உலக அரசியலில் ராணுவக் கூட்டுக்களை வைத்து தலையீடு செய்யும் ஏகாதிபத்திய அரசியலுக்கு எதிராக கூட்டுச் சேரா இயக்கம் பிறந்தது. பல காரணங்களால் அணி சேரா நாடுகளின் இயக்கம் படுத்த படுக்கையானது. இப்பொழுது நாம் (NAM) என்று அழைக்கப்படும் இயக்கம் முன்னைவிட பலத்தோடும், எழுச்சியோடும் மீட்சியுற்று ஏழை நாடுகளின் பாதுகாவலனாக நிமிர்ந்து நிற்கிறது.
இன்று உலகம் முழுவதும், அமெரிக்காவின் போர்வெறியை எதிர்த்து மக்கள் இயக்கம் நடைபெற்று வருகிறது. வளர்ந்த நாடுகளின் பன்னாட்டு மூலதனம் மேலும் வளருவதற்காகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிற WTO உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய உலகச் சூழலில் மூன்றாம் உலக நாடுகளின் வலிமையான கூட்டு தேவைப்படுகிறது.
கியூபா தலைநகர் ஹவானாவில் 116 நாடுகள் பங்கேற்ற அணிசேரா இயக்கத்தின் 14வது மாநாடு இந்தக் கடமையை நிறைவேற்றுவதாக அமைந்துள்ளது. இந்த மாநாடு கியூபாவில் நடைபெற்றதும், எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் அணிசேரா இயக்கத்திற்கு கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ தலைமைப் பொறுப்பை பெற்றதும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள்.
இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட 92 பக்க அரசியல் பிரகடனம், ஏராளமான உலகப் பிரச்சனைகளில் தெளிவாக நிலைபாடுகளை கொண்டதாக உள்ளது. சமீபத்தில் இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதல், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள், ஐக்கிய நாட்டுச் சபையை ஜனநாயகப்படுத்துவது, ஜனநாயகத்தை பரப்புவது எனும் பெயரில் அமெரிக்கா பல நாடுகளின் சுயாதிபத் தியத்தை பறிக்க முயல்வது உள்ளிட்ட பல பிரச்சனைகளை இந்தப் பிரகடனம் உள்ளடக்கியுள்ளது.
இஸ்ரேலின் ஆதிக்கப் போக்கையும், அமெரிக்காவின் தலையீடுகளையும் பெயர் சொல்லாமல் கண்டிக்கிறது இந்தப் பிரகடனம். வெளிநாட்டு சக்திகள் ஒரு நாட்டை ஆக்கிரமித்து மக்கள் மீது தாக்குதல் நடத்துவதுதான் மிக மோசமான பயங்கர வாதம் என்று பிரகடனம் குறிப்பிடுகிறது.
குறிப்பிட்ட ஒரு மதம், இனத்தை சார்ந்தவர்களை பயங்கர வாதிகள் என்று கூறுவது கூடாது என்று பிரகடனம் கூறுகிறது. அதே போன்று ஒரு அந்நிய நாட்டின் ஆக்கிரமிப்பு இருக்கும் போது, விடுதலைக்காக மக்கள் நடத்தும் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சொல்லக் கூடாது என பிரகடனம் வலியுறுத்துகிறது.
ஈரானிடம் அமெரிக்கா கடைபிடிக்கும் அணுகு முறையையும் பிரகடனம் கண்டிக்கிறது. ஈரான் நாட்டை உலக சமாதானத்திற்கு எதிரியாக சித்தரிக்கும் அமெரிக்காவின் போக்கையும் பிரகடனம் கண்டிக்கிறது. அணுசக்தியை அமைதியான நோக்கங்களுக்காக பயன்படுத்தும் உரிமை அனைத்து நாடுகளுக்கும் உண்டு என்பதை பிரகடனம் தெளிவுபடுத்துகிறது.
ஈரானுக்கு ஆதரவுக்குரல்கள் மாநாட்டில் ஒலித்தன. ஈரான் தாக்கப்பட்டால் எந்த நாட்டிற்கும் இனி எண்ணை கிடையாது என்று அறிவிப்போம் என்றார் வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ். ஐக்கிய நாட்டின் பாதுகாப்பு சபையின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டுமென மாநாடு கோரி யுள்ளது. 5 நாடுகளின் வீடோ (Veto) அதிகாரத்தை அகற்றுவது அல்லது கட்டுப்படுத்த வேண்டுமென மாநாட்டுப் பிரகடனம் கோரியுள்ளது. ஐ.நா. பொதுச்சபையில் மூன்றில் இரண்டு பங்கினர் சேர்ந்து வாக்களித்தால் வீடோ ரத்து செய்யப்படும் என்ற வகையில் திருத்தம் செய்ய பிரகடனம் வலியுறுத்துகிறது.
இந்த மாநாட்டை துவக்கி வைப்பதற்கு பிடல் காஸ்ட்ரோ வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் பூரண உடல் நலம் பெறும் வரை ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் வலியுறுத் தியதால், அவர் மாநாட்டில் நேரடியாக கலந்து கொள்ளவில்லை. எனினும், இந்த மாநாட்டின் ஆதார சுருதியாக அந்த மாமனிதர் திகழ்ந்தார். கியூப கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் உள்ள அவரது அறையிலிருந்து மாநாட்டு நிகழ்ச்சிகளை அவர் கவனித்து வந்தார். ஒரு சில உலகத் தலைவர்களை மட்டும் சந்தித்து உரையாடினார். அவர் சந்தித்து உரையாடிய தலைவர்களில் ஒருவர் நமது பிரதமர் மன்மோகன் சிங். எப்போதும் இந்தியாவின் உற்ற தோழனாய், இந்திய நிலைமைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக பிடல் காஸ்ட்ரோ இருந்து வந்துள்ளார்.
விடுதலைக்குப் பிறகு, முப்பதாண்டு காலம் (1989 வரை) இந்தியா பின்பற்றிய பரந்த வெளியுறவுக் கொள்கையாக இருந்து வந்துள்ளது அணிசேராக் கொள்கை. இந்தக் கொள்கை அமெரிக்க அனுதாபிகளுக்கு தொடர்ந்து ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்தது. பா.ஜ.க. தலைவர் ஜஸ்வந்த் சிங் இந்த ஆண்டுகள் அனைத்தும் வீணாக்கப்பட்ட காலங்கள் என்று வர்ணித்தார். பா.ஜ.க ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
அதாவது, எந்த வல்லரசு அணியிலும் சேராமல், தனித்தன்மையோடு சுதந்திரமாக செயல்பட்டது வீண் என்பது அவரது கருத்து. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழ் அணி சேர்ந்து அமெரிக்காவிற்கு தாளம் போட்டிருந்தால் எத்தனையோ பலன் களை ஈட்டியிருக்கலாம் என்பது பா.ஜ.க. வில் உள்ள அமெரிக்க ஆதரவாளர்கள் பலரின் கருத்து. அணிசேராக் கொள்கை என்றா லே பல அறிவுஜீவிகள் எரிந்து விழுகிற காட்சியை தொலைக் காட்சி விவாதங்களில் பல நேரங்களில் நாம் கண்டிருக்கிறோம். ஏறத்தாழ 30 ஆண்டுகாலம் அணிசேரா பதாகையை உயர்த்திப் பிடித்து வந்த நிலை 1990 ம் ஆண்டுகளில் மாறியது. அணிசேரா இயக்கம், இந்த காலக்கட்டத்தில் சரிவை சந்திக்கத் துவங்கியது. அப்போது அமெரிக்க ஆதரவு முகாம் சந்தோசக் களிப்பில் மூழ்கியது.
எனினும், அணிசேரா இயக்கத்தின் இந்த சரிவுக் காலத்தில் உலக நிலைமைகளில் நல்ல மாறுதல்கள் ஏதாவது ஏற்பட்டுள்ளதா? உலகின் பல நாடுகளில் பல்வேறுபட்ட நிலைமைகள் இருந்தாலும், ஒரு உண்மை மறுக்க முடியாதது.
இன்றைய உலகில் ஒரு பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது. ஆப்கானிஸ்தான், ஈராக் மீது தாக்குதல் நடத்தி, அந்த நாடுகளை அமெரிக்கா கைப்பற்றியது ஒரு கொடூரமான நிகழ்வு. இது போன்ற அமெரிக்காவின் நடவடிக்கைகள் தான் பாதுகாப்பற்ற தன்மை உலகில் அதிகரிக்க முக்கிய காரணம்.
இதுவே பல தீமைகளுக்கு ஊற்றுக்கண். பல நாடுகள் அவர்களுக்கு உகந்த பாதையை தேர்ந்தெடுக்க முடியவில்லை. தங்களது நாட்டு மக்களின் நலன்களுக்காக சுதந்திரமாக எதையும் செய்ய முடியாத நிலையை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவு தான் பயங்கரவாதம் எனப்படும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது. அதிக அளவில் பயங்கரவாதக் குழுக்கள் மதத்தின் பெயரால் செயல்படுவதும், பயங்கரவாத செயல்கள் அதிகரிப்பதும் நிகழ்கின்றன.
ஹவானா மாநாட்டில் உரையாற்றிய நமது நாட்டு பிரதமர், பயங்கரவாதம் பற்றி கடுமையாக கண்டித்துப் பேசினார். இதனை கண்டிப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால் பிரதமர், தனது உரையில் பயங்கரவாதத்திற்கு மூலகாரணம் யார் காரணம் என்பதை குறிப்பிடவில்லை.
ஒரு பயங்கரவாத குழு வெடிகுண்டு வீசி மக்களை அழிப்பது மட்டும்தான் பயங்கரவாதமா? ஒரு நாடே மற்றொரு நாட்டின் மீது குண்டு வீசி தகர்ப்பது பயங்கரவாதம் இல்லையா? இந்த அரசு பயங்கரவாதம் பற்றி பிரதமர் மன்மோகன் சிங் மூச்சுவிடவில்லை. இதைப்பற்றி பேசத் துவங்கினால், அவர் அமெரிக்காவைத்தான் குற்றம் சாட்டிப் பேச வேண்டியிருக்கும் என்பதால், அவர் அந்த எல்லைக்குச் செல்லவில்லை.
அவர் அமெரிக்காவை குறிப்பிடாததற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய உடனடி காரணம் ஒன்று இருந்தது. ஹவானா மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தான், அமெரிக்க செனட் சபையில், இந்திய அமெரிக்க அணுசக்தி மசோதா விவாதத்தில் இருந்தது. அதற்கு பாதிப்பு எதுவும் வந்து விடக்கூடாது. இந்த மசோதா சட்டமாக செனட்டில் நிறைவேற்றப் பட வேண்டும் என்ற கவலை பிரதமர் பேச்சில் இருந்தது.
ஏற்கனவே இந்திய அரசோடு அமெரிக்கா கையெழுத் திட்டிருந்த இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தங்களுக்கு மாறாக, இந்திய நலன்களுக்கு விரோதமான ஏராளமான அம்சங்கள் இந்த மசோதாவில் இருந்தது.
இவ்வாறு அமெரிக்கா பல வகைகளில் இந்திய நலனுக்கு துரோகம் இழைத்திருந்தாலும், இந்திய ஆட்சியாளர்கள் உறுதியாக அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை எடுத்து, அணி சேரா நாடுகளோடு இணைந்து நிற்க தயாராக இல்லை.
இதற்கு அடிப்படைக்காரணம், இந்திய ஆட்சியாளர்களின் வர்க்கத் தன்மைதான். இந்தியப் பெரு முதலாளித்துவம், எப்போதும் ஏகாதிபத்திய மூலதனத்தோடு முரண்படுவதை விரும்புவதில்லை. அப்படியே முரண்படும் நிலை வந்தாலும், முற்றான எதிர்ப்பு நிலை எடுப்பதில்லை. ஏனெனில், இந்திய பெரு முதலாளித்துவ, ஏகபோகங் களின் வளர்ச்சிக்கு, உலக ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் கூட்டு அவசியமானது.
அணிசேரா நாடுகளின் இயக்க வரலாறே இதற்கு சான்றாக உள்ளது. இரு துருவ உலகம் என்று அழைக்கப்பட்டு வந்த காலத்தில், அணி சேரா நாடுகளின் இயக்கம் ஒரு முக்கிய உலக இயக்கமாகத் திகழ்ந்தது.
சோவியத் யூனியன் ஒரு புறம், அமெரிக்கா மறுபுறம் என்று உலகம் இரு கூறாகப் பிரிந்து, இரு முகாம்கள் எதிரும் புதிருமாக இருந்த நிலையில், எந்த வல்லரசோடும் சேர மாட்டோம் என்று உறுதியான குரலோடு 1955 ம் ஆண்டில் மூன்றாம் உலக நாடுகள் சேர்ந்து உருவாக்கிய இந்த அணிசேரா இயக்கம் மலர்ந்தது.
எந்த வல்லரசோடும் சேர்ந்து ராணுவக் கூட்டணி கிடையாது என்று இந்த நாடுகள் அறிவித்தாலும், அவ்வப்போது, தேவைக்கு ஏற்றாற்போல வல்லரசுகளின் உதவிகளை பெற்றுக்கொண்டன. இந்திய ஆளும் வர்க்கம், தொழில் நுட்பம் வளராத நிலையில், கனரக தொழில்கள் உருவாக்க அமெரிக்க உதவியை நாடியது. ஆனால் அமெரிக்கா, இந்தியா சொந்தக்காலில் நிமிர்ந்து நின்றிட விரும்ப வில்லை, தனது வர்த்தக வாடிக்கையாளராக மட்டும் இந்தியா இருந்தால் போதும் என்று கருதியது.
இதனால் வெறுப்புற்ற இந்திய முதலாளித்துவம், பிறகு தான் சோவியத் யூனியன் உதவியை நாடியது. சோவியத் உதவியோடு தான் இந்தியாவின் சுயமான தொழில் வளர்ச்சி சாத்தியமாகியது.
இந்தக் காலக்கட்டத்தில்தான், இந்தியா அணிசேரா நாடுகளோடு நின்று, இந்த இயக்கத்தின் முன்னணி பாத்திரத்தை ஆற்றியது. காலனியாதிக்கம், நொறுங்கி, பல நாடுகள் விடுதலை பெற இந்த இயக்கத்தின் வலுவான குரல் காரணமாக அமைந்தது.
தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சி முடிவுக்கு வர அணிசேரா இயக்கம் செயலாற்றி வெற்றி கண்டது. 1955ம் ஆண்டு பாண்டுங்கில் நடைபெற்ற மாநாட்டில் பஞ்சசீலக் கொள்கைகள் என்று அழைக்கப்படும் 5 கோட்பாடுகள் உருவாக்கப்பட்டது. இவ்வாறு துவங்கிய இந்த இயக்கத்தில் முக்கிய பங்காற்றிய இந்தியா தனது வர்க்கத் தேவைகளையொட்டி, ஏகாதிபத்தியங்களோடு முரண்படுதலும், கூட்டு சேருவதும் என இரண்டு எதிர் எதிரான கொள்கையை கடைபிடித்து வந்துள்ளது.
1955 முதல் பத்தாண்டுகளுக்கு மேலாக ஏகாதிபத்தியங்களோடு எதிர்நிலை எடுத்தது போன்ற தோற்றம் இருந்தது. எனினும், ஏகாதிபத்தியத்தோடு இருந்த பிணைப்பை இந்தியா முற்றாக கைவிடவில்லை.
1980 ம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும், 1990 ம் ஆண்டுகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தியா, ஏகாதிபத்தியங்க ளோடு, குறிப்பாக, அமெரிக்காவோடு அதிக நெருக்கம் காண முயன்றது.
இதற்கு முக்கியக்காரணம், உள்நாட்டு பொருளாதாரத்தில் துவக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள். புதிய தாராளமயக் கொள்கைகள் என்ற ஒரு புதிய சகாப்தத்தில் இந்தியா நுழைந்தது. தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் கோலோச்சத் துவங்கின. இது இயல்பாகவே, அந்நிய நிதி மூலதனம், அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களோடு உறவினை பலப்படுத்த வேண்டிய தேவையை இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு ஏற்படுத்தியது. வளர்ச்சியடைந்த இந்திய முதலாளித்துவம், தனது துரித வளர்ச்சிக்கான சுரண்டல் கொள்கையை நிகழ்த்த அந்நிய நிதி மூலதனத்திற்கும் துணை தேவைப்பட்டது. அந்நிய மூலதனத்திற்கும், இந்திய சந்தையை ஆக்கிரமிக்க இந்திய அரசு, ஆளும் வர்க்கங்களின் துணை தேவைப்பட்டது.
ஆக, இந்த நிகழ்வுப் போக்கு இயல்பாகவே இந்திய அரசுக்கு அணி சேரா இயக்கத்தின் மீது இருந்த நாட்டத்தைக் குறைத்தது. இதே போன்ற போக்குகள் மற்ற மூன்றாம் உலக நாடுகளிலும் ஏற்பட்டது. உலகமயம் எனும் பெயரால் உலகவங்கி, சர்வதேவ நிதி நிறுவனத்தின் பிடி இறுகியது.
இந்த நிகழ்வின் இணையான போக்காக, சோவியத் யூனியனின் வீழ்ச்சி அமைந்தது. இரு துருவ உலகம் என்று சொல்லப்பட்ட நிலை மாறியது. சோவியத் யூனியன், அமெரிக்கா என்ற இரு துருவங்களில் ஒன்று தகர்ந்த பிறகு இயல்பாக என்ன நிகழ்ந்திருக்க வேண்டும்? பல துருவங்கள் நிரம்பியதாக இந்த உலகம் மாறியிருக்க வேண்டும். ஆனால், என்ன நடந்தது? ஒரு துருவ உலகமாக, அமெரிக்கா ஏகமாக ஆதிக்கம் செலுத்தும் உலகமாக இந்த பூவுலகம் மாற்றப்பட்டது.
சோவியத் யூனியன் சிதைவு, அணிசேரா இயக்கம் நீர்த்துப் போனது ஆகிய இரண்டும் ஒரு சேர நிகழ்ந்தது. இது எதைக் காட்டுகிறது? சோவியத் யூனியன் எனும் மகத்தான சக்தி இருந்தபோது தான், அணிசேரா இயக்கம் எழுச்சியோடு செயல்படுவதற்கான உலகச் சூழலும், வாய்ப்பும் பிரகாசமாக இருந்தது. சோவியத் யூனியனின் வல்லமை தான் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தது. இந்த உலக நிலை காரணமாகத்தான், மூன்றாம் உலக நாடுகள் தங்களது வளர்ச்சிக்காக அணிசேரா இயக்கம் அமைத்து ஓரளவு சுதந்திரமாக செயல்பட வாய்ப்பு ஏற்பட்டது.
அணிசேரா இயக்கத்தில் இருந்த தலைவர்கள் பல நேரங்களில் எந்த வல்லரசோடும் கூட்டு இல்லை என்று பிரகடனப்படுத்துகிற போது, சோவியத்தையும், அமெரிக்காவையும் சமமாக பார்ப்ப துண்டு. உண்மை என்னவெனில், சோவியத் யூனியன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற நிலை காரணமாகத்தான், அமெரிக்காவிடம் சரணடையாமல், ஓரளவு எதிர்ப்பு காட்டும் தைரியத்தை அணி சேரா இயக்க நாடுகள் பெற முடிந்தது. இதை உணர்ந்தே, பிடல் காஸ்ட்ரோ அன்று சோவியத் யூனியனை அணி சேரா இயக்கத்தின் இயல்பான கூட்டணி நாடு என்று வர்ணித்தார்.
இதனால் தான் சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு அணி சேரா நாடுகளின் இயக்கமும் பலவீனப்பட்டது. பல நாடுகள் அமெரிக்கா விடம் ஒட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உலகம் ஒரு துருவ உலகம் ஆனது.
இத்தகு பின்னணியில், இனி வரும் காலங்களில் அணி சேரா இயக்கத்தின் திசைவழி எதுவாக இருக்க வேண்டும்? மாநாட்டு துவக்க உரையில், கியூப பொறுப்பு அதிபர் ரால் காஸ்ட்ரோ இதைப் பற்றி குறிப்பிட்டார். அணிசேரா இயக்கம், சர்வதேச சட்டங்களை காப்பதிலும், 1955-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பஞ்சசீலக் கோட்பாடுகளை பாதுகாப்பதிலும் உறுதியாகப் போராட வேண்டும்.
தற்போதுள்ள, சுரண்டல், கொள்ளை அடிப்படையிலான உலகப் பொருளாதார அமைப்பினை மாற்றிட அணிசேரா இயக்கம் உறுதியுடன் போராட வேண்டும். மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ், இன்றைய உலகமய பொருளாதாரம் இயங்கி வருவதால், சுதந்திர வர்த்தகம் என்பதெல்லாம் வெறும் ஏமாற்று என குறிப்பிட்டார் ரால் காஸ்ட்ரோ. ஒரு சில பணக்கார நாடுகளைக் கொண்டே ஒரு குழுவிற்கும், 80 சதம் மக்களைக் கொண்ட நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வை ஒழிப்பது அணிசேரா இயக்கத்தின் முக்கிய கடமை. இவையே பிரதான அணி சேரா இயக்கத்தின் முக்கிய பணிகளாக உள்ளன.
எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தின் மூலம் ரஷ்யா இன்று பெரும் வருமானத்தை ஈட்டியுள்ளது. இதனால், ரஷ்யா மத்திய ஆசியாவில் செல்வாக்கு பெற்ற நாடாக மீண்டும் உருவாகியுள்ளது.
சீனா உலகில் மிகப் பெரும் பொருளாதார வல்லரசாக மாறியுள்ளது. ரஷ்யாவும், சீனாவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பினை வலுவான அமைப்பாக மாற்றியுள்ளன. இதில் ஈரானும் சேர்க்கப்பட்டுள்ளது.
லத்தின் அமெரிக்காவில் இடதுசாரிகள் மீண்டும் பலம் பெற்றுள்ளனர். காஸ்ட்ரோவும், சாவேசும் லத்தின் அமெரிக்க ஒற்றுமையை உருவாக்கி வருகின்றனர். இந்த நிலையில் அணிசேரா இயக்கமும் வலுப்பெற்றால், ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் மகத்தான எழுச்சி மலரும்.