இட ஒதுக்கீடு: சிபிஐ(எம்) அணுகுமுறை

கே. பாலகிருஷ்ணன்

குரல்: யாழினி

தமிழகத்தில் மாநில கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீடு நீண்ட காலமாக அமலில் உள்ளது. கிட்டத்தட்ட 95 சதவீத மக்கள் இடஒதுக்கீடு வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஆனால் இதர மாநிலங்களில் இத்தகைய நிலைமை இல்லை. சரிபாதிக்கும் மேற்பட்ட மக்கள் சில மாநிலங்களில் இட ஒதுக்கீடு சலுகை பெறும் வரம்புக்கு வெளியில் உள்ளனர். எனவே, இம்மாநிலங்களில் தங்களுக் கும் இட ஒதுக்கீடு சலுகை வேண்டுமென அவர் கள் கோருவது தவிர்க்க இயலாத ஒன்றாகும்.

தமிழகத்தில் மாநில அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 252 சாதிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தீர்மானிக்கப்பட்டுள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான பிற்படுத்தப் பட்டோர் சாதியில் 181 சாதிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இதில் விடுபட்டுள்ள 71 சாதி களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பெறும் வாய்ப்பு தற்போது இல்லை. பொருளாதாரத்தில் பின் தங்கிய இதர பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப் பட்டதன் மூலம் இவர்களுக்கு மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சலுகை பெற இப்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தனியார் மயம்

அதுமட்டுமின்றி, அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் நாளுக்குநாள் மூடப் பட்டோ, தனியார் மயமாக்கப்பட்டோ வரு கின்றன. இருக்கும் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன. 2018-ம் ஆண்டு டிசம்பர் கணக்கெடுப்பின்படி மோடி ஆட்சியில் ஒரே ஆண்டில் சுமார் 1 கோடியே 10 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டன என இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (ஊஆஐநு) தெரிவித்தது. மத்திய-மாநில அரசுகளால் அமலாக் கப்படும் தனியார் மயம், தாராளமயக் கொள்கை களால் இடஒதுக்கீடு நீர்த்துப் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள வேலைவாய்ப்பு களில் தோராயமான கணக்குப்படி 85 சதவீதம் தனியார் நிறுவனங்களிலும், 15 சதவீதம் மட்டுமே அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளன. நிரந்தரப் பணிகளை வெளிநிறுவனங் களைக் கொண்டு செய்விப்பதன் விளைவாக (அவுட்சோர்சிங்) அவையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன.

இந்நிலையில் தனியார் துறைக்கும் இட ஒதுக் கீட்டு கோட்பாட்டை விரிவுபடுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட காலமாகவே வற்புறுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் இம்ம சோதா விவாதத்திற்கு வந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கள் (மக்களவையிலும், மாநிலங்களவையிலும்) அனைத்துப் பிரிவினருக்கும் தனியார் துறையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான இட ஒதுக் கீட்டினை விரிவாக்க வேண்டுமென சட்டத் திருத்தத்தை முன்மொழிந்தனர். ஆனால் மோடி அரசு அதை நிராகரித்து விட்டது.

இட ஒதுக்கீட்டிற்கு உண்மையான ஆபத்து தனியார்மய, தாராளமயக் கொள்கைகளால் தான் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து இடஒதுக் கீட்டு கோட்பாட்டை பாதுகாக்க வேண்டுமெனில், தனியார் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதற்கான சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்று வது அவசர, அவசியமானதாகும். இதற்கு அனைத்து ஜனநாயக, முற்போக்கு சக்திகளும் இணைந்து குரல் கொடுப்பது காலத்தின் தேவையாகும்.

நிலக்குவியல்

இடஒதுக்கீடு பிரச்சனை குறித்து விவாதிக்கும் போது சாதிகள் குறித்தும் அதற்கு அடிப்படை யாக உள்ள நிலவுடைமை குறித்தும் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியின் நிலைப்பாடாகும். நீடித்து வரும் வேலையின்மை, வறுமை, பசி, பட்டினி போன்ற அனைத்து சமூகச் சீர்கேடுகளுக் கும் அடிப்படையான காரணம் விடுதலைக்குப் பிறகும் பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் நிலக்குவியலே ஆகும். இந்த நிலக் குவியலை உடைத்து நிலமற்றோர் அனைவருக்கும் நிலவிநி யோகம் செய்வதன் மூலம் மட்டுமே வேலையின் மைக்கு முடிவு கட்ட முடியும். அதாவது நிலமற்ற அனைவருக்கும் நிலவிநியோகம் செய்து அவர் களது வருவாய்க்கு வழி செய்வதன் மூலம் இம்மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த முடி யும். மக்களின் வாங்கும் சக்தி உயரும்போது பொருட்கள் உற்பத்தி, விற்பனை, அதனால் ஏற்படும் தொழில்வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு வழியேற்படும்.

இதையே மண்டல் கமிஷன் ”தீவிரமான நிலச் சீர்திருத்தம், கிராமப்புற பொருளாதார மறுசீர மைப்பு, பூதான இயக்கம், கால்நடை மற்றும் பால் பண்ணை வளர்ச்சி உள்ளிட்டவைகளை மேற்கொள்ள வேண்டும்”என்று சொன்னதோடு“நிலச்சீர்திருத் தத்தின் மூலம் இன்றைய நிலவுடைமைகளை மாற்றாமல் உண்மையான சமூகநீதி கிடைக்காது” எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த மையமான பிரச்சனையை கையில் எடுக்க அன்றும் இன்றும் உள்ள ஆட்சியாளர் கள் முன்வரவில்லை என்பதே உண்மை.

இடதுசாரி அரசுகள்

இந்த நிலச்சீர்திருத்தத்தை அடிநாதமாகக் கொண்டே 1957-ம் ஆண்டில் தோழர் இ.எம்.எஸ். தலைமையிலான இடதுசாரி அரசில் தொடங்கி இன்று வரை கேரளா, மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஆட்சிக்கு வந்த இடதுசாரி அரசுகள் நிலச்சீர்திருத்த நடவடிக் கைகளை மேற்கொண்டன. இதன் மூலம் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட உபரி நிலங்களில் கேரளாவில் 70,834 ஏக்கர் 1,68,912 பயனாளிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 10,52,269 ஏக்கர் 31,37,662 பயனாளிகளுக்கும், திரிபுராவில் 1,599 ஏக்கர் 1,424 பயனாளிகளுக்கும் விநியோகிக் கப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் உபரியாக அறிவிக்கப்பட்ட நிலங்களில் 21 சதவீத நிலம் மேற்குவங்கத்தில்தான் அறிவிக்கப்பட்டது.  இந்தியா முழுவதும் இவ்வாறு நிலம் பெற்ற பயனாளி களில் 54.2 சதவீதம் பேர் மேற்கு வங்கத்தில்தான் உள்ளனர் என்பதும் மேற்கு வங்க இடது முன்னணி அரசின் முனைப்பையும் செயல்பாட்டையும் எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.  (இது 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள்)

தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு சட்டம் நிறை வேற்றப்பட்டபோது 20 லட்சம் ஏக்கர் நிலம் உபரியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால் கடந்த 60 ஆண்டுகளில் விநியோகம் செய்யப்பட்ட மொத்த உபரி நிலம் 1.90 லட்சம் ஏக்கர் மட்டுமே. மண்டல் கமிஷன் சுட்டிக் காட்டிய உண்மையான சமூக நீதிக்கான நில விநியோகம் செய்யப்பட்ட லட்சணம் இதுவே.

உண்மையான சமூகநீதி

இடஒதுக்கீடு பிரச்சனையில் தீவிரம் காட்டும் கட்சிகளும் இம்மக்களுக்கு நிலவிநியோகம் செய்ய வேண்டும் என்பதை மறந்தும்கூட வற்புறுத்து வதில்லை. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிராமப்புற நிலவுடைமையில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலமே தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதன் மூலம் உண்மையான சமூகநீதி கிடைக்கும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

நிலப்பிரபுக்கள் மற்றும் பெரும் தொழிலதிபர் களிடம் உள்ள நிலங்களை பறிமுதல் செய்து நிலமற்றோருக்கு விநியோகம் செய்வது விவசாயப் புரட்சியின் அடிப்படைக் கடமைகளோடு தொடர்புடையதாகும். இதை சட்டம் மற்றும் நீதிமன்றங்களின் மூலம் மட்டுமே நடத்துவது சாத்தியமில்லை. இத்தகைய விவசாயப் புரட்சியை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் மட்டுமே நிலப்பிரபுக்கள், பெரும் தொழிலதிபர்கள், கந்து வட்டிக் கும்பல்கள் ஆகியோரின் கோரப்பிடியி லிருந்து தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப் பட்ட உழைப்பாளி மக்களை விடுவிக்க முடியும். இவர்கள் காலம் காலமாக அனுபவித்து வரும் அனைத்துக் கொடுமைகளுக்கும் முடிவு கட்ட முடியும். இதைத் தவிர இதற்கு மாற்று வழி கிடையாது என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் திட்டவட்டமான முடிவாகும்.

மக்கள் ஒற்றுமை

விவசாயப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டுமெனில் தாழ்த்தப்பட்ட, பழங் குடி, பிற்படுத்தப்பட்ட மக்களது ஒற்றுமை மட்டுமல்லாது இதர சாதிகளைச் சேர்ந்த உழைப் பாளி மக்களின் ஒற்றுமையும் அவசியமானதாகும். சமூகத்தில் உள்ள அனைத்து உழைப்பாளி மக்களின் போர்க்குணமிக்க வர்க்க ஒற்றுமையை உருவாக்குவது என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டுள்ள நீண்ட பயணத்தின் குறிக்கோளாகும்.

ஆனால் உழைப்பாளி மக்களை முற்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என பல அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயத்திற்காக பிளவுபடுத்துவது இம்மக்களின் நலன்களுக்கு விரோதமானதாகும் என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக சுட்டிக்காட்டி வந்துள்ளது. ஒரு பக்கம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு இட ஒதுக்கீட்டு கொள்கை யினை கண்டிப்பாக அமலாக்க வேண்டும் என வற்புறுத்தும் அதே நேரத்தில், இதர சாதிகளில் உள்ள உழைப்பாளிகள் மற்றும் ஏழை மக்களுக் கும் ஒரு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென நீண்டகாலமாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி வருவது மேற்கண்ட விவசாயப் புரட்சியை வெற்றிகரமாக நடத்திட வேண்டுமெனில் அனைத்து உழைப்பாளி மக்களின் வர்க்க ஒற்றுமை பலப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் அணுகு முறையே ஆகும்.

இடஒதுக்கீடு பிரச்சனை : ஜனநாயக இயக்கத்தின் பார்வை

அறிமுகம்

பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதம் இட ஒதுக்கீடு செய்வது என்ற மத்திய அரசின் அண்மைக்கால முடிவு சில வட்டாரங்களிலிருந்து கடுமையான எதிர்ப்பைச்சந்தித்துள்ளது. நமது நாட்டு ஊடகங்கள் – தொலைக்காட்சி, பத்திரிக்கை, இணைய தளம் இத்யாதி பெரும்பாலும், அரசின் முடிவிற்கு எதிராக அந்தஸ்து மிகுந்த மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவ சமுதாயத்தில் ஒரு சிறிய பகுதியினர் நடத்தி வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக, செய்தி – பிரச்சாரம் மேற்கொண்டுள்ளன. ஆனால் இதே ஊடகங்கள், இத்தகைய எதிர்ப்பை விட பன்மடங்கு வலுவாக, இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் இயக்கங்களைப் பற்றி மிகக் குறைந்த அளவிலேயே செய்திகளை வெளியிடுகின்றன. இருட்டடிப்பு செய்கின்றனர் என்றே கூறலாம். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மிகப் பிற்போக்குத்தனமான முறையில் எதிர்த்து வருவது ஒரு மேல் தட்டில் உள்ள, சிறிய சமூகப் பகுதிதான். இருந்தபோதிலும், இந்த எதிர்ப்புகள் இரண்டு விஷயங்களை முன் கொண்டு வருகின்றன. ஒன்று, ஒரு மிக அவசியமான ஜனநாயகத் தன்மை கொண்ட நடவடிக்கையைக் கூட பிற்போக்குத் தனமாக எதிர்க்கும் மேல் தட்டு சமூகப் பகுதியின் நிலை பாடு அம்பலமாகியுள்ளது. இரண்டு, அனைத்து வணிக, சமூகப், பொருளாதார அநீதிக்கும், ஒடுக்கு முறைக்கும் எதிராக, அனைத்து உழைக்கும் மக்களின் ஒற்றுமை யைக் காட்டும் வகையில், இப்பிரச்சனையின் பல்வேறு அம்சங்களைத் தெளிவுபடுத்துவது நமது இயக்கத்தின் அவசர, அவசியம்.

துவக்கத்திலேயே, நாம் ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகக் கூற வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு உயர் கல்வி நிறுவன மாணவர் சேர்க்கையில் 27 சதம் ஒதுக்கீடு செய்வது முற்றிலும் நியாயமானது. சொல்லப்போனால், எப்பொழுதோ செய்யப் பட்டிருக்க வேண்டிய ஒன்று. இடஒதுக்கீடு பற்றிய தனது அண்மை முடிவை அறிவிக்கும் பொழுது மத்திய அரசு  93 வது அரசியல் சாசன திருத்தம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. 93 வது திருத்தம் என்ன செய்கிறது? அரசியல் சாசன குறிக்கோளான சமூக நீதியை அடைவதற்கு, அனைத்து வகை கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை வழி முறைகளில் தேவையான சிறப்பு நெறிமுறைகளைக் கடைபிடிக்கும் படி ஆணையிட அரசுக்கு உரிமை உண்டு என்று கூறுகிறது.

அனைத்து வகை கல்வி நிறுவனங்கள் என்பது இங்கே அரசு நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறாத நிறுவனங்கள் ஆகிய மூன்று வகைகளையும் உள்ளடக்கியதாகும். அரசியல் சாசனத்தின் 30 (1) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள  சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கல்வியை வணிக மயமாக்கி கொள்ளை லாபம் அடித்து வரும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பச்சைக்கொடி காட்டி பரிபூரண சுதந்திரம் வழங்கிய ஒரு உச்ச நிதி மன்ற முடிவின் எதிரொலியாக கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட 93 வது திருத்தம் வரவேற்கத்தக்கதே.

அதே சமயம், மத்திய அரசின் கீழ் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 27 சதம் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு 93 வது அரசியல் சாசன திருத்தம் அவசியம் அல்ல. 1990 ல் வி.பி. சிங் தலைமையிலான தேசீய முன்னணி அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைகளில் ஒர பகுதியை அமல் செய்யும் வகையில் மத்திய அரசு மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 27 சதம் இட ஒதுக்கீடு செய்தது. இட ஒதுக்கீடு பற்றிய மண்டல் கமிஷன் கொள்கை நிலைபாட்டை உச்ச நீதிமன்றம் தனது 1992 தீர்ப்பில் (இந்திரா சாஹனி எதிர் இந்திய அரசாங்கம்) அங்கீகரித்தது. ஆனால், 1990க்குப் பின்பு மத்தியில் ஆட்சி செய்த அரசுகள், தாராளமயக் கொள்கைகளின் பிடியில் செயல்பட்டனவே தவிர, பிற்படுத்தப்பட்டோருக்கு உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிப்பதற்கான ஒரு சாதாரண அரசு ஆணையைக் கூட பிறப்பிக்கவில்லை.

நமது நாட்டில் பல நூறு ஆண்டுகளாக கணிசமான பகுதி மக்களுக்கு, பிறப்பின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு, வரலாற்று அடிப்படையில் உருவாகியுள்ள ஆகப் பெரிய ஏற்றத் தாழ்வுகளை நீக்க அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு செய்யாத வரை, ஜனநாயகம் என்பது கணிசமான பகுதி மக்களுக்கு பொருள் அற்றதாகவே இருக்கும். கல்வியில் இட ஒதுக்கீடு தரத்தை பாதிக்கும் என்ற வாதத்தை பொருத்தவரையில், பல பத்தாண்டு களாக இடஒதுக்கீடு அமலாகி வந்துள்ள தமிழகம் போன்ற மாநிலங்களின் அனுபவம் இந்த வாதம் பொய்யானது என்பதைத் தெளிவாக்குகின்றன. தர்க்க ரீதியாக அணுகினாலே, இடஒதுக்கீடு ஒரு மாணவரைச்சேர்க்க மட்டும் தான் உதவுகிறது. குறிப்பிட்ட படிப்பிற்கு சேர்க்கப்படும் அனைத்து மாணவர்களும் ஒரே அளவு கோலை வைத்துத்தானே படிப்பு இறுதியில் மதிப்பீடு செய்யப்படுகிறார்கள்! எந்த ஒரு உயர் கல்விப் பட்டமும் சாதி அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. தென் மாநிலங்களில் பல பத்தாண்டுகள் உயர்கல்வி ஆசிரியப் பணியைச் செய்தவர்களைக் கேட்டாலே ஒரு செய்தியை உறுதிபடச் சொல்வார்கள். அது என்ன? மிகவும் பின்தங்கிய சூழலிலிருந்து, இடஒதுக்கீடு அடிப்படையில் படிப்பிற்குள் நுழையும் மாணவர்கள் சேர்வுகளில் பிற மாணவர் களுடன் ஒப்பிடுகையில் ஒன்றும் குறைந்து போவதில்லை. இடஒதுக்கீடும் தகுதியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது என்ற வாதம் முற்றிலும் பொய்யும் புனை சுருட்டும் ஆகும்.

ஒரு உயர் கல்வி நிலையத்தில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற ஏற்பாடு இருக்கும் பொழுது, இடஒதுக்கீடு பெறாத சமூகங்களைச் சார்ந்த மாணவர்கள் ஒரு சமனற்ற நிலையை எதிர் கொள்கின்றனர் என்பது உண்மை. இதன் பொருள், அவர்களை விடக் குறைவான மதிப்பெண்களை நுழைவுத் தேர்வில் பெறுகின்றன, ஆனால் இட ஒதுக்கீட்டுக்கு தகுதியுள்ள மாணவர் களுக்கு கல்வி நிலையத்தில் அல்லது குறிப்பிட்ட படிப்பில் இடம் கிடைக்கும், அதே நேரத்தில் அவர்களுக்கு கிடைக்காமல் போகும். ஆனால் இந்த சமனற்ற நிலையை அநீதி என்று அம்மாணவர்கள் கருதினாலும், இதையும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்குப் பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டதில் உள்ள அநீதியையும் சமமாகப் பார்க்க முடியாது. வரலாற்று ரீதியாக நிகழ்ந்து வந்துள்ள சமூக அநீதி முற்றிலும் சமனற்ற சமூகக் களத்தை உருவாக்கியுள்ளது என்பதை மறக்கலாகாது.

உயர் சாதி மாணவர்களைப் பொருத்த வரையில், இது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமில்லை என்பதும், வரலாற்று ரீதியாக தொடர்ந்து வந்துள்ள சாதிப்பாகுபாட்டிற்கு சமகால உயர்சாதி மாணவர்கள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல என்பதும் உண்மையே. இருப்பினும், ஒவ்வொரு நியாயங்களை ஒப்பிடும் பொழுது வரலாற்று அநீதியை அகற்றுவது என்ற விரிவான சமூகப்பணி மிக அதிகமான அவசரத்தன்மையும் நியாயமும் கொண்டது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும், தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி நிர்ணயம் செய்வதிலும், அதை வைத்து நியாய, அநியாய கணக்கு போடுவதிலும் சிக்கல் உள்ளது. தேர்வு மதிப்பெண்களை தகுதியின் குறியீடாகக் கொள்ளும் பொழுது, குழந்தைப் பருவத்திலிருந்து சந்திக்கும் கல்விச் சூழல், கல்வி வாயப்பு பெறுதல் ஆகிய விஷயங்களில் சாதி அடிப்படையிலும் வர்க்க அடிப்படையிலும் மேல் சாதியினருக்கு உள்ள சாதகமான நிலைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

தனியார் துறை, பொதுத்துறை இரண்டிலுமே பணி சேர்க்கை, கல்விச் சேர்க்கை இரண்டிலும் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியுள்ள காரணத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அவசியம் என்ற சமூக நீதிக் கோட்பாட்டை ஜனநாயக இயக்கம் முழுமையாக அங்கீகரிக்கிறது. அதே சமயம், பொதுவாக இடஒதுக்கீடு என்ற பிரச்சனையிலும், குறிப்பாக கல்வி நிறுவனங் களில் இடஒதுக்கீடு என்ற பிரச்சனையிலும், ஒரு முழுமையான, வர்க்க அடிப்படையிலான நிலைபாட்டை எடுக்க வேண்டிய தேவையும் கடமையும் ஜனநாயக இயக்கத்தின் முன்பு உள்ளது. குறிப்பாக, சாதி அமைப்பில் பளிச் சென்று வெளிப்படும் சமூக அந்தஸ்து ஏற்றத் தாழ்வுகள் மட்டுமின்றி உற்பத்திக் கருவிகளின் உடமை, வசிக்கும் பகுதி (கிராமமா? / நகரமா?) பாலினம் (ஆண் / பெண்) ஆகிய அம்சங்களிலும் நமது சமூகம் பொருளாதார ஆழமான கட்டமைப்பு ரீதியான ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டுள்ளது என்பதையும் நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது.

மேலும், நாடு விடுதலை பெற்ற பிறகு நமது நாட்டு ஆளும் வர்க்கங்கள் பின்பற்றி வந்துள்ள வளர்ச்சிப்பாதை மேற்கூறிய கட்டமைப்பு ரீதியான ஏற்றத்தாழ்வுகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, அந்த வளர்ச்சிப் பாதையின் நெருக்கடி புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கையின் ஆளுமைக்கு வழிவகுத்துள்ளது. இதன் விளைவு, இன்று சமூக, பொருளாதாரப் பிரச்சனைகளில் அரசு நடவடிக்கை எடுப்பது என்பதை வலுவான பொருளாதார ஆதிக்க சக்திகள் கடுமையக எதிர்க்கின்றன. இத்தகைய கட்டமைப்பு ரீதியான பிரச்சனைகளையும் முதலாளித் துவ வளர்ச்சிப் பாதை மற்றும் புதிய தாராளவாதம் ஆகியவற்றின் அடிப்படை அரசியல் – பொருளாதாரத் தன்மையையும் புரிந்து கொள்ளாமல், எதிர் கொள்ளாமல், இடஒதுக்கீடு பிரச்சனை பற்றியும் அதன் ஜனநாயகத் தீர்வு பற்றியும் ஒரு சரியான புரிதலை ஜனநாயக இயக்கம் பெற இயலாது.

இடஒதுக்கீடு அவசியமே

அண்மைக் காலமாக நடந்து வரும் இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கத்தின் இலக்கு உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு மட்டும் அல்ல. பொதுவாக இடஒதுக்கீடு என்ற கொள்கைக்கே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் வியப்புக்குரிய விஷயமும் அல்ல. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு முன்பு, வி.பி.சிங் அரசு மண்டல் கமிஷன் அறிக்கையின் ஒரு பகுதியை மத்திய அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதம் பணியிட ஒதுக்கீடு என்ற பரிந்துரையை அமல் செய்த பொழுது எழுந்த எதிர்ப்பின் பின்னணியில், தோழர் பிரகாஷ்காரட் பின்வருமாறு குறிப்பிட்டார்.

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு என்பதற்கு பகிரங்கமான எதிர்ப்பு என்பதோடு பழங்குடி மக்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு என்பதும் மறைமுகமாக எதிர்க்கப்படுகிறது. இந்த இடத்தில், 1981ல் குஜராத்தில் நிகழ்ந்த இடஒதுக்கீட்டுககு எதிரான போராட்டத்தையும், டிசம்பர் 1989ல் பழங்குடி மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு மேலும் 10 ஆண்டு காலம் நீட்டிக்கப் பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்த பொழுது உத்திரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த கிளர்ச்சியையும் நினைவு கூர்ந்தாலே இது புரியும். பீப்பிள்ஸ் டெமாக்ரஸி, செப்டம்பர் 19, 1990.

எனவே, இடஒதுக்கீடு அவசியம் என்பதை மீண்டும் விளக்க வேண்டியது அவசியமாகிறது. பழங்குடி மக்களின் சமூக பொருளா தார வளர்ச்சிக் குறியீடுகள் மிகவும் தாழ்வாக இருப்பதாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமைக் கொடுமைக்கு உட்படுத்தப் படுவதுடன் அநேகமாக நிலமற்றவராக இருப்பதாலும், எள்ளள வாவது சமூக உணர்வு உள்ளவர்கள் எவருமே இவ்விரு பிரிவினருக்கு இடஒதுக்கீடு தேவை என்பதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், படித்தவர்கள், அறிவுஜீவிகள் பகுதியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு என்பதை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் உள்ளது. உண்மையில், தேசிய மாதிரி ஆய்வுக்கழகம், (NSSO) உள்ளிட்ட தேசியப் புள்ளி விபர அமைப்புகள் தரும் புள்ளி விவரங்களை அறிவியல் நோக்கில் பரிசீலித்தால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அகில இந்திய அளவிலும், பல மாநிலங்களிலும், சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் மிகவும் பின்தங்கி உள்ளனர் என்பதும், இது கிராமப்புற பிற்படுத்தப்பட்டோர் விஷயத்தில் இன்னும் பளிச்சென்று தெரிகிறது என்பதும் புரியும். எடுத்துக் காட்டாக, 1998 – 2000 காலத்திற்கான புள்ளி விபரம் ஒன்றைப் பார்க்கலாம்.

பழங்குடியினர் மத்தியில் உழைப்புப் படையில் 100க்கு 75 பேரும், தாழ்த்தப்பட்டோர் மத்தியில் 68 சதமும், பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் 61 சதமும், உடல் உழைப்பு செலுத்துபவர்கள் என்றும் பிறபிரிவினரில் 47 சதம் தான் உடல் உழைப்பு மூலம் வருமானம் ஆட்டுவோர் என்றும் தேசிய குடும்ப நல ஆய்வு – 2 (National Family Health Survey – 2) தெரிவிக்கிறது. தேசிய மாதிரி ஆய்வு, 1999 – 2000 என்ன தெரிவிக்கிறது என்றால், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு பெற்ற பெண் ஒருவர் கூட இல்லாத குடும்பங்கள் என்று பார்த்தால், கிராமப் புறங்களில் எஸ்.டி, எஸ்.சி குடும்பங்களில் 100க்கு 70க்கும் மேற்பட்டவை இத்தகைய குடும்பங்களாகும். பிற்படுத்தப்பட்டோர் குடும்பங்களில் 63 சதம் இவ்வாறு உள்ளன. மற்றவர்களில் 45 சதம் தான் இந்த நிலையில் உள்ளன.

இத்தகைய இடைவெளிகள் நகர்ப்புறங்களிலும் காணப்படுகின்றன. 15 வயதுக்கு மேற்பட்ட படித்த பெண் ஒருவர்கூட இல்லாத குடும்பங்கள் என்று பார்த்தால், நகர்ப்புறத்தில் எஸ்.சி, ஓ.பி.சி மற்றும் பிறர் குடும்பங்களில் முறையே 54 சதம், 38 சதம் மற்றும் 25 சதம் இடம் பெறுகின்றன. சில மாநிலங்களில் கிராமப்புற பிற்படுத்தப்பட்டோர் நிலைக்கும் கிராமப்புற பிற்படுத்தப்பட்டோர் நிலைக்கும் எஸ்.சி.க்கள் நிலைக்கும் உள்ள வேறுபாடு மிகக் குறைவாக உள்ளது. இவர்களுக்கும் பிறருக்கும் இடைவெளி மிக அதிகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, 15 வயதுக்கு மேற்பட்ட படித்த பெண் ஒருவர் கூட இல்லாத கிராமப்புற ஓ.பி.சி குடும்பங்கள் ராஜஸ்தான், பீகார், உ.பி, ஆகிய மாநிலங்களில் முறையே 82 சதம், 78 சதம் மற்றும் 75 சதம். எஸ்.சி. அல்லாத, எஸ்.டி. அல்லாத, ஓ.பி.சி. அல்லாத பகுதியினருக்கு இதே விகிதங்கள் முறையே 67 சதம், 58 சதம் மற்றும் 54 சதம் ஆகும்.

இதேபோல், 20 வயதிற்கு மேற்பட்டவர்களை எடுத்துக் கொண்டால் (ஆண் – பெண் இருபாலரும்) கிராமப்பகுதியில் எஸ்.டி, எஸ்.சி, ஓ.பி.சி மற்றும் பிறர் மத்தியில் முறையே 4.9 சதம், 5.3 சதம், 7 சதம் மற்றும் 13.2 சதம். பன்னிரெண்டாம் வகுப்பு பாஸ் அல்லது அதற்கு மேல் படித்தவர்கள். நகரப்பகுதியிலும், 20 வயதுக்கு மேற்பட்ட எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி அல்லாத சமூகத்தினர் மத்தியில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் படித்தவர்கள் விகிதம் 36.7 சதம். ஆனால்,  20 வயதுக்கு மேற்பட்ட நகர்புற ஓ.பி.சி க்களில் 18.3 சதம் தான் பன்னிரெண்டு ஆண்டுகளாவது படித்தவர்கள். நகர்ப்புற எஸ்.சி க்கள் மத்தியில் இந்த விகிதம் 13.2 சதம் தான்.

இடஒதுக்கீடு பல பத்தாண்டு கால அமலில் உள்ள கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட, குறிப்பாக கிராமப்புறங்களில், ஓ.பி.சி க்களுக்கும், பிறருக்கும் கல்வித் தளத்தில் கணிசமான இடைவெளி உள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு

மேற்கூறிய விவரங்கள், எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர்களைப் போலவே, பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு அவசியம் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. கிராமப்புறங்களில் பெரும்பாலான ஓ.பி.சி குடும்பங்கள் கூலி உழைப்பின் மூலமாகத் தான் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை ஈட்டுகின்றனர். நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் இத்தகைய உழைப்பு அத்தக்கூலித் தன்மையிலானது. குறைந்த கூலியும், பாதகாப்பு அற்ற பணி நிலைமையும் கொண்டது. அகில இந்திய அளவில் கிராமப்புற ஓ.பி.சி குடும்பங்களில் 57 சதத்திற்கு ஒரு ஏக்கருக்கும் குறைவாகவே நிலம் உள்ளது. 37 சதம் ஓ.பி.சி ஊரகக் குடும்பங்கள் கூலி உழைப்புக் குடும்பங்களாகும். பெரும்பாலான ஓ.பி.சி சாதியினரும், இச்சாதிகளில் பெரும்பாலான குடும்பங்களும் சிறு, குறு விவசாயிகளாகவும், கைவினைஞர்களாகவும், குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட, பின் தங்கிய தொழில் நுட்பம் கொண்ட தொழில்களில் உள்ளனர். இங்கே ஓ.பி.சி சாதிகளில் பெருவாரியான சாதியினர், நால்வருண வர்ணாசிரம கட்டமைப்பில் அந்தணர், சத்திரியர், வைசியர் ஆகிய பிரிவுகள் அல்லாமல், சூத்திரர் என்ற நான்காம் வருணப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது நினைவு கூறத் தக்கது. வரலாற்று ரீதியாக, நெடு நீண்ட காலமாக சூத்திரர்கள், மேல் ஜாதி அந்தணர், சத்திரிய, வைசியர் சாதியினரின் ஒடுக்கு முறைக்கும் சாதியப்பாகுபாட்டுக்கும் இரையானவர்கள். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு அடுத்தபடியாக கடும் சாதி ஒடுக்குமுறையைச் சந்தித்தவர்கள். தோழர் பிரகாஷ் காரட் ஓ.பி.சி க்கள் பற்றிப் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களின் (பட்டியல்களில்) ஓ.பி.சி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் பெரும்பகுதியினர் கிராமப்புற ஏழைகள் என்பது தெளிவு. அவர்கள் பங்கு சாகுபடி விவசாயிகள், சிறு குத்தகையாளர்கள் அல்லது மிகக் குறைவான நிலம் கொண்ட ஏழை விவசாயிகளாவர். மேலும், இன்றும் பாரம்பரிய சாதிப்படிநிலைகளை அடிப்படையாகக் கொண்ட வண்ணார், நாவிதர்,  ஆநிறை காப்போர், கைவினைஞர் போன்ற தொழில் பிரிவுகளையே கிராமப்புற ஓ.பி.சி க்கள் சார்ந்துள்ளனர். அவர்களது தாழ்ந்த சாதி அந்தஸ்து புதிய தொழில்களுக்குள்ளும் கல்வித் துறைக்குள்ளும் அவர்கள் நுழைவதற்குத் தடையாக உள்ளன.

(பீப்ள்ஸ் டெமாக்ரஸி, செப்டம்பர் 19, 1990)

இவ்வாறாக, சமூக ரீதியாகவும், கல்வியடிப்படையிலும், பொருளாதார ரீதியாகவும் பிற எஸ்.சி., எஸ்.டி அல்லாத சாதியினருக்கும் இடையே உள்ள இடைவெளி கணிசமாக (அதுவும், குறிப்பாக கிராமப்புறத்தில்) உள்ளதால், பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பதன் நியாயம் தெளிவாகவே உள்ளது. அதே சமயம், ஓ.பி.சி க்கள் மத்தியில் சமூக, கல்வி – பொருளாதார நிலைகளில் கணிசமான ஏற்றத் தாழ்வுகள் உள்ளன என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஓ.பி.சி களுக்கு மத்தியிலான ஏற்றத் தாழ்வுகள் இரண்டு வகையானவை. ஒன்று, சில ஓ.பி.சி சாதிகள் பிற ஓ.பி.சி சாதிகளை விட கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளதோடு, சமூக – கல்வி நிலைகளில் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி அல்லாத பிரிவினருக்குக் கிட்டத்தட்ட சமமாக உள்ளன. இதற்கு, நாட்டின் சில மாநிலங்களில் பல பத்தாண்டுகளாக ஓ.பி.சி களுக்கு இட ஒதுக்கீடு அமலில் இருப்பது ஒரு காரணம். அனால், இதைவிட முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அது என்ன? இந்திய நாட்டின் கிராமப்புறத்திலும், நகர்ப்புறத்திலும் நிகழ்ந்துள்ள முதலாளித்துவ வளர்ச்சி, பல்வேறு சமூகத்தினரிடையேயும் வர்க்க ஏற்றத் தாழ்வுகளை வலுப்படுத்தி யுள்ளது. உதாரணமாக, முதலாளித்துவ நிலச் சீர்திருத்த நடவடிக்கை களின் விளைவாக நாட்டின் சில பகுதிகளில் பாரம்பரிய பெரும் நில உடமை சாதிகளிமிருந்து ஓரளவிற்கு சில ஓ.பி.சி சாதிகளுக்கு நிலம் கையில் வந்துள்ளது. அரசின் பல்வேறு மான்யங்களையும், ஊரக முதலீடுகளையும் இச்சாதிகளில் பலரும் பயன்படுத்தியும், முதலாளித்துவ  வளர்ச்சிப் போக்கிலும், சில ஓ.பி.சி சாதிகள் தங்களை சமூக, கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேறிக் கொண்டு எஸ்.சி, எஸ்.டி., ஓ.பி.சி அல்லாதாருடன் கிட்டத்தட்ட சமநிலை அடைய முடிந்துள்ளது. இச்சாதிகள் எவை என்பது மாநிலத்துக்கு மாநிலமும், ஒரே மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் வேறுபடும். என்றாலும், உடனடியாக இச்சாதிகள் எவை என்ற பட்டியல் கைவசம் இல்லாவிட்டாலும், கள ஆய்வுகள் மூலம் இதை அறிய இயலும். இரண்டாவதாக, ஒவ்வொரு ஓ.பி.சி சாதிக்குள்ளேயும் சமூக – கல்வி அடிப்படைகளில் கணிசமான ஏற்றத்தாழ்வுகள் உருவாகியுள்ளன. இதுவும் நிகழ்ந்துள்ள சமனற்ற முதலாளித்துவ வளர்ச்சியின் ஒரு விளைவாகும்.

1992 ம் ஆண்டு 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நிதி மன்ற அரசியல் சாசசன பெஞ்ச் இந்திரா சாஹ்னி வழக்கில் வழங்கிய மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலாக்கம் தொடர்பான தீர்ப்பில் இத்தகைய அம்சங்கள் பிரதிபலிக்கப்பட்டுள்ளன. அத்தீர்ப்பு சமூக மற்றும் கல்வி அடிப்படையிலான பின்னடைவின் காரணமாக சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ளுடிஉயைடடல யனே நுனரஉயவடியேடல க்ஷயஉமறடிசன ஊடயளளநள – ளுநுக்ஷஊள) இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற மண்டல் குழு பரிந்துரையை ஏற்றுக்கொண்டது, அங்கீகரித்தது. அதே சமயம், சமூக ரீதியாக முன்னணியில் உள்ள இதே (ளுநுக்ஷஊ) வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படக் கூடாது என்றும் அத்தீர்ப்பு கூறியது. கவனிக்க வேண்டியது என்னவெனில், சமூக ரீதியாக முன்னணியில் உள்ள பகுதியினரை அடையாளம் காண்பதற்கான வரையறைகளை இறுதி செய்த நிபுணர் குழு அறிக்கை சரியாகவே கூறியுள்ளது போல், இட ஒதுக்கீட்டிற்கான காரணம் சமூக மற்றும் கல்வி நிலையில் பின்னடைவு என்பதால் கிரீமிலேயர் என்று கருதப்பட்டு இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்படுவதற்கும், சமூக – கல்விப் பின்னடைவுகள் தான் பிரதான காரணமாக இருக்க முடியும். அதே சமயம், கணிசமான பொருளாதார முன்னேற்றம் என்பது, சமூக – கல்வி நிலைகளிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதையும் மேற் கூறிய நிபுணர் குழு அங்கீகரித்துள்ளது.

இத்தகைய புரிதலுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓ.பி.சி இடஒதுக்கீடு பிரச்சனையில் எடுத்துள்ள நிலைபாட்டுக்கும் ஒற்றுமை உள்ளது. எஸ்.சி., எஸ்.டி க்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தில், சமூக – கல்வி – பொருளாதார முன்னேற்ற அடிப்படையில் இப்பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுப்பது சரியல்ல என்று சிபிஐ(எம்) கருதுகிறது. ஏனெனில், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மத்தியில் பெருமளவிற்கு வர்க்க வேறுபாடு இல்லை என்பதும் அவர்களுக்கெதிரான சமூகக் கொடுமைகள் அப்பகுதியினர் அனைவரையும் பாதிக்கின்றன என்பதும் தான் யதார்த்தம். ஆனால், ஓ.பி.சி பிரிவினரிடையே  கணிசமான வர்க்க வேறுபாடுகள் வளர்ந்துள்ளதால், இடஒதுக்கீடு விஷயத்தில் மிகவும் பின்னடைந்துள்ள பகுதியினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று சிபிஐ(எம்) கருதுகிறது. மொத்த மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர் சதவிகிதம் 27 சதத்தை விடக் கூடுதலாகவே உள்ள நிலையில், அந்தப் பகுதிக்குள் இட ஒதுக்கீட்டைப் பிரித்தளப்பதற்கு ஒரு நெறிமுறை அவசியமாகிறது. அத்தகைய நெறிமுறை, வெறும் வருமான அடிப்படையில் அமைய வேண்டியதில்லை. பொருளாதார அடிப்படையில் மட்டும் அமைய வேண்டியதில்லை. மாறாக பெற்றோர்களின் கல்வித் தகுதி, அவர்களது பணி நிலை அந்தஸ்து, குடும்பத்தின் நில உடைமை உள்ளிட்ட சொத்து மதிப்பு போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கலாம். நிபுணர் குழுவும் இது போன்ற நிலைதான் எடுத் துள்ளது. மிகச் சரியாகவே, அக்குழு ஜாக்கிரதையுடன் இப் பிரச்சினையை அணுகியுள்ளது. அதாவது, இடஒதுக்கீட்டுக்குத் தகுதியுள்ள எவரையும் விலக்கி விடும் வாய்ப்பை பெரிதும் குறைக்கும் வகையில் அதன் அணுகு முறை உள்ளது. ஓ.பி.சி இடஒதுக்கீட்டிலிருந்து எல்லா வகையிலும் வசதி பெற்ற (சமூக, கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முன்னணியில் உள்ள) சிலரை நீக்குவது என்பது மிகவும் பிற்பட்ட, மிகவும் ஏழையான, நிலமற்ற குடும்பத்தினருக்கு, முன்னணி, பணக்கார பெரும் நில உடமைக் குடும்பத்தினரைக் காட்டிலும் அதிக முன்னுரிமை வழங்குவது என்பதாகும் என்று சிபிஐ(எம்) சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இவ்வாறு கிரீமிலேயர் குடும்பங்களுக்கு இடஒதுக்கீடு மறுத்து, பிற ஓ.பி.சி குடும்பங்களுக்கு இடஒதுக்கீடு தரப்பட்ட பின்பு, ஓ.பி.சி கோட்டா முழுமையாகப் பூர்த்தியாக வில்லை என்றால், இந்த மிச்ச இடங்கள் கிரீமிலேயர் ஓ.பி.சி க்களுக்கே அளிக்கப்பட வேண்டும் என்பதும், ஓ.பி.சி இட ஒதுக்கீடு கோட்டாவிலிருந்து வெளியே எடுக்கப்படக் கூடாது என்பதும் சிபிஐ(எம்) நிலைபாடு.

இந்தத் தெளிவான ஓ.பி.சி ஆதரவு சிபிஐ(எம்) நிலைபாட்டை வேண்டுமென்றே திரித்துக் கூறும் சில விஷமிகள் கிரீமிலேயர் பற்றிய சிபிஐ(எம்) நிலைபாடு மேல்சாதியினர் நலன் காக்கிறது என்று பொய்ப்பிரச்சாரம் செய்வது தவறு மட்டுமல்ல, திட்டமிட்ட அயோக்யத்தனம்  என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

இடஒதுக்கீடு நிரந்தரத் தீர்வாகுமா?

வேலை வாய்ப்பானாலும் சரி, கல்வியானாலும் சரி பொருளாதார உயர்வுக்கான கல்வி பெறுவதற்காக மற்றும் சமூக மேம்பாட்டுக்கான வாயப்பினை இழந்தவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது இழப்பினை எதிர்கொள்ளும் உடனடி நடவடிக்கையாகவோ அல்லது அதைத் தணிக்கும் மருந்தாகவோத்தான் இருக்க முடியும். அதன் வேர்கள் சமூகப் பொருளாதார கட்டமைப்பில் ஆழமாகப் புதைந்து கிடக்கின்றன. மண்டல் கமிஷன் குறிப்பிடுகிறது, சமூக கட்டமைப்பின் மாற்றங்கள் கொண்டு வந்து உற்பத்தி உறவுகளில் அடிப்படை மாற்றம் வேண்டும்; நாடு முழுமைக்கும் நிலச் சீர்திருத்தங்கள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட வேண்டும். இதைச் செய்தாலன்றி, பிற்படுத்தப்பட்ட மக்கள் உண்மையான விடுதலையினை பெற இயலாது.

1980 ல் மண்டல் கமிஷன் அதன் அறிக்கையினை சமர்ப்பித்த நாளிலிருந்து இந்தியப் பொருளாதாரம் நெருக்கடி மிக்க முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறது. விவசாயம் மற்றும் தொழில் துறையிலும் உற்பத்திக்கான அடிப்படை சொத்துக்கள் ஏற்ற வகையில் பங்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதன் விளைவாக எழும் துன்ப துயரங்களோடு, தொழிலாளி வர்க்கம் 1991க்குப் பிறகு புதிய தாரளமய, பொருளாதாரக் கொள்கையின் கடுமையான தாக்கு தலையும் சந்திக்க வேண்டியிருந்தது. வேலையில் 27 சதம் பிற்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு மத்திய அரசு செயல்படத் துவங்கிய போதே, நம் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் தனியார் மயம் மற்றும் வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி யினையும் நோக்கி வேகமாக நடைபோடத் துவங்கியது. வேலை நியமனத் தடை என்பது செயல்படத்துவங்கியவுடன், பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு என்பது குறைந்த அளவிலே தான் நடைமுறைப்படுத்த முடிந்தது. நிலைமை அதோடு நிற்காமல் மோசமடையத் துவங்கியது. வளர்ச்சி மற்றும் சமூகத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டினை மத்திய அரசு குறைத்தது.

உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனம் வழிகாட்டுதல் (நிர்ப்பந்தங்கள்) படி நிதிப்பற்றாக்குறையினை ஒரு பொருத்தமான அளவில் நிறுத்தி வைக்க வேண்டும் என்பதற்காக கல்வி, குறிப்பாக உயர்கல்வியினை கடுமையான பாதிப்புக் குள்ளாக்கியது. மிகமிகக் குறைந்த அளவில் உயர் கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்யும் பொழுது, உயர்மட்ட (உயர்ந்தோருக்குரிய) நிறுவனங்களான, ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற நிறுவனங்கள் மற்றவைகளைக் காட்டிலும் அதிகமாக தங்கள் பங்கினைப்பெற முடிந்தது; அவைகளும் கூட மிகப் பெரிய அளவில் அரசின் செலவீனங்கள் உயர்வதைக் காண முடியவில்லை. அரசு நிதி உதவியுடன் செயல்படும் உயர் கல்விக்கான துணை அமைப்புகள் கடுமையான பாதிப்புக்குள்ளாயின. கல்வி கொடுப்பது அரசின் வேலையல்ல என்று புதிய தாராளமயக் கொள்கை சொல்லுகிறது; குறிப்பாக, உயர் கல்வி சந்தையில் விளையாடும் சக்திகளுககு உட்படுத்தப்பட வேண்டும் என சொல்லுகிறது. அனைவருக்கும் அடிப்படைக்கல்வி அளிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடு இரண்டு வகையில் செயல்படுத்தப்படுகிறது; சர்வ சிக்ஷா அபியான் (எல்லோருக்கும் எழுத்தறிவித்தல்) திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள் கல்வி பெறும் முறையும், சமூகத்தின் மேல் தட்டு மக்கள் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் கல்வி பெறும் வாய்ப்பும் ஆக இரண்டு வகையில் செயல்படுகிறது.

உயர் கல்வியில் சுயநிதி நிறுவனங்கள் (உண்மையில் மாணவ/மாணவியரின், பெற்றோர்களின் நிதி கொண்டு நடத்தப்படும் நிறுவனங்கள் என்று தான் அழைக்கப்பட வேண்டும்) எந்தத் தடையுமில்லாமல் செழித்து வளர்கின்றன. அந்த நிறுவனங்கள் வற்புறுத்திக்கோரும் கட்டணத்தை வேறு வழியின்றி மாணவர் களும், அவர்களின் பெற்றோர்களும் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இன்றைய தேர்வுகளின் மூலமாகவோ அல்லது நுழைவுத் தேர்வின் மூலமாகவோ அளவிடும் தகுதி என்பதெல்லாம் அந்த நிறுவனங்களுக்கு தேவையில்லாத ஒன்று; எவ்வளவு பணம் பெற்றோர் கொடுக்க இயலும் என்பது தான் கேள்வி. தகுதி பற்றி வாய் கிழிய பேசும் பெரிய மனிதர்கள் இந்த விஷயத்தில் வாய்மூடி மௌனியாகிவிடுகின்றனர். இதற்கிடையில் தாராள மயத்தின் விளைவாக உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் நவீன சேவைப் பிரிவுகள் திறந்து விட்ட சூழ்நிலையும், தகவல் தொழில் நுட்பத் துறையின் விரைவான வளர்ச்சியும் பொறியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் பணம் கொழிக்கும் வழிகள் நிறையவே திறந்து விடப்பட்டிருக்கின்றன.

தொழிற் கல்வி பட்டப்படிப்புக்கான நுழைவு என்பது போட்டிக்கான களமாக மாறியிருக்கிறது. அந்தப் போட்டிக்கான அடிப்படை அம்சங்கள் கல்வித் தகுதியினைச் சார்ந்ததல்ல. மாறாக, கல்விகளின் வணிக நோக்கங்களைச் சார்ந்தது. அரசு நிதி உதவியுடன் செயல்படும் தொழிற்கல்வி நிறுவனங்களில் இடங்கள் ஒரு வரையறுப்புக் குட்பட்டவை என்பது ஒரு புறம்; மற்றொரு புறத்தில் வணிக நோக்கில் நடத்தப் பெறும் கல்வி நிறுவனங்களின் லாபச் செழிப்பு – இந்த நிலை தான் வசதிபடைத்தோர் கல்வி பெறும் நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்றவைகளில் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடுக்கு எதிரான வெறித்தனமான போராட்டங்களுக்கு சாரமானதொரு அடிப்படையினைக் கொடுக்கிறது.

காலங்காலமாய் தொடர்ந்து வரும் சாதிப்பாகுபாடு இடஒதுக்கீட்டுக்கு எதிரான வாதங்கள் தொடுக்க துணை போகிறது. குறிப்பாக, தகுதி என்ற கோட்பாட்டிற்கும், இடஒதுக்கீடு என்பதற்கும் இடையில் அந்த கருத்து முன் வைக்கப்படுகிறது. இடஒதுக்கீடு முறை தேர்வுகளின் மூலம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு எதிராக நிறுத்தப்பட்டு அதனால் தரம் குறைந்து விடும் என்ற கருத்து உண்டு; நவீன உலகமயப் பொருளாதாரத்தில் இடஒதுக்கீடு என்பது போட்டியினை தவிர்க்கும் பத்தாம் பசலித்தனமான நடவடிக்கை என்ற கருத்தும் உண்டு. இரண்டுமே கவனத்தில் கொண்டு மறுதலிக்க வேண்டிய அவசியமே இல்லாதவை. இடஒதுக்கீடு என்பது ஒரு குறிப்பிட்ட படிப்புக்கான நுழைவினை உத்தரவாதம் செய்கிறது. படிப்பு முடிந்து வெளியே வருகிற போது எல்லோரும் தேர்ச்சி பெறுவதற்கான நுழைவினை உத்தரவாதம் செய்கிறது.

படிப்பு முடிந்து வெளியே வருகிற போது, எல்லோரும் தேர்ச்சி பெறுவதற்கான அடிப்படைகளை நிறைவு செய்திருக்க வேண்டும். இப்படியும் கூட நம்மால் வாதிட முடியும். புதிய தாராளமயம் கல்வியில் வணிக நோக்கங்களை புகுத்தி யிருப்பதால், பணம் படைத்தோர் பட்டங்களை வாங்க முடியும். சமூக வாழ்நிலை மற்றும் கல்வி வாய்ப்பு கிடைக்கப் பெறாதவர்க்கு இடஒதுக்கீடு ஒரு முற்றிலும் நிறைவான வழியினை கொடுத்து விட முடியாது என்று வாதிடுவோரும் உண்டு. இந்த வாதத்தில் கொஞ்சம் உண்மையும் உண்டு.ஆனால், இன்றைய சூழலில் இதுதான் செயலில் நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு முடிவாகும். நமது சமூகத்தில் அத்தகைய இழப்பு என்பது பல்வேறு வடிவங்களில் சாதி அந்தஸ்தோடு இணைக்கப்பட்டிருந்தாலும் கூட, அதுதான் இன்றைய சூழலுக்கு பொருத்தமானதொன்றாகும்.

மாணவர் சமூகத்திலேயே உயர் கல்வியில் இடஒதுக்கீடுக்கு எதிரானகருத்து உருவாவதற்கு என்ன காரணம்? கல்விக்கான குறிப்பாக, பொறியாளர், மருத்துவர் போன்ற உயர்கல்விக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதும் தான் காரணம். எவ்வளவு இடங்கள் அதற்கு உள்ளதோ அதைக்காட்டிலும் அதிகமான மாணவர்கள் முறையான கல்வித் தகுதிகளோடு விண்ணப்பிக்கின்றனர். இதை எப்படி எதிர்கொள்வது? தொடக்கக் கல்வியிலிருந்து, உயர்கல்வி வரை அனைத்து நிலைகளிலும் அரசு முதலீட்டை அதிகப் படுத்துவதன் மூலம் தான் இப்பிரச்சனையை நாம் சந்திக்க முடியும். இதற்காகத் தான் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைக்க நடத்தப்படும் போராட்டம் எல்லோருக்கும் தரமான கல்வி வேண்டி நடத்தப்படும் போராட்டத்தோடு இணைக்கப்பட வேண்டும். அடிக்கடி கல்வி பற்றி குறிப்பிடப்படுகிற மூன்று வரையறுப்புகளும் – தரம், எண்ணிக்கை, சமம் எனும் இயற்கை நீதி – ஒரு ஜனநாயக முறையில் மாற்றப்பட்ட ஒரு பொருளாதார கட்டமைப்பிலும், கொள்கை வடிவத்திலும் தான் முழுமை பெற முடியும். அனைத்து பிரிவினரிடம் உள்ள ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கு வழிவகை காண வேண்டும் என்ற கோரிக்கை அர்த்தமுள்ள ஒன்று தான். பெரும் முதலாளிகள் மற்றும் ஊடகங்கள் உரமேற்றும் எதிர்ப்பினைச் சந்தித்து பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவும், அதன் நியாயத்தின் பாலும் நாம் உறுதியாக நிற்க வேண்டும். அதே வேளையில் அதையும் தாண்டிச் சென்று நிலம், சொத்து மற்றும் வாழ்நிலை பற்றிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. முழுமையான நிலச் சீர்திருத்தத்தை மறுத்து, தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் சில இடங்க ளுக்கான இட ஒதுக்கீட்டைப் பற்றி மட்டும் கவலைப்படுவது நீண்ட காலத்தில் எந்த பலனையும் கொடுக்கப் போவதில்லை. அதைப்போலவே பிற்படுத்தப்பட்ட பிரிவினரி டையே உள்ள நலிந்த பிரிவினருக்கு முன்னுரிமை கொடுக்கும் அடிப்படையினையும், திட்டங்களையும் உருவாக்க வேண்டும்;

சமூக ரீதியில் வளர்ச்சி பெற்ற பிரிவினரை இதில் இருந்து விலக்கி வைப்பதன்மூலம் அதைச் செய்ய முடியும். ஏனெனில், அத்தகைய நடவடிக்கை இடஒதுக் கீட்டின் பலன்களை, அந்தப் பிரிவினரின் ஒரு சில குடும்பங்களே ஏகபோக அனுபவிப்பதை தடுக்க முடியும்; அந்தப்பகுதி தான் புதிய தாராளமயக் கொள்கைகளோடு, அதன் தத்துவத்தோடு தங்களை இணைத்துக் கொண்டவர்களாகவும் உள்ளனர். மக்களிடம் காணப்படும் சமூக ரீதியிலான இழப்பின் மீது புதிய தாராள மயக் கொள்கை மற்றும் அதன் தத்துவத்தின் தாக்கம் எவ்வாறு நிகழ்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வசதி படைத்தோரின் இரக்கமற்ற தன்மையும் மற்றும் பிற்படுத்தப்பட்ட பெரும் பான்மையான மக்கள் சந்திக்கும் இந்த சமூக இழப்பிற்கு எதிராக நிற்கும் ஊடகங்களின் செயல்பாடும் அந்த மக்களின் இன்னல்களை புரிந்து கொள்ளாததால் மட்டும் எழுந்தவைகள் அல்ல. புதிய தாராள மயத்தின் சூழலும் அச்சான சமூக டார்வினிச கோட்பாட்டில் வேர் கொண்டிருக்கின்றன. சமூக டார்வினிசத்தை உள் வாங்கிய புதிய தாராளமயக் கொள்கை, அதாவது இயற்கையான சந்தை சக்திகளின் செயல்பாடுகளில் அரசு தேவையற்ற முறையில் நுழைகிறது என்ற அந்தக் கொள்கைதான். இடஒதுக்கீடு எதிர்ப்புக்கு விளை நிலமாக அமைந்திருக்கிறது.

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு சாதீய சக்திகளை வளர்க்கும் என்பதால், இடஒதுக்கீடு கூடாது என்பது சரியான அணுகுமுறையாகது. ஏனெனில், சாதிப்பாகுபாடும், ஒடுக்குமுறையும் தான் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கைக்கு முதலில் வித்திட்டது. வடமாநிலங்களில் இது சாதிய மோதல்களை தீவிரப்படுத்துகிறது என்பதனைக் கவனிக்க வேண்டும். ஆனால், தென் மாநிலங்களில் அனுபவங்கள் வேறு. வட மாநிலங்களில் சமூக முன்னேற்றம் இல்லாதது, கிராமப்புறங்களில், நில உடமையில் மாற்றங்கள் வராதது தான் இந்நிலைக்கு காரணமாகும். அதே நேரம்,  இடஒதுக்கீடு ஒன்று தான் நாம் கவலைப்பட வேண்டிய ஒன்று என்றும், அதை அப்படியே, அதே தளத்தில் வைத்து போராடுவது என்றும் இந்தப் பிரச்சனையை பார்ப்பது தீர்வாகாது. இந்த பிரச்சனையினை பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் சுரண்டல் வர்க்கத்தின் கொள்கைகளைப் பற்றி விமர்சனப் பூர்வமாக அ ணுக மறுத்தால், சுரண்டல் வர்க்கங்களின் நலன்களுக்கு துணை போவதில் தான் முடியும். அது உழைக்கும் மக்களை நிராயுதபாணியாக்கி விடுகிறது; அவர்களை பிளவுபடுத்தி எதிரெதிர் முகாம்களில் நிறுத்துகிறது; மக்கள் கவனத்தை குறுகிய திசை வழியில் திருப்பி விடுகிறது.

ஆகவேதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய அரசியல் பொருளாதார அமைப்பு, அதன் உள்ளார்ந்த தன்மையின் பின்னணியில் உயர்கல்வியில் இடஒதுக்கீட்டை பரிசீலனை செய்து, புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறது; சுரண்டும் வர்க்கத்தின் கொள்கைகளும், அதன் அமைப்பும் உயர் கல்விக்கான வாய்ப்புகளின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறது. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கான நியாயமான போராட்டம் என்பது முடிவானதொன்றல்ல; அது விரிவான தளத்தில் நடத்தப்பட வேண்டிய போராட்டங்களுக்கான ஒரு வழிமுறை. அந்தப் போராட்டம் உற்பத்தி ஆதாரங்கள் சமச் சீரற்ற முறையில் பங்கீடு செய்யப்பட்டிருப்பதை எதிர்த்தும், ஜனநாயகத்திற்காகவும் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்பினை உருவாக்குவதற்கும் நடத்தப்படும் ஒன்றாகும். அது புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து போரிடுமாறு நம்மை அழைக்கிறது. அந்தக் கொள்கைதான் கிராமப்புற, நகர்ப்புற ஏழைமக்கள் மீது சொல்லொணா சீரழிவை சுமத்தியிருக்கிறது. புதிய தாராளமயக் கொள்கைகள் அந்த துயறுற்ற மனிதர்களின் எண்ணிக்கையினை வெகுவாக உயர்த்தியிருக்கிறது. ஆகவே, அதை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களுடன் இடஒதுக்கீட்டுக்கான போராட்டமும் நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அடிப்படைவாதிகள்

கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா கண்டத்தில் பெரும் விவாதம் நடந்து கொண்டிருந்தது.  அதாவது ஆரிய இனத்தில் பிறப்பவர் அறிவாளி என்றும், வேறு இனங்களில் பிறக்கும் குழந்தைக்கு அவ்வளவு மதிநுட்பம் இருப்பதில்லை என்றும் விவாதம் நடந்தது. அதேபோல் தான், உயர்கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதமானம் இட ஒதுக்கீடு என்கிற, மத்திய அரசின் முடிவுக்கு, எதிரான விவாதங்களும் நடைபெறுகிறது. தகுதி என்பது, அவரவர் வளருகிற சமூக சூழ்நிலையில் இருந்தே உருவாகிறது.  பிறக்கும் போதே எல்லோரும் எல்லாத் தகுதிகளுடன் பிறப்பதில்லை.  உலகமயமாக்கல் கொள்கையைப் பற்றி குறிப்பிடுகிறபோது, அடிப்படைவாதம் உலக மயமாக்கலோடு சமரசம் செய்து கொள்கிறது என்று சமீர் அமீன் குறிப்பிடுகிறார்.  இங்கே அடிப்படை வாதம் என்பது மத, சாதி மற்றும் இன ரீதியிலான ஆதிக்க மனப்பான்மை ஆகும்.

உலகமயமாக்கல் காலத்தில் பல்வேறு விதமான பண்பாட்டு பரிவர்த்தனைகள் நடந்தாலும், அடிப்படை சிந்தனையில் இருந்தும், ஆதிக்க சிந்தனையில் இருந்தும் சிலர் மாறுவதே இல்லை.  பொருளாதார ரீதியினாலும், சமூக ரீதியினாலும் உயர்ந்தோர் எனக் கருதிக் கொள்பவர்கள், இத்தகைய அடிப்படை வாதத்துடன் சமரசம் செய்து கொள்பவர்களே.  இது ஆதிக்க  உணர்விலிருந்தே வெளிப்படுகிறது.

1927ல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், கேரியேக்கும், அவரது சகோதரியும் கட்டாய கருத்தடை செய்து கொள்ள வேண்டும்.  இவர்கள் பரம்பரை முட்டாள்கள் எனவும், இவர்கள் பிள்ளை பெற்றால் அவர்களும் முட்டாள்களாகவே இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டது.  ஆகவே அமெரிக்க நாடு முட்டாள்கள் நிறைந்த சமூகமாக மாறி விடக்கூடாது எனும் நல்லெண்ண அடிப்படையில், மக்கள் நலன் கருதி கட்டாயக் கருத்தடைக்கு ஆணையிட்டது. இந்த தீர்ப்பினைப் போலவே, இன்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தேசிய அறிவுசார் ஆணையம் (National Knowledge Commission), கல்வியில் இட ஒதுக்கீடு என்பது தேசத்தை பின்னோக்கி நகர்த்துவதற்கு ஒப்பாகும், என்று குறிப்பிடுகிறது.  எனவே இட ஒதுக்கீடு கூடாது என வலியுறுத்துகிறது.  பிரதம மந்திரியின் ஆலோசனைகள் இரண்டு பேர் இடஒதுக்கீடு தகுதியை சீரழிக்கும்.  எனவே எங்கள் பணியினை ராஜினாமா செய்கிறோம் என்று வெளியேறியுள்ளனர்.

இங்கே தகுதி என்பது பரம்பரை சார்ந்தே பயன்படுத்தப் படுகிறது.  இது உண்மையா? என்பதை எல்லா நாடுகளிலும்  வெவ்வேறு மட்டங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.  இந்தியாவில் கரண்ட் சையின்ஸ் எனும் ஆய்விதழில் சுயந்தராய் சவுத்ரி, சங்கீதா ராய் ஆகியோர், 23 ஜாதிக்கருத்துக்களை ஒப்பிட்டு ஆய்வுகளாகத் தேர்வு செய்துள்ளனர்.  தென்னிந்தியாவில் ஐயர், வன்னியர், பள்ளர் மற்றும் வட இந்தியாவில் பிராமணர், முண்டா பழங்குடி இனத்தவர் என பலரையும் ஆய்வு செய்து இவர்களின் மைட்டோ காண்ட்ரியா டி.என்.ஏ. எனப்படும் மரபணுக் கூற்றினை ஒப்பிட்டுள்ளனர்.  அதிலிருந்து மேற்படி பிரிவினர் அனைவரும் ஒன்று போன்ற மரபணுக்கூறுகளை உடையவராக உள்ளனர் என்பது கண்டறியப் பட்டுள்ளது.  இப்படிப்பட்ட அறிவியல் ரீதியில் சாதிய வித்தி யாசங்கள் எதுவும் இல்லை என்று நிரூபணம் செய்யப்பட்ட பின்னும், இன்றைய இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள், எதை அடிப்படையாகக் கொண்டு, இடஒதுக்கீடு தகுதியை அழித்து விடும் என்று கூறுகிறார்கள்?

மிகச் சமீபத்தில் +2 தேர்வு முடிவில் வெளியான ஒரு தகவல், உச்சி முடியைப் பிடித்து உலுக்குகிறது.  அப்பா பெரிய நிறுவனத்தின் மேலாளர், அம்மா இன்னொரு நிறுவனத்தின் அதிகாரி என்ற சூழலில் பிறந்து வளர்ந்த மாணவர் 1200 மதிப்பெண்ணுக்கு 1153 மதிப்பெண் பெற்றுள்ளார்.

அதே நேரத்தில் அப்பா, அம்மா இரண்டு பேரும் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்பவர்கள்.  மகனோ பள்ளி முடிந்து மாலையில் ஹோட்டலில் டேபிள் துடைக்கும் பணியை மேற்கொண்ட ஒரு மாணவன், 1200 மதிப்பெண்ணிற்கு 1013 மதிப்பெண் பெற்றுள்ளார்.  மேற்கண்ட இந்த இரண்டு பேரில் யார் அதிக தகுதியும், திறமையும் உடையவர்? என்பதை இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களால் விளக்க முடியுமா?

கடுமையாக உழைத்து முன்னுக்கு வரும் ஒருவர் புறக்கணிக்கப்படுவது இந்திய சமூகத்தில் புதிதல்ல. மகாபாரதமும், ராமாயணமும் மேற்படி புறக்கணிப்பு குறித்து கதைகளை உள்ளடக்கி இருக்கிறது. தானே கற்றுக்கொண்ட வில்வித்தைக்கு ஏகலைவன், துரோணருக்கு குருதட்சணையாக, தன் கட்டை விரலை வெட்டிக் கொடுத்தது நடந்தது. தேரோட்டியின் மகனாக வளர்க்கப்பட்ட கர்ணனுக்கு ராஜ்ஜியம் கொடுக்கப்பட்டு மன்னனாக மாறிய பின்னும், கர்ணன் சுயவரத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டான். மன்னனாக இருந்தும் பலநேரங்களில் அவமானப்படுத்தப்பட்டான். பிராமணர் அல்லாத விசுவாமித்திரர், மக்களை பெருமழையில் இருந்து மீட்பதற்கு தன்னையே அழித்துக்கொள்ள முன்வந்தார். அது கண்டு அவருடைய சமஸ்கிருத கல்வி காரணமாகவும், அவருக்கு பிரம்மரிஷி பட்டம் வழங்கப் பட்டது.  இருந்தபோதிலும், ராமனின் திருமணத்தின் போது, பிராமணரல்லாத விசுவாமித்திரர் திருமணத்தை நடத்தி வைக்க முடியாது  என்றும், பிராமணரான வஷிஷ்ட்டர் தான் நடத்தி வைப்பார் என்றும் வலியறுத்தப்பட்டு, விசுவாமித்திரர் வெளியேற்றப் படுவார்.  இப்படி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக, வேறு வேறு தளங்களில், வேறு வேறு காரணங்களுக்காக, சாதி ரீதியான அவமானங்கள் தொடருகின்றன.

சாதிய படிநிலையின் கீழ்நிலையில் இருப்பவர்கள் இரக்கமற்று குற்றங்களைப் புரிபவர்கள் என சித்தரிக்கப்பட்டு வருகின்றனர்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செஞ்சியில் பணம் களவாடப்பட்டதைக் கண்டறிய முடியாத நிலப் பிரபு, அங்கே பணியாற்றும் குழந்தை உழைப்பாளிகளை அழைத்து, அவர்கள் பழங்குடி இனத்தை சார்ந்தவர் என்ற காரணத்தினால் திருடி இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.  உண்மையைக் கண்டறிய மாட்டு சாணத்தை கரைத்து அதை கொதிக்க வைத்து, அதற்குள் குழந்தைகளின் கையைத் திணித்து கொடுமை செய்தனர்.  அதாவது இந்த சாதியைச் சார்ந்த குழந்தைக்கு படிக்கிற புத்தியை விடவும், திருடுகிற புத்தி அதிகம் என்ற பரம்பரை பரம்பரையான கற்பிதங்களில் இருந்து இந்த சிந்தனைகள் வளர்க்கப்படுகிறது.  ஆனால் சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் உயர்வானவர்கள், படித்துப் பெற முடியாத தகுதியை பணத்தின் மூலம் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.  இங்கே தகுதி குறித்த விவாதம் நடத்தப் படுவதில்லை.  கடந்த 2005 ஆக. 12 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தனியார் கல்லூரிகளின் இட ஒதுக்கீடு வேண்டும் என அரசு கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பல லட்சங்களை கொண்டிருக்கும் தகுதி பெற்றவராக இருந்தால் அவர்களுக்கு 15 சத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கினர்.  அப்போது இது போன்ற போராட்டம் ஏன் நடை பெறவில்லை?  என்றால் காரணம் பணமும் ஒரு தகுதியாக கருதப் பட்டதே ஆகும். பணம் இருந்தால் அவனுக்கு திறமை குறைவாக இருக்காது என நம்பப்படுகிறது.

தகுதி குறைவானவர்கள், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் படிக்கிறபோது தரம் குறையாதா? என்ற வாதமும் அதிகரித்துள்ளது.  படிப்பில் தகுதி குறைந்த ஒருவர் பணத்தினால் தகுதி பெற்றவராகி அதே மருத்துவத்தையும், தொழில் நுட்பத்தையும் படிக்கிறபோது, குறைகிற தரத்தைப் பற்றி கவலை கொள்வதில்லை.  தகுதி என்பது  இந்திய சமூகத்தில் சாதியை மட்டுமே மையப்படுத்தி பேசப்பட்டு வந்திருக்கிறதே ஒழிய, வேறு வடிவங்களில் இல்லை.  இந்த இளக்காரமான பார்வையை மாற்றவே சமூக ரீதியிலான இடஒதுக்கீடு என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இட ஒதுக்கீடு தந்த சமூக வளர்ச்சி

இட ஒதுக்கீடு கொள்கை சமூகத்தை சமப்படுத்த உதவியதா? என்ற கேள்விக்கு விடையளித்தால் தான், இட ஒதுக்கீடு கொள்கைக்கான போராட்டத்தின் நியாயம் புரியும்.  சென்னை ராஜதானியாக இருந்த நேரத்தில் 1831 கால சட்டத்திலேயே இட ஒதுக்கீடு கல்வி மற்றும்  வேலைவாய்ப்பால் அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்னுக்கு வந்துள்ளது.  இக்கோரிக்கைகளை பிரிட்டிஷார் ஒருசில இடங்களில் கணக்கில் எடுத்துள்ளார்.  1850-51-ம் ஆண்டுகளில் பிரிட்டிஷைச் சார்ந்த மான்ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன் என்ற நிர்வாகி,  கிறிஸ்த்துவ மிஷனரியைச் சார்ந்தோர், சாதிய படி நிலையில் கீழே உள்ள சாதியைச் சார்ந்த மாணவர்கள் சிறந்தவர்களாக உள்ளனர், என்பதை கண்டறிந்துள்ளனர், என குறிப்பிட்டுள்ளார்.  இதை உயர்சாதியினர் எப்படி புரிந்து கொண்டு எதிர்வினையாற்றுவார்கள் என்பது சிக்கலானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார். அதே ஆண்டில் பாம்பே ராஜதானியின் கல்வி ஆணையம், அதனுடைய அறிக்கையில், மிக நம்பிக்கையோடு பின் தங்கிய சமூகப் பிரிவினரான மகர் மற்றும் தேட் போன்றவர்களின் குழந்தைகளுக்கு கல்வி அளித்தால், சமூகத்தின் மற்ற பிரிவினரைப் போலவே சிறந்த ஞான முடையவர்களாக, வளரும் வாய்ப்புள்ளது, என குறிப்பிட்டுள்ளது.

இந்திய கல்வி ஆணையம்,1882ல் தீண்டத்தகாதவர்களாக உள்ள சாதியினருக்கு, ஆரம்பக்கல்வியில் வாய்ப்பளிக்கும் விதத்தில் ஒரு திட்டத்தை உருவாக்கியது.  அதன்படி, மலபார்  (சென்னை ராஜதானி), மத்தியப் பகுதியில் இருந்த மாநிலங்களான, மத்தியப் பிரதேஷ், மகராஷ்ட்ரா மற்றும் இன்றைய சட்டீஸ்கர், பாம்பே ராஜதானியில் இருந்த மகராஷ்ட்ரா, கர்நாடகா, குஜராத் ஆகிய பகுதிகளிலும் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.  இதன்மூலம் ஒருசில குறிப்பிட்ட சாதியினரின் ஏக போக உரிமையோடு இருந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், சமூகரீதியில் பின் தங்கியவர்களுக்கு ஓரளவு வாய்ப்பினைத் தர முடிந்தது.  இத்தகைய குறைந்த பட்ச கல்வி அறிவும், அதன்பின் விடுதலை இந்தியாவின் இடஒதுக்கீடு மூலம் பெற்ற கல்வி அறிவும், சமூக ரீதியில் பின் தங்கிய மக்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்துள்ளது. அதேபோல் பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு, 1902ம் ஆண்டு கோல்சன்பூர் மகாணத்திலும், மில்லர் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி மைசூர் மகாணத்தில் 1921-ம் ஆண்டிலிருந்தும், எல்.ஜி. ஹவானூர் கமிஷனின் பரிந்துரைப்படி சென்னை ராஜஸ்தானியில் 1921-ம் ஆண்டிலிருந்தும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1935ம் ஆண்டிலிருந்தும் அமுல்படுத்தப்படுகின்றன.

இத்தகைய இடஒதுக்கீட்டின் மூலம், பிற்படுத்தப் பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் முழுமையான சமூக மாற்றத்தைப் பெற்றுவிட்டனர் எனக் கூறுவதற்கு இல்லை.  ஆனால் தனிநபர் வருமான விகிதத்தில், கல்வி அறிவு பெற்றோரின் சராசரி விகிதத்தில், மருத்துவ வசதிகளைப் பயன்படுத்துகிற சராசரி விகிதத்தில் சில மாற்றங்களைக் காண முடிந்துள்ளது.  2001-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய மனித வளர்ச்சி அறிக்கை தென்னிந்தியா மற்றும் வட இந்தியாவுக்கான ஒப்பீட்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

எண் சுகாதார குறியீடு தெற்கு வடக்கு இந்தியா
1 பிறப்பு விகிதம் 2 4 3
2 இறப்பு விகிதம் 7 10 9
3 குழந்தை இறப்பு விகிதம் 44 78 68
4 மருத்துவ மனைகளில் பிரசவம் 70 18 34
5 பிறப்பின்போது மருத்துவ உதவி 76 28 42
6 குழந்தை நோய் தடுப்பு நடவடிக்கை 75 18 42
7 தொற்று நோய் தடுப்பு 91 64 76
8 இரும்பு சத்து மாத்திரைகள் 88 36 58
9 பிரசவத்தின்போது தாய் இறப்பு 158 582 407
10 PHC சராசரி மக்கள் தொகை 24044 29574 27364
11 வறுமை விகிதம் 17 32 26

ஆதாரம்: தேசிய மனித வளர்ச்சி அறிக்கை : 2001

இந்த அறிக்கையை கம்யூனிஸ்டுகள் பார்க்கிற போது திருப்தி பட முடியாது.  இதில் இருக்கும் ஓட்டைகளும், இன்னும் கிடைக்க வேண்டிய தேவைகளும் கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கும்.  ஏனென்றால், கம்யூனிஸ்ட்டுகள் 100 சதமான வெற்றியை நோக்கி சிந்திப்பவர்கள்.  ஆனால் இன்றைய முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையில் தென்னிந்தியா சற்று முன்னேறி இருப்பதில், இட ஒதுக்கீடு அளித்த பங்கு மறுப்பதற்கு இல்லை.  இட ஒதுக்கீடு அமுலில் உள்ள தென்னிந்திய மாகாணங்களை விடவும், வட இந்திய மாகாணங்களில் உள்ள விளை நிலத்தின் தன்மை, நீர்வளத்தின் தன்மை, கனிம வளங்களின் தன்மை, உள்ளிட்ட பல்வேறு வளங்கள் மனித குல வளர்ச்சிக்கு பயன் தரவில்லை என்பதை ஓப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் மற்றும் ஜுன் ட்ரெஸ் ஆகியோர் நடத்திய சமீபத்திய ஆய்வான இந்திய வளர்ச்சி மற்றும் பங்கேற்பு (Indian Development and Participation)”தமிழகத்தில் சுகாதாரத் துறை ஒரு சில முக்கியமான காரணம்,” என்று சுட்டிக் காட்டியுள்ளது.  அதேபோல் லீல் விசாரி என்ற பெண், தனது ஆய்வின் மூலம் தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றுகிற மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையில் மொழி, உடை, செயல்பாடு மற்றும் விழுமியங்களின் (Values) அடிப்படையில் எந்த ஒரு வித்தியாசத் தையும் பார்க்க முடிவதில்லை. இதற்கு காரணம் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்கள் மருத்துவர் களாக ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகும் என்கிறார். அதே நேரத்தில் வட இந்தியாவில் உள்ள மருத்துவர்களுக்கும், நோயாளி களுக்கும் இடையே பெரிய அளவில் இடைவெளி இருப்பதாகக் குறிப்பிடுகிறார். இதற்குக் காரணம், மருத்துவர்களில் பெரும் எண்ணிகையில் உயர் சாதியினர் மட்டுமே இருக்கின்றனர்.  இவர்களால் பின் தங்கிய பிரிவினரில் இருந்து வருகிற நோயாளி களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை, என்றும் குறிப்பிடுகிறார்.

வட இந்தியாவில் இருக்கிற இன்னும் ஒரு முக்கியமான பிரச்சனை மூளை வெளியேற்றம் (Brain Drain) ஆகும்.  இந்தியாவில் முக்கியமான உயர்கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIMS, PGI (Chanrdigarh) ஆகியவற்றில் படிக்கின்ற பெரும்பான்மையான மாணவர்கள் வெளிநாடுகளில் குறிப்பாக, அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர்.  தற்போது சுமார் 1 கோடி இந்தியர்கள் அமெரிக்காவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவில் பணியாற்ற விரும்பாமை IIT போன்ற நிறுவனங்களில் படிக்கின்ற மாணவர்களிடம் இது அதிகரித்து வருவதற்கு அடிப்படைக் காரணம், ஒன்று இந்தியாவில் அவர்களைப் பயன்படுத்துவதற்கான உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களின் போதாமை, இரண்டு இந்த மாணவர்களைப் பயன்படுத்தும் அளவிற்கு பணத்தின் போதாமை. மூன்று வெளிநாடுகளில் ஏற்கனவே செட்டிலாகி விட்ட தன் சொந்த பந்தங்களின் நெருக்கடி. சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்காவில், இடஒதுக்கீடு கூடாது என்று நடந்த ஆர்ப்பட்டமே இதற்குச் சாட்சி. இதற்கும் இட ஒதுக்கீட்டிற்கும் என்ன சம்மந்தம்? என்றால், கம்ப்யூட்டர் துறை தவிர்த்து எஞ்சினியரிங் மற்றும் மருத்துவம் படித்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் இந்தியாவிலேயே இருந்து பணியாற்றியுள்ளனர்.  இந்திய ரயில்வே போன்ற நிறுவனங்களில் சாம்பிள் எடுத்துப் பார்ப்பதன் மூலம் இவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.  தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே ஏற்படுகிற சமஸ்கிருதமயமாக்கலும் (Samkrisation), உயர் சாதியினரிடத்தில் உள்ள மேற்கத்திய மயமாதலும் (Westernisation)தான் இதற்குக் காரணமாகும். இத்தகைய சமஸ்கிருதமயமாக்கல் மற்றும் மேற்கத்தியமயமாக்கல் நிகழ்வுகள், தீண்டாமை இந்த சமூகங்களில் இன்னும் தொடருவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பதாக இருக்கின்றன. இடஒதுக்கீட்டின் நன்மைகளைப் பேசுகிற போது, தீண்டாமை குறித்த கேள்விக்கு விடை காண முடியாத நெருடல் வருவது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

மண்டல் கமிஷன் 26 ஆண்டு காலதாமதம்

நமது நாட்டில் மிக எளிமையான பணி கமிஷன் அமைப்பது ஆகும்.  தீவிரமான போராட்டமோ, கொலையோ, கலவரமோ எதுவானாலும் ஒரு கமிஷனை அமைத்து விட்டால், அந்நிகழ்வு கிட்டத்தட்ட மறக்கப்பட்ட ஒன்றாக மாறிவிடும்.  இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கொடுப்பது குறித்து ஆய்வு செய்ய இதுவரை இரண்டு கமிஷன்கள் மட்டுமே அமைக்கப் பட்டுள்ளன. ஆனாலும், அவைகளின் பரிந்துரைகள் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.  முதலில் 1953, ஜனவரி-29 அன்று காகா காலேகர் என்பவரின் தலைமையில் 11 பேர் கொண்ட கமிஷன் அமைக்கப்பட்டது. இக்குழு 1955, மார்ச் 30-ல் தனது பரிந்துரைகளை சமர்பித்தது.  அன்றைய மத்திய அரசு இந்தக் குழுவின் பரிந்துரைகளில் திருப்தி அடையாத காரணத்தால், மாநிலங்களே, ஆங்காங்கு இருக்கின்ற சமூக தேவைகளைக் கணக்கில் கொண்டு இடஒதுக்கீடு கொள்கையை அமுல்படுத்திக் கொள்ளலாம், என 1962-ல் அறிவிப்பை வெளியிட்டது.

காகா காலேகர் கமிஷனின் பரிந்துரை மீது, இரண்டு விதமான ஆட்சேபனைகளை மத்திய அரசு பதிவு செய்தது. ஒன்று, பின்தங்கிய பிரிவினருக்கு உண்மையில் கிடைக்க வேண்டிய பலன், 70 சதமான இடஒதுக்கீடு என்ற நீண்ட சாதிய பட்டியலுக்குள் காணாமல் போய்விடும் என்ற அச்சமாகும்.  இரண்டு, சாதி ரீதியில் இனம் காணப்பட்டு பிரச்சனையைத் தீர்ப்பது, மிகவும் பின் தங்கிய சிந்தனை என கருதியதாகும்.  இந்த இரண்டு சிந்தனைகளும் சாதியா? வர்க்கமா?  என்ற பட்டிமன்றத்தில் இருந்து பிறந்திருக்க வேண்டும்.  இப்படி ஒரு சர்ச்சையை மைய அரசு தானே உருவாக்கி, அதன் காரணமாக, இடஒதுக்கீடு கொள்கையைத் தள்ளிப் போட்டது.  பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய 3 வர்ணங்கள் வரை, வர்க்க ரீதியில் பொதுவான கண்ணோட்டத்தில் முன்னேறியவர்களாகவே நீண்ட நெடும் காலம் இருந்துள்ளார். சமூக ஒடுக்குமுறையும் இவர்கள் மீது இருந்ததற்கான தகவல்கள் இல்லை.  சூத்திரர்களைப் பொருத்தளவில், வர்க்க ரீதியிலும், சாதி ரீதியிலும் சமூக ஒடுக்கு முறையை சந்தித்த கூட்டம் என்பது வெட்ட வெளிச்சமான உண்மை.  ஆனாலும் காகா காலேகர் கமிஷனின் பரிந்துரை ரத்து செய்யப்பட்டது.

1978, டிசம்பர்-20ல் மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது. இக்கமிஷன் தனது பரிந்துரையை 1980-ல் மைய அரசிடம் ஒப்படைத்தது. அதற்குள் அன்றைய மொரார்ஜி தேசாய் தலைமை யிலான மைய அரச கவிழ்க்கப்பட்டதால் அமுல்படுத்தவில்லை.  அதன்பின் வி.பி. சிங் தலைமையிலான தேசீய முன்னணி அரசு, 1990, ஆகஸ்ட்-7ல் வேலை வாய்ப்பில் 27 சதமான இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யும் கொள்கை அமுல்படுத்தப்பட்டது. இதுவும் தொடர் போராட்டங்கள் காரணமாக, நீதிமன்றம் 1993ல் கொடுத்த தீர்ப்பின் படி,  27 சத இட ஒதுக்கீடு வேலை வாய்ப்புத் துறையில் அமுல் செய்யப்பட்டு வருகிறது.  சுமார் 26 ஆண்டுகள் ஆன பிறகும் கூட, மண்டல கமிஷன் பரிந்துரை செய்த கல்வி, வாய்ப்பில் 27 சத இட ஒதுக்கீடு, இன்னும் மக்களுக்கு கிடைக்க வில்லை.  கல்வித் துறையில் 26 ஆண்டு காலம், 26 தலைமுறை மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய நியாயம் கிடைக்காமல் போய் இருக்கிறது.  இப்படிப்பட்ட தாமதத்திற்கான அடிப்படைக் காரணம் சாதி ரீதியான பாகுபாடும், பழைய வர்ணாசிரம, மனுதர்ம வாதிகளின் புதிய அவதாரங்களும் ஆகும்.

இந்நிலையில், மண்டல் கமிஷன் பரிந்துரைத்த நிலச் சீர்த்திருத்தம், நில விநியோகம், கிராமமுன்னேற்றம் போன்றவை அவ்வளவு எளிதில் நிறைவேறும் ஒன்றாக இருக்கிறது.  மண்டல் கமிஷனின் முழுப் பரிந்துரைகளையும் அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கான போராட்டமே இப்போது நடந்திருக்க வேண்டும். ஆனால், இடஒதுக்கீட்டை எதிர்த்து போராடுவது, காலம் காலமாக அனுபவித்து வந்த வாய்ப்புகளையும், வாழ்க்கை வசதி களையும் இழக்கிற கோபத்தில் பிறந்ததாகும். இந்தக் கோபம் இடஒதுக்கீடு அமுலாக்கத்தை இன்னும் ஓராண்டு தள்ளி வைத்திருக்கிறது.

2006 -கல்வியாண்டிலிருந்து அமுலாக்க வேண்டிய இடஒதுக்கீடு, 2007 ஜீலையில் இருந்து தான் அமுலாகும். இதற்காக வருகிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சட்டம் இயற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி தொடர்ந்து மண்டல கமிஷன் பரிந்துரை அமுலாவது, தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதற்கு, சில அரசியல் சாட்சிகள் ஆதரவாகவும் இருக்கின்றன.  குறிப்பாக, BJP 1990-ல் 27சத இடஒதுக்கீட்டிற்கான அறிவிப்பை திரும்பப் பெறவில்லையானால், வி.பி. சிங் அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்குவதாக அறிவித்து, வாபஸ் வாங்கவும் செய்தது. இன்றைக்கும், இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் அத்வானி மற்றும் வாஜ்பாய் போன்ற தலைவர்களை தொடர்ச்சியாகச் சந்தித்து ஆலோசனை பெறுவதும், இந்தப் பின்னணியில் இருந்தே என்பது தெளிவாகிறது.

இன்று இடதுசாரிகள் குறிப்பாக CPI(M) முன்வைக்கிற, பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்கள் (Creamy Layor) இடஒதுக்கீட்டிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.  ஏற்கனவே உச்சநீதி மன்றம், 1993ல் வேலைவாய்ப்பில் 27 சதவிதமான இடஒதுக்கீடு குறித்த தீர்ப்பில் குறிப்பிட்டதை மையப்படுத்தியே, மார்க்சிஸ்ட் கட்சி இப்போதும் கோரிக்கை வைத்துள்ளது.  அதே நேரத்தில் Creamy Layor-ஐ முன்வைத்து இடஒதுக்கீட்டை அமுல்படுத்தக் கூடாது என மார்க்சிஸ்ட் கட்சி வாதிடவில்லை.  பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டின் அவசியம் என்ன?  என்ற கேள்விக்கு விடைகாண முடியாதவர்களே மார்க்சிஸ்ட் கட்சியை அவதூறு பொழிகின்றனர். இத்தகைய பிரிவினர் வரலாற்றின் பக்கங்களைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.  உண்மை என்னவென்றால், 1978-ல் மண்டல் கமிஷன் அமைக்கப் பட்ட போது, மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசையும், 1990 -ல் மண்டல் கமிஷனின் பரிந்துரையான வேலைவாய்ப்பில் 27 சதமான இடஒதுக்கீட்டை அமுல்படுத்திய போது, வி.பி. சிங் தலைமையிலான அரசையும், இப்போது கல்வியில் 27 சதமான இடஒதுக்கீட்டை அமுல்படுத்துகிற போது மன்மோகன் சிங் தலைமையிலான அரசையும், ஆதரிப்பதில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னின்று செயலாற்றி இருக்கிறது.  இப்படி ஒரு பெருமை வேறு எந்த கட்சிக்கும் இருக்குமா? என்பது சந்தேகமே. எனவே, மார்க்சிஸ்ட் கட்சி இடஒதுக்கீடு அமுலாவதை ஒரு போதும் தள்ளிப்போடக் காரணமாக இருந்ததில்லை.

உலகமயாக்கலும் சமூக நீதியும்:

இன்று இடஒதுக்கீட்டினை வலியுறுத்தும் அரசியல் இயக்கங்களின் பலவும் உலகமயமாக்கலை ஆதரிக்கின்றன. முன்னமே குறிப் பிட்டதைப் போல், உலகமயமாக்கல் அடிப்படை வாதத்துடன் சமரசம் செய்து கொண்டுள்ளது.  உலகமயமாக்கல் கொள்கையும், அடிப்படை வாதமும் ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிப்பதில் ஒன்று பட்டு செயலாற்றுகின்றன என்பதை உணர வேண்டும்.  அடிப்படை வாதம் சாதீயத் தூய்மையை, வர்ணாசிரமத்தை முன்வைத்து பின்தங்கிய மக்களை ஒடுக்கும் பணியைச் செய்தது.  உலகமய மாக்கல், ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தும், பொதுவிநியோக முறை, அடிப்படைக் கட்டமைப்புகள் ஆகியவற்றை அரசின் கடமையில் இருந்து அபகரிக்கும் பணியைச் செய்கிறது.  அடுத்ததாக, புதிய அரசுப் பள்ளிகளை, புதிய ஆசிரியர்களை, சுகாதார நலத் திட்டங்களை அரசு செய்வதில் இருந்து விலகி, தனியாரிடம் ஒப்படைத்து, அதை வணிகமயமாக்கும் பணியைச் செய்கிறது.  எனவே, ஒடுக்கப்பட்டவர்களை மேலும் ஒடுக்குவதற்கான ஆயுதமாகவே, உலகமயமாக்களும், இடஒதுக்கீடும் இருந்துள்ளது  என்பதை அறிய முடியும்.

இந்த சமரசத்தை உலகமயமாக்கல் கொள்கை, அடிப்படை வாதத்துடன் செய்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல், இட ஒதுக்கீட்டையும், உலகமயமாக்கல் கொள்கை யையும் ஒரு சேர ஆதரிப்பது பேராபத்தை விளைவிக்கும்.  இது வெட்டப் போகிறவனின் கையில் சிக்கிய ஆடு போன்றது.  1993-ல் உச்ச நீதி மன்றம் 27சத இடஒதுக்கீட்டிற்கு அனுமதித்தது. அதன் பின் உலகமயமாக்கல் கொள்கையின் தீவிரத்தின் காரணமாக, வேலைக்கு ஆள் எடுக்கும் பணி முறையாக நடைபெறவில்லை. வேலை வாய்ப்பில் 27 சத இடஒதுக்கீடு அமுலுக்கு வந்த பின், எத்தனை துறைகளில், எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டது.  என்பதை அரசு ஓர் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.  ஏனென்றால், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, ஆண்டுக்கு 2 சத மத்திய அரசு ஊழியர்கள் குறைக்கப்பட்டார்கள். BSRB (Banking Service Recuritment Board) கலைக்கப்பட்டது. பல மாநிலங்களில் அரசுப் பணிகளுக்கு ஆள் எடுப்பதில்லை  என்ற வேலை நியமனத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.  அரசு பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாருக்கு விற்பது துரிதமானது. தனியார் இன்சூரன்ஸ் மசோதா, அந்நிய முதலீடு போன்றவை அமுலானது.  இவையனைத்தும் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவை என்பதை யாரும் புளி போட்டு விளக்க வேண்டியதில்லை.  இத்தைகயை செயல்கள் காரணமாகவே, இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு இடஒதுக்கீட்டுக் கொள்கை மீது நம்பிக்கை குறைவதற்கு காரணமாகும். இந்த நம்பிக்கை குறைவு காரணமாகவே இடஒதுக்கீட்டை ஆதரித்தும் நடைபெறும் போராட்டங்கள் குறைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகிறது.

இப்போது உயர் கல்வியில் இடஒதுக்கீடு இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும் என்பது பொது விவாதம்.  ஆனால், கல்வி ஒரு கடைச் சரக்காகவும், மாணவர்கள் நுகர்வோரா கவும் உரு மாறியிருக்கிறார்கள்.  இதன் விளைவு, ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை வணிகமயமாகியுள்ளது. இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினர் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்,  AIIMS, PGI போன்ற தொழில் நுட்ப கல்வி நிலையங்களிலும், ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக் கழகம் போன்ற மத்தியப் பல்கலைக் கழகங்களிலும் மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர்.  அதே போல், ஓரளவு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பாடப் பிரிவுகளான, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கார்ப்பரேட் செக்கரட்டரிஷிப், ஜர்னலிசம், பேங்கிங், மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்டரி, பயோ டெக்னாலஜி போன்ற பாடப் பரிவுகள் படித்தவர்களும் இடஒதுக்கீடு இல்லாத காரணத்தினால் OBC, SC மற்றும் ST ஆகியோர் மிகக் குறைவாக இருக்கிறனர். இன்றைக்கு இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் முன்வைக்கின்ற தகுதி, திறமை  உள்ளிட்ட எதுவும் இல்லாதவர் களால், பணத்தை வைத்து படிப்பை விலை பேச முடிகிறது. T.A. இனாம்தாருக்கும், அரசுக்குமான வழக்கில் உச்ச நிதிமன்றம், சுயநிதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு கேட்பதற்கு அரசுக்கு உரிமையில்லை என்றும், NRI-க்கான 15 சத இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்றும் 2005, ஆக.12 அன்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக இடதசாரி இயக்கங்கள் மட்டுமே பேராடின. வேறுயாரும் போராடவில்லை. இந்தத் தீர்ப்பு அரசின் கடமையில் இருந்தும், சமூக கட்டுப்பாட்டில் இருந்தும் விலக்கிகொண்ட தனியார் மயமாக்கலின் காரணமாக ஏற்பட்ட கொடுமையாகும். குறிப்பாக பள்ளிகள் முதல் அனைத்து கல்லூரிகளும், கடந்த 15 ஆண்டுகளில் அரசாங்கத்தால் திறக்கப்பட்டதை விட, தனியாரால் திறக்கபட்டதே அதிகம். இதற்கு முன் இருந்த BJP அரசும், இப்போது உள்ள காங்கிரஸ் அரசும், அந்நியப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதியளிக்க எந்த நேரமும் தயாராக இருக்கின்றன. இத்தகைய அந்நியப் பல்கலைக் கழகங்களில் இடஒதுக்கீடு எப்படிக் கிடைக்கும்?  எனவே, சமூகநீதிக்கு முதலில் குழிதோண்டுவது உலகமயமாக்கல் கொள்கை என்பதை உலகமயமாக்கலை ஆதரிப்போர் உணர வேண்டும்.  அதன் மூலம் தான் இடஒதுக்கீட்டின் பலாபலன் எல்லோருக்கும் கிடைக்கும்.

மேலே விவாதித்ததில் இருந்து இன்றைய அத்தியாவசியத் தேவையான இடஒதுக்கீடு கொள்கை அமுலாக வேண்டும்.  புதிய உயர்கல்வி நிலையங்களை மைய அரசு சார்பில் துவக்கிட முன்வர வேண்டும்.  கல்வித்துறையில் தனியார் துறையின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி, சமூகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  பள்ளிக் கல்வியில் பொதுப்பள்ளி (Common School) முறையை வளர்க்க வேண்டும். இவை அனைத்தையும் மத்திய மாநில அரசுகள் முன்வைப்பதன் மூலமே உண்மையான சமூக நீதி கிடைக்கும்.

ஆதாரம்

  1. அறிவாளியா? முட்டாளா?-த.வி. வெங்கடேஸ்வரன்
  2.  ஃப்ரண்ட் லைன் கட்டுரைகள்-மே-05-2006.
  3. ஃப்ரண்ட் லைன் கட்டுரைகள்-பிப்-05-2002.
  4. அனில் சடகோபால் கட்டுரை, பீப்பிள்ஸ் டெமோக்ரசி – மே 22 – 28 – 2006.
  5. Why Reservation for OBC is a Must by V.B.Rawat – Countercwocents.org
  6. Merits of Resevation: efficient health system and Social equity emerging evidence from south Indian, S.Venkatesan, One World..

பெரியாரும் சுயமரியாதை இயக்கமும்

பாரதீய ஜனதா கட்சியின் செல்வாக்கு தமிழகத்தில் படருமா?

தமிழக அரசியலை கூர்ந்து கவனித்து வரும் எவரிடமும் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் இல்லை என்று அடித்துக் கூறியிருப்பார்கள். இது பெரியார் வாழ்ந்த மண். பகுத்தறிவும் பிராமணியத்திற்கு எதிர்க்கலாச்சாரமும் ஊறிய இந்த பூமியில், பெரியார் வழிவந்த திராவிடக் கட்சிகள் மூச்சுவிடாது நாற்பது ஆண்டுகளாய் ஆட்சி செய்யும் இந்த மாநிலத்தில் இந்துத்துவ பாரதீய ஜனதா கால் நுனியைக்கூட ஊன்ற முடியாது என்று உறுதியாகச் சொல்லி இருப்பார்கள். பெரியாரின் 125 ஆவது பிறந்த நாளை தமிழகம் கொண்டாடி முடித்திருக்கும் இவ்வேளையில், அவருடைய கொள்கைகளின் தாக்கம் தமிழகத்தில் இன்றும் தொடர்ந்த போதிலும், பெரியார் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை எந்தச் சக்திகளையெல்லாம் எதிர்ப்பதற்காகப் பாடுபட்டாரோ அந்தச் சக்திகளை முழுமையாக உருவகப்படுத்தி நிற்கும் பாரதீய ஜனதா கட்சியை தமிழக மக்கள் தயக்கமின்றி அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளச் செய்கின்றன திராவிடக் கட்சிகள்.

தமிழகத்தின் சமூக, கலாச்சார தளங்களிலும் இந்துத்துவ சக்திகளின் சில நடவடிக்கைகளுக்கு ஊக்கம் தரும் முயற்சிகள் நடக்கின்றன. பசுவதைத் தடுப்பு, மரக்கறி (சைவ) உணவுக்கு ஆதரவான இயக்கம், கோவில்களில் உயிர்ப்பலி தடுப்பு, கோவில் குளங்களை சுத்தம் செய்வதில் முனைப்பு, கோவில்களில் அன்னதானம், தமிழில் அர்ச்சனைக்கு எதிர்ப்பு, விநாயகர் ஊர்வலங்கள் என்று ஏராளமான வடிவங்களில் தமிழகம் மறந்துபோன பல விஷயங்கள் எவ்வித எதிர்ப்புமின்றி மீண்டும் அரங்கேற்றப்படுகின்றன. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் கிளைகளைப் படரவிட்டுள்ள திராவிடக் கட்சியினர் சங்பரிவாரத்தின் முயற்சிகளை ஒரு கலாச்சாரப் பிரச்சினையாக பார்க்காதது மட்டுமின்றி பல நேரங்களில் உள்ளூர் மட்டத்தில் அவற்றில் பங்கேற்கவும் செய்கின்றனர்.

மேடைகளின் பின்புலத்திலும், கட்சிப் பாடல் வரிகளிலும், மாநாட்டு உரைகளின் முதல் சில வரிகளிலும், புகைப்படக் கண்காட்சிகளிலுள்ள பழைய பிரதிகளிலும் தவறாமல் இருக்கும் பெரியார் இவர்களின் கொள்கைகளில் காணாமல் போயிருப்பது வரலாற்றுச் சறுக்கலா? அரசியல் சந்தர்ப்பவாதமா? சந்தர்ப்பவாத மென்றால் பெரியாரின் கொள்கைகளை முன்னிறுத்த மீண்டும் ஒரு வாய்ப்பிருக்கும்போது இவர்களும் மாற வாய்ப்பிருக்கிறது. சறுக்கல் என்றால் மீண்டும் எழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் இங்கு நடப்பது விலகல்.

இந்த விலகலின் வரலாறு பெரியாரின் வாழ்நாட்களிலேயே துவங்கிவிட்டது. இந்த விலகலின் வேர் திராவிட இயக்க வரலாற்றின் துவக்க காலத்திலிருந்தே தீர்க்கப்படாத சில முரண்பாடுகளிலும், முழுமையடையாத, முதிர்ச்சியடையாத ஒரு தத்துவார்த்த அரசியல் போக்கிலும் ஊன்றியிருக்கிறது. இந்த முரண்பாடுகளையும், முதிர்ச்சியின்மையையும் புரிந்துகொள்வதற்கு பெரியார் என்ற புயல், எழுந்து வளர்ந்த வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த சில அடிப்படையான அரசியல் சக்திகளின் தாக்கத்திற்கு உள்ளாகி அவற்றின் மீதும் தாக்கமேற்படுத்திய போராளிதான் பெரியார். காந்தியின் தேசியத்தினால் முதலில் ஈர்க்கப்பட்டு, பின் உயர்சாதி விருப்பு வெறுப்புகளையும் சமூகப் பிற்போக்குத்தனங்களையும் விட்டுத்தள்ள  மனமில்லாத தேசிய வாதிகளை வெறுத்து விலகிச் சென்று, ஜாதீய, மதப் பிடியில் சிக்கியுள்ள சமூகத்தை சவுக் காலடித்துச் சீர்திருத்தும் பாதையில் சென்று, பின் சோஷலிஸத்தின் சிறப்புணர்ந்து புரட்சிப்பாதையில் நடைபோட்டு சிறிது தூரம் சென்று திரும்பி மீண்டும் சீர்திருத்தம் என பிராமண எதிர்ப்பு, பிரிட்டிஷ் ஆதரவு இயக்கத்தில் இணைத்துக்கொண்டு, இந்திய சுதந்திரத்தை நிராகரித்து… பெரியார் என்ற கட்டுக்கடங்காத தனிமனித சரிதையும் தமிழகத்தின் வரலாறும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இதனால்தான் தமிழ்மண்ணில் ஒரு மாற்றம் வேண்டும் என்று விரும்பும் எவரும் பெரியாரை மறந்துவிட்டு சிந்திப்பது நடக்காத ஒன்றாகிறது. அவருடைய தாக்கத்தை மறப்பது வரலாற்றை மறைப்பதற்கு ஒப்பாகும்.

பிரிட்டிஷ் அரசுக்கு மகஜர் அளிதுக்கொண்டிருந்த காங்கிர மக்கள் இயக்கமாக மாற்றம் பெற்றது காந்தியின் தலைமையில்! அந்நிய ஆட்சியைத் துரத்த மட்டுமின்றி, வறுமை, தீண்டாமை, குடிப்பழக்கம் ஆகியவற்றிலிருந்தும் மக்கள் விடுதலை பெறவேண்டுமெனப் போராடும் தேசிய இயக்கத்தில் தன் நண்பர் இராஜகோபாலாச் சாரியாரின் வழிகாட்டுதல்படி 1919-இல் தன்னை இணைத்துக் கொண்டார் பெரியார். செல்வச் செழிப்பு மிக்க வணிகக் குடும்பத்தில் பிறந்த அவர் (கதர்) காதித் துணி மூட்டைகளைச் சுமந்து கிராமம் கிராமமாகச் சென்று விற்றார். எண்பது வயது நிரம்பிய தன் தாயார் உட்பட குடும்ப உறுப்பினர் அனைவரையும் காதி அணியச் செய்தார். ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தி மது விலக்குப் போராட்டத்தை அறிவித்தபோது தானே முன்னின்று கள்ளுக்கடை மறியல்களை நடத்தினார். இயக்கத்தை நிறுத்த வேண்டிக் கோரிக்கை எழுந்தபோது, அந்த முடிவு தமிழ்நாட்டிலுள்ள இரண்டு பெண்களின் கைகளில்தான் இருக்கிறது என்றார் காந்தி. அவர் கூறிய பெண்கள் பெரியாரின் மனைவியும், சகோதரியும். அத்தனை தீவிரமாக கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டிருந்தனர் இருவரும்! போராட் டத்தின் ஒரு பகுதியாக தன் தோப்பிலிருந்த 1000 தென்னை மரங்களையும் வெட்டினார் பெரியார். பழுத்த தேசியவாதிகள் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் மரங்களை வெட்டினர். இவ்வளவு தீவிரமாகத் தேசியவாதப் பாதையில் எட்டாண்டுகள் நடைபோட்ட பெரியார், காங்கிரசுக்கு எதிராகத் திரும்பும் நிலை ஏற்பட்டது.

அன்றிருந்த சென்னை மாகாணத்தின் தேசிய இயக்கத் தலைவர்களில் பலரின் சமூகப் பார்வை குறுகியே இருந்தது. தேச விடுதலை என்பது இந்திய எல்லைக்குள் வாழும் எல்லோருக்குமான விடுதலை. அன்னிய ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது, விடுதலை என்ற கருத்தின் ஒரு அம்சம் மட்டுமே. மனிதனைப் பிறப்பால் தாழ்த்தி வைத்திருக்கும் எல்லா சமூக, கலாச்சார, ஆதிக்க சாதிகளிடமிருந்தும் விடுவித்து ஒரு புதிய வாழ்க்கை மற்றும் சிந்தனைத் தளத்திற்கு இட்டுச் செல்வதுதான் உண்மையான விடுதலை. தேசியம் பற்றிய பெரியாரின் இந்தப் புரிதல் காங்கிர இயக்கத் தலைமையின் புரிதலோடு முரண்பட்டது. இந்த முரண்பாடு முதலில் வெளிப்பட்டது சேரன்மாதேவியில் தேசிய இயக்கத் தலைவர்களில் ஒருவரான வ.வே.சு.ஐயர் நடத்திய குருகுலத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையில் தான். தேசிய சமூக சேவைக்காக வகுப்பு வேறுபாடின்றி இளைஞர் களைப் பயிற்றுவிப்பதற்காக துவங்கப்பட்ட இந்தக் குருகுலத்தில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உணவருந்த தனி இடமும், தரத்தில் சற்றே உயர்ந்த உணவும் அளிக்கப்பட்ட நடைமுறை பெரும் பிரச்சினையாக வெடித்தது.

பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் காந்தியைச் சந்தித்தனர். இதில் பிராமணரல்லாதோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சேரன்மாதேவி குருகுலத்தில் சமபந்தி பிரச்சினை சமூக நீதி என்ற பெரும் பிரச்சினையின் ஒரு வெளிப்பாடேயாகும். சமூக அநீதி இருக்கும் வரை இந்திய தேசியம் என்ற லட்சியம் நிறைவேறாது என்ற முடிவுக்கு காங்கிரசில் இருந்த பிராமணரல்லாதோர் வந்தனர். பெரியாரிடமிருந்து கொள்கை விஷயங்களில் வேறுபட்ட திரு.வி.கல்யாணசுந்தரனார் (திரு.வி.க.) கூறிய தீர்வுகளையும் கூட குருகுலப் பிரச்சினைகளில் வ.வே.சு.ஐயர் ஏற்க மறுத்தார்.

குருகுலத்திற்கு காங்கிர கமிட்டி தரவேண்டிய பாக்கி ரூ.5,000 ஐ அங்கு பொது உணவிடம் ஏற்படுத்தும் வரை தர இயலாது என்று செயலாளர் என்ற முறையில் பெரியார் முடிவெடுத்திருந்தார். ஆனால் அவருக்குத் தெரியாமலேயே பிராமணராயிருந்த ஒரு உதவி செயலாளர் மூலம் அப்பணத்தை காசோலையாகப் பெற்றார் வ.வே.சு.ஐயர். இதனால் ஆத்திரமுற்ற பெரியார் குருகுலத்தின் மீது முழுப்போர் பிரகடனம் செய்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மெற்கொண்டார்.

ஏற்கெனவே கேரளாவிலுள்ள வைக்கம் என்ற ஊரில் பிராமணர் வசிக்கும் பகுதியில் பிற்படுத்தப்பட்ட ஈழவர்கள் நடப்பதைத் தடுத்ததையொட்டி எழுந்த பிரச்சினையில் தலையிட்டு நடத்திய போராட்டத்தில் பிராமணப் பழமைவாதிகளின் நிலைப்பாடுகளால் ஆத்திரமுற்றிருந்த பெரியாருக்கு, தேசிய இயக்கத்துக்குள்ளிருந்த ஜாதீய உணர்வுகள் அவ்வியக்கத்திலிருந்து அவரை அன்னியப் படுத்தின.

தேசியம் பற்றிய பெரியாரின் புரிதல் என்னவாக இருந்தது? பாலக்காட்டில் பெரியார் நிகழ்த்திய உரையில் இதற்கு விடை இருக்கிறது.

ஒரு தேசத்தின் தேசியம் முக்கியமாக எதைப் பொறுத்திருக்க வேண்டுமென்று பார்ப்போமானால், குறைந்தபட்சம் ஒரு தேச மக்கள் தங்கள் மனத்தையும், மன சாட்சியையும் விற்காமலும் விட்டுக் கொடுக்காமலும் வயிறு வளர்க்கும்படியாவது இருக்க வேண்டும். ஈதன்றி, அதற்கு  மேற்பட்ட தேசியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அறிவு வளர்ச்சி வேண்டும், கல்வி வேண்டும், ஆராய்ச்சி வேண்டும், கண்ணியமான தொழில் வேண்டும், சமத்துவம் வேண்டும், ஒற்றுமை வேண்டும், தன் முயற்சி வேண்டும், உண்மை உயர்வு வேண்டும், ஒருவரை ஒருவர் ஏமாற்றிப் பிழைக்காமலிருக்க வேண்டும், சோம்பேறிகள் இருக்கக்  கூடாது, அடிமைகள் இருக்க கூடாது, தீண்டாதவர்கள் தெருவில் நடக்க முடியாதவர்கள் இருக்கக் கூடாது, இனியும் இது போன்ற எவ்வளவோ காரியங்கள் செய்யப்பட வேண்டும்.

இத்தகைய விளக்கமளித்த பெரியாருக்கு அன்றைய தேசியவாதிகள் மீது வெறுப்பு வரக் காரணமென்ன?

மேற்குறிப்பிட்ட வகையில் தேசியம் வளர்வதற்கான சட்டம் எதையும் அவர்கள் செய்யவில்லையென்பது மட்டுமின்றி, வந்த சட்டங்களுக்கு முட்டுக் கட்டையும் போட்டவர்கள் தேசியவாதிகள் என்று சாடுகிறார்.

மக்கள் சாதி பேதத்தையும், மதபேதத்தையும் ஒழிக்க தேசியவாதிகள் கவனிக்காமலிருப்பது மாத்திரமல்லாமல், அவற்றை நிலை நிறுத்தவும், வலுப்படுத்தவும் முயற்சிக்காமலிருப்பதுமில்லை. இன்றைய தேசிய வாழ்வில் தேவஸ்தான மசோதாவை எதிர்த்தவர்கள் யார்? சாமிகள் பேரால் பெண் மக்கள் விபச்சாரத்தை தடை புரியும் மசோதாவை எதிர்த்தவர்கள் யார்? மக்கள் எல்லோருக்கும் சமப்பிரதிநிதித்துவமும், சமசந்தர்ப்பமும் அளிக்க வேண்டும் என்ற கொள்கைகளை எதிர்ப்பவர்கள் யார்?

பால்ய விவாகத்தை தடை செய்யும் சாரதா சட்டம் மத்திய சட்ட சபையில் கொண்டுவரப்பட்ட போது, பழுத்த தேசாபிமானிகளும், பிரபல தேசியத் தலைவர்களும் என்ன நிலையெடுத்தனர் என்பதை பெரியார் அம்பலப்படுத்தினார். மதன் மோகன் மாளவியா: 14 வயதுக்கு மேற்பட்டு கல்யாணம் செய்வது நல்லதுதான். ஆனாலும் வைதீகர்களோடு மோதலை தவிர்ப்பதை முன்னிட்டு 12 வயதாக இருக்க வேண்டும்.

மோதிலால் நேரு 20 வயதுக்கு முன்னால் எங்கள் குழந்தைகளுக்கு கல்யாணம் செய்வதில்லை. அவசியமிருக்கிறவர்கள் 14 வயதுக் குள்ளாகவும் கல்யாணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற திருத்தம் கொண்டு வந்தார். கேஸ்கர் என்ற தேசியத் தலைவர் வைதீகர்கள் இஷ்டத்திற்கு விரோதமாய்ச் சட்டம் செய்யக் கூடாது என்றார்.

இத்தகைய தேசியவாதிகளின் கையில் தேசம் சென்றால் என்னவாகும் என்ற கவலை அவருக்கு இருந்தது.

வினா அறியாக் குழந்தைகளைக் கடவுளின் கடவுள் பேரால் பொட்டுக் கட்டி விபச்சாரிகளாக்குவதையும், மக்களை விபச்சாரத் தொழிலால் ஜீவனம் செய்யக் கூடாதென்றும், ஜாதிக் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் கூட மதத்தின் பேராலும், சாத்திரங்களின் பேராலும், சாமிகள் பேராலும் ஆட்சேபிக்கப்படுமானால் அதுவும் பூரண சுயேச்சையை விரும்பும் சங்கக் காரியதரிசியும், கற்ற பண்டிதராலேயே எதிர்க்கப்படுமானால், இனி சாதாரண பார்ப்பனர் களும் அவர்கள் கலந்த இயக்கங்களாலும் நாம் எந்த விதமான சீர்திருத்தத்தை சுய ராஜ்ஜியத்தில் இராமராஜ்ஜியத்தில் எதிர்பார்க்க கூடுமென்பது விளங்கவில்லை

இத்தகைய தேசிய தலைவர்களையெல்லாம் வழி நடத்திய காந்தியாரின் கருத்துக்கள் சில பெரியாரை மேலும் தேசிய இயக்கத்திலிருந்து அன்னியப்படுத்தியது.

செப்டம்பர் 1927-இல் கடலூருக்கு விஜயம் செய்த காந்தி, பிராமணர்கள் அறிவின் கலன்கள், தியாகத்தின் உருவம் என்று புகழ்ந்தார். பிராமணர்கள் தங்கள் பாரம்பரிய எளிமையைப் பேணி பிராமணரல்லாதோர் கொடுப்பதைப் பெற்று வாழ வேண்டு மென்றும், பிராமணரல்லாதோர் பிராமணரை வெறுப்பதன் மூலம் ஒரு புதிய தீண்டத்தகாதப் பிரிவை உருவாக்கிவிடக் கூடாதென்றும், பிராமணர்கள் இந்து மதத்தின் காவலர்களென்றும் கூறினார். பிராமணர் மீதுள்ள கோபத்தின் காரணமாக இந்து மதத்தின் அதிவாரமாக இருக்கும் வர்ணாசிரம தர்ம அமைப்பினை பிராமணரல்லாதோர் தகர்த்துவிடக் கூடாதென்றும் வேண்டுகோள் விடுத்தார். வர்ணாசிரமம் என்பது ஒரு பிரபஞ்ச விதி, மனித ஆற்றலை உயரிய நோக்கங்களுக்குத் திசை திருப்பும் ஆன்மீகப் பொருளாதார விதி என்று விளக்கங்களைக் கொடுத்தார்.

இவ்விளக்கங்கள் ஏற்கெனவே காங்கிரஸிற்குள் நடக்கும் பிராமணிய ஆதிக்க செயல்பாடுகளினால் வெறுப்புற்றிருந்த பிராமணரல்லாதோரிடையே பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்தது. வர்ணாசிரம தர்மம் பற்றிய காந்தியின் நிலைப்பாட்டை மாற்றும் முயற்சியாக பெரியாரும், எ.ராமநாதனும் அவரைச் சந்தித்தனர். அவருடைய கருத்துக்கள் தீண்டாமை, பால்ய விவாகம் ஆகிய பிரச்சினைகளில் பிராமணிய பழமைவாத சக்திகள் மேற்கொண்டுள்ள நிலைப்பாடுகளை வலுப்பெறச் செய்யுமென்றும் இச்சமூகத் தீமைகளுக்கு எதிராக காந்தி எடுத்துள்ள நிலைப்பாடு களையே மறுதலிக்குமென்றும் எடுத்துக்கூறினர். காந்தியின் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லாததைக்கண்ட பெரியார் இந்திய தேசிய காங்கிர, இந்துமதம், பிராமணியம் ஒழியும்போது மட்டுமே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்று காந்தியிடம் கூறினார்.

காங்கிர  மூலம் சமூக நீதி கிடைக்காது என்று முடிவெடுத்த பெரியார் 1927-இல் அவ்வமைப்பிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் என்ற சீர்திருத்தப் பாதையில் செல்லத் தொடங்கினார். கலாச்சார ரீதியாக சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உணர்வுகளையும் உள்வாங்கி தேசவிடுதலை என்ற இலக்கினை நோக்கிச் செல்லும் இயக்கத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்குக் கிடைத்த வாய்ப்பினை காங்கிர இழந்தது.

காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியாருக்கு பிராமணரல்லா தோர் இயக்கமான நீதிக்கட்சியில் நேரடியாக இணையும் வாய்ப்பு இருந்தது. அக்கட்சியின் பல மாநாடுகளிலும், கூட்டங்களிலும் பெரியார் கலந்து கொண்டபோதிலும் அவ்வியக்கத்தின் குறிக்கோள் ஆட்சியிலும், அரசாங்கப் பதவிகளிலும், கல்வி, வேலை வாய்ப்பு களிலும் பிராமணரல்லாதோருக்கு அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற வட்டத்துக்குள்ளேயே நின்றிருந்தது. பிராமணரல்லாதோரின் நலன்களைப் பாதுகாக்கப் பிறந்த இயக்கம் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நீதிக்கட்சி 1916-இல் வெளியிட்ட பிராமணரல்லாதோரின் அரசியல் அறிக்கையில் இப்பிரிவில் பெரும்பான்மையோராயிருந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. ஏனெனில் பிராமணரல்லாதோரின் சமூக, வர்க்க அடித்தளம் வேறு.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் விவசாயம் வியாபாரமாக்கப்பட்டு, பருத்தி போன்ற பணப்பயிர்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டதால் பிராமணரல்லாத சாதியினரிடையே பணக்கார விவசாயி, தரகு வணிகர், வட்டி முதலாளி போன்ற வர்க்கங்களும் படித்த, நடுத்தர வர்க்கமும் தோன்றின. இந்தக் காலகட்டத்தில்தான் பிரிட்டிஷ் அரசு அதிகார இயந்திரத்தை மத்தியத்துவப் படுத்தியது; இந்திய மயமாக்கியது. ஏற்கெனவே கல்வியில் குறிப்பாக, ஆங்கிலக் கல்வியில், வியாபித்திருந்த பிராமணர்களே பெரும்பாலான அரசுப் பதவிகளைத் தக்கவைத்துக் கொண்டிருந்தனர். கல்வியின் விரிவாக்கம் மற்றும் பிராமணரல்லாதோரிடையே புதிய வர்க்கங்களின் தோற்றத்தால் அரசாங்கப் பதவிகளில் இப்பிரிவினருக்கும் மக்கள் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேற்கத்திய கல்வியினால் முன்னேற்றம் பெற்றிருந்த பிராமணர்களே தேசிய இயக்கத்தில் முன்னணி வகித்து வந்ததால் அவர்களுக்கு எதிராக இந்திய சமூகத்திலிருந்தே ஒரு பிரிவினர் எழுந்தது, பிரிட்டிஷ் ஆட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வசதியாக இருந்தது. பிராமணரல்லாத பிரிவினரின் மேல்தட்டிலிருந்து வந்த வர்க்க சக்திகளின் அரசியல் வடிவமாகவந்த நீதிக்கட்சியின் முதல் அறிக்கை இதனால்தான் கல்வி, அரசாங்கப்பதவி என்ற குறுகிய கோரிக்கை வட்டத்திற்குள் நின்றது. பிரிட்டிஷ் ஆட்சி மட்டுமே வர்க்கங்களுக்கும் இனங்களுக்கும் இடையே தராசை நியாயமாகப் பிடிக்கும் வல்லமை படைத்தது என்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர் களின் செல்வாக்கினையும் அதிகாரத்தையும் அழிப்பதற்காக எடுக்கப்படும் எந்த முயற்சிக்கும் நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம் என்றும், அந்த ஆட்சிக்கு ஆழ்ந்த விசுவாசத்துடன் நடப்போம் என்றும் பிராமணரல்லாதோர் அறிக்கை கூறியது. அமெரிக்க செவ்விந்தியர்களின் உடல்களின் மீதும், ஆப்பிரிக்க அடிமைகளின் ரத்தத்தை உறிஞ்சியும் பூதாகரமாய் வளர்ந்து நின்ற ஏகாதிபத்திய சக்தி, தாதாபாய் நெளரோஜி போன்ற அறிஞர்களினால் இந்தியச் செல்வங்களைக் கொள்ளையடிக்க வந்த கூட்டம் என்று புள்ளி விவரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சி தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த வர்க்கம் பிராமணரல்லா தோரின் நலன் என்று எதைக் குறிப்பிடுகிறது என்பது தெளிவு.

பிராமணரல்லாதோர் அறிக்கை புகழராம் சூட்டிய பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பிராமணரல்லாதோர் சமூகத்தின் பெரும்பாலோரின் அவல வாழ்க்கையை எடுத்துக் காட்டும் சில உண்மைகள் இங்கே:

பரந்து விரிந்து வரும் தன் உலக சாம்ராஜ்ஜியத்தை நிலை நிறுத்துவதற்காக பிரிட்டிஷ் அரசு பின்பற்றிய இரக்கமற்ற நிலவரிக் கொள்கையினால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல வருடங்களில் பஞ்சம் தலை விரித்தாடியது. 1823இல் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியாளர் அரசுக்கு ஓர் அறிக்கை அனுப்பினார். மக்கள் தலையில் துணியிட்டபடி உணவைத் தேடியலைந்து கொண்டிருந் தனர். பொதுச் சாலைகளில் தினமும் மக்கள் மடிகின்றனர்.

1876-78ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது, சென்னை மாகாணத்தில் மூன்றரைக் கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். ஏழரை லட்சம் பேருக்கு 22 மாதங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டியிருந்தது.

இந்தப் பெரும் பஞ்சத்தினால், லட்சக்கணக்கான மக்கள் (பிராமணரல்லாதோர்) புலம் பெயர்ந்து இலங்கை, பர்மா, மலேசியா, மேற்கிந்தியத் தீவுகள் நோக்கிச் சென்றனர்.

1878ஆம் ஆண்டில் மட்டும் 1,50,000 பேர் இலங்கைக்கு புலம் பெயர்ந்து சென்றனர்.

பெரும் பஞ்சங்களுக்கு காரணமாயிருந்த பிரிட்டிஷ் கொள்கைகள், பண்ணையாள் எனப்படும் விவசாயத் தொழிலாளி அடிமைகளை விடுவிப்பதிலும் ஆர்வம் காட்டவில்லை. பறையர், பள்ளர், பள்ளி (வன்னியர்) போன்ற சமூகப் பிரிவுகளைச் சார்ந்த பண்ணையாட்கள் உணவு தானியங்களை அளப்பது. விவசாய நில எல்லைகளை ஏற்படுத்துவது, நீர் பாய்ச்சுவது, இறந்தவர்களைப் புதைப்பது போன்ற பணிகளில் பிராமணர் மற்றும் பிராமணரல்லாத நிலப்பிரபுக்களால் ஈடுபடுத்தப்பட்டனர்.

பட்ட கடனுக்காக பரம்பரை பரம்பரையாக பண்ணைச் சேவகம் புரிந்தனர் இம்மக்கள். 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையில் இந்த அடிமை முறைக்கு ஆங்கிலேயே ஆட்சியின் ஆசிர்வாதம் இருந்ததாக பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தென்னிந்தி யாவில் நிலமும், சாதியும் என்ற புத்தகத்தில் தர்மா குமார் என்ற ஆராய்ச்சியாளர் இவ்வாறு குறிப்பிடுகிறார். 1800இல் பண்ணைச் சேவகம் புரிந்த பள்ளர்களும், பறையர்களும் தலைமறைவாகி விட்டனர் என்று கேள்விப்பட்ட தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் அனைவரையும் அவரவரின் எஜமானார்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டார். அது மட்டுமல்லாமல், அடிமைகள் அரசாங்கத்திற்கும் நிலப்பிரபுக்களுக்கும் சேவகம் புரியுமாறு காவல்துறையைக் கொண்டு நிர்ப்பந்திக்க வேண்டு மென்றும் யோசனை கூறினார்.

அடிமை முறைக்கு எதிராக பிரிட்டிஷ் சமூகத்திற்குள் எழுந்த இயக்கங்கள் வலுப்பெற்ற போதுதான் 1841இல் பிரிட்டிஷ் ஆட்சி அடிமையொழிப்புச் சட்டம் இயற்றியது. அதுவரை அடிமைகளை விடுவிப்பதனால் நிலவுடைமை அமைப்பு சிதைந்து நிலவரி வருமானம் குறையாமல் பிரிட்டிஷ் ஆட்சி பார்த்துக் கொண்டது.

பிராமணரல்லாதோர் அறிக்கை இந்த பிரிட்டிஷ் ஆட்சியின் நீதி நியாய உணர்வைப் பாராட்டுவதோடு, மட்டுமல்லாமல் பெரும்பாலான பிராமணரல்லாதோர் அவ்வாட்சியில் எப்படி வாழ்ந்தனர் என்றும் குறிப்பிடாதது அதன் வர்க்க சமூக நிலைப்பாட்டை உணர்த்துவதாக உள்ளது.

பிராமணர்களோடு நடத்தும் அதிகார வர்க்கப் போட்டியைவிட சமூக, கலாச்சார தளங்களில் மனிதர்களைப் பிறப்பால் தாழ்த்தி வைத்திருக்கும் வர்ணாசிரம தர்மத்திற்கு எதிரான போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று முடிவெடுத்த பெரியார், எ.ராமனாதன் துவங்கிய சுயமரியாதைக் கழகத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார். இந்த சமூக, கலாச்சாரப் போராட்டத்தின் சமூக அடித்தளம் பிராமணரல்லாதோரில் பெரும் பகுதியினரைக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்த பெரியார் விவசாயத் தொழிலாளர், தாழ்த்தப்பட்ட மக்கள், நாடார்கள், அகமுடையார், இசை வேளாளர், செங்குந்தர், வன்னியகுல சத்திரியர் போன்ற பிரிவினரிடையே இயக்கத்தை எடுத்துச் சென்றார். சௌந்தரபாண்டிய நாடார், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்ற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்களையும் தன் இயக்கத்தில் இணைத்துக்கொண்டார்.

பிராமணர்கள் (ஆரியர்கள்) கலாச்சார ரீதியாக திராவிடர்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளனரென்றும், புராணங்களும், சாதிரங்களும், மனுநீதியும் கொளுத்தப்பட வேண்டுமென்றும் கூறினார்.

சுயமரியாதை இயக்க வீரர்கள் தங்கள் பெயரிலும், உடலிலும் இருந்த ஜாதிய அடையாளங்களைத் துறந்தனர். 1932-ஆம் ஆண்டு மட்டும் 1,50,000 பேர் தங்கள் ஜாதிப் பெயர்களைத் துறந்ததாகக் கணக்கு உள்ளது. கலப்புத் திருமணங்கள் நடத்தப்பட்டன. குழந்தைத் திருமணம், வரதட்சிணைமுறை கண்டனம் செய்யப்பட்டன. விதவை மறுமணத்துக்கு உற்சாகம் அளிக்கப்பட்டது. பெண்களுக்கு சொத்துரிமையும், விவாகரத்து உரிமையும் கோரப்பட்டது. மனித சிந்தனையின் மீது சாதியமும், மதமூட நம்பிக்கைகளும், கட்டியிருந்த சங்கிலிகளை அறுத்து, வாய்ப்பளித்தால் எப்பிறப்பைச் சேர்ந்தவரும் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர்கள், பெண்கள் மத்தியில் உருவாக்குவதில் சுயமரியாதை இயக்கம் பெரும் பங்காற்றியது.

மத நம்பிக்கையிலிருந்து மக்களை விடுவித்து, பகுத்தறிவுப் பாதையில் திருப்பிவிடும் வகையில் புரட்சிகரமான தீர்மானங்களை சுயமரியாதை இயக்கம் நிறைவேற்றியது. வழிபாட்டுக்கென்று ஒரு பைசா கூட தமிழர்கள் செலவழிக்கக்கூடாது, புதிதாகக் கோவில்கள் கட்டக்கூடாது, கோவில் வருமானத்தைக் கொண்டு தொழில்நுட்பக் கல்வி, தொழிற்கல்வி, கல்வி தொடர்பான ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். கோவில் திருவிழாக்கள் நடத்துவதை விட்டு பொது சுகாதாரம் போன்ற பிரச்சினைகளைப்பற்றிய கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும்.

மேற்கூறிய தீர்மானங்களை பிராமணர்கள் மட்டும் கண்டிக்க வில்லை. நீதிக்கட்சி நடத்திய பிராமணரல்லாதோரும் நிராகரித்தனர். அதிகாரப் பங்கீட்டில் பிராமணர்களை விரோதியாகப் பார்த்த நீதிக்கட்சி தலைவர்கள் பலரும், சமூக கலாச்சாரத்துறைகளில் பிராமணியம் பிரதிநிதித்துவப்படுத்திய நிலப்பிரபுத்துவக் கலாச்சார மதிப்பீடுகளிலிருந்து அதிகம் மாறுபடவில்லை. பிராமணரல்லா தோர் இயக்கத்தின் இந்த முரண்பாடு தீர்க்கப்படாத ஒன்று. சமூக சீர்திருத்தம் என்ற கட்டத்திலிருந்து சோஷலிஸம் என்ற அடுத்த கட்டத்துக்கு பெரியார் முன்னேறிச் சென்றபோது இந்த முரண்பாடு மேலும் முற்றியது.

ரஷ்யப் புரட்சியில் தொழிலாளி வர்க்க ஆட்சி ஏற்பட்டதன் வீச்சும், முதல் உலகப்போருக்குப்பின் ஏற்பட்ட பெரும் முதலாளித்துவ நெருக்கடியின் மோசமான தாக்கமும் புதிதாய்த் தோன்றி எழுந்துவரும் தொழிலாளி வர்க்கத்தினிடையே சோஷலிஸ மாற்றத்துக்கான ஒரு வேட்கையைத் தோற்றுவித்தது. 1920-க்கும் 1930-க்கும் இடைப்பட்ட இக்காலகட்டத்தில் சென்னை மாகாணத்திலிருந்து தொழிற் சாலைகள், தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை 511-லிருந்து 1330 ஆக உயர்ந்தது. ஏறக்குறைய ஒரு லட்சமாக இருந்த தொழிலாளர் எண்ணிக்கை 1,90,500 ஆக உயர்ந்தது. இடதுசாரித் தலைவர்களான சிங்காரவேலு செட்டியார், ப.ஜீவானந்தம் போன்றோர் இடதுசாரி கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்சென்றனர்.

இடதுசாரித் தலைவர்களுக்கும் பெரியாருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. பெரியாரின் உலகப்பார்வையில் ஒரு புரட்சிகர மாற்றமும் ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில் அவருடைய கருத்துக்கள் எவ்வளவு ஆழம் பெற்றன என்பதற்கு ஒரு சான்று:

சாதாரணமாய் தீண்டாமை முதலிய ஜாதி வித்தியாசத்துக்கு அடிப்படையாய் இருப்பது பொருளாதார தத்துவமேயாகும். ஜாதி வித்தியாசம் என்பது ஏதோ ஒரு முட்டாள்தனத்தினால் ஏற்பட்டது என்று சொல்வதை ஒருநாளும் ஒப்புக்கொள்ள முடியாது. அது மிகவும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட முன் ஜாக்கிரதையான சுயநல அயோக்கியத்தனத்தால் எற்படுத்தப்பட்டதாகும். அந்நிலை கட்டுப்பாடாகவும் நிலையாகவும் இருப்பதற் காக சாதிர ஆதாரங்களும் மதக்கோட்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டன. ஆகவே மக்களுக்குள் உண்மையான ஒற்றுமை ஏற்படவேண்டு மானால் தீண்டாமை நீங்கி உண்மையான சமத்துவம் ஏற்பட வேண்டுமானால் மதங்கள் ஒழிந்து பொருளாதாரத்துறையில் மக்கள் எல்லோரும் சமத்துவத்துடன் இருக்கும்படியான காரியங்கள் எற்பட்டால் ஒழிய மற்றெந்த வழியாலும் சாத்தியப்படக்கூடியது அல்ல என்றே சொல்லுவோம்.

அரசியல் பொருளாதார சமூக விடுதலைக்கான ஒரு அருமையான அரசியல் திட்டத்திற்கான கருவினை இந்த உரையில் பார்க்கலாம்.

சோவியத் யூனியன் பயணமும் பிரிட்டிஷ் இடதுசாரி தொழிற் சங்கத் தலைவரான சக்லத் வாலாவின் சந்திப்பும் ஒரு பெரும் சோஷலிச தாக்கத்தை பெரியாருக்குள் ஏற்படுத்தின. சுயமரியாதை இயக்கத்துடன் இணையாக சமதர்மக் கட்சி உருவாக்கப்பட்டது. சென்னை மாகாணத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சோஷலிசக் கருத்துக்களை பெரியாரும் சுயமரியாதை இயக்க வீரர்களும் எடுத்துச்சென்றனர். சுயமரியாதைக் கூட்டங்களின் முடிவில் முதலாளித்துவம் ஒழிக, சோஷலிசம் வாழ்க என்று மக்கள் எழுந்து நின்று குரல்கொடுத்த அற்புதம் நிகழ்ந்தது. நிலப்பிரபுத்துவ அமைப்பின் பிற்போக்கு கலாச்சார உணர்வுகளிலிருந்து ஜனநாயக, சோஷலிச உணர்வை நோக்கி மக்களின் கணிசமான  ஒரு பகுதியினரை திருப்பியதில் பெரியாரின் பங்கு மகத்தானது.

சுயமரியாதை, சீர்திருத்தம், பிராமணர் அல்லாதோர் இயக்கம் என்ற பாதையில் போய்க்கொண்டிருந்த பெரியார், புரட்சிப் பாதையில் நடமாடத் தொடங்கியதும் இரண்டு பகுதியினர் கலவரமடைந்தனர். நீதிக்கட்சியிலும் சுயமரியாதை இயக்கத்திலும் இருந்த நிலவுடமை யாளர்களும் சிறுமுதலாளிகளும் ஒருபுறம். ஏகாதிபத்திய பிரிட்டிஷ் ஆட்சி மறுபுறம். பெரியார் மீது இரு பக்கங்களில் இருந்தும் தாக்குதல். வர்க்க நலன்களுக்கு ஊறு வந்ததால் சிங்காரவேலருடன் சேர்ந்து பெரியார் இயற்றிய ஈரோட்டுத் திட்டத்தைக் கைவிட்டு சீர்திருத்தப்பாதைக்கு திரும்ப வேண்டும் என்று ஒரு பகுதியினர் கூற 1934-இல் கம்யூனிச இயக்கத்தை தடை செய்த பிரிட்டிஷ் அரசு, சுயமரியாதை, சமதர்ம இயக்கத்தின் மீதும் நேரடித் தாக்குதல் தொடுத்தது.

பெரியார் எந்தப்பக்கம் போனார் என்பது வரலாறு! தமிழகத்தில் முற்போக்கு அரசியல் தடத்தையே மாற்றிப்போட்ட முடிவு அது.

இடதுசாரித் தலைவர்களுடன் தொடர்பிருந்த காலத்திலேயே பணக்காரர்களும் நமக்கு வேண்டும் என்ற நிலை எடுத்த பெரியார் பிராமணர் அல்லாதோர் மற்றும் சுயமரியாதை இயக்கத்திற் குள்ளிருந்த அடிப்படையான மேற்குறிப்பிட்ட முரண்பாடுகளை தீர்த்து முன்னேறவில்லை.

1936-இல் ராஜாஜி தலைமையில் காங்கிர ஆட்சிக்கு வந்ததும் அதுவரை பிராமணர் அல்லாதோர் இயக்கம் அடைந்த சமூக, அரசியல் பலன்கள் (வகுப்புவாரி பிரதிநிதித்துவம், தேவதாசிமுறை ஒழிப்பு, பால்ய விவாக தடுப்பு, அறநிலையத்துறை மசோதா) காங்கிரஸ்-பிராமண ஆட்சியில் அடிபட்டுவிடும் என அவர் அஞ்சினார். அவரை சோஷலிசப் பாதையில் வைத்திருப்பதற்கான இடதுசாரி அமைப்போ அரசியல் திட்டமோ நிலைபெற்றிருக்க வில்லை.

இந்நிலையில் நீதிக்கட்சியின் பக்கம் பெரியார் சென்றார். ராஜாஜி அரசு, பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கியது. விடுதலை இயக்க வீச்சிற்கு முன்னால் நிலைகுலைந்து போயிருந்த பிராமணர் அல்லாதோர் இயக்கத்துக்கு புத்துயிர் அளித்தது. இந்தி எதிர்ப்புப்போரில் தமிழ் தேசியம் முனைப்புப்பெற்றது. சீர்திருத்தம், சுயமரியாதை என்ற பரிணாமங்களுடன் தமிழ் உணர்வு என்ற புதிய பரிணாமமும் சேர்ந்து பிராமணர் அல்லாதோர் இயக்கம் திராவிடர் இயக்கம் என்ற புதிய வடிவம் பெறுவதற்கான வரைபுள்ளிகள் வைக்கப்பட்டன.

ஆனால் இந்த வரைபடத்தை முழுமையாக்க நீதிக்கட்சியின் ஏகாதிபத்திய ஆதரவுப்போக்கு உதவாது என்பதை சரியாகப் புரிந்துகொண்ட சி.என்.அண்ணாதுரை போன்ற பேச்சாற்றல் மிக்கத் தலைவர்கள் பெரியாரை நேரடியாக எதிர்க்காமல் அவரது உலகப்பார்வைக்கு அப்பாற்பட்ட ஒரு தளத்துக்கு இயக்கத்தைக் கொண்டு சென்றனர்.

விடுதலைப்போரின் வேகத்தில் நீதிக்கட்சி உதிர்ந்துபோக திராவிடர் கழகம் பிறந்தது.

அரசியல் விடுதலைபெற்று பிராமண-காங்கிர ஆதிக்கத்தில் இருப்பதைவிட திராவிட நாடு ஒன்றை தனியாகப்பெற்று பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இயங்க வேண்டும் என்ற நிலை எடுத்த பெரியார் இந்திய சுதந்திரத்தை அங்கீகரிக்கவில்லை. ஆகட் 15 துக்க நாள் என்று அறிவித்தார். இந்த நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அண்ணாதுரை போன்றோர் சுதந்திர இந்தியாவில் ஜனநாயக சாத்தியக்கூறுகளின் தன்மையை உணர்ந்து திராவிடர் கழகத்தை ஒரு முழு முதல் அரசியல் சக்தியாக மாற்றும் வண்ணம் திராவிட முன்னேற்றக்கழகத்தினை ஏற்படுத்தினர்.

ஜமீன்தார் மற்றும் பெருநில உடமையாளர்களுக்கும் புதிதாக மேல் எழுந்து வந்த மத்தியதர வர்க்கத்திற்கும் பிராமணர் அல்லாதோர் இயக்கத்தினுள் நிகழ்ந்த முரண்பாடே புதிய அரசியல் கட்சியாக முடிந்தது.

பெரியார் சோஷலிசப் பாதைக்குச் சென்று மீண்டும் சீர்திருத்தத்திற்குத் திரும்பியது ஒரு குண ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தியது போலவே சீர்திருத்தம் என்ற தளத்தில் இருந்து முழுயைமான அரசியல் தளத்திற்கு அண்ணாதுரை சென்றதும் திராவிட இயக்கக்கொள்கையில் ஒரு குணமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனை மூன்று கூறுகளாக இலங்கைத் தமிழ் அறிஞர் கா.சிவத்தம்பி கூறுவார்.

  1. தேர்தல் அரசியலில் பங்குகொள்வது என்ற தீர்மானம் (1956).
  2. நாத்திக நிலையில் இருந்து விடுபட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலைப்பாடு.
  3. திராவிட நாடு கோரிக்கை கைவிடப்படல்.

சமூக சீர்திருத்தத் தளத்திலிருந்து தேர்தல் அரசியலுக்கு வந்த திமுகவின் வளர்ச்சிக்கு நாத்திகம் ஒரு தடையாக இருக்கும் என்பதால் அக்கொள்கை நிலையிலிருந்து மாறியது. வளர்ந்து வரும் பிரதேச முதலாளித்துவத்திற்கு, இந்தியா என்பது ஒரு பெரும் வணிகச் சந்தையாகவும் மேலெழுந்து வரும் மத்தியதர வர்க்கத்திற்கு வேலைவாய்ப்புச் சந்தையாகவும் இருந்ததால் தனி நாடு கோரிக்கையையும் கைவிட்டது. ஆனால் மத்தியில் ஆட்சி புரிந்த காங்கிர வலுவிழக்கத் தொடங்கிய நேரத்தில் ஒரு பிரதேச சக்தியாக தன்னை அடையாளம் காட்டி, மத்திய அரசு எதிர்ப்பு நிலை எடுத்து நின்றது. வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்ற கோஷங்களை விட்டு வடக்குடனான பேர ஆற்றலை வளர்த்துக் கொண்டது. 1972-ல் ஏற்பட்ட பிளவுக்குப் பின் திராவிட இயக்கத்தின் ஒரு கணிசமான பகுதி பிரதேச அரசியலில் இருந்து அகில இந்திய அரசியலுடன் ஐக்கியமாகி மத்திய அதிகாரத்தில் பங்காளியாகும் போக்கு ஏற்பட்டது. காங்கிர முற்றிலுமாக வலுவிழந்து அதற்கு மாற்றாக அகில இந்திய வீச்சுள்ள ஒரு சக்தி எழாத நிலையில் மத்திய ஆட்சியில் வலுவான பங்கு வகிக்கும் நிலைக்கு திராவிட இயக்கம் சென்றது.

சீர்திருத்தம் பகுத்தறிவு என்ற அடிப்படைகளில் இருந்து வெகுதூரம் வந்துவிட்ட நிலையில் தமிழர் என்ற உணர்வினாலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோர் இயக்கம் இது என்ற நம்பிக்கையினாலும் பின்திரண்டு நிற்கும் மக்களின் வாழ்வில்  உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் பொருளாதாரத் திட்டம் இல்லாத நிலையில் கொள்கைகளைப் பின்னுக்குத்தள்ளி தனிநபர் அரசியல் முன்னுக்கு வந்துள்ளது. அரசியல் அதிகாரம் மட்டுமே குறிக்கோள் என்று ஆகிவிட்டபிறகு ராமனும் ராவணனும் ஒன்றுதான்-பாஜகவும் காங்கிரசும் ஒன்றுதான்.

முற்போக்கான அரசியல் பொருளாதாரத் திட்டம் திராவிடக் கட்சிகளுக்கு இல்லாதது, பெரியார் காலத்தில் இருந்தே வர்க்க நிலைப்பாட்டினை மேற்கொள்ளாத ஒரு வரலாற்றுப் பலவீனம். பொப்பிலி அரசரை ஆதரித்துக்கொண்டே ஜமீன்தார் அல்லாதார் மாநாட்டினை நடத்தினார்; நாட்டுக்கோட்டை செட்டியார்களை வைத்துக்கொண்டே லேவா தேவிக்காரர் அல்லாதார் மாநாடு நடத்தினார்; உயர்சாதி இந்துக்களை தலைவராகக் கொண்டு தீண்டாமை விலக்கு மாநாடு நடத்தினார்; தரகு வணிகர்களும் நிலப்பிரபுக்களும் அமர்ந்த மேடையில் ஏகமனதாக சமதர்மத்தீர்மானம் இயற்றப்பட்டது என்று கோ.கேசவன் பெரியாரை விமர்சித்தது போலவே நிலவுடமை யாளர்களின் ஆதரவை வைத்துக்கொண்டே நிலச்சீர்திருத்த சட்டத்தை இயற்றியது சமூக பொருளாதார நீதிக்கு எப்படி வழி செய்ய முடியும்?

அரசு அதிகார எந்திரத்திலும் சமூக அளவிலும் பிராமண மேலாண்மையை நீக்கி எல்லா சமூகத்தவருக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்யும் ஜனநாயக மயமாக்கும் போக்கிற்கு திராவிடஇயக்கம் தலைமை வகித்தபோதிலும் ஏறக்குறைய 40 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தலித்துகளுக்கு கல்வியிலும் அரசுப்பதவிகளிலும் நியாயமாகக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் சமூக அளவிலும் பல இடங்களில் தீண்டாமையின் வடிவங்கள் நிலவுகின்றன. வன்முறையும் நடக்கிறது. அரசியல் அதிகாரம் இருந்தபோதிலும் திராவிட இயக்கத்தால் ஜனநாயக மயமாக்கும் போக்கினை நிறைவு செய்ய இயலவில்லை என்பது தெளிவு. மேலவளவும் தாமிரபரணியும் இதற்குச் சான்றுகள்.

இடஒதுக்கீடு, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பவை திராவிட இயக்கச் சாதனைகள். ஆனால் இட ஒதுக்கீடு என்பது அரசாங்க வேலைகளில்தான். தனியார்மயம், உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் வேலைவாய்ப்புகளே குறைந்துகொண்டிருக்கும் நேரத்தில் இடஒதுக்கீடு என்ற கொள்கைக்கு குந்தகம் விளைந்துகொண்டிருக்கும் வேளையில் தெளிவான பொருளாதாரக் கண்ணோட்டமும் வர்க்கப்பார்வையும் இல்லாத திராவிட இயக்கம் எப்படி சமூக நீதியைக் காக்கப்போகிறது. உலகம் முழுவதும் நிதிமூலதனத்தின் தாண்டவம் வேலை வாய்ப்புகளையும், நீர், நிலம், காற்று போன்ற மனிதகுலத்தின் பொதுச்சொத்துக்களையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது. காலனி ஆதிக்க காலத்தைவிட வேகமாக மூன்றாம் உலகநாட்டு மக்களை வறுமையிலும் துயரத்திலும் ஆழ்த்திக் கொண்டிருக்கிற பாசிச சக்திகள் பன்முக கலாச்சார தன்மைகளை ஒருமுகப்படுத்த முனைந்துகொண்டிருக்கின்றன. ஏகாதிபத்தியம் இராக்கிலும், ஆப்கானிதானத்திலும் தன் உண்மையான முகத்தைக்காட்டி வருகிறது. தனி மனிதர்கள் மட்டுமல்ல. பல நாடுகளில் பொருளாதார சுதந்திரமும் சுயமரியாதையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளுக்கெல்லாம் எதிர்ப்பலைகளும் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த எதிர்ப்புக்கு இன்றும் கூட ஆயுதமாகப் பயன்படும் ஆற்றலைக் கொண்டவைதான் 1930-களில் பெரியார் முன்வைத்த சுயமரியாதையும் சமதர்மமும்.