷ் வருகிற நேரம் இடதுசாரிகளுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் கிடைத்த அருமையான வாய்ப்பாகும்.